உரைநடைக்  கோவை

             உரைநடைக்  கோவை  

                    (  இலக்கியக் கட்டுரைகள் )

ஆசிரியர்

மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

பண்டிதமணி

மு . கதிரேசச்  செட்டியார்

                                                      பொருளடக்கம்

  1. தமிழும்  தமிழ்ப்  பணியும்
  2. தமிழ்ப்  புலமை
  3. நம்  பண்டைய  நீதி   நூலாசிரியர்
  4. மாணிக்கவாசகர்
  5. சங்க  காலத்து  அங்கதம்
  6. காதற்கடிதங்கள்
  7. குறுந்தொகை
  8. மணிமேகலை

              தமிழும்   தமிழ்ப்   பணியும்

( கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்துப்  பதினாங்காம்  ஆண்டு  விழாத் தலைமைப் பேருரை )

இமிழ்கடல்  வரைப்பில்   இனிமை  சான்ற

தமிழ்மொழி  பேணுந்  தகைசால்  ஐயன்மீர் ! அன்னைமீர் !  

           செந்தமிழ்த்  தெய்வச்  சீர்நலம்  போற்றுதலே  தன்  முழு  நோக்கமாக  மேற்கொண்டு  திருவருட்பாங்கால்  தோன்றிய  இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  பதினான் காம்  ஆண்டுத்  திருவிழாவில்  யான்  தலைமை பெறத்  தந்தது  , சிறியேன்  மாட்டு  இச்சங்கத்தார்  வைத்துள்ள  பேரன்பின்  பெருமையையே  விளக்குவதாகும் . இதுகாறும்  நிகழ்ந்த  ஆண்டு  விழாக்களில்  தலைமை  பூண்டோர்  புலவர் , புரவலர் , அமைச்சர் . பொருளாளர்  என்னும்   தகுதியினராவர்.  இன்ன  தகுதியுள்  ஒன்றேனும்  வாய்க்கப்பெறாத  யான் , இவர்தம்  நிரலில்வைத்  தெண்ணப்படும்  பேறு  பெற்றமைக்குக்  காரணம் , அந்  நிரலில்  அன்பரும் அமைகவென  இச்சங்கத்தார்  கருதியதென்றே  எண்ணுகின்றேன் .

           இச்சங்கத்தார்  என்னை  உறுப்பினனாகக்  கொண்டு   சில  ஆண்டுகளாக  நடைபெற்ற  ஆண்டு  விழாக்களில்  அழைத்து  இம்  மன்றத்தில்  விரிவுரை  நடத்துவித்துச்  சிறப்பித்து  வந்தனர் .  அம்  மட்டில்  அமையாது  இற்றை  ஞான்று  தலைமையளித்துஞ்  சிறப்பிக்க  மேற்கொண்ட  அன்புடைமையை  என்னென்பேன் !  இந்நன்றி  எஞ்ஞான்றும்  மறப்பேனல்லேன் .

                                      1 .  தாய்மொழிக்   கல்வி

அன்பர்களே !

             ஒருமைக்கட்  பயிற்சியால்  எழுமைக்கண்ணும்   தொடரும்  இயல்பினதாகிய  கல்வியே  மக்களை  மக்கட்டன்மை  யுடையா ராக்கும்  என்பது  பெரியார்  துணிபு . எந் நிலத்தில் எக்  குடிக்குட்  பிறந்தாராயினும்  கல்வியுடையாரையே  உலகம்  போற்றும் என்பது  கண்கூடாக  அறியப்பட்ட தொன்று .  இத்தகைய  விழுப்பஞ்  சான்ற  கல்வியை  , எந் நிலத்தில் எம் மொழி  வழங்கப்படுகின்றதோ  அந் நிலத்தில் வாழும்  மக்கள்  அம்மொழி  மூலமாகவே  முதற்கட்  பயிலவேண்டும் .  அதுவே  அந் நிலத்து மக்கட்குத்  தாய்மொழியாகும் .  ஒரு குழந்தை  பிறந்து மொழி  பயிலுங்கால்  அதன்  தாயால் முதற்கண்  பயிற்றப்படும் மொழி யாது? அதுவே  தாய்மொழி  என்று கோடல்  பொருந்தும் .  அன்னை வாயிலாகக்  கேட்டு  மழலை  மொழிந்து தேறிய  பின்னரே  அக் குழந்தை அப்பனாலும்  ஆசிரியனாலும்  வரிவடிவிற்  பயிற்றப்பட்டு  அறிவு  விரிவெய்தப்  பெறும் .  ஒருவன்  இறைவனை  அடைந்து  பேரின்ப  நுகர்ச்சியில்  தலைப்பட  விழையுங்கால் ,  அங்கும்  அருளுருவாகிய  தாயே  முதற்கண்   இவனைப்  பண்படுத்தி அப்பனாகிய இறைவனை அறிவித்து அவன்பால்  உய்ப்பவனாவள் . இதனை , “மெய்யருளாம்  தாயுடன்  சென்று பின் தந்தையைக்  கூடிப் பின் தாயை  மறந்து , ஏயுமதே  நிட்டை”  என்னும்  முற்றத் துறந்த முனிவர் பெருமானாகிய   பட்டினத்து  அடிகள் அருண்மொழியாலும்  உணர்க .  தாய்  வழியாகத்  தந்தைக்கு  ஆளாதலை  யுணர்ந்தே , முதற்கண்  தாயைக் குறிப்பிட்டு  மணிவாசகப் பெருந்தகையாரும் “அம்மையே  அப்பா  ஒப்பிலா  மணியே”  என்று  திருவாய் மலர்ந்தருளினார் .  இத் தமிழ் நிலத்து மக்களாகிய நம்மனோர்க்கு நம் அன்னையரால் முதற்கட் பாலொடு  குழைத்து அன்போடளாவி  ஊட்டிய  அருமை மொழி அந்தமிழிலின்பம்  ஆர்தரப் புரியும் செந்தமிழ் மொழியே யாமன்றோ ! அன்னையர் அருளொடு சுரக்கும் இனிய பாலை உண்ணுங்  குழவிப்பருவத்தில் ,  அவராற்  பயிற்றப்பட்டுப் பயிலும் சிறப்புப்  பற்றியன்றே  இம்மொழி,  “பால்வாய்ப்  பசுந்தமிழ்”  என்று  பாராட்டப்படுகின்றது .  மழவிளம்  பருவத்திற்  பயிற்றப்படுதல் குறித்தே இதனைப் “பசுந்தமிழ்”  என்றார் போலும் . இயற்கையும் அன்னதே .இதனால் , நம் உடல்  பாலுண்டு  வளரும்  பருவந்தொட்டே , உடற்கண்  உறையும் உயிர் , தன் குணமாகிய  அறிவைச்  செந் தமிழ்த் தெய்வ மொழிப் பயிற்சி வாயிலாக  வளர்த்துத்  திகழும் உண்மை நமக்குப்  புலனாகின்றது . அறியாப்பருவத்தினும்  நம் உயிர்க்கு உறுதுணையாக  நின்று அறிவுச் செல்வத்தை வளர்வித்து உதவி வரும் தமிழ் மொழியின் பழமையையும், சிறப்பையும் என்னென்று  கூறுவேன் ! அவை வரையறுத்துக்  கூறுதற்கு  இயலாதன வெனினும் , அறிந்தாங்கு  ஒரு சிறிது கூறத்தொடங்குகிறேன் .

                                   2 . தமிழ்  மொழியின்  தொன்மை

          பல்லாயிரம்  ஆண்டுகட்கு  முன்னர்த்  தோன்றி  இற்றை ஞான்று  நம் கைவரப்பெற்ற  தமிழ்  நூல்கள் எல்லாவற்றிலும்   காலத்தானும் , சிறப்பானும்  முற்பட்டு  விளங்குவது  ஒல்காப்  பெரும்புகழ்த் தொல்காப்பியம்  என்னுந்  தலையாய  இயல்  நூலே  யாகும் .  இது  கூடலின்கட்  பண்டு  நிலவிய  முச்சங்கத்துள் , தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும்  உணர்வர் .  இந் நூலின்கண்  தமிழ் வரம்பு கண்ட தண்டமிழ் முனிவராகிய தொல்காப்பியர் , வடநூலார்  நான்கென  வகுத்த உறுதிப் பயன்களை  அகம் , புறமென  இரு பிரிவினுள்  அடக்கி , மக்கள் இம்மைப்பயனாக  நுகர்தற்பாலதாய  இன்ப நிலையை அகத்தினும் , மறுமைக்குரியதாக  எய்தற்  பாலதாகிய  அறநிலையினையும் , அதற்குக்  கருவியாகிய  பொருள்  நிலையையும்  இம்  மூன்றன்  நிலையாமையையும்  உணர்ந்து ஒருவித அடைதற்  பாலதாகிய  அந்தமிலின்பத்தமிழில்  வீடாகிய  உறுதி பயக்கும்  வாயிலையும் புறத்தினும் ஒழுங்குற   வகுத்து விளக்கியுள்ளார் .  

        இங்ஙனம் மக்கள் ஒழுகலாற்றைத்  திறம்பட  நுனித்துணர்ந்து  பலபட  விரித்துரைத்தலோடு  மற்றை  உயிர்த்  தொகுதிகளின்  இயற்கைகளையும் , நிலையியற்  பொருளிய  மரம்  முதலியவற்றின்  இயல்புகளையும் , நிலப்பகுதிகளின்  பான்மைகளையும் , மற்றை  இயற்கைப்  பொருள்களின்  தன்மைகளையும் ஆராய்ந்துணர் வார்க்குப்  புலப்படும்படி  கூறியிருக்கும்  திட்பநுட்பம் , வேறு எம் மொழி இயல் நூலார்க்கும் இயலாத தொன்றாம் . ஒரு மொழிக்கு இலக்கணம் காணப்புகும் ஆசிரியர்  அம்மொழிக்கண் உள்ள “எழுத்து” “சொல்” என்னும்  இவற்றையே  ஆராய்ந்து தூய்மைப்படுத்துவர் . இவ் வியல்பு பிறமொழி இயனூலார்  யாவர்க்கும் ஒத்ததாகும் . நம் செந்தமிழ்த் தெய்வ மொழியின் இயன் முதனூல்  ஆசிரியரே  மொழியாளர் எல்லோர்க்கும்  பொதுவாகிய எழுத்து , சொற்களின்  ஆராய்ச்சிகளோடு  அமையாது .  சொல்  கருவியாக  உணரப்படும்  பொருளாராய்ச்சியிற்  பெரிதும்  தலைப்பட்ட  அப்பொருளைக்  கூரறிவாளர்  எத்துணைப்  பாகுபாடு  செய்து  உணர  விரும்புவாரோ அத்துணைப்  பகுப்புக்களும்  அமைய  மக்களின்  ஒழுகலாற்றையும்  பிற  இயங்கியல்  நிலையிற்  பொருள்களின்  தன்மைகளையும்  தெள்ளத் தெளிய   விளக்கியுள்ளார் .  

            இப்  பொருளதிகாரத்திற்  கண்ட  கந்தழி முதலிய  சொற்களை  ஆராய்வோமாயின்   அந்நூற்  காலத்துத்  தமிழரின்  கடவுட் கொள்கை  நன்கு  புலப்படும் .  ஒரு  பற்றுக்   கோடின்றி  அருவாகித்  தானே  நிற்குந்  தத்துவங்கடந்த  பொருளாக்  கடவுளைத்  தமிழர்  ஆராய்ந்து  தெளிந்துள்ளாரென்பது  அதனாற்  புலனாம் .  தொல்காப்பியர்  தமிழ் நிலத்தார்  ஒழுக்கங்கண்டு   நூல்  செய்யுங்  காலத்துத்  தமிழர்  நிலை இத்துணை மேம்பாடுற்றிருக்குமாயின்   அதற்கு முன் எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே  தமிழர்  தத்துவ  ஆராய்ச்சியில்   தலைப்பட்டிருத்தல்  வேண்டும் . நாள்  வினைகளைச்  செவ்விதின்  இறுக்கப்  பணிக்கும்  அற  நூல்களின்  வழியொழுகிப்  பண்படுத் தப்பட்ட  உள்ள நிலையுடையாரன்றே  முடிவில் தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படுவர் ?  அங்ஙனம் தலைப்படுவாரும்  கடவுட்குப்  பல்வகைப்  பொருந்தா  இலக்கணங்களைக் கண்டு ஒருவரோடொருவர் தம்முண்  முரண்படுவர் .  அம்முரண்பாடறுத்துக்  கடவுட்  பொருளின்  தூய  இயல் நிலையை  உள்ளவாறுணர்வார்  மிகவும் அரியர் .  இவ் வரிய உணர்ச்சியைத்  தமிழர்  எத்தணையோ  ஆயிரம்  ஆண்டுகட்கு  முன்னரே  எளிதிற்  கைவரப்  பெற்று  ஒழுகினரென்பது  அத்  தொல்காப்பிய  முதுநூலிற்  கண்ட  உண்மைத்  தெளிவாகும் .  இதனால் , தமிழின்  பழமை  காலத்தான்  அறுதியிட்டு ரைத்தல்  அரிதென்பது போதரும் . புதிய முறையில் ஆராய்ச்சி  செய்வாருள்  நுண்மாணுழைபுல  மிக்கார் சிலருக்கும் இஃது  உடன்பாடேயாகும் .  

             தொன்மை  வரலாற்று  முறையில்  நோக்கினும்  இதன்  பழமை  புலனாகும் .  ஒரு  பற்றுக் கோடின்றி   அருவாகித்   தானே  நிற்கும்  தத்துவங்  கடந்த  பழம்   பொருளாகிய  இறைவன் , மக்கள்  ஆண்  பெண்களாக இயைந்து  இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படும்  பொருட்டு  அருள்வழி  உருக் கொண்டு  பொற்கோட்டிமயத்தின்  கண்  மலைமகளை  வேட்டஞான்று , அமரர்  முதலியோர்  அனைவரும்  ஆங்கு   ஒருங்கு  தொக்காராகத்  தென்பால்  உயர்ந்து வடபால்  தாழ்ந்தமையின்  ,  அது  கண்டு  அப்பெரியோன் , நிலப்பரப்பின்  சமநிலை  குறித்துக்  குறுமுனியை  நொக்கிப்  பொதியிற்கு  ஏகென, அம்முனிவர் பெருமான்  முழுமுதற்பிரானை  வணங்கி , “ஐயனே ! தெற்கணுள்ளார்  தமிழ்  மொழி  வல்லாரென்றே . அவருவப்ப  யான்  அம்  மொழிப்  பயிற்சியிற்  பீடு  பெறுதல் எங்ஙனம் ?”  என  வேண்ட , இறைவன்  அதுகாலைக்  குடமுனிக்குத்  தமிழறிவுறுத்தா ரென்பது  கந்தபுராணக்கதை .  இப்புராண  வரலாற்றை  நம்புவார்க்குத்  தமிழின் தொன்மையைப்  பற்றி விரித்துரைத்தல்  மிகையே .

                            3.       தமிழ்  மொழியின்  சிறப்பு

          இனி , இங்ஙனம்  தொன்மையான  மாண்பு  மிக்க  இம் மொழியின்  சிறப்பைப்  பற்றிச்  சிறிது  ஆராய்வோம் . ஒரு  மொழிக்குச்  சிறப்பு   அதன்கண்  அமைந்துள்ள   சிறந்த  இலக்கியம் , இலக்கணம் , சமயம்  முதலியவை  பற்றிய  நூற்பரப்புக்களானும் , பிரிதொன்றன்  சார்பு  வேண்டாது  புலவர்  கருதும்  எத்தகைய  அரும்பொருள்களையும்  வழங்குதற்குரிய  சொற்களுடைமையானும்,  பிறவற்றானுமாம் .  இன்னோரன்ன  சிறப்புக்களில்  நம்  தமிழ்மொழி  யாதுங்  குறைவுடையதன்று .  இது  மற்றொரு மொழியினின்றும்  தோன்றியதென்றாதல்  , பிரிதொன்றன்  சார்பின்றி  நடைபெறா தென்றாதல்  கூறுவார்  உண்மை யாராய்ச்சி யிலாராவர் . ஆனால் , தொல்காப்பியர்  காலந் தொட்டே  வட சொற்களுட்  சில  தமிழில்  வழங்கலாயின .  அது பற்றித்  தொல்காப்பியரும்  ,

“வடசொற்  கிளவி  வடவெழுத்  தொரீஇ

யெழுத்தொடு  புணர்ந்த  சொல்லாகும்மே” 

எனவும் .

“சிதைந்தன  வரினும்  இயைந்தன  வரையார் “ 

எனவும், வட சொல் தமிழில்  வழங்கு முறையை  வரையறுத்துக்  கூறினர் .  வடமொழி  எந்நிலத்து மாந்தரும்   மேற்கோடற்குரிய   பொது  மொழியாக  உள்ளமையானும் , பொதுப்பொருளில்  வேண்டுமளவு கோடல்  முறையாதலானும் , கூடற்  சங்கத்துக்  குலவிய  பண்டைப்  புலவர்  பெருமக்களுட்  பலர் , வடமொழியினும்  வல்லராக  இருந்து  தமிழை  வளர்த்தமையானும்  அச்சங்க காலங்களில்  மிகச் சுருக்கமாகத்  தமிழில்  வடசொற்  கலப்பு  உண்டாயிற்று .  அங்ஙனம்  வடசொற்கள்  தமிழிற்  கலக்குங்காலும்  பொதுவெழுத்தான்   இயன்ற  சொற்களே  தூய தமிழுருவெய்திப்  பெரும்பாலும்  விரவலாயின .

           நாளடைவிற்  புலவர்  தனித்  தமிழ்ச்  சொற்களைத்  தெரிந்து வழங்கும்  மதுகை  யின்மையானும் ,ஓரோவழித்  தெரியினும்  அவற்றினும்  வடசொற் றொடை  செவிக்கு  இன்பம்  பயப்பனவாம்  என   மாறுகொள  உணர்ந்தமையானும் , தனித் தமிழ்ச் சுவை கண்டு  இன்புறும்  தலைவர்  அருகினமையானும் , வட மொழியாளர்  உவப்பத்  தமிழிற்  பாட்டு  உரை முதலியன இயற்ற வேண்டுமென்னும்  விழைவு   மேற்கொண்டமையானும் ,  பொதுவெழுத்தானும் , சிறப்பெழுத்தானும்  ஆய  வட சொற்கள்   பலவற்றைத்  தமிழில்  வரம்பின்றி   வழங்கி  வருபவராயினர் .  சுவையுடைமை  அவ்வம்  மொழிகளில்  தனித்த  நிலையிற்  காணப்படுதல்  போற்  கலப்பிற்  காணப்படுதல்  அரிது .  ஒரு மொழியிற்  செவ்வனம்  பயின்று  சுவை நிலை கண்டுணர்வார்க்கு  அதன்  தனி நிலையிற் போலப்  பிற மொழிக் கலப்பில் அத்துணை  இன்பம்  உண்டாகா தென்பது  உண்மை . அநுபவமுடையார்  எல்லோர்க்கும்  ஒத்ததாகும் . இதனால்  வட சொற்களை  நேர்ந்தவாறு தமிழில்  புகுத்தல்  முறையன்றென்பது  தெளிவாம் . ஒரு சில வட சொற் கலப்பு உண்மை பற்றித்  தமிழ் மொழியை  வடமொழியினின்றும் தொன்றியதென்றல்  பொருந்தாததொன்றாம் .  

               வடமொழிக்கும்  தமிழ்மொழிக்கும்  உள்ள  வேறுபாடு  மிகப்பலவாம் . வடமொழியில் தமிழிற் போலத்  திணை  பாலுணர்த்தும்  வினை விகுதிகள் இல்லை . “ப4வதி”  என்னும்  வினைமுற்று   “இருக்கின்றான்” “ இருக்கின்றாள்”  “இருக்கின்றது”  என  ஓர் ஈறே  நின்று  எழுவாய்க்கேற்றவாறு பொருள் உணர்த்தும் . தமிழில் வினை  முற்றுக்களின் ஈறே  திணை  பால்களை  உணர்த்தி  நிற்கும் .  பால்  வகுப்புத்  தமிழிற்  பொருளைப்  பற்றியும் , வடமொழியிற்  சொல்லைப் பற்றியும்  உள்ளது . ஆண் மகனைப் பற்றி  வருஞ்  சொற்களெல்லாம்  ஆண்  பாலாகவும் ,பெண்மளைப் பற்றி  வரு வனவெல்லாம்  பெண் பாலாகவும்  தமிழில்  உள்ளன . வடமொழியில் இவ்வரையறை  யில்லை ; மாறுபட்டு  வரும் . சொல்  நோக்கியதா கலின் , மனைவியைப் பற்றிய  “பா4ர்யை”  என்னுஞ் சொல் பெண் பாலாகவும் ,  “தா3ரம்  ஆண்  பாலாகவும் , “களத்திரம்”  என்னுஞ் சொல்  நபுஞ்சகப் பாலாகவும் வருதல்  காண்க .  வடமொழியில் ஒருமை  இருமை  பன்மைச்  சொற்கள்  உள்ளன . தமிழில்  ஒருமையல்லாதன வெல்லாம் பன்மையே . தினைப்  பாகுபாடு ,  குறிப்பு  வினைமுற்று முதலியன  தமிழுக்கே  உரியன . “முல்லையைக்  குறிஞ்சியாக்கி  மருதத்தை  முல்லையாக்கி”  என்னும்  கம்ப ராமாயணச்  செய்யுளை  வட மொழிக்கண்  மொழிபெயர்க்கப்  புக்க  வடமொழிப்புலமை  மிக்க  என்  நண்பரொருவர்  அத்  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லாமையால் , “நல்லனவற்றைத்  தீயனவாக்கியும் ,  தீயனவற்றை  நல்லனவாக்கியும்”  என்னும்  பொருள்பட   மொழிபெயர்த்துள்ளார் .  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லையாயினும்  பொருளா ராய்ச்சி  வன்மையால் , ஒருவாறு  பொருந்த  மொழிபெயர்க்கலாம் .  இயலாதென்பது  அவர் கருத்து போலும் . இன்னும்  உற்று  நோக்கு வார்க்கு  இலக்கண  அமைதியில்  வடமொழிக்கும்  தமிழ்  மொழிக்கும்  வேறுபாடு  பல  தோன்றும் .  இவ் வேறுபாடுகளைச்  சுருக்கி ,

“சாற்றிய  தெய்வப்  புலவோர்  மொழிக்குந்  தமிழ்  மொழிக்கும்

வேற்றுமை  கூறின்  திணைபால்  உணர்த்தும்  வினைபகுதி

மாற்றருந்  தெய்வ  மொழிக்கில்லை  பேர்க்கெழு  வாயுருபும்

தேற்றிய  லிங்கம்  ஒருமூன்றும்  இல்லை  செந்தமிழுக்கே”

என்று  பிரயோகவிவேக  நூலார்  கூறினார் .  வடமொழி  தென்மொழி  ஆராய்ச்சியிற்  புலமை  மிக்க  மாதவச் சிவஞான முனிவர்  இவ்வேறுபாடுகளை நன்கு  ஆராய்ந்து  தெளிவுபட  உரைத்தனர் . அவர்  கூறியன  வருமாறு :  “தமிழ்  மொழிப்  புணர்ச்சிக்கட்  படுஞ்  செய்கைகளும்  , குறியீடுகளும்  ,  வினைக்குறிப்பு , வினைத்தொகை  முதலிய  சில  சொல்லிலக்கணங்களும் , உயர்திணை  அஃறிணைப்  பாகுபாடுகளும்  ,  அவற்றின்  பகுதிகளும்  , வெண்பா  முதலிய  செயுளிலக்கணமும்  , இன்னோரன்ன  பிறவும்  வடமொழியிற்  பெறப்படாமையானும்  “  என்பனவாம் .  இவ்வாராய்ச்சியால்  தமிழ்  தனி  மொழி  என்பது  செவ்விதிற்  புலனாதல்  காண்க .

               இனி , இம்மொழிக்கணுள்ள  நூற்பரப்புக்களை  உற்று  நோக்குவோம் . கடல்கோள்  முதலியவற்றாற்  செற்றன  போக , எஞ்சிய  சங்க  நூல்கள்  பலவுள்ளன .தமிழின்  இயற்கைச்  சுவை  நலம்  ததும்பித்  திகழும்  பத்துப்பாட்டு ,  அகம் , புறம் , கலித்தொகை  முதலிய  சங்கத்துச்  சான்றோர் இலக்கியங்களும் , எம்மொழியினும்  இத்துணைத்  திட்ப  நுட்பங்களமைய  யாத்த  ஒரு  நூலும் உளதோ வென்று  ஆராய்வார்  வியப்புறும்  வண்ணம்  தமிழ் நிலத்தார் தவப்பயனாக  எழுந்த  திருக்குறளை  முதலாகவுடைய  நீதி நூல்  இலக்கியங்களும்  ,  பாடுவோர்க்கும்  கேட்போர்க்கும்  இறவன்  றிருவடிப்  பற்றை  விளைவித்து அன்புமயமாய்  நின்று  உள்ளுருகச் செய்யும்   தேவாரம் , திருவாசகம் , நாலாயிரப் பிரபந்தம்  முதலிய  அருட்பாடல்களும் , காப்பியச்சுவை  நலம்  கனிந்தொழுகும்   சிலப்பதிகாரம் ,சிந்தாமணி  முதலியனவும் , இறைவன்  றிருவருள்  நலத்தை அன்பர் அள்ளி உண்டு  இன்புற்ற  முறையையும்  ,  உலகியல்  நிலைகளை  வரம்பிட்டு  அழகு  பெற  உரைக்கும்  பெற்றியையும்   முறையே  மேற்கொண்டு வெளிப் போந்த சைவ  வைணவ  இலக்கியங் களாகிய   பெரிய  புராணம் , கம்பராமாயணம்  முதலியனவும் , சிவாநுபவச்  செல்வர்களாகிய  மெய்கண்ட தேவர்   முதலியோர்களால்  அளவை நூன்முறையில்   வைத்துப்  பொருள்  வரையறை  செய்து  அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோதம் ,சிவஞான சித்தி , திருமந்திரம்  முதலிய  சமய  நூல்களும்  சிவஞானமுனிவர் , குமரகுருபர அடிகள்  முதலியோர்  அருளிய  இனிய  நூற்றொகை களும் , பிறவும்  இதன்கண்  உள்ளன .

                   உருக்கரந்த  நூல்களினின்றுஞ்  சிதறுண்டு  அங்கு மிங்குங்  காணப்படும்  சில  செய்யுட்களைப்  பார்க்குங்கால் ,  முழுவுருவமுங்  கிடைக்கப் பெறாமை  தமிழரின்   தவக்  குறை யென்றே  இரங்க வேண்டியதாயிற்று .  சேர பாண்டிய  சோழர்களாகிய  மூவேந்தர் களையும்  தனித்தனியே  தொள்ளாயிரம்  வெண்பாக்களாற்   புகழ்ந்து  பாராட்டு முறையில்  அமைந்த  முத்தொள்ளாயிரச்  செய்யுட்களிற்   சிதறிக் கிடந்த  சிலவற்றைக் கண்டதும்  அந் நூன் முற்றுப் பெறாமை பற்றி  என் மனம் வருந்தியதுண்டு .   சிற்றுருவாகிய  வெண்பாவில்  உயர்ந்த  பொருளைச்  செப்பனிட்டமைத்துச்   சொல் வளமும் , பொருள் வளமுங்  கெழுமப்  பாடியிருக்கும்  வனப்புத்  தமிழ்ச்சுவை  நலம் துய்ப்பார்  யாவருள்ளத்தையுங்   கவரவல்லதாம் .  “வெண்பாவிற்  புகழேந்தி”   என்று  பாராட்டிய  புலவர்க்கும்  இம்  முத்தொள்ளாயிர  நூல்  காணப்பட்டிலதென்றே  எண்ணுகின்றேன் .  “பொருப்பிலே  பிறந்து தென்னன்  புகழிலே  கிடந்து “  என்று  தமிழ்  மடந்தையைப்  புனைந்து பாராட்டிய  புலவரும்  இதனைக்  கண்டிலர் .  தென்னன்  புகழின்  மட்டில்  அன்றி  மூவேந்தர் புகழிலும்  ஒருங்கு கிடந்தமை  இந் நூலாற்   கண்டிருப்பாராயின் , “பொருப்பிலே  பிறந்து மூவர்  புகழிலே  கிடந்து”  என்று  பாடியிருப்பர் .  இன்னும்  பூதங்களாலும்   காலதத்துவத்தாலுங்  கவரப்பட்டு  ஒழிந்த சிறந்த  நூல்களும் உரைகளும்  பலவாம் .  

             இலக்கண நூல்களுக்குள் எழுத்து  முதலிய  ஐந்து   இயல்களையும்  முற்ற  உரைப்பனவும் , அவற்றுள்  ஒன்றிரண்டே  நுதலுவனவுமாகிய   தொல்காப்பியம் ,  இறையனாரகப்  பொருள் , நன்னூல்  முதலிய  பலவுள்ளன .  இவற்றுள் தொல்காப்பியத்தின்  பெருமை  மேற்கூறப்பட்டது  கொண்டு  ஒருவாறு  உணரலாம் .  

              இனி , நூல்களின்  உண்மைக்   கருத்துக்களைத்   தம் மதி நுட்பத்தாற்  கண்டு  உரை  வரைந்த  ஆசிரியர்களின்  பெருமையை  என்னென்பேன் !  இளம்பூரணர் , பேராசிரியர் , சேனாவரையர் , நச்சினார்க்கினியர் , பரிமேலழகர் , அடியார்க்கு நல்லார்  முதலிய  ஆசிரியர்களின்  திறமையைத்  தனித்  தனி  விரிக்கப்  புகின்  மிக  விரியும் . இவரெல்லாம் , மிக விரைவாக  ஓடிச் செல்லும் ஒரு பேரியாற்றை எதிர்த்து நீந்தி அந்நீரோட்டத்தின்  வன்மையை இற்றென உணர முற்படுவார்  போலத்  தாம் உரையெழுத மேற்கொண்ட  சான்றோர்  செய்யுட்களிலுள்ள  சொற்களின்  செலவை  எதிர்த்தாராய்ந்து  உண்மைப் பொருள்  கண்டு  உலகிற்  குதவியவராவர் .

              பிற்காலத்தே  பொதியிற்  சாரலில்  தென்றமிழ்  நாடு  தவப் பயனாகத்  தோன்றிய மாதவச்  சிவஞான முனிவரின் மாட்சிமை கூறும் தரத்ததன்று . அம்முனிவர்  பெருமான்  வடமொழி  தென்  மொழிகளிலுள்ள  இலக்கியம்  இலக்கணம்  தருக்கம்  சமயம்  முதலிய   நூற்பாவைகளைத்  தேக்குற  உண்டு  நூலியற்றல் , உரை வரைதல் , பிறர்  புரைபட  யாத்த  நூலுரைகளின்  குற்றங்கண்டு  விலக்கல்  முதலிய  எல்லாக்  கல்வித்  துறைகளிலும்  ஒப்புயர்வின்றி  விளங்கிய   தமிழ்ப்பெரும்   தலைமணி யென்பதும் , சைவ சமயம் முதனூற்  பேருரையாசிரியரென்பதும்  இத்தமிழுலகம் அறிந்தனவே . அவர்கள்  வரம்பிட்டுரைத்த தொல்காப்பியர்  சூத்திர  விருத்தி  முதலியனவும்  , சிவஞான போதச் சிற்றுரை , பெருமை  முதலியனவும்  தமிழ்ப்  புலவர்களாலும்  சைவ  சமயப்  பெரு  மக்களாலும்  தலைமேற்  கொண்டு  போற்றற்பாலனவாம் .  

                இங்கு  கூறிய  நூலுரைகளின்  பெயர்களும்  சுருக்கம்  பற்றி  இவ்வாறு  கூறப்பட்டன . ஈண்டுக்  கூறப்படாத  பிற  நூலுரைகளைப்  பற்றியும் , ஆசிரியர்களைப்பற்றியும்  உள்ள  என்  மதிப்பு  ஒரு  சிறிதுங்  குறைந்ததன்று .  வாய்ப்புழி  விரித்துரைக்கும் அவாவுடையவனே .

               அகப்பொருள்  இயல்புகளை  அறத்தினின்றும்  பிறழாதெடுத்து நயம்பட  உரைக்கும்  அழகு  தமிழ் மொழிக்கே  சிறந்ததாகும் . தலைவன்  தலைவி , பாங்கன்  பாங்கி ,  செவிலி  நற்றாய்  முதலியோர்  இன்ன இன்ன இடங்களில் இவ் விவ் வண்ணம்   உரையாடக்  கடவரென்று  வரையறுத்த  முறை  பெரிதும்  இன்புறற்பாலது .  அகப்பொருள்  விரிவைத்  தமிழற்   பரக்கக்  கண்ட  ஒரு சிலர் ,  இம் மொழி காம  நிலையை  பற்றியதென்று  கூறினர் .  அவர்  கூற்று , “தோள்கண்டார்  தோளே  கண்டார்”  என்றாங்கு  அப்பகுதியில் ஈடுபட்டு  அதனின்றும்  பெயர  ஒண்ணாமை  பற்றி   எழுந்த  தொன்றாகும் .  சைவ  நூல்களை  முறைப்படுத்திய   நம்பியாண்டார்  நம்பிகள்   என்னும்புலவர்  பெருமான்  இறைவனையடைந்து பேரின்பம்  துய்த்தற்கு  வாயிலாகவுள்ள  அறிவுமொழி  இத்தமிழ்  மொழியெனக்  கண்டு  அக்காட்சியைத்  திருஞானசம்பந்த  பிள்ளையார்  பெருமை  கூறுமுகமாக ,

“ஆரதே  றுஞ்சடை  யான் அருள்  மேவ  அவனியர்க்கு

வீறதே  றுந்தமி  ழால்வழி  கண்டவன் “

என்று  வெளியிட்டருளினர் . “சிவபிரானது திருவருட் பேற்றை  யடைய  உலகத்தவர்க்குத்  தமிழால்  வழி  கண்டவர்”  என்னும்  இதனால்  இது  ஞானமொழி  என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம் .  ஈண்டு  தமிழைச்  சுட்டுங்கால்  “வீறதேறுந்  தமிழ்”  என்றார் .  வீரு  என்னுஞ் சொல் ‘வேறொன்றற் கில்லா  அழகு’  என்னும்  பொருளதாம் .  இப்பொருள்  சீவக சிந்தாமணியில்   ‘வீறுயர்  கலச  நன்னீர்’ என்புழி  நச்சினார்க்கினியர்  கண்டதாகும் . வேற்று மொழிகட்கில்லாச்  சுருங்கச்  சொல்லல்  ,  விளங்க வைத்தல் முதலிய  அழகுகள்  இத்தமிழ் மொழிக்கண் மலிந்திருத்தலின்,இச்சொற்பொருள் நச்சினார்க்கினியர்  கண்ட  அவ்விடத்தினும்  இங்கு  மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு  விளங்கும் .

             இச்  செந்தமிழ்  மொழியாம்  நறுநீர்த்  தடாகத்திற்  பற்பல  கிளை  நூல்களாம் கொடி , இலை , அரும்பு .மலர்   முதலியன  கிளைத்தெழுதற்கு  முதலாகவுள்ளதும் , மொழியின்  தன்மையை வரம்பிட்டு  உரைக்கும்  இயல்  முதல்  நூலுமாகிய   தொல்காப்பியம்  என்னும்  மூலமும் , அதன்கட்டோன்றி  எழில்  பெற  விளங்குவதும் , இன்னும்  காலக்கூறு  எத்துணை  கழியினும்  உலக நிலையும்  மக்கள்  ஒழுகலாறும்  இன்ன  படியாக  இருத்தல் வேண்டு மென்று  புதிய புதிய எண்ணங்களை  மேற்கொண்டு  ஆராய்வார்க்கெல்லாம்  சிந்தாமணி போல் நீதிப் பொருள்களை வழங்குவதும் , நுண்பொருள் நறுமணம்  மிக்கதுமாகிய  பீடுசால்  திருக்குறள்  என்னும்  தாமரை  மலரும் , அம்மலர்க்கண்ணே   ததும்பி  வழிவதும் , விலை  வரம்பில்லா  மாணிக்கம்  போன்ற  சொன்  மணிகளானும்  உள்ளே  நோக்கி   உளம்  நெகிழ்ந்து ஆராய்வார்க்கு   “எனை  நான்  என்பதறியேன்”  என்றபடி அவர் தம் நிலையும் மறக்கச்செய்யும் பொருளொளிகளானும் , கல்லையுங்  கரைக்கும்  இசை நலத்தானுஞ்  சிறந்து திகழ்வதும்  படித்தல் , கேட்டல்  முகமாகத்  தன்னை யுண்பாரைத்  தான்  உண்டு  அன்புருவாக்கிச்  சிவநெறிக்கட்  செலுத்திப்  பேரின்பப்  பெருவாழ்வுறுத்துவதும்  ஆகிய  திருவாசகம் என்னும்  தேனும்  கைவரப்பெற்ற   தமிழ்ச்  செல்வர்க்கு  யாதுங்  குறையின்றெனினும் , கால வேறுபாட்டால்  உள்ள  நிலை  வேறுபட்டு அதனால்  விளையுங்  குறைகட்கு  அவர்  இடனாதல்  வருந்தத்  தக்கதே .

அக்குறைகளாவன :-

             நஞ்செந்தமிழ்த்  தெய்வ  மொழிக்கு  இயல்பின்  அமைந்த காட்சிகளை  விளக்கமாக  உணர்ந்து உலகினர்க்கும் உணர்த்தித்  தாமும்  பயன்  எய்துதலை விட்டு , இதற்கிலாதனவும்  வேண்டாதன வுமாகிய   சிலவற்றைச்  சிறப்பெனக்  கண்டு  இதற்கு ஏறிட முயன்று  இடர்ப்படுதலும்  இன்னோரன்ன பிறவுமாம் . வேற்று  மொழியாளர்   அறியாமையால்  நம்  மொழியைப்  பழித்துரைப்பாராயின்  தக்கவாறு  ஏதுக்களைக்  காட்டி  உண்மை நிலை யுரைத்து  அவரை  நன்நெறிப் படுத்த முயலல் வேண்டும் . அந்நெறிக்கு  வாராராயின்  “நெறியினீங்கி யோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் “  என்றாங்கு  அவர்  தன்மைக்கு  இரங்கி யொழிதலே  நாம்  மேற்கொள்ளற்பாலதாம்.  இங்ஙனமல்லாமல்  நாமும்  அவரியல்பைக்  கைப்பற்றி  அவர் மொழிக்குள் இல்லாத குறைகளை ஏறிட்டுப் பழித்துரைத்தல் நடுநிலை திறம்பாத் தமிழ்க் குடியிற் பிறந்த நமக்கு ஒல்லாத தொன்றாம் .  கலகம் விளைத்தலால் எய்தும் பயன் , நடுநிலை திறம்பா  நன் னெஞ்சைக் கோட்டமுறச்  செய்தலேயன்றி  வேறன்று .  மொழியள வின்றிச்  சமய  நிலையிலும்  இம் முறை  மேற்கொள்ளற் பாலதொன் றாம் . காய்தல்  உவத்தலின்றி  உண்மை நிலை கடைப்பிடித்துப்  பண்டை நிகழ்ச்சிகளை யாராய்ந்து வெளியிடும் இக்காலத்துத்  தமிழ்ப்  புலவர்களின் அருஞ்  செயல்கள் போற்றற்பாலவையாம் . புதிய  முறையிற்  கண்ட  கொள்கைகளும்  , பொருந்துவன இன்ன, பொருந்தாதன இன்னவென்று அறுதியிட்டு  வெளிப்படுத்தற்குரிய வழியைப் பின்னர்க் கூறுவேன் .  

                                4 .  தமிழ்  மொழியின்  நிலைமை

தமிழ்ச்  செல்வர்காள் !

            இது  காறுங்  கூறியவற்றால்  தமிழின் தொன்மையுஞ்  சிறப்பும் ஒருவாறு புலப்படுமேயன்றி முற்றவெடுத்து விளக்கப்பட்டனவாகா . தாலீ  புலாக  நியாயமாகச்  சுருங்கிய  நிலையிற்  சில  எடுத்துக்  காட்டப்பட்டன . இனி , இத்தகைய  மூலப் பொருளாகிய தமிழின் நிலை இக்காலத்தில் எங்ஙனம் உள்ளதென்று  ஆராயப்  புகுவோமாயின் , அது வருத்தந்  தருவதொன்றாகும் . இம்மொழியை முறையாகப்  பயில்வாருஞ்  சிலரே . பயிற்றுக்  கல்லூரிகளுஞ்  சிலவே . நம் அரசினர் மொழியாகிய ஆங்கிலத்தால் நெருக்குண்டு இது தன்னுருக்கரந்து  அங்குமிங்குஞ் சிறிது உறைவிடம் பெற்று ஒல்கியிருக்கின்றது . போற்றுவாரின்மையால்  வேற்றிடம் பெயர்தற்கும் வழியில்லை ; ஆர்வ மிக்குப் பயில முயல்வாரும் பொருள் வருவாயைக்  கருதிப் பின்வாங்கு கின்றனர் .  பொருள் வருவாயைப்  பொருட்படுத்தாத  தகுதியுடை யார்க்கு  இதன்கண்  விருப்பமுண்டாதல் அரிதாகின்றது . இளைஞர் சிலர் , காலத்தின் விரைவிற்கேற்றவாறு  ஒரு  நூலையேனும் அழுந்தியாராயாமல்  நுனிப்  புல்  மேய்ந்து இக்கால நாகரிகத்திற்கு ஒத்த வண்ணம் எங்கணும் உலாவித் திரியும் பத்திரிகைகளில் வெளிப்படுஞ் சில  கட்டுரைகளைப்  பயின்று , அம்மட்டில் தம் கல்வி முற்றியதாக நினைந்து , தாமும்  அம்முறையிற் காலங்கழிக்க எண்ணுகின்றனர் .  

          பண்டைக்காலம் போலக் கற்று  வல்ல பெரும் புலவர்கட்கு முற்றூட்டாக  நிலம் , பொருள்  முதலியன கொடுத்துப் பேணும்  புரவலரும் இலர் . ஆரவாரமின்றி அறிவு விளக்கங்  கருதிக் கல்வி பயின்று  அடக்க மேற்கொண்டொழுகுவாரைப்  பெருமைப்படுத்து வாரும்  சுருங்கினர் . போலிப்பயிற்சியும் போலியறிவும் , அடிப்போலி யறிவுடையாரைப்  பாராட்டுதலுமே  எங்ஙணும்  மல்கின .  

           ஆங்கில மொழிப் பயிற்சியால்  உயர்தரப் பட்டம்  பெற்றாருட்  சிலர்  தமிழையுங் கடைக்கணித்து  ஒரு சிறிது பயின்றதும் , வேற்று மொழியால்  தாம் எய்திய பெருமையை இதன் மூலமாக வெளிப்படுத்த எண்ணிப் பண்டையோர் சிறந்த முறையில் ஆராய்ந்தெழுதிய  நூலுரைகளைக்  குறைகூறத்  தலைப்பட்டு தம்குறையை வெளிப்படுத்துகின்றனர் .  அவர் குறை , அறிவுடையாருட்  சிலர்க்கன்றி ஏனையோர்க்கும் புலப்படாததாகலின் , அவ் வேனையோர் மலிந்த  இவ்வுலகத்தாராற்  பாராட்டப்படும்  பேறு பெற்று , மீண்டும்  மீண்டும் அவர் தம் இயற்கையை வெளிப்படுத்த முயல்கின்றனர் . ஒரு  நூலையோ  , உரையையோ  ஒருவர் மறுக்க  எண்ணுவாராயின்  , அந்நூலுரைகளின் பொருளுரைகளை ஆசிரியரின் கருத்தின் வழி முதலில்  அறிதல் வேண்டுமன்றோ ?  அங்ஙனம் அறிதலில் தம் உழைப்பைப் பயன்படுத்தாமல் மறுத்து ரைக்க விரைவார்  செயலை என்னென்பேன் ! வைரமணியின் தூய வெண்ணிற வொளியை  மஞ்சள்  நிறமென மாறுபடக்  கண்டு  அக்காட்சி  ஏதுவாக  “இது வைரமணி அன்றென ஒருவன் கூறுவானாயின்  அஃது அவன்  கண்ணின்  குற்றத்தாலாயதன்றி  வேறென்ன ?  

              சிலர் வேறு வழியில் தாம்  உயர்ந்த நிலையை அடந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து , தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர் .  அந்தோ ! அவர் பாட்டை நினையுங்கால்  தமிழ் மொழியாளர் செயல் இத்தகையது போலுமென்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே  என்று வருந்த வேண்டியதாகின்றது . “செல்வப் புதல்வரே ஈர்ங்  கவியோ”  என்றபடி புலவர்க்குப்  புலமைப் புதல்வராகப்  பிறக்கும்  இயல்பினவாகிய  பாட்டுக்களைக்  கருக்  கொள்ளாது பொறையுயிர்க்க வெண்ணின்  எங்ஙனமாம் ?

                தமிழ்த்துறையில்  ஒரு  சிறிதும் பயிலாத  தம் பதவி மேம்பாட்டால்  ஒரோ  வமயம்  இன்னோரன்ன  அவைக்களங்களில்  தலைவராக  வீற்றிருக்கும் பேறு  பெறுங்கால் அவர்  கூறும்  உபதேசம் எத்துணைப்  பயனுடையதாகுமென்பதை  நீங்கள்  அறிவீர்கள் . அவரை  உயர் பதவிக்குக் கொண்டுவந்து மொழிப் பயிற்சியில் அவர் செலவிட்ட  காலத்தையும் , முயற்சியையும் கூறுபடுத்துக்கால்  அல்லது அரைக்காற்  கூறு  தமிழுக்கு உபயொகப் படுத்தியிருப் பாராயின் , அவர்  உபதேசங்  கொள்ளற்பாலதாகும்.  அங்ஙனமின்றி, “பண்டிதர் நடை கடினமாதலிற்  பயனுடையதன்று “  என்றின்னோ ரென்ன  உபதேசங்களைச்  செய்வரேல் அவற்றை எவ்வாறு  ஏற்றுக்கொள்ளலாம் ?

                   சிறந்த  நடையில்  எழுதுவார்  மிகச் சிலரே .  அவர்களும் இவர்  ஆரவாரத்தில்  ஈடுபட்டுத்  தம்  இயற்கையைக்  கைவிடுவாரா யின்  அந் நடை வனப்பை  யாண்டுக்  காண்போம் ?  இவ்வுபதேசகர்  கருத்துப்படி  எது  நல்ல  நடையென்று தெளியப் புகின்  அது நகை விளக்கும் .  பிற  மொழிகளிலுள்ள சொற்களை மிகுதியாகக்  கலந்து இலக்கண  வரம்பின்றி  எழுதப்படுவதே   எளிய  நடை யென்பது  அவர் கருத்து .  இந் நிலையைக்  கடைப்பிடித்துள்ளாரே  இக் காலத்துப் பலராவர் . இயல்பிற்  பரந்து கிடக்கும் இவ் வெளியே கொள்கைக்கு இவர் உபதேசமும் இன்றியமையாததுகொல் !  எளிய  நடையாவது  இலக்கணப் பிழையின்றித் திரிசொற்கள் பெரிதும்  விரவாமல் இயற்சொற்களால்  இயல்வதாகும் .  இவ்வெளிய  நடையையும் , திரிசொற்கள் பெரிதும்  விரவிய  அரிய  நடையையும் எழுதப்படும்  பொருள்களுக்கு  ஏற்றவாறு  புலவர்கள்  பகுத்துணர்ந்து மேற்கொள்ளல் வேண்டும் .  

                                  5 .  இனிச்   செய்ய   வேண்டுவன

  •  நூல்கள் , ஆராய்ச்சிகள்  முதலியன

    இனி, நம் அருந்தமிழ் நன்னிலைப்படுதற்குச்  செயற்பால  காரியங்களைச் சுருக்கிக் கூறுவேன் . உலகத்து வழங்கும் பல மொழிகளிலும் உள்ள அரிய பல கலைகளெல்லாம் தமிழ் மொழியில் வரல் வேண்டும் . ஆங்கில மொழியிலும்  வடமொழி யிலுமிருந்து  மொழி பெயர்க்க வேண்டிய சிறந்த நூல்கள்  பலவுள்ளன .  உயிர்த்தொகுதிகளைப்  பற்றினவும் மற்றை  நிலையியற்  பொருள்களைப்  பற்றினவுமாகிய  நூல்களுள் , இரசாயனம் முதலிய செயற்குப் பயன்படும் நூல்களும்  ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்படல்  வேண்டும் . மேலைத் தேயத்துப்  பண்டிதர்கள்  தம்  பேருழைப்பாற்   புதிய முறையிற்  கண்ட  சிறந்த ஆராய்ச்சி  நூல்களெல்லாம்   ஒவ்வொன்றாகத்  தமிழில்  வெளிப்படல்  வேண்டும் . இதற்கு  ஆங்கிலமும்  தமிழும்  உடன்  கற்ற  புலவர்கள்  துனை  புரிய  வேண்டும் .

            வடமொழியினின்று  மொழி  பெயர்க்க  வேண்டிய  மூல  நூல்கள்  பலவுள்ளன . பல்லாயிரம்  ஆண்டுகளாக  நம்  தேயத்தாராற் பிரமாண  நூல்களாக  மேற்கொள்ளப்பட்டு வரும்  இருக்கு  முதலிய  வேதங்களும் , அவற்றின்  முடி  பொருளாக  விளங்கும்  உபநிடதங்கள் , தமிழ்  நிலத்தார்  வாழ்க்கைக்கு  இன்றியமையாச்  சிறப்பு  நூல்களாகவுள்ள  ஆகமங்களும்  ஆகிய  இன்னொரன்ன  மூல  நூல்கள்  எத்துணை  ஆயிரம்  ஆண்டுகளாகி யும்  இன்னுந்  தமிழிற்  செவ்விய  முறையில்  மொழி  பெயர்க்கப் பட்டு  வெளிவரவில்லை . ஒரோ  விடங்களிற்  சிலர்  இவற்றை மொழி  பெய்ர்க்கத்  தலைப்பட்டுச்  செவ்விய  முறையிற்  பயன்பட  இயற்றலாற்றாது  இடைக்கண்   ஒழிந்தனர் . அவர்  அத்துணை  தானும்  முயன்றது  பற்றிப்  பாராட்டக்  கடமைப்பட்டுள்ளோம்  அவர்க்குத்  துணை  புரிவாரும்  இல்லை . எவ்வாறு  வெளிப்படுத்தி னாற்   பயன்படுமென்பதைத்  தெரிந்துகொள்ள  அவர்  முயலவுமில் லை .  எத்துணையோ  ஆயிரம்  காவத  தூரங்களுக்கு  அப்பாலுள்ள  ஆங்கில  தேயத்தார்  தம்  மொழிகளில்  இவ்வரிய  வேதாகம  உபநிடதங்களைப்   பொருட்படுத்தி  மொழி  பெயர்த்துப்  பலவகைச்  சிறந்த  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  வெளிப்படுத்தி யிருக்கின்றனர் .  தொன்றுதொட்டு  ஒற்றுமையோடு  வழங்கப்பட்டு  வரும்  நம்  தமிழ்  மிழியில்  இதுகாறும்  அவை  வெளிவராமை  ஒரு  குறையேயாம் . தெளிவான  உரைநடையிற்  பல்வகை  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  அவை  வெளிவரல்  வேண்டும் .  

                  மூல  நூல்கள்  உள்ளவாறு  வெளிவந்தபின்  அவற்றின்  நலந்  தீங்குகளைப்  பற்றி  ஆராய்வார்  ஆராய்க . மூலம்  மற்றும்   தமிழில்  வருவதற்குமுன் , அவற்றின்  உட் பொருள்களைப்  பற்றி  ஆங்காங்குள்ள  சிற்சில  குறிப்புக்களைக்  கொண்டு   நம்  தமிழ்  வல்லார்  ஒரு  முடிபுக்கு  வருதல்  சிறந்த  முறையன்று .

                    இன்னும் , வடமொழிக்கண்ணுள்ள  அளவை  நூல்களும் , சுவையாராய்ச்சி  நூல்களும்  ,  பெருங்காப்பியங்களை  ஆராய்தற்குக்  கருவியாகவுள்ள  நூல்களும்  , பொருணூல்களும் , அறிவு  நூல்களும் , பிறவும்  மொழிபெயர்க்கப்படல்  வேண்டும் . இச்செயற்கு  வடமொழியோடு  தமிழ்  பயின்றார்  பலர் வேண்டும் .  

                        நம்  தமிழ்மொழியின்  ஆக்கத்திற்கு  ஒரு தலையாக  வேண்டுவனவற்றுள்  இம்மொழி  பெயர்ப்புச்  செயலும்  ஒன்றாம் .  இது பற்றியே  தொல்காப்பியனாரும் 

“தொகுத்தல்  விரித்தல்  தொகைவிரி மொழி பெயர்த்

 ததர்ப்பட  யாத்தலோ  டனைமர  பினவே “

என்று  நூல்  யாப்பு  வகைகளுள்  ஒன்றாக  இம்மொழிபெயர்ப் பையும்  கூறினார் . இவ்வரிய  காரியஞ்  செய்தற்குரிய  நிலையத்தை  இன்னோரன்ன  சங்கங்களின்  உறுப்புக்களுள்  ஒன்றாகக்  கொண்டு  பலர்  கூடிச்  செய்தல்  வேண்டும் .  

               இனி , ஆராய்ச்சி  , செய்யுள் , உரை  நூல்களைப்  பற்றி  ஒரு  சிறிது கூறுவேன் . சிறந்த பண்டைத் தமிழ்  நூல்களைச்  செவ்வனம்  ஆராய்ந்து  அவற்றிற்  பொதிந்து கிடக்கும்  நுண்பொருள்களைத்  தொகுத்துப் பல  ஆராய்ச்சி  நூல்கள்  வெளிப்படுதல் வேண்டும் .

 பெரும் புலவர்களால்  அரிதில்  தேடித் தொகுத்த இரத்தினக்குவியல்  போன்ற  பழந்தமிழ்  நூல்களெல்லாம்  கிளைக்கக்  கிளைக்கப்   புதிய  புதிய  சுவை  நலன்களைத்  தேற்றி  இன்புறுத்தும்  நிலையினவாகும் . அவ்வின்பச்  சுவைகளை  அழுந்தி  ஆராய்ந்து  துய்க்கும்  புலவர்கள்  “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்”  என்றபடி  மற்றையோர்க்கும்  அளித்தல்  வேண்டும் .  ஒரு  மொழி யின்  சிறப்பு  ,  மதிநுட்ப  நூலோடுடைய   புலவர் பெருமக்க ளின்  ஆராய்ச்சி  யுரையால்  வெளிப்படும் .  அத்துணை  வேற்று  நெறிகளால்  ஆகாது ; இந்நெறியில்  இற்றைஞான்று  தலைப்படு வார்  சிலருளர்  எனினும் , அன்னாரை  அந்நலம்  கண்டு  போற்றுவாரின்மையால் அவ்வருஞ் செயல் நன்கு  விளக்கமுறவில்லை .

                 நம்  பண்டையோர்  போலத்  திருந்திய  முறையிற்செய்யுள்  நூல்கள்  பலவற்றை  அவ்வாற்றலுடையார்  வெளியிடல்  வேண்டும் . முன்னுள்ள  செய்யுணூல்கள்  பல இருப்ப  புதியன  வேண்டுதல் மிகையெனக்  கருதுவாருமுளர் . நம்  பரத  கண்டத்து மொழிகளெல் லாம்  நிலை  பிறழாது என்றுந் திருந்திய  முறையிற்  றிகழ்தல்   மூல நூல்களெல்லாம் செய்யுட்களால்  ஆக்கப்பட்டமை  யானேயாம் .  ஒரு செய்தியைப்  புலமுடையார்  உள்ளங்கொள்ளுங்கால்  அது  செய்யுண்  முகமாகக்  கேட்கப்படுதல் போல் வழக்குச்சொல்  முகமாகக்  கேட்கப்படுதல்  இன்பம் பயவாது ;  நீண்ட  நாள் மறவாமல்  உளங்கோடற்கும்  இயலாது . ஒரு  நிகழ்ச்சியைச்  சிறந்த  புலவன்  கூறுதல்போற்  பிறர்  கூற  அறியார் .  கூறப்படும்பொருள்  சிறந்ததாக  இருப்பினுங்  கூறுவோன்  புலவன்  அல்லனேல்  அது  பிறர்  நெஞ்சில்  தங்கி  இன்புறுத்தலாற்றாது .  அரசுரிமையும்  புலமையும்  வாய்ந்த சைவ  மன்னர்  ஒருவர்   தம்  உண்மைச்  சமயக்  கொள்கையையும்  மறந்து  வேற்றுச்சமய  நூலில்  ஈடுபட  நேர்ந்தது   செய்யுளின்பத்தினாலேயாம் . மீண்டும்  அவரை  அவர்  சமய  நிலையில்  திட்பமுறப்  பிணித்து  வயமாக்கியதும்  செய்யுளின்பமேயாம் .

கல்வியே  கற்புடைப்  பெண்டிரப்  பெண்டிட்க்குச்

செல்வப்  புதல்வரே  யீர்ங்கவியாச்  —  சொல்வளம்

மல்லல்  வெறுக்கையா  மாணவை   மண்ணுறுத்துஞ்

செல்வமும்  உண்டு  சிலர்க்கு “

என்றபடி  புலமைக்கு  மகப்பேறு  ஈர்ங்கவியாயின் , கவிபாடும்  ஆற்றலில்லாதார்  புலவ ருலகத்தில்  மக்கட்பேரில்லா  வாழ்க்கையை  உடையவராவ  ரல்லரோ !  ஆதலின் , புலமை  வாழ்க்கையிற்  சிறப்பெய்த   எண்ணுவாரெல்லாம்  செய்யுள்  பாடும்  வன்மையுடையா  ராதல்  வேண்டும் . அவ்வன்மையைப்  பயிற்சி  முகமாகப்  பெருக்கிக்  கொண்டு  சிறந்த  நூல்கள்  செய்யுள் வடிவில்  எழுத  முயலல்  வேண்டும் . 

               அதனோடு  பழைய  சிறந்த  நூல்களுள்   உரையெழுதப்  படாதவைகட்கெல்லாம்   உரை  வரைதலையும்   மேற்கொள்ளல்  வேண்டும் .  நூலாசிரியரின்   அரிய   கருத்துக்களையெல்லாம்  உரையாளர்  உதவியாலேயே  உலகம்  உணர்ந்து இன்புறுகின்றது .  பேருபகாரிகளாகிய   உரையாசிரியர்களின்  உதவி  இல்லையா யின்  பண்டை  உயர்  நூல்களாம்  கருவூலங்களில்  தொகுத்து  வைத்த  விலை வரம்பில்லாப்  பொருண்மணிக்  குவியல்களை   யாம்  எங்ஙனம்  பெறுதல்  கூடும் .?  வடமொழியில்  சூத்திரகாரரா கிய  பாணினியாரினும்  உரையாளராகிய  பதஞ்சலியார்  பெருமை  சிறந்து  விளங்குதலை  அறியாதார்  யாவர் ?   நூலாசிரியர்  உள்ளக்  கிடக்கையை  நுணுகி  ஆராய்ந்து தெளிவு  பெற  எடுத்தெழுதும்  வன்மையாளரே   உண்மை உரையாசிரியராவார் .யார்  யார்  எவ்வெத்திறத்து  நூல்களிற்  பயிற்சி  மிக்குடையாரோ  அவரவர்  அவ்வத்திறத்து  நூல்களுக்கு  உரையெழுதப்  புகல் வேண்டும் . அங்ஙனமின்றிக்  கல்லாது மேற்கொண்டொழுகல்  தவறுடைத்தாம் .  சைவ நூலில்  ஒரு  சிறிதும்  பயின்றறியாதார்  ஒருவர்  சைவத்  தலைமணியாகத்  திகழும்  திருவாசகம்  திருவிசைப்பாக்களுக்கு   முற்றும்  உரையெழுதித்  தம்  புரை  நெறியை வெளிப்படுத்தியுள்ளார் .

இத்தகையர்  தம்  தகுதிக்கு  இயலாத  வுயர்  நூல்களுக்கு  உரை  காணப் புகுந்து  உண்மைப்பொருள்  காண  இயலாமல்   இடர்ப்பட்டதோடு , மரபுக்கு  முரணாகவும்  பல  எழுதினர் .   பிழைபட்ட  எல்லாவற்றையும்  கண்டு  விளக்கல்  மிகையாதலின்  ஒன்று  காட்டுவேன் . “நானார்  என்  உள்ளமார் , ஞானங்களார்  என்னை  யாரறிவார் .  வானோர்  பிரான்  என்னை  ஆண்டிலனேல்  மதிமயங்கி  ,  ஊனா ருடைதலை மேல்  உண்பலிதேர்  அம்பலவன்”  என்னும்  திருப்பாட்டில்    ‘மதிமயங்கி’ என்பதைப்  பெயராகக்  கொண்டு  ஆறாம்  வேற்றுமை  உருபு  விரித்து  மதிமயக்கமுற்ற   பிரமனது  தலையோட்டிற்  பலி  தேரும்  அம்பலவன்  என  முடித்துக்காட்ட  அறியாமல் , அதனை  வினையெச்சமாகக் கொண்டு  மதிமயக்கத்தை  அம்பலவர்க் கேற்றினர் . இன்னோரன்ன  பலவுள .  ஒரு  புலவன்  காலக்கழிவு  நோக்காது  நெடிதாராய்ந்து  தன்  வாணாளில் ஒரு  நூற்கு  உண்மையுரை  எழுதி  முடிப்பினும்   போதியதே .   பிழைபடப்  பல  வெழுதுதலிலும்   பிழையறச்  செப்பனிட்டு  ஒன்று  எழுதுதல்   நன்றாம் .

  • புலவர் , புரவலர் , செய்யுள்  முதலியன

மொழி பெயர்த்தல்  , செய்யுள்  நூல்  யாத்தல் , பண்டை  நூல்களுக்கு  விளக்கவுரை  எழுதுதல் .  ஆராய்ச்சியுரை  வரைதல்  ஆகிய  இன்னோரன்ன  துறைகளெல்லாம்   நம்  தண்டமிழ்   வளர்ச்சியுறுதற்கு  ஏற்றனவாம் . இத் துறைகளிற்  புலவர்  பெருமக்கள்  தலைப்படுதற்குத்   தக்க  பொருள்  வருவாயிருத்தல்  இன்றியமையாத  தொன்றே . இதற்கென்  செயலாம் .? தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  கடைக்கணித்தல்  வேண்டும் .  இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  போன்ற  சங்கங்களின்  வாயிலாகச்  செல்வர்கள்  தக்கவாறு  பொருளுதவி  புரிந்து , அப் புலவர்  பெருமக்களைப்  போற்றுதல்  வேண்டும் .  பொருள்  படைத்தவர்  ஒவ்வொருவரும்  தத்தம்  பெயரால்  ஒவ்வொரு  துறைக்கும்  இத்துணைப் பொருள்  கொடுப்போமென  முன்  வந்து சங்கங்களின்  வாயிலாக  வெளியிட்டுப்  புலவரை  ஊக்குதல்  வேண்டும் .  தமிழ்  நாட்டுத்  தலை நகரங்களிற்   குணங்  குற்றங்களை  ஆராய்தற்குரிய  புலவர்  கழகங்களை  அமைத்து  அக் கழகத்தார்  நடுநிலை  திறம்பாமல்  ஆராய்ந்து  மதிப்பிடும்  நூலுரை  முதலியவற்றிற்குத்  தக்கவாறு  பொருட்  பரிசிலும்  பட்டங்களும்  வழங்கல்   வேண்டும் .இச் செயன்முறை  பெரிதும்  தமிழ்நாட்டுச்  செல்வர்களைப்  பொறுத்ததாகும் .  

                 புலவர்க்கு  வறுமை  தேர்தல்  பண்டுதொட்டு  உள்ளதே . அதற்குக்  காரணம்  அவர்  புலமைச் செல்வத்தைப்  போற்  பொருட்  செல்வத்தை  ஈட்ட  விருப்பமும் , முயற்சியும் , உபாயமும் . மேற்கொள்ளாமையேயாகும். புறநானூற்றை  ஆராய்வோமாயின் , புலவர்  வறுமைத் துன்பம்  பல  வெளியாம் .  பெருஞ்  சித்திரனார்  என்னும்  புலவர்  பெருமான்  குமண வள்ளலை  நோக்கி , “வாழு  நாளோ  டியாண்டு  பலவாக” எனத் தொடங்கிக்  கூறிய  பாட்டில் ,  தம் , தாய் , மனைவி , குழந்தைகள் , சுற்றத்தாராகிய  இவர்கள்  பசியால்  வருந்துதலைக்  கூறும்  பகுதிகள்  கன்னெஞ்சையுங்  கரைப்பன  அல்லவோ !

                ஆனால் , இவர்  வருத்தங்  கண்டு  அக்காலத்து  வள்ளல்கள்  இவர்களை  எவ்வாறு  பேணினர்  என்பதற்கு  அக் குமண  வள்ளல்  வரலாறு  ஒன்றே   போதிய  சான்றாகும் . உண்மையாகவே  தம்மைப்  பாடி  வந்த  புலவர்க்கு  உயிரையும்  வழங்க  ஒருப்பட்டவ ரல்லரோ   நம்  தமிழ்  வள்லல் !  ஆ !  ஆ !  அவர்  கொடைக் குணத்தை என்னென்று  கூறுவேன் .  உள்ள  பொருளெல்லாம்  புலவர்க்கீந்து  உடன் பிறந்தார்க்கு  அஞ்சிக்  காடுறை காலைத்  “தலை  கொடு வருவார்க்கு  ஆயிரம்  பொன்  தருவேன் “  எனப்  பறைசாற்றிய  தம்பியார்  செயலை  அன்புடையார்  சிலர்  நம்  வள்ளற்  பெருமானுக்கு  மறைவிற்  கூற ,  அது  கேட்ட ஞான்று   அவ் வள்ளலார்  முகம்  மேற்கொண்ட   மலர்ச்சி ,  அரசியல்  முடிசூடத்  தொடங்குங்கால்   மந்தரை  சூழ்ச்சியால்  வனம்  போக்க  முயன்ற  கைகேயியின்  கடுஞ் சொற்  கேட்டு ,  “அப்பொழுதலர்ந்த  செந்தாமரையினை”  வென்ற  இராமபிரான்  முகமலர்ச்சியினும்  விழுமியதன்றே !  இராமபிரானுக்கு  நாடு  நீங்குதலும் , குமண வள்ளலுக்கு  உடல்  நீங்குதலும்  அம் மலர்ச்சிக்குக்   காரணங்களான மை  ஈண்டுக்  கருதற்பாலது .  அவ்வள்ளல்  தன்  மகிழ்ச்சிக்குக்  காரணமாக்  கருதியது , “இறந்த ஞான்று  பெற்ற  தாயும்  பிணமென  வெறுக்கச்  சீயோடு  புழுவும்  மணமும்  சேரும்  இச் சென்னிக்கு  ஓராயிரம்  பொன்  விலை  மதித்தனன்  என்  அருமைத்  தம்பி “   என்பதேயாகும் . இங்ஙனம்  தம்  உயிரையும்  புலவர்  பொருட்டு  வழங்க  ஒருப்பட்ட  வள்ளல்கள்  வாழ்ந்த  காலத்துப்  புலவர்  வறுமை  நெடிது  நில்லா தொழிந்திருக்குமென்பது  கூற  வேண்டா .  புலவர்மாட்டு  வள்ளல்கள்  வைத்த  மதிப்பிற்கோர்  எல்லையில்லை.

        எத்துணை  வறுமை  நேரினும்  மதிப்பிலார்  தரும்  பரிசிலைப்  பெறுதற்கு  அக்காலத்துப் புலவர் ஒருப்படுதலும்  இல்லை .  இதனால் , வறுமை  முதலியவற்றைக்  கருதித்  தம்  தகுதியினின் றும்  இழிதலாகாதென்பதைப்  புலவர்கள்  இன்றியமையாது  போற்றிக்  கோடல் வேண்டுமென்பது  போதரும் , வருந்தியும்  தங்  கடமையைச்  செய்தல் வேண்டும் . கற்றல்  பொருள்  பெறுதற்கன்று;  அறிவைப் பெருக்கி  அதனால்  இன்பம்  நுகர்தற்கேயாம் . புலவர்  கருத்து  இவ்வாறாதல்  வேண்டும்  .புரப்பார்   கருத்துப்  பொருட்கொ டையிற்   செல்லல்  வேண்டும் .  

            புலவர்களைப்  பாதுகாத்து  அவர்  செந்நாவாற்  பாராட்டப் படுதலினும்  செல்வர்  பெறும்  பேறு  வேறு  யாதுளது ? காலத்தாற்  கவரப்பட்ட  செல்வருட்  புகழுடம்பு  கொண்டு  இன்றும் நம்மோடு  அளவளாவி  இன்புறுவார் , புலவர்  பாடும்  புகழ்  படைத்தாரன்றே ! கற்றவர்க்கு  ஈத்துவக்கும்  பேறில்லாதார்  ,  செல்வம்  படைத்தும்  ஒளியும்  புகழும்  இலராய்,  விலங்கோடு  ஒப்ப  உண்டு  களித்துத்  துஞ்சும்  இயல்பினரேயாவர் .  ஆதலாற்  செல்வர்களே  !  புலவரைப்   போற்றுதல்  நும்மைப்  போற்றுதலாகும் . ஆதலின் , தமிழ்  நலம்  கருதி  இன்னோரன்ன துறையில்  இறங்குமின்கள் . செல்வம்  படைத்த  ஞான்றே  புலவர்  பக்கலிருக்க  விழைமின்கள் !  பற்பலவாற்றானுஞ்  செலவழிக்கப்படும்  நும்பொருட்  கூறுகள் ஒன்று  புலவர்க்கெனச்  செய்மின்கள் !  அவிச்சுவையினும்  இனிய  கவிச்சுவையை   நுகர்மின்கள் !  நும்  பூதவுடல்  வன்மையுற்றி ருக்கும்   ஞான்றே  புகழுடலின்  ஆக்கத்திற்கு  வேண்டுவன  புரிமின் கள்!  அழிதன்  மாலையதாகிய  செல்வத்தைக்  கொண்டு  அழியாப்  புகழை   வளர்த்தற்குரிய   நெறியைப்  பற்றுமின்கள்  !  புகழொன்றோ ,  வலவனேவா  வானவூர்தி   யெய்துதலாகிய   பண்ணியப்  பயனும்  நுங்கட்காம் .

“அர்ச்சனை  பாட்டேயாகு  மாதலால்  மண்மேல்  நம்மைச் 

 சொற்றமிழ்  பாடுகென்றார்  தூமறை   பாடும்  வாயார் “

என்று  அருண்மொழி  தேவரும் ,

“தித்திக்கு  மணிவார்த்தை  இன்னுஞ்  சின்னாள் 

 திருச்செவியில்  அருந்தவும்” 

என்று  பரஞ்சோதி  முனிவரும்  கூறியாங்கு , மறை  பாடும்  பெரும்  புலமையும்  ,  பொன்மலை  வெள்ளி மலை களாகிய  பெரும் பொருளும் , வாய்க்கப்பெற்று   எல்லாவுயிர்க்கும்  உயிராக  விளங்கும்  பரமபதியாகிய  இறைவரே    சுந்தரமூர்த்தி  நாயனார்  மாணிக்கவாசகர்   முதலிய  அருட்புலவர்   திருப்பாடல்களைக்  கேட்க  விழைந்தன ரென்றால்  அவரால்  இயக்கமுறும்  நாம்  புலவர் பாட்டில்  அவாவுறாதிருத்தல்  எங்கனம்  அமையும் ?  

  •  சங்கங்கள் , கல்லூரிகள்  முதலியன

         இனி , இக்காலத்துத்  தமிழ்  புரப்பான்  எழுந்த  சங்கங்கள்  கல்லூரிகளைப்  பற்றிச்  சிறிது  கூறுவேன் . தமிழ்  வளர்த்தலையே  பெரு நோக்கமாகக்  கொண்டு  எழுந்த  சங்கங்கள்  பலவற்றுள்   மதுரைத்  தமிழ்ச்  சங்கமும், இக்கரந்தைத்  தமிழ்ச் சங்கமும்  ,  எம்  நகரங்களிலும்   பிறவூர்களிலுந்  தோன்றிய  சங்கங்கள் பலவற்றுட்  சிலவுமே   இயன்றவரை தம்  கடமையைப்  புரிந்து வருகின்றன . இற்றைக்கு  இருபத்து மூன்று  ஆண்டுகளுக்கு  முன்னர்   ஓர்  உத்தமரின்  தூய  எண்ணத்தில்  அரும்பி   அதன்  பயனாக  இதுகாறும்  செவ்வி  குலையாது  பாதுகாக்குந்  துணைவரைப்  பெற்று  விளங்கும்   மதுரைத்  தமிழ்ச்  சங்கம் , மாணாக்கர்  பலருக்கு  உணவு  கொடுத்துத்  தமிழ்  கற்பித்து , தேர்ச்சி  பெற்றோர்க்குத்  தகுதிப்  பத்திரமும்   ஓரளவு  பொற்  பரிசும்  உதவி , தனித்  தமிழ்க் கல்விக்கு  வரம்பிட்டு  வளர்ந்து  வரும்  செய்தி  பாராட்டத்தக்கதே . இன்னும்  அது  தன் நோக்கங்களெல்லாவற்றையும்   முற்ற  நிறைவேற்றுவதற்குப்   பொருளாளர்  உதவியை  வேண்டி  நிற்கின்றது .   

            இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  நிலையை  இறுதியிற்  கூறுவேன் .

            எம்மனோர்  நரங்களில்   முளைத்த  சங்கங்களிற்  பல,  சில  ஆண்டுகளாகக்  கண்  விழிப்பதும்  உறங்குவதுமாகக்  காலத்தைக்  கழிக்கின்றன .  பொருட்குறை  நேராதோயென்று  நீங்கள்  நினைக் கக்கூடும் . அன்பில்  வழிப்  பொருளிருந்தும்  அது  நற்காரியத்தில்  எங்ஙனம்  பொருந்தும் ?  எம்  தனவைசியர்  கணக்கற்ற  பொருளைப்  பல்யாண்டுகளாக  இவ்விந்திய   தேயத்திலுள்ள  சைவ  வைணவ  ஆலயங்களுக்குச்  செலவிட்டிருக்கின்றனர்  .  தெய்வ  பக்தியை  மக்களுக்கு  உண்டாக்குதற்கு  இவ்வறங்கள்  பயன்படு வன வெனினும் , அதற்கு  இன்றியமையாச்  சாதனமாகிய  கல்வியையன்றோ  முதன்மையாக  வைத்துப் போற்றல்  வேண்டும் . சில  ஆண்டுகளுக்கு  முன்வரை  வடமொழி  வேத  பாடசாலை களுக்கும் , வடமொழிக் கல்லூரிகளுக்கும்  பெருஞ்  சோற்றில்லங் களுக்கும்  பொருளை  வாரி  இறைத்து  வந்தனர் .  சின்னாளாக ஆங்கிலக்  கல்லூரிகளுக்கும்  வழங்கத்  தலைப்பட்டு  வருகின்றனர்.  இவ்விரு  திறத்திலும்  செலவிடப்பட்ட  பொருட் கூறுகளில்  ஒரு  சிறு  பகுதியேனுங்  கொண்டு  நம்  அருமைச் செந்தமிழ்த்  தெய்வத்திற்குத்  திருக்கொயில்  அமைத்திலர் . தமிழ்த் தெய்வத்தை வழிபடும்  மாணாக்கர்களுக்குப்  பெருஞ்  சோற்றில் லங்கள்  அமைத்திலர் . இக்குறையை  எடுத்து  அன்பர்கள்  பலர்  அடுத்தடுத்துக்  கூறி  வந்ததன்  பயனாக  இப்பொழுது  எம்மவர்  நகரங்கள்  சிலவற்றில்  தமிழ்த் தெய்வத்  திருக் கோயில்கள்  அமைத்து , தமிழ்ப்பிளைகளுக்கு  ஓர்  அளவு  கல்வி  கற்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர் .  அக்கல்வியும்  உயர்தர  நிலையில்  இன்னும்  பயிற்றப்படவில்லை .  

                 பல்யாண்டுகளாக  வடமொழி  வேத  சாத்திர  பாடசாலை களுக்குப்  பொருள்  செலவழித்த  முறையில்  தமிழ் மொழி வளர்ச்சி குறித்துச் செலவிடாமைக்குக்  காரணம்  இதன்  பெருமையை  அவர்களுக்கு  எடுத்துச் சொல்லுவா ரில்லாமையும் , , யாரேனும்  தமிழ்ச் சுவையுணர்ந்தார்  சொல்ல  விரும்பின்  அவர்  சொல்  மதிக்கப்படுதல்   இல்லாமையும் , வடமொழியாளர்  செல்வாக்கு  இவர்களிடை  மிகுதிப்பட் டிருந்தமையுமேயாம் .  வடமொழியாளர்  தம்  மொழியைப்  பேணுதற் பொருட்டுச்  செல்வரைத்  தூண்ட  முயல்வது  அவர்  கடமையே .  அது  பற்றித்  தமிழரைப்  புறக்கணித்  தொதுக்கும்படி  அவர்கள் உபதேசிக்கவில்லை .  நாம்  நம் தாயை  மறந்திருப்போமாயின்   நமக்கு   நினைவுறுத்துவார்   யாரே ?  

               எம்  மரபினர்  புதிய   முறையில்  எவ்வறத்தையும்  முதற்கண்  தொடங்குதல்  அரிது  .  அறிவாளரொருவர்  தொடங்கு வாராயின் , அவர்  முறையைப்  பின்பற்றி  மற்றையோரும்  அந்  நற்காரியத்திற்  சேறலிற்  பெரிதும்  விரைவு  மேற்கொள்வர் .  இந்  நற்குணம்  ஒன்று  வருங்காலத்தில்   நலமளிக்கும்  தகையது . இதற்கு  எம்மவருள்  ஒருவர்  தக்கவாறு  வழிகாட்டியுள்ளார் . அவர்கள்  ஸ்ரீ நடராசர்  திருவருட்பாங்கால்   கானாடுகாத்தானிலே  எம்  தனவைசிய  மரபிலே , சிறந்த சிவஞானச் செல்வராகவும்  அருட் கவியாகவும் , விளங்கிய  பட்டினத்து  அடிகளைக்  குல முதல்வராகக் கொண்ட   செல்வப்பெருங்குடியிலே   தோன்றிய  திருவாளர்  சர்  சா  ராம  மு  அண்ணாமலைச் செட்டியாரவர்களே  ஆவர் . இவர்கள்  சிதம்பர  தலத்தில் ஆங்கில  வடமொழிகளுக்கு  அமைந்த  பெரிய   கல்லூரிகளை  யொப்பத்  தமிழ் மொழிக்கும்  ஸ்ரீ  மீனாட்சி திருப்பெயரால்  ஒரு  கல்லூரியமைத்துப்  பாதுகாத்து வருகின்றார்கள் . இது  தொடக்கம்  ஸ்ரீ நடராசர்  திருமுன்  நேர்ந்தமையால் , இனி  நம்  தமிழ்நாடு  முழுவதும் இம்முறை  மேற்கொள்ளப்படுதற்கு  இது  நன்னிமித்த  மாகுமென்பதி  ஐயமின்று . இவர்கள்  முறையைத்  தழுவி  மற்றையோரும்  தமிழ்  நாட்டிலுள்ள  ஒவ்வொரு  பெரிய  நகரங்களிலும்   நூற்றுக்கணக் கான  மாணவர்களுக்கு  உண்டி  உடை  முதலிய  உதவிகளைச்  செய்து தமிழ்  கற்பிக்கத்  தலைப்படுவாராயின் , இந் நாடு  சில  ஆண்டுகளில்  கல்விச் செல்வர்கள்  பலரைப்   பெற்றுத்  திகழ்வதாகும் .  

               தமிழ்  கற்க  விரும்பும்  நம்  நாட்டு  ஏழைச்  சிறார்க்கு   உணவு  கொடுத்தாலன்றி  அவர்கள்  கல்வியில்  தலைப்படார் . பசிப்பிணி யென்னும்  பாவியாற்  பற்றப்பட்டார்  கல்விச்சுவையை மிசைய  எங்ஙனம்  விரும்புவார் ?  மாணவர்களுக்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும் கல்லூரி  யமைத்தலாகிய  நல்லறம்  புரிவார் ,  உலகத்து  மக்கள்  உடல்  நலத்திற்   குரியதும் உயிர்  நலத்திற்குரியதுமாகிய  இருவகைப்  புண்ணியங்களையும்  ஒருங்கு  செய்தவராவர்  . ஓரிடத்தில் ஒரு  நூறு  சிறுவர்க்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும்  தனித் தமிழ்க் கல்லூரி இதுகாறும்  நம்  நாட்டில்  அமைந்திலதே !  இத்தகைய  நிலையம்  ஒன்றைக்கண்டு  கண்ணுங்  கருத்தும்  குளிருங்   காலம்  என்று  வாய்க்குமோ !  வேண்டுவார்  வேண்டுவன  அருளும்  இறைவன்  நும்  செவ்விய  உள்ளத்தில்  நின்று  இவ்வரும் பெருஞ்   செயலில்  நும்மை  ஊக்கி  அருளுவாராக .  

  • சமயக்  கல்வி

    நம்  செந்தமிழ்  மொழியைச்  செவ்விதிற்  பயிற்றுங் கல்லூரிகளி  லெல்லாம்  பிற  சமயங்களோடு  முரணாமல்   நம்  சமயக்  கொள்கைகளை   மாணாக்கர்களுக்கு   எளிதிற்  புலனாகும்  வண்ணங்  கற்பித்தல்  வேண்டும் . தெய்வமணங்  கமழாத  கல்வி  சிறந்த  பயனுடையதாகாது . “கற்றறியேன்  கலை  ஞானம்  கசிந்துருகே  னாயிடினும்”  என்ற  பெரியார்  திருமொழியும்  கல்வியின்  பயன்  கடவுளை  அறிந்து  நினைந்து வழிபடச் செய்தலேயாம்   என்று  அறிவுறுக்கும் .  கடவுளியல்  முதலியனவும், வழிபடுமுறை  முதலியனவும்  சமய  நூல்களைப்  பயின்றா லொழியத்   தெரியா . எல்லாம்  வல்ல  இறைவன் , “கற்றவர்  விழுங்குங் கற்பகக்கனி”  யாதலின் , அக்   கனியின்  இயல்பு  அறிதற்குரிய  வழியைக்  கல்வியின்  தொடக்கம்  முதல்  மேற்கோடலே  நன்றாம் . இக்குறிப்பை  நம்  தமிழ்  மூதாட்டியாகிய  ஒளவையார்  சிற்றுருவிற்  பெரும்பொருள்  பொதுள  அருளிய  ஆத்திசூடி , கொன்றைவேய்ந்தோன்  முதலிய  நூல்கள்  நன்கு  வலியுறுத்துவனவாம் .  மக்கட்குரிய  பொது  வொழுக்கங்களையும்  சமயம்  பற்றிய  சிறப்பொழுக்கங்களையும் ஒருவன்  ஒருங்கு  எய்துதற்குரிய  வழி  சமய நூற்  பயிற்சியானேயாம் . ஆதலின் , நம்  சிறார்  பயிலுதற்குரிய   பாடங்களுள்   சமயக்  கொள்கைகளைப்   பற்றிய  பாடமும்  ஒன்றாம்படி  செய்தல்  தமிழ்க்  கல்லூரிகளை  நடாத்தும் தலவர்களால்  மேற்கொள்ளத்தக்கதொன்றாம் .

                            6 .  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்

      இனி , இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தைப்  பற்றிச்  சில  கூற  வேண்டுவது  என்  கடமையாகவுள்ளது .  இச்சங்கம்  இறைவன்  அடிசேர்ந்த  திரு . வே . இராதாகிருட்டிண பிள்ளை  அவர்கள்  நல்லுள்ளத்திற்  பதிந்த  செழுமை  மிக்க  வித்தினின்றுங்  கிளைத்தெழுந்ததாகும் . தூய்மைமிக்க  குளத்தினின்றும்  தோன்றுவது பிற்காலத்தில்  எந் நிலையிற்   செழித்து  வளரும்  என்பதற்கு  இச்சங்கமே  சான்றாகும் . அவர்கள்  பருவுடலை  யான்  அறிவேனாயினும் , அவர்களுக்கு  முன்  தோன்றியவர்களும்  இற்றை ஞான்று   இச்சங்கத்தைக்  கண்ணுங்  கருத்துமாகப்  பாதுகாத்துவருகின்றவர்களும் , என் இனிய நண்பரும்  ஆகிய   திருவாளர்  த . வே . உமாமகேசுவரம்  பிள்ளை  யவர்களின்  உயர்ந்த  குனஞ்  செயல்களே  அவர்க்கு  இளையாரின்  நிலையையும்  இற்றென்று  கிளப்பனவாம் . அவர்  நுண்ணுடம்பை  தம்  அகக்கண்  கண்டு  களிக்கின்றது .  அந் நல்லவ ருள்ளத்திற்  பதிந்து  வெளிப்பட்ட  இக்கல்விக் கழகம்  நாடோறும்  திங்கடோறும்   ஆண்டுதோறும்  புதிய புதிய திருத்தங்களை  மேற்கொண்டு  , பற்பல  அரிய  தமிழ்ப்  பணிகளை  இயற்றி  வருகின்றது .

              இது, ‘பெத்தாச்சி புகழ் நிலையம்’  என்னும்  சுவடி  நிலையம் , கைத்தொழிற்  செந்தமிழ்க் கல்லூரி , திங்கள்  வெளியீடு  முதலியவற்றைத்  தன்  உறுப்புக்களாகக்  கொண்டு  எல்லா  நலன்களும்  ஒருங்கமைந்த தலைவரைப்  பெற்றுத் , தான்  செய்யவேண்டிய  செயல்களைச்   செவ்வன  ஆற்றி  வருகின்றது; நூற்றுக்கணக்கான   மாணவர்களுக்குத்  திருந்திய  முறையிற்  கல்வியை  ஊட்டுகின்றது . இக் கழகத்தினின்றுந்  திங்கள்  வெளியீடாகத்  தோன்றிய  தமிழ்ப்  பொழிலோ   தோன்றிய  சில  திங்களுள்  தமிழன்பர்களின்  உள்ளத்தைக்  குளிர்விக்கும்  உள்ளுறையாந்  தண்ணிய  நிழலையும்  , அரும்பொன்  மணமிக்க   வேற்று மொழி விரவாத்  தண்டமிழ்ச்  சொற்றிரளாம்  நறுமலர்த் துணர்வுகளையும்  உதவித்  தமிழ்  நிலத்தாரை  மிகவும்  இன்புறுத்தி  வருகின்றது . வேற்று மொழிப்  பயிற்சியால்  வெதும்பிய  அன்பர்கள்  இப்பொழிலை  அடைவார்களாயின்  அவ்வெப்பம்  ஒழியப்பெற்றுச்   செந்தமிழ்த்  தட்பத்தால்  இன்புறுதல் ஒருதலை .

              இன்னோரன்ன  அருஞ்  செயல்களை  மேற்கொண்ட  இச்சங்கத்தின்  வேலையோ  மிகப் பெரிது . இதற்குத்  துணைக்  கருவியாகவுள்ள  பொருள்  வருவாயோ  மிகச் சுருக்கம் .  இச்சங்கத்தின்  அருமைத் தலைவராகிய  திருவாளர்  உமா  மகேசுவரம்  பிள்ளையவர்களும் , ஏனைய  அன்பர்களும்  ஆண்டுதோறும் உதவி  வரும்  பொருளைக்  கொண்டே  இஃது  இத்துணை  அரிய  வேலை ஆற்றி வருகின்றது .  இங்ஙனம்  ஆண்டுதோறும்  பலரிடத்தினின்றும்  சிறிது  சிறிதாகத்  தொகுக்கப்படும்  பொருளைக் கொண்டு  இப்பணி  நடைபெறுதல்  ஒரு வகையில் எல்லார்  அன்பிற்கும் இது நிலைக்களனாதலைப்   புலப்படுத்துமாயினும்  , இங்ஙனமே  கடைபோக  இயற்றுதல்  அரிதாகலான்  இதற்குத் தக்க பெரும் பொருள் மூலதனமாகத்  தொகுத்தமைத்தல்  இன்றியமையாததாகும் .

              பண்டைக்காலத்துப்  பெரும்  புலவர்களையெல்லாம்  பொருட் கொடையாலும்  பிறவற்றாலும்  நம்  உயிரினுஞ்  சிறப்பப்  போற்றி  வந்த  சோழ  மன்னர்கள்  வாழ்ந்த  நாடன்றோ  இது . செந்தமிழ்க்  கல்வியைச்  சைவ  சமயத்தோடு  வழங்குதற்கு  எழுந்த  சைவ  மடங்கள்  பல  விளங்கப்  பெறுகின்றதும் இந்  நாடன்றோ!  அம் மடங்கள் பண்டு செய்த தமிழ்ப் பணிகள் அளவில்  லாதனவாகும் .  அம்மடங்களில்  விளங்கிய  சைவ  சீலர்களாகிய   அத்  துறவறச்  செல்வர்களால்  வெளிப்பட்ட  செய்யுணூல்கள்  எத்தனை  !  சிறந்த  உரை  நூல்கள்  எத்தனை ! அவர்பாற்  கசடறப்  பயின்றார்  எத்துணையர் !   அம்மடங்களுக்குத்  தலைவராக  இற்றை  ஞான்றுள்ளார்   தம்முன்னையோர்  போலத்  தாம்  தமிழ்ப்  பரிபாலனத்திற்   றலைப்பட்டு  இன்னோரன்ன  தமிழ்ச்  சங்கங்களுக்கும்  உதவி  புரியலாமே !  அவர்கள்  இதனை  உளங்  கொள்ள அவர்  உளத்துறை  தெய்வத்தை யாம்  வேண்டுதலே  யன்றி  வேறென் செய்யக்  கடவோம்  !  

          மற்றை  நாடுகள்  யானைகளையும்  முத்துக்களையு முடையனவாக , மக்கட்கு  இன்றியமையாச்  சோற்றை  மிகவுடையதன்றோ  இச் சோழ வளநாடு  ?  இச் செல்வ  நாட்டில்  அருமருந்து போல்  தோன்றிய  இச்சங்கத்தை  அடுத்த  மாணவர்க்குச்  சோறிட்டுத்  தமிழ்  கற்பித்தலன்றே  இந் நாட்டின்  பெருமைக்கு  ஏற்றதாகும் .?  இங்குள்ள  பொருளாளர்  மனங் கொள்வாராயின்   இஃது   இயலாததொன்றோ  !  பிற மொழிக்   கல்லூரிகளுக்கு  ஒரு  திங்கட்கு  எத்தனை  ஆயிரமோ  செலவாக , இச் செந்தமிழ்த்  தாயின்  திருக்கோயிலுக்குத்   திங்களொன்றிற்கு  ஓராயிரமேனும்  பயன்படுத்தல்  வேண்டாமா ?  இத்துணை  வருவாயுள்ள  மூலப் பொருள்  தொகுத்தல்  பெருங்  காரியமா ?  

தமிழ்க்கண்  அன்பு  மிக்க  திருவுடையீர் !

நம்  வாழ்நாளிற்  பற்பல  பகுதியாகச்  செலவிடப்படும்  பொருட் கூறுகள் என்று  இதற்கெனத்  தனிப்படுத்துதவ  முன்  வருவீராயின்  , இது  நிறைவேறுவதற்கு  எத்துணை  நாட்  செல்லும் ? ஆ !  எம்  நகரத்து வைசியச்  செல்வருள்ஒருவர்  மனங்கொள்வாராயின்  அவருதவியே  இதற்குக்  கண்டு  மிகுவதாமே  !  தமிழ்ச்சுவைக்கு   அவாவுற்றுச்   சுந்தரர்  மாணிக்கவாசகர்  முதலிய  அருட்பெருங்கவிகளை  இரந்த  சிவபிரானுக்குத்  திருக்கோயில்  புதுக்க  எம்மவருள்  ஒரு  குடும்பத்தார்  தனிமையிற்   பதினைந்து   நூராயிரங்களுக்குமேற்   செலவிட்டிருக்கின்றனரே  !  அத்தகையார்  அப்பெருமானுக்கு  இன்சுவை  யமுதாவது  இத்தமிழென  உணர்வரேல்  இதற்கு  ஒரு  நூராயிரம் உதவல்  பெரிதாகுமோ ?

               இச் சோழவளநாட்டில்  அளவிறந்த  நிலப் பகுதிகளையு டைய   பெருஞ் செல்வர்கள் பலர்  இருக்கின்றனரே ! வேற்று  நெறியிற்  கணக்கிறந்த  பொருள்களை  வாரியிறைக்க  மனம்  ஒருப்படும்  அவர்கள்  இன்னோரன்ன  தமிழ்ச்சங்க  வளர்ச்சிக்கு  உதவி , கிடைத்தற்கரிய  புகழையும்  புண்ணியத்தையும்  கைப்பற்ற   இதுகாறுந்  தாழ்ந்திருந்த லென்னையோ !  தினைத்  துணை  நன்றியையும்  பனைத்துணையாக  ஏற்றுக்கொண்டு  பாராட்டும்  இச்சங்கத்தின்  பயின்றரு குணத்தை  யுணர்ந்த  நீவிர் . இதற்குப்  பனைத்துணை  உதவுவீராயின்  இது  கூறும்  புகழுரை  யெல்லாம்  நும்  மேலாவாமல்லவா !   இந் நாட்டுச்  செல்வர்களாகிய  நும்மனோர்  உள்ளங்களும் எம்  தனவைசியப்  புண்ணிய  சீலர்கள்  உள்ளங்களும்  இச்சங்க  வளர்ச்சியில்  ஒன்றுபட்டுப்  பொருளுதவி  புரிந்து  மகிழப்  பெருங்கருணைத்  தடங்கடலாகிய  இறைவன்  திருவருள்  பாலிப்பாராக ! 

                                         7 .  தொகுப்பும்  வாழ்த்தும்

ஐயன்மீர் !

                    இதுகாறுங்  கூறியவற்றால்  கல்வி  மக்களுக்கு  இன்றி யமையாத  தென்பதூஉம் ,  அதனைத்  தாய்மொழி யாகிய  தமிழ்  மூலம்  பயிலல்  வேண்டுமென்பதூஉம் , தமிழின்  தொன்மையும்  சிறப்புக்களும்  தொல்காப்பிய  முதலிய  இலக்கண  நூல்களானும்  பலவகை  இலக்கிய நூல்களானும்  சமய  நூல்களானும்  விளங்குமென்பதூஉம் , தமிழ்  பிறிதொன்றினின்றும்  தோன்றாத்  தனி மொழியென்பதூஉம் ,  இதன் கணுள்ள   அகப்பொருள்  முறை  வனப்புக்கள்  சிறந்தனவென்பதூஉம், இஃது  அறிவு மொழி யென்பதூஉம் , போலி முறைகளைக்  களைந்து  இதனை  வளர்க்க  வேண்டுமென்பதூஉம் ,  வளர்த்தற்குரிய  வழிகள்  மொழி பெயர்ப்பு, ஆராய்ச்சி , செய்யுணூல் , உரைநூல் , வரைதல்  முதலியன  வென்பதூஉம் ,  அத் துரைகளில்  தலைப்படும்  புலவர்களை   பொருட்பரிசல்   பட்டங்கள்  அளித்துப்  போற்றுதல்  வேண்டுமென்பதூஉம் ,  பண்டைப் புலவர்களின்  இயல்பும்  அவர்களைப்  பாதுகாத்த  வள்ளல்களின்  இயல்பும்  இன்ன வென்பதூஉம் ,  புலவராற்  பாராட்டப்படுதல்  செல்வர்க்கு  இன்றியமையாத  தென்பதூஉம் , இக்காலத்துத்  தமிழ்  வளர்ப்பான் எழுந்த  சங்கங்களின்  இயல்பு  இன்னவென்பதூஉம் ,  பெரிய  தனித்  தமிழ்க்  கல்லூரிகள்  அமைத்து   பன்னூறு மாணவர்க்கு   உணவளித்துத்  தமிழ்  பயிற்றல்  வேண்டுமென்பதூஉம் ,  தமிழ்ப்  பலகளைக் கழகம்   ஒன்று  விரைவில்   நிலைபெறச்  செய்தல்  வேண்டுமென்பதூம் ., தமிழ்ப்  பள்ளிகளில்  மொழிப்  பயிற்சியோடு  சமய  நூற்பயிற்சியும்  மாணவர்க்கு  வேண்டுமென்பதூஉம் , இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின் மேம்பாடும்  இதற்கு  வேண்டுவனவும்  இன்னவென்பதூஉம் , தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  தமிழ்  வளர்ச்சியிற்  பேரூக்கமுடையராய்   தக்கவாறு  பொருளுதவி  புரிந்து  போற்ற  வேண்டுமென்பதூஉம் ,  திருவருள்  முன்னிற்க  வென்பதூஉம் , பிறவுமாம் .

            இத்துணைக்காலம்  என்  சிற்றுரைக்குச்  செவிசாய்த்துப்  பொறுமை யணியை மேற்கொண்டு  விளங்கும்  பெரியீராகிய  நுங்கள்  நன்றியை  நினைவுட்  கொண்டு ,என்  உளமார்ந்த  வணக்கத்தை  நுமக்கு  உரிமைப்படுத்துகின்றேன் .

போற்றுந்  தமிழும்  புலவரும்  வாழ்கநலஞ் 

சாற்றுங்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  —  ஏற்றமொடு

பல்லாண்டு  வாழ்க   அருல்  பாலித்  ததுபுரக்கும்

எல்லோரும்  வாழ்க  இனிது .

                                    &&&&&&&&&&&&&&&&&&&

                            2 .  தமிழ்ப்   புலமை

( துரையூரில்  ( 06 . 08 . 1932 ) கூடிய  திருச்சிராப்பள்ளி —  தஞ்சை மாகாணத்  தமிழ்ப்  புலவர்  மாநாட்டில்  நிகழ்த்திய  திறப்புரை )

ன்பர்களே ! 

                         இங்குத்  திறந்து  வைக்கப்  பெறுவது  தமிழ்ப்  புலவர்  மாநாடாகும் . நம்  அமிழ்தினுமினிய  தமிழ்  மொழி  பண்டைக்  காலத்தில்  இற்றை  ஞான்றினும்  எத்தணையோ  பன்மடங்கு  அகன்ற  நிலப்  பரப்பைத்  தனக்குரியதாகக்  கொண்டு  விளங்கிய தென்பதும் , குமரியொடு  வடவிமயத்தொருமொழி  வைத்துல காண்ட   சேரலாதனால் , குமரிமுனை  தொட்டு  இமயமலை வரையும்  இறை மொழியாக  வழங்கப்  பெற்ற  தென்பதும் , தொன்மையில்  தனக்கு  நிகராக  ,  இக்காலத்து  வழங்கும்  மொழிகளில்  மிகச் சிலவன்றி  இல்லை  யெனத்தக்க  நிலையில்  உள்ளதென்பதும்   நீவிர்  நன்றுணர்வீர்கள் .  ஆதலின் , இவை  பற்றி  யான்  விரித்தல்  வேண்டா  வென  நினைக்கிறேன் .

    செப்பமிக்க  இயலமைப்பும்   அவ்விலக்கணங்களுள்   வேறு  எம் மொழிக்கும்  இல்லாது தனக்கெனச்  சிறப்பு முறையின்  அமைந்த  பொருளிலக்கண  ஒழுங்கும்  , முதிர்நலச் சொற்களும் சிதைவில்  நுண் பொருள்களும்  தங்கி  நின்றொளிருஞ்   சங்க  நூற்றொகையும்  புன்னுனிப்  பனியல்  மன்னுமா  மலையுருத்  துன்னிநின்  றொளிர்தரல்  போலச்   சிற்றளவினவான  சொற்றொடர்களிற்  சிறந்தமைந்தனவாகிய  பெரும்  பொருள்கள்  தோன்றித் திகழும்  அறமுத  னுதலிய  திறமை  நூல்களும், அன்பினைத்  திணை  அகவொழுக்க  நேர்மையும் , தொடர்நிலைச்  செய்யுட்  சுவைநலக்  கனிவும் , குறிக்கோள் பற்றிய  அறிவியல்  நூல்களின்  திட்ப நுட்ப  அமைவும் , காதல்  மிக்கு  ஒதுவார்  கேட்பாரது  கல்லினும்  வலிய  உள்ள  நிலையையுங்  கரைத்து அவர்தமை  அன்புருவாக்கி   இறை  திருவருட்கு  இனிதின்  ஆளாக்கும்  இசை  நலந்  தழீஇய  அருட்  பாசுரப்  பகுதிகளும் , இன்னும்  பற்பல  துறைகளைப்  பற்றி  நின்று  திகழும்  நூற்றொகைகளும்   தன்பான்  மிளிர , இனிமையாங்  குணத்தை  இயைந்து  தட்பம்  தகவும்  ஒட்பமும்  ஒருங்கமையப்  பெற்ற , எல்லாம்  வல்ல  இறைநிலை  போல் என்றும்  நின்று  நிலவுவது  தென்றமிழ் மொழியே  ஆகும் . இத்தகைய  தனித்த  நந்தமிழின்  சால்பினைப்  பற்றிப்  பெரியோர்  பற்பலரும்  அவ்வப் போது  பல  கல்விக்  கழகங்களிற்  பேசியும்   எழுதியும்  வெளியிட்டுள்ளனர்  .  ஆதலின் , அதனையே  யானும்  ஈண்டு  விரித்துக் கூற  முற்படுதல்  வேண்டாதொன்றென  அமைகின்றேன் .  

  •  புலமையின்  குறிக்கோள்

          இனிப்  புலமையாவது  யாதென  ஆராய்தல்  இன்றி  யமையாத தாகும் .  ஒரு  நூலை  ஆசிரியர்  முகமாகக்  கற்ற அளவினானும் , இயன்முறை  தெரிக்கும்  நூற்பாக்களையும்  எடுத்துக்காட்டாஞ்  செய்யுட் பகுதிகளையும்  சொற்பொருள்  அறிந்து கொள்ளும்  அவ்வளவினானும்  புலமை நிரம்புவ தன்று . இவ்வெல்லாம்  , சிறந்த  புலமையின்  உறுப்புக்களாமன்றி  உறுப்பியாகா .  ஒன்றனை  ஊன்றிப்  படிக்குங்கால்   படிக்கப்படுஞ்  சொற்  குழுவின்றி உணரப்படும்   பொருட்கண்  உள்ளம்  உறைத்து  நிற்ப ,  சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மைத்தாகிய  உயிர்  , அவ்விழுமிய  பொருட்கண்  பிரிப்பின்றிக்  கலந்து  அப்பொருட்  பயனை  நுகர்தலும் ,  நுகர்ச்சிக்குப்  பின் வெளியுலகத்து  மீண்டு  நினைவு  கூர்தலும் , தீர்ந்த  உண்மைகளைக்  கடைப்பிடித்துத்  தம்  குறிக்கோளாக  ஒழுக்கியலின்  மேற்கோடலும்  மேற்காட்டிய  உறுப்புக்களோடியையுமாயின் , ஒருவாறு  புலமை  நிரம்பியதாகக்  கொள்ளலாம் .  புலமையின்   குறிக்கோள்  உலகியற் பொருள்  அளவின்  இருப்பின்  அது  சிறுமையெய்தி  மாசுடையதாகும் . அறிவை, ஒளி வலியுடைய  தாக்கி   அகலமுறச் செய்து அவ்வகன்ற   ஒளி விளக்கத்தின்  கண்ணே  முன்னர்க்  காணப்படாதனவும்  உலப்பிலா  இன்ப  விளைவிற்கேற்றன வுமாகிய  அரிய  பல  நுண்பொருளை  அகக்  கண்ணாற்  கண்டு  இன்புறுதலாகிய  வாழ்க்கையே  புலமை  வாழ்க்கை  ஆகும் .

            ஓரளவுட்பட்ட   சில  பல  நூல்களை  வினவுவார்  கருத்துக்கியைய  விடையிறுக்கு  முகமாகக்  கற்றுத்  தகுதிச்  சீட்டுப் பெரும்  அவ்வளவில் , புலமை  தன்  நிறைவை  யெய்தியதாக  எண்ணி  விடலாகாது .  பயிலுந்தோறும்  பயிலுந்தோறும்   பண்புடையாளர்  தொடர்பு  எங்ஙனம்  இனிமை  சான்று  பயன்  விளைக்குமோ , அங்ஙனமே  மீண்டும்  மீண்டும்  கற்குந்தோறும் கற்குந்தோறும்   உயரிய நூல்களின்  நுண்பொருள்  நலங்கள்   நம்  உள்ளத்தை  ஈர்த்துத்  தம்பாற்படுத்துப்  பேரின்புறுத்துவனவாம் . மிக  விரைந்தோடும்  வெள்ளப்  பெருக்கினை யுடைய  ஆற்றின்  நீர்ச் செல வாற்றலை ஒருவன்  அளக்க  நினைக்கின், அதன்கண்   அவன்  எதிரேறிச்  செல்ல  வேண்டுவதே  இன்றியமையாததாகும். அவ்வாறின்றி  அந்நீர்ச்  செலவோடியைந்து  அதனான்  ஈர்த்துச்  செல்லப்படுவானாயின்   அவ் வாற்றலின்   நிலை  இயற்றென  உணரகில்லான் . அங்ஙனமே  உயர்நிலைப்  பாவலர்  மயர்வற  ஆகிய  விழுப்பொருள்  நிறைந்த  செய்யுட்களின்  சொற்பொருளொழுக்கில் , நும்  நுண்ணறிவு  எதிரேறிச்  செல்லல் வேண்டும் . அங்ஙனஞ்  சென்று  அச் சொற் பொருள்களின்  வன்மை  வனப்புக்களை   ஆராய்ந்தளக்க  முயலின் , அச் செய்யுலாசிரியன்  ஆழ்ந்து  நினைவிற்  கண்டு  வைத்த  அரும்  பொருண்  மணிகளின்  இயலொளியை  உண்மையாகக்  கண்டு  இன்புறலாம் .  ஆராய்ந்து  தெளிவதற்கு  முன்   அச்சொற்  பொருள்  களோடு  எதிர்த்து  நிற்றலே  நன்றாம் .  

                 பொருணலத்  தெளிவின்  பின்  அச்  சொற்பொருள்  களோடு  நம்  அறிவை  இரண்டறக்  கலப்பித்து , அவற்றின்  வண்ணமாக  நின்று அசைவுறும்  நிலையெய்தி , இன்ப  வெள்ளத்துள்  திளைத்தல்  வேண்டும் . ஒரு  சிறந்த  நூலாசிரியன்  குறிக்கோள்  இன்னதெனத்  துணிந்தாலன்றி   அவன்  பலவாறு  பன்னிப்  பன்னி  உரைக்கும்  உரைப்பொருளின்  உண்மைக் கருத்து  அறியப்பட்டதாகாது .  சிறந்ததொரு  முடிபொருளைச்  செப்பனிட்டுத்  திறம்பட  உரைக்க  முற்படும்  புலவன்  , பருந்தின்  வீழ்ச்சி  போற்  சேய்மையினின்றே   முடிபொருட்குரிய  சார்வுப்  பொருள்களில்  மெல்ல  மெல்லத்  தலைப்பட்டுச்  செல்லுவன் . அச்செலவின்  நிலையை  அந் நெறி  நின்றே  உய்த்துணர்தல்  வேண்டும் .செல்வழிக்கட்  கண்டனவே   தீர்ந்த  பொருளென  எண்ணி  விடலாகாது . நூலுரையாசிரியர்களின்  கருத்துப்  படர்ச்சியில்  நம்  அறிவுத்  தொடர்ச்சி  பின்னிடுதல்  நன்றன்று  .  அயரா உழைப்பிற்கு  அகப்படாத  அரும்பொருள்  யாதுமின்று  . தொடர்  நிலைச்  செய்யுட்கலின்  உயிரனைய  சுவை நலம்  விராய  குறிப்புப்பொருளை   உனர்த்தலின்  நம்  அவா  முற்பட வேண்டும் . சுவை   நலங்  கலந்த  அத் தொனிப்  பொருள்  தங்குதற்குரிய  இனிமையாப்  பாடல்கள்  உயிரற்ற  வெற்றுடல்  போல்வனவாம் . வெற்றுடலை  அணிகலன்  புனைந்து காண்டல்  பின்னர்க்  காணலாகாத  இறுதிக்  காட்சியாக  முடியுமென்பது  அறிந்ததொன்றே ;  அங்ஙனமே  சுவைநலமளைந்த  தொனிப்பொருள்  விரவாப்  பாடல்களை  அணிநலனளவிற்  காண்டல் , மீண்டுங்  காண  வேண்டும்  என்ற  விழைவற்ற  நிலையில்  நிகழ்வதொன்றாகும் .  

              மதிவலி  மிக்க  முது  புலவனிடத்தினின்றுந் தோன்றிய  பாடல்  நங்கைக்கு  திட்ப  நுட்பம் , தெளிவு ,விளக்கம் , இனிமை  முதலிய  பண்புகளமைந்த  சொற்பொருட்குழுவே  அழகிய  உடலும் , சுவை   நலந் துறுமும்  தொனிப்  பொருளே  உயிருமாம் . இந்  நங்கைக்கு   உவமை  முதலிய  அணிகளே  அணிகலங்களாம் . அழகுக்கு  அழகு  செய்தல்  போல  வணிகள்  சேர்க்கப்படினும்  இப்பாடன்  மெல்லியற் பாவை  நல்லாளின்  இயற்கை  வனப்பு  மிக்க  நல்லுடலைச்  சார்ந்து  உவமை  முதலிய  அணிகளே  சிறந்த  அழகு  பெற்றுத்  திகழ்வனவாம் .   

             இங்ஙனம்  இயற்கை  நலம்  மிக்குச்  செயற்கை  நலனையுமேற்றுத்  திகழும்  இத்தகைய  பாடல்  நங்கையைக்  கூடி  நுகர்தற்குரிய  இளநலஞ்  சான்ற  மணமகனியல்பை  இயம்பவும்  வேண்டுங்கொல் !  அன்னான்  இலக்கிய  நூலறிவானும்  மதிநுட்பத்தானுஞ்  சிறந்து  மலர்ந்து  மணப்பருவம்  வாய்க்கப் பெற்று, கட்டழகு  வாய்ந்த  பாடல்  நங்கையைக்  காண்டலில்  காதல்  மிக்குடையனாய்  அப்பேறு  குறித்துத்  தவம்  புரிந்த  தனிப்பெருஞ்  செல்வதானல்  வேண்டும் . வேட்கை முயற்சியும்  தவப்பயனும்  ஆகூழ்  வலியும்  ஒருங்கு  கைவரப்  பெற்றாலான்றி , அப்பாடல்  நங்கையின்  பரிசுணர்தல்  அரிதாகும் .  

          இன்ன  பாடல்  நங்கையைப்  பண்புடன்  வேட்ட  காதற்  கொழுநனாங்  கலைவல  மணமகன்  ,  அந்நங்கை  நலனெலாம்  நன்னர்  நுகர்ந்து  புல  நிரம்பின்பம்   பொருந்திய  வாழ்க்கை யிற்றலைப்   படுங்கால்  அவ்விருவர்தம்  இரண்டற்ற  தன்மையி னெழுந்த  இன்ப  நிலையே  உருவெடுத்தாங்கு  மழ  விளம்பாடற்  குழவிகள்  தோன்றும்  இந்  நன்மக்கட்  பேற்றினையுடைய  நன்புல  இல்லற  வாழ்க்கையிற்  றலைப்பட்டு  நிரம்பினோரே  உண்மைப்  புலவராவார் .

          கண்  முதலிய  அறிவுக்  கருவிகளாற்   காண்டற்கியலாத  நுண்பொருள்களை  யெல்லாம்  நுண்மாணுழைபுலமாகிய  உட்கருவியாற்  செய்யுளுலகத்திற்  கண்டு  இன்புறுதல்  கூடும் . அவ்வளவின்  அமையாது  , அவ்வுட்புறக் கருவிகளுக்கும்  எட்டாது  அப்பாற்பட்ட  திருவருளாற்றலினது  சீரிய   நிலையின்  ஒரு  சிறு  கூற்றினை  யாதல்  செவ்விய  புலமை  முயற்சியின்  பயனாகிய  மெய்யுணர்விற்  கண்டு  இன்புறுதற்கு  முயல வேண்டும் . அவ்வின்பப் பேறொன்றே   நம்  புலமை  வாழ்க்கையில்  அரிதின்  முயன்று  அடைதற்பாலதாகிய  முடிந்த  பயனாகும் . முதற்கண்  மனமொழி  முதலிய  உட்புறக்கருவிகள்   செந்நிலையுறுதற் கமைந்த   விழுமிய  நூலறிவு , முடிவில்  திருவருள்  நிலையின்   தெளிவு  கைவரப்  பெறுதற்குரிய  சிறந்த  கருவியாகிய   மெய்யுணர்வைப்  பயந்து நிற்கும் . அம்மெய்யுணர்வொன்றே  தன்  பயனாகிய  உயர்வொப்பில்லாப்  பேரின்பத்தை   விளைவிப்பதாகும் .  

          உலக  வாழ்க்கை  போலப்  புலமை  வாழ்க்கையும் , இல் நிலை  , துறவு  நிலை  என  இருதிறப்பட்டு  நிகழுமாறும்  இக்குறிப்புக்களான்  உணரலாம் . கல்வியே  கற்புடை  மனைவியாகவும் ,  செல்வப் புதல்வரே  செழும்  பாடலாகவும்  , கற்றதுணர  விரித்துரைத்தலாகிய   சொல்வளனே  இந் நிலைக்கு  வேண்டிய  பொன்னிலையாகவுங்  கொண்டு இல்லறப்  புலமை  வாழ்க்கையைச்  செவ்வன்  நடாத்திய  செம்புலச்  செல்வனொருவன் , முடிவில்  மெய்யுணர்வு  கைவரப்  பெற்று  , அது  வாயிலாகத்   திருவருள்  நிலையை யுணர்ந்து , அவ்வருள்  நிலை  இன்பத்தில்  திளைப்பின் ,  அந்  நிலையே  துறவறப்  புலமை  வாழ்க்கையாகும் .  உண்மைப்  புலமையின்  சிறந்த  குறிக்கோள்   இதுவேயாகும் .   

  •  புலவரும்   புரவலரும்

         மிகச்  சிறந்த  இந் நிலைக்கு  நம்மை  ஆளாக்கும்  இப்புலமைச்  செல்வத்தை  இவ்விழுமிய  நோக்குடையாராகவே  நம்  பெரியார் மேற்கொண்டிருந்தனர் . அன்னார்  குறிக்கோள்  அன்னதாக,  அவருக்கு  இம்மை  நலம்  முட்டின்றி  நடைபெறுதற்கு  வேண்டும் . பொருள்  முதலியன  கொடுத்துப்  போற்றுதற்கு  வரையாதளிக்கும்  வள்ளன்மை  மிக்கார்  பலரை  அவ்வப்போது  திருவருளாற்றல்  உதவி  வந்தது .

           சிறந்துயர்ந்த  குறிக்கோ ளொன்றைக்  கடைப்பிடித்துத்  திருவருட்  டுணையொடு  முயல்வார்க்கு , அதனை  நிறைவேற்றி விக்கும்   இறையருள்  இடைக்கண்  வேண்டுவனவாகிய  பிறவெல்லாம்  பல்லாற்றானு முதவி  அவரைத்  தளரவிடாது  அளித்துக்  காக்கும்  என்பது  நம்  பெரியோர்  கண்ட  உண்மை . புலமையின்  குறிக்கோள்   மிகச் சிறந்துயர்ந்த  அறிவு  வளர்ச்சியான்  எய்தும்  உலப்பிலா  இன்பப்  பேறாகவும்  அதனை  மறந்து , அழிதன்  மாலையதாகிய  குறுகிய  உலக  வின்பமே  அதுவெனக்  கொள்ளப் படுமாயின் , அது  நிறைவேறுந்  துணையும்  அப் புலமை  நின்று  பின்  வளர்த்தலின்றி  ஒழியும்  இயல்பினதாகும் . அந் நிலையில்  அமைந்த  புலமையுஞ்  சிறிதேயாகும் .

            இற்றை  ஞான்று  கல்வி  பயிலும்  மாணவர்கள்  தொடக்கத்திற்  கொள்ளும்  நோக்கம் , பெரும்பாலும்  தம்  வாணாளில்  உடலோம்பலாகிய  அவ்வளவிலேயே  அமைந்துள தென்பது யாவரும்  உணர்ந்த தொன்று . இக்குறுகிய  நோக்கம்  மேற்கொண்டு  பயில்வோர்  ஒரு  வகையாகத்  தேர்வில்  வெற்றி  பெற்ற  பின்னர் ,  அக் குறுகிய  நோக்கமாகிய  பொருட் பேறு நிறைவேறுவதற்குரிய  முயற்சியிற்  றலைப்படுகின்றனரேயன்றிக்  கற்ற  கல்வியின்  விழுமிய  பயனைப்  பெருதலில்  வேட்கை யுடையராகக்  காணப்பட்டிலர் .  ஆசிரியனை  அடுத்துக்  கற்றது  அவன்தன்  புலமையளவிற்  காற் கூறாம் . அத்துணையே  யல்லது , முற்றும்  நிரம்பிய  தாகா தென்பது  நம்  பெரியோர்   கண்ட  உண்மை . காணாதனவெல்லாங்  காண்டற்கும்  , கேளாதனவெல்லாங்  கேட்டற்கும்  அறிவுலகத்து  நிகழும்  வியத்தகு  அருஞ்  செயல்களை உணர்ந்து இன்புறுதற்கும் , நிரம்பிய  புலமையே  சிறந்த  கருவியாகும் .  இவ் வுயரிய நோக்கங் களை  நிறைவேற்று வதற்குரிய  புலமையை உடலோம்பற்கு  வேண்டிய  பொருளளவிற்  பயன்படுத்த எண்ணுதல்  பொற்கொழுக் கொண்டு வரகுக்கு  உழ எண்ணுவதனோடு  ஒக்கும்  என்ப . சிறந்துயர்ந்த  நோக்கங்களை  மேற்கொண்டு  திருவருளுணர்ச்சியிற்  றலைப்படும்  புலமைச்  செல்வம்  வாய்ந்து  விளங்கிய  நம்  பண்டைத்  தமிழ்ப்  புலவர்  பெருமக்களைப்  பண்டைத்  தமிழ்  நிலவேந்தர்கள்  எத்துணைப்  பெருமை  பாராட்டிப்  போற்றி யொழுகினர் என்பதர்குப்  புறநானூறு  முதலிய  நம்  அரிய தமிழ்  நூல்களே  தக்க  சான்றாக  மிளிர்கின்றன .  

            தமிழ்  நில  மன்னர்கள்   தமிழ்ப்புலவர்களைத்  தம்  உயிரினுஞ்  சிறந்தாராக  மதித்தொழுகிய  செய்திகள்  பற்பல  உள்ளன . அம்மன்னர்க்கு  அரசியற்  சூழ்ச்சிக்குரிய  அமைச்சராகவும்  , அறிவுரை  கூறி  நன்று  தீதுணர்த்தி  நல்லாற்றின்  நிறுத்தும் ஆசிரியராகவும்  , அவர்  குடிக்கண்   உடன்றோன்றினார்  முதலியவர்பாற்  கலாம்  விளை காலை  நடுநின்று  அரிவுரை  கூறி, அதனைத் தீர்த்து   அவரை  அன்புநிலைப் படுத்தும் அகல  முதியோராகவும்  விளங்கினார்  நம்  தமிழ்ப்பெரும்  புலவரேயாவார் .  முதுமையின்  தளர்ச்சியிற்  கதுமென  நேரும்  இறப்பு  முதலியவை  பற்றிய  அச்சம்  நிகழா  வண்ணம்  உடல்,  இளமை,  பொருள்  முதலியவற்றின்  நிலையாமைகளை  நெஞ்சிற்  பதியுமாறு  எடுத்துரைத்து  மெய் யுணர்விற்   றலைப்படுத்தும்   அறவோராகவும் , காதலித்து  கைவிடப்பட்ட  கற்பரசியரை  அவர்தம்  கணவரோடியைத்து  நீதி  பல  கூறி  நெறி  பிறழா  வண்ணம்  வாழ்க்கை  நிலைப்படுத்தும்  நல்லுறவினராகவும்  விளங்கிய  பெருமை  நம்  தமிழ்ப்  புலவர்  பாலதேயாம் .தந்தை  தாயார்  முதலியோரை  இழந்து வருந்தும் இளம் பருவத்துப்  பெண்  மக்கட்கு  அத் தந்தை தாயார்  முதலிய  உறவாக  நின்று நீதி  வழாத  நிலையிற்  பாதுகாத்து  நட்புக்  கடனாற்றிய  பெரியோரும்  புலனழுக்கற்ற   நம்  தமிழ்ப்புலவர்  பெருமானே  யாவார் . புணர்ச்சி  பழகுதலின்றி   உணர்ச்சி  வாயிலாகவே  நட்பு  முதிரப்பெற்றும்   அந்நாட்டார்க்கு  இறுதி  நேர்ந்துழி  அதனைத்  தம்  உணர்ச்சிச்  சிறப்பான்  இயல்பில்  தெரிந்து  தம்  உயிரையும்  உடன்  உய்த்து  அன்புக்  கடனாற்றிய  ஆன்றவிடத்தடங்கிய  கொள்கைச்  சான்றோரும்   நம்  தமிழ்ப் புலவரே யாவர் .  

         இங்ஙனம்  அரசர்பாற்   புலவரும் , புலவர்பால்  அரசரும்  அன்பு  வழிப்பட்டு  ஒழுகிய  சிறந்த  வரலாற்றுப்  பகுதிகள்  பலவாம் . தன்னைப்பாடி  வந்த  ஒரு  புலவர்க்கு  ஏதுங்  கொடுக்கும்  நிலையில்லாத  ஒரு  வள்ளல்  ‘தலையினைக் கொண்டு போய்த்  தம்பி  கைக்  கொடுத்து  விலையினைப்  பெறுக’  எனச்  சொல்லியதும்  , அவ்வள்ளற்  பெருமான்  உள்ளமறிந்த  புலவர்  பெருமான் ‘மறப்பேனாயின்  மற்றொருவர்க்கு  இங்ஙனங்  கூறிக் கொடுக்க  நேரின்  மன்னர்  பெருமானை  இழக்க  நேருமே’  என்று  அஞ்சி , அத்தலை  தன்  உடைமை  எனவும் , அதனை ‘யான்  வேண்டுங்காற்  பெறுவே’  னெனவும் , ‘பெறுங்காறும்  யார்க்கும்  இதைக்  கொடுத்தலாகாது’  எனவுங்கூறி , அவ்வளவோடு  பகைஞனாகிய  தம்பியின்  மனத்தைக்  குழைவித்து  அன்புரிமைப் படுத்து  ஒன்றுபடச்  செய்து  இன்புற்றதும்  நினையுங்கால்  , சென்னறிப்படரும்   மன்னவருள்ளமும் , சொன்னெறிப்  புலவர்  தூய  உள்ளமும்  எத்துணைச்  சிறந்துயர்ந்த  நிலையில்  உள்ளன  என்பது  நன்கு  புலனாகும் .  இந் நிகழ்ச்சி  அறிவுடையாரகத்தை  உருக்கும்  பான்மைய தென்பதை  யாவரும்  உணர்வர் .புலனழுக்கற்ற  தூய  பெரும்  புலவர்களையும்  அருண்மிகு  நெஞ்சத்தினராகிய   புலவர்களையும்  இரு  கண்ணெனப்  பெற்றுத்  திகழ்ந்த  நம்  தமிழ்  நிலம்  இற்றை  ஞான்று  ஒற்றைக்  கன்ணிழந்து  மற்றொருகண்ணும்  ஒளி  நலங்  குன்றப்  பெற்று  ஒடுங்கிக்  கிடத்தலை  உன்னுங்கால், எத்தகைய  தமிழ்  மனிதனும்  வருந்தாமலிருக்க  முடியாது .  

            பண்டை  அரசர்பாற்  புலவர்  பெற்ற  பரிசிலை  உன்னுங்கால், அது  மிக்க  வியப்பைத்  தருவதாகும் . நூறாயிரக்கணக்கான  பொற்காசுகளையும் , முற்றூட்டாகப்  பல  நிலத் தொகுதிகளையும் , விலையுயர்ந்த  ஆடை  அணிகளன்களையும் , யானை  தேர்  முதலியவைகளையும்  வரையாது  வழங்கப்பெற்று  மகிழ்கூர்ந்த  செய்தியைப்  பண்டை  நூல்களான்  உணர்ந்தலோடு  இன்னும்  அப்பரிசில்  நிலங்களைப்  பற்றிய  ஆவணங்களானும்  அப் புலவர்  வழித்  தோன்றல்களின் ஆட்சியானும்  கண்கூடாகவுங்  காண்கின்றோம் .

         புலவர்  பாடும்  புகழுடையா ரன்றே , தானே  இயங்கும்  வானவூர்திக்கண்   இவர்ந்து  செல்லும்  நல்வினையாளர்  என  எண்ணப்பட்டனர் !  புலவராற்  பாடப் பெறுவது  ஒன்றே  தம்  வாழ்க்கையின்  பயனெனக்  கொண்டு  மகிழும்  முன்னை  வேந்தர்  நன்ன ருள்ளம்  எத்துணைச்  சிறந்த தென்பதை  விரித்துரைக்கவும்  வேண்டுங்கொல் !  “குறித்த  பகைவனை  வென்று  வெற்றி  மாலை  புனையேனாயின்  உயர்ந்த  கல்வி  கேள்விகளையுடைய  மாங்குடி  மருதன்  தலைவனாகவுள்ள  பலர்  புகழுஞ்  சிறப்பு  வாய்ந்த  புலவராற்  பாடப்  பெறாது  என்  நிலவெல்லை  நீங்குக “  என்று  சூழுரை  பகர்ந்த  தமிழ்ப் புல வேந்தன் உள்ளப்  பாங்கை  உள்ளிப் பார்மின் ! குறித்தாங்கு  இன்னது  செய்யேனாயின் , இன்ன  தீவினை  யாளனாவேன்  என்னுஞ்  சூழுரையிற்  புலவராற்  பாடப்பெறாத  தொன்று  பெருந்  தீவினைப்  பயனெனக்  கொள்ளப்படின்  அன்னார்  பாடற்பெறு  அரசர்  தம்  வாழ்க்கைக்கு  எத்துணை  விழுமியெதெனக்  கருதப்பட்டதென்பதை   உற்று  நோக்குமின்கள் !

      இத்தகைய  சிறந்த  நிலையிலிருந்த  முன்னைத்  தமிழ்ப்  புலவர்  வழித்  தோன்றல்களாகிய  இக் காலத்துப்  புலவர்   பெருமக்கள்  நிலை  சிறிது  வருந்தத்தக்கதாக உள்ளது . புலவர்க்குரிய  உயரிய  நோக்கங்களும்  வர வரக் குறுகி  வருகின்றன . அவரைப்  புரக்கும்  இயல்பினராகிய  திருவுடையார்  நிலையும்  புலமைக்கு  மதிப்பளிப்பதாக  இல்லை .  எதற்கு  எது  காரணமென்பதை  ஈண்டு  ஆராய  வேண்டா . அவரவர்  கடமையை  அறிந்து  மேற்கோடலே  சிறந்ததாகும் .  கல்வி , அறிவின்பத்தை  அளித்து வாழ்க்கையைத்  தூய்மைப்படுத்தற்குரியதாம்  என்னும்  நம்  புலமையின்  விழுமிய  நோக்கத்தைத்  தளர  விடாது  மேற்கொள்ளுவோமாயின் , நம்மை  புரத்தாற்குப்  புரவலரும்  கடவுளரும்   நம்  பக்கலில்  தாமே  அணுகித்  தம்  கடமையைப்  புரிய  முற்படுவர்  . இவ்வுண்மையை  நம்  புலவர்  பெருமக்கள்  உறுதியாகக்  கடைப்பிடித்தல்  வேண்டும்  .  

                                3  .  தவிர்தற்   குரியன

            இனிப்  பழங்கதை  பேசிக்கொண்டிருத்தலிற்  பயனின்று .  செய்வன  இன்ன , தவிர்வன  இன்ன  என்னுஞ்  சூழ்ச்சிற்  றலைப்பட்டு   நல்லன  காண்டலும்  அவற்றைத்  தாழாது  செயலின்  மேற்கொடலும்  வேண்டும் . விலக்கியன  ஒழித்தலும்  அறமென்ப வாகலின் , முதலில்  நம்  புலவர்  பெருமக்கள்  தம்  வாழ்க்கையில்  தீயகுணஞ்  செயல்கள்  நெருங்க  இடந்தராமல்  அவற்றைக்  களைதல்  வேண்டும் . தீயன  களைந்தாலன்றி  நல்லன  ஏய்தற்கு  இடனமைதல்  அரிது .   

               தவிர்வனவற்றுள்  ஒரு  சிலவற்றை  ஈங்குக்  குறிப்பிடல்  மிகையாகா  தென்றெண்ணுகிறேன் . ஒருவரை யொருவர்  புறங்கூறல் இல்லன கூறி  எள்ளி நகையாடல்  ,  தம்  அறிவினும்  மற்றைய  ரறிவு  தாழ்ந்ததென வாய்ப்பறை யறைதல் , ஆகூழால்  ஒருவர்க்குக்  கிடைக்கும்  ஊதியங்கண்டு  நெஞ்சம்  புழுங்கல் , பிறர்  அறிவிற்  கண்டுரைத்த  சுவை  நலமிக்க  சொற்பொருள்  நலங்களைக்  கேட்டுணர்ந்து  உவகை  யுறாமை  , ஒருகால்  தம்  புலமையுள்ளம்  தம்மை  அறியாது  உவகையுறத்  தொடங்கின்  ,அதனைச்  சினந்து  மேலெழ  விடாது  அடக்கிவிடுதல் , மொழியறிவுத்  துறையில்  தாம்  மேம்பட்டதாக எண்ணிக் கடவுணிலை  யுணர்ச்சியிற்  றலைப்படாதி ருத்தலே   புலமை  மாண்பெனக்  கருதல் , கடவுள் கலையுருவினன்  என்பதை  மறந்து  கல்விக்கும்  கடவுட்  கொள்கைக்கு  இயைபின்றென  எண்ணல் , “ கற்ற  கல்விக்குத்  தக  நிற்க”  என்னும்  பொருளுரையைப்  பொருட்படுத்தாமல்  கல்விக்கும்  ஒழுக்கத்திற்கும்  தொடர்பின்றெனக்  கோடல்  , இகலிலர்  எஃகுடையராய்த்  தம்மிற்  குழீஇ  இன்புறுதலை  விடுத்துப்  பல்பிறப்பினுந்  தொடர்ந்த  பகைஞர்  எனக் கொண்டு  ஒருவரை  ஒருவர்  வெறுத்தல் , தமக்கே  பிறர்  உதவி  புரியற்பாலற்  தாம்  பிறர்க்கு  ஒல்லும்  வகையானும்  உதவி  புரிய  முற்படல் , தம்  புலமை  மாண்புக்கு  ஏலாதென  நினைத்தல் , பிறர்  கூறும்  நல்லன  கொண்டு  இன்புறுதற்கு  உள்ளம்  ஒருப்படாமையோடு  அந்  நல்லனவற்றையும்  தீயனவாகத்  திரித்துக்  கூற  முற்படுதல் , உண்மை  தெளிதற்கு  நடுநின்  றாராய்ந்து  தம்கொள்கை  மறுக்கப்படுமாயின் , அதனைப்  புலமைக்கு  அழகென  ஏலாது  மறுத்தாரை  முனிந்து  வறுத்தமுறுதல்  முதலிய  இன்னோரன்ன  தீய  குணஞ்  செயல்களை  அறவே  ஒழித்தல்  நன்று .  

           பண்டைப் பிறப்பின்  தொடற்பால்  ஒரோ  வழி  அவை   முற்படினுந்  தன்  மதிவலியால்  இயன்றாங்கு  விலக்க   முயலல்  வேண்டும் .  அவ் விலக்கு  முயற்சி  பயன்பாட்டில தெனினும்  தம்பால்  நிகழ்ந்த  இவை  தீயன  என்றுணர்ந்த  அவ்வளவிற்  பயன்  உண்டென்ப  ஒரு  சாரார் .  இத்தீய  குணங்களில்  ஒரோவொன்றுடையாரும்   சிலபல  உடையாருமாகப்   பலரும்,  அறவே  இலராகச்  சிலரும்  உலகத்துக்  காணப்படுவர் . ஏதேனும்  இருப்பிற்  களைதல்  வேண்டும்  என்பதை  நினைவுறுத்தற்குக்  கூறியதேயன்றிப்  புலவரெல்லோரும்  இத்தீய  குணஞ்  செயல்கள்  உடையரெனக்  கொண்டு  கூறியதன்று  . ஒரு   பிழையுமில்லாத  தூய  தன்மை  கடவுளிடத்தன்றி  மக்களுட்  காண்டலரிது .  ஆயினும்  மக்கட்  பொதுவாக  உள்ள  பிழைகளைப்  புலமைச் சிறப்பாற்  களைதற்கு  முற்பட  வேண்டுவதே  புலமைப் பேற்றின்  கடமையாகும்.   

          ஓராராய்ச்சியில்  ஒரு  காலத்தில்  தமக்குக்  கிடைத்த  சான்றுகளைக்  கொண்டு  ஒரு  வகையாக  முடிக்கப்பட்டதொன்று , பிறிதொரு  காலத்திற்  பிற  சான்றுகளால்   தவறுடைய  தெனத்  தாமே  கண்டாதல்  பிறர்  கூறக்  கேட்டதால்  உண்மை  தெளிய வரின்  அப்பொழுது  தம்பிழைபட்ட  முன்னைக்  கொள்கையைக்  கைவிட்டு  உண்மைக்  கொள்கையைத்  தழீஇக்  கோடலே  புலமையின்  சிறப்பாகும் .  பின்னர்  எத்துணைத்  திட்ப  நுட்பமான  சான்றுகள்  கிடைப்பினும்  மாறுபட  முன்னர்க் கண்ட  முடிவினின்றும்  வேறுபடேம்  என்னுங்  கொள்கை  தவறுடையதாகும் .  உண்மைநிலை  காண்டற்குப்  பலவாறு  சூழ்ந்து  ஒரு  முடிபுக்கு  வருதலும் , பின்னர்  அது  தவறுடைத் தெனக்  கண்டவழி  அதனை  மாற்றிக் கோடலும்   நடுநிலைப்  புலமையுடையார்க்கு  இயல்பேயாம் .  

            புலவரில்  ஒரு  சிலர்  தம்மைச்  சிறந்த  ஆராய்ச்சி யாளரென  உலகம்  மதிக்கவேண்டும்  என்னும்  வேட்கையுடையராய் , பண்டை  நூலுரை   வரலாற்று  முறைகளில்  தவறில்  வழியுந்  தவறுகளை  ஏறிட்டுக்கூறி  வருகின்றனர் . அக்கூற்றுக்கள்  அவர்தம்  புலமைத்  தவறுதலையே  புலப்படுத்துவனவாம் .  அவர்  அறியாமையால்  அங்ஙனங்  கூறின் , அஃதொரு  பெருந்  தவறாகாது , அறிவுடையார்  தேற்றத்  தேறுவராகலின்.  அறிந்து  கூறுவரேல் ,அது  புலமைக்கு  இழுக்காகும். பழையன  கழிதலினும்  புதியன  புகுதலினும்  முறையே  தீமையும்  நன்மையும்  அறிந்து   கோடல்  நன்று .  கால  நிகழ்ச்சிக்கு  ஏற்பன  ஏலாதன  என்பதை  நெடிது  சூழ்ந்து  முடிவு  செய்தல்   வேண்டும் .  

            தம்  மொழிக்கு  ஏற்றங்கூற  முற்பட்டுப்  பிற  மொழிகளைப்  பழித்துரைத்தலுந்  தவறாகும் . தம்  மொழிக்கண்  இல்லாத  சிறப்பொலி  யெழுத்துக்கள்  வேற்று  மொழிக்கண்  இருத்தல்  கண்டு , ‘அவை  எதற்கு?’  என  ஒரு  புலவர்  ஒரு  பேரவையில்  எள்ளி  நகுவரேல், அவர்  புலமையி னியல்பை  எவ்வாறு  கருதலாம் !  ஒருவன்  பாலுள்ள  பொருள்  இருப்பின் , அது  பற்றி  அவன்  எள்ளப்படுதல்  யாண்டுங்  காணாததொன்று  .  ஒரு  குழுவில்  உரைக்கப்படும்  பொருளுரை  அவ்வளவினன்றிப்  பரந்த  அறிவுலகத்துக்கும்  ஏற்ப  விளங்குதலன் றோ  நலமாகும் ! 

             இன்னோரன்ன  இழுக்கு  நெறிகளில்  நம் புலமை  வாழ்க்கையை  நடத்தலாகாது  .  புனைந்து  பாடுங்கால்  , “அவர்  செய்யாதனவற்றைச்  சொல்லி  அவர்  குணங்களைக்  கூறுதலை  யறியாததாகும்  எம்மூடச்  சிறிய  செவ்விய  நா”  என்ற  புலவர்  பெருமான்  அறிவுரையை  நினையுங்கால் ,  நம்  தேனினுமினிய  செந்தமிழ்ச்  சுவையை  உணர்ந்த  நாவானது  ஒன்று  கூற  முற்படுங்கால் எவ்வளவு  நடு  நிலையுடன்  சீர்தூக்கியறியும்  உளத்தோடு  கூடியெழ வேண்டும்  என்பது  நன்கு  புலனாம் .

               கொடுக்கிலாதானைப்  பாரியே  என்று  கூறாமையும் ,  பிறர்க்கு  இன்னல்  விளைக்கும்  பொய்மொழி  புகலாமையும் , இடரினுந்  தளரினுங்  கடவுட்  கொள்கைக்கு  மாறுபடப்  பேசாமையும், நடுநிலை  மிகுந்து  நவிலாமையும் ,  பயனில்லன  பகராமையும்  ஆகிய  இன்னோரன்ன  செயல்களே  நம்  தமிழ்ச்  சுவையுணர்ந்த  நாவிற்கு  உரியனவாம்  என்பதை  உணர்ந்து  கடைப்பிடித்தல் வேண்டும் .   

                                         4  .  செயற்குரியன

    புலத்துறை  முற்றிய  நலத்  துறையும்  அன்பரீர் !

              இனி , நாம்  செயற்பாலன  இன்ன  வென்பதைப்  பற்றிச்  சிறிது  நினைவு  கூர்வோம் .  பண்டு  மிகப்  பரந்த  நிலப்  பகுதிகளைத்  தனதாகக்  கொண்டிருந்த   நம்  பால்  வாய்ப்  பசுந்தமிழ் , தன்னைப்  புரப்பார்  துணை  சுருங்கி  வந்தமயானும் ,  பிற  மொழிகள்  அம்  மொழியாளர்  பேரூக்கத்தால்  வளர்ச்சி  யெய்தித்  தன்  இடம்  சுருங்கப்பெற்றமையானும்  ,  கற்பார்  நோக்கம்  வரவரக்  குறுகி  வந்தமையானும் ,  திருவருளுணர்ச்சி  முதலிய  உயரிய  நோக்கங்கள்  சிறிது  சிறிதாகக்  கைவிடப்  பெற்று  வருகின்றமையானும் , தன்னிடத்திலுள்ள  சிறந்த  பல  முதுநூல்களைக்  கால  மாறுபாட்டால்  நீருண்ண ,  நெருப்புண்ண  ,  நிலமுண்ணக்  கொடுத்து  இழந்தமையானும்  தன்னைப்  பயில்வார்க்கு  இம்மை  இன்புதவும்  பொருட்  பேற்றுக்கு  இக்காலத்து  அரசியல்  இடந்தராமையானும் ,  பிறவற்றானும்  தன்  ஆக்கங்குன்றி  நிற்கின்றது .  

               ஒரு  நாடு  தனக்குறிய  மொழியை  ஆக்கமுற  ஓம்பிப் பாதுகாத்தலன்றித்  தான்  சிறந்த நிலை எய்துதல் அரிதாம் . மொழி வளர்ச்சி  கொண்டே  அது  வழங்கும் நாட்டின்  நலத்தையுணரலாம் .  எந்த நாடு தன் மொழிச்  சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை யெல்லா  வளங்களானும் பிற்பட்டதாகும் . ஆதலின் , தமிழ்ச் செல்வர்களும் தமிழ்ப் புலவர்களும் விழிப்புடையராய் நின்று நம் உடைமையை விளக்க முறப் பேணல் வேண்டும் .நம் மொழி வளர்ச்சியில் நாம்  செயற்பாலன பலவாகும் .  

                 முதலாவது , இற்றை நாள்  வழங்கும் நிலம் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு  சிறந்த கல்லூரி தமிழ் நாட்டின் நடுவண் நீர் நில வளங்கள் நிறைந்த அகன்ற இடத்தில் , ஆசிரியர்களும் மாணவர்களும்  ஒருங்கிருந்து , கல்வியை உயரிய நோக்கங்களோடு பயிற்றவும் பயிலவுந் தக்க  முறையில் நிலைபெறல் வேண்டும் . இம்மை நலம் பெறற்குரிய மருத்துவம் தொழிற் கல்வி முதலிய பயிற்சிகளும் உடன் நிகழ்தல் இன்றியமையாததாகும் . அக்கல்லூரியின் உறுப்புக்களாகப் பல நிலையங்கள் அமைத்து அவற்றால் தமிழுக்கு வேண்டற்பாலனவா கிய  பிற மொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டும் , புதிய உண்மையாராய்ச்சிகள் செய்யப்பட்டும் , பல நூலுரைகள் வெளிவரல் வேண்டும் . தமிழ் நாடு முழுதும் இதுகாறும் நிறுவப்பட்டனவும் , இனி நிறுவப் பெறுவனவுமாகிய பல கல்வி நிலையங்களெல்லாம் அத் தமிழ்ப் பெருங் கல்லூரிக்குக் கிளைகளாக அமைதல் வேண்டும் .

                   சிறந்த  நூலுரைகளை ஆக்கிப் புலமை யரங்கேறி னார்க்குத் தகுதியான பட்டங்களும் பரிசுகளும் வழங்கி ,அவரைப் பெருமைப் படுத்தல் வேண்டும் . தமிழின் இயல்பை நன்குணராது ஆரவார நீர்மையராய்ப் போலி நூலுரைகளை வெளிப்படுத்தித் தமிழகத்திற் கும் தமிழ் மொழிக்கும் இழுக்குண்டாக்கும் போலிப் புலவர்களை அறிந்து  அறிவுறுத்தி  அவரை  நல்லியற் புலவராக்க முயலவேண்டும் .  உண்மைத்  தமிழறிஞரை ஒடுங்கியிருக்கவிடாது  சிறப்பிடனளித்து  உவகையுறுத்தல்  வேண்டும் . இயல் வரம்புடைய நம் மொழிக் கண் அவ் வரம்பிகந்து வெளிப்படும்  புலத்துறைக் கொல்லாப்  போலி நூலுரைகள் , செவ்விதின் ஆக்கப்பட்ட சீரிய நூல்களுக்குக்  களைகளாக நெருங்கிப்  படர்ந்து தீங்கு புரிகின்ற வாதலின் அக்களை கட்டல் சொல்லே ருழவராகிய  தமிழ்ப் புலவர் கடனாகும் .  அக்களை  களையப்பட்டால் அன்றி நம் செழுந்தமிழ்ப் பைங்கூல் வளர்தற்கு இடமின்றாகும் .  தீஞ்சுவை  மிக்க  திருவருட்கனியை நம்க்கு  உதவத்  தோன்றிய  செழுந்  தமிழ்ப்  பைங்கூழைப்  பல்லாற்றானும்  போற்றிக்  காத்தலன்றோ நம் நற்பயனை  நன்கு  பெற முடியும் ?

              ஆங்கிலம் , வடமொழி முதலிய வேற்று மொழிகளிலுள்ள  பல துறைப்பட்ட  அரிய நூல்களை அவ்வம் மொழியோடு  தமிழ்  கற்ற மதிநுட்பமுடைய  புலவர்களைக் கொண்டு விளக்கமான சிறந்த முறையில்  மொழிபெயர்ப்பித்து வெளிப்படுதல் வேண்டும் . இத்துறை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும்  ஏற்ற தொன்றாம் .  வேற்று மொழிகளி லுள்ள  ஒரு  திறப்பட்ட  பல  நூல்களை நன்கு  பயின்று  அவற்றின்  திரண்ட  கருத்துக்களைத்  தொகுத்துத்  தனித் தமிழ்  நூலாக  வெளிப்படுதல்  சாலச் சிறந்ததாகும் .  இத்  துறையில்  தமிழ்ப் புலவர்  முற்படுவாராயின் , ‘மேல் வகுப்புப் பயிற்சிக்குரிய பல திறம்பட்ட நூல்கள் தமிழில்  இல்லையே ‘  என்னுங்குறை  ஒழிந்துவிடும் . மொழி  பெயர்ப்பால்  ஒரு  மொழிநூல்  வளர்ச்சி  பெறுதல் , அம்  மொழிப் புலவர்  இயன்மதியற்றற்கு  அத்துணைச் சிறப்பின் றென்பது  உண்மையெனினும் , இயற்கையாகப்  பல  புதிய  சிறந்த நூல்களை மதிவலியால் ஆக்கும்  ஆற்றல் , வளர்ச்சி யெய்துங்காறும்  மொழிபெயர்புச் செயலை  மேற்கோடலால்  இழுக்கின்று  என்பது என் கருத்து . இது  கருதியே  மொழிபெயர்த்து  அர்த்தப்பட யாத்தலையும்  நூல்  யாப்பு  வகையுள்  ஒன்றெனக்  கண்டனர்  தொல்காப்பியனாரும்  என்க .

                சென்னைப்  பல்கலைக்  கழகத்தையும் , அதனினும்  தமிழ்  வளர்ச்சிக்கு  மிக  நெருங்கிய  இயைபுடைய  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்தையும் , தெய்வத்  தமிழுஞ்  சைவத்  துறையுஞ்  செழித்தோங்க எழுந்த திருவாடுதுறை , திருப்பனந்தாள் ,  தருமபுரம்  முதலிய  செல்வமலி  சைவமடங்களில்  விளங்குந்  தலைவர்களையும்  தமிழ்  நிலத்துச்  சிற்றரசர்களையும்  ,  தமிழன்பர்களாகிய  மற்றைத்  திருவுடையாரையும்  மேற்  காட்டிய  தமிழ்  வளர்ச்சிக்கு  வேண்டுவன  செய்யும்  வண்ணம்  இன்னோரன்ன  புலவர்  மாநாடுகள்  கேட்டுக்  கொள்ள வேண்டும் . சற்றுக்  காலத்தாழ்விற்  பயன்  பெறுவதாக இருப்பினும்  அது  பற்றி  வெறுத்துப்  பேசாமல்  மீண்டும்  வேண்டிக்  கோடல்  நன்றாகும் . அன்போடு  பன்னாள்  அழைத்தால்  இறைவனும்  வெளிப்பட்டு   அருளாமலிருக்க  முடியாது . ஆதலின் , சைவாதீனத்துத்  தலைவர்களையும் , அன்பர்கள்  பிறரையும்  அன்புக் கயிற்றாற்  பிணிக்க  முயல்வதே  அறிவுடைமையாகும் .  

                                          5 .  இறுவாய்

       இம்மாநாடு , புலவர்  பெருமக்கள்  வாழ்ந்த  சோழ  வளநாட்டில்  தஞ்சை  திருச்சிராப்பள்ளித்  தலை  நகர்களுக்குரியதாக  இத்துறை யூரில்   முதலில்  தொடங்கப்  பெறினும் , திருவருட்  பாங்கால்  இது வரும்  ஆண்டு  முதல்  தமிழ்  வழங்கும்  நிலங்கள்  எல்லாவற்றுக்கும்  பொதுவெனக்  கொள்ளப்பட்டு , ஒவ்வொராண்டினும்  ஒவ்வொரு  தலை  நகரினும்  கூடித்  தமிழ்  மொழிக்கும் , தமிழ்ப்  புலவர்  முதலிய  மக்களுக்கும்  நலம்  பயக்கும்  வன்ணம்  திருவருட்  டுணைகொண்டு தமிழன்பர்கள் செய்தல் வேண்டும் . செல்வரும்   புலவருமாகிய  தமிழ் மக்கள்  தம்மில்  வேறுபாடின்றி  ஒற்றுமையுடன்  ஒருங்கியைந்து  தமிழன்னையைப்  பேண  முன்வரின், அவ்வன்னை  தன்  மக்களின்  நலம்  வளர  வாழ்த்துவள்.  அன்னையர்  வெறுப்புக்கு  மக்கள்  ஆளாதல்  நலமன்று  . தமிழன்னை  தன்  மக்களாகிய  நம்மை  உளங்குளிர்ந்து  வாழ்த்துவாளாயின்  நம்  வாழ்க்கை  சிறந்த  இன்பப்  பேறுடையதாகும்  என்பதை  உறுதியாகக்  கடைப்பிடிப்பீர்களாக.

செந்தமிழ்ப்  புலவர்காள் !

            இனிப்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  பலவுளவெனினும் , புலவர்  மாநாட்டைத்  திறந்து வைக்கும் ஒருவன்  கடமை  இதனினும்  நீட்டு  சேறல்  முறையன்றாதலின் , இம்  மட்டில்  அமைகின்றேன் .  நுங்  கட்டளைப்படியே   திருவருட்டுணை  கொண்டு   இம்மாநாடு   திறக்கப்பெறுகின்றது .  இதனுட்  புகுமின் !  புகுங்கால்  முதற்கண்  எல்லாம்  வல்ல  இறைவன்  திருவருளை  நெஞ்சார  நினைமின் !  தமிழ்த்  தாயை  வாழ்த்துமின் !  யான்  கூறியவற்றுட்  கொள்ளுவன  கொண்மின் ! இன்னும்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  சூழ்மின்! சூழ்ச்சி  முடிவில்  துணிவு  எய்துமின்  !   அத்துணி  பொருளைத்  தாழாது  செயலின்  மேற்கொண்மின் ! நாகரிக  மிக்க  உலகங்களால்  நம்  தமிழ்ப்புலமை  பாராட்டப்பெறும்  வண்ணம்  ஒழுகுமின் !  புலமை வாழ்க்கையின்  சிறந்த நோக்கங்கள்  நிறைவேறப்பெற்று  நல்லின்பம்  யெய்துமின் ! இதுகாறும்   என்  சிற்றுரையைச் செவியேற்று  உளங்கொண்ட  நும்  பொருமைக்கு   என்  வணக்கம்  உரியதாகுக .

                         3 .  நம்  பண்டைய  நீதி  நூலாசிரியர்

                          ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

      மக்கள்  வாழ்க்கைக்குப்  பயன்படும்  வண்ணம்  நம்  பெரியார்  நமக்கு  உதவிய  நூல்கள்  அறம் , பொருள் , இன்பம் , வீடு  என்னும்  உறுதிப் பொருள்கள்  நான்கனையும்  பற்றியனவேயாம் . இவ் வெல்லாம்  நீதியின்மேல்  அமைவன  வெனினும் , இவற்றுள்  பொருட்பகுதியைப்  பற்றி  யெழுந்த  நூல்களையே   ‘நீதி  நூல்’  எனப்  பெரியோர் வழங்குவர் .  அப்பொருட்  பகுதியை  மாத்திரம்  சிறப்பாக  எடுத்துக் கூறிய  ஆசிரியரும்  உளர் .  அதனோடு  அற முதலிய  ஏனைய  உறுதிப்பயன்களையும்  இயைத்துக் கூறிய  ஆசிரியர்களே  பெரும்பான்மையோராவர் . இம் முறையில்  தமிழிற்  சிறந்த  நீதிகளை   வழங்கிய   வண்மையிற்  சிறந்த  பெரியார்  திருவள்ளுவரே  யாவர் . அவருக்கு  முன்னும்  பின்னும்  நீதி  நூலருளிய  ஆசிரியர்கள்  வடமொழியிலும்  தமிழிலும்  பலரிருந்தனர் .  எனினும் ,  அன்னார்  புகழொளி  யெல்லாம்  வானத்து  விளங்கும்  மீன்களாக  , வள்ளுவர்  சீர்த்தி  அப் பன்மீன்  நடுவண்  பான்மதி  போலத்  திகழ்வதாகும் . “ எல்லாப்பொருளும்  இதன்பாலுள ; இதன்பால்  இல்லாத  எப்பொருளும்  இல்லையால்”   என்றபடி  உள்ளுநர்  உள்ளும்  பொருளெல்லாம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  காணப்படுவனவேயாம் . தம்  தெள்ளிய கல்வியானும்  ஒள்ளிய  மதி  நுட்பத்தானும் உலகியலையும்  மக்கள்  வழக்கவொழுக்கங்களையும்  அழுந்தியறிந்து  உள்ளத்தமைத்துத்   ‘திருக்குறள்’  என்னும்  நீதிக்  களஞ்சியத்தை  உலகமுள்ளவும்  நிலைபெற  யாத்துதவிய  பெருமையே  அப்  பொய்யில்  புலவர்  புகழொளி  விஞ்சுதற்கு  ஏதுவாயிற்று .  

                திருவள்ளுவர்  எழுதிய  நூல்  ஒழுங்கிற்கும்   ஏனையோர்  நூன்  முறைக்கும்  உள்ள  வேறுபாடுகள் பலவாம் . தாம்  கூற  மேற்கொண்ட   பொருளை  நன்றாக  ஆராய்ந்து , இவ்வாறு  தெளிவுபடுத்த  வேண்டு மென்று  உள்ளத்தமைத்துப்  பின்னர்  செய்யுள்  வடிவில்  இவர்  வெளியிட்டுள்ளார் .   பெரும்பான்மையும்  கொண்ட  பொருளின்  இலக்கணம்  , அதன்  சிறப்பு , அதனாலாம்  பயன் ,  அஃதில்  வழி  வருந் தீங்கு  என்று  இன்னோரன்ன  பாகுபாடுகளை  வரையறுத்துக் கொண்டு  கூறுதல்  இவர்  இயல்பு .  எப்பொருட்கும்  வரையறையும்  தெளிவும்  இன்றி  யமையாதன .  வரையறுத்துத்  தெளிவுபடுத்தப் படாத  பொருள்கள்  மக்கள்  உளங்கோடற்கு  ஏற்றனவாக  என்பது  பெரியார்  துணிபு.

                 இத்தகைய  சிறப்பு  வாய்ந்த  திருக்குறளுக்கு  வடமொழி  தென்மொழி  களிலுள்ள  பற்பல  நீதிநூல்களையும்  நன்கு  கற்று  ஆராய்ந்த  பரிமேலழகர்  என்னும்  புலவர்  பெருமான்  இயற்றிய  உரையே  எல்லா  உரைகளினும் சிறந்ததாகப்  போற்றப்படுவது  அவ்வுரையாளர்  ஓரிடத்து , “தேவர்க்கும்  அசுரர்க்கும்  அமைச்சுப்  பூண்ட  வியாழ  வெள்ளிகளது  துணிபு  தொகுத்துப்  பின்  நீதி  நூலுடை யார்  கூறியவாறு  கூறுகின்றமையின் “   என்று  எழுதியிருத்தலால்   வடமொழியிற்  புகழ்  மிக்கவர்களான  வியாழ  வெள்ளிகளின்  நூற்  கருத்துக்கள்  நம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  புலப்படுகின்றன வென்பது  பரிமேலழகர்  கருத்தாம் . ஒரு  நாட்டினர்  வழக்க  வொழுக்கங்களை  உணர்ந்து  அவற்றிற்  கேற்ப  நீதிகளை  வரையறுக்கும்  ஆசிரியர்கள்  கால  இடையறவால்  சேய்மைக்கண் உள்ளாரெனினும் , பொருள்  ஒற்றுமைக்கருத்தால் அணிமையில்  உள்ளவராகவே  கருதப்படுவர் .

                வடமொழியில்  மனு  முதலிய  நூல்களில்  அறம் , பொருள் , இன்பங்கள்  விரவக்  கூறப்பட்டுள்ளன . பொருட்பகுதியாகிய   அரசியல்  முறையைத்  தனிமையில்  விளக்க  எழுந்த  நூல்களுள்,  பிருகற்பதியாகிய  வியாழ  குருவால்  தேவர்கள்  பொருட்டு  இயற்றப்பட்ட   பாற்கபத்தியமும் , உசனஸ்  என்னும்  சுக்கிராசாரி யாரால்  அசுரர்  பொருட்டு   இயற்றப்பட்ட  ஒளசநசமும்  முதலில்  நினைக்கத்தக்கனவாம் .  இவற்றின்பின்  எழுந்தன  சந்திரகுப்தன் காலத்து  அமைச்சராக  இருந்த  சாணக்கியரால்  ஆக்கப்பட்ட  கெளடலியமும் , காமாந்தகனால்  இயற்றப்பட்ட  காமாந்தக  முதலிய  னவும்  ஆம் . இவற்றுள்  இக் காலத்துச்  சட்ட  நூல்  வல்லோராற்  பெரிதும்  தழுவப்படுவது கெளடலியம்  என்னும்  நூலேயாம் . வியழனால்  ஆக்கப்பட்ட  நூலினும்  வெள்ளியாகிய  சுக்கிரரால்  ஆக்கப்பட்ட  நூல்  தென்னாட்டு  வழக்க  வொழுக்கங்  களுக்குப்  பெரிதும்  இயைபுடையதாகும் .  இவற்றின் பின் தோன்றிய  கெளடலிய  நூலின்  தொடக்கத்தில்  அதன்  ஆசிரியர்  பூர்வாசார்ய  வணக்கமாகச்  “சுக்கிர  பிரகஸ்பதிப்யாம்  நம:”  —-  சுக்கிரற்கும்  பிருகற்பதிக்கும்  வணக்கம்”  என்று  கூறியுள்ளார் .  இதனாலேயே  வெள்ளி  நூலின்  விழுப்பம்  புலப்படுவதாகும் .  பிற்காலத்துக்  கவிஞர் பெருமானாகிய  கம்பர் “வெள்ளியும்  பொன்னும்  என்பார்  விதிமுறை வகுத்த  நூலில்”   என்று  முறைப்படுத்திக்  கூறியதும்  இதனை  வலியுறுத்தும் . இங்ஙனம்  சிறந்துள  ஒளசநசத்தின்  சுருக்கமே  ‘சுக்கிரநீதி’   என்னும்  மேற்பொருள்  நூலாகும் .

                இச்  சுக்கிரநீதியைத்  தமிழ் மக்கள்  நலங்குறித்து   மொழி பெயர்த்தபொழுது  யாம்  கண்ட  புதுமைகளும் , பழமைக்குரிய  சான்றுகளும்   பலவாம் . “புதல்வர்ப் பேற்றை  விரும்பும்  பெண்  மக்கள்  வைரமணியை  அணிதலாகாது”  என்று  கூறப்பட்டுள்ளது .  கருவைத்  தடைப்படுத்தற்கு  வைரவொளி  எங்ஙனங்  காரணமாகும்  என்பதைக்  கலவை (இரசாயன)நூலார்  ஆராய்தல்  வேண்டும் . இது  போன்றன  புதியனவாம் . நீர்ப்பொறி,  இசைப்பொறி , காற்றியக்கும் பொறி ,  கம்பி வழிச் செய்தியனுப்புங்  கருவி , நீராவியால்  இயக்கப்படும்  பொறிகள்  முதலிய  இக்  காலத்துக்  காணப்படும்  இயந்திரத்  தொழில்களைப் பற்றியும்  அந்  நூலிற்  கூறப்பட்டுள்ளன . ஆனால் , இவற்றின்  அமைப்பு  முறைகள்  வேறுபட்டிருக்கலாம் .  போர்த்  தொழில்  முறைகளும் , போர்க்கருவிகளும் ,  பொறி  வழியாக  ஆயுதங்களைச்  செலுத்தும்  முறையும் , வெடி மருந்து செய்யு முறையும் ,படைகளின்  அணிவகுப்புக்களும்   பிறவும்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளன .  மக்கள்  இயங்குஞ்சாலை  ( ROAD ) ஆமை  முதுகு   போல   இருக்க  வெண்டுமென்று  குறிப்பிடப்பட்டுள்ளது . ஆமை  முதுகு  இருமருங்கும்  தாழ்ந்து  நடுவிடம்  சிறிது  உயர்ந்திருக்கும் . இது  சாலை வழியிற்  பெய்யும்  மழை  நீரால்  அச்சாலை  கெடாமல்  இருப்பதற்குக்  கருதப்பட்டதாகும் , மேலும் , இந் நூலின்கண்   அரசனியல்பு  ,  அவன்  சுற்றங்களாகிய  அமைச்சர்  முதலியோரியல்பு, வினை  செய்யும்  ஏவலரியல்பு,  கிராம  பரிபாலனம் ,  வாணிக  முறை   நியாய  மன்றங்கள், நீதிபதியின்  அதிகாரங்கள்   வழக்கின்  இயல்புகள்  முதலியன  விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளன .   

          கரிகாற்  சோழ  அரசனைக்  குடிமக்களுள்  ஒருவனாகச்  சிலப்பதிகாரம்  கூறும். இதனால்  அரசன்  குடி மக்களின்   உயர்ந்தனவாகத்  தன்னை எண்ணலாகாது  என்பது  புலனாகும்.  செங்கோன்மை  தவறாது  செலுத்தும்  நல்லரசற்கு  அரசியற்  காரியம்  தன்னலங்  குறித்ததாகாது ; குடிமக்கள்  நலங்குறித்ததேயாம்.  இங்கே , கோவலனைக்  குற்றமில்  வழியும்  கொலை  புரிவித்த   பாண்டியனைக்  கண்ணகியார்  வெகுள ,  அது  காரணமாகப்  பாண்டியன்  உயிரிழந்தான்  என்று  தண்டமிழ்ப்  புலவர்  சாத்தனார்   செங்குட்டுவற்குக்  கூறினாராக ,  அது  கேட்ட  செங்குட்டுவன்   பாண்டியன்  தவரின்மையையும்  அரசியல்  நடாத்தும்  சிரமத்தையும்  சாத்தனார்க்குக்  கூறுமுகமாக,

“மழைவளங்  கரப்பின்  வான்பே  ரச்சம்

 பிழையுயி  ரெய்திற்  பெரும்பே  ரச்சம் 

குடிபுர  வுண்டும்  கொடுங்கோ  லஞ்சி

மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல்

துன்ப  மல்லது  தொழுதக  வில்லென”

என்று  இளங்கோவடிகள்  கூறியது  நினைந்  தின்புறத்தக்கது .  “அரசன்  குடிகளினிடத்தினின்று  தனக்குரிய   அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலால் , அக்குடிகளுக்கு  ஏவலாளர்  தன்மையுடையவனாவான்  எனவும் , “பூமரத்தை  வளர்த்து  மலர்  பறித்து  மாலை  கட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்பக்  குடிகளைப்  பாதுகாத்து  அவர்பால்  அரசிறை  பெற  வேண்டும்”  எனவும்,   அங்ஙனமின்றி  அம்மரத்தை  எரித்துக்  கரி  செய்து  பயன்  பெறுதல்  போலக்  குடிகளைக்  கெடுத்துச் சிறுபயன்  கொள்ளலாகாது”  எனவும்  சுக்கிர நீதி  கூறுகின்றது . இச் செய்திகள்  மிகவும்  பாராட்டற் குரியனவாம் .  

             திருக்குறட்  பொருட்பகுதியில்  அரசர் , அமைச்சர் , படைத் தலைவர் முதலியோரின்   இலக்கணங்களாகக்  கூறப்பட்டனவும்   பிறவும்  யாண்டும்  காண்டற்கரியனவாம் . ஒற்றர்  இயல்பு  கூறுங்கால் ஒற்றும் , நீதி  நூலும்   ஆகிய  இரண்டும்  அரசர்க்கு  இரு  கண்களாகும் என்று  கூறப்பட்டுள்ளது . நாட்டின்  இலக்கணங்  கூறுங்கால் .  ஒரு  நாட்டில் , வாழ்வோர்  தேடி  வருந்தாமல்  வேண்டுவனவெல்லாம்  ஆங்கே  பெறத்தக்கதாக  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்தமைய  “நாடென்ப  நாடாவளத்தன”  என்கிறார் .  பிணியின்மையையும் , நிரம்பிய  செல்வமும் , விளைவும் , இன்பமும் , காவலும்  ஆகிய  இவ்வைந்தும்  நாட்டிற்கு  அழகு  செய்வனவெனும்  கூறப்பட்டுள்ளன . இதனால்  அரசன்  தன்  நாட்டை  இத்தகுதிகளுக்கு  உரியதாக  அமைத்துக் கொள்ள  வேண்டுமென்பது  புலனாகும் . அமைச்சரியல்பு  கூறுங்கால் , வினைத்தூய்மை  ,  வினைத்  திட்பம் , வினை  செயல்  வகை   என  மூன்றதிகாரங்கள்  காணப்படுகின்றன .  இவற்றை  ஊன்றிப்  படிப்பார்குத்  தாம்  செய்ய  வேண்டிய  காரியங்களைப்  பற்றிய  தெளிவு  கல்லெழுத்துப்  போல  நெஞ்சிற்  பதிவதாம் .  திருக்குறளே  யல்லாமல்  நாலடியார் , நான்மணிக் கடிகை , திரிகடுகம்  சிறுபஞ்சமூலம்  முதலிய  சங்கமருவிய   நீதிநூல்களும்  தமிழிற்  பலவுள .  அவையெல்லாம்  மக்கள்  ஒழுங்குமுறைகளை  வரையறுத்துத்  தெளிவுபடுத்துவனவாகும்.

               நாலடியார்  என்னும்  நூல்  கற்பார்  மனதைக்  கவரவல்லது . “ஆலும்  வேலும்  பல்லிற்குறுதி , நாலு  மிரண்டுஞ்  சொல்லிற்குறுதி “  என்னும்  பழமொழியில்  நாலென்பது  நாலடியாரையும்  இரண்டு  என்பது  ஈரடியான்  அமைந்த  திருக்குறளையுங்  குறிப்பனவாம் .  ஒருவன்  சிற்சில  செயல்களிற்  செவிடனாய்க்  குருடனாய்  ஊமை யாயிருத்தல்  வேண்டுமென   நாலடி  கூறுகின்றது . இம் முறை  வியக்கத்தக்கது . இதன்  கருத்து , பிறர்  ரகசியங்களைக்  கேட்பதிற்  செவிடனாகவும் , பிறர்  மனைவியரைக்  காம  நோக்கமாகக்  காண்பதிற்  குருடனாகவும்  பிறரைப்  பற்றிக்  காணாவிடத்துப்  புறங்  கூறுவதில்  ஊமையாகவும்  இருத்தல்  வேண்டும்  என்பதாம் . இங்ஙனம்  சாதுரியமாகக்  கூறுமியல்பு  இந் நூலிற்  பல  விடங்களிற்  காணலாம் . ஒருவன்  மற்றொருவன்பால்  இல்லாத  குணங்களைப்  புகழ்வதினும்  அவனை  வைதல்  நல்லதென்கிறார் .  கடையாயர் , இடையாயர் , தலையாயர்  ஆகிய  இம்  முத்திறத்தாரும்   அஞ்சுதற்குரியன   யாவை  என்னும்  வினாவை  எழுப்பி  விடையிருக்கு முகமாக  கடையார்  பசிக்கு  அஞ்சுவரெனவும் , இடையார்  துன்பத்திற்கு  அஞ்சுவரெனவும் ,  தலையாயர்  பழிச்  சொல்லிற்கு  அஞ்சுவரெனவும்  கூறுவர் .  குலப் பெருமை  பேசுவார்க்கு , “நல்ல  குலமென்றுந்  தீய  குலமென்றுஞ்  சொல்லள  வல்லாற்  பொருளில்லை”  என்றும் , “தவங்கல்வி  ஆள்வினை  என்றிவற்றான்  ஆகும்குலம் “  என்றுங்  கூறுவர் . இன்னோரன்ன  சிறந்த  நீதிமணிகள்  பல  ஒளிசெய்தலை  இந் நூலாகிய  பொற்பேழையிற்  பரக்கக்  காணலாம் .  

               பிற்காலத்து  ஒளவைப்  பிராட்டியார்  அருளிய  ஆத்தி சூடி , வாக்குண்டாம் , நல்வழி  முதலிய  நீதி  நூல்கள்  சிறுவரும்  உணர்ந்து  இன்புறத்தக்க  நிலையில்  அமைந்த பேரறிவாளர்க்கும்  விருந்தாக  விளங்குவன . ‘இயல்வது  கரவேல்’  என்னும்  சூத்திரம்  ஒருவன்  மனமொழி  மெய்களாற்  பிறர்க்குச்  செய்யக்கூடிய  உதவியை  ஒளித்தலாகாது  என்னும்  பொருளை  உட்கொண்ட   இப்பொருளின்  விரிவுகளுக்  கெல்லாம்  நிலைக்  களமாக  நிற்றலை  நோக்குவார்க்கு  இதன்  திட்ப  நுட்பங்கள்  இனிது  விளங்கும் .   

“சில்வகை  யெழுத்திற்  பல்வகைப்  பொருளைச்

 செவ்வன்  ஆடியிற்  செறித்தினிது  விளக்கித்

 திட்ப  நுட்பஞ்   சிறந்தன  சூத்திரம் “

 என்பதனாற்  சூத்திரத்தின்  இலக்கணத்தை  அறியலாம் .  இவ்விலக்கணத்துக்குப்  பெரிதும்  இவ்  ஆத்திசூடிச்  சூத்திரங்கள்  இயைபுடையவாக  விளங்குவன . இந் நூல்  மாபாடியம்  போன்ற   விரிவுரையே  யேற்குந்  தகுதி  வாய்ந்தது . உயர்ந்த  நீதிகலைச்  சிறுவர்  எளிதிலுணர்ந்து  கொள்ளுதற்குப்  பெரும்  புலவர்கள்  பல  நிறமாக  வகுத்து  ஆராய்ந்து உரை  காண்டற்கும்  இஃது  இலக்கியமாகத்  திகழுமாயின் , இதனை  உபகரித்த  தமிழ்ச்  செல்வியின்  அறிவின்  திட்பம்  எத்துணைச்  சிறந்ததாகும்  என்பதை  அறிவுடையார்  உணர்வாராக .

             பண்டை  நீதிநூலார்  கூடிய  வரை  முயன்று  தம்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளை  நெடுங்கால  மாயினும்  சிதையாம லிருத்தற் பொருட்டுச்  சூத்திர வடிவிலும்  செய்யுள்  வடிவிலும்  யாத்துள்ளனர் .  அவை  உரைநடையில்  ஆக்கப்படாமை  குறையென்பர்  ஒரு  சாரார் .  முற்காலத்தில்  இவ்வளவு  விரிவாக  அச்சிடுதற்குரிய  கருவிகளில்லை.  கற்பவர்  நெஞ்சத்திலும்   உரைநடையிலும்  செய்யுள்  நடை  நிலைபெற்று  ஞாபகத்துக்கு  நன்கு  பயன்படும் . காலந்தோறும்  மக்கள்  வழக்கவொழுக்கங்கள்   மாறுபடுதல்  இயல்பே .  அம்  மாறுபாட்டிற்கேற்ப  நீதிகளும்  திருத்தப்படுமென்பது  சொல்லாமலே  விளங்கும் .  மகாபாரத்துக் கண்ட சில அறங்கள்  இக்காலத்துக்குப்  பொருத்தமாகக்  காணப்படா . அது  பற்றிப்  பேரறிஞராகிய   வியாச  முனிவர்  இழித்துரைக்கப்படுவாரல்லர் . ஆகவே  எத்தகைய  நீதிகளையும்  காலம்  நோக்கிக்   கொள்ளுதலும்  தள்ளுதலுஞ்  செய்தல்  வேண்டும் . “பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்”  என்பதைக்  கடைப்பிடித்து  மனம்  போனபடி  செய்யத்  துணிதல்  நன்றன்று .  இங்ஙனம்  வடமொழி  தென்மொழிகளிற்  சிறந்த  நீதி  நூல்களை  ஆக்கிய  பெரியாருடைய  இயல்புகளை  இங்கே  கூறியன  கொண்டு  தெளிந்து  கொள்க .

                                 4 .  மாணிக்கவாசகர்

                         (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

  செந்தமிழ்ப்  பாண்டி  வள  நாட்டிலே  ,  சைவ  மணங்கமழுந்   திருவாதவூர்  என்னும்  திரு  நகரில் , சிவ  பக்தி மிக்க  அந்தணர்  குலத்தில்  மாணிக்கவாசக  அடிகள்  தோன்றியருளினார்கள் .  இவர்களுக்குப்  பிள்ளைத்  திருப்பெயர்   திருவாதவூரர்  என்பதாம் . இவர்கள்  தோன்றியருளினமையைக்  குறித்துக்  கடவுண்  மாமுனிவர், ‘உலகில்  மாயப்  பொங்கிருளகல   எம்மையாளுடை யான்  அன்ப ரிதய தாமரைக ளெல்லாஞ்  செம்மையாய்  மலர , ஞான  தினகரர்  உதயஞ்  செய்தார்’  என்று   சிறப்பித்துப்  பாராட்டுவர் .  திருவாதவூரர்  இளம்  பருவத்திற்  கருவி  நூல்கள் , அரசியல்  நூல்கள் , சமய நூல்கள் , முதலியவற்றை  ஐயந்திரிபறக்  கற்றுத்  தெளிந்த  அறிவுடையராக  விளங்கினர் .  அக்காலத்து  மதுரையிலிருந்து  தமிழ் நாடு புரந்த  அரிமர்த்தன  பாண்டியன்,  இவர்கள்  அறிவின்  மாண்பை   யுணர்ந்து  அழைத்துத்  தன்  அரசியல்  நடாத்துதற்குரிய  அமைச்சருள்  தலைவராக்கினான் . அவர்கள்  மதிநுட்பம்   நூலோடுடையராய்  அமைச்சருள்   தலைவராக  வீற்றிருந்து  அறநிலை  பேணித்  தம்  செயலாற்று  நாளில் , “நானார் , என்னுள்ளமார் ,  ஞானங்களார்”  என்று  இன்னோரன்ன  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , இருவினைக் கீடாகப்  பிறந்து  இறத்துழலும்  உயிர்த்  தொகுதிகளி னியல்பும் , அவ்வுயிர்களை  வினைப்பயன்  நுகர்வித்து  அருள்புரியும்   பரங்  கருணைத்  தடங்கடலாகிய  இறைவனியல்பும் , அவ்விறைவனை  யுணர்ந்து  இன்பம்  எய்தற்குத்  தடையாகவுள்ள   பாசப் பொருள்களினியல்பும்  உள்ளவாறுணர்ந்து  தெளிவெய்தினர் .  இந்  நிலையில்  அடிகள்  “கூத்தினர்  தன்மை  வேறு , கோலம்  வேறாகுமா போல்”பாண்டியன்  இட்ட  பணியைப்  புறத்தே  மேற்கொண்டும்  அகத்தே  பற்றற்றும்  சிவபத்தியில்  ஈடுபட்டு  ஒழுகுவாராயினர் .

            அந்நாளில்  பாண்டியற்குக்  குதிரை  வாங்கப்  பொன்  கொண்டு  சென்றவர் , திருப்பெருந்துறையில்  குருந்த  மரத்து  நீழலில் , இவர்  பந்தமறும்  எல்லையது  பார்த்தினிதிருந்த  , சிவபரம்  பொருளாகிய  குருபரனைத்  தரிசித்து  உள்ளங்கரைந்து  உலகியலை  மறந்து , “உன்னடியடைந்து  நாயேன்  உறுபவம்  ஒழித்தல் வேண்டும், என்னுயிர்க்கிறைவா”  என்று  முன்னுற  வணங்கி  நின்றார் .  இவர்  அதி  தீவிர  பக்குவ  நலையைக்  கண்டு  பெருமான்  அருள்  கூர்ந்து  சிவஞான  போதமென்னுஞ் சைவத்  தலை  நூலின்  நுண் பொருளைத்  தெளிவுறுத்திய  பின் , “இருவினைப்  பாசமும்  மலக்கல்  லார்த்தலின், வருபவக்  கடலின்வீழ்  மாக்களேறிட  , அருளுமெய் யஞ்செழுத்தை  அநுபவ  நிலையில்  உபதேசித்தருளினார் . இங்ஙனம்  குருபரன்  பாலுணர்ந்த  தம் அநுபவத்தையே  ,’ நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நமவெனப்  பெற்றேன் “  என்று  அடிகள்  திருவாய்  மலர்ந்தருளினார் .

          இவ்வாறாகப்  பாண்டியன்  பொருட்டுக்  குதிரை  வாங்கப்    போனவர் தொன்னுறு  பரி  கொளாமல்   கோவணங்கொண்ட  செய்தியைப்  பாண்டியன்  கேட்டு , ஓலைபோக்கி , அடிகளை  அழைப்பித்துத்   துன்புறுத்தினானாக .  அடிகள்  தஞ்  செயலற்று  எல்லாம்  இறைசெயலாகக்  கண்டிருப்பவராதலின், அவ்விறை  நினைவில்  ஈடுபட்டிருந்தனர் . பின்னர் , இவர் பொருட்டு  இறைவன்  நரியைக்  குதிரைப்  பரியாக்கி  ஞாலமெல்லாம்  நிகழ்வித்தும் , மண்  சுமந்தும் , பிரம்படியுண்டும் , அடிகள் பால்  தாம்  கொண்ட  அருட்டிறத்தை  உலகுக்கு  விளக்கியருளினார் . அடிகள்  திருவரு ளமிர்தத்தை  நிறைய  வுண்டு  , சிவாநுபவச்  செல்வராக  விளங்கிய  நிலையில் , “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்  வையகம்”  என்ற  முதுமொழிப்படி  தம்  அருளநுபவத்தை  உலகத்துள்ள  மக்களுக் கெல்லாம்   வழங்க  ஆண்டவன்  அருள்  வழி  நினைந்து  திருவாசகம்  என்னும்  இசைப்பாடற் றொகுதியைத்  திருவாய்  மலர்ந்தருளினார் .  

            உலகப்  பற்றை  முழுதும்  துறந்த  உத்தமச்  சிவஞானச்  செல்வர், தமக்கு  இறைவன்  அருளிய  ஒப்புயர்வில்லாப்  பேரின்ப  நிலையைத்  தாம்  அநுபவித்த  அளவில்  நின்று  விடாது , உலகத்து  மக்களுக் கெல்லாம்  உபகரிக்க  நினைந்தது  பெரிதும்  பாராட்டத்தக்கது . இல்வாழ்வார்க்கு  அன்பென்னும்  அருங்குணமும்  துறவற வாழ்க்கை  யுடையார்க்கு  அருளென்னும்  பெருங்குணம்  சிறப்பாக  இருத்தல்  வேண்டும்  என்பர்  திருக்குறளாசிரியர் .  மாணிக்கவாசகப்  பெருமான்  இவ்விரு  பெருங்  குணங்களுக்கும்  நிலைக்களமாக  விளங்கிய  பெரியராவர் .

               இவர்  மேற்கொண்ட  நெறி , சரியை  கிரியை  யோகங்களுக்கு  மேலான  ஞான  நெறியாகிய  சன்மார்க்கமாகும் .  இந் நெறியில்  நின்ற  அடிகள் , காணப்படும்  இவ்வுலக  வியல்புகளைத்  தம்  கூர்த்த  மதியால்  உய்த்துணர்ந்து , பருப் பொருளாகிய  மாயா  காரியங்க ளெல்லாம் தத்தங்  கால  வெல்லையில்  அழித்தழிந்து  தேய்ந்தொழிவன  என்னும்  உண்மையையும் , இவ் வெல்லாவற்றையும்  கன்மங்களுக் கீடாகப்  படைத்தும் , காத்தும் , கரந்தும்  விளையாடும்  பேராற்றல்  வாய்ந்தது . கால  வெல்லையைக்  கடந்து  நிற்கும்  கடவுள்  ஒருவருளர்  என்பதையும் , அப்பெருமான்  சார்ந்தார்க்குத்  தண்ணிழலாய்ப்  பேரின்ப  வடிவாகத்  திகழும்  இயல்பினர் என்பதையும்  உள்ளவாறுணர்ந்து , அப்பெரும்  பெயர்க் கடவுள்  உபதேசத்தால் , தாம்  யெய்திய  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தைத்  தம்  சோதரராகிய  மக்களெல்லோரும்  துய்க்க  வேண்டுமென்னும்  பேரருளுடையராய்த்   திருவாசகம்  என்னும்  தெளிதேனைப்  பொழியும்  அருண்முகி லாயினர் .   

                 திருவாசகப்  பாடல்களில்  மாணிக்க வாசக அடிகளுடைய   சிவாநுபவ  நிறைவில்  பொங்கித்  ததும்பி வெளிப்பட்ட  முது வெள்ளமெனின்  மிகையாகாது . பிற்காலத்துச்  சிவயோக  நெறி  நின்று  இறையருளநுபவத்தில்  ஈடுபட்டு   ஒழுகிய  தாயுமான அடிகள்  “என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து  கரைந்து , அன்புருவாய்  நிற்க அலைந்தேன் பராபரமே “  என்று  கூறியதற்கு  இலக்கியமாகவுள்ளவர்  மாணிக்கவாசக அடிகளே.  இவர்கள்  அன்பு  நெறியை  வியந்தே  ‘வாதவூர்  ஐயன்  அன்பை  வாஞ்சிப்பதெந்நாளோ’  என்றுங்  கூறினர் .   படிப்பவர்  கேட்பவர்  உள்ளங்களைக்  கனிவிக்கும்  கவிமழை  பொழிந்த  சமீப காலத்துக்  கவிஞர்  தலைமணியாகிய  இராமலிங்க  அடிகள்   , திருவாசகத்தைப்  பன்முறை  யோதி யுணர்ந்து  பயின்றவர்  என்பது  அவர்  அநுபவப்  பாடல்களால்  அறியலாம் .  ஒரு  சிறந்த  கவியினுள்ளத்தை  மற்றொரு  கவிதான்   உனரமுடியும் .  அந்நிலையில்   திருவாசகப்  பாடல்களில்  உள்ளந் தோய்ந்து பொருள்  நயங்களில்  ஈடுபட்ட  இராமலிங்க  அடிகள் ,

“வான்கலந்த  மாணிக்க  வாசகத்தின்  வாசகத்தை

நாங்கலந்து  பாடுங்கால்  நற்கருப்பஞ்  சாற்றினிலே

தேங்கலந்து  பால்கலந்து  செழுங்கனித்தீஞ்  சுவைகலந்து

ஊன்கலந்து  உயிர்கலந்து  உவட்டாமல்  இனிப்பதுவே “

என்று  கூறினர் .  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றது  நினைக்கத் தக்கது .  ஒரு  பெரியார்  பாடலைப்  படிப்பவர்கள்  உள்ளமும்  அப்பாடற் பொருளும்  அத்துவித  நிலையடைதல்  வேண்டும் .  அங்ஙனம்  ஒன்றுபடுதலையே  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றனர் .  திருவாசகச்  சுவை   ‘ஊங்கலந்து  உயிர்கலந்து  இனிப்பது ‘  என்றார் .  உயிரிற்கலந்து  தன்வயமாக்குங்  கனிவு  திருவாசகத்துக்குச்  சிறப்பியல்பாகும் .  தேன்  பால்  முதலிய  உவமைகளானன்றித்  திருவாசகச்  சுவையி னியல்பை  உள்ளபடி  கூறுக  என்பார்க்கு  விடையாக ,

“காமமிகு  காதலன்றன்  கலவிதனைக்  கருதுகின்ற

ஏமமிகும்  கற்புடையாள்  இன்பினும்  இன்பாயது” 

என்று , சொல்லொணாமையைக்  குறிப்பிட்டார் . இதற்கு  மேல்  அவ்வநுபவச்  சுவையை  எடுத்துக் கூறுதற்கு  எங்ஙனம்  இயலும் !  

               திருவாசக  திருப்பாடல்களை  ஒளடவ  ராகமாகிய  மோகனத்திற்  பொருளுணர்ந்து  பாடுவாராயின் ,கல்நெஞ்சமும்  கரையும் . “திருவாசகத்துக்கு  உருகாதார்  ஒரு  வாசகத்த்துக்கும்  உருகார்”  என்னும்  மூதுரையும்  இது  பற்றி யெழுந்ததே  கவிஞர்பெருமானாகிய  சிவப்பிரகாச  அடிகள் ,

“வாதவூ  ரன்பர்  மலர்வாய்ப்  பிறந்த

திருவா  சகமிங்  கொருகா  லோதில் 

கருங்கல்  மனமுங்  கரைந்துக்  கண்கள்

தொடுமணற்  கேணியிற்  சுரந்து  நீர்  பாய

அன்ப  ராகுந  ரன்றி 

மண்பதை  யுலகில்  மற்றைய  ரிலரே “

என்று  தம்  ஆராமையை  வெளிப்படுத்தினார் . இன்பக்  கலைகளுள்  ஒன்று  இசையென்பர்  அறிவுடையோர்   அவ்விசைக்குக்  கொழுக்கொம்பு  பொல  ஆதாரமாக  நிற்பது  இசைப்பாடல்களும் , சுவை  கனிந்த  பாடல்களிலன்றி  இசையின்  பெருமையை  உணர்தல்  இயலாது . இசை  பாடுபவன்  சுவைகளை  அநுபவித்த  உட்கோளைப்  புலப்படுத்துதர்குச்  சிறந்த  பாடல்களே  பற்றுக் கோடாகும் .

“வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார்

 வெண்காடு  மேவிய  விகிர்தனாரே “

என்னும்  தமிழ்  மறையில்  யாழிசைக்கு  வேதப் பாடல்கள்  பற்றுக்கோடாக  விளங்கின  என்பது  புலனாகும் .  தமிழ்  நாட்டில்  இசைக்  கலை  வளர்ச்சி  யடைந்த  காலம்  தேவார  திருவாசக காலம்  என்பது  யாவர்க்கும்  உடன்பாடாகும் . ‘நாளும்  இன்னிசையால்  தமிழ்பரப்பும்  ஞான சம்பந்தர்’  என்றும்,  ‘கானத்தின்  எழுபிறப்பு’  என்றும்  திருஞானசம்பந்தர்  பெருமை  கூறப்படுகிறது .  திருவாசகப்  பாடல்களின்  சொற்களையும்  எழுத்துக்களையும்  சுரநிலங்களில்  அமைத்துப்  பாடினால்  சுரங்களுக்குப்  பாடல்  அமைந்ததோ  பாடல்களுக்குச்  சுரம்  அமைந்ததோ  என்று  இசைவல்லார் பெருவியப்பெய்துவர் .  பிறவிப்  பிணிக்குச்  சார்ந்த  மருந்தாகவுள்ள  அரும்  பொருள்களைப்  பாடல்களில்  அமைத்து  இசையாகிய  அநுபானத்தோடு  ஊட்டுதற்கு  முற்பட்டவர்  மணிவாசகப்  பெருந்தகையாவர் .

              இவர்கள்  பற்பல  சிவ   தலங்களுக்குச்  சென்று , ஆங்காங்குக்  கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவனை  உள்ளத்தமைத்துப்  பாடும்  முகமாகத்  தம்  அநுபவ  உணர்வை  அன்பர்களுக்குத்  தெளிவாகப்  புலப்படுத்தியுள்ளார் .  எங்கும்  நிறைந்த  பரம்பொருளைச்  சில  இடங்களில்  மாத்திரம்  உள்ளதாகக் கொண்டு  பாடியது  பொருந்துமோ  எனின் ,  ஒரு பசுவின்  உடல்  முழுதும்  பால் பரவியிருப்பினும்  , அது  தோன்றுதற்குரிய  உறுப்பினன்றிப்  பிறிதிடத்து   வெளிப்படாதவாறு  போல , மக்கள்  வழிபாட்டிற்கிரங்கி  அருள்  புரிதற்கு   அருட்குறிகளின்  முகமாக  ஆண்டவன்  வெளிப்பட்டு  அருளுவர் .  இவ்வுணர்ச்சி  மேற்கொண்டே ,

பார்பதம்  அண்டம்  அனைத்துமாய்  முளைத்துப் 

 பரந்ததோர்  படரொளிப்  பரப்பே “ 

என்னும்  திருப்பாட்டின்  இம்  முற்பகுதியில்  இறைவனுடைய  எங்குநிறை  இயல்பைக்  கூறிப்  பிற்பகுதியில்  ,

“சீருறு  சிந்தை  யெழுந்ததோர்  தேனே

 திருப்பெருந்  துறையுறை  சிவனே

என்று  தம்  அகத்தும்  சிவ  தலத்தும் வெளிப்படும்  உண்மையைப்  புலப்படுத்தியுள்ளார் . இங்கே  எங்கு  நிறை  நிலையில்  ஒளிப்பரப்பா கவும் , உள்ளத்தில்  இனிக்குந்  தேனாகவும்  ,  திருக் கோயிலில்  மங்கலகரமான  மூர்த்தியாகவும்  பெருமான்  விளங்குவர் என்னும்  பொருணயம்  நினைந்து  இன்புறத் தக்கது .

          ஆண்டவன்  அமைப்பாகிய  அன்பு , அருள் , அறிவு  முதலிய  அரிய  குணங்களில்  ஈடுபடுத லன்றி , மக்களமைப்புக்களாகிய  சாதி  குலம் , பிறப்பு , பொருள்  முதலியவை  பற்றிய  உயர்வு  தாழ்வுகளைச்  சிறிதும்  நம்  மாணிக்கவாசகனார்  கருதியவரல்லர் . இவ்வுண்மை யைப்  புலப்படுத்துதற்கே , ‘சாதி  குலம்  பிறப்பென்னுஞ்  சுழிப்பட்டுத்  தடுமாறும்   ஆதமிலி  நாயேன்”  என்று  தம்  முற்பட்ட  இயல்பையும் , ‘குலங்  களைந்தாய்  களைந்தாய்  என்னைக்  குற்றம்’  என்று  இறைவனுக்குத்  தாம்  ஆளாய  பிற்பட்ட  இயல்பையும்  கூறுவாரா யினர் . மக்களுக்குக்  குலப்பெருமை  பேசுதல்  இயல்பென்பதும் , அதனால்  உண்டாகுஞ்  செருக்கு  ஒழியின் ,  அது  மூலமாக  உண்டாகும்  எல்லாக்  குற்றங்களும்  நீங்கி  விடும்  என்பதும்  அவர்கள்  கண்ட  உண்மைகளாம் . உடல் , பொருள் , ஆவி மூன்றனையும்  இறைவனுக்குரிய  பொருள்களாகக்  கொடுத்து , அவற்றில்  ஒரு  சிறிதும்  பற்றின்றி  ஒழுகுதலை  மேற்கொண்டன ராதலின்  ஏதும்  இடர்ப்பாடு  அடைந்திலர்  என்பது  விளங்கும் .

            ஒருவன்  எவ்வெப்   பொருள்கலிற்  பற்றொழிந்திருக்கின்றானோ, அவ்வப்  பொருள்களால்  வரும்  துன்பத்திற்கு  ஆளாகான்  என்பது  பெரியவர்கள்  கண்ட  உண்மை .அடிகள்  விருப்பு  வெறுப்பற்ற  நிலையில்  நின்றார்களெனினும்  மக்கள்  பாலுள்ள  சோதர  உரிமையை  விட்டவரல்லர் . அதற்குக்  காரணம்  அன்னாரெல்லாம்   தாம்  பெற்ற  பேரின்பப்  பெருவாழ்வில்  தலைப்பட  வேண்டுமென்னும்  கருணையேயாகும் .  இவ்வருளறத்தை  மேற்கொண்டே  , ‘காலமுண்டாகவே  காதல்  செய்துய்ம்மின்’   என்றும் , ‘மூலபண்டாரம்  வழங்குகின்றான் வந்து  முந்துமினே’  என்றும் ,  ‘முழுதுலகும்  தருவான் கொடையே வந்து  முந்துமினே’  என்றும்  உலகத்தவரை  நோக்கி  அருளமுதத்தை  உடனுண்ண  அழைப்பாராயினர் . அவர்  அன்புடன்  விடுத்த  அழைப்பிற்  கிணங்கி  வாராத  மடவோரை , உலக  நிலையா மையை  யுணர்த்தி  அஞ்சுவித்தாயினும்  அழைத்து  ஊட்ட  வேண்டு மென்னும்  அருள்  நிறைவால் , ‘நிற்பார்  நிற்க  நில்லா  உலகில்  நில்லோ மினி  நாம்  செல்வோமே’  என்று  திருவாய்  மலர்ந்தருளினார்.

                 இனி , அடிகள்  உலகியலைக்  கடந்த  நிலையில்  நின்று  மறையோனாகிய  இறைவன்  அருள்  வெள்ளத்துள்  மூழ்கிப்  பேரின்ப  நிலையில்  தடைப்பட்டு  அநுபவித்த  உண்மைகளெல்லாம்  மனம்  வாக்குகளுக்கு  அடங்காதனவாகவும் ,  அவற்றைப் பதிகரணமாக  மாறப் பெற்ற  நம் உள்ளத்தால் அறுதியிட்டுத்  தெள்ளமுத உரைகளால்   அறிவிற்  சிறியாரும்  உணர்ந்து  இன்புறும்  வண்ணம்  இசையினிமை  மிக்க  பாடல்  வடிவில்  வெளிப்படுத்திய  முறை  மிகவும்  பாராட்டற் குரியது .  அம்மானை , பொற் சுண்ண  மிடித்தல் , உந்தி , சாழல் , தெள்ளேணம் , ஊசல்  முதலிய  மகளிர்  விளையாடல்களில்  , அவர்  தம்முள உரையாடு  முகமாக , அரிய  அநுபவ  உண்மைகளை  எளிய  முறையில்  தெளிவுபடுத்தியது .  அடிகள்  ஏனைய  மக்கள்பால்  வைத்த  பெருங்  கருணைக்குப்   பெரிது  சான்றாவதாம் .  குயிலை  முன்னிலைப்படுத்தி  இறைவன்  அருட்குணங்களை  இங்ஙனம்  கூவுக  எனவும்   வேண்டுகோளை  நோக்கி  இங்ஙனம்  ஊதுக  எனவும் , அருளிச்செய்த   திருப்பாடல்களை  நோக்குங்கால் , ஓசையொலி யெல்லாம்  சிவமயமாகக்  கண்டார்  என்பது  புலனாம் .  

              தாம்  அநுபவித்த  பொருட்களின்  வரையறையும் , தெளிவும் , குழைந்த  அன்பின்  கனிவும்  ததும்ப  இடையறாது  ஒழுகும்  தேனருவி  போன்ற  ஒழுக்கமிக்க  இவர்கள் பாடல்களின்  இயல்பை  நம்மனோர்  எங்ஙனம்  எடுத்துரைக்க  இயலும் !  ஆயினும்  இவற்றிற்கெல்லாம்  எடுத்துக்காட்டாக, சிறிய  வடிவிலமைந்த  ஒரு  திருப்பாடலைக்  குறிப்பிடலாம் என்று  எண்ணுகின்றேன் . அஃதாவது ,

“இன்பம்  பெருக்கி  யிருளகற்றி  யெஞ்ஞான்றும் 

 துன்பம்  தொடர்வறுத்துச்  சோதியாய் —  அன்பமைத்துச்

சீரார்  பெருந்துறையான்  என்னுடைய  சிந்தையே 

 ராகக்  கொண்டா  னுவந்த “ 

என்பதாம் .  சுவை  மிக்க  அமிர்தத்தைப்  பெய்து  வைத்தற்குரிய  கலத்தில்  அவ்வமிர்தத்திற்கு மாறுபட்ட  பொருள்  இருத்தலாகாது . இருக்குமாயின் , முதலில்  அதனை  அறவே  ஒழித்து  விட  வேண்டும் . பின்னர் , அக்கலத்தை  உரிய  கருவி  கொண்டு  அழுக்கொழித்துத்  தூய்மைப்படுத்த வேண்டும் . அதன்பின் , நல்லமிர்தத்தைப்  பெய்து  வைத்தல்  முறயாம் . இஃது  உலகியலிற்  கண்டது . இவ்வண்மையை  நினைவு  கூர்ந்த  அடிகள்  இத்திருப்பாடலில்  ஓர்  அரிய  அநுபவத்தை  வெளியிடுவராயினர் . இறைவனார்  தம்  அருளமிர்தத்தை அடிகள்  உள்ளமாகிய  கொள்  கலத்தில்  பெய்து  வைக்கத்  திருவுளங்  கொண்டு , அதன்கண் நீண்ட  காலமாக  ஈட்டப்பட்டு  நிறைத்து  வைத்த  மாயாகாரியப் பொருள்களாகிய  துன்பங்களை  அறவே  ஒழித்துப் , பின்  மயக்க  உருவமாகப்  படிந்து  கிடந்த  இருளைத்  தன்  அருட்பார்வை  யொளியாற்  போக்கிப்  பேரின்பமாகிய  அருளமிர்தத்தைப்  பெய்து  இன்புறுத்தினாரென்பதும் . அந் நிலையில் அடிகள்  உள்ள  முழுதும்  அன்பு  மயமான  குளிர்ந்த  இடமாக  அதன்கட்  பெருமாள்  வீற்றிருந்தருளினரென்பதும்  இதன்கட்  புலனாம்  படி ,  “சோதியாய்  நின்று  இருளகற்றித்  , துன்பந்  தொடர்வறுத்து இன்பம்  பெருக்கி , அன்பமைத்து  என்னுடைய  சிந்தையே  ஊராகக்  கொண்டான் “  என  நிரனிறைப்  பொருள்கோளாக   அழகு  பொருந்தத்  திருவாய்  மலர்ந்தருளினார் .

           இங்ஙனம்  மாணிக்க வாசக  அடிகள்  நம்மனோர்  உய்யும்  பொருட்டுத்  தாம்  அநுபவித்த  சிவானந்தத்  தெள்ளமுதைச்  சொல்லினிமை  பொருளினிமைகளிற்   சிறந்த  பாடல்  வடிவில்  வெளிப்படுத்தருளிய  பேருபகாரத்தை  நினைவு  கூர்தற்கு  அறிகுறியாக  நாம்  மேற்கொள்ளத்தக்கது , அப்பாடல்களை  இசை  நலம்  பொருந்த  மெய்யன்போடு  ஓதியும்  உண்மைப்பொருள்களை  உணர்ந்தும்  இன்புறுதலேயாம் .  அன்பே  சிவம்  எனும்  அரிய  பொருளுரை  மக்கள்  உள்ளத்தில்  நிலவுவதாக .

                      5 .  சங்க   காலத்து   அங்கதம்

                       (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

         ஆங்கில  மொழியில்    SATIRE  (செடயர்)  என்பது  தமிழில்  அங்கதம்  என்று  வழங்கப்படும் .  தமிழிற்  காலத்தால்  முற்பட்ட   தொல்காப்பியம்  என்னும்  இலக்கன  நூலில் , இவ்வங்கதம்  பற்றி  வந்த  செய்யுளின்  இலக்கணமும்  வகையும்  இன்னவென ,

“வசையொடும்  நசையொடும்  புணர்ந்தன்  றாயின்

 அங்கதச்  செய்யு  லென்மனார்  புலவர்”

“அங்கதந்தானே  அரில்தபத்  தெரியின்

 செம்பொருள்  கரந்த  தெனவிரு  வகைத்தே”

“மொழிகரந்து  சொல்லினது  பழிகரப்  பாகும் “

என்னும்  இவை  முதலிய  சூத்திரங்களால்  தெளிய  உரைக்கப்பட்டன . ஒருவனுடைய  குறையையோ  ஒரு  சமூகத்தாரின்  குறையையோ  , அன்னார்  நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம் வெளிப்படையாகவும்  குறிப்பாகவும்  கூறுதல்  அங்கதமாகும் .  அங்ஙனங்  கூறுங்கால்  நகைச்  சுவை  தோன்றக்  கூறுதல்  இன்புறத் தக்க  தொன்றாகும் .

             இவ் வங்கதம் , வெளிப்படையாகக்  கூறுதல் , கரந்தமொழியிற்  கூறுதல்  என  இரு  வகைப்படும்  என்பது  முதற்கூறிய  இரண்டாம்  சூத்திரத்தால்   அறியப்பட்டதொன்று .  வாய்  காவாது  சொல்லும்  வசையே  இங்குச்  செம்பொருளங்கதம்  எனப்படும்  .  இதனைச்  செவியாலநுபவிக்கப்படுஞ்  சொற்சுவை  பொருட்சுவைகளை  யுணராது  வாயால்  நுகரப்படும்  உணவின்  சுவையிலேயெ  ஈடுபடும்  மனிதர்  செத்தால்  வரும்  இழப்பும்  வாழ்ந்தால்  வரும்  பேறும்  இன்மையால்  உலகிற்கு  அவரால்  வருவது  யாது ? என்னும்  பொருள்  தோன்றக்  கூறிய ,

“செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள்

  அவியினும்   வாழினு  மென் ?”

 என்னுந்  திருக்குறளால்  அறியலாம் .  இங்ஙனம்  வெளிப்படையாகக்  கூறல்  நீதி  நூற்று  இயல்பாகும் .  கவிநயந்  தோன்றக்  கூறற்குக்  கரந்த  மொழியாற்  கூறலே  சிறந்ததாகும் .  இதனையே  இங்கே  குறிப்பிட்ட  இறுதிச்  சரித்திரம்  புலப்படுத்தும் .  வசைப்பொருளினைச்  செம்பொருள்  படாமலிசைப்பது   பழிகரப்பங்கத  மென்று  பெறப்பட்டமையால்   இதுவே  SATIRE  என்று  கூறுவதற்குப்  பொருத்தமாகும் . இப்பகுதிக்கும்  திருக்குறளிற்  பல  சான்றுகள்  உள்ளன . 

“தேவரனையர்  கயவர்  அவருந்தாம்

 மேவன  செய்தொழுகய  லான் “

என்னுந்  திருக்குறளில் , நெஞ்சத்து  அவல மில்லாத  வஞ்சக்கயவர்  சாதாரண  மண்ணுலக  மக்களுக்கு  ஒப்பாகார் ;  ஆனால்  அவர்கள்  உயர்ந்த  விண்ணுலகத்து  வாழும்  தேவர்க்கு  ஒப்பாவார் .  எதனாலெனின் ,  தேவர்கள்  தம்மை  நியமிப்பாரின்றி  எண்ணியவற் றைத்  தாமே  செய்தொழுகுதல்  போல , கீழ் மக்களும்  நல்லன  தீயன  ஆராயாது  தாம்  விரும்புவனவற்றை  விலக்கற்பாடின்றிச்  செய்தொழுகும்  இயல்புடைமையான்  என்று  குறிக்கப்பட்டுள்ளது .  மறைந்த  மொழிகளாற்  கயவருடைய   கயமைக்  குணங்களை   நகைச்சுவை   தோன்ற  இடித்துரைக்கும்  வள்ளுவர்  வாய்மொழியின்  மாண்பு  இங்கே  நினைக்கத்தக்கது .  

         வசை  யெடுத்துக்  கூறுங்கால்  அவ் வசையுடையயார்  அஃதொழிந்து  திருந்த வேண்டும்  என்னும்  நோக்கத்தாற்  கூறுதல்  நன்று .  அந்  நோக்க மின்றியுங்  கூறலாம் .  இவ்விலக்கண  அமைதிப்படி , சங்க  நூல்களிற்   காணப்படுங்  குறிப்புக்களை  ஆராய்தல்  இன்பம்  பயப்பதொன்று . தொகை  நூல்களிற்  சிறந்த  புறநானூறு  என்னும்  சங்கச்  செய்யுளில்  , ஒளவையார்  என்னும்  கவியரசியின்  புலமை  நலத்தைப்  பாராட்டாதாரிலர் .  தமிழ்   நாட்டு  முடியுடை  மூவேந்தராலும்   குறுநில  மன்னராலும்  போற்றப்பெற்று  வாழ்ந்த  ஒளவைப்  பெருமாட்டி  சேரர்  குலத்தவரின்  உறவினனும்  மழவர்  என்னும்  வீரர்களுக்குத்  தலைவனும்   கடை வள்ளல்களில்  ஒருவனும்  ஆகிய  அதியமான்  நெடுமானஞ்சியினிடத்துப்  பெரிதும்   அன்புடையராய்  ,  அவனால்  ஆதரிக்கப்பட்டிருக்குங்கால் ,  காஞ்சி  நகரத்திருந்த  தொண்டைமான்  என்னும்  அரசனிடம்  தூது  விடுக்கப்பட்டு   அவன்பாற்  சென்றார் . தொண்டைமான், தன்  வீரத்தையும்  படைப்பலத்தையும்  ஒளவையார்  கண்டு  விம்மிதங்  கொள்ள  வேண்டுமென்னும்   இறுமாப்புடையனாய்  ஒளவையை  நன்கு  வரவேற்றான் ;  ஆயுத  சாலையாகிய  படைக்கலக்  கொட்டிலைக்  காட்டினான் . அங்கே  வேல்  வாள்  முதலிய  படைகள்,  திரண்ட  அழகிய  கைப்பிடிகளை  யுடையனவாய்  எண்ணெய்  பூசப்பட்டு  மயிலிறகு  மாலை  முதலியன  அணியப்பட்டுக்  காவலை யுடைய  அகன்ற  அழகிய  கட்டிடத்தில்  எவரானுந்  தொடப்படாமல்  வைக்கப்  பெற்றிருத்தலைக்  கண்டு   வியந்து  கூறுவார்  போன்று   செருக்கு  மிக்க  தொண்டைமான் நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம்  ஓர்  அழகிய  பாடலைக்  கூறினர் .  அப்பாடற் பகுதி ,

“இவ்வே ,

 பீலி  அணிந்து  மாலை  சூட்டிக் 

கண்டிர  ணோன்காழ்  திருத்திநெய்   யணிந்து

கடியுடை  வியனக  ரவ்வே  யவ்வே 

பகைவர்க்   குத்திக்  கோடுநுதி  சிதைந்து 

கொற்றுறைக்  குற்றில   மாதோ”

என்பதாம்  . இதன்கண், அதியமான்  அடிக்கடி  அஞ்சாது  செய்யும்  போர்ச்  செயலில்  தலைப்படுவதால்  அவனுடைய  படைகள்  போரிற்  பயன்படுத்தப்பட்டுப்  பகைவரைக்  குத்தியதால்  கங்கும்  முனையும்  சிதைந்து  கொல்லனது  பணிக்   களரியாகிய  சிறிய   கொட்டிலின்  கண்  உள்ளன  என்றும் , தொண்டைமான்  அத்தகைய  போர்ச்செயலில்  தலைப்படாமல்  அஞ்சி  யொழுகும்  இயல்பினனா தலின்  அவன்  படைக்கலங்கள்  எத்தகைய  சிதைவுமின்றி  எண்ணெய்  பூசப்பட்டு  வனப்புடன்  அழகிய  மாளிகையில்  தூங்குகின்றன  என்னும்  கூறிய  அழகு  இன்புறத்தக்கது .  தொண்டைமானுடைய  ஆயிதங்களைப்  புகழ்ந்து  கூறுதற்போற்  பழித்து  அவன்  வசையைக்  குறிப்பிற்  கூறிச்  செருக்கொழியச்  செய்த  கவியரசியாரின்  திறமை  பாராட்டத்தக்கது .  

இன்னும் ,

“உவர்க்கட  லன்ன  செல்வரு  முளரே

 கிணற்றூற்  றன்ன  நீயுமா  ருளையே”

என்று  ஒரு  புலவர்  ஒரு  கொடை  வள்ளலைப்  புகழ்ந்து  கூறுமுகமாக , கொடாத  பெருஞ் செல்வரை இழித்துக் கூறினார் . சிலர்  பரந்த செல்வ முடைய ராயினும்  அச்  செல்வம்   பிறர்க்குப்  பயன்படாது   என்பது  தோன்ற , ‘உவர்க்கட லன்ன’  என்று உவமை  கூறப்பட்டது .  இது  விளக்கமாகப்  பிறிதோரிடத்துத் , 

தெண்ணீர்ப்  பரப்பின்  இமிழ்திரைப்  பெருங்கடல் 

 உண்ணா  ராகுப  நீர்வேட்டோரே

என்று  கூறப்பட்டது . செல்வப் பரப்புடையேம்  எனச்  செருக்குறுவார்க்கு  இது  சுடு  சொல்லாகும் .

            ஏனாதி  திருக்கிளி  என்பானை  மதுரைக் குமரனார்  என்னும்  புலவர் பாடிய  ஒரு  பாடலில் , அவனுடைய  பகையரசரைப்  பழித்துரைத்த  செய்தி  வியக்கத்தக்க  முறையில்  அமைந்துள்ளது .  அப்பாடல்  வருமாறு :

“நீயே , அமர்காணின்  அமர்  கடந்தவர்

 படை  விலக்கி  யெதிர்   நிற்றலின் 

வாஅள்  வாய்த்த  வடுவாழ்  யாக்கையொடு

கேள்விக்  கினியை  கட்கின்  னாயே

அவரே , நிற்காணிற்  புறங்கொடுத்தலின் 

ஊறறியா  மெய்யாக்கையொடு

கண்ணுக்  கினியர்  செவிக்கின்  னாரே

அதனால் , நீயும் ஒன்  றினியை  அவருமொன்  றினியர்

ஒவ்வா  யாவுள  மற்றே  வெல்போர்க் 

கழல்புனை  திருந்தடிக்  கடுமான்  கிள்ளி 

நின்னை  வியக்கமிவ்  வுலகம்ஃது

என்னோ  பெரும  வுரைத்திசின்  எமக்கே “

இப் பாடற் கருத்து :

           அரசே !  நீ  போரைக்  காணின் , அப்  போரை  வென்று  பகைவரது  படையை  விலக்கி  எதிர்  நிற்றலான்  , அவர்  வாட்  படையால்   வடுபட்ட  உடலுடனே  கூடியிருத்தலின்   காண்பார்  கண்ணுக்கு  அழகுடையை யல்லை ;  கேட்ட  செவிக்கு  இனியை ,  நின்  பகைவரோ , போரில்  புறமுதுகிட்டோடுதலால்   உடம்பில்  யாதொரு  வடுவுமில்லாராய்க்  கண்ணுக்கு  இனியராவர் .; கேள்விக்கு  இன்னாராகுவார் .  அதனால்   நீயும்  ஒன்று  இனியை ; அவரும்  ஒன்று  இனியர் . இங்ஙனம்  நீயும்  நின்  பகைவரும்  ஒப்புடைய ராகும்  நிலையில் , நின்னை  வியக்கும்  இவ்வுலகம்  அஃது  என்னோ  பெரும! என்பதாம் .  பகைவர்  உடம்பில்  வடுப்படாமையால்  ,  பிறர்   கேள்விக்குப்  பழி  மிக்குடையராக  வுள்ளார்  என  அவர்  வசை  ஒரு வகை  நயந்  தோன்றக்  கூறப்பட்டது . இங்கே  நீயுமொன்றினியை  யவரு  யொன்றினியர்  ‘எனத்  தோற்றோடியவரைப்  புகழ்வது  போலப்  பழித்திருக்கும்  செய்தி  வியக்கத்தக்கதொன்று .  

         இனிச்  சங்கத்துச்  சான்றோர்  நூல்களுள்  அகப் பொருள்  பற்றி  எழுந்த  பாடல்களில் , இவ்வங்கதக்  குறிப்புக்கள்  பற்பல  இடங்களில்  மிக  நயம்படக்  கூறப்பட்டுள்ளன . கற்றறிந்தாரேத்தும்   கலித்தொகை  என்னும்  நூலில்  ,  மருதத்  திணை  பற்றிய  ‘வண்டூது  சாந்தம்  வடுக்கொள  நீவிய’  என்னும்  பாடற்  பகுதி  ஈண்டுச்  சிந்தித்து  இன்புறத்தக்கது .  பரத்தைபாற்  சென்று  வந்த  தலைமகனை  அது  குறித்து  ஊடல்  மேற்கொண்ட  தலைமகள்  , “நீ  புறத்துப்  போய்க்  கண்ட  வினோதம்  என்னை ?”  என்றாளாகத்  தலைவன்  , “யாமிருவரும்  இனிமேல்  மேற்கொள்ளத்தக்க   வானப்பிரத்த  வாழ்க்கைக்கு  உதவியாயிருக்கும்  முனிவரைக் கண்டு  அவரிடத்தே  தங்கினேன்”  என்றான் . அது  கேட்ட  தலைவி , “சோலையின்  கண்ணே மலர்  சூடிய  மான்  பேட்டினை  ஒத்தவராய்க்   கடவுட் டன்மை  உள்ளவராக  உன்னாற்  கருதப்படுவார்  பலருள் , எக்கடவுளிடம்  தங்கினாய் ? “  என்று  கேட்டாள் . அவட்கு  அவன் , நம்  மண   வாழ்க்கைக்கு  நன்னாள்  வாய்ப்பச்  சொன்ன  அந்தக்  கடவுள்  காணென்று  தன்  பரத்தைமையை  மறைத்து  மீண்டுங்  கூறினானாக. அது  கேட்ட  தலைவி  , “நீ  கூறியது  எனக்கும்  ஒக்கும்”  எனத்  தனது  ஒவ்வாமைத்  தோன்றக்  கூறுவாளாய்  , “ஐய ! தலையைச்   சாய்த்து  நாத்  தடுமாற  நீ  கூறிய  சொற்களாளேயே   நீ  அகப்பட்டுக் கொண்டாய் .  நீ  கண்ட  கடவுளரியல்பை  உண்மையாக  யான்  கூறுவேன் ; அதனைக் கேட்பாயாக’  எனத்  தொடங்கி  ,

“பெறனசை  வேட்கையி  நிங்குறி  வாய்ப்பப்

பறிமுறை  நேர்ந்த  நகையராய்க்  கண்டார்க்கு

இறுமுறை செய்யும்  உருவொடு  நும்மில்

செறிமுறை  வந்த  கடவுளைக்  கண்டாயோ?”

எனவும் ,

“நறுந்தன்  தகரமும்  நாணமும்  நாறும்

நெறிந்த  குரற்கூந்தல்  நாளணிக்  கொப்ப

நோக்கிற்  பிணிகொள்ளுங்  கண்ணோடு  மேனாணி

பூப்பலி  விட்ட  கடவுளைக்  கண்டாயோ ! “

எனவும் ,

“கண்ட  கடவுள்  தம்முளு  நின்னை

வெறிகொள்  வியன்மார்பு  வேறாகச்  செய்து

குறிகொளச்  செய்தார்  யார் ….

சிறுவரைத்  தங்கின்  வெகுள்பவர்

எனவுங்  கூறினாள் . 

இப்பாடற்  பகுதியின்  பொருள்  பின்வருமாறு : 

           ‘உன்னைப்  பெற வேண்டு மென்னும்  விருப்பத்தால்   நீ  குறிப்பிட்ட  குறியிடத்தே  தம்பால்  வந்து  முளைத்த  பற்களை  யுடையவராய்க்  கண்டவர்களுக்கு  மரணத்  துன்பத்தை  யொத்த  மயக்கத்தைச்  செய்யும்   வடிவுடையராய்  நின்  இல்லிடத்தே  சேரும்  முறைமையினையுடைய   கடவுளரைக்  கண்டாயோ?’  என்பதும் , பார்வையாலே  தம்  வயப்படுத்துங்   கண்கள்  வருத்துதலால் , மணமிக்க  குளிர்ந்த  மயிர்ச் சாந்தமும்  புகழும்  மணக்கும்  கரு மணல்  போன்ற  நெருங்கிய  கூந்தலுக்கு  நாட்காலத்துச்  செய்யும்  அலங்காரத்துக்குப்  பொருந்த  முதல்  நாளே  மலர்களைத்  தூவி  வழிபடப்  பெற்ற  கடவுளைக்  கண்டாயோ?”  என்பதும் ,  “அங்ஙனம்  கண்ட  கடவுளருள்  நின் மனத்தை  வேறாகப்  பண்ணி  வானப்பிரத்த ஆச்சிரமத்தை  மேற்கொள்ளச் செய்த முனிவரர் யாவரோ? அவர்பாற்  செல்லாது  சிறிது  பொழுது  நீ  இங்கே  தங்கினும்  அவர்  வெகுள்வர் ;  ஆதலின் , அவ்விடத்தே   செல்வாயாக’   என்பதும்  ஆம் . இப்பகுதியில் , தலை மகன்  பரத்தையர்  பாலொழுகிய  தீயொழுக்கத்தைக்  கடிந்து  அவன்  திருந்தியொழுக  வேண்டுமென்னுங்  கருத்தினளாய்த்  தலைவி  குறிப்பிற்  கூறிய  வசைமொழி  புலப்படுதலின்  இதுவும்  பழி கரப்பு  அங்கதத்தின்பாற்  படுவதாகும் .

      ஐங்குறுநூறு   என்னும்  சங்கச் செய்யுளில்  உள்ளுரையாகக்  கூறப்பட்ட  பாடற்  பகுதிகளில்  ,  இச்சுடு சொல்லாகிய  அங்கதம்  பல  இடத்தும்  நகைக்  குறிப்பு  தோன்றப்  புலப்படுத்தப்பட்டுள்ளது .  பரத்தமையாகிய  புறத்தொழுக்கத்திலே  ஒழுகி  வந்த  தலைமகனை  நோக்கி ,  தோழி  தன்  விருப்பம்  இன்னதெனக்  கூறுமுகமாக  ,

“ பூத்த  கரும்பிற்  காய்த்த  நெல்லிற்

 கழனி   யூரன்  மார்பு

பழன  மாகற்க  எனவேட்  டேமே “ 

எனக்  கூறினள் . இதன்கண் ,  பூத்து  பயன்படாக்  கரும்பினையும்  காய்த்துப்  பயன்படும்  நெல்லினையும்  உடைய  ஊரன்  என்றது ,  ஈன்று  பயன்படாப்  பொதுமகளிரையும்   குழந்தை  பெற்றுப்  பயன்படும்  குல  மகளிரையும்  ஒப்பாக  நினைப்பவன்  தலைவன்  என்று  அவனுடைய  குறை  வருணனைக்  குறிப்பில்  புலப்படுக்கப் பட்டுள்ளது . இன்னும் ,

“கரும்புநடு  பாத்தியுட்  கலித்த  ஆம்பல்

 கரும்புபசி  களையும்  பெரும்புன  லூர்”

என்று  தலைவனை  அழைக்கு  முகமாகப்  ‘பரத்தையர் தங்குதற்கு உரிய  இல்லில்  யானிருந்து  விருந்தினர்  முதலியோரை  உபசரிக்கலா னேன் ‘   என்று  தலைவி  தலைவனது தீயவொழுக்கத்தைக்  கடிந்து அவள்  நெஞ்சுற  உணர்த்தியது  புலனாம் .  இங்கே  கரும்பு  நடுவதற்காக  அமைக்கப்பட்ட  பாத்தி  என்றதனால்  , தலைவனுக்கு உகந்த  விலை  மாதர்  தங்குதர்குரியது இவ்வில்லம்  என்பதும் ,  அப்பாத்தியில்  தானே  தோன்றி  வண்டுகளின்  பசியைப்  போக்கும்   ஆம்பல்  என்றதனால் ,தலைவன்  விரும்பாத  நிலைமையில் தான்  அவ்வில்லத்தின்கண்  இருந்து  இயன்றவாறு  இல்லறம்  நடத்துபவள்  என்பதும்   இவ் வருணனையில்  உள்ளுரையாகப்  புலப்படுக்கப் பட்டுள்ளன .  

             அகநானூறு  என்னும்  அழகிய  சங்க  நூலில்  மருதத் திணை  பற்றிய  செய்யுளொன்றில் , பரத்தையர்  சேரியினின்றும்  வந்த  தலைமகன்  ,  யாரையும்  அறியேனென்றானாக, அவன்  தீயவொழுக்கத்தைத்  தலைவி  பிறிதொரு  நிகழ்ச்சியால்  அவன்  மனத்திற்  பதிய  அறிவுறுத்திய  செய்தி  பின்வருமாறு :  “ஐய !  மழலை  மொழியுடைய  இளம்  புதல்வனைத்  தேர்  வழங்கு  தெருவிற்  கண்ட  ஒருத்தி ,அப் புதல்வன்  நின்  உருவோடு  ஒத்து  விளங்குதலைக்  கண்டு  விரும்பி  அங்கே  அப்பொழுது  யாரும்  இல்லாமையால்  ‘என்  கண்ணே  வருக !” என்று  கூறிப்பெரிதும்  மகிழ்ந்து  தழுவி  எடுத்துக்  கொண்டாள் .அந் நிலையில்  ,  யான்  அங்கே  சென்று  ,”குற்றமற்ற சிறியவளே !  ஏன்  மயங்குகிறாய்  ?இவனுக்கு  நீயும்  தாயே  ஆவாய் “  என்று  கூறினேனாக , அது  கேட்டு  அவள் , தாம்  செய்த  களவு  பலர்  முன்னிலையில்  வெளிப்பட  உடன்பட்டு  நின்றாரைப்  போல  நாணமுற்றுத்  தலை  கவிழ்ந்து  நின்றாள் .  அந்  நிலையில்  அவளும்   நின் மகனுக்குத்  தாயாவாளெனக்  கொண்டு  அவளை  உபசரித்தே னன்றே “  என்று  தலைமகள்  கூறியதாகும் .இதன்கண்  தலைவனது  தீயவொழுக்கத்தைத்  தலைவி  கரந்த  மொழியிற்  பெற  வைத்தது  இன்புறத்தக்கது .

                          இனிப்  பெருங்காப்பியங்கள்  ஐந்தனுள்  ஒன்றாகிய   சீவக சிந்தாமணியில்  சச்சந்தன்   என்னும்  அரசன் , விசயை  என்னும்  தன்  மனிவியின்  காதல்  வயப்பட்டு   கட்டியங்காரன்  என்னும்  அமைச்சன்பால்  அரசியலை  விட்டு  இடையறாது   போக  நுகர்ச்சியில்   தலைப்பட்டானாக  , அந்நிலையில்  அத்தீய  அமைச்சன்  அரசனைத்  தொலைத்து  நாட்டாட்சியைத்  தன்னதாக்க  முயன்று  தன்  அமைச்சர்  பலரோடு  சூழ்ந்து  ஆலோசிக்கும்  மளவில்  தருமதத்தன்  என்னும்  நல்லமைச்சன் , இது  தகாத  காரியம்  என்று  பற்பல  நீதிகளை  எடுத்துரைக்க , அவன்  உரைகளை  மறுத்து  மதனன்  என்பான்  கட்டியங்காரன்  கருத்துக்கு  ஒத்த  முறையிற்  கூறியதாகவுள்ள  செய்தி  பின்வரும்  செய்யுளிற்  காணப்படும் .

“தோளினால்  வலிய  ராகித்  தொக்கவர்  தலைகள்  பாற

 வாளினாற்  பேச  லல்லால்  வாயினாற்  பேசல்  தேற்றேன்

 காளமே  கங்கள்  சொல்லிக்  கருணையாற்  குழைக்குங்கைகள்

வாளமர்  நீந்தும்  போழ்து  வழுவழுத்  தொழியு  மென்றான் “

       இதன்கண்  பின்  இரண்டடிகளும்  இங்கே  நினைக்கத்தக்கன . “போர்ச்  செயலைப்  பற்றிய  வீரவுரைகளைக்  காளமேகம்  போல  முழங்கக்  கூறி   அச்  செயலில்  தலைப்பட  நேர்ந்த  பொழுது   அஞ்சுவார்க்குப்  பொரிக்  கறிகளோடு   சோற்றைத்  திரட்டும்  அவர்  கைகள் அப்போர்க்கடலை  நீந்துதற்கு  இயலாது   வழுவழுத்  தொழியும்  போலும் “  என்று  போர்  குறித்துப்   பின்வாங்குவோரைச்   சுடு  சொல்லார்  பழித்துக்  கூறியதும்  அங்கத்தின்பாற்  படுவதாகும் .

                                6   .   காதற்   கடிதங்கள்

                      ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

          காதல்  என்பது  ஆடவர்  மகளிர்  இருவரும்  உலக  வாழ்க்கையில்  அறநெறி   பிறழாதொழுகி  இன்ப  நுகர்தற்குரிய  சிறந்த  குணமாகும் .  காதல்  காமம்  என்னும்  இரண்டனுள்,  காமம்  இழிந்த  நிலையில்  நிகழ்வதென்பதும் , காதல்  உயர்ந்த  நிலையில்  நிகழ்ந்த  தன்  வயப்பட்டாரை  எத்துணை  இடையூறு  நேரினும்  பிறழவிடாது  பிணித்து  இன்பத்தினும்  துன்பத்தினும்   பகிர்ந்தநுபவிக்கச்  செய்து  நெடிது  நிலைத்திருப்பதென்பது   அறிஞர்  கண்ட  உண்மைகளாம் . ஆடவர்  மகளிர்  கூடி  நுகரும்  இன்பத்தின்  இயல்பை  விளக்க  நினைத்த பெரியார் , “எஞ்ஞான்றும்   காதலிருவர்  கருத்தொருமித்து — ஆதரவு  பட்டதே  இன்பம்”  என்று  கூறினர் .  காமம்  பற்றி  ஆடவர்  மகளிரை  முறையே  காமுகன்  காமுகதி  என்று  கூறுதலினும்  காதல்  பற்றிக்  காதலன்  காதலி  என்று  கூறுதல்  அறநிலைக்கொத்த  சிறந்த  வழக்கென்பதையுங்  காணலாம் . தமிழ் மொழியிற்  சங்க  இலக்கியங் களாக  உள்ள  அகநாநூறு  குறுந்தொகை  முதலிய  அகப்பொருட்  பகுதியை  நுதலிய  நூல்களெல்லாம்  இக் காதலியல்பை  விளக்க  எழுந்தனவாம் . அறம் பொருள்  இன்பங்களை   அகம்  புறம்  என  வகுத்த  தமிழ்  இலக்கண  நூலாசிரியர்கள் , முன்னைய  இரண்டையும்  புறமெனவும்  பின்னையதாகிய  இன்பநிலையை  அகமெனவுங்  கொண்டு  பாகுபாடு  செய்தனர் . அகப்  பொருளிற்  காதலையும்  புறப் பொருளில்  வீரத்தையுமே  சிறந்தனவாக  எடுத்து  விளக்கியதனாலும்  இக்  காதலின்  பெருமையை  உணரலாம் . ஆடவர்  மகளிர்  இருவரும்  முதலில்  வாழ்க்கை  யின்பத்தில்  தலைப்படுதற்கு  ஒருவர்  பாலொருவர்  மேற்கொள்ளுங்  காதலே  சிறந்த  கருவியாம் . முதலில்  காதல்  முகிழ்த்தற்கு  ஏதுக்கள் , உடல் வனப்பு , அன்பு , அறிவு  முதலிய  சிறந்த  குணங்கள்  என்னும்  இவை  முதலியனவாம் . சில  விடங்களிற்   காதலின்  தோற்றத்திற்குக்  காரணங்  காண்டல்  அரிதாகவும்  முடியும். இக் காதல்  வயப்பட்டார்  ஒன்று  கூடுதற்கு  நீங்காத  தடை  நேரின் , அது  காரணமாகச்  சாதலும்  அவர்  பக்கல்  இனிதாகும்  என்பது  சரித்திரங்களாற் கண்டதொன்று .  

      ஆடவர்  மகளிர்  ஒருவரை  யொருவர்  காதலித்துத்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்தற்கு  முன்னரும் ,  கூட்டம்   நிகழ்ந்து  எக்காரணத்தாலாவது  பிரிவு  நேர்ந்த  பின்னரும்  இக் காதற்  சிறப்பு  ,  உடல்  வேறு  உயிர்  ஒன்றெனக்  கருதத்தகும்   தொடர்புடையார்க்கன்றி  வெளிப்படுத்து  நிலையில்  உள்ளதன்று .  ஆடவர் , தம்  இன்னுயிரனைய   பாங்கர் பாலும் ,  மகளிர்  கண் போற்  சிறந்த  உயிர்த்  தோழியரிடத்துமன்றி  வெளிப்படுத்துவரல்லர் .  இதன்  இயல்பைச்   சீவக சிந்தாமணி  நூலாசிரியர் ,  ‘சென்றே  படினும்  சிறந்தார்கு  உரைக்கலாவதன்று ‘  என்றார் . இதன்  கருத்து ,  இறப்பு  நேரினும்  தாயர்  முதலியோர்க்கும்  கூறத்தக்க தொன்றன்று   என்பதாம் .  காதல்  முதிர்ந்த  இடத்துக்  காதலிக்கப்பட்டாரைப்  பெறாத  நிலையில் , காணப்படும்  வெளியெல்லாம்  அன்னார்  உருவமாகவே  காண்பர்  என்பதை  அகப்  பொருட்டுறையில்  “எதிர் பெய்து பரிதல்”  என்று  இயல்  நூலாசிரியர்  கூறுவர் . விமலை யென்னும்  ஓர்  இளநங்கை , பந்து  விளையாடி னாளாக, அப்  பந்து  புறவெளியில்  வீழ்ந்தது  கண்டு  அதனை  எடுக்கச்  சென்றவள்  சீவக  குமாரன்  என்னும்  கட்டழகனைக்  கண்டு ,

“பெண்பா  லவர்கட்  கணியாய்ப்  பிரியாத  நாணுந்

திண்பால்  நிறையுந்  திருமாமையுஞ்  சேர்ந்த  சாயல்

கண்பாற்  கவினும்  விளையுங்  கவர்ந்திட்ட  கள்வன்

மண்பா  லிழித்த மலரைங்கணை மைந்த  னென்றாள்”

           இங்ஙனக்  கருதிக்  காதல்  வயப்பட்டனளாக   அந்நிலையில்  அவளைக்  கண்ணுற்ற  சீவகனும் ,

பூவுண்ட  கண்ணாள்  புருவச்சிலை  கோலி  யெய்ய

ஏவுண்ட  நெஞ்சிற்  கிடுபுண்மருந்தி  தெங்கொ  லென்னா

மாவுண்ட  நோக்கின்  மடவாளை  மறித்து  நோக்கிக்

கோவுண்ட  வேலான்  குழைந்தாற்றல  னாயி  னானே

                இங்ஙனம்  ஆற்றலனாய்த்  தான்  கண்ட  வெளிநில   மெல்லாம்  அக்காதலின்  வடிவழகே  தன்  கட்பொறிகளுக்குப்  புலனாகக்  கண்டு ,

“பைங்கண்  மணிமகர  குண்டலமும்  பைந்தோடும் 

திங்கள்  முகத்திலங்கச்  செவ்வாய்  எயிறிலங்கக் 

கொங்குண்  குழல்தாழக்  கோட்டெருத்தஞ்  செய்தநோக்

கெங்கெங்கே   நோக்கினும்  அங்கங்கே  தோன்றுமே

என்று  காதலிற்  கனிந்து  கூறியதாக  ஆசிரியர்  கவி  வடிவில்  தீட்டிய  ஓவியம்  அறிஞருள்ளத்தைக்  கனிவிப்பதாகும் .  இதனுள்  “கோட்டெருத்தஞ்  செய்த  நோக்கு”  சாய்ந்த  கழுத்துத்  தந்த  பார்வை  என்னும்  பொருளதாகும் . அவள்  தன்னை  நோக்குங்கால்  கழத்தைச்  சிறிது  சாய்த்துப்  பார்த்ததைக்  கண்டானாகலின் , அத்  தோற்றமே  அவன்  உள்ளத்தைப்  பிணித்ததென்றார் .  இது   வியக்கத்தக்க  தொன்று .   

                பிறிதோரிடத்துக்  குணமாலை  யென்பாள் , ஒரு  பெண்கள்  திலகம் , நீராடித்  திரும்புங்கால்  ஒரு  யானையால்  தாக்கப்படும்  நிலையில்  சீவகுமாரன்  சென்று  தன்  ஆண்மையால்  அவ் யானையை  அடர்த்து விலக்கி  அவளைப்  பாதுகாத்துச்  செல்ல  விடுத்தானாக , அந் நிலையில்  இருவர்க்குங்  காதல்  ததும்பியது .

“கன்னிய  ருற்றநோய்  கண்ணனார்க்கு  மஃது

 இன்னதென்  றுரையலர்  நாணி  னாதலால்

கைக  ளாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும் 

மொய்கொள்  சிந்தையின்  மூங்கையு  மாயினேன் .”

என்று  அவள்   கருதுவாளாயினாள் .  மூங்கை  என்பது  ஊமையாகும் . இங்கே  ஊமையின்  இலக்கணத்தை  ஆசிரியர்  ,  “கைகளாற்  பேசக்  கண்களாற்  கேட்பது  என்றும் , உள்ளச்  செய்திகளை  வெளிப்படுத்திப்  பேச  இயலாமையால்  நினைவு  பலவாக  நிறையுமாதலின்  “மொய்கொள்  சிந்தை”  என்றுங்  கூறியது  நினைந்து  இன்புறத்தக்கது  இங்ஙனம்  குணமாலை  நினைவும்  செயலும்  காதல்  வயப்பட்டுருகும்  நிலையில் , 

“வெஞ்சின  வேழ  முண்ட  வெள்ளிலின்  வெறியமாக

நெஞ்சமும்  நிறயும்  நீல  நெடுங்கணாற்  கவர்ந்த  கள்வி

என்று  அவள்  கண்ணோக்கத்தால்  காதல்  வயப்பட்டுப்  பிரிந்த  சீவகுமாரன் , தனித்திருந்து  தன்  உள்ளத்தில்  திகழும்  அவள்  அழகிய  உருவத்தை  ஓவியத்தில்  வரைய  எண்ணினான் .  அவள்  உடலுறுப்புக்கள் ஆடையணி முதலியவற்றின் நிற வேற்றுமைகளுக்கு, அவ்வந்திறத்து   இரத்தினங்களைப்  பொடித்துக்  கரைத்துப்  பசையூட்டி  வண்ணக்  குழம்பாக்கி , அக்குழம்பில்  துகிலியைத்   தோய்த்து  ஓர்  ஆடையில்  ஓவியம்  எழுதுவானாயினான் .   அங்ஙனம்  எழுதுங்கால் , அவள்  யானைக்கு  அஞ்சி  மேற்கொண்ட  நடுக்கமும் , அந்நிலையில்  தன்னை  நோக்கிய  காதல்  நோக்கமும்  அவ்வடிவில்  ஒருங்கு  புலப்படத்  தீட்டினான்  என்று  கவி  திறம்படக்  கூறுகின்றார் .  

“கூட்டினான்  பணிபல  தெளித்துக்  கொண்டவன்

 தீட்டினான்  கிழிமிசைத்  திலக  வாணுதல்

வேட்டாமல்  களிற்றிடை  வெருவி  நின்றதோர் 

நாட்டமும்  நடுக்கமும்  நங்கை  வண்ணமே “

இப்பாட்டில்  ஒன்றுக்கொன்று  முரணாகவுள்ள  அச்சத்தையும்  காதலையும்  ஒரு  வடிவிற்  புலப்படுத்தியதாகச்  சீவகனது  ஓவியநூற்  றிறமையை  ஆசிரியர்  நன் கு  புலப்படுத்தியுள்ளார் .  இச்சித்திரத்தில்  நங்கையின்  காட்சியில்  தான்  திளைத்து  மேற்கொண்ட  காதற் பெருக்கே  இங்ஙனம்  உள்ளபடி  வரைவதற்குக்  கருவியாயிற்றென்பது  தெளியத்  தக்கது .  

       இங்ஙனம்  கண்ணனாருக்கும்  இன்னதென்று  வாக்கால்  உரைக்க  இயலாத  காதலின்  இயல்பை  ஒத்த  காதலர்  இருவர்  தம்முட்  கூடுதற்கு  முன்னும் , கூட்டத்தின்பின்  பிரிவு  நேர்ந்த இடத்தும்  பிறர்  வாயிலாகவன்றிக் கடித  மூலமாக  ஒருவருக்கொருவர்  புலப்படுத்திக் கொள்ளுதல்  முற்காலத்தும்  நிகழ்ந்ததுண்டு .  காப்பியச்சுவை  நலத்தில்  திளைத்துப்  பாடும்  கவிகள்  மூலமாகவே  அக்காதற்  கடிதங்களின்   இயல்புகளை  வெளிப்படக் காணலாம் .  காதலர்  இருவர்  கருத்தொருமித்துப்  பிறர்  அறியாதவாறு  தம்  உள்ளத்து  நினைவுகளை  மறைமுகமாக  வெளிப்படுத்துள்ளாராயினும் , அச்   செய்தியை  நம்மனோர்  அறிவிற்கு  விருந்தாக  வெளிப்படுத்து  அளித்து  இன்புறுத்தியவர்கள்  புலவர்  பெருமக்களே  யாவர் .  இங்கே  வடமொழியிற்  சிறந்த  காளிதாச  மகா கவியும்  ,  செந்தமிழ்  மொழியிற்  சிறந்த  இளங்கோவடிகள்  என்னும்  புலவர்  பெருமானும்  முறையே  தாம்  மேற்கொண்ட  “சாகுந்தலம்”  என்னும்  சுவை  மலிந்த  நாடகத்தினும்   “சிலப்பதிகாரம்” என்னும்  தீந்தமிழ்க்  காப்பியத்தினும்  காதற்  கடிதங்களை  வெளிப்படுத்தியுள்ளார் .   

         இவ்விரு  பெருங்காப்பியங்களினும் , அக்கடிதம்  எழுதினார்  இருவரும் , பெண்மக்களேயாவர் .  இருவருள்  சகுந்தலை  என்னும்  பெண்மணி , துஷய்ந்தன் என்னும்  வேந்தர்  பெருமானைக்  கானகத்திற்  கண்ட  அளவிற்  காதல்  வயப்பட்டு  அந்நிலையை  எவ்வாறு  அரசர்க்குப் புலப்படுத்தலாமென்று , ஆராய்ந்து  கொண்டிருக்குங்கால் , தன் உயிர்த் தோழியால் அறிவிக்கப்பட்டுக்  காதற்  கடிதம்  எழுதத்  தொடங்கினாள் .  இஃது  அக்  காதலிருவரும்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்துதற்கு  முன்  நிகழ்ந்தது .  சிலப்பதிகாரத்துக் கண்ட  மாதவி  யென்னும்  நங்கையர்  திலகம்  கோவலனோடு  கூடி  இன்புற்று  ஒரு  காரணத்தால்   அவன்   தன்னைப்  பிரிய  நேர்ந்த   பொழுது , அப் பிரிவாற்றாமையைப்  புலப்படுத்து  முகமாக  ஒரு  காதற்  கடிதம்  எழுதலாயினாள் .  இது  காதலர்  கூட்டம்  நிகழ்ந்தபின்  எழுதப்பட்டதாகும் .  அக்கடிதங்களிரண்டும்   அவ்வப்  பாத்திரங்களுக் கேற்ற   முறையில்  அமைந்துள்ளன . அக்கடிதப்  பாசுரங்களுள்  சகுந்தலை  கடிதம்  வருமாறு :  அதன்  பொழிபெயர்ப்பாவது , 

“நின்னுடைய  உள்ள  நிலையறியேன்  நின்பாலே 

  மன்னுடைய  வேட்கை  மலிவுற்ற  — –  என்னுறுப்பைக்

 காமன்  இரவும்  பகலும்  கனற்றுகின்றான்

 ஏமரு ளில்லா  யிவன் “

என்பதாம் . ‘அருளில்லாத  அரசே !  நின்பாற்  கொண்ட  வேட்கை  மிக்க  உடலுறுப்புக்களை  மன்மதன்  இரவும்  பகலும்   எரிக்கின்றான் ; இந் நிலையில்  நினது  உள்ளத்தின்  நிலை  இன்னதென்று  அறிந்திலேன்’  என்பது  இப்பாடலின்  கருத்து .  இனி  மாதவி  கோவலனுக்கு  எழுதிய  கடிதம்  வருமாறு  : 

“மன்னுயி  ரெல்லாம்  மகிழ்துணை  புணர்க்கும்

இன்னிள  வேனில்  இளவர  சாளன்

அந்திப்  போதகத்  தரும்பிடர்த்  தோன்றிய

திங்கட்  செல்வனும்  செவ்விய  நல்லன்

புணர்ந்த   மாக்கள்  பொழுதிடைப்  படுப்பினும் 

தணந்த  மாக்கல்  தந்துணை  மறப்பினும்

நறும்பூ  வாளியின்  நல்லுயிர்  கோடல்

இறும்பூ  தன்றிஃ  தறிந்தீமின் “

என்பதாம் . ‘ உலகத்திலுள்ள  உயிர்களை யெல்லாம்  தாம்  மகிழுந்  துணையோடு  புணர்விக்கும்  இனிய  இளவேனிலாகிய  வசந்தனென்பான்  இளவரசனாவான் .  ஆதலால் , ஒழுங்குபடச்  செய்யான் .  அன்றி , அந்திப் பொழுதின்  கண்ணே  அரும்புகின்ற   விரக  விதனத்தின்  மேலே  வந்து  தோன்றிய  திங்களாகிய  செல்வனும் பிறப்பினுங்  கோட்டமுடையன்  ஆதலால் , கூடினோர் இடையே  சிறிது  தாழ்ப்பினும்  பிரிந்தோர்  மறப்பினும்   மணமிக்க  பூவாளிகளால் , இன்ப  நுகரும்  அவ்வுயிரைக்  கொண்டொழிதல்  அவனுக்குப்  புதியதொரு  காரியம்  அன்று . அதனை  அறியுங்கள்  என்பது  இப்பாசுரப்பகுதியின்  கருத்தாம் .

          சகுந்தலை  எழுதிய  கடிதம்  கிளியின்  வயிறு  போன்ற  பசுமை  மிக்க  மெல்லிய  தாமரையிலை  யாகும் . அதன்கண் ,அவள்  தன்  கைந்  நகங்களையெ  எழுதுகோலாகக்  கொண்டு  எழுத்துக்களைப்  பதித்தனள் என்பர் .  தாமரையின்  மெல்லிய  இலைகளால்  அவள்  வெம்மை  தணிய  அப்பொழுது  தோழியர்  விசிறிக்  கொண்டிருந்தனராதலின் ,  அவள்  இருந்த  இடத்தில்  கிடைத்த  தாமரையிலையே  எழுதுதற்குரிய கடிதமாயிற்று .  எழுதுகோல்  தேடுதற்கு அவகாசம் இன்மையாற் கைந் நகங்களாற் பதிக்கலாயினாள் .

           மாதவி  கடிதமாகக்  கொண்டது , முதிர்ந்த  அழகிய  தாழையினது  வெள்ளிய  இதழாகும் .  மாதவி  காவிரிப்பூம்பட்டினத்து  உள்ள  ளாதலானும் , அப்பட்டினம்  கடற்கரைக்  கண்ணதாதலானும் , நெய்தல் நிலத்துக்  கருப்பொருளாகிய  தாழை  மடலைக்  கடிதமாகக்  கொண்டாள் . அம்மடல் ,  நல்ல  நிறமும்  பளபளப்பும்   நறுமணமும்  , காய்ந்துலர்ந்தாலும்  கெடாத  வன்மையும்  உடையது .  எழுதுகோல்  பித்திகைக்  கொழுமுகை  ஆணி  என்றதனால் ,  நறுமணமுள்ள  பூவரும்பின்  முனையாகும் .  மை  செம்பஞ்சின்  குழம்பாகும் . ஆகவே  வெண்ணிறமான  தாழையிதலிற்  செந்நிறமான  குழம்பில்  பூவரும்பின்  முனை  கொண்டு  எழுதப்பட்ட தென்பதும் , இக் கருவிகள்  காதற்  குறிப்பிற்  கேற்றபடி  இன்பம்  விலைவிக்கும்  பொருள்களாக  அமைந்தன  என்பதும்  புலனாம் . எழுதிய  பெண் மக்கள்  இருவருள் , சகுந்தலை  அரச  குலத்தினனால்  கைப்பற்றத்  தக்கவளாயினும்  , அந்தணர்  ஆச்சிரமத்தில்  வளர்ந்தவலாவாள் . காதற்  பயனுக்கு  அநுபவமில்லாப்  புதியவளுமாவாள் .  ஆதலின்  அவள் , மன்மதன்  பகலும்  இரவும்  சுடுகின்றான் ; நின்  கருத்தறிந்திலேன் என  வெளிப்படத்  தீட்டினாள் .  தன்  கருத்தைக்  குறிப்பாற்  புலப்படுத்தினால்  தனக்குப்  புதியவனாகிய  வேந்தன்  பொருள்  வேறு  கொண்டு  புறக்கணிக்கவுங்  கூடும்  என்னும்   ஐயத்தால் , விளக்கமாக  எழுதினா ளென்று  கொள்ளலாம் . ஒருவரையொருவர்  மன நிலை அறியாத  நிலையில்  எழுதப்படுங்  கடிதத்தில் , குறிப்பு மொழி தெளிவாகப்  பொருள்  விளக்கஞ்  செய்யாதாகலிற்  பயனின்றி  யொழியவுங்  கூடும்  ஆதலானும் ,பிறரறியாமற்  காதலிக்கப்பட்டா னொருவனே  பார்க்கக்  கூடுமென்னுந்  துணிவானும்  இங்ஙனம்  விளக்கமாக  எழுதப்பட்டுள்ளது .  முடிவாகத்  தன் வேட்கையைப்  புலப்படுத்தி  இதற்குப்  பரிகாரமாகச்  செய்ய  வேண்டிய  காரியத்தில்  நின்  கருத்து  இன்னதென்று  அறிந்திலே னென்று  சகுந்தலை  எழுதியது பொருத்தமே . தாமரையிலைக்  கடிதம்  எழுதியதும் , காதலனாகிய  வேந்தன்  தாழாது  வெளிப்பட்டானாதலால்  மிகு  விரைவில்  வாடத்தக்க  அவ் விலையின்  பயன்  வீணாகவில்லை  .

             இனி , மாதவி  கணிகையர்  குலத்தவள்; கோவலன்பால்  சிறந்த  காதற்கிழமை  பூண்டொழுகியவள் ; அவள்  கடிதம்  எழுதியது  முன்  அவனோடு  கூடி  அநுபவித்த  பின்னரேயாம் . அந் நிலையில்  அவன்  உள்ளத்தைப்  பன்னாட்  பழகி  அறிந்தவலாதலின் , தன்  கருத்தைக்  குறிப்பாகப்  புலப்படுத்தினாலும்  அவன்  அறிந்து  கொள்ளுவா னென்று  அவள்  கருதுவது  இயல்பே .  இந் நிலையில்   மன்மதன்  கொடுமை  கூறுபவளாய் , அக் காமவேள்  என்னும்  அரசற்கு  மகிழ்  துணை  புணர்க்கும்  வேனிலாளன்  இளவரசன்  ஆவானென்றும் , அவன்  கொற்றக்  குடை  திங்களாதலால்  அத்  திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவன்  என்றுங்  கூறி ,இப்பரிவாரங்களை  யுடைய  காமன் ,  புணர்ந்துளோர்  ஊடல்  முதலியவற்றாற்  காலம்  நீட்டிப்பினும் ,ஓதல்  முதலியன  குறித்துப்  பிரிந்துளோர்  குறித்துக்  கூறிய  பருவம்  பொய்த்துத்  தம்  துணையை  மறப்பினும்  இன்பம்  நுகரும்  அவ்வியிரைப்  பூவாளிகளாற் கொள்ளும்  இயல்பின  னென்பது  புதிய  தொன்றன்று ; இதனை  அறிவீர்களாக “  என்று  அவள்  எழுதியது  பொருத்தமே .  உண்மைக்  காதலுடையார்  இயல்பை  உலகியல்பில்  வைத்துக்  கூறுமுகமாகத்  தன்னிலையைப்  புலப்படுத்தினாள் .  இங்கே  இளவரசனாகிய  வேனிலாளன்  துணை  புணர்ப்பவ னாதலாலும் , திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவனாதலாலும்  பிரிந்திருக்கும்  தனக்கு  நலஞ்  செய்யான்  என்னுங்  கருத்துத்  தொன்றக்  கூறியது  இன்புறத்தக்க தொன்று .  மாதவி  கணிகையர்  குலத்தவளாயினும்   மிக்க  நாகரிகமும்  ஒரு  வழிப்பட்ட  காதலும்  அறிவும்  உடையவளாதலின்  இங்ஙனம்  எழுதினாள் . இவளுடைய  உயர்ந்த  நிலையைக்  காதலனாகிய  கோவலன்  பிரிவால்  உலக  வாழ்க்கையைத்  துறந்து  துறவு  நிலை  பூண்டதனாலே  அறியலாம் . இவளெழுதிய  கடிதம் , கட்டப்பட்ட மலர்  மாலையினோடியைத்து   வசந்தமாலை  என்னும்  மற்றொருத்தி  வாயிலாக  கோவலற்குச்  சில  நாழிகை கழித்துச்  சேரத்தக்க  தாகலின்  தாமரையிலை  போல்  விரைவில்  வாடும்  இயல்பினதாக  அன்றி  நெடிது  நிற்பதாகிய  தாழை  மடலாக  அமைத்தது  பொருத்தமே .  சகுந்தலை , துஷ்யந்தனுடைய  காட்சியில்  ஈடுபட்டுக்  காதலால்  வெதும்பும்  போது  அவள்  சிறுமி,  ஆதலால்  தன்   காதற்  குறிப்பை  எவ்வாறு  காதலற்குப்  புலப்படுத்துவதென்றறியா ளாய்த்  துன்புறும்  நிலையில் ,பிரியம்வதை  என்னும்  உயிர்த்தோழி  சகுந்தலையை  நோக்கித் , “தோழி ! அவ் வேந்தர்க்கு  ஒரு  காதற்  கடிதம்  எழுதுக ;அதனை  ஒரு  நறுமலர்  மாலையில்  மறைய  வைத்துத்  தேவப்  பிரசாதம்  என்று  பெயரிட்டு  அவ்வரசர் பெருமானிடம்  சேர்த்து  விடுவேன்”  என்றாள் . அதனை  மற்றொரு  தோழியாகிய  அநசூயை , “யானும்  அப்படியே  நினைக்கின்றேன்”  என்று  ஆமோதித்துப்  பேசினாள்.  அதன்மேற்  சகுந்தலை , நும் கட்டளையில்  மாறுபாடேது  என்று  உடன்பட்டுக்  காதற்  பாசுரத்தை ஆராய்ந்து  எழுதினாள் . இந் நிகழ்ச்சியில்  , அவள்  தகுதிக்கேற்பக்  கவி  கருதியது பாராட்டத்தக்கதே .  இனி , மாதவி  தன்  காதலனோடு   அநுபவித்துப்  பன்னாட்  பழகியவளாதலாலும் , தனக்கு  ஒருவர்  அறிவிக்க வேண்டுவது  இல்லையாதலாலும் , மடலவிழ் கானற்  கடல்  விளையாட்டினுள்  கோவலனூடக்  கூடாதேகிய  பின் ,  மன  வேதனை  தீரத்  தன் னில்லத்துத்  தனித்திருந்து சிறிது  நேரம்  யாழை  இசைத்துப்  புறநீர்மை  என்னும்  பண்ணை  வாசிக்குங்கால் , அவ்விசை  யின்பத்திற்  காதலன்  கூடலின்பம்  தோன்ற  மயங்கித்  தெளிவுற்றுப்  பின்னர்த் , தன்  காதலற்கு  இன்ன  விதமாகத்  தன்  கருத்தைத்  தெரிவிக்க வேண்டும்  என்பதைத்  தானே  துணிந்து  திருமுகம்  போக்கும்  செவ்வியளாய்  எழுதத்  துணிந்தாள் .

             இங்ஙனம்  மாதவியின்  இயல்பை  மனத்துட்   கொண்டு , அவள்  தகுதிக்கேற்ப  ஆசிரியர்  அவள்  காதற்  கடிதத்தை  அழகுற  முடித்தது  பெரிதும்  பாராட்டத்தக்கதே .  இவ்வாறு     காதல்  வயப்பட்டவருள் , எழுதுவோர்  எழுதப்படுவோர்  இயல்புகள் , எழுதும்  வாசகங்கள் , அவ் வாசகக்  கருத்துக்கள் , கடிதம், எழுதுகோல், மை  முதலிய  கருவிகள்  என  இவ்வெல்லாவற்றையும்  புலவர்  பெருமக்கள்  செவ்விய  முறையிற்  சிந்தித்துக்  காதல்  நறுமணங்  கமழப்  புலப்படுத்தியது போற்றத்தக்கதொன்றாம் .  

                                       7  .  குறுந்தொகை

( இது  சென்னையிற்  கூடிய  குறுந்தொகை மாநாட்டில்  நிகழ்த்திய   

                                              தலைமையுரை )     

ன்புமிக்க  ஐயன்மீர் !  அன்னைமீர் ! 

                 இக்குறுந்தொகை  மாநாட்டில்  நிகழும்  அரிய  சொற்பொழிவுகள்  எல்லாவற்றையும்  ஒழியாது  கேட்டு  மகிழும்  பேற்றுக்கு  உரிய  பதவியை  எனக்கு  அன்புடன்  அளித்த   சைவ சித்தாந்த  நூற்பதிப்புக்  கழக  அமைச்சர்க்கு  என்  நன்றியறிவை  முதலிற்  பலப்படுத்திக்  கொள்ளுகின்றேன் .

                  உலகத்துப்  பருப்  பொருள்களைக்  காண்டற்குக்  கருவியாக  மக்களுக்கு  அமைந்த  புறக்கண் போல ,புறக்காட்சிக்குப்  புலனாகாத  நுண்பொருள்களை  அறிந்து  தெளிதற்குரிய  அகக்கண்  அமைதல்  இன்றியமையாததென்பது  யாவரும்  உணர்வர் . பருப்பொருள்களைக்  காணும்  புறக்கண்ணும்  அகக்கண்ணின்  துணையின்றிப்  பொருள்களின்  இயல்புகளைப்  பகுத்துணர்வதற்கு  வலிவுடைய தாகாது . ஆகவே  புறக்கண்ணும்   அகக்கன்ணும்  மக்கட் டன்மைக்குச்  சிறப்பாக  வேண்டப்படுவதென்பதை  அறிகின்றோம் . இவ்வகக்கண்  யாதாக  இருக்கலாம்  எனின் , இதற்கு  விடையாகப்  பேரறிஞர்கள்  எல்லோருங்கூறியது  ஒன்றே  . அது  கல்வி  என்பதை ,

எண்ணென்ப  ஏனை  எழுத்தென்ப  இவ்விரண்டுங் 

 கண்ணென்ப  வாழும் உயிர்க்கு

என்பதனால்  உணரலாம் . இக்கல்வி  ஒவ்வொரு  நாட்டினர்க்கும்  அவ்வந்  நாட்டு  மொழி  வாயிலாக  இருத்தல்  வேண்டும்  என்பதும், பின்னர்  வேண்டப்படும்  வேற்றுமொழிப்பயிற்சி  அறிவாற்றற்கேற்ப  இருக்கலாம் . என்பதும்  அறிஞர்  கண்ட  முடிபுகளாம் .  நமக்குரிய   நாட்டு  மொழியைப்  புறக்கணித்து  வேற்று  மொழியில்  எத்துணை  மேற்சென்றாலும்   மொழியறிவாற்  பெறும்  பயன்  முற்றும்  பெற்றதாக மாட்டாது .  இந்நிலையில்  நாம்  இன்றியமையாது  பயில வேண்டுவது  நமக்குரிய  தமிழ்  மொழியே யாகும் . இம் மொழிக்கண்  உள்ள  இலக்கிய  நூல்களுள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  முதலிய  சங்க இலக்கியங்கள்   காலத்தால்  முற்பட்டனவாம் . மொழி  வளமும்  பொருள்களின்  இயற்கையை  உள்ளபடி  எடுத்து  விளக்கும்  ஆற்றலும்  , உவமையழகும்  ,  ஊன்றிப்  படிப்பார்க்கு   உணர்ச்சியின்பம்  ததும்பச்  செய்யும்  இயல்பும்  ஒருங்கமைந்து   விளங்குவன  சங்க  இலக்கியங்களேயாகும் .  சில்வகை  எழுத்தானாய  செந்தமிழ்ச்  சொற்களும்    தொகை  நிலைத்  தொடர்களும்  கருதிய  பொருள்களைத்   தெளிவுறுத்துவனவாக  அப்பாடல்களிற்  பரக்கக்  காணலாம் . அகமும்  புறமுமாகிய  பொருள்களை  இயநெறியில்  திறம்பாமல்  உலகியல்  ஒழுக்கத்தொடு  இயைத்துப்  புலநெறி  வழக்கமாகப்  பாடல்  செய்யுந்  திறம்   சங்ககாலத்துப்  புலவர்களுக்கு  அமைந்தது  போலப்  பிற்காலத்தவற்பாற்  காண்டலரிதாகும் .  பாடல்களில்  அமைய  வேண்டிய  ஆழமுடைமை  இனிமை  எளிமை  என்னுங்  குணங்களுள்   ஆழமுடைமையும்   இனிமையும்  சங்க  இலக்கியங்களில்  நன்கு  அமைந்துள்ளன . என்பதை  யாவரும்  எளிதில்  உணர்வர் .  எளிமை  கால  வேறுபாட்டால்  அவ்விலக்கியங் களில்   அருமையாக  மாறுதல்  அடைந்து  உள்ளது .  அப்பாடல்கள்  தோன்றிய  காலத்து  அந்  நடை  எளிமையாக  இருக்கலாம் .  அக் காலத்துப்  பயிற்சியில்  முதிர்ந்த  செந்தமிழ்ச்  சொற்கள்  இயல்பாக  வழங்கப்பட்டிருக்கக்  கூடுமாதலின் , அப்பாடல்  நடைகளும்  அங்ஙனமே  அமைந்துள்ளன  என்ற  கோடல்  பொருந்தும்  .  இற்றை  ஞான்று  மொழி  நடையில்  முதிர்ந்த  பழஞ்  சொற்களும்  தொடர்களும்   சிறிது  சிறிதாகக்  கைவிடப்பட்டு  வந்தமையால்  முன்னைப்பாடல்  நடைகள்  இப்பொழுது  நமக்கு  எளிமையில்லாதன வாகக்  காணப்படுகின்றன .சங்க  இலக்கியங்களுள்  ஒரு சிலவற்றைத்  தெளிவாகப்  பொருள்  உணர்ந்து  படித்து  அடிக்கடி  பழகி  வருவோ மாயின்  அந் நடையும்  எளிமையாக  அமையும்  .  எதுகை  மோனை  நிமித்தம்  வறிதே  அடைமொழிகளைப்  புணர்த்துப்  பொருட்சுருக்க மும்   சொற்பெருக்கமும்  அமைய  யாக்கப்படும்  பிற்காலத்தவர்  பாடல்கள்   நுண்ணறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாகா .  ஒரு  சிறு  சொல்லேனும்  வறிதே  விரவாமல்  உய்த்துணருந்தோறும்  “நவில்தொறும்  நூல்  நயம்  போலும்”  என்னும்  முதுமொழிக்கிணங்க  இன்பஞ்  செய்வன  சங்கப்பாடல்களேயாகும் . இத்தகைய  பொருள்வளஞ்  சான்ற  சங்க  இலக்கியங்கள்  இடையே  சில  நூற்றாண்டுகளாகத்  தமிழ்  மக்களாற்  பயிலப்படாமலிருந்தன .  இப்பொழுது  ஒரு  சில  ஆண்டுகளாக  அத் துறையில்  விழிப்புடை யராய்ப்  பயில  முற்பட்டிருப்பது  மகிழ்ச்சி  தருவதொன்று .  இற்றை  ஞான்று  ஆடவரும்  மகளிரும்  சங்க  இலக்கியங்களைப்   படிக்கவும்  அவற்றில்  கூறப்படும்  இயற்கை  முதலிய  பொருளழகுகளை  உணர்ந்து  இன்புறவும் , பெருங்  கழகங்களில்  பலருந்  தெளிய  எடுத்துரைக்கவும்  தகுதியுடையராய்  முன்வருதல் , தமிழராக்கம்  புத்துருப் பெற்று வளர்தற்கேற்ற  சான்றாகும் . இந் நிகழ்ச்சியில்  இச் சென்னை  மாநகரம்  முற்பட்டிருப்பது  சிறப்பாக  நினைக்கத்  தக்கதொன்று  .  பத்துப்பாட்டு  மாநாடு  , கலித்தொகை  மாநாடு , சங்க  இலக்கிய  மாநாடு  என  மூன்று  பேரவைகள்  இதற்கு  முன்  நடைபெற்றன  .  இன்னும்  பல  நடைபெறுதற்குரிய  முயற்சிகள்  காணப்படுகின்றன .  இன்று  கூடிய  மாநாடு  “குறுந்தொகை”என்னும்  அரிய  நூலைப்  பற்றியதாகும் .

                 குறுந்தொகை  என்பது  சங்க  இலக்கியங்களாகிய  தொகை  நூல்கள்  எட்டனுள்  ஒன்று . இது  நல்ல  குறுந்தொகை  என்று  பாராட்டப்பட்டுள்ளது . அகப்பொருள்  நுதலிய  தொகை  நூல்களுள்  அடியளவாற்  பெற்ற  பெயர்   இதுவாகும் . நாலடிச்  சிற்றெல்லை யையும்  எட்டடிப் பேரெல்லையையும்  உடையது . அடியளவாற்  குறுகிய  தன்றிப்  பொருளளவார்  பெரியதென்றே  கூறலாம் . இதன்கண்  மேற்கொண்ட  அகத்துறைகளைத்  தெளிவு  படுத்துங்  குறிப்புக்கள்  வியத்தகு  முறையில்  அமைந்து உள்ளன .  கூறப்படும்  பொருள்கள்  வரையறையும்  தெளிவுமுடையன .  வாய்ப்  பயில்வார்க்குப்  பெரிதும்  இன்பஞ்  செய்கின்றன .  இதற்குப்  பாரதம்  பாடிய  பெருந்  தேவனார்  கடவுள்  வாழ்த்துப்  பாடியுள்ளார் . அது  முருகப்பெருமானைப்  பற்றிய  வாழ்த்தாக  இந்நூன்  முகத்தே  திலகம் போல   ஒளிர்கின்றது . அப்பாடல்  வருமாறு : 

“தாமரை  புரையுங்  காமர்  சேவடிப்

பவழத்  தன்னமேனித்   திகழொளிக்  குன்றின்

நெஞ்சுபக  எறிந்த  அஞ்சுடர்  நெடுவேற் 

சேவலங்  கொடியோன்  காப்ப

ஏம  வைகல்  எய்தின்றா  லுலகை”  

என்பதாம் . இப்பாடலின்  தூய்மையை  நன்காராய்ந்த   யாப்பருங்கலக் காரிகை  உரையாசிரியர்  எல்லாக்  குற்றமும் தீர்ந்த  செய்யுட்கு  மேற்கோளாக  இதனை  எடுத்துக்  காட்டியுள்ளார் . இதன்கண்  முருகப்பெருமானுடைய  திருவடி , நிறம் , ஒளி , ஆடை , வேல் , சேவற்கொடி  என்னும்   இவை  ஆறும்  புனைந்துரைக்கப்பட்டன  முருகவேளை  நினைக்கும்  போதே  தாமரை  மலர்  முன்னிற்பதும் , அறுவகை  வருணனையில்  உள்ளஞ்  சேரலும்  புலவர்  பெருமக்களுக்கு  இயல்பாக  நிகழத்தக்கன  .  நிவந்தோங்கு  இமயத்து  நீலப்  பைஞ்சுனையாகிய  சரவணப்  பூம்பொய்கையில்  , பதுமப்  பாயலில் , அப்பெருமான்  தோன்றியமையை  நினைவுறுவார்  உளக்  கண்ணுக்குத்  தாமரை  மலர்  எங்ஙனம்  புலனாகாதிருத்தல்  கூடும்?  “நமக்  குமாராய”  என்னும்  ஆறெழுத்தடக்கிய  அறுமறைக்  கேள்வியும்  ஆங்கமை  மூவிருமுகனும்  முறைநவின்  றொழுகலும்  மனங்  கொள்ளுவார்க்கு  அறுவகை  இயைபு  எவ்வாற்றாலும்   அப்பெருமானுக்குப்  பொருந்தியதென்று  உயர்ந்த  கவிகள்  கருதல்  இயல்பே .  இதற்கேற்ப  இக்கடவுள்  வாழ்த்து  ஆறடி  களால்   ஆக்கப் பட்டிருப்பதும்  ஈண்டு  உணர்ந்து  இன்புறத்தக்கது . இனி , முதலில்  அப்பெருமானுடைய  சிவந்த  திருவடியே  புனைந்துரைக்கப்படு கின்றது .  கடவுளரைப்  பாடுங்கால்  அன்னார்  திருவடி  நினைவே  கவிகளுக்கு  முன்னிற்பதாகும் . அதனாற்  பெறும்  பயன்  நோக்கி  அங்ஙனங்  கூறல்  மரபு . யாவர்க்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையான்  திருவடியும்  , யாவர்க்கும்  கீழாம்  அடியார்  தலையும்  ஒன்று  படுவதே   வேண்டப்படுவதாகும் .  இது  கருதியே  இறைவனொடு  இரண்டறக்  கலத்தலாகிய  வீடு  நிலைக்குத்  “நாலைப்  போல்  அடங்கிநறிறல்” என்று  சைவப்  பெரியார்  எடுத்துக்   காட்டுவர் . “தாடலை”  என்னும்  தொடரில் , தாள்  என்பதினிறுதியும் ,  தலை  என்பதன்  முதலும்  ஒன்றுபட்டுத்  “தாடலை”  என்றாயவாறு  போல , இறைவன்  நிலையில்  உயிர்நிலை  தோய்ந்த  இரண்டற்ற  நிலை  யாதலே  வீடு  என்பது  புலனாம் . இங்ஙனம்  திருவடியை  முதற்கண்  தொடங்குதலம் , அத்திருவடிக்கட்  பொருண்  முடிவு  கோடலும்  ஆகிய  மரபு  குறுந்தொகைக்கண்  அன்றி  நற்றிணை , ஐங்குறுநூறு , அகநானூறு  முதலியவற்றிலும்  முறையே  “மாநிலஞ்  சேவடியாக”  எனவும் , “ஒருவன்  இருநாள்  நிழற்கீழ்”  எனவும் , “தவில்  தாள்  நிழல்  தவிர்ந்தன்றாலுலகே”  எனவுங்  கூறிய  மறையான்  உணரலாம் . குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு  இம்மூன்றும்  முறையே  குறுமை , இடைநிகர் , நெடுமை  ஆகிய  அடியளவு  பற்றித்  தொகுக்கப்பட்டனவாம் . இவற்றிற்கு  முறையே  பாரதம்  பாடிய  பெருந்தேவனார்  முருகன் , சிவபிரான்  இவர்களைப்  பற்றிக்  கடவுள்  வாழ்த்துக்  கூறியுள்ளார் . இம்முறையில்  ஆசிரியர்  பிரமன் , திருமால் . சிவபிரான்  அவர்களைப்பற்றிக்  கருதியிருக்கலாம் . பிரமனைக்  கூற வேண்டிய  பகுதியில்  அப்பிரமனை  மறைப்பொருள்  வினவி  அடக்கியருளிய  ஆற்றல்  முருக  வேளுக்கு  உள்ளதாலும் , நிலக்  கிழமை  பற்றியும்  இதற்கு  முருகன்  வாழ்த்துச்  சிறந்ததென  மேற்கொண்டார்  போலும் .

               இனி , நானிலத்து  ஐந்திணை  ஒழுக்கமும்   இந் நூல்  நுதலிய  பொருளாதலின் , அப்பொருளைக்  கருக்கொண்டுள்ளது  இப்பாடலென  உணர்க . இங்ஙனம்  நூல்  நுதல் பொருளைத்  தன்னகத்தடக்கி  முதற் பாடல் புலப்படுக்குமாற்றைத்   திருக்கோவையாரில்  “திருவளர்தாமரை” என்னும்  முதற்  செய்யுட்குப்  பேராசிரியர்  செய்த  நல்லுரையானும்  உணரலாம் , இக்கடவுள்  வாழ்த்துப் பாடலில்  அக்  கருப்பொருள்  அமைந்த  முறையைச்  சற்று  ஆராயத்  தொடங்குவேன்  “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்புழி  மருத  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  தாமரையும்  , “பவழத்  தன்ன  மேனி”  என்புழி  நெய்தல்  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  பவளமும் , “குன்றி  யேய்க்கும்  உடுக்கை”   என்புழி  முல்லைக்கு  உரியதாகக்  கருதப்படும்  குன்றிமணி  கொடியும் , “குன்றின்  நெஞ்சுபக  எறிந்த”  என்றதனால் , குறிஞ்சிக்கு  உரிய  மலையும்  புலப்படுக்கப்   பட்டுள்ளன .  பாலைக்கெனத்  தனியே  நில  மின்மையாலும்  “முல்லையுங்  குறிஞ்சியும்  முறைமையில்  திரிந்து  பாலை  என்பதோர்  படிவங்  கொள்ளும் “  ஆதலானும் , அம்முறையில்  குறிப்பாக  அந் நிலமும் புலப்படுக்கப்பட்டதென்னலாம் குன்றியையும் குன்றத்தையும் ஒரே  அடியில்  இயைய  வைத்த குறிப்பும்  இதனை  வலியுறுத்து வதாகும் . ஈண்டு , குறிஞ்சியல்லா  ஏனை  நிலங்களைக்  கருப் பொருள்களாலும்,  குறிஞ்சியை  முதற்  பொருளாலும்  பெற  வைத்தது. “சேயோன்  மேய  மைவரை  யுலகமும்”  என்றபடி  அந் நிலவுரிமை  செவ்வேட்கு  உள்ளது  கருதியே .   

         முருகவேளின்  இளமையும் , அழகும் , வீரமும்  சிறப்பு  முறையில்  கவிகளின்  உள்ளத்தைக்  கவர்வனவாம் . “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்பதனால்  இளமைச்  செவ்வி  புலனாம்  .  தாமரை  இதழ்  போன்ற  மென்மையும் , செம்மையும்  ஈண்டு  இளமையைப்  புலப்படுப்பன . “பவழத்  தன்ன  மேனித்  திகழொளி”  என்றதனால்  திருமேனி  நிறமும்  அந் நிறத்தில்  விளங்கும்  பேரொளியும்  அழகைப்  புலப்படுப்பன.  முருகனது  ஒளியின்  பெருமையை  “முன்னே  வந்து  எதிர்  தோன்றும் முருகனோ  பெருகொளியால்”  என்னும்  பெரியார்  மொழியானும்  உணரலாம் . குன்றின  நெஞ்சு  பக எறிந்த அஞ்சுடர்  நெடுவேல்”  என்பதனால்  வீரம்  புலனாம் . உலகம்  கொடியவர்களால்  துன்புறுங்கால்  தம்  வேற்படை  கொண்டு  பகையொழித்து  இன்புறுத்தற்கு  வீரம்  இன்றியமையாதது . ஆதலின்  காத்தற்  றொழிலுக்கு  உதவியாக  வீரம்  முதற்கண்  அடுத்துக்  கூறப்பட்டது .  அளியும்  தெறலும்  அரசர்க்கு  இன்றியமையாதனவாம் . அந்நிலையில்  தெய்வ  அரசராகிய  முருக  வேட்குக்  “காப்ப”  என்றதனால்  அளியும் , “குன்றின்  நெஞ்சுபக எறிந்த:  என்றதனால்  தெறலும்  உள்ளன  என  ஆசிரியர்  பெருந்தேவனார்  புலப்படுத்துள்ளார் . முருகவேளின்  காவலிற்பட்டு  உலகம்  இன்பமயமான  நாட்களைஎய்துகின்றது  என்னும்  பொருள்  தோன்ற ,”காப்ப , ஏமவைகல்  எய்தின்றாலுலகே”  என  இவ்வாழ்த்து  முடிக்கப்பட்டது . இதனால்  மக்களுக்கு  உரிய  அன்பின்  ஐந்திணை  ஒழுக்கம்  இந்நூல்  நுதலிய  பொருளாகும்  என்பது  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . இவ்வாழ்த்துப்பாடலில்   மருத  நிலத்துக்  கருப்பொருள்  முதலிலும்   குறிஞ்சி  முதற்பொருள்  ஈற்றிலும்  அமைந்துள்ளன .இதனால்  “ஊடுதல்  காமத்திற் கின்பம் , அதற்கின்பம்   கூடி  முயங்கப்  பெறின்”  என்னும்  முதுமொழிப்படி  ஊடலும்  கூடலும்  முறையே  நிகழும்  இன்பவியல்பு புலப்படுக்கப்பட்டது என்பது  போதரும் . இங்ஙனம்  இக்குறுந்தொகைக்கு  அமைந்த  கடவுள்  வாழ்த்துப்  பாடல்  நுண்பொருள்  பலவற்றையும்  தன்னகத்து  அடக்கி  நுண்ணுணர்வினோர்க்கு  நவில்தொறும்  உணருந்தோறும்  முருகன்  திருவடி  இன்பம்  போன்ற  பேரின்பத்தைப்  பயத்தலால் இன்பவூற்றாகத்  திகழ்வதாகும் .

அன்பர்களே ! 

        இனி,  இந்  நூலின்  உட்பகுதியில்  நுழைந்து  பல  பொருள்  நயங்க ளைப்  பின்னே  சொற்பொழிவாற்ற  முன்வரும்  புலவர்  வாயிலாக  உணர்ந்து  இன்புறலாம் . ஆயினும் , நறுஞ்சுவைப்  பொருளை  நுகர்தற்கு  வேட்கை  விஞ்சினார் , பின்  அவர்  காலந்  தாழ்த்துத்  தரும்  வரை  காத்திருத்தற்கு  மனம்  ஒருப்பாடுவாரல்லர் .  ஏதோ  கைக்  கெட்டிய  அளவு  முந்துற  நுகர்தற்கு விரும்புதல்  இயல்பே . அம்முறையிற்  சிற்சில  பகுதிகளை  அறிவு  கருவியாக  நுகர்ந்து  இன்புறலாமென  நினைக்கின்றேன் .  இந்  நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினைக்கிறேன் . இந்நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினையின்  மிக  விரியும் . ஆதலின் , ஒரு  சில  நயங்கள்  மட்டில்  ஆராயலாமென  எண்னுகின்றேன் .  இவை :   1 உவமையழகு   2  . குணவருணனை  3 . தேற்றுமுறை  4 . உள்ளுறை   5 மக்கள் மனநிலை  6 .  காதலின்  இயல்பு  என்பனவாம். இவையும்  சுருங்கிய   அளவில்  முறையே  கூறப்படும் .    

1 .  உவமையழகு

          சங்க  இலக்கியங்களுட்  பெரும்பாலும்  அமைந்த  அணிகள்  தன்மை  நவிற்சியும்  உவமையுமாம் . பொருள்களைத்  தெளிவுறுத்து வது   உவமையாகும் . ஒரு  புடையொத்தல்  உவமமெனக்  கொண்டு  உள்ளத்  துணர்வுக்குக்  கொள்ளத்தக்க  அளவில்  அன்றி  உவமை  கூறுவர்  பிற்காலத்துப்  புலவர் .  சங்கப்புலவர்  காணும்  உவமைகள் , பொருளோடு  ஒத்த  தன்மையால்  நெருக்கம்  உடையனவாய்  நின்று , உணர்வுக்கு  இன்பஞ்  செய்வனவாம் . அவற்றுள் , இங்கே  ஒரு  சிலவற்றைக்  குறிப்பிடுவேன் .  மனையாளை  அஞ்சியொழுகும்  ஓராடவன்  இயல்பு, “கையுங்  காலுந்  தூக்கத் தூக்கும்  ஆடிப்  பாவை  போல , மேவன  செய்யும்  “  என்று  உவமை  கூறித்  தெளிவுறுத்தப் பட்டது .  கண்ணாடியின்  முன்னின்றார் , தம்  கையையும்  காலையுந்  தூக்குங்கால்  அக்கண்ணாடியில்  தோன்றும்  எதிருருவாகிய  பாவையும்  அங்ஙனமே  தூக்குமென்பது  எளிதிற்  காணப்படுவ தொன்று . அதனால்  “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே” என்புழிப்  போல, இறைமை  தலைவி  பாலதாக, அவள்  இயக்கியாங்கு  இயங்குதல்  தெளிவுறுத்தப்பட்டது . இது  பரத்தை கூற்றாதலின்  அவள்  மனம்  வேறுபட்ட  நிலையிற்  கூறியது  பற்றித்தலைமகன்  பெருமைக்கு  இழுக்காதென்பது ஈண்டு  அறியத்தக்கது .

            பிறிதோரிடத்து , சிறிய  உயிரில்  அமைந்து  கிடக்கும்  பெரிய  காதலின்  இயல்பை  உவமிக்கக்  கருதிய  ஆசிரியர் ,  

சிறுகோட்டுப்  பெரும்பழத்  தூக்கி  யாங்கிவள்

 உயிர்  தவச்  சிறிது  காமமோ  பெரிதே “

என்கின்றார்  . வேரிற்  பழுக்கும்   பழத்தை  நீக்குதற்குக்கோடெனவும்   சிறு  பழத்தை  நீக்குவதற்குப்  பெரும்  பழமெனவுங்  கூறினர் .  மரக்  கொம்பை  மகளிர்க்கு  உவமையாக்குதல்  கவி  மரபு . இங்கே  உடலோடு  உயிர்க்குள்ள  ஒற்றுமை  கருதியும் , உயிர்  அணுவென்று  கூறப்படுதல்  பற்றியும் , தலைவியின்  இளமைச்  செவ்வி  நினைந்தும்  சிறு  கோடு  உவமையாயிற்று  . இத்தகைய  சிற்றுயிரில்  தங்கிய  வேட்கையோ  மிகப்  பெரிதென்பது  போதரவும்  , நுகருந்  தலைமக னுக்கு  அது  பேரின்பஞ்  செய்யுமென்பது  பற்றியும்  காமத்திற்குப்  பெரும்  பழம்  உவமையாயிற்று .  காமம்  நறுங்கனியாக   கூறப்படு தலை ,

“தாம்வீழ்வார்  தம்வீழப்  பெற்றவர்  பெற்றாரே

 காமத்துக்  காழில்  கனி” 

என்னுந்  திருக்குறளாலும் ,

“கன்னிமை  கனிந்து  முற்றிக்  காமுறக்  கமழுங்  காமத்

 தின்னறுங்  கனியைத்  திய்ப்பான்  எந்தலே”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளாலும்  உணரலாம் . காதலின்  வளர்ச்சியை  ஆடவர்  மகளிர்  பிரிவிற்  காண்டல்  போலக்  கூடற்  காலத்திற்  காண்டற்கியலாது . கூட்டத்தில்  இருவரும்  உள்ளம்  இயைந்து  இன்பம்  நுகர்வர் . அந் நிலையில்  , அவ்வின்ப நிலை ,

“மக்கட்குத்  தாய்தான்  மணாளனோ  டாடிய

சுகத்தைச்  சொல்லெனிற்  சொல்லுமா  றெங்ஙனே”

என்ற  பெரியார்  மொழிப்படி  வெளிப்படுத்துச்  சொல்லுந்தரத்தன்று . பிரிவுத்  துன்பம்  வாய்  விட்டுக்  கூறும்  இயல்பினது . இது  பற்றியே  இங்கே  தோழி   “உயிர்தவச்சிறிது  காமமோ  பெரிதே” என்றனள் .  கூடலில்  நிகழும்  இன்பத்தினும்  பிரிவின்கண்  நிகழுந்  துன்பம்  மிகப் பெரிதா மென்பதனை ,

ஏரிதலைக் கொண்ட காமத்  தின்பநீர்ப்  புள்ளி  யாற்றல்

 பிரிவிங்கட்  பிறந்த  துன்பம்  பெருங்கடலனைய  தொன்றால்”

என்னுஞ்  சிந்தாமணியாசிரியர் கூற்றாலும்  உணரலாம் . இங்கே  இன்பத்தையுந்   துபத்தையும்  நீராகக்  கொண்டு , அவ்வின்பம்  நீர்த்திவலை  யளவினதென்றும் , பிரிவுத் துன்பம்  நீர்ப்பெருக்காகிய  கடலளவினதென்றும் கூறியது  உணர்ந்து  இன்புறத்தக்கது . “காமமோ  பெரி”  தென்றதும்  பிரிந்த நிலையில்  நிகழ்வது  கருதியே  முதிர்ந்த  பெரும் பழம்  கொள்ளுவாரில்லையாயின் , தனக்கு  ஆதாரமாகிய  சிறிய  கொம்பையும்  , இறுத்துத்  தானும்  வீழும் .  அது  போலத்  தலைவியின்  காதற்  பெருங்கனியை  ,  உரிய  தலைவன் நுகர முற்பட்டிலனேல் ,  அதற்கு  ஆதாரமாகிய  தலைவியின்  சிற்றுயிரையும்  இறந்துபடச்  செய்து  தானுங்  கெடுமென்பதும்  இங்கே  உணரத்தக்கது .  

            இனி , களவொழுக்கத்தில்  தலைப்பட்டு  மீண்ட  தலை மகனது  வேறுபாடு  கண்ட  பாங்கன், அவ்வேறுபாட்டிற்குரிய  காரணத்தை  வினாவிய  பொழுது , ஓர்  இளம் பெண்ணால்  இங்ஙனம்  நேர்ந்த தென்று  தலைமகன்  கூறியதாக  ஒரு  பாடல்  உள்ளது . அது ,

“சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை

கான  யானை  அணங்கி  யாஅங்கு

இளையள்  முளைவா  ளெயிற்றள்

வளையுடைக்  கயளெம்  அணங்கி  யோளே “

என்பதாம் . சிறிய  வெள்ளிய  பாம்பின்  குட்டியானது  காட்டில்  திரியும்  பெரிய  யானையை   வருத்தினாற்போல , நாணல்  முளை  போன்ற  கூறிய  பற்களையுடைய  ஓர் இள நங்கை  என்னை  வருத்தச்  செய்தாள்  என்பது  இதன்  பொருளாகும் . மிகச்  சிறிய  கோலினாற்  கொல்லத்தக்க  பாம்புக்குட்டி  மலை  போன்ற  யானையும்  வருத்துமென்பதை ,

அஞ்சனக் கோலி  நாற்றா  நாகமோ  ரருவிக்  குன்றிற்

 குஞ்சரம்  புலம்பி  வீழக்  கூர்நுதி  யெயிற்றிற் கொல்லும்”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளலும்  அறியலாம் . இங்கு , தலைவன்  யானையைத்  தனக்கு  உவமையாகக்  கூறியதனால் , தலைமை  யிலக்கணத்துக்குப்  பொருந்தாத  தற்புகழ்தல்  பெறப்படுகின்றதே  , அங்ஙனம்  பெற  வைகலாமோ  வெனின் , சென்றதற்கு  இரங்குகின்றானாதலின்  தற்புகழ்தல்  ஆகாதென்பது  கருத்து . இங்கே,

ஒண்ணுதற்  கோஒ  உடைந்ததே  ஞாட்பினுள்

 நண்ணாரும்  உட்குமென்  பீடு “ 

என்னுந்  திருக்குறளும்  , ‘ஞாட்பினுள்  நண்ணாரும்  உட்குமென் பீடு’  என்பதனாற்  பெறப்பட்ட  தற்புகழ்  தலைப்  பரிகரித்தற்கு  “கழித்ததற்  கிரங்கலின்   தற்புகழ்தல்  அன்றாயிற்று . என்று  கூறிய  பரிமேலழகர்  உரைப்  பகுதியும்  ஒப்பு  நோக்கி  இன்புறத்தக்கன . இங்ஙனம்  பாங்கன்  கேட்டதற்குத்  தலைமகன்  இறுத்த  விடையை  ஏற்றுக்  கொள்ளாமல் , பாங்கன் , பேராற்றல்  படைத்த  நீ  ஒரு  சிறுமகளால்    இத்தன்மையை  யாதல்  நின்  பெருமைக்கு  இழுக்காகுமென்றது  இடித்துரைத்தானாக  .  அக்  கழற்றுரையைத்  தலைமகன்  மறுத்துரைக்கு  முகமாக  ஒரு  பாடலுள்ளது . அஃது ,

“இடிக்குங் , கேளிர்  நுங்குறை  யாக

 நிறுக்க  லாறறினோ  நன்றுமற்  றில்ல

ஞாயிறு  காயும்  வெவ்வறை  மருங்கிற்

கையி  லூமன்  கண்ணிற்  காக்கும்

வெண்ணெ யுணங்கல்  போலப்

பரந்தன்  றிந்நோய்  நோன்றுகொளற்  கரிதே “

என்பது  .  இதன்கண்  ஓரழகிய  உவமை  எடுத்தாளப்பட்டுள்ளது . கதிரவனது  கடும்வெயில்  எறிக்கும்  வெப்பத்தையுடைய  பாறையின்  கண்ணே , கையில்லாத  ஊமன்  தன்  கண்னினாலே  பாதுகாக்கும்படி  வைக்கப்பட்ட  வெண்ணெய்  உருகுதல்   போல  இக்  காதல்  பரந்துள்ளது ;  பொறுத்தற்கரிதாயிற்று என்பதாம் .  ஊமன்  இலக்கணத்தைச்  சிந்தாமணியாசிடியர் ,

“கயி  னாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும்

மொய்கொள்  சிந்தையின்  மூங்கை” 

என்று  கூறினர் .பிறர்  கையினாற்  கூறுஞ்  செய்திகளை  ஊமன்  தன்  கண்களாற்  கேட்குமெனவும் , பேச  இயலாமையினால்  நினைத்த  கருத்துக்கள்  அளவில்லனவாக  உள்ளத்தில்  நிறைந்திருக்கு மென்பது கருதி “மொய்கொள் சிந்தையின் மூங்கை’   எனவும்  கூறினர் . இங்ஙனம்  பேச  இயலாமையோடு  கையுமில்லையானால்  வெண்ணெ  யுருகிப்  பரத்தலைக்  கண்ணினாற்  கண்டும்  பிறர்க்குத்  தெரிவிக்க  இயலாமையோடு  அவ் வெண்ணெயைப்  பெயர்த் தெடுத்துப்  பிறிதொரிடத்து  வைக்கவும்  அவ்வூமற்கு  இயலாததாம் . அது போல , இந் நோயைப்  பொறுக்கவும்  பிறர்க்கு  வெளிப்படுத்திக்  கூறி  ஆறுதலடையவும்   இயலாதவனாயினே னெனவும் , என்னை  இடித்துரைக்கும்  நண்பரே  இதனை  நும்  காரியமாக  நிறுத்தலைச்  செய்யின்  நன்றாமெனவும்  தலைமகன்  கூறினானென்பதும்  இப்பாடற்  கருத்து . இத்துணையும்  உவமை  நயங்கள்   ஒருவாறு  புலப்படுக்கப்பட்டனவாம் .

2   .  குண  வருணனை

       இனி , ஒரு  குணத்தை  யெடுத்துச்  சிறப்பித்துக்  கூறுங்கால் , அதற்குப்  பேரெல்லையாக  எம்மட்டிற்  கூறலாமோ  அத்துணையுங்  கூறி  அக்  குணத்தின்  பெருமையை  விளங்க  வைத்தலை  இந்  நூலிற்  பல  விடத்துங்  காணலாம் .  தலைமகள்  தன்  காதலனோடு  மேற்கொண்ட  நட்பைப்  பற்றிக்  கூறும்  போது , “நிலத்தினும்  பெரிதே  வானினு முயர்ந்தன்று . நீரினு மாரளவின்றே”  என்று  கூறியதாக  ஒரு  பாடற்  பகுதி  காணப்படுகிறது .  திருக்குறளிற்  பெருமைக்  கெல்லை யாக  நிலம்  வான்  கடல்கள்  கூறப்பட்டுள்ளன .  இவ்வெல்லாம்  பெருமை  யென்னும்  ஒரு  பொதுத்  தன்மை  பற்றி  வினாவிய   அநபாய  சோழ  அரசற்கு , இவை  எடுத்தாளப்பட்ட  மூன்று  திருக்குறள் களையும்  எடுத்துக் காட்டி  எழுதி  யுய்த்த  பெருமை  பற்றிச்  சேக்கிழார்  பெருமான்  திருக் கைகள் ,

மண்ணிற்  கடலின்  மலையிற்  பெரியதென

 எண்ணியெழு  திக்கொடுத்த  ஏற்றக்கை”

என்று  பாராட்டப்  பெற்றன . இங்ஙனம்  திருக்குறளில்  பெருமையொன்றே  பற்றிக்  கூறப்பட்டனவாக , இங்கே  ஒவ்வொரு  வகையினும்  வேறு  வேறு  பொதுத்  தன்மை  கண்டு  கூறியது  இன்புறத்தக்கது . சிறந்த  நட்பென்னுங்  குணம்  சுருங்கியதாக  இல்லாமற்  பரந்தும் , அப்பரப்பிற் கேற்ப  உயர்ந்தும்  அதற்கேற்ப ஆழ்ந்தும்  இருத்தல்  வேண்டும் . பிறராற்  சிதைக்க  முடியாதபடி  வேர்  ஆழ்ந்திருத்தலைப்  பிற்காலத்துப்  புலவரும் ,

“ஒருநாட்  பழகினும்   பெரியோர்  கேண்மை

இருநிலம்  பிளக்க  வேர்வீழ்க்  கும்மே”

என்று  கூறுவர் . இங்ஙனம் மூன்று  தன்மையும்  வாய்க்கப்பெற்று  எல்லாம்  வல்ல  இறைவன்  எங்கும்  நிறைந்த  நிலை  போல அகன்று  உயர்ந்து   ஆழ்ந்திருத்தற்கு  முறையே  நிலத்தையும்  விண்ணையுங்  கடலையும்  உவமையாகக்  கண்டது  பாராட்டத்தக்கதே . இம் மூன்று  தன்மைகலையும்  இறைவனுக்  குரியனவாக  ஆளுடை  அடிகள்  தம் அநுபவ  முறையிற்  கண்டு  கூறிய ,

                                        “    ……………………………………………………வேதங்கள்

ஐயா  என  ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே “

என்னுந்  திருவாசகப்  பகுதி  ஈண்டு  நினைந்து  இன்புறத் தக்கது .  இங்கே  நுண்மை  ஒன்று  மிகுதியாகக்  கூறப்பட்டுள்ளது . அதற்குக்  காரணம்  அணுவினும்  அணுவாய்  நிற்கும்  இறைவனிலக்கணம்  இந்  நட்புக்  குணத்திற்குப்  பொருந்தாது  என்பதே .  

3  .  தேற்று  முறை

           ஒருவர்க்கு  ஆற்றொணாத்  துயரம்  நேர்ந்தவிடத்துத்  தேற்றப்  புகுவார் , துயரமுற்றார்  உள்ளத்துட்  பதியுமாறு   ஆறுதல்  மொழி  கூற வேண்டும் . அங்ஙனங்  கூறப்படு மொழியும்  உண்மையாக  இருப்பின்  நலமாம் . இந் நிலையில்  தலைமகனுடைய  பிரிவு  கருதி  வேறுபட்ட  தலைமகளுக்குத்  தோழி  ஆறுதல்  கூறுமுகமாக  ஓர்  இனிய  பாடல்  இங்கே  காணப்படுகின்றது . அது ,

“வினையே  ஆடவர்க்  குயிரே  வானுதல்

 மனையுறை  மகளிர்க்  காடவ  ருயிரென

நமக்குரைத்  தோருந்  தாமே 

அழாஅல்  தோழி  அழுங்குவர்  செலவே “

என்பதாம். ஓரமயம்  பொருளீட்டக்  கருதிய  தலைமகன்  அச்செய்தி யை  வெளிப்படையாகக்  கூற  அஞ்சிக்  குறிப்பிற்  புலப்படுத்த  நினைத்தான் .  உண்மைக் காதலன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  தன்  உயிரனைய   காதலியைப்  பிரிய  நேரின்  அச்  செய்தியை  வெளிப்படக்  கூறினால்  அவள்  ஆற்றொணாத்  துயர  மெய்துவாளென்  றெண்ணி  முதலில்  ஒருவாறாகத்  தன்  எண்ணத்தை  அவள்  அறிந்து  கொள்ளுமாறு  குறிப்பிற்  புலப்படுத்தலும் , பின்னர்  விரைந்து  திரும்புவேன்  என்று  கூறிப்  பிரிவை  வெளிப்படுத்தலுஞ்  செய்வன்  .  இதனை.

மினிவரும்  மன்னரும்  முன்னுவ  பொன்னால்  முடியும்” 

என்று   பொதுவாக  நீதி  கூறுவான்   போன்று  பேசத்தொடங்கியதும்  தலவி  பிரிவுக்  குறிப்புணர்ந்து  அழத்தொடங்கினாள் .  என்று  கூறிய  திருக்கோவைப்  பாடலும் , அதன்பின்  ஒருவாறாகத்  தேற்றி  ‘யான்  பிரிந்து  விரைவில்  வருவேன்’  என்றானாக , அது  கேட்ட  தோழி ,  ‘பிரிந்து  போக  வல்லையாயின்  அதனை  எனக்குச்  சொல் ; அங்ஙன மின்றிப்   பிரிந்து  சென்று  விரைந்து  வருதலைச்  சொல்வையாயின்  அதனை  அப்பொழுதே  உயிர்  வாழ்வார்க்குச்  சொல்   என்றும்  கருத்துத்  தொன்ற,

“செல்லாமை  உண்டேல்  எனக்குரை  மற்றுநின்

வல்வரவு  வாழ்வார்க் குரை

என்னுந்  திருக்குறளும்  புலப்படுத்துவனவாம் .  இத்திருக்குறட்  கூற்றுத்  தோழியதாயினும்   வேறுபாடின்மை  பற்றித்  தலைவியாகக்  கொள்ளுதல்  பொருந்தும் .  இம்முறையில்  இங்கே  தன்  பிரிவைக் குறிப்பிற்  புலப்படுத்த  எண்ணிய  தலைவன்  பொதுவாக ,  “வினையே  ஆடவர்க்குயிர்”  என்றான் . இந்  நீதி  மிக  உயர்ந்தது .  தொழின்  முயற்சியின்றி  மக்கள்  வாழ்க்கை  நடைபெறுதல்   அரிதாகலின்  அஃது  ஆடவர்க்  குயிராகுமென்பது  உண்மையே .  இவ்வுயர்ந்த  குறிக்கோளைப்  பொது  நீதியாகத்  தலைவன்  கூறிய  அளவில்  அவன்  பிரியக்  கருதுகின்றான்  என்பதைக்  குறிப்பால்  அறிந்த  தலைமகள்  துயரமிக்கு  வேறுபட்டாளாக , அஃது  உணர்ந்த  தோழி  அவளை  நோக்கி ,’ஆடவர்க்கு  வினை  உயிர்  என்று  கூறிய  தலைவரே  முன்னொரு  முறை  மனையுறை  மகளிர்க்கு  ஆடவர்  உயிரென்றுங்  கூறியுள்ளார் ; கற்பரசியாகிய  நினக்கு  உயிர்  அவராக , நின்னை  விட்டு  எங்ஙனம்  பிரிந்துறைவர் ? அவர்  கொள்கைப்படி  எவ்வாற்றானும்  பிரிவாரல்லர் ;  வருந்தல்  வேண்டா  ; ஆறுதலடைக’  என்று  தேற்றுவானாயினள் .இங்ஙனம்  தேற்றும்   அறிவாற்றல் உடைய  வளாகத்  தோழியினுயர்வைப்  புலப்படுத்திய , கவியினுட்கோள்   வியத்தற்குரியது .  

4  .  உள்ளுறை

         இனி,  அகப்பொருட்  பகுதியிற்  பேசு  மக்கள் , கருத்தைக்  கருப்பொருள்  வருணனையில்  உள்ளுறை  பொருளாக  அமைத்துக்  குறிப்பிற்  புலப்படுமாறு   வலியுறுத்தலைப்  பலவிடத்துங்  காணலாம் . இவ்வழகு  மொழிக்கே  சிறந்த  தென்னலாம் . செம்பொருளினுங்  குறிப்புப்  பொருள்களே  அறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாம் .  தமிழ்  மொழியிலுள்ள  சங்கத்துச்  சான்றோர்  பாடல்களெல்லாம்  பெரும்பாலுங்  குறிப்புப்  பொருள்களை  உடையனவாகவே  காணப்படுவன .  இதற்கு  எடுத்துக்காட்டாக  ஒன்று  காட்டுவேன் .  தலைவியின்  இயைபு  கருதி  நள்ளிரவில்  தலைமகன்  வருதலை யறிந்த  தோழி , வழியில்  உறும்  இடையூறுகளால்  தலைவர்க்குத்  தீங்கு  நேருங்கொலோ?என்றஞ்சி  இரவில்  வருதலை  விலக்க  முற்பட்டுக்  கூறுமுகமாக  ஒரு  பாடல்  உள்ளுறை  நயந்தோன்ற  உள்ளது . அது,

கருங்கட்  டாக்கலை  பெரும்பிறி  துற்றெனக்

கைம்மை  யுய்யாக் காமர்  மந்தி

கல்லா  வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி

ஓங்குவரை  யடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும் 

சாரல்  நாட  நடுநாள் 

வாரல்  வழியோ  வருந்தும்  யாமே “

என்பதாம் .

              இதன்கண் , தலைமகனது  குறிஞ்சி  நிலத்து  வருணனையாக ,  ‘ஆண்  குரங்கு  இறந்ததாக  அதன்  பிரிவில்  கைம்மைத்  துன்பத்தை  ஆற்றாத  அதன்  பெண்  குரங்கு  தன்  இளங்குட்டியைச்  சுற்றத்திடைச்  சேர்த்து விட்டு , உயர்ந்த  மலையினின்றும்   வீழ்ந்து  உயிரை  மாய்த்துக்கொள்ளும் ‘ என்னுஞ்  செய்தி கூறப்பட்டுள்ளது . இதனால் , நின்  நிலத்துள்ள  விலங்கும்  பிரிவாற்றாது  இறந்து  படுதலை  அறிகின்றாய் ; ஆதலின்  நினக்கு  இடையூறு  நேருமேல்  தலைவி  உயிர்  வாழ்தலை  விரும்ப  மாட்டாள்  என்பது  அறிவிக்க  வேண்டிய  தொன்றன்று  என்று  தோழி  தலைமகனுக்குச்  சொல்லக்  கருதிய  செய்தி  குறிப்பிற்  புலப்படுத்தலை  அறியலாம் .

5  .  மக்கள்  மனநிலை

     இனிப்   பழங்காலத்துத்  தமிழ்  மக்கள்  மனநிலைகளை  அறிதற்குச்  சங்க  நூல்களே  சிறந்த  கருவிகளாகும் . ஒருவனும்  ஒருத்தியுந்  தம்முட்  கொண்ட  காதல்  எத்தகைய  இடையூற்றானும்  பிறழ்ச்சி  எய்துவதன்று . காதல்  வயத்தான  ஒன்று  கூடுவார்  தம்    மனத்திற்குச்  சான்றாக  வேறு  பொருள்களை  எதிர்பார்ப்பதில்லை.  அவரவர்  உள்ளங்களே  சான்றானவாம்.  களவொழுக்கத்து  நெடுங் காலம்  பயின்று  கற்பு  முறையில்  மணஞ்  செய்து  கொள்ளாதிருந்த  தலைவனியல்பைக்  குறித்துத்  தலைமகள் தோழியை  நோக்கி , “தோழி ! தலைவன்  என்னைக்  கனவில்  மணந்த  காலத்தில்  சான்றாவார்  வேறொருவருமிலர் ; தலைவர்  ஒருவரே  இருந்தனர் ; அவரே  தாம்  கூறிய  சூளுறவினின்றுந்   தப்பியொழுகுவாராயின்  யாஞ்  செய்யத்தக்கது  யாதுளது ? அவ்விடத்து  அவ்வமயம்  ஒரு நாரை  மாத்திரம்  இருந்தது  ;அதுவும்  ஓடும்  நீரில்  தானுண்ணும்  பொருட்டு  ஆரல்  மீனின்  வரவை  எதிர்பார்த்து நின்றதாகலின் , எம்  நிகழ்ச்சியைக்  கண்ணுற்றிராது ; காணாத  தொன்றைப்  பற்றிச்  சான்றாதற்குத்  தமிழ்  நிலத்துப்  புள்ளும்  ஒருப்படாது ;  வாய்மை  நெறி  யொழுகும்  இயல்பின  தாகலின் ,  என்று  தலைவி  கூறினாளாம்.  இவ்வரிய  கருத்தைப்  புலப்படுத்தும்  பாடல் :-

யாரு   மில்லைத்  தானே  கள்வன்

தானது  பொய்ப்பின்  யானெவன்  செய்கோ

நினைத்தா  ளன்ன  சிறுபசுங்  கால

ஒழுகுநீ  ராரல்  பார்க்கும்

குருகு  முண்டுதான்  மணந்த  ஞான்றே “

என்பதாம் .  இங்கே  தலைமகள் , சான்றோர்க்குத்  தகுதி  யில்லாத  அஃறிணைப்  பொருளாகிய  நாரையைக்  குறித்துக்  கூறியது  எங்ஙனம்  பொருந்தும் ? எனிற்  கூறுவேன் . தமிழ்  நிலத்துப்  பெண்மக்களுடைய  கற்பின்  பெருமை  குறித்து  அவர்  மண நிகழ்ச்சிக்கு  அஃறிணைப்  பொருள்களுள்ளும்  நிலையியற்  பொருள்களாகிய  மர  முதலிய  சான்றாகியன  நிகழ்ச்சி  , சிலப்பதிகாரத்திற்  கண்ணகி  யென்னுங்  கற்பரசி  வாயிலாக  வெளியிடப்பட்ட  ,

“வன்னி  மரமும்  மடைப்பளியுஞ்  சான்றாக

முன்னிறுத்திக்  காட்டிய  மொய்குழலாள் “

என்னுஞ்  செய்தியால்  அறிகின்றோம் .  மரமாகிய  நிலையியற்  பொருளும்  மடைப்பள்ளியாகிய   செயற்கை  பொருளுந்  தமிழ்  மகளிர்  கற்பிற்குச்  சான்றாகுமாயின் , இயங்கிற்  பொருளாகிய  நாரையைக்  குறித்தது  பொருந்தாதென்று  எங்ஙனம்  எண்ணலாம் ?  

6  .  காதலின்  இயல்பு

         உண்மைக் காதல்  வயப்பட்ட  மகளிர் , தம்  காதலர்  எக்காரணத்தாலாவது  தம்மொடு   அளவளாவுதலில்  தவிர்ந்தொழுகு வாராயினும்  அக்கணவன்மாரிடத்துள்ள   உண்மை  அன்பிற்  சிறிதுங்  குறைபாடிலராய்  ஒழுகும்  இயல்பினர்  என்பதை  இந் நூலிற்  பரக்கக்  காணலாம் . இச்செய்திக்கு  எடுத்துக்காட்டாக  ,  “குறுந்தாட்  கூதளி”  என்னுந்  தலைப்புடைய  பாடலும் , “தச்சன்  செய்த  சிறுமா  வையம்”  என்னுந்  தலைப்புடைய  பாடலும்  குறிப்பிடத்தக்கன . முறையே  அப்பாடற்  கருத்துக்கள்  வருமாறு  ; –  “ஓருயர்ந்த  மலையில்  பெரிய  தேனடையைக்  கண்ட  ஒரு  முடவன்  அதனைப்  பெருவதர்  கியலாமையால்  தன்  உள்ளங்கையைச்  சிறிய  கொள்கலமாகக்  குவித்து  அம்மலையின்  கீழிருந்தபடியே  அத்தேனிறாலைப்  பல  முறை  சுட்டித்  தன்  கையையே  நாவினாற்றுழவி  இன்புறுதல்  போலக் , காதலர்  நல்கார்  நயவாராயினும்  யான்  அவரைப்  பலமுறை  காண்டலும்  என்  உள்ளத்திற்  கினிதாகும்”  என்பதும் ,  ‘சிறு  குழந்தைகள்    நாம்  உருட்டி  விளையாடுஞ்  சிறு  வண்டியை  ஏறிச்  செலுத்தி  இன்புறாராயினும்  அவ்வண்டியை  இழுத்து  நடத்தி  அவ்வின்பத்தை  அடைதல்  போல , என்  கணவரை  மெய்யுற்று  இன்பம்  அடையப்  பெற்றேனாயினும்  அவரது  நட்பை  மேன்மேலும்  பெருக  வளர்த்து  இன்பம்  அடைந்தேன்’  என்பதும்  ஆம் . இங்கே  குறிக்கப்பட்ட  காதர்  பண்புகள்  எத்துணைச்  சிறப்புடையனவாகக்  காணப்படுகின்றன  என்பது  உணர்ந்தின்  புறத்தக்கது .   

அறிஞர்களே !

        இதுகாறுஞ்  சங்கத்துச்  சான்றோர்களின்  இலக்கியப்  பெருமையும் , அவற்றுள்  குறுந்தொகை  என்னும்  அழகிய  நூலின்  மாண்பும்  ஒருவாறு  புலப்படுத்தப்பட்டன .   இலக்கியச் சுவையே  தம்  வாழ்க்கை  நலமெனக்  கொண்டு  துய்த்தின்புறும்  உணர்வுடைப்  பெருமக்கட்கு  , இன்ப  வூற்றாகவுள்ள  இன்னோரன்ன  நூலாராய்ச் சிகள்   தேவ ரமிழ்தினுஞ்  சிறந்த  சுவை  பயப்பனவாம் .  இதுவரை  பொறுமையோடிருந்து  செவி  சாய்த்த  நும்  எல்லோருக்கும்  என்  வணக்கத்தை  உரிமைப்படுத்துகின்றேன் .  இம்மட்டில்  யாந்தரும்  சிறுசுவை  விருந்தை  நிறுத்தி  ,என்னை   அறிஞர்கள்  இந் நூன்முகமாகத்  திரட்டி  வைத்திருக்கும்  பெருவிருந்தை  நீவிர்  துய்க்குமாறு  நும்மையும் , வரையாது  வழங்குமாறு  என்  நண்பர்களாகிய  சொற்பொழிவாளர்களையும்  வேண்டுகின்றேன் .

                              தமிழ்  மொழி  நீடு   வாழ்க !

                    8.  மணிமேகலை

(25-01-1941 இல்   திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது)

          மணிமேகலை  யென்பாள், கோவலன்  என்னும்  வணிக  குமரனுக்குக்  காதற்  கணிகையாகிய  மாதவி  பெற்ற  மகளாவாள் . அவள்  வரலாறு   கூறும்  காப்பியத்திற்கும்  இதுவே  பெயராகும் . இற்றைக்கு  ஆயிரத்து  எண்ணூறு  யாண்டுகளுக்கு  முன் , சோழ   நாட்டின்  தலைநகராக  விளங்கிய  காவிரிப் பூம்பட்டினத்தின்  பெருங்குடி   மரபில்  தோன்றிய  கோவலன்  என்பான் , அரசவையில்  ஆடல்  பாடல்களில்  திறமை  பெற்று  அரங்கேறிய  நாடகக்  கணிகையாகிய  மாதவியென்பாளைக்  காதலித்து , அவளுடனுறைந் தொழுகினனாக , அவனுக்கு  அவள்  வயிற்றில்  மணிமேகலை  என்னும்  பெண்மணி  பிறந்தனள் . நிகரற்ற  அழகு  வாய்ந்த  இப்பெண்கள்  திலகம்  மங்கைப்  பருவம்  எய்திருக்கு  நாளில் , தன்  அருமைத்  தந்தையாகிய  கோவலனும் , பெற்ற  தாயினும்  உற்றதாயாக  மேற்கொண்ட  கண்ணகியும்  படாத  துன்பங்களுக்கு  ஆளாகி  இவ்வுலக  வாழ்க்கையை நீத்த  செய்தி  கேட்டுத்  திடுக்கிட்டு   இவ்வுலக  இன்பத்திற்  பற்றற்று  ஒழுகத்  தலைப்பட்டாள் .

“ஆடவர்  கண்டா  லகறலு  முண்டோ

பேடிய  ரன்றோ  பெற்றியி  னின்றிடின்”

என்று  சுதமதியாற்  பாராட்டப்பட்ட  இவள்  அழகின்  சிறப்பை  நினைந்து , இவளைத்  தகாத  ஒழுக்கத்திற்கு  ஆளாக்க  முயன்ற  இவள்  அன்னையின்  தாயாகிய  சித்திராபதி  என்பாள் , ‘பாண்மகள்  பட்டுழிப்  படூஉம்  பான்மையில் , யாழினம்  போலுமியல்பினம்’  என்றும் , ‘நறுந்தா  துண்டு  நயனில்  காலை,  வறும்பூத்  துறக்கும்  வண்டு  போல்குவம்’  என்றும்  தங்  குல  ஒழுக்கத்திற்கு  ஏற்ப  நினைந்து  ஒரு  தோழி  மூலமாக  இச்செய்தியை  மாதவிக்குத்  தெரிவித்தனள் .  அது  கேட்ட  மாதவி ,

மாபெரும்  பத்தினி  மகள்மணி  மேகலை

அருந்தவப்  படுத்த  லல்ல  தியாவதுந்

திருந்தாச்  செய்கைத்  தீந்தொழிற்  படாஅள்”

என்று  மறுத்து  உரைத்தனள் . இந்  நிலையில் , இருமுது  குரவரையும்  இழந்தமையால்  மணிமேகலைக்கு நேர்ந்த  துன்பத்தை  ஆற்றுதற்  பொருட்டுச்  சுதமதி  யென்னும்  தோழி  , ‘உபவனம்’  என்னும்  ஒரு  பூஞ் சோலைக்கு  அவளை  அழைத்துச்  சென்றாள் . இவள்  கட்டழகின்  மாண்பைக்  கேட்ட  அந் நகரத்து  அரச குமாரனாகிய  உதயகுமரன்  என்பான் , காம  பரவசனாய்  அவ்வனத்திற்  சென்று  பளிக்கறையுட்  புகுந்திருக்கும்  மணிமேகலையைப்  பற்றிப் பலவாறு  பாராட்டிச்  சுதமதியால்  தெருட்டப்பட்டு  மீண்டும்  அவளை  யடையலாம்  என்னும்  துணிவுடன்  திரும்பினான் . இந்  நிலையில்  உதயகுமரன்  காட்சியில்  மணிமேகலைக்குச்  சிறிதளவு  அவன்பால்  உள்ளஞ்  சென்றது . இதனை  அவள்  ஒளியாமல்  தோழியாகிய  சுதமதியை  நோக்கி ,

கற்புத்  தானிலள்  நற்றவ  வுணர்விலள்

வருணக்  காப்பிலள்  பொருள்விலை  யாட்டியென்

றிகழ்ந்தன  னாகி  நயந்தோ என்னாது 

புதுவோன்  பின்றைப்  போனதென்  னெஞ்சம் 

இதுவோ  அன்னாய்  காமத்  தியற்கை”

என்று  கூறிய  செய்தியாலும் , பின்னர்  உதயகுமரன்  காஞ்சனனால்  வெட்டுண்டு  இறந்த   பொழுது  மனங்கலங்கி,

            “உவவன   மருங்கில்   நின்பா  லுள்ளந்

              தவிர்விலே  னாதலின் …………………………

              …………………..நின்  இடர்வினை   யொழிக்கக்

              காயசண்  டிகைவடி  வானேன்  காதல

என்று  இரங்கிப்  புலம்பினமையாலும்  அறியலாம். இங்ஙனம்   உதய குமரனால்  இழித்து  உரைக்கப்படும்  அவள்  உள்ளம்  சிறிது  காதலித்ததற்குக்  காரணம் , பண்டைப்பிறப்புக்களில்  இவ்விருவரும்  கணவனும்  மனைவியுமாக  வாழ்ந்து  வந்த  தொடர் பென்று  ஆசிரியர்  கூறுகின்றார் . காமத்தீச்  சிறிதாகப்  பற்றினும்  பெரிதாகி  வெதுப்பும்  ஆதலின் , அத் தொடர்பினின்றும்  ஒழித்தற்கு  மணிமேகலையை  அவள் குலதெய்வமாகிய  மணிமேகலா தெய்வம்  யாரும்  அறியாதபடி  எடுத்து , இலங்கையிடூ உள்ள  மணிபல்லவம்  என்னுந்  தீவிற்குக்  கொண்டு  வந்து  புத்தபீடிகையைத்  தரிசிக்கச்  செய்தது . இச் செய்தியை  ஆசிரியர்  மணிமேகலா  தெய்வத்தின்  கூற்றாக ,

ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்

 நீங்காத்  தன்மை  நினக்குமுண்  டாகலிற்

கந்த  சாலியின்  கழிபெரு  வித்தோர்

வெந்துரு  வெண்களர்  வீழ்வது  போன்மென

அறத்தின்  வித்தாங்  காகிய  உன்னையோர்

திறப்படற்  கேதுவாச்  சேயிழை  செய்தேன்

என்று  கூறியதனால்  அறியலாம் . இங்கே  மணிமேகலையை  நோக்கிச்  சிறந்த  மணமுள்ள   கந்தசாலி  என்னும்  நெல்  வித்தை  உவர் நிலத்தில் வீழ்ந்து வீணாக்குதல்  போல  அறத்தின்  வித்தாகிய  நின்னை  இழி காமத்துக்கு  இலக்காக்குதல் தக்கதன்று  என்றெண்ணி, அறச்செல்வி  யாக்குதற்கு  ஏற்றது செய்தேன் என்னுங்கருத்துத்  தோன்றக்  கூறியது பாராட்டத்தக்கது .

     இனி , இந்நங்கையர்  திலகம்  மணிபல்லவம்  என்னுந்  தீவில்  எதிர்ப்பட்ட  தீவதிலகை யென்பாள்   உதவியால்  கோமுகி  யென்னும்  பொய்கையினின்றும்  அமுத  சுரபி  யென்னும்  அட்சய  பாத்திரத்தைப்  பெற்றாள். இப்பேறே  மணிமேகலையின்  அறச் செயற்குச்  சிறந்த முதற்  கருவியாயிற்று .தீவதிலகை,

“குடிப்பிறப்  பழிக்கும்  விழுப்பங்  கொல்லும்

 பிடித்த  கல்விப்  பெரும்புணை  விடூஉம்

 நாணணி  களையும்  மாணெழில்  சிதைக்கும்

பூம்முலை  மாதரொடு  புறங்கடை  நிறுத்தும்

பசிப்பிணி  யென்னும்  பாவிஅது  தீர்ந்தோர்

இசைச்சொல்  அளவைக்  கென்னா  நிமிராது”

எனவும் ,

மண்டிணி  ஞாலத்து  வாழ்வோர்க்  கெல்லாம்

உண்டி  கொடுத்தோர்  உயிர்கொடுத்  தோரே “

எனவுங்கூறிய  அறவுரைகளைக்  கடைப்பிடித்து , அவ்வமுத  சுரபி யினின்றும்  அள்ள  அள்ளக்  குறையாத  உண்டியை  எளிய  மக்களுக்கு  வழங்குதலாகிய  பேரறத்தை  மேற்கொண்டொழுகு வாளாயினள் . இங்ஙனம்  புரிந்த  அறச்  செயலில் ,

ஆற்றுநர்க்  களிப்போர்  அறவிலை  பகர்வோர்

 ஆற்றா  மக்கள்  அரும்பசி  களைவோர்

மேற்றே  யுலகின்  மெய்ந்நெறி  வாழ்க்கை”

என்னும்  உண்மை இவ்வம்மையால்  மேற்கொள்ளப்பட்டது . செல்வமுடையார்க்குப்  பல்வகைச்  சுவை  நிரம்பிய  உணவுகளைப்  படைத்தல்  அறமாகாதெனவும் , அஃது  ஆரவார  நீர்மையேயாமெனவும்  உணர்ந்தமையால் , அம்முறை  கைவிடப்பட்டுக்  குருடர் , முடவர் , செவிடர் , ஆதரவில்லோர் , நோய்த்  துன்பமுடையோர்  ஆகிய  எளிய  மக்களுக்கே  இவளறம்  பயன்படுவதாயிற்று. இவ் வன்னதானமாகிய  அறம்  புரிதற்கு ஏற்ற  இடமாகக்  காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள   ‘உலக  அறவி’  என்னும்  ஊரம்பலத்தைத்  தெரிந்தடைந்தனள் .

             அங்கே  உதயகுமரன்  தன்மேற்  காதலுடையனாய்  வருதலையறிந்து  அவனால்  இடையூறு  நேரவுங்கூடுமென்று  எண்ணிக்  காயசண்டிகை  என்னும்  வித்தியாதரப்  பெண்ணின்  உருவத்தை  மேற்கொண்டு , தன்  அறச்செயலைப்  புரிவாளாயினள் .  அவ்வமயம் , காயசண்டிகையின்  கணவனாகிய  காஞ்சனன்  என்பான் , தன்  மனைவியைக்  காதலித்ததாகத்  தவறுபட  நினைந்து  உதயகுமரனை  வாளாலெறிந்து  கொன்றான் . இச்செயலை  அறிந்த  உதயகுமரன்  தந்தையாகிய  அரசன் , தன்  மகன்  கொலைப்பட்டது  குறித்துச்  சினமுடையவனாய்  மணிமேகலையைச்  சிறைப்படுத் தினான் .

              அவ்வரசன்  மனைவியாகிய  இராசமாதேவி  என்பாள் , மணிமேகலைக்கு  நலஞ்செய்வதாக  வெளிக்காட்டித்  துன்புறுத்தும்  நினைவுடையவளாய்  அவளைச்  சிறையினின்றும்  விடுத்து , மயக்கும்  மருந்தை  உணவிற்  கலந்து  ஊட்டியும் , புழுக்கறையில்  அடைத்தும் , காமுகன்  ஒருவனை  விடுத்துப்  பழியுண்டாக்க  முயன்றும்  பலவாறு  கொடுமை  செய்தனள் .  மணிமேகலை  இக்கொடுந்துன்பங்களை  யெல்லாம்  பொறுத்துக்கொண்டு , தான்  எய்திய  சில  சித்திகளால்  அவ்விடையூறுகளைக்  கடந்து   சிறிதும்  வாட்டமின்றி  இருந்தனள் .  இந் நிலை  அறிந்த  இராசமாதேவி  அச்சமுற்று , ‘மகனை  இழந்த  துன்பம் பொறுக்க லாற்றாது  இத் தீங்குகளைச்  செய்தேன் பொறுத்தருள வேண்டும் ‘  என்று  மணிமேகலையை  வேண்ட , மணிமேகலை  அவள்  துன்பத்தை  யொழிக்குமுகமாக  உண்மைப்  பொருளை  மனங்கொளத்  தெருட்டி  அருளறத்தைக்   கடைப்பிடிக்கச்  செய்தனள் .

           மகனது  இறப்பால்  துயருறும்  இராசமாதேவிக்கு  மணிமேகலை  கூறிய  பொருளுரையால்  அவளறிவு  எவ்வளவு  தெளிந்த  நிலையிலுள்ள  தென்பது  புலனாம் .

“உடற்கழு  தனையோ  உயிர்க்கழு  தனையோ

உடற்கழு  தனையேல்  உன்மகன்  றன்னை

எடுத்துப்  புறங்காட்  டிட்டனர்  யாரே?

உயிர்க்கழு  தனையேல்  உயிர்புகும்  புக்கில்

செயப்பாட்டு  வினையால்  தெரிந்துணர்  வரியது

அவ்வுயிர்க்  கன்பினை  யாயின்  ஆய்தொடி

எவ்வுயிர்க்  காயினும்  இரங்கல்  வேண்டும் “

என்பது  அப்பொருளுரையாம் . இதன்கட்  குறிக்கப்பட்ட  பொருள் , ‘உடல்  ஒழிந்ததற்கு  அழுதேனென்றால் , அவ்வுடலைச்  சுடலையில்  இடங்கொடுத்தது  யார் ? நீயன்றோ?  அன்றி, உயிர்  நீங்கியதற்கு  அழுதேனென்றால்  ,  அவ்வுயிர்  நித்தியமாகலின்   அது  செய்த  வினைவழி  ஓர்  உடல்  எடுத்திருக்கும் ;  அவ்வுடல்  இன்னதென  நம்மால்  தெரிந்துகொள்ளுதல்  அரிது .  அவ்வுயிர்க்கு  அன்பு  செய்ய  விரும்பின்  உலகத்துள்ள  எவ்வுயிர்களுக்கும்  இரங்க்கல்  வேண்டும் ;  அங்ஙனம்  இரங்குவையாயின், பலவாகிய  அவ்வுயிர்த்  தொகுதிகளுள் நின்மகன்  உயிரும்  ஒன்றாமாதலின்  அதற்கு  அன்பு  செய்தனை  யாவை ‘  என்பதாம் .இங்ஙனம்  அவள்  துயரம்  ஒழிதற்குரிய  நெறியைக்  காட்டி , அதன்முகமாக   அருளறத்தை  மேற்கொள்ளச்  செய்த  மணிமேகலையின்  தெளிந்த  நுண்ணறிவுத்  திறனும் , அருளறத்திலுள்ள  விருப்பமும்  பாராட்டத்தக்கன .  இவள் உபதேசச்  சிறப்பைக்  குறித்து , ‘மகனை  இழந்தமையால் நேர்ந்த  துயரமாகிய  நெருப்பு , மனம்  விறகாகப்  பற்றி உள்ளத்தைச்  சுடுதலின் , ஞானமாகிய  நல்ல  நீரைத்  தெளித்து  அவித்தனள் ‘  என்னும்  பொருள்  தோன்ற ,

ஞான  நன்னீர்  நன்கனந்  தெளித்துத்

தேனா  ரோதி  செவிமுதல்  வார்த்து

மகன்றுயர்  நெருப்பா   மனவிற  காக

அகஞ்சுடு  வெந்தீ  ஆயிலை  அவிப்ப “

என்று  ஆசிரியர்  பாராட்டியுள்ளார் .

            இஃதன்றி , மணிமேகலை  தன்  ஆற்றலால்  அந்  நகரத்துள்ள  சிறைச்சாலையை  அடைந்து  தண்டிக்கப்பட்டுப்  பசியால்  வாடிய  மக்களுக்கு  வேண்டுமளவு  உணவளித்தும், அவர்களுக்கு  அறிவுரை  பகர்ந்தும்  அச்சிறைச்சாலையை  அறச்சாலையாக்கிப்  பலவகை  புண்ணியச்  செயல்களும்  நடைபெறும்படி அரசனைக்கொண்டு  செய்வித்தனள் . இக்காலத்தில்  சிறைச்சாலையைச்  சீர்திருத்துவ தற்காக  முற்படும்  விருப்பமுடைய  பெரியோர்களுக்கு  இம்மணிமேகலையின்  அருஞ்செயல்  வழிகாட்டியாக  உள்ளதாகும் . தனக்குப்  பலவகைக்  கொடுஞ்  செயல்களால்  தீங்கிழைத்த  இராசமாதேவியை  வெறாது , அவள்  அறியாமையை  ஒழித்து , அவளை  நல்வழிப்படுத்திய  பேருதவியை  நினைக்குங்கால்  திருவள்ளுவ  தேவர்  அரிதினாராய்ந்து  கூறிய ,

இன்னாசெய்  தாரை  யொறுத்தல்  அவர்நாண

  நன்னயஞ்  செய்து  விடல்”

“இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால்

என்ன  பயத்ததோ  சால்பு

என்னுந்  திருக்குறள்கள்  நம்  நினைவின்முன்  நிற்பனவாம் . ஒருவன்  தனக்குத்   துன்பஞ்  செய்தார்க்கு  அவர்  நாணும்படி  நன்மை  செய்தலே  அவரைத்  தண்டித்ததாகும் .  என்னும்  பொருளுரை   மணிமேகலை  வாழ்க்கையில்  தலை  நின்று  விளங்குவதொன்று .  இங்ஙனம்  மணிமேகலை  தன்  வாழ்நாளிற்  பெரும்பகுதியைப்  பிறர்க்கு நலம்  செய்தலிலேயே  கழித்தனள் .  கணிகையர்  குலத்தில்  தோன்றிக்  கட்டழகும்  யெளவனமும்  வாய்க்கப்  பெற்றும் , அரச குமரனால்  பலமுறை  விரும்பப்பட்டும் , இழிதக  வாகிய  காம  நிலையில்  உள்ளத்தைச்  செல்லவிடாது , தனக்குத்  தீங்கு  செய்தார்க் கும்  நன்மையே  செய்தும் , உரிய  சமயங்களில்  அறவுரைகளைக் கொண்டு   அறிவுக்கலக்கமுற்றாரைத்  தேற்றியிம்  அருளறத்தை  வளர்த்த  பெருமை  மணிமேகலைக்கே  சிறந்ததாகும் . திருவள்ளுவர்  தவத்தின்  இலக்கணங்கூறுங்கால்,

உற்றநோய்  நோன்ற  லுயிர்க்குறுகண்  செய்யாமை

 யற்றே  தவத்திற்  குரு “

என்றனர் . தனக்கு  நேர்ந்த  பலவகைத்  துன்பங்களையும்  பொறுத்துப்  பிறவுயிர்களுக்கு  ஒரு  சிறிதும்  துன்பஞ்  செய்யாமையோடும்   நன்மையும்  புரிந்த  தவப்பெரும்  செல்வியாக   விளங்கினமையின், மணிமேகலையே  இலக்கியமாவாள் .

       இன்னும்  இவ்வம்மை , சாவக  நாடு , இலங்கை  முதலிய  அயல்  நாட்டு  யாத்திரையையும்  , வஞ்சி , காஞ்சி  முதலிய  உண்ணாட்டுச்  செலவையும்  மேற்கொண்டு  ஆங்காங்கு  பற்பல  அறங்களைப்  புரிந்தும், ஞானம்   மிக்க  தவச்  செல்வர்களிடத்தில்   தருமோபதே சங்களைப்  பெற்றும், பற்பல  சமய  உண்மைகளைக்  கேட்டும் , சிறப்பான  பெளத்த  மத  உண்மைகளை  உணர்ந்தும்  ஒழுகுவாளாயி னாள் .  அறிவு  வளர்ச்சி  யடைதற்கு  அயல்  நாட்டு  யாத்திரை  பெரிதும்  உதவியாகு மென்னும்  உண்மையையும்   இவ்வம்மை  சரிதம்  புலப்படுத்துவதாகும் .

         சமயவாதிகள்  பற்பலரை  அடுத்து  உண்மை  தெளிதற்கு  வாதித்ததும்  ,  மாறுபட்ட  கொள்கையுடையாரைத்  திருத்தியதும்  வியப்பை  அளிப்பனவாம் . ஒரு சமயம் , காட்சியளவை  ஒன்றினையே  கடைப்பிடித்து   அநுமானப்  பிரமாணத்தை  ஏற்றுக் கொள்ளாத  பூதவாதியை யடுத்து  இவ்வம்மை  தேற்றியமுறை  அரிதினும்   அரிது . அப்பூதவாதியை  நோக்கி  அம்மையார் , நின்  தந்தை  தாயார் யாவரன , அன்னாரை  அவன்  காட்டினனாக , “காட்சியளவை  ஒன்றனையே  கடைப்பிடிக்கும்  நினக்கு  இவர்  எப்படித்  தந்தை  தாயார்  ஆவர்?  காட்சியில்  வைத்து  எவ்வாறு  காண  முடியும் ?”  என  வினவ , அவன்  கலக்கமுற்றுத் , தன்  கொள்கையைக்  கடைப்பிடிக்கும்  நிமித்தம்  தந்தை  தாயாரை  ஏற்றுக்கொள்ளாது  ஒழிப்பதா?   அல்லது  அவரை  ஏற்றுக்கொள்ளு  நிமித்தம்  தன்  கொள்கையை  விட்டு  ஒழிப்பதா ?  என்னும்  ஊசலாட்டிற்கு   ஆளாயினான் . இங்ஙனம்  தந்தை  தாயாரை  விட்டொழிக்க  மனம்  வாராத  அந்நிலையில்  மணிமேகலை ,

“தந்தை  தாயரை  அனுமானத்  தாலலது

 இந்த  ஞாலத்  தெவ்வகை   யறிவாய் “

என்று  தேற்றுவாளாயினாள் .               

         இவள் , இளமை  நிலையாமை ,  யாக்கை  நிலையாமை  முதலியவற்றை  பிறர்க்கு  எடுத்துக் காட்டி  நல்வழிப்  படுத்துந்  திறமையில்   மிகச் சிறந்தவ ளென்பதற்கு   இவ்வரலாற்றுப்  பகுதியிற்   கண்ட  வேறு சில  சான்றுகளும்  உள . அவற்றுள்  முன்னர்  காம  வேட்கையிற்  சிக்குண்ட  உதயகுமரனுக்கு  இளமை  நிலையாமையை  அறிவுறுத்த  எண்ணி , அப்பொழுது அங்கே இயல்பாக  வந்த  முதிர்  பருவத்தினளாய  ஒருத்தியைக்  காட்டிப்  பண்டு  வனப்புடையனவாக  இருந்த  அவள்  உடல்  உறுப்புக்கள்   இப்போது  வன்மை  குறைந்து  அழகிழத்தலைக்  குறித்து ,

தண்ணறல்  வண்ணந்  திரிந்துவே  றாகி

 வெண்மண  லாகிய  கூந்தல்  காணாய் “ 

என்பது  முதலாக  ஏனை  யுறுப்புக்களில்   வேறுபாட்டையும்  விளக்கிக்  காட்டி  முடிவில் ,

“பூவினுஞ்  சாந்தினும்  புலால்மறைத்  தியாத்துத்  

தூசினும் மணியினும்  தொல்லோர் வகுத்த

வஞ்சந்  தெரியாய்  மன்னவன்  மகனே

 என்று  தெளிவுறுத்தியதொன்று .

             சாவக  நாட்டரசனாகிய  புண்ணியராசனைக்  கண்டு , அவன்  முற்பிறப்பில்  ஆபுத்திரனாக  இருந்து  அருளறம்  பேணிய  செயலை  எடுத்துக் காட்டி , அவனுக்கு  நேர்ந்த  மயக்கத்தைத்  தெளிவித்துத்   தருமோபதேசஞ்  செய்து  நன்னெறிப்படுத்தியது   மற்றொன்று .

             இங்ஙனம் , பல்லாற்றானும்  பலர்க்கும்  உதவி  புரிந்து  முடிவில்  வஞ்சி  நகரத்திற்  சென்று , சமய  வாதிகள்  பற்பலரொடு  வாதப் போர்  நடத்தித் , தள்ளுவன  தள்ளிக்  கொள்ளுவன  கொண்டு , காஞ்சியம் பதிக்குச்  சென்று , அறவண  அடிகளை  யடுத்துத்  தத்துவ ஞானங்  கைவரப்பெற்றுப் , பவத்திறம்  அறுகெனத்  தவச்  செயலில்  தலைப்பட்ட   மணிமேகலையின்  சிறந்த  வாழ்க்கை  வரலாறு , அறிவுடையுலகம்  நன்னெறிப்படுதற்குச்  சிறந்த  வழிகாட்டியாக  உள்ளதென்பது  தெளிவாம் .

                                            நி றை ந் த து

நாட்டுக் கோட்டை   நகரத்தார்களின் சீ ர் தி ரு த் த ம்

                       நாட்டுக் கோட்டை   நகரத்தார்களின் சீ ர் தி ரு த் த ம்

                                               மு . கதிரேசச்  செட்டியார்.

                                                      மகிபாலன்பட்டி

                                                                 1911

                                                        அவையடக்கம்

                                                               காப்பு

                                                            வெண்பா

மன்னுந்  திருவினராய்  வாழ்வணிகர்  சீர்திருத்தம்

பன்னுமுறை  நெஞ்சிற்  பதியவே  —–  யுன்னும்

பிரணவத்தி  னுண்மை  பிறங்குங்  கணேசர்

சரணபற்பங்  கொள்க  தலை .

      மாட்சிமை  தங்கிய  அக்கிராசனாதிபதியவர்களுக்கும் , இவ்வவைக் கட்குழீஇய  அறிவுடையோர்களுக்கும் , பணிவுடன்  செய்துகொள்ளும்  அறிவிப்பு .

ஐயன்மீர் !

       சன்மார்க்கசபையென்னு மிக்கழகம்  தோன்றி   யிரண்டுவருடங் களாயின .இவ்வீராண்டிற்  பன்முறை  கூடிய  இக்கழகத்திற்  பற்பல  விடயங்களைப்பற்றி  அறிவிற்சிறந்த  பல  பண்டிதர்கள்  செய்த  உபந்நியாசங்களும் ,  சிற்றறிவுடைய  யான்  புரிந்த  உபந்நியாசங் களும்   இன்னின்னவையெனச்  சென்ற  ஆண்டின்  அறிக்கையானும் , இவ்வாண்டின்  அறிக்கையானும்  நன்கு  தெரிந்திருப்பீர்கள். அவ்வுபந்நி யாசங்களுள் , எம்  வணிகமக்களின்  சீர்திருத்தவிடயமாகப்  பொதுமை யினன்றிச்  சிறப்பாக  ஒன்றேனுமின்று .அங்ஙன மில்லாமைக்குக்  காரணம் , இவ்வவையினிடத்து  அவர்களது  அன்புரிமை   முதிர்தலை யிதுகாறும்  எதிர்நோக்கி   யிருந்தமையேயாகும் . ஒரு  தொகுதியி னரைப்பற்றிய  சீர்திருத்தத்தைப்  பேசப்புகும்பொழுது, அதனைப்  பயனுறச்செய்யும்  அக்குழுவினர்க்கு அவ் விடயத்தைக் கேட்டலில்  விருப்பம்  இருத்தல்  வேண்டும் .  அவ் வவாவும்,  அன்னார்  இக்கழகத்தில்  நன்கு மதிப்பு வைத்த பின்னரன்றி  முன்னர்  நிகழ்தற்கு  ஏதுவின்று . அந் நன்குமதிப்பும்  இவ்வகை  சின்னாளேனுஞ்   செவ்வி தினடை பெற்றுத்   திகழ்ந்தபின்னரன்றி  வாராது .  இனி , இதுவரை  இக்கழகத்தைக்  கண்டாரும்  ,  இதன்கட்  பேசப்படும்  விடயங்களைக்  கேட்டாரும்  ,  இங்ஙனங்  கண்டுங்கேட்டு  மகிழ்ந்தார்பாற்  கேட்டாரும்  ஆகிய  பல  நண்பர்கள் , சேணிடத்துள்ள   தத்தம்  ஊர்களினின்று  பன்முறை  யிங்குப்  போந்து  ஒருங்குக்கூடி   யளித்த  காட்சியால்  அன்னாரெல்லார்க்கும்  இவ் வவையினிடத்து  நன்கு   மதிப்பு  ஒருதலையாகவுள்ளது  என்று  அறிந்த  இச்சபையார் , முன்னர்ப்  பேசப்படாத  இவ்விடயம்  இப்பொழுது  பேசிற் பயனுறும்  என்னுந் துணிவுடையாரா யென்னை   யுபந்நியாசிக்கப்  பணித்தார்கள் .

             தக்க  நூலுணர்ச்சியுஞ்  சீர்திருத்தங்  கூறுதற்குரிய  அநுபவ  ஆற்றலும்  இல்லாத  யான்  இதனை  மேற்கோடல்  தகாதெனினும்  , பெரியார்  பணியை  மறுத்தல்  பிழையுடைத்தாதலின்  ,  அக்குற்றத்தினின்று  நீங்கற்கே  இதனை  யேற்றுக்கொண்டேன் . இவ்வுபந்நியாசம்தான்  பொதுவகையாக  எல்லார்க்கும்  உரியதா யினும்  சிறப்பு  வகையாக  எம்  நாட்டுக்கோட்டை  நகரத்து  வணிகமக்கட்குரியதாதலின் , அன்னார்பாற்  சேறலையே  உரிமையாக  மேற்கொண்டுள்ளது  .இங்ஙனம் ,  ஒரு  சாராரைப்பற்றிய  இஃது  இக்கழகத்திற்  படித்தற்குரியதாகுமோ   எனின் :  எம்மனோர்  நலத்தை  மேம்படுத்தலையே  முக்கிய  நோக்கமாகக் கொண்டு  இச்சபை  (மேலைச்சிவபுரிச்  சன்மார்க்கசபையின்  இரண்டாம்  ஆண்டு  நிறை வேற்றவிழாவி நிமித்தம்  விரோதகிருது  வருடம்  சித்திரத்  திங்களில்  கூடிய  மகா சங்கத்திற்  படிக்கப்பெற்றது .)  யெழுந்தமையானும் , தனிக் கூட்டத்தில்  இவ்வளவு  பெருக்கமாக்  கூடுதல்  அருமையாதலானும்  , இத்தகைய  விடயங்கள்  எம்மவர்  பலர்  நெஞ்சி னிலைபெறினன்றிப்  பயனுடையதாதல்   செல்லா தாதலானும், உரியதாகுமென்னும்   துணிவுடையேன் .

****************

   கணபதி துணை .

நகரத்தார்களின்  சீர்திருத்தம்

*********

ஆன்புநிறைந்த  எம்  வணிகமக்களே !

           நம்மவர்  சீர்திருத்தவிடயமாகக்  கருத வேண்டியவை  பலவிருப்பினும்  ,  இப்பொழுது  இன்றியமையாது  முதலிற்கொள்ள வேண்டிய  சிலவற்றையே  கூறுவான்  றோடங்குகின்றேன் . எஞ்ஞான்றும் , ஒரே  படித்தாக  அழிவின்றி  விளங்கு  மறைப்பொருளை   யுள்ளத்தமைத்துப்   பல இருடிகளாற்  செய்யப்பட்ட  அறநூல்கள்  அவ்வக்காலத்துக்கு  ஏற்றவாறு  சில  மாறுதல்களோடு  வெளிவந்திருக் கின்றனவாகலின் ,  என்னாற்  கூறப்படுவனவற்றிற்   சில  விடயங்கள் , சில  நூன்  முறைகளுக்கு   மாறுபாடாகத்  தோன்றின்  அவை யிற்றைக் காலங்கருதிப்  போந்தனவாகக்கொள்ளும்வண்ணம்  வேண்டுகின் றேன் .

                                                      க  .  க ல் வி

          கல்வியே  மக்கட்குரிய  இன்றியமையாத  பொருளாதலின் ,  அதனைப்பற்றி  முதலிற்  சில  கூறுவேன் .  முன்னரீட்டிய  இருவினைக்கீடாக  இறைவன்  கருணை  மேலீட்டாற்   றரப்பெற்ற  மக்கள்  யாக்கையுடையாரெல்லாரும்  ,  தமக்கு  இயற்கையாக  அமைந்துள்ளதும்  , ஆணவமல மறைப்பால்  வெளிப்படாததும் , எல்லாம்  வல்ல  சிவபெருமான்  றிருவருளால்  ஒவ்வோரமயம்  வெளிப்பட்டு  விளங்கும்  இயல்பினதும் , எல்லா   வுயிர்கண்மாட்டும்  ஒரே  படித்தாக   அழிவின்றி யிருப்பதும் ஆகிய  இயற்கையறிவைக்  கருவியாக் கொண்டு செயற்கையறிவாகிய  நூலறிவைப்  பெறுதல் வேண்டுவதவசியமே  .  என்னை ?  அச்செயற்கையறிவே  நம் பிறப்பு  முதலியவற்றைப்பற்றிய  ஆராய்ச்சியில்  நம்மை  முற்படுத்தி  நாம்  எய்தவேண்டிய  உறுதிப்பயன்களை  யெய்தற்குத்  துணை நின்று  அழிவிலாப் பேரின்ப  நுகர்ச்சியிற்  றலைப்படுத்துமாகலினெங்க. நூலுணர்ச்சியின்றி  யியற்கை  நுண்ணறிவுடையாரும்  பலருளரே  அன்னார்க்குக்  கல்வி  யெற்றிற்கெனின் :  “கல்லாதானொட்பங்  கழிய நன்றாயினுங் ,  கொள்ளா ரறிவு டையார்”என்பது  பொய்யில்   புலவர்   திருமொழியாகலின் , அவரெத்துணை  மதிநுட்பமுடையராயினும்   கற்றிலராயின்  அவரறிவை  நல்லறிஞர் பொருட்படுத்தாரென்க.  கல்வியின்  காரியமாகிய  பகுப்புணர் வுள்  வழியே  ஐம்பொறியுணர்ச்சி யானும்  ,  உண்டி , உறக்கம் ,பெண்விழைச்சு  முதலியவற்றானும்  ஒப்புடைய விலங்கினத்தினின்று   மனிதர்  மேம்பாடுடையராவர் . அஃதில்வழி  அவ்விலங்கினத்தோடு   ஒருங்கெண்ணப்படுவர் .  இது  கருதியன்றே  “மாவு மாக்களுமை யறிவினவே , மக்கடாமே  யாறறிவுயிரே “   என்று  வரையறைப்படுத்துக்  கூறினார்  தொல் காப்பியனாரும் . இச் சூத்திரங்களு ளிரண்டாவது  சூத்திரத்தான்  மக்கள்  எனப்படுவார்  மனவுணர்வுடையரென்பதேயன்றி  அவ்வுணர்வு  விலங்கினிடத்துக்  காணப்படின்  அதுவும்  மக்கட் டன்மை யுடையதாய் மக்கட்  பிறப்பின்பாற்  படுமென்பது  போதர “பிறவுமுளவே  யக்கிளைப்பிறப்பே”  என்றுங் கூறினார் .  ஈண்டுப்  “பிறப்பென்றதனாற்  குரங்கு  முதலாகிய  விலங்கினுள்   அறிவுடையனவெனப்படு  மனவுணர்வுடையன வுளவாயின்  அவையும்  ஈண்டு  ஆறறிவுயிரா  யடங்குமென்பது”   என்று  கூறிய  நச்சினார்க்கினியார்  நல்லுரையும்  ,  “விலங்கொடு  மக்களனையர்”  என்னுந்  திருக்குறளின்   விசேடவுரை யில்   “விலங்கின்  மக்கட்கேற்றமாகிய  வுணர்வு  மிகுதி  காணப்படுவது  கற்றார்கண்ணே  யாகலின்  கல்லாதாரும்  அவரும்  (கற்றாரும்)  ஒத்த  பிறப்பினரல்லரென்பதாம் “  என்று  வரைந்த  பரிமேலழகர்  அருமைக் கருத்தும் கருதற்பாலன . “தக்கவின்ன  தகாதன  வின்னவென்றொக்க  வுன்னலராயி  னுயர்ந்துள  மக்களும்  விலங்கே  மனுவின்  னெறிபுக்க  வேலவ்  விலங்கும்புத் தேளிரே”   என்னுங்  கம்ப நாடர்  கருத்தும்  ஈண்டுக்  கருதற்பாற்றாம் . இதனால்  அவயவச்  சிறப்பானன்றி  மனவுணர்வுடைமையானே  மக்கட்  பிறப்புப்  பயனுடையதாகு மென்பது  வெளியாம். இனி , அவ்வுணர்வுதானுங்  கல்வியானன்றி  வாராது .  என்னை ;  கல்வியே  செய்யத்தக்கது இன்னது  தகாதது  இன்னது  என்று  பகுத்துணர்தற்குக்  கருவியாகலின்  ,  இதனை , “இருவிழிகள்  வாண்முகத்தி லிருந்தாலும்  வானிரவி  யெழுந்தாலன்றிக்  கருதுநிலப்  பல்பொருளுங்  காண்டலரி  தாமுலகிற்   கண்போல்  யார்க்கும் ,  பெருகிய செல்வமு மறிவும்  பெற்றாலு நுலுணர்ச்சி  பெறாரே  யாகிற் , றிருவளர் புண்ணிய பாவ மிம்மை மறுமையும் வீடுந்  தெரியா வன்றே “   என்னுஞ்  செய்யுளானுமுணர்க .  இக்கல்வியின்   பெருமையைப்பற்றிக்  கூறுங்கால்  எல்லாப்  பொருள்களையுநுனித்து ணர்ந்து  கூறும்  இயற்கையுடைய  தெய்வப்புலவர்  திருவள்ளுவதேவர் , “தந்தை  மகற்காற்று நன்றி  யவையத்து, முந்தி யிருப்பச் செயல் “  எனவும் ,  “மகன்  றந்தைக் காற்று முதவி யிவன் றந்தை,யென் னோற்றான் கொல்லெனுஞ் சொல்” எனவுங்  கூறிய  அருமைத் திருக்குறள்களிரண்டே  போதியன .  என்னை?  தந்தை  மகனுக்குச்  செய்யவேண்டிய வுதவியும், மகன்  றந்தைக்குச்  செய்யவேண்டிய  வுதவியும்  கல்வியும்  அதன்  பயனுமாகக்  கருதப்பட்டமையானென்க .  

           இனி , தந்தையேயன்றி  நற்றாயும்  புதல்வினிடத்து  எப்பொருள் பற்றிப்  பெருமகிழ் வெய்துவாள்  எனின் : அன்னாள்  அப்புதல்வ னிறைந்த  கல்வியுடையனாதலை  நோக்கியே  யென்க . இதனை ,அந் நற்றாய்தான்  பன்னெடுநாட்  பதல்வற் பேறுகருதி  நண்ணினார்  வினையொழித்து  அன்னாரைப்   புண்ணியவுருவாப்  புரிதற்குரிய  தெண்ணீர்  யாறு  பலதிளைத்தும்  , ஆறணிசடையெம்  அண்ணலை  யனவரத மருச்சனையாற்றியும் , வறியாக் கீந்து  மாதவர்ப் பேணியும்   இன்னன பலவா முன்னருந்தவங்க்கிடந்து மிக அரிதிற்பெற்ற  அற்றை ஞான்று  “கவாஅனின்  மகற்கண்டு  தாய்மகிழ்ந்தாங்கு”  என்றபடி  யெய்திய  வரம்பிலா  மகிழ்ச்சியினும் , அப்புதல்வன்  இளம்பருவத்திற்   கல்வி  கேள்விகளான்  மேம்பாடுற்றுழி  அதுகண்ட  அறிஞர்  அச்செய்தியைக்  கூறக்கேட்டு  எய்திய வுவகை  மிக  விழுமிதா மெனவும் ,  அப் பேருவுவகை  தோன்றுதற்குக்  காரணம்  அப்புதல்வன் மாட்டு   அமைந்துகிடக்குங்   கல்வியறிவேயாமெனவும்  நன்கு தெளிந்த  நம்  செந்நாப்போதார்  தாம்  சிற்றுருப் பாக்களாற்  செய்த  தமிழ்மறையுள்  “ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்  தன் மகனைச் , சான்றோ னெனக் கேட்ட தாய் “  எனத்  திருவாய்மலர்ந்தருளிய  இச் செய்யுளாற்  றேற்றி விளக்கினர் . இங்ஙனம்  தந்தை  தாயார்  பெருமகிழ்ச்சிக்கு  மக்கள்  கல்வியே  யேதுவாமாயின் ,  அம்மக்களைப் பற்றி  யுலகத்தார்  மகிழ்தற்கும்  அக்கல்வி  காரணமாதல்  சொல்லாமலே  விளங்குமன்றோ ?  இன்னும்  இக்கற்றலின்  பெருமை யைப்பற்றிக்   கழறப்புகின்  விரியுமாதலின்  இதனுடனிறுத்தி  மேல்  எம்மொழியைக்  கற்றல்வேண்டுமென்பதைச்  சிறிது  கூறுவேன் .

                                                    (உ)    த மி ழ் .

            ஒவ்வொருவரும்  தத்தந் தோற்றத்திற்கு  நிலைக்களனாகிய   நாடு  எம் மொழியை யுடையதோ  அம்மொழியே  முன்னர்க்கற்றல்  வேண்டும் .  அம்மொழியே  யன்னார்க்குரிய   இயற்கை மொழியாகும் . வேற்று  நிலத்து  மொழியைக் கற்கப்புகுவார்  தொடக்கத்தில்  அவ்வந்நியப் மொழிப்பொருளை  யுளத்துக்கொள்ளுங்கால்  அப் பொருட்குரிய  வேறு  சொல்லை  யெம்மொழியாற் கூறித் தெளிகின்றனரோ அம்மொழியே  அன்னார்க்குரிய  மொழியாகும் .  ஊரிளங்குழவிக்கு  மழலைச்  சொற்பயிலும்  பருவம்  வந்துழி  அதன்  தாய்  தந்தையர்  எம்மொழியாற்  பயிற்றுகின்றனரோ   அம்மொழியே  அன்னார்க்குரிய  மொழியாகும் .  அவ்வரிய  மொழிப்பயிற்சி  சிறிது செய்தவழியன்றி   அந்நியமொழி  பயிறல்  கூடாதென்க .  இது  கருதியே  நமது  அரசினர்  தம்  மொழியாகிய  ஆங்கிலத்தைப்  பயிற்றுங்  கல்லூரி களிலெல்லாம்  அவ்வத் தேயத்திற்குரிய  மொழி  நூல்களையும்  பயிற்றி  வருவாராயினர். இனி , நம்  வணிக  மக்கட்குரிய  மொழி  தமிழே யாகுமாதலின் , அதனையே  நாம்  கற்றற்குரியவராகின்றோம் .  இறைவன்  றிருவருளாலிந்  நிலத்து  வழங்கும்  அருமைச்  செந்தமிழ் மொழியானது  வடமொழியொன்று  நீங்கலாக  மற்றைமொழிக ளெல்லாம்  தனக்கு  நிகரிலவாகவும் ,  வடமொழியொன்று  மாத்திரம்  ஒப்புடையதாகவு  நிலவத்  தன்னிடத்து  இலக்கியம் , இலக்கணம் ,  வேதாந்தம் ,சித்தாந்தம் ,கணித  முதலிய  பலவகைப்பட்ட  நூல்கள்  குறைவின்றி  நிரம்பப்  பெற்றுக்  கற்பார்க்கு   இனிமை  பயந்து  நிற்றலாற்  றமிழ்  என்னும்  பெயர்த்தாய் ,  பரமபதியாகிய  சிவபெருமான்  றிருவாக்கினின்றும் , அவரடியார்களாகிய  ஸ்ரீதிருஞான சம்பந்தமூர்த்தி  நாயனார்  முதலிய  சமயகுரவர்   சந்தானகுரவர்  முதலி யோர்  திருவாக்கினின்றும்  ,  வைணவ சமயகுரவராகிய  ஸ்ரீசடகோபர்  முதலியோர்  திருவாக்கினின்றும்  வெளிப்பட்டுப்  பற்பல  செயற்கரிய  அற்புதச்செயல்களைச்  செய்தமையான்  தெய்வீகமொழியாய் , சிவபெருமானால் , எம்மை  நீ யொப்பா , யென்று  போற்றப்பெற்ற   அகத்திய  முனிவருக்கு  உபதேசிக்கப்பட்டு  அம்முனிவர்  பெருமானால்  முதலில்  இலக்கணங்  காணப்பெற்றதாய் , முதலிடைகடை யென்னுமுச் சங்கங் கூட்டி  அவற்றிற்  பல்லாயிரமாண்டு  பாண்டியர் களால்  வளர்க்கப்பெற்றதாய்  விளங்கியுள்ளது  .  இஞ்ஞான்றும்  மடாதிபதிகளானும் , தமிழாயர்களானும் ,  புலவர்களானும்  தன்  இயனலத்திலொரு  சிறிதுங்குறைவின்றிப்  போற்றப்பட்டுவருகின்றது . ஓதுதற்குக் கடிந்நியமிலதாய் இலகுவாக்கற்றற்குரியதாய் , விரைவில்  இறைவனிடத்து  அன்பு  விளைக்கு  நூல்களையும்  ,  அறிவைப்பெருக்கு  நூல்களையும்  உடையதாய்த்  திகழ்வது மிச்செந்தமிழ்   மொழியே . இம் மொழிக்கணமைந்த  நூல்களுள்  திருக்குறள்  என்னுந்  தெய்வத்தமிழ் மறை போலெம்மொழியினிடத்துங்  காண்டலறிதாமென  நடுநிலை யுடைய  பல  பண்டிதர்கள்  கூறுகின்றனர் . இத்திருக்குறள்  இதுவரை  நாற்பதுக்கு  மேற்பட்ட  பல மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு   அம்மொழியாளரால்  தம் மொழி நூல்களெல்லாவற்றினுமே  இலாய தென்று போற்றப்பட்டு  வருதலே  இதற்குத் தக்க சான்றாகும் . இவ்வளவு  அருமை  பெருமை  வாய்ந்த  இச் செந்தமிழ் மொழியை அருமை பாராட்டிப்  பயிலவேண்டுவது  அது  வழங்கும்  வேங்கடங்குமரி  தீம்புனற்  பெளவங்களாகிய  இவ்வெல்லைக்குட்பட்ட  நம்  தமிழ் மக்க ளெல்லார்க்கும் கடமையாயினும்  அவருள்  வணிகமக்களாகிய  நம்மனோர்க்கு  அச்செந்தமிழ்த் தெய்வத்தைச்  சங்க  நிறுவி வளர்த்த தெய்வப்பாண்டியர்  அரசுரிமை  பெற்ற  நாடே உறைவிடமாக  இருத்தலான்  நாம்  பயிறல்  மிகவும்  இன்றியமையாததாகின்றது . நம்ம னோரின்  முறையாகப்  படித்த  சிலரிடத்தன்றி   மற்றையோரிடத்து  இத் தமிழ் இயனலங்குன்றி  வேறுபட்டிருக்கிறது . எம்நிலத்து  மொழி  தமிழேயாயினும்   முறையாகச்  சின்னாளேனுங்  கற்கப்படாதேல் , அதன்  நல்லெழில்  முறையின்றிக்  கற்றார்  மாட்டுக்குன்றிப்  பிறமொழி யறிஞர்களால்  எள்ளப்பட்டு   மறைந்து  கிடக்குமென்பது  எல்லாரு மறிந்ததே  .நம்  வணிக  மக்கள்  , தஞ்சிறார்களைத்  தமிழ்  பயிலத் தொடங்கி   எண்சுவடி  யென்னும்  ஒருவகைக்  கணிதச் சிறுநூல்  பயின்றதும்   பிறவிடத்திற்  சென்று  பொருளீட்டுதற்குப்   போதிய அளவு  அறிவு  வந்ததென்று  அம்மட்டில்  நிறுத்திப்  பொருளீட்டு  முயற்சியிற்  புகுத்துகின்றனர் .  அச்சிறுவர்கள்  அவ்வமயம்  தந்தைமார்  அறியாமற்  கூறினும்  அவர்  மொழியை  யேற்று  நடத்தல்  கடனாதலின் அங்ஙனமே  செய்கின்றனர்  .பின்  காளைப்பருவம்  வந்துழிக் கற்கலாமோ வென்றால்   வெயிற்றவாமணிப்பூ ணல்லாரெனும்  பெரு விடங் கொடீமை  யெயிற்றுமா  காமப்  பாந்தன்  முதலிய  இடர்களானும் , பின்னர்ப் புதல்வர்  முதலிய  உறவினரைப்  பாதுகாத்தன் முதலிய   தொழில்களானும்  ,  பின் உடற்றளர்வு,  அறிவுத்தளர்வுகளானும்  கற்றற்குப்  போதிய  வலியின்றிப்  பிறப்பை யவமேயாக்குகின்றனர்  . அந்தோ!   நம்  மக்கள்  பல  அறிஞர்களோடு  பழகுங் காலத்து  தம்மிடத்துச்  சொற்  சோர்வு  எழுத்துப்பிழை  முதலியன  எங்கு  வந்துவிடுமோ  வென்று  நாணுகின்றனரே  !  அந்நாண்  சிறுபொழுதேனும்  முறைப்படக் கற்றிருப்பின்  உண்டாமா?  அறிஞரவைக்களத்துச்  சென்றார்  பொருட் பற்றியன்றிக்  கல்விபற்றிய  மதிப்புக்கிடைத்த  லரிதாகின்றதே ! கற்றோராற்  பெறுமதிப்புக்   கல்வி யானன்றிப்  பொருளானாதல்  பெருமையன்றே !  அறிவுடையார்  நண்பு   பொருளைப்பற்றி யொரோ வழிக்கிடைத்திருப்பின்  ,  அன்னார்க்குக்  கடிதம்  எழுதவேண்டுமானால்  முறைப்படக்கற்ற  ஒருவரைத்   தேடவேண்டுவதவசியமாகின்றதே !  அங்ஙனம்  தேடுதல்  வேண்டா வென்று  தீட்டுவரேல் அது  பிழை  பல  பொதுளி  அந்நட்டாரிடத்துத்  தம்  பெருமையைக்  குறைக்கின்றதன்றோ?  முறைப்படக்கற்காத  நம்  மக்களுட்  பொருனிலையான்  மேனிலையடைந்தார்  கடிதத்தும்  , இலக்கண  விரோதமாகிய   எழுத்துக்களும் , சொற்களும்  பரம்பரை யாக  உபயோகப்படுத்தப்பட்டும்   வழங்கப்பட்டும்  வருதலை  யிஞ்ஞான்றுங்  கண்கூடாகக்  காணலாம் . அப்பிழைபட்ட மொழிகளுட்  சில  என் நினைவிலுள்ளனவெனினும்  அவை யிற்றை  யீண்டு  விரிதற்கு  என் மனம்  நாணுகின்றதாகலின் ,  எழுதுகிற்றிலேன் .  அப்பொருள்  மிகுதியாக  வாராதா?  நம்  தமிழ்  நிலத்துள்ள  அந்தணரிற்  பெரும்பாலாரெல்லாம்  நன்கு  கற்றவரன்றோ ? கல்வியான்  மிகுத்த  பொருள்  வரவுண்டென்பதை  அரசு  நூல் கற்று   நீதிமன்றத்து  நின்று வாதிப்பாரிடத்துக்  காட்சியளவையிற்  றெளிந்திருப்பீர்களன்றோ ? கற்றுத்துறைபோய  காதலன்  அறிவுமுதிர்ந்தபின்னர்ப்  பொருளீட்டி  யொரு காதலியை  மணந்து  இல்லறம்  நடத்துதலினும்   விழுமிய  இன்பம்  வேறொன்றுண்டா ?   நம்  வணிக  மக்கட்குப்  பிறர்  நட்பு  கோடல்  பொருள்  பற்றியன்றி யறிவுபற்றியாதலருமை   யென்பது  அவரவர்  அநுபவத்தானுணரலாம் .  நம்மக்களிடத்து  இயற்கையறிவோ  மிக  நுன்ணியதாக   நிரம்பியிருக்கின்றது . இவ்வருமை  மதிநுட்பத் தைப்  பெற்றுஞ்  செவ்வைபாக்கற்றற்கு  முற்படாதிருத்தல்  , விளைநிலம்   கருவி  முதலிய  பெற்றும்  தொழிலில்  முயன்று  தொடங்காமையை  யொத்திருக்கின்றதன்றோ ?   ஓ  என்  அருமைச் சகோதரர்களே  !  நம்மனோரிற்  சிலர்  இப்பொழுது  கல்வியுடையாரும்  சிலர்  கற்க  விரும்புவாருமாக   இருக்கின்றமையின்  இவ்வமயம்  நம் குறையைக்  கூறின்  விரைவினீங்கப்பெற்று  நலனுறலாமென்னு மவாவும் , தருக்கசங்கிரகத்  தொடக்கத்தில்  அந் நூல்  கேட்டற்குரிய  அதிகாரிகளை  “இளையோரெனவும்”  இளையோராவார்  கோடலும்  உள்ளத்தமைத்தலும்  வல்லுநர்,  குழவிப் பருவத்தரல்லரென்பதாம் “   எனவுங்  கூறியாங்கு   நீயிர்  எல்லீரும்  இற்றை ஞான்று  இக்குறையைக்  கொண்டு களைதற்கும்,  கல்விவுணர்ச்சியின்  முற்படுதற்கும்  உரிய  அறிவுமாற்றலுமுள்ளீரென்னுந்  துணிவுமே  யென்னை  யித்துணையுங்  கூற  முற்படுத்தின . போதிய  அளவு  பொருள்  படைத்திருக்கு நம்மனோர்  அதற்குத்  தக்க  கல்வியுமுடையராயிருப்பின் , அப்பொருள்  புரையறு பொன்னாற் புரிதருமெழின்மலர்  விரைநனி செறிந்து விளங்குதல்போல்  விளங்கிக் காலத்துக்குத்தக்க  அறம்பலபுரியதற்குரி யதா மன்றோ?  கல்வியறிவில்லாரெத்துணையறங்களைப்  புரியினும்  அவை  தாஞ்  செதற்குறிய  பயனைச் செய்தற்கு  வலி யிலவா யொழியுமென்பதை   “பன்னும்  பனுவற் பயன்றோரறிவிலார் ,  மன்னுமறங்கள்  வலியிலவே  நன்னுகால், காழொன்றுயர்திண் கதவு வலியுடைத்தோ, தாழொன் றிலதாயிற்றான் “     எனவரும்  முன்னோர்  மொழியானுமுணர்க . இன்னும்  அறிவிலார்  அறமுடையராயினும்  ,  பொருளுடையராயினும்  இவ்விரண்டும்  ஒருங்குடையராயினும்  அவற்றாற்  பயனெய்தாரெனலை  “அறிவுடையா ரெல்லா முடையார்  அறிவிலார் ,  என்னுடையரேனுமிலர்”  என்னும்  திருக்குறளாற் றெளிக .

                                                க லா சா லை

              இனி , அறிவுக்கு  இன்றியமையாச்  சாதனமாகிய  அக்கல்வியில் லாக்  குறையை   யொழித்தற்குரிய  நெறிதான்  என்னை  யெனிற்  கூறு வேன் . நம்மவர்  உறைவிடமாகவுள்ள  ஒவ்வொரு  நகரங்களினும்  ,  கலாசாலை   நிலைபெறச்செய்து அதனில்  இலக்கிய  இலக்கணங் களைக்  கிரமமாகக்  கற்றுணர்ந்தவரையும் , போதனாமுறை  தெரிந்தவராயுமுள்ள  பண்டிதர்களை  உபாத்தியாயராக  நியமனஞ்  செய்து  அவர்களா  லக்கல்லூரியிற்  சேரும்  சிறார்களுக்கு  வேதனமின்றிக்  கல்வி  கற்பித்தல்  வேண்டும் . கலாசாலை  நடைபெறுதற்குரிய  மூலதனம்  அவ்வவ்வூராராற்  றொகுக்கப்பட்டுக்  கல்வி  செல்வங்களான்மிக்க  ஒருவர்  அல்லது  சிலர்  பொறுப்பி லிருத்தல்  வேண்டும் .  பெரிய  ஊராகவிருப்பின்  சிறுவர்கள்  மிகுதியாகச்  சேருவார்களாதலின் , தலைமைப் பண்டித  ரொருவரைத்  தவிரச்  சுருக்கமான  வேதனத்தில்  சில  உபாத்தியாயர்களை  வேண்டிய  அளவு  நியமித்தல்  வேண்டும் .  கலாசாலை  நடைபெறு  நகரத்திலுள்ள   சிறுவர்களுக்கேயன்றி   அயலூர்களிலிருந்து  வருஞ்  சிறுவர்கள்  உண்டி,  உடை  முதலிய  செலவு செய்தற்குப்  போதிய  பொருளில்லாதவராக இருப்பின் , அன்னார்  எச் சாதியராயினராயினும் , அவர்களுக்குரிய  அச்செலவையும்  கலாசாலைப்  பொதுப்  பொருளிலிருந்து  செய்து  படிப்பித்தல்  மிகுந்த  புண்ணியமாகும்.  ஆனால்  அங்ஙனம்  வருபவர்களில்  இத்தனை பெயர்க்குமட்டில்  போஷணைச்  செலவுடன்  கற்பித்தல்  வேண்டுமென்று   மூலதனத்துக்குத்  தக்கவாறு  வரையறை  செய்துகொள்ளலாம் .  மூலதனம்  தொகுக்கும்பொழுதே  இவ்விடயத் தையுஞ்  சிந்தித்துக் கொள்ளல்  வேண்டும் .  சிலர்  எம்மக்கள்  கல்விபயிறற்குரிய  பருவமிலராதலின்  , யாம்  இது பொழுது எதற்காகக் கலாசாலைக்குப்  பொருள்  தரல் வேண்டும் , பின்னர்  பார்த்துக் கொள்ளுவோமென்று  கருதுவாருமுளர் .  சிலர்  இறைவன்  எமக்கு  இதுகாறும்  புதல்வரைத்  தந்திலராதலின் , யாம்  இவ்வறச் செயலிற்   றலையிடுதலெற்றிற்கு ?  புதல்வற்பேறு  கிடைத்த பின்னர்ச்  செய்வோமென்பாரு முளர் . சிலர்  நம் மக்கள்  பல்லாண்டு  படிப்பினும்   மாத வேதனமாக உதவிவரின் , சுருக்கமான  பொருள்தானே  செல்லும்,  அங்ஙனமிருக்க  ஏன்  ஒரே  தொகையாக  மிகு பொருள்  கொடுத்தல் வேண்டும் ?  என்று  கருதுவாருமுளர் .  இங்ஙனம்  “நலமதொன்று  அடைதற் குறுமிடை  யூறு தானே  பலவுளவன்றே”    என்றாங்கு  இந் நற்காரியத்திற்குப்   பல  இடையூறுகளும்  நேர்தல்  இயற்கையே .  ஆனால் , இங்ஙனங்   கருதுவாரெல்லாம்  நாம்  இக்கலாசாலைக்குப்  பொருளீதல்   நம்வாணாளிற்  செய்தற்குக்  கடமைப்பட்ட  அறச்செயல்கள்  பலவற்றுட்சிறந்த தொன்றென்பதூஉம் , அப்பல வகைத் தருமங்களினும்  இவ்வித்தியாதான  தருமம்  சிறந்ததென் பதூஉம் ,  இது  நமக்கு  இம்மையிற்  புகழையும்  மறுமையிலுரிய பயனையும்  விளைக்குமொரு  நற்செயலென்பதூஉம் , அதனைப்  பிறர்  பயனோக்கிச்  செய்தலே  யன்றித்  தமக்குச்செய்துகோடல்  சிறந்த  தன்றென்பதூஉம் ,  ஆகிய  இவ்விடயங்களை  நினைவிற்  கொள்ளுவரேல்   பொருளீதலில்  ஒரு சிறிதும் பின்வாங்கார் .  வடமொழியிலுள்ள  அறநூல்களாகிய  மநுமிருதியிலும்  ஞானம்  வேள்வி   இவற்றினும்  தானமே  சிறந்ததென்பது  போதரும் . அத் தானம்  பலவற்றுள்ளும்   அறிவை  வளர்த்தற்கு  வித்தையும்  , அவ்வறிவின்  நிலைக்களமாகிய  உயிரிருத்தற்குரிய  உடலை  வளர்த்தற்கு  அன்னமுமுரியதாதலின் ,  அன்னதானமும் ,  வித்தியாதானமுஞ்   சிறந்தனவாகும் . அவ்விரண்டனுள்ளும்  பெறுவார்க்கு  அன்னத்தாலாம்  பயன்  சிறுபொழுது  நின்றொழிதலானும் , கல்வியானாம்  பயன்  வாணாண்முழுதுமிருத்தலோடு   “ஒருமைக்கட்டான்  கற்றகல்வி யொருவற் , கெழுமையு மேமாப்புடைத்து”  என்று  திருக்குறள்  கூறியாங்கு  எழுமையுந்  தொடர்தலானும்  மிக்க  பயன்  தருவது  வித்தியாதானமேயாகும் . “தான மெவ்வெவற்றினுந் தக்க  வித்தியா , தானமே  சிறந்தது  சாற்றுங்காலையே”  என்னுந்  தமிழ்ச்செய்யுளானு முணர்க.  ஈண்டு  ஏழைச்  சிறுவர்களுக்கு  உண்டி , உடை கொடுத்துக் கற்பித்தல்  இருவகைத்  தானப்பயனையுந்  தருமென்பது முணர்க . இத்துணை  மேம்பாடுள்ள  வித்தியாதானஞ்  செய்தற்குரிய  பொருளோ  நம்மவர்  செய்துவரும்  வேறு  தருமங்களுக்குரிய  பொருளை  நோக்க  மிகச் சுருக்கமாகும் .சுருங்கிய பொருளைக்கொண்டு  பெரும்பயனைத் தரும் புண்ணியச்செயல்  இதனையன்றி  வேறு  யாதுமிருப்பதாகத் தெரிந்திலேன் .  ஆதலின்  அவ்வவ்வூர்களில்  நிலைபெறும்  வித்தியா சாலைக்கு   அவ்வவ்வூரார்  இயன்றவளவு  பொருள் கொடுத்தல் அவர் தமக்கு  இன்றியமையாத  கடமைகளிலொன்றாகும் .  இந் நற்காரி யத்தை  முடித்தற்கு  ஒவ்வோரூரிலுமுள்ள   செல்வமிக்க  சீரியோரே  முயறல் வேண்டும் .  அவர்  தமக்குள்ள  பல வேலைகளி லீதொரு  முக்கிய  காரியமாகக்  கொள்ளல் வேண்டும் .  எவ்வளவு  பொருள்  படைத்து  எத்துணை  நாள்  வாழினும்   இத்தகைய  நற்செயலால்  வரும்  இசை யிலரேல்  அவர்  செல்வமும்  வாழ்க்கையும்  என்ன  பயனுடையவாம் ?  நண்பர்களே ! நம்  சீவியகாலத்தில்  நம்மக்கள்  எவ்வளவு  பொருளைப்  பயனின்றிச்  செலவு  செய்கின்றனர்?  பொருட்பெண்டிர்  பொய்மை  முயக்கத்திற்கு  எவ்வளவு  போகின்றன .  பொறாமை , சினம் முதலியவை  காரணமாகக்  கலாம்  விளைந்து  அதனால்  எவ்வளவு  செலவாகின்றன ?  அந்தோ ! இவற்றால்  அக்கணத்திற்  றோன்றும் ஒரு  சிற்றின்ப நோக்கிச்  செய்கின்றனரெனினும்  ,  தமக்கும்  உணவு  முதலியன  தக்ககாலத்திற்  செய்து கோடலின்றித்  தம்மைச் சார்ந்த  தாய்   தந்தையர்  பெண்டிர்  மக்கள்  வருந்த  அதனையும்  பொருட்படுத்தாது  அறிவுள்ள  தந் நண்பரைக்  கண்டால்  நாணம்  பெரிதுகொண்டு  அவரோடு    பேசுதலின்றி  மறைந்து சென்று எவ்வளவு  பொருளைச்  சூதில்  போக்குகின்றனர் ?  இவர்  செய்கை  மிகவும்  வருந்தற்பாலதாகும் .  இத்தகைய  தீயவழிகளில்  நம் பொருள்  போதற்கு  முன்னரே  நாம்  பின்னர்த்துய்க்கும்  வண்ணம்  வைத்தற்குரிய  இடத்தில்  வைக்க  முந்த வேண்டாமா ?  இனி , அக்கலாசாலைகளில்  நமக்குரிய  மொழியாகிய   தமிழைப் படிப்பித்தலோடு  நம்மையாளும்  அரையர்க்குரிய  ஆங்கில  மொழியையும்   பயிற்றல்  வேண்டும் .  ஆங்கிலம்  எக்காலத்தில்  எந்நிலத்தை  எவ்வரசர்  ஆளுகின்றனரோ  அக்காலத்தில்  அந்நிலத்துள்ளார் அவ்விராச  மொழியைக்  கற்றாலொழிய   இலெளகிக  உணர்வு , பொருளீட்டற்குரிய  வலி , பலரானு  மதிக்கப் படுதல்  முதலியவை  யுடையராதல்  அமையாது . ஆங்கிலத்திற்  சிறிது கற்றுப்பட்டம்  பெற்றாரொருவரும்  தமிழிற்  பெரும்பட்டமுடையாரொ ருவரும் , தேய  யாத்திரையாகச்  செல்லுங்கால்  புகைவண்டி  முதலியவற்றில்  முறையே  அவர்களடையும்  இன்பதுன்பங்களே   ஆங்கில  நூலுணர்வின்  அவசியத்திற்கும் , அஃதின்மைக்கும்  போதிய  சான்றுகலாம் . அன்றிப் பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே  நம்  இந்திய  மக்கள் கண்டு   தெளிந்தனவும் , நூல்வடிவாகச் செய்யப்பட்டனவும்  இப்பொழுது நம்மனோரா  லறிதற்கரியனவுமாகிய   பெளதிக  தத்துவ  இயல்களையும் , எந்திரத்தொழில்களையும்   மேனாட்டார்  கருவி கொண்டு  சோதித்து அறிந்து  பலர்க்கும்  உபயோக மாம்படி  விளக்கமாக  அவ்வாங்கில  மொழியிலேயே  எழுதிவருகின் றனர் .  அங்க நூல்கள்  பல  பன்னாட்  பயின்று   அறிதற்குரிய  ஆரிய  வேதங்களின்  சீரிய பொருள்களை  யெல்லாம்  அம்மொழியில்  சிறிது  கற்றாரும்  எளிதிலுணர்ந்து  கொள்ளும்  வண்ணம்  மிக  இலகுவான  சொன்னடையில்  விளக்கி  யெழுதியிருக்கின்றனர் .நம்மனோரெல் லார்க்கும்  இக்காலத்துக்குரிய  அரச நீதி  கூறும்  நூலுணர்ச்சி  சிறிதேனுமிருத்தல்  வேண்டும் . அந் நூல்களும்  பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  உள்ளன .  இவற்றையெல்லாம்   அறிய வேண்டின்  அம்மொழியின்  பயிற்சி  சிறிதேனும்  பெறவேண்டுவதவசியமா கின்றது .  ஆகலின்  நம்மால்  நிறுவப்படுங்  கலாசாலைகளில்  ஒரு சிறு  நேரம்  சிறார்களுக்கு  ஆங்கிலமுங்  கற்பித்து  வருதன் மிக நலமாகும் .

                                                    வ ட மொ ழி .

            இனி , வடமொழியானது , வேதாகம புராணேதிகாச  தரும சாத்திரங்களையும்  ,  கணிதம் , தருக்கம் , வைத்திய  முதலிய  நூல்களையும்  தன்னுட்கொண்டிருந்தாலும் , நமக்குரிய கிரியைகளில்  உபயோகப் படுமந்திரங்களெல்லாந்தன்மயமாக  இருத்தலானும் , பூகோளக்கோள நூல்களெல்லாந் தன்பால் விரிந்துகிடத்தலானும்  அதனையும்  நம் கலாசாலையிற் கற்பித்தலவசியமென்பது   சொல்லா மலேயமையும் . ஆனால் , இக்காலத்திற்  கற்றுணர்ந்த  அந்தணர்க ளன்றி  இப்பக்கத்திலுள்ள  மற்றையோரெல்லாம்  வடமொழி பயிறல்  தங்கள்  மரபினர்க்கேயன்றி  யேனையோர்க்கு  உரித்தன்று  என்று  கூறியும் ,  பிறர்  வட சொல் ஒன்றைத் தம் முன்னர்க்  கூறுவராயின்   அது தம் செவிக்கு   விடம்போல் வதென்று  கருதியுந்திரிகின்றனர்   அவரெல்லாம்  பிறர்  வடமொழியுணர்தற்கு  அதிகாரிகளல்லர்  என்பதை  யெந்த நூலிற்  கண்டிருக்கின்றனரோ அறியேன் .  ஆராயப் புகுவாராயின்  இங்ஙனம்  கூறார் . வேதத்தை  அந்தணர் , அரசர் , வணிகர்  ஆகிய  மூவரும்  ஓதலாம் ; சூத்திரர்  ஓதற்கு  அதிகாரிகளல்லர் என்றும்  , புராணங்களையும்  ஆகமங்களையும்   படிக்கலாமென்றும்  தருமசாத்திரங்கள்  கூறுகின்றன . சூத்திரர்  வேதத்தை யொதுதற் கதிகாரியல்லர்  என்பதற்கு  வேதத்திற்குறிப்பானன்றி   விளக்கமான  பிரமாணம்  இருப்பதாக  ஒருவருங்கூறவில்லை .  பிற்காலத்துச்  சில பயனோக்கி   அறநூலார்வரையறையப்படுத்தினர் போலும் , அவ்வற நூல்  விதிப்படி   வைசிய  மக்களாகிய  நாம்  நமது  பூர்வாசாரங் களினின்றும்  பிறழ்தலின்றி   துவிஜத்துவமுடையராயிருப்போமாயின்  வேதத்தைத் தடையின்றிப்  படித்தற்கதிகாரிகளாவேம் .  பல வருடங்க ளுக்கு  முன்னர்  நம் வைசியாசாரம்  பிறழ்ந்துவிட்டமையால்  இப்போது  சற்சூத்திர  நிலையிலிருந்து  அந் நிலைக்குரிய   ஆசாரங்களை   யநுட்டித்தற்கதிகார  முடையேமா யிருக்கின்றோம் .  அங்ஙனமாகவும் படித்த  அந்தணருட்  சிலர்  புராணங்களுள்ளும்  வேதோபநிடத  மந்திரங்களைக்  கூறும்  பாகங்களாகிய   சிவகீதை , பகவத்கீதை , வாயுசங்கிதை , முதலியவற்றையும்  சூத்திரர்  படித்தல் கூடாதென்கின்றனர் . ஈதென்னை  விபரீதம் ?  வேதத்திற்  கூறும்  விடயங்களை  நேரே யறிந்துகோடற்கு  அதிகாரிகளாகாத  சூத்திரர்  புராணமுகமாக  அறிந்துகொள்ளலாமென்றும் , அதற்காகவே  புராணங்களில்   வேதார்த்தங்கள்  விளக்கிக் கூறப் படுகின்றன வென்றுங்  கூறுகின்ற தரும சாத்திரங்களைத்  தங்களுக்குரியனவாக  வைத்துக்கொண்டும்  அவற்றை  நோக்காது கையில்  விளக்கேந்திக்   கிணற்றில்  விழுவார் செயலையொத்து மனம் போனபடி  கூறுகின்றனர் .  இவர்  கூற்றுநம்மாலொரு  பொருளாக  மதித்துக்  கண்டித்தற்குரிய தின்றெனினும்  நம்  வணிக மக்கள் சிலர்  இவர்  வஞ்ச மொழியை  நம்பி  அக்கொள்கையை யவலம்பனஞ் செய்கின்றன ராதலின்  அம்மயக்க நிவிர்த்தியின்  பொருட்டுச்  சில கூறினேன் .  இவற்றால்  மேற்காட்டிய   உண்மையை  யறிந்தடங்குவாராக ,  இனிச் சிலர் வடமொழியை  நாம்  பயிலவேண்டுதற்குக் காரணம்  நமக்குரிய  செந்தமிழ்  வடமொழியினின்றும் பிறந்தமையானென்பர் . அவர் கூறும்  காரணம்  நடுநிலையுடைய  மொழிஞான விற்பன்னர்களா  னிரசிக்கப் பட்டதொன்றாகும் .  வடமொழியிலுள்ள  துவிவசனம் தமிழில்லை . தமிழிலுள்ள  திணை பாலுணர்த்தும்   வினை விகுதி  முதலியன   வடமொழியிலில்லை . உதாரணம்  பவதி யென்னும்  வினைமுற்று   இருக்கின்றான் , இருக்கின்றாள் , இருக்கின்றது என்று  எல்லாத்திணை பாலையுங்கொண்டு  முடியும் .  வடமொழியிற்   பிரதமா விபக்தி கூறுவர். தமிழில் , எழுவாயுருபு, திரிபில் பெயரே யென்பர் . வடமொழியில்  சப்தங்களுக்கு  இலிங்கம்  வகுத்திருக்கின்றனர் .  தமிழில்  பொருட்டன்மை  நோக்கி  அப்பொருளையுடைய  சொற்குப் பால்  வகுபார்.  உதாரணம்  தாரம்  என்னும்  பெண்பாற்  பொருளுணர்த்துஞ்சொல்  வடமொழியில் ஆண்பாற்பன்மை யென்று  கூறப்படும் . தமிழில்  அங்ஙனமின்று. இன்னும்   வடமொழியையும்  செந்தமிழையும்  நன்கு  ஆராயின்  அவை  வேறு  வேறு  தனிமொழிகள்  என்பதற்குப்பல  வேறுபாடு  காணலாம் . இவ்விடயம்  நம் தமிழ்ப்பண்டிதரே  யன்றி  ஆங்கிலேய  பண்டிதர் பலரானும்  நன்கு  விளக்கப்பட்டிருக்கின்றது . இனி , நம்முன்னோர்  வடமொழி  பயிறற்கு  முக்கிய காரணம்  வேறியாதெனின்  கூறுவேன் .  வடமொழி  செந்தமிழ்போலப்  பரமசிவனாற் றரப்பட்டதாதலானும் , அலங்காரம்  தருக்க  முதலிய  நூல்களைத்  தன்பானின்றும்  பிறமொழியாளர் கோடற்குரியதாக  இருத்தலானும்  தொன்றுதொட்டு  நம்  தமிழ்க்கும்  அதற்கும்  ஒற்றுமையுண்மையானும்  நம்மத கிரந்தங்களெல்லாம்  பெரும்பாலும்  அம்மொழியிலேயே  அமைந்திருத்தலானும்  நாம்  கற்றலவசியமாகும் .  வடமொழி  உலக வழக்கிலின்றி நூல் வழக்கின்  மாத்திரம்   பயின்று  வந்தமையானும்  ,  தமிழ்  நூல்  வழக்கு   உலகவழக்கு  ஆகிய  இரண்டினும்  பயின்று  வந்தமையானும் ,  தமிழிற்  பெரும் புலவராயுள்ளாரெல்லாரும்   வடமொழியையுங்  கற்று   அதனிலுள்ள  விடயங்களைத்  தமிழிற்  கூறுங்கால்  அச்சொற்களையும்   உடன் கூறி   வந்தமையானும்  தமிழ் மொழியிற்  பல வட சொற்கள்  பழங்காலத்தே  வழங்கப்பட்டு  வந்தனவாகும் .  இவற்றையுணர்ந்து  வைத்தும்  நம்  தமிழ்ப்புலவருட் சிலர்  தமிழினும்  வடமொழி  தாழ்ந்ததென்றும் , தமிழர்க்கு  வடமொழிப்  பயிற்சி  அவசியமின்றென்றும்  வடமொழியைப் பலவாறு  இழித்துக் கூறுகின்றனர் . இவர் கொள்கை  பரவி வருதலாற்றான்  நம்  சமய  உண்மைகளை  விளக்கும்  ஆகமங்கள்  வடமொழியிற்  பல்கோடியாக  விரிந்து கிடப்பவும்  அவற்றை யாராய்வாரும்  பரிபாலிப்பாரும்   அரியராகின்றனர், இக்கொள்கையை  நம்  தமிழ்  மக்களறவே  யொழித்து விடல் வேண்டும் . இனி , வடமொழியையும்  முறையாகக் கற்கத் தொடங்கல் வேண்டும் .  அங்ஙனங்  கற்று  நம்மனோர்க்குப் போதிக்க   ஒருப்படும்  அந்தணோத்தமர்களுக்கு  வேண்டிய  உதவி  நாம்புரிதல் வேண்டும் . ஆனால்  நம்  வணிகமக்கள்  பலர்  பல இடங்களில்  வடமொழிக்கலாசாலை நிறுவி  நன்கு நடத்தி வருகின்ற னர் . கலாசாலை  தொடங்கும்பொழுதே  அந்தணர்களைத் தவிர  வேறு  ஒருவரும்  படித்தல்  கூடாதென்னும்  விதியையும்  ஏற்படுத்திவிடு கின்றனர் . அதற்குக் காரணமும்  ஒன்றுண்டு .   என்னவெனின் :  ‘கதா நுகதிகோ லோக”  என்னும்  பொது நியாயத்தை  நம்மவர்  தமக்குச்சிறப்பாக   அங்கீகரித்தமையேயாகும் . அக்கலாசாலைகளில் அந்தணச்சிறார்களே  யன்றி  மற்றவருணத்தார்  படித்தல்  கூடாதென்று  எந்த நூல்  கூறுகின்றது ?  திருவனந்தபுரத்து   மகாராஜா  அவர்கள்  அச்சமஸ்தானத்தில்   நிறுவிய  கலாசாலையிலும் , பண்டிதை  ஸ்ரீ அனிபிசன்ட்  அம்மையார் காசியில்  நிறுவிய  பெரிய  கலாசாலை யிலும்   நான்கு வருணத்தாரும்  ஆரம்பக் கல்வி முதல்  வியாகரணம்  தருக்கம்  முதலிய  எல்லாக்கிரந்தங்களையுங்  கற்கும்படி  விதிக்கின்றனரே  . அவ்விதியை  நாம் ஏன் கடைப்பிடித்தல்  கூடாது ;  இப்பொழுது  நம் குலத்துச்  சிறார்களும்  வேளாளர்  குலத்துச்  சிறுவர்களும்  படிக்க விரும்பினாற்  கலாசாலையிற்  போதகரா யிருப்போ  ருடன்படுவரா ?  ஆதிசைவப் பிராமணச்சிறுவர்களைச்  சேர்த்துக் கற்பித்தற்கும்  உடன்படுதலருமையாயின்   நம்மனோரை  யெங்ஙனம்   மதிப்பார் ?  இவற்றிற்கெல்லாங்காரணம்   நம்மவர் பாலுள்ளதேயன்றி   யவர்களிடத்திலின்று .  இனி , நம்  நாட்டில்  செந்தமிழ்க்கலாசாலைகள்  பல  ஆங்காங்கு  நிறுவி  அவற்றிலிருந்து  வடமொழியை  நம்  தமிழ்மக்கட்குப்  போதிப்பிக்கத்  தொடங்குவேமேல்   நம்  நல்லுணர்வையும்  பாஷாபிமானத்தையும்  அறிஞர்  மிகப்பீடுடைய னவாக  எண்ணுவர் . இன்றேல்  ஒருவர்  சென்றவழியாச்  செல்லும்  நம்  இயற்கை  பிறர் மதித்தற்குரியதாகாது .  நிறுத்துணர்ந்து   எக்காரியத் தையுஞ்  செய்தலே  தக்கதாகும் .  

                                                      ச பை க ள் .

          இனி , தமிழ்க்கலாசாலைகளை  யூர்கடோறுந்  தவறாமல்   நிறுவுதலோடு  பத்து  ஊர்களுக்கு  ஒன்றாக  எல்லாச் செளகரியங்களும்   நிரம்பிய  ஒவ்வொரு  பெரிய  நகரங்களினும்   பல  பண்டிதர்கள்  தத்தங்கருத்துக்களை  யுபந்நியாசித்திற்குரிய  சபைகள்  தாபித்தல் வேண்டும் .  இக்காலத்தில்  மதவகையான  திருத்தங்களும்  , அரசியற் றிருத்தங்களும் , சாதிமுறைத்  திருத்தங்களும்  பிறவுஞ்  சபைவாயி லாகவே  செய்யப்படுகின்றன . இவ்விந்திய தேயத்தில்   பலவகையுட்   சமயங்களும்  ஒருவாறாகச்  சில சில  இடங்களிற் பரவிவர  தியாசபிகள்  சங்கத்தின்  நோக்கங்கள்  மிக்க  விரைவிற்  பரந்து நம்  இந்திய  மக்களிற்  பல மேதாவிகளையும்   தன் வயப்படுத்தற்கேது , இத்தகைய  சபைகளேயன்றி   வேறன்று . ஒருவகை நூலிற்   பலர்க்கும்  பலவகை யவிப்பிராய பேதங்கள்  தோன்றுதலியற்கையே . அக்கருத்து  வேறுபாடுகளைத்  திருத்திக்  கோடற்கு  வாயில்  இச்சபைகளேயாகும் . நம்  சிறுவர்கள்   கல்வி பயிலுங்காலத்தே  பலர்  முன்னிலையில்  அஞ்சாது   பேசப் பழகுதற்குரிய தானமுமிச்சபைகளேயாகும் ”இண ரூழ்த்து நாறாமலரனையர் கற்ற துணர விரித்துரையாதார்”  என்னுங்குறை  யையொழித்து  “சொலவல்லன்  சோர்விலனஞ்சான வனை, யிகல் வெல்லல்  யார்க்குமரிது “என்று  கூறும்படி சிறுவர்களைப்  பெருமைப்படுத்தற்கு  மிதுவே  சிறந்த கருவியாகும் . உதாரணமாக  இச்சன்மார்க்க சபையை  நினைப்போம் . இது  நிலைபெறுத்தப்பட்டு  ஈராண்டுகளாயின.  இவ்வீராண்டுகள் , பிறந்தநாட்டொடங்கி  இப் பக்கங்களைக்  கண்டறியாத எத்தனை பெரியோரைக்  காண நேர்ந்தது?   அவர்  வாயிலாக  எவ்வளவு  நுண்ணிய  பல  விடயங்களைக்  கேட்கநேர்ந்தது ?  நன்னீர்  தோய்ந்து இன்சுவை யடிசிலுண்டு  மேன்மாடியிற்  சாளரவாயிலாகப்   போதருமிளங்காற்று  வீச  வெயின்முகமறியாது  பயிலும்  மெல்லியவுடலையுடைய  அறிவிற்  சிறந்த  நீவிர்  பல்லீரும்  முள்ளுங்கல்லும்   பரவிய  நீணெறி கடந்து  சேணிடத்துள்ளதாகிய   இச்சிற்றூரையெய்தி  யொருங்குகூடி  யளிக்கு மிக்கண்கவர்   காட்சி கிடைக்கப்பெற்றமைக்குக்  காரணமிக்கழகமே யன்றோ ?  இக்கழகம்  சன்மார்க்கமாதலின் , இதனை  நோக்கி  யாம்  வருதற்குரிய  நெறி சன்மார்க்கமாயினும்  அதனைப் பொருட் படுத்திலேமென்று  பல  பண்டிதர்  என்னிடம்  கூறியுள்ளார்கள் .  ஆதிபெளத்தர்  அரசமரத்தடியில்  நின்று  பலரையும்  ஒன்றுகூட்டித்  தம்  மத  போதனைகளைச்  செய்தமையானன்றோ  இக்காலத்திற்  பல வகைப் பட்ட  மதங்களை யவலம்பிக்கும் உலகத்து ஜனத்தொகையுள்  பெளத்தக் கொள்கையினர் மூன்றிலொரு பகுதியின்  மேலும்  மிக்கு  விளங்குகின்றனர் .  நம்  வணிகமக்களுரைவிடங்களாகயுள்ள  நகரங்க ளிற்  குறைந்த பக்கம்  பத்துச்சபைகளிதுபோல்  நிலைபெறுமாயின் , நம்மவர்   சில  ஆண்டுகளுக்குள்  பிறர்  கூறுங்குறைகளை யொழித்து நாகரீக நிலையில்  எல்லாரினு  மேம்பாடெய்துவரென்பதிலொரு  சிறிதும்  ஐயமின்று . அங்ஙனமாமாறு   நம்  உள்ளத்துளொளியாய்  விளங்குஞ்  சிவபெருமான் றிருவருள் புரிவரென்னுந்  துணிவு  பெரிதுடையேன்

                                                            ச ம ய ம்

           இனி,  சமயவிஷயத்தில் நம்மவர் நிலையைச்  சிறிது ஆராய்வேன். நம்  வணிகமக்களுக்குரிய  சமயம்   வேதாகமங்களில்  விதந்தெடுத்து விழுமிதாகக்கூறப்பட்ட  சைவசமயமேயாகும் .  சைவசமயம்  என்பது சிவனிடத்து இடையறாது அன்பு பூண்டு   ஒழுகுவோரது கொள்கை  யென்று  பொருள்படும் .  ஈண்டுச்  சமயமென்றது  இது  பொருளென்று தெளிந்த அவசரம் , அல்லது  பருவம்  என்று  பொருளாகும் .  சிவபிரான்  பரம்பொருளாதலை  வேதம்  பொதுவகையாகவும்  சிவாகமம்  சிறப்புவகையாகவும்  தெளிவிப்பனவாம் .  வேதத்துட் சிவபிரான் பிரமம் , பசுபதி , முதலிய  சப்தங்களாற்   பலவிடத்தும் படிக்கப்படுவன்.  பிரமசப்தத்தை யொவ்வொரு  சமயத்தாரும் தத்தங்கடவுட்கேற்றிக் கூறுகின்றாரார்களோ  எனின் , அற்றன்று  . கேநோபநிடதத்தில்   இந்திரன் , அக்கினி , வாயு  முதலியோர்   அசுரர்களைப் போரில்  வெற்றிகொண்ட   சயசீலர்  யாம்  யாம்  என்று  செருக்குற்றிருப்ப   அதனையறிந்த பரமசிவன் , அவர்கள்  முன்னிலையில்  ஓரியக்க  வேடந்தாங்கிச்சென்று  ஒரு சிறு துரும்பை  நட்டு இதனிடத்து உங்கள்  வலியைக்காட்டுங்களென்று   கூறினெனவும் , அக்கினியும் ,வாயுவும்  தம்  ஆற்றல்  சிறிதும்  செல்லாதிருத்தலை  நோக்கி  நாணி நிற்பப்  பின்  இந்திரன்  வந்தவுடன்  இயக்க வுருவினனாகிய   பரமசிவன்  மறைந் தருளினனெனவும்  , அவ்வமயத்தில்  விசும்பில்  இமவான்  மகளாகிய  உமையம்மையார்  தோன்றினாரெனவும் , அவ்வம்மையாரை  நோக்கி  அம்மே ! இவ்வியக்கன்  யாவன்  என்று  இந்திரன்  கேட்ப இவன்  பிரமம்  என்று  அம்மையார்  கூறியருளினாரெனவும்  கேட்கப் படுதலானென்க. அவ் வுபநிடதத்தில் இயக்க வுருவமாக  வந்தது  பிரமம்  என்று  காணப்படினும்  “தாயுடன் சென்று  பின் றாதையைக்கூடி”  என்றமுறைப்படி  உமாதேவியராகிய  சிவசத்தியாற்  காட்டப்பட்டமை யால்  அந்தப் பிரமம் பரமசிவனே யென்பதுணர்க . இக்கதையை  வாயுசங்கிதை  யென்னும்  புராண  நூலும்  விரித்துக்  கூறுதலையுணர்க  யஜூர்வேதத்துள்ள  சமக  மந்திரங்கள்  அரி, அயன் , இந்திரன் முதலியோரை அன்னாதிகளுடன் சேர்த்து  ஈயப்படும் பொருளாகக்   கூறுகின்றமையானும்  “பிறராற்   சாதிக்கமுடியாத முப்புரத்தை வெற்றிகொண்டு உலகங்களைக் காத்தமையான்  பசுபதி  நீயே ,  யாமெல்லாம்  பசுக்கள்  என்று  அங்கீகரித்தனர்  தேவர்கள்” என்பது  முதலிய  சுருதிகளுண்மையானும்  பசுபதி சப்தமும்   அதற்குரிய   இலக்கணங்களும்  சிவபிரானுக்கே  யுரியனவென்பதும்  தெளிக . சிவபிரான்  ஏனையதேவர்கள்  ஆற்றலெல்லாந்  தன்னுள்  வியாப்பியமா யடங்க  தான்  வியாபகசக்தியுடையனாதலை , சுருதி பிறதேவர்கள்  பெயரெலாஞ்  சிவனுக்குரியதாகக்  கோடலானும் சிவனுக்குரிய  சிறப்புப்பெயரைப்  பிறதேவர்க்குக்  கூறாமையானுமுணரலாம் . பிறதேவர்கள்  நாமம்  சிவனுக்குண்மையை  வாயுசங்கிதை  யென்னும்  நூலினாலும் , சிவன் சிறப்புப்பெயர்  பிறர்க்கின்மையை  “சிவனெனுநாமந்  தனக்கேயுடைய  செம்மேனியெம்மான்”  எனவருந் தமிழ் மறையானுமுணர்க .இங்ஙனம்  அளப்பரும்  பெருமை வாய்ந்த  நம்  சிவபெருமானைப்  பரம்பொருளென  வேதாகம விசாரத்தால் உண்மையாகத்  தெளிந்து  பக்தி செய்தல் ஒருவற்குக்  கூடுமாயின் ,  அவன்  ஒருகோடி  பிறப்பிற்செய்த  நல்வினையுடையானெனப் பெரியோர் நிச்சயிப்பர் . இதனை  சிவகீதையென்னும்  பத்ம புராணத்தாலறியலாம் . அப்பல  பிறப்பினும்  புறச்சமயங்கள்  பலவற்றை  மேற்கொண்டும் , பின்னர்  அச்சமயம்  எய்தியும் , மிருதி  கூறும்  வழிச்சென்றும் , புராண  சிரவணஞ் செய்தும் , வேதமோதியும் , வேதாந்தந்  தெளிந்தும்  மேற்சென்றார்  சைவநெறியடையலாம் இதனை  “புறச்சமயநெறி நின்று  மகச்சமயம்புக்கும்  புகன்  மிருதிவழி யுழன்றும்  புகலுமாச்சிரம  , வறத்துறைகளவையடைந்து  மருந்தவங் கள்  புரிந்து  மருங்கலைகள்  பல தெரிந்து மாரணங்கள்  படித்துஞ்  , சிறப்புடைய  புராணங்களுணர்ந்தும்  வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ்  சென்றாற் சைவத் , திறந்தடைவரிதிற்  சரியை  கிரியா  யோகஞ்  செலுத்திய பின்  ஞானத்தாற்  சிவனடியை  சேர்வர்”  என்னுஞ் சிவஞானசித்தித்  திருவிருத்தத்தா னுணர்க . இனி , இச்சைவ சமயமானது ,  ஏனைய சமயங்களை  யெல்லாம் ஒதுக்காமல்  அவை தன்னையடைதற்குச்  சோபானமாக  இருக்குமுண்மையைக்  காட்டி  , மாறுபாடின்றித்  திகழ்தலாலிதனையே  மெய்ச்சமயமென்று  அறிஞர்  கூறுவர் .  மற்றைச்  சமயங்களெல்லாம்  ஒன்றையொன்று   வெறுத் தொதுக்கு  மியல்பினவாம் .  இத்தகைய  உண்மைநெறியை  யொருவன்  எய்தினால்  அவற்குச்   சுலப கைங்கர்யங்களாலே  எவரும்  அடைதற்கரிய  வீட்டின்பத்தைச்  சிவபெருமான் தந்தருளுவன் . இதனை  அப்பையதீக்ஷிதர்  பெருமான்  றிருவாய் மலர்ந்தருளிய  ஆத்மார்ப் பணது  தியானுமுணர்க .  இத்தகைய  எளிய  செயலால்  இறைவனை  மகிழ்விக்கும் இந்நெறியை  யியற்கையிற் பெற்றாருட் சிலர்  வேறு  மார்க்கங்களைபற்றி  நிற்றல்  என்பயன்  கருதியோ ?  அங்ஙனம்  பற்றி நிற்பார்  செயலை , சிவகீதையும் , “பரமதக் கடலுட்  டுளைகுநர்  தாமும்  பைப்பய  வுயர்ந்துமே லில்லாவரமலி  சைவ  மருவுவ  ரிதங்கண்  மரபினாலறமுத லாற்றி  விரவுவ ரிறைவன்  பாததா மரையை மேவருஞ்  சைவமே  சார்ந்து மூரமறுபுறநூலொழுகுரமிழ்த மொரீஇ விடம்பருகுநர்புரைவார்”  என்று  தணிகைப்புராண  நூலாசிரியருங்  கூறுமாற்றாலுனர்க .  

என் அருமை  நண்பர்காள் !

       இத்துணை  யருமைச்  சைவநெரியை   நாம்  விரும்பிப்   பெறுமாறின்றி  நம் குலத்திற்கே  யியற்கையிலமையத்  திருவருள்  புரிந்த சிவபிரான் பெருங்கருணையைப்  பன்முறை  வழுத்துவோமாக .

                                   நகரத்தாரும்  சைவசமயமும் .

      இனி , நம்முன்னோரெல்லாம்   இச்சைவ  நெறியையே  யவலம்பித்து  ஒழுகினவரென்பதை,  நம்  மரபினர்  சரித்திரத்தானும் , சிரமாப நோதன புர  மான்மியமென்னும் இளைசப்புராண  முதலியவற்றானும்  தெளியலாம் .  நம்மவர்  ஆதியில்  நாக  நாட்டிலே  சாந்தியாபுரி யென்னு  நகரத்திலிருக்கும்பொழுது  கோபாதீசுவரசுவாமி   தரிசனமும் ,  சதாசிவ  குருபீடத்தில் தீக்ஷாகிரியையும் , பெற்றிருந்தமையானும் ,  பின்னர்க்  கலியுகம்  ௨௦௪  ல்  தொண்டைமண்டலத்திற்   காஞ்சிபுரத்தி லிருக்கும் பொழுது  சத்திபுரீசுவரர்  தரிசனமும் , அருணகிரி  சிவசங்கராசாரியரிடத்தில்  தீக்ஷாகிரியையும் மரகத விநாயகர் பூஜையும்  பெற்றிருந்தமையானும் , பின்னர்க்   கலியுகம்  2312 ல் சோழதேயத்தில்   காவிரிப்பூம் பட்டினத்திலிருக்கும்பொழுது உருத்திர பதீசுவர  தரிசனமும்  , சிதம்பரத்திலுள்ள  பதஞ்சலி  க்ஷேத்திரத்தில்  ஈசான  சிவாசாரியரிடத்தில்  தீக்ஷாகிரியையும் பெற்றிருந்தமை யானும் , கலியுகம்  3808  முதல்  இளையாற்றங்குடி  முதலிய  ஒன்பது கோயில்  சுவாமி  தரிசனமும்  பாண்டிநாட்டில்  ஈசான  சிவாசாரியராகிய   பாண்டிநாட்டு  ஆசாரியரிடத்து தீக்ஷையும்  ,  பின்  ஒரு  காரணத்தால்  கலாமடத்து ஆசாரியர்  உத்தரவுப்படி  இல்லஞ் சேரிப்பட்டணமாகிய  பாதரக்குடிச்  சிவாசாரியரிடத்துத்  தீக்ஷையும்  , பெற்றுவருகின்றமையானும் ,தொன்றுதொட்டுச் சிவாலயப்பிர திட்டை  விபூதி , ருத்திராக்ஷதாரண  முதலியன வுள்ளமையானும்  , நம்  பழமையோரும்  நாமும்  சைவநெறியையன்றி  வேறு  நெறிகளைச்  சிறிதுங்   கைப்பற்றினேமல்லே  மென்பது  வெள்ளிடை  மலைபோல் விளங்கும் .  இளைசைப்  புராணத்தில்  நம்மவர்  சிதம்பரத்தில்  அகோர சிவாசாரியரிடம்  தீக்ஷைபெற்றுப்  பின்  அவரா ஞைப்படி  பாண்டிநாட்டில்  ஈசான சிவாசாரியரிடம்  பெற்றுவருகின்றனரென வுள்ளது . நம் முன்னோர்  வகுத்த  சாதிமுறை  நியாயங்கள்  பலவற்றுள் “சிவமதத்திலேயே  இருத்தல் வேண்டும்  அந்நிய  மதங்களிற்  சேரக்கூடாது “  என்பதுமொன்று , இதனாற்  சைவத்தினம்மவர் களுக்குள்ள  அபிமானம் இவ்வளவென்பதை  யூகிக்கலாம் . எல்லாப் பொருள்களையும்  பற்றறத்துறந்தவரும் , படித்தாரைப்  பரவசமாக்கிச்   சிவானந்த வெள்ளத்து ளமிழ்த்தும் அருட்கவி  கூறும்  ஆன்ற  நாவுடையாரும் , வரம்பிலா நிதிக்கு வையத்துரும்பென மதித்து ஒழித்தவரும் ,மகாஞானியுமாகிய  பட்டினத்தடிகளும்  நம் மரபில வதரித்துள்ளரெனின் , நம்குலமாட்சி  யெவ்வளவு  ஏற்றமுடையதாகும்?  அப்பெருமான்   நம்  மரபினரென்பதனை  ,  இன்றும்  அவ் அடிகள்   மரபினராகிய  நம்  வணிக மக்கட்குப்  பட்டின சாமியார்  என்னும்  பட்டப்பெயர்  வழங்கப்பட்டும்  விவாக  காலத்தில்  எழுதப்படும்  “இசைகுடிமானம்”  என்னும்  சாசனத்தில்  வரையப்பட்டும்  வருதலால்   ஐயமின்றித்  தெளியலாம் .  இன்னும்  நம்குலத்துப்  பண்டையோர்  மாட்சிகளை  “சிவபெருமானை  மேலாத்தெளிந்த  நல்லுள்ள முள்ளோர்”  “கொடைபொறை யடக்கம்வாய்மை  குறைவிலா விரக்கமாதி, வடுவறு குணங்கள்யாவும்  வாழ்வதற்  குறையுளானோர் “  என்பனவாதி  இளைசப்புராணச்  செய்யுட்களானும்  ,  கல்வெட்டிலும்   தாமிர  சாசனத்திலுமிருந்து  சிலவருடங்களுக்குமுன்   புத்தகவுருவமாக   வெளிப்படுத்தப்பட்ட  நம்  வைசிய மக்கள் சரித்திரத்தானும் , விளக்கமாகக்  காணலாம் .  இங்ஙனம்  தக்கசீரும்  மிக்கசெல்வமுஞ்   சிவவழிபாடும் பெற்று நல்வாழ்வெய்திய  வைசியப் பெருமக்கள்  மரபிற்பிறந்த  நம்மனோர்நிலைமை  இக்காலத்தின்  மதவிஷயத்திலும் வேறுசில விஷயத்திலும்  செவ்விதாகக்  காணப்படவில்லை . சைவசம யத்தினின்றும்   அந்நியமதப்  பிரவேசஞ்செய்தல்  நம்  மக்களிடத்துச் சிறிது மின்றெனினும்,  நமக்குரிய  சைவசமயா நுட்டானங்களிற்  சிலவற்றைக்  கைவிட்டிருக்கின்றோ மென்பது  எல்லாரானும்  ஒத்துக்கொள்லற்பாலதே . சைவசமயிகளுக்குரிய  முக்கிய  கடமைகள்  விபூதி யுருத்திராக்கதாரணம்  ,  பஞ்சாக்கரஜபம் ,  சிவாலய வழிபாடு  செய்தன் முதலியவைகளேயாம். இவற்றுள் விபூதி  யுருத்திராக்க  தாரண மகிமைகள்  பிருகஜ்ஜாபாலம்  உருத்திராக்க  ஜாபால  முதலிய  உபநிடதங்களிலும்  சிவாகமபுராணங்களிலும்  விசேடமாக்  கூறப் பட்டுள்ளன .  பாச ஞான ,  பசு ஞான  நீக்கிப்  பதி ஞானமாகிய  சிவ ஞானத்தை  யளிப்பனவும் , மகாபாதகோபபாதங்களைப் போக்கிச்  சுத்திதருவனவும்  இவைகளேயா மென்பதனை  சிவவசனமாக்  கூறப்பட்ட  வடமொழி  சுலோகத்தானும் , வாக்கியங்களானுமுணர்க . விபூதி ருத்திராக்ஷங்களைத்  தாரணஞ் செய்த  பெரியோர்களை   யெவன்  பரிகாசஞ் செய்கிறானோ  அவன்  பிறப்புக்  கலப்புள்ளதென்று  அறியவேண்டு மென்பதை வாசிஷ்டலைங்கத்தாலுணர்க . இத்துணைப் பெருமைவாய்ந்த   இச்சிவசின்னங்களைத்   தொன்றுதொட்டு  நாமும் , நம்  பெண்மக்களும் , நம்  சிறார்களும்  இடைவிடாது  அணிந்துகொள்ளு வதில்  தவறு ற்றிலேமென்பது மிக்க  மகிழ்ச்சியைத்  தருகின்றது .  இவ்விடயத்தில்  நம்  மனதை   நழுவவிடாதுபற்றி  நிற்பச்செய்த  பரமபதியைப்  பன்முறை  வழுத்துவோமாக .

                                          பஞ்சாக்கரப் பெருமை

     இனி , இவற்றிற்கெல்லாம்  உயிராகவுள்ள  பஞ்சாக்கர  உபதேசத்தை   நம்மவரிற்  சிலர்  சிலநாளாகப்  பெறக்கூடாமலிருப்பது மிகவும்  வருந்தத்தக்கதே . வேதத்தில்  மந்திர  அரசாக  விளங்குவதும் ,  பிரணவப்பொருளாகவுள்ளதும், பதி பாசங்களி நியல்களைக்காட்டு வதும் ,  தன்னை நினைப்பார்க்கு  வீட்டின்பத்தைத்  தருவதும் இப்பஞ்சாக்கரமேயாகும் . இதனை ,

“ஓது  மந்திரங்கட்கெல்லா முயர்ந்திடு  முயர்ந்துநின்ற

தீதினான்  மறையின்சார  மாகுமாற்  சிவன்ற  னன்பர்

ஏதமின்  முத்திவீட்டை  யெய்திடக்  கொடுக்குமென்று 

மாதியா  யுறையுமீச  னுருவமா  யமருமன்றே”

என்னும்  வாயுசங்கிதையானுந்  தெளிக . 

     இன்னும்  இம்மந்திரம்  வேதங்களின்   மத்தியிலவைகளுக்கு  உயிர் நிலையாக  விளங்குதலைக்  காட்டுவேன் . வேதங்கள்  இருக்கு , எஜூர் , சாமம்  என மூவகைப்படும் .அவற்றி நடுவிலுள்ளது  எஜூர்  வேதம் ;  அஃது  ஏழு காண்டங்களையுடைத்து . அவற்றுள்  நடுக்காண்டமாகிய  நாலாவதுகாண்டம்  ஏழு  சங்கிதைகளையுடைத்து ;  அவ்வேழுள்  முன்பின்  ஆறு   சங்கிதைகளை  யொழித்து  மத்திய சங்கிதையின்  மத்தியிலுள்ளது  இப்பஞ்சாக்கர  மந்திரம் .  வேத புருடனுக்கு  ஸ்ரீ ருத்திரம்  கண்ணும் பஞ்சாக்கரம்  அக்கண்மணியும்  “சிவ”  என்பது கட்பார்வையுமாமென்ப .  இது , நகாராதியாகவும்  சிகாராதியாகவும்  ஓதப்படும் . சிகாராதியாக  ஓதலே  சிறந்ததாகும் .  இதனை  ஓதுந்தோறு  மனசை  யுருக்குந்  திருவாசக  ஆசிரியராகிய  ஸ்ரீமந். மாணிக்க வாசகப் பெருமானுக்குச்  சிவபெருமான் குருமூர்த்தியாக  எழுந்தருளி  யுபதேசஞ்  செய்யும்பொழுது  நிகழ்ந்த  செய்தி  கூறும்  திருவாதவூரர்  புராணம் ,

“எவர்க்கு  மெய்ஞ்ஞானமாஞ்செழுத்தை  யுமுணர்த்த வேண்டி

யவத்தொழி லகற்றியாளுஞ் சிவத்தை முன்னாக மாறித்

தவப்பெரு வடிவங்கொண்டார் தண்டமிழ் பாடுமன்பர்

செவிப்புலன் வழியே சிந்தை யுறத்திரு வாய்மலர்ந்தார்”

என்று  கூறுதலானும்  அங்ஙனம்  உபதேசிக்கப்பெற்ற  நம்  மணி வாசகனார் “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்”  என்று  திருவாய்  மலர்ந்தருளியமையானுந்  தேறுக . ஸ்ரீ பஞ்சாக்கரத்திற்  சிகாரம்  சிவமும்  ,  வகாரம்  அருளும் , யகாரம்  ஆன்மாவும் , நகாரம்  திரொதையும் , மகார மலமுமாக  அறிதல் வேண்டும் . இவற்றுள் , முன்  இரண்டெழுத்துக்கள் பதியும்  பின்னிரண்டெழுத்துக்கள்   பாசமும்  நடுகின்ற  எழுத்தொன்று  பசுவுமாகும் . பதிக்கும்  பாசத்துக்கு மிடைப்பட்டதாய்ப்   பதியோடு  சேர்ந்து  பதியாகியும்   பாசத்தோடு  சேர்ந்து  பாசமாகியும்   அப்பாசமும்  பதியுமாகமற் சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மையுடையது  பசுவென்னு முன்மையு மிதனானிலைபெறும் .  பதியோடு  கூடிய  சம்பந்தத்தை  ஞானநடனமெனவும் , பாசத்தோடு  கூடிய  சம்பந்தத்தை  யூனநடன மெனவும்  கூறுவர்  பெரியோர் . ஊன நடனமொழிந்து  ஞான நடனந்தானே   கோடற்பாலதென   வேதாகமங்கள்   முழங்கலான் நகர  மகாரங்களாகிய   மலங்களைப்  பின்றள்ளி  யகாரமாகிய  ஆன்மா  வகாரமாகிய   அருள் கூட்டச்  சிகாரமாகிய  சிவத்தில் ஐக்கியமாகும் . சிதம்பரத்திலே   ஞானமயமாகிய   சிவகாமியம்மையார்  காண  ஆன்மாக்களுய்தற்பொருட்டு   ஆனந்த தாண்டவஞ்  செய்தருளும்  சபாநாயகர் வடிவம்  ஸ்ரீ பஞ்சாக்கர   ரூபமென்பதை  உண்மை விளக்க  முதலிய  சித்தாந்த   சாத்திரங்களானுணர்க . இனி , அருமருந்தன்ன   இப் பெருமந்திரத்தை யெல்லா  இலக்கணங்களு  நிரம்பிய   ஞானா சிரியரை  யடுத்து அவரால்  சிவாகமத்திற்  கூறிய  சைவதீக்ஷை  செய்யப்பெற்று  உபதேசமுகமாக்  கொள்ளல்வேண்டும் .

                                                     தீக்ஷாமகிமை .

             தீக்ஷையாவது, ஆன்மாக்களிடத்துள்ள  சிவசக்தியை   வெளிப் படவொட்டாது  தடையாக  மறைத்துநிற்கு  மலசக்தியைக் கெடுத்துச்   சிவதத்துவத்தைக்  கொடுப்பதாகிய   சிவசக்திக் கிரியையாகும் .  இன்னும்  இச்சிவ  தீக்ஷையினாலேயே   மோக்ஷ  முதலிய  எல்லா  நலன்களும்   சித்திக்கும்  என்னுமுண்மையை  “சைவநூலிற்   கூறப்பட்டதும்  பாசமூன்றையுந்  தவிர்ப்பதும்  மேலானது மாகிய  தீக்ஷையைத்தவிர   வேரோரு  ஆசிரமும்  இவ்வுலகத்திலே   மனிதருக்கு  மேன்மையன்று . ஆதலால்  தீக்ஷையிற்றான்  மோக்ஷம் .  ஆசிரமங் களினாலுமற்றைக்  கருமங்களினாலும்   மோக்ஷமில்லை .  அத்துவ சுத்தியின்றி   முத்தியை  விரும்பு  மனிதர்  கோலின்றி  நடக்கத்  தொடங்கிய  குருடர்  போல்வர் . தோணியின்றிக்  கடலைக்கடக்க   விரும்பினவர் போல்வர்”  எனவரும்  வாயு  சங்கிதை  முதலிய  பிரமாணங்களானும்  விரித்துக் கூறும்   சிவாகமப்  பிரமாணத்தானும்  ஐயமின்றித் தெளிக, இனி, அத் தீக்ஷையானது  ஒளத்திரி  தீக்ஷையெனவும் , மானசதீக்ஷை , சாத்திர தீக்ஷை , யோகதீக்ஷை  யெனவும்  பலதிறப்படும் .  இவற்றுள்  ஒளத்திரி  தீக்ஷையானது  ஞானவதி , கிரியாவதியென  இரண்டு  வகைப்படும்  அவ்விரண்டும்  தனித்தனி  சமயம் ,  விசேடம் ,  நிருவாணம்  என  மூன்றுவகைப்படும் . இவற்றுள்  ஒளத்திரி   தீக்ஷை  பெறுதற்குப்   பிரமக்ஷத்திரிய  வசிய  சூத்திரர்களாகிய  நால்வருணத்தாரும் .  யோக்கியராவர். இன்னும்  இதன்விரிவும்  முறையும்  சிவாகமபத்ததிகளிற்   செவ்வையாக்  காணலாம் .  

        என்  இனிய  நண்பர்களே ! சிவவழிபாட்டிற்குரிய  யோக்கியதை யைப்  பறப்பிக்கும்  இத் தீக்ஷா  கிரியையை  நம்  வணிக மக்கள்  சென்ற  பதினைந்து வருடங்களாக  பாதரக்குடி  ஆசாரிய  பரம்பரையிலுள்ள  கருத்தரின்  வியவகாரத்தால்  இழந்து  அருமையாகப் பெற்ற  பிறப்பின்  பயனைப்  பெறாதிருக்கின்றனர் .  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னரே  தீக்ஷை  பெறத்தக்க  பருவமுள்ளவர்களெல்லாரும்  தீக்ஷையுடையரா யிருக்கின்றனரோ  வெனின் ;  அதுவுமில்லை .  அதற்குக்  காரணம் , விவாகமுடிந்தபின்னர்  தீக்ஷை செய்து கொள்ளல்  என்னும்  வழக்கமும் ,  பன்னூற்றுவர்  ஒன்றுகூடியே  செய்துகொள்ளவேண்டுமென்னும்  வழக்கமுமேயாகும் .  இவ்வழக்கங்கள்  சில  செளகரியங்களைக்  கருதி  யாசகரிக்கப் பட்டவை களேயன்றி  நூல்களால்  ஏற்படவில்லை யென்பது  யாவரு முணர்வர் . தீக்ஷை விவாக காலத்திற்கு  முன்னரே  ஏழாம்  ஆண்டிலாவது  ஒன்பதாம்  ஆண்டிலாவது  பெறவேண்டுமென்று  ஆகமம்  கூறுதலை  நோக்காது   புத்திர  பெள த்திரர்களையெல்லாங்  கண்டுகளித்தபின்னர் அவரெல்லாம்  பக்கத்திற்  சூழ்ந்துமகிழத்  தீக்ஷை  செய்துகொள்ளும்படி  யெவ் வாகமம்  விதிக்கின்றதோ ?  அறிந்திலேன் . அஃதொன்றோ  , ஒருமுறையிற்  குண்டமண்டலமிட்டு   ஆகுதி  முதலியன  செய்து  ஒருங்கே சிலர்க்கு  தீக்ஷை  செய்யவேண்டுமாயின்   தனித்தனியும்  சில  சம்ஸ்காரங்கள்  செய்தல்வேண்டுமென  ஆகமங்கள்  கூறியிருப்ப  . அதனை  நோக்காது  பன்னூற்றுவ ரொருங்குகூடி  ஒருவரை யொருவர்  சரீரபலத்தாலும்  பொருள் வலியாலும்  பிற்படுத்தி மிக்க  சிரமத்தோடு   முந்துதல்  எப்பயன்  கருதியோ ?  இனியேனும் ,  இத்தகைய   இல்லாத  விதிகளை   வழக்கமென்று  கொள்ளாமல்   முற்குறிப்பிட்டபருவம்  வந்தவுடனே   ஆசாரியனிருக்கு மிடத்திலாவது  அன்றி  ஆலயங்களிலாவது  விதிப்படி  தீக்ஷைபெறும்  முறையை  நம் பழக்கத்திற்  கொண்டு  வரவேண்டியது  அவசியமென்று  தெரிவித்துக்கொள்கின்றேன் . அநுட்டானம்  ஜபமுதலியன  சிறு பொழுது முதல்  ஆசரித்துவந்தால்  மனம்  அவற்றிற்  பதிந்து  நிற்பப்  பயனுறுவேமேயன்றி  ,  சிவகீதையிற்  கூறியபடி  கூற்றுவனார்  இருப்புப்  பாசத்தானும் ,  சுற்றத்தார்  உறவுக் கயிற்றானும்  இழுத்தற்குரிய பருவம்  நெருங்கி வரும்பொழுது  நாம்  செய்யக்கடவது  யாதுள்ளது .  

                                               ஆசாரிய  இலக்கணம் .

           இனி , இத்தீக்ஷாகாரியஞ்  செய்தற்குத்  தக்க  ஆசாரியராவார்  யாவரெனின் ;  சமயவிசேட  நிருவாண  தீக்ஷையுடையராய் , ஆசாரியாபிக்ஷேகம்  பெற்றவராய்  இலக்கிய  இலக்கண  தருக்க  நூல்களைக்  கற்றுணர்ந்தவராய்  , வேதாகமங்களை  யோதித்  தெளிந்தவராய் ,சித்தாந்த  சாத்திர  ஆராய்ச்சியுடையரா யுள்ளவரே  யாவர் .  நான்கு  வருணத்தாரும்  ஆசாரியராதற்குத்  தக்கவரேயாவர்  . இதற்குப்  பிரமானம்  வடமொழியில்  வரும்  சைவபுராணத்தானும்  ஆகமங்களானுமுணர்க .  இந் நான் கு   வருணத்தாருள்ளும்   பிராமணர்  தம்  வருணத்தாருக்கு , மற்ற  மூன்று  வருணத்தாருக்கும்  க்ஷத்திரியர்  தம்மவர்க்கும்  மற்ற  இரண்டு வருணத்தாருக்கும்  வைசியர்  தம்மவர்க்கும்   சூத்திரர்க்கும் ,  சூத்திரர்  தஞ்சாதியினர்க்கும்  ஆசாரியராகலாம் . இவருள்  முதன் மூவர்  வேதாகமங்களை  யோதுதற் கும்  பின்னவர்  ஆகமங்களை  யோதுதற்கும்  அதிகாரிகளாவர் ..  ஆகமங்களை  யோதுதற்கு   நால் வருணத்தாரும்   சிவ  தீக்ஷை  பெற்றா லொழிய  அதிகாரிகளாகார் . பிரமசரியாசிரமம் , கிருகத்தாசிரம மாகிய   இந் நிலையுடையாரே  ஆசாரியராதற்கு  யோக்கியராவர் . வானப்பிரத்தம்  சந்நியாசம்  ஆகிய  இந்  நிலையுடையார்  ஆசாரியாரா தற்கு  அருகரல்லர் .  இதற்குப்பிரமாணம் “பிரமசரிகிருகி யென்னவே பேசு, மிருவருமேதேசிகரென்றெண்”  சந்யாசி  பாரியுட னேவனத்திற் றங்குமவ , னென்னுமிவர் தேசிகரன்றே , எனவரும்   சைவசமய  நெறி வெண்பாக்களாலுணர்க . சைவாகமத்தில்  ஞானகாண்டம்  கிரியா காண்டமாகிய  இவைகளில்  ஓரிலக்கங்கிந்தமேனும்  ஓதினவரே  ஆசாரியாரெனவும் , ஐம்பதினாயிரம்  அல்லது  இருபத்தையாயிரங்  கிரந்தமேனும்  ஓதினவராக இருத்தல்  வேண்டுமெனவு  நூல்கள்  கூறுகின்றன .  இவ்வளவும்  வடமொழியில்  தெரிந்தவராக  இருப்பினும், இது தமிழ்  நிலமாதலின்   தம்மையடைந்த  மாணாக்கர்கள்  நல்வழிப்படப்  போதித்தற்கு   அம்மாணாக்கரெல்லாம்  வடமொழிப் பயிற்சி பெற்றிருத்தல்  கூடாமையால்  தமிழிலுள்ள  இலக்கிய  இலக்கண  சித்தாந்த  சாத்திரங்களையும்  தேவார  திருவாசக  முதலிய  அருட்பாக்களையும்  ஓதித் தெளிந்தவராகவும்  இருத்த்ல்வேண்டும் .  ஜீவகாருண்ணியம் , கடவுட்பக்தி , நடு நிலை , சொல்வன்மை  , பிறர்மனைநயவாமை , வரவின் மகளிர்ச் சேராமை  முதலிய  உயர்குணங்கள்   வாய்ந்தவராகவு மிருத்தல் வேண்டும் . தம்மைச் சார்ந்த  சுற்றத்தாரைப்  பேணுதலினும்  வேறு பல உலக விடயங்களினும்  , பொருட்சேர்த்தலினுமே  முக்கிய  நோக்கமுடை யாரை   ஆசாரியராகக் கொள்ளல்  கூடாது .  அவர்  ஆசாரியராயின்  தம்மையடைந்த   மாணாக்கர்களைப்  பொருட்பற்றிக்  கருதுவாரே யன்றிஅன்னார்  நன்மையெய்தலைக்  கருதமாட்டார் .  கருத்துவகை யங்ஙனமாயின்   அவரிடத்துப்  பெறுந்தீக்கை   யுபதேசங்கள்   உரிய பயன்களைச் செய்யா .  இனி  , எல்லா  இலக்கணங்களு நிரம்பிய   ஆசா ரியரிடத்து  மாணாக்கர்கள்  நடந்துகொள்ள வேண்டியவை  பலவுல .  வடமொழிப் பிரமாணப்படி  மாணாக்கன்  உடல்  பொருள்  ஆவி  மூன்றும்  ஆசாரியர்பொருட்டுத்  தத்தஞ்  செய்தற் குரியவனாகின்றா னெனின் ;  வேறு  விரிப்பதெற்றிற்கு ?  இனி,  நம்  வணிக  மக்கட்கு  இற்றைஞான்று   ஆசாரியத்  தானங்களாகவுள்ளவை  கலாமடத்துள்ள  பரம்பரையும் , பாதரக்குடிப்  பரம்பரையுமேயாம் . இவை  ஈசான  சிவாசாரிய  பரம்பரையென்று  நமது  சரித்திரமும்  இளைசைப் புராணமுங்   கூறுகின்றன . சில வருடங்களாக  பாதரக்குடியாரும்  நாமும்  ஆசாரிய  மாணவக  முறைக்கு  விரோதமான  செய்கைகளிற் றலைப்பட்டுப்  பொருளையுங்  காலத்தையும்  வீணாக்கினோம் .  அவ்வாசாரியர்  நம்மிடத்துச்  செய்யவேண்டியவைகளிற்றவறுறினும்  , நாம்  அவரிடத்து  நடந்துகொள்ளவேண்டியவைகளிற்   பிழை படினும்  ஆசாரிய  சிஷ்ய  முறையை  நோக்கிப்பொறுத்துக்கொண்டு  நடக்க வேண்டியவைகளைச்   சீர்பெறச்  செய்தலை  விட்டு  இங்ஙனம்  கலாம்  விளைத்தல்  நம்மவர்க்கும்  அவ்வாசாரியர்க்கும்  தக்கதொரு  காரிய மன்றாகும் . கூடிய  விரைவில்  எவ்வித  நெறியானும்   அவ்வாதீன  பரம்பரயைச்   செவ்விதாக்கிச்  சிவாக மோக்தசைவா நுட்டானத்தைப்  பெறவேண்டுவது   நமது  கடமையாகும் . தற்போது  கலாமடத்திலும்   சமீபகாலத்திற்   சிவபதமெய்திய  ஆசாரியர்க்குப்பின்னர்  இன்னாரை யத்தானத்தில்  உரியவராச்  செய்தல்  என்னும்  நிச்சயம்  உண்டாகாமல்   அவ்வாதீன  சீடர்களாகிய  நம்மவரும்  தீக்ஷையின்றி  யிருக்கின்றனர் . கூடிய விரைவில்  அவ்வாசாரியமூர்த்திகளின்  சுற்றத்தாருள்  சிறுவராக  இருப்பினும்  உரிய  குணங்களும்  பிற  இலக்கணங்களும் , அமைந் திருப்பின்  அத்தானத்திலமரச்செய்து  பின்னர்க் கல்வி  விடயத்தில்  நாம்  அஜாக்கிருதையாக  இராமல்  ஒவ்வொரு நாளும் நங்  கவனத்தைச்  செலுத்தி  முன்  குறிப்பிட்ட  இலக்கணங்களெல்லாம்  அவரிடத்து நிரம்பும்படி செய்தல்வேண்டும் .  இவ்விடயத்தி லிப்பொழுதே   நம்  கவனஞ்  செல்லுதலின்றெனில்  பின்னர்  மாறுபாடு  பல  விளையு மென்பதை  நீங்களே யறிந்துகொள்வீர்கள் . ஆசாரியர்  தக்க கல்வியும்  ஒழுக்கமும்   நிரம்பினராக  இருத்தல்  நமது கல்வியொழுக்கங்களின்   விருத்திக்கேதுவாகும் .  இவ்விடயத்தில்  தக்கபடி  காலத்திற்  கேற்றவாறு   திருத்திக்கோடற்குரிய   அறிவும்  ஆற்றலு  நிரம்பிய   உங்களுக்கு  யான்  கூறவேண்டுவது  யாதுளது ?  முடிவாக்  கூறுமிடத்து  நாம்  மத  விடயமாகத்   திருந்தவேண்டியவைகளிலிது   முக்கியமான  தொன்றாகும் .  எவ்வாற்றானும்  இவ்விரண்டு  ஆதீனங்களையும்  கூடிய  சீக்கிரம்  சீர்படுத்திக் கோடல்  நம்  கடமையே .

                                                 ஜீவகாருண்ணியம் .

          இனி , எல்லா  மதத்தினரு மேற்கொள்ளத் தக்கதும் , நம்  சமயத்திற்குச்  சிறப்பாக  வுள்ளதுமாகிய  ஒழுக்கம்  ஒன்றுள்ளது .  அதுதான்  ஜீவகாருண்ணியமாகும் . இவ்வொழுக்கம்  எல்லாவற்றினுந்  தலைசிறந்த தென்பது  பல நூல்களின்  கருத்து . இதனை  மேற்கொள்ளு வோர்  இன்றியமையாது  மேற்கொள்ளவேண்டியது புலால்வுணவை  நீக்குதலேயாம் ஒருவன் இவ்வுணவைக்  கொள்ளினுஞ்  சீவர்களிடத்துக்  கருணையுடையனாதல்  கூடும்  எனக்கருதுவாருமுளர் .அவர் , “பொருளாட்சி  போற்றாதார்க் கில்லை  யருளாட்சி ,  யாங்கில்லை  யூன் றின்பவர்க்கு  “  என்னுந்  திருக்குறளையும் , அதன்  விசேடவுரையில்  “ஊன்றின்றாராயினும்  உயிர்கட்கொரு  தீங்கு நினையாதார்க்கு   அருளாடற்கிழுக்கில்லை  யென்பாரை  மறுத்து  அஃதுண்டென்பது ….. கூறப்பட்டது “  என்று  கூறிய  பரிமேலழகர்  கருத்தையுஞ்  சிந்திப்பாராக வேதங்களில்  வேள்வி  நிமித்தம்  கோறலும்  ஊனுகர்தலும்  துறக்க  வின்பங்களை விளைக்குமென்றும்   பாவச்செயலாகா வென்றும்  விதித்திருப்பவும் ,  ஒவ்வோரொழுக்கத்தையுஞ்  செவ்விதுணர்ந் திருவள்ளுவதேவர்  “அவிசொரிந்தாயிரம்  வேட்டலினொன்றன்  , உயிர் செகுத்துண்ணாமை  நன்று”  என  அவ்வேள்விகளான்  வரும்பயனினும்  இக்கொல்லா விரதத்தான் வரும் பயனே  பெரிதாமென்று  கூறினார் .  இவ்விழுமிய  அருளொழுக்கத்தை   நம்மவரிற்  சிலர்  கைநழுவ விட்டிருக்கின்றனர் . நம்  பழஞ் சரிதத்தில் வகுத்த   சாதி முறை நியாயங்கள்  பலவற்றுள்  “ஜீவவதையான  வியாபாரங்கள்  செய்கிற தில்லை” என்பது மொன்று. இதனால்  வியாபார  நிஷேதந்தானே யன்றி  உண்ணல்கூடாதென்பதின்றேயெனின்நம்மவரிடத்துப் புலாலு ண்ணல்  அக்காலத்தின்மையானும் , சமயாசாரம்  இடந்தராமையான்  அதனை யெதிர்காலத்திற்  கொள்ளற்கு  ஒருப்படாரெனுந் துணிவானும், வியாபார  நிமித்தங்  கோடல்  ஒரு சமயம்  நேரவுங்கூடும் ; அதனை  விலக்கலே  யவசியமாகுமென்னுங்  கருத்தானும்  அங்ஙனம்  எழுதினா ரென்க . முன் இல்லாத இப்புலாலுணவை  நம்மவரிற்  சிலர்  பின்  விரும்புதற்கேது  என்னை  யெனின் ;  இந்நாட்டில்  நம்மவர்  குடியேறிய பின்னர்  இடையே  சிலகாலம்  புலானுண்ணன்  முதலிய  நிஷேதாசார முடைய  அநாகரிக மாக்கள்  பழக்கத்தில் விருப்புடையரா யிருக்க நேர்ந்தமையான்  அவர்  வழக்கங்கள் நம்மவரையும் பற்றி யிருக்கலாம்  அதனாலே தான்  பரமபதியாகிய  சிவ பெருமானை யன்றி வேறு  தெய்வங்களை வழிபடுதலில்லாத நம் மக்களிற் சிலர்  பிற்காலத்தில் அற்பபிரயோஜனங்களைத்  தரக்கூடிய  காளி, கருப்பன்  முதலிய  சிறு தெய்வ வழிபாட்டையுங்  கைப்பற்றினர்போலும் .”யாதொரு தெய்வங்  கொண்டீரத்  தெய்வமாகி  யாங்கே , மாதொருபாகனார்  தாம்  வருவர்”  என்றபடி.  அப்பரமபதி  நாம்  விரும்பிய  உருவத்தைக்  கொள்ளினும்  பலனளிப்பதில்  அவ்வவ்வுருவங்களுக்குத்  தக்கபடி  கொடுக்குமியல் பினராதலானும், நிரதிசய  இன்பமாகிய  மோக்ஷத்தைத்  தரத்தக்க  அவரது உண்மையுருவத்தை வழிபாடு  செய்தற்கு   யோக்கியதையுடை யோர்  அதனை யொழித்து அற்பப்  பிரயோஜனத்தைத்  தரத்தக்க  வேற்றுருவங்களைவழிபடுதல்  தக்கதன்றாதலானும் ,  சைவர்களாகிய  நமக்கு  அவ்வழிபாடு  அவசிய மின்றென்க . அரச சக்தியொன்று  அரசன் முதல்  சிறு சேவகன்  வரைய மைந்திருப்பினும்  அரசனிடத்துப்  பெறு  நன்மை  கீழதிகாரிகளிடத்துப்  பெறுதற்குக்  கூடாதவாறு போல  பரமேசுவரனுடைய  சக்தி யெல்லா வுருவங்களினு  நிறைந்திருப்பினும்  சிவலிங்க  முதலிய  வழிபாட்டினாற்  பெறும்பயன்  வேற்றுருவங்களின்  வழிபாட்டாற்  பெறுதல் கூடாதென்க .   இது  கருதியே  ஸ்ரீ சங்கராச் சாரிய  சுவாமிகளும் தமது சிவானந்தலகரியிற்  கூறியருளினார் .  இவ் விசாரத்தால்  நம்மவரிற்  சிலர்  இடைக்காலத்தில் மேற்கொண்ட  புலாலுணவையும்  சிறு தெய்வ  வழிபாட்டையும் ஒழித்த்ல்  வேண்டு மென்பது போதரும் . ஒருவன்  குழவிப்பருவத்தே  தன்  அவயங்களில்  மறைத்தற்குரியவைகளை   மறையாமையும் , அறிவு  முதிர்ந்த பின்னர்  மறைத்துக்கோடலும்  இயல்பாதலின்   இதுவரை  மேற்கொண்ட  அவை யிற்றை யினி யொழித்தல் தகுமென்க.

                                                   பெண் கல்வி.

       இனி , நம் பெண் மக்கள் விஷயமாகக் கவனிக்க வேண்டியவை களுஞ்  சிலவுள .  எல்லாக்கற்பிலக்கணங்களு  நிரம்பப்பெற்ற  நம்  பெண்மக்களுட்   சிலர்  நம்  சமயாசாரப்படி  கிருகத்திற்  செய்ய வேண்டிய   நித்தியகாரியங்களைச்  செவ்வையாகச் செய்தலிற்   சிறிது அசிரத்தை கொள்ளுகின்றனர் .  அதனையும் ,  குணவகைகளின்   மாறுபட்டிருப்பின்  அவற்றையும்  திருத்தலும்  நித்திய  ஒழுக்கங்களைக் கற்பித்து  அவ்வழி நிறுத்தலும்  அவரவர்  புருடர்களுக்குரிய  கடனாகும். இவற்றிற்கெல்லாம்  நம்  பெண்மக்களுங்  கல்வியுடையராயிருப்பின்  மிக நலமாகும் . பண்டைக்காலத்தில்  ஒளவையார்  பூதப்பாண்டியன்   றேவியார் ,  வரதுங்கராமபாண்டியன்  தேவி  முதலிய  பெண் மக்கள் இலக்கிய  இலக்கண  வரம்பு கண்ட பெரும்  பண்டிதைகளாக   விளங்கிரென்பது  அன்னாரியற்றிய  அருமை  நூல்களானுஞ்  செய்யுட்களானும் விளங்குகின்றது . பெண்மக்கள்  கல்வியுடையவரா யிருப்பின்  நிலைபிறழ்ந்து கெடுவர்  என்று  கூறுவாருஞ்  சிலருளர் . கல்வி  யில்லாத பெண்கள்  சிலர்  முறைபிறழ்ந்து கெடுதற்கு  அவர்  கூறுங்  காரணமென்னையோ?  கல்வியுடையவராயிருப்பின்  கூடியவரை   தம்  மதிப்பைப்  பேணிக் கொள்வதிலவர்  கருத்துச்செல்லு மென்பதிலையமின்று . இப்பெண்கல்வி விடயமாக  இக்காலத்து நாகரிகமக்கள் பலர்  பல பத்திரிக்கைவாயிலாகவும்  புத்தகவாயி லாகவும்  வெளியிட்டு  வருகின்றனராதலின் , யானிதுவிஷயமாக  விரிக்காது  ஒன்று கூறி  முடிக்கின்றேன் .  அஃதாவது நம்  பெண் மக்களைச்  சிறுபருவத்தில்  தந்தைமார்களும்  பின் அவரவர்  புருடர்கலும்  கல்வியானும்  பழக்கத்தானும்  சமயாசார  நியமத்திற்   சிரத்தையுடையராகச்  செய்வதேயாம் .

                                                  விவாகமுறை

          இனி ,நம்மவர்  விவாக  முறையைப்பற்றிச்  சில  ஆராயவேண்டுத வசியமாகின்றது . விவாகமாவது , பிரமசரியம் , வானப்பிரத்தம் , சன்னியாசம் என்னு  மூவகை  நிலையிலுள்ளாரும்    அவரவரொழுக்க நெறிகளின்  முடியச்செல்லுமளவும்   அச்செலவிற்குப்  பசி நோய் குளிர் முதலியவற்றான்  வரும்  இடயூறுவராமல்  உண்டியு மருந்தும்  உறையுளு முதலியவுதவி அவ்வந்நெறியில்  வழுவாமற்  செலுத்தற்கும்   பாதுகாப் பின்றித்  துன்புறுவோர்க்கும்   வறுமையாளர்க்கும்   தென்புலத்தார்க்கும் , முறையே  களைகணாதற்கும்  உணவு  முதலிய  கொடுத்தற்கும் , நீர்க்கடன்  முதலிய  செய்தற்கும்  உரித்தான  இல்லறத்தை  நடாத்தற்கு  ஒரு  தலைவனும்   தலைவியுங்  கூடுங்  கூட்டமாகும் . இம்மணம்  எட்டுவகைப்படுமென்று  நூல்கள்  கூறுகின்றன . இவற்றுள் , சில  மணம்  உயர்ந்த வருணத்தாரானும்  சில மணம்  இழிந்தவர்களானுங்  கோடற்  பாலனவாம் . இவற்றுட்பிராசாபத்தியம்  என்னு  மணமே  மகட்கொள்ளு வோரிடத்து  கொடுப்போர்  பரிசம்  வாங்கலாமென்று  விதிக்கின்றது .  மற்றவை  இங்ஙனம்  விதித்தில . இனி , அப்பிராசாபத்திய  விவாக  விதியிற்  கூறியாங்குப்  பரிசம்  வாங்குவதானால்  எவ்வளவு  வாங்கலாம் ?  அங்ஙனம்  வாங்கியவற்றை  யென்செய்யலாமெனின்  : வாங்கும்  பரிசத்துக்கிரட்டி  சேர்த்து  தம்  மகட்குக்  கொடுத்துவிடல்   வேண்டுமென்று  அவ்விவாக விதி கூறுகின்றது .  இதனை   “அரிமதருண் கணாயிழை யெய்துதற்குரியவன்  கொடுத்த  வொண் பொருளிரட்டி , திரிவின்றந்தை  திண்ணிதிற்  சேர்த்தி , யரியதங்கிளையோடமைவரக் கொடுத்தல் ,  பிரிதலில்லாப்   பிராசாபத்தியம் .”  என்னுஞ் சான்றோர்  கூற்றானுமுணர்க . ஆனால் , இதனினின்றும்  நாம் ஊகிக்கவேண்டியது  பெண்ணுக்குரிய  சீர்  முதலியவை  கொடுத்தற்குப் போதிய  பொருளில் லாதானொருவன் , அதற்கு  வேண்டிய   அளவுமுழுதும் வரனைச் சேர்ந்தாரிடத்து  வாங்கிக்கொடுப்பினுங்  குற்றமின்றென்பதேயாம் .  இங்ஙனமின்றி  மிகுதியாகப்பொருளை  வாங்கிக்கொண்டு   பெண் கொடுத்தலும் , அப்பொருளாற்றம்  சீவனகாரியம்   நடைபெற விரும்புதலும்  மிக்க பாவச்செயலாகுமென்று  அற நூல்கள்   கூறுகின்றன . இதனை  மநுஸ்மிடுதியானும் ,  “பொருள்விழைந்த ணங்கைக் கொடுத்தவன்றனக்கும் புகன்ற  முற்குற்றமேயடுக்கும் “  எனவரும்  தமிழ்ச் செய்யுளானு முணர்க .  இவ்விலக்குச் செயல்  நம்மவரிற்  சிலரிடத்து சற்றுப்  பெருகிவரத்  தலைப்படுகின்றது.  அறிவுடையோர்  கூடியவரை  இதனைச்  சிந்தித்து  நூன்முறையையுங் குலப்பெருமையையும்  போற்றுவாராக .  இனி , நம்மவரிற்  றக்க பொரு ளுடையாரிடது  இச்செயலின்றெனினும்  வேறொன்று  அவர்கள் சிந்திக்கவேண்டியதுளது . என்னெனில் : ஓரிளைஞனுக்கு  அவன்  வயசினுமேற்பட்ட  வயசையுடைய  பெண்ணை  மணம்  புணர்த்துகின்றனர் . இவ்விவாகம்  மேற்கூறிய  எண்வகை  மணத்துள்  விலக்கியவற்றின் பாற்படும் .  ஓரிளைஞன்  தன்வயசின்  மேற்பட்ட  பெண்ணோடு  கூடுவானாயின்  அவற்குப்  பல  தீங்குகள்  நேரிடுமென்று  நூல்கள்  கூறுகின்றன .  இம்மட்டோ  அவர்களுக்கு  தேக திடம் குறையுமென்றும்  அற்ப  ஆயுளையுடைய  சந்ததி யுண்டாமென்றும்  ஆயுர்வேதங்  கூறுகின்றது . வதூவரர்களின் வயசினி யமத்தைப்பற்றிய  பண்டைக்கால  வழக்கை  நோக்கினாலிப்போது  நமக்குச்  சிறிதும்  பொருத்தமாகத்  தோற்றாது .ஆயினும்  நான்கு  வருடங்களாவது   பெண்மகட்குப்  புருடன்  மூத்தவனாக  இருத்தல்  வேண்டும் . இதனால்  வரு  நன்மையையும்  மணமக்களின்  மிக்க  சிறியபருவத்திற் செய்யப்படும்   விவாகத்தினால்  வருந் தீமைகளை யும் நன்கு  ஆராய்ச்சிசெய்த பரோடாதேயத்தரசரும்   திருவனந்தபுரத்து  அரசரும்  இது  விஷயமாகச்  சிலவிதிகளை  யேற்படுத்தி  அவை  தந்தேயங்களிற்  பரவச்செய்திருக்கின்றனர் . மிக்க  இளம்பருவத்தில்  விவாகஞ்  செய்தலே  பல  பெண்மக்கள்  “மக்களிழந்த விடும்பையினு மனையாளிழந்தவிடும்பையினும் ,மிக்கவிடும்பையோவாதவி தவையி டும்பை”   என்று  கூறியபடி  வைதவ்வியம்  அடைந்து  துன்புறற் கேதுவாகுமென்பதும் , தக்கபருவம்  வந்துழிச்செய்தல்  இவ்விடர் பெரும்பாலு நேராதென்பதும்  அவர்கள்  கருத்தாகும் .  இவ்விஷயங் களை  நம்மனோருஞ்  சிந்தித்தலவசியமாகும் .   

                               விவாக  முதலிய  சடங்கு – விதிகள்

       இனி, இவ்விவாக  காலத்திற்  செய்யப்படுங் கிரியைகளும்  கிராத்தம்  சஷ்டியப்த  சாந்தி  முதலிய  கிரியைகளும்  விதிப்படி   நடைபெறுவதாகத்  தெரியவில்லை . விதியாவது வைசிய  தர்மத்திற்குரிய  வைதிக விதியை யன்று . அத்தருமாசரணை  சிலகால முன்னர்க்   கைவிடப்பட்டிருப்பதால்  சற்சூத்திரர்க்குள்ள  சிவாகம  விதியையே  நாம்  கொள்ளவேண்டுமென்பது  என் கருத்து . நாம்  இப்பொழுது  செய்யுஞ்  சிராத்தக்கிரியை  வைதிகமுறையுமின்றி   ஆகமமுறையுமின்றிச்  செய்விக்கும்  புரோகிதர்களின்  மணமுறை யைப்  பொறுத்திருப்பதாகத்  தெரிகின்றது .  அது  விஷயமாகச்  சேகரிக்கும்  பதார்த்தங்களும்   செலவுசெய்யும்  பொருள்களும் அளவிற்கு  மேற்பட்டவைகளே . எவ்வளவு   கொடுப்பினும்  புண்ணியமுண்டென்பதில்  ஐயமின்று . அங்ஙனங்  கொடுக்கப்படு வனவற்றைக்  கிரியையை யொழுங்குற   நடத்திக்கொடுத்தால்  மிக்கநன்றாகும் .  சஷ்டியப்த  சாந்தியில்   மிக்கப்பொருளைச்  செலவு செய்கின்றோம் . அச்சாந்திக்குரிய  சிவாகம பத்ததிகளிற்  கூறப்படும்  விதிகளைக்கவனித்தல்  சிறிதுமின்று .  அந்தணர்களெல்லாம்   பதினைந்து  கலசம்  வைத்துக் கிரியை  நடத்துகின்றனர் . .  நம்மவர்  சாந்தியில்  அறுபதுக்குமேற்  கலசங்கள்   பரப்பப்படுகின்றன.  அங்ஙனம்  பரப்பும்படி  விதித்த  நூல்  யாதெனவும்  , அந்நூலிற்  கூறப்பட்ட  அச்சாந்திக்குரிய  பிறகிரியைகள் யாவெனவும்  விசாரித்துச்  செய்தல் எனலாம் .  இவ்வாராய்ச்சி  நம்மனோரைப்  பொறுத்ததே  யன்றிப் புரோகிதர்களைப்  பொறுத்ததன்று . ஒழுங்காகத்  தெரிந்து செய்யவேண்டுமென்று   புரோகிதர்களைத்  தூண்டுவேமா யின்   அவர்கள்  கவனிப்பார்கள் . இச்செயல்களை  நம்  சமய  சாத்திர  விதிப்படி   திருத்திச் செய்துகோடல்  நம்மவர்  கடமையாகுமென்பதை  ஞாபகப்படுத்துதற்கே  யீண்டுச்  சில கூறினேன் .

                                                  வி யா பா ர ம் .

இனி , வியாபார  விஷயமாகக்  கவனிக்கவேண்டியவைகளுஞ்  சிலவுள.  முற்காலத்திற்  பெரும்பாலும்  பண்டமாற்ருதலானுஞ்  சிறுபான்மை  வட்டி  வாங்குதலானும்  நம்மவர்  பொருளீட்டியதாகத்  தெரிகின்றது .  தற்காலத்திற்  பெரும்பாலும்  வட்டித் தொழிலே  செய்தலும்  தத்தமக்குள்ள  முதலளவிற்கு  எவ்வளவோ மடங்கு  அதிகமாகக்  கடன்  வாங்குதலும்   மேற்கொண்டிருக்கின்றனர் . கடன்  மிகுதியாக  வாங்குத லான்  நம்மவருட்  சிலர்க்குச்  சமீபகாலத்தினேர்ந்த  துன்பத்தை நிதரிசனமாகத்  தெரிந்திருக்கின்றோம் . அறநூல்கள்  வட்டித் தொழிலை  முற்றிலுங்கூடாதென்று   விலக்கவில்லை . ஆனால் , சில  நியமங்களைக்  கூறுகின்றன . அவற்றைக் கைக்கொண்டு  ஒழுகுதலினும்  பண்டமாற்றுத் தொழிற்  சாலைகளாற்   பொருளீட்டல்   தரும முறையாகவும்  பொருட் பெருக்கத்திற்  கேதுவாகவு மிருக்கும் .  இவ்விஷயங்களை நன்றாய்ந்து  வியாபார நடத்து மேனாட்டார்  நம்மினும்  மிக்க  பொருள்  படைத்திருத்தலைக்  காட்சியிற் றெரிந்திருக்கின்றோம் . தொழிற்சாலை  முதலியவற்றால்  நமக்கு வட்டியினுமிக்க  பொருள்  வருவாயும்  பல  ஏழைமக்கட்கு  உய்யும்  வழியும்  உண்டாகின்றன . உலகத்துள்ளா ரொவ்வொருவரும்  தாம்  செய்யும் , ஒவ்வொரு  காரியத்தினும்  தம்பயனைக்  கருதுதலோடு  பிறர்  பயனையுங் கருதவேண்டியது முக்கியமாகுமென்று  முது  நூல்கள்  கூறு கின்றன . ஆதலின்  இவ்விஷயத்தை ஆலோசித்து  நடத்தன் மிக நலமாகும் .  

                                               த ரு ம ங்  க ள்

      இனி , நம்மனோர்  தருமங்களைப்பற்றிச்  சில  கூறுவேன் .நம்  வணிக  மக்கள்  செய்துவரும்  தருமங்களுள்  முக்கியமானவை , சிவாலயத்திருப்பணி  ,  அன்னசத்திரம் , வேதபாடசாலை ,  வடமொழி வித்யாசாலை  யென்பவைகளேயாம் . இவற்றுள்  வடமொழிக்   கலாசாலைபற்றி  முன்னர்க் கூறியுள்ளேன் .  மற்றவைகளைச்  சிறிதா ராய்வேன் .  சிவாலயத்  திருப்பணி , பதி புண்ணியமாதலானும் , நம்  சமயத்தைப்  பாதுகாத்தற்கும்  உலகத்துள்ளார்  பக்திநெறிப்படுதற்கும், உரியதாகலானும்  நாம்  செய்யவேண்டிய  தருமங்களுள்  மிகமேலான   தருமமென்பதில் ஐயமின்று . ஆனால்  அவ்வாலய தருமஞ்  செய்தற் குரிய இடத்தை  நோக்கி  யளவோடு செய்தலே  போதியதாகும் .  அங்ஙனமின்றி வணங்குவார்   சிலரிருக்கும்  ஊர்களில்  இலக்ஷக்கணக் கான  திரவியங்களைச்  செலவிட்டுச் செய்தன் மிகைச் செயலேயாகும். பேரூர்க்குத்   தக்கவாறு  பெரும்பொருள் செலவிடல் கூடுமாயினும்  சிற்றூர்க்குத்  தக்கவாறு  சுருக்கமான  பொருளால்  நீண்டநாள்  நிலை பெறச் சுருக்க அளவிற்  றிருக்கோயில் அமைத்தல் போதாதோ?  இதுவரை நம் வணிகமக்கள் செய்துவந்த இச்சிவாலய  நிருமித்தல், திரு நந்தனம் வைத்தல் , பசுமடம்  தாபித்தன்  முதலிய  எல்லாத் தருமங்களும் சைவசமயத்தில் நமக்கு இருக்கும் அன்பைக்காட்டும்  அறிகுறிகளேயாகும் . இனி , இக்காலத்திற்கேற்ற   அறங்களையும்  புதியமுறையிற்  றோடங்கன் மிகநலமாம் .அவற்றுள் நம்மவர்  வசிக்கும்  இந் நாட்டில்  பலரும்  நடத்தற்குரிய  வழிகளைச் செவ்வைசெய்தல் மிக முக்கியமானதொன்றாகும் . ஆனால்  இப்புண்ணியம்  பசு புண்ணியமாதலின்  பதி புண்ணியத்திற்  றாழ்ந்தது தானே யெனின் ; அப்பதி புண்ணியத்தைப்  பயப்பித்தற்கு  இது  சாதனமாகலானும் , திருக்குறளில்  “ஒப்புரவறிதல்” என்னும்  அதிகாரத்தில் இது முதலிய  அறங்கள்  மேலானவை யென்றும்  செல்வமுடையா ரொவ்வொருவரு மேற்கொள்ளவேண்டுமென்றுங்  கூறுதலானும் இக்காலத்து  மேம்பட்டதாகத்  தோன்றுதலானும்  சிறப்புடைத்தென்க .  

           இனிச்  சத்திர தருமம்  நம் நாட்டினும்  பிற இடங்களினும்  நம்மவரால்  நன்கு நடைபெறுகின்றது . அது மிகமேலான  தருமமாயினும்   அந்தணர்களுக்கேயன்றி  மற்றைச்  சாதியார்க்கு  அன்னமுதவல்  கூடதென்னும்  விதி பொருத்தமானதன்று . துறவிகள் , தொழில்  செய்து சீவனஞ் செய்யச்  சக்தியில்லாதவர்கள் , வயோதிகர்  சிறுவர்களாகிய   இவர்கள்  எச்சாதியாராயினும்  அன்னம்  உதவற்கும்  வழிப்போக்கர்  தங்குதற்கும்  உரிய  இடமன்றோ  சத்திரம் ; இவ்வியல்களைவிட்டுப்   பிராமணருள்ளே  யொழுக்கந்  தவரினவரா யினும்  செல்வராயினும்  அவர்களுக்கு  அன்னம்  உதவலும் , பிற வருணத்தா  ரொழுக்கமுடையராயினும் , வறியராயினும் , அவர்களுக்கு  உதவுதலின்மையும்  பெரியதோர்  குற்றமாம் .  வறியார்க்கொன்  றீவதே  யீகை யென சாதியைக்  குறியாது பொதுப்படக் கூறலு  மீண்டு கருதற்பாலது .  பலவாறு  கூறுவதென்னை ? இக்காலத்திற்  சத்திர மதிகரிக்க  அந்தணருள்ளே   சிலர்  தொழில்களை விட்டும்  கருமா நுட்டானங்களை  யிழந்தும்  சோம்பராகின்றனர் .  ஆதலின் , அதனை  நடாத்துவார்  ,  மேற்கூறியபடி  யெல்லார்க்கும்  இதம்பயக்கும்  வண்ணம் ஆராய்ந்துசெய்வாராக .  

            இனி , நம்மவரிற்  பெரும்பாலார்  ஒருவர்  ஒரு    தருமத்தைச்   செய்தற்குத்   தொடங்கினால்  மற்றவர்களும்  பயனை  நோக்காது அதனையே  தொடங்கக் கருதுவதல்லது  காலநிலைக்கும் ஜன சௌகரி யத்துக்குந்  தக்கபடி  வேறோரறத்தைச்  செய்தற்குக்  கருதுவதில்லை . அதனாலேதான் மனிதற்கு  இன்றியமையாத  மருத்துவச்சாலை  இந்நாட்டில் நம்மவரா நிலைபெற்றதாக ஒன்றேனுமின்று . நம்  வணிக மக்கள் வசிக்கும் நகரங்களுட்   சற்றுப்பெரிய   ஊர்களிளெல்லாம்  நோயாளிகளுக்குப்   பணம்  வாங்குவதன்றி  வைத்தியஞ் செய்யும்படி  வைத்தியசாலை  தாபித்தல் , பிணிநிலை தெரியாது மருத்துவஞ் செய்யக்கிளம்பும்  போலி வைத்தியர்  மிகுந்த இக்காலத்தில் பெரியதோரறமாகும் .  இத் தருமத்தின்  மேனாட்டார்  மிக்க விருப்பமுள்ளவரென்பது பல  சரித்திரங்களானும்  அநுபவத்தானும்  அறிந்திருக்கின்றோம் .  “நோயிலா  வாழ்வினால்  வாழ வேண்டும் “  என்று ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்  கூறியபடி  இந்நாட்டு  ஏழைச்  சகோதரர்கள்  நோயிலா  வாழ்க்கை  பெறுதற்கு  இவ்வைத்தியசாலை  நம் நகரங்களிலடுத்தடுத்து  இருப்பின் , எவ்வளவு  உபகாரமாகும் !  இதுவரை  இத்தருமத்தில்  நம்மக்கள் கவனஞ்  சிறிதுஞ் செல்லாமலிருந்தது வியப்பே !  எவ்வகை  யறங்களையுந்  தவறாமற் செய்யும்  எண்ணமுடைய  நம்மவர்கள் இத்தருமகாரியத்தை யேன்  பிறருக்கு விடல் வேண்டும் ?  இப்பக்கத்துள்ள  மற்றையோரினும்  வணிகமக்கள்  விசேடமான   தருமசிந்தையுடையராயிருப்பவும் , இக்குறைகளை ஏன் நம்மிடத்துக் கூறவேண்டுமெனின்?  “ஊருணிநீர்  நிறைந்தற்றேயுலகவாம் , பேரறிவாளன் றிரு “  என்று  திருக்குறள் கூறியபடி  எல்லார்க்கும்  இதம்பயக்கும்  எல்லா நல்லறங்களையும்  இடைவிடாது செய்தற்கேற்ற  பெருங்குணமும்  பெருஞ்செல்வமுடைய  நம்மவரா லித்திருத்தங்  கேட்கப்படின்  பயனாமேயன்றி  நீரின்மையும்  இறங்குதுறையு மில்லாத வெறுங்கிணறு  போன்ற  பிறர்  கேட்டமையானும்  கேளாமையானும் வருவதோர்  பயனின்றென்க.

                                         வேதாகம  பாடசாலைகள்

             இனி , வேத  பாடசாலையைப்பற்றிச்  சிறிது  நினைப்போம் . இத் தென்னாட்டில்   நம் சமயம் விருத்தியாதற்கு  “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” என்று  அருண்மொழித் தேவரருளியாங்கு   வேதங்களையுஞ்  சிவாகமங்களையும்  விருத்தி செய்தனங்கடமையே .  வேதமுஞ்  சிவாகமும்  ஒரு பொருளனவே .  சிவபெருமான்  பெருமையும், சீவர்களினியலும் , அப்பெருமானை  அவ் வான்மாக்க லடைதற்குத்  தடை யாகவுள்ள   மலங்களின்றன்மையும் , ஆன்மாக்கள் அம்மல சக்தியைக் கெடுத்துப்  பரமசிவனை யடைதற்குரிய  உபாயங்களும்  அப்பரமபதியோடு  இரண்டறக்கலந்து அநுபவிக்கும்  பேரின்ப  நிலையும் பிறவும்  வேதத்திற் பொதுவகையாகவுஞ்  சிவாகமத்திற்  சிறப்பு  வகையாகவும் விளங்க  அவ்விரு  முதனூல்களையும்  பரமசிவனே  யருளிச்செய்தனர் . வேதம் பொருள் பலபடத் தோன்றுஞ்  சூத்திரமும்  சிவாகமம்  அதனையங்ஙனமாக  வொட்டாது தெளிந்துரைக்கும்  பாடியமும் போலச்  சிவபிரானாலருளிச் செய்யப் பட்டன  வென்பார் பெரியோர் . இவ்வேத சிவாகமங்களுக்குப்  பேதமின்மையை  வேதாந்த சூத்திர மெய்ப்பொருள்கண்ட  ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியரும் ,

வேதமொடாகம மெய்யாமிறைவனூல்,

ஓதும்  பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக

நாதனுரையிவை  நாடிலிரண்டந் தம்

பேதம தென்பர்  பெரியோர்க்கபேதமே”

என்று  திருமூல தேவருந் திருவாய் மலர்ந்தருளியமையாலுணர்க . இங்ஙனம் அபேதார்த்த முதனூல்களான  வேத சிவாகமங்க ளிரண்டனையும்  பரிபாலித்தனங் கடமையாயிருப்ப   வேற  பாடசாலைகளை யொவ்வோரூரிலும் இரண்டு  மூன்று  நிலைபெற செய்தறகும் . ஆகம  பாடசலை யிரண்டிற்கு மேல்  நம்  தமிழ் நாட்டிலில்லாமற்  செய்தற்கும் , என்ன  நியாயமுளதோ?  “ஆகமமாகி நின்றண்ணிப்பான்றாள்  வாழ்க “  என்று  ஸ்ரீமத் , மாணிக்கவாசக சுவாமிகள்  கட்டளையிட்டருளியவாறு  சிவபிரான்  சிவாகம வுருவாகவுள்ளாராதலின்  அவ்வாகம பரிபாலனம்  சிவபூஜைப் பயனைத் தருமென்பதி லென்னை கொலையம் ! வேதபாடசாலை  நம் நாட்டிலெவ்வளவுள்ளனவோ  அவ்வளவு ஆகம பாடசாலை யிருந்தா லன்றோ  நம் சமயம் விருத்தியடையும் .  வேதபாடசாலைகளை நியமித்தற்கு  நம்மவரை யன்றிப் பிறரும்  பலருளர் .  ஆகமங்களப்  பேணுவார்  நம்மையன்றிச் சிலரேனும் இருப்பாரென்பது சந்தேகமே .  சமீப காலத்தில்  தேவி  கோட்டையுலுள்ள  சிவதரும பரிபாலகராகிய  நம் வைசிய மக்கள் சிலர் சிவாகம பரிபாலன நிமித்தம் பொருள் தொகுத்து  வைத்திருக்குஞ் செய்தி , சைவமக்கட்கெல்லாம்  பெரு மகிழ்ச்சி  விளைவிப்பதாகும் .  ஆனால்  அவ்வாகமங்களை யெல்லாம்  ஒன்று  சேர்த்துப் பூஜிக்கவேண்டுமென்பது  அவர்கள் கருத்து .  அது  மிக  நல்லதாயினும்  சிறிது சிறிதாக  அச்சிட்டு வெளிப்படுத்தி வருதலே   பரிபாலனஞ் செய்ததாகும் .  சிவாகமம்   பரிபக்குவர்க்கன்றி  யளித்தல் தகாதெனின் , வேதங்களும்  உபநிடதங்களும்  சித்தாந்த  சாத்திரங்க ளும்  பிறவும் அச்சின்   வாயிலாக வெளிப்பட்ட இக்காலத்தில்   அது பொருந்தாதென்க .பரிபக்குவரல்லாதார் குருவின் முகமாகப்  பெறுதலே கூடாது .  அச்சுப்புத்தக வாயிலாகப்பார்த்தல்  குற்றமின் றென்பது பல  அறிஞர் துணிவு .

                                                தே வா ர  பா ட சா லை

            இனித்  தமிழ் மறையாகிய  தேவராதி யருட்பாக்களை யோ துவதற்குரிய  தேவார பாடசாலைகள்  தாபித்தலும் அவசியமாகும் .  தேவார  திருவாசகங்களாற்  சமயாசாரியர் செய்தருளிய  அற்புத அருட்செயல்களும்  பிறவும்  பெரிய புராண வாயிலாக  நன்குணர்ந்த  உங்களுக்கு  யான்  கூறவேண்டிய தென்னை?  வேதாரணிய  க்ஷேத்திரத் தில்  ஆரிய வேதங்களான்  மூடப்பட்ட  கதவு தேவாரத்தாற்  றிறக்கப்படு மாயின்  தேவாரங்கள்  தமிழ் மறையென்பதில் ஐயம் யாதுளது ? “வேதநெறி  தழைத்தோங்க”  என்பதிற்கிலக்காக  இத்தமிழ்  மறைகளை யும் ஓம்பல்  நமது  கடனே .

                                                         ஒ ற் று மை

         என்னருமைச்  சகோதரமணிகளே !  யான்  இத்தனையுங்  கூறி வந்த எல்லாவற்றையுஞ் சீர் செய்து கோடற்கு  ஒரு காரிய முக்கியமாக வுள்ளது .  அது  கைவரப்பெற்றாலெல்லாஞ்  செவ்வையாகும் .  அதுதான்  யாதெனின்  ஒ ற் று மை  யென்பதே.  சிறியேனாகிய  யான்  கூறிவந்த  சீர் திருத்தங்களுள் ஒவ்வாதன  சிலவுளவாயின்  அவற்றைத் திருத்தித்தர  யான்  கேட்டலும் , அதற்கு நீயிர்  அன்புடன்  உடன்பட்டு  அங்ஙனமே  செய்தலும் ஒற்றுமைக்கு  அங்கங்களாகும் , இங்ஙனமின்றி யான்  எழுதியவற்றையே சாதிக்கவெண்ணுதலும்  நீயிர்  இவனோரு சிறுவன்  கூறுதலையா மேன்  அங்கிகிரிக்க வேண்டுமென்று  கலாம்  விளைக்கக் கருதலும் , ஒற்றுமை  யின்மைக்கு  அங்கங்களாகும் . இவை போலவே  யெவ்விக்ஷயத்திலுங் கொள்க .  இவ்வருமையாகிய  ஒற்றுமை மணியை  யெந்தத்தேயம்  பெற்றிருக்கின்றதோ, அதுவே  திகந்தம்வரை  தன்  இசையொளியைப்  பரப்பும். நாமெல்லாம்  விகற்பமின்றிச்  செய்யவேண்டியவைகளை   விடாது  தொடங்குவே மாயின், கூடியவிரைவில்  நம்  எண்ணம்  திருவருளால் நிறைவேறு மென்பதில்  ஐயமின்று .  “எண்ணியவெண்ணியாங்கெய்துப வெண்ணி யார் , திண்ணியராகப்பெரின் “  என்னும்  பொதுமறையையுஞ்  சிந்தித்து நோக்குக .  

             இவ்வியாசத்துட்  கூறியவைகளையும்  இன்னும்  நம்மவர்க்கின்றி  யமையாத  பிறவற்றையும் நாம்  எல்லாரும்  மொருங்கு  கூடிச்சூழ்ந்து  செய்தற்குரித்தாக ஒரு காரியம்  செய்யவேண்டுமென்னும்  எண்ணம்   என்  உள்ளத்திற்  பலநாளாகக்  குடிகொண்டுள்ளது .  அதனை  வெளியிடுவதற்கு  இதுவே  தக்க  சமயமென்றெண்ணுகின்றேன் .

                                                  ம கா ச பை

     என்னை யெனின் , குன்றக்குடி , கானாடுகாத்தான் , தேவிகோட்டை, காரைக்குடி ஆகிய  இப்பெருநகரங்களுள்  ஒன்றில் நம்  வணிக மக்கட்கெல்லாம்  பொதுவாக “வைசிகமகாசபை”  என்னும்  பெயரால்  ஒரு சபை   தாபித்தல்வேண்டுமென்பதூஉம் , அச்சபையின்  அங்கங்களாக  வித்தியாசாலை  ,  புத்தகசாலை  முதலியன நிறுவுதல்  வேண்டுமென்பதூஉம் , அவ்வித்தியாசாலையில்   தமிழ்  வடமொழி  ஆங்கிலம்  இப்பாக்ஷைகளை  வரு மாணாக்கர்களுக்கு  உண்டி உடை கொடுத்துக் கற்பித்தல் வேண்டுமென்பதூஉம் , நாவன்மை  மிக்க  உபந்நியாசகர் சிலரை  மாத வேதனமுதவி  உபந்நியாசராக நியமணஞ் செய்து   அவர்களைக்கொண்டு  அச்சபையிலும்  ,  ஜனக்கூட்டத்திற்கு   ஏதுவான  உற்சவம்  முதலிய விசேடமுள்ள  நம்  நகரங்களிலும் , கடவுட்பக்தி ,கல்வி , சமயாசார முதலிய பல விஷயங்களை  யுபந்நியாசிக்கச் செய்யவேண்டுமென்பதூஉம் , அக்கழகத்தைத்  தலைமையாக்கொண்டு  வேறு நம்  நகரங்களிலுள்ள  கலாசாலைக ளையும்   சபைகளையும்  கிளைகளாக அமைத்து அக்கிளைக் கலாசாலைகளிற்   கற்கு மாணவர்களை  ஆண்டுகடோறும்  பரீக்ஷித்துப்  பரிசு கொடுத்தல் வேண்டுமென்பதூஉம் , கிளைச்சபையார் விரும்பும் பொழுது  மகாசபியினின்றும்  உபந்நியாசர்களையனுப்பி  யுபந்நி யாசஞ்  செய்வித்தல் வேண்டுமென்பதூஉம் , பிறவுமாம் . இவற்றிற்கெல்லா  மூலதன  மிகுதியாக வேண்டும் . சிவாகமங்களை  வெளிப்படுத்தற்குரிய  வேலைகளும்  அம்மகாசபையிலே  செய்யலாம்  கூடுமாயின்  பத்திரிக்கையொன்று  அச்சபையினின்று  வெளிப்படுத் தலாம் .  இன்னும்  அப்போதப்போது பயனுடையவாக்கருதப்படுங்  காரியங்களையுஞ் செய்யலாம் . இவ்விஷயமாக  நம் நண்பர்க  ளுள்ளத்திற்  சிவபெருமான் விருப்பத்தை யுண்டாக்குவாராயின் , அவர்கள்  செய்யும்  பணியை  இயன்றவரை  செய்தற்கு  யானுங்  கடமைப்பட்டிருக்கின்றேனென்பதையுந்   தெரிவித்துக்கொள்கின்றேன்  எல்லாம்  வல்ல  சிவபெருமான் விரைவிற்  றிருவருள்  புரிவாராக .

                                                       மு டி வு ரை

    இதுகாறுங்  கூறியவற்றால் , வனிக  மக்களாகிய  நம்மவர்  மேற்கொள்ளவேண்டிய   திருத்தங்களுண்  முதலில் , எல்லாவற்றிற்குந்  துணைக்கருவியான   கல்வியை  முறையாகக்  கற்றல் வேண்டுமென்பதூஉம் ,  அங்ஙனங்  கல்லாமையான்  வரும்  ஏதங்களின்னவை  யென்பதூஉம் ,  முறையாகச்  சிலநாட்  கற்பினும்  அதனானலம்பலவுண்டாமென்பதூஉம் ,  அங்ஙனங் கற்கப்படு மொழிக ளுண்  முதலினமக்குரிய   இயற்கைமொழியாகிய  தமிழையே  கற்றல் வேண்டுமென்பதூஉம் , அவ்வந்நிலத்து மக்கட்குரிய  இயற்கைமொழி களின் இலக்கணங்களின்னவா மென்பதூஉம் ,  நம்மனோர்க்குரிய  செந்தமிழ்  மொழியின் பெருமைகளைப் பரியவா மென்பதூஉம் ,  அதனை யிளமையிற்  கற்றலவசிய மென்பதூஉம் ,  நம்மவர்  கல்வி நிலை சிறிது குறைவுடையதாகக் காணப்படுதலான்  விரைவிலக் குறையை  யொழித்தல்  வேண்டுமென்பதூஉம் ,  அதற்குபாயம்  நம்  நகரங்களிலெல்லாங்  கல்விச்சாலை நிறுவுதலேயாமென்பதூஉம் , அக்கலாசாலைகளை யின்னவாறு நடத்தல் வேண்டுமென்பதூஉம் ,  அதற்குப்பொருள் கொடுப்போர் பெறும் புண்ணியம்  பெரிதாமென் பதூஉம் ,  அக்கலாசாலைகளில்   ஆங்கிலமொழி  வடமொழிகளையுங் கற்பித்தலவசிய  மென்பதூஉம் , அவற்றால்   விளையு  நன்மை களின்னவை  யென்பதூஉம் , வடமொழியை  நாங்கற்பதற்கு  ஏதுஇன்னதென்பதூஉம் , நம்மவர் நிறுவிய   வடமொழிக் கலாசா லைகளை யின்னவிதம்  நடத்தல் வேண்டுமென்பதூஉம்,  கலாசாலைகளோடு  நம்  ஊர்களுட்  சிற்சில  முக்கிய  நகரங்களிற் சபை  தாபித்தலவசிய மென்பதூஉம் , நம்  சமயமாகிய  சைவத்தின் மாட்சிகளின்னவென்பதூஉம் ,  நம் முன்னோரெல்லாம் இச்சைவசமய ஒழுக்கத்தையே பற்றி நின்றவரென்பதூஉம்,  சைவர்களுக்குரிய  இலக்கணங்களுள்  உயிர் போன்றது பஞ்சாக்கர ஜபமென்பதூஉம் ,  மிக்க மகிமையுடைய  அப்பஞ்சாக்கரத்தை ஜபித்தற்குரிய அதிகாரிகள் சிவதீக்ஷை யுடையாரென்பதூஉம் , அத்தீக்ஷையின்  மகிமைகள்  இலக்கணங்களின்னவென்பதூஉம் ,  அதனைச்செய்தற்குரிய ஆசிரிய ரின்ன இலக்கணமுடையவராயிருத்தல் வேண்டுமென்பதூஉம் ,  அதனை ஒவ்வொருவரும் இன்ன காலத்தில் இன்னவிதமாகச் செய்துகோடல்  வேண்டுமென்பதூஉம் ,  இவ்விஷயத்தில்  நம் கவனமிகவிரைவிற்  செலுத்தப்படல்  வேண்டுமென்பதூஉம் , நம்  சமயா சாரத்திற்குரித்தல்லாத  புலாலுணவைச்  சிலர்  இடையே  கைப்பற்றியதற்குக்   காரணம்  இன்னதென்பதூஉம் ,  சிவவழி பாடேயன்றிச்  சிறு தெய்வ வணக்கம்  அவசியமின்றென்பதூஉம் ,  நம்மவர்  விவாக  முறையிற் றிருந்த  வேண்டியவை  யின்னவென்பதூஉம் ,  விவாகம் , சிராத்தம் , சஷ்டியப்த சாந்தி  முதலிய வற்றின் கிரியைகள்  செவ்வையாக  நடைபெறவில்லை யென்பதூஉம் ,  அவற்றைத் திருத்திக்கோடலவசியமென்பதூஉம் ,   வியாபார  விஷயத் திற்  கவனிக்கவேண்டியவை  இன்னவென்பதூஉம் , நம்மவரிதுவரை செய்து வந்த தருமகாரியங்களிற்  சிலவற்றைக்  காலத்துக்கு  ஏற்றவாறு  திருத்தி நடத்தவேண்டுமென்பதூஉம் ; வைத்தியசாலை தாபித்தல் , நடத்தற்குரிய நெறிகளைச்  சீர்படுத்தன்  முதலிய  அறங்கள்  இந் நாட்டிலிப்பொழுது செய்யத்தக்கவைகளாமென்பதூஉம் , நம்மவர்  நிறுவிய  வேதபாடசாலைகளெவ்வளவோ   அவ்வளவு  சிவகாமபாட சாலைகள்  நிலைபெறச்  செயவேண்டுமென்பதூஉம் ,  சிவாகமப் பெருமை  செப்பற்கரியதென்பதூஉம் ,  தமிழ் மறையாகிய   தேவார பாடசாலைகளின்னுந் தாபித்தல்  வேண்டுமென்பதூஉம் , இத்துணைக் காரியங்களையும் செய்தற்குரிய  சிறந்த  சாதனமாகிய  ஒற்றுமைக்   குணத்தை நாமெல்லாருமுடையராயிருத்தல்  வேண்டுமென்பதூஉம் , நம் வணிகமக்கட்கெல்லாம்  பொதுவாக  ஒரு  மகாசபை  தலை நகரினிலைபெறச்செய்தன் மிக நலமென்பதூஉம் ,  பிறவும் ஒருவாறாக  விளக்கப்பட்ட பொருள்களாம் .

         “எல்லா  நூல்களும்  பழைமைபற்றிக்  கொள்ளத்தக்கனவாதலும், இன்று ; புதுமைபற்றித்  தள்ளத்தக்கனவாதலும்  இன்று  ;  அறிவுடையார் குணங்குற்றங்களை  யாராய்ந்து  நல்லவை கொள்வர் ; அறிவில்லார் தாம்  ஒன்றையும்  ஆராயாது பிறர் கூற்றைக்  கடைப்பிடிப்பர் “ என்று  கவிகுல திலகராகிய   காளிதாசர்  கூறியபடி  இவ்வியாசத்துள்  உங்கள் நற்கருத்தைச் செலுத்திக் கொள்வன கொள்ள வேண்டுகின்றேன் .

                                                       வாழ்த்து

அருளுடைச் சிவனா ரன்பிவ் வணிநிலத் துள்ள மக்கள்

இருளறப் பொலிக வீச நிணையடி மறவா வாழ்வே

பொருளெனப் போற்று மன்பர் புகழ்நனி யோங்க வுண்மைத்

தெருடரு நெறியாஞ் சைவஞ் சிறந்துமீக் கிளர்ந்து வாழ்க.

உமிழொளிப் பாநு போற்றன் உயரிசை பரவ வோங்கித்

தமிழ்மொழி வாழ்க வெல்லா அறங்களுந் தழைத்து வாழ்க

அமிழ்துறழ் மொழியாள் பாக நருளினால் வணிக மக்கள்

இமிழ்திரை ஞாலத் தெல்லா இன்பமும் பெற்ரு வாழ்க .

                    நகரத்தாரின்  சீர்திருத்தம் முற்றிற்று .

பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

பண்டிதமணி

(வாழ்க்கை வரலாறு)

எழுதியது

பெருமழைப் புலவர்

திரு பொ. வே. சோமசுந்தரனார்

(வெளியீடு: 1954)

தோற்றுவாய்

பண்டைக்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சமண புத்த சமயங்கள் மிகவும் செல்வாக்கடைந்து, சைவ வைணவ சமயங்கள் பெரிதும் வீழ்ச்சியடைந்தன என்றும், அக்காலத்தே இறைவன் திருவருளாலே திருநாவுக்கரசர் முதலிய சைவசமய குரவர்களும், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும் தமிழகத்தே தோன்றி, வீழ்ச்சியுற்ற சைவ வைணவ சமயங்களின் சிறப்புகளைப் பல்லாற்றானும் மக்கட்கு தெரியக்காட்டி அச்சமயங்கள் தழைத்தோங்குமாறு செய்தருளினர் என்றும் வரலாற்று நூல்கள் விளம்புகின்றன.

மக்கள் வாழ்க்கைக்குப் பெருமை தருவனவற்றுள் தலைசிறந்தவை சமயமும், மொழியும் எனலாம். இவ்விரண்டுமே விலங்கியல் வாழ்க்கையினின்றும் வேறு பிரித்து மக்களை உயர்திணை என்று கூறுதற்குரிய சிறப்பை நல்கி, மக்கள் வாழ்க்கையின் சீரிய பயனை எய்துவிக்கும் தெய்வீகக் கருவிகளாம். ஆதலால் இவற்றை நன்கு பேணிக்கொள்ளுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் முதற்கடமையாகும்.

சமயமும் மொழியின் உதவியின்றேல் வீழ்ச்சியுறும்; ஆதலின் சமயத்தினும் மொழியே சிறப்புடைக் கருவி எனலாம். இச்சிறப்புணர்ந்து போற்றும் நாடு பெரிதும் முன்னேற்றமடையும். இதைப் போற்றாத நாடு பெரிதும் வீழ்ச்சியுற்றுத் தன் ஒன்னார்க்கு அடிமைபுகும் என்பது உறுதி.

பண்டு, சைவ வைணவ சமயங்கள் வீழ்ச்சியடைந்தனவே யல்லாமல், நம் தாய்மொழி வீழ்ச்சியடைந்ததில்லை. கி. பி. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நம் நாட்டின்கண் ஒற்றுமை உணர்ச்சி குன்றி, மக்கள் தம்முட்கலகம் விளைத்துக்கொண்டு, வெள்ளையர்க்கு அடிமையாயினர். அயலோர் ஆட்சியில் நம் தமிழகமட்டும் அன்று; நம் இந்திய நாடே அடங்கிக் கிடந்தது.

இக்காரணத்தால் நாட்டில் அறியாமைப் பேரிருள் மிகுந்து, மக்கள் தந் தாய்மொழியின் அருமை பெருமைகளை உணர்ந்து போற்றும் மதுகையில்லாதவராய்த் தம் பெருமை குன்றி வீழ்ச்சியடைந்தனர். அரசியலார் மொழியாகிய ஆங்கிலமொழிக்கே பெருஞ்சிறப்பளிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கே ஊதியம் வழங்கப்பட்டது. ஒரோவழித் தந்தாய்மொழிப் பற்றுடையராய் அதனைப் பயின்ற அறிஞரைப் போற்றுவார் யாருமிலர். பண்டு உலகெலாம் புகழ்வீசித்திகழ்ந்த நந்தமிழன்னை, தன்னைப் போற்றுவார் இல்லாத ஏழையாய் ஒடுங்கினாள். அவள் பழம்பெருஞ் செல்வமாகிய இலக்கியக் கருவூலங்கள் எல்லாம் அழி நிலை எய்திக் குறைந்தும் மறைந்தும் போயின. இதற்கு முன்னர் என்றும் கண்டறியாத வீழ்ச்சியை நம் தமிழன்னை எய்தினாள்.

பண்டு மெய்ந்நெறியாளர்களாகிய சமயங்கள் வீழ்ச்சியுற்ற போது, நாயனார்களும் ஆழ்வார்களும் தோன்றியதே போன்று மக்கட்கு உறுதிபயப்பதாகிய மொழி வீழ்ச்சியுற்ற அப்பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நம் தமிழகத்தே பற்பல இடங்களினும் பற்பல பெரியோர்கள் தோன்றலாயினர். நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் தோற்றுவித்துச் சைவ வைணவ சமயங்களை நிலைநிறுத்திய இறைவனே இப்பொழுதும் நமது தெய்வத் தமிழை நிலைநிறுத்தத் திருவுளங்கொண்டு, இவ்விருட்காலத்தே அறிவொளிமிக்க இப்பெரியோர்களைத் தோற்றுவித்தனனாதல் வேண்டும். இவர்கள் தாம் தோன்றியிலரேல் நம் ஒப்பற்ற சிந்தாமணியையும், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும், இன்னோரன்ன அறிவுக் கருவூலங்கள் பிறவற்றையும் இழந்து யாம் வறியராய்க் கிடப்பது திண்ணம்.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழியை மீண்டும் வாழ்விப்பதே தம் பிறப்பின் குறிக்கோளாகக்கொண்டு முயன்று, தாங்கருதியபடியே தமிழ்மகளைப் பெருவாழ்வுறுத்திய இப்பெரியோர்களில் தலைசிறந்த சிலரை மட்டும் கூறுகின்றேன். உயர்திரு மறைமலையடிகளார் அவர்கள், மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், திரு வி. கலியாணசுந்தரமுதலியார் அவர்கள், திரு நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், திரு நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி திரு மு. கதிரேச் செட்டியார் அவர்கள், திரு ரா. இராகவையங்கார் அவர்கள், திருவாளர் ரா. பி. சேதுப்பிள்ளை யவர்கள் ஆகிய இவர்களும், இவர்கள் தொண்டிற்கு உறுதுணையாய் நின்ற வேறு சிலரும் ஆவர்.

பண்டு சமய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் செய்ந்நன்றியறியும் நம்முன்னோர்கள் உருவச்சிலை செய்து திருக்கோயில்களில் அமைத்துத் தெய்வமாகப் போற்றி வருவாராயினர் அல்லரோ? அங்ஙனமே, இப்பெரியோர்களை யாமும் உருவச்சிலை எடுத்துத் தெய்வமாகப் போற்றுதல்வேண்டும். அங்ஙனம் செய்வது நமக்கே ஆக்கஞ்செய்து கொள்ளுமொரு நற்செயலாகும். எனவே மேற்கூறிய பெரியார்களுள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களின் வரலாறும் சிறப்பும் விளக்கும் பொருட்டே இந் நூல் எழுந்ததென்க.

  1. நாடும் ஊரும்

“வடவேங்கடத் தெங்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தே” சேர சோழ பாண்டிய நாடுகளாகிய முத்தமிழ்நாட்டில் நம் பண்டிதமணியவர்கள் பாண்டி நாட்டில் தோன்றியவராவர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்ச்சியின் பொருட்டுச் சங்கம் வைத்தும், நல்லிசைப் புலவர்கட்குச் சிறந்த பரிசில்கள் அளித்தும், பத்துப்பாட்டாதிய இலக்கியச் செல்வங்களைத் தொகுத்தும், தொல்காப்பிய முதலிய இயனூல்களைத் தோற்றுவித்தும், இன்ன பிற பணிகளாலே தமிழாக்கங் கண்ட நாடு அச்செந்தமிழ்ப் பாண்டிநாடன்றோ! தமிழ்மொழி, மூன்று தமிழ் நாட்டிற்கும் பொதுவாயினும், அதன் வளர்ச்சியிற் பெரிதும் முயன்றமை கருதி அம்மொழியைக் “கூடற்றமிழ்”  என ஆன்றோர் அழைப்பதும் உண்டு.

பாண்டி நாட்டின் கண் உள்ள உட்பகுதிகளாகிய சிறிய நாடுகளில் பூங்குன்ற நாடு என்றோர் நாடுளது. இது இருபத்து நான்கு பற்றுக்களைத் (பட்டிகள் அல்லது கிராமங்கள்) தன்னகத்தே கொண்டது. அவ்விருபத்து நான்கு பட்டிகளுக்கும் தலைமையிடமாய்த் திகழ்வது மகிபாலன்பட்டி என்னும் திருநிறைமூதூர். இம்மூதூரே நம் பண்டிதமணியவர்களை ஈன்றளித்த பெருமையுடையதாகும்.

பூங்குன்ற நாடு என்னும் இனிய சொற்கேட்டவுடன் தமிழுணர்ந்த பெரியோர்கள் உளத்தே கணியன் பூங்குன்றனார் என்னும் பண்டைநாள் நல்லிசைப் புலவர் ஒருவருடைய திருப்பெயர் நினைவில் எழா நிற்கும். புறநானூறு என்னுந் தொகைநூலின்கண், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் ஒப்பற்ற பாடலை யாத்தவர் கணியன் பூங்குன்றனாரேயாவர். இப் பழம்புலவரும் இவ்வூரிலே தோன்றினவர் என்று அறிஞர் கருதுகின்றார்கள். மகிபாலன்பட்டியிலே உள்ள ஒரு திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் அம்மையின் பெயர் பூங்குன்ற நாயகி என்றே இன்றும் வழங்குகின்றது. அச்சிறு நாடும் இன்றும் பூங்குன்ற நாடென்றே வழங்கப்படுகின்றது.

புறநானூற்றின்கண்ணுள்ள நானூறு பாடல்களுள்ளும் தலைசிறந்த பாடலாகத் திகழ்வது கணியன் பூங்குன்றனார் பாடல் என்பது மிகையாகாது. ஞானத் தெளிவுடைய அப்பாடல் கடல் போன்ற ஆழமுடையது. அதனைப் பாடிய புலவரும் திறவோர் காட்சியில் முழுதும் தெளிந்து மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலராய்ச் சிறியோரை இகழ்தல் அதனினும் இலராய், வாழ்க்கை இனிதென மகிழ்தலும், இன்னாதென்று முனிதலும் இலராய் அமைந்து வாழும் சீவன்முத்தராகத் திகழ்கின்றனர். இத்தகைய ஞானத் தெளிவுமிக்க புலவரைத் தோற்றுவித்தற்குரிய சிறப்பு அந்நாட்டிற்கு – அவ்வூர்க்கு – உளது போலும். ஏனெனில் நம் பண்டிதமணியவர்களும் எவ்வாற்றானும் அக்கணியன் பூங்குன்றனாரையே ஒத்திருக்கின்றார். கணியன் பூங்குன்றனார்க்கும் “யாதும் ஊர்; யாவரும் கேளிர்.” நம் பண்டிதமணியார்க்கும் “யாதும் ஊர் யாவரும் கேளிர்”. அவ்வழகிய பனுவலிற் காணப்படும் ஏனைய சிறப்புகள் எல்லாம் நம் பண்டிதமணியும் உடையர்.

மகிபாலன்பட்டி இயற்கை காட்சியில் மிகவும் அழகான ஊராகும். தெளிந்த நீரையுடைய ஏரிகளும், ஆழ்ந்த குளங்களும், நெடிய கால்வாய்களும், அடர்ந்த மரச்சோலைகளும், ஊரைச் சூழ்ந்த குறுங்காடுகளும் ஆண்டுள்ளன. அழகுணர்ச்சியுடைய கலைஞர்கள் ஆர்வத்துடன் வாழ்தற்கேற்ற ஊராகும் அது.

அவ்வூரின்கண் தனவணிகர் பெருங்குடிகள் பலவுள்ளன. அந்நாட்டிலே பெருநிதிக் கிழவராகவும், செல்வாக்குடையவர்களாகவும், அயல் நாடுகளிலே சென்று மிகவும் பொருளீட்டும் தொழிலில் வல்லுநராகவும் உள்ளவர்கள் தனவணிகர்களே ஆவார். ஆதலால் அந்நாட்டினைத் தனவணிக நாடென்றே வழங்குகின்றனர்.

2. இருமுது குரவர்கள்

மகிபாலன்பட்டியிலுள்ள தனவணிகர் பெருங்குடியில் ஒரு குடிக்கண் நம் பண்டிதமணியார் தோன்றினார். தந்தையார் பெயர் முத்துக்கருப்பன் செட்டியார் என்ப. தாயார் பெயர் சிகப்பி ஆச்சி என்பது. தாயாதி வகையாலே தனவணிகக் குடிகள் பலவகைப்படும். அவற்றுள் முத்துக்கருப்பன் செட்டியார் குடி வயிரவன் கோயில் கேரளசிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டியத்திலே சிறு குளத்தூருடையார் குடி என்ப. முத்துக்கருப்பன் செட்டியார் இயற்கையிலே கடவுளன்பு மிக்கவர். எளியோரிடத்து இரக்கமுடையவர். இவர் நம் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை வழிபடு கடவுளாகக் கொண்டு அன்புடன் போற்றிவந்தார். இவர்க்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்த சிகப்பியாச்சியாரும் குலமகளிர்க்குரிய நற்குணங்களும் நற்செயல்களும் நிரம்பப் பெற்றவர்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும். (குறள் – 114)

என்பது பொய்யில் புலவன் பொருளுரை. “இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் தன்மை அவரவருடைய நன்மக்களது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்,” என்பது இத்திருக்குறளின் பொருளாம். இக்குறளின் கருத்துப்படி, முத்துக்கருப்பன் செட்டியாரும், சிகப்பியாச்சியும் நடுவுநிலைமை திறம்பாத சான்றோராதல் ஒருதலை. தம் தந்தைக்கு “இவன்றந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்லை,” அளித்த நம் பண்டிதமணியவர்களை மகனாகப் பெற்ற இவர்கள் பற்பல பிறவிகளினும் சிறந்த நோன்புகளை ஆற்றிய நல்லோராக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ?

அன்பு கெழுமிய இக்காதலரின் இனிய வாழ்க்கையின் பயனாக நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1881-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினாறாம் நாளுக்குச் சரியான, விசுயாண்டு புரட்டாசித் திங்கள் இரண்டாநாள் வெள்ளிக்கிழமை திருவாதிரை விண்மீன் நிலவிய நன்னாளிலே செந்தமிழும் சைவமும் திகழ்ந்தோங்கத் தோன்றினர்.

வரலாற்று நூலின் ஏடுகளிலே பதிவாதற்குரிய இந்நாள் ஒரு சிறந்த நன்னாளாகும். அன்று இத்தமிழுலகத்திலே சிறந்த நன்னிமித்தங்கள் பல தோன்றியிருத்தல் கூடும். தமிழ் கற்றோருடைய உள்ளங்களிலே தம்மையறியாமலே உவகை தோன்றியிருத்தல் கூடும். கருமுகில்கள் வானின்கட் குழுமி மெல்லெனத் துளித்திருத்தல் கூடும். ஏனெனில், உலகிற் சிறந்த நன்மை தோன்றுங்கால் நன்னிமித்தங்கள் தோன்றும் என்பது நம் முன்னையோர் கண்ட உண்மையாமன்றோ?

நம் பண்டிதமணியின் தந்தையார் தங்குலத்தினர் வழக்கப்படியே திரைகடலோடியும் திரவியந்தேடுவதில் குன்றாத ஊக்கமுடையவர். இவர் செந்தமிழ்க் கணித அறிவில் மேம்பாடுடையவராக விளங்கினர் என்ப. இவர் பொருளீட்டல் நிமித்தம் இலங்கையில் இருக்கும்பொழுது, அத்தீவகத்தே கதிர்காமம் என்னும் திருப்பதியில் திருக்கோயில் கொண்டருளிய கதிரேசப் பெருமானிடத்துப் பத்திமை பூண்டு அடிக்கடி சென்று வழிபடுவர் என்ப. ஒருகால், நம் பண்டிதமணியவர்கட்குக் கதிரேசன் என்னும் அழகிய திருப்பெயரை இடுதற்குத் தூண்டியது அக்கதிர்காமத்து முருகப் பெருமான் திருவருளே ஆதலும் கூடும் என ஊகித்தற்கு இடனுண்டு.

பெரும்பாலும் இருண்டு கிடக்கும் செந்தமிழ் வானத்தே திகழொளி விரித்து அறியாமை இருள் அகல நீக்கும் செங்கதிர் ஆகும் தந்திருத்தகு மகவு, என்னும் உண்மையை அத்தாய் தந்தையர் அன்று அறிந்திடுதற்கு நியாயமில்லை எனினும் நம் பண்டிதமணியவர்கட்குக் தந் தாய் தந்தையர் இட்ட பெயரும் காரணங் கருதிய சிறப்புப் பெயர் போன்றே இயற்கையில் அமைவதாயிற்று.  நம் பண்டிதமணியவர்கட்குத் தம்பியரும் இருவர் தோன்றினர்.

பண்டிதமணியவர்கள் தந் தாயாராச்சியின் பேரன்புடைமையைப் பாராட்டிப் பிற்றைநாள் பன்முறையும் கூறக்கேட்டுள்ளோம். தம் மகன் சிறந்த செல்வந்தனாவதை விடச் சிறந்த புலவனாதலையே அவர் பெரிதும் விரும்புவாராம். இவ்வருங்குணம் கல்வி தேய்ந்தொழிந்த அந்த நாளிலே பெண்பாலாராகிய ஆச்சியார்க்கிருந்தது வியத்தகு நிக்ழ்ச்சியே யாகும். ஆச்சியாருடைய அன்பைப் போற்று முறையில் நம் பண்டிதமணியார் பிற்றை நாளில் அவர்களைப் பாடிய அன்புப் பாடல் ஒன்றுளது. அவ்வொரு பாடலே ஆச்சியாரின் பெருமையை நன்கு விளக்கும். அது வருமாறு:

“என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி

இருந்தமிழ்ப் புலவர்தங் குழுவில்

துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்து

சொலற்கரும் உதவிகள் புரிந்து

முன்னையான் செய்த நல்வினைப் பேற்றின்

முதிர்ச்சியால் நெடிதுநாட் புரந்த

அன்னையின் அருளை நினைவுறீஇ யுருகற்

கமையடை யாளம் தாமால்”

இச்செய்யுட்கு அவர்களே தந்த விளக்கம் வருமாறு:

“அறிவு வளர்தற்கு இடனாகவுள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணையாம்படி அவ்வப்பொழுது கிடைத்த அறிவுடையார் பலரையும் உபசரித்து, யான் கலைநலம் பெறுதற்குப் பெரிதுந் துணையாக இருந்தவர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலைகண்டு உளமகிழ்ந்து நீண்ட நாளாக என்னைப் பாதுகாத்து வந்தவர்களும், ஆகிய என் இனிய அன்னையார் அவர்களின் அருட்பெருக்கை உன்னியுன்னி உருகுதற்கு அடையாளமாக அவ்வருட்கு இதனை உரிமைப் படுத்துகின்றேன்”, என்பதாம்.

“இருந்தமிழ்ப் புலவர் தங்குழுவில் துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்தார்,” எனத் தம்மன்னையாரின் அருங்குணத்தை இப்புலவர் பெருமான் பெரிதும் பாராட்டுகின்றார் “எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய்” என்பது பொய்படுமாறு எண்ணிலாக் கல்வியையே இப் பெரியார் விரும்புதல் பெரிதும் பாராட்டத்தக்கதே. இத்தகைய அன்னையை, அன்னையாய் எய்திப் பிறத்தற்குப் பண்டைப் பிறப்பில் தாம் எண்ணிலாப் புண்ணியமே இயற்றி யிருத்தல் வேண்டும் என்று இயம்பி ஆராமை கொள்கின்றார் செய்ந்நன்றி போற்றும் இப்புலவர் பெருமான். பண்டிதமணியாரை மகனாகப் பெற “இவ்வாச்சியார் என்னோற்றனரோ!” என்று உலகம் வியக்கின்றது. இவரை அன்னையாகப் பெற “யான் என்னோற்றனனோ” என்று பண்டிதமணியார் வியக்கின்றார். இருவழியும் புண்ணியம் புண்ணியத்தை எய்துதல் இயல்புதானே!

  • கல்வி

நிலநலம் முளையானே அறிந்துகொண்டோம். இனி, மேலே செல்வோம்.  ஙங்கதிரேசனாரை அக்காலத்தார் வழக்கம் போன்றே பெற்றோர்கள் அவ்வூரிலுள்ள திண்ணைப் பள்ளியில் ஓர் ஆசிரியர்பால் நன்னாளில் சுவடி தூக்கி ஓம்படை செய்தனர். அக்காலத்தே தொடக்கப்பள்ளியும், இறுதிக் கல்லூரியும் எல்லாம் அவ்வொரு திண்ணைப் பள்ளிக்கூடத்தே அடங்கிவிடும். தனவணிகர் நாட்டில் அவர்கள் குலத்தொழிலுக்கு எழுத்தைக் காட்டிலும் எண்களே இன்றியமையாதன. ஆதலின், அந்நாட்டில் திண்ணைப் பள்ளிகளில் கணிதமே சிறப்பாகக் கற்பிக்கப்படும். பெருக்கல் வாய்பாட்டிற் றொடங்கி எண்சுவடியிலே அக் கணித அறிவு முற்றுப் பெறுவதாம். சிறப்பில் பாடமாகிய எழுத்திற்கு, வேழமுகம், உலகநீதி, ஆத்திச்சூடி முதலியன பாடமாக வைக்கப்படும். எண்சுவடிப் பயிற்சிக்கு இடையே இவற்றை விரும்புவோர் கற்கலாம்; விரும்பாதவர் விட்டுவிடலாம்.

மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் இப்புலவர் பெருமான், கல்வி பயின்ற ஒரே கல்லூரி மகிபாலன்பட்டியிலுள்ள அத்திண்ணைப் பள்ளியே ஆகும். அப்பள்ளியிலும் அப் பெரியார் பயின்ற காலம் ஒரோ ஒராண்டெல்லையுட்பட்டதேயாம். ஆயின், இத்துணைப் பெரிய கலைவாணராக அவர் ஆயது எப்படி?

இந் நிகழ்ச்சி பெரிதும் வியக்கத் தகுந்ததொரு நிகழ்ச்சியன்று. ஏனெனில் பண்டைக் காலமாகிய வரலாறறிந்த காலந்தொட்டு இற்றை நாள்வரை மிகப் பெரிய பல்கலைக் கழகங்களாதல் கல்லூரிகளாதல் உலகம் போற்றும் கலைவாணரைத் தம் முயற்சியால் பயிற்றி அளித்ததில்லை. மக்கள் வழக்கற்ற காட்டினூடே திரிந்த வான்மீகியும் உவச்சர் சிறுகுடிலிற் றோன்றிய கம்பநாடனும், ஐந்தாண்டுகாறும் மூங்கையாயிருந்த குமரகுருபர அடிகளாரும், கலைக்கடலாகிய இராமலிங்க அடிகளாரும், உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூரும், வரகவி சுப்பிரமணிய பாரதியாரும் எந்தக் கல்லூரியில்? எத்தனை யாண்டுகள் பயின்றனர்? இவர்கட்கு ஆசிரியர் யார்?

எம்மன்னை கலைச்செல்வியே, இத்தகைய பெரியோர் அனைவருக்கும் நல்லாசிரியை. இவ்வாசிரியைதானும் அம்மாணவர் உள்ளமாகிய தூய வெண்டாமரையில் வீற்றிருந்தே தன் அருளாகிய ஒப்பற்ற கலையை உணர்த்தியருளினாள். இவள் திருவருளுக்கு ஆளாகின் “கல்லும் கவி சொல்லும்” என்ப.

கலைச்செல்வியின் திருவருளுக்கு ஆளாதல் தற்செயலாய் நிகழுமொரு அதிட்ட வலியன்று; நல்வினை தீவினைகளின் பயனுமன்று, நல்வினை தீவினைகளின் பயனோடொத்து இயங்கும் இயல்பினள் திருமகளேயன்றிக் கலைமகள் அல்லள். திருமகள்போலத் தகுதியில்லார்க்கும் அருள் சுரத்தலும், அருளப்பெற்றாரை மீண்டும் வறுமைப் பேரிருளிற்றள்ளிச் சினத்தலும் நங் கலைமகள்பாற் காணப்படாத பண்புகளாம். தகுதியுடைமை கண்டே அருள் சுரந்தளிப்பாள். ஒருமுறை நம் கலைத் தெய்வத்தாற் கடைக்கணிக்கப்பட்டார் பின்னொரு காலமும் அவள் அருள் நிழலை ஒருவ அவள் உடன்படாள். இவ்வுலகில் இம்மை வாழ்க்கை தொடங்கி, வீட்டின்பம் எய்துங்காறும் உள்ளத்திருந்து உயர உயர அழைத்தேகுவது நம் கலைத்தெய்வத்தி னியல்பாம்.

சமய உணர்ச்சியாதல், கலையுணர்ச்சியாதல் ஒருவற்கு ஒரு பிறப்பிலே எய்திவிடத்தகும் எளிமையுடையனவல்ல. எத்தனையோ பல பிறப்புக்களிலே அடிபட்டுப் படிப்படியாய் முதிர்வன இத் தெய்வீக உணர்ச்சிகள். முதிர்ந்த இறையன்பைச் சேக்கிழாரடிகள் வழியன்பு என்றோதுவர். பற்பல பிறப்புக்களிலே முயன்றுதான் கலைச்செல்வராதல் கூடும் என்பதை நம் தெய்வ வள்ளுவனாரும்,

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து”

(குறள் – 398 )

என்னும் அருமைத் திருக்குறளானே ஒப்புவர். இதனாலன்றோ “ “சாந்துணையும் கற்க”, என, அப் பெரியார் அறிவுறுப்பாராயினர்.

எனவே, நம் பண்டிதமணியார் பண்டும் பண்டும் பற்பல பிறப்புக்களிலே கலைமகளை வழிபட்டுத் தம் திருவுள்ளத்தை அத் தெய்வத்தின் திருக்கோயிலாக்கி வைத்தனர். அவர் பிறந்தபொழுதே கலைக் கருவூலமாகிய ஒரு சிறந்த திருவுள்ளத்தைத் தம்முடன் கொணர்ந்தார். மாறிப் பிறக்குமொரு நிகழ்ச்சியாலே மறவியின்பாற்பட்ட எழுத்துருவங்களை அவர்க்கு நினைவூட்ட ஒரு திண்ணைப் பள்ளியின் எளிய ஆசிரியனே அமையும். தம் கலைக்கருவூலத் திருவுள்ளத்தை மீண்டும் திறந்து நுகர்தற்கு எழுத்தறிதல் திறவுகோல் ஆகும். இத் திறவுகோலையே அவர் அத் திண்ணைப் பள்ளியிற் பெற்றனர். இனி, அவர் தாமே தம்முள்ளத் தமைந்த கலைச்செல்வத்தை உணர்ந்து கொள்வார்.

திரு. முத்துக்கருப்பன் செட்டியார் அவர்கட்குத் தம் மகனார் உலகம் போற்றும் உயர்மொழிப் புலவர் என்பது அச் சிறு பருவத்தே அறியக் கூடாததொன்றன்றோ. ஆதலின், தம்மயலிலுள்ள தங்குலத்தினர் போன்று திரைகடலோடியும் திரவியந்தேடிப் பெரும் பொருளீட்டிப் பெருவாழ்வு வாழ்தல் வேண்டும் என எண்ணினராய் அத்தொழில் செய்தற்குத் தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்க்குத் தம் மகனாரை உய்த்தனர்.

இராமன் செல்லுமிடமெல்லாம் அயோத்தி என்பதுபோல, நம் கதிரேசனார் செல்லுமிடமெல்லாம் கல்லூரிகளேயாகும். தோன்றி அழியும் செல்வப் பொருளீட்டுதலில் அவர் நெஞ்சம் படர்ந்திலது. தந்தையாரின் அன்புக் கட்டளையும் மேற்கொள்ளுதற்குரியது; விண்ணளாவிய மலைகளானும், பளிங்கெனத் தெளிந்த நீரருவிகளானும், மனிதர் வழக்கற்ற கானகங்களானும், கடல்சூழ் இலங்கை ஆற்றவும் அழகுடைத்தென்ப; அது காணவும் வேண்டும். எனவே, திருத்தேடுவார் போன்று நம் கதிரேசனாரும் அவ்விளம் பருவத்தே எழிலுடை இலங்கைத் தீவகம் சேர்ந்தனர்.

“யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோ ஒரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடே ஒருசில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன்; உள்ளனவாயின் அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சிற்சில பிள்ளைத் தமிழ் இவைகளே அவ்விளம் பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன். அப்பெருநூல்களும் தஞ்செய்யுட் பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், – ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் – பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாக பொருள் புலப்படலாயின. மேலும் என் இளம்பருவத்து நண்பருக்கும், அயலுள்ளார்க்கும் அவற்றின் பொருளை எடுத்துச் சொல்லுதலும் உண்டு. நான் இவற்றை அயலார்க்குச் சொல்லுங்கால் அவர்கள் நீ யாரிடம் பாடம் கேட்டாய்? எங்கே படித்தாய்? என்று என்னை அடிக்கடி வினவுவதுண்டு. இங்ஙனம் வினவுவார்க்கு மறுமொழி கூற என்னால் இயல்வதில்லை. யான் ஒருவரிடமும் பாடங்கேட்காமலே இவற்றைத் தெரிந்து சொல்கிறேன் என்றாலோ, அவர்கள் அக்கூற்றை நம்புதலும் அரிது அன்றோ?

இவைகள் பண்டிதமணி அவர்களே கூறியவை. பண்டிதமணி யவர்கள் திண்ணைப் பள்ளிக்கூடப் பயிற்சி முடிந்தவுடனேயே தந்தையாரால் இலங்கைக்குச் செலுத்தப்பட்டார். முதன்முதலாக “நம் கதிரேசனை யான் இலங்கைக்கு அனுப்ப எண்ணுகின்றேன் என்று என் அன்னையார்க்கு என் தந்தையார் அறிவித்ததைக் கேட்ட போது என் சிறு உள்ளம் என்னுள்ளே குதூகலித்தது. அன்னையார் மறுத்துவிடுவாரோ என்றஞ்சினேன். ஒருவாறு அன்னையாரும் ஒப்புக்கொண்டனர். இலங்கைத் தீவகம் பேரழகு வாய்ந்ததென்றும், மிகப்பெரிய காடுகளும் மலைகளும் ஆங்குள்ளன என்றும், அக்காடுகளிலே புலி கரடி யானை முதலியன திரியும் என்றும், கலத்தின் கண் ஏறியே இலங்கைக்குப் போதல் வேண்டும் என்று பிறர் சொல்ல யான் கேள்விப்பட்டிருந்தேன் அல்லனோ? இவற்றை எல்லாம் நேரிற் காண்பது எவ்வளவு இன்பமாக இருக்கும். இவ்வாசை என் உள்ளத்தே பொங்கிக் கிளர்ச்சி செய்தது. பொருளீட்ட வேண்டும் என்பதிலோ ஒரு சிறிதும் என் உள்ளம் பொருந்திற்றில்லை,” என்று பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள்.

“இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.”

(குறள் – 374)

என்பது  தமிழ்மறை. “உலகத்து ஊழினால் ஆய இயற்கை இரண்டுகூறு; ஆதலால், செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு” என்பது இதன் பொருள். “அறிவுடையர் ஆதற்கு ஆகும் ஊழ், செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது” என்பது இதன் கருத்து. இயற்கையிலேயே பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை நம் பண்டிதமணியார் உளத்தைத் தூண்டியதில்லை. கலைச்செல்வத்தைத் தேடித் தேடி தமதாக்குதலிலேயே பண்டிதமணியார் ஒரு பேராசைக் காரராகவே இருந்தார். ஆதலின், இலங்கைத் தீவகத்துப் பொருளீட்டுந் தொழிலிலே ஈடுபட்டிருந்தபோதும், அவர் உள்ளம் கலைச்செல்வத்தையே நாடுவதாயிற்று. அக்காலத்தே திருத்தொண்டர் புராணம் கம்பராமாயணம் முதலிய இலக்கியங்களை இடையறாது பயின்றார். இவ்விலக்கியங்களேயன்றி இவற்றிற்குக் கருவி நூல்களாகிய இயனூல்களும் வேறு உள்ளன என்பதும் கேள்விவாயிலாய் அறிந்தனர். அவ்வியல் நூல்களை ஓதி யுணர்தல் வேண்டும். “அவை எங்கே கிடைக்கும்?”

இவ்வாறு நம் கதிரேசனார் கலையார்வ மிக்கு நின்ற காலம் அவர்க்குப் பதினான்காண்டகவை இளம்பருவமே யாகும். அவ்வகவையில், நம் கதிரேசனார் திடீரெனத் தம் தந்தையாரை இழக்க நேர்ந்தது. அன்புடைத் தந்தையாரின் பிரிவாலே மனம் நொந்து அரற்றினார். இக்காரணத்தாலே அவர் இலங்கையை விட்டுத் தம் தாய் நாடாகிய தமிழகத்திற்கு வரவேண்டியதாயிற்று. தம்மூராகிய மகிபாலன்பட்டிக்கு வந்து, அன்னையாரை வணங்கி அவர் வாழ்த்தும் பெற்றார். இப்பொழுது குடும்பத்தலைவராகிவிட்ட கதிரேசனார் அந்நாள் தொடங்கித் தாம்பிறந்த பொன்னாட்டிலேயே, தம் அன்புடைத் தாயோடே அன்பு கெழும அமர்ந்து, தம்தெய்வத் தாயாகிய தமிழன்னை வழிபாட்டிலே பெரிதும் ஈடுபடுவாராயினர்.

“செய்யுளின் அழகிலே, அது தரும் இன்பத்திலே ஈடுபட்டே யான் கலைகளைப் பயின்றேன் அல்லது, பொருட்பேறடைதற்குக் கல்வி ஒரு சாதனம் ஆம் என்று கருதியாதல், புகழ் பெற வேண்டுமென்றோ யான் கலை பயின்றேனில்லை” என்று நம் புலவர் பெருமான் பல விடங்களிலே கூறியுள்ளனர். மேலும் தமிழ்மொழிப் பயிற்சியாலே அக் காலத்தே ஒரு சிறிதும் பொருளீட்ட இயலாது. தமிழ் கற்றவர்களைப் புகழ்வாரும் அக்காலத்து அரியர். நம் பண்டிதமணியவர்கள் குடும்பம், தனவணிகக் குடும்பங்களில் தலைசிறந்த பொருட்பேறு மிக்க குடும்பம் அன்றெனினும், பொருட்பேறில்லாத சிறு குடும்பமும் அன்று. மகிபாலன்பட்டியில் வழிவழியாக அக் குடும்பத்திற்குப் போதிய விளை நிலங்கள் உள்ளன. பாட்டனார், தந்தையார் ஈட்டிய செல்வமும் உளது. இவற்றிற்கு மேலாக, நம் பண்டிதமணியார்க்கும், அவருடைய அறிவுமிக்க அன்னையார்க்கும் “தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழும்” அமைதியுள்ளமாகிய பொன்செய்யும் மருந்தும் கைவயமிருந்தது. அதனால், கணவனாரை இழந்த சிகப்பியாச்சியார் தம் அன்புடைய மூத்த மகனார் பொருள்தேடி உழலவேண்டா; தம்மோடிருப்பதே சாலும் எனக் கருதினர். நம் பண்டிதமணியாரோ பொய்ப் பொருளீட்டுதலிலே உவர்ப்பும், மெய்ப்பொருள் நாட்டமும் உடையவர்.

  • கலை நண்பர்கள்

“பொன்னுந் துகிரும் முத்து மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து

அருவிலை நன்கல மமைக்குங் காலை

ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்

சான்றோர் பால ராப

சாலார் சாலார் பாலரா குபவே”

(புறம் – 218)

என்பது கண்ணகனார் என்னும் நல்லிசைப் புலவர் பாட்டு. பொன்னும் பவளமும் முத்தும், நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும், ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்மையிற் றோன்றினும், கோவை பொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்தே ஓரிடத்துத் தோன்றினாற்போல, எப்பொழுதும் பெரியோர்கள் பெரியோர் பக்கத்தராவர்; சிறியோர் சிறியோர் பக்கத்திலே சேர்வர் என்பது அழகிய இப்பனுவலின் பொருள்.

இவ்வினிய பாடலிற் கூறியபடி, தம்மூரின்கண் தமதில்லத்திருந்து கலை பயிலத் தொடங்கிய நம் மணியின்பால் “பொன்னுந் துகிரும் முத்தும்” போல்வராகிய சான்றோர் சிலர் வந்து அவர்தம் இனிய நட்புரிமையைப் பெற்றனர். இவ்வாற்றால் மகிபாலன்பட்டியில் நம் பண்டிதமணியவர்களின் இல்லம் கலைமகள் கோயிலாகத் திகழ்ந்தது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருகின்ற அறிஞர்களுக்கு, அன்போடே உணவளித்து ஆச்சியாரவர்கள் ஆதரித்து வந்தனர். நம் பண்டிதமணியவர்களும், அவர்கட்கு இயன்ற அளவு பொருளுதவியும் செய்து வந்தனர். சில அறிஞர்கள் பற்பல நாட்கள் நம் பண்டிதமணியோடே உடனுறைவதுமுண்டு. இவ்வாற்றால், அக்காலத்தே தொடங்கி நம் பண்டிதமணி யவர்கள் புலவர்களைப் போற்றும் புரவலராகவும் ஆயினர். புலவர்களைப் புரக்குந் தொழிலை அவர்கள் எப்பொழுதும் ஒல்லும் வகையாற் செய்தே வந்துள்ளார்கள். இன்றும் நம் பண்டிதமணி யவர்களின் உதவியாலே உயர் நிலை அடைந்த புலவர்கள் நந்தமிழ் நாட்டிற் பற்பலர் உளர்.

கலைப் பெரியாராகிய நம் பண்டிதமணியவர்களின் வள்ளன்மை கண்டு அவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் புனைந்து வந்து பரிசில் பெற்றாரும் உளர்.

“தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணாராகுப நீர்வேட்டோரே

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்

சேறொடுபட்ட சிறுமைத் தாயினும்

உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்.”

(புறம் – 204)

என்னும், கழைதின்யானையார் பாட்டிற்கு நம் பண்டிதமணியவர்களின் இல்லம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

நம் பண்டிதமணி யவர்களுடன் நட்புரிமை பூண்டொழுகிய சான்றோர்களில்—சோழவந்தான் அரசன் சண்முகனார், கந்தசாமிக் கவிராயர், சுந்தரேசுவரையர் என்னும் புலவர்கள் குறிப்பிடத்தக்கவராவர்.

சோழவந்தான் அரசன் சண்முகனார் என்பவர், பண்டைக்காலத்தில் பேராசிரியராகத் திகழ்ந்த பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார் முதலிய சான்றோர்களோடு ஒருங்குவைத்து மதிக்கத்தக்க நுண் மாணுழைபுலமுடைய சான்றோர் ஆவர். தொல்காப்பியம் முதலிய இயல் நூல்களின் நுணுக்கங்கண்டு உணர்த்துவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். இவரை அக்காலத்துத் தமிழுலகம் நன்கு அறிந்து போற்றவில்லை. இப்புலவர் பெருமான் வறுமையால் நலிந்தனர். நம் பண்டிதமணியார் அப் புலவர் பெருமானின் பெருமையை உணர்ந்து, இவருடைய கூட்டுறவு நம் தவத்தின் பயனாம் என மகிழ்ந்து, அப்புலவர் பெருமானுக்குப் பொருள் முதலியன நல்கிப் போற்றுவாராயினர். செய்ந்நன்றி போற்றும் அப் புலவர் பெருமானும்,

“கல்விதனம் மிக்க கதிரேச னாம்வணிகன்

வல்விதன மெற்கொழித்தான் வள்ளுவரே”

என்பன போன்ற பல பாடல்களாலே பண்டிதமணியாரை ஏத்தி வாழ்த்தினர்.

“இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு இயல்பாகவே யான் பொருளுணர்ந்து கொண்டேன் எனினும், இயனூலாகிய தொல்காப்பிய முதலிய நூல்களோ, சேனாவரையர் முதலியவர்களின் உரைகளோ, என் அறிவிற்கெட்டாத ஆழமுடையனவாக இருந்தன. என் அறிவிற்கியலும் துணையும், அந் நூல்களை யான் பிறர் உதவியின்றிப் படித்தேன். பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் பிதிராகவே இருந்தன; எண்ணிறந்த ஐயங்கள் தோன்றின. இவ் வியல் நூல்களை ஐயந்திரிபறக் கற்றாலன்றிப் புலமை நிரம்பியதாகா தெனவும் அறிந்துகொண்டேன். அந் நூலின் பெயரறிவார்கூட அக்காலத்தே அரியராயினர். அவற்றைக் கற்க ஆசிரியர் வேண்டுமே! ஆசிரியர் எங்கே கிடைப்பார்?

இவ்வாறு இயனூல் கற்ற ஆசிரியரை யான் அவாவியிருந்த காலத்தே, திருவருளின் உதவியால் சோழவந்தான் அரசன் சண்முகனாரை யான் காண நேர்ந்தது. அவருடன் அளவளாவி நட்புரிமையும் கொண்டேன். அப் புலவர் பெருமானும், யானும் ஒத்த தகுதியுடைய நட்புரிமையே கொண்டிருந்தோம் எனினும், அவர் எனக்கு ஆசிரியரே ஆவர். அவருடைய நுண்மாணுழை புலத்தையும், இயனூலறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன். இவர் என்னோடு என்னில்லத்திலேயே பற்பல செவ்விகளில் பன்னாள் உடனுறைந்து இயனூலறிவில் எனக்குள்ள குறையைப் போக்கினர். இப் புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல் நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின” என்று நம் பண்டிதமணியவர்களும் அப் புலவர் பெருமானால் தாம் அடைந்த நன்மையைப் போற்றிப் பலரிடத்துங் கூறியுள்ளார்கள்.

செந்தமிழ் மொழிக்கண் உள்ள, உலகநீதி முதல் தொல்காப்பியம் இறுதியாகவுள்ள எல்லா நூல்களையும் இவ்வாறு பயின்று தேர்ந்த நம் பண்டிதமணியவர்கள், தமிழ்ப்புலமை நிரம்புதற்கு வடநூற் பயிற்சி இன்றியமையாது எனக் கண்டுகொண்டனர். மேலும், ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோதப் பேருரை போன்ற நூல்களையும், சைவசித்தாந்த நூல்கள் பிறவற்றையும், ஐயந்திரிபற அறிதற்கும் வடமொழிப் பயிற்சி வேண்டும்; ஆதலால், வடமொழியில் வல்லுநரான தருவை நாராயண சாத்திரியார் என்பவரைத் துணையாகக்கொண்டு ஐந்தாண்டுகள் அம்மொழியிலுள்ள உயரிய காவியங்கள், நாடகங்கள் முதலிய இலக்கியங்களையும், பாணினி வியாகரண முதலிய இயனூல்களையும் இனிதே பயின்று, வடமொழி வல்லாரும் “எற்றோ இவர்க்கு யாம்” என்று வியக்குமாறு அம்மொழிப் புலமையும் நிரம்பப் பெற்றார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் தம் இரு கண்களேபோல் எண்ணிப் போற்றியவர்கள். ஆதலால், தாமே முயன்று பயின்றிருந்தாலும், சிவஞானபோத முதலிய சைவப் பெருநூல்களையும், சிவாகம நூல்களையும், சமயத்துறை வல்ல பெரியார் துணைகொண்டு கற்றல் வேண்டும் என்று கருதினார்கள். அக்காலத்தே சைவசமயநூல் உணர்ச்சியினும், சிவபெருமானிடத்துப் பேரன்பு பூண்டு வழிபாடு செய்வதினும் சிறந்து விளங்கிய காரைக்குடி சொக்கலிங்கையா என்னும் பெரியோரை அடைந்து, அவர்கள்பால் சைவசமயப் பெருநூல்களை இரண்டாண்டு ஓதி அச்சமய நூலறிவும் ஐயந்திரிபின்றி நிரம்பப் பெற்றனர்.

இதுகாறுங் கூறியவற்றால், நம் பண்டிதமணியவர்கள் மிகப் பொறுமையுடன் நீண்டகாலம் பெருமுயற்சி செய்து, தென்மொழி, வடமொழி நூல்களையும், சமய உண்மைகளையும் அறிந்து, பெரும் புலமை எய்தினர் என்பது புலனாம். இத்தகைய முயற்சியில், அவர்கள் இருபத்தேழாம் அகவை நிரம்புங்காறும் கடைப்பிடியாக ஈடுபட்டிருந்தனர்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

(குறள் – 26)

என்பது வள்ளுவர் வாக்கு. இங்ஙனம் செயற்கரிய செயல்களைப் பொறுமையோடு கடைப்பிடியாகக் கொண்டு யாதேனுமொரு துறையில் முயன்று ஆற்றியவர்களே நம்மனோரால் பெரியோர் என்று புகழ்ந்து போற்றுதற்குரியவர் ஆகின்றனர்.

  • சீர்திருத்தம்

மக்கட்கு உறுதியளிக்கும் துறைகள் பற்பல உள்ளன. அவற்றில் யாதேனுமொரு துறைபற்றிச் சீர்திருத்த முயல்வோர், முதலில் அத்துறைக்கண் தாமே நன்கு சீர்திருத்தம் அடைந்தவராதல் வேண்டும். தம்மாற் சீர்திருத்தப்படும் துறைக்குத் தாமே எடுத்துக்காட்டாகத் திகழ்தல் வேண்டும். மொழியறிவு நிரம்பப்பெறாதவன் மொழியை சீர்திருத்த முயலுதலும், ஒழுக்கநெறி நில்லாதவன் மாந்தர்க்கு ஒழுக்கநெறி காட்ட முற்படுதலும், சமயநெறி யறியாதவன் மாந்தர்தம் சமயநெறியைச் சீர்திருத்த முயலுதலும் நகைப்பிற் கிடனாகிய பயனில் செயல்களாம் அன்றோ?

நம் பண்டிதமணியவர்கள் கல்வி கேள்விகளான் நிறைந்து முதிரும் துணையும், சீர்திருத்த முற்பட்டிலர். முதற்கண், அவர் தம்மையே சீர்திருத்திக்கொண்டனர். இனி, அப்பெரியோர் உலகைச் சீர்திருத்தக் கருதியது சாண்றாண்மைக் கேற்றதொரு நன்னினைவே ஆகும். இச்சீர்திருத்தத்தை முதன் முதலாகத் தம் மூரிலேயே செய்தற்கு முற்பட்டார்.

“அறிவுடையார் எல்லா முடையா ரறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்”

(குறள் – 430)

என்பது வள்ளுவர் மெய்ம்மொழி. தம் நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் மக்களின் அறியாமையே ஆகும். ஆதலால், நந் தமிழ் மக்களை நிரம்பிய அறிவுடையாராக்குதல் வேண்டும். அறிவு, கல்வியாலே பெருகுவது; எனவே, நாடு முழுதும் கல்விக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும். இத்தொண்டே யாம் முதலில் மேற்கொள்ளற்பாலது என்று துணிந்தனர். மகிபாலன்பட்டி ஒரு சிறு கிராமம். ஆங்குள்ள சிறார்கள் பயிலுதற்குச் சிறந்த தொடக்கப்பள்ளி வேண்டும். ஆதலால், தாம் வழிபடு கடவுளாகக் கொண்ட அவ்வூர் வீரவிநாயகர் திருப்பெயராலே, ஒரு தொடக்கப் பள்ளியைத் தம்மூரின்கண் நிறுவி, அவ்வூர் மக்களைக் கல்வி பயிலும்படி செய்தனர். அத்தொடக்கப் பள்ளியில் நல்ல ஆசிரியர்களையும் தேர்ந்து அமைத்தனர். அன்று தொடங்கி, “வீர விநாயகர் கல்விக் கழகம்” என்னும் பெயரால் இன்றும் நன்னிலையில் நிகழ்ந்து வருகின்றது.

மேலைச் சிவபுரி என்னும் மூதூரில், வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் என்றொரு பெருநிதிக் கிழவர் வாழ்ந்து வந்தனர். இவர் திருமகள் திருவருளுக்கு உரியராயிருந்ததனோடு, கலைமகள்பாலும் பேரன்புடையோர். கற்றவர்களை உற்றவர்களாகக் கொண்டு போற்றும் இயல்புடையார். தம்மினத்தார் பொருட்டுறையிற் போலக் கல்வித் துறையினும் மேம்படவேண்டும் என்னும் அவாவுடையர். இப்பெரியார் நம் கதிரேசனாரின்ன் பேரறிவுடைமை கண்டு அவரை நன்கு மதிப்பாராயினர்; அவர்பால் பெரிதும் நட்புரிமையும் கொண்டிருந்தனர்.

6. சன்மார்க்க சபை

நம் பண்டிதமணியவர்கள், தந் நண்பரும் பெருநிதிக் கிழவரும் இயல்பிலேயே வண்மைக் குணம் நிரம்பியவருமாகிய வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் அவர்களிடம் தனவணிகர் அறிவு முன்னேற்றம் பெறுதற்குத் தாங்கருதியுள்ள செயலை விளக்கமாகக் கூறினர். அவரும் ஆர்வத்துடனே அச்செயலின்கண் ஒத்துழைக்க முற்பட்டனர். சங்கங்களின் வாயிலாகவே மொழி வளர்த்தல் வேண்டும் என்பது நம் பண்டிதமணியவர்களின் கொள்கையாதலால் முதன்முதலாக மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்றொரு கழகத்தை நிறுவ முற்பட்டனர்.

சங்கங்களின் வாயிலாக மொழிவளர்க்கும் செயல் நமக்குப் புதிதன்று; பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்க்க முற்பட்ட நம் முன்னோராகிய பாண்டிய மன்னர்களும், சங்கங்களின் வாயிலாகவன்றோ நந்தெய்வமொழியை வளர்த்தனர்.  நந்தமிழ் இன்றுஞ் சங்கத் தமிழ் என்றன்றோ கூறப்படுகின்றது. அநுபவத்திற் கண்ட நெறியே அன்றோ அந்நெறி; ஆதலால், நம் பண்டிதமணியவர்கள் தமிழ் வளர்த்தற்குச் சங்கம் காண முற்பட்டது மிகமிகப் பொருத்தமுடைய செயலே ஆகும்.

கி. பி. 1909ஆம் ஆண்டு மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணிபுரிவதே அச்சபையின் நோக்கமாகும். இச்சபையின் உறுப்பாகக் “கணேசர் செந்தமிழ்க் கலாசாலை” என்றொரு கலைக்கழகமும், “ தொல்காப்பியனார் புத்தகசாலை” என்றொரு நூனிலையமும் நிறுவப்பட்டன. பன்னூறு மக்கள் குழுமியிருந்து சொற்பொழிவு கேட்டற்கு ஏற்ற இடவசதியுடையதாகவும், மாணவர்க்கு வகுப்புக்கள் நடத்துதற்கு ஏற்றதாகவும் அழகிய பெரிய கட்டிடம் ஒன்றும் எடுக்கப்பட்டது. ஒருவர்பின் ஒருவராகப் பெருநிதிக்கிழவர் பலர் சபைக்குப் பொருளுதவி செய்ய முன் வருவாராயினர். சபை தோன்றிய ஐந்தாண்டகவையில் இருபதினாயிரம் வெண் பொற் காசுகள் சபைக்கு நன் கொடையாகச் செல்வர்களால் வழங்கப்பட்டன.  

நாட்டின் பல்வேறிடங்களினும் உள்ள, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களை அடிக்கடி அழைத்து அவர்தம் அறிவுரைகளால் மக்கள் அறிவைப் பெருக்குதலும், மாணவர் பலர்க்கும் உண்டி உடை உறையுள் முதலியன வழங்கி நன்முறையிற் கல்வி பயிற்றலும், தனித்தமிழ்த் தேர்வில் சிறந்த முறையில் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்தலும் அச் சபையின் நோக்கங்களாம்.

புதியதொன்றனைப் பெரிதும் விரும்பும் இயல்புடையவர் மக்கள்; இச்சன்மார்க்க சபையும், அதன்கண் நிகழும் நிகழ்ச்சிகளும் அந்நாட்டிற்கே புதியனவாகும். இச் சன்மார்க்க சபையே தனவணிக நாட்டில் நிறுவப்பட்ட முதற்சபை என்பது நினைவுகூரற்பாலது. நாட்டின் பல திசைகளினின்றும் புதிய புதிய புலவர் பெருமக்கள் சபையாரால் அழைக்கப்பட்டனர். அவர்தம் அறிவுரைகளைக் கேட்டற்குச் சேய்மையிலுள்ள மக்களும் திரண்டு வந்து குழுமுவாராயினர். இடையிடையே நம் பண்டிதமணியவர்களும் அறிவுரை நிகழ்த்துவார்கள். இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தே அறிவொளி புகுதலை அறிந்த பலர், இத்தகைய சபைகள் தத்தம் ஊரிலும் நிறுவப்படுதல் வேண்டும் என்று அவாவினர்.

இன்று, தனவணிக நாட்டிலே பற்பல தமிழ்க்கழகங்கள் தோன்றிப் பணிபுரிந்து அறிவொளி பரப்பி வருகின்றன. இந்நன்மைக்கு முதன் முதலாக வித்திட்டவர் நம் பண்டிதமணியே ஆவார். அன்று பண்டிதமணியவர்கள் தம்முள்ளத்தே கண்டிருந்தவைகள் எல்லாம், இன்று நடைமுறையில் தோன்றி நிகழக் காண்கின்றோம். பல ஆண்டுகட்கு முன்னர் நம் பண்டிதமணியார் தங்குலப் பெரியோர்களைச் சன்மார்க்க சபையிற் கூட்டி அவர்கள் முன்னிலையிலே,

“தமிழ்க் கலாசாலைகள் ஊர்தோறும் நிறுவுதல் வேண்டும்; பத்து ஊர்களுக்கு ஒன்றாக எல்லா வசதிகளும் நிரம்பிய ஒவ்வொரு பெரிய நகரங்களினும் புலவர் பெருமக்கள் அடிக்கடி வந்து அறிவுரை வழங்குதற் கேற்றனவாகக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும்; எடுத்துக்காட்டாக இச்சன்மார்க்க சபையை நினைவு கூர்மின். இது நிறுவப்பட்டு இரண்டாண்டுகளே ஆயின. இவ்விரண்டாண்டினுள் பிறந்த நாள் தொடங்கி யாம் கண்டறியாத எத்தனை பெரியோர்களைக் கண்டோம்; அவர் வாயிலாக எவ்வளவு நுண்பொருள்களைக் கேட்டு அறிவுப்பெருக்கம் எய்தினோம். நம் தனவணிக நகரங்களில் இச்சன்மார்க்க சபை போன்று ஒருபது சபையேனுந் தோன்றுவன வாயின், நம் மக்கள் அறிவுச் செல்வத்தை நிரம்ப எய்தி நாரிக நிலையில் மேம்படுவாரல்லரோ! பொருளுடையார் என்று நம்மைப் பிறர் புகழ்வதினும், அறிவுடையார் என்று புகழ்வதன்றோ நமக்கு மேம்பாடு தரும்.”

என்றின்னோரன்ன பொன்னுரைகளை வழங்கி ஊக்கி வந்தனர். மேலும் இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தவர்களுக்குக் கல்வித்துறை யல்லாத பிற துறைகளினும் பற்பல சீர்திருத்தங்கள் செய்து வந்தார்கள்.

7. மொழிபெயர்ப்பு

இங்ஙனம் கல்வித்தொண்டின் வாயிலாய்த் தந் நாட்டவர்க்கு அறிவுச் செல்வம் பெருக்கிவந்த நம் பண்டிதமணியவர்கள், மற்றோர் வகையாலேயும் மொழியாக்கத் தொண்டு இயற்றி வந்தார்கள். தாம் கற்றின்புற்ற வட நூல்களிற் சிறந்த நூல்களை மொழி பெயர்த்து, நந்தமிழர்க்கு வழங்குதல் வேண்டும் என எண்ணினர். சன்மார்க்க சபையின் ஆதரவில் இம் முயற்சியில் ஈடுபட்டனர். வடமொழியிற் சிறந்த நாடக நூலாகிய “மிருச்சகடிகம்” என்னும் நூலை “மண்ணியல் சிறு தேர்” என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். இந் நூல் இடையிடையே செய்யுள் விரவப்பட்ட உரைநடை நூலாக வடமொழிக்கண் உள்ளது. அவ் வடமொழிக்கண் உள்ளபடியே, தமிழில் உரையை உரையாகவும், செய்யுளைச் செய்யுளாகவும் இவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு மொழியிலுள்ள செய்யுளைப் பிறிதோர் மொழியில் செய்யுளாகவே மொழிபெயர்ப்பது மிகவும் செயற்கருஞ் செயலாகும். எற்றாலெனின், செய்யுள்கள் எதுகை மோனை முதலியவற்றை உடையனவன்றோ. இவ் வெதுகைக்கேனும், மோனைக்கேனும், இன்னுஞ் சீருக்கேனும், சொற்கள் தேர்ந்தமைக்குங்கால் முதனூற் செய்யுளிலில்லாத பொருளுடைய சொற்களைச் சேர்த்தல் அல்லது முதனூற் செய்யுளிலுள்ள பொருளை நழுவவிடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதன வாகிவிடும்.

நம் பண்டிதமணி யவர்களோ தம்முடைய ஒப்பற்ற புலமை யாற்றலாலே முதனூற் செய்யுட்களிலுள்ள பொருள்கள் குறையாமலும், மிகாமலும் தமிழ்ச் செய்யுளின் எதுகை மோனை சீர் முதலிய நயங்கள் குன்றாமலும், வடநூற் செய்யுட் பகுதியைச் செந்தமிழ்ச் செய்யுளாகவே மொழி பெயர்த்துள்ளார்கள். இவ் வருமையை உணர்ந்த இருமொழிப் புலவர் பலர், நம் பண்டிதமணி யவர்களைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும் இராமேச்சுரம் வடமொழிக் கல்லூரித் தலைவராயிருந்த சுப்பிரமணி ஐயர் என்னும் வடமொழிவாணர்,

“வடமொழியில் தெளிவு குன்றிக்கிடக்கும் சில இடங்களில் இத் தமிழ் மொழிபெயர்ப்பு, தெளிவு மலிந்து காணப்படுகின்றது. இவ்வாற்றால் இது முதனூலினும் மேம்பாடுடையதாகக் கருதற்பாலது.”

என்று புகழ்ந்துள்ளார்கள் எனின், நம் பண்டிதமணி யவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றற்குச் சான்று பிறிது கூறுவானேன்!

நம் பண்டிதமணியவர்கள், இம் மண்ணியல் சிறு தேரேயன்றி, மேலும் அவ் வடமொழிக்கண் உள்ள சிறந்த பொருணூலாகிய “சுக்கிர நீதி” யையும், “சுலோசனை”, “உதயண சரிதம்”, “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் ஏனைய நூல்களையும் பொருள் பெயராது, நுண்ணிதின் மொழிபெயர்த் துதவியுள்ளனர். இந் நூல்களில் “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் இரண்டு நூல்களும் இன்னும் அச்சேறவில்லை. ஏனைய அச்சேறி வெளி வந்துள்ளன. அச்சேறாதவற்றை அச்சேற்றித் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு யாம் திரு கதி. சுப்பிரமணியன் செட்டியார் அவர்களை வேண்டுகின்றோம்.

                         8. செய்யுளியற்றல்      

நம் பண்டிதமணி யவர்கள் தம் இளமைப் பருவத்தே இயற்றிய “பதிற்றுப்பத்தந்தாதி”, “சுந்தரவிநாயகர் பதிகம்”, “வீரவிநாயகர் மாலை” என்னும் சின்னஞ் சிறிய செய்யுள் நூல்களும், பிற்றை நாளில் செட்டிநாட்டரசர் சர். அண்ணாமலை வள்ளலை அவ்வப்போது பாடிய வாழ்த்தியற் செய்யுள்களும், “மண்ணியல் சிறுதேர்” என்னும் நூலின்கண் மொழிபெயர்த்தமைத்த செய்யுட்களும், வேறு சில தனிச் செய்யுள்களும், அவர்கள் சுவையுடைய செய்யுள்களை இயற்றும் ஆற்றலுடையவர்கள் என்பதனை நன்கு விளக்குகின்றன.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழிக்குப் புதுவாழ்வளித்தற்குச் செய்ய வேண்டிய பிற செயல்கள் அவர்கள் காலத்தைப் பெரிதும் கவர்ந்துகொண்டமையாலோ? வேறு எக்காரணத்தாலோ? இவர்கள் சிறந்த செய்யுள் நூல்கள் இயற்றுஞ் செயலில் முற்படவில்லை. தாம் முற்படாவிடினும், சிறந்த செய்யுள் நூல்களை இயற்றுதலும் நம் தமிழ் மொழிக்குச் செய்யும் சிறந்த பணியே ஆகும். ஆதலின், செய்யுள் இயற்றவல்ல தகுதியுடைய புலவர்கள் அச் செயலில் ஈடுபடுவாராக என அவ்வப்போது அறிவுறுத்தி வந்தனர்.

பிழை நிறைந்த செய்யுள்களைக் கேட்க நேர்ந்தவிடத்துப் பண்டைக்காலத்திருந்த தண்டமிழாசான் சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், எழுத்தாணியாலே தம்தலையிற் குத்திக்கொள்வாராம். அங்ஙனமே செய்யுள் இயற்றும் வன்மையில்லாதார் பிழையுடைய செய்யுள்களை இயற்றக் கண்டால், நம் பண்டிதமணியவர்கள் தலையிற் குத்திக் கொள்ளாராயினும், உளம் புண்பட்டு வருந்தாநிற்பர்:

“சிலர் வேறுவழியில், தாம் உயர்ந்த நிலை அடைந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து, தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர்; அந்தோ! அவர் பாட்டை நினையுங்கால் தமிழ்மொழியாளர் செயல் இத்தகையது போலும் என்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே என்று வருந்த வேண்டியதாகின்றது. ‘செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா’ என்றபடி புலவர்க்குப் புலமைப் புதல்வராகப் பிறக்கும் இயல்பினவாகிய பாட்டுக்களைக் கருக் கொள்ளாது, பொறையுயிர்க்க எண்ணின் எங்ஙனமாம்”, என்பன பண்டிதமணி யவர்கள் புன்கவியாளர் செயற்கு இரங்கிக் கூறியனவாம்.

அக்காலத்தே, ஒரு போலிப் புலவர் தம்மைத் தாமே “வீமகவி” என்னும் சிறப்புப் பெயராலே சிறப்பித்துக் கொண்டு, தமிழிலக்கண இலக்கியங்களைப் பொதுமுறையானும் தாம் கல்லாதவராயிருந்தும், போலிக் கவிகளைப் பாடித் தனவணிக நாட்டிற் பொருளீட்டிப் பிழைத்து வந்தார். இப்புன்கவிஞர், தனவணிகப் பெருநிதிக் கிழார்களை அண்மி, “யாம் கலைமகள் அருளை நிரம்பப் பெற்றுள்ளேம்; யாரையேனும் சினந்து ஒருபாடல் கூறுவோமாயின் உடனே அவர் வாழ்விழந்து மாள்வது திண்ணம்! அங்ஙனமே, எமக்கு நிரம்பப் பொருள் தருவாரை, வாழ்த்திப் பாடுவோமாயின், அவர் மேலும் மேலும் நிதிப் பெருக்கமெய்தி நீண்ட வாழ்நாளும் எய்துவர்!” எனக் கூறி அச்சுறுத்தியும் அவாவுறுத்தியும் வந்தனர். வஞ்சக மறியாத செல்வர்கள், அவர் வசைபாடி தம் வாழ்வைக் கெடுப்பினும் கெடுப்பர் என்று அஞ்சி, அவர் வேண்டியாங்குப் பொருளும் வழங்குவாராயினர். அவர் நினைத்தவுடனே “குருட்டுக்கண் இருட்டுக் கஞ்சாது” என்றபடி, விரைந்து நாணமின்றிப் பாடுதலாலே, பாட்டின் இயலறியா மக்கள், அவரைக் கலைமகள் அருள் பெற்றவரே என்று நம்பினர். இவ்வாறு செல்வாக்கடைந்த அவ் வீமகவியார் தலபுராணங்கள் பாடி அரங்கேற்றவும், அப் பிழைமலிந்த நூல்களை அச்சிடவும் தொடங்கினர்.

அவ் வீமகவியார் “கீழைச்சிவல்பட்டித் தலபுராணம்” என்றொரு நூலைச் செய்யுள் வடிவில் இயற்றி அச்சேற்றி வெளியிட்டனர். மேலும், “நீதிவழி” என்றொரு (72) வெண்பாவாலாகிய நூலையும் இயற்றித் தேவகோட்டை திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியார் என்னும் பெருநிதிக் கிழவர் தலைமையில் மக்களைக் கூட்டி, அந் நூலை அரங்கேற்றலாயினர். இத்தகைய செயல்களால் வீமகவியார்க்கு நிரம்பப் பொருள் வருவாயும் உண்டு.

மக்களின் அறியாமையையும், வீமகவியாரின் வஞ்சகத்தையும் கண்டு நம் பண்டிதமணியவர்கள் மிகவும் வருந்தினர். மேலும், வீமகவியாரின் தலபுராணப் புன்கவிகளும், தம்முள்ளத்தைச் சுட்டன. வீமகவியாரின் நீதிவழி நூல் அரங்கேற்று விழாவிற்குத் திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியாரவர்கள் நம் பண்டிதமணியாரவர்கட்கும் அழைப்பு விடுத்திருந்தனராகலின், அவ் வரங்கேற்று விழாவிற்கு, நம் பண்டிதமணியவர்கள் வேறுசில அறிஞர்களோடே சென்றிருந்தார்கள்.

நூல் அரங்கேற்றுங்கால்,

“புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவும் கண்ணோடி

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து” (நாலடி – 155)

என்றபடி வருந்தியும் பொறுமையோடு கேட்டிருந்து, பின்னர் வீமகவியாரைத் தனியே அழைத்து, ஒரு சில அறிஞரை உடன் வைத்துக் கொண்டு அவர்தம் பாடலிலுள்ள எண்ணிறைந்த பிழைகளையும் எடுத்துக்காட்டி, இங்ஙனம் கவிபாடுதல் நம் தமிழ்மொழிக்கு இழுக்குத்தரும் செயலாகும் என்றும், தலபுராணம் பாடுதல் முதலிய தொழிலை விடுக என்றும் வேண்டினர். இவ் வேண்டுகோட்கு இணங்காமல் வீமகவியார் மேலும் தன் புன்செயலை விடாது செய்வாராதலைக் கண்டு, “கீழைச் சிவல்பட்டித் தலபுராணப் பிழைகள்” என்று ஒரு நெடிய அறிக்கையை எழுதி அச்சிட்டுத் தனவணிகர் நாடு முழுதும் பரப்பினார்கள். அதே அமயத்தில், தமிழறிஞர், இராமசாமி பிள்ளை என்பவர்கள் “வீமகவியாரின் நீதிவழிப் பிழைகள்” என்றொரு அறிக்கை வெளிப்படுத்தினர். இவற்றால், மக்கட்கு வீமகவியாரிடத்து உள்ள அச்சம் போக்கப்பட்டது; கவியாரும் பின்னர் வாளா அடங்குவாராயினர்.

பின்னர், நம் பண்டிதமணியவர்கள் செவ்வி நேர்ந்த பொழுதெல்லாம், செய்யுளியற்றுந் திறலுடையாரை அச்செயலிலே ஈடுபடும்படி தூண்டி வந்துள்ளார்கள். “நம் பரதகண்டத்து மொழிகள் எல்லாம் நிலை பிறழாது என்றுந் திருந்திய முறையில் திகழ்தற்குக் காரணம் மூல நூல்கள் எல்லாம் செய்யுட்களால் ஆக்கப்பட்டமையே”, என்றும், “ஒரு செய்தியைப் புலமுடையார் உள்ளம் கொள்ளுங்கால் அது செய்யுள் முகமாகக் கேட்கப்படுதல் போல் வழக்குச் சொல் முகமாகக் கேட்கப்படுதல் இன்பம் பயவாது”, என்றும், “அரசுரிமையும் புலமையும் வாய்ந்த சைவமன்னர் ஒருவர், தம் உண்மைச் சமயக் கொள்கையையும் மறந்து வேற்றுச் சமய நூல்களில் ஈடுபட நேர்ந்தது செய்யுளின்பத்தினாலேயாம்,” என்றும் “மீண்டும் அவரை அவர் சமய நிலையில் திட்பமுறப் பிணித்து வயமாக்கியதும் செய்யுளின்பமேயாம்,” என்றும் “கவிபாடும் ஆற்றலில்லாதார் புலவருலகத்தில் மக்கட் பேறில்லா வாழ்க்கை உடையவர் ஆவார்”, என்றும் “புலமை வாழ்க்கையிற் சிறப்பெய்த எண்ணுவாரெல்லாம் செய்யுள் பாடும் வன்மை உடையராதல் வேண்டும்,” என்றும், இன்னோரன்ன அறிவுரைகளால் புலமையாளரை நம் பண்டிதமணியவர்கள் ஊக்கிவந்தனர்.

இனி, நம் பண்டிதமணியவர்கள் பாடிய தனிச் செய்யுள்கள் பலவற்றையும் தொகுத்து, ஒரு நூலாக்குதல் தமிழுக்கு ஆக்கந்தரும் செயலாகும்.

9. கட்டுரைத் திருப்பணி

பண்டிதமணியவர்கள் அவ்வப்போது அரிய கட்டுரைகள் வரைந்து, பத்திரிகை வாயிலாய் வெளியிட்டு வந்தார்கள். அக் கட்டுரைகளைத் தேடித் தொகுத்தல் வேண்டும். ஒரு சில கட்டுரைகளை மட்டும், பண்டிதமணியவர்களே தொகுத்து உரைநடைக் கோவை என்னும் பெயரானே, இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். அவ் விரண்டனுள், முதற்பகுதி சமயச்சார்பான உயரிய கட்டுரைகள். இரண்டாம் பகுதி இலக்கியச் சார்பான கட்டுரைகளாம். முதற்பகுதியாகிய சமயக் கட்டுரைகளின் பெருமையை

“ஈண்டுத் தொகுக்கப்பட்ட ஐந்து கட்டுரைகளும் திருவைந் தெழுத்துப் போலப் பாராட்டத் தக்கன. அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல், முத்திப்பேறு என்பவற்றின் நுட்பங்களை விளக்குவனவா யமைந்துள்ளன. இந்நூல் சைவ உண்மையை அறிய விரும்பும் தமிழ் மாணவர்க்கு எளிதிற் பெரும் பயன் தரும் இணையற்ற அறிவுக் கருவூலமாகப் போற்றற்பாலது”, என்றும், “தற்கால உரைநடைக்குத் தக்க எடுத்துக்காட்டாக இவை மிளிர்வன”, என்றும், “நிகரற்ற ஆழ்ந்த சைவசித்தாந்த நூலாராய்ச்சித் திறனோடு இந் நூலிற் காணப்படும் நுண்பொருள்போல இதுவரை எவரும் அறிவுறுத்தக் கண்டிலம்”, என்றும், தாகூர் சட்ட விரிவுரையாளராகிய அறிஞர் பெருமான் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வரைந்துள்ள பாராட்டுரைகள் நன்கு விளக்குவனவாம்.

பண்டிதமணியவர்கள் வரைந்துள்ள ஏனைய கட்டுரைகள் அனைத்துமே இணையற்ற அறிவுக் கருவூலங்கள் என்பது மிகையன்று.

                        10. பண்டிதமணிப் பட்டம் 

நம் பண்டிதமணியவர்களால் நிறுவப்பட்ட சன்மார்க்க சபையும் நாடோறும் தழைத்து வளர்ந்து, அந்நாட்டின்கண் அறிவு பெருக்கி வந்தது. அச்சபையினால் விளைந்த நன்மைகளை யுணர்ந்து, அந்நாட்டில் மக்கள் வேறு பல சபைகளையும் தோற்றுவித்தனர். சன்மார்க்க சபையின் ஆறாம் ஆண்டு விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. அக்காலத்தே மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் அவ்வாண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். தமிழ் நாட்டின் பற்பல பகுதிகளினின்றும் வந்து புலவர் பெருமக்கள் பலர் சொற்பொழிவாற்றினர். அறிவுரைகளைக் கேட்பதற்குப் பல்லாயிரம் மக்கள் வந்து குழுமினர்.

பெரியார் உ. வே. சாமிநாதையரவர்களைத் தமிழுலகம் நன்கறியும். தமிழறியாதாரே ஐயர் அவர்களையும் அறியாதவராவார். நம் தமிழன்னை புதுவாழ்வடைதற்குத் தொண்டு பூண்டு பணிசெய்தாருள் இப்பெரியாரே முதல்வர் எனலாம். ஆங்கில மொழியாலே நெருக்குண்டு புறக்கணிக்கபட்ட நம் தமிழன்னை, பண்டைநாள் தம்தவப்புதல்வர்கள் தனக்கு அன்போடே அளித்த சிந்தாமணியும் மேகலையும் சிலம்புமாகிய ஒப்பற்ற அணிகலன்களையும் இழந்து வறியளாகும் நிலையை எய்தினள். நம் ஐயரவர்கள் தமது பேருழைப்பாலே அழிநிலையிலிருந்த அவ்வணிகலன்களை எடுத்து மாசு போக்கிப் புதுப்பித்துத் தமிழன்னைக்கு அணிவித்துப் போற்றினார்கள். அத்தகைய பெரியார் நம் பண்டிதமணியாரின் ஆழ்ந்த புலமையையும், தமிழன்னைக்கு அவர் ஆற்றி வரும் மாபெருந் தொண்டினையும், கண்டு வியந்தார்கள். அவர்களோடே நட்புரிமையும் கொண்டார்கள். சன்மார்க்க சபையில் தலைமை தாங்கி நம் கதிரேசனாரின் பெருமையை எல்லோரும் அறிய எடுத்து மொழிந்தார்கள். “பண்டிதர்கள் உலகிற் பற்பலர் இருப்பினும், அவருள் நம் கதிரேசனார் மணிபோலத் திகழ்கின்றார் ஆதலின் உங்கள் முன்னிலையிலே இக் கதிரேசனார்க்கு யாம் “பண்டிதமணி”  என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்” என்றார்கள். தலைவராற் சூட்டப்பட்ட பண்டிதமணி என்னும் பெயர் சாலப் பொருத்தமுடையதே எனப் பின் பேசிய புலவரெல்லாம் மகிழ்ச்சியுடனே வழிமொழிந்து போற்றினார்கள். அன்று தொடங்கி, நம் கதிரேசனார்க்குப் “பண்டிதமணி” என்னும் சிறப்புப் பெயர் இயற்பெயர்போல வழங்குவதாயிற்று. பண்டிதமணியின் ஒளி, தாம் பிறந்த நாடாகிய தனவணிகர் நாட்டின்கண் அடங்காமல், வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவித் திகழலாயிற்று.

11. நாநலம்

கலைநலம் நிரம்பிய உள்ளம் பெற்ற சான்றோருள்ளும், தாம் கற்றவற்றைப் பிறர் நன்குணருமாறு கூற வல்லார் மிகச் சிலரேயாவர். இது பற்றியே “ஆயிரத்தொன்றாம் புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர்,” என்று பண்டைச் சான்றோர் கூறலாயினர். நம் வள்ளுவப் பெருந்தகையாரும், இச் சொல்வன்மையை நாநலம் எனக் கூறி, இந்நலம் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது என்பதை,

“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉ மன்று.” ( குறள் – 641)

எனத் தெரித்தோதினர். கல்வி நிரம்பப் பெற்றும் சொல்வன்மையில்லாதாரை, “இணரூழ்த்தும் நாறாமலர் அனையர்” என மணமற்ற மலரோடு ஒப்பிடுவர். கற்றோர், பிறர்க்குப் பயன்பட வாழ்தலே முறையாகவும், சொல்வன்மை யின்மையால் அவ்வாறு பிறர்க்குப் பயன்பட வாழமாட்டாமையின் அவர், “கல்லாதவரிற் கடை” என்றும் வள்ளுவர் கூறியுள்ளார்.

நம் பண்டிதமணியவர்களோ வார்த்தைகூற வல்லார் பதினாயிரவருள்ளும் மிக்க ஒருவராக விளங்கினார்கள். தம்முடைய சொல்லை ஒருமுறை கேட்டோர் மீண்டும் மீண்டும் கேட்டல் வேண்டும் என்று விரும்பும்படி இனிமையாகப் பேசுவார்கள். அடிசிற்கு உப்பு அளவறிந்து இடுமாறு போலத் தம்மினிய பேச்சிடையே அளவறிந்து நகைச்சுவை கலந்து பேசுவார்கள். அவையிடையே சொற்பொழிவாற்றும் பொழுதும், தனியே ஒருவருடன் அளவளாவி பேசும்போதும் தம் முகத்தே அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும்படி பேசுவார்கள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, பொருளற்ற வெறுஞ் சொற்களை மூச்சுவிடாமல் வாரி வீசும் சொற்பொழிவாளர் பலரை யாம் கண்டிருக்கின்றோமல்லமோ! அவ்வாறன்றி, நம் பண்டிதமணியவர்கள் பேசுங்கால், புன்னகை பூத்துப் பொலிவுறும் முகத்தோடே, விரையாது மெல்லன மெல்லன விழுமிய சொற்களாலே இனிமை ததும்பப் பேசுவார்கள். நீண்ட நேரம் பேசியவிடத்தும், அவர்கள் சொற்பொழிவின்கண் பொருளற்ற சொல் ஒன்றேனும் கலக்கமாட்டாது. “வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன்தருதல்” என்னும் சொல்லுக்குரிய எல்லா குணங்களும், அவர்கள் சொற்பொழிவில் நிரம்பியிருக்கும்.

நம் பண்டிதமணியவர்கள், யாதேனுமொரு கழகத்தே சொற்பொழி வாற்றுமிடத்து, அக் கழகத்தே இவர்க்கு முன்னும் பின்னும் சொற்பொழிவாற்றும் எத்தகைய அறிஞர் பேச்சினும் தம்பேச்சு மிக்குத் தலைமைத்தன்மை யுடைத்தாதலை அவையினர் நன்கு அறிந்துகொள்ளுமாறு சொற்பொழிவாற்றுந் திறமை பெற்றிருந்தார்கள். இத்திறமை இவர்கட்கு நிரம்பிய இருமொழிப் புலமையாலே ஏற்பட்டதாகும். நம் பண்டிதமணி போன்று இருமொழியினும் நிரம்பிய புலமையுடையோர் அரியரே யன்றோ!  வடநூற் புலமை மட்டும் நிரம்பியவரும், அன்றித் தென்மொழிப் புலமை மட்டும் நிரம்பியவரும், இருமொழியும் கற்றவிடத்தும், புலமை யுள்ளம் இல்லாதவரும், ஒருமொழியைச் சிறப்பாக அறிந்து மற்றைமொழியைப் பொதுவினறிந்தாரும், என இத்திறத்த அறிஞரேயன்றோ பலராவார். ஆகவே, இத்திறத்தார்க்கு ஏலாதவாறு, இருமொழிப் புலமை முதிர்வாலே, இவர் பேசுங்கால் கம்பநாடன்பாற் கண்ட நுணுக்கத்தைக் காளிதாசனிடத்தும், காளிதாசனிடத்துக் காணப்படும் நுணுக்கத்தை இளங்கோவடிகள் பாலும், இங்ஙனமாக இரண்டு மொழிகளிலும் உள்ள நல்லிசைப் புலவர்பாற் காணப்படுபவனவற்றை இவர் ஒப்புக்காட்டிப் பேசுவார்கள். இவர்கள் பேசுங்கால் பொதுமக்கள் நிற்கச் சிறந்த அறிஞர் உலகமும், இன்பக்கடலுள் ஆழ்ந்து, “என்னே இஃதென்னே! இஃதென்னே!” என வியப்புடையராய்ப் பரவசமடையா நிற்பர்.

மேலும், நம் பண்டிதமணியவர்கள் இலக்கியங்களைப் பற்றி பேசும் பொழுது, அவ்விலக்கியங்களிலே சமயக் கருத்துக்களைக் காட்டியும், சமய நூல்களிலே இலக்கியச் சுவைகளைக் காட்டியும் பேசும் அழகு, கேட்போர்க்குப் பேரின்பம் நல்குவதாம். பண்டிதமணியவர்களின் சொற்பொழிவை ஒருமுறை கேட்டோரும், தாம் அதுகாறும் நந் தாய்மொழி கல்லாது வறிதே போக்கிய நாட்கு இரங்கி, அன்றுதொட்டுத் தமிழ் நூல்களைக் கற்க முற்படுவர். முன்னரே, தமிழ் கற்ற திருவுடையோராயின், புதிய புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதோடு, தாமும் அவ்வாறு நூல்களில் நுணுக்கங்காண முற்படுவர். இந் நாநலமுடைமையால், நஞ்செந்தமிழ் மொழியின் அழகினையும், பெருமையினையும் அவர்கள் நந்தமிழ் நாட்டினர் நன்கு உணருமாறு செய்தார்கள். இதனால், தமிழகத்தே அவர்கள் புகழ் நன்கு பரவிற்று. மூன்று தமிழ்நாட்டினும் உள்ள கழகங்கள் எல்லாம், அப்பெரியாரை ஆர்வத்தோடே அழைத்து அவர்கள் இனிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தன.

12. தாய்மொழிப்பற்று

“செப்பமிக்க இயலமைப்பும் அவ்விலக்கணங்களுள் வேறு எம்மொழிக்கும் இல்லாது தனக்கெனச் சிறப்பு முறையின் அமைந்த பொருளிலக்கண ஒழுங்கும், முதிர் நலச் சொற்களும், சிதைவில் நுண்பொருள்களும், தங்கி நின்றொளிரும் சங்க நூற்றொகையும், புன்னுனிப்பனியில் மன்னுமா மலையுருத் துன்னி நின்று ஒளிர்தரல்போலச் சிற்றளவினவான சொற்றொடர்களில் சிறந்தமைந்தனவாகிய பெரும்பொருள்கள் தோன்றித் திகழும் அறமுதனுதலிய திறமை நூல்களும், அன்பினைந்திணை அக வொழுக்க நேர்மையும், தொடர்நிலைச் செய்யுட் சுவைநலக் கனிவும், குறிக்கோள் பற்றிய அறிவியல் நூல்களின் திட்ப நுட்ப அமைவும், காதல்மிக்கு ஓதுவார் கேட்பாரது கல்லினும் வலிய உள்ள நிலையையும் கரைத்து அவர் தமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கும் இசைநலந் தழீஇய அருட்பாசுரப் பகுதிகளும், இன்னும் பற்பல துறைகளைப்பற்றி நின்று திகழும் நூற்றொகைகளும் தன்பான் மிளிர, இனிமையாங்குணத்தை இயைந்து தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையப்பெற்று “எல்லாம் வல்ல இறைநிலைபோல் என்றும் நின்று நிலவுவது நம் தென்றமிழ் மொழியேயாம்”, என நந்தாய்மொழியின் அருமை பெருமைகளை சென்ற சென்ற இடமெலாம் எடுத்துக் கூறி, “அந்தோ தமிழ்நாட்டீர்! இருமையும் உதவவல்ல இன்னமிழ்தம் போன்ற நந்தாய்மொழியைப் பயின்று இன்பமும் பயனுறாமல், அவமே நாள் போக்குதல் அறிவேயோ!” என்றிரங்குவார்கள், நம் பண்டிதமணியவர்கள்.

“ஒரு நாடு தனக்குரிய மொழியை ஆக்கமுற ஓம்பிப் பாதுகாத்தாலன்றித் தான் சிறந்த நிலை எய்துதல் அரிதாம். மொழி வளர்ச்சி கொண்டே அது வழங்கும் நாட்டின் நலத்தை உணரலாம். எந்த நாடு தன் மொழிச் சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை எல்லா வளங்களானும் பிற்பட்டதாகும். ஆதலால், நாம் முன்னேறவேண்டுமேல், நந்தாய்மொழியை நன்கு பேணி வளர்த்துக்கோடல் நம் முதற் கடமையாகின்றது. எனவே, இனிமை மிக்க நந்தாய்மொழியை எல்லீரும் பயிலுமின்! பயிலுமின்! என அவைகளில் முழங்கினார்.

“எந்நிலத்தில் எம்மொழி வழங்குகின்றதோ அந்நிலத்துவாழும் மக்கள் அம்மொழி வாயிலாகவே முதற்கட் பயிலவேண்டும். அதுவே அந்நிலத்து மக்கட்குத் தாய்மொழியுமாகும். ஒரு குழந்தை பிறந்து மொழிபயிலுங்கால் அதன் தாயால் முதற்கண் பயிற்றப்படும் மொழி யாது? அதுவே தாய்மொழி என்று கோடல் பொருந்தும்,” என்று இனிதின் அறிவுறுத்தினர்.

“நந்தாய்மொழியாகிய தமிழ்மொழி வடமொழி முதலிய பிறமொழிக் கலப்பின்றியே இயங்கும் பெருமையுடையதாகும். இன்றிமையாத விடத்தன்றி இயன்றவரை தூய தனித்தமிழ் மொழியிலே எழுதுதலும் பேசுதலும் நந்தாய்மொழியின் இயற்கையழகை எடுத்துக்காட்டுவதாகும். ஒரு மொழியில் செவ்வனம் பயின்று சுவை நிலை கண்டுணர்வார்க்கு, அதன் தனி நிலையிற்போலப் பிறமொழி கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாது என்பது உண்மை அநுபவமுடையார் எல்லார்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற்களையாதல் பிறமொழிச் சொற்களையாதல் நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்று”, எனத் தூய தமிழ்மொழியின் அழகைப் போற்றும் முறையை நம் பண்டிதமணியவர்கள் பலர்க்கும் அறிவுறுத்திவந்தார்கள்.

பிறமொழிக் கலப்பின்றி தனித் தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டும் என்னும் இக்கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டு அவ்வழியில் தொண்டாற்றி வந்தவர்களுள் தலைசிறந்தவர் மறைமலை அடிகளார் என்னும் புலவர் பெருமானேயாவர். நம் பண்டிதமணியவர்களும் இக்கொள்கையைப் பெரிதும் வற்புறுத்தி வந்ததோடு, தம் இனிய கட்டுரைகளையும் அவ்வாறே வரைந்து வந்தார்கள். மறைமலையடிகளார் இன்றியமையாவிடத்து வடமொழியைத் தமிழில் விரவி எழுத உடன்படமாட்டார்கள். நம் பண்டிதமணியவர்கள் இன்றியமையாவிடத்து வடமொழியைச் சிறிது விரவியும் வரைவார்கள். மறைமலையடிகளாராதல் நம் பண்டிதமணியவர்களாதல் தம் இளம்பருவத்தேயே இத் தனித்தமிழ் கொள்கையைக் கண்டு கையாண்டவர்கள் அல்லர். ஆதலால், இவர்களின் இளம்பருவத்தே எழுதப்பட்ட கட்டுரைகளாதல், நூல்களாதல் பெரிதும் வடமொழி விரவப்பட்டனவாகவே உள்ளன. இவர்கள், தம் அநுபவத்தாலே நாளடைவில் தனித்தமிழின் சுவையை உணர்ந்து அந்நலத்தைக் கைக்கொள்ளும்படி மக்களைத் தூண்டிவந்தார்கள். இதன் பயனாக, இற்றை நாளில் இனிய தூய தமிழ்நடையின் சுவையுணர்ந்து எழுதுவாரும், பேசுவாரும் நந்தமிழகத்தே பலர் உளராயினர்.

நம் பண்டிதமணியவர்களின் இளம் பருவத்து உரைநடைக்கு எடுத்துக்காட்டாக ஒன்று காட்டுவல், காண்மின்:

“என்னும் உபதேசத்தால், ஓங்காரத்தினுடைய அர்த்த ரூபமாகவுள்ளது ஸ்ரீ பஞ்சாக்கரம் என்பது வெளியாகும். சிதம்பரத்திலே ஞானமயமாகிய கனகசபையிலே சிவகாமி அம்மையார் காண ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் சபாநாயகர் வடிவம் ஸ்ரீ பஞ்சாக்கர ரூபம் என்பதை உண்மை விளக்க முதலிய சித்தாந்த சாத்திரங்களால் உணர்க”, எனவரும்.

13. அரசர் நட்பு

நம் தமிழ்மொழி வீறுபெற்றுயர்ந்து இப்பரத கண்டம் முழுதும் செங்கோலோச்சி அரசமொழியாகத் திகழ்ந்த பண்டைக் காலத்திலே புலனுழுதுண்பாராகிய புலவர் பெருமக்களை, முடிவேந்தராகிய சேர சோழ பாண்டிய மன்னர்களும், குறுநில மன்னரும் நன்கு மதித்து, நிலம், பொருள் யானை தேர் அணிகலன்கள் உண்டி உடை உறையுள் முதலிய பெரும் பரிசில் வழங்கிப் போற்றி வந்தமையும், புலவர் பெருமக்களும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் கீழ்க்கணக்கும் முதலிய அரிய பெரிய இலக்கிய நூல்களையும் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களையும் இயற்றி, மொழியை வளம்படச் செய்து நாட்டின்கண் அறிவுச்செல்வத்தைப் பெருக்கி வந்தனர் என்பதையும் நமது பழைய இலக்கிய நூல்களானே நாம் நன்கு உணர்தல் கூடும். எண்ணமாக வுள்ள அறிஞர் கருத்துக்கள், செயலாக மலர்ந்து பயன் உடையன ஆதற்குப் பொருளின் அல்லது, பொருளாளர்களின் உதவி இன்றி அமையாததாகும். இதுபற்றியே, “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்”, என்றும் “அருள் என்னும் அன்பீன்குழவி பொருள் என்னும், செல்வச் செவிலியால் உண்டு”, என்றும் ஆன்றோர்கள் கூறுவாராயினர். அறிவுச் செல்வமுடைய மேன்மக்களும், பொருட் செல்வமுடைய மேன்மக்களும் ஒத்து இயங்கியவழியே இவ்வுலகில் மிகப் பெரிய சீர்திருத்தச் செயல்கள் நிகழ்வனவாகும். பொருளாளர் உதவியின்றேல் அறிஞர்களின் சீர்திருத்த எண்ணங்கள் நினைவுமாத்திரையாய் நின்றொழிவனவாகும். மற்று, அறிஞர்களின் உதவி பெறாதபோது பொருளாளர்களுடைய பொருள், இவ்வுலகில் நன்மையை வளர்ப்பதற்கு முரணாகப் பெரிய தீமைகளையே போற்றி வளர்ப்பதாகவும் முடியும்.

நம் பண்டிதமணியவர்கள் இளைஞராயிருந்த காலத்தேயும், தன வணிகப் பெருநிதிக் கிழவர்கள் தமக்கு இயல்பாகவுள்ள அறப்பண்பின் தூண்டுதலாலே பற்பல அறச் செயல்களைப் பெரும்பொருள் செலவிட்டு ஆற்றியே வந்தனர். இவ்விந்திய நாட்டிலுள்ள சைவ வைணவத் திருக்கோயில்களைப் புதுக்கிச் சீர்திருத்துதற்கு அம்மக்கள் எண்ணிறந்த பொருள்களைச் செலவிட்டனர். வடமொழிப் பாடசாலைகள் பற்பல நிறுவி அவற்றில் பார்ப்பனச் சிறுவர்களே பயிலவேண்டும் என வரையறை செய்தனர். அரசியற் செல்வாக்குடைய ஆங்கிலக் கல்லூரிகட்கும் பெரும்பொருள் வழங்கினர். வடமொழிக் கல்லூரிகட்கும் சத்திரங்கட்கும் பொருளை வாரி இறைத்து வந்தனர். இவையெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதுக்களேயாயினும், எல்லா நன்மைக்கும் முதற் காரணமாக அமைந்த நந் தாய்மொழியின் பொருட்டு ஒருசில உதவியேனும் அவர்கள் செய்ய முன்வரவில்லை.

இவர் “அறச்செயல் தன் தாயைப் பட்டினியாற் சாகவிட்டு செல்வமிக்க மக்கட்கு அன்னதானம் செய்யும் ஒருவனுடைய செயலையே ஒக்கும்,” என நம் பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனவணிகச் செல்வப் பெருங்குடியிலே தோன்றியவர்களும், வண்மைக் குணம் நிரம்பியவர்களும், அரசியலாரால் நன்கு மதிக்கப்பட்டவருமாகிய சர். சா. ராம. மு. அண்ணாமலைச் செட்டியார் என்னும் வள்ளல் பெருமான் சிதம்பரத்திலே, ஆங்கிலம் வடமொழிகளுக்கு அமைத்த கல்லூரிகளைப் போன்று, நாட்டின் முன்னேற்றம் தாய்மொழியாகிய தமிழ்வளர்ச்சியை இன்றி அமையாதென்னும் சீரிய கொள்கையுடையவர்களாய், ஒரு சிறந்த தமிழ்க் கல்லூரியையும் நிறுவினார்கள். இவ்வள்ளலாரே முதன்முதலாகத் தமிழன்னைக்குத் திருக்கோயில் எடுத்தவர்கள் என்னலாம். இப்பெருநிதிக் கிழவர் தங்குலத்தினராகிய பண்டிதமணியவர்களின் அறிவுப் பெருமையையும், அவர்களைத் தமிழுலகம் புகழுமாற்றையும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுடையராய், அவர் நட்பைப் பெரிதும் விரும்பினர். நம் பண்டிதமணியவர்களும் அவர்களின் விருப்பத்தை உணர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏது நம் நல்லூழே ஆதல் வேண்டும் என உள்ளுள்ளே உவந்தனர். மாசற்ற தூய உள்ளமுடைய இவ்விருவரும், நாளடைவில் உயிருறக் கலந்து ஒன்றி நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தனர். இவ்வாற்றால் பண்டைக் காலத்தே முடிமன்னர்களாற் போற்றப்பட்ட ஒரு நல்லிசைப் புலவர்க் குண்டாகிய நலனெல்லாம் நம் பண்டிதமணியும் பெற்றார்கள் என்பது மிகையாகாது. நந்தமிழன்னைக்குத் திருக்கோயில் கண்டவர்கள் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். அத்திருக்கோயிலில் உறையும் தமிழ்த்தெய்வத்திற்குச் சுடர் விளக்கம் ஏற்றியவர்கள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள்.

நம் பண்டிதமணியவர்களிடத்துச் செட்டிநாட்டரசர் அவர்கள் கொண்டிருந்த நன்குமதிப்பையும் நட்புரிமையையும் அவ் வரசர்பெருமானே கூறிய கீழ்வரும் அன்புரைகள் நன்கு விளக்குவனவாம். அவை வருமாறு:-

“தமது கல்வியின் மேம்பாட்டினால், தமிழ்நாடு முழுதும் புகழ்பெற்று விளங்கும் பண்டிதமணியவர்களைப் பாராட்டுவது நமக்கே பெரிய சிறப்பாகும். இப் பெருங் கல்வியாளர் தமது இலக்கிய இலக்கண அறிவு, சொல்வன்மை, ஆராய்ச்சித் திறன், மொழிபெயர்க்கும் ஆற்றல், போதனாசத்தி முதலிய சிறந்த குணங்களால் பெருமை பெற்று விளங்குகிறார்கள். இவர்கள் வடமொழியிலும், தென்மொழியிலும் நல்ல அறிவு வாய்ந்திருப்பதால் இவர்களுடைய மொழித்தொண்டு மேன்மையுறுகின்றது. ஒரு மொழியிலுள்ள கருத்துக்களைச் சிதைவுறாமலும் தெளிவாகவும் வேறொரு மொழியில் விளக்கி உரைப்பது எளிதன்று. சொன்னயம் பொருணயம் பொருந்தப் பேசுவதும் எழுதுவதும் யாவருக்கும் எளிதல்ல. சன்மார்க்க சபையின் விருப்பத்திற்கிணங்கி இவ் வறிஞரால் இயற்றப்பட்டுச் சன்மார்க்க சபையால் வெளியிடப்பட்டுள்ள சுலோசனை, உதயண சரிதம், சுக்கிர நீதி, மண்ணியல் சிறுதேர் என்ற நூல்கள் இவர்களுடைய சிறந்த கல்வியறிவிற்கும் நூலியற்றும் ஆற்றலுக்கும் ஏற்ற எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. இவைகளே யன்றி, பிரதாப ருத்திரீயம், மாலதீ மாதவம், சாகித்திய தருப்பணம் முதலிய அரிய நூல்களும் பண்டிதமணியவர்கள் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவைகள் விரைவில் அச்சிடப்பட்டுப் பலருக்கும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பண்டிதமணியவர்களுடைய நூல் இயற்றும் ஆற்றல் ஒருபுறமிருக்க, அவர்களுடைய சொல்வன்மை அதனினும் சிறந்து விளங்குகின்றது. நயம் மிகுந்து விளங்கும் அவர்களுடைய சொற்பொழிவுகள் அறிவைப் பெருக்கும் தன்மையனவாகவும் இருக்கின்றன. தேவாரம், திருவாசகம், திருக்குறள், இராமாயணம் முதலிய தெய்வீக நூல்களில் மிகுந்த சுவையான பகுதிகளையும் பண்டிதமணியவர்கள் கேட்பவர்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியுமாறு பரவச்செய்வதில் தளராத ஊக்கம் உடையவர்கள். மாணவர்களுக்குப் போதிப்பதன் மூலமாகவும், கற்றோர் சபையில் சொற்பொழிவுகள் இயற்றுவதன் மூலமாகவும், இவர்கள் தமிழ்நாட்டில் கல்வி பரவப் பெரிதும் உதவி வருகிறார்கள்.

“வடமொழியிலும் தென்மொழியிலும் வல்ல புலவராகவும் மாணவர்கள் மனமுவக்கப் போதிக்கும் ஆசிரியராகவும், அரிய நூல்களை இயற்றும் நூலாசிரியராகவும், அறியாமையையும் ஐயத்தையும் போக்கவல்ல சொற்பொழிவாளராகவும் பண்டிதமனியவர்கள் திகழ்கின்றார்கள்”, என்பதாம்.

இப் பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்களின் நற்பண்புகள் அனைத்தையும் அவ் வள்ளலார் உணர்ந்திருந்தார் என்பதையும் அவர்கள்பால் சிறந்த நட்புரிமை கொண்டிருந்தார் என்பதையும் நன்கு விளக்குகின்றன.

செட்டிநாட்டரசரின் நட்புரிமையால் பண்டிதமணி எய்திய சீரும் சிறப்பும் அளவிடற்பாலன அல்ல. நம் பண்டிதமணியவர்களும், அரசர் நட்பாலே தாம் எய்திய நன்மைகளைப் பற்பலவிடத்தும் வெளிப்படையாக விளம்பி மகிழ்ந்தார்கள். “யான் உயர்ந்தவன் என்று பிறர் உணரும்படி செய்த பெருமை கனம் ராசா அவர்களைச் சார்ந்தது, நிகரற்ற செல்வமும் அறிவும் ஆட்சித் திறனும் அமைந்த பெருங் கொடை வள்ளலாகிய கனம் செட்டிநாட்டு ராசா அவர்கள் தம் உள்ளத்தில் எனக்கும் ஓர் இடனளித்துச் சிறப்பித்து வரும் பெருமையே யான் அடைந்து வரும் சிறப்புக்கள் எல்லாவற்றினும் தலைசிறந்ததாகும்.”

இவ் வன்பார்ந்த பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்கள் கூறிய நன்றியுணர்ச்சி கெழுமிய நல்லுரைகளாம்.

14. இல்வாழ்க்கை

பண்டிதமணியவர்களின் உள்ளத்தை இளமையிலேயே கலைமகள் கவர்ந்து கொண்டமையானும், அவர்கள் செயற்கரிய செயலாகிய சீர்திருத்தத் துறையிலே சென்றமையாலும் நீண்டகாலம் இல்வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டார்களில்லை. பண்டைக்காலத்தே அருமறை அந்தணர் நாற்பத்தெட்டாண்டு அகவை நிரம்புந்துணையும் கல்வித்துறையில் ஈடுபட்டு அறிவுச் செல்வத்தை நிரம்ப ஈட்டிக்கொள்வர் என்றும், அவ் வகவை எய்துந்துணையும் பிரமசரிய நோன்பு கொள்வர் என்றும், பின்னரே இல்லறம் புகுவர் என்றும் நம் பண்டை நூல்கள் கூறுகின்றன.

“அறுநான் கிரட்டி இளமைநல் யாண்டு

ஆறினிற் கழிப்பிய அறநவில் கொள்கை,

…..  ……. இருபிறப் பாளர்.” (180)

எனத் திருமுருகாற்றுப் படையினும் வருதல் காண்க.

நம் பண்டிதமணியவர்கள் கலை நிரம்பும் பொருட்டு இளமை நல்யாண்டு முப்பதும் கழித்தார்கள். பிறழாத பிரமசரிய நோன்பில் உறைத்து நின்றார்கள். அவ் வகவையின் பின்னரே, திருமணம் புரிந்துகொண்டார்கள். மகிபாலன்பட்டியின் அண்மையிலுள்ள வேகுப்பட்டி என்னும் ஊரிலுள்ளதொரு ஒழுக்கம் நிறைந்த தனவணிகப் பெருங்குடியில் தோன்றிய திரு. மீனாட்சி ஆச்சியாரை நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1912ம் ஆண்டு, சனவரித் திங்கள் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து தம்மினிய வாழ்க்கைத் துணைவியாராகக் கைப்பற்றினார்கள்.

இல்வாழ்க்கையில் இருந்துகொண்டே செயற்கரிய செய்து புகழ்பெற்ற சான்றோர்களின் புகழிற் செம்பாதிக்கு மேலும் உரிமையுடையோர் அப்பெரியோரின் வாழ்க்கைத் துணைவியராக அமைந்த குலமகளிர்களே ஆவார்கள். காந்தியடிகளார்க்குக் கத்தூரியம்மையாரும், வள்ளுவனார்க்கு வாசுகியம்மையாரும் வாய்த்தாற்போன்று திரு. மீனாட்சியாச்சியார் நம் பண்டிதமணியார்க்கு வாழ்க்கைத் துணைவியராக வாய்த்தார்கள். நம் பண்டிதமணியவர்களின் புலமைச் சிறப்பை ஆச்சியாரவர்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். ஏனைச் செல்வர் இல்லங்கட்குப் பெரும்பாலும் அவர்கள் உறவினர்களே அடிக்கடி வருவர். அவர்கள் தொகையும் மிகையாக இராது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்குத் தமிழ் நாட்டிற் பற்பல பகுதிகளினும் உள்ள அறிஞர் பெருமக்கள் அடிக்கடி வருவதுண்டு. அவ்வறிஞர்களும் வியக்குமாறு இன்சுவை யடிசில் சமைத்துப் பொழுதறிந்து விருந்தூட்டுவதில் நம் ஆச்சியார் மிகவும் வல்லவர்கள்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே எப்பொழுதும் சமையற்காரன் ஒருவன் இருந்து தொழில்செய்வன். சமையற்காரர்களை வைத்துக் கொள்ளக்கூடிய நிதிப்பெருக்கமுடையோர் மனைகளிலுள்ள மகளிர்கள், பெரும்பாலும் சமையற்றொழில் தெரியாதவர்களாகவும், தெரிந்தாலும் அத்தொழில் செய்வதில் சோம்பலுடையவர்களாகவும் இருப்பதே வழக்கம்.

தனவணிகச் செல்வக் குடும்ப மகளிர்களில் பெரும்பாலோர் மேற்கூறிய குறைபாடுடையவர்கள் என்று பண்டிதமணியவர்கள் கூறுவார்கள். மேலும் அவர்கள் இக்குறையை அகற்றவேண்டும் என்றும் பற்பல கூட்டங்களிலே கூறி வந்தனர். “இனி நம் பெண்மக்கள் பொருட்டு யாம் கருதவேண்டியவைகளும் சிலவுள்ளன; எல்லாக் கற்பிலக்கணமும் நிரம்பப்பெற்ற நம் பெண்மக்களுட் சிலர் நம் சமய முறைப்படி தம்மில்லத்தே செய்யவேண்டிய நாட்கடன்களைச் செய்தலிற் சிறிது சோம்பலுடையவராய்க் காணப்படுகின்றனர்; அதனையும் குணவகைகளின் மாறுபட்டிருப்பின் அவற்றையும் திருத்துதலும், நாட்கடன்களைக் கற்பித்து அவ்வழி நிறுத்தலும் அவரவர் கணவன்மார்களின் கடமையாகும்”, என்பது நம் பண்டிதமணியவர்கள் தம்மினத்தார் சீர்திருத்தம்பற்றிப் பேசியவற்றுள் ஒரு பகுதியாகும்.

இவ்வறிவுரைகள், மகளிர்கள் அட்டில் தொழில் வல்லராதல் வேண்டும் என்னும் அவர்கள் கருத்தைப் புலப்படுத்துகின்றனவல்லவோ!

சமயற்காரன் இருப்பினும், ஆச்சியாரவர்கள் தாமே அடுக்களையிலிருந்து அடிசில்களை நன்கு சுவையுடையனவாகவும், பதனழியாமலும் சமைப்பார்கள். அங்ஙனம் சமைத்த அடிசிலை விருந்தினர்க்கும் கணவனார்க்கும் மக்கட்கும் தம் கையாலே அன்புடன் இடுவர். சுவையுடைய அடிசில் ஆக்குவதில் ஆச்சியார் தனிச்சிறப்புடையவர். நம் பண்டிதமணியவர்களும் இன்னின்ன உணவுப் பொருளை இன்னின்ன கூட்டி இன்னின்ன பதத்திற் சமைக்க வேண்டும் என்று அடிசிற் பக்குவம் சில செவ்விகளில் கூறுவர். அவர்கள் கூறும்போதே கேட்போராகிய எம்மனோர் நாவில் நீரூறும்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே விருந்துண்ட அறிஞர் வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், வயிறார உண்டு மகிழ்ந்து பாராட்டிய மொழிகள் ஆச்சியாரின் அடிசிற்சிறப்பை நன்கு விளக்கும். அவர் கூறியதாவது:

“யான் சோற்றுத்துறை அடிகளில் ஒருவன்; இவருடைய அன்பு குழைந்த இன்ப விருந்துண்டு களித்து நாவில் இப்போதும் நீரூறி நிற்கின்றவர்களில் ஒருவன். மிகச்சிறந்த செல்வர்களும் அத்தகைய இனிய உணவைத் தங்கள் இல்லத்தே அமைத்துக்கொள்ள முடியாமல் விழிக்கக் கண்டிருக்கின்றேன். பண்டிதமணிக்கு அமைந்த அம்மையாரும் சுவையுலகில் வாழ்கின்றவர்கள். சுவையுலக வாழ்க்கை வாழ்வார்க்கே அனைத்தும் எளிதில் அமையும். ஆகவே, இவரிடத்தே சுவையுலக வாழ்க்கையைக் கண்கூடாகக் காணலாம். இல்வாழ்க்கையிலும் இனிமை; உடையிலும் இனிமை; ஊனிலும் இனிமை; பேச்சிலும் இனிமை; மூச்சிலும் இனிமை; எழுத்திலும் இனிமை; குழுவிலும் இனிமை; இவர் பிறரைப் புகழ்வதிலும் இனிமை; இகழ்வதிலும் இனிமை; மரத்தைப் பழத்தால் அறிக என்பர் கிறித்து; ஈதே பழம்; இனி மரத்தை அறிந்துகொள்க,” என்பதாம்.

பண்டிதமணியார்தம் பண்புடைய இல்லத்தே விருந்துண்டு களித்த அறிஞர் திரு. மீனாட்சிசுந்தரனார் அவ்வினிமையைத் தொடர்ந்து பண்டிதமணியாரின் வாழ்க்கை முழுதுமே இனிமையாதலை உணர்ந்து இன்புற்றவாறிது.

இனி, நம் பண்டிதமணியவர்கள் நம் நூல்களானே போற்றிக் கூறப்படும் இல்வாழ்க்கைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தார்கள் எனலாம். யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப் பழகும் பேறு பெற்றேன். என்பால் பண்டிதமணியவர்களும், திரு. ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறை கொண்டு அன்பு பூண்டொழுகினர். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் பேராசிரியராக இருந்த காலத்தே மாணவர் பற்பலர் பண்டிதமணியவர்களின் அன்புகெழுமிய அறிவுரைகளைக் கேட்க விரும்பி மாலைப்பொழுதினும், விடுமுறை நாட்களினும் இல்லத்திற்கு வருவார்கள். அம்மாணவர்களை நம் பண்டிதமணியாரேயன்றி, ஆச்சியாரும் மக்களை அன்போடே உபசரிக்குமாறு இன்சொற்களாலே வரவேற்று உபசரிப்பார்கள். வந்த மாணவர்கள் தத்தம் அன்புடைத் தாய்தந்தையரை அவ்விடத்தே கண்டாற்போன்றே மகிழ்வர். மாணவர்களைப் பண்டிதமணி எப்போதும் “அப்பன்” என்றே அன்பு ததும்ப அழைப்பர்.

ஆச்சியாராதல், பண்டிதமணியாராதல் தம் மக்களை இன்சொல்லாலன்றி ஒருபொழுதும் சுடுசொல்லாலே கண்டிப்பதில்லை. வீட்டுப் பணியாளரிடத்தும் மிக்க அன்புடையவர்களாகவே இருப்பர். பண்டிதமணியாரின் இல்லமே ஓர் அன்புக்கடல் என்னலாம்.

பெருந்தன்மை மிக்க பண்டிதமணியவர்கள், தம் வீட்டுக் காரியங்களை ஒருபொழுதும் எளிதென்று கருதியிராமல் சிறு காரியங்களையும் விழிப்புடன் நடத்துவார்கள். வீட்டிற்கு வேண்டிய உப்பு முதற் கருப்பூரம் இறுதியாக உள்ள எப்பொருளையும் விழிப்புடன் ஈட்டி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் இல்லத்தே இனிமையுடன் எளிமையும் கலந்தே இருக்கும். பொருள்களைச் சிக்கனமாகவே செலவு செய்வார்கள்.

பாமர மக்களுடனே நம் பண்டிதமணியவர்கள் கலந்து பேசும்போது அப் பாமரரோடே தாமும் ஒரு பாமரர் போலே பேசுதலைக் காணும் நமக்குப் பெரிதும் வியப்புண்டாகும். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் இருந்த காலத்தே, ஓர் இடைமுதுமகள் பக்கத்துக் கிராமத்திலிருந்து தயிரும் வெண்ணையும் கொணர்ந்து பண்டிதமணி இல்லத்திற்குக் கொடுத்து வந்தாள். அம்மூதாட்டி நம் பண்டிதமணியவர்களின் சிறப்பை எவ்வாறறிவாள்! அவள் பெருமைமிக்க நம் பண்டிதமணியாரை “உனக்கு எவ்வளவு வெண்ணெய் வேண்டும் நீ எனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்”, என்றிப்படிப் பேசும்போதெல்லாம் நீ, உனக்கு, என்னும் ஒருமை மொழியாலேயே பேசுவாள். அவள் பேசுவதை அயலில் இருந்து கேட்கும் எம்மனோர் உளத்தே “நீ, உனக்கு” என்னும் மொழிகள் சுறுக்கென்று தைக்கும். நம் பண்டிதமணியவர்களோ அங்ஙனம் பேசலாகாதென அவளை ஒருபொழுதும் திருத்த முற்பட்டிலர். அவள் வினாவிற்கெல்லாம் நம் பண்டிதமணியவர்களும் முகமலர்ந்து புன்சிரிப்புடன் “எனக்கு இவ்வளவு வெண்ணெய் வேண்டும், உனக்கு நான் இவ்வளவு காசு தரவேண்டும்,” என்று விடையிறுப்பர். அவர்கள் பேசுங்கால் ஒத்த தகுதியுடைய தமக்கையும் தம்பியும் அளவளாவுதல் போன்று நமக்குத் தோன்றும்.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள்: 60)

என்பது திருக்குறள். இக்குறளிற் கூறியாங்கு நற்குண நற்செயல்களையுடைய மனைவியாரை எய்தியிருந்த நம் பண்டிதமணியவர்கள், அறிவறிந்த மக்கட் பேற்றானும் சிறப்புடையராகவே திகழ்ந்தார்கள். பண்டிதமணியார்க்கு நிறைநாட் செல்வர்கள், சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியகராசன் என்னும் நான்கு ஆண்மக்களும், திருநிறை செல்வியர், மங்கயர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என்னும் பெண்மக்கள் மூவருமாக மக்கள் எழுவர் உளர்.

இம்மக்களும்,

“செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவய லூர

மகனறிவு தந்தை யறிவு”

                    (நாலடியார் 367)

என்றபடியும், “நூலைப்போலே சீலை தாயைப் போலே பிள்ளை” என்றபடியும், தம் இருமுது குரவர்களின் பண்பெல்லாம் வாய்க்கப் பெற்றவராய் மன்னுயிர்க்கெல்லாம் இனியராய்த் திகழ்கின்றனர். இவர்களில் மூத்த சுப்பிரமணியன் செட்டியார்க்கும், கனகசபாபதிச் செட்டியார்க்கும், மங்கயர்க்கரசி யாச்சிக்கும் குழந்தைகள் உளர். இவ்வாற்றால் நம் பண்டிதமணியவர்கள் நிரம்பிய மக்களையும் பேரர்களையும் உடையராயதுடன், அவர் தம்மை அன்பு கெழும வளர்த்தின்புறும் பெரும்பேறும் உடையராயினர்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)

என்னும் அருமைத் திருக்குறட்குப் பண்டிதமணியவர்கள் இலக்கியமாக விளங்கினார்கள்.

அக்காலத்தே தமிழன்பு மிக்க திரு. வே. இராதாகிருட்டிண பிள்ளை என்பவர்கள், தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பெயரால் ஒரு சிறந்த தமிழ்க்கழகம் நிறுவி, அதன் வாயிலாய் மொழிவளர்த்து வந்தார்கள். இராதாகிருட்டிணபிள்ளையவர்கள் கழகம் நிறுவிய ஒருசில ஆண்டெல்லையிலேயே இறைவன் திருவடி நிழலை எய்தினார்கள்; ஆதலின், அவர்கள் முன்தோன்றலாகிய திருவாளர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அத் தமிழ்க் கழகத்தைத் தம்முயிரேபோற் போற்றி வளர்ப்பாராயினர். பிள்ளையவர்கள் நம் பண்டிதமணியவர்களின் புலமைச் செல்வத்தையும், தாய்மொழித் தொண்டின் ஆர்வத்தையும் அறிந்து அவர்களுடன் நட்புரிமை பூண்டனர்.

“தமிழவேள்” “செந்தமிழ்ப் புரவலர்” என்னும் சிறப்புப் பெயர்களாலே புலவர்கள் போற்றிப் புகழும்படி தமிழ்மொழியினிடத்தும் தமிழ்ப்புலவரிடத்தும் பேரன்புடையவரான திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டிதமணியவர்களைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக இருந்து தங் கழக வளர்ச்சியினும் பங்கு கொள்ள வேண்டும் என வேண்டினர். நம் பண்டிதமணியவர்களும் அதற்கிசைந்து மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையில் தாம் கொண்டிருந்த உரிமைபோலவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின்பாலும் உரிமைபூண்டு பொருளுதவியானும் இனிய தம் சொற்பொழிவுகளானும் அச்சங்கத்தைப் புகழுறத் தம் ஆயுள்காறும் போற்றி வந்தார்கள். அச்சங்கத்தின் பதினான்காம் ஆண்டு விழாவில் நம் பண்டிதமணியவர்கள் தலைமையேற்றுத் “தமிழும் தமிழ்ப்பணியும்” என்னும் பொருள் பற்றிப் பேசிய விரிவுரை தமிழ் வளர்ச்சிக்கான பற்பல துறைகளையும் கற்றோரும் மற்றோரும் சுவைத்துச் சுவைத்து இன்புறுமாறு நுண்பொருட் செறிவுங்கொண்டு நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.

“போற்றுந் தமிழும் புலவரும் வாழ்கநலம்

சாற்றுங் கரந்தைத் தமிழ்ச்சங்கம் – ஏற்றமொடு

பல்லாண்டு வாழ்க அருள் பாலித் ததுபுரக்கும்

எல்லோரும் வாழ்க இனிது”.

என நம் பண்டிதமணியவர்கள் தம் அருள்வாக்காலே மனமார வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்தியவாறே அத் தமிழ்ச் சங்கம் “ஏற்றமொடு” பல்லாண்டாகத் தமிழ் வளர்த்துச் சிறந்தோங்கித் திகழ்கின்றது.

15. பேராசிரியர்

“அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” என்றபடி நம் பண்டிதமணியவர்களைச் செட்டி நாட்டரசர் பெரிதும் விரும்பி அவர்களுடன் நட்புரிமை பூண்டனர் என்று முன்பு கூறினோம். அவ்வரசர் பெருமான் தாமெடுத்த தமிழ்த் தெய்வத் திருக்கோயிலாகிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியில் நம் பண்டிதமணியார் ஆசிரியராக அமர்ந்து பணிபுரிவது உலகெல்லாம் தமிழைப் பரப்புவதற்கு ஏதுவாகும் என்றும், மேலும் தம் பல்கலைக் கழகமும் பெரிதும் சிறப்பெய்தும் என்றும் கருதியவர்களாய்ப் பண்டிதமணியவர்களைப் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்து பணிபுரியும்படி வேண்டிக்கொண்டார்கள். அக்காலத்தே யான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே ஒரு தமிழ் மாணவனாக இருந்தேன். பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக் கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபோது என் போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர்கள் பதவியேற்பதற்கு ஒருசில கிழமைகட்கு முன்னர்ப் பல்கலைக் கழகத்தே வந்து ஒரு சொற்பொழிவாற்றியிருந்தார்கள். அவர்களுடைய ஒருநாள் ஒரு பொழுதைச் சொற்பொழிவைக் கேட்ட யாங்களும் தேனுண்ட வண்டெனக் களி துளிம்பினேம்! இனிமை மிக்க அப்புலவர் பெருமான் எமக்கு நிலைப்பான ஆசிரியர் எனக் கேட்டதும் எங்கள் மகிழ்ச்சி கடல் எனப் பெருகிற்று.

கி. பி. 1934-ம் ஆண்டில் நம் பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஆகிப் பணிபுரியத் தொடங்கினார்கள். பிச்சை யேற்று வயிறு வளர்க்கும் பேராசைமிக்க ஒரு ஏழைக்கு ஒரு பேரரசனுடைய தலைமைக் கருவூலத்தைத் தாழ்திறந்து “இக் கருவூலத்துக் கிடந்த பொருளெல்லாம் உன்னுடையதே” கொள்க என அவ் வரசன் வழங்கினனாக அவ் வேழை எங்ஙனம் மகிழ்வான்! அங்ஙனம் மகிழ்ந்தேம் அவர்பால் மாணவராக இருந்து அவர்தம் அறிவுரையைக் கேட்கும் பேறு பெற்ற மாணவக் குழாத்தினேம்.

நம் பண்டிதமணியவர்களிடம் மாணவராக இருந்து பயிலும் திருப் பெற்றவர்களில் ஒருவரும், தலைமாணாக்கர் இனத்தைச் சேர்ந்தவருமாகிய டாக்டர். திரு. அ. சிதம்பரநாதச் செட்டியார் எம். ஏ. அவர்கள் ஆசிரியராகிய நம் பண்டிதமணியின் நல்லாசிரியத் தன்மையைப்பற்றிக் கூறியதாவது:-

“அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் கல்வி கற்கும் பேறுபெற்ற சிலருள் யானும் ஒருவன். 1934-1935-ஆம் ஆண்டுகளில் நான் எம். ஏ. வகுப்பிற் படித்து வருங்கால் அவர்களிடம் சிலப்பதிகாரம் அகநானூறு ஆகிய உயர்ந்த இலக்கியங்களைப் பாடங் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன். அவர்கள் நடத்திய ஒவ்வொரு வகுப்பினையும் இன்று நினைத்தாலும் உள்ளத்தில் உவகையும் எழுச்சியும் உண்டாகின்றன. உரையில்லாப் பகுதியாகிய வஞ்சிக் காண்டத்திற்குத் தம்முடைய கூரிய மதியினால் அவர்கள் பொருள் கூறின திறத்தை யாங்கள் வியந்தோம். ஒப்புமைப் பகுதிகள் காட்டல், மேற்கோள் காட்டல், இலக்கண நயம் எடுத்துரைத்தல், நூனயம் நவிலுதல் ஆகிய வகையில் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனச் சொல்லுமாறு அவர்களுடைய வகுப்புக்கள் நடைபெறும்” என்பதாம்.

இனி, மைசூர் மகாராசா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் திரு. S. உருத்திராபதி என்பாரும் நம் பண்டிதமணியவர்களுடைய மாணாக்கராவார். அவர் கூறியதாவது:- “சீரிய புலமையும், சொல்வன்மையும், எழுத்து வன்மையும் வடமொழி தென்மொழி இரண்டையும் ஒருங்கே ஆய்ந்த மதிவன்மையும், வாய்க்கப்பெற்ற நம் புலவர் பெருந்தகையைக் காண்பதே இன்பமாகும். அவர்கள் நய உரையைக் கேட்பது சிந்தைக்கும் செவிக்கும் ஒருங்கே இன்பம் பயப்பதாகும். அவர்கள் மாணவர் குழுவில் யான் ஒரு கடைமாணாக்கன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத் தனியொரு பெருமையும் இன்பமும் உண்டு என்பதாம்.

இவ்வண்ணம் மாணவர் எல்லோரும் மனமகிழ்ந்து இன்புறுமாறு நம் பண்டிதமணியவர்கள் நூற்றுக் கணக்கான மாணவர்கட்கு அரிய பெரிய செந்தமிழ் நூல்களையும் எண்பொருளவாகச் செலச்சொல்லி வந்தார்கள். இவர்கள்பாற் கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகின் பற்பல இடங்களிலே இருந்து பண்டிதமணியவர்கள்பால் தாங்கள் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படி பணிபுரிந்து வருகின்றனர்.

நம் பண்டிதமணியவர்கள் 1934-ம் ஆண்டு தொடங்கி 1937-ம் ஆண்டு முடியுந்துணையும், விரிவுரையாளராக இருந்து பணி புரிந்தார்கள். பின்னர், அப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்ப் பேராசிரியராம் பெரும் பதவியையும் பெற்றார்கள். பண்டிதமணி அப் பதவியை ஏற்பதற்கு முன்பெல்லாம் அப் பதவிக்கு ஆங்கில அறிவு மிக்கவர்களே தகுதியானவர்கள்; அவ்வறிவு இல்லாதவர் அதனை ஏற்று நடத்த இயலாதென்னும் கொள்கை இருந்து வந்தது. ஆங்கிலத்திலே, எம். ஏ. முதலிய பட்டதாரிகளே அப்பதவியை ஏற்று நடத்தி வந்தனர். ஆங்கிலம் கல்லாத தமிழ்ப் புலவரும் அப்பதவி ஏற்கத் தகுதியுடையவர்களே என்பதை நம் பண்டிதமணியவர்கள் தமது செயலிலே உலகமறியக் காட்டுவாராயினர். இப் பதவியேற்று ஏனையோர் புகழும்படி ஒரு சிறு குறையுமின்றிப் பண்டிதமணியவர்கள் நடத்தினார்கள்.

ஆங்கில மொழியிலே மட்டும் பட்டதாரிகளாய்த் தமிழறிவு குறைந்துள்ளவர்களைவிட நம் பண்டிதமணியவர்கள் அப் பதவியில் வீற்றிருந்தது எத்துணையோ பெரிய நன்மை விளைத்தது. இதனால் தமிழ்ப்புலவர்கட்கே மதிப்புப் பெருகுவதாயிற்று எனலாம்.

இக்காலத்தே இவர்க்கு அணுக்கராயிருந்து தொண்டாற்றிய பெரியார் T. P. பழனியப்ப பிள்ளை B.O.L. அவர்கள். இவர்கள் திறமையைப் பாராட்டிக் கூறியவற்றைக் கேண்மின்:

“நந்தமிழகத்து முப்பெருங் கலைக் கழகங்களாகிய சென்னை, அண்ணாமலை, திருவாங்கூர்ப் பல்கலைக்கழகங்களில், மந்தணக் குழுவிலும் மந்திரக் குழுவிலும் பதவி பெற்று அவற்றுக்குரிய ப்ஃறலைப்பட்ட செயல்களைப் பல்லாற்றானும் நாடிச் சூழ்ந்து அந் நன்னர் நாட்டமுடைச் சூழ்ச்சித்துறை உறுப்பினர் உவக்க வினையாற்றும் திறம் எல்லாம் எளியேன் விழைவொடும் வியப்பொடும் கண்டு பாராட்டுவேன். வீறு பெறுமுறையில் வேறுபடு குழுவினுள் காரிய நெறிகளைக் கைக்கொள்ளுதற்கென நேரிய தாள்களை (Records) நிரல்படத் தொகுத்துக் கூரிய கொள்கையைக் குறிக்கொண்டு நடாத்தும் பெற்றியைக் கண்கூடாகக் கண்ட எளியேன் ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்! என்று கூறிக் கொண்டாடுவேன்”, என்பதாம்.

16. பதவிகள்

“ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்” என்று அறிஞர் எல்லாம் வியந்து பாராட்டும் திறமுடைய நம் பண்டிதமணியவர்கள், தம் இளம்பருவந்தொடங்கி இறுதிகாறும் ஏற்று நடத்திய பதவிகளும் சாலப்பலவாம். இப் புலவர் பெருமானின் வடமொழிப் புலமை கண்டு வியந்த இராமேச்சுர வடமொழிக் கல்லூரியுடையோர் இவரைத் தம் கல்லூரியின் மந்திரக்குழு உறுப்பினராக நியமித்திருந்தார்கள். இவர்களுடைய தமிழ்ப்புலமையின் தனிச் சிறப்பையுணர்ந்து நாடெங்கணும் உள்ள தமிழ்க் கழகங்களும், பல்கலைக் கழகங்களும் இவர்கள் உதவியை நாடினர். தம் இளம் பருவத்திலேயே மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஓர் உறுப்பினராய்ச் சங்கப் புலவராக விளங்கினார்கள். அச்சங்கத்தே பல்லாண்டுகள் தேர்வாளராகவும் திகழ்ந்தார்கள். இச்சங்கத்தின் மந்திரக்குழுவிலும் நிறைவேற்றுக்குழுவிலும் நீண்டகாலம் உறுப்பினராக விளங்கினார்கள். தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தே ஆயுட்கால உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் திகழ்ந்தமை முன்னரே கூறியுள்ளோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாடக்குழுவிலும், தேர்வுக்குழுவிலும், உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்தார்கள். இப் பல்கலைக்கழகப் பேரவையிலும், கலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்கள்..

சென்னைப் பல்கலைக்கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள கீழ்நாட்டுக் கல்விநிலையம் என்னும் கல்லூரியில் தேர்வாளராக இருந்தார்கள்.

இவற்றையன்றி இவர்கள் அவ்வப்போது சென்று எத்துணையோ பல கழகங்களில் அவைத் தலைமைதாங்கிப் பணிபுரிந்தார்கள். யாழ்ப்பாணம், கொழும்பு, மைசூர் முதலிய இடங்களுக்கும் சென்று தலைமையேற்றார்கள். இங்ஙனம் இவர்கள் தலைமை தாங்கிப் பணிபுரிந்த கழகங்களுள் சிறப்பாகக் குறிப்பிடற்பாலன, சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசத்தின் வெள்ளிவிழா, கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா, தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் பொன்விழா, துறையூர் மாநாட்டுத் திறப்பு விழா, பூவாளூர் சைவசித்தாந்த சபை விழா, சென்னைத் தமிழ்ப்புலவர் மாநாடு, குறுந்தொகை மாநாடு என்பனவாம்.

17. வினைத்திட்டம்

பெருமைமிக்க பெரும் பதவிகளை ஏற்று அவற்றில் ஒரு சிறிது தவறும் நிகழாவண்ணம் விழிப்புடன் செயல் ஆற்றுவதில் நம் பண்டிதமணியை ஒப்பார் இலர் என்றே சொல்லலாம். யாதேனுமொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பே, அச்செயல் செய்தற்கு வேண்டிய பொருள், கருவி, காலம், வினை, இடன் என்னும் இவற்றை மயக்கமற ஆராய்ந்து தெரிந்த இனத்தொடு தேர்ந்து இருள்தீர எண்ணியே தொடங்குவார்கள்.

சென்னையிற் பல்கலைக் கழகத்தே பின்னாள் பாடத்தேர்வின் குழுவில் தலைமைதாங்கிச் செயல்புரியவேண்டுமாயின், இன்றே நினைந்து நினைந்து அச்செயற்கு வேண்டிய எல்லாத் தாள்களையும் செயலாற்றுதற்கேற்ற முறையில் நிரல்படுத்தி வைத்துக் கொள்வார்கள். அவ்விடத்தே ஐந்து நாட்கள் தங்கிச் செயலாற்ற வேண்டுமெனின், அந்நாட்களுக்கு வேண்டிய உடைகள் முதலியவற்றையும், பற்பொடி, நாவழிக்கும் பனையீர்க்கு முதலிய சிறு பொருள்களையும்கூட மறவாமல் ஒரு பேழையில் அடக்கஞ் செய்துகொள்வார்கள். ஆண்டுச்சென்று செய்யவேண்டிய செயலையும், நிரல்படுத்திக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். அத்துறையில் தமக்கு ஐயமாக ஏதேனும் உளதாயின், ஆங்கிலந்தெரிந்த தம் அருமை நண்பர்களிடத்தே ஐயந்தீர நன்கு வினாவித் தெரிந்துகொள்வார்கள். யாதேனுமொரு ஆங்கிலச் செய்தியை அது இன்றியமையாததெனக் கருதுமிடத்துத் தம் நண்பர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொள்வார்கள். தமிழில் மொழிபெயர்க்குங்கால் பி. ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களைக் கொண்டு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். பொதுவாக அனுபவ அறிவாலே தாமும் ஆங்கிலச்சொற்களுக்கு நேரிய தமிழ்ச்சொற்களைக் கண்டு மொழிபெயர்ப்போர்க்குச் சொல்லுங்கால் அவ்வாங்கிலப் பட்டதாரிகளும் அத்தகைய நேரிய தமிழ்ச்சொல்லைத் தாம் கண்டு கூறமாட்டாமைக்கு நாணுவார்கள்.

மொழிபெயர்ப்போர் யாண்டேனும் ஒருசிறு சொல்லில் தவறிவிடினும், அதனை உடனே கண்டு ஏன் அச்சொல்லை விட்டுவிட்டீர்கள் அல்லது அச்சொல்லிற்கு இத் தமிழ்ச்சொல் அன்றோ நேர்பொருளுடையது என்று அவர்களையும் தெருட்டுவார்கள். ஆதலின், ஆங்கிலப் பட்டம் பெற்றோரும் நம் பண்டிதமணியவர்களிருக்குமிடத்தே மிக விழிப்புடன் நடந்துகொள்வார்கள். இன்றேல், அவர்கள் கற்றுப் பட்டம் பெற்றுள்ள ஆங்கில அறிவிலேயே அவர்கள் மட்டமானவர்கள் என்பதை நம் பண்டிதமணியவர்கள் எடுத்துக்காட்டிவிடுவார்கள்.

மறதி என்பது நம் பண்டிதமணியவர்களிடத்தே ஒருபொழுதும் நிகழ்ந்திருக்கமாட்டாது. அங்ஙனமே சோம்பலும் அவர்கள்பால் ஏற்படுவதில்லை. பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக ஆற்றும் செயலும் தங்குடும்பத்தில் தம் அருமை மக்களின் ஆடைகள் தூயனவாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும் செயலும் இரண்டும் அவர்கட்கு ஒருவிதத்தில் சமமான செயலே ஆகும். முன்னையது பெருஞ்செயல் என்றும் பின்னையது எளிய செயல் என்றும் கொள்ளாமல் இரண்டு செயலையும் விழிப்புடனேயே செய்வார்கள்.

பண்டிதமணியவர்கள் தாம் செயல்புரிவதற்கெனத் தம் இல்லத்தே அமைத்துக்கொண்டுள்ள அறையை எப்பொழுதும் அழகாகவும், தூய்மையாகவுமே வைத்துக் கொள்வதில் விழிப்புடன் இருப்பார்கள். இல்லத்துக் கூரையில் யாண்டேனும் ஒருசிறு சிலந்திநூல் காணப்படினும் உடனே வேலையாளை அழைத்து அதைத் துடைத்துத் தூய்மை செய்யச் சொல்வார்கள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருப்பார்கள். எழுதுகோல் முதலிய சிறு கருவிகளையும் அவ்வவை இருத்தற்குரிய இடத்திலேயே இருக்கும்படி வைப்பார்கள். எப்பொருளும் தூய்மையாகவும் அழகாகவுமே இருத்தல்வேண்டும்.

மாலைவேளைகளிலே, தம் மனைவி மக்களோடும் வருகின்ற விருந்தினரோடும் நகைச்சுவைபடப் பேசிக் கேட்போர்களை நகைக்கவைத்துத் தாமும் கலகலவென்று சிரிப்பார்கள்.

வேறு சிலர் போலாது நம் பண்டிதமணியவர்கள் ஒரே விதமான ஆடையையே எப்பொழுதும் உடுப்பார்கள். வெண்ணிறமான ஆடையே அவர்கள் உள்ளத்திற்கு மிகவும் பொருந்தியதாம். பலவண்ண ஆடைகளை அவர்கள் விரும்புவதே இல்லை. எப்போதாயினும் சிற்சில செவ்விகளில் அவர்கள் கோட்டும் தலைப்பாகையும் அணிவதுண்டு.

இளைஞர்களைப்போன்று அடிக்கடி முகத்தைச் சவரம் செய்வித்துக் கொள்வார்கள். புறவுடலைப்பற்றிய நாகரிகத்தில் புதுமைக்கும் புதுமையாக அவர்கள் பொலிவுற்றுத் திகழ்வார்கள்.

விசு. திருநாவுக்கரசு என்பவர் கூறியதுபோன்று நம் பண்டிதமணியவர்கள் பண்டைநாளிலிருந்த தனவணிகப் பெரியோர்கள்போல மழித்த தலையுடையவர்களா? இக்காலத்து இளைஞர்போன்று கத்தரிக்கபட்ட தலையினரா? என்று காண்டல் அரிது. இரண்டுக்கும் இடை நிகரானதொரு நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

                       18. பாட்டின்ப நுகர்ச்சி 

“தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும், மடங்கொன்று அறிவகற்றுங் கருவி” என்பது குமரகுருபர அடிகளாரின் வாக்கு. கல்வி தொடங்குங்கால் துன்பமாம் என்று இப்பெரியார் கூறுவது பொதுவியல்பு பற்றிப் போலும். உலகின்கண் பெரியோராகத் திகழ்ந்த புலவர்கள் எல்லாம் கல்வி தொடங்குங்கால் தமக்குப் பேரின்பமாய் இருந்தமை கண்டே மேலும் மேலும் அதனைத் தொடர்ந்து பயில்வாராயினர். கலைவாணராந் திருவுடையார்க்குக் கல்வி தொடங்குங்காலும் இன்பமே பயப்பதாம். “என் இளம்பருவத்தே சொற்பொருள்கள் தரும் இன்பத்தாலேயே நான் அவற்றை ஊக்கத்துடன் கற்றேன்”, என்று பண்டிதமணியவர்கள் பற்பலவிடத்தே கூறியுள்ளார்கள்.

தெய்வத் திருவருளுடையார்க்கே தீஞ்சுவைச் செய்யுள் இயற்ற இயலும் என்பர் சான்றோர். அச் செய்யுளிடத்தே உள்ள சுவை உணர்தற்கும் எம்மன்னை கலைச்செல்வியின் திருவருளே துணை செய்யல் வேண்டும். செய்யுளின் தீஞ்சுவையை உணர்தற்கு ஏதுவாவது நுண்மான் நுழைபுலம் உடைமையேயாம். “நுண்மான் நுழைபுலம் ஆவது, நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு” என்பர் பரிமேலழகர். “அறிவிற்கு மாட்சியாவது பொருள்களைக் கடிதிற் காண்டலும் மறவாமையும் முதலாயின” என்று மேலும் விளக்கமும் கூறுவர். நம் பண்டிதமணியவர்களின் பெருஞ்சிறப்புக்குக் காரணமாவதும் அவர்தம் நுண்மான் நுழைபுலனுடைமையே ஆகும்.

நம் வள்ளுவப் பெருந்தகையார் தம் அருமைத் திருக்குறளின்கண் “மதிநுட்பம்” என மற்றோரிடத்தே குறிப்பிட்டதும் இந் நுண்மான் நுழைபுலத்தையேயாம். ஆண்டும் பரிமேலழகர் “அது தெய்வந் தரவேண்டுதலின் முற்கூறப்பட்டது” என அதன் சிறப்பை விளக்குகிறார்.

நம் பண்டிதமணியவர்கள் திருவாசகம் போன்ற உயரிய நூல்களில் யாதேனும் ஒன்றைப் பயிலுங்கால், அதன் ஏடுகள் விரைந்து புரளமாட்டா. நீண்ட நேரம் அவர் அந்நூலின் ஒரே பக்கத்தில் அல்லது ஒரே செய்யுளிலேயே ஆழ்ந்திருப்பர். செய்யுளை மட்டும் பயில்கின்றவர் பலர் ஒருநாழிகைப் போதில் பன்னூறு செய்யுட்களை விரைந்து ஓதுகின்றனர். இவர்கள் கலைக்கடலில் மூழ்கும் சத்தியற்ற மிதவைக் கட்டைகள் போன்று, செய்யுளின் ஓசையாகிய அலைகளாலே உந்தப்படுகின்றவர்களே யாவார்கள். நம் பண்டிதமணியவர்கள் பற்பல நாழிகைகளை ஒரே செய்யுளினும் போக்கிப் பயில்வார்கள். அவர்கள் அலைகடலின் ஆழத்தே மூழ்கிச் சென்று ஆண்டுள்ள முத்து முதலிய மணிகளை எடுத்து வருவோரைப் போன்றவர்கள்.

இயற்கையில் நுண்மாணுழைபுலம் உடைய நல்லிசைப் புலவர்களின் ஆழ்ந்த உள்ளத்திருந்தன்றோ சுவைமிக்க செய்யுட்கள் உருவாயின! அச் செய்யுட்களைப் பயில்வோர் அச் செய்யுளின் வழியே சென்று அதனை ஆக்குதற்கு முதலாக அப்புலவனுடைய உளத்தே கிடந்த நுண்கருத்துக்கள் யாவை என ஆராய்ந்து, அக்கருத்துக்களை உணரும்போதே அவற்றின் அழகாலே தம்முடைய உள்ளத்துள்ள இன்ப ஊற்றுக்கள் கண்திறக்கப்பட்டு அளவில்லாத பேரின்பத்திலே மூழ்குகின்றார்கள். உணர்ச்சி மிக்கவர்கள் ஆழ்ந்து நோக்கநோக்க அரிய பொருள்களைச் சுரந்தளிக்கும் தெய்வத்தன்மை நல்லிசைப் புலவர்களின் செய்யுட் குளதாயதோர் பண்பாகும். இப்பண்பையே கலையிற் பெரியராய கம்பநாடரும் பம்பையாற்றினது ஆழத்திற்கு,

“கீழுறக், கற்பகம் அனைய அக்கவிஞர் நாட்டிய

சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது”

என உவமையாக எடுத்தோதினர்.

கடலென விரிந்து பரந்த நல்லிசைப் புலவர்களின் உள்ளத்தே முத்தென ஒளிரும் நுண்ணிய ஒளியுடைய கருத்துக்களைத் தம் நுண்மாண் நுழைபுலனாலே கண்டு மகிழ்தல் ஒன்றே கலைவாணர்க்குப் போதிய ஊதியமாமன்றோ! இவ்வின்பத்தே திளைத்துத் திளைத்து முதிர்ந்த உள்ளமுடையவர் நம் பண்டிதமணியவர்கள். இத்தகைய செய்யுளின்ப நுகர்ச்சியுடைய நம் பண்டிதமணியவர்கள் தம் அனுபவத்தே கண்ட புலமைவாழ்க்கையின் சிறப்பை,

“ஒரு நூலை ஆசிரியர் முகமாகக் கற்ற அளவினனானும், இயன்முறை தெரிக்கும் நூற்பாக்களையும் எடுத்துக் காட்டாம் செய்யுட் பகுதிகளையும் சொற்பொருள் அறிந்து கொள்ளும் அவ்வளவினானும், புலமை நிரம்புவதன்று. இவ்வெல்லாம் சிறந்த புலமையின் உறுப்புக்களாமன்றி உறுப்பியாகா.

“ஒன்றனை ஊன்றிப் படிக்குங்கால் படிக்கப்படும் சொற்குழுவினின்று உணரப்படும் பொருட்கண் உள்ளம் உறைத்து நிற்பச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து அப்பொருட்பயனை நுகர்தலும், நுகர்ச்சிக்குப் பின் வெளியுலகத்து மீண்டு நினைவு கூர்தலும், தீர்ந்த உண்மைகளைக் கடைப்பிடித்துத் தம் குறிக்கோளாக ஒழுக்கியலின் மேற்கோடலும், மேற்காட்டிய உறுப்புக்களோடியையு மாயின், ஒருவாறு புலமை நிரம்பியதாகக் கொள்ளலாம்.

“புலமையின் குறிக்கோள் உலகியற் பொருளளவின் இருப்பின் அது சிறுமை எய்தி மாசுடையதாகும். அறிவை ஒளி வலியுடையதாக்கி அகலமுறச் செய்து, அவ்வகன்ற ஒளி விளக்கத்தின்கண்ணே முன்னர்க் காணப்படாதனவும் உலப்பிலா இன்பவிளைவிற்கு ஏற்றனவுமாகிய அரிய பல நுண்பொருள்களை அக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய வாழ்க்கையே புலமை வாழ்க்கை யாகும்”,

எனக் கூறிய மணிமொழிகளாலே ஒருவாறு அவர் தம் புலமையின்பச் சிறப்பை யாம் உணர்தல் கூடும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்றாற் போன்று அவருடைய மொழிகள் அவர் தன்மையை விளக்கிக் காட்டுகின்றன. அம்மொழிகள்போல் பிறர் மொழிகள் அவரியல்பை நமக்குத் தெற்றன விளக்கமாட்டுவனவல்ல.

யாம் கற்கவேண்டுவன செய்யுட்கள் அல்ல! அச்செயுள்ளின் வாயிலாகக் காலத்தானும் இடத்தானும் நமக்குச் சேயனாகிய தொரு நல்லிசைப்புலவனுடைய உள்ளத்தையே யாம் கற்றல்வேண்டும்! அப் புலவனுடைய கருத்தழகிலே, அவனுடைய உள்ளத்தின் பரப்பிலே, ஆழத்திலே, நுண்மையிலே, தெளிவிலே, ஒளியுடைமையிலே, அப் புலவன் உளத்தோடு ஒரே இனமான நம்முடைய உள்ளம் பரவியும், நுணுகியும், ஆழ்ந்தும், ஒளியேற்றும், தெளிந்தும், கலப்பதனையே ஈண்டுப் பண்டிதமணியவர்கள், “சார்ந்ததன் வண்ணமாந் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து” என்று சுருங்கக் கூறினார்கள்.

இம் மண்ணுலகத்தே வாழ்கின்ற மனிதர்கள் வெளித்தோற்றத்திலே ஓரினத்தவராகக் காணப்படினும், அவர்தம் வாழ்க்கை வகையாலே மூன்றுவகையினராவதைக் காணாலாம். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் இவ்வைம்புலன்கள் அளிக்கும் இன்பத்தையே முறையே நாவும் கண்ணும் மெய்யும் செவியும் மூக்குமாகிய பொறிகளானே நுகர்ந்து இன்பம் அல்லது துன்பமுற்று உழல்வார் ஒரு சாரார். இத்திறத்து மாந்தர்களே உலகில் தொகையான் மிக்கவர்கள் ஆவார். இவர்களை வாழ்க்கை வகையானே விலங்கியல்புடையார் என்று விளம்பி அவ் விலங்கியலுண்மை குறிப்பால் தோன்றுமாறு “மாக்கள்” என நூல்கள் கூறுகின்றன. இனி அகக்கருவியாகிய மனனுணர்ச்சியே தம் வாழ்க்கைக் கருவியாகக்கொண்டு உலகத்தும், நூல்களிடத்தும் அழகாக மிளிர்கின்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களை நுகர்ந்து இன்புற்று வாழ்வோர் ஒரு வகையினராவார். இவர்கள் மாந்தராயினும் தேவர்களோடு ஒப்பாவார் என்னுங் கருத்தால் நம் திருவள்ளுவப் பெருந்தகையார் “அவியுணவின் ஆன்றோ டொப்பர் நிலத்து,” என்று தெரிந்தோதுவாராயினர். ஈண்டு நம் பண்டிதமணியவர்கள் “உலப்பிலா இன்பவிளைவிற் கேதுவான அரிய பல நுண் பொருள்களை அகக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய புலமை வாழ்க்கை” என்று இயம்பியதும் இவ் அமர வாழ்கையையே என்க. இனி, மூன்றாவதாகிய வாழ்க்கை மனமாற்ற பரிசுத்தநிலை எனத் தாயுமான அடிகளாற் கூறும் சீவன் முத்த வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையை உடையோர் இவ்வுலகத்திலேயே வீட்டின்பம் கைவரப்பெற்ற மேலோர்களாகலின், மானிட உருவினின்ற இறைப் பொருளே ஆவரல்லரோ. இம் முத்திறத்த வாழ்க்கையினுள்ளே எப்பொழுதும் கலையென்னும் உண்ணா அமிழ்தத்தை மனணுணர்வாலே உண்டு உலப்பிலா வாழ்வெய்தியதொரு தேவர்கள் வாழ்க்கையை நம் பண்டிதமணியவர்கள் இவ்வுலகத்தே எய்தி நின்றார்கள்.

“ஓரளவுட்பட்ட சில பல நூல்களை வினவுவார் கருத்துக்கியைய விடையிறுக்கு முகமாகக் கற்றுத் தகுதிச் சீட்டுப் பெறும் அவ்வளவில் புலமை தன்நிறைவை எய்தியதாக எண்ணிவிடலாகாது” என நம் பண்டிதமணியவர்கள் நுண்ணிதிற் கூறியுள்ளார்கள். இங்ஙனம் எண்ணும் புலவர்களே இக்காலத்து யாண்டும் காணப்படுகின்றனர். செய்யுளில் இன்புறும் மனனுணர்ச்சி இவர்கள்பால் இயற்கையில் இல்லை; ஆதலால் அவிச்சுவை ஒன்றே அறியும் மாக்களினத்தாராகிய இவர்கள் அவ் வவிச்சுவையை நிரம்பப் பெறுதற்கு இக் கல்வியை ஒரு கருவியாகக் கொண்டு வினவுவார் கருத்துக்கியைய விடையிறுப்ப தொன்றே குறிக்கொண்டு பெருநூல்களை வருந்தி வருந்திக் கற்கின்றனர். மனனுணர்ச்சி இன்மையால் செய்யுளிடத்தின்பம் இவர்கட்குத் தோன்றாதொழிந்தது. “தொடங்குங்கால் துன்பமாய்” என்னுந்துணையும் குமரகுருபர அடிகளார் வாக்கு இவர்கட்கு நன்கு பொருந்தும். ஒருவாறு இவர்கள் தேர்விலே வென்றுவிட்டவுடன் தம் புலமை நிரம்பியதாக எண்ணிவிடுகின்றனர். இத் திறத்துப் புலவர்களே பிற்றை நாள் நாத்திகம் பேசித் திரியவும் திரிகின்றனர். இவர்கள் நாத்திகம் பேசுதல் வியப்பன்று. புலமை வாழ்க்கையின்கண் உருவெளிப்பட்டு உயிருடன் களவியல் வாழ்க்கை நடத்துபவனும், சீவன் முத்த வாழ்க்கைநிலை உயிர்த்தலைவியை வரைந்து கற்பியல் வாழ்க்கை நடத்துபவனுமாகிய எம்மிறைவன் இவ் விலங்கென்னும் வெள்ளறிவினரால் என்றென்றும் உணர்தற் கரியன் ஆதலும் இயல்புதானே!

“பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பண்புடையாளர் தொடர்பு எங்ஙனம் இனிமை சான்று பயன் விளைக்குமோ அங்ஙனமே மீண்டும் மீண்டும் கற்குந்தோறும் கற்குந்தோறும் உயரிய நூல்களின் நுண்பொருள் நலங்கள் நம் உள்ளத்தை ஈர்த்துத் தம்பாற்படுத்துப் பேரின்புறுத்துவனவாம்”, என்றும் “மிக விரைந்தோடும் வெள்ளப்பெருக்கினுடைய ஆற்றின் நீர்ச்செலவாற்றலை ஒருவன் அளக்க நினையின் அதன்கண் எதிரேறிச் செல்லவேண்டுவதே இன்றியமையாததாகும். அவ்வாறின்றி அந்நீர்ச் செலவோடியைந்து அதனால் ஈர்த்துச் செல்லப்படுவானாயின், அவ் வாற்றின் நிலை இற்றென உணரகில்லான். அங்ஙனமே உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருளொழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச்சொற் பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின், அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம். ஆராய்ந்து தெளிவதற்கு முன் அச் சொற்பொருள்களோடு எதிர்த்து நிற்றலே நன்றாம்”, என்றும், “பொருணலத் தெளிவின்பின் அச்சொற் பொருள்களோடு நம் அறிவை இரண்டறக் கலப்பித்து அவற்றின் வண்ணமாக நின்று அசைவறும் நிலை எய்தி இன்ப வெள்ளத்துள் திலைத்தல்வேண்டும்”, என்றும், “நூலாசிரியரின் குறிக்கோள் இன்னதெனத் துணிந்தாலன்றி அவன் பலவாறு பன்னிப்பன்னி உரைக்கும் உரைப்பொருளின் உண்மைக் கருத்து அறியப்பட்டதாகாது” என்றும், “சிறந்ததொரு முடிபொருளைச் செப்பனிட்டுத் திறம்பட உரைக்க முற்படும் புலவன் பருந்தின் வீழ்ச்சிபோற் சேய்மையினின்றே முடிபொருட்குரிய சார்வுப் பொருள்களில் மெல்ல மெல்லத்தலைப்பட்டுச் செல்லுவன். அச் செலவின் நிலையை அந்நெறி நின்றே உய்த்துணர்தல் வேண்டும். செல்வழிக் கண்டனவே தீர்ந்த பொருளென எண்ணிவிடலாகாது,” என்றும், “நூலுரையாசிரியர்களின் கருத்துப் படர்ச்சியில் நம் அறிவுத் தொடர்ச்சி பின்னிடுதல் நன்றன்று,” என்றும், “அயரா உழைப்பிற்கு அகப்படாத பொருள் யாதுமின்று. தொடர்நிலைச் செய்யுட்களின் உயிரனைய சுவை நலம் விராய குறிப்புப் பொருளை உணர்தலில் நம் அவா முற்படவேண்டும்,” என்றும் நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியையும் அதற்குரிய நெறியையும் தமது அனுபவத்தினின்றும் எடுத்துத் தாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் எய்துகவெனக் கருதி அழகுற விளம்பியுள்ளார்கள்.

இதற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்கள் இலக்கியச் செல்வங்களை நுகர்ந்து அளவிலா இன்பமெய்தினர் எனினும், அவ் வின்ப நுகர்ச்சிக் குரிய வழிதுறைகளை இத்துணை நுணுக்கமாக அவருள் ஒருவரேனும் நம்மனோர்க்கு அறிவுறுத்தினாரைக் கண்டிலம். நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியில் தோய்ந்த தமது திருவுள்ளத்தை எஞ்சாமல் திறந்தன்றோ நமக்குக் காட்டுகின்றார்கள். அமிழ்தினும் இனிய இவ் வறிவுரைகள் இலக்கியம் நுகரும் திருவுடையார்க்கு ஒப்பற்ற வழிகாட்டியாக அமைந்துள்ளன.

மெய்யறிவு முதிர்ந்து மெய்ப்பொருளுணர்ச்சி கைவரப் பெற்ற சான்றோர்கள் சொல்லுதற் கொண்ணாத அப் பேரின்ப நிலையை நம்மனோர்க்குப் பேசப் புகுங்கால் நம் அனுபவ உணர்ச்சிக்குட்பட்ட காதலின்பத்தையே உவமையாக எடுத்துப் பேசாநிற்பர். பேரின்பம் உவமையற்றதாயினும் “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை” எனத் தொல்காப்பியனார் உவமை, பொருளினும் உயர்ந்ததாதல் வேண்டும் என விதி கூறியிருப்பினும், மெய்யுணர் வுடையோர், இவ்விதி வழி நில்லாது அழியாத பேரின்பத்திற்கு அதனிற் றாழ்ந்ததும் அழிதன்மாலைத் தாயதுமாகிய காதலின்பத்தையே உவமையாக்கிக் காட்டுகின்றனர். அங்ஙனமே ஒப்பற்ற பாட்டின்ப நுகர்ச்சிக்கும் உவமை கூறப் புகுந்த நம் பண்டிதமணியவர்களும், சிறந்த காதலனும் காதலியும் தம்முள் மனமொத்துப் புணரும் புணர்ச்சி யின்பத்தையே உவமையாகக் கூறினார்கள். “மதிவலி மிக்க முதுபுலவனிடத்தினின்றும் தோன்றிய பாடல் நங்கைக்குத் திட்பம் நுட்பம் தெளிவு விளக்கம் இனிமை முதலிய பண்புகளமைந்த சொற்பொருட் குழுவே அழகிய உடலும், சுவைநலந் துறுமும் தொனிப்பொருளே உயிருமாம். இந் நங்கைக்கு உவமை முதலிய அணிகளே அணிகலன்களாம். அழகுக்கு அழகு செய்தல்போல இவ்வணிகள் சேர்க்கப்படினும் இப்பாடன் மெல்லியற்பாவை நல்லாளின் இயற்கை வனப்புமிக்க நல்லுடலைச் சார்ந்து உவமை முதலிய அணிகளே சிறந்து அழகு பெற்றுத் திகழ்வனவாம்”,

“இங்ஙனம் இயற்கைநலம் மிக்குச் செயற்கை நலனையும் ஏற்றுத் திகழும் இத்தகைய பாடல் நங்கையைக் கூடி நுகர்தற்குரிய இளநலம் சான்ற மணமகனியல்பை இயம்பவும் வேண்டுங்கொல்? அன்னான், இலக்கிய நூலறிவானும், மதிநுட்பத்தானும் சிறந்து மலர்ந்து மணப்பருவம் வாய்க்கப்பெற்றுக் கட்டழகு வாய்ந்த பாடல் நங்கையைக் காண்டலில் காதல் மிக்குடையானாய் அப்பேறு குறித்துத் தவஞ்செய்த தனிப்பெருஞ் செல்வனாதல் வேண்டும். வேட்கை முயற்சியும் தவப்பயனாம் ஆகூழ்வலியும் ஒருங்கு கைவரப்பெற்றாலன்றி, அப்பாடல் நங்கையின் பரிசுணர்தல் அரிதாகும்.”

மெய்யுணர்வுடைய சீவன்முத்தர்கள் உயிராகிய தம்மைக் காதலியாகவும், தம்முடன் கலந்து அளவிலா இன்பத்தை நல்கும் இறைவனைத் தம் காதலனாகவும் கூறிக் களிப்பார்கள். ஈண்டுப் பண்டிதமணியவர்கள், செய்யுளைக் காதலியாகவும், அதனை நுகரும் திருவுடைய புலவனைக் காதலனாகவும் உருவகம் செய்தார்கள். தூய்நிலை அடைந்த அடியார்களை இறைவன் வலிந்து வந்து கலந்து இன்புறுகிறான்; ஈண்டுப் புலவனே காதல் வேட்கை மிக்குக் காவியப் பெருஞ் சோலையிலே செய்யுளாகிய தலைவியைத் தனிமையிற் கண்டு புணர்ந்து மகிழ்கின்றான் ஆதலின், இங்ஙனம் மாறி உருவகம் செய்தது சாலப் பொருத்தமேயாம்.

இன்ன பாடல் நங்கையை ஆகூழ்வலியாம் தவப்பயனாகப் பெற்று அந் நங்கையுடன் இரண்டறக் கலந்து இன்புற்ற தலைமகனே நம் பண்டிதமணியவர்கள். கட்பொறி முதலிய அறிவுக் கருவிகளாலே காண்டற்கியலாத நுண் பொருள்களை எல்லாம் தம் நுண்மாண் நுழைபுலனாகிய உட்கருவியாலே செய்யுளுலகத்திற் கண்டு கண்டு அளவிலா பேரின்பம் நுகர்ந்தவர்கள் நம் பண்டிதமணியவர்கள். “தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டு ஈண்டமரர் சிறப்புக் கொண்டவர்கள் நம் பண்டிதமணியவர்கள். கற்ற கல்வியின் விழுமிய பயனைப் பெறுதற் பொருட்டே கலைமகளை வழிபட்டவர் நம் பண்டிதமணியவர்கள்”. “காணாதனவெல்லாம் கண்டு கேளாதனவெல்லாம் கேட்டு” அறிவுலகத்து நிகழும் வியத்தகும் அருஞ் செயல்களை உணர்ந்து இன்பக்கடலில் மூழ்கியவர் நம் பண்டிதமணியவர்கள். அங்ஙனமின்றி எளிய வயிறோம்பற் பொருட்டுக் கலையை ஒரு கருவியாக்கியவர்களை நோக்கி, அந்தோ! நமரங்காள்! உயரிய நோக்கங்களை நிறைவேற்றுதற்குரிய புலமையை உடலோம்பற்கு வேண்டிய பொருளளவிற் பயன்படுத்த எண்ணுகின்றீர்கள்! நுஞ்செயல் பொற் கொழுக்கொண்டு வரகுக்கு உழ வெண்ணுவோர் புன் செயலோடெக்குமன்றோ! சிறந்துயர்ந்த நோக்கங்களைக் கொண்மின்! சிறந்த கருவியைப் பெற்றிருக்கின்றீர்கள்! திருவருளுணர்ச்சியில் தலைப்பட்டுத் தேவ வாழ்க்கை புகுமின்”, எனத் தெருட்டினவர் நம் பண்டிதமணியவர்கள்.

19. சமய உணர்ச்சி

நம் பண்டிதமணியவர்கள் பிறந்த தனவணிகப் பெருங்குடி சைவ சமயத்தை மேற்கொண்டொழுகிய குடியாகும். ஆதலால் பண்டிதமணியவர்கள் சைவசமயத்தைப் பிறப்புரிமையாகப் பெற்றவர்கள். மேலும் இப்பரந்த உலகத்தே வழங்கும் சமயங்களுள், தலைசிறந்த உண்மைச் சமயங்கள் ஒருசிலவே உள்ளன. அச் சிறந்த மெய்ச்சமயங்களுள் ஒன்றாகத் திகழ்வது நம் சைவ சமயம்.

விலங்கியல் வாழ்க்கை, அமர வாழ்க்கை, கடவுள் வாழ்க்கை என முத்திறத்த வாழ்க்கையுடைமையாலே, மாந்தரும் முத்திறப்படுவர் என முன்னர் மொழிந்ததாம். அவற்றுள், இடைநின்ற புலமை வாழ்க்கையின் முதிர்வே இருதியினின்ற மெய்யுணர் வாழ்க்கையாகிய கடவுள் வாழ்க்கையாதல் வேண்டும். புலமை வாழ்க்கையிலே கலைகளிடத்தே யாம் உணரும் இன்பம் வீட்டின்பமாகிய கடவுளின்பத்தின் முழுமையாகக் கொள்ளற்கில்லை எனினும், அக்கடவுள் இன்பத்தின் ஒரு கூறே அது எனச் சான்றோர் கூறுகின்றனர். ஒரு புலவர், புலமை வாழ்க்கையைத் தமிழ் நூலாற் பேசப்படும் அகப்பொருட்கண் களவியலோடும், மெய்யுணர் வாழ்க்கையைக் கற்பியலோடும் அழகுற ஒப்பிட்டுள்ளார். காவியமாகிய பூம்பொழிலிலே, உயிர்த்தலைவியை இறைவன் களவின் வந்து மணப்பதே யாம் செய்யுளிற் காணும் இன்பம் என்பது அப்புலவர் கொள்கை.

“அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”,

என்றும்,

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும்–மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்”

என்றும், நம் முன்னையோர் கல்விக்கு முடிந்த பயனாவது மெய்யுணர்ந்து வீடுபேறெய்துதல் ஒன்றே எனக் கண்டுணர்த்துவாராயினர். இதனாலன்றோ நம் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்”

என்னும் அருமைத் திருக்குறளானே கல்விப்பயன் கடவுள் உணர்ச்சி பெற்று அவன் திருவடிகளை வழிபடுதல் ஒன்றே அஃதில் வழிக் கற்றதனால் யாதொரு பயனும் இல்லை என வரையறுத் தோதுவராயினர்.

மெய்ப் புலமையையும், போலிப் புலமையையும் எளிதாகக் காண்டற்கு, அப்புலவர்தம் கடவுளுணர்ச்சியுடைமையும் அஃதின்மையும் போலச் சிறந்த சான்றாவன வேறு இல்லை. மெய்ப் புலமையுடையோரில் இறையன்பிலாதார் இலர். இறையன்பிலாதாரிடத்துப் புலமை உணர்ச்சி உளதாவதும் பொய்! பொய்யே!

நம் பண்டிதமணியவர்கள், சமய உணர்ச்சியில் – கடவுளன்புடைமையில் – அறுபான்மும்மை நாயன்மார்களோடு சேர்த்தெண்ணத் தகுந்த தகுதியுடையார் என்பது மிகையன்று. அச்சமய வுணர்ச்சிதானும், சமய நுணுக்கங்களை அறியாத பொதுவுணர்ச்சியுமன்று. சமய நுணுக்கங்களை எல்லாம் தம் நுண்மாணுழைபுலனாலே நன்கு ஆராய்ந்து தெளிந்த சிறப்புணர்ச்சியுடையவர்கள். சைவமும் தமிழும் அவர்களின் இரு கண்கள்போலப் பேணப்பட்டன எனின், சைவம் அவர்தம் வலக்கண் எனலாம்; ஏனெனில் சமயத்தை நோக்க மொழி கருவியே அன்றோ!

பண்டைக் காலத்தே சமயம் வீழ்ச்சி யுற்றபோது, நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயம் வளர்க்கு முகத்தானே தமிழையும் உடன் வளர்த்து வந்தார்கள். நம் பண்டிதமணியவர்களோ இக் காலத்தே தமிழே வீழ்ச்சியுற்றமையால், தமது திருத்தொண்டில் மொழி வளர்ச்சியை முன்னிறுத்தி, அதன் வாயிலாய்ச் சமயத்தையும் உடன் வளர்த்தார்கள். சமயம் வளராதவிடத்து மொழி வளர்ப்பது பயனில்செயல்; மொழிவளராத வழிச் சமயம் வளரமாட்டாது. ஆதலின், இரண்டையும் ஒருசேர வளர்ப்பதே அறிஞர் கடனாயிற்று.

திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் போன்று நம் பண்டிதமணியவர்களும் சமயவுணர்ச்சியிற் பரந்த உள்ளமுடையவர்களே. பண்டிதமணியவர்கள் சைவ சமயத்தே தலைநின்ற சான்றோர் ஆயினும், ஏனைச் சமயங்களிடத்தும் நன்கு மதிப்புடையவராகவே இருந்தார்கள். “உலகத்துள்ளாரெல்லாரும் அவரவர்க்குரிய சமய நெறியிற் சென்றே ஒழுக்க நிலையை எய்தக்கடவர், சமயச் சார்பு வேண்டாம், ஒழுக்க மாத்திரமே போதியது என வாய்ப்பறை சாற்றுவோர் அவ்வொழுக்கத்தினும் நிலைபெறமாட்டாப் புல்லர்களே” எனச் சமயவுணர்ச்சி இம்மை யொழுக்கத்திற்கும் இன்றியமையாதாதலை நுண்ணிதின் எடுத்து விளக்கினார்கள். “மறுமைத் துன்பமும், அதனைத் தரும் ஆண்டவனியல்பும், இன்னோரன்ன பிறவுமாகிய நம்பிக்கைகளே ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவனவாம் என்றும், ஆகவே, “உயிரினும் ஓம்பப் படுவதாகிய ஒழுக்கத்தை மேற்கொள்ள நினைப்போர் யாவரும் சமயநெறி நின்றே மேற்கொள்ளக் கடவர்” என்றும் இயம்பி, மக்கள் அவ்வவர் சமய நெறியினின்றே ஒழுகும்படி அறிவுறுத்தி வந்தார்கள்.

“இறைநலம் பற்றாத வாழ்க்கை பயனற்றது; அவ்வாழ்க்கைக்கு வேண்டுவன செய்தல் பாழுக்கு நீரிறைத்தலே ஆகும்” எனச் சமயநெறி நில்லாதபொழுது மக்கள் வாழ்க்கையாற் பயனொன்றும் இல்லாமையும் காட்டினார்கள்.

“நம் புலமையும் அறிவும், கவிச் சுவையில் ஈடுபடுங்கால் இன்பம் அவலம் முதலியனவாகத் தோன்றி முடிவில் அச் சுவையனைத்தும் தெய்வ நறுங்கனித் தீஞ்சாற்றில் தோய்ந்தனவாகவே புலப்படுவனவாம்” என்னும் நம் புலவர் பெருமானின் அருள் மொழிகள் செய்யுளின்பமும், கடவுளின்பத்தின் ஒரு கூறே என்பதனை வலியுறுத்துதல் அறிக.

இந்தக் காலத்திலே கல்லாதார் நிற்கக் கற்றோர் எனப் பாடுபடுவோரும், பொல்லாத குருட்டு நாத்திக நெறிபடரும் கொடுமை நோக்கி, நம் பண்டிதமணியவர்கள் பற்பல அவையிடத்தும் நம் சமய நோக்கங்களையும், அவற்றாலே நமக்குளதாம் ஒப்பற்ற நலங்களையும், சமயம் வீழ்ச்சியுற்றால் நமக்குண்டாம் கேடுகளையும், நன்கு விளக்கிக் கூறி ஒவ்வொருவரும் “நுந்தம் சமயங்களைப் போற்றுமின்! அந் நெறியே நின் மின்! என்று வற்புறுத்தி வந்தார்கள்.

“ஆ! ஆ!! ஒரு நாட்டுக்குத் தன் பண்டைச் செல்வமாகிய சமயநிலை இழக்குங் காலம் நேரின், அந்நாட்டில் எந் நலனும் குறைவுபடுமே! அதன்கண் வாழும் மக்கள் எவ்வகை இன்பமும் இலராய் விலங்கு நிலையை எய்திக் கீழ்நோக்கித் தம் பிறப்பின் பயனை வீணாக்குவரே! செய்யத்தக்கன இன்ன, தகாதன இன்ன என்னும் பகுப்புணர்வின்றி உண்டியும் காம இன்பமுமே பொருளெனக் கொண்டு, அவற்றின் பொருட்டு மனம்போன வழியிற் சென்று தம் அறவாழ்க்கைப் பயனை ஒரு சிறிதும் எய்தாராய்க் கேடுறுவரே! அந்தோ! பொருளிலார் அதனைப் பெற முயறல் உலகியற்கை; உடையார் தம்பாலுள்ள பெறலருந் திருவை வெறுத்தொதுக்கி வறியராக முயறல் யாண்டும் காணாததொன்று! பெறலருஞ் செல்வமாகிய நம் சமயத்தைப் பெற்றிருந்தும், அதனை ஏற்று நுகர்ந்து பயன் பெறமாட்டாமையோடு, அதனை அழிக்கவும் முற்படும் பேதைமையை என்னென்பேம்!” எனப் பண்டிதமணியவர்கள் இக் காலத்தினரின் நாத்திக நெறிச் செலவு நோக்கி, உளம் வருந்திக் கூறிய மொழிகள், அவர்க்குச் சமயநெறிக்கண் உளதாகிய பற்றினை நன்கு தெரியக் காட்டுவனவாம்.

பண்டிதமணியவர்கள் நந்தமிழ்நாட்டிலே சைவ சித்தாந்த சபைகள் போன்ற அவையங்களிலே, அவ்வப்போது சைவ சமய நுணுக்கங்களை மிகவும் விரிவுபட எடுத்து விளக்கி வந்தார்கள். அவைகள் பழைய சமயநூற்கொள்கைகளே யாயினும், அப் பழங் கொள்கைகளேயே இக்காலத்தார் விரும்பி மனங்கொள்ளுமாற்றால், புதிய முறையிலே விளக்கங் கூறி வந்தார்கள். “ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயக் கடவுளைச் சிறப்பு வகையானும், பிற சமயக் கடவுளைப் பொதுவகையானுமன்பு செய்யலாம்; அன்றிச் சமநிலையாக் கோடல் இறையன்பின் இலக்கணம் அன்றாம், என்றும், “தெய்வங்கள் எல்லாம் உண்மை நிலையில் முடிவில் ஒன்றே எனினும், அவ் வுண்மை தத்துவ ஞானிகளுக்கன்றி மற்றையோர்க்கு உணர்வரிதாம்,” என்றும், “சாமானியர்கள் அந் நிலையைப் பற்றிப் பேசல், பேச்சளவேயன்றி அநுபவ அளவிற்கோடல் அரிதென்றும், சிறப்பென்பது ஓரிடத்தன்றிப் பலவிடத்துச் சேறலாகாதென்றும், பலவிடத்தும் சேறல் சாமானிய பத்தியே” என்றும் அவர்கள் கூறிய அறிவுரைகள் ஆற்றவும் இனியனவாம்.

தம் சமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு சிறப்பன்பாகவும், பிறசமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு பொது அன்பாகவும் இருத்தல் வேண்டும் என இப்புலவர் பெருமான் கூறியது பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறாததொரு புதுநெறியே யாகும். இதற்கு இவர்கள் கூறும் உவமை மிக அழகானது; அது வருமாறு:- “ஒரு பெண்மகள் தன்னைக் கைப்பிடித்த காதலினிடத்துச் செய்யும் அன்பிற்கும், தன் சோதரர் சுற்றத்தாரிடத்துச் செய்யும் அன்புக்கும் வேறுபாடு உண்டன்றோ? முன்னையது சிறப்பு அன்பும், பின்னையது பொது அன்புமாம். சிறப்பன்பை வேறோரிடத்துச் செய்யின் பிறழ்ச்சிக் குற்றம் வருதலோடு சிறப்பிலக்கணமும் பிழைபடும். பொது அன்பை உரிய சோதரர் இடத்துப்போல் மற்றையோரிடத்துஞ் செய்யலாம். அதனால் வருங்குற்றம் யாதுமின்றாம் அவ்வாறே சமயக் கடவுளிடத்துச் செய்யும் பத்தி சிறப்பும், ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் பத்தி பொதுவுமாம். ஆனால், அப் பெண்மகள், தன் உயிர்க் காதலனைப் பாராட்டி, ஏனைச் சோதரர் முதலியோரையும் இகழாது உபசரித்தல் போல, நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையும் இகழாது அவரவர்க்கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம். இவ்வாறு தத்தம் சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் சிறப்பன்பே, நல்லின்பந் துய்த்தற்கு உரியதாகும். இங்ஙனம் இன்றி எல்லாம் சமம் சமமென்று கூறுவார் ஒன்றினும் நிலைபெறாது தமக்குரிய ஆன்மப்பேற்றை இழந்தவரேயாவர்”, என்பது அவர்கள் கூறிய மணிமொழிகள். இவை, அவர்களுடைய பரந்துபட்ட சமயநோக்கத்தை நன்கு விளக்குகின்றன.

இவர்கள் வைணவ சமயத்தைக் குறிப்பிடும்போது “நமது சகோதர சமயமாகிய வைணவ சமயம்” என்றே கூறுவார்கள். இது, அவர்கள் அச் சமயத்தின்பாற் கொண்ட நன்குமதிப்பைக் காட்டுகின்றது. இனி, சமண புத்த சமயம் பற்றிய நூல்களாகிய சிந்தாமணி மணிமேகலை முதலிய பண்டைப் பெருங்காப்பியங்களை இவர்கள் பயிலுங்கால், இவர்களே சிறந்த சமண அல்லது புத்த சமயப் பெரியாராகிவிடுவார்கள். கடலென விரிந்த அக்காப்பியங்களை அருளிச் செய்த பெரியோர்களின் உளக் கருத்தை அச் சமயக் கண்கொண்டே நோக்கி நுண்ணிதிற் கண்டுணர்த்துவார்கள். அவர்கள் அறிவுறுத்தபடியே தஞ் சமய நூலாகிய திருத்தொண்டர் புராணம் திருவாசகம் முதலிய நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் சிறப்பன்பும், வைணவ சமய நூல்களிடத்தும் ஏனைச் சமய நூல்களிடத்தும் அவற்றின் ஆசிரியர்களிடத்தும் பொது அன்பும் உடையராய் நன்கு மதித்துப் போற்றினார்கள்.

பற்பல நாட்டுப் பெரியார் பலரும் இந்நெறி நிற்கமாட்டாது அலமருகின்றார்கள். நம் பண்டிதமணியவர்கள் எண்ணிறந்த சமயங்கள் நின்று நிலவும் இப் பேருலகத்தே சமயப் பூசலின்றி எல்லாச் சமயத்தாரும் சகோதரர்கள் போல ஒற்றுமை கொண்டு ஒருவரை ஒருவர் அன்பொடு தழுவி வாழுதற்குரிய நெறியை நுண்ணிதின் ஆராய்ந்து கூறினார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் நமது தமிழுக்கியற்றிய தொண்டில் சைவசமய நெறிக்கியற்றிய தொண்டு குறைந்ததன்று. உரைநடைக்கோவை முதற்பகுதியில் அடங்கிய சமயக்கட்டுரைகள் ஐந்தும், சைவ சமயத்தவர்க்குப் புதுவதாகக் கிடைத்த பெருஞ் செல்வங்களே யாகும். ஓர் அறிஞர் இவற்றைச் சைவப்பெருமக்கள் திருவைந்தெழுத்தைப் போற்றுமாறே போற்றிக்கொள்ளல் வேண்டும் என அறிவுறுத்தியது சாலப் பொருந்துவதேயாம்.

      20. கலைப் பெருங்கோயிலும் கடவுட் காட்சியும் 

இவ்வாறு சிறந்த சமயவுணர்ச்சி மிக்கவர்களாய், யாண்டும் சமய நெறியில் மக்கள் ஒழுகுமாறு அறிவுறுத்தி வந்த நம் பண்டிதமணியவர்கள், கல்லானும் உலோகங்களானும் ஆகிய திருக்கோயில் வழிபாட்டினும், திருவுருவ வழிபாட்டினும், அவ் விறைவனைத் திருவருட் பேறுடைய சான்றோர் சொற்பொருள்கொண்டு அன்பாலே இயற்றியருளிய அழிவிலாத் திருப்பாசுரத் திருக்கோயில்களைப் பன்முறை வலம் வந்து அத் திருக்கோயில்களிலே பொருள் வடிவமாக எழுந்தருளி யிருக்கின்ற இறைவன் திருவுருவத்தை அகக்கண்ணாலே கண்டு அன்பு கெழும அடிவீழ்ந்து வணங்குதலே சாலச் சிறப்புடைய வழிபாடாம் என்று கருதி, அக் கோயில்களிலே உள் நுழைந்து கருவறை வரையில் உட்சென்று கடவுளைக் கண்டு வழிபட்டு வருவார்கள். இங்ஙனம், அவர்கள் வழிபடுதற்கெனத் தேந்தெடுத்துக்கொண்ட திருக்கோயில்களில் தேவாரம் திருவாசகம் திருத்தொண்டர் புராணம் என்னும் மூன்று கலைக் கோயில்களே முதலிடம் பெற்றன.

நம் பண்டிதமணியவர்களின் இளமைப் பருவத்திலேயே இக் கலைக்கோயில்கள் தம் சிறப்பானே இப் புலவர் பெருமானைத் தடுத்தாட்கொண்டன. இராமலிங்க அடிகளார் “ஆடையிலே எனை மணந்த மணவாளா”, என்றபடி, தெருவில் ஆடாநின்ற மழவிளம் பருவத்திலேயே இவ்வினிய நூல்கள் நம் பண்டிதமணியின் உள்ளத்தைத் தம் தெய்வ மணங் காட்டித் தம்பாலீர்த்துக் கொண்டன. அவ் விளம்பருவந் தொடங்கித் தம் ஆயுளின் இறுதிகாறும் நம் பண்டிதமணியவர்கள் இக் கலைக்கோயில் வழிபாட்டைக் கைந்நெகிழ விட்டதில்லை.

திருவாசகத்தைப் பயின்றவர்களில், இராமலிங்க அடிகளாரையே நம் பண்டிதமணியவர்கட்கு உவமை கூறலாம். திருவாசக நுகர்ச்சியின்பத்தைக் கருதி உள்ளம் விம்மிதம் கொள்ளும்போதெல்லாம் ஆராமை மிக்கு நம் பண்டிதமணியவர்களின் கலைமணம் கமழும் செந்நா, இராமலிங்க அடிகளார் இயற்றிய,

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்னும் திருவருட்பாவை யாதல்,

“வாதவூர் அன்பர் மலர்வாய்ப் பிறந்த

திருவா சகம்இங் கொருகால் ஓதின்

கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையோர் இலரே”

எனவரும் சிவப்பிரகாச அடிகளார் திருப்பாடலையாதல் மிழற்றிக்கொண்டே இருக்கும். சிற்சில அமயங்களில் நம் பண்டிதமணியவர்கள்,

“வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்

வெண்காடு மேவிய விகிர்தனரே”

“பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

பரந்ததோர் படரொளிப் பரப்பே”

“வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்

மெய்வேடர் பெருமானைக் கண்டுவீழ்ந்தார்”

“கற்றிலேன் கலைகள் ஞானம்கற்றவர் தங்களோடும்

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயனானேன்”

“விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்

மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்

உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

“பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்

ஆசை மேலுமொர் ஆசை அளிப்பதோர்

தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய

ஈச னாரருள் எந்நெறிச் சென்றதோ”.

எனவரும் இன்னோரன்ன திருப்பாசுரப் பகுதிகளில் யாதானும் ஒன்றை மெல்லெனப் பன்முறை திரும்பத் திரும்ப இனிதாக ஓதிக்கொண்டே இருப்பர். அப்போது அவர்கள் நாத் தழுதழுக்கும். கடைக்கண்களில் நீர் ததும்பித் துளிக்கும். அப் பாடற் பகுதியை ஓதியாங்கே தம்மை மறந்து அப் பாடற்பொருளில் நிட்டை கூடுவர்.

பொதுவாக நம் பரத கண்டத்தினும், சிறப்பாகத் தமிழகத்தினும் இறைவழிபாட்டின் பொருட்டு எடுக்கப்பட்ட திருக்கோயில்களும் திருவுருவங்களும் எண்ணிறந்தன. பண்டைக்காலந்தொட்டு இவற்றிற்காக நம் நாடு செலவிட்டிருக்கும் பொருட்குவையும் அளவிறந்தன. விண்ணளாவி நிற்கும் நாற் பெருங் கோபுரங்களோடும், பிற வுறுப்பக்களோடும் நின்று திகழும் இத் திருக்கோயில்கள் பிற நாட்டில் இருந்து வருவோர்க்கு நம் கடவுளுணர்ச்சியின் சிறப்பை விளக்குவதோடு, அவர்களை வியப்புக் கடலுள் மூழ்கவும் செய்கின்றன. இத்தகைய திருக்கோயில்கள் உலகில் நிரம்பிக் கிடக்கும் விலங்கியல் வாழ்வுடைய மாக்களைச் சமயநெறிக்கண் அழைத்து மக்களாக்கி, மேலும் மக்கட்பிறப்பின் பயனை அவர்கள் எய்திக்கொள்ளுமாறு தூண்டுதற்குரிய ஏதுக்களாம் என்று கருதியே நம் முன்னைச் சான்றோர்கள் இவற்றிற்காம் பொருட்செலவினும், பயன் சாலவும் பெரிதென இவற்றை இங்ஙனம் போற்றி வந்தனர்.

இக்கோயில்களினும், மக்கட்கே சிறந்துரிமையுடைய திருக்கோயில்கள், திருவாசகம், தேவாரம் போன்ற கலைக்கோயில்களேயாகும். கற்கோயிலைக் கட்டியவர்களோ மலவீக்கமுடைய மன்னர்களும், செல்வர்களும், சிற்பிகளுமே ஆவர். இக் கலைக்கோயில்களைக் கட்டியவர்கள் “வினையினீங்கி விளங்கிய அறிவின் முனிவர்கள்” ஆவர். ஆதலால், கலைநலம் கைவரப்பெற்றோர் திருக்கோயில் யாத்திரைக்காக உடல் வருத்தமுறுதலும், பொருட்செலவு செய்தலும் வேண்டா! ஒருசிறு பொருட்செலவின் வாயிலாய், அவர்கள் இருக்குமிடத்திலேயே மெய்ஞ்ஞானப் பூங்கோயில்கள் பலவற்றை எளிதிற் காணலாம். தவப் பேறுடையார் அப்பூங்கோயிலகத்தே காண்டற்கரிய இறைவனையும், அன்புவழிச் சென்று அகக்கண்ணாற் கண்டு போற்றலாம்.

நம் பண்டிதமணியவர்கள், “பாடுவோர்க்கும், கேட்போர்க்கும் இறைவன் திருவடிப்பற்றை விளைவித்து அன்பு மயமாய் நின்று உள்ளுருகச் செய்யும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம் முதலிய அருட்பாடல்கள்,” என்றும், “அடிகள் திருவருள் அமிழ்தத்தை நிறையவுண்டு, சிவானுபச் செல்வராக விளங்கிய நிலையில் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிப்படி தம் அருளனுபவத்தை உலகத்துளுள்ள மக்களுக்கெல்லாம் வழங்க ஆண்டவன் அருள்வழி நினைந்து திருவாசகம் என்னும் இசைப்பாடல் தொகுதியைத் திருவாய்மலர்ந்தருளினார்,” என்றும் திருவாசகப் பாடல்கள் மாணிக்கவாசக அடிகளுடைய சிவானுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப்பட்ட அமுதவெள்ளம் என்றும் இவற்றின் சிறப்பை விளக்கியுள்ளார்கள்.

நம் செந்தமிழ் நாட்டுத் தமிழ்க் கழகங்களினும், சைவ சித்தாந்த சபை போன்ற இடங்களினும் பண்டிதமணியவர்கள் வாயிலாய்த் திருவாசக நுண்பொருள்களை உணர்ந்த அறிஞருலகம் அத் திருவாசகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து பயிலத் தொடங்கிற்று. திருவாசகத் திருப்பாசுரங்கட்கு நம் பண்டிதமணியவர்கள் கூறும் நுணுக்கம் போன்று வேறு யாரும் கூறிற்றிலர் என்று அறிஞர்கள் பண்டிதமணியைப் பாராட்டுவாராயினர். பழம் பனுவல்கட்குப் பொருள்காணும் தமக்கே உரிய சிறப்பு முறையில் திருவாசகப் பாசுரங்களின் நுணுக்கத்தை அவர்கள் விளக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறியதொன்றனைக் காட்டுதும்.

“வழங்குகின் றாய்க்குன் அருளார்

அமுதத்தை வாரிக் கொண்டு

விழுங்குகின் றேன்விக்கி னேன் வினை

யேனென் விதியின்மையால்

தழங்கருந் தேனன்ன தண்ணீர்

பருகத்தந் துய்யக் கொள்ளாய்

அழுங்குகின் றேனுடை யாயடி

யேனுன் அடைக்கலமே”

என்பது திருவாசகம். இதற்கு அவர்கள் கூறும் நுண்பொருள் வருமாறு.

“இதன் அருமைப் பொருளையும் சிறிது கூறி மேற்செல்வேன். “வழங்குகின்றாய்க்கு” என்புழி குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம். “என்னை

யாண்டாய்க்கு” என்று, பிறாண்டும் சுவாமிகள் இதனை வெளிப்படக் கூறுவர். ஆகவே, வழங்குகின்ற நின் பொருட்டு நின் அருளாகிய ஆரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்பதே அத்தொடரின் பொருளாம். மாணிக்கவாசக சுவாமிகள் தம்மைச் சிவபிரான் மிக வலிந்து அடிமை கொண்டார் என்பதைக்,

“கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை

நின் கழற்கன்பனாக் கினை”

எனவும்,

“ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே”

எனவும்,

“கல்லைப் பிசைந்து கனியாக்கிக் தன்கருணை

வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை”

எனவும்,

“இனையனா னென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம் பிரானானாய்க்கு”

எனவும் போந்த திருவாக்குக்களான் உணர்க.”

அவ்வாறு அடிமைகொண்டு, தங்கருணை அமிழ்தத்தை எவ்வாறு ஊட்டினார் எனின், ஒன்றும் அறியாத குழவிப்பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தி உணவு ஊட்டுமாபோலும், கல்லூரிக்கட்சென்று கல்வியின் மாட்சியுணராது கற்றற்கு மலைவுறும் சிறாரை ஆசிரியன் அடித்துத் துன்புறுத்திக் கல்வியைப் புகட்டுமாபோலும் ஊட்டினார் என்க.

இவ்வுண்மையை நம் சுவாமிகள்,

“அடித்தடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேனே”

என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள். ஆதலின் சருக்கரை வழங்குதல் என்பதுபோலச் சிறிதும் வருந்துதலின்றி மகிழ்ச்சிமிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக் கொடுத்தல், தருதல் முதலிய சொற்களை விடுத்து, வழங்குதற் சொல்லால் தொடுத்து அவ்வாறு கருணையமுதத்தைப் பெய்து உண்ணுக! உண்ணுக! என்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின்பொருட்டு அஞ்சியென்பார் “வழங்குகின்றாய்க்கு” எனவும், தன்னை யுண்டாரைச் சிற்றின்புறுத்தும் தேவரமுதம் போலாது சிவபிரான் அருளமுதம் பேரின்புறுத்த வல்லதாகலின், “உன் அருளாரமுதத்தை” எனவும், இயற்கையாக உண்டலின்றித் துன்புறுத்தும் நின்பொருட்டு மிக விரைந்துண்ணுகின்றேன் என்பார், “வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்” எனவும், அங்ஙனம் விழுங்குதலான் “விக்கினேன்” எனவும், வேண்டாத உணவை உண்டற்குத் தொடங்குமுன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின், முறையே நிகழ்காலமும், இறந்த காலமும் தோன்ற, “விழுங்குகின்றேன் விக்கினேன்” எனவும், அவ்வாறு விக்குதற்குக் காரணம் நீயல்லை; வினைவயப்பட்டுழலும் எனது விதியே என்பார் “வினையேனென் விதியின்மையால்” எனவும், யான் வேண்டாதிருப்பவும், என்னைத் துன்புறுத்தி ஊட்டினையாதலின், அதனால் உண்டான விக்கலை ஒழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார், “தண்ணீர் பருகத்தந்து உய்யக்கொள்ளாய்” எனவும், அவ்வமுதம் நின் அருளமுதமாகலின், அதனை உண்ணுதற்குரிய அதிகாரசிவத்துவம் வேண்டுமென்பார், தண்ணிய நீர்மை—சிவத்துவம் என்னும் பொருள் பொதுளத் “தண்ணீர்” எனவும், அத்தண்ணீரும் அவ்வமுதம்போல் விக்கல் முதலிய சலனங்களைத் தருதலின்றி, எற்குகந்த இனிமைச் சுவையுடன் இருத்தல் வேண்டுமென்பார், “தழங்கருந் தேன் அன்ன தண்ணீர்” எனவும், அது பெறாமையின் மிக வருந்துகின்றேன் என்பார், “அழுங்குகின்றேன்” எனவும், சிவபிரான் சேதனப் பொருள்கள் எல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டார் எனவும், அசேதனப் பொருள்கள் எல்லாம் உடைமையாகத் தாம் உடையார் எனவும் கூறப்படுவாராதலின், இந்நான்கு சொற்களைக்கொண்டு விளக்குதற்குரிய பொருள் முன்னிலை தன்மையாகிய இருசொற்களின் அமைய, “உடையாய் அடியேன்” எனவும், யான் சேதனனாயிருந்தும், சிறிதும் அன்பிலன் ஆதலின் என்னை ஆளுதல்பற்றி வரும் ஆண்டார் என்பதினும் அசேதனப் பொருள்களைப் பற்றிய உடையார் என்பது நினக்குப் பெருமையாதலின், அதனையே விளிப்பல் என்பார், “உடையாய்” எனவும், ஆண்டார் என்பது உண்மை எனினும், என்னை நோக்கி அவ்வாறு கூறற்கு நாணமுடையேனாதலின், அப்பொருள் பிறர் அறிய என்னையே கூறிக்கொள்வன் என்பார், “அடியேன்” எனவும், நின்றனக்கு உரிமையுடைய பொருளினும் அடைக்கலப் பொருளைக் காத்தல் நின் பெருந்தன்மைக்கு இயன்றதென்பார் “உன் அடைக்கலமே” எனவும் அருளினார், என்பதாம்.

அரிதரிது! செய்யுட்கண் உள்நுழைந்து ஊடுருவிச் சென்று, சொற்றொறும் சொற்றொறும் இற்றிதன் பெற்றி என்று அச் செய்யுள் இயற்றிய சான்றோரின் திருவுள்ளத்தைத் தொட்டுகாட்ட வல்லார் கலைநல முதிர்ந்த வித்தகப் பெரியார் நம் பண்டிதமணிபோல்வாரன்றி, ஏனையோர்க்கு இவ்வருஞ்செயல் இயல்வதாகுமோ! நம் பண்டிதமணியவர்களே “உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருள் ஒழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச் சொற்பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின் அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம்” என நம்மனோர்க்கு அறிவுறுத்தினர் அல்லரோ! அவ்வறிவுரைக்கு எடுத்துக்காட்டாகவே இச் செய்யுட்கு அவர்கள் கூறிய நுண்பொருளுரை அமைந்திருத்தலைக் காண்க.

இவ்வாறு திருவாசகம் என்னும் தெய்வ நூலிலே தோய்ந்து தோய்ந்து, திருவாசகம் வேறு, தாம் வேறு என்பதின்றித் திருவாசகமே தாம் தாமே திருவாசகமாக இரண்டறக் கலந்தின்புற்ற பண்டிதமணியார் அக்கலைக் கோயிலிற்றானே, தம் மன மொழி மெய்களானே வணங்குதற்குரிய கடவுளையும் கண்டு வழிபாடு செய்து வந்தார்கள். மேலும், தாம் சென்ற சென்ற இடமெல்லாம் இத்திருவாசகம் என்னுந் தேனை அன்பர்கள் செவிவாயாக உண்ண வழங்கியும் வந்தார்கள். அங்கங்கே ஒருசில பாசுரங்களின் நுணுக்கங்களைக் கேட்டு வியப்புற்ற அன்பர்கள் பலர், நம் பண்டிதமணியவர்களைத் திருவாசகம் முழுதிற்கும் உரைவரைந்தருளும்படி வேண்டுவராயினர். வேண்டியும், அச்செயலில் காலமுண்டாக இறங்கினார்களில்லை.

21. பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறு

பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே பேராசிரியராக இருந்த பொழுது, அவர் ஏறத்தாழ அறுபதாண்டகவையை எய்தினார். இக் காலத்தே இவர்கள் புகழ் அரசியலார்க்கும் எட்டிற்று. 1941-ஆம் ஆண்டுச் சூன் திங்கள் பதினோராம் நாளாகிய மன்னர் பிறந்தநாட் கொண்டாட்ட விழாநாளில், நம் பண்டிதமணியவர்களை அரசியலார் “மகா மகோபாத்தியாயர்” என்றதொரு சிறப்புப் பெயரால் போற்றி அழைத்தனர். முன்னர் ஆங்கிலம் வல்லுநர்க்கு மட்டுமே உரியதெனக் கருதப்பட்ட பல்கலைகழகத் தமிழ்ப் பேராசிரியர்ப் பெரும்பதவியைத் தாம் ஏற்று, அப்பதவி தமிழ்வல்ல கலைவாணர்க்கும் உரித்தாம் என்பதை விளக்கினார்கள். அங்ஙனமே “மகா மகோபாத்தியாய” என்னும் இச் சிறப்புப் பெயர், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது போன்று முன்பெல்லாம் கருதப்பட்டது. தமிழ்ப்புலவர்களிலே இச் சிறப்புப் பெயரைப் பெற்றவர்கள் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மட்டுமேயாவர். அவர்கள் அந்தணர்மரபினர் ஆதலால், இச் சிறப்புப் பெயர் அந்தணர் அல்லாதார்க்கும் உரியதாக அதனானும் கருத இடமில்லையன்றோ. அந்தணர் அல்லாதார்க்கும் அச் சிறப்புப்பெயர் பொருந்தும் என்பது நம் பண்டிதமணியவர்கள் அதனை ஏற்ற பின்னரே நன்கு விளங்குவதாயிற்று. செட்டி நாட்டிளவரசர் தலைமையில் நிகழ்ந்த ஒரு புலவர்குழுவில் பண்டிதமணியவர்கட்கு “முதுபெரும் புலவர்” என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்க நாட்டிலே உலகில் உயர்வறவுயர்ந்த பெரும் புகழாளரின் பெயர்களைத் தேடிப் பொறிக்கும் “கலைக் களஞ்சிய”ப் பெருநூலிலே இக்காலத்தே நம் பண்டிதமணியவர்கள் திருப்பெயரும் பொறிக்கப்பட்டமை உணர்தற்பாலது.

இனி நம் பண்டிதமணியவர்கள் பல்கலைக் கழகச் சட்ட திட்டங்கட்கு இழுக்கு வாராதபடி, தமக்கு அகவை முதிர்ந்தகாரணத்தால் தாமே தமிழ்ப் பேராசிரியர் பதவியினின்றும் விலகிக் கொண்டார்கள்.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையார்கள், நம் பண்டிதமணியவர்களாலே நிறுவப்பட்டு மேலும் மேலும் வளர்பிறை போன்று வளர்ச்சியுற்றுத் திகழ்வதும், தனவணிக நாட்டின்கண் அறிவுச் செல்வம் பரவுதற்கு வழிகாட்டியாக உள்ளதுமாகிய, தம் சன்மார்க்க சபையிடத்தே, நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு என்றென்றும் விளங்குதல் வேண்டும் என்று கருதினார்கள். அவ்வுருவப்படத் திறப்புவிழாவில், கனம் டாக்டர் ராசா சர். சா. ராம. மு. அ. அண்ணாமலைச் செட்டியார் அவர்களைத் தலைமையேற்றுப் படத்திறப்பும் செய்து தருமாறு வேண்டினார்கள். கனம். செட்டிநாட்டரசர் அவர்களும் சபையார் நோக்கத்தைப் பாராட்டி அவர்கள் வேண்டுகோட்கு விருப்பத்துடன் உடன்பட்டார்கள்.

1940-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஏழாம் நாள், சன்மார்க்க சபையில் நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் செட்டிநாட்டரசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தனவணிகப் பெருமக்களும், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கப் புரவலர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை முதலியோரை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும் குழுமிப் பண்டிதமணியவர்களைப் பாராட்டினார்கள்.

1940-ஆம் ஆண்டு, அக்டோபர்த்திங்கள் பன்னிரண்டாம் நாள் மகிபாலன்பட்டியில், நம் பண்டிதமணியவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடந்தேறியது. அப் பெருவிழாவிற்கும் கனம் செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளல் அவர்களே தலைமை ஏற்று நம் புலவர் பெருமானைப் பாராட்டினார்கள்.

“நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியடையும் காலங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய தினம் பண்டிதமணியவர்களுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகி அறுபத்தோராவது ஆண்டு பிறக்கின்றது. நம்முடைய இனத்தாரில் ஒருவராகிய பண்டிதமணியவர்களுடைய பெருமையையும் குணங்களையும் பாஷா ஞானத்தையும் நம்மினத்தாரேயன்றி இந்தத் தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியும். இவர்களுடைய சாந்தி விழாவைச் சிறப்புடன் நடத்தி வைப்பதால் பண்டிதமணியவர்களுக்குப் பெருமையைச் செய்வதோடு நம்மையும் கௌரவித்துக் கொள்கிறோம்”. இவ்வினிய மொழிகள் செட்டிநாட்டரசர் பண்டிதமணியவர்களைப் பாராட்டியதன் ஒரு பகுதியாம்.

“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால” (நாலடி:163)

என்பர் ஆன்றோர். சான்றோரைச் சான்றோர் மதித்துப் புகழ்தலே மெய்ப்புகழாகும். புலவர் அருமையைப் புலவரே அறிந்து கூறுதல் வேண்டும். நம் பண்டிதமணியவர்களைப் புகழாத புலவர்களே இல்லை என்லாம். அவர்களுள்ளும், பண்டிதமணியவர்களோடு ஒத்த தகுதியுடைய புலவர் பெருமக்கள் சிலர், நம் பண்டிதமணியவர்களின் பண்பெல்லாம் தம் கூர்த்த அறிவாலே நன்குணர்ந்து பாராட்டியுள்ளார்கள். பண்டிதமணியவர்களின் சிறப்பை உணர்தற்கு அப் பாராட்டுரைகள் மிகச் சிறந்த ஏதுக்களாம். ஆதலின், அவையிற்றில் விரிவஞ்சி ஒருசில மட்டும் கீழே தருகின்றோம்.

“என்னுடைய அன்பரும், இயற்கையில் அமைந்த மதிநுட்பமும், வடமொழி தென்மொழி நூல்களை ஆழ்ந்து பயின்றதனால் அமைந்த பேரறிவு வாய்ந்தவர்களும், மேலைச்சிவபுரி முதலிய இடங்களில் தமிழ்க் கலாசாலைகளை நிறுவிப் பாதுகாத்துத் தமிழ்க் கல்வி பரவும்படி செய்தவர்களும், செய்யுளும் வசனமும் எழுதுவதில் ஆற்றல் மிக்கவர்களும், கேட்போர் உள்ளம் கவரும் பிரசங்கங்கள் புரிபவர்களும், அண்ணாமலைச் சர்வ கலாசாலையில் தமிழ்த் துறைத் தலைவராகவிருந்து தம் ஆராய்ச்சித் திறத்தையும் மதிவன்மையையும் வெளிப்படுத்துவர்களும் ஆகிய…………….. பண்டிதமணியவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திருந்து தமிழின்பம் நுகர்ந்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும் தொண்டுகள் புரிந்துகொண்டு விளங்கும்படி செய்விக்கும் வண்ணம் ஸ்ரீ ஆனந்த நடராசப் பெருமான் திருவருளைச் சிந்திக்கின்றேன்.” இப்பாராட்டு—-மகாமகோபாத்தியாய, தட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமி நாதையர் அவர்கள் கூறியதாம்.

மணிமலரிலே வெளிவந்த “ஆங்கிலவாணி” முடிபுரையிலே “ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியார்” எனச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைத் தொகுத்துக் கூறிய உரைத் தொடரினை நண்பர் சிலர் வேண்டுகோளுக்கியைய விரித்துரைக்க விழைவுற்று இதனை எழுதுகின்றாம்.

வேதம் ஆகமம் முதலிய எண்ணிறந்த பல்வேறு அறிவுநூற் பெருக்கங்களையுடைய வடமொழியும், தமிழ்மொழியும் ஆகிய இருபெரு மொழிக்கும் இலக்கண முடிபுகள் பல ஒன்றி வரலாலும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த புலனழுக்கற்ற அறிவுடையோர் பலர் வடமொழி வல்லாராய் அம் மொழிமரபு பலவற்றை எடுத்தாண்டமையாலும், தமிழிலக்கணப் புலமை நிரம்புதற்கு வடமொழியறிவும் ஒருசார் வேண்டப்படுவதன்றோ? இக் காரணங்களினாலே ஆரிய மொழியினை விரும்பிக் கற்று, அம்மொழியிலுள்ள “சுக்கிரநீதி”, “மிருச்சகடிகம்” முதலிய சிறந்த நூல்களைத் தூய தமிழில் மொழிபெயர்த்து அச்சியற்றி நல்கியதற்காகத் தமிழுலகம் பண்டிதமணியாரைப் பாராட்டுகின்றது.

“ஆரியமும் தமிழும்” என ஆரியத்தை முதலிற் கூறியது இவரது தமிழ்ப்புலமையை இரண்டாம்படியாக வைத்ததாகாதோ? எனின், ஆகாது. “தமிழ்கள் மூன்றும் கொண்டாடி இளம்பூவைக் குழாம் தலைசாய்த்து உளமுருகும்” செந்தமிழ்ப் பாண்டிநாடு இவர் நாடாகலின், தமிழ்ப்புலமை இவர்க்குப் பிறப்புரிமையாயிற்று; ஆரிய மொழிப்புலமை சிறப்புரிமையாயிற்று. சிறப்புரிமையை முதலிற்றந்துரைக்கு முகத்தான் “ஆரியமும் தமிழும்” என வைத்தது பொருத்தமேயான் என்க.

“தமிழ் வல்லார்” என்றமையின் இவர் சொலல் வல்லார், கவிபுனைதல் வல்லார், நூலியற்றல் வல்லார், மாணவர்க்குத் தமிழறிவுறுத்தல் வல்லார் என இவரது பலதிறத்து ஆற்றல்கள் ஒருங்கு கூறப்பட்டன. இனித் தமிழ் என்னுமிடத்து இயல் இசை கூத்து என நின்ற மூன்றும், எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென நின்ற ஐந்தும் “தமிழ்தழீஇய சாயலவர்” என்புழிப் போந்த இனிமையும் பெறப்படுதலின், இவர் தமிழ்த்துறை பலவினும் ஆய்ந்து கண்ட அரும்பொருண் முடிபுகளை வேட்பத்தாம் சொல்லும் மாட்சியினார் என்பது உய்த்துணரவைத்தமை காண்க.

அன்பும், அறிவும், நிரம்பி ஆண்டவன் படைத்த உயிர்களை ஏற்றத்தாழ்வாக நோக்காது, ஒருபடித்தாகக் காண்போன் பண்டிதன் எனக் கண்ணபிரான் கீதையுள்ளே கட்டளையிட்டமையின், ஆன்றோர் இவர்க்கு ஈந்த பண்டிதப்பெயர், இவர் அன்போடமைந்த அறிவுடையார் என்பதைத் தெளிவு படுத்திற்று. திருவாசகத்தினும் ஏனைய திருமுறைகளினும் இவரடைந்துள்ள புலமை வாளா அறிவு மாத்திரையோடமையாது அன்புகலந்த நீர்மையதென்பது அறிஞரது துணிபு.

பெரியோர் இவரைப் பண்டிதமணி என்றது, “பொன்னும்…… தோன்றியாங்கு”, எனக் கண்ணகனார் கூறியபடி, இடைநிலம்படச் சேய் நிலத்தினராகிய தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு கூடும் அவைக்களத்திலே, அப் புலவர் பொன்னும் பவளமும் முத்தும் போன்று அழகுதர, இவர் மணிபோல் ஒளிகாலும் நீர்மையர் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று.”

ஆழகு! அழகு! நம் பண்டிதமணியவர்களின் புலமையழகினை இவ்வாறு அழகுற எடுத்துரைத்தவர், மலமாசு நீங்க நோற்று நின்ற நம் விபுலானந்த அடிகளார் ஆவார்.

இனி, நம் புலவர் பெருமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நம் பண்டிதமணியாரைப் பாராட்டுதலைக் கேண்மின்:

“பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை யான் நீண்ட நாளாக அறிவேன். இற்றைக்கு ஏறக்குறைய முப்பதாண்டுக்கு முன்னர்த் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையிலே அவரை யான் கண்டு இன்புறும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது கதிரேசனார், தேனினும் இனிய திருவாசகத்தைப் பற்றி ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர்தம் இளமைச் செழுமையும் தமிழ்ப் பொழிவின் கொழுமையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அக் கவர்ச்சி அவர்க்கும் எனக்கும் உற்ற நட்புக்குக் கால்கொண்டது.

பண்டிதர் கூட்டங்கள் ஈண்டியிருக்கும்; அங்கே திரு கதிரேசனார் புன்முறுவலுடன் போதருவர். போந்த சிறிது நேரத்தில் அவர் வான்மணி எனத் திகழ்ந்து ஒளி கால்வர். பண்டிதருள் திரு. செட்டியார் வான்மணியாய் இலங்குவது கண்ட புலவர்கள், அவரைப் பண்டிதமணி எனப் போற்றலாயினர். பண்டிதமணிப் பண்பு திரு. செட்டியாருக்குக் கருவில் அமைந்த பண்பாகும்.

பண்டிதமணியின் புலமையில் பல சிறப்புக்கள் உள்ளன். அவைகளுள் குறிக்கத்தக்கது ஒன்று; அது “பாட்டின்ப நுகர்ச்சி”.

திரு. செட்டியார் வாழும் ஊர் அமைதியுடையது; இயற்கை அமைதியுடையது. அமைதிமிக்க ஊரில் அமைதிமிக்க தமிழ்க் கவிதையில் உறவு கொள்ளும் பேறு பண்டிதமணிக்குக் கிடைத்தது. இஃது அவர்தம் தவப்பயன் போலும்! அதனால் பண்டிதமணியின் மனம் தமிழ் வண்டாகிப் பாக்களாம் பூக்களுள் படிந்து இன்பத்தேன் நுகர்ந்து தன்னை மறக்கும் பயிற்சி பெறலாயிற்று.

திரு. செட்டியார் காவியங்களைப் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பாவுள்ள இடங்களில் அவர் பாக்களுடன் இரண்டறக் கலப்பர், என்று யான் சொல்வது வழக்கம். பண்டிதமணி புலவர் சூழலிலே அமர்ந்து பாக்களிற் செறிந்து கிடக்கும் நுட்பங்களையும் வனப்புக்களையும் பிறவற்றையும் அகழ்ந்தகழ்ந்து எடுத்துக் காட்டும்போது, அவர் அவைகளில் இரண்டறக் கலக்கும் இயல்பினர் என்பது நன்கு விளங்கும்.

கதிரேசனார் காவியக்கடலில் மூழ்கிமூழ்கித் திளைத்துத் திளைத்து, இருமையற ஒன்றிஒன்றி அக்காவியக் கடலானவர் என்று கூறல் மிகையாகாது. “கதிரேசனார் காவியமானார்; காவியம் அவராயிற்று” என்று கூறல் பொருந்தும்; சாலப் பொருந்தும்!

பொதுக்கூட்டங்களிலும் சிறப்பாகப் புலவர் கூட்டங்களிலும், பண்டிதமணி தமது தமிழ்கொழிக்கும் நாவால் பாக்கொழிக்கும் திறங்களை வெளியிடும்போது அவர் தம் தோற்றம் ஒரு காவிய அருவிபோலப் புலனாகும். வண்டின் யாழும், குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், அருவியின் முழவும், இன்னபிறவும் ஒன்றி வழங்கும் இன்பத்தைச் செட்டியாரின் தமிழ் — பாத்தமிழ் – வழங்குதலைப் பாவாணர் புலன்கள் உணரும்.

கதிரேசனாரை ஒரு காவியப்பொழில் என்றுங் கூறலாம். அப்பொழிலில், தமிழ்ப்பறவைகள் புகுந்து பலதிறக் கனிகளின் சுவை நுகர்ந்து இன்புறுவதுண்டு. கதிரேசனார் கூட்டங்களில் நுழையும்போது “காவியம் வருகிறது” என்று அறிஞர் பேசுவதை யான் கேட்டுள்ளேன்.

இங்ஙனம், தாம் பேசப்புக்க பொருள் கேட்பார்க்குக் கண்கூடாகத் தோன்றும்படி எடுத்துக் கூறுவது திரு வி. க. அவர்கள் போல்வார்க்கே கைவந்த வித்தையாம்.

இனி நம் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பாராட்டுவதைக் கேளுங்கள்.

“தமிழ் அன்னையின் அருந்தவப் புதல்வராகிய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியாரவர்கள் தமிழ்ப் புலமைக்கு வரம்பாயுள்ளவர். வடமொழிப் புலமையும் ஒருங்குடையவர். வித்தகச் சொற்பொழிவாளர்; “ஆயிரத் தொன்றாம் புலவர்” எனவும், “வார்த்தை பதினாயிரத் தொருவர்” எனவும் ஒரு பழஞ்செய்யுள் கூறுகின்றது. ஆனால், நம் பண்டித மணியோ புலவர் ஆயிரவரில் ஒருவர்; வார்த்தை வல்லார் பதினாயிரவரில் ஒருவர்; ஏனோர் அறிதற்கரிய நுண்பொருள்களை எடுத்துக் காட்டியும், நகைச்சுவை முதலிய தோன்றவும் பேசும் அவரது அரிய சொற்பொழிவைச் செவிமடுத்து இன்புற்றவர்கள், அதனை ஒருபோதும் மறத்தல் இயலாது. மற்றும், செய்யுளியற்றல் உரையெழுதுதல் முதலிய புலமைக் கூறுகள் பலவும் அவர்பாற் சிறந்து விளங்குகின்றன.

பண்டிதமணியவர்கள் தமது புலமையையும் செல்வாக்கையும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்பாலதன்று. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து, அதன் வளர்ச்சிக்கும் அரிய தொண்டுகட்கும் பற்றுக்கோடாயிருந்து, மற்றும் பல கழகங்களும் கல்விச் சாலைகளும் அந் நாட்டிலே தோன்றுதற்கு ஏதுவாயிருந்தமையை உணர்வோர், தனவணிகர் நாட்டிலே தமிழ்க்கல்வி பரவுதற்கு விதை விதைத்தவர் பண்டிதமணியே என்று கூறத் தயங்கார். தமிழ்ப் பணியில் ஈடுபட்டுள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு அவர்கள் செய்தும், செய்வித்தும் வரும் உதவிகள் சாலச் சிறந்தன. மற்றும் நூல்கள் இயற்றியும், சொற்பொழிவாற்றியும், மாணாக்கர்கட்குக் கல்வி கற்பித்தும், பொருளுதவி செய்வித்தும் பண்டிதமணியவர்கள் புரியும் கல்விக்கொடைக்கு, பல்கலைக்கழகம் தோற்றுவித்து வளர்த்தும், பல கலைகட்கும் பாதுகாப்பாளராயிருந்தும் புரந்துவரும் செட்டி நாட்டரசர் அவர்களது மாண்பொருட்கொடையையே ஒப்புச் சொல்லலாகும் என்பதாம்.

மகாவித்துவான், பாஷா கவிசேகரர் திரு. ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் கூறிய பாராட்டுரையாவது:

“பண்டிதமணி பேராசிரியராக இருந்து செய்த காரியங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது. அவர்கள் பொருளுணர்ந்து சொல்லுதற்கரிய சேனாவரையம் என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையை மிக எளிதாகப் போதித்ததை அடுத்த அறையிலிருந்து கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவன் நான். ஆங்கிலம் படித்தவர்கள்தாம் அந்தப் பேராசிரியர் பதவியை வகிக்க வேண்டும் என்ற நியதியைப் பண்டிதமணி மாற்றிவிட்டார் என்றே கூறவேண்டும்”, என்பதாம்.

சென்னை வித்துவான், தெ. பொ. மீனட்சிசுந்தரனார் எம். ஏ., பி. எல். எம். ஓ. எல், அவர்கள் கூறுகின்றார்கள்:

“பாட்டில் வருஞ் சொற்களைச் சுவையுலகாக மாற்றிவைக்கும் ரசமணியாவார் இவர். இவர் பேச்சைக் கேட்கும்போது கேட்போரும் ஒருமித்து அவரோடு பாட்டிற் சமாதி கூடிச் சாந்தி என்று புகழப் பெறும் மன அமைதியை அடைந்துவருதல் கண்கூடு. அந்தவகையில், இவர் ஒரு மகரிஷி; ஒரு ஆசாரியபீடம். கட பட என்றுருட்டுகின்றேன் என நினைத்தல் ஆகாது. அவ்வடசொற்கள் கருத்தைத் தெளிவாக விளக்குகின்றன. இத்தகைய சுவை வாழ்வு இவரை முழுதும் மாற்றி அமைத்துள்ளது. மெய்யுணர்வாளர்க்கு அடையாளமாகத் திருவள்ளுவர் கூறும் நகையும் உவகையும் இவரிடத்தே கூத்தாடுகின்றன. இவர் உடையிலும் அழகு; ஊணிலும் அழகு; பேச்சிலும் அழகு; மூச்சிலும் அழகு”, என்பதாம்.

நம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் பாராட்டுரை வருமாறு.

பண்டிதமணி என்றால் தமிழகம் முழுதும் அறியும்; நாடறியும்; நகரறியும்; வீடறியும்; ஏடறியும்; கடல்கடந்த நாடுகளும் அறியும்.

கலைவானில் ஒளிவிளங்கித் தோன்றும் ஞாயிறு அவர். கடல்மடை திறந்தெனத் தட்டுத் தடையின்றிப் பேசும் நாநலம் கனிந்த நாவலர் காவலர்; பாநலம் பயின்ற பண்பினர்; வடமொழிவல்ல மாண்பினர்.

கலை ஊற்று; இன்பச் சுரங்கம்; அன்பின் ஆறு; அறிவுக் கடல்; தெருளின் ஒளி; சைவ ஞாயிறு; மெய்ம்மைக்கேணி; அறத்தின் ஆணி; மறத்தின் வாள்.

பண்டிதமணி வடமொழியில் வல்லுநராயினும் “மணிப்பிரவாளம்” என்னும் கலப்புத் தமிழ்நடை அவர்கள் எழுதிய நூல்களில் விரவுவதில்லை. அவர்கள், கலப்புத் தமிழ் நடை தமிழை வளம்படுத்தாதென்னும் ஊன்றிய கருத்துடையவர்.

ஒரு நூலின் சொற்கள் சொற்றொடர்கள் நம் போன்றோர்க்கு வெறுங் கற்பனையாக—எதுகை மோனைத் தொடைக்கமைந்த சொற்களாக—சொற்றொடர்களாகத் தோன்றும். நம் கதிரேசனார்க்கு அரிய கருத்தாகக் கற்பனையாக—கலைவிளை பயனாக—அரிய காட்சியாகக் காட்சி தரும்.

எழுத்தெண்ணி எழுத்தின் திறன் அறிந்து கற்றவர் நம் பண்டிதமணி. நுனிப்புல் மேய்வார் உலகு வேறு; கதிரேசனார் உலகு வேறு. “இரு வேறு உலகத்தியற்கை” என்னும் செந்நாப் போதார் திருமொழியைக் கடந்தவர் நம் பண்டிதமணி. இத்தகைய செம்மைசான்ற நங் கதிரேசர் கலைப் பிழிவுத் தீஞ்சாற்றை மாணவர் மனத்திலே—கலைஞர் காதகத்திலே—சுவைஞர் உளத்தடத்திலே ஓடி நிரம்பிப் பெருகி நிலைத்துநின்று மகிழுமாறு ஊட்டுவார்; ஊற்றுவார், சொற்பொழிவின் இடை இடையே நகைச்சுவை தோன்றும். அது தூங்குவோரை எழச்செய்யும் துடிப்புடையது. அதனிடையில் நுண்கருத்து, அறிவு நுட்பம் மிளிரும். பின்னர்க் கருங் கொண்மூ மின்னென மறையும். பண்டிதமணி பேச்சு எல்லையற்றது; அவர் பேச்சே தனிக்கலை. அதை அவர்களுடன் தோய்ந்து பழகினார் உணர்வர். அவர் பேச்சில் வெருஞ் சொற்கள்—வேண்டா வெறுப்புத்தரும் மொழிகள் இல்லை”, என்பதாம்.

இனி இலங்கையிலுள்ள பேராசிரியர், திரு. கா. பொ. இரத்தினம், எம். ஏ. பி. ஓ. எல்., அவர்கள் யாழ்ப்பாணத்தே நம் பண்டிதமணியார் புகழ் பரவிய விதத்தைக் கூறக் கேண்மின்:

“சொல்லுக்குச் சொல் அழகேறிய பேச்சு; மொழிக்கு மொழி தித்திக்கும் வார்த்தைகள்; கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மை; கேளாரும் விரும்பிய நயங்கள்; என்று வருணித்தார், பண்டிதமணியின் சொற்பொழிவைக் கேட்ட என்னுடைய நண்பரொருவர்.

தமிழ்க் கல்வியில் ஈடுபட்ட என்போன்ற இளைஞர்களுடைய உள்ளத்திலே அவருடைய பேச்சு பல உணர்ச்சிகளையும் பதிவுகளையும் உண்டாக்கிற்று. அவருடைய சொல்லாட்சியும், புதுமை மிக்க நயங்களைக் கூறும் மாட்சியும் சிந்தைக்கும் செவிக்கும் இனிமை பயக்கப் பேசும் ஆற்றலும் பன்னூற் பயிற்சியும், நுண்மாணுழை புலமும், உள்ளத் தெளிவைக் காட்டும் புன்முறுவல் பூத்த முகமும் எங்களைக் கவர்ந்தன.

“மூவர்கட்கு அறியான் நிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப்

பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி”

எனும் அடிகளை அன்று எடுத்துக் காட்டிப் பண்டிதமணியவர்கள் கூறிய நயங்களும், தமிழ்ப் புலவர்களின் புலமையைப் புலப்படுத்திய அருமையும் இன்றும் என் மனத்தில் நிலைத்துள்ளன.

அவருடைய வருகையால் யாழ்ப்பாணத்திற் புத்துணர்ச்சி ஏற்பட்டது; தமிழார்வம் பெருகியது. தமிழ்மக்கள் யாவருடைய பாராட்டுக்கும் வியப்புக்கும் அவர் உரியவரானார்.

அவருடைய பேச்சிலுள்ள கனிவு குழைவு இனிமை நுட்பம் முதலிய பண்புகள் யாவற்றையும் ஒருசேரப் பிறர் பேச்சிலே காணுதல் அரிது.

எழுத்தின் திறனும் இன்சொற் பொருளின் அழுத்தமும் நன்கறிந்து அழகுற எடுத்துரைக்கும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

அவர்களுடன் பழகியவர்கள் அவருடைய இனிய பண்புகளை நன்கறிவர். நகைச்சுவை ததும்பும்படி உரையாடி அன்பர்களை மகிழ்விப்பதில் அவருக்கு அவரே நிகராவர். சொற்பெருக் காற்றும்பொழுது மாத்திரமன்றி உரையாடும்பொழுதும் அவர் செய்யுள் நயங்களை எடுத்துக் காட்டிக் கேட்போரை இன்பமடையச் செய்வர்”, என்பதாம்.

கற்றுவல்லார் பெருமையைக் கற்றுவல்லாரே காணவும் கூறவும் வல்லுனராவார்! மேலே காட்டிய அறிஞர் பெருமக்களின் பாராட்டுரைகள் ஒருவாறு பண்டிதமணி யவர்கள்பாலமைந்த பண்புகளை நன்கு விளக்குவனவாம். நம் பண்டிதமணியவர்களை உலகிலுள்ள அறிஞர் எல்லாம் இவ்வண்ணமே புகழ்ந்துள்ளார்கள். அவற்றை ஈண்டெடுத்துக் காட்டல் மிகையாகும். நம் பண்டிதமணியவர்களைப் பாராட்டிப் புனைந்த இன்றமிழ்ச் செய்யுட்களும் பற்பல. இவ்வாறு நம் பண்டிதமணியவர்கள் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்னும் அருமைத் திருக்குறள் அடிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.

22. அந்திமாலையில் ஆற்றிய பெரும்பணி

நம் பண்டிதமணியவர்கள் அறுபதாண்டைக் கடந்து முதிர்ந்த அகவையராயபொழுதும் முதுமையின் தளர்ச்சி அவர்களிடம் காணப்படவில்லை.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”

எனத் திருமூலர் உடல்போற்றி உயிர்போற்றி அறிவினை எய்துக என்று அறிவுறுத்திய மந்திரமொழியை நம் பண்டிதமணியவர்கள் பொன்னேபோற் போற்றுவார்கள். உடலை மருத்துவரின் உதவியின்றியே காலத்தின் தட்பவெப்ப மாறுபாட்டுக்கிணங்க உண்டி ஆடை உறையுள் முதலியவற்றாலேயே போற்றிக்கொள்வார்கள். விழித்தற்குரிய காலத்தே விழித்தலும், நாட்கடன்களைச் செய்யுங்காலத்தே செய்தலும், உண்ணுங்காலத்தே உண்ணலும், பணிபுரியும் போழ்திலே பணிபுரிதலும், ஓய்வுகொள்ளும் நேரத்திலே ஓய்வுகோடலும், உறங்கும் காலத்தே உறங்குதலும், மாறுபடாத உணவைத் தேர்ந்துண்ணலும் முதலிய செயல்களை உடற்குக் கேடுண்டாகாதபடி விழிப்புடன் செய்துவருவார்கள். ஆதலால், நம் பண்டிதமணியவர்களை நோய்கள் பற்றுதற்கு வழிகாணா தொழிந்தன. நாள் முழுதும் அவர்கள் சுறுசுறுப்போடே காணப்படுவார்கள். ஆதலால் அகவை முதிர்ந்த காலத்தும் உடலுரமுடையராகவும், ஊக்கமுடையவராகவும் ஒரு இருபதாட்டை இளைஞனைப்போலவே திகழ்ந்தார்கள்.

இங்ஙனம் உடல்நலத்தோடு திகழும் பண்டிதமணியவர்கள் தம் பல்கலைக் கழகத்தே பின்னுமிருப்பது பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் நலம் பயப்பதாம் என்று கருதிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் மீண்டும் தம் பல்கலைக்கழகத்தே உறவுகொண்டு பணிபுரியும்படி பண்டிதமணியவர்களை ஆர்வத்துடன் வேண்டினார்கள். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையை மேற்கொண்ட நம் பண்டிதமணியவர்களும் அவ்வேண்டுகோட்கு இசைந்தார்கள்.

1941-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் “அறிவுரைதருநர்” (அட்வைஸர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலை நகரில் இருந்து பணிபுரிந்து வந்தார்கள்.

அவ்வமயத்தே தமிழிசையியக்கம் நடைபெற்றது. அவ்வியக்கத்துக்கும் நம் பண்டிதமணியவர்கள் ஆங்குள்ள இசைக்கல்லூரியாளர்களோடு உறவுகொண்டு சிறந்த பணியாற்றிவந்தார்கள்.

வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற “கௌடலியம்” என்னும் பொருள் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள்.

இம்மொழிபெயர்ப்புப் பணியில் யானும், ஒரு வடமொழி வாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணை செய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல.

மொழிபெயர்க்குங்கால், யாதானும் ஒரு வடசொல்லைத் தமிழாக்குமிடத்து, அவ்வடசொல் அம்மொழிக்கண் எந்த வேரிலிருந்து கிளைத்தது? அதனுடைய தாற்பரியப் பொருள்கிடக்க நேர்பொருள் யாது? என நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே, தமிழ்மொழிக்கண்ணும் அதே வேரிற்றோன்றி, அப்பொருளையே தன் நேர்பொருளாகவுள்ள திறனுடைய சொல்லையும் ஆராய்ந்து தெளிந்து, அவ் வடமொழிக்கேற்ற தமிழ்ச்சொல்லை அமைத்து எழுதுவார்கள்.

கௌடலியம் என்னும் அப்பொருள் நூல் பண்டைக்காலப் பரத கண்டத்தின்கண் நிகழ்ந்த அரசியல்வாழ்க்கை முதற்கொண்டு எளியோர் வாழ்க்கை இறுதியாகவுள்ள மக்களினது வாழ்வியல்புகளையும் நாட்டு நிகழ்ச்சிகளையும் இன்னோரன்ன பிறவற்றையும், காவியங்கள் புனைந்துரை வகையான் மிகைப்படுத்துக் கூறுதல்போலாது, தன்மை நவிற்சியாக உள்ளன உள்ளவாறே கூறுமொரு சிறந்த நூலாகும். பண்டைக்கால வரலாற்றையும், உலகியலையும் நேரிற் காண்பதுபோல் அந்நூலிற் காணலாகும். மேலும், இக்காலத்து அரசியலாரும் மக்களும் மேற்கொள்ளவேண்டிய அறங்களும் பிறவும் அதன்கண் உள்ளன. அதனை ஒருசிறு தவறும் நேராதபடி விழிப்புடன் நம் பண்டிதமணியவர்கள் மொழிபெயர்த்து நந்தமிழகத்திற்கு உதவியிருக்கின்றார்கள்.

23. கதிர்மணி விளக்கம்

சென்ற சென்ற அவைகள்தோறும் நம் பண்டிதமணியவர்கள் மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திற்குக் கூறிவந்த நுண்பொருள் விளக்கங்களைக் கேட்டின்புற்ற அறிஞர்கள் பண்டிதமணியவர்களைத் திருவாசகத்திற்கு உரை வரைந்து உலகிற்கு உதவும்படி வேண்டிவந்தனர் என்று முன்னர்க் கூறினோம். பண்டைக்காலத்தில் நம் நாட்டிற்றோன்றிய சிறந்த உரையாசிரியர்கள் திருவாசகத்திற்கு உரை வரைந்தாரில்லை. தேவாரங்களுக்கும் திருவாசகத்திற்கும் உரைவரைதல் கூடாது என்னும் கொள்கையும் பண்டைக்காலத்தே இருந்ததாகத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் அந்நூல்களிடத்து அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பேயாகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய சீவன்முத்தர்களாகிய அப்பெரியோர்களுடைய திருவுள்ளத்தே மலர்ந்த அவ்வருட்பாடல்களின் ஆழத்தையும் நுண்பொருளையும் இருவினையுட்பட்டுழலும் கட்டு நிலையிலுள்ள மானிடர்கள் காண்டல் இயலாது என அவர்கள் கருதினார்கள்போலும்!

மணிவாசகப் பெருமான் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது, ஆண்டுள்ள தில்லை மூவாயிரவர் அடிகளாரை வணங்கித் திருவாசகத்திற்குப் பொருள் அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்டினர் என்றும், அவரை அடிகளார் அம்பலவாணன் திருமுன்னர் அழைத்துச் சென்று அம்பலக்கூத்தன் திருவுருவத்தைச் சுட்டிக்காட்டி நம் திருவாசகத்தின் தெளிபொருள் இதுவே காண்மின் என்று அருளிச்செய்தார்கள் என்றும், ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரைவகுத்தருளிய பேராசிரியப் பெருந்தகையாராதல், சிவஞானபோதத்திற்குப் பேருரை கண்ட மாதவச் சிவஞான யோகியராதல், நம் திருவாசகத்திற்கு உரை வகுத்திருந்தார்களாயின் நம் தமிழுலகமும் சிறப்பாகச் சைவவுலகமும் சிறந்த அறிவுக் கருவூலம் ஒன்றை எய்தியிருக்கும் என்பது திண்ணம்.

திருவருள் உணர்ச்சி மேலிட்டிருந்த காலத்தே, அப்பெரியோர்கள் கொண்ட கொள்கை ஏற்புடைத்தாயினும், அவ்வுணர்ச்சி குன்றிவரும் இக்காலத்தே அத் தெய்வநூல்களின் மாட்சியையும், நுணுக்கங்களையும் எடுத்துக் காட்டுதல் இன்றியமையாததாயிற்று. மேலும் சைவசித்தாந்த நுணுக்கங்களை உணராதவர்களும், நிறைந்த கல்விப் பயிற்சி இல்லாதவரும், மதிநுட்பம் இல்லாதவருமாகிய ஒருசிலர் திருவாசகத்திற்கு உரை எழுதவும் தலைப்பட்டார்கள். இத்தகையார் புன்செயலைக் கண்டு நம் பண்டிதமணியவர்கள் வருந்தியதோடு, அச்செயல் தகாத செயல் என்பதை எடுத்துக் கூறியும் வந்தார்கள். நம் பண்டிதமணியவர்கள் ஒரு பேரவைக்கண்ணே தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றும் பொழுது இத்தகைய புல்லிய உரையாசிரியரைப் பற்றி உரைத்ததைக் கேண்மின்:

“நூலாசிரியர் உள்ளக் கிடக்கையை நுணுகி ஆராய்ந்து தெளிவுபெற எடுத்தெழுதும் வன்மையாளரே உண்மை உரையாசிரியர் ஆவார். யார் யார் எவ்வெத்திறத்து நூல்களிற் பயிற்சி மிக்குடையாரோ அவரவர் அவ்வத்திறத்து நூல்களுக்கு உரை எழுதப் புகல் வேண்டும். அங்ஙனமின்றிக் கல்லாத மேற்கொண்டொழுகல் தவறுடைத்தாம். சைவ நூலில் ஒரு சிறிதும் பயின்றறியாதார் ஒருவர், சைவத் தலைமணியாகத் திகழும் திருவாசகம் திருவிசைப்பாக்களுக்கு முற்றும் உரையெழுதித் தம் புரைநெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகையார், தம் தகுதிக்கு இயலாத இவ்வுயர் நூல்களுக்கு உரைகாணப் புகுந்து உண்மைப் பொருள் காண இயலாமல் இடர்ப்பட்டதோடு, மரபுக்கு முரணாகவும் பல எழுதினர். பிழைபட்ட எல்லாவற்றையும் ஈண்டு விளக்கல் மிகையாதலின் ஒன்று காட்டுவேன்.

“நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலி தேர் அம்பலவன்.”

என்னும் திருப்பாட்டில், “மதிமயங்கி” என்பதைப் பெயராகக் கொண்டு ஆறாம் வேற்றுமை உருபு விரித்து, மதிமயக்கமுற்ற பிரமனது தலையோட்டில் பலிதேரும் அம்பலவன் என முடித்துக் காட்ட அறியாமல், அதனை வினையெச்சமாகக் கொண்டு தம் மதிமயக்கத்தை அம்பலவர்க்கேற்றினார். இன்னோரன்ன பலவுள. ஒரு புலவன் காலக் கழிவு நோக்காது நெடிதாராய்ந்து தன் வாணாளில் ஒரு நூற்கு உண்மையுரை எழுதி முடிப்பினும் போதியதே. பிழைபடப் பல எழுதுதலினும் பிழையறச் செப்பனிட்டு ஒன்று எழுதுதல் நன்றாம்,” என்பதாம்.

அக்காலத்தே திருவாசகத்துக்கு உரைகாண வல்ல தகுதியுடையாராகிய புலவர் பெருமான் மறைமலையடிகளார், தாம் ஓருரை காணத் திருவுளங்கொண்டு, திருவாசகத்தின் முற்பகுதிகளாகிய அகவல்களுக்கு ஓர் உயரிய உரை வகுத்தார்கள். அவர்கள் செயல் கண்டு அறிஞர் உலகம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. ஆனால் அப்பெரியோர் எக் காரணத்தாலோ அகவற் பகுதிகளோடே உரைவரைதலை நிறுத்திவிட்டார்கள். எஞ்சிய பகுதிகட்கு உரைகாண நம் பண்டிதமணியவர்களைவிடத் தகுதியுடையோர் ஒருவரேனும் இலர்.

இக்காரணத்தால், மேலும் மேலும் அறிஞர் உலகம் நம் பண்டிதமணியவர்களை நெருக்கி வேண்டி வந்தது. கல்வி நிரம்பப் பெறாதார் உரைகளும் தோன்றித் திருவாசகத்தை மாசுபடுத்தியும் வந்தன. அதனால், நம் பண்டிதமணியவர்களும், அச் சிறந்த திருப்பணியைச் செய்யத் தூண்டுவது திருவருளே எனக் கொண்டு, மறைமலையடிகளார் உரை வரைந்த பகுதிகட்குப் பின்னுள்ள, திருச்சதகம் என்னும் பகுதியிலிருந்து உரைகாண முற்பட்டார்கள். இத் திருப்பணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாராய்ச்சித் துறையிற் பதவி வகித்திருந்த பொழுது தொடங்கப்பட்டது.

இக்காலத்தே நம் பண்டிதமணியவர்களின் வாழ்க்கைத் துணைவியாராகிய திரு. மீனாட்சி ஆச்சியார் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை” என்னும் திருக்குறட் கருத்திற்கு எடுத்துக்காட்டாகத் திடீரென ஒருநாள் ஒரு பொழுதிலே மண்ணுலக வாழ்வு நீத்து இறைவன் சேவடி நீழலை எய்தினார்கள். பின்னர், நம் பண்டிதமணியவர்கள், தாம் மேற்கொண்டுள்ள திருவாசகத் திருப்பணி ஒன்றையே ஆராய்ந்து அமைதியுடன் ஆற்றக் கருதியவர்களாய்ப் பதவியினின்றும் விலகி மகிபாலன்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

திருவாசக உரைத் திருப்பணியாற்றிய பொழுது பண்டிதமணியவர்கள் பிற பணிகளை எல்லம் இயன்றவரையில் நீத்தார்கள். பற்றற்றதொரு சீவன்முத்த நிலையிலிருந்தே அத் திருப்பணியை ஆற்றினார்கள். இறையருளாலே திருவாசகத் திருச்சதகமாகிய ஒரு நூறு திருப்பாசுரங்கட்கும் உரை வரைந்து முடிந்தவுடன் அப்பகுதியை அச்சேற்றி வெளியிட்டார்கள்.

நீண்ட காலமாகத் தாம் எதிர்பார்த்திருந்த திருவாசக உரை பண்டிதமணியவர்களால் வரையப்பட்டு வெளிவரக் கண்ட தமிழ் அறிஞர்கள் திருப்பாற்கடலை அரிதிற்கடைந்த காலத்தே அமிழ்தெழக் கண்ட அமரர்களைப் போன்று எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பண்டிதமணியவர்கட்கும் தம் அன்பு கெழுமிய முடங்கல் வாயிலாய் உணர்த்தினார்கள்,

“வம்மின் புலவீர் மணிவா சகத்தீந்தேன்

துய்ம்மின் சுவை நலத்தில் தோய்மினோ—மெய்ம்மைக்

கதிர்மா மணிவிளக்கம் கண்காட்டி யாண்டும்

எதிரிலா இன்புறுத்தும் ஈங்கு.”

என்று, ஒரு புலவர் ஏனைப் புலவரைச் சுவைநலங் கூட்டுணக் கூவினார்.

மற்றொரு புலவர்,

“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து

இறைவற் றொழுதலே கடன்என முன்னாள்

எல்லையில் அன்பால் அடிகளார் இசைத்த

இன்றமிழ் அறிவுரைப் படியே

மல்லல்வண் டமிழாற் சுவைநலம் விளங்க

வாசகப் பொருள்உரை பகர்வோர்

இல்லைஎன் றுரைத்த இன்மையை அகற்ற

எழுந்தது கதிர்மணி விளக்கம்.”

என்று மகிழ்ந்தார்.

மற்றொரு புலவர்,

“சொல்லியற் கரையன் போலும்

தொன்மறைக் கழகன் போலும்

புல்லிய பிறவி போக்கும்

போதக்கு முனிவன் போலும்

மெல்லியற் கோவைக் கொப்ப

விரிசெய்த ஆசான் போலும்

கல்லியல் கனியுஞ் சொற்குக்

கதிரவ மணியன் என்க.”

என நம் பண்டிதமணியவர்களைப் பண்டைநாள் உரையாசிரியப் பெருந்தகையாரோடு ஒப்பிட்டு வந்தார்.

மற்றொரு புலவர்,    

“கதிரவன் ஒளியில் ஒளியெலாம் ஒடுங்கும்

காட்சிபோல் கதிர்மணி விளக்காம்

முதுபெரும் புலவர் நல்லுரைக் கண்ணே

முன்னுள உரையெலாம் ஒடுங்கும்

அதிர்கடல் உலகிற் கற்பவர்க் கினிதாய்

அரும்பொருட் செறிவின தாகி

எதிர்தனக் கிலதாய் இலகுமிவ் வுரை நூல்

என்றென்றும் வாழிய ருலகே.”

என ஓகைகொண்டு வாழ்த்தினார்.

மற்றோர் அன்பர், “தங்கள் அரும் பேருரையை என்னென்று கூறுவது! மணிவாசகப்பெருமானார் உருவெடுத்துத் தம் கருத்துரைக்க வந்துள்ளார் என்றே தங்களைக் கருதுகின்றேன். அழகு, இனிமை, ஆற்றல், ஆழம் யாவும் சேர்ந்து உரை எங்கணும் மிளிர்கின்றன. யாண்டும் நுண்மை! யாண்டும் புலமை! முதுபெரும் புலமை! யாண்டும் யாண்டும் நுகர்வு!” என இன்பத்துள் மூழ்கி ஆராமை கொண்டார்.

இவ்வாறு அவ்வுரை கண்டு மகிழ்ந்த அறிஞர் பாராட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பின்னர் நம் பண்டிதமணியவர்கள் அத்திருப்பணியைத் தொடர்ந்து, “நீத்தல் விண்ணப்பம்”, “திருவெம்பாவை” என்னும் இரண்டு பகுதிகட்கும் உரை வரைந்தார்கள். நிலையாமையை எண்ணி ஒவ்வொரு பகுதியையும், நிறைவேறியவுடன் வெளியிட்டார்கள். நான்காவதாகத் திருவம்மானைப் பகுதியில் மூன்று பாசுரங்கட்கு உரையிட்டதனோடு நம் பண்டிதமணியவர்கள் உரைத் திருப்பணி நின்றது.

முழுதுணர் முதல்வனாகிய சிவபெருமான், இனி எதிர்காலத்தே தோன்றவிருக்கும் தன் அடியார் எஞ்சிய பகுதியை எழுதியுய்க என்னும் கருத்தாலே அவ்வளவின் நிறுத்திக்கொண்டான் போலும்.

24. மம்மர்கொள் மாலை

நம் பண்டிதமணியவர்கள், இக்காலத்தே ஏறத்தாழ எழுபதாண்டகவையை எய்தினார்கள். திருவாசகக் கதிர்மணி விளக்கவுரை வரைந்த காலமெல்லாம் அவர்கள் திருவுள்ளம் அத்திருவாசகத்தின் தெளிபொருளாகிய இறைவன்பால் சென்று கலந்தவண்ணமாகவே இருந்தது. தமது அந்திப்பொழுதில் இறைவனைச் சிந்தித்துய்ய இவ்வுரைத் திருப்பணி ஓர் ஏதுவாக அமையும் என்று கருதியேபோலும் அத் திருப்பணியைத் தாழ்த்துத் தொடங்கினார்கள். எஞ்சிய பகுதியை உரைத்திருப்பணி செய்யத் தாமே மீண்டும் வருதலும் கூடும். தம் உடல்நிலை வரவர வலிகுன்றிவருதலை உணர்ந்தார்கள். சிந்தனை செய்து எழுத வேண்டிய திருவாசகத் திருப்பணியை இனி யாம் மேற்கோடல் தகுதியன்று என எண்ணி அத்திருப்பணியை நிறுத்தினார்கள். இனி, எஞ்சிய காலம் சிறிது இருக்குமாயின் அதனை எம்பெருமானை இறைஞ்சிக் கழித்தலே தகுதி என்று எண்ணி இறைபணி நிற்றலாகிய அச்செயலிலே ஈடுபட்டார்கள்.

“மக்கள் வாழ்க்கை ஒரு பெரு உயிராறுபோல இயங்குதல் வேண்டும்” என உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூர் அவர்கள் கூறியுள்ளார்கள். உயிராறானது, உயரிய மலையுச்சியில் தோன்றி நீரின் நிலையமாகத்திகழும் கடலைநோக்கி ஓய்வின்றி விரைகின்றது. இடைஇடையே எத்தனை எத்தனை அணைகளை எடுத்து மறைப்பினும், ஆண்டெல்லாம் அவ்வணைகளைக் கடக்கும் ஒரே முயற்சியுடன் தேங்கித் தன் ஆற்றலை மிகுத்துக்கொண்டு, அவ்வணைகளையும் கடந்து கடலை எய்தவே விரைகின்றது. அந்நதியின் ஒருதலை குறிஞ்சிநிலத்தே கிடக்க, மற்றோர் தலை விரிந்து பரந்த கடலிடத்தே சென்று கலந்து தானும் கடலே ஆகி அமைதிகொள்கின்றது. ஒருதலையானே அப்பேரியாறு கடலோடு கலந்து அமைதிகொள்ளும்போதே, அதன் இடைப்பகுதியிலுள்ள நீரானது நாட்டிலே பாய்ந்து உயிர்கட்கு உணவுப்பொருள்களை விளைவித்தும், தானே உண்பொருளாகியும் சிறந்த அறத்தை நிகழ்த்துகின்றது.

இங்ஙனமே, ஒரு மனிதன் ஒருசார் உலகிற்கு உபகாரம் செய்துகொண்டே, மற்றொருசார் மெய்யுணர்ந்து எல்லாம் இறைசெயலாகக்கண்டு, அப்பரம்பொருளின் திருவருளிலே அமைதியடைதல் வேண்டும் என்பது அக்கவிஞர் பெருமான் கருத்தாகும்.

நம் பண்டிதமணியவர்கள் தம் வாழ்க்கையாலே, அத்தகைய உயிராற்றினையே ஒத்தவராவார். தமிழும் சைவமும் தழைத்தோங்கி மக்கள் பெருவாழ்வுபெற்றுத் திகழுமாறு அவர்கள் செய்த திருத்தொண்டு அளவிடற்பாலவல்ல. அத்திருத்தொண்டு செய்த காலங்களில் எல்லாம் “எல்லாம் அவனுடைய செயலே” என்னுமொரு மெய்யுணர்ச்சியோடே முனைப்பின்றியே செய்துவந்தார்கள். அப் பணிகாரணமாக இறையடியை ஒருபொழுதும் மறந்தவர்கள் அல்லர். அவர்கள் தூயவுள்ளம் எப்பொழுதும் அச்சீவநதியின் ஒருதலை கடலிற் கலந்து அமைதிகொள்வதுபோன்று, இறைவன் திருவருளிலே மூழ்கி ஆறுதல் பெற்றேவந்தது.

தம்முடலின் வலி நாளடைவிற் குறைந்துவருதலை அறிந்த நம் பெரியார், இனி எதிர்காலத்தே நிகழும் ஒவ்வொரு கணமும் தம் இறுதிக்காலமாக இருத்தல்கூடும் எனக் கருதியவர்களாய், அந்நிகழ்ச்சியை ஆர்வத்தோடே எதிர்நோக்கியே அமைதியுடன் இருந்தார்கள். ஆண்டு முதிர்வாலே ஏற்படுகின்ற தளர்ச்சியே வரவர மிக்கு வந்ததல்லாமல் குறிப்பிடத்தக்கதொரு நோய் அவர்களைத் தீண்டவில்லை. இத்தகைய அமைதிநிலையில் அவர்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகளைக் கழித்தார்கள்.

இக்காலங்களிலே, நாட்டின் பல்வேறு கழகங்களில் இருந்து நம் பண்டிதமணியவர்கட்கு அழைப்பு வந்த வண்ணமாகவே இருந்தன. அந்நண்பர்கட்கெல்லாம் தம் ஏலாமையை அன்புடன் முடங்கல்வாயிலாய் அறிவித்தே வந்தார்கள். நாளடைவில் உடலின் உள்உரம் குறைந்ததே யல்லால் புறத்தோற்றத்தில் பெரிதும் மாறுபாடு உண்டாகவில்லை.

நம் பண்டிதமணியவர்கள் இறுதிக்கணம் வரையில் படுத்தபடுக்கையிலே ஒருசில நாளேனும் கிடக்கவில்லை என்பது குறிப்பிடற்பாலது. தம் இறுதிக்காலம் அண்மையிலேயே நிகழக்கூடும் என்றுணர்ந்த நம் பெரியார், தம் மக்களுள் மூத்தவராகிய திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும் திரு. கனகசபாபதிச் செட்டியார் அவர்கட்கும் தம் கருத்து ஒன்றனைச் சில திங்கள் முன்கூட்டியே குறிப்பாகத் தெரிவித்திருந்தார்கள். அஃதாவது:

தனவணிகர் மரபிலே ஆண்டான் முதிர்ந்து மாய்வார்களை அவர்கள் தங்குடும்பத்தவர்களால் மட்டுமே பொருள் புகழ் முதலிய வகைகளில் யாதேனும் ஒன்றார் சிறந்தவர் என்று கருதியவிடத்தும், தொடுகுழிப்படுத்துதலும் (சமாதி செய்தல்) அவ்விடத்தே கட்டிடம் கட்டி அருட்குறி (சிவலிங்கம்) நடுதலும் செய்யத் தவறுவதில்லை. அவ்வழக்கம் உண்மையானால், நம் பண்டிதமணியவர்கள் தம் மக்கள் கேட்குமாறு “நம்மனோர் செய்யும் அவ்வழக்கம் நஞ்சமயத்தோடு பொருந்தியதன்று. இம்மையிலே இருவினைப் பாசமற்று வீட்டின்பம் கைவந்த சீவன் முத்தர்களின் உடலம் மட்டுமே, தொடுகுழிப்படுத்தற்கு உரியதாம். அவர்கள் உடல் அடக்கம் செய்தவிடத்தே சிவலிங்கம் நட்டுப் போற்றலே முறையாம். ஏனையோர் உடலை அங்ஙனம் செய்தல் அடாது. அத்தகைய சீவன்முத்த நிலையை எய்த நம்மனோர் இன்னும் எத்தனையோ பிறவிகள் பிறத்தல் வேண்டும்”, என்பதே.

இவ்வறிவுரைகளின் குறிப்புப்பொருளை அம்மக்கள் நன்கு உணர்ந்துகொண்டனர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்து நான்காம் நாள் பொழுது விடிந்தது. நம் பண்டிதமணியவர்களின் உடல்நிலையில் புதிதாக மாறுதல் ஒன்றும் தோன்றவில்லை. இருபத்துமூன்றாம் நாளிலிருந்து மலப்போக்கு மட்டும் தடைப்பட்டிருந்தது. இங்ஙனம் மலப்போக்குத்தடை முன்னரும் சிற்சில நாட்களில் நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் நீரேற்றி (எனிமா)வைத்துக் குடலைத் தூய்மை செய்துகொள்வது வழக்கம்.

அன்று அஞ்சலில் நண்பர்கள் முடங்கல்களும், தமது மேலான பார்வையின்பொருட்டுப் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு நூல்களும் வந்திருந்தன. அவற்றுள் அன்பர் முடங்கலில் இன்றியமையாவொன்றிற்கு மறுமொழியும் வரைந்து அஞ்சலில் சேர்த்தார்கள். தம் மகனார் திரு. கனகசபாபதிச் செட்டியாரிடம், தம் பார்வையின் பொருட்டு வந்த புதிய நூல்களைக் கொடுத்து, “இவற்றை மேசைமேல் வை, மாலையிற் படிக்கவேண்டும்,” என்று கூறினார்கள்.

25. கதிரவன் மறைவு

“அற்ற தறிந்து கடைப் பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து” (குறள்: 944)

என்னுந் திருக்குறட் கருத்தை எப்பொழுதும் மறவாதே கடைப்பிடித்

தொழுகும் நம் பண்டிதமணியவர்கள், மலப்போக்குத் தடைப்பட்டமையாலே அன்று நண்பகலில் ஒருசிறிதே மெல்லுணவு அருந்தினார்கள். மாலை மூன்று மணியாயிற்று; வழக்கம் போன்று நீரேற்றிக் கருவியாலே குடலைத்தூய்மை செய்துகொள்ளக் கருதி, அக்கருவியாற் குடலில் நீரேற்றிக் கொண்டார்கள். உள்ளே செலுத்தப்பட்ட நீர் புறம் போகாது உள்ளே தங்கிற்று; மணி நான்காகியும் அந்நீர் புறப்பட்டிலது. இஃதொரு புதியமாற்றம். மேலும் நெஞ்சு மிடறு முதலிய உறுப்புக்களில், சளிக்கட்டுத் திடீரென ஏற்பட்டது. மூச்சு இயல்பாக இன்றித் திணறிற்று. இது தம்முடைய இறுதி மாலைப்பொழுது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் பொழுதெல்லாம், பண்டிதமணியவர்கள் தாம் வழக்கமாக அமரும் ஒரு விசிப்பலகையின் மேலே வீற்றிருந்தார்கள். அயலிலே இரண்டாவது மகனார் கனக சபாபதியவர்களும், ஓர் ஆசிரியருமே இருந்தார்கள். அவர்கள் மூச்சுத் திணருவது பாயலிலே படுத்துக் கொண்டால் சிறிது குறைதல் கூடும் என்று படுத்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். பலகையினின்றும் இறங்கி மெல்ல ஆண்டு விரித்துள்ள பாயலின்கண் இறுதியாகப் படுத்துக்கொண்டார்கள்.

பாயல் கொண்ட பின்னர் மூச்சு வரவர மிக்கது. அவர்கள் நாவாலே மெல்லத் திருவைந்தெழுத்தை மூச்சின் இடையிடையே ஓதினார்கள். இல்லத்துள்ளார் எல்லோரும் வந்து குழுமினர். அவர்களை நோக்கி யாதொன்றும் கூறுதற்கு அவர்கள் ஒரு சிறிதும் முயலவில்லை.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே திருவைந்தெழுத்தோதவும் இயன்றது; பின்னர் அச்செயல் நின்றது. பின்னர் ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே மூச்சும் இயங்கிற்று. அப்பத்து நிமிடங்கட்குப் பின்னர்க் கண்கள் முகிழ்த்தன; மூச்சு நின்றது! உடல் அமைதியுற்றது.

அந்த ஒப்பற்ற உயிர் ஒளி, “அங்கிங்கெனாதபடி எங்கும்” உளதாகிய இறவனின் அருட் பேரொளியிலே கலந்தது.

செய்தி தந்தி வாயிலாகவும் பிறவாயில்களானும் நான்கு திசைகளிலும் விரைந்தது. தனவணிக நாட்டினர் எல்லாம் செய்தி கேட்டுத் துணுக்குற்று விரைந்து மகிபாலன்பட்டியை எய்தினர்; அந்தணர் பலர் எய்தினர்; மற்றும் வரற்பாலர் எல்லோரும் வந்தனர்; மகிபாலன்பட்டி மக்கட்கடலாயிற்று.

ஆர்வமிக்க சிலர் பண்டிதமணியின் திருவுடலைச் சமாதிசெய்தல் வேண்டும் என்றும், அவ்விடத்தே பின்னர்ச் சிறந்த திருக்கோயில் எடுத்தல் வேண்டும் என்றும் விரும்பினர். அவர்கட்கெல்லாம் தம் தந்தையார் அவர்களின் கருத்தைத் திரு. சுப்பிரமணியன் செட்டியார் உணர்த்தினார். இறுதியாகச் செய்ய வேண்டிய கடன்கள் யாவும் குறைவின்றி நிகழ்த்தப்பட்டன.

இறுதியாக, நம் மகாமகோபாத்தியாய, முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் அச்சிறந்த ஆன்மவொளி எழுபத்து மூன்றாண்டுகள் கோயில் கொண்டருளிய அச் சிறந்த திருமேனி, எம்மையாளுடைய இறைவன் திருவுருவமாகத் திகழும் பூதவொளியாகிய பொங்கழலிலே பெய்யப்பட்டது.

உரைநடைக்  கோவை  —– சமயக் கட்டுரைகள்

உரைநடைக்  கோவை  —–  சமயக் கட்டுரைகள் .

அன்பு கெழுமிய  ஆன்றோர்களே !

            இனி வரும்  கட்டுரைகள்  அனைத்தும்  பண்டிதமணி யவர்கள்  அன்பர்களின்  அவைக்களங்களில்  ஆற்றிய  சொற்பொழிவுகளும் , எழுதிய  கட்டுரைகளும்  ஆகும் .  இவைகள்  தொகுக்கப்பெற்று  இரண்டு தொகுதிகளாக  வெளி வந்தன . அவைகள் முறையே  “உரைநடைக்கோவை  சமயக்கட்டுரைகள்”  என்றும்  , “உரைநடைக்கோவை  இலக்கியக் கட்டுரைகள் “ என்றும்  பெயர் பெற்றன . அதில் , முதற் பகுதியான  சமயக்கட்டுரைகளின்  முதல்  கட்டுரையான  சன்மார்க்கம்  ஏற்கனவே  பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ள நிலையில் .  அதன் தொடற்சியாக  ஏனைய கட்டுரைகள்  கீழே  பதிவேற்றம்  செய்ய்ப்பட்டுள்ளன .

             திரு.  கா .  சுப்பிரமணிய பிள்ளை யவர்கள்  இந் நூலுக்கு  எழுதிய   சிறப்புப்  பாயிரத்தில்  “  ஈண்டுத்  தொகுக்கப்பெற்ற  ஐந்து  கட்டுரைகளும்  திருவைந்தெழுத்துப்போல  பாராட்டத்தக்கன .அவை முறையே  கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டை கூடல்   முத்திப்  பேறு  என்பவற்றின்  நுட்பங்களை  விளக்குவனவா  யமைந்துள்ளன   இந்நூல்  சைவ  உண்மையை  அறிய  விரும்பும்  தமிழ்   மாணவர்களுக்கு  எளிதிற்  பெரும்  பயன்  தரும்  இணையற்ற  அறிவுக்  கருவூலமாகப்  போற்றற்பாலது “  என்று  குறிப்பிடுகின்றார் .

                 இனி,  அடுத்துப் பதிவேற்றம்  செய்யப்படும்  கட்டுரையின்  பெயர்  “சிவபிரான்  கருணையும்  சீவர்கள்  கடமையும்”  என்பது .  இது, பண்டிதமணியவர்கள்  பூவளூர்ச்  சைவ  சித்தாந்த  சங்கத்தின்  ஐந்தாம்  ஆண்டு  நிறைவு  விழாக்  கொண்டாட்டக்காலமாகிய  7- 03 – 1915 ல் சென்னைப்  பிரஸிடென்ஸிக்  கல்லூரித்  தமிழ்ப்பண்டிதர்  மகாமகோபாத்தியாய  ஸ்ரீ  வே .  சாமிநாதையரவர்கள்   தலைமையிற்  கூடிய  பேரவையிற்  செய்த  சொற்பொழிவு .

2     சிவபிரான்  கருணையும்

     சீவர்கள்  கடமையும்

தலைவரவர்களே !  அன்புமிக்க  ஆன்றோர்களே ! 

          பெரியோர்களாகிய  நுங்கள்  அன்புரிமை  சான்ற  ஆணையைக்  கடக்க  அஞ்சி  ஒல்லும்  வகையான்  மேற்கொள்ள  விரும்பியும் , திருவருட்டுணை கொண்டும்  இப்பொழுது  செயக்கடவதாகிய  என்  கடமையை  நிறைவேற்றத்  துணிகின்றேன் .

           யான்  மேற்கொண்ட  “சிவபிரான்  கருணையும்  சீவர்கள்  கடமையும் “  என்னும்  இப்பொருளை  விரித்துக்  கூறற்கு  இடந்தரும்  தேவாரத்  திருப்பாசுரம்  வறுமாறு :-

நங்க  டம்பனைப்  பெற்றவள்  பங்கினன்

றெங்க  டம்பைத்  திருக்கரக்  கோயிலான் 

றங்க  டன்னடி  யேனையுந்  தாங்குதல் 

எங்க  டன்பணி  செய்து  கிடப்பதே .

இப்  பாசுரத்தின்  அருளொலியும்  பொருளுமே  இப்  பொருளை  விளக்கற்  குதவியாயின  வென்பதை  இறுதியிற்  கூறப்படுந்  தொகையுரைக் கண்  முடித்துக்  காட்டுவேன் .

பெரியோர்களே !

   மறை  யாகமங்களானும் , அவற்றின்  நூல்களானும்  பொதுவாகவுஞ்  சிறப்பாகவும்  விளக்கப்பட்ட  பதிப்பொருள்  சிவபிரானே யென்பது  அந்  நூல்களைச்  செவ்விதினாராயும்  நுண்ணறிஞர்க்கெல்லாம்  ஒத்த  தொன்றாம். இப்பதிப்பொருளைக்  கடவுண்  முதலிய  பொதுப்பெயர்களான்  வேத  நெறி யொழுகும்  எல்லாச்  சமயத்தார்களும்  ,  சிவன்  முதலிய  சிறப்புப்  பெயர்களாற்  சமயாதீதமாகிய  சைவநெறி  நிற்போருங்  கூறுப .  கடவுள்  என்னும்  சொற்குப்  பொருள்  கடத்தலாதலின்  அதுபற்றி  இறைவனைக்  கடந்தவரென்ப . எவற்றைக்  கடந்தவரெனின் , சுட்டியறியப்படுங்  காரிய  வுருவப்  பிரபஞ்சத்தையும்  அதனாற்  றத்துவ  தாத்துவிகங்களையும்  கடந்தவ ரென்க . இப்பொருள்  ஏனைய  தேவர்களுக்கு  உண்மையிற்  பொருந்தா தென்பது , அன்னார்  சிவாகமங்களுட்  கூறப்படும்  முப்பத்தாறு  தத்துவங்களுக்  குட்பட்டவர்க ளாதலானும் , பேராற்றலுடைய   சிவபிரா  னியக்கத்தான்  ஒவ்வோ  ரதிகாரங்களைப்  பற்றிநிற்பவ  ராகலானுமாம் . மற் றைச்  சமய  நூல்கள்  போலாது  சைவ  சமயத்திற்  குறைவின்றிக்  கூறப்பட்டுந்  தத்துவங்கள்  முப்பத்தாறாம் .  அவற்றைக் கடந்து  நிற்பவர்  பரம்பொரு ளாகிய  சிவபிரான்  ஒருவரே  யாவர் . இம்முப்பத்தாறு  தத்துவங்களும்  முப்பகுதியினவாம் . அவற்றுள்  தொடக்கப்பகுதியாகிய  ஆன்ம  தத்துவ  விரியுள்  ஒவ்வொன்றே  ஏனைய  சமயக்  கடவுளர்களின்  நிலயமாகும் .  ஆதலிற்  கடவுண்  முதலிய  சொற்களும்  உண்மையிற்  சிவபிரானையும்  உபசாரத்தான்  மற்றைத்  தேவர்களையுங்  கூறுவனவாம் . இங்ஙனமே  வட மொழிக்கட்  கூறப்படும்  பிரமசப்த  முதலியவை  உண்மையிற்  சிவபிரானையும்  உபசாரத்தாற்  பிற  தேவர்களையுங்  குறிப்பிடும்  பொருளுடைய  வென்பது ,  சுவேதாசுவதரம்  கேநம்  முதலிய  உபநிடதங்களானும் ,    அவற்றை  விரித்து  விளக்கிய  வாயுசங்கிதை  முதலிய  புராணங்களானும்  நன்குணரலாம் . இன்னும்  இப்பொருள்  குறித்து  வேதாகமாந்தங்களை  நிலைகண்டுணர்ந்த  நீலகண்டவாசிரியர் ,  அரதத்தாசிரியர்  , அப்பயதீக்கிதர்   முதலிய  சைவப்  பெரியோர்கள்  சிறிதும்  ஐயமின்றி  ஆராய்ந்துரைத்தருளிய  அரிய  வடநூல்களானுந்  தெளியலாம் . பிரபஞ்ச  நிகழ்ச்சியி  னிமித்தம்  ஒவ்வொரு  தேவர்களையும்  அதிட்டித்து  நின்று  சிவபிரான்  ஒருவரே  படைப்பு  முதலிய  அருட்டொழில்களைப்  புரிவர்  அதனாலன்றே , வடமொழி  வாயுசங்கிதை  கூறியாங்குத்  தொழிலதிகார  நிலயராகிய  முக்கியதேவர்களின்  பெயர்களெல்லாஞ்  சிவபிரானுக்குப்  பொருந்தின .  சிவனென்னும்  வாசகமோ 

 “சிவனெனு  நாமந்  தனக்கே  யுடைய  செம்மேனி  யெம்மான் “ 

என்னுந்  தமிழ்  வேதத்தான்  ஏனையோர்க்குச்  செல்லாதென்பது  போதரும் .  இதனாற்  சிவபிரானுக்குள்ள  முழுமுதன்மை,வேறு தேவர்களுக்கின்றென்பது  முணர்க .  இங்ஙனமின்றி  அழிவில்  இன்ப  மங்கலப்  பொருளுடையதாகிய  இச்  சிவ  என்னும்  சொல்லைப்  பிற சமயத்தார்  தஞ்சமய  தெய்வங்களுக்குக்  கூறிக்  கொள்ளின் ,  அஃது  உண்மைப்  பொருளைப்  பற்றிய  பெயராகப்  பொருந்தாதென்ப  துண்மை  யெனினும்  நம்  சிவபிரான்  மாட்டு  அமைந்து கிடக்கும்  உயர்  நலங்களே  அன்னாரை  அவ்வாறு  கூறச்செய்தன  வென்றும் அதனாற்  சைவ  மக்களாகிய  நம்மனொர்க்குப்  பெருமையே  யென்றும்  நினைந்து  மகிழ்வோமாக .  இத்துணையும்  ஒருவாறு  சுருக்கியுரைத்த  சிவபரத்துவப்  பொருள்  தனியான  ஓரரிய  சொற்பொழிவாக  விளக்க வேண்டிய  தொன்றாகலின் ,  இதனை  நிறுத்தி மேல்  இப்பெருமான்  கருணைத்  திறத்தைச்  சிறிது  கூறுவேன் .

  1. கருணையினிலக்கணம்

          கருணை, தயை, இரக்கம், அருள் என்பன  ஒரு பொருட்  சொற்கள் .  இது —  பரமபதியாகிய   சிவபெருமானுக்குரிய  குணங்கள்  எட்டனுள்   முக்கியமானதொன்றாகும் .  இதுவே  , அப்பெருமானிடத்து  அலுப்த  சக்தி  அல்லது  பேரருளுடைமை  யென்று  சொல்லப்படும் .  இக்கருணைக்  குணத்தின்  இலக்கணமாவது , ஒருவர்  தமக்குரியாரை  நோக்கி  “இவர்  எம்  தந்தையார் ;  இவர்  எம்  தாயார் ;  இவர்கள்  உடன் பிறப்பாளர் ; இவர்கள்  எம்  உறவினர் ;  இவள்  எம்  மனைக் கிழத்தி ; இவர்கள்  எம்  புதல்வர்கள் “  என்றின்னோரன்ன  தொடர்புபற்றி  மேற் கொள்ளும்  அன்புபோலாது  எல்லாவுயிர்கண்மாட்டும்   இயல்பாக  நிகழ் கின்ற  உள்ள  நெகிழ்ச்சியாகும் .  இவ்வுயர் குணம்  நம்மனோர்க்கு  ஒருசிறிது  வாய்க்குமாயின்  அது  தொடர்புபற்றி  யெழும்  அன்பின்  முதிர்ச்சியா  னுண்டாயதென்  றறிதல்  வேண்டும் . இது  கருதியே 

              “அருளென்னு  மன்பீன்  குழவி”

என்றார்  திருவள்ளுவ  தேவரும் .  இவ்விடத்துத்  திருத்தொண்டர்  புராணத்  திருப்பாட்டினியைபு  ஒன்றனைப்  புலப்படுத்தி  மகிழாமலிருக்கக்  கூடவில்லையாதலின்  அதனையுஞ்  சிறிது  காட்டுதல்  அவசியமாகின்றது .  திருஞானசம்பந்த  சுவாமிகளும்   திருநாவுக்கரசு சுவாமிகளும்  சீகாழியில்  திருத்தோணியப்பரையும், அம்மையாரையுந்  தரிசிப்பான்  செல்லுங்கால்  அவ்விருவர்களும்  ஒருங்கு  கூடிச்  செல்லும்  அழகிய  காட்சியை  நூலாசிரியராகிய  சேக்கிழார் சுவாமிகள் , தம்  மனத்தின்கண் , தியானமுகமாக  எழுதிப் பார்த்துப்  பார்த்து  மகிழ்ந்தின்புற்று  ,  அம்மகிழ்ச்சின்பங்களை நம்மனோருஞ்  சிறிது  பெற்றுய்யுமாறு,  தாந்துய்க்கும்  இன்பம்  பொங்கி  வெளிபடுதல்போல  ஓரருமைப்  பாசுரத்தையருளியிருக்கின் றார்கள்  .அப்பாசுரத்தின்  கருத்து  ,  அந்நாயன்மார்களிருவர்களது  ஒன்றுபட்ட  தோற்றத்துக்கு  ஒப்புக்கூறுவதேயாகும்  . அது  வருமாறு :–

“அருட்பெருகு  தனிக்கடலு  முலகுக்  கெல்லாம்

       அன்புசெறி  கடலுமா  மெனவு  மோங்கும்

 பொருட்சமய  முதற்சைவ  நெறிதான்  பெற்ற 

        புண்ணியக்கண்  ணிரண்டெனவும்  பவன  முய்ய

 இருட்கடுவுண்  டவருளு  முலக  மெல்லாம்

         ஈன்றாடன்  றிருவருளு  மெனவுங்  கூடித் 

 தெருட்கலைஞா  னக்கன்று  மரசுஞ்  சென்று

          செஞ்சடைவா  னவர்கோயில்  சேர்ந்தா  ரன்றே”

என்பதே.

                இதன்கட்   கூறப்பட்ட  உவமைகளை  யன்றிவேறு எத்துணை  நீண்டு  நினைப்பினும்  “உயர்ந்ததன்  மேற்றே  யுள்ளுங்காலை”   யென்னும்  உவமவிலக்கணத்துக்கு  மாறுபாடின்றி  ஈண்டுக்  கூறத்தக்கது யாதுளது?  என்னே  இவ்வுவமைகளின்  அருமை  நயங்கள்!  இங்ஙனங்  கூறுதலன்றே  ஆன்ற  அருட்கவிகளினியற்கை ! இப் பாசுரத்தின்  அரும் பொருள்களை  முற்றக்  கூறின்  ஈண்டு  விரியுமாதலின் , இயைபுடைய  முதலடியின்  பொருளை  மாத்திரஞ்  சுருக்கிக்  கூறுவேன் .இதனிறுதியடியில் 

        “தெருட்கலைஞா  னக்கன்றும்  அரசும்”

என்று  கூறுவதால்  நிரனிறையாகப்  பொருள்  கொள்ளுதல்  வேண்டும்.  அங்ஙனங் கொள்ளுங்கால் அருட்பெருகு தனிக்கடல்  திருஞானசம்பந்த  சுவாமிகளும்  ,  அன்புசெறிகடல்  திருநாவுக்கரசு  சுவாமிகலுமாவார் இவ்விருவரிடத்தும்  அருள்  அன்பு  என்னும்  இருகுணங்களுமுள வெனினும்  அவற்றாலாம்பயனை  நோக்கிச்  சிறப்பாக  ஆராயுங்கால்  அப்பர்  சுவாமிகள்  , சிவபிரானும்  சிவனடியார்களுமே  தமக்குரியவர் களாகக்  கொண்டு  அன்பு   செய்தமையானும்  ,  அடிமை  நெறியில்  (தாச மார்க்கத்தில்)  வெளிப்பட  நின்று  ஒழுகியமையானும் , அந் நெறியில்  ஒழுகுதற்குத்  தலைவன்  ஒருவனை  மேற்கொண்டு  அன்பு  செய்தலே  முக்கியமாதலானும் , அவர்களிடத்துள்ள  அருட்  குணத்தினும்  அன்பே  யாவர்க்கும்  வெளிப்படக்  காணப்படலான் ,  அவர்களையன்புக்கடலென்றும்  ,  திருஞானசம்பந்த  சுவாமிகளிடத்து  இவ்  அன்புளதெனினும்  அவர்கள்  மகன்மை நெறியில்(சற்புத்திர மார்க்கம்) வெளிப்பட   ஒழுகியமையானும் ,  இறைவன் குணம்  அருளே யாதலானும்,  சுவாமிகளிடத்து  எல்லாவுயிர்கண்மேலும் இயல்பாக  எழுங்கருணையே  மேலிட்டிருந்தமையானும்  ,  திருப்பெருமண  நல்லூ ரில்  தந்  திருமணக்  கோலத்தைத்  தரிசிக்க  வந்திருந்த  தகுதியு டையார்    தகுதியில்லாராகிய  எல்லோரும்  அக்  கணத்திலேயே  மல நீக்கமும்  சிவப்பேறும்  எய்திக்  கொள்ளைகொள்ள  வீடுதவிக்  கூற்றைப்  பிடர்பிடித்துத்  தள்ளித்  தம்  அருட்குணப்பயனைக்  காட்டியமையானும்  அவர்களை  அருட்கடலென்றுந்  திருவாய்  மலர்ந்தருளினார்  ஆசிரியர்  சேக்கிழார்  சுவாமிகள் .

      ஈண்டு  இன்புறத்தக்கதோர்  இயைபென்னையெனின் , அன்பினால்  அருளுண்டாவது  பற்றி  அன்பு  அப்பனும், அருள்  பிள்ளையுமாகும் . அம் முறையே  அன்புக்  கடலாகிய  நாவரையரை  அப்பரெனவும் , அருட்கடலாகிய  சம்பந்தரைப்  பிள்ளையாரெனவும்  பெரியார்  பாராட்டி  வழங்குதலேயாம் . அந் நாயன்மார்பாற்  கருணையின்மைக்குச்  சரிதங்காட்டிப்  பேசுவாருஞ்  சிலருளராலோ வெனின்  ,  அன்னார்  கூற்றுச்  சிவபிரான்  கருணையைப்  பாகுபாடு  செய்து  கூறுங்காற்  சொல்லப்படும்  தடை விடைகளாற்  சிறிதும்  பொருந்தாமை  யிணரலாம்.  இவ் வளவிற்  கருணையின்  இலக்கணம்  ஒருவாறு  சுருக்கிக்  கூறப்பட்டது .

2 . சிவபிரானே  கருணையை  முழுதும்  ஆளுதற்குரியர்

     இனி, இக்  கருணையை  முற்றும்  ஆளுதற்குரியர்  சிவபிரான்  ஒருவரேயாவ ரென்பதைப்  பற்றிக்  கூறுவேன் .

 “அருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம் 

   புல்லார்  புரள  விடல் .

என்னுந்  திருக்குறளால்  அருள்  உயர்ந்தோர்  தம்மின்  தாழ்ந்தோரிடத்தும் , அன்பு  தாழ்ந்தோர்  தம்மின்  உயர்ந்தோரிடத்தும்  செய்யுங்  குணங்களா மென்பது வெளியாம் .  இச்  சிறப்பிலக்கணப்படி  எல்லா  உலகத்துமுள்ள  எல்லா  உயிர்களிடத்தும்  ஒருங்கே  கருணை  செய்தல்  எல்லாம்  வல்லசிவபிரான்  ஒருவர்க்கே  கூடுமன்றிப்  பிற  தேவர்களுக்கின்றாம் .  வேறு  தேவர்களும்  மக்களுட்  சிறந்தார்  சிலரும்  இவ்வருட்  குணத்தை  உடையராய்க்  காட்டிய  சரிதங்களும்  உளவேயெனின் , அம் மக்கள்  தேவர்கள்  யாவருக்கும்  ஒவ்வோர்  அமயங்களில்  தம்மின்  தாழ்ந்தாரிடத்துக்  கருணை  நிகழுமாயினும் , தமெக்கெல்லாம்   உயர்ந்தாராகிய  சிவபிரான்  ஒருவரிருத்தலான் , அவரிடத்து  அன்பேயன்றி  அருள்  செய்தர்கியைபின்மையானும் , சிவபிரான்  எவரானும்  விலக்குதற் கொண்ணாத  பாற்கடற்கண்  எழுந்த  நஞ்சை  யுண்டு  யாவர்க்கும்  தாம்  தலைவரென்பதையும் ,  யாவரிடத்துங்  கருணை  செய்யத்தக்கவரென் பதையுங்   காட்டினமையானும்  கருணையின்  முழுவிலக்கணமும்  ஏனையோரிடத்தன்றிச்  சிவபிரான்  பக்கலிருப்பதை  உணரலாம் .

                இவ்வருட்  குணத்தின்  பகுதியாகிய  கண்ணோட்டத்தைப்  பற்றி  யெழுந்த 

                  “பெயக்கண்டும்  நஞ்சுண்  டமைவர்  நயத்தக்க 

                    நாகரிகம்  வேண்டு பவர் “

என்னுந்  திருக்குறளிலும்   சிவபிரான்  நஞ்சுண்ட  சரிதங்  குறிப்பிடத்  தக்கதொன்றாம் .  சிபி ,  ததீசி  முதலியோர்  சரிதக்  குறிப்புக்களைச்  சில  குறள்களிற்  கண்டு  உரைக்கட்காட்டிய  ஆசிரியர்  பரிமேலழகர்  இதனையும்  ஈண்டுக்  காட்டியிருப்பின்  மிக நன்றாகும் .  இறைவனுக்கு  எல்லாஞ்செய்யும்  ஆற்றல்  இயற்கை  யென்றொழிந்தார்  போலும் .  சிவபிரான்  றலைமையும் , அவர்  கருணைத்  திறமும்  மாணிக்கவாசக சுவாமிகள் , தாம்  அநுபவித்துத்  திருவாய்  மலர்ந்தருளிய  திருவாக்குக்களிற்  பரக்கக்  காணலாம்.    

                     “தன்மை  பிறரா  லறியாத  தலைவா “

என்பது  தலைமை  பற்றியதாகும் .  தலைவர்களை  உலகத்  தலைவரெனவுங், கடவுட்  டலைவ ரெனவும்   இருவகையாகக்  கொள்ளலாம் . இவ்விருவர்களுக்கு  முள்ள  வேறுபாட்டை  நம்  அடிகளார்  யாவரும்  வியந்தின்புறுமாறு   மிக  அழகுபெறக்  கூறியிருக்கின்றார்கள் . எங்ஙனமெனின் ; உலகத்தலைவர் களாகிய   அரசர்   முதலியோரை  உலகத்துள்ள   மற்றையோ  ரெல்லாம்  நன்கு  தெரிவர் ; அத் தலைவர்களின்  குணஞ்  செயல்களையும்  வரையறுத்துணர்வர்  அத் தலைவர்கள்  பிறரெல்லாரையும்  அறியார் . அன்னார்  குணஞ்  செயல்களையும்  நன்கு  தெரியார் .  கடவுட்  டலைவராகிய  சிவபிரானோ வெனின் , பிறரெல்லாரையும்  அறிவர் ; அன்னார்  குனஞ் செயல்களையும்  “அவனன்றி  ஓரணுவும்  அசையாது “  என்றபடி  உயிர்க்குயிராய்  நின்று  நன்குணர்வர் .  பிறர்க்கு  அப்பெருமான்  பெற்றி   உணர  அரிதாகும்  .  இப்பொருணலங்களையே  நம்  சுவாமிகள்  ,  மேற்காட்டிய  படியும் , 

                              “பெற்றி  பிறர்க்கரிய  பொம்மான் “

எனவும்  அருளிச்  செய்வாராயினர் .

                               “குறைவிலா  நிறைவே “ 

யென்பது ,  அப்பெருமான்  கருணையைப்  பற்றியதாகும் .  சிவபிரான் , தங் கருணையைப்  பிறரெறத் துணை  அள்ளிக்கொண்டாலும்  குறைவின்றி  நிரம்பியிருப்பரென்பதாம் .  இவ்விரு  பொருள்களையும்  ,

                  “தெள்ளிப்  பிறரால்  தெரிவரியான்  தங்கருணை

                     அள்ளக்  குறையா  அரன் “

என்பதனாலும்  நன்குணரலாம் .  இதனால் , தங்  கருணையைக்  கொள்ளா விட்டாற்  குறைவரே  யன்றிக்  கொள்ளக்  குறையா  ரென்பதும்  வெளியாதல்  உய்த்துணர்க . எவ்வுயிர்க்கும்  இரங்கி,  அவற்றிற்கு  வரும்  இடையூற்றை  ஒழித்து  இன்பம்  அளித்தல்  சிவபிரான்  ஒருவர்க்கே  கூடுமென்பதும் , மற்றையோர்க்கு  இயன்றவரை  கருணை  செய்தலே  கூடுமென்பதும்  ஆன்றோர்  துணிபாகும்  . இது  கருதியே  அருளைப்பற்றித்   திருமூலதேவர்  கூறுமிடத்து  ,

“ஆருயிர்  யாதொன்  றிடருறு  மாங்கதற்

கோருயிர்  போல  உருகி  உயக்கொள்ள 

நேரி  நதுமுடி  யாதெனி  நெஞ்சகத் 

தீர முடைமை  அருளி  நியல்பே “

என்று  மற்றையோர்க்  கியன்றவாறு  “முடியாதெனின்  ஈரமுடைமை  அருளினியல்பே “  எனக்  கட்டளையிட்டருளினார் .  

              சிவபிரானுக்கு  முடியாத  தொன்றின்மையின்  ,  அவரே  கருணையை  முழுவிலக்கணத்துடன்  ஆளுந்தகுதியின  ரென்பது  வெள்ளிடை  மலையென  உணரத்தக்கதொன்றாம் .  சகல தேவர்  மக்கள்  முதலிய  யாவர்க்கும்  எவற்றுக்கும்  ஈயுந்தா தா  சிவபிரானே  யாவரென்பது .  எஜூர்  வேதத்துள்ள  சமக  மந்திரங்கள்  ,  திருமால்  பிரமன்  முதலிய  தேவர்களை  அன்னத்தோடு  சேர்த்து  ஈயப்படும்  பொருளாகக்  கூறினமையானும் ,  சிவபிரானை  அங்ஙனம்  கூறாமையானும்  நன்குணரலாம் . யாவருந்  தம்பா  லிரக்கத்  தாம்  வேண்டியார்  வேண்டியாங்  கீயும்  பெருங்  கொடையாளர்  ஆதலின் , இப் பெருமானே  ,  கருணை  யென்னும்  உயர்குணத்தின்  முழுப்  பாகத்தையும்  உடையாரென்பது  தேற்றமாம் .

3.  சிவபிரான்  கருணையின்  சிறப்பு

        இனி , நம்  பெருமானுக்குரிய  எண்வகைக்  குணங்களுட்  கருணையும்  ஒன்றெனினும்  ,  இக் குணமே  ,  நாமெல்லாம்  வழிபட்  டுய்தற்குரிய   திருமேனியை  இறைவன்  கோடற்குரியதாக  இருத்தலின்  மிகச்  சிறந்ததாகும்  சிவபிரான்  உண்மைச் சொரூப  இலக்கணம் .

 “செறிசிவ  மிரண்டு  மின்றிச்  சித்தொடு

 சத்தாய்    நிற்கும் “

என்றபடி  சச்சிதாநந்தப்  பிழம்பே  யாகும் . இந் நிலை  பாசப்பிணிப்புடைய  ஆன்மாக்கள்  உணரவரியதாகலின் ,  அவ்வான்மாக்களின்  பொருட்டு  இறைவன்  அருவம் ,  உருவம் ,  அருவுருவம்  என்னும்   மூவகைத்  திருமேனியு  முடைவராய்  வெளிப்பட்டருளுவர் . இதுவே  தடத்த  நிலை  யெனப்படும் .  இத்  திருமேனிகள்  கருணையாற்  கொண்டனவேயாம் .  இவ்விருவகை  நிலையும்  இறைவனுக்குரிய  வென்பதையும் , கருணையே  வடிவமென்பதையும்  , 

“கற்பனை  கடந்த  சோதி  கருணையே  உருவமாகி”    எனவும் ,

                               “செப்பிய  மூன்றும்  நந்தங்

கருமேனி கழிக்க  வந்த  கருணையின்  வடிவு  தானே “ 

எனவும்  போந்த  திருவாக்குக்களான்  அறிக .  ஈண்டு  இக் கருணையே  தமது  இடப்பாகம்  பிரியாதுடனுறைந்து  விளங்கும்  உமாதேவியாகிய  சிவசத்தியாகும் .   இஃது  ,

                   “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”

என்பதனான்  அறிக . தமக்கமைந்த  எண்வகைக்  குணங்களுள்  ,  இவ்வருட்  குணமே  நம்  பிரானுக்குரிய  பராசத்தியாக  அமையுமாயின் , இதன்  மாட்சி யை  எவ்வாறு  பேசுவேன் !  நம்  பெருமானது  இப் பேரருள்  வெளிக்கண்ணே   எல்லா  அண்டங்களும் , அவற்றின்  உட்பொருள்களுந்  தோன்றி  நிலைபெறுவனவாம் .  இவ் வருள்  வெளிக்கண்  எல்லா உயிரும்  நிலைபெற்றிருந்தும்

வெள்ளத்துள்  நாவற்றி  யாங்குன்

       னருள்  பெற்றுத்  துன்பத்தினின்றும் ,

விள்ளக்கி  லேனை “

என்ற  திருவாக்கின்படி  நாம்  நம் வினைப்பகுதியான்   அக் கருணையினாற்  பெறவேண்டிய  பயனைப்  பெறாது  மாழ்குகின்றோம் .  இக் குற்றம்  நம்மதே யன்றி  அக்  கருணாநிதியின்  பாலதன்று .  தாழ்ந்த  நிலம்  மேட்டு  நிலமென்னும்  வேறுபாடு  கருதாது  மேகம்  நிரந்தரமாகப்  பெய்தும்  , ,அந் நீரை  மேட்டு  நிலம்  ஏற்காது  ஒதுக்கத்  தாழ்வு நிலம்  ஏற்குமாபோல , சிவபிரான்  பருகற்கினிய  பரங்  கருணைத்  தடங் கடலாக  இருந்தும்  ,  நம்  தீய  வினையாகிய  அணை  குறுக்கிட்டுக்  கிடத்தலான் , அக் கருணை வெள்ளம்  நம்பாற்  செல்லாது  உண்மை  அன்பர்  கூட்டமாகிய  நற்றடத்திற்  சென்று  நிறைகின்றது . சிவபிரான்  ஆன்மாக்கள்  உய்தற்பொருட்டுத்  தங்  கருணை யமுதத்தை  மிகவலிந்து  எத்தணையோ  உபாயங்களாலும்  ஊட்டுகின்றார் .  இவ்வுண்மையைத்  தம்  அநுபவத்தால்  உணர்ந்த  பேரன்பாளராகிய   மாணிக்கவாசக  சுவாமிகள் கட்டளையிட்டருளிய  பின்வரும்  திருவாசகத்  திருப்பாசுரத்தானும்  உணரலாம் .  அது  பின்வருமாறு :- 

“வழங்குகின்றாய்க்கு  உன்  அருள்  ஆர்

          அமுதத்தை  வாரிக்கொண்டு 

விழுங்குகின்றேன்  விக்கினேன்

          வினையேன்  என்  விதி  இன்மையால்

தழங்கு  அரும்  தேன்  அன்ன  தண்ணீர்

          பருகத்  தந்து  உய்யக்  கொள்ளாய்

அழுங்குகின்றேன்  உடையாய்

          அடியேன்  உன்  அடைக்கலமே”

இதன்  அருமைப்  பொருளையுஞ்  சிறிது கூறி  மேற் செல்வேன். வழங்குகின்றாய்க்கு  என்புழி,  குவ்வுருபு   பொருட்டுப்  பொருளதாம் . “என்னை  யாண்டாய்க்கு”  என்று  பிறாண்டுஞ்  சுவாமிகள்  இதனை  வெளிப்படக்  கூறுவர் . ஆகவே  ,வழங்குகின்ற  நின் பொருட்டு  நின்  அருளாகிய  ஆரமுதத்தை  வாரிக்கொண்டு  விழுங்குகின்றேன்  என்பதே  அத்தொடரின்  பொருளாம்  .  மாணிக்கவாசக  சுவாமிகள்  தம்மைச்  சிவபிரான்  மிகவலிந்து  அடிமை கொண்டாரென்பதைக்  “கல்லை மென்கனியாக்கும்  விச்சை  கொண்டென்னை  நின் கழற்  கன்பனாக்கினை”  எனவும் ,  “ஈர்த்தென்னை  ஆட்கொண்ட  எந்தை  பெருமானே “  எனவும் ,  “கல்லைப்  பிசைந்து  கனியாக்கித்  தங்கருணை, வெள்ளத்  தழுத்தி  வினை கடிந்த வேதியனை “  யெனவும் ,    “இனையனானென்றுன்னை  யறிவித்தென்னை  யாட்கொண் டெம்பிரா  னானாய்க்க்கு “  எனவும் ,   போந்த திருவாக்குக்களானுணர்க . அவ்வாறு   அடிமை  கொண்டு  தங்  கருணை  யமுதத்தை  எவ்வாறு  ஊட்டினா ரெனின் ;  ஒன்றும்  அறியாக்  குழவிப்  பருவத்து  மகவைத்  தாய்  அச்சமுறுத்தி  உணவூட்டுமா  போலும் , கல்லூரிகட்  சென்று  கல்வியின்  மாட்சியுணராது  கற்றற்கு  மலைவுறும்  சிறாரை  ஆசிரியன்  அடித்துத்  துன்புறுத்திக்  கல்வியைப்  புகட்டுமா போலும்  ஊட்டினாரென்க .  

                       இவ்வுண்மையையே  நம்  சுவாமிகள்   “அடித்தடித்து   அக்காரம்  முன்தீற்றிய  அற்புதமறியேனே”  என்று  திருவாய்  மலர்ந்தருளினார்கள்  . ஆதலின் ,  “சருக்கரை  வழங்குதல்”  என்பது  போலச்  சிறிதும்  வருந்துதலின்றி  மகிழ்ச்சி  மிக்கு  இடையீடின்றிப்  பெய்தல்  கருதிக்  ,  கொடுத்தல்  தருதல்  முதலிய  சொற்களை  விடுத்து  வழங்குதற்  சொல்லால்  தொடுத்து , அவ்வாறு  கருணை  யமுதத்தைப்  பெய்து  உண்ணுக  உண்ணுக வென்று  அடித்தடித்து  வற்புறுத்துகின்ற  நின் பொருட்டு  அஞ்சி  வழங்குகின்றாய்க்கு  எனவும் , தன்னையுண்டாரைச்சிற்றின்புறுத்துந்  தேவரமுதம்  போலாது   சிவபிரான ருலமுதம்  பேரின்புறுத்தவல்லதாகலின்  உன்  அருளாரமுதத்தையெனவும் , இயற்கையாக  உண்டலின்றித்  துன்புறுத்தும்  நின் பொருட்டு  மிக  விரைந் துண்ணுகின்றேனென்பார்.  வாரிக்கொண்டு  விழுங்குகின்றே  னெனவும் , அங்ஙனம்  விரைந்து விழுங்குதலான்  விக்கினேனெனவும், வேண்டாத  உணவை உண்டற்குத்  தொடங்கு  முன்னர்க்  கண்டவளவிலேயே  விக்கலுண்டாமாகலின் , முறையே  நிகழ் காலமும்  இறந்தகாலமுந்  தோன்ற  விழுங்குகின்றேன் விக்கினெனெவும்,  அவ்வாறு  விக்குதற்குக்  காரணம்  நீயல்லை ;  வினைவயப்பட்டுழலும்  எனது  விதியேயென்பார்  வினையேனென்  விதியின்மையால்  எனவும் ,  யான்  வேண்டாதிருப்பவும்  , என்னைத்  துன்புறுத்தி  ஊட்டினையாதலின்  ,  அதனாலுண்டான  விக்கலை  ஒழித்தற்குத்  தண்ணீர்  தந்து  பிழைப்பித்தல்  வேண்டுமென்பார் ,  தண்ணீர்  பருகதத் துய்யக்  கொள்ளாயெனவும் , அவ்வமுதம்  நின்னருளமுதமாதலின் , அதனை  உண்ணுதற்குரிய  அதிகார  சிவத்துவம்  வேண்டுமென்பார்  தண்ணிய  நீர்மை  சிவத்துவம்  என்னும்  பொருள்  பொதுளத்  தண்ணீரெனவும்  ,  அத்தண்ணீரும்  அவ்வமுதம்  போல்  விக்கல்  முதலிய  சலனங்களைத்  தருதலின்றி  எற்குகந்த இனிமைச்  சுவையுடனிருத்தல்  வேண்டுமென்பார்,  “தழங்கருந்  தேனன்ன  தண்ணீ “   ரெனவும் , அது பெறாமையின்  மிக  வருந்துகின்றேனென்பார் . அழுங்குகின்றே  னெனவும்  ,  சிவபிரான்  சேதனப்பொருள்களெல்லாம்  தமக்கு  அடிமையாகத்  தாம்  ஆண்டார்  எனவும் , அசேதனப்  பொருள்களெல்லாம்  உடைமையாகத்  தாம்  உடையாரெனவுங்  கூறப்படுவாராதலின்  , இந் நான்கு சொற்களைக் கொண்டு  விளக்குதற்குரிய  பொருள்  முன்னிலை   தன்மையாகிய  இரு  சொற்களினமைய  உடையாய்  அடியே  னெனவும்  ,  யான்  சேதனனாயிருந்துஞ்  சிறிதும்  அன்பிலனாதலின்  , என்னை  யாளுதல்பற்றி  வரும்  ஆண்டாரென்பதினும் , அசேதனப்பொருள்களைப்  பற்றிய  உடையாரென்பது  நினக்குப் பெருமை  யாதலின்  அதனையே  விளிப்பலென்பார்  உடையாயெனவும் , ஆண்டாரென்பது  உண்மை யெனினும்  என்னை  நோக்கி  அவ்வாறு  கூறற்கு  நாணமுடையேனாதலின் அப் பொருள்  பிறரறிய  என்னையே  கூறிக்  கொள்வ லென்பார் அடியேனெனவும்  ,  நின்றனக்குரிமையுடைய  பொருளினும் , அடைக்கலப் பொருளைக்காத்தல்  நின்  பெருந்தன்மைக்கு  இயன்ற  தென்பார்  உன் அடைக்கலமே  யெனவுந்  திருவாய்  மலர்ந்தருளினார்  சுவாமிகள் .  நண்பர்களே !  இவ்வரிய  நுண்பொருளை  நினையுங்கால்   திருவாசக  மாட்சி  சிந்தித்தற்கெவ்வாறு  ஒல்லும் ?  இவ்வருமை  நூலுக்கு  உரை வரைவேனென்று  முற்பட்டார்  சிலர்  இதன்  நுண்பொருணலங்களைப்  பிறரறியக் கூடாவாறு  செய்தமை  பெரிதும்  வருந்தத்தக்கதே .  இன்னும்  நம்  இறைவன்  அன்பர்க ளை  ஆட்கொள்ள  மேற்கொண்ட  செயல்கள்  எண்ணத்தொலையா.  அவர்  தம்  அன்பர்களுக்கு  எவ்வளவு  எளிய  நிலையிலுள்ளா ரன்பது  அச்  செயல்களான றியலாம். .  நம்  மணிவாசகர்  பொருட்டு  மண் சுமந்தார் .  “மண் முதற்  சிவமீறாகிய  முப்பத்தாறு  தத்துவங்களை யுங்  கடந்தவன்  என்று  என்னைக்  கூறுவார் ;  யானோ  என்  உண்மையன்பர்  பொருட்டுக்  கீழ்க்  கண்ட  பிருதிவி  தத்துவத்தை  அம்  முப்பத்தாறினும்  மேல்  நிற்கும்  என்  தலைமேலேற்றுங் கடப்பாடுடையேன்”   என்று  அவர்  தாம்  அடியார்க்  கெளியராம் நிலைமையை  நன்கு  புலப்படுத்தினார் போலும் !  அவர்  பெருங்கருணை  மாட்சி  நினையுங்கால்  உள்ளம்  உருகுகிறதே  !  

                            4.   அக் கருணையின்  வகை

         இனி,  அப் பெருமான்  கருணைத் திறம்  இரு வகைப்படும் . அவை  அறக்கருணை  மறக்கருணை  என்பனவாம் . ஒரு  தந்தைக்குரிய  மக்கள்  இருவருள் , ஒருவன் , “தந்தை  சொன்  மிக்க  மந்திரமில்லை”  என்றபடி  செவ்விய  நன்நெறிக்கண்  ஒழுகுகின்றான் . அதற்குத்  தந்தை  வேண்டுவன  தந்து  இன்புறுத்துகின்றான் . மற்றொருவன்  தந்தை  யுரை  கடந்து  தீய  நெறிக் கட்   செல்லுங்கால்  அவனைத்  தந்தை  அடித்துத்  துன்புறுத்தி  நன் நெறிக்கட்  செலுத்துகின்றான் .  இம் மக்கள்  இருவரிடத்துச்  செய்யும்  இவ்விரு  செயலும்  அன்பு  பற்றியனவேயாகும் . இங்ஙனமே  நம்  பரமபதியின்  செயலுமாம் .  தம்மிடத்து  அன்புபூண்டு  ஒழுகும்  அடியார்களை  அவர்    உவப்பன  செய்து  இன்புறுத்துவர்  .  அன்பின்றி  இருப்போரை  ஒறுத்து  நன்நெறிக்கட்  செல்லு மாறு   அருள் பாலிப்பர் .

         இவ்விரு  செயற்கும்  அவ்  வான்மாக்களிடத்துத்  தாம்  வைத்த  கருணையே  காரணமாகும் .  இவற்றுள்  முன்னையது  அறக் கருணையெனவும்  ,  பின்னையது  மறக் கருணையெனவுங்  கூறப்படும் . நம்  சமய  நூல்களையும்  உலகியலையும்  அறியார்  சிலர்  “யாவர்க்கும்  ஒப்பவிருத்தலன்றே  கடவுளியல் ,  அவ்வாறின்றிச்  சிலர்க்கு  இதஞ்செய்தலும், சிலர்க்கு  அகிதஞ்  செய்தலும்  என்னை?  “    என்பர் . இவ் வுலக  பரிபாலனஞ்  செய்யும்  அரசியலை  நோக்கினும்  இவ்வுண்மை  மிக  எளிதில்  அறியத்தக்க  தொன்றாகும் . இது  கருதியே  திருவள்ளுவ  தேவரும்  ,

“அறத்திற்கே  அன்புசார்  பென்ப  அறியார்  

மறத்திற்கும்  அஃதே  துணை “

என்று  கூறினர் .  இத் திருக்குறளுக்கு  மறத்தை  நீக்குதற்கும்  என்று  ஆசிரியர்  பரிமேலழகர்  உரை  கூறினார் . இதனினுஞ்  செவ்வையாக  அறத்தைச் செய்தற்கு  அன்பு  துணையாதல் போல்  ஏனை  மறத்தைச்  செய்தற்கும்  அன்பு  துணையாம் என்று  கொண்டு  இவ்விரண்டனுட்  பின்னதை  அன்பு  பற்றிய  மறமெனக்  கோடல்  சிறப்புடைத்தென்பதுணர்க.  இங்ஙனமே  நாயன்மார்கள்  செயலுமாம்    நம்  வைதிக  சைவசமய  நெறியைஅழிப்ப  முற்பட்ட  சமணர்கள் ,  பாண்டிய  அரசனால்  ஒறுக்கப்பட்டுக்  கழுவேறுங்கால் ,  அதனை  விலக்காமையால்  திருஞானசம்பந்த சுவாமிகள்  கருணையில  ரென்பர்  ஒரு  சிலர் .  அன்னார்  ஒரு  குடி  நலம்பெற  ஒருவனையும்  ,  ஓரூர்  நலம்பெற  ஒரு  குடியையும் ,  ஒரு  தேயம்  நலம் பெற  ஓரூரையுங்  கெடுத்துக்  காத்தல்  அறமாமென்று  அற  நூல்  கூறுதலையும்  உணர்ந்திலர் ;

“பொறையெனப்  படுவ  தாடவர்  தமக்குப்

             பூணெனப்  புகலினும்  பொருந்தார்

முறையறப்  புரிந்தா லக்கணத்  தவர்தம்

              முடித்தலை  துணிப்பதே  முழுப்பூண் “

என்னும்  நீதியையும்  உணர்ந்திலர் .  இன்னும்  பிரபல  நியாயங்கள் உளவெனினும்  ,  அவை  ஈண்டு  வேண்டற்பாலன   அல்லவாதலின் ,  விருத்திலன்  .  ஆகவே  , சிவபிரான்  செயல்கள்  ,

“எக்கிர  மத்தி  நாலும்  இறைசெயல்  அருளேயென்றும்”

என்றாங்க்குக்  கருணை  காரணமாக  உள்ளனவேயாம் .

                     5 . அக் கருணையால் ஆன்மா  எய்தும்  பயன் 

இனி,  அப்பெருமான்  கருணையா னுண்டாம்   பயனைச்  சிறிது  கூறுவல். ஆன்மாக்கள்  அநாதி  கேவலத்தில்  ஆணவ  மலத்தாற்  பிணிப்புண்டு  இருட்ட றையிற்  கிடக்கின்ற  கண்ணிலாக்  குழவி  போல  நினைவு  செயற்றுக்கிடக் குங்கால்  ஆற்றல்  பல  உடைய  அவ்  வாணவ  மலத்தைக்  கழுவுதற்பொருட் டுக்  கன்ம மல  மாயா  மலங்களை  அவ்வவற்றிற்கேற்ப  பயனுறச் செய்து  ,  சிறிது  அறிவெழக்கண்டு  ,  படைத்தல்  முதலிய  ஐந்தொழில்களையும்  புரிந்து,  இறுதியில்  தம்  திருவடி  இன்பத்தை  ஈதற்குக்  காரணம்  ,  தம்  அளவிலாப்  பெருங்கருணையே   யாகும் .  இவ்  வுண்மையை,  

“அருளிற்  பிறந்திட்  டருளில்  வளர்ந்திட்

டருளில்  அழிந்தினைப்  பாறி  மறைந்திட்

டருளான  ஆனந்தத்  தாரமு  தூட்டி

அருளாலென்  நத்தி  அகம்புகுந்  தானே “

என்னுந்  திருமந்திரமும்  வலியுறுத்துவதாம் . இனி,  அப்பெருமானைக்  காண்டற்கும்  அவர்   கருணையே  கண்ணாதல்  வேண்டும்  .  கேநோபநிடதத்தில்  “இந்திரன்  இயக்க  வடிவத்துடன்  வந்த  பரம்பொருளாகிய   சிவபிரானை  ஆங்குத்  தோன்றிய  உமாதேவியாராகிய  அருட் சக்தி  காட்டலால்  தெளிந்தான் “  என்று  கேட்கப்படுதலானும்  ,

                                                 “மெய்யருளாந்

     தாயுடன்  சென்றுபின்  தாதையைக்  கூடி”

என்று  பட்டினத்தடிகள்  அருளினமையானும்,

   “அவனருளே  கண்ணாகக்  காணி  னல்லால்”

எனவும்  போந்த  திருவாக்குக்களானும்  இவ்வுண்மை  நன்கு  புலனாம் .

    “ஆங்கவ  நருளாற்  பத்தி  நன்குண்டாம்”

என்றபடி  இறைவனை  அடைதற்கு  மிக  முக்கியமான  பத்தியும்  அவனருள்  வழி  யுண்டாமெனின் ; வேறிதன்  பயனை  எவ்வாறுரைப்பேன் !  அப்பெருமான்  பரங்கருணையின்  பயனாக  முடிவில்  நாம்  பெறத்தக்க  பொருள்  அப்பெருமானே  யாகும் . இதனினுஞ்  சிறந்த  பயன்  யாதுள்ளது ? சிவ  நேசர்களே ! இவ்வுலகத்தும்  விரைவில்  தோன்றி  யழிதன்  மாலையவாகிய  சிற்றின்பந்  தரும்  பொருள்களைப்  போலாது  உலப்பிலா  இன்ப  உருவமாகிய  அவ்விறைவனையே  தரும்  மாட்சி  மிக்க  அக்கருணையைப்  பெறுதற்குரிய  செயலையன்றி  வேறு  யாம் செயக்  கிடப்பது  யாதுளது ?  மணிவாசகனாரும்,

 “தந்ததுன்  றன்னைக்  கொண்டதென்  றன்னைச்

            சங்கரா  யார்கொலோ  சதுரர்

  அந்தமொ  ன்றிலா  ஆனந்தம்  பெற்றேன்

            யாது  நீ  பெற்றதொன்  ரென்பால் “

என்று  இப் பேரானந்தப்  பெருஞ்செல்வப்  பேறாகிய  அவர்  கருணையாற்  பெற்ற  தம்  அநுபவ  உண்மையை  நம்மனோரும்  உய்ய  வெளிப்படுத்தி  யருளினார்கள் . இத் திருவாசகத்தில்  ஒரு  பண்டமாற்றுச் செய்தியை நாம் அறிகின்றோம் .  அஃதாவது ,  எல்லாவறிவும்  எல்லாவற்றாலும்  நிறைந்த  மலரகிதராகிய  சிவபிரான்  தம்மைக்  கொடுத்துச்  சிற்றறிவுஞ்  சிறு  தொழிலுமுடைய  சீவனை  அதற்கு  மாற்றாகக்  கொள்கின்றா  ரென்பதே  அப் பெருமானைப்  பெற்றமையாற்  சீவன்  எய்திய  பயன்  அளப்பிலா  ஆனந்தம். இச் சீவனால்  அவ்விறைவன்  பெற்றது  யாதுமின்று  ,  என்னே  அவர் கருணைத் திறம்  !  மனத்தான்  நினைத்தற்கும்  வாயாற்  பேசற்கும்  அளவுபடுவதின்றா கலின் , இம் மட்டிற்  சிவபிரான்  கருணை  யென்னும்  பகுதியை  நிறுத்தி  மேற்  சீவர்களின்  கடமையைப்  பற்றிச்  சிறிது  கூறுவேன்  . 

6 .  சீவர்களின்  தன்மை

      ஆன்மா  எப்பொருளைச்  சார்ந்ததோ  அப் பொருளின்  வண்ணமாந்  தன்மை  உடையதென்பது  வேதாகம  சித்தாந்தம் . வெளி  இருளோடு  கூடுங்கால்  இருளாகவும் ,  ஒளியோடு  கூடுங்கால்  ஒளியாகவும்  ஆதல்போலவும் ,  ஒரு  பளிங்கு  செந்திறத்  தைச்  சார்ந்துழிச்  செம்மை யாகவும்  ,  கரு  நிறத்தைச்  சார்ந்துழிக்  கருமையாகவுந்  தோன்றுதல்  போலவும் ,  ஆன்மா ,  மலவிருளிற்  கலந்துழி  அதன்  மயமாகவும் ,  சிவ  விளக்கத்திற்  பொருந்துழிச்  சிவமயமாகவும்  விளங்கும்  . அவ்வப்பொருளைச்  சாருங்காற்  பிரிப்பின்றி  அத்துவிதமாகவே  சம்பந்தமுற்றுக்  கலந்திருக்கும்  . மலத்தோடு  சம்பந்தமுற்றுழி  அந் நிலையும்  அத்துவித நிலையாமோ வெனின் ,  அதுவும் ,  ஒன்றென்றாவது  வேறொன்றாவது  கூறப்படாமையின்  அத்துவிதமேயாம்  .  இதனை,

“ஆணவத்தோ  டத்துவித  மானபடி  மெஞ்ஞானத்

தாணுவினோ  டத்துவிதஞ்  சாருநா  ளெந்நாளோ

என்னுந்  தாயுமானார்  திருவாக்கும்  வலியுறுத்தும் . ஆகவே  தனக்கென  ஒரு  சுதந்தரமுமின்றிச்  சார்ச்சிப்பொருள்களின்  தன்மையே  தன்  தன்மையாகக்  கோடல்  ஆன்மாவினிலக்கணங்களுள் முக்கியமானதொன்றாம்.  இன்னும்  இச் சீவன்  சகச மலமாகிய  ஆணவத்தாற்  பிணிப்புண்டு  அதன்  நீக்கத்தின்  பொருட்டு  இறைவனால்  தரப்பட்ட  மாயாமல  கன்ம மலங்களின்  காரியங்களாகிய  தநு கரண  புவன  போகங்களைப்  பெற்று  மாறி  மாறிப்  பிறக்கும்  இயல்புடையதாம் . மனம்  புத்தி  அகங்காரம்  சித்தமென்னும்  அந்தக்கரணங்களாகிய  கருவிகளாற்  பொறிகளின்  வாயிலாகப்  புலன்களை   நுகர்ந்து  அதனால்  மீண்டும்  மீண்டும்  வந்தேறுகின்ற  கன்மங்களையுடைத்தாம் .  இன்பந்தருவனவற்றில்  விருப்பும் , துன்பந்தருவன வற்றுள்  வெறுப்புமுடையதாகும்.  இன்னும்  இவ்வான்மாவினிலக்கணம் , வகைவிரிகளாற்  பலதிறப்படும்.  அவை  விரிந்த  சைவநூல்களிற்  காண்க .

7 . கடமையின்  தன்மை

         இனி,  கடமையாவது  இன்னதெனச்  சிறிது  கூறுவேன் . இவ்வுலகத்து  அறிவுள்ள  ஒவ்வொருவரும் , நாம்  செய்யவேண்டியவை  இவையிவையென  நூன் முகமாகவும்  ,  பெரியார்  முகமாகவும்  உணர்ந்து  எதிர்ப்பயனைப்  பற்றிச்  சிந்தியாமல்  மேற்கொள்ளுங்காரியங்களுள் இன்றியமையாது  செய்யத்தக்கவை  எவையோ  அவை  கடமை  யெனப்படும் . நன்  மாணாக்க னொருவன்  ஆசிரியன்  ஒறுத்தல்  கருதி  வெறுப்புறாது  அவனாணைவழி  நின்று  கற்றுவருதலும்  இக்  கடமையாகும் . போர்  வீரனொருவன்  போர்  முனையிற்  சென்றவுடன்  தனக்கு  வரும்  வெற்றி  கருதி  முற்படலும் , தோல்வி  கருதிப்  பிற்படலுஞ்  செய்யாது  நிலை  நின்று  பொருதலும்  அவன்  கடமையாகும்  .  அற நூல்களில்  நித்தியகருமாநுட்டானங்களைப்  பற்றிக் கூறி, அவற்றைச்  செய்தலால்  வரும்  பயனையும்  விரித்துப்  பின் ,  இப் பயன்களைப்   ஆராய்ந்தறிந்தே  செய்தல்  வேண்டுமென்று  எவரும்  கருதல்  கூடாதெனவும் , நாடோறும்  செய்யவேண்டிய  கன்மங்களைப்  பயன்  விசாரியாதே  செய்து  தீரவேண்டுமெனவும்  ,  அங்ஙனஞ்  செய்தல்  ஒவ்வொருவனுக்குங்  கடமையாமெனவுங்  கூறுதலும்  ஈண்டுக்  கருதற்பாலது. அறிவுவலி  படைத்தார்  ,  பயனை  விசாரித்தல்  மிக  நன்றே. அஃதியலாதாயின்  விசாரித்தறியும்வரை  கன்மங்களைச்  செய்யாதொழிதல்  தவறென்பதே  ஈண்டுத்  துணியற்பாலது பயன் ,   விசாரித்தலின்றிச்  செய்யினும்  செய்தாரைச்  சார்தலொருதலை  வரையாது  கொடுக்கும்  வள்ளன்மையு டையோர், இவற்கு  இன்னது  செய்தல்  வேண்டும் ,  இதற்கு  இன்னது  செய்தல் வேண்டும்  என்னும்  நியதியின்றி  நேர்ந்த  நேர்ந்தபடி  கொடுத்தற்குக்  காரணம்  அவருள்ளத்திற்  பதிந்து  கிடக்குங்  கொடைக்  கடமையேயாகும்  .  இது  நோக்கியே  ,  அவர்  கொடைமடம்  பட்டோரென்று  கூறப்படுவர் . முல்லைக்குத் தேரும்  மயிலுக்குப்  போர்வையும்  வேண்டாதனவாகவும் , அப்பொருள்களின்  இயற்கைத்  தளர்  நிலையைக்  கண்டவுடன்  மன நெகிழ்ந்து  இரக்கமுற்று  அவற்றிற்குப்  பேரிடையூறு  வந்ததாகக்  கருதிப்  பாரி  முதலியோர்  இயைபில்லாத்  தேரும்   போர்வையும்  ஈந்தனரே  .  இவ்வீகை  பயன்  குறித்ததாமா?  அவர்  தமக்கு  இயற்கையின்  அமைந்துகிடக்குந்  தண்ணளியோடு  கூடிய  கொடைக்  கடமையேயன்றி  வேறென்  சொல்வது ?   முல்லைக்கொடி  படர் கொம்பின்றித்  தளருமேல் , தன்  ஏவலாளரைக்  கொண்டு  தக்கதொரு  கொழு  கொம்பை  நிறுத்தல்  கூடாதா?  அக்  கொழு கொம்பினும்  இத் தேரினால்  அக் கொடிக்குக்  கிடைத்த  விசேட  நலம்  யாதுளது  ?  அங்ஙனமாகவும்  தேரை  ஈந்ததற்குக்  காரணம் , பாரிவள்ளல்  தேரேறி  வருங்காற்  கொடியின்  தளர்  நிலையைக்  கண்டதும் ,  தனது  இயற்கைத்  தண்ணளியால்  இன்னது  செயற்பாலதென்றுணரும்  அத்துணையுந்  தாழ்க்க  மனமின்றி  அக்கணமே  தேரை  நிறுவினார்  என்பதே இதனானன்றே ,

      “கொடுக்கிலா  தானைப்  பாரியே  யென்று

                        கூறினுங்கொடுப்  பாரிலை”

என்று  நம்  சுந்தரமூர்த்தி  சுவாமிகள்  அவ்  வள்ளலின்  கொடைத்  திறத்தைப்  பாராட்டியருளினார்கள் .  நம்  மக்களொவ்வொருவரும்  தம்  தேயம் , மொழி , சமய  முதலியவற்றை  இயன்றவரை  பேண  முற்படலும்  தத்தங்  கடமையாகும் . இக்கடமை  உலகியற்  கடமை , சமயக்கடமை  என  இருவகைப்படும்  அவற்றுள்  ஈண்டுக்  கூறப்பட்டன  சில  உலகியற்  கடமைகளாம் . இன்னும்  இது  சம்பந்தமாகக்  கூறப்புகின்  மிகவிரியுமாதலின், எடுத்துக்கொண்ட  பொருளுக்  கியையுமாறு  நம்  சமயக்  கடவுளராகிய  சிவபிரான் மாட்டு  நாம்  செய்யவேண்டியவைகளை  ஈங்குக்  கூறுவேன் .

8 . சிவபிரானிடத்துச்  செய்யவேண்டிய  கடமைகள் .

      சைவர்களாகிய  நாமெல்லாம்  நம்  சமயக்  கடவுளாகிய  சிவபிரானை  உண்மை  அன்போடு  வழிபடுதல்  வேண்டும் . அங்ஙனம்  வழிபடுங்கால்  இதர  தெய்வங்களைப்  பழித்தல்  கூடாது . நம்  தெய்வத்தையே  போற்றுவோமாக  ஆயின் ,  ஒரு  சாரார்  எல்லாத்  தெய்வங்களும்  ஒன்றேயாதலின் , அத்  தெய்வங்க  ளெல்லாவற்றையும்  சமமாகக்  கருதி   அன்பு  செய்தல்  வேண்டு  மென்பார் . அன்னார்  கூற்று  மரபு  பிழைபட்டதொன்றாதலின் ,  பொருந்தாமை  காட்டுவதும் .ஒவ்வொருசமயத்தாருந்  தத்தஞ்  சமயக் கடவுளைச்  சிறப்பு வகையானும்  பிற  சமயக்  கடவுளைப்  பொது வகையானும்  அன்பு  செய்யலாமன்றிச்  சமநிலையாக்  கோடல்  பத்தியின்  இலக்கணமன்றாம் . தெய்வங்களெல்லாம்  உண்மை  நிலையில்  முடிவில்  ஒன்றேயெனினும்  அவ்வுண்மை  தத்துவ ஞானிகளுக்கன்றி   மற்றையோர்க்கு  உணர்வரிதாம் .  சாமாநியர்கள்  அந்  நிலையைப்  பற்றிப்  பேசல்  பேச்சளவேயன்றி  அநுபவவளவிற்  கோடல்  அரிது .  எப் பொருளும்  அநுபவத் தினன்றிப்  பேச்சளவி  னொழிதல்  பயனின்றாம் .  இன்ன  இன்ன  ஒழுக்கங்கள்  நல்லனவென்று  பேசிவிட்டு  அவற்றைக்  கடைப்பிடியாவிடின்  ,  அப்  பேச்சாற்  பயனென்னை ?

“சொல்லுதல்  யார்க்கும்  எளிய  அரியவாம்

 சொல்லிய  வண்ணம்  செயல் “

என்பதும்  ஈண்டுக்  கருதற்பாலது.  சிறப்பென்பென்பது  ஓரிடத்தன்றிப்  பல விடத்துஞ்  சேறலாகாது . பல்லிடத்துஞ்  சேறல்   சாமாநிய  பத்தியேயாகும்  ஒரு பெண்மகள்  தன்னைக்  கைப்பிடித்தகாதலனிடத்துச்  செய்யும்  அன்புக்கும்  தன்  சோதரர்  சுற்றத்தாரிடத்துச்  செய்யும்  அன்புக்கும்  வேறுபாடு  உண்டன்றோ?  முன்னையது  சிறப்பு  அன்பும் , பின்னையது  பொது  அன்புமாம் .   சிறப்பன்பை  வேறோரிடத்துச்  செய்யின் ,  பிறழ்ச்சிக்குற்றம்  வருதலோடு   சிறப்பிலக்கணமும்  பிழை படும் . பொது  அன்பை  உரிய  சோதரரிடத்துப்  போல்  மற்றையோரிடத்துஞ்  செய்யலாம் .  அதனால்  வருங்  குற்றம்  யாதுமின்றாம் .  அவ்வாறே  நமது  சமயக்  கடவுளிடத்துச்  செய்யும்  பத்தி  சிறப்பும் ,  ஏனைத்  தேவர்களிடத்துச்  செய்யும்  பத்தி  பொதுவுமாம்  .  ஆனால்  அப்  பெண்மகள்  தன்  உயிர்க்காதலனைப்  பாராட்டி  ஏனைச்  சோதரர்  முதலியோரையும்  இகழாது  உபசரித்தல்  போல  நாமும்  நம்  சமயத்  தெய்வத்தைப்  பாராட்டுதலோடு  மற்றைத்  தேவர்களையும்  இகழாது  அவரவர்க்  கேற்றவாறு  உபசரித்துப்  போற்றுதல்  கடனாம் . இவ்வாறு  தத்தஞ்சமயத்  தெய்வங்களிடத்து வைக்கும்  சிறப்பன்பே  நல்லின்பந்  துய்ப்பதற்குரியதாகும் .  இங்ஙனமின்றி  எல்லாம்  சமஞ்  சமமென்று  கூறுவார்  ஒன்றினும்  நிலைபெறாது  தமக்குரிய  ஆன்மப்பேற்றை  முடிவில்  இழந்தவரே யாவர் .  சமய  சாத்திர  விசாரத்தால்  தத்துவ  நிலை  ,  அதிகார  நிலை முதலிய  தாரதம்மியங்களைக்  கண்டு  கூறல்  அவரவர்  அன்பு  நிலைப்படுதற்கு  உபயோகமாதலானும் ,  முன்னைய  சமயாசாரியர்க   ளெல்லாரும்  அங்ஙனங்  கூறிப்  போந்தமையானும் ,  அது  நிந்தையாகாது . நிந்தையாவது  துரபிமானத் தால்  உள்ளதை  இல்லதாகவும் ,  இல்லதை  உள்ளதாகவும்  கூறிப்  பழித்தலேயாம் 

“உள்ளேன்  பிறதெய்வம்  உன்னையல்லா

   தெங்க  ளுத்தமனே “

“கற்றறியேன்  கலைஞானம்  கசிந்துருகே  னாயிடினும்

    மற்றறியேன்  பிறதெய்வம்”

என்னுந்  திருவாக்குக்கள்  நிந்தையின்றிச்  சிறப்பன்பின்  இலக்கணத்தை  வெளிப்படுத்துதலுணர்க.  ஆகவே ,  நாம்  நம்  பதியாகிய  சிவபிரானிடத்து  விசேட  பத்தியாகிய  உண்மையன்பு  செய்தல்  கடமையாம் .  பிற  தெய்வங்களையும்  உரியவாறு  போற்றுதலைப்பற்றி  விலக்கின்மையும்  உணர்தல்வேண்டும் . அஃது  அவரவர்  மன நிலைக்கேற்ப  மேற்கொள்ளத்  தக்கதொன்றாம் .  

      இனி, சைவர்களாகிய  நாம்  நம்  இறைவனை  முறைப்படி  வழிபடுதற்கு  இன்றியமையாது  மேற்கொள்ளத்தக்கது  தீக்கையேயாகும் .  தீக்கை  இல்வழி  திருவைந்தெழுத்துப்பெருமறை  முதலியவற்றைச்  செபித்ததற்குக்  கூடாமை யானும்  ,  சரியை  முதலிய  நால்வகை  நெறியொழுக்கம்  பெறப்படாமை யானும்  அஃது  இன்றியமையாத  தொன்றேயாம் .  தீக்கையாவது  ஆன்மாக்க னிடத்துள்ள  சிவசத்தியை  வெளிப்படவொட்டாது  தடையாக  மறைந்து  நிற்கும்  மலசத்தியைக்  கெடுத்துச்  சிவத்துவத்தைக்  கொடுப்பதாகிய   சிவசத்திக்  கிரியையாகும் .   இன்னும்  தீக்கையினாலேயே  வீடு  முதலிய  எல்லா  நலன்களும்   சித்திக்குமென்னும்  உண்மையை  வாயு  சங்கிதை  முதலிய  புராணங்களானும்  ,  விரித்துக்  கூறுஞ்  சிவாகமங்களானு  முணர்க இத் தீக்கை  பலதிறப்படும் .  அவற்றின்  விளக்க  விசேடங்களை  யெல்லாம்  ஆகமங்களுள்  தெளிவாக  உணரலாம் . சமய  தீக்கை  பெற்று  இறைவன்  உருவத்  திருமேனியைப்  புறத்தொழில்  மாத்திரையான்  வழிபடுதலாகிய  சரியையும்  ,  விசேட  தீக்கை  பெற்று  அருவுருவத்  திருமேனியைப்  புறத் தொழில்   அகத்தொழில் இரண்டானும்  வழிபடுதலாகிய  கிரியையும்  ,  அருவத்  திருமேனியை  நோக்கி  அகத்தொழில்  மாத்திரையான்  வழிபடுதலாகிய  யோகமும் ,  நிருவாண தீக்கை  பெற்று  இம்  மூன்றனையுங்   கடந்த  உண்மை  யறிவின்ப   வடிவமாகிய  இறைவன்  சொரூபத்தை  வழிபடுதலாகிய  ஞான  நிலையும்  ஆகிய  இந்  நால்வகை  நெறிகளுள்  ,  தம்  தகுதிக்கேற்ப  இயன்றதொன்றை  அநுட்டித்து  வருதல்  ஒவ்வோரான்மாக் களுக்கும்  உரிய  கடமையாகும்.

          அற  நூல்களிற்  கூறப்பட்ட  அருள் ,  கொல்லாமை ,  புலாலுண்ணாமை , கட்காம  நீத்தல்  முதலிய  உயர்ந்த  ஒழுக்கங்களெல்லாம்  ஈண்டுக்  கூறிய  சைவ  நெறிக்கண்  அடங்குமாதலின்  , வேறாக  விரித்திலன்  .  வைதிக  குலத்திற்   பிறந்தாருள்ளுஞ்  சில  நவீன  அறிவுடையோர்  ,  கிரியைகள்  கேவலம்  மெளட்டியர்களுக்கேயன்றி  ,  அறிவுடையார்  உண்மையுணர்ந்து  அந்தக்கரணங்களை  மாத்திரம்  திருத்திக்கோடல்  போதியதெனவுங் கூறி  நித்திய  கன்மங்களைப்  பொருட்படுத்தாது  காலத்தை  வறிதே  கழிக்கின்றனர் ;  அவரெல்லாம் ,  கன்மானுட்  டானங்களா  லன்றிச்  சித்த  சுத்தி  யுண்டாகாதென்று  அநுபவ  ஞானிகளாகிய  நம்  பண்டையோர்  கூறி  அவ்வாறே  யொழுகிய  உண்மையை   ஒரு  சிறிதும்  உணர்ந்திலர் .கீதையிற்  கண்ணபிரான்  ,  தத்துவஞானியுங்கன்மத்தை  விடல்  தவறெனவும் ,  மேற்கோ டல்   இன்றியமையாத  தொன்றெனவும்  தடைவிடைகளால்  அருச்சுனற்  குபதேசித்ததையும்  உணர்ந்திலர் .  உண்மை  ஞானி  யொருவர்  எல்லாப்  பந்தங்களையும்  ஒருவிச்  சுத்த  ஞான  வொளியி லியைந்  திருக்குங்காற்  கன்மங்கள்  அவரைத்  தாக்காமல்  தாமே  ஒழியும்  .  அந்  நிலையைப்பற்றி  ஈண்டுச்  சங்கித்தல்  இயைபின்று .  கன்மந்  தானே  ஒழியப்பெற்ற  ஒரு  மகா  ஞானியை  நோக்கி  ஒருவன்  “அடிகாள் , தேவரீர்  சந்தியோபாசனை  செய்யா திருத்த  லென்னை ? “  என்று  வினாவினானாக  , அவர்

“அஞ்ஞானத்  தாய்மரண  மானாள்  அஃதொன்றோ

மெய்ஞ்ஞானக்  கான்முளையும்  மேவினான் —  இஞ்ஞானலந்

தன்னில்  மரண  சனன இரு  சூதகத்தேன் 

உன்னலெங்ஙன்  சந்திசெயல்  ஓர் “

என்று  விடை  கூறினார்  .  அஃதாவது  :  “அஞ்ஞான  வுருவமாகிய  தாய்  இறந்தாள்;  அறிவுருவமாகிய  குழந்தை  பிறந்தது ;  இவ்   விருவகை  ஆசெளசத் தையும்  உடையனா  யிருக்குங்கால்  எவ்வாறு  யான்  சந்தியோபாசனை  செய்வல்”  என்பதாம் .  ஆதலிற்  கண்ணப்பர்  முதலிய  முறுகிய  அன்புடையார்  செயலை  விதியாகக்  கொண்டு  அத் தகுதி  யில்லாத  நாமும்  இறைச்சி  நிவேதனத்தை  இறைவனுக்குச்  செய்தல்  பொருந்துமா?  அவர்  இறைவன்  கண்ணிற்  புண்ணீர்  வார்தல்  கண்டு  வருந்தி  அதற்கு  மாற்றாகத்  தங்  கண்ணைப்  பறித்து   வைத்து  மகிழ்ந்தாரன்றே !  அத் துணிவு  நமக்கும்  வரினன்றே  அவர்  செயலை  நாமுங்  கோடலமையும் .

அன்பர்களே !

இக்  குதர்க்க  நெறியையொழித்து   நமக்கு  இறைவன்   அருளிய  வேதாகமங்களில்  விதிக்கப்பட்ட  செயல்களை  இயன்றவரை  விடாது  செய்மின்கள் ;  புலாலுண்ணல்  முதலியவற்றிற்கு  முதிர்ந்த  அன்புடைச்  சிவச்  செயலாளராகிய  அடியார்களை  உதாரணங்  காட்டிப்  புரைபடாதீர்கள் ;  சமயாசாரமாகிய  நித்திய  கன்மங்களை  விடாது  செய்ய  முந்துமின்கள் .   ஒவ்வோரோழுக்கங்களையுஞ்  சொல்லளவிற்  சுருக்கியுஞ்  செயலளவிற்  பெருக்கியுங்  காட்டுமின்கள்  ;  நம்  சமயக்கடவுளைச்  சிவலிங்காதி  திருமேனி களிடத்தும் ,  சிவனடியாரிடத்து  மிருப்பதாகக்  கண்டு  விசேட  அன்பைச்  செய்மின்கள் ;  பிற  சமயங்களும்  இறைவனரு  ளிருந்தவாறு  ஆன்ம  பக்குவ  நோக்கி  வெளிப்பட்டன  என்னும்  உண்மை  யுணர்ந்து  அவற்றை  இகழன்மின்கள் .  இளமைப் பருவம்  காமாதிகளை அனுபவித்தற்கென்றே  கருதிக்  கழிக்காது ,  நம்  பெருமானை  வழிபட்டுய்தற்கு  மிக  ஏற்றதொரு   பருவமென்றெண்ணுமின்கள் ;  ஆலய  வழிபாட்டையும்  விக்கிரகாராதனத் தையும்  இயன்றவரை  இடைவிடாது  செய்ய  விரும்புமின்கள்  ;  உரிய  கருவி  நூல்களையும்  ,  அவற்றின்  பயனாகச்  சமய  நூல்களையும்  நடுநிலையுடன்  ஆராய்மின்கள் ;  தாங்கொண்டதே  பொருளெனக்  கடைப்பிடியாது  தம்மினுந்  தாழ்ந்தார்வாய்  உண்மை  வருமாயின்  அதனை  மகிழ்ந்து  ஏற்றுக்கொண்  மின்கள் ;  நூல்களிற்  கண்டவை  ஒழுக்கத்திற்  காட்டற்கன்றிக்கலாம்  விளத்தற்  குபயோகமென்  றெண்ணாதீர்கள் ;  நம்  சமயத்தையும்  ,  மொழியையும் பிற  சமயத்தார்க்கும்  பிறமொழியாளர்க்கும்  வருத்தமுண்டா மாறின்றிப்  பேண  முற்படுமின்கள்;  பிறர்  நம்  சமயம்  மொழிகளை  அறியாமையான்  இகழின்  அவர்  மனம்  வருந்தாது  ஐயப்பாட்டிற்கு  மாத்திரந்  தக்கவாறு  மறுமொழி  தந்து  அவரைத்  திருத்துமின்கள் ;  பின்னுந்  திருந்தாராயின்  அவரறியாமைக்  கிரங்கி  அஃதொழிய  நம்கடவுளை  வேண்டுமின்கள்  ;  சிவபிரான் ,  விரும்பிக்  கருணைபாலித்தற்குரியதாக  அருளறம்  என்னும்  சிறந்த  அமிழ்தத்தை  முதலில்  நும்  நெஞ்சக்கலத்திற்  கொண்மின்கள் . நண்பர்களே ! இவையெல்லாம்  சீவர்களாகிய  நம்  கடமைகளேயாம் .  இத்துணைக்  கடமைகளுள்  மிக  முக்கியமான  கடமையொன்று  சிவபிரானை  நோக்கச்  சீவர்களுக்குண்டு.  அதனையும்  ஈண்டுக்  கூறுவேன் .

                                        9 . ஓரின்றியமையாக்  கடமை

அஃதாவது  இறைவனை  நோக்க  ஆன்மா  ஒருவித  சுதந்தரமுமின்றிப்  பர தந்திரம்  உடையதாகலின் ,  ஆணவ  மலத்தாற்  பிணிப்புண்டு  கிடக்கும்  பெத்தகாலத்தும் ,  தநுகரணங்களைப்  பெற்றுச்  சிறிது  அறிவு  விளக்கமுற்று  உபாசனாதிகளைச்  செய்யும்  மத்திய  காலத்தும் ,  மலசத்தி  அறவே   ஒழியப்  பெற்றுச்  சிவத்துவமெய்திப்  பேரின்ப  நுகரும்  முத்திக்  காலத்தும்  தன்பாலிடைவிடாதமைந்து  கிடக்கும்  அடிமைத்  தன்மையேயாம் .   அடிமையாவது ,

    “கண்டவிவை  யல்லேனா  நென்றகன்று  காணாக்

              கழிபரமு  நானல்லே  னெனக்கருதிக்   கசிந்த

      தொண்டு”

என்றபடி  காணப்படும்  பாசகாரியப்  பொருள்களும்  மேலாகிய  பதிப் பொருளும்  யானல்லே  னென்று  கருதியவழி  முன்போல  முனைத்தலின்றி  ஓங்குணர்வின்  உள்ளடங்கி  நிற்றலாம் .  இவ்வடிமையின்  முக்கிய  இலக்கணமாகக்  கருத வேண்டியது , ஆண்டவனாகிய  சிவபிரான் ,  ஒப்பாரு  மிக்காருமின்றி  யாவர்க்கு  மேலாந்  தலைவ ரெனவும்  அடிமையாகிய  யான் ,  என்னின்  ஒப்பானதுங்  கீழானதுமாகிய  பொருளொன்றுமின்றி  யானே  மிகக்  கீழானவா னெனவும்  உள்ளவா  றுணர்ந்தொழுகலேயாம்.  இது  கருதியே ,

“யாவர்க்கு  மேலாம்  அளவிலாச்  சீருடையான்

 யாவர்க்குங்  கீழாம்  அடியேனை”

என்றார்  மணிவாசகப்  பெருமானும் . நம்  சமயக்  கொள்கை  பலவற்றுள்  மிக  முக்கியமானதும்  இதுவேயாம் .  அதனாலன்றே ,

“தாழ்வெனுந்  தன்மையோடு  சைவமாஞ்  சமயஞ்சாரும்

 ஊழ்பெறலரிது”

என்று  கூறும்  சிவஞானசித்தியும் ,  இத் தொண்டு  அடிமைநெறி (தாத மார்க்கம்)  ,  தோழநெறி (சக மார்க்கம் ),  மகன்மை  நெறி (சற்புத்திர மார்க்கம்)  உயர்நன்நெறி (சன்மார்க்கம் )  ஆகிய  நால் வகை ஒழுக்கத்தினும்  ஆன்மாவை  விட்டு  நீங்காததொன்றாம் .   “எவ்விடத்தும்  இறை யடியை  “  எனவும் ,  “தொழும்பாகும்  அங்கு “  எனவுங்கூறியபடி  வீட்டு  நிலையினும்  இவ்வான்மா  அடிமையே   யாமெனின் ,  வேறிதன்  மாட்சியை  எங்ஙனம்  கூறுவேன்  !  உள்ளவாறு  ஓரான்மா  இறைவனுக்கு  யான்  என்றும்  அடிமையே  யென்றுணர்ந்து  முனைப்பின்றியொழுகுமாயின்  வீட்டின்பமாகிய  பயனைச்  சிவபிரான்  தாமே தருவர் , வீட்டு நிலையை  விரும்புதலும்  அடிமை  யிலக்கணத்துக்குக்  குற்றமா  மென்றால் ,  வேறு  கைம்மாறு  கருதல்  கூடாதென்பதைப்  பற்றிக்  கூறுதல்  மிகையே .  வீடென்பது  எல்லாவற்றையும்  விடுதலன்றே !  அவ்  வேண்டாமையை  வேண்டல்  அவசியமென்று  நூல்கள்  கூறவும் ,   அதனை  விரும்புதலுங்  குற்றமென்ப  தெங்ஙனம்  பொருந்துமெனின் ;  ஆன்மா,  தன்  கடமை  இன்னதென்றறிந்து  மேற்கொள் ளின் ,  இறைவனுந்  தன்  கடமையைச்  செய்வன்  என்பது  தேற்றமன்றே  !  அஃதுணர்ந்தும்  ,  சிறிதுஞ்  சுதந்தர  மில்லாத  இவன்  எற்கு  இன்னது  வேண்டுமென்று  விரும்புதலுந்  தவறேயாம் .  இவ்  வுண்மையை , 

“மண்மேல்  யாக்கை  விடுமாறும்

வந்துன்  கழற்கே  புகுமாறும்

அண்ணா  என்ணக்  கடவேனோ

அடிமை  சால  அழகுடைத்தே “

என்னுந்  திருவாக்கானும்  உணர்க .  அஃதாவது  யான்  அடிமையென்றுணர்ந் தபின்   நின்னை  வழிபடுதலேயன்றி  இவ்வுடல்  கழியுமாற்றையும்  நின்  திரு வடிப்பேறு  பெறும்  வழியையும்  ,  யான்  எண்ணுதற்  குரியனோ ;  அங்ஙனம்  எண்ணுவேனாயின்  என்  அடிமை  யிருந்தவாறு  மிக  அழகிது  என்பதாம் .    

“சார்புணர்ந்து  சார்பு  கெடவொழுகின்” .

என்றபடி  அடிமைநெறி  முதலிய  மூன்று  நெறிகளினும்  ஒழுகுவோர்  வீட்டின்பத்தில்  விருப்புற்று  மேன்மேற்  செல்லுவர் .  நான்காவதாகிய  சன் மார்க்கத்  தொழுகுவோர்  அவ்விருப்பமின்றித்  தங்  கடன்  இதுவென  உணர்ந்து  சிறிதும்  முனைத்தலின்றி  அடங்கிநிற்பின்  சிவபிரான் ,  தங்  கடனாகிய  பேரின்பளித்தலை  விரைந்து செய்வர் . 

           ஆசிரியர்  சேக்கிழார்  சுவாமிகளும்  இவ்வுண்மை  அடியாரைக்  கூறுங்கால் , 

“கேடும்  ஆக்கமும்  கெட்ட  திருவினார்

ஓடும்  செம்பொனும்  ஒக்கவே  நோக்குவார்

கூடும்  அன்பினில்  கும்பிட  லேயன்றி 

வீடும்  வேண்டா  விறலின்  விளக்கினார் “

என்று  பாராட்டியிருக்கின்றனர் .  இவ்  வருட் பாசுரத்தின்  அருமையை  என்னென்பேன் !  இத் திருத்தொண்டின்  மாட்சியைப்  பற்றித்  தனியே  ஒரு  வியாச  மெழுதி  வெளிப்படுத்தக்  கருதியுளே  னாதலின்  ஈண்டு  விருத்திலன். முடிவாகக்  கூறுமிடத்து , இவ் வடிமையே  ஆன்மா  பயன்  குரியாது  மேற்கொள்ள வேண்டுவ தொன்றென்பது  இவ்வாராய்ச்சியால்  விளக்கமாம் .

                                                        10 .  இதன்  பயன் 

      இனி , இவ்  வின்றியமையாக்  கடமையாகிய  அடிமையின்  பயனைப்பற்றிச்  சிறிது  கூறுவேன்  .  அதன்  பயன்  வீட்டின்பமே  யென்பது  முன்னர்ப்  பெறப்பட்டதாயினும் ,  இடைக்கண , உண்டாம்  பயன்களும்  உள . ஆன்மா , எல்லாம்  அவன்  செயலேயன்றித்  தன்  செயலென் றென் றுணர்ந்து  அருள்  வழி  நிற்பின் ,  அதனாற்  செய்யப்படுங்  கன்மங்கள்  அதனைச்  சாரா. கன்மங்கள்  கட்டு   நிலையில்  நான்  செய்கின்றே னென்று  கருதுவதால்  ஆன்மாவைத்  தாக்கும் . வீட்டு  நிலையில் யான்  எனதென்னும்  இருவகைப் பற்றுமின்றி  எல்லாம்  அவன்  செயலேயென்  றுணர்ந்து  அருள்வழி  நிற்றலால்  அக்காலத்துச்  செய்யப்படுங்  கன்மங்கள்  அவ்வான்மாவைத்  தாக்கா . பிராரத்த  வினை   அநுபவித்தே  தீரவேண்டு  மெனினும்  , அஃது  உடலூழாய்க்  கழியுமன்றி  உயிர்க்கு  இன்ப  துன்பங்களைச்  செய்யாதென்பதாம் . இவ் வுண்மையை  ,

“நாமல்ல  இந்திரிய  நம்வழியி  னல்லவழி

நாமல்ல  நாமு  மரனுடைமை  —  யாமென்னின் 

எத்தனுவி  னின்று  மிறைபணியார்க்  கில்லைவினை

முற்செய்வினை  யுந்தருவான்  முன் “

என்னும்  மெய்கண்டார்  திருவாக்கான்  உணர்க . இதனால்  எல்லாம்  அவன்  செயலென்  றிருத்தல்  மிக  நலமென்று  போதரலான் ,  தாம்  செய்யுந்  தீவினைகளுக்கும்  இதனையே  பிரமாணமாகக்  காட்ட  முற்படலாமா  வெனின் , நன்று  நன்று  !  எப்பொருளையுஞ்  சிவமயமாகக்  கண்டு  தானொரு  முதலென்பதின்றி  அவனே  தானேயாகிய  அந் நிலையில்  நிற்கும்  முத்தனுக்கும்  ,  கண்ட  பொருளெலாம்  இன்பஞ்  செய்வனவென்றும்  ,  அவை  எனக்கெனக்  கென்றும் , யானே  நுகரும்  முதலென்றுங்  கருதி  மலவாய்ப்பட்  டுழலும்  பெத்தனுக்கும்  எத்துணை  வேறுபாடுள  தென்பதை  உற்று நோக்குவார்க்கு  உண்மைபுலனாம் .  இதனால்  முடிவுவரை  பெரும்பயனைச்  செய்வது ,  இத்  திருத்தொண்டேயென்று  அதன்  மாட்சி  யுணர்ந்து அவ்வொ ழுக்கத்தை  மேற்கொள்ளுதலே  நம்  கடமையாமென்பதும் ,  விதி  விலக்கைக்  கடந்து  நிற்றல்  நம்மனோர்க்குப்  பொருந்தா  தென்பதும்  விளக்கமாம் .

என்  அன்புள்ள  சகோதரர்களே  ! 

      இத்  திருத்தொண்டை  இயன்றவரை  செய்தலே  சீவர்களின்  முக்கிய  கடமையென்றுணர்ந்து  நம்  பெருமானிடத்து  எஞ்ஞான்றும்  அன்புப்  பணி   பூண்டு  ஒழுகுமின்கள்  ;  பயன்  செய்வது  அவர்  கடமை  யென்பதை  உறுதியாக  நம்புமின்கள் ;  திருத்தொண்டு  புரிவார்  யாவரும்  நம்  உரிமைத்  தமரென்பதை  உள்ளவா  றுணர்மின்கள்  ; சிவபிரானாகிய  பரம  பிதாவினது  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தைப்  பெறுதற்குரிய  மக்கள்  நாமேயென்  றுணர்ந்து  பெற்று  இன்புறுமின்கள் ;  என்  புன்சொற்களிற்  பொதுளிய  பிழைகளை  என்  அறிவின்  சிறுமை  கருதிப்  பொறுத்துக்கொண்மின்கள் ;  இவ்வளவே  யான்  இப்பேரவைக்கண்  இன்று  செய்யவேண்டிய  கடமை  யென்பதை  உணர்ந்து  இக்  கட்டுரையிற்  பரந்து  கிடக்கும்  பொருள்களைப் பற்றிய  தொகையுரைக்குப்  பொறுமையுடன்  சிறிது  செவி  சாய்மின்கள் .

                                         11 .  தொகையுரை

       இத்துணையுங்  கூறியவற்றாற்  போந்த  பொருள்கள்  :- 

பரமகருணாநிதியாகிய  சிவபிரானே  வேதாகமங்களால்  ,  நிச்சயிக்கப்படும்  பரம்பொரு  ளென்பதூஉம் ,  அதனை  முழுவிலக்கணத்தோடு  ஆளுந்த லைமை , பிறர்க்கின்றாகச்  சிவபிரான்  ஒருவர்க்கே  உரித்தென்பதூஉம்,  அவர்  இக்  கருனையையே  சக்தியாகவும்  திருமேனிகளாகவுங்  கொண்டு  வெளிப்பட்டருளுவ  ரென்பதூஉம் .  தம் கருணையமுதை  அடியார்க்கு  வலிந்து  அச்சமுறுத்தியும்  ஊட்டுவரென்பதூஉம்  ,  அடியார்பொருட்டு  மிக எளியராம்  நிலையுடையரென்பதூஉம்  ,  அவர்  கருணை  அறக்கருணை  மறக்கருணை யென  இரு வகைப்படு மென்பதூஉம் ,  அக் கருணையின்  பயனாகவே  ஆணவ  மலத்தாற் பிணிப்புண்டு  கிடக்கும்  ஆன்மா  மாயா கமங்களாற்  சிருட்டியாதிகளையுற்று  அறிவு  விளங்கப்படு மென்பதூஉம் ,அதுவே,  இறைவனைக்  காண்டற்கும்  ,  ஆனந்த  வடிவனாகிய  அப்  பெருமானைப்  பெறுதற்கும்  கருவியாகவுள்ளதென்பதூஉம் , சீவர்களின்  தன்மை  இன்னவென்பதூஉம் , கடமையாவ திதுவென்பதூஉம்  ,  உலகியற்  கடமைகள் இவையென்பதூஉம் , சமய  சம்பந்தமாகச்  சிவபிரானிடத்துச்  செய்யுங்  கட மைகள்  இவையென்பதூஉம் , சமயங்களின்  சமரச  உண்மையை  இவ்வாறு  கோடல்  வேண்டுமென்பதூஉம் ,  தீக்கைபெறல்  சரியை  முதலிய  நெறிகளின்றும்  கன்மங்களை  விடாமற்  சிவபிரானை  வழிபடன்  முதலியவையெல்லாஞ்  சமயக்கடமைகளாமென்பதூஉம் , அவற்றுள்,முக்கிய  கடமை  ஆன்மா,  தான்  பெத்தகாலத்தும்  முத்திக்காலத்தும் மேற்கொள்ளத் தக்க  அடிமைத்  திறமேயாமென்பதூஉம் , அதன்  தன்மை  மாட்சிகள்  இன்னவென்பதூஉம் , அதனால்  ஆன்மா எய்தும்  பயன்  இன்ன  வென்பதூஉம்,  இத் திருத்தொண்டை  ஆன்மா  தன்  கடமையென  மேற்கொள்ளின்  ,  அதற்கு  வீட்டின்பந்   தருதலைச்  சிவபிரான்  தம்  கடமையென  மேற்கொள்வ  ரென்பதூஉம் , பிறவுமாம் .

அறிஞர்களே ! 

      யான்  இச்  சொற்பொழிவின்  தொடக்கத்திற்  கூறிய  தேவாரப்பாசுரத்தில்,

“தன்கடன்  அடியேனையும்  தாங்குதல்

 என்கடன்  பணிசெய்து  கிடப்பதே “

என்னும்  பிற்பகுதியாகிய  இவ்  விரண்டடிகளும்  முறையே  சிவபிரான்  கருணையையும் , சீவர்கள்  கடமையையும்  புலப்படுத்தி , இச்  சொற்பொழிவை  இனிது  நிறைவேற்றின  வென்பதையும்  ஈண்டு  ஞாபக முறுத்துகின்றேன் .  சைவ சமயமுஞ்   சிவதருமமுந்  தமிழ்மொழியும்  நீடுவாழ்க .  

                                                    ***************************

                      3 .  சைவசமய   விளக்கம் 

( சைவசித்தாந்த  மகாசமாஜத்தின்  இருபத்தைந்தாம்  ஆண்டு  வழாவின்  தலைமையுரை )

அன்புமிக்க  ஐயன்மீர்  !  அன்னைமீர்  !

       எல்லாம்  வல்ல  பரங்கருணைத்  தடங் கடலாகிய  சிவபெருமான்  திருவருட்   பாங்கால்,  இன்றைக்கு  இருபத்தைந்து  யாண்டுகளுக்குமுன்  தோன்றி , இதுகாறும்  சைவ  உலகிற்குப்  பல்லாற்றானும்  நற்பயன்  விளைத்துவரும்  இச்  சைவசித்தாந்த  மகாசமாஜத்தின்  கால்  நூற்றாண்டு  வழா  நிமித்தம்  இங்குக்  கூடிய  இம்  மாபேரவையில் ,  பேரறிஞர்களாகிய  உங்கள்  முன்னிலையில்  “தலைமை  தாங்குக”  என்று  இச்  சமாஜத்தன்பர்கள்  “வண்ணப்பணித்தென்னை  வாவென்ற  வான் கருணைக்கு”  யான்  பெரிதும்  கடமைப்பட்டுள்ளேன்  .  இது  பற்றி  என்  நன்றியறவையும்  வணக்கத்தையும்  இம் மகாசமாஜத்தார்க்  குரிமைப்படுத்துகின்றேன் .  சித்தவிருத்தி  முதலிய  கரணங்கள்  யாதுமில்லாத  கல்லுருவில் ,  தூய  உள்ளமுடைய  பெரியார்  தெய்வபாவனையைச்  செய்ய  ,  அத்தெய்வம்  அவ்வுருவிற்றங்கிப்  பயன்  விளைத்தலைக்  கண்  கூடாகக்  காண்கின்றோம் .  அங்ஙனமாயின்  ,  அறிவாற்றல்  நிறைந்த  உங்கள்  தூய  எண்ணங்களெல்லாம்  கருவி  கரணங்களோடுங்  கூடிய  சிறியோற்குத்  தலைவனாந்  தகுதி அமைகவென  நிகழுமாயின்  ,  ஏன்  அமையாது ? இவ்வுறுதி  கடைப்பிடித்தே  இப்பணியில்  தலைப்படலானேன் .

                                       1 .   இக்காலத்துச்   சமயநிலை .

             அன்பர்களே !    தற்கால  உலக  நிகழ்ச்சி  சமய நிலையிற்  பெரிதும்  பிறழ்ச்சி  யடைந்து  வருகின்றது . இந் நிலையிற்  பண்டைப்  பெரியோர்  வகுத்த  சமயவுணர்  வொழுக்கங்களில்  கால நிலை  கருதி  வேண்டுவன  இன்ன ,  வேண்டாதன  இன்னவென  ஆராய்ந்து  கோடல்  நன்றென்று  பல  அறிவுடையோர்  கருதுகின்றனர்.  அக்கருத்து  ஏற்றுக்கொள்ளத்  தக்கதெ னினும் ,  பழையன  கழிதற்கும்  புதியன  புகுதற்கும்  உரிய  தீங்கு  நலங்களை  ஊன்றி   நிறுத்துணர்தலாகிய  பொறுப்பு  ,  ஒவ்வோர்  அறிஞர்க்கும்  இன்றி யமையாத  தாகும் .  இப்பொறுப்பைக்  காய்தல்  உவத்தலின்றி  நடுவு  நிலைமை  மேற்கொண்டும்  முன்னைப்  பெரியார்பால்  நன்கு  மதிப்பை  நழுவவிடாமலும்  தாங்கல்  வேண்டும்  .  இக்கால  உலகம்  பழைய  உண்மைகளாகிய  உருவைப்  புதிய  ஆராய்ச்சி  என்னும்  எழில்  மிக்க  அணிக லன்களாற்  புனைந்து  வெளிப்படுத்துதலை  எதிர்பார்த்து  நிற்கின்றது . இவ்வேட்கைநிலை  உணர்ந்து  இச்  செயல்  மேற்கொள்ள  முற்பட்டாருட்  சிலர்  தம்  கற்பனையாற்  காணும்  அணிகலன்களுக்கு   அவ் வுண்மை  உரு இயையாமை  கண்டு  அவ் வுருவையே  களைந்துவிட  எண்ணுகின்றனர் .  இவ் வெண்ணம்  மிகத் தீங்கு  பயப்பதாகும்  . நம்  பண்டைய  உண்மைக்  கொள்கைகளை  மாசுபடச்  செய்து  அவற்றின்  சிறந்த  பயன்களை  நாம்  துய்க்கவொட்டாது  இடையூறு  விளைத்துவரும்  களைகளைக்  களைய  வேண்டுமென்னும்  எண்ணம்  சிறந்ததே .  அம் முயற்சியில்  தலைப்பட்ட  நம்  சகோதரருட்  சிலர்  அக்  களைகளோடு  பன்னாட்  பயின்ற  பிழைநோக்கி  நற்கதி  விளைக்கும்  நம்செந்நெறிப்  பயிரையும்  உடன்  களைந்  தெறிந்து விட்டு  ,  “யாது  பயனும்  வேண்டாம்   உண்டியும்  உறக்கமுமே  வேண்டுவன  “  என்று  மக்கள்  வாழ்க்கைக்கு  ஒவ்வா  நிலையை  மேற்கோடல்  மிகவும்  வருந்தத்  தக்கதே .

                        2 .  வாழ்க்கையின்   நோக்கங்கள் .

        இனி ,  மக்களிடம்  வாழ்க்கையின்  நோக்கங்கள் தாம்  யாவை ?  அந்  நோக்கங்களை  நிறைவேற்றிக்  கோடற்குரிய  நெறிகள்  எவை ?  அவற்றாலாம்  பயன்கள்  என்னை ?   என்று  இன்னோரன்ன  ஆராய்ச்சியில்  தலைப்படல்  அறிவுடையார்  யாவர்க்கும்  உரிய  முதற்  கடமையாகும் .  நம்  வாழ்க்கையின்  நோக்கமாக 

“யோசிக்கும்  வேளையிற்  பசி தீர  உண்பதுவும்

 உறங்குவது  மாக  முடியும் “

என்று  நம்  பெரியாரொருவர்  உலகஞ்  செல்லும்  கீழ்நிலை  நோக்கி  இரங்கிக்  கூறிய  பரிவுரையை  ,  அக்  கருத்துணராமற்  கடைப்பிடிப்பேமென்பார் செயல்  மிகவும்  இழிந்ததொன்றாகும் .  பசி  தீர  உண்டலும் ,  வேட்கை  தீரக்  காமவின்பம்  துய்த்ததலும்  நம்மினும்  இழிந்த  பிறப்பினவாகிய  புள்  விலங்கு  முதலியவற்றிற்கும்  குறைவறக்  கிடைத்தலான் ,  பகுப்புணர்வினாற்  சிறந்த  மக்கட்  பகுதியினர்க்கு  அச்  செயல்களால்  அவற்றினும்  விழுமிய  பெருமை  யாதுளது ? இறைவன்  நமக்கு  மனவுணர்வையும்  நூலுணர்வையும்  சிறப்பாக  அமைதர  உதவியதன்  நோக்கந்தான்  யாதோ ?   அவ் வுணர்வு  பெற்றதனால்  நம்  நோக்கம்  அதற்குத்  தக  விழுமியதாக  இருத்தல்  வேண்டுமன்றோ ? அந்  நோக்கந்தான்  அறநிலையிற்  பலதிறப்பட்டுச்  சமய நிலையில்  ஒன்றாகவே  முடியுமென்பதை  நம்  பெரியார்  ஒழுகலாற்றானும் ,  அருள்  மொழிகளானும்  உணரலாம் .

                                                3 . இல்லற   நோக்கம் 

      ஒரு  மணமகளை  ஓராடவன்  காதற்கிழமை  யொடு  மணந்து  நடாத்தும்  இல்வாழ்க்கையைப்  பெரியார்  இல்லறமென்று  சுட்டியதன்  கருத்தை  ஊன்றி  நோக்கல்  வேண்டும் .  “இல்லின்பம்”  என்னும்  வழக்குப்  பொருந்துவதாகவும் ,  “இல்லற”மென்னும்  வழக்கே  ஆட்சியிற்  பெரிதும்  காணப்படுகின்றது .  அவ்விருவரும்  துய்க்கு  மின்பம் ,  அவர்தம்  அன்பின்  தொடர்பை  வேரூன்றச் செய்து  பின்  அவ்வன்பு  ஒருங்கியைந்த  அருங்கலமாக  அவர்பால்  வெளிப் படூஉம்  மகவு  முதலியோர்மாட்டு  அதனை விரிவுபடுத்திப்  பின்னர்ப்  படிப்படியாக  உலகத்துள்ள  எல்லா  உயிர்களிடத்தும்  அவ்  வன்பைப்  பரவச்  செய்து  அருள்  என்னும்   பெயரதாக்கி  அதன்  முகமாக  அவ் வருளையே  வடி வமாகவுடைய  இறைவனோடு  இயைவித்துப்  பேரின்ப  நுகர்ச்சியிற்   றலைப் படுத்தும்  அறமாக  மாறுதலின்  இல்லின்பமென்பதனினும்  இல்லறமென்னும்  ஆட்சி  சிறந்ததெனப்  பெரியார்   கண்டனர் போலும் . கற்புக்  கடம்பூண்ட  தெய்வமெனப்  பாராட்டப்பெற்ற   வீரபத்தினியாகிய  கண்ணகி  யென்னும்  பெண்மணி ,  இளமையும்  எழிலுமிக்க  தன்  காதல்  கொழுநனாகிய  கோவலன்  கணிகை  யொருத்தியின்  வயப்பட்டு  ,  அவள்  உடனுறைவால்  தன்  இளமைப்  பயனைப்  பிறழ்ச்சி  முறையில்  நுகர்ந்து  ,  பொருளற்ற  நிலையில்  தன்பாற்போந்து  ,  “பொன்னே  மணியே  புனைபூம்  பாவாய்  காதல்  கெழீஇய  கற்பரசியாகிய  நின்னைவிட்டு  வேறொருத்திபால்  என்  இளமையைக்  கொன்னே  கழித்தேன்  !  என்னே  நின்  பொறுமை  !  இருமுது குரவர்  ஏவலும்  பிழைத்தேன்; சிறு  முதுக்குறைவிக்குச்  சிறுமையுஞ்  செய்தேன் ;  வழுவெனும்  பாரேன் ; மாநகர்  மருங்கீண்  டெழுகென  எழுந்தாய்  என் செய்தனை “ என  வியந்து  இரங்கிக்  கூறுங்கால் ,  தன்  காதலனாம்  அவன்  பிரிவால்  “பொறயிலா  அறிவு  போகப்  புணர்விலா  இளமை”  யென  இளமையின்  பயனாகக்  கூறப்பட்ட  காமவின்பம்  துய்த்தற்கு  இயைந்திலதே !  பருவம்  வறிதே  கழிந்ததே !  என்று  அவ்வின்ப  மெய்தாமை  குறித்து  வருந்தினாளல்லள்.  பின்னை  அவ்வறப்  பெருஞ்  செல்வி , 

“அறவோர்க்  களித்தலும்  அந்தண  ரோம்பலும்

துறவோர்க்  கெதிர் தலும்  தொல்லோர்  சிறப்பின்

விருந்தெதிர்  கொடலும்  இழந்த  என்னை “

எனத்  தம்  இல்வாழ்க்கையின்  உண்மைப்  பெரு நோக்கங்களையே   இனிதெ டுத்துரைத்து  ,  அவை  அவன்  பிரிவாற்  கைகூடப்பெறாமைபற்றி  இரக்க முற்றாள்  என்பதைத்  தமிழ்ப்  பெருங் காப்பியமாகிய  சிலப்பதிகாரத்தா  லுணர்கின்றோம் .  இதனாலும்  இல்லறமென்னும்  பெயரும் , அதன்  நோக்கமும்  இத்தன்மையவென  வெளிப்பட்டன .  இந்  நோக்கம்  அறநிலை  பற்றியதாகும் .

                                  4 .  சமய   வாழ்க்கையின்   நோக்கம்

           இங்ஙனமே  சமய  நிலையில்  நம்  வாழ்க்கைச்  செயல்களெல்லாம்  இன்ப  வடிவினனாகிய  இறைவனைப்  பற்றியே  நிகழ்தல்  வேண்டும் . நம்  உட லுறுப்புக்க ளெல்லாம்  அப் பெருமானை  வழிபடற்கே  அமைந்தன வென்பதை,

“வாழ்த்த  வாயும்  நினைக்க  மடநெஞ்சும்

 தாழ்த்தச்  சென்னியுந்  தந்த  தலைவனை “

என்னுந்  தமிழ்மறையானும்  உணர்ந்துளேம்.   நம்  நாட்டுச்  செயலனைத்தும்  அப் பெருமான்  நினைவே  முன்னிற்கச்  செய்தல்  வேண்டுமென்னும்  ஆன்றோராசாரம்  எத்துணை  நலமுடையது !  நம்  வாழ்க்கை  மலர்  தெய்வமணங்  கமழுமேல்   சிறந்ததாகப்  பாராட்டப்படும் .   அந்  நன்மண  மின்றேல்  , 

         “பாழுக்  கிறைத்தேன்  பரம்பரனைப்  பணியாதே” 

யென்றருளியாங்குப்  பயனற்றதாக  முடியும் .

                        5 .  மகா   கவிகளின்   உள்ளக்கிடக்கை

         நம்  புலமையும்  அறிவும்  கவிசுவையி  லீடுபடுங்கால் , இன்பம்  அவலம்  முதலியனவாகத்  தோன்றி  ,  முடிவில்  அச் சுவை  யனைத்தும்  தெய்வ  நறுங்கனித்   தீஞ்சாற்றில்  தோய்ந்தனவாக  புலப்படுவனவாம் .  இவ்வுண்  மையைப்  பெரும்புலமை  வாய்ந்த  அருங்கவிகளின்  எண்ணங்களே  வெளிப்படுத்துவன .  தெய்வமணக்கும்  செய்யுள்  யாக்கும்  திறம்  பெரிதுடைய  நம்  சேக்கிழார்  பெருமான் ,  இன்பச் சுவையை  இனிது  விளைக்கும்  செய்யுட்களினும்   தம்  உண்மை  நோக்கமாகிய  தெய்வமணங்  கமழவே  கூறுவர் ,

“வழுக்கி  வீழினுந்  திருப்பெய   ரல்லால்

 மற்று  நானறியேன்  மறுமாற்றம்”

என்பது  அநுபவ  அருளுரையன்றோ !  எழில்  நலமும்  தெய்வ  நலமும்  நிரப்பப்பெற்ற  பரவையாரைச்  சுந்தரமூர்த்திகள்  திருக்கோயிலிற்  கண்ட  காட்சியை  எடுத்துரைக்குமுகமாகச்  செந்தமிழுக்குச்  சிறப்பளித்து  நிற்கும்  இன்பத்  துறைபற்றியெழுந்த  செய்யுட்களைக்  காண்மின்கள் !  பரவையாரைக் குறித்துக் , 

“கற்பகத்தின்  பூங்கொம்போ  காமன்றன்  பெருவாழ்வோ

 பொற்புடைய  புண்ணியத்தின்  புண்ணியமோ  புயல்சுமந்து

விற்குவளை  பவளமலர்  மதிபூத்த  விரைக்கொடியோ

அற்புதமோ  சிவனருளோ  அறியேயென்  றதிசயித்தார் “

என்று  சுந்தர  மூர்த்திகள்  திருவுள்ளக்  கருத்தும்  அவ்வடிகளைக்   குறித்து , 

“முன்னேவந்  தெதிர்தோன்றும்  முருகனோ

  பெருகொளியால்

தன்னேரின்  மாரனோ  தார்மார்பின்  விஞ்சையனோ

மின்னேர்செஞ்  சடையண்ணல்  மெய்யருள் பெற்

றுடையவனோ 

என்னேயென்  மனந்திரித்த  இவன்யாரோ  என

நினைந்தார்”

என்று  பரவையார்  கொண்ட  திருவுள்ளக்  கருத்தும்  இயைந்த  அழகுதான்   என்னே !  என்னே ! 

            இச்  செய்யுட்களின்  முடிவில்  ,  “சிவனருளோ”  எனவும் ,  “மின்னேர்  செஞ்சடை யண்ணல்  மெய்யருள்  பெற்றுடையவனோ”   எனவும்  போந்த  இயைபு  அருட்பெரும்  புலவராகிய  அடிகளின்  புலமை  நோக்கத்தைத்  தெற்றெனப்  புலப்படுத்தும் .  ஓகாரங்களால்  ஐயுற்று  விலக்கப்பட்ட  உவமை   உவமைகளி  னியைபையும்  சிந்தித்துப்  பார்மின்கள் !  “கற்பகத்தின்  பூங்கொம்போ” என்னும்  அடிகள்  உரையில்  கற்பகத்  தருவில்  இந்திரனால்  வளர்க்கப்பட்ட  பூங்கொம்பு  போல்வாளாகிய  தெய்வயானையோ  என்னுங்  குறிப்புத் தோன்ற  ,  அம்மையார்  “முன்னேவந்  தெதிர்  தோன்றும்  முருகனோ”  என்றாரெனவும்  ,  அடிகள்  “காமன்  றன்  பெருவாழ்வோ”  என ,  அம்மையார்  “தன்னேரின்  மாரனோ”  என்றாரெனவும் ,  அடிகள்  “புண்ணியத்தின்  புண்ணியமோ”  என,   அம்மையார்  அதன்  நுகர்ச்சி  மிக்க  “தார்மார்பின்  விஞ்சையனோ”  என்றாரெனவும் ,  முடிவில்  அடிகள்  “சிவனருளோ”  என ,  அம்மையார்  “மெய்யருள்  பெற்றுடையவனோ”   என்றாரெனவுங்  கூறிய  கருத்தியைபுகள்  நம்  மனத்தை  மிகவுங்  கனிவிக்கின்றன .  பின்னர்ப்  பரவையார்  சற்று  மறைந்த  வுடன்  அவர்  பிரிவுபற்றி  வன்றொண்டர்  கூறியதாக  வெளிப்பட்ட 

“பாச  மாம்வினைப்  பற்றறுப்   பான்மிகும்

ஆசை  மேலுமொ  ராசை  யளித்தெனத்

தேசின்  மன்னியென்  சிந்தை  மயக்கிய

ஈச  னாரருள்  எந்நெறிச்  சென்றதே”

என்னும்  திருப்பாடலின்கட்  டோன்றும்  தெய்வமணம்  மிகவும்  சிறந்ததாகும்.  இதன்கண் , 

“பற்றறுப்பான்  மிகும்  ஆசை”

எனவும் ,  “ஈசனாரருள்”  எனவும்  போந்த  கருத்துகள்  சிந்தித்து  இன் புறத்தக்கன .

       இம்மட்டோ !  இருள்  வரவுக்கும்  நிலவெழுச்சிக்கும்  உவமங்  கூறுங்கால் , 

“ஐந்தெ  ழுத்து  முணரா  அறிவிலோர்

 நெஞ்சு  மென்ன  இருண்டது  நீண்டவான்”

எனவும்,

“அண்ணல்  வெண்ணீற்றின்  பேரொளி

 போன்றது  நீணிலா”

எனவும்  நம்  சைவ  சமய  சாதனங்களைக்  கூறியருளிய  அழகு , அன்பர்கள்  உள்ளத்தை  மிகவும்  இன்புறுத்துவதாகும் .  இன்னோரன்ன  சந்தர்ப்பங்களில்  மற்றைக்  கவிகள்  இந்  நினைவை  மேற்கொள்ளார்.  அருட்  கவிகளுக்கே  இது  வாய்ப்பதாகும்  .   இன்னும்  இத்  தெய்வச்  சுவை  மிக்க  பகுதிகள்  பல :  புலவர்  திலகமாகிய  சிலப்பதிகார  நூலாசிரியர்  இன்பம்  முதலிய  ஒன்பான்  சுவைக்கும்  நிலைக்களமாகத்  தாம்  யாத்த  அத்  தீஞ்சுவைக்  காப்பியத்தின்  இறுதியில்  , 

“தெய்வந்  தெளிமின்  தெளிந்தோர்ப்  பேணுமின்”

என்று  கூறிய  பயனுரையைச்  சிந்தித்துப்  பார்மின்கள் !  வடமொழி  மகாகவி யாகிய  காளிதாசர்  இரசபுஞ்சமாக  இயற்றிய  சாகுந்தல  நாடகத்  திறுதியில்  பரத  வாக்கியமாகக்  கூறிய  ,

“ப்ரவர்த்ததாம்  பிரகிருதி  ஹிதாய  பார்த்திவ :

ஸரஸ்வதீ  கருதி  மஹிதா  மஹீயஸாம் !

மமாபிச  க்ஷபயது  நீலலோஹித :

புனர்பவம்  பரிகத்  சக்திராத்மபூ :

என்னும்  சுலோகத்தின்  பொருளை  உற்று  நோக்குவோமாயின்  ,  காதல் மணங்  கமழ  இயற்றிய  அந்  நாடகத்  திறுதியில்  தன்னுள்ளக்  கிடக்கையை  அக் கவி எவ்வளவு  உயரிய  நோக்கத்தோடு  வெளிப்படுத்தியுள்ளா   ரென்பது  புலனாம் . இப்  பொருளாவது  “மன்னுயிர்  நலங்குறித்து  மன்னவன்  அரசு  செய்க ;  செவிப்  பொறியாற்  சிறப்புறூஉம்  மகாகவிகளின்  நூல்கள்  நின்று  நிலவுக . நீலச் செந்நிற  முடையானும்  உமையொரு  கூறனும்  சுயம்புவுமாகிய  இறைவன்  எனக்கும்  புனர்ப்பவத்தைப்  போக்கியருள்வானாக  “  என்பதாம் .  இதன்கட்   சகளமாகிய  உருமேனியும்  ,  சகள  நிட்களமாகிய  அருவுருமேனி யும் ,  நிட்களமாகிய  அருமேனியுமாகிய  மூன்றுமுடையான்  இறைவன்  என்பது  தோன்றும் .  ஈதன்றோ  புலமை  வாழ்க்கையின்  பொருள்  முடிபு .

       ஒரு  வாணிகனது  வாணிக  வாழ்க்கையின்  குறிப்பு  ஊதியமே  யாயினும் அதன்கண்ணும்   “கொள்வதூஉ  மிகை  கொளாது  கொடுப்பதூஉங்  குறை  கொடாது “  இயற்றவேண்டுமென்ப  .  இங்ஙனமே  எல்லாச் செயல்களும்  உயரிய  நோக்கத்தை  மேற்கொண்டு  இறைவனோடியையும்  இன்பநிலை  பற்றியே   நிகழ்வனவாம் . இறைநலம்  பற்றாத  வாழ்க்கை   பயனற்ற தென்றும்  அவ் வாழ்க்கைக்கு  வேண்டுவன  செய்தல்  பாழுக்கு  நீரிறைத்த  லென்றும்  பெரியார்  கூறுப.  இவ் வுயரிய  கருத்துச்  சமய  வாழ்க்கையினின்று   அவ் வுணர்  வொழுக்கம்  கைவரப்  பெற்றார்க்கன்றி  உண்டாதல்  அரிதாகும்.

                6 .  ஒழுக்கநிலைக்குச்   சமயத்தின்  இன்றியமையாமை

      உலகத்துள்ளா  ரெல்லோரும்   அவரவர்க்குரிய  சமய  நெறியிற்  சென்றே  ஒழுக்க  நிலையை  எய்தக்கடவர் .  சமயச்  சார்பு  வேண்டாம் :  ஒழுக்க மாத்திரமே  போதியது  எனச் சிலர்  எண்ணக் கூடும் .  அச்  சார்பின்றேல்  ஒழுக்கம்  உரம்  பெறல்  அரிது . விதித்தன  செய்தலும்  விலக்கியன  ஒழிதலும்  அறமாமெனவும்   அதனாற்  பெறக் கிடப்பது   இன்பமெனவும்  கொண்டு  , அதனைப்  பெறும்  அவ்வளவிலன்றிச்  சமய  நிலைக்கு  வரக் கடவேமல்லே மென்பார் சிந்திக்க  வேண்டுவன  சிலவுள ,  அன்னாரை  நோக்கி  , விலக்கியன  சில  இம்மையில்  இன்பந் தருகின்றன . ஆதலின் , அவற்றை  மேற்கோடலான்  வரும்  ஏதம்  என்னை?  என்று  வினவின்  ,  அரசியற்  றண்டம்  நேருமென்று  கூறக்கூடும் .  அரசியல்  வினைஞர்க்கும்  அறியாத  நிலைமையிற்  புரியும்  தீச்  செயல்களால்  இன்பமுண்டாமாயின் ,  ஏன்  அவற்றைச்  செய்தலாகாதெனின், மாற்றமென்  பகர்வர் ?    இந் நிலையில்  மறுமைத்  துன்பமும்  அதனைத்  தரும்  ஆண்டவனியல்பு  முதலிய  சமய  நம்பிக்கைகளுமே  ஒழுக்கத்தை  உறுதிப் படுத்துவனவாம் . ஆகவே  உயிரினும்  ஓம்பப்படுவதாகிய   ஒழுக்கத்தை  மேற் கொள்ள  நினைப்போர்  யாவரும்  சமய  நெறி  நின்றே  மேற்கொள்ளக்  கடவர். அவ்வொழுக்கங்களுக்குப்  பயன்  விளைவிக்கும்  இறைவன்  ஒருவன் உளன்  என்னும்  எண்ணம்  சமயநிலை  பற்றியே  உண்டாவதாகும் .    

                          “உன்னை  வந்திப்பதோர்

நெறியறியேன்  நின்னையே  யறியேன்”

என்ற  திருவாக்கின்படி  சமயநெறிக்கட்  செல்லாதார்க்கு  இறைவன்  நிலையை  அறிதல்  இயலாததாகும்.   

                                                 7 .  சமய   இலக்கணம் .

       அங்ஙனமாயின்  மக்கள்  ஒழுகலாற்றிற்கியைந்த  சமயம்  யாது ?  அச்சமயப்  பொருள்கள்  யாவை ?  அவற்றை  யுணர்த்தும்  நூல்கள்  யாவை ?  அவை  கூறும்  நிலையில்  நின்றார்  யாவர் ?  அவர்கள்  உண்மையிற்  கண்ட  அநுபவங்கள்  எவை ?  என்றின்னோரன்ன  ஆராய்ச்சியிற்  றலைப்படும்  அவா  எழுதலியல்பே . இவற்றிற்கு  விடைபெறு முகமாகப்  பல  உண்மைகளைத்  தெளியலாம் . 

“இதுவாகும்  அதுவல்ல   தெனும்பிணக்கதின்றி 

  நீதியினால்  இவையெல்லாம்  ஓரிடத்தே  காண 

  நின்றதியா  தொருசமயம்   அது  சமயம் “

என்று  மெய்ச்சமய  இலக்கணம்  கூறப்பட்டுள்ளது . உலகத்துள்ள  பல்வகைச்  சமயங்களினும்  கூறப்படுந்  தத்துவங்களையெல்லாம் தன்னுள்  அடக்கி  அவற்றோடு  முரணாது  தழீஇக்கொண்டு  அவ்வத் தத்துவ  நிலையினின்று  முடிவில்  தன்னைச்  சார்ந்தாரை  உலப்பிலாப்  பேரின்ப  நுகர்ச்சியில்  தலைப்படுத்தும்  இயல்நலம்  அமைந்தது   சிவநெறியாகிய  சைவ சமயமே  யாகும் .  

                          8 .  முப்பொருள்களின்  இயல்பும்    உண்மையும் 

முதலாவது  இச்  சமய  நெறிக்கட்  புகுவானொருவன்  தன்னை  நோக்கி “நான்  யார்?  எனக்கு  இவ்வுடல்  வந்தவாறென் ?  இவ்வுடற்கும்  எனக்கும்  உள்ள  இயைபு  யாது ?  என்று  இவ்வளவில்  நின்று  ஆராயத் தொடங்குவன் .  இத்தொடக்கத்தில்  இவ்வுடலையல்லாமற்  காட்சியளவையில்  வேறொன்றுங்  காணப்படாமையானும்  ,  இதற்கு  ஓர்   ஊறுபாடுண்டாயின்  எனக்குத்  துன்ப முண்டாகின்றதாகலானும்  தோல்   என்பு   நரம்பு   முதலியவற்றாலாகிய  இவ் வுடலே   யானாக  இருக்கலாம்  என்னும்  நினைவு  தோன்றப் , பின்னர்  உயிருடன்  கூடியிருக்குங்கால் உற்றதை யுணரும்  இவ்வுடல்  அவ்வுயிர்  நீங்கிய  வழித்தடிந்தெரி  யூட்டினுந் தானுணராதாகலான் ,  உடம்பிடைப்  போன  தொன்றுண்டென்னும்   உணர்ச்சி  தோன்றும் . அங்ஙனம்  உடலினின்று நீங்கியதே  அறிவுருவாகிய  உயிராகுமெனவும்  ,  இவ்வுடம்பு  மண்  நீர்  தீ  வளி  முதலிய  பூதங்களின்  சேர்க்கையாலாகிய  அறிவில்  பொருளாதலின்  ,  இஃது  அறிவுருவாகிய   உயிராகா தெனவும் ,  காட்சியொன்றானே  எப்பொருளையும்  அறிதல்  இயையாதெனவும் ,  கருதலளவையும்  உரையலளவையும்  பொருட் டுணிவிற்கு  இன்றியமையாதனவெனவும்  முறையே  உணர்வுதிக்கும் .  இவ்வுண்மையையே  பட்டினத்து அடிகள்  என்னும்  சிவஞானச்  செல்வர் ,

“மேவிய  புன்மயிர்த்  தொகையோ  அம்மயிர்

 பாவிய  தோலின்  பரப்போ  தோலிடைப்

 புகவிட்டுப்  பொதிந்த  புண்ணோ  புண்ணிடை

 யூறு  முதிரப்  புனலோ  கூறுசெய்

திடையிடை  நிற்கு  மெலும்போ  எலும்பிடை

 முடைகெழு  மூளை  விழுதோ  வழுவழுத்

துள்ளிடை  யொழுகும்  வழும்போ  மெள்ளநின்

றூரும்  புழுவி  னொழுங்கோ  நீரிடை

வைத்த  மலத்தின்  குவையோ  வைத்துக் 

கட்டிய  நரம்பின்  கயிறோ  வுடம்பிற்குட்

பிரியா  தொறுக்கும்  பிணியோ  தெரியா

தின்னதி  யானென்  றறியே  னென்னை

எங்குந்  தேடினேன்  யாதினுங்  காணேன்

……………………………….    ……………………   ……………………

மங்கை  பங்க  கங்கைநா  யகநின்

தெய்வத்  திருவருள்  கைவந்து  கிடைத்தலின்

மாயப்  படலங்  கீறித்  தூய

ஞான  நாட்டம்  பெற்றபின்  யானும்

நின்பெருந்  தன்மையுங்  கண்டேன்  காண்டலும்

என்னையுங்  கண்டேன் “

 என்னும்  செய்யுட்  பகுதியில்  நன்கு விளங்கக்  கூறினார் .

      இதனால் , இத்தத்துவ  தாத்துவிகங்க  ளெல்லாம்  சடப்பொருளாக ,  இவை  யானல்லேன்  எனக்  களைந்து  ஆராயும்  அறிவுடைப்  பொருளொன்று  நம்  உடம்பின்  வேறாக  உண்டென்பதும்  ,  அதுவே  இறைவன்  அறிவித்தால்  அறியும்  இயல்பினதாகிய  உயிரென்பதும்  போதரும் .  இவ்வுயிரினிலக்கணம்  பலவாயினும் ,  ஈது  எப்பொருளைச்  சார்கின்றதோ  அப்பொருளின்  தன்மையே  தன்  தன்மையாகக்  கொள்ளும்  இயல்பு  நோக்கி  இதனைச்  சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மையுடையதெனப்  பெரியார்  விதந்து  கூறுப .  இவ்விலக்கணம்  மிக  நுணுகியுணர்ந்ததொன்றாகும் .

          பளிங்கொன்று  தன்னை  அடுத்த  நிறம்  யாதாயினும்  அந் நிறமே  தன்  நிறமாகக்  கொள்ளும்  இயல்பினது . அதுபோலவே  இவ்வுயிரும்  எவ்வெப்பொருளைச்  சார்கின்றதோ  அவ்வப்  பொருண்மயமாகவே  தோன்றும் . இஃது  அறிவித்தால்  அறியும்  இயல்பினது . இனி  உலகத்துள்ள  செயற்கைப் பொருள்  ஒவ்வொன்றினையும்  நோக்கி  அதனதன்  செயற்பாட்டிற்குச்  செய்பவனையுங்  கண்கூடாகக்  கண்டு  வருகின்றோம் .  ஆதலின் ,  இந் நிலையில்  அதி விசித்திரமான  இவ்வுலகின்  ஆக்கப்பாட் டிற்குப்  பேராற்றலும்  பேரறிவுமுள்ள  இறைவனொருவன்  வேண்டுமென்பதில்  ஐயம்  யாதுளது ?  அப்பெருமான் அறிவிக்க  அறியுமியல்பினதாகிய  இவ்வுயிர்,  தன்னியல்பையும்  பேரறிவுப்  பிழப்பாகவுள்ள  தலைவனியல்பையும்  அறிதற்குத்  தடையாகத்  தன்மாட்டுள்ளது  யாதென  ஆராயப்புகின்  , அஃது  அநாதியே . தன்னைப் பற்றி  நின்று  தன்  அறிவை  மறைத்து  நிற்கும்  அழுக்கு  ஒன்று  என்பது  போதரும் .   

           அவ்வழுக்கையே  ஆணவ  மலம்  என்ப .  இவ்வாணவ  அழுக்கைக்  கழுவுதற்கே  உடல் , கரணம்  ,  இடம் , நுகர்ச்சி  என்பவற்றை  இறைவன்  நம்க்களித்துப்  பிறப்புக்களிற்  செலுத்துகின்றான் ,  உடல்,  கரணம் , இடம்  , நுகர்பொருளாகிய  இவையெல்லாம்  தோன்றுதற்கு  இறை , உயிர் , தளை  என்னுமிவற்றின்  வேறான  காரணம்  இருத்தல்  வேண்டும் . அக் காரணங் களையே  மாயா  கன்மங்களென்ப .நாம்  செய்யும்  நல்வினை  தீவினைகள்  அறம்  பாவமென்று  கட்டுற்று  இன்ப  துன்பங்களாக  நம்  அநுபவத்துக்கு  வருகின்றன .  இக்கன்மப்பயன்  நுகர்தற்கு  மாயை  என்னும்  வித்தினின்று  ,  நமக்கு  உடல்  முதலியவை  கிடைக்கின்றன . உடல்  முதலியவற்றை  உயிரே  படைத்துக்கொள்ளல்  இயலாது ;  அது  சிற்றறிவும்  சிறு  தொழிலும்  உடையதாகலான்  .  மாயா  கன்மங்கள்  அறிவில்  பொருள்கலாதலின்  தாமே  தாரா . ஆகலின்  எல்லா  ஆற்றலுமுடைய  இறைவனே  அவற்றின்  இயல் பறிந்து   கூட்டுவிப்பவனாவான் .  மாயா கன்மங்கள்  மூலமல  ஆற்றல்  கழிதற்கு  ஏதுவெனினும்  ,  அதன்  கழிவில்  தம்  காரியங்களும்  ஒழிவுற , அந் நிலையில்  கட்டனைத்தும்  விட்டு  நீங்கப்பெற்ற  உயிர் ,  சித்தம்  சிவமாகப்  பெற்று  இறைவனோடு  இரண்டறக்  கலந்து  அழிவிலாப்  பேரின்பத்திற்   றிளைத்து   நிற்கும்  இவ்வுண்மைகளையே  பலதிறப்படுத்துச்  சைவ  சித்தாந்த  நூல்கள்  வெளிப்படுத்துவனவாம் .  இறை , உயிர் , தளை  என்பவற்றை  வடநூலார்  பதி , பசு , பாசம்  என்பர் . பாசத்தின்  வகைகளை  ஆணவம் , கன்மம் , மாயை  என  முத்திறப்படுத்தும் ,  மாயேயம் , திரோதானம் ,கூட்டி  ஐவகைப்படுத்தும்  கூறுப .  “மும்மை  மலம்  அறுவித்து “  எனவும் ,  “மலங்கள்  ஐந்தாற்  சுழல்வன்”  எனவும்  மணிவாசக ஞானப் பாசுரங்கள் வெளிபடுத்தின.

                             9 . இறைவனை  அடைதற்குரிய  நெறிகள் 

            உயிர்  கட்டறுத்து  வீடு  பெறுதற்கு  நம்  அரிய  சமயத்தில்  அமைந்த  சாதனங்கள்  மிகச் சிறந்தனவாம் .  சரியை  முதலிய  நான்கு  வழிகள்  ஆன்மாக்களின்  பக்குவ  நோக்கி  அமைந்தன . அவற்றினியல்கள்  மிக்க  விரி வுடையன .  சரியை  முதலிய  நான்கு  வழிகளையும்  ஒன்றுக்கொன்று  சாதன  சாத்திய  முறையில்  வைத்து  இறுதியிலுள்ள  ஞானத்தால்  வீட்டின்பம்  அடை யலாமென உணர்த்தப்பட்டது . இவ்வுண்மையைச்   சிவயோகியாராகிய    தாயுமான அடிகள் ,

“விரும்புஞ்  சரியைமுதல்  மெய்ஞ்ஞான  நான்கும்

 அரும்புமலர்  காய்கனிபோல்  அன்றோ  பராபரமே “

என்று  கூறியருளினார் . ஒன்றனையொன்று  இன்றியமையாமைக்கு  அரும்பு  மலர்  காய்  கனி  யென  எடுத்துக்காட்டிய   அநுபவ  உவம  அழகு  மிகப்  பாராட்டற்பாலது . இந் நெறிகளை  இன்னுஞ்  சற்றுச்  சுருக்கி  அறிவுநெறி   அன்பு நெறி  யென  வகுத்து  விளக்கும்  தெளிவு  மிகச் சிறந்ததாகும்  .  இவற்றை  ஞான  மார்க்கம் ,  பத்திமார்க்கமென்றுங்  கூறுப .

                                                          10 . அறிவு  நெறி 

       அறிவு ,  நூலறிவு  அநுபவ  அறிவு  என  இரு திறப்படும்  .  இவற்றை  அபர  ஞானம் ,  பர ஞானம்  என்றுங்  கூறுப . அநுபவ  அறிவைப்  பயப்பதற்கு  நூலறிவு  சாதனமாகும் .  “நானார் ?  என்னுள்ளமார் ?  ஞானங்களார் ? “என்னும்  ஆராய்ச்சியிற்   றலைப்பட்டுச்  சிவஞானபோத  முதலிய  அறிவு  நூல்களை  ஆசிரியர்முகமாக  உணர்ந்து  உண்மைப்பொருள்  தெளிதலே  நூலறிவாகும்  . அவ்வுண்மைகளைத்  தேவாரம்  திருவாசகம்  முதலிய  துதிவடிவிலமைந்த   அருட்பாசுரங்களான்  உணர்தலும் ,  பெரியபுராண  முதலிய  வரலாற்றுண்மை கூறும்  சிவநெறி  யிலக்கியங்களான்  உணர்தலும்  அதன்பாற்படும் .  “பந்தமும்  பிரிவுந்  தெரிபொருட்  பனுவற்  படிவழிச்  சென்று  சென்றேறி  “  என்பதும்  இதனை  வலியுறுத்தும் .   இந்  நூல்கள்   நம்  பண்டைப்  பெரியார்  கருணை  கூர்ந்தளித்த  விலை  வரம்பில்லா  உயர்  மணிகள்  நிறைந்த  ஒப்பற்ற  கருவூலங்களேயாம் .  இந்  நூல்களிற்  பயின்ற  முறையை  அநுபவத்திற்  கொண்டு  செய்கையிற்  பயன்  படுத்தல்  அநுபவ  ஞானமாகும். அநுபவமென்பது  அழுந்தியறிதலாகும்  .  பொறிகளாற்  பற்றப்படும்  பொருள் களை   அறியுமுறையில்   ஈடுபட்டு  அழுந்தியறிதலே  ஈண்டு  அநுபவமாகும் . இச்  சொற்பொருளை  இங்ஙனங்  கண்டு  தமிழ்மொழியில்  தந்த  மாதவச்  சிவ ஞானமுனிவர்  பெருமை  உலகறிந்தது .

         ஒரு  பழச்சாற்றைத்  துய்க்குங்கால்  நாப்  பொறி  பொதுவாக  அறிதலினும்  அழுந்தி  அறிதலே  அநுபவமாகும் .  இங்ஙனமே  நூல்வாயிலாகக் கண்ட  சாதனங்களை  அகவுணர்வில்  அமைத்து  அழுந்தியறிதல்  சமயாநுபவ  சாதனமாகும் .  சிவோகம்பாவனை  சிவநெறியில்  முக்கிய சாதனமாகக்  கூறப் பட்டுள்ளது  .  அதனியல்பை   நூல்  வாயிலாகத்  தெளிதல்  நூலறிவாகும். அப் பாவனையை  மேற்கோடல்  அநுபவ  அறிவாகும் . சிவோகம்  என்பதன்  பொருள்  “சிவன்”  என்பதாம் .  இதனாலேயே  “நான்”   என்பதற்கு  வாச்சியமாகவுள்ள  உயிரும் ,  “சிவன்”  என்பதற்கு  வாச்சியமாகவுள்ள  இறைவனும்  எனப்  பொருள்  இரண்டு  போதரும் .  உயிராகிய  “நான்”  எதற்காகச்  சிவபாவனை  செய்தல்  வேண்டும்  எனக்  கருதுங்கால் ,  என்பாலு றைந்துள்ள  அழுக்காகிய  ஆணவத்தைப்  போக்குதற்கேயாமென்பது  புலனாகும் .  இதனாலும்  தடையாகவுள்ள  பாசம்  ஒரு  பொருளென்பதும்  வெளிப் படும் .  சிவோகமென்பதனால்  சிவனும்  உயிரும்  பொருள்வகையில்  ஒன்றாகா . மல  நீக்கப்பயன்  கருதி  அப் பாவனை  விதிக்கப்பட்டுள்ளது . பாம்பு  தீண்டுதலாலுண்டாகிய  நச்சுத்துன்பம்  ஒழிதற்கு  ,  மாந்திரிகன்  கருடோகம்  எனப்பாவித்துப்  பார்க்கவேண்டுமென்று  விதிக்கப்பட்டுள்ளது . ஆன்மா  சார்ந்ததன்  வண்ணமாந் தன்மைத்தாதலின் , அவன்  கருடனுருவ  பாவனையால்  அம் மந்திர  மூர்த்தியாகிய  நஞ்சொழிவிற்குக்  காரணமாகின்றான் .  பொருள்வகையின்  உருவு  திரிந்து  கருடனாவதில்லை .  அது  போலவே  பேரொளிப்  பிழம்பாகவுள்ள  சிவ  பாவனையில்  உயிர்  சிவனாவதில்லை .  ஆணவ  இருள்  நீங்கப்பெற்று  , உயிர்  “ஆணவத்தோ  டத்துவித   மானபடி  மெய்ஞ்ஞானத்  தாணுவினோ  டத்துவிதம்”  சார்கின்றது.  இதனைத்  திருமூலராகிய  சிவாநுபவச் செல்வர் ,

“கருட  நுருவங்  கருதும்  பொழுதிற்

 பருவிடந்  தீர்ந்து  பயங்கெடு  மாபோல்

 குருவி  னுருவம்  குறித்தவப்   பொழுதே

  திரிமலந்  தீர்ந்து  சிவனவ  னாமே”

என்று  வெளிப்படுத்தருளிச்  செய்வாராயினர். 

        இப் பாவனையில்  உறைத்து  நிற்றல்  அநுபவ அறிவாகும்  .  பாவனைக்குப்  பயனுண்டென்பதை  நம்  முன்னையோர்  மிகத்  தெளிவாக  உணர்ந்துள் ளார்கள் .  இக்காலத்து  மேலைத்  தேயத்து  அறிஞரும்  பாவனைப்  பயனைத்  தம்  அநுபவத்திற்  கண்டு  நம்பி  வருகின்றனர்  என்ப .  இச்  சிவாநுபவ  அறிவு  கைவரப்   பெற்றாரே  ஐம்புல  வேடர்களால்  நேரும்  துன்புறு  நிலையை  யொழித்துச்  சிவானந்தத்திற்   றலைப்படற்  குரியவர் .  இவ்வுண்மையை  நம்  திருநாவுக்கரசு  அடிகள் , 

“புள்ளுவ   ரைவர்கள்வர்

        புனத்திடைப்  புகுந்துநின்று

 துள்ளுவர்  சூறைகொள்வர் 

        தூநெறி  விளையவொட்டார்

முள்ளுடை  யவர்கள்தம்மை

         முக்கணான்  பாதநீழல்

உள்ளிடை  மறைந்துநின்றங்

          குணர்வினால்  எய்யலாமே “

என்னும்  அருட்  பாசுரத்தால்  வெளியிட்டருளினார்கள் .  ஐம்புலன் களையும்  வேடர்களாகிய  கள்வர்களென்றனர் ;  சிவார்ப்பணமாகக்  கொள்ளப்படும்   பொருள்களையெல்லாம்  தமவாகக்  கொண்டு  மாறி  நின்று  மயக்கி  ஆறலைத்துச்  சூறை  கோடலான் .  

             “மனமெனும்  புனமே” 

என்னும்  பட்டினத்து  அடிகள்  கருத்துப்படி, ‘புன’ மென்பது  ஈண்டு  மனமாகும். அஃது  அக்  கள்வர்க்குகந்த  இடமாகலின்  ‘துள்ளுவ’  ரென்றார் . தூநெறி —  செந்நெறி  .  அந்  நெறியைத்  தடைப்படுத்தலின்  விளையவொட்டா  ரெனவும்,  எதிர்த்தாரை  ஊறுபடுத்துங்  கொடுந்தன்மை  யுடைமைபற்றி  “முள்ளுடையவர்க” ளெனவும்  ,  அஃதுடைமையால்  மறைவில்  நின்று  அம்பெய்து  வீழ்த்த  வேண்டுதலின்,  ‘முக்கணான்  பாத  நீழல்  உள்ளிடை  மறைந்துநின்  ‘றெனவும்,  உணர்வாகிய  அம்பினால்  எய்யலாமெனவும்  கூறியருளினார் .  ஈண்டு  உணர்வு  அநுபவ  அறிவாகிய  சிவஞானமாகும்.  இன்னும்  இவ்  வநுபவத்தை  உயிரநுபவம்,  அருளநுபவம் ,  சிவாநுபவம்  என  வகைப்படுத்துரைப்பாருமுளர் .  இதனைப் , 

“பொத்திய  மூல  மலப்பிணி  தவிர்க்கும் 

        பொருள்  அருளநுபவம்  அதற்குப் 

 பத்தியம்  உயிரின்  அநுபவம்

          இதனைப்  பற்றறப்  பற்றுதி”

என்பது  முதலிய  செய்யுட்களில்  ,  சிவனேய  மிக்க  இராமலிங்க  அடிகள்   வெளிப்படுத்தியுள்ளார் .  இவ்வறிவு  நெறியையே  மணிவாசகப்  பெருமான் ,

“நெறியறியேன் நின்னையே  யறியேன்

நின்னையே  அறியும்  அறிவு  அறியேன் “

என்றருளிச்செய்வாராயினர் .  நூலறிவும்  அநுபவ அறிவுஞ்  சிறந்த  சாதனமாதலை  நம்  பெரியார்,

“கற்றிலேன்  கலைகள்  ஞானம்  கற்றவர்  தங்களோடும் 

 உற்றிலே  னாதலாலே  உணர்வுக்குஞ்   சேய  நானேன் “

எனவும் , 

“கற்றறியேன்  கலைஞானங்  கசிந்துருகே  னாயிடினும்”

எனவும் , 

“ஞானத்  தாலுனை  நானும்  தொழுவனே”

எனவும்  மிகத்  தெளிவுபடுத்தி   விளக்கியுள்ளார்கள் .

                  நூல்களைப் பற்றியும்   அநுபவம்பற்றியும்  நிகழும்  ஞானத்தையே  அறிவுநெறியெனக்  கண்டு  அந்  நெறிக்கட்  சென்றால்  இன்ப  வடிவினனாகிய  இறைவனை  யுணர்ந்து  பேரின்பத்திற்  றலைப்படலாமெனும்  உண்மையை  நம்  வாசீகப்  பெருந்தகையார் ,  சிற்றறிவினேமும்  செவ்விதிற்  றெளிந்து  உளங்கொளும்வண்ணம் , 

“உடம்பெனும்  மனைய  கத்து  உள்ளமே  தகளியாக

 மடம்படும்  உணர்நெய்  அட்டி  உயிரெனுந்  திரிம  யக்கி

இடம்படு  ஞானத்  தீயால்  எரிகொள  இருந்து  நோக்கில்

 கடம்பமர்  காளை  தாதை  கழலடி  காணலாமே

என்று  தெளிவுபடுத்தருளினார்கள் .

            இதன்  பொருள்  :  காரிட்ட   ஆணவக்  கருவறையிற்  கிடக்கின்ற  நாம்,  மெய்ஞ்ஞான  விளக்கை  ஏற்றி  அப்  பேரொளிக்கண்  அகக்கண்கொண்டு  காண்பேமாயின்  ,  இறைவன்  கழலடி  காணலா  மென்பதாம்  விளக்கிடுதற்கு  முதலில்  வீடும் , பின்  அகலும் ,  நெய்யும் ,  திரியும்  நெருப்பும் வேண்டும் .

“உடம்பை  வளர்த்தேன்  உயிர் வளர்த்  தேனே “  

என்னும்  அருளுரை  இப்பயன்  கருதியே  எழுந்த தாகும்   இவ்  வுருவகங்கள்  மனத்தை  மிகவும்  இன்புறுத்தலோடு  மெய்யநுபவத்தையும்  வெளிப்படுத்து கின்றன . ‘மடம்படும்  உணர்நெய்’  எனவும்  ‘ஞானத்தீ’  எனவும்  ஈரிடத்தும்  உணர்வு , ஞானமென  ஒரு  பொருளை  நுதலிவருஞ்  சொற்களே  உருவகப் படுத்தப்பட்டுள்ளன . ஈண்டுப் பொருள்  வேற்றுமை  வேண்டும்  .  இன்றேல்  உருவகவியல்  சிதைவுறும் . ‘மடம்படும் உணர்வு’  என்பது  அறியாமை  கெடுதற்கேதுவாகிய  நூலறி வென்பதூஉம்  ,  ‘இடம்படும் ஞானம்’  என்பது , மூலமல  விருளின்  ஆற்றல்  குன்ற  யாண்டும்  பரந்தெழூஉம்  அநுபவ  ஞான மென்பதுஉம்  போதரும் . இஞ்ஞான விளக்கொளியிற்  கான்பது  ஆன்மாவா கவும்  ,  உயிரெனுந்திரியெனக்  கூறுயது  எங்ஙனம்  பொருந்துமெனின்  ,  “நிலநீர் நெருப்புயி”  ரென்புழி  ,  உயிர்க்காற்றென்று  பொருள்பட்டாங்கு  ஈண்டுப்  பிராணவாயுவெனப்  பொருள் கோடல்  வேண்டும் .   

                                                     11.  அன்பு   நெறி

      இங்ஙனம்  நூலறிவு  சாதனமாக   அநுபவ  அறிவு  பெற்று  அதன்  வாயிலாக  வீட்டின்பமெய்தல்  ஒன்று ;  மற்றொன்று  நம்  பெரியார்  பலரும்  மேற்கொண்ட  கனிந்த  பத்தி  மார்க்கமாகிய  அன்பு  நெறியாகும்.  அன்பில்  அறிவும்  அறிவில்  அன்பும்  கலந்தனவேயாயினும்  சிறப்பு  நோக்கித்  தனித்தனியாகக்  காட்டப்பட்டன.  அன்பினியல்பைக்  கூறின்  அது  விரிந்த  ஆராய்ச்சியில்  முடியும் . சுருக்கிக்கூறின் ,  இனி யாரிடத்துக்  கொள்ளுங்  காதலே  அன்பாகு  மென்பதாம் .  இனியான் , 

“கனியி  னுங்கட்டி   பட்ட  கரும்பினும்

பனிம  லர்க்குழற்  பாவைநல்  லாரினும்

தனிமு  டிகவித்  தாளு  மரசினும் 

இனியன்  தன்னடைந்  தார்க்கிடை  மருதனே “

என்ற  அருளுரைப்படி  இறைவனேயாவான் .  அவனைக்  குழைந்த  அன்பிலே  காணலாம் .

“உரனெனும்  பொருளானை

           உருகில் உள்   ளுறைவானை “

என்பது  அருண்மொழியன்றோ  !  “இன்பமே  என்னுடைய  அன்பே “  எனவும் ,  “அன்பினில்  விளைந்த  ஆரமுதே “  எனவும் ,  போந்த  அருளுரைகளால்  அன்பிலே  தோன்றும்  இன்ப  வடிவினனாகிய  இறைவனை  அன்பெனச்  சுட்டியது  நோக்கத்தக்கது . “அன்பென்ப  தொன்றின்  தன்மை  அமரரு  மறிந்த  தன்றே “  என  உலகிய  லன்பே  இங்ஙனம்  பாராட்டப்படுமாயின் ,  இறைவனைப்பற்றி  நிகழும்  பேரன்பின்  மாட்சி  எங்ஙனம்  அளந்து  பேசுந்  தரத்ததாம் ? 

          அடியார்  ப;லரும்  ஞானநிலை  யெய்திப்  பின்  அன்பு  நெறியையே  மேற் கொண்டுள்ளாரென்பதும் ,  அவருட்  சமயகுரவர்  அருளிச்செய்த  அருட்  பாசுரங்களெல்லாம்   அன்பெனுந்  தெவிட்டா  அமிழ்த  மழையாக  வெளிப்பட்டன  வென்பதும்  உணரத்தக்கன . அக்குரவர்களின்  மன மொழி மெய்கள்  சிவ வுருவத்தில் திளைத்து  நிற்பச்  சிவ  கரணமாக  மாறிய  தம்  உள்ளக்  கிழியில்  இறைவன்  திருவுருவை  யெழுதி ,

“எனை நாளென்ப  தறியேன்பகல்

       இரவாவதும்  அறியேன்” 

என்றபடி ,  சீவபோத  மிழந்து  அனலிற்பட்ட  மெழுகுபோல்  நெஞ்சம்  நெக்குருகி  நிற்க ,  அந் நிலையில்  அப் பாசுரங்கள்  அப் பெருமக்கள்  வாயிலாகத்  தங்கு  தடையின்றி யொழுகும்  தேனொழுக்குப்போல  வெளிப் பட்டன  என்பதைப்  பெரியபுராண  படனமுடையார்  யாவரும்  இனிதுணர்வர், அவர்கள்  மெய்யநுபவத்தை   அப்பாசுரங்களிற்  காணுந்தோறும்  காணுந்தோறும்  அறியாமை  வயப்பட்டுழலுஞ்  சிறியேங்கள்  மனமுங்  கரை யுமாயின்  ,  அதன்  பெருமையை  என்னென்பேம் !  என்னென்பேம் !  சிவநேயர் களே  !  அவ்வருட்பாசுரங்களில்  திளைத்தின்புறுதலொன்றே  நம்  அறிவு  வாழ்க்கையாலெய்தும்   முடிந்த  பெறும்  பேறாகக்  கொள்ளினும்  அது  மிகையாகாது . ஆ ! ஆ !  நினையுங்கால்  நெஞ்சம்  உருகுகின்றது  ! கூறுங்கால்  என்றுங்  காணாத  இனிமை  மிக,  நா அள்ளூறித்  தித்திக்கின்றது  !  கேட்குங்காற்  செவிகள்  குளிர்கின்றன !  உடல்  தன்  வயமிழக்கின்றது !  பளிங்கனைய  ஆன்மா  அவ்வருட்  பாசுர  மயமாக  மாறுகின்றது !  சொல்லும்  பொருளும்  இசையும்  சிவமணங்  கமழ்கின்றன !  பொறி புலன்களெல்லாம்  சிவமயமாகிறன !   

          இங்ஙனந்  தித்திக்கும்  மணி  வார்த்தைகளைத்  திருச்செவியி லருந்தவே  பாட்டுக்குருகும்  பனிமலைவல்லி  பாகன்  செழியர்  மருமகனாய்த்  தென்றமிழ்  நாட்டில்  தெய்வச்  செங்கோல்  செலுத்தும்  அரசனாயினான் . அவ்வருட்  பாசுரங்களை  அருளிய  பெரியார்  திருவுருவை  உள்ளத்தெழுதிய  சேக்கிழாரென்னும்  புலவர்  பெருமான்  ,  அன்பு வயப்பட்டருளிய  திருத் தொண்டர்   புராணத்துள்ள  பின்வருஞ்  செய்யுட்களில்  அவ்வுண்மையநுபவத் தைப்  பரக்கக்  காணலாம் .

“வார்த்து  சொரிந்த  கண்ணருவி

          மயிர்க்கால்  தோறும்  வரும்புளகம்

 ஆர்த்த  மேனிப்  புறம்பலைப்ப

          அன்பு  கரைந்தென்  புள்ளலைப்பச்

 சேர்ந்த  நயனப்  பயன்பெற்றுத் 

          திளைப்பத்  திருவே  கம்பர்தமை

நேர்ந்த  மனத்தி  லுறவைத்து

          நீடும்  பதிகம்  பாடுவார் “

“தூய  வெண்ணீறு  துதைந்த  பொன்

          மேனியுந்  தாழ்வடமும்

 நாயகன்  சேவடி  தைவரு

           சிந்தையும்  நைந்துருகிப்

பாய்வது  போலன்பு  நீர்பொழி

          கண்ணும்  பதிகச் செஞ்சொன்

 மேயசெவ்  வாயு  முடையார்

          புகுந்தனர்  வீதியுள்ளே “

என்றிங்ஙனம்  இறைவனைப்  பாடினாரைப்  பாடிய  செய்யுட்களே  நம்மைப் பரவசப்படுத்துகின்றன .இப்பாசுரங்களின்  முகமாக  வெளிப்பட்ட  அன்பு நெறியை  மாசற  மேற்கொண்ட  கண்ணப்பர்  வரலாற்றுச்  செயல்களெல்லாம் அன்பின்  முழு  இலக்கணங்களுக்கும்   இலக்கியமாக  நின்றொளிர்வனவாம்

“அன்புபிழம்  பாயினா

        ரவர்  கருத்தி  னளவினரோ?”

என்றபடி  அன்புருவமே  அவர்  வடிவம் .  இவ்வுண்மையை  உள்ளவாறு  உணர்ந்தவர்கள்  சமயகுரவர்கள் .

      அவர்கள்  கலைகளிலே  பாராட்டப் பெற்றமையா  னன்றே கண்ணப்பர்  “கலை  மலிந்த  சீர்  நம்பி “யாயினார் .திருநெறித்  தமிழ்  விரகராகிய  ஞானசம்பந்தர்   திருக்காளத்தி  சென்று  முதலில்  இறைவனையும்  ,  பின்  கண்ணப்பரையும்  வணங்கியமுறையை  எடுத்துக்  கூறுந்  தொண்டர்  புராணப் பகுதி   யாவ  ருள்ளத்தையுங்  கனிவிப்பதாகும் .

“வீழ்ந்தெழுவார்  கும்பிட்ட

      பயங்காண்  பார்போல்

 மெய்வேடர்  பெருமானைக் 

      கண்டு  வீழ்ந்தார் “

என்பர் . ஞானசம்பந்தர்க்குச்  சிவதரிசனப் பயனாக  வேடர்  பெருமான்  தரிசனங்  கிடைத்ததாம் . காரணம்  சிலை  வடிவத்தில்  இறைவனைக்  காண்பதினும்  அன்புப்  பிழம்பாகவுள்ள  கண்ணப்பர்  வடிவத்திற்  காண்டல்  சிறந்ததென்பது போலும்  விதி நெறியிற்  கடியப்பட்ட  எச்சில்  ஊன்  முதலியன  அன்பு  வயப்பட்டு  இறைவற்கு  உவப்பாயின . விதிநெறியிற்  போற்றப்பட்ட  மலர் ,  நறு நீர்  அன்னம்  முதலியனவும்  ,  கண்ணப்பர்  அன்பு  நெறியிற்  கடியப்பட்டன . ஆயினும்  அப்பொருள்களும்  விதிநெறி பற்றி  யொழுகும்  சிவகோசரியாரது  அன்பின்  அளைந்தனவாதலின்  பெரியோர் களாற்  போற்றப்பட்டன .  இவ் வுண்மையை ,

“ஊனோ  டுண்டல்  நன்றென  ஊனோ  டுண்டல்  தீதெனா

ஆன  தொண்டர்  அன்பினாற்  பேசநின்ற  தன்மையான் “ 

என்னுந்  தமிழ்மறை  நன்கு  விளங்கும்  .  சித்தம்  சிவமாகப்  பெற்றால்  அன்பு  மேற்பட்டாற்  செய்வனவெல்லாம்  தவமேயா  மென்பதை  இவ்  வரலாற்றுப் பகுதி   தெளிவுறுத்துருகின்றது .

          சித்தஞ்  சிவமாகப்  பெற்றோர்க்கு  விடய வாதனைகளால்  யாதும்  ஏதம்  விளையாது .  அங்ஙனம்  புலனுகர்ச்சியும்  அவர்தம்  நெஞ்சத்தைக்  கலக்கும் .  இவ்வுண்மையை  ,

“எழிலையாழ்  செய்கைப்  பசுங்கலான்  விசும்பி

 நின்றுளி  படநனைந்  துருகி,

 அழலையாழ்  புருவம்  புனலொடுங்  கிடந்தாங்கு

என்னுந்  திருவிசைப்பாவிற்  காணலாம் . இதன்  பொருள்  சிறு  நீர்த்துளிக்குங்  கரையும்  பசு  மட்குடத்தை நெருப்பிற்  சுடப்பட்டபின்  பெரும்  புனலிலிடினும்  அஃது  உருச்சிதையாவாறு  போலத்  திருவருட்  பதிவு பெற்ற  மனம்  எத்தகைய  புலனுகர்வாலுஞ்  சிதைவுறா  தென்பதாம் . ( இப்  பாசுரப்  பகுதிக்குப்  பொருள்  வரைந்தவரோருவர்   அழலை யாழ்பு  —  உருவம்  — எனப்   பதப்பிரிவு  கொள்ளாமல்,“அழலையாழ்–புருவம்”எனப்பிரித்துப்“பொருள்வெளிப்படை “  யென்று  குறித்துள்ளார் . அவர்  செய்த  பதப்பிரிவே  அவர்  அப்பொருள்  அறியாரென்பதைப்  புலப்படுத்துவதாகும் )  ஈண்டறிந்த  அறிவுநெறி  அன்பு  நெறியாகிய  இரண்டும்  சிவ நலம்  பெறுதற்குரிய  வென்பது  முடிந்த  பொருளாம் .  இவ் விருவகைச்  சிறந்த சாதனங்களை  நம்  பெரியார்  அருள்  சுரந்து  நமக்கு  வெளியிட்டனர்  .

“விறகிற்  றீயினன்  பாலிற்படு  நெய்போல்

மறைய  நின்றுளன் மாமணிச்  சோதியான்

உறவு  கோல்நட்  டுணர்வு  கயிற்றினால்

முறுக  வாங்கிக்  கடையமுன்  நிற்குமே”

என்னும்  அப்பர்  அருண்மொழியில்  “உறவுகோ”  லெனவும் , ‘உணர்வுகயி’  றெனவுங்  கூறியது  முறையே  அன்பு  நெறியையும் அறிவுநெறியையுமேயாம். இவற்றுள்  ,  கடைதற்குக்  கயிற்றினுங்கோல்   மிக  நெருங்கிய  சாதனமாதலை உய்த்துணரின்  ,  ஞானத்தினும்  அன்பு விழுமிய  தென்பது  போதரும்  .  பாசநீக்கத்திற்  றோன்றும்  அறிவினும்  ஆண்டான்  நிலை  நோக்கி  யுண்டாம்  அன்பு  பிறப்பிடத்தானுஞ்  சிறந்துளதென்று  கூறுவாருமுளர் .

                                  12 . ஆண்டானடிமைத்   திறம்

          இன்னும்  நம்  சைவ  சித்தாந்தச்  செந்நெறியில்  ஆண்டா  னடிமைத்  திறம்  மிகத்  தெளிவாக  வலியுறுத்  துரைக்கப்பட்டுள்ளது .  கட்டு  நிலையினும்  வீட்டு  நிலையினும்  உயிரை  விட்டு  நீங்காதது  இத்  தொண்டாந் தன்மை  யொன்றே.

“கண்டவிவை  யல்லேனா  னென்றகன்று  காணாக்

கழிபரமு  நானல்லேன்  எனக்கருதிக்  கசிந்த

தொண்டு “

என்பதனால்  இத்  தொண்டினிலக்கணம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது .  இறை வற்குப்  பசுக்கள்  அடிமையும்  பாசங்கள்  உடைமையாகும் .

“எல்லாம்  உன்  அடிமையே

         எல்லாம்  உன்  உடைமையே “

என்பதும்  இக்  கருத்துப்  பற்றி  யெழுந்ததாகும் . அடிமைத் தன்மையில் ஒரு சிறிதாவது  முனைப்பிருத்தலாகாது . சிறிது  முனைப்புளதேனும்  அடிமை யிலக்கணம்  பிழைபடும்  இது  பற்றியே  “தாழ்வெனுந்  தன்மையோடு  சைவமாஞ்  சமயஞ்  சார்தல்”  வேண்டு  மென்பர் . பெரியாரொருவரை  யொருவர்  சந்திக்குங்கால் , ஒருவர்  மற்றொருவரை  நோக்கித்  ‘தாங்கள்  யாவர்’?  என  வினவுங்கால் , வினவப்பட்டவர் தம்மையறிவிக்க  ,வேறொருவர்  இல்லாதவழித்  தாமே  தம்மைக்  கூற நேரின் , தம்மைக் கண்டுகொள்ளக் கூடிய  நிலையில்  எளிய  நிலையை  எடுத்துரைப்ப  ரென்பதை  நாவரையரும்  அப்பூதி  அடிகளும்  சந்தித்த  பொழு துண்டாகிய  வினா  விடைகளால்  அறியலாம் .  

            அப்பூதடிகள்  , “ எங்குரைவீர்  நீர்தாம்  யார்”  என்று  வினவ ,  வாகீசர்,

                            “பிறதுறையின்  நின்றேற 

அருளுபெருஞ்  சூலையினால்  ஆட்கொள்ள  அடைந்துய்த்த

 தெருளும்  உணர்  வில்லாத  சிறுமையேன்  யான் “

என்றார்  .  உண்மையான  தொண்டக்  குலத்தைச்  சார்ந்தார்க்குப்  பண்டைக்  குலமாகிய  சாதி  பற்றிய  வேறுபாடின்றாம் .   இவ் வுண்மையையும்  இவ்வரலாறு  நன்று  தெளிவிக்கும் .  “குலந்தரும்  செல்வந்தந்திடும் ……….நாரா யணா  என்னு  நாமம்”  என்புழி “  குலந்தருமென்பதற்கு  உயர்குலப்  பிறப்பைத்  தருமெனப்  பொருள்  கொள்ளின்  ,  இயல்பாக  உயர்குலப்  பிறப்புடையார்க்கு  இப் பயன்  வேண்டாததாக  முடியுமாகலான் ,  இங்குக்  கூறிய  குலம்  பண்டைக்  குலமன்று ;  தொண்டக்  குலமேயாமென்பர்  அப்  பாசுர  உரையாசிரியர்  பண் டைக்  குலவொழுக்கிறந்து  இத்  தொண்டக்  குலத்துச்  சிறந்த  அப்பூதியடிகள்  வரலாற்றைக்  கூறத்தொடங்கிய  நம்  அருட்பெருங்  கவிஞர் ,  இன்னவூரில்  இன்ன  குலத்தில்  இன்னாருளர்  எனக்  கூறு  முறையை  விடுத்து ,  “தாண்டவம்  புரிய வல்ல  தம்பிரா  னாருக்கன்பர் “  என  அவர்தம்  தொண்டர்க்குலச்  சிறப்பையே  சுட்டிக் கூறியருளினார் .  புகழை  ஒரு  சிறிதும்  வேண்டாத  அடிகளை  “ஈண்டிய  புகழின்  பாலா”  ரென்றது ,  அடிகள்  வேண்டாத  நிலையில்  புகழ்  தானே  நெருங்கி   வருதல்  பற்றியாகும் .

             இவ்  வாண்டா  னடிமைத்  திறத்தை  நம்  சகோதர  மதமாகிய  வைணவ  சமயம்  சேஷ  சேஷி  பாவமாக  வைத்து  விளக்கிக்  கூறும் . அடிமையி  னியல்பைப்  பற்றி  அச்  சமயத்தார்  கொண்ட  கருத்தை  ஓரெடுத்துக்காட்டால்  விளக்குவேன் .  இராம  காதையில்  ஓரிடத்தொருவர்  இலக்குமணனை  நோக்கி,  ““ராமனுக்கும்  உனக்கும்  என்ன  இயைபு “  என்று  வினவ  “அஹமஸ் யாவரோப்ராதா    குணைர்தாஸ்யம்  உபாகத ,”  என்று  இலக்குமணன்  விடை  கூறியதாக  மதுரகவியாகிய  வான்மீகியார்  வெளியிட்டுள்ளார் . இதன்  பொருள்  யான்  இவர்க்குத்  தம்பியும்  அடிமையுமாகவே  னென்பதாம் .  இங்கே  திருவாய்மொழியி  னுரையாசிரியர்  அடிமைத்  தன்மையிற்  சகோதர பாவம்  ஏறிட்டது   முரணுறுவதா  மென  ஆசங்கித்து  “அவனொருபடி  நினைப்பன் ,  யான்  ஒருபடி  நினைப்பன் “  என்பது  இலக்குமணர்  கருத்தாகக்   கொண்டு  காட்டி  அம்  முரண்பாட்டைக்   களைந்து  அடிமை  யிலக்கணம்  பிழைபடாமையை  எடுத்துக் காட்டினர் . இராமன்  பின்னே  செல்கென  இலக்குமணர்க்குச்   சுமித்திரையார்  விடை  தருங்கால் , 

 “பின்னும்  பகர்வாள்  மகனே  யிவன்பின்  செல்  தம்பி

யென்னும்  படியன்  றடியாரினேவல்  செய்தி”

என்று  இட்ட  கட்டளையால்  அடிமைத் தன்மைக்குச்   சோதரபாவ   முரண் படுவதாகு  மென்பது  வெளியாகின்றது .  மேலே  காட்டப்பட்ட   அவ்வரைச்  சுலோகத்தின்  முதற்பகுதி  இராமபிரான்  கருத்தாகவும் ,  பிற்பகுதி  தன்  கருத்தாகவும்   இலக்குமணன்  கூறியதாகக்  காட்டியது  மிகவும்  பாராட்டற்பாலது .  இவற்கு  யான்  தம்பியாவேனென்றது  ,  “இவனை  வினவினால்  என்னைத்  தம்பி  யென்பன் ;  என்  கருத்து  அஃதன்று  ;  யான்  அடிமையே  என்றானாம் . இப்பணிவு  நிலை  மிகவும்  போற்றத்தக்கதொன்று. 

              இறைவனை  நோக்கி  அடியார்  தம்  கடமை  யாகிய  “கூடுமன் தனிற் கும்பிடலேயன்றி,  வீடும்  வேண்டா  விற”  லுடைய  அடிமையியலிற்  பிழையாததாகும்.  அவ்வடியார் வீடெய்தற்குத்  தடையாகவுள்ள  தளைகளைக்  களைதற்கு  இறைவன்  திருவடி  நாட்டத்தில்  ஈடுபடுதலே  கடன் .  அதற்குப்  பயன்  விளைத்தல்  இறைவன்  கடமையாகும் .  அதனையும்  வேண்டி  நிற்றல்  அடிமைத்தன்மைக்கு  ஒவ்வாத  தொன்றாம்.

“மண்மேல்  யாக்கை  விடுமாறும்

            வந்துன்  கழற்கே  புகுமாறும்

 அண்ணா  எண்ணக்  கடவேனோ

             அடிமை  சால  அழகுடைத்தே”

என்னும்  அருண்மொழி  இவ்வுண்மையை  வலியுறுத்துவதாகும் .  இவ்வடிமைத்தன்மை   கட்டு  நிலையிற்போல  வீட்டு  நிலையினும்  ஆன்மாவிற்குரியதென்பதை  , 

“அதனி னீறலா  வொன்று  பலவாறே

தொழும்பாகு  மங்கு”

என்பதனாலும் ,

“சித்தமல  மறுவித்துச்  சிவமாக்கி  யெனையாண்ட”

என்பதனாலும்  தெளியலாம் .  ‘அங்கு’  என்பது  வீட்டு நிலையி லென்று  பொருளாதலையும் ,  சிவமாக்கிய  பின்னும்  ஆட்சி  கூறப்படுதலையும்  உற்றுணர்க .

                                                  13 .  வீட்டு   நிலை

      இனி , நம்  சமயத்தின்  வீட்டு  நிலையைப்  பற்றி  விளக்கும்  பகுதியும்  அதற்கு  எடுத்துக்  காட்டாகவுள்ள  உவமங்களும்   அளவை  நூன்  முறையிற்  சிறிதும்  பிறழ்தலின்றி  அமைந்துள்ளன .  கட்டறுத்து  வீடுபெறும்  ஆன்மா  இறைவனோ  டிரண்டறக்  கலந்து  சிவாநுபவ  நுகர்ச்சியிற்  றலைப்படுங்கால்   பொருள்  வகையா  லிரண்டாயினும்  அநுபவ  நிலையில்  அவனெனத்  தானென  வேற்றுமை  யின்றி  அத்துவித  சம்பந்தம்  பெற்று  நித்திய  வின்பத்திற்   றிளைத்து  நிற்கும் .  அத்துவிதச்  சொல்லாராய்ச்சி  மிக  விரிவுடைய  தாகலின்  ஈண்டு  விளக்க  முற்பட்டிலன் . வீட்டு  நிலையினும்   இறை  ,  உயிர் , தளை  என்னும்  முப்பொருளுண்மையை   இச் சமயம்  தெளிவு றுத்திநிற்கின்றது . நித்தியப்  பொருள்களுக்கு  யாண்டாவது  ஓரிடத்து  அழிவு  கேட்கப்படுமாயின்   நித்தியத்துவம்  நிலைபெறாது .

       முத்தி  நிலையில்  இன்ப  வடிவினனாகிய  இறைவனும்  அவனோ  டிரண்டறக்கலந்து  அவ்வின்ப நுகர்ச்சியி  லழிந்தி நிற்கும்  ஆன்மாவுமாகிய  இருபொருளுண்மை  பெறப்படுமாயினும்  , கட்டு  நிலையில்  தடையாக  இருந்து  சிவ  சாதனங்களாலொழிந்த  மலத்துக்கு  ஆண்டு  அவகாசம்  இல்லை  யாதலின்  ,  அதன்  நித்தியத்துவம்  எங்ஙனம்  நிலைபெறுமெனின் ;  முத்தி  நிலையில்  அவ் வான்மாவைப்  பாதித்திருந்த  மலத்தின்  ஆற்றல்  அறவே  யொழிந்ததன்றி  மலம்  என்னும்  பொருட்டுக்  கேடின்றெங்க.  முத்தியிற்   றலைப்படாத   மற்றை  உயிர்களிடத்து   அம்  மலவாற்றல்  காணப்படுதலின்  அப்  பொருட்டுக்  கேடு  யாண்டு  மின்றாம் .  அங்ஙனமாயின்  மல  ஆற்றல்  ஒழியப்பெற்ற  வீட்டு  நிலையில்  வைத்து ,

“முத்திதனின்  மூன்று  முதலு  மொழியங்கேள்

சுத்தவநு  போகத்தைத்  துய்த்தலணு–  மெத்தவே

இன்பங்  கொடுத்தலிறை  இத்தைவிளை  வித்தல்மலம்

அன்புடனே  கண்டுகொள்  அப்பா “

என்பது  எங்ஙனம்  பொருந்துமெனின் ,  நெடிது  நேரம்  பனியால்  நடுங்குற்றான்  ஒருவன் . தீயின்  பக்கல்  சார்ந்துழி  ஓரின்பம்  எய்துகின்றான்; அவ் வின்பத்திற்குக்  காரணம்  தீயின்  சூடும்  பனியின்  நீகமுமேயாம் . பனியாற்பற்றப்படாத  நிலையில்  தீயை  யணுகின்  இன்பந்  தோன்றாமை யின்   ஆண்டும்  பனி  நீக்கமும்  இன்பத்திற்குக்  காரணமாகும் . இத்தை  விளைவித்தல்  பனியென்புழிப்  பனியின்  நீக்கமெனக்  கொள்ளல்  வேண்டும். பனியாற்  பற்றப்பட்டு  நடுக்கமுற்ற  நிலையில்  தீயின்  சூட்டினால் அது  நீங்குங்கால்  இன்பம்  எய்தும் . அதுபோலக்  கரையற்ற காலம்  ஆணவ  மலவெதுப்பாற்  பற்றப்பட்டுத்  துபுற்று  நின்ற  ஆன்மா  தண்ணிழலாம்  பதியோடு  இணந்த பொழுது  அம்மல நீக்கமும்  அவ்வின்பத் தோற்றத்திற்குக்  காரணமாதலின்  ,  ‘இத்தை  விளைவித்தல்  மல’  மென்றார். ஆகவே  நித்தப்  பொருள்களுக்குக்  கேடில்லாத  நிலையில்  வைத்தே  வீட்டு  நிலை  நம்  சமயப்  பெரியொர்களால்   தெளிவுறுத்தப்பட்டுள்ளதெங்க.

                                                          14 .  நம்  கடமைகள்

         இன்னும்  ஆன்மாக்கள்  நன்னிலைப்படுதற்குரிய  இன்னோரன்ன  சிறந்த  உண்மைகள்  பல  நன்கு அமையப்பெற்ற  நம்  சைவ  சமயத்தின்  மாட்சி  அளவிடுந்  தரத்தன்று  .  இதனைப்  போதிக்கும்  நூல்களோ  தமிழ்  வளம்  பழுத்த  கவிச்சுவை  பொதுள  அநுபவ  அருட்புலவர்  பெருமக்களால்  அருளிச்  செய்யப்பட்டன  வாகும் .  சாத்திர  வடிவிலுந்  தோத்திர  வடிவிலும்  முறையே  அமைந்த  சிவஞானபோத  முதலியனவும்  தேவாரம்  முதலியனவும்  நம்  சமய  வுண்மைகளாகிய  மூலப்பொருள்கள்  நிரம்பிய  சிறந்த  கருவூலங்களாக  அமைந்திருக்குங்கால் நமக்கு  யாது  குறையுளது ? அக்  கருவூலப்  பொருள்களை  அறிந்து  அனுபவிக்க  வேண்டியதே  நம்  கடமையாகும் .  

         அன்பர்களே  !  இவ் வரிய  சமய  மூல  தனத்தை  நமக்குக்  கருணையுடன்  நம்  பெரியார்  அருளியிருப்பவும்,அந்  நன்றியை  மறந்து  நம்மவரிற்  சிலர்  அன்னாரைக்  குறை கூறியும்  ,  சமய  வுண்மைகளை  இகழ்ந்தும் , அந்  நூல்களை  வெறுத்துப் பேசியும்  நெறிபிறழ்ந்து  சைவ  வுலகுக்குத்  தீங்கு  புரிந்து  வருகின்றனர்  .   தாமே  தம்மைக்  கெடுத்துக்கொள்ளும்  அவ்வளவி  லமையாது  உண்மை  அறிவாற்றலில்  தலைபடும்  பருவத்தினராகிய  சைவ  இளைஞர்களையும்  கெடுக்க  முற்படுகின்றனர் .  அறவே  நம்  சமயத்தைத்  தொலைத்துவிட வேண்டுமென்பார் ஒருபுறமிருப்ப ,  சைவ வேடந்தாங்கி  நின்று  புதிய  முறையிற்  சைவத்தை  விளக்குவதாக  மேற்கொண்டு  நம்  சமய  நெறிக்கு  ஒவ்வாத  பல  கொள்கைகளைப்  பரப்ப  முற்படுவாரும்  ஒருபுறந்  தாக்குகின்றனர்  .  ஆ ! ஆ !  ஒரு  நாட்டுக்குத்  தன்  பண்டைச்  செல்வமாகிய  சமய நிலையை  இழக்குங்  காலம்  நேரின் ,  அந்  நாட்டின்  எந்  நலனுங்  குறைவுபடுமே  !  அதன்கண்   வாழும்  மக்கள்  எவ்வகை  யின்பமும்  இல்லாராய்  விலங்கு  நிலையை  யெய்திக்  கீழ்  நோக்கித்  தம்  பிறப்பின்  பயனை  வீணாக்குவரே !  செய்யத்தக்கன  இன்ன  ,  தகாதன  இன்னவெனும்  பகுப்புணர்வின்றி  உண்டியுங்  காம  இன்பமுமே  பொருளெனக்  கொண்டு  அவற்றின்  பொருட்டு  மனம்  போன  வழியிற்  சென்று   தம்  அறவாழ்க்கைப்  பயனை  ஒரு  சிறிதும்  எய்தாராய்க்  கேடுறுவரே !  அந்தோ !  பொருளில்லாதார்  அதனைப் பெற  முயறல்  உலகியற்கை  உடையார்  தம்  பாலுள்ள  பெறலருந்  திருவை  வெறுத்தொதுக்கி   வறியராக  முயறல்  யாண்டுங்  காணாததொன்று  .”காட்சியளவையிற்  கொள்ளப்படுவனவற்றை யே  கொள்வோம் ; மற்றைக்  கருதலளவை  உரையலளவைகளை  ஏற்றுக் கொள்ளோம் “ என்று  சாதிப்பார்க்கு , அவர் தம்  தாய்  தந்தையரை  எப்  பிரமா ணத்தாற்  காட்டக்கூடு “  மென்று  கேட்போமாயின்  ,  யாது  விடை  பகர்வர் ?

           காட்சி  யளவை  யொன்றனையே  கொண்டு  மற்றவற்றை   ஏற்றுக்கொள்ளாத  பூதவாதி  யொருவனை  மணிமேகலை  யென்னும்  அறிவுடை  மகள்  தேற்றுமுகமாகக்  கூறியதொன்று  ஞாபகத்துக்கு  வருகின்றது .  அது ,

“தந்தை  தாயாரை  யநுமானத்  தாலலது

 இந்த  ஞாலத்  தெவ்வகை  யரிவாய் “

என்பதாகும் .  ஈண்டு  அவன்  தன்  கொல்கையைக்  கடைப்பிடித்துத்  தந்தை  தாயாரை  விலக்குதல் தக்கதா ?  அல்லது  தந்தை  தாயரை  ஏற்றுக்கொள்ளுமுகமாகத்  தன்  கொள்கையை  விட்டு  அநுமானத்தை  ஏற்றுக்கொள்ளல்  தக்கதா?  அன்பர்களே !  சிந்தித்துப்பார்மின்கள் .  இங்ஙனங்  காட்சி  யனுமானங்களை   ஏற்றுக்கொள்ளுங்கால்  இவற்றை  விளக்குதற் குரிய   உரையளவையை  எங்ஙனம்  விலக்க  முடியும் ?

              உரையளவையாகிய  நூற்  பிரமாணங்கொண்டே  மக்கள்  தம்  அறிவைப்  பெருக்கிப்  பற்பல   நுண்ணிய  அரிய  பொருள்களையெல்லாம்   அறிந்தின்புறற்பாலர் .  ஆகவே  நூலளவையையும்  , கருதலளவையையும்  ஏற்றுக்கொண்டே  எப்பொருளையும்  அறிவுடையார்  ஆராய்தல்  வேண்டும் .  “இந் நியாய  நெறியில்  யாம்  செல்லோம்;  எம்  உளஞ்  சென்றவாறே  செல்வோம் “  என்று  வரம்பிகந்து  பேசுவார்க்கு  யாம்  தரும்  மாற்றம்  யாதுளது?

“நிற்பார்  நிற்க   நில்லா  வுலகி

 னில்லோம்  இனிநாம்  செல்வோமே “

என்னும்  அருண்மொழிப்படி  அவரவ்வளவின்  மகிழ்க  என்றமைந்து ,

“நெறியி  னீங்கியோர்  நீரல  கூறின்

 அறியா  மையென்  றறியல்  வேண்டும்”

என்பதைக்  கடைப்பிடித்து  இறைவனை  நோக்கி ,  “கடவுளே !   நன்நெறி யிகந்து   இருளதர்  செல்லும்  சோதரர்க்கு  நீக்கரும்  நிலையின்  நிற்கும்  நீ  அறிவு  விளக்கை  யளித்துக்  காத்தருளல்  வேண்டும் . “     என்று  வேண்டுதலே  யன்றி  வேறென்  செயக்கடவோம்!  நம்  சமய  அடையாளங்களாகிய  திருநீறு   கண்டிகை  யணிதலும்  ,  ஆலயவழிபாடு  செய்தலும் ,  உண்மைப் பத்தியை  விளைவிக்கும்  புராண  கதைகளைக்  கேட்டலும்  இன்றியமையாதனவாக , இவற்றையெல்லாம்  பயனற்ற  செயலெனக்  கூறித்  திரியும்  சிறு  நெறியாளர்  கெடுமதியை  என்னென்பேன்  !  என்னென்பேன் ! ! 

               புராணக் கதைகள்  அவை  தோன்றிய  காலத்து  மக்கள்  ஒழுகலாறு  நோக்கி  எழுந்தன வாதலின்  அவருட்  சில  இற்றைநாள்  மக்கள்  நாகரிகத்துக்கு  ஒவ்வாதனவாகவும்  இருத்தல்  கூடும் .  அங்ஙனம்  இயையாதன  இன்னவென்று  தெளிந்தால்  அவற்றை   விட்டுக்  கொள்வன  கொள்ளுதலன்றோ  முறை !  எல்லாம்  பொய்யெனக்  கூறுதல்  எப்  பிரமாணம்  பற்றி ?  புராண  காவியங்கள்  நிகழ்ந்தனவும்  ,  நிகழாதனவும்  ,  இரண்டுங்  கலந்தனவும்  எனப்  பலதிறப்படும் .  

                  நிகழாதனவற்றிலும்  நீதி  அறம்  கடவுட்  பத்தி  முதலிய  நலமிருப்பின்  ஏற்றுக்கொள்ளலாம் .   நிகழ்ந்தனவற்றிலும்  மக்களுக்குத்  தீங்கு  விளைப்பன   உளவேல்  அவற்றையறிந்து  ஒதுக்கிவிடலாம் . பொய்  மெய்களின்  உண்மை  இலக்கணத்தை  யறிந்தார்  இம்  முறையைக்  கோடல்  ஒருதலை .  

“வாய்மை  யெனப்படுவ  தியாதெனின்  யாதொன்றுந்

 தீமை  யிலாத  சொலல்”  

எனவும் ,

பொய்மையும்  வாய்மை   யிடத்த  புரைதீர்ந்த 

நன்மை  பயக்கு  மெனின் “ 

எனவும்  போந்த  பொய்யில்  புலவர்  பொருண்மொழிகள்  எத்துணை  ஆழ்ந்த  சிந்தனையின் மேல் வெளிப்பட்டன .  உற்று நோக்குமின்கள்  !  நிகழாதது  பற்றிப்  பொய்யெனவும்  நிகழ்ந்தது  பற்றி  வாய்மை  எனவுங்  கொள்ளப்பட வில்லை .  தீமை  பயத்தல்  நன்மை  பயத்தல்களையே   பொய்மை  வாய்மைகளுக்குப்  பொருளாகக்  கொண்ட  சிறப்பும்  நம்  முன்னையோர்  பெருமையைப்  புலப்படுத்துகின்றது .  

        வடமொழி  யியைபை  அறவே  தொலைத்து  விட  வேண்டு  மென்னுங்  கொள்கையும்  நம்  சமயப்  பாதுகாப்புக்கு  ஊறு  செய்வதாகும் . அம்  மொழிக்கண்ணுள்ள  வேதாகம  புராணேதிகாசங்களுக்குள்  நம்  சமய  வுண்மைகளை  விளக்கும்  பகுதிகள்  நமக்குப்  பிரமாணங்க   ளென்றே  நம்  பெரியார்  கொண்டு  போற்றினர் .  வட மொழிக்கண்  உள்ள  நூற்  பரப்புக்கள்   அறிவுடையுலகத்தாற்  பாராட்டப்படுகின்றன .  ஒரு  சிலர்  அம்மொழியைத்  தமக்கே  யுரியதென   அறியாமையாற்  கொண்டு  நம்மை  வெறுப்பாராயின் , அவரை  வெறுத்தொதுக்குதலே  முறையாகுமன்றி  அவர்  புரியுந்  தீங்கு  குறித்து  அம் மொழிக்கணுள்ள  சுவை  நிரம்பிய  காவியப்பகுதிகளையும்  அறிவுநூற் பகுதிகளையும்  அறிந்து  இன்புறும்  பேற்றை  யாமேன்  இழக்கவேண்டும்  ?  உண்மைப்பொருள்  எம்  மொழிக்க ணிருப்பினும்  அறி வுடையார்  கொள்ள  விரும்புத லியல்பே  .  நம்  செந்தமிழறிவு   நூல்களெல் லாம்  வடமொழிக்  குறியீடுகளையே  பெரிதுந்  தழீஇ   நிற்கின்றன . அவற்றைப்  பொருட்  பிறழ்ச்சி  நேராமல்  தமிழ்மொழியில்  ஆக்கிக்கோடல்  நன்றாயினும்  அதுபற்றி  வடமொழியை  வெறுத்தொதுக்க  வேண்டுமென் பதில்லையே  !  தமிழிலுள்ள  தலபுராணங்களிற்  பல  அம் மொழிபெயர்ப்பா யினும்  சிறந்த  காவிய  முறைகளில்  அமைந்தனவாகும் .  வடமொழியிற்  புராண  நடை வேறு ;  காவிய  நடை  வேறு .  தமிழிலுள்ள  தலபுராணங்கள்  பெரும்பாலும்  காப்பியச்சுவை    நலங் கனிந்தொழுகும்  முறையில்  அமைந்தனவே . நிகழாத  வரலாறுகளைப்  பற்றி  எழுந்தவற்றையும்  கவிச்சுவை  , அறநிலை  முதலிய  நல  நோக்கி  ஏன்  அவற்றைப்  படித்தலாகாது?  அம் முறையில்  அவைகளும்  பயன்  விளைவிப்பனவேயாம் .  கவியின்  கற்பனா லங்காரங்  கருதிக்  கூறப்பட்டவைகளைப்  பொய்யெனக் கூறி  இகழ்தல்  நூல்  நலம்  பெற  விழையும்  மதிபடைத்தாற்குப்  பொருந்துவதன்றாம்  . எவற்றினும்  நல்லன  இருப்பிற்  கொள்ளல்   வேண்டும்.  காலத்தால்  முற்பட்டது  பற்றிக்  கேட்டலும்  பிற்பட்டது  பற்றி  விலக்குதலும்  முறையல்ல .  நன்று  தீதாய்ந்து  நல்லன  கொள்ளுதலே  அறிவுடையார்  கடமை.  

“தொன்மையவா  மெனுமெவையும்  நன்றாகா  இன்று

 தோன்றியநூ  லெனுமெவையுந்  தீதாகா” 

என்பது   உமாபதிசிவாசாரியர்  உயர் மொழியாகும் .

                                       15 . வேண்டுகோள்

         சைவ  சீலர்களே !  உண்மைகளைப்  பிறழ்வித்து   உறுதிப்   பயங்களைக்  கெடுக்க  எழுந்த  சுழல்காற்றுக்  கஞ்சாதீர்கள் .  “வானந்  துளங்கிலென்  மண்கம்ப  மாகிலென் ……………………..ஒருவனுக்  காட்பட்ட  வுத்தமர்க்கே  “   என்னும்  நம்  அப்பருண்மொழியைக்  கடைப்பிடித்துச்  சமய  நிலையிற்  கொண்ட  உறுதியைத்  தவறவிடாதீர்கள் . யாண்டும்  சைவ  சித்தாந்த  உண்மைகளைப்  பரப்புமின்கள்  .  சித்தாந்த  நூல்களை  நம்  இளைஞர்கள்  செவ்வனம்  படித்தறிதற்கேற்ற  நிலையங்களை   நிலைப்படுத்துமின்கள் .  தமிழிலுள்ள  சைவ  சித்தாந்த  நூல்களும்  அவற்றின்  உரைகளும்  கவிச்சுவை  நிரம்பியுள்ளன  வாதலின்  அவற்றை  அம்  முறையிற்  படிப்பித்தல்  நன்று . தேவார  திருவாசக  முதலிய  திருமுறை  இலக்கியங்களைப்  பொரு  ளாராய்ச்  சியுடன்  தெளிவு  பெறக்  கற்பிக்கும்   அற  நிலையங்கள்  வேண்டும்  .  இக்காலத்  திளைஞர்கள்  கல்விப்பயிற்சி  செய்தற்கு  முன்னரே  “எங்கொள்கை  ஈது  நுங்கொள்கை  ஈது”  எனத்  தெளிவு  கைவரப்  பெறாமல்,  அடிப்படையிலே  கொள்கை  பற்றித்  தடுமாறுகின்றனர்  .  அன்னார்  சற்றுப்  பொறுமையுடன்  முறையாகக்  கற்றுச்  சமயநூற்  போதம்  பெறுவாராயின்  ,  உண்மை  தெளிந்து  பிற்கால  உலகுக்கு  மிகவும்  பயன்படுவர் .  ஆதலின்  அவர்களை  அறிவு நூற்பயிற்சி   யுடையராக்கி  நன்நெறிப்படுத்த  முயலவேண்டும் . 

      சமயநூ  லாராய்ச்சி  சமய  ஒழுக்கத்தோடு  செயற்பாலதாகும் .  நூலறிவும்  ஒழுக்கமும்  ஒருங்கியைந்தே  வளர்ச்சியடையும்படி  தக்க  சாதனங்களைச்   சைவ  சீலர்களாகிய  செல்வர்கள்  செய்யமுந்தவேண்டும் . செல்வம்  படைத்தார்  இச் சிறந்த  அறிவறத்தையன்றி  வேறென் செயக்  கடவர்  !  கால  நிலையோ  விபரீதமாக  மாற்ற  மடைந்து  வருகின்றது . இவ் வமயம்  அறிவுந்  திருவும்   வாய்க்கப்பெற்றோரும்  அறிவுச்  செல்வ மாத்திர   முடையோரு மாகிய  சைவ  சீலர்கள்  மன மொழி மெய்களாலும்  மற்றைப் பொருள் முதலிய  உபகரணங்களாலும்     செல்லும்வா  யெல்லாம்  ஒல்லும்  வகையான்  சிவநெறி  பேணுஞ்  செவ்விய  அறங்களைத்  தாழாது  புரிய  முன்வரல் வேண்டும் .

       இன்னோரன்ன  சைவ  மகா  சங்கங்களைத்  தமிழ்நா  டெங்கணும்  நிலைபெறச் செய்து   அறிவொழுக்கங்களிற்  சிறந்த  பெரியாரைக் கொண்டு  சமய  வுண்மைகளை  யாவரும்  உளங்கொள  வெளிப்படுத்தல்  வேண்டும்  .  சைவ  மடாதிபதிகளை  அடுத்து  அன்னார்  கடமைகளைக்  கால நோக்கித்  தாழாது  புரியும்படி  வேண்டிக்கொள்ள வேண்டும் . அன்னார்  அயர்வு  காட்டினும் ,  அவர்களை  வெறாது , அவர்தம்  உளங்கொள வேண்டுவன எடுத்துரைத்துச்  சைவப் பயிர்  தழைய  அன்னா  ரருண்மழையைப்  பெய்விக்க வேண்டும் . இன்னோரன்ன  உண்மை  முயற்சிகளில்  நாம்  தலைப்பட்டுத்  திருவருட்  டுணைகொண்டு  சைவ  நலம் பேண  முற்படுவேமாயின்  ,  வேண்டுவார்  வேண்டுவன  ஈயும்  பெருங்கருணைத்  தடங்கடலாகிய  சிவ  பெருமான்   நம்  முயற்சியைப்  பயனுறச்  செய்து  நமது சமய  வாழ்க்கையைப்  புனிதமுறத்  தந்து  இன்புறுத்திக்  காத்தருள்வா  ரென்ப  தொருதலை  . 

பெரியோர்களே ! 

“கூறுமின்  ஈசனைச்  செய்ம்மின்

            குற்றேவல்  குளிர்மின்  கண்கள்

 தேறுமின்  சித்தம்  தெளிமின்

              சிவனைச்  செறுமின்  செற்றம்

ஆறுமின்  வேட்கை  அறுமின்

          அவலம்  இவை  நெறியா

ஏறுமின்  வானத்  திருமின்

           விருந்தாய்  இமைய  வர்க்கே “ 

என்னும்  பெரியார்  அருளுபதேசத்தை  எடுத்துக்காட்டி  இம் மட்டி  லமைகின்றேன் .

           சிவநெறிச்  செல்வர்களே !  இத்துணைக்காலம்  என்  சிற்றுரைக்குச்  செவி  தந்து  பொறுமை  கொண்டிருந்த  உங்களுக்கு  என்  உளம்  இயைந்த  வணக்கம்  உரியதாகுக . 

            சைவத்  திறமுந்  தெய்வத்  தமிழும்  தழைத்தினிது  ஓங்குக ! 

                                    *************************************************

               4  .  ஞா  ன  த்  தி  ன்      தி  ரு  வு  ரு

                     (கரந்தைக்  கட்டுரையில்  வெளிவந்தது )

         உலகத்துப்  பொருள்கள்   உண்மை  மாத்திரை   உணர்த்திப்  பிழம்பு  உணர்த்தப்படாதனவும் ,  உண்மையும்  பிழம்பும்  உணர்த்தப்படுவனவும்  என  இருவகைப் படுமென்று  கூறுவர்  களவியல்  உரையாசிரியர் .  உண்மையுணர்த்தல்  அநுமான  அளவையானும்  ,  பிழம்புணர்த்தல்  காட்சியளவையானும்  பெறப்படுவனவாம் .   பிழம்பு  வடிவாதலின்  ,  அன்பு  அருள்  அறிவு  முதலிய  பண்புகளெல்லாம்  உண்மை  மாத்திரையான்   உணர்த்தப்ப்டுமல்லது  பிழம்பு  உணர்த்தப்படாதனவாம் .  ஆகவே  பிழம்பு ணர்த்தப்படாது  , உண்மை  மாத்திரை  உணர்த்தப்படும்  ,  ஞானம்  முதலிய  குணங்களுக்கு  அழகிய  வடிவு  கூறுதல்  அரிதாம்  என்பது  யாவரும்  உணர்வர்.  அவ்வருஞ்  செயலிற்   றலைப்பட்டு   நிறுவும்  ஆற்றல்  ,  செயற்கரிய  செய்யும்  புலவர்  பெருமக்கள்பால்  அமைந்துள  தென்பதை   அப்  பெரும்   புலவர்களால்  ஆக்கப்பட்ட  பொருள்  நிரம்பிய  பாடல்களிற்  காணலாம் .  திருவருட்பேறு  பெற்ற  பெரியோர்கள்  அருளிய  தெய்வ  மணங்  கமழும்  பாசுரங்களினும் , உலகியலை  நுனித்துணர்ந்தும்  ,  தெய்விக  நிலையை  அழுந்தி  யறிந்தும் ,  கற்பாருள்ளம்  அவ்வெண்ணமாமாறு  பெரும்புலவர் களாற்  பாடப்பெற்ற  பெருங்காப்பியங்களினும் , குணிப்பொருளாகிய  தெய்வங்களையும்  மக்களையும்  உயர்ந்த  நிலையில்  வைத்துப்  புனைந்து ரைக்குங்கால் ,  எக்குணத்தால்  யாவர்  சிறந்து  விளங்குகின்றனரோ அன்னாரை  அக் குணவடிவாகவே  வருணித்தல்  மரபென்பதை அவர்தம்  மொழி களால்  நன்குணரலாம் . தன்னை  அணைந்தார்க்கு  அருள்  புரிந்து  பேரின்பமளிக்கும்  இறைவனை  அவ்வருட்  குணத்தினும்  இன்பப்  பண்பினும்  சிறந்து  விளங்குதல்  பற்றியும் ,  உண்மை  அன்பர்  பத்தி  வலையிற்  படுதல் பற்றியும்   முறையே  ,  “கருணையே  வடிவ  மாகி”  எனவும் ,  “இன்பமே  என்னுடைய  அன்பே”  எனவும்  ஆன்றோர்  பாடி  இன்புறுவர் .  “அன்பே  சிவமாவது”  என்னும்  திருமூலர்  அநுபவ  மொழியும்  ஈண்டு  எண்ணத்தக்கது. புலவர்  பெருமக்கள்  பாடல்களில் ,  உவமை  கூறுங்கால் ,  உவமிக்கப்படு வோர்   இயல்பை  நன்குணர்ந்து  குணியைக்  குணமாகக்  கூறுதல்  மரபென்பதற்கு   ஒரு  சில  எடுத்துக் காட்டுதல்  ஈண்டுப்  பொருந்துவதாகும் .

            சுந்தரமூர்த்திகளைத்  தடுத்தாட்கொள்ளப்  போந்த   அந்தணரின்  மூத்த  வடிவத்தைப்  புனைந்துரைக்கப்  புக்க  தெய்வப்  புலமைச்  சேக்கிழார்  பெருமான் ,

“மொய்த்துவளர்  பேரழகு  மூத்தவடி  வேயோ

 அத்தகைய  மூப்பெனும்  அதன்படிவ  மேயோ”

என்று  கூறினார் . முதியராகிய  அந்தணர்க்கமைந்த  அழகிய  உருவத்தை  , “அழகின்  மூத்த  வடிவையோ”  எனவும் ,  ‘அம்  மூப்பெனும்  அதன்  படிவமேயோ’  எனவும்  அழகு  முதுமை  என்னும்   குணங்களாகக்  கூறினர் , மூப்பின்  முடிந்த  எல்லையையும்  ,  அழகின்  முடிந்த  எல்லையையும்  அவர்  வடிவம்  உடையதாய்  இருத்தல்  குறித்து  இங்ஙனம்  எழில் பெறப்  புனைந்துரைத்தார் .  கல்வியிற்  பெரிய  கம்ப  நாடர்  இங்ஙனம்  குணிப்பொருள்களைக்  குணங்களாக உருவகஞ்  செய்தலினும்  ,  உவமை  கூறுதலினும்  மிகத்  திறமையும்  ஆர்வமுமுடையவர்  என்பது  அவர்  பாடல்களால்  நன்கறிவதொன்று .  சீதாப்பிராட்டியைத்  தேடச்சென்ற  சொல்லின்  செல்வனாகிய  அநுமன்  இலங்கை  புக்குச்  சிறையிருந்த  செல்வியைக்  கண்கூடாகக்  கண்டு  திரும்பிவந்து  ,  அவன்  ‘வாயுடையது’  என்னுடைய  வாழ்’  வென்று  எதிர்பார்த்திருந்த  இராமபிரானுக்கு  அந்  நற்செய்தியைத்  தெரிவிக்குமுகமாகக்  கம்பர்  பாடிய  பாடல்களுல்  ஒன்று  ஈண்டு  நினைந்து  இன்புறத்தக்கது ,  அப் பாடல் ,

“விற்பெருந்  தடந்தோள்  வீர 

      வீங்குநீ  ரிலங்கை  வெற்பின் 

 நற்பெருந்  தவத்த  ளாய

       நங்கையைக்  கண்டேனல்லேன்

 இற்பிறப்  பென்ப  தொன்றும்

        இரும்பொறை  என்ப  தொன்றும்

 கற்பெனும்  பெயர  தொன்றுங்

        களிநடம்  புரியக்  கண்டேன் “

என்பதாம் .  இது  பிராட்டியார்  அநுமன்  காட்ச்சிக்குக்  கற்புடை  மகளிர்க்குச்  சிறந்த  அணிகலன்  களாகவுள்ள  உயர்ந்த  குணங்களின்  வடிவமாகக்   காணப்பட்டாளன்றிக்  குணிப்பொருளாகக்  காணப்பட்டிலள் என்பதைப்  புலப்படுத்துவதாகும் .  ஒரு  குணிப்பொருளில்  அதற்குரிய  குணங்கள்  மிகவும்  சிறந்து  காணப்படுமாயின்  ,  அக்  குணிப்பொருளைக்  காணும்  அறிஞன்  உள்ளம்  குணநிறைவில்  ஈடுபடுமென்பது  இயல்பே .  அந் நிலையிற்  சிறந்த  அறிஞனாகிய  அநுமன்  உள்ளத்தைப்  பிராட்டியின்  நற்குண  நற்செயல்கள்  மிகவும்  ஈடுபடுத்தினவாதலின்  ,  அவள்  திருவுருவைக்  குணிப்  பொருளாகக்  கண்டிலேன்  என்பான்  “நங்கையைக்  கண்டேனல்லேன்” என்றான் .  பின்னை  அவன்  காட்சிக்குப்  பொருளாக  ஆங்குக்  காணப்பட்டன  யாவையெனின்  ,  இற்பிறப்பும்  ,  இரும்பொறையும்  ,  கற்பும்  என்னும்  சிறந்த  குணங்களேயாம் . இவை   ஒருங்கு  கூடித்  தமக்கமைந்த  பற்றுக்கோட்டின்  சிறப்பால்  தம்மியல்பில்  ஒரு  சிறிதும்  குறையாது  நிரம்பி  விளங்கின  என்பதைப்  புலப்படுத்தவே  “களி  நடம்  புரியக்   கண்டேன்”  என்று  கூறினன். பிராட்டியை  உயிருடனிருக்கக்  கண்டேன்  என்று  அநுமன்  கூறுதலினும்  , அவர்  பிறந்த  குலம் ,  புக்க  குலங்களின்  பெருமைக்கேற்பக்  கற்பரசியாக  விளங்கிய  நிலையை  எடுத்துக்  கூறுதலே  இராமபிரானுக்கே  உவப்பாகும்  என்பது  கண்ட  அநுமன்  இங்ஙனம்  கூறினன் .  இவ்வுண்மையைக்  “கண்டனன்  கற்பினுக்  கணியை”  என்னும்  அநுமானது  முன்மொழியாலும்  நன்கறியலாம்  .  பிராட்டியின்பால்  சனக  குலமாகிய  உயர்குடிப்  பிறப்பிற்கேற்ற  அறிவொழுக்கங்களும் , உயர்ந்த  கற்பும்  ,  ‘அறையிருங்  கழலவற்  காணு  மாசையான் ‘  மேற்கொண்ட  பொறையும்  சிறந்து  காணப் பட்டமையால்  அநுமான்  குணிப்  பொருளாகிய  ‘நங்கையைக்  கண்டிலேன்’  எனவும்  ,  இன்ன  குணங்கள்  ஒருங்கு  கூடிச்  செழித்து  விளங்குதலைக்  கண்டேன்  எனவும்  கூறினன் .  இங்ஙனமே  ,  இராமன்  பிரிவிற்  பரதன்  எய்திய  துயர்  நிலையை  வருணிக்கப்  புக்க  கம்பர் , ‘அவலம்  ஈதென  எழுதிய  படிவ  மொத்து’  இராமபிரான்  கட்புலனுக்குக்  காணப்பட்டான்  என்பர் .   இராமபிரானும்  பிராட்டியும்  இளயபெருமாளும்  ஒருங்கு  செல்லும்  காட்சி நிலை  முறையே   வாய்மையும்  சீலமும்  பத்தியும்  உருக்கொண்டு  நடப்பன போலாமென்று  வடமொழி  நாடக  ஆசிரியராகிய  பாசகவி  கூறியதும்  ஈண்டு  நினைந்தின்புறத்தக்கது .  

            இங்ஙனம்  குணிப்  பொருளைக்  குணங்களாகிய  வருணிக்குஞ்  சிறந்த  கவிமரபு ,  செய்யுளெல்லாம் தெய்வமணங்  கமழத்  திருத்தொண்டர்  புராணத்தை  ஆக்கியருளிய   சேக்கிழார்  பெருமான் பாற்  சிறந்து  அமைந்துளதென்பதை ,  அத்  தொண்டர்  புராணத்தைப்  பயின்றார் எல்லாரும்  நன்குணர்வர் . அவர்  அடியார்களை  உவமை  முகமாகவும் ,  உருவக  முகமாகவும்  இந்  நிலையில்  வைத்துப்  புனைந்துரைப்பதைப் பல  இடங்களிற்  காணலாம் .  அடியாருட்  கண்ணப்ப நாயனார்  அன்பெனும்  குனத்தாற்  றலைசிறந்தவராவர் .  இது  ‘கண்ணப்பன்  ஒப்பதோர்  அன்பின்மை  கண்டபின்’  என்று  அன்பெனும்  ஆறு  கரை  புரளப்  பெற்ற  மணிவாசகனார்  அருளிய  திருவாசகத்திலுங்  கண்டது .  இவ்வுண்மையை  அவர்  வரலாற்றான்  நன்குணர்ந்த  சேக்கிழார்  அவரை  எங்ஙனம்  பாடுவர்  என்பது  சொல்லாமலே  விளங்கும் .  கண்ணப்பர்  காளத்தி  மலையில்  ஏறுங்கால் ,  நாணன்  என்பான்  வழிகாட்டிச்சென்றான் . ஆணையாஞ்  சிவத்தைச்  சார  அணையும்  ஐயர்  அவன்  பின்  சென்றார்  என்று  கூறுதலில்  உள்ளம்  ஒருப்படாத  சேக்கிழார் ,  நாணன்  வழிகாட்டி  மலையிற்  செல்லக்  கண்ணப்பர்  உடல்  பின்  சென்றதெனினும்  ,  அவர்  அன்புமுன்  நடந்ததென்று  முதிர்ந்த  அவ்வன்பின்  விரைவைக் குறிக்க ,

“நாணனும்  அன்பும்  முன்பு

      நளிர்வரை  யேறத்  தாமும்

 பேனுதத்  துவங்க  ளென்னும்

       பெருகுசோ  பானம்

ஏறினார்  என்றும் , மலையுச்சிக்கட்  சென்றவுடன்  அங்கணராகிய  இறைவன்  கருணை  நோக்கமாகிய  நயனத்தீக்கை  பெற்ற  அளவிற்  பிறவிக்குரிய  சார்புகளையெல்லாம்  ஒழித்துச்  சிவபிரான்  திருவடி  நீழலில்  அன்புருக்கொண்டு   விளங்கினார் என்பது  தோன்றப் 

“பொங்கிய  வொளியினீழற்  ! 

           பொருவிலன்  புருவமானார்”

என்றும்  அருளிச்  செய்வாராயினர் .  இங்கே  இறைவனை  “ஒளி”  என்னும்  குண  வடிவாகவும்  ,  கண்ணப்பரை  ‘ஒப்பற்ற  அன்பு’  என்னும்  குணவடிவாகவும்  கூறியது  அறிந்து  இன்புறத்தக்கது  .  யாண்டும்  விளங்கித்  திகழ்தல்  பற்றி  இறைவன்  ஒளியாகவும் ,  அவ்விறைநிலை  ஒன்றே  பற்றுக்கோடாகக்  கொண்டு ,  குழைந்து  உருகுதலின்  கண்ணப்பர்  அன்புருவாகவும்  கூறப்பட்டன ரென்க .  கண்ணப்பரது  முறுகிய  அன்பின்  நிகழ்ச்சியை  நாணன்முகமாகக்   கேட்ட  அவர்  தந்தை  நாகனென்பான் ,  மலைக்கட்  சென்று  அவரை  மீட்கப்  பல்லாற்றானும்  முயன்றும்  இயலாமையாற்  கைவிட்டுத்  திரும்பினான்  என்று  கூறுமிடத்து  அங்ஙனம்   மீளாமைக்குரிய  உண்மையை  உணர்ந்த  சேக்கிழார் .

“முன்புதிருக்  காளத்தி  முதல்வனார்  அருள்நோக்கால்

 இன்புறுவே  தகத்திரும்பு  பொன்னானாற்  போல்யாக்கைத்

தன்பரிசும்  வினையிரண்டுஞ்  சாருமல  மூன்றுமற

அன்பிழம்  பாய்த்திரிவார்  அவர்கருத்தின்  அளவினரோ”

என்று  பாராட்டிக்  கூறியுள்ளார் .  விதி  நெறி  நின்று  இறை  வழிபாடு  செய்த  சிவகோசரியார,  கண்ணப்பரின்  அன்புநெறி  வழிபாட்டிற்  கண்ட  இறைச்சி  முதலியவற்றை  அநுசிதம்  என்று  வெறுத்தாராக  அவர்  கனவில்  இறைவன்  எழுந்தருளிக்  கண்ணப்பரின்  குணம்  செயல்களெல்லாம்  நமக்கு  உவப்பானவாம்  என்று  திருவாய்  மலர்ந்தருளுங்கால் ,

“அவனுடைய  வடிவெல்லாம்  நம்பக்கல்  அன்பு”

என்று  அருளிய  உண்மையும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  கண்ணப்பர்  சிவகோசரியார்  ஆகிய  இப்பேரன்பர்கள்  இருவருடைய  வழிபாட்டுண் மையை  நன்குணர்ந்த  திருஞானசம்பந்தப்  பெருமான்  இவ்விருவர்  செயல்களும்  ஒன்றுக்கொன்று  முரண் பட்டனபோலக்  காணப்படினும்  இவற்றிற்கு   மூலகாரணமாக  உள்ளது  உண்மை  அன்பெனக்  கண்டு  தாம்  பாடிய  தேவாரத்தில்,

“ஊனொடுண்டல்  நன்றென  ஊனொடுண்டல்  தீதென

ஆனதொண்டர்  அன்பினாற்  பேசநின்ற  தன்மையான் “

என்று  அருளிச்செய்வாராயினர் .  “ஊனொடுண்டல்  நன்றென  “  என்பது  கண்ணப்பர்  கொள்கையாகவும்  ,  “ ஊனொடுண்டல்  தீதென “  என்பது  சிவகோசரியார்  கொள்கையாகவும்  குறிப்பிடப்பட்டனவாம் . அன்பு  காரணமாக  நிகழ்ந்தவளவில்  இவ்விருவர்  செயல்களும்  ஒக்குமாயினும் , கண்ணப்பர்  இறைவனை   “ஆர்வமுன்  பொங்க  ஆரா  அன்பினிற்  கண்டுகொண்டு “   பிறிதொன்றனையுங்  காணாமையானும் ,  தமக்கெனப்  பொறிகள்  புது  நுகர்ச்சியிற்   றலைப்படாமையானும் ,  கண்ணிடத்தப்பிய   எண்ணருஞ்  செயலானும் ,  ஈண்டு  அவர்  அன்பு  சிறந்துள  தென்பது  குறித்தே  அவர்  அன்புருவமாகப்  பாராட்டப்பட்டனர்  என்பது  தெளிவாம் .  இத்துணையுங்   கூறியவற்றால்  உயர்ந்த  குணங்களின்  முடிந்த  எல்லையிற்  நிற்பாரைச்  சிறந்த  கவிகள்  குணவடிவாக  வருணித்துரைப்பர்  என்னும்  கவிமரபின்  உண்மை  ஒறுவாறு  புலப்படுத்தப்பட்டவாறாம் .

        இனி , இங்கே  எடுத்துக்கொண்ட  ஞானத்தின்  திருவுருவைப்  பற்றி  ஆராய்வோம் .  இப் பொன்மொழி ,  சிவனடியார்  பெருமையைச்  செப்பமுறத்  தெளிந்துரைக்கும்  தெய்வப்  புலமைச்  சேக்கிழார்  பெருமான்  திருவாய் மலர்ந்தருளியதாகும் ,  பாண்டி  நாடும்  அரசனும்  சமண்  சமயம்  புக்குச்  சமயநெறியில்  முறை  பிறழ்ந்திருக்குங்கால்  அச் சைவச்  செங்கோலைத் தாங்கி  நின்ற  பாண்டிமா  தேவியராகிய  மங்கையர்க்கரசியாரும் ,  அமைச்சர்  பெருமானாகிய  குலச்சிறையாரும்  அமணிருளோட்டிச்  சைவக்  கதிர்  பரப்ப  எண்ணி  ஞான  இள ஞாயிறாக  விளங்கிய  திருஞானசம்பந்தப் பெருமானை  மதுரைக்கு   எழுந்தருளுவித்தனர் .  அதுகாலை ,  அப் பெருமான்  அமர்ந்த  திருமடத்தில்  அமண்கையர்  கொளுவிய  தீயின்  வெம்மை ,  திருவருட்பாக்கல் , இக்கொடுஞ்  செயற்கு  உடன்பட்ட  அரசன்  உடலைப்பற்றி வெதுப்பியது  .  அது  தீர்க்கும்  வாயிலறியாது  சமணர்  இடர்பாட்  டுழல்பொழுது  தேவியாரும்  அமைச்சரும்  அரசனையணுகித்  தீய  இப்பிணியே  யன்றிப்  பிறவியும்  தீர்த்தற்குரிய  ஞான  சம்பந்தர்  என்னும்  நாம  மந்திரத்தை  அம்மன்னவன்  செவியில்  ஓதினாராக  , அம்மந்திர  வன்மையால்  அரசன்  உணர்வுற்று  ,

“மன்னிய  சைவ  நீதி  மாமறைச்  சிறுவர்  வந்தால்

 அன்னவ  ரருளா  லென்னோய் அகலுமேல்  அழையும் “

என்று  கூறினன் .  அப்பணியை  மேற்கொண்டு   அரசியாரும்  அமைச்சரும்  விரைந்து  சென்று  திருமடத்தைச்  சார்ந்து ,   ஆங்கு  இள ஞாயிறு போல ஞான  ஒளிபரப்பி  விளங்கும்  திருஞானசம்பந்தப் பெருமானைக்  கண்களிப்பக்  கண்டனர் . இவ்வமயத்தில்  அன்னார்  காட்சிக்குத்  திருஞானசம்பந்தப் பெருமான்  எங்ஙனம்  காணப்பட்டனர்   என்பதைச்  சேக்கிழார்பெருமான் தம் உள்ளக்கிழியின்  உருவெழுதிக்  கண்டு  தெரிவிக்கப்  புக்குத்  தம்  அசக்  காட்சிக்குப்  புலனாகிய  அத்திருவுருவை  அன்பு  நலங்  கனிந்தொழுகும்  ஓர்  அருண்மொழிப்  பாடலால் விளக்கியருளினார் . அத் திருப்பாட்டின்  தலைப்பில்  இப்பொன்மொழி  விளக்கமுற்றுத்  திகழ்கின்றது . அப்  பாடலை  ஈண்டுக்  காண்பாம்  :

“ஞானத்தின்  திருவுருவை  நான்மறையின்  தனித்துணையை

வானத்தின்  மிசையன்றி  மண்ணில்வளர்  மதிக்கொழுந்தைத் 

தேன்நக்க  மலர்க்கொன்றைச்  செஞ்சடையார்  சீர்தொடுக்குங்

கானத்தின்  எழுபிறப்பைக்  கண்களிப்பக்  கண்டார்கள் “

               இப்பாசுரத்தில்   காண்டற்குரிய  செயப்படுபொருள்களைப்  புலப்படுத்தும்  இரண்டாம்  வேற்றுமை   யுருபையுடைய  சொற்கள்  நான்குள்ளன.  அவை  முறையே  “திருவுருவை”  “தனித்துணையை”   “மதிக்கொழுந்தை” “கானத்தின்  எழுபிறப்பை” என்பனவாம் . இந்  நான்கும்  தனித்தனியே  ‘கண்களிப்பக்  கண்டார்கள்’  என்புழிக்  காண்டல்  வினையைக்  கொண்டு  முடிந்தன .இரண்டாம்  வேற்றுமைக்கு   “வினையே  வினைக்குறிப்  பவ்விரு  முதலிற்   றோன்றும்”  எனவும்   ‘நோக்கலின்’  எனவும்  கூறிய  தொல்காப்பிய  விதிக்கிணங்கக்  ‘கண்டார்கள்’  என்னும்  தெரி  நிலை  வினைமுற்று  முடிக்குஞ்  சொல்லாயிற்று . இன் நான்கும்   திருஞானசம்பந்தப் பெருமானைக்  குறிப்பனவாம் .  கனிந்த  பேரன்புடைய  மங்கையர்க்கரசி யாரும்   குலச்சிறையாரும்  சம்பந்தப்  பெருமானை  ஆர்வமிகக்  காணுங்கால்,  அவர்கள்  கட்புலனுக்கு  அப் பெருமானுடைய  உள்ளமும்  மெய்யும்  மொழியுமாகிய  மூன்று  கரணங்களும்   இங்ஙனம்  புலப்பட்டனவென்று  சேக்கிழார்  பெருமான்  தெளிந்து  , ஒரு  வரையறையைத்  தம்  உள்ளத்த மைத்து   உளங்குளிரப்  பாடவாராயினார் .  உட்கருவியாகிய  தூய  உள்ளத்தின்  இயல்பைக்  குறித்து,  ‘ஞானத்தின்  திருவுருவை’  ‘நான்மறையின்  தனித்துணையை’   என்னும்  இரண்டு  தொடர்மொழிகளானும்,  மழவிளங்குழவிப்  பருவத்ததாகிய  தூய  உடலினியல்பைக்   குறித்து,  ‘வானத்தின்  மிசையன்றி  மண்ணில் வளர்  மதிக்கொழுந்தை’  என்னும்  தொடர்  மொழியானும் ,  சிவ  பரம்பொருளைப்  பற்றியே  நிகழும்  இசைத் தமிழ்  பயிலும்  திருவாயி  னின்றும்  வெளிப்படும் தூய  மொழி  இயல்பைக்  குறித்துச்  ‘செஞ்சுடையார்  சீர்  தொடுக்குங்கானத்தின் எழுபிறப்பை’  என்னும்  தொடர்  மொழியானும்  புலப்படுத்தார்  என்பது  உய்த்துணர்வார்க்கு  நன்கு  புலனாம் ,  சம்பந்தப் பெருமான்  சித்தம்  சிவமாகப்  பெற்ற  செவ்வியராதலின்  அவருள்ளத்தின்  தூய  நிலை  நோக்கி   ‘ஞானத்தின்  திருவுருவை’  என்றார் .  அன்பின்  முடிந்த  எல்லையினின்ற  கண்ணப்ப  நாயனாரை  ‘அன்பு  பிழம்பாயினார்’  பொருவிலன்  புருவமானார்’  என்று  கூறியது போலவே ,  மெய்யுணர்வின்  முடிந்த  எல்லையிற்  றிகழும்  ஞானசம்பந்தப்பெருமானை   ‘ஞானத்தின்  திருவுரு’   என்றது  மிகவும்  பொருந்தியதொன்றாம்  .  இறைவனை  அடைதற்குரிய  நெறிகள்  பலவற்றுள்  அன்பு  நெறியும்  அறிவு நெறியுமே  சிறந்தனவா  மென்பது பெரியார்  கண்ட  முடிபு  அன்பும்  ஞானமுமாகிய  இவ்விரு  குணங்களும்   கண்ணப்பர்  ஞானசம்பந்தராகிய  இருவரிடத்தும்  ஒருங்குள்ளன .  வெனினும் , வெளிப்பட்டு  விளங்கிய  சிறப்புப்பற்றி  அவ்விருவரையும்  முறையே  அன்புருவம்  எனவும் , ஞானத்தின்  திருவுரு   எனவுங்  கூறினர் . சம்பந்தப்பெருமான்  இறைவியின்  திருமுலைப்பாலுண்டு  ,  அந் நிலையில்  ஞானம்  எய்தினார் . என்பதைச்  சேக்கிழார்  பெருமான் ,

“சிவனடியே  சிந்திக்கும்  திருப்பெருகு  சிவஞானம்

பவமதனை  யறமாற்றும்  பாங்கினிலோங்  கியஞானம்

உவமையிலாக்  கலைஞானம்  உணர்வரிய  மெய்ஞானம் 

தவமுதல்வர்  சம்பந்தர்  தாமுணர்ந்தா  ரந்நிலையில் “

என்னும்  திருவிருத்தத்தால்  விளக்கினார்  .  இப்பாடலிற்  குறிக்கப்பட்ட  ஞானம் , சிவனடியே  சிந்திக்கும்  திருப்பெருகு  சிவஞானமாகிய  உவமையிலாக்  கலைஞானமும் ,  பவமதனை  அறமாற்றும்  பாங்கினில்  ஓங்கிய  ஞாமாகிய  உணர்வரிய  மெய்ஞ் ஞானமும்  என  இரண்டாகும்  ஆகவே , நூலறிவும்  அநுபவ  உணர்வுமாகிய  அபரஞான  பரஞானங்களை  ஒருங்கெய்தினார்  என்பதே  முடிந்த  பொருளாகும் .  இறைவன்  றிருவருட்  சத்தியாற்  பெற்ற  ஞானமே  சம்பந்தப்பெருமானுக்கு  உள்ளத்தின்  தூய  இயல்பாகத்  திகழ்தலை  நோக்கி ,  “ஞானத்தின்  றிருவுரு”  என்றார் .  பண்பாகிய  ஞானம்  பண்பியாகிய  ஒரு  வடிவைக்  கொள்ளப்புகின்  இதுபோலுஞ்  சிறந்த  பிழம்பு  அதற்கரிதென்பார்  ‘ஞானத்தின்  உரு,’   என்னாது  ‘திருவுரு’  என்றார் . ஈண்டு  மனமொழி  மெய்களாகிய  மூன்றனுள்  மெய்யின்  தூய்மையையும் ,  மொழியின்  தூய்மையையும்  புலப்படுத்துவார் ,  முறையே  “மதிக்கொழுந்தை”  எனவும் ,  ‘கானத்தின்  எழுபிறப்பை’    எனவும்  ஒவ்வொன் றே  கூறிய    ஆசிரியர்  உளத்  தூய்மைக்குத்  ‘திருவுருவை’   ‘தனித்துணையை’  என்று  இரண்டு  பொருள்  கூறியதன்  கருத்தை  ஆராய்தல்  வேண்டும் .

“ஞானமாவது  வீடு  பயக்கும்  உணர்வு “ 

என்பர்  பரிமேலழகர் . 

“எப்பொருள்  யார்யார்வாய்க்  கேட்பினும்  அப்பொருள்

 மெய்ப்பொருள்  காண்ப  தறிவு “

என்பது  உலகியலறிவின்   இலக்கணமாகவும் ,

“எப்பொருள்  எத்தன்மைத் தாயினும்  அப்பொருள்          

 மெய்ப்பொருள்  காண்பதறிவு “                    

என்பது  வீடு  பயக்கும்  உணர்வாகிய  மெய்யுணர்வின்  இலக்கணமாகவும்  பொய்யில்  புலவர்  பொருளுரையிற்  காணப்படுகின்றன .  பொருளிரண்டனுள்  முன்னது  சொல்லா  லறியப்படுவது ;  பின்னது  இயங்குதிணையும்  நிலைத்திணையுமாகிய  உலகத்தைக்  குறிப்பது . இவ்வுண்மை  கருதியே ,  முறையே  “யார்  யார்  வாய்க்  கேட்பினும்”எனவும் ,  “எத்தன்மைத்  தாயினும்”  எனவும்  கூறுவாராயினர் . முன்னது  ஒருவர்குக்  கல்வி  கேள்விகளானாகிய   செயற்கை  அறிவுக்குக்  காரணமாகிய  மதிநுட்பம்  என்னும்  இயற்கை  அறிவென்பதும் ,  அஃது  உயர்ந்தார்  ,  இழிந்தார்  நட்டார் ,  பகைவர்  யாவராயினும்  அவர்  வாய்க்கேட்கப்படுஞ்  சொல்லைப்  பொருளின்  பயனோக்கிக்  கொள்ளுதற்கும்  ,  தள்ளுதற்கும்  உரிய  கருவியாம்  என்பதும்  அறிகின்றோம் .  பின்னது,  இயங்கு  திணையும்  நிலைத்திணையுமாகிய  உலகத்துப் பொருள்களின்  கற்பனைகளைப்  போக்கி ,  நில  முதலிய  தத்துவங்களின்  தொகுதியென  அறிதற்கும் ,  அவற்றைத்  தத்தம்  காரணங்களுளொடுக்கிக்கொண்டு  சென்று  முடிவிற்  காரண  காரிய  மிரண்டுமின்றி  நிற்பதாகிய  பரம்பொருளை  உணர்தற்கும்  உரிய  கருவியாமென்பது  புலனாம் .  இவ்வுண்மை  யறிந்தே  முன்னது  பொருட்பாலில்  அரசியற்  பகுதியினும்  பின்னது  அறத்துப்பாலில்   துறவறப்  பகுதியினும்   அமைத்துக் கூறப்பட்டனவாம் . இவ்வுண்மையையே  சமய  நூலார்  ஞானம்  அபரம்  பரமென  இருதிறப்படுமென்று  வகுத்துக்  கூறுப . அவ்வகை  முன்னருங்  கூறப்பட்டது .அபரஞான  மென்பது  மறை  ஆகமம்  முதலிய  நூல்களின்  வாயிலாக  உண்டாவது ;  பரஞான  மென்பது  அநுபவ  வாயிலாக  நிகழ்வது ;  அபரஞானமாகிய  நூலறிவே  பரஞானமாகிய  அநுபவ   வுணர்வைப்  பயக்குமாதலான்   அவ்விரண்டும்  அழிவி  லின்ப  மெய்தும்   ஆர்வமுடைய  உயிர்க்கு  இன்றியமையாதனவாம் .  இவ்வுண்மையைப்  புலப்படுத்தற்கே  , திருநாவுக்கரசு  நாயனார்  ,

“உடம்பெனும்  மனைய  கத்து  ளுள்ளமே  தகழி  யாக

மடம்படு  முணர்நெய்  அட்டி  உயிரெனுந்  திரிம  யக்கி

இடம்படு  ஞானத்  தீயால்  எரிகொள  இருந்து  நோக்கிற் 

கடம்பமர்  காளை  தாதை  கழலடி  காண  லாமே “

என்னும்  தேவாரத்  திருப்பாசுரத்தில் , “மடம்படும்  உணர்நெய்”   எனவும் ,  “இடம்படு  ஞானத்தீ”  எனவும்  ஞானத்தை  உருவகவுறுப்பு   இரண்டாகக்  கொண்டு   திருவாய்மலர்ந்தருளினார் . ஈண்டு ,  “மடம்படும்  உண்ர்வு”  என்பது அறியாமை  கெடுதற்  கேதுவாகிய  அபரஞான  மெனவும் ,  “இடம்படு  ஞானத்தீ”  என்பது  அநுபவ  உணர்வாகிய  பரஞான  மெனவும்  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  முன்னது  நெய்யாகவும் ,  பின்னது  தீயாகவும்  உருவகஞ்  செய்யப்பட்ட  இயைபு  ஈண்டுக்  கருதத்தக்கது ,

“கற்றறியேன்  கலைஞானம்  கசிந்துருகே  னாயிடினும்”

என்று  மணிவாசகனார்  கூறியருளியதும்  இவ்வுண்மையை   நிலைப்படுத்துவதாகும் . அபர ஞானத்தைப்  பாசஞான  பசுஞானங்களாகவும்,  பரஞானத்தைப்  பதிஞானமாகவும்   சைவநூல்  கூறும் . பதி ஞானம் ,  சிவ ஞானம் ,  மெய்யுணர்வு  , அநுபவ வுணர்வு  என்பன  ஒரு  பொருளனவாம் .  சிவ ஞானமே  சிவாநுபவத்திற்கு  நேர் வாயிலாகும்  .  “ஞானத்தால்  வீடு”  எனவும் ,

“பாச ஞானத்தாலும்  பசு ஞானத்தாலும் 

         பார்ப்பரிய  பரம்பரனைப்  பதி ஞானத்தாலே 

 நேசமொடு  முள்ளத்தே  நாடி” 

எனவும்  சைவ  சித்தாந்தம்  புலப்படுக்கும் . வீட்டின்பத்திற்குச்  சிவ ஞானம்  நேர்வாயிலாதலைத்   திருநாவுக்கரசு  நாயனாரின்  முத்தி   நிலையை  விளக்க  வந்த  ஆசிரியர் ,

“நண்ணரிய  சிவானந்த  ஞானவடி  வேயாகி

 அண்ணலார்  சேவடிக்கீழ்   ஆண்டவர  செய்தினார்”

என்று  கூறினார் .  “ஞான வடிவேயாகிய”  என்பது  ஈண்டு  கருதத்தக்கது .  காமம்  முதலிய  குற்றங்களையெல்லாம்  ஒழித்தற்கும்  இச் சிவ ஞானமொன்றே  கருவியாமென்பது  ஆன்றோர்  அநுபவம் .  சேக்கிழார்  பெருமான்  இவ்  வநுபவ    வுணர்ச்சியிற்  பெரிதும்  தலைப்பட்டவர்  என்பதை  உலகியல்  நிகழ்ச்சிக்கு  உவமை  கூறுமிடத்தும் ,  அவர்  திருவாக்கில்  இவ் வுண்மை  வெளிப்படுதல்  கொண்டு  தெளியலாம் . ஏனாதிநாயனார்  அதிசூரன்  என்பவனோடு  செய்த  வாட்போரில்  அதி சூரனுடைய  படைவீரருட்  பலர்  இறந்தனராக , எஞ்சி  நின்றா ரெல்லாரும்  போர்க்களத்தை  விட்டுப் புற முதுகிட்டோடினர்  என்பதை  உவமிக்கப் போந்த  ஆசிரியர் , 

“தலைப்பட்டா  ரெல்லாரும்  தனிவீரர்  வாளிற் 

 கொலைப்பட்டார்  முட்டாதார்  கொல்களத்தை  விட்டு

நிலைப்பட்ட  மெய்யுணர்வு  நேர்பட்ட  போதில்

அலைப்பட்ட  ஆர்வமுதற்  குற்றம்போ  லாயினார் “

என்று  கூறியருளினர் .  மெய்யுணர்வின்  முன்னர்க்  காம  வெகுளி  மயக்கங்கள்  நில்லா  என்னும்  உண்மையையே  ஈண்டு  உவமையாக்கிய  நயம்  பாராட்டத்தக்கது . இன்பச் சுவையை  வருணிக்குங்காலும்  தெய்வமணங்  கமழப்  பாடும்  இப்புலவர்   பெருமான்  பாடல்களில்  இத்தகைய  உவமை  முதலியன  அமைதல்  இயல்பேயாம் .  ஆதலின்  சிவ ஞானச்  செல்வர்களாகிய  மங்கையர்க்கரசியார்க்கும்  ,  குலச்சிறையார்க்கும்  திரு ஞானசம்பந்தப் பெருமான்  காட்சியில்  உளத்தூய்மை பற்றி அப்பெருமான்  றிருவுரு  மெய்யுணர்வின்  வடிவாகப்  புலப்பட்டதென்பதைத்  தெய்வக்  கவிஞர்  திருவுள்ளம்  உணர்ந்தமையால்  ,  “ஞானத்தின்  றிருவுரு  “  என்று முதற்கட்  கூறினர் . அத்தகைய  ஞானம்  பரமாகவும்  அபரமாகவும்  இரு வகைப்படுமென்பதை  யுட்கொண்டும்  அவ்  விருவகை  ஞானத்தையும்  அம்மையா  ரருளாற்   சம்பந்தப் பெருமான்  ஒருங்கெய்தின  ரென்னும்  உண்மையை  உணர்ந்தும் ,  உளத்தூய்மைபற்றிப்  பர ஞான  வடிவமாக  விளங்குதலைக்  குறித்து   “ஞானத்தின்  றிருவுருவை”  என்றருளிய  ஆசிரியர்  அபர ஞானமும்  அவர்க்கு  எளிதிற்  கைவந்த  தென்பதைப்  புலப்படுத்தவே  , “நான் மறையின்  தனித்துணையை  “  யென்றுங்  கூறினர் .  பர ஞானமாகிய மெய்யுணர்வின்  வடிவாக  விளங்கும்  சம்பந்தப்பெருமான்  அதனின்  தாழ்ந்த  அபர ஞானமாகிய  நூலுணர்வின்  வடிவாகவும்  விளங்கினாரென்று  கூறுதல்   அப்பெருமான்  பெருமைக்கு  ஏலாததொன்றென்பது கருதியும்  ,  அந்  நான்மறை   யறிவாகிய  அபர ஞானம்  பேரின்பமெய்த  முயலும்  உயிர்களின்  பொருட்டு  என்றும்  அழியாத நிலை  பெற்றிருக்க வேண்டும்  என்பது  அப்பெருமான்  திருவுள்ளமாதலை  யுணர்ந்தும்  அவ்  வபர  ஞானத்திற்கு  அவர்  அருட்பாசுரங்களாற்  பெரிதும்  துணை  நின்றவர்  என்பதைப்  புலப்படுத்தவே  “நான்மறையின்  தனித்  துணையை”  யென்றுங்  கூறியருளினார். சம்பந்தப் பெருமான்  முதலிய  சமய  குரவரருளிய  தேவாரத்  திருப்பாசுரங்கள்  தமிழ்  மறையாக  விளங்குகின்றன வாதலால் ,  அபர ஞானத்திற்கு  ஒப்பற்ற  துணையாகவுள்ளா ரென்று   அப்பெருமானைக்  குறிப்பிட்டது  பெரிதும்  போற்றத்தக்கதே  .  பர ஞானமாகிய  மெய்யுணர்வின்  வடிவாகவும் ,  அபர ஞானமாகிய  நூலறிவிற்குச்  சிறந்த  துணையாகவும்  அப்  பெருமான்  காணப்பட்டாரென்று  மரபு  பிறழாது   வரையறைப்படுத்துரைத்த  நயம்  அறிஞருள்ளத்தை  மிகவும்  இன்புறுத்துவதாகும் . இங்ஙனமே  இப் பெருமானைத்  தோணிபுரத்தவர்  தாம்  எதிர்கொண்டு  துதிக்குங்கால் ,  “கலைஞானத் தாழிய  கடலே”  எனவும் ,  “வளர் ஞானப்  பொறையணி முகிலே”  எனவும்  இருதிறத்து  ஞான  வடிவமாகக்  கொண்டு  பாராட்டினர்  என்று  பிறிதோரிடத்தும்  ஆசிரியர்  புலப்படுத்தியுள்ளார் .  இங்ஙனம்  சம்பந்தப் பெருமான்  இவ்விரு ஞானங்கட்கும்   எல்லையாக   விளங்குதலைத்   தெளிவுறுத்தற்கே   மெய் மொழிகளின்  தூய்மைபற்றித்  தனித்தனியே  செயப்படுபொருள்  ஒரோவொன்றாகவும் ,  உள்ளத்தின்  தூயவியல்புபற்றி  அதற்கு  மாத்திரம்  செயப்படுபொருள்  இரண்டாகவும்  வகைபடுத்து ரைத்தனர் .  ஈண்டு  ஆசிரியரது  நுண்மாணுழைபுலம்  அறிஞருள்ளத்தைப்  பெரிதும்  இன்புறுத்துவதாகும் .  

            இனி , சம்பந்தப் பெருமான்  றிருமேனியின்  ஒளியும்  மழவிளங்  குழவிப்  பருவமும்  பொலிந்து  திகழ்தலைப்  புலப்படுத்தற்கே  ,  “வானத்தின்  மிசையன்றி  மண்ணில்  வளர்  மதிக்கொழுந்தை  “  என்றார் .  இஃதோரணி யாகும் .  மதி  வானத்தினூர்ந்தியங்குவது  இஞ்  ஞானமதி  மண்ணுலகிற்  றிகழ்தின்புறுத்துவது  ஈண்டு  வளர்மதியென  வினைத்தொகையாகக்  கூறியதன்  நுண்பொருள்  ஆராயத்தக்கது .  வளர்மதிக்குப்  பதினாறு  கலைகள்  நிரம்பியதும்  மேல்  வளர்ச்சியின்று . அதுபோலச்  சம்பந்தப் பெருமான்  றிருவுடல்  பதினாறியாண்டு  வளர்ச்சியுற்றுப்  பின்  பேரொளிப்  பிழம்பாகிய  இறை வடிவில்  மறைந்தது ;  இவ்  வுண்மை  புலப்படுத்தற்கே  “வளர்மதி”  யென்று  கூறினார்  போலும் .  இங்ஙனமே  ,  கண்ணப்ப  நாயனார்  புராணத்திலும்  ,

“பான்பதி  உவரி  யீன்றா  லெனமகப் பயந்தபோது”

என்று  அவர்  அவதாரத்  தொடக்கத்தில்  அன்புருவாகிய  கண்ணப்பரைப்  பான்மதியாகவும் ,  அவர்  தோன்றிய  வேடர்  குலத்தை  உவர்க் கடலாகவும்  உவமித்துக்  கூறினர் . அதற்கேற்ப  அந்  நாயனார்க்கு  வீட்டு  நிலை  யெய்தும்  தருணத்திற்  பதினாறாண்டு  நிறைவுற்றது எனக்  குறிப்பிடப்  புக்க  ஆசிரியர்,

கலைவளர்   திங்களே  போல்

 எண்ணிரண்  டாண்டின்  செவ்வி யெய்தினார் “

என்று  தெளிவுறுத்தருளினர் .  இத்தகைய  இயைபையே  திரு ஞானசம்பந்தப் பெருமான்  வரலாற்றினும்  புலப்படுத்தாரெனக்  கோடல்  பொருந்துவதாகும் .

“கண்ணிறை  கதிரே , கலைவளர்  மதியே” 

எனப்  பிரிதோரிடத்துக்  குறிப்பிடுதலும்  அறியத்தக்கது .  ஒளி  தீயினும்  மணியினும்  காணப்படினும்  தீயொளி  சுடுவதாக ,  மணியொளி  குளிர்ந்திருத்தலையும்  ,  அங்ஙனமே  ஞாயிற்றினொளி  வெய்யதாக , திங்களொளி  தண்ணிதாக  இருத்தலையும்  உணர்கின்றோம்  .  சம்பந்தப் பெருமான்  திருமேனியில்  திகழும்  ஒளி  தண்ணிதாதலையும் ,  அவ்வொளியின்  செழுமையும்  மென்மையும்  கொழுந்துபோற்   காணப்படுதலையும்  புலப்படுத்தற்கே  “மதிக்கொழுந்தை”  என்று  கூறினர் .

            இனி , சம்பந்தப் பெருமான் மொழியின் தூயவியல்பு  பற்றிக் “கானத்தின்  எழுபிறப்பை”  என்றார் .  அவர்  அவதாரப்  பயன்  கூறுமிடத்தும் , பிறிதோரிடத்தும்  முறையே

“இசைமுழுதும்  மெய்யறிவும்

          இடங்கொள்ளும்  நிலைபெருக “

எனவும் ,  “பண்ணியல்  கதியே”  எனவும்  கூறியருளினார் . அப் பெருமான்  தம்  மெய்யுணர்விற் கண்டநுபவித்த  பொருள்களை யெல்லாம்  செழுந்தமிழ்  மொழியில்  தேனினும்  இனிய  இசைப்பாடலில்  இயைந்து  உளங்  குளிர்ந்து பாடி ,  வண்டமிழ்  செய் தவம் நிரம்பச்  செய்தவராதலானும் ,  அத் திருப்பாசுரப்  பொருளெல்லாம்  சிவபரம்  பொருளையே  பற்றினவாதலானும், “தேனக்கமலர்க்  கொன்றைச்  செஞ்சுடையார்  சீர்தொடுக்குங்கானத்தின்   அழுபிறப்பை “ யென்றார் .  அப்பெருமானை,  “நாளும்  இன்னிசையால்  தமிழ்ப்  பரப்பும்  ஞானசம்பந்தன்  “  எனத்  திருநாவலூரர்  கூறிய  அடை  மொழிகளாலும் ,  அவர் தமிழிசையிற்  சிவபரம்  பொருளைப்  பாடுதலில்  மிக்க  விருப்பமுடையவ ரென்பதை  உணரலாம் .  கானத்தின்  எழுபிறப்பாவது, இசைக்குரிய  குரல்  துத்தம் முதலியனவாம் . இவற்றைச்  “ச ரி க ம ப த நி “  என்று  கூறுவர்  வட நூலார் .  பிறப்பு  அழுவகைத்தாதலின்  இசைக்கும்  எழுபிறப்புக் கூறியது  பொருத்தமே .  இவ்  வெழுவகைப்  பிறப்பையுடைய  இசை  வடிவமாகவும் , அப்பெருமான்  காணப்படுதலால் , “கானத்தின்  எழுபிறப்பை “  யென்றார் .  அக் கானமும்  உலகியற்  பொருள்  பற்றி  நிகழுமாயின்  சிறந்ததாகா  தென்னுங்  கருத்தால் , “செஞ்சுடையார்  சீர்தொடுக்கும்   கான” மென  விசேடித்  துரைக்கப்பட்டது  இறைவன்  “ஏழிசையாய்  இசைப்பயனாய் “  விளங்கு  மியல்பினராதலின்  அப்  புரமெரித்தார்   திருமகனாராகிய  சம்பந்தப்பெருமானுக்கும்  அது  பொருந்துவதாகும் .  

       இனி , மன மொழி மெய்களின்  தூயநிலை  பற்றி  இங்ஙனம்  கூறிய  பொருள்களிற்  பிறிதோரியையும்  நம்முள்ளத்தை  இன்புறுத்துவதாகும் . அஃதாவது , மன மொழி மெய்களாகிய  மூன்றன்  தூய்மைக்கும்  ஞானமே  வெளிப்படையாகவும் , குறிப்பாகவும்  இயைந்து  விளங்குதலாம் .  உளத்தூய்மை பற்றி  , “ஞாத்தின்  திருவுருவை  நான்மறையின்  தனித் துணையை “  என  வெளிபடை யாகக்  கூறினார் . உடற்றூய்மை  பற்றி  ‘மதிக்கொழுந்தை’ யெனக்  குறிப்பிற்  பெற  வைத்தார் .  மதி  கலைகளை  யுடயதென்பதனாலும் , கல்விக்கு  உவமை  கூறுங்கால்  “திங்களன்ன கல்வியும்”  என  இதனையே  ஆன்றோர்  எடுத்தாளுதலானும்  குறிப்பிற்  பெறப்பட்டதாம் .”கலை வளர் மதியே”  யென  முன்னர்  எடுத்துக்காட்டியதும்  ஈண்டு  இயைபுடைத்தாம் . சீவகன் ,  “கோள்மின்னு  மீன்போற்  குளிர்மாமதித்  தோற்றம்”  ஒத்திருந்தான் என்று  கூறிய  சீவகசிந்தாமணிப்பாடற்  குறிப்பில் ,  “ஞாயிறு  போல்வானைக்  கலையைத்  தோற்றுவிப்பதாக  இருத்தலின்  ஈண்டு  மதியை  உவமை  கூறினார்”  என்று  நச்சினார்க்கினியர்  கூறியதனாலும்  இவ்வுண்மை  புலனாம் .  மூன்றாவதாகிய  மொழித்தூய்மை  பற்றிக்  கூறிய  இடத்தில்  கானத்திற்குச்  “செஞ்சுடையார்  சீர்தொடுக்கும்”  என்று  அடைபுனர்த்ததால்  ஆண்டும்  ஞானம்  புலனாதல்  நோக்கத்தக்கது .  

         இனி , இப் பாசுரத்தில்  இரண்டாம்  வேற்றுமைக்கு  முடிக்குஞ்  சொல்லாகவுள்ள  “கண்களிப்பக்  கண்டார்கள்”  என்பது  வியப்பின்  பாலாதாகிய  இன்பத்தை அளிப்பதாகும் . இங்கே  கூறப்பட்டனவெல்லாம்  கண்களிப்பக்  காண்டற்கியலாதனவாம் . “ஞானத்தின்  திருவுருவம்  நான்மறையின்  தனித்  துணையும்  “  பொறிகளா  லறியப்படாத  குணங்களாதலானும் , மதி  கட்புலனறியத்தக்க  தாயினும்  ,  மண்ணில்  வளர்  மதிக்கொழுந்து  இல்  பொருளாக  நின்று  காணப்படாத  தொன்றாகலானும் ,  “கானத்தின்  எழுபிறப்பு”  செவியுணர்விற்கன்றிக்  கட்பொறிக்குப்  புலனாவ தொன்றன்மையானும் , இம் மூன்றும்  கண்ணாற்  காணப்படாதனவாகவும்  , அவற்றைக்  “கண்களிப்பக்  கண்டார்கள்”  என்றது  வியப்பின்பாலதாகும் .  காண்டற்  கியலாப்  பொருள்களைக்   “கண்களிப்பக்  கண்டார்கள்”என்று  கூறுதல் எவ்வாறு  பொருந்துமெனின் , கண்ட  அதிகாரிகளின்  ஞானமும்  பத்தியும்  இங்ஙனம்  காண்டற்குக்  கருவிக  ளாயினமையிற்  பொருந்து மென்க.  இஃது  இவ்வியப்பின்  பாலதாய்  நின்று  இன்பம்  விளைவிப்பதாகும் .  புறக்காட்சிக்குப்  புலனாகாத  பொருள்கள் , காணும்  அதிகாரிகளின்  சிறப்பியல்பாகிய  அகக்  காட்சிக்குப்  புலனாமென்னும்  உண்மையைக்  கண்ணப்ப நாயனார்  புராணத்திலுங்  காணலாம் .  ஞானத்தின்  திருவுருவா கிய   சம்பந்தப் பெருமான்  அன்பின்  திருவுருவாகிய  கண்ணப்ப நாயனாரின்  திருவுருவத்தைத்  தரிசித்த  முறையைக் கூறுங்கால் , மரபு  பிறழாமல்  அழகுற  இவ்வுண்மையை  புலப்படுத்தப்பட்டுள்ளது .   சம்பந்தப் பெருமான்  முதலில்  இறைவன்  திருவுருவத்தை  வணங்கிப்  பின்னர் , கண்ணப்பர்  திருவுருவத்தை  வணங்கினாரென்று  கூறும்பொழுது  கண்ணப்பர்  வணக்கம்  இறை  வணக்கத்தின்  பின்  நிகழ்ந்ததெனினும்  ,

“வீழ்ந்தெழுவார்  கும்பிட்டபயன் காண்   பார்போல்

            மெய்வேடர்  பெருமானைக்  கண்டு  வீழ்ந்தார்”

என்று  அதனை  இறை வணக்கத்தின்  பயனாகக்  கூறியது  உணர்வார்  உள்ளத்தைப்  பெரிதும்  கனிவிப்பதாகும் . ஆண்டுக்  கண்ணப்பர்  வணக்கம்  இறைவணக்கத்தின்  பயனாதற்குக்  காரணம்  என்னாங்கொல்  என்று  ஐயுறுவாரைத்  தெளிவிக்கும்  முகமாக ,

“உள்ளத்திற்  றெளிகின்ற  அன்பின்  மெய்மை

        உருவினையும்  அவ்வன்பின்  உள்ளே  மன்னும்

 வெள்ளச்செஞ்  சடைக்கற்றை  நெற்றிச்  செங்கண் 

        விமலரையு  முடன்கண்ட   விருப்பம்  பொங்கி

 ………………………………………………………………………………  வணங்குகின்றார் “

என்று  கூறியருளினர் .  கண்ணப்பர்  வடிவத்தை  அன்பின்  மெய்மை  யுருவாகவும்  ,  “அன்பிலே  விளைந்த  ஆரமுதே “  என்று  மணிவாசகனார்  திருவாய்மலர்ந்தருளியபடி ,  அவ்  அன்புருவத்தில்  இறைவன்  விளங்கு தலையுங்  கண்டார்  என்றார் . இலிங்க  உருவத்தினும்  அன்புருவத்திற்  காணப் படும்  இறைவன்  விளக்கம்  சிறந்ததாகலின்   இங்ஙனம்  கூறப்பட்டது .  கண்ணப்பர்  வடிவத்தை  அன்புருவமாகவும்  ,  அவ் வன்பிலே  இறைவன்  விளங்குதலையுங்  உள்ளுணர்வாற்  காண்டற்குரிய  தகுதி  ஞானத்தின்  திருவுருவமாகிய   சம்பந்தப் பெருமான்பால்  உள்ளதென்பது இந் நிகழ்ச்சி யாற்  புலனாம் .  இங்ஙனமே  ,  ஞானசம்பந்தப் பெருமானுடைய  உள்ளம்  உடல்  மொழிகளின்  தூய  இயல்பு  பற்றி  அவரை  ஞானத்தின் திருவுரு  முதலியவாகக்   காண்டற்குரிய  தகுதி ,  பங்கயச்செல்வியாகிய  பாண்டிமா  தேவியார்க்கும் , அடியவர்தங்களைக்  கண்டால்  குணங்கொடு  பணியும்  குலச்சிறையார்க்கும்  உளதாயிற்று  என்பது  போதரும் .

           இத்துணை  “ஞானத்தின்  திருவுரு “  என்பது  பற்றி  ஆராயு முகமாக  அப்  பொன்மொழியை  முதற்கணுடையதாக   அருண்மொழித்  தேவரருளிய  திருவிருத்தத்திற்கு   ஒறுவாறு  நுண்பொருள்  விளக்கம்  கூறியதாகும் .

             இதுகாறும்  கூறியவற்றாற்  போந்த  தொகைபொருள்  வருமாறு :- 

                                    உலகத்துப் பொருள்களுள்  ஞான முதலிய  குணங்கள்  உண்மை மாத்திரை  உணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன  என்பதூஉம் , தெய் வங்களுள்லும் ,  மக்களுள்லும்  சிறந்த  குணங்களான்   மேம்பட்டாரை  அக் குணவடிவாக  வருணித்தல்  பெரும்புலவர்  இயல்பென்பதூஉம் ,  அந்  நெறியினின்று   வளம்பெறப்  பாடிய  சேக்கிழார்  , கம்பர்  பாடல்களில்  அப் பொருள்  இன்னின்ன படியாகப்  புலனாமென்பதூஉம்  ,  கண்ணப்ப நாயனார்  முடிந்த  அன்பின்  எல்லைக்கு  இலக்காக  விளங்குதல்  நோக்கி ,  அவர்  பலவிடத்தும்  அன்பின்  திருவுருவாக   வருணிக்கப்பட்டுள்ளார்  என்பதூஉம்  ,  திரு ஞானசம்பந்தப் பெருமானை    மங்கையர்க்கரசியாரும் ,  குலச்சிறை  நாயனாரும்  தரிசிக்குங்கால் , அன்னார்  கட்புலனுக்குச்   சம்பந்தர்  ஞானத்தின்  திருவுரு  முதலியவாகக்  காணப்பட்டார்  என்பதூஉம்  ,  அப் பொன் மொழியைச்  சேக்கிழார்  முதற்கண்  அமைத்துப்பாடிய  திருவிருத் தத்தில்  அப் பெருமானுடைய  மனம் , மெய் , மொழிகளின்  தூய  இயல்புபற்றி  மூன்றுபடியாக  வருணித்துரைத்தனர்   என்பதூஉம் ,  முதலாவாதாகிய  உளத்தூய்மை  பற்றி  ,  “ஞானத்தின்  திருவுரு”  எனவும் , “நான்மறையின்  தனித் துணை”  எனவும்  கூறினாரென்பதூஉம் , அதற் கிரண்டு  பொருள்  கூறியது  பர ஞான ,   அபர ஞான  வகை பற்றி  யென்பதூஉம் , இரண்டாவதாகிய  மெய்யின்  மழவிளம்  பருவங்  குறித்து ,  “மண்ணில்  வளர் மதிக்கொழுந்து”  என்று  கூறினாரென்பதூஉம் ,  மூன்றாவதாகிய  மொழியின்  தூயவியல்புபற்றிக்  “கானத்தின்  எழு பிறப்பு “   என்று  கூறினாரென்பதூஉம் ,  இம்மூன்றன்  கண்ணும்  ஞான  விளக்கமே  வெளிப்படையினும்  ,  குறிப்பினும்  பெறப்பட்ட  தென்பதூஉம்  பிறவுமாம் .

                                              ******************************************

                     5 .   அ ன் பி ன்   தி ரு வு ரு

                                                 1 .  தோற்றுவாய்

       மக்கள்  இறைவனை  அடைதற்குரிய   நெறிகளுட்  சிறந்தன  அன்பு  நெறியும்  ஞான  நெறியுமாகும் .   இவ் விரண்டனையுமே  “உறவு  கோல்  நட்டு  உணர்வுகயிற்றினால்  முறுகவாங்கிக்கடைய  முன்னிற்குமே” என்பர்  ஆளுடைய  அரசர் . இங்கே  உறவு  அன்பும்  உணர்வு ஞானமுமாம் .  இவ் விரண்டனுள்ளும்  அன்பு நெறி  சிறந்த  தென்ப .  “முத்திநெறி  அறியாத  மூர்க்கரொடு  முயல்வேனைப்  பத்திநெறி  அறிவித்து”  என்பதூஉம்  இதனை  வலியுறுத்தும் .வேறெதுவும்  கலவாத  தூய  மெய்யன்பினால்  இறைவனை  வழிபட்டுப்  பேரின்பம்  எய்திய  பெரியார்  கண்ணப்ப  நாயனார்   என்பது  யாவரும்  உணர்ந்ததொன்று . கண்ணப்பரை  நினைப்பா ரெல்லோரும்  அவரைக்  குணிப்பொருளாகிய  அன்பர்  என்று  கருதுவதினும்  அவர்பால்  விஞ்சிநின்ற  அருங்குணமாகிய  மெய்யன்பு  பற்றி  அன்புவடிவமாக  நினைப்பதே  சிறந்ததாகும்  .  இது  கருதியே  சேக்கிழார்  பெருமானும்  “பொங்கிய  ஒளியின்  நீழற்பொருவில்அன்  புருவமானார் “  என்று  உண்மையை  வெளிப்படுத்தியுள்ளார்  .  ஆதலின் ,  இங்கே  சேக்கிழார்  காட்டிய  அன்பின்  திருவுரு  என்னுந்  தொடர்மொழியால்  கண்ணப்ப  நாயனாரைக்  குறிக்கலானேன் .  இக்  கட்டுரையில்  கண்ணப்பர்  வரலாற்றுச்  சுருக்கத்தை  முதற்கண்  கூறிப்  பின்னர்  அவ் வரலாற்றைச்  சேக்கிழார்  பாடிய  முறையிற்  காணப்படும்  நயங்களை   வகுத்துக்காட்டி  ,  முடிவில்  அவ்வரலாற்றால்  உணரத்தக்க  நுண்பொருள்களையும்  ஒருவாற்றான்  விளக்கத்  துணிகின்றேன் .  திருவருள்  துணை செய்வதாக .

                                              2 .   வரலாற்றுச்    சுருக்கம்

          வளம்பல  மிக்க  பொத்தப்பி  நாட்டிலே  மலப்பக்கத்தே  உள்ள  உடுப்பூர்  என்னும்  நகரிலே  ,  வேடர் குலத் தலைவனாகிய  நாகன்  என்பான்  தத்தை  எனப்  பெயரிய  மனைவியுடன்  இயைந்து  இல்வாழ்க்கையை  நடாத்தினான் . அவர்க்கு  மகப் பேறு  இன்றாக  அது  குறித்துத்  தம்  குலதெய்வமாகிய  முருகப்பெருமானுக்குப்  பெருவிழா  எடுத்துச்  சிறப்புச்  செய்தனர் .  அத்தவத்தின்  பயனாக  முருகன்  திருவருட்பாங்கால்  அவர்க்கு  ஓர்  அரும்பெறற்  புதல்வன்  தோன்றினான் .   அக்குழந்தையைக்  கையில்  எடுத்தபோது  திண்ணென்றிருந்தமையால்  அம்மகனுக்குத்  திண்ணனார்  என்று  பெயரிட்டனர் . திண்ணனார்  பிள்ளைமைத்  தொழிலாகிய   விளையாட்டினால்   தம்  இருமுதுகுரவரும்   உறவினர்  அனைவரும்  மனம்  மகிழ்வெய்தச்  செய்து  வளர்ந்து  வருவாராயினர் .  பின்னர் ,  அம் மரபிற்   படைக்கலத்  தொழிற்  பயிற்சியில்  மேம்பட்டார்  சிலரிடம்  விதி  முறை  வழாது  விற்றொழில்  முதலியவற்றைப்  பயின்று  வல்லராயினர் . அவர்க்கு  யாண்டு  பதினாறு  நிகழுங்கால்  ஆங்குள்ள  வேடர்கள்  விலங்குகளின்  தீங்கு  குறித்துத்  தம்  தலைவனாகிய  நாகன்பாற்  சென்று  வேட்டையாடலை  வேண்டி  நின்றனர் .  நாகன்  தன்  மூப்பின்  நிலையையும்  அருமை  மகன்  இளமை  நிலையையும்  தெரிவித்துத்  தேவராட்டியின்  வாழ்த்துடன்  பொருப்பாட்சி  உரிமையும்  தின்னனார்க்கு  வழங்கி  வேட்டையாடப்  பணித்தனன் .  

          திண்ணனார்  தந்தையின்  கட்டளைப்படி  வேட்டையாடுதற்குரிய  கோலத்தைக்கொண்டு தேவராட்டியின்  வாழ்த்துப்பெற்று  அச்செயலின்  முற் பட்டனர் .  பன்றி ,  யானை ,  புலி ,  கரடி ,  மான்  முதலிய  விலங்குகளை  வேட்டையாடி  வரும்  இடையில்  ,  ஒரு  காட்டுப்பன்றி  மிக்க  வன்மை யுடையதாய்ப்  பிறரால்  அகப்படுத்தப்படாமல்  வலை  முதையவற்றைச்  சிதைத்து  மலைச்சாரலில்  ஓடியது  கண்டு ,  திண்ணனார்  பின் தொடர்ந்து  உடைவாளால்  அதனைப்  பிளத்தனர் .  அந் நிலையில்  பொன்முகலியாற்றின்  கரையில்  அப் பன்றி  இறைச்சியை  நெருப்பிற்  காய்ச்சிப்  பக்குவப் படுத்தும்படி  உடன்  வந்த  காடனைப்  பணித்து , நாணன்   என்பவனால்  தெரிவிக்கப்பட்டபடி   திருக்காளத்தி  மலைமிசை  எழுந்தருளியிருக்கும்   குடுமித்  தேவரைக் காண்டால்  விருப்பு  மிகலால்  அவனுடன்  அம்மலையை ஏறிச்சென்றனர் . ஆங்கு  ஒளிவடிவமாய்த்  திகழும்  அப் பெருமான் அருட்பார்வை பெற்றுத்  தம்  பிறப்பின்  தொடர்பு  நீங்க  அவர்  திரு முன்  அன்புருவமாயினர் .  பின்னர் , திண்ணனார்  தம்  செயலற்று  மெய்யன்பின்  வயப்பட்டுத்  திருக்காளத்தி  யப்பரைத்  தழுவியும்  மோந்தும்  அன்புரைகள்  பல  பகர்ந்தும்  அனலிற்பட்ட  மெழுகுபோல் உருகி  நின்றனர் .  

        அப்பொழுது ,  சிவகோசரியார் விதிப்படி  செய்த  வழிபாட்டின்  இயல்பை  நாணன்  கூற  அம்முறையைக்  கடைப்பிடித்து  ,  அப்பெருமானை உண்பிப் பான் வேண்டி  அரிதிற்  பிரிந்து  பொன் முகலி  ஆற்றின்  கரையை  அண்மினார் .  காலந் தாழ்த்ததன்  காரணத்தை  வினவிய  காடன்  முதலிய  வேடர்களுக்கு  நாணன்  நங்குலத்  தலைமை  விட்டான் . நலப்பட்டான் தேவர்க் கென்று  கூறினன் .  வேடர்கள்  கூறிய  சொற்களைச்  செவிகொள்ளாராய்ப்  பன்றி   யிறைச்சியை  நெருப்பில்  வேகவைத்துத்  தம்  நாவினால்  சுவைத்துச்  சுவையில்லானவற்றை உமிழ்ந்தொழித்து  நல்லனவற்றை  இறைவன் பொருட்டு   இலைக் கலத்து  அமைத்துக்  கொண்டிருந்தனர் . இஃதுணர்ந்த  வேடர்கள் தேவுமால்  கொண்ட  இத் திண்ணனார்  மயக்கத்தைத்  தீர்க்கத்  தேவராட்டியையும்   நாகனையும்  அழைத்துவருவோமென்று  எண்ணி  அகன்றனர் .  திண்ணனார்  இலைக்கலத்து  இறைச்சியை  ஒரு  கையிலும்  வில்லையும்  அம்பையும்  மற்றொரு  கையிலும்  தாங்கிக்கொண்டும் , திருமஞ்சன  நிமித்தம்  பொன்  முகலி  நீரை   வாயிற்கொண்டும்  , மலர்  மாலையைத்  தலையிற்  கொண்டும் திருக்காளத்தி யப்பரை   அடைந்தனர் .  அப் பெருமான்  திருமுடியுலுள்ள பழ  மலரைத்  தம்  காற்  செருப்பால்  மாற்றி  வாய்க்  கலசத்து நீரை உமிழ்ந்து  ஆட்டித்  தலைமிசைக்  கொணர்ந்த  மாலையைச்  சாத்திக்  கல்லையிலுள்ள  இறைச்சியை  எதிரே  வைத்து  இன்னுரை  கூறி  அமுது  செய்வித்தனர் . இந் நிலையிற்  கதிரவன்  மறைந்தனன் .  அன்றிரவு  விடியுமளவும்   விலங்கு  முதலியவற்றால்   ஊறுபாடு  நேருங்கொலோ  என்னும்  எண்ணத்தால்  உறங்காது   புறங்காத்து  நின்றனர் .  வைகறைப்  பொழுதில்  இறைவர்க்கு  மீண்டும்  இறைச்சி  கொணர்தற் பொருட்டுக்  காடு  நோக்கிச்  சென்றார் .  

             காலையில்  சிவகோசரியார்  என்னும்  முனிவர்  திருக்காளத்தி  நாதர்   திருமுன்  வந்து  இறைச்சி  எலும்பு  முதலியன  கண்டு  அருவருத்து  வருந்தி , அவற்றைத்  திருவலகால்  மாற்றி  நீராடி  வந்து  சிவாகம  முறைப்படி  இறைவனுக்குத்  திருமஞ்சன  முதலியன  செய்து  தவ  வனத்தை  அடைந்தார். வேட்டை  குறித்துச்  சென்ற  திண்ணனார்  பன்றி  முதலிய  விலங்குகளின்  இறைச்சிகளைத்  தீயிற்  பக்குவப்படுத்தித்  தேன்  கலந்து  கல்லையிலெடுத்து  முன்பு  போலத்  திரு மஞ்சள்   நீரும்  மாமையுங்  கொண்டு  காளத்தி  நாதரை  அடைந்து  ,  சிவகோசரியார்  செய்த  வழிபாட்டுப்  பொருளை  அகற்றித்  தம்  வழிபாட்டுச்  செயலை  நிறைவேற்றினர் .  இங்ஙனம்  இராப்பொழுதில்   உறங்காமலும்  பகலில்  வேட்டையாடியும்  வழிபட்டு  வருவாராயினர் .  

               இச் செய்தியை  நாணனும்  காடனும் தெரிவிக்கக்  கேட்டு   நாகனும்  தேவராட்டியும்  வந்து  திண்ணனாரைப்  பலவாறு  போதித்தும்  ,  தம்  வழியின்  வாராத  அவர்  உளத்திண்மையை அறிந்து   கைவிட்டகன்றனர் .  திண்ணனார்  வழிபாட்டுச்  செயலை  ஒழிக்கவேண்டிய  சிவகோசரியார்  கனவில்  ,  இறைவன்  எழுந்தருளித்  திண்ணனாருடைய  சிறந்த  மெய்யன்புச் செயல்களை  எடுத்துரைத்து   அச் செயலெல்லாம்  தமக்கு  உவப்பாவன  என்று  அருளிச்  செய்தனர் .  அதுகேட்டுச்  சிவகோசரியார்  திண்ணனுடைய  மெய்யன்புச் செயல்களைக்  காண  மறைந்து  நின்றார் .   

                ஆறாம்  நாட்  காலையில்  திண்ணனார்  முன்பு போல ஊன  முதலியன  கொண்டு  வருங்கால தீய  நிமித்தங்களைக்  கண்டு  உளம்  பதைத்துக்  காளத்தியப்பரை   அடைந்தார் . அவ் விறைவன்  வலக்  கண்ணில்  புண்ணீர்  ஒழுகுதலைக்  கண்டு  துடிதுடித்து  வேடர்கள்  இத் தீங்கு  செய்தனரோ   விலங்குகள்  செய்தனவோ  என்று  வருந்திப்  ,  பலவகை  மருந்து  கொணர்ந்து  கண்ணிற்  பிழிந்தனர் .  அவற்றாற்  புண்ணீரொழுக்கு  நில்லாமை  கண்டு ,  “ஊனுக்கு  ஊனிடல்” என்னும்  பழமொழிக்  கேள்வி  நினைவில்  தோன்ற  மகிழ்ந்து  ,  அம்பினால்  தம்  வலக்  கண்ணை  இடந்து  இறைவன்  கண்ணில்  அப்பினார் . குருதி  நின்றது  கண்டு  பேருஉவகை  எய்தினர் . பின்னர்  இறைவன்  இடக்கண்ணலும்  புண்ணீர்  ஒழுகியது  கண்டு  தமது   மற்றைக்  கண்ணையும்  இடந்து  அப்ப  நினைந்து  ,  இடந் தெரிதற் பொருட்டுத்  தம்  இடக்காலை  இறைவன்  இடக்கண்ணிற்  சேர்த்து  ஓர்  அம்பைத்  தம்  கண்ணில்  ஊன்றினார் .  இச்செயற்கருஞ்செயலைக் கண்டு  பொறாது  இறைவன்  தன்  திருக்கையால்  திண்ணனார்  கையைப் பிடித்துக்  கொண்டு  “நில்லு  கண்ணப்ப !  நில்லு  கண்ணப்ப !  என்  அன்புடைத்  தோன்றல்  நில்லு  கண்ணப்ப !”  என்று  மூன்று  முறை  கூறி ,  “ஓப்பற்ற  பேரன்ப! என்  வலப்பக்கத்தே  நிற்க ! “  என்று  அருளிச்செய்தனர்  .  இவ்வற்புதச்  செயலைச்  சிவகோசரியார்  நேரிற்   கண்டு  வியப்புற்றனர் .  தேவர்கள்  மலர்மாரி  பொழிந்தனர் .  

  • .   பிறப்பின்  பெருமை

             “தெய்வ  மணக்குஞ்  செய்யுளெலாம் “  என்று  பாராட்டப்பெற்ற  திருத்தொண்டர்  புராணத்தை   ஆக்கியருளிய  அருட்கவியாகிய  சேக்கிழார்  என்னும்  புலவர்  பெருமான் பாடல்  வளத்தை  அறுதியிட்டுரைக்க   எம்மனோரால்  எங்ஙனம்  இயலும் ?  பத்திச் சுவை  நனி  சொட்டச்  சொட்டப்  பாடிய  கவி  வலவராகிய  அவர்  பாடல்  இனிமையையும்  நுண்பொருட்  பொலிவையும்  இயன்றவளவில்  தனிக்  கட்டுறையாக  எழுதி  வெளியிட  எண்ணியுள்ளேன் .   ஆதலின் ,  ஈண்டுக்  கண்ணப்ப  நாயனார்  புராணப்  பகுதியில்  என்  சிற்றறிவிற்குத்  தோன்றிய  ஒரு  சில  நயங்களை  மட்டில்  குறிப்பிடத்  துணிகின்றேன் .

               கண்ணப்பர்  பிறப்பால்  அவர்  பிறந்த  ஊரும்   அவ்வூரையுடைய  நாடும்  சிறந்தன   என்னும்  பொருள்  தோன்ற  , “கண்ணப்பர்  திரு நாடென்ப  .  ………………..பொத்தப்பி  நாடு”   எனவும் , “ஈவர்  திருப்பதி  யாதென்னில்  ………….  முதுபதி   உடுப்பூராகும்”  எனவும்  தலைமையை  இவர்பாலதாக்கி   நாட்டையும்  ஊரையும்  பின்னர்க்கூறினர்  . வரலாறு  கூறுவார்  பெரும்பாலும்  இன்ன  நாட்டிலே  இன்ன  வூரிலே  என்று  கூறுதல்  மரபு .  ஆயினும்   செயற்கருஞ்  செயல்புரிந்த  பெரியார்  தோன்றியதனாலேயே  அவர்  ஊரும்  நாடும்  பெருமை  பெற்று   விளங்குமாதலின்  ,  அம்முறை பற்றி  இங்ஙனங்  கூறப்பட்டது . 

“நாடா  கொன்றோ  காடா கொன்றோ 

 அவலா  கொன்றோ  மிசையா  கொன்றோ 

எவ்வழி  நல்லவ  ராடவர்

அவ்வழி  நல்லை  வாழிய  நிலனே “

என்னும்  புறப்பாட்டும்  (187)  இக்கருத்துப்பற்றி  எழுந்ததொன்று  .  தீய  நிலனேயாயினும்  நல்லோர்  உறையின்  நன்றெனவும்  நல்ல நிலனேயாயினும்  தீயோர்  உறையின்  தீதெனவும்  தன்னிடத்து  வாழ்வோர்  இயல்பல்லது  ,  நிலம்  தனக்கென  ஓரியல்பு  உடையதன்று  என்பது  இதன்  கருத்தாகும் .  

            கண்ணப்பர்  பிறந்த ஊர்  உடுப்பூராகவும்  ,  நம்  புலவர்  பெருமான்  “திருக்காளத்திக்  கண்ணப்ப” ரென  முதற் செய்யுளிலேயே  குறியிட்டாளத்  தொடங்கினர் .  மாயா  காரியமாகிய  அவருடல்  தோன்றிய  இடத்தினும்  ஞான வடிவமாகிய  அவருயிர்  பேரின்ப நிலை  எய்திய இடம் சிறந்ததாகலானும்  , தந்தையாரிட்ட  திண்ணனார்  என்னும்  பெயரினும்  இறைவன்  இட்ட  கண்ணப்பர்  என்னும்  பெயர்  சிறப்புடையதாகலானும்   உடுப்பூர்த் திண்ணனார்  என்னாது  , திருக்காளத்திக்  கண்ணப்பர்  என்று  கூறுவாராயினர் .

              இவர்  தந்தை  தாயாரைப்பற்றிக்  கூறுங்கால் , முறையே  “வெஞ்சின  மடங்கல்  போல்வான்”  எனவும் , “சூரரிப்  பிணவு  போல்வாள்”  எனவும்  உவமை  குறித்தனர் .  வீரர்  குடிக்குத்  தலைவனாகிய  நாகனைச்  சிங்கவேறு  போல்வான்  என்றதற்கேற்ப , அவன்   மனைவி  தத்தையைப்  பெண் சிங்கம்  போல்வாள்  என்று  கூறியது  பொருத்தமே .  அன்புருவமாம் அரும்பெறற்  புதல்வனைப்  பெற்ற  இருமுது  குரவர்க்கு  ஒப்புக்  கூறுங்கால்  அவ் வுமையினும்   பிறழ்ச்சி  வரலாகாது  என்பது  ஆசிரியர்  கருத்தாகும்  .  இங்ஙனம்  இவ்  விருவரையும்  சிங்கம்  போல்வார்  எனக்  கூறியதற்கேற்பக்   கண்ணப்பரைச்  சிங்கக்  குட்டியாகக்   கொண்டு  ‘  செங்கண் வயக்கோளரி யேறன்ன   திண்மைத்  திண்ணனார் “ எனவும் ,  “கற்றன  ரென்னை  யாளும்  கானவர்க்கரிய  சிங்கம் “  எனவும்  கூறுவர் . ஈண்டுக்  ‘கானவர்க்கு  அரிய  சிங்கம்’  என்று  குறிப்பிட்டதால்  இருமுது  குரவரும்  கானவர்க்கு  எளியர் என்பதும் , இவர் இறைவனுக்கு  உரியர்  என்பதும்  புலனாம் . பிறிதொரிடத்துக்   “கருங்கதிர் விரிக்கு  மேனிக்  காமரு  குழவி  தானும் ,  இரும்புலிப்  பறழி  நோங்கி”  என்று  குறிப்பிட்டுள்ளார் . இங்கே  புலிக்குட்டியைக்  கண்ணப்பருக்கு  உவமை  கூறியது  அவர்  குழவிப்  பருவத்தில்  தந்தை  தாயாரை  விட்டகலாமல்  அருகிலிருந்து பாதுகாப்புடன்  வளர்ந்தது  நோக்கிப்  போலும்  வீர  விலங்குகளுள்  பிறிதொன்றனால்   இடையூறு  வாராமல்  புலியால்  பாதுகாக்கப்படுதல்  அதன்  குட்டிக்கு  உள்ளது  என்பது  கருதி , இங்ஙனம்  கூறினா  ரென்றல்  பொருத்தமாகும் .”புலிதானே  புறத்தாகக்  குட்டிகோட்    படாது “  என்னுங்  கம்ப  ராமாயணச்  செய்யுளும்  இதனை  வலியுறுத்தும் .  

             நாகனும்  தத்தையும்  மகப் பேற்றிற்  சூரியகாலங்  கடந்தமையால்   தம் குல  தெய்வமாகிய  முருகப்பெருமானை   வழிபட்டுத்  தவங்  கிடந்து  கண்ணப்பரைப்  பெற்றனரென்று  ஆசிரியர்  கூறியுள்ளார் .  உலகில்  ஞானத்தாலும்  பத்தி  முதலியவற்றாலும்  உயர்ந்த  பெரியோர்களின்  பிறப்புக்களை  ஆராயின்  ,  அவர்களை  ஈன்றவர்கள்  அரிய  தவஞ்  செய்து  பெற்றனர்  என்பது  பெரும்பாலுங்  காணப்படுவதொன்று .  திருஞான சம்பந்தரைப் பெறுதற்கு  அவர்  தாய்  தந்தையர்  அருந்தவம்  புரிந்த  செய்தியைப்பற்றி  ,

“நினைவுறமுன்  பரசமய  நிராகரித்து  நீறாக்கும்

 புனைமணிப்பூண்  காதலனைப்  பெறப்போற்றும்  தவம்புரிந்தார்”

என்று  கூறியது இங்கு  நினைக்கத்தக்கது .  காதலிருவர்  கருத்தொருமித்து  இல்லற நெறி  யொழுகுங்கால்   காமங்  காரணமாகக் கூடுங்கூட்டத்திற்  பிறக்கும்  மகவினும் ,  அக்காம வேட்கை  ஒருவாறு  தணியப் பெற்றுத்  தெய்வ  நினைவுடையராய்ப்  புதல்வர்ப்பேறு   குறித்துக்  கூடும்  கூட்டத்திற்  பிறக்கும்  மகவு  இருமுது  குரவர் உளத்  தூய்மைக்  கேற்ப  அறிவு  முதலியவற்றாற்  சிறந்து  விளங்கும்   என்னும்  உண்மையும்  ஈண்டு   கருதத்தக்கது .

             வேடர்  குடியில்  தோன்றிய  தத்தை    கண்ணப்பரை  ஈன்ற  செய்தியை  ஆசிரியர்  “அளவில்  செய் தவத்தி  னாலே  பான்மதி  உவரி  யீன்றாலென மகப்  பயந்தபோது”  என்று  உவமித்தனர் , தூய்மை  மிக்க  திங்கட்கொழுந்தை  உவர்க்கடல்  பெற்றது  போல  என்று  இங்கே  கூறியது பொருத்தமே .  குற்றமே  முணமாகக்   கொள்வாரும்  கொடுமையே  தலை நின்றுள்ளாருமாகிய வேடரது  குடிக்கு உவர்க்கடலையும்  மெய்யன்பின்  வடிவினராகிய கண்ணப்பருக்குத்  தூய திங்கட்குழவியையும்  உவமையாகக்  குறித்தது நினைந்து இன்புறத்தக்கது . இனி , பான்மதி என்பதற்குப்  பால்  பகுதியெனக்  கொண்டு  பதினாறு  கலைகளில்  ஒரு  கூறாகிய பிறை  யெனக்கோடலும்  பொருந்தும் . மதி  யென்பது  கலைகள் முற்றும்  நிரம்பப்பெற்ற  திங்களை  யன்றோ  குறிக்கும் எனின் ;  “தூய வெண்மதி  சூடி” என்புழி,  கலை  குறைந்த  பிறையையும்  சுட்டுதலால்  ஈண்டும் அவ்வாறே    கொள்ளலாம் .ஆகவே , உவர்க் கடல் ஒரு கலைப் பிறையை ஈன்றது போலத்  தத்தை  அன்புருவக் குழவியை  ஈன்றாள்  என்பது  போதரும் . இதற்கேற்பக்  கண்ணப்பருக்கு  பதினாறு  யாண்டுகள்  நிரம்பினவென்று  கூறுமிடத்து ,

“கண்ணகன்  சாயல்  பொங்கக்

             கலைவளர்  திங்க  ளேபோல் ,

 எண்ணிரன்  டாண்டின்  செவ்வி  யெய்தினார் “                                    என்று  குறிப்பிட்டருளினார் . இங்கே  கலைவளர் திங்கள்  என்றது  நிறைமதியாகும் .திங்களுக்குப்  பதினாறு  கலைகளுக்கு மேல்  வளர்ச்சி யின்று .  அது  போலக்  கண்ணப்பருக்குப்  பதினாறு யாண்டு களுக்கு மேல் உடல்  வளர்ச்சி  கிடையாது . வீட்டு  நிலை யெய்தின  ராதலின்  ,  இப்பொருள்  நலம்   தோன்றவே  கண்ணப்பர்  பிறந்த நிலையில்   “ஒரு கலை மதியும்  வீட்டு  நிலை  யெய்திய பதினாறாட்டைப்  பருவம்  நிரம்பிய  நிலையில்   பதினாறு  கலைகளும்  நிரம்பிய  திங்களும்  உவமையாக  எடுத்தாளப்பட்டன .  

                                       4 .  பிள்ளைமைப்   பருவம்

             கண்ணப்பருடைய  பிள்ளைமைப்  பருவத்தைச்  சேக்கிழார்  பெருமான்  நினைந்து நினைந்து உளங்குளிர்ந்து பாடியுள்ளார் . குழந்தைக்கு  அணியக் கூடிய  தம் மரபிற்கேற்ற  அணிகலன்களைத் தாய் தந்தையர்  என்பதைப்

“புண்ணியப்  பொருளா  யுள்ள

          பொருவில்சீர்  உருவி  நானைக்

கண்ணினுக்  கணியாத்  தங்கள்

          கலன்பல  அனிந்தா  ரன்றே .”

என்று  அழகுறக்கூறினர் . கண்ணப்பர்  திருவுருவம்  சிவ  புண்ணியத்  திரட்சியாலாகிய  அன்புருவமாகும் . அன்புநிலை  என்னும்  தலைப்பில்  இது  பற்றிய  சில  உண்மைகள் விளக்கப்படும் . இத்தகைய  மெய்யன்பின்  வடிவத்தை  வேடர்கள் உணருந்  தகுதியுடைய  ரல்லராதலின்  , அவர்கள்   தம்  கண்களுக்கு  அழகு  பயக்குமாறு  புறவுடலில்  தம் மரபினருக்கு  உரிய  அணிகல்ன்கள்  பலவற்றை அணிந்து அம்மட்டில் கண்டு  மகிழ்ந்து  இன்புறுவாராயினர் .

             கண்ணப்பர்  மழலை மொழியுங்கால்   அவ்வினிய சொற்களை ஆசிரியர் ,

“புண்ணியக்  கங்கை  நீரிற்  புனிதமாம்  திருவாய்  நீரில்

உண்ணனைந்து  அமுத மூறி  ஒழுகிய  மழலைத்  தீஞ்சொல்”

என்று  பாராட்டி யுள்ளார்  .  அவர்  காளத்தியப்பரைத்  தம்  திருவாயிற்  கொணர்ந்த  நீரை  உமிழ்ந்து அன்புத்  திருமஞ்சனம்  ஆட்டினர் என்பதை  உட்கொண்டு  கங்கை  நீரினும்  தூய்மை  மிக்கது  திருவாய்நீர்  என்றும் , அந் நீரிற்றோய்ந்து  வெளிப்பட்டமையான்  இனிமை  மிக்கு  ஒழுகியது  மழலைத்  தீஞ்சொல்  என்றும்  கூறப்பட்டுள்ளன .

             விளையாடுங்கால்  பார்வை  விலங்காகவுள்ள  புலியின்  வாயில்  கண்ணப்பர்  தம்  கையை  நீட்டியது  கண்டு  தந்தை  தழைகொண்டோச்சி விலக்கினன்  என்றும் ,  அது  பொறாது  கண்ணப்பர்  அழவே  தாய்  முத்தமிட்டு  மாற்றினள்  என்றும்  ஆசிரியர்  கூறுங்கால்  ,  நீர்  மல்கிய  அவர்  கண்களை  “இரு சுடர்க்கு  உறுகண்  தீர்க்கும்  எழில்  வளர்கண்” என்று  பாராட்டினர் . இரு  சுடர்  கதிரவனும்  திங்களுமாம்  .  அவ்விரண்டும்  இறைவர்க்கு  இரு  கண்களாகும் . அக் கண்களிற்  புண்ணீர்  ஒழுகக்  கண்டு  தம்  கண்களை  இடந்து மாற்றினர்  என்பது கருதி இங்ஙனம்  கூறியருளினார் .

“தடித்தவோர்  மகனைத்  தந்தையீண்  டடித்தால் 

            தாயுடன்  அணைப்பள்தா  யடிப்பின்

 பிடித்தொரு  தந்தை  அணைப்பன்”

என்று  உலகியல்  கருதிக்  கூறிய  இராமலிங்க அடிகளின்  பாடற் பொருள்  இங்கே  நினைக்கத்தக்கது .

                                  5 .  தொழிலுரிமை   கோடல்

           கண்ணப்பர்  விற்றொழிற்  பயிற்சியை  மேற்கொள்ளுதற்கு  வேடர்கள்  நல்ல  நாளில்  அவர்  வில்லுக்குக்  காப்புக்கட்டினரென்று  கூறுங்கால் , முன்   மேருவாகிய  வில்  திருப்பாற் கடலினின்றும்  நஞ்சாகிய  உணவை  ஆக்கி  இறைவர்க்கு  அளித்தது  .  அங்ஙனமின்றி  ,  இஃது  ஊனை  அமுதமாக்கி  அளிப்பதாகும்  என்னும்  பொருள்  தோன்றச்  “செம்பொன்  மேரு  ஆனது  கடலி  நஞ்ச மாக்கிட  அவர்க்கே  பின்னும் , கானவூ  னமுதமாக்குஞ்  சிலை”  என்று  பாராட்டப்பட்டுள்ளது .  விலங்குகளால்  நேர்ந்த  ஊறுபாடு  நீங்கத்  தந்தை  சொல்  வழி  நின்று  வேட்டைத்தொழிலில்  முற்பட்டு  நிகழ்த்திய  செயல்களை   ஆசிரியர்  பற்பல  நயந்தோன்றப்  பாடியுள்ளார் .  ஓரிடத்துப்  புறத்தே   வலைத்தொழிலும்   சிலைத்தொழிலும்  நடைபெற  அகத்தேயுள்ள  பாசமாகிய  வலைப்பிணிப்பை  அறுக்கச் செல்லும்  ஐயர் என்று  பாராட்டினர் .

             மேலும்  கண்ணப்பர் முன்   பல  பார்வை  விலங்குகளைக்  கொண்டு  வேடர்  சென்றனர்  என்பதைக் ,

“கொன்றை  தங்குவேணி  யார்தமைக்

கண்னில்நீடு  பார்வை  ஒன்று

கொண்டுகாணும்  அன்பர்முன்

எண்ணில்பார்வை  கொண்டுவேடர்

எம்மருங்கும்  ஏகினார் “

என்னுஞ்  செய்யுளால்  குறிப்பிட்டுள்ளார் . இறைவன்  வலக்  கண்ணில்  ஊறுபாடு  கண்டு  தம்  வலக் கண்ணை  இடந்து  அப்பிய  பின்  இடக்கட்பார்வை  ஒன்று கொண்டு   இறைவனைக்  கண்டு  இன்புறு  நிலையினர்  முன் ,  வேடர்  பல  பார்வை  விலங்குகளைக்  கொண்டு  சென்றனர்  என்னும்  இந் நிகழ்ச்சியில்   வேற்றுப்பார்வை  யின்றி  ஒரு  பொருளையே  அகப்  பார்வையால்  ஆரா  அன்பினிற்   கண்டுகொண் டிருப்பவர்  கண்ணப்பர் என்பதும் ,  புறப்பார்வை  பலவுடையர்  வேடர்கள்  என்பதும்  தோன்றக்  கூறிய  நயம்  அறிந்து  இன்புறத்தக்கது .

            கண்ணப்பர்  வேட்டைச் செயல்   அறநிலை  பிறழாதது  என்பதை  ஆசிரியர்  “துடியடியென ………………. மறவோர் “  என்னும்  பாடலால்  தெளிவுறுத்தினார் .  சிறிய  யானைக் கன்றுகளையும்  , மற்றைய  விலங்குக் குட்டிகளையும் , சூல்  முதிர்ச்சியால்  அடி  தளர்ந்து  செல்லும்  மான்பேடு   முதலியவற்றையும்  கொலை  புரியாது  விட்டனர்  என்பது  இதன்  பொருளாகும் .  இந்  நீதி  போர்ச்செயலிலும்   மேற்கொள்ளப்பட்டது  என்பதை,

“ஆவும்  ஆனியற்  பார்ப்பன  மாக்களும்

பெண்டிரும்  பிணியுடையீரும்  பேணித்

தென்புல  வாழ்நர்க்  கருங்கட  நிறுக்கும்

பொன்போற்  புதல்வர்ப்  பெறாஅ  தீரும்

எம்மம்பு  கடிவிடுதும்  நும்மரண்  சேர்மின்”

என்னும்  புறப்பாடலால்  உணரலாம் . நாட்டிற்கு  நலிவு  செய்யும்  தீயவர்களை  ஒறுத்தல்  அரசர்க்கு  உரிய  கடமையாதல்  போல , விளை பொருள்களுக்கு  ஊறு  செய்யும்  விலங்கினங்களை  அழித்தல்  வேடர்  தலைவர்க்குரிய  கடமையாயினும்  ,  சூல்  முதிர்ந்த  பிணைமான்     முதலியவற்றைக்  கொல்லாது  விடுதல்  நீதியென்பது  உணர்ந்து அவ்வாறு செய்தனர் . இஃதுணர்ந்தே  பிறரொருவர்  ,

“பொருப்படியிற்   கண்ணப்பர்  அருள்வேட்டம்

               புரிகால்பொன்  னடியிற்   பூண்ட      

 செருப்படியிற்  சிறுமணலாய்க்  கிடவாத

               தீவினைக்கென்  செய்குவேனே”

என்னும்  பாடலில்  கண்ணப்பர்  வேட்டையை  ‘அருள்  வேட்டம்’  என்று  கூறினர் இங்கே  ,செருப்படியிற்  சிறு  மணல்  என்று  கூறியது பாராட்டத்தக்கது . செருப்படியிற்  பெரு  மணலாயிருந்தால்   நடக்குங்கால்  உதிர்ந்துபோம்  , சிறு  மணலாயின்  ,  உட்செறிந்திருந்து  பின்  இறைவன்  திருமுடியிலுள்ள  மலரை  அச் செருப்பால்  மாற்றுங்கால்  அம்  முடியைத்  தானும்  உறுதல்  பெற்று  இன்புறலாம்  என்னுங்  கருத்து  அவ்  அன்பர்க்கு  உளதாதல் போற்றத்தக்க தொன்று  . ஈண்டுக்  கண்ணப்பர்   செருப்படியிற்  படிந்திருத்தல்  சாதனமும் ,  இறைவன்  திருமுடியிற்  பொருந்துதல்  பயனுமாத லறிக .

                                             6 . பழம்   பிறப்புத்   தொடர்ச்சி

             இனி ,  கண்ணப்பரது  பண்டைப்  பிறப்பைப்  பற்றிய  செய்தி  ஒருவகையில்  உய்த்துணரப்படுதலை  இங்கே  குறிப்பிடுவேன் . வேட்டைத்தொழில்  முடிவில்  பொன் முகலி  நதிக்குச் செல்லுங்கால் ,  திருக்காளத்தி  மலையில்  “கோணமில்  குடுமித்தேவர்  இருப்பர்  கும்பிடலாம்” என்று  நாணன்  கூறியவுடன்  கண்ணப்பர்  அம்மலையை  நெருங்குந்தோறும்   தம்  உடற்  சுமை  குறைந்து  தோன்றுவதாகவும் ,  உள்ளம்  என்றுமில்லாத  வேறோர்  விருப்ப  மிக  விரைவதாகவும்  அநுபவத்திற்  கண்டு  கூறினர் .  இங்ஙனம்  தம்மை  யறியாமல்  அவர்க்கு  இந்  நிகழ்ச்சிகள் நேர்ந்தமைக்குக்  காரணம்  அவர்  பண்டைப்பிறப்பிற்  செய்த  அரிய  தவத்தின்  பயனாம்  என்பதைச்  சேக்கிழார் ,

“முன்புசெய்  தவத்தி  னீட்டம்  முடிவிலா  இன்பமான

 அன்பினை  எடுத்துக்காட்ட”

என்னும்  பாடலாற்  புலப்படுத்தியுள்ளார் .

            இங்ஙனங்  கூறியது  கொண்டும் ,  காளத்திப்  புராணத்திற்  கூறிய  வரலாற்றி லிருந்தும்  , கண்ணப்பர்  பண்டைப்பிறப்பில்  அருச்சுனனாகப்  பிறந்து  கைலை   சென்று  சிவ  வழிபாடாகிய  தவம்  பண்ணியவர்  என்று  கொள்ளுவர்  ஒரு சிலர் .  அருச்சுனன்  தவச்செயற்கு  இடையூறாக  மூகாசுரன்  என்பான்  பன்றி  உருவெடுத்து  வர , அப் பன்றியைக்  கொல்லச்   செல்லுங்கால்,  சிவபெருமான்   வேடுவராகத்  தோன்றி  அவனோடு  பொருது  முடிவில்  தம்  உண்மை  உருக் காட்டி ,  வீடு  பெற  வேண்டி  நின்ற   அவ் வருச்சுனற்குப்  பிற்றைப் பிறப்பில்  வேடுவனாகப் பிறந்து  அன்பு  வழிபாடு  செய்து  பெறுவை  என்றனராம் . இந்  நிகழ்ச்சிக்கு  ஏற்பக்  கண்ணப்பர்  புராணத்தில்  “பன்றியும்  புலியும்” ,  “ஏனமொடு  மானினங்கள்” , “ஏறுகாற்  பன்றியோடும்” ,  “”பெரும்  பன்றி  புனமேய்ந்து “  என்றிங்ஙனம்  பற்பல  இடங்களில்  பன்றியின்  செய்திகளே  கூறப்பட்டமையும்  ,  வேட்டையின்  முடிவில்  ஒரு  பன்றியைக்  கொன்று  அதனிறைச்சியையே  திருவுணவாகப்  படைத்தனர் என்று  கூறியதும்  எடுத்துக்காட்டத்தக்கனவாம் .

              “முன்புசெய்  தவத்தினீட்டம்”  என்று  சேக்கிழார்  பொதுவாகக்  கூறினாரன்றி ,  அருச்சுனன்  செய்தியைக்  குறிப்பிட்டிலர் .  அதனால் , இப்பிறப்பில்  கல்வியறிவு  முதலியவற்றுள்   ஏதுமின்றிச்  சிறந்துயர்ந்த  அன்பு  வடிவாக  நின்று  வழிபட்டு   மிக்க  விரைவில்  வீட்டினைத்  தலைப்படுதற்கு  இவர்  பண்டைப்  பிறப்பிற்  செயற்கருந்  தவம்  செய்திருக்க  வேண்டுமெனவும்,  ஏனை  விலங்குகளுடைய  இறைச்சிகளினும்  பன்றி   இறைச்சி  மிக்க  சுவையுடையதெனக்  கொண்டு  தமக்கு  உவப்பாகவுள்ள  அதனை  இறைவற்குப்  படைத்தனர்  எனவுங்  கோடலும்  பொருந்துவனவாம் .  

                                                 7 .  அ  ன்  பு     நி லை

    இனி , கண்ணப்பரது  சிறந்த  அன்பு நிலையைக்   கூறுவதென்றால்   அது  மாற்றம்  மனங்  கழிய  நின்றதொன்று .  நாணன்  வழி  காட்டி  முன் செல்ல  அவர்  அவன்  பின்னே  காளத்தி  மலையில்  ஏறி  நடந்தனர்  என்பதைக்  கூறப்புகுந்த  ஆசிரியர்  ,  முறுகிய   பேரன்பராகிய  கண்ணப்பரை  அன்ன  தகுதி  ஏதுமில்லாத  நாணன்பின்னே  நடப்பிப்பது  தக்கதன்று  என்று  கருதிக் ,  கண்ணப்பர்  உடல்  பின்னே  சென்றதாயினும்  அவர்  அன்பு  நாணனுடன்  முன் சென்றது  என்னுங்  குறிப்புத்  தோன்ற  “நாணனும்  அன்பும்  முன்பு  நளிர்வரை யேற”  என்று  திருவாய்  மலர்ந்தருளினர் . காளத்தி  மலையை  அடைந்து  இறைவன்  திருவுருவத்தைக்  கண்டதும் ,  அவர்  தம்வயம்  இழந்து  இறைவன்  வயப்பட்டு  வடிவெல்லாம்  புளகம்  பொங்க  மலர்க்கண்ணீர்  அருவி  பாயக்  கைச்சிலை  விழுந்ததை  அறியாராய்ப்   போதுவர் ;  மீண்டு  செல்வர் ;  புல்லுவர்;  மீளப் போவர் ;  காதலின்  நோக்கி  நிற்பர்;  கன்றகல் புனிற்றாய்போ  லாயினர் ,  இங்ஙனம்  இவர்  நின்ற  நிலையைக்  கண்ட  நாணன்  காலந்  தாழ்த்தது   குறித்து  வினவிய  காடனை  நோக்கி  ,  “வங்கினைப்பற்றிப்  போதா   வல்லுடும்பு  என்ன  நீங்கான்”  என்று  கூறினன் .  உடும்ம்புப்பிடி  மிக்க  வன்மையுடைய  தென்பதைச்  சீவகசிந்தாமணி   நூலாசிரியரும் ,

“தணக்கிறப்பறித்த   போதும்  தானளை  விடுத்தல் செல்லா

நினைப்புடை  உடும்பன்  னாரை  யாதினால்  நீக்க  லாமே “

என்று  கூறுவர் .  வேடன்  வாய்க்  கூறும்  உவமையை  அவன்  மரபிற்குரிய  தொழிலிற்  கண்ட  காட்சிக்கு  ஏற்ற  முறையிற் கூறியது  சேக்கிழாரின்  உலகியலறிவைப்  புலப்படுத்துவதாகும் .

       மெய்யன்பு  நிலையினராகிய  கண்ணப்பர்  உலகியல்களையும்  தமரையும்  தன்மையும்  மறந்து  இறை  நிலையில்  இயைதலாகிய  இயல்பு  ஒன்றையே  உடையராயினர் . “பரமே   பார்த்திருப்பார்  பதார்த்தங்கள்  பாரார்.”  என்பதற்கு  இவர்  எடுத்துக்காட்டாயினார்  .  இவர்  சுவைத்த  ஊன்  இறைவர்க்குத்  தேவரமிழ்தினுஞ்   சிறந்த  திருவமுது  ஆயிற்று ;  இவர்  வாயிற்  கொண்டு  உமிழ்ந்த நீர்  புண்ணியக்  கங்கைப்  புனலினும்  சிறந்த  திருமஞ்சன  நீராயிற்று ;  செருப்படி  அவ்விளம்பருவச்  சேயாகிய  முருகன்  திருவடியைப்  போற்  சிறந்ததாயிற்று  . இப் பேரன்புச்  செயல்கலைச்  சங்கராச்சாரியார்  வியந்து  தாம்  பாடிய  சிவானந்தலகரியில் ,

“மார்க்கா  வர்த்தித  பாதுகா  பசுபதேரங்யகஸ்கூர்ச்  சாயதே

கண்டூஷாம்பு  நிஷேசனம்  புரரிபோர்  திவ்யாபிஷேகாயதே !

கிஞ்சித்  பக்ஷிதமாம்ஸசே  ஷகவளம்  நவ்யோப  ஹாரயதே

பக்தி; கிம்  நகரோதியஹொ  வளசர : பக்தாவதம்  ஸாயதே!!

என்று  மனமுருகிப்  பாடியுள்ளார் .  இச்  சுலோகப் பொருள்:-

           “வழி  நடத்தற்குரிய  செருப்புப்  பசுபதியின்  திருமேனியைத்  தூய்தாக்கும்  கூர்ச்சமாயிற்று , எச்சில்  நீர்  புறப்  பகைவற்குச்  சிறந்த  திருமஞ் சனமாயிற்று .  சிறிது  சுவைத்த  இறைச்சி  புதிய  நிவேதனமாயிற்று  .  பத்தி  யாது  செய்யாது ?  ஆ !  வேடன்  பத்தருள்  தலைமணியாயினான்”  என்பதாம் . இவர்  இராப்பொழுது  விடியுமளவும்  இறைவன்  திருமேனிக்கு  விலங்கு  முதலியவற்றால்  ஊறுபாடு  நேராமைப்பொருட்டுக்  கண்னிமை  மூடாமல் உள்ளத்தில்  மெய்யன்பையும்  கையிற்   சிலையையும்  தாங்கிப்  பாதுகாத்து  நின்றனர் .  இக் காட்சியைச்  சேக்கிழார்  தம்  உள்ளத்தில்  எழுதிக்  கனிந்து  பாடிய  பாடல் ,

“சார்வருந்  தவங்கள்  செய்து  முனிவரும்  அமரர்  தாமும்

கார்வரை  அடவி  சேர்ந்தும்  காணுதற்  கரியார்  தம்மை

ஆர்வமுன்  பெருக  ஆரா  அன்பினிற்  கண்டு  கொண்டே

நேர்பெற  நோக்கி  நின்றார்  நீளிருள்  நீங்க  நின்றார் “

என்பதாகும் .  தேவர்  முனிவர்  முதலியோரும்  அருந்தவம்  புரிந்தும்  காணுதற்கரிய   பெருமானைத்  தம்  மெய்யன்பிற்  கண்டு கொண்டு  நீளிருள்  நீங்க  நின்றார்  என்பது  இதன்  கருத்து  .இங்கே  ‘நீளிருள்’  என்றது ,  மிக்க  விரைவில்  ஒழியவேண்டுமென்று  கருதிய  கண்ணப்பருக்கு   அவ்விராப்பொழுது  நீண்டதாகக்  காணப்பட்டது  பற்றிப்  புறவிருளையும் , பிறப்புத்  தொடங்க  முதல் வீட்டு  நிலை  யெய்துமளவும்  ஒழியாது  பற்றி  நின்ற  ஆணவமலம்  என்னும்  அகவிருளையும்  குறிப்பதாகும் ,  கண்ணப்பரது  சிவானுபவ  நிலையால்  அம் மலையில்  இராப்பொழுதென்பது  சிறிதும்  இன்றாயிற்றாம் .  இது ,

“செந்தழல்  ஒளியிற்  பொங்கும்  தீபமா  மரங்க  ளாலும்

 மந்திகள்  முழையில்  வைத்த  மணிவிளக்  கொளிகளாலும்

ஐந்துமா  றடங்கி  யுள்ளா  ரரும்பெருஞ்  சோதி   யாலும்

எந்தையார்  திருக்கா ளத்தி   மலையினில்  இரவொன்றில்லை”

என்னும்  பாடலால்  தெளிவுறுத்தப்பட்டது  .  புறவிருள்  ,  அகப்புறவிருள் , அகவிருள்  என  இருளை  முத்திறப்படுத்து  வெளியை  மூடியிருக்கும்  இருளைப்  புறவிருளாகவும்  ,  இல்லம்  முதலிய  உள்ளிடங்களிலுள்ள  இருளை  அகப் புற விருளாகவும்  ,  மக்கள்  உள்ளத்திற்  படிந்துள்ள  மயக்க  விருளை   அகவிருளாகவும்  கூறலாம் .  இம் முத்திறத்து  இருளையும்  ஒழித்தற்கு  உரிய  ஒளிக்  கருவிகளாக  முறையே  ,  அம் மலையிலுள்ள  ஒளி  மரங்களையும்  ,  மலை  முழைகளில்  பெண் குரங்கு  முதலியன  கொணர்ந்து  வைத்த  மணிகளையும்  ,  மாறுபட்ட  ஐம்புலன்களின்   ஆற்றலை  அடக்கி  இறை  நிலையிற்  பதிந்துநின்ற  கண்ணப்பரது  உள்ளுணர்வையும்  குறிப்பிட்டுள் ளனர் .  “ஐந்துமா  றடக்கியுள்ளார் “  அம் மலையில்  தவம்  பண்ணும்  முனிவரர்  எனவும்  கூறுவர் .  இங்கே  கண்ணப்பருடைய  அருஞ்  செயல்களைக்  குறிக்கொண்டு  கூறுதலானும் ,  மாறி  நின்று  மயக்கும்  வஞ்சப்  புலங்களின் வழி  அவருள்ளம்  செல்லாமையானும்  அக்  கண்ணப்பரைக்  கூறுதல்  பொருந்துவதாகும் . ஒளிக்கருவிகளை   முத்திறப்படுத்துக்  கூறிய  முறையில் கதிரவனும்  திங்களும்  அங்கியுமாகிய  ஒளிப்பொருள்கள்  மூன்றும்  தொனியளவில்  புலப்படுக்கப்பட்ட  உண்மையும்  உணரத்தக்கது .  

             இனி,  சிவகோசரியாருக்குக்  கண்ணப்பரது  பேரன்பின்  திறத்தைக்  காட்டற் பொருட்டு இறைவன்  முதலில்  தம்  வலக்கண்ணில்  புண்ணீர்  ஒழுக்கினாராக  , அது  கண்டதும்  கண்ணப்பர்  துடிதுடித்துப்  பற்பல  மருந்து களைப்  பறித்துக்கொண்டு ,விரைவில்  வந்து பிழிந்தனர்  என்ப . இந் நிலையில்  அவரது  விரைந்த  வருகைக்கு  ஒப்பாக  வாயுவேகம்  எங்கும்  படிந்து  செல்லுதலாற்  பொருந்தாதென்று  விடுத்துத்  தாவிச்  செல்லும்  மனோ  வேகத்தைக்  குறிப்பிடலானார் .  அதுவும்  ஊக்கமில்லாதார்  மனமாக  இருப்பின் ,  ஒவ்வாதென்று  கருதிப் “பூதநா  யகன் பால்  வைத்த  மனத்தினுங்  கடிது வந்து “  என்றார் , “இறைவன்பால்  வைத்த  தம்  மனம்போல்”  என்று  கூறுவதே  பொருந்துவதாகவும் , அதனினுஞ்  சிறந்த  ஒப்புக்  கூறவியலாமையால்  “மனத்தினுங்  கடிது”  என  உறழ்ச்சி  உவமமாகக்  கூறினர் .

               இதனால் ,  உவமையும்  ஈண்டு  மேற்கொண்ட  பொருட்குச்  சிறந்து  நின்று  பயன்  விளைத்தமையும்  உணரத்தக்கது. உவமேயமாகிய பொருளே  புலவன்  கூற  மேற்கொண்ட செய்திக்குச்  சிறந்ததாகும் . உவமை அதற்கு  ஒப்புத்தன்மையைப்  பயந்து  அவ்வளவில்  ஒழிவதாகும் . இது  மற்றைப்  புலவர்களின் புலமை  நெறியாகும் .  அருட்கவியாகிய  சேக்கிழார்  பெருமான்   உவமையும்   பொருளுமாகிய  இரண்டும்  தாம்  மேற்கொண்ட  வரலாற்றிற்குச்  சிறந்தன வாகக்  கூறும்  இயல்பினராவர் .  இதற்கு  ஈண்டுக்  கூறியதொன் றன்றிச்   “செம்பியன்  செங்கோலென்னத்  தென்னன்  கூன்  நிமிர்ந்த  தன்றே”  என்பது  முதலியனவும்  சான்றாகும்  .  பாண்டியன்  கூன்  நிமிர்ந்ததற்குச்  சோழமன்னனது  செங்கோலை  உவமையாகக்  கூறினர் . அப்பொழுது  சைவத்தை  நிலை பெறச் செய்தற்கு  மங்கையர்க்கரசியார்  முன் நின்றாராத லானும்  ,  அவர்  புக்ககத்துப்  பெருமையினும்  சைவ  முறை  வழுவாத  பிறந்தகத்துப் பெருமை  அவ்வமயம்  விஞ்சிநின்றதாகலானும்  இவ்வாறு  கூறி யருளினர் .

                 இனி ,  கண்ணப்பரது  உருவம்  அன்பின்  திருவுருவாம்  என்பது முன்னர்க்  கூறப்பட்டுள்லது . ஒரு  குணிப்பொருளைப்  புணைந்துரைக்குங் கால்   அப்பொருள்களின்கண்   விஞ்சி  நிற்கும் குண  வடிவமாகக்  கூறுதல்  பெரும்புலவர்  மரபென்பதும் ,  இது  கடைப்  பிடித்தே  திரு ஞானசம்பந்தப் பெருமானை   ஞானத்தின்  திருவுருவாகவும் ,  கண்ணப்ப நாயனாரை  அன்பின் திருவுருவாகவும்  தெளிந்து  கூறினர் சேக்கிழார்  என்பதும்  ‘ஞானத்தின் திருவுரு’  என்னுங்  கட்டுரையில்  விரித்துரைக்கப்பட்டன ,  “அன்பு  பிழம்பாய்த்  திரிவார்”   “பொங்கிய  ஒளியின்  நீழல்  பொருவில்  அன்புருவமானார்”  “படியிலாப்  பரிவுதானோர்  படிவமாம்  பரிசு  தோன்ற “  என்று  ஆங்காங்குப்  புலப்படுத்துச்  செல்லுங்  குறிப்புக்களும் ,  திரு ஞானசம்பந்தர்  கண்ணப்பரது  திருவுருவத்தை  வணங்குங்கால்  “உல்ளத்தில்  தெளிகின்ற  அன்பின்  மெய்மை , உருவினையும்  “  என்று  தெளிவுறுத்திய  உண்மையும் ,  ஊன்  முதலியன  கண்டு  வருந்திய  சிவகோசரியார்  கனவில்  இறைவன்  எழுந்தருளி  “அவனுடைய  வடிவெல்லாம்  நம்  பக்கல்  அன்பு “  என்பது  முதலியவாகக்  கூறிய  செய்திகளும்  கண்ணப்பர்  அன்பின்  திருவுருவாவர்  என்பதை  மிகத்  தெளிவாக  வலியுறுத்துவனவாம் .  

            அன்பின்  பேரெல்லைக்குக்  கண்ணப்பரே  எடுத்துக்காட்டாவார் . இதனை  அன்பு  மயமாக  உருகி  இறைவன்  திருவடி  யடைந்த  மாணிக்கவா சகப் பெருமான்  “கண்ணப்ப  னொப்பதோர்  அன்பின்மை   கண்ட பின் “  என்றருளிய  பாசுரத்தானும்  உணரலாம்  .  ஈண்டுக்  ‘கண்ணப்பனொப்பதோர்  அன்பின்மை’  என்பதற்குக்  ‘  கண்ணப்பரது  அன்போடு  ஒத்த  அன்பு  என்பால்  இல்லாமை  கண்டு”  என்று  பொருள்  கூறின்  , அவ்வன்பிற்குச்  சற்றுக்  குறைந்த  அன்பு  உண்மை  பெறப்படும்   .  அங்ஙனமாயின்  ,  அக் கருத்து  “நான்  தனக்  கன்பின்மை  நானுந்தானு  மறிவொம்”   என்பதனோடு  முரண்  படுவதாகும்  .  அதனால்  இதனை  மறுதலை  உவமையாகக் கொண்டு ,  கண்ணப்பர்  அன்பு  எத்துணை உயர்ந்ததோ  அத்துணைத்  தாழ்ந்தது  என்  அன்பு  என்று  பொருள்  கோடல்  சிறந்ததாகும்  .  கண்ணப்பர்  பேரன்பிற்கு  எடுத்துக்  காட்டாதல்போல  ,  யான்  அன்பின்மைக்கு  எடுத்துக்காட்டாவேன்  என்பது  கருத்து .

             இன்னும்  இவர்  பேரன்பின்  இயலைப்  பதினோராம்  திருமுறையிலுள்ள  நக்கீர  தேவனார்  பாடிய  திருக்  கண்ணப்ப  தேவர்  திருமறம்  என்னும்  நூலில்  நன்கு   கானலாம் . சிவகோசரியார்   கனவில்  இறைவன்  எழுந்தருளிக்  கூறிய  செய்தி   யடங்கிய  இந்  நூற்பகுதி  படித்து  இன்புறத்தக்கது .  அது  வருமாறு :- 

“குனிசிலை  வேடன்  குணமவை  யாவன

 உரிமையிற்  சிறந்தநன்  மாதவ  னென்றுணர்  அவனுகந்து,

இயங்கிய  இடம்முனி  வனமது  வேயவன்

செருப்படி  யாவன  விருப்புறு  துவலே

எழிலவன்  வாயது  தூயபொற்  குடமே

அதனின்  தங்குநீர்  கங்கையின்  புனலே

புனற்கிடு  மாமணி  யவனிரைப்  பல்லே

அதற்கிடு  தூமலர்  அவனது  நாவே

உப்புனல்  விடும்பொழு  துஞ்சிய  மீசைப்

புன்மயிர்  குசையினு  நம்மடிக்  கினிதே 

அவன்றலை ,

தங்கிய  சருகிலை  தருப்பையிற்  பொதிந்த

அங்குலி  கற்பகத்  தலரே  அவனுகந்து

இட்ட  விறைச்சி  யெனக்குநன்  மாதவர்

இட்ட  நெய்பால்  அவியே

என்பதாம் .  இதன்கண்  அவர்  வாய்  திருமஞ்சனப்  பொற்குடம்  எனவும் ,  அதன்  கண்ணுள்ள  அவர்  எச்சில்  கலந்த  நீர்  கங்கைப்  புனலெனவும் , அவருடைய  பற்களும்   நாவும்  முறையே  திருமஞ்சன  நீரில்  இடப்படும்  இரத்தினங்களும்  மலருமாம் எனவும் ,  அவர்  அப்புனலை  உமிழுங்கால்  உராய்ந்த  அவர்  மீசை  மயிர்  தூய  தருப்பைப்  புற்களாம்  எனவும்  கூறிய   செய்திகள்  அறிஞர்  உள்ளத்தை  இன்புறுத்துவன  .  இவரன்பை  அந்தமில்  இன்பமாகிய   அழிவில்  வீடு  பயக்கும்  மெய்யன்பு  என்பது  தோன்ற  “முடிவிலா  இன்பமான  அன்பு”  என்று  ஆசிரியர்  கூறுவர் . இத்தகையதே   காரைக்காலம்மையார்  வேண்டிய  இறவாத  இன்ப  அன்புமாம் .  சிவகோசரியார்   அன்பு  ஆகமநெறி   ஒழுகி  மேற்கண்ட   விதிமுகமான  அன்பாகும் .  இவரன்பு  விதி விலக்குகளைக்  கடந்து  நின்ற  தொன்றாகும்  .  “எத்தவப்  பிரியம்  ததிஹ  புண்யம்”  என்றபடி  இறைவனுக்கு  உவப்பாக  வுள்ள  இவர்  செயல்களெல்லாம்  சிவ புண்ணியச்  செயல்களாயின.  இவர்க்கும்  சிவ கோசரியார்க்கும்  உள்ள  செயல்களில்   வேறுபாடுள்ளனவன்றி,  அச்  செயல்களுக்கு  மூலமாகவுள்ள  அன்பு  ஒன்றெனவே  கொள்ளத்  தகும் . இவ் வுண்மையைத்   திருஞான சம்பந்தப்பெருமான்  ,

“ஊனொ  டுண்டல்  நன்றென  ஊனொ  டுண்டல்  தீதென

 ஆன  தொண்ட ரன்பினால்  பேச  நின்ற  தன்மையான”

என்று  தாம்  திருவாய்மலர்ந்தருளிய  தமிழ்  மறையிற்  புலப்படுத்தருளினார், 

                                     8 .   க லை ம லி ந் த      சீ ர்

சுந்தரமூர்த்திகள் தாம்  அருளிச்  செய்த திருத்தொண்டத் தொகையில்  கண்ணப்பரைக்  “கலை மலிந்த சீர்  நம்பி  கண்ணப்பர்க்  கடியேன்”  என்று  கூறினர் . இத் தொடர்க்கு  நூலறிவாகிய  அபர ஞானம் நிரம்பப் பெற்ற  சிறப்பினையுடைய   நம்பி  எனப் பொருள்  கொள்ளலாம் .  இப் பிறப்பில்  கல்விப்  பயிற்சி  சிறிதுமில்லாத  இவரை  இங்ஙனம்  கூறலமோ  எனின் , கல்வி யில்லாமையைக்  குறைவாக  ஒரு  சிலர்  கருதுவர் . என்பது  குறித்தே  இவ்வாறு  கூறினர் .  இங்ஙனமே  சிவனடியார்  திறத்துக்  குறையெனக்  கருதத் தக்க  இடங்களிலெல்லாம்  நினைவு  கூர்ந்து   அக் குறையைப்  பரிகரித்துச்  செல்லுதல்,  நம் அருட்பெரும்  புலவராகிய  நாவலூரார்  இயல்பாம் .  பிறவியிலேயே  புறக் கண்ணிழந்த  தண்டியடிகளை   “நாட்டமிகு  தண்டி “  எனவும் ,  முத்தி நாதன்  வாட்படையால்  உடல்  நீத்த  மெய்ப்பொருள்  நாயனாரை  “வெல்லுமா  மிக  வல்ல  மெய்ப்பொருள்”  எனவுங்  கூறிய  செய்திகள்  இங்கே  கருதத்தக்கன .  இவ்வடியார்களை  இவ்வாறு  கூறுதற்குத்  தக்க  ஆதாரமும்  உண்டு .  கண்ணப்பர்  பண்டைப்பிறப்பிற்   கலையறிவு முற்றுப்பெற்றதனாலேயே  இப்பிறப்பில்  அந் நூலறிவின்  பயனாகிய  அனுபவ வுணர்ச்சி விரைவிற்  கைவரப்பெற்று  மெய்ப்பொருளை  உணர்ந்தனர்  என்பதும் , தண்டியடிகள் அகக் கண்ணாலேயே  இறைவனை  வழிபட்டுப்  பின்னர்ப்  பறக்கண்ணும்   பெற்றனர் .என்பதும் , மெய்ப்பொருள் நாயனார்  சிவனடியார்  திருமடத்தையே  மெய்ப்பொருளெனக்  கொண்டவராதலின் , தம்  உடற்குப்  பகைவனால்  ஊறு  நேர்ந்த பொழுதும்  தாம்  மேற்கொண்ட  உறுதியைக்  கடைப்பிடித்து வெற்றியடைந்தனர்  என்பதும்  ஈண்டு  ஆதாரங்களாகக்  கருதத்தக்கன .

            இனி , கலைமலிந்த   சீர்  என்பதற்குப்  பலவகைக்  கலைகளிலும்  மிக்க  விளங்கும்  புகழ்  எனப்  பொருள்  கோடலும்  பொருந்தும் .  தமிழ் மறைகளாகிய  தேவார  முதலியன  தென்றமிழ்க்  கலைகளாகும்  .  அவற்றையருளிய  திருஞான சம்பந்தர்  முதலிய  மூவரும்  மாணிக்க வாசகரும்   கண்ணப்பருடைய  பேரன்பின்  திறத்தைப்  பெரிதும்  பாராட்டியுள்ளனர் . நக்கீர  தேவர்  ,  கல்லாடர் , பட்டினத்து அடிகள்  முதலிய  புலவர்களும்  பிற்காலத்துப்  புலவர்களும்  தத்தம்  பாடல்களில்  இங்ஙனமே  சிறப்பித்துப்  பாடியுள்ளார்கள் .  தென்  கலயேயன்றி  வட  கலையிலும்  இவர்  பெருமை  பாராட்டப்பட்ட  செய்தியை  முன்  காட்டிய  சங்கராச்சாரியருடைய   சிவானந்தலகரிச்  சுலோகத்தாலும்  அறியலாம் .  

              இவர்  திருவுருவத்தைத்  திருஞானசம்பந்தர்  முதலிய  பெரியோரெல் லோரும்  வணங்கி  இன்புற்றனர்  என்ப . அவ்வணக்கப்  பயனைப்பற்றிக்  கூறிய  செய்திகளுள் ,  திரு ஞானசம்பந்தர்  வணக்கத்தைப்பற்றி  “வீழ்ந்தெழுவார் குறிப்பிட்ட  பயன் காண்பார்போல்  மெய்வேடர்  பெருமானைக்கண்டு  வீழ்ந்தார் “  என்று  கூறியது   சிறப்பாக  நினைக்கத் தக்கது .  முன்னர்  இறைவன்  திருவுருவையும்  பின்னர்க்  கண்ணப்பர்  திருவுருவத்தையும்  திரு ஞானசம்பந்தர்  வனங்கிய  முறையில்  கண்ணப்பர்  திருவுருவ  வணக்கம் பின்னதாக நிகழினும் ,  அது முன்னர்ச்  செய்த  சிவ  வணக்கத்தின்  பயனைக்  கைவரப்பெற்றது போலிருந்தது  என்று குறிப்பிட்டது அறிஞர்கள்  உள்ளத்தைப்  பெரிதும்  இன்புறுத்துவதொன்று .

                                       9 .  அருஞ்செயல்களும்   இன்பப்  பேறும்

           கண்ணப்பர்   ஆறு  நாட்கள்  இரவு  பகல்  உணவையும்  உறக்கத்தையும்  அறவே  யொழித்தார் .  அருட்குறியாகிய  சிவலிங்கத்தைச்  சிவபெருமானின்  வேறாகக்  கருதினாரல்லர் . இரவெல்லாம்  வேடராலும்  விலங்குகளாலும்  ஊறுபாடு  நேரா வண்ணம்  பாதுகாத்தலிலும்  ,  பகலெல்லாம்   இறைவனுக்கு  உணவு  தேடிக் கொணர்தலிலும்  இவர்  கருத்துச் சென்றது . தாய்   தந்தை  சுற்றம்  நட்பு  முதலிய  பிறப்புத்தொடர்புகளை  யெல்லாம்  அறவே  மறந்தனர். யாவர்  எது  செய்யினும்  எது  பேசினும்  இவர்க்கு  இறையருள்  நாட்டமே யன்றிப்  பிறிதொன்றில்லை .கரண மெல்லாம்  பசுத்துவம்  நீங்கிப்  பதி கரணமாகத்  திகழ்ந்தமையால்  இவர்  செயலனைத்தும்  சிவச்  செயலாயின .  இவர்  சித்தம்  சிவமானபடியால்  செய்தனவெல்லாம்  தவமாயின.  இவரது  கரை  கடந்த  பேரன்பைச்  சிவ கோசரியார்க்கும்  உலகினர்க்கும்  காட்ட  இறைவர்  தம்  வலக்கண்ணிற்   புண்ணீர் ஒழுக்கினராக  ,  அது  கண்டதும்  இவரெய்திய  துயரம்  அளவில்  அடங்காததாயிற்று .  மருந்து  பிழிந்து  பார்த்தார்;  நோய்  தீர்ந்திலது .  ஊனுக்கு  ஊனிடல்  என்னும்  பழமொழியைக்   கேட்டவராதலின்  இறைவன்  கண்ணிலுள்ள  ஊறுபாடு  ஒழித்தற்கு  வழிகண்டு  பெரிதும்  உளம்  மகிழ்ந்து  தம்  கண்ணை  அம்பினார்  பெயர்த்து  இறைவன்  கண்ணில்  அப்பினார் . புண்ணீர்  ஒழுக்கு  நின்றது . அது கண்டு  உவகைக்  கடலுள்  மூழ்கி  உன்மத்தர்  போல்  ஆயினர் .

“கண்ணிற்  சிறந்த  உறுப்பில்லை “  என்றதனால்  மக்கள்  உறுப்புக்களுள்  கண்ணே  மிகச்  சிறந்ததாகும் .  அதன்கண்  சிறு  துகள்  படிந்தாலும்  துன்பமுண்டாம் .  இந் நிலையில்  , தம் கை அம்பினால்  தம்  கண்ணைப்  பெயர்த்து  எடுத்தனர்  என்றால்  இச்  செயற்கரும்  செயலை  எங்ஙனம்  அளவிட்டுரைக்க  முடியும் !  மீண்டும்  இறைவன்  இடக்கண்ணிலும்  புண்ணீர்  ஒழுகக் கண்டு  சிறிது  வருந்திப்  பின்  தேறித்  தம்  இடக்கண்ணையும்  அவ்வாறு  பெயர்க்கத்  தொடங்கினார்  .இவ் வருஞ்  செயலைத்  தாங்காது  இறைவன்  தம்  திருக்கையால்  அவர்  கையைப்  பிடித்துக்கொண்டு  “கண்ணப்ப  நிற்க ! நிற்க ! நிற்க !  என மும்முறை  கூறித்  தடுத்து ,  ‘ஒப்புயர்வற்ற மெய்யன்ப !  என் வலத்தே  நிற்க “  வெனத்  திருவருள்  புரிந்தனர் . அருளாளரொருவர்   மற்றோரன்பர்க்கு  உதவிபுரிய  முற்படுங்கால்  அதனைப்  பெறுபவர்  ஓரளவிற்  போதியதென்று  தடுத்தாலும்  ஏற்றுக்கொள்ளாது  மேலும்  செய்தலை  உலகியலிற்  காண்கின்றோம் .  அங்ஙனமே  ,  இங்கே  நிற்க  வென்று  இறைவன்  ஒருமுறை  கூறியொழியின்  அன்பின்  மிகுதியால்  தம்  ஆணையையுங்  கடந்து  மேற்கொண்ட  செயலைச்  செய்து  முடிப்பர்  என்னுங்  கருத்தால்  மும்முறை  கூறியருளினர் .  அவ்வருண்மொழிப்படி  இறைவன்  திருவடி  நீழலில்   இரண்டற்ற  நிலை யெய்திப்  பேரின்பம்  துய்ப்பாராயினார் .  

                                      10 .  வ ர லா ற் று    நு ண் பொ ரு ள்

அ .  முப்பொறுள்  உண்மை .

               இனி , கண்ணப்ப  நாயனார்  வரலாற்றிற்  காணப்படும்  மக்களைச்  சைவ  சித்தாந்த  நூல்  முறைப்படி  அமைந்த  தத்துவப்  பொருள்களாகக்  கொண்டு  ஒருவாற்றால்  ஆராய  முற்படுகின்றேன் .  

                சைவ சித்தாந்தத்திற்  கூறப்படும்  நித்தியப்பொருள்கள்  இறை , உயிர்,கட்டு  என்னும்  மூன்றுமாம் .  இவற்றைப்  பதி  பசு  பாசம்  எனக்  கூறுப .  இவற்றுள்  பதிப்பொருளாகிய  இறை  திருக்காளத்தி  யப்பரென்பது  கூறவேண்டியதொன்றன்று  .  உயிர்க்குச்  சார்ந்ததன்  வண்ணமாத்  தமையுடைமை  இலக்கணமாகும்  .  அவ்விலக்கணம்  அமைந்த  உயிராக ,  வீட்டு  நிலை  எய்துதற்குரிய  பக்குவம்  அமைந்த  கண்ணப்ப  நாயனாரைக்  கூறுதல்  பொருந்தும் .  கண்ணப்பர்  பிறப்பின்  சார்பால்  குற்றமே  குணமாகக் கொள்ளும்  இயல்பினரென்பதை  அவர்  தம்  மரபினர்க்குரிய  வேட்டைத் தொழிலை  மேற்கொண்டமையானும்   பல  விலங்குகளைக்  கொன்றமையானும் ,  காடன்  நாணன்  முதலிய  வேடரொடு  கூடி  அவர்  தன்மையராய்  ஒழுகினமையானும்  உணரலாம் . முடிவில்  வேடர்களாகிய   பாசங்களை  ஒருவிச்  சிவதரிசனம்  பெற்ற  மாத்திரத்தில்  உலகியலை மறந்து  இறை  நிலையில்  தோய்ந்து  நின்றதும்  அவ்விலக்கண  முடைமையைத்   தெளிவுறுத்துவதாகும் . கட்டாகிய   பாசங்களை  ஆணவம்  மாயை  கன்மம்  என  மூன்றாகவும்  , அவற்றோடு  மாயேயம்  திரோதாயி  என்பன  கூட்டி  ஐந்தாகவுங்  கூறுவர் . “இம்மலம்  மூன்றினோடும்  இருமலம்  இசைப்பன் பின்னும்”   “ஆய்வர்  இம்மலங்களைந்தும்  “  என்று  சிவஞான  சித்தியார்  கூறும். மெய்கண்டாருக்குப்   பல்லாண்டுகளுக்கு  முற்பட்ட  மாணிக்க வாசகர்   “மும்மலப்  பழ  வல்வினை”   “மலங்கள்  ஐந்தாற்  சுழல்வன்”  என்று  கூறியதும்  நோக்கத்தக்கது .   

                                         ஆ  .  ஆணவம் 

            இவற்றுள்  ,  ஆணவம்  மூலமலம்  எனப்படும் . இஃது ஒன்றாய்  எண்ணிறந்த  ஆற்றல்களை யுடையதாய்  அநாதியே  . செம்பிற் களிம்பு போல உயிர்கள் தோறும்  விரவி  நிற்பதாய்  உயிரறிவை  மறைத்து  நிற்கும்  இருளாய்த்   தன்னாற்  பற்றப்பட்ட  உயிர்  ஒளிப்பிழம்பாகவுள்ள  இறைவன்  திருமுன்   எய்திய அளவில்  உயிரை  விட்டு  நீங்கும் இயல்பினதாய்  உள்ளதாகும்  ,  இந் நிலையில்  கண்ணப்ப நாயனாருடைய  தந்தையாகிய  நாகனை  மூலமலமாகிய  ஆணவம்  என்று  குறிப்பிடலாம் .  “மகனறிவு  தந்தை யறிவு”  என்பதனால்  தந்தையின்  தொடர்பு  மகனை விட்டு நீங்காத  தொன்றாம் . கண்ணப்பரைக் குழவிப் பருவத்துத் தந்தை எடுத்துத்  தன்னின்  வேறன்மை தோன்றத்  தழீஇனான்   என்பதைக் ,

“கருவரை  காள  மேகம்  ஏந்திய  தென்னத்  தாதை

 பொருவளரத்  தோள்க  ளாரப்  புதல்வனை  எடுத்துக்கொண்டான்”

என்பதனால்  ஆசிரியர்  புலப்படுத்துள்ளார் .  இச் செயல்  “ஆணவத்தோ  டத்துவித  மானபடி”  என்று  தாயுமானவர்  கூறிய  உண்மையைக்  குறிப்பதாகும் .  உயிர்  ஆணவமலத்தாற்  பிணிப்புண்டு   பொய்யுலக  வாழ்க்கையே  மெய்யெனக்கொண்டு  அறிவு  விளக்கம்  பெறாத  நிலையைக்  கண்ணப்பர் , தந்தையாகிய  நாகன்  வயப்பட்டு  அவன்  கட்டளப்படி  பொருப்பாட்சி  யுரிமை  யேற்று  வேட்டைத் தொழில்  முதலியவற்றில்  முற்பட்ட  செய்தி  புலப்படுத்துவதாகும் .  பக்குவான்மா  ஒளி  வடிவமாகிய  இறைவன்  திருமுன்  எய்தியவுடன்  ஆணவ  மலம் , அவ் வான்மாவைப்  பற்றி நின்ற  தன்  ஆற்றல்  கெடப்  பெற்று  ஒழியும்  என்பதை , நாணனும்  காடனும்  கண்ணப்பரியல்பைக்  கூறக் கேட்ட  நாகன்  கண்ணப்பரை  அணுகித்  தன்  வயப்படுத்தப்  பலவாறு  வேறுபடுத்திப்  பார்த்தும்  தன் வழி வாராமையால் கைவிட்டகன்றான்  என்னும்  செய்தி  புலப்படுத்துவதாகும் . இதனை , “நாணனோடு  காடனும்  போய்  நாகனுக்குச்  சொல்லியபின்  ………………  பேணு மகனார்  தம்பால்  வந்தெல்லாம்  போதித்து  ……………..  தங்கள்  குறி வாராமற்  கைவிட்டார்”   என்னும்  பாடலால்  அறியலாம் . உயிர்  வீட்டு  நிலையில்  தலைப்பட்ட  அளவில்   அவ்வுயிரைப்  பற்றி  நின்ற   ஆணவ மலத்தின்   ஆற்றல்  கெடுமன்றி  அம் மலத்திற்குக்  கேடின்றென்பதை   நாகன்  முயற்சி  பயன்  பெறா  தொழிய  அவன்  மீண்டு  தன்னில்லஞ்  சேர்ந்திருந்தனன்  என்னும்  செய்தியால்  அறியலாம் .  இங்ஙனம்  பல்லாற்றானும்  ஆணவ  நிலையில்  நாகனைக்  குறித்தல்  பொருந்துவதாகும் .   

                                                   இ  .    மாயை

இனி , மாயை  யென்னும்  பாச  நிலையில்   கண்ணப்பருடைய   நற்றாயாகிய  தத்தையைக்  குறிக்கலாம் . மாயை  உலகத் தோற்றத்திற்கு  முதற்  காரணமாகும் .  குடமாகிய  காரியத்திற்கு  மண்ணும்  திரிகையும்  முறையே   முதல்  துணைக்  காரணங்களாகக்  ,  குயவன்  நிமித்த  காரணமாவான் . இங்ஙனமே  உலக  காரியத்திற்கு  மாயையும்  சிவ சக்தியும்  முதற் காரணமும்  துணைக் காரணமுமாக   இறைவன்  நிமித்த காரணமாவான் . கன்மங்களுக்கு  ஈடாக  உயிர்  கொள்ளும்  தனு  கரண  புவன  போகங்கள்  எல்லாம்  மாயையினின்றுங்  கிடைப்பனவாம் .  ஐம்பூதங்களின்  சேர்க்கையாலுண் டாகிய  உடலும் , மன  முதலிய   கரணங்களும்  ,  உடல்  தோன்றுதற்குரிய  இடமும் ,  நுகர்  பொருள்களும்  மாயையின்  காரியங்களாகும்  . இம் முறையிற்  கண்ணப்பருடைய  உடல்  தத்தையினிடத்தினின்றும்   தோன்றியதாலும்  , அவ்வுடலை  நுகர்  பொருள்களாகிய  பால்  முதலிய  உணவூட்டி  வளர்த்தவளும்   அவளாதலாலும்  அவளை  மாயை  நிலையிற்  குறிப்பது  பொருத்தமாகும் .  “மாயா  தனு  விளக்கா  மற்றுள்ளங்  காணாதேல்  ,  ஆயாதா  மொன்றை” என்னும்  சிவ ஞான போதப்படி  உயிர்  மாயா  காரியமாகிய  உடம்பு  தனக்குக்  காட்டாகக் கொண்டு   காணாதாயின்  ஒரு  விடத்தையும்  அறிவதில்லையாம் .  ஆதலால்  காட்டாய்  நின்று  விடயங்களை   அறியும்  வண்ணம்  உயிர்க்கு  அறிவை  விளக்குதலும்   மாயையின்  செய்தியாகு  மென்பது  போதரும் .  இங்கே  தந்தை  உதவிய  உடலைக் கொண்டே  கண்ணப்பர்  மெய்யுணர்வு  பெற்றனராதலின்  அம் முறையாலும்  தத்தையை  மாயை  நிலையிர்  குறிப்பிடுதலில்  தட்டின்றாம் . மாயா  காரியமாகிய  உடம்பைக் கொண்டே  உயிர்  ஞான மெய்தி  நலம்  பெறல் வேண்டு மென்பதை , 

“உடம்பா  ரழியின்  உயிரா  ரழிவர்

        திடம்பட  மெய்ஞ்ஞானஞ்   சேரவு  மாட்டார்”

என்னுந்  திருமந்திரத்தானும்  உணரலாம் .

                                                     ஈ .   கன்மம்

இனி , கன்மமலம்  அறம்  பாவ  மென்னும்  இருவகைத்தாய்ச்  , செயப்படு  பொருளாகிய  தனக்கு  மூல  கன்ம  முண்டென்பது காட்டி , நன்மை  தீமையாகிய  காரண  ஏதுவானும்  இன்ப துன்பமாகிய காரிய  ஏதுவானும் அநுமித்தறியுமாறு   நிற்பதொன்று .  இஃது  ஒன்றாயினும்  காரியப்பாட்டால்  அறம்  பாவ  மென்னும்  இரு  திறத்ததாகும் .  இக் கமத் தொடர்புள்ள  உயிர்  இறை  நிலையில்  இயையுங்கால்  முதலிற்  பாவப்பகுதி  யொழியப்  புண்ணியப்பகுதி  எஞ்சி  நின்று  தன்னைப்  பற்றிய  அவ்வுயிர்  இறைநிலை யடைதற்கு   உதவிபுரிந்து  முடிவில்  தானும்  ஒழிவெய்துவதாகும் .

“பண்ணிய  தழல்காய்  பாலனா  நீர்போற்

                 பாவமுன்   பறைந்துபா   லனைய 

 புண்ணியம்   பின்சென்று   அறிவினுக்   கறியப்   புகுந்தது “

என்னும்  ஆன்றோர்  மொழியும்  இவ்வுண்மையைப்  புலப்படுப்பதாகும் . பாலும்  நீருங் கலந்த  நிலை  புண்ணியமும்  பாவமுங்  கலந்த  கன்மத்தையும், தழல்  இங்கே  சிவஞானத்தையும்  உணர்த்துவனவாம் .  பாலும்  நீருங்  கலந்த  கலவை  தழலின் கட் பட்டுழி  முதலில்  நீர்ப்பகுதி  அறும் . பின்னர்  எஞ்சி நின்ற  பாற்கூறு  பொங்கி  அத் தழலின்கட்  பட்டுத்  தானும்  ஒழிந்துவிடும் .  இங்ஙனமே  பக்குவான்மாவைப்  பற்றி  நிற்கும்  கன்மப் பகுதியில்  பாவக் கூறு  முதலிற்  கெட்டுப்  பின்  எஞ்சிய  புண்ணியக்கூறும்   அவ் வுயிர்  சிவஞானம்  எய்திய  அளவில்  அதனெதிர்ப்பட்டு  நீங்குவதாகும் .  

           இந் நிலையில் , காடனைக்  கன்ம  மலமாகக்  குறிக்கலாம் . கண்ணப்பருடைய  கன்மக் கூற்றில்  பாவப்பகுதி  முற்பிறப்பிலேயே   ஒழிந்திருக்கலாம் . எஞ்சிய  புண்ணியக்கூறே   இப்பிறப்பிற்குக்  காரணமாகும்   இதனை  ,  “புண்ணியப்பொருளாயுள்ள  பொருவில்சீர்  உருவி  னானை”  என்பத னா லறியலாம் .  இங்கே  காடன்  அவர்  வேட்டைத்  தொழிலுக்கு  உதவியாகச் சென்றதும் ,  இறுதியில்  அவர்  ஒரு  பன்றியைக்  கொன்று  தர  அவ்விறைச்சி  யைப்  பக்குவப்படுத்துதற்குரிய  தீயைக்  கடைந்து  வைத்ததும்   அப்பன்றியின்  உறுப்புக்களை  வகுத்தெடுத்து  அவர்க்குக்  காட்டியதும் ,  “என்செய்தாய்  திண்ணா  நீதான்  என்னமால்  கொண்டா யெங்கள்  , முன்பெரு முதலி யல்லையோ”  என்று  கூறியதும்  ஆகிய  இவ்வெல்லாம் கண்ணப்பர்பால்   எஞ்சி  நின்ற  புண்ணிய  கன்ம  வியல்பைக்  குறிப்பனவாம். காடன்  கடைந்து   வைத்த  நெருப்பே  நிவேதனம்  ஆக்குதற்குரிய  கருவியாயிற்று . நிவேதனப்பொருளாகிய  இறைச்சியைச்  செவ்வை  செய்து  கொடுத்தவனும்  அவனே . இச் செயல்கள்  சிவ புண்ணியம்  தன்னைப் பற்றி  நின்ற  ஆன்மா  இறைபணி  செய்தற்குதவியாம்  என்னுங்குறிப்பைப்  புலப்படுத்துவனவாம் . “எங்கள் முன்  பெரு  முதலி  யல்லையோ “  என்றது  கண்ணப்பர்  முதிர்ந்த  சிவபுண்ணியத்தலைவர்  என்பதைக் குறிக்கும் .  முடிவில் , “தேவுமால்  கொண்டா நிந்தத்  திண்ணன்மற்  றிதனைத் தீர்க்கல்,  ஆவதொன்றறியோம் “  என்று  அவரை  விட்டு  அகன்றனன்  . இது  புண்ணிய  கன்மமும்  பொன் விலங்கு  போல  வீட்டு  நிலைக்குத்    தடையாகுமாதலின்  அதுவும்  ஒழிந்ததென்னுங்  குறிப்பைப்  புலப்படுப்பதாகும் .

                                                 உ .     மாயேயம்

           இனி , மாயேயம்  என்பது  “மாயையின்  காரியத்தை  மாயேய  மலம  தென்று”  என்று  சித்தியார் கூறியபடி  மாயா  காரியமாகும் . இது , மாயையில்  அடங்குமெனில்  ,  ஆன்மாவின்  அறி விச்சை   செயல்களை   ஏகதேசப்படுத்திப்  பத்தித்தற்கட்படும்  வேற்றுமை  பற்றி  வேறு  வைத்தெண்ணப்பட்ட  தென்ப .  மாயா மலம்  பந்தஞ்  செய்தலும்  மாயேயமலம்  ஆன்ம  அறிவை  ஏகதேசப்படுத்தலும்  தம்முள்  வேற்றுமையாம் .  சிவஞான சித்தியாரில்  மாயா  காரிய மென்று  பொதுவாகக்  கூறப்பட்டுள்ளது .  சார்பு  நூலாகிய  சிவப்பிரகாசத்தில்  “தேகமுறு  கரணமொடு  புவன போகச்  செயலாரும்  மாமாயைத்  திரட்சி  யொன்று”  என்று  இன்னும்  விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளது .  இங்கே  “மாமாயைத்  திரட்சி”  என்றது   சுத்த  மாயா  காரியமாகிய  சுத்தவித்தை  ,  ஈசுவரம்  ,  சாதாக்கியம் ,  சத்தி , சிவம்  என்னும்  சுத்த  தத்துவங்கள்  ஐந்தனையுமாம் .  இவற்றையே  மாயேய  மலமென்ப .  .  உயிர்க்குத்  தனுகரண  புவன  போகங்களை  அசுத்த  மாயா  காரணத்திலே  நின்று  சிவ  சத்திகள்  தோற்றுவிக்கும்  .  அமயம்  அவற்றோடும்  பொருந்தி  நடத்தும்  இயல்பு  நோக்கிச்  சுத்த  மாயையின்  திரட்சியாகிய  சுத்த  தத்துவங்களும்  மலமென்று  உபசரிக்கப்பட்டன .  பாவைக் கூத்தில்  மரப்பாவையும்  கயிறும்போல்   நம்  உடல்  கரணங்களுக்கு  ஆன்ம  தத்துவமும்   வித்தியா  தத்துவமும்  முறையே  அமைவனவாக ,  ஆட்டுபவனைப்  போல  நின்று  இயங்குவது  சிவ  தத்துவமாகும் .  இதனாலே  இது “பிரேரக  காண்ட” மென்றுங்  கூறப்படும் .  

          இங்ஙனம்  பிரேரக  தத்துவமாகிய  இம்மாயேய  மலத்தின்   நிலையில்  நாணனைக்  குறிப்பிடலாம் .  முதலில்  “காண நீபோதின்  நல்ல  காட்சியே  காணும்  …………….  கோணமில்  குடுமித்தேவர்  இருப்பர்  கும்பிடலாம் “  என்று  கூறியவன்  நாணனே  .  சுத்த  தத்துவங்களாகிய  சிவதத்துவங்கள்  சிவபரம்  பொருட்கு  நெருங்கிய  இயைபுடையனவாகலின்  குடுமித்தேவர்  பக்கல்  கண்ணப்பருடன்  நாணனும்  சென்றான் .  ஆன்ம  தத்துவங்களையும்   வித்தியா  தத்துவங்களையும்  கடந்தன  சிவ  தத்துவமாதலின்  கண்ணப்பர்  அத் தத்துவ  சோபானங்களில்   ஏறிச்  செல்பவர்  போல  மலையை  யடையுங்கால்  நாணனும்  உடனேறிச்  சென்றான் . “நாணனு  மன்பு   முன்பு  நளிர்வரையேற  “  என்பதனால்  இஃது  அறியப்படும் . மலமென்று  உபசரிக்கப்பட்ட   மாயேயம்  தன்னால்  பாதிக்கப்பட்ட  உயிரைக்  கடவுள்  பக்க  லியைக்கும்  பிரேரக  தத்துவ மாகலின்  ,   அந் நிலையில்  காளத்தி  யப்பருக்குச்  செய்யத்தக்கது   யாதோவென  நினைக்கும்போது   சிவகோசரி யார்   வழிபாட்டு  முறையைக்  கூறிக்  கண்ணப்பர்   அந் நெறியைக்  கடைப்பிடித்  தொழுகுமாறு  குறிப்பிட்டவனும்  நாணனே  யாவன் .  முடிவில்  உயிர்  திருவருட்  பேற்றுக்கு  உரியதாகுங்கால்  இம்  மாயேய  மலமும்  ஒழிய  வேண்டுமாதலின்  அக்குறிப்பைத்  ‘தேவுமால்  கொண்டானிந்தத்  திண்ணன்  மற்றிதனைத்  தீர்க்கல்  ஆவதொன்ற றியோம் “  என்று  கூறி  நாணனுங்  கைவிட்டகன்ற  செய்தி  புலப்படுப்பதாகும் .

                                                 ஊ  .   திரோதாயி

         இனி , திரோதாயி  என்னு மலத்தி னியல்பை  “ஏயுமும்  மலங்கள்  தத்தம்  தொழிலினை  யியற்ற  ஏவும் ,  தூயவன்  தனதொர்  சத்தி  திரோதன  கரியது”  என்று  சிவஞான சித்தியும்  ,  “முயங்கி  நின்று   பாகமிக  வுதவி  திரோதாயி யொன்று”  என்று  சிவப்பிரகாசமுங்  கூறும் . அவ்வம் மலங்களை  அவ்வத் தொழிலிற்  படுத்திப்  பாகம்  வருவிக்கும்  சிவசத்தியே   திரோதாயியாகும் .  அங்ஙனமாயின் இது  பராசத்தியில்  அடங்குமெனின்  ,  தொழில்  வேற்றுமைபற்றி  உபசாரத்தால்   திரோதாயியென  வேறுவைத்  தெண்ணப் பட்டது .கண்ணிலுள்ள  படலத்தை  நீக்குதற்குரிய  மருந்தானது  கண்ணோடு  கூடி நின்று  துன்புறுத்தி  அப்படலத்தை  யொழித்துத்  தெளிவுறுத்துவது போலச்  ,  சிவபிரானுடைய  திருவருட் சத்தி  ,  ஆன்மாவை  மறைத்திருக்கும்  மலத்தைப்  பாகமுறச்  செய்து  அம்  மல  நீக்கத்தில்  ஞானமாக  விளங்கி  இன்புறுத்துவதாகும் .  

              இந்நிலையில்  தேவராட்டியைத்  திரோதமலமென்று  குறிப்பிடலாம் .  திரோதாயி ,  மூலமலமாகிய  ஆணவத்தோடு  கூடி  நின்று  தொழிற்படுத்து  மென்பதைத்  தேவராட்டி  நாகனோடு  கூடி  நின்று  வேட்டைத்  தொழிலிற்  கண்ணப்பரை  யேவிய  செய்தி  புலப்படுத்தும் .  அங்ஙனம்  ஏவுவதற்கு  முன்  நாகனை  நோக்கி , 

“எற்றையினுங்  குறிகள்மிக  நல்ல  வான

             இதனாலே  யுன்மைந்தன்  திண்ண  னான

 வெற்றிவரிச்  சிலையோன்நின்  னளவி  லன்றி

             மேம்படுகின்றான் “ 

என்று  கூறி  வாழ்த்தியுள்ளாள் .  இவ் வாழ்த்தில்  ‘நின்  அளவினன்றி  மேம்படுகின்றான்’  என்றது,  எதிர்காலத்தில்  கண்ணப்பருக்கு  நேரும்  பேரின்பப்  பேற்றைப்  புலப்படுத்தும்  அருட்  குறிப்பாகும் . அங்ஙனம்  வாழ்த்தப்பட்ட  பின்  கண்ணப்பர்  வேட்டைக்குப்  புறப்படுங்கால் , மீண்டும்  தேவராட்டி  வந்து அட்சதை  சாத்தி  வாழ்த்துக்  கூறினள்  என்னும்  செய்தியை  ஆசிரியர் ,

“நின்றெங்கு  மொய்க்குஞ்  சினவேடர்கள்  நீங்கப்புக்குச் 

 சென்றங்கு  வள்ளல்  திருநெற்றியிற்  சேடைசாத்தி

உன்தந்தை   தந்தைக்கும்  இந்நன்மைகள்  உள்ளவல்ல

நன்றும்பெரி  துன்விறல்   நம்மள  வன்றிதென்றாள் . “

என்று  கண்ணப்பர்  பெருமை  புலப்படப்  பாடியுள்ளார் .  தெய்வ  மேறப்  பெற்றவர்களை  மக்கள்  பலர்  நெருங்கிச் சூழ்ந்து  நின்று , வாழ்த்து  நலம்பெற  முந்துதல்  உலகியலிற்  கண்டதொன்று . இங்க்கே  வாழ்த்துப்  பெறுபவராகிய  கண்ணப்பர்  நின்ற  இடத்திற்குத்  தேவராட்டி  பிற  வேடர்களை  விலக்கிக் கொண்டு  சென்று  அவர்  நெற்றியிற்  சேடை  சாத்தியதும்  ,  அவரை  நோக்கி  “உன்  தந்தை  தந்தைக்கும்  இந்  நன்மைகள்  உள்ளவல்ல”  என்றதும் ,  “மிகப் பெரிய  நின்வெற்றி   நம்மளவன்று”  என்றதும்  திரோதமலம்  பின்  அருட்சத்தியாக  மாறி  நின்று  இன்புறுத்தும்  என்னும்  இயல்பைப்  புலப்படுப் பனவாகும் .  முடிவில்  மலமாம்  நிலையில்  இதுவும்  ஒழியவேண்டுமாகலின்  ,  இதனைக்  கண்ணப்பர்  காளத்தியப்பரைப்  பற்றிவிடாது  நின்ற  நிலையில்   நாகனுடன்  தேவராட்டியும்  அங்கே  சென்று , நாகனுக்கு  அனுகூலமானவள்  போல்  தன்னைக்  காட்டிக்  கண்ணப்பரைச்  சிவனுக்கு  உரிமையாக்கி  மீண்ட  செய்தி  புலப்படுத்துவதாகும் .  தேவராட்டியின்  வாழ்த்துரைகள்  வேட்டையில்  நன்மை  விளையுமென்பது  புறப்பொருளாகவும்  ,  திருவரு ளின்பம் விளையு மென்பது  உட்பொருளாகவும்  கோடற்கு  இடனாதலை  உய்த்துணரின் , தேவராட்டியைத்   திரோதாயி யென்னும்  பாச  நிலையிற்  குறிப்பிடல்  பொருந்துவதாகும் .  

                                                எ  .   தத்துவ   நிலை

    இனி , இவ் வைவகைப்  பாசங்களையும்  ஒருவி  வீட்டு  நிலை  யெய்திய  ஆன்மா  கண்ணப்பரென்பது  தெளிவாம் . ஓருயிர்  சரியை  கிரியை யோகங்களைச்  செய்து  ஞான  மெய்திய  பின்னரே  வீட்டு  நிலையில்  தலைப்படுமென்பது சைவ  நூற்கொள்கை  .  “இவ் வான்மாக்களுக்கு  முற்செய்தவத்தால்   ஞானம்  நிகழும் “என்பது  மெய்கண்டார் நல்லுரையாகும் இங்கே  ‘முற்செய்தவம் ‘  என்றது  சரியை  முதலிய  மூன்றையும்  உனர்த்தும் .  கண்ணப்பர்  முற்பிறப்பில்  சரியை  முதலிய  தவம்  நிறைவேறப்  பெற்று  ஞான  நெறியில்  ஒழுகி  அழிவில்  இன்பத்திற்கு  ஏதுவாகிய  அன்பு  நெறியில்  தலப்பட்டவரென்பதை  , “முன்புசெய்  தவத்தி னீட்டம்  முடிவிலா  இன்பமான  ,  அன்பினை  எடுத்துக்காட்ட   என்பதினாலும் ,  நாணன்  திருக்காளத்திமலை மிசைக்  குடுமித்தேவர்  இருப்பர்   கும்பிடலாமென்று  கூறக்கேட்ட  அளவில்  உடற்சுமை  குறையப்  பெற்றவராய்த்  தம்வயம்  அழிந்து  என்றும்  நிகழாத  புதிய  விருப்ப  மிக  இறைவனைக்  காண  விரைந்தமை  யானும்  அறியலாம் . வீட்டு  நிலைக்குரிய  உயிர்  முதலில்  தன்  இயல்பையும்  பின்  தன்னுள்ளே  விளங்கும்  தலைவனியல்பையும்  அறிந்து  தலைவனைத்  தலைப்படும்  .  தன்  இயல்பை  அறிதலாவது  மண்முதற்  சிவம்   ஈறாகிய  தத்துவங்களை   ஒவ்வொன்றாக  இது நானன்று  நானன்று  என்று  அறிந்து கடந்து  மேற்சேறலாம் .  இங்ஙனம்  ஆன்ம  தத்துவங்களைக்  கடந்து  தன்னியல் பையும்  ,  அவற்றோடு  வித்தியா  தத்துவம்   சிவதத்துவங்களையும்  கடந்து  இறைவன்  இயல்பையும்  அறிதல் வேண்டும் .  இக் குறிப்பை ,

“நாணனு  மன்பு  முன்பு  நளிர்வரை  யேறத்  தாமும்

 பேணுதத்  துவங்க  னென்னும்  பெருகுசோ  பான  மேறி

ஆணையாஞ்  சிவத்தைச்  சாரா  அணைபவர்  போல  ஐயர்

நீணிலை  மலையை  யேறி  நேர்படச்  செல்லும்  போதில்”

என்னுந்  திருவிருத்தம்  தெளிவுறுத்துவதாகும்  .  இவ் வருமைப்  பாடலே  கண்ணப்பர்  வரலாற்றில்   தத்துவ  நுண்பொரு  ளாராய்தற்கு  வழி  காட்டியதாகும் . இங்கே  திருக்காளத்தி  மலையையேறிச்  சென்றது  தத்துவங்களைக்  கடந்து  சென்ற  இயல்பைக்  குறிப்பதாகும்  . அம்  மலையுச்சியிலிருப்பவர்   தத்துவாதீதராகிய  சிவபரம்  பொருளாவர்  . அவரைச்  சார்ந்த  முறையை , “ஆணையாஞ்  சிவத்தைச்  சார  அணைபவர் போல”  என்றார் . இங்கே  ஆணை  யென்றது  சிவசத்தியைக்  குறிக்கும் .  இறைவனை  அடைதற்கு  இறைவியின்  சார்பே   முதலிற்  பெறவேண்டு மென்பது  “அவனருளாலே  அவன் றாள்  வணங்கி”  எனவும் ,  அவனருளே  கண்ணாகக்  காணி னல்லால் “  எனவும்  கூறிய  அருளுரைகளால்  தெளியப் படுவதொன்று .  மெய்யருளாந்  தாயுடன்  சென்று  அவள்  காட்டத்  தந்தையை  யடைவதே   முறையென்பது  பெரியோர்  கண்டது . ஆணையாகிய  சிவம்  என்றது  இறைவியொடு  உடனாய்  இறைவனை  உணர்த்தும் .  

                                                   ஏ  .    சி வ தீ க் கை

         இனி , தீக்கையாலே  உயிர்  மல  அழுக்கைப்  போக்கித்  தூய்மையுடை யதாகு மென்ப . . தீக்கை குண்ட மண்டலங்களிட்டுத்   தீ வளர்த்துச்  செய்யப்படுங்  கிரியாவதியும்  , ஞானாசிரியர்  தம்  அருட்பார்வை  முதலியவற்றால்  செய்யப்படும்   ஞானவதியுமென  இரு வகைப்படும்  .  பின்னது  அதி தீவிர  பக்குவ  ஆன்மாக்களுக்கு  உரியது .  ஞானவதியாகிய  அருள்  நோக்கத்தை “நயன  தீக்கை”  என்ப .  இங்கே  கண்ணப்பர்  அதி தீவிர  பக்குவான்மா  வாதலின் , இறைவனே  ஞானாசிரியராக   எழுந்தருளித்  தம் அருள் நோக்கமாகிய  நயன  தீக்கையைச்  செய்து  அவரைச்  சிவ குமார  ராக்கினார்  என்பதை,

“திங்கள்சேர்  சடையார்தம்மைச்  சென்றவர்  காணாமுன்னே

அங்கணர்  கருணைகூர்ந்த  அருட்டிரு  நோக்கமெய்தத் 

தங்கிய  பவத்தின்  முன்னைச்  சார்புவிட்  டகல  நீங்கிப்

பொங்கிய  வொளியி  னீழற்  பொருவிலன்புருவ  மானார் “

என்னும்  பாடலால்  அறியலாம் . அருள்திரு  நோக்கமே  நயன  தீக்கையாகும்  .  ஒளியென்பது  காளத்தியப்பரைக்  குறிப்பதாகும் . “காளத்தியுண்ணின்ற  வொளியே”  என்பது  சுந்தரமூர்த்திகள்  திருவாக்கு . “கண்ணால்  நோக்கிக்  கண்ணப்பர்  பணியுங்கொள்   கபாலியாரே “   என்னும்  அப்பர்  தேவாரத்தா னும்   நயன  தீக்கைப்  பேறு  வலியுறுவதாகும் .  இங்ஙனம்  அருள்  நோக்கமாகிய  தீக்கையால்  கண்ணப்பரைப்  பற்றி நின்ற  பாசங்களெல்லாம் ஒருங்கு  அழிய  அவர் தூயராய்  அருள்  உருவினராகிய  இறைவனுக்கு  உரிய  அன்புருவக்  குழந்தையாயினா  ரென்பதைச்  சேக்கிழார்  பிறிதோரிடத்தில்  மிகத்  தெளிவாகக்  கூறியருளினர் .   அப் பாடல் ,

“முன்புதிருக்  காளத்தி  முதல்வனார்  அருள் நோக்கால் 

இன்புறுவே  தகத்திரும்பு  பொன்னானாற்  போல்யாக்கைத்

தன்பரிசும்  வினையிரண்டும்  சாருமல  மூன்றுமற

அன்புபிழம்  பாய்த்திரிவார்  அவர்கருத்தி  னளவினரோ”

என்பதாம் .  வேதகம்  என்பது  இரும்பு  முதலிய  உலோகங்களைப்  பொன்னாக்குவது .  அதனால்  இரும்பு  முதலியன  கறை  யொழிந்து  பொன்னாதல்  போல  இறைவன்  அருள்  நோக்கால்  கண்ணப்பர்  தம்மைப்  பற்றி  நின்ற  பாசங்களெல்லாம்  ஒழியப்பெற்றுத்  தூய  ராயினார்  என்பது  புலனாம் .  

               இங்கே ,  ‘வினையிரண்டும்  சாருமல  மூன்றும்  அற’  என்றார் . மும்மலங்களுள்  வினையும்  ஒன்றாகவும்  வினையிரண்டுமென  மீண்டும்  அதனை  வேறாகக் கூறியது  என்னையெனின் , “கன்மமும்  மூலங்  காட்டிக்  கான்மிய  மலமாய் நிற்கும் “  என்னும்  சித்தியார் கருத்துப்படி  கன்மத்தை விருப்பு  வெறுப்பாம்  நிலயில்  மூலகன்மமென  ஒன்றாகவும்  ,  செயல்  வேறுபாட்டால்  அறம் பவமென  இரண்டாகவும் கொள்ளல் வேண்டும் .  இக் கொள்கையைச்  சேக்கிழார்  “இருவினைப்  பாசமும்  மலக்கல் லார்த்தலின்”  எனப்  பிறிதோரிடத்தும் புலப்படுத்துள்லார் . இங்கே  இருவினையைக்  கயிறாகவும்  , மும்மலங்களைக் கல்லாகவும்  உருவகப்படுத்திய  செய்தி  நினைக்கத்த்கக்கது .  கண்ணப்பருக்கு  நேர்ந்த இருவினை யொப்பு   மல பரிபாகம்   முதலிய  வெல்லாம் இங்கே  புலப்படுக்கப்பட்டன .

               இங்ஙனம்  தூயராகிய  கண்ணப்பர் இறையன்பில்  தலைபட்டு  ஆறாம் நாளில்  வீட்டின்பம்  எய்தினர்  என்ப .  சைவ சித்தாந்தத்தில்   கலை , தத்துவம்  புவனம்,  வன்னம் , பதம் , மந்திரம்  என்னும்  ஆறு  அத்துவாக்கள்  கூறப்பட்டுள்ளன . அத்துவா  என்பது  வழி  என்னும்  பொருளதாகும் . “இவை  ஒரோவொன்றாகக்  கழித்துக்  கொண்டு  சிவபதத்தில்  சேற்ற்கு  வழி  போறலின்  அத்துவா  எனப்பட்டன .”  என்பர்  சிவ ஞான முனிவர் .  இதுபற்றியே  தீக்கையில்  அத்துவ சோதனை  கூறப்பட்டுள்ளது . இங்ஙனம்  சிவபதம் எய்துதற்கு  வழிபோலவுள்ள  ஆறு  அத்துவாக்களையும்  கடந்து  சென்றனர் கண்ணப்பரென்பதை   “வருமுறை  ஆறாம்  நாளில்  வருமிர வொழித்த  காலை”  ஆறு  சேர் சடையார்  தம்மை அணுக  வந்து  அடையாநின்றார் .என்னும்  செய்திகள்  புலப்படுத்துவன .  

                                       க  .  ப ரு வு ட லொ டு க் க ம்

இனி , இறைவன் தம்  வலக்கன்ணில்  ஊறுபாடு  காட்டினாராகக்  கண்ணப்பர்  தம் வலக்கண்ணைப்பெயர்த்து அப்பினர்  என்னும்  இதன் கண்  ஒரு சிறந்த நுண்பொருள்  புலப்படுவதாகும் , ஒரு  பக்குவான்மா  வீட்டு  நிலையில்  தலைப்படுங்கால் , கன்மங்  காரணமாக அதற்கமைந்த  ஐம்பூதக்  கலவையாகிய உடலிலுள்ள  அவ்வப்பூதக்  கூறுகள் அவ்வம்  மாபூதங்களில்  ஒடுங்குமெனவும்  , அந்தக்கரணங்களும்  அவ்வாறே  அவ்வம்  முதலில்  ஒடுங்குமெனவும் ,  அறிவுருவாகிய உயிர்  பேரறிவுப்  பிழம்பாகிய  இறையடி  நீழலை  எய்துமெனவும்  மரையாகமங்கள்  கூறும் . இந் நிலையில்  கண்ணப்பருடைய  கட்பொறி  தேயுவின்   கூறாகும் .  அஃது  யாண்டு  ஒடுங்குமெனின் ,”சக்ஷீ ரசதித்யம்” (கண்  ஆதித்தனை  யடையும்)  என்னும்  மறைமொழிப்படி  அது  சூரியனை  அடைய வேண்டும் . இறைவனது வலக்கண் சூரியனாகும் ,  ஆதலால் தேயுவின்  கூறாகிய  கண்ணப்பரது  கட்பொறி  இறைவனது வலக்கண்ணாகிய சூரியனை அடைந்தது

  .  

            பின்னர் , இறைவனது இடக்கண்ணிலும்  ஊறுபாடு  உண்டாகக்  கண்ணப்பர் தம்  இடக்கண்ணைப்  பெயர்த்துவைக்க  நினைந்து  முயன்றார் . அச்  செயலை  இறைவன்  தடுத்துவிட்டனர் .  ஏன்  அதனையும்  ஏற்றுக் கொள்ளலாகாதென்று  கருதுங்கால் ,  ஆண்டும்  ஒரு  நுண்பொருள்  புலப்படுவதாகும் .

“சினமிறக்கக்  கற்றாலும்  சித்தியெல்லாம்  பெற்றாலும்

 மனமிறக்கக்  கல்லார்க்கு  வாயேன்  பராஅபரமே “

என்றபடி  வீட்டு  நிலையில்  தலைப்படும்  ஆன்மாவுக்கு  மன முதலிய கரணங்களின் செயல்களும் ஒழியவேண்டும் .  மனம்  நினைவு  வடிவமாகும்  .  ஆகவே  கண்ணப்பர்  தம்  இடக்கண்ணைப்  பெயர்க்க  நினைந்தார்  .  அவ்வளவில்  அஃது  ஒழிக்கப்பட்டது .  அந் நினைவு  யாண்டுச்  சென்றதெனின், “மனஸ்  சந்திரே  நிலீயதே” ( மனம்  சந்திரனிடத்தே  இலயமாகும் )  என்னும்  மறை  மொழிப்படி  சந்திர  மண்டலத்தை  அடைந்ததென்னலாம் .  எங்ஙனமெனின் , இறைவனது  இடக்கண்  சந்திரமண்டலமாகும் .  அக் கன்ணில்  தோன்றிய  ஊறுபாட்டை  ஒழிக்கவே  கண்ணப்பரது இறுதி  நினைவு  சென்றது . ஆகவே  அக்கண்ணைப்  பெயர்த்து அப்புதலாகிய  செயல்  தடுக்கப்பட்டு  அவ்வளவில்    நினைவு  வடிவமாகிய  மனமும்  சந்திரனில்  ஒடுங்கியதாகும் ,  இங்கே  வலக்கண்  சூரியனை  அடந்ததென்பது ஏனைப்  பூதக் கூறுகளும்  பொறிகளும்  அவ்வவற்றிற்குரிய  மாபூதங்களை  எய்தின  என்பதற்கும்  ,இடக்கண்ணைப்  பெயர்க்க  நினைந்த  நினைவு  சந்திரனை அடைந்ததென்பது , ஏனைய  அகக்கரணங்கள்  அவ்வவற்றிற்குரிய  இடங்களை அடைந்தன  என்பதற்கும் உபலக்கணமாகும் .  உபலக்கணம்  என்பது  ஒரு பொருள் ,  ஒழிந்த தன் இனத்தையும் குறிப்பது . இங்கே  கூறிய  கருத்துகள்  தோன்றவே  “இருசுடர்க்  குறுகண்  தீர்க்கும்  எழில்  வளர்கண் “  என்று  கண்ணப்பருடைய  கண்கள்  குறிக்கப்பட்டன . இவ்வரலாற்றுப்  பகுதியின்   பருப்பொருள்  பற்றி  இன்றும்  இறைவனது வலக்கண்   கண்ணப்பருடையதாகு மெனக் கொண்டு ,

“முக்கண்ண  னென்றானை  முன்னோர்  மொழிவார்கள்

அக்கண்ணாற்  குள்ள  தரைக்கண்ணே  ——    மிக்க

உமையாள்கண்  ணோன்றரைமற்  றூன்வேடன் கண்ணொன் 

றமையுமித  னாலென்  றறி”

என்று  ஒரு  புலவர்  சாதுரிய  நயந்தோன்றப்  பாடியுள்ளார் .

                                            10  .  பே ரி ன் ப    நி லை

    இனி , இறைவன்  கண்ணப்பரது  கையைப்  பிடித்துக் கொண்டு  என்  வலத்தில்   மாறிலாய்  நிற்க   என்று  பேரருள்  புரிந்தனர்  என்னும்  இந் நிகழ்ச்சியால்  ,  கண்ணப்பரைத்  தம்  புதல்வராகக்  கொண்டு  பரிச தீக்கை  செய்து  தம்  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தை  அவர்க்கு  அருளினர்  என்னும்  நுண்பொருள்   புலனாகும் .  முன்னர்  அருள்  நோக்காகிய   நயன  தீக்கையால் மலர்ப்பிணிப்பை  ஒழித்து  இறுதியில்  தம்  திருக்கரத்தால்  அவர்  கையைப்  பிடித்தலாகிய  பரிசதீக்கை  செய்து  சிவ  குமாரனாக்கிப்  பேரின்பம்  அளித்தனர் .  இடப்பக்கம்  அம்மையின்  கூறுதலானும்  ,  அம்மை அருள்  வடிவினளாதலானும்   அருள்  வழிச் சென்று  சிவபதம்  எய்தினர்  என்பது  புலனாக  வலத்தே  நிற்க  என்றனர் . இறைவன்  அருள்  நிறைவில்  அடங்கி  இன்புறலே  வீட்டு  நிலையாகவும்  வலம் என்று  ஒரு  பகுதியைக்  குறிப்பிட்டது,  அருள் வழிச்  சென்று  சிவபதம்  எய்திய  உண்மையைப்   புலப்படுத்து முகமாகப்  பிற்காலத்தே  வழிபடும்  அன்பர்  கண்ணப்பர்  திருவுருவை  நிலைப்படுத்தற்குரிய  இடம்  காட்டியபடியுமாம் .   

     இனி , இறைவனை  அடைதற்குரிய  சாதனமும்  அதனாற்  பெறப்படும்  பயனும்  இன்னவெனக்  கூறுமுகமாக ,  “உயிர்  தான்  முன்னே  செய்துகொள்ளப்பட்ட   புண்ணிய  விசேடத்தால்  தனக்கு  அந்தரியாமியாய்  இதுகாறும்  உண்ணின்றுணர்த்தி  வந்த  பரம்பொருளே   இப்பொழுது  குருவடிவமும்  கொண்டு  எழுந்தருளி  வந்து  சிவதீக்கை  செய்து  மன்னவ  குமாரனாகிய  நீ  ஐம்பொறிகளாகிய  வேடருட்பட்டு  வளர்ந்து  நின்  பெருந்தகைமை  அறியாது  மயங்கி  இடர்ப்பட்டாய் :  நின்  பெருந்தகைமை யாவது  ,  இவ்வியல்பிற்றென்று   அறிவுறுப்ப  அறிந்த  மாத்திரையே   அவ் வேடரை  விட்டு  நீங்கி  அன்னிய  மின்றி  அநன்னியமாந்   தன்மையின்  நிலைபெற்று   அம் முதற்வன்  திருவடிகளை  அணையும் .”  என்னும்  பொருள்  தோன்ற  எழுந்தது  சிவஞானபோதத்தின்   எட்டாம்  சூத்திரம்  . அது ,

ஐம்புல   வேடரின்  அயர்ந்தனை  வளர்ந்தெனத்

 தம்முதல்  குருவுமாய்த்  தவத்தினில்   உணர்த்தவிட்டு

அன்னியம்  இன்மையின்  அரங்கழல்  செலுமே “

 என்பதாம் ,  இச்  சூத்திரக்  கருத்துப்படி  ,  ஐம்புல வேடர்களின்  சூழலிற்  பட்டு  வளர்ந்த  திண்ணனாரை  அவர்  முன்பு  செய்  தவத்தி  நீட்டத்தால்   சிவபெருமானே  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ஞானத்தீக்கை  செய்து  உண்மை  உணர்த்திக்  கண்ணப்பராக்கித்  தம்  திருவடி  நிழலில்  இருந்திப்  பேரின்பம்  அருளினாரென்று   இவ்  வரலாற்றிற்கு  மற்றொரு  வகையால்  நுண்பொருள்  கோடலும்  பொருந்தும் .   

          இனி ,  கண்ணப்பர்  வரலாற்றிற்  கூறப்பட்ட  அவர்  தந்தை  தாயார்  அப்  பேரன்பாளரைப்  பெற்ற  நல்வினைப்  பேற்றாலும்  ,  நாணன்  முதலியோர்  அப்பெரியாருடன்  பழகிய  சிறப்பாலும்  அவரெல்லோரும்  நற்கதி  அடைந்திருப்பர்  என்பது  திண்ணமே  .  அங்ஙனமாகவும்  அந் நல்லோரைப்  பாசங்களாகவும்  ஐம்புலவேடராகவும்  குறித்தல்  எங்ஙனம்  பொருந்து மெனின் ,  கண்ணப்பராகிய  தூயவுயிரைச்  சார்ந்த  அம்மாந்தர்  செயல்களையெல்லாம்  அப் பாசங்களி னியல்பிற்  புலப்படுத்திச்  சைவ சித்தாந்த  தத்துவ   நுண்பொருள்  பல  வுணர்தற்கு  நிலைக்களனாக  இவ் வரலாறு  அமைந்திருப்பதால் ,இங்ஙனம்  குறிப்பிற்கோடல்  பொருந்து மென்க   இங்ஙனம்  தத்துவப்பொருள்  கொண்டமையால்  அன்னார்  நல்வினைப் பேற்றிற்குச்  சிறிதும்  இழுக்கின்று  என்பது  தெளிவாம் . 

             இதுகாறும்  கூறியவற்றாற்  போந்த  தொகைப் பொருள்  :-   கண்ணப்ப நாயனாரை  அன்பின்  திருவுரு  என்றால்  பொருந்து மென்பதூஉம் ,  அவர் வரலாற்றுச்  சுருக்கம்  இன்ன தென்பதூஉம்  ,  அவர் பிறப்பின்  பெருமையும்  தாய்  தந்தையர்  சிறப்பும்  இன்ன  வென்பதூஉம் , அவர்  பிள்ளைமைப்பருவம்   பற்றிய  நிகழ்ச்சியில்  அறியக்கிடக்கும்  பொருள்  நயங்களும்   பொறுப்புரிமையேற்று  வேட்டைத் தொழிலில்  தலைப்பட்டு  நடாத்திய  செயல்களும்  பழம்  பிறப்புத்  தொடர்ச்சியைப்  புலப்படுத்தும்  அடையாளங்களும்   இன்னவென்பதூஉம் , அவர்  மெய்யன்பின்  சிறப்பியல்பும்   அவ்  வன்பின்  சிறப்பை  இறைவன்  வெளிப்படுத்திய  அருமையும்  அதன்  விளைவுகளாகிய  கண்ணிடத்து  அப்புதல்  முதலிய  செயற்கருஞ்செயல்களும்  இன்ன வென்பதூஉம் , அவர்  வரலாற்றிற்  சைவ சித்தாந்த  தத்துவ  நுண்பொருள்கள்  புலப்படுமாறிங்ஙனம்  என்பதூஉம் , இறை , உயிர் , கட்டு  என்னும்  முப்பொருள்களுள்  காளத்தியப்பருங்   கண்ணப்பரும்  இறையும்  பக்குவ  முதிர்ந்த  உயிருமா  மென்பதூஉம் ,  கட்டாகிய  ஆணவம் ,  மாயை  , கன்மம்  , மாயேயம்  ,  திரோதாயி  என்னும்  ஐவகைப்படும்  பாசங்களின்  இயல்புகளை  முறையே  நாகன் , தத்தை , காடன், நாணன் ,  தேவராட்டி  என்னும்  இவர்கள்  செயல்கள்  புலப்படுத்துவன  வென்பதூஉம்  ,  திருக்காளத்தி  மலைமிசை  யேறியது  தத்துவங்  கடத்தலைப்  புலப்படுத்தூஉம்  என்பதூஉம் ,  குடுமித்தேவர்  ஞானாசிரியராக  நின்று  ஞானாவதியாகிய  நயனதீக்கையால்  கண்ணப்பரது  மலத்தொடர் பொழிந்தன  ரென்பதூஉம் , இறைவன்  தமது  வலக்கண்ணில்  ஊறுபாடு  காட்டி  இவர்  வலக்கண்ணை  யேற்றுக்கொண்டதும் , இடக்கண்ணை  யேற்றுக்கொள்ளாமல்  கையைப்பிடித்து  வலத்தெ  நிற்கவென்றதும் , கண்ணப்பர்  ஆறாம்  நாளில்  வீட்டு  நிலை  யெய்தியதும்  ஆகிய  இவையெல்லாம்  இன்னின்ன  நுண்பொருள்களைப்  புலப்படுத்துவன  வென்பதூஉம் , “ஆய்ம்புல வேடரின்  “  என்னும்  சிவஞானபோதச்  சூத்திரக்  கருத்துக்கும்  இவர்  வரலாற்றுக்குறிப்பு   ஒத்ததாகு மென்பதூஉம் , தாய் தந்தை முதலியோர்  செயல்களைக்கொண்டு  பாசங்களின்  இயல்புகளைக்  குறிப்பிட்டமையால்  அன்னார்  பெருமைக்கு  ஏதுங்  குறைவு  வாராதென்பதூஉம்   பிறவுமாம் .  

வாளா  பொழுது  கழிக்கின்றார்  மாநுடவர்

கேளரர்கொ  லந்தோ  கிறிபட்டார் —-  கீளாடை

அண்ணற்  கணுக்கராய்க்   காளத்தி  யுண்ணின்ற

கண்ணப்ப  ராவார்  கதை                                                                                          

                            >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

                                                      குறிப்புரை                                                  

இன்றியமையாமை  =  அவசியம் 

சாதனம்  =  கருவி .

கெழுமிய  =  பொருந்திய 

குரிசில்  =  உயர்ந்தோன் 

நிமித்தம்  =  காரணம்             

இயனூலாசிரியர்  =  இலக்கண மியற்றிய  ஆசிரியர்

புவனம்  =  உடல்  தோன்றுதற்குரிய  இடம்

போகம்  =  நுகர்பொருள்

தது  =  உடல்

கரணம்  =  மன முதலியன 

துய்த்தல்  =  நுகர்தல்

இறுமாந்து  =  செருக்கி

ஈடாக  =  பேறாக 

ஒருதலை  =  துணிவு 

தலைக்கூடல்  =  உண்டாதல்

அழிதன்  மாலையின  =  அழியும்  இயல்புள்ளன .

அவகாசம்  =  காலம் 

தலைப்படல்  =  அடைதல்

அண்முதல்  =  அணுகுதல் 

வினையீட்டம்  =  இருவினைகளயும்  தேடிக்கொள்ளல்

கன்மப்பயன்  =  இருவினைகளான்  எய்தும்  இன்ப  துன்பங்கள் 

உவர்  =  உப்பு  மண்

சிற் சக்தி  =  ஞான  சக்தி

அத்துவிதம்  =  இரண்டற்ற  நிலை ,

உய்த்துணர வைத்தல்  =  ஆராய்ந்தறிய  வைத்தல் .

தேக்கற  =  தெவிட்டுதல் ஒழிய 

கட்டுநிலை  =  பாசத்தோடு  கூடிய நிலை 

( பாட்டு )  தாணு   =  இறைவன்

அளவை  =  பிரமாணம்

கருதலளவை  =  அநுமானப்  பிரமாணம்

காட்சியளவை  =  பிரத்தியட்சப்  பிரமாணம்

உரையளவை  =  ஆகமப் பிரமானம்

பதிஞானம்  =  சிவஞானம்

பாசஞானம்  =  சொற்பொருட்  பிரபஞ்சம்  பற்றி  நிகழும்  ஏகதேச  ஞானம்

பசுஞானம்  =  மன முதலியவற்றைக்  கொண்டறியும்  ஆன்ம சொரூப  ஞானம்

குலாலன்  =  குயவன் 

தூலாருந்ததி  நியாயம்  =  பெரிய  நாண்மீனைக்  காட்டி  அதற்கடுத்த  நுண்ணிய  அருந்ததி  யுருவத்தைக்  குறித்தல்  போலப்  பலப்பொருள்  காட்டி  நுண்பொருள்  விளக்கும்  ஒரு நெறி .

மலபரிபாகம்  =  பாசம்  தன்  ஆற்றல்  ஒழிதற்குரிய  பக்குவம்  அடைதல் .

சடப்பொருள்  =  அசேதனப்பொருள்  . 

உவர்ப்பித்தல்  =  வெறுப்பித்தல் 

சமக  மந்திரம்  =  ஒரு ருத்திர  மந்திரம் .

சப்தம்  =  சொல்

சோபானம்  =  படி

கரதலாமலகம்  =  உள்ளங்கை  நெல்லிக்கனி

பிருதிவி  =  மண் , 

தத்துவாதீதர்  =  தத்துவங்களைக் கடந்தவர்

வியாப்பியம்  =  ஒன்றினொன்று  அடங்கிய  நிறைவு

வியாபகம்  =  எங்கும்  நிறைதல்

பரியாயம்  =  ஒரு பொருளைக் குறித்து  வழங்கும்  வேறு  பெயர்

அருவுரு  =  சகளநிட்களத்  திருமேனி

பரமுக்தி  =  இரண்டறக் கலந்த  நிலை

விழுச்சுடர்  =  சிறந்த ஒளி

சென்நெறி  =  செல்லுதற்கேற்ற  வழி 

தட்டின்று  =  தடையிலது

விழுமியது  =  சிறந்தது

ஒல்லுதல்  =  இயலுதல்

பிரபஞ்சம்  =  உலகப்பொருள்

தாத்துவிகம்  =  தத்துவங்களாலாயது

அதிட்டித்தல்  =  பற்றி  நிற்றல்

அலுப்த  சக்தி  =  பேரருளுடைமை

(பாட்டு)  இருட்கடு   =  கரிய  நஞ்சம்

மகன்மை நெறி  =  சர்புத்திர  மார்க்கம்

(பாட்டு) பெய  =  பெய்ய

நாகரிகம்  =  கண்ணோட்டம்

பிழம்பு  =  வடிவம் 

தடத்த நிலை  =  இறைவன்  அரு   உரு   அருவுரு  என்னும்  மூவகைத்  திருமேனி  கொண்டு  வெளிப்படும்  நிலை

மாழ்குதல்  =  மயங்குதல்

(பாட்டு)  அழுங்குதல்  =  வருந்துதல் 

பிறாண்டு  =  பிறவிடத்து

விச்சை  =   வித்தை

ஈர்த்து  =  இழுத்து

மலைவுறல்  =  மயங்குதல் 

அக்காரம்  =  சருக்கரை

தீற்றுதல்  =  உண்பித்தல்

சலனம்  =  அசைவு

சேதனப்பொருள்  =  அறிவுடைப் பொருள்

அசேதனப் பொருள்  =  அறிவிலாப் பொருள்

விளிப்பல்  =  அழைப்பேன்

ஒறுத்தல்  =  தண்டித்தல்

இதம்  =  நன்மை

அகிதம்  =  தீமை

(பாட்டு)  பூண்  =  அணிகலன்

கிரமம்  =   முறை

உவப்பு  =  கெடுதல்

மலரகிதர்  =  மலமில்லாதவர்

சகசமலம்  =  ஆணவம் 

நியதி  =  வரையறை

விசாரம்  =  ஆராய்ச்சி 

மெளட்டியார்  =  அறிவில்லாதவர்

சங்கித்தல்  =  ஐயுறுதல்

(பாட்டு)  கான்முளை  =  புதல்வன்

சனனம்  =  பிறப்பு 

சூதகம்  =  தீட்டு

ஆசெளசம்  =  தீட்டு 

வார்தல்  =  ஒழுகல்

புண்ணீர்  =  இரத்தம்

குதர்க்கநெறி  =  விதண்டாவாத  முறை

புரை  =  குற்றம்

கலாம்  =  கலகம்

நெஞ்சக்கலம்  =  மனமாகிய  பாத்திரம்

பரதந்திரம்  =  தன்  வயமின்றி  இருத்தல்

பெத்தகாலம்  =  பாசத்தோடு  கூடிய  நிலை

முனைத்தல்  =  செருக்கல்

தொழும்பு  =  அடிமை

(பாட்டு)  சால  =  மிக

(பாட்டு)  விறல்  =  வலிமை

முத்தன்  =  பாச விடுதி பெற்றவன்

பெத்தன்  =  பாசப்பிணிப்புடையவன்

காய்தல்  =  வெறுப்பு 

எழில்  =  அழகு

பரிவுரை  =  அன்புமொழி

ஒழுகலாறு  =  ஒழுகுநெறி

காதற் கிழமை  =  அன்புரிமை

கடம்பூண்ட  =  கடமையாக  மேற்கொண்ட 

கொன்   =   பயனின்மை 

இருமுதுகுரவர்  =  தாய்  தந்தையர் 

சிறு  முதுக் குறைவி  =  இளமையிற்  பேரறிவு  படைத்தவள் .

(பாட்டு) சென்னி  =  தலை

மடம்  =  அறியாமை 

அவலம்  =  துன்பம்

(பாட்டு) பொற்பு  =  அழகு

விரை  =  மணம்

தெற்றென  =   தெளிவாக

வன்றோண்டர்  =  சுந்தரமூர்த்திகள்

இரசபுஞ்சம்  =  சுவைத் திரட்சி

சுயம்பி  =  தானே  தோன்றியது .

புனர்ப்பவம்  =  மறுபிறப்பு 

சகளம்  =  உருவம்

நிட்களம்  =  அருவம்

ஊதியம்  =  இலாபம் 

உரம்பெறல்  =  வலியுறுதல் 

ஏதம்  =  துன்பம் 

மாற்றம்  =  சொல்

(பாட்டு)  வந்திப்பது  =  வணங்குவது

(பாட்டு)  பிணக்கு  =  மாறுபாடு

தடிதல்  =  வெட்டுதல்

வளி  =  காற்று

(பாட்டு)  பாவிய  =  பரவிய 

உதிரப்புனல்  =  இரத்தம்

முடை  =  புலால் நாற்றம் 

இழுது  =  நிணம்

குவை  =  திரட்சி

சாதனம்  =  அடைதற்கருவி

சாத்தியம்  அடையும் பேறு

அபரஞானம்  =  நூலறிவு

பரஞானம்   =  அநுபவறிவு

பனுவல்  =  நூல்

கூர்  =  மிகுதி

கருவூலம்  =  நிதியறை.

அநுபவம்  =  அழுந்தி யறிதல் 

வாச்சியம்  =  பொருள்

கருடோகம்  =  கருடன்

(பாட்டு)  திரிமலம்  =  மும்மலம்

(பாட்டு)  புள்ளுவர்  =  வேட்டுவர் 

புனம்  =  காடு

குறைகொளல்  =   கொள்ளை யிடுதல்

தூநெறி  =  சன்மார்க்கம்

சிவார்ப்பனம்  =  சிவனுக்கென்று  ஒப்பித்தல்

தம  =  தம்முடைய 

(பாட்டு)பொத்திய  =  மூடிய

(பாட்டு) கட்டி  =  சருக்கரை

பனி  =  குளிர்ச்சி

உரன்  =  திண்மை

சிவகரணம்  =  சிவத்துவம்  பெற்ற  உள்ளம் 

சீவ போதம்  =  உயிரறிவு

படனம்  =  பாராயணம்

பனிமலைவல்லி  =  பார்வதி

(பாட்டு)  புளகம்  =  மயிர் சிலிர்த்தல்

கடிதல்  =  விலக்குதல்

அளைந்தன  =   கலந்தன

விடயவாதனை  =  புலனுகர்வுத் தொடர்ச்சி

(பாட்டு)  தெருளுதல்  =  தெளிதல்

அளவை நூல்  =  தருக்க நூல்

பந்தித்தல்  =  பிணித்தல்

பூதவாதி  =  மண்  முதலிய  பூதங்களையே  பொருளெனக் கொள்பவன்

(பாட்டு)  நீரல  =  நெறி  பிறழ்ந்த சொற்கள்

அதர்  =  வழி

ஊறு  =  துன்பம்

தழீஇ  =  தழுவி

(பாட்டு)  துளங்கல்  =  அசைதல்

கம்பம்  =  நடுக்கம்

செவ்வனம்  =  நன்றாக 

அயர்வு  =  சோர்வு

(பாட்டு)   செற்றம்  =  கோபம்

நுனித்துணர்தல்  =  நுணிகி  ஆராய்தல்

குணிப்பொருள்  =  குணத்தையுடைய பொருள்

(பாட்டு)  படிவம்  =  வடிவம் 

ஆர்வம்  =  விருப்பம்

பற்றுக்கோடு  =  ஆதரவு

வாய்மை  =  உண்மை

சீலம்  =  ஒழுக்கம்

ஒருப்படாத  =  பொருந்தாத

(பாட்டு)  நளிர்  =  குளிர்

அங்கணர்  =  இறைவர்

(பாட்டு)  பொருவு  =  ஒப்பு

பரிசு  =  தன்மை

அநுசிதம்  =  தக்கதல்லாதது

இடத்தல்  =  பெயர்த்தல்

அமண்  =  சமன் சமயம்

கையர்  =  கீழ்மக்கள்

கொளுவுதல்  =  மூட்டுதல்

மழவிளங்குழவி  =  மிக்க  இளமைப்பருவமுள்ள  குழந்தை .

(பாட்டு)  பாவம்  =  பிறப்பு

பாங்கு  =  இயல்பு

இயங்குதிணை  =  சரப்பொருள் 

நிலைத்திணை  =  அசரப்பொருள்

(பாட்டு) நேர்படுதல்  =  உண்டாதல்

ஆர்வமுதற் குற்றம்  =  காமம்  முதலிய  தீங்குகள்

தோணிபுரம்  =  சீகாழி

ஆழிய  =  ஆழ்ந்த 

முகில்  =  மேகம்

செவ்வி  =  காலம்

தண்ணிது  =  குளிர்ச்சியுடையது

திருநாவலூரர்  =  சுந்தரர்

கோள்  =  கிரகம்

மீன்  =  நட்சத்திரம்

(பாட்டு)  விமலர்  =  குற்றமில்லாதவர்

இலக்கு  =  அடையாளம் 

அருண்மொழித்தேவர்  =  சேக்கிழார்

விஞ்சுதல்  =  மிகுதல்

தேவராட்டி  =  தெய்வம்  ஏறப் பெற்றவள் ;  தெய்வவழிபாடு  செய்பவள்

குடுமித்தேவர்  =  மலையுச்சியிலிருக்கும்  இறைவர் .

இலைக்கலம்  =  இலையாலமைக்கப்பெற்ற  பாத்திரம்  ,  தொன்னை

தேவுமால்  =  தெய்வ  மயக்கம்

திருமஞ்சனம்  =  நீராட்டு

கலசம்  =  குடம்

கல்லை  =  தொன்னை

ஊறுபாடு  =  துன்பமுண்டாதல்

வைகறைப்பொழுது  =  விடியற்காலம்

பேதித்தல்  =  வேறுபடுத்தல்

குருதி  =  இரத்தம்

அறுதியிட்டுரைத்தல்  =  வரையறுத்துக்  கூறல்

(பாட்டு)  அவல்  =  பள்ளம்

மிசை  =  மேடு

மடங்கல்  =  சிங்கம்

சூர்   =   அச்சம்

அரிப்பிணவு  =  பெண்சிங்கம்

வயம்  =  வலிமை

அரியேறு  =  ஆண் சிங்கம்

காமரு  =  அழகு

பறழ்  =  குட்டி

கோட்படாமை  =  கொள்ளப்படாமை

மல்கிய  =  பெருகிய

உறுகண்  =  துன்பம்

சிலை  =  வில்

(பாட்டு)  வேணி  =  சடை

சூல்  =  கருப்பம்

மான் பேடு  =  பெண் மான்

(பாட்டு)  தென்புல வாழ்நர்  =  பிதிரர்

இறுத்தல்  =  கொடுத்தல்

பிணைமான்  =  பெண்மான்

(பாட்டு)  பொருப்பு  =  மலை

ஈட்டம்  =  தொகுதி

ஏனம்  =  பன்றி

புனம்  =  காடு

போதுவர்  =  வருவர்

புல்லுவர்  =  தழுவுவர்

புளிற்றா  =  ஈற்றணிமையையுடைய பசு

வங்கு  =  மரப்பொந்து 

(பாட்டு)  தணக்கு  =  வால்

அளை  =  பொந்து

பதார்த்தம்  =  உலகியற்பொருள்

கூர்ச்சம்  =  தருப்பை

(பாட்டு)  அடவி  =  காடு

(பாட்டு)  தீபமரம்  =  சோதி விருட்சம்

மந்தி  =  பெண் குரங்கு

முழை  =  மலைக்குகை

அங்கி  =  நெருப்பு

பூத நாயகன்  =  சிவபெருமான்

செம்பியன்  =  சோழ  மன்னன்

படி  =  ஒப்பு

எடுத்துக்காட்டு  =  உதாரணம் 

(பாட்டு)  குனிசிலை  =  வளைந்தவில்

மாதவன்  =  முனிவன்

(பாட்டு)  குசை  =  தருப்பை

அங்குலி  =  பவித்திர மோதிரம்

அவி  =  தேவருணவு

துகள்  =  தூசி

ஒருவி  =  நீங்கி

(பாட்டு)  கருவரை  =  கரியமலை

காளமேகம்  =  கரியமேகம்

காட்டு  =  விளக்குவது

அநுமித்தறிதல்  =  அநுமானப்  பிரமாணத்தாலறிதல் , காரியப்பாடு செயற்படுதல்

(பாட்டு)  பாலளாநீர்  =  பால் கலந்த நீர் , பறைதல்    =  நீங்கல்

(பாட்டு)  முதலி  =  தலைவன்

மாமாயை  =  சுத்த மாயை

வித்தியாதத்துவம்  =  காலமுதலியஏழு, 

ஆன்மதத்துவம்  = மண் முதல் சித்தம்  இறுதியாகவுள்ள  இருபத்து  நான்கு

சிவதத்துவம்  =  சுத்ததத்துவம் , சிவமுதல் ஐந்து

பிரோகதத்துவம்  =  இயக்குந்  தத்துவங்கள் .

(பாட்டு)  எற்றையினும்  =  எந்த நாளினும்

வரிச்சிலை  =  கட்டமைத்த   வில்

அருட்குறி  =  சகுனம்

அட்சதை  =  மஞ்சள்  கலந்த அரிசி .

(பாட்டு)  சேடை  =  அட்சதை

குண்டமண்டலங்கள்  =  ஓமத் தீ வளர்த்தற்கு  முக்கோணம் வட்டம்  முதலிய  வடிவாக  அமைக்கப்படும்  இடங்கள்

கறை  =   களங்கம் 

கான்மியமலம்  =  மூலகன்மங் காரணமாகத் தோன்றும்  செயல்கள்

அத்துவா  =  வழி

பருவுடல்  =  தூலவுடம்பு

தேயு  =  நெருப்பு

நயனதீக்கை  =  ஆசிரியன்  பார்வையாற்  செய்வது

பரிசதீக்கை  =  ஆசிரியன்  தழுவிக்கொண்டு  செய்வது

அந்தரியாமி  =  உள்ளே கலந்து  விளங்குபவன்

அன்னியம்  =  வேறுபாடு

குழல்  =  கூட்டம்

                                               ***********************************

உதயனசரிதமும் சுலோசனையும்

உதயனசரிதமும்

சுலோசனையும்

மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

பண்டிதமணி

மு. கதிரேசச் செட்டியார்

பண்டிதமணி  நூற்றாண்டு விழா  வெளியீடு

சன்மார்க்க சபை

மேலைச்சிவபுரி

1983

விழாப் பதிப்புரை

        பண்டிதமணி  நூற்றாண்டு விழாக்  குழுவினர் இந் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாகப் பண்டிதமணியாரின் நூல்களையெல்லாம் மறுபடியும் பதிப்பித்து இவற்றைத் தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செயல் வேண்டும் எனவும் அதன் மேலும் இப்பெரும் புலவரின் நூல்களைத் தக்கோரால் திறன் செய்து அத்திற நூல்களையும் தமிழாக்கம் பெற வெளியிடல் வேண்டும் எனவும் நன்முடிவு கொண்டனர் .

         அண்மைக்காலத்துப் பெருந்தமிழ்ப்புலவர் பலரின் நூற்றாண்டு விழாக்கள் சோனைமாரிபோல நாடெங்கும் கொண்டாடப் பெறுகின்றன. கொண்டாடுவது கொண்டாடத்தக்கது என்றாலும் , அவ்வளவில் ஒரு நாளை ஆர்வமாக அது கழிகின்றது . விழாச் செலவுக்கு ஏற்ற தொடர்குறியும் தமிழ்நிலையும் இல.அப்புலவர் தம் படைப்புக்களை வெளியிடுவதையும் விழா யயர்வின் ஓரு பாங்காகக் கடைப்பிடித்தல் அவர்தம் நூல்கள் வழி வழி கிடைக்கும் . முன்னும் பின்னும் அச்சாகப்  படிகளும் தேடலின்றிக் கிடைக்கும். புலவர்களின் அறிவுடைமைகள் பொதுவுடைமைகள் அல்லவா?

              இக்குறைபாடு பண்டிதமணியார்க்கு  வாராதபடி , அவர் தம் எழுத்துடைமைகள் மறுமை பெற்றுக் காக்கப்படுகின்றன . ஆய்விற் சிறந்தோர் எழுதிய திறநூல்களும்  ஆக்க நூல்களும்  உடன் வருவதால் , அணைநீர்  பெறும் யாறு போல  இவ்விழாவினால் தமிழ்  ஊட்டம் பெறுவதை அறியலாம் . இவ்வெளி யீடுகட்குப் பல்லாயிரத்  தொகை நன்கொடை வழங்கும்  தமிழ்ப் பாரிகட்குப் பெரிதும் நன்றியுடையோம் . வண்மையின்றித் தமிழ் வளம் பெறுவதில்லை .

                பண்டிதமணியின்  பனுவல்களும் திற நூல்களும்  மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைக்கே உரிமைய . “ என்னை இப்புகழ் நிலைக்கு உருவாக்கியது சபையே “  என்பது பண்டிதமணியின் நன்றிச் சொல். பல பட்டங்கள் இருந்தாலும் 1925 இல் இச் சபை வழங்கிய “பண்டிதமணி” என்ற முதற்பட்டமே பெரும் பேராசிரியர் கதிரேசனார்க்கு  இயற்பெயரிலும் தனிப்பெயராக வழக்குப் பெற்று விட்டது .இச்சபையை பெரும்புலவர் சோழவந்தான் அரசன் சண்முகனார் தலைமையில் 1909 இல் தோற்றி வளர்த்து இன்றும் இனியும் காக்கும் வ. பழ . சா . குடும்பத்தாரின் தமிழ்த் தொண்டு தமிழ்மக்களின் தவத் தொண்டாகும் .இச்சபை இன்னும் இரண்டாண்டுகளில் பவள விழாக் கொண்டாடும் பருவம் எய்தும் .

                   சுலோசனையும் (1922 ) உதயன சரிதமும் ( 1924 ) சபையின் வெளியீடுகள் :  வடமொழிக் காப்பியம்  தழுவிய  கதைகள் :  பண்டிதமணியின்  முதல் மொழிபெயர்ப்புகள் .  இவை ஒரு நூல் வடிவாக  விழாப்பதிப்பாகின்றன. அல்லொலிகலவாமை , சொல்லாக்கம் , வடமொழிப்  பெயர்களைத் தமிழுருவாக்கல் , பெருமிதத் தமிழ்நடை , புணர்ச்சித் தொடர்கள்  , தொடர் நெடுமை , இலக்கிய  வனப்பு  என்ற  நெறிகளை  இந்நூலால்  அறியலாம் . மொழிபெயர்  கலைஞர்கட்குப்  பண்டிதமணியின் மொழிபெயர்  ஆக்கங்கள்  பாடநூல்களாகும் என்பது தெளிவு . இந் நெறிகளைப் பண்டிதமணியம்  என்று  பெயரிடலாம் . பண்டிதமணியின்  உரைநடைகளைப்  படித்தாற் போதும் , கவிதைகளாற் பெறும் இலக்கியத்  திறமை கைவந்துவிடும் .

                 உரைநடை நூல்களில்  முடிவுப்பகுதியில் பொருள் பொதிந்த வெண்பா  யாத்தல் பண்டிதமணியின் ஓர் எழுத்து மரபு.  சிலப்பதிகாரத்திலும்  பத்துப்பாட்டிலும் பண்டே  இம் மரபு தோன்றியிருப்பதைக்  காண்கிறோம் . மொழிபெயர்ப்புத்  தொடக்கத்திலேயே  என் ஆசிரியர்க்குக்  கவிதைத்  தனித்திறம் இருந்தது என்பதற்கும் பின்னே  மண்ணியல்  சிறுதேர்  போன்ற  “செய்யுள்  நடையாகவே  நூல்கள்  இயற்றும் ஆற்றலிருந்தும்  வசன நடையாகவே  இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக்  காரணம்   எல்லோரிடத்துமுள்ள  அன்பின்  மிகுதி என்றே சொல்லவேண்டும் “  என்பது பெரும் பேராசிரியர் அறிஞர் உ . வே . சாவின்  மதிப்புரை .

                   இந் நூற்பதிப்பிற்குத்  தக்க  நன்கொடை   வழங்குநர்  தமிழ்ப்  பேராசிரியர்  திருமுறைச்  செல்வர்  க . வெள்ளைவாரணனார் . இப் பெரும் புலவர் விபுலானந்த அடிகளின்  மாணாக்கர் ;  பன்னிரு திருமுறை  வரலாறு  கண்டவர் . இலக்கியம்  ,இலக்கணம் , சித்தாந்தம்  , கல்வெட்டு  , இசை முதலான  பல்துறை வல்லுநர் . இரக்கும்  புலவருலகில் ஒரு கொடைஞ்ர் . இந் நன்மகனார்க்குச் சபை நன்றியுடையது .

                     பண்டிதமணி  நூற்றாண்டுக்  குழுவுறுப்பினர்கட்கும் உடனிருந்து உறுதுணை புரிந்த தணிக்கையாளர்  பெரி. தியகராசனார்க்கும் , பேராசிரியர்  அறிஞர் தமிழண்ணலுக்கும் நூலச்சீட்டுக்கு  முழுதும் உதவிய அறிஞர் கதிர் மகாதேவனுக்கும் வனப்புற  அச்சிட்ட  மலரச்சகத்தார்க்கும்  உள்ளார்ந்த நன்றியம் .

                       தமிழ்ப்பண்பு  சான்ற  தமிழகவரசு  பண்டிதமணி நூற்றாண்டு விழாவினைச்  செம்மாந்த அவர் திருவுருவைத்  திறந்து வைத்து அரசு விழாவாகக்  கொண்டாடியது .தமிழவேள் மகாலிங்கனார் நிறுவிய இராமலிங்கர் பணிமன்றமும் திருவுருவக்காட்சியொடு   சிறப்பு விழா  எடுத்தது .  தேவகோட்டை  கலைக்கல்லூரி நிறுவனர் தமிழறிஞர் சேவு . அண்ணாமலையார் பெருந் தொகை வழங்கி பண்டிதமணி அறக்கட்டளையை மதுரை காமராசர்  பல்கலைக் கழகத்தில்   நிறுவினார். உலகுபுகழ்  வளரும் மதுரை காமராசர்  பல்கலைக்கழகம்  கருத்தரங்கு  மண்டபத்துக்குப்  “பண்டிதமணியரங்கு”  என்ற பெயர் வைத்துச் சிறப்பித்தது.  இச்சிறப்புக் கெல்லாம் நன்றி  ஒருவர்  கூறினார்  போதுமா? தமிழினமே  கூறும் தகைத்து . அரசும் மக்களும்  தக்கார்க்குத்  தக்க  சிறப்புச்  செய்து காட்டுவது நாட்டில்  தக்கார்  பலரை  உருவாக்கும் .

                          என் ஆசான் பண்டிதமணியின்  தொண்டுகள்  முத்திறத்தன . தமிழில்  நயங்காண் துறையைக் கண்டு  சொல்லாலும் எழுத்தாலும்  பரப்பியவர் ; புதிய வகை நூல்களை மொழிபெயர்த்து வழங்கியவர் ; உருக்கும்  திருவாசகத்திற்கு  உள்ளொளி பெருக்கும்  கதிர்மணி  விளக்கம்  கண்டவர் .

        பண்டிதமணியின்  திருவடிக்கு  வணக்கம் . 

                                                              வ சுப  மாணிக்கம்

                                              தலைவர் , பண்டிதமணி நூற்றாண்டு  விழாக்குழு .

காரைக்குடி .

16-10-1982.                           

அபிப்பிராய  பத்திரங்கள்

சென்னை மகாமகோபாத்தியாய  பிரமஸ்ரீ

வே . சாமிநாதையரவர்கள்

              மகிபாலன்பட்டி  வித்துவான் மகா  ஸ்ரீ  மு . கதிரேசன் செட்டியாரவர்கள் இயற்றிய “உதயன சரிதம்” என்னும் வசன நூலை  முற்றும் படித்துப்பார்த்து இன்புற்றேன் .

              வடமொழியில் மிக விரிவாகப் பரந்து கிடக்கும்  இச்சரிதத்தை யாவரும் எளிதிலுணரும்படி  சுருக்கமாகத் தெள்ளிய இனிய நன்னடையிற்  பலவகையான  சுவைகளை அங்கங்கே அமைத்துப் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும் , பண்டை உரைகளிலும் காணப்படும் இனிய வாக்கியங்களை உரிய இடங்களிற் சேர்த்துத் தமிழர்க்கு ஒரு நல்விருந்தாக  இவர்கள் இயற்றியிருத்தல் மிகப்  பாராட்டற்பாலது. இதில் இடை யிடையே வாய்த்த இடங்களில் உலகத்தாரை நோக்கிப் புலப்படுத்தும் நீதிவாக்கியங்களும் , ஒவ்வொரு பகுதியின்  இறுதியிற் கதையின்  சாரத்தைச் சுருக்கித் தெரிவித்திருக்கும்  வெண்பாக்களும் , உரிய இடங்களிற் சிவபெருமானுடைய திருவருளின் பெருமையைப்  புலப்படுத்திய பகுதிகளும் அறிந்து இன்புறற்பாலன.

                     செய்யுள் நடையாகவே  நூல்களியற்றும் ஆற்றலிருந்தும் வசன நடையாகவே இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக்  காரணம் எல்லோரிடத்துமுள்ள அன்பின் மிகுதியென்றே சொல்லவேண்டும் .

                     கல்வியறி வொழுக்கங்களாற் சிறந்த இவர்கள் இது போன்ற இன்னும் பற்பலவாகிய சொற்பணிகளைச் செய்து கொண்டு பலகாலம் மிக்க புகழுடன் இந்நிலவுலகில் வாழ்ந்து  விளங்கும்படிச்   செய்வித்தருளும் வண்ணம் இறைவன் திருவடிகளைச் சிந்திக்கின்றேன் ,

          “இதனையிதனா  லிவன் முடிக்கு  மென்றாய்ந்

             ததனை  யவன்கண்   விடல்

என்னும் பெரியோர் திருவாக்கிற்கிலக்காக இவ்வரிய காரியத்தைச் செய்து நிறைவேற்றும்படித்  தேர்ந்தெடுத்து  இவர்களைத் தூண்டிய மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைத் தலைவர்களுடைய தமிழபிமானமும்  வண்மையும் மிகப் பாராட்டற்பாலன . 

தியகராஜ  விலாசம்,                                                                இங்ஙனம்,

திருவட்டீசுவரன் பேட்டை ,                                                வே . சாமிநாதையர்.

28 – 03 – 1924                

சென்னை  நியாய  கலாசாலைப்  பேராசிரியரும் ,

கல்கற்றா தாகூர்ச்  சட்ட  விரிவுரைகாரருமாகிய

Advocate  திருவாளர்

கா . சுப்பிரமணிய பிள்ளையவர்கள் , M A ., M L .

             தங்கள்  அருமைச் சிறுநூல்  கைவரப்பெற்று மகிழ்ந்தேன். அது, தமிழ்ப் பெருங்  காப்பியங்களுள்  ஒன்றாகிய பெருங்கதைக்குத்  தோற்றுவாயாகா அமைந்துள்ளது . ஆதலால் , தமிழ்  கற்பார்க்குப்  பெருநூலின்  நயத்தை  எளிதில் நன்கு  விளங்குஞ் சீர்மை  மிக்கது .  வடமொழிச் சொற்றொடர்களைத் தூய செந்தமிழ்  நலங்கனியும் வண்ணம் மொழிபெயர்த்துள்ள தங்கள் புலமைத்திறன்  கற்போருள்ளத்தைக்  கவரவல்லது .  மொழிபெயர்ப்பானமைந்த  உரைநடை  நூல்களுள்  இந்நூல்  தலைநின்று  விளங்குந்  தகுதி யுடையது .

                அரசாங்கப்  பெருமை ,  அமைச்சர் திறமைப்பாலது என்பதையும் , கற்பின்  சீர்மை   மாசுபடாது போற்றற்குரியது என்பதையும் , அருளொழுக்கம்  அளவில்  சிறப்புடைய  தென்பதையும்  , அனைய பிறவுண்மைகளையும் நிலை நாட்டு  முகத்தான்  அறிவுக்கு  நல்லுணவு  தரவல்ல  “உதயனன்  கதை”  போன்ற  நூல்களே  கலாசாலை மாணவர்க்குப்  பெரிதும் பயன்படுத்தற்குரிய   பாடங்களாக   நியமிக்கற்பாலன. 

சென்னை,                                                                                                     இங்ஙனம் ,

26 – 03 – 1924 .                                                                                          K . சுப்பிரமணியன்

இராமநாதபுரம்  சேது ஸமஸ்தான வித்துவான்

மகா- ஸ்ரீ  உப . வே

ரா. இராகவையங்காரவர்கள்

மகிபாலன்பட்டி வித்துவான் கதிரேசன் செட்டியார் தமிழிற்   சிறந்த புலமை வாய்ந்தவர் ;  வடமொழியுணர்ச்சி  மிக்கவர் ; அரிய பெரிய நூனயங்களைத்  தம் மதிநுட்பத்தானன்காராய்ந்து  தெளிந்து கல்விக் கழகத்துப் பலரும்  வியக்க எடுத்து வழங்குஞ்  சொல்  வன்மையினிதுடையர் ;நகர வணிக நன்மக்களூர்கள்  பலவற்றுட்டமிழ்க் கல்வி வளர்தற்குக்  காரணமான  கழகங்கள் , கல்லூரிகள் நிலைபெறுவித்தற்கட்டம்மினத்தாரைத் தூண்டியவர்  ஆங்காங்குள்ள  புலவர் பெரியாரை  அழைப்பித்துத்  தங்குலத் தனவாங்களைக்  கொண்டு உபகாரம்  புரிவித்து மகிழ்விப்பவர் ; தம்மினத்தார் அறிவினும் ஒழுக்கத்தினும்  திருந்திப் புகழ் எய்தி வாழ்தற்பொருட்டுத் தம் மனமொழி மெய்யொத்து முயல்கிற்பவர். செல்வப்பொருளேயீட்டும் வணிகக்குலம் இவரைப் பெற்றுக் கல்விப் பொருளையும் ஈட்ட முயல்வது காண்டற்கினியது .

  இவர்  தமிழிற் சிறந்த வசனநடையாற் பொலிவு பெற்றகத்திய நூல்களில்லாத குறையைத்  தீர்க்கக் கருதி  “ சுலோசனை “  “ உதயன சரிதம்”  என இரண்டு நூல்களை வடமொழியினின்று  மொழிபெயர்த்துதவி யுள்ளனர். நிரம்பிய கல்வி யுடைய இப் பெருந்தகையாளரால்  இயற்றியளிக்கப்பட்ட  இந்நூல்கள்  செவ்விய விழுமிய தீந்தமிழ்மொழிகள் மலிந்து குறித்த பொருளை யினிது விளக்கிச் சேறலாற் கற்பார்க்குக் கழிபேருவகை பயக்கும் பெருவிருந்தாதலொருதலை.

     இந்நல்லறிவாளர் தம்மினத்தவர்க்கும்  புலவர்க்கும் பிறர்க்கும் இங்ஙனமே  பல்லூழிநாளும்  பயனுற நின்று  வாழும் வண்ணம்  இறைவன் றிருவருளைச்  சிந்திக்கின்றோம் .

இராமநாதபுரம்                                                                                           இங்ஙனம் ,

14 – 04 – 1924  .                                                                                    ரா . இராகவையங்கார்

                                                                                            சேது ஸமஸ்தான வித்துவான்

செந்தமிழ்,  தொகுதி  உ உ .  பகுதி  @

……………………………………  கதை படிக்கத் தொடங்கும்  சிறுவர்களும் மனம் கொள்ளற் கேற்றவாறு வாக்கியங்களைச் சிறு தொடராக வமைத்தும் , செய்யிளிலும் சிறிது பயிலுமாறு  இடையிடையே சில வெண்பாக்களியற்றிச்  சேர்த்தும் இருப்பது பாராட்டத்தக்கது . செட்டியாரவர்கள் கல்வித் திறமையை  நோக்குங்கால்  இது மிகச் சிறிய காரியமாயிருப்பினும்  சிறுவர்களுக்    கெல்லாம்  கல்வியறிவளிக்கும்  சிறப்பினை நோக்குங்கால் பெரிய காரியமேயாம் .

………………………………………….

மதுரை  ஹைகோர்ட்டு  வக்கீல்  திருவாளர்

S  S  பாரதியாரவர்கள் ,  M A ., B L .

…………………………   இந்நூலின் உரைநடை  இனிமையோடு  எளிதில் தெளிவுநுதலும்   ஆசிரியர் கருத்தை யினிது வெளிப்படுத்துகின்றது . படிக்குங்கால் மொழிபெயர்ப்பு நூலென்னும் உணர்வெழவிடாது  படிப்பவர் மனத்தை யொழுகு தெள்ளினிமையாற்  களிப்பிக்குஞ்  செவ்வி  பாராட்டற்பாலது . அமைச்சு  நல்லறமாதி நலம் பல பொதுளிச்  சிறக்குமிந்நூலில்  எம்மனோர் மனத்தை  முழுதுங்  கவர்வது  கற்புயர் காதலாகும்

கணபதி துணை

முன்னுரை

*” உதயன சரிதம் “ என்னும் இது வற்ச நாட்டிலே , கெளசாம்பி நகரத்திலே , பாண்டவ குலத்திலே  சகச்சிரானீகன்  என்னும் வேந்தற்கு  மிருகாவதிபாற் றோன்றிய    உதயனனது    வரலாற்றை   விரித்தும்    அவன்புதல்வன் நரவாகனதத்தன்  வரலாற்றைச்  சுருக்கியுங்  கூறுவதாகும் .

    இதன் சுருக்கம் வருமாறு : –   “திலோத்தமை சாபத்தாற் சகச்சிரானீகன்  மிருகாவதியைப்  பதினான்கு யாண்டு பிரிந்திருக்க நேர்ந்துழி , மிருகாவதி இமயமலைச் சாரலிற்  சமதக்கினி முனிவர் ஆச்சிரமத்தில் அம்முனிவர் காப்பிற் அருமருந்தன்ன  உதயன  னென்னும்  புதல்வனை  யீன்றாள் .  முனிவரால் உதயனன்  கல்விப்பயிற்சி செய்யப்பெற்று எல்லாக் கலைகளி லும்   சிறந்து விளங்கினான்  சாபந்  தீர்ந்துழி  அக்காட்டில் உதயனன் வள்ளன்மை  காரணமாக   “ இன்னிசை “ யென்னும்  யாழைப் பெற்றுத்  தந்தை யுணர்ந்துவந்தழைப்பத்  தாயோடு தன் நகர மெய்தி மகிழ்ந்தான் . இவ்வுதயனன்  காளைப்  பருவமுற்றுழி , இவன் எழில் குணஞ் செயல்களைக்  கேல்வியுற்று  உச்சயினி  நகரத் தரசன்  சண்ட மகாசேனன் என்பான் , தன் அருமை மகள் வாசவதத்தையை  இவர்க்கு மணஞ் செய்துகொடுக்கத் துணிந்து , தன் மகட்கு  யாழ்பயிற்றுதலைத்  தலைக்கீடாகக்  கொண்டு தூதன் முகமாக   உதயனனை யழைப்ப ,  வரவுடன்படாமை   கண்டு   பொறியானை

*”உதயனன் என்பது  பிராகிருதத்தில்  உதயணன் “ என்று வரும் . தமிழிலுள்ள பெருங் கதை  முதலியவற்றுள் , பிராகிருதத்துள்ள வண்ணமே  “உதயனன்” என்று கூறப்பட்டுள்ளது . இச்சரிதம் வடமொழியினின்று  மொழிபெயர்க்கப்  படுதலின் , வடமொழியிலுள்ளபடியே  “ உதயனன்” என்று கண்டு வழங்கப்பட்டுள்ளது

ஒன்று நிருமித்துக் காட்டிற்றிரியச் செய்தான் . அதனை யுண்மையெனக்  கேட்டு  வேட்டை  விருப்பாற் போந்த உதயனன் வஞ்சகத்தாற்  கொணரப்பட்டுச்  சிறைக்கண்  யாழ் பயிற்றும் வினைஞனாயினான் . பின் , அமைச்சர்களுட் சிறந்த யெளகந்தராயணன் செய்த அரிய சூழ்ச்சிச்  செயல்களால் ,உதயனன்  நள்ளிரவில் , தன் மாட்டுக்  காதற்கிழமை  பூண்டுள்ள  வாசவதத்தையை  அழைத்துக்கொண்டு  இடையூற்றைக் கடந்து  தன் நகரம் புக்கு  அவளை மணஞ் செய்துகொண்டான் . இவ்வாழ்க்கை நிகழ்வுழி , இவன் அரசியற் செல்வத்தைப் பெருக்கக் கருதிய  யெளகந்தராயணன் , மகதராசன் மகள்  பதுமாவதியை உதயனன் மனஞ் செய்து கோடற்குச் சூழ்ந்து , இலாவாணகம்  என்னும் இன்ப நிலத்தில் வேந்தனை யிருத்தி  வாசவதத்தையை  “எரிவாய்ப் பட்டிறந்தாள்”  என்னுஞ் செய்தியை  வெளிப்படுத்திப் பிரித்துத் தனித்துறையுங் காலத்தும் , கற்பின் சான்றாம்வண்ணம்  அவளைப் பதுமாவதி பக்கல் சேர்த்தான் . வாசவதத்தையின் பிரிவால் வருந்திய உதயனனைத் தேற்றி , மகதராசன் மகள் பதுமாவதியை மணக்க உடன்படுத்தி , அவண்  மன்றலையும் முடிப்பித்தான் . மணக்காலத்திற் பதுமாவதியின்பால் வாடுதலில்லாத மலர்மாலையையும் அழகிய திலகத்தையும் உதயனன் கண்டு , அவற்றானே  பதுமாவதியுடன் தன் நகரிற் போந்து ஒருபுறத்திருந்த  வாசவதத்தையைக் கண்டு இன்புற்றான் . பின், இடையர்களாற் காட்டில் , வைப்பு நிதியும் , தன் முன்னோரின் அரியணையும் பெற்றுச் சிவ வழிபாடு புரிந்து , திசைவென்றி குறித்துப் புறப்பட்டு , அமைச்சன் , மாமன்மார்  முதலியோர் உதவியால்  நாற்றிசைக்கண்ணுள்ளாரையும் வென்று புகழோங்கப் பெற்றான் . பின்னர், புதல்வர்ப்பேறு  குறித்து நாதமுனிவர்  உபதேசத்தாற் சிவபிரானை வழிபட்டு  அப்பெருமான் றிருவருளால்  நரவாகன தத்தன்  என்னும் மகனைப் பெற்று இன்புற்றான்.  இதன்பின்  இச்சரிதத்திற்  சிறப்பாகக்  கருதி இன்புறற்பாலது, அமைச்சிலக்கணம் முழுதும் அமையப்பெற்ற பேரறிஞனாகிய யெளகந்தராயணது  சூழ்ச்சித்   திறனேயாகும் . இவன் தன்றலைவன் அரசியல் விரிவுறச் செய்த அரிய செயல்கள்  மிகப் பாராட்டற்பாலன. எரிவாய்ப்பட்டிறந்தாளென்று  வெளிப்படுத்திப் பிரிக்கப்பட்ட வாசவதத்தையைப் பின் அரசற்கு மனைவியாம் நிலையிலுள்ள பதுமாவதியின்  பக்கல் இயைந்தது , அவ் வாசவதத்தையின் அரிய கற்பொழுக்கத்திற்  பின் வேந்தன் ஐயுறாமை கருதியேயாம் . இந்நிகழ்ச்சி  மிக இன்புறற்பாலது. இதன்கண் , அரசர்க்கு வேட்டை யாடன்  முதலியவற்றால்  வருந்தீங்கும் , அறிவிற் சிறந்த அமைச்சர் சொல்வழி நிற்றலால் வரும் நலங்களும் , சிறந்த அமைச்சனின் நுண்ணிய  மதிநுட்பமும்  அரிய சூழ்ச்சி முதலிய செயல்களும் , இடுக்கட்காலத்தும் மகளிர்  கற்பு  மாசுபடலாகா தென்பதும் , ஒருவற்கு அமைந்த இருமனைவியரின் அன்பு கெழீஇய ஒற்றுமையும் , மகளிர்க்கு வேண்டும் உயர்குணங்களும் ,அரசியல் விரிவதற்குச் செயற்பாலன  வின்னவென்பதும்  சிவவழிபாட்டின் பயனும் , அறம் வழாஅநிலையும் பிறவும் புலப்படுவனவாம் .

        இத்தகைய  நலம் பல கனிந்து  திகழும் இச்சரிதம் வடமொழிக்கட்  பல புலவர்களாலும்  காவிய  முதலிய வடிவிற் கூறப்பட்டுள்ளது ; சோமதேவர் என்னுங் கவியாற்  செய்யப்பட்ட கதாசரிற்சாகரம் என்னுங்  கிரந்தத்திலும் , அவர்க்குப் பிரமாணமாக முன்னுள்ள குணாட்டியராற்   செய்யப்பட்ட பிருகற் கதையிலும்  விரித்துரைக்கப்பட்டுள்ளது . காளிதாசர்க்கு முற்பட்ட “ பாசன் “ என்னும் நாடக கவி யியற்றிய “ சொப்பன வாசவதத்தம் “  “பிரதிஞ்ஞாயெள கந்தராயணம் “ என்னும் நாடகங்கள் இச்சரிதப் பகுதிகளையே  நுதலுவன . தமிழிற் பண்டைக் காப்பியமாகிய  “பெருங்கதை” என்பதனுள்ளும் இச்சரிதமே சில வேறுபாட்டுடன்  கூறப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது . அத்தமிழ்ப் பெருங்கதை ,  கிடைத்தற்கரிய பண்டை நூல்களைச் செப்பனிட்டுப்  பல்லாண்டுகளாக வெளிப்படுத்தித் தமிழ்த் தெய்வத்தை அலங்கரித்து வரும் பெரியோராகிய  மகாமகோபாத்தியாய  ஸ்ரீ  வே . சாமி நாடையரவர்களால் ,  பற்பல ஆராய்ச்சிகளுடன் அச்சிடப்பட்டு  வெளிப்படுத்தப்  பட்டுளது . அதன்கண்  இச்சரித இனிமையைத் தமிழ்ச் செய்யுளாகிய  அமுதத்திற்  கண்டு சுவைத்தின்புற்றுக் கதை நிகழ்ச்சியின்  ஒழுங்கையும்  உணர்ந்து  கொள்ளலாம் .

                 பல்லாண்டுகளின் முன்னர் மதுரையினின்று  திங்க டோறும் வெளிப்போந்த “  ஸஹ்ருதயா”  என்னும் வடமொழிப் பத்திரிகையில் , வடமொழிப் புலமை மிக்க பண்டித ஸ்ரீ வே. அனந்தாசாரியவர்களால்  இனிமை மிக்க வடமொழி  வசன வடிவில் எழுதப்பட்டு வெளிவந்த இச்சரிதம் , புதுக்கோட்டை  ஸமஸ்தானத்தைச் சார்ந்த மேலைச் சிவபுரிக்கண்ணுள்ள  சன்மார்க்க சபையாரின் விருப்பின்படி  தமிழில் மொழிபெயர்த் தெழுதப்பட்டது .  

                 இன்னோரன்ன  நற்செயல்களில் ஊக்கித் தமிழுலகுக்குப்  பயன் விளைவித்து வரும் மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின்  உதவி மிகப்பாராட்டற்பாலது இச்சபை, பற்பல மாணவர்க்குத் தமிழ்க் கல்வி பயிற்றியும், பல பண்டித மணிகளின்  அரிய சொற்பொழிவுகளால்  உலகத்தவரை நன்நெறிப்படுத்தியும்  உதவி வருவதோடு  வடமொழி களிலுள்ள  அரிய நூல்களைத்  தமிழில் வெளிப்படுத்தி அதனாலும் தமிழ் மக்கள்  இன்புறுதற்குரிய   செயலின் முற்பட்டிருப்பது   போற்றற்பாலதே .

                                                                                                                                அன்பன்,

                                                                                                                        மு . கதிரேசன்

                        உதயன சரிதம்  –  பெயர்  விளக்கம்

அகம்பணன் :-  மந்தரதேவ னென்னும்  வித்தியாதரனுடைய  தந்தையான                                இராஜ ரிஷி ;  தன் புதல்வி மந்தர தேவியை நரவாகனதத்தனுக்கு மணஞ் செய்து கொடுத்து அவனுக்கு இடபகிரியில் முடிசூட்டுக்  கொண்டாட்டம் நிறை வேற்றும்படி வித்தியாதரர்களுக்குக் கட்டளை யிட்டவன் .

அங்காரகன் :-   அங்காரவதியின்  தந்தை ; அசுரர் தலைவன் ; தவவன்மை யால்  வச்சிரப்படையாலும் பிளக்கவொண்ணாத  யாக்கையைப்  பெற்றவன். அரச கன்னியர் பலரைப் பணி செய்தற் பொருட்டு  வஞ்சித்துக் கொணர்ந்தவன் . தன் புதல்வி அக்காரவதியினிடத்துக் காதல் கொண்ட  சண்டமகாசேனனால் சிவபிரானை வழிபடுங்காற் கொல்லப்பட்டவன் .

அங்காரவதி :-  சண்டமகாசேனன்  மனைவி .அவனிடத்துக் கொண்ட காதலால்  தன் தந்தை அங்காரகனைக் கொலை செய்தற்கு அம்மன்னன் வழி நின்றவள் . இந்திரனருளால்   வாசவதத்தையை  ஈன்றவள் .

அசிநாவதி :-   நரவாகன தத்தனால்  இருசியமுக மலையில் மணக்கப் பெற்றவள் ; தநவதியின் மகள் ;  இவளைச் சார்ந்தவர்களின்  துணையாலேதான்  நரவாகன தத்தன்  வித்தியாதர சக்கரவர்த்தியானான் .

அத்தினாபுரம் :-   சாதனீகனுக்கு முன்னுள்ள பாண்டவகுல மன்னரிருந்து அரசு செய்த  நகர் . கங்கைக் கரையிலுள்ளது.

அபிமன்யு :-   உதயனன் மரபில் வந்த முன்னோன் ; அருச்சுனனுக்குச் சுபத்திரை வயிற்றிற் பிறந்தவன் ; பரிட்சித்துவின் தந்தை ; பரிட்சித்து  உத்தரை வயிற்றிற் கருவாயிருந்தகாலையில்  பாரதப் போரில் சயந்தனாற் கொல்லப்பட்டவன் .

அயோத்தி :-  உதயனன்  தாயாகிய  மிருகாவதி பிறந்த ஊர் ; கிருதவன்மனின் தலைநகரம் .

அரிசிகன் :-  உருமண்வனின்  புதல்வன் ; நரவாகனதத்தனுடைய  படைத்தலைவன் .

ஆசாடகன் :-  வாசவதத்தையின் யானைப்பாகன் .

ஆசாடபுரம் :- மதனமஞ்சுகையைக் கவர்ந்து சென்ற மானச வேகன் என்னும் வித்தியாதரனின் நகரம் .

ஆவந்திகை :-  வாசவதத்தை பார்ப்பனியாக வேடம் பூண்டு பதுமாவதியின் மருங்கு வசிக்கும் போது கொண்ட பெயர் .

இடபகிரி :-  நரவாகனதத்தனுக்கு  முடிசூட்டு விழா  நடை பெற்ற  இடம் .

இத்தியகன் :-  உதயனனுடைய   வாயில்   காவலரில்   ஒருவன் .

இரத்தினப்பிரபை :-  நரவாகனதத்தன்  மனைவியருள்  ஒருத்தி .

இருசியமூகம் :- ஆசாடபுரத்தினின்று  நரவாகனதத்தனையும்  மதனமஞ்சுகையையும்    வேகவதி   சேர்த்த    இடம் .

இலாணகம் :-  உதயனனுக்குரிய   நகரங்களுள் ஒன்று . பல வகை வளங்களால்    இன்பம்   பயக்கும்   பூம்   பொழில்களையுடையது ; மகத   தேயத்திற்கு   அணித்தாயது .

இன்னிசை :-  உதயனனுடைய  யாழ் ; கோடபதி யெனவும் பெயர் பெறும் ; வசு நேமியென்னும் பாம்பால் உதயனனுக்கு  அளிக்கப்பட்டது .  அவன் வாசவதத்தையின்  அன்பைப் பெறுதற்கு ஏதுவாக இருந்தது .

உச்சயினி :-   வாசவதத்தையின் தந்தையாகிய   சண்டமகாசேனனின்  தலைநகரம் ;  அவந்தி   நாட்டிலுள்ளது .

உதயனன் :-  இவன் இச்சரிதத் தலைவன் ; பாண்டவர் குலத்துப் பிறந்தவன் ; சகச்சீரானீகன்  புதல்வன் ; சமதக்கினி முனிவனால்  உபநயனம் செய்யப்பெற்று எல்லாக் கலைகளையுங்  கற்றுணர்ந்தவன் ; வள்ளன்மை மிக்கவன்; வசுனேமி என்னும்  பாம்பினால் இன்னிசையென்னும்  யாழினைப்  பெற்றவன் . சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்டுச்  சிறைபுகுந்த பொழுது யெளகந்தராயண  னென்னும் தன் முதலமைச்சன் சூழ்ச்சித்திறனால்  அவ்வரசன் புதல்வி வாசவதத்தையோடு  வெளிப்போந்து அவளை மணந்தவன் ;மகத தேசத்து அரசனைத் தனக்கு நட்பாக்க வேண்டி அமைச்சர் செய்த சூழ்ச்சியால்  அவன்  புதல்வி  பதுமாவதியையும்  மணந்து கொண்டவன் ;  தன்முன்னோர்  தம் பொருட் குழுவையும் , அரியணையையும்  நல்லூழாற்  பெற்றவன் ; அமச்சரின்  உபாயத் திறனும் மாமன்மாரிருவர்  தோள்வலியும்  துணயாகக் கொண்டு திக்குவிசயஞ்  செய்து தன் முன்னோர்  வீற்றிருந்த   அரியணைக்கணிருந்து  அரசாண்டவன் ; காமவேளின்  கூறான  நரவாகனதத்தனை  ஈன்றவன் ;  தன்னை விரும்பிவந்த கலிங்கசேனையின் மணத்தால் தீங்கு நிகழுமென்று அமச்சரால்  உணர்ந்து அவள்மீது வைத்த காதலை  யறவே  யொழித்தவன் ;  சூரியோதய காலத்துப் பிறந்தது பற்றி  “உதயனன்” என்னும்  இப்பெயரைப்  பெயற்றானென்பார்  .

உருமண்வான் :-  உதயனனுடைய  அமைச்சருள் ஒருவன் ; சுப்பிரதீகன்  என்னும்  படைத்தலைவனின் புதல்வன் ; யெளகந்தராயணனை யொப்ப  நுண்ணறிவும் போர்த்திறமையும் மிக்கவன் ; சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  உதயனனைச் சிறை மீட்க  யெளகந்தராயணன்  சென்றபொழுது  கெளசாம்பி  நகரைக்  காத்தவன் .

கருப்பூரவதி :-  நரவாகனதத்தனுடைய  மனைவியருள்  ஒருத்தி .

கலிங்கசேனை :-  கலிங்கதத்தனுடைய  மகள் ; உதயனனைக்  காதலித்து  அவனை  மணக்க  எண்ணியிருக்கும்  பொழுது  அவ்வுதயன வேடம் பூண்டு வந்த  மதனவேகனென்னும்   விஞ்சையனால்    மணக்கப்பெற்றவள் .

கலிங்கதத்தன் :-  தக்கசிலை நகருக்குத்  தலைவன் ; கலிங்கசேனையின் தந்தை.

காசி நகர் :-  உதயனனுக்குப்  பகைவனான  பிரமதத்தனுடைய  தலைநகரம் .

காஞ்சனமாலை :- வாசவதத்தையின்   உயிர்த்தோழி .

காமரூபேசுவரன் :- உதயனன் திக்குவிசயஞ்  செய்த  பொழுது  அவனைக்   குடைநிழல்   பெறாத தலையால்   வணங்கி   இறைப்பொருள்  கொடுத்தவன் .

கிருதவன்மன் :-  அயோத்தி அரசன் ; மிருகாவதியின்  தந்தை .

குககன் :-  பகைவனான  பிரமதத்தனது  செயலை  யறிதற்  பொருட்டுக்  காசி நகரைக்  குறித்து யெளகந்தராயணால் அனுப்பப்பட்ட  ஒற்றர்களில்  ஒருவன் ; இவன்  ஆசிரிய  வேடம்  பூண்டு  முக்காலமு  முணர்ந்தவனாக  நடித்து  அப்பிரமதத்தனுடைய மறைபொருள்களை  யெளகந்தராயணுக்கு ஒற்றர்முகமாக அறிவித்துவந்தவன் .

கோபாலகன் :-  சண்டமகாசேனன்  புதல்வரில்  ஒருவன் ; தந்தையின் கட்டளைப்படி  தங்கையாகிய   வாசவதத்தைக்குப்  பாணிக்கிரகண விழாவை  நிறைவேற்றி   வைத்தவன் ; உதயனன்  ஆக்கங்கருதி அவன்  பதுமாவதியை  மணப்பதற்கு  உதவி  செய்தவன் ; அவனால்  விதேக  நாட்டிற்கு  அரசனாக்கப்பட்டவன் .

கோமுகன் :-  இந்தியகன்  புதல்வன் ; நரவாகனதத்தன்  வாயில்  காவலரில்  ஒருவன் .

கெளசாம்பி :-  வற்ச  நாட்டின்  தலை நகரம் ; உதயனன்  பாட்டனாகிய  சதானீகனால்  தலைநகரமாகச்  செய்யப்பட்டது ; யமுனையின் கரையிலுள்ளது ; ஆதியிற்  குசாம்பன்  என்னும்  அரசனால்  உண்டாக்கப்பட்டதனால்  இப்பெயர்  பெற்றதென்பர் .

சகச்சிரானீகன் :-  உதயனன்  தந்தை ; விட்புலஞ் சென்று   இந்திரனால்  உபசரிக்கப்பெற்றவன் ;  திலோத்தமையெனுந்  தெய்வ  மாதினால்  தன் மனைவியைப்  பதினான்கு  யாண்டுகள்  பிரிந்திருக்கும்  சாபத்தைப் பெற்றவன் ;  கருவுற்றிருந்த தன் மனையாள்   தன்னின்  நீங்கிச்  சமதக்கினி  முனிவன்  ஆச்சிரமத்தில்  பதிநான்கு  யாண்டு  நிறைவேறப்பட்ட  புதல்வனோடு   இருக்கின்றாளென்ற  செய்தியைக்  கேட்டு  அங்குச்சென்று   அவர்களோடும்  அரண்மனையை   யடைந்து  அப்புதல்வன்  மாட்டு  அரசியற்  சுமையை  வைத்து  விட்டு  மனைவியுடன்  தவஞ் செய்யச்  சென்றவன் .

சண்டமகாசேனன் :-   அவந்தி  நாட்டு  அரசன் ; வாசவதத்தையின்  தந்தை ; “மகாசேனன்”  என்னும்  இயற்பெயர்  பெற்றவன் ;  சண்டிகைபால்  வரம்  பெறற்   பொருட்டுத்  தலையறுத்தலாகிய   சண்டகன்மத்தைச்  செய்தலால்  இப்புகழ்ப்  பெயரடைந்தான் ; அத் தேவியின்  திருவருளால்   வாட்படை  பெற்றான்; தன்பால்  காதற் கிழமை  பூண்ட  அங்காரவதியின்  துணைகொண்டு   அவள்  தந்தையாகிய  அக்காரகனைக்  கொன்று  அவளை  மணந்தவன்  ;  தன்  புதல்வி  வாசவதத்தையை  மணஞ் செய்விக்க  எண்ணி  உதயனனை  வஞ்சத்தாற்  பிடித்துச்  சிறை வைக்கச்  செய்தவன் .

சாதனீகன் :-   உதயனனுடைய  பாட்டன் ; தன்  முன்னோர்  வாழ்ந்து வந்த  அத்தினாபுரத்தை  விட்டுக்  கெளசாம்பியையடைந்து  வாழ்ந்தவன் ; தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  நிகழ்ந்த  போரில்  துணை செய்தற்பொருட்டு  இந்திரன்  வேண்டச்  சென்று  அசுரர்களோடு  போருஞற்றி   அவர்களாற்  கொல்லப்பட்டவன் .

சமதக்கினி :-  உதயாசலத்தில்  வசித்த  முனிவரிற்  றலைவன் ; கருடனாற்  கவரப்பட்டுத்  தன்னிருக்கை  புகுந்த  மிருகாவதியை  எதிர்காலச்  செய்திகூறித்தேற்றி   ஆதரித்தவன் ; அவள் புதல்வனாகிய  உதயனனுக்கு  உபநயனஞ்  செய்து எல்லாக்  கலைகளையும்  கற்பித்தவன் .

சயசேனன் :-   சண்டமகாசேனன்  தந்தை .

சனமேசயன் :-  உதயனன்  முன்னோர்களில்  ஒருவன் ; பரிட்சித்துவின்  புதல்வன் ; சதானீகனுக்குத்  தந்தை .

சாந்திகரன் :-  உதயனனுடைய  புரோகிதன் .

சாந்திசோமன் :-  பிங்கலிகையின்  புதல்வரில்  ஒருவன் ; நரவாகனதத்தனுடைய  புரோகிதன் .

சிங்கவன்மன் :-    மகததேசத்து  அரசனுடைய  புதல்வன் ; பதுமாவதியின்  சகோதரன் ; உதயனனால்  சேதி நாட்டுக்கு  அரசனாக்கப்பட்டவன் .

சிராவத்தி :-  பிரசேனசித்தின்  நகரம் .

சுப்பிரதீகன் :-  சகச்சிரானீகனுடைய   படைத்தலைவன் ; உருமண்வானின்  தந்தை .

சுரபிதத்தை :-  இந்திரன்  சாபத்தாற்  கலிங்கசேனையாகப்  பிறந்த  ஒரு  தேவமாது .

சேதிநாடு :-  உதயனனால்  பதுமாவதியின்  சகோதரன்  சிங்கவன்மனுக்குக்  கொடுக்கப்பட்டது .

சோமப்பிரபை :-    மாயாசுரனுடைய  மகள் ;  கலிங்கசேனையின்  தோழி ;  அக்கலிங்கசேனை  உதயனன்பால்  காதற்கிழமை  பூணும்படி  அவன்  பெருமைகளை  யெடுத்துக்  கூறியவள் .

செளண்டிலிய முனிவன் :-  உதயனன்  பாட்டனாகிய  சதானீகனுடைய  நண்பன் ; அம்மன்னன்  புதல்வர்ப் பேறு  குறித்து  இரக்கபுதித்ரகாமேட்டி  யென்னும்  வேள்வி  யியற்றினான் .

தக்கசிலை :-    கலிங்கதத்தனது  தலைநகர் .

தபந்தகன் :-  வசந்தகனுடைய  புதல்வன் ; நரவாகனதத்தனின்  விளையாட்டுத்   தோழன் .

தம்பகன் :-  நரவாகனதத்தனுக்கு  வித்தியாதரரால்  தீங்கு  நேரா  வண்ணங்  காப்பதன்  பொருட்டுச்  சிவபிரானால்  அனுப்பப்பட்டவன் .

தநவதி :-     இருசியமூகம்  என்னும்  மலைக்கண்  வசித்த  வித்தியாதரப்பெண்; தன் புதல்வியை  நரவாகனதத்தனுக்குக்  கொடுத்தவள்.

தாராதத்தை :-   கலிங்கதத்தனின்  மனைவி .

தாளபடன் :-  சண்டமகாசேனனின்  வாயி  காவலரில்  ஒருவன் ;  வாசவதத்தையை  வஞ்சித்துக்  கவர்ந்து  சென்ற  உதயனனைத்  தடுக்க  அவனால்  கொல்லப்பெற்றவன்  .

திலோத்தமை :-  நாடகத்  தெய்வமகளிருள்  ஒருத்தி ; சகச்சிரானீகனைச்  சபித்தவள் .

நடைமலை :-  சண்டமகாசேனனது பட்டத்து  யானை .

நரவாகனதத்தன் :-    உதயனனுக்குக்  காமவேளின்  கூறாக  வாசவதத்தையின்பால்  அவதரித்தவன் ; விஞ்ஞையரால்  இடையூறு  நேராவண்ணம்  சிவபிரான்  கட்டளையால்  தம்பகன்  என்னும்  கணத்தலைவனால்  பாதுகாக்கப்பெற்றவன் .  கலிங்கசேனையின்  புதல்வி  மதனமஞ்சுகையையும்  இரத்தினப்பிரபை  முதலிய  மாதர் பலரையும்  மணந்தவன் ; தவவன்மையால்  சிவபிரானிடத்து  நினைத்த அளவில்  எல்லா விச்சைகளும்  விளங்கித்தோன்றுவதான  வரமும் , விமானமும்  பெற்றவன் ; வித்தியாதரர்களுக்குச்   சக்கரவர்த்தியானவன் .

நளகூபரன் :-  சோமப்பிரபையின்  கணவன் .

நன்மசசிவன் :-   சகச்சிரானீகனுடைய  விளையாட்டுத்  தொழிற்கும் , அந்தரங்கக்  காரியங்கட்கும்  உரிய  நண்பன் ; வசந்தகனுடைய  தந்தை ;  இவனுக்கு இப்பெயர்  தொழில்  பற்றிய  பெயர்  போலும் .

பத்திராவதி :-  வாசவதத்தையினது  பெண்யானை  ; இதன்மீதுதான்  அவளை  ஏற்றிக்கொண்டு  உதயனன்  உச்சயினியிலிருந்து  சென்றான் . செல்லுங்கால்  குடிநீரின்  குற்றத்தாலிறந்தது ;  மாயாவதி  யென்னும்  வித்தியாதரப் பெண்  சாபவயத்தால்  இப்  பெண்யானையாயினாள்.

பதுமாவதி :-   மகததேசத்து  அரசனின்  புதல்வி ; உதயனனுடைய  இரண்டாம்  மனைவி ;  சுவைபடப் பேசும்  திறமை மிக்கவள் ;  சபத்தினியாகிய  வாசவதத்தையின்பால்  மிக்க  அன்புள்ளவள்

பரிட்சித்து :-   உதயனன்  மரபில்  முன்னோன் ; அபிமன்யுவின்  புதல்வன் ; சனமேசயன்  தந்தை .

பாலகன் :-    சண்டமகாசேனன்  புதல்வரில்  ஒருவன் ;  தன் உடன்பிறந்தவளாகிய  வாசவதத்தையை  உதயனன்  கவர்ந்து  செல்லுங்கால்  தந்தையால்  ஏவப்பட்டுத்  தடை  செய்தவன் .

பிங்கலிகை :-   புரோகிதனுடைய  சகோதரன்  மனைவி ; இவள்  புதல்வர்  நரவாகனதத்தனுக்குப்  புரோகிதராயினர் .

பிரசேனசித்து :-    சிராவத்தி  நகருக்குத்  தலைவன் .  கலிங்கசேனையை  மணஞ்  செய்விப்பதாக  அவள்  தந்தையால்  கருதப்பட்டவன் .

பிரமதத்தன் :-  காசி  நகரை  யாட்சி  புரிந்த  அரசன்  ;  உதயனன்  பகைவன் ;  அவனோடு  பொருதற்காற்றாது  கையுறைப்  பொருள்  பல  தந்து  அவன்பால்  அடைக்கலம்  புகுந்தவன் .

புளிந்தகன் :-   விந்தியவனத்தில்  வசித்த  வேடர்  தலைவன் ; உதயனன்  நண்பன் ;  அவனையும்  வாசவதத்தையையும்  கள்வர்  துன்புறுத்தா வண்ணம்  தடுத்துத்  தன்  நகரை  யடைவித்து  உபசரித்தவன் .

மகததேசம் :-  பதுமாவதி  தந்தையின்  நாடு . இதன்  தலைநகர்  இராஜகிரியம்  என்ப .

மகாசேனன் :-     சண்டமகாசேனனின்  இயற்பெயர்  .

மகாமாத்திரன் :-   சண்டமகாசேனனுடைய  குதிரைச்சாலைத்  தலைவன் .

மகேந்திரவர்மன் “-  சண்டமகாசேனனுடைய  பாட்டன் .

மதனமஞ்சுகை :-  கலிங்கசேனைக்கு  இரதிதேவியின்  கூறாகப்  பிரமதேவனால்  கொடுக்கப்பட்ட  புதல்வி ; நரவாகனதத்தனின்  பட்டத்தேவி ;  மானசவேகன்  என்னும்  வித்தியதரனால்  விரும்பி  எடுத்துச்  செல்லப்பெற்று  தன் கணவனால்  மீட்கப்பட்டவள் .

மதனவேகன் :-   உதயனன்பாற்  காதற்கிழமை  பூண்ட  கலிங்கசேனையை   அவனுருவந்தாங்கிச்  சென்று   வஞ்சித்து   மணந்த   வித்தியாதரன் .

மந்தரதேவன் :-  இமயமலையின்  வடபால்  வாழ்ந்த  வித்தியாதரர்களுக்குச்  சக்கரவர்த்தி ; நரவாகனதத்தனொடு  பொருது  தன்  தங்கை  வேண்டுகோளின் படி  அவனால்  கொல்லாது  விடப்பட்டவன் .

மந்தரதேவி :-   மந்தரதேவனின்  தங்கை ;  நரவாகனதத்தனை  மணந்தவள்

மருபூதி :-  யெளகந்தராயணனுடைய  புதல்வன் ;  நரவாகனதத்தனுக்கு  அமைச்சனானவன் . 

மாதலி :-   தேவேந்திரனுடைய  சாரதி ; அவனுக்குத்  துணை செய்தற் பொருட்டுச் சென்று அசுரரால் கொல்லப்பட்ட  சதானீகன்  உடலைக்  கெளசாம்பி  நகரத்திற்  சேர்ப்பித்தவன் ; மிருகாவதியின்  பிரிவால்  வருந்திய  சகச்சிரானீகனைத்   திலோத்தமையின்  சாபச் செய்தி  கூறித்  தேற்றியவன் .

மாயாசுரன் :-  சோமப்பிரபையின்  தந்தை .

மாயாவதி :-  ஒரு  வித்தியாதரப்  பெண்  . சாபக்  குற்றத்தால்  பத்திராவதி  யென்னும்  பெண்யானையானவள் .

மானசவேகன் :-  வித்தியாதரரில்  ஒருவன் ; மதனமஞ்சுகையை  விரும்பிக்   கவர்ந்து  சென்று  நரவாகனதத்தனால்  வெல்லப்பட்டவன் .

மிருகாவதி :-   சகச்சிரானீகனுடைய  மனைவி ; அயோத்தி யரசன்  கிருதவன்மனின்  புதல்வி ;  கருவுற்றிருந்த பொழுது  செவ்வரக்கு  நீர்  தோய்ந்த  தன்னுடலை  இறைச்சிப்  பிண்டமாகக்  கருதித்  தன்னைக்  கவர்ந்து  சென்ற  கருடனால்  உதயாசலத்தில்  விடப்பட்டுச்  சமதக்கினி  முனிவனுடைய  ஆச்சிரமத்தை  யடைந்து   உதயனனைப்  பெற்றவள் ;  அப்புதல்வன்  அரசுரிமையை   ஏற்றபின்னர்  கணவனொடு  தவஞ்  செய்யக்  கானகம்  புக்கவள் .

யுகந்தரன் :-  சகச்சிரானீகனுடைய  அமைச்சரில்  ஒருவன்  ; யெளகந்தராயணனுடைய  தந்தை  .

யோககரண்டகன் :-    காசி  நகரத்து  அரசன்  பிரமதத்தனுடைய  முதல்  அமைச்சன் ; உதயனன்  படைகள்  வரும்  வழிகளில்  வஞ்சச்  செயல்கள்  பல  செய்தவன் .  

யோகேசுவரன் :-    உச்சயினி  நகர்க்கணித்தான  சுடலையில்  வாழும்  பிரமராக்கதன்  ;  யெளகந்தராயணன்பால்   நட்புக் கொண்டு  அவனுக்கு  உருவமாற்று  என்னும்  விஞ்சையை  உபதேசித்தவன் ;  கலிங்க சேனையின்  ஒழுக்க  நிலையை  மறைந்து  நின்று  அறிந்து  அவனுக்கு  அறிவித்தவன் .

யெளகந்தராயணன் :-   உதயனனுடைய  முதல் அமைச்சன் ; சூழ்ச்சித் திறமையிலும்   வில்வித்தை  முதலிய  எல்லாக்  கலைகளிலும்  வல்லவன் ; உதயனன்  சண்டமகாசேனனால்  வஞ்சித்துச்சிறைப்படுத்தப்பட்டானென்பது  கேட்டு  வேற்றுருக்கொண்டு  உச்சயினி  யடைந்து  பல  உபாயங்களால்   சிறைச்சாலையினின்றும்   அவன்  வாசவதத்தையோடும்  வெளிப்படும்  வண்ணம்  செய்தவன் ;  அவனுக்கு  வாசவதத்தையை  மணஞ்  செய்வித்ததுமின்றி   மகததேசத்து  அரசன்  நட்பாளனாக்கக்  கருதி  அவன்  மகளையும்  வேட்பித்தவன் ;  பாண்டவர்  குலத்து  அரசர்  வைத்த  நிதித்  திறளையும்  அரியணையையும்  உதயனனை  அடைவித்து   அவன்  அரசியற்றிருவைப்  பெருகச்செய்தவன் .  அவனைக் காதலித்து  வந்த  கலிங்கசேனையின் மனம்  தீங்கு  பயப்பதாகுமெனக்  கருதி  அது  நடைபெறா  வண்ணம்  தடை  செய்தவன் ;  அவ்வுதயனன்  எல்லா  நலங்கட்குங்   காரணம்  இவன்  பெருமுயற்சியே .

வசந்தகன் :-    உதயனனுடைய  அமைச்சரில்  ஒருவன்   சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  உதயனனை  விடுவிக்க  யெளகந்தராயணன்  செய்த  சூழ்ச்சிகட்குத்  துணை  நின்ற  உடலின்  வேற்றுமையால்   விளையாட்டுப்  பொருள்போல  இருந்து  வாசவதத்தையின்  மனத்தை யின்புறுத்தியவன் ;  உதயனன்  பதுமாவதியை  மணப்பதற்கு யெளகந்தராயணன்  செய்த  உபாயத்தின்படி  வாசவதத்தையோடு  தானும்  வேற்றுருக்கொண்டு   பதுமாவதியை  யடைந்து  கணவற்  பிரிவால்   வாசவதத்தை  வருந்தாவண்ணம்  தேற்றியவன் ; கதை பல பொதிந்த  பொருளுரைகளைச்  சுவைபடப்  பேசும்  திறமை  மிக்கவன் .

வசுநேமி  :-  வாசுகியென்னும்  பாம்பின்  தமையன் ; உதயனனால்  வேடனின்றும்  விடுவிக்கப்பட்டு  அவனுக்கு  “இன்னிசை “  யென்னும்  யாழொன்றைக்  கொடுத்தவன் .

வற்சம்  :-  உதயனன்  அரசாண்ட  நாடு ; இதன்  தலைநகரம்  கெளசாம்பி .

வாசவதத்தை  :-  உதயனனுடைய  பட்டத்தேவி ; சண்டமகாசேனனின்  புதல்வி;    இந்திரன் ( வாசவன் ) அருளால்  உதித்தவளாதலின்   இப்பெயர்  பெற்றாள் ; உதயனன்பால்  இசைக்கலை  பயின்றவள் ;  மாலை தொடுத்தல்  முதலிய  முதலிய  கைத்தொழிலிலும்  , சிற்பவேலையிலும்  மிக்க  திறமையுள்ளவள் .  தன்பாலுள்ள  காதலால்  உதயனன்  இராசகாரியத்தை  மறந்தானென்பது  கேட்டு  அவனாக்கங்கருதி   வேற்றுருக் கொண்டு   சிலகாலம்  மறைந்திருந்தவள் ; சபத்தினியாகிய  பதுமாவதிபால்  மிக்க  அன்புள்ளவள் ;  சிவபிரான்  வழிபாட்டால்  காமவேளின்  கூறான  நரவாகனதத்தன்  என்னும்  புதல்வனைப்  பெற்றவள் .  

விண்டுமதி :-   சதானீகனுடைய  மனைவி ; செளண்டிலிய  முனிவன்  ஈந்த  தூயதான  பாயசத்தை   உண்டு  கருத்தரித்துச்  சகச்சிரானீகனைப்  பெற்றவள்;   தேவாசுரர்  போரில்  இந்திரனுக்குத்  துணை  செய்தற்  பொருட்டுச்  சென்று  அவ்வசுரரால்   கொல்லப்பட்ட  தன் கணவன்  பிரிவுக்காற்றாளாய்  அவன்  உடலோடு   சிதைக்கண்ணேறி  உடன்  இறந்துபட்டவள் .

விதேகநாடு :-   உதயனனால்  வாசவத்தை  சகோதரன்  கோபாலகனுக்குக்  கொடுக்கப்பட்டது .

விந்தியபர்வதம் :-   ஒரு  மலை ;  அழகிய  காடுகள்  சூழப்பெற்றது .

வீரபாகு :-  சண்டமகாசேனன்  வாயில்  காவலரில்  ஒருவன் ; வாசவதத்தையை  வஞ்சித்துக் கவர்ந்து சென்ற   உதயனனைத்  தடை  செய்து  அவனாற்  கொல்லப்  பெற்றவன் .

வேகவதி :-  மானசவேகன்  உடன்பிறந்தவள் ; மதனமஞ்சுகையின்  வேடங்  கொண்டு   வந்து  நரவாகனதத்தனை   மணந்தவள் .

வசுவாநரன் :-   பிங்கலிகையின்  புதல்வரில்  ஒருவன் ; நரவானகதத்தனுடைய   புரோதன் .

கணபதி  துணை

உதயன  சரிதம்

முதல்  வகுப்பு

( உதயனன்  பிறப்பு )

 

திங்கண்  மரபு  சிறக்கப்  பிறந்து நலம்

பொங்கு  முதயனன்றன்  பொற்சரிதம் – இங்கினிது

சொல்லு  முறையின்கட்   டோன்றுந்  தமிழ்ப்புலவீர்

பல்லறங்க  ளானும்  பயன் .

           வற்சம்  எனப்  பெயரிய  நாட்டிலே  கெளசாம்பி  எனப்  பெயரிய  நகரம்  ஒன்றிருந்தது . அதன்கண்   , சதானீகன்  என்னும்  அரசன் ஒருவன்  இருந்தான் .அவன்  பாண்டவகுலத்திற்  பிறந்தவன் . சனமேசயன்  புதல்வன் ; பரிட்சித்துவின்  பெளத்திரன் ; அபிமந்நியுவின்  பிரபெளத்திரன் ( பெளத்திரன் மகன் ) அவன் இளம்பருவத்தில்  விண்டுமதி என்னும்  பெண்ணை  மணந்தான்.

     அவன்  ஓர்  அமயத்தில்  வேட்டையாடல்  குறித்து வனத்தை எய்தினான் . ஆண்டு  அவர்க்குச்  செளண்டிலிய  முனிவனோடு  பழக்கமுண்டாயிற்று . அம்முனிவனைப்  புதல்வற்பேறு  குறித்து இரந்தான் . அம்முனிவன்  சதானீகனோடு  கெளசாம்பி  நகரத்தை எய்திப்  புத்திரகாமேட்டி  என்னும்  வேள்வியைச்  செய்தான் . அவ்வேள்வியினின்றும்  “மந்திரங்களாற் றூயதான இப் பாயசத்தை  உண்ணச்செய்”  என்று  அரசனுக்கு  ஈந்தான் .விண்டுமதி அப்பாயசத்தை  உண்டு  கருத்தரித்தாள் .பத்தாந் திங்களில்  ஒரு மகனைப் பெற்றாள் . அரசன் அப் புதல்வற்குச்  சகச்சிரானீகன்  என்று  பெயரிட்டான் .  பின்னர்  முறையே  சகச்சிரானீகன்  பாலப்பருவத்தைக்  கடந்து இளவரசனாயினான் . 

         அப்பொழுது  விண்ணுலகில் , தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  போர்  உண்டாயிற்று . அப்போரில்  விட்புலவேந்தன்  தனக்குத்  துணை செய்தற்பொருட்டுச்  சதானீகனை  அழைத்தான் .  சதாநீகன்  அரசியற் சுமையை  யுகந்தரன்  என்னும்  பெயரினையுடைய  அமைச்சன்பால்  வைத்து  அமரருலகு  எய்தினான் .  ஆண்டு , இயமதமிட்டிரன்  முதலிய  அரசர்கலோடு போருஞற்றி  அவர்களாற்  கொல்லப்பட்டான் . இந்திரனுடைய  சாரதியாகிய   மாதலி  சதானீகன்  உடலைத்  தேரிலேற்றிக்  கெளசாம்பி  நகரத்தை  அடைவித்தான் .  விண்டுமதி  அஞ்சத்தக்க  அக் கொடுந்  துன்பத்தை  ஆற்றாளாய்த்  தலைவனோடு   சிதைக்கண்  ஏறி ( சிதை –  சுடலைக்கண்  அடுக்கும்   விறகு  ) உடனிறந்தாள் .  சகச்சிரானீகன்  தந்தைக்குச்  செய்ய வேண்டிய  இறுதிக்கடன்களை   நிறைவேற்றித்  தாதையினது  அரியணையில்  வீற்றிருந்தான் . 

             இதற்கிடையில்  , தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  நிகழ்ந்த   போரில்  தேவேந்திரன்  வெற்றி  அடைந்தான் .  அதன்  பின்னர்த்  தன்  நண்பனுடைய  புதல்வனாகிய  சகச்சிரானீகனை  அழைத்துப்  பலவாறு  உபசரித்தான் .  அவ்வமயம்  உரையாடிக்கொண்டிருக்குங்கால்“அயோத்தியில் கிருதவன்மன்  என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவனுளன் . அவற்கு  மிருகாவதி என்னும்  பெண்மணி  ஒருத்தி  இருக்கின்றாள் . சகச்சிரானீகன்  அதனைக் கேட்டு  அப்பொழுதே  மிருகாவதியினிடத்து  மகவும்  காதற்கிழமையுடை யனாயினான்  அதன் பின்  விண்ணவர்  இறைபால்  விடைபெற்றுக்  கொண்டு  அவன்  தேரின்கண்ணே  ஏறி  கெளசாம்பி  நகரைக்  குறித்துப்  புறப்பட்டான்.  மிருகாவதியை  நெஞ்சத்தில்  இருத்திச்  செல்கின்ற  சகச்சிரானீகனை  இடைவழியில்  திலோத்தமை  கண்டு  , “அரச ! கணப்பொழுது நின்று  எனது சொல்  ஒன்றைக் கேட்டு  அதன்பின்  செல்வாயாக “  என்று  கூறினால் . சகச்சிரானீகன்  அதனைச்  செவியேற்றிலன் . அதனாற்  சினமுற்ற  திலோதமை , சகச்சிரானீகனை  நோக்கி  , “ எவளிடத்துக்  காதலாற்  செலுத்திய  நெஞ்சத்தையுடையவனாய்   என் சொல்லைச்  செவிக் கொள்ளாமல்   விரைந்து  செல்லுகின்றாயோ  அவளிடத்தினின்றும்   பதினான்கு யாண்டுகள்  பிரிவுத் துன்பத்தை  அனுபவிப்பாய்  “  என்று  இவ்வாறு  சபித்தாள் . இச்சாபத்தையும்  வேரொன்றைப்  பற்றிய  மனத்தினையுடைய  அரசன்  கேட்டிலன் , தேவேந்திர  சாரதியாகிய  மாதலி  மாத்திரம்  கேட்டான் .

            சகச்சிரானீகன் , கெளசாம்பி  நகரத்தை  எய்தி விட்புல நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும்   அமைச்சர்களுக்குத்  தெரிவித்தான் .  அதன்பின்  அயோத்தியின்  தலைவனாகிய  கிருதவன்  மன்பால் தூதனைப்  போக்கினான். ( தூதர் :  தலை , கடையென மூவகைப்படுவர் . இவருட்  சத்திவிக்கிரகங்கட்கு   வேற்று  வேந்தரிடைச்  செல்லுங்கால்  , தானே  வகுத்துக்  கூறுபவன்  தலையாவான் .  கூறியது  கூறுவோன்  இடையாவான்.  ஓலை  கொடுத்து  நிற்போன்  கடையாவான் .  இம்முறை  வடநூலுட்   கூறப்படுவதாகும் . திருக்குறள்  தூது  என்னும்  அதிகாரத்தில்  ‘ கடனறிந்து ‘  என்னுந்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையையும்  நோக்குக . இச்சரிதத்திற்  பின்னும்  தூதன்  என  வருமிடங்கடோறும் இவ்வாறு  பகுத்துணர்க )  . கிருதவன்மன்  தன் மகளாகிய   மிருகாவதியின்பால்  சகச்சிரானீகனுக்குள்ள  காதற்கிழமை யைக் , கோப்பெருந்தேவிக்கு  அறிவுறுத்தான்.  அவள்  “தேவ !  மிருகாவதிக்கும்  சகச்சிரானீகனுக்குமுள்ள  மணமக்களாந்  தன்மை  மிகவும்  பொருத்த மானதே . விரைந்து இவ்விருவருக்கும்  மணம்  நிகழும் .  இப்பொருளையே  ஓர்  அமயம்  ஓர்  அந்தணன்  கனவிற்  போந்து  எற்கு  அறிவுறுத்தான் . “  என்று  இங்ஙனம்  கூறினாள் . கோப்பெருந்தேவியின்  இச்சொற்களைக் கேட்டு க் கிருதவன்மன்  மகிழ்ச்சியுடையனாய்த்  தூதன்முகமாக  “ என்  புதல்வி  மிருகாவதி  முன்னரே  நின்னைக்  காதலித்தாள் .  நுங்கள்  இருவீரது  ஒத்த  காதற் கிழமையைக்  கேட்டால்  இப்பொழுது  யான்  பயனுடையனாயினேன் . ஆதலின் , காலந்  தாழ்த்தலின்றி  இவண்  வந்து  மணவினையை  நிறைவேற்றல்  வேண்டும் “  என்று  இவ்வாறு  மறுமொழி  கூறி விடுத்தாள்

                  பின்னர் , சின்னாட்  சென்று  மிருகாவதி  கருத்தரித்தாள்  அவளுக்கு  முகம்  வெண்ணிறமுற்றது;  இடை  பருமை  யெய்தியது .  ஓர்  அமயம்  அவள்  கணவன்பால்  எய்தி ,  “நாத ! சிவந்தநீர்  நிரம்பிய  தடாகத்தில்  நீராடுதற்கு  விரும்புகின்றேன் “  என்று  தன்  கருப்ப  கால  வேட்கையை  இவ்வாறு  தெரிவித்தாள் .  உயர்ந்த  அறவோனும்  , உயிர்களுக்குத்  தீங்கு  செய்ய  விரும்பாதவனும்  ஆகிய  சகச்சிரானீகன்  , செவ்வரக்கு  முதலியவைகளாலாய  நீரால்  நிரம்பிய  தடாகம்  ஒன்றை  நிருமாணித்து  அவளுக்குக்  காட்டினான் .  அவள் அத்தடாகத்தில்  நீராடினால்  . நீர்  மூழ்கி  எழுந்த  மிருகாவதியினது  உடல்  செவ்வரக்கு  நீர்  தோய்ந்தமையால்  இறைச்சிப்பிண்டத்தை  யொப்ப  விளங்கியது . அப்பொழுது  விண்ணிற்  பறந்து திரியும்  பருந்து  அவளைப்பார்த்து  இஃது  இறைச்சிப்பிண்டம்  என்னுங்கருத்தால்  மூக்கினால்  கெளவிக்கொண்டு  உயரப்பறந்தது .  அதனைக் கண்ணுற்ற  அரசன்  துன்பக்கடலுள்  மூழ்கி  மயக்கமுற்று  வீழ்ந்தான் . அத்தகைய  அவனது நிலையை யோகவன்மையால்  மாதலி  யுணர்ந்து , விண்ணுலகினின்றும்  இறங்கி  , அரசனை  நோக்கி  ,”அரச ! முன்னரே  நீ  விண்ணுலகினின்றும்  நிலவுலகத்தை அடையுங்கால் திலோத்தமை  நின்னைக்  கண்டாள் ;  நின்னோடு  சிறிது அளவளாவுதற்கு   விரும்பி  நின்ற  அவளைப்  பொருட்படுத்தாமல்  மிருகாவதியின்பால்  வைத்த அவா  நிறைந்த  மனத்தினனாய்  விரைந்து  போந்தனை ; அதனாற்  சினமுற்ற  அவள்  நின்னைச்  சபித்தாள் ;  அச்சாபத்தால்  இப்பிரிவுத் துன்பம்  நேர்ந்தது பதினான்கு யாண்டுகள்  பிரிவுத்துன்பத்தை  நுகர்ந்து அதன்மேல்  மிருகாவதியோடு  சேருவாய்  “   என்றிவ்வாறு  கூறினான் .

              இங்ஙனம்  மாதலியால்  தேற்றப்பட்ட  சகச்சிரானீகன்  ,மிருகாவதியின்  பிரிவை  மிக அறிதிற்  பொறுத்து ,  “உயிர் வாழ்க்கை  யுளமகற்கு  யாண்டு  பல  கடந்தும்  இன்பம்  உறுமால் “  என்னும்  முதுமொழியை நினைவு  கூர்ந்து  மனத்திட்பத்தால்  உயிர்  தாங்கினான் .

                மிருகாவதியை  மூக்கினாற்  கவர்ந்து  உயரப் பறந்து சென்ற  கலுழன் (கருடன்)  உறுப்புக்களின்  இயக்கத்தால் இவள்  இறச்சிப்பிண்டம்  அல்லள் ; உயிருடன்  கூடிய  மானிடப்பெண்  என்று  அறிந்து அவளை  உதயாசலத்தின்   சாரலில்  விடுத்தது .  பறவை  மூக்கினின்றும்  விடுபட்ட  அம்மிருகாவதி , துணையின்றி  யாரும்  அடைதற்கரிய  மலைப்பக்கத்தில்  இருக்கும்  தன்னை நோக்கி  மிகவும்  அச்சமுற்று  வாய்திறந்து  கதறினாள் .  அவ்வமயம்  பன்னாளாகப்   பசியுற்றிருக்கும்  ஒரு  பெரும்பாம்பு  அவளை  விழுங்குதற்குத்  தொடங்கிற்று .  அவ்விடத்தில்  எதிர்பாராது  அடைந்த  ஒரு  மனிதன்  அப் பாம்பை   அம்புகளாற்  கொன்று  மிருகாவதியைக்  காத்தனன் . அதன்பின், அவள்  அத்தகைய  துன்பத்தை  ஆற்றாதவளாய்  உயிர்விடுதலே  நலமெனத்  துணிந்து  அவ்விடத்தில்  தன்  விருப்பின்  வண்ணந்  தடையின்றித்  திரியும்   ஒரு  மதயானையின்  முன்னிலையிற்  சென்று  நின்றாள் . அவ் யானை  தமியளாய்  நிற்கும்  அபலையாகிய  அப்பெண்ணை  நோக்கி  அருளுடைய  யானை  யொப்ப  விளங்கி  அவளைத்  தன்  துதிக்கை  நுனியால்  மெல்லிதாகத்  தடவிற்று .  

                 பின்னர் , அம்மிருகாவதி  கருப்பச்சுமையால்  துன்புற்று  ஆங்குள்ள  அருவியின்பக்கல்  அடைந்து  துன்பமிகுதியாற்  புலம்பினாள் . ஆண்டு ,  அணிமைக்கண்ணுள்ள  முனிவர் இருக்கையினின்றும்  ஒரு  தாபத  குமாரன்  வந்து அவளைக்  கண்டான் . அவன்  அவளது துன்பகாரணத்தைக்  கேட்டு  அநாதையாகிய  அவளைக்  கருனைகூர்ந்து  சமதக்கினி  முனிவனது  இருக்கையை  அடைவித்தான் . நிறைந்த  கருப்பச்சுமையாற்  சிரமமுற்றவளும்  வேறு  புகலில்லாதவளுமாகிய  அம்மிருகாவதி  பிரம  தேசசால்  அக்கினியைப்போற்   றிகழ்கின்ற  பெரியோனாகிய  அம்முனிவன்  பாதங்களில்  வனங்கினாள் .  அம் முனிபுங்கவன்  அவளது  துன்ப  காரணத்தை  மனவொருக்கத்தால்  உணர்ந்து அவளை  நோக்கி  , “குழந்தாய்  !  வருந்தற்க  ;  சின்னாள்  இவ்வாச்சிரமத்திலேயே  இருப்பாயாக ; எல்லா அழகும்  வாய்ந்த  புதல்வன்  பிறப்பான் ; சமீப  காலத்திலேயே  தலைவன்பக்கல்  அடைவாய் “ என்றிவ்வாறு  தேற்றினான் .மிருகாவதி  அச்சொற்களைத்  தலைவணங்கியேற்று  அவ்  வாச்சிரமத்திலேயே  தங்கினாள் . பின்னர், பேறு  கால  நிறைவில்  சக்கரவர்த்தியின்  எழில்  வாய்ந்த  புதல்வன்  ஒருவனைப்  பெற்றாள்  .  அவன்  பிறந்த  சமயத்தில்  , ஆகாயத்தில்  அசரீரியாக, “நங்காய்!  மிருகாவதி ! உதயனன்  என்னும்  பெயர்  வாய்ந்த  நின்னுடைய  இப்புதல்வன்  எல்லாவுலகங்களிலும்  புகழ்   விளங்கப்பெற்ற  சக்கரவர்த்தியாவான் “  என்னுஞ்  சொற்கள்  எழுந்தன . அவற்றைக் கேட்டு மிருகாவதி பெருமகிழ்ச்சியையும்  வியப்பையும்  அடைந்தாள் .

                                                       வெண்பா

கணவற்  பிரிந்தமிரு  காவதியோர்  காட்டிற்

றணவின்  முனியிருக்கை  சார்ந்தங்  — கணியிர்

றிகழு  முதயனனாஞ்  சேய்மணியைப்  பெற்றாள்

புகழுந்  திருவின்  புற .

                                                       ————

இரண்டாம்  வகுப்பு

( உதயனன்  அரசியற்றிருவெய்தல்)

பின்னர்ச்  சமதக்கினி  முனிவன்  அப்புதல்வனுக்குச்  சாதகன்மம்  முதலிய  எல்லாக்  கிரியைகளையும்  அவ்வக்  காலங்களிற்  செய்தான் . சிறுவனாகிய  உதயனன்  ஒத்த  பருவமுள்ள  முனிகுமாரர்களோடு   கூடிச்  சிறுவர்க்குரிய  விளையாடல்களைச்   செய்து  முறையாகக்  குழவிப்பருவத் தைக்  கடந்தான் .  அதன்பின் , அம்முனிவர்  பெருமானாலேயே    உபநயனம்  செய்யப்  பெற்று  அவன்பானின்றே  எல்லாக்  கலையுங்  கற்றுணர்ந்தான் .  முறையாகப்  பதினான்கு  வித்தைகளிலும்  வில்வித்தையிலும்  கரைகண்டவ னாயினான் ; ஓர் அமயம்  மிருகாவதி  நிறைமதி  போற்  கண்களுக்கு  இன்பத்தை  விளைவிக்கின்ற  புதல்வனைப்  பார்த்து  , அன்பு  நிறைந்த  மனத்தினளாய்  சகச்சிரானீகனது  பெயர்  குறிக்கப்பட்டுத்  தன் கையில்  அணிந்திருக்கின்ற  வளையலை  அப்புதல்வன்  கையில்  இட்டாள் .  அதன்பின்  ஒரு  நாள்  , உதயனன்  வேட்டையாடல்  குறித்துக்  காடுகளிற் றிரிந்து  ஒரு  பாம்பை  வலிந்து  இழுத்துக்கொண்டு  நிற்கும்  ஓர்  மனிதனைப்  பார்த்தான் . பாம்பினது  அத்துன்ப  நிலையை  நோக்கி  அருளுடையனாகிய  அவ்வுதயனன்  , வேடனைப்பார்த்து  ,  “ஒரு  குற்றமில்லாத  இப்பாம்பை  எதர்காகத்  துன்புறுத்துகின்றாய் ?  இதனை  விடல்  வேண்டும் ; இது  தன்  விருப்பின்படிச்  செல்க “  என்று  இங்ஙனங்   கூறினான் .  அவ் வேடன்  ,  “குமாரா !  யான்  வறியவன் ;  இதுவே  என்  வாழ்க்கைத்  தொழில் ;  மந்திரவன்மையாலும்  ,  பச்சிலைகளின்  பெருமையாலும்  இவ்விடத்திற்  பாம்புகள்  கிடைத்தர் கரியவாயின ;  நெடு நாளாக  இதனைத்  தேடிப்  பெற்றேன் ;  ஆதலின்  இதனை  விட்டு  எங்ஙனஞ்  சீவிப்பேன் ?” என்று  இங்ஙனம்  மறுமொழி  கூறினான் . 

                  இதனை  வள்ளற்றன்மையினையுடைய  உதயனன்   கேட்டுத்  தாய்  உதவிய  காப்பைக்  கையினின்றும்  கழற்றி  வேடனுக்குக்  கொடுத்து , “இக்காப்பை  வாழ்க்கைக்குரியதாக் கொண்டு  இதனை  விடுவாயாக “  என்று  கூறினான் . அவ்வேடன்  காப்பைப்பெற்று  மகிழ்ச்சி  யுடையவனாய்ப்  பாம்பய்விட்டு  அப்புதல்வனது  வள்ளற்  றன்மையைக்  கண்டு  வியந்து  தன் விருப்பின்  வண்ணஞ்  சென்றான் .

           அதன்பின் , அப்பாம்பு  உதயனனை  வணங்கி  மக்கள்  கூறுஞ்  சொற்களால்  “குமார !  யான்  வாசுகியின்  தமையனாகிய  வசுனேமி  என்னும்  பெயரினையுடையேன்  . என்பால்  “இன்னிசை”  என்னும்  பெயரினை  யுடைய  யாழ்  ஒன்று  இருக்கின்றது . அதனைப்  பெற்றுக்  கொள்வாயாக “  என்று  இங்ஙனம்  கூறிற்று  .  உதயனன்  “அங்ஙனமேயாக”  என்று  சொல்லி  அவ்யாழைப்  பெற்றுக்கொண்டான்.  வசுனேமி  உதயனன்பால்  விடைபெற்றுத்  தன்  இருப்பிடஞ்  சென்றது .  உதயனனும்  தாயின்  பக்கல்  எய்தி   இவ் வெல்லா  நிகழ்ச்சிகளையும்  தெரிவித்தான் .  மிருகாவதி  அவர்க்கு  இளமைப்பருவத்தே  இயற்கையினமைந்த  வள்ளற் றன்மையை  மகிழ்ந்து  பாராட்டினாள் .

             பின்னர் , வேடன்  அக்காப்பை  விற்றற்  பொருட்டுக்  கெளசாம்பி  நகரத்தை  அடைந்தான் . அவ் விடத்திற்  சகச்சிரானீகனது  பெயர் குறித்த  அக்காப்பைக்  கண்டு  அரசன்  காவலாளர்  , அவ்வேடனை  அரசன்  பக்கல்  கொணர்ந்தனர் .”நீ  இக்காப்பை  எவ்வாறு  அடைந்தாய் “  என்று  அரசன்  கேட்க ,  வேடன் , நிகழ்ந்த  எல்லாவற்றையும்  விளங்கக்  கூறினான் . அப் பொழுது  அசரீரிமொழி  “அரச!  நின்னைப்பற்றிய  சாபத்தின்  ஒழிவு காலம்  நெருங்கிவிட்டது .  நின்  கோப்பெருந்தேவியாகிய  மிருகாவதி  உதயாசலத்தின்  பக்கத்திலுள்ள  சமதக்கினி   முனிவனது  ஆச்சிரமத்திற்  பதினான்கு யாண்டு  நிறைவேறப் பெற்ற  நின்  அருமைப்புதல்வனோடு  சுகமாகத்  தங்கியிருக்கின்றாள் . “ என்று  இங்ஙனம்  எழுந்தது  .  அதனைக் கேட்டுச்  சகச்சிரானீகன்  முகில்  ஒலி  கேட்ட  மயில்  போல  மிகப்பெரு  மகிழ்ச்சியுடையனாயினன் .

              பின்னர் ,  அப்பொழுதே  படை வீரர்கள்  சூழப்  புறப்பட்டு  அவ்வேடன்   வழி  காட்ட  உதயாசலத்தை  அடைந்தான் .  ஆச்சிரமத்திற்கு  இடையூறு  உண்டாகாத  வண்ணம்   படைகளைச்  சேய்மைக்கண்ணே  நிறுத்தித்  தான்  தமியனாகவே  ஆசிசிரமத்தின்  உட்புகுந்து  சமதக்கினி  முனிவனைத்  தரிசித்து  வணங்கினான்  .  அம்முனிவன்  அரசற்கு  வாழ்த்துரைகூறி  நலம்  வினவினன் .  பின்னர்ப்  புதல்வனோடு  மிருகாவதியை  ஈந்தான் .  அவளைக்கண்டு  சகச்சிரானீகன்  பெரிதும்  இன்புற்றான் . இத்துனைக் காலம்  வரையும்  காணாத  தன்  அருமைப்புதல்வனை   விரைந்திழுத்துத்  தழுவி  உச்சி  மோந்து  உடல்  புளகமுற   இன்பக்கடலுண்  மூழ்கினவனாயினான் .பின்னர், முனிவன்பால்  விடைபெற்று  மிருகாவதி , உதயனன் , இவர்களோடு  கெளசாம்பி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டான் .   பதினான்கு  யாண்டுகளிலும் தான்  அநுபவித்த  நிலைகளைத்  தன்  காதலிக்கு  அறிவுறுத்தும் , அவள்  நிலையைத்  தான்  கேட்டும்  நெடுந்தூரமான  வழியைச்  சிரமம்  தோன்றா  வண்ணங்  கடந்தான் .  அப்பொழுது  கெளசாம்பி  நகரத்தில்  வாழ்கின்ற  மக்கள்  எல்லோரும்  தோரணம்  முதலியவைகளால்  நகரத்தை  அலங்கரித்தனர்  . தெருக்கடோறும்  நீர்  தெளித்தனர்  .  சந்தனம்  அகில்  முதலியவற்றின்  புகைகளாற்  எல்லாப்  பக்கங்களிலும்  மணங்கமழச்  செய்தனர் . இல்லங்களின்  வாயில்கடோறும்  நிறை  குடங்களை  வைத்தனர் . பலவகை  வாத்தியங்களை  முழக்குவித்தனர் . மங்களவாழ்த்துரைப் போராகிய   அந்தணர்களை  முன்னிட்டு  அமச்சரனைவரும்  , நகரத்து  மக்கள்  எல்லோரும்  அவனை  எதிர்கொண்டு  வரவேற்றனர்  .இங்ஙனம்  நகரத்து  மக்களால்  மிக்க  குதூகலத்துடன்  வரவேற்க்கப்பட்ட  சகச்சிரானீகன்  , புதல்வனோடும்  பெருந்தேவியோடும்   நகரத்துட்  புகுந்து  தன்  அரண்மனைக் கண்   அடைந்தான் .அதன்பின் , முறையாக  இளமைப்  பருவத்தினையடைந்த  உதயனன்  இளவரசன் ஆயினான் . அவற்கு  “யெளகந்தராயணன்” ,  “உருமண்வான்” , “வசந்தகன்”  என்னும்  மூவரும்  அமைச்சராயினர்  .  பின்னர்த்தன்  புதல்வன்  உலகாட்சியில்  , தகுதிவாய்ந்திருத்தலை  யுணர்ந்து  சகச்சிரானீகன், அப்புதல்வன் மாட்டே  அரசியற்  சுமை எல்லாவற்றையும்  வைத்துவிட்டு  மிருகவதியோடு தவஞ்  செய்தற் பொருட்டு  இமயமலையை  எய்தினான்.

வெண்பா  

மன்னுங்   கலையனைத்து   மாமுனிவன்  பாற்பயின்றங்

கின்னிசையாம்  யாழும்  இனிதேற்றே  — யன்னையொடு

தந்தை    யுறைவிடத்தைச்    சார்ந்தங்       கரியணையின்

மைந்த  னிவர்ந்தான்   மகிழ்ந்து

மூன்றாம்  வகுப்பு.

(வாசவதத்தை  பிறப்பு)

                உதயனன்  தந்தையினது  அரியணைக்கண்  வீற்றிருந்து  அறனெறி  கடவாது  குடிகளைப்  புரந்தான் . குடிகளும் அவன்  தந்தையிடத்துப்  போல  அவனிடத்தும்  அன்பு  பூண்டு  ஒழுகினர் . இங்ஙனம்  பன்னாட்கழிந்ததும்  யெளகந்தராயணன்  முதலிய  மந்திரிகள்பால்  அரசியற் சுமையை  வைத்துவிட்டுச்  சுகமாக  இருந்தான் . வசுநேமி  என்னும்  பாம்பு  தந்த  “இன்னிசை”  எனப்  பெயரிய  யாழை  இடைவிடாது  வாசித்துக்கொண்டி ருந்தான் .  வனங்களிற்சென்று  வேட்டை  யாடுவதில்  மிகவும்  குதூகலமுடைய வனாயினான் .  இன்னிசை  என்னும்  யாழின்  ஒலியால்  வயப்பட்ட  காட்டியானைகளைக்  கவர்ந்தான் . இங்ஙனம்  பல்வகை  விளையாடற்களாற்  றன்  மனத்தை  இன்புறுத்தி  வருகின்ற  வற்சதேயத்தரசனாகிய  உதயனன்  ஓர்  அமயம்  “இத்துணைக்  காலம்வரையும்  எனக்கு  எல்லாவகையானும்  ஒத்த  மனைவி  வாய்த்திலள் . வாசவதத்தை   என்பாளைக்  குலத்தாலும்  , ஒழுக்கத்தாலும்  , உருவத்தாலும்  பருவத்தாலும்  எனக்கு  ஒத்தவளாகக்  கேட்கின்றேன் . அவள்  என்  பகைவனும்  உச்சயினி  நகரத்தரசனும்  ஆகிய  சண்டமகாசேனன்  புதல்வியாவாள்  ,  ஆதலின்  அவளை  எங்ஙனம்  அடைவேன்  “  என்று  இங்ஙனம்  மனத்தாற்  சிந்தித்தான் . அவ்வமயத்திலேயே  சண்டமகாசேனனும்  “என்  புதல்வியாகிய  வாசவதத்தை  மங்கைப்பருவம்  எய்தினாள் . வற்சதேயத்தரசனே  யன்றிப்  பிறனொருவன்  அவளுக்கு  ஒத்த  கணவனாகக்  காணப்பட்டிலேன். அவ்வுதயனனோ  என்  பகைவனாவான் . எங்ஙனம்  என்பான்  மகட்கோடலை  அங்கீகரிப்பான்? மேலும்  அவன்  மானத்தையே  பொருளாக  உடையான் ; பெரிய  வீரன் ; உலோபம்  முதலிய  குற்றங்களால்  சிறிதும்  பற்றப்படாதவன் ;  நகரத்து  மக்களாலும்  அமைச்சர்களாலும்  மிகவும்  அன்பு  செய்யப்பட்டவன் .  ஆதலின் , அவனைச்  சமாதானம்  முதலிய  உபாயங்களால்  வயப்படுத்துதற்கு  இயலாது . இப்பொழுது  யாது  செயற்பாலது ?” என்று  இங்ஙனம்  மனத்தாற்  சிந்தித்தான்.நெடுநேரம்  சூழ்ந்து  முடிவில்  “வற்சதேயத்தரசன்   வேட்டை யாடுதலிலேயே  பற்றுடையனாய்  இடைவிடாது  தமியனாகவே  காட்டில்  திரிகின்றான் . விசேடமாகக்  காட்டியானைகளைப்  பிடிப்பதில் அவாவுடையனாகக்  காணப்படுகின்றான் . ஆதலின்  , அவனைப்  பொறியான்  இயன்ற  யானையால்  வயமாக்குவேன் . பின்னர் , அவன்பால்  இசை பயிலுதற்பொருட்டு  என் புதல்வியாகிய  வாசவதத்தையை  நியமனஞ்  செய்வேன் . அவன்  அவள்பாற்  காதலுடையனாவான் . உதயனனை  மருகனாகப்  பெறுதற்கு  இதனையன்றி  வேறு  வழியின்று”  என்று  இங்ஙனந்  துனிந்தான் .

                   இவ்வாறு  துணிவுற்றுச்  சண்டமகாசேனன்  சண்டிகையின்  கோயிலை  அடைந்து  தேவியை  வணங்கி  “எனது  வேண்டுகோளை  நிறைவேற்றியருள்க  “  என்று  வேண்டினான் .  அப்பொழுது  அசரீரிமொழி  , “அரச! நின்  விருப்பம்  நிறைவேறும்  ; கவலுதல்  ஒழிக “  என்று  கேட்கப்பட்டது சண்டமகாசேனன்  இதனைக் கேட்டுப்  பெரிதும்  மகிழ்ந்து  அப்பொழுதே  தூதனை  யழைத்து  , “கெளசாம்பி  நகரத்தையடைந்து  வற்சராசன்பாற்  சென்று , “நீ  இசைத்  தொழிலில்   மிகவும்  நிபுணன்  என்பது  அறிந்ததொன்றே; என் புதல்வி  வாசவதத்தை  நின்பால்  இசைபயில  விரும்புகின்றாள் ;  ஆதலின், என்பால்  நட்புலதேல்  இங்கு  வந்து  வாசவதத்தையை  நன்கு  பயிற்றல்  வேண்டும் “  என்று  கட்டளையிட்டான் .  தூதன்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்து  அங்ஙனமே  தெரிவித்தான் .

                   உதயனன்  பகைவன்  விடுத்த  பொருத்தமில்லாத  செய்திகளைக்  கேட்டு  யெளகந்தராயணனை  யழைத்து  மறைவிடத்திலிருந்து  , “அமைச்ச!  எக்காரணத்தாற்  சண்டமகாசேனன்  இங்ஙனம்  தூது  விடுத்தான் . செருக்கினாலா!  அன்றி  வேறு  கருத்தாலா !  ஆராய்தல்  வேண்டும்  “  என்று  இங்ஙனம்  கூறினான் .  பேரறிஞனாகிய  யெளகந்தராயணன்  வற்சநாயகனது   நலங்குரித்து, “வேந்தர்  பெரும!  நீ  வேட்டையாடுதலிலும்  ,இசைபயிலுதலிலும்   மிகவும்  பற்றுடையவன்  என்பது  எல்லாராலும்  அறிந்ததன்றே !  சண்டமகாசேனன்  தன்  பெண்மணியால்  நின்னை  வயப்படுத்தற்கு  முயல்கின்றான்  . எவன்  வேட்டையாடன்  முதலியவைகளில்  மிக்க  பற்று  வைத்திருக்கின்றானோ  அவன் , குழியில்  வீழ்த்திப்  பிடிக்கப்படும்  காட்டியானையைப்போலப்  பிறன்கைப்பட்டுப்  பெரிதும்  துன்பத்தை  அநுபவிப்பான்  .  ஆதலின் ,  இனி  வேட்டையாடன்  முதலியவைகளில்  வைத்திருக்கும்   அவாவை  விட்டொழிப்பாயாக “  என்று  இவ்வாறு  மறுமொழி  கூறினான் . இதனைக் கேட்ட  வற்சர்தலைவன்   சண்டமகாசேனனுடைய  தூதனை  நோக்கி  , “செல்!  நின்  தலைவன்பால் ;  ‘நின்  புதல்வி  இசைக்கலை  பயிலுதற்கு   விரும்புவாளாயின்  ,அவளை  ஈண்டுச்  சேர்ப்பிப்பாயாக; அவளைப் பயிற்றுவேன் ‘  என்று  இங்ஙனம்  யான்  கூறியதாகத்  தெரிவிக்கவேண்டும்”  என்று  கட்டளை  யிட்டான் . உதயனன்  இங்ஙனம்  மறுமொழி  கூறித்  தூதனபோக்கி ச்  சண்டமகாசேனன்பாற்  பெரிதுஞ்  சினமுடையனாயினான்.  அப்பொழுதே  அவனோடு  பொருதற்கு  விரும்பினான் . அவ்வமயம்  யெளகந்தராயணன்  “அரச!  இது  செய்தற்கு  ஒல்லாதது ; தக்கதும்  இன்று .  சண்டமகாசேனனோ , நின்னோடு  உறவுகோடலை  விருப்புகின்றான் ;  அவன்  பெருமையைக்  கேட்பாயாக .  “உச்சயினி  நகரத்தில்  மகேந்திரவன்மன்  என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவன்  உளன் .  அவற்கு  ,  சயசேனன்  எனப்  பெயரிய  புதல்வன்  இருந்தான் .  அவற்குப்  புதல்வனாக  மகாசேனன்  தோன்றினான் . அவன்  ஆண்மையிலும்  , திண்மையிலும்  தன்னை  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாதபடி  இவ்வுலகத்தைக்  காவல்புரிந்தான் ;  அவன்  ஓர்  அமயம்  , ‘எனக்கு  ஒத்த  இல்லாளையும்   வாட்படையையும் , எவ்வாறு  அடைவேன்?  என்று  இங்ஙனம்  சிந்தித்தான் . அம்மனைவியையும்  வாட்படையையும்  பெறுதற்பொருட்டுச்  சண்டிகையின்  கோயிலையடைந்து  அவ்வம்மையை  வணங்கி  அவ்விடத்திலேயே  பன்னாளாகச்  செய்தற்கரிய தவத்தைச்  செய்தான். தவ  முடிவில்  ,  தன்றலையை  அறுத்துத்  தீங்கட் பெய்தான் ; அப்பொழுது  அருண்மிக்க  சண்டிகை  அவன்  கண்ணெதிரிற்  றோன்றினாள் ;  அவளை  மகாசேனன்  தரிசித்து  விரைந்தெழுந்து வணக்கம்  புரிந்து  கைகூப்பி  நின்றான்  ; சண்டிகாதேவி  அவனைப்  பார்த்து , “வேந்தே !  இத்தகைய  அருளுடையளாயினேன் ; இவ்வாட்படையைப்  பெற்றுக்கொள் வாயாக ; இதனால் , நீ  பகைவர்களான்  வெள்ளப்படாதவன்  ஆவாய் ; இன்னும்  அங்காரகன்  என்னும்  பெயரினை யுடைய  அசுரர் தலைவன்  ஒருவன்  உளன்; அவற்கு  அங்காரவதி  யென்னும்  பெயரினை யுடைய  பெண்மணி  ஒருத்தி  இருக்கின்றாள் ; அவள்   நின்  மனைவியாவாள் . நீ  என்பால்  வரங்கோடற்  பொருட்டுத்  தலையறுத்தலாகிய  சண்டகன்மத்தைச்  செய்தமையால்  ,  சண்டமகாசேனன்  என்னும்  புகழ்ப்  பெயரை  அடைவாயாக”  என்று  கூறி  அவ்வம்மை  மறைந்துவிட்டாள் .

                சண்டமகாசேனன் , தன்  அவா  பயனுறப்பெற்று  மிக்க  மகிழ்ச்சி யடைந்தான் .  அவற்கு   முன்னரே  ஒப்பற்றா மதயானை  ஒன்றுளது . இப்பொழுது  சண்டிகாதேவியின்  திருவருளால்  வாட்படையும்  கிடைத்தது .  ஆதலின் , பகைவர்களால்  அச்சுறுத்தப்படாதவன்  ஆயினான் .

                  பின்னர்,  ஓர் அமயம்  ,  சண்டமகாசேனன்  வேட்டை  யாடல்  குறித்துக்  காட்டினை  யடைந்தான் ;  அக்காட்டில்  மலையை  ஒத்த  உருவினையுடைய  ஒரு  பன்றியைக்  கண்டான் ; அது  மிக்க  சீற்றத்தோடு  அரசனை  நோக்கி  விரைந்து  ஓடி  வந்தது . அஃது  அரசன்  உய்த்த  கூரிய  பகழிகளால்  உயிர்  நிலை  உறுப்புக்கள்  அடிக்கப்பட்டும்  , அத் துன்பத்தைப்  பொருட்படுத்தாது  ,  அவன்  தேரைச்  சிதறச்செய்து  துகளாக்கியது.  அதன்பின்  ஒரு  பிலத்தின்  உட்புகுந்தது . நேர்  ஒழிந்து  காலாட்படையினை  மாத்திரம்  உடைய  அரசன்  ஆற்றொண்ணாச்  சினத்தால்  அப்பன்றியைப்  பின்றொடர்ந்து  பிலத்தினுட்  புகுந்தான் ; பன்றியோ  சிறிது  தூரம்  சென்று  காணப்படாததாயிற்று .  சண்டமகாசேனன்  அங்குமிங்கும்  பார்த்து  அகன்ற  ஒரு  காட்டினை  யடைந்தான் ;  ஆண்டு   வியப்புடையனாய்ச்  சுற்றித்  திரிந்து  மலையையொத்த  மதில்சூழ்ந்த  நகரம்  ஒன்றைக்  கண்டான் ; அந் நகரத்தின்  புறத்தே  உள்ள  உத்தியானவனத்தில்  தெளிந்த  நீர்ப்  பெருக்கினையுடைய  ஒரு  தடாகம்  இருந்தது .  அதன்  கறையிற்  சிறிது நேரம்   இருந்து  வழிநடத்தலால்  உண்டாகிய  இளைப்பைப்  போக்கினான் ,  அவ்வமயம்  அவ்விடத்தே  ,  மன்மதனது  வெற்றித்  திருவினை  யொத்து  விளங்கிப்  பற்பல  தோழிகளும்  பணிப்பெண்களும்  புடைசூழ  வருகின்ற  ஒரு  நங்கையைக்  கண்டான் ; அவள் , சேய்மைக்கண்ணே  சண்டமகாசேனனைக்  கண்டு  மிக்க  காதற்பெருக்கால்  இமைத்தலின்றி  அவனையே  உற்று  நோக்கினவளாய்  மெல்ல  மெல்ல  நடந்து  அவன்பக்கல்  எய்தினாள்.  எய்தி,  “நீ  யார்? எங்கு  வந்தனை?  யாது  செய்ய  விரும்புகின்றனை?”  என்று  வினவினாள் . சண்டமகாசேனன்  , தன்  வரலாறு  முழுவதையும், உள்ளவாறு  தெரிவித்தான்அதனைக் கேட்டு  அப்பெண்மணி  , ஒரு  காரணமுமின்றிப்  போந்த  துன்பமுடையாளாய்க்  கண்களினின்றும்  நீர்  ஒழுக  அழத்  தொடங்கினாள் .  சண்டமகாசேனன்  ,  “நீ  யார் ? எவன்  மகள் ?  எதற்காக  அழுகின்றனை? “என்று  கேட்டாள் .  அவள்,  “பெரியோய்!  கேட்பாயாக ;  நின்னாற்  பன்றியுருவமாகக்  காணப்பட்டவன்  அங்காரகன் என்னும்  பெயரினையுடைய  அசுரர்  தலைவன் ஆவான் .  யான்  அவன்  புதல்வி ; அங்காரவதி   யென்னும்  பெயரினையுடையேன் ; கண்ட  அளவினானே  நின்பாற்  காதற்  கிழமையுடையளாயினேன்; அத்தகைய  என்  தந்தை  தவவன்மையால்  வச்சிரப்  படையாலும்  பிளக்க வொண்ணாத  உடலினைப்  பெற்றான்  ;  பல  அரசர்களுடைய  உவளங்களினின்றும்  பல  பெண்மணிகளை  எற்குப்  பணிசெய்தற்பொருட்டுக்  கொணர்ந்தான்;  அவன்  இப்பொழுது  பசி  தாகங்களால்  வாட்டமுற்று  உறங்குகின்றான்.  உறக்கத்தினின்றும்  எழுந்து   நின்னைக் காண்பானாயின்  , நிச்சயமாகக்  கொன்றுவிடுவான் ;  விரைவில்  நேரக்கூடிய  நின்கேட்டைக்  கண்டு  மிகவும்  வருந்துகின்றேன் “  என்று  இங்ஙனம்  கூறினான் . 

                    இவ்வாறு  கூறிய  அங்காரவதியின்  சொற்களைக்  கேட்டுச்  சண்டமகாசேனன்  அவளை  நோக்கி , “ நங்காய் !  அஞ்சற்க.  வருவன  வந்தே  தீரும் ;  என்பால்  அன்புளதேல்  என்  சொல்வழி  நிற்பாயாக;  எப்பொழுது  இவன்  தூக்கம்  நீங்கி  விழிக்கின்றானோ  அப்பொழுது நீ  அவன்  முன்னின்று  கண்ணீர்  உதிர்ந்து  அழல்வேண்டும்  ;  அவன்  அவசியம்  நின்  துன்ப  காரணம்  யாது  என்று  வினவுவான் ; அவனை  நோக்கி  “தந்தையே  !  நின்னினும்  வலியனாகிய  ஒருவன்  போந்து  நின்னைக்  கொன்று  விடுவானாயின்   அப்பொழுது  யான்  அநாதையாக  நின்று  என்செய்வல்? “  என்று  மறு  மொழி  கூறுக :  அதனைக் கேட்டு  அவன்  கூறும்  மறுமொழியை  என்பால்  தெரிவித்தல்  வேண்டும்  ; அதன்மேல்  நினக்கும்  எனக்கும்  நலம்  உண்டாம்,”  என்று , இங்ஙனம்  கூறினான் .  இதனைக் கேட்டு  அங்காரவதி ,  “அங்ஙனமே  செய்வல்”  என்று  உடன்பட்டாள்.

                       காமவேளின்  ஏவலால்  தந்தையின்  கொலையிலும்  பெண்கள்  முயல்கின்றனர் என்னும்  இந்நிகழ்ச்சியால்  உலகத்தீர்  !  அம் மன்மதனது  கொடுமையை  உணர்வீர்களாக .

                         அதன்பின்னர் , அவள்  தன்  தந்தையால்  சண்டமகாசேனனுக்குக்  கேடுவருங்கொலோ  என்னும்  ஐயமுடையவளாய்  அவனை  ஒரு  மறைவிடத்திற்  காத்து  வைத்துத்  தூங்குகின்ற  தந்தையின்  பக்கல்  எய்தி  ,அவன்  விழிக்கும்  அமயத்தை  எதிர்பார்த்து  நின்றாள் .

                           அதன்பின்  சிறிது நேரம்  சென்றதும்   துயில்  நீத்தெழுந்த  அங்காரகன்  கண்களை  விழித்துத்  தன்  முன்னிலையிற்  கண்ணீர்  ஒழுக நிற்கின்ற  அங்காரவதியைக்  கண்டான் . “எதற்காக  இங்ஙனம்  அழுகின்றனை !”  என்று  கேட்ப,  “ஐயா!  நின்னினும்  வலிய  வீரன்  ஒருவன்  போந்து  நின்னைக் கொன்று  விடுவானாயின்  ,  அப்பொழுது  எற்குப்  புகலிடம்  யாதாம்? “  என்று  கூறினாள் .  அங்காரகன்  அதனைக்  கேட்டு  நகை செய்து , “குழந்தாய்”  என்  உடல்  முழுதும்  வச்சிர  மயம்  என்பதை அறிந்திலாய்கொல்?  மேலும்  என்  இடக்கையில்  நுண்ணிய  துளை  ஒன்று  உள்ளது ; அதன்கண்  அடிவிழுமாயின்  எனக்கு  இறப்பு  நேரும் .  என்னையன்றி  வேறொருவற்கும்  இது  தெரியாது  .இங்ஙனமிருக்குங்கால்   என்னைக்கொல்லுதற்கு  யாவன்  வலியுடையவன்  ஆவான்’   ஆதலின்  நீ  துன்புறுதல்  ஒழிவாயாக”  என்று  கூறினான் . 

                           இவ்வாறு  இவன்  கூறிய   மொழிகளை  மறைந்து  நின்ற  சண்டமகாசேனன்  கேட்டான் ..  அதன்பின்  அப்பொழுதே  அங்காரகன்  படுக்கையினின்றெழுந்து  நீராடி  முக்கண்ணனாகிய  சிவபிரானுக்குப்  பூசைசெய்யத்  தொடங்கினான் .  அவ்வமயத்தையே  பார்த்துச்  சண்டமகாசேனன்  வில்லின்கண்  அம்பைப்  பூட்டி  அங்காரகனைப்  போர்க்கழைத்தான்  .  அப்பொழுது  அங்காரகன்  மெளனவிரதத்தை  ஒழிக்க  விருப்பமற்றவனாய்த்  தனதிடக்கையைத்  தூக்கிநீட்டி,  “சிறிது  தாழ்த்தலைப்  பொறுத்திருத்தல்  வேண்டும்”  என்று  குறிப்பில்  தெரிவித்தான் சண்டமகாசேனன்  இதுவே  நல்லசமயம்  என்றெண்ணி  விரைந்து  அக்கையில்  அம்புகளைப்  பொழிந்தான் .உயிர்நிலைத்   தானத்தில்  அடிக்கப்பட்ட  அங்காரகன்  உயிர்துறந்தான்.  அதன்பின் , சண்டமகாசேனன்  அச்சமற்று  அங்காரவதியை  மணந்து  உச்சயினி  நகரத்தை  நோக்கித்  திரும்பினான் .சின்னாட்  சென்றதும்  அங்காரவதி  , பாலகன்  கோபாலன்  என்னும்  இரண்டு  புதல்வர்களைப்  பெற்றாள்.  பின்  ஓர்  அமயம்  சண்டமகாசேனன்  இந்திரனுக்குப்  பெரும்  விழாச்  செய்தான். அதனான்  மகிழ்ந்த  இந்திரன்  கண்  எதிரில்  வெளிப்பட்டுச்  சண்டமகாசேனனை  நோக்கி , “வேந்தே”  நின்பால்  மிகவும்  மகிழ்ச்சியுடையனாயினேன். ஆதலின் , என்  அருளால்  உருவத்திலும்  ,  குணத்திலும்  ஒப்புவமையற்ற  பெண் மகவை  யடைவாய்”  என்று  கூறினான் .  அங்ஙனமே  அவற்கு  ஒருபெண்மணி  பிறந்தாள் .  அப்பெண்  மகவு  பிறக்குங்கால்  விண்ணில்  அசரீரியாக  “இப்  பெண்மணியின்  வயிற்றிற்  காமவேளின்  கூறாக  ஒரு  புதல்வன்  உண்டாவான் . அவன்  வித்தியாதரர்களின்  சக்கரவர்த்தியாவான் “  என்னும்  சொற்கள்  எழுந்தன.  சண்டமகாசேனன்  அச்சொற்களைக்  கேட்டுப்  பெருமகிழ்ச்சி யெய்தினான் .  அதன்பின்  ,  வாசவன்  அருளாற்   றரப்பட்டமை யான்  அவளுக்கு  வாசவதத்தை  என்னும்  காரணப்  பெயரிட்டான் .  அப்பெண்  முற்பக்கத்துத்  திங்களஞ் செல்வன்  கலைபோல  முறையே  உறுப்புக்கள்  வளரப்பெற்றுத்  தந்தையின்  கண்களை  இன்புறுத்தினாள் . 

                          இங்ஙனம்  மிக்க  பெருமையினையுடைய  சண்டமகாசேனன்  எய்தற்கரிய  வலிமையுடைமையால்  அச்சமிலனாய்  எப்பொழுதும்  பிறரால்  வெல்லுதற்கு  அரியனாயினான்  .மேலும்  இவன்  தன்மகளை  நினக்குத்  தருதற்கு  விரும்புகின்றான் .  ஆயினும்  மானத்தால்  இரத்தற்  கேடு  வருங்கொலோ  வென்னும்  “அச்சத்தால்  முதலில்  வேண்டிக்  கோடற்கு  விரும்பவில்லை  .  வாசவதத்தைக்கு  நீயே  மணவாளன்  ஆவாய்  என்னு  மிதங்கட்  சிறிதும்  ஐயமின்று”  என்று  இங்ஙனம்  கூறி  யெளகந்தராயணன்  ஒழிவெய்தினான். இதனைக் கேட்டு  உதயனன்  வாசவதத்தையையே   இடைவிடாது  நினைவு கூர்ந்து  சில  நாட்களைக்  கழித்தான் .

வெண்பா

விண்ணோ  ரிறையருளான்  மேதினியி  லுஞ்சைநகர்க்

கண்ணா  ரெழிலெல்லை  காட்டுதல்போ —  னண்ணிய

வாசவ  தத்தை  வரலாற்  கேட்டின்ப

மாசலதி  தோய்ந்தான்  மனம் .   

நாங்காம்  வகுப்பு

(சிறைப்படல்)

               இஃது   இங்ஙனமிருக்க  வற்சதேயத்  தரசனது  தூது  மொழியை  ஏற்றுக்கொண்டு  உச்சயினி  நகரத்தை  யடைந்த  தூதன்  ,  உதயனன்  ஈந்த  மறுமொழியைச்  சண்டமகாசேனன்  பக்கல்  உள்ளவாறு  தெரிவித்தான் .  அதனைக்  கேட்ட  சண்டமகாசேனன்  “மானமுடையாரில்  தலைசிறந்தவன்  உதயனன்  .  நம்  வேண்டுகோளை  ஏற்றுக்கொள்ளான்  .  வாசவதத்தையை  அவன்பக்கல்  அனுப்புவேமாயின்  ,  அது  நம்மை  மிகவும்  சிறுமைப்படுத்துவ தாகும்  .ஆதலின்  , இப்பொழுது  வேறு  சூழ்ச்சிகளால்  உதயனனை  நம்  வயப்படுத்துதலே  தக்கதாகும் . “  என்று  இவ்வாறு  கருதினான் .  இங்ஙனந்  துணிந்து  படைத்தலைவனையழைத்து   “மிகப்பெரியதொரு  எந்திரயானை யைச்  செய்விப்பாயாக”  என்று  கட்டளையிட்டான் .  அப்படைத்  தலைவன்   நிபுணர்களான  சிற்பிகளாற்  பொறிக்களிறு  ஒன்றை  இயற்றுவித்தான்  .  சண்டமகாசேனன்  பொறியான்  இயன்ற  யானையின்  உள்ளே  பல  போர்வீரர்களை  மறைத்துவைத்து  வித்தியவனத்தில்  திரியச்செய்தான் .  யானை  பிடிப்பதில்  மிக்க  அவாவுடையனாகிய  உதயனன்பால்  வேடர்கள்  வந்து  “வேந்தர் பெரும!  விந்தியவனத்தில்  பெரிய  உருவத்தினையுடைய  மதயானை  ஒன்று  திரிகின்றது ; இத்தகைய  யானை  இதுகாறும்  எங்களான்  முன்னர்க்  காணப்படாத  தொன்று.  பெரிய  உருவத்தால்  மலைபோலக்  காணப்படுகின்றது . “  என்று  இங்ஙனந்  தெரிவித்தனர் .  இதனைக் கேட்டு  உதயனன்  பேருவகையால்  அவ்வேடவர்களுக்கு  நூறு  பொற்காசுகளைப்  பரிசிலாக  உதவினான் .  பின்னர்ச்  “சண்டமகாசேனனுக்கு ‘நடைமலை’  என்னும்  பெரிய  மதயானை  ஒன்று  இருக்கின்றது .  அதற்கு  எதிராக  இவ்யானையைக் கொணர்வேன் .  அதனாற்  சண்டமகாசேனன்  எளிதில்  வெல்லுதற்கு  உரியன்  ஆவான் “  என்று  இவ்வாறு  மனத்திற்  கருதினான் . 

                இங்ஙனம் , மனத்தின்கண்  அவாவை  மேற்கொண்டு  பிற்றைநாட்  காலையில்  அமைச்சர்கள்  தடுத்தும்  கேளானாய்  யானையைக்  கவர்தற்  பொருட்டு  வேடர்கள்  சூழ்வரச்  சென்றான் .  அமைச்சர்கள்  கணிதம்  வல்லோரை  யழைத்து  ,அவன்  புறப்பட்ட  நேரத்தின்  பயனை  வினவினர் . அக்கணிகன் , “சிறைக்கோட்டம்  புகுந்து  ஒரு  பெண்ணை  அடைவான் “ என்று  தெரிவித்தனர்  .விந்திய  வனத்தை  யடைந்த  வற்சர்  தலைவன்  படைவீரர்களைக்  கண்டு  கலக்கமுற்று  யானை  ஓடிவிடும்  என்னும்  ஐயத்தால்  அவ்வீரர்களைச்  சேய்மைக்கண்ணே   நிறுத்திச்  சில  ஏவலாளர்கள்  சூழ்ந்துவரச்  சுற்றினான். வசுநேமியாற்  றரப்பட்ட  “இன்னிசை”  எனப்  பெயரிய  யாழைக்  கேட்டற்கு  இனிமை  பயக்குமாறு  வாசித்துக்கொண்டு  உதயனன்  காட்டின்  இடையே  உயிருள்ள  யானையைப்போல  மெல்ல  மெல்லத்  திரிகின்ற  பொறியானையைக் கண்டான் .

                   உதயனன்  மிகக்  கூறிய  அறிஞனாயினும்  மாலைக் காலத்து  இருளாற்  கரிய  நிறத்தினையுடைய  காட்டில்  அம்மாயக்களிற்றை  உயிருள்ள  யானையாக  எண்ணி மெல்ல  மெல்லச்  சென்று  அதன்  பக்கலையடைந்தான். அப்பொறி யானையோ  காதுக்கு  இனிமை  பயக்கும்  அவ்  யாழிசையால் இழுக்கப்பட்டது  போல  முறம்  போன்ற  காதுகளை  மிகவும்  உயர  எடுத்து  மீண்டும்  மீண்டும்  பக்கல்  அணுகியும் , தூரச்சென்றும்  மனிதர் இல்லாத  அக்காட்டில்  அரசனை  நெடுந்தூரம்  ஈர்த்தது .முடிவில், அப்பொறியானை யினுள்ளே  யிருக்கின்ற  போர்வீரர்கள்  அரசன்  துணையில்லா திருத்தலை யுணர்ந்து  விரைந்து  வெளிப்பட்டு  வாட்படை  ஏந்திய  கையினராய்  நாற்புறமுஞ் சூழ்ந்தனர் . அவர்களை  வற்சர் தலைவன்  பார்த்துச்  சினமுற்று  உறையினின் றெடுத்த  வாளினால்  அவ்வெல்லோரையும்  வீழ்த்தினான் . இதற்கிடையில்  அக்காட்டிலுள்ள  புதரில்  மறைந்திருந்த  வேறு  சில  போர்வீரர்கள்  விரைந்து  ஓடிவந்து  பிற்பக்கத்தே  பிடித்துக்கொண்டனர் .  ஆங்காங்கு மறைந்திருக்கின்ற  பல  போர்வீரர்கள்  மேன்மேலும்  குறிப்பான்  அழைக்கப்பட்டு  ஓடிவந்து  அவனைப்  பிணித்துச்  சண்டமகாசேனன்  பக்கல்  சேர்த்தனர் . சண்டமகாசேனன்  வற்சர்தலைவனைச்  சிறப்பாகப்  பெருமைப்படுத்தி  அன்போடு  உபசரித்தான் .  பின்னர் , “ வேந்தே!  நின்  மனத்தில்   துன்புறல்  ஒழிக.  நின்பால்  எனக்குப்  பகையின்று.  என்  புதல்வி  வாசவதத்தை  இசைக்கலை  பயிலுதற்கு  விருப்பமுடையவளாக  இருக்கின்றாள் .  அவளைப்  பயிற்றுவித்தல்  வேண்டும் .  அதன்பின்,  நலம்  எய்துவாய்  “  என்று  இங்ஙனம்  கூறினான் .

               உச்சயினி  நகரத்திலுள்ள  மக்கள்  உதயனன் பாற்  பெரிதும்  அன்பு பூண்டு  ஒழுகினர் .  அதன்பின்  சண்டமகாசேனன்  ஒரு  சமயம்  உதயனனுக்கு  அமங்கலத்தைச்  செய்யவுங்கூடுமென்று  ஐயமுற்றமனத்தினராய்  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர் .  இங்ஙனம்  நகரத்து  மக்களிடைப்  பெருகிவரும்  ஐயப்பாட்டைச்  சண்டமகாசேனன்  , ஒற்றர்களால்  உணர்ந்து  , அவர்களையழைத்து   “எனக்கு  வற்சர்தலைவன்பாற்  பகைமையின்று . அவனோடு  நட்புரிமை  கோடற்கே  இவ்வுபாயம்  என்னான் மேற்கொள்ளப் பட்டது . ஆதலின் , என்பால்  நுங்கட்கு  வேறு  வகையான  வேறுபாடு  வேண்டா”  என்று  இவ்வாறு  தெரிவித்தான் . பின்னர்ச்  சண்டமகாசேனனால்  ஏவப்பட்ட  வாசவதத்தை  உதயனன்  பக்கல்  எய்தி  இசைக்கலை  பயிலுதற்குத்  தொடங்கினாள் .  வாசவதத்தை  வற்சராசன்  இவ்விருவர்பாலும்  முன்னரே  முளைத்தெழுந்த   காதற்கிழமையானது    இப்பொழுது    துளிர்த்தெழுந்தது .

வெண்பா

பொறியா  நியன்ற  புழைக்கைமா  வீர்ப்ப

நெறியா  ருதயனன்சீர்  நீங்காச்  —  சிறைசேர்பு

மாசிரியுங்  காதன்  மடவரற்கி  யாழ்பயிற்றும்

ஆசிரிய  னாயினா   னங்கு .

ஐந்தாம்  வகுப்பு

(சிறை  வீடல்)

இதற்கிடையில்  , கெளசாம்பி  நகரத்தில்  “உதயனன், பகைவனாகிய  சண்டமகாசேனன்  கையில்  அகப்பட்டான்”  என்று  பெரிய  கிளர்ச்சி  உண்டாயிற்று .  அப்பொழுதே  படைகளைச் செலுத்தி  உச்சயினி  நகரத்தைத்  தாக்க வேண்டும் “  என்று  நனாபக்கங்களிலும்  நகரத்து  மக்கள்  பேரொலி  செய்தனர் .  அப்பொழுது  அமைச்சர்களுள்  ஒருவனாகிய  உருமண்வான்  எல்லோரையிம்  அழைத்துச்  “சண்டமகாசேனனைப்  படைகளால்  வெற்றிகோடல்  அரிது .  அவன்  சண்டகாதேவியின்  திருவருளால்  அளவற்ற  வலிமையை  அடைந்துளான் .இன்னும்  உச்சயினி  நகரத்தை  எதிர்த்துச்செல்லுவேமாயின்  அவன்  ஒருவாறு  உதயனனுக்குக்  கேடு  விளைவிக்கக்கூடும்  . ஆதலின் , இப்பொழுது  எதிர்த்துச்  சேறல்  தக்கதன்று  இக்காரியம்  நன்கு  ஆராய்ந்து  நுண்ணறிவாற்  சாதிக்கத்தக்கது,”  என்று  இங்ஙனம்  கூறினான்.  அதன்பின்  நுண்ணறிவுடைய  யெளகந்தராயணன்  “ஓ நகரத்தவர்களே !  நீங்கள்  எல்லோரும்  இவ்விடத்திலேயே  இருத்தல்  வேண்டும்.  உருமண்வான்  அரசியற்  காரியங்க ளெல்லாவற்றையும்  பார்த்துக்கொள்ளுவான் . யானோ  வசந்தகனைத்  துணையாகக்  கொண்டு  இவ் விடத்தினின்றும்  புறப்பட்டு  என்  அறிவின்  மாட்சியால் உதயனனைப்  பகைவன்  கையினின்றும்  விடுவித்து  இங்குக்கொணர்வேன் .  இதன்கட்   சிறிதும்  ஐயமின்று  . வேண்டுங் காலத்தில்  வெளிப்படுத்துதற்குரிய  மறைத்துக்கோடன்  முதலிய  விஞ்சைகள்  என்பால்  இருக்கின்றன “  என்று  இவ்வாறு  சொல்லினான்  .  இங்ஙனம்  சொல்லிவிட்டு   யெளகந்தராயணன்  எல்லோரையும்  உருமண்வான்  கையிற்  சேர்த்து  வசந்தகனோடு  உச்சயினி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டான் .  விந்திய  வனத்திற்குச்   சென்று  உதயனனுடைய  அன்புமிக்க  நண்பனாகிய  “புளிந்தகன்”  என்னும்  பெயரினையுடைய  வேடர்  தலைவனைக்  கண்டான் .  அவ்வேடன்  யெளகந்த ராயணனை  விருந்தினர் முறையில்  உபசரித்தான் .  யெளகந்தராயணன்,  தான்  செய்ய  விரும்பிய  காரியங்கள்  எல்லாவற்றையும்  அவர்க்குச்  சொன்னான் .  முடிவில்  “வற்சர்  தலைவன்  மீண்டுவருங்கால்  அவனை  நீ  காத்தல்  வேண்டும்  .  பெரிய  படைவீரர்களோடு  நீ  இவ்விடத்திலேயே  விழிப்புடையவனாக  இருத்தல்  வேண்டும் . ,”  என்று  இங்ஙனம்  வேண்டினான். புளிந்தகன்  ,  “அங்ஙனமேயாக “  என்று  உடன்பட்டான் .  அதன்பின், யெளகந்தராயணன்  வசந்தகனோடு  புறப்பட்டு  உச்சயினி  நகரத்திற்கு  அணிமையில்  அடைந்தான் ,  அவ்விடத்தில்  அஞ்சத்தக்க  உருவினையுடைய  பலவகை  வேதாளங்கள்  சூழ்ந்த  சுடலையுட்  புகுந்தான் .  அங்கு  “யோகேசுவரன்”   என்னும்  பெயரினையுடைய  வேதாளம்  ஒன்று  யெளகந்தராயணனுக்கு  நன்புடையதாயிற்று .  யெளகந்தராயணன்  வேண்டு கோட்கிணங்கி   யோகேசுவரன்  “உருவமாற்று”  என்னும்  பெயரினையுடைய  விஞ்சையை  அவற்கு  உபதேசித்தது .  அவ்விஞ்சையால்  அப்பொழுதே  வேற்றுருக்கொண்ட  யெளகந்தராயணன்  ,  யாண்டு  முதிர்வும்  குறுமையும்  பிறழ்ச்சியுணர்வும்  உடையவனாயினான்.  அவ்விஞ்சையாலேயே  வசந்தகனையும்  பருத்த  வயிறும்  வேறுபட்ட  முகமும்  உடையவனாகச்  செய்தான். அவனை  வாயிலின்கண்  நிறுத்தி  யெளகந்தராயணன்  அரண்மனையினுட்  புகுந்தான் .  அந் நகரத்துள்ள  சிறுவர்  எல்லோரும்  யெளகந்தராயணனை  மருளன்  என்று  எண்ணிக்  கைகொட்டிப்  பேரொலி  செய்து  சூழ்ந்தனர் .  அதற்கு  ஒத்தவாறே  யெளகந்தராயணனும்  ஆடிப்பாடி  அச்சிறார்களுக்குக்  குதூகலத்தை  விளைவித்தான் . இதனை  வாசவதத்தை  கேட்டுத்  தோழியை  உய்த்து  யெளகந்தராயணனை  உவளகத்திற்  கொணர்வித்தாள் .  

                பித்த  வேடங்கொண்ட  யெளகந்தராயணன்  அவ்விடத்திற்  பகைவன்  வயப்பட்டிருக்கின்ற  உதயனனைக்  கண்டு  நேத்திரங்களினின்றும்  மிகவும் கண்ணீர்  ஒழுக்கினான் . உதயனன் , அவயவக்  குறிப்புக்களால்  யெளகந்தராயணனை  வேற்றுருவில்  மறைந்திருப்பவனாக   அறிந்தான் . அதன்பின் , யெளகந்தராயணன்  விரைந்து  யோக  வன்மையால்  அவ்விடத்திலேயே  மறைந்திருந்தான் . உதயனற்கு  மாத்திரம்  கண்ணுக்குப்  புலனாமாறு  இருந்தான்  .  அங்குள்ள  எல்லோரும்  “இப்பித்தன்  யாண்டுச்  சென்றான் “  என்று  வியப்பெய்தினர் .  உதயனன்,  யெளகந்தராயணன்  தன்  கட்புலனுக்கு  மாத்திரம்  தெரிய  இருத்தலைக் கண்டு  ,  அவனொடு  அளவளாவிப்  பேசுதற்கு  உரிய  அவகாசம்  எய்துதற்கு  வாசவதத்தையை  நோக்கிப்  “பனுவலாட்டி (சரசுவதி) பூசைக்குறிய  பொருள்களைக்  கொணர்க”  என்று  கட்டளையிட்டான் . அவள், “அங்ஙனமே”  என்று  தோழிகளோடு  புறம்  போந்தாள் .

                    இதற்கிடையில்  யெளகந்தராயணன்  ‘விலங்குமுறித்த்சல்’   “வாசவதத்தையை வசீகரித்தல்”  இவை  முதலிய  யொக விஞ்சையின்  திறமைகளை  உதயனற்கு  உபதேசித்து  ,  வேற்றுருக்கொண்டு  வாயிலின் கண்  இருக்கின்ற  வசந்தகனையும்  தெரிவித்து  விரைவில்  வெளிச்சென்றான்.

                       பின்னர் , வாசவதத்தை  பூசைக்குரிய  உபகரணங்களை  எடுத்துக் கொண்டு  வந்தாள் .  உதயனன்  அவற்றைக்கொண்டு  சொற்கிறைவியை  அருச்சித்தற்குத்  தொடங்கினான் . அப்பூசையில் , “தக்கிணைப்  பொருள்  பெறுதற்குரிய  அந்தணன்  ஒருவன்  வாயிலின்கண்  இருக்கின்றான் . அவனை  இங்கு  அழைத்து  வருக  “என்று  கட்டளையிட்டான். வாசவதத்தை  , வேற்றுருக் கொண்டு  வாயிலின்கண்  இருக்கின்ற  வசந்தகனை  உள்ளே  புகுவித்தாள் . அவன்  தக்கினைப்  பொருளைப்  பெற்றுக்கொண்டு  பகைவன்  வயப்பட்டி ருக்கும்   அரசனைப்  பார்த்து  ,  அதனால்  உண்டாய  பெருந்துன்பத்தை  உள்ளே  அடக்குதற்கு  ஆற்றாதவனாய்  வாய்திறந்து  அழுதான் .  உதயனன் , “இவ்வசந்தகன்  ஒரு  சமயம்  துன்பமிகுதியாற்  காரியத்தை  மறந்து  உண்மையை  வெளிபடுத்துவாங்கொல்,”  என்னும்  ஐயமுடையவனாய்  ,  “ஓ அந்தண!  நோயால்  வேறுபட்ட  உடலினையுடைய  நின்னை  விரைவிலேயே  இயற்கை  நிலையுடையவனாகச்  செய்வேன்.  அழுதல்  வேண்டா .  இனி , இவ்விடத்திலேயே  என்  முன்னிலையில்  இருப்பாயாக”  என்று  இவ்வாறு  கூறினான்.  வசந்தகன்  “அங்ஙனமே”  என்று  கூறி  உடலின்  வேற்றுமையால்  பெண்பாலர்க்கு  விளையாட்டுப் பொருள் போல  இருந்து , இடைவிடாது குதூ கலமடைந்துவரும்   வாசவதத்தையின்  மனத்தை  இன்புறுத்திக் கொண்டிருந்தான் .

                       இங்ஙனம் சின்னாட்  சென்றதும்,  வாசவதத்தை  வற்சர்  தலைவன் பாற்  காதலுடையளாயினாள்  . அயக்காந்தத்தால்   ஊசி  இழுக்கப்படுதல்  போல   அவ்வுதயனது  உருவ  முதலிய  குணங்களால்   இழுக்கப்பட்ட  வாசவதத்தை  மனத்தால்  அவனையே  தனக்குக்  கைப்பிடி  நாயகனாக  வரித்தாள் .  பின்னர் , யெளகந்தராயணன்  இந்நிகழ்ச்சிகளை  யறிந்து  பிறர்  காணாதவாறு  வந்து  உதயனன்  முன்னின்று , “வேந்தர்  பெரும!  சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  நீ  தகுதியில்லாததான  பிறர்  வயப்பட்ட  இந்நிலையை  அனுபவிக்கின்றாய் .சண்டமகாசேனன்  வாசவதத்தையைக் கொடுத்து  நின்னைச்  சிறப்புச்  செய்து  சிறையினின்றும்  விடுவித்தற்கு  விரும்புகின்றான் . ஆதலின் ,  அக்காலத்தை  எதிர்பார்த்து  நீ  இங்கிருத்தல்  தக்கதன்று  . இனி , வாசவதத்தையை  வலிந்து  பற்றி  இங்கிருந்து  வெளிபடுதலே  நல்லதாகும் .  அங்ஙனம்  செய்யின்  நம்மை  வஞ்சித்தவர்க்கு  எதிர்  செய்ததாகும் .  அந்நிகழ்ச்சியில்  இச்சூழ்ச்சியானது  என்னாற்  கருதப்பட்டது .  சண்டமகாசேனன்   வாசவதத்தைக்குப்  “பத்திரவதி”  என்னும்  பெயரினையுடைய  பெண்  யானையைக்  கொடுத்திருக்கின்றான் .அது  மிகவிரைவிற்  செல்லுந்  திறமை  வாய்ந்தது  .  அதற்குரிய  யானைப்பாகன்  “ஆசடகன்”  என்னும்  பெயரினையுடையான்  ஒருவன்  உளன்.  அவனை  யான்  மிகு  பொருள்  கொடுத்து  நம்  விருப்பத்திற்கு  அநுகூலமுடையவனாகச்  செய்திருக்கின்றேன் . மேலும் , இவ்விடத்தில்  “மகாமாத்திரன்”  என்னும்  பெயரினையுடைய  குதிரைச்சாலைத் தலைவன் ஒருவன்  இருக்கின்றான் .  மிக்க  திறமை  வாய்ந்த  அவன்  களிப்பு  மயக்கத்தால்  அறிவு  கெடும்  வண்ணம்   அளவின்  மேம்பட்ட  கள்ளினை  அவற்குக்கொடுத்தல்  வேண்டும் . இங்ஙனம்  முன்னரே  செய்யத்தக்க வைகளைச்  செய்து  நள்ளிரவிற் பிறராற் பார்க்கப்படாமல்   வாசவதத்தையோடு  யானைக்கன்றின்மேல்  ஏறி , அன்புமிக்க  காவலாளர்  சூழ்வர , நகரத்தினின்றும்  வெளிச்செல்லால்  வேண்டும் . யானோ ,  முன்னர்ச்சென்று  “புளிந்தகன்” என்னும்  பெயரினையுடைய  நின்  நண்பனோடு கூடி ,  வழியிடை  நேரக்கூடிய  இடையூறுகளைப்  போக்கி  நின் வரவை  எதிர்பார்த்திருப்பேன்”  என்று  இங்ஙனம்  கூறினான் .

                 இவ்வாறு  உதயனற்குச்  செய்யத்தக்கவைகளை  உபதேசித்து  யெளகந்தராயணன்  வெளிச்சென்றான் .  உதயனன்  சிறிது  நேரம்  நினைவு  கூர்ந்து  செய்யத்  தக்கவைகளைப்பற்றி  நன்றாக  ஆராய்ந்தான். பின்னர் ,  வாசவதத்தை  அவன்  பக்கலில்  வந்தாள் . அவளோடு  நெடுநேரம்  பலகதைகளைச்  சொல்லி  அவள் மனத்தைப்  பலவாறு  சோதித்து  முடிவில்  , “நம் செயற்கு  இவள்  துணை நிற்பவள்  ஆவாள் “  என்று  துணிவுற்றான் .  அவள்பால்  நம்பிக்கை  மேற்கொண்டொழுகும்  இவ்வுதயனன்  அவட்குத்  தான்  செய்யவிரும்பிய  காரியங்களைப்  பற்றிக் கூறினான்.அவள்,  மகிழ்ச்சியோடு    உதயனனைப்  பின்றொடர  உடன்பட்டாள் . பின்னர் , “ஆசாடகன்”  என்னும்  பெயரினையுடைய  யானைப்  பாகனை  யழைத்து  “பத்திரவதி”  என்னும்  யானையைப்  பிரயாணத்திற்குச்  சித்தம்  செய்து  இவ்விடத்திலேயே  நிறுத்தி வைத்துப்  பிரயாண காலத்தை  எதிர்  பார்த்திருத் தல்  வேண்டும் “  என்று  இவ்வாறு  கட்டளை  யிட்டாள் .  அதன்பிறகு , உதயனனது  விருப்பத்திற்  கிணங்கிக்  கடவுட்  பூசையைக்  காரணமாகச்  செய்து  குதிரைச்சாலைத்  தலைவனாகிய  மகாமாத்திரனுக்கும்   மற்றை  யானைப்பாகர்களுக்கும்  அளவிகந்த  கள்ளைக்  கொடுப்பித்தாள் . அதனாற்  களித்து  மயங்கிய  எல்லோரும்  அறிவிழந்தவராயினர்  .

                  பின்னர் , நள்ளிரவில்  உதயனன் ‘இன்னிசை’  என்னும்  யாழை  எடுத்துக்கொண்டு  யெளகந்தராயணன்  உபதேசித்த  யோக  வன்மையால்  விலங்கை  முறித்து  ,  அன்புமிக்க  காவலாளர்கள்  தன்னைச்  சூழ்ந்துவர ,  வசந்தகனோடு  “பத்திரவதி”  என்னும்  யானையில்  இவர்ந்தான் . வாசவதத்தையும்  மறைவான  நிகழ்ச்சிகளையும்  உள்ளே  அடக்கி  வைத்திருக்கும்   ‘காஞ்சனமாலை’  என்னும்  பெயரினையுடைய  தோழியோடு  அவ் யானையிலேயே  ஏறினாள் . அந்நால்வர்க்கும்  முன்னர்  ஐந்தாவனாக  யானைப்பாகனும்  அதன்கண்   ஏறினான் . இவ்வாறு  ஐவர்களையும்  ஏற்றிக்கொண்டு  ‘பத்திராவதி’  என்னும்  யானை  மிக்க  வேகத்தோடு  புறப்பட்டது. .

               அதன்பின்,  வீரபாகு  , தாளபடன்  என்னும்  இரண்டு  வாயில் காவலர்கள்  வழியிற்றடுத்தனர்  .  உதயனன்  அவ்விருவரையும்   வாட்படையால்  வீழ்த்தி  மிக்க  வேகத்தோடு  நகரத்தினின்றும்  வெளிப்பட்டான் . உதயனன்  நெடுந்தூரம்  கடந்ததும் , காவலாளர்  பெருங்கிளர்ச்சி  செய்தனர் . அரசனிடத்தும்  அறிவித்தனர்  .  வேந்தன் , வாசவதத்தையைக்  கைப்பற்றி  ஓடுகின்ற  உதயனனைப்  பிடிக்குமாறு  ‘பாலகன்’  என்னும்   பெயரினையுடைய  தன்   புதல்வற்குக்  கட்டளையிட்டான். அவன்  பத்திரவதியின்பால்  அன்புமிக்க  ‘நடைமலை’  என்னும்  களிற்றரசியின்மேல்  இவர்ந்து  பின்றொடர்ந்து  ஒடினான் .  உதயனன்  பின்புறத்தே  தொடர்ந்து  வருகின்ற  பாலகன்பால்  அம்பு மாரிகளை  இறைந்தான் .  ‘நடைமலை’  என்னும்  யானை  அப்பத்திரவதியைக்  கண்டு  அவாவோடு  வேகந்  தணிந்து  மெல்ல  மெல்ல  அதனைத்  தொடர்ந்து  சென்றது .

                   இதற்கிடையில்  ‘கோபாலன்’  என்னும்  பெயரினையுடைய  சண்டமகாசேனனுடைய  இரண்டாம்  புதல்வன்  தந்தையின்  கருத்திற்  கிணங்கிப்  பின்புறத்தே  விரைந்து போந்து  பாலகனைப்  போரினின்றும்  திருப்பினான் .  பாலகன்  திரும்பியதும்  வற்சர்  தலைவன்  அச்சமின்றிச்  சென்றான் . பின்னர்,  விந்திய  வனத்தின்  நடுவண்  அடைந்தான் ..இரவு  விடிந்தது .  அப்பொழுது  நெடுந்தூரம்  வழிநடத்தலால்  நீர்  வேட்கை  மிக்க  பத்திரவதி  ஆங்குள்ள  தடாகத்தில்  நீர்  உண்டது . அக்குடிநீரின்  குற்றத்தால்  அப்பொழுதே  அவ்யானை  மரணம்  எய்திற்று.  உதயனன்  வாசவதத்தையோடு  மிகவும்  துன்புற்று  , எதிர்பாராமல்  உண்டாகிய  ஆகாயச்  சொல்லாகிய  “அரச!  யான்  ‘மாயாவதி’ என்னும்  பெயரினையுடைய  வித்தியாரப் பெண்  ஆவேன் . இதுகாறும்  சாபமாகிய  குற்றத்தாற்  பெண்யானை  ஆயினேன். நினக்கு  இவ்வுதவியைச்  செய்து  அச்சானைபதினின்றும்  விடுதி பெற்றேன் .இதற்குப் பின்னரும்  நினக்குப்  பிறக்கும்  புதல்வனுக்கும்  உதவி  செவேன் “ என்னும்  இதனைக்  கேட்டான் .

                      பின்னர் , வற்சராசன்  விந்தியமலையின்  சாரலில்  இருக்கின்ற  புளிந்தகனுக்குத்  தன்  வரவைத்  தெரிவித்தற் பொருட்டு  வசந்தகனை  ஏவினான் .  பின்னர்  அவ்விடத்திலேயே  வாசவதத்தையோடு  கால்களால்  நடந்து செல்கின்றைவனைக்  காட்டிற்  றிரியும்  நூற்றைந்து  திருடர்கள்  வளைத்தனர் . வில்லை மாத்திரம்  துணையாகவுடைய  உதயனன் வாசவதத்தையின்  கண்  முன்னரே  அவர்கள்  எல்லோரையுங்  கொன்றான் . பின்னர் , மற்றைத்திருடர்கள்  ஒருங்குகூடி  அவனை  எதிர்த்து  ஓடிவந்தனர் . இதற்கிடையிற்  புளிந்தகன்  , வசந்தகன்  வழி  காட்ட   யெளகந்தராயண னோடு  அவ்விடத்தை  அடைந்தான் . அவன்  அக்கள்வர்களைத்  தடுத்து  வற்சர்தலைவனை  வணங்கி  வாசவதத்தையோடு  தன்  இருப்பிடத்தை  அடைவித்தான் .உதயனன்  அவ்விடத்திலேயே  அவ்விரவைக்  கழித்தான் .  பின்னர் , பிற்றைநாட்  காலையில்  யெளகந்தராயணன்  போக்கிய  ஒற்றனால்  எல்லா  நிகழ்ச்சிகளையும்  உணர்ந்த  ‘உருமண்வான்’  என்னும்  படைத்தலைவன்   படைவீரர்கள் எல்லோருஞ்  சூழ்ந்துவர  அவ்விடத்தை  எய்தினான் . உதயனன்  உச்சனியின்  நிகழ்ச்சிகளை  அறிதற்பொருட்டு  அவ் விந்தியவனத்திலேயே  சிறிது  காலந்  தங்கினான் . 

வெண்பா

சொற்றிறனார்  யெளகந்த  ராயணன்செய்  சூழ்ச்சியினாற்

றுற்று  மிருளிற்  றுணைப்பிடிக்கண்  —  அற்புமிகு

தேவி  யுடனிவர்ந்து  சென்றான்  சிறையொரீஇ

யாவியினு  மானமுயர்  வால் .

ஆறாம்  வகுப்பு

(வாசவதத்தை  திருமணம்)

                  இதனிடையில்  உச்சயினியின்  நிகழ்ச்சிகளை  யறிதற்  பொருட்டு யெளகந்தராயணன்  போக்கிய  வணிகன்  ஒருவன்  உச்சயினி   நகரத்தையடைந்து  எல்லாநிகழ்ச்சிகளையுமுணர்ந்து  திரும்பிவந்து  உதயனனை  நோக்கி  “வேந்தர்  பெரும! சண்டமகாசேனன்  நின்பால்  மிகவும்  அன்புடையவனாக  இருக்கின்றான் . நின்னைக் குறித்து  ஒரு  தூதனை  விடுத்தான்.  அத்தூதன்  தூதுமொழியை  மேற்கொண்டு  என்னோடு  புறப்பட்டான் .யானோ  செய்திகளைத்  தெரிவித்தற்பொருட்டு  விரைந்து வந்தேன் “ என்று  இவ்வாறு  சொல்லினான் . இதனைக் கேட்டு  வற்சர் தலைவன்  ஆனந்த  பரிதனாய்  வாசவதத்தைக்கு  உணர்த்தினான் .  அவள்  பேருவுகைக்கடலுண்  மூழ்கினவளாய் மணத்  திருநாள்  எப்பொழுது  நேரும்  என்று  மனத்தாற்  சிந்தித்துக்கொண்டிருந்தாள் பின்னர்ச்  சண்டமகாசேனனு டைய  தூதன்  வந்து  உதயனனை  வணங்கி  , “பெரும! அரசர்  பெருமானாகிய  சண்டமகாசேனன்  நட்போடு  என்  முகமாகத்  தெரிவிக்கின்றான் .அஃதாவது  ‘முன்னரே  வாசவதத்தைக்கு  நீயே  ஒத்த  மணவாளன்  என்று  எனக்கு  விருப்பம்  இருந்தது .  அவளை  நீ  பெற்றுக்கொள்ளுதற்கே  என்னால்  இச்சூழ்ச்சி  மேற்கொள்ளப்பட்டது . ஆதலின் , என் விருப்பமே  நின்னால்  நிறைவேற்றப்பெற்றது .  என் புதல்வன்  கோபாலகன்  விரைவிலேயே  அவ்விடத்தில்  வந்து  நுங்கள்  இருவீர்க்கும்  விதிப்படி  மணவினையை  நிறைவேற்றுவான் ‘  என்பதாம் “  என்றிவ்வாறு   தெரிவித்தான் .  உதயனன்பால்  தெரிவித்துவிட்டு  அத்தூதன்  வாசவதத்தைக்கும்  தந்தையின்  தூதுமொழியை  அறிய  செய்தான் .  

                 பின்னர் ,  வற்சர்  தலவன்   வாசவதத்தையோடு  கெளசாம்பி நகரத்தைக்  குறித்துப்  புறப்பட்டான் .அத்தூதனையும்  புளிந்தகனையும்  நோக்கி  “ நீவிர்  இருவீரும்  இவ்விடத்திலேயே  இருந்து  கோபாலகனுடைய வரவை   எதிர்பார்த்தல்  வேண்டும் .  அவனை  யழைத்துக்கொண்டு  கெளசாம்பி  நகரத்தை  அடைவீர்களாக . என்று  இவ்வாறு  கட்டளையிட்டான் .  கடல்  அலைகளை  ஒப்ப  யான்முன்  யான்முன்  என்று  புறப்பட்ட  அளவிறந்த  படைவீரர்கள்  சூழ்வர  உதயனன்  இரண்டு  மூன்று  நாள்வரை  வழி  கடந்து  காலப்  பொழுதிற்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்தான் .  அப்பொழுது  நகரத்து  மக்களனைவரும்  மிக்க  குதூகலமுடையவராய்  நகரத்தைத்  தோரண  முதலியவைகளால்  அலங்கரித்து  உதயனனது  வரவைப் பற்றி மகிழ்ச்சி  கூர்ந்தார்கள் . யாவரானும்  புகழ்ந்து  பாராட்டப்பெற்ற  கட்டழகு  வாய்ந்த  வாசவதத்தையைக்  காணும்  அவாவினராய்  அந்நகரத்து  மகளிர்  அனைவரும்  வீட்டின்  மேற்றளத்தில்  ஏறிச்  சாளரங்களில்  வரசையாக  நின்றனர் .  அந்நகரத்தவரனைவராலும்  சிறப்போடு  நல்வரவேற்கப்பட்ட  வற்சர்தலைவன்  வாசவதத்தையொடு  தன்  அரண்மனையுட்  புகுந்தான் .

             பின்னர்ச்  சிலநாட்  சென்றதும்  வாசவதத்தையின்  உடன்பிறந்தானாகிய  கோபாலகன்  தந்தையின்  கட்டளைப்படி  விந்திய  வனத்தை  யடைந்து  தூதனையும்  புளிந்தகனையும்  உடன்  அழைத்துக் கொண்டு  கெளசாம்பி  நகரத்தை  அடைந்தான் . பின்னர் , நன்மை  மிக்க  முகூர்த்தத்தில்  வாசவதத்தைக்குப்  பாணிக்கிரகண  விழாவை  நிறைவேற்றி னான் .  அவ்வமயத்தில்  அளவிறந்த  அரதனங்களையும்  உதயனற்கு  ஈந்தான். மற்றை  வேந்தர்களும்  பல வகைக்  கையுறைகளைக்  கொணர்ந்தனர் .  இவ்வாறு  எல்லா  நண்பர்களாலும்  , சுற்றத்தாராலும்  அன்போடு  சேர்ப்பிக்கப் பட்ட   பொருள்களால்  அவ்வுதயனனுடைய  பொருளுறை  இல்லங்கள்  நிறைந்தவாயின. அதனால் . அவன்  குபேரனை  ஒத்தான் .

                பின்னர் , விதிப்படி  மணவினை  நிறைவேறியதும்  உதயனன்  கோபாலகனையும்  புளிந்தகனையும்  தானே  நன்கு  உபசரித்தான் . அங்கு  வந்த மற்றை  வேந்தர்களனைவரையும்  உபசரித்தற்கு  யெளகந்தராயணனை  யும்  ,  உருமண்வானையும்  நியமனஞ்  செய்தான் . அவ்விருவரும்  எல்லா  மன்னர்களையும்  “ஒவ்வொருவரும்  தாம்  தாமே  மற்றையோரினுஞ் சிறந்த  அன்பினாற்  பெருமைப்  படுத்தப்பட்டடேம் “  என்று  எண்ணுமாறு  பெருமைப்படுத்தினர் .

                  பின்னர் , உதயனன் யெளகந்தராயணனையும்  உருமண்வானை யும்   வசந்தகனையும்  ஆடை  அணி  முதலியவைகளாற்  பலவாறு  பெருமைப் படுத்தினான் . வாசவதத்தை  தனக்கு  ஒத்த  காதலனை  அடைந்து  அவனோடு  உம்பருலகத்தினும்  பெறுதற்கரிய  போகங்களை  நுகர்ந்து  இன்புற்றிருந்தாள்.

வெண்பா

ஐம்பொறிக்கு  மின்ப   மளிக்கு  மமுதமென

நம்பு  மடவரலை  நன்றுமணந் – திம்பரிடைக்

கற்பு  முறையிற்   கலந்தின்ப  மெய்தினான்

பொற்பு  மதனிரதி  போல் .

ஏழாம்   வகுப்பு

(மந்திராலோசனை)

            இங்ஙனம்  உதயனன் வாசவதத்தையை  மணந்து  அவளோடு  இன்புற்று  யெளகந்தராயணன்  என்னும்  அமைச்சன்பாலும்  , உருமண்வான்  என்னும்  படைத்தலைவன்  பாலும்  , அரசியற்  சுமையை  வைத்துவிட்டுக்  கவலையற்றுப்  பல நாட்களைக்  கழித்தான் .

            பின்னர்,  ஓர் அமயம்  யெளகந்தராயணன், உருமண்வானை  அழைத்து  மறைவிடத்திருத்தி  “இவ்வுதயனன்  பாண்டவ குலத்திற்   பிறந்தவன் . இவர்க்குக்   குலமுறைப்படி  அத்தினாபுரம்  தலைநகராகும் .  அவ்வெல்லாம்  இப்பொழுது  முயற்சி யற்றிருக்கும்  இவனால்  விடப்பட்டன .இப்பொழுது  இவன்  இந்நிலத்தின்  ஒரு  கோடியில்  அரசனாக  இருக்கின்றான் .இடைவிடாது  இவன், மகளிர்   இன்பத்திலும்  வேட்டையாடுவதிலும்  அவாவுடையவனாய்க்  கவலையற்றிருக்கின்றான் .  அரசியல்  சுமை  எல்லாவற்றையும்  நம்  தலைக்கண்  ஏற்றினான் . ஆதலின், இவன்  இந்நிலவுலகம்  எல்லாவற்றிற்கும்   சக்கரவர்த்தியாகும்  வண்ணம்  நாம்  முயல  வேண்டும் .இங்ஙனம் செய்வோமாயின்  அரசன்பால்   நமக்குள்ள  அன்பை  வெளிப்படுத்தியதாகும். இவ்விடத்தில்  மகததேயத்  தரசன் பகைவனாக  இருக்கின்றான்  அவற்குப்  பதுமாவதி  என்னும்  பெயரினையுடைய  பெண்மணி  ஒருத்தியுள்ளாள் . அவள் நம்  உதயனர்க்கு  மனைவியாவாளாயின்  மகத தேயத்தரசனும்  நாம்  செய்ய  விரும்பிய  காரியத்திற்குத்  துணைநிற்பான் . அப்பதுமாவதியை  முன்னர்  வற்சநாயகனுக்காக  யான்  தூதன்முகமாகக்  கேட்டதுமுண்டு .  அதற்கு  மகத  தேயத்தரசன்  “வற்சராசனுக்கு  வாசவதத்தையின்பாற்  பெரிதும்  அன்புண்டு  என்பது  யாவரும்  உணர்ந்ததே .ஆதலின்  உயிரினுஞ்  சிறந்த  அன்பு மிக்க  பதுமாவதியை  அவ்வுதயனற்குக்  கொடேன் “  என்று  இவ்வாறு  தூதன்முகமாக  மறுமொழி  விடுத்தான் . “வற்சராசனும்  வாசவதத்தை  இருக்குங்கால்  வேறொருத்தியை  மணஞ்செய்துகொள்ளான் .  ஆதலின்  இச்செயலில்  நமது  அறிவின்  மாட்சியைக்  காட்டல்  வேண்டும்.  வாசவதத்தையைப்  பிறர்  அறியாவாறு  ஓரிடத்தில்  மறைத்து  வைத்து  அவள்  உறையுளைத்  தீக்கிரையாக்குதல்  வேண்டும்  .அதன்பின்  ‘வாசவதத்தை எரிந்து  நீறாயினாள்’  என்று  உலகவதந்தியைச்  செய்தல் வேண்டும் .  இங்ஙனஞ்  செய்வோமாயின்  மகததேயத்தரசன்  பதுமாவதியை  வற்சராசற்குக்  கொடுத்துவிடுவான்.  வற்சராசனும்  மனம்புரிந்து கொள்ளுவான்.  அதன்பின்  மகததேயத்தரசன்பாற்  றுணைநிற்பாராகிய  ஏனைய  அரசர்கள் எலோரும்  இவன்வயப்படுவார்கள் .  அதனால் இவன்  நிலவுலகம்  எல்லாவற்றிற்கும்  சக்கரவர்த்தியாவான் . என்று  இவ்வாறு  சூழ்ந்தான் .

                 அதனைக் கேட்டு  உருமண்வான் “இச் சூழ்ச்சி  ஒருவாறு  கேடுவிளைக்கவுங்  கூடுமென்று  அஞ்சுகின்றேன் .  காரியம்  நிறைவேறாவிடின்   அரசற்குக்  கோபம்  விளையும்  .  சனங்களும்  நம்மைப்  பரிகசிப்பார்கள்  . வாசவதத்தையின்  பிரிவால்  அரசற்கு  ஒருவாறு  அமங்கலம்  உண்டாகவுங்கூடும் .”  என்று  இங்ஙனம்  கூறினான் . 

                 அதனைக் கேட்ட  யெளகந்தராயனன்  பின்வருமாறு  கூறுவானாயினான் . “வேந்தர்கள் , தம்வயத்தார்  , அமைச்சர்வயத்தார்  என  இருவகைப்படுவர் .  தம்வயத்தராவோர்   தம்  அறிவினாலேயே  எல்லாச்செயல்களையும்  நிறைவேற்றுவார் . நம்மன்னனோ  அமைச்சர் வயத்தன்   ஆவான் .  இவர்குச்  செய்யத்தக்கவைகளில்  அமைச்சர்  அறிவே  புகலிடமாகும்  .  நாம்  முயன்றிலேமாயின்  இவற்கு  எல்லாம்  அவிந்துபோம்  .  இனி  நாம்  இப்பொழுது  சூழ்ச்சியினாலேயே  காரியத்தை  நிறைவேற்றல்  வேண்டும்.  இத்தகைய  செயல்களைச்  செய்யாமல்  வாளாவிருப்போமாயின்  அரசன்  நம்மை  அவமதிப்பான் .  மனத்திட்பமுடைய  வற்சராசன்  வாசவதத்தையின்  பிரிவிலும்  மனவுறுதி  மேற்கொண்டிருப்பான் .  முற்காலத்தில்  தேவர்கள்  இராமனால்  இராவணனைக்  கொல்லுதற்குச்  சீதா  பிராட்டியினிடத்தினின்றும்   அவனைப்பிரியும்படி  செய்தார்கள் . உயிரினுஞ்சிறந்த  அன்புமிக்க  சீதையை  நீங்கியும்  இராமன்  மனத்திண்மையால்  உயிர்தாங்கினான் . இன்னும்  இவ்விடயத்திற்  பழங்கதை  யொன்று  கேட்பாயாக .

                  அது, “முற்காலத்தில்  உச்சயினி  நகரத்தில்  ‘புண்ணியசேனன்’  எனப்பெயரிய  அரசன்  ஒருவன்  இருந்தான் . அவனை  ஓர் அமயம்  வலிமைமிக்க  பகைவன்  எதிர்த்தான். வலிமை  குறைந்த  புண்ணிய  சேனனைப்பார்த்து , அமைச்சர்கள்  ஒருங்குகூடி   ஆலோசித்து  அவனை  ஓரிடத்தில்  மறைத்து  வைத்து   “நம்  அரசன்  இறந்து  போயினான்”  என்று  யாவரும்  உணர  வெளிப்படுத்தினர் . வேறொரு  பிரேதத்தை  இஃது அரசன்  பிரேதம்  என்று  வெளிப்படுத்தி  அதற்கு  முறைப்படி  இறுதிக் கடங்களைச்  செய்தனர் .  பின்னர் , பகைவன்பக்கல்  எய்தி  “இவ்விராச்சியம்  அரசனில்லாததாயிற்று . நீயே  எங்களுக்கு  வேந்தன்  ஆதல்  வேண்டும், “  என்று  வேண்டினர் .அவன்  இவ்  வெல்லாம்  உண்மையென்று  நினைத்து  அரசனாதற்கு  உடன்பட்டான் .  பின்னர்ச்  சின்னாட்சென்றதும்  மறைவிற் சித்தம்  செய்து  வைத்திருந்த  படைவீரர்களால்   அப்பகைவனை  வேரோடு  களந்து   புண்ணிய  சேனனை  மீண்டும்  அவன்  இராச்சியத்தில்  நிலைநிறுத்திவைத்தனர்”  என்பதாம் .   

                  ஆதலின் , “அரசநீதியாற்  சூழ்ச்சிபுரிதல் இயற்கையே  , இவ்விடயத்தில்  ஐயுறல்  வேண்டா . தெய்வம்  நமக்குத்  துணைநிற்கும்”  என்று  இவ்வாறு  கூறினான் .

                     அதனை கேட்டு  உருமண்வான்  “இது  துணிவாயின்  வாசவதத்தையின்  உடன்  பிறந்தானாகிய  கோபாலகனை  ஈண்டழைத்து அவனோடு  சூழ்ந்து  இச்செயலில்  இறங்கல்  வேண்டும்”   என்று  கூறினான்.  யெளகந்தராயணன்  “அங்ஙனமே “ என்று  உடன்பட்டுக்  கோபாலகன்பால்  தூதனை  விடுத்தான் . தூதன்  விரைந்து  உச்சயினி நகரத்தை அடைந்து  கோபாலகனை  வணங்கி  “ஐய, அமைச்சர்  தலைவனாகிய  யெளகந்த ராயணன்   நின்னைச்  சிறிதும்  தாழ்த்தலின்றிக்  காண்டற்கு  விரும்புகின்றான்.  என்று  தெரிவித்தான் . அக்கோபாலகன்   அப்பொழுதே  புறப்பட்டுக் கெளசாம்பி நகரத்தையடைந்தான். யெளகந்தராயணன்  அவனை  மறைவிடத்தில்  அழைத்துத்  தான்  செய்யவிரும்பிய  காரியங்க்கள்  எல்லாவற்றையும்  உண்மையாக  அவற்கு  கூறினான் .  கோபாலகன் , முதலில்  வாசவதத்தைக்குத்  துன்பம்  தருவதாயினும்  அரசற்கு  நலத்தை  வளர்விப்பதால்  அச்சசொல்லை  ஏற்றுக் கொண்டான் .

                       பின்னர்  யெளகந்தராயணன் ,  “மகாதேயத்தின்  அணிமையில்   இலாவாணகம்   என்னும்  பெயரினையுடைய  இடம்  ஒன்று  இருக்கின்றது . அது வேட்டையாடுதற்கு  இன்பம்  விளைக்கும்  இடமாகும் .  ஆதலின் , வாசவதத்தையையும்  வற்சரசனையும்  அழைத்துக்கொண்டு  அவ்விடத்திற்கு  நாம்  செல்லல்  வேண்டும் .  எப்பொழுது  வேட்டையாடல்  குறித்து  உதயனன்  வெளிச்செல்வானோ  அப்பொழுது அரண்மனையில் தீ  வைப்போம் . வாசவ  தத்தையை  மகததேயத்தரசனது  கன்னியா  மாடத்தில்  இருக்கின்ற  பதுமாவதியின்  பக்கல்  உபாயத்தாற்  சேர்ப்பிப்போம்.  பிரிவுக்  காலத்திலேயும்  வாசவதத்தையின்  கற்பு நிலைக்குப்  பதுமாவதியே  சான்றா வாள் . இங்ஙனஞ்  செய்யின்  நாம்  செய்யவிரும்பிய  காரியம்  சிரமமின்றி  நிறைவேறிவிடும்,”  என்று  இங்ஙனம்  கூறினான் .

                          இங்ஙனம்  சூழ்ந்து , யெளகந்தராயணன் , உருமண்வான் , கோபாலகன் , என்னும்  இம்மூவரும்  , பிற்றைநாட்காலையிற்   காலைக்கடன் களை   முடித்துவிட்டு  அரசன்பக்கல்  எய்தினர் .  அரசன்  தகுதிக்குத்  தக்கவாறு  சிறப்பித்து  ஈந்த  இருக்கைகளில்  இருந்தனர் . பின்னர்  உருமண்வான்  ,  அரசனை நோக்கி  “வேந்தர்  பெரும!  இலாவாணகம்  என்னும்  இன்ப  நிலம்  ஒன்று  இருக்கின்றது .  அதனைச்  சூழ்ந்து  வேட்டையாடுதற் குரிய   நிலங்கள்  பலவுள்ளன . பக்கத்துள்ள  மகததேயத் தரசன்  எப்பொழுதும்  அவ்விடத்தை  உலைவு  செய்கின்றான் .  அதனைக்  காத்தற்கு   அவ்விடம்  அடைதல்  இவ்வமயம்  தக்கதாகும், “  என்று  இவ்வாறு  தெரிவித்தான் .  வேட்டையாடுதலில்  விருப்பம்  மிக்க  உதயணன்  அச்சொற்களை  ஏற்றான் . புறப்படல்  துணிந்ததும்   கணிதம்  வல்லோர்  பிரயாணத்திற்குரிய  நன்னாழிகையைக்  கண்டு கூறினர் .

                             அப்பொழுது  எதிர்பாராது  நாரதர்  ஆகாயத்தில்  நின்றும்  இறங்கி  வெளிப்பட்டார் . வற்சராசன்  அவரைக்கண்டு  விரைந்தெழுந்து அருக்கியம்,  பாத்தியம்  முதலியவைகளால்  உபசரித்தான் .  பின்னர்  அவரை  இருக்கையில்  வீற்றிருக்கச்செய்து வணக்கத்தோடு  கைகூப்பி  நின்றான் . நாரதர் பாரிசாதமலர்களானாகிய மாலையொன்றை அரசற்குக் கொடுத்தார்  பின்னர், வணங்கி  நிற்கின்ற  வாசவதத்தையை  நோக்கி  , “நங்காய்! , பகவானாகிய  காமவேளின்  கூறாக அவதாரஞ்செய்யும்  வித்தியாதரர்களின்  தலைவனை மகனாக  விரைந்து  பெறுவாய் “ என்னும்  வாழ்த்துரையால்  அருள்  செய்தார் .  பின்னர் அமைச்சர்களின்  முன்னிலையில்  உதயனனை  நோக்கி  “வேந்தே! தருமபுத்திரன்  முதைலிய  சகோதரர்  ஐவரும்  எனக்கு  நண்பர்களாக  இருந்தனர் . நீயும்  அவர்கள்  வழித்தோன்றினவன் .  அவ்வன்பால்  நினக்குச்  சிறிது உபதேசிக்க  யான்  இங்கு  வந்தேன் .  நீ  என்  சொல்வழி  நிற்றல்  போல்  அமைச்சர்  சொல்வழியும்  நிற்றல்  வேண்டும் . அவர்கள்  யாது  யாது  கூறுவார்களோ  அதனை  அவ்வண்ணமே  மேற்கொள்ளல்  வேண்டும்  .  அதனால்  நீ  மிக்க  நலத்தினை  அடைவாய் . சிறிது  நாட்களில்  நினக்குச் சிறிது  துன்பம்  நேரும்  . அதுவும்  இன்பவளர்ச்சியாகவே  முடியும் .  இதன்கண்  நீ  துன்புறல்  வேண்டா . என்று  இங்ஙனங் கூறினார் .  இவ்வாறு  சொல்லி  நாரதர் அவ்விடத்திலேயே  மறைந்துவிட்டார் . யெளகந்தராயணன்  முதலியோர்  நாரதமுனிவர்  சொற்களைக்  கேட்டுத்  தாங்கள்  செய்ய  விரும்பிய  காரியத்தில்  தெய்வமும்  துணைநிற்கின்றது  என்னும்  மகிழ்ச்சியால்  இருமடங்கு  உற்சாகம்  எய்தினர்.

வெண்பா

மன்ன  னரசின்  வளம்பெருக்கும்  வல்லமைச்சர்

இன்னன்  முதற்  கணிசைவித்த  — பின்னரே

மன்னிறைவ  நாக்கி  மகிழ  மதித்தனராற்

றுன்னு  மதிவலியாற்  சூழ்ந்து .

எட்டாம்  வகுப்பு

(பதுமாவதி  பரிணயம்)

        பின்னர்  அமைச்சர்களோடு   ஆலோசித்தபடி  வற்சராசன்  வாசவதத்தை யோடு  படைவீரர்கள்  சூழப்புறப்பட்டு  ‘ இலாவாணகம் ‘  என்ப்பெயரிய  சிற்றூரையடைந்தான். அவ்விடத்தில்  நாடோறும்  பக்கத்துள்ள  வனங்களிற்  சுற்றித்திரிந்து   வேட்டையாடலான்  மனம்  இன்புற்றுச்  சிலநாட்களைக்  கழித்தான் . ஓரமயம்  உதயனன்  வனத்திற்  சென்றிருக்குங்கால் , யெளகந்தராயணன், உருமண்வான் , வசந்தகன்  இம்மூவரும்  கோபாலகனை  முன்னிட்டுத்  தனித்திருக்கும்  வாசவதத்தையின்பாற்  சென்றனர் . பின்னர் , தாம்  செய்யவிரும்பிய  எல்லாக்காரியங்களையும்  கூறினார்கள்  . முன்னரே  கோபாலகன்பால்  எல்லா  நிகழ்ச்சிகளையுந்  தெரிந்த  கற்பரசியாகிய   வாசவதத்தை, தனக்குத்  துன்பந்தருவதாயினும்  தலைவற்கு  நலம்விளக்கும்  என்பது பற்றி  அவர்கள்  செய்யவிரும்பிய  காரியத்தை  ஏற்றுக்கொண்டாள் .

              பின்னர் , யெளகந்தராயணன் ‘உருவமாற்று’  என்னும்  விஞ்சையால்  வாசவதத்தையை  அந்தணர்  குலத்துப்  பெண்ணாகவும் , வசந்தகனை  ஒற்றைக்கண்  மாணவனாகவுஞ்  செய்தான் . யெளகந்தராயணன்  தானும்  யாண்டு முதிர்ந்த  அந்தணவடிவமுடையனாயினான் .  பின்னர்  யெளகந்தரா யணன்  அந்தனர்  குலத்துப்  பெண்வேடந்தாங்கிய  வாசவதத்தையையும்  ஒரு கண்  கெட்ட  மாணவகவேடந்தாங்கிய  வசந்தகனையும்  அழைத்துக் கொண்டு   மகததேயத்  தரசனது  தலைநகரை  யடைந்தான் .  வாசவதத்தை  தலைவனையே  நெஞ்சத்தால்  நினைந்து  யெளகந்தராயணனைப்  பின்றொ டர்ந்து  சென்றாள் .  

                 அவ்வமயத்தில்  உருமண்வான் , அந்தப்புரத்தில்  தீப்பெய்து  “அந்தோ! அந்தோ! தேவி  வாசவதத்தை  நெருப்புச்  சுடரால்  வெந்துபோயினாள் “  என்று  பேரொலி  செய்தான் . பின்னர் , பரிசனங்களினது  அழுகையொலி  மிகவும்  உண்டாயிற்று .  மெல்ல  மெல்ல  நெருப்புத்தணிந்தது .  அழுகையொலி  ஒவ்வொரு  கணமும்  பெருகிற்று .  வாசவதத்தையோடும்  வசந்தகனோடும்  புறப்பட்ட  யெளகந்தராயணன்  மலர்கள்  நிறந்த  உத்தியானவனத்தில்  தோழிகளோடு  விளையாடல்  செய்து கொண்டிருக்கும்  பதுமாவதியை  அடைந்தான் .  பதுமாவதிக்கு  அந்தணர்  குலத்துப்  பெண்ணுருவந்தாங்கிய  வாசவதத்தையின்பால், கண்ட  அளவினானே  பெரிதும்  நட்புண்டாயிற்று.

                       பின்னர் , பதுமாவதி  வயோதிகப்  பிராமண  உருவத்தையுடைய யெளகந்தராயணனை  நோக்கி  “பகவானே ! இப்பெண் யார் ? எதன்பொருட்டு  இங்கு  எய்தினை?’  என்று  வினவினாள் .  அவன்  “நங்காய் ! ஆவந்திகை யென்னும்  பெயரினையுடைய  இவள்  என்  புதல்வியாவாள் . இவள்  கணவன், இவளை விட்டு வேற்று  நாடடைந்தான் .  ஆதலின்  இவளை  நின்பக்கல்  இருத்தி  இவள்  கணவனைத்  தேடிக்கொணர்தற்கு விரும்புகின்றேன் . இச்சிறுவன்  இவள்  உடன்பிறந்தான் ஆவான் .  இவனையும்  இவண்மாட்டே  விடுகின்றேன் . அதனால் இவள்  தனித்திருக்கும்  துன்பத்தை  யடையாள் . “ என்று  மறுமொழி  கூறினான் . பதுமாவதி  “அங்ஙனமேயாக” என்று  உடன்பட்டாள் .

                          யெளகந்தராயணன், வாசவதத்தையையும்  வசந்தகனையும்  அவ்விடத்திலேயே  விட்டுப்  பதுமாவதியின்பால்  விடை பெற்று  அப்பொழுதே  புறப்பட்டுத்  தனது முன்  உருவத்தை  யடைந்து இலாவாணகத்தை  எய்தினான்.  இதனிடையில்  உதயனன்  வேட்டை  நிமித்தம்  நெடுந்தூரம்  காடுகளில்  அலைந்து  திரிந்து  மாலைப்பொழுதில்  இலாவாணகத்தை யடைந்தான் . அங்கு  உவளகம்  நீறாக்கப்பட்டிருத்தலைக்   கண்டும்  வாசவதத் தையையும்  நெருப்பினால்  வெந்து  போயினாள்  என்பதைக் கேட்டும்  மயக்கமுற்று  நிலத்தில்  வீழ்ந்தான் .பின்னர் ,பரிசனங்கள்  செய்த உபசாரங்களாற்  சிறிது பொழுதில்  தெளிவெய்தி  வாசவதத்தையை  நினைவு கூர்ந்து  துன்பமிகுதியாற்  பலவாறு  புலம்பினான் .

                   பின்னர்  மனத்தின்கண்  பின்வருமாறு  சிந்திப்பானாயினான்  “முன்னரே  அசரீரிச்சொல்   ‘வாசவதத்தை   வித்தியாதாச் சக்கரவர்த்தியாகும்  புதல்வனைப்  பெறுவாள்’   என்று  கேட்கப்பட்டது .  தெய்வ  முனிவராகிய  நாரதராலும்  அங்ஙனமே  கூறப்பட்டது . அது  பொய்மையாகாது . மேலும்  சில  நாள்  என்னாற்றுன்பம்  அனுபவிக்கப்படும்  என்றும்  நாரதராற்   கூறப்பட்டது. வாசவதத்தையின்  உடன்பிறந்தானாகிய   கோபாலகனுஞ்  சிறிது  துன்பமு டையவனாகக்  காணப்படுகின்றான் . யெளகந்தராயணன்  முதலிய  அமைச்சர்களுடைய  முகங்களும்  மலர்ச்சியுடையவைகளாகவே  காணப்படு கின்றன . ஆதலின், எனக்குப்  பெரிய  நலத்தை  யுண்டாக்குவதற்கு  விரும்பி அமைச்சர்கள்  செய்த  சூழ்வினைச்செயலே  இதுவாகும்  என்று  எண்ணுகின்றேன் .  ஆதலின், தேவி  வாசவதத்தை  யாண்டாயினும்  உயிருடை யவளாக  இருக்கின்றாள் என்றே  ஊகிக்கின்றேன் .  இதனால்  ஒரு சமயம்  எனக்கு  வாசவதத்தையோடு  சேர்தல்  நேரும்”  என்று  இவ்வாறு  சிந்தித்து  வற்சராசன்  சிறிது  தேறுதல்  அடைந்தான் .

                       பின்னர் மகத  தேயத்தரசன் , இலாவாணக நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும்  ஒற்றன்  மூலமாக  அறிந்தான் .  பதுமாவதியை  ஏற்றுக்கொள்ளச்  செய்தற்கு  இதுவே  தக்க  சமயம்  என்று  துணிந்து  தன் கருத்தைக்  கூறித்  தூதன்  ஒருவனை  உதயனற்கு  விடுத்தான். உதயனன் , யெளகந்தராயணனது  உடன்பாட்டின்  வண்ணம் , பதுமாவதியை  மணஞ்  செய்து கொள்ளுதற்கு  அங்கீகரித்தான் . அப்பொழுது  பதுமாவதியின்  மணத்தை  நிறைவேற்றுதற்கே  வாசவதத்தை  அமைச்சர்களால்  மறைத்து வைக்கப்பட்டிருப்பாள் என்று  உதயனனது  மனத்தில்  உறுதியான  நம்பிக்கை  உண்டாயிற்று .

                        பின்னர் , யெளகந்தராயணன்  விவாகத்திற்குரிய  இலக்கினத்தை  நிச்சயித்து  மகத  தேயத்தரசற்கு   “உதயனன்  பதுமாவதியை  மணந்துகோடற்கு  உடன்படுகின்றான் ; இதற்கு  ஏழாவது  நாள்  விவாகத்தை  நிறைவேற்றுதற்கு  நின்  தலைநகரை யடைவான் “  என்று  இவ்வாறு  மறு  மொழி  விடுத்தான் .  அதனைக் கேட்டு  மகத தேயத்தரசன்  மிக்க  மகிழ்ச்சி  யுடையனாயினான் .  பின்னர்த்  தன்  புதல்வியின்மாட்டுள்ள  அன்பிற்கும்  தன்  செல்வத்திற்கும்  ஒத்தவாறு  விவாகச்  சிறப்பிற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்வித்தான் .  பதுமாவதி , தான்  அடைதற்கு  விரும்பிய  கணவனைப்  பெறுதலான்  மிகவும்  மகிழ்வெய்தினாள் . அப்பொழுது வாசவதத்தை  பதுமாவதியின்  மண   நிகழ்ச்சியைக் கேட்டுத்  துன்பத்தால் வேறுபட்ட  முகம்  உடையளாயினாள் . உடனிருக்கின்ற  வசந்தகன் “அன்னாய்  இம் மகத நாட்டரசனை  வயப்படுத்தற்கு  அமைச்சர்கள்  செய்த  சூழ்ச்சியிதுவாகும் . வேறுபாடு  கருதற்க”  என்று  மறைவிடத்திருந்து  தேற்றினான் . பின்னர்  விவாக  முகூர்த்தம்  அடுத்திருக்குங்கால்  வாசவதத்தை  வற்சராசன்பாற்   கற்ற விஞ்சையால்  வாடுதலில்லாத  மாலையையும்  விசித்திரமான திலகத்தையும்  செய்து பதுமாவதிக்குக்  கொடுத்தாள் . பதுமாவதி  அவற்றை  அணிந்து  தாயின்  பக்கல்  எய்தினாள் .தாய்  விசித்திரமான  மாலையையும்  திலகத்தையையும்  பார்த்து மிக்க  வியப்புடையவளாய் , “யாரால்  இவை  செய்யப்பட்டன” வென்று  பதுமாவதியை  வினவினாள் .  அவள் “அன்னாய்! ஆவந்திகை  என்னும்  பெயரினையுடைய  அந்தணர்  குலத்துப்  பெண்மகள் என்பக்கல்  இருக்கின்றாள் . அவள்  இவற்றைச்  செய்தனள் “  என்று  மறுமொழி  கூறினாள் . அதனைக்கேட்ட  தாய்  “குழந்தாய் !  மிகப் பெரியவளாகிய  இவள்  எக்காரணத்தினாலோ இங்கு  வந்த  தெய்வ மகள் ஆவாள்.  ஆதலின் , இவண்மாட்டு  விழிப்புடையவளாக  இருப்பாயாக.  .  தக்க  உபசாரங்களாற்  பெருமைப்படுத்துக “  என்று  கூறினாள் . அதுமுதல்  வாசவதத்தை  பதுமாவதி யினால்  மிகவும்  சிறப்பிக்கப்பட்டிருந்தாள் .

                   பின்னர் , வற்சர்  தலைவன்  குறிப்பிட்டவாறு  அமைச்சர்களோடு  புறப்பட்டு  மகத  தேயத்தரசனது  தலைநகரை  யடைந்தான் . மகதராசன்  அவனை  எதிர்கொண்டழைத்து  மகிழ்ச்சியோடு  தன்நகரையடைவித்தான் .  அவ்விடத்தில்  நன்  முகூர்த்தத்தில்  விவாக  மண்டபத்திற்கு  அழைத்து வரப்பெற்ற  வற்சர்  தலைவன்  , மணத்தின் பொருட்டுச்  சித்தமாக  இருக்கின்றவர்களும்  , எல்லா  அணிகலன்களாலும்  அலங்கரிக்கப்பட்ட வளும்  ஆகிய  பதுமாவதியைக்  கண்டான் .  அப்பதுமாவதியின்  உடம்பில்  வாசவதத்தையால் நிருமிக்கப்பட்ட  மாலையினையும்   திலகத்தினையுங்  கண்டு  “தேவியாகிய  வாசவதத்தையினது  கைத்திறமை  இதுவாகும் . இம்மாலையும்  திலகமும்  இவளால்  எங்கிருந்து  அடையப்பட்டனவோ “  என்று  மனத்தினாற்  சூழ்ந்தான் . இதனை  எண்ணிக்கொண்டே  மணவறை  வேதியை  எய்தி  விதிப்படி  பதுமாவதியை  மணந்தான் .

                      அவ்வமயத்தில் , மகதராசன்  யெளகந்தராயணனது வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு  “இனி  உதயனற்குக்  கனவினும்  கேடுசெய்யக்  கருதுவேனல்லேன்”  என்று  உறுதி  செய்தான் . அதன்பின்  உதயனற்கு  விலைமதிக்கொண்ணா  அளவிறந்த  அரதனங்களை  வழங்கினான் . மணத்திருவிழா  நிறைவேறியபின்  யெளகந்தராயணன்   “ஒரு  சமயம்  உதயனன்  உவளகத்திலிருக்கும்  வாசவதத்தையைக்  காணவுங்கூடும் “  என்னும்  ஐயத்தால்  அப்பொழுதே  இலாவாணகத்தைக்  குறித்துப்  புறப்படும்  வண்ணம்  செய்தான் . பதுமாவதியோடு  வற்சராசன்  புறப்பட்டவுடன்  வாசவதத்தையும்  வசந்தகனோடு  மறைவிற்  பின்றொடர்ந்து  சென்றான்  . எப்பொழுதும்  வாசவதத்தையையே  மனத்தால் நினைந்துகொண்டிருக்கும்  உதயனன்  இலாவாணகத்தையெய்தித்  தன்  இருப்பிடத்துட்  புகுந்தான்.  வாசவதத்தையோ  தன்  உடன்பிறந்தானாகிய  கோபாலகனது  இருப்பிடத்தை யடைந்து  அங்குக்  கோபாலகனைப்பார்த்துப்  பிரிவுத்துன்பத்தை   யுள்ளே  அடக்கமுடியாதவளாய்  வாய் திறந்து  அழத்தொடங்கினாள் .  அப்பொழுது யெளகந்தராயணன்  உருமண்வானோடு  அவ்விடத்தெய்தி   வாசவதத்தை யைப்  பலவாறு  தேற்றினான் .

                        இதற்கிடையில் , ஏவன்மகளிர்  விரைந்தோடி  வந்து   வற்சராசனது  முன்னிலையிற்  பதுமாவதியை  நோக்கி  “ஆவந்திகை  யென்னும்  அந்தணர்  குலமாது  எம்மைப்  புறத்தே  நிறுத்தி  விட்டுக்  கோபாலகனது  இல்லத்துட்புகுந்து  ஏதோ ஒரு துன்பத்தால் வாய்திறந்து  அழுகின்றனள்”, என்று  இவ்வாறு  தெரிவித்தனர்  . அது கேட்ட  வற்சராசன்  பதுமாவதியை நோக்கி  இம்மாலையுந்  திலகமும்  எங்கிருந்து  நின்னால டையப்பட்டன  வென்று  கேட்டான் .  அவள்  “யாண்டு  முதிர்ந்த  ஓர்  அந்தணனால்  அடைக்கலமாக  வைக்கப்பட்ட  ஆவந்திகை  என்னும்  பெயரினையுடைய  அந்தணர்குலமாது  என்பால்   இருக்கின்றாள் .  அவள்  என்னால் உண்டி  உடுக்கை  முதலிய  உபசாரங்களால்  நன்கு  போற்றப்பட்டவளாய்  என்பாலளவிகந்த  நட்புரிமை   யுடையவளா யிருக்கின் றாள் .  சிலநாட்களுக்கு  முன்னர்  எனது  மண நிகழ்ச்சி  வெளிப்படுத்தப்பட்டி ருக்குங்கால்   இம்மாலையினையுந்   திலகத்தினையும்  நிருமித்து  எனக்குதவினாள் “  என்று  இவ்வாறு  தெரிவித்துக்கொண்டாள் . அது கேட்ட  வற்சராசன்  “இஃது  உண்மையாக வாசவதத்தையினது  சிற்பத்திறமையையே   யாகும்”  என்று  துணிந்து  அப்பொழுதே  கோபாலகனது  இல்லம்  எய்தினான் .அங்கு  யெளகந்தராயணனால்  முன்னை  உருவம்  எய்தப்பெற்றவளும்  , தனக்கு  நேர்ந்த  கொடிய  பிரிவு  நிலையை  எண்ணி  மிகவும்  வருந்துகின்றவளும்   யெளகந்தராயணனாலும்   உருமண்வானாலும்  வசந்தகனாலும்  பலவாறு  தேற்றப்படுகின்றவளும்  , பிரிவுத் துன்பத்தால்  மிக  மெலிந்த  உடம்பினையுடையாளும்  ஆகிய  வாசவதத்தையைக்  கண்டான் . கண்டதும்  கண்ணீராற்றடுக்கப்பட்ட  வாயினால்   எதனையுஞ்  சொல்வதற்கு  ஆற்றலில்லாதவனாய்க்  கண்களினின்றும்  பெருகி  வழிகின்ற  நீர்த்  தாரைக ளான்  முன்னிடத்தை நனைத்துப்  பேய்  கோட்பட்டான்  போல்  நிலத்தில்  வீழ்ந்தான் .  அங்ஙனம்  வீழ்ந்த  அவனைப்பார்த்தவுடன்  நடுக்கமுற்ற  நெஞ்சினையுடையாளாகிய  வாசவதத்தையும்  அத்தகைய  துன்பத்தை  ஆற்றாதவளாய்  நிலத்தில்  வீழ்ந்தாள் .  கணப்பொழுதில்  தெளிவெய்தித்  தலைவன்  துன்பத்திற்குக்  காரணமாகிய  தன்னைப்  பலவாறு  பழித்துரைத்தாள் .

               அவ்வனயத்தில் தலைவன்  தலைவியாகிய  இவ்விருவர்களது  அத்தகைய  நிலையை  நோக்கி  மிகவருந்துகின்ற  நெஞ்சத்தையுடைய  யெளகந்தராயணனும்  கண்களினின்றும்  நீரை யொழுக்கினான் .  அங்கு  நிகழ்ந்த  குழப்பத்தைக்கேட்ட  பதுமாவதியும்  ஈதென்னை  யென்று  ஏதமுற்ற  நெஞ்சினளாய் அவ்விடத்தை யடைந்தாள் . அப்பொழுது யெளகந்தராயாணன்  வற்சராசனை  நோக்கி “வேந்தர்  பெரும !  நிலவுலக  முழுதும்  நின்வயமாக்கு தற்குரிய  உபாயத்தை  யாராய்ந்தேன் .  அதற்கு  மகத தேயத்தரசன்  ஒருவனே  தடையாயுள்ளான் .  பதுமாவதியின்  விவாகத்தையின்றி  மகதராசனைத்  துணையமைத்துக்கொள்ளக்  கூடவில்லை ;   பதுமாவதியின்  மணத்தை  முடித்துக்  கோடற்கு  என்னால்  இவ்வுபாயம்  மேற்கொள்ளப்பட்டது . இனி. மகதராசன்  கனவிலும்  நினக்கு  துன்பம்  செய்ய  எண்ணான் . யானே  நின்றுன்பத்திற்குக்  காரணமாயினேன் .  தேவி  வாசவதத்தையும்  இதன்பொருட்டு  அழைக்கப்பட்ட  கோபாலகனோடு  ஒற்றுமைப்பட்டு மிக அரிதின் இந்நிகழ்ச்சியிற்  றுணையுடையளாயினாள் . பிரிவுக்காலத்திலும்  இவள்  பதுமாவதியின்  பக்கலிலேயே இருக்கப்பெற்றாள் .  ஆதலின்  பதுமாவதியே  இவள்  கற்புடைமையிற்  சான்றாவாள் . நின்க்குத்  துன்பம்  விளைவித்த  எனது  இப்பிழையைப்  பொறுத்தருள்வாயாக” என்று  இவ்வாறு  கூறினான் .

                       அதுகேட்ட  பதுமாவதி   “யெளகந்தராயணன்  உண்மையையே கூறினான் . யான்  இவ்வாசவதத்தையின்  கற்புடைமையிற்  சான்றாவேன் . யான்  தீப்புகுதலானும்  இதனை  நம்பும்படி  செய்வேன்”  என்றிவ்வாறு கூறினாள் . பின்னர், வாசவதத்தை   “யானே  எனது கற்பு  நிலைமையில்  நம்பிக்கை  கொள்ளும்  வண்ணம்  தீப் புகுவேன் “  என்று  துணிவு  நீர்கொணர்ந்து  ஆசமித்துக்  கிழக்குமுகமாக  இருந்து  “ஏ ! உலகபாலகர்களே! யான்  வற்சராசனாகிய  உதயனற்கு  நலம்  விளைப்பதில்  உறுதி  பூண்டுளேனென்பதும், தேவி வாசவதத்தை கற்புநிலையினின்றும்  பிறழ்ந்திலள்  என்பதும்  உண்மையாயின் , அவ்விரண்டினையும்  இப்பொழுது  அறிவியுங்கள்.  இன்றேல்  தீப்புகுந்து  உயிரைப்  போக்குவேன்”  என்றிவ்வாறு  கூறினாள்.  அச்சொன்முற்றியபொழுதே  அசரீரியாக  “ஓ வற்சராச ! நினக்கு  அமச்சர்  இலக்கணம்  முற்றும்  நிரம்பிய  யெளகந்தராயணன்  மந்திரியாகவும்,  கற்பரசியும் முற்பிறப்பில்  தெய்வமுமாகிய  வாசவதத்தை  மனைவியாகவும்  வாய்ந்தமையால்  நீ மிகச்  சிறந்தவனாயினாய்  ஆதலின்  இவள்பால்  நினக்கு  வேறுபாடான  எண்ணம்  உண்டாதல்  வேண்டா”   என்னும்  இச்சொற்கள் உண்டாயின. அவை கேட்ட  எல்லோரும்  கார்காலத்து மயில்கள் போல  மிக்க  மகிழ்ச்சியுடையராயிருந்தனர் .  பின்னர் , வற்சராசன்  யெள கந்தராயணனது  உபாய  நிபுணத்தன்மையைப்  பலவாறு  பாராட்டினான் .  நில முழுதும் தங்கைப்பட்டதாக  எண்ணினான் . 

வெண்பா

க .        ஆன்ற  அறிவி  நமைவா  சவதத்தை

              யேன்ற  துயரோ  டியைகற்பின்  —  சான்றாம்

              பதுமா  வாயென்னும்  பாவைதனை  வேட்டான்

              விதுநே  ருதயனனாம்  வேந்து .

உ .          தன்றலைவற்  கண்டின்பஞ்  சார  வயலொருத்தி

                மன்றல்  கொளத்தன்  மனமிசைந்து  —  பொன்றாத

                மாலை  யொடுதிலக  மீந்தாள்  வலாரிதரு

                வேலை  யுருவமுதா  மின் .

ஒன்பதாம்  வகுப்பு

(மகதராசன்  சந்தி)

                அதன்பின்,  இரண்டு  மூன்று  நாட்  கழிந்ததும்   மகத தேயத்தரசனுடைய  தூதன்  வந்து  வற்சராசனை  நோக்கித்  “தேவா !அரசர்  பெருமானாகிய  மகதராசன்  என் முகமாகத்  தங்களுக்கு  இவ்வாறு  அறிவிக்கின்றான் .  அஃதாவது  “அரச!  உபாயத்திறன்  வாய்ந்த  நின்  அமைச்சர்களால்  யாம்  வஞ்சிக்கப்பட்டவர்களாயினேம் .  ஆதலின், யாங்கள் பதுமாவதியைக்  குறித்துக்  கவலைகொள்ளாதிருக்கச்  செய்தல் வேண்டும்  என்பதே”  என்று  இவ்வாறு  தெரிவித்தான்  .  அச்சொற் கேட்ட  வற்சராசன்  ஒற்றற்குத்  தக்கவாறு  சிறப்புச்செய்தான் .  பின்னர் “தந்தைக்கு  வேண்டிய  செய்தியைத்  தருக”  என்று  கூறிப்  பதுமாவதியின்  பக்கல்  அவனைப்  போக்கினான்.  

                  பதுமாவதி,  தந்தையின்பானின்று  வருகின்ற  அத்தூதனை  வியப்போடு  மலர்ந்த  கண்ணிணைகளாற்  சேய்மைக்கண்ணே  பார்த்து , அன்போடு  வருக!  வருக!  என்று  அழைத்துத்  “தாயுந்தந்தையும்  நலமுடையர் களாய்  இருக்கின்றார்களா?”  என்று  வினவினாள் .  தூதன் ,  “மன்னவன்  புதல்வி!  அன்னையாகிய  தேவியும்  வேந்தர் பெருமானும்  நலமுடையரே . ஆனால்  அன்னை  நின்னை  வஞ்சித்துக்  கொணர்ந்தமை  கேட்டு  அவலத்தாற்  கலக்குண்டு , நீராடல் , பருகல் , உண்டல்  ஆகிய  இவற்றிற்  பற்றில்லாதவளா யிருக்கின்றாள் .அரசர் பெருமானோ  நினக்கு  ஒருசெய்தி தந்து  என்னை  உய்த்தான் . அச்செய்தி  வருமாறு :-  “வாசவதத்தை  எரிந்து போயினாள்  என்று  பொய்யான அவச்சொல்லை  வெளிப்படுத்தி  வற்சராசன்  நின்னை  வஞ்சத்தாற்  பெற்றுக்கொண்டான் . வாசவதத்தையோ  வற்சராசற்கு  உயிரினுஞ்  சிறந்த  காதலியாவாள்   என்பது  யாவராலும்  உணரப்பட்ட  தொன்றே  . ஆதலின் , “பெண்மகப்  பெறுதல்  துன்பமாம்”  என்பதாம்”  என்று  இவ்வாறு  கூறினான் . 

                    அது கேட்ட  பதுமாவதி , “நல்லோய் ! வஞ்சத்தால்  யான்  கொணரப்பட்டேனாயினும்  இங்குச்  சுகமாகவே  இருக்கின்றேன் . நின் மருகன்  வாசவதத்தையின்பால்  மிக்க  அன்புடையவன்  என்று  யாவரானுங்  கூறப்பட்டானாயினும்  என் மாட்டு  மிகப்  பேரன்புடையவனாகவே  யிருக்கின்றான் . வாசவதத்தையும்  உடன் பிறந்தாளை  யொப்ப  என்பால்  அளவில்லாத  நட்புரிமை  கொண்டுள்ளாள் .  ஆதலின் , என்னிமித்தம்  நீங்கள்  கவலை  மேற்கொள்ளல்  வேண்டாம்  என்னும்  இச்செய்தியை  யான்  கூறியதாகத்  தந்தையின்பால்   நீ சொல்லவேண்டும் “   என்றிவ்வாறு  கூறினாள் . வாசவதத்தையும்  அத்தூதனை  நன்கு  பசரித்தாள் .  பின்னர், பதுமாவதியினது இச்செய்தியை  ஏற்றுக்கொண்டு  தூதன்  மகதராசன் பக்கல்  எய்தினான் .

                        பின்னர் , பதுமாவதி  தந்தையின்  இல்லத்தை  நினைந்து  சிறிது  அவாவிற்று  வருந்தினான் .வாசவதத்தை  வசந்தகனை  யழைத்துப்  “பதுமாவதிக்கு மகிழ்ச்சியொடு  பொழுது போதற் பொருட்டுக்  கதை  சொல்லுக . என்று  கூறினாள் . வசந்தகன்  மனத்தை  இன்புறுத்தத்தக்க  கதைகளைக்  கூறினான் .  கதை  முடிவில்   வாசவதத்தையையும்  பதுமாவதியையும்  நோக்கி “  முற்பிறப்பில்  நீவிர்  இருவீரும்  உடன்பிறந்த  தெய்வப்பெண்களாயிருந்து  ஏதோ  ஒரு  சாபப்பிழையால்  மக்கட்பிறப்பை  யடைந்தீர்கள் . ஆதலின் , உங்கள்  நெஞ்சம்  ஒன்றுக்கொன்று  துணைசெய் வதாகவே  இருக்கும் . ஒருபொழுதும்  நும்மறிவு  மாறுபடும்  நிலையில்  ஒழுகமாட்டாது” என்று  இவ்வாறு  கூறினான் .

                    அது கேட்டுப்  பதுமாவதி மிக்க  மகிழ்ச்சியுடையளாயினாள் . வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களின்  உள்ளங்களும்  பொறாமை  சிறிதுமின்றி  ஒன்றுக்கொன்று  அனுகூலமுடையனவாய்  ஓர் உள்ளம் போல் ஆயின .  பின்னர் , யெளகந்தராயணன்  என்னும்  அமைச்சன்  வற்சராசன்  பக்கல்  எய்தி   “வேந்தர் பெரும!  இனிப்பெரியதொரு  முயற்சி  செய்யத்தக்கதாக  இருக்கின்றது . இப்பொழுதே  சிறிதும்  தாழ்த்தலின்றிக்  கெளசாம்பி  நகரத்தைக்  குறித்துப்  புறப்படுதல்  தக்கதாகும் . மகதராசனை  யாம்  வஞ்சித்தேமாயினும்  நமக்கு  துணையில்லாதவனாகமாட்டான் . அவனோ  பதுமாவதியின்  விவாக காலத்தில்  “ இனி யான்  வற்சராசற்குக்  கனவினுங்  கேடு  செய்யக்  கருதேன் ,” என்று  தீக்கடவுள்  சான்றாக  உறுதி செய்துளான் . அன்றி  நம்மோடு  பகைத்து உயிரினுஞ் சிறந்த  பதுமாவதியை  எங்ஙனம்  புறக்கணிப்பான் ?  யானும்  ஒற்றர்களைப்போக்கி  அவள்  உள்ளத்தை  நன்குணர்ந்திருக்கின்றேன் . ஆதலின், எவ்வாற்றானும்  மகதராசன் நமக்குத்  துணைசெய்பவனாவான் .என்பது  உறுதியே  .ஆதலின்  இப்பொழுதே  புறப்பட்டுக்  கெளசாம்பியை  யடைவோமாக”  என்றிவ்வாரு  கூறினான் .

                   யெளகந்தராயணன் , இவ்வாறு  சொல்லிக்கொண்டிருக்குங்கால்  மகதராசனுடைய  தூதன்  வந்தான் .அவன் அரசனால்  அனுமதி  பெற்று  வணங்கி , “வேந்தர் பெரும ! பெருமானாகிய  மகதராசனது  செய்தியைத் தாங்கி  இங்கு  வந்துள்ளேன் . அப்பெருமான் , தன்  அருமை  மகளாகிய  பதுமாவதியின்  செய்தியைச்  தூதன்  முகமாகக்கேட்டு  மிக்க  மகிழ்ச்சியுடையனாய்த்  தூதன்  முகமாகவும், குழந்தை பதுமாவதியின்  செய்தியாலும்  அவ்விடத்து  நிகழ்ச்சிகளை  நன்றாக  அறிந்துளேம் .  நினக்கு  ஒப்பற்ற  அறிவுடையனாகிய  யெளகந்தராயணன்  அமைச்சனாக  இருத்தலின்  நீயே  எவ்வாற்றானுஞ்  சிறந்தவனாவாய் .  பதுமாவதி வஞ்சத்தாற்  கவரப்பட்டாளாயினும்  நலமுடையளாயிருக்கின்றாள்  என்றுகேட்டு  மிகவும்  மகிழ்ச்சியடைந்துள்ளேம் .  எதற்காக  இத்தகைய  ஏற்பாடுகள்  தொடங்கப் பட்டனவோ அச்செயலிற்  காலந்தாழ்த்தலின்றி   நீ  இறங்கல்  வேண்டும் . யாமும்  அந்நிகழ்ச்சியில்  துணைசெய்வோம் “  என்றிவ்வாறு  நின்பாற்றெரி வொக்கும்படி   கட்டளையிட்டருளினான் . என்று  கூறினான் .

                     அதுகேட்டு  வற்சராசன்  உள்ளத்திற்றோன்றிய  அளவலா  மகிழ்ச்சியை  உள்ளடக்கிக்கொண்டு  “தங்கள்  துணையுடைமையால்  யாம்  மிக்க  பெருமையுடையேமாயினேம் . குறிப்பிட்டபடிச்  செய்வேமாக.” என்று   மறுமொழி  கூறி  அத்தூதனை  நன்கு  உபசரித்துப்  போக்கினான் .  தூதன்  மகதராசனது  தலைநகரைக்  குறித்துப்  புறப்பட்டான் . அவ்வமயத்திலேயே  உச்சயினி  நகரத்தினின்றும்  சண்டமகாசேனனால்  அனுப்பப்பட்ட  தூதன்  வந்தான் .அவனும்  வற்சராசனால்  உட்புக  அனுமதி  பெற்றுச்சென்று  வணங்கி  “தேவ ! வேந்தர் பெருமானாகிய  சண்டமகாசேனன்  நட்புரிமையை  முன்னிட்டுத்  தங்களைக்  குறித்துத்  தெரிவித்துக்கொள்வதாவது  :-  “பதுமாவதி  விவாகம்  முதலிய  பாராட்டப்படும்  நின்செயல்கள் அனைத்தையும்  நன்கறிந்துளேன் . யெளகந்தராயணனை  அமைச்சனாகப் பெற்ற  நீ  எவ்வாற்றானும்  பாக்கியவானாவாய் . தன் தலைவனது  நலத்தையே  விரும்பித்  தனக்கு  நேரும்  துன்பத்தையும்  பொருட்படுத்தாமல்  யாருமறியாதவாறு  இருக்கும்  தாழ்ந்த  நிலையை  எய்திய  குழந்தை  வாசவதத்தையும்  மிகவும்  பாக்கியசாலியாவாள் . இன்னும்  வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களும்  ஒருவருக்கொருவர்  உண்மையன்புடையரா யிருத்தலைக்  கேட்டு  மிகவும்  மகிழ்ச்சியடைகின்றேன் . ஆதலின்  நும்மால்  அடையவிரும்பிய  காரியத்தில்  சிறிதும்  தாழ்த்தலின்றி  முயற்சி  மேற்கொள்ளப்படல் வேண்டும் . அக்காரியத்தில்  யாமும்  துணைசெய்வோம்’என்பதாகும் “ என்றிவ்வாறு  கூறினான் . அது கேட்ட  வற்சராசன்  சண்டமகாசேனற்குத்  தக்கவாறு  மறுமொழியீந்து தூதனைத்  திருப்பி  யனுப்பினான் .

                      அதன்பின் , யெளகந்தராயணன் கூறியவண்ணம்  வாசவதத்தை பதுமாவதி  இவ்விருவர்களோடு  கெளசாம்பிநகரத்தைக்  குறித்துப்  புறப்பட்டான் . கரை கடந்து செல்லும்  கடல் நீர் போல  அளவிடவொண்ணாப்  படைகள் அவனைப்  பின்பற்றிச்சென்றன . களிற்றரசின்  பிடர்க்கண் ஏறிச்செல்கின்ற  உதயணன்  , கீழ்க்கடன் மலையிற்றோன்றித்  திகழும்  கதிரவனை  யொப்ப  விளங்கினான் .வாசவதத்தையும்  , பதுமாவதியும்  பின்னாக  மற்றொரு  பெண்யானையின்  மீதிவர்ந்து  அவ்வுதயனனைப்  பின்றொடர்ந்து சென்றனர் .  இங்ஙனம் , வற்சராசன்  வரவைக் கேட்டுக்  குதூகலமிக்க  நகரத்து  மாந்தரெல்லோரும்  கெளசாம்பி நகரத்தைக்  அணி செய்தனர் . எவ்விடத்தும் கொடியாடைகளை  இடைவெளியின்றி  யுயர்த்தினார்கள் .இல்லங்கடோறும்  அழகு வாய்ந்த பற்பல  தோரண  வரிசைகளைக்  கட்டினார்கள் ; வீட்டு  வாயில்கள் தோறும் உயர்ந்த  நிறைகுடங்களையமைத்தார்கள் . இவ்வாறு  நகரத்து  மக்கள்  அனைவராலும்  மகிழ்ச்சியோடு  வரவேற்கப்பட்ட  உதயனன்  கெளசாம்பி  ஆரவாரிக்கின்ற  நகரத்து  மக்களால்  நிறையப்பெற்ற  கெளசாம்பி  நகரம் , திங்களஞ் செல்வன்  தோன்றுங்  காலத்துப்  பெரிய அலைகளையுடைய  கடற்கரைபோலத்  திகழ்வதாயிற்று  . இங்ஙனம்  நகரத்திலுள்ள  மாந்தர்களின்  கண்களை  இன்புறுத்தும்  உதயனன்  , வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களோடும்  தன்  அரண்மனையை  யடைந்தான் .

வெண்பா

மாமன்மார்  தன்சீர்  வளர்ச்சி  கருதியுய்த்த

தூய்மை  நிறைதுணையாஞ்  சொற்பெறீஇப் – பூமனெழில் 

இன்ப  நிலமா  மிலாவா  ணகமகன்று

நன்புலத்திற்  சென்றனந்  நாள் .

பத்தாம்  வகுப்பு

(அரியணையடைதல்)

          அதன்பின்னர், பிற்றைநாட்காலையில்  வற்சராசன்  காலைக்கடனை  முடித்துக்கொண்டு  அமைச்சர்களோடு  அத்தாணி  மண்டபத்தை  யலங்கரித்தான் . அப்பொழுது  ஓர்  அந்தணன்  வாயிற்புறத்தையடைந்து  “அந்தோ! அந்தோ! “என்று  கதறினான் .  உதயனன்  துன்பத்தின்  காரணத்தைக் கேட்க, அவ்வந்தணன்  “வேந்தே”  காட்டிற்  செல்கின்ற  என்புதல்வன்  குற்றம்  யாதும்  செய்யாதிருப்பவும்  அவன்  காலைக்  கொடியவர்களாகிய  இடையர்கள்  வெட்டினார்கள்  “  என்றிவ்வாறு  கூறினான் .அது கேட்டு  வற்சராசன்  அந்தணனைத்  தேற்றி  அக்கணமே  அவ்விடையர்களைக்  கொண்டு  வரச் செய்தான் . கொணர்வித்து  “எதற்காக  இத்தகைய  கொடுஞ்செயலைச்  செய்தீர்கள் ?”  என்று  வினவினன் . அவர்கள் “அரசர் பெரும! இடையர்களாகிய  யாம்  மனித  சஞ்சாரமில்லாத  காட்டில்  விளையாடிக்கொண்டிருந்தோம் . எங்களுள் , தேவசேனன்  என்னும்  பெயரினையுடைய  இடையன்  ஒருவன்  இருக்கின்றான் . அவன்  காட்டின்  ஒருபுறத்தே  கல்லான்  அமைந்ததோர்  இருக்கையைக்  கண்டு  அதன்கண்   அமர்ந்தான் .அமர்ந்த மாத்திரத்திலேயே   “யான்  இப்பொழுது  இடையர்களுக்கு  அரசனாகின்றேன் .ஆதலின் , இனி நீவிர்  விழிப்புடன்  எனது ஆணைவழி  ஒழுகுதல் வேண்டும்  “  என்று  எமக்குக்  கட்டளையிட்டான் .யாங்களும் அவ்வாணையை  அங்ஙனமே  ஏற்றுக்கொண்டோம் . அது முதல் அவன்  ஆணையை  யாம்  கடப்பதில்லை .  அவன் இங்ஙனங் காட்டில்  அரசுசெலுத்திக் கொண்டிருக்குங்கால்,  இவ்வந்தனன்  புதல்வன்  அவ்வழிக்கட்  சென்றுகொண்டிடுந்தான் . . எங்கள்  அரசனாகிய  தேவசேனனுக்கு  வணக்கஞ் செய்திலன் .யான்  அவன் பக்கல்  அணுகி  “வேந்தற்கு  வணக்கஞ்  செய்யாது  நீ  செல்லல்  கூடாது “ என்று  கூறினேம் .அவன் இங்ஙனம்  பலவாறு  வற்புறுத்து ரைக்கப்பட்டும் எம்மைப்  பொருட்படுத்தாமற்  சென்றான் .அதன்பின்  யாம்  எல்லோரும்  அவனை வலிந்திழுத்து  அரசன்  பக்கல்  சேர்ப்பித்தோம்  .  எங்கள்  தலைவனாகிய  அத்தேவசேனன்  “இறுமாந்தைவனது காலை  வெட்டி  விடுங்கள்”  என்று  எமக்குக்  கட்டளையிட்டருளினான் .  ஆதலின்  யாம்  அரசனது  ஆணையை  மேற்கொண்டேம் . அரசனது ஆணையைக்  கடத்தற்கு  எங்ஙனம்  ஆற்றலுடையேம் ஆவேம்?”  என்ன்றிவ்வாறு  தெரிவித்துக் கொண்டனர் .

            இவ்வாறு  இடையர்கள்  கூறிய  சொற்களைக்  கேட்டு  அறிஞனாகிய  யெளகந்தராயணன்,  நெடு நேரம்  மனத்தில்  ஆராய்ந்து  , வற்சராசனை  மறைவிடத்திற்கழைத்து  “வேந்த! அவ்விடத்தில்  அளவில்லாத  வைப்புப்பொருள்கள்  நிச்சயமாக  உள்ளன .  அப்பொருண்மாட்சியால் இடையனும்  அரசனை  யொப்ப  ஒழுகுதற்குரிய  வன்மையுடையவனாயினான் .ஆதலின்  இப்பொழுதே  புறப்பட்டு  அவ்விடத்தையடைந்து  சோதித்தல் வேண்டும் “  என்று  இவ்வாறு  கூறினான் . வற்சராசன்  அங்ஙனமேயாகவென்று  உடன்பாடுற்று  அக்கணத்தே  புறப்பட்டு  இடையற்களாற்  காட்டப்பட்ட  நெறியே  சென்று  அவ்விடத்தை யடைந்தான் . பின்னர்  அவ்விடத்தை  வினைஞர்களைக்  கொண்டு  தோண்டுவித்தான் . அவ்விடத்தினின்றும்  மலையை  ஒத்த  உருவத்தினை யுடைய   ஓர்  இயக்கன்  கிளம்பினான் . அவ்வியக்கன்  “அரச!  நின் குலத்து  முன்னோர்களால்  வைக்கப்பட்ட  பெரிய  நிதி  இங்குள்ளது . அதனைக்   காத்தற்கு  இத்துணைக்காலம்  ஈண்டிருந்தேன். அதனைப்  பெற்றுக்கொள் வாயாக, செல்கின்றேன்”  என்று  சொன்னான் . அது கேட்டு  மிக்க  மகிழ்ச்சியடைந்த  வற்சராசன்  இயக்கத்திற்கு  அளவின்றிப்  பூசை  செய்தான் அப்பூசனையை  ஏற்றுக்கொண்டு  அவ்வியக்கன்  மறைந்தான் . அதன்பின் , கல்லப்பட்ட  அவ்விடத்தினின்றும்  பெரிய நிதி  வெளிப்பட்டது . பின்னும்  அவ்விடத்தில்  மிக்க விலைமதிப்புள்ள  இரத்தினங்களழுத்திய  அரியணையும் 

காணப்பட்டது . ஆங் காலத்தில்  மனிதற்கு  மேன்மேலும்  மங்கள வரிசைகள்   தாமாகவே  வந்தடைவனவாம் . ஆதலின் , வற்சராசன்  இடையர்களை  நோக்கி  “இனி நீவிர்  இன்னோரன்ன  கொடுஞ்செயல்களைச்  செய்தல்  கூடாது “  என்று  கட்டளையிட்டான் .

                  பின்னர் , பொருட் குழுவனைத்தையும்  எடுத்துக்கொண்டு  தன் நகரத்தைக் குறித்துப்  புறப்பட்டான் . இரத்தினங்களிழைக்கப்பட்ட   அவ்வரியணையை  நன்கு  பார்த்துக்  கெளசாம்பி  நகரத்து  மக்களெல்லோரும்  மிகவும்  வியப்பெய்தினர் . மற்றா நாள்  யெளகந்தராயணன்  வற்சராசனை  நோக்கி  “வேந்தே! நின் முன்னோர்கள்  வீற்றிருந்த  இரத்தின சிங்காதனத்தில்  ஏறி  அலங்கரிப்பாயாக “ என்றிவ்வாறு  தெரிவித்தான் . அதற்கு  வற்சராசன்,  “எனது முன்னோர்களாகிய  அரசர்கள்  நிலவுலக  முழுதையும்  தந்தோள்  வலியால் வென்று  இவ்வரியணையில்  ஏறி  வீற்றிருந்தார்கள் . யானும்  எல்லாத்  திசைகளையும்  வென்றபின்னரே  இவ்வரியணையில்  ஏறுதற்கு  விரும்புகின்றேன் .ஆதலின்  இப்பொழுதே  நாற்புறமும்  கடல்சூழ்ந்த  இந் நிலவுலகத்தை வென்று  கோடற்குப்  புறப்படல்  வேண்டும் “ என்றிவ்வாறு  மறுமொழி  கூறினான் .  

                   யெளகந்தராயணன் , அச்சொற்களை  மகிழ்ந்து பாராட்டினான் . பின்னர்  “முதலிற்  கீழ்த்திசையை  நோக்கிப்  புறப்படுவாயாக “ என்று  கூறினான் . அது கேட்டு  வற்சராசன்  “வடக்கு முதலிய  திசைகள் இருக்கக்  கீழ்த்திசையைக்  குறித்து முதலிற்  செல்லல்  வேண்டுமென்னும்  நியமம்  எதற்காகச்  செய்யப்பட்டுள்ளது “  என்று  வினவினான் .  அதற்கு  யெளகந்த ராயணன் , “வேந்த !  கேட்பாயாக  .நான்கு  திசைகளுள்  வடதிசை  எல்லாச் செல்வமும்  நிறைந்ததாயினும் , மிலேச்சர்களாற்  கவரப்பட்டிருத்தலின்  இழிந்ததாகும் ; மேற்றிசையும்  கதிரவன்  சென்று  மறைதற்குக்  காரணமாயிருத்தலிற்  சிறந்ததன்று; தென்றிசையும் இயமனால்  ஆளப்படுதலின்  உயர்ந்ததன்று ; கீழ்த்திசையிலோ  பகவானாகிய  கதிரவன்  உதயமாகின்றான் ;  அத்திசையிலேயே  எல்லாத்  தேவர்களுக்குந்  தலைவனா கிய  இந்திரன்  வீற்றிருக்கின்றான் ;  எல்லா உலகத்தையும்  தூய்மை செய்யும்  கங்கையும்  கீழ்பாலை  நோக்கி  ஓடுகின்றது .; கங்கையின்  சிறப்பைப் பற்றி   வேறு  கூறற்பாலது  என்னை?  எல்லா  நாட்டினுள்ளும்  கங்கை  நீராற்  றூய்மை செய்யப்படும்  நாடே  சிறந்ததாகப்  பாராட்டப்படுவதாகும் ; பெரும்பாலும்  அரசர்கள்  பலர்  கங்கைக்  கரைகளிலுள்ள   நாடுகளிலேயே  வாழ்கின்றனர் ; ஆதலின்  நலத்தை  விரும்பும்  அரசர்  முதலிற்  கீழ்பாலை  நோக்கிச்செல்வர் ; நின்முன்னோர்களும்  கீழ்பாற் றொடங்கியே  எல்லாத் திசைகளையும்  வென்றனர் ;  கங்கைக்கரையிலுள்ள  அத்தினாபுரத்திலேயே  வாழ்ந்தனர்  . நின்பிதாமகனாகிய  சதானீகன்  அத்தினாபுரத்தைவிட்டுக்  கெளசாம்பியை யடைந்தான் ; அத்தினாபுரத்தினும்  சிறந்த  எழில்  வாய்ந்ததாகுங்  கெளசாம்பி நகரம் ; சதானீகன்  நிலமுழுதும்  ஆளுதல்  ஆண்மையின்  பாலதாகும் ; நாடு  என் செய்யும்  என்றெண்ணி  முன்னோர்களாற்  பெறப்பட்டதாயினும்  அத்தினாபுரத்தை  யொழித்து விட்டான் ; நினக்கு  இப்பொழுது  ஊழ் நல்லதாக  இருக்கின்றது ; ஆண்மையும்  நிறைந்துள்ளது ; ஆதலிற்  சிறிதுந்  தாழ்த்தலின்றித்  திக்குவிசயத்தின்  பொருட்டுப்  புறப்படல்  வேண்டும் “  என்றிவ்வாறு  மறுமொழி  கூறினான் . இங்ஙனங் கூறிய  யெளகந்தராயணன்  சொற்களைக்  கேட்டு  வற்சராசன் , “அமைச்ச!  நலமதொன்றடைதற்குறு  மிடையூறு  நாதனே !  பலவுள”  என்பது  முதுமொழி.  ஆதலின், இடையூறுகளைப்  போக்குதற்கு  முதலிற்  பகவானாகிய  உமாநாதனை  வழிபடுதற்கு  விரும்புகின்றேன் . “  என்று  கூறினான் . யெளகந்தராயணனும்  அங்ஙனமே  செய்தல்   வேண்டுமென்று  ஒத்துரைத்தான் ,  பின்னர்  மற்றை  அமைச்சர்களும்  தழீஇக்கூற, வற்சராசன்   வாசவதத்தை, பதுமாவதி  இவ்விருவர்களோடு   நீராடித்  தூய்மையுடையனாய்  மூன்றிரவு  பட்டினி  இருந்து  பகவானாகிய  உமாகந்தனைப்  பூசித்தான் . நோன்பின்  இறுதியிற்  சிவபெருமான்  கனவிற்றோன்றி   “வேந்த ! நீ  குற்றமற்ற  மெய்யன்போடு  செய்த  வழிபாட்டினான்  மகிழ்ச்சி  யெய்தினேம் .  சிறிதும்  ஐயமின்றித்  திக்குவிசயங்  குறித்துப்  புறப்படுவாயாக  .  தடையில்லாத  வெற்றியையடை வாய் .  வித்தியாதரச் சக்கரவர்த்தியாகிய  புதல்வனையும்  விரைந்து  பெறுவாய் “  என்றிவ்வாறு  கட்டளையிட்டருளினார் . அதன்பின்  கண்விழித்த  வற்சராசன்  பெரிதும்  இன்பமுடையனாயினான் .  காலைப்பொழுதில்  இக்கனவின்  நிகழ்ச்சியை  நோன்பினாலிளைத்த  மனைவிமார்க்குங்  கூறினான் . பின்னர்  அமைச்சர்களுக்குங்  கூறினான் . அதனை  எல்லோரும்  கேட்டு  மகிழ்ச்சியின்  பேரெல்லையை   அடைந்தார்கள் . பின்  வற்சராசன்  நோன்பை  முடித்து  உணவுட்கொண்டான் .

வெண்பா

முன்னோர்தம்  வைப்பாம்  முழுமணிப்  பூண்பொருளும்

பொன்னா  ரரியணையும்  போற்றியெடுத் —  தந்நாள்

திசைவிசயஞ்  செய்தேறச்  சிந்தித்  தரனை

வசையொழியப்  பூசித்தான்  மன். 

பதினோராம்  வகுப்பு

(திக்குவிசயம்)

அதன்பின் ,  மற்றா நாள் , யெளகந்தராயணன் , வற்சராசனை  நோக்கி  “தேவ! பகவானாகிய  பார்வதீ  காந்தன்  திருவருளால்   நீ  பாக்கியவனாயினாய். ஆதலின்  இப்பொழுதே  திக்குவிசயத்தின்  பொருட்டுப்  புறப்படுவாயாக  .  தோள்வலியால்  ஈட்டப்படும்  அரசியற்றிருவை  யடைவாயாக . அறவழியான்  ஈட்டப்படுஞ்  செல்வமே  அழிவில்லாததாகும் .  மறவழியான்  ஈட்டப்படுஞ்  செல்வங்கள்  புன்னுனியிற்  பொருந்தியிருக்கும்  பனித்திவலைகளை  யொப்பச்  சிறிது பொழுதில் அழிந்துவிடும் .  ஆதலின்  அரசன்  அறவழியாற்  பொருளீட்டுதலில்  முயற்சி  செய்தல் வேண்டும் . நினக்கு  இப்பொழுது எல்லாத்  திசைகளும்  எளிதில்  வெல்லற்பாலனவாம் . நினக்கு  மாமன்மார் இருவர்களுடைய  இயைபாற்  பல அரசர்கள்  உறவினராயினர் .  அவ்வெல்லோரும்  திக்குவிசயங்  குறித்துச்  செல்லும்  நின்னோடு  பகைமை கொள்ளார் . துணை செய்தலையே  மேற்கொள்பவராவர் . காசிநகரிற்  பிரமதத்தன் என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவன் உளன் . அவன் ஒருவனே  முதலிற்  கருதற்பாலன் . அவன்  நினக்கு  எப்பொழுதும்  பகைவனாவான் . அவனை முதலில் வென்று   பின்னர்க்  கீழ்த்திசை  தொடங்கி  எல்லாத்திசைகளையும்  வெல்லுவாயாக”  என்று  கூறினான் .

                 இங்ஙனங்கூறிய  யெளகந்தராயணன்  சொற்களைக் கேட்டு வற்சராசன் படைத்தலைவனை யழைத்து “ இப்பொழுதே  திக்குவிசயச்  செலவிற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்தல் வேண்டும் “  என்று  கட்டளையிட்டான் . அப்பொழுது  வாசவதத்தையின் உடன் பிறந்தவனாகிய கோபாலகனும்  பதுமாவதியின்  உடன் பிறந்தவனாகிய  சிங்கவன்மனுந்  துணை செய்தற்பொருட்டு  அவனைப்  பின்றொடர்ந்து  சென்றனர் . வற்சராசன்   கோபாலகனை  விதேக  நாட்டிற்கு  அரசனாகச்  செய்தான் . சேதி நாட்டைச்  சிங்கவன்மனுக்குக்  கொடுத்தான். பின்னர்த்  தனக்குத்  துணைசெய்தற் பொருட்டு  விந்திய மென்னும்  அடவியினாப்பண் இருக்கின்ற  வேடர்  தலைவனாகிய  புளிந்தகனைப்  பரிவாரங்களோடு  கொண்டுவரச் செய்தான் .  

                 இதற்கிடையில் , யெளகந்தராயணன்  பிரமதத்தனது  செயலை  அறிதற்பொருட்டுக்  காசிநகரைக் குறித்து  ஒற்றர்களைப்  போக்கினான் .அவர்கள்  காபாலிக  வேடந்தாங்கிக்  காசிநகரை  யடைந்தார்கள் . அவர்களுள் , குகனென்னும்  பெயரினையுடைய  ஒருவன்  ஆசாரிய  வேடம்  பூண்டான் . மற்றையோர்  அவர்க்கு  மாணவகர்  ஆயினர் . அவர்கள்  ஐயமேற்றுண்ணும்  அவ்வஞ்சக குருவை  முக்காலமு முணர்ந்தோன்  என்று  புகழ்ந்து  கொண்டாடினர் . காசிநகரத்து  மாந்தர்  அனைவரும்  எதிர்காலத்து வரும்  நன்று  தீதுகளைக்  கேட்டற்கு  வணக்கத்தோடு  அவன்பக்கல்  சூழ்ந்தனர் . எல்லாவற்றையும்  ஞானக்கண்ணாற்  காண்பவன்  போல்  அபிநயஞ்  செய்கின்ற  அக்கபட  குரு , இன்ன  இடத்தில்  நெருப்புப்  பற்றும் , இன்ன  இடத்திற்  களவுபோம்  என்று  இவை  முதலியவற்றுள்  எதனை யெதனை அம்மாந்தர்க்குச்  சொல்லுகின்றானோ  அதனை யதனை அவன் மாணவர்கள்  உண்மையாகவே  செய்தனர் . இதனால் அவன்  பெரும்புகழ்  எங்கும்  பரவுவதாயிற்று .  அவ்வமயத்தில்  வற்சராசனது திக்குவிசய  யாத்திரையின்  ஏற்பாட்டை  ஒற்றன்  முகமாக  அறிந்த பிரமதத்தன் மிகவும்  கலக்குண்ட  நெஞ்சமுடையனாயினான் . அப்பொழுது  மிக  வியக்கத்தக்க  மகிமைகளையுடைய  இக்காபாலிகவிரதி வந்திருத்தலைக்  கேட்டு  அவனை வழிபடுதற்குத்  தன் மகன் ஒருவனை யனுப்பினான் . அக்கபடகுரு  அவ்வரச குமாரனைச்  சிறந்த மாணவனாக  ஏற்றுக்கொண்டான் .பின்னர்  அவன்முகமாகப்  பிரமதத்தனுடைய  எல்லா மறைபொருள்களையும்  அறிந்தான் .

               வற்சராசன் , முதலிற்  காசிநகரை  நோக்கிப்  படையெடுத்துவருவான்  என்றுணர்ந்த  யோககரண்டகன்  என்னும்  பெயர் வாய்ந்த  பிரமதத்தனுடைய  அமைச்சன்  பல வஞ்சகச்  செயல்களைச்  செய்தான் . வழியிலுள்ள  மரங்கள் , கொடிகள் , நீர்நிலைகள் , புற்கள்  ஆகிய  இவைகளை  நஞ்சு பொருந்தச் சேர்த்துக் கெடுத்தான் . பொருட்பெண்டிர்  உருவந்தாங்கிய  நச்சுப் பெண்களை   ஆங்காங்கு  நிலைப்படுத்து இயங்கவைத்தான். இராக்காலங் களிற்  பாசறை  புகுந்து மறைவிற்  படைகளைக்  கொல்லுதற்குரிய  கொலைத் தொழில் வல்ல மாக்களைத் திட்டஞ் செய்தான் . இங்ஙனம்  பிரமதத்தனுடைய  அமைச்சனாற் செய்யப்பட்ட  வஞ்சகச்  செயல்களை யுணர்ந்து கபடமிக்க  காபாலிகன்  ஒற்றன்முகமாக யெளகந்தராயணற்கு   அறிவித்தான் .

     பின் , வற்சராசன் கணிதம் வல்லுநரால்  தெரிந்துரைக்கப்பட்ட  நன்னேரத் திற்  படைகளோடு  புறப்பட்டான் . அப்பொழுது அவர்க்கு  வெற்றியை  யறிவுறுப்பனவாகிய  நன்னிமித்தங்கள்  பல உண்டாயின. நிலவுலக  மனைத்தையும் மறைத்துக்கொண்டு  கிளம்பியதும் அளவறுக்க  ஒண்ணாதது மாகிய  அவன்படை ஊழிக்காலத்திற்  கரைகடந்தெழூஉம்   கடநீர்போலக்  காணப்பட்டது . மிகவுயர்ந்த களிற்றின் பிடர்க்கண்  ஏறி வீற்றிருக்கும்  உதயனன்  காலைபொழுதில் உதயமலையின்  உச்சியில் விளங்கித் தோன்றும்  கதிரவனை யொப்பத் திகழ்ந்தான் . முதலிற்  கிழக்குத்  திசையைக்  குறித்துப்  புறப்பட்ட  வற்சராசன் காசிநகரை நோக்கிச்  சென்றான்.

              முன்னரே,  பிரமதத்தனுடைய  அமைச்சன்  யோக கரண்ட கனாற்  செய்யப்பட்ட  வஞ்சகங்களையறிந்த  யெளகந்தராயணன்  மாற்றுச்  செயல்களால் அவ்வஞ்சகச்  செயல்களைப்  பயனில்லாதனவாம்படி  செய்தான் . நஞ்சின்  சேர்க்கையாற்  கெடுக்கப்பட்ட  புல் , நீர் முதலியவை களை எதிர்ப்பிரயோகத்தால் ஆராய்ந்து ஒழித்தான். நச்சுப்பெண்களின்  றடையைப் போக்குதற்கு , முன்னர்க்  காணப்படாத  பெண்கள் உட்புகுதலைப் படைவீட்டிற்  றடுத்தான் . மறைவிற் கொல்லுங்  கொலைத் தொழிலாளரை  உபாயங்களாற்  றேடிக்கொன்றான் . இங்ஙனம் யெளகந்தராயணன் பகைவனுடைய  வஞ்சகச் செயல்களைப்  பயனில்லாதனவாக்கி   வற்சராசனது வெற்றிச்செலவை  இடையூறில்லாததாகச்  செய்தான் . இவ்வாறு  இடையூறொழித்து  அளவில்லாத  படைகளாற்  றிசையிடங்களை  நிறைத்து வந்த  வற்சராசனைக் கண்டு செயற்பாலது இன்னதென்று  அறியாமையாற்  பாழடைந்த  நெஞ்சினனாகிய  பிரமதத்தன்  அமைச்சர்களோடு  சூழ்ந்து “வற்சராசனை வெல்லுதற்கு  முடியாது “  என்று  துணிந்தான் .  பின்னர்ப்  பல வகைக் கையுறைப்பொருள்களை  ஏந்திக்கொண்டு  தலையிற்  கைகூப்பி  வற்சராசன் பக்கல் எய்தினான் .  அடைக்கலம்  புகுந்தோரை  அன்பு செய்யும்  வற்சராசன் , அப்பிரமதத்தனை மகிழ்ச்சியாற்  பெருமைப்படுத்தி  விடுத்தான்.

               இவ்வாறு, வற்சராசன் , வணங்கினவர்களை அன்பினாற் காத்தும் , இறுமாந்தவர்களை  வேரோடு களைந்தும் ஆங்காங்கு  வெற்றிக்கொடிகளை  நாட்டிக்  கீழ்க்கடற்கரையை  யடைந்தான் . அதன்பின்  மகேந்திரநாட்டின்  தலைவனாகிய  கலிங்கனை எதிர்த்துச் சென்றான் .  அக்கலிங்கன்   நீரோட்டத்தில்  வளைந்து கொடுக்கும்  நாணற்புல்லின்  நிலையை  மேற்கொண்டு  மகேந்திர தேயத்திற்றோன்றிய   அளவிறந்த  யானைகளைக்  கையுறையாகக்  கொடுத்து வணங்கினான் .  அதன்பின்  கடற்கரை வழியாகவே  தென்றிசைகளை  வெல்லுதற்குப்  புறப்பட்டான் . அவ்விடத்துக்  காவிரியாற்றைக்  கடந்து சோழராசனை  வென்றான் . பின்னர்  முரளையாற்றின்  கரையை  விரைந்தடைந்து  வணங்கிய  சேரர்களுக்கு  அருள் செய்தான் . பின்னர் எழுவகைப் பிரிவினையுடைய  கோதாவரியைக்  கடந்து  நருமதையாற்றின்   கரையில்  இரண்டு  மூன்று  நாட்கள்  தங்கினான். பின்னர், அதனையுங்  கடந்து  உச்சயினி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டுச்  சென்றான் . சண்டமகாசேனன்  அன்போடு  எதிர்சென்று  நல்வரவேற்க  அவ்வுச்சயினி  நகரத்துட்  புகுந்தான் . அவ்விடத்தில் , தன் நாட்டை  மறக்கச்செய்யும்  மாமன்  வீட்டு  வாழ்க்கை  இன்பத்தை நுகர்ந்து சில நாட்களைப் போக்கினான் .

                அதன்பின்  மேற்றிசையைக்  குறித்துப்  புறப்பட்டுச்சென்று  இலாடதேசத்தரசர்களை  வென்றான் .  பின்னர்  மந்தரமலையைக் கடந்து வடதிசையை யடைந்தான் . அவ்விடத்திற்  சிந்து தேயத்தரசனை இருத்தி இறுமாப்புடைய  மிலேச்சர்களை ஓட்டினான் . பின்னர்ப்  பாரசீகநாட்டை  யடைந்து வணக்கமில்லாத  பாரசீகத்தரசனது தலையைக்  கூரிய  அம்புகளாற்  பிளந்து வீழ்த்தினான் .  பின்னர்  இமயமலையின்  சாரலில்  இருக்கின்ற  ஊணர்களைப்  பணியச்செய்தான் . அதன்பின், காமரூபேசுவரன் என்பான் , வற்சராசனைக்  குடைநிழல்  பெறாத  தலையால் வணங்கி  இறைப்பொருள்  கொடுத்தான் .

                     இவ்வாறு  வற்சராசன் , நிலமுழுதும் வென்று  பதுமாவதியின்  தந்தையாகிய  மகதராசனது தலைநகரை  யடைந்தான் . மகதராசன் , எல்லா  நாட்டினுஞ்  சென்று  தடுக்கப்படாத  பராக்கிரமம்  வாய்க்கப்பெற்று , வாசவதத்தை , பதுமாவதி இவ்விருவர்களோடும்  வருகின்ற  மருமகனைக் கண்டு  மிகவும்  மகிழ்ச்சியடைந்தான் . முன்னர் உவளகத்தில் மறைவாக  இருந்தவளும்  இப்பொழுது வெளிப்படையாக  வருகின்றவளுமாகிய  வாசவதத்தையை  உவளகத்து மகளிர்  அனைவரும்  வியப்புஞ்  சிறப்புமுடையராய்ப்  பார்த்தார்கள் .  அவ்விடத்தில்  மகதராசனால் . விசேட  உபகாரஞ்  செய்யப்பெற்ற  உதடனன்  அங்கிருந்து புறப்பட்டு  இலாவாணகத் தை யடைந்தான் . படைகள்  இளைப்பாறுதற்  பொருட்டுச்  சில  நாள்வரை  அங்க்குத்  தங்கினான் .  பின்னர் யாத்திரையானேர்ந்த  துன்ப  நீங்கிய  சைனியங்களை யழைத்துக்கொண்டு  கெளசாம்பியை  நோக்கிச் சென்றான். வெற்றித் திருவால்  விளங்குகின்ற  வேந்தனை  நேராகத்  தரிசனஞ்  செய்தற்குக்   குதூகல  மிக்க  நகரமாந்தர்களால்  தோரண முதலியவைகளைக்  கொண்டு  அலங்கரிக்கப்பட்டதும்  நாற்புறமும்  உயர்த்தப்பட்ட  கொடிகளையுடையதுமாகிய  கெளசாம்பி  நகரத்துட்  புகுந்தான் . பின்னர்  நகரத்து மக்களாலும்   அமைச்சர்களாலும்   அனுமதி  பெற்று  நன்முகூர்த்தத்தில்  இரத்தின  சிங்காதனத்திவர்ந்து வீற்றிருந்தான் .  அப்பொழுது திக்குவிசயத்தினால்  ஈட்டிய  பொருளனைத்தையும்  அந்தணர்க்கு  வழங்கினான் .  இவ்வாறு  தன்றோள்வலியால்  ஈட்டிய  அரசியற் றிருவினால் விளங்குகின்ற  வற்சராசன்  உருமண்வானிடத்தும், யெளகந்தராயணன்  பாலும்  அரசியற்சுமையனைத்தையும்  வைத்துவிட்டு வாசவதத்தை   பதுமாவதியாகிய  இவ்விருவர்களோடுங்  கூடி  விளையாடித் , தேவர்களும்  விரும்பத்தக்க  இன்பத்தை  நுகர்ந்து , காலங்கழித்து  வந்தான் .

வெண்பா

  ஒற்ற  ரமைச்ச  ருரன்வலியாற்  றிக்கனைத்தும்

         வெற்றிகொடு  மாமன்மார்  மேவிடஞ்சென் – றுற்ற

        நலனுகர்பு  தன்னகரின்  நண்ணினான்  றோளின்

                                வலன்மிகுதார்  வண்மைசெறி  மன் .

            முன்றோன்று  செல்வத்தை  முன்னச்  சிறந்ததுமன்

றன்றோள்  வலியாற்  றருந்திருவே— யென்று

                               கருதி  வினைமுடித்துக்  காண்டகு  பண்டை

                                யரியணைக்க  ணுற்றா  னரசு 

பன்னிரண்டாம்  வகுப்பு

( நரவாகனதத்தன்  பிறப்பு )

               அரசியலில்  கருத்தில்லாத  வற்சராசன்  சிலநேரம்  வசு நேமியாற்றரப் பட்ட  யாழை  வாசித்துக்  காலங்கழிப்பான் .  சில நேரம்  வேட்டையாடி  மனத்தை  மகிழ்விப்பான் .  சிலநேரம்  யாழோடு  ஒன்றுபட்ட  கண்டவிசையாற்  பாடுகின்ற  வாசவதத்தையின்  இசைத்தொழிற்  றிறமையைக்கண்டு  தலையசைத்து  மகிழ்வான் . சிலநேரம்  சுவைபடப்  பேசுந்திறன்  வாய்ந்த  பதுமாவதியோடு  கூடி  இன்புற்று  நெடுநேரத்தை  ஒரு கணமெனக்  கழிப்பான்.

                 பின்னர் , அரசியல்  நினைவை  மறந்து வேட்டை  யாடுதலிற்  பற்றுடையவனாய்  எப்பொழுதும்  காட்டிற்றிரிவானாயினான் . அதனையறிந்த  நாரத முனிவர்  அங்கு  வந்தார் . வற்சராசன்  அந் நாரதமுனிவரைச்  சேய்மைக்கண்ணே கண்டு , விரைந்து இருக்கையினின் றெழுந்து எதிர்கொண்டழைத்தான் . பின்னர்த் தன்  கைகளாற்  கொணர்ந்திடப்பெற்ற  இருக்கையில்  அவரை  யிருக்கச்செய்து  முறைப்படி  உபசரித்தான் .  வணக்கமுடையனாகிய  வற்சராசனாற்  செய்யப்பட்ட  வழிபாட்டை  ஏற்றுக்கொண்ட  நாரத முனிவர் ,பின்வருமாறு  கூறுவாராயினார் . “வேந்த ! நினக்கு  நலமுண்டாதலை  விரும்பிச்  சிறிது உபதேசஞ்  செய்வான் இங்குப்  போந்தேன் . வேட்டையாடுதலில்  உண்டாம்  பேரவா அரசர்களுக்குப்  பெரிதும் ஏதந்தருவதாம் . இதனாற்  பல  அரசர்கள்  துன்பம்  எய்தினர் . நின் முன்னைப்  பிதாமகனாகிய  பாண்டு  என்னும்  பெயரினையுடைய  அரசன் ஒருவன்  இருந்தான் . அவன்  நின்னை யொப்ப  வேட்டையாடுதலில்  மிகப்பற்றுடையனாக  இருந்தான் . வேட்டையாடிக்  காட்டில்  மானுருவத்தோடு  திரிந்த  கிந்தமன்  என்னும்  பெயரினையுடைய  முனிவனைக் கொன்றான் .  அம் முனிவன்  சாபத்தாற்  பாண்டு   காளைப்  பருவத்திலேயே  மரணமெய்தினான் . ஆதலின்  துன்பம்  விளைவிக்கும்  வேட்டை  விருப்பை  விடுப்பாயாக  .வாசவதத்தையோடு  பகவானாகிய  உமாகாந்தனை  வழிபடுவாயாக.  அச்சிவபிரான்  திருவருளாற்  காமதேவன்  கூறாக  ஒரு புதல்வன் நினக்கு  உண்டாவான் .  அவன்  வித்தியாதரச் சக்கரவர்த்தியுமாவான் “  என்று  கூறி  நாரத முனிவர்  வற்சராசன்பால்  விடைபெற்றுச்  சென்றார் .

                     அதன்பின்  வற்சராசன் , வாசவதத்தையோடு  மூன்றிரவு  பட்டினியிருந்து  சிவபெருமானை  ஆராதனை  செய்தான் . சிவபிரான் அவ்விருவர்களுக்குங் கனவிற்றம்  தரிசனங்கொடுத்துப்  பின்வறுமாறு  கட்டளையிட்டருளினார் .  “நுங்கள்  வழிபாட்டான்  மகிழ்ச்சியடைந்தேம் . விரைவிலேயே  காமதேவன்  கூறாகவுள்ள  புதல்வனை  யடைவீர்கள் .   ஆதலின்  நோன்பை  முடித்துக்கொள்வீர்களாக”  என்று  கூறி  மகேசுரர்  மறைந்தார் .  

                      அதன்பின் , விழிப்பெய்திய  வாசவதத்தையும்  வற்சராசனும்  பெருமகிழ்ச்சியடைந்தனர் .  பின்னர்  விதிப்படி  நோன்பை  நிறைவேற்றிக் கொண்டு   உணவுட்கொண்டனர் . சிலநாட்  சென்று  இரவில்  மிகுதுயில்  மேற்கொண்ட  வாசவதத்தையைச் , சடைமுடி  தரித்த  தேவன்  ஒருவன்  அடைந்து  தெய்வ உலகில்  உண்டாகிய  ஒரு பழத்தை அவட்குக்  கொடுத்து அப்பொழுதே  மறைந்தான் . பகவானாகிய  சிவபெருமானே  பழமென்னும்  பொருளாற்  புதல்வனை  யருளினார் என்று  கருதி வற்சராசன் மிக்க மகிழ்ச்சி  யடைந்தான் . வாசவதத்தை கருத்தரித்தாள் . அவள்  முகம்  வெண்ணிறம்  எய்திற்று ; உடலும் மெலிவுற்றது . ஓர்  அமயம்  அவள் தன்னை விண்ணில்  விமானத்தில்  ஏற்றிக்கொண்டு  போவதாகவும்  , கேட்டற் கினிமை யுண்டாம்படி  பாடுகின்ற  வித்தியாதரப்  பெண்கள்  போற்றுவதாகவும்  கனவிற்  கண்டாள் . விழிப்புற்ற  அவள்  அந் நிகழ்ச்சிகளை  நேராக அனுபவிக்க  விரும்பினாள் .  யெளகந்தராயணனும்  தனது  இந்திரசால  விச்சைத்  திறமையால்  அவள் விருப்பத்தை  நிறைவேற்றினான் .  வாசவதத்தையின்  வயிற்றிற்  கருப்பம்  முறையாக  வளர்ந்தது ; அவள்  இடை  பருத்து ; மும்மடிப்பும்  மெல்ல  மெல்ல  மறைந்தது  . அக்கருப்பத்தை  எப்பொழுதுந்  துணைநின்று  சூலபாணியாகிய  சங்கரர்  பாதுகாத்தார் .  

                   பத்தாந்  திங்களில்  வாசவதத்தை  பேறுகாலத்தின்  அணிமையுடை யளாயினாள் . நன்நேரத்தில்  மணிமயமான  விளக்குக்களாலும் , மஞ்சண்  முதலிய  மங்கலப்  பொருள்களாலும் , அணி செய்யப்பட்ட  மகப்பேறும்  இல்லத்துட் புகுந்தாள் . அவ்விடத்தில்  திங்களஞ்  செல்வனைப்போலக்  கண்களுக்கு  இன்பம்  விளைவுக்கும்  புதல்வனைப்  பெற்றாள்  .  அப்பொழுது  உவளகத்திலுள்ள  தோழிமாரனைவரும்  விரைந்து யான்முன்  யான்முன்  என்று  ஒடிவந்து  வற்சராசற்குப்  புதல்வற்பேற்றை  அறிவித்தனர் .  அது கேட்டு  மிகப்  பெருமகிழ்ச்சி  யடைந்த  வற்சராசன்  அத்தோழிமார்க்கு  மிக்க  விலை மதிப்புள்ள  இரத்தினங்களை  வழங்கினான் . பின்னர்  விருப்பத்திற்கு  மேற்பட்ட  பொற்  கொடைகளால்  அந்தணர்களை  மகிழ்வித்தான் .

                      அதன்பின் , அரசியற்  பெருந்திருவை  எய்துதற்குரிய  இலக்கணங்கள்  அமையப்பெற்றதும் , காலைப்பொழுதிற்  றோன்றிய  இளங் கதிரவனாலலர்த்தப்பட்ட  தாமரைப்  பூவைப்  போலத்  திகழ்கின்ற  சிவந்த  அதரங்களையுடையதும்  ஆகிய  தன்  குழந்தையைக்  கண்டான் . கண்டு  உவாமதியைக்கண்ட  பெருங்கடல்  போலத்  தன்னுள்  அளவிறந்த  மகிழ்ச்சியை  அடைந்தான் . பின்னர் , சாந்திகரன்  என்னும்  பெயர்  வாய்ந்த  இவனுடைய  புரோகிதன் புதல்வற்குச்  சாதகன்மம் முதலிய  கிரியைகள்  அனைத்தையும்  நிறைவேற்றினான் .  அப்பொழுது எதிர்பாராமலே  அசரீரிச்சொல்  “வேந்த ! காமதேவன்  கூறாக  அவதரித்த  நினது  இப்புதல்வன்  நரவாகனதத்தன்  என்னும்  பெயரினன்  ஆவான் . இவன் சின்னாளிலே  வித்தியாதரர்களுக்குச்  சக்கரவர்த்தியாவான் “  என்றிவ்வாறு  உண்டாயிற்று  .  அப்பொழுது விண்ணுலகத்தினின்றும்  பூமழை  பொழிந்தது .  தேவதுந்துபி  வாச்சியத்தின்  ஒலி  கேட்கப்பட்டது .  

                       பின்னர்  நகரத்து  மாந்தர் அனைவரும்  அரசனது  புதல்வற் பேற்றுத்  திருவிழாவைக்  கொண்டாடினார்கள் . அவ்வமயத்திற்  கெளசாம்பி நகர  முழுவதும்  திருவிழாப்  பொலிவுடையதாயிற்று  . வற்சராசன்  ஆகாயவாணியாற்   சொல்லப்பட்ட  வண்ணம்  இப்புதல்வற்கு  நரவாகனதத்தன் என்று  பெயரிட்டான் . நரவாகனதத்தன்  முற்பக்கத்துத்  திங்களஞ்  செல்வன்  கலை  போல  மெல்ல  மெல்ல  வளர்ச்சி  யடைந்தான் . அகாரணமாகப்  பற்களின்றித்  தோன்றும்  அவன்  சிரிப்புக்கள்  வற்சராசனை  ஆனந்த  பரவசனாகச்  செய்தன . எல்லா  மக்கள்  கண்களுக்கும்  இன்பம்  விளைக்கின்ற  அப்புதல்வன்  முழந்தாள்களாற்  றவழ்தல்  சாமந்த  அரசர்களுடைய  உள்ளங்களையும்  உவகையுறச்  செய்தது . பின்னர் , தடைப்பட்டுத்  ததும்பி  வருகின்ற  பொருள்  விளக்கமில்லாத  அப்புதல்வனுடைய  மழலைச்சொற்களைக்  கேட்டு  வற்சராசன் பெரிதும் உள்ளமகிழ்பூத்தான் . இதற்கிடையில்  யெளகந்தராயணன்  மருபூதி  என்னும்  பெயரினையுடைய  புதல்வனையடைந்தான் . உருமண்வான்  அரிசிகன்  எனப் பெயரிய  மகனைப் பெற்றான் .  வசந்தகனுக்குத்  தபந்தகன்  என்னுங்  குமாரன்  உண்டாயினான் . இத்தியகன்  என்னும்  பெயரினையுடைய  வாயில்காப்போனுக்குக்  கோமுகன்  எனப் பெயரிய  புதல்வன்  உண்டாயினான் . அதன்பின் , ஓரமயம்  நரவாகனதத்தற்குப்  பகைவரிடத்தினின்றுந்  தீங்கு  விளையுங்கொலோவென்னும்  ஐயத்தால் வற்சராசன்  மிகவும்  கவற்சியடைந்தான் . அதனையறிந்த  யெளகந்தரா யணன்  அவ் வுதயனனை  மறைவிடத்தில்  வைத்து  , “தேவ ! நின்  புதல்வனாகிய   நரவாகனதத்தனைப்  பாதுகாத்தல்  குறித்துச் சிறிதுங்  கவலு தல்  வேண்டா .  பகவானாகிய  அம்மையப்பர் , இப்புதல்வன்  எதிர்காலத்தில்  வித்தியாதரச்  சக்கரவர்த்தியாதலைத்  திருவுளங்கொண்டு  பிறப்பித்தார் .இப்புதல்வற்குத்  தீங்கிழைப்பான்  எண்ணி  முயல்கின்றனர் .ஆதலின்  உண்மைக்  கருணாநிதியாகிய  அப்பகவான்  தம்பகன்  எனப்  பெயரிய  கணத்தலைவனை  இப்புதல்வன்  பாதுகாப்பு  நிமித்தம்  விடுத்துள்ளார் . அத் தம்பகன்  இப் புதல்வனைக்  காத்துக்கொண்டு  இவ்விடத்திலேயே  பிறராற்  காணப்படாமல்  இருக்கின்றான் . இச் செய்தியை  ஓரமயம்  நாரத முனிவர்  என்பால்  வந்து  தெரிவித்தனர் “  என்றிவ்வாறு  கூறினான் .  அது கேட்ட  வற்சராசன்  கவலுதல்  ஒழிந்தான் .   

                    இங்ஙனம்  உதயனனால்  வளர்க்கப்பட்டுப்  பூருவபக்கத்துச்  சந்திரகலைபோல  மெல்ல மெல்ல  வளர்ச்சி  யெய்துகின்ற  உறுப்புக்களையுடைய   நரவாகனதத்தன்  உரிய  காலங்களில்  செளளம் உபயநயனம் முதலிய  கிரியைகள்  செய்விக்கப்பெற்றுப்  புனிதனாயினான் . தன்னோடு  ஒத்த  பருவத்தினராகிய  மந்திரி குமாரர்களோடு  கூடி  எல்லாக்  கலைகளையும்  பயின்றான் . பணிவு  முதலிய  உயர்  குணங்களால்  மிகவும்  பெருமையுற்று  விளங்கும்  நரவாகனதத்தன்  முறையே  எல்லாக்  கலைகளிலும்  திறமை யெய்தினான் .  அதன்பின்  பாலப்  பருவங்  கடந்த  அந்  நரவாகனதத்தற்கு  மணஞ்  செய்தற்குரிய  காலம் வந்ததாக  உதயனன்  எண்ணினான் .

வெண்பா

        எப்பொருளுந்  தானா  மிறைவன்  றிருவருளா

னற்பொருளாஞ்  சேய்மணியை  நண்ணினான்  — மெய்ப்பொருள்

          கொள்ளு  மறிஞனெனக்  கொண்டான்  பெருமகிழ்ச்சி

           வள்ள  லுதயனனா   மன்

                                                                 ——————-

பதின்மூன்றாம்  வகுப்பு

(கலிங்கசேனையின்  வரலாறு)

               விசும்பினை  யளாவிய  மேனில  இல்லங்கள்  சூழ்ந்த  தக்க  சிலையெனப்  பெயரிய  நகரம்  ஒன்றிருந்தது . அந் நகரின்கண், கலிங்கதத்தன்  எனப் பெயரிய  அரசன்  ஒருவன்  இருந்தான் . அவற்குத்   தாரதத்தை  என்னும்  பெயரினை  யுடையாள்  பெருந்தேவி  யாயினாள் . அவ்விருவர்க்கும்  நெடுங்காலம்  மகப்பே றிலதாயிற்று  . அதனால்  மிகவும் துன்ப  மெய்திய  கலிங்கதத்தன்  அரிதிற்  காலங்  கழித்துக்  கொண்டிருந்தான்  இதற்கிடையில்  உம்ப  ருலகத்தில்  ஒரு  பெருந்  திருவழா  நிகழ்ந்தது .  அப்பொழுது  அரமகளிர்  அனைவரும்  ஆடுதற் பொருட்டு  ஒன்று  கூடினர் . அவ் அரமகளிருள்  ஒருத்தியாகிய  சுரபிதத்தை  மாத்திரம்  அங்கு  வாராமல்  தன்  விருப்பின்  வண்ணம்  நந்தவனத்தில் ஒரு  வித்தியாதரனோடு  கூடி  இன்ப  விளையாடல்களைச் செய்துகொண்டிருந்தாள் . அதனை யறிந்த தேவேந்திரன்  அவளைத்  “தீவினையாட்டி ! நீ  மனித உலகத்தை  அடைவாயாக”  என்று  சபித்தான் . அச் சாபத்தை  யறிந்த  அவள்  விரைந்து வந்து தேவேந்திரனுடைய  திருவடிகளில்  வீழ்ந்து  “தேவ ! என்  குற்றத்தைப்  பொருத்தருளல்  வேண்டும்”  என்று  வேண்டினாள் .  தேவேந்திரன்  கருணையுடையனாய்  “நீ  ஒரு  பெண்  மகவை  ஈன்றபின்  மீண்டும்  இவ்வுலகை  யடையக்  கடவாய்”  என்று  அருள்  செய்தான் .  அச் சுரபிதத்தை  தாரதத்தையின் வயிற்றிற்  கருவுருவாகக்  புகுந்தாள்  .

                   அதன்பின் , ஒருநாள் நள்ளிரவில்  தாரதத்தை விசும்பினின்றும்  வீழ்ந்த ஒளிப்பிழம்பு  தன் வயிற்றுட்  புகுந்ததாகக்  கனவு  கண்டாள் . காலைப்பொழுதில்  விழித்து  அக்கனவைத்  தன்  தலைவற்கு  அறிவித்தாள் . அவன்  அக்கனவைக்  கேட்டு மிகவும்  மகிழ்ச்சி  யெய்தினான் .  அப்பொழுதே  தாரதத்தை  கருத்தரித்தாள் .  பத்தாந்  திங்களில்  மின்னற் கொடியை யொத்துத்  திகழும்  பெண்  மகவை ஈன்றாள் .  கூதிர்காலத்துத்  திங்கண்மண்டிலத்தைப்  போல  மக்கள்  எல்லோருடைய  கண்களுக்கும்  இன்பத்தைச்  செய்கின்ற  அப்பெண்மகவைக்  கண்டு  பெரிதும்  இன்புற்ற  கலிங்கதத்தன் கலிங்கசேனையென்னும்  பெயரையிட்டு  அழைத்தான் .  முற்பக்கத்துத்  திங்களஞ் செல்வன் கலை போல்  நாடோறும்  வளர்ச்சி  யெய்துகின்ற  அக்கலிங்கசேனை  இல்லத்தின்  முற்றங்களிலும்  மேனிலங்களிலும்  உய்யானங்களிலும்  விளையாடல்  புரிந்து முறையே  பாலப்  பருவங்  கடக்கப்  பெற்றாள் . 

                      அதன்பின்  ஒரமயம்  விசும்பில்  தெய்வ  ஊர்தியிற்  போக்கு வரவு  புரிகின்றவளும்  மாயாசுரனுடைய  மகளுமாகிய  சோமப்பிரபை  என்பாள்  அரண்மனையின்  மேனிலத்தில்  தோழிகளோடு  விளையாடல்  புரியும்  கலிங்கசேனையைக்  கண்டாள் . அக்கலிங்கசேனையின்  தெய்வீகத்தன்மை  வாய்ந்த  எழில்  நலத்தை  நோக்கிப்  பின்வருமாறு  சிந்திக்கலாயினாள் .  “ஆ ! இப்பெண்மணியின்  எழில்  நலம்  இந் நிலவுலகத்தில்  எய்தற்கரியது . இவள்  தெய்வமகளோ !  அன்றி  நாககன்னிகையோ !  கண்ணெதிரிற்  போந்த  இலக்குமிதேவியோ !  ஏதோ  ஒரு  சாபப்பிழையால்  நிலவுலகத்தையடைந்த  இவள்  உறுதியாக  ஒரு  தெய்வப்பெண்ணாக  இருத்தல்  வேண்டும்  .  இன்னும்  இவளைப்பார்த்த  அளவினானே  என்னுள்ளம்  மிகவும்  இன்புறுகின்றதா கலின்  இவள்  முற்பிறப்பில்  என்  அன்பிற்குரிய  தோழியாந்தன்மையையும்  எய்தியிருத்தல்  கூடும் .  ஆதலின்  இவளோடு  நட்புரிமையை  மேற்கொள்ளல்  வேண்டும் .  விரைந்து  இவள்  பக்கல்  அணுகுவேனாயின்  இவள் அச்சம் எய்துவாள் “   என்றிவ்வாறு  உள்ளத்திற்கருதி  அச்சோமப்பிரபை  மெல்ல  மெல்ல  விமானத்தினின்றும்  இறங்கி  மனிதப் பெண்ணுருவம்  தாங்கிக்  கலிங்கசேனையின்  பக்கல்  எய்தினாள் .  கலிங்கசேனையும்  அச்சோமப்பிரபைக்  கண்டு   “ஆ !  ஈதென்னை  வியப்பு !  இம்மாநுடப்பெண்  இவ்விடத்தை  எவ்வாறடைந்தாள்? “    என்று கூறி  விரைந்தெழுந்து  எதிர்சென்று  வருக வருக வென்று நீட்டிய  கையினை  யுடையவளாய்  அவளைத்  தழீஇக் கொண்டாள் . பின்னர் , தானே  விரைந்தோடி  இருக்கை  கொணர்ந்தாள் .அவளை இருக்கையிலிருத்தி  அவளுடைய  பெயர்  இடம்  முதலியவற்றை  வினவினாள் . அதன்பின்  அவ்விருவரும்  தம்முள்  உரையாடினர்  .  அதனால்  அவ்விருவர்க்கும்  நெருங்கிய  நட்புரிமை  யுண்டாயிற்று .  சோமப்பிரபை  அவ்விடத்திற்  சிறிது  நேரம்  இருந்து  “தோழீ!  கலிங்கசேனே  !  என்  இருப்பிடம்  இங்கிருந்து அறுபதுயோசனை  தூரத்திற்கப்பாலுள்ளது . கதிரவனும்  அத்தகிரியை  யடைகின்றான் .  ஆதலின்  எனக்கு  விடை யருள்வாயாக “  என்று  கூறிவிட்டு  எழுந்து  விமானத்திலேறிப்  போயினாள் .

                       சோமப்பிரபை  சென்ற  வழியையே  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்க்கின்ற  கலிங்கசேனை  விமானம்  தன்கட்  புலன் கடந்தமை யுணர்ந்து ,  “ஆ ! தெய்வ  மகளோடு  எனக்கு  நட்புரிமையுண்டாயிற்றே .  ஈதென்னை  வியப்பு !”   என்று  கூறி  அவ்வியப்பினாற்  பரவசமாயினாள் . அதன்பின் சோமப்பிரபையை  நினைவுட்  கொண்டே  இரவு  முழுதும்  கழித்தாள் . பிற்றைநாட்  காலைப்பொழுதில்  மீண்டும்  சோமப்பிரபை  கலிங்கசேனையின் பக்கலை  எய்தினாள் . எய்தி  மரத்தான்  ஆக்கப்பட்ட னவும்   வியக்கத்   தக்கனவுமாகிய  பற்பல  பாவைகள்  நிறைந்த  பேழை  ஒன்றனைக்  கலிங்கசேனைக்குக்  கொடுத்தாள் .  கலிங்கசேனை , “இப்பேழையில்  யாதுள்ளது .? “  என்று  கேட்டாள் . சோமப்பியை  பேழையைத்  திறந்து  காட்டினாள் .   அதன்கட்  சில  பாவைகள்  மலர்களான்  மாலை  தொடுத்தன ;  சில  பாவைகள்  பானீயங் (குடித்தற்குரிய  நீர்  முதலியன )  கொணர்ந்தன .; சில  ஆடின ;  சில  பாடின ; சில  வீணை  வாசித்தன .   இவ்வாறு  பற்பல  விதங்களாக  அமைந்த  பாவைகளைக்  கண்டு  கலிங்கசேனை  தன்  மனத்தில்  அளவிடற்கரிய  ஆனந்தம்  எய்தினாள் . பின்னர்ச்  சோமப்பிரபை  கலிங்கசேனைக்குத்  தெரிவித்து  விட்டுத்  தன் இருப்பிடத்தைக்  குறித்துப்  போயினாள் .  இவ்வாறு  சோமப்பிரபை  மீண்டு  மீண்டுங்  கலிங்கசேனையின்  பக்கல்  போக்கு வரவு  புரிபவளாயினாள் .  

                          பின்  ஓரமயம்  கலிங்கசேனை  தன்பால் எய்திய  சோமப்பிரபையை  நோக்கி ,  “தோழீ ! என்னுள்ளத்தோடொத்த  நின்பால் ஒரு மறைபொருளைப் பற்றித்  தெரிவித்துக்  கொள்ளுதற்கு  விரும்புகின்றேன் . மணஞ்செய்தற்குரிய  பருவம்  வாய்ந்த என்னை  அரசர் பலர் விரும்புகின் றனர் .  தந்தையோ  என்னைச்  சிராவத்தி  என்னும்  நாட்டின்  தலைவனாகிய  பிரசேனசித்து  என்னும்  பெயரினையுடைய  அரசர்க்கு  கொடுக்க  விரும்புகின்றார் . இஃது  என்  அன்னையாற்  கூறப்பட்டது ; அப்பிரசேனசித்துவை   நீ  முன்னர்க்  கண்டதுண்டா ?  அங்ஙனமாயிற்  கூறுவாயாக .  அவன்  எத்தகையன் ?  அவன்  உருவம்  எத்தகைத்து ?”  என்றிவ்வாறு  கூறினாள் .  அதனைக்  கேட்ட  சோமப்பிரபை  கைகளாற்  செவியைப்  பொத்திக்கொண்டு  “தீவினை  யொழிக ;  அமங்கலம்  நீங்குக “  என்று  கூறிக்  கண்களினின்றும்  மிகவும்  நீரை  ஒழுக்கினாள் . கலிங்கசேனை  அவளை  நோக்கி , “இங்ஙனம்  துன்புறுதற்குக்  காரணம்  என்னை?”  என்று  கேட்டாள் .  சோமப்பிரபை  கலிங்கசேனையை  நோக்கி  , “தோழீ !  மணமகன்  இலக்கணங்களாக  ஆராயப்படுவன  பருவம் , குலம் , சீலம் , கல்வி ,உருவம்  என்னும்  இவை  முதலிய  பலவாம் .  அவற்றுட்  பருவமே  சிறந்ததாகும்  .  சிராவத்தி  நாட்டின்  தலைவனாகிய  பிரசேனசித்து என்பான்   குலம் , சீலம் , கல்வி , உருவம்  என்னும்  இவைகள்  நிரம்பப்  பெற்றவனாயினும்  யாண்டு  முதிர்ந்தவனாவான் .  யாண்டு  முதிர்ந்தவன்பாற்  குலமுதலியவற்றால்  எய்தக்கடவ  பயன்  யாதுள்ளது .? ஆதலின் , அவன்  நினக்கு  ஒத்த  மணமகன்  ஆகான் .  கெளசாம்பி  என்னும்  தலைநகரில்  வாழ்கின்ற  வற்ச  தேயத்தரசனாகிய   உதயனனோ   நினக்கியைந்த  மணமகனாவான் . அவனும்  நின்னை  மிக்க வனப்புடையவள் என்று  கேட்டிருக்கின்றான் . ஆதலின்  நின்பாற்  சிறந்த  காதற்கிழமை  பூண்டுளான் .  அங்ஙனமாயினும்  அவர்க்கு  வாசவதத்தை  யென்னும்  பெயரினையுடைய  பெருந் தேவி ஒருத்தி யுள்ளாள் . அவள்பால்  அவன்  மிகப் பெரும் காதலும்  மதிப்பும்  உடையான் . அவட்கு  மனக்கலக்கம்  உண்டாகுமென்னும்  அச்சத்தால் நின்னை  வேண்டுகின்றானல்லன்”  என்றிவ்வாறு  கூறினாள் .

                  இங்ஙனங்  கூறக்கேட்ட  கலிங்கசேனை  சோமப் பிரபையை நோக்கி, “என்  அன்பிற்குரிய  தோழீ ! வற்சதேயத்தரசன்   என்னை  மணஞ்  செய்து  கோடற்கரிய  உபாயத்தை  ஆராய்தல் வேண்டும் . அன்றி , வாணாசுரன்  புதல்வியாகிய  உடையின்  பொருட்டு  அநிருத்தனைச்  சித்திரலேகை  கொணர்ந்தாங்கு  நீயே  அவ் உதயனனை இங்குக்  கொண்டுவரல் வேண்டும்”  என்றிவ்வாறு  கூறினாள் . பின்னர்ச்  சோமப்பிரபை , “அரசுப்பெண்ணாகிய  சித்திரலேகை  என்பாள்  தனக்கு  உரியனல்லாத  மற்றோராடவனை  தீண்டுதன்  முதலிய  செயல்களைச்  செய்தாள் . யான்  இத்தகைய  செயலை  எங்ஙனம்  செய்வல்?  இனி  ஒன்று  செய்வேன்  .  நீ  எனது  இவ்விமானத்தில்  ஏறிக்கொள்ளல் வேண்டும் .  முதலிற்  பிரசேனசித்துவை  நினக்குக்  காட்டி  அதன்பின்  வற்சதேயத்தரசன் பக்கல்  நின்னைச்  சேர்ப்பேன் .  ஆதலின், ஆடை அணிகலன்கள்  எல்லாவற்றையும்  எடுத்துக்கொண்டு  புறப்படுக” என்று சொல்லினாள் . கலிங்கசேனை  “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டுத்  தாய்  தந்தையர்க்குங்  கூறாமல் , குலவொழுக்கத்தையும்  பொருட்படுத்தாமல்  உலகங் கூறும்  பழிச்சொல்லையும்  புறக்கணித்து , ஆடை  அணிகலன்  பொருள்  எல்லாவற்றையும்  எடுத்துக்கொண்டு  சோமப்பிரபையோடு  விமானத்திலேறிப்  புறப்பட்டாள் .  காமநோய்  வயப்பட்டார்  வரக்கடவ  நன்மையையாதல்    தீமையையாதல்  நோக்குவாரல்லர்  .  தாம்  புரியுஞ்செயல்  நல்லதாயினும்  தீயதாயினும்  அதனை  ஆராயாமல்  துணிந்துசெய்யும்  இயல்பினரன்றே !

                 அதன்பின் , சோமப்பிரபை  கலிங்கசேனையை  விமானத்திலேற்றிக்  கொண்டு  சிராவத்தி  நாட்டை  அடைந்தாள் . அங்கே  நரை திரை மிக்க உடலினையுடைய  பிரசேனசித்து  என்னும்  அரசனைக்  காட்டினாள் . அதன்பின்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்து  அந்நகரத்தின்   புறத்தேயுள்ள  பூஞ்சோலையில்  விளையாடிக்கொண்டிருக்கும்  காமனை யொத்த  உருவம்  வாய்ந்த  வற்சதேயத்தரசனைக்  காட்டினாள் . அவ் உதயனனையே  நெடு  நேரம்  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்க்கின்ற  கலிங்கசேனை  ,  “தோழீ ! சோமப்பிரபே !  இப்பொழுதே  என்னை  இவனோடு  கூட்டுவிப்பாயாக .  யான்  இவனை  யின்றி  ஒரு  கணப்பொழுதேனும்  உயிர்  வாழேன் “  என்று  கூறினாள். சோமப்பிரபை , “தோழீ ! இப்பொழுது  தீநிமித்தங்கள்   பிற  காணப்படு கின்றன . ஆதலின் , இப் பூஞ்சோலையிலேயே  பலர்  அறியாவாறு  சிறிது நேரம்  இருப்பாயாக .  யான்  எனது இருப்பிடம்  எய்தி விரைந்து திரும்பி  வருவேன் “ என்று  கூறிப்  போயினாள் . வற்சதேயத்தரசன்  அப்  பூஞ்சோலைக் கண்ணே  நெடு நேரம்  விளையாடல்  செய்து  பின்  ஏவலாளரோடு  தன்  இருப்பிடம்  எய்தினான் . பின்னர்க்  கலிங்கசேனை  சகுனநிலை  யுணர்ந்த  சோமப்பிரபையால்  தடுக்கப்பட்டும்  காமவெறியின்  இறுதி  எல்லைக்கண்  இவர்ந்து  வற்சநாயகன்பால்  யாண்டு  முதிர்ந்த  தூதன்  ஒருவனை  ஏவினாள். அத் தூதன்  வாயில்  காப்பவனால்  விடப்பட்டு , உட்புகுந்து  வற்சதேயத்தரசனை  வணங்கி , “தேவ ! தக்கசிலை  என்னும்  நகரத்திலுள்ள  கலிங்கதத்தன்  என்னும்  அரசற்குக்  கலிங்கசேனை  என்னும்  புதல்வி  ஒருத்தி  யுள்ளாள் .  அவள்  மங்கைப்  பருவமுடையளாய்  அரசர்  பலரால்  வேண்டப்பட்டும்  நின்னையே  தனக்கு  ஒத்த  மணமகனாகத்  துணிந்துளாள் .  அன்னாள்  இப்பொழுது  சுற்றத்தார்  எல்லோரையும்  விட்டுத்  தன்  அன்புரிமைத்  தோழியும்  மாயாசுரன்  மகளும்  நளகூபரன்  மனைவியுமாகிய  சோமப்பிரபையோடு  கூடி  விமானத்திலேறி  நின் உய்யான  வனத்தில்  வந்தி ருக்கின்றாள் . இந் நிகழ்ச்சியை  யறிவித்தற் பொருட்டுத்  தேவரீர்  பக்கல்  அவள்  என்னை  விடுத்தாள் .  ஆதலின்  அவளை  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்.  திங்களும்   நிலவும்  போன்ற  நுங்கள்  இருவீரது  சேர்க்கை  மிகவும்  சிறந்து  விளங்கும் “  என்றிவ்வாறு  தெரிவித்தான் . இங்ஙனங்  கூறிய  யாண்டு  முதிர்ந்த  தூதனுடைய  சொற்களை  வற்சதேயத்தரசன்  கேட்டு  மிக்க  மகிழ்ச்சியுடையனாய் , “அங்ஙனமேயாக”  என்று  அத்தூதனுடைய  மொழிகளை  மகிழ்ந்தேற்று  ஆடை  அணிகலன்  முதலிய  பரிசில்களால் அவனை  உவப்பித்தான் . பின்னர்  அப்பொழுதே  அமைச்சருள்  தலைவனாகிய  யெளகந்தராயணனை  யழைத்து  எல்லாவற்றையும்  அறிவித்தான் .  அவ் அமைச்சன்  அரசற்கு  நலத்தை  விரும்புகின்றவனாய்ப்  பின்வருமாறு  சிறிது  நேரம்  சிந்திக்கலாயினான் .

                    “கலிங்கசேனையோ  உருவச்சிறப்பாற்  புகழ்வாய்ந்தவள் .மூவுலகத்திலும்  அவளுக்கு  ஒப்பான  அழகு  வாய்ந்தவள்  வேறொருத்தியுமிலள் . அமரரும்  அவளையடைய  விரும்புகின்றனர் .  நம்  வற்ச தேயத்தரசன்  அவள  மணம்  புரிந்து கொள்ளுவானாயின்  ,  பிறவெல்லாவற்றையும்  துறந்து அவளிடத்திலேயே  காதலுடையனாவன் . அங்ஙனமாயின்  வாசவதத்தை  நெடுநாள்  உயிர்  தாங்கியிராள் .  புதல்வனாகிய  நரவாகனதத்தற்கும்  தீங்கு  விளையும் . பதுமாவதியின்  வாழ்க்கையும்  ஐயப்பாட்டிற்குரியதாகும் .  சண்டமகாசேனனும் மகத  தேயத் தரசனும்  தம்  புதல்வியர்க்கு  நேருங்  கேட்டினால்  தம்  உயிரை  விடுவர் .அன்றி  வற்சராசன்மாட்டுப்  பகைமை  மேற்கொள்வர் .  ஆகவே  கலிங்கசேனையின்  மணத்தால் எல்லோருக்கும்  அழிவு  உண்டாம் .  அவன்  மன்றலை  அறவே  விலக்குதலும்  பொருத்தமன்று . அங்ஙனம்  விலக்கப்படின்  அரசற்குக்  காமவேதனை  மிகும் . ஆதலின் , காலந்  தாழ்த்தலே  இப்பொழுது செய்யத்தக்கதாகும் “  என்றிவை  முதலியவற்றைப்  பலபடியாக  ஆராய்ந்து  யெளகந்தராயணன்  வற்சராசனை  நோக்கி  “அரசே !  கலிங்கசேனை  நின்னையடையத்  தானே  வேண்டுகின்றமையால்  நீ  பாக்கியவானா கின்றாய் . கலிங்கதத்தனும்  நினக்கு  நண்பனாவான் .  ஆதலின் , நன் முகூர்த்தத்தில்  கலிங்கசேனையின்  மணம்  நிறைவேற்றத்தக்கது . விவாகத்திர்குரிய  சிறந்த  இலக்கினத்தைச்  சோதிடர்களைக்  கேட்டுத்  தீர்மானிப்பேன் .   அக் கலிங்கசேனையின்  செல்வச்  சிறப்பிற்கேற்றவாறு  இருப்பிடத்தையும்  மிகவுயர்ந்த  ஆடை  அணிகலன்களையும்  அளித்த்ல் வேண்டும் . அவட்குப்  பணி செய்தற் பொருட்டுப்  பணிப்பெண்களையும்  ஏவலாளரையும்  நியமித்தல் வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினான் .  வற்சராசனும்  யெளகந்தராயணன்  கூறியாங்குச்  செய்தான் . விரைவில்  தன்  விருப்பம்  நிறைவேறி  விடுமென்று  மகிழ்கூர்ந்தான் .

                   யெளகந்தராயணன்  சோதிடர்  எல்லோரையும்  அழைந்து  “வற்சராசனது  நலத்தின் பொருட்டு  நீவிர்  துணை செய்தல் வேண்டும் . அவன்  “கலிங்கசேனையை  மணஞ்  செய்து  கோடற்கேற்ற  நல்ல  இலக்கினத்தைத்  துணிவீர்களாக “  என்று  நும்மை  நோக்கிக்  கூறுவான் . அப்பொழுது  நீவிர் , “மணத்திற்கியைந்த  நன்முகூர்த்தம்  ஆறு  திங்களுக்கிடையில்  இல்லை “  என்று  கூறல்  வேண்டும்  .  இன்னோரன்ன  பொய்யுரையால்  தீங்கு  நேருமென்றெண்ண  வேண்டா.  “பொய்மையும்  வாய்மையிடத்த  புரைதீர்த்த, நன்மை  பயக்குமெனின் “  என்பது பொய்யில்  புலவர்  பொருளுரையாகும் “  என்றிவ்வாறு  கூறினான் .  அக் கணிகளும் (சோதிடர்)  அங்ஙனமேயாகவென்றுடன்பட்டனர் . அதன்பின் ,  பிற்றை  நாளில்  யெளகந்தராயணன்  அரசவைக்கட்  சென்று  அரசனுடைய  தூதர்களால்  ஒளிநூல் (சோதிட நூல்) வல்லார்  எல்லோரையும்  அழைப்பித்தான் . அவரும்  வந்தனர் .  யெளகந்தராயணன்  அரசன்  முன்னிலையில்  அவர்களை  நோக்கி, “விவாக நற்செயற்கு  ஏற்ற  முகூர்த்தத்தை  விரைவிற்  பாருங்கள் “  என்றிங்ங னங்  கூறினான் . அச் சோதிடர்  முன்னரே  செய்து  கொள்ளப்பட்ட  சங்கேதத்தை  மனத்தில்  வைத்துக்கொண்டு ,  “ஆறு திங்கள்  சென்றபின்  ஏழாம்  திங்களில்  நல்ல  இலக்கினங்  காணப்படுகின்றது .”  என்றிங்ஙனங்  கூறினர் . 

                  அதுகேட்டு  யெளகந்தராயணன்  பொய்மையாகச்  சினந்து , “அறிவிலாத  இவர்க்கு  ஒன்றும்  தெரியாது  .  மற்றொரு  பெரிய  பண்டிதன்  இருக்கின்றான் . எவன்  தங்களால்  அடிக்கடி  பெருமைப்  படுத்தப்பட்டு ளானோ  அவன்  இப்பொழுது  இங்கு  வரவில்லை “  என்றிங்ஙனஞ்  சொல்லினான் . அரசனும் , “ஆங்ஙனமேயாக”  வெனத்  தூதர்களால்  அப் பண்டிதனை  அழைப்பித்தான் . அப்பண்டிதனும்  யெளகந்தராயணால்  முன்னரே  சங்கேதஞ்  செய்யப்பட்டவனாதலின்  அங்ஙனமெ  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன்  மனவருத்தமுடையவன் போலாகி ,  “தேவ ! இனி  இதன்கட்   செயற்பாலது  யாது ? “  என்று  கேட்டான் .  அரசன்  கலிங்கசேனையின்  கருத்தென்னை  என்று  அறிதல்  வேண்டும்  என்று  சொல்லினான் . யெளகந்தராயணன் ,  “அங்ஙனமேயாக”  வென்று  கூறி  இரண்டு  சோதிடர்களை  யழைத்துக்கொண்டு  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்தான் . அடைந்து  அவளை  நோக்கி  “தேவி ! வற்சராசன்  நின்னை  மணஞ்  செய்து  கோடற்குப்  பரபரப்புடையனாக  இருக்கின்றான் .  நல்ல  இலக்கினத்தைத்  துணிதற்பொருட்டு  இரண்டு  சோதிடர்களை  யழைத்து வந்தேன் .  நின் பிறந்த  நாளைக் (நட்சத்திரம்)  கூறுவாயாக .”  என்றிவ்வாறு  கூறினான் . அவளுடைய  ஏவன்  மகளிர்  பிறந்த  நாளைக் கூறினர் . அவ்விரு  கணிகளும்  பொய்மையாகக்  கணனஞ்  செய்து முன் போலவே  கூறினர் .  அது  கேட்டுக்  கலிங்கசேனை  கவலைக் கடலுண்  மூழ்கினாள் . அப்பொழுது  அவளுடைய  வயோதிக  தூதன் , “நல்ல  இலக்கினங்  காண்டல்  இன்றியமையாததொன்றே .  காலமே  நன்மை  தீமை  எல்லாவற்றிற்குங்  காரணமாகும் .  நன்முகூர்த்தமே  மணமக்களுக்கு  வருங்காலத்தில்  நலந்தருவதாகும் . அஃது  அணிமையிலாயினுமாக ; சேய்மையிலாயினுமாக ;  எவ்வாற்றானும்  எதிர்பார்க்கத்தக்கதே  “  என்றிங்ஙனங்  கூறினான் . யெளகந்தராயணனும் ,  “தேவி ! விலக்கப்பட்ட  நாட்களில்  நற்கன்மங்கள்  செய்தலாகாது .  அங்ஙனஞ்  செய்யப்படின் , அவை  பின்னர்ப்  பெருந்துன்பத்தை  விளைவிப்பனவாம் .  ஆதலின் , நல்லிலக்கினத்தை யாராய்ந்து  காண்டலே  நலம் “  என்று  கூறினான் . அது கேட்டு  கலிங்கசேனை, “காலம்  விலக்கற் கரியது “  என்று  துணிந்து ,  “நீவிர்  எல்லீரும்  எங்ஙனம்  அறிகின்றீர்களோ  அங்ஙனமே  செய்வீர்களாக “   என்று  சொல்லினாள் . யெளகந்தராயணன்  வற்சராசன்  பக்கல்  அணுகிக்  காலத்தை எதிர்பார்த்தலே  கலிங்கசேனையின்  கருத்தென்பதை  அவற்கு  எடுத்துக்  கூறிவிட்டுத்  தன்  இல்லத்தை  யடைந்தான் .   

             இங்ஙனம்  தன்  அறிவுவன்மையால்  கலிங்கசேனையின்  மன்றற்கு  இடையூறு  விளைத்து  எஞ்சிய  காரியத்தை  நிறைவேற்றுதற்பொருட்டுத்  தன்  நாட்டோனாகிய  யோகேசுவரன்  என்னும்  பெயரினையுடைய  பிரமராக்கதனை  நினைந்தான் . நினைந்த  அளவில்  நெருங்கி  வந்த  அவ்  யோகேசுவரன்   யெளகந்தராயணனது  முன்னிலையில்  நின்று  ,  “என்னால் ஆகவேண்டிய  காரியம்  யாது ?”   என்று  கேட்டான் .  யெளகந்தராயணன் , வற்சராசற்குக்  கேடு  விளைவிக்கத்தக்க   கலிங்கசேனையைப்  பற்றிய  நிகழ்ச்சிகளெல்லாவற்றையும்  அவற்கு  அறிவித்து  மீண்டும் ,  “நண்ப !  கலிங்கசேனையின்   விவாக  நிகழ்ச்சியில்  யான்  காலந்தாழ்த்தலைச்  செய்தேன் .  இனிக்  கலிங்கசேனையின்  பக்கலில்  நீ  மறைவாக  இருத்தல்  வேண்டும் . அவளது  ஒழுக்கத்தையும்  திறமையுடன்  ஆராய்தல்  வேண்டும் .  அவள்  மூவுலகத்திலும்  எய்தற்கரிய  எழில்  நலத்தோடு  விளங்குகின்றாள் .  அவளைச்  சித்தர்களும்  வித்தியாதரர்களும்  நிச்சயமாக  விரும்புவர் . தாம்  விருப்பியவாறு  உருக்கொள்ளும்   இயல்பினாராகிய  அவர்கள்  வேற்றுருக்  கொண்டு  அவளோடு  கூடுவர் . அதனையும்  நீ  விழிப்புடையனாயிருந்து  அறிதல்  வேண்டும் .  வேற்றுருக்கொள்வோர்   துயிலுங்கால்  தமக்குரிய  இயற்கை  யுருவத்தையே  எய்துவர் . நீ  அவளுடைய  ஒழுக்கம்  எல்லாவற்றையும்  சோர்விலனாயிருந்து அறிதல்  வேண்டும் . அதனால்  வற்சராசற்கு  அவள்பால்  விருப்பமின்மையை  விளைவித்தல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினான் .   

               அது கேட்டுப்  பிரமராக்கதன்  ,  “இத்துணைச்  சிரமம்  எற்றிற்கு  ?  ஒழுக்க நெறியின்  வழுவிய  அவளை  உடனே  கொன்று  விடுவேன் “  என்று  கூறினான் .  யெளகந்தராயணன் ,  “அங்ஙனஞ்  செய்தலாகாது ;  பெரும்  பாவம்  விளையும் “  என்று  மறுத்துரைத்தான் . .  யோகேசுவரன் ,  “அங்ஙனமேயாக”  வென்று  அவன்  சொல்லையுடன்பட்டு  மறைந்தொழுகுதற்குரிய  விச்சையால்  மறைந்து கலிங்கசேனையின்  இல்லத்துட்புகுந்தான் , புகுந்து  அவளையே  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்த்துக்கொண்டிருந்தான் . இதற்கிடையில்  வாசவதத்தை  கலிங்கசேனையின்மாட்டு  அரசன்  மேற்கொண்ட  காதற்கிழமையை யறிந்து, மிகவும்  மனக்கலக்கமுற்றாள் . யெளகந்த ராயணன்  அவ் வாசவதத்தையின்பாற்  சென்று , “அரசி ! இந் நிகழ்ச்சியை  முன்னிட்டுச்  சிறிதும்  மனக்கலக்கமுறவேண்டா .  என்னுயிருள்ள  காலம்  வரையும்  பதுமாவதியை யன்றி  வேறொருத்தி   நினக்குச்  சபத்தினியாகாள் . இஃதுண்மை  .  ஆயினும்  நின்னாற்  செய்யத்தக்க  ஒரு  காரியத்தைப்பற்றிக்  கூறுவேன் . அதனை  அங்கீகரிப்பாயாக .  அரசன்  கலிங்கசேனையின்பால்  தனக்குள்ள  அவாவை  நின்பால்  தெரிவிப்பான் .  அப்பொழுது  அவன்  விருப்பத்திற்கு  இயைந்தவள்  போலாகி  அவன்பால் ,  “ஐய ! இது  தக்கதே  கலிங்கதத்தனது  இராச்சியமும்  நின் கைவயப்படும் .  ஆதலின், அவசியம் கலிங்கசேனையை  மணஞ்செய்துகொள்ளவேண்டும் “  என்றிங்ஙனங் கூறு வாயாக . .  இங்ஙனம்  கூறின்  அவன்  நின்பால்  முன்னையிலும்  மிகுதியான  மதிப்பு  வைத்தொழுகுவான் .  தன்  விருப்பத்திற்கு  இடையூறு இல்லையென்று  கருதிக்  கலிங்கசேனையின்  மன்றலில்  தளர்ந்த  முயற்சியுடையவனாவான் . அன்றித்தன்  விருப்பம்  தடைப்படுமாயின்  அடையவேண்டுமென்னும்  அவா மிகுதி  யுடையவனாவான் .  பதுமாவதிக்கும்  இச் செய்தியைத்  தெரிவிப்பா யாக “ என்றிவ்வாறு  கூறித் தேற்றினான் . வாசவதத்தையும் , “அங்ஙனமேயாக வென்றுடன்பட்டாள் .  

                        அதன்பின் , ஓரமயம்  சோமப்பிரபை  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்தாள். அப்பொழுது  தன்சொல்லைக்  கடந்து  வற்சராசனைக்குறித்துத்  தூது   போக்கியதும்  ,  சோதிடர்களால்   ஆறு  திங்களின்  பின்  விவாகமுகூர்த் தம்  துணிந்ததும்  அறிந்து மிகவும்  துன்பமுற்றுப்  பின்வருமாறு  கூறுவாள்.  “தோழி ! சபத்தினிகள்  பொய்மையான  குற்றங்களை  நின்பால்  ஏற்றிடுவர்.  விவாகமுகூர்த்தம்  பல நாட்களின்  பின்  குறிக்கப்பட்டுள்ளது .  தேவர்களும்  நின்னை  மனஞ்  செய்து கோடற்கு  விரும்புகின்றனர் .  ஆதலின், எவ்வாற்றானும்  தற்காப்புச்  செய்துகொள்ளல்  வேண்டும்  .   இக்காரியத்தில்  நீ  விழிப்புடையளாக  இருத்தல்  வேண்டும்  . இனி  யானும்  கணவன்  இல்லத்தில்  வாழும்  நின்னை  அடிக்கடி  வந்து காண்டற்கியலாது .  இப்பொழுது   என்  பதியின்  அநுமதியை  மிக முயன்று  பெற்று  இங்கு வந்தேன்.  இங்கு  என்னாலாக  வேண்டியது ஒரு  சிறிதும்  இன்று . ஆதலின்,  என்  காந்தன்  பக்கல்  எய்துவேன் .  காரியங்களை  முன்னிட்டு நினைப்பின்  எதிர்ப்படுவேன் .எவ்வாற்றானும்  நின்னைக் காத்துக்கொள்வாயாக “  என்று  கூறிப்போயினாள் . அதன்பின்  வற்சராசன்  கலிங்கசேனையின்பாற்  பதிந்த  காதற்  பெருக்கினையுடைய  தன் மனத்திற்கு  ஆறுதலாகிய  மகிழ்ச்சியை  யாண்டும்  பெறாதவனாய்  வாசவதத்தையின்  இல்லத்தை யடைந்தான் .  முன்னரே  யெளகந்தராயணனாற்  கூறப்பட்ட  செய்திகளை  மனத்தில்  தாங்கியிருக்கும்  அவ்வாசவதத்தை  அரசனை  முன்னையினும்  மிகுதியான  அன்போடு  உபசரித்தாள் . அதனைக்கண்டு  அரசன்  இவள்  கலிங்கசேனையைப் பற்றிய  நிகழ்ச்சிகளை  அறியாதவள்  போற்  காணப்படுகின்றாள்  என்றெண்ணி  அந் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக்கூறினான் .

                   அதுகேட்ட  வாசவதத்தை  முன்னையினும்  மிகுதியான  முகமலர்ச்சியோடு  விளங்குகின்றவளாய்  ,  “ஆ ! ஆ !  அரசர் பெருமானுக்கு  எதிர்பாராமல்  நேர்ந்த  செல்வ  வரிசைகள் என்னே !  இக் கலிங்கசேனையின்  மன்றலாற்  கலிங்கதத்தனும்  நினக்கு  நண்பனாவான் .ஆதலின், கலிங்கசேனையின்  மணம்  எவ்வாற்றானும்  விலக்கத்தக்கதன்றாம் .”  என்றிங்ஙனங்  கூறினாள் . அது கேட்ட  உதயனன் மிகவும்  வியப்புடையனாய்  மனத்திங்கட்  பின்வருமாறு  சிந்திக்கலாயினான் .  “ஆ !  இவ் வாசவதத்தை மிகப் பெரியவள் ;  பதுமாவதியை  யொப்பக்  கலிங்கசேனையையும்  சபத்தினியாக  எண்ணுகின்றாள் ; இவளுக்கு  வேண்டாததொன்று  எவ்வாற்றானுஞ்  செய்யத்  தக்கதன்று . இவளது பெருந்தன்மையை  நினையுங்கால்  கலிங்கசேனையின்  விவாகத்தில்  என்  மனம்  செல்லவில்லை.”  என்று  இவ்வாறு  நினைந்து  வாசவதத்தைக்கு  அறிவித்துத்  தன்  இல்லத்தை  யடைந்தான் .அதன்பின்  மற்றை  நாளில்  பதுமாவதியின்  இல்லம்  எய்தினான் .  அவளும்  வாசவதத்தையினால்  முன்னரே  இன்னது  செயற்பாலது  என்று  அறிவிக்கப்பட்டவளாதலின்  அங்ஙனமே  அரசனை  மிக்க  சிறப்போடு  உபசரித்தாள் . இங்ஙனம்  தேவிமார்  இருவருடைய  உள்ள  நிகழ்ச்சிகளும்  ஒன்றுபட்டிருத்தலை  வற்சராசன்  உணர்ந்து  ஐயமேற்கொண்டு  யெளகந்தராயணனை  அழைத்து  அவன்பால்  எல்லாவற்றையும்  அறிவித்தான் . பேரறிவுடைய  அவ்  யெளகந்தராயணன்  கலிங்கசேனையின்  மணமாகிய  தீச்செயலினின்றும்  அரசனை  மீட்டற்கு  இதுதான்  சமயமென்றெண்னி , “தேவ !  யான்  தேவிமாரின்  கருத்துக்களை  அறிவேன் .அவர்கள்  கலிங்கசேனையின்  மன்றல்  நிகழுமாயின்  நிச்சயமாக  உயிரைத்  துரும்பென  மதித்து ஒழித்து விடுவர் .  நேர்மையான  நெஞ்சத்தையும்  உயர்ந்த  குணஞ்  செயல்களையுமுடைய  கற்புடை  மகளிர்  சபத்தினிகளாலாம்  துன்பத்தை  நெடுங்காலம்  அநுபவிப்பாரல்லர் .  ஆதலின்  கலிங்கசேனையின்  மணம்  நிறைவேறுமாயின்  தேவி  வாசவதத்தை  நிச்சயமாக  உயிரைப் போக்குவாள் . பதுமாவதியும்  அக்கதியையே  யடைவாள் . அதன்பின்  குமாரன்  நரவாகனதத்தனும்  எங்ஙனம்  உயிர்  வாழ்வான் ?  மாமன்மார்  மைத்துனர்  முதலிய  எல்லா  உறவினரும்  சினமுடையராவார் .  ஆதலின்,  கலிங்கசேனையின்  மன்றலால்  மிகப் பெருங்  கேடு  உண்டாகும் . “  என்றிவ்வாறு  கூறினான் .  யெளகந்தராயணன் ,  கூறிய  இச் சொற்களைக்  கேட்டு  வற்சராசன்  மனத்தில்  விவேகம்  தோன்றப் பெற்றவனாய் ,  “அமைச்ச !  நின்னாற்  கூறப்பட்டன வெல்லாம்  உண்மையே . கலிங்கசேனையின்  மணத்தால்  எனக்கு  விளையும்  பயன்  யாதுளது ?  இந் நிகழ்ச்சியில்  தெய்வவயத்தாற்   சோதிடர்கள்  காலத்தாழ்வு  செய்தனர் .  ஆதலின்  சுயம்வரத்தின்  பொருட்டுக்  கலிங்கசேனை  வந்தவளாயினும்  அவளை மணஞ்  செய்துகொள்ளேன் “  என்றிவ்வாறு  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன்  தன்  நீதிப்  பிரயோகம்  பலித்தது  கண்டு  மனத்தில்  அளவு  கடந்த  உவகை  மேற்கொண்டு  அரசற்கு  அறிவித்துத்   தன்  இல்லம்  எய்தினான் . பின்னர்  அரசன்  வாசவதத்தையின்  மனைக்கட்  சென்றான் . அவள்  இவ்வெல்லாம்  யெளகந்தராயணனது  சூழ்ச்சித்  திறனென்று  அரசற்குக்  கூறினாள் .  அதனைக் கேட்ட  அரசன்  அவ்வமைச்சனது   அறிவின்  திறத்தைப்  பலவாறு  புகழ்ந்துரைத்தான் .  

                  இஃதிங்ஙனமாகக்  கலிங்கசேனையின்  உருவம்  அழகு  முதலியவற்றைக்  கண்டு  அவள்பால்  வித்தியாதரர்  பலர்  அவாவுடையராயினர் .  அவருள் , மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரன்  ஒருவன்  கலிங்கசேனையைப்  பெறுதற்பொருட்டுத்  தவம்  புரிந்து  பகவானாகிய  உமாகாந்தனை  வழிபட்டான் .  அப்பெருமான்  அங்ஙனமே  வரங்கொடுத்தார் .  அங்ஙனம்  வரம்  பெற்றும்  அக் கலிங்கசேனை  வற்சராசன்பால்  மனத்தினை  யுடையளாய் , அவனது  நகர்ப்புறத்துப்  பூஞ்சோலைக்  கண்ணே  தங்கி  இருத்தலைக்  கண்டு  மிகவும்  வருத்தமுடையனாயினான் ;  எப்பொழுதும்  அவளைப்  பெறுதற்குரிய  உபாயத்தையே  சிந்தித்துக் கொண்டிருந்தான்  .  ஒரு நாள்  இரவில்  மதனவேகன்  கலிங்கசேனை  யிருக்கும்  இல்லத்தின்  மேற்புறத்தே  சுற்றித் திரிந்தான் . அப்பொழுது  பகவானாகிய  உமாகாந்தன்  அருளிய  விச்சையினால்  வற்சராசனைப் போல்  உருக்கொண்டு  அவ் வுருவத்தோடு  கலிங்கசேனையின்  இல்லத்துட்  புகுந்தான் . அவனை  வாயில்  காப்போர்  கண்டு  இவன்  வற்சராசன்  என்றெண்ணி  வணக்கஞ்செய்து  கைகூப்பி  நின்றனர் .  கலிங்கசேனை  இவனைக்கண்ட அளவில்  நடுக்கமும்  நாணமும்  உடையளாய்   எழுந்தாள் . அதன்பின்  மதனவேகன்  பலவகை  இன்சொற்களால்  அவளை  நம்பிக்கையுறச்  செய்து  காந்தருவ  முறைமையால்  மணந்தான் . யோகேசுவரனும்  இவன்  வற்சராசனே  யாவான்  என்றெண்ணி  யெளகந்தராயணன்பாற்  சென்று  அறிவித்தான் . யெளகந்தராயணன்   அவ்  யோகேசுவரனை  நொக்கி , “வாசவதத்தையின்  இல்லத்தில்  உதயனன்  இருக்கின்றான்  என்றாதல் , இல்லை  யென்றாதல்  மறைந்து  காணக்கடவை “  என்று  கட்டளையிட்டான்  .  யோகேசுவரனும்  அங்ஙனமே  வாசவதத்தையின்  இல்லத்தை  யடைந்து  அங்குக்  கட்டிலின்கட்   படுத்திருக்கின்ற  வற்சராசனைக்  கண்டான் .  கண்டு  யெளகந்தராயணற்குச்  சொல்லினான் .  யெளகந்தராயணன்  யோகேசுவரனை  நோக்கி  விரைந்து  “கலிங்கசேனையின்  இல்லத்தை  யடைக . கலிங்கசேனையை  விரும்பி  எய்திய  அக்காமுகன்  யாவன்  என்பதை  அவன்  துயிலுங்கால்  அறிவாயாக “  என்ரு  கட்டளையிட்டான் .  யோகேசுவரன்  அங்ஙனமே  கலிங்கசேனையின்  இல்லத்தை  யடைந்தான் .   

                     அவ் வில்லத்தின்கண்   நள்ளிரவில்  நன்றாக  உறங்கும்  கலிங்கசேனையோடு  துயில்கின்றவனும் ,  தன்  இயற்கை யுருவம்  பொருந்தப்  பெற்றவனுமாகிய  மதனவேகனைக் கண்டான் .பின்னர்  உடனே  யெளகந்தராயணன்பாற்  சென்று  ,  “அமைச்சர் பெரும !  ஆ !  நின்  நுண்ணறிவின்  மாட்சி  என்னே ! எம்மனோராற்   காண்டற்கரிய  பொருளையும்  நீ  எளிதிற்  காண்கின்றாய் .  நின்னை  அமைச்சனாகப்  பெற்றமையால்   வற்சராசன்   எவ்வாற்றானும்  பாக்கியவானாகின்றான் . நின்னால்  யாது  எவ்வாறு  எண்ணப்பட்டதோ  அஃது  அத்தகையதே .  மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரன்  வற்சராசனது  உருவத்தைத்  தாங்கிக்  கலிங்கசேனையோடு  கூடி  இன்புறுகின்றான் “  என்றிவ்வாறு  தெரிவித்தான் . இங்ஙனம்  கூறிய  யோகேசுவரற்கு  அவன்  விரும்பிய  இடத்தை  எய்தும்படி  யெளகந்தராயணன்  கட்டளை  யிட்டான் . அவனும்  யெளகந்தராயணனை   வணங்கிப் போயினான் .   

                  அதன்பின் ,  காலப்பொழுதில்  யெளகந்தராயணன்   வற்சராசனைக்  காண்டற்குச்  சென்றான் . அங்கு  உரையாடிக்கொண்டிருக்குங்கால் , “அரசர் பெரும !  இக்கலிங்கசேனை    அன்னிய  புருடனோடு  சேர்க்கையை   மேற்கொண்டமையால்  நின்  கையால்  தீண்டுதற்குரியளாகாள் . என்று  கூறினான் .  அதுகேட்டு  அரசன் ,  “குலமகள்  இங்ஙனந்  தகாத செயலை  எவ்வாறு  செய்வள் “  என்றான் . யெளகந்தராயணன் , “ இன்றிரவிலேயே  காட்சியளவில்  வைத்து  நினக்கு  இதனைக்  காட்டுவேன் “  என்று  மறுமொழி  கூறினான் .  வியப்பு  மிக்க  மனத்தினையுடைய  வற்சராசன்  அன்றிரவிலேயே  யெளகந்தராயணனோடு  கலிங்கசேனையின்  இல்லம்  எய்தினான் .  அவ்வில்லத்தினுட்  புகுந்து கலிங்கசேனையோடு  இன்புறத்  துயிலும்  மதனவேகனைக்  கண்டான் . பெரிதும்  சினமுற்று  அவனைக்  கொல்லுதற்கு  முயலுங்கால்  மதனவேகன்  விரைந்து  விழித்துக்கொண்டு  விசும்பை நோக்கி  எழுந்து சென்றான் .  

                     அதன்பின் , கலிங்கசேனையும்  விழித்தெழுந்தாள்  .  எழுந்து  தன் படுக்கையில்  யாரும்  இல்லாதிருத்தலைக் கண்டு , “ஆ !  துன்பம் .  முன்னரே  விழித்தெழுந்த  வற்சராசன்  என்னைத்  தனியளாக  ஒழித்துவிட்டு  எவ்விடத்தோ  சென்று விட்டான் “  என்று  அழுதாள் .  அப்பொழுது  யெளகந்தராயணன்  அரசனோடு  அவள் பக்கல் அணுகிக் , “கலிங்கசேனே !  எவனோ  ஒரு  வித்தியாதரன்  எங்கள்  அரசனது  வேடந்தாங்கி  நின்னை  வஞ்சித்து  மணந்தான் .  ஆதலின் , நீ  வற்சராசன்  மனைவியாதற்குத்  தகுதியுடையை அல்லை .  என்று  கூறினான் .   

                        அது கேட்ட  கலிங்கசேனை  கோடரியால்  தாக்கப்பட்டவள்  போலவும்  பேய்கோட்பட்டாள்  போலவும்  மிகவும்  துன்பத்தாற்  கலக்குண்டு  நீர்  ஒழுகுங்  கண்களையுடையளாயினாள் .  அதன்பின்  அரசனும்  அமைச்சனும்  தத்தம்  இல்லம்  எய்தினர் .  பின்னர்க்  கலிங்கசேனை  இனத்தினின்றும்  பிரிந்த மான் பேடு போல மிகவும் கலக்குண்ட நெஞ்சமுடையளாய்   இல்லத்தினின்றும்  புறம்போந்து  ஆகாயத்தை  நோக்கி, “யாவன்  வற்சராசன்  வேடந்தாங்கி  என்னை  மணந்துளானோ  அவன்  என்  மாட்டு  அருள்  கூர்ந்து தன் இயற்கை உருவத்தோடு வெளிப்படுக .  அவனையே  யான்  மணவாளனாக  வரிப்பேன் “  என்றிங்ஙனங்  கூறினாள் . அதன்பின்  மதனவேகன்  ஆர  கேயூர  (தோளணி)  முதலிய  சிறந்த  அணிகலன்களை  யணிந்துகொண்டு  விண்ணினின்றும்  இறங்கி  அக்கலிங்கசேனையின்  பக்கல்  எய்திப்  பின்வருமாறு  கூறுவானாயினான் . “காதலீ !   கலிங்கசேனே !  என்னை  மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரனென்று  அறிவாயாக. யானே  வற்சராச  வேடந்தாங்கி  நின்னை  மணந்துளேன் . முன்னொரு காலத்தில்  தந்தையின்  இல்லத்திலிருந்த  நின்னை யான்  கண்டு  அவா   மேற்கொண்டு   நின்னைப்பெறுதற்பொருட்டுச் சிவபிரானைக் குறித்து வழிபாடு  செய்தேன் . நின்னைப்  பெறுதலாகிய  வரத்தையும்  அப்பெருமான்  எனக்கு  அருளிச் செய்தார் .  அதன்பின் நீ  உதயனன்  மாட்டு  மிக்க  காதற்கிழமை  மேற்கொண்டமை  யறிந்து இதுவே  குற்றமற்ற  உபாயம்  என்றெண்ணி   வேற்றுருக்கொண்டு  நின்னை  மணந்தேன் . இனி  நீ  இவ்விடத்திலேயே  இருத்தல் வேண்டும் . மாநுடப்  பெண்ணாகிய  நின்னோடு  எம்மரபினர்  கூடி வாழ்தல்  தக்கதன்று”   என்றிங்ஙனங்  கூறி  மிகுதியான  பொன்களை  அவட்குக்  கொடுத்துவிட்டு  விசும்பிற்  சென்றான் .  இந் நிகழ்ச்சிகளை  யறிந்த  வற்சராசனும்  அவளை  அவ்விடத்திலேயே இருக்கும்படி  அநுமதி  செய்தான் . வித்தியாதரனை  மணாளனாக  எய்தப்பெற்று  உளமகிழ்ந்த  கலிங்கசேனை  கணவன்  கட்டளை   இட்டவாறு  அந் நகர்ப்புறப்  பூஞ்சோலைக்  கண்ணே  இன்புற்றிருந்தாள் .  

வெண்பா

கற்பு  நலநிறைந்த   காதலியர்  தாங்கவல

அற்பொ  டியலறத்தி  னாறொரீஇத்  —  தற்பயனா

மன்றல்  கொளலிறைக்கு  மாண்பன்  றெனமறுத்தான்

துன்று  மதியமைச்சன்  சூழ்ந்து .

விச்சா  தரன்மதன  வேக  னுதயனன்பால்

நச்சுங்  கலிங்கதத்த   னன்மகளை  —  யிச்சையினால்

நாடி  நலநுகர்ந்தா  னாதன்  சிவனருளைக்

கூடினார்க்  குண்டோ  குறை .

பதினாங்காம்  வகுப்பு

( மதன  மஞ்சுகை  மன்றல் )

      நாள்  பல  சென்றபின்  கலிங்கசேனை  கருவுற்றாள் . அதன்பின் மதனவேகன்  அவளையடைந்து  பின்வருமாறு  கூறுவான் .”கலிங்கசேனே !  கருப்பமுண்டானபின்  தேவர்கள்  மாநுடப்பெண்களோடு  சேற்கையை  விரும்புவதில்லை. .  இது  தேவர்களது  கொள்கை  .  முன்னொருகாலத்தில்  மேனகை  சகுந்தலையைப்  பெற்றபின்  விசுமாத்திர  முனிவரை  விலக்கி  விட்டுச் சென்றாள்  என்பது  புராண கதை  . ஆதலின்  யான்  செல்கின்றேன். அமயம்  நேர்ந்துழி  நினைப்பாயின்  எதிர்ப்படுவேன் “  என்று  சொல்லி  மதனவேகன்  போயினான் .  

        பகவானாகிய  மகேசுவரரால்  மன்மதன்  உடல்  நீறாக்கப்பட்ட பொழுது  இரதிதேவி  உடலோடுங்  கூடிய  கணவனை  யடைதற்  பொருட்டுத்  தவம்  புரிந்தாள் . அத்தவங்கண்டு  மகிழ்ந்த சிவபெருமான்  இரதியை  நோக்கித் ,  “தானே  மேற்கொண்ட  இறுமாப்புக்  காரணமாக  என்னால்  நீறாக்கப்பட்டு  அழிந்த  உடலினையுடைய  நின் கணவன்  கெளசாம்பி  நகரத்தில்  உதயனன்  என்னும்  அரசற்கு  நரவாகனதத்தனென்னும்  பெயரினையுடைய  மகனாகப்  பிறந்திருக்கின்றான் . நீயும்  நிலவுலகத்தில்  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாமற்   பெண்ணாகி  அந் நரவாகனதத்தனோடு  சேரக்கடவை “  என்றிங்ஙனங்  கட்டளையிட்டார் .  மேலும்  பிரமனை  நோக்கி , “நிலவுலகத்திலுள்ள  கெளசாம்பி  நகரத்தில்  வற்சராசனது  நகர்ப்புறத்துப்  பூஞ்சோலைக்கண் இருக்கும்  கலிங்கசேனை  சிறந்த  புதல்வனைப் பெறுவாள் .  அப்புதல்வனை  மாயையினாற் கவர்ந்து   இவ் ரதியை  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாத  கன்னிகையாக  நிருமித்து  அப்புதல்வன்  கிடந்த  இல்லத்தில்  வைப்பாயாக”  என்றிவ்வாறு  கட்டளையிட்டார் .  கலிங்கசேனை  எப்பொழுது  சிறந்த  புதல்வனைப்  பெற்றாளோ   அப்பொழுதே  பிரமன்  பரமசிவனது  கட்டளையை  நிறைவேற்றினான் .  அது காலை  யாவரும்  மின்னற்கொடி போல்  ஒளி  விளங்கும்  பெண்மணியைப்  பெற்றதாகக்  கண்டனர் .  வியக்கத்தக்க  எழில்  வாய்ந்த  அப்  பெண்மகளைக்  கண்டு  கலிங்கசேனை  புதல்வர்ப் பேற்றினும்  மிகுதியாக  மகிழ்ந்து  விழாக் கொண்டாடினாள் .  

            வற்சராசன்  கலிங்கசேனைக்குப்  பெண்மகவு  பிறந்த  செய்தியைக் கேட்டு  யெளகந்தராயணனோடு  வாசவதத்தையின்பாற்  சென்று , “கலிங்கசேனை  தேவர்களாலும்  விரும்பத்தக்க  உருவம்  வாய்ந்த  ஒரு  பெண்குழந்தையைப்  பெற்றாள் . அப்பெண்  நம்  அருமைமகன்  நரவாகனதத்தற்கு  மனைவியாம்  தகுதியுடையவள்”  என்றிவ்வாறு  கூறினான்.   அது  கேட்டு  வாசவதத்தை  அரசனை  நோக்கி , “தேவ !  ஈதென்னை  இவ்வாறு  கூறுகின்றனை?  இரண்டு  குலமும்  தூய்மையாகப் பெற்ற  நின் புதல்வன்  நரவாகனதத்தன்  எங்கே !  கற்புநிலை  பிறழ்ந்த  கலிங்கசேனையின்  கருப்பத்திற்  றோன்றிய  அப்பெண்  எங்கே !   கலிங்கசேனையோ  முதற்கட்  பிரசேனசித்துவையும்   அதன்பின்  நின்னையும்  அதன்பின்  மதனவேகனையும்  காதலித்துக்  கற்பிழந்தவளாயினாள் . ஆதலின்  எங்ஙனம்  நம்மோடு  சம்பந்தத்திற்குரிய ளாவாள் “  என்றிவ்வாறு  மொழிந்தாள் .

      அது கேட்டு  வற்சராசன் , “இக் கலிங்கசேனை  ஏதோ  ஒரு  சாபப் பிழையால்   இந் நிலவுலகத்திற்  போந்த  தெய்வப்பெண்ணென்று  கூறுவர் . இவள் பாற்  பிறந்த கன்னிகையும்  கடவுட்  கூறுடையளாகத்  தோன்றினவள்  என்றே  எண்ணுகின்றேன்  .மேலும்  நலனிறைந்த  கன்னியர்க்குச்  சாதி  நன்மை  தீமையில்லை’   என்பதன்றே  அறநூலின்  கட்டளை  யாகும்  .  இஃது என் ஒருவன் அபிப்பிராய மாத்திரமன்று .   விட்புலச்  சொல்லும்  இங்ஙனமே  எழுந்ததுண்டு .”  என்றிவ்வாறு   மறுமொழி  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன் , “தேவி !  அரசனாற்  கூறப்பட்ட  இஃதுண்மையே .  என்  நண்பனாகிய  யோகேசுவரன்  என்னும்  பிரமராக்கதன்  என்பால்  வந்து  கலிங்கசேனையின்  புதல்வியைப்பற்றிக்  கூறியதாவது ,  “கலிங்கசேனை முற்பிறப்பில்  பெண்ணாகி  ஒரு  சாபப் பிழையால்  இந் நிலவுலகத்திற்  போந்து கற்புநிலை  பிறழ்ந்தவள்  என்னும்  அபவாதத்தை  யடந்தாள் .  இவளுக்கு  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாத  கன்னிகையை  இரதியின்  கூறாகப்   பிரமன்  ஈந்தான் . இப்பெண்மணியே  உதயனன்  புதல்வனாகிய  நரவாகனதத்தற்கு  மனைவியாவாள் “  என்பதாம் ,  என்றிவ்வாறு  கூறினான் .  அது கேட்டு  வாசவதத்தை   “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டாள் . அதன்பின்  கலிங்கசேனை  தன் மகட்கு   மதனமஞ்சுகை   என்று  பெயரிட்டாள் .  அக்கன்னிகை  நாடோறும்  பூருவபக்கத்துத்  திங்களஞ்  செல்வன்  கலை போல  மக்கள்  எல்லோருடைய  கண்களுக்கும்  ஆனந்தம்   விளைப்பவளாய்  வளர்ச்சி  யெய்தினாள் . கலிங்கசேனையும்  வற்சராசனோடு  செய்துகொள்ள  விரும்பிய  சம்பந்தம்  வாய்த்ததைக்  கேட்டு  மிகவும்  மகிழ்ந்தாள் . பின்னர்  முறையே  யெளவனப்  பருவம்  வாய்க்கப்பெற்ற   நரவாகனதத்தன்  தன்  தந்தையால்  இளவரசாக  நியமனம்  பெற்றான் .  அந் நரவாகனதத்தற்கு  யெளகந்தராயணன்  புத்ல்வனாகிய  மருபூதி  என்பான்  அமைச்சனாயினான் .  உருமண்வான்  புதல்வனாகிய  அரிசிகன்  என்பான்  படைத்தலைவனாயினான் . வசந்தகன்  புதல்வனாகிய   தபந்தகன்  என்பான்  நன்மசசிவனாயினான் .  இந்தியகன்  மகன்  கோமுகன்  என்பான்  வாயில்  காப்போனாயினான் .  பிங்கலிகை  என்னும்  பெயரினையுடைய  பிராமணியின்  குமாரர்களாகிய   வைசுவானரன் ,  சாந்திசோமன்  என்னும்  இருவரும்  புரோகிதராயினர் .  நரவாகனதத்தன்  இளவரசாம்  நிலையெய்திய  பின்  வறுமையும்  நோயும்  களவும்  இந் நிலப்  பரப்பைவிட்டு  ஒழிந்தன .  

              பின்னர்  ஓரமயம்  கலிங்கசேனை  தன்  அன்புரிமைத்  தோழியாகிய  சொமப்பிரபையை  நினைந்தாள் .  நினைந்த  அப்பொழுதே  அச் சோமப்பிரபை  தன்றலைவன்  அநுமதி  பெற்று  இரவிற்  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்து இனி  நிகழவிருப்பதாகிய  உதயனனோடுள்ள  சம்பந்தத்தைத்  தன்  கணவன்  முகமாகக்  கேட்டதாகத்  தெரிவித்தாள் . மேலும்  மதனமஞ்சுகையின்  பொருட்டுத்  தெய்விகத் தன்மை  வாய்ந்த  ஓர்  உய்யானத்தையும்  இயற்றினாள் . அதன்கண்  பொன்மயமான   வேதிகைகளும் , அரதனம்  இழைக்கப்பட்ட  திண்ணைகளும் ,  பொன்மயமான  மதிற்  சுவர்களும் ,  பவழமயமான  தூண்களும் , முத்துக்களாகிய  மணல்களுமாகிய  இவ்வெல்லாம்  மக்களாற்  செய்தற்கரியனவாகவும்  பெரிதும்  வியக்கத்தக்கனவாகவும்  விளங்கின .  இத்தகைய  உய்யானத்தை  மதனமஞ்சுகைக்கு  ஈந்து  சோமப்பிரபை  கலிங்கசேனையின்பால்  தெரிவித்துவிட்டுத்  தன்  இருப்பிடம்  எய்தினாள் .

                பிற்றை  நாட்காலையில்  கெளசாம்பி  நகரத்துள்ளார்  அனைவரும்  தெய்விகத்  தன்மை வாய்ந்த  அவ்  உய்யானத்தைக்  கண்டு  வியப்பெய்தினர். உதயனன்  யெளகந்தராயணன்  முதலியோர்  , “இவ்  உய்யானம்  எவ்வாறு  அடையப்பட்டது ?”  என்று  கலிங்கசேனையைக்  கேட்டனர்  .  அவள்  தனக்குச்  சோமப்பிரபையோடுண்டாகிய  நட்புரிமையும் , அவளால்  உய்யானம்  இயற்றப்பட்டதும்  ஆகிய  இவை  முதலிய  எல்லாவற்றையும்  விளங்க  உரைத்தாள் . பின்னர்  ஓரமயம்  உதயனன்  தேவாலயத்தை  யடைந்தான் .  அங்குத்  தெய்வத்தன்மை  வாய்ந்த  கன்னியர்  பலரைக் கண்டு , “நீவிர்  யார்?”  என்று  கேட்டான் . அப் பெண்கள்  “அரச ! யாம்  அறுபத்து நான்கு கலைகள்  ஆவேம் ; பகவானாகிய  உமாகாந்தன்  கட்டளையால்  நின்  புதல்வனாகிய  நவராகனதத்தனை  யடைந்து பணி  செய்தற்கு  வந்தோம் “  என்றிவ்வாறு  கூரினர் . 

             அது கேட்டு மிக்க  மகிழ்ச்சி  யெய்திய  உதயனன்  மதனமஞ்சு கையையும்   எல்லாக்  கலைகளிலும்  பயிற்சி  செய்வித்தான் .  அங்ஙனம்  எல்லாக்கலைகளிலும்  மிக்க  தறமையைப்  புலப்படுத்திவரும்   மதனமஞ்சுகையைக்  கண்டு  நரவாகனதத்தன்  அவள்பால்  அளவிகந்த  காதற்கிழமை  யுடையவனாயினான் . அவளும்  அவன்மாட்டுப்  பேரன்புடையளாயினாள் . இங்ஙனம்  ஒவ்வொரு  கணமும்  வளர்ச்சி   யெய்துகின்ற  காதற்  பெருக்கினையுடைய  அவ் விருவரும்  கணப்பொழுதேனும்  தம்முள்  ஒருவரையொருவர்  காணாமலிருக்க  ஆற்றாராயினர் .   இவ்விருவர்க்குமுள்ள  மிக்க  காதற்  கிழமையைக்  கண்டு  உதயனன்  காலந்தாழ்த்தலின்றி  இவ்விருவக்கும்  திருமணப்பெரு விழாவை  நிறைவேற்றல்  வேண்டுமென்று  துணிவுற்றான் . பின்னர் , கற்புநிலை   பிறழ்ந்தவள்  என்னும்  அபவாதத்தை  யடைந்த  கலிங்கசேனையின்  சம்பந்தத்தைக்  குறித்து உலகம்  யாது  கூறுமோவென்னும்  ஐயப்பாட்டால்  முயற்சியின்றியிருந்தான் .

                அப்பொழுது  விசும்பினின்றும்  அசரீரிச்சொல்  :-  இந் நரவாகனதத்தன்  காமன்  கூறாகப்  பிறந்தவன் .  காமன்  காதலியாகிய  இரதியே  மதனமஞ்சுகை  உருவத்தோடு  அவதரித்தாள் . ஆதலின்  இவ்விருவரது  மணமக்களாந்  தன்மை  மிகவும்  பொருத்தமுடையதே . நரவா கனதத்தன்  பகைவர்  எல்லோரையும்  வென்று  வித்தியாதரர்  எல்லோர்க்கும்  வேந்தனாகவும்  விளங்குவான்”.  என்றிவ்வாறு  எழுந்தது .  இவ்விட்  புலமொழியைக்  கேட்டு  உதயனன்  ஒரு  சிறிதும்  ஐயமின்றி  மணத்திற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்தான் .  

                 அதன்பின்  சோதிடர்களைக் கொண்டு  சிறந்த  நன்முகூர்த்தத்தைத்  துணிந்தான் .  வைசுவானரன் , சாந்திசோமன்  என்னும்  புரோகிதர்  இருவரும்   நரவாகனதத்தற்கு  கெளதுக (மங்கலகாரியத்  தொடக்கத்திற்  கையிற் கட்டப்படும்  நூல் ) முதலிய  மங்கல  காரியங்களை  யியற்றினர் .  விவாக  முகூர்த்தம்  வந்ததும்  நரவாகனதத்தன்  சிறந்த  அணிகலன்களால்  அலங்கரிக்கப்பட்டு  விளங்கும்  மதனமஞ்சுகையைக்  கைப்பிடித்தான் . அத்திருமணப்  பெருவிழாக்காலத்தில்  இந் நிலவுலகத்தன்றி  உம்பருலகத்தும்  பெரிய  மகிழ்ச்சிக்  கொண்டாட்டம்  நிகழ்ந்தது . மூன்றுலகமும்  திருவிழாப்பொலிவுடையன போலாயின .  இங்ஙனம்  குணம்  செயல்  பருவம்  முதலியவற்றால்  தனக்கு  ஒத்து  விளங்கும்  மதனமஞ்சுகையை  மணந்து நரவாகனதத்தன்  மிகவும்  இன்புற்றான் .  அவனைக் கண்டு  வாசவதத்தை  , வற்சராசன்  ஆகிய  இருவரும்  பெரிதும்  உவகை பூத்தனர் .  

               அதன்பின்  நரவாகனதத்தன்  இரத்தினப்பிரபை ,  கருப்பூரவதி,  அலங்காரவதி  என்னும்  இவர்  முதலிய  தெய்வ கன்னிகைகளையும்  மணந்து  அவர்களோடு  கூடிக்கலந்து  இன்புற்றான் .  

                  பின்னர்  ஓரமயம்  நல்லிரவில்  மதனமஞ்சுகை  சட்டெனக்  காணப்படாத  நிலையை   யடைந்தாள் .  அவளைத்  தேடுதற்பொருட்டு  முயன்ற  உவளகத்து  ஏவன்  மகளிர்  மிகவும்  ஆரவாரஞ்  செய்தனர் .  நரவாகனதத்தன்   மதமஞ்சுகை  சட்டென  மறைந்தாள்  என்பதை யறிந்து  மன மொழிகளைக்  கடந்த  தாபத்தை  யநுபவித்தான்  . கலிங்கசேனையும்  தன் அருமை  மகள்  காணப்படாமையைக்  கேட்டுப்  பேய் கோட்பட்டாள் போல  அறிவிழந்தவளாயினாள் ..  இந் நிகழ்ச்சிகளை  யரிந்து  கெளசாம்பி  நகரத்துள்ளாரனைவரும்  கலக்கம்  எய்தினர் . அப்பொழுது உவளகத்துள்ள  ஒரு  கிழவி  வந்து  “பல  நாட்களின்  முன்னர்  மானசவேகன்  எனப்  பெயரிய  வித்தியாதரன்  ஒருவன்  இங்கு  வந்தான் . அப்பொழுது  மதனமஞ்சுகை  மணஞ்செய்யப்படாதவளாக  இருந்தாள் . அவள்பாற்  காமமிக்க  நெஞ்சினனாகிய  மானசவேகன்  கலிங்கசேனையை  யடைந்து  அவளை  வேண்டினான் .  கலிங்கசேனையோ  “இக்கன்னிகை  முன்னரே  நரவாகனதத்தற்கு  உரியளாக  நிச்சயிக்கப்பட்டாள்”   என்று  கூறி  அவன்  வேண்டுகோளை  மறுத்துவிட்டாள் . அதனால்  மனம்  வருந்திய  மானசவேகன்  வந்த வழியே  திரும்பினான் . அவனாலேயே  இப்பொழுது  மதனமஞ்சுகை  கவரப்  பட்டிருத்தல் வேண்டும்”  என்றிவ்வாறு  கூறினாள் .  

                     அது  கேட்டு  நரவாகனதத்தன் பித்தனைப்  போலாகிப்  பரிசனங்களுக்குக்  காணப்படாமல்  தனியனாய்ப்  புறப்பட்டு  மதனமஞ்சுகையைத்  தேடிக்  காட்டில்  அங்குமிங்கும்  அலைந்து  திரிந்தான் . அக் காட்டில்  மானசவேகன்  உடன்பிறந்தாளாகிய  வேகவதியென்னும்  பெயரினையுடையாள் மதனமஞ்சுகையின்  உருக்கொண்டு  நரவாகனதத் தன்  பக்கல்  எய்தினாள் . அவளைக் கண்டு  நரவாகனதத்தன்  விரைந்தோடி , “பிரியே !  காரணமின்றி  என்னை  விட்டொழிந்த  நீ  என்  செய்தனை “  என்று  கூறி  இறுகுறத் தழீஇக்   கொண்டான் .  

                        அதன்பின்  அவள்,  “எனக்கு  மணம்  நிகழ்ந்த  அந் நாளில்  இயக்கர்க்குப்  பூசை  செய்வதாகப்  பிரதிஞ்னஞ  செய்து  கொண்டேன்  . அவ் வண்ணம்  அதனைச்  செய்திலேன் .  அது பற்றிச் சினமுற்ற  இயக்கர்கள்  என்னைக் கவர்ந்து  சென்றனர்  .  ஆதலின்  இப்பொழுது   அவ் இயக்கர்க்குப்  பூசை  செய்தற்பொருட்டு  மீண்டும்  மணவிழா  நடத்தல்  வேண்டும்  “  என்றிவ்வாறு  கூறினாள் .  நரவாகனதத்தன்  அவள்  கூறியவண்ணம்  எல்லாவற்றையும்  அங்ஙனமே  நிறைவேற்றினான் .  அதன்பின்  நடுநிசியில்  துயிலுங்கால்  தன் இயற்கை  உருவத்தோடு  படுத்திருக்கும்  வேகவதியைக் கண்டு  ஐயமுற்ற  நரவாகனதத்தன்  விழிப்புற்ற  அவளை  நோக்கி  , “நீ  யார் ?  உன்மை  கூறுக “  என்று  வினவினான் . அவள்  பின்வருமாறு  கூறுவாளாயினாள். “ஆசாடபுரம்  எனப் பெயரிய  வித்தியாதர  பட்டினம்  ஒன்றுளது .  அதங்கண்  மானசவேகன்  எனப் பெயரிய  வித்தியாதரன்  ஒருவன் உளன் .  யான்  அவன்  தங்கையாவேன் .  வேகவதி  என்பது  என்  பெயர் . என்  தமையன்  மானசவேகன்  என்பான்  நின் மனைவியாகிய  மதனமஞ்சுகை யின்   பாற்  காதல் கொண்டு  மாயையால்  அவளைக் கவர்ந்தான் .  கவர்ந்தும்  இராவணனைப்  போற்  சாபம்  எய்தப்பெற்றவனாதலின்  அவளை  வலிந்துசேர  ஆற்றலில்லாதவனாயினான் .  மதனமஞ்சுகை  அவனாற்  பலவாறு  வேண்டப்பட்டும்  அவனைத்  துரும்பென  மதித்துத்  தள்ளி  நின்பாலே  பிணிக்கப்பட்ட  உள்ளமுடையவளாய்த்  துன்புறுகின்றாள் .  இஃதிங்ஙன மிருக்குங்கால்  ஒருவரோடு  ஒருவர்  உரையாடுதலால்  மதனமஞ்சுகையோடு  எனக்கு  நட்புண்டாயிற்று  .  அவள்  முகமாக  நின் உருவம்  குணம்  முதலியவற்றைக்  கேட்டுக் காமுற்று நின் பக்கல்  யானே  வந்தடைந்தேன் . மதனமஞ்சுகையின்  பிரிவால்  பாழடைந்த  நெஞ்சினனாகிய  நின்னைக் கண்டு மணஞ் செய்து  கொள்ளுதற் பொருட்டு  இவ்வுபாயத்தை  மேற்கொண்டேன் “  என்றிங்ஙனங் கூறி  அவ்  வேகவதி  விச்சையின்  திறமையால்  நரவாகனதத்தனைத்  தூக்கிக்கொண்டு  விசும்பின்  வழியாக  ஆசாடபுரத்தை யடைந்தாள் . திடீரென்று  நரவாகனதத்தன்  காணப்படாமையால்  வற்சராசன்  முதலிய  கெளசாம்பி  நகரத்துள்ளார்  அனைவரும்  துன்ப  நிலையின்  பேரெல்லையை  யடைந்தனர் . அப்பொழுது  நாரத  மகாமுனிவர்  விண்ணினின்றும்  இறங்கி , “நரவாகனதத்தன்  நல முடையவனாக  இருக்கின்றான் ;  நலமுடையளாகிய  மதனமஞ்சுகையோடு   விரைவில்  இங்குப் போதருவான் .  கவலுதல்  வேண்டா “   என்றுகூறி  ஆறுதல்  அளித்தார் . அதனால்  அவர்கள்  தைரியத்தை  கடைப்பிடித்திருந்தனர் .  

                 ஆசாடபுரத்தில்  வேகவதியால்  கொண்டுவரப்பட்ட  நரவாகனதத்தனைக்  கண்டு  பொறாமை  மேற்கொண்ட  மானசவேகன்  அவனைக்  கொல்லுதற்கு  முயன்றான் .  அம்  மானசவேகன்   தாய்  தந்தையர்  நரவாகனதத்தனை  வேகவதியின்  கணவெனன்றறிந்து  கோறன்  முயற்சியினின்றும்  அவனைத் தடைப்படுத்தினர் .  அதன்பின்  வேகவதி  நரவாகனதத்தனை  மதனமஞ்சுகையோடு  இருசியமூகம்  எனப்பெயரிய  மலக்கண் அடைவித்தாள் . அங்குத்  தனவதி  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரப் பெண்  தன் மகள்  அசிநாவதி  எனப் பெயரிய  நங்கையை  நரவாகனதத்தற்குக்  கொடுத்தாள் .  அவளையும்  மணந்து   நரவாகனதத்தன்  தனவதியால்  அடைவிக்கப்பட்டுக்  கெளசாம்பி  நகரத்தைக்  குறித்துத்  திரும்பி  வந்தான் .  விம்மிதத்தன்  மலர்ந்த  கண்களையுடைய  உதயனன்  முதலியோர் அவனைக் கண்டு  பெரிதும்  இன்ப மெய்தினர

வெண்பா

காணுங்  குணம்பருவங்  காதலுரு  வொத்தமையான்

மாணுற்  றொளிர்மதன  மஞ்சுகையைக்   —  காணூஉ

நரவா  கனதத்த  நன்றுமணந்  தின்பப்

பெருவா  ரிதிதோய்ந்தான்  பெட்டு .

பதினைந்தாம்  வகுப்பு

( திருமஞ்சனம்  பெறுதல் )

      வித்தியாதரராகிய   சுற்றத்தார  ரனைவரும்  நரவாகனதத்தன்  பக்கல்  வந்து, “மானசவேகன்  முதலிய  வித்தியாதரர்  பலர்  நினக்குப்  பகைவரா  யுள்ளார்  .  அவர்களை  வென்று  நீயே  வித்தியாதர  சக்கரவர்த்தியாதல்  வேண்டும்  . விச்சைகள்  சித்தியெய்தற்  பொருட்டு  நீ  இங்கு  நின்றும்  புறப்பட்டுக்  கைலாயத்தை  யடைந்து  தவமியற்றல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினர் .  

        “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டு  நரவாகனதத்தன்  பகவானாகிய  மலைமகன்  மணாளன்  வீற்றிருக்கப் பெற்றதும் , எல்லா  நலன்களும்   சித்தியாதற்குரிய  நல்லிடமுமாகிய  கைலாயத்தை  யெய்திச்  செயற்கரிய  தவத்தைச்  செய்தான் . அத் தவத்தால்  வழிபடப்பெற்ற  உமாநாதன்  காட்சியளவையில்  வெளிப்பட்டு ,  “எல்லா  விச்சைகளும்  நினைத்த  அளவில்  நினக்கு  விளங்கித் தோன்றும் “   என்று  அருளினார்  .  தாமரைப்  பூவை  யொத்த  வடிமைந்த  ஒரு  விமானத்தையும்  அருளினார் .  அவற்றைப் பெற்ற  பின்னர்  நரவாகனதத்தன்  வித்தியதரராகிய  சுற்றக்  குழிவினர்  துணைசெய்யப்  படைகளோடு  புறப்பட்டு  இமயமலையின்  தென்பால்  வாழ்கின்ற  மானசேவகன்  முதலிய  வித்தியாதர  வேந்தர்களைப்  பொருது  வென்றான் .

         இமையமலையின்  வடபால்  வாழ்கின்ற  மந்தரதேவன்  எனப்  பெயரிய  வித்தியதரச்சக்கரவர்த்தி   தென்பாலுள்ள  வித்தியாதரர்  தோல்வியுற்றனர்  எனக்  கேட்டுச்  சினமுடையனாய்  நரவாகனதத்தனோடு  போர்  செய்யச்  சித்தனாயினான் . நரவாகனதத்தன்  ஒற்றர்முகமாக   அதனையறிந்து  பகவானாகிய  பார்வதீ  மணாளன்  அநுக்கிரகத்தையே  சிறந்த  பலமாகக்  கடைப்பிடித்து  மந்தரதேவனைப்  படைகளோடு  வளைத்தான் . அப்பொழுது  வடபாலில்  மந்தரதேவர்க்கும்  நரவாகனதத்தற்கும்  பெரும் போர்  நிகழ்ந்தது . அப்போரில்  விசும்பிடமுழுதும்  கதை  வாள்  வளைதடி  ஈட்டி  சூலம்  முதலிய  ஆயுதங்கள்  நிறந்தன . நிலவுலக  முழுதும்  படைக்கலங்களால்   அறுக்கப்பட்ட  தலைகள்  நிரம்பின.  புண்ணீர்  வெள்ளம்  கார்காலத்தில்  மலயினின்றும்  வீழும்  அருவி  வெள்ளம்  போற்  பன்முகமாகப்  பெருகிற்று .  வெட்டு  குத்து  கொல்  என்னும்  இவை  முதலிய  கொடுஞ் சொற்கள்  கேட்கப்பட்டன .

        மிக்க  அச்சத்தை  விளைவிக்கும்  இத்தகைய  போரில்  நரவாகனதத்தன்  மந்தரதேவனை  நிலத்தில்  வீழ்த்திக்  கால்களால்  அவன்  மார்பிடத்தை  மிதித்து  அதிவிரைவில்  எடுக்கப்பட்ட  வாட்படையால்  அவன்  தலையை  வெட்டுதற்கு  முயன்றான் . அப்பொழுது  மந்தர தேவன்  தங்கையாகிய  மந்தரதேவியென்பாள்  விரைந்து  ஓடிவந்து  நரவாகனதத்தன்  கால்களில்  வீழ்ந்து ,  “ஐய ! கேடெய்தினாற்பால்  இரக்கம்  வைக்கும்  நின்னைப்  புகலடந்தவளாயினேன் .  என்  தமையனுக்கு  அபயம்  அருள்வாயாக . “  என்று  வேண்டினாள்  .  அதனால்  அருள்கூர்ந்த  நெஞ்சினனாகிய  நரவாகனதத்தன் அவனைக்  கொல்லுதலினின்றும்  ஒழிவடைந்தான் . பின்னர்  மந்தரதேவன்  நரவாகனதத்தனை  வணங்கி ,  “என்  குற்றத்தைப்  பொறுத்தருள்க .  வித்தியாதர  இராச்சிய  முழுதையும்  நீயே  ஆள்க “  என்று  கூறித்  தவஞ் செய்தற்பொருட்டு  வனத்தை  யடைந்தான் .  இங்ஙனம்  பகைவர்  எல்லோரையும்  வென்று  பகையற  விளங்கும்  அரசியற்றிருவை  யடைந்து  திகழும்  நரவாகனதத்தனைக்  கண்டு  மருபூதி  முதலிய  தலையாய  அமைச்சர்கள்  அளவிலாப்  பெருமகிழ்வெய்தினர் .   

        நரவாகனதத்தன்  மானசவேகன்  முதலியோரை  அவரவர்  இராச்சியத்தில்  நிலைப்படுத்தினான் . இங்ஙனம்  சுற்றத்தார்  நண்பர்  நொதுமர்  ஆகிய  இவ்  எல்லோரிடத்தும்  அன்புவைத்தொழுகும்  நரவாகனதத்தன்  அவ்வப்பொழுது  ஆகாயவாணியால்  வெளிப்படுத்தப்படும்  பிரபாவ  முண்மையாலும் ,  பகவானாகிய  சிவபெருமானிடத்தினின்றும்  அடைந்த  பெறற்கரிய  செல்வங்களை   யுடைமையாலும் , பல வித்தியாதரப்  பெண்கள்  தாமே  வர   மணஞ்செய்துகொண்டமையாலும் ,  “இவன்  மனிதனல்லன் ;  வித்தியாதர  குமாரனேயாவான் “ என்று  துணிந்து  வித்தியாதரர்  எல்லோரும்  நட்பும்  மதிப்பு முடையராய்  மகிழ்ந்து  கொண்டாட  விளங்கினான் .   

          அதன்பின்  நாரத  முனிவர்  வந்து  நரவாகனதத்தனை  நோக்கி , “அகம்பனன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரராச  இருடி  ஒருவன்  உள்ளான் ;  அவன்  மந்தரதேவனுடைய  தந்தையாவான் ;  இப்பொழுது  காட்டில்  தவஞ்  செய்கின்றான் ;  அவனை  யடைந்து  வணங்குக . அவன்  நினக்கு  வித்தியாதர  இராச்சியாபிடேகத்துக்குரிய   ஏற்பாடுகளைச்  செய்வான் “   என்றிவ்வாறு  கூறினார் .  

              அதுகேட்டு  நரவாகனதத்தன் ,  “அங்ஙனமேயாக”   வென்றுடன்பட்டு  அப்பொழுதே  புறப்பட்டுத்  தபோவனத்தில்  தவஞ் செய்கின்ற  அகம்பனன் என்னும்  இராச  இருடியின்  பக்கல்  எய்தித்  தன் பெயரை  எடுத்துக்கூறி  வணங்கினான்  .  அவ்  இருடி  ஞானக்  கண்ணால்  எல்லாவற்றையு  முணர்ந்து  தன்  மகள்  மந்தரதேவி  எனப்  பெயரிய  கன்னிகையை நரவாகனதத்தற்குச்  சமர்ப்பித்து  அவ்விருவர்க்கும்  மண  வினையை  விதிப்படி  நிறைவேற்றினான் .  பின்னர் , “இடப கிரியில்  முடிசூட்டுக்  கொண்டாட்டம்  நிறைவேற்றற்பாலது . “   என்று  வித்தியாதரர்களுக்குக்  கட்டளையிட்டான்  .  வித்தியாதரர்  எல்லோரும்  தத்தம்  செல்வ  நிலைக்கியைந்த  ஏற்பாடுகளைச்  செய்தனர் .  நரவாகனதத்தன்  சுற்றத்தார்  நண்பர்  எல்லோரும்  புடைசூழ  மனைவிமார்  அமைச்சர்  வித்தியாதரக்  குழுவினர்  ஆகிய  இவர்களோடு  புறப்பட்டு  இடபகிரியைச்  சார்ந்தான் .  அவ்விடத்தில்  வைசுவானரன்  சாந்திசோமன்   என்னும்  புரோகிதர் இருவரும்  அணுத்துணைக்  குற்றமில்லாத  மிகச் சிறந்த  நன்முகூர்த்தத்தை  நிச்சயித்தனர் .  

             பின்னர்,  நரவாகனதத்தனுடைய  மனைவிமார்  பலருள் ,  “யாவள்  கோப்பெருந்  தேவியாம்  நிலைக்குத்  தகுதியுடையளாவாள்? “   என்னும்  ஆராய்ச்சியுண்டாயிற்று  .  அப்பொழுது , “இரதி தேவியின்  கூறாக  அவதரித்த  மதனமஞ்சுகையே  கோப்பெருந்தேவியாம்  நிலையில்  அபிடேகம்  பெறுவதற் குரியளாவாள் “  என்று  அசரீரி  சொல்  வெளிப்பட்டது .  அதுகேட்டு  எல்லோரும்  வியப்பெய்தினர் .  பின்னர்  முடிசூட்டு  விழாவிற்குரிய  முகூர்த்தம்  வந்ததும்  வித்தியாதரர்  மங்கல  வாச்சியங்களை  வாசித்தனர் . தெய்வ  மகளிர்  புகழ்ச்சிப்பாடலாகிய  இனிய  மங்கல  கீதங்களைப்  பாடினர் .  அந்தணர்  “நலம்  வளர்க”  என்று  வாழ்த்துரை  கூரினர் .  கற்பக  தருக்கள்  மலர் மழை  பெய்தன .  வித்தியாதரப்  பெரியார்  மங்கல  வாழ்த்துக்  கூறினர் .  இன்னோரன்ன  மங்கலகரமான  ஆரவாரங்களுக்கிடையே  சுருசுருப்பு  மிக்க  புரோகிதர்  இருவரும்  பெரிய  இருடிகள்  பலரோடுங்  கூடி  மதனமஞ்சுகையோடு  நரவாகனதத்தனை  இரத்தினமயமான   அரியணைக் கண்  வீற்றிருக்கச்  செய்தனர் .   

             அதன்பின்  மாட்சிமிக்க  முனிவரர்  பலர்  எல்லாத்  தீர்த்தங்க ளினின்றும்   கொணரப்பட்டுப்  பொற்கலசங்களில்  நிறைவிக்கப்பெற்றதும் ,  தூய்மை  மிக்கதும் ,  நறுமணம்  நிறைந்ததும்  ஆகிய   நன்னீரால்  நரவாகனதத்தற்கு  திருமஞ்சனம்  செய்தனர் .  அவன்  பக்கலில்  வீற்றிருக்கும்  மதனமஞ்சுகை  தேவேந்திரன்  அருகில்  வீற்றிருக்கும்  இந்திராணிபோல்  விளங்கினாள் . இங்ஙனம்  பகவானாகிய  மகேசுவரரது  திருவருட்  பாங்கால்  எல்லா  வித்தியாதரர்களுக்கும்  அதிபதியாம்  தன்மையைப்  பொதுவற வடைந்து   நிலவுலகத்திற்  பெறுதற்கரிய  போகங்களை   யநுபவிக்கின்ற  நரவாகனதத்தனைக்  கண்டு  வாசவதத்தையும்  வற்சராசனும்  மாறிலா  மகிழ்ச்சியின்  மலர்ந்தனர் . 

வெண்பா

அண்ணல்  சிவனருளா  லன்ற  மதிகுலத்துப் 

புண்ணியன்  றெவ்வர்  புரைகடந்து — நண்ணியசீர் 

விண்ணவரும்   போற்றவுயர்  விச்சா  தரவரசாய்

மண்ணின்மிசை  வாழ்ந்தான்  மகிழ்ந்து  . 

அன்ப  ருளத்தி    னகலாப்  பரனருளால்

இன்ப  மிருமையினு  மெய்தலா  —-  மென்பதே

வற்சநாட்  டேந்தன்  மகனிவர்தம்   வாழ்க்கைதிகழ்

பொற்சரிதங்  காட்டும்  பொருள் .

                                 முற்றிற்று . 

அரும்பதவுரை

அகாரணம்  —-  காரணமில்லாமை 

அசரீரி  —— ஆகாயவாணி  .

அச்சுறுத்தப்படாதவன்  —–  பயப்படுத்தப்படாதவன் .

அடவி  —–  காடு .

அணிகலம்  —– ஆபரணம் .

அணி  —–  அழகு .

அணிமை  —–  சமீபம் .

அதரம்  —–  உதடு .

அத்தகிரி  —–  சூரியன்  மறைவதற்கு  இடமாய் நிற்கும்  மலை .

அத்தாணி மண்டபம்  —–  அரசிருக்கை மண்டபம் .

அநாதை  —–  பாதுகாப்போரில்லாதவன் .

அந்தோ  —–  இரக்கத்தையுணர்த்தும்  குறிப்புமொழி  .

அபயம்  —–  பயமில்லாமை .  

அபலை  —–  வன்மையில்லாதவள் ,  எளியள் .

அமங்கலம்  —–  கேடு .

அமயம்  —–  சமயம் .

அமைச்சன்  —–  மந்திரி 

அயக்காந்தம்  —–  இரும்பையிழுப்பது .

அரசவை  —–  அரசனுடைய  சபை .

அரதனம்  —–  இரத்தினம் .

அரமகளிர்  —–  தேவமாதர் .

அரியணை  —–  சிங்காதனம் .

அருக்கியம்  —–  பெரியோர்க்கு  நீரால்  செய்யப்படும்  வழிபாடு .

அவகாசம்  —–  இயைந்த காலம் .

அவதரித்தல்  —–  பிறத்தல் .

அவம்  —–  வீண் .

அவலம்  —–  துன்பம். 

அவா  —–  விருப்பம் .

அறிவுறுத்தான்  —–  அறிவித்தான் .

அற்பு  —–  அன்பு .

ஆகாயவாணி  —–  ஆகாயத்திலிருந்து உண்டாகும்  சொல் (வாணி —  சொல்)

ஆஅங்காலம்  —–  அநுகூலமான  காலம் . 

ஆசமித்தல்  —–  ( வலக்குடங்கையால்  மந்திரப்பூர்வமாக  நீரை   மூன்று      

                                    –முறை  )  உட்கொள்ளல் .

ஆச்சிரமம்  —–  முனிவர்  இருப்பிடம் .

ஆணை  —–  ஆஞ்னஞ  ,  கட்டளை .

ஆரம்  —–  மாலை .

ஆரவாரம்  —–  ஒலி .

ஆராதனை  —–  வழிபாடு .

ஆற்றல்  —–  வலி .

ஆனந்த பரிதன்  —–  மகிழ்ச்சி மிக்கவன் . 

ஆன்ற  —–  நிறைந்த .

இகத்தல்  —–  கடத்தல் .

இடையூறு  —–  துன்பம் .

இந்திரசாலம்  —–  மாயவித்தை .

இனம்  —–  கூட்டம் . 

இம்பர்  —–  இவ்வுலகம்  .

இயக்கம்  —–  அசைவு.

இயைபு  —–  பொருத்தம் , சேர்க்கை .

இரிதல்  —–  கெடுதல் .

இருக்கை  —–  இருப்பிடம் , ஆஸனம்  .

இருமை  —–  இம்மை ,  மறுமை .

இவர்தல்  —–  ஏறுதல் .

இறுதிக்கடன்  —–  அந்திய கருமம் . மரணத்தின்பின்  செய்யும்  பிரேத கிரியை

இறுதியெல்லை  —–  முடிந்த அளவு .

இறைச்சிப்பிண்டம்  —–  தசைத்தொகுதி .

இறைப்பொருள்  —–  கப்பம் .

இன்னல்  —–  துன்பம் . 

ஈர்த்தல்  —–  இழுத்தல் .

உஞற்றல்  —–  செய்தல் .

உடுக்கை  —–  ஆடை .

உடை  —–  உஷை,  அநிருத்தன்  மனைவி ,  வாணாசுரன்  மகள் .

உதயாசலம்  —–  சூரியன்  உதித்தற்கு  இடமாய்  நிற்கும்  மலை .

உத்தியானவனம்  —–  பூஞ்சோலை .

உபாயம்  —–  தந்திரம் .

உம்பர்  —–  தேவர் .

உயிர் நிலைத்தானம்  —–  உயிர் நிலை நிற்குமிடம் .

உயிர்நிலை யுறுப்புக்கள்  —–  உயிர் நிற்கும்  விசேட அங்கங்கள் .

உய்த்தல்  —–  செலுத்துதல் . 

உய்யானம்  —–  பூஞ்சோலை .

உரன்  —–  அறிவு .

உரு  —–  வடிவு .

உருவமாற்று  —–  ஓருருவை  வேறு  உருவமாக  மாற்றும்  மந்திரம் .

உலக பாலர்கள்  —–  திக்குப்  பாலகர்கள் .

உலைவு  —–  கெடுதல் .

உவளகம்  —–  அந்தப்புரம் . அரச மகளிர்  உறைவிடம் .

உவா மதி  —–  பூரண சந்திரன் .

உறவு கோடல்  —–  நட்புக்கொள்ளல் .

உறையுள்  —–  வசிக்குமிடம் .

ஊர்தி  —–  வாகனம் .

ஊழிக்காலம்  —–  உலகம்  அழியவரும்  யுகம்  முடிவுக்காலம் .

எடுத்துக்காட்டு  —–  உதாரணம் .

எழில்  —–  அழகு .

எழூஉம்  —–  எழுகின்ற .

ஏதம்  —–  துன்பம் .

ஒரீஇ  —–  நீங்கி .

ஒல்லாதது  —–  முடியாதது .

ஒளிநூல்  —–  சோதிடநூல் .

ஒற்றன்  —–  பிறர்பால்  நிகழ்வனவற்றை  மறைந்து  நின்று  ஆராய்ந்தறிபவன்

கடவாது  —–  நீங்காது .

கட்டழகு  —–  மிக்க அழகு .

கட்புலன்  —–  கண்ணாகிய  இந்திரியம் .

கணனம்  செய்து  —–  கணக்குச் செய்து .

கணித நூல்  —–  ஜோதிட நூல் .

கண்டம்  —–  கழுத்து .

கதிரவன்  —–  சூரியன் .

கதை  —–  தண்டாயுதம் .

கபடம்  —–  வஞ்சகம் .

காத்தல்  —–  மறைத்தல் .

கலுழன்  —–  கருடன் .

கவலல்  —–  வருந்தல் .

கவற்சி  —–  வருத்தம் .

களிறு  —–  ஆண்யானை .

கன்னிமாடம்  —–  மணஞ்செய்யப்பெறாத  பெண்கள்  தனித்து  வசிக்குமிடம்

காட்சியளவை  —–  பிரத்தியஷப் பிரமாணம்  .

காணூஉ  —–  கண்டு .

காதற்கிழமை  —–  அன்புரிமை .

கந்தருவம்  —–  ஒருவனும்  ஒருத்தியும்  கொடுப்போரின்றி  அன்பினால்  தாமே                                                                               

மணந்து  கொள்ளும்  மணம்

காந்தன்  —–  கணவன் .

காபாலிகவேடம்  —–  கையில்  ஓடு  தாங்கிப்  பிச்சையேற்றுண்ணும்                                                                                                     

                                            சந்நியாச வேடம் .

காமவேள்  ,   காமன்  —–  மன்மதன் .

காமுற்று  —–  விரும்பி .

காமுகன்  —–  மிக்க  காமமுள்ளவன் .

காலத்தாழ்வு  —–  காலதாமதம் .

கிரகணம்  —–  பற்றுதல் ,  பிடித்தல் .

கிரியை   —–  சடங்கு .

கழமை  —–  உரிமை .

கீழ்கடல்  மலை  —–  கீழ்கடலின்  பாங்கருள்ள  உதயகிரி .

குதூகலம்  —–  பெருமகிழ்ச்சி.

குறுமை  —–  குறுகிய வடிவம் .

கூதிர்காலம்  —–  குளிர்காலம் .  ஐப்பசி  கார்த்திகை  மாதங்கள் .

கூறு  —–  அமிசம் .

கேயூரம்  —–  தோளணி.

கையுரை  —–  காணிக்கைப்  பொருள் .

கோப்பெருந்தேவி  —–  பட்டத்தேவி .

கோறள்  —–  கொல்லுதல்.

கெளதுகம்  —–  மங்கல  காரியத்தின்  தொடக்கத்தில்  கையிற்  கட்டப்படும்

                                 நூல் . (ரக்ஷாபந்தனம் )  .

சங்கேதம்  —–  ஏற்பாடு .

சண்டகன்மம்  —–  கடுந் தொழில் .

சண்டிகை  —–  காளி , துர்க்கை .

சந்தி  —–  பொருந்துதல் .

சபந்தினி  —–  கணவனுடைய  மற்றொரு  மனைவி .

சமர்ப்பித்தல்  —–  கொடுத்தல் .

சலதி  —–   கடல் .

சாதகன்மம்  —–  பிறந்த காலத்தில்  குழந்தைகளுக்குச்  செய்யும்  சடங்கு.

                                   ( சாதம்  —  பிறப்பு )

சாதிக்கத்தக்கது  —–  முடிக்கத்தக்கது ..

சாமந்த அரசர்  —–  சிற்றரசர் .

சாமம்  —–  இன் சொற் சொல்லுதல்.

சாளரம்  —–  சன்னல் .

சான்ற  —–  சாக்ஷி.

சிதை  —–  சுடலைக்கண்  அடுக்கும்  விறகு .

சித்தம்  செய்தல்  —–  முன்னேற்பாடு  செய்தல் .

சித்தி யெய்தல்  —–  பயனடைதல் .

சிறைவீடல்  —–  சிறையினின்றும்  விடுதலை  செய்தல் .

சினந்து  —–  கோபித்து .

சீலம்  —–  ஒழுக்கம் .

சுடலை  —–  சுடுகாடு .

சுயம்வரம்  —–  தானே  கணவனை  நிச்சயத்தல் .

சுற்றக்குழுவினர்  —–  உறவினராகிய  கூட்டத்தார் .

சூலபாணி  —–  சிவபிரான் .

சூழ்ச்சி  —–  ஆராய்ந்து செய்யும்  உபாயம்  .

சூழ்ச்சி வினைச்செயல்  —–  ஆராய்ந்து  செய்யப்படும்  செய்கை .

செய்வல்  —–  செய்வேன் .

சேய்  —–  மகன் .

சேய்மை  —–  தூரம் .

சேர்பு  —–  அடைந்து .

சைனியம்  —–  சேனைத் தொகுதி .

சொற்கிறைவி  —–  சரசுவதி .

சோதித்தல்  —–  ஆராய்ந்தறிதல் .

சோர்விலன்  —–  செயலில்  தளர்வில்லாதவன் .

செளளம்  —–  குடுமி வைக்கும்  சடங்கு .

தமியள்  —–  தனித்தவள் .

தலையாய  —–  முதன்மை  வாய்ந்த  .

தழீஇ  —–  தழுவி .

தற்காப்பு  —–  ( கற்பின்  வழுவாமல் ) தன்னைப்பாதுகாத்துக்கொள்ளல் .

தாதை  —–  தந்தை .

தாபதகுமாரன்  —–  முனி புத்திரன் .

தாபதன்  —–  மினிவன் .

தாபம்  —–  துக்கம் .

தானம்  —–  கொடுத்தல் .

திக்குவிசயம்  —–  திசையிலுள்ள  அரசரை  வெற்றி   கொள்ளுதல் .

திண்மை  —–  மனவுறுதி .

திருமஞ்சனம்  —–  அரசர்க்கு  முடி  சூட்டுமுன்  செய்யப்படும்  அபிடேகம் .

திவலை  —–  துளி .

தீக்கடவுள்  —–  அக்கினிதேவன் .

தீநிமித்தம்  —–  தீயசகுனம் .

துற்றும்  —–  நெருங்கிய .

தூதர்  —–  தலை , இடை , கடை யெனமூவகைப்படுவர்  இவருள்  சந்தி  விக்கிரகங்களுக்கு  வேற்று  வேந்தரிடைச்  செல்லுங்கால்   தானே  வகுத்துக்  கூறுபவன்  தலையாவான் ;  கூறியது  கூறுவோன்  இடையாவான்  ;  ஓலை  கொடுத்து  நிற்போன்  கடையாவான் .இம்முறை  வட நூலுட்  கூறப்படுவதாகும்  திருக்குறள்  தூது  என்னும்  அதிகாரத்தில்  “கடனறிந்து”  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையையும்  நோக்குக . இந்நூலில்  “தூதன்”  என  வருமிடங்கள்  தோறும்  இவ்வாறு  பகுத்துணர்க , இவன்  ஒற்றனின்  வேறு  பட்டவன் .

தூய்மை  —–  பரிசுத்தம் .

தெய்வ  ஊர்தி  —–  தேவ  விமானம் .

தெய்வகன்னிகை  —–  தேவ மாது .

தேசசு  —–  ஒளி .

தேயம்  —–  நாடு .

நச்சுப்பெண்கள்  —–  நம்மைச்  சார்ந்தாரை  நஞ்சூட்டிக்  கொல்லும் பெண்கள்

நட்டோன்  —–  நண்பன் .

நம்பல்  —–  விருப்பம் .

நள்ளிரவு  —–  இராப் பொழுதின்  நடுக்கூறு .

நன்புலம்  —–  நல்லிடம் .

நன்னிமித்தம்  —–  நல்ல  சகுனம் .

நன்று  —–  நன்மை .

நாப்பண்  —–  நாடு .

நாள்  —–  நக்ஷத்திரம் .

நிசி  —–  இரவு .

நிபுணன்  —–  திறமையுடையவன்  .

நிமித்தம்  —–  சகுனம் ,  காரணம் .

நியமம்  —–  நிச்சயம்  ,  முறை .

நியமனம்  —–  ஏற்பாடு .

நிருமாணித்தல்,  நிருமித்தல்  —–  உண்டாக்குதல் .

நிறைகுடம்  —–  பூரணகும்பம் .

நிறைமதி  —–  பூரணசந்திரன் .

நிதிப்பிரயோகம்  —–  நியாயமுறையில்  மேற்கொண்ட  முயற்சி  .

நீறு  —–  சாம்பல் .

நுகர்தல்  —–  அநுபவித்தல்  .

நுதல்  —–  நெற்றி .

நேரம்  —–  காலம் .

நேர்ந்துழி  —–  வாய்த்தவிடத்து .

நொதுமலர்  —–  பகையும்  நட்புமில்லாதவர் ,  அயலார் .

நோன்பு  —–  விரதம் .

பகழி  —–  அம்பு .

படைக்கலம்  —–  ஆயுதம்.

பணி  —–  ஏவல் , வேலை .

பணிப்பெண்கள்  —–  வேலைக்காரிகள் .

பண்டு  —–  முன் .

பதி  —–  தலைவன் .

பரபரப்பு  —–  மிக்க  விரைவு .

பரவசம்  —–  தன்வசமில்லாமை .

பராக்கிரமம்  —–  வீரம் .

பரிசனங்கள்  —–  ஏவலாளர் .

பரிசில்  —–வெகுமதி .

பரிணயம்  —–    கலியாணம் .

பருவம்  —–  வயது , காலம் .

பலபடி  —–  பலவிதம் .

பற்று  —–  விருப்பம்  .

பனுவலாட்டி  —–  சரசுவதி.

பாசறை  —–  பகைமேற்  சென்றோர்  தங்குமிடம் .

பாணி  —–  கை

பாணிக்  கிரகணம்  —–  கைப் பிடித்தல் .

பாத்தியம்  —–  பெரியோருக்குப் பாதம்  அலம்பக் கொடுக்கும்  நீர் .

பானீயம்  —–  குடித்தற்குரிய  நீர் முதலியன .

பிடி  —–   பெண்யானை .

பிணித்து  —–  கட்டி .

பிதாமகன்  —–  பாட்டன் .

பிரபாவம்  —–  புகழ் , பெருமை .

பிரபெளத்திரன்  —–  பேரன்  புதல்வன் .

பிரமதேஜசு  —–  தவ  வலியால்  முனிவர்க்கு  உண்டாகும்  ஒளி .

பிலம்  —–  குகை .

பிழம்பு  —–  திரட்சி.

பிறந்த நாள்  —–  ஜன்ம நட்சத்திரம் .

பிறழ்ச்சியுணர்வு  —–  வேறுபட்ட  அறிவு .

பிற்றை  நாள்  —–  மற்றாநாள் .

புகலிடம்  —–  அடைக்கலமாகப்  புகுமிடம் .

புங்கவன்  —–  உயர்ந்தவன் .

புடை  —–  பக்கம் . 

புண்ணீர்  —–  இரத்தம்  .

புதல்வற்பேற்றுத்  திருவிழா  —–  புதல்வன்  பிறந்தமைக்காகச்  செய்யும்  உவகைக்  கொண்டாட்டம் .

புத்திர காமேட்டி  —–  புதல்வற் பேறு  குறித்துச்  செய்யும்  யாகம் .

புரத்தல்  —–காத்தல் .

புரை  —–  குற்றம் .

புரோகிதன்  —–  வருங்  காரியஞ்  சொல்வோனும் , சடங்கு  செய்விப்போனும்  ஆகிய  பார்ப்பன் .

புலம்  —–  இடம் .

புலனாதல்  —–  வெளிப்படுதல் .

புழைக்கைமா  —–  யானை ( புழை  —–துவாரம் )

புளகம்  —–  மயிர்  சிலிர்த்தல் .

புறக்கணித்தல்  —–  அசட்டையாய்  வேறொன்றைக்  கருதியிருத்தல் .

பெட்டல்  —–  விரும்புதல் .

பெயரிய  —–  பெயரையுடைய .

பெருந்தேவி  —–  பட்டத்தேவி .

பெறீஇ  —–  பெற்று  .

பேரவா  —–  பெரு விருப்பம் .

பேருவகை  —–  மிக்க  மகிழ்ச்சி .

பேழை  —–  பெட்டி .

பேறுகாலம்  —–  பிரசவ காலம் .

பொருட்குழு  —–  நிதித்திரள் .

பொருட்படுத்தல்  —–  மதித்தல் .

பொருட்பெண்டிர்  —–  வேசையர் .

பொருதல்  —–  போர் செய்தல் .

பொருளுரை  —–  பயன்  நிறைந்த  மொழி .

பொருளுரையில்லம்  —–  பொக்கிச  சாலை .

பொலிவு  —–  அழகு .

பொறி  —–  இயந்திரம் .

பொறிக்களிறு  —–  இயந்திரத்தாற்  செய்யப்பட்ட  யானை .

பொற்கொடை  —–  பொன்னை  வழங்குதல் .

பொற்பு  —–  அழகு .

பொன்னாத  —–  கெடாத.

போக்கு வரவு  —–  போதல்  வருதல் .

போதரல்  வருதல் .

போந்து  —–  வந்து .

பெளத்திரன்  —–  புதல்வன் மகன் .

மகப்பெறும்  இல்லம்  —–  பிரசவ வீடு .

மகவு  —–  குழந்தை .

மகிமை  —–  பெருமை .

மடவரல்  —–  பெண் .

மணவறைவேதி  —–  விவாகம்  செய்யும்  இடத்திலுள்ள  மேடை  .

மணவிழா  —–  விவாகச் சிறப்பு .

மணவினை  —–  விவாகச்செயல்  .

மதி  —–  சந்திரன் .

மந்திராலோசனை  —–  அரசியற்  சூழ்ச்சி .

மரபு  —–  குலம் .

மருளன்  —–  பித்தன் .

மலைமகள் மணாளன்  —–  சிவபிரான் .

மழலைச் சொல்  —–  குழந்தைகளின்  பொருள்  நிரம்பாத  மென்சொல் .

மறவழி  —–  பாவமார்க்கம் .

மறை  —–  இரகசியம் .

மனத்திட்பம்  —–  மனவுறுதி .

மன்றல்  —–  கலியாணம் .

மன்னிறைவன்  —–  சக்கரவர்த்தி .

மாசு  —–  குற்றம் .

மாந்தர்  —–  மக்கள் .

மானம்  —–  தன்னிலையில்  தாழாமையாகிய  பெருமை .

முகில்  —–  மேகம் .

முதுமொழி  —–  பழமொழி .

முற்பக்கம் —–  சுக்கிலபக்ஷம் .

முன்னுதல்  —–  நினைத்தல் .

முன்னைப் பிதாமகன்  —–  முதற் பாட்டன் .

மேதினி  —–  பூமி .

மேம்பாடு  —–  சிறப்பு .

மேனில  இல்லம்  —–  மேல்மாடம் .

யாண்டு  —–  வருடம் .

யாண்டு முதிர்வு  —–  வயோதிகம் .

வசீகரித்தல்  —–  வசமாக்குதல் .

வண்மை  —–  கொடை .

வரித்தாள்  —–  கணவனாக  நிச்சயத்தாள் .

வலாரி  —–  இந்திரன் .

வள்ளல்  தன்மை  —–  கொடைத் தன்மை .

வனப்பு  —–  அழகு .

வாசவன்  —–  இந்திரன் .

வாச்சியம்  —–  வாத்தியம் .

வாட்படைய்  —–  வாளாயுதம் .

வாரிதி  —–  கடல் .

வாளா  —–  சும்மா .

விசும்பு  —–  ஆகாயம் .

விச்சை , விஞ்சை  —–  வித்தை .

விட்புலச்சொல்  —–  ஆகாயவாணி  .

விட்புலம்  —–  ஆகாயம் , தேவருலகம் .

விட்புல வேந்தன் ,  விண்ணவர்  இறை  —–  இந்திரன் .

விது  —–  சந்திரன் .

விம்மிதம்  —–  ஆச்சரியம்  .

விரதி  —–  விரதமுடையான் .

விழிப்பு  —–  கவனம் . 

வினைஞர் —–  தொழிலாளர்  .

வெல்லற்பாலன  —–  வெற்றி கொள்ளத்தக்கன .

வென்றிச் செலவு  —–  வெற்றி கொள்ளுதற்குச் செல்லும்  பிரயாணம் .

வேட்கை  —–  விருப்பம் .

வேட்டல்  —–  மணம்  செய்தல் .

வேதி  —–  திண்ணை , மேடை .

வேதிகை  —–  குறடு .

வேலை  —–  கடல் .

வேள்வி  —–   யாகம் .

வைப்பு  —–  புதையல் .

                                                        முற்றும் .

                    | |   சுலோசனை  |  |

கணபதி  துணை

அறிவித்தல்

அறிஞர்காள்  !

            சுலோசனை  யென்னும்  இச்  சிறுகதை  இராமாயண  சம்பந்தமுடைத்தென்பது  யாவரும்  அறிவர் . இராம காதையை  வடமொழிக்கட்  பெரியார்  பலர்  பற்பல  வேறுபாட்டுடன்  செய்திருக்கின்றனர் அவற்றுள்  ,  இஃது  ஏதாவதொன்றில்  அடங்குமென்று  ஊகஞ்செய்யத்தக்க  நிலையிலுள்ளது . இது கருதியே , “அறிஞர் வாயிலாகக்  கேட்கப்படுகின்றது”  என்று  இதன் றொடக்கத்திற்  கூறியதுபோலும் . எங்ஙனமாயினும்  கதை  நிகழ்ச்சி  மிக்க  சுவையிள்ளதே  . அவலச்சுவையே  இதன்கட்  சிறப்பாக  நிலவுகின்றது .சுலோசனையின்  அருங்கற்பும் , பெருங் குனங்களும் , அறிவுடைமையும், தலைவற்பிரிவாற்  றுன்புறு  நிகழ்ச்சிகளும்  படிப்பார்க்கு  வியப்பும்  உருக்கமும்  தோன்ற  இன்புறுத்துவனவாம் .  உண்மைக்  கற்பினிலை  யிற்றென்று  இதனாற்  றெள்ளிதி  லுணரலாம் . அறுபட்டனவாகிய  கையும்  தலையும் , எழுதியதும்  பேசியதும்  கற்பின்  ஆற்றலைப்  புலப்படுத்துவனவாம் .இப்பிறப்பிற்  பயிலப்படாதாரைக்  கண்டவிடத்து  ஒரோவழியுண்டாம்  அந்  நிகழ்ச்சிகளுக்கு  முற்பிறப்பின்  றொடர்பே  காரணமென்பதும் இதன்கட்  காணலாம் .

      இது , மதுரையின்கணுள்ள  இராமேசுவர  தேவஸ்தான  வடமொழிக்  கலாசாலைத்  தலைமையாசிரியர்  வித்தியாநிதி  ஸ்ரீ  ர . கிருஷ்ணமாசாரியர்  அவர்களாற்  சென்னையினின்று  திங்கடோறும்  பிரசுரிக்கப்பட்டுவரும்  “ஸகிருதயா”  என்னும்  வடமொழிப்  பத்திரிக்கையிற்  பத்து  வருடங்களுக்கு  முன்னர்  வெளியாயது .  இப்பொழுது  புதுக்கோட்டை  ஸமஸ்தானத்தைச்  சார்ந்த  மேலைச்சிவபுரியின்கணுள்ள   சன்மார்க்க சபையார்  விருப்பின்  வண்ணம்  தமிழறிஞர்களும்  படித்தின்புறற்பொருட்டு   மொழிபெயர்க்கப் பட்டது .

மகிபாலன்பட்டி                                                                                  இங்ஙனம் ,

துன்மதி—வருடம்                                                                          மு.  கதிரேசன்.

மார்கழி – மீ  கசு உ

சுலோசனை

       முதற்காப்பியமாகிய  இராமாயணப்  பயிற்சியில்  மிக்க  பற்றுடையார்க்குங்  கேட்ட வளவினானே  நிகரிலா  வியப்பைத்  தருகின்ற  இச்  சுலோசனையென்னும்  பழஞ்சரிதம்  அறிஞர்  வாயிலாகக்  கேட்கப்படு கின்றது .  “இராம”  என்னும்  அழகிய  வுடலோடு  நிலவுலகத்தி லவதரித்துத்  தந்தையார்  திருமொழியோம்பல் வேண்டுமென்னும்  உறுதியால்  அரசுதுறந்த  திருமகள் கொழுநனது மூவுலகத்தையும்  மயக்குறுத்தும்  பேரெழிலனனைச்  சூர்ப்பநகை  கண்டு  காமமயக்க  முடையவளாய் , அவ்விராமபிரானை  அப்பொழுதே  தனக்கு  மணவாளனாக  வேண்டி , அது காரணமாக இலக்குமணனாற்  றனக்கு  நேர்ந்த  மானக்கேட்டைக்  கரதூடணர்களுக்கு  அறிவுறுத்து  , அவ் விராக்கதர்களும்  கூறிய  இராமபாணத்தா லுயிர் துறப்பக் கண்டு  கரைகடைந்தெழூஉந்  துன்பக்கடலுண்மூழ்கி  மிகுவிரைவில்  ஓடித் தனது மானக்கேட்டிற்கு  ஏதுவாக  நிகழ்ந்த  செய்திகளனைத்தையும் இலங்கைக்கிறைவனாகிய  இராவணனுக்குணர்த்தினாள் .  அவ் விராவணன்  அச்  செய்திகளைக் கேட்டுக்  கூற்றுவன்போல்  மிக்கசினத்தாற்  கொதித்துப்  பொன்மானா லிராமபிரானை வஞ்சித்துச்  சானகியைக்  கவர்ந்தான் .கொடியவனாகிய  அவ்வரக்கர் தலைவன்  இழைத்த  கொடுஞ்செயலை யறிந்த  இராமபிரான்  சுக்கிரீவன்  முதலிய  குரக்குத்தலைவர்களோடு  சென்று  இலங்கையை  வலைத்தான் .பின்னர்  நிகழ்ந்த  பெரும் போரில்  இராமபிரான்  வில்லினின்றும்  வெளிப்போந்த  கொடிய  விடப்பாம்புகள்  போன்ற  அம்புகளால் , கும்ப  நிகும்ப  அதிகாய மகாகாயர்  முதலிய  இராக்கதரெல்லாம்  நீறுபட்டழிந்தவுடன்  சிறிது  அச்சமுற்ற  இராவணன் , நெடுநேரஞ்சூழ்ந்து  இந்திரசித்து  ஆகிய  தனது  குமாரனையழைத்துப்  போர்புரிதற் கேவினான் . உலகபாலரிடத்து  வெற்றிகொண்ட  அவ்  விந்திரசித்து ,பல்லாயிரவராகிய  அரக்கர்கள்  புடை சூழப்  பகைவரைப் பொருதான் . அவ் விராவணகுமாரன்  நெடுநேரம்  போருஞற்றியும்  ஓரிடத்தில்  ஒவ்வொருகணத்திலுங்   குரக்கினங்களாற்  கோறல்  செய்யப்படுந்  தனது  படைகளையும்  , மற்றோரிடத்தில்  இலக்குமணன் விடுத்த  பகழியினுறைப் பாற்  சிதறுண்ட  தன்னையுஞ்  சீர்படுத்தற்கு  வலியிலனாய்  வெற்றியின்  அவாவற்றுப்  போர்க்களத்தினின்றும்  வெளிப்போந்து  இலங்கையை  யெய்தி  இராமலக்குமணர்களுடைய  தெய்விகவன்மையையும் ,  தனக்கு  நேர்ந்த  மானக்கேட்டையுந்  தந்தைபாலுணர்த்தினான் .

                 அது கேட்ட  இராவணன்  அஞ்சத்தக்க  சினமுடையனாய்ப்  பற்களை  நெறுநெறெனக்கடித்து  “ஏட ! இழிதகவ !  விட் புல வேந்தன் முதலிய  உலகபாலகர்களையும்  வென்றும் , மிகவும்  இழிந்த  மக்களிடத்திற்  றோல்வி யுற்று  நாணமின்றி  எங்ஙனம்  ஈண்டுற்றாய்? செல் ! செல் ! என்முன்னிருத்தற்குத்  தகுதியில்லாதவனாகின்றாய்”  என்று  பேரொலியாற்  பழித்துரைத்தான் .   

                  இதனைக் கேட்ட  இந்திரசித்து  ,  பின்னரும் , “இராமலக்குமணர்கள்  உண்மையில்  மக்களல்லர் ! அவருள், இராமன், மூன்றுலகங்களுக்கும்  இன்னல்புரியும்  நின்னை  அடியோடொழித்தற்கு   நிலவுலகத்தில்  அவதாரஞ்செய்த  திருமகள்கொழுநனென் றறிவாயாக . இன்றே  சானகியை  அவன்பக்கல்  சேர்த்திலையேல்  நங்குலத்தில்  ஒரு  சிறுதுகளும்  காண்டல்  அரிது . “  என்று  கூறினான் . இராவணன்  மிக்கசினத்தாற்  கிளர்ந்து  அவ்வெகுளித்தீயால் நீறாக்கமுயல்பவன் போலத்  தன்  புதல்வனைப்  பின்னருங்  கடுஞ்சொற்களாற்  பழித்துரைத்தான் .  

                   இவ்வமயத்தில்  அவற்கு  இனிய  நண்பனாகிய  வித்தியுச் சிகுவன்  என்னும்  அமைச்சன்  இலங்கநாயகனைச்  சிறிது தேற்றி , நிகும்பிலையில் , விரும்பியவைகளைத் தரும்  ஒரு வேள்வியைச்  செய்துமுடித்தற்கு  இந்திரசித்துவைப்  போக்கினான் .இராவணகுமாரன்  அங்ஙனமே  செய்வலென்று  கூறிப் புறப்பட்டுப்  பன்னாட்குமுன்னர்கண்ட  தன்  அன்பிற்கருங்கலமாகிய  மனைவியைக்  காணவிரும்பி  அவளுறையும்  இல்லத்தை யெய்தினான் .

                     எய்திய  அவ்விந்திரசித்து , பிரிவானெய்திய  பசப்பானெழின்மிக்க கதுப்புகளைக்  கைத்தலத்தனைத்து  அளவின்  மிக்க  மூச்சுக்காற்றுக்களால்  உள்ளத்துள்ள  பிரிவுத்தீயை  விசிறுகின்றவளும்  ,  எப்பொழுதும்  பெருகி  யிடையறாதொழுகுங்  கண்ணீர்த்திரளால் நனைந்த  மேலாடையுடையாளும், “என்னையொத்த  துன்பமிக்கபெண்  இவ்வுலகத்தில்  வேறு  ஒருத்தியுமில்லை”  என்று  பலவிதமாகத்  தன்னைப்  பழிக்கின்றவளும் , தோழிமார்கள் ,  “தோழி தேறுவாயாக  .நின் பிராணபதி  அவசியம்  விரைவில்  வருவான்  . தாபத்தையும்  போக்குவான் . ஆதலின் , இவ்வவலத்தை  யொழிப்பாயாக”  என்று  அடிக்கடி  தேற்ற  ,  அவர்களை  நோக்கிப்  “பேறிலளாகிய  யான்  என் செய்வல் !  எனது  அன்புரிமைத் தலைவனது  அழகியமுக  கமலத்தை  யான்  என்றுதான்  எங்ஙனங்  காண்பேன்”  என்று  அழுங்கலிற்   றடுமாறுகின்ற  சொற்கலான்  மெல்லமெல்லப்  பேசுகின்றவளும் , சில  அணிகலன்களையுடையவளும் , இளமை  மிக்காளும் , தாமரையினி ளந்தண்டு  போன்ற  மெல்லிய  உடலை  யுடையவளும்  ,  நினைந்து நினைந்து புலம்புகின்றவளும்  ,  அழகிய  எயிறுகளையுடையாளும்  ,கற்பரசியும்  ஆகிய  சுலோசனை  என்னும்  பெயரையுடைய  தன்  காதலியைக்  கண்டான் .  

                     விரகவிதனமே  உருவெடுத்தாற்போல  அங்ஙனமிருக்கின்ற  காதலியைக்  கண்ட  அவ்  விந்திரசித்து ,  மகாவீரனாயினுந்திண்மையை  அறவே  ஒழிப்பது உம்,  நெஞ்சைப்பிளப்பதூஉமாகிய   சோகாக்கினியினால்  எரிக்கப்படுகின்ற  மனத்தையுடையனாய்த்  தோழிகள் விரைந்தெடுத்திட்ட பொன்மயமான  வேத்திரவிருக்கையில்  இருந்தான் .

                   சுலோசனையும் ,  தான்  பன்னாளாக  விரும்பிய  தலைவனை  உண்ணாநோன்புடையனபோல  விளங்குங்  கண்களாற்  பருகி,  அவசரமுற்று, வியப்பெய்திச்  சிலவெழுத்துங்  கூறுதற்கு  வலியிழந்து  காந்தனது  திருவடிகளை  வணங்கி  ,  மிகமுயன்றுங்  கன்ணீர்ப்பெருக்கைத்  தடுத்தற்கு  ஆற்றலின்றிச்  சிறிது  நேரம்  இன்னது  செயற்பாலதென்றறியாளாய்   ஓவியத்  துற்றாள்போன்று  அசைவற்றுத்  தன்வயமிழந்து  நெடுநேரம்  வாய்வாளாதிருந்தாள் .

                     இன்னல்மிகுதி  சிறிது  தணிவெய்தியபின்,  இந்திரசித்து  மிக்கொழுகுகின்ற   நீர்த்திவலைகணிரம்பிய  சுலோசனையின்  கண்களைத்  தனதுகைத்தலத்தான்  மீண்டுமீண்டுத்  துடைத்து , அவளை  நோக்கி  “ஏ காதலி அலர்ந்த தாமரையினிதழ்களை  யொத்த  அழகியவிழிகளினின்று  இந் நீர்ப்பெருக்கு  ஆறுபோல்  வழிகின்ற  தென்னை?  இளம்பருவத்  தணங்கரசே ! பெருங்காற்றான்  அலைப்புறூஉம்  இளங்காதலிபோல்  மிகமெல்லிய  நினது  இவ்வுடற்கொடி  நடுங்குதல்  எற்றிற்கு ? அன்பே ! அணிசெய்துகொள்ளாமை  யென்?  மிகக்கடியதாய புன்கணாநிரம்பிய  யோசையின்றியழுதல்  எக்காரணம்பற்றி? யான்  சிறிதெனுங்  கேடுசெய்ததாகக்  கூர்ந்தாராய்ந்து பார்த்தும்  புலப்பட்டிலதே !  அங்கனாய் ?  நினது  வருத்தத்திற்குக்  காரணமின்னதெனக்  கூறுவாயாக . இப்பொழுதே  நின்  துக்ககாரணத்தைப்  போக்குதற்கு  அடியேன்  சித்தனாக  இருக்கின்றேன் . “  என்று  கூறினான் .

                        சுலோசனையும் , சிறிதுசிவந்த  உள்ளிடத்தையுடையகண்களை  முன்றானையால்  நீவித்  தழுதழுத்தகுரலுடன்  “நாத ! அநாதையைப் போல  என்னை  விடுத்து  இத்துணைக்காலமாக  வாராதிருந்த  நின்  வன் நெஞ்சைப்  பேறிலளாகிய  யான்  என்னென்று  கூறுவேன் ?  இப்பேதை  செய்த   குற்றம்  யாது ? இப்பொழுது  அவசியம்  வருவாய் , மாலை  வருவாய்  ,  இரவில்  வருவாய்,  நாளை  வருவாய்   அதன்பின்னால்  வருவாயென  நினைந்து எத்தனையோ  கற்பம்  போன்ற  நாட்களைப்  போக்கினேன் . இன்றுதான்  என் விருப்பம்  பயனாயிற்று . என்மாட்டு  அருளுண்டாதற்கு  இத்துணை  நாட்  சென்றது .”  என்னுஞ் சொற்களைப்  புகன்றாள் .  

                           இந்திரசித்து அவள்  சொற்களைக் கேட்டு  , “மருள்விழியாய் ! நிகழ்ந்த செய்திகளனைத்தும்  உணர்ந்திருந்தும்  இங்ஙனங்  கேட்டலென்னை?  பன்னாள்  வளர்க்கப்பட்டதும் , மிக இனியதுமாகிய  நமது  காதற்கொடியை  யான்  என்றும்  மறவேன் . நின்பால்  எது பற்றியும்  எனக்குக்  கோபமின்று . காலத்தின்   மாறுபாட்டை  அறிந்திருக்கிறாயன்றோ . என்  தந்தை  சானகியைக்  கவர்ந்தமையாற்  பெரியகேடுகளின்றொடர்ச்சி  யுண்டாயது . தத்தமுள்நேர்ந்த  பகையினையுடைய  இராம  இராவண  சைன் யங்களின்  மிக  அஞ்சத்தக்க  போர்க்களத்தில்  அதிகாயன்  முதலிய  பெரிய வீரர்களும்  இறந்தனர் . மூவுலகத்தினும்   புகழ் பெற்ற  பராக்கிரமத்தையுடைய  எனது  சிறியதந்தையாகிய  கும்பகன்னனுஞ்  சரிதத்தான் எஞ்சிய  விக்கிரமனாயினான் . யானும்  அரக்கர்கள்  சூழ்வரச்சென்று  நெடுநேரம்  பொருது , இலக்குமணன்விடுத்த  கணைகளாற்  பிளக்கப்பட்ட  மார்பினையுடையனாய்  ,  மிகவுந்துன்புற்றுத்  தந்தையின்  பக்கலெய்தி  இவ்வெல்லாவற்றையுந்  தெரிவித்தேன் . இராமலக்குமணர் களுடைய  ஆண்மையை  அறியாதவனாகவே  அவ்விராவணனும்  மூவுலகத்தினும்  வெற்றியைத் தரும்  ஒரு வேள்வியை  நிகும்பிலையிற்  செய்தற்கு  இன்று  என்னை  ஏவினான் . நின்னைக்காண்டலிலவாவும்  மனத்தினையுடைய  யான்  வழியிடையே   ஈண்டுப்  போதரலானேன் . ஆதலின் , எனக்கு  விடைதருவாயாக . கவலையை  ஒழிக்க . மிகவிரைந்து திரும்புவேன் .”  என்று  இவ்வாறு  கூறினான் .  

                 அது கேட்ட  சுலோசனை  சிறிது  நீர் ததும்ப  நிலநோக்கிய  கண்களையுடையளாய்  , “உயிர்த்தலைவ !  இப்பொழுதே  இங்குப்போந்த  நினது  பிரிவை  மீண்டும்  பொறுத்தற்கு  எங்ஙனம்  ஆற்றலுடையேன் ?  நிகும்பிலையில்  வேள்வியை  முடித்துப் பின்னரும்  போர்  கருதியன்றே செல்ல  விரும்புகிறாய் .அந்தோ ! அளவில்லாத  அம்புகளின்  வீழ்ச்சியாற்  புண் பற்றிய  நினது  இவ்வுடலைக்  காண்டற்கு  என்நெஞ்சந்  துணிந்திலது . நிற்க , இவ்விடயத்திற்  சிறிது  கூறுதற்கு  என்னுள்ளந்  துணிகின்றது .மனித இயல்பைக் கடந்த  தோள் வலிமிக்க  வீரனாகிய  இராமன்  எங்கே ? நினது  தந்தை  எங்கே?  கடவுட் கூறனாகிய  இராமனைப்  போர்முனையில்  வெல்லுதற்கு  மனித  இயல்பினால் எங்ஙனம்  கூடும் ?  நீ  இவ்வெல்லாவற்றையும்  உனர்ந்தும்  போர்  கருதிப்  புறப்படமுயலல்  என்னை?  இனி இப்பயனற்ற  செயல்  அமைக . இம்முயற்சியினின்றும்  ஒழிவெய்துக . என்  மாமன்  செல்கின்ற  இல்வழி  நல்லோரால்  விரும்பத்தக்கதன்று .  அவனோ  கற்பினுக்கணியாகிய  சீதாபிராட்டியைக்  கொணர்ந்து  எரிகின்ற  நெருப்பைப்  புதர்நடுவண்  இட்டாங்கு  நகரிக்கண்வைத்தான் . தலைவர் பிரிந்த  துன்பத்தினையுடைய  அச்  சீதையின்  சோகாக்கினியானது  காட்டுத் தீப்போல  எல்லாவற்றையும்  விழுங்குகின்றது ; இங்ஙனம்  போர்  முகத்தே  மகாவீரர்களாகிய  நினது  சிறியதந்தை  முதலியோர்களையுஞ்  சரிதத்தின்  எஞ்சியவர்களாகச்செய்தது . இத்தீயே  எல்லாப்படைகளையுமுடைய  நினது தந்தையையும்  அழித்தல் உறுதி .  ஆதலின்,  கேட்டினை  விளைக்கின்ற  இப்பயனற்ற  செயலினின்றும்  ஒழிக ;  ஒழிக . அதனால்  ஒருசிறிதுங்  குற்றமின்று . தான்செய்ததீவினைப்பயனைத்  தானே  அநுபவித்தல்  என்பது  நிச்சயம் . நினது  சிறியதந்தையாகிய  விபீடணனைப்  பார்க்க .  அறவோனாகிய  அவ் விபீடணன்  தன்முன்னோனைத்  தீநெறிக்கண்ணின்றும்  மீட்டற்கு  ஆற்றலிலனாய்  இராமனையே  புகலிடமாக  அடைந்தான் . அவனே  பெறலரும்  பேறுடையான்”  என்று  இன்னோரன்ன  அழகியசொற்றொகுதிக ளால்  வணக்கமும்  ,  நலமும்,  பிரியமும்பொருந்த  உபதேசித்தாள் .

                 இந்திரசித்து ,  தன்காதலியின்  உபதேசம்  அழகியதெனினும்  அதனைப்  பொருட்படுத்தாமற்  சிறிதுசினமுடையனாய்ச்  “சிறியவளே ! இது , நினது  இளமைக்கு  ஏற்றதே ;  அரசியின்  முறைமைகளைச்  சூழ்ந்து  தெரியாமலும்  சமயத்திற்செயத்தக்கதின்னதென்று  உணராமலும்  நின்னால்  மிக்கசதுரப்பாட்டுடன்  தொடங்கப்பட்டது . பெரும்போர்  நேர்ந்திருக்கின்றது . பகைவர்களாற்  பெரிய வீரர்களும்  மாண்டனர் . யான்  சுதந்திரமில்லாதவன் .  தந்தையின்  கட்டளை பெரிதன்றே.  தெய்வசம்பந்தமான  ஊழ்  நலமெனினுந்  தீதெனினுஞ் செய்க . தந்தை சொல்மிக்க  மந்திரமில்லையன்றே .அதன்போருட்டன்றே  நமது  பகைவனாகிய  இராமன்  “அரசுதஞ்சமேயென்று  அருங்கானடைந்தான் ?  விரித்தலிற்  பயனென்?  காலங்கடக்கின்றது . இனிக்  கணப்பொழுதேனும்  ஈண்டிருத்தற்கு  என்னாற்  கூடாது . போகின்றேன் .  தெய்வம்  அருள்செய்யின்  மீள்வேன் .”    என்று  சொல்லிக்கொண்டே  நீர் நிறைந்த  கண்களையுடைய  சுலோசனையைக்  கணப்பொழுதில்  விட்டுப்புறப்பட்டான் .   

               அவன்சென்றவுடன்,  சுலோசனை  தன்தலைவனுக்குவரற்பாலதாகிய  தீமையின்றிரளை  ஐயுற்று  உள்ளத்தா லொன்றைக்  கருதி  நெடிதாகவும்  வெப்பமாகவும் பெருமூச்செறிந்து  அசைவறு நிலையை  யண்மினாள் . அதன்பின்  சேடியர்கள்  தேற்ற  அரிதிற்றொளிவெய்தி  நீர்பொழிவிழிகளை யுடைய  முக  கமலத்தை  இடதுகையிற்றாங்கி  ஒன்றுமுரையாது  கீழ்நோக்கியமுகமுடையளா யிருந்தாள் .

                இங்ஙனந்  துன்புறுமயத்தில்  எருவை( கழுகு )  யிறகா   னணிசெய்யப் பட்டதும்  பொற்பிடியான்  ஒளிசெய்கின்றதும்    இருப்பினானாக்கப்பட்ட தும், வாயுவேகத்தால்  அச்சத்தை  விளைக்கும்  ஒலியினையுடையதும்  ,  பார்த்த  அளவினானே  மயக்கத்தைப்புரிவதூஉம் ,  உருவத்தொடுங்கூடிய  கூற்றுவன்  சினம்போன்றதூஉம்,  வாளின்றன்மையெய்தப்பெற்ற   கரும் பாம்புபோன்ற   தூஉம்  ஆகிய  பெரியவாளாயுதத்தோடுங்கூடிப்பொன்னானாய  தோளணி யாற்   கவின்று  செஞ்சந்தனச்சேற்றாலணிசெய்யப்பட்ட  ஒரு  கைத்துண்டு (துணிக்கப்பட்ட  கை)  , மரகதமணியுருவாகிய  ஒரு  தூணின்றோற்றத்தைச்  செய்வதாய் ஆழிப்படைபோற்  கழன்று  அச்  சுலோசனையுன் முன்னிலையில்  வீழ்ந்தது .  

                 “ஆ ! ஆ !  ஈதியாது”  என்று  துன்புறுமுள்ளத்தாராகிய  தோழிகளினது  கலகலவொளியால்  நன்குவிழித்த  கண்களையுடைய  அப்பெண்மணி , தனது  விழித்துணையால்  முன்னர்  வீழ்ந்துகிடக்குங்  கைத்துண்டினைப்பார்த்துச்  சிறிது  ஆலோசனையுடையளாய்ப்  பொற்கோடுகளான்  வரையப்பட்ட  தன்  நாயகனது  பெயரெழுத்துக்களை  அக்கொடிபோன்ற  வாளினிடத்து  எதிர்பாராது  நோக்கி  யப்பொழுதே  கூந்தல்  சரிந்து  நிலத்திற் பரவத்  திடீரென்று  வீழ்ந்தாள் .  

                    விரைவில்  நிலத்தினின்ரும்  எழுந்து  அக் கைத்துண்டினைத்  தனது  கைக்கொடிகளாற்   றழீஇப்  பெருகுகின்ற  கண்ணீர்த்துளிகள்  விண்மீனையொத்துநிலவும்  முலைகளையும்  , மிகவும்  நெட்டுயிர்த்தலையும்  உடைய  சுலோசனை ,  “ஆ ! கொல்லப்பட்டேன்  !  ஆ !  சுடப்பட்டேன் !  ஆ !  கவரப்பட்டேன்  ஆ !  வஞ்சிக்கப்பட்டேன்  !  ஆ !  எய்திய  இத்துன்பம்  என்னை?  நோய்கோட்பட்டேன்  !  பகலிடமில்லேன் !  துன்புறுகின்றேன்  !  ஆ !  முப்பெருப்புவியுனும்  ஒப்பிலா  அழக !  எவனாற் கொல்லப்பட்டாய் ?  ஆ !  சுலோசனையாகிய  உயிரை  யுடையாய் !  என்னைத்  தலைவனையிழந்த வளாகவும்  தையளாகவும்  விட்டு  எவ்வாறு  சென்றாய் ?  அம்ம !  உயிரைப்  பொறுத்தற்கு  ஆற்றலில்லேன் .  தலைவ !  இப்பொழுது  நின்னையில்லா  எனக்கு  இவ்வுலகம்  பாழ்ங்காடு ; பிறப்புப்  பயனற்றது ;  உடல்  உலர்ந்த  விறகின்  றன்மையது .  ஏ !  பகைவனாகிய  கூற்றுவனே  !  இப்பொழுதே  எனது  உயிரைக்  கொள்வாயாக . ஆ !  சுலோசனையின்  கண்களாகிய  சகோரப்புட்களுக்குரிய  திங்களஞ்செல்வ !  புலோமசை  கேள்வனை  விளையாட்டாக  வென்று  “இந்திரசித்து”  என்னும்  பெயரினை  எங்கணும்  நிறுவிய  பெருமையினையுடைய  நினது  அவ்வலி  யாண்டுச்  சென்றது?பிறரிடத்துக்  காண்டற்கரிய  நினது  நன்று  தீது  ஆராயும்  அறிவு  எவ்விடத்துப்போயது ? “கேட்டை  விளைக்கும்  இம்முயற்சியுனின்றும்  ஒழிக  ஒழிக “  என்று  பன்முறை  பகர்ந்தேனே  .  ஏழையாகிய  என்னை  விரும்பாது சென்ற  நீ  எவ்வாற்றானும்  இன்புறுகின்றாய்.  நீ  யாண்டுள்ளாயோ  ஆண்டே  என்னையுஞ்  சேர்க்க  .  காலத்தினது  மாறுபாட்டுத்  தன்மை  என்னே !  அகாலத்தில்  எய்திய  வெதுப்பினாலே  எனது  உள்ளுறையுயிர்  சூடுற்றதுபோலும் ! உடலுறுப்புக்கள்  வெந்தனபோலும்  !  பிராணவாயுக்கள்  வெளிச்சென்றன .போலும் !  ஆ !  என்செய்வேன்  !  இன்னுயிர்த்தலைவனைப்  பின்னரும்  எங்ஙனங்காண்பேன் ?  இந் நிகழ்ச்சியின் பின்னர் , வாழ்க்கையில்  எனக்கு  ஒரு பற்றுமின்று  . இப்பொழுதே  சேர்ந்தாரைக்  கொல்லியைச்  சேர்வேன் . இன்றேல் , இப் பயனற்ற  வுடலைக்  கரையிலா  ஆழியில்  எறிவேன்.  அதாஅன்று  ,  வெதும்பிய  உயிரினையுடைய  எனது  யாக்கையைக்  கோறற்  றொழிலையுடைய  விலங்கினங்களுக்குப்  புலவுணவாக்குவேன் .”  என்று  இன்னோரன்ன  பன்மொழிகூறிப்  புன்கணுற்றுப்  புலம்புகின்ற  சுலோசனை  அவ்வமயம்  எளிதான  இயக்கமின்  மயக்கத்தான்  மூடப்பட்டாள் . 

                பின்னர் , அணிமையிலுள்ள தோழிகளுள் ஒருத்தி  சுலோசனையைத்  தாக்கினாள் . மற்றொருத்தி  பொற்கலசத்தில்  நீர்  கொணர்ந்து  அவள்  செந்தாமரையனைய  திருமுகத்தையும்  , விழித்துணையையும்  கழீஇயினாள் வேறொருத்தி,  சுறுசுறுப்போடு  பனிநீரிற்றோய்ந்த  விசிறியினால்  மெல்லமெல்ல  வீசி  இளங்காற்றைப்  பரவச்செய்தாள் .வேறு  சில  அறிவு மிக்க  பெண்கள்  “தோழீ !  சுலோசனே  !  தெளிக .  தெளிக “  என்று  அடிக்கடி  தேற்றினார்கள் .

                  அறுக்கப்பட்டு  நிலத்தில் வீழ்ந்த  கற்பகவல்லிபொன்றவளும் ,  மேகத்தினின்று  பெருங்காற்றாற்  பிடுங்கி  வீழ்த்தப்பட்டு  நிலத்திற்கிடக்கின்ற  மின்னற்கொடிபோன்றவளும்  ,  சேற்றால்  நிரம்பிய  தாமரைத்தண்டுபோலப்  புழுதியினால்  நிரம்பிய  திருமேனியையுடையாளும்  நிலைபெயர்ந்த  தாமரைக்கொடி  போலத்  தலைவற்பிரிந்த  துன்பத்தாற்  கவலுகின்ற  உடலையுடையாளும்  ஆகிய  அம்மெல்லியலைப்  பார்த்தற்கு  ஆற்றாதவர்களான  தோழிமார்கள் ,   “ஆ !  எய்தின  இத்துன்பம்  என்னை ?  என்று  கதறிக்கொண்டு  நிலத்தில்  வீழ்ந்தார்கள் .  

                       இங்ஙனம்  ஒவ்வொருகணமும்  உட்புகுந்த  சோகாக்கினியாற்  சுடப்பட்ட  உள்ளத்தையுடைய  சேடியர்களது  மிகக்  கொதிக்கின்ற  கன்ணீர் வெள்ளத்தால்  நனைக்கப்பட்ட  சரீரத்தையுடைய  சுலோசனை  அரிதிற்போந்த  அறிவையடைந்து  அக்கணத்தே  இறத்தலையே  புகலிடமாக  நினைத்து  மிகவும்  புலம்பித்  தலைவற்கெய்திய  சொல்லொணாநிலையை  நினைத்து  “ஆ !  காமசுந்தர !  பாவியாகிய  இவள்  நின்னையின்றி  எங்ஙனம்  உயிரைத்தாங்குவாள் ?  ஏ !  இன்னுயிர்த்தலைவ  !  நின்னுயிர்  நீங்கியும்  என்னுயிர்  இக்கணத்தே  வெளிச்செல்லாதிருத்தல்  என்னை?  ஐய !  இப்பொழுது  அருள்செய்வாயாக .  நின் வாசத்தானத்தில்  என்னையுஞ்  சேர்க்க . ஆ !  தோழிகளே !  மரணத்தினும்  மிக்க  இத் துன்பத்தை யநுபவிக்கின்ற  யான் பிரியபதியின்றியும்   நாணில்லாதவளாக  எப்பயன் குறித்துச்  சீவிக்கின்றேன் ?  எவனுடைய  அன்புமிக்க  அழகிய  பன்மொழிகளால்  அளவளாவிக்  காலத்தைப்  போக்குவேன் . எனது   புன்கணையார்பாற்  றெரிவிப்பேன் ?  சந்திரிகை  சந்திரனையும்  ,  மின்னல் முகிலையுஞ்  சார்தல்போல் , எல்லாத்துன்பங்களும்  ஒழிதற்பொருட்டு  யான்  எனது  உள்ளுறை  தலைவனைச்  சார்கின்றேன் . விறகுகளைக்கொணர்ந்து  சிதையை  அடுக்குங்கள் .  நெருப்பை  எழுப்புமிங்கள் .  என்னை  இறுதியான  தழுவுதலாற்  பெருமைப் படுத்துமின்கள் “  என்று  சகிகளோடுங்கூடிப்  புலம்பிப்  பின்னரும்  இயக்கமின்மயக்கம்  எய்தினாள் . அதன்பின்  முகூர்த்தப்போழ்திற்  றெளிவை  யடைந்து  சிறிதுபொழுது  “ ஆ !  நாத ! “  என்று  மார்பில்  அடித்துக்கொண்டு  புலம்பினாள் .  சிறிது பொழுது  நெடிதுங்  கொடியதுமான  பெருமூச்செறிந்தாள் .  சிறிது  போழ்து  “நின்னையே  புகலிடமாகவுடைய  இவளைத்  திடீரென்று  ஒழித்து  நினைவுமாத்திரையான  கதியை  யடைந்தனையே .  இவ்வொழுக்கந்  தக்கதன்று “  என்று  வாய்திறந்து  கதறினாள் .  

                      இத்தகைய   துன்பநிலையை  அநுபவிக்கின்ற  அழகிய  கண்களையுடைய  அச்சுலோசனையைத்  தோழி  ஒருத்தி , வணக்கத்துடன்  துன்பமும்  அநுதாபமும்  தோன்ற , “ஏடி !  சுலோசனே  !  ஊழ்வலியால்  நேர்ந்த  இந் நிகழ்ச்சியில்  யாது செயற்பாலது ?  வாடுதலில்லாத  சண்பகமலர்போன்ற  அழகிய  உடலில்  மேகமின்றியே  இடியைவீழ்த்திய  பாதகமிக்க  கொடிய  ஊழ்  நன்று  செய்திலது . ஊழ்வலியை  விலக்குதற்கு  உலகத்தில்  எவன்  வலியுள்ளான் ?  முற்பிறப்பிற்  செய்யப்பட்டதும் , கழுவாயின்றி ( பரிகாரம் )  இன்றியமையாது  நுகரத்தக்கதுமாகிய  கொடிய  தீவினையின்பயனே  இஃதென்று  நினைக்கின்றேன் . பேறிலளாகிய ( பேறு  — நல்லூழ்ப்பயன் )  நீ  மீண்டும்  நின்  அன்புக்குரிய  நாயகனைக்  காண்டற்கு  வலியற்றவளா கின்றாய் .  தலைவற்பிரிவானுண்டாய  துன்பம்  உண்மையிற்  பொறுக்கத் தகாததே ; ஆனால் , இவ் விஞ்ஞான   உலகம்   கழித்ததற்கு  இரங்குந்தன்மைத்து . அறிவறிந்த  நின்முன்னிலையிற்  பேதையாகிய  யான்  இங்ஙனங்  கூறுதற்கு  நாணம்  எய்துகின்றேன் . ஆயினும்  பன்னாட்  பழக்கத்தாற்  காரணமின்றியுண்டாய  அன்புரிமையே  என்னை  இங்ஙனஞ்  சொல்விக்கின்றது . இக்கவற்சி  நீங்குக .  தேறுதல்  எய்துவாயாக”  என்று  தேற்றினாள் .   

                 பின்னர்ச்  சுலோசனை  உடனிறத்தற்குத்  துணிந்து  ஈம  விறகு  அடுக்குதற்குத்  தோழிமார்களை அடுத்தடுத்து  வற்புறுத்தினாள் . தோழிமார் களெல்லோருந்  துன்பத்தால்  வாய்  வாளாதிருந்துழி  ,  ஒருத்தி  சுலோசனையின்  பக்கல்  மெல்லமெல்ல  எய்தி  வணக்கத்துடன் , “ஏழாய் !  முன்  நிகழ்ந்தவற்றை  யறியாமலும் ,  இறந்த  தலைவனது  முகத்தைக்  காணாமலும் ,  காதலர்க்குநேர்ந்ததை  உண்மையாகத் துணியாமலும் ,  இக்கைத்துண்டு  யாருடையதென்று  ஆராயமலும்  ,  யாரான்  எதற்காக  ஈண்டு  எரியப்பட்டதென்று  எண்ணாமலும்  இடுக்கனான்  அலந்த  நெஞ்சத்தினையுடைய  நீ , உடனிறத்தலையே  துணிவுற்று  ஆராயாது செய்கின்ற   நின்  எண்ணத்தைத்  தடுக்கின்றாயில்லை”  என்று  இங்ஙனம்  அறிவுறுத்தினாள் . அம்மொழி கேட்ட மாது “நன்குபதேசிக்கப்பட்டது”  என்று  பெருமைப்படுத்தி  ,  “நிகும்பிலையில்  வேள்வி  முடித்தற்கன்றே இங்கிருந்து  என்  நாதன்  புறப்பட்டான் .  ஏழையாகிய  யான் , அவன்செயலை  எவ்வாறு  உணர்வேன் ?  யாரை  வினவுவேன்  ?  என் தலைவனது  செய்தியை  அறிவிப்பவர்  யார் ?  யாண்டுச் செல்வேன் ? பேறிலளாகிய  யான்  காதலனது  செய்திகளை  எம்முறையான்  எங்ஙனம்  நுணுகி ஆராய்ந்து  எவ்வழியான்  உணர்வேன் .?  என்று  துன்பத்துடன்  கூறிச்  சிதறுகின்ற  தூய  முத்துக்  கூட்டங்களைப்போற்  கண்ணீர்த்திவலைகளை  யுதிர்த்துத்  துன்பமிகுதியாற்  பொறி  கலங்கித்  திங்கண்மண்டிலங்  கூதிர்காலத்து முகிலான்  மறைக்கப்பட்டது போற்  பாம்புரியன்ன  மெல்லிய  வெள்ளிய  ஆடையான் முகத்தை  மறைத்து  “தேறுதலடைவாயாக “  என்று  அணிமையுலுள்ள  தோழிகளால் அடுத்தடுத்துக்  கையினாற்  றைவரப்பட்டு, ஒவ்வொருகணமு  மெலிவெய்தி  ,  அவ்வமயஞ்  செய்யத்தக்கதின்னதென்று  அறியாளாய்ச்  சிறிது  நேரம்  பாழடைந்தமனத்தினளாயினாள் .   

                  பின்னர் , மிகச் சிரமமுற்று  மனத்தையடக்கித்  தலைவனது  செய்தியையறியும்  விருப்பமுடையளாய்த்   “தீயூழின் கேடுபயக்குஞ்செயல்  அந்தோ !  மிகக்கொடியது  .  நாயகனது  இக்  கைத்துண்டினை  நோக்கியே  அன்னான்செய்திகள்  எல்லாவற்றையும்  பற்றிக்  கேட்கிறேன் . “  என்று  துணிவுற்று , வாட்படையேந்திய  அக்கையினை  மும்முறை  வலம் வந்து  நெற்றி  நிலத்திற்றோயப்  பணிந்து  ,தலையிற்  கூப்பியகையுடன்  “எல்லாப்  பகைவர்களையுங்  கொல்லுதலாற்  றன்வலிமையை  வெளிப்படுத்துகின் றதும் , வாட்படையால்  அணிசெய்யப்பட்டதும் , விண்ணவர்தலைவனைத்  தன்புகழ்  பாடுபவனாகப்  பெற்றதுமாகிய  என் நாயகனதுகைத்துண்டிற்கு  நலமுண்டாக.ஒவ்வொருகணமும்  வளர்கின்ற  நாயகவியோகமாகிய  அக்கினியின்  எரிகொழுந்தால் எரிக்கப்படுகின்ற  உறுப்புக்களையுடை யவளும், மிகவுங்கொடிய  தீயூழாற்  பன்னாட்பழகிய  அன்பின்சுவைக்கு  நிலயமாகிய  காதலனது  உடனுறைவினின்றும்  எதிர்பாராது வேறுபடுக்கப்பட்டவளும், இறப்பினும்  மிக்க  துன்பத்தைத் தருந்தலைவனது  பிரிவை  யாற்றாதவளும், செவியைவெதுப்புகின்ற  கணவனது  மரண சரிதத்தைக் கேட்ட  அளவிலேயே  உடனிறப்பதிற்  றுணிவுற்றவளும் , தாமரை மலர் போன்ற  அவன்முகத்தைக்  காணாமல்  உடனிறப்பநினைப்பது தகுதியின்   றெனவெண்ணுகின்றவளும் , அவன்  முகத்தைக்  காண்டற்குத்  தக்க நெறி   யின்னதென்றறியாதவளும்  , வேறு  புகலிடமில்லாதவளும் , நின்னையே  புகலாக  அடைந்தவளுமாகிய  இத்தகைய  இவள்  கண்ணீரொழுகக்  கைகூப்பி  வணங்கிப்  பெருமை தோன்ற  நின்னை இரக்கின்றாள் . அருள்செய்து  சொல்வாயாக  .  ஓ !  என் தலைவனது  வலக்கையே  !  உலகத்திற்  சிறந்த வீரனும்  அடுத்தடுத்துநேர்ந்த  மிக அஞ்சத்தக்க போர்முனையில்  விண்ணவர்களை  மிகக்கூறிய  பகழிகளாற்  சிதறாடித்தவனுமாகிய  என்காதலன்  எவனாற்கொல்லப்பட்டான் ?  பேறிலனா கிய யான்  அவன் முகத்தைக் காண்டற்கு  யாதுசெய்தல் வேண்டும்?  எவ்விடத்து  அடைதல்வேண்டும் ? என்று வணக்கத்துடன்  தெரிவித்தாள் .

                ஒவ்வொருகணமும்  மறுமொழியை  யெதிர்பார்த்தும்  ஒன்றுங் கேட்கப்படாமையால்  இருமடங்கதிகமான துன்பமெய்தி  “ஏ ! வலக்கையே  ! எவ்வாற்றானுங்  கொடியையாகின்றாய் !  கண்ணோட்டமேற்கொண்டிலை . என்றலைவனதுகையென்பதும் , பேறிலளாகிய  என்னிடத்து  எனது    பிராணபதிக்கு  இயற்கையிற்றோன்றிய  அன்புண்டென்பதும் உண்மையா யின்  எனக்கு மறுமொழி  தருவாயாக “  எனக்  கூறினாள் .

                அக்கைத்துண்டு , அமங்கலமான  சொல்லை  அவள்  கேட்பதற்கு  பிரியமில்லாததுபோலப்  பின்னரும்  மோனமுற்றிருக்குங்கால்  ஆற்றொணாத் துன்பமும்  சினமுமேற்கொண்டு , சிறிது  கண்சிவந்து , தளிர்போன்ற  அதரங்கள் துடிக்க , எல்லா  உறுப்புக்களையும்பற்றிய  வெதுப்பத்தால்  உடல்நடுங்கி , மீண்டும்  எழுந்து , தலைவனை நெஞ்சால்  தியானித்து , “என்னாற் பன்முறை  வேண்டப்பெற்றும்  இக் கைத்துண்டு  எனக்கு  மறுமொழி  தந்திலது .  ஆ !  காலத்தின் மாறுபாட்டுத்தன்மை யென்னே ! நிற்க; மீண்டும்  வஞ்சினத்துடன்  கேட்கின்றேன் .  ஏ !  கைத்துண்டே !  கைப்பிடித்தவன்றுதொட்டு  இன்றுவரை  இன்பத்திலுந் துன்பத்திலும்  எனது  பிராணகாந்தனையன்றி  வேறொன்றையுங்  கருதிலேன்  என்பதூஉம்,  ஒருபொழுதும் எனது  கணவனையன்றி  வேறொருவனை  நெஞ்சத்தாலும் நினைந்திலேன் என்பதூஉம்  உண்மையாயின்  எனக்கு  மறுமொழி  தருவாயாக “  எனக்கூறி  ஒழிவெய்தினாள் .

                  பின்னர் , நொடிப்பொழுதில் , மானமிக்கோரிற்  சிறந்த  இந்திரசித்துவின்  கைத்துண்டு , கற்பரசிகளுட்சிறந்த சுலோசனையினது  மிகக்கடியதும்  முன்கேட்கப்படாததும்  ,  கேட்டவளவினானே  சல்லியபாணம் போல   நெஞ்சத்தை  வருத்திப்பிளப்பதூஉமாகிய  அச்சொல்லைக் கேட்டு  , அதிவிரைவில்  நிலத்தினின்றுமெழுந்து , மின்னர்குழுவாற்  செய்யப்பட்டது போல  ஒளிசெய்கின்ற  அவ்வாட்படையைக்  கீழ்முகமாகத்  திருப்பி  மிகக்கூறிய  அதன்  நுனியால்  “ஏடி !  சுலோசனே !  முதலில்  நின்கண்களைத்  துடைத்துக்கொள்க .  என்செய்திகளைப்  படிப்பாயாக.  இதோ  எழுதுகின்றேன்  அன்புரையாடுங் காதலீ !  அறிவுமிக்க  நின்னால்  “இக் கேட்டை விளைக்குஞ்  செயலினின்றும்  ஒழிகஒழிக “  என்று உரைக்கப்பட்டதன்றோ!  நலத்தை  விரும்புகின்ற  நின் உபதேசங்களைச்  சேய்மையின்  ஒதுக்கிப்  போர்த்தொழிலையே  மேற்கொண்டு  நிகும்பிலையில்  ஆபிசாரவிதியினாற்  செய்யப்பட்ட வேள்வித்தீயினின்றும்  விடுபடை  கைப்படை  முதலிய  ஆயுதக் கூட்டங்களானிறைந்து  மாயையான் ஆக்கப்பட்ட  தேரைப்பெற்றுப்  போர்செய்ய  விரும்பிய யான்  அவ்விடத்தையடைந்து  நெருப்பை  விரைவிற்  கிளர்வித்துப்  பொரி , எள்ளு , சமித்து , தருப்பை ,  நெய் முதலியவைகளால்  ஓமஞ்செய்து  இறுதியிற்  பெரிய  ஆட்டின் கொழுப்பினாற்  பூரணாகுதியைக் கொடுத்தற்கு முயன்று கொண்டிருக்குமிடையில் , எனது  சிறியதந்தை யிடமாக  எல்லா நிகழ்ச்சிகளையுமுணர்ந்த  இராமனால் ஏவப்பட்டு என்னைக் கொல்லவந்த இலக்குமணன்  அங்கு  விரைந்து  போந்து  மிகக்கடிய  கன்மழையினு மிகுதியாகப்  பாம்புகளின்  நஞ்சாகிய  தீயைக் கக்குகின்ற  அம்புமாரியை  என்பாற்  பொழிந்தான் .

                    அவ்வமயத்திலும் , எங்ஙனமாயினும் வேள்வியை  முடித்து  இவனோடு  போர்செய்தல் வேண்டுமென்னும்  உறுதியையும்  , வேள்விவினையிலேயே  பற்றிய  மனத்தினையுமுடைய  யான்  பெருகுகின்ற  நெய்யொழுக்கத்துடன்கூடிய   பெரிய  ஆட்டின்  கொழுப்பைக்  கையினால்  உயரவெடுத்தேன் .  இவ் வாபிசார  வேள்வி  நறைவேறுமாயின்  என்னை  என்றுங்  கொல்லமுடியாதன்பதை  உணர்ந்த  அவ்விலக்குமணன்  விரைவில்வந்து  மிக்கவிரைவுடன்  தூக்கியகாலுதையால்  அவ்வவியை  என்  கைத்தலத்தினின்றுஞ்   சேய்மைக்கண்ணெறிந்தான். அப்பொழுதே  கிளர்ந் தெழும்  சினத்தினையுடைய யான் மீண்டும்  வேள்வியின்முயலல்  அறியாமையின்  பாலதாம் என்று  துணிவுற்று  “என்  சினமாகிய  நெருப்பில்  நின்னை ஓமஞ்செய்வே  “ னென்று  அவனோடு  போர்புரியத்தொடங்கினேன் .  அப்போர்த்தொடக்கத்திற்  கிளர்கின்ற  கோபத்தையுடைய  எம்மிருவர்க்கும்   அம்புகளாலும் , தண்டங்களாலும் , கைகலத்தலாலும்  நெடுநேரம்  யுத்தம்  நடைபெற்றது .  மிக்க  மாயாவியும்  மூவுலகத்தினுஞ்  சிறந்த  வீரனுமாகிய  என்னைக்  கொல்லுதற்கு  வலியற்றவனாகிய  இலக்குமணன்  ஊழித்தீயினையொத்த  ஒரம்பை  வில்லிற்பூட்டி  “ஏ !  பகழியே !தசரத குமாரனாகிய  இராமன்  ,  அறவோனும் , உண்மையாளனும்,  ஆண்மையில்  நிகரற்றவனும்  ஆவன்  என்பது  உண்மையாயின்  இவ்  விராவணகுமாரனைக்  கொல்வாயாக . என்று  வஞ்சினங்  கூறி  என்பால்  விடுத்தான் . வில்லினின்றும்  வெளிப்பட்ட  அவ்விராமபாணம்  அச்சத்தைவிளைக்கும்  ஒலியினையுடைய தாய்ப்    பாம்பின்  நெஞ்சையொத்த  தீத்திரளைக்  கக்கிக்கொண்டு  இடிவீழ்ந்தால்போலென்பால்  வீழ்ந்து , என் தலயைத்  துணித்து , அதனை  இராமபிரானது  திருவடித்தாமரைகளிலும் ,  இவ்வலக்கையைத்  துணித்து  நின்பக்கலிலும்  வீழ்த்தியது  . அவ்வம்பாற்றுணிக்கப்பட்ட  என்றலை  ,அரக்கர்குலத்துத்  தூமகேதுவும் , கதிரவன் குலத்துத்  தலைமணியுமாகிய  இராமபிரானது  திருவடித்தாமரைகளை  யடுத்தலால்  வருமின்பத்தை  நுகர்ந்து  அளவிலாப்  பேரின்பத்தை  யடைகின்றது . நங்காய் !  நீயும்  விரைந்து  வருவாயாக. இராமபிரானது  திருவடிகளை  யெய்தலால்வரும்  இன்பத்தை நுகர்வாயாக . பிறப்பைப்  பயன்படுத்துக .மணம்  நிகழ்ந்த ஞான்று  அன்புடன்பற்றிய  எனது  இவ்வலக்கையை  யெடுத்துக்கொண்டு  விரைந்து வருவாயாக “  என  நிலத்தில்வரைந்து  மீண்டுஞ்  சுலொசனையின் முன்னிலையிற்  பூமியில்  வீழ்ந்தது . அங்ஙனமெழுதப்பட்ட  தன் றலைவனது  செய்தியை  அன்பு பெருகப்  படித்துக்  குப்பாயம்  போர்த்ததுபோல்  மயிர்ப் புளகமுற்றவுடலையும் ,  இடைவிடாது  அழுதலாற்  பருத்த  கண்களை யுமுடைய  அச்சுலோசனை  ,  பாழடைந்தாள்போலும் , மயக்கமுற்றாள் போலும் , ஓவியத்துற்றாள்போலும் ,  அசைவறுநிலையை  யண்மினாள் போலும்  , நெடுநேரம்  எல்லாப் பொறிகளின்  தொழில்களும்  ஒடுங்கப்பெற்று  இருந்தாள் .அவள் தோழிமார்களெல்லாம் மிக்க வியப்பைத்  தருகின்றதும் முன்னிகழாததுமாய  இந் நிகழ்ச்சியைப்  பார்த்துக்  கற்பரசியாகிய  அச்சுலோசனையினது  பிறரிடத்துக்  காண்டற்கரிய  கற்பின்  மேம்பாட்டைப்  பாராட்டினார்கள் .  

                     பின்னர் , இவள்  முகூர்த்தப்பொழுதிற்  கண்களை  விழித்து  “இனிக்  காலந்தாழ்த்தல்  கூடாது ; கட்டளையிட்டவாறு  நடத்தல்வேண்டும் ;  இப்பொழுது என்  மாமன்பக்கலெய்தி  இறந்த  என் கணவனது  சிரசைக்  கொணரும்படி வேண்டிக்கொள்வேன் .ஆதலிற் சிவிகையைக் கொணருங்கள். இக்கைத்துண்டினை  யேற்றுங்கள்  .  என் மாமன்  யாண்டுள்ளானோ   ஆண்டு  விரைந்துசெல்வோமாக . “  என்று  சொல்லிக்கொண்டு  பல்லக்குக்  கொணர் தற்பொருட்டுத்  தோழிகளுக்குக்  கட்டளையிட்டாள் .

                அக்கணத்திலே  கொண்டுவரப்பட்ட  இரத்தினசிவிகையில்  அக்கைத்துண்டினைச்  சிறப்புடனேற்றி  அப்பல்லக்கை  நான்கு வேலைக்காரி களாற்  றூக்குவித்துத்  தோழிகள்  சூழ  அடிவரையும் குப்பாயத்தான் (சட்டை) மறைக்கப்பட்டவுடலையும் , மூச்சுக்காற்றின்  வெம்மையால்  நிறம்  வேறுபட்ட  அதரங்களையும் , தடையின்றிப்  பெருகுகின்ற  கண்ணீர்வெள்ளத்தானனைக் கப்பட்ட  மேலாடையையும்  ,  யமுனையாற்றுவெள்ளம்  போற்  கறுத்துத்  தோட்பக்கங்களிற்  றுவண்டு  சிதறுண்டுகிடக்கின்ற  கூந்தலையும் , பன்முறை  மார்பின்கண்   அடித்துக் கொள்ளுதலாற்   றளிர்போற்  சிவந்த  கைகளையும் , நெல்லிக்கனிபோற்  பருத்த  முத்துக்களானாய  மாலையாகிய  அணிகலனையுமுடையவளும் , “ஆ !நாத !  “   என்று பன்முறை  புலம்பி , முககமலத்தைக்  கைத்தலத்தான்  மறைத்து , ஒருத்தி  தாமரை யிலையில்  நீர்  தாங்கிவர ,  ஒருத்தி  ஈரமுள்ள  வாழையிலையானாகிய  விசிரியைத்  தாங்கிவர , ஒருத்தி  மேலே  விழுகின்ற  கடுங்கதிர்க்கிரணத்தைத்  தடுக்கவிரும்பித்  தூக்கப்பட்டதும் , அத் துன்பநிலைக்குரியதுமாகிய  கறுப்புக்குடையைத்  தாங்கிவர , வேறுசிலர்  சோகத்தால் வேறுபட்டு  வாய்வாளாது  நெருக்கமின்றிச்  சூழ்ந்துவர வரம்  பிகந்த  தனது துன்பத்தால்  எல்லோருடைய  மனத்தயும்  வருத்துகின்றவளும் , இரக்கத்திற்கு  அதிட்டானதேவதை போற்  கட்புலனுக்குத்  தோன்றுகின்றவளும்  ,  கற்புருக்கொண்டாற்போல  நாயகற்  பிரிவானேர்ந்த  துன்பத்தாற்  கலக்க முறுகின்றவளும்  ,  ஒவ்வொரு கணத்திலும்   மூங்கைபோலவும்  அறிவிலாள்  போலவும் , மயக்கமுற்றாள் போலவும் , பேய்கோட்பட்டாள் போலவும் , பாழடைந்த மனத்தினள் போலவும், கவலைக்கடலுண்  மூழ்கினாள் போலவும்  தடுமாறுகின்றவளும் ,  யாவனாயினும்  ஒருவன்  தன்றலைவனது  சரிதத்தைத்  தெரிவிப்பான் என்று  புதிய  கருங்குவளைமலர்போல்  அழகிய  அகன்ற  விழிகளை  நாற்புறமும்  பரப்புகின்றவளும்  , “இன்னும்  எத்துணைத்  தூரத்தில்  என்  மாமனது  அரசிருக்கை மண்டபம்  உள்ளது “  என்று  ஒவ்வொரு கணத்திலும்  தோழிகளை  நோக்கி  வினவுகின்றவளும் , சிறிதுபொழுது  இரக்கத்துடன்  கதறுகின்றவளும் , சிறிதுபொழுது நெட்டுயிர்ப்பெறி கின்றவளும்  ஆகிய  சுலோசனை  தோழிகளான்  மிக்கச்சிரமத்துடன்  தாங்கப்பட்டு  இராக்கதசக்கிரவர்த்தியாகிய  இலங்கைநாயகனது  அத்தாணி  மண்டபத்தின்  பக்கலை  யடைந்தாள் .  

                ஆண்டுள்ள  ஒளிர்கின்ற  பொன்னாலியற்றப்பட்ட   அத்தாணிமண்ட பத்தின்  நடுவண்  நவமணிகள்  அழுத்திய  அரியணையில்  வீற்றிருக்கும்  இராவணனை  ,  மிக அணிமைக்கண்ணுள்ள  ஓர்  இருக்கையில்  வீற்றிருக் கின்ற  பதிவிரதாசிரோமணியாகிய  மந்தோதரி , இயற்கை  வனப்பு  வாய்ந்து  வணக்கத்துடன்  கூடிய  பற்பல  உபதேசமொழிகளாற்   றடுத்தும்  அவன்  சானகியின்பால்வைத்த  பற்றுள்ளமுடையனாய், “ஏடி !  அறிவிழந்த  மந்தோதரி  நீ  இங்ஙனங்கூறுதலென்னை? உயிர்விடினும்  ஒருபொழுதும்  சானகியை  விடேன் . வீரர்களுட்சிறந்த  நம் புதல்வன்  நிகும்பிலையில்  விதிப்படி  செய்யப்பட்ட  வேள்வித் தீ யினின்றும்  எய்திய  தெய்வத்தன்மை  வாய்ந்த  தேரையுடையோனாய்ப்  போர்க்களத்தில்  இராமலக்குமணர்களை  நிச்சயமாக  கொல்லுவான் .பின்னர்  வேறு  புகலில்லாது  இறத்தற்கு  அஞ்சுகின்ற  அப்பெண்மணியாகிய   சானகி , தானே  போந்து  என்னை  யின்புறுத்துவாள் . என்  அவாவையும்  நிறைவேற்றுவாள் “  என்று  கூறினான் .  

                   செவியை  வெதுப்புகின்ற  அம்மொழியைக்கேட்ட  மந்தோதரி  , “நாத !  சிவபிரானை  மகிழ்வுறுத்திய  தோள்வலியினையுடைய  நினக்கு  இஃதறமன்று  .  சனகன்புதல்வி , கற்புமிக்க  நங்கையருள்  தலைமணியன்றே!   கற்புக்  காட்டுத்தீபோன்றதன்றே !  கற்பரசிகளின்  சரிதம்  மிக்க  வியப்பினையும்  சிறப்பினையும்  உடையதன்றே ! நூற்றுக்கணக்கான  வீரர்கள்  போர்க்களத்தில்  இறந்ததை  நோக்குவாயாக . தசரதன்  புதல்வர்கள்  மக்கட்டன்மையினர்களாகவும் , சனககுலத்தை  மகிழ்விக்கும்  சீதை  சாமானியமான  ஒரு பெண்ணாகவும்  இருப்பார்களாயின் , இவையெல்லாம்  எங்ஙனம்  நிகழும்? ஆதலின்  உலகத்திற்கு  இன்பம்  பயக்கும்  இராமனை  எல்லாவுயிர்களுக்கும்  இதஞ்செய்யும்  விருப்பத்தால்  நிலத்தில்  அவதரித்த  திருமாளாகவும் , சானகியைப்  பூவுலகத்திற்குத்  தாயாகிய  பாற்கடற்பிறந்த  இலக்குமியாகவும்  அறிவாயாக . உருவமே  மனிதவியல்பைக்  கடந்ததென்று  அறிவிக்கும்  சீதையை  இராமபிரானிடம்  வணக்கத்துடன்  சேர்ப்பிப்பாயாக .  தனது  கற்பினானாகிய  புகழினாற்  பத்துத்திக்குக்களையும்  வெள்ளியவாகச்  செய்த  விதேககுலத்துக்கு  மங்கல விளக்காகிய  சீதையின்பால்  இவ்வாறு  ஐயுறுதற்கு  நின்மனம்  முயல்கின்றதென்னை ?  இத்தகைய  நின்னறிவு  நலமுடையதன்று . ஒரு பொழுதும்  இன்பந்தருவதுமன்று .  நலன்றருஞ்செய லைத்  தொடங்குகின்ற  ஆடவன்  எச்செயல்களினும்  நேரத்தக்க  நன்று  தீதுகளை  நுனித்துணர்கின்றானன்றே !  இந் நிகழ்ச்சியில்  ஈது  எடுத்துக்காட்டாகும் . மிக்க  வன்மை  வாய்ந்த  எத்தனையோ  வீரர்கள் போர்முகத்தின்  மாண்டனர் . ஆற்றொணாத்  திண்மையினையுடைய  நினது  உடன்பிறந்தானாகிய  கும்பகன்னன் , நால்வகைப் படைகளுடன்  சென்று தக்கவாறு போர்புரிந்தும்  ,விலங்கினங்களைத்  துணையாகப்பெற்ற  இராமனாற்  போர்க்களத்தில்  இறந்தான் . குமாரனாகிய  மேகநாதன்  முதலில்  மிக்க மானக்கேட்டை யடைந்து , சானகியை  விடுதற்பொருட்டு  நின்னைப்  பல்லாற்றானும்  வேண்டியும் ,நீ மறுத்துரைத்த  கடுஞ்சொற்களை  யாற்றதவனாய் ,உயிரையுந்  துரும்பாகக்  கருதிப்போர்செதற்பொருட்டு  மீண்டும்  ஓடினான் . மீண்டும்  அவனை வாழ்நாளுடையனாகக்  காண்பேனோ?காண்கிலேனோ ? அறியேன் . இன்னுந் தீ நெறிக்கட்செல்லும்  அறிவைத்  திருப்புதற்கு  ஆற்றலில்லாயாயின்  நம்குலம்  வேறோடு  கேடுறுமென்பதுறுதியே . ஆதலின் , இக்கேட்டை  விளைக்குஞ்  செலவினின்றும்  நீக்குவாயாக.  மிக்க  எழில்வாய்ந்த  இவ்விராச்சியம்  விரிவு டையது ;  நிரம்பிய  இச்செல்வமும்  பிறர்க்கு  அமையாதது .;  வணக்கமிக்க  ஏவலாளர்  பலருளர் ; ஆணயும்  விட்புலவேந்தன்  முடிமணியில்  விளங்குவது ; புகழ் எல்லாத்  திசைகளிலும்  நின்று  நிலவுகின்றது ;  வரலாறு  மக்களனை வரையும் வியப்புறச்செய்வது . அனைத்தையும்  ஓரமயத்திலேயே  பயனற்றன வாகச்செய்யற்க . விரைந்து  சானகியைச்  சமர்பணஞ் செய்வாயாக . தசரதன்  புதல்வர்களிடத்து  நட்பைக்  கொள்வாயாக .  நீண்டகாலம்  இவ்வரசுரிமைத்  திருவை  நுகர்வாயாக “    என்று  அன்புடன்  கூறினாள்.  

                    இராவணன்  தனது  செயல்  பொருத்தமற்றதென்றறிந்தும், காலமாறுபாட்டால் , அன்புடன்  கூறப்பட்டனவாயினும்  மந்தோதரியின்  மொழிகளை  வெறுத்துத்  தள்ளினான் .

                     ஆ ! ஆ ! நமது  அத்தாணிமண்டபத்தின் அணிமைக்கண்  எய்திய  சுலோசனையை மறந்து  மிகவுங்  காலங்கடந்து  விட்டோம் .  ஆண்டு  அக்கற்பரசி  எத்துணைக்  காலமிருப்பள் . ஆதலின்  அவள்  உள்ளே  புகுக.  பின்னர்  யாதுநேருமென்று  அறிவதற்கு  நாமும்  அவாவுடன்  முற்படுவோமாக .

                       சூர்கொண்ட  புதிய  மேகம்  போன்ற  கரியகுழற்கற்றையாலும் , கார்காலத்து  நிறைமதி போன்ற  அழகிய  முகத்தானும் , இளம்பிறைபோல்  எழின்மிக்க  நெற்றியானும் , விற்கொடியோவென்று  ஐயுறுத்தும்  புருவங்களானும்  ,  அசைகின்ற  கருங்குவளையிதழ்போல்  வனப்பு மிக்க  கண் களானும்  , சண்பகத்தினரும்புகொலோவென்னும்  ஐயத்தை  விளக்கும்  மூக்கானும் ,  கண்ணாடியொத்த  கதுப்புகளானும், பவளக்கொடிபோன்ற  அழகிய  அதரங்களானும் , சங்கத்தையொத்த  கழுத்தானும்  , பந்துபோற்றிரண்ட  பயோதரங்களானும் ,கொடிகளையொத்த  கைகளானும், மும்மடிப்பான்  அழகு செய்யும்  இடையானும் , புளினதலத்தையொத்த   நிதம்பத்தானும் ,வாழைத்தண்டு போலாகிய  தொடைகளானும் , தாமரப்பூ போன்ற  அடிகளானும் விளங்குகின்றவளும் , நடையால்  அன்னத்தையும் , இன்சொற்களாற்  குயிலையும் , தலைவனிடத்துள்ள  அன்பால்  அன்றிற் பேட்டையும் , யாவரையும்  தன் வயமீர்த்தலால் மந்திரசித்தியையும்   ஒத்துத்  திகழ்கின்றவளும் , அழகிய  உருவச்சிறப்பினாலும்  ,  ஒப்பற்ற  எழிலானும், இயற்கையின்  வாய்ந்த  நல்லொழுக்கத்தானும்  , மாட்சிமிக்க  கற்பினானும் –  பலவாறு  கூறுவதென்னை?  எல்லா வகையானும்  சானகியை  யொத்துவிளங்குகின்றவளுமாகிய  சுலோசனை , அத்தாணிமண்டபத்தின்  வாயிலை  மெல்ல எய்தி இராவணனது அவைக்களத்திற்   புகுந்தாள்  

                   இரங்குதற்குரிய  அச்சுலோசனையைப்  பார்த்த இராவணன்  மந்தோதரியை நொக்கி  “ஏடி !  மதியற்ற  மந்தோதரி ! நீ  சிறிதும்  அறிந்திலை. தக்கதின்ன  தகாதன  வின்னவென்று  ஆராய்ந்திலை . இந்திரசித்துவின்  வலிமையை  உண்மையிலுணர்ந்திலை  . பார்க்க !  பார்க்க !  வீரருட்சிறந்த  நம்புதல்வனாற்  போரில்  இராமலக்குமணர்கள்  இறந்தமை கேட்டு  , என்பால்  அருள்பெறற்பொருட்டுச்  சானகி  ஈண்டே  வருகின்றாள் . இப்பொழுதே  எனது  அவா  பயனுடையதாயிற்று  .  இப்பொழுதே  செயதக்க  செய்தவனைப்போல  என்னைப்  பார்க்கின்றேன் “  என்று  மொழிந்தான் . அங்ஙனம்  வருகின்ற  நங்கையை  நோக்கி  மந்தோதரியும் ,  சானகியென்று  சிறிது  மயங்கினாள் . அப்பொழுதும் ,  இராவணன்  அவளைச்  சானகியென்றே  துணிவுற்றான் . மந்தோதரி , அம்மாதை  நன்றாகப்பார்த்துத்  தன் மருகி  யென்றுணர்ந்து , “புலத்தியகுலத்தரசே !  இம்மங்கையை நீ நன்றாக  அறிந்திலை, இவள்  சானகியல்லள் .  நம் புதல்வன் மேகநாதனது  அன்புமிக்க  காதலியாகிய  நமது மருகி ; தன்னெழில்  நலத்தாற் சானகியையொப்பாள் . கதிரவன் கானார்களன்றே இராசபத்தினிகள் .  உவளகத்தில்வெயிருந்து(அந்தப்புரம்)  எங்ஙனம்  ஈண்டு  வருகின்றாள்?  நன்றாக  ஆராய்ந்து நோக்கின் , துன்பத்தால் வாடியமனத்தினள்போலக்  காணப்படுகின்றாள் .இந் நங்கை  உடலை யணிந்து  கொள்வதில்  விருப்பமற்றவளாகத்  தோன்றுகின்றாள். ஆதலானன்றே , நெற்றியிற்  றிலகங்  காணப்படவில்லை ; குழல்  பின்னப்பட்டிலது ; முககமலம்   வாட்டமுற்றிருக்கின்றது ;  கண்கள்  நீர்ப்பெருக்கான்  மலர்ச்சி  குன்றின .உடற்கொம்பு  துன்பத்தால் வாட்டமுற்றுள்ளது ; நேர்ந்த  இடையூறு  யாதோ  வறிகிலேன் . எக்காலத்தும்  இவள்  உவளகத்தினின்றும்  வெளிப்போந்திலள் .இத்தகைய  வேடத்துடன்  இங்கெய்திய  இவளைப்  பார்த்தமையான் , போர் குறித்துச்சென்ற  புதல்வனைப்பற்றி  அன்புவயப்பட்ட  என் நெஞ்சம்  அமங்கலத்தை  யையுறுகின்றது  .  ஆ !  என்செய்வல் !  இவ்வாட்டமிக்க  பெண்மணி  எத்தகைய  செய்தியைத்  தெரிவிப்பாளோ?  என்று  பகர்ந்தனள் .

               இங்ஙனஞ்  சொல்லியவுடனே  சுலோசனை  ஆண்டடைந்து  துன்பத்தான் மூடப்பட்ட  தன்னிலையை  அரிதிற்றகைந்து  , பல்லக்கிற்றாங்கி வந்த  அக் கைத்துண்டினை  , இராவணன்முன்னிலையில்  வைத்து , மாமன்  மாமி  யிருவர்களையும்  வணங்கிச்  சிறிது  தூரத்தினின்று  அடித்தலநோக்கிய  கண்களையுடையளாய்த்  தழுதழுத்தகுரலுடன்  , “அரசர் பெரும!பேரிலளாகிய நினது மருகி  சுலோசனையென்னும்  பெயரினையுடைய  யான்  இங்குப்  போந்தேன் ; எக்காரணத்தை  முன்னிட்டும்  இது காறும்  உவளகத்தினின்றும்  வெளிச்செல்லும்  நிலைமைய  ளல்லேன் ; இப்பொழுதோ  ஆற்றோணாத்  துன்பத்தால் வருந்தி , நாணத்தைச்  சேய்மைக்கணொழித்து , வணக்கமாகிய  செல்வத்தைச்  சிறிதும்  பொருட்படுத்தாமல்  நற்குலத்துதித்த  பெண்பாலரின்  இயல்பை  முற்றும்  ஒழித்து  , என்னிலையை  மிகவும்  அடக்கித்  தன்வயத்தினள் போலவும் , அறிவிலாள் போலவும், நினது திருமுன்  எய்தினேன் ; தெரிவித்துக்கொள்ளவேண்டிய தொன்றுளது . அளியால்  நனைந்த  மனத்தான்  அருள்க.   நினைவுகூர்தலாகிய  வன்மையால்  என்னை  அநுக்கிரகிக்க . என் சொற்களைக் கேட்டல் வேண்டும் . அவாவை  நிறைவேற்றவேண்டும்  . போர்க்களத்தில்  இராமலக்குமணர்களை  வெற்றி கோடற்பொருட்டு  நிகும்பிலையில்  ஆபிசாரவேள்விசெய்தற்குப்  புறப்பட்ட  என் காதலன்  வழியிடையே  என் இல்லத்தை அடைந்தான் . என் உபதேசமொழிகள்  எல்லாவற்றையும்  வெறுத்தொதிக்கி   நிகும்பிலையை அடைந்த  இந்திரசித்து , சுமித்திரை புதல்வனாற்  கொல்லப்பட்டான் .ஈதன்றே மூவுலகத்தினுஞ்  சிறந்த  வீரனாகிய  நின் புதல்வனது  கைத்துண்டு  .  யான், அவனது மரண நிகழ்ச்சி  முழுதும்  எழுதிய  பத்திரிகை  இதுவாகும் .இவ்வெல்லா  நிகழ்ச்சிகளும்  இக்கைத்துண்டினாலேயே  தன்கையிற்றாங்கிய  கூரியவான்முனையால் ,நிலத்தில்  நன்றாக  எழுதப்பட் டனவாகும்  . யானோ  என்தலைவனது  தலையைக்கண்டு  அப்பொழுதே  அவனுடன்  இறத்தலை  விரும்புகின்றேன் . ஆதலின் , அருள் செய்க. என்  தலைவனது தலையைக் கொணர்தற்பொருட்டு விரைந்து  கட்டளையிடுங்கள்”  என்று  கூறித்  தன்  கைத்தலத்துள்ள  பத்திரிக்கை யொன்றை  அவன்  முன்னிலையில்  வைத்தாள் . இந்திரசித்துவின்  மரண நிகழ்ச்சிகேட்ட  அளவினானே  மந்தோதரியின்  இதயம்  இரு கூறாகப்  பிளக்கப்பட்டது .அப்பொழுதே  அறிவை  மயக்கங்கவர்ந்தது . “ஆ ! புதல்வ ! மேகநாத ! “  என்று  கதறிப்  பெருங்காற்றான  அலைப்புண்ட  வாழைபோல  நிலத்தில் வீழ்ந்தாள் .

              இராவணனுந்  தானே  அப்பத்திரத்தைப்  படித்து  உலகம்  புகழுந்  திண்மை மிக்க  தன்  புதல்வனது  இறப்பு  நிகழ்ச்சியை  முதலில்  நம்பாமல் பத்திரிக்கையில்  வரைந்த  பொருளையும்  வெறுத்துத்தள்ளிச்  சிறிது  நினைவு கூர்ந்து , தன்  மகனது  நாமவிலச்சினையுடைய  கொடிபோன்ற  வாளால்  அணிசெய்யப்பட்ட  கைத்துண்டினையும்  பார்த்து , அசைவறு  நிலையன் போலவும் , ஓவியத்துற்றான்போலவும் , இடியாற்  கெடுக்கப்பட்டவன்  போலவும்  அசைவற்றிருந்து  , ‘ ஆ ! கேடு  விளைக்கும் அவாவினையுடைய  யான்  கெடுகின்றேன்  ‘  என்று  பத்து  முகங்களாலும்  உரக்கக்  கதறினான் . “ ஆ !  குழந்தாய் ! மேகநாதா ! யான்  உயிருடையனாயிருக்கும்  பொழுதே  நீ  நினைவுறும்  நிலையைஎய்தினாய் ;  பேரிலனாகிய  எனது  தீவினைப்  பயன்  வெறுக்கத்தக்கது ; நின்பெயர் கேட்டவளவிலே  தேவாசுரர்களையுடைய  எல்லா  உலகங்களும்  அச்சத்தால்  நடுக்கமுறும் ; அத்தகைய  நீ,  கரடி  குரங்கு  இவைகளின்  முன்னிலையில்  மனிதரில்  இழிந்த ஒருவனால்  எங்ஙனம்  கொல்லப்பட்டாய் ?  ஆ !  அஞ்சத்தக்க  திண்ணிய  நினது  கொடிய  மரணத்தைக்கேட்டு  என்  மனம்  மிகவுங்  கலக்கமுறுகின்றது .  பிறரால்  ஆற்றோணா  வலிமை  மிக்க  நீ  போரில்  அவ்  விராசகுமாரர்களை  விளையாட்டாகத்  தோல்வியுறச் செய்து மகிழ்ச்சியுடையனாய் வந்து  என்னை  யின்புறுத்துவாய்  ; அரசியலின் பத்தையும்  நுகர்வாய்  என்று  உவகையுற்றிருந்த  கெடு நினைவி னனாகிய  எனது  பேரவாவென்னும்  பெருமரம்  வேருடன்  களையப்பட்டது “  என்று  இங்ஙனம்  நெடுநேரம்  புலம்பினான் .

              பின்னர்ச்  சிறிது  நேரஞ்  சென்றதும் , சுலோசனை  மீண்டும்  தன்றலைவனது  தலையைக்  கொணர்தற்கு  இரந்தாள் . அவள்  சொற்களைக் கேட்டுப்  புத்திரசோகத்தாற்  கலக்குண்ட  எளியனாகிய  இராவணன் , சினத்தாற்  கிளர்ந்தெழுந்து ,  “ஏடி !  ஒழுங்கிழந்தவளே !  போர்க்களத்தி னின்றும் அவன்றலையைக்  கொணர்தலைப்பற்றி   இரக்கின்ற  நினது  கடுஞ் சொற்களைக் கேட்டலால்  எத்துணைத்துன்பம்  விளைகின்றதோ, அத்துணைத்  துன்பம்  வீரகுல  சூடாமணியாகிய  என்புதல்வனிறந்தான் என்னும்  இதனால்  விளைந்திலது .  அமயத்திற்  குரியசெயலைச்  சிறிதும்  ஆராயாது  இங்கெய்தி  இங்ஙனம்  கூறுதற்குரிய  நெஞ்சுறுதியை   எவ்வாறு  கடைப்பிடித்தாய் ?  அறிவிலாய் !  என் பக்கலினின்றும்  அப்புறம் செல்க “   என்று  அவளை  அச்சுறுத்தினான் .

                  சுலோசனையும் , நெஞ்சுறுதியைக்கைப்பிடித்து  ,  “அரசர் பெரும !  யான்  கூறுகின்றதனைச்  சிறிது  நினைவுற்றுக்  கேட்பாயக. சினத்திற்கும் , பிரிவிரக்கத்திற்கும்  ஈது  அமயமன்று . ஊழினாலூட்டப்படும்  வினைப்பயன்  இன்றியமையாது நுகரத்தக்கதே .  இவ்வமயத்திற்  சினத்தாற்  செய்யத்தக்கது  யாதுளது ?  போரில்  இராமலக்குமணர்களை  வெல்லுதற்கு  யாவன்  வலியான்?  இராமன்  பொருட்டுச்  சானகியை  வேண்டுதலின்றியே   சேர்ப்பிப்பாயாக . அறிவுமிக்க  அமைச்சருள்  ஒருவனையும்  இராமன்  பக்கல்  விடுப்பாயாக .  என்றலைவனது  தலையைக்  கொணர்விப்பாயாக . இப்பொழுது  யான்  அத்தலையை  அவசியம்  காண்டல் வேண்டும் .  உடனிறத்தலையும்  நிறைவேற்றல்  வேண்டும் . நற்குடிக்கட்டோன்றிய   அரச குலத்து நங்கையரது குலவொழுக்கமாகிய  ஆசாரம்  ஈதன்றே.  அரசர்பெருமகனாகிய  நீ , என் வேண்டுகோளை  முறைமையில்லாதது போல் வெறுத்தொதுக்கிச்  சினத்தாற்  கண்சிவத்தல்  என்னை?  நற்செயல்களிற்  பற்றில்லாத  அரசர்பெருமானாகிய  நீ , முதலிற்  குற்றத்தை  நன்றுகண்டிலை. மிக்க  அறிவுபடைத்த  அரசன்  பிறன்மனைவியைத்  தடுத்தற்கு  எவ்வாறு  தகுதியுளனாவன்?  இராமலக்குமணர்களால்  விடப்பட்ட  ஊழித்தீயினை யொத்த  பகழிகளின்  முன்னிற்றற்குத்  தேவதானவர்களுள்ளும்  யாவன்  ஆற்றலுடையான் ?  சனத்தானத்தின் கேட்டையுணர்ந்தும் ,  வாலியின்  இறப்பைக்கேட்டும்  , அரசர்பெருமானின்  நெஞ்சம்  நடுக்கமுறாமை  என்னை? ஆதலின், இராமச்சந்திரன்பொருட்டுச்  சானகியைத்  திருப்பிக்கொடுத்து விடுவாயாக .  நலமற்ற  இச்செயல்  இனி அமைக  “  என்று  இவைமுதலிய  பிற  அறிவுபதேசங்களையுஞ்  சொல்லிச்  சுலோசனை  ஒழிவெய்தினாள் .

                புதல்வற்பிரிவால்  வெதும்புகின்றவனும் , இயற்கையானே  சினமிக்கவனுமாகிய  இராவணன் , கற்பரசியாகிய  அச் சுலோசனையின்  மொழிகளைக்கேட்டுச்  சினத்தீக்  கிளர்ந்தெழ , ஒளிர்கின்ற  விளக்கங்களை யொத்த  கண்களினின்றும்  நெருப்புப்  பொரிகளை  யிறைத்துப்  பற்களால் உதடுகளைக்கடித்துத்  தன்  மருகியை  எரிக்கின்றவன்போல  நோக்கி ,  “ஆ !  மதியற்றவளே !  இலங்கேசுவரன்  மாட்சி  யின்னதென்  றுணராதவளே !  பல்லாற்றானும்  உபதேசித்தனை .  நீயே  எனக்குக்  கட்டளையிடுபவளா கின்றாய் ;  என்பக்கல்  எய்தித்  தடையின்றி  இவ்வாறு புலம்புதற்குப்  பேதையாகிய  நீ  எங்ஙனம்  உரியை ?  இப்பொழுதே  எனது  சந்திரகாசன்  நினது  நாவை  அறுப்பான் . அறிவிலியாகிய  நீ  மிகவும்  வெறுக்கத்தக்கவள் .உண்மையாகவே  நீ  தலைவற்பிரிவால்நேர்ந்த  துன்பத்தால் வருந்தினை யாயின்   இத்துணைக்காலம்  உயிரைத்தாங்கியிருத்தல்  என்னை?  விரைவிற் செல்க !  இக்கணமே  கிளர்கின்ற  நெருப்பின்கட்   சேர்வாயாக .  வீரனாக  நினைக்கத்தக்க  எவன்றான், பகைவன்பக்கலெய்திப்  போரிலிறந்தவனது தலையை வேண்டுதற்குத்  துணிவான் ? மீண்டும்  இங்ஙனம்   புலம்புவாயேல்  இக்கணத்தே  யானே  நின்னை  இமயனில்லத்தின்கண்  அடைவிப்பேன் .என்  அருகில்லாது  செல்க !  செல்க !  தீக்கண்  வீழ்ந்து  நின்றலைவன்  செல்லுழிச்   செல்க”  என்று  கூறினான் .  

             சுலோசனை , கண்ணீரானனைந்த  தன்  முகத்தைத்  துடைத்து , மெல்லத்  தழுதழுத்தகுரலுடன்  “மரணமெய்திய  என்றலைவனது  முகத்தைக் காணாமல் , தீக்கட்புகுதற்கு  யாங்ஙனந்  துணிவேன் ?  நினக்கு  இராமன்பக்கலெய்தி  என் றலைவனது  தலையை  வேண்டுதலில்  விருப்பமின்றேல்  எனக்கு  விடைதருவாயாக .  யானே  அவன்சந்நிதியடைந்து  என் நாதனது  சிரத்தை  வேண்டுவேன் “  என்று  தெரிவித்தாள் .  

              இராவணன் , “ஏடி !  நாணமற்றவளே  !   விலங்கினங்களின்  துணை யைப் பெற்றிருக்கும்  இராமன்  மக்களுட்   டாழ்ந்தவன் . மூவுலகத்திற்கும்  அரசனாகவும் , இராக்கதசக்கிரவர்த்தியாகவும்  உள்ள  யான் , அவன்  மனைவியைக்  கவர்ந்தேன் . அஞ்சத்தக்க  திண்ணியனாகிய  நின்நாயகனை, அவன்தம்பி  போரிற்  கொன்றான் . அங்ஙனம்  கொல்லப்பட்ட  இந்திரசித்துவின்  மனைவியும்  என்மருகியும் , சானகியை  ஒத்த  அழகுவாய்ந்தவளும்  ,  இளமையுடையாளும்  ஆகிய  நீ ,  நின் றலைவனை  இழந்திருக்குங்கால் , நம் பகைவனும் , காதலின்பிரிவாற்   றுன்புறுகின்ற வனும் , எழின்மிக்கானுமாகிய  இராமனது பக்கலை யெய்துதலென்னும்  இஃது  எங்ஙனம்  பொருத்தமுடையதாகும் ?  “புதல்வனிறத்தலாலச்சமுற்ற  இராவணன்  பகைவர்களை  உடன்படுத்தற்பொருட்டுத்  தன் மருகியை ஏவினான் . ‘ என்றன்றே  உலகம்  பழித்துரைக்கும்  .  அப்பாதகனாகிய  இராமன்  முன்  என் றங்கையை  விகாரப்படுத்தியது போல  நின்னையும்  செய்வான் .ஆதலின் , அறிவிலியாகிய  நீ  அவன்பக்கலிற்  சேருதல்  தகுதியன்று . எவ்வாற்றானும்  நின் சொல்லை  ஏற்பேனல்லேன் . என்முன்னில்லாது  விரைந்து செல்வாயாக”  என்று  உரத்த  குரலுடன்  அவளைப்  பழித்துரைத்தான் .  

                  செவியைவெதுப்புகின்ற  அவனது  கடுஞ் சொற்களைக் கேட்டுப்  பிரிவிரக்கமுஞ்  சினமும்  மிக்க  அக்  கற்பிற்சிறந்த பெண்மணி , “பொருத்தமின்றி   இங்ஙனம்  எதற்காகப்புலம்புகின்றாய் ?  நெறிபிறழ்ந்த  ஒருவன்  உலகமனைத்தையுந்  தன்னைப் போற்  காண்கின்றான் . பிறர்மனை நயத்தலிற்  பற்றுடையனாகிய  நீ  வாய்மையிற் சிறந்த  இராமனை  ஏன்  இவ்வாறு  பழித்துரைக்கின்றாய் ?இப்பொழுதே   நின்  நாவானது  நிலத்தில்  அடியோடு  வீழும் . எல்லாவுலகங்களுக்கும்  புகலிடமாயுள்ள  பெரியோ னாகிய  இராகவனது  அணிமைக்கண்  தலைவனது  தலையை  வேண்டுதற்கு  அடைகின்ற  என்னை  உலகம்  நிச்சயமாகப்  பெருமைப்படுத்தும்  .பாவியாகிய  நினது  நெஞ்சத்தின்கண்ணே  அத்தகைய  கொடுஞ்சூழ்ச்சி  தோன்றியது . விரைந்து  தீவினையின்  பயனை  நுகர்வாய் . எஞ்ஞான்றும்  தீத் தொழிலையே  புரிகின்ற  நீ  கொடிய நரகத்தில்  வீழ்தல்  உறுதியே . நினக்கு  அத்தகைய  ஊழ்  உளது  .  வீரியச்செருக்கினாலேயே  தற்புகழ்ச்சி  செய்யற்க. காட்டுத்தீயினையொத்ததும் , இராமபிரானது  வில்லினின்றும்  வெளிப்படு வதுமாகிய , பகழியாகிய  நெருப்பு  விரைந்து  போந்து  நினது  தலைக்காட்டை  நீறாக்கும் . குலத்துக்குக்  கேடு  விளைக்குஞ்  சிறுமையாளனாகிய   நீ மிகவும்  வெறுக்கத்தக்கவன்”   என்று  சொல்லிவிட்டு  இராமனையே  புகலிடமாகக் கருதி  எல்லாத்தோழிமார்களையும்  ஒழித்து  இராவணனது  சபா மண்டபத்தி னின்றும்  வெளிப்பட்டாள் . இராமன்  வானரவீரர்கள்  சூழ, வீற்றிருக்கும்  அகன்ற  ஆடையான்  அமைந்த  இல்லத்தை நோக்கிச்   சென்றாள் . இவ்வமயத்தில்  இராமபிரான்  வன்மையாளருட்சிறந்த  மாயாவியான  இந்திரசித்துவைக்  கொன்று , புண்ணீர்தோய்ந்த  உடலுடன்  வந்த  இலக்குமணனைத்  தன்  மடித்தலத்திலிருத்தி  இறுகுறத்தழீஇ  அன்புடன்  உச்சிமோந்து  , “குழந்தாய்  !  இலக்குமணா !  செயற்கரிய  செய்கின்ற  நீ  நல்லன  செய்தனை .  கெடுமதியாளனாகிய , அவ்விராவணனது  வலக்கையாகிய  இந்திரசித்துவின்  இறப்பைக்கேட்டு  இராவணனே  இறந்தானென்று  எண்ணுகின்றேன் .இன்றுதான்  பகைமையில்லாதவனா யினேன் . இப்பொழுது இராவணன்  , தானே  போர்குறித்து வெளிப்படுவான் .  அக்கொடியவனை  விரைவிலேயே  அழித்துவிடுவேன் . வீரர்களுக்குரிய  கடமையையும்  நிறைவேற்றுவேன் . தோன்றால் ! வீரருட் சிறந்த  இந்திரசித்துவின்  அன்பின்றொகுதியை  நீ  எங்ஙனம்  ஆற்றினாய் !  மிகக்கடிய  அம்பினாற் றுளைக்கப்பட்டு  ஒழுகும்  புதிய  செந்நீராற்  பூசப்பட்ட  நினது  இவ்வுடலை  நோக்கும் பொழுது என் நெஞ்சம்  வெதும்புகின்றது . இந்திரசித்து  பெரிய வீரனன்றே !  நின்னையன்றி  இவனைக்  கோறற்கு  ஒருவனும்  வலியுடையானல்லன் . அச்சிறுமையாளன்  தொலைந்தான் “  என்று சொல்லிச்  சுசேனனை  அழைத்து , “சுசேனா ! உடன்பிறந்தாரிடத்து  அன்புமிக்க  இலக்குமணனுடம்பிற்றைத்த  அம்புகளைப்  போக்கி  மிகவும்  சுகமுற்றிருக்குமாறு  உரியமருந்துகளாற்  சிகிற்சை செய்வாயாக .”  என்று  கட்டளையிட்டான் .  

            அக்  காழகவில்லத்தின் (  ஆடையானமைந்த வீடு  )  வாயில்காத்தற்குக்  கட்டளையிடப்பட்ட   அநுமானும் , விபீடணனும்  தம்முட்  பின்வறுமாறு  உரையாடினார்கள்  :- 

   “ ஓ !  விபீடணா !  போரில்  இலக்குமணனாற்  றன்புதல்வன்  இறந்த  செய்தியைக்கேட்டு  இராவணன்  அஞ்சிச்  சானகியை   விடுவானென்று  எண்ணுகின்றேன் .” 

     “ ஓ ! அறிஞருட்சிறந்தோய் !  ஒருபொழுதும்  அக்  கெடுமதியாளன்  இங்ஙனஞ்  செய்யான் . தன்னுயிரையே  விடுவான் “

       “ஓ !  விபீடண  !  சிறிதுதூரத்தே  பார்க்க .  புதல்வன்  இறந்தமையால்  அஞ்சிய  இராவணனால்  விடப்பட்டுச்  சானகி தானே  ஈண்டுப்  போதருகின்றாள்”

        “  ஆம் .  அநுமானே !  ஆச்சரியம்  !  ஈது  எங்ஙனம்  நிகழ்ந்தது ?  இவளைப்பற்றி  எனக்கு  ஐயம்  நிகழுகின்றது . நிற்க . பார்ப்போமாக .” 

           இங்ஙனம்  உரையாடிக்கொண்டிருந்த  அவ்விருவர்களும்  அணிமைக் கண்  எய்திய  அவளது  வருந்தத்தக்க  வேடத்தானும் ,  மதிக்கத்தக்க  உருவச்சிறப்பானும்  ,  வஞ்சிக்கப்பட்டவர்களாய்ச்  சிறிது  அசைவற்றிருந் தார்கள் .  அப்பெண்மணியுந்  தடையின்றி  உள்ளே  புகுந்தாள் . இராமபிரானையும்  பார்த்தாள் . இதனிடையில்  தம்  நிலையெய்திய  அநுமானும்  விபீடணனும்  அம்மங்கையைக்  காணாமையான்  வியப்புடன்  உட்புகுந்தனர் .  

            அங்ஙனம்  வந்த  பெண்மணி   இராமன் றிருவடிகளில்  வணங்கித்  தலையிற்  கூப்பிய  கையினையுடையாளாய் , “அடைக்கலம்புகுந்தார்க்கு  அருள்செய்யும்  வள்ளல் !  இராமபத்திர !  யான் ,  நிகும்பிலையில்  இலக்குமண னார் கொல்லப்பட்ட  இந்திரசித்துவின்  மனைவி .  பேறிலளாகிய  என்னைச்  “சுலோசனை” என்னும்  பெயரால்  அழைப்பார்கள் . என்  தலைவனது  அறுக்கப்பட்ட  கைத்துண்டினால் ,  ‘தலை  இராமபிரான் றிருவடித்  தாமரை களை  யடைந்து  இன்பம்  நுகர்கின்றது . ‘  என்று   எழுதப்பட்டது .பகவானே  !  அருள்க .  என் றலைவன்  தலயைக்  கொடுப்பாயாக . அதனைக்கண்ட பின்னரே  என்  பிராணபதியைத்  தீப்புகுந்து  பின்றொடர்வேன் . “  என்று வேண்டினாள் .   

        அதனைக் கேட்டுச்  சில  வானரங்கள்  , “அறுபட்ட  தலையின்  நிகழ்ச்சிகளை  அறுபட்டகை  யெழுதியது “  என்னுமிது  மிக்க வியப்பே !  என்று  சொல்லிச்  சிரித்தன . வேறு  சில  வானரங்கள் , “இராவணனால் விடப்பட்டுச்  சானகியையொப்ப  உருக்கொண்டுபோந்த  ஓர்  அரக்கியாகிய  இவள்  நம்மை  வஞ்சித்தற்கு  ஈண்டுற்றாள் .  இப்பொழுதே  இவளைக்  கொல்வோம் “  என்று   சினந்து  கூறின .  

             “போர்க்களத்தே  இறந்த வீரர்களின்  தலை  எங்ஙனம்  இங்குக்  கொணரப்படும் ?  நீ  இந்திரசித்துவின் மனைவியாயின்   நின்  தலைவனது  அறுபட்ட   தலையைக்  காண்டற்குரிய  நிகும்பிலையை  அடைவாயாக “  என்று கூறினன்  அநுமன் .

               சுலோசனையை  முதற்கட்பார்த்தவளவினானே  இலக்குமணன்  மிகவும்  கலக்கமுற்று  மனத்தாற்  பலபல  நினைந்து , நீர் நிறைந்த  கண்களையுடையனாய்த்  தன்னையுஞ்  சிறிது மறந்து, இன்னதென்று கூறொணாத  மன நோயால்  வருந்தி , நெடுநேரம்   வாய்வாளாதிருந்தான்  .  

            பின்னர் , இராகவன் , வானரங்களினது  ஆரவாரங்களை நிறுத்திப்  புன்னகை செய்து  ,  “அநுமானே !  ஏன்  இங்ஙனங்  கூறுகின்றாய் ?  உலகத்தில், இயங்கியற்பொருள்களின்  நினைக்கப்படாதெய்துவனவாகிய  பற்பல  நிகழ்ச்சிகள்  தோன்றுகின்றன . இக்கற்பரசி  மேகநாதன்  மனைவியென்ப  துண்மையாயின் , எல்லாவற்றையும்  நன்கு  ஆராய்ந்து  துணிவோமாக .  “அறுபட்டதலையின்  செய்தியை  அறுபட்ட  கை யெழுதியது “என்னும்  இஃது  இப்பெண்மணியாற்  கூறப்பட்டது . அதன் உண்மையை  வெளிப்படுத்து வோமாக “  என்று  கூறிச்  சுலோசனையை  நோக்கிக்  “கற்புடைமாதராய்  !  இவர்கள்  நின் சொல்லை  நம்புகின்றார்களில்லை .  நின்  தலைவனது  அறுபட்ட  தலை கொணரப்படுமாயின்  அது  நின் வினாக்களுக்கு  விடைகூறுங்கொலோ ?  என்று   வினவினான் .  

             எங்ஙனமேனுந்  தலையைக்  காண்டலிற்  பேரவாவினையுடைய  அச்சுலோசனை , “யான் , உண்மையாகவே  இந்திரசித்துவின் மனைவியாயின்  அறுபட்டதாகிய  என் நாதன்  தலையும்  என்னாற் கேட்கப்படும்  வினாக்களுக்கு  இன்றியமையாது  விடைகூறும் “  என்று  சொன்னாள் .  பின்னர் , இராமபிரான்  கட்டளையிட்டவாறு  மாருதி  விரைந்து சென்று ,  அறுபட்ட  இந்திரசித்துவின் றலையை   ஆண்டுக்கொணர்ந்து   அவை நடுவண்  மிகவுயர்ந்த  ஒரு  பிரப்பிருக்கையில்  வைத்தான் . நாயகனது  தலையைக்  கண்ட  அப்பொழுதே  சுலோசனை  மிக அவலமுற்றுப்  புலம்பினாள் . பின்னர்த்  தன்னிலையைமிகமுயன்றடக்கி , எழுந்து, வலஞ்சுற்றிவந்து , தலைப்பாகினையும்  , ஒளிர்கின்ற  குழைகளையுமுடைய  அத் தலையைக்  கைகூப்பிய  சிரத்தான்வணங்கி  , “நாத !  கட்டளையின் வண்ணம்  ஈண்டெய்திய  என்சொல்லில்  யாரும்  நம்பிக்கைவைத்திலர் .  நினது கைத்துண்டினால்  எழுதியெற்கறிவித்த  நிகழ்ச்சியனைத்தும்  அறிந்தும்  , ‘அறுபட்ட  கை  யெழுதியது’  என்று  என்னை  இழித்துரைக்கின் றார்கள் .  ஆதலின் ,  இவர்கள்  நம்புதற்பொருட்டு  நின்னையே  புகலிடமாகவுள்ள  என்னை  மலர்ந்த முகத்துடன்  சிறிது நோக்கி  ,  என்னுடன்  சிறிது  உரையாடல்  வேண்டும்  . அருள்க “  என்று  சொல்லினாள் .  அசைவற்றிருந்த  அத்தலையைப்பார்த்து  , “இறந்தவனது  தலை இவளோடு  எங்ஙனம்  பேசும் ?  நிலை பிறழ்ந்த  இவள்  நம்மெல்லோரையும்   ஏமாற்றுதற்பொருட்டுப்  பற்பல சூழ்ச்சிகளைச்  செய்கின்றாள் “  என்று  எல்லாவானரவீரர்களும்  பேசினார்கள் . இருமுறை  மும்முறை  வேண்டப்பட்டும்  , அவ் விந்திரசித்துவின்றலை   மெளனத்தைவிட்டிலது.  அதுகண்டு  துன்பமிக்க  அப்பெண்மணி  ,  “தலைவ  இவர்கள்முன்னிலையில்  எதற்காக  என்னை ஈர்த்துவந்து  அவமானப்படுத்துகின்றாய் .?  இலக்குமணனோடு  போர் நிகழுங்கால்  நினக்குத்  துணைசெய்தற் பொருட்டு  என்  தந்தையை  யான்  அழைத்துவந்திலனென்றோ  என்னைச்  சினக்கின்றாய்?”  என்று  கூறினாள் .  அவள் மொழிந்த  அச் சொல்லைக் கேட்டுச்  சினத்தாற்  கவரப்பட்டதுபோலவும்  ,  நாணத்தாற்  பற்றப்பட்டது போலவும்   அத்தலை  பரபரப்புடன்  ஒருமுறை  நகைத்து ,”ஏடி !  என்பிரியே !  சுலோசனே !  என்னை  நன்றாகப்பழிக்கின்றாய்.  இப்பொழுது  இவ்வெல் லோரும்  எந்தன்புரிமைக்  காதலியாக  நின்னையே  நம்புகின்றார்கள் .  என்று  மேகமுழக்கம்  போன்ற  பேரொலியாற்  கூறி யொழிவுற்றது .  

               எல்லோரும்  அதனைக் கேட்டு  வியப்புமிக்கமனத்தினராய்ச்  சுலோசனையின்  கற்பு நிலையைப்  பாராட்டினார்கள் . அநுமான் ,  சுலோசனையை  நிலத்தில்  வீழ்ந்து  வணங்கி   “யான்  செய்த  எல்லாப் பிழைகளையும்  பொறுத்தருள்க .! “  என்று  வேண்டினான் .பின்னர்ச் சுலோசனை  இராமலக்குமணர்களை  அன்புடன்  வணங்கி  வாயுபுத்திரனைத்  துணையாகப்பெற்றுத்  தன்காரியத்தை  நிறைவேற்றுதற்குப்  புறப்பட்டாள் .

              அநுமான் ,  முகூர்த்தப்பொழுது  கடந்தபின்னர்  “ஆ !  கற்பரசியாகிய  சுலோசனை  ,  தன்காதலன்  சென்றுழிச்  சென்றாள் “  என்று  தழுதழுத்த குரலுடன்   மொழிந்துகொண்டு  , மிக விரைந்து  அவ்விடத்துப்  போந்தான் . சாலவு  மிரங்கத்தக்க  அச் சுலோசனையின்  நிகழ்ச்சியால்  எல்லாருஞ்  சிறிது  நேரந்  துன்பக்கடலுண்  மூழ்கினார்கள் . அறிவுடையாரிற்  சிறந்த  வாயுகுமாரன்  இராமன்  பக்கலெய்திப்   “போர் நிகழுங்கால்  நினக்குத்  துணைசெய்தற்பொருட்டு  என்  தந்தையை  யான்  அழைத்துவந்திலேன் . “  என்று  அக்கற்பரசி சொல்லிய  அதன்  உண்மையை  என்மனம்  அறியவிரும்புகின்றது .  ஐய !  தெரிவித்தல் வேண்டும் .  எங்கள்  வேட்கையை  அகற்றல் வேண்டும்  .பகவானே   !  அருள்செய்க . “  என்று  வேண்டினான் .   

               இராகவனும் , “மிக்க  மறைபொருளாகிய  நிகழ்ச்சியையன்றே  கேட்கின்றாய் .  அதனை  வெளிப்படுத்தற்கு  என் மனம்  விரும்பவில்லை . என்னையெனின் , அச்சொல்  யாவனாயினும்  ஒருவனது உள்ளத்தை  மிகவும்  வருத்துமாதலின் “  என்று  கூறிப் புன்னகை செய்தான் .  

                அது கேட்ட  சுமித்திரைபுதல்வன்  நெடுநேரம்  மறைந்து கிடந்த  பிரிவி ரக்கமாகிய தீயால்  வெதும்பி  “ஐய !  அவ்விளம் பெண்  எப்பொழுது  எங்கண்ணுக்குப்  புலனாயினாளோ , அது முதலே  எனக்குப்  பெரிய  கவற்சியுண்டாயது . நெஞ்சம்  நிலையின்றிச்  சுழல்கின்றது .  அவள்  என்பாற்  பழக்கமுள்ளவள்  போற்  காணப்படுகின்றாள் .  இந் நிகழ்ச்சிக்குக்  காரணம்   இன்னதென்றுணர்ந்திலேன் . ஆதலின் , அவள் வரலாற்றை  அவசியம்  தெரிவித்தல்  வேண்டும் “  என்று  புகன்றான் .

               இராகவனுஞ்  சிறிது  நினைவு கூர்ந்து  , இலக்குமணனது  மார்பில் , தன்கைத்தலத்தாற்  றைவந்தான் . அப்பொழுதே  இலக்குமணன்  “ ஆ !  கெட்டேன்  !  ஆ !  குழந்தாய் !  சுலோசனே !  தீவினையாளனாகிய  யானே  யெனது  மருகனைக் கொன்றேன் . கொடியவனாகிய  யானே  நின்மரணத்திற்கும்  காரணமாயுனேன் .”  என்று  வாய் திறந்து  அழுதற்குத்  தொடங்கினான் . மீண்டும் , இராமபிரான் இலக்குமணனைத்  தேற்றுகின்றவ வன்  போலத்  தன்கைத்தலத்தால்  அவனைத்தடவினான் .  தன் இயற்கை நிலையையெய்திய  இலக்குமணன் ,  எல்லாத் துன்பங்களையும்  மறந்து , விகாரமற்றவனாய்  வாய்வாளாதிருந்தான் .  அந் நிகழ்ச்சியைக்  கண்டு  வியப்புற்றவர்களாய்   எல்லோரும் , “ஈதென்னை !”  என்று  பரபரப்புடன்  இராகவனைக்கேட்டனர் . அவனும் , “சுலோசனையோ, நாககுலத்துக்குத்  தலைமணியான   ஆதிசேடனது  புதல்வியாவாள் . திக்குவிசய  யாத்திரை நிமித்தம் நாகருலகத்தையெய்திய   இந்திரசித்துவிக்குக்  கொடுக்கப்பட்டாள்.  இலக்குமணனை  இந் நிலவுலகத்தில்  அவதரித்த  ஆதிசேடனென்று  உணர்மின்கள்  . ஆதலின்  அவ்  விலக்குவனுக்கு  உள்ளேயுள்ள  தொடர்பால்  அத்தகைய  மனக்கலக்கம் உண்டாயிர்று .  கற்புடையாருட்  சிறந்தவளென்றே சுலோசனை .  ஆ !  அச்  சுலோசனையுனது  கற்பின் மாட்சியைக்  காண்மின்கள் ! “  என்று  கூறினான் .

வெண்பா

கற்பிற்  சிறந்த  கனங்குழையார்  தம்முள்ளே

சொற்புகழின்  மிக்காள்  சுலோசனையே  —-  பொற்பிற் 

றிகழுடலைத்  தீப்பெய்து  சென்றனளா  லன்பன்

புகுமிடத்தைச்  சார்ந்தின்  புற .

                                         சுபம் !      சுபம் !

திருச்சதகம் பகுதி_4

திருச்சதகம் 

 6.   அநுபோக சுத்தி

              அநுபோக  சுத்தி  என்பது , சிவாநுபவ  நிமித்தம்  உயிர்  தன்னைத்  தூயதாக்கிக்  கொள்ளுதல்  என்னும்  பொருள்  உடையதாகும்.  அநுபவம்  என்பது அழுந்தி  அறிதல்.  சிவாநுபவம், சிவபிரானை  அழுந்தி  அறிதல்  ஆகும் . உலகியலில்  மக்கள்  அநுபவம்   பலதிறப்படும் . கண்டு  கேட்டு  உண்டு  உயிர்த்து  உற்றறியும்  ஐம்புலன்  நுகர்ச்சிகளும்  அநுபவங்களே. அவ்  அநுபவங்கள் எல்லாம்  சிறிது பொழுது நின்று  அழியும் இயல்பினவாம் . மனம் ,  பொறிவழிச்சென்று நுகரும்  அநுபவங்கள் எல்லாம்  சடப் பொருள்களைப்  பற்றின ஆதலின் , அழியும் இயல்பு உடையனவாம் . புலன் நுகர்ச்சிக்கு மேற்பட்ட  அநுபவங்களை  உயிர் , தன் இயல்பை  அழுந்தி அறிதல் , அருளை அழுந்தி அறிதல் , சிவத்தை அழுந்தி அறிதல்  என முத்திறப் படுத்து க்  கூறுவர் . “தம்மை உணர்ந்து  தமையுடைய  தன் உணர்வார் “ என்றபடி, உயிர்கள் தம் இயல்பை முதலில் உணர்ந்து,  பின் தம்மை உடைமையாக  உடைய இறைவன்  அருளையும்  அவ் அருளோடு  வேறறக் கலந்து நிற்கும் இறைவனையும் முறையே உணர்தல் வேண்டும் . பட்டினத்து அடிகள் , உயிரின் இயல்பை அறிதற்கு முற்பட்டு , “மேவிய புன் மயிர்த்தொகையோ”என்னும் , அகவற்பாட்டில் , “இன்னதுயான் என்று அறியேன் என்னை , ஏதினும் தேடினேன் யாதினும் காணேன்”  என்று கூறிப் பின்னர் , “ஞான நாட்டம்  பெற்றபின் யானும் நின் பெருந்தன்மையுங் கண்டேன் , காண்டலும் என்னையும் கண்டேன்”  என்றனர் .  இந்நிலை உயிர் அநுபவம்  ஆகும் .

                  இதன் பின்  சார்ந்ததன் வண்ணம் ஆம் தன்மை உடைய உயிர்க்குச் சிவச்சார்பு இன்றியமையாதது எனக் கண்டு , அப் பெருமான் பக்கலில் உயிரை ஈர்த்துச் சிவக்காட்சிக்கு ஆளாகும் சிவசத்தியாகிய அருள் நிலையை அறிந்து வழிபடல் இன்றியமையாததாகும் . அருட் பதிக்கு உயிர் இலக்கு ஆனால் அன்றிச் சிவக்காட்சி நேர்படல் அரிதாகும் . மூல மல ஆற்றலைக் கெடுத்து  சிவாநுபவத்திற்கு உரிய தகுதியை அளிப்பது அருளநுபவமாகும். அதன்மேல் , பேரின்பப் பிழம்பாக உள்ள சிவம் இன்ன இயல்பிற்று என்று மெய்யுணர்வினால் உணர்ந்து , ஞனாசிரியன் உபதேசவழி  ஒழுகி , அச்சிவபரம்பொருளைத் தான் என, அவன் என வேற்றுமை இன்றி ஒட்டி நின்று பேரின்பத்தில் தலைப்படல் சிவாநுபவம் ஆகும் . உயிர் மலப்பிணிப்பு ஒழிந்து , தூய நிலை அடைந்து , சிவன் திருவடி நீழல் எய்தி இன்பம் நுகர்தலே முடிந்த பயன் ஆகும் என்பர் . “உயிர்தானும்  சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்து “ என்பது சிவஞானசித்தி இத்துணைச் சிறந்த சிவாநுபவத்திற்குத் தவ முதலிய  சாதனங்கள் சிறந்த ஏதுக்கள் ஆகும் . அத் தவம்  உடலோடு கூடிய வழிச் செயற்பாலதாகும் . ஆயினும் , உடலோடு கூடிய நிலையிலே, உடல் சடப்பொருள் , உயிர் சித்துப்பொருள் என்னும் வேற்றுமை அறிந்து , உடலைக் கருவியாகக் கொண்டு  செயற்பாலதாகிய தவத்தை முடித்துக்கொள்ளல்  வேண்டுமேயன்றி , அவ்வுடல் ஓம்புதலிலே  நாட்டம் செலுத்தல்  அறிவின் பயன் ஆகாது என்பது பெரியோர் கண்டது. அந்நிலையில் , அடிகள் , அழிவுடையதும்  அருவருக்கத்தக்கதும்  ஆகிய ஊனுடல்  உளதாங்காறும்  அதன்கட்  பற்று வைத்து, அதனை ஓம்புதற்கு  வேண்டுவன செய்தலிலே நோக்கம் செல்லும்  என்னும் உண்மை உணர்ந்து , அவ்வுடற்பற்று  ஒழிப்பதற்கு உடலையே வேண்டாமல் வெறுத்து  உரைத்தலை  இப் பதிகத்தில்  பல திருப்பாட்டுக்களினும் காணலாம் . தூய  சிவானுபவத்திற்கு  உடற்கற்றுத் தடை  என்பது அடிகள் கருத்தாகலின் , அத்தடை நீக்கமே ஈண்டு சுத்தி எனப்படும்   என்க  . ஊனுடலின் அருவருப்பை நினைந்து , அதனை விடுதலில் உள்ள விருப்பமும், இடையறாது ஆண்டவனைத் தியானித்தல் முதலியன செய்தலுமே சிவானுபவ நிமித்தம் செய்யப்படும் தூய்மையாம் என்பது கருதத்தக்கது . இதன் முன்னைப் பதிகத்தில் , ஆண்டவன் செய்த அளப்பரிய  பேருதவிக்குக் கைமாறாக , அடிகள் தம்  உடல்  பொருள்  ஆவிகளைக் கொடுக்க எண்ணியும் ,அவை அவன் உடைமை எனக் கண்டு , அவற்றின்  வேறாகத் தமக்கு என ஒன்றும் இல்லாமை பற்றி  வருந்திக் கூறிய செய்தியைக் கண்டாம் . இப்பதிகத்தில் அங்ஙனம் கைம்மாறு கொடுக்க இயலாவிட்டாலும் , வலிந்து ஆட்கொண்ட அப் பெருமானைச் சார்ந்து  அநுபவிக்கவும் இவ்வூன் உடல் தடைப்படுத்துகின்றதே என்று இரங்கி , இவ்வுடற் பற்றால் உண்டாம்  அழுக்கை  ஒழித்துத் தம் உயிரைத் தூய்மைப் படுத்துக் கொள்ளுமுறையை அருளிச்செய்வார்  ஆயினர் . இதனால் பதிக இயைபு  புலனாதல்  அறிக .

அறுசீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம்

பாடல் 51.

ஈச   னேயென் எம்மானே

யெந்தை  பெருமான்  என்பிறவி

நாச  னேநான் யாதுமொன்

றல்லாப்  பொல்லா  நாயான

நீச   னேனை  யாண்டாய்க்கு

நினைக்க  மாட்டேன்   கண்டாயே

தேச    னேயம்  பலவனே

செய்வ  தொன்றும்   அறியேனே.

கருத்துரை :-  இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் இறைவன் தம்மை அறிவிலாப் பருவத்தே புகுந்து ஆட்கொண்ட பேரருள் திறத்தைப் பாராட்டிய அடிகள், இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண், மிக இழிந்தவனாகிய  என்னை ஆட்கொண்டு அநுபவிக்கத்தந்த  நின்னை இடையறாது நினைந்து , என் உயிரைத் தூயதாக்கிக் கொள்ளாமல் இருக்கின்றேனே என்று வருந்துகின்றார் .

பதவுரை :-  ஈசனே  = யாவர்க்கும் எவைக்கும் இறைவனே ,

என் எம்மானே  = எனக்குச் சிறப்புமுறையில் உள்ள எங்கள்  தலைவனே,

எந்தை  பெருமான்  = என் தந்தையாகிய  பெரியோனே,

என் பிறவி நாசனே  =  எனக்குப்  பிறப்பை  ஒழிப்பவனே ,

தேசனே  =  ஒளி வடிவினனே ,

அம்பலவனே  = ஞான வெளியை உடையவனே,

யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான  =  உலகத்துப்பொருள் யாதேனும்  ஒன்றிற்படாத பொல்லாமை உடைய நாய் போன்ற ,

நீசனேனை ஆண்டாய்க்கு  =   இழிந்தவனாகிய என்னை ஆட்கொண்டருளிய நின்னை,

நான் நினைக்க மாட்டேன்   = யான் நினையேன் ,

செய்வது ஒன்றும் அறியேன்  =  இனிச் செய்யத்தக்கது இன்னது என்பதையும் அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  இறைவன் , மக்கள் முதலிய யாவர்க்கும் , நிலம் மலை கடல் முதலிய  எவைக்கும் தலவன் என்பதை , நூல் அறிவானும் அநுபவ உணர்வானும் அடிகள் அறிந்தவர் ஆதலின் , அப் பெருமானது  பொதுவான அகண்ட ஐசுவரியத் தன்மையைக் குறித்து, “ஈசனே” எனவும் , தமக்குச் சிறப்பு முறையில் தலைவன் ஆவான் என்னும் உரிமையை நினைந்து , “ஏன் எம்மானே” எனவும் கூறினர்.  பலர்க்கும் தலைவனாக உள்ளான் ஒருவனை , அப் பலருள்ளும் ஒருவன் பணிசெய்யும் முறையில் மிக நெருங்கிய  தொடர்பு உடையனாக  இருப்பின் , அத் தலைவனது பொதுமையைப் பாராட்டும் அளவில் நில்லான் என்பதும் , சிறப்பு முறையில் என் தலைவன் என்று பாராட்டி மகிழ்வன் என்பதும் உலகியலிற் காணப்படுவன . அக் குறிப்பே ஈண்டும் கருதத்தக்கது . அடிகள் பிறிதோரிடத்து , “எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா” என்று இவ்வுண்மையைப் புலப்படக்  கூறியிருத்தலும் அறிக. உலகில் ஒருவர்க்குத் தலைவன் ஆவானும் ,தந்தையாவானும் வேறு வேறு ஆவர். தலைவன் ஆட்கொண்டு பணிகொள்ளுபவன்  தந்தை , கல்வி ,முதலியன நல்கிச் சான்றோன் ஆக்குவோன் , ஒருவன் தன் தந்தையை நோக்க,, அவன் செல்வத்திற்கு உரிய உரிமை தனக்கு உண்டு எனக் கருதுதலும் , தலைவன் நோக்க, அடிமைப்பணி செய்து அடங்கி வாழ நினைத்தலும் இயல்பே . ஈண்டுத்  தம்மை ஆட்கொண்டு  பேரின்பப் பெருஞ் செல்வத்தை  அளிக்கும் தலைவனாகவும்  தந்தையாகவும்  உள்ளான் சிவபெருமானே என்பதை நன்று தெளிந்த அடிகள், “என் எம்மானே எந்தை பெருமான் “ என்று கூறினர்.  தந்தையின் பெருமைக் குணங்களில்  ஈடுபட்டு , “எந்தை “ என்ற அளவில் ஒழியாது , “எந்தை பெருமான்” என்றனர் .

          பெருமை, செயற்கரிய செய்தலால் உண்டாவது . பெருமைமிக்க  தந்தையினிடத்து  நின்றும் தாம் பெறும் பேறுகளில் முதலாவது பிறப்பறுதல் என்பது குறித்து . “ஏன் பிரவி நாசனே”ஏன்றார் . ஞானச் செல்வர்கள் விரும்புவது பிறப்பு இறப்புக்களின் ஒழிவாகும் . அங்ஙனமாகவும் , இவ்விரண்டன் ஒழிவையும் குறியாது, பிறப்பை மாத்திரம் குறித்ததில்  ஓர் உண்மை உண்டு . இறப்பு இயற்கையாகும் . எடுத்த உடல் எப்படியும் ஒழிந்தே போகும் .  ஆதலின் , உடல் ஒழிவில் அடிகளுக்குச் சிறிதும் கவலையின்று .  வினையளவு நின்று ஒழியும் இயல்பினதாகிய  உடலை விட்டு , அழிவில்  இன்பநுகர்ச்சியில் ஈடுபாடு உடைய அடிகளுக்கு , மீண்டும் பிறவாமையே வேண்டத்தக்கது. ஆதலின் , அவ் வேண்டுகோளை  நிறைவேற்றும் தலைவனைக் குறித்து , “என் பிறவி நாசனே” என்றார் . இறப்பிலும் அச்சம் இருக்குமாயின் , மரண நாசத்தையும்  குறிப்பிட்டிருப்பார் . நோயுடை ஒருவனுக்கு , நல் உணவு அளித்து  ஆதரிக்கக் கருதுவோன் , முதலில் அந் நோய்க்கு  மருந்து உதவுதல் இன்றியமையாதது  ஆதல் போல , பேரின்பப் பெருஞ் செல்வத்தை அளிக்கக் கருதும்  ஆண்டவன் , அதற்குத்  தடையாக உள்ள  பிறப்பை ஒழித்தன்றோ செய்தல் வேண்டும் .  இந் நயம் தோன்றவே , எனக்கு இன்பம் தருவோனே  என்னாது ,  “ என் பிறவி நாசனே “ என்றார் என்பது  இன்ப நுகர்ச்சிக்குத் தடையை  விலக்கியவாறு  இது.

             இனி, தமக்கு  ஞானோபதேசம்  செய்த ஆசிரிய வடிவத்தை  நினைந்து , “தேசனே” எனவும் , அங்ஙனம் எழுந்தருளியது  வெளியான இடத்தில் என்பார், “அம்பலவனே”  எனவும் கூறி யருளினர். அம்பலம் தில்லைக்கண் உள்ளதாயினும் , திருப்பெருந்துறையில்  அன்பர் பலர் சூழ ஆண்டவன் எழுந்தருளி ஆட்கொண்டான்   ஆதலின், அதுவும் உட்கோள் ஆகும் என்க . “தான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர் “  என்பதும் நோக்குக. ஞானசிரிய வடிவம் கண்கொள்ளாக் காட்சி உடைய தாகலின் , ஞானவொளி நிலையமாகவுள்ள அவ்வுருவத்தைக் குறித்து , “தேசனே”என்றார் .  தேசு – ஒளி அம்பலம் என்பது பொது இடம் . புறவெளி , பரவெளி , ஞானாகாசம்  என்னும் பொருள்களை உணர்த்துவதாகும் .  இதுகாறும்  கூறிய விளிகள் ஆறு . இவ் ஆறு விளிகளாளும்  முறையே இறைவன் பொதுவும் சிறப்புமாகவுள்ள தலைவனாதலும்  தமக்குப் பேரின்பம் நல்கும்  தந்தையாதலும் , பிறவிப்பிணி ஒழிக்கும் மருத்துவனாதலும் , ஞானோபதேசம் செய்யும் ஞானாசிரிய னாதலும், தமக்குப் போலவே பிறர்க்கும் உபகரித்தற்கு உரிய பொது வெளிக்கண் உளனாதலும்  புலப்படுக்கப்பட்டபடியாம்.

         ஆண்டவன் பெருமையை நோக்க, அப் பெருமானுக்கு ஆட்படும் தகுதி தம்பால் ஒரு சிறிதும் இன்று என்பது  தோன்ற “நீசனேனை”  எனவும்  அவ்  இழிவுக்கு எடுத்துக்காட்டாக. “நாயான “ எனவும் , அந்த நாய்ப் பிறப்பினும்  தீ வினைப்பயன்  மிக்கது என்பது தோன்ற , “பொல்லா” எனவும் கூறினர் . நாயான என்புழி, ஆதல் உவமப்பொருட்டு , என் இழிந்த நிலைக்கு எடுத்துக்காட்டாக  வேறொன்றும் புலப்படாமையால் , பொல்லாங்கு  மிக்க நாய் உவமை  கூறப்பட்டதாயினும் , உள்ளவாறு நினையுங்கால், என் பிறப்பு  உலகத்துள்ள  அந் நாய் முதலிய  இழி பிறப்புக்களுள் ஒன்றன்பாலும் படாதது  ஆகும் என்பது  தோன்ற , “யாதும் ஒன்றல்ல”  என்றார்

          ஆண்டாய்க்கு  என்புழி , நான்கன்  உருபை இரண்டன் உருபு  ஆக்குக . ஆண்டாய் , முன்னிலை வினைப்பெயர் .  ஆட்கொண்டருளிய நினக்கு வேறு கைம்மாறு  செய்யும் ஆற்றல்  இல்லேன் ஆயினும் , அப் பேருதவியை நினையும் அளவிலாவது நன்றியறிவுடையனாதல் இன்றியமையாததாகவும் , அதுவும் செய்திலேன் என்பார் , “நினைக்கு மாட்டேன் “ என்றார்,  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு  புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடின்  நெஞ்சுண்டன்றே”  என்றபடி ,செயலளவிற் கைம்மாறு இயற்றல் அரிதாயினும், நெஞ்சத்தாலாவது  நினைதல் எளிதாகவும் , அதுவும் செய்திலேன்  என்று இரங்கிய படியாம் .  கண்டாய் : முன்னிலை அசை .  நினைக்கமாட்டேன்  என்பதற்கு , இரண்டாம் அடியில் உள்ள நான் என்பதை  எழுவாய்  ஆக்குக .  நினையும் அளவிலாவது தலைப்படாது ஒழிந்த சிறுமையேன் , மேற்செய்யத்தக்கது  இன்னது என ஒன்றையும் அறிந்திலேன் என்பார் , “செய்வதொன்றும்  அறியேன் “ என்றார் .  இதனால் பகல் பிறிது இன்று என்பது குறிப்பு .

            இதன்கண்,  “நீசனேனை  ஆண்டாய்க்கு  நினைக்கமாட்டேன் “ என்றமையால் , சிவாநுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மையில் , முதலாவது செயற்பாலது ஆண்டவன் பேருதவியை நினைவு கூர்தலாம் என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,  “யாதுமொன்றல்லாப் பொல்லா நாயான  நீசனேனை “  என்றதனால்  வைராக்கியமும் , ஆண்டவனை நினைதல் அவசியம் என்பது  போதரலின் , பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                     *******************************************************************

பாடல் 52.

செய்வ  தறியாச்  சிறுநாயேன்

செம்பொற்  பாத  மலர்காணாப்

பொய்யர்  பெறும்பே  றத்தனையும்

பெறுதற்  குரியேன்  பொய்யிலா

மெய்யர்  வெறியார்  மலர்ப்பாத

மேவக்  கண்டுங்  கேட்டிருந்தும்

பொய்ய  னேன்நான்    உண்டுடுத்திங்

கிருப்ப  தானேன்  போரேறே.

கருத்துரை :_  இதன் முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவனை  இடயறாது நினைந்து ,  தம் உயிரைத்  தூயதாக்கிக் கொள்ளாமைக்கு இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நினையாமல்  இருத்தலே யன்றி , இவ்வுலக  வாழ்க்கையின் நிமித்தம் உண்டும் உடுத்தும்  உடலோம்பி  இருத்தலை நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :_  

போர் ஏறே  = போரில் அரியேறு  போல்பவனே,

செய்வது அறியாச் சிறு நாயேன்  =  செய்யத்தக்கது இன்னதென்று அறிந்துகொள்ள முடியாத சிறுமையை உடைய  நாய் போல்பவனும் ,

செம்பொன் பாதமலர் காணாப் பொய்யர்  =  செம்மையாகிய பொன் போன்ற  நின் திருவடிமலரைக் காணும் பேறு இல்லாத பொய்மையாளர் ,

பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்  =  பெறுதற்கு உரிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கு  பெறுதற்கு உரிமை உடையேனும்  ஆகிய ,

பொய்யனேன்  நான்  =  பொய்மையாளனாகிய  யான் ,

பொய்யிலா மெய்யர் வெறியார்  மலர்பாதம்  மேவ  = பொய்மை கலவாத மெய்யன்பர்கள்  மணம் பொருந்திய மலர் போன்ற நின் திருவடிகளைஅடைய ,

கண்டும் கேட்டு இருந்தும்  = நேரிற் கண்டும் அறிவுறுத்தக் கேட்டிருந்தும் ,

உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்  =  உணவு உண்டும்  ஆடை உடுத்தும்  இவ்வுலகத்தில்   வாழ்ந்திருக்கலானேன்  என்பது .

விளக்கவுரை :   அன்பர்களைக்  காம முதலிய  அறுபகையாகிய யானைகள் தாக்காவண்ணம் , அவற்றை அழித்து ஒழிக்கும் ஆண் சிங்கம் போல்வான் என்பது குறித்து , இறைவனைப்  “போர் ஏறே” என்றார் . அருள்வலிமிக்க ஓர் அரசன் , தனக்கென வேறு பகையின்று  எனினும் , தன் குடிகளைக்  கரவில் நலிய  முயலும்  பகைவரைத்  தன் பகைவராகக் கொண்டு , ஒறுத்து அடக்க முற்படுதல் போல, இறைவன் தனக்கென வேறு பகை இலன் எனினும் , தன் அன்பரை நலியும்  பகைகளைத் தன் பகை எனக் கொண்டு அழிக்கும் இயல்பு உடையான் என்பது கருத்து .

                உலகிற் செய்யத்தக்கன  இன்ன, தகாதன இன்ன என்று பகுத்து உணரும் அறிவாற்றல் இல்லாமையால், சிறுமையுடையேன் என்பார் , “செய்வதறியாச் சிறுநாயேன் “ என்றார் . அவ் வறியாமையே  சிறுமைக்கு ஏதுவாயிற்று  என்பது.  சிறுமை தகாதன செய்தல். என்  தகுதி மிக இழிந்ததாகலின் , அதற்கேற்ற பயனையே பெறுதற்கு  உரியேன் என்பது  தோன்ற , “பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார். பொய்மை , நலம் பயப்பது எனவும் , தீமை பயப்பது எனவும் இருதிறப்படும் என்பர்  நக்கீரர் . வெளிப்படையில் பொய்மைபோல் காணப்பட்டு , உண்மையில் நலம் பயப்பதை  மெய்மை எனவே கொள்ளுவர்  திருவள்ளுவர் . “பொய்மையிம் வாய்மையிடத்த புரை தீர்ந்த, நன்மை பயக்குமெனின் “ என்பது திருக்குறள் .  ஆகவே ஈண்டு நலம் பயக்கும் பொய்மை விலக்கி , தீங்கு பயப்பதைப் புலப்படுத்தற்கே, “செம் பொற்பாத மலர் காணா” என்றனர் .  இறைவன் திருவடித்  தாமரையைச்  சிறிதும் நினைவு கூறாத பொய்யர் என்பதனால் , நலம் பயக்கும் பொய்மையின் நின்றும் இது விலக்கப்பட்டது  என்பது தெளியலாம் .  இறைவன் திருவடித் தாமரையை  அகத்தே காண  விரும்பாமையோடு , புறத்தேயும் காணாதவர் என்றபடி . அத்தகைய பொய்யொழுக்கம் உடையோர் பெரும்  துன்பப் பயனைப் பெறும்பேறு என்றது நகைச்சுவை தோன்றற்கு .  பொய்யொழுக்கத்தின் எல்லையில் நிற்போர்  பெறும் துன்பப் பயன்கள்  எல்லாவ ற்றையும்  ஒருங்கு பெறுதற்கு  உரிய சிறுமையே என்பால் உள்ளது என்பார்,  “அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார் .  பிறிதோரிடத்து , “விச்சுக்  கேடு பொய்க் காகா தென்று இங்கு எனை வைத்தாய் “ என்று அடிகள் கூறுவர் . அதன் கருத்து, அடியேனை நில உலகத்தில் இருக்கச்செய்தற்குக் காரணம் , பொய்யொழுக்கம்  ஆகிய பயிர் செழித்து விளைதற்கு வித்துக்கேடு  இருக்கலாகாது என்னும்  குறிக்கோளேயாம்  என்பது.  நாயேனும்  உரியேனும்  என்புழி , எண்ணும்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கு நின்றன.

                மெய்யர் என்ற அளவிலே,  சத்திய சீலர் என்பது பெறப்படுமாயினும் , பொய்யில்லா  மெய்யர் என்றது.  பொய்மையை  உட்பொதிந்து , புறத்தே வேட முதலியவற்றால்  மெய்யொழுக்கம்  உடையவர்போலக்  காணப்படுவோரை  விலக்கற்கு என்க.  இதனால், முன்னர் கூறப்பட்டார்மெய்யிலாப் பொய்யர்என்பதும் தெளிவாம் .  மெய்யர்  –  உண்மை யொழுக்கமுடைய மெய்யன்பர் .  அடிகள் ஞானோபதேசம்  பெறும் காலத்து , ஞானாசிரியனாக  எழுந்தருளி இருந்த இறைவன் பக்கலில் தம் கண்காணச் சூழ்ந்து இருந்த பக்குவ முதிர்ந்த  மெய்யன்பர்களை உட்கொண்டே, பொய்யிலா மெய்யர் என்றார் . அன்னார் எல்லோரும் ஆண்டவன் திருவடி நிழலில்  இயைந்து இன்பநுகர்ந்து  இருத்தலை , அப்பெருமான் திருவருள்  துணைகொண்டு  மெய்ஞ்ஞானத்தால்  உணர்ந்தவர் ஆதலின் , “வெறியார் மலர்பாதம்  மேவக் கண்டும் “ என்றார்  அங்ஙனம் அம் மெய்யன்பர் எல்லோரும்  இறைவன் திருவடிக்கண் இன்பம் நுகர்ந்து  இருத்தலைத் தாம்  உண்முகமாகக் கேட்குமாறு அப் பெருமானே கூறியருளினர் என்னும் உணர்ச்சி தலைப்பட்டவர் ஆதலின் ,  “கேட்டிருந்தும்” என்றார் . காட்சியாலும்  கேள்வியாலும்  மெய்யன்பர்கள் அடைந்த சிறந்த பேறுகளை உணர்ந்திருந்தும் , இப் பேறு பெறுதற்கு உரிய தூய்மையை  அடைய முயலாமல் , அதற்குத் தடையாக உள்ள உடலை  ஓம்புதற் பொருட்டு  ஐம்புலன்களும்  ஆர  உண்டும் , ஆடை  அணிகலங்களால்  புனைந்து கொண்டும் ,இப்பொய்யுலக வாழ்க்கையை விரும்பி  இருக்கின்றேனே என்பார்,  “உண்டுடுத் திங்கிருப்பதானேன்”  என்றார்.

             செய்யத்தக்கது இன்னது என்று அறியாத  சிறுமை காரணமாகப் பொய்யொழுக்கம் உடையார் பெறும் பேறுகள் எல்லாவற்றையும்  ஒருங்கு  பெறுதற்கு உரியேன் ஆயினும் , மெய்யன்பர் எய்திய சிறந்த பேற்றைக் கண் கூடாகக்  கண்டும் , தெளியக் கேட்டும்  உள்ளேன்  ஆதலின், அன்னார் மேற்கொண்ட தவ நெறியில் ஒழுகி நலம் பெற முயலலாம் ; அங்ஙனம் முயலாமல் , உடல் ஓம்புதலிலே நாட்டம் செலுத்தல் ஆனேனே என்று இரங்கியபடியாம் .

                இதன்கண் , “பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன் “ என்பதில் , சிவாநுபவத்திற்குரிய  தூய்மை ,  உண்டு உடுத்து  இருத்தலால் ஏற்படாது என்பதும் , அவ்வுடல்  ஓம்புதலின் ஒழிவே தூய்மையாம் என்பதும் பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பொய்யர் பெறும் பேறு  அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றதனால் , தொண்டின் பணிவும் ,  “உண்டுடுத்திங் கிருப்பதானேன்” என்றதனால் , உடற் சுமையில்  வெறுப்பும்  தோன்றி நிற்றலின் , பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                            **********************************

பாடல் 53.                                                                      

போரே  றேநின்   பொன்னகர்வாய்

நீபோந்  தருளி  யிருள்நீக்கி

வாரே  றிளமென்  முலையாளோ

டுடன்வந்  தருள  அருள்பெற்ற

சீரே  றடியார்  நின்பாதஞ்

சேரக்  கண்டுங்  கண்கெட்ட

ஊரே  றாயிங்  குழல்வேனோ

கொடியேன்  உயிர்தான்  உலவாதே.

கருத்துரை :-

முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினையாமல் , உலக வாழ்க்கையின் நிமித்தம்  உண்டு  உடுத்து  உடல் ஒம்புதலையே  கடைப்பிடித்து  இருக்கின்றேன் என்று இரங்கிய அடிகள், இத் திருப்பாட்டில்  உடலை  யான்  பற்றிக்கொண்டு  இருந்தாலும் , அவ்வுடலை விட்டு உயிர் தானே கழியலாமே!  அங்ஙனமும்  கழிந்து  இலதே! என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   போர் ஏறே   –  ஆணவப்போர் போர் ஏறே  = ஆணவப் போரில்  அரியேறு  போல்பவனே,

நின் பொன்னகர்வாய் = நின் சிவபுரத்திருக்கோயிலினின்றும் ,

நீ போந்தருளி  =  நீ புறப்பட்டு எழுந்தருளி ,

வார் ஏறு இளமென் முலையாளோடு உடன் வந்து  =  கச்சு யாத்த இளமை மிக்க மெல்லிய முலைகளை யுடைய அம்மையோடு  கூடி இங்கு வந்து ,

இருள் நீக்கி அருள =  ஆணவமல இருளின் ஆற்றலைக் கெடுத்து அருள் புரிய ,

அருள் பெற்ற சீர் ஏறு அடியார் =  அத் திருவருளைப் பெற்ற சிறப்பு மிக்க மெய்யன்பர்கள்,

நின் பாதம் சேரக்கண்டும்  = நின் திருவடிகளை அடையக் கண்கூடாகப் பார்த்திருந்தும் ,

கொடியேன் உயிர் உலவாது = கொடியவனாகிய என் உயிர் தானே கெட்டு ஒழியாது இருக்க ,

கண் கெட்ட ஊர் ஏறாய்  இங்கு உழல்வேனோ = கண் கெட்டுக் குருடாகிய  ஊர்ப் பொலி எருதுபோல இவ்வுலகத்தில் யான் அலைந்து திரிவேனோ? என்பது .

விளக்கவுரை :-   நீ போந்தருளி உடன் வந்து இருள் நீக்கி அருள எனக் கூட்டுக. போரின் பயனாக  இருள் நீக்கம் கூறப்பட்டிருந்தலின் , ஈண்டு  ஆணவப்போர் என்பது பெற்றாம் . மெய்யன்பர்க்கு அருளுங்கால் ,அவரைப் பற்றி நிற்கும் மூல மலமாகிய  ஆணவம் என்னும் யானைகளின் வலியழித்தற்கு ஆண் சிங்கம் போன்றலின் , “போரேறே” என்றார் .  பொன்னகர்  –  சிவபுரமும் அங்குள்ள திருக்கோயிலும்  ஆம் . எங்கும் நிறை பொருளாகிய ஆண்டவனுக்கு  ஓர் ஊரும்  ஒரு திருக்கோயிலும் உள எனக் கூறுதல் பொருந்துமா எனின் , இறைவன் வியாபகம்  எங்கும் உளது எனினும் , பசுவின் உடல் முழுதும் வியாபித்து ஊறும்  பால் , அதன் முலை வழிச் சுரத்தல் போல , பக்குவமுதிர்ந்த  மெய்யன்பர் நெருங்கிய இடத்தில் சிறப்பாக வெளிப்பட்டு அருளுவன்  ஆதலிற்  பொருந்தும் என்க . இக் கருத்துப்பற்றியே , “தில்லை வாழ் கூத்தா சிவபுரத்தரசே” என்பது முதலிய பல இடங்களிலும் சிவபுரத்தரசனாக இறைவனைப் பாராட்டி அருளினர் .  வாய் : ஏழனுருபு ; ஐந்தனுருபாகக் கொள்க.. போந்தருளுதல் –  எழுந்தருளுதல் ;புறப்பாடல் , ஒரு சொன்னீர் மைத்து .

       இந் நிலவுலகத்துள்ள  மெய்யன்பரை ஆட்கொள்ள இறைவன் எழுந்தருளுங்கால் , அம்மையை  வெளிபடையாக உடன் கொண்டு வருவான்  என்பதும் , அம்மை என்றும் ஒரு கூறு பிரியாது உறையும்  பெற்றியள் எனினும் சில  நிகழ்ச்சிகளில்  அவ்வம்மையின்  உருவத்தைத்  தன்னுட் கரந்து தோன்றுதலும்  உண்டு என்பதைக் கேட்கின்றோம் ; ஆதலின் , “உடன் வந்தருள” என்றார் . உலகம் ஈன்றும் கன்னியாய் இருப்பள் என்பது குறித்து இளமைச் செவ்வி புலப்படுக்கப்பட்டது என்க..  அம்மை, தன் மக்களுள்  மெய்யன்புமிக்க  பக்குவர்க்கு  அருள் ஞானப்பால் சுரந்து அளித்து , அப்பனைக் காட்சிப்படுத்துவள் என்பது அடைமொழிக்குறிப்பு .  “அருளது சத்தியாகும் “என்றபடி , அருள் வடிவினளாகிய  தாயை வழிபட்டு , அவள் கருணையால் தந்தையைக் காணவேண்டும் ஆதலின் , அம்மையுடன் எழுந்தருளி வந்தான் என்பது.  உமையம்மையோடு  எழுந்தருளி வந்து , மெய்யன்பர்க்குக் காட்சியளித்து , முதலிற் செய்த நலம் ,  மூலமாகிய ஆணவத்தின் ஆற்றலை  ஒழித்தது என்பார், “இருள்நீக்கி” என்றார் .

                     கட்டுக்காலத்தில் , தெளிவான பளிங்கு அனைய உயிர் அறிவை மறைத்துநிற்பது , திணிந்த இருள் உருவமான ஆணவ மலமே . அம் மலப்பணிப்பு  நீங்கினால் அன்றிச் சிவக்காட்சி புலனாகாது .ஆதலின், முதலிற் பாச நீக்கமே வேண்டுவதாயிற்று . பக்குவ முதிர்ந்த உயிரைப்பற்றிநிற்கும்  ஆணவ  ஆற்றல் கெட்டு ஒழிந்ததும் , அவ்வுயிர் சிவன் அருளில் தலைப்படும் என்பது . “இருள் நீக்கியருள அருள் பெற்ற “ என்பதனால் தெளியலாம் . ஈண்டு நீக்கலும்  அருளலும் முறையே  பாச நீக்கத்தையும் சிவப்பேற்றையும் குறிப்பனவாம் . சிவஞான போதம் பத்தாம் சூத்திர அவதாரிகையில் ,  “இனி, அச் சாதனத்தானாய பயனியல்பு வகுத்துக் கூறுவானெடுத்துக்  கொண்டார் . அப் பயனாவது  , பாசவீடும் , சிவப்பேறும் என இருவகைப்படும் “ என்பர்  சிவஞான முனிவரர் . பத்தாம் சூத்திரத்தில் , “மலமாயை தன்னொடு  வல்வினையின்றே “ என்றதனால் , பாசவீடும் , பதினோராம் சூத்திரத்தில் , “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்றதனால்  சிவப்பேறும் கூறப்பட்டன . அவ்விரண்டு பயன்களையும்  ஈண்டு மெய்யன்பர் பேறுகளாக அடிகள் , “இருள் நீக்கியருள” எனவும் ,  “அருள்பெற்ற” எனவும் முறையே கூறியருளினார் . பாசவிடுதிக்கு உயிரின் சாதனம் ஏதுவாயினும் , இறையருள் முக்கியம் என்பது  தோன்ற “இருள் நீக்கி “ என இறைவன் செயலாகவும் , அந் நீக்கத்தில் சிவப்பேறு தானே கைகூடும் என்பது தோன்ற , “அருள் பெற்ற “ என உயிரின் செயலாகவும் அடிகள் அருளிச்செய்வாராயினர் . இத்தகைய  தத்துவ நுண்பொருள்கள் , உண்மை அநுபவம் உடையார் வாக்கில் எத்துணை எளிமையாக வெளிப்படுகின்றன என்பது  உணர்ந்து இன்புறத்தக்கது .

                 இங்ஙனம் பாச நீக்கமும் சிவப்பேறும் ஒருங்கு பெறும் தகுதி உடைய மெய்யன்பரையே இங்கே , “சீரேறடியார் “ என்றனர் . சீர் ஏறுதலாவது , மல   ஆற்றல் தேயத்தேய , அத்துணை மெய்ஞ்ஞான  விளக்கம் மிகுதல் . அம்மெய்ஞ்ஞான விளக்கு ஒளியால்  நின் திருவடியைக் கண்டு அடைந்தனர் என்பார், “நின் பாதஞ் சேர “ என்றனர் .  பாதஞ்சேரல் ,தாடலைபோல்  இரண்டறக்கலந்து  இன்புறல் .  இதுவே வீடு பேறு  ஆகும் . இந் நிகழ்ச்சி , தவ முதிர்ச்சியுடைய அடிகளுக்கு அன்றிப் பிறர்க்குக் காண்டல் அரிதாம் என்க  இத்தகைய சிறந்த காட்சி  காணக்கிடைப்பதே அரிதென்பது தோன்ற , “கண்டும் “ என்று கூறப்பட்டது . உம்மை அருமை  உணர்த்தி நின்றது .

                   சுவை மிக்க நுகர் பொருள் ஒன்று பொதுவாக , அதனைப்பலரும்  பொது உரிமை பற்றிக் கூட்டுண்ண ஒருவன்  மாத்திரம் அருகு இருந்து  கண்கூடாகக் கண்டு வைத்தும் , அதனைப் பெற இயலாமல்  இருப்பதற்கு  அவன் கொடுவினையே காரணம்  ஆதல்போல் , மெய்யன்பர்கள்  ஆண்டவன்  திருவடியடைந்து  இன்புறுதலைக் கண்டு வைத்தும் ,அப்பேறு பெறாமல் , ஊன் உடலை  ஓம்பித் திரிதற்குத்  தம் கொடுவினை  காரணம் என்பார் , அது குறித்துத் தம்மை , “கொடியேன் “ என்றார் . இக்கொடுமைக்கு  ஆளாகி வாழ்தலில் , உயிர் உடலினின்றும் ஒழிதல்  இனிதாகவும் , அது தானேயும் கழித்திலதே  என்று  இரங்குவார் , “உயிர்தானுலவாது” என்றார் . உலவாது  உழல்வேனோ என முடிக்க .

                     மெய்யன்பர் எய்திய பேறு தமக்கு இல்லாமைபற்றிய  இந் நிகழ்ச்சியில் , அடிகளுக்குள்ள  வருத்தத்தையும்  ஆர்வத்தையும் , “அருளாருமுதப்  பெருங்கடல்வாய் அடியாரெல்லாம்  புக்கழுந்த , இருளார் ஆக்கை  இது பொறுத்தே எய்த்துக் கிடந்தேன் எம்மானே “ என்னும் பாடற் பகுதியானும் உணரலாம் .  ஊர்  ஏறு  –  ஊர்க்குப் பொதுவாக விடப்படும் பொலி எருது  அல்லது பொலிகாளையாகும் . இது, மேய்த்து அடக்குவார் இன்றி , வயிறார  உண்ணுதலும்  காமநுகர்ச்சியில் தலைப்படுதலும் , பிறர்க்குத் துன்பம் செய்தலுமே தொழிலாகக்கொண்டு , தன் மனம் போலக் கட்டுக்கடங்காது  அங்கும் இங்கும் அலைந்து திரிவது . இத்தகைய ஊர் ஏறு கண் கெட்டது ஆயின் நெறி தவறிப் பள்ளமேடுகள் அறியாமல் வீழ்ந்து , திரிந்து , துன்புற்று  , உழலக்காணலாம் . அங்ஙனமே  யானும் நெறி பிறழ்ந்து , நன்று தீது அறியாமல் உழல்கின்றேன் ; இந்நிலைக்கு என்னை ஆளாக்கல், ஆண்டவனே , தகுமா என்பர் , “கண்கெட்ட  ஊரேறாயிங்குழல்வேனோ” என்றார் . ஊரேறாய் என்புழி , ஆக்கம் உவமப் பொருட்டு.  “கண்டும் கண்கெட்ட” என்ற முரண் அறிந்து இன்புறத்தக்கது .  இனி, ஊரேறு  என்பதற்கு,  ஊர்ப்பன்றி என்று பொருள் கூறுவாரும் உளர் ,

                 இதன்கண் , ஊரே  றாயிங் குழல்வேனோ  கொடியேனுயிர்  தானுலவாதே “ என்றதனால் , கொடுவினைக்கு நிலைக்களமாகிய  ஊனுடலினின்றும்  உயிர் கழியின் , அது தூய்மை பெறும் என்பது பெறப்படுதலின் , அநுபோகசுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,உயிர்வாழ்தலை  வெறுத்தலின் வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                ****************************************

பாடல் 54 .

உலவாக்  காலந்  தவமெய்தி

உறுப்பும்  வெறுத்திங்  குனைக்காண்பான்

பலமா  முனிவர்  நனிவாடப்

பாவி யேனைப்   பணிகொண்டாய்

மலமாக்  குரம்பை  யிதுமாய்க்க

மாட்டேன்  மணியே  உனைக்காண்பான்

அலவா  நிற்கும்  அன்பிலேன்

என்கொண்   டெழுகேன்  எம்மானே.

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் உயிர் தானேயும் கழித்திலதே  என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் கழியாத நிலையில் , மலமயமாக உள்ள இவ்வுடலை  ஒழிக்கவும்  ஒருப்படாமல் இருக்கின்றேன் . வேறு பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு  உய்யக்கடவேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-    மணியே எம்மானே  =  மாணிக்க மணிபோல்வானே  என் தலைவனே ,

இங்குப் பல மா முனிவர் =      இவ்வுலகிற்  பல பெரிய முனிவரர் எல்லாம் ,

உன்னைக்  காண்பான்  =    நின்னைக் காண்டற்  பொருட்டு ,

உலவாக்காலம் தவம் எய்தி =    எல்லையற்ற காலம் தவ புரிந்து ,

உறுப்பும் வெறுத்து   =   உடலையும் வெறுத்து ,

நனி வாட  =  மிகவும்  வாட்டம் எய்தா நிற்க.,

பாவியேனைப் பணி கொண்டாய்   =    பாவியாகிய என்னைத் தொண்டனாக ஏற்றுக்கொண்டனை ,

மலமாக் குரம்பை இது மாய்க்கமாட்டேன்  = மலமயமாகவுள்ள  இவ்வுடலை  ஒழிக்க  ஆற்றல்  இல்லேன் ,

உனைக் காண்பான்  =  நின்னைக் காண்டர் பொருட்டு ,

அலவா நிற்கும்  அன்பு இலேன்  = துன்புற்று  நிற்கும்  மெய்யன்பு இல்லேன் ,

என் கொண்டு  எழுகேன்  =  இந்நிலையில்  பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு   உய்வேன்  என்பது .

விளக்கவுரை :-      உலகத்துப் பொருள்களுள்  பொன்னும் மணியும் உயர்ந்தன  அவற்றுள்ளும்   மணி சிறந்தது  ஆகலானும் , அதனினும் சிறந்ததாகப்  பிறிதொன்று இல்லாமையானும் , இறைவனை , மணியே   எனவும்  , பின்னர்ப்  பணிகொண்டாய்  என்று  கூறியதற்கு ஏற்ப , ஆட்கொண்டவன் என்பது  போதர,  “எம்மானே”  எனவும்  கூறியருளினார் . 

                  செய்தற்கு அரிய கடுந்தவம் புரியும் பக்குவ முதிர்ந்த முனிவரர் பலரையும் ,இவ்வுலகத்தில் அடிகள் தம் கண் கூடாகக் கண்டவர்  ஆதலின் , “இங்குப்பல மாமுனிவர்”என்றார் . இங்கு  = இவ்வுலகத்தில் ,முனிவர்  = இறைவனையே  இடையறாது  நினைப்பவர் என்னும் பொருட்டு. இன்பத் துன்பங்களில் ஈடுபடாத  மனமும் , விருப்பு , வெருப்பு ,அச்சம்  முதலியன நீங்கிய இயல்பும் ,  உறுதியான  புத்தியும்  உடையார்  முனிவர்  எனப்படுவார். இத்தகைய  பக்குவமுள்ள முனிவரர் , ஆண்டவன் திருவடி  காண்டற்கு , நீர் நிலை , ஐந்தீ  நடு முதலிய பொறுத்தற்கு அரிய  தட்ப வெப்பங்களில்  நின்று தவம் இயற்றினர் என்பதும் , அவ்வரிய  தவத்தானும்  சில  நாட்கள் வரையோ எனின் , அன்று ; எண்ணில் அடங்காத காலம் என்பதும் தோன்ற, “உலவாக் காலம் தவம் எய்தி “  என்றார்.  “புற்றுமாய் மரமாய்ப்  புனல் காலே  உண்டியாய் அண்டவாணரும் பிறரும் , வற்றியாரும்  நின் மலரடி காண மன்ன”  என்பதும் அடிகள் திருவாக்கு ,  உறுப்பு  = ஆகு பெயராகநின்று  உடலை  உணர்த்தும் .அத்துணை  நெடுங்காலம்  தட்ப வெப்பங்களைப்  பொறுத்துத்  தவம் புரிதற்குக் கருவியாகவுள்ள  அத் தவவுடம்பையும்  வெறுத்து நின்றனர் என்பது தோன்ற , “உறுப்பும்  வெறுத்து “ என்றார் . “உறுப்பும் “ என்புழி  , உம்மை உயர்வு சிறப்புப் பொருளில்  வந்தது. இங்ஙனம் தவம் புரிந்தோர்  ஒருவர் இருவர் அல்லர் ; பலராகவும் , அப்பலர்க்கும்  திருவடி , காட்சிப்படாமையால் கவலை எய்தினர் என்பதும் , தவத்தின் கடுமையும் , கால நெடுமையும் , காண்டற்கு அருமையும்  காரணமாக , அக் கவலை பெருகிற்று  என்பதும் தோன்ற , “நனிவாட” என்றார் .

                 அடிகள் நிரம்பிய மெய்யன்புடையராயினும் , தம் பணியில்  தமக்குக்  குறையே  காணும் இயல்புடையர் ஆதலின, தம்மை , “பாவியேன்” எனவும் , பாவ கன்மம்  உடையோனாகவும் , நின் அருட்பெருக்கம்  காரணமாக ,  “என்னைப் பணி கொண்டாய் “எனவும் கூறினர் .ஒரு பொருட் கொடையில் , கொள்வோன் தகுதியும் , கொடுப்போன் தகுதியும்  விரவி நிற்பதாகும் . ஈண்டுக் கொடுப்போன் தகுதியே விஞ்சி நின்றது , என்றபடியாம் . பணிகொண்ட நிலையில் , நின் பக்கலில் அணுகி , நின்னைத் தரிசித்துத்  தொண்டு செய்தற்குத் தடையாக இருப்பது . இம் மல பாண்டமாகிய ஊனுடலே என்பார், “மலமாக் குரம்பை “ எனவும் , இதன் ஒழிவில் , சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை எய்தும் ஆதலானும் , இது தானே ஒழியும் நிலையில் இல்லாமையால் , யனே  ஒழிக்க வேண்டியது ஆகலானும் , ஆங்ஙனம் ஒழித்தற்குப் பற்று உடைமையால் , ஆற்றல் இல்லாதவனாக  இருக்கின்றேன்  என்பார் . “ இது மாய்க்க மாட்டேன் “ எனவும்  கூறினர்.  “நின் திருவடிக் காட்சி வேண்டி  உலவாக்காலம்  அரிய தவம் புரிவோர்  முற்றத்துறந்த  புண்ணிய சீலராகிய முனிவரர் ; யானோ பாவி ; அம்முனிவரர் உடம்போ  தவ வுடம்பு ; என் உடம்போ மாமலக்குரம்பை . அத்தகைய தவ உடம்பையும்  அம்முனிவர்  பொருட்படுத்தாமல்  வெறுக்கின்றனர் ; என் மலக்கூடாகிய உடம்பை  ஒழித்தற்கு  யான் துணிந்திலேன் ; இவ் ஏற்றத்தாழ்வான  நிலையில் அம் முனிவரர் அருந்தவம் புரிந்தும் நின்னைக் காணப்பெறாமல்  மிகவும்  வாட்டம்  எய்தி நிற்ப , அவர்களுக்கு  அரியனாகிப்  பாவியாகிய என்னை  வலிய  வந்து  ஆம் கொண்டனை” என்று இவ்வாறு  அடிகள் கருதினர் என்பது .   இத் திருப்பாட்டில்  சொற்பொருள் அமைப்பில் காணப்படும் உண்மையாகும் . தவத்திற்குப்  பயன்படும்  முனிவரர்  உடம்பை  உறுப்பு எனவும் , அங்ஙனம் பயன் படாதது  எனக் கொண்டு  தம் உடம்பை  மலமாக்குரம்பை  எனவும்  அடிகள்  கூறியதும்  கருதத் தக்கது . இந்நயம் இலக்கியச் சுவை நுகர்வோர்க்கும் விருந்து ஆதல் அறிக.

                   அடிகளின் அன்பு முதிர்ச்சியும் சிவாநுபவ  நுகர்ச்சிக்கு உரிய  தகுதியும் மிகப்பெரியன . அவை நம்மனோர் உள்ளத்தைக் கவரும்  பெற்றியுடையன .  அங்ஙனமாகவும்,   அவர் தம்மைப் பல இடத்தும் மிக இழிவாகக்  கூறிக்  கொள்ளுதல் , அடிமை இயல்பு  தோன்றற்கு  என்க. அடிகள் தம்மை  இழிவாகக் கூறியவற்றை  எடுத்துக்  கூறற்கு  எம் உள்ளம்  மிகக்  கவலுகின்றது. . உரை விளக்க நிமித்தம்  மேற்கொள்ளும்  இக் குற்றம் இறைவன் திருவருளால்  பொறுக்கப்படும்  என்னும்  உறுதியுடைமை  அதற்கு  ஆறுதல் அளிப்பதாகும் .

                   மூன்றாம் அடியில் , “உனைக் காண்பான் “  என்பதை “ இடைநிலைத் தீவமாகக் கொண்டு  “உனைக் காண்பான் மலமாக்குரம்பை  இது மாய்க்கமாட்டேன் “  எனவும்,  “உனைக் காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் “  எனவும் இயைத்துக் கொள்க .  அலத்தல் = துன்பம் உறுதல் . நின்னைக்  காண்டற்குரிய  நெறியறியாது  துன்பம் உறுகின்றேன் என்பார், “அலவா நிற்கும் “  எனவும் , அன்பு நெறி  சிறந்தது எனக் கேட்டும் , அந் நெறி நிற்றற்கு அன்பு சிறிதும் இல்லேன்  என்பார்,  “அன்பிலேன்”  எனவுங் கூறினர். இறைவன் காட்சி பெறாமைக்கு  வருத்தமும் , நெறி நிற்றற்கு  உரிய  அன்பு இன்மையும் உடையேன் என்பது அடிகள் கருத்து.  நெறி  பலவற்றுள்ளும்  அன்புநெறி  சிறந்ததாகவும் , எளிதாக  மேற்கொள்ளத்தக்கதாகவும்   இருப்ப , அதனை  விட்டு  , எதனைப்  பற்றுக் கோடாகக்  கொண்டு உய்யக்கடவேன்  என்பார் ,  “என் கொண்டு எழுகேன் “  என்றார் .  எழுதல் = வீழ்ச்சியினின்றும்  மேலேறி  உய்தல் .

இதன்கண்,  “மலமாக் குரம்பை இது  மாய்க்க மாட்டேன்”  என்றதனால், அதன் ஒழிவே  சிவாநுபவத்தின் நிமித்தம்  உயிர் எய்தும்  தூய்மை  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பாவியேனைப் பணி கொண்டாய்” ,  “மலமாக்குரம்பை  இது  மாய்க்க மாட்டேன்” என்பவற்றால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ***************************************************

பாடல் 55.

மானேர்  நோக்கி  உமையாள்

பங்கா  வந்திங்  காட்கொண்ட

தேனே  அமுதே  கரும்பின்

தெளிவே  சிவனே  தென்தில்லைக்

கோனே  உன்றன்  திருக்குறிப்புக்

கூடு  வார்நின்  கழல்கூட

ஊனார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தானேன்  உடையானே

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் தம் உடலை மலமாக்குரம்பை என்றும், இதனை ஒழிக்க  மாட்டாதவனாக இருக்கின்றேன் என்றும் இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஊனார் புழுக்கூடு என்றும் ,அப்புழுக்களுக்கு உறையுளாகவுள்ள இதனை , எனது உயிரின் உறையுளாக எண்ணிப் பாதுகாத்திருக்கின்றேனே! எவ்வாறு  உய்வேன் என்றும் இரங்குகின்றார் .

பதவுரை :-  மான் நேர் நோக்கி உமையாள் பங்கா =   மான் விழி போன்ற விழியினை யுடையாளாகிய  உமையம்மையை  ஒரு கூற்றில் உடையவனே,

இங்கு வந்து   ஆட்கொண்ட  =  இந் நில  உலகத்து வந்து  என்னை  அடிமை கொண்டு  அருளிய ,

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே =  மெய்யன்பர்க்குத்  தேனும்  அமிர்தமும்  கரும்பின்  தெளிவான  சாறுமாக  விளங்குகின்றவனே ,

சிவனே  =  பேரின்ப  வடிவினனே ,

தென் தில்லைக்  கோனே =  தென்  திசைக்  கண்ணதாகிய  தில்லையில்  விளங்கும்  அரசனே,

உடையானே  =   எல்லாம்  உடையவனே,

உன் தன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல் கூட  =  நின்  திருவுள்ளக்  குறிப்புச்  சாரப்பெற்ற  மெய்யன்பர்கள்  நின்  திருவடியை  அடைய ,

ஊன்  ஆர்  புழுக்கூடு  இது  காத்து  =  யான்  ஊன்  நிறந்த  புழுக்கூடாகிய  இவ்வுடலைப்  பாதுகாத்து,

இங்கு இருப்பது ஆனேன் = இவ்வுடலில்  தங்கி  இருத்தலை  மேற்கொண்டுள்ளேன்  ( எங்ஙனம்  உய்வேன்) என்பது.

விளக்கவுரை :-    எல்லாம்  வல்ல  ஆண்டவன் ,  மெய்யன்பர்களை   ஆட்கொள்ள, உமையம்மையோடு இந்நில வுலகத்துக்கு  எழுந்தருளுங் காலத்து , அம்மை  அருள்  வடிவினள்  ஆதலின், அடிகளைப் போன்ற    உள்ளன்பு  மிக்க  தன்  மக்கள்  இறைவனாற்  புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டுமே  என்னும்  எண்ணம்  காரணமாக , அப்பெருமாட்டி  கண்களில்  மருட்சி  தோன்றிற்றோ  என்று  கருதும்படி , “மானேர் நோக்கி  யுமையாள்” என்று  கூறப்பட்டாள்  என்க.  நன் மக்களை  விரைந்து  ஆதரிப்பதில்  தாய்மை  அருள்  முற்பட்டுச்  செல்லும்  என்பதை  உலகியலிலும்   காணலாம் .  அடிகள்,  அம்மையுடனாகவே  ஆண்டவனை  நினைவு  கூறும்  இயல்பினர்  என்பதை , “உடயாளுன்றன்  நடுவிருக்கும்”  என்பது  முதலிய  திருப்பாடல்களானும் உணரலாம் . அடிகள்   தம்மைப்  பணிகோடற்கு , அம்மையுடையான   அப்பன்  வருகையே  காட்சிப்பட்டது  என்பதைப்  புலப்படுத்துவாராய்  “ உமையாள் பங்கா”  என்றார் .  ஆட்கொள்ளும்  தலைவன்   அடிமையைத்  தன்  இடத்து  வரச்செய்தே  பணிபுரியச்செய்வன்  என்பது  உலகியலிற்  கண்டது .  ஈண்டுக்  கடவுளர்  தலைவனாகிய  ஆண்டவன்  தன்  பேரருள்  திறத்தை , உலகு  அறியக்காட்டுதற்கு ,  மிக  எளியவனாகிய  என்னை  ஆட்கொள்ள,  யான்  இருக்கும்  இடம்  நோக்கி  வந்தனன்  என்பார், “இங்கு  வந்து “  என்றார் .

                   அடிமை  கொண்டால் , அவ்வடிமையைத்  துன்புறுத்துப்  பணிபுரியச்  செய்வாரும்  உளர் .  அங்ஙனம்  இன்றி , எனக்கு  மிகவும்  இனியனாகவுள்ளான் என்பார் , “தேன்”  முதலியவகக்  கூறினர் .  அமுதம்  என்பதற்குத்  தேவர்  உணவாகிய  அமிர்தம்  எனவும்,  பால்  எனவும்  பொருள்  கொள்ளலாம்.  பிற  இடங்களிலும்  அடிகள் , “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய்”  எனவும் , “தேனையும்  பாலையும்  கன்னலையும்  ஒத்து “  எனவும்,  இவ்வாறே , இம்மூன்று  பொருள்களையும்  இம்முறையே  கூறியிருக்கின்றனர் .  இனிமைப்  பொருள்களாகிய  இம்  மூன்றனையும்  இம்முறையே  கூறியதில்  ஓர்  உண்மை  இருத்தல்  வேண்டும்.  மூன்றனுள்ளும்  தேன் , வடிகட்டிய  அளவில்  எடுக்கப்படுவது;  நாவிற்  பட்டதும்  மிக்க  இனிமை  செய்வது .  பால்  காய்ச்சப்பட்ட  பின்  ஓர்  அளவு  இனிமை  பயப்பது.  கருப்பஞ்சாறு  ஆலையில்  இட்டுப்  பிழிந்து  எடுக்கப்பட்டு  ,  நன்றாகக்  காய்ச்சப்பட்ட  பின்  கட்டியாகி  இனிமை  செய்வது .  இம்  மூன்றனுள்ளும் ,  தேன்,  புழுக்களின்  எச்சில்  மயமாகவும் ,  பால்,  ஊனுடலின்  சாரமாகவும்  உள்ளவை ,  பயன்  விளைப்பதில்  தேனினும்  பால்  சிறந்தது .  “பாலொடு  தேன்  கலந்தற்றே “  என்புழி , ஓடு  உருபு  உயர்  குறித்து  வந்ததும்  அறிக .  கருப்பங்கட்டி  ,  எச்சில்  ஊன்  கலப்பு  முதலிய  அக்  குற்றமும்  இலதாய் , உடலுக்கு  நலம்  பயப்பதாகும்.  இம்  முறையில்  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் ,  தேனைப்போல  மிக  இனியனாய்  வெளிப்பட்டு  வயப்படுத்துப்  பாலைப்போலப்  பின்  பயன்  விளைத்துக்  கருப்பங்கட்டியைப் போலத்  தூய  இன்பம்  அளித்துப்  பாதுகாப்பான்  என்பது   அறியத்தக்கது.  தேன்  சுவை  எளிமையினும் , பாற்  சுவை  அதனிற்  சற்று  அருமையினும் , கருப்பங்கட்டிச்  சுவை  அதனினும்  அருமையினும்  அறியப்படுதல்  போல,  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால்,  முதலில்  எளியனாகவும் ,  பின்  அவன்  சொரூப நிலையை   உணர  உணர  மேன்மேலும்  பெரியனாகவும்  கானப்படுவன்  என்னும்  உண்மையையும்  பெறப்படுதல்  அறிக. “கரும்பின்  தெளிவே”  என்பது,  தெளிந்த  சாற்றினாலாகிய  கட்டியை  உணர்த்தலின்  ஆகு  பெயர்  ஆகும் . 

               இங்ஙனம்  தேன்  எனப்  பால்  எனத்   தெளிவு  என  வெளிப்பட்டு  ஆட்கொண்டு  அருளும்  ஆண்டவன் ,  முடிவில் ,  அழிவு  இல்லாத  பேரின்புறுத்தும்  இன்ப  வடிவினன்  ஆவான் என்பது  தோன்ற , “ சிவனே” எனவும் ,  இவ்வரிய  பரம்பொருள் , தம்  அளவில்  அன்றி  ,  உலகத்து  உயிர்த்  தொகுதிகளுக்கு  எல்லாம்  பொதுவான  வெளியிடத்தில்  நின்று.  ஐந்தொழில்  திருக்கூத்து இயற்றி,  எல்லோரையும்  விழிப்பித்து  அருளும்  பெற்றியன்  என்பது  தோன்ற  ,  “ தென் தில்லைக் கோனே” எனவும்  அருளிச் செய்வார் ஆயினர்.  உயிர்கள்  செய்யும்  தவ  முதலியவெல்லாம்,  இறைவன்  திருவருட்பேற்றிற்கு  ஆளாகவும்,  தட்ப வெப்பங்களைப்  பொறுத்து  இயற்றும்  கடுந்தவம்  எல்லாம்  மூலமாகிய  மெய்யன்பின்  வலியளவே  பயன்  செய்வன.  அம் மெய்யன்பு  உள்வழியே ,  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  சார்புக்கு  ஆளாகலாம் . அத்தகைய  சார்புபெற்ற  பெரியோர்  எல்லாம்,  ஆண்டவனே ,  நின்  திருவடியை  எய்தி  இன்புற்றனர்  என்பார்,  “உன்றன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல்  கூட”  என்றார்.  திருவுள்ளக்  குறிப்பிற்  கூடினார்  திருவடி  கூடினாராக,  அச்  சொல்லளவில்  ஒற்றுமையுடைய  ஒரு  கூடு  எனக்கும்  வாய்த்தது  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு”  என்றார் .  என்பு , நரம்பு , தசைகளால்  ஆக்கப்பட்டுப்  புழுக்களுக்கு  உறையுளாகவுள்ள  இக் கூட்டை , யான்  தங்குதற்கு  உரிய  உறையுளாக  நினைந்து , எனது  எனக்  கடைப்பிடித்து,  இதனைப்  பாதுகாத்துக்  கொண்டு  இருக்கலானேன் ;  என்  அறியாமை  இருந்தவாறு  என்னே!  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு  இது  காத்திங்  கிருப்பதானேன் “   என்றார் .  இதனால்  கழல்  கூடினார்,  ஊனார்  புழுக்கூட்டை  ஒழித்துக்  கூடினார்  என்பதும்  போதரும் ,  “புழுக்கூடு  இது”  என்புழிச்  சுட்டு  இழிவு  கருதிற்று.  இங்கு  =  இவ்வுடலில்   ;  இவ்வுலக வாழ்க்கையில்  எனினுமாம் . 

             இதன்கண் , “ஊனார்  புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன்”  என்றதனால் ,  அது  சிவானுபவத்திற்குத்  தடையாதலும் , அதன்  ஒழிவு,  அதற்கு  உரிய  தூய்மை  பயப்பது  என்பதும்   போதரலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்,  தேனே  யமுதே  என்பன  முதலிய  விளிகளாலும், புழுக்கூடு  என  உடலைக்  கூட்டியதாலும்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்   என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        *******************************************

பாடல் 56.

உடையா  னேநின்  தனையுள்கி

உள்ளம்  உருகும்  பெருங்காதல்

உடையார்  உடையாய்  நின்பாதஞ்

சேரக்  கண்டிங்  கூர்நாயிற்

கடையா  னேன்னெஞ்  சுருகாதேன்

கல்லா  மனத்தேன்  கசியாதேன்

முடையார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தாக  முடித்தாயே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ,  “ஆண்டவனே , நின்  திருவுளக்  குறிப்புச்  சார்புடையார்  நின்  திருவடி  அடைய ,  யான்  ஊனார்  புழுக்கூடு  ஆகிய   இவ்வுடலைக்  காத்திருக்கின்றேன் “  என்ற  அடிகள்  , இத்  திருப்பாட்டில்,  உள்ளம்  உருகும்  பேரன்பு  உடையார்  நின்  திருவடி  அடையக்  கண்டும்,  யான்  தீ  நாற்றம் உடைய  புழுக்கூடு  ஆகிய  இதனைக்  காத்திருக்கும்படி  செய்தனையோ?  எங்கின்றார் .  உடலைக்  காத்தல்,  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  செயலாகவும்,  இதன்கண்  ஆண்டவன்  கட்டளையாகவும்  கொண்டு  இரங்கியபடியாம் . 

பதவுரை :-  உடையானே  =  எல்லாம்  உடைய  ஆண்டவனே ,

நின்  தனை  உள்கி  =  நினைந்து  நினைந்து, 

உள்ளம்  உருகும்  பெருங்காதல்  உடையார்  = நெஞ்சம்  உருகும்  பேரன்பு  உடையார்

உடையாய் நின்  பாதம்  சேரக்  கண்டும்   =   தம்மை  உடைமையாக  உடைய  நின்  திருவடிகளை அடைந்து  இன்புறக்  கண்டு  வைத்தும் ,

நெஞ்சு  உருகாதேன்  =  உள்ளம்  கரையாதவனும் ,

கல்லா  மனத்தேன்  =  கற்று  அறியாத  மனம்  உடையவனும்  ,

கசியாதேன்  =  உள்ளக்  கனிவு  இல்லாதவனும்  ஆகிய  நான் ,

இங்கு  ஊர்  நாயின்  கடையேன்  = இவ்வுலகத்தில்  ஊர்க்குப்  பொது  நாய்  போலக்  கடைப்பட்டவனாய் ,

முடையார்  புழுக்கூடு  இது   காத்து =  தீ  நாற்றமுடைய   புழுக்கூடாகிய  இதனைப்  பாதுகாத்துக்கொண்டு,

இங்கு  இருப்பதாக  முடித்தாயே  =  இந்நில  வுலக  வாழ்க்கையிலே  இருக்கும்படி   முடிவு  செய்தனையோ?    என்பது.

விளக்கவுரை :-    ஒரு பொருளைச்  சிறப்பு  முறையில்  குறிப்பிட்டு , அதனை  உடையான்  என்னாது , பொதுவாக  உடையான்  என்றதனால் , எல்லாம்  உடையான்  என்பது  பெறப்படும்.  குறைவற   எல்லாம்  உடையான்  இறைவன்  ஒருவனே  ஆவன் .  உள்ளம்  உருகும்  பெருங்காதல், “பானலார்  கண்ணியர்க்கும்  பதைத்துருகும்  பாழ்  நெஞ்சே”  என்றபடி , காம  நிலையில்  மகளிரை  நினைந்தும்  உண்டாவதாகும் . அதனை  விலக்குதற்கே , “நின்றுனையுள்கி”  என்றார்.   இறைவனுடைய  உருவம்  , அருவம் , அருவுருவம்  என்னும்  மூவகைத்  திருமேனிகளுள் ,  முதலில்  நெஞ்சால்  நினைதற்கு  உரியது  உருவத்  திருமேனியே  .  அவ்வுருவத்  திருமேனியின்  இயல்பு  சிவா காமங்களில்  கூறப்பட்டபடியாம் . அதனை  நெஞ்சத்  தாமரை  மலர்  நடுவண்  இருத்தி  நினைவு  கூர்தல்  வேண்டும்  என்ப .  அதனையே  ஈண்டு,  “உள்கி” என்றார்.  உள்கி  யுருகுதலாவது  ,  நினைதற்குக்  கருவியாகிய  உள்ளம் .  அந் நினைவின்  முதிர்ச்சியில்  நெகிழ்ந்து  கரைதல்  ஆகும்.  உள்ளம்  முற்றும்  கரைந்த  நிலையில் ,  உயிர்  சிவ  பாவனையில்  தலைப்பட்டு ,  மலநாசமாகிய  பயன்  எய்துவதாகும் .  பலகால்  நினைந்து  நினைந்து  உள்ளம்  உருகும்  நிலையில்  உள்ள  அன்பே  பேரன்பு   ஆகும்  என்பது  குறித்து  ,  “பெருங்காதல்” என்றார் .  அப் பேரன்பு  உடையாரே  ,  “தம்மை  யுணர்ந்து  தமையுடைய  தன்னுணர்வார்  “  ஆவர்  என்பது  தோன்ற , “பெருங்காதலுடையார்  உடையாய்”  என்று  கூறப்பட்டது  என்க .  தம்மை  உணர்ந்து  தமையுடைய   தன்னுணர்வார்  என்பதற்கு  உடைமைப்பொருளாகிய  தம்  இயல்பினை  உணர்ந்து  ,  உடையான்  ஆகிய  தலைவனை  உணரும்  தத்துவ  ஞானிகள்  என்பது  பொருள் ஆகும், “பெருங் காதலுடையார்  உடையாய்  நின்பாதம்”  என்புழிப்  பேரன்புடையார்  தம்மை  உடைமைப்பொருளாக  உடையை  ஆகிய  நின்னுடைய  திருவடிகளை  என  விரித்தல்  வேண்டும் .  உடையாய்  என்னும்  குறிப்பு  வினை முற்றுப் பெயரெச்சப் பொருள் பட்டு நின்றது.  உடையாய் ஆகிய  நின்  என  விரியும் .  அத்தகைய  பேரன்பு  உடையாரே  ஆன்மாவின்  இயல்பையும் ,  ஆண்டவன்  இயல்பையும்   உணரும்  பெற்றியர்  என்பது  தோன்றற்கு  அவ்வாறு  கூறப்பட்டது  என்க.

            அத்தகைய  பரிபக்குவம்  உடைய  மெய்யன்பர்  ,  ஆண்டவனே  ,  நின்  திருவடியைச்  சார்ந்து  இன்புறக்  கண்டு  வைத்தும்  என்பார், “நின் பாதஞ் சேரக்  கண்டும்”  என்றார் .  கண்டும்  என்புழி ,  உம்மை  தொக்குநின்றது . கண்டும்  உருகாதேன்  என முடிக்க .  ஆண்டவனே,  நின்னை  நினைந்து  உள்ளம்  உருகும்  பெருங்காதலுடையார்  எய்திய  பேற்றை  அறிந்து  இருந்தும், அப்பெருங்  காதல்  கொள்ளும்  தகுதியில்லேன்  எனினும்,  அதற்கு  ஏதுவாக  உள்ள  மனம்  உருகும்  நிலையாவது எய்தினேனோ எனின் ;  அதுவும்  இன்று  என்பார் , “ நெஞ்சுருகாதேன்” என்றார் .

              உள்ளம்  உருகும்  அநுபவம்  இன்று  எனினும்,  நின் பரம்பொருள்  தன்மையும்  அடிமையாகிய  என்  இயல்பும்,  கட்டாகவுள்ள  பாசத்தின்  இயல்பும்  முதலிய  சமய  உண்மைகளையாவது  கற்றுக்  கேட்டு  மனத்  தெளிவு  எய்தினேனோ  எனின்;  அதுவும்  இன்று என்பார் , “கல்லா  மனத்தேன்” என்றார்.  ஈண்டுக்  கல்லாமை , சமய  நூல்களைப்  பற்றியதாகும் . பரஞானமாகிய  அநுபவ  ஞானத்திற்கு  ஏதுவாகவுள்ள  அபரஞானம்  அதுவாகலின்  என்பது . நெஞ்சுருகுதல்  அநுபவஞானமாகிய  பரஞானம்  ஆகும் . கற்றல் , சமயநூல்  அறிவாகிய  அபரஞானம் ஆகும்.  இரண்டும்  இல்லேன்  என்றபடி . கல்லா  மனத்தேன்  என்பதற்கு  ,  கல்லைப் போன்ற  நெஞ்சம்  உடையேன்  என்று, உரைப்பாரும்  உளர்.  அது  நெஞ்சு உருகாதேன்  என்பதனாற்  பெறப்படுவதாகும்  என்க .  கசிதல்  =கனிதல்.  குழைதல்  என்னும்  பொருள் உடையது ;  உருகுதற்கு  முன்  நிகழும்  உள்ள  நிலையாகும்.  இவ்  வுண்மையை , “கற்றறியேன் கலைஞானம்  கசிந்துருகேனாயிடினும் “  என்னும்  பாடற் பகுதியானும்  அறியலாம் .  இப்பகுதியிற்  கூறப்பட்டவை  ,  நூல்  அறிவும் அநுபவ உணர்வும்  என்பது  தெள்ளிதின்  விளக்கம்  ஆதல்  அறிக.  முதல்  அடியில்  பெருங்காதல்  உடையார்  இயல்பு   கூறுங்கால் , அவர்க்கு  நூலறிவு  கூறப்படாமைக்குக்  காரணம்,  அநுபவ  உணர்வு  விஞ்சி  நிற்றல்  என்க.  சரியை  முதல்  மேற்கொண்டு,  ஞான நிலையடைந்தாரைச்  சரியையும்  உடையார் என்று  கூறுதல்  மிகையாம்  என்பது  ஈண்டு  நினைக்கத்தக்கது.

               நாய்ப்பிறப்பே  இழிவானது . அந்  நாயும்  ஒருவனுக்கு  உரியதாக  இருப்பின் ,  உணவு  கொடுத்தும் ,  இருப்பிடம்  அளித்தும்  பாதுகாக்கப் படுவதாகும் . அங்ஙனம்  இன்றி ,  ஊர்ப்பொதுவில்  உள்ள  நாய்  ஆயின்  ,  பாதுகாப்பார்  இல்லாமையான் ,  அங்கும்  இங்கும்  இடயறாமல்  ஓடி  அலைந்து,  பலரானும்  துன்புறுத்தப்பட்டு  ,  ஒரு  நிலையின்றித்  திரிவது  ஆகும்.  அத்தகைய  ஊர்ப்பொது  நாய்  போல, மனம்  ஒருநிலையின்றி  அலைவுறத்  திரியும்  இழிவுடையேன்  என்பார், “ஊர்நாயிற்  கடையானேன்”  என்றார்.  மேலே,  “ஊரேறாயிங்  குழல்வேனோ”  எனவும்,  இங்கே ,  “ஊர்நாயிற்  கடையானேன்”எனவும்  கூறினார் . ஆண்டு  உழலுதற்கும்  ,  ஈண்டுக்  கடைப்  படுதற்கும்  எடுத்துக்  காட்டியபடியாம் .  கடையானேன்  என்பது  முற்றெச்சம். 

                 முன்னைத்  திருப்பாட்டில் , “ஊனார்புழுக்கூடு” என்றார் .  அவ்வூனின்  பயன்  தீ  நாற்றம்  என்பார்,  இதன்கண்,  “முடையார்  புழுக்கூடு”  என்று  கூறினார் .  முன்னைப்பாட்டில்  ,  “இது  காத்து  இங்கு  இருப்பதானேன்”  எனத்  தன்  செயலாகக்  கூறினர் .  யான்  இத்  தீ  நாற்றம்  உடைய  புழுக்கூட்டை   அறியாமையால்  எனது  எனப்  பாதுகாத்துக்  கொண்டு  இருப்பினும் ,  பேரருள்  உடைய  ஆண்டவனாகிய  நீயாவது  உண்மை  உணர்த்தி , இதனை  ஒழித்து  விடலாமே?  நின்  கருணைத்  திருவுள்ளத்தில்  அவ்வாறு  கொண்டால் , எனக்கு  முடை  உடற்  கழிவும்  பேரின்பப்பேறும்  எளிதில்  ஆமே?  என்  தீவினை  காரணமாகத்  திருவுள்ளத்தில்  அக் குறிப்புத்  தோன்றாமல்,  இத்  தீ  யுடலைக்  காத்துக்  கொண்டு ,  இவ்வாழ்க்கையிலே  நிலைப்படுமாறு  செய்தனையோ? என  ஆண்டவன்  கட்டளையாகக்  கூறுவார்.  “இது  காத்திங்கிருப்பதாக   முடித்தாயோ”  என்றார்.  முடித்தாயே  என்புழி,  ஏகாரம்  வினாப்பொருளில்  வந்தது.

                  இதன்கண்,  நெஞ்சுருகாமை  முதலியனவும் , புழுக்கூடு  காத்திருத்தலும் , சிவாநுபவத்திற்குத்  தடை  என்பதும் ,  உருகுதலும்  , உடலின்  ஒழிவும்  ,  அதற்குரிய  தூய்மை  பயப்பன  என்பதும்  பெறப்படுதலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சுருகுதல்  வேண்டும்  என்னும்  குறிப்பினாலும் ,  முடையார்  புழுக்கூடு  என்னும்  வெறுப்பினாலும் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ************************************************

பாடல்  57. 

முடித்த  வாறும்  என்றனக்கே

தக்க  தேமுன்  அடியாரைப்

பிடித்த  வாறுஞ்  சோராமற்

சோர   னேனிங்   கொருத்திவாய்

துடித்த  வாறுந்  துகிலிறையே

சோர்ந்த  வாறும்  முகங்குறுவேர்

பொடித்த  வாறும்  இவையுணர்ந்து

கேடென்  றனக்கே   சூழ்ந்தேனே

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டுக்களில் , “ஊனார்  புழுக்கூடு “  எனவும் “முடையார்  புழுக்கூடு”  எனவும்  இழித்துக்கூறப்பட்ட  உடலைப்  பாதுகாத்துப்  பொய்யுலக  வாழ்க்கையில்  இருக்க  நேர்ந்ததே  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில் , அவ்வுடற்பற்று  அளவில்  அன்றி,  அது  காரனமாக  விளையும்  காம  விளைவிற்கும்    ஆளாகி  அழிவேன்கொல்  என்று    வருந்துகின்றார்.

பதவுரை :-   என்  தனக்கு  முடிந்தவாறும்  தக்கதே  =  எனக்கு  (இவ்  வூன் உடலைக்  காத்து  இங்கு  இருக்கும்படி ) முடிவு  செய்ததும்  பொருத்தமே,

முன்  அடியாரைச்  சோராமல்  பிடித்தவாறும்  தக்கதே  =  முன்னர்  மெய் யன்பரைத்  தளரவிடாமல்  அணைத்துக் கொண்டதும்  பொருத்தமே ,

சோரனேன்  =  கள்வனாகிய  யான் ,

இங்கு  ஒருத்தி  வாய்  துடித்தவாறும்  =  இவ்விடத்து  ஒரு  மாயைப்  பெண்ணின்  வாய்  இதழ்  துடித்த  விதமும் ,

துகில்  இறையே  சோர்ந்த  வாறும்  =  ஆடை  சிறிது  நழுவிய  விதமும் ,

முகம்  குறுவேர்  பொடித்தவாறும்  =  முகத்தின்  நின்றும்   சிறு  வியர்  அரும்பிய  விதமும் , 

இவை  உணர்ந்து  என்  தனக்கே  கேடு  சூழ்ந்தேனே   =  ஆகிய  இவற்றை  அறிந்தும்  எனக்கே  யான்  கேடு  தேடிக்  கொள்ளல்  ஆயினேன்  என்பது .

விளக்கவுரை :-   பாசப்  பிணிப்புண்டு ,  பண்டை வினைப் பயன் நுகர வேண்டியதாக இருத்தலான் , முடையார் புழுக்கூடு  ஆகிய இவ்வுடலைக் காத்துக் கொண்டு  , என்னை  இங்கு  இருக்கும்படி  முடிவு  செய்ததும், வினை எச்சம்  இன்மையால் பிறவியிற்  புகுத்தாது,  மெய்யன்பர்களைத் தளர  விடாமல் திருவடி  நிழலில்  சேர்த்துக்கொண்டதும்  பொருத்தம்  என்றார் .

                     “முன்”  என்பது , அடிகளுக்கு  ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி , ஞானோபதேசஞ்  செய்த  காலத்தைக்  குறிக்கும் . அப்பொழுது  மெய்யன்பர்கள் பலர்  சூழ்ந்து இருந்தனர்  என்பதும் , இறைவன்  உருக் கரந்த ஞான்று , அவர்  எல்லோரையும் தன்  திருவடி நீழலில் சேர்த்துக்கொண்டனன்  என்பதும் , அடிகள் வரலாற்றானும் , “அருளாரமுதப்  பெருங்கடல்வய் அடியாரெல்லாம் புக்கழுந்த” என்னும்  பாடற்பகுதியானும்  உணரலாம் . மலக்கட்டுடையாரை , அது  நீங்குங்காறும்  கன்மப் பயனாகிய உடலோடு கூடியிருக்கச் செய்தலும் , அஃதில்லாத  மெய்யன்பரை அழிவில் இன்பத்திற்கு ஆளாக்கிக்கோடலும்  இறையருட்  செயல்கள் ஆகும்.  “தன் கடன் அடியேனையுந்  தாங்குதல் “ என்றபடி, பக்குவ முதிர்ந்த ஆன்மாக்களை , மீண்டும்  மல வாசனை பற்றாமல் காத்து  அருளுதல்  இறைவனுக்குரிய  பொறுப்பு  ஆகும் என்பது குறித்து , சோராமற் “பிடித்தவாறும்” என்றார், “தக்கதே” என்பதை, “முடித்தவாறும்”   “பிடித்தவாறும்” என்னும்  ஈரிடத்தும் இயைத்துக்  கொள்ளல் வேண்டும் .

                        வினை யெச்சம் காரணமாக , யான் இவ்வூன் உடலைக் காத்திருக்க  முடிவு  செய்தனை யாயினும் , அம்மட்டில்  அமையாமல் , இவ் வுடற்  பற்றுக் காரணமாக மேன்மேலும் வினை விளைவு  கிளைக்கின்றதே ! ஆண்டவனே , என் செய்வேன் ! என்று  அடிகள் வருத்த மேற்கொண்டு , அவ் வினை விளைவுகளுள் , ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவார் ஆயினர் . அந் நிகழ்ச்சி ; ஒரு பெண் , தம் முன்னிலையில் நின்று , காமச் செயல்களைக் காட்ட , அச்செயல்கள் தீங்கு பயப்பன என்று  அறிந்திருந்தும் , சிறிது மனம் சென்றதாகக்  கொண்டு  இரங்கியதாகும் . இத்தகைய நிகழ்ச்சி உலகியலில் எளிதாக நிகழ்வது உண்டு . இங்ஙனம் நிகழுங்கால் , உண்மை அறிந்து அகப்படாமல் விலகி  உய்ய வேண்டும் என்று உலகினார்க்கு அறிவுறுத்தற் பொருட்டு , அடிகள் தம் மேல்  ஏறிட்டுக் கூறுவார் ஆயினர்.  அடிகள் திருவருட் பேற்றிற்கு ஆளான பெருமை  அளவிடற்கரியது . அங்கனமாகவும் , தம்மையும் தம் செயல்களையும் மிக இழிவாகக்  கூறிய  இடங்கள் பலவாகும் . அப்படிக் கூறிய  நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிகளை  ஆளாக்கல் நம்மனோர்க்குத் தகுதியன்று.  மற்றை அடியார்களும் , பொதுவான மக்களியல்புகளை  ஓரோவிடங்களில்  தம் மேல் ஏற்றிக் கூறியிருப்பதை  அறிகின்றோம்.

             இனி, ஞானாசிரியனாக  எழுந்தருளிய  ஆண்டவன் , “இன்னும் சின்னாள் இருத்தி” என  உருக் கரந்தபின் , அடிகள் , இத் தீயுடலை ஒழித்து , ஆண்டவன்  திருவடியடைதல்  எப்பொழுது கூடுமோ என்று கவன்று  இருக்குங்கால் , அவர் உள்ளம்  உலகவாதனை எதிர்ப்பட்ட   நிலையிலும் , அதன்கண்  ஈடுபடாமல்  இருக்க , ஆண்டவன்  திருவுளங்கொண்ட  குறிப்பின் வழி ,  மாயையின்  படைப்பாக  ஒரு  பெண் அடிகள் முன்னிலையில் காமச்  செயல்களைக்  காட்டி  நடித்ததாகவும்  கொள்ளலாம்.  “மாயை  மயக்கமும்  செய்யுமன்றே “ என்பது   சிவஞான சித்தி , அந் நடிப்புக்களை   நஞ்ச நடிப்புக்கள் என்றே அடிகள் உணர்ந்தனர் என்பதை , இவை “யுணர்ந்தும் “ என்பதனால் அறியலாம் . அங்ஙனம்  அறிந்தும் , அக் காட்சியில்  சிறிது  மனஞ் சென்றது குறித்து , “கேடு என்றனக்கே  சூழ்ந்தேனே “ என்றார் என்க . அம் மாயைப் பெண்ணின் காமச்  செயல்கள்  பல  ஆயினும் , ஓரளவிற் சுருக்கிக்  கூறத் தொடங்குகின்றார் .  கரவிற்  கவர்ந்த பொருளைப்  பிறர் அறியாவாறு  அநுபவிக்கக்  கருதும்  கள்வர்  இயல்பை  ஒத்துத்  தனிமையில்  நடித்த அம்மாயப்பெண்ணின்  செயல்களைப்  பிறர்  அறியாத  நிலையில்  காண  நேர்ந்தது  பற்றித் தம்மை , “சோரனேன்” என்றார்.

              முதலில்  அப்பெண்  தோன்றி , என்னவோ  சில  காமச்செய்திகளைக் கூறத் தொடங்கினாளாக , காதல் மிகுதியால் தன் வயம் இழந்ததாக  நடித்து , பேச இயலாமல் வாய் இதழ் துடித்த அளவில்  நின்றாள் என்பார், “ஒருத்தி வாய்  துடித்த வாறும் “ எனவும் , பேச இயலாத நிலையில் , உடுத்த ஆடையின் ஒருகூறு சிறிது நெகிழ விட்டதாகக் கொண்டு , “துகில் இறையே சோர்ந்தவாறும் “ எனவும்  கூறினர். இவ் விருவகைச் செயல்களாலும் அடிகள் உள்ளம் நெகிழாமை  கண்டு  , இனி என் செய்வல் என்று வருத்தம் தோன்ற  நின்றாளாக , அத் துன்பநினைவினால்  அவள் முகத்தில் சிறு வியர்வு உண்டாயிற்றாம் . அதனையே  , “முகங்குறுவேர்  பொடித்தவாறும்”  என்றார் . நினைவின்  வெப்பத்தால்  சிறு வியர் அரும்புதல் இயல்பே . பொடித்தல் = அரும்புதல் .  மன மொழி மெய்களாகிய முக்கரணங்களும்  காம  வயப்பட்டன என்பதற்கே  இம்மூன்று செயல்களும் கூறப்பட்டன  என்க. வாய் துடித்தலால்  மொழியும் , துகில்  சோர்ந்தலால் மெய்யும் , முகம் வியர் பொடித்தலால்  மனமும்  காமவயப்பட்டன என்பது.

         இப் பாடற் கருத்தையே , துறவறச்  செல்வராகிய  சிவஞான முனிவரர் , கலைசைப்  பதிற்றுப்  பத்து  அந்தாதியில் அமைந்து , “சுரி குழன் மடவார் இளமுலைப் பணைப்பும்  துகிலிறை சோர்வதும்  நகையும் , வரிவிழித் தொழிலும்  சேயிதழ்த் துடிப்பும் மனத்திடை யெழுதி வைத்தழிவேன்” என்றார். இச் செயல்கள் தீமை விளைவிப்பன என்று அறிந்திருந்தும் என்பார், “இவை  யுணர்ந்தும்”என்றார்,உம்மைவிகாரத்தால் தொக்கது . இக் காமச்செயல்களில் தாம் அகப்படவில்லையாயினும் , இக் காட்சியில் சிறிது மனம் சென்றது குறித்து , அதனால் விளையும் கேட்டினை யானே தேடிக்கொண்டவன்  ஆயினேன் என்பார், “கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றார் . சூழ்தல் = ஆராய்ந்து தேடிக்கொள்ளுதல் .  ஆண்டவனே , ஊனுடலில் இருக்கச் செய்தல் , இத்தகைய காம முதலிய குற்றங்களுக்கு மேன் மேலும்  ஆளாக நேருமே , அங்ஙனம் நேராதபடி , இத் தீயுடலை  ஒழித்து , என்னை ஏற்று கொள்ளல்  வேண்டும் என்பதே இத் திருப்பாட்டிற்  போந்த கருத்து எனக் கொள்க.

            இதன்கண் “இவையுணர்ந்து  கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றதனால் , இத்தகைய செயல்களில்  ஈடுபடாமையே  சிவானுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மை ஆகும் என்பது பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.

                                                ***********************************

பாடல் 58.

தேனைப்  பாலைக்  கன்னலின்

தெளிவை  யொளியைத்  தெளிந்தார்தம்

ஊனை  உருக்கும்  உடையானை

உம்ப  ரானை  வம்பனேன்

நானின்  அடியேன்  நீ யென்னை

ஆண்டா  யென்றால்  அடியேற்குத்

தானுஞ்  சிரித்தே  யருள  லாந்

தன்மை  யாமென்  தன்மையே

கருத்துரை :-    முடையார்  புழுக்கூடாகிய  ஊனுடலைப் பற்றி நிற்பதோடு  அமையாது , காமம்  முதலிய  குற்றங்களுக்கும்  ஆளாகி  அழிவேனோ  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக் கூறிய  அடிகள் , அத்தகைய  இழிதகவு  உடையேன் , யாவர்க்கு மேலாம்  அளவிலாச்  சீருடைய  நின் அடிமை என்றால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாகும் . ஆதலின், ஆண்டான்  அடிமைப் பொருத்தம்  இன்மையைத்  திருவுள்ளம்  கொள்ளக்  கூடுமோஎன, இத் திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :-   தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை   =   

தன்னை  அடைந்தார்க்குத்  தேனும்  பாலும்  கருப்பஞ்சாற்றின்  தெளிவுமாக  உள்ளவனும்,

ஒளியை  =  பேரொளிப்  பிழம்பினனும் ,

தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை  =  தன்னைப் பரம் பொருள் எனத்  தெளிந்த மெய்யன்பர்களின் ஊன்  உடலை  உருக்கும் உடையவனும்,

உம்பரானை  =   மேலாகிய  சிவபுரத்து அரசனும் ஆகிய  ஆண்டவனை நோக்கி,

வம்பனேன்  =  வீணனாகிய  யான் ,

நான் நின் அடியேன்  நீ என்னை  ஆண்டாய் என்றால்   = யான் உனக்கு  அடிமையாவேன்  நீ எனக்கு  ஆண்டவன்  ஆவாய்  என்று  கூறினால் ,

அடியேற்குத்  தானும்  சிரித்தே  அருளலாம் தன்மை ஆம்  என் தன்மை  =

அடியேனைக் குறித்து  அப்பெருமான்  நகைத்தே   அருளலாம்  தன்மையாகும்  என்  இயல்பு   என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன்  மெய்யன்பரை  ஆட்கொள்ளுங்கால்  தேனைப் போல  எளிமையில்  இனிமை  பயந்து  அவரை  வயப்படுத்தும் , பின்னர்த்  தன்னை உணர்ந்து  உணர்ந்து  நெருங்குந்தோறும் பாலைப்போலத்  தன்  அரிய  இயல்பையும்  பயனையும்  அவர்க்குப்  புலப்படுத்தும் , அதன்  மேல்  கருப்பஞ்சாற்றுத்  தெளிவினால்  ஆக்கப்பட்ட  கட்டியைப்  போல்  மிக  அரிய  தன்  இயல்பை  உணர்த்தித்  தூய  இன்பத்தை  அருளியும்  பாதுகாப்பன்  என்பது  தோன்ற , “தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை  “  என்றார்.  தெளி= தெளிந்த  சாற்றினால்  ஆக்கப்படும்  கட்டியை  உணர்த்தலின்  ஆகுபெயர்  ஆகும்.  இம் மூன்று  பொருள்களையும்  இம் முறையிற்  கூறிய  கருத்தும்  பிறவும்  55  ஆம்  திருப்பாட்டின்  விளக்கத்திற்  காண்க.

                இங்ஙனம்  இனிமைப்  பொருளாக  உள்ள  அப் பெருமான்  , தூய  ஞானப்பிழம்பாக   வுள்ளான்  என்பது  தோன்ற, “ஒளியை”  என்றார்.  கதிரவன்  முதலிய  மண்டிலங்களுக்கு  எல்லாம்  ஒளி  உதவும்  மூல  ஒளியாக  உள்ளான்  இறைவன்  என்று  மறை  யாகமங்கள்  கூறும் . “காளத்தியுள்ளிருந்த   ஒளியே” என்பது  தமிழ்மறை .  ஞானமயமான  பொருள்களில்  தோன்றும்  இன்பம்  சிறந்தது  என்பது புலப்படுக்கத்  தேன்  முதலிய  இனிமைச்  சுவை  மிக்க  பொருள்களாகவும் ஒளிப்பொருளாகவும்  கூறியருளினார் . 

                   தெளிந்தார் =  இறைவனைப்  பேரின்ப  மயமான  ஞான  வடிவினன்  என்று  நூல்  அறிவினால்  ஐயம்  திரிபு  அற  அறிந்து,  ஞானாசிரியன்  உபதேச  முகமாக  அநுபவ  உணர்வினர்  தெளிந்த  மெய்யன்பர் , அங்ஙனம்  தெளிந்து, தன்  அருள்  அமுதத்தை  உண்ண   உண்ண , உள்  ஒளியைப்  பெருக்கி , ஊனுடலைக்  கரையச்செய்பவன்  என்பார், “ஊனையுருக்கும்  உடையானை” என்றார்.  ஞானாநுபவம்  உடையார்க்கு,  தவத்தினால்  ஊனுடல்  சுருங்கச்  சுருங்க,  உள்ளொளியாகிய  ஞானம்  மிகும்  என்பதை , “ஊனினை  யுருக்கி  யுள்ளொளி பெருக்கி “  என்னும்  அடிகள்  திருவாக்கானும்  அறியலாம்.  பிணியின்  நலிவினால்  ஊனுடல்   சுருங்குதலை  உலகத்து  மக்களிடைக்  காணலாம் . அதனால்  உண்டாம் பயன்  துன்பமே  அன்றிப்  பிறிது  இன்று.  தவச்  செயலினால்  ஊனுடல்  சுருங்குமாயின்,  உள்  ஒளி  பெருகப்  பெற்று , அதனால்  சிவானந்த அநுபவமாகிய  பயன்  எய்துவதாகும்.  ஒரு  மகனுக்கு  உடல்  இளைப்பு  , நோயினால்  இல்லாமல்  தவத்தினால்  உண்டாயின் , அது  சிறந்தது  ஆகும்  என்பதை,  “விரதம்தனில்  இளைத்த  மேனி” என்பதனால்  அறியலாம் .  ஊனுடலும்  இறைவன்  உடைமையாகும்  ஆதலின்,  அதனை  உருக்குதற்கு  உரிய  உரிமையும்  அப்பெருமானுக்கே  உண்டு   என்பதைப்  புலப்படுத்த , “உருக்கும்  உடையானை”  என்றார்.  ஊன்  உருகிய  நிலையில்,  இறைவன்  அவ்வுயிர்க்கு  ஒளிமயமாகிய   தன்னை  வழங்கும்  இயல்பினன்  என்பதையும்  குறிக்கொண்டே முன்னர்,  “ஒளியை”  என்று  கூறினர்  என்பதும்  ஒன்று. இந் நிலவுலகத்துள்ள  உயிர்த்  தொகுதிகளையும்  ,  பெளதிகப்  பொருள்களையும்  தனக்கு  அடிமையாகவும் , உடைமையாகவும்  கொண்டு  விளங்கும்  தலைவனாகிய  சிவபெருமானே , எல்லா உலகங்களுக்கும்  , தேவர்  முதலியோர்க்கும்  தலைவன்  என்பது  தோன்ற , “உம்பரானை”  என்றார்.  உம்பர்  =  மேல்  உலகமாகிய  சிவலோகமும்  சிவபுரமும்  ஆம்.  அதற்கு  அரசன்  என்றதனால்,  முழுமுதல்  தலைமை  பெறப்படுவதாகும் .  “உம்பர்கட்கரசே” என்பது  அடிகள்  திருவாக்கு. 

                 ஒரு  சிறந்த  குறிக்கோளை  மேற்கொண்டு  அதற்குரிய  தவச்  செயலில்  ஈடுபடாமல் ,  உடலை  ஓம்பி,  இவ்வுலக  வாழ்க்கையில்  பயன்  அற்ற  செயல்களை  மேற்கொண்டு  ஒழுகும்  இயல்பினன்  யான்  என்பார், தம்மை, “வம்பனேன்”  என்றார் . “தவஞ்செய்வார்  தங்கருமஞ்செய்வார்   மற்றல்லர் ,  அவஞ்செய்வார்  ஆசையுட்பட்டு”  என்னும்  பொருள்  உரைப்படி,  தவம்  அல்லாத  செயல்கள்  எல்லாம்  பயனற்ற  செயல்கள்  என்பது  தெளிவாம் என்க.  சரியை  முதலிய  தவச் செயல்கள்  உடையாரே,   ஆண்டவனுக்குச்  சிறந்த  அடியார்  ஆவார் . அச் செயல்கள்  இன்றி ,  அவச்செயல்களையுடைய  வீணன்  ஆகிய  யான்,  அடியாரைப் போலப்  பொய்மையாக  நடித்து,  உயிர்க்கு  உயிராக  நின்று,  அவரவர்  நன்று  தீதுகளை  உணரும்  எம்பெருமானை  நோக்கி ,  “நான் நின்  அடியேன்”  என்றால் ,  அது தவச்செயல்  இல்லாமையாகிய  குற்றத்தோடு  ,  பொய்மை  கூறிய  குற்றமும்  ஆம் என்பதும்,  அவ்வளவில்  அன்றி , ஆளுதற்கு  உரிய  தகுதியைப்  பகுத்து  உணரும்  ஆற்றல்  இறைவனுக்கு  இன்று  என்பது  பெறப்படுமாறு , “நீ  யென்னை யாண்டாய் “ என்றால் ,  அதனினும்  பெரும்  குற்றம்  ஆம்  என்பதும்  அடிகள்  கருத்து .  இன்னோரன்ன  குற்றங்கள்  விளையுமாறு  அடிகள்  ஆண்டவனை  நோக்கித்  தகுதியில்லாத  தம்மைக்  குறித்து, “நான் நின்  அடியேன்”  எனவும்,  தகுதி  உணராது  ஆட்கொண்ட  குறைதோன்ற  ,  “நீ  யென்னை  ஆண்டாய் “எனவும்  கூறினால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாம்  என்பார்,  “சிரித்தே  யருளலாம்  தன்மை” என்றார் . தான்  என்பது  படர்க்கைப்  பெயர் ; அப்  பெருமான்  என்னும்  பொருட்டு.  உம்  –தவிர்வழி  வந்த  சாரியை  .  யான்  கூறிய  பொருந்தா உரைக்கு  என்னைக்  கடுந்தண்டத்தால் ஒறுத்து  அடக்க  வேண்டியது  இருக்க,  பேரருள்  உடைமையால் அங்ஙனம்  செய்யாமல் , தந்தையின்  முன்னிலையில்  அறியாப்  பருவத்துக்  குழந்தை  கூறிய  பொருந்தாஉரையைக்  கேட்டு  நகையாடல்  போல  ,  அப்பெருமான்  சிரித்து  அருள்வன்  என்பது அடிகள்  கருதியது  என்க.  அடியேற்கு  என்புழி , நான்கன்  உருபை  இரண்டன்  உருபாக்கல் வேண்டும் .  “சிரித்தே”  என்புழி,  ஏகாரம்  தேற்றப்பொருட்டு ,  இது நகைத்தற்கே  இடனாகும்  அன்றி , உண்மை  ஆகாது  என்பது.  என் இயல்பு ஆண்டவன் எள்ளிநகையாடற்கு  உரியதே  அன்றி  வேறு  பயன்  விளைப்பது  அன்று  என்பார் , “சிரித்தே யருளலாம்  தன்மையாம்  என்  தன்மையே” என்றார்.  அடிகள்  தம்  பொருந்தா  உரையைக்  கேட்டாவது  ஆண்டவன்  வெளிப்பட்டு  நகைத்து  அருளுவான்  ஆயின் , அவ்வளவிற்  பேறுடையேன்  ஆவேன்  என்பது  அவர்  தம்  உட்கோள்  என  இத்திருப்பாட்டில்  தெளியலாம்.  “ஒறுத்தல்  ஒன்றும்  போதுமே” என்னும்  அடிகள்  திருவாக்கு  ஈண்டு  நினைக்கத்தக்கது . 

               இதன்கண்,  “சிரித்தே  யருளலாம் தன்மையாமென் தன்மையே”  என்றதனால்,  சிவாநுபவத்திற்குரிய   தூய  தன்மை  மெய்யடிமையால்  உண்டாவது  என்பது  பெறப்படுதலின்  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                            *****************************************

பாடல்  59.

தன்மை  பிறரால்  அறியாத

தலைவா  பொல்லா  நாயான

புன்மை  யேனை  ஆண்டையா

புறமே  போக  விடுவாயோ

என்னை  நோக்கு  வார்யாரே

யென்நான்  செய்கேன்  எம்பெருமான்

பொன்னே  திகழும்  திருமேனி

யெந்தாய்  எங்குப்  புகுவேனே.

கருத்துரை :-      முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  பெருமையையும்  தம்  சிறுமையையும்  நோக்கத்  தம்மைப்  பொறுத்த அளவில் ,  ஆண்டான்  அடிமைத்  திறத்தில்   பொருத்தம்  இன்மை  திருவுள்ளம்  பற்றக்  கூடுமோ என்று  ஐயுற்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில் , யான் சிறுமையாளனாக  இருந்தாலும் , ஆட்கொண்ட  நீ  எங்ஙனம்  கைவிடக்  கூடும்?  அங்ஙனம்  கைவிட்டால், இனி,  எங்குப்  புகல்  அடைவேன் ?  என்று  இறைவனை  முன்னிலைப்படுத்து  இரங்குகின்றார் .

பதவுரை :-  தன்மை  பிறரால்  அறியாத  தலைவா   =   தன்   இயல்பு  பிறரால்  அறியப்படாத   தலைவனே ,

பொல்லா நாயான  =  தீங்கு  மிக்க  நாய்  போன்ற ,

புன்மையேனை  ஆண்டு  =  சிறுமையுடைய  என்னை  ஆட்கொண்டருளி ,

ஐயா  புறமே  போக  விடுவாயோ  =  ஐயனே  புறத்தே  செல்லவிட்டு  ஒழிப்பாயோ,

என்னை  நோக்குவார்  யாரே  =  ( அங்ஙனம்  விடுவாய்  ஆயின் )  அடியேனைக்  கடைக்கணிப்பார்  பிறர்  யாரோ? ,

எம்  பெருமான்  =  எங்கள்  ஆண்டவனே , 

நான்  என்  செய்கேன்  =   யான்  யாது  செய்ய  வல்லேன் ,

பொன்  திகழும்  திருமேனி  எந்தாய்  =  பொன்  மயமாக  விளங்கும்  திருமேனியை  உடைய  என்  தந்தையே ,

எங்குப்  புகுவேன்  =   வேறு  எவ்விடத்தைப்  புகல்  அடைவேன்  என்பது ..

விளக்கவுரை  :-    இப் பாடலின்  தொடக்கத்தில்   கடவுள்  தலைவன்  இலக்கணம்  மிகச்  சிறந்த  முறையில்  தெளிவுறுத்தப்பட்டுள்ளது.  உலகத் தலைவன்  ,  கடவுள் தலைவன்  என  இரு  திறப்படும்  தலைவருள் , உலகத்  தலைவனாகிய  அரசனை ,  உலகத்துள்ள  மற்றை  மக்கள்  எல்லோரும்  நன்கு அறிவர் ;  அத்  தலைவன்  குணஞ்செயல்களையும்  வரையறுத்து  உணர்வர்  .  அத்  தலைவன்  பிறர்  எல்லோரையும்  அறியான் , அன்னார்  குணம்  செயல்கலையும்  நன்கு  உணரான் .  கடவுள்  தலைவனாகிய  இறைவனோ , பிறர்  எல்லாரையும்  ஒருங்கு  அறிவன் ; அன்னார்  குணம்  செயல்ளையும்   “அவனன்றி  யோரணுவும்  அசையாது”  என்றபடி , உயிர்க்கு  உயிராக  நின்று  நன்கு  உணர்வன .  பிறர்க்கு  அப்பெருமான்  பெற்றி  உணர்தல்  அரிதாகும் .  இக் கருத்துக்களை   அடக்கியே , “தன்மை  பிறரால்  அறியாத  தலைவா” என்று  சிவபெருமான்  சிறப்பிலக்கணத்தை   அருளிச்செய்வாராயினர் . “பெற்றி  பிறர்க்கரிய   பெம்மான் “  என்று  அடிகள்  பிறிதோறிடத்துக்  கூறியதும்  இக்  கருத்துப்பற்றியே .  அடிகள் , தம்மை  ஆட்கொண்ட  ஆண்டவன் ,  தலைமை  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பதைக்  குறிப்பிட்டு , அப் பெருமான்  தகுதிக்கேற்றபடி  ,  அவனால்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  அடிமை  இலக்கணம்  தன்பால்  சிறிதும்  இன்று  என்பதைப்  புலப்படுத்துவாராய் ,  “பொல்லாத  நாயான  புன்மையேனை  “  என்றார்.  நாய் , பிறப்பினால்  இழிவும்,  நன்றியறிவினால்  உயர்வும்  உடையதாகும் .  ஈண்டு  உயர்வுக்கு  ஏதுவாகிய  நன்றியறியும்  நலத்தை  ஒழித்துப்  பிறப்பினால்  இழிவுடையது  என்பார்,  “பொல்லா  நாய் “  என்றார்.  ஆக்கம் ,  உவமப்  பொருட்டு .

            அடிமைக்குத்  தகாத  சிறு  குணங்கள்  பலவும்  உடையோன் என்பார், “புன்மையேனை” என்றார் .  என்  புன்மையை  அறிந்தும் , நின்  பேரருள்  காரணமாக  என்னை  ஆட்கொண்டனை  எனவும்  ,  அறிந்து  ஆட்கொண்டபின், என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  எவ்வாறு  அமையும்  எனவும்  கூறுவார் , “ஆண்டு  புறமே  போக விடுவாயோ” என்றார் . இதனால், இறைவனால்  ஆட்கொள்ளப்பட்டவன் , “மீளாஅடிமை  யுனக்கே யாளாய்”  என்றபடி, அவ்வடிமையினின்றும்  மீட்சி  பெற்றுப்  பிறிதிடஞ்  செல்ல  நேராது  என்பதும்  போதரும்  . “புறமே  போகவிடுவாயோ”  என்றதனால், “யான்  அடிமைக்கு  உரிய  தகுதி  இல்லேன்  “ எனினும்  என்னை  அறிந்து  ஆட்கொண்ட  நின்  பெருமை  சிறந்தது  ஆகலின் , அதற்கு  இழுக்கு  நேராவண்ணம்  என்னைப்  புறம்செல்ல  விடமாட்டாய்” என்னும்  அடிகள்  உட்கோள்  புலனாதலும்  அறிக.  இவ்  வுட்கோள்  பற்றியே , ஈண்டு, ஆண்டவனை  விளக்குங்கால் , உயர்ந்தோய்  என்னும்  பொருள்  தோன்ற , “ஐயா” என்று  அருளிச்  செய்தனர் .  ஒருவாறு  என்  பொல்லாங்கு  குறித்து  நின் பெருமையையும்  கருதாமல்  என்னைப்  புறத்தே  தள்ளிவிடுவாய்  ஆயுன் , சிறந்த தலைவனால்  ஆட்கொள்ளப்பட்டும்  , விலக்கப்பட்டவன்  என்று  கருதிப்  பிறர்  யாரும்  என்னைக்  கடைக்கனிக்க  மாட்டாரே என்பார்,  “என்னை  நோக்குவார்  யாரே”  என்றார் . ஒரு  சிறந்த  தலைவனுக்கு  ஆட்பட்டான்  ஒருவன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  விலக்கப்படுவான்  ஆயின், அத்  தலைவன்  பெருமைக்கு  அஞ்சிப்  பிறர் யாரும்  அவ்  வடிமையை  ஏற்றுக்கொள்ளமுற்படார்  என்பதும், முற்படினும், சிறந்த  தலைவனுக்கு  ஆளாயபின் , அத் துணைச்  சிறப்பில்லாத  இழிந்தார்க்கும்  ஆளாதல்  மிகவும்  இழிவு  தருவதென்று  அவ் வடிமையும்  பிறிதிடம்  செல்ல  ஒருப்படான்  என்பதும்  உலகியலில்  காணப்படுவன.  இக்  குறிப்பும்  , “என்னை நோக்குவார் யாரே” என்னும்  தொடர்  மொழியால் புலப்படுதல்  அறிக .

               ஆண்டவனே, நீ என்னைக்  கை விடுவாய்  ஆயின் , ஆதரிக்கும்  பிறர்  யாரும்  இன்மையால்,  இந்நிலையில்  யான்  செய்யத்தக்கது  யாதுளது  என்பார், “என்  நான் செய்கேன்  “ என்றார் .  ஈண்டு , என்னை  ஆண்டவனாகிய  நீ இருக்க  , அடிமையாகிய  யான்  செய்யத்தக்கது  எதுவும்  இன்று  என்பதைக் குறிக்கொண்டு  ,  “எம்பெருமான் “ என்று  விளித்தனர் .

                  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அளித்த  திருக்காட்சி, கண்கொள்ளாக்காட்சியாக  அடிகள்  கண்டு  இன்புற்றவர்  ஆதலின்,  ஞானாசிரியனாகிய  அப்  பெருமான் திருவுருவத்தை  உள்ளக்கிழியில்  எழுதிக்கொண்டு , “பொன்னே  திகழும்  திருமேனி”  என்றார்.  அத்  திருமேனியைச்  சுட்டிக்  கூறக்  கருதுங்கால்  ,  அப்  பெருமான்  தன்  பேரானந்தப்  பெருஞ்செல்வத்தை  அநுபவிக்குமாறு   சிறப்பு  முறையில்  தமக்கு  உபதேசித்த  தந்தை  எனக்கொண்டு , “எந்தாய்”  என்றார்.  சிறந்த  தந்தையின்  செல்வத்தை  அநுபவிக்கப்  பிறந்த   மைந்தனாகிய  யான் , அத்  தந்தையிடத்தை  விட்டு , வேறு  எங்குச்  செல்வேன்  என்பார், “எங்குப்  புகுவேனே” என்றார் .

                    இத்  திருப்பாட்டில்  ஒவ்வோர்  அடியிலும்  குறிப்பிட்ட  கருத்துக்கு  ஏற்ப  இறைவனை  விளித்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .  “தலைவா”,  “ஐயா” ,  “எம்பெருமான்” , “எந்தாய்”,  என  முறையே  நான்கு  அடிகளிலும்  கூறியிருத்தல்    காண்க.  அடிகளின்  கனிந்த  உள்ளநிலையும் , அன்பின்  பெருக்கமும்,  ஆண்டவன்  இடத்துள்ள  பேரார்வமும்  இத்  திருப்பாட்டில்  நன்கு  அமைந்துள்ளன.  வஞ்சம்  அறியாக்  குழந்தை ,  தன்னைப்  பெற்ற  தாய் , தந்தையரிடத்துத்  தன்  குறையைக்  கூறுதல்  போல் ,  அடிகள்  ஆண்டவனை  நோக்கிக்  கூறியிருக்கும்  செய்திகள்  நம்மனோர்  உள்ளத்தை  உருக்கும்  தன்மை  யுடையனவாய்  இருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                      இதன்கண்,  அட்கொண்ட  சிறந்த  தலைவனை  அன்றி , வேறு  புகல்  இல்லையென்று  கூறியிருத்தலால் ,  அத்  தலைவனுக்குச்   செய்யும்  தொண்டே  சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை  பயப்பதாகும்  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , அடிகளின்  அன்புமொழி  பலவற்றாலும் ,  பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                             *********************************************************

பாடல் 60.

புகுவேன்  எனதே  நின்பாதம்

போற்றும்  அடியா  ருள்நின்று

நகுவேன்  பண்டு  தோள்நோக்கி

நாணம்  இல்லா  நாயினேன்

நெகும்அன்  பில்லை  நினைக்காண

நீயாண்டருள  அடியேனுந்

தகுவ  னேயென்   தன்மையே

எந்தாய்  அந்தோ  தரியேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் , ஆண்டவனை  நோக்கி , ஆட்கொண்ட  நீ  என்னைக்  கைவிட்டால் ,  யான்  வேறு  எங்குப்  புகல்  அடைவேன்  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில்  யான்  அன்பு  இலேன்  ஆயினும் , அருமையாக  ஏற்றுக்கொண்டமையால் , நின் திருவடி  எனக்கு  உரியது  ஆகிவிட்டது  ஆதலின்  , அதன் கண்ணே  புகல்  அடயக்  கடவேன்  என்று  தம்  துணிபு  கூறுகின்றார் .

பதவுரை :-    நாணம்  இல்லா நாயினேன்  =  பழி பாவங்களுக்கு   நாணுதல்  இல்லாத   நாயின்  தன்மையுடைய  அடியேன் ,

பண்டு  போற்றும்  அடியார்  உள்  நின்று   =  முன்னர்  நின்னை  வழிபட்டு  நின்ற  மெய்யடியார்  குழுவின்  நடுவே  நின்று ,

தோள் நோக்கி நகுவேன்  =  என்  தோள்களின்  பணைப்பைப்  பார்த்து  இறுமாந்து  களித்தேன் ,

நின்னைக்  காண  நெகும்  அன்பு  இல்லை   =  நின்  திருவுருவைக்  கண்டு   இன்புறுதற்குரிய  குழைந்த  மெய்யன்பு   என்பால்  இல்லை ,

நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவனே   =    இந் நிலையில்  நீ  அடிமை  கொண்டு  திருவருள்  புரிதற்கு  அடிமையாகிய  யானும்  தகுதி  உடையன்  ஆவேனோ ,

எந்தாய்  தன்மை  என்  =   என்  தந்தையே  என்  இயல்பு  இருந்தவாறு  என்னே,

அந்தோ  தரியேன் :-    ஐயகோ  இவ்வுலக  வாழ்வில்  பொறுத்து  இரேன் ,

எனது நின்  பாதமே  புகுவேன்  =   எனக்குரிய  நின்  திருவடிக்கண்னே  அடைவேன்  என்பது .

விளக்கவுரை :-    இழிந்த  கருமம்   காரணமாக  நாணுதல்  நன்  மக்கள்  நாணம்  என்பதும் ,  பழி  பாவங்களுக்கு  நாணவேண்டும்  என்பதும்  அறநூல்  விதி .  “நாணாமை  நாடாமை”  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  ,  “நாணவேண்டுமவை  பழி  பாவங்கள் “  என்று  எழுதிய  உரைக்குறிப்பும்  காண்க.  ஈண்டு,  உண்மை  அன்பு  இல்லாமல்  மெய்யடியார்  குழுவில்  புகுந்ததும் ,  இறுமாந்து  களித்தும் பழிக்கத்தக்கன  ஆகவும் , அவை  குறித்து  நாணம்  கொள்ளாமையின் , அடிகள்  தம்மை  , “நாணமில்லா  நாயினேன்” என்றார் . நாண  வேண்டியதற்கு  நாணாமை  நேரின் ,  அந் நாண் கெடாமைப்பொருட்டு  உயிரை  நீத்தலும்  தக்கது  என்ப.  “நாணால்  உயிரைத் துறப்பர்  உயிர்ப்பொருட்டால் , நாண்  துறவார்  நாணாள்பவர்”  என்னும்  பொருள் உரையும் , “உயிரினுஞ்  சிறந்தன்று  நாணே”  என்னும்  சன்றோர்  கூற்றும்  ஈண்டு  நினைக்கத்தக்கன.  அங்ஙனம்  ஆகவும் , இங்கே  அடிகள்  நாணம்  இழந்தும்  செருக்கு  உற்று  வாழ்ந்திருக்கின்றேனே என்று  இரங்கிய  படியாம் .  

               “பண்டு  போற்றும்  அடியார்”  என்றது,  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அடிகளுக்கு  உபதேசித்த  காலத்து, அப் பெருமான்  பக்கலில்  சூழ்ந்து  வழிபாடு  செய்துகொண்டிருந்த மெய்யன்பரைக்  குறிக்கும் . சிறிதும்  அன்பு  இல்லாத  யான் ஒதுங்கி  நில்லாது, நாணம் இன்றி , அவ்வுண்மை  அடியார் குழுவில்  நடுவில்  நின்றேன்  என்பார்,  “போற்றும்  அடியார்  உண்ணின்று “  என்றார்.  ஆண்டவன்  எல்லோரும்  அறிய  ஆட்கொண்டனன்  ஆதலின், அஃது   அறிந்த  மெய்  யடியார்  தம்  குழுவில்  என்னை ஏற்றுக் கொண்டனர்  ஆயினும்,  அன்பு  இன்மை  அறிந்த  யான்  ஒதுங்கி  இருத்தலே  தக்கது  ஆம்  என்று  அடிகள்  கருதினர்  என்க . ஆண்டவன்  ஆட்கொண்டு  உபதேசித்த  அளவில் , சித்த  விருத்தியை அடக்கிப்  பணிசெய்தல்  ஒன்றையே  கடப்பாடாகக்  கொண்டு  ஒழுக  வேண்டியவனாகவும் ,  அங்ஙனம்  இன்றிப்பலரும்  அறிய  என்  பெருமையை  வெளிப்படுத்தி , என்  தோள்களின்  பூரிப்பை  யானே  கண்டு  இறுமாந்து  இருந்தேன்  என்பார் , “  தோள் நோக்கி  நகுவேன்”  என்றார்.  மெய்யறிவு  இல்லாத  மக்கள் ,  “இன்பத்தி  லிறுமாந்து  தோணோக்கி  யீன்றமத,  துன்பத்தில்  அழுந்துவார்  தொல்லுலகில்  அறியாதார் “  என்றபடி ,  இன்பம்  நுகரும் காலத்து  இறுமாந்து , தம்  தோள்  பணைப்பை  நோக்குதலும் ,  துன்பம்  நுகரும்  காலத்துக்  கன்றி  வாடுதலும்  இயல்பாகக்  கொள்ளுவர்  என்பது  உலகியலில்  அறியப்படுவது.  நகுதல்  = களித்தல்  .  இங்ஙனம்  கொள்ளாது  , “தோணோக்கி  நகுவேன்”  என்பதற்கு ,  ஆண்டவன்  திருத்தோள்களைக்  கண்டு  சிரிக்கும்  அவ்வளவே  உடையேன்  என்றும்  பொருள்  கூறினாரும்  உளர் .  அது பொருட்  சிறப்பு  இன்மை அறிக . 

                    யான்  உண்மை  அடியார்  குழுவில்  நடுநயகமாக  இருக்கும்  தகுதி  பெற்றேன்  என்று  இறுமாந்து  களித்தேனே  அன்றி ,  ஆண்டவனே , நின்னைக் காண்டற்கு  உரிய  குழைந்த  அன்பு  பெற்றிலேன்  என்பார் .”நெகும்  அன்பு  இல்லை  நினைக்காண “ என்றார்.  இறைவன்  அன்பர்  உள்ளம்  உருகிய  நிலையிற்  காட்சி  அளிப்பவன்  ஆவான்  என்பதை ,”நெக்கு  நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே,  புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்புண்ணியன்”  என்னும்  தமிழ் மறையானும்  உணரலாம் .  நின்னைக்  காண்டற்கே  என்பால்  அன்பு  இல்லையானால் , நின்  திருவடியைச்  சார்ந்து  இருத்தற்கு  யான்  எங்ஙனம்  தகுதி  உடையனாவேன் என்பது  அடிகள்  குறிப்பு  என்க .

                        அத்தகைய  மெய்யன்பு  இல்லாத  நிலையில் ,  நீ  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  என்பால்  எங்ஙனம்  அமையும்  எனவும் , ஆளாந்  தகுதியே  இல்லாதபொழுது , நின்  அருள்  பெறுதற்கு  எவ்வாறு  உரிமை  உடையனாவேன்  எனவும் , அடிகள்  அறிவித்துக்  கொள்ளுவாராய் , “நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவேனே “ என்றார் .  தகுவனே  என்புழி .  ஏகாரம்  எதிர்மறை  வினாப்பொருளில்   வந்தது. 

                         யான்  தகுதி யற்றவன்   ஆயினும் , நின்  புதல்வன்  என்பதை  மனக் கொளல்  வேண்டும்  என்பது  குறித்து  , “எந்தாய்”  எனவும்,  அன்பு  இல்லாதநிலையிலும்   ஆட்கொண்டு  அருளிய  நின்  உயர்ந்த  இயல்பை  நோக்க , என்  இழிந்த இயல்பு  இருந்தவாறு  வருந்தத்தக்கதென்பார் ,  “தன்மையென்”  எனவும்  கூறினர்.  அமரர் , முனிவரர்,  முதலியோரும்  பல்லாயிரம்  ஆண்டு  கடுந்தவம்  புரிந்தும் , காண்டற்கு  அரிய  ஆண்டவன்  எளிவந்து  காட்சி  அளிக்கவும் ,  காணப்பெறும்  பேறு  இல்லாத  நிலையில்  இவ்வுலக  வாழ்க்கை  எற்றிற்கு  என்பார்,  “அந்தோ  தரியேன்” என்றார் .  தரித்தல் = பொறுத்தல் , இவ்வுலக  வாழ்க்கையைப்  பொறேன் என்ற  அடிகள், முடிவில்   ஆண்டவனை நோக்கித்  துணிந்து  கூறியது  யாது  எனின் ,”எனது  நின் பாதமே  புகுவேன் “  என்பது.  யான்  தகுதி  இல்லாதவன்  ஆயினும் , நின்  கருணை  காரணமாக  என்னை  ஆட்கொண்டமையால் , நின்  திருவடி  எனக்கு  உரியதாகும் . உரிய  இடத்தை  அடைதற்கு  ஏதும்  தடை  இன்று  ஆதலின், அத் திருவடிக்கண்ணே  கூடுவேன்  என்பார் , “எனது  நின்  பாதமே  புகுவேன்” என்றார்.  “ஏனதே  நின்  பாதம்  “   என்புழி , ஏகாரத்தைப்  பிரித்துக்கூட்டுக .  துணிபொருளைப்  பாட்டின்  தொடக்கத்திற்   கூறியது,  உறுதி  இது  எனத்  தெளிவுறுத்தற்  பொருட்டு  என்க.  இதற்கு  முன்  உள்ள  திருப்பாட்டில்  ,  “எந்தா  யெங்குப்  புகுவேனே”  என்று  வருந்திக்  கூறியதற்கு  அமைதி  கூறியவாறு  இது.

                         இதன்கண்,  “புகுவேன்  எனதே  நின்பாதம் “  என்றதனால் , திருவடி  கூடுதலே  சிவாநுபவத்திற்கு  உரிய  தூய்மை  பயப்பது என்பது  பெறப்படுதலின் ,  அநுபோக சுத்தி  என்னும் பதிகம்  நுதலிய  பொருளும்  , “எந்தாய்  அந்தோ  தரியேனே “ என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  அறிக.     

7.    காருணியத்   திரங்கல்

         காருணியத்  திரங்கல்   என்பது  ஆண்டவன்  கருணையைக்  குறித்து  இரங்குதல்  என்னும்  பொருள்  உடையதாகும்,  சிவாநுபவ  நிமித்தம்  செய்து கொள்ளப்படும்  உயிர்த்தூய்மை  முன்னைப்  பதிகத்திற்  கூறப்பட்டது . பேரின்பப்  பிழம்பாகவும்  , தூய  ஞானச்  சுடர்  ஒளியாகவும்  உள்ள  இறைவனை  அநுபவித்தற்குத்  தடையாக  உள்ள  குற்றங்களைப்  போக்கி , சிவானந்தத் தேறலை  நிரப்பிக் கொள்ளுதற்குத்  தகுதியான  கொள்கலனாக  உயிர் இயல்பு  தூயதாயபின் ,வேண்டற்பாலது  சிவபெருமான்  திருவருள்  விளக்கமேயாகும்  .  பாசநீக்கத்தின்  பின்  சிவப்பேறு  உண்டாம்  என்பது சைவ  நூற் கொள்கை .  அச்  சிவப்பேறு  ஆனந்தத்து   அழுந்தல்  முதலிய  பிவரும்  மூன்று  பதிகங்களாலும்  தெளிவு  படுத்தப்பட்டுள்ளன .  அச்  சிவப்பேற்றுக்கு  முன்னரும் , பாச  நீக்கத்தின்  பின்னரும்   வேண்டற்பாலது  இறைவன்  திருவருட்  பதிவு  ஆகும்.  அவ்  அருளே  ஈண்டுக்  காருணியம்  என்று  குறிக்கப்பட்டுள்ளது.  அவ்  அருட்பேறு  கருதியே,  அடிகள்,  காத்து  அருள்க,  வணக்கம்  என்னும்  பொருளுடைய  போற்றி  என்னும்  அன்பு மொழியைப்  பாடல்  தோறும்  பலமுறை  கூறி  இறைவனை  வேண்டி  இரங்குவார்  ஆயினர். அடிகள்  இரங்கி  வேண்டிய  குறிப்பு  மொழிகள்  ஒவ்வொரு  திருப்பாட்டிலும் ,  அமைந்து  இருத்தலை  ஆங்கு  ஆங்குக்  காணலாம் . இதனாற்  பதிக  இயைபு  புலனாதல்  அறிக. 

அறுசீர்க்கழி  நெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் 61.

தரிக்கிலேன்  காய  வாழ்க்கை

சங்கரா  போற்றி  வான

விருத்தனே  போற்றி  எங்கள்

விடலையே  போற்றி  ஒப்பில்

ஒருத்தனே  போற்றி  உம்பர்

தம்பிரான்  போற்றி  தில்லை

நிருத்தனே  போற்றி  எங்கள்

நின்மலா  போற்றி  போற்றி

கருத்துரை :-     முன்னைப்  பதிகத்தின்  இறுதித்  திருப்பாட்டில் ,  யான்  தகுதியற்றவன்  ஆயினும் ,  என்னை  ஆட்கொண்டமையால்  எனக்கு  உரிய  நின்  திருவடிக்கண்ணே புகுவேன்  என்று  உறுதி  கூறிய  அடிகள் ,இத்  திருப்பாட்டில் ,  அங்ஙனம்  புகுதற்கு  தடையாக  உள்ள  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைச்  சிறிதும்  பொறேன்,  இதனை  ஒழித்து இன்பம்  நல்குக  என  இரங்கி  வேண்டுகின்றார் . 

பதவுரை :-   காய  வாழ்க்கை  தரிக்கிலேன்  =  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறேன் ,

சங்கரா  போற்றி  =  இன்பம்  செய்பவனே  காத்து  அருள்க ,

வானவிருத்தனே  போற்றி   =  நுண்ணிய  பரவெளியில்  விளங்கும்  முதியோனே  காத்து  அருள்க,

எங்கள் விடலையே  போற்றி      =   சிறியேம்  ஆகிய  எங்கள் திண்ணியோனே  காத்து  அருள்க,

ஒப்பு  இல்   ஒருத்தனே  போற்றி   =   ஒப்பற்ற   தனி  முதல்வனே  காத்து  அருள்க,

உம்பர்  தம்பிரான்  போற்றி   =  தேவர்  தலைவனே  காத்தருள்க ,

தில்லை  நிருத்தனே  போற்றி    =  தில்லை  நகரில்  அருள்  நடம்  புரியும்  கூத்தப்பெருமானே  காத்தருள்க ,

எங்கள்  நின்மலா  போற்றி  போற்றி     =  பாசப்பிணிப்பு  உடையேமாகிய  எங்கள்  தூயோனே  காத்து  அருள்க , என்பது.

விளக்கவுரை :-   சங்கரன்  =  இன்பம்  செய்பவன்  .  இறைவனை  இன்பம்  செய்பவன்  என்று  விளித்தமையால்  ,  காய  வாழ்க்கை  துன்பம்  செய்வதாகும்    என்பது  போதரும் .  துன்பம்  செய்வதாகிய  இவ்வுடலோடு  கூடிய  வாழ்க்கையை ,  “தினைத்  துணையேனும்  பொறேன்  என்றபடி , “தரிக்கிலேன்” என்றார் .  செயப்படுபொருள்  ஆகிய  காய  வாழ்க்கையைப்  பின்னும்,  முடிக்கும்  சொல்லாகிய  தரிக்கிலேன்  என்னும்  வினையை  முன்னும்  கூறினார் ; புழுக்கூடு  ஆகிய  உடலின்  அருவருப்பைப்  பொறாது  , அதனின்  நின்றும்  வெளிப்படவேண்டும்  என்னும்  ஆர்வமும்  விரைவும் குறிக்கொண்டு  என்க.  “சங்கரா போற்றி “  என்றதனால் , அவன்  காப்புப்  பேரின்பம்  செய்வதாகும்  என்பது  கருத்து ,  “போற்றி”  என்னும்  சொல் ,  வணக்கம்  என்னும்  பொருளும்  உடையது  ஆகும் . சிலப்பதிகாரத்தில் , “பொய்தீர்  காட்சிப்  புரையோய்  போற்றி” என்புழி , “போற்றி”  என்பதன் இகரத்தை  வியங்கோட்  பொருளாகக்  கொண்டு  , “போற்றுக”  என்று  அடியார்க்கு  நல்லார்  பொருள்  கூறியதும்  காண்க.  இறைவனை  விளித்துக்கூறிய  இடங்களிலெல்லாம்  , இரண்டு  பொருளும்  பொருந்தும்  ஆயினும்  ஈண்டுக்  காத்தருள்க  என்னும்  பொருள்  சிறந்ததாகும் .  ஏனையிடங்களில்  வணக்கம்  என்னும்  பொருள்  கொள்ளலாம். 

                 வானம்,  ஈண்டு  ஞானாகாயத்தை  உணர்த்தும் .  இதனை  வட  மொழியாளர்,  தகராகாசம்  எனவும் ,  அதன்கண்ணே  சிவபெருமானைக் கண்டு   வழிபடல்  தகரவித்தை  எனவும்  கூறுவர்  நுண்ணிய  ஞானப் பெருவெளியில்  விளங்கும்  பழமைபற்றி , “‘விருத்தனே”  என்றார்  .  இறைவனது  முதுமை ,  காலதத்துவத்தைக்  கடந்தது  ஆதலின்,  அளவிட்டு  அறிதற்கு  அரிது  என்ப,  திருத்தொண்டர்  புராணத்தில் , “மொய்த்துவளர்  பேரழகு  மூத்த  வடிவையோ ,  அத்தகைய  மூப்பெனும்  அதன்  படிவமோயோ, என்று  அம்  மூப்பு  வருணிக்கப்பட்டு  இருத்தல்  காண்க. சிறியேமாகிய  எங்களுக்கு , அம்  முதிய  நிலை  காண்டற்கு  அரியது  எனக்கொண்டு , காளைப்  பருவத்தன்  ஆய்  என்பார், “விடலையே”  என்றார். விடலை  என்னும்  சொல்  பதினாறு  முதல்  முப்பது  ஆண்டு  வரை  உள்ள  ஆண்மகனை  உணர்த்தும் ; யெளவன  பருவம்  உடையவன்  என்பது  மூப்பு , விடலை  முதலிய  பருவங்கள்  இறைவனுக்கும்  உளவாயின் , மக்களினின்றும்  இறைவனுக்கு  வேறுபாடு  என்னை  எனின் ,  பாலனாகி  விடலையாகிக்   கிழவனாதல்  மக்கள்  இயல்பு ;  இதற்கு  மாறாகக்  கிழவனாகிப்  பின்  காளையாய்க்  கிஞ்சுச்  செவ்வாய்  மழலை  ஆதல்  இறைவன்  திருவிளையாட்டு  என்க.  அம் முறயில், ஈண்டு  விருத்தனாகி  விடலை ஆயினான்  என்றார்.  இவ்  வேற்றுமையால்  இறைவன்  உருக்கோடல்  நம்மனோர்  நலம்  குறித்து  என்பது  போதரும். 

                    முதுமைப்  பருவம் , காளைப்பருவம்  முதலியவை  குறித்து,இறைவனை  மக்கள்  அளவில்  எண்ணிவிடல்  ஆகாது  என்பதை  மீண்டும்  வலயுறுத்தற்கு , “ஒப்பில்  ஒருத்தனே”  என்றார்,  மக்கள் ,தேவர்  முதலியோருள்  ஒப்பு  ஆவார்  யாரும்  இல்லை  என்பதோடு , தனி  முதல்வனும்  ஆவான்  என்பது  கருத்து. முதுமைப்  பருவமும்,  விடலைப்  பருவமும்  மக்களுக்கு  உரியன  ஆதலின் , ஒப்பில்  ஒருத்தன்  என்பது,  மக்களை  நோக்கக்  கொள்ளத்தக்கது;  தேவர்களுக்கு  எத்தகையன்  எனின் , அவர்க்கும்  தலைவன்  ஆவான் என்பார், “உம்பர்  தம்பிரான் “என்றார் . “விண்ணோர்  முழுமுதல்” என்பது  காண்க. 

                     தேவர்களுக்குத்  தலைவன்  ஆயினும் , அன்னார்  காண்டற்கு  அரியனாய் , மக்களுக்கு  எளியனாய்த்  தில்லை  நகர்க்கண்  எழுந்தருளி , ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும்  அருளாளன்  என்பது தோன்ற , “தில்லை  நிருத்தனே”  எனவும் , கூத்து  இயற்றல்  தற்பயன்  கருதி  அன்று ; உயிர்த்தொகுதிகள் கண்டு  உயர்தற்  பொருட்டு , என்பது  தோன்ற , “எங்கள்  நின்மலா” எனவும்  கூறினர் .  நின்மலன்  =  தற்பயன்  கருதுதல்  ஆகிய  அழுக்கு  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                        இத்  திருப்பாட்டில்  ஏழு  முறை   விளித்து , எட்டு  முறை  காத்து  அருள்க  என்றார் . ஆண்டவனை  அழைக்கும்  அளவினும்  தமக்குக்  காப்பு  வேண்டும்  அளவில்  ஆர்வம்  விஞ்சி  நிற்றலால்  என்க.

                          இதன்கண்,  சங்கரன்  முதலிய  சொற்களால்  விளித்து , போற்றி  என்று  பலமுறை  வேண்டிக்கொண்டமையின் ,  காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “தரிக்கிலேன்  காய  வாழ்க்கை  “ என்றதனால்  வைராக்கியமும் , போற்றுக  என்றமையால்  பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக . 

                                                   ***************************************

பாடல்  62.

போற்றியோ  நமச்சி  வாய

புயங்கனே  மயங்கு  கின்றேன்

போற்றியோ  நமச்சி  வாய

புகலிடம்  பிறிதொன்  றில்லை

போற்றியோ  நமச்சி  வாய

புறமெனைப்  போக்கல்  கண்டாய்

போற்றியோ   நமச்சி  வாய

சய சய  போற்றி  போற்றி .

கருத்துரை  :-      முன்னைத்  திருப்பாட்டில்   உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பெற்றேன்  என்ற  அடிகள் ,  இத்திருப்பாட்டில்   அவ்வுடலை  விட்டுச்  செல்லும்  இடம்  பிறிது  இன்று  ஆதலின் , புறத்தே  என்னைப்  போக்கல்  ஆகாது ;  நின்  திருவடிக்கண்ணே  இயைத்துக்  கொள்ளல்  வேண்டும்  என்று  இரங்கி  வேண்டுகின்றார் .

பதவுரை :-     ஓம்  நமச்சிவாய  போற்றி   = ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

புயங்கனே  மயங்குகின்றேன்  =   பாம்பை  அணிகலனாக  உடையவனே  மயங்குகின்றேன்

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம் நமச்சிவாயனே  காத்தருள்க,

புகலிடம்  பிறிது  ஒன்று  இல்லேன்  =  யான்  புகுதற்கு  உரிய  இடனாக  வேறு  ஒன்றும்  இல்லாதவன்  ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

என்னைப்  புறம்  போக்கல்  =  என்னைப்  புறத்தே  தள்ளிவிடலாகாது ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க ,

சய  சய   =  வெல்க  வெல்க

போற்றி  போற்றி   =  காத்தருள்க  காத்தருள்க   என்பது .

விளக்கவுரை :-  திருவைந்தெழுத்தை  நகாரம்  முதலாக  ஓதுதல்  மறைவழக்கும்  சிகாரம்  முதலாக  ஓதுதல்  ஆகமவழக்கும்  ஆம் . திருவாசகம், தமிழ்மறை    ஆதலின் , இதன்  தொடக்கத்திலே, “நமச்சிவாய  வாழ்க” என்று  கூறப்பட்டுள்ளது .  ஏனைய  மந்திரங்கள்  எல்லாம்  பிரணவத்தோடு  கூடியே  எண்ணப்படுவன  ஆம் . சிவபெருமானைப்பற்றிய  இத்  திருவைந்தெழுத்து  மந்திரம்,  பிரணவம்  இன்றியே  எண்ணப்படுவதாகும் ;  காரணம் , திருவைந்தெழுத்திற்கும்  பிரணவத்துக்கும்  வேறுபாடு  இன்மையாம்  என்க. பிரணவம்  ஆகிய  ஓம்  என்பதன்  விளக்கமே  திருவைந்தெழுத்து  என்பர்.  அவ்  விரண்டும்  முறையே  தொகையும்  விரியுமாகக்  கொள்ளப்படுவனவாம் .அம்  முறையே  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்டது  என்க .  “ஓம்  நமச்சிவாய  போற்றி”  என்பதற்குப்  பிரணவத்தின்  வேறுபாடு  இல்லாத  திருவைந்தெழுத்தின்  வாச்சியப்  பொருளாக  உள்ள  சிவபெருமானே  காத்தருள்க  என்பது  பொருள்  ஆகும் .  இத்  திருப்பாட்டின்  ஏனைய  மூன்று  அடிகளிலும்  உள்ள , “போற்றியோ நமச்சிவாய”  என்னும்  தொடர்கலுக்கும்  இவ்வாறே  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அடிகள்  தம்  திருமுறையில்  நகார  முதலாகக்  கூறினும் ,  ஞானாசிரியனாக  இறைவனிடத்துப்  பெற்ற  உபதேசம்  சிகார  முதலாக  என்பது ,  “நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நம  வெனப்  பெற்றேன் “  என்னும்  பாடற்  பகுதியால்   உணரலாம் .  இன்னும்  திருவைந்தெழுத்தின்  தூல  சூக்கும  காரண   முதலிய  நிலைகளும்  ,  நிற்குமுறை , ஓதுமுறை , முதலிய  இயல்களும்  பிறவும்,  திருமந்திர  முதலிய  நூல்களானும் , உபதேச  முறையாலும்   அறிந்து  தெளியத்தக்கன  .

                       புயங்கம்  =  பாம்பு .  நஞ்சு  காலும்  பாம்பை  அணிகலனாக  ஏற்றுக்கொண்டிருக்கும்  நீ ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்  ஆகாது ; என்  தகுதி  நின்னை  அணுகுதற்குப்  போதியது  ஆகாமைக்குக்  காரணம்  அறியாமல்  கலங்குகின்றேன்  என்பார் , “புயங்கனே  மயங்குகின்றேன்”எனவும்,  இம்  மயக்கத்தின்  தெளிவாக  வேற்றிடம்  செல்லலாம்  எனின் ,  என்னை  ஏற்று  கோடற்கு  உரிய  புகலிடம்  வேறு  யாதும்  இன்று  என்பார், “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”  எனவும் , அத்தகைய  ஓரிடத்தை  நின்னின்  வேறாக  அமைத்து , அதன்கட்  செல்லுக  என்று  கட்டளையிடல்   ஆகாது  என்பார் , “புறம்  எனைப்  போக்கல்”  எனவும்  கூறினர் .  போக்கல்  என்புழி  ,  அல்லீறு  எதிர்மறைபொருளில்  வந்தது  .  கண்டாய் என்பது  ,  முன்னிலை  அசைச்சொல் . 

                          புகலிடம்  பிறிதொன்று  இல்லேன்  எனவும், புறம்  எனைப்  போக்கல்  எனவும்  கூறியதால், “புகுவேன்  எனதே  நின்  பாதம் “  என்றபடி , எனக்குப்  புகலிடமாவது  என்னை  ஆட்கொண்ட  நின்  திருவடியே  ஆகும்  என்பதும் , அதன்  கண்ணே  புகுவேன்  என்பதும்  குறிப்பெச்சத்தாற்  கொள்ளத்   தக்கனவாம் .  “வெல்க  வெல்க ; காக்க  காக்க”  என்னும்  பொருள்  தோன்ற ,  “சய  சய  போற்றி  போற்றி  “ என்று  அடுக்காகக்  கூறப்பட்டன.  “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான்”  என்றபடி , இறைவனை  நோக்கிக்  கூறிய  வெற்றி  தமக்கு  உண்டாக  வேண்டுமென்பது  கருத்து .  ஈண்டு  அடிகள்  கருதிய  வெற்றி ,  “புகுவேன் எனதே  நின்பாதம்”  என்னும்  துணிவின்  பயன்  ஆகும் .  அடுக்கு , ஆர்வத்தால்  உண்டாய  விரைவு  தோன்ற  நின்றது . சிறந்த  தத்துவ   உண்மைகளைத்  தன்னுள்  அடக்கி  நிற்கும்   திருவைந்தெழுத்தைப்  பிரணவத்துடன்  பலமுறை  ஓதுதலால் ,  அழிவில்  இன்பப் பேறு  உண்டாம்  ஆதலின் ,  நான்கு  அடிகளினும்  நாநலம்  கனிய  ஓதுவார்  ஆயினர்.

                      இதன்கண்,  “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”,   “புறம்  என்னைப்  போக்கல்”  எனவும் ,  “மயங்குகின்றேன் “  எனவும்  கூறியவற்றால் , ஆண்டவன்  திருவருளை  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் ,  காருணியத் திரங்கள்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                       ***********************************************

பாடல் 63. 

போற்றியென்  போலும்  பொய்யர்

தம்மைஆட்  கொள்ளும்  வள்ளல்

போற்றிநின்  பாதம்  போற்றி

நாதனே  போற்றி  போற்றி

போற்றிநின்  கருணை  வெள்ளப்

புதுமதுப்  புவனம்  நீர்தீக்

காற்றிய  மானன்  வானம்

இருசுடர்க்  கடவு  ளானே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் ,  வேறு  புகல்  இடம்  இல்லாமல்  வருந்துகின்ற  என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  ஆகாது  என்று  ஆண்டவனை  நோக்கி  இரங்கிக்கூறிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில்  நின்  அகத்தே  என்னை  ஈர்த்து ,  அருள்  வெள்ளமாகிய  புதிய  தேனை  உண்பித்துப்  பாதுகாத்து  அருள  வேண்டும்  என்று  விண்ணப்பம்  செய்கிறார் .

பதவுரை  :-   என்போலும்  பொய்யர்  தம்மை  ஆட்கொள்ளும்  வள்ளல்  போற்றி=    என்னைப்  போன்ற  மெய்யன்பு  இல்லாரை  அடிமை  கொள்ளும்  வள்ளற்  பெருமானே  காத்தருள்க.

நின்  பாதம்  போற்றி  போற்றி  =   நின்  திருவடிக்கு  வணக்கம்  வணக்கம் ,

நாதனே  போற்றி  போற்றி   :-  எம்பெருமானே  காத்தருள்க  காத்தருள்க  ,

புவனம், நீர் , தீ , காற்று , வானம் இருசுடர்  இயமானன்  கடவுளானே  =

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விசும்பு ,  இரண்டு  ஒளி  மண்டிலங்களாகிய  கதிரவன் , திங்கள் , உயிர் , என்னும்  எண்வகைப்  பொருள்களையும்  திருமேனியாகக்  கொண்டு  மூர்த்திமானாக  விளங்கும்  கடவுளே ,

நின்  கருணைப்  புதுமது வெள்ளம்  போற்றி  =  நினது  அருளாகிய  புதிய  தேன்  வெள்ளம்  என்னைக்  காத்தருள்வதாக  என்பது. 

விளக்கவுரை  :-    . பொய்க்கு  வித்தாக  இவ்வுலக  வாழ்க்கையில்  என்னை  வைத்தாய்  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறுவர்  ஆதலின் , தம்மைப்  பொய்மையாளர்க்கு  உவமமாகக்  குறிப்பிட்டார்.  “உயர்ந்ததன் மேற்றே  யுள்ளுங்காலை  “  என்றபடி ,  உவமேயப்  பொருளினும்  உவமம்  உயர்ந்ததாக  இருத்தல்  வேண்டும்  என்பது  விதி .  அவ்விதிப்படி,  ஏனைப்  பொய்மையாளரினும்   தம்  தகுதி  உயர்ந்தது  எனக்  கருதி, “என்  போலும்  பொய்யர்”  என்றார் .  பொய்யர்  என்றது , அகத்தே  அன்பு  இன்றிப்  புறத்தே  அன்பு  உடையராக  நடிப்போரைக்  குறிக்கும் . “நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்து”  என்பது  அடிகள்  திருவாக்கு .  அத்தகைய  பொய்யரையும்  ஆட்கொள்ளுதலின்  , இறைவன்  வள்ளல்  எனப்பட்டான் .  கொடை  மடம்  பட்டு,  வரையாது  வழங்குவோன்  வள்ளல்  ஆவான் .  “முல்லைக்குத்  தேரும்  மயிலுக்குப்  போர்வையும்  “  வழங்கியது , வரையாது  வழங்கற்குச்  சான்றாம்  என்க . வரையாமையாவது  , தகுதி  உடையார் , தகுதி  இல்லார்  என்னும்  ஏற்றத்தாழ்வு  உணர்ந்து,  தகுதி  இல்லாரை  நீக்காமை,  மெய்யரையும்  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதினும்,  தகுதியில்லாரை  மாத்திரம்  குறிப்பிட்டுப்  பொய்யரை  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதே  சிறந்ததாகும் . என்னை ?  கொடை  மடம்  ஆகிய  வள்ளன்மையின்  முக்கிய  நோக்கம்  அதுவாதலின்  என்க.

                         “போற்றி  நின் பாதம்  போற்றி”  என்று  திருவடியை  நடுவண் அமைத்து ,  முன்னும்  பின்னம்  வணக்கம்  கூறியது ,  பொய்யர்க்கு  உவமமாகவுள்ள  தம்மையும்  அடிமை  கொண்டு  காட்சியளித்த  பேருதவி  கருதி  என்க.   திருவடிவாகிய  அவயவத்திற்கு  வணக்கம்  கூறி , அவயவியாகிய  இறைவனைக்  குறித்துக்  காப்பு  வேண்டுவார் ,  “நாதனே போற்றி  போற்றி “ என்றார் .  ஈண்டும்  அடுக்கு , ஆர்வம்  பற்றிய  விரைவுப்  பொருளில்  வந்தது. 

                            “புவனம்  நீர் ……இருசுடர்  “  என்பன,  செய்யுள்  இயல்பு  கருதி  முறை  பிறழ  வைக்கப்பட்டன.  ஐம்பெரும்பூதங்களும்  ,  கதிரவன்  ,  திங்கள்  என்னும்  ஒளி மண்டிலங்களும் ,  இயமானன்  எனப்படும்  உயிரும்  ஆகிய  இவ்  எண்வகைப்  பொருள்களும்  அல்லாமல் , காணப்படும்  இவ்வுலகம்  என்பது  பிறிது  இன்மையின் , இவ்வெல்லாவற்றையும்  திருமேனியாகக்  கொண்டு , இறைவன்  மூர்த்திமானாக  விளங்குவன்  என்று  மறை  ஆகமங்கள்  கூறும்.   இதனால்,  இறைவன்  எல்லாமாய்  விளங்குவன்  என்பதும் , “கடவுளானே “  என்றதனால்,  இவை  அல்லதுமாய்  உள்ளான்  என்பதும்  பெறப்படும்  என்க.

                                கடவுள்  என்பது , எல்லாவற்றையும்  கடந்து  இருப்போன்  என்னும்  பொருள்  உடையதாகும்.  இங்ஙனம்  ஆகிய  இறைவனது  அருட்குணமே  அன்பர்க்கு  இன்றியமையாத  பேரின்பப்  பயனை  விளைவிப்பதாகும்  ஆதலின் , குனிப்பொருளாகிய  இறைவனை  , அகண்ட  வடிவத்தில்  வைத்து  விளித்துக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டுவார்  ஆயினர் . இறைவன்  அருட்குணத்தை, “அருளாரமுதப்  பெருங்கடல் “  என்று  பிரிதோரிடத்துக்  கூறியபடி ,  ஈண்டு  இனிமை  மிக்க  பொருள்களுள்  சிறந்த  தேனாகக்  கொண்டும் ,உலகில்  சுவைத்து   அறிந்த  தேனைப்  போள்  இல்லாமல் , என்றும்  அறியாத  புதிய  சுவையுடைய  தேனாகக்  கண்டும்  , “கருணைப்  புது  மது “  என்றார்.  உலகப்பொருள்களுள்  இனிமை  மிக்கதற்கு  வேறு  உவமம்  இல்லாமையால் . தேனெனப்பட்டது  ஆயினும்  ,  “புல்லாகிப்  பூடாய்  “  என்றபடி  ,  தாம்  எடுத்த  பிறவிகளுள்  , எப்பிறவியினும்  அறியப் படாத  சுவையுடைமை  கருதிப்  புதுமை  அடை  புணர்க்கப்பட்டது  என்க.   பிறப்பு  அறும்  நிலையில்  சுவைக்கப்படுவது  ஆதலின்,  அது  புதுமது  ஆயிற்று  என்க.  அத்தகைய  புதுமது   வெள்ளப்பெருக்குக் கரை  புரண்டு  ஓடக்கூடும்  , கொள்வார்  அரியர்  ஆயினார்  என்பதும் ,  அவ்  வருமை  நோக்கியே  தம்மைப்  போன்ற  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல் ஆகினான்  இறைவன்  என்பதும்  குறிப்பு.

                     இதன்கண்,  “போற்றி  நின்  கருணை  வெள்ளப்  புதுமது”  என்றதனால் , ஆண்டவன்  கருணைக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் , காருணியத்திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                           ****************************************

பாடல்  64.

கடவுளே  போற்றி  யென்னைக்

கண்டுகொண்டருளு  போற்றி

விடவுளே  உருக்கி  யென்னை

ஆண்டிட  வேண்டும்  போற்றி

உடலிது  களைந்திட்  டொல்லை

உம்பர்தந்  தருளு  போற்றி

சடயுளே  கங்கை  வைத்த

சங்கரா  போற்றி  போற்றி.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனே ,  “நின்  கருணை  வெள்ளம்  ஆகிய  புதிய  தேனை  நுகர்வித்து  என்னைக்  காத்து  அருள வேண்டும்”   என்று  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள், இத் திருப்பாட்டில்,அதனை  உண்டற்கு  யான்  தகுதி  உடையனாக  அருட்பார்வை  நல்கியும் ,  அகப்  புறப்பற்றை ஒழித்தும்  அருள்  புரிய வேண்டும்  எங்கின்றார்.

பதவுரை  :-.   கடவுளே  போற்றி  =  எல்லாவற்றையும்  கடந்து  நிற்கும்  இறைவனே  காத்து  அருள்க ,

என்னைக்  கண்டு  கொண்டு  அருளு  போற்றி  =  அடியேனை  அருணோக்கம்  நல்கி  ஏற்றுக்கொண்டு  அருளுக,,வணக்கம்.

விட உள் உருக்கி  என்னை  ஆண்டிட வேண்டும்  போற்றி  =  புறப்பற்று  ஒழிய  என்  உள்ளத்தை  உருக்கி  அடியேனை  ஆட்கொள்ளல்  வேண்டும்  வணக்கம் ,

உடல்  இது  களைந்திட்டு   =    உடலாகிய  இவ்  அகப்பற்றையும்  ஒழித்து  , 

ஒல்லை  உம்பர்  தந்தருளு  போற்றி  =  விரைவில்  மேலாகிய  வீட்டு  இன்பத்தைத்  தந்து  அருளுவாயாக , வணக்கம் 

சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா  போற்றி  போற்றி   =   சடையின்  கண்ணே  கங்கையை  வைத்து  உலகைக்காத்து   அருளிய  சங்கரனே  வணக்கம்  வனக்கம்  என்பது.

விளக்கவுரை :-   மெய்யுணர்வினாலன்றி  ,  மக்களுடைய  மன  மொழி  மெய்களுக்கு  எட்டாதவன்  என்பது  தோன்ற  , “கடவுளே”  என்றார். இதனால்,  யான்  நின்னை  அறிந்து  அணுகும்  ஆற்றல்  இல்லாதவன்  என்பது  பெறப்படுதலின்  ,  நீயே  என்னை  அருட்பார்வை  நல்கி  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்  என்பார், “கண்டுகொண்டருளு”  என்றார்.  இறைவன்  அருணோக்கமே  நயன  தீக்கை  என்ப.   “அருணோக்கில்  தீர்த்த  நீராட்டிக்கொண்டாய்  “  என்பது  தமிழ்மறை .  யாரையும்,  எவற்றையும்  கடந்து  நிற்கும்  பொருளை , ஓர்  உயிர்  அணுகி  அறிதல்  அரிது  ஆதலின்,  அவ்விறைவனே  தன்  அருட்பார்வைக்கு  இலக்கு  ஆக்கித்  தூய்மைப்படுத்து  ஏற்றுக்கொள்வன்  என்பது  கருத்து. 

                            “விட”  என்பது, புறப்பற்று  ஒழிய  என்னும்  பொருளதாம்,  பின்னர்,  அகப்பற்றாகிய  உடல்  ஒழிவு  கூறப்படுதலின்  , ஈண்டு,  ஏனைய   புலநுகர்  பொருள்கள்    ஆகிய  புறப்பற்று  என்பது  வருவித்து  உரைக்கப்பட்டது.  தான்  அல்லாத  உடம்பை  யான்  என்றும்  ,  தன்னோடு  இயைபு  இல்லாத  பொருளை  எனது  என்றும்  கருதி ,  அவற்றின்கட்  பற்றுச் செய்தல் ,  முறையே  அகப்பற்றும் , புறப்பற்றும்  ஆகும்  என்ப.  யான்  வந்தேன்;  போனேன்  என்புழி, வருதல்  போதல் உடம்பின்  செயல்களாகவும் ,  அச்  செயல்களுக்கு  வினை  முதலாக  உயிர்  யான்  எனத்  தன்னைக்  குறித்தலான் , அஃது  அகப்பற்று  ஆயிற்று ,  “பிறப்  பறுக்கல்  உற்றார்க்கு  உடம்பும்  மிகை”  என்பது  பொருளுரை,  ஐம்புல நுகர்ச்சி  நிமித்தம்  படைக்கப்பட்ட  பொருள்    எல்லாம்  தன்னோடு  இயைபு   இல்லனவாகவும் ,  எனது  எனது  என்று  கருதிப்  பற்றுச்  செய்யப்படுதலின்,  அது  புறப்பற்று  ஆகும் . புறப்பற்று  , மனம் பொறிவழிச்  சென்று  புலநுகர்ச்சியில்  ஈடுபடுதலான்  உண்டாவது.  “அடல்  வேண்டும்  ஐந்தன்  புலத்தை” என்பது  திருக்குறள். ஆகவே,  புறப்பற்று  ஒழிவிற்குப்  பொறிவழிச்  செல்லும்  மனவலி  குறைய  வேண்டும்  என்பது  போதரும்.  இது  குறித்தே  , ஈண்டு , “உள்  உருக்கி “ என்றார்.  மனம்  வலிதாக  நின்று  புலன்  நுகர்விற்  செல்லாமைப்  பொருட்டு, அதனைக்  கரைத்து , அன்பு  மயம்  ஆக்கவேண்டும்  என்பது  கருத்து.  புறப்பற்று  எல்லாம்  ஒழிய ,  எனது  என்பதற்குப்  பொருலாக  உள்ளது.   “புகுவேன்  எனதே  நின்பாதம்”  என்று  அருளியபடி ,  தம்மை  ஆட்கொள்ளுதற்கு  உரிய  இறைவன்  திருவடியே  ஆம்  என்பார்,  “என்னை  ஆண்டிடவேண்டும் “  என்றார்.

                            புலநுகர்  பொருள்களில்  உள்ள  பற்று  ஒழிந்த  அளவில் , வீட்டின்பம்  பெற  இயலாதாகலின் , யான்  என்பதற்குப்  பொருளாக  உள்ள  உடலைப் பற்றிய  அகப் பற்றும்  ஒழிய  வேண்டும் என்பார் , “உடலிது  களைந்திட்டு” என்றார்.  இது  என்பது  அகப்பற்று  என்னும்  பொருட்டு.  இதனையும்  என்று  விரித்துக்  கொள்ளல்  வேண்டும் . உடலைப்பற்றிய  பற்று  ஒழிதற்கு , உடலையே  ஒழித்தல்  வேண்டும்  என்பது  அடிகள்  கருத்து.. “பிறப்பறுக்கல்  உற்றார்க்கு   உடம்பும்  மிகை”  என்புழி.  “இவ்வுடம்புகளால்  துன்பம்  இடயறாது  வருதலை  உணர்ந்து,  இவற்றானாய  கட்டினை  இறைப்பொழுதும்  பொறாது, வீட்டின்கண்ணே  விரைதலின் ,  உடம்பு  மிகை  என்றார்”  என்று  பரிமேலழகர்  எழுதிய  உரைப்பகுதியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .  “உம்பர்”  என்பது  மேலாகிய  வீட்டின்பத்தைக்  குறிப்பதாகும்.  “தினைத்  துணையேனும்  பொறேன் “  என்பதனால், அடிகள்  புழுக்கூடாகிய  ஊனுடலை  விட்டு  ஒழிப்பதற்கு  விரைகின்றார் என்பது  அறியப் படுதலின் , ஈண்டும்,  “ஒல்லை  உம்பர்  தந்தருளு”  என்றார்.

                             இத்  திருப்பாட்டின்  முதல்  அடியில் ,  நயன  தீக்கையால்  என்  உயிரைத்  தூய்மைப்படுத்து ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்வேண்டும்  எனவும்,   இரண்டாம்  அடியில் ,  புறப்பற்றை  ஒழித்து, வலிய  நெஞ்சை  உருக்கி  ஆட்கொள்ளல்  வேண்டும்  எனவும் , மூன்றாம்  அடியில் , அகப்பற்றையும்  ஒழித்து , வீட்டின்பம்  நல்க  வேண்டும்  எனவும்  அடிகள் கருதிக்  கூறியபடியாம்.   “யானென  தென்னுஞ்  செருக்கறுப்பான் , வானோர்க்கு  உயர்ந்த  உலகம்  புகும்”  என்பதும்  காண்க.  திருவள்ளுவ  தேவர் ,  உயர்ந்த  உலகம்  என்று  வீட்டு  நிலையைக்  கூறியபடியே,,  இத் திருப்பாட்டில்  “உம்பர்”  என்று  அருளிச்  செய்யப்பட்டது என்க .

                                 இறைவன்  தன்னைச்  சார்ந்தாரைத் துன்பம்  ஒழித்து  இன்புறுத்தும்  இயல்பினன்  என்பது  தோன்ற , “சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா” என்றார் .  வான்  யாற்றின்  பெருக்கால்  உலகத்திற்குக்  கேடு  நேராவாறு, தன்  சடையின்  ஒரு  கூற்றில்  அடக்கி  இன்புறுத்தினன்  என்பது  புராண கதை.  சங்கரன்  =  இன்பம்  செய்வோன் .  அங்ஙனமே  அகப்  புறப்  பற்றுக்களால்  ஆகிய  துன்பத்தை  ஒழித்து , விரைவில்  வீட்டின்பம்  அருளி , என்னைக்  காத்து  அருளல்  வேண்டுமென்ற  இறுதி  அடியில்  உள்ள  விளியாலும்  குறிப்பிட்டு  அருளினார்  என்பது , ஈரிடத்தும்  அருளுக  என்பவற்றின்  ஈறு  தொக்கு  நின்றன.

                              இதன்கண் , “உள்  உருக்கி  யென்னை  ஆண்டிடவேண்டும்  “ எனவும் , “ஒல்லை உம்பர்  தந்து  அருளுக”  எனவும்  ஆண்டவன்  கருணையை  வேண்டி  இரங்குதலின்,  “காருணியத்திரங்கல்” என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “உடலிது  களைந்திட்டு”  என்றதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக.

                                        *************************************************

பாடல்  65.

சங்கரா  போற்றி  மற்றோர்

சரணிலேன்  போற்றி  கோலப்

பெங்கரா  அல்குற்  செவ்வாய்

வெண்ணகைக்  கரிய  வாட்கண்

மங்கையோர்  பங்க  போற்றி

மால்விடை  யூர்தி  போற்றி

இங்கிவாழ்  வாற்ற  கில்லேன்

எம்பிரான்  இழித்திட்டேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  அகப் புறப் பற்றுக்களை  ஒழித்து,  விரைவில்  வீட்டின்பம்  அருளவேண்டும்  என்று  இரங்கி  வேண்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில் , அப் பற்றுக்கள  விளைதற்கு  உரிய  ஊனுடல்  வாழ்க்கையைப்  பெற்றேன் ; இழிவு  உடையதென  வெறுத்து  நிற்கின்றேன்  என்று  தம்  உள்ளக்  கருத்தை  வெளிப்படுத்துக்  கூறுகின்றார் .

பதவுரை :-     சங்கரா  போற்றி   = இன்பம்  செய்வோனே காத்தருள்க ,

ஓர்  சரண் மற்று  இல்லேன்  போற்றி  =  ஒரு  புகலிடம்  பிறிது  இல்லேன்  காத்தருள்க ,

பொங்கு அரா கோல  அல்குல் =  சினம்  மிக்க பாம்பின்  படம்  போன்ற  அழகிய  அல்குலையும் ,

செவ்வாய் வெள்நகை  கரியவாள்  கண்  =  சிவந்த  வாயினையும்  வெள்ளிய  பற்களையும்  கருமை  நிறம்  பொருந்திய  ஒளி  மிக்க  கண்ணினையும்  உடைய  ,

மங்கையோர்  பங்கா போற்றி  =  உமையம்மையாரை  ஒரு கூற்றில்  உடையனனே  காத்தருள்க ,

மால்விடை  ஊர்தி  போற்றி  =  திருமால்  ஆகிய  எருதினை  ஊர்தியாக  உடையவனே  காத்தருள்க ,

எம்பிரான்   =எங்கள்  தலைவனே  ,

இங்கு  இவ்  வாழ்வு  ஆற்றகில்லேன்  இழித்திட்டேன்  =  இவ்வுலகில்  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறுக்கமாட்டேன் ;  இகழ்ந்து  வெறுத்துளேன்  என்பது.

விளக்கவுரை :-   நின்னை  இன்பம்  செய்வோன்  என்று  அறிந்து  இருந்தும் , பிறிது  ஒரு  புகலிடம்  நாடுவேனோ?  நாடேன் ,  நாடினும்  , நின்னைப்  போல  அழிவில்லாத இன்பம்  பயக்கும்  ஒரு  தலைவனைப்  பெற  எங்ஙனம்  இயலும்? இயலாது  என்பார்  , “சங்கரா”  என  விளித்து  , “மற்றோர்  சரணிலேன்” என்றார். மற்றைத்  தேவர்  ,  முனிவர்  முதலிய  அனைவர்க்கும்  முடிவான  புகலிடமாக  உள்ளான்  சிவபெருமானே என்பதை  மறை யாகமங்கள்  ஆகிய  நூலறிவானும்  அநுபவவுணர்வானும்  அடிகள்  தெளிந்தவர்  ஆதலின்,  இங்ஙனம்  கூறினார்  என்க.

                           பொங்கல்   =  வெகுளல்  ,  பாம்பு.  சினமுற்றுச்  சீறும்  நிலையிலே  படம்  விரியும்  ஆதலின் ,  “பொங்கரா”  எனப்பட்டது.  அரா,  ஆகுபெயராக  நின்று  படத்தை  உணர்த்தும் .   “செவ்வாய்  வெண்ணகைக்  கரியவாட்கண்” என்பது  முரண் அணி  .  இதனால்  புன்முறுவல்  பூத்த  முகமும் , அருள்  ஒழுகும்  விழியும்  உடையவள்  உலக  அன்னையாகிய  உமையம்மை  என்பது  போதரும் ; தன்  மக்களாகிய  மெய்யன்பர்களை  இனிய  முகத்தோடு  வரவேற்றுக்  கருணை  பாலிப்பவள்  என்பது  கருத்து. 

                             அத்தகைய  அன்னை  உடனாய  அத்தனாக  விளங்கும்  நின்னை  அன்றி  வேறு  புகல்  இல்லேன்  என்பார் , “மங்கையோர்  பங்க”  என்றார். “மால்விடை யூர்தி “  என்றதனால் , திருமால்  முதலிய  தேவர்களும்  சிவ வழிபாடும்  சிவத்தொண்டும்  உடையவர்  ஆவர்  என்பதும் , அன்னாரையும் , சைவ  சீலம்  உடையார்  அம்  முறையில்   வெறாது  போற்றல் வேண்டும்  என்பதும்  போதரும்.

                              திருமால்  முதலிய  தேவர்களும்  தம்  பதங்களைச்  சிறந்தனவாக  எண்ணாமல்  நின்  தொண்டில்  ஈடுபடுவர்  ஆயின்,  சிறியேன்  ஆகிய  யான்  நிலையற்ற  இவ்வுலத்தில்  ஊனுடலோடு  கூடிய  இழிந்த  இவ்வாழ்க்கையை  எவ்வாறு  பொறுப்பேன்  என்பார்,  “இங்கு  இவ்வாழ்வு  ஆற்றகில்லேன்  “  எனவும்  , இவ்வாழ்க்கை  துன்பமிக்கது  என  அறிந்துளேன்  ஆதலின்,  வெறுத்து  இகழ்ந்தனன்  என்பார், “இழித்திட்டேன்  “   எனவும்  கூறினர்.  இவ் வாழ்வு  என்புழிச்  சுட்டு  இழிவு  தோன்ற  நின்றது.  இன்பம்  செய்யும்  பெருமானும்  ,  அருண்  மிக்க  பெருமாட்டியும் , என்றும்  பிரியாது, தம்  உயிர்க்குத்  தந்தையும் , தாயுமாகச்  சிறந்த  ஊர்தி  முதலிய  செல்வங்களுடன்  ஆதரிக்க  இருக்கும்  நிலையில் ,  அவர்களுடன்  கூடி வாழ்தலை  விட்டு  அழியும்  இயல்பினது  ஆகிய  இவ்வுடற்கு  உரிய  தாய் , தந்தையரோடு  எங்ஙனம்  வாழ்வேன் என்பார்,  “இங்கிவாழ்வாற்ற கில்லேன்”என்றார் எனினுமாம் .

                                 இதன்கண்,  “சங்கரா போற்றி  மற்றோர்  சரணிலேன் “   என்றதனால் ,  நீயே  புகலிடமாவாய்  என்பது  பெறப்படுதலின்  ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்திட்டேனே” என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        ***************************************

பாடல் 66.

இழித்தனன்  என்னை  யானே

எம்பிரான்  போற்றி  போற்றி

பழித்திலேன்  உன்னை  என்னை

ஆளுடைப்  பாதம்  போற்றி

பிழைத்தவை  பொறுக்கை  எல்லாம்

பெரியவர்  கடமை  போற்றி

ஒழித்திடிவ்  வாழ்வு  போற்றி

உம்பர்நாட்  டெம்பி  ரானே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் , இவ் வுலகத்து ,  இவ் வாழ்க்கையை  இழித்திட்டேன்  என்ற  அடிகள் , இவ் வாழ்வும்  கன்மத்திற்கு  ஈடாக  இறைவன்  தத்தது  அன்றே ,  இதனை  இழித்தற்கு  உரிய  சுதந்திரம்  தானும்  நமக்கு  ஏது?  என்று  அஞ்சினராய் , என்னை  யானே  இழித்தனன் ;  அதனால்  நின்னைப்  பழித்திலேன்;  ஆயினும்  , அவ்வளவிற்  சிறியேன்  செய்த  பிழையைப்  பொறுத்து  அருளி,  நீயே  இவ் வாழ்க்கையை  ஒழித்திடவேண்டும்  என்று,  இத் திருப்பாட்டில்  மீண்டும்  வேண்டுகின்றார்.

பதவுரை :- எம்பிரான்  போற்றி  போற்றி   =  எம்பெருமானே  வணக்கம்  வணக்கம்

யானே  என்னை  இழித்தனன்   =  யானே  அடியவனாகிய  என்னை  இழிவுபடுத்தல்  ஆனேன்

உன்னைப்  பழித்திலேன்   =  ஆண்டவனாகிய  நின்னை  இகழ்ந்திலேன்,

என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி  =  என்னை  ஆட்கொண்டருளிய  நின்  திருவடிக்கு  வணக்கம்,

பிழைத்தவை  எல்லாம்  பொறுக்கை  =  செய்த  குற்றங்கள்  அனைத்தையும்  பொறுத்து  அருளல்,

பெரியார்  கடமை  போற்றி   =  பெரியார்  ஆயினார்க்குக்  கடமையாகும்  வணக்கம் ,

உம்பர்  நாட்டு  எம்பிரானே போற்றி  =  மேலாகிய  சிவலோகத்துள்ள  எங்கள்  தலைவனே  வணக்கம்.,

இவ்  வாழ்வு  ஒழித்திடு  =  இவ்வூன் உடலோடு  கூடிய  வாழ்க்கையை  ஒழித்து  அருள்வாயாக  என்பது ,

விளக்கவுரை:-  என்  அன்பு  இன்மையை  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவன்  அறிந்திருந்தும்  ,  கருணை  காரணமாக  யாவரும்  அறிய  என்னை  ஆட்கொண்டு  பெருமைப்படுத்தினன்  ஆயினும் , என் இயல்பை  யான்  அறிந்தவன்  ஆதலின் ,  என்னை  யானே  கீழ்மைப்படுத்தல்  ஆனேன்  என்பார்,  “இழித்தனன்  என்னை  யானே”  என்றார்.  அடிகள்  தம்  இயல்பு  குறித்துத்  தம்மைக்  கீழ்ப்படுத்தனர்  ஆயினும் , அவரை  ஆண்டவன்  ஆட்கொண்டதை  எல்லோரும்  அறிந்து  உளர்  ஆதலின் ,  பிறர்  எல்லாம்  மேன்மைப்படுத்து   மதிக்கலானார்  என்பது  பெறப்படும் .  அகத்து  அன்பு  இன்மை  குறித்து , என்னை  யான்  இழித்தனன்  ஆயினும் ,  யான்  நின்  உடைமையாதலின், அவ்விழிவு  நின்  உடைமையைப்  பற்றி  நிற்றலின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும்  என்பாராய் , “எம்பிரான்  போற்றி , போற்றி”  என  வணக்கத்தை  அடுக்கிக்  கூறினர் . 

                       என்னை  இழித்துக்  கூறுமுகமாக ,   நின்னை  ஒரு  சிறிதும்  குறைவாகக்   கருதிலேன்  என்பார்,  “பழித்திலேன்  உன்னை” எனவும் ,என்னை  யாரும்  அறிய  ஆட்கொண்ட  திருவடியை  எப்பொழுதும்  நினைவு  கூர்ந்து   வணக்கம்  செலுத்தும் கடப்பாடு  உடையேன்  என்பார்,  “என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி”  எனவும்  கூறினர் .

                        இறைவன், அடிகளை ஆட்கொண்டது உண்மை.  இதனை அடிகளே  உணர்ந்து  பலவிடத்தும்  கூறியிருக்கின்றனர் .  ஆட்கொண்டு  உபதேசித்த  காலை , அடிகளுடைய  உடல், பொருள்,  ஆவி  மூன்றும்  ஞானாசிரியனாகிய  அப்  பெருமானுக்கு  உரிய வாயின.  “அன்றே  யென்றன்  ஆவியும்  உடலும்  உடமையெல்லாமும் , குன்றேயனையா  யென்னை  ஆட்கொண்ட  போதே  கொண்டிலையோ” என்று  அடிகள்  கூறுமற்றானும்  அறியலாம். அங்ஙனம்  இறைவன்  உடைமையாகிய  தம்மை  அடிகள்  இழித்துக்  கூறியதற்குக்  காரணம் , “நான் தனக்கன்பின்மை  நானுந்  தானும்  அறிவோம்” என்று  கூறியபடி , தம்  அகத்து  மெய்யன்பு  இல்லாமை  என்கிறார்.   அடிகள்,  “யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  “  என்றபடி,  உலகியலில்  வைத்து , அடிமை  நிலை  கருதி  அங்ஙனம்  கூறினார்  ஆயினும்,  அடிகளுடைய  அன்பு  அளவிட்டு  உரைக்க  இயலாதது  ஒன்று.  அன்புருவமாகிய  அருள்  உருவம்  எய்தினவர்  என்ப.  அவர்  ஒரு  காரணம்  கருதி , உலகியலில்  வைத்துப்  பலவிடத்தும்  தம்மை  இழித்துக்  கூறினர் ஆயினும்,  பின்னர்,  ஆண்டவன்  உடைமையைப்  பழித்த  பெரும்பிழை  செய்ததாக  முடியுமே  என  அஞ்சி , அது  பொறுக்கவேண்டுவார், “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றார். பொறுப்பவர்  பெரியவர்  என்றதனால் ,  பிழை  செய்தவர்  சிறியர்  என்பது  பெறப்படும் .  அடிகள்  செய்த  பிழை ,  இறைவன்  உடைமையாகிய  தம்மை  இழித்துக்  கூறியது  அன்றி ,  வேறு  இன்று  என்பது.  “செய்து  பிழையறியேன்  சேவடியே  கைதொழுதேன் “ என்பதனாலும்  அறியலாம் .

                       உம்பர்  நாடு  என்பது  மேல் உலகத்தைக்  குறிக்கும்.  எல்லா உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  என்பது  பொருள் ,  எல்லாஉலகங்களுக்கும்  தலைவனாகிய பொருமானே  தமக்கும்  தலைவன்  ஆனமை  பற்றி  உண்டாகிய  உவமையால் , “உம்பர்  நாட்டு  எம்பிரானே” என்றார். இவ்வூன்  உடல்  வாழ்க்கை ,  திருவடி  இன்பத்திற்குத்  தடையாக  இருத்தலான், இதனை  ஒழித்தற்கு ,  ஆக்கிய  நீயே  அதிகாரி  ஆவை  என்பார்,  “ஒழித்திடிவ் வாழ்வு”  என்றார்.

                                 ஆண்டவனே ,  யான்  என்  இயல்பு  குறித்து  என்னை  இழித்தனன்  அன்றி ,  அதன்  மூலம்  நின்னைப்  பழித்திலேன் ; பழித்ததாக  முடியுமாயின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும் ; மேலும்  என்  வேண்டுகோள்  இவ்  வாழ்க்கையை  ஒழித்தல் வேண்டும்  என்பது.  இதுவே  இத்  திருப்பாட்டின்  அடிகள்  புலப்படுத்திய  கருத்து  என்க.

                                 இதன்கண்,  “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றதனால் ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்தனன்  என்னை” ,  “ஒழித்திடு  இவ்  வாழ்வு”  என்பன  வைராக்கியத்தையும் ,  “என்னை  யாளுடைப்  பாதம்  போற்றி” என்பது பத்தியையும்  புலப்படுத்தலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  காண்க.

                                  *************************************************

பாடல்  67.

எம்பிரான்  போற்றி  வானத்

தவரவர்  ஏறு  போற்றி

கொம்பரார்  மருங்குல்  மங்கை

கூறவெண்  நீற  போற்றி

செம்பிரான்  போற்றி  தில்லைத்

திருச்சிற்றம்  பலவ  போற்றி

உம்பரா  போற்றி  என்னை

ஆளுடை  ஒருவ  போற்றி .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்  வாழ்க்கையை  ஒழித்திட  வேண்டுமென்று  வேண்டிய  அடிகள், இதன்  ஒழிவின்பின்  எய்தும்  பேறு  குறித்திலர்;  இத்  திருப்பாட்டில்  அப் பேறு  அளித்தற்குரிய  தகுதியுடைமை   பல்லாற்றானும்  நின்  கண்ணதே  என, ஆண்டவனுடைய  பெருமைக்  குணங்களை விளக்கிக்  கூறுகின்றார் . 

 பதவுரை :-   எம்பிரான்  போற்றி  =  எங்கள்  தலைவனே  காக்க ,

வானத்து  அவர்  அவர்  ஏறு  போற்றி  =  விண்ணுலகத்துள்ள  பதவிகளில்  இருக்கும்  அவ்வத்  தேவர்களுக்கும்  ஏறு  போல்பவனே  காக்க ,

கொம்பர் ஆர்  மருங்குல்  மங்கை  கூற   =  பூங்கொம்பு   போன்ற  இடயினையுடைய   உமையம்மையாரை ஒரு  கூற்றில்  உடையவனே ,

வெள்நீற  போற்றி  =  வெள்ளிய  திருநீற்றினையுடையாய்  காக்க,

செம்பிரான்  போற்றி   =  செம்மேனியையுடைய   பெருமானே  காக்க,

தில்லை  சிற்றம்பலவ  போற்றி  =   தில்லை  நகர்க்கண்  உள்ள  அழகிய  நுண்ணிய  ஞானப்பரவெளியில்  திகழ்பவனே  காக்க,

உம்பரா போற்றி  =  சிவலோகத்  தலைவனே  காக்க ,

என்னை  ஆள்  உடை  ஒருவ  போற்றி  =  சிறியேனாகிய  என்னை  ஆட்கொண்ட  தனி  முதல்வனே  காத்தருள்க  என்பது.

விளக்கவுரை  :-   அடிகள்  மக்கட்  பிறப்பினர்  ஆகலான் , அவர்  “எம்பிரான்” என்ற  அளவில் , இறைவன்  மக்களுக்குத்  தலைவன்  ஆவான் என்பது  பெறப்படும் .  அடுத்துத்  தேவர்  உலகங்களில்  உள்ள  இந்திரன் , பிரமன் ,முதலிய  பதங்களில்  உள்ளார்  எல்லோர்க்கும்  தனித்  தனியே  தலைவன்  ஆவான்  என்பது  தோன்ற , “வானத்தவரவ ரேறு”  என்றார் . ஏறு போல்வானை  ஏறு  என்றது  உபசார  வழக்கு .  மண்ணுலகும்  விண்ணுலகும்  கூறவே ,  ஏனைய  உலகும்  அடங்கும்  என்பது .  அங்ஙனம்  தலைவனாகிய  சிவபெருமான்  , “போகியாய்யிருந்துயிர்க்குப்   போகத்தை  புரிபவன்”  என்பது  தோன்ற , “மங்கை கூற “  என்றார் . கொம்பரார்  என்புழி , அர்  போலியீறு .  ஆர் உவமப்பொருட்டு  .  “வெண்ணீற”  என்று , யோகியாய்  யோகமுத்தி  உதவுதற்கு  உரிய  குறியீடு  கூறினர் . உமையொரு  கூறனாய  காலத்தும்  , திருவெண்ணீறு  பூசிய  திருமேனி உடையன்  ஆயினும்  , அதனோடு  சந்தனக்கலவை  முதலிய  மணப்பொருள்களும்  பூசப்படுவனவாம் . யோகநிலையில்  திருவெண்ணீறு  தனிச்  சிறப்பாகப்  பூசப்படுதலின் , “வெண்ணீற”  என்ற  விளி , யோக  நிலையைக்  குறிக்கும்  என்பது. 

                      மக்கள், தேவர் முதலியோர்க்குத்  தலைவனும் , போக  யோகங்களை  அளிப்பவனும்  ஆகிய   சிவபெருமான் , நம்மனோர்  பொருட்டுக்  கருணை  கூர்ந்து  திருமேனி கொள்ளுங்கால் , செந்நிறமான  திருமேனி  உடையன்  ஆவான்  என்பது  தோன்ற,  “செம்பிரான்”  என்றார்.  “சிவன்  எனும்  நாமம்  தனக்கே  உடைய    செம்மேனி  எம்மான்”  என்பது  தமிழ்மறை .  “ஈசற்கு  யான்  வைத்த” என்னும்  திருக்கோவைச்  செய்யுளில்  ,”பூசத்  திரு நீறென  வெளுத்து  “என்புழிச்  செம்மை  திருமேனியாற்  பெறப்படும்  என்று  பேராசிரியர்  கூறியதும் அறிக. 

                          அங்ஙனம்  கொண்ட  திருமேனிகளுள்,  ஆக்கல்   முதலிய ஐந்தொழிற்கும்  தலவன்  தானே  என்பதைப்  புலப்படுத்துத்  திகழ்வது  கூத்தப்  பெருமானாக  விளங்கும் நிலையே.  அத்  திருவுருவம்  தில்லைத்  திருச் சிற்றம்பலத்தில்  சிறந்து  திகழ்வது  என்பது  குறித்து , அதனையே  குறிப்பிட்டுள்ளார் .  தில்லை  –  நகர்ப்பெயர் ;  திருச்சிற்றம்பலம் –  கோயிற்  பெயர்.  இதனைச்  சிதம்பரம்  என்பர்  வடமொழியாளர் . சிதம்பரம்  என்பது      சித்  அம்பரம்  எனப்  பிரிக்கப்பட்டு , ஞானாகாசம்  , என்னும்  பொருள்  உடையதாகும் . தமிழில்  சிற்றம்பலம்  என்பதே  பண்டை  வழக்கு .  சிறுமை  அம்பலம்  என்று  பிரிக்கப்பட்டு ,  நுண்ணிய  ஞானப்பரவெளி  என்னும்  பொருள்  உடையதாகும் . வட  மொழி  மறை  முடிவில்  கேட்கப்படும்  தகராகாசம்  என்பதற்கு  நுண்ணிய  வெளி  என்பதே  பொருள்  .  “சிற்பர  வியோமம்  ஆகுந்  திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழார்  அடிகள் . “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது”  என்றபடி,   அப்  பெருமானுடைய  அசைவாகிய  திருக்கூத்தினாலே  அண்டங்கள்  எல்லாம்  சுழன்று  நிலைபெறுவன  என்பதும்,  உயிர்த்தொகுதிகள்  இயங்குகின்றன  என்பதும் ,  பிறவும் பெரியார்  கண்ட  உண்மைகள் . ஆங்குத்  திருக்கூத்து  இயற்றும்  நிகழ்ச்சியில் , இன்னும்  பல  அரிய  நுண்பொருள்கள்  உள்ளன  என்பர்  பெரியார். விரிப்பிற்  பெருகும். 

                    செம்மேனி  எம்மான் , நம்மனோர்  பொருட்டு ,  இம்  மண்ணுலகில்  இங்ஙனம்  எளிவந்து  காட்சி   அளித்தனன்  ஆயினும், அப் பெருமானுடைய  சிறப்பிடம்  எல்லா  உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  அல்லது  சிவபுரம்  என்பார்,  “உம்பரா  போற்றி” என்றார். “ உம்பரான்”  என்பதில்  ஆன்  விகுதியில்  உள்ள   ன  கரஈறு   விளிப்பொருளிற்  கெட்டது.  மேற்குறிப்பிட்ட  தலைமை  முதலிய  இலக்கணம் எல்லாம்  நிரம்பிய  ஓப்பற்ற  பரம்  பொருளே என்னை  ஆளாக்கிக்  கொண்டான்  என்னும்  உவகை  தோன்ற ,  ஈற்றில்  , “என்னை  ஆளுடை யொருவ”  என்றார் . ஒருவன்,  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                       இதன்கண்,  இறைவனுடைய  பலவகைப்  பெருமைக்  குணங்களையும்  எடுத்து  விளக்கிக்  காத்தருள்க  என்று  வேண்டினமையின் , காருணியத் திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                       **********************************************

பாடல்  68.

ஒருவனே  போற்றி  ஒப்பில்

அப்பனே  போற்றி  வானோர்

குருவனே  போற்றி  எங்கள்

கோமளக்  கொழுந்து  போற்றி

வருகவென்  றென்னை  நின்பால்

வாங்கிட  வேண்டும்  போற்றி

தருகநின்  பாதம்  போற்றி

தமியனேன்  தனிமை  தீர்த்தே .

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பர்க்குப்  பேரின்பம்  அளித்தற்கு  உரிய  தகுதி  பலவகையானும்  சிவபெருமானுக்கு  உண்டு  என்று  விளக்கிய  அடிகள்,  இவ் வூனுடலோடு  கூடிய  வாழ்க்கை  ஒழிவில்  தமக்கு  வேண்டிய  பேறு  திருவடிச்  சார்புபற்றிய  இன்பம்  ஆகும்  என்பதை  இத்  திருப்பாட்டில்  உணர்த்துகின்றார் .

பதவுரை :-    ஒருவனே  போற்றி  =  தனி  முதல்வனே  வணக்கம் ,

ஒப்பில்  அப்பனே  போற்றி  =     நிகரற்ற  என் தந்தையே  வணக்கம் ,

வானோர்  குருவனே  போற்றி   =  தேவர்களின்  ஞானாசிரியனே  வணக்கம்

எங்கள் கோமளக்கொழுந்து  போற்றி  =   அடியேங்களது  மெல்லிய  இளந்தளிரே  வணக்கம் ,

என்னை  நின்பால்  வருக  என்று  வாங்கிட  வேண்டும்  போற்றி  =  அடியேனை  நின்  பக்கலில்  வருக  என்று  கட்டளை  இட்டு  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்   வனக்கம் ,

தமியனேன்   தனிமை  தீர்த்து  =  உறுதுணையில்லாதேனைத்  தனிமை  ஒழித்து ,

நின்  பாதம்  தருக  போற்றி  =  நின்  திருவடியைத்  தந்து  அருளல்  வேண்டும்  வணக்கம் ,  என்பது. 

விளக்கவுரை  :-     இறைமை  இலக்கணம்  எல்லாவற்றினுஞ்  சிறந்தது ,  “ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும் “  என்றபடி  , ஒருவன்  ஆதலாம் .  இரண்டாம் அவனாக  மற்றொரு  தலைவனும்  உளன்  எனின்.  முழுமுதல்  தலைமை  இயல்  சிதைந்துவிடும்  என்க.   சிவனோடொக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை”   என்றபடி , மறையாகமங்களின்  ஆராய்ச்சியாலும் ,  அநுபவ  ஞானிகளின்  உபதேசத்தாலும்  சிவபெருமான்  ஒருவனே  கடவுள்  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பது  தெளியப்படும்  என்க. அத்தகைய  பரம் பொருளாகிய  நீயே  என்  தந்தை  ஆயினை  என்பார் ,  “ஒப்பில்  அப்பனே  என்றார் .  “ஒப்பில்”  என்னும்  அடயை  , “ஒருவன்”  என்பதனோடும்  கூட்டுக .  நிகரற்ற  தந்தை  என்றதனால் ,  தம்  பேரின்ப  வாழ்க்கைக்கு  வேண்டும்  செல்வங்களுள்  எதற்கும்  வேறு  யாரையும்  எதிர்  பார்க்க  வேண்டுவது  இல்லை  என்பது  அடிகள்  கருத்து  என்க.   உடற்காப்புச்செய்யும்  அவ்வளவில்  ஒழியும்  உலகியல்  தந்தை  போலாது   ஞானநெறியை  உபதேசித்து  , உயிர்க்காப்புச்செய்யும்  ஞானாசிரியனும்   ஆவான்  என்பது ,  “ஒப்பில்”  என்னும்  அடைமொழியால்  உணரத்தக்கது.

                        தம்  அளவினும் , ஏனை  மெய்யன்பராகிய  மக்கள்  அளவினும்  ஞானாசிரியன்  ஆவான்  என்பது  அன்றி , பக்குவ  முதிர்ந்த  தேவர்   முதலியோர்க்கும்  ஞான  குரு  ஆவான்  என்பது  தோன்ற  , “வானோர் குருவனே” என்றார்.  மெய்யன்பு  உடைய  அடியார்  குழுவை  உளப்படுத்து , “எங்கள்” என்றார் . கோமளம்  = மென்மை , கொழுந்து  என்பது,  செடி  கொடிகளின்  நுனியில்  உள்ள  தளிர்  ஆகும்.  மெய்யடியார்  கூட்டமாகிய  பூஞ்செடிகளின்  கொழுந்தாக  இறைவனைக்  கூறியது  ,  அச்  செடி  கொடிகளின்  வேர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளால்  உண்டாம்   மலர்ச்சியும்  வாட்டமும்  முதலிற்  கொழுந்திற்கு  உளவாதல்  போல மெய்யன்பர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளை  முதலில்  இறைவன்  தன்னுடையவாக   உணர்ந்து  கோடல்பற்றி  என்க.  வேர்க்கு  ஏற்படும்  தீங்கை  முதலிற்  கொழுந்தால்  உணர்ந்து , மற்றைப்  பகுதிகளுக்கு  அத்  தீங்கு  பற்றாமுன்  விரைந்து  பரிகரிக்கப்படுதல்  போல , மெய்யடியார்க்குப்  பண்டை  வினையால்  ஓரோவழிக்  கலக்கம்  நேரத்  தொடங்குங்கால் , அஃது  அவரைப்  பற்றா முன்னரே,  ஆண்டவன்  அறிந்து  பரிகரிப்பன்  என்பது  கருத்து, இறைவனே  கொழுந்தாகக்  கூறப்பட்டமையாலும்  , அவனின்  வேறாகப்  பரிகரிப்பான் ஒருவன்  இல்லாமையானும்  , ஈண்டு  அறிபவனும்  பரிகரிப்போனும்  அவனே  என்பது  அறியத் தக்கது.  இறைவனைக்  கோமளக்கொழுந்து  என்றது  ஏகதேசவுருவகம். 

                        மாயா  காரியமாகிய  தநு கரண புவன போகங்களில்  அகப்பட்டுத்  தவிக்கும்  என்னை , அவற்றினின்றும்  விடுவித்து ,  நின்  பக்கலில்  ஏற்றுக்கொள்ள  வேண்டுமென்பார் , “என்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்”  என்றார் .  அடிகள்  தமக்கு  மாயா  காரியங்களால்  ஏற்பட்ட  துன்பத்த, ஆண்டவன்  கோமளக்  கொழுந்தாக  இருந்து , அறிந்து  இருப்பான்  என்னும்  துணிவினால்,  “வருக”  என்று  இன்சொற்கூறி  அழைத்துக்கொள்ளல்  வேண்டும்  என்றார்  என்க.  துன்பத்தாற்  பற்றப்பட்டான்  ஒருவனைக்  காப்பாற்றப்  புகுவோன் ,  முதலில்  இன்சொற்  கூறிப்  பின்  செயல்   அளவில்  ஆதரித்தல்  உலகியலிற்  காணலாம் .  அவ்வாறே , ஈண்டு  “வருக” என்று  இன்சொற்  கூறிப்பின்  வாங்கிட  வேண்டும்  என்று  வேண்டுவார்  ஆயினர் .  துன்பச்  சேற்றிற்  பதிந்து  கிடப்பவனை ,  இன்சொற்  கூறிக்  கைதூக்கி  எடுத்தபின்  , அவன்  களைப்புத்தீர ,  வேண்டுவன  செய்து , நல்லிடன்  அளித்து  இன்புறுத்தல்  அருள்  வண்மையுடையார்  இயல்பு  ஆகும்  அன்றோ?  அங்ஙனமே , அடியேனைப்  பாசப்பிணிப்பினின்றும்  விடுத்தபின் , தனிமை  தீர்த்து, இன்பம்  நுகருமாறு  நின்  திருவடியை  அளித்தல்  வேண்டும்  என்பார், “தருக  நின்  பாதம்”  என்றார் .  இறைவன்  திருவடித்துணை  பெறுங்காறும்  பற்றுக்  கோடு  இல்லாதவன்  என்பார்., “தமியனேன் “எனவும் , அத்  திருவடிப்பேறு  ஒன்றே  பேரின்புறுத்துவது  அன்றித்  துணையாக  நின்று  அத்  தனிமையையும்  தீர்ப்பதாகும்  என்பார், “தனிமை  தீர்த்து”  எனவும்  அருளிச்செய்வார்  ஆயினர் .

                               இதன்கண்,  “ வருகவென்  றென்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்  ,”  “தருக  நின் பாதம்”  என்பவற்றால் இறைவன்  கருணை  குறித்து  வேண்டுதல்  பெறப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல் அறிக.

                                         ********************************************

பாடல்  69.

தீர்ந்தஅன்  பாய  அன்பர்க்

கவரினும்  அன்ப  போற்றி

பேர்ந்துமென்  பொய்மை  யாட்கொண்

டருளிடும்  பெருமை  போற்றி

வார்ந்தநஞ்  சயின்று  வானோர்க்

கமுதம்ஈ  வள்ளல்  போற்றி

ஆர்ந்தநின்  பாதம்  நாயேற்

கருளிட  வேண்டும்  போற்றி .

கருத்துரை:-     முன்னைத்  திருப்பாட்டில்  என்னை வருக  என்று  அழைத்து , நின்  திருவடியைத்  தரல்வேண்டும்  என்று  வேண்டிய  அடிகள், அங்ஙனம்  தருதற்குத்  தடையாகவுள்ள  குற்றம்  தம்பாலதாக , அதனைப்  பொறுத்து  நலம்  செய்தல்  நின்  இயல்பு   ஆம்  என  ஆண்டவனுடைய  பெருமை,  வண்மை  முதலிய  உயர்  குணங்களை இத்  திருப்பாட்டில்  வேண்டுகின்றார்.

பதவுரை:-   தீர்ந்த  அன்பாய  அன்பர்க்கு   =  முதிர்ந்த  மெய்யன்பு  வடிவமான  அடியார்க்கு ,

அவரினும்  அன்ப  போற்றி   =  அவர்  அளவினும்  மிகுதியான  அன்புடையவனே  வணக்கம்,

என்  பொய்மை  பேர்ந்தும்   =  சிறியேனது  போய்  ஒழுக்கத்தை ஒழித்தும்,

ஆட்கொண்டும்  =  என்னை  அடிமை  கொண்டும்,

அருளிடும்  பெருமை  போற்றி  =  அருள்  புரிந்த  பெருமைக்  குணம்  உடையோனே  வணக்கம் ,

வார்ந்த  நஞ்சு  அயின்று  =  பாற்  கடலில்  ஒழுகிப்  பரந்த  நஞ்சை  உண்டு

வானோர்க்கு  அமுதம்  ஈ  வள்ளல்  போற்றி   =  தேவர்க்கு  அமுதம்  கொடுத்து  அருளிய  வள்ளலே  வணக்கம் ,

ஆர்த்தநின் பாதம்  =  அழிவில்  இன்பம்  நிறைந்த  நின்  திவடியை  ,

நாயேற்கு  அருளிட  வேண்டும்  போற்றி   =  நாயின்  தன்மையுடைய   சிறியேனுக்குத்  தந்தருள  வேண்டும்  வணக்கம்  என்பது . 

விளக்கவுரை :-  தீர்ந்த  அன்பு  –  முதிர்ந்த தலையன்பு ;  கண்ணப்ப  நாயனார்  அன்பு  போல்வது.  அன்பாய  அன்பர்  என்றதனால்  அன்பைக்  குணமாகக்  கொண்டு ,  அதனை  உடைய  அன்பர்  குணிப்பொருளாக  இல்லாமல்,  முதிர்ந்த  அன்பாகிய  குணமே  உருக் கொண்டால்  ஒத்த  மெய்யடியார்  என்பது  போதரும் .  அத்தகைய  தலையன்பு  உடையார்க்கு  என  அடிகள்  படர்க்கையில்  வைத்துக்  கூறினும் , நம்மனோற்  கொள்ளற்பாலது  அதற்குத்தகும்  தகுதியுடையார்  அடிகளேயாவர்  என்பதாம் . ஆண்டவனுக்கு  மெய்யன்பர்  செய்யும்  தொண்டுகள்  வரலாற்றுமுகமாக  அறியப்படுவன . “அன்பர்க்கு  அவரினும்  அன்ப”  என்றதனால், அத்தகைய  பேரன்பாளர்க்கு  ஆண்டவன்  செய்த  பணிகளும்  பலவாகும் .  அதற்கும்  சான்றாக  அடிகள் வறலாற்று  நிகழ்ச்சிகளையே  கொள்ளலாம் .  “மண்  சுமந்து  கூலி  கொண்டு , புண்  சுமந்த  பொன்மேனி”  உடையன்  ஆனமையும் ,  பிறவும்  ஈண்டு  உணரத்தக்கன  , “பெயர்த்தும் “  என்பது  பேர்த்தும்  என்றாகி ,  எதுகை  நோக்கி  மெலிந்து  நின்றது .  என்  பொய்மையைப்  பெயர்த்தும்  என்றபடி , நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்த  என்  பொய் ஒழுக்கத்தை  ஒழித்தும்  என்பதாம்.  நோயினாற்  பற்றப்பட்ட  உடல்  உடையானுக்கு , அந்  நோய்  நீக்கம்  செய்தலே  பேருதவியாகும் . அவ்வளவன்றி , அவன் உடல்  வன்மையுடன்  நெடுங்காலம்  இருக்கும்படி  காய  கற்பமும்  ஈதல்  மிகப்  பேருதவி  ஆகும்  அன்றே? என்  பொய்  ஒழுக்கத்தை  ஒழித்ததோடு  அமையாது , தகுதியில்லாத  என்னை  யாவரும்  காண  ஆளாகவும்  கொண்டனையே  என்று  உள்ளம்  உருகிப்  பாராட்டுவார்,  “  ஆட்கொண்டு  “ என்றார்.  ஆட்கொண்டும்  என்புழி.  எண்ணும்மை  விகாரத்தால்  தொக்கது , “பொறுப்பர் அன்றே  பெரியோர் சிறு  நாய்கள் தம்  பொய்யினையே”  என்றபடி , பொய்மை  பொறுத்தலே  பெருமையாக  மேலும்  அதனைப்  பெயர்த்தும் ,  ஆட்கொண்டும்  அருள்  புரிதல்  எத்துனைப்  பெருமையாம் என்பது  நினைக்கத்  தக்கது . பெருமைக்  குணத்தின்  இலக்கணம்  இங்ஙனம்  ஆம்  என்பது .  இக்குறிப்புத்  தோன்றவே , “அருளிடும்  பெருமை” என்றார் .  பெருமை, ஆகுபெயராக  நின்று  , குணிப்  பொருளாகிய  ஆண்டவனை  உணர்த்தும் .

      வார்தல்  =  ஒழுகுதல் .  திருப்பாற்  கடல்  கடைந்த  ஞான்று ,  அமுதம்  தோன்றுதற்கு  முன்னரே  கடைகயிறாக  மேற்கொண்ட  பாம்பின்  வாயினின்றும்  நஞ்சு  ஒழுகி  யாண்டும்  பரவியதாக , அது  கண்டு  அஞ்சிய  தேவர்களைக்  காத்தற்பொருட்டு ,  அந் நஞ்சைத்  தான்  உண்டு , பின்னர்  தோன்றிய  அமுதத்தை    தேவர்  உண்ணக்  கொடுத்தனன்  என்பது  புராணக்கதை  .  இவ்  வரலாறு  நன்றே  சிவபெருமானுடைய  பேராற்றலையும்  பேரருளையும்  புலப்படுத்துவதாகும் .  உலகத்து  வள்ளல்  ஆவார் , தமக்குக்  கிடைத்த  அரிய  பொருளைப்  பிறர்க்கு  வழங்கும்  பெற்றியர்  ஆவர்  என்ப .  அதியமான்  நெடுமான் அஞ்சி  என்னும்  தமிழ்  நாட்டு   வள்ளல் ,  ஒளவைப்  பிராட்டிக்கு  நெல்லிக்கனி  ஈந்த  வரலாறு  இதற்குச்  சான்றாம்  என்பது,  உண்டாரைப்  பல்லாண்டு  வாழச்  செய்யும்  நெல்லிக்கனி  ஒன்று  அரிதிற்  கிடைத்ததாக ,  அதனைப்  பெற்ற  அதியமான் ,  தான்  உண்டு  நெடுங்காலம்  வாழ்தலினும் ,  சிறந்த  தமிழ்ப்  புலமை  சான்ற  ஒளவைப்  பிரட்டி  உண்டு , நீடு  வாழ்தல்  உலகத்தவர்க்குப்  பெரும்  பயன்  விளைப்பதாகும்  எனக்  கண்டு ,  அதனைப்  பாதுகாத்து  வைத்திருந்து , தன்பால்  ஒளவையார்  வந்ததும் , அந்  நெல்லிக்கனியின்  அருமையையும்  , அதனால்  விளையும்  பயனையும்  வெளிப்படுத்தாமல்  தன்  உள்ளே  அடக்கிக்  கொண்டு , அப்  பிராட்டிக்குக்  கொடுத்து  உண்ணச்  செய்தானாம்.  பின்னர், அதன்  அருமையையும்  பயனையும்  அறிந்து , ஒளவையார்  அவ்  வள்ளலைப்  பாராட்டி  வாழ்த்திய  பாடல்  அறிந்து  இன்புறத்தக்கது  .  அப்  பாடலில் , “நீலமணிமிடற்  றொருவன்  போல  மன்னுக  பெரும  நீயே…………சிறியிலை  நெல்லித் தீங்கனி  குறியாது,  ஆதல் நின்னகத்தடக்கிச்   சாதனீங்க எமக்கீந்தனையே “  என்னும்  பகுதி  மிகவும்  பாராட்டத்தக்கது.  தீங்கனி  குறியாது  என்பதற்குப்  பெறுதற்கு  அரிது  என்று  கருதாமல்  எனவும் , ஆதல்  நின்னகத் தடக்கி  என்பதற்கு  அதனால்  விளையும்  பயனை  எனக்குக்  கூறாமல்  நின்னுள்ளே  அடக்கி  எனவும்  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அருமையும்  பயனும்  உண்ணுதற்கு  முன்னரே  கூறினால் , ஒளவையார்  வாங்கி , அவ்  வள்ளல்  வாயிலே  செலுத்தி  விடுவார்  என்பது  கருத்து.  தன்  சாவைப்  பொருட்படுத்தாமல் , ஒளவை சாவாமையைக்  குறித்து  இங்ஙனம்  வழங்கிய  வள்ளலை  , அப்  பிராட்டி  வாழ்த்துங்கால் , சாதற்குக்  காரணமாகிய நஞ்சுண்டும்  இறைவன்  நிலைபெற்று  இருத்தற் போல , நீயும்  சாவாது  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்துத்  தோன்ற , “நீலமணி  மிடற் றொருவன்  போல மன்னுக பொரும”   என்றாராம் .  இந்  நிகழ்ச்சியில்  , அதியமான்  ,  நலம்  விளைப்பதை  ஒளவைக்கு  ஈந்தனன்  என்பதன்றிக்  கேடு  விளைப்ப  தொன்றைத்  தான்  உண்டான்  என்பதில்லை, இறைவன்  செய்தியில்  , ஒழுகிய  பெருநஞ்சைத்  தான்  உண்டு , தேவர்க்கு  அமுதம்  ஈந்தான்  என்பது  நினைக்கத்தக்கது .  “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ வொருவரும், உண்ணாத  நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய் “ என்பது  சிலப்பதிகாரம் .  இத்தகைய  பெருவண்மை ,  இறைவனிடத்து  அன்றி  மக்கள்பால்  எதிர்பார்க்கத்தக்கது அன்று.  வண்மைக்  குணத்தின்  முடிந்த எல்லை  இது  எனக்கொண்டு , “நஞ்சயின்று  அமுதமீவள்ளல்”  என்றார் .ஈ  வள்ளல் , வினைத்தொகை.  “பெயக்கண்டும்  நஞ்சுண்டமைவர்   நயத்தக்க , நாகரிகம்  வேண்டுபவர் “  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையில் , மக்களில் இந்  நிகழ்ச்சி  காணப்படாமையானும்  சிவபெருமான்  எல்லா  ஆற்றலும்  உடையன் ஆதலின் , அவர்க்கு  இஃது  எளிது ஆகலான், அச்சரித  நிகழ்ச்சியை  எடுத்துக்காட்டுதல்  வேண்டா  வென்னும்  கருத்தானும், வரலாற்றுப்  பகுதி எடுத்துக்  காட்டாது  ஒழிந்தனர்  போலும் .

       ஆர்தல்  –  நிறைதல் ;  சார்ந்தார்  எய்துதற்கு  உரிய  அழிவு இல்லாத  பேரின்ப  நிறைவைக்  குறிக்கும் .  நஞ்சுண்டு  அமுதம்  ஈந்த  வள்ளல்  ஆதலின், சிறியேன்  பிழைகள்  எல்லாவற்றையும்  அடக்கிப்  பேரின்ப  நிறைவாகிய  திருவடிகளைத்  தந்து  அருளுவை  என்னும்  துணிவு  மேற்கொண்டு  ,  வேண்டுவன்  என்பார் , “நாயேற்கு  ஆர்ந்த  நின்  பாதம்  அருளிட வேண்டும்”  என்றார் .  இழிந்த  நிலையில்  பல  குற்றங்களுக்கும்  ஆளானவன்  என்பது  தோன்ற , “நாயேற்கு”  எனவும் , நின்  வண்மைக்  குணத்தால் , அக்  குற்றங்களைக்  கருதாமல்  எனக்கு  அருளத்தக்கது பேரின்ப  நிறைவாகிய  திருவடி  இன்பம்  என்பார்,  “ஆர்ந்த  நின்  பாதம்  “ இத்  திருப்பாட்டின்  முதல்  அடிக்  கருத்து.  இரண்டாம்  அடியிற்  கூறப்பட்டதற்கும் , மூன்றாம்  அடிக்  கருத்து ,  நான்காம்  அடியிற்  கூறப்பட்டதற்கும்  ஏதுவாக  அமைந்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                     இதன்கண், என்  பொய்மை  ஒழித்து  என்னை  ஆண்டருள வேண்டுமெனவும் , நாயேற்கு  நின்  பாதம்  அருளிட  வேண்டும்  எனவும் , இறைவனை  நோக்கி  வேண்டுதல்  காணப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                ****************************************************

பாடல்  70.

போற்றியிப்  புவனம்  நீர்தீக்

காலொடு  வானம்  ஆனாய்

போற்றியெவ்  வுயிர்க்குந்  தோற்றம்

ஆகிநீ  தோற்ற  மில்லாய்

போற்றியெல்  லாவு  யிர்க்கும்

ஈறாயீ  றின்மை  யானாய்

போற்றியைம்  புலன்கள்  நின்னைப்

புணர்கிலாப்  புணர்க்கை  யானே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  மெய்யன்பர்  பொருட்டு  மேற்கொண்ட  அருள் , பெருமை , வண்மை  என்னும்  உயர்  குணங்களின்  சிறப்பைப்  பாராட்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  எல்லாமாய்த்  தோற்ற  வொடுக்கமின்றிப்  புலனறிவிற்கு எட்டாமல் நிற்கும்  அவ்  இறைவனுடைய  ஒப்புயர்வற்ற  தன்மைகளை  எடுத்துக்கூறிப்  பாராட்டுகின்றார் .

பதவுரை :-  இப்  புவனம்  நீர்  தீ  காலொடு  வானம்  ஆனாய்  போற்றி  = 

இந் நிலம்  நீர்  நெருப்புக்  காற்று  விண்  என்னும்  ஐம்பெரும்  பூதங்களும்  ஆயினய்  வணக்கம் ,

எவ்  உயிர்க்கும்  தோற்றம்  ஆகி  நீ  தோற்றம்  இல்லாய்  போற்றி  = 

எல்லா  உயிர்களும்  தோன்றுதற்குக்   காரணன்  ஆகி  நீ  ஒன்றில்  தோன்றுதல்  இலன்  ஆனாய்  வணக்கம்,

எல்லா  உயிர்க்கும்  ஈறாய்  ஈறு இன்மை  ஆனாய்  போற்றி   =

எல்லா  உயிர்களும்  ஒடுங்கும்  இடனாய்  நீ  ஒன்றில்  ஒடுங்குதல்  இலன்  ஆனாய்  வணக்கம் ,

ஐம்புலன்கள்  நின்னைப்  புணர்கிலாப்  புணர்க்கையானே  போற்றி   =

மனத்தோடு  இயைந்து  ஐம்பொறிகளும்  நின்னைச்  சார்தல்  இல்லாதபடி  சார்ந்திருப்பவனே  வணக்கம்  என்பது.

விளக்கவுரை  :-    நம்மாற்  காணப்படும்  இவ்வுலகம்  மண்ணுலகம்  ஆதலின், “இப்புவனம்”  என்று  முதலிற்  சுட்டிக் கூறப்பட்டது  .  முதலில்  நிலம்  கூறப்பட்டமையால் , ஒடுக்கமுறை  பற்றி , முறையே  புவனம் , நீர் , தீ , கால் , வானம்  என்றார் .  ஐம்பெரும்  பூதங்களும்  வெளிப்படக்  கூறப்பட்டமையால்,  தீயின்  கூறு  ஆகிய  ஞாயிறு  திங்களும், இங்ஙனம்  கூறுதற்கு  வினை  முதலாகிய  உயிரும்  ஆகிய  மூன்றும்  கொள்ளப்படும் என்க.  இவ்  வெண்வகைப்  பொருள்களும்  இறைவனுக்குத்  திருமேனியாகும்  என்பது.  இதனால் , இறைவன்  உலகெலாம்  ஆவானென்பது  பெறப்படும் .

                 உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  ஆதல்  பரம்பொருள்  இலக்கணங்களுட்  சிறந்ததொன்று  என  மறையாகமங்கள் கூறும் . ஆதலின்,  “எவ்வுயிர்க்கும்  தோற்றமாகிய “  என்றார் .  தோற்றம் , இலக்கணைச்  சொல்லாக  நின்று , காரணன்  ஆதலை  உணர்த்தும் , உயிர்களின்  பிறப்பிற்கு  மாயையினின்றும்  உடல்  முதலியன  கிடைப்பதால், மாயை  காரணம்  ஆகாதோ எனின் ,  மாயை  தனக்கு  ஆதாரமாக  உள்ள  சிவசத்தியின்கண் நின்று  , அச்  சத்தி  இயக்கிய  வழியே  அவ்வக்காரியங்களைப்  பயக்கும்  ஆற்றல்  உடையதாகும்  ஆதலின்,  மாயா  காரியமாகிய  உலகம்  சிவ சத்தியினின்றும் தோன்றியதேயாம் என்ப. அதனால், உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  சிவபெருமானே யன்றி மாயை  உண்மைக் காரணன்  ஆகாது என்க.   இவ்வுண்மையை, “வித்துண்டா  மூல முளைத்த வாதாரகமாம்” என்னும் சிவஞான  போத  வெண்பாவின் பேருரையில் , சிவஞான  முனிவர்  விளக்கி  உரைத்தமை  யானும்  உணர்க .  உலக  ஒடுக்கத்திற்கும்  இவ்வாறே  கொள்க. “ஏல்லா உயிர்க்கும்  ஈறாய்  ஈறின்மையானாய்  “ என்றது.  எல்லா  உயிர்களும்  ஒடுங்குதற்கு  முடிவு  இடனாக வுள்ளவன்  மகாருத்திரனாகிய  பரமசிவனே என்ப.  “அந்தமதி “ என்புழி  , அந்தத்தைச்செய்யும்  மகா சங்கார காரணன் பமசிவனே என்பது  தெளிவிக்கப்பட்டமை  அறிக.  எல்லாம்  முடிவில்  தன்பால்   ஒடுங்கத்  தான்  ஒன்றினும்  ஒடுங்குதல்  இன்றி , அழிவில்  பொருளாகத்  திகழ்பவன்  சிவபெருமானே யாவான்  என்பது , “ஓதத்தொலிமடங்கி  …… வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  தமிழ்  மறையனும்  அறிக.  உலகம்  எல்லாம்  தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும்  காரணன்  ஆகி , தான்  தோன்றுதலும்  ஒடுங்குதலும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவன் என்னும்  இவ் இயல்பால், இறைவன் உலகில்  வேறு ஆவான்  என்பது  பெறப்படும் என்க.

                 புலன்கள் என்பது  ஈண்டு  வாயிலாகவுள்ள  பொறிகளை  உணர்த்தும். மனம், பொறி வழிச்சென்று நுகரும் புலன்கள் எல்லாம் சடப்பொருள்களைப்  பற்றின ஆதலானும் , ஞான  வடிவமாகிய இறைவன் மெய்யுணர்வினால்  அன்றி  அற்யப்படாதவன்  ஆதலானும், ஐம்பொறிகளுக்கும்  எட்டாத  நிலையினன்  என்பது தோன்ற , “ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலா” என்றார்.  ஐம்பொறிகளும் இறைவனைப் பற்றாவாயினும் , வினைக்கு ஈடாகப் பிறந்த உயிர்கள் எல்லாம் அவ்வினைப் பயன்களை நுகர்ந்து , வினை யொழிவு பெற்று நலம் அடைய வேண்டும் என்னும் கருணை காரணமாக, இறைவன் ,அவ்வுயுர்கள் கன்மப் பயன்களை அநுபவிக்குங்கால் , அவற்றோடு உடனாக  நின்று உதவி புரிவன் என்னும் உண்மை தோன்ற, அவ் ஐம்பொறிகளோடு சார்ந்திருப்பன் என்பார் . “புணர்க்கையானே” என்றார். ஐம்பொறிகளும் ஆண்டவனைப் பற்றா, ஆண்டவன் அவ் ஐம்பொறிகளையும் சார்ந்து நிற்பன் என்பது  கருத்து. ஐம்பொறிகளால் பற்றப்படுவான் ஆயின் , மீள முடியாத நிலை ஏற்படும் . உயிர்களுக்கு  உபகரித்தல் கருதி, இறைவன் புணர்ந்து இருப்பான் ஆயின், வினைஒழிவின்பின், தானும் அவற்றைவிட்டு , அவ்வுயிரையும் விடுவித்துத் தன் திருவடி இன்பத்தில் இயைப்பன் என்பது கருத்து. இதனால், ஆண்டவன்  உலகத்தோடு  உடனாதல் பெறப்படும் என்க. இங்ஙனம்  இறைவனுக்கும்  உலக  உயிர்களுக்கும் உள்ள  இயைபு  “எட்டுத்  திசைதானாய் வேறாயுடன் ஆனான் இடம் வீழிம் மிழாலையே” என்று தமிழ்மறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய் “ என்று ஆகமமுடிவும் கூறியபடி, உலகெலாம் ஆதல், வேறாதல், உடனாதல் என்னும்  முத்திறப்படுத்து உரைக்கப்படும் என்பது. இம் முத்திறமும் இத் திருப்பாட்டின் முதல்  அடியிலும் , இரண்டாம், மூன்றாம் அடிகளிலும் ,நன்காம் அடியிலும் அமைந்து  இருத்தல் அறிந்து இன்புறத்தக்கது .

                   இதன்கண், உலகெலாமாகி, வேறா யுடனுமாய் விளங்கும் இறைவனை ஐம்புலன்களாலும் பற்றப்படாதவன் என்று கூறியிருத்தலின், ஐம்புலன் அளவில் அன்றி, மேற்சொல்லாத சிறியேனைக் கருணை காட்டி ஆட்கொள்ளல் வேண்டும் என்று இரங்கிக்  கூறியது பெறப்படுதலின், காருணியத்திரங்கல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                   **************************************************

8.   ஆனந்தத் தழுந்தல்

 னந்தத்து அழுந்தல் என்பது இன்பத்தில் அழுந்தி நிற்றல் என்னும் பொருளதாம். இன்பம், ஈண்டு அழிவில் இன்பம் ஆகிய பேரின்பம் ஆகும். உடல் அளவில் உயிர் நுகரும் இன்பம் ஐம்பொறிகளின் வாயிலாக அநுபவிக்கப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தும் ஆம் . பொறிவழி மனம் சென்று , ஒரு புலனை அறியுங்கால் , பொது முறையில் இல்லாமல், சிறப்பு முறையில் அறிதல் அநுபவம் ஆகும். அநுபவம் என்பது அழுந்தி அறிதல் ஆகும் என்ப. எடுத்துக்காட்டாக ஒன்றை நினையலாம் . நாவாகிய பொறியால் , ஒரு பழத்தைச் சுவைக்குங்கால், இன்ன இயல்பினது என்று அழுந்தி அறியின் அஃது அனுபவம் ஆகும்.

     பொறிவழி அநுபவிக்கப்படும் இன்பங்கள் எல்லாம் விரைவில் அழியும் இயல்பினவாம் . மேலும், அவ்வின்பங்கள் அளவில் மிகும் ஆயின், கேடு விளைவிக்கவும் கூடும் . ஈண்டு, அடிகள் இன்பம் எனக் கண்டது, பொறிகளின் வாயிலாக இன்றி, மெய்யுணர்வின் வாயிலாக நுகரத்தக்க சிவானந்தம் ஆகிய அழிவில் இன்பத்தையே யாம். “உணர்வினேர் பெற வருஞ் சிவபோகம்”என்பர் சேக்கிழார். இவ் இன்பத்தையே அடிகள் ,”உலப்பிலா ஆனந்தம் “ எனவும் , “அந்தமொன்றில்லா ஆனந்தம்” எனவும் கூறுவர் , மாயா காரியமாகிய உலகப் பொருட் காட்சி  ஒழிந்து, பேரின்ப வடிவமான சிவக் காட்சியில் தலைப்படுவோர்க்கே இவ் வின்பம் புலன் ஆம் என்பது . பாசப்பிணிப்பிற் சிக்குண்டு கிடக்கும்  உயிர் , பண்டை  நல்வினை வயத்தால் அப் பிணிப்பினின்றும் விடுதலை பெற வேண்டுமென்னும் முயற்சி மேற்கொண்டு, அதற்குரிய தவத்தில் தலைப்பட்டு, மன மொழி மெய்களைத் தூயனவாக்கிக் கொள்ளல் வேண்டும். அத் தூய்மை நெஞ்சத்தால் இறைவனை இடயறாது நினைதலானும்,மொழியால் அவன் புகழைப் பாராட்டுதலானும், காயத்தால் வழிபாடு செய்தலானும் உண்டாவதாகும். அத் தூய்மை விளக்கம் மேற்பட மேற்பட  , மல இருள் நீங்கி மெய்யுணர்வு கைகூடும் . அவ்வுணர்வு  முதிர்ச்சியிலே, பொறி புலன்களின் நுகர்வு சுருங்கிச் சிவானந்த விளைவு உண்டாம் . அவ் இன்பத்தில் சிறிது தலைப்பட நேருமாயினும் , அது கிடைத்தற்கு அரியது எனக் கண்டு , மேன்மேலும் அச்சாதனங்களையே நழுவவிடாமல் பற்றி , அவ் இன்பப் பதிவில் ஆர்வம் வைத்து ஒழுகல் வேண்டும் என்பது இப் பதிகம் நுதலிய பொருளாம் . இவ் இன்ப நுகர்வின் பொருட்டு , உயிரைத்  தூய்மைப் படுத்துக் கொண்டு, ஆண்டவன் கருணை குறித்து இரங்கிய செய்தி முன்னைப்பதிகத்திற் கூறப்பட்டது.  அக் கருணையின்  பயனாகவுள்ள சிவானந்த விளைவில் திளைத்தல் இதன்கட்  கூறப்படுதலால் , பதிக இயைபு உண்மை புலனாதல் அறிக.

எழுசீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்

பாடல் 71.

புணர்ப்ப  தொக்க  எந்தை  யென்னை

யாண்டு  பூண  நோக்கினாய்

புணர்ப்  பதன்றி  தென்றபோது

நின்னொ  டென்னோ  டென்னிதாம்

புணர்ப்ப  தாக  அன்றி  தாக

அன்பு  நின்க  ழற்கணே

புணர்ப்ப  தாக  அங்க  ணாள

புங்க  மான  போகமே.

கருத்துரை :-    முன்னைப்  பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் உலகு எலாம் ஆகி , வேறாய்  உடனுமாய்  நிற்கும் இறைவனுடைய ஒப்பு உயர்வு அற்ற தன்மைகளை எடுத்துப் பாராட்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அப் பெருந்தகை ஆகிய நீ என்னை ஆட்கொண்டும், சாத்தியமாகிய நின் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளக் கால இடையறவுதடை ஆம் ஆயின் , சாதனமாகிய மெய்யன்பே வேண்டும் என்று இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  எந்தை  =  என் தந்தையே ,

புணர்ப்பது ஒக்க =  நின்  திருவருட்  பேற்றில் என்னை  இயைவிப்பதாகிய  காலம்  பொருந்துவதாக,

என்னை  ஆண்டு  பூண நோக்கினாய்  =  அடியேனை  ஆட்கொண்டு  யான் அடிமைத்தன்மையை மேற்கொள்ளுமாறு  அருள் நோக்க செய்தாய் ,

நின்னொடு  என்னொடு இது புணர்ப்பது அன்று என்ற போது =  பின்னர்  உன்னை என்னோடு இக்காலம் இயைவிப்பது அன்று என்று நீ திருவுளங்கொண்டு புறக்கணித்த பொழுது ,

இது என் ஆம்  =  இதுகுறித்து யான் செய்யத்தக்கது யாது ஆம் ?,

இது புணர்ப்பதாக அன்றாக   =  இக் காலம்  நின்னோடு என்னை  இயைவிப்பதாக  அல்லதாக,

அங்கணாள  = அழகிய  கண்ணோட்டம் உடையவனே ,

நின் கழற்கண்  அன்பே   = நின் திருவடிக்கண் உள்ள மெய்யன்பே

புங்கம் ஆன போகம் புணர்ப்பதாக =உயர்ந்ததாகிய  சிவானந்தத்தை விளைவிப்பதாக  என்பது.

விளக்கவுரை :-   இறைவனது  பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை அநுபவித்தற்கு  உரிய  மைந்தன் எனத்  தம்மைக் கண்டு , “எந்தையே” என்று விளித்தார் . அடிகள் திருப்பெருந்துறை சென்ற பொழுது , அவர் பாசக்கட்டினின்று  விடுதலை பெறுதற்கு உரிய கால எல்லையை எதிர்பார்த்து, இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த மரத்து நீழலில்  எழுந்தருளி இருந்தான் என்று கூறுவர் வரலாற்று  ஆசிரியர் .  “பந்தம் அறும் எல்லையது பார்த்தினிதிருந்தான் “ என்பது காண்க .

       பண்டைப் பிறப்புகள் பலவற்றினும் செய்து போந்த அரிய தவத்தின் பயனாக, ஞானாசிரியனாக எழுந்தருளியிருந்த அவ் விறைவன் அருட் பார்வைக்கு இலக்காகும் காலம் தமக்கு வாய்த்தது என்பார், “புணர்ப்பது ஒக்க “ என்றார்.  புணர்ப்பது –  கூட்டுவிப்பது; அது காலத்தக் குறிக்கும் . ஆண்டவன் அருட் பார்வைக்குத் தம்மை இலக்காக்கிய அரிய அந் நற்காலத்தையே கடவுள் தன்மை  வாய்ந்தது எனக்கொண்டு , இறைவனை காலதத்துவத்தில் வைத்து , “ஞாலமே விசும்பே இவை  வந்து போம், காலமே உனைஎன்று கொல் காண்பதே” என்று போற்றி இருத்தலும் அறிக. “ஒக்க” என்பதற்கு , அந் நற்காலம் வந்து பொருந்தியதாக என்பது பொருள். ஆண்டு பூண நோக்கினாய்” என்றார் ஆயினும் , அருணோக்கம் முன்னரும் , ஆட்கோடல் பின்னரும் நிகழ்வன   ஆதலின் , நோக்கியாட்கொண்டாய் என்பதே கருத்தாகக்  கொள்க. பின்னர், “அங்கணாள” என்பதற்கேற்ப , “நோக்கினாய் “ என்றார். நோக்குதல் நயன தீக்கை ஆகும் . ஆண்டவனது அருட்பார்வையே ஆன்மாக்களின் மல இருளைக் கெடுத்துத் தூய்மைப்படுத்துவதாகிய கருவியாகும் என்ப.  “கண்ணால் நோக்கிக்  கண்ணப்பர் பணியுங்கொள் கபலியாரே” என்பது தமிழ்மறை. நோக்கிய பின்னரே பணிகோடல் என்பது ஈண்டும் அறியத்தக்கது.  நயன தீக்கையால், அடிகள் நல்லுயுரைத் தூய்மைப்படுத்து , இறைவன் பணிகொண்டனன் ஆக, அப்பணியே சிறந்த அணிகலனாக அடிகள் பூண்டனர் என்பது ,”பூண”என்னும் சொல்லால் அறியலாம். “பூண நோக்கினாய்” என்புழி, பூண என்னும் செயவென் எச்சம் காரியப் பொருட்டு; அருணோக்கு ஆகிய காரணத்தால்  நிகழ்வது பணிபூணுதல் ஆதலின் என்க.

            இறைவன் அருணோக்கால் அடிகளை  ஆட்கொண்ட பின்னர், தினைத்துணைக் காலமும் காய வாழ்க்கையைப் பொறேன் என்று அடிகள் திருவடி இன்பத்தில் தலைப்பட  விரைந்தனர் ஆக, “இன்னும் சினாள் இருந்து பின்னர்த் திலையம்பதிக்கு வந்து காண்க “என்று இறைவன் கட்டளை இட்டு  உருக்கரந்தனன் என்பது வரலாறு. “நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென, ஏலவென்னை யீங்கொழித்தருளி” என்னும் அடிகள் திருவாக்கும்  ஈண்டு நினைக்கத்தக்கது .

               இரண்டாம் அடியில் , “இது” என்னும் சுட்டு, “ஈங்கு ஒழிந்தருளி” என்றபடி ஆட்கொண்டும் திருவடியில்  இயைவித்துக் கொள்ளாமல்  நிலவுலகத்து  இருத்தற்கு ஏதுவாகிய காலத்தைக் குறிப்பதாகும் . “இது நின்னொடு என்னொடு புணர்ப்பதன்று., என்பது ஆண்டவன் கட்டளை மொழியாகும்.  “நின்னொடு” என்புழி, மூன்றாவதை இரண்டாம் உருபு ஆகக் கொண்டு , நின்னை எனவும், “என்னொடு” என்பதற்கு , ஆண்டவன் தன் திருவடி நீழலோடு எனவும் கொள்ளல் வேண்டும்.  “புணர்ப்பதன்று” என்பது, இது என்னும் சுட்டால் உணர்த்தப்படும் காலம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை ஆகும் ; சேர்ப்பிப்பதன்று என்பது பொருள், ஆகவே, ஆண்டவன் அடிகளை நோக்கி , “நின்னை நம் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளுதற்கு இது   காலம் அன்று “ என்று அருளிச் செய்தனர் என்பது கருத்து அகும். அருட் பார்வையால் தூய்மைப்படுத்து ஆட்கொண்ட ஆண்டவனே இப்பொழுது திருவடியில் இயைத்துக் கொள்ள இயலாது என்றால் ,அடியேனாகிய சிறியேன் செய்யத்தக்கது  யாது  ஆகும் என்பார், “இது என்னாம்” என்றார் . இது  என்பது ஈண்டு , ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பை உணர்த்தும் .  “என் ஆம்” என்பது, யாது ஆகும் (ஒன்றும்  இன்று) என்னும் பொருள் உடையது ஆதலின் , அதற்கேற்ப , யான் செய்யத்தக்கது என்பது வருவித்து உரைக்கப்பட்டது.

                  “புணர்ப்பதாக அன்றிதாக “ என்புழி, இது என்பது திருவடியில் இயைத்துக்  கொள்ளாமைக்கு  ஏதுவாகிய காலத்தைச் சுட்டுவதாகும் . புணர்ப்பது ஆக  –  நின் திருவடியில் இயைவிப்பதாக, அல்லது அன்றாக  இயைவிப்பது  அல்லது  ஆக  என்பது.  அடிகள் ஆண்டவன் கட்டளையை  ஏற்றுக்கொண்டு, “ஆண்டவனே, நின் திருவடி அடைதற்கு இக் காலம்  பொருந்தியது  ஆயினும் , அன்றிப் பொருந்தாதது ஆயினும்  ஆகுக.  என் முடிவான வேண்டுகோள் ஒன்று  உண்டு ; அதனை மறவாமல் ஏற்று அருளுவை என்னும் துணிவுடைமைக்கு  ஆதரவு  உண்டு”  என்பார், “அங்கணாள” என்று விளித்தார் .  அங்கணாளன் என்பதற்குக்  கண்ணோட்டம் உடையவன் என்பது பொருள் . கண்ணோட்டம்  என்பதற்கு , “தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை. இஃது அவர் மேற் சென்ற வழி நிகழ்வது ஆகலின் அப் பெயர்த்தாயிற்று” என்று  பரிமேலழகர் விளக்கம்  கூறியுள்ளார் . கண்ணோட்டத்தையே  நாகரிகம் எனவும் கூறுப. “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் தனி நாகரிகர் “ என்பதும்  காண்க.  ஈண்டு, ஆண்டவன் புற  உருக்கரந்த நிலையாயினும் , அடிகள் தம் உள்ளத்துளே உருவிழைத்து முன்னிலைப்படுத்துக் கூறுகின்றார் ஆதலின், கண்ணோட்டத்தின்  பயன் குறித்து  இவ்வாறு  விளித்தனர் என்பது.

                      இனி, அடிகள் தம் வேண்டுகோளை அருளிச்செய்கின்றார் . அது:- “காலம் உதவினும் உதவுக, உதவாது ஒழியினும் ஒழிக. சிறந்த  வீட்டின்பத்தைப்  பயக்கும்  மெய்யன்பே  வேண்டற்பாலது” என்பதாம்.  “அன்பு நின் கழற்கணே” என்புழி , ஏகாரத்தைப் பிரித்து , அன்பு என்பதனோடு இயைத்து , நின்கழற்கண்  அன்பே என இயைக்க வேண்டும் . ஏகாரம் தேற்றப் பொருட்டு , இதனையே  அடிகளும் , “பெறவே  வேண்டு  மெய்யன்பு “ எனப்  பிறிதோரிடத்துத்  தெளிவுபடுத்துக் கூறியிருத்தலும் அறிக.

              புங்கம்  –  சிறந்தது  என்னும்  பொருட்டு . சிறந்தது  என்னும்  அடைமொழியால்  போகம் ஈண்டுச்  சிவானந்த  அநுபவத்தை  உனர்த்தும் . திருவடிக்கண் உள்ள மெய்யன்பே  என்னைச் சிவானந்த நிறைவில்  இயைவித்து அருளல் வேண்டும்  என்பார், “அன்பே  புயங்கமான  போகம்  புணர்ப்பதாக “  என்றார் .  இதனால்  சிறந்த  சிவானந்தத்தை  விளைக்கும்  மெய்யன்பே  நின்  திருவடி  பற்றியதாக அருளல்  வேண்டும்  என்பது போதரும்.  அழிவில்  இன்பம்  பயப்பது மெய்யன்பு  என்பதை , “இறவாத  இன்ப  அன்பு  வேண்டிப் பின் வேண்டுகின்றார்”  என அம்மையார்  வேண்டுகோளாகச் சேக்கிழார்  கூறியதனாலும்  அறிக.  அழிவில்  இன்பப்  பேறு  ஆகிய  சாத்தியத்தைப் பயப்பது  மெய்யன்பு  ஆகிய  சாதனம்  ஆகும்.  “என் கடன் பணிசெய்து  கிடப்பதே” என்றபடி , சிறந்த  சாதனப்பேறே  சாத்தியமாகிய பயனை எளிதிற்  பயக்கும்  என்னும்  துணிவு  உடையராய்  இங்ஙனம் வேண்டுவார்  ஆயினர்  என்க.  இத்  திருப்பாட்டு , சொற்பொருட்  பின்வரும்  நிலை  என்னும்  அணியுடையதாகும் .

                 இதன்கண்,  “நின்  கழற்கண் அன்பே  புங்கமான  போகத்தைப்  புணர்ப்பதாக”  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இது  புணர்ப்பதாக  அன்றாக “ எனக்  காலத்தை வெறுத்து மெய்யன்பே  வேண்டும் என்றமையால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                              ******************************************

பாடல் : 72

போகம்  வேண்டி  வேண்டி  லேன்பு

ரந்த  ராதி  யின்பமும்

ஏக  நின்க ழலி  ணைய

லாதி  லேனென்   எம்பிரான்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து

குஞ்சி  யஞ்ச  லிக்கணே

ஆக  என்கை  கண்கள் தாரை

யாற  தாக  ஐயனே .

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆகிய  மெய்யன்பே  வேண்டும்  என்று  தெறிவித்துக்கொண்ட  அடிகள் , இத்  திருப்பாட்டில், அவ்வேண்டுகோளுக்குக்  காரணம்  கூறி , அம் மெய்யன்பின்  விளைவாக உள்ள  செயல்களையும்  பெற வேண்டும்  என்று  விண்ணப்பம் செய்கின்றார்.

பதவுரை :-     ஏக       =     ஒப்பற்ற  தனி முதல்வனே,

என்  எம்பிரான்  =   என்  தலைவனே ,

ஐயனே  =  ஞானாசிரியனே ,

போகம்  வேண்டி   =  உலக  போகத்தை  விரும்பி ,

புரந்தர ஆதி  இன்பமும்  வேண்டிலேன்  =  இந்திரன்  முதலிய  தேவர்  உலக  இன்பங்களையும்  விரும்புகின்றிலேன் ,

நின்  கழல்  இணை  அலாது  இலேன்  =  நின்  திருவடித்  துணையல்லாது  வேறு  பற்றுக்கோடு  இல்லேன்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து  =  உடல்  வேறுபட்டு  நடுக்கம்  தோன்ற ,

என்  கை  குஞ்சி  அஞ்சலிக்கேண்ண ஆக   = என்  கைகள்  தலைமேற்  குவித்துத்  தொழுதல்  ஆகிய  செயலின்  கண்ணே  நிகழ்வனவாக ,

என்  கண்கள்  தாரை  ஆறு  அது  ஆக  =  என்னுடைய கண்களின்  நீர்  ஒழுக்கு  ஆறாகப்  பெருகுவதாக  என்பது.

விளக்கவுரை :-  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவான் என்பது  தோன்ற , ஏகன்  எனப்பட்டான் . அத்  தனிப்பெரு  முதல்வனே தமக்குத்  தலைவனாகவும்  ஞானாசிரியன்  ஆகவும் ஆயினான்  என்பார், “ என்  எம்பிரான் “, “ஐயனே”  என்று  அருளிச்  செய்தனர் . 

           இந்திரன் , பிரமன்  முதலிய  தேவர்களின்  பதங்கள்  பலவற்றுள்ளும் , போக  நுகர்ச்சிக்குச்  சிறந்தது  இந்திரன்  பதம்  ஆகும் . ஆதலின், “புரந்தராதி இன்பமும்”  என்றார் .  உம்மை , சிறப்புப்  பொருளில்  வந்தது. அத்துணைச்  சிறந்த  இன்பத்தையும் , போக நுகர்ச்சி நிமித்தம்  விரும்பேன்  என்பார், “போகம்  வேண்டி  வேண்டிலேன் “  என்றார்.  “புரந்தராதி “  என்புழி , ஆதி  என்னும்  சொல்லால்  சிவபோகம் அல்லாத ஏனையவெல்லாம்  கொள்ளல்  வேண்டும் .  “போகம்  வேண்டி வேண்டிலேன்” என்றதனால் , சிவ  வழிபாடு  செய்தற்கு  அப்  பதங்கள் வாய்ப்பு  உடையனவாக  இருக்குமாயின் , அது  குறித்துத்  திருவருளாலே அப்  பதங்களைப் பெற நேரினும் வெறுப்பேன் அல்லேன் என்று அடிகள் கருதினார்  என்பது  குறிப்பிற்  பெறப்படுவதாகும் .  “நரகம் புகினும்  எள்ளேன் திருவருளாலே  இருக்கப்பெறின்”  என்றாபடி, திருவருள்  வழியன்றி , அடிகள்  தாமாகப்  போக நிமித்தம்  அவ்வின்பங்களைச்  சிறிதும் விரும்பாத  இயல்பினர்  என்பது  கருத்து .

              அடிகளுக்குச்  சிவபெருமான்  திருவடித்துணையே  புகல்  இடம் ஆகும்,  ஆதலின், “நின்  கழலிணையலாது  இலேன்” என்புழி , இல்லேன் என்பதற்குப்  புகல்  இடம்  அல்லது  பற்றுக்கோடு என்பதை  வருவித்து இயைத்துக்  கொள்ளல்  வேண்டும். அல்லது , இல்லேன்  என்பன, அலாது  இலேன் எனச்  செய்யுள் விகாரத்தால்  தொக்கு  நின்றன . இனி, “ஏக” என்பதற்குச்  செல்ல  எனப்  பொருள்கொள்வாரும்  உளர் . ஆண்டவன்  திருவடியன்றித் தமக்குப்  புகல் இடம் பிறிதின்று என்னும் உறுதி  உடைமையால் , “எம்பிரான்” என்ற  அளவில் அன்றி ,”என்  எம்பிரான்”  என்றார்.

           இனி, வேண்டாமைக்குச் செயப்படு பொருளாகப்  புரந்தராதி  இன்பத்தைக்  கூறிய  அடிகள் , வேண்டும்  என ஆண்டவன்  இடத்து விண்ணப்பம்  செய்துகொள்ளப்  பட்டவை யாவை  எனின் , மெய்யன்பின்  காரியங்களாக உள்ள  தொழுதன்  முதலிய  நிகழ்ச்சிகளேயாம் . காரணம்  உள்வழியன்றே  காரியம்  நிகழ்வது ; அதனால்,  காரிய  நிகழ்ச்சியை  வேண்டவே , காரணம்  ஆகிய  மெய்யன்பு  வேண்டும் என்பது  கூறாமலே  அமையும்  என்பது.  அன்பு, புறத்தே தோன்றும்  மெய்ப்பாடுகளான் அன்றிப் பிழம்பு  உணர்த்திக்  காட்டற்பாலது அன்று.  உள்  நிகழும்  அன்பளவில்  அன்றி,  அதனால்  விளையும்  புறச்  செயல்களும்  வேண்டும்  என்று  அடிகள் விரும்பியதற்குக்  காரணம் , அகம்,  புறம்  எல்லாம் அன்பு  மயமாக  நிகழ  வேண்டும் என்பதே.  மேலும்  மெய்யன்பின்  விளைவு  ஆகிய  புறச்செயல்கள் இல்லையாயின் , அரசன்  முதலிய  உலகியலார் , அடிகளின்  உண்மை  இயல்பை அறியாமல் ,  அவரைத்  தம்மவர்  என்று நெருங்கி , உலகியற் செயல்களில் ஈடுபடுத்தக்கூடும்  என்பதும்  ஆம். கண்ணீர்  ஒழுகல்  முதலிய  புறச்செயல்களைக்  கண்டதும்  “இவர் இயல் வேறுபட்டது ; நம்க்கு  ஒவ்வார் “ என  அன்னார் எல்லாம்  விட்டு அகல்வர்  என்பது.  அன்பின்  விளைவாகவுள்ள  செயல்கள், “மெய்தானரும்பி “ என்னும்  திருப்பாட்டில்  முன்னரும்  கூறப்பட்டன. வேண்டாமையைக்  குறிப்பிட்டு , வேண்டுவன  கூற நேர்ந்ததால் ஈண்டும்  கூறுவார்  ஆயினர்.

                அன்பின்  முதிர்ச்சியில்  தன்னையும்   மறக்கும்  தன்மை  உண்டாம்.  அந்நிலையில், உடலில் ஒரு வகை வேறுபாடு உண்டாகும் ஆதலின், “ஆகம்  விண்டு” என்றார். விள்ளல்   = வேறுபடுதல் .  அவ் வேறுபாட்டோடு  நடுக்கமும்  நிகழ்தல் குறித்து, “கம்பம்  வந்து” என்றார் . வந்து  என்னும்  செய்தென்  எச்சத்தைச்  செயவென் எச்சமாகக்  கொள்ளல்  வேண்டும் . வந்து  –  வர; தோன்ற  என்பது, உடல் வேறுபாடும்  நடுக்கமும் அன்பின்  விளைவாக  அன்றி  அச்சத்தின் விளைவு  ஆகவும் ஏற்படும்  ஆதலின், அதனை  விலக்கி, அன்பின்  விளைவு  எனக் கோடற்கு , “என் கை குஞ்சி  யஞ்சலிக் கணேயாக” என்பது  முதலியன கூறப்பட்டன. “உச்சிக்கூப்பிய கையினர்”  என்பது முதலியன  முனிவர்களின் செயல்களாகக் கூறப்பட்டன .  ஈண்டு, அச் செயல்கள் தானே  நிகழவேண்டும்  என்பார், “அஞ்சலிகணேயாக, ஆறாத “ என  வியங்கோள்  வாய்ப்பாடாகக் கூறப்பட்டன.  கூப்பிய  கை தலைக்கண்ணதாக என்பதோடு  அமையாது, கண்ணீர்ப்பெருக்கு  ஆறதாக  என்றார்,  “அழுதால்  உன்னைப் பெறலாமே “ என்னும் குறிக்கோள் உடையர் ஆதலின், ஆறது  என்புழி,  அது  பகுதிப்பொருள் விகுதி .

                       இதன்கண், ஆண்டவன்  திருவடி இன்பத்தில் ஈடுபடுதற்கு உரிய மெய்யன்பும் , அதன்  விளைவு ஆகிய  மெய்ப்பாடுகளும்  கூறப்பட்டமையால் ஆனந்தத் தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், புரந்தராதி இன்பமும் வேண்டிலேன் என்றமையால் வைராக்கியமும் , கை கூம்புதல் , கண்ணீர் பெருகல்  முதலியவற்றால் பத்தியும்  புலப்படுதலின் ,பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதம் நுதலிய பொருளும்   தோன்றுதல் அறிக . 

                                          **********************************************

பாடல்: 73.

ஐய  நின்ன  தல்ல  தில்லை

மற்றோர்   பற்று  வஞ்சனேன்

பொய்க  லந்த  தல்ல  தில்லை

பொய்மை  யேனென்  எம்பிரான்

மைக  லந்த  கண்ணி  பங்க

வந்து  நிங்க  ழற்கணே

மெய்க  லந்த  அன்ப  ரன்பெ

னக்கும்  ஆக  வேண்டுமே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் மெய்யன்பையும் , அதன் விளைவு  ஆக உள்ள  செயல்களையும்  பெறவேண்டும் என்று  ஆண்டவன்  இடத்து  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள் , அப்பேரன்பைப்  பெறுதற்கு  உரிய  தம் இயல்பையும் , அஃது யாருடைய  அன்பு  போன்றதாக  இருக்க வேண்டும்  என்பதையும்  இத்  திருப்பாட்டில்  தெரிவித்துக் கொள்ளுகிறார்

பதவுரை  :-  ஐய  என்  எம்பிரான்  =   ஐயனே  என்  தலைவனே ,

மை கலந்த கண்ணி  பங்க  = அஞ்சனம்  தோய்ந்த  கண்களை உடைய  உமையம்மையை  ஒரு  கூற்றில்  உடையவனே ,

வஞ்சனேன்  =   வஞகனாகிய  எனக்கு ,

நின்னது  அல்லது  மற்று  ஓர்  பற்று  இல்லை  =  நின்னையல்லாமல்  பிறிதொறு   பற்றுக்கோடு இல்லை , ( அங்ஙனமாகவும் ) ,

பொய்மையேன்  =  பொய்யொழுக்கம்  உடையவனாகிய  யான்,

கலந்து  பொய் அல்லது  இல்லை  =  சேரப்பெற்றது பொய்மையாகிய  அன்பே  யல்லாது  வேறு  இன்று  (ஆதலின்) ,

நின்  கழற்கண்  வந்து கலந்த  மெய் யன்பர் அன்பே  =  நின்  திருவடி  நீழலில்  வந்து  இரண்டற்ற  நிலையில்  இயைந்து இன்புறும் மெய்யன்பரது  சிறந்த  அன்பே ,

எனக்கும்  ஆக வேண்டும்  =  பொய்மையாளனாகிய  எனக்கும்  உண்டாதல்  வேண்டும்  என்பது.

விளக்கவுரை  :-  ஐயன்  என்றது  ஈண்டு,உயர்ந்தோன்  என்னும்  பொருட்டு  . ஆண்டவனை  உயர்ந்தோன்  எனத்  தெளிந்தே  பற்றுக்கோடாகக்  கொண்டமை , “ஐய”  என்று  விளித்தார்  என்பது. நினது என்பது  விரித்தல்  விகாரத்தால்  நின்னது  என்று  ஆயிற்று .  அது  என்னும் ஆறன்  உருபை  இரண்டன்  உருபு  ஆக்கி , நின்னை  எனக் கொள்க . “அல்லது  இல்லை “ என்றது துணிவு  தோன்றற் பொருட்டு .  இரண்டாம் அடியிற்  கூறியதற்கும்  ஈது  ஒக்கும். ஆண்டவனே, நின் அளவு  சிறந்த ஆதரவு  பிறிது  இல்லை ஆயினும், நின்னிற்  சிறிது  குறைந்த அளவிலாவது  ஒன்று  உளதோ எனின் , அங்ஙனம்  ஒன்றும் கண்டிலேன்  என்பார், “மற்று  ஓர்  பற்று  இல்லேன் “ஏன்றார் .

                  வஞ்சகன்  என்னும்  சொல் , நெஞ்சம் அறிந்தது  ஒன்றைச்  சொல்லினாலும், செயலினாலும்   மறைத்து  மாறுபடச் சொல்லியும் , செய்தும்  ஏமாற்றுவோன் என்னும்  பொருள்  உடையதாகும் . அம்முறையும்  அடிகள் , தம்  இயல்பு  உண்மையில்  வஞ்சிப்பதாக  இருக்குமாயின்  , அதனை  மாற்றி  உரைத்து  இருப்பர் . அங்ஙனம்  கூறாது, “வஞ்சனேன்”  என்று  தம்மை வெளிப்படக்  கூறியிருத்தலின் , அவர்  வஞ்சம் இன்மை  புலனாகும் என்பது.  அங்ஙனம்  ஆகவும் , தம்மை  இவ்வாறு  ஏன்  தாழ்த்துக் கூறவேண்டும் எனின்  பிறழ்தல்  ஆகிய  இயல்பு , ஒரு சிறிதும்  இல்லாது , நேர்மையின்  தூய்மையில்  தலை  சிறந்து  நிற்கும் கடவுளின்  முன்னிலையில்  வைத்துத்  தம்  இயல்பைக் கூறுங்கால் , யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  என்னும் அடிமைப் பண்பு  தோன்றற்கு  என்க.   அதற்கு  இயைய உலகியலில்  வைத்துக்  கூறியபடியாம்  என்பது. யான்  இழிகுணம்  உடையேண்  ஆயினும், நின்னை  அல்லாது  வேறு  ஒரு  பற்றுக்கோடும் இல்லாதவன்  ஆதலின் , என்னைக்  கைதூக்கி  ஆளுதல் நின்  கடன்  ஆம்  என்பது  குறிப்பிற் பெறப்படும் கருத்து  ஆகும் .  இரண்டாம்  அடியில்  பொய்மையேன் என்றதற்கும்  இதுவே  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் . 

                       யான்  பொய்யொழுக்கம்  உடையேன் ஆதலின் , அதற்கு  ஏற்ப  என்  அன்பும்  பொய்  ஆகும்  என்பார் , “பொய்  கலந்து  அல்லது இல்லை  “  என்றார். பிறிதோரிடத்தில் , “யானே   பொய்  என் நெஞ்சம் பொய் என்   அன்பும்  பொய்” என்று  அடிகள்  தம்மைக்  கூறியிருத்தலும்  அறிக . யான்  பொய்யொழுக்கம்  உடையேனாக இருப்பினும் , என்  உயிர்க்கு  நின்று , என்  பொய்மை  அன்பை  அறிந்தும்  என்னை  ஆட்கொண்ட  தலைவன் ஆயினான் என்பார், “என்  எம்பிரான்”  என்று  சிரிப்புரிமை  தோன்ற  விளித்துக்  கூறுவார் ஆயினர் .  யான்  வஞ்சகன்  ஆயினும் , பிறிதொரு  பற்றுக்கோடு  இல்லாமையால், எனக்கு  நீயே  ஆதரவாக   அருள் செய்ய  வேண்டும்  என்று  முதல்  அடியில்  கூறியது  போலவே , ஈண்டும் என்  அன்பு  பொய்மையாயினும்,  அஃது  அறிந்தும்  ஆட்கொண்ட  தலைவனாக  இருத்தலின் , ஆட்பட்ட  என்னைப்  பாதுகாக்க  வேண்டும்  கடமை  நின்பாலதாகும்  என்பது குறிப்பிற்  பெறப்படும் கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .

             தன்னை  அடைந்த  மெய்யன்பரைத்  தன்  திருவடி  நீழலில்  இயைத்துக்கொள்ள  முற்படுங்கால் , ஆண்டவன் , அருள்  உருவினள் ஆகிய  அம்மையுடன்  காட்சியளித்தல்  இயல்பு  ஆதலின் , அக்  கருத்துத்  தோன்ற , “மை  கலந்த  கண்ணி  பங்க” என்றார். அம்மையின்  அருட் குணம் , அவன்  திருநோக்கின்  முகமாக வெளிபடுதல்  குறித்து , “மை கழற்கணே”  என்புழி, ஏகாரத்தைப்பிரித்து , நான்காம்  அடியில் உள்ள அன்பு  என்பதனோடு  இயைத்து , “அன்பே” எனத்  தேற்றப்பொருட்டாகக்  கொள்ளல்  வேண்டும்  .வந்து  என்னும்  செய்தென்  எச்சம், “கலந்த” என்னும்  பெயெரெச்ச  வினையைக்  கொண்டு முடியும் . “மெய்” என்பதை அன்பர்க்கு அடையாகக்  கொண்டு , “கலந்த  மெய்யன்பர்  அன்பே”  என இயைத்துக்கொள்ளல்  வேண்டும் . பக்குவ  முதிர்ந்த  மெய்யன்பர், இறைவன்  திருவடி  நீழலை  அடைதற்கு  , அப் பெருமான்  அருட்குணம்  சிறந்த  ஏதுவாகும் என்பதை , “மை  கலந்த  கண்ணி  பங்க”  என்னும்  தொடரும், அம்  மெய்யன்பர் , தொடக்க  முதல்  மேற்கொண்டு  வந்த சரியை  முதலிய  தவங்களும்  அதற்குச்  சாதனம்  ஆகும்  என்பதை , “வந்து கலந்த”  என்னும்  சொற்களும் புலப்படுத்தி  நிற்றல்  அறிக.  “என்னை நினைந்து  அடிமை  கொண்டு  என்  இடர்  கெடுத்துத்  தன்னை  நினையத்  தருகின்றான் “  என்று  பெரியோர்  கண்ட  மரபும் ஈண்டு  நினைக்கத்தக்கது .  ஒரு  காரியம்  நிறைவேறுதற்கு  இறைவன்  திருவருளும், அத்  திருவருளால்  தூண்டப்பட்ட  உயிர்  முயற்சியும்  ஒத்து  இயைதல்  வேண்டும்  என்பதை  உலகியலிலும்  வைத்து  அறியலாம் .  மெய்மையான  அன்பு  இன்றி , அஃது  உடையான்  போல  நடிக்கும்  பொய்மையாளனாகிய  எனக்கு  இனி   வேண்டுவது  மெய்யன்பர்  அன்பே  யாகும் .  அஃது  இதுகாறும்  இல்லாமல் இருந்தபடியால், இனி  நின்  அருணோக்கால் உண்டாதல்  வேண்டும் என்பார், “எனக்கும்  ஆகவேண்டும் “ என்றார் . “எனக்கும்” என்புழி, உம்மை  இழிவு  சிறப்புப்  பொருட்டு  ஆம்.  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்ட  பொருள்கள்  மூன்று ; அவற்றிற்கேற்ப , விளி  நிலையும்  மூன்றாக  அமைந்து  இருத்தல்  ஆராய்ந்து  இன்புறத்தக்கது.

                  இதன்கண், “மெய் கலந்த  அன்பர்  அன்பு  எனக்கும்  ஆகவேண்டும் “ என்றது , ஆனந்தத்தில்  அழுந்துதற்குக் கருவியாதலின், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், “மற்றோர்  பற்று  இல்லை “, அன்பு  எனக்கும்  ஆகவேண்டும்”  என்பவற்றால் , முறையே  வைராக்கியமும்  , பத்தி  நிலையும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம் என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                        *********************************************

பாடல் : 74.

வேண்டும்  நின்க  ழற்கண்  அன்பு

பொய்மை  தீர்த்து  மெய்மையே

ஆண்டு  கொண்டு  நாயினேனை

ஆவ வென்ற  ருளுநீ

பூண்டு  கொண்ட  டிய  னேனும்

போற்றி  போற்றி  யென்றும்  என்றும்

மாண்டு  மாண்டு  வந்து  வந்து

மன்ன  நின்வ  ணங்கவே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பின்  பயனாகிய  அழிவில்  இன்பத்தை  அருளுதற்கு  உரிய  ஆண்டவன்  இடத்து  அப்  பயனை  வேண்டாமல்,  அதற்குக்  கருவியாகிய  மெய்  கலந்த  அன்பர்  அன்பே  வேண்டும்  என்ற  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  வேண்டியதற்கு  ஏதுக்  கூறுகின்றார் .

பதவுரை :-   மன்ன   =   தெய்வ  அரசே

நீ  நாயினேனை  =  நீ  நாயைப்போன்ற  இழிந்தவனாகிய   என்னை,

பொய்மை  தீர்த்து  =  பொய்யொழுக்கத்தை  ஒழித்து  ,

ஆண்டு  ஆண்டு  ஆவ  என்று  அருளு =  ஆட்கொண்டு  இரக்கக்  குறிப்புத்  தோன்ற  ஆறுதல்  மொழி  கூறி அருள்  செய்வாயாக ,

அடியேனும்  =  அடிமையாகிய  யானும் ,

பூண்டு  கொண்டும்  =  அவ்  வடிமைத்  தன்மையை  மேற்கொண்டும்,

மாண்டு  மாண்டு  வந்து  வந்தும்  =  பலகால்  இறந்து  பிறந்தும் ,

போற்றி  போற்றி  என்றும்  =  வணக்கம்  வணக்கம்  என்று  கூறியும்,

என்றும்  நின்  வணங்க  =  எக்காலமும்  நின்னை  வணங்குதற்  பொருட்டு,

நின்  கழற்கண்   =  திருவடிக்  கண்ணே ,

மெய்மை  அன்பே  வேண்டும்  =  மெய்மையாகிய  அன்பே  எனக்கு  வேண்டுவதாகும்  என்பது.

விளக்கவுரை  :-   மன்னன்  என்னும்  சொல்  ஈண்டுத்  தெய்வங்களுக்கு  அரசன்  என்னும்  பொருட்டு .  ஒரு  நாட்டிற்  பிறந்தவன், அப்  பிறப்பில்  , அந்  நாட்டு  அரசனையே  அரசுரிமையில்  வைத்துப்  போற்றுவன். அவனே  இறந்து  பிறிதொரு  நாட்டில்  பிறப்பான்  ஆயின்,  முன்னை  அரசனை  விட்டு  , மீண்டு  பிறந்த  நாட்டு  அரசனையே  உரிமை  கொள்ளக்  கடவன் .  இஃது  உலகியலிற்  காணப்படுவது.  தெய்வ  அரசின்  உரிமை,  அங்ஙனம்  அன்று  ஒருவன்  எவ்  எவ்வுலகில்  எத்துணைப்  பிறவி  எடுப்பினும்  , ஆண்டெல்லாம்  தெய்வ  அரசாகத்  திகழ்வோன் ஒருவனே  யாவன்.  இவ்வுண்மை  குறித்தே , பலகால்  இறந்து பிறந்து  வரும்  நிலையினும்  நீயே  அரசாவாய்  என்பார், ஈண்டு, “மன்ன” என  விளித்து  உரைப்பார்  ஆயினர்.

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கல் , அவர்  தூய நிலையுணர்ந்தே  ஆட்கொள்ளுவன் . பொய்யொழுக்கம்  உள்வழிப் பணிபுரியும்  அன்பர்  ஆதல்  இயலாத தொன்று .  அங்ஙனம்  ஆகவும், என் பொய்மை  தீர்த்து ஆட்கொள்ளல்  வேண்டும்  என்று  அடிகள்  வேண்டியது, ஆண்டவன்  அளப்பரிய பேரருள் வள்ளல்  ஆதலின் , அவ்வருள் வண்மை காரணமாகத்  தம்  பொய்மை  தீர்த்தற்கு  முன்னரே  ஆட்கொள்ளுதற்கு   முற்படவுங்   கூடும்  என்னும்  கருத்தன்  என்க. நோய்வாய்ப்பட்ட  ஒரு  மகனுக்கு  மருந்து  கொடுத்து , அந்  நோயைத்  தீர்த்தற்கு  முன்னரே,  கனிந்த  அன்பு  காரணமாகத்  தாய்  இனிய  உணவு  கொடுக்க  முற்படுதலை உலகியலிலும்  காண்கிறோம் அன்றோ?ஆடிகள்  சிறந்த  மெய்யன்புடையராயினும் , அளப்பரும்  பெருமை  மிக்க ஆண்டவன்  முன்னிலையில் , தம்மைச்  சிறுமையுடையர்  ஆகவே காணும் இயல்பினர்  ஆதலின், பலவிடத்தும்  இவ்வாறே  கூறுவாராயினர் .  “ஆவ”  என்பது , இரக்கம்  பற்றிய  குறிப்பு  மொழியாகும் . அங்ஙனம்  கூறி  இரக்கங்காட்ட  வேண்டும்  என்றது , செயற் பயனினும்  இன்சொற்பயன்  விரைவின்  முற்பட்டு  ஆறுதல் அளிக்கும்  என்பது  பற்றியாம்  “அருளுக”  என்புழி , முன்னிலை வியங்கோள்  ஈறு  தொக்கு ,”அருளு”  என்று  ஆயிற்று. அடியனேனும்  என்புழி  உம்மை, “நீ என்னை  ஆண்டு  அருளுக; யானும்  அவ்வடிமைத் தன்மையைப்  பூண்டு  கொண்டு வணங்க “ என்று கொள்ளக்கிடப்பதால் எச்ச வும்மையாகும் .  பூண்டு  கோடல் = இறைவன்  பணியை  அணிகலனாக  மேற்கொள்ளல், அடிகள்  தம்மைப்  பொய்மை  தீர்த்து  ஆண்டுகொள்ள  வேண்டுங்கால், “நாயினேனை”என இழித்தும் , அவ்விறை பணியை மேற்கொள்ளக்  குறிப்பிடுங்கால் , “அடியனேன் “என  உயர்த்தும் கூறியிருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது . “பூண்டு  கொண்டும்”  என்புழி , எண்ணும்மை தொக்கு  நின்றது .

               “என்றும்  என்றும்” என்புழிப்  பின்னது  காலத்தை உணர்த்துவதாகும் .  கொண்டும், வந்தும் , என்றும்  என்றும்  நின் வணங்க  அன்பு  வேண்டும்  என  முடிக்க . இப்  பிறப்பிலே வீட்டின்பம்  எய்துதற்கு வினையெச்சம்  தடையாகுமாயின் ,  அவ்வினை  யொழிவு  பெறுங்காறும்  இறந்து  இறந்து பிறக்க  நேரும்  ஆதலின்,  அப் பிறாவிகளில்  எல்லாம் நின்  அடிமைப்  பணியை அணிகலனாக மேற்கொண்டு  வனக்கம்  வணக்கம்  என்று  நாவாரக் கூறி ,  ஆண்டவனே , நின்னை வணங்க வேண்டும் ஆதலின் , அதன்  நிமித்தம்  எனக்கு  நின்  திருவடிக்கண் மாறாத  மெய்யன்பே   தந்து  அருளல்  வேண்டும் என்பது ,இத்  திருப்பாட்டின்  முகமாக  அடிகள் கருதிக் கூறியது என்க. அழிவில்  இன்பம்  ஆகிய  முடிவான பயனையே  வேண்டும் என  இரந்தால், அது  பெறுதற்குப்  பக்குவம்  இன்று  என  ஆண்டவன்  திருவுள்ளம்  கொள்ளின், பேறு  ஒன்றும்  இன்றாய்விடும் என்னும்  ஐயத்தால், அப் பயனை  உறுதியாகப்  பயக்கும்  மெய்யன்பாகிய  சாதனத்தை  வேண்டுவார்  ஆயினர் .  இச்  சாதனப்பேறு  ஒருமுறை  ஆண்டவன்  அருளால்  கிடைத்துவிட்டால் , பிற்றைப்  பிறவிகளிலும்  தொடர்ந்து  பயன் செய்யும்  என்னும்  உறுதியுடையராய் , “மாண்டு  மாண்டு  வந்து  வந்து மன்ன நின்  வணங்க “ என்றார் .  வருதல்  = பிறத்தல் .

                  அரசனிடத்துக்  குறையிரப்பான்  ஒருவன் , முடிவான  பெரும் பயனைக்  குறிப்பிட்டு  வேண்டுதலும் , அத்துணை  பெறுதற்கு ஏதும் தடை  ஏற்படுமாயின் , அதனிற்  சிறிது  குறைந்த  அளவிலாவது  தரல்  வேண்டும்  எனத்  தெரிவித்துக்  கொள்ளுதலும்  உலகியலிற்   காண்கின்றோம் . அங்ஙனமே , முன்னர்ச்  சிறந்த  பயனாகிய  வீட்டின்பத்தை  வேண்டிய  அடிகள்  அது  பெறுதற்கு  ஒருவாறு  பக்குவம் இன்று  எனக்  கொள்ளநேரின் , அப் பயனைக்  காலந்தாழ்த்தியாவது  விளைக்கும்  மெய்யன்பே  வேண்டும்  என  நினைந்து  இரப்பார் ஆயினர் . நின்னை  வணங்க    அன்பு  வேண்டும்  என்ற  அளவே  அமைவதாக, “நின்  கழற்கண் அன்பு வேண்டும் “  என்றது , “ புழுவாய்  பிறக்கினும்  புண்ணியா  உன்  அடி  யென்மனத்தே, வழுவாதிருக்க  வரந்தரவேண்டும்”  என்றபடி. ஒருகால்  தம்  நிலை  பிறழினும் , திருவடிப் பதிவு  அதற்கு  இடம்  தராது  செம்மைப்படுத்தும் என்னும்  குறிக்கோள்  பற்றி என்க.  ஈண்டு, ஆளுடைய   அரசு , ஆண்டவன்  திருவடியைப்  பற்றிக்  கொள்ளுதற்கு  உரிய  ஆற்றல்  தம் மனத்திற்கு இல்லாமை  உணர்ந்து , “எ ன்  மனம்  உன்  அடிக்கண் வழுவாதிருக்க “  என்னாது, “உன்னடி  என்  மனத்தே  வழுவாதிருக்க” என்று  அருளிச்  செய்தமை  அறிந்து  இன்புறத்தக்கது .

       இதன்கண்,  “மன்ன  நின்  வணங்க ……….நின் கழற்கண் அன்பு  வேண்டும் “  என  வீட்டின்பத்திற்கு  ஏதுவாகிய  மெய்யன்பு  வேண்டப்பட்டிருத்தலானும் , அது  பிரவிகள்  தோறும்  தொடர்ந்து , முடிவில்  அவ்  இன்பத்தில்  இயைக்கும்  என்னும்  உறுதி  பெறப்பட வைத்தமையானும், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக  .

                                      ***********************************************

பாடல் : 75.

வணங்கு  நின்னை  மண்ணும்  விண்ணும்

வேத  நான்கும்  ஓலமிட்

டுணங்கு  நின்னை  யெய்த  லுற்று

மற்றொ  ருண்மை  யின்மையின்

வணங்கி  யாம்வி  டேங்க  ளென்ன

வந்து  நின்ற  ருளுதற்

கிணங்கு  கொங்கை மங்கை  பங்க

எங்கொ  லோநி  னைப்பதே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் சாதனமாகிய மெய்யன்பை  வேண்டியது, ஆண்டவன்   திருவடியை  எக் காலமும் வணங்குதற்கு  என்பது  கூறப்பட்டது .  இத்  திருப்பாட்டில் , அவ்  வணக்கத்தின்  இன்றியமையாமையும் அதனைக்  கடைப்பிடித்து  நெருங்குவோர்க்கு  ஆண்டவன்  திருவருள் பாலிக்கத்  தடையாகக்  கருதுவது யாதாக  இருக்கலாம்  என்பதும்  கூறப்படுகின்றன .

பதவுரை  :-   இணங்கு  கொங்கை  மங்கை  பங்க  =  நெருங்கிய  கொங்கைகளையுடைய  உமையம்மையை  ஒரு  பங்கில்  உடையவனே ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  நின்னையன்றி  வேறாக  ஒரு  மெய்ப்பொருள்  இல்லாமையால் ,

நின்னை  மண்ணும்  விண்ணும் வணங்கும்  =  உன்னை  நிலவுலகமும்  விண்ணுலகமும் வணங்குவன ,

வேதம்  நான்கும்   நின்னை  எய்தல்  உற்று  ஓலம்  இட்டு உணங்கும்  =

நான்  மறைகளும்  உன்னை  அணுக முயன்று  (இயலாமையால்)  ஓலம் இட்டு  இளைத்து  நிற்கும்,

யாம்  வணங்கிவிடேங்கள்  என்ன  =  அடியேமாகிய  யாங்களும் நின்னை  வணங்கிடமாட்டோம் என்று   விண்ணப்பம்  செய்யவும் ,

வந்து  நின்று  அருளுதற்கு  =  வெளிப்பட்டு  நின்று  அருள்  புரிதற்கு,

நினைப்பது  என் கொல்  = தடையாகத்  திருவுள்ளம்  கொள்வது  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மண்,  விண்  என்பன  ஆகுபெயராக  நின்று , ஆண்டுள்ள  மக்களையும் , தேவரையும் உணர்த்தும் , உலக  மூன்றுனுள், மண்ணுலகமும்  விண்ணுலகமும்  வணங்கும்  என்றார் ; ஆண்டுள்ளார் முறையே  புண்ணிய  பாவ  கன்மங்கள்  காரணமாகவும் , மக்களாகவும் ,தேவராகவும்  பிறந்து ,இறைவனை  வழிபடுதற்கு உரிய  ஞானம் பெறும் தகுதி  வாய்ந்து  இருத்தலின், கீழ்  உலகத்தவர், பாவ  கன்மம் காரணமான  பிறப்புடையர் ஆதலின், இறைவணக்கத்திற்குரிய தகுதி  பெறல் அரிது  எனக்  கருதி  உடன்  கூறப்பட்டிலர் . மண்ணுலகத்தவர் , கலப்பு  வினைப்பயன்  நுகர்ச்சி  உடையர் ஆதலின்,  தொண்டில்  ஈடுபட்டு , உயிர்  முனைப்பு  அடங்கி  ஆண்டவனை நினைந்து  வழிபடும் இயல்பு உடையவர்  என்பதும், நல்வினைப்பயன்  ஒன்றே  நுகர்ந்து  இன்பத்தில்  இறுமாக்கும் தேவர் , ஒரே வழிக் கடவுள் நினைவையும் புறக்கனிக்கும்  இயல்புடையர்  என்பதும்  கருதி, “மண்ணும்  விண்ணும் “  என்று  முறைப்படுத்து  உரைப்பார்  ஆயினர் . இவ் விரு திற உலகத்தவரும்  முடிவான வணக்கத்திற்கு  உரிய  கடவுள் யாராக  இருக்கலாம் என  நூல்   அளவையானும் , அநுபவ உணர்வானும் நெடிது  ஆராய்ந்து , மக்கள் ,தேவர்  முதலிய  யாவரும்  ஒடுங்கிய பேரூழிக் காலத்து.  அவ்வெல்லோரையும்  எல்லாவற்றையும்  தன்னுள்  ஒடுக்கி  , அழிவு  இன்றி  நிற்பவன்  பரமசிவனே  என்னும்  உண்மை  உணர்வு  கைவரப்பெற்றவர்  என்பார், “மற்று  ஓர் உண்மையின்மையின்  மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “  என்றார் . “உண்மை”  இறைவனைக்  குறித்தலின்  ஆகு  பெயர் .  எல்லோரானும்  வணங்க்கப்படுபவன்  சிவபெருமானே  என்பதும் , அப்  பெருமானால் வணங்கப்படும்  தெய்வம்  பிறிது  ஒன்றும்  இல்லை  என்பதும்  மறைமுடிவுகளின்  ஆராய்ச்சியாற்  கண்ட  உண்மையாகும் .  “”செய்யானை வெண்ணீறணிந்தானைச்  சேர்ந்தறியாக், கையானை”  என்று  அடிகள்  பிறி தோரிடத்து  அருளிச்  செய்து  இருத்தல்  இதனை உறுதிப்படுத்துவதாகும் .  “மற்றோர்  உண்மையின்மையின்  “  என்பதை , மண் , விண்  , வணக்கம் , மறைகளின்  உணக்கம் , அடியார்  வணக்கம்  ஆகிய  எல்லாவற்றிற்கும்  ஏதுவாக்கிக்  கொள்ளல்  வேண்டும்.

                      ஓலம் = அபயம்  அளிக்க  வேண்டும்  என்னும்  குறிப்பு  மொழி .  மறைகள்  அணுகுதற்கு  முயன்று , இயலாமையால் ஓலம்  இட்டு  இளைத்து  நிற்கும்  என்றது,  இறைவன் பெருமையை  அளவிட்டுக்கூற  இயலாமல் , கீழ்ப்பட்ட  தெய்வங்களை  வருணித்துப்  பரம்பொருள் இது வன்று;  இதுவன்று  என்றே  கூறி  ஒழிந்தன என்பது பற்றியாம் . “ அல்லை யீதல்லை யீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்து  இளைக்கும் “  என்ற  பெளராணிகர்  உரையும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  மறைகள்  தம்  சொற்பெருக்காற்  காண்டற்கு  எத்துணை  விரிந்து  செல்லினும், இறை  இயல்  அப்பாற்பட்டு  நிற்றலின் , மேற் சேரற்கு  இயலாமையால் , அச்சமுற்று  இளைத்து  நிற்றலின் , “ஓலமிட்டு  உணங்கும் “ என்றார்.

                        சொல்லுலகும்  பொருளுலகும் ( சத்தப்  பிரபஞ்சம்  அருத்தப்  பிரபஞ்சம் ) என  இரு  கூற்றில்  அடக்குவர்  உலகம்  எல்லாவற்றையும் . ஈண்டு, “மண்ணும்  விண்ணும்  “ என்பது பொருள் உலகமாகும் . “வேதம்  நான்கும்” என்பது  சொல்  உலகம் ஆகும்.  சொல்லுலகினும்  பொருளுலகு  இறைவனை  அணுகுதற்குத்  தகுதி  சிறந்ததாகலின் , “மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “ எனவும், அத்துனைத் தகுதியின்மையால் , “ வேத  நான்கும்  ஓலமிட்டு ணங்கும்” எனவும் கூறப்பட்டன .

                   அடியார், பொருளுலகில்  அடங்குவர்  ஆயினும் , தகுதியின்  பொதுச்  சிறப்பு  முறை  பற்றி  வேறாகக்  கூறப்பட்டனர்  என்க.  அடியார் தகுதி , மற்றைத்  தேவர் , மக்கள் தகுதியினும்  சிறப்பு  உடையது  என்பது  கருத்து.  அதனாலே , அடிகள், மற்றை  அடியாரையும்  உளப்படுத்து ,”வணங்கியாம்  விடேங்கள்  என்ன”  என்றார். மண்ணுலகத்தவரும்  விண்ணுலகத்தவரும்  உண்மை  அறிந்து  வணங்கிய  அளவில்  நின்றனர் எனவும் ; அடியேம் ஆகிய  யாங்கள் வணக்கத்தளவில்  ஒழியாது , விடாமல்  தொடர்ந்து பற்றினேம் எனவும்  கூறியது, பொதுச்  சிறப்பு  முறையை வலியுறுத்துவதாகும் .  ஆண்டவனை  விடாமற்  பிடித்தற்கு  , அடிகள் தம்  அளவில்  ஒழியாது , மெய்யன்பர்  பலரையும்  துணையாக்கிக்கொள்வாராய் , “யாம்” என  உளப்பாட்டுப்  பன்மையிற்  கூறினர் .  மேலும்,  வணக்கம் என்ற  அளவில்  ஒழியாது , “சிக்கெனப்  பிடித்தேன் “  என்றாங்கு  , விடமாட்டோம்  என்று  கூறவும் என்றார் . இனி, “விடேங்கள்  என்ன” என்பதற்கு , “நின்  திருவடி இன்பம்  பெறுங்காறும்  எம்  கடமையாகிய  இவ்  வணக்கத்தைக்  கைவிட  மாட்டோம்  என்று  விண்ணப்பம் செய்து  கொள்ளவும் “ என்று  பொருள்  கோடலும்  அமையும்  . யாமும்,  என்னவும்,  என்புழி ,உம்மைகள் செய்யுள்  விகாரத்தால்  தொக்கு  நின்றன. விடேங்கள்  என்புழி, கள்  என்பது  விகுதி மேல்  விகுதியாகும்.

                        வந்து நின்று  அருளுதல்  = வெளிப்பட்டுத்  தோன்றி  நின்று  அருள்  புரிதல் . எங்கும்  நிறை   பொருளகிய  இறைவன் , மெய்யன்பர்  வேண்டுகோளுக்கு  இரங்கி , அவர்  நினையும்  வடிவில்  வெளிப்பட்டு  அருள்  புரிதலைத்  திருத்தொண்டர்  புரான  முதலியவற்றானும்  அறியலாம் . யாங்கள் மன  மொழி  மெய்கள் ஒன்றுபட்டு  வணங்கவும்  , ஆண்டவனே  வெளிப்பட்டு  அருளுதற்குத்  தடையாகத்  திருவுள்ளம் கொள்ளுவது  என்னையோ  என்புழி, அருள் உருவினள் ஆகிய அம்மையோடு  இயைந்த  நின்னால்  தடை நேர்ந்து  இராது ; எம்  வினையெச்சத்தால் நேர்ந்து  இருக்கலாம் என்று  அடிகள் கருதினார்  என்பது குறிப்பிற்  பெறப்படும் .  இதனை, “மங்கை  பங்க” என்ற  விளி நிலையும்  உறுதிப்படுத்துவதாகும் . திருவுள்ளத்தில்  தடையாகக்  கருதியது  இன்னது  என அறியச்  செய்யின் , திருவருட்டுணை  கொண்டு அத்  தடையை  ஒழித்தற்கு  உரிய  தவத்தில் தலைப்படலாம் என்பதும் உட்கோளாகக்கொண்டு  , “ஏன் கொலோ நினைப்பது”என்றார்  என்பது .

                            இதன்கண், “மற்றொருண்மை  இன்மையின்” ,  “வணங்கி  யாம் விடேம்” என்றமையால் , பரம் பொருள்  இன்னது என்னும் தெளிவும், அதனை  வழிபட்டு  நெருங்கிப்  பற்றும் நெறியும், அந்நெறி  நின்று  அருள் அமுதம்  நுகரலாம்  என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக. 

                                            ******************************************

பாடல் : 76 .

நினைப்ப  தாக  சிந்தை  செல்லும்

எல்லை  யேய  வாக்கினால்

தினைத்த   னையும்  ஆவ தில்லை

சொல்ல  லாவ  கேட்பவே

அனைத்து  லகும்  ஆய  நின்னை

ஐம்பு  லன்கள்  காண்கிலா

எனைத்தெ   னைத்த  தெப்பு  றத்த

தெந்தை  பாதம்  எய்தவே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  வணக்கம்  செய்துவிடுவேம்  அல்லேம்  என்னும்  எம்மனோர்க்கு  அருள்புரியத்  தடையாகக்  கருதுவது  என்னையோ  என்று  கூறிய  அடிகள் , அத்  தடைகள்  எம்மனோர்  மன மொழி  முதலியவற்றால்  ஆயவெனினும்  , அவற்றை ஒழித்தற்குத்  திருவருள் துணை  அன்றி  எம்மால்  செய்யத்தக்கது யாதும்  இன்று  என்னும்  உட்கோள்  புலப்பட, இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   எந்தை  =  என்  தந்தையே ,

சிந்தை  செல்லும்  எல்லை  நினைப்பது  ஆக  = என்  மனம்  செல்லும்  அளவும்  நினைவதாக,

சொல்லல்  ஆவ  கேட்பவே  =  சொல்லுதற்கு  உரியன  எல்லாம்  கேட்கப்படுவனவே (ஆதலின்) ,

ஏய வாக்கினால்  தினைத்தனையும்  ஆவது  இல்லை  =  பொருந்திய  சொற்களால்  திணையளவும்  பயன்  விளைதல்  இன்று,

அனைத்து  உலகும்  ஆய  நின்னை  = உலகெலாம்  ஆய  நின்னை ,

ஐம் புலன்கள்  காண்கிலா  =  ஐம்பொறிகளும்  காணும்  ஆற்றல்  இல்லாதன  ஆகும் ,

பாதம்  எய்த  =  நின்  திருவடி  அடையவோ ,

அது  எனைத்து  எனைத்து  =  அத்  திருவடி  எத்துணை  எத்துணை  அளாவுஉடையதோ ,

எப்புறத்து  =  எவ்விடத்ததோ ? (அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-   “ எந்தை  “ என்றது  ஈண்டு  மைந்தனாகிய  சிறியேனால் செய்யப்படும்  சிறு  பணியைத்  தந்தையாகிய  நீ  மனம்  உவந்து ஏற்று  அருளல்  கடமையாம்  என்னும்  குறிப்புத்  தோன்ற நின்றது.  அடிகள்  தம் மனம்  மொழி  பொறிகளால்  இறைவனைக்  காண்டற்கு, இயலாமையைக்  குறிப்பிடத்  தொடங்கி, முதலில்  மனத்தின் இயல்பைத்  தெரிவிக்கலானார் . எல்லாக்  கருவிகளும்  மனமே  கட்டிற்கும்  வீட்டிற்கும் சிறந்த  ஏதுவாம் என்ப . மனத்தின்  இயைபு  இன்றேல், மொழிகள் வெற்றுரை  ஆகும் ; பொறிகள்  புலனுகர்ச்சியின்றி  வறியனவாம் . மனம் , பொறிவாயிலாகச்  சென்று புறப்பொருள்களை  அறிதலோடு , உண் முகமாகவும்  நின்று, கண்டவை கேட்டவைகளை நினைந்து  உணரும்  இயல்பினது ஆகும்.  சிவாகமங்களின்  வாயிலாக  இறைவன் திருவுருவங்களைக்  கேட்டும் , புறத்தேயுள்ள  திருக்கோயில்களில்  அம்முறையில்  அமைக்கப்பட்ட  திருவுருவங்களைக் கண்டும், உள்ளத்து  அமைந்து  நினைதலைச்  சகுணோபாசனை  என்பர். சகுண  உபாசனையாவது, இறைவனைத்  திருவுருவில்  வைத்து  வழிபடுதல் . இவ்  வுருவ  வழிபாடு , மன்ம்  கட்பொறிவழிச்சென்று , புற  வுருவத்தைக் காண்டலானும் , செவிப்பொறி  வழிச்சென்று  சிவாகமத்திற்  கேட்டலானும் ,பொறிவழிச் செல்லாது  ஒருங்கு  இயைந்து  நினைதலானும் நிகழ்வது, உருவ  வழிபாடு   முதிர  முதிர  , நினைதற்குக் கருவியாகிய  சித்தவிருத்தி ஒடுங்கி , முடிவில்  மனோலய  சித்தி  உண்டாம் . மனம்  இறந்தநிலையில் , இறைவனுடைய  உண்மை  இயல்பை  உயிர்  உணர்ந்து  இன்புறுவதாகும் .  அவ்வுணர்வு  நிலை  நிர்க்குணோ பாசனை  ஆகும் . நிர்க்குண  உபாசனையை  அருவ  வழிபாடு  என்ப .ஆகவே  புறத்தும்  அகத்தும் வைத்துத்  திருவுருவ  வழிபாட்டில் தலைபடும்  அவ்வளவே  மனத்தால்  இயல்வதாகும் . இவ்வுண்மை  புலப்படவே , “செல்லும் எல்லை  சிந்தை  நினைப்பதாக “  என்றார். இறைவனது  உண்மை இயல்பை  மனம்  காண்டற்கு  இயலாது  எனக் கொண்டு  , இயன்ற  அளவு  திருவுருவை  நினைதற்கும் , அதனைச்  செல்லவிடாது  இருத்தல்  பெரும்  குற்றமாம்  என்ப.  இது  கருதியே , “செல்லும்  அளவும்  செலுத்துமின்  சிந்தையை “ என்பர்  திருமூலர் .

             அடிகள் , சிந்தை  தம்  வயத்தது  அன்றிச்  செல்லும்  இயல்புண்மை  குறித்தே,  “செல்லும்  எல்லை  சிந்தையால் நினைப்பேன் “  என்று  சிந்தையைக்  கருவியாகக்  கொண்டு  , தம்மை  வினை  முதலாகக்   கூறாமல் , “நினைப்பதாகச்  சிந்தை “ என, நினைத்தற்கு  வினை முதலாக  மனத்தையே  கூறுவார் ஆயினர் .  மனம்  தம் வயப்படாமல்  செல்லும்  நிலையிலும்  பழம்  நழுவிப்  பாலில்  வீழ்ந்தது  போல, அதன் செலவு  இறைவனைப்  பற்றியதாக  நேர்ந்தது, திருவருளாற்  பெற்ற  உதவி  என்பது  குறிப்பு .

             நூல்கள்  முகமாகக்  கேட்க்கப்பட்ட  செய்திகளே  பேச்சுக்கு  உரியன என்பது  தோன்ற , “சொல்லலாவ  கேட்பவே “ என்றார் . இது, “வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை”  என்பதற்கு  ஏதுவாகும் . இறையருளின்  அநுபவம் , பேச்சு  இறந்த  நிலை  ஆதலின்  வாக்கினாற் சிறிதும்  பயன்  இன்று  என்று  கூறப்பட்டது .  தினைத்தனை  = தினையளவு .  தினை  = சிறுமை குறிக்கும்  ஓர்  அளவை . ஏயவாக்கு = அக்  கேள்வியோடு  பொருந்திய  சொல் . செவிப்பொறி  வாயிலாகக்  கேட்கப்படுவன  எல்லாம்  ஓசை  என்னும்   புலன்  ஆதலானும் , அப் புலன்  உணர்வு  ஏதுவாக  வெளிப்படும்  சொற்களால்  மெய்யுணர்விற்குப்   புலன்  ஆகும்  இறை  இயலை  உணர  இயலாது. ஆதலானும் , “ஏய  வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை “என்றார் . இறவன்  உலகு  எலாம்  ஆகி  வேறாய்,  உடனும்  ஆய்  நிற்கும்  இம் மூவகை  நிலைகள்  உள்ளும் , வேறு  ஆதல் , உடன்  ஆதல் ஆகிய  இரண்டும்  பொறிகளால்  அறியப்படுவன  அல்ல, உலகு  எலாம் ஆகி  நிற்கும்  நிலை  அறியப்படுவது  ஆம்  அன்றோ?  அல்  அளவிலாது  ஐம்பொறிகளாலும்  நுகர்ந்து  இன்புறலாம்  எனின் ,  அதுவும்  இயலாது  என்பார், “அனைத்துலக  மாய  நின்னை ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார். “உலகெலாமாகி “ என்புழி, உலகம்  என்பது  உயிரை  உணர்த்தும்  .  கலப்பினால்  உடலின்  உயிர்போல அவ்வுயிர்களேயாய்  நிற்பன்  என்பது  கருத்து , இந் நிலையை  மாயா  காரியமாகிய  புறவுலகில்  வைத்து  எங்ஙனம்  அறிய  முடியும்  என்பது.  “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது” என்றபடி .  அனைத்து  உலகும்  அப் பெருமானால் ஆயது  எனினும் , அவற்றை  இயக்கி , அவற்றின்  உள்ளும்  புறமும்  எள்ளில்  எண்ணெய்போல  நிறைந்து  நிற்கும்  அவ் இறை  இயல்பை மெய்யுணர்வினால்  அன்றிப்  பொறிகளாற்  காண்டற்கு  இயலாது என்பார், “ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார் . ஈண்டுப்  புலன்  என்பது  பொறி  என்னும்  பொருட்டு , முதல்  அடியில்  , “வாக்கு”  என்றது செயற்  கருவியும் (கன்மேந்திரியம்) , ஈண்டு  ஐம்புலன்கள் என்றது , அறிவுக்கருவியும் (ஞானேந்திரியம்) ஆதலால், இவை  புறக் கருவிகளுக்கும் , மனம் அகக்  கருவிக்கும்  உபலக்கணம்  ஆகும்.  ஆகவே , உயிர்களின் அகப்  புறக் கருவிகளுக்கு இறைவன்  எட்டாதவன்  என்பது  தெளிவுறுத்தப் பட்டப்படியாம். 

                      இனி,  ஆண்டவனே  , நின்  இயல்பு  முற்றும்  அறிய  இயலாதது  ஆயினும்  , நின்  திருவடியின்  பக்கலாவது, அணுகலாம்  என்றால் , அத்  திருவடி, “பாதாளம் எழினுங்கீழ்  சொற்கழிவு  பாதமலர்”  என்றபடி , அதன்  அளவும்  முடிவு  இடனும் அளந்து அறியவொண்ணா என்பார். “பாதம்  எய்த அது  எனைத்து  எப்புறத்தது “  என்றார் . “எனைத்து  எனைத்து”  என்னும்  அடுக்கு  அடியின்  அகலத்தையும் , “எப்புறத்தது” என்பது  நீளத்தையும்  குறிப்பனவாம் .  இவ்வுண்மையை  , “அகலம் அளக்கிற்  பாரில்லா  அடி “  எனவும்,  “எழுவாயிறு  வாயிலாதன  ……… ஐயாறான்  அடித்தலமே “  எனவும்  போந்த  ஆளுடைய  அரசர்  அருண்மொழிகலானும்  உணரலாம் . “எந்தை”  என்பது  அண்மை விளி .

                         இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்து :  ஆண்டவனே, நின்  இயல்பு  ஞானேந்திரிய  கன்மேந்திரியங்களால்  அளந்து  அறிய  இயலாத  தொன்று ; மனத்தால்  நினைந்து  உணர  என்றாலோ  ஓர்  அளவில்  அன்றி  அது  செல்லாது .  நின்  திருவடியை  அணுகலாம்  என்றாலோ , அதன்  அகலமும்  நீளமும் அளப்பரியன.  ஆதலால்  நின்  திருவருள்  துணை  இன்றி  , உயிர்  முயற்சி  மாத்திரம்  பயன்  விளையாது  என்பது தெளியப்படுதலின் , நீயே  ஏழைக்கு  இரங்கி  அருளல்  வேண்டும்  என்று  அடிகள் கருதினார்  என்பது.

                           இதன்கண் , மனம் , வாக்கு , பொறி ,  புலன்கள்  யாவும்  இறைவனைக்  காண்டற்குப்  போதிய  ஆற்றல்  உடையன  அல்ல  என்றதனால், ஆண்டவன்  திருவருளே  துணையாக  நின்று , வீட்டின்பத்தில்  தலைப்  படுத்துவதாகும்  என்பது பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய   பொருள் புலனாதல்  அறிக.

                                          ********************************************

பாடல் : 77.

எய்த  லாவ  தென்று  நின்னை

யெம்பி  ரானிவ்  வஞ்சனேற்

குய்த  லாவ  துன்கண்  அன்றி

மற்றொ  ருண்மை  யின்மையின்

பைத  லாவ  தென்று  பாது

காத்தி  ரங்கு  பரவிபேயற்

கீத  லாது  நின்  கண்  ஒன்றும்

வண்ணம்  இல்லை  யீசனே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனை  அடைதற்குத்  தம்  மனம்  மொழி  முதலியவற்றால் இயலாமை  கூறுமுகமாக, அப் பெருமானே  இரங்கி  அருளல்  வேண்டும்  என்னும்  உட்கோளைக்  குறிப்பிற்  பெற  வைத்த  அடிகள், இத்  திருப்பாட்டில் , அவ்வுட்கோள்  குறிப்பை   ஏதுக்காட்டி  வற்புறுத்து  வெளிப்பட  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  எம்பிரான்  =  எங்கள்  ஆண்டவனே ,

நின்னை  எய்தலாவது  என்று  =  (யான்)  நின்னை  அடைந்து  இன்புறுதல்  எப்பொழுது? ,

இவ் வஞ்சனேற்கு  =  இவ்  வஞ்சனாகிய  எனக்கு  ,

உன்  கண்  அன்றி  உய்தல்  ஆவது  =  நின்  பற்றுக்கோடு  அல்லாமல்  உய்தி  கூறுதற்கு  ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  பிறிதொரு  மெய்யாகிய  பற்றுக்கோடு  இல்லாமையான் ,

பைதல்  ஆவது  என்று  பாதுகாத்து  இரங்கு  = (கை விடின்) துன்பம்  விளையும்  என்று  திருவுள்ளம்  கொண்டு  காப்பாற்றி  இரங்கி  அருள்வாயாக

ஈசனே   =   ஈசனே ,

ஈது  அல்லது  நின்  கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை  =

 இங்ஙனம்  நீயே  இரங்கி  அருளுதல்  ஆகிய  இஃது  அல்லாமல்  நின்  திருவடி  நீழலில்  இயையும்  வகை  பிறிது  இல்லை  என்பது.

விளக்கவுரை :-   எம்மை  ஆட்கொள்ளும்  தலைவன்  என நின்னை  முன்னரே  தெளிந்துளேன்  என்பார், “எம்பிரான் “ என்றனர் .  எய்தல் –  அல்லீற்றுத்  தொழிற்  பெயர்.  ஆண்டவன்  உருக்கரந்த  நிலையில்  , அப்பிரிவு  பொறாது , அடிகள்  உள்ளம்  வருந்தி , அவ் விறைவனை  அடய  விரைதலின், “ எய்தலாவது  என்று  நின்னை”  என்றனர் .  எய்துதல்  ஆகிய  வினையையும் , என்று  எனக்  காலக்  குறிப்பையும்  செயப்படுபொருளாகிய  நின்னை  என்பதற்கு முன்னர்க் கூறியது, அடயப்படும்  பொருள் துணியப்பட்டமை  யானும் , ஏனை  இரண்டும்  அங்ஙனம்  துணியப்படாமையானும் , துணிந்த  பொருளில்  அமைதியும் , துணியப்படாதவற்றில்  விரைவும்  தோன்றியமையான்  என்க .

                     “இவ் வஞ்சனேற்கு “ என்புழிச்  சுட்டு  இழிவு  குறித்து  நின்றது .  “உன்  கண்”  என்புழி ,  கண்  –  பற்றுக்கோடு  என்னும்  பொருட்டு , “  உன்  கண்  அன்றி”  என்னும்  தொடர்க்கு, உன்  பற்றுக்கோடு  அல்லாமல்  என்பது  பொருளாயினும், பற்றுக்கோடு  உன்னையன்றி  என்பது  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .  உண்மை  என்பது  ஆகு  பெயராக  நின்று,  பற்றுக்கோடு  என்னும் பொருளை  உணர்த்தும் .  உலக  வாழ்க்கைக்கு  ஆதரவாகக்  கருதப்படுவன  பல  உள. அவை  எல்லாம்  எடுத்த  உடம்பு  பற்றி  உண்டானவை  ஆதலின் , அவ்வுடல்  ஒழிவில் ஒழிந்துவிடும்  இயல்பினவாம்.  “தந்தை  தாய்  தமர்தார  மகவெனுமிவை   யெலாஞ்  சந்தையிற்  கூட்டம் “  என்பர்  தாயுமானார். ஆதலின்,  உயிர்க்கு  உறுதி  பயக்கும்  உண்மையான  பற்றுக் கோடாக  வுள்ளவன்  ஆண்டவன்  ஒருவனே  என்பது  தெளிவு.  இத்  தெளிவு  கைவரப்பெற்றவர்  அடிகள்  ஆதலின் , “மற்றொருண்மையின்மையின் “ என்றார் . பாது காத்திரங்கு”  என்பதற்கு  இஃது  ஏதுவாகும் .  “பாதுகாத்திரங்கு”  என்பதை, இரங்கிப்பாதுகாத்து  அருள வேண்டும்  எனக்  கொள்ளல்  வேண்டும்.   பாதுகாத்தல்  –  பேணிக்காத்தல்.  பைதல்  –  துன்பம் .   ஆண்டவனே,  நின்னை  யன்றி  என் உயிர்க்கு  உண்மையான  பற்றுக்கோடு  பிறிது  இல்லாமையால், நீயே  என்னை  மீண்டும்  பிறவாமல்  விரைந்து  பேணிக்  காத்தருளல்  வேண்டும் .  புறக்கணிப்பாய்  ஆனால் , பிறப்பினால்  விளையும்  துன்பத்திற்கு  ஆளாவேன் .  அத்  துன்பம்  உண்டாம்  என்பது  திருவுள்ளம்  அறியுமே  என்று  அடிகள்  விண்ணப்பம்  செய்துகொள்வாராய்,  “பைதலாவதென்று  பாதுகாத்திரங்கு  “  என்றார்.  ஈண்டுப்  பாவியேன்  என்றது  துன்ப  விளைவிற்கு  ஏதுக்  காட்டியபடியாம் . 

                        உயிர்களின் முயற்சியும்  தவமும்  ஆண்டவன்  அருள்  அமுதத்தை நிறைவித்துக்  கொளுதற்குத்  தம்  உள்ளமாகிய  கொள்கலனைத்  தூய்மைப்  படுத்துக்கொள்ளும்  அவ்வளவே  பயன்  செய்வனவாம் .  வீட்டின்பப்பேற்றிற்கு  ஆண்டவன்  கருணையே  சிறந்த  காரணம்  ஆகும். இவ்வுண்மை  கருதியே, “ஈதலாது  நின்கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை”  என்றார். ஈது  என்பது  இறைவன்  கருணையைச்  சுட்டும் .  ஒன்றுதல்  –  இரண்டறக்கலத்தல் ;  வீட்டு  நிலையைக்  குறிப்பதாகும்.

                        இத்  திருப்பாட்டில், எய்துதல் , உய்தல் , ஒன்றுதல் , என்னும்  மூன்று  செயல்கள்  உயிர்க்கு  வேண்டுவன  என்று  கூறப்பட்டன .  எய்துதல் –  அரிய  தவம்  கிடந்து,  இறைவன்  பக்கல்  அடைந்து  ,  சிவத்  தொண்டில்  தலைப்படுதல்.  உய்தலாவது,  இறைவன்  அகத்தும்  புறத்தும்  வைத்து  வழிபட்டுக்  கட்டறுத்துச்  சிவப்பேற்றிற்கு  உரிய  தூய்மை  பெறுதல்.  ஒன்றுதலாவது  ,  இறைவனோடு  இரண்டறக்  கலந்து   சிவானந்தத்தில்  திளைத்தல்  .  இம்  மூன்றனுள் , எய்துதற்குச்  சரியையும்  , உய்தற்குக்  கிரியை  யோகங்களும்  , ஒன்றுதற்கு  ஞானமும்  சாதனங்களாம் . எய்துதற்குக்  கலதத்துவமாகவும்  , உய்தற்குப்  பற்றுக்கோடாகவும்  , ஒன்றுதற்கு  அருள்  உருவம்  ஆகவும்  நின்று  ஆண்டவன்  உபகரிப்பன்  என்பதும்  இத்  திருப்பாட்டிற்  பெறப்பட்டவாறு  அறிக. 

                         இதன்கண்,  எய்தல் , உய்தல் , ஒன்றுதல் ஆகிய  செயல்கள்  படிமுறையிற்  கூறப்பட்டு  இருந்தாலும் , முடிவாகக்  கூறப்பட்ட  ஒன்றுதலால்  இன்பத் தோய்வு  உண்டாம் என்பது  பெறப்படுதலானும்,  ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றுதல் அறிக. 

                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடல் :78.

ஈச  னேநீ  யல்ல  தில்லை

யிங்கும்  அங்கும்  என்பதும்

பேசி  னேனோர்  பேதம்  இன்மை

பேதை  யேனென்  எம்பிரான்

நீச  னேனை  யாண்டு  கொண்ட

நின்ம  லாவொர்  நின்னலால்

தேச  னேயோர்  தேவ  ருண்மை

சிந்தி  யாது  சிந்தையே.

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்   இறைவன்  திருவடிக்கண்  இயைந்து  இன்புறுதற்கு அப் பெருமான்  திருவருள்  துணைபுரியின்  அல்லது  உயிர்  முயற்சியளவில்  இயலாது  என்பது  கூறப்பட்டது. அங்ஙனமாயின் , உயிர்  முயற்சியாக  , “வாழ்த்தவாயும்  நினைக்க  மட  நெஞ்சும்  “  தந்த  இறைவனைக்  குறித்து , உயிர்  செய்யத்தக்க  கடமைகள் வேண்டாவோ  எனின்  , “ என் கடன் பணி செய்து கிடப்பதே”  என்றபடி  . உயிர்  தூய்மை  எய்துதற்கு மன மொழி மெய்கள் இடையறாது  இறை  பணியில்  தலைப்பட  வேண்டும்  என்பது  இத் திருப்பாட்டில்  கூறப்படுகின்றது .

பதவுரை :-   ஈசனே  இங்கும்  அங்கும்  நீ  அல்லது  இல்லை  யென்பதும்  =  ஈசனே, இம்மை உலகத்தும்  மறுமை  உலகத்தும்  தலைமைப்  பொருள்  நீ  அல்லாமற்  பிறிதொன்று  இல்லை  என்பதையும் ,

பேதம்  இன்மை  =  உயிர்  வேறுபாடற்கு  ஒன்றும்  வீட்டு  நிலையையும் ,

ஓர்  பேதையேன் பேசினேன்  =  ஓர்  அறிவிலியாகிய  யான்  பாராட்டிப்  பேசியது  உண்டு,

என்  எம்பிரான்  =  எனக்குச்  சிறப்புரிமை  உடைய  எங்கள்  தலைவனே ,

நீசனேனை  ஆண்டுகொண்ட  நின்மலா  =  இழிந்தவனாகிய  என்னை  ஆளாகக்கொண்ட  தூயோனே ,

தேசனே   =   பேரோளிப்  பிழம்பாக  வுள்ளவனே  ,

ஓர்  நின்  அல்லால்  =  ஒப்பற்ற  நின்னையல்லாமல் ,

ஓர்  தேவர்  உண்மை  =  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்றன்  உண்மையே  ,

சிந்தை  சிந்தியாது  =  என்  மனம்  நினையாது  என்பது.

விளக்கவுரை :-    “நீ  அல்லது  இல்லை”  என்புழி , இல்லை  என்னும்  முற்றிற்கு  வினை  முதலாக  ,  ஈசத்துவம்  உடைய  பிறிதொரு  பொருள் என்று  கோடற்கு, “ஈசனே”  என்று  அழைக்கலாயினர். நீயே  உள்ளாய் என்று  கூறுதலினும் , “ஆல்லது  இல்லை “ என்றது, தெளிவின்  துணிவை  வலியுறுத்துவதாகும் .  இம்மை , மறுமை ,வீடு  என்னும்  மூன்றனுள், முன்னைய  இரண்டும்  உலக நிலையாகக்  கொள்ளப்படுதலின்,  ஆண்டு  உள்ள  உயிர்த்தொகுதிகளை  ஆளும்  தலைமைத்  தன்மை  சிவபெருமானுக்கே  உள்ளது  என்பது , “நீ  யல்லது  இல்லை” என்பதனால்  தெளிவுறுத்தப்பட்டபடியாம் . இம்மை  மறுமை  என்னும்  இரண்டையும்  கடந்த  வீட்டு  நிலையை , “பேதம்  இன்மை” என்னும் தொடராற்  புலப்படுத்துள்ளார் . பேதம்  –  வேறுபாடு ;  இறை , உயிர் என்னும்  இரண்டையும்  பற்றியது , உயிர் , கட்டொழிந்த, திருவருள்  சார்பாக  இறையடி  நீழலில்   இரண்டறக்கலந்து  இயைதலையே , “பேதம்  இன்மை “ என்னும்  தொடர்  குறிப்பதாகும் . ஆகவே, இம்மை மறுமைகளை, “ இங்கும்  அங்கும்  “  என்னும்  சொற்களாலும் , வீட்டு  நிலையை , “ பேதம்  இன்மை” என்னும் தொடராலும்  புலப்படுத்து  அருளினார்  என்பது .

              வீட்டு  நிலையைக்  கூறிய இடத்து, மெய்யன்பர்  எல்லோர்க்கும்  தலைவனாயினும் , தமக்குச்  சிறப்புரிமை  தோன்ற , “என்  எம்பிரான் “  என்று  அடிகள்  முறிப்பிட்டது , இம்மை  மறுமைப்  பிறவி  ஒழித்து,  வீட்டு  நிலை  எய்தும்  விருப்பம்  தமக்கு  விஞ்சி  நிற்றலான் என்க. “ பேதம்  இன்மையும்”  என்புழி ,  எண்ணும்மை  தொக்கு  நின்றது. அடிகளுக்கு  இம்மைப்பயனாகிய  புகழினும் , மறுமை  இன்பம்  ஆகிய  இந்திரன்  முதலியோர்  பதங்களினும்  விருப்பம்  இல்லை  என்பதை  , “வேண்டேன்  புகழ்”  என்பதனாலும், “கொள்ளேன்  புரந்தரன்  மாலயன்  வாழ்வு”  என்றமையானும்  நன்கு  உணரலாம் . “நன்றறிவாரிற்  கயவர்  திருவுடையர்  “  என்புழி , நன்று  என்பதற்கு  , “இம்மை ,மறுமை , வீடுகட்கு  உரியவாய  புகழ் , அற ஞானங்கள்” என்று  பரிமேலழகர்  கூறிய  உரை  நயம்  ஈண்டுக்  கருதற்பாலது. புகழை  வேண்டாமையால்,  இம்மை  விருப்பம்  இன்று  என்பதும் , அறத்தை  மறுமை  நோக்கு  இன்றிச்  சிவ  புண்ணிய  நோக்காக  மேற்கொண்டமையின் , மறுமை  விருப்பமும்  இன்று  என்பதும்  போதரும் .  யான்  ஓர்  அறிவிலி  ஆயினும்  , இம்மை , மறுமை , வீடுகளைப்பற்றிய  செய்திகளையும் , அம் மும்மைக்கும்  உரிய  தலைவன்  நீயே  என்பதையும் , மறை  ஆகமங்களின் வாயிலாக  அறிந்து  பேசுதலாகிய  மொழிப்பணியை  மேற்கொண்டுள்ளேன்  என்பார், “ஓர்  பேதையேன் பேசினேன்” என்றார் .  “பற்பல பொருளாய்  உள்ள  பாசமும்  அதனை  மேவி , உற்பவ பேதமான  உடம்புயிரொடுங்குமாறும் , அற்புத  புத்தி முத்தியளித்தருளாலே  மேலாந் , தற்பரனடாத்து  மாறும்  உணர்ந்தனர்  சைவ  நூலில்”  என்று  அடிகள்  வரலாறு  கூறுதலும்  ஈண்டுக்  கருதற்பாலது .  அடிகள், மெய்யன்பு  நிறைவும் , ஆண்டவன்  அருள் பெறுதற்கு  உரிய  பக்குவ  முதிர்ச்சியும்  நன்கு  உடையவரே  யாயினும் . அவர்  தம்மை  ஆண்டவன்  முன்னிலையில்  யாவர்க்கும்  கீழாம்  அடிமை  இயல்பு  தோன்ற , “நீசனேனை” என்றார்.  அவர்  அங்ஙனம்  கூறியது  கொண்டு , நாமும்  அங்ஙனம்  கருதல்  ஆகாது, ஆண்டவன்  முன்னிலையில்  ஓர்  அடிமை  எப்படிப்  பேச  வேண்டும்  என்பதை , அம்முறையில்  வைத்து  அறிந்து  கொள்வதே  அறிவுடைமை  ஆகும்  என்க.  ஆண்டுகொண்ட  என்பதற்கு , ஆளாக  ஏற்றுப்  பணிகொண்ட  என்பது  பொருள்  ஆகும் . நோயுடை  ஒருவனுக்கு , அந்  நோய்  நீக்க  நோய்த்தொடர்பு  இல்லாத மருத்துவனே  வேண்டும் . மற்றொருவன்  கண்ணுக்கு  அறுவை  மருத்துவம்  செயப்புகுவோன் , தன்  கண்ணிலும்  படல  நோய்  உடையனாயின் , எங்ஙனம்   செய்யக்  கூடும் .  அங்ஙனமே  ,  பாசப்பிணிப்பு  ஒரு  சிறிதும்  இல்லாத ஆண்டவனே  , அப்  பிணிபுடைய  என்னை  ஆட்கொண்டான்  என்பார் , இறைவனை , “நின்மலன் “  என்றும்  ,  தம்மை  , “நீசன்”  என்றும்  கூறுவாராயினர் . நின்மலன்  –  அழுக்கற்றவன் ;  இயல்பாகவே  பாசங்களினீங்கினவன்  என்றும்  பொருட்டு.  நீசன்  –  பாசப்பிணிப்பால்  இழிந்தவன்  .  “ஆண்டு கொண்ட”  என்றதனால் , தொண்டு  மெய்தலாகிய  செயப்பணி  உடைமையும்  பெறப்படுவதாகும்.  இனி,  உள்ளப்  பணியைக்  குறிப்பிடுவாராய் , “ஓர்  நின்  அல்லால் ……….. ஓர்  தேவர்  உண்மை  சிந்தியாது  சிந்தை “  என்றார் . ஓர்  இரண்டனுள்  ,  முன்னது  ஒப்பற்ற  என்னும்  பொருள்  உடையது. , பின்னது  ஓர்தல்  என்னும்  தொழிற்  பெயரின்  விகுதி  குன்றி, “ஓர்  தேவர்”   என  வினைத் தொகையாக  நின்றது.  ஓர்  தேவர்  உண்மை  என்பது,  நூலறிவானும் , அநுபவ உணர்வானும்  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்று  உள்ளதாக  என்னும்  பொருளது . மனம்  பிறிதொன்றைச்  சிந்தியாது  என்றாதனால் , உள்ளப்பணி  புலப்படுக்கப்பட்டவாறாம் .  நின்னையல்லாமல்  என்றவிடத்து , “தேசனே”  என்ற  விளி  கொள்ளப்பட்டது. தேசன்  –  ஒளி  வடிவினன் .  மற்றைத்  தேவரும்  ஒளியுடம்பினர்  ஆதலின் , அவ்  வொற்றுமையால்  அன்னாரையும்  பரம் பொருள் எனக்  கருதுவாரும்  உளர் எனக்  கொண்டு , என்  உள்ளம்  பேரொளிப்  பிழம்பாக  உள்ள  நின்னை  அன்றி  வேறு  கருதாது  என்னும்  குறிப்புத் தோன்ற  நின்றது, “தேசன்”  என்னும்  அவ்  விளிச்  சொல்  என்க .

                இத்  திருப்பாட்டில் , அடிகள்  தம்  மன  மொழி  மெய்கள்  இறைபணியில்   தலைப்பட்டிருத்தலைக்  குறிப்பிட்டிருப்பதால்,   உயிர்  முயற்சியிற்  குறைவின்று  என்பதும்,  இனி,  ஆண்டவன்  திருவருட்  பதிவுதான்  வேண்டுவது  என்பதும்  குறிப்பெச்சமாகக்   கொள்ளக்  கிடப்பனவாம் .

                 இதன்கண், ஆண்டவனைக்  குறித்து ,  என்  அகப்  புறக்  காரணங்கள் நின்னையே  பற்றி  நிற்பன  என்று  அடிகள்  கூறி  இருத்தலின், உயிர்  தூய்மை  நிலை  எய்தியதும்  , திருவருட்பேற்றை  எதிர்பார்த்து  இருத்தலும் , அப் பேறு  காரணமாக  வீட்டின்பத்தில்  தலைப்படலாம் என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக . 

                                               *****************************************

பாடல் :79 .

சிந்தை  செய்கை  கேள்வி  வாக்குச்

சீரில்  ஐம்பு  லங்களால்

முந்தை  யான  காலம்  நின்னை

யெய்தி  டாத  மூர்க்கனேன்

வெந்தை  யாவி  ழுந்திலேன்  என்

உள்ளம்  வெள்கி  விண்டிலேன்

எந்தை  யாய  நின்னை  யின்னம்

எய்த  லுற்றி  ருப்பனே  .

கருத்துரை :-   உயிர்  எய்தும்  தூய்மைக்கு  , மன  மொழி  முதலிய  அகப்புறக்  கரணங்கள்  எல்லாம்  இறைபணியில்  தலைப்படவேண்டும்  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  கூறிய  அடிகள் , அக்கரணங்கள்  அவ்வாறு  பண்டைப்பிறப்பில்  தலைப்படாமையால்  , அத்  தூய்மையும்  திருவருட்  பதிவும்  பெறாமல் , இப்பிறப்பிலும்  வீட்டின்பப் பேறு  குறித்து  உயிர்வாழ்ந்து  இருக்கலானேன்  என்று  இரங்குகின்றார் . 

பதவுரை :-    சிந்தை  செய்கை  கேள்வி  வாக்கு  சீர்  இல்  ஐம்புலன்களால்= 

மனம்  செயல்  கேள்வி  மொழி என்னும்  இவற்றாலும்  சிறப்பில்லாத  ஐம்பொறிகளாலும்  ,

முந்தையான  காலம்  =  பழமையான  காலத்தில் ,

நின்னை  எய்திடாத  மூர்க்கனேன்  =  நின்னை  அடையப்பெறாத  அறிவிலியாகிய  யான் ,

வெந்து  விழுந்திலேன்  =  தீயில்  வீழ்ந்து  வெந்திலேன்,

என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்  =  என்  மனம்  நாணி  உடையப்பெற்றேன்  இல்லை ,

எந்தை  ஆய  நின்னை  =  என்  தந்தையாகிய  நின்னை  ,

இன்னம்  எய்தல்  உற்று  இருப்பேனே  =  இன்னமும்  அடைதற்கு  விருப்பமுற்று  வாழ்ந்து  இருக்கலானேன்   என்பது . 

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட்பேறு  குறித்து, உயிர்கள்  மேற்கொள்ளும்  தவங்கள், சிந்தை  முதலியவாக  இங்கே  கூறப்பட்ட  அகப்புறக்  கரணங்களால்  நிகழ்வனவாம் .  இக் கருவிகள் எல்லாவற்றுள்ளும்  மனமே  சிறந்ததாகும் .  மனம்  இல்வழி  , நிகழும்  செயல்  முதலியவெல்லாம்  பயன்  விளைப்பன  ஆகா, மன  மொழி  மெய்களாகிய  முக்கரணங்களுள்  , மொழிப்பணி    ஒருவற்குப்  பிறர்கூறக்   கேட்டலும்  , தான்  கூறலும்  என  இருதிறப்படும்  ஆதலின்,  “கேள்வி  வாக்கு”  என்றார்.  ஐம்புலங்களால்  என்புழி  ஆல்  என்னும்  மூன்றனுருபைச்  சிந்தை  முதலியவற்றோடும்  இயைந்து , எண்ணும்மைகளை  விரித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும்.  சிந்தையால்  ஆண்டவன்  திருவுருவை  நினைவு  கூர்தலும், உடற்செயல்களால்  தொழுதல் , வணங்குதல்  முதலியன  செய்தலும் , இறைவன்  புகழ்  மொழிகளைப்  பிறர்   கூறக்  கேட்டலும் , அவற்றை நாவாரப் பாராட்டிக்  கூறலும்  ஆகிய  இவை  முக்கரணங்களாலும்  நிகழும்  தவச் செயல்களாகும் .  இத்  தவ  முயற்சி  உடையார்க்கு  , ஐம்பொறிகளின்  வாயிலாக நுகரப்படும்  புலன்கள்  எல்லாம்  சிவமயமாகவே  நிகழும்  என்பது   பெரியார்  அநுபவத்திற்  கண்டது .  இந் நிகழ்ச்சி  சித்தம்  சிவமாகப்  பெற்றோர்க்கு  அன்றி , மற்றையோர்க்கு  இயல்வது  அன்று,  ஐம்பொறிகளின்  வாயிலாக  உலகியற்  புலன்களை  நுகர்தற்கே   மனம்  செல்லும்  இயல்பினதாகும்.   அவ் வியல்பை , அறிவினால்  தடைப்படுத்துத்  தன்வயம்  ஆக்கல்  வேண்டும் . அஃது  அரிதிற்  செயர்பாலதாகும் . 

                   உலகியற்  பொருள்களைப்  பற்றிக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்ற.றியும்  ஐம்புலங்களின்  இயல்பு  குறித்தே, “ சீரில்  ஐம்புலன்கள்” என்று  கூறப்பட்டன .  இவ்  ஐம்புலன்களையும்  சிவமயமாகக்  கண்ட   பெரிய  அன்பின்  வரகுண  தேவர்  வரலாறு  ஈண்டுக்  கருதத்தக்கது .  உதிர்ந்து  கிடந்த  வேப்பங்கனிகளைச்  சிவலிங்க  வடிவமாகக்  கண்டதும் , நீர்  நிலையில்  உள்ள  தவளைகளின்  ஒலியை  ஈசனைப்  பாடினதாகக்  கேட்டதும்  முதலிய  சிவாகாரமான   புலன்  நுகர்ச்சிகளைத்  திருவிடைமருதூர்  மும்மணிக் கோவையில்  ,   “காம்பவிழ்ந்  துதிர்ந்த   கனியுருக்  கண்டு , வேம்புகட் கெல்லாம்  விதானம்  அமைத்தும்  , குவளைப்  புனலிற்றவளை  யாற்ற , ஈசன்றன்னை  யேத்தினவென்று , காசும்   பொன்னும்  கலந்து  தூவியும்”  என்பன  முதலியவாகப்  பட்டினத்து  அடிகள்  கூறியவற்றான்  உணரலாம். இங்ஙனம்  வரகுண  தேவர்  சிவாகாரமாகப்  புலன்களை  நுகர்ந்ததோடு  அமையாது , உலகியற்  பொருள்  மூலமாக  நுகரப்படும்  ஐம்புலன்களையும்  தமக்கு  எனக்  கொள்ளாமல் , சிவார்ப்பணம்  செய்தனர்  என்பதும் ,” விரும்பின  கொடுக்கை  பரம்பரற் கென்று , புரிகுழல்  தேவியைப்  பரிவுடன்  கொடுத்த , பெரிய  அன்பின்  வரகுண தேவரும்” என்னும்  அப்பாடற்பகுதியான்  அறியலாம் .  ஒரு  சிவஞானி, உலகியலில்  நுகரப்படும்  ஐம்புல  இன்பங்களைச்  சிவார்ப்பணம்  செய்யவேண்டும்  என்பது , சிகார  முதலாக  வைது  ஓதப்படும்  திருவைந்தெழுத்தின்  பொருளாக, அப்பைய  தீக்கிதர் , சிவார்ச்சனா  சந்திரிகையில்  விளக்கி  இருந்தலாலும்  அறியத்தக்கது. சிவாய  நம ;  என்பதற்கு  ,  நுகர்  பொருள்  எல்லாம்  சிவனுக்கே ; எனக்கு  இல்லை என்பது  அவர்  விளக்கிய  பொருள்களில்  ஒன்று.  இங்ஙனம்  உலகியல் பற்றிய  ஐம் புலன்களையும்  இறைவனுக்குச்  சமர்ப்பித்து  விட்டுச்  சிவமயமாக  அப்புலன்களை  மாற்றிக் கொள்ளுதலே  ஐம்புலன்களால்  இறைவனை  அடைதல்  ஆகும்  என்பது .

                 முந்தையான  காலம்  — பண்டைப்  பிறப்புக்களைக்  குறிப்பதாகும்  . பழம்  பிறப்புகளிற்  சிந்தை  முதலிய  கரணங்களால்  இறைவனைப் பற்றியிருந்தால், இப்  பிறப்பில்  திருவடி  இன்பம்  எளிதில்  கிடைத்திருக்கும்  என்பதும் , அங்ஙனம்  பற்றி  ஒழுகாமையால்  இப்  பிறப்பில்  அரிதாகின்றது  என்பதும்  அடிகள்  கருத்து. பண்டைப்  பிறப்புகளில்  உண்மைப்பொருள்  இன்னது  எனத்  தெளிந்து  , சாதனங்களை  மேற்கொள்ளுதற்கு  உரிய  அறிவு  கைவரப்  பெற்றிலேன்  என்பார்,  தம்மை  “மூர்க்கனேன்”  என்றார்.

                    “வெந்து  விழுந்திலேன்”  என்பதை, விழுந்து  வெந்திலேன்  என  மாற்றிக் கொள்ளல் வேண்டும் .  வெந்திலேன்  என்றமையால் , வீழ்தற்கு   இடன்  தீ  ஆயிற்று  என்க . எல்லாக்  கரணங்களுக்கும்  மூலமாக  வுள்ள  மனம் , இறைவனைத்  தானும்  பற்றி, மற்றைக்  கரணங்களையும்  செலுத்த  வேண்டிய  கடமை  உள்ளதாகவும் , அக்  கடமை  செய்யாமை  பற்றி  நாணம்  எய்த  வேண்டும்  என்பதும், அக்  கடமைக்கு  மாறாக , உலகியலில்  தானும்  சென்று, மற்றைக்கரணங்களையும் செலுத்திக்  கேடு  விளைத்தலின் , உடைந்து  அழிதல்  வேண்டும் என்பதும்  கருத்து.  அங்ஙனம்  மனம்  நாணமுற்று  அழியாமல்  இருக்கப்பெற்றேன் என்று  இரங்குவார் , “என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்” என்றார்.  உடலை  நெருப்பில்  வீழ்த்தற்கு , உற்பணியாகிய  தொழுதல்  , வணங்குதல் முதலியன  செய்யாமையும் , உள்ளம்  வெள்கி  விள்ளுதற்கு , நினைவு கூர்தலாகிய  உள்ளப்  பணி  புரியாமையும்  ஏதுக்களாம். உடல் வீழ்ச்சியையும் , விள்ளுதலையும்  பற்றி  இங்ஙனம்  கூறியது .  புறக்கரணமும்  அகக்கரணமும்  உரிய  கடமைகளுக்குப்  பயன்படாமை  குறித்துச்  செய்யப்படும்  கழுவாயாம்  என்பது .

                    “எந்தையாய நின்னை” என்றதனால், ஒரு குழந்தை தன்  தந்தையை அணுகுதற்கு  இத்துணை  இடர்ப்பாடு  நேரலாமா என்பது குறிப்பு. ஆண்டவனே , நின்னை  இன்னமும்  அடையலாம் என்னும்  ஒரே  குறிக்கோள்பற்றிய   அவாக்  காரணமாகவே  இவுடலைத்  தீயில்  வீழ்த்து  இறவாமல் உயிர்  வாழ்ந்து இருக்கலானேன்  என்பார், “நின்னையின்னம்  எய்தலுற்றிருப்பனே “  என்றார்.

                    இதன்கண், மன முதலிய  கரணங்களால் பண்டு  நின்னை  அடைந்திலேன் என்று  அடிகள் இரங்கிக்  கூறியிருத்தலின்  ,  பல  பிறப்புகளில்  இறை  பணியில்  தலைப்பட்டு  ஒழுகுதலே  அழிவில்  இன்பம்  நுகர்தற்குச்  சாதனம் ஆகும்  என்பது  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “எந்தையாய  நின்னை  இன்னம்  எய்தலுற்றிருப்பன் “  என்றதனால்  பத்தியும் , “வெந்தையா  விழுந்திலேன்” என்றதனால் , வைராக்கியமும்  அறியப்படுதலின்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                           **************************************************

பாடல் : 80 .

இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை

ஆண்டு  கொண்ட  நின்னதாட்

கருப்பு  மட்டு  வாய்ம  டுத்தெ

னைக்க  லந்து  போகவும்

நெருப்பும்  உண்டு  யானும்  உண்டி

ருந்த  துண்ட  தாயினும்

விருப்பம்  உண்டு  நின்கண்  என்கண்

என்ப  தென்ன  விச்சையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் பண்டைப்  பிறப்பில்  தம்  கரணங்கள்  இறை  பணியில்  தலைப்படாமையால்  திருவருட்  பதிவு  பெறாமைக்கு  இரங்கிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  முன்னைத்  தவம்  இல்லாத  நிலையிலும், ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்டு , இன்ப  நிலையில்  இயல்பு  உணர்த்தினமையை அறிந்தும் , அப் பெருமான்  பிரிவைப் பொறுத்து, உயிர்  வாழ்ந்து  இருக்கலானேனே  என்று  இரங்குகின்றார் .

பதவுரை :–  இரும்பு  நெஞ்ச வஞ்சனேனை  =  இரும்பு  போன்ற  வலிய  நெஞ்சத்தை  உடைய  வஞ்சனாகிய  என்னை ,

ஆண்டு  கொண்ட  நின்னதாள்   =  ஆட்கொண்டு  அருளிய  நின்னுடைய  திருவடிகள்,

கரும்பு  மட்டு  வாய்மடுத்து =  கருப்பஞ்சாறு   போன்ற  அருள்  அமுதத்தை  உண்பித்து,

எனைக்  கலந்து  போகவும்  =  என்  உயிரிற்  கலந்து  பிரிந்து  செல்லவும்,

நெருப்பும்  உண்டு  =  தீயும்  உள்ளது ,

யானும்  இருந்தது  உண்டு  =  சிறியேனும்  உயிருடன்  இருந்தது  உண்டு ,

உண்டது  உண்டு  =  நல்ல  உணவுகளை  வயிறார  உண்டதும்  உண்டு ,

ஆயினும்  =  அங்ஙனம்  உண்டு  உயிருடன்  இருந்தும்  ,

நின்கண்  என்கண்  விருப்பும்  உண்டு  என்பது  =  நின்னிடத்து  எனக்கு  அன்பும்  உளது  என்று  கூறுதல் ,

என்ன  விச்சை  =  என்ன  மாய  வித்தையோ?  என்பது .

விளக்கவுரை  :-  அன்பினாற்  குழைந்து, இறைவனை  நினையாமையால் , “இருப்பு  நெஞ்சம்”  எனப்பட்டது. இரும்பு  கரும்பு  என்பன  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றன .  நெஞ்சம்  குழையாமையால் , அதனாற்  பெறும்  பயன்  இழக்கப்பட்டதாகும்  அன்றித்  தீங்கு  விளைதற்கு  இடன்  இன்றாம் .  “நல்லது  செய்தல்  ஆற்றீராயினும் , அல்லது  செய்தல் ஒப்புமின் “  என்றபடி , இருப்பு  நெஞ்சம்  படைத்த  அவ்வளவில்  நல்லதே ; அம்மட்டில்  அமையாது , வஞ்சித்தலாகிய  தீமை  பயக்கும்  குணமும்  உடையனாயினேன்  என்பார். “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை”  என்றார் .  நெஞ்சத்திற்  குழைவு  இன்மையால், நன்மையின்மையும் , வஞ்சம்  கலந்தமையால்  , தீமை  உண்மையும்  பெறப்படும்  என்க . அத்தகைய  தீயவன்  என  அடிகள்  தம்மைக்  கூறிக் கொண்டமையாலும்  , அஃது  உணர்ந்தும் , இறைவன் , கருணை  காரணமாகத்  தம்மை  ஆட்கொண்டு  அருளினன்  என்றமையாலும் , ஆண்டான்  அடிமைத்திறத்தில் அடிமை  இயல்பு  பிழைபட்டது  என்றும், ஆண்டான்  இயல்பு  மிகச்  சிறந்தது  என்றும்  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் .  “நின”  என்புழி.  அகரம்  ஆறாம் வேற்றுமைப்பன்மை  உருபு  ஆகும் ; விரித்தல்  விகாரத்தால்   “நின்ன”  என்று  ஆயிற்று  .தாள் , கலந்து போதற்கு வினை முதலாகும்.

                         மட்டு  –  சாறு.  கருப்பு  மட்டு , அடையடுத்த  உவம  ஆகுபெயராக, நின்று  , அது  போன்ற  இனிமைச் சுவைமிக்க  திருவருள்  அமுதத்தை  உணர்த்துவதாகும்.  உவமம்  உயர்ந்ததாக  இருக்க  வேண்டும்  என்னும்  விதி  பிழைபடுகின்றதே எனின்,  உலகியற்  பொருள்களுள்  இனிமைச்  சுவையிற்  சிறந்தது  ஆதலானும் ,  ஈடும்  எடுப்பும்  இல்லாத  தெய்விகப்  பொருளுக்கு  எடுத்துக்காட்டப்  பிறிதொன்று  இல்லாமையானும் , ஓர்  அளவு  சுவை  இனிமை  ஒப்பு  நோக்கிக்  “கருப்பு  மட்டு” என்றார் . வாய்  மடுத்தல்  –  வாயுட்  கொள்ளல் ; உண்டல் . வாய்  மடுப்பித்து  என்பது , பிறவினை  விகுதி  குன்றி  வாய்மடுத்து  என்று  ஆயிற்று.  நின்தாள்  மடுப்பித்து,  என்னைக்  கலந்து  போகவும்  என்று  ஆம் .  நின்  –  திருவடி  அருள்  அமுதத்தை  உண்ணச்செய்து , என்னைக்  கலந்து  பிரிந்து  செல்லவும்  என்பது  பொருள் . இறைவன்  தாளை  அருட்சத்தி  என்று  ஆகமங்கள்  கூறும் . தாள்  கலத்தலாவது , உயிரிற்  சிவசத்தியாகிய  ஞான  ஒளி விரவுதல்  ஆகும்.  இறைவன் , யான்  தகுதியற்றவன்  என்பதை உணர்ந்தும் , தன்  அருட்குணமாக  என்னை  வலிய  ஆட்கொண்டு  , தன்  அருள்  அமுதத்தைத்  துய்ப்பித்து , தன்  அருள் ஒளியை  என்  உயிரில்  விரவச்  செய்து  நெடிது  நில்லாது  பிரிந்து  செல்லவும் , யான்  உடலைப்  பேணிப்  பொறுத்து  இருக்கின்றேனே  என்பார்  இங்ஙனம்  கூறினர். 

                      இறைவன்  திருவருட்  கலப்பு  ஒருகால்  நேரினும் , பிரியும்  இயல்பினது  அன்று.  அங்ஙனம்  ஆகவும் , பிரிந்து  செல்லவும்  என்றது  என்னை  எனின்  , அடிகளை  ஆட்கொண்டபின் , அவர்  தித்திக்கும்  மணி  வார்த்தைகளை  உலகத்துள்ள  மக்கள்  அறிந்து  இன்புறவேண்டும்  என்று  இறைவன்  திருவுளம்  கொண்டு, அடிகளை  இந்நிலவுலகத்து   இருத்திப்  பிரிந்தனன்  என்பது  வரலாறு  ஆதலின் , அவ்வாறு  கூறியது  என்க .

                      திருவருள்  தோய்வு , அடிகள்  உயிரிற்  கலந்து  பிரிந்திலது   எனினும் , உடனே  ஊனார்  புழுக்கூட்டை  நீத்துத்  தம்  உயிர்  , வீட்டின்பத்தில்  தலைப்படாமல்  இன்னும்  சின்னாள்  அவ்வுடலோடு  கூடியிருக்க  நேர்ந்தது  பற்றிப் பிரிவு  நேர்ந்ததாகக்  கூறிக்கொண்டு  “எனைக்கலந்து  போகவும் “  என்று  கூறுவார்  ஆயினர் .  அரிதிற்  கிடைத்த  திருவடிப்பேறு  பிரிவுற்றது  அறிந்தும், அத்  திருவடிக்கண்   இயைந்து  இன்பம்  நுகரவேண்டிய  தம்  உயிர் , இம் முடையார்  புழுக்கூட்டில்  அகப்பட்டு  வருந்துவதாயிற்றே  என  இரங்கி, அங்ஙனம்  வருந்துதற்கு  ஏதுவக  உள்ள  உடலைத்  தீவாய்ப்படுத்துச்  சுட்டு  ஒழிக்க  வேண்டுவது  யாததாகவும், அங்ஙனம்  செய்யத்  துணிவு  பிறவாமைபற்றிப்  பின் வருமாறு  கூறுகின்றார் : உடலைச்  சுட்டு  ஒழித்தற்கு, “நெருப்பும்  உண்டு”  என்றார்.  நெருப்பிற்பட்டு  விரைவில்  அழிந்து  சாம்பர்  ஆதல்  போல  ஆகாது  என்று  கருதி , நீர்  மூழ்குதல்  முதலியவற்றைக்  கூறார்  ஆயினர் .  எரிப்பதற்கு  நெருப்பு  உளதாதல்  அன்றி , எரிக்கப்படு  பொருளாக  யானும்  உயிர்  வாழ்ந்திருக்கின்றேன்  என்பார், “யானும்  இருந்ததுண்டு” என்றார். தீயில்  வீழ்தற்கு  மனம்  ஒருப்படா விட்டாலும் , உணவு  கோடலை  நிறுத்தி, உடம்பை  உலர்த்தலாமே  எனின் , அதுவும்  செய்திலேன்  என்பார் ,  “உண்டது  உண்டு”  என்றார்.  “யானும் உண்டிருந்தது  “  என்னும்  தொடரை ,  “யானும்  இருந்தது உண்டு  “ எனவும் ,  ஆண்டுள்ள  “உண்டு”  என்னும்  குறிப்பு வினை  முற்றை ,  “உண்டது” என்பதன்  பின்னும்  கூட்டி, “உண்டதுண்டு”  எனவும்  கொள்க.  எரிக்கும்  கருவியும் ,  எரிக்கப்படு  பொருளும்  யாரும்  தடைப்படுத்தாத  நிலையில்  எளியனவாக  இருந்தும் , மனம்  துணியாமையோடு ,  கருவியாகிய  நெருப்பை  உணவு  ஆக்குதற்குச்  சாதனமாகவும்  கொண்டு, நல்ல  உணவுகளை  ஆக்கி,  எரிக்கப்படு பொருளாகிய  உடலை  ஓம்புதற்கு  வயிறார  உண்டேன்  என்பார்,  “உண்டது முண்டு” என்றார் .  “உண்டதும்  “  என்புழி , உம்மை  தொக்கு  நின்றது. 

                    இங்ஙனம் பிரிவு பொறாத நிலையில் , உடலைத்  தீயில்  வீழ்த்தாமலும் ,  உணவினால்  வளர்த்துக்கொண்டு  இருந்தும் , நின்பால்  எனக்கு  அன்பு  உண்டு  என்று  யான்  கூறுதல்  என்ன  வித்தையோ  என்பார், “விருப்பும்  உண்டு  நின்கண்  என்கண் என்பதென்ன  விச்சையோ” என்றார்.  என்கண்  என்புழி , ஏழாம்  வேற்றுமை  உருபை  எனக்கு  என  நான்காவது  ஆக்குக . “நின்கண்  விருப்பும்  உண்டு” என்புழி ,  என்  உடம்பின்  அன்பு  உளதாதலே  யன்றி , நின் கண்ணும்   அன்பு  உண்டு  என்றும்  பொருள்  தரலால்  உம்மை  எச்சப்பொருட்டாம் .  என்பது – என்று  கூறுதல்  .  இதனால் , பேச்சு  அளவில்   அன்றி  , உள்ளத்தில்  மெய்யாக  அன்பு  இல்லை  என்பது  போதரும். உண்மையில்  இல்லாமல் , பேச்சளவில்  உண்டு  என்று  கூறுதல்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை  ஏமாற்ற  முயன்றது  ஆகும்  எனக்கொண்டு, “என்ன  விச்சையே” என்றார்.  விச்சை  –  மாய  வித்தை  ; இல்லதை  உள்ளதாகவும்  ,  உள்ளதை  இல்லதாகவும்  காட்டுதல் .  இவ்விரு திறத்துள், இஃது இல்லதை உள்ளதாகக்  கொண்டு  கூறியதாகும் . என்  அவிச்சை  எனப்  பிரித்துப்  பொருள்  கூறுவாரும்  உளர் .  பாட்டின்  பொருட்  கிடக்கையை நோக்க  ,  அப் பொருள் சிறப்பின்றாதல்  அறிக. 

                     இதன்கண், “நின்ன  தாள்  கருப்புமட்டு  வாய்மடுத்தெனைக்  கலந்து  போகவும் “  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை   யாண்டு  கொண்ட  நின்னதாள்” என்றதனால்  பத்தியும் , “நெருப்பும்  உண்டு  யானும்  உண்டு”  என்றதனால்  உடல்  ஒழிவு  முகமாக  வைராக்கியமும் பெறப்படுதலின்  ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .                                     

                                       ************************************************

9 .   ஆனந்த   பரவசம்

           னந்தம்   என்பது   மெய்யுணர்வின்  வாயிலாக  இறை  அருளைப்  பற்றி  நின்று,  பக்குவமுதிர்ந்த  உயிர்  நுகரும்  பேரின்பம்  ஆகும் . இதன்  இயல்பு , இதன்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகிய  ஆனந்தத்  தழுந்தல்  என்பதற்கு  எழுதிய  குறிப்பில்  விளக்கப்பட்டுள்ளது .  பொறி  வாயிலாக  நுகரப்படும்  புலன்கள்  ஆகிய  உலகியல்  இன்பத்தை  உவர்ந்து  , மெய்யுணர்வு   கருவியாக  அநுபவிக்கப்படும்  சிவானந்தத்தில்  தோயும்  படி  உயிர்க்கு  ஒரு சிறிது  இடங்கிடைப்பினும்  நழுவவிடாமல்  பற்றிக்கோடற்கு  ஆண்டவனை  வேண்டுதல்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகும்  .  அங்ஙனம்  ஆனந்தத்து   அழுந்தல்  ஆகிய  அநுபவத்தில்  தலைப்படக்  கிடைத்ததும் , அதன்கண்  மேன் மேலும்  ஈடுபட்டுத்  தன்வசம்  அழிதல்  ஆனந்த  பரவசம்  ஆகும் .  பரவசம்  என்பதற்குப்  பிறர்  வயப்படல்  என்பது  பொருள்  ஆயினும்,  ஈண்டுத்  தன்  வசம்  அழிதலே  கருத்து  ஆகும் .  நுகரப்படும்  அழிவில்  இன்பத்திற்கு  நம்  அறிவு  கருவியாகும்  என்று  எண்ணும்  மன  நிலையின்  ஒழிவே  தன்வசம்  அழிதல்  ஆகும் .  அங்ஙனம்  இன்றித்  தன்  அறிவுக்கு  முதன்மை  நினைய  நேருமாயின் ,  யான்  என்னும்  உயிர்  முனைப்பு  முற்பட்டு , இன்பத்  தோய்விற்குப்  புறம்பாக  நேரும்  திருவருளால்  நிகழ்தலை  மறந்து , கருவிகளைக்கொண்டு  நான்  செய்கின்றேன்  என்று  எண்ணும்  உயிர்  முனைப்பு  அறவே  ஒழிதல்  வேண்டும்.  நன்றாக  உறங்குகின்றவன்  ஒருவன்  அவ்வுறக்கநிலையில் , தன்  மெய்யை  மறத்தல் , ஆண்டுத்  தன்  வயம்  இழத்தல்  ஆகும் .  இஃது  அஞ்ஞான  நிலையில்  நிகழ்வது  .  சிவானந்தத்தில்   தன்  வயம்  இழத்தல்  ஞான  நிலையில்  நிகழ்வது.  “தூங்காமல்  தூங்கிச்  சுகப்பெருமான்  நின்  நிறைவில் , நீங்காமல்  நிற்கும்  நிலை  பெறவுங்  காண்பேனோ” என்னும்  அநுபவ  மொழி  ஈண்டு  நினைக்கத்தக்கது.   உலகத்தில்  மக்கள்  பகல்முழுதும்   வேலை  செய்து  உழைத்து , அவ்வுழைப்பினால்  ஏற்படும்  இளைப்பை  ஒழித்தற்கு , இரவில்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவு இன்றி  ஒடுங்கிய  நிலையில்  தூங்கி, அதனால்  உடலுக்கு  உறுதி  பெறுவர்  . இவ்வுலகியலைக்கடந்து , திருவருளில்  தலைப்படுவோர்  பற்பல  பிறப்புகளிலும்  ஏற்பட்ட  இளைப்பு  ஒழியப்  பெற்றுக்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவோடு  ஒடுங்கிய  நிலையில்  அமைதி  பெற்றுப்  பேரின்பத்தில்  தலைப்பட்டுத்  தம்  உயிர்க்கு   உறுதி  பெறுவர் .  உலகியலில் மக்கள் , உறக்கம்  நீங்கி  விழிப்பு  ஏற்பட்டதும் , வினையெச்சம்  இருத்தலான் , மீண்டும்  உண்டு , உடுத்து , வாழ்தற்கு  உரிய  வேலையில்  தலைப்படுவர்  .  திருவருளில்  தோயப்  பெறுவோர் , வினையெச்சம்  இன்மையால், மீண்டு  பிறத்தலன்றி  , உலப்பிலா  இன்ப நுகர்ச்சியுடையராய்  அழிவில்லாத  வாழ்க்கையில்  தலைப்படுவர் . இதுவே  தூங்காமல்  தூங்கி  எய்தும்  சுகப்பேறு   ஆகும்  என்க .  இந்நிலையில்  “சிந்தனை  போய்  நான்  எனல்  போய்த்  தேக்க  இன்ப  மாமழையை , வந்து  பொழிந்தனை” என்றபடி , உயிர் , கருவி , கரணங்களின்  சார்பு  உண்மை  குறியாது . அவ்வின்பத்தில்  தன்  வசம்  இழந்து  தோய்தல்  வேண்டும்  என்பதும்,  எக்காரணத்தாலும் அந்நிலையினின்றும்  நழுவுதல்  கூடாது  என்பதும்  இப்பதிகம்  நுதலிய  பொருள்  ஆகும் . ஆனந்தத்  தழுந்தலின் பின்  உண்டாவது   பரவச  நிலையாதலின் , இஃது  அதன்பின்  வைக்கப்பட்டது .  இதனால் , பதிக  இயைபு  உண்மை  புலன்  ஆதலும்  அறிக .

கலிநிலைத்துறை

பாடல் :  81 .

விச்சுக்  கேடுபொய்க்  காக  தென்றிங்

கெனைவைத்தாய்

இச்சைக்  கானார்  எல்லாரும்  வந்துன்

தாள்சேர்ந்தார்

அச்சத்  தாலே  ஆழ்ந்திடு  கின்றேன்

ஆரூரெம்

பிச்சைத்  தேவா  என்னான்  செய்கேன்

பேசாயே.

கருத்துரை :-    முன்னைப் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்ட உதவியை  அறிந்தும் அப்பெருமான்  பிரிவைப்  பொறுத்து  உயிர் வாழ்ந்திருக்கலானேன் என்று  இரங்கிய  அடிகள்,  அங்ஙனம்  உயிர்  வாழ்ந்திருந்தாலும்  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  வழியென்பதும் , அதற்குக்  காரணமாகத்  தாம்  கருதியதும்  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   ஆரூர்  எம்  பிச்சைத்  தேவா   =   திருவாரூரில்  எழுந்தருளி  இருக்கும்  ஐயம்  ஏற்கும்  திருவுருக்  கொண்ட  எங்கள்  தெய்வமே ,

பொய்க்கு  விச்சுக் கேடு  ஆகாது என்று  இங்கு  என்னை  வைத்தாய்  = பொய்மைக்கு  வித்து  அழிவு   நேர்தல்  கூடாது  என்று  இவ்வுலகவாழ்க்கையில்  அடியேனை  இருத்தினாய் ,

இச்சைக்கு  ஆனார்  எல்லோரும்  =  அன்புடன்  செய்யும்  தொண்டிற்கு  உரியராயினார்  அனைவரும்,

வந்து  உன்தாள்  சேர்ந்தார்  =  நின்பால்  வந்து  நின்  திருவடி  நிழலை  எய்தினர் ,

அச்சத்தால்  ஆழ்ந்திடுகின்றேன்  –  பிறப்புப்பற்றிய  அச்சம்  காரணமாக  வருந்துகின்றேன் ,

நான்  என்  செய்கேன்  =  யான்  என்ன  செய்வேன்? 

பேசாய்  =  சொல்லி  அருள்வாயாக என்பது.

விளக்கவுர  :-  திருவாரூர்த்  திருத்  தலம் , நில மடந்தையின்  நெஞ்சத்தாமரை   மலர்  ஆகும்.  “மேதினிக்  காதன்மங்கையிதய  கமலமாம் , மாதொர்  பாகனார்  ஆரூர்  மலர்ந்ததால்”  என்பர்  சேக்கிழார் .  அண்டத்தில்  உள்ளபடியே  பிண்டத்திலும்  ஆம்  என்பராதலின் , இஃது  உயிர்களின்  இதய  கமலத்தையும்  குறிப்பின்  உணர்த்துவது  ஆகும். ஆண்டுத்  திருக்கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவன்  திருப்பெயர்  தியாகராசன்  என்பதாம் . புறத்தே  திருவாரூர்த்  திருக்கோயிலின்  கண்ணும் ,  அகத்தே  உயிர்களின்  நெஞ்சத்தின்  கண்ணும்  வீற்றிருந்து  உயிர்களுக்கு  வேண்டுவன  வழங்கும்  பெரு  வள்ளல்  ஆவான் என்பதை  அத்  திருநாமம்  உணர்த்தும் . தன்  இடத்தில்  இரப்போர்க்கு  எல்லாம்  தன்  அருள்  அமுதைக்  குறைவற  வழங்கும்  அவ்வள்ளற்   பெருமானை , “பிச்சைத் தேவா”  என்றார் ; அருட் கொடையால்  அன்பரை  இன்புறுத்தல்  போல, அவர்  அன்பை  ஏற்றும்  இன்புறுதல்  பற்றி , உலகியலில்  ஓர்  அரசன்  குடி  மக்களுக்குப்  பாதுகாப்பு  அளித்து , அவர்  இடத்தினின்றும்  இறைபொருள்  பெறுதல் போல , ஆண்டவனும்  தன்  அருள்  அமுதை  மெய்யன்பர்க்கு  வழங்கி , அவர்  அன்பை  ஏற்றுக்கொள்ளும்  இயல்பு  உடையவனாவன்.ஆனால்,அரசன் இறைப்பொருள் பெறுதல்  தன்  நலங்குறித்தாம் .  இறைவன், அன்பர்  அன்பைப்  பெறுதல்  அவர்  நலங்குறித்தாம் . இதனால், ஈதலும் ஏற்றலும்  இறைவனுக்கு  உள்ளன  என்பது அறியப்படும் . ஆரூர்  என்றமையால் , தியாகராசனாக  ஈதலும் , பிச்சைத் தேவா   என்றமையால் ஏற்றலும்  பெறப்பட்டவாறு   அறிக. உலகத்தில்  ஒரு  பயிர்  தோன்றி  வளர்தற்கு  நல்ல  வித்தை  ஆராய்ந்து , அதனை  பதுகாத்துப் பேணி  வைப்பது போல, பொய்மையாகிய  பயிர்  தோன்றிச்  செழித்துப்  பயன்  செய்தற்கு  வித்தாக  ஊன் உடம்பில்  என்னை  இருத்தி  வைத்தாய்  என்பார் , “விச்சுக் கேடு பொய்க்காக தென்றிங்கெனை  வைத்தாய்”  என்றார் . ஆகவே  உலகத்துள்ள  பொய்மை  எல்லாவற்றிற்கும்  மூலம் தாமே என்றபடியாம் . ஆண்டவன், மற்றை  அன்பர்கள்  எல்லோர்க்கும்  தன் திருவடிச் சார்பை  நல்கி, அடிகளை  ஊன்  உடலில் இருக்கச்செய்தற்கு , அடிகள்  கருதிய  காரணம்  இதுவாம் என்க . இச்சை  என்பது ஆகுபெயராக நின்று, அன்புடன் செய்யும்  தொண்டை உணர்த்துவது ஆகும்.  “எனை நினைந்தாட் கொண்டாய்க்கு என்னினியான் செயும்  இச்சைகளே “ என்பது தமிழ்மறை . ஆதல் – உரியர் ஆதல்.;  அத்தொண்டிற்குரிய  மெய்யன்பர் என்பது கருத்து. இங்ஙனம்  அன்றி, இச்சைக்கானார்  என்பதற்கு , ஆண்டவன்  விருப்பத்திற்கு  உரியர்  என்று பொருள் கொள்ளுவாரும் உளர் . மற்றை அடியார்கள் எல்லோரும் ஆண்டவனை அடைதற்குத்  தகுதி  உடையர்  ஆயினார் என்பதும் , தமக்கு அத்தகுதி இலதாயிற்று  என்பதுமே  அடிகள்  கருத்து ஆதலானும், இப்பதிகத்து  மூன்றாம்  திருப்பாட்டில் , இங்ஙனமே , “ஆடியாரானார் எல்லாரும் வந்துன்தாள்  சேர்ந்தார் “ என்று  தொண்டு  பற்றியே கூறியிருந்தலானும் , அவ்வுரை  பொருந்தாது என்க.

                   இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி  இருக்குங்கால் , அவன்  அருகிற்  சூழ்ந்து இருந்த  அடியார்  அனைவரும் அப் பெருமானோடு  மறைந்து  அருளினமையை  நேரிற்  கண்டவர்  ஆதலின் , “இச்சைக்கானாரெல்லாரும்  வந்துன்  தாள் சேர்ந்தார் “  என்றார் . வந்து சேர்தல்  –  இறைவனோடு  வெளிப்பட்டு  வந்து  அடைதல் .  தொண்டராகக்  காணப்பட்டமையால் , “இச்சைக்கானார்” எனவும் , வெளிப்பட்டு வந்தமையால், “வந்து” எனவும் , கண்கூடாக  மறைந்தமையால் , “உன்றாள்  சேர்ந்தார்” எனவும்  கூறியருளினர். “தொண்டர் எல்லாம்”நின்  திருவடி இன்பம் எய்த , ஆண்டவனே , என்னை மாத்திரம் ஈங்கு இருக்கப்பணித்தது , பொய்க்கு  வித்துக்கேடு  உண்டாதல் ஆகாது என்பது திருவுள்ளம் ஆயின் , யான் என் செய்வேன் ? பொய்மை நீங்கி  மெய்யன்பு  உடையனாகி  நின் அருட்கு இடனாகும் காலம் என்றோ?  அக்காலம் வரை , பிறந்து , இறந்து துன்பம் உறுவேங்கொல்” என்று அடிகள் நினைந்து, பிறவித்துன்பத்திற்கு அஞ்சுவாராய் , “அச்சத்தாலே யாழ்ந்திடுகின்றேன் “ என்றார் .  ஆழ்தல்  –  வருந்துதல்; அழுந்துதலும் ஆம்.  அச்சம் காரணமாக  வருந்துகின்றேன் எனவும் , அச்சத்தில் அழுந்துகின்றேன் எனவும் கூறலாம். பின்னதற்கு மூன்றனுருபை  ஏழாவதாகக் கொள்ளல் வேண்டும் . இத் துன்பநிலையில் யான் செய்யத்தக்கது இன்னது என்று எனக்குத்  தோன்றவில்லை ; நீயே  திருவுளம் பற்றி அருளல் வேண்டும் என்பார், “என் நான் செய்கேன் பேசாயே” என்றார். கருவிகளை  இயக்குவோனும் , பயன்  விளைப்பவனும்  இறைவன்  ஆதலின் , வீட்டின்பப்பேறு  குறித்து மேற்கொள்ளவேண்டிய  சாதனங்கள் இன்னவெனத்  தெரிந்து கொள்வதற்கும் இறைவனையே  வினவுவார் ஆயினர்.

                     இதன்கண், “மெய்த்தொண்டர் எல்லாம் நின் திருவடி சார்ந்து  ஆனந்த பரவச நிலை எய்தினாராக , என்னைப் பொய்மைக்கு மூலமாக ஈங்கு இருத்தினாய்; என் செய்வல்” என்று அடிகள் கூறியிருத்தலான்,அப் பரவச நிலை  தமக்கும் எய்த வேண்டும் என்பது  பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பிச்சைத் தேவா என்னான்  செய்கேன் “ என்றதனாற்  பத்தியும் ,பொய்க்கு மூலமாக வைக்கப்பட்டேன் என்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் ,பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                                         *******************************************

பாடல் : 82.

பேசப்பட்டேன்  நின்னடி  யாரில்

திருநீறே

பூசப்பட்டேன்  பூதல  ரால்  உன்

அடியானென்

றேசப்பட்டென்  இனிப்படு  கின்ற

தமையாதல்

ஆசைப்பட்டேன்  ஆட்பட்  டேன்உன்

அடியேனே.

கருத்துரை :-    ஆண்டவன் பிரிந்த நிலையில், அப் பிரிவைப் பொறுத்துத்  தாம் உடலோடு கூடி வாழ்ந்திருத்தற்குக்  காரணம் . பொய்க்கு  வித்துக்கேடு உண்டாகாமைப் பொருட்டு, அப் பெருமான்  தம்மை  வைத்ததாகும் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள்,அங்ஙனம்  பொய்க்கு  மூலமாக வைக்கப்பட்டேனாயினும் , அடியாராலும் உலகத்தவராலும் சிவனடியாருள்  ஒருவனாக எண்ணப்பட்டமையால் , அவ் எண்ணத்தின்  பயனாக வீட்டின்பத்தில் தலைப்பட விரும்பலானேன் என்று  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  நின்  அடியாரில்  பேசப்பட்டேன்  =  உன்  மெய்யடியாருள் ஒருவனாக  வைத்து மெய்யன்பராற் பாராட்டிப் பேசப்பட்டேன் ,

திருநீறு  பூசப்பட்டேன்  = ஞானாசிரியனாக  எழுந்தருளிய நின்னால் திருநீறு  பூசப்பட்டேன் ,

பூதலரால் உன்  அடியான்  என்று  ஏசப்பட்டேன் =  உலகத்தவரால்  உன்  அடியவன்  என்று  இகழப்பட்டேன் ,

இனிப்படுகின்றது  அமையாது  = இனித்  துன்பப்படுதல்  பொருந்தாது ,

ஆசைப்பட்டேன்  =  வீட்டின்பப்பேறு  குறித்து அவாவுடையேன் ,

உன் அடியேன்  ஆட்பட்டேன்  =  உன்  அடியவனாக  ஆளாயினேன்  என்பது.

விளக்கவுரை :-   பேசப்படுதல்  –  பராட்டிப்பேசப்படுதல் , பின்னர்ப்  பூதலரால்  என்றதனால் , ஈண்டு  மெய்யன்பரால் என்பதும் , ஏசப்பட்டேன்  என்றதனால் , பாராட்டப்பட்டேன்  என்பதும் பெறப்படும். இம்மை  மறுமைகட்கு  உரிய  புகழ், பொருள், அற முதலியவற்றால்  பெரியார்  எனப் பிறர்  பாராட்டுதல் அடிகளுக்கு உவந்தது அன்று என்பதும், சிவனடியாருள் ஒருவர் என்று பேசப்படுதலும் , அப் பேச்சும் உலகத்து உள்ள அரசர் , செல்வர் முதலியோரால் அன்றி, மெய்யன்பராற்  கூறப்படுதலுமே அடிகளுக்கு உவப்பு  ஆவன என்பதும் குறிப்பிற் பெறப்படுவனவாம் . விருப்பு  வெறுப்பு அற்ற  நிலையில் , ஒன்றை  உவத்தலும் , ஒன்றை  வெறுத்தலும் பொருந்துமோ , எனின் , உலகியற் பொருள்களுள்  நல்லன  தீயன குறித்து, உண்டாம் விருப்பு வெறுப்புகளைப் பற்றியது அதுவாகலின் , ஈண்டு  கருதத்தக்கதன்று . ஆண்டவன் அருட்கு இடன் ஆதலின் அடிகளுக்கு உண்டாம் மகிழ்ச்சியை ,  “பூமேலயனொடு  மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க” என்பது முதலியவற்றான் அறியலாம்.

                      ஆண்டவன் குருந்த மரத்து நீழலில்  ஞானாசிரியனாக  எழுந்தருளி அடிகளை ஆட்கொள்ளுங்கால் , திருநீற்றால் அவர் உடலையும் , அருள் நோக்கால் அவர் உயிரையும் , பாசப் பிணிப்பு  ஒழித்துத்  தூய்மைப்படுத்தினன்  ஆதலின், “திருநீறே பூசப்பட்டேன் “ என்றார் . திருநீற்றுப் பூச்சை அங்கியிற் குளித்தல் என்று சிவாகமங்கள்  கூறும் .

                        பூதலர்  என்பது, ஈண்டு  நில வுலகத்துள்ள  திருவருட் பண்பு அறியாதாரைக் குறிக்கும் . அடிகள் அரசியலில் அமைச்சராக இருந்து ,சிறப்பு  எய்தியதை விட்டுச் சிவனடியாராய் ஒடுங்கி இருத்தலைக் கண்டு, அவர் எள்ளி நகையாடியதை அடிகள் காட்சியளவையிற் கண்டவர் ஆதலின் , “பூதலராலுன்  அடியானென்று  ஏசப்பட்டேன் “என்றார். இறைவனை முன்னிலைப்படுத்து , “உன் அடியான் என்று ஏசப்பட்டேன் “ என்றது.  தம்மைப்  பாதுகாக்கும்  உரிமைப் பொறுப்பு அவ் விரைவனுக்கு  மிகுதற்பொருட்டாம் என்க. இங்ஙனம் சிவனுக்கு அடியேன் ஆயினான் என்று பிறர் இகழ்ந்து உரைத்தது,அடிகளுக்கு அப் பெருமானது அரிய சார்பை வலியுறச்செய்து மகிழ்வித்தது என்பதை, “நாடவர் பழித்துரை பூணதுவாக “ என்னும் அடிகள் திருவாக்கானும் உணரலாம் . உலகத்தவர் இகழ்ந்து உரைத்ததை வெளிப்படக்கூறி , மெய்யன்பர் பாராட்டுரையைக் குறிப்பிற் பெறவைத்தது, அடிகளின் பெருமையைப் புலப்படுத்துவதாகும் . மேலும் இக்கருத்தானே , “ஏசப்பட்டேன்”  என்பதற்கு வினை முதலாகப்  “பூதலரால்” என்று வெளிப்படக் கூறியபடி , “பேசப்பட்டேன்” என்பதற்கும் , “பூசப்பட்டேன்”  என்பதற்கும் முறையே வினை முதல்களாகிய  “மெய்யன்பரால்” என்பதும் , “நின்னால்” என்பதும் வெளிப்படக் கூறாது ஒழிந்தமையும் கண்டு நினைக்கத்தக்கது . திருவருள் நாட்டம் உடைய பெரியார் , தம்மைப் பிறர் கூறும் பாராட்டுரைகளைத் தம் நாவினால் அநுபவதித்துக்  கூற ஒருப்பட்டார் என்பதும், தம்மைப் பிறர் பழித்து உரைத்தலை அணிகலனாக  ஏற்றுக் கொள்வர்  என்பதும் , தம்மைப் பிறரிடம் அறிவிக்க நேர்ந்த இடத்துச்  சிறுமை தோன்றக்  கூறுவர் என்பதும், திருத்தொண்டர் புராண முதலிய மெய்யன்பர் வரலாற்று நிகழ்ச்சிகளில் வைத்து அறியப்படுவனவாம் .

                        இத் திருப்பாட்டில், அடிகள் தாம் பெற்ற பேறுகளாகக் குறிப்பிட்டவை மூன்று.  திருநீற்றினால் தூய்மை பெற்றதும் , மெய்யன்பரால் சிவனடியாருள்  ஒருவராகப்  பேசப்பட்டதும் , உலகத்தாரால் சிவனடியான் என  ஏசப்பட்டதும்  ஆம். இவற்றுள் , உலகத்தவர் வெறுப்பு இன்றேல் , ஒரோவழி உலகப் பற்றிற்கு  ஆளாகவும்  நேரலாம் . ஆதலின் , அதுவும் அடிகளுக்கு உவப்புச் செய்யும் பேறுகளில்  ஒன்று ஆயிற்று என்க. படுகின்றது என்பது  தொழிற்பெயர் அளவில் நின்றது. படுதல் – துன்பப்படுதல் , ஆண்டவனாலும் அவன் அடியாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , உலகத்தவரால் வெறுக்கப் பட்டபடியால் , இனிப் பிறப்பு இறப்புக்களிற்பட்டுத்  துன்பம் உறுதல் பொருந்தாது என்பார், “இனிப்படுகின்ற தமையாது”என்றும், மேற்குறிப்பிட்ட ஆதரவுகளைக் கருவியாகக் கொண்டு வீடு பெற விரும்புகின்றேன்  என்பார், “ஆசைப்பட்டேன்”  என்றும் கூறியருளினர்.

                    முடிவாக , ஆண்டவனே , பொய்க்கு  மூலமாக என்னை இருத்தினாய் ஆயினும் , வேறு புகல் இல்லாமையால் , நின்னையே  புகலிடமாக அடைந்து , மீளா அடிமையாக உனக்கே ஆளாயினேன் ; என்னை  நின் கருணை காரணமாக  ஏற்றுக்  காத்து  அருள வேண்டும்  என்பார், “உன் அடியேன் ஆட்பட்டேன் “ என்றார் . இனி, “ஆட்பட்டேன் உன்னடியேனே” என்பதற்கு , ஆளாயினேன் ; எவ்வாற்றானும் உன் அடியவனே , வேற அல்லேன் என்று கூறுதலுமாம் . இப்பொருட்கு  ஏகாரத்தைத் தேற்றப் பொருளாகக் கொள்ளல் வேண்டும் .

                        இதன்கண், “ஆசைப்பட்டேன்” என்று இன்ப நிலையில் தன் வயம் இழந்து கூறியதால், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பேசப்பட்டேன்” , “பூசப்பட்டேன்” என்றமையால் பத்தியும் , “ஏசப்பட்டேன்” என்றமையால் , வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                       *******************************************

பாடல் :83

அடியேன்  அல்லேன்  கொல்லோ  தானெனை

ஆட்கொண்  டிலை கொல்லோ

அடியார்  ஆனார் எல்லாரும்

வந்துன் தாள்சேர்ந்தார்

செடிசேர் உடலம்  இது நீக்க

மாட்டேன் எங்கள்  சிவலோகா

கடியேன்  உன்னைக்  கண்ணாரக்

காணுமாறு  காணேனே .

கருத்துரை :-  ஆண்டவனை  நோக்கி வீட்டின்பத்திற்கு ஆசைப்படலானேன் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் ,இத் திருப்பாட்டில் அடியார் எல்லாரும் நின் திருவடி அடைய என் அவா நிறைவேறாமல் இருந்ததற்குக் காரணம் என் அடிமைப் பிழைப்பா?  அன்றி  நீ ஆட்கொள்ளவில்லைய என்றும், நின்னைக் கண்குளிர  மீண்டுங் காணும் நெறி அறியாமல் இருக்கின்றேனே என்றும் இரங்குகின்றார்.

பதவுரை :-  எங்கள் சிவலோகா  =  எங்கள்  சிவலோகநாதனே ,

அடியார்  ஆனார்  எல்லாரும்  வந்து  உன்  தாள் சேர்ந்தார்  = 

மெய்யடியார் ஆயினார் அனைவரும்  நின்னை அணுகி நின் திருவடி நிழலை அடந்தனர் ,

கடியேன்  =  கடியவனாகிய  யான் ,

செடி சேர் உடலம் இது நீக்கமாட்டேன்  =  துன்பம் தரும் ஊனிடலாகிய  இதனை ஒழிக்கவு மாட்டேன் ,

உன்னைக் கண் ஆரக் காணும் ஆறும் காணேன்  =  இன்பம் தரும் நின்னைக் கண் நிறையக் காணும் நெறியையும் அறிந்திலேன் , ( இந் நிகழ்ச்சியை நினையுங்கால்)  யான்  தான்  அடியேன் அல்லேனோ ,

தான் எனை ஆட்கொண்டிலை கொல்லோ  =  நீ தான்  என்னை  ஆட்கொண்டதில்லையோ ? (இன்னதன்று அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-  மெய்யன்பரின் அழிவில் வாழ்க்கைப் பொருட்டு ஆண்டவன் சிவலோக ஆட்சியைக் சிறப்புரிமையாகக் கொண்டவன் என்பார், “ எங்கள் சிவலோகா” என்றார் . பின்னர், வந்துன்றாள் சேர்ந்தார்” என்புழி, வருவதற்குச் சிவலோகம் இடனாதல் பற்றியுமாம். என்க . அடியாரானார் என்புழி , ஆக்கச் சொல் , சரியை  முதலிய தவங்களால் ஆண்டவன் அருள் பெறுதற்கு உரிய தகுதி படைத்தவர் என்பதைக் குறிக்கும் . எல்லாரும் என்றதனால் , தம்மைப் போலத் தனிமைப்பட்டார் பிறர் யாரும் இலர் என்பதைப் புலப்படுத்தவாறாம். வந்து சேர்ந்தார் என்பதில் , வருதல் சாலோக முதலிய பத முத்திகளையும் , சேர்தல் இரண்டறக்கலத்தலையும்  புலப்படுப்பனவாம் .

                             கடியேன் – கடுமையான இயல்புடையேன் ; நெஞ்சம் குழையாதவன் என்னும் பொருட்டு . “கள்வன் கடியன் கலதி” என்று பிறிதோரிடத்தும் அடிகள் தம்மை இங்ஙனம் கூறியிருத்தல் அறிக.

செடி – பாவமும் அதன் பயனாகிய துன்பமுமாம் .  இது என்பது ,இறைவன் திருவடிப் பேற்றிற்குத் தடையாகவுள்ளது என்னும் பொருட்டு. தடையாக  உள்ள பாவயாக்கையை ஒழித்தற்கு உரிய உபாயமும் அறிந்திலேன் என்பது கருத்து. யாக்கையை ஒழித்தற்குத் துணிந்திலேன் ஆயினும் , அதனோடு  கூடிய நிலையில் முன் ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்த திருக்கோலத்தை மீண்டும்  கண் நிறையக் காண்டற்கு உரிய நெறியையும்  அறிந்திலேன் என்பார் , “உன்னைக் கண்ணாரக் காணும் ஆறு காணேன்”

 என்றார் .   ஆர்தல்  –  நிறைதல் , நீக்கவும் காணுமாறும்  என்னும்  இடங்களில் , உம்மைகள் தொக்கு நின்றன . இனி, “ கண்ணாரக் காணுமாறு  உன்னைக் காணேன் “ எனக் கொண்டு , ஆண்டவனே , நின் அருள் நிறைந்த திருவிழிகளால் அடியேனைக்  கடைக்கணிக்குமாறு  யான் தரிசித்திலேன் எனக்  கோடலுமாம். “தொண்டனேன் நினையுமா நினையே” என்றபடி , மெய்யன்பர் காண்டற்கு இறையருள்நோக்கம் முதற்கண் நிகழவேண்டும் என்பதும், அவ்வருள் நோக்கம் பெறுதற்கு உரிய தவத்தை உயிர்கள் மேற்கொள்ளவேண்டும் என்பதும் கருத்து. நீ என்னைக் காணும்படி யான் உன்னைக் காணேன் என்றது, நின் அருட் பார்வைக்கு இலக்காதற்கூரிய தவஞ் செய்திலேன் என்பது பற்றியாம் . இக் கருத்திற்கு ஏற்ப , அத்தொடற்குப் பொருள் கொள்ளுங்கால் , கண்  ஆர  என்பதற்குக் கண்ணோட்டம் பொருந்த எனவும்,  காணுமாறு என்பதற்கு , நீ என்னைக் காணும்படி எனவும் பொருள் கொள்ளல் வேண்டும் .

                       இத் திருப்பாட்டின்  திரண்ட கருத்தாவது  : ஆண்டவனே நின் அடியாராகிய மெய்யன்பர் அனைவரும் நின்னுடன் சிவலோகம் வந்து , நின் திருவடியில் இயைந்து இன்புறுகின்றனர் . கொடியவனாகிய யான் அங்ஙனம் வந்து எய்தும் பேறு இல்லாமையோடு , பாவப்பயனாகிய துன்பம் தரும்  இவ்வுடற்  சுமையையும் ஒழிக்கமாட்டேன் ஆயினேன் . மேலும்  இவ்வுடலைப் பற்றி நின்ற  நிலையிலாவது  நின்னைக்  கண்கள் குளிரக் காணும் பேறாவது பெற்றேனோ  எனின் , அதுவும் இன்று . இந் நிகழ்ச்சிகளையெல்லாம் நன்கு சூழ்ந்து நோக்குங்கால் , யான் தான் நினக்கு அடியனாயது உண்மையில்லையோ ? அன்றி நீதான் என்னை ஆட்கொண்டிலையோ ? இன்னது என்று துணிந்திலேன் , என் செய்வேன் என்பதாம் . இக்குறிப்பு தோன்றவே ,

கனவில் வருங் காட்சி யெனக் கருணை மூர்த்தி

காட்டி மறைத்தலும் அன்பர் கலக்கத் தாழ்ந்து

நனவு  கொல்லோ கனவு கொல்லோ

என்று அடிகள் எண்ணுவாராயினர் என்பர் பரஞ்சோதி  முனிவர் , உலகியலில் ஒரு செல்வனை நோக்கிப் பரிசு பெறாத  புலவன் வருந்திப் பாடுங்கால் , “யான் பரிசு பெறாமைக்குக் காரணம்  என்பால் புலமைத் தகுதி யில்லாமையோ? அன்றி நின்பால் என்னை ஆதரிக்கும் தகுதி இல்லாமையோ? என்று கூறலாம் . ஆண்டவனை நோக்கி , அருள் பெறாத நிலயில் , ஓர் அன்பன் அங்ஙனம் பாடுங்கால் , நின் அருள் பெறாமைக்குக் காரணம் என்பால் தொண்டன் ஆம் தன்மை இல்லாமையா  என்று கூறலாம் . நின்பால் என்னை ஆட்கொள்ளும் தகுதி இல்லையா என்று கூறுதல் கடவுட் பெருமைக்குப்  பொருந்துவது அன்று. அதனாலே, அடிகள் யான் உண்மை அடியேன் அல்லேனோ ? அன்றி நீ என்னை ஆட்கொண்டிலையோ? என்று இறைவன் பெருமைக்குச் சிறிதும் குறை நேராவாறு  கூறியருளிய நயம் நினைந்து இன்புறத்தக்கது .

            இதன்கண், “அடியாரானாரெல்லாரும் வந்துன்றாள் சேர்ந்தார்” என்றதனால் , அவர் எய்திய ஆனந்தம்  எனக்கு இலையே என்று கூறப்புகுந்த அடிகள், தம்மை  “ஆடியேனல்லேன் கொல்லோ” எனவும், இறைவனை நோக்கி, “ஆட்கொண்டிலை கொல்லோ “ எனவும் தன்வயம் இழந்து கூறியிருத்தலின் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                                       *******************************

பாடல்: 84 .

காணு  மாறு  காணேன்  உன்னை

அந்நாட்  கண்டேனும்

பாணே  பேசி யென்றன்னைப்

படுத்ததென்ன  பரஞ்சோதி

ஆணே  பெண்ணே ஆரமுதே

அத்தாசெத்தே   போயினேன்

ஏணாண்  இல்லா  நாயினேன்

என்கொண்  டெழுகேன் எம்மானே.

கருத்துரை :-    முன்னைத் திருப்பாட்டில் , மற்றை அடியாரைப் போல ஆண்டவன்  திருவடியை அடையப் பெறாமைக்குக்  காரணம் ,யான் தான் உண்மை அடியேன் அல்லேனோ , அன்றி நீதான் ஆட்கொள்ளவில்லையோ என்று கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ,நீ என்னை அடிமை கொண்டது  உண்மையாயினும் , அந்நாளில் யான் நின்னைப் புகழ்ந்து பாராட்டியவெல்லாம் இச்சகப்பேச்சாக  முடிந்து , பயன் விளைவிக்கவில்லை போலும் ; அங்ஙனமாயின் எங்ஙனம் உய்வேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   பரம் சோதி  ஆணே  பெண்ணெ  ஆர் அமுதே  அத்தா  எம்மானே  =  மேலான ஒளிப்பிழம்பாக  வுள்ளவனே  ஆணாகவும் பெண்ணாகவும்  நிறைந்த  அமுதமாகவும்  உள்ளவனே,  தந்தையே  எங்கள் தலைவனே ,

காணும் ஆறு  காணேன்  =  இப்பொழுது உன்னைக் காணும்  நெறியறியாதவனாகிய  யான் ,

உன்னை அந்நாள்  கண்டெனும்  =  நின்னை அக்காலத்திற்  கண்டு  வைத்தும் ,

பாணே  பேசி  என்  தன்னைப் படுத்தது என்ன  =  இச் சகமே பேசி எனக்கு யான் , செய்து கொண்ட நலம் யாது ,

ஏண்  நாண் இல்லா நாயினேன் =  ஆற்றலும்  நாணமும் இல்லாத  நாயனையேன் ,

செத்தே போயினேன்  =  பயனின்றி இறந்துபோம் நிலயிலுள்ளேன் ,

என் கொண்டு எழுகேன்  =  இனி, எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உய்யக் கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில் இறவனைப்பற்றி  விளியேற்ற   பெயர்கள் ஆறு  ஆகும் . இறைவன் எங்கும் நிறை பொருளாகவுள்ள  இயல்பை குறிக்கொண்டு , “பரஞ்சோதி “ என்றார் . அவயப்பகுப்பு  இல்லாத அருவ நிலையில்  ஒளிப்பிழம்பாகப் பொரியோர் கூறுவர் . “ஒளி வளர் விளக்கே உலப்பிலா வொன்றே “ எனத்  திருவிசைப்பாவும் , “கற்பனை கடந்த சோதி கருணையே  யுருவமாகி “ எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுதல் அறிக. பூதங்களுள் ஒன்றாகிய தீயின்  ஒளியை விலக்குதற்குப் “பரம்” என்ற அடை புணர்க்கப்பட்ட தென்க.

                         எப்பொருட்கும்  அப்பாலாய்த்  தத்துவங் கடந்த நிலையில்  அருவமாகவுள்ள பரம்பொருளாகிய இறைவன் உயிர்களின் நலங்குறித்துத்  திருவுருக் கொண்டு வெளிப்படுங்கால் , ஆண் வுருவாகப்  பெண்ணுருவாக அவ்விரண்டும் இயைந்த உருவாகக் காட்சியளிப்பன் என்பது குறித்து ,”ஆணே பெண்ணே “ என்றார். ஆணும் பெண்ணும்  இயைந்த வடிவமாகிய உமையொரு கூறன் என்பதை , “ஆணே  பெண்ணே “ என்பதனை இரட்டித்துக் கூறுமுகமாக  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . இங்ஙனம்  காட்சியளித்து  ஆட்கொள்ளப்பட்ட  மெய்யன்பர்க்கு உலப்பிலா இன்பம்  அளிக்கும் இயல்பு பற்றி , “ஆரமுதே” என்றார்.

                          இறைவனுடைய அருவம் , உருவம் , அருவுருவம் என்னும்  மூன்று  நிலைகளும் , முறையே , “பரஞ்சோதி”  , “ஆணே  பெண்ணே “ , “ ஆரமுதே” என்பவற்றாற்  புலனாதலும் அறிக. அமுதம் , கை கால்  முதலிய  உருப்புக்களின்மையால்  அருவத்  தன்மையும் பொறிகளால் நுகரப்படும் இயல்புடைமையால்  உருவத் தன்மையும் உடையதாய் , அருவுருவ நிலையில் எண்ணப்பட்டதென்க . அருவ நிலைக்குக்கூறிய  சோதியும் கட்புலனால் பற்றப்படும் இயல்பினதே  யெனின் , பூதவொளியன்று என முன்னரே கூறப்பட்டமையால்  அத் தடைக்கு இடன் இன்று என்க.ச்

                             இத்துணைப்பெருமைகளும் உடைய அப்பெருமான் , தமக்குச் சிறப்பு முறையில் ஞானாசிரியனாகவும் , தந்தையாகவும் உள்ளான் என்பது தோன்ற, “அத்தா” எனவும் , அடிமை கொண்டமையால் தமக்கும் மற்றை மெய்யன்பர்க்கும் தலைவனாதல் பற்றி ,” எம்மானே” எனவும் கூறுவாராயினர்.

                             “காணுமாறு  காணேன் “ என்பதற்கு , முன்னைத் திருப்பாட்டில் உரைத்தாங்குப் பிறிதொரு பொருளும் உரைத்துக் கொள்க . “காணேன்” என்பதை  வினையாலணையும்  பெயராகவும் , “கண்டேன்” என்பதை முற்றெச்சமாகவும்  கொள்ளல் வேண்டும் . காணேனாகிய யான் , கண்டும் பேசி யென்னைப்படுத்த  தென்ன என முடிக்க . “அந்நாள்” என்பது  குருந்த மர நீழலில் இறைவன் ஞானாசிரியனாக  எழுந்தருளிய காலத்தைக் குறிக்கும் .

                     நேரில் நின் திருக்கோலத்தைத்  தரிசித்தும் , யான் புகழ்ந்து பாராட்டிய எல்லாம் உள்ளன்போடு  நிகழாமல் இச்சக மொழி ஆயின என்பார், “பாணே பேசி” என்றார் .  பாண் – இச்சகம் ; முகமன் . என் தன்னை என்புழித் தன் அசைச் சொல் . இரண்டனுருபை  நான் காவதாக்கி , எனக்குச் செய்துகொண்ட நலம் தான் என்னவோ என்பார், “படுத்ததென்ன” என்றார் . படுத்தல்  – செய்தல் . என்ன  என்னும்  வினா மொழியால் , படுத்தது நலம் எனக் கொள்ளப்பட்டது . அடிகள் ஆண்டவனைப் பண்டு  கண்டது போல்  மீண்டும்  கானப்பெறாமையால் , கண்ட காலத்துப் பாரட்டிப் பேசியவெல்லாம் பயன் விளைக்கவில்லை எனக் கொண்டு , அவ்வுரைகள் உண்மையக இல்லாமல் உபசாரமாயினவோ என ஐயுறுவர்  ஆயினர் என்பது கருத்து.

                       திருவருட் பேற்றிற்கு உரிய தவ வன்மையும் , காண்டற்கு அரிய பொருளைக் கண்டும் , பயன் பெறாமல் அடியார் குழுவில் எண்ணப்பட்டமை  குறித்து  நாணமும்  மேற்கொள்ள  வேண்டியனவாகவும் ,கொள்ளாமையால் , “ஏண்  நாண் இல்லா  நாயினேன்” என்றார் .  ஏண்  – வலிமை . இனிப் பிறவாமைக்கு உரிய திருவருட்பதிவு  இல்லாமையால் இவ்வுடல் பயன் இன்றி இறந்து ஒழியும் நிலைமையில் உள்ளது என்பார். தெளிவு பற்றி இறந்தகால  வாய்பாட்டல் , “செத்தே போயினேன் “ என்றார் .

                          “ ஆண்டவனே   நின்னைக் காணும் நெறியும் அறிந்திலேன். முன் கண்ட காலத்துப்  பாராட்டியதும் முகமனாகப்  பயன்  செய்திலது ; தவ  வன்மையும் இல்லாதவனாய் வறிதே இறந்து போம் நிலையில் உள்ளேன் .  இந்நிலையில்  எனக்கு  ஆதரவாக மேற்கொள்ளத்தக்கது  யாதுளது? இனி எவ்வாறு உய்வேன் “ என்று அடிகள் இரங்குவாராய் , முடிவில் ,”என் கொண்டெழுகேன்”  என்றார் .

                             இதன்கண், இறைவனை , “ஆரமுதே” என விளித்து , “உன்னைக் காணுமாறு காணேன் “ என்றமையால் , அமிர்த வடிவாகவுள்ள இறைவனை , நெறி அறிந்து இயைதலே இன்பம் என்பது தெளிந்தும் , அதனைப் பெறாமையில் வைத்து , “பாணே பேசிப் படுத்ததென்ன” என்று  தன்  வயம்  இழந்து  கூறியமையால் , ஆனந்த  பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                              *******************************************

பாடல் : 85 .

மானேர்  நோக்கி  யுடையாள்பங்கா

மறையீறறியா   மறையோனே

தேனே  அமுதே  சிந்தைக்கரியாய்

சிறியேன்  பிழைபொறுக்குங்

கோனே  சிறிதே  கொடுமைபறைந்தேன்

சிவமா  நகர்குறுகப்

போனார் அடியார்  யானும் பொய்யும்

புறமே  போந்தோமே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில் , “ஆண்டவனே , அந்  நாளில்  நின்னைக் கண்டு பாராட்டியதால்  யான் பெற்ற பயன் என்னவோ எனக் கூறிய  அடிகள், அங்ஙனம்  கூறியது நின் அருள் வண்மைக்குத்  தகாத கடுஞ்சொல்லாகும்;  யான் புறம்பானது பற்றி அவ்வாறு கூறலானேன் ; பிழை பொறுக்கும் பெருமை நின் கண்ணதே “ என இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மான்  நேர்  நோக்கி  உடையாள்  பங்கா  = மான்  விழி  போன்ற விழிகளையுடையாளாகிய  எம்மையுடைய  அம்மையை  ஒரு  கூற்றிலுடையவனே ,

மறை ஈறு அறியா  மறையோனே  =  மறைகளும்  மறை  முடிவுகளும்  உணர  முடியாத  மறை  பொருளாகவுள்ளவனே ,

தேனே  அமுதே   =  தேனே  அமுதே ,

சிந்தைக்கு அரியாய்  =  மனத்திற்கு  எட்டாதவனே ,

சிறியேன்  பிழை  பொறுக்கும் கோனே  =  சிறுமையுடையேனாகிய  என்  குற்றங்களைப்  பொறுத்தருளும்  பெரியோனே ,

அடியார்  சிவமாநகர்  குறுகப்  போனார்  = அடியார்  எல்லாரும்  பெருமை  மிக்க  நின்  சிவபுரம் அணுகப்  போயினர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  என்  பொய்யும்  புறம்பாகச்  சென்றோம் ,

சிறிது  கொடுமை  பறைந்தேன்  =  அதனாற்  சிறிது  கடுஞ்சொற்  கூறலாயினேன் (ஆதலாற்  பொறுத்தருள  வேண்டும் )  என்பது .

விளக்கவுரை :-    “மான்நேர்  நோக்கி”   என்றதனால்  தெய்வ  இள  நலமும் , “உடையாள்”  என்றதனால் தாய்மையும்  பெறப்படும் .  உடையாள்  –  உலகம் எல்லாம் தனக்கு உடைமையாகப் பெற்றவள். இறைவனையும்  இறைவியையும் உடையான்  எனவும்  உடையாள் எனவும்  அடிகள் கூறுவர். அருள்  வடிவினள் ஆகிய  அன்னையை ஒரு  கூற்றிலுடையவன்  என்றது , அருளாளனாய் அன்பர்  காட்சிக்கு எளியனானவன் என்பது குறித்தாம் . மறை  யீறு  என்பது உம்மைத் தொகை . மறை , கன்மப்  பகுதியையும், அதன்  யீறு  ஞானப்  பகுதியையும்  விளக்குவனவாம் . மறைகளும்  அதன் முடிவுகளாலும்  அறியப்படாமையால் ,  மறை பொருள்  ஆயினான் என்பது .  “நூலுணர்  வுணரா  நுண்ணியோன் “ என்பதும்  அடிகள் அருண் மொழி  .  நுண்ணியன் என்பது  பற்றியே ஈண்டு  மறையோன்  என்றனர் . கன்மயோகம்  ஞானயோகங்களால் இறைவன்  அறியப்படுவனாகவும் , அவற்றை  உணர்த்தும்  மறை  யீறுகளால்  அறியப்படாதவன்  என்று  ஈண்டுக் கூறியது  எங்ஙனம்  பொருந்தும்  எனின் , மறையும்  அதன்  யீறும்  முறையே  கன்மஞானங்களை  உணர்த்துவனவேனும், அவை நூல்  உணர்வாகிய  அபரஞானமாக முடிதலின் , அவற்றால்  அறியப்படாதவன்  என்பது  தெளிவாம் என்க.  “மறைத்திறம்  நோக்கி  வருந்தினர்க்  கொளித்தும் “ என்பதும்  காண்க.

                  தன்னை அடைந்தார்க்கு  இனிமைச் சுவை  பயந்து  நிற்றலின்  இறைவனை, “தேனே  அமுதே “ என்றனர் .  அமுதம்  –  தேவர்  உணவு . இவ்விரண்டனுள்  ஒன்று கூறிய அளவில் அமையுமே  எனின், பெறுதற்கு எளிமையும் அருமையும் பற்றி   இரண்டு  கூறப்பட்டன என்க.  அம்மையப்பனாக  மெய்யடியார்க்கு  எளி வந்து  இன்புறுத்தலின் ,”தேனே” எனவும் , மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு  நுண்ணியனாய், அரிய பொருளாக  இருத்தலின், “அமுதே”  எனவும்  கூறினர் . நூலுணர்வுக்கு  அரியன்  ஆயினும் , அவ்வுணர்வு , அநுபவ நிலைக்கு  ஆகுங்கால் , பேரின்புறுத்த  வல்லன்  என்பது  குறித்து , “அமுதே” என்றது பொருத்தமே .  “மாற்றம்  மனங்கழிய  நின்ற  மறையோன் “  என்னும்  இறை இலக்கணத்துள், மாற்றங்கழிய நின்றமை , “மறையீறறியா மறையோனே”  என்பதனாலும் , மனங்கழிய  நின்றமை , “சிந்தைக்  கரியாய்” என்பதனாலும்  பெறப்பட்டவாறு  அறிக.

                    சிறுமை , பெருமை ஆகிய  இரண்டு  குணங்களும்  முறையே குற்றஞ்  செய்தற்கும், அதனைப் பொறுத்தற்கும்  ஏதுவாகும்  ஆதலின் , சிறியேனாகிய  எனக்குப்  பிழை  செய்தலும் , பெரியோனாகிய  நினக்கு  அதனைப் பொறுத்தலும் இயல்பாம்  என்பார், “சிறியேன்  பிழை  பொறுக்குங்  கோனே “  என்றார்.  கோன்  –  பெருமைக்குணமுடையோன் .  “வெறுப்பனவே  செய்யும்  என்  சிறுமையை  நின்  பெருமையினாற்  பொறுப்பவனே “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதுங்  காண்க. “பிழையுளன  பொறுத்திடுவ  ரென்றடியேன்  பிழைத்தக்கால், பழியதனைப்  பாராதே  படலம்  என்கண்  மறைப்பித்தாய் “ என்று  தம்பிரான் தோழர்  கூறியதும் ஈண்டு  நினைக்கத்தக்கது

                     இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித்  தமக்கு  உபதேசித்து  மறைந்தபின் , அப்பெருமான் கட்டளைப்படி , திருப்பெருந்துறையில் உள்ள  ஒரு  பொய்கையில்  ஒளிப்பிழம்பாக  காணப்பட்டதாக , அதன்கண்  அடியார்  பலர்  மூழ்கி  இறை  யருளிற்  கலந்த  நிகழ்ச்சியை  அடிகள்  கண்கூடாகக்  கண்டவராதலின், “சிவமாநகர் குறுகப் போனாரடியார்” எனவும், ஆண்டவன்  உலகத்தவர்  நலம்  குறித்து அடிகளைச்  சிலகாலம்  நிலவுலகத்திருக்கப்  பணித்தமையால், “யானும்  பொய்யும்  புறமே  போந்தோமே” எனவும்  கூறினார் .  அடிகளை இருக்கப்  பணித்தது ஆண்டவன்  கட்டளையாயினும், “அருளாரமுதப்  பெருங்கடல்வாய் அடியார்  எல்லாம்  புக்கழுந்த , இருளார்  ஆக்கையிது  பொறுத்தே யெய்த்துக்  கிடந்தேன் “  என்றபடி , மெய்யடியார்க்குக்  கிடைத்த  பேறு தமக்கு  அப்பொழுதே  கிடையாமையால்  உண்டாகிய  வருத்தம்  பொறாது , தம்மைப் பொய்யோடு  சேர்த்துப்  புறம்பானோம் என்று  கூறினர்.  சிவமாநகர்  மெய்மையின்  இருப்பிடம்  ஆகும்.  ஆதலின், பொய்மைக்கு  அங்கு  இடனின்று .  பொய்க்கு  வித்தாக ஆண்டவன் தம்மை  வைத்ததாக  அடிகள்  கூறியுள்ளார்  ஆதலின் , பொய் , சிவமாநகருக்குப்  புறம்பாகுங்கால் ,  அதனோடு  பிணைக்கப்பட்டுத்  தாமும்  புறம்பானதாகக்  கூறியுள்ளார் .

                   இங்ஙனம்  அடியாரெல்லாம்  சிவமாநகர்  அணுகப்போய்  இன்புறவும் , தாம்  பொய்யோடு  பிணைக்கப்பட்டுப்  புறம்பாகித்  துன்புறவும், நேர்ந்தமை  பற்றி   உண்டாகிய  வருத்தம் பொறாது , தம்மைப்  பாசப்பிணிப்பு  ஒழித்து  ஆட்கொண்டருளிய  அருள்  வள்ளலாகிய  ஆண்டவன்  பேருதவியையும் எண்ணாமல் , அப்பெருமான் முன்னிலையில் , “பாணே  பேசி  யென்றன்னைப்  படுத்ததென்ன.” என்பது முதலிய  கடுஞ்சொற்களைப்  பேச  நேர்ந்ததென்று  தெரிவித்துப்  பொறுக்க வேண்டுவாராய் , “சிறிதே கொடுமை  பறைந்தேன் “ என்றார்.  கொடுமை  –  கடுஞ்சொல் ,  பறைதல்  –  பேசுதல். “கேள்வியினும்  வினையினும்  கடியவாய  சொல்லைக்  கடுஞ்சொல் “  என்பர்  பரிமேலழகர்  .  ஈண்டு  அடிகள்  கூறியதாகக்  குறித்த  கடுஞ்சொல் , கேள்வியளவில்  கடுமை  யுடையதேயன்றிச்  செயற்கடுமை  இன்று .  இது  கருதியே , “சிறிதே கொடுமை பறைந்தேன் “  என்று  குறிப்பிடுவாராயினர் . ஆதலிற் பொறுத்தருள வேண்டுமென்பது குறிப்பெச்சமாக  வருவித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும் . அடிகள், ஆண்டவன்  முன்னிலையில்  ஒரோவமயம்  இங்ஙனம் சொல்லளவில் வெறுப்புத் தோன்றக் கூறுதல் , தந்தையின் முன்னிலையில்  அறியாப்  பருவத்து  இளங்குழவி  பேசுதல் போல்வதாகும் என்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களில் , முன்னும்  பின்னும்  இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லம்  இஃதொக்கும் .

                      இதன்கண், “தேனே  யமுதே”  என்றதனால், இறைவன் ஆனந்தவடிவினன்  என்பதும் ,  “சிவமாநகர்  குறுகப்  போனாரடியார்” என்றதனால் ,அதுவே  பெறத்தக்கது  என்பதும் அப்பேறின்மை  குறித்து, “சிறிதே கொடுமை பறைந்தேன் “ஏன்றதனால் , தன்வயம் இழந்த நிலையும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                    ***********************************************

பாடல் : 86 .

புறமே  போந்தோம்  பொய்யும்  யானும்

மெய்யன்பு

பெறவே  வல்லேன்  அல்லா  வண்ணம்

பெற்றேன்யான்

அறவே  நின்னைச்  சேர்ந்த அடியார்மற்றொன்

றறியாதார்

சிறவே  செய்து  வழிவந்து  சிவனேநின்றாள்

சேர்ந்தாரே .

கருத்துரை :-    அடிகள்  ஆண்டவன்  பெருமைக்குப்  பொருந்தாத முறையிற்  சிறிது  பிழை  செய்ய நேர்ந்ததற்கு  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறப்பட்ட  ஏதுவை , மீண்டும்  இத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  சிவனே  =  சிவனே ,

நின்னையே  அறச்சேர்ந்த  அடியார்  =  உன்னையே  முழுதும்  உரிமையாகச்  சார்ந்த  அடியார் ,

மற்று ஒன்று  அறியாதார் =  பிறிதொன்றனையும்  அறியாதவராய் ,

சிறவு  செய்து  வழி  வந்து நின் தாள்  சேர்ந்தார்  =  சிறந்த செயல்களைச்  செய்து  செந்நெறிக்கட்  போந்து  நின் திருவடிக்கண் இயைந்தனர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  பொய்மையும்  புறம்பானோம்

யான்  = அவ்வளவினன்றி  யானோ ,

மெய்யன்பு  பெறவே  வல்லேன் அல்லா  வண்ணம்  பெற்றேன்  = 

மெய்மையாகிய  அன்பைப்  பெறுதற்கே  வன்மையுடையேன்  அல்லாத  தன்மையையும்  பெற்றுளேன் (ஏன் செயல் ! காத்தருள்க) என்பது.

விளக்கவுரை :-    சார்ந்தாரை  இன்புறுத்தும் மங்கல வுருவினன் என்னும்  பொருள் தோன்ற, :சிவனே” என்றனர் . அறவே  என்புழி , ஏகாரத்தைப்  பிரித்து, நின்னை என்பதனோடு  இயைத்துத்  தேற்றப்  பொருட்டாகக்  கொள்க,  அறவென்னுஞ் சொல் , முழுதும் என்னும்  பொருளுடையதாகும் . தம்  உடல் பொருள்  , ஆவி  எல்லாம்  ஆண்டவனுக்கே  உரிமையாக்கிய  அடியவர்  என்பார் , “அறவே நின்னைச் சேர்ந்த அடியார் “  என்றார் . நின்னைச் சேர்ந்த  என்றதனால்,  பண்டைக்குலம் ஒழிந்து , தொண்டர்க்குலம்  உடையராயினர் என்பது  போதரும் .

              உலகத்தில் தாக்கான்  ஒருவன்  ஆதரவைப்  பற்றி நிற்கும் மற்றொருவன், அந் நிலையிலே,  அவ்வாதரவினுஞ்  சிறந்த பயன் பெறுதற்குரிய பிறிதோர்  ஆதரவை  நாடுதலும்  இயல்பாம் .  அம் முறையில்  இறைவனையே  எல்லா வகையிலும் உரிமையாகப்பெற்ற அடியார், அன்நிலையில் பிறிதொன்றைப்  பற்றுக்கோடாக எண்ணும் இயபினரோ என்பார்க்கு  விடையாக, “மற்றொன் றறியாதார்” என்றார் . உலகியலில்  ஒன்றை நோக்கப்  பிறிதொன்று  உயர்வாக அன்றித்  தாழ்வாகக்  காணப்படலாம். எல்லாம் வல்ல  ஆண்டவனை நோக்கப் பிறிதொரு  பொருள் சிறந்ததாக  இல்லாமையாலும் , அப்பெருமானையே முற்றிலும்  உரிமையான  பற்றுக் கோடாகப் பெற்றமையாலும் , மற்றொன்று  அறியாதார் ஆயினர்  என்பது.

                சிறவு  –  சிறப்பு . பிறப்பு  இறப்புக்களை, பிறவு  இறவு என்றாற்போலச்  சிறப்பைச்  சிற வென்றார் . “பிறவினோ டிறவுமானான்” என்பது  தமிழ்மறை . சிறந்த செயல்களாவன, சரியை  முதலிய  தவங்கள்  ஆகும். வழி, ஞான நெறியும் அன்பு நெறியுமாகிய  செந் நெறிகளாம் . ஞானத்தால்  தெளிதலும் , மெய்யன்பினால் இறைவனோடு  கலத்தலும் உளவா மென்பது பெரியார் அநுபவமாகும் .     சரியை , கிரியை  யோக  மூன்றும் ஞானத்தைப் பெறுதற்குச்  சாதனமாகிய தவங்கள் ஆம் என்பதும், ஞானம் , இறைவனைத்  தெளிதற்கு ஏதுவாகிய செந்நெறி என்பதும், மெய்யன்பு , இரைவனோடு  கலத்தற்கு உரிய நன்னெறி என்பதும் நுண்ணிதின் ஆராய்வார்க்குப்  புலனாம் . ஆகவே அந்னெறிக்கட்  சென்றால், சேரும் இடன் இறைவன் திருவடியாம் என்பார், “நின்றாள் சேர்ந்தார் “ என்றார்.

                 மெய்யடியார் அங்ஙனம் திருவடிக்கண் இயைந்தனராக , யானும்  என் பொய்யும்  சிறிதும்  அணுகப்  பெறாமல்  புறம்பாயினோம்  என்றார் . பொய்மைக் குணப் பொருளாகவும் , அதனையுடைய  தம்மைக்  குணிப்பொருளாகவும்  கொண்டு , “பொய்யும்  யானும் “ என்றார். குண  குணிகள்  என்பன , பண்பும், பண்புடைப்  பொருளாகிய  பண்பியுமாம் . பண்பும்  பண்பியும் பிரிக்கப்படாதனவாயினும் , பண்புக்கு  ஆற்றல் மிக்க இடத்து , அதனுடைய  பண்பியைப்  பண்பாகத்  தனிபடுத்துக் கூறுதல் கவி  மரபு . எடுத்துக்காட்டாக ஒன்று கூறுதும் . அன்பு  குணமாக , அதனுடைய  அன்பன் குணிப்பொருள்  ஆவன் . அவ்வன்பனிடத்துள்ள  அன்பாகிய  குணம் சிறந்திருக்கு மாயின் , என் அன்பே என்று அழைத்தல் உண்டு . “நாணனும் அன்புமுன்பு  நளிர்வரை  யேற “ என்று  சேக்கிழார்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  இவ்வுண்மை கருதியே , அடிகள்  குணிப்பொருளாகிய தம்மினும்  , தம்மிடத்துள்ள  குணமாகிய பொய்மை வலியுடையது  எனக் கொண்டு , “ பொய்யும்  யானும் “ என்று  பிரித்துக் கூறுவாராயினர் .

                  “மெய்யன்பு  பெறவே” என்புழி , ஏகாரம்  சாதன சாத்தியப்  பேறுகள் இரண்டனுள் , சாதனப் பேறு  பிரித்துக் கூறப்பட்டமையின் , பிரிநிலைப் பொருட்டாதல் அறிக.  வல்லேன் அல்லா வண்ணம் –  வல்லுனன்  அல்லாத தன்மை . வண்ணமும்  என்புழி , உம்மை  தொக்கு நின்றது . பொய்யும்  யானும்  புறம் போந்ததன்றிக்  குண  குணிகளாகிய அவ் விரண்டனுள் குணியாகிய யானோ , சாத்தியமாகிய  திருவடி இயைபேயன்றிச்  சாதனமாகிய  மெய்யன்பைப்  பெறுதற்கே தவ  வன்மையில்லாத  தன்மையையும்  பெற்றுள்ளேன் . எங்ஙனம் உய்வேன் என்பார், “மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம்  பெற்றேன் யான் “ என்று  கூறினார்.  வண்ணம்  – ஒரு  குணம் ஆகும்  .  பொய்மையாகிய  குணமேயன்றித் தவ வன்மைக்கு உரியதல்லாத  தன்மையையும் பெற்றேன் என்பது  கருத்து. என் செய்வல் , காத்தருள்க என்பன குறிப்பெச்சமாக  வருவித்துரைக்கப்பட்டன .

                  இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்தாவது :- ஆண்டவனே  நின்னை  முழுதும்  உரிமையாகப்  பெற்ற  மெய்யடியார் , பிறிது ஒன்றையும் எண்ணாதவராய்ச்   சரியை  முதலிய  தவச்  செயல்களைச் செய்து , நெறி  நின்று நின் திருவடி  யடைந்தனராக , யானோ பொய்யொடு புறம்பானதன்றிச் சாதனமாகிய  மெய்யன்பைப் பெறுதற்கு உரிய  தகுதியும்  பெறாத  நிலையில் உள்ளேன் . எங்ஙனம்  உய்வேன் ? காத்தருளல் வேண்டும்  என்பதாம் .

                   இதன்கண், “அடியார்  மற்றொன் றறியாதார் , சிறவே  செய்து வழி வந்து நின் தாள் சேர்ந்தார் “ என்றதனால் , இம் முறைப்படி  அடைதலே  அழிவில் இன்பம் என்பதும் , அது  பொறாமையோடு  சாதனமாகிய  மெய்யன்பையும்  பெற்றிலேன் என்றதனால், அது குறித்துத்  தன்வயம் இழத்தலும்  பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                             ************************************

பாடல் : 87 .

தாராய்  உடையாய்  அடியேற்  குன்தாள்

இணையன்பு

பேரா  வுலகம்  புக்கார்  அடியார்  புறமே

போந்தேன்யான்

ஊரா  மிலைக்கக்  குருட்டா  மிலைத்தாங்குன்தாள்

இணயன்புக்

காரா  அடியேன்  அயலே  மயல்கொண்

டழுகேனே .

கருத்துரை :-   தம்  பிழைக்கு  ஏதுவாகவுள்ளவற்றை முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறிப் பொறுத்தருள  வேண்டிய  அடிகள், அப் பிழை  பொறுத்தலோடு  தமக்கு  இன்றியமையாது வேண்டிய  சாதனத்தை அருளுமாறு  இத் திருப்பட்டில் குறிப்பிட்டு வேண்டுகிறார்

பதவுரை  :-   உடையாய்  =  ஆண்டவனே ,

அடியார்  பேரா  உலகம்  புக்கார்  =  மெய்யடியார்கள்  மீளா  வுலகமாகிய  வீட்டு  நிலையை எய்தினர் ,

யான்  புறமே   போந்தேன்  =  யானோ  அதற்குப்  புறம்பாகிய  இடத்தையே  அடைந்தேன் ,

ஊர்  ஆ  மிலைக்கக்  குருடு  ஆ  மிலத்து ஆங்கு  = ஊர்ப்பசுக்கள்  கனைக்க  குருட்டுப் பசுவும்  கனைத்தது போல ,

உன்  தாள்  இணை அன்புக்கு ஆரா  அடியேன்  =  நின் திருவடித் துணைக்கட்  செலுத்தும்  அன்பு  குறித்து அநுபவம்  பெறாத  அடியேன் ,

அயலே  மயல்கொண்டு அழுகேன்  =  மெய்யடியார்க்குப்  புறம்பாக இருந்து  ஆசைப்பட்டு  அழா நின்றேன் ,

அடியேற்கு  உன்தாள் இணை  அன்பு  தாராய்  =  ஆதலின், அடியவனாகிய  எனக்கு  நின்  திருவடித்  துணை பற்றிய  மெய்யன்பைத்  தந்தருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-   “உடையாய்” என்றது, அடிமை உடைமைகளைப்  பாதுகாக்கும் பொறுப்பு  நின்பாலது என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . பின்னர் , “அன்புக்கு  ஆரா அடியேன் “ என்று  தம்மைக் குறிப்பிட்டமையால் , ஈண்டு அடியர் என்றது , அன்பு அநுபவம் மிக்க  மெய்யடியார் எனப் புலப்படுக்கப்பட்டபடியாம் . பெயர்தல்  – பேர்தல் .   மீளா உலகம்  – அடைந்தார்  திரும்பாமைக்கு ஏதுவாகிய  வீட்டு  நிலை . வீட்டு  நிலையை உலகம் என்றது உபசார  வழக்கு . “மீண்டு  வாரா வழி”  “ மறிவறியாச் செல்வம்” என்பனவும்  அது. புறம் போந்தோர் ஒரோவமயம் உட்புகுதலும்  உண்டு. யானோஉட்புகுதற்கு வழியற்றுப் புறத்தே செல்லல் ஆனேன்  என்பார், “புறமே போந்தேன் “என்றார் . புறமே  என்புழி , ஏகாரம்  தேற்றப் பொருட்டு , மெய்யடியார்  திரும்பா  நிலையில்  உட்புக்கார்  எனவும் , யான்  உட்புகா நிலையில் புறம் போந்தேன் எனவும்  அடிகள் கருதியபடியாம் .

                     “ஊர் ஆ “என்பது  , ஓர்  ஊரில்  உள்ள பசுக்கூட்டங்களை  உணர்த்தும். மிலைத்தல்  –  கனைத்தல் . கன்றைக் கண்டதும்  தாய்ப்பசு கனைத்து ஒலித்தல் இயல்பு . கண் தெரியாத பசு , மற்றைப் பசுக்கள் கனைத்துக்  ஒலித்தலைக் கேட்டுத்  தானும் ஆங்குக் கன்றைக்  கண்டதாகக்  கனைத்தல் போல என்பதாம். “மிலைத்திங்கு” என்னும் பாடம் , எச்சத்திற்கு முடிபின்மையால் சிறந்ததன்று . இவ்வுவமை , மெய்யன்பு மிக்க  அடியார் பேராவுலகம் புக்கார் எனக் கொண்டு , அத்தகைய அன்பில்லாத யானும் அங்ஙனம் புகுதற்கு ஆசைப்பட்டுப் புறம்பாய் நின்று  அழா நின்றேன் என்னும்  உவமேயப் பொருளைத் தெளிவுறுத்துவதாகும்.  “கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர் புகுதும்” என்று உமாபதி சிவாசாரியார் கூறியதும் கண்டு நினைக்கத்தக்கது.

                    நின்  திருவடிக்கட் செலுத்தும் மெய்யன்பு  பெறுதற் பொருட்டு மேற்கொள்ளப்படும்  சரியை  முதலிய தவ ஒழுக்கமாகிய அநுபவம் இல்லாமற் பெயரளவில் அடியவன்  ஆகிய  யான் என்பார், “உன் தாளினை அன்புக்கு ஆராவடியேன்” என்றார். ஆர்தல்  –  அநுபவித்தல் . இனி, “ஆராயடியேன்” எனப் பாடங்கொண்டு , ஆராய் என்பதற்கு , எத்தன்மையுடையேனாய் எனவும் பொருள் கூறுவாரும்  உளர் .

                       அயல்  – வேற்றிடம் . மெய்யடியார்  பேரா வுலகம் புகுதற்கு அடியிட்ட செந்நெறிக்குப் புறம்பான இடம் என்பதாம் . மயல்  – அவா. மெய்யன்பர் எய்திய வீட்டு  நிலையை அடைதற்குத் தகுதி பெறாத நிலயில் , அவாக்  கொண்டு முயன்றமையால், கருதியது பெறாமல் வருந்தலானேன் என்பார் , “மயல் கொண்டழுகேன் “என்றார். இந்நிலையில்  யான் வேண்டுவது மெய்யடியார் புக்க பேராவுலகம் புகுதலையன்று., அதற்குச் சாதனமாகிய  மெய்யன்பேயாம் என்பார் , “உன்றாளிணையன்பு” என்றார் . சாதன சாத்தியமாகிய மெய்யன்பு ,வீட்டு நிலை என்னும் இரண்டனுள், வீட்டு நிலை  பெறுதற்குத் தகுதியில்லேனாயினும் , அதற்கு  ஏதுவாகிய மெய்யன்பு பெறுதற்கு அன்று  ஆட்கொண்ட முறையில் அடியவன் ஆயினேன் ஆதலின் ,அதனைத்  தந்தருள  வேண்டுமென்பார் ,, “அடியேற்கு “ எனவும்,”தாராய்” எனவும் கூறியருளினர். “தாராய்” முன்னிலை உடன்பாட்டு வினை.

                           இத்  திருப்பாட்டில் , “பேரவுலகம் “ என்பதை , மோனை நோக்கிப் “போராவுலகம் “ எனப் பாடங்கொண்டு , சொல்லுதற்கரிய  எனப்  பொருத்தமில் பொருள் கூறியும் , “மிலைக” என்னும் சொற்கு , மேய்ந்திட எனவும் , போர் செய்ய எனவும் இல்லாத  பொருள்களை  இயைபின்றிக்  கூறியும் ,”அழுகேனே”   என்பதை , “எழுகேனே “ என அந்தாதித் தொடை சிதையப்  பாடங்கொண்டும் , திருப்பாட்டின் அமைப்பையும் , சொற்பொருள் ஆற்றலையும் , கருத்து நயத்தையும் ஆராயாமற் பொருள் கூறி இடர்ப்படுவாரும் உளர் . அவையெல்லாம் பொருந்தாமை யறிக.

                              இதன்கண்,  “பேராவுலகம் புக்காரடியார்” என்றதனால், அழிவில் இன்ப நிலை அதுவென்பதும் , “ஊராமிலைக்கக்  குருட்டா மிலைத்தாங்கு”  என ஒப்புமை காட்டி, “அயலே மயல் கொண்டழுகேனே” என்றதனால் அவ்வின்பம் பற்றித் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்   நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *******************************************

பாடல் : 88 .

அழுகேன்  நின்பால்  அன்பாம்  மனமாய்

அழல்சேர்ந்த

மெழுகே  யன்னார்  மின்னார்

கழல்கண்டு

தொழுதே  யுன்னைத்  தொடர்ந்தா  ரோடுந்

தொடராதே

பழுதே  பிறந்தேன் என்கொண்  டுன்னைப்

பணிகேனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன்  திருவடி  அடைதற்கு  இன்றியமையாத சாதனம்  மெய்யன்பு  எனக்  கண்டு , அதனைத்  தந்தருள வேண்டுமென வேண்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில் அஃதன்றி வேறு எதனைப் பற்றுக்கோடாக  மேற்கொள்ளக்  கடவேன் என்று மீண்டும் வற்புறுத்து  இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  நின்பால்  அன்பு  ஆம்  மனமாம்  =  நின்னிடத்து அன்புமயமான  உள்ளம்  உடையராய் ,

மின் ஆர்  பொன் ஆர்  கழல் கண்டு  =  ஒளிபொருந்திய நின் பொன்போன்ற திருவடிகளைத்  தரிசித்து ,

அழல்  சேர்ந்த  மெழுகு அன்னார்  =  தீயிடைப்பட்ட  மெழுகை  ஒத்தவராய்

தொழுதே  உன்னை  தொடர்ந்தாரோடும் தொடராது  =  வணங்கிய  நிலையிலே  நின்னைப்  பற்றித்  தொடர்ந்து  அடைந்த  மெய்யன்பரோடும்  தொடர்ந்து  வாராமல் ,

அழுகேன்  = தனிப்பட்டு  அழுவேனாயினேன் ,

பழுது  பிறந்தேன்  =  ஆதலிற்  பயைன்றிப்  பிறந்தவனாகிய  யான் ,

என்  கொண்டு  உன்னைப்  பணிகேன்  =   எதனைப்  பற்றுக்கோடகக்  கொண்டு  நின்னை  வழிபடுவேன்  என்பது.

விளக்கவுரை  :-    ஆண்டவனைத் தொடர்ந்து அடைந்த மெய்யன்பர்களின் பக்குவ முதிச்சியை அடிகள் கண்கூடாகக் கண்டவராதலின் , இத் திருப்பாட்டில் சற்று  விளக்கமாகக் கூறத்தொடங்குகின்றார் . அம் மெய்யடியார் உள்ளமெல்லாம்  குழந்தை அன்பு மயமாயின என்பார், “அன்பாம்  மனமாய்” எனவும் , அத்தகைய அன்பும் உலக வாழ்க்கையில் மனை மக்கள் முதலியோரைப்  பற்றியதன்று ; அழிவில் பொருளாகிய நின்னைப் பற்றியது என்பார், “நின்பால்” எனவும்  கூறினர் . மனம்  ஆகு  பெயராக நின்று , அதனை யுடையாரை உணர்த்தும் .

                     அங்ஙனம்  குழைந்த அன்புருவமான உள்ளம் உடைமைக்குப் பயன் கூறுவார், “மின்னார் பொன்னார் கழல் கண்டு “என்றார். ஆண்டவன்  திருவடியைச் சிவஞானம் என ஆகமங்கள் கூறும்.  ஆதலானும், ஞானத்தை ஒளியாகக் கூறுதன் மரபு  ஆகலானும், “மின்னார்” எனவும், உலகப் பொருள்களில் வைத்துப் போற்றத்தக்க பொருளாக உவமை  கூறுதற்குப் பிறிது இன்மையின் ,”பொன்னார்” எனவும் கூறினர் , “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” என்பது தமிழ் மறை .  உள்ளம் அன்பு  மயமாகக்  குழைந்த நிலையில் உண்டாம் பயன் , ஆண்டவன் திருவடிக் காட்சி என்பது போதர , “கழல் கண்டு “ என்றார். பெறுதற்கு அரிய அக் காட்சியின் பின்னர் , அம் மெய்யன்பரின் உள்ளம் எவ்வாறு ஆயிற்று  என்பதற்கு விடையாக , ‘அழல் சேர்ந்த மெழுகேயன்னார் “ என்றார். தீயிடைப்படுதற்கு  முற்பட்ட நிலையில் குழைவுடைய மெழுகு போல , ஆண்டவன்  திருவடிக் காட்சிக்கு முற்பட்ட நிலையில் அவ் விறைவனை நினைந்த துணையானே குழைவுடைய மெய்யன்பர் உள்ளம் , அக் காட்சியின் பின்னர்த் தீயிடைப்பட்ட மெழுகு உருகி வடிதல் போல உருகிக் கரையும் என்பது கருத்து.

                       அங்ஙனம் உள்ளம் உருகப்பெற்ற மெய்யன்பர், அவ் அன்பிலே விளைந்த ஆரமிர்தமாகிய இறைவன் அருட் பார்வையாற் கவரப்பட்டு , அப் பெருமான் அருள் நிறைவில் தோய்ந்து இன்புற்றனர் என்பது புலப்பட, ”தொடர்ந்தார் “ என்றார் . தொடர்தல் – விரைந்து செல்வாரைப் பின்பற்றிச் சேறல் . எங்கும் நிறை பொருளாகிய  இறைவனுக்குப் புடைபெயர்ச்சி யின்மையால் , பக்குவமுள்ள உயிர் ,உலகப் பார்வை ஒழிந்து , இறைவன் அருள் இயல்பு அறிந்து இயைதலையே அங்ஙனம்  கூறினார் என்பது . “யானுனைத் தொடர்ந்து   சிக்கெனப் பிடித்தேன்” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  இக் கருத்துப் பற்றியே . அங்ஙனம்  தொடருங்கால் , வணக்க நிலையிலே உள்ளார் என்பது தோன்ற , “தொழுதே யுன்னைத் தொடர்ந்தார் “ என்றார். தொழுதலும் தொடர்தலும் ஒருங்கு நிகழ்ந்தன என்பது அறியத்தக்கது . அக் கருத்துத் தோன்றவே ,”கொழுநற் றொழு தெழுவாள்”என்பதற்குப் பரிமேலழகர் , “தொழாநின்று என்பது தொழுதெனத் திரிந்து நின்றது” என்று உரைக் குறிப்பு எழுதலானார் .

                           இதுகாறுங் கூறிய மெய்யன்பர் இயல்பிற் புலனாகும் பிறிதோர் உண்மையும் ஈண்டு அறிந்து இன்புறத்தக்கது . அஃதாவது இத் திருப்பாட்டில் மெய்யடியாரின் அறிவு , இச்சை , செயல்கள்  இறைவனைப் பற்றி நின்றன என்பதாம் . “கழல் கண்டு “ என்றதனால் அறிவும் , “அன்பாம் மனமாய் “ என்றதனால் இச்சையும் ,”தொழுதே தொடர்ந்தார்” என்பதனால்  செயலும் பற்றி நின்றமை புலனாயவாறு  அறிக. “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்னும் சிவஞான போத நூற்பாப் பகுதியும் , அதற்கு மாதவச் சிவஞான முனிவரர் , “அறிவிச்சை செயல்களின் நிகழ்ச்சியாகிய  அயராமையும் அன்பும்  செலவும் முறையே காரண காரியங்களாய் அவ்வொரு பொருள்மேல் ஒழுங்கு நிகழும் என்பார் . “அயராவன்பின் அரன் கழல் செலுமே என்றார். “ என்று நுண்ணிதின் ஆராய்ந்து எழுதிய உரைக் குறிப்பும் ஈண்டு  உணரத்தக்கன .

                       இத்தகைய மெய்யன்பரோடு  தொடர்ந்து வரும் தவ வலி  இன்மையால் , தனிப்பட்டு வருந்தலானேன் என்பார் , “ தொடராதே அழுகேன்” என்றார். திருவருட்  பேற்றிற்கு உரிய தவம் புரிதற்கு இவ்வுடல் பயன் படாமையால் , “பழுதே பிறந்தேன் “ என்றார் . “பிறந்தேன் “என்பது வினையாலணையும் பெயராய்ப் பணிகேனே என்னும் பயனிலைக்கு எழுவாயாயிற்று . உன்னைத்  தொடர்ந்தாரோடும்  தொடர்தற்கு உரிய மெய்யன்பாகிய சாதனத்தை விட்டு ,வேறு பற்றுக்கோடாக எதனைக் கொண்டு நின்னை வழிபடுவேன் என்பார், “என்  கொண்டு உன்னைப் பணிகேனே “ என்றார்.

                            இதன்கண், மெய்யன்பரின் அறிவு , இச்சை , செயல்கள் எல்லாம் ஆண்டவனைப் பற்றி நிகழ்ந்தன என்றமையால் , அங்ஙனம் நிகழ நுகரும் இன்பமே ஆனந்தம் என்பதும் , அது பெறாமையால் ,”அழுகேன்”  “பழுதே பிறந்தேன்” என்றமையால் தன் வயம் அழிதலும் பெறப்பட்டமையால் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        **********************************************

பாடல் : 89 .

பணிவார்  பிணிதீர்த்  தருளிப்

பழைய  அடியார்க்குன்

அணியார்  பாதங்கொடுத்தி

அதுவும் அரிதென்றால்

திணியார்  மூங்கில்  அனையேன்

வினையைப்  பொடியாக்கித்

தணியார்  பாதம்  வந்தொல்லை

தாராய்பொய்தீர்  மெய்யானே.

கருத்துரை :-  இறைவன்  திருவடி வணக்கத்திற்கு அன்பு நெறியல்லாது  வேறு எதனைத் துணைக்கொள்ளக்  கடவேன் என்று முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் , அச் செந்நெறிச்  செலவிற்குத் தடையாகவுள்ளது தம் பண்டை வினை என்றும் , அதனை அறவே  ஒழித்து விரைந்து திருவடிப் பேறு அளித்தல் வேண்டும்  என்றும் இத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .

பதவுரை :-  பொய் தீர் மெய்யனே  =  பொய்மையின் நீக்கத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

பணிவார்  பழைய  அடியார்க்குப்  பிணி தீர்த்து அருளி  =  வழிபடுவோராகிய  பண்டை  அடியார்க்குப்  பிறவி நோயை ஒழித்தருளி ,

உன் அணியார் பாதம் கொடுத்தி  =  நின் அழகு  மிக்க  திருவடியைக்  கொடுக்கின்றாய் ,

அது அரிது  என்றாலும்  =அங்ஙனம் தருதல் எனக்கு அரியது  ஆம்  என்றாலும் ,

திணி  ஆர்  மூங்கில் அனையேன்   =   திட்பம்  பொருந்திய மூங்கிலை  ஒத்தவனாகிய  எனது ,

வினையைப்  பொடியாக்கி  =  கன்மத்தை  நீறாக்கி ,

ஒல்லை வந்துதணி  ஆர்  பாதம்  தாராய்  = விரைந்து  வந்து  குளிர்ச்சி  பொருந்திய  நின்  திருவடியைத்  தந்தருள்வாயாக.  என்பது.

விளக்கவுரை :-  “பொய் தீர் மெய்யான்” என்புழி,  தீர் மெய்யான் என்பது வினைத்தொகை . அழியும் இயல்பினவாகிய மாயாகாரியப்  பொருள்கள் எல்லாம் பொய்ப் பொருள்களாம் , அப்பொருள்களை  வைத்துஆய்ந்து ஆழ்ந்து செல்லுங்கால் , அவ்வெல்லாம்  சென்று சென்று ,அணு அனூவாய் தேய்ந்து ஒழிய , அவற்றின் நீக்கத்தில் அவ்வெல்லாவற்றையும் கடந்து  நிற்கும் அழிவில் பொருளாகிய மெய்ப்பொருள் உண்மை பெறப்படும் . இக் கருத்துப்பற்றியே , “பொய் தீர் மெய்யானே” என்றார். “பொய் தீர் “  என்னாது , “மெய்யானே”என்ற  அளவில் இக் கருத்து அமையாதோ எனின் ,மக்கள்  ஆராய்ச்சி  காணப்படும் நிலையுதல் இல்லாத பொருளைப்பற்றியே முதலில் நிகழும் இயல்பினது ஆகலின் அமையாது  என்க. “காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் , உலகின் மேல் வைத்துக் கூறினார்” என்னும் பரிமேலழகர் உரைக்கருத்தும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . பிணி தீர்த்தற்கும்  வினையைப் பொடியாக்குதற்கும் உரிய தகுதி இறைவனிடத்து உண்மை குறித்து இங்ஙனம் கூறப்பட்டது என்பது குறிப்பிற் பெறப்படுவதாகும் .

                       பழைய அடியார் என்றதனால் , அவர்  வணக்கமும் தொன்று தொட்டு  ஏற்பட்டது என்பது போதரும். ஆகவே, பற்பல பிறப்புகளிலும் ஆண்டவனை  வழிபட்டு வழிபட்டுத் திருவருளால் தூய்மை  எய்தி ஆட்பட்ட  மெய்யன்பர்களே  பழைய அடியார் எனப்படுவார் என்பதாம் . அங்ஙனம் தொன்று தொட்டு வழிபாட்டை விடாமல் மேற்கொண்டுவரும் பழைய மெய்யன்பர்க்கு , அநாதியே பற்றிய  பாசப்பிணிப்பை எளிதின் ஒழித்துத்  தன் திருவடிகளை , ஞானவொளி மிக்க பேரெழில் வாய்ந்த நிலையிற் காட்சிப் படச்செய்து இன்புறுத்துகின்றாய்  என்பார்.  “பணிவார் பழைய அடியார்க்குப் பிணி  தீர்த்து உன் அணியார் பாதம் கொடுத்தி “ என்றார். இதனால் , பழைய மெய்யன்பர்க்குப்  பாச நீக்கமும்  சிவத்துவப் பேறும் அருளிய உண்மை புலனாம் என்பது . “பிணி தீர்த்து “ என்றதனாற்  பாச நீக்கமும் , “”அணியார் பாதம் கொடுத்தி” என்றதனாற் சிவத்துவப் பேறு அளித்தலும்  பெறப்பட்டவாறு அறிக. நோயுடை ஒருவனுக்கு முதலில் நோய் நீக்கத்திற்கு மருந்தும் , பின்னர் உடல் வன்மைக்கு உரிய உணவும் கொடுக்கப்படுதல் உலகியலிற் காண்கின்றோம் . அங்ஙனமே , பிணி தீர்த்தல் முதற்கண்ணும் , திருவடி கொடுத்தல் பின்னரும் கூறப்பட்டன . அணியார் பாதம்  என்றது , ஈண்டு இறைவனை அறிதற்கு உரிய சிவ ஞானத்தைக் குறிக்கும் .

    “அதுவும்” என்புழி , உம்மையைப் பிரித்து , “அரிதென்றால்” என்பதனோடும் இயைத்து , அது அரிது என்றாலும் எனக் கொண்டு பொருள் கூறப்பட்டது . அங்ஙனமின்றிச் சொற்கிடந்தபடியே பொருள் கூறின் , “மெய்யன்பர்க்குப் பிணி தீர்த்து அணியார் பாதம்கொடுத்து அரிதன்று”என்று அடிகள் கருதினார் என்பது பெறப்படும் . பாச நீக்க முகமாக உண்டாம் சிவத்துவப் பேறாகிய அதுவன்றி முடிந்த பயன் பிறிதொன்று இன்மையின் , அடிகள் அங்ஙனம் எளிதாகக் கருதினார் எனக் கொள்ளுதல் பொருந்தாது என்பது.  அப்பேறு தமக்கு அரிதாம் என்பதை உடன்பட்டு ,அத்துணைப் பெறுதற்குத் தமக்குத் தகுதியின்றாயினும் என்பார், “அது அரிது என்றாலும் “ என்றார். அத்துணை அரிதாகிய முடிந்த பயனைப் பெறுதற்குத் தகுதியில்லேன் ஆயினும், இப்பொழுது இன்றியமையாது வேண்டப்படும் கன்ம நாசத்தை விரைந்து அருளல் வேண்டும் என்பது பற்றிப் பின்வருமாறு  வேண்டுகின்றார்.

         திணியார் மூங்கில்  –  வன்மை மிக்க மூங்கில் ; அதனைக் கெட்டி மூங்கில் என்பர். மூங்கில் உள்ளும் புறமும் கசிவு இல்லாது ஆகும் . மேலும் குழாய் மூங்கிலினின்றும் வேறு ஆகிய திணியார் மூங்கில் ஆனதால் பிறர் வளைத்தால்  அன்றி வளையாததுமாம் . அது போல், உள்ளும் புறமும் முறையே குழைந்த அன்பும் , அது பற்றி யுண்டம் மெய்ப்பாடும்  பணிவும் இல்லாதேன் என்பார், “திணியார் மூங்கில் அனையேன்” என்று  மூங்கிலைத் தமக்கு உவமம் கூறுவார் ஆயினர் . ‘மூங்கில் அனையேன் வினையை “ என்புழி, ஆறாம் வேற்றுமை தொக்கதாகக் கொண்டு , “ஆனையேனது “ என விரித்துக் கொள்ளல் வேண்டும் . இதனால், மெய்யன்பர் உள்ளே குழைத்த அன்பும் , புறத்தே அதன் விளைவு ஆகிய செயலும் பணிவும் உடையார் என்பது பெறப்படும். மேலும் , அடிமைக்குப் பழமை கூறியமையால் , அன்புண்மையும், பணிவார் என்றதனால் வணக்கம் உண்மையும் உணரத்தக்கன . அடிகள் , தம்பால் உள்ளன்பும் வணக்கமும் இல்லாமைக்கு ஏதுவாக உள்ளது பண்டை வினையெச்சம் எனக் கண்டு , முதலில் அதனை முளைத்தல் இல்லாவாறு ஞானத் தீயால் சுட்டு எரித்தல் வேண்டும் என்பார்.,”வினையைப் பொடியாக்கி”என்றார்.  பொடியாக்குதல் – நீறாக்கல். “வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகாதென் செய்கேன்” என்னும் அடிகள் அருண்மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது .

            வினையைச் சுட்டு எரிக்குங்கால் , அவ்வினையிலே கிடக்கின்ற தம் உயிர்க்கும் அவ் வெப்பம் தாக்கும் ஆதலின் , அவ்வெம்மையின் தணிவு நிமித்தம் நின் திருவடியைக் குளிர்ந்த நிலையில் தரல் வேண்டும் என்பார் .  “தணியார்பாதம்” எனவும் ,அது தருதற்குக் காலம் தாழ்ப்பின் பொறேன் ஆதலின், விரைவில் தரவேண்டும் என்பார், “ஒல்லை” எனவும், யான் அவ் வெம்மையைத்  தாங்கி நின்பால் அணுகுதற்கு ஆற்றல் இல்லேன் ஆதலின் , நீயே என்பால் அருள் கூர்ந்து வரல் வேண்டும் என்பார், “வந்து” எனவும் கூறியருளினர் . தணி – தண்மை ; குளிர்ச்சி . “தணி புனலாடுந் தகைமிகு போர்க் கண்” என்புழி, அப்பொருட்டாதல் அறிக. வினையெச்சம் இல்லாமையால் மெய்யன்பர்க்குத் திருவடியை எழில்மிக்க ஞான நிலையில் கொடுத்து இன்புறுத்துகின்றாய் எனவும், யான் அங்ஙனம் பெறுதற்குத் தகுதி இல்லாமல் வினையோடு பிணிப்புண்டு இருத்தலின் , அதனை எரித்து ஒழித்து, அவ்வெம்மை  தாக்காமல் எனக்குத் திருவடியை விரைவில் குளிர்ந்த நிலையில் அருளிக் காக்கவேண்டும் எனவும் அடிகள் வேண்டியவாறாம் .

                 இதன்கண், “பணிவார் பிணி தீர்த்தருளிப் பழைய  அடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி” என்றதனால் , அழி வில் இன்ப நிலை இவ்வியல்பிற்று என்பதும் , அது பொறாமையால் , “திணியார் மூங்கில னையேன்” எனத் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் ,ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                          ****************************************

பாடல் :90 .

யானே  பொய்யென்  நெஞ்சும்  பொய்யென்

அன்பும் பொய்

ஆனால்  வினையேன்  அழுதால்  உன்னைப்

பெறலாமே

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே

தித்திக்கும்

மானே  அருளாய் அடியேன் உனைவந்

துறுமாறே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் வீட்டின்பப் பேற்றிற்குத் தடையாகவுள்ள வினையை நீறாக்கித் திருவடி நீழலை அருள வேண்டும் என்று  கூறிய அடிகள் , அப்பேறு குறித்துத் தம் கருவி கரணங்களையும் ஈடுபடுத்தற்கு  அவை நேர்மையுடையனவாக இல்லாமையானும், வேறு  பற்றுக்கோடு காணப்படாமையானும் ,தாயின் உதவி குறித்துக் குழந்த மேற்கொள்ளும் செயலைக் கடைப்பிடிக்கலாமா என்று இத்திருப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.

பதவுரை :-  தேனே  அமுதே  கரும்பின் தெளிவே  =  தேனும்  அமிழ்தமும்  கரும்பின் தெளிந்த சாறுமாக  உள்ளவனே ,

தித்திக்கும்  மானே =  இனிப்புச் சுவை மிக்க பெரியோனே ,

யானே  பொய் =  யான் பொய்யனே ,

என்  நெஞ்சும் பொய்  =  என் உள்ளமும் வஞ்சமுடையது ,

என் அன்பும் பொய்  = என் அன்பும் போலியாகவுள்ளது ,

ஆனால்  =  அங்ஙனமாயின் ,

வினையேன்  =  கன்மத்தையுடையேனாகிய  யான்,

அழுதால்  உன்னைப்  பெறலாமே  =  வருந்தி  அழுதால்  நின்னை அடையலாமா?

அடியேன்  உனைவந்து உறும் ஆறு அருளாய்  = அடியேன்  நின்னை வந்து எய்துமாறு  அருள்  புரிவாயாக என்பது.

விளக்கவுரை :- தேனே , அமுதே , கரும்பின் தெளிவே  என்று இறைவனை இனிமைச் சுவை மிக்க பொருள்களாக இம் முறையில் விளித்தலைப் பற்றித் திருச்சதகம் 55 ஆம்  திருப்பாட்டு உரையில் விளக்கம் கூறப்பட்டுள்ளது . ஆண்டுக் காண்க. பேரின்பப் பிழம்பாகவுள்ள  இறைவன் ,சார்ந்தார்க்கு இனிமை பயந்து நிற்கும் இயல்பு கருதி , உலகப்பொருள்களில் இனிமைச் சுவை மிக்க தேன் முதலியவாகக் கூறப்பட்ட அளவில் அமையாமை கண்டு , மீண்டும் ,”தித்திக்கும் மானே” என்றார் . மான்  – மகான் ; வட சொற்றிரிபு . மனம் , பொறிவழிப் புறத்தே சென்று நுகரும் பொருல்களுள் , தேன் முதலியன  போல அகத்தே நினையுந்தோறும் இனித்தல் குறித்து , “தித்திக்கும் “எனவும் , மக்களாற் சுவைக்கப்படும் உலகியற் பொருள்கள் எல்லாம் சுவைப்போனில் தாழ்ந்தனவாக அன்றி ,ஒத்தனவாக உள்ளன ஆதலின், அவற்றின் வேறாக , ஆண்டவன் மிக்கோன் ஆவான் என்பது தோன்ற , “மானே” எனவுங் கூறுவாராயினர் . “கனியினுங் கட்டிப்பட்ட கரும்பினும் … இனியன்” என்னும் தமிழ் மறையும் ஈண்டு நினைக்கத்தக்கது .

                    அடிகள் ஆண்டவன் திருவடிப்பேறு எய்த இயலாமையின் , தம் ஒழுக்கம் புரைபட்டது எனக் கொண்டு ,”யானே பொய்” என்றார். ஏகாரம் தேற்றப்பொருளது . தம்மைப் பொய்யன் என்ற  அளவிலே , தம் நெஞ்சும் அன்பும் பொய்மையுடையன என்பது பெறப்படுமாயினும் , ஆண்டவனை அடைதற்கு உரிய கருவி கரணங்களுள் நெஞ்சம் சிறந்தது ஆகலானும் , அன்பு இன்றியமையாதது ஆகலானும், அவ்விரண்டனையும் வேறாகப் பிரித்து ஓதினர். இங்ஙனம் கூறுதல் ஆன்றோர் வழக்கு என்பதை, “நாணனும் அன்பு முன்பு நளிர் வரை யேற “ எனவும் ,”செம்பொற்றாளே சார்வான திருமணமும் …………தாமுமாகி” எனவும் சேக்கிழார் அடிகள் கூறுமாற்றான் அறிக. மன மொழி மெய்கள் மூண்றனுள் , நெஞ்சம் பிரித்து ஓதப்பட்டமையால் , ஏனைய மொழி மெய்களின் பொய்மை, “யானே பொய் “ என்றதனாற் பெறவைத்தார்  என்பதாம். பேச்சளவில் நிகழும் போலிப் பாராட்டும், உடலளவில் நிகழும் போலி வணக்கமும் பொய்மையுடையன என்பது கருத்து. அவ்விரண்டற்கும் மூலமாக உள்ளது நெஞ்சம்  ஆதலின் , அதன் வஞ்சகம் , கேடு பயப்பதில் அவற்றினும் சிறந்தது எனக்கொண்டு ,தனித்து எடுத்து ,”என் நெஞ்சம் பொய் “ என்றார் . அன்பு என்னும் உயிர்க்குணம் முதிர்ந்த நிலையில் ஆண்டவனை அடைதற்கு  உரிய சிறந்த நெறியாக முடிதலின் , அஃது இன்றியமையாதது ஆகவும் ,அதுவும் போலியாயிற்று என்பார், “என் அன்பும் பொய் “ என்றார். “என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய்” என ஈரிடத்தும் “என்”என்பதை இயைத்துக் கூறியது , உலகத்தில் என் அளவில் இப்படிப் போலி ஆயினவே என அடிகள் இரங்கியமை புலப்படுத்தற்கு என்க.

                  இங்ஙனம் தம் மனம் மொழி மெய்களும் அன்பும் பொய்மை உடையன ஆதற்கு ஏது , தம் தீவினை என்பார், “வினையேன் “ என உடம்பொடு  புணர்த்து ஓதினர் . உடம்பொடு புணர்த்தலாவது, சொல்லப்பட்ட இலக்கியத்திலே  சொல்ல வேண்டியது ஒன்றை உய்த்துணர வைத்தலாகும் . இதனை, “சுவையொளி  யூறோசை நாற்றமென்றைந்தின் , வகை தெரிவான் கட்டே யுலகு “ என்னுங் குறளில் , “வகை தெரிவான் கட்டென உடம்பொடு புணர்த்ததனால் , தெரிகின்ற புருடனும் , அவன் தெரிதற் கருவியாகியமான்  அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம் “  என்று  பரிமேலழகர் எழுதிய உரையானும் உணர்க . ஈண்டு , யான் எனக் கூற வேண்டிய இடத்தில் வினையேன் என்றதனால் , வினை ஏதுவாமென்பது உய்த்துணர வைக்கப்பட்டவாறு  அறிக.  என் நெஞ்சும்  அன்பும் பொய்பட்டமையால் , அந் நெஞ்சத்தின் துணை பற்றி , அன்பு நெறியாக ஆண்டவன் திருவருளைப் பெறுதற்கு இயலாமையானும் , பிறிதோர் ஆறின்மையானும் , “அழுதால் உன்னைப் பெறலாமே “என்றார். உலகத்தில் எத்துணை ஆற்றல் படைத்தாரும் ஒன்றைப் பெறுதற்கு விரும்புங்கால் , தம் கருவி கரணங்கள் வலியிழந்து பயன்படாத நிலையில் மேற்கொள்ளப்படுவது அவலித்து அழுதலே யாகும்.  “பெறலாமே” என்புழி, ஏகாரம் வினாப்பொருளில் வந்தது . என் அன்பும் பொய்யானால் , அழுகையும் பொய்யாகும் ஆதலின், பொய்யாக அழுதால் உன்னைப் பெறலாமோ எனப் பொருள் கோடலுமாம் .

                     அடிகள், தம் அன்பு பொய்மையானதால் , வேறு புகல் இன்றி , “அழுதாலுன்னைப் பெறலாமே” என்றார். ஆயினும், அவர் அழுகை , பால் நினைந்தூட்டும் தாயை நினைந்து மழவிளங்குழவி  அழுதல் போல் அன்பினால் நிகழ்வதாகும் ; மற்றை அடியார்களும் இறைவன் திருவருளை வேண்டி , அன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்து அழுதமை , அன்னார் வரலாற்றான் அறியப்படும் . “புனித வாய் மலர்ந்தழுத” என ஆளுடைப் பிள்ளையாரையும் , “நைந்துருகிப் பாய்வது போலன்பு  நீர்பொழிகண்ணும் “ என்று ஆளுடை அரசையும் பற்றிச் சேக்கிழார் கூறியிருத்தல் ஈண்டு நினைக்கத் தக்கது .

                     “அழுதால் உன்னைப் பெறலாமா” எனக் கேட்ட அடிகள் , ஒருவாறு அங்ஙனம் அழுதலும்  நின்னைப் பெறுதற்கு வாயில்  ஆகாது எனின், நின்னை வந்து அடைதற்கு உரிய சிறந்த நெறி பிறிது ஒன்று இன்னது என்று காட்டியருளல் வேண்டும் என்பார், “அடியேன் உன்னை வந்து உறும் ஆறு  அருளாய் “ என்றார் . ஈண்டு அடியேன் என்றது , ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . “அவனருளாலே யவன்றாள் வணங்கி “ என்றபடி , அப்பெருமானை அறிந்து  வழிபடுதற்கு உரிய நெறியைக் காண்டற்கும் அவன் அருளே துணை புரியவேண்டும் ஆதலின் இங்ஙனம் கூறினார் என்க.

     இதன்கண், “தேனே யமுதே கரும்பின் தெளிவே  தித்திக்கும் மானே” என்றதனால் பரவசமாதலும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “மானே யருளாயடியேன் உனை வந்துறுமாறு என்றதனால் பத்தியும் ,”யானே பொய், என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய் “ என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                         *********************************************

10 .   ஆனந்தாதீதம்

                          ஆனந்தாதீதம் என்னும் வட சொற்றொடர் ஆனந்தத்தின்  அதீத நிலை என விரியும் . ஆனந்தம் , மெய்யுணர்வினால் அநுபவிக்கப்படும் அழி வில் இன்பம் என்பது  8, 9 ஆம் பதிகங்களின் வைத்து விளக்கிக்கூறப்பட்டது . அதீதம் என்னும் சொல் கடந்தது என்னும்  பொருள் உடையதாகும். ஆகவே , அத் தொடர் , அப் பேரின்பத்தின் கடந்த நிலையாகிய முடிந்த எல்லையைக் குறிக்கும் என்பது தெளிக. சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடைய உயிர் , இடையறாத சிவபாவனையால் , பாசச் சார்பை ஒழித்துச் சிவச்சார்பை யடைந்ததும் ,அப்பாச நீக்கத்தில் உண்டாம் அருள் விளக்கத்தில் தலைப்பட்டு , அது வாயிலாக ஆனந்த விளக்கம் நிகழப்பெறுவதாம் என்ப.  பாசம் நீங்கிய வழி உண்டாவது அருள் விளக்கமாகும் . அஃது இருள் நீக்கத்தின் உண்டாம் ஒளி விளக்கம் போல்வதாம். அதன்மேல் , ஆண்டவன் கருணையால் நிகழ்வது ஆனந்த விளக்கமாகும் . அவ் ஆனந்தத்தில் ஞானநிலையோடு உயிர் தோய்தல்  ஆனந்தத் தழுந்தல் என்று 8-ஆம் பதிகத்தும் ,அத் தோய்வு முதிர முதிர , அவ்வுயிர் தன்வயம் அழிதல் ஆனந்த பரவசம் என்று 9-ஆம் பதிகத்தும் கூறப்பட்டன . அங்ஙனம் தன்வயம் அழிந்த நிலையின் மேம்பட்ட நிலையே அதீத நிலை ஆகும் . இந்நிலையில் , காண்பவன் , காட்சி, காணப்படுபொருள் என்னும் வேறுபாடு இன்றாம் , தன்வயம் அழிந்த நிலையில் , ஒரோவழிப் பண்டை பாசத் தொடர்பால் யான் நுகர்கின்றேன் என்று உயிர் நினைவு முற்படுதலுங் கூடும் . அதீதமாகிய கடந்த நிலையில் ,அந் நினைவு சிறிதும் நிகழாது என்பதாம். இந் நிலையின் இயல்பை ,அடிகள் , “எனை நானென்பதறியேன் பகலிரவாவதும் அறியேன்”என்று கூறியருளிய அநுபவ உண்மையான் உணரலாம்.

            உலகியலில் ஓர் அழகிய உருவத்தைக் காணுங்கால் ,அதனை அழுந்திப் பார்ப்பவன் காண்பவன் ஆவான் ; அங்ஙனம் பார்க்கப்படும் உருவம் காணப்படு பொருள் ஆகும் காண்பவன் அறிவு காட்சியாகும் . இவ் வேறுபாடு உள் வழி ,அஃது அதீத நிலை ஆகாது . இவ்வேற்றுமையின்றி , இன்பமயமாக நிகழும் அநுபவம் ஆனந்தாதீதம் என்ப. இதனையே ,”ஆதீத நிலைக்கண்ணதாகிய சிவத்துவ விளக்கம் எனப்படும் பரமசுகம் “ என்று சிவஞான முனிவர் கூறுவர் . பரம சுகம்  – மேலான இன்பம் . இவ்வதீத நிலையில் அனுபவிக்கும் உயிர்க்குத் தன்னைக் குறித்து யான் எனது என்றலும் ,அநுபவப் பொருளாகிய இறைவனைக் குறித்து முன்னிலைப்படுத்து , நீ நினது என்றலும் ஆகிய வேற்றுமையுணர்ச்சி சிறிதும் நிகழாது என்பதாம் . இவ்வுண்மையைத் தாயுமான அடிகள் , “எனதென்பதும் போய் ,யானெனல் போய் ,எல்லாம் இறந்த இடங்காட்டும் நினதென்பதும் போய் ,நீயெனல் போய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் “ என்று கூறுவர் .( இப் பாடலில் உள்ள  போய் என்னும் நான்கனையும்  பதிப்பிட்டார் , உரை எழுதினார் எல்லோரும் , பொய்  எனப்  பாடங்கொண்டு  வெளியிட்டனர் . இறைவனை நோக்கி ,” நீ யெனல் பொய் “ என்று கூறுதல் சைவ சித்தாந்த மரபிற்கு முரணுதலானும் , பொருட் சிறப்பின்மையானும் , சிறந்த பாடம் அன்று) எனது , யான் , நினது , நீ  என்னும் வேறுபாடு ஒழிந்து நிற்கும் நிலை என்பது பொருள் . இதுவே அதீத நிலையாகும் . இந் நிலையில் , உயிர் நுகரும் பேரின்பம் , கருவி கரணங்களைக் கடந்தது ஆகலின் , இதன் இயல்பு இத்தன்மைத்து எனக் கூற ஒண்ணாதது என்று திருமூலர் பிவருமாறு கூறுவர்; “மகட்குத்  தாய் தன் மணாளனோடாடிய , சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமாறெங்கனே “ என்பது. இவ்வதீதமாகிய  பேரின்ப நிலை , தன்வயம் அழிந்து நுகர்தலாகிய  ஆனந்த பரவசத்தின் பின் நிகழ்வதாகலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது என்க . இதனால் பதிக இயைபுண்மை புலனாயவாறு அறிக .

எண்சீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 பாடல் : 91 .

மாறி  லாதமாக்  கருணை  வெள்ளமே

வந்து முந்திநின்  மலர்கொள்  தாளிணை

வேறி  லாப்பதப்  பரிசு  பெற்றநின்

மெய்மை  அன்பருன் மெய்மை  மேவினார்

ஈறி  லாதநீ  யெளியை  யாகிவந்

தொளிசெய்  மானுட  மாக  நோக்கியுங்

கீறி  லாதநெஞ்  சுடைய  நாயினேன்

கடையன்  ஆயினேன்  பட்ட  கீழ்மையே.

கருத்துரை :-    ஆண்டவன் திருவடியின்பப் பேற்றிற்கு உரிய சாதனங்களை மேற்கொள்ளத் தம் கருவி கரணங்கள் செம்மையுடையனவாக இல்லாமையால் , அழுதால் உண்ணைப் பெறலாமே என்று முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் கூறிய அடிகள், அங்ஙனம் இறைவன் அரிதிற் பெறுதற்கு இன்றி எளிமையில் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளி அருள் நோக்கம் நல்கியும் , இன்பப் பேற்றிற்குப் புறம்பாகிய நெஞ்சத்தோடு கூடிப் பொறுத்திருக்கலானேனே என்று ,இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மாறு  இலாத  மா  கருணை  வெள்ளமே  =  வேறுபாடு  இல்லாத  பேரருட் பெருக்கே,

நின் மலர்கொள்  தாளிணை  =  உன்னுடைய  தாமரை மலர்  போன்ற  திருவடித்துணைக்கண்  ,

வேறு  இலாப்  பதப்  பரிசு பெற்ற நின் மெய்மை அன்பர்  =  வேற்றுமையின்றிக்  கலத்தற்குரிய  பக்குவத்தன்மை யடைந்த நின் மெய்யன்பர் ,

முந்தி  வந்து  =  முற்பட்டு  வந்து ,

உன்  மெய்மை  மேவினார்  =  நின் திருவடி  இன்பம்  எய்தினர்,

ஈறு  இலாத  நீ  =  அழிவில்லாத நீ ,

எளியை  ஆகி  ஒளி  செய் மானுடம்  ஆக  வந்து  நோக்கியும்  = 

எளிமையுடைமை  ஆகி  ஒளிபொருந்திய  மக்கள்  வடிவில்  ஞானாசிரியனாக  எழுத்தருளி  வந்து  அருட்பார்வை  நல்கியும்  ,

கீறு  இலாத  நெஞ்சு உடைய  நாயினேன்  =  பிளவு படாத  வலிய  நெஞ்சத்தையுடைய  நாய் போன்றவனாகிய  யான் ,

பட்ட  கீழ்மை  =  எய்திய  இவ்விழிவால் ,

கடையன்  ஆயினேன்  =  கடைப்பட்டவன்  ஆயினேன் என்பது.

விளக்கவுரை :-   இறைவனுடைய  எண்குணங்களுள் பேரருள்  உடைமை ஒன்று. அது, “மாக்கருணை” என்னப்பட்டது . அளப்பரிய அவ்வருளை மழையாகவும் கடலாகவும் கூறுதல் போல , ஈண்டு  வெள்ளமாகக்  கூறினர் . கற்பனை கடந்த சோதியாகவுள்ள ஆண்டவன் , கருணையே வடிவமாக  வுடையான் ஆதலின், இங்ஙனம் கூறினர் . கருணையை நிராகக் கொண்டு , அவ் வருண்மயமாகவுள்ள இறைவனை வெள்ளம் என்றார். உலகத்தில்  நீர்ப்பெருக்காகிய  வெள்ளம்  பெருகுதல் , சுருங்குதல் , வற்றுதல் ஆகிய வேறுபாடுகளை யுடையதாகும் . இறைவனாகிய அருள் வெள்ளம் அவ்  வேறுபாடுகள் இன்றி , எக்காலத்தும்  ஒரே படித்தாக நிறைந்து இருத்தலின் , “மாறிலாத மாக்கருணை  வெள்ளமே” என்றார் . “குறை விலா  நிறைவே “என்றதும் இக்கருத்துப் பற்றியே .

                       சார்ந்தாரை  இனிமை யுறுத்தும்பேரின்பத் தேன் நிறைந்த மலரின் தன்மையைக் கொண்டன என்பார் , “மலர்கொள்”என்றார். வேறு இலாமை  – பக்குவத்தன்மை ; ஈண்டு இருவினை யொப்பு , மலபரிபாகம் முதலிய இயல்புகளைக் குறிக்கும் ; இறைவனோடு இரண்டறக் கலத்தற்குரிய  தகுதி யென்பது கருத்து. இத் தகுதியால் ,பாசப் பிணிப்பு  ஒழிந்து , மெய்யுணர்வு பெற்றுத் தூயராயினர்  என்பதும், “மெய்மையன்பர் “ என்றதனால் , உண்மையாகிய அன்பு நெறியில் ஒழுகினார் என்பதும் பெறப்படும் . இச் செந்நெறிச் செலவினராகிய  மெய்யன்பர் , இப் பொய்யுலக வாழ்க்கையினின்றும் விடுதி பெற்று , விரைவில் முற்பட்டு எய்தினர் என்பார், “முந்தி வந்து “ என்றார். மெய்மை – ஆகு பெயரால் என்றும் நிலையுதலை யுடைய வீட்டு நிலையைக் குறிப்பதாகும்.. “நின் தாளிணை “ , “நின் மெய்யன்பர்” , “உன் மெய்மை “  எனச் சாதனம், நெறி, பயன் என்னும் மூன்றும் கூறப்பட்டபடியாம்.  இம் மூன்றிலும் சிவசம்பந்தத்தின் இன்றி யமையாமையில்  ஈடுபட்டு , “நின், உன் “ என விடாது கூறினர் .

                       “ஆதியும்  அந்தமும்  இல்லா அரும்பெருஞ்சோதி “ என்றபடி , “ஈறிலாத நீ “ என்றார். ஈறின்மை கூறவே , தோற்றம் இன்மையும் பெறப்படும் . மெய்யன்பர்க்குக்  காட்சிப்பட்டு அருள் நல்கும்  இறைவனுக்குத் தோற்றம் இன்மை கூறுதலினும் , ஈறின்மை கூறுதலே சிறந்ததாகும் . “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்னும் தமிழ் மறையும் நோக்குக . இதனால், காட்சி முதலியவற்றிற்கு  அரிய பொருள் ஆவான் ஈறிலாத  ஈசன்  ஒருவனே  என்பது தெளியப்படும் . அடிகள் பிறிதோரிடத்து , “அரியதில் அரி அரியோன் காண்க” என்று கூறியருளியதும் காண்க. இத்துணை அரிய பொருளாகவுள்ள இறைவன் ,கருணை காரணமாகத்  தமக்கு எளிமையிற்  காட்சியளித்தான் என்பது குறித்து , “எளியையாகி “ என்றார். ஈறிலாமையான் ஆகிய  அருமை  இறைவர்கு இயல்பு ஆதலையும் , மெய்யன்பர்க்கு வெளிப்படும் எளிமை  அருள் காரணமாக  நிகழ்தலையும் ,”எளியை யாகி” என்புழியுள்ள ஆக்கச் சொல் புலப்படுப்பதாகும் ,தமக்கு எளிமையாயது ,திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஆண்டவன் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளியது என்பார், “மாநுடமாக “எனவும் ,மனித வடிவில் எழுந்தருளினான் ஆயினும் ,தெய்வீக ஒளி அவ்வுருவில் திகழ்ந்தது. என்பார், “ஓளிசெய் மாநுடம்” எனவும் கூறியருளினர். இறைவனைப் பேரொளிப் பிழம்பாக முது நூல்கள் கூறும் . அந் நிலையில் காட்சியளிப்பின் , மக்கட் பிறப்பினராகிய  அடிகள் கட் புலனுக்கு அடங்காது எனக்கொண்டு ,அவ் வொளியைத் தன்னுள் அடக்கி நிற்கும் மாநுட வடிவம் ஆயினான் என்பது .  தெய்வத்தன்மையின் ஒரு சிறு கூறுடைய சாத்தன் என்பான் மக்கள் வடிவில் தோன்றி , மணந்த தேவந்தி என்பாளுக்குத் தன் இள நலத்தைக் காட்டுங்கால் , அவள் கண்கள் தன் ஒளி வடிவத்தைக் காண இயலா எனக் கண்டு ,தன் ஆற்றலால் பொறுப்பித்தான் என்று சிலப்பதிகாரம் கூறும்.  “தேவந்தி யென்பான் மனைவி யவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் , மூவா விளநலங்காட்டி “ என்னும் பகுதியும் , அதற்கு , “மக்கள் கண்ணிற்குத் தெய்வயாக்கை காணப்பொறாதாகலின் இவள்கட்குப்  பொறுக்கக் கடவதென்று நிருமித்துக் கொண்டான்” என்று அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும்  ஈண்டு அறியத்தக்கன. இங்ஙனம் கடவுட் கூறு சிறிது அமைந்த சாத்தன்  ஒளியே மக்கள் கட்புலனாற் பற்றப்படாதது ஆகுமாயின் , இறை இலக்கணம் முற்றும் அமைந்த சிவபெருமான் ஒளிவடிவம் எங்ஙனம் கட்புலனுக்கு அடங்கும் என்பது உணரத்தக்கது .  இனி, “ஒளிசெய் மாநுடம் “ என்பதற்கு , ஞான ஒளியை அடிகளுக்கு அருளும் ஞானாசிரிய வடிவம் என்று பொருள் கோடலும் பொருந்தும் . ஒளி   –  ஞானம் . மல இருளை யொழித்து விளங்குதலின் , ஞானம் ஒளி எனப்பட்டது  என்க .

                 முதல் அடியில் மெய்யன்பர் தாமே இறைவனை அணுகினார் என்பது தோன்ற , அவர் செயலாக , “முந்தி வந்து “ எனவும் , மூன்றாம் அடியில்   அடிகள்பால் உள்ள அருள் காரணமாக இறைவன் நிலவுலகத்து  எளி வந்தனன் என்பது தோன்ற , இறை செயலாக ,”மாநுடமாக வந்து “ எனவும் கூறிய நயம் உணர்ந்து இன்புறத்தக்கது. அங்ஙனம் தானே வந்து காட்சி அளித்த அளவில் அமையாது , தம் உயிரைத் தூய்மைப் படுத்தற்கு உரிய  அருள் நோக்கம்  ஆகிய நயன தீக்கையும் செய்தனர் என்பார்,  “நோக்கியும்” என்றார்.  “அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்த” என்று  திருத் தொண்டர் புராணம் கூறியதும்  நயன தீக்கையே என்க . நோக்கியும் என்புழி ,உம்மை சிறப்புப் பொருளில் வந்தது .

         இங்ஙனம் ஈறிலாத அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு எளியனாதல் , ஒளிசெய் மாநுடமாதல் , வலிய வருதல் , நோக்குதல் ஆகிய குணஞ் செயல்களாற் கருணை காட்டிப் பேருதவி புரிந்தும் , இந் நன்றியைச்  சிறிதும் நினையாத வன் நெஞ்சு  பிளக்கப்பட்டிலது என்பார், “கீறிலாத நெஞ்சு”ஏன்றார். நாய் இழிந்த பிறப்புடையதாயினும் , நன்றி மறவாமையில்  சிறந்ததாகும் . யான் நன்றி மறக்கும் நாயின் தன்மை யுடையேன் என்னும் குறிப்புத் தோன்ற , “கீறிலாத நெஞ்சுடை நாயினேன்” என்றார். “கீறிலாத நெஞ்சுடையன் ஆயினேன் “எனப் பாடம் கொண்டு முடித்தலுமாம். .

           “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்  உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு “ என்றபடி , உய்தியில் குற்றமாகிய நன்றி மறத்தலால் , இழிவு எய்திற்று என்பார் , “பட்ட கீழ்மை “ எனவும் , அது காரணமாக உயிர்த் தொகுதியில் கடைப்பட்டவன்  ஆயினேன் என்புழி , மூன்றான் உருபு தொக்கு நின்றது .

              இதன்கண் , “வேறிலாப் பதப் பரிசு பெற்ற நின் மெய்மையன்பருன் மெய்மை மேவினார் “ஏன்றதனால் , அவர் எய்தியது அதீதமாகிய ஆனந்தம் என்பது பெறப்படுதலின் , ஆனந்தா தீதம் என்னும் பதிகம் நுதலிய பொருளும், “மாறிலாத மாக்கருணை பாராட்டியமையால் பத்தியும் , “கீறிலாத நெஞ்சுடையேன் “ஏன்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாயாவாறு அறிக.

                                      ******************************************

பாடல் :92 .

மையி  லங்குநற்  கண்ணி  பங்கனே

வந்தெ  னைப்பணி    கொண்ட  பின்மழக்

கையி  லங்குபொற்  கிண்ணம்  என்றலால்

அரியை  என்றுனைக்  கருதுகின்றிலேன்

மெய்யி  லங்குவெண்  ணீற்று  மேனியாய்

மெய்மை  அன்பருன்   மெய்மை  மேவினார்

பொய்யில் அங்கெனைப்  புகுத  விட்டுநீ

போவ  தோசொல்லாய்  பொருத்தமாவதே.

கருத்துரை :-  அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு மாநுட வடிவில் எளியனாய் வந்து அருட் பார்வை நல்கியும்  நன்றி மறந்தவனாயினேன் என்று முன்னைத் திருப்பாட்டில் இரங்கிக்கூறிய அடிகள் , அங்ஙனம்  நன்றி மறத்தலே  யன்றி , ஆட்கொண்டருளிய அப் பெருமானது அருமைப் பாட்டையும் நினையாமல் , மிக எளிய  பொருளாகவும்  கருதலானேனே என்று இத் திருப்பாட்டில் மீண்டும் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மை இலங்கு நல் கண்ணி பங்கனே  =  அஞ்சனம் விளங்குதற்கு ஏதுவாகிய அருள் விழிகளையுடைய அம்மையை ஒரு கூற்றிலுடையவனே,

மெய் இலங்கு  வெள் நீற்று மேனியாய்  =  திருமேனியில்  விளங்குகின்ற திரு வெண்ணீற்றினால் வெண்ணிறமுடையாய் ,

வந்து  என்னைப் பணி கொண்டபின்  =  நீ  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து அடியேனை ஆட்கொண்டருளிய  பின்னர் ,

மல கை இலங்கு  பொன் கிண்ணம் என்று அலால்  =  சிறு குழந்தை தன் கையிலுள்ள ஒளி செய்கின்ற பொற்கிண்ணத்தை எளிமையாக எண்ணுதல் போல  எளிமையாக எண்ணினேன் அல்லாமல் ,

அரியை யென்று உன்னை கருதுகின்றிலேன்  = கிடைத்தற்கு அரிய பொருள் ஆவாய் என்று நின்னை நினைத்தேன் அல்லேன்,

மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்  =மெய்யன்பர் நின் வீட்டின்பமாகிய அழி வில் வாழ்க்கையை அடைந்தனர் ,

என்னைப்  பொய்யில் புகுதவிட்டு  = சிறியேனைப் பொய்மை வாழ்க்கையில் புகும்படி விட்டு ,

நீ அங்குப் போவது பொருத்தம் ஆவதே   =  நீ சிவபுரத்திற்கு எழுந்தருளுதல் பொருத்தம் ஆகுமா ?,

சொலாய்  = கூறியருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  அஞ்சனம் அம்மையின் திரு விழிகளில் தோய்ந்து விளக்கம் பெற்றது என்பர் , “மை இலங்கு “ என்றார் . இலங்கும் கண் என்புழி , எச்சம் காரியப்பொருட்டு . அருட்குணமே சிவசத்தியின் வடிவம் ஆகும் . அவ் அருட்பண்பைத் திருவிழிகள் மூலம் புலப்படுத்தி ,உயிர்த் தொகுதிகளை உய்யக் கோடலின் , அம்மையின் கண்களை , “ நற்கண்” என்றார். நன்மை – அருட்குணத்தால் ஆகிய சிறப்பு .   அஞ்சனத்திற்கு  விளக்கமும் , ஆருயிர்த் தொகுதிக்கு  அருளும் நல்கும்  கண்களை  உடையவள்  என்றமையால் , அம்மை, தன்னைச் சார்ந்த பொருள் யாதாயினும் , அதனை விளக்க முறுத்தும்,சாரக்கடவ பொருள்களில் கருணை  காட்டியும் ஆதரிக்கும் இயல்புடையாள்  என்பது பெறப்படும் .

                     ஆண்டவன்  வலிய வந்து தம்மை ஆட்கொண்டதற்கு ஏது ,தம் தவம் அன்றி என்பதும் , அப் பெருமானிடத்து இயல்பின் அமைந்துள்ள கருணையேயாம் என்பது  புலப்படுத்துவார் , அருள் உருவினளாகிய “கண்ணி பங்கனே” என்றார், ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய ஞான்று காட்சிப்பட்ட திருக்கோலம் , அடிகள் உள்ளக்கிழியின் உருவெழுதியாங்கு , அக் கண்ணிற்குப் புலப்பட்டமையின் , “மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய் “ என்றார்.  மெய் –  ஆண்டவன் திருமேனி , மேனி – நிறம் , ஆண்டவன் செம்மேனி யெம்மானாதலின் , திருநீற்றினால் வெண்ணிறம் காணப்பட்டதென்க, ஆண்டவன் போகியா யிருந்துயிர்க்குப்  போகத்தைப் புரிதலும் , யோகியாய்  யோகமுத்தி  யுதவுதலும் உடையனாதலின் , அவ்விரண்டு தன்மைகளும் புலப்பட , முறையே , “மையிலங்கு நற் கண்ணி பங்கனே” எனவும் , “வெண்ணீற்று மேனியாய் “  எனவும்  கூறுவாராயினர் , வெண்ணீறு –  ஞான யோகத்தின் இலச்சினையாகும்.

                 ஆண்டவன், தம்மை ஆட்கொள்ளுதற்கு முன்,  அப் பெருமானுடைய  பெருமைகளை நூலுணர்ச்சி முகமாக ஆராய்ந்து, அருமை உடையன எனத் தெளிந்து போற்றியதாம் , அவ் விறைவன் வலிய வந்து பணி கொண்ட பின் , எளிமையாகக் கருத நேர்ந்ததே என இரங்குவார் , “வந்தெனைப் பணிகொண்ட பின் “ என்றார். நூலறிவு பேசிய அளவில் இறைவன் பெருமைகளை உணர்தலினும் , இறைவன் காட்சி நல்கி ஆட்கொண்டபின் உணர்தலே சிறந்ததாகும் . உலகியல் இதற்கு மாறாகும் . மக்களுள் ஒரு தலைவனைப்  புனைந்துரைப்பார் வாயிலாகக் கேட்பதினும் , நேரிற் காண்டலிற் குறைவே காணப்படும். எல்லாம் வல்ல கடவுளின் பெருமை அங்ஙனமன்று . கேள்வியளவினும் , அநுபவக் காட்சி எத்துணையோ சிறந்ததாகும் . அதற்கு மாறாக ,நூலறிவிற் கேட்கப்பட்ட அருமையை , அநுபவ உணர்வில் எளிமையாகக் கோடற்கு ஏது , என் அறியாமையே என்று இரங்குவாராயினர் . “பணி கொண்ட பின்” என்றதனால் ,நுண்ணிய இக் கருத்துகளைப்  புலப்பட வைத்தார் என்பது.

                 அடிகள், தம்மை ஆட்கொண்டபின் ஆண்டவனது அருமை  அறியாமைக்குக் காட்டிய எடுத்துக் காட்டு  நினைந்து நினைந்து இன்புறத்தக்கது . மழ என்பது குழந்தையை உணர்த்தும் . “வானுந்து மாமதி வேண்டியழு மழப்போலும்” என்னும் திருக்கோவையிலும்  இப் பொருட்டாதல் காண்க. அறியாப்பருவத்துக் குழந்தையின் கையில் , அதன் மகிழ்ச்சி கருதிப் பொன்னால் ஆக்கப்பட்ட  விலையுயர்ந்த  ஒரு கிண்ணம் கொடுக்கப்பட்டால் , அதன் அருமையை அக் குழந்தை அறியாவாறு போல என்பார், “மழக் கை இலங்கு  பொற்கிண்ணம் என்றலால் “ என்றார். இவ் எடுத்துக் காட்டிற் பிறிதோர் உண்மையும் புலனாம். அது, பொற்கிண்ணத்தின் அருமை அறியாத அம்மழவிளங் குழந்தை , அதனைக் கை நழுவவிட்டால் , அது வீழ்ந்து சிதைந்து விடுமே  என்னும் கவலை , தாய் தந்தையர்க்கு ஏற்பட்டு ,அங்ஙனம் வீழா வாறு அக் குழந்தை செல்லும் இடன் எல்லாம் தாமும் சென்று , நழுவ விடாமல் தாங்கித் துணை நின்று பாதுகாத்தல் போல ,ஆண்டவன் தன்னைத் தமக்குத் தந்த அளவில் அமையாமல் , பேணிக்கோடற் பொருட்டுத் தாம் செல்லுழி யெல்லாம் புறம் போந்து பாதுகாக்கும் கடப்பாடும் உடையனாவன் என்பதாம். இது கருதியே பிறிதோரிடத்து அடிகள் , “தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே” என்று அருளிச் செய்வாராயினர் . ஆண்டவன் ,தம் புறம்  புறம் திரிதற்கு ஏது, அடிகளுக்குத் தான் அருளிய அருளமுதத்தை அடிகள் நழுவவிடாமல் துய்த்து இன்புறுதற் பொருட்டு என்பது.  மழக்கை என்பதற்கு இங்ஙனம் பொருள் கொள்ளாது , அடிகளது மென்மையான கை என்று கூறுவாறும் உளர். அடிகள் தம் கையை அங்ஙனம் கருதி யிருப்பாராயின் , அது எடுத்துக் காட்டாதல்  அமையாமையின் ,அது பொருள் அன்மைஅறிக.

            “அரியை யென்றுனைக் கருதுகின்றிலேன் “ என்று பின்னர்க் கூறப்பட்டிருத்தலின் , “என்று அல்லால்”  என்பது  என்று எளிமையாகக் கருதியதன்றி என்னும் பொருட்டாம்.  அரியை பெறுதற்கரியை . “மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்” என்பதற்கு , முன் உரைத் தாங்கு உரைத்துக் கொள்க . மெய்யன்பர் பொய்மையாகிய வீட்டிபத்தை எய்தினாராக ,அன்னார் குழுவுட்பட்ட அடியேனைப் பொய்மையாக்கிய இவ்வுலக வாழ்க்கையில் இருத்திக் கைவிட்டுச் சேறல் நின் அருட்குணத்திற்குப் பொருந்துமா என்பார், “பொய்யில் புகுதவிட்டுப் போவது பொருத்தமாவதே” என்றார். அங்குப் போவதென இயைக்க ,  அங்கு –  சிவபுரமாகிய அவ்விடத்து. போவது – போதல் ; தொழிற் பெயர் . பொருத்தமாவதே என்புழி , ஏகாரம் வினாப்பொருட்டு. என்னை விட்டு நீ போவதோ என்றதனால் , நிங்காட்சியில் ஈடுபட்டிருக்கப்பெறின் , இவ்வுலக வாழ்க்கையும் எனக்கு இனிதாகும் என்று அடிகள் கருதினாரென்பது குறிப்பிற் கொள்ளத்தக்கது, “நரகம் புகினும் எள்ளேன் திருவருளாளே யிருக்கப்பெறின்” என்பதும் அடிகள் அருண்மொழி , “பொருத்தமாவதே” என வினா வடிவில் கேட்ட அடிகள் , பொருத்தமாகாது என்று ஆண்டவன் திருவுள்ளக் குறிப்புணராமல்  தாமே தீர்மானித்தல் தக்கதென்றெனக் கொண்டு, அவ் வினாவிற்கு உரிய விடையை ஆண்டவனே அருளல் வேண்டுமென்பார். “சொல்லாய்” என்றார் . சொல்லாய், முன்னிலை ஏவல் வினைமுற்று.

                இதன்கண்,  “மழக்கை யிலங்கு பொற்கிண்ணம் “ என்ற எடுத்துக்காட்டினால் ஆண்டவன் பெறுதற்கரியன்  என்பதும் , “ மெய்மை யன்பருன் மெய்மை மேவினார் “ என்றதனால்,  அதீதமாகிய ஆனந்தத்தின் இயல்பும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும், “பொய்யிற் புகுதவிட்டு “ என்றதனால் , வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.  

                                             &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 பாடல் :93 .

பொருத்தம்  இன்மையேன்  பொய்மை  யுண்மையேன்

போத  வென்றெனைப்  புரிந்து  நோக்கவும்

வருத்தம்  இன்மையேன்  வஞ்சம்  உண்மையேன்

மாண்டி  லேன்மலர்க்  கமல பாதனே

அரத்த  மேனியாய் அருள்செய்  அன்பரும்

நீயும்  அங்கெழுந்  தருளி  இங்கெனை

இருத்தி   னாய்முறை  யோஎன்  எம்பிரான்

வம்ப   னேன்வினைக்  கிறுதி  யில்லையே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருமைப்பாட்டை உணராமையோடு , மிக எளிய பொருளாகவும் நினையலானேன் என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் என் அறியாமையால் நினைந்ததை உணர்த்தும் , என்னை வருக என்று விரும்பி , அருள் நோக்கம் செய்யவும் , அப் பெருமானை அணுகுதற்கு முயலாமல் வஞ்சனைக் கொள்கலனாக வாழ்ந்திருக்கலானேனே  என்று தம் வினை வலியை நினைந்து துன்புறுகின்றார் .

பதவுரை :-   கமல மலர்ப் பாதனே  =  செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையுடையாய் ,

அரத்த மேனியாய்  = செந்நிறமான திருமேனியை யுடையாய் ,

என் எம்பிரான்  = எனக்குச் சிறப்புரிமையுடைய எங்கள் தலைவனே ,

பொருத்தம் இன்மையேன்  = திருவருட் பேற்றிற்கு உரிய தகுதி இல்லாதேன் ,

பொய்மை உண்மையேன்  = பொய் யொழுக்கத்தையும் உடையேன் ,

என்னைப் போதா என்று புரிந்து நோக்கவும்  =  அத்தகைய சிறியேனாகிய என்னை வருக என்று விரும்பி அருள் நோக்கம் நல்கவும் ,

வருத்தம் இன்மையேன்  =  வருதற்கு முயற்சி இல்லாதேன் ,

வஞ்சம் உண்மையேன்  =  ஏமாற்றும் குணமுடையேன் ,

மாண்டிலேன்  =  அதனால் இறந்து ஒழிந்தேனும் அல்லேன் ,

அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி  = நின்னால் அருள் செய்யப்பட்ட மெய் அன்பரும்  நீயும்  சிவபுரத்திற்கு எழுந்தருளிச் சென்று,

இங்கு என்னை இருத்தினாய்  – இப் பொய்யுலக வாழ்வில் சிறியேனை இருக்கப் பணித்தாய் ,

முறையோ =  இது நியாயமாகுமா ?

வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே  =  பயனிலியாகிய என் வினைக்கு அழிவு கிடையாதா? என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய பொழுது, அடிகள் விரைந்து திருவடிக்கண் வீழ்ந்து வணங்கினமையின் , முதலில்  திருவடிக்காட்சியும், பின்னர் எழுந்து நின்று கண்குளிரத்  தரிசித்தமையின், அடுத்து அப் பெருமானது திருமேனிப் பொலிவும் , தம் உள்ளத்தில் விளக்கம் உற்றனவாக முறையே , “மலர்க்கமல பாதனே” எனவும்,  “அரத்த மேனியாய்” எனவும் கூறியருளினார் . மேலும் காட்சி அளவில்  திருமேனியில்  ஈடுபட்டமையான் , கட் பொறிக்குப் புலனாய் நிற வொளியைக் குறித்து , “அரத்த மேனியாய்” எனவும் , திருவடிக்கண் தம் தலை தோய வீழ்ந்து வணங்கியமையான் கட்புலனும் , மெய்ப்பொறியும் முறையே , உருவத்தினும் ஊற்றின்பத்தினும் ஈடுபட்டமை குறித்து ,”மலர்க் கமல பாத்னே “ எனவும் கூறினர் என்பதுமாம். கமல மலரை ஒப்புக் கூறினமையால் மென்மைத் தன்மையாகிய ஊறும் ,நிறவொளியாகிய உருவமும் கொள்ளப்பட்டன .

                பொருத்தம் –  தகுதி . ஆண்டவன் அருட் பேற்றிற்கு உரிய தகுதியாவது , சரியை முதலிய உண்மைத் தவ ஒழுக்கமும்  ஆகும் . அஃது இல்லாமை , அப்பொழுது அருட்பேற்றிற்கு ஆளாக்காது ஆயினும், அதனால் ஒருகா மேற்கொண்டு உய்தி பெறுதற்குத் தட்டின்றாம், அம்மட்டில் அன்றி, அத் தவ ஒழுக்கத்திற்கு மாறாகப் பொய் ஒழுக்கத்தையும் உடையவன் ஆயினேன் ; எவ்வாறு உய்வேன் என்பார், “பொருத்தம் இன்மையேன் ,பொய்மை உண்மையேன்” என்றார். “பொய்மை உண்மையேன் “ என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது.  “நல்லது செய்தல் ஆற்றீராயினும் , அல்லது செய்தல்  ஒப்புமின் “ என்றபடி, நல்லது செய்யவில்லையானால் , அதனால் விளையும் இன்பப் பேறு இழந்ததாக முடியும் ; பின் ஒருகால் நல்லது செய்தற்கும் தட்டின்றாம் . அம்மட்டில் அன்றி , அல்லதும் செய்யின் , துன்பநுகர்ச்சியோடு , பிறிதொருகால் உய்தி பெறுதற்கும் வழியின்றாய் முடியும் என்பது குறிப்பு

                 தகுதியின்மையோடு  பொய்யொழுக்கமும் உடையனாக இருத்தலை  உயிர்க்கு உயிராக நின்று உணர்ந்து வைத்தும் , கருணைகாரணமாக  அருட் குரவனாக எழுந்தருளி வண்ணப் பணித்தென்னை வருக என்று விரும்பி அழைத்து , அருள் நோக்கம் நல்கினாய் என்பார், “போதவென்றெனைப் புரிந்து நோக்கவும்” என்றார்.  அறநோக்கமும் மறநோக்கமும் என இருதிறத்து நோக்கங்களுள், எனக்கு நல்கியது அறநோக்கம் என்பார், “புரிந்து நோக்கவும் “ என்றார் . புரிதல் –  விரும்புதல். உலகியலில் ஒரு தலைவன் தன் கீழ்ப்பட்ட ஒருவனை வாவென அழைத்தற்கும் பார்த்தற்கும் ஏது , அருளும் ஆகலாம் வெகுளியும் ஆகலாம் , அவ்வேது இன்னதென அத்தலைவன் முகக் குறிப்பால் அறிதல் கூடும் ; அடுத்தது காட்டும் பளிங்கு போல முகம் காட்டும் ஆதலின் , வெகுளி காரணம் என்பது உணர்ந்தால் ,என்ன தீங்கு நேருமோ என ஐயுற்று , அத் தலைவனை அவன் அணுகுதற்கு மனம் ஒருப்படான் . அருள் காரணம் என்பது புலப்பட்டால், சிறிதும் தாழாது நெருங்க முயல்வான் . இம்முறையில் ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பு , அருள் காரணமாக நிகழ்ந்தது என்பதை,,”புரிந்து நோக்கவும்” என்பதனால் உணர்ந்த அடிகள் ,சிறிதும் தாழாது , இறைவனை அணுகிப் பணிபுரியும் கட்டுப்பாடுடையராகவும்,   அக்கடமை குறித்து முயலாமை பற்றி இரங்குவாராய், “வருத்தமின்மையேன்” என்றார். வருத்தம் – முயற்சி . “ஆற்றின் வருந்தா வருத்தம்” என்புழி,அப் பொருட்டாதல் அறிக. அங்ஙனம் முயற்சி மேற்கொள்ளாமல் இருத்தல் மடிமைக் குற்றத்தளவில் அமையும் . அம்மட்டில் இல்லாமல் உண்மையை மறைத்துக்காட்டி ஏமாற்றும் வஞ்சகச் செயலும் உடையன் ஆயினேன் என்பார், “வஞ்சமுண்மையேன்” எனவும் கூறினர் .

                    இனி, திருவருட் பேற்றிற்கு உரிய தகுதியில்லேனாயினும் , தகுதி பெற முயலலாம் . அம் முயற்சியும் இல்லேனாயினேன் என்பார் , “பொருத்தமின்மையேன் வருத்தமின்மையேன் “எனவும் பொயொழுக்கம்  உடையேன் ஆயினும், அதனை உயிர்க்கு உயிராக விளங்கும் ஆண்டவன் அறியக்கூடுமே என அஞ்சிப் பிழை யொறுக்க  வேண்டலாம் ; அங்ஙனம் வேண்டாமல் அவ்வொழுக்கத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்கின்றேன் என்பார், “பொய்மை யுண்மையேன்  வஞ்சமுண்மையேன் “ எனவும் அடிகள் கருதினார் எனக் கொண்டு , நிரனிறைப் பொருள்கோளாகக் கோடலுமாம்.

                       எவ்வாற்றானும் உய்தி பெறுதற்கு உரிய நெறி காணாமைக்கு ஏதுவாகிய தீவினைப் பயனாகிய இவ் வூனுடலாதலின் , இதனை ஒழித்துவிட்டால், பிற்றைப் பிறப்பிலாவது திருவருட் பேற்றிற்கு இலக்காகலாமே என்பார் , “மாண்டிலேன் “ என்றார்.

                       உலகத்தில் ஈகை இரப்போன் தகுதி குறித்தே நிகழும் என்பது இன்று ஈவோன் தகுதி குறித்தும் நிகழ்தல் உண்டு . சேர அரசனிடத்து ஒளவை சுரப்பாடு கேட்க , அவன் பொன்னாடு கொடுத்தான் என்பர் . “இரப்பவர் என் பெறினும் கொள்வர் . தாமுணர்வர் தங்கொடையின் சீர் “  இம்முறையில் அடிகள் , திருவருட் பேற்றிற்குஉரிய தகுதி தம்பால் இல்லை  என்பதைத் தெளிந்து தம் நிலைக்கு இரங்கினார் ; ஆயினும் தம்மை வலிந்து ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ஆண்டவனது அளவில்லாத பெருமைக்கு ஏற்ப , அப் பெருமானே தம் வினை மாசு ஒழித்து அழைத்துக்கொள்ளல்முறையாகவும் அங்ஙனம் செய்யாமை குறித்துப் பின்வருமாறு  இரங்குவார் ஆயினர்.

              “அருள் செய் அன்பர்” என்றதனால் , நின்னால் ஆட்கொள்ளப்படுங்கால் , யான் மாத்திரம் நின் அருட்கு இடனாயது இல்லையோ என்பது அடிகள் குறிப்பு . ஒன்று அடியார் சூழலில் என்னை இருத்தலாம் ; அல்லது அவரையெல்லாம் சிவபுரத்திற்கு உய்த்து , நீ சிறிது தாழ்ந்து , ஆட்கொள்ளப்பட்ட என்னைத் தகுதிப்படுத்துப் பின் அழைத்துச் செல்லலாம் , அங்ஙனம் ஏதும் செய்யாது , யான் காண அம்மெய் யன்பரோடு  நீயும் எழுந்தருளிச் சென்றனையே என்பார், “அன்பரும் நீயும்  அங்கெழுந்தருளி”என்றார். “நீயும் அங்கெழுந்தருளி “ என்றாது குழந்தை யன்பிற் கூறிய மொழியாகும் . ஓர் இன்பநிலையத்திற்குச் செல்லும் தாய் தந்தையர் ,தம் மக்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கால் , ஒரு மகனை விட்டுச் சேறல் தகாது. எக் காரணத்தாலாவது அங்ஙனம் விட நேர்ந்தால்  “ நீ பின்னர் வருக” என்று கூறலாம் . அப்படிக் கூறுதல் , அம்மகனுக்குச் சிறிது ஆறுதலாக இருக்கும் ; அதுவும் இன்றி , “நீ இங்கு இருக்க” என்று இருத்திச் சேறல் , இருமுதுகுரவர் அன்பிற்கு மாறாம் அன்றோ ? அங்ஙனமே , ஈண்டு அடிகள் தம்மை விட்டு , ஏனை அன்பருடன் ஆண்டவன் சிவபுரத்திற்கு எழுந்தருளினாலும் , “பின்வருக” என்று பணியாமல் ,” இங்கு இருக்க “ என்று கட்டளையிட்டுச் சென்றது, தமக்கு வருத்தம் விளைத்ததாகக் கொண்டு , “இங்கெனை இருத்தினாய் முறையோ” என்றார். ஈண்டு “ என் எம்பிரான் “  என்றது , ஏனையடியார்க்குத் தலைவனாதலே யன்றி  எனக்குச் சிறப்புரிமைத் தலைவன் அன்றோ? அங்ஙனமாகவும் , இங்ஙனஞ் செய்தல் முறையாகுமோ  என்னும் குறிப்புத்தோன்ற நின்றது . இவ்வுலக வாழ்க்கையை உவர்த்தும் , இறையடி நீழல் பெறாமலும்  பயனின்றி இருத்தல் பற்றி அடிகள் , தம்மை “வம்பனேன்” என்றார். ஒருவாறு என் வினையெச்சம் இப்பேற்றிற்குத்  தடையாகுமாயின் , நின் அருள்  நோக்கிற்பட்டும் , அவ் வினைக்கு அழிவு இல்லையேல் , இனி, அதற்குத்தான் முடிவு இல்லையோ என்பார், “வினைக்கு இறுதி யில்லையே” என்றார் . இல்லையே என்புழி, ஏகாரம் வினாப்பொருட்டு .

இதன்கண், “அருள் செய் அன்பரும்  நீயும் அங்கெழுந்தருளி “ என்றதனால் குறிக்கப்பட்ட வீட்டின்பம் அதீத நிலையினதாதலின் , அதுவே பெறத்தக்கது என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *****************************************

பாடல் :94 .

இல்லை  நின்கழற்  கன்ப  தென்கணே

ஏலம்  ஏலும்நற்  குழலி  பங்கனே

கல்லை  மென்கனி  ஆக்கும்  விச்சைகொண்

டென்னை  நின்கழற்  கன்ப  னாக்கினாய்

எல்லை  இல்லைநின்  கருணை  எம்பிரான்

ஏது கொண்டு  நான் ஏது  செய்யினும்

வல்லை  யேஎனக்  கின்னும்  உன்கழல்

காட்டி  மீட்கவும்  மறுவில்  வானனே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருள் நோக்கம் நல்கியும் முயாலாமல் பொய்யும் வஞ்சகமும் உடையவனாய் வாழ்ந்திருக்கலானேனே என்று வருந்திக் கூறிய அடிகள் , இத்  திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி,,என்னை அரிதின் முயன்று அன்பனாக்கினாய் ஆதலானும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலானும் , என் பணி யாதாயினும் , அதனை யேற்று நின் திருவடிகளை மீட்டும் காட்சிப்பட அளித்துக் காத்தருளல் வேண்டும் என வேண்டுகின்றார்.

பதவுரை :-  மறு இல் வானனே  =  குற்றமற்ற நுண்ணிய பரவெளியில் உள்ளவனே,

ஏலம் ஏலும் நல் குழவி பங்கனே =  மயிர்ச் சாந்து அணிந்த அழகிய கூந்தலையுடைய  அம்மையை  ஒருபால் உடையவனே,

எம்பிரான்  = எம் பெருமானே ,

நின் கழற்கு அன்பு என் கண் இல்லை = நின் திருவடிக்கண் மெய்யன்பு என்பால் இன்று,

கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு  = வலிய கல்லைக் கனிந்த பழம் ஆக்கும் வித்தையிற் பயின்று ,

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்  =  அடியேனை நின் திருவடிக்கு அன்புடையனாகச் செய்தனை ,

நான் ஏது கொண்டு ஏது செய்யினும்  = யான் எதனைக் கருவியாகக் கொண்டு எச் செயலைச் செய்யினும் ,

நின் கருணை எல்லை இல்லை  =  நின் பேரருளுக்கு வரம்பு கிடையாது ஆதலின் ,

எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் வல்லையே  =

சிறியவனாகிய எனக்கு மீண்டும் நின் திருவடிக் காட்சியளித்து இவ்வுலக வாழ்க்கையினின்று திருப்பவும் ஆற்றல் உடையை ஆவாய் அன்றோ? என்பது.

விளக்கவுரை :-  மறுவில் வான் –  நுண்ணிய ஞானப் பரவெளி. பருப்பொருளாகிய வானின் வேறு என்றற்கு , “மறுவில்” என்னும் அடை புணர்க்கப்பட்டது . கோள் , நாள் முதலிய மண்டலங்கள் இல்லாமல் , தூய ஞான மயமாக வுண்மையின் மறுவிலதாயிற்று  என்க. அதனையே ஈண்டு, “மறுவில்  வான்” எனவும் , ஆங்கு விளங்கும் இறைவனைக்குறித்து , “மறுவில் வானன்” எனவும் கூறியருளினார் . இஃது இறைவனது சிறப்பு இலக்கணம் கருதிக் கூறியபடியாம் . இறைவனுக்கு ஆகமங்களிற் கூறப்பட்ட சிறப்பு,பொது என்னும் இருவகை இலக்கணங்களுள் சிறப்பாவது , குணம் குறி இன்றி  எல்லாவற்றையும் கடந்த நிலையாகும் . பொதுவாவது , சத்தியுடன் கூடி ஐந்தொழில்களையும் செய்யும் நிலையாகும் . “ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே “ என்றது பொது இலக்கணங் கருதிக் கூறியபடியாம் .

                 “அன்பது” என்புழி, அது, பண்டறி சுட்டாக நின்று , வீட்டின் பத்திற்கு ஏதுவாகிய மெய்யன்பை உணர்த்தும் . அன்பு என்பது ஒருவருக்குத் தொடர்புடையாரிடத்து உண்டாகும் காதலாகும். இஃது உலகியலில் தாய் தந்தை , மனைவி மக்கள் முதலியோரைப் பற்றிஉண்டாகி வளர்ந்து , அன்னாரெல்லாரும் உண்மையில் தொடர்பு இலராய்  ஒழிய , முடிவில் , என்றும் நிலையான தொடர்புடைய ஆண்டவனைப் பற்றி நிலை பெறுவதாகும் . இந் நிலையில் இது மெய்யன்பாகும் . ஆகவே , அன்பு நிகழ்வதென்றால்  அதற்கு இடனும் வினைமுதலும் இன்றியமையாதன . ஈண்டு , இடன் தாம் முடிவாகக் கண்ட இறையடியாதலின் , “நின் கழற்கு” எனவும், வினை முதலாகத் தம்மைக் குறித்து , “என்கணே” எனவும் கூறினர். பொருளுடைப் பெரியோன் ஒருவன் தன்பாற் பொருளுண்டு என்று கூற நேர்ந்தால் ,அக்கருத்துக் குறிப்பிற் புலப்படக் கூறுவன் . அன்றி , என்பாற் பொருளுண்டு என்று வெளிப்படக் கூற நாணுவன் . பொருளின்மை  கூற நேர்ந்தால் ,”யான் பொருள் உடையேனல்லேன் “ஏன வெளிப்படக் கூறுவன் . இது, “பணியுமா மென்றும் பெருமை” என்றபடி , பெருமைக் குணத்தின் பயனாகும் . இம்முறை பற்றியே ,தம்பால் அன்பு இன்மை கூறத்துணிந்த அடிகள் , வெளிப்படையாக ,”இல்லை நின்கழற் கன்பதென்கணே” என்று கூறுவாராயினர் .

                    ஆண்டவனே , நின் திருவடிக்கண் உண்மை அன்பில்லேனாகிய என்னை , அன்பன் ஆக்க வேண்டுமானால் , கல்லினும் வலிய என் நெஞ்சத்தைக் குழைவித்தன்றோ செய்தல் வேண்டும் . செயற்கரிய இச்செயலைச் செய்தற்குப் பொதுவாக எல்லா ஆற்றலும் உடைய நீயும் ஓர் அரிய வித்தையிற் சிறப்பு முறையில் பயின்ற பின்னரே, அதன் முதிர்ச்சியினால் தலைப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன் என்பார், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு” என்றார். வன்மையோடு முதிரும் பழங்களின் நீக்குதற்கு , “மென்கனி’ என்றார். “மென்கனி”என்றதனால் , வலிய கல் என்பது பெறப்படும் . கல்லினும் மென்மைத் தன்மையுடைய வகையுமுண்டு . விச்சை – வித்தை . ஆண்டவன் ,பொதுவாக எல்லா ஆற்றலும் உடையனாயினும் ,அன்பர்க்கு உபகரித்தற் பொருட்டு  மேற்கொள்ளும் இன்னோரன்ன அரிய செயற்கும், சிறப்பு முறையில்  இனமாகிய வித்தையில் திறமை படைத்தமையால் அதிகாரி ஆயினான் என்பது. கல்லைக் கனியாக்கிய வரலாறு இல்லையாயினும் , மலையை வில்லாக வளைத்த வரலாறு உண்மையின், கனியாக்கும் திறமையும் படைத்திருக்கலாம் என்பது குறிப்பு.  அடிகள், திருக்கோவையில் , “தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண்டு என்னை யாண்டு கொண்ட , செவ்வரை மேனியன்” என்று அருளிச் செய்திருத்தலும் , அதற்கு, “வலியனவற்றை வயமாக்கிப் பயின்று , பின் என்னை ஆண்டான் என்பது போதர, “காய்சிலையாண்டு என்னையாண்டு கொண்ட” வென்றார் ; என்னைத்தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை வளைத்தான் ; என் நெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கு ஒரு பகை யுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து ; “கல்லை மென் கனியாக்கும்  விச்சை கொண்டென்னை நின் கழற்கன்பனாக்கினாய்” என்பதும்  “அது  “ என்று பேராசிரியர் எழுதிய உரைக்குறிப்பும் காண்க. கல்லை வளைத்த புராண கதை யுண்மையால் , ஆண்டு , “சிலையாண்டு” எனச் செயற்றிறமையால்  வைத்தும் , கல்லைக் கனியாக்கிய  கதை இன்மையால் , “கல்லை மெங்கனியாக்கும் விச்சை கொண்டு” என,  ஈண்டு வித்தைத் திறமையில் வைத்தும் கூறியருளினார் என்பது .

             யான் அன்பும் செய்தற்கு ஆற்றல் இல்லேனாயினும் , நின் ஆற்றலினால் என்னை அன்பன் ஆக்கினாய் என்பார், நின் கழற் கன்பனாக்கினாய் “ என்றார். நின்னால் ஆக்கப்பட்ட  அன்பனாகிய யான் இனி, மன மொழி மெய்களுள்  எதனைக் கருவியாகக் கொண்டு  யாது செய்யினும், எல்லையில்லாத நின் கருணைக் குணத்தால், அதனையே நின்னை அடைதற்கு உரிய தவமாக ஏற்றருளும் கடமையுடையை என்பார், “ஏது கொண்டு நான் ஏது செய்யினும் நின் கருணை எல்லையில்லை என்றார். ஏது செய்யினும் என்பது, மன மொழி மெய்களால்  ஆம் பணிகளுள் எச் சிறு பணி செய்தாலும் என்னும் பொருட்டு , ஆண்டவன் கருணை இத்துணைப் பணி செய்தால்தான் ஏற்றருளும்  என்பது இன்றி , எல்லையற்ற நிலையில்  உண்மையால் , மிகச் சிறு பணியையும்  மிகப் பெரும் பணியாகக் கொண்டு பயன் அளிக்கவல்லது  என்பது கருத்து.

              ஆண்டவன் , முன்னர்க் குருந்தமரத்து நிழலில் எழுந்தருளித்  திருவடிக் காட்சி அளித்த அளவில் மறைந்துவிட்டமையால் , அப் பெருமான் திருவடிப் பேற்றிற்குத் தம் தவச்செயல் தக்கதாக இல்லை எனக் கண்ட அடிகள் , “இறைவ  அரிதின் முயன்று என்னை அன்பன் ஆக்கி விட்டமையாலும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலாலும் , இனி, யான் எது கொண்டு ஏது செய்யினும் , அதனையே,”இயன்றதோர்  பொழுதின் இட்டது மலராச் , சொன்னது மந்திரமாக என்னையும் இடர்ப் பிறப் பிறப்பெனும் இரண்டின் கடற்படாவகை காத்தல் நின் கடனே “ என்று கூறியபடி , நின்னைஅடைதற்கு உரிய தவச் செயலாகக் கொண்டு, மீட்டும் நின் திருவடிக் காட்சியளித்து , இவ்வுலக வாழ்க்கையினின்றும்  மீட்டருளல் வேண்டும் ; இச் செயல் நினக்கு அரிது என்பார், “வல்லையே எனக்கின்னுமுன்கழல்  காட்டி மீட்கவும் “ என்றார்.  “வல்லையே” என்புழி , ஏகாரம் தேற்றம் , “இன்னும்” என்றதனால் முன்னரும் என்பது பெறப்படும்,

                 இதன்கண், “கல்லை மென்கனி  ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற் கன்பனாக்கினாய் “ என்றதனால் , அதீதமாகிய வீட்டின்பத்திற்கு அதிகாரியாதலும் , “எல்லையில்லை நின் கருணை” என்றதனால் , அப் பேற்றிற்குச் சிறந்த சாதனம் ஆண்டவனது அளப்பரிய கருணையே என்பதும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக.

                                 *******************************************

பாடல் :95 ,

வான  நாடரும்  அரியொ  ணாதநீ

மறையில்  ஈறுமுன்  தொடரொ  ணாதநீ

ஏனை  நாடருந்  தெரியொ  ணாதநீ

என்னை  யின்னிதாய்  ஆண்டு  கொண்டவா

ஊனை  நாடகம்  ஆடு  வித்தவா

உருகி  நானுனைப்  பருக  வைத்தவா

ஞான நாடகம்  ஆடு  வித்தவா

நைய  வையகத்  துடைய  விச்சையே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி எல்லையற்ற கருனையுடையை ஆதலின் , என் பணி யாதாயினும், அதனை ஏற்று  மீட்டும் காட்சியளித்துக் காத்தருள வேண்டும் என்று வேண்டிய அடிகள், அதற்கு ஏதுக்கூறு  முகமாக , காண்டற்கு அரிய பொருளாகிய  நீ எளியேனை முன்னர் ஆட்கொண்டு உபதேசித்ததும் , உலகப்பற்று ஒழிந்து நன்னிலை பெறுதற் பொருட்டு அன்றோ என இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  வான நாடரும் அறிய ஒண்ணாத நீ  = விண்ணுலகத்தவரும்  அறிய  இயலாத நீ ,

முன் மறையில் ஈறும் தொடர ஒண்ணாத  நீ  =  பண்டை மறைகலின் முடிவாகிய ஞானக் கூறும் தொடர்ந்து பற்ற இயலாத நீ,

ஏனை நாடரும் தெரிய ஒண்ணாத  நீ  = மற்றைய உலகத்தவரும் தெரிய இயலாத  நீ ,

என்னை ஊனை நாடகம் ஆடுவித்தவா = சிறியேனை ஊனுடலைக் கொண்டு கூத்தாடும் படி  செய்தவாறும் ,

இன்னிதாய் ஆண்டு கொண்டவா =  பின் இனிமையுற  ஆட்கொண்டருளியவாறும் ,

நான் உருகி உன்னைப் பருக வைத்தவா =  யான் உள்ளம் உருகி நின் அருளமுதத்தை உண்ணும்படி  செய்தவாறும் ,

ஞான நாடகம் ஆடுவித்தவா  = அதனால் ஞானக்கூத்து ஆடும்படி செதவாறும் ,

வையகத்து உடைய இச்சை நையவே  = இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான அவா ஒழிதற் பொருட்டாம் அன்றோ ?  என்பது

விளக்கவுரை :-   ஆண்டவனது அரிய தன்மையைக் கூறப்புகுந்த அடிகள் தேவருள் ஒருவன் என்று கூறும் உபசார மொழியை உண்மை எனக் கொண்டு, தமக்கு எளியன் என்று இறுமாக்கும் அவ்விண்ணவர் காட்சிக்கு அரியன் என்பார், “வான நாடரும் அறியொணாத நீ “ என்றார். நாடரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருட்டு  , “ஈறும் ,நாடரும்” என்று பின் வருவனவற்றிற்கும்  இஃது ஒக்கும் .  “ஆறிய ஒண்ணாத “ என்புழி, அறிய என்னும் வினையெச்சத்தீறு தொக்கும் . ஒண்ணாத என்பது இடைக் குறையாகவும்  நின்றன. பின்வருவன வற்றிற்கும்  ஈதொக்கும் . அறிதல்  –  காட்சியளவையிற்  காண்டல்.

                மறை நூல் , கன்மக் கூறு , ஞானக் கூறு என இருதிறப்படும் . பின்னது சிறந்தது என்ப . அதனையே, “மறையிலீரும் “ என்றார். அது கூறவே, முன்னதற்கும் ஆம் என்பது , மறை முடிவாகிய ஞானக்கூற்றில் இறைவனுடைய  பண்புகள் பல திறமாகப் பாராட்டப்பட்டும் , கடை போக அளவிட்டு உரைக்க இயலாமையால் ஒழிவடைந்தன என்பார், “மறையிலீற முன் தொடரொணாத நீ “ என்றார். தொடர்தல்  –  பன்னிப் பன்னி மேற்சேறல் . இனி, “ஈறு முன் “ என்பதை , இறுதியும் முதலும் எனக் கொண்டு , மறையின் முடிவும் முதலும் ஆகிய ஞானக் கூறு கன்மக்கூறுகளுக்கு ஆக்குதலுமாம் .

                  ஏனை நாடர்  –  வான நாடர்  அல்லாத மண்ணுலகத்தவரும்  கீழுலகத்தவருமாம் . தெரிதல்  – நூலுணர்வாற்  காண்டல் . தேவர் , இறைவனைத் தமக்கு அணியனாகக் கருதி , நூலுணர்வைப் பொருட்படுத்தாமல் , காட்சியிற் காணும் தகுதியுடையேம் என்று இறுமாந்து இருத்தலின் , அவர்க்கு அறியொணாதவன்  எனவும் , மக்கள் முதலியோர் , மறை ஆகமங்களால் ஆராய்ந்து தெளியலாம் என்னும் கருத்துடையராதலின் , அவர்க்குத் தெரியொணாதவன் எனவும் ,மறைகள்  இறைவன் குணங்களைக் கூறி முடிவு காண முயறலின் ,அவற்றால் தொடரொணாதவன் எனவும் கூறப்பட்டன. இங்ஙனம் யாவர்க்கும்  எவைக்கும் அரியனாகிய பரம்பொருளாவான் , கருணை காரணமாகத் தமக்கு எளியனாக வந்து செய்த பேருதவிகளை நெஞ்சார நினைந்து  நாவாரப் புகழ்ந்து பாராட்டத் தொடங்குகின்றார் .

                    யான் பண்டு செய்த வினைக்கு ஈடாக, மாயையினின்றும்  ஊனுடலை உதவி , அதன் தொடர்பாகத் தந்தை , தாய், தமர், தாரம் , மகவு எனும் பரிவாரங்கள் சூழ , இவ்வுலகமாகிய அரங்கில் நிலையுதல் இல்லாத வாழ்க்கைக்கூத்து ஆடும்படி புரிவித்தவாரும் என்பார், “ஊனை நாடகம் ஆடுவித்தவா”என்றார். ஊன் ஆகு பெயராக நின்று உடம்பை உணர்த்தும் . “கொண்டு” என்னும் ஒரு சொல் வருவித்துரைத்தல் வேண்டும் . “ஆடுவித்தவா” என்புழி, ஆறும் என்பதன் ஈறும் எண்ணும்மையும் தொக்குநின்றன . பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும் ; உலக வாழ்க்கையில் ஈடுபடச் செய்தவாறும் என்பது கருத்து. இறைவன் உயிர்க்குச் செய்யும் உதவிகளுள்  இதுவே முதலில் எண்ணத்தக்கது. “”காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்  போல் “ மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு அறிவு விளக்கம் பெறுதற்பொருட்டுக் கன்மத்துக்கு ஈடாக ,உடல் முதலியவற்றை உதவித் தவச் செயல்களுக்கு ஆளாக்கி , உய்விக்கத் தொடங்கும் முதல் உபகாரம் இதுவாம் என்பது கருத்து. அடுத்துச் சரியை முதலிய தவங்களால் தூய்மை யெய்திய உயிரின் பக்குவங் கண்டு , இறைவன் ஆட்கொள்ளுதல் நிகழ்வதாகும் .அந் நிலையில் அடிகள், ஆண்டவன் ஞானாசிரியனாக எளிமையில் எழுந்தருளி , ஞானோபதேசஞ் செய்து தம்மை ஆட்கொண்டருளிய அருமையை வியந்து ,” என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா” என்றார். , “இனிது” என விரித்தால் விகாரம் பெற்றது . “இன்னிதாய்”என்புழிச் செய்தென் எச்சத்தை செயவென் எச்சமாகத் திரித்துக் கொள்ளல் வேண்டும் . இனிது என்பது மாநுட வடிவில் ஞானகுருவான எளிமையில் எழுந்தருளிக் காட்சியளித்ததைக்  குறிக்கும் .

              காட்சியளித்து உபதேசித்த அந் நிலையில் , அடிகள் நெஞ்சம் உருகி , ஆண்டவனை அமுத வடிவிற் பருகி இன்புற்றனராக , அந் நிலையும் அப் பெருமான் அருளாற் கிடைத்த பேறு ஆதலின் ,”உருகி நான் உனைப் பருகவைத்தவா” என்றார் . பருகுதற்கு உருகுதல் ஏதுவாம் என்க. உள்ளம் உருகி  உணர்வு பெருகினால் அருளமுதைப் பருகலாம் என்பது அடிகள் கருத்து . “உருகிப் பெருகியுளங் குளிர முகந்து கொண்டு , பருகற்கினிய பரங்கருணைத்  தடங்கலை” என்றும்  பிறிதோரிடத்துக் கூறிய அடிகள் அருண்மொழியும் , “உரமென்னும் பொருளானை உருகிலுள்ளுறை  வானை” என்னும் தமிழ் மறையும்  ஈண்டு நினைக்கத்தக்கன .

               உள்ளம் உருகி அருளமுதைப் பருகிய நிலையில் உலகியலை மறந்து , தம் வயம் இழந்து , எல்லாம் சிவமயமாகக் கண்டு , அக் காட்சியால்  ஆனந்தக் கூத்து  ஆடும்படி இறைவன் அருளிய பேருதவியை நினைந்து , “ஞான நாடகம் ஆடுவித்தவா” என்றார் . “நாடவர் நந்தம்மை யார்ப்ப  ஆர்ப்ப , நாமும் அவர் தம்மை யார்ப்ப ஆர்ப்ப” என்று ஆரவாரித்து ஆடியது அக் கூத்து என்க. ஊனை நாடகம் கட்டுநிலையும், ஞான நாடகம்  வீட்டு நிலையுமாம் . ஆண்டு கொண்டதும்  பருக வைத்ததும் சாதன நிலயின்பாற் படும்.

                 ஆண்டவன் , அளப்பரிய இப் பேருதவிகளைத் தமக்குச் செய்ததெல்லாம் , இவ் வுலக வாழ்க்கையில் உள்ள பற்றை  அறவே ஒழித்தற் பொருட்டு என்பார் , “நைய வையகத்துடைய  விச்சையே” என்றார். “இச்சையே”என்புழி, ஏகாரத்தைப் பிரித்து நையவே எனக்கூட்டுக. ஏகாரம் தேற்றப் பொருட்டு.  நைதல் – அறவே யொழிதல் . இறுதியில் , “ஆம்” என்னும் ஒரு சொல்லை வருவித்து முடித்தல் வேண்டும் . உலக வாழ்க்கை ஒழிதற் பொருட்டு , இப் பேறுதவிகளைச் செய்த பின்னரும் , என்னை ஈண்டு இருத்தியது என்னையோ என்பது குறிப்பெச்சமாகும். .

                     இதன்கண், ஊனை நாடகம்  ஆடுவித்ததும் , ஆண்டு கொண்டதும் , பருக வைத்ததும் , ஞான நாடகம் ஆடுவித்ததும் அதீதமாகிய சிவானந்த அநுபவத்திற்கு உரிய பேருதவிகளாகவும் , அப் பேறு பெறாமல் வருந்தலானேனே என்னும் அடிகளது இரக்கக் குறிப்புப் புலப்படுதலின் , ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                      *********************************

பாடல் : 96 .

விச்ச  தின்றியே  விளைவு  செய்குவாய்

விண்ணு  மண்ணக  முழுதும்  யாவையும்

வைச்சு  வாங்குவாய்  வஞ்ச  கப்பெரும்

புலைய  நேனையுன்  கோயில்  வாயிலில்

பிச்சன்  ஆக்கினாய்  பெரிய  அன்பருக்

குரியன்  ஆக்கினாய்  தாம்வ  ளர்த்ததோர்

நச்சு  மாமரம் ஆயி  நுங்கொலார்

நானும்  அங்ஙனே  உடைய  நாதனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் , அரிய பொருளாகிய நீ எளிவந்து ஆட்கொண்டது யான் நலம் பெறற் பொருட்டன்றோ எனக் கூறிய அடிகள் , அவ் வரிய தன்மையோடு , எல்லா ஆற்றலும் நிரம்பப்பெற்ற நின்னைப்பற்றி நிற்பேனை எங்ஙனம் கைவிடல் அமையும் என இத் திருப்பாட்டில் தெரிவித்துக் கொள்ளுகின்றார்.

பதவுரை :- விச்சு  அது  இன்றியே  விளைவு செய்குவாய்  =  வித்து ஆகிய  அக் காரணம் இல்லாமலே விளைவிப்பாய் ,

விண்ணும்  மண்ணகம் யாவையும்  முழுதும் வைச்சு வாங்குவாய்  = 

விண்ணுலகம்  மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் குறைவற நிலைபெறச் செய்து அழிப்பாய்,

வஞ்சகப்  பெரும்  புலையனேனை  =  (அத்தகைய நீ ) வஞ்சகனாகிய  மிக்க இழிதகவுடைய  என்னை  ,

உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்  = நின் திருக்கோயில் வாயில்  முன்னே வைத்துப் பித்தனாகச் செய்தாய்,

பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்  = பேரன்பராகிய மெய்யடியார்க்கு  உரியனாகவும்  செய்தாய் ,

தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொல்வார்  =  உலகத்தவர்  தம்மால் வளர்க்கப்பட்டது ஒரு முதிய நச்சு மரம் ஆயினும் தாமே வெட்டி அழிக்கமாட்டார் ,

உடைய  நாதனே  =  சிறியேனை அடிமையாகவுடைய  என் தலைவனே ,

நானும் அங்ஙனே =  யானும் அப்படியே ஆவேன் என்பது.

விளக்கவுரை :-  படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் முத்தொழிற்கும் இறைவன் தலைவனாயினும் , படைத்தல் தொழிலில் ஓர் உண்மை ஆராயத்தக்கது . வினைக்கு ஈடாக மாயை என்னும் வித்தினின்றும் உயிர்க்கு உடல் முதலியன இறைவனால் தரப்படுகின்றன என்பது சைவநூற் கொள்கை. அங்ஙனமாயின் , மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு வினைத் தொடர்பு இன்மையால் , முதல் தோற்றத்திற்கு ஏது என்னாம் என்பது வினாவாகும் . அதற்கு விடையுளதாயினும் , அஃது அரிதின் ஆராய்ந்து  கொள்ளத்தக்கதாகும். இவ்வருமை நோக்கியே சிவஞானபோதம்  இரண்டாம் சூத்திரத்திற்கு நுதலிய பொருள் கூறப்புகுந்த மெய்கண்ட ஆசிரியர் , “புனருற்பவம்  வருமாறுணர்தல்  நுதலிற்று” என்று கூறினார் . புனருற்பவம் – மீண்டு பிறத்தல் . அஃதாவது அழித்தற்குக் காரணனாக வுள்ள  இறைவன்  இடத்தினின்றும் வினைக்கு ஈடாக உயிர் மீண்டும் தோன்றுதல் என்பது கருத்து. ஈண்டுப் பேருரை வகுத்த மாதவச் சிவஞான முனிவரர் , “அஃது அங்ஙனமாக, முதலுற்பவம் வருமாறுணர்த்தாது , புனருற்பவம் வருமாறுணர்த்துவது என்னையெனின் , பிரபஞ்சம்  அநாதியாகலின் , அம்முதற்கோடி நம்மனோரான்  அரியவராமை யானும் , ஒடுங்கியபின்  மீளவுளதாமாறே……கூறினார் என்பது “ என்று கூறிப் பின்னர், “அற்றாயினும் , முதலுற்பவம்  ஆமாறு இவ்வியல்பிற்று என்பது” எனத் தொடங்கி ,”விச்ச தின்றியே விளைவு செய்குவாய்” எனவும், “விண்ணு மண்ணக முழுதும் யாவையும்  வைச்சு வாங்குவாய் “ எனவும் ஓதிய திருவாக்கானும் இவ் இரு வேறு வகையும் கண்டு கொள்க” என்றுரைத்தார் . இரு வேறு வகையான , முதலுற்பவமும்  புனருற்பவமும் ஆம் என்பது.

           பாலையும் கோலையும் நோக்கும் குழவிக்கும் குருடர்க்கும் , அந் நோக்கம் உணர்ந்து கொடுப்பார் போல , மருட் கேவல நிலையில் மூல மலத்தாற் பிணிப்புண்டு , அசைவற்றுக்கிடக்கும் உயிர்க்கு ,இறைவன் அருளால் நுண்ணிய நிலையில் விருப்பு வெறுப்பு நிகழ , அவற்றை இறைவன் உணர்ந்து , கன்ம மாயைகளைக் கொடுத்துப் பிறப்புட் படுத்துவன் என்று முதலுற்பவத்தின்  இயல்பு கூறப்படுதலும் உண்டு. இது, நுண்ணிய நிலையில் நிகழ்வதால் , பருமை நோக்கில் ,”விச்சதின்றியே விளைவு செய்குவாய்” என்று கூறப்பட்டது  என்க. “விச்சது” என்புழி, “அது” பண்டறிந்ததாகிய காரணம் என்னும் பொருள் மேலதாம். “விச்சின்றி நாறு செய்வானும்” என்னும் தமிழ் மறைக்கும் இதுவே கருத்து என்க. இனி, அத்தொடர் , வித்தின்றி விளைவாய் எனப் பொருள்பட்டு , இறைவன் மாயையின்றியே திருமேனி கொள்ளு முறையை உணர்த்திய துமாம் எனவும் ,காலத்தானும் இடத்தானும் வேற நிற்பனவாகிய உலகத்திற் காணப்படும் வித்துப் போல் அல்லாமல் , தன்னையே  தாரகமாகக் கொண்டு , வேறின்றி உடனாய் நிற்பதாகிய மாயையினின்றும் விளைவு செய்குவாய் என, உலகத்து  வித்திற்கும்  மாயைக்கும் வேற்றுமை தோன்றக் கூறுதலே அத் திருப்பாட்டின் கருத்து ஆகலாம்  எனவும், மாதவச் சிவஞான முனிவரர்  சிவஞானபோதப் பேருரையில்  2 ஆம் சூத்திரம் , 2 ஆம் அதிகரணத்தில் தடை விடையில் வைத்து விளக்கி யிருத்தலும்  அறிக.

                விண்ணுலகம் , மண்ணுலகம் முதலிய எல்லா வுலகங்களிலும்  உள்ள உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் முற்றும் படைத்து , அளித்து , அழிக்கும் தலைமை குறித்து , “முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” என்றார் . வைச்சல்  – வைத்தல் ; படைத்துக் காத்தல் . வாங்குதல் –  ஒடுக்குதல் . இதனால் உலகத் தோற்றத்திற்குக் காரணன் ஆம் தன்மை முற்றும் பரமசிவனுக்கே உரியது என்பது புலப்படுக்கப்பட்டபடியாம் . உலக காரணமாந்தன்மை பரம்பொருள் இலக்கணம் என்ப.

                  வஞ்ச ஒழுக்கமும் , அதனால் மிக்க இழிதகவும் உடையேன் என்பார், “வஞ்சகப் பெரும் புலயனேனை” என்றார். பிறப்பான் அன்றி , வஞ்சகமாகிய செயலால் எய்திய இழிதகவு என்பது குறித்துப் பெருமை அடை புணர்க்கப்பட்டது. செயலால் இழிந்தவனாகிய என்னை நின் திருமுன் வைத்து, இவ்வுலகியலில்  மாறுபடச் செய்து பித்தனாக்கினாய் என்பார், உன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் “ என்றார் . பிச்சன்  – பித்தன்; பைத்தியம் பிடித்தவன் , “மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில்  ஒத்தன வொத்தன சொல்லிட” என்று முன்னர்க் கூறியது , பிச்சனாக்கிய தன் பயனாகும் .

                      பெரிய அன்பர்  – அழிவுடைப் பொருள்களின் இயல்பு அறிந்து  நீங்கி , அழி வில் பொருளாகிய ஆண்டவன் இடத்து இறவாத இன்ப அன்புடைய மெய்யடியார் . ஆண்டவன், தனக்கு அன்பனாக்கியபின் ,தன் அடியவர் குழுவுள் இருக்கும் பேற்றைத் தமக்கு அளித்தனன் என்பார், “பெரிய அன்பருக்கு உரியனாக்கினாய் “ என்றார். உரியனும் என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது . அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே” என்றபடி ,அடிகள் வியந்து மகிழ்ந்தது ,மெய்யன்பர் குழுவில் தம்மை இருக்க வைத்தது கருதியே யாம் .

                 ஆண்டவனால் வயப்படுத்தப்பட்டு,  அவன் அடியார் குழுவுள் இருக்கும்  உரிமையும்  பெற்றபின், தமக்கென ஒன்றுமின்றி , “நன்றே செய்வாய்  பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று இருக்கும் அடிகள், அப் பெருமானை நோக்கி ,”யான் மெய்யன்பு இல்லேனாயினும், நீ அடிமையாக ஏற்றுக் கொண்டமையால் என்னைக் கைவிடலாகாது என்பதற்கு, உலகியலில் வைத்து ஒரு நீதி எடுத்துக் காட்டுகின்றார், உலகத்தவர் தம்மால் வித்திட்டு வளர்க்கப்பட்ட மரம், எட்டி அல்லது அதனைப் போன்ற பிறிதொரு நச்சு மரம் ஆயினும், அதனை வளர்த்த தாமே வெட்டி யழிக்கத்  துணியார் . அது போல, மெய்யன்பில்லேன் ஆயினும் நின்னைச் சார்ந்தவனாதலின், என்னை வெறுத்து ஒதுக்கலாகாது என்பார், “தாம் வளர்த்ததோர் நச்சு மாமர மாயினுங் கொலார் நானும் அங்ஙனே “ என்றார். தாம் வளர்த்தது, நச்சு மரத்துள்ளும் முதுமையடைந்ததாயினும் என்றற்கு, “மா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . இக் கருத்துக் குமார சம்பவம் என்னும் வட நூலில் இரண்டாம் சருக்கத்தில் ஐம்பத்தைந்தாம்  சுலோகத்தில் மகா கவி காளிதாசராற் புலப்படுக்கப்பட்டிருத்தலும்  அறிந்து இன்புறத்தக்கது.  “உடைய நாதனே” என்னும் விளி, என்னை ஆதரிக்க வேண்டிய கடமை நின்பாலது என்று எடுத்துக்காட்டினால்  விளக்கப்பட்ட, “நானும் அங்ஙனே ‘ என்பதை வலியுறுத்து நிற்பதாகும்.

                   இதன்கண், ஆண்டவன் அடிகளைத் தன் திருக்கோயில் வாயிலிற் பிச்சனாக்கியதும், பெரிய அன்பருக்கு உரியனாக்கியதும், அதீதமாகிய சிவானந்த நுகர்ச்சிப் பொருட்டு  என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                          *******************************************

பாடல் : 97 .

உடைய  நாதனே  போற்றி  நின்னலால்

பற்று  மற்றெனக்  காவ  தொன்றினி

உடைய  னோபணி  போற்றி  உம்பரார்

தம்ப ராபரா  போற்றி  யாரினுங்

கடையன்  ஆயினேன் போற்றி  என்பெருங்

கருணை  யாளனே  போற்றி  என்னைநின்

அடியன்  ஆக்கினாய்  போற்றி  ஆதியும்

அந்தம்  ஆயினாய்  போற்றி  அப்பனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் பெறலரும் பொருளாகிய நின்னைச் சார்ந்தவனாகிய என்னை எங்ஙனம் கை விடல் அமையும் என்று ஆண்டவனை நோக்கிக் கூறிய அடிகள், நீ கைவிடத் திருவுளங்கொள்ளின், நின்னை அல்லாமல் பிறிதொரு பற்றுக்கோடு எனக்கு யாதுலது?  கூறியருள்க என்று இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  ஆதியும் அந்தமும் ஆயினாய் போற்றி  =  முதலும் இறுதியும்  ஆக விளங்குகின்றவனே  வணக்கம் ,

உம்பரார் தம் பராபரா போற்றி  = மேல் உலகத்தவர்க்கு மேலான பரம் பொருளே வணக்கம் ,

யாரினும் கடையன் ஆயினேன் போற்றி  =  யான் எவரினும்  கடைப்பட்டவன் ஆயினேன் வணக்கம் ,

என் பெரும் கருணையாளனே போற்றி  = என்பால் பேரருளாளனே  வணக்கம் ,

என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி  = சிறியேனை நினக்கு அடிமையாகச் செய்தனை வணக்கம் ,

உடைய நாதனே அப்பனே  போற்றி  = என்னை ஆளாக உடைய தலைவனே என் தந்தயே   வணக்கம்,

எனக்கு ஆவது பற்று =  அடியேனுக்கு ஆதரவாக  வுள்ளதாகிய  பற்றுக்கோடு,

இனி நின் அல்லால் மற்று ஒன்று உடையனோ = இப்பொழுது நின்னையல்லாமற் பிறிதொரு பொருளை யான் உடையனோ,

பணி  =  கூறியருள்வாயாக ,

போற்றி  =  வணக்கம்  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில்  விளியுருபு ஏற்று நிற்கும் சொற்றோறும் வணக்கப் பொருள் குறித்துப் “போற்றி” பல கூறப்பட்டன, ஆண்டவன் இடத்துள்ள அளப்பரிய ஆர்வத்தல் என்க.

                  அந்தமும் என்புழி, எண்ணும்மை  தொக்கு நின்றது . எல்லாப் பொருள்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணன் ஆதல் பற்றி . இறைவனை, “ஆதியும் அந்தமும் ஆயினாய்”ஏன்றார்.  “ஈறாய் முதல் ஒன்றாய்” என்பது தமிழ் மறை.

மாயையை அழி வில் பொருள்களில் ஒன்றாகக் கொண்டு , அதனிடத்தினின்றும் உலகம் தோன்றி, அதனிடத்தே ஒடுங்கும் என்று சைவ நூல் கூறும் . அங்ஙனம் மாயையில் தோன்றி ஒடுங்கும் உலகங்களை, இறைவன் இடத்துத் தோன்றி ஒடுங்கின என்றல் எங்ஙனம் பொருந்தும் எனின், மாயையும் உலகமும் வித்தும் முளையும் போலும் ஆதலின், வித்துக்கு ஆதாரமாகிய நிலம் குளிர்ந்த வழி, அதன்கண்  வித்துள்ளதாக, அதனினின்றும் முளை தோன்றியவாறு  போல, மாயை, தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சக்தியின் கண் உள்ளதாய் நிற்றலால், அச்சத்தி சங்கற்பித்த வழி. வினைக்கு ஈடாகத் தோற்றுவிக்கும் என்பவாதலிற் பொருந்தும் என்க. இது, கிழங்கினின்றும்   தோன்றிய தாமரையைச் சேற்றினின்றும் தோன்றியது என்னும் பொருள்படப் பங்கயம் என்று கூறுதலானும் அறியலாம். இக் கருத்துப் பற்றியே “உலகவனுருவிற்றோன்றி யொடுங்கிடும் “ என்று சிவஞான சித்தி கூறியதூம் என்க. இது பரப்பொருள் இலக்கணங்களுட்  சிறந்தது .

            இவ்வியல்பிற்றாகிய பரம்பொருளைத் தேவரின் ஒருவன் என்று அறியாதார் கூறுப. அது பொருந்தது என்பதைத் தெளிவுறுத்தற்பொருட்டு, “உம்பரார் தம் பராபரா” என்றார். “தேவரினொருவனென்பர் திருவுருச் சிவனைத் தேவர் , மூவராய் நின்றதோரார்” என்று ஞான நூல் தெளிவுறுத்ததூம்  அறிக. பராபரன்  –  மேலானவனும் தனக்கு மேல் பற்றொரு பொருள் இல்லாதவனுமாம் என்னும் பொருட்டு. “யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் “என்று இறைவனையும் , “யாவர்க்கும்  கீழாம் அடியேன் “ என்று தம்மையும் அடிகள் கூறுவாராதலின் , அக்கருத்துத் தோன்ற, அடுத்து , “யாரினுங்கடைய னாயினேன் “ எனவும் , அத்துணை உயர்ந்தோன் , இத்துணை இழிந்த தம்மைப்  பணிகோடற்குக் காரணம்  அளப்பரிய கருணையே என்பார், “என்பெருங்கருணையாளனே “ எனவும் கூறினர் . கருணை செய்தற்கு உரிய தகுதி தம்பால் இல்லை எனக் கொண்டு, அங்ஙனம் இல்லாத தம்பால் நிகழ்ந்தமையால் ,அக்கருணை பெரிதாம் என்பார், “பெருங்கருணை “ என்றார். பெருங் கருணையாளனாக இருந்தமையா னன்றே, சிறியேனாகிய என்னை நினக்குத் தொண்டனாக்கிப் பணி கொண்டாய் என்பார்,” என்னை நின் அடியானாக்கினாய் “ என்றார்.

             இனி, முடிவாகத் தாம் விண்ணப்பம் செய்து கொள்ளும் செய்திக்கு ஏற்ப, ஆண்டவனை விளி கொள்ள முற்பட்டு ,”உடைய நாதனே அப்பனே” என்றார். ஆண்டவன் , தன்னை அடியன் ஆக்கியபடியால், என்னை ஆளாகவுடைய தலைவனே எனவும், அப் பெருமானது பேரானந்தப் பெருஞ் செல்வ நுகர்ச்சிக்கு மகன்மை முறையில் உரிமை தமக்கு உண்டு எனக் கொண்டு , “அப்பனே”எனவும் கூறுவார் ஆயினர்.

              இதன் முன்னைத் திருப்பாட்டில் “நச்சுமாமர மாயினுங் கொலார்  நானும் அங்ஙனே “ என்றதனால், தம்மைக் கைவிடல் ஆகாது என்று விண்ணப்பம் செய்து கொண்டவர், எக்காரணத்தாலாவது ஒருகால் என்னை நீ ஒதுக்கத் திருவுளங்கொண்டாலும், பற்றிய நின்னை யான் எவ்வாறு விடுவேன்  விட்டால் , வேறு பற்றுக் கோடு  நின்னையன்றி யாதுளது ? அங்ஙனம் ஆதரவாகவுள்ள  பற்றுக்கோடு பிறிது ஒன்று இருக்குமாயின், அஃது இன்னது என எனக்கு அறிவிக்கவேண்டிய பொறுப்பும் நின்பாலதே” என்பார், “நின்னலாற் பற்று  மற்றெனக் காவதொன்றினி யுடையனோ பணி “ என்றார். ஆவது – ஆதரவாக நின்று பயன் விளைப்பது . “இனி,’ என்றது ,என்னை அடிமை கொள்ளுதற்கு முன்னர்ப் பொய்யுலக  வாழ்க்கையில்  ஈடுபட்டு, அதனையே ஆதரவாகக்  கடைப்பிடித்தேன் ஆயினும் , அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற  நின்றது . பணி யென்றதனால், யான் கடைப்பித்தேன் ஆயினும், அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற நின்றது. பணி யென்றதனால், யான் கடைப்பிடித்தற்குரிய  நெறி பிறிதொன்று  உண்டெனினும் , அதனைக் காட்டுதற்கும் நீயே தலைவனாய் என்பது  போதரும் . “காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே” என்று தமிழ் மறை தெளிவுறுத் தருளியதூங் காண்க .

                இத் திருப்பாட்டில்  அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் இறைவனது முழு முதல் தன்மையும் , அதனினின்றும்  படிப்படியாக உயிர்த்தொகுதிகளுக்கு  நலம்  புரிதற்பொருட்டு எளிவரும் பேரருள் திறமும் தோன்ற, முன்னிலைப்படுத்து அழைத்திருத்தல்  அறிந்து இன்புறத்தக்கது . முதலில் ஆதியும் அந்தமும் ஆயினாய் என, உலகத் தோற்ற  ஒடுக்கங்களுக்கு காரணன் ஆதலாகிய முதன்மையும் , அடுத்து,” உம்பரார்தம் பராபரா “ எனத் தேவர்க்கு அணியனாம் பரம்பொருள் தன்மையும், பின்னர், “என் பெருங் கருணையாளனே” என, மக்கட் பிறப்பினரிடத்து  அருளுடையனாந் தன்மையும் ,அதன்பின் , உடய நாதனே “ என, அன்பர் பணி கொள்ள எழுந்தருளும் எளிமைத்தன்மையும் , முடிவில் ,”அப்பனே”எனத் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்திற்கு மகன்மை முறையில் உரிமையளிக்கும் தன்மையும்  புலப்பட  அருளியவாறு அறிக. செய்யுளாதலின் இம்முறை பிறழ்ந்து வந்தது .

                 இதன்கண், “ஆதியும் அந்தமு மாயினாய்” என்பது முதலிய விளியேற்று நிற்கும் சொற்களால் , உயிர்க்கு அதீதமாகிய ஆனந்தம் அருளும் வன்மையுடையான் சிவபெருமான் என்பதும் , “நின்னலார் பற்று மற்றினி யுடையனே” என்றதனால், அவனையன்றி , அப் பேறு பிறிதோர் ஆற்றல் பெற இயலாது என்பதும் பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக .

                                           ******************************************

பாடல் : 98 .

அப்ப  னேயெனக்  கமுத  னேஆ

னந்த  னேயகம்  நெகஅள்  ளூறுதேன்

ஒப்ப  னேயுனக்  குரிய  அன்பரில்

உரிய  னாயுனைப்  பருக  நின்றதோர்

துப்ப  னேசுடர்  முடிய  னேதுணை

யாள  னேதொழும்   பாளர்  எய்ப்பினில்

வைப்ப  னேயெனை  வைப்ப  தோசொலாய்

நைய  வையகத்  தெங்கள்  மன்னனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி  என்னைக் கைவிடின் நின்னையல்லாமல் பிறிதொறு  பற்றுக் கோடு  உடையனாக எங்ஙனம்  ஆவேன்  எனக்  கூறிய  அடிகள், அங்ஙனம்  ஆதரவற்ற  நிலையில் உள்ளவனாகிய அடியேனைப் பல்லாற்றானும் பாதுகாக்கும் உரிமையுடைய நீ,  இப் பொய்யுலக வாழ்க்கையில் நைய வைப்பது  முறையாகுமா என, இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  எனக்கு அப்பனே  =  எனக்கு  அப்பனே,

எனக்கு அமுதனே =  எனக்குச் சாவா மருந்தாக வுள்ளவனே,

ஆனந்தனே  =  பேரின்ப மயமானவனே,

அகம் நெக அள் ஊறு  தேன்  ஒப்பனே  = உள்ளம் உருக  வாயூறுதற்கு ஏதுவாகவுள்ள  தேனைப்  போன்றவனே,

உனக்கு உரிய அன்பரில் உரியனாய் =  நினக்கு உரிமையுடைய  மெய்யன்பரைப்போல  யானும்  உரிமையுடையனாகி ,

உன்னைப் பருக நின்றது ஓர் துப்பனே  =  நின்னை நுகரும்படி எனக்குக் கிடைத்து நிற்பதாகிய ஒப்பற்ற  உணவாக  வுள்ளவனே,

சுடர் முடியனே  =  ஒளி விளங்கும் திருமுடியை யுடையவனே,

எங்கள் மன்னனே  =  அடியேமாகிய  எங்கள் அரசே,

தொழும்பாளர்  துணையாளனே  =  மெய்யடியார்க்கு  உண்மைத்  துணையாக   வுள்ளவனே ,

தொழும்பாளர் எய்ப்பினில்  வைப்பவனே  =  தொண்டர்க்குத்  தளர்ந்த நிலையில்  சேமநிதியாக  வுள்ளவனே,

வையகத்து  என்னை  நைய  வைப்பதோ  =  இப் பொய்யுலக வாழ்க்கையில்  அடியேனைத்  துன்புறும்படி வைத்தல்  முறையாகுமா? ,

சொல்லாய்  =  கூறியருள்வாயாக என்பது.

விளக்கவுரை :- இத் திருப்பாட்டில் அடிகள் ஆண்டவனைத் தமக்குச் சிறப்புரிமையில் தொடங்கி , அப்பெருமானுக்கும் தம்மை உள்ளிட்ட அடியார்க்கும் உள்ள இயைபுகளை மேன்மேலும் விளக்கி விளித்தல் முகமாகக் கூறித் தம் நாவையும் நெஞ்சத்தையும்  அருளமுதில் நனைத்து இன்புறுகின்றார் . “எனக்கு” என்பதை முன்னும் பின்னுங் கூட்டுக. அதுவென் வேற்றுமை  யுயர்தினைத் தொகைவயின் அது வெனுருபு  கெடக் குகரம் வருமே “ என்னும் விதிப்படி, “எனக்கு அப்பனே”என்னப்பட்டது. தந்தை , தன் குடிப்பொருளாகிய உடைமைக்கு உரியவனேயன்றி உடைமையாகான் . மெய்யன்பர்க்கு ,ஆண்டவன் நுகர் பொருளாகிய உடைமையும் அதற்கு உடையானும் ஆவன்  ஆதலின் , அடுத்து , “எனக்கு அமுதனே” என்றார்.  அமுதம் – நுகர் பொருளாகும் . ஆகவே, உடையானும் உடைமையும் அப் பெருமானே என்பது பெறப்பட்டவாறு அறிக.

          அமிர்தம் என்னும் சொல் , சாவைத் தவிர்ப்பது  என்னும் பொருளதாகலின், சாவா மருந்து எனப்பட்டது; சாதற்கு ஏதுவாகிய பிணி, மூப்பு முதலியவற்றைப் போக்குமே யொழிய , உண்மையில் சாதலைத் தவிர்ப்பதன்று . “விண்ணொரமுதுண்டும்  சாவ” என்று சிலப்பதிகாரம் கூறும் . இதனால் , இங்ஙனம் கூறியது உபசாரமே யன்றி உண்மையன்று  ஆதலின் , அமுதம் ஒரு கால எல்லைவரை பயன்செய்தலானும், இறைவன், என்றும் உலப்பிலா இன்பமயமாக வுள்ளான் ஆதலானும் , அதன்மேல் ,”ஆனந்தனே” என்றார்.

             சிவானந்தத்திற்கு, உலகப் பொருள்களில்  நெகிழ்ச்சியும் , மிக்க இனிமையும் உடைய தேனை ஒப்புக் கூறுதல் உண்டு . “உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து” என்பதும் அடிகள் அருண் மொழியாகும். அம் முறையில் ,”தேன் ஒப்பனே” என்றார்.  அள்ளூறல் – வாயூறல் . “அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் “ என்புழியும் அப் பொருட்டாதல் அறிக. நினைக்குங்கால் நெஞ்சம் உருகுதற்கும் ,வாயில் அமிழ்தம் ஊறுதற்கும் ஏதுவாகவுள்ளது என்பார், “அகநெக அள்ளூறு தேன் “ என்றார். “நினைத்தொறும்  காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் , அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறிய அருண் மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது.

               இனி, “அள்”என்பது செறிவு என்னும் பொருளாதலின், “அள்ளூறுதேன்”என்பதற்கு நெருங்கிச் சுரக்கும் தேன் எனப் பொருள் கோடலும்  ஆம்.  நெருங்கிச் சுரத்தலாவது, இடையறாது  ஒழுகுதல் . இங்ஙனம் நெஞ்சம் உருக , வாயூறலுண்டாக, அத் தேன் இடையறாது ஒழுகுவதாயினும், அதனைப் பருகும் தகுதியும் இருந்தாலன்றி அதனாற் பயன்பெற  இயலாது ஆதலின் , அதற்கு உரிய தகுதியை  ஆண்டவன் தமக்கு உதவிய முறையைப் பின்வறுமாறு புலப்படுத்துவாராயினர் .

              ஆண்டவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அநுபவித்தற்கு , உரிய உரிமையுடைய மெய்யன்பர் யென்பார் , “உனக்குரிய அன்பர்”என்றார். இல் என்னும் ஐந்தனுருபு , உவமப்பொருட்டு . ஆண்டவனே,நின்னை நுகர்தற்கு உரிய  மெய்யன்பரைப்போல என்னையும் உரிமையுடையனாக்கினாய் ஆதலின் , ஆயினேன் என்பார் , “அன்பரிலுரியனாய்”எனவும் , அவ் வுரிமை கொண்டு யான் நுகர்தற்கு உரிய சிறந்த உணவுப்பொருள்  ஆயினை என்பார், “உனைப் பருக நின்றதோர் துப்பனே” எனவும் கூறினர். பருக நின்றது  – உண்ணுதற்குச் செயப்படு பொருளாக நின்றது . நின்றதென்பது  துப்பன் என்பதன் பகுதியாகிய துப்பு என்பதனோடு இயையும் , பருகுதல் – குடித்தல், நுகர்தல்  என்னும் பொருளை உணர்த்தும் . “பருகுவன் பைதனோ யெல்லாங் கெட “ஏன்னும் குறளில் நுகர்தற் பொருட்டாதல் அறிக. துப்பு – உணவுப்பொருள் . “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி”  என்புழி அப் பொருட்டாதல் அறிக.

                “பின்னர் எங்கள் மன்னனே” என்றதற்கு ஏற்ப அரசுரிமை அடையாளங்களாகிய முடி , குடை , கோல்  என்பவற்றுட்  சிறந்த முடியை உடையான் என்பார், “சுடர் முடியனே” என்றார். இம் முடி,தெய்வ அரசுக்கு உரியதாகலின் , சுடர் என்னும் அடை மொழி புணர்க்கப்பட்டது . உலகில் முடியுடை அரசனைப் பேரரசன் என்பர் . ஈண்டுக் கடவுட் பேரரசைக் குறிப்பிட்டபடியாம் . “சுடர் முடியனே” என்பதை அடுத்து , “எங்கள் மன்னனே” என்பதை இயைத்துக் கொள்ளல் வேண்டும் . எங்கள் என்றது உலக நிலைக்கு உரிய பொருட் செல்வமன்றி , வீட்டு நிலைக்கு உரிய அருட் செல்வத்தை உடைய மெய்யன்பரை  உளப்படுத்துக் கூறியதாகும் . துணை புரிதற்கும், எய்ப்பில் வைப்பாக நின்று பாதுகாத்தற்கும்  முடியுடைத் தெய்விகப் பேரரசனாக அமைதல் அரிதாகலின், இறைவனை இங்ஙனம் கூறலாயினர்.

                  உயிர்த் தொகுதிக்கு , உலகத்திற் காணப்படும் சுற்றம் , துணை எல்லாம், அவ்வுயிர், வினைக்கு ஈடாக எடுத்த உடலைப் பற்றி உண்டானவை யாதலின் , அவ்வுடல் ஒழி வில் அவை எல்லாம்  ஒழிந்துபோம் . அதனால், அத்துணை உடற்றுணை  யாகுமன்றி  உயிர்த்துணை ஆகாது. உயிர்க்கு உண்மைத்துணை பரம்பொருளாகிய இறைவனே ஆவான் . இவ் வுண்மையை உள்ளவாறு அறிவார் மெய்யடியார் ஆதலின் , “தொழும்பாளர் துணையாளனே” என்றார். தொழும்பாளர் என்பதை முன் கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும். மெய்த் தொண்டர்க்குச் சிறப்பு முறையில் துணையாளனாக இருத்தலோடு , அவர்க்குத் தளர்ச்சி நேர்ந்த இடத்து வைப்பு நிதி  போலவும் உதவும் இயல்பினன் என்பது குறித்து . “தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே”என்றார். இன்றியமையாமை  நேர்ந்தவிடத்து  எடுத்துப் பயன் படுத்தற்பொருட்டு  வைக்கப்பட்ட நிதியை வைப்பு நிதி என்ப. உலகப்பொருள் எல்லாம் அழியும் இயல்பினவாதலின் , என்றும் அழியாப் பொருளாக நின்று பயன்செய்வோன் இறைவன் என்பது குறிக்கொண்டு இவ்வாறு கூறினர்.  இங்ஙனம் சிறந்த துணையாதலையும். எய்ப்பில் வைப்பதாலையும்  வேறொரு படியாக ,” அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை” என்று ஆளுடை அரசர் அருளிச் செய்தமையாலும் அறிக. ஈண்டு அடியார் என்பதை முன்னரும் இயைத்து, அடியார்க்கு அருந்துணையே , அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை எனக் கொள்ளல் வேண்டும்.

                இத்துணையும் ஆண்டவன் பெருமைக் குணங்களையும், தமக்கும் அப் பெருமானுக்கும் உள்ள இயைபுகளையும் குறிப்பிட்டு முன்னிலைப் படுத்து, இறுதியில், தம் வேண்டுகோளை வெளிப்படையில் கூற முற்படுகின்றார் .இத்துணைப் பேரருளாளனாகிய நீ என்னை ஆட்கொண்ட பின்னரும், இப்பொய்யுலக வாழ்க்கையில்  இருத்தி, யான் துன்பம் உறச்செய்தல் முறையாகுமா என்பார், “எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து “ என்றார். வைப்பது என்பதன்பின் , முறை என்னும் சொலை வருவித்து உரைத்தல் வேண்டும் . ஓகாரம் வினாப் பொருட்டு ,வையக வாழ்க்கை , இன்பனும் துன்பமும் விரவிய தாகலானும் , அதுவும் நிலையுடையதன்று ஆகலானும் , அதுபற்றி  வருந்துவேன் அல்லேன் ; இவ்வுலக வாழ்க்கையினும் சிறந்த வீட்டிப வாழ்க்கை ஒன்று உண்டு எனக் காட்டி ,  அதன்கண்  தலைப்படச் செய்யாமல் விட்டு மறைந்தது , பசியாற் களைத்து உறங்கும் ஒருவனை எழுப்பி, உணவு இல்லை என்று கைவிட்டு அகறலை ஒக்கும் ஆதலின் , அது குறித்து வருந்தலானேன் என்பார், “வையகத்து நைய வைப்பது” என்றார். வீட்டின்ப நோக்கு உடையார்க்கு இவ்வுலகியல் துன்பமேயன்றி , இன்பமும் துன்பமுமாம். ஆதலின் இவ்வாறு கூறலாயினர்.

                    இதன்கண்,  “ஆனந்தனே”  , “அகம் நெக அள்ளூறு  தேன்  ஒப்பனே “ , “உன்னைப் பருக  நின்றதோர்  துப்பனே “ என்னும் சொல்லானும்  சொற்றொடர்களானும்  ஆண்டவன் அதீதமாகிய ஆனந்த வடிவினன் என்பதும் , அதுவே தமக்குச் சிறந்த பேறாம் என்பதும் பெறப்படுதலின்  ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                         **************************************

பாடல் : 99 .

மன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

மாலும்  நான்முகத்  தொருவன்  யாரினும்

முன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

முழுதும்  யாவையும்  இறுதி  யுற்றநாட்

பின்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பெய்க  ழற்கண் அன்  பாயென்  நாவினால்

பன்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பாவ  நாசநின்  சீர்கள்  பாடவே.

கருத்துரை :-   அடியேனைப்  பாதுகாக்கும்  உரிமையுடைய  எம் பெருமானே , இவ்வுலக  வாழ்க்கையில்  வருந்தும்படி  என்னை  வருத்தலாகாது  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  தெரிவித்துக்  கொண்ட  அடிகள் , இனி, இவ் வாழ்க்கையினின்றும்  விடுவித்து ,நினக்கு  அணுக்கனாய் , அன்பு  பூண்டு , நின்  புகழ்களைப்  பாடி  இன்புறுதற்  பொருட்டு , அடியேனை  வருக  என்று  பணித்தருளல்  வேண்டும்  என்று  இத்  திருப்பாட்டில்  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மன்ன  எம்பிரான்  எனை  வருக  என்  =  என்றும்  நிலை  பேறுடையவனாகிய  எங்கள்  தலைவனே  அடியேனை  வருக  என்று  கட்டளையிட்டருள்வாயாக,

மாலும்  நான்  முகத்து  ஒருவன்  யாரினும்  முன்ன  எம்பிரான்  = 

திருமாலும்  பிரமனும்  முதலிய  மற்றைத்  தேவர்  எவரினும்  முன்னவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  எனை  வருக  என்று ,

யாவையும்  முழுதும்  இறுதி  உற்ற  நாள்  =  எல்லா  உலகங்களும் முற்றும்  அழிவு  எய்திய  பேரூழிக்  காலத்தின்  ,

பின்ன  எம்பிரான்  =  பின்னும்  அழிவு இன்றி  இருப்பவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  என்னை  வருக  என்று ,

பாவநாச  எம்பிரான்  =  பாவத்தை  ஒழிப்பவனாகிய  எங்கள்  தலைவனே,

பெய்  கழற்கண்  அன்பு  ஆய்  பன்ன  =  கழல்  அணிந்த  நின்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடையனாய்ப்  புகழ்  பாராட்டவும் ,

நின்  சீர்கள் பாட  =  நின்  சிறப்புக்களை  இசையுடன்   பாடவும் ,

எனை  வருக  என்  =  அடியேனை  வருக  என்று  கட்டளை  யிட்டருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  சிவபெருமானது  பரம் பொருள்  தன்மையை , உலகத்தோற்றத்திற்கு  முன்னும்  பின்னும்  என்றும்  உள்ளான் என்று  கூறுமுகமாகத்  தெளிவுறுத்  துரைத்து , முன்னிலைப்படுத்து , அடியேனை  நின்  பக்கல்  அணுகக்  கட்டளையிடல்  வேண்டுமென்று  கூறுவாராய் ,முதலில்  என்றும்  நிலைபேறுடைமையைக்  குறித்து , “ மன்ன  வெம்பிரான்  வருக  வென்னெனை  “ என்றார். மன்னுதல் – நிலைபெறுதல் . மன்னன்  எனும்  சொல்  விளியுறுபு  ஏற்று , மன்ன என்றாயிற்று . இனி, மன்ன  என்பதற்கு  அரசே  எனப்  பொருள்  கோடலுமாம்.

                என்றும் நிலையுதலையுடைய  கடவுள்  முதல்வனாகிய அவ்  விறைவனே  எங்கள்  தலைவனாயினன்  என்று  அப்பெருமானது  சார்புண்மை  பற்றிய  மகிழ்ச்சியால்  அடுத்து, “எம்பிரான்” என்றார். பின்வருவனவற்றிற்கும்  இஃதொக்கும்.  “என்னை வருக என் “என்புழி,  என்பாய்  என்பது , விகுதியும்  இடைநிலையும்  புணர்ந்து  கெட்டு , “ என்”  என்றாயிற்று .  ஆகவே,  என்று  கட்டளையிடுவாய்  என்பது  பொருளாகும் .  பின்வருவனவற்றையும்  இவ்வாறே  கொள்க. 

                  இறைவன் என்றும்  நிலையுதல் உடையவன் என்பதை விளக்கிக்  கூறுமுகமாக , ‘” மாலும்  நான்முகத்  தொருவன் யாரினும்  முன்ன”என்றார்.  தேவர், மக்கள் முதலிய  எல்லா  உயிர்த்  தொகுதிகளுக்கும் முன்னோன்  ஆவான்  என்பதை , ஆக்கல் , அளித்தல் , ஆகிய  தொழில்  தலைவரைக்  குறிப்பிட்டு , அன்னாரையும்  ஆக்கி  யளிக்கும்  தலைவனாய்  முற்பட்டவனாவான்  என்றார்.  நான்முகத்தொருவனும்  என்புழி,  எண்ணும்மை தொக்கு  நின்றது.  யாரினும்  என்றது  ,அன்னாரை  யுள்ளிட்ட மற்றை  இந்திரன்  முதலிய  தேவரையும்  மக்கள்  முதலியோரையும்  குறித்து  என்க.  உயிர்களின்  தோற்றத்திற்குக்  காரணிகனாய்  முற்பட்டவன் என்பது  கருத்து .

                    உலகம்  எல்லாம்  சிறிதும்  எஞ்சுதல்  இன்றி  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்தென்பார், “முழுதும்  யாவையும்  இறுதி உற்ற  நாள்  “  என்றார். எல்லாம்  ஒடுங்கிய  மகா  சங்காரத்தின்    பின் , இறைவன் ஒருவனே  அழிவின்றி  நிற்பனாதலின் , பின்ன”  என்றார். பின்ன  என்பது  பின்னாக  எஞ்சி நிற்பவனே  என்று  பொருள்படும் . “ஓதத்தொலிமடங்கி  யூருண்டேறி  யொத்  துலக மெல்லாம்  ஒடுங்கிய பின் வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார். வெண்காடு  மேவிய  விகிர்த்தனாரே  “  என்பதும்  இக்கருத்துப்  பற்றியதாகும். விண்ணுலக  முதலிய  எல்லா  உலகங்களும் , அறிவுடைப்பொருளும் , அறி வில்  பொருளும்  ஆகிய  இரு  கூறும்  கலந்தன  ஆதலின் ,அவ் வெல்லாவற்றிற்கும்   முன்னாவானும்  பின்னாக  நிற்பவனும்  இறைவனே  என்பதைப் புலப்படுக்கக்  கருதிய  அடிகள் , படைப்போன்  முதலியோரைப்  படைத்தலின்  முன்னவனாதலைத்  திருமால் ,நான்முகன்  முதலிய  அறிவுடைப் பொருள்களைப்  பற்றியும் , வித்தாகிய  மாயையும்  தன்  சக்தியின்கண்  ஒடுங்குதலின் பின்னவனாதலை, யாவையும்  முழுதும்  என  அறிவில்  பொருள்களைப்  பற்றியும்  குறிப்பிடுவார்  ஆயினர் . “ முன்னவன்காண்  பின்னவன் காண் மூவா  மேனி  முதல்வன் காண் “  என்னும்  அப்பர்  அருண் மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.

                     இறைவனது  யாண்டும்  உண்மையைக் கூறிப் பின்  அப் பெருமானால்  உயிர்க்கு  உண்டாம்  பயனைப்  புலப்படுத்துவாராய் , “பாச  நாச “ என்றார். வீட்டின்பத்திற்குப்  பாவத்தைப்  போலவே  புண்ணியமும்  தடையாம்  என்ப.  அங்ஙனமாகவும் , இரண்டையும்  ஒழிப்பவனே  என்னாது , பாவத்தை  மாத்திரம்  ஒழிப்பவனே  என்றது  என்னை  யெனின் , புண்ணியமும், பாவமும்   பாலும்  நீரும்  போலும் என்பதும், சிவஞானமாகிய நெருப்பிடைக்  காய்ச்சப்படுங்கால் , பாலோடு  கலந்த  நீர்  முதலிற்  சுவறுதல் போலப்  பாவம்  முதலில்  தேய்ந்து  ஒழியும்  என்பதும்  பின்னர்  பால்  சுவறி  நெய்யாகிப்  பயன்  விளைத்தல்  போலப்  புண்ணியம்  உலகியலினின்றும்   வேறுபட்டுச்  சிவ புண்ணியமாக  நின்று  , சிவக்  காட்சியைப்  பயப்பிக்கும்  என்பதும்  ஆன்றோர்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளாம் . “பண்ணிய  தழல்  காய்  பாலளா  நீர்  போற்  பாவமுன்  பறைந்து  பாலனைய , புண்ணியம்  பின் சென்ற  றிவினுக்  கறிய”  என்னும்  திருவிசைப்பாவானும்  இவ்வுண்மை  புலனாதல்  அறியலாம் . ஆகவே,  பாவ  நாசன்  என்று  கூறுதலே  அமைவுடைத்து  என்பது.

        அங்ஙனமாயின் , அவ்விரண்டற்கும்  பொதுவாகப்  பிற  இடங்களில்  , “கன்ம  நாசன்” என்று  கூறுதல்  எங்ஙனம்  அமையும் எனின்  , அக் கன்மத்துள்  அடங்கிய  நல்வினை , “இருள்  சேரிரு வினை” யின்பாற்  படுமாதலின்  பொருந்தும் என்க. உயிர்  தற்பயன்  கருதாத  நிலையில் ,அது  சிவ  புண்ணியமாகும் .  ஆதலின்  , கன்ம நாசன்  என்னும்  இடத்துச்  சிவ  புண்ணியம்  அடங்காது  என்பது  கருத்து .

            இனி,  அடிகள் இறைவனை  நோக்கி  ,”வருகவென் எனை” என்று பல முறை  கூறியதன்  பயனை  வெளிபடுத்துக்  கூற  முற்படுகின்றார் . முதலில்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடைமையும் , அதனால் , அப்பெருமானுடைய  புகழ்  மொழிகளைத்  தம்  நாவினாற்  பாராட்டுதலும் , அப்  பாராட்டு  முதிர்ச்சியில்  உள்ளம்  உருகி  அவன்  சிறப்புக்களை இசையுடன்  கலந்து  பாடுதலும்  ஆகிய  இவற்றையே  ஈண்டுப் பயனாக  விண்ணப்பித்துள்ளார் . ஆண்டவன்  திருவடி  இன்பமே  தமக்கு  முடிந்த  பயனாயினும்  , அதனைக் குறிப்பிடாமல் , “என்  கடன்  பணி  செய்து  கிடப்பதே” என்றபடி , அதற்கு  உரிய  சாதனங்களாகிய  தம்  கடமைகளையே  குறிப்பிட்டனர் . அவ்வீட்டின்பம்  ,”தன் கடன்  அடியேனையுந்  தாங்குதல் “  என்றபடி , அப்பெருமானது  கடமையாக  அருளத்  தக்கது  என்று  ஈண்டுக்  கூறாதொழிந்தார்  என்பது.  சாதனங்களுள்  பன்னுதலும் , பாடுதலும் , முறையே  அருச்சித்து  வழிபடுதலையும்   துதிபாடலையும்  குறிக்கும் என்பதுமாம் . “பன்னவும், பாடவும்  “  என்புழி, எண்ணும்மைகள் தொக்கு  நின்றன .

                 இதன்கண், முதலும்  ஈறுமாக  விளங்கும்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  வைத்து  வழிபட்டு  ஒழுகுதற்கு  அவனால்  அழைக்கப்படல்  வேண்டுமென்பதும் , அவ்  அருளழைப்பே   அதீதமாகிய  இன்பப்பேற்றிற்கு  ஏதுவாகும்  என்பதும்  பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                            ********************************************

பாடல் : 100 .

பாட  வேண்டுநான்  போற்றி

பாடி  நைந்துநைந்   துருகி  நெக்குநெக்

காட  வேண்டுநான்  போற்றி  அம்பலத்

தாடு  நின்கழற்  போது  நாயினேன்

கூட  வேண்டுநான்  போற்றி   இப்புழுக்

கூடு  நீக்கெனைப்  போற்றி  பொய்யெலாம்

வீட வேண்டுநான்  போற்றி  வீடுதந்

தருளு  போற்றிநின்  மெய்யர்  மெய்யனே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்வுலக  வாழ்க்கை யினின்றும்  என்னை  விடுவித்து , நின் பக்கலில் வரக்  கட்டளையிட்டருளல்  வேண்டுமென்று  இறைவனை நோக்கி விண்ணப்பம்  செய்துகொண்ட அடிகள் , அணுக்கனாயபின் , தாம்  எய்த  வேண்டிய முடிவான  பேறுகளை   அளித்தல்  ஆண்டவன்  கடமையாயினும் , வீட்டின்பத்தை  விரைவிற்  பெறும்  ஆர்வமிகுதியால்  இத்  திருப்பட்டில் தாமும்  வெளிப்படக்  கூறி  வேண்டுகின்றார்.

 பதவுரை :- நின்  மெய்யர்  மெய்யனே  =  நின்பால்  மெய்யன்புள்ள  அடியார்க்கு  மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

போற்றி  =  வணக்கம் ,

நின்னையே  நான்  பாடவேண்டும்  =  உன்னைப் பற்றியே  நான்  பாடவேண்டும் ,

நெக்கு  நெக்கு  உருகி  பாடி  நைந்து  நைந்து  நான்  ஆடவேண்டும்  = 

உள்ளம்  நெகிழ்ந்து நெகிழ்ந்து  உருகிப்  பாடிக்  கொண்டு  அவசமுற்று  யான்  கூத்து  ஆடல்  வேண்டும்

போற்றி  =  போற்றி,

அம்பலத்து  ஆடும்  நின் கழல்  போது நாயினேன்  நான்  கூட  வேண்டும் =

தில்லச் சிற்றம்பலத்தில்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  மலரை  நாய்த்  தன்மையுடய  சிறியேன்  அடைதல்  வேண்டும் ,

போற்றி  = போற்றி,

என்னை  இப் புழுக்கூடு  நீக்கு  =  அது  குறித்து  அடியேனைப்  புழுக்களுக்கு  இடனாகிய  இவ்வுடலினின்றும்  விடுத்தருளல்  வேண்டும்,

போற்றி  =  போற்றி ,

நான்  பொய்யெலாம்  வீட  வேண்டும்  =  யான்  இப்பொய்யுலக  வாழ்க்கையைப்  பற்றிய  எல்லாவற்றையும்  விட்டொழிக்கச்  செய்தல்  வேண்டும் ,

போற்றி    =   போற்றி , 

வீடு  தந்து  அருளு  போற்றி  =  அழிவில்  இன்பமாகிய  வீட்டு  நிலையைத்  தந்து  அருளுவாயாக  வணக்கம்  என்பது.     

விளக்கவுரை :-    மெய்மையாகிய  அன்பும்  ஒழுக்கமும்  உடையார்  மெய்யர்  ஆயினும் , அம்  மெய்மை , சிவபெருமானைப்  பற்றியதாக  நிகழ்தல்  வேண்டும்  என்பது  குறித்து , “நின்  மெய்யர்”  என்றார். மெய்யர்க்கு  மெய்யனாதல் , ஆண்டவன்  உளன்  என  உணர்ந்து  நம்புவார்க்கு  உளனாய்  நின்று , அவர்  வேண்டுவன  அளித்துக்  காப்போனாதல் நின்னையே  என்புழி,  ஏகாரம்  தேற்றப் பொருட்டு , “நின்னையே  நான்  பாடவேண்டும்”  என்றதனால், பிற  தேவரையாதல் , மக்கள் முதலியோரையாதல் மறந்தும்  பாடலாகாது என்பதும், அதற்கும் நீயே  உதவி  புரிதல்  வேண்டும்  என்பதும்  போதரும்.  “பொய்மையாளரைப்  பாடாதே  யெந்தை  புகலூர்  பாடுமின்  புலவிர்காள் “ என்பர்  தம்பிரான்  தோழர்.  இது  மொழிப்  பணி.

        “நெக்கு  நெக்கு  உருகி” என்றதனால் , கல்லினும் வலிய நெஞ்சம் , ஆண்டவனை  நினைந்து நினைந்து , கரைந்து  உருகுதல்  வேண்டும் என்பது  போதரும் , “உருகு  மனத்தடியவர்கட்கு   ஊறுந்தேனை  “ என்பது  அப்பர்  அருண் மொழி . உள்ளம்  உருகிய  நிலையிலே  , இறைவன்  விளக்கம் உண்டாம்  என்பது  கருத்து.  நைதல் – தன்வயம்  அழிதல் . வலிய  நெஞ்சம்   இறைவனை  நினைந்து  முதலிற்  குழைதலும்  , பின்னர்  உருகுதலும் , முடிவில்  தன்வயம்  அழிதலும்  ஆகிய  மூன்று  நிலைகளையும்  எய்தும்  என்பது .  விரிந்த  நினைவுகள், குழைவு  தோன்றிய  நிலையில்  சுருங்குதலும் , சுருங்கி  எஞ்சிய  எண்ணங்கள் , உருகிய  நிலையில்  ஒடுங்குதலும்  , எண்ணங்களின்  ஒடுக்கத்தில் தன் நிலை அழிதலும்  உளவாம் என்க.  இஃது  உள்ளப்பணி.

            உருகி, நைந்து என்னும்  செய்தென்  எச்சங்கள், “சினை  வினை சினையொடு  முதலொடுஞ்  செறியும் “ என்னும்  விதிப்படி  முதலோடு  முடிந்தன.  தன் வயம்  அழிந்த  நிலையில்  ஆனந்தக்  கூத்து  நிகழும்  ஆதலின், “பாடி  நைந்து  நைந்து உருகி நெக்கு  நெக்கு  ஆடவேண்டும்  நான்” என்றார். ஆடல்  இன்றியும்  நிகழும்  பாடல்  பற்றி , முதலில்  நின்னையே  பாடவேண்டும்  எனவும்  , பாடலுடன்  நிகழும்  ஆடல்  பற்றி  , அடுத்துப்  பாடி  ஆடவேண்டும்  எனவும்  கூறப்பட்டன. இது  மெய்ப்  பணி  .

             இங்ஙனம்  முக்கரணங்களும்  ஆண்டவன்  பணியில்  ஈடுபட்டு  நிகழ்தல்  அப் பெருமான்  திருவடி  நீழலில்  இயைதற்  பொருட்டாம்  என்பார், “அம்பலத்தாடும்  நின்  கழல்  கூட  வேண்டும்”  என்றார் . ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  உபதேசித்து  மறைந்த  பொழுது, “நாயினேனை  நலமலி  தில்லையுட் கோலமார்தரு  பொதுவினில்  வருகெனக்”கட்டளையிட்டனன்  எனக் கூறுவார்  ஆதலின்,  ஆங்கு  வரப்பணித்த  குறிப்பினை  உணர்ந்த  அடிகள், ஈண்டு  தில்லையம்பலத்துத்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  அடைதல்  வேண்டும்  என்று  கூறுவாராயினர்

                 கழற்போது – திருவடி மலர்.. தூய  மலரிற்  கூடுதற்குத்  தடையாக, இவ்வூனார்  புழுக்கூட்டில் இருக்கலாமா? இதனை  விரைவிற்  கழித்தருளல்  வேண்டும்  என்பார், “இப் புழுக்கூடு  நீக்கு  எனை” என்றார்.  சுட்டு, இழிவு  கருதிற்று  .  ஆண்டவன்  திருவடி  மலர் , சிவஞான  மணத்திற்கும் , பேரின்பத் தேனுக்கும்  இருப்பிடனாகும்.  உடல் , முடை நாற்றத்திற்கும்  புழுக்களுக்கும்  உறைவிடனாகும் .  ஆதலின் , முதலில்  இழிந்த  இப் புழுக் கூட்டினின்றும்  நீக்கி  யருளல்  வேண்டும்  என்றார்  என்பது.

                    பொய்யெலாம்  என்பது,  அழியும்  இயல்பினவாகிய  இவ்வுலக  வாழ்க்கைக்கு  உரிய  பொருள்களைப்  பற்றி  உண்டாம் பல  திறத்து அவாக்களையும்  குறிப்பதாகும். “ அவாவென்ப  எல்லா  உயிர்க்கும்  எஞ்ஞான்றும், தவா அப்  பிறப்பீனும்  வித்து”  என்ப  ஆதலின்,  அவ் அவா  என்னைச்  சாராதபடி  , அவற்றை  ஒழித்து  அருளல் வேண்டும் என்றார். அவாவை  ஒழித்தலே  பிறவாமைக்கு  ஏதுவாம் ஆதலின், அதன் ஒழிவில்  , என்றும்  அழிவு  இல்லாத  பேரின்பப்  பெருவாழ்வு  ஆகிய  வீட்டு  நிலையை  அளித்து  அருளல்  வேண்டும்  என்பார், “”வீடு தந்தருளு “ என்று  முடிவாக  வேண்டுவார்  ஆயினர் .

                       வீட்டின்பப்  பேற்றிற்குச்  சாதனமாகிய  மெய்யன்பு, மன  மொழி மெய்கள்  தூயனவாய்,  இறைபணியில்  தலைப்படலால்  உண்டாம் என்பதும் , அம் மெய்யன்பினால்  எய்தப்படும்  இறைவன்  திருவடி  இயைபிற்குத்  தடையாகவுள்ளது  உடற்சுமை   யாதலின்,  அதுவும் , அதுபற்றி  உண்டாய  அவாவும்  ஒழிக்கப்படல் வேண்டும்  என்பதும்  , அவ்வொழிவில்  சாத்தியமான  வீட்டின்பம்  எய்தலாம்  என்பதும் ,அடிகள்   வேண்டுகோள்  முகமாகக்  கூறிய  இத் திருப்பாட்டால்  நன்கு அறியத்தக்கனவாம்.

                           இத்  திருச்சதகத்  திருப்பாட்டுக்கள்  எல்லாவற்றிலும்  பரந்து கிடந்த பொருள்  அனைத்தையும்  இவ்விருதித்  திருப்பாட்டில்  சுருங்கச்  சொல்லி  விளங்க  வைத்திருக்கும்  அருமை  உணர்ந்து  இன்புறத்தக்கது . இறுதியில் , “மெய்யர்  மெய்யனே  “ என்றது , இத் திருச்சதகத்தின்  முதல் திருப்பாட்டாகிய  , “மெய்தான்  அரும்பி”  என்பதன்  முதலொடு  இயைந்து , அந்தாதித்  தொடையாயினமை  அறிக . இங்ஙனம்  “மெய்” யென்னும்  சொற்றொடர்  நிலையே  அன்றி,  முக்கரணங்களும் இறைவன்  வயப்படல்  வேண்டும்  என்னும்  இத் திருச்சதகத்தின் முதல்  திருப்பாட்டின்  கருத்தாகிய  பொருள்தொடர்  நிலையும்  இத் திருப்பாட்டில்  அமைந்திருத்தல்   உணர்ந்து  இன்புறத்தக்கது .

                            இதன்கண் ,”பாட வேண்டும்” , “நைந்து  நைந்துருகி  ஆடவேண்டும்”  என்பனவற்றால் பத்தியின்  இயல்பும்  “இப்புழுக்கூடு நீக்கு “, பொய்யெலாம்  வீட வேண்டும் “  என்பனவற்றால்  வைராக்கியத்தின்  இயல்பும்  பெறப்படுதலின் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும் , அவா  வொழித்து , வீடுதந்து  அருளல்  வேண்டும் என்றதனால் ,  அதீதமாகிய  இன்பநிலை  பெறப்படுதலின்,  ஆனந்தாதீதம்   என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் புலனாதல்  அறிக.

                     திருவாதவூர்  அடிகள்  அருளிச்  செய்த  திருவாசகத்  திருமறைக்கண்  உள்ள  திருச்சதகத்திற்குப்  பாண்டி வள நாட்டில்  , பூங்குன்ற  நாட்டுத்  தலை நகராகிய  மகிபாலன் பட்டி , மகாமகோபாத்தியாய  முது பெரும்  புலவர்  , பன்டிதமணி  மு .  கதிரேசச்  செட்டியார்  இயற்றிய  கதிர்  மணி   விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப் பெற்றது .

                                                        திருச்சிற்றம்பலம்

                                                **********************************

திருச்சதகம் பகுதி_3

திருச்சதகம்  —அறிவுறுத்தல்

பாடல் : 12 .

யானேதும்  பிறப்பஞ்சேன்

இறப்பதனுக்  கென்கடவேன்

வானேயும்  பெறில் வேண்டேன்

மண்ணாள்வான்  மதித்துமிரேன்

தேனேயும்  மலர்க்கொன்றைச்

சிவனேயெம்  பெருமான் எம்

மானேயுன்  அருள்பெறுநாள்

என்றென்றே  வருந்துவனே.

கருத்துரை :-  ஆண்டவன்  அடியாரைக்  குறித்து  மேற்கொள்வது அருளும், அடியார்  அவ்வருளைப்  பெறுதற்கு  மேற்கொள்வது  அன்பும்  ஆகும்.  இவ் வுண்மையை ,”ஆருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம்  புல்லார்  புரளவிடல்” என்று  உலகியலில்  வைத்துத்  திருவள்ளுவர்  கூறியதனாலும் , “யாஅமிரப்பவை , பொருளும் பொன்னும் போகமுமல்ல , நின்பால்  அருளும்  அன்பும்  அறமூன்றும் “  என்னும்  பரிபாடலானும்,  “எமக்கு  வீடு  பயக்கும்  நின்னருளும் , அதனை  யுண்டாக்க  நின்னிடத்து  யாம்  செய்யும் அன்பும் , அவ்விரண்டானும்  வரும்  அறமும்  ஆகிய  இம்  மூன்றுமே” யென்னும்  அதனுரைப்  பகுதியானும்  உணரலாம்.  இம் முறையில்  அடிகள்  இதன்  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவனிடத்து  இடையறாத  மெய்யன்பை  வேண்டி , அதற்கு அப் பெருமான்  திருவருட்  பேறு  ஒன்றே  எனத்  துணிந்து  , அதனை  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்து  வேண்டுகின்றார்.

பதவுரை :-  யான்  பிறப்பு  ஏதும்  அஞ்சேன்  =  யான்  பிறப்பிற்கு  ஒரு  சிறிதும்  அஞ்சுவேன்  அல்லேன்,

இறப்பதனுக்கு என் கடவேன் = இறத்தற்கு என் செய்ய வல்லேன்,

பெறில்  வானேயும் வேண்டேன் =  எளிதிற் பெறக்கிடைப்பது விண்ணுலகமே  ஆயினும்  விரும்பேன் ,

மண் ஆள்வான் மதித்தும் இரேன்  =  நிலவுலகத்தை ஆளுதற்கு  நெஞ்சத்தால் நினைந்தும்  இரேன்,

தேன்  ஏயும்  மலர்க்கொன்றைச்  சிவனே  = தேன்  பொருந்திய  கொன்றை  மலர்மாலையையுடடைய  சிவபெருமானே ,

எம் பெருமான்  =  எங்கள்  தலைவனே,

எம்மானே  =  எங்கள்  தந்தையே ,

உன்  அருள்  பெறும்  நாள்  என்று  என்று  வருந்துவன்  =  நினது  திருவருளைப் பெறுதற்குரிய  நன்னாள்  எப்பொழுது  வாய்க்கும்  என்று  நினைந்து  வருந்துகின்றேன்  என்பதாம் .

விளக்கவுரை :-  பிறப்பு  இறப்பு  இரண்டனுள்ளும் , பிறத்தலைத்  தவ  முதலிய  சாதனங்களால் ஒழித்தல்  கூடும் , வீட்டு  நிலையிற்  பிறவி  யொழிவுண்டாம்  என்பது  அறிவியல்  நூலிற்  காணப்படுவது . ஆதலின்,  இறந்தவன் வினையெச்சமுடையனாயிற்  பிறத்தலும் , அஃதிலனாயிற்   பிறவாமையும்  உடையவனாமென்பதும்  புலனாம் . பிறந்தவன்  இறத்தல்  எவ்வாற்றானும்  தவிர்க்க  ஒண்ணாததொன்று . இவ்  வுண்மையை , “இறப்பெனு மெய்மையை  இம்மை  யாவர்க்கும் ,  மறப்பெனும்  அதனின் மேற்  கேடு  மற்றுண்டோ” என்னும் கம்பர்  கூற்றானும் , “உடலுடையார்க்கு  இறப்பு  இயற்கை” என்று  காளிதாச  மகாகவி  விளக்கியவற்றானும்  அறிக.  “பிறந்தவர்  இறத்தலும் , இறந்தவர்  பிறத்தலும்  புதுவதன்று  “  என்பது , பற்றற்று  எய்தும்  வீடுபேறு  மிக  அரிய தொன்றாகலின் , அதனை  விட்டு , வினையெச்ச முடையாரே  உலகத்து  பெரும்பாலர்  என்னும்  உண்மை  கருதி,  அன்னாரைக்  குறிக்கொண்டு கூறியதாகும்.  ஆகவே, பிறப்பு  நேரின், இறப்பும்  உறுதியாதலானும் , அவ்விருவகைத்  துன்பமும்  பிறப்பு  ஒன்றானே  யுண்டாதலானும் , அவ்  விரண்டனுள்ளும்  பிறப்பே  பெரிதும்  அஞ்சத்தக்க தென்பது  போதரும் . இறப்பில்  வினையெச்சம் முளதாயின்,  அவ் வுயிர்கள் மீண்டு  பிறத்தலும் , அஃதினதாயின்  பிறவாமையும்  உண்டாம் . ஆதலின்,  பிறப்பிற்கு  அஞ்சும்  அத்துணை  இறப்பிற்கு  அஞ்ச  வேண்டிய  தின்று  என்பது  விளக்கமாம் . இவ்வுண்மையை  உளங்கொண்டே , அடிகள்  பெரிதும்  அஞ்சத்தக்கதாகிய  பிறப்பிற்கே  அஞ்ச  மாட்டேன்  எனின் , அத்துணை  அஞ்சத்தகாதது  ஆகிய  இறப்பைப்  பற்றி  யான்  செய்யக் கடவது  யாதுளது  என்பார் . “இறப்பதனுக்கு  என்  கடவேன்” என்றார்.  இத்  தொடர், இறத்தலைக்  குறித்து  யான்  செய்யத்  தக்கது  யாதுளது?. அஃதொரு  பொருளன்று  என்னும்  பொருளதாம்.  இஃது  இப் பொருட்டாதலை , “வளையார்  பசியின்  வருந்தார்  பிணியின்  மதனன்  அம்புக்கு , இளையார்  தனங்கண்டிரங்கி  நில்லாரிப்  பிறப்பினில்  வந்து , அளையார்  நரகினுக்கு  என்  கடவார்”  என்னும்  பட்டினத்து  அடிகள்  திருவாக்கினும்  காண்க. “நரகினுக்கு  என்  கடவார்” என்பது.  நரகத்தைக்  குறித்து  அவர்  செய்யக்கடவது  யாது?  ஒன்றுமில்லை;  அது  குறித்து  அஞ்சமாட்டா  என்பதே  கருத்தாத லறிக . இங்ஙனமின்றி , “இறப்பதனுக்  கென்கடவேன்” என்பதற்கு , இறத்தற்கே  அஞ்சுகின்றேன்  என்று  பொருள்  கூறின் , அஃது  “பிறப்பினோடிறப்பு  மஞ்சேன் “  என்னும்  அடிகள்  கருத்தோடு  முரணுதலால்  பொருத்தமின்று  என்பது  உணர்க .

       “வானேயும்  பெறில்  வேண்டேன் “  என்பதில் , ஏயும்  என்பது  ஆயினும்  என்னும்  பொருட்டு;  “கணமேயுங்  காத்தலரிது “ என்புழிக்  கணப்பொழுதாயினும்   என்று  பரிமேலழகர்  எழுதிய உரையானும்  உணர்க.  இனி,  ஏயும்  என்புழி, உம்மையைப்  பிரித்து , வானே  பெறினும்  என  இயைத்துப்  பொருள் கோடலும்  பொருந்தும் .  ஈண்டு , ஏகாரம்  உயர்வு  சிறப்பையும் , உம்மை  பெறுதற்கு  அருமையையும்  உணர்த்தும். 

              இனி,  முதல்  இரண்டடிகளிலும்  உள்ள  வினைமுற்றுக்கள் நான்கு  ஆகும்.  முதலிரண்டனையும்  பின்னிரண்டனோடு  எதிர்  நிரல்  நிறையாக  இயைத்துப்  பொருள்  நயங்காண்டல்  இன்பம்  பயப்பதாகும் . “பிறப்பு  அஞ்சேன் “ என்பதனால், பிறந்து உலகாளும்  அரசுரிமை  பெற்றுப்  போகந்  துய்க்கலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  உண்மைக்  குறிப்பாற்  பெறப்படும்  ஆதலின், அதனை  விலக்குதற்கு , “மண்ணாள்வான்  மதித்து  மிரேசன் “  எனவும், இறப்பதற்கு  அஞ்சேன்  என்றதனால் , “ இறப்பன் இறந்தா  லிருவிசும்  பேறுவன்”  என்றபடி,  இப்பிறப்பை  யொழித்து , இறந்து  விண்ணுலகம்  எய்தி  இன்புறலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  குறிப்பாற்  பெறப்படுமாதலின்  , அதனை  விலக்குதற்கு , “வானேயும்  பெறில்  வேண்டேன் “  எனவும்  அருளிச்  செய்யப்பட்டன .  ஈண்டுப் பிறத்தலும்  இறத்தலும்  மனித  உடம்பைச்  சுட்டிக்  கூறப்பட்டனவாகக்  கொள்ளல்  வேண்டும்.  மனிதவுடம்பின்  ஒழிவு , தேவவுடம்பு  பெறுதலைக்  குறிக் கோளாகப்  புலப்படுத்தும்  என்க. மண்ணுலக  ஆட்சியினும்  விண்ணுல கின்பம்   சிறந்ததாகும்  ஆதலின், “வானேயும்  பெறில்  வேண்டேன்”  எனவும், “மண்ணாள்வான்  மதித்துமிரேன்”  எனவுங் கூறப்பட்டன . வேண்டாமை, விரும்பாமையையும்  மதியாமை , ஒரு  பொருளாக  நினையாமையையும் உணர்த்துதல்  ஈண்டுக்  கருதத்தக்கது

                 கொன்றைமலர்  இறைவனுக்குச்  சிறந்த  அடையாளப்  பூவாகும்  “கார்விரி  கொன்றைப் பொன்னேர்  புது  மலர்த்தாரன்  மாலையன்  மலைந்த கண்ணியன்”  என்னும்  அக  நானூற்றுக் கடவுள்  வாழ்த்துப்  பாடலானும் ,  “தார்  ஓர்  விசேடமாக  இடுவது; மாலை  அழகுக்கு  இடுவது;  கண்ணி  போர்ப்பூ”  என  வரும்  அதன்  உரைக்  குறிப்பானும்  உணர்க.  உலகத்துத்  தலைவராகிய  அரசர்க்கு  அடையாளப்பூ ,  போர்ப் பூ முதலியன  வெவ்வேராகும் .  கடவுட்டலைவனாகிய  இறைவனுக்கு  ,அவ்  வடையாளப் பூ  முதலியவெல்லாம்  திருக்கொன்றைப்  பூவேயாகும் . இவ்வுண்மை  குறித்தே , “தேனேயு  மலர்க்கொன்றைச்  சிவனே”  யெனக்  கொன்றை  மலர்  அப்பெரு மானுக்குச்  சிறப்புரிமையுடையதென்று புலப்படுத்துவாராயினர் .  சிவன்,  எம்பெருமான்,  எம்மான்  என்னும்  இம்மூன்றும்,  முறையே  அழிவில்லாத  இன்பவடிவினன் , சிறந்த  தலைவன்,  தந்தை  என்னும்  பொருலனவாம்.  இன்ப  வடிவினன்  சிறந்த  தலைவனாக  இருப்பின்  , அவ்வின்பம்  தலையான  பேரின்பமாகும்  ஆதலின்,  சிவனே  எம்பெருமான்  என்றும்,  அப்பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை  மக்களுக்கு  உரிமையாக்குபவன்  தந்தையாதலின், எம்மான்  என்றுங்  கூறியருளனர்.  எம்மான்  என்பது  தந்தை  என்னும்  பொருளது.  இதனை  “எம்மான்  எம்மனை  யென்றனக்  கெட்டனைச்  சார்வாகார்”  என்பதனாலும்  அறிக.  வேண்டாமையை  வேண்டும்  சிவஞானி  களால்  வேண்டப்படுவது  திருவருட்பேறு  ஒன்றேயாகும்  .  ஆதலானும் , அப்பேறும்  உடலோடு  கூடியிருக்கும்  நாளில்  வாய்க்குமாயின், அவ்வுடல்  ஒழிவில்  திருவருளில்  தோய்ந்து  இன்புறுதல்  கூடுமென்னும்  உறுதிப்பா  டுடைமையானும்,  “அருள்பெறு  நாள்  என்றென்றே  வருந்துவன்”  என்று  கூறுனர். எல்லாரானும்  அஞ்சத்தக்க  பிறப்பு  இறப்புக்களுக்கும்  அஞ்சேன்; மண்ணுலக  ஆட்சிகளுக்கும்  முயலேன் , ஆனால் , நின்  திருவருட்  பேற்றிற்குறிய  நன்னாள்  வாய்ப்பது  கருதியே  கவல்கின்றேன்  என்பார், “வருந்துவனே”  என்று  கூறினர். அருட்பேற்றிற்கு  வருந்துவன்  என்னாது , அதற்குரிய  காலங்கருதியது, எடுத்த உடம்பு  கால  வரையறைக்கு  உட்பட்டது  குறித்தாம்.

           இதன்கண், மண்ணுலக  ஆட்சியும்  விண்ணுலக  இன்பமும்  பெறுதற்கு  விரும்பும்  மனத்தின்  செயலை  வெறுத்து , அந்  நெறியிற்  செல்லேன்  என  இறைவனை  முன்னிலைப்படுத்துக்  கூறுமுகமாக,  அந் நெஞ்சிற்குக்  குறிப்பால்  அறிவுறுத்தமை புலனாதலின், அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  வைராக்கிய விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனதல்  அறிக.

                                             **********************************************

பாடல் :13 .

வருந்துவன்நின்  மலர்ப்பாதம்

அவைகாண்பான்  நாயடியேன்

இருந்துநல  மலர்புனையேன்

ஏத்தேன்நாத்  தழும்பேறப்

பொருந்தியபொற்  சிலைகுனித்தாய்

அருளமுதம்  புரியாயேல்

வருந்துவன்  அத்  தமியேன்மற்

றென்னே  நான்  ஆமாறே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பட்டிற்  குறிப்பிட்ட  திருவருட்  பேற்றிற்கு  உரிய  அன்புச்  செயல்கள் தம்பால்  இல்லாமை  காரணமாக  அருளமுதம்  பெறுதல் அரிதாகுமாயின் , யான்  எவ்வாறு  உய்தல்  கூடுமென  அடிகள்  இத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார். 

பதவுரை :-  பொருந்திய பொன் சிலை குனித்தய்  = பொருந்திய  மேருமலையை வில்லாக  வளைத்தவனே ,

நாய்  அடியேன்  =  நாய்  போன்ற  சிறுமையுடைய  அடியேன்,

நின்  மலர்ப்பாதம்  அவை  காண்பான்  =  நின்னுடைய  தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  அவற்றைக்  காணுதற்பொருட்டு ,

வருந்துவன்  =  வருந்தி  முயல்கின்றேன் ,

இருந்தும்  =  கை , நா  முதலிய  உடல்  உறுப்புக்கள் எல்லாவற்றோடும்  கூடியிருந்தும் ,

நல  மலர்  புனையேன்  =  நல்ல  மலர்களைத்   தொடுத்து  நினக்கு  அணியேன் ,

நாத்தழும்பு  ஏற  ஏத்தேன்  –  நாவில்  தழும்புண்டாம்படி  நின்  புகளைப்  பாராட்டேன் ,

அருளமுதம்  புரியாயேல்  =  நின்  கருணையாகிய  அமுதத்தை  அடியேனுக்கு  வழங்கவில்லையாயின் ,

அத்தமியேன்  = அத்தகைய  கதியற்றவனாகிய  யான் ,

வருந்துவன்  = மேன்மேலும்  வருத்தம் எய்துவேன் ,

நான்  ஆம்  ஆறு  என்னே  =  பின்னர்  யான்  உய்யுமாறு  எங்ஙனம் ? என்பது.

விளக்கவுரை :-  கடவுள் தன்மையின் அரிய ஆற்றல்  புலப்படுத்தற்கு  மேருவை  வில்லாக  வளைத்த புராண கதை அடிகளால் மேற்கொள்ளப் பட்டது . பொன் : ஆகு பெயர் , பொன் மலையை வில்லாக  வளைக்கும்  அரிய  செயல்  பரம்பொருளாகிய  சிவபெருமான்  ஒருவற்கே  பொருந்தியதாகும் ;  ஏனையோர்க்கு  இயலாததொன்று  என்பதைப்  புலப்படுத்துவான், “பொருந்திய பொற்சிலை  குனித்தாய் “ என்றார். மலையை  வில்லாக வளைத்தல் இயலாததொன்று என எண்ணி, “இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை  யந்தணன் “ என்பதற்கு, “இமய  மலையிடத்துப்  பிறந்த  மூங்கிலாகிய வில்லை வளைத்த இறைவன் “ என்பர் நச்சினார்க்கினியர் . மக்கள்  ஆற்றலை  நோக்க , இங்ஙனம் கோடல் பொருந்துமாயினும் , எல்லாம் வல்ல  ஆண்டவன்  பேராற்றற்கு  மூங்கிலை வளைத்தல் சிறந்த செயலாகாதென்பது எளிதில் உணரத்தக்கது . “கூத்தனிவ்  வானுங் குவலயமும்  எல்லோமுங்,  காத்தும்  படைத்துங் கரந்தும் விளையாடி “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியபடி உலகப்  படைப்பு முதலிய தொழில்களே இறைவர்க்கு  விளையாட்டாக  அமையுமாயின் ,மலயை  வில்லாக  வளைத்தல் எங்ஙனம் இயலாததாகும் ? அக் கலிப் பா விலேயே  கயிலையை  இராவணன் பெயர்த்த கதைப் பகுதியுள்ளது . அதற்கு  உரையாளர்  வேறுபடக்  கூறிற்றிலர்.

               நாய்  இழிபிறப்புடையதாயினும் நன்றி  மறவாமைக் குணத்திற் சிறந்ததாகும்; அது போலத் தம் சிறுமை நிலையினும் இறைவன் தமக் கருளிய  பேருதவியை  நினைந்துருகும்  இயல்பு  தமக்குண்டு என்பதைப் புலப்படுத்துவார் , “நாயடியேன்” என்றார் . “அண்ணல்தானுரைப்பக்  கேட்டே  யடுகளிற் றெருத்தினிட்ட  , வண்ணப்பூந்தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்கும் “ என்புழி , “வேறோர் ஊர்தி  கூறாது  ஞமலியைக்  கூறினான் ; அவன் அயிராது தருதற்கு “  என்று நச்சினாக்கினியர்  கூறிய உரைக்குறிப்பு  ஈண்டுக்  கருதத்தக்கது . அகரம் சேய்மையிலுள்ள  பொருளைச்  சுட்டுமாதலின் , திருவடிகள் அகக் கண்ணாலும்  காணமுடியாத சேய்மையில் உளவென்பதைக்  குறிப்பிற் புலப்படுத்தலான் , அடிகள் இறைவனுடைய  திருவடிகளைக் காண வருந்துதற்குக்  குறிப்பேதுவாகவுள்ளது  அவை  யென்னுஞ்  சுட்டு.

          “வாழ்த்த வாயும்  நினைக்க மடநெஞ்சுந் , தாழ்த்தச்  சென்னியும்  “ இறைவனால்  தரப்பட்டும்  , அவற்றைக்கொண்டு  உரிய  பணிகளைச்  செய்திலேன்  என  இரங்குவார் . “இருந்து நலமலர்புனையேன் ஏத்தேன் நாத்  தழும்பேற”  என்றார். “ ஆரூராவென்றென்றே யலறாநில்லே”  என்புழி , அலறுதல் உரக்கக்  கூவியழைத்தலாதலின், அங்ஙனஞ் செய்திலேன் என்பார், “நாத்தழும்  பேற  ஏத்தேன்”  என்றார்.  மன மொழி மெய் யாகிய  மூன்றனுள் , எளிதிற் பணி செய்தற்குரிய  மொழியும்  மெய்யுமே  தம்  பணிகளைச் செய்யவில்லையாயின், அரிதிற் செயற்பாலதாகிய  உள்ளப் பணியைப்  பற்றிக்  கூறவேண்டாவெனக்  கருதி , அதுகுறித்து யாதும்  கூறிற்றிலர் .

மன மொழி மெய்கள் இறைவன்  வழிபாட்டிற்  பொருந்தாமையால் இறைவனது  அருளமுதம் பெறுதல் இயலாதொழியுமே  என்றும் , அருளமுதம் பெறவில்லையாயின் , யான்  என்ன  செய்வேன் என்றும்  வருத்தம் தோன்ற  , “அருளமுதம் புரியாயேல்  வருந்துவன்”  என்றார். இத்  திருப்பாட்டின்  முதலடியிற்  கூறிய  வருத்தம்  சாதனமாகிய  இறைவழிபாடு  செய்யவியலாமை குறித்தும், நான்காம் அடியிற்  கூறிய  வருத்தம்  சாத்தியமாகிய  அருளமுதம் பெறாமை  குறித்தும் உண்டாயின  என்பது  உய்த்துணரத்  தக்கது .  அறம் , பாவம்  என்பவற்றையும் , அவற்றின்  பயன்களாகிய  இன்ப  துன்பங்களையும் மேற்கொள்ள  நினையுங்கால், அறமாகிய  மூலத்தைவிட்டு , அதன் பயனாகிய  இன்பத்தை விழைதலும், பாவமாகிய  மூலத்தைச் செய்து, அதன்  பயனாகிய  துன்பத்தை  வெறுத்தலும்  மக்களுட்  சிறியோர்  இயல்பு  என்ப . இம் முறயே , “இருந்து நலமலர் புனையேன்  ஏத்தேனாத் தழும்பேற “ என  அறமாகிய மூலத்தை விட்டு, அருளமுதம் பெற  விளைகின்றேன் ; என் சிறுமை  யென்னேயென இரங்குவார்.,”வருந்துவன் “ என்றார்.

    “அத்தமியேன்”  என்புழிச்  சுட்டு , மலர்  புனையாமையும் , நாத்தழும்பேற ஏத்தாமையும் , ஆகிய அந் நிலைமையை  உணர்த்தும் . இறை  வழிபாட்டிற்  குரிய  உறுப்புக்களோடு  கூடியிருந்தும் அவ்வழிபாட்டில் தலைப்படா மையால், உறுதுணையின்றி வெறுவியனாய்த்தனியனாயினேன்  என்பார், “அத்தமியேன்” என்றார்.  மற்று;  அசை நிலை . உலகப்  பொருள்கள்  எத்துணையிருப்பினும் , இறைவனது அருளமுதம்  பெறவில்லையானால், உயிர்  உய்தற்கு  , வழியில்லையே  என்று  இரங்குவார். “நான்  ஆமாறு  என்னே”  என்றார். ஆமாறு  என்புழி,  ஆதல் , உய்தல் , என்னும்  பொருட்டு. 

        இதன்கண், இறைவன்  திருவடிக்கண்  மலர்  புனைதல், நாத்தழும்பேற ஏத்துதல் முதலிய  சாதனங்களில் தலைப்படாத  நெஞ்சின்  இயல்பு  குறித்து  வருந்தி  இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , அந்நெஞ்சிற்குக் குறிப்பான்  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறறிக.

                                                ***********************************

பாடல் : 14 .

ஆமாறுன்  திருவடுக்கே

அகங்குழையேன்  அன்புருகேன்

பூமாலை  புனைந்தேத்தேன்

புகழ்ந்துரையேன்  புத்தேளிர்

கோமான்நின்  திருக்கோயில்

தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்

சாமாறே  விரைகின்றேன்

சதுராலே  சார்வரானே .

கருத்துரை :-  திருவருட் பேற்றிற்குரிய  சாதனம்  தம்பால்  இல்லாமை  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள், இத் திருப்பாட்டில்  கட்டறுத்து உய்தி  பெறுதற்குரிய அச் சாதனம் மன மொழி மெய்களை இறை வழிபாட்டிற்கு உரிமையாக்குதல் ஆகவும் , அங்ஙனமின்றி, அவற்றை உண்டு  உடுத்து உறங்கும்  உலக  வாழ்விற்கு  உரிமைப்படுத்திப்   பயனின்றி  இறத்தற்கும்  விரையும்  என்  அறியாமை யிருந்தவாறு  என்னேயென  மீண்டும்  இரங்குகின்றார் .

பதவுரை :- புத்தேளிர்  கோமான்  =  கடவுளர்  தலைவனாகிய  சிவபெருமானே,

உன்  திருவடிக்கே  ஆமாறு  = நின்  திருவடிக்குத்  தொண்டனாம்  வண்ணம் ,

அகம்  குழையேன்  =நெஞ்சங்கனிந்திலேன் ,

அன்பு உருகேன்  =  அன்பினால்  உருகுவதும்  இல்லேன் ,

பூமாலை புனைந்து  ஏத்தேன்  =  மலர்  மாலையை அணிந்து  வாழ்த்திலேன் ,

புகழ்ந்து  உரையேன்   =  நின்  புகழைப்  பாராட்டிப்  பேசேன் ,

நின் திருக்கோயில்  தூகேன்  =  நின்  திருக்கோயில்களை  அலகிடேன் ,

மெழுகேன்  =  மெழுகுதல்  செய்யேன் ,

கூத்தாடேன்  =  உவகை  மிகுதியாற்  கூத்தாடுதல்  செய்யேன் ,

சதுராலே  சார்வான்  =  என் ஆற்றலாலே  நின்னை  யடைதற்கு ,

விரைகின்றேன்  = முந்துகின்றேன் ,

(ஆது)  சாமாறே  =  அங்ஙனம்  விரைகின்றது  பயனின்றிச்  சாதற் பொருட்டேயாம்  என்பது.

விளக்கவுரை :-  “யாங்கள்  எல்லோரும்  பசுக்கள் ; நீ  ஒருவனே  பசுபதி யென்று  உடன்பட்டனர்  தேவர்கள் “ என்னும்  மறைமொழிப்படி , கடவுளர்  தலைவன்  சிவபிரான் ஒருவனே  யாவன் ஆதலின்,  “புத்தேளிர்  கோமான்”  என்றார் , “திரு” என்பது செல்வத்தைக் குறிக்கும்; ஈண்டு  ஞானச்  செல்வத்தை , அடைந்தார்க்கு   அளிக்கும்  இறைவன் அடி  திருவடி யெனப்பட்டது. திருவடிக்கேயாதல் – அடித் தொண்டனாதல் . உலகத்துப்  பொருள்களுள் எதற்கும்  அடிமையாகாமல்  , இறைவன்  திருவடிக்கே  யடிமையாதல் உட்கோளாதலின் , ஏகாரம்  தேற்றப்  பொருளது . சிவத்  தொண்டில்  ஈடுபடுதற்கு  , மன மொழி மெய்கள் மூன்றும் இறைவன் வயப்படல்  வேண்டும் . உள்ளம்  இல்வழி, மொழியும்  செயலும்  பயன்  விளையா  ஆதலின்,  முதலில்  உள்ளத்தின் தூய  செயலைப்  புலப்படுத்தத் தொடங்கி  , “அகங்குழையேன்  அன்புருகேன்” என்றார் . குழைதல் – இளகுதல்; உள்ளம்  உருகுதற்கு  முதலில்  குழைதல்  வேண்டும் . அக்குழைவு, கல்லைப்  போன்ற  வன் நெஞ்சம் , இறைவனை இடையறாது  நினைவு  கூர்தலால்  நிகழ்வது. அதன்மேல் , இறைவன் ஒருவனே  பற்றுக்கோடு  என்னும்  உறுதிப்பாட்டால்  உண்டாகும்  அன்பு  காரணமாக  அவ்வுள்ளம் உருகும் . உருகிய  அவ்வுள்ளத்தில் இறைவன்  விளங்குவான்  என்பது  பெரியோர்கள் கண்ட  அநுபவம் . இதனை  “உரமென்னும்  பொருளானை  உருகில்  உள்ளுறைவானை “ என்பதனாலும் , “உள்ளம்  உள்கலந் தேத்தவல்  லார்க்கலால், கள்ளமுள்ள வழிக்கசிவானலன்” என்பதனாலும்  உணர்க. உள்ளத்தின் செயல்களாகிய  குழைதலும்  உருகுதலும்  இன்றியமையாத  சாதனங்களாகவும் , அவற்றை  அடைந்திலேன்  என்று  இரங்குவார், “அகங்  குழையேன்” , “அன்புருகேன்” என்றார்.

             ஏத்துதல்  –  வாழ்த்துதல் . ஏத்துதற்கு  முன்னர்ப்  பூமாலை  புனைதல்  இறை வழிபாட்டு  முறையாதலின் , “ பூமாலை  புனைந்தேத்தேன் “ என்றார்.  புகழ்ந்து  உரைத்தல் , இறைவன்  பெருமைகளைப்  பலவாறு  பாராட்டிக்  கூறல், வாழ்த்துதல், தம்  குறையைப் பரிகரிக்க  நினைந்து  வாழ்த்துருவத்தில்  இறைவனைத்  துதித்தல்  .  “வாழ்த்துவதும் வானவர்கள் தாம்  வாழ்வான் “   என்பதும்  கருதத்தக்கது.  புகழ்தல், இறைவனுடைய  திருவிளையாடல்களை  இனிய  பாட்டு  வடிவிலும்  உரை  வடிவிலும்  வைத்துப் பாராட்டடுதல் .  ஆகவே , வாழ்த்துதலும்  புகழ்ந்துரைத்தலும்  மொழிப்பணியாதலால் , அவற்றையும்  மேற்கொண்டிலேன்  என்பார், “ஏத்தேன் புகழ்ந்துரையேன்” என்றார்.

                 தூகல்  –  திருவலகிடுதல்.  நாடோறும்  திருக் கோயிலுக்குச்  சென்று  திருவலகிடுதல்  மெழுகுதல்  முதலியன  செய்தல்  உடற்பணிகளாம் . எளிமையிற் செய்யத்தக்க  அப்  பணிகளையும்  செய்திலேன்  எனவும் , இம் முக்கரணங்களாலும்  வழிபாடியற்றி , அதன்  பயனாக  இன்பத்தில்  திளைத்துப் பரவசமாக  நின்று  கூத்தாடலுஞ்  செய்திலேன்  எனவும்  இரங்குவார் , “ தூகேன் மெழுகேன் கூத்தாடேன் “ என்றார். முக்கரணங்களாலும்  நிகழ்வன , முறையே  இரண்டிரண்டு  செயல்களாக, அகங்குழைதல்  அன்புருகுதல் ,ஏத்தல் புகழ்ந்துரைத்தல் , தூகல்  மெழுகுதல் என்னும்  இவை கூறப்பட்டன.  இச் செயல்களின்  முதிர்ச்சியில்  நிகழ்வது  பரவசமாக  நின்று  இயற்றும்  இன்ப  ஆடலாகும். கூத்தாடல்  உடலின்  செயல்  எனினும் , இன்பக்  களிப்பின்  விளைவாதலின் , கரணங்கள்  மூன்றும்  இறை  வயப்பட்டபின்  நிகழ்வதாகுமென்பது  கருதத்தக்கது. சரியை  வழிபாடாகிய  அலகிடுதல்  மெழுகுதல்  ஆகிய  உடற்பணிகலும் , ஏத்துதல் புகழ்ந்துரைத்தல்  ஆகிய  மொழிப்பணிகளும்  , இவற்றின்  முதிர்ச்சியில்  நிகழும்  இன்பக்  கூத்தும்  , தொண்டற்கு  இன்றியமையாதன  என்பதை , “நிலை  பெறுமாறு  எண்ணுதியேல்  நெஞ்சே  நீ வா ,  நித்தலும்  எம்பிரானுடைய  கோயில் புக்குப்  புலர்வதன்முன்  அலகிட்டு  மெழுக்கும் இட்டுப்  பூமாலை  புனைந்தேத்திப்   புகழ்ந்துபாடித்  , தலையாரக்  கும்பிட்டுக்  கூத்துமாடி  “ என்னும்  அப்பர்  திருவாக்கானும்  உணர்க.

                 யாவருக்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையானாகிய  இறைவன்  முன்னிலையில் , யாவர்க்கும்  கீழாம்  அடிமையாக  நின்று  , தொண்டு  செய்து  அடைதற்பாலதாகிய  அவ்விறையருளை, அத்  தொண்டுகளை  மேற்கொள்ளாமல்  ஆன்மாத்  தன்  ஆற்றலால்  அடையலாம்  என்று  என்ணுதல் தவறுடைத்து  என்பதைப்  புலப்படுத்த  , “சதுராலே  ‘சார்வான்’ விரைகின்றேன் “  என்றார். சதுர்  – ஆற்றல்.  சார்வனே  என்பதிலுள்ள  ஏகாரம்  ஈற்றசை.  சதுராலே  என்புழி,  ஏகாரம்  தேற்றம் . இறையருளைப்  பெறுதற் குரிய  தொண்டுகளை மேற்கொள்ளாமல்  உயிர்  தன்  ஆற்றலால்  அதனைப்  பெறக்கருதல், பயனின்றிச் சாதற்கு  முந்துவதாகும்  என்பது  கருதி  ,  “சாமாறே” என்று  கூறினர் . விரைகின்றேன் என்னும்  வினைமுற்றுச்  சார்வான்  என்னும்  எச்சத்திற்கு  முடிவாகும் .

                    இனி,  உன்  திருவடிக்கே  குழையேன்,  உருகேன்  என்றதனாலும் , ஏத்தேன் , புகழ்ந்துரையேன்  என்றதனாலும்  , திருக்கோயில் தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்  என்றதனாலும் முறையே  குறிப்பாற்  பெறக்கிடப்பன ,  என்  மனைவி , மக்கள்  முதலியோர்  பொருட்டு  அகங்  குழைதலும்   உருகுதலும், பொருட்பயன்  கருதித்  தகுதியில்லாத  மனிதரை  ஏத்தலும்  புகழ்ந்துரைத்தலும் ,  அநித்திய  வாழ்க்கைக்குரிய  என்  இல்லத்தை  அலகிடுதலும்  மெழுகுதலும் , இன்னோரன்ன  உலக  வாழ்க்கை  நலத்தில்   ஈடுபட்டுக்  களித்துக்  கூத்தாடலும்  செய்கின்றேன்  என்பனவாம் . அந்தோ !  இச்செயல்கள்  எல்லாம்  ஊனடைந்த  உடம்பின்  பிறவி,  தானடைந்த  உறுதியைச்  சாராமல்  பயனின்றிச்  சாதற்கு  உரியனவாமே  என்று  இரங்குவார் , “சாமாறே விரைகின்றேன்  சதுராலே  சார்வானே”  என்றார். 

                       இதன்கண், முக்கரணங்களாலும்  நிகழும்  செயல்களுக்கு  மூலமாகவுள்ளது  நெஞ்சம்  ஆதலான் , அந்  நெஞ்சம்  இறைவயப்படாமல் , அழிதன் மாலையவாய  உலகத்துப்  பொருள்களின்பால்  விரைகின்றதே என்று  வருந்தி , இறைவனை  முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக் குறிப்பான் அறிவுறுத்தவாற பெறப்படுதலின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக .     **************** 

பாடல் : 15 .

வானாகி  மண்ணாகி

வளியாகி  ஒளியாகி

ஊனாகி  உயிராகி

உண்மையுமாய்  இன்மையுமாய்க்

கோனாகி  யானெனதென்

றவரவரைக்  கூத்தாட்டு

வானாகி  நின்றாயை

யென்சொல்லி  வாழ்த்துவனே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  மன மொழி  மெய்களை  இறைவழிபாட்டிற்  பயன்படுத்தாமைக்கு  இரங்கிய  அடிகள் , அக்  காரணம்  மூன்றனுள் , மனத்தாலும்  மொழியாலும்  இறைவன்  பெருமையை  நினைந்து  வாழ்த்துதற்கு, அப் பெருமான் , மாற்ற  மனங்கழிய  நின்ற  மறையோனாதலால் , அவற்றிற்கு  எட்டாமை  குறித்து, எவ்வாறு  நினைந்து , என்  சொல்லி  வாழ்த்துவேன்  என்று இத்  திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வானாகி  மண்ணாகி  வளியாகி  ஒளியாகி  =   விண் ,மண் , காற்று , தீ என்னும்  இப்  பூதங்களாகியும்  ,

ஊனாகி , உயிராகி  =  உடலும் , உயிருமாகியும் ,

உண்மையும்  ஆய்  இன்மையும்  ஆய்  = உள்பொருளாகியும்  இல்பொருளாகியும் 

கோன்  ஆகி  =  எப்பொருட்கும்  தலைவனாகியும் ,

அவரவரை  =  உலகத்துள்ள  மக்கள்  எல்லோரையும்  ,

யான்  எனது  என்று  கூத்து  ஆட்டுவான் ஆகி  = யான்  என்றும்  எனது  என்றும்  சொல்லிக்  கூத்தாடும்படி  செய்பவனாகியும் ,

நின்றாயை  =  நிற்கின்ற  நின்னைக்  குறித்து ,

என் சொல்லி  வாழ்த்துவன்  =  யாது  கூறி  வாழ்த்தக்  கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  ஐம்பெரும்  பூதங்களும்  , ஞாயிறு திங்களும் , உயிரும்  ஆகிய  எட்டும்  இறைவனுக்கு  உடல்  என்பர் . இதனை  ,”இருநிலனாய்த்  தீயாகி  நீருமாகி  இயமானனாய்  எறியுங்  காற்றுமகி ,அருநிலைய  திங்களாய்  ஞாயிறாகி  ஆகாசமாய்  அட்ட  மூர்த்தியாகி” என்னும்  நின்ற  திருத்தாண்டகத்தலும்  அறியலாம். இஃது   இவ்வெண்வகைப் பொருள்களும்  அல்லாமல்  உலகம்  என்பது  ஒன்றில்லை  யாதலின் நிற்கும்  இறைவனது  வியாபக  நிலையைக்  கூறியபடியாம் . இந் நிலையையே  அடிகள்  இத் திருப்பாட்டின்  முதற்கண்  புலப்படுத்து  வாராயினர். “வான்” என்னுஞ்சொல்  ஆகாயத்தையும்  , மேகம் என்னும்  பொருளுடையதாய்  ஆகுபெயராய் நின்று  நீரையும்  உணர்த்தும் . “ஒளி”  என்பது  தீயையும்,  ஞாயிறு  திங்களையும்  உணர்த்தும் . தீ  முதலிய  மூன்றனையும்  தனித்தனியே  கூறாமல்  ஒருங்கு  புலப்படுத்தற்கே ஒளியென்னும்  ஒரு  சொல்லாற் கூறியருளினார் ; அவையெல்லாம்  ஒளியுடைமை  பற்றி  யென்க. முதற்கண் வானாகியென்று தொடங்கியது  தோற்ற  முறைபற்றி  நீரையும்  அச்சொல்லாற்  பெறவைத்து, பிரமனுடைய  படைப்புப்பொருள்களுள் முதற்கட்  படைக்கப்பட்ட தென்னும்   சிறப்பு  நோக்கி என்க. செய்யுள் முறை நோக்கி மண்  முதலிய  பூதங்கள் பிறழ வைக்கப்பட்டன. உயிர்  உடலைப்பற்றி  நிற்கும்   நிலையிலே  “ இயமானான் “ எனப்படும்  . இவ்வுண்மை  குறித்தே , “ஊனாகி உயிராகி” என்றார். ஊன், ஆகுபெயராய்  உடலை  உணர்த்தும். ஆகவே, இறைவன் மேற்குறிப்பிட்ட  எண்வகைப்  பொருள்களையும்  தனக்கு உடலாகக் கொண்டு விளங்குபவன் என்பது புலப்படுத்தவாறாம்.

                      மெய்யன்புடையார்  அகக்  காட்சிக்குப்  புலப்படுதலின்  உள் பொருளாகவும்  அவ்  வன்பிலார்க்கு  எவாற்றானும் புலப்படாமையின்  இல்பொருளாகவும்  விளங்குவன் என்பது தோன்ற ,”உண்மையுமாய்  இன்மையுமாய் “ என்றார் . இதனைப்  பிறிதோரிடத்தும்  அடிகள் , “அன்பர்க்கு  மெய்யானை  அல்லாதார்க்கு  அல்லாத  வேதியனை  “ எனக்  கூறுவர். “சொதியனே  துன்னிருளே “என்பதும்  இக் கருத்தைப்  புலப்படுப்பதகும். இனி, பாசஞான பசுஞானங்களால் அறியப் படாமையும், பதி ஞானம்  ஒன்றானே  அறியப்படுதலும இறைவனுக்குச்  சிறப்பிலக்கணம்  என்பவாதலின், அவ்வுண்மை  தோன்ற , “உண்மையுமாய்  இன்மையுமாய் “என்றார் எனினுமாம்.  வான்  முதலிய  பூதங்களும்  உயிரும்  ஆகிய  அறிவில் பொருளும் , அறிவுடைப்  பொருளுங் கலந்த உலக உருவமாக  விளங்குவோன்  இறைவன் என்றால், அவ்வுலகத்தை  இயக்கும்  பேராற்றல்  படைத்த தனி  முதல்  வேறொரு  பொருளாக  இருக்குங்கொலோ  என்னும்  ஐயத்தை  ஒழித்து, இவ்வுலகப்  பொருட்குத்  தலைவனாக  இருப்பவனும்  அப் பெருமானே  என்பதை  வலியுறுத்தற்கு  , “கோனாகி” என்றார்.

                        யான்  என்பதை  அகங்காரம்  எனவும்,  எனது  என்பதை  மமகாரம்  எனவும்  வடநூலார்  வழங்குவர் . இவை  முறையே  அகப்பற்றும் புறப்பற்றும் ஆகும். எல்லாப் பற்றுக்களும்இவ்விரண்டனுள்  அடங்கும் . இவ் விருவகைப் பற்றுக்களும் அற்ற  நிலையே வீட்டின்ப  நிலையாகும் . இதனை , “ஆவியாக்கை யான்  எனது என்று யாதுமின்றி அறுதலே” என்னும் அடிகள் திருவாக்கானும்உணரலாம் . இவ் அகப்புறப் பற்றுக்களில்  ஈடுபட்டே உலகத்து உயிர்களெல்லாம் உழல்கின்றன என்பது  பெரியோர்  அநுபவத்திற் கண்டது. எல்லாவுயிர்களும் இப்பற்றுக்களை  யுடையன  வாயினும் , மக்கள்பாலே  விளக்கமாகக்  காணப்படுதலின் , “யான்  எனது  என்று  அவரவரை “ என்றார்.  நூற்கேள்வி  யானும்  ஞானாசிரியன்  உபதேசத்தானும்  இப்பற்றுக்களின் இயல்பை  அறிந்து , அவற்றினின்றும்  விடுதி  பெறுதற்குத்  தகுதியுடையார்  மக்கட் பிறப்பினராகலின், சிறப்பாக, “அவரவரை” என்று  உயர்திணைமேல்  வைத்துக்  கூறியது  பொருத்தமுடையதே . யான்  எனது என்னும்  இவ்விருவகைப்  பற்றுக்களாலும்  உயிர்  ஆரவாரித்துக்  களிக்கும்  இயல்புடைமை  நோக்கி , அந் நிலையைக்  கூத்தாடல்  எனவும் , இறைவன் , படைத்தல்  முதலிய ஐம்பெருந் தொழில்களுள் ஒன்றாகிய மறைத்தற் றொழிலால்  உயிர்களோடு உடனாகி  நின்று, வினைப்பயன்களை நுகர்விக்கின்றான் என்பது சைவ நூல் துணிபாகலின் “கூத்தாட்டு  வானாகி” எனவும்  கூறினர் . யானே செய்பவன்  எனக் களித்தாடும்  அகக்  கூத்தும் , எல்லாம் எனது எனக் களித்தாடும் புறக்கூத்தும்  ஆகிய  அறியாமையால் நிகழும் இருவகைக் கூத்தும் உயிருக்கு  உள்ளன  என்பதும் , அங்ஙனம்  ஆட்டுவிப்பவன்  இறைவன் என்பதும் போந்தவாறுணர்க, “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே “ என்பதும் ஈண்டுக்  கருதத்தக்கது . இங்ஙனம் ஆட்டுவித்தற்குக் காரணம் உயிர்களின் வினைஒழிவு  குறித்து  இறைவனுக்கு  உண்டாகிய அருட்குணமேயாகும் .

             நின்றாய் , முன்னிலை  வினைப்பெயர் . பரம்  பொருளாகிய சிவபெருமானுக்கும் உலகத்திற்கும் உள்ள  இயைபைப்பற்றி, “எட்டுத்திசை தானாய்  வேறா  யுடன்  ஆனான்  இடம்  வீழிம்மிழலையே” எனத்  தேவாரத்  திருமறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய்” எனச்  சைவ  நூலும்  கூறும். முதல்வன் உலத்தோடு  கலந்திருத்தலின்  உலகெலாமாகி எனவும் , அவ்வுலகத்திற் குரிய விகாரங்கள் தன்னைப் பற்றாவாறு இருத்தலின்  வேறாய் எனவும்  ,உயிர்க்கு உயிராக  நின்று  வினைப்பயன்  நுகர்ச்சியில்  தலைப்படுதலால் உடனாகி  எனவும் கூறப்பட்டனன் .  இம்  மூன்று நிலைகளையும்  இத் திருப்பாட்டுத்  தெளிவுறுத்து நிற்றல் உய்த்துணரத்  தக்கது .

              வானாகி  என்பது  முதல்  உயிராகி  என்பதுவரை கூறப்பட்ட  செய்திகளால் , “உலகெலாமாகி “  என்பதும் ,”உண்மையுமாய்  இன்மையுமாய்க்  கோனாகி”  என்பவற்றால் , “வேறாய்” என்பதும் , “அவரவரைக்  கூத்தாட்டுவானாகி “  என்றதனால் “உடனுமாய் “ என்பதும்  புலப்படுத்தவாறு  அறிக. 

              இங்ஙனம்  வான்  முதலிய  பூதங்களாகவும் தலைவனாகவும்  விளங்குகின்ற  இறைவனுடைய  நிலைகளுள் ,  எந் நிலையை  எவ்வாறு  எடுத்துக் கூறி  வாழ்த்துவேன்  என்பார், “ என் சொல்லி  வாழ்த்துவனே” என்றார் . இறைவனுடைய  ஒரு  சில குணங்களைப் பாராட்டினால் , மற்றவை  கூறப்படாமை குன்றக் கூறல்  ஆக  முடியுமென்பதும் , எல்லாவற்றையும்  எடுத்துக்  கூறற்கு  மாற்ற மனங்கழிய  நின்றவனாகலின்  இயலாத  தொன்றாகும்  என்பதும்  கருத்து.

                  இதன்கண், வாழ்த்த வாயும் , நினைக்க  மடநெஞ்சும்  தந்த  இறைவனை  வாழ்த்துதற்கு  அவன்  குணங்கள் மாற்ற மனங்கழிய நிற்கும் இயல்பினவாகலான் , இயலாதவென  அமைதி  பெற  முயலும்  நெஞ்சத்தின் இயல்பை  வெறுத்து , இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , இயன்றாங்கு  வாழ்த்துவதே  கடமை  என்பதைக் குறிப்பிற்  புலப்பட  வைத்து  நெஞ்சிற்கு அறிவுறுத்தமை பெறப்படுதலின்  , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாயவாறு  அறிக.

                                  *******************************************

பாடல் :16 .

வாழ்த்துவதும்  வானவர்கள்

தாம்வாழ்வான்  மனம் நின்பால்

தாழ்த்துவதுந்  தாம்  உயர்ந்து

தம்மையெல்லாந்   தொழவேண்டிச்

சூழ்த்துமது  கரமுரலுந்

தாரோயை  நாயடியேன்

பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்

யானும் உன்னைப்  பரவுவனே.

கருத்துரை :-  இறைவனுடைய  பலதிறப்பட்ட  குணங்கள் எல்லாவற்றையும்  முற்ற  எடுத்துக்  கூறி  வாழ்த்துதல்  இயலாத  தொன்றென  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனமாயினும் , இயன்றாங்கு  வாழ்த்துதல்  கடமையென்றும், அதுவும் தேவபோக  முதலியவற்றைக்  கருதாமல் , பிறப்பறுத்தலையே  கருதியதாக  இருத்தல் வேண்டும்  என்றும் , இத் திருப்பாட்டில்  தம்  உண்மைக்  கருத்தைத்  தெரிவித்துக் கொள்ளுகின்றார் .

பதவுரை :-  மதுகரம்  சூழ்ந்து  முரலும்  தாரோயை  =  வண்டுகள் மொய்த்து  ஒலிக்கும்  கொன்றை  மாலயையுடைய  நின்னை,

வானவர்கள்  வாழ்த்துவது தாம்  வாழ்வான்  =  தேவர்கள் வாழ்த்துதல்  தாம்  நெடுங்காலம்  இன்பமாக  வாழுதற்  பொருட்டே ,

மனம்  நின்பால்  தாழ்த்துவது  =  நெஞ்சத்தை  நின்னிடத்துப்  பணிவித்தல் ,

தாம்  உயர்ந்து  எல்லாம்  தம்மைத்  தொழ வேண்டி  = தாம்  பெருமையடைய  எல்லாவுயிர்களும்  தம்மைப்  பணிய  வேண்டியே,

நாயடியேன்  யானும்   =  நாய்  போன்ற  சிறுமை உடைய  அடிமையாகிய  யானும் ,

பாழ்த்த  பிறப்பு  அறுத்திடுவான்  =  பயனற்ற  பிறப்பை  அறவே  நீக்குதற்  பொருட்டு ,

உன்னைப்  பரவுவன்  =  நின்னை  வாழ்த்துவேன்  என்பது  .

விளக்கவுரை :-   உம்மைகள்  இரண்டும்  இசை  நிறை . சூழ்த்து  என்பது  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றது.  வண்டுகள் சூழ்த்து  ஆரவாரித்தல்  மலரிலுள்ள  தேனை  நுகர்ந்து  இன்புறுதற்  பொருட்டே .இக்  குறிப்பு  வானவர்  குறிக்கோளுக்கும்  இயைந்திருத்தல்  அறிக. பெரும்பாலும்  புண்ணியப்பயனையே  நுகரும்  தேவர்கள் ,  அப்பயன்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டுப்  பிறப்பு  இறப்புத்  துன்பத்தை  மறந்து ,மேன்மேலும்  தம்  வாழ்க்கை  இன்பம்  மிகுதற்  பொருட்டே  இறை வழிபாடு  செய்யும்  இயல்பினர்  என்பதைப்  புலப்படுத்த , “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான் “ என்றார் . இறை  வழிபாடு  செய்வார்  எப்  பயன்  குறித்துச்  செய்கின்றனரோ, அப்  பயனை   அவர்க்கு  இறைவன்  அருளிச்செய்வன்  என்பது  துணிபாதலின் , தாம்  வாழ  விரும்பி  இறைவனை  வாழ்த்துதல்  தம்  வாழ்க்கை  இன்பத்தை  மிகுவிக்கும்  என்பது  தெளிவாம் .  தம்  நெஞ்சத்தைப்  பணியச்  செய்தல்  ,  எல்லா  உயிர்களும்  தம்மைப்  பணிய ,  அதனால்  தாம்  உயர்வு  அடைய  வேண்டியே  என்பது  கருத்து ; உயர  என்பது  , உயர்ந்து எனத்  திரிந்து  நின்றது .  “வானின்றுலகம்  வழங்கி  வருதலான்” என்புழி,  நிற்ப  என்பது  நின்று  எனத்  திரிந்த  நின்றது  போலக்  கொள்க.  இறைவனை  மெய்யன்போடு  வாழ்த்துவாரும்  வணங்குவாரும்  தேவர்  முதலிய  எல்லோரானும்  வாழ்த்தப்பட்டும்  வணங்கப்பட்டும்  பெருமையுடையவர்  என்பதனை , ” தொழப்படும் தேவர்  தொழப்படுவானைத்  தொழுத  பின்னை, தொழப்படுந்  தேவர்  தம்மால் தொழுவிக்கும்  தம்  தொண்டரையே” என்னும்  திருவாக்கானும்  உணர்க.

                  பிறப்பு இறப்பு அற்ற  நிலையே அழிவில்லாத  இன்பநிலை யாதலின்  அப்  பேறே  உயிர்க்கு  உண்மைப்பயனாகும்  .  அஃதல்லாதனவெல்லாம்  வினைப்  பயன்களாக நின்று  மேன்  மேலும்  வினையீட்டத்திற்கு  ஏதுவாம்  ஆதலின் , அப்  பயன்களைத்  துய்ப்பதற்குக்  கருவியாகவுள்ள  பிறப்பு  ,  பயன் அற்றதெனக்  கொண்டு ,”பாழ்த்த  பிறப்பு” என்றார். பிறப்பு அறுத்தல் – பிறவிக்கு  ஏதுவாகிய  வினையை  வேரறக்  களைதல் .  வினையெச்சம்  சிறிதிருப்பினும் , ஆலம்  வித்துப்போலப்  பிறப்பு  இறப்புக்  கிளைத்தெழும்  ஆதலின்,  இவ்வாறு  கூறப்பட்டது .  “பாசவேரறுக்கும்  பழம் பொருள் “  என்பது  அடிகள் திருவாக்கு ,  யானும்  என்புழி  உம்மை  எச்சப்பொருளது .

                    வாழ்த்துதல்  முதலிய  வழிபாட்டுச்  செயல்கள்,  பயன்  கருதிச்  செய்யப்படுவனவும் , பயன்  கருதாமல்  செய்யப்படுவனவும்  என  இரு  வகைப்படும்.  இவற்றுள் தேவர்கள் வழிபாடு  பெரும்பாலும்  போகம்  முதலிய  பயன்  கருதிச்  செய்யப்படுவனவாம் .  இவ்வுண்மையைப்  புராண  இதிகாச  முதலியவற்றிற்  பரக்கக்  காணலாம் .  அடிகள்  வழிபாடு  உலகப்  பயனைக்  குறித்தன்று ; அப்  பயனுக்குக்  கருவியாகவுள்ள  பிறப்பை  அறுத்தலையே குறித்ததாகும் .  பந்தம்  வீடு  தரும்  பரமன் “ என்றபடி,   பந்தத்திற்கு  எதுவாகிய  உலக  வாழ்க்கையையும் , வீட்டிற்கு  ஏதுவகிய  பிறப்பு  அறுத்தலையும்  தருதற்குரிய  இறைவனிடத்து  அடிகள்  பிறப்பு  அறுத்தலைக் குறித்து வேண்டியது பொருத்தமே . தேவர்களுடைய  வாழ்த்தும் வணக்கமும்  அவர்தம்  உயர்வைக்  குறித்தனவாம்  என்று  தாழ்த்துக் கூறியது  எற்றிற்கெனின், “ பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்  யானும்  உன்னைப்  பரவுவனே”  என்னும்  வேண்டுகோளை  ஏற்றுக்கொண்டு , மனிதப்பிறப்பை  ஒழித்துத்  தேவப்பிறப்பை  அருளி , துறக்க  இன்பத்தைத்  துய்க்கவெனக்  கட்டளையிடின், தேவ போகத்தில் மயங்கி ,மேன்மேலும் அவ்வின்பத்தையே விழைந்து , மீண்டும்  பிறப்பு  இறப்பில்  சுழலக்  கூடுமென்று  அஞ்சியே , அடிகள்  அவ் விண்ணவர்  இயல்பை  எடுத்துக்கூறி , அவ்  வாழ்க்கையில் தமக்கு  விருப்பமின்மையைக்  குறிப்பிற்  புலப்படுத்துவாராயினர் . “கொள்ளேன் புரந்தரன்  மால்  அயன்  வாழ்வு”  என்றும் , “போகம்  வேண்டி  வேண்டிலேன்  புரந்தராதி  இன்பமும்  “  என்றும்  முன்னும்  பின்னுமுள்ள  அடிகள் திருவாக்குகளும் , இதனை  வலியுறுத்துவனவாம் .

                      இதன்கண், இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துங்காலும் , மேன்மேலும் போகவிழைவிற் செல்லும் தேவர்களின் இயல்பை மேற்கொளக் கருதும்  நெஞ்சத்தின் இயல்பைத்  தகாதென்று  வெறுத்து  ,இறைவனை  முன்னிலைப்  படுத்துக்  கூறுமுகமாக , அந்  நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றியவாறறிக .

                                             *************************************\

பாடல் :17 .

பரவுவார்  இமையோர்கள்

பாடுவன  நால்வேதங்

குரவுவார்  குழல்மடவாள்

கூறுடையா  ளொருபாகம்

விரவுவார்  மெய்யன்பின்

அடியார்கள்  மேன்மேலுன்

அரவுவார்  கழலிணைகள்

காண்பாரோ  அரியானே

கருத்துரை :-  இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துதல்  தம்  கடமையாகும் என  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனம்  வாழ்த்துதல்  முதலிய  செயல்களாலும், பிறப்பறுத்தற்கு  வாயிலாக  உள்ள  இறைவன்  திருவடிக்காட்சி  பெறுதற்கு  அரியதாகுங்கொலோவென  ஐயுற்று, அவ்  அருமைப்பாட்டை  நினைந்து  வியந்து இத்  திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார். 

பதவுரை :-  அரியானே   =  காண்டற்கு  அரியவனே ,

இமையோர்கள் பரவுவார்  =  தேவர்கள் முன்னிலைப்படுத்து  வாழ்த்துவர் ,

நால் வேதம்  பாடுவன  =  நான்கு  மறைகளும்  பாராட்டிப்  புகழ்வன ,

குரவுவார்  குழல்  மடவாள்  =  குராமலரை  அணிந்த  கூந்தலையுடைய  இறைவி ,

ஒரு  பாகம்  கூறு  உடையாள்  =  நின்  திருமேனியின்  ஒரு  கூற்றைத்  தனக்குக்  கூறாக  உடையள் ,

மெய்யன்பின்  அடியார்கள்  விரவுவார்  =  உண்மையான  அன்பினையுடைய  அடியவர்கள்  நின்னோடு  கலந்து  இன்புறுவர் ,

உன்  அரவுவார்  கழல்  இணைகள்  மேன்மேலும்  காண்பாரோ  = 

அவரெல்லாம்  ஒலிக்கின்ற  நெடிய  வீரக் கழல்களையுடைய   நின்  திருவடிகளை  மேன்மேலுங்காண்பார் கொலோ?  என்பது .

விளக்கவுரை :- மன மொழி  மெய்களான்  இயைந்து  இறைவனைக்  காண்டல்  ஞான  நிலையில்  பக்குவ  முதிர்ந்தோர்க்கும் ஒரொருகாற்  கூறுமேயன்றி  இடையறாது  நிகழ்தலின்று . ஆதலின்  , அத்தகையோரும்  மேன்மேலும்  இடையறாது  கண்டு  இன்புறுதற்கு  அரியன்  என்பார், “அரியானே” என்றார். “உணர்ந்தாற்கு  உணர்வரியோன் “  என்னும்  திருச்சிற்றம்பலக்  கோவைச்  செய்யுட்  பகுதியும் , அதற்கு , “ஒருகால் தன்னை  யுணர்ந்தவர்கட்குப்  பின்  உணர்தற்குக்  கருவியாகிய  சித்த விருத்தியும்  ஒருங்குதலான்  மீட்டு  உணர்வரியோன் “  என்னும்  பேராசிரியர்  உரையும்  இதனை  வலியுறுத்து  நிற்கும் . இத் திருப்பாட்டின்  திரண்ட  கருத்திற்கேற்ப , “அரியானே”  என்னும்  சொற்கு  இவ்வாறு  பொருள்  கோடல்  பொருத்தமாதல்  அறிக .

               இறைவனை  முன்னிலைப் படுத்துப் பாராட்டுதலைப்  பரவுதல்  எனவும்,  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டுதலைப்  புகழ்தல்  எனவும்  இயல் நூலார்  கூறுவர் . “பரவலும்  புகழ்ச்சியும்   கருதிய  பாங்கினும்  “ எனும்  தொல்காப்பியச்  சூத்திர  உரையில்  , “புகழ்தல்  படர்க்கைக் கண்ணும்  பரவல்  முன்னிலைக் கண்ணும்  வரும்” என்பர்  இளம்பூரணர் . ஆதலின் , தேவர்கள் எல்லோரும்  முன்னிலைப்படுத்து இறைவனைப்  பாராட்டுவர் என்பதைப்  புலப்படுத்த , “பரவுவார்  இமையோர்கள்”என்றார். மறைகள் எல்லாம் இனிய  பண்ணுடன்  இறைவன்  புகழைப்  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டும்  என்பார், “பாடுவன  நால்வேதம் “என்றார். இனிப்   புகழ்தான்  உரையும்  பாட்டுமென  இருவகைப்படும்  ஆதலின், இமையவர்கள் உரையாற்  பாராட்டுவர்  எனவும், மறைகள் பாட்டுக்களாற்  பாராட்டுவன எனவும்  பொருந்தும்.

               குரவு  –  குராமலர் : இது  பாலைக்குறியது ; அதற்குத்  தெய்வம்  கொற்றவை என்னும் சிவ சத்தியாகும் . ஆதலின்  உமையம்மையார்க்குக் குராமலர்  கூறப்பட்டது. கொற்றவை  சிவ சத்தியாதலை , “கங்கைமுடிக்கணிந்த  கண்ணுதலோன்  பாகத்து , மங்கை  யுருவாய்  மறையேத்தவே நிற்பாய் “ என்னும்  சிலப்பதிகாரத்தாலும்  அறியலாம் . குராமலர்  குறிக்கப்பட்ட  பாலைக்கு  உரிப்பொருள் பிரிதலாகும் . இது  மக்களைப் பற்றியது . கடவுளர் தலைவனாகிய  இறைவர்க்கும்  இறைவிக்கும்  மக்கள் ஒழுகலாற்றை  ஏற்றிடலாகாது  என்பது புலப்படுக்க, “கூறுடையா ளொருபாகம்”  எனப்  பாகம்  பிரியாமை  கூறப்பட்டது . இறைவனோடு  உள்ளங்கலத்தற்கு  உண்மையான  அன்பு  வேண்டும்  என்பதும் , அம் மெய்யன்பினாலே  சிவத்  தொண்டு  நிலை  பெறுவதாகும்  என்பதும்  புலப்படுக்க, “மெய்யன்பின்  அடியார் “ என்றார், “கண்ட  இவையல்லேன்  நான்  என்றகன்று  காணாக்  கழிபரமும்  நானல்லேன் எனக்  கருதிக் கசிந்த, தொண்டினொடும்  உளத்தவன்றான் நின்ற  கலப்பாலே  சோகமெனப்  பாவிக்கத்  தோன்றுவன் வேறின்றி”” என்னும்  சைவ  நூற்கருத்தும்   ஈண்டு  நோக்கத்தக்கது .  விரவுதல்  –  கலத்தல்; உள்ளங்கலத்தலைக்  குறிக்கும்  . இனி, அடியார்கள்  மெய்யன்பினால்  விரவுவார் எனக்  கொண்டு , கலத்தற்கு  மெய்யன்பை  ஏதுவாக்கலும்  ஒன்று. 

                    தேவரும் , மறைகளும் , இறைவியும்  அடியாரும்  மன மொழி மெய் மூன்றானும்  வழிபட்டு  இறைவனைக்  கண்டன  ரெனினும் , சிறப்பு  முறை பற்றி , மொழியால் இயைந்து கண்டவர் தேவராவர் ; மறைகளும்  அன்ன. திருமேனியில்  இயைந்து  கூறு கொண்டு கண்ட பெருமை இறைவிக்குரியது . உள்ளத்தாற் கலந்து கண்டவர்  மெய்யன்பின்  அடியார்கள்.  திருமேனியில்  இயைதல்  இறைவிக்கேயன்றி  அடியார்க்கு  ஓரளவில் உண்டு.  கண்ணப்ப  நாயனாரது  கண்  ஒன்று  இறைவன்  கண்ணில்  இயைந்தது  இதற்குச்  சான்றாகும் . ஆயினும் , எல்லா உறுப்புக்களாலும்  இறைவன்  திருமேனியில்  கூறு  கொண்டு  இயைந்த  சிறப்பு  அம்மைக்கே  உரியதாகும் . இது கருதியே, திருமேனி இயைபிற்குத்  தேவர் , மக்கள் முதலியோருள் யாரையும்  கூறாது, உமையம்மையாரை எடுத்துக் கூறினர். மேலும்,மக்கள்உடல் ஊனுடலாதலின்  அதன்கண் இறைவன் திருமேனி இயைதல் எல்லாவற்றானும் , பொருந்தா தொன்று . இறைவன் அவருள்  திருமேனிக்கு  ஊனுடல்  வேறென்பதும் , அது கலத்தற்கு  உரியதன்று என்பதும்  கருதியே , “ஊனார்  உடல்  புகுந்தான் உயிர்  கலந்தான் “என்று  கூறினர்  அடிகள். புகுதல், கலத்தல் என்னும்  இரண்டற்கும்  வேற்றுமை  பெரிதென்பது  அறிந்தது . ஓர்  இல்லினுட்  புகுந்தான் என்று கூறலாமே  யொழியக்  கலந்தான்  என்று  கூறுதல்  பொருந்தாதென்பது எளிதில் அறியத்  தக்கது . மேலும் கண்ணப்ப  நாயனார்  கண்ணொளி இறைவன் கண்ணொளியில்  இயைந்தது மேற்கூறியதற்கு  முரணாகாது . என்னை?  அறிவுருவம்  ஆகிய  உயிர் , இறைவன்  திருவடி நீழலில்  ஒடுங்குங்கால் , அவ்வுயுற்க்கு ஆதாரமாக  அமைந்த  உடற் கூறுகள் எல்லாம்  அவ்வம் மகாபூதங்களில்  ஒடுங்கும்  என்றும் , கண்ணொளி சூரிய  மண்டலத்தை  அடையும்  என்றும்  மறை முடிவிற்  கூறப்பட்ட உண்மைக்கு  ஏற்பக்  கண்ணப்பர்  கண்ணொளி , இறைவன் வலக்கண்ணாகிய  சூரிய  மண்டலத்தைச்  சார்ந்தது என்னும்  உண்மை புலப்பட  அமைந்தது அந் நிகழ்ச்சியாதலின்  என்க .

      மொழியாற் பரவிய தேவரும் , திருமேனியிற் கூறு  கொண்ட  அம்மையும்  உள்ளத்தாற் கலந்த அடியாரும் , முறையே , பரவுதல் , கூறுகோடல் , விரவுதல் என்னும்  அவ்வளவில் இயைந்து  இன்புற்றனரேயன்றி , மேன்மேலும் இடயறாது  இறைவன் திருவடிகளைக்  காணும் நிலையில் இல்லை என்பது தோன்ற  , “கழலிணைகள் காண்பாரோ” என்றார் ; உமை  மேன்மேலுங்  காணவில்லை  யென்றது , இறைவனுடன்  ஒரு கூறு  பெற்றுப்  பிறராற் காணப்படும்  நிலையில்  இருத்தலின்றித்  தான்  வேறாகநின்று  சிவத்தைக் காணும்  நிலையில்  இல்லையென்பது பற்றி  , சிவனோடு வேறறக்  கலந்திருத்தல்  பற்றிக்  “காண்பாரோ “என்றனர் . இறைவன் திருவடியைக்  கண்ட  அளவிலே , அக் காட்சி  யொழிந்து  இன்புற்று  இயைதலினும் , அக் காட்சி இடையறாது நிகழ்தல் மிக்க  இன்பம் பயப்பதாகும்  என்பது அடிகள் உட்கோளாகும் . இதனை ,

“கண்ணார்  நுதலோய்  கழலிணைகள்

கண்டேன்  கண்கள்  களிகூர

எண்ணா  திரவும்  பகலும்நான்

அவையே  யெண்ணும்  அதுவல்லால்

மண்மேல்  யாக்கை  விடுமாறும்

வந்துன்  கழற்கே  புகுமாறும்

அண்ணா எண்ணக்  கடவேனோ

அடிமை  சால  அழகுடைத்தே”

என்று  அடிகள் பிறிதோரிடத்திற் கூறிய  திருப்பாட்டு  வலியுறுத்தல் அறிக. “கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்னும்  உண்மையடியார் பெருமையும்  ஈண்டு  கருதத்தக்கது . புட்பதந்தர்  என்னும்  வட மொழிக் கவிஞர்  இடயறாத  சிவ  வழிபாட்டில்  ஈடுபட்டு  , அப்  பெருமையைப் புலப்படுக்கும்  முகமாகச்  சிவபெருமானை முன்னிலைப்          படுத்துக்  கூறிய  ஒரு  சுலோகத்தின் மொழிபெயர்ப்புப் பின்வருவது :- “முப்புரப்பகைவ, முன்னர்க்கிடைத்த எப்பிறப்பினும் ஒரு கணப்பொழுதிலும்  நின்னை  வணங்கினேன் அல்லேன் என்னும்  இவ்  உண்மை , எனது  இவ்வுடல்  தோற்றத்தால்  அனுமித்து  அறியப்பட்டது.  இப்பொழுது  யான்  வணங்கினமையின், வீடு  பெறும்  நிலையினன் ஆயினன். ஆதலால், எதிர்காலத்திலும் விடலின்மையால்  வணக்கஞ்  செய்ய  இயலாதவனாகின்றேன் ; இறைவ , சென்ற காலத்தும்  எதிர்  காலத்தும்  வணக்கம்  செய்யாமையாகிய   இக்  குற்றங்கள் இரண்டனையும்  பொறுத்து அருளல் வேண்டும்  என்பது  இதனால் , வீடு பேற்றின்பத்திலும்  அதற்குச்  சாதனமாகிய  திருவடிக்  காட்சியையே மெய்யன்பர்  வேண்டிநிற்கும்  உண்மை புலனாதல்  அறிக. இக் குறிக்கோளை உட்கொண்டே , “மேன்மேலுன் …….கழலிணைகள் காண்பாரோ” என்று அருளிச்செய்தனர் அடிகள். கழல்களுக்கு  நெடுமை  கூறியது , “பாதாளம்  ஏழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர்  “ என்றபடி , திருவடிகளின் நெடுமை  குறித்து  என்க. ஒலித்தற் குறிப்பு, மடிமை  யுற்றிருப்பாரை  விழிப்பித்து  நினைவூட்டற்காம் .  காண்பாரோ  என்புழி, ஓகாரம்  ஐயப்பொருட்டு .

              இத்  திருப்பாட்டிற்குப்  பலரும்  இக்கருத்து உணராமல்  உரை  கூறியதோடு , “காண்பாரோ “என்னும்  சொல்லைக்  “காண்பு – ஆரோ  எனப்  பிரித்து  இடர்ப்படுவாராயினர்  .  அடிகள்  மனம்  குழைந்து  அமிழ்த ஒழுக்குப்  போலப்  பாடி  அருளிய  இன்னோரன்ன  திருப்பாட்டுக்களில், இங்ஙனம்  சொற்  சிதைத்துப்  பொருள்  காண்டல்  பொருந்தாதென்பது அறிக.

                 இதன்கண், இறைவனை  மன மொழி மெய்கள்  இயைந்து  இன்புறுதலினும்  , அதற்குச்  சாதனமான  திருவடிக்  காட்சி  இடையறாது  நிகழ்தல்  சிறந்ததாகும்  என்னும்  உவமை  வலியுறல்  வேண்டி, இறைவனை  முன்னிலைப்படுத்து , நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின்  அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு  அறிக . 

                                     ******************************************* 

பாடல் :18 .

அரியானே  யாவர்க்கும்

அம்பரவா  அம்பலத்தெம்

பெரியானே  சிறியேனை

ஆட்கொண்ட  பெய்கழற்கீழ்

விரையார்ந்த  மலர்தூவேன்

வியத்தலறேன்  நயந்துருகேன்

தரியேன்நான்  ஆமாறென்

சாவேன்நான்  சாவேனே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெறுதற்கு அரியது ஆகுங்கொலோ என  ஐயுற்று  வியந்து  கூறிய  அடிகள் , பிறர்க்கு  அரிய அத்  திருவடிச் சார்பு , தம்மை  ஆட்கொள்ளுதற்கு  எளிதாகக்  கிடைத்ததும், அத்  திருவடிக்கண் மன மொழி மெய்கள்  ஈடுபடாமை  குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :- யாவர்க்கும்  அரியானே  = அமரர்  முனிவர்  முதலிய  எல்லோர்க்கும் காண்டற்கு  அரியவனே ,

அம்பரவா  = நுண்ணிய  ஞானவெளியில்  விளங்குகின்றவனே,

அம்பலத்து எம்பெரியானே  = பெரு வெளியாகிய  பொதுவில்  நின்று  அருட்  கூத்தியிற்றும்   எங்கள் பெரியோனே ,

சிறியேனை  ஆட்கொண்ட  பெய்கழல்  கீழ்  = அறிவாற்றல்களால்  சிறுமையுடைய  அடியேனைத்  தொண்டனாகக்  கொண்ட  நின்  திருவடிக்கண்ணே ,

விரை ஆர்ந்த  மலர்  தூவேன் =  மணம்  நிறைந்த  மலர்களை  இட்டு  வழிபாடு  செய்யேன் ,

வியந்து அலறேன்  =  வியப்புற்று  உரத்த  குரலில்  கூவிக்  கதறேன் ,

நயந்து  உருகேன்  =  அன்பினால்  ஈடுபட்டு  உருகேன்  ,

நான்  ஆம்  ஆறு  என்  =  யாம்  உய்யுமாறு  எங்ஙனம் ? ,

தரியேன்  =  நினக்கு  ஆளாய் வழியடிமை  செய்யாமல்  இந் நிலவுலகத்தில்  தங்கி  வாழேன் ,

நான்  சாவேன்  சாவேன்  =  யான்  இறந்துபடுவேன் ,இறந்துபடுவேன்  என்பது. 

விளக்கவுரை :-  இறைவன் மெய்ஞ்ஞானத்தாலன்றித்  தேவர் , முனிவர் முதலியோரானும் காண்டற்கு அரியன் என்பார், “அரியானே யாவர்க்கும்”  என்றார் . “பாரார் விசும்புள்ளார்  பாதாளத்தார் புறத்தார்  யாராலுங் காண்டற்கரியான் எமக்கெளிய பேராளன் “என்னும்  அடிகள்  திருவாக்கும் , “சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர்  தாமும் .  கார்வரை யடவி சார்ந்துங்காணுதற்கரியான் “ என்னும்  பெரியபுராணச்  செய்யுளும் இதனை வலியுறுத்தும் . அம்பரம் – ஆகாயம் . ஈண்டு, நுண்ணிய ஞானவெளியைக்  குறிக்கும். இதனைச் சிதகாசம் எனவும், தகராகாசம்  எனவும் , சூக்கும வெளியெனவுங் கூறுவர் . ஞான யோகிகள் மிக்கதூய்மையுடைய  தம்  நெஞ்சத்தாமரையை அலர்வித்து , அதன் நடுவண் உள்ள நுண்ணிய வெளியாகிய  தகராகாசத்தில் , இறைவன் விளக்கத்தை  அகக் கன்ணாற் கண்டு வழிபட்டு இன்புறுவர் என்னும்  இவ்வுண்மை மறை  முடிவிற் காணப்படுவது.  இதனைத்  தகராவித்தை என்று பெரியோர் கூறுவர் . இக் காட்சி வழிபாடு ஞானயோகத்தின் முதிர்ந்த மெய்யன்பர்க்கன்றிப்  பிறர்க்கு  அரிய தொன்றாம் . இத்  தகராகாசத்தையே , “சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழாரடிகள் , சிற்பர வியொமம் என்பது ஞானப் பரவெளி என்னும்  பொருளதாகும் . இறைவன் இந் நுண்னிய பர வெளியில்  சூக்குமமாக  விளங்கும் தன்னை, எல்லோரும்  கண்டு கும்பிட்டு உய்ய வேண்டு மென்னுங் கருணை காரணமாக , அம்பலமாகிய பொதுப் பெரு வெளியில் நின்று , மேள தாளங்களுடன் அருட்கூத்தியற்றும் இயல்பைக்  குறித்தே , “அம்பரவா அம்பலத்தெம்பெரியானே “ என்றார்,யாவர்க்கும்  காண்டற்கு  அரியநிலை சிதாகாசத்தில் விளங்குவதென்பதும் , காண்டற்கு  எளிய  நிலை அம்பலப்பொதுவில்  தோன்றுவதென்பதும்  ஈண்டுப் பகுத்து  உணரத்தக்கன.  அம்பலத்தெம் பெரியானே என்றதனால் , அம்பலம் பெரிய பொதுவெளி யென்பதும் , தகராகாசமாகிய  அம்பரம் நுண்ணிய சிறப்பு வெளியென்பதும், இறைவன் ஈரிடத்தும் முறையே தூல சூக்கும நிலையில் விளங்குவான் என்பதும் புலப்படுத்தவாறாம் . “பெரியானே” என இறைவனை  விளித்து , அதற்கு அடுத்துத்  தம்மைச்  “சிறியேனை” என்று  குறிப்பிட்டது , பெருமைக்கு  எல்லையாக இறைவனையும் , சிறுமைக்கு  எல்லையாகத் தம்மையும் குறிப்பிட்டபடியாம் . “யாவர்க்கும்  மேலாம் அளவிலாச் சீருடையன், யாவர்க்குங் கீழாம் அடியேனை “என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் இங்கே கருதத்தக்கது. ஆட்கொள்ளல்  – ஆளாகக் கொள்ளல் . ஈண்டு ஆள்  என்பது பணி  புரியும்  அடிமை ஆளைக்  குறிக்கும் . “மீளா  அடிமை  யுமக்கேயாளாய் “ என்புழிப் போலக் கொள்க. இறைவன்  திருவடிக்குத்  தொண்டு செய்யும் பேறே மெய்யன்பர்க்கு ஆட்படுந்  தன்மையை அளிப்பதாகும் . ஆதலின் , அன்பரை ஆட்கொள்ளுதற்கு இறைவன்  திருவடியே கருவியாதலும் , ஒற்றுமை நயத்தால்  வினை முதலாதலுங்கூடும். ஈண்டு , ஒற்றுமை நயமென்றது அவயவமும் அவயவியும் வேறாகாது  இயைந்திருத்தல் பற்றியாம் . கருவியாதலை ,”கண்ணார் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட  அண்ணாமலையான் “ எனவும் , “ஒப்பிலாதன உவமனிலிறந்தன ஒண்மலர்த்  திருப்பாதத்து ,அப்பன் ஆண்டு” எனவும் போந்த திருவாக்குக்களானும் ; வினை  முதலாதலை , “போற்றியாம் உய்ய வாட் கொண்டருளும் பொன் மலர்கள்” என்பதனாலும்  அறியலாம் . இறைவன்  தன் திருவடியைக் காட்டி  அன்பரை ஆட்கொள்ளுவானாயினும் , ஆட்படும் அன்பர்க்குப்  பற்றுக்கோடாக இருப்பது அத்  திருவடியே   ஆதலின் , ஈண்டு  அதனை வினை முதலாக்கி , “ஆட் கொண்ட  பெய்கழல் “என்றார். பெய்கழல்  என்றது கழல்  அணியப்பட்ட திருவடியை உணர்த்தும் . கீழ் என்பது ஏழாம் வேற்றுமை உருபாயினும் , ஈண்டுக் கீழிடத்தை உணர்த்துவதாகும் . திருவடித் தொண்டிற்கு அத் திருவடியின் கீழிடத்தைக் குறித்தது. ஆண்டவன்  பெருமையும் அடியவர் சிறுமையும் புலப்படுத்தற் கென்க.ஈண்டுச் சிறுமை  என்றது இறைவன் பெருமைகருதிப் போந்ததன்றி, உலகத்தவரைக் கருதிப் போந்தது அன்றென்பது , “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

            மணமுள்ளன இல்லன; விதிக்கப்பட்டன விலக்கப்பட்டன வென்று பகுத்தறியாமல் , பல  மலர்களையும் மிகுதியாக வாரியிறைத்தல் , ஆடம்பர  நிமித்தம் இறைவழிபாட்டில் தலைப்படுவார் இயல்பாகும் . அங்ஙனமின்றி , நறுமண மிக்க மலர்கள் சிலவாயினும் , அவற்றை விதிமுறையின்  ஆராய்ந்தெடுத்து ,மென்மையாகத்  திருவடிக்கீழ்ப் பெய்தல் மெய்யன் புடையார் இயல்பாகும் . அவ்வியல்பை மேற்கொண்டிலேன்  என்பார், “விரையார்ந்த மலர்  தூவேன் “ என்றார் . தூவுதல் – மென்மையாகப் பெய்தல். “வியந்தலறேன்” என்புழி , வியப்புப்  புதுமை பற்றி உண்டாயது . “புதுமை  பெருமை  சிறுமையாக்கமொடு , மதிமை சாலா மருட்கை  நான்கே”  என்புழி,  மருட்கை  புதுமை பற்றித் தோன்றும் என்பர் இயனூலார்.  மருட்கை என்பதற்குப் பொருள் வியப்பாகும் .புதுமை, பண்டு ஒரு காலும் கண்டறியாத நிகழ்ச்சியாகும் .  ஈண்டு அந் நிகழ்ச்சி யாதெனின் , எத்துணையும் பெரியோன்  ஒருவன் எத்துணையும்  சிறியான் ஒருவனை ஆட்கொண்டதாகும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்கு அடிகள் மிகவும் தகுதி யுடையவராயினும் , அவர்  தம்மைக்  கருதியது அவ்வாறு . “எம்பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழல்” என்றது இவ்வுண்மையைப்  புலப்படுத்தும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்குத் தகுதி  மிகவுடைய மெய் யன்பராதல்  வேண்டும் . இது பண்டு தொட்டுள்ளது.  ஆதலின் , இப்பொழுது அத் தகுதி சிறிதும் இல்லாத தம்மை  ஆட்கொண்டது பண்டு  நிகழாத புதுமை  எனக் கொண்டு , அப்புதுமை பற்றி , “வியந்து அலறேன்” என்றார் . எதிர்பாராத நிலையில் ஒரு  புதுமையைக்  கண்டுழி , மெய்மறந்து ஆரவாரித்தல்  மக்கட்கு இயல்பு  ஆதலின் , அது  செய்திலேன்  என்பர். “அலறேன்” என்றார்.  “நயந்து உருகேன் “ என்புழி , நயத்தல்  அன்பு செய்தலாதலின் ,அன்பினாற் கரைந்து  நெஞ்சம் உருகப் பெற்றிலேன்  என்றார். தூவல் , அலறுதல் , உருகுதல் இம்  மூன்று செயல்களும் முறையே மெய் மொழி மனம் ஆகிய முக்கரணங்களாலும் நிகழ்வனவாம் . மொழிப்  பணியாகிய வியந்தலறுதலைச்  செய்யலாம் ;அதற்கும் இயன்றிலதேல், நெஞ்சத்தளவில் நினைந்து உருகலாம் என, அருமை, எளிமை கருதி இவ்வாறு  கூறப்பட்டன. ஆனால் , உள்ளம்  உருகுதலை நோக்க  அலறுதலும் , அதனை நோக்க மலர்  தூவுதலும் எளிய செயல்களாகவும் , இவ்வாறு  கூறுதல் என்னையெனின் , பிறிதோர் உபகரணத்தைத் தேடுதலினும் , உரத்த  குரலாற் கூவிக் கதறுதல் எளிதாதலும் , மனம் அமைதியுற்று உருகுதல் அதனினும்  எளிதாதலும் கருதியென்க.  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே “ என்னும்  பெரியோர்  உரையும் இதனை வலியுறுத்துவதாகும் .

           பிறப்பு  இறப்புக்களினின்றும்  விடுதி  பெறுதற்குரிய  சாதனங்களை  இழந்திருத்தலின் , எவ்வாறு கட்டு  அற்று  உய்தி பெறுவேன் என்பார், “நான்  ஆம்  ஆறு என் “ என்றார். ஆதல் பாச ஒழிவு பெற்றுத் தூயனாதல் . மன மொழி மெய்கள் இறை வழிபாட்டில் தலைப்பட்டு  உய்தி பெறுதலே மெய்யன்பர்க்கு  உடலோடு கூடிய வாழ்க்கையின் நோக்கமாகும். அந்  நோக்கம் நிறைவேறாத நிலையில் , அவ்வுடல்  வாழ்க்கை வெறுக்கத்தக்கதாகலின் , “தரியேன்” என்றார் . “ தரிக்கிலேன் காய வாழ்க்கை” என்பதும்  இக்கருத்துப் பற்றி  எழுந்ததே . பாசப்பிணிப்பிற்பட்டு உழன்ற தம்மை , அதனின்  நின்றும்  விடுவித்துக் கருவி கரணங்களை  நன்னிலைப் படுத்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளைநினைந்து வழிபாடு செய்தலே கடமையாகவும், அதனை  மேற்கொள்ளாத நிலையில் வாழ்தலினும் சாதலே நன்று என்பார், “நான் சாவேன் “ என்றார். தரியேன் என்ற  அளவிலே  சாதல் பெறப்படுமா யினும் , மீண்டும்  சாவேன் என்றது.  எதிர்மறையாலும் உடன்பாட்டாலும் கருத்து வலியுறுதற்பொருட்டாம் . “புறங்கூறிப்  பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் , அறங்கூறும் ஆக்கம்  தரும்” என்றாற்போல , இறைவழிபாட்டிற்குப் பயன்படாத உடல் ஒழித்தல் , பின்னைப் பிறப்பிலாவது  அக்குற்றம்  நீங்கி அவ் வழிபாட்டில் தலைப்படல் கூடும் என்பது கருத்து .  பிற்பிறப்பினும் அது கைகூடவில்லையாயின் , கை கூடுங்காறும் சாதலே வேண்டும்  என்பார், “சாவேன்  நான்  சாவேனே” என்று  அடுக்கிக்  கூறினர். இவ் வடுக்கு , விரைவு  பற்றியதும் அம் ; என்னை : இறைவழிபாடு இல்லாத  நிலையில் ஒரு கணப்பொழுதும் அவ்வுடல்  வாழ்க்கை இருத்தலாகாதென்பது, கருத்தாகலின்.

          இதன்கண், அடிகள் தம்  சிறுமை  அறிந்தும் , திருவடித்  தொண்டனாகிய  இறைவன் பேரருளை நினைந்து , செய்ய வேண்டிய பணிகளைச் செய்தற்கு முற்படாத நிலைக்கு இரங்கி , இறைவனை முன்னிலைப்படுத்து , இந் நிலையினும் சாதலே நன்று  என்று கூறுமுகமாக நெஞ்சிற்கு  அறிவுருத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல் எனும்  பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு  அறிக .

                                               *************************************

பாடல் :19 .

வேனில்வேள்  மலர்க்கணைக்கும்

வெண்ணகைச்செவ்  வாய்க்கரிய

பானலார்  கண்ணியர்க்கும்

பதைத்துருகும்  பாழ்நெஞ்சே

ஊனெலாம்   நின்றுருகப்

புகுந்தாண்டான்  இன்றுபோய்

வானுளான்  காணாய் நீ

மாளாவாழ்  கின்றாயே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்கண்  தம் மன மொழி மெய்கள்  ஈடுபடாமைக்கு இரங்கிய  அடிகள் , அக்கரணம் மூன்றனுள்ளும் , மனமே மக்கள் எய்தும் பேறுகள் எல்லாவற்றிற்கும்  சிறந்த காரணமாதலான் , அது  வீட்டிற்கு  ஏதுவாக இறைவனை நினைந்து உருகுதலைச்  செய்யாமல் , கட்டிற்கு  ஏதுவாக மகளிரை நினைந்து உருகுதலைக்  கண்டு , அம்மனத்தை  வெறுத்துரைக்கு முகமாக , இத் திருப்பாட்டில்  இறைவனது அருமைப்பாட்டை நினைந்து இரங்குகின்றார் .

பதவுரை :- வேனில்  வேள் மலர்க்கணைக்கும்  =  காமன்  எய்யும்  மலர் அன்பிற்கும் ,

வெண்நகை  செவ்வாய்  கரிய  பானல்  ஆர்  கண்ணியர்க்கும்  = வெள்ளிய  பற்களையும்  சிவந்த  வாயையும்  கரிய  குவளை மலர்  போன்ற  கண்களையும்  உடைய  மகளிர்  பொருட்டும் ,

பதைத்து  உருகும்  பாழ்  நெஞ்சே  =  பதைப்புற்றுக்  கரையும்  பயன் அற்ற நெஞ்சமே ,

ஊன்  எல்லாம்  உருக  =  உடல்  உறுப்புக்கள்  எல்லாம்  உருகும்படி  ,

புகுந்து  நின்று  ஆண்டான்  =  உட்புகுந்து  நிலைத்து  நின்று  ஆண்ட எம்பெருமான் ,

இன்று  போய்  வான்  உள்ளான்  =  இப்பொழுது  சென்று  நுண்ணிய  பரவெளியில்  உள்ளான் ,

நீ  காணாய்  =  நீ  கண்டிலை?  (கண்டும்) ,

மாளா  வாழ்கின்றாயே   =  கெட்டொழியாமல்  இன்னும்  வாழ்கின்றனையே  என்பது.

விளக்கவுரை :- வேள்  என்பது  முருகனையும்  உணர்த்தும்  ஆதலின்  , அவனை  விலக்கி  ஈண்டுக்  காமனை  உணர்த்துதற்கு வேனில்  என்னும்  அடை  புணர்க்கப்பட்டது . காமன்  மலர்க்கணை  மிகுதியாகப்  பெறுதற்கும், அவற்றைக்கொண்டு  மக்களைக்  காமநிலையில்  தலைப்படுத்தற்கும்  உரிய  காலம்  இளவேனில்  ஆதலின்  , ஈண்டு , “வேனில்வேன்” எனப்பட்டான். வேள் கணை என்னாது மலர்க்கணை  என்றது , “வல்லவனுக்குப்  புல்லும்  ஆயுதம்” என்றபடி ,எய்பவன் ஆற்றல் புலப்படுத்தற்கு  என்க . பவழம்  போன்ற  செவ்வாயில் , முத்து  நிரைத்தனன்  வெண்பற்களைக்  குறிப்பிட்டது, புன்முறுவல்  பூத்த முகம் என்றற்காம் .

                    பானல்  – குவளை ;  ஆகுபெயரால் மலரை  யுணர்த்திற்று .  செங்குவளையும்  உண்டு  ஆதலின்  , கரிய  என்பது இனம்  விலக்கிய  அடை மொழியாகும்  .  ஆர் : உவமப்பொருட்டு.  மகளிர்  கண்களில்  வெண்மை  செம்மை  முதலிய  நிறங்களும்  உளவேனும் , கருமையே ஆடவரை  மயலூட்டுதற்குச்  சிறந்தது  ஆதலான் , “கரிய  பானலார்  கண்ணியர்  “ என்றார். “நெஞ்சமும்  நிறையும்  நீல  நெடுங்கணாற் கவர்ந்த  கள்வி “ என்புழி, ஆடவர்  உள்ளத்தைக்  கவர்தற்குக்  கருங்கண்ணே வலியுடைய தென்று  கூறியது காண்க.  மயலுறுத்தற்குப்  புன்முறுவல் பூத்த  முகமும்  , இணக்கக்  குறிப்பைப்  புலப்படுத்தற்குக் கருங் கண்ணும்  கூறப்பட்ட படியாம் . “காதன்மை கண்ணுளே  அடக்கிக் கண் எனும்  , தூதினால் துணி  பொருள் உணர்த்தி “  என்பதும்  இதனை  வலியுறுத்தும் . காமன்  அம்புகளுள் நீல  மலரும்  ஒன்றாதலின் உவமேயப்பொருளாகிய  கண்களேயன்றி  , உவமையாகிய  அம்மலரும்  ஆடவர்க்கு  மயல்  விளைக்கும் இயல்பின்  என்பது  தோன்ற  , “கருங்கண்”  என்னாது, “கரிய  பானலார்  கண்” என்று கூறப்பட்டது . வெண்மை , கருமை , செம்மை  என்பன முரண்தொடையாக நின்று  இன்புறுத்துவனவாம் .  கணைக்கும்  கண்ணியர்க்கும்  என்புழி, உம்மைகள் எண்ணுப்  பொருளன. பதைத்தலையும்  உருகுதலையும்  நிரல் நிறையாக்கி , மலர்க்கணைக்குப்  பதைத்து , கண்ணியர்க்கு  உருகும்  நெஞ்சே  எனக்  கோடல் பொருட் சிறப்புடையதாகும் . காமன்  அம்பு  பட்ட  அளவில்  துடித்தலும் ,அதன் முதிர்ச்சியில்  மகளிரை  நினைந்து உருகுதலும்  நெஞ்சிற்கு இயல்பாதலின்  , இவ்வாறு  கூறப்பட்டது . நெஞ்சிற்குப்  பதைத்தலும்  உருகுதலும் ஆண்டவனை  முன்னிட்டு  நிகழின் நன்றாம் . அந் நிலையில்  அவை  அன்புச்செயலாக  நின்று  , இறையருளிற் கலப்பித்துப் பேரின்பத்தில் தலைப்படுத்துவனவாகும் . “வேட்ட  நெஞ்சாய்ப்  பள்ளந்தாழ்  உறுபுனலிற் கீழ் மேலாகப்  பதைத்துருகும்  அவர்”  என அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியதும்  ஈண்டு நினைக்கத்தக்கது . இறைவன் பொருட்டு  மேற்கொள்ளத்தக்க  பதைத்தலையும்  உருகுதலையும் இழிந்த காமங்கருதி  மேற்கோடல் மிக்க தீங்கு பயக்குமாதலின் , அந்த நெறியிற்  செல்லும் நெஞ்சத்தை வெறுத்து ,”பாழ் நெஞ்சே” என்றார்.

                “  ஊனெலாம் “ என்புழி , எல்லாம் என்பதனால் என்பு, நரம்பு முதலிய வன்மை மென்மைப்  பகுதிகள் அனைத்தையும் கொள்ளல் வேண்டும் . மெய்யன்பர்க்கு உள்ளொளி பெருக , ஊன்  உருகுமென்பது அடிகள் அநுபவத்திற் கண்டது.  “ஊனினை  உருக்கி உள் ஒளி பெருக்கி “ என்னும் திருவாக்கையும் நோக்குக . ஊனுருகி உடல் மெலிதல் இழிந்த காமத்தானன்றித் தவத்தால் நிகழுமாயின் ,அது சிறந்ததொன்றாகும் . “விரதந்தனில் இளைத்த மேனி”  “என்பெழுந்து இயங்கும் யாக்கையர்” என்பனவற்றால்  இவ்வுண்மை தெளியெலாம் , புகுந்து நின்று  ஆண்டான்  என்புழி , புகுதல் ஓரிடத்தினின்றும்  பிறிதோரிடத்தில் நுழைதலாகும்.  எங்கும்  நிறைந்த பொருளாகிய  இறைவனுக்குப் புடை பெயர்ச்சி கூறுதல் எங்ஙனம் பொருந்தும் எனிற்  கூறுவேன் . சீவ போதம் முனைத்  திருக்குங்கால்  சிவபோதம்  மேற்பட்டிருக்குங்கால் சீவ போதம் விளக்கின்முன் இருள் போல ஆற்றல் கெட்டு ஒழிதலும் பெரியோர் அனுபவத்திற் கண்டவை. “என்னுளே  உழிதர் வேனை, எம்பிரான் என்னைப்  பின்னைத் தன்னுளே சுரக்கும்” எனவும், “என்னறிவை உள்ளடக்கி என்போல் வரு மெளனி தன்னறிவுக்குள்ளே  நான்  சாருநாள்  எந்நாளோ “ எனவும் போந்த அனுபவ மொழிகள் இவ்வுண்மையைத்  தெளிவிப்பனவாம் . இங்ஙனம்  உயிரறிவு  முனைத்திருக்குங்கால் , ஆண்டுப்  புலப்படாமல் இருந்த  இறைவனது வியாபக  நிலை பண்டைத்  தவத்தால் விளக்கம்  உற  அந்நிலை கருதியே இறைவன் வெளியிடத்திருந்து  உட்புகுந்ததாகக் கூறியருளினர். இவ்வுண்மையை , “என மனமே  ஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே “ என்னும் பெரியார் திருமொழி புலப்படுத்தி நிற்றல் அறிக.  ஈண்டு , அடிச்சுவடு தோன்றாவாறு புக்கனன் என்பது மேற்குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துவதாகும் . “உருகப் புகுந்தாண்டான் “ என்புழி , உருக என்னும் செயவென் எச்சம் காரியப்பொருட்டு . அருவருக்கத்தக்க ஊனுடன்புள் புகுந்தாண்டான் என்றது. இறைவனது பேரருள் உடைமையைப் புலப்படுத்தற்கு என்க. உட்புகுந்த அந்நிலை , பற்றிக்கொள்ளுதற்கு எளிதாக  இருந்தும் , நெஞ்சம் அது செய்யாமல்  தவறிவிட்டது  என்பது  குறிப்பு.  அருளுடைமையால்  அன்று  எளிதிற்  புகுந்தாண்ட இறைவன் , இன்று தம்மை விட்டு , மனத்திற்கு எட்டாத நுண்ணிய பரவெளியில் மறைந்து விட்டானே என்று இரங்குவார்  “இன்று போய் வானுளான் “ என்றார்.  வான் –  சிற்பர வியோமமாகும் . “இன்று போய்  வானுளான் “ என்றது ,அடிகளை இறைவன் இன்னும்  சின்னாள் இருத்தி யென உருக்கரந்த நிலையில் இரங்கிக்  கூறியதாம் . இறைவன் உருக்கரந்ததை நீ அறிந்திலையோ (அறிந்துளாய்)  என்பார், “காணாய் நீ “ என்றார். இப்பொருட்டாதல் ஓசை வேற்றுமையாற் காண்க. இதனை வடநூலார் “காகு” என்பர்.  காணாய் என்பது முன்னிலை அசையுமாம் . மாளாமல்  என்பது , ஈறு தொக்கு மாளா என நின்றது . பேரருளுடையமையால்  ஊனுடல் உருகப்  புகுந்தாண்ட இறைவனது  பேருதவியை நினைந்து , பதைத்து உருகாமலும் ,கைவிட்டகன்று பர வெளியில் புகுந்ததைக் கண்டு வைத்து இறவாமலும் இருக்கும்  நெஞ்சத்தின்  கொடுமையை நினைந்து ,அஃது இறவாமல் இருத்தற்கு வருந்தி , “மாளா வாழ்கின்றாயே” என்றார் . மனம் மாளுதல்  வினை விளைவு இன்மைக்கு ஏதுவாம் என்பதும் இங்கே  கருதத்தக்கது . இன்னுயிர்க் கணவனை இழந்த கற்புடையாள் உடன் இருத்தல் ,அல்லது வருத்த மேற்கொண்டு கைமை நோன்பியற்றல் அன்றி ,வாழ்க்கை நலத்தை விரும்பமாட்டாள் . அது போல, இறைவனைப் பிரிந்த நிலையில் , நெஞ்சம்  கெட்டொழிதல் அல்லது வருந்தி  வாடியிருத்தல் வேண்டுமேயன்றி , வாழ்வில் தலைப்படல் கூடாததாகவும் , அதற்கு மாறாகத் தம் நெஞ்சம் வாழ்க்கை நலத்தில் சேறலை வெறுத்து, ”வாழ்கின்றாயே”  என்று  இரங்கிக்  கூறினர் .

                   இப் பதிகத்து எழு திருப்பாட்டுக்களிலும் , தம் நெஞ்சத்தின் மாறுபட்ட நிலையை வெறுத்து , இறைவனை முன்னிலைப் படுத்துக் கூறுமுகமாக , நெஞ்சிற்குப்  பலவாறு குறிப்பால் அறிவுறுத்தும்  எட்டாவது  திருப்பாட்டில் , நெஞ்சின்  கொடுமை பொறாது , “சாவேன் நான் சாவேன்” என்று இறுதியுரை கூறியும் , அது நன்னிலைப்படாமை கண்டு  வருந்தி , இத்  திருப்பாட்டில் , அந் நெஞ்சையே முன்னிலைப்படுத்து , அதன் இழிவை எடுத்துரைத்து  அறிவுறுத்தமையின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம் நுதலிய பொருள் வெளிப்பட்டு  நிற்றல் அறிக.

                                         ******************************************

பாடல் :20 .

வாழ்கின்றாய்  வாழாத

நெஞ்சமே  வல்வினைப்பட்

டாழ்கின்றாய்  ஆழாமற்

காப்பானை  ஏத்தாதே

சூழ்கின்றாய்  கேடுனக்குச்

சொல்கின்றேன்  பல்காலும்

வீழ்கின்றாய்  நீயவலக்

கடலாய  வெள்ளத்தே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினைந்து உருகமல் உலக வாழ்க்கையில்  ஈடுபட்டு உருகும் தம் மனத்தை வெறுத்து உரைத்த அடிகள், இத் திருப்பாட்டில் இறைவனது அருமைப் பாட்டையும் பேருதவியையும்  அறியாமல் துன்பக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் அந் நெஞ்சத்தை இடித்துரைக்கும்  முகமாக , அப் பெருமான் சார்பின்மையால் நேரும் தீங்கை எடுத்துக் கூறி இரங்குகின்றார்.

பதவுரை :-  வாழாத நெஞ்சமே  =  பேரின்ப வாழ்க்கையில்  தலைப்படாத   நெஞ்சமே ,

வாழ்கின்றாய்  = கெடாமல் இருக்கின்றாய் ,

வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்  =  வலிய தீவினையின் வயப்பட்டு அதனுள்ளே அழுந்துகின்றாய் ,

ஆழாமற் காப்பவனை  ஏத்தாது  =  அங்ஙனம் அழுந்தாமற் காப்பாற்றும்  பெருமானைப்  புகழ்ந்து  பாராட்டாமல் ,

உனக்குக் கேடு  சூழ்கின்றாய்  =  உனக்கு  நீயே  கேடு  தேடிக்கொள்ளக்  கருதுகின்றாய் ,

பல்காலும்  சொல்கின்றேன்  =  உனக்குப்  பலமுறையும் இடித்துக்கூறி  வருகின்றேன் , அங்ஙனம்  கூறியும்,

அவலக் கடலாய வெள்ளத்து  =  துன்பம்  ஆகிய  கடற் பெருக்கில் ,

வீழ்கின்றாய்  =  நீ  வீழ்ந்து மூழ்குகின்றாய்  என்பது .

விளக்கவுரை :-உயிர் என்றும் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் தலைப்பட்டு உய்தற்கும் . விரைவில் அழிந்தொழியும் இயல்பினதாகிய சிற்றின்பத்தில் அழுந்திக் கெடுதற்கும் நெஞ்சமே கருவியாகும் .இதனை முறையே , “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ எனவும் , “உழுத சால்வழி  யேயுழு வான் பொருட்,டிழுதை  நெஞ்சமி தென்படுகின்றதே “ எனவும் கூறிய அனுபவவுரைகள் தெளிவிப்பனவாம். இத்தகைய நெஞ்சம் தாம் கருதும் வாழ்க்கைக்குப்  பயன்படாமை  குறித்து ,அதனை ,”வாழாத  நெஞ்சமே” என விளித்து , நம்மை செய்யாமையோடு  அமையாது , தீமை செய்தற்கும் முற்படுதல் குறித்து , நீ இறவாமல்  இருக்கின்றாயே  என்பது  தோன்ற , “வாழ்கின்றாய்” என இரங்கிக் கூறினார் .

                 நெஞ்சம்  கெட்டொழியாமல் இருத்தலாலே வலிய வினைக்காட்பட்டு  அதன்கண் அழுந்த நேர்ந்ததென்பது கருத்து. வல்வினை மெல்வினை என வினைகளை இருதிறப்படுத்துரைப்பர் .  அறம்  பாவம் என்னும் இரண்டன் கண்ணும் வன்மை மென்மை யுளவெனினும் , ஈண்டு வல்வினை யென்றது  கொடிய தீவினையை . ஆற்றன்மிக்க தீவினை பயன் செய்யுங்கால்  எதனாலும் தடைப்படுத்த இயலாததாகும் . “வல்வினை வளைத்த கோலை மன்னவன் ,நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” என்புழி, வலியவினையின்  விளைவைப் பாண்டியன் உயிர் கொடுத்துத் தடைப்படுத்தினான். என்று  இளங்கோவடிகள்  திறம்படக் கூறியதனால் , உடலினின்றும் உயிரைப்பிரிக்கும் அத்துணையாற்றல் வல்வினைக்கு உண்டென்பதை அறியலாம் . செயலில் துன்பத்திற்கு மூலமாகிய தீவினையையும் , நுகர்ச்சியில் நல்வினைப்பயனாகிய  இன்பத்தையும் விழைதல் உலகத்து  இழிந்த மக்கள் இயல்பு.  அவர்க்குக் கொடிய  தீவினையைச்  செய்வதில் விருப்பம் உண்டாதற்குக் காரணம் , அப்பொழுது பின்வரும் பயனை நினையாமல் ,அவ்வினையால் அன்னார் மனம் உவகையடைதலே யாகும். வினைவிளைவாகிய பயனை மெய்யென உணர்ந்தவர்க்கே தீவினையில்  அச்சம் உண்டாகும் . அவ்வுண்மை உணராதார்க்கு அச்சம் இன்றாதலோடு உவகையும் உண்டாமென்பது உலகியலிற் கண்டது. பயனாகிய பெருந் துன்பத்தைச் சிறிதும் கருதாமல் , மெல்வினையையும் உவர்த்து, வல்வினை யை  மேற்கொண்டு , அதன் கண்ணும் அழுந்துதல் என்ன அறியமை என்பார், “ வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் “என்றார் . பண்டைப்  பிறப்புக்களின்  தொடர் ச்சியால்  ஆற்றல் பெற்றுத் தன்னுள் அழுத்தும் அவ்வினையினின்றும்  எவ்வாறு கரையேற  இயலுமெனின் ,” இருவினைப்பாசமும்  மலக்கடல்  ஆர்த்தலின் , வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட , அருளுமெய் அஞ்செழுத்து “ என்னும்  சேக்கிழார் அருண்மொழிப்படி , ஆண்டவனை நினைவு  கூர்தல் ஆகிய  தவத்தில் தலைப்பட்டால் உய்தி பெறலாம் . அங்ஙனம் கரையேற்றி ஆளுதற்குரிய இறைவனை நினைந்து முறையிட்டிலை  என்பார் . “ஆழாமற் காப்பானை ஏத்தாது” என்றார், ஏத்தாமையை கேடு தேடிக்கொண்டதாக முடியும் என்பது கருத்து. செய்யத் தகாததைச் செய்தலும் ,செய்யத்தக்கதைச் செய்யாமல் விடுதலும் கேட்டிற்குக் காரணம் ஆகும் .  இங்கே ,”வல்வினைப்  பட்டாழ்தல் “  தகாததைச் செய்தலும் ,”காப்பானை ஏத்தாமை “ தக்கதைச் செய்யாமல் விடுதலும் ஆகும் . ஆதலின் இரண்டு வகையானும்  கேடு  தேடிக் கொண்டனை  என்பார், “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்றார்.

                 உனக்கு என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு ,”உனக்குச் சொல்கின்றேன்” எனக்  கூட்டுக. கொடிய தீவினைப்பயன் விளக்குங்கால்  கொடுந்துன்பமாக  முடியும்  ஆதலின், “வல்வினைக்குள் அழுந்தற்க” என்று  பலமுறை  இடித்துரைத்தும் நன்நெறிப் பட்டிலையே என்று இரங்குவார், “உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்” என்றார். “இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் , கெடுப்பாரிலானுங் கெடும் “ என்னும்  நீதி மொழியைக் கடைப்பிடித்து , இடித்துரைத்தலின்றிக் கேடு அடையவிடுதல்  அறம்  அன்றெனக்  கொண்டு ,ஒரு முறை இருமுறையின்றிப் பலமுறையுஞ் சொல்கின்றேன் என்பார், “பல்காலும்” என்றார். இடித்துரைப்பார் ஓரளவிற்  கூறியும் ,கேட்பார் அதனை யேற்றுக்கொள்ள வில்லையானால் , அவ்வளவில் விட்டு ஒழிதல் இயல்பு. அங்ஙனம் ஒழியாது இன்னும் சொல்லி வருகின்றேன் என்பது தோன்ற , “சொல்லினேன்” என்று இறந்த காலத்தாற் கூறாது ”சொல்கின்றேன்”  என நிகழ்காலத்தாற் கூறினர். அங்ஙனம் கூறியும் கேளாமல்  வல்வினைப்பட்டு  அழுந்துவதால் விளையும் பயன் இன்னவென் பதை  நான்காம் அடியிற் கூறுகின்றார்.

              வினை வலியதாகலின் , அதற்கேற்பப் பயனை அவலக்கடல் வெள்ளமாகக் கூறினார் . வல்வினை மூலமும் , அவலம் அதன் பயனும் ஆகும். கடல் பெருகிக் கரை புரண்டு  ஓடும் நிலையில்  அதனைக் கடல் வெள்ளம்  என்று  கூறலாம் . ஆழமாயினும் , நிலையான  நீரில் வீழ்வார்  ஓரோவழி  உய்தல்  கூடும் . அந் நீர் பெருக்கெடுத்து  ஓடும் நிலையில் வீழ்வார்  உய்தலரிது. இவ்வுண்மை கருதியே , வல்வினைப்பயனாகிய துன்பம் ஆற்றொணாதது எனக் கொண்டு , “அவலக் கடலாய வெள்ளம்” என்றார். “வல்வினைப்பட்டு “  என்பதற்கேற்ப , “ அவலக்  கடலாய வெள்ளத்தே” எனவும், “ ஆழ்கின்றாய் “ என்பதற்கேற்ப , “வீழ்கின்றாய் “ எனவும் கூறியது, கருதி இன்புறத்தக்கது. செயல் முன்னரும் பயன் பின்னரும் நிகழ்தல் இயல்பு. இங்கே செயல் வலியதாகலின் , அது நிகழும் பொழுதே பயனும் உடன் நிகழ்தல்  குறித்து , “வீழ்வாய்” என்னாது , “வீழ்கின்றாய் ‘என்றார் . ஒரு வினையைச்  செய்தவனிருக்க, அவனை விட்டு , அதன் பயன் மற்றொருவனை  அடையாதாதலின் , வல்வினைக்கண் அழுந்திய  நீயே அதன் பயனையும் நுகர்தற்குரியை என்பது தெளிவுறுத்தற்கு ,” வீழ்கின்றாய்” என்னும்  முன்னிலை வினையாற் பெறத்தக்க  எழுவாயை வெளிபடுத்து , “வீழ்கின்றாய் நீ” என்று  கூறியருளினர் .

            இதன்கண், நெஞ்சை நோக்கி , “பலகாலும் இடித்துரைத்தும் கேளாமல் கொடிய  தீவினைச்  செயலில்  தலைப்படுகிறாய் ; இது பெருந்துன்பக்கடலில் மூழ்குதற்கு ஏதுவாம் “ என்று  அறிவுறுத்தமை  வெளிப்படக் கிடத்தலின் , அறிவுறுத்தல் என்னும் பதிகம்  நுதலிய பொருளும் , “வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்” , “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்பனவற்றால் வைராக்கியமும் , ஆழாமற் காப்பானை ஏத்தல் வேண்டும் என்றதனால் பத்தியும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக .

                                           ********************************************

                                *******************************************************************

3 .  சுட்டறுத்தல்

     இ   த் திருச்சதகத்தின் முதற்பதிகத்தில்  பொய்ப்பொருள் கடிந்து , மெய்ப்பொருளாகிய கடவுள் உணர்ச்சியில்  தலைப்படுதலைக் குறித்தும், இரண்டாம் பதிகத்தில்  அதற்குத் துணை புரிய வேண்டிய மனம்  நன்நெறிப்படாமை  கண்டு , அதனை இடித்துரைத்து  அறிவுருத்தமை  பற்றியும் தெளிவுறுத்தப்பட்டன . இங்ஙனம் அறிவுறுத்தப்பட்ட நெஞ்சம் உள்ளுறக் கருதியும் , பொறிவாயிலாக வெளிப்பட்டும்  அறியும் சுட்டறிவினால் இறைவனைக்  காண்டற்கு முயன்றதாக , அம்முயற்சி  ஓரளவிற்குச் சாதனமாகுமேயன்றிக் கருதிய பயனைச் செய்ய  மாட்டாதெனவும்  , சுட்டறிவினால் அறியப்படும் பொருள் எல்லாம்  சுட்டுப்பொருள்களாகிய  நிலையில் பொருள்களாம்  எனவும் , எங்கும் நிறை  பொருளாகிய இறைவனை அறிதற்கு அச் சுட்டறிவு  கருவியாகாது எனவும் உணர்ந்து ,அச்சுட்டறிவை யொழித்தல் பற்றி இப் பதிகத்தில்  கூறுகின்றார். சுட்டறிவு என்பது , இது குடம் , இஃது ஆடையென்று கண்ட பொருளைப் பொறி  முதலிய கருவிகளுடன் கூடி நின்று அறியும் அளவையறிவாகும் . இதனை ஆன்ம  போதமென்றுங் கூறுவர். இவ்வறிவால் அறியப்படுவனவெல்லாம்  அழியும்  இயல்பினவாகும் . இவ்வுண்மையை , “ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து” என மெய்கண்டாரும் , அதன் விளக்கமாக , “சுட்டறிவினால் அறியப்பட்ட சுட்டுப்பொருள் எல்லாம் அசத்து” என மாதவச்  சிவஞான  முனிவரரும்  கூறியவற்றால் தெளியலாம் . அகண்டப் பொருளாகிய இறைவன் , பொறி முதலிய கருவிகளோடு  கூடாத மெய்யுணர்வினால்  அறியப்படுபவன் ஆவான் . இம் மெய்யுணர்வைப்  பரஞானம் , தத்துவ ஞானம் , பதி ஞானம் , அநுபவவுணர்வு  எனப் பெரியோர்  கூறுவர். இறைவனை  அறிதல் மெய்யுணர்வினால் அன்றிச்  சுட்டறிவினால் இயலாதென்பதை , “அனைத்துலகுமாய  நின்னை ஐம்புலன்கள் காண்கிலா” என்னும்  அடிகள் திருவாக்கானும் உணரலாம்.  கருவிகளோடு கூடியறியும்  சுட்டறிவாகிய  உலகியலறிவிற்கும் , அவற்றின் நீங்கிச் சுட்டிறந்தறியும் மெய்யுணர்விற்கும் உள்ள வேறுபாடு கருதியே , திருக்குறள் ஆசிரியர் , முன்னதை , “அறிவுடைமை “ என்னும்  பெயரால் பொருட்பாலில் அரசியற்  பகுதியிலும் , பின்னதை , “மெய்யுணர்தல் “ என்னும் பெயரால் அறத்துப்பாலில்  துறவறப் பகுதியிலும் இரண்டு  அதிகாரங்களாக  அமைத்துள்ளார் . இறைவனது அகண்ட வடிவம் சுட்டறிவிற்கு அறியப்படாத தெனினும் , சாதனத் தொடக்கத்தில்  அப்பெருமானது திருவுருவைக் கண்டப் பொருளாகக் கொண்டு நினைவுறல் வேண்டும் . ஆதலின், அது பற்றி இறைவனது பெருமைக்கு இழுக்கு நேராது என்பது  கருதத்தக்கது.  நினைபவன்  தகுதி குறித்து அவ்வுருவத்திலும் இறைவன் விளக்கம் உள்ளது  என்பது பெரியோர் அநுபவத்திற் கண்டது. திருவுருவத்திற்  பதிந்த நினைவு முதிர முதிர , நினையும்  கருவியாகிய மனம் இறந்தொழியும்  என்பதையும் , அந் நிலையில் இறைவனது நிறைவு நிலை மெய்யுணர்விற்கு விளக்கமாம் என்பதையும் ,”உணர்ந்தார்க் குணர்வரியோன்” என்னும் திருக்கோவைச் செய்யுட்பகுதியும்  அதற்கு , “ஓருகால் தன்னை யுணந்தவர்கட்குப்  பின் உணர்தற்குக்  கருவியாக  சித்த விருத்தியும்  ஒடுங்குதலான் ,மீட்டு உணர்வரியோன் “என்று  கூறிய  பேராசிரியர்  உரைப்பகுதியும் தெளி வுறுத்துவனவாம் . இவ்வுண்மை குறித்தே , முதலில்  நெஞ்சை அறிவுறுத்துத்  திருவுருவில்  பதியச் செய்து , அதன் முதிர்ச்சியில்  அச் சுட்டறிவை யொழித்தல்  இப்பதிகம் நுதலிய பொருள் என வகுக்கப்பட்டதென்க .

எண்சீர்க் கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் : 21 .

வெள்ளந்தாழ்  விரிசடையாய்  விடையாய்  விண்ணோர்

பெருமானே  யெனக்கேட்டு  வேட்ட  நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ்  உறுபுனலிற்  கீழ்மேல்ஆகப்

பதைத்துருகும்  அவர்நிற்க  என்னை  யாண்டாய்க்

குள்ளந்தாள்  நின்றுச்சி  யளவும்  நெஞ்சாய்

உருகாதால்  உடம்பெல்லாங் கண்ணாய்   அண்ணா

வெள்ளந்தான்  பாயாதால் நெஞ்சங்  கல்லாம்

கண்ணிணையும்  மரமாந்தீ  வினையி  னேற்கே.

கருத்துரை :-  இரண்டாம் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் நெஞ்சத்தின்  மாறுபட்ட நிலையை எடுத்துக்காட்டி அறிவுறுத்த அடிகள் அது தகாத நிலையிற் சேறலைக் கண்டு வைத்தும் ,பெருங்கருணையால் இறைவன் தம்மை ஆட்கொண்ட பேருதவியைக் குறித்து , அந் நெஞ்சம் மேற்கொள்ளவேண்டிய  கடமையையும் , அதன் விளைவையும் இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :- வெள்ளம்  தாழ்  விரிசடையாய்  =  கங்கை  நீர்ப் பெருக்குத்  தங்கிய  விரிந்த  சடையினையுடையாய் ,

விடையாய்  =  ஊர்தியாகிய  எருதினையுடையாய் ,

விண்ணோர்  பெருமானே  =  அமரர்  தலைவனே,

எனக்  கேட்டு வேட்ட நெஞ்சாய்  =  என்று  கூறக்கேட்ட  அளவிலே  வேட்கை மிக்க நெஞ்சம் உடையராய் ,

பள்ளம்  தாழ்  உறுபுனலின்  =  பள்ளத்தில்  வீழும்  மிக்க  நீரைப்போல,

கீழ் மேலாகப்  பதைத்து  உருகும்  அவர் நிற்க  =  கீழ் மேலாம்படி  துடிதுடித்து உருகும்  மெய்யன்பராகிய  அவர்கள்  ஒரு புறம் நிற்க,

என்னை  ஆண்டாய்க்கு  =  சிறியேனை  ஆளாகக்கொண்ட  நின் பொருட்டு ,

உள்ளந்தாள்  நின்று  =  உள்ளங்கால்  தொடங்கி ,

உச்சி  அளவும்  =  உச்சம்  தலைவரையும்  ,

நெஞ்சாய்  உருகாது  =  மனம்  தானாய் நின்று  உருகுதலைச்  செய்திலது,

உடம்பு  எல்லாம்  =  உடல்  முற்றும் ,

கண்ணாய்  வெள்ளம்  பாயாது  =  கண்ணாகி  நீர்ப்பெருக்குப்  பாய்ந்திலது ,

அண்ணா  =  என் தந்தையே ,

தீவினையினேற்கு  =  தீவினையுடையேனாகிய  எனக்கு ,

நெஞ்சம்  கல்  ஆம்  =  அங்ஙனம்  உருகாத நெஞ்சம்  கல்லாகும் ,

கண் இணையும் மரம் ஆம்  =  அங்ஙனம் வெள்ளம் பாயாத கண்களிரண்டும்  மரம்  ஆகும் , என் செய்வேன்  என்பது .

விளக்கவுரை :- வெள்ளம்  என்பது பெருக்கு எடுத்து வழியும் கங்கை நீரைக்  குறிக்கும் . நிலம் தாங்கலாற்றாத  அளவு விரைந்து வழிந்த கங்கைப் பெருக்கை இறைவன் தன் சடையின் ஒரு கூற்றில் அடக்கி அருளினான்  என்னும்  புராணக்கதையை  உட்கொண்டு கூறியது . சடை முழுதையும்  திரட்டி  அணையாக்கித்  தடுத்தான் அல்லன் ; அதனை விரித்து ஒரு சிறு பகுதியில் அடக்கினான் என்பது தோன்ற , “வெள்ளந்தாழ்  விரிசடையாய் “ என்றார் . இஃது அப்பெருமானது பேராற்றலைப்  புலப்படுத்தும் .

             விடையை  அறத்தின் வடிவம் என்ப.  அதனை ஊர்தியாகக்  கொண்டது.  அறத்தைப் பாதுகாத்து நடத்தும் தலைவன் என்பதைப் புலப்படுக்கும் . இறைவன் உலகத்திற்கு ஆதாரமாகியும் , ஆதேயமாகியும்  நின்று பாதுகாப்பவன் என்பதை , “சடையாய் “ , “விடையாய்”  என்பன  குறிப்பாக  அறிவுறுப்பனவாம் . எங்ஙனமெனிற் கூறுவோம் . ஆதாரம்  தாங்குதலும் , ஆதேயம்  தாங்கப்படுதலும்  ஆதலின் , இறைவன் தன்  சடையில்  கங்கைப்  பெருக்கைத்  தாங்கியும் , விடையை ஊர்ந்து , அதனால் தாங்கப்பட்டும் இருத்தலின் என்க. திங்களைச் சடையிற் சூடிப் பாதுகாத்த  புராணகதையும்  இவ்வுண்மையைத்  தெளிவிப்பதாகும் . “தோடுடைய  செவியன் விடை யேறியோர் தூவெண்மதி  சூடி” என்னும்  தேவாரத்தில்  அம்மையின் திருச்செவியைக் குறித்துத் “ தோடுடைய செவியன்” என்றதனால்  படைத்தலையும் , “ விடையேறி” , மதி சூடி “  என்பவற்றால்  காத்தலையும்  , “சுடலைப்  பொடி  பூசி” என்றதனால் அழித்தலையும் ,” “உள்ளங்கவர்  கள்வன் “ என்றதனால் மறைத்தலையும் , “ அருள் செய்த “  என்றதனால் அருளையும்  குறிப்பிட்டு , இறைவன் ஐந்தொழிற்குத்  தலைவன்  என்பதைப் பெறவைத்தார்  திருஞானசம்பந்த  சுவாமிகள் . அம்முறையில், ஏனைய தொழில்களுக்கு எல்லாம் ஒவ்வொன்று கூறிக் காத்தல் தொழிற்கு , “விடையேறி”  , “ மதி சூடி” என்னும்  இரண்டு நிகழ்ச்சி  கூறியது  இவ்வுண்மை குறித்தே என்பது தெளிவாம் . இங்ஙனம் ஆதாரமாகியும்  ஆதேயமாகியும் நின்று  காப்பவன் முழுமுதலாகிய தலைவன் என்பது தோன்ற, “விண்ணோர் பெருமானே “ என்றார். அமரர் தலைவன் என்பதனாலே மக்கள் முதலியோர்க்கும்  தலைவன் என்பது எளிதிற் பெறப்படும் . “விண்ணோர் முழுமுதல்  பாதாளத்தார்  வித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  காண்க.  இங்ஙனம் , சடையாய் , விடையாய் , பெருமானே  என்று மெய்யன்பர்கள்  அணிமையில் நின்று இறைவனை விளித்தனராக , அச் சொற்களைக் கேட்ட அளவிலே நெஞ்சம் வேட்கை மிக்கு , வயம் அழிந்தது என்பார், “எனக் கேட்டு  வேட்ட நெஞ்சாய்” என்றார். கற்பு மிக்க காதலி யொருத்தி , தன் தலைவன் பெயர் கேட்ட அளவில்  தன்வயம் அழிதல் தலையன்பும், கண்ட அளவில் வயம் அழிதல் இடையன்பும் , ஊற்றின்பத்தில் வயம்  அழிதல் கடையன்பும்  ஆம்  என்பர்.  அது போல , ஈண்டு இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் வேட்கை மிக்கதாயிற்று  எனத் தலையன்பு உண்மை கூறப்பட்டது . “ முன்னம்  அவனுடைய நாமங்கேட்டாள் “ என்பதும் இக்கருத்துப் பற்றியதே . “வேட்ட நெஞ்சாய் “ என்புழி , ஆக்கம் இறைவன் பெயர் கேட்டற்கு முன் உள்ள தன்மை மாறித் தன்வயம் இழந்து , வேட்கை மீதூர  நின்ற நிலையை  உணர்த்துவதாகும் . நெஞ்சு , ஈண்டு  அதனை உடையார்க்கு  ஆயிற்று .

               “பள்ளந்தாழ் உறுபுனல் “ விரைவான  செலவிற்கும் கீழ் மேலாதற்கும்  உவமையாம் . பள்ளத்தை நோக்கி  விரைந்து செல்லும் நீர்  மிகுதியாக இருக்குமானால் , வீழ்ந்த இடத்தினின்றும்  மேலே கிளம்புதல்  இயற்கை , புனல் மிகுதி தோன்ற , “உறுபுனல்” எனப்பட்டது . ஈண்டு , நீர் வீழ்ச்சியைப் போல இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் தன்வயம் இழந்து , துடித்துக்  கரைந்தது  என்பார் , “பதைத்துருகும் “என்றார் . காம நிலையில் பதைத்துருகுதலை  ஒழித்தற்கே , “எனக் கேட்டு வேட்ட நெஞ்சமாய் பதைத்துருகுமவர் “ என்றார். மெய்யன்பினால் நெஞ்சங்கரையும் உண்மை அடியார் வேண்டி  நிற்க , அப் பெரியாரைவிட்டுக்  காமன் அம்பிற்கும்  மகளிர்க்கும்  பதைத்துருகும்  சிறியேனை ஆட்கொண்டருளிய கருணையை என் என்பேன் என்பார், “என்னை யாண்டாய்க்கு “ என்றார். குவ்வுருபு  பொருட்டுப் பொருளது.

               இத்துணைப்  பேரருளுடன்  ஆட்கொண்ட நினைக் குறித்து ,உடம்பின் உட்பகுதி முழுதும் நெஞ்சம்  ஆகி உருகுதல் வேண்டும் ; அங்ஙனம் உருகப் பெற்றிலேன் என்பார், “உள்ளந்தான் நின்றுச்சியளவும்  நெஞ்சாயுருகாது “ என்றார். நினைத்தற் கருவியாகிய மனத்திற்கு நெஞ்சம் இடனாதல் பற்றி மனத்தை நெஞ்சம் என்று கூறுதல்  தமிழ் வழக்கு . அஃது உடம்பினுள் ஒரு பகுதியாகும் . இறைவனது பேரருள் உதவி குறித்து உருகுதற்கு மனம் உடம்பின் ஒரு சிறு கூற்றை இடனாகக் கொள்ளுதல் போதிய தாகாதென்று கருதியும் ,நெஞ்சிடத்தின் உட்பகுதியே மனத்திற்கு இடனாதல் குறித்தும் , “உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் “ என்றார், மேட்டு நிலத்தில்  நின்றும் பள்ளத்திற் பாயும் நீர்போற்  கீழ் மேலாக என்றதற்கேற்ப , “உச்சியினின்றும் உள்ளந்தாள் அளவும் “ என்னாது, “உள்ளந்தாநின்றுச்சியளவும் “ என்றார். நெஞ்சம் உருகுங்கால் , புறத்தேயுள்ள கண்களினின்றும்  கண்ணீர் பெருகுவதாகும் . இதனை ,”அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் “என்பதனாலும் அறியலாம் “அழுதா லுன்னைப் பெறலாமே”  என்பதும் அடிகள் திருவாக்கு . இது கருதியே , “ அழுதடியடைந்த  அன்பன் “ என்று  பின்னுள்ளோர் அடிகளைக் குறிப்பிடுவாராயினர் . அங்ஙனம் உருகிக் கண்ணீர் வடிதற்கு முகத்திலுள்ள இரண்டு கண்கள் போதா; உடல் முழுதும் கண்களாதல் வேண்டும் என்பார், ‘உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளம்  பாயாது “ என்றார் .ஆல்  இரண்டும் , அசைகள் .” உடம்பெல்லாம் “என்பதற்கு, உடம்பின்  புறம்  எல்லாம் என்று பொருள் கொள்ளல் வேண்டும் . என்னை?  நீர் ஒழுக்கும்  கண்கள் முகத்தின் உள்ளனவாதலின்.

            உருக்கத்தாற் பெருகுங் கண்ணீரில் மிகுதி தோன்ற ,”வெள்ளம்” என்றார்.  இனி, அங்ஙனம் உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாகாவிட்டாலும் , உள்ள நெஞ்சத்தானும்  சிறிதும் குழைந்திலதே  என்பது குறித்து வருந்தி ,”நெஞ்சம் கல்லாம் “என்றார்.  இரும்பு முதலிய உலோகங்களாகக்  கூறின் , தீயின் , மிகுதியான சூட்டினால் உருகக்கூடும் . ஆதலின், எவ்வாற்றானும் நெகிழாத , கல்லாகக்  கூறினர் . உடம்பெல்லாம்  கண்ணாகாவிட்டாலும் , உள்ள கண்கள் தாமும் சிறிதும் கசிந்திலவே என்பது குறித்து வருந்தி , “கண்ணிணையு மரமாம் “ என்றார் . மரத்தின் கணுக்களுக்கு  கண் என்னும் பெயருண்மையாலும் , அதற்கு ஒன்றை நினைந்து  நீர்  வடிக்கும்  அறிவின்மையானும் , அதனோடு ஒப்பித்து , “மரமாம்” என்றார். “மரக்கணேனையும்  வந்திடப்  பணியாய் “ என்று பிறி தோரிடத்து  அடிகளும் , “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” எனப் பிறரும்  கூறியிருத்தலும்  காண்க. நெஞ்சம்  அன்பினால் உருகாமலும் , அதன் விளைவாகக் கண்கள் நீர் கசியாமலும் இருத்தற்குக்  காரணம் என்  தீவினையே என்பார், உடம்பொடு புணர்ந்து , “தீவினையினேற்கே” என்றார்.

            இதன்கண், ஏகதேசமாகச்  சுட்டியுணர முயலும் நெஞ்சத்தை யொறுத்து, உள்ளந்தாள் நின்று  உச்சியளவும் நெஞ்சாயுருகுதல் வேண்டுமெனக்  கூறி , அதனால்  அங்ஙனம் நெஞ்சம் உருகிக்  கரைந்த நிலையிலே இறைவன் காட்சி மெய்யுணர்விற்குப் புலனாமென்பது பெறப்பட வைத்தமையான் , சுட்டறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சாயுருகாதெனவும் , கண்ணாய்  வெள்ளம் பாயா தெனவும் கூறியதனால் பத்தியும் ,”நெஞ்சம் கல்லாம் கண்ணிணையு மரமாம்  தீவினையினேற்கு  “ என்றதனால்,,  வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும்  தோன்றியவாறு  அறிக .

                                           **************************************

பாடல் :22 .

வினையிலே  கிடந்தேனைப்  புகுந்து  நின்று

போதுநான்  வினைக்கேடன் என்பாய்போல

இனையன்நான்  என்றுன்னை  அறிவித்  தென்னை

ஆட்கொண்டெம்  பிரான்  ஆனாய்க் கிரும்பின்  பாவை

அனையநான்  பாடேன் நின்  றாடேன்  அந்தோ

அலறிடேன்  உலறிடேன்  ஆவி  சோரேன்

முனைவனே  முறையோநான்  ஆன  வாறு

முடிவறியேன்  முதலந்தம்  ஆயி  நானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் நெஞ்சம் தனக்குரிய கடமையை  மேற்கொண்டு தமக்கு உதவி புரியாமைக்கு  இரங்கிய அடிகள் , அங்ஙனம்  கடமையை  மேற்கொள்ளாமையோடு  தம்வழியின்  அன்றி வினைவழிச்சென்று , தம்மையும்  ஈர்த்து , அவ்வினையிலே உழல்வித்ததாக , அந்நிலையில் வலிய  வந்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளை  நினைந்து  தாம்  மேற்கொள்ளவேண்டிய  கடமைகளைச்   செய்யாமை குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்

பதவுரை :- முனைவனே  =  கடவுளே ,

முதல் அந்தம் ஆயினானே  =  தோற்றத்திற்கும்  இறுதிக்கும் காரணம்  ஆயினவனே ,

வினையிலே  கிடந்தேனை  =  வினைப்பகுதியிலே  கிடந்து  உழலும்  அடியேன்பால் ,

புகுந்து நின்று  =  புகுந்து  நிலையுதல்  பெற்று ,

போது  =  வருக ,

நான் வினைக்கேடன் என்பாய்  போல  =  யான்  வினையை ஒழிப்பவன்  என்று  கூறுவாய்  போல  ,

இனையன் நான் என்று  உன்னை  அறிவித்து  =  இத்தன்மையை உடையவன்  யான்  என்று  நின்னை  எனக்கு  அறிவித்து ,

ஆட்கொண்டு  =  என்னை  அடிமையாகக்  கொண்டு  ,

எம்பிரான்  ஆனாய்க்கு  =  எங்கள் தலைவனாகிய நின் பொருட்டு ,

இரும்பின் பாவை அனைய நான்  =  இரும்பினால்  ஆக்கப்பட்ட  பாவையை  ஒத்த  யான்,

பாடேன்  நின்று  ஆடேன்  =  பாடுதலைச்  செய்யேன் , நின்று ஆடுதலைச்  செய்யேன் ,

அந்தோ  அலறிடேன்  உலறிடேன்  ஆவிசோரேன்  =  கதறுகின்றிலேன்  வற்றுகின்றிலேன்  உயிர்ப்புச்சோர்கின்றிலேன் ,

நான்  ஆனவாறு  முறையோ  =  யான்  இங்ஙனம்  ஆகியது முறையாகுமா,

முடிவு அறியேன்  =  இஃது  எவ்வாறு  முடியும்  என்பதையும்  அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்பது  இயல்பாகவே பாசங்களின் நீங்கிய  முற்றறிவுடைய  இறைவனைக் குறிக்கும் . “வினையின்  நீங்கிவிளங்கிய  அறிவின் முனைவன் “ என்பர் தொல்காப்பியனார் . உலகத் தோற்றத்திற்கும்  ஒடுக்கத்திற்கும் காரணன் சிவபெருமான் என்று  மறைமுடிவுகள் கூறுதலின் , “முதல் அந்தம் ஆயினானே “ என்றார் . ஆதல் – காரணன்  ஆதல் . இனி, அந்தம் முதலாயினானே எனக் கொண்டு , அந்தத்தைச் செய்யும்  முதற்பொருளானவனே என்று கோடலுமாம் . உலகம்  ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற தன்னிடத்தில் நின்றே மீளத்தோன்றுதலின் , அழித்தலைச் செய்யும் மகா சங்கார காரணாகிய இறைவனே முதற்பொருள்  ஆவான் என்னும் பொருள் தோன்ற , “ஒடுங்கி  மலத்துளதாம்  அந்த மாதி “ என்று  சிவஞான போதம் கூறுதல் அறிக. வினை , ஈட்டப்படுவதும் ,சேர்க்கப்படுவதும், நுகரப்படுவதும்  என  முத்திறப்படும் . ஓர் உழவன் அத் தொழிலின் முயற்சியால் நெற்பயிரை  ஓம்பி ,விளைவித்துக் கொணர்தல் ஈட்டப்படுவதும் கொண்டுவந்த நெல்லைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்தல்  சேர்க்கப்படுவதும் ,பின் அதனை உணவாக்கி உண்டல் நுகரப்படுவதும்  ஆதல்போல , வினையும் ஆம் என்பது . ஓர் உயிர் பிறவியில் தலைப்படல் தொடங்கி  வீட்டுநிலை  எய்துங்காறும் வினைத் தொடர்பிலே கிடப்பதாகும். இங்ஙனம் மாறி மாறி  ஈட்டன் முதலியவற்றைச்  செய்துகொண்டே  பிறந்து இறந்து உழலுதலின் , “வினையிலே கிடந்தேனை” என்றார் . “ அறம் பாவம்  என்னும்  அருங்கயிற்றாற் கட்டி” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க .  “கிடந்தேனை” என்புழி , இரண்டாம்  உருபை  ஏழாம் வேற்றுமை  மயக்கமாகக் கொள்க.

           இத் திருப்பாட்டின் இரண்டாம் அடியில் , “என்னை யாட்கொண்டெம் பிரான்  ஆனாய் “ என்று  கூறுவதாலும் , ஆட்கொள்ளுதல் , “கட்டறுத் தெனையாண்டு “ என்றபடி வினைத் தொடரின் நின்றும் விடுவித்தே செய்யத்தக்கது ஆதலாலும் , வினையிலே கிடத்தல் ஆட்கொண்டதற்கு  முன்னுள்ள நிகழ்ச்சி எனக் கொண்டு “கிடந்தேனை “ என இறந்த காலத்தாற் கூறினர் .புகுந்து நிற்றலைப்பற்றி , “ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான், என்புழி, விளக்கிக் கூறப்பட்டு  வினையிலே பிணிப்புண்டு , அறிவு விளக்கமின்றிக் கிடந்த என்னுட் புகுந்து நின்றவன் , வினையினீங்கி  விளங்கிய  அறிவனாவான் என்பது குறிப்பிற் பெறப்படும்  ஒரு நயம் . மேலும்  “வினையிலே கிடந்தேனை” எனத் தம்மையும் , “புகுந்து நின்று” என இறைவனையும்  கூறியதில் ,கிடத்தல் பொருட்படுத்தாமல் இருந்ததையும் , நிற்றல்  பொருட்படுத்து  நின்றமையையும் புலப்படுத்தும் பிறிதொரு நயமாகும் . இவற்றானும் இறைவன் அடிகள்பால்  வைத்த பேரருளின் திறம் புலனாதல்  அறிக . புகுந்த இடம் தூயதாயின் , நிற்றல் கூடும் . ஈண்டுப்  புகுந்தது  ஊனார் உடல் ஆதலின் ,நிற்றற்குத் தகுதியில்லாததாகவும் , அதனுள் நின்று ஆண்டான் என ,இறையருட் சிறப்பை மேலும் புலப்படுத்த, ”புகுந்து நின்று “  என்றார். புகுந்து நின்ற இடம்  ஊனுடலாயினும் , தூய உடம்பினன் ஆகிய இறைவன் புகுந்தமையால் , அது சிறந்த திருக்கோயில் ஆகுமென்பது . இதனை , “வினைபடு முடல் நீ  புகுந்து நின்றமையால் விளங்கிய விமானமாயினதே “ என்னும் திருவிசைப்பாவானும் அறிக. இங்ஙனம்  இறைவன் புகுந்து நின்றதும் , வினைப்பிணிப்பால் அவனை  இன்னான்  என அறியாமல் வாய்வாளா இருந்தேனாக , அப் பெருமானே என்னை வருக என அழைத்தான் என்பார், “ போது” என்று அருளினன் எனக்  கூறினர் . ஓர் இல்லத்திற்கு  ஒரு பெரியவர் வந்தால் , அவர் முன்னர் அறியப்படாதவர்  ஆயினும் , இல்லமுடையார் அவரை வரவேற்று , “வருக”  என்று கூறி , இருக்கையளித்து உபசரித்தல் உலகியலிற் கண்டது . அதற்கு  மாறாக , உட்புகுந்த பெருமானே வாய்வாளா இருந்த தம்மை  வருக என அழைத்தான் என , அவ்விறைவன் பேரருளை ஈண்டும் புலப்படுத்தமை  அறிக .

புதியராக வந்தார் ஒருவரை ,இன்னார் என அறிமுகப்படுத்தற்கு, அறியப்பட்ட  மூன்றாமவராகப் பிறரொருவர் வேண்டும் . இஃது உலகியலிற்  கண்டது . ஈண்டு , உட்புகுந்த ஏகநாயகனை  அடிகளுக்கு  அறிமுகப்படுத்த யாரும் இல்லாமையால் , அப் பெருமானே தம்மை இன்னான் என அறிவிக்க வேண்டியதாயிற்று . “ அறிவானுந்தானே அறிவிப்பான்  தானே” என்னும் அம்மை திருவாக்கும் அறிக. அறிவித்தது எவ்வாறு எனின் , “இனையன் நான் “ என்பதாம் . இனையன் என்பதற்கு இத் தன்மையுடையேன் என்பதும் பொருள்  அத் தன்மைதான் யாதெனில் , “வினைக்கேடனாதல் “ என்பதாம் .  தன்மையின்  விளக்கம் இதுவாகும் . வினையிலே  கிடப்பவனுக்கு உபகரிப்பவன் , அப் பிணிப்பை ஒழிப்பவனாக இருக்க வேண்டும் . ஆதலின், இறைவன் தன்னை அறிவிக்குங்கால் , தன்னுடைய பலவகைப்பட்ட பெருமை களில் கன்மநாசம் பண்ணும்  ஒன்றை மாத்திரம் வெளிப்படுத்தி , “வினைக்கேடன்”  என்றானாம் . வினையிலே பிணிப்புண்டு  உழலும் என்னை விடுவித்தற்கு , என்னுட் புகுந்து நின்று , வருக என என்னை அருகில் அழைத்து, “நான் வினையை ஒழிப்பவன் “ என்று எனக்குத் தெரிவிப்பாய் போல , இத் தன்மையவன் என்று உன்னை எனக்கு அறிவித்து , என்னை ஆட்கொண்டாய்  என்பார் இங்ஙனம் கூறினர். “நான்  வினைக்கேடன் “  “நான், இனையன்” என ஈரிடத்தும் எழுவாயாகிய  நான்  என்பதை  இறைவன் வெளிப்படக்கூறியதாகக் கொண்டு கூறியது ,”எண்பொருளவாகச் செலச் சொல்லித்தான்  பிறர்வாய் , நுண்பொருள்  காண்பதறிவு. “ என்னும்  பொருளுரைப்படி மறை பாடும் வாயனாகிய இறைவன் தமக்கு விளங்க உரைக்க வேண்டுமென்னும்  கருணையினால் என்பது அடிகள் கருத்து.  உலகத்தில் ஆற்றன்மிக்கான் ஒருவன் தன் அரிய செயலைப் பயனால் வெளிப்படுத்துவானேயன்றித் தன் நாவினால் வெளிப்பட உரைப்பான் அல்லன் .  “ வாளினாற் பேசலன்றி வாயினாற் பேசல் தேற்றேன் “ என ஒரு வீரன் உரையாகச்  சிந்தாமணியாசிரியர்  கூறியதுங்  காண்க . . அம்முறையில் இறைவன் தன் பெருமையைத்  தானே கூறாது ஒழியின் , வினைப் பிணிப்பிற் கிடப்போர்  அறிதல் அருமையெனக் கருதியும் , ஓரளவிற்குக் குறிப்பாகக் கூறியே  அருள் செய்யவேண்டுமெனக் கொண்டும்  அடிகளுக்கு அவ்வமயம்  பயன்படுமுறையில்  தன் இயல்பைக் குறிப்பிற் புலப்படுத்து,  இத் தன்மையன் என்றுஅறிவித்தல் இன்றியமையாத தாயிற்றாம் . இவ்வுண்மையை அநுபவத்திற் கண்ட அடிகள் , “நான்  வினைக்கேடன் “ என்று உன்னை அறிவித்து , எம்பிரான்  ஆனாய் என்னாது வினைக்கேடன் என்பாய் போல , இனையன்  நான் என்றுன்னை யறிவித் தென்பிரான் ஆனாய்” என்று அருளிச்செய்தனர் .  “என்பாய்போல” என்றதனால் வெளிப்படக்  கூறாமல் குறிப்பிற் புலப்படுத்தான் என்பது தெளிவாம் . இத்துணையும் கூறிய அடிகள் அநுபவ நிலையும்,

வெள்ளநீர்ச்  சடைய  னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான்புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய நாரே

என்று அருளிய அப்பர் அநுபவ நிலையும் பல்லாற்றானும் ஒன்றுபட்டிருத்தல் அறிந்து இன்புறத்தக்கது . இவ்விருவருடைய அநுபவ நிலைகளும் ஒன்றுபட்டிருக்கும் இயல்பை இத் திருப்பாட்டின்சொற்பொருளாராய்ச்சியால் ஒருவாறு தெளிவிக்கலாம் . ஆயினும் ஈண்டு விரித்தல் மிகையெனக்கருதி  மேற்கொண்டிலேம். இனி, இங்ஙனம் வினைச்சூழலிற் பட்டுழலும் என்னுட் புகுந்து நின்று ,வினையொழிவு செய்பவனைப்போல , இத் தன்மையன் என உன்னை எனக்கு அறிவித்த அளவிலாவது , நின்னை எங்கள் தலைவன் என்றறிந்து ஆட்பட வேண்டியது கடமையாகவும் , அங்ஙனம் செய்திலேனாக, அக் குற்றத்தையும் பொறுத்து, நீயே வலிய ஆளாகக் கொண்டு , எம் தலைவனாயினாய் என்பார், “என்னை யாட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு  என்றார். குவ்வுருபு பொருட்டுப் பொருளது.

              இத்தகைய பேருதவியாளானாகிய இறைவன் பொருட்டு அடிகள் தாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகளைச் செய்யாமை குறித்துப் பிவருமாறு இரங்குகின்றார் : இறைவனுக்கு  ஆட்படும் பேறு கிடைத்தற்கு அரியது ; இஃது எளிதிற் கிடைக்கப் பெற்றமை குறித்து ஆனந்த பரவசத்தால் ஆடல்  பாடல்  முதலிய செயல்களில்  தலைப்படுதல் இன்றியமையாததாகவும் , அங்ஙனம் செய்யாமைக்குக் காரணம் , யான் இரும்பினாற் செய்யப்பட்ட  பாவையை  ஒத்திருத்தல் என்பார், “ இரும்பின் பாவை யனைய நான்” என்றார். தோற்பாவை , மரப்பாவைகளாயின் பிறரால் இயக்கப்பட்டுக் கூத்தாடல் முதலிய  செய்யக் காணலாம் . “ தோற்பாவைக்கூத்தும்  தொல்லை மரப்பாவை  இயக்கமும் “ என்பது சிவஞானசித்தி . இரும்புப்பாவை  திண்ணிதாகலின் ,இயக்கப்பட்டு ஆடல்  முதலியன செய்ததாக நிகழ்ச்சியின்று . இவ்வுண்மை கருதியே தோற்பாவை மரப்பாவைகளைக் கூறாமல் ,”இரும்பின் பாவை” ஒப்புக் கூறப்பட்டது . எதிர்பாராத பேறு கிடைத்த  அளவில் , உள்ளம் உருகிப் பரவசமான நிலையில் ஒருவர்க்கு நிகழும் செயல்களுள் , முதலிற் பாடுதலும் , அதன்பின்  எழுந்து நின்று ஆடுதலும் , அதன் மேல் கதறுதலும் , அதன்பின்னர் நாப்புலர்ந்து உடல் வற்றுதலும் , அதன் முதிர்ச்சியில்  ஆவி  சோர்ந்து மூர்ச்சித்தலும் முறையே நிகழ்வனவாம் . இவ் அநுபவம் புலப்படவே , “பாடேன் நின்று  ஆடேன் அந்தோ அலறிடேன்  உலறிடேன் ஆவி சோரேன் “ என்று அருளிச்செய்தனர் . பாடுங்கால் இருந்தும் நின்றும் பாடலாம் . ஆடுங்கால்  நின்றே ஆடல் வேண்டும்  ஆதலின் , “நின்று  ஆடேன் “ என்றார் . பாடுதல் ,ஆடுதல் என்னும் இவ்விரண்டு செயல்களுக்கும் பின்னர் நிகழும் அலறுதன் முதலியன முறுகிய செயல்களாதலின் ,இடையில் ,”அந்தோ “ என இரங்கற் குறிப்புத் தோன்றக் கூறப்பட்டது. அலறுதல் – ஆடல்  பாடல்களுக்குரிய சித்த விருத்தியும் சுருங்கிய நிலையில் நிகழ்வதாகும் . உலறுதல் – உடல் வற்றுதல். “வற்றியாரும் நின் மலரடி காணா மன்ன “ என்பது அடிகள் திருவாக்கு . ஆவி சோர்தல் – மூர்ச்சித்தல் . “இங்ஙனம் என கடமையினின்றும்  வழுவுதல் முறையாகாதே ! என் செய்வல் !” என வருந்திக் கூறுவார் , “ முறையோ நான் ஆனவாறு “ என்பதற்கு யான் இங்ஙனம் என் கடமையினின்றும் வழுவுதல் என்னை ஆட்கொண்டருளிய நினக்கு முறையாகுமா? என்பது கருத்தாகக் கொள்ளலுமாம் . “ என் கடன் பணி செய்து கிடப்பதே “என்பதைப் புறக்கணித்து விட்ட இந் நிலையில் , முடிவு என்னாமோ அறிந்திலேன் என்பார், “முடிவு அறியேன்” எனவும் கூறினர் . முடிவு – கடமை யினின்றும் வழுவுதலால் விளையும் பயன் .

                 இதன்கண் ,”முனைவனே முதலந்த  மாயினானே” எனச் சுட்டறிவிற்குப் புலப்படாத இறைவன் இலக்கணம்  தோன்ற வைத்தமையானும் , முதல் இரண்டடிகளானும்  சீவபோதத்தை ஒடுக்கிச்  சிவபோதம் மேலிட்டு விளங்கிய உண்மை பெறப்பட வைத்தமையானும் , “சுட்டறுத்தல்” என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதலும் , “பாடேன் நின்றாடேன் “ என்பன முதலியவற்றால் சதகம் நுதலிய “பத்தி விசித்திரம் “ என்னும் பொருள் வெளிப்பட்டு நிற்றலும் காண்க.

                                         *************************************

பாடல் : 23 .

ஆயநான்  மறையவனும்  நீயே  யாதல்

அறிந்தியான்  யாவரினும்  கடைய  னாய

நாயினேன்  ஆதலையும்  நோக்கிக் கண்டு

நாதனே  நானுனக்கோர்  அன்பன்  என்பேன்

ஆயினேன் ஆதலால்  ஆண்டு  கொண்டாய்

அடியார்தாம்  இல்லையே  அன்றி  மற்றோர்

பேயனேன்  இதுதான்நின்  பெருமை  யன்றே

யெம்பெருமான்  என்சொல்லிப்  பேசுகேனே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பாட்டில்   தம்மை வலிந்து  ஆட்கொண்டு  அருளிய இறைவனது பேருதவியை நினைந்து , தம் கடமைகளைச் செய்யாமைக்கு  இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் இறைவன் வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டதற்குக்  காரணம்  , அப் பெருமானது  மிகவும்  உயர்ந்த தன்மையையும் , தமது மிகவும் இழிந்த தன்மையையும்  அறிந்துவைத்தும் , “யான்  நின் அன்பன்” என்று  நாவளவிற்  சொல்லியதே  யாமெனவும்  , அத்துணை யெளிமையில் ஆட்கொண்ட  ஆண்டவன் பெருமையை  எவ்வாறு  புகழ்ந்து பாராட்டுவேன் எனவும் வியப்புறுகின்றார் .

பதவுரை :-   நாதனே  =  கடவுளே ,

நீயே ஆய  நான்மறையவன் ஆதல் (நோக்கி) அறிந்தும்  =  நீயே யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை ஆராய்ந்துஅறிந்தும் ,

யானே  யாவரினும் கடையன் ஆய  நாயினேன் ஆதலை நோக்கிக் கண்டும்   = யானே யாவர்க்கும்  கடையவனாய நாயின் தன்மையுடையேன்  ஆதலை ஆராய்ந்து கண்டு வைத்தும் ,

நான் உனக்கு  ஓர் அன்பன் என்பேன் ஆயினேன்  =  யான்  நினக்கு  ஓர் அன்பன் என்று சொல்லுவேனாயினேன் ,

ஆதலால் ஆண்டுகொண்டாய்  =  அதுவே  காரணமாகக் கொண்டு என்னை  ஆளாகக் கொண்டாய் ,

பேயனேன்  அன்றி  மற்றோர் அடியார்  தாம் இல்லையே  =  பேயின்  தன்மையுடையேனாகிய என்னை  யன்றி  நீ  ஆட்கொள்ளுதற்கு வேறு ஓர் அடியார்  இல்லையா? ,

இது நின் பெருமை அன்றே  =  இச்செயல்  நின் பெருமையைக்  குறிப்பதன்றோ ? ,

எம் பெருமான் என்  சொல்லிப்  பேசுகேன்  =  எங்கள் தலைவனாகிய நின்னை எவ்வாறு  புகழ்ந்து பாராட்டக்கடவேன் என்பது.

விளக்கவுரை :-    “ஆயன் நான்  மறையவனும் “ எனவும் பாடபேதம் உண்டென்ப; அது பொருட் சிறப்பின்று.  வட மொழியில் நாத என்னும் பகுதி , ஐசுவரியம் என்னும் பொருளதாகலின் , “நாதன் “ என்பது ஈச்சுரத்தன்மையுடைய  கடவுளை உணர்த்துவதாகும் . “நீயே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருட்டு . பின்னர் , “யாவரினுங்கடையன் “ என அடிகள் தம்மைக் கூறிக்  கொண்டதற்கியைய , “ யாவர்க்கும் தலைவன்” என்னும் மறுதலைச் சொற்களை வருவித்துரைக்கப்பட்டன . “உடையார் முன்  இல்லார் போல்  ஏக்கற்றுங்  கற்றார் , கடையரே கல்லாதவர் “ என்புழிக் கற்றார் தலையாயினார்  என முடித்து , “கடைய ரென்றதனான் அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது “ என்று அதன் விளக்கமாகப் பரிமேலழகர் கூறியிருத்தலும் அறிக. “மறையவனும் “ என்புழி ,உம்மையைப் பிறித்து , அறிந்து என்பதனோடு கூட்டுக. நான் மறையவன் என்றது , நான்கு  மறைகளுக்கும் வினை முதலாகவும் , அம்மறைகளின் முடிபொருளாகவும்  உள்ளவன் என்னும் பொருட்டு . இதனாலே இறைவன் அமரருள் அந்தணன் என்று  கூறப்பட்டான் . “யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் “ என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்திற்  கூறியிருத்தலும் காண்க. இறைவன் யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை , மறையாகமங்களின் ஆராய்ச்சியால்  அறியலாமென்பது  தோன்ற , “நோக்கி அறிந்தும் “ என்றார் . பின்னுள்ள  நோக்கி என்னும் எச்சத்தை  ஈண்டும்  கூட்டுக. சிவபிரானின் உயர்ந்தாருமில்லை , தம்மின் இழிந்தாருமில்லை என்பது தோன்ற ,அடிகள் தம்மை “யாவரினுங்கடையன்” என்றும் , அவ் இழிவுதானும்  எத்தன்மைத்து என்பார்க்கு , “நாயினேன்” என்றும் கூறினர். நாயின் தன்மை , பல இடங்களிலும் பயனின்றி அலைந்து திரிதலால் இழிக்கப்படும்  இயல்பாகும் . இதனை அப்பர் தம் பாடல் ஒன்றில் ,”பாட்டில்  நாய் போல நின்று பற்றதாம் பாவந்தன்னை , யீட்டினேன்” என்று அருளிச்செய்தனர் . பாடு  என்பது  உழைப்பு என்னும்  பொருளதாகலின் , வறிதே உழைத்துத் திரியும் நாய் போல  என்பது கருத்து . இங்ஙனம்  நாயின் தன்மையைத்  தம் மேல் ஏறிட்டு அடிகள் பல இடத்தும் கூறுதல் அறியலாம் . ஆதலையும் என்புழி, உம்மையையும் பிரித்து , “கண்டு” என்பதனோடு கூட்டுக. தமது புன்புலால் யாக்கையை , “சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் “ எனவும் , தம் அறிவும் செயலும் மிகச் சிறியன எனவும் , காட்சியளவையில்  எளிதின்  ஆராய்ந்து காணலாமென்பது தோன்ற ,”நோக்கிக் கண்டும்” என்றார். இறைவன்  தலைவனாதலை அறிவு கருவியாக அறிய வேண்டுதலின் , “அறிந்தும்” எனவும் , தாம் கடையனாதலைக் கண்கூடாகக் காணலாமென்பது தோன்ற ,”கண்டும்” எனவும்  கூறினர் .

             எல்ல வகையானும் பெரியான் ஒருவன்பால் அன்பு செய்து ,அவன் அருட்கு ஆளாதல் வேண்டுமாயின் , அப்பெரியான் விரும்பத்தக்க தகுதி ஓரளவாது இருத்தல் வேண்டும் . அது சிறிதும் இல்லாத கடையேனாகிய  யான், நின் உயர்வையும் என் இழிவையும் அறிந்து வைத்தும் , என்  அவாவினால் யான் உனக்கு அன்பனாவேன் என்று சொல்லளவிற் கூறத் தொடங்கினேன்  என்பார். “நானுனக்கோர் அன்பனென்பே னாயினேன் “ என்றார். “ என்பேனாயினேன்” என்றதனால் , அன்பனாதற்குரிய  செயல்களில் தலைப்படாமல் சொல்லளவிற் கூறியது என்பது பெறப்படும் . “சொல்லுதல் யார்க்கும் எளிய  அரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” என்னும் பொருளுரைப்படி , எளிமைபற்றிச் சொல்லினேனாக , அச் சொல்லையே ஏதுவாகக் கொண்டு , என்னை  ஆட்கொண்டு  அருளினை யென்பார் , “ஆதலால்  ஆண்டுகொண்டாய் “ என்றார் . அடிகள் தாம் சொல்லளவிற்  கூறத்தொடங்கியதை  ஏற்று , ஆண்டவன் செயலளவிற் காட்டினான் என்னும் அருமைப் பாட்டைப் புலப்படுக்கவே , “என்பேனாயினேன் “ எனவும் , “ஆண்டுகொண்டாய்” எனவும் அருளிச் செய்தனர் . ஒருவாறு இறைவனுக்கு அடிமைப்பணி புரிதற்குத் தகுதியான  ஆள் அமையாமையால் , தாம் அன்பன் என்ற அளவில் , தகுதி யொன்றையும் ஆராயாமல்  தம்மை இறைவன் ஆட்படுத்துக்கொண்டனன் என்று அடிகள் கருதினரோ வெனின் , அங்ஙனங்  கருதினார் அல்லர் என்பதை , “பேயனேன்  அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே “ என்பதனால்  அறியலாம் . பாவகன்மத்தால்  இழிபிறப்புடைய பேயைப் பணி கொண்டால் துன்புறுத்துமேயன்றி  வேறு பயன் விளையாதென்னும் உண்மை கருதித் தம்மைப் பேயனேன் என்றார்.  “புற்றுமாய்  மரமாய்ப்  புனல்காலே யுண்டியாய்  அண்டவாணரும்  பிறரும் , வற்றியாரும் நின் மலரடி காணாமன்ன” என்றபடி , அரிய தவங்கிடந்து நினக்குப் பணிபுரியும் அன்பராதற்கு  அமரர் முனிவர்  முதலியோர் எண்ணிறந்தோர் உளராக , அன்னாருள் ஒருவரேனும்  அடியார் ஆதற்குத் தகுதியுடையார் அல்லரோ என்பார், “பேயனேன் அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே” என்றார்.  “இல்லையே”என்புழி, வினாப்பொருட்டாகிய  ஏகாரம் எதிர்மறைப் பொருளை உணர்த்தி நின்றது .

            பக்குவ முதிர்ந்த அடியார் எத்துணையோ தவங்கிடப்ப , அன்னாரை விட்டு , ஒரு சிறிதும் தகுதியில்லாத என்னை , யான் அன்பன் என்று சொல்லத் தொடங்கிய அளவில்  ஆட்கொண்டருளிய இவ்வருட் செயல்  நின் பெருமைக்குணத்தைப் புலப்படுத்தி நிற்பதென்பார் , “ இதுதான் நின் பெருமை யன்றே” என்றார். பெருமை, செயற்கரிய செய்தலாகும் . ஈண்டு , அருஞ்செயல் யாதெனின் , பேயனைய தம்மைப் பிறப்பறுக்க ஆண்டது என்பது அடிகள் கருத்துப் போலும் . இங்ஙனம் ஆட்கொண்டு பேருதவி புரிந்த எங்கள் தலைவனாகிய நின்னைக் குறித்து , மன மொழிகளுக்கு அடங்காத நின் பெருமைக் குணங்களை  எவ்வாறு புகழ்ந்து பாராட்டக் கடவேன் , “எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே” என்றார். எம்பெருமான் என்புழி, இரண்டன் உருபு செய்யுள் விகாரத்தால் தொக்கது.

         இதன்கண், இறைவன் யாவர்க்கும்  தலைவனாகிய  மறைமுதல்வன் எனக்  கூறியதும் , “என் சொல்லிப் பேசுகேன் “ என அப்பெருமான் இயல்பு , மன மொழிகளால் வரையறுக்கப்படாத தொன்று  என்றதும் , பதிகம் நுதலிய  பொருளாகிய  சுட்டறுத்தலைப் புலப்படுப்பனவாம்  .                                                   

பாடல் : 24 .

பேசிற்றாம்  ஈசனே  யெந்தா  யெந்தை

பெருமானே  யென்றென்றே  பேசிப் பேசிப்

பூசிற்றாம்   திருநீறே  நிறையப் பூசிப்

போற்றியெம்  பெருமானே  யென்று  பின்றா

நேசத்தாற்  பிறப்பிறப்பைக்  கடந்தார்  தம்மை

ஆண்டானே  அவாவெள்ளக்  கள்வ  னேனை

மாசற்ற  மணிக்குன்றே  யெந்தாய்  அந்தோ

என்னை நீ  ஆட்கொண்ட  வண்ணந்  தானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவனை நோக்கி ,” யான்  நின் அன்பன் “ என்று  சொல்லிய  அளவில் , என்னை  ஆட்கொண்டு  அருளிய நின் பெருமை இருந்தவாறு  என்னே?  என வியந்து கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில்  உரையளவில் , “ நான் நின் அன்பன்” என்றேனே  அன்றி , உள்ளத்தளவில் வெள்ளத்தனைய  அவாப் பெருக்கையுடைய கள்வனாவேன் எனவும், அஃதறிந்தும் , என்னை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னே எனவும் கூறி , மேலும் வியப்புறுகின்றார்  .

பதவுரை :-   மாசு அற்ற  மணிக்குன்றே  =  குற்றம் அற்ற மாணிக்க  மலையே ,

எந்தாய்  =  என் தந்தையே ,

தாம் பேசின்  = தாம் பேசப்புகின் ,

ஈசனே  எந்தாய்  எந்தை பெருமானே  =  பரமேச்சுரனே ; எங்கள் தந்தையே;  எங்கள்  தந்தைக்கும்  தலைவனே ,

என்று  என்றே  பேசிப் பேசி  =   என்றே  பலகாலும்  சொல்லியும் ,

பூசின்  =  பூசப்புகின் ,

எம்பெருமானே  போற்றி என்று  =  எங்கள்  தலைவனே  காத்தருள்க  என்று  கூறி ,

திருநீறே  நிறையப் பூசி  =  திருநீற்றையே  குறைவறப்  பூசியும் ,

பின்றா  நேசத்தால்  =  பிறழாத  மெய்யன்பினால் ,

பிறப்பு  இறப்பைக்  கடந்தார்  தம்மை  ஆண்டானே  =  பிறத்தலையும்  இறத்தலையும்  ஒழித்த மெய்யன்பரை  ஆட்கொண்டருளியவனே  ,

அந்தோ  =  அந்தோ ,

அவாவெள்ளக்  கள்வனேனை  =  வெள்ளத்தனைய  அவாப் பெருக்கினை  யுடைய  கள்வனாகிய  என்னையும் ,

நீ  ஆட்கொண்டவண்ணம்  என்னை  =  நீ  ஆட்கொண்டருளிய  தன்மை  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மாசு  –   வேற்று ஒளியான் அன்றி விளங்காமை .உலகத்தில் இரத்தினக் குற்றங்களுள்  யாதும்  இன்றி  ஒளிமிக்க  எத்துணை உயர்ந்த மாணிக்கம்  ஆயினும் , ஞாயிற்றின்  கதிர்  முதலிய  பிற  ஒளிகளால் ஒளி காலுமேயன்றித்  தானே ஒளி செய்யாமை அறிகின்றோம் . செம்மேனி  யெம்மானாகிய  இறைவன்  திருவுருவம் பேரொளிப்  பிழம்பாக நின்று  , மற்றை ஒளி  மண்டிலங்களுக்கு ஒளி அளிப்பதன்றி , அம் மண்டிலங்களின் ஒளியைத் தான் பெறுவதன்று .  இவ்வுண்மையை ,

நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப வெங்கும்

பாயிரு  ளாகி  மூடப்  பரிந்துல   கினுக்கு  நெற்றித்

தூயநேத்  திரத்தி  னாலே  சுடரொளி  கொடுத்த பண்பிற்

றேயமா  ரொளிக  ளெல்லாஞ்  சிவனுருத்  தேச  தென்னார்

என்னும் சிவஞான சித்தியின் விளக்கத்தானும் அறிக. இறைவனை மணிக்குன்றாகக் கூறியதன் கருத்து. “ ஆடகச் சீர் மணிக்குன்றே “ என்புழி , விளக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்  காண்க.

          உலகத்திற்கெல்லாம் ஒளி விளக்கம் செய்யும் இறைவன் தமக்குச் செய்த பேருதவியை நினைந்து , அப் பெருமானைப் பொதுமை யினின்றும் அன்பு மேலீட்டால் சிறப்பு முறையிற் கொண்டு , “எந்தாய்” என்றார். இனி  பிறப்பு  இறப்பைக் கடந்தவர்களாகிய மெய்யன்பர்களின் இயல்பை விளக்குகின்றார். “தாம்” என்பது பிறப்பு இறப்பைக் கடந்த அடியாரைக் குறிக்கும் . அடியார்  பேசத்தொடங்கின் , “ஈசனே” என்பது முதலிய இறைவன் திருப்பெயர்களையும்  பெருமைகளையுமே  பேசுவர் அல்லது , வேறு ஒன்றையும் பேசார் என்பது உணர்ந்து , “பேசிற்றாம் ஈசனே எந்தாயெந்தை பெருமானே யென்றென்றே பேசிப் பேசி “ என்றார். “பிறந்து மொழி பயின்ற பின் எல்லாங்  காதல், சிறந்து நின் சேவடியே  சேர்ந்தேன் “ என்பது அம்மை திருவாக்கு . ஈசன் என்பது அமரர் , மக்கள் முதலிய எல்லோர்க்கும் தலைவன் என்பதை உணர்த்தும் . அங்ஙனம் பொதுவாகிய  பெருந்தலைவனே  தமக்குத் தந்தையாயினான் என்னும் உவகை மேம்பாட்டல் , “எந்தாய் “ என்று  கூறப்பட்டது .

                 உலகத்தில்  ஒருவனுக்குத் தந்தையாயினான் அவனை ஆட்கொள்ளும் தலைவனாகவும் இருக்க வேண்டும் என்னும் நியமம் இன்று, ஈண்டுத்  தமக்குத்  தந்தையாதலேயன்றி தம் தந்தைக்கும் தலைவன் ஆயினான் என்பது தோன்ற ,”எந்தை பெருமானே” என்று கூறப்பட்டது . “எந்தை பெருமானே” என்புழி , நான்கன் உருபும் எச்சவும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றன . எந்தைக்கும் தலைவனே என்றது , வழிவழி அடிமையாகக் கொண்டு ஆள்பவன்  என்பதைக்  குறிப்பதாகும் . “ மூதாதை மாதாளும் பாகத்தெந்தை “ என்பதும் இக் கருத்துப் பற்றியதே . தந்தையின்  செல்வத்திற்குப்  புதல்வன் உரிமை உடையனாதல் போல் , இறைவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்திற்கு அன்பர் உரிமை உடையராதல் பற்றி , இறைவன் தந்தையாகவும் , அடிமையாகக் கொண்டு பணி புரிவித்துக்கொள்ளும்  தலைவனைப் போல நன்நெறிப்படுத்துத் திருத் தொண்டில்  ஈடுபடச்செய்தலின் பெருமான்  ஆகவும் ,அரசனைப்  போலிருந்து பொதுவாட்சி  முகமாகப்  பாதுகாத்தலின் ஈசனாகவும் , மெய்யன்பர்  பேசுவாராயினர் என்பது கருத்து. “என்றென்றே பேசி” என்றதனால் ,இங்ஙனம் இறைவனைப் பற்றியே பலகாலும்  பேசுவார் என்பது பெறப்படும் . ஏகாரம் தேற்றம் . அன்பர்களின் மன மொழி மெய்கள் இறைவன்பால்  ஈடுபடு முறையில்  இது , மொழியின் ஈடுபாடாகும் .

            இனி, அன்பர்  தம்  உடலிற் பூசப்புகுவாராயின் , திருநீற்றையன்றி வேறு  எதனையும்  பூசார்  என்பது தோன்ற ,” திருநீறே “ எனப்பட்டது. ஈண்டு , ஏகாரம்  பிரிநிலைப் பொருட்டு . இதனால் திருநீறு அல்லாத நறுமணக் கலவைகள் எத்துணை உயர்ந்தவை  ஆயினும் விரும்பார் என்பது போதரும் . திருநீற்றைப்பூசுங்காலும் , விருப்பம் இன்றிச் சிறிதலவு எடுத்து இடுவாரோ எனின் , அங்ஙனம் செய்யாது , பூசுதற்குரிய உடல் உறுப்பு முழுவதிலும்  மிக்க  மகிழ்ச்சியோடு பூசுவார்  என்பது ,போதர , “நிறையப்  பூசி “ என்றார். ஈண்டுத்  திருநீறு  என்பது  இனம்  பற்றி உருத்திராக்கத்தையும்  உணர்த்துவதாகும் . ஆகவே, திருநீறும்  கண்மணியுமே , முறையே அன்பர்கள் பூசுதற்கும் , புனைதற்கும்  உரியனவாம் என்பது  தெளிவாம் .  

  மீண்டும் எம்பெருமானே காத்தருள்க என்னும் பொருள் தோன்ற , “போற்றி  யெம் பெருமானே “ என்ற மொழிப் பணியாகக் கூறியது , திருநீறு  பூசுங்கால் செய்யும் வேண்டுகோளைப் புலப்படுத்துவதாகும் .  “எம்பெருமானே போற்றி” என்பதில், போற்றி என்பது வணக்கத்தைக்  குறிப்பதாகக்  கொண்டு , “சிவாய நம” என்னும் திருவைந்தெழுத்தின் விளக்கமாகக்  கொள்ளுதலும்  பொருந்தும் . “சிவாய  நம” என்பது சிவனுக்கு வணக்கம் என்னும் பொருள் உடையதாகும் .அப் பொருளே , “எம்பெருமானே போற்றி” என்னும் தொடரிலும் புலப்படுதல் அறியலாம் . இதனால்  திருவைந்தெழுத்தை ஓதி , திறுநீறு  பூசல் வேண்டும் என்னும்  விதிமுறை புலனாதலும் உணரத்தக்கது. போற்றி யெம்பெருமானே  யென்று  நிறையப் பூசி  என முடிக்க.

    பின்றுதல்  –  பிறழ்தல் : பிற்படுதலுமாம் .  ஆகவே , உண்மைஅடியார்களின் அன்பு , பிறழ்ச்சி  அடையாத  நிலையில் உள்ளது. ; அல்லது எதற்கும் பிற்படாதது என்பதாம் . எத்துணை இடையூறு நேரினும் , இயல்பின்  மாறுதல் அவ்வன்பிற்கு இன்று  என்பதைப் புலப்படுக்க. “பின்றா நேசம் “ எனப்பட்டது. இஃது உள்ளத்தின் ஈடுபாடு  . பேசிப்  பூசிப்  பின்றாத நேசத்தால் என முடிக்க. இங்ஙனம்  மனம் , மொழி , மெய்களின்  ஈடுபாட்டால் வீட்டு நிலைக்குத்  தகுதியுடையவராயினார் என்பது தோன்ற ,” பிறப் பிறப்பைக் கடந்தார் தம்மை  ஆண்டானே” என்பது எங்ஙனம் பொருந்தும் எனின், “அரசன்  முடிசூடினான் “ என்புழிப்போலப் பொருந்துமெனக் கொள்க . முடி  சூடிய பின்னன்றே அரசன் ஆதம் வேண்டும் . அரசன் ஆகியபின் முடிசூடுதல் இன்று. இதனால் குடிப்பிறப்பு , முதலியவற்றால் அரசன்  ஆதற்குத் தகுதியுடையான்  முடிசூடினான் என்பது  கருத்தாகக் கொள்ளல் வேண்டும் . அவ்வாறே , மன மொழி மெய்களின் தூய்மையால் , பிறப்பு இறப்பைக் கடத்தற்குத் தகுதியுடையாரை  ஆட்கொண்டருளினான் என்பதே கொள்ளத்தக்கது.  இறந்தவர் பிறத்தல் என்பது வீட்டு நிலையிற் செல்லாமையானும் , பிறந்தவர் இறத்தல் என்பது உறுதியாதலானும் ,பிறப் பிறப்பை என்புழிப் பிறப்பு  முதற்கூறப்பட்டது . “ அவாவென்ப எல்லா  உயிர்க்கும் எஞ்ஞான்றும் , தவாஅப்  பிறப்பீனும்  வித்து” என்னும்  பொருளுரைப்படி  , பிறவிக்கு  வித்தாகவுள்ள அவா ,வெள்ளத்து அனையதாயின் , அதனால்  உண்டாம்  பிறப்பு எல்லையற்றதாம் என்பது தெளிவாம் . வெள்ளத்தனைய அவாப் பெருக்கினை உள்ளத்தடக்கி , அவாவற்றவனைப்போல நடிக்கின்றேன் என்பார்,  “அவா வெள்ளக் கள்வனேனை” என்றார். அவாப் பெருக்குடையனா தலே  குற்றமாம் . அத்தகைய  அவாவைக்  கரந்து  நடித்தல் அதனினும் பெரிய குற்றமாம் என்பது கருத்து.  வெள்ளத்தனைய அவாவைக் கரத்தல் , சொல்லாலும் செயலாலும் நிகழ்வது  ஆதலின் , மன மொழி மெய்களின் தூய்மையின்மை பெறப்படும் . முக்கரணங்களும் தூய்மையுடையனவாய் நிகழப்பெற்ற  தகுதியுடைய மெய்யன்பரை  ஆட்கொள்ளும் இறைவன் , அம் மூன்றும் தூய்மையில்லனவாய் நிகழப்பெற்ற  தகுதியில்லாத தம்மை ஆட்கொண்டது என்னே  எனக்  காரணம்  அறியாது வியப்புறுவார் , “கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை” என்றார்.  “அந்தோ” என்பது வியப்பிற் பிறந்த இரக்கக் குறிப்பு . தான் இரண்டும் அசைநிலைகள் . ஏகாரம்  ஈற்றசை .

               இதன்கண், “ மாசற்ற  மணிக்குன்றே” என்பதனால் எல்லா ஒளி மண்டிலங்களுக்கும்  ஒளி உதவும் இறைவன் இயல்பு மெய்யுணர்வினால்  அன்றிச் சுட்டறிவுக்குப் புலனாகாமை பெறப்படுதலின் , “சுட்டறுத்தல் “ என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் ,மன மொழி மெய்களின் ஈடுபாடு  குறிக்கப்பட்டமையால் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலப்படுக்கப்பட்டமை  அறிக .

                                             ******************************************

பாடல் :25 .

வண்ணந்தான்  சேயதன்று  வெளிதே  யன்ற

னேகஏகன்  அணுஅணுவில்  இறந்தா யென்றங்

கெண்ணந்தான்  தடுமாறி   யிமையோர்  கூட்டம்

எய்துமா  றறியாத  எந்தாய்  உன்றன்

வண்ணந்தான்  அதுகாட்டி  வடிவு  காட்டி

மலர்க்கழல்கள்  அவைகாட்டி  வழியற்  றேனைத்

திண்ணந்தான் பிறவாமற்   காத்தாட்  கொண்டாய்

எம்பெருமான் என் சொல்லிச்  சிந்திக்  கேனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் போலி அன்பை உனர்ந்தும் , இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய வண்ணந்தான் என்னே என வியந்த அடிகள் , இத் திருப்பாட்டில் அப் பெருமான் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைப்  புண்ணியப்பயன் நுகர்ச்சியிலே தலைப்பட்டுள்ள இமையவரும்  அறியாவாறு மயங்க வைத்து , அவாப் பெருக்கில்  அமிழ்ந்திக் கிடக்கும்  தமக்குக் காட்சியளித்து ஆட்கொண்ட அருட்டிறத்தை  எவ்வாறு நினைந்து பாராட்டுவேன் எனத்  தம் ஆராமையைப் புலப்படுத்துகின்றார்.

பதவுரை :-  எம் பெருமான்  =  எங்கள் தலைவனே ,

இமையோர் கூட்டம்  =  அமரர் குழு ,

உன் வண்ணம் தான் சேயது அன்று  =  உன் நிறம் செம்மையானது அன்று,

வெளிது அன்று  =  வெண்மையானது அன்று ,

அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தய்  என்று   =  நீயே  பல உயிரும் ஆவாய் தனி முதல்வன் ஆவாய் அணுருவும்  ஆவாய்  அணுவினுங்கடந்த  நுண்ணியை  யென்று இங்ஙனம் பலவாறு  கூறி ,

அங்கு எண்ணம்தான் தடுமாறி  –  ஆண்டு நினைவு மயங்கி ,

எய்தும்  ஆறு  அறியாத எந்தாய்  = நின்னையடையும்  நெறியினின்று  அறியப்படாத  என் தந்தையே ,

உன் தன் வண்ணம்  காட்டி  வடிவு  காட்டி  மலர்க் கழல்கள்                       அவை  காட்டி  =   உன்னுடைய  உண்மையான  நிறத்தையும் , திருவுருவத்தையும்  தாமரை மலர் போன்ற  திருவடிகளையும்  உள்ளவாறு யான்  காணுமாறு  அருள் செய்து ,

வழி அற்றேனை  =  நெறியறியாது  மயங்கும்  அடியேனை ,

திண்ணம்  தான்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டாய்  =   உறுதியாக   இனிப்  பிறவி  நேராமல்  காப்பாற்றி  ஆளாகக்  கொண்டனை ,

என் சொல்லிச் சிந்திக்கேன்  =  அத்தகைய  நின்னை  எங்ஙனம்  பாராட்டி  நினைவு  கூரக்கடவேன்  என்பது .

விளக்கவுரை :-  பேரொளிப்  பிழம்பாகவுள்ள  இறைவன்  திருமேனியின் வண்ணம்  , ஞான  நாட்டம் பெற்றோர்க்கு அன்றி , இமையா  நாட்டம்   பெற்றோர்க்கும் காண்டற்கு அரிதாம்  என்பார்  . “இமையோர் கூட்டம் “  என்றார்.  கூட்டம்  என்றதனால்  , ஒருவர்  அறிந்தபடி  மற்றோருவர் அறியாமல்  பலரும்  பலவகையாகக்  கருதினர் என்பது புலனாம் . இறைவன்  இயல்பை  மறை முதலிய  நூல்களான்   ஆராய்ந்து  அறியப்  புகுந்த  தேவர்கள் , பருமையில் தொடங்கி நுண்மையில் செல்ல முற்பட்டு  , முதலில்  நிறம்  இன்னது  எனத்  துணியத்  தலைப்படுவாராயினர் . “சேயதன்று “ என்றதனால்  வெண்மையா  மென்பதும் ,”வெளிதன்று” என்றதனால்  செம்மையா மென்பதும்  போதரும் . “வெண்ணீறு  சண்ணித்த  மேனி” என்றபடி , திருமேனியிற்  பூசப்பட்ட  திரு வெண்ணீறு  குறித்து ,” வண்ணந்தான்  சேயதன்று  “ எனப்பட்டது . அன்மைச்  சொல்லால்  வெண்மை நிறம்  என்று  பெறப்பட  வைத்தது .  “செம்மேனி யெம்மான்” என்று  மறை  நவின்றது பற்றியாம் .  வண்ணன்  தீவண்ணன்  எம் மிறை” என்று  கேட்க்கப்பட்டமையால்   செம்மை நிறம் எனக் கருதி இருந்தார்க்கு  , நீற்றுப்  பூச்சினால்  வெண்மை  நிறம்  கூறப்படுதல்  பற்றி  , “ சேயதன்று”  எனவும் , அவ்வெண்மை  ,நீற்றுப் பூச்சாகிய   செயற்கையாற்  காணப்படுவதன்றி  , இயற்கையிற்  செம்மையாம்  எனக் கொண்டு  , “வெளிதன்று” எனவும்  கருதுவாராயினர்  என்பது.

             பின்னர் , நிறத்தைப்பற்றிய   ஆராய்ச்சியைவிட்டுத்  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , “அநேகன் , ஏகன் “  என்பன  முதலியவாகக்  கருதுவாராயினராம் . உயிர்கள் பலவாக  இருத்தலின் , அப் பல்லுயிர்களும்  அவனேயாம் எனக் கொண்டு , “அநேகன்” ஆவான்  என்று  கருதின ரென்பது , அங்ஙனம்  கருதுங்கால் , அப்பல்லுயிரும்  வினைப்பகுதிகளுக்கு  ஏற்பப்  பிறந்து  இறந்து  இன்பதுன்பங்களில் ஈடுபடுதலானும்  , இறைவனுக்கு  அவை இன்மையானும்  ,அநேகன்  அல்லன், ஏகனேயாம் எனக்  கருதினாராம் . ஏகன் என்றதனால் ,ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன் என்பதும் , அகண்ட  வடிவினன் என்பதும் பெறப்படும் . பருப்பொருள்கள் எல்லாவற்றிற்கும்  பருப்பொருளாகவுள்ள அப் பெருமானே நுண்பொருள்கள் எல்லாவற்றிற்கும் நுண்ணியனாகவும்  உள்ளவன் என்று  மறைகள்  கூறுதலின்  , “ அணு” எனவும் , “அணுவில் இறந்தாய் “ எனவும்  கூறப்பட்டன . “பரியர் நுண்ணியர்  பார்த்தற்கரியவர் “ என்று தமிழ்  மறை  கூறுதலும்  அறிக.  அளவின் மிக்க  பருமையும்  , அளவின் மிக்க  நுண்மையும்  மக்களாற்  காண்டற்கு  அரியன என்பது பற்றி  ஈண்டு ,”பார்த்தற்கரியவர்” என்று  கூறப்பட்டது. இறைவன் பரியனாக இருக்குங்கால் , அப் பருமை  வடிவில் அடங்கிய   அப் பெருமான் உயர் குணங்கள் எல்லாம் , அணுவினுங் கடந்த அவனது நுண்ணிய  வடிவினும்  அடங்கியிருக்கும் என்பதை , “நுண்ணியை எனினும்  நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்தென் ,கண்ணிணுண் மணியிற் கரந்தனை”  என்னும் திருவிசைப்பாப்  பாடற்  பகுதியானும்  உணரலாம் .  அங்கு  –  அவ்வாராய்ச்சியில் ; மறை , ஆகமம்  முதலிய  நூல்களின் ஆராய்ச்சியிற்  பல  தலையாய  உணர்வு  ஏற்பட்டமையால் , இறைவன்  இயல்பு  துணியப்பட்டிலது  என்பார் , “எண்ணந்தடுமாறி” என்றார். மாற்ற  மனங்கழிய  நின்றவன் ஆதலால் எண்ணந்தடுமாறுதல் இயல்பே. அநுபவ  அறிவினால் அன்றி , நூலறிவு  எத்துணை  நுண்ணிதாயினும் , அதனால் அறியப்பட்டான் என்பதை , “நூலே  நுழைவரியான் “ என்று  அடிகளும் , “நூலறிவு  பேசி நுழைவிலாதார்  திரிக” என்று  அம்மையும்  கூறியவாற்றான் அறியலாம் . இமையவர்க்கு  இங்ஙனம்  உளத் தடுமாற்றம் ஏற்பட்டமையால் , இறைவனை உள்ளவாறு  அடைதற்கு  உரிய  நெறி  நின்று  அறிந்து கோடல் இயலாததாயிற்று  என்பது கருதி , “எய்தும்  ஆறறியாத  எந்தாய் “ என்றார். ஆறு  அறியாத  என்புழி , ஆற்றினின்றும் என ஐந்தனுருபை   விரித்துக்கொள்ளல்  வேண்டும்  . எய்தும் நெறியையும் , அந் நெறி  நின்று  இறைவனையும்  அறிந்தில ரென்பது கருத்து. “அறியாத  “ என்னும்  செயப்பாட்டுப் பெயரெச்சவினை , “எந்தாய்” என்னும்  செயப்படுபொருளைக்  கொண்டு  முடிந்தது. “உன்” என்பது இடைநிலை  விளக்காக  நின்று  மேலுங் கூறப்பட்டது.

            புண்ணியப் பயனையே  நுகருந்  தேவர்கள் நூலறிவு கொண்டு  நுணுகி ஆராய்ந்தும்  , திருவருட்  பேரின்மையால் நெறியறியாது மயங்கி நிற்ப , அவர்க்குக் காட்சிப்படாத வண்ண முதலியவற்றைத்  தமக்குக் காட்டியருளிய முறையைக் குறிப்பிடுவாராய் , “வண்ணம் அது காட்டி வடிவு காட்டி  மலர்க் கழல்கள் அவை காட்டி “ என்றார் . ஈண்டு அது அவை என்பன பண்டறி சுட்டாக  நின்று , நூல்களின் முகமாக  முன்னர் அறியப்பட்டமையைக் குறிப்பனவாம் . அது என்பதை வடிவோடும்  இயைக்க  . காட்டி  என்றது  , அநுபவ  அறிவிற்  புலனாம்படி  காட்சி  அளித்து என்னும் பொருட்டு . ஒருவனைச்  சேய்மையினின்று  காணுங்கால் , முதலில் அவன் வடிவும் , அணுக  அணுகப் பின்னர் அவன் உறுப்புக்களும் , நிறமும் , முறையே காணப்படுவனவாம் . இது மக்கட் காட்சி , கடவுட்  காட்சியில் இறைவன் ஒளி வடிவினன் ஆதலின் , முதலில் நிறமும் ஒளியும் , அணுக அணுகப் பின்னர்  வடிவமும் முறையே காணப்படுதல் இயல்பு  ஆதலின் , அம்முறையாற் காட்சிப்பட்டு அநுபவித்ததை , இங்ஙனம் அருளிச் செய்வாராயினர் . இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த  மரத்தடியில் எழுந்தருளி யிருக்குங்கால் , அடிகள் முதலிய  அப் பெருமான் திருமேனியின் நிற வொளியில்   ஈடுபட்டு  , அணுகிக்  குருவுருவத்தையும் , பின்னர் தம் வணக்கத்திற்குரிய  திருவடிகளையும் கண்டு  இன்புற்ற  அநுபவ  உண்மையை இவ்வாறு  புலப்படுத்துள்ளார் என்பது அறிக . தேவர் தாம்  வண்ண  முதலியவற்றை அநுபவவுணர்விற்  கண்டு துணிதற்கு நெறி அறியாமை தடையாயின் , அத்தடையே எனக்கும் உளதாயிற்று  என்பார் , “வழியற்றேனை “ என்றார் . அங்ஙனம் நெறியறியாத என்னை  மீண்டும்  பிறவாமல்  உறுதியாக  ஆட்கொண்டு  காப்பாற்றி அருளினை என்பார் , “திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் “ என்றார் . இறைவன் திருவடிக் காட்சி சிவ புண்ணியமாக நின்று , இந்திரன்  முதலிய  இறையவர் பதங்களை  அருளுதலும் உண்டு . அந் நிலையிற்  காத்தல் , பிறவியைக்  கொடுத்துக் காப்பாற்றியதாகும் . இன்னோரன்ன  பதங்களைப் பெற்றார்  மீண்டும்  பிறத்தல் கூடும் . அங்ஙனம்  இன்றித்  தமக்கு  எவ்வாற்றானும்  பிறவாமற் காத்தது உறுதி என்பார் , திண்ணந்தான்” என்றார்.  ஆட்கொண்டு பிறவாமற் காத்தாய் என மாற்றிக் கொள்ளுதலும்  ஆம் ; ஆட்கொண்ட பின்னரே பிறவியொழிக்கப்படுதலின்  , சிந்தித்துப்  பேசுதல் , மனம் தன் வயப்பட்டிருக்குங்கால்  நிகழ்வது. ஈண்டுத்  தகுதியில்லாத நிலையில் தம்மை  ஆட்கொண்டதாக  எண்ணி , அடிகள் உள்ளம் தன்வயம் இழத்ததாதலின் ,அந் நிலையில் அன்பு மேலீட்டால் மனத்தில் தட்டாமல் முதலிற் பேச்சு  நிகழத் தலைப்பட்டனவாக  , அப் பேச்சின் நின்றும் சிந்தனைக்குச்  செல்வராய் , “என் சொல்லிச் சிந்திக்கேனே” என்றார். தான் , ஏ  என்பன  அசைகள் .  

        இதன்கண்,  நூலாராய்ச்சியாற்  சுட்டியுணர   முற்பட்ட  தேவர்க்கு , எண்ணந் தடுமாறி , அறியப்படாத இறைவன் வண்ண  முதலியன , அடிகளின் மெய்யுணர்விற்கு அநுபவ நிலையிற் புலனாயின  என்று  கூறப்பட்டமையான்  சுட்டறுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருள்  தோன்றுதல்  காண்க.

                                                **********************************

பாடல் :26 .

சிந்தனைநின்  தனக்காக்கி  நாயினேன்றன்

கண்ணிணைநின்  திருப்பாதப்  போதுக்  காக்கி

வந்தனையும்  அம்மலர்க்கே  யாக்கி  வாக்குன்

மணிவார்த்தைக்  காக்கியைம்  புலன்கள் ஆர

வந்தனையாட்  கொண்டுள்ளே  புகுந்த விச்சை

மால்அமுதப்  பெருங்கடலே   மலையே  யுன்னைத்

தந்தனைசெந்  தாமரைக்கா  டனைய  மேனித்

தனிச்சுடரே  யிரண்டுமிலித்   தனிய  னேற்கே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவன் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைத்  தமக்குப்  புலனாம்படி காட்டிய அருள் திறத்தில் ஈடுபட்டுக்  கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் தம் ஐம்புலன்களும்  ஆரத்  துய்க்கும் வண்ணம் தன்னையே வழங்கிய தனிப்பெருங்கருணையை வெளிப்பட அருளிச் செய்கின்றார் .

பதவுரை :-  வந்தனை  ஆட்கொண்டு  உள்ளே புகுந்த விச்சை  =  வலிய  வந்து  அடியேனை ஆளாகக் கொண்டு என் உள்ளே புகுந்தருளிய  வித்தையினையுடைய ,

மால் அமுதப் பெருங்கடலே  =  யாவரானும்  விரும்பத்தக்க  அமிழ்தப் பெருங்கடலே ,

மலையே  =  மலை  போன்றவனே ,

செந்தாமரைக்காடு  அனைய மேனி  =  செம்மையாகிய தாமரை மலர் வனம்  போன்ற திருமேனியையுடைய  ,

தனிச்சுடரே  =  ஒப்பற்ற ஒளி விளக்கே ,

நாயினேன் தன் சிந்தனை நின் தனக்கு  ஆக்கி  =  நாயினேனுடைய  நினைவெல்லாவற்றையும்  உன் பொருட்டு  நிகழ்வித்து ,

கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி  =  என் இருகண்களையும் நின் திருவடி  மலர்களுக்கு  உரிமையாக்கி ,

வந்தனையும்  அம்மலர்க்கே  ஆக்கி  =  வணக்கத்தையும்  அத் திருவடி மலர்களுக்கே  நிகழச் செய்து ,

வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி  =  வாயை  உன்னைப்பற்றிய  மணி மொழிகளுக்கு  உரிமையாக்கி ,

இரண்டும்  இல்  இத்  தனியனேற்கு  =  நூலறியும் , அநுபவ உணர்வும் இல்லாத  துணையற்ற  இவ்  வேழையேனுக்கு  ,

ஐம்புலங்கள் ஆர  உன்னைத்  தந்தனை  =  ஐம்புலங்களும்  நுகர்ந்து இன்புற  உன்னையே  தந்து அருளினாய் ( நின் அருட் பெருக்கை என் என்பேன்)  என்பது .

விளக்கவுரை :-வந்தனை புகுந்த என்புழி , வந்தனை என்பது  எச்சம் முற்றாக நின்று திரிந்த தென்னும்  கருத்தால் “ வினையெஞ்சு  கிளவியும் வேறுபல் குறிய “ என்னும் சூத்திர விதியில் அடங்கி , முற்றுத்திரிசொல் என்பர் சேனாவரையர் ,”வினைமுற்றே வினையெச்சமாகவும் “ என்றுவிதி கூறி , முற்று எச்சமாக  நின்றது என்பர் நன்னூலார் . இறைவன் ஞானாசிரியன் உருக்கொண்டு , வலிய வந்து தம்மை  ஆட்கொண்டு அருளியதை நின்னைந்து , “வந்தனை  ஆட்கொண்டு “ என்றார். “பந்தமறும் எல்லையது பார்த்தினி திருந்தார் “ என்பது வாதவூரடிகள் புராணம் . கட்டறுத்து ஆட்கொண்ட பின்னரேஅடிகளின் உள்ளத்தே இறைவன் புகுந்தானாம் . உட்புகுந்த செய்தி , “நூலே நுழைவரியான் நுண்ணியனாய்  வந்தடியேன் , பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால்” என்பது முதலிய பல திருப்பாடல்களினும் காணலாம். புகுந்தன் உண்மை மேலே விளக்கப்பட்டது, கடலாகவும்  மலையாகவும்  காடாகவும்  ஒப்புக் கூறப்பட்ட  இறைவன்  தன் பருவுருவை  நுண்ணிதாக்கித்  தம்முட் புகுந்து, ஒரு மாய  வித்தை  என்பார், “புகுந்த  விச்சை”  என்றார். விச்சை  –  வித்தை ; வியக்கத்தக்க செயல் .

             மால் – அவா. கண்டாற்கு அச்சத்தை விளைவித்தல் . கடைந்தெடுக்கும் உழைப்பிற்குத்  தக நஞ்சத்துடன் சிறிது அமிழ்தத்தை யளித்தல் , ஊழின் இறுதியில் ஒடுங்கிச் சுருங்குதல் , இவையெல்லாம் பெளதிகக் கடலுக்கு உள்ளன. இச்செயல்களுக்கு  மாறாக , மெய்யன்பினால் கண்டாற்கு  மேன்மேலும் விருப்பத்தை விளைத்தல் , முற்றும் அமிழ்த மயமாதல் , எக் காலத்தும் சுருங்காமல் ஒரேபடியாக நிறைந்திருத்தல் என்னும் இவ்வியல்புகள் இறைவனுக்கு உள்ளமையால், “மால் அமுதப்  பெருங்கடலே” என்றார். கருணையை நீர்ப்பெருக்காகக் கொண்டு , அதற்கு இடனாதல் பற்றி, இறைவன் கடல் என்னப்பட்டான் . “பரங்கருணைத் தடங்கடலை “ என்பதும் ஈண்டு  நினைக்கத்தக்கது . கடலுக்குச் சலித்தல் உண்மையானும் ,இறைவன் சலிப்பறியாத் தன்மையன் ஆதலானும் , அவ்வியல்பை விளக்குதற்கு , “மலையே” என்று  கூறினர் . இறைவனுடைய திருமுகம் , கண் , வாய், கை , கால்  முதலிய  உறுப்புக்களுக்கெல்லாம்  செந்தாமரை  மலர் ஒப்புக்  கூறப்பட்டமையால் , “செந்தாமரை காடனைய மேனி” என்றார். கடல் நெய்தலையும்  , மலை  குறிஞ்சியையும் , தாமரை  மருதத்தையும் , காடு  முல்லையையும்  உணர்த்தலின் , காணப்படும்  நானில வடிவமும்  இறைவன் திருமேனியையே நினைவுறுத்தும் என்பது  புலப்படுக்கப்பட்டபடியாம் .

காலையே போன்றிலங்  கும் மேனி  கடும்பகலின்

வேலையே  போன்றிலங்கும்  வெண்ணீறு  –  மாலையின்

தாங்குருவே  போலுஞ்  சடைக்கற்றை  மற்றவர்க்கு

வீங்கிருளே  போலு  மிடறு “

என்புழி, கால  வகைகள் இவ்வாறு  நினைவுறுத்தும் என்ற அம்மை அருளியது  போலவெனக் கொள்க. முதல் கரு , உரி என்னும் மூவகைப்  பொருள்களுள் , முதற் பொருள் நிலமும் பொழுதும் ஆகும் . ஆகவே ஈண்டு நில உருவமாக அடிகளும் , ஆண்டுப் பொழுது வடிவமாக அம்மையும் கூறியது அறிந்து இன்புறத்தக்கது .

               பிற பொருள்களை அநுபவித்தற்கு  உதவியாதலோடு , தன்னையே  அநுபவித்தற்கும் தருதல் பற்றி , “தனிச் சுடரே” என்றார் . ஒரு விளக்குப் பிற  பொருளைக் காண்டற்கு உதவி புரியுமேயன்றித்  தன்னைத் தொட்டாற் சுடும் என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இனித் தம் மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களையும் இறைவன் தனக்குரிமை யாக்கிக்  கொண்ட செய்தியை அடிகள் அருளிச்செய்கின்றார். எண்ணம்  இல்  வழி  நிகழும்  செயலும்   மொழியும் சிறந்த பயனை விளையாவாதலின் , முதலில்  நினைவு  எல்லாம்  தன்னைப்  பற்றியே  நிகழுமாறு  உபகரித்ததைப் புலப்படுத்துவாராய்  , “சிந்தனை நின் தனக்காக்கி “ என்றார் . கண்  முதலியவற்றைக் குறித்துக் கூறுங்கால் ,திருவடி , உறுப்பு முதலியவற்றிற்கு ஆக்கி என்று  கூறியது போல் , சிந்தனையை  ஏதேசப்படுத்தாமல்  “நினக்கு” என  முழுதையும் புறித்து , இறைவன் திருவுருவத்தை  மனம் இடையறாது  தியானித்தல் வேண்டும் என்பதும் , அந் நினைவின் நின்றே  கண் முதலிய உறுப்புக்கள்  திருவடி முதலியவற்றைப் பற்றி நிற்றல் வேண்டும்  என்பதும் கருதியாம் . ஆக்குதற்கு வினை முதல் இறைவனாவான் . பின் வருவன வற்றிற்கும்  ஈது  ஒக்கும் .

            அன்பர் செய்யும் வழிபாட்டிற்கு  இரங்கி , அவர்க்கு  இறைவனே  தன்னை நினையத் தருதல் வேண்டுமென்பது  சைவ நூல்  துணிபு . “என்னை நினைந் தடிமை கொண்டேன்  இடர்கெடுத்துத் , தன்னை நினையத் தருகின்றான் “ என்னும்  சைவாசிரியர்  அநுபவ  உரையானும் அறிக. உடற்பணிகளுள் சிறந்தன கண்களால் காண்டலும் , கைகளால் தொழுது தலையால் வணங்கலுமாம் . தொழுதல் வணங்குதல் இரண்டும் வந்தனை என்னும் சொல்லற் பெறப்படும் . காண்டல் வந்தனை என்னும் இரண்டனுள் . முன்னதனைக் கருவியாற் பெற வைத்தார் ; காட்சி  “ஐம்புலங்களார “ என்பதனாலும் பெறப்படுதலின் . “ஐம்புலங்களார “ என்பதனாற் பெறப்படுவதை ஈண்டுங் கூறியது ஒரு நயம் பற்றி.  அஃது இன்னதென்பது பின்னர்  கூறப்படும் . இறைவன் திருவுருவம் முழுதும் காண்டற் குரியதாயினும் , திருத் தொண்டில் ஈடுபட்டவர்க்குத் திருவடிக்  காட்சியிலே கண்கள் ஈடுபடுதலும் ,வந்தனை அத் திருவடியைக்  குறித்தே செய்யப்படுவ தென்பதும் முறையாகும் . இம் மரபு வழாது இறைவன் உபகரித்த இயல்பை நினைந்து , “கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்காக்கி “ எனவும்,  “வந்தனையும்  அம்மலர்க்கே யாக்கி” எனவும்  கூறியருளினர் .

                    வாயில் நின்றும் பேச்சு வெளிப்படுமாயின் அப் பேச்செல்லாம் இறைவனுடைய புகழ் வடிவமாகவே  யாகும்படி  உபகரித்ததைக் கருதி ,  “வாக்குன் மணி வார்த்தைக் காக்கி “ என்றார். “ மாசில் மணியின் மணிவார்த்தை , பேசிப் பிறப்பறுத்தேன் “ என்பதும் அடிகள் திருவாக்கு . வார்த்தை ஈண்டுப்  புகழ்மொழி  என்னும் பொருட்டு , பொருள் ஒளிமிக்க புகழ் மொழியாதலின் , “மணிவார்த்தை” என்னப்பட்டது. மற்றைத் தேவர் மக்கள் முதலியோரைப்பற்றிய  புகழுரைகளெல்லாம்  பொருள் இல்லாதன என்பதும் , “இறைவன் பொருள் சேர் புகழ் “ என்னும் பொருளுரையானும் “இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரை உடையரெனக்  கருதி  அறிவிலார் கூறுகின்ற புகழுரைகள் பொருள்சேரா வாகலின் , அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது. “ என்னும் பரிமேலழகர் உரையானும் உணரத்தக்கன . இறைவன் பொருள்சேர் புகழ் சிறந்த மாணிக்கத்தைப் போலப் பொருள் ஒளி மிக்கு, அடிகள் திருவாக்கினின்று  வாசக  வடிவமாக வெளிப்பட்டது குறித்தே , அடிகள்  “மாணிக்கவாசகர் “ என்று அழைக்கப்பட்டனர்  போலும் .

                    கன்மேந்திரியம்  ஞானேந்திரியம்  இரண்டிற்கும் இடனாகிய  நா  ஈண்டுக்  கன்மேந்திரியமாக  கொண்டு  “வாக்கு” எனப்பட்டது. சிந்தனை முதல் வாக்கு வரை கூறப்பட்ட செய்திகளில் , இறைவன் திருவுருவத்தை நினைதலும் , காண்டலும் , தொழுது வணங்கலும் , புகழ்ந்து பாராட்டலும்  முறையே நிகழும் உண்மையும் , அந் நிகழ்ச்சிகளால்  கரணங்கள் மூன்றையும் இறைவன் தன்வயமாக்கிய செய்தியும் புலனாதல் அறிக. “இரண்டும்  இல் “ என்பதற்கு , நல்வினை  தீவினை  யில்லாத எனவும், இம்மை  மறுமை  இல்லாத எனவும்  கூறுவாரும் உளர் . அவையற்றநிலை , வீடு பெறுதற்குரியதாதலின் , அத் தகுதி தமக்குள்ளதென்று  அடிகள் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் இயல்பினர் அல்லர் என்பதையும் , தகுதியில்லாத நிலையில் ஆண்டவன் தம்மை ஆட்கொண்டனன்  என்பதே  ஈண்டு அடிகள் கருத்தாதலையும்  உணரின் , அக் கருத்துப் பொருத்தமாகாதென்பது புலனாம் , ஆகவே , அடிகள் “கற்றறியேன் கலைஞானங்  கசிந்துரு கேனாயிடினும்” என்று  பல இடங்களிலும் நூலறிவும் அநுபவ வுணர்வும்  இல்லாதவன்  எனத் தம்மைக்  கூறிக்கொள்ளுவராதலின், அவற்றையே இங்கே , “இரண்டு மில் “ என்பதனாற்  குறிப்பிட்டுள்ளார்  எனக்  கோடல் பொருத்தமாதல் அறிக. நூலறிவாகிய  அபர ஞானமும் , அநுபவ உணர்வாகிய பரஞானமும் இல்லாத நிலயில்  அருள்புரிந்த ஆண்டவன் அருள்திறமே  ஈண்டு  வியக்கத்தக்கதாயிற்று என்பது .

       “தனியன்” என்பது திருவருட்பேற்றிற்குரிய சாதனத் துணையற்றவன்  என்னும்  பொருட்டு .  இறைவனது பேரின்பப் பெருஞ்செல்வத்தை நுகர்தற்கு வாயில் மெய்யுணர்வேயன்றிப் புலங்களாகா. புலன்களால்  நுகரப்படுவன வெல்லாம் சடப் பொருள்களைப் பற்றினவே.  இவ்வுண்மையை , “பூண்ட  ஐம்புலனிற் புலப்படாவின்பம்  புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க “ என்னும்  தம்பிரான் தோழர் அநுபவத்தாலும் அறியலாம் . அங்ஙனமாகவும், இங்கே, “ஐம்புலங்களாரத்  தந்தனை” யென்றது . இறைவன் தமக்கு எளிமையில்  செய்த கருணையைக்  குறித்தாம் . ஆண்டவன்  அருட்கடலில் மூழ்கினார்க்கு , மெய்யுணர்விற்கு  நேர்படும் சிவபோகம் . இடையறாத புலனுகர்ச்சிக்கு  எளிவரும் உண்மையைத் தில்லக் கூத்தன்  தரிசனத்தில்  திருஞான சம்பந்தர் அநுபவத்தானும் உணரலாம்.   அவ்வநுபவ  நிலையை , “உணர்வின் நேர்பெறவருஞ் சிவபோகத்தை  யொழிவின்றி யுருவின்கண் , அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர வருளினை யெனப் போற்றி” என்று பெரிய புராணம் தெளிவுறுத்தமை  அறிக. ஐம்புலங்களும் நுகருமுறையை, “தலையே  நீ  வணங்காய் “ என்னும் தொடக்கத்துத்  திருவரங்க மாலையில்  அப்பர்  அருளிச் செய்தமையானும் அறியலாம்.  இனி, “ஐம்புலன்களார”  என்பதற்கு  ஐம்புலன்களும் உண்முகமாக நின்று அநுபவிக்க என்று பொருள்  கூறுதலுமாம் . இறைவனை உள்ளக்கமலத்து  எழுந்தருளிவித்து  புறப்பொறி வாயிலாக அன்றி, அகமுகமாகக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்றறிதல்  ஆகிய அநுபவம்  சிவயோகிகளுக்கு உண்டென்ப, அடிகளின் ஐம்பொறிகளும் நுகர , இறைவன் அருளிய பொருள் பிறிதொன்று அன்று; தன்னையே  யென்பது குறித்து , ‘ஆரத் தந்தனை” என்றார் . “தந்துன் றன்னைக்  கொண்டதென்றன்னை”  எனப் பிறிதோரிடத்துக்  கூறியதும் காண்க. ஆக்கியென்னும் செய்தென் எச்சங்கள்  நான்கும் , ஆர என்னும் செயவென் எச்சமும் , தந்தனை  யென்னும் முன்னிலை வினையைக் கொண்டு முடிந்தன .  

              இதன்கண் , மன மொழி மெய்களைத் தன் வயப்படுமாறு  செய்து , ஐம்புலன்களும் , ஆரத் தன்னையே  வழங்கினான் என்று கூறியமையால் , இறைவன் சுட்டுணர்விற்குப் புலப்படும் இயல்பு பெறப்படுமாயினும் , அம் முறையிலும் , உணர்வினேர்  பெற  வருஞ்  சிவபோக  மாதலின் , புலங்களின் முகமாக  மெய்யுணர்வை அருளியே  நுகர்வித்தமை  புலனாதலின் , சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றுதல் அறிக.  

                                            *******************************************\

பாடல் :27 .

தனியனேன் பெரும்பிறவிப்  பெளவத்  தெய்வத்

தடந்திரையால்  எற்றுண்டு  பற்றொன்  றின்றிக்

கனியைநேர்  துவர்வாயார்  என்னுங்  காலாற்

கலக்குண்டு  காமவான்  சுறவின்  வாய்ப்பட்

டினியென்னே  யுய்யுமா  றென்றென்  றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக்  கிடக்கின்  றேனை

முனைவனே  முதல்  அந்தம்  இல்லா  மல்லற்

கரைகாட்டி  யாட்கொண்டாய்  மூர்க்கனேற்கே.

கருத்துரை :-  மெய்யுணர்வினால் நுகரத்தக்க  சிவ போகத்தைத்  தம் ஐம்பொறி  அளவின் எளிதிற் பெற அருளிய  இறைவன்  கருணைத் திறத்தை  முன்னைத் திருப்பாட்டிற்  கூறிய அடிகள் , அங்ஙனம் இறைவன் அருளுதற்குத்  தாம் மேற்கொண்ட  சாதனம்  இன்னதென்பதையும் , அதனை  மேற்கொள்ளுங்கால்  தம் இயல்பு இருந்தவாறு  இங்ஙனம்  என்பதையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.

பதவுரை  :- முனைவனே  =  கடவுளே ,

தனியனேன்  =  யான்  உதவியற்றவனாய் ,

பிறவிப் பெரும் பெளவத்து  =  பிறவிப் பெருங்கடலில் (வீழ்ந்து) ,

எவ்வம் தடம் திரையால்  எற்றுண்டு  =  துன்பமாகிய  பெரிய  அலைகளால் அலைக்கப்பட்டு  ,

பற்று ஒன்று இன்றி  =  பற்றுக்கோடு  ஒன்றும்  இல்லாமல் ,

கனியை  நேர் துவர்  வாயார் என்னும்  காலால் கலக்குண்டு  = 

கொவ்வைப் பழத்தை ஒத்த சிவந்த வாயினையுடைய  மகளிர்  என்னும்  காற்றினால்  தடுமாற்றம் எய்தி ,

காமம்  வான்  சுறாவின்  வாய்ப்பட்டு  =  காமமாகிய  பெரிய  சுறாமீன்  வாயிற்  சிக்கி ,

இனி, உய்யும்  ஆறு  என்  என்று  என்று  எண்ணி  =  இந் நிலயில்  உய்தி பெரும்  நெறி என்னாம்  என்று  பல்கால்  நினைந்து ,

அஞ்சு எழுத்தின் புணை  பிடித்துக்  கிடக்கின்றேனை  =  திருவைந்தெழுத்தாகிய  தெப்பத்தைப் பற்றிக் கிடக்கின்றவனாகிய ,

மூர்க்கனேற்கு  =  மூடனாகிய  எனக்கு ,

முதல்  அந்தம்  இல்லா  மல்லல்கரை  காட்டி  ஆட்கொண்டாய்  =  தோற்றக்  கேடு  இல்லாத  வளமிக்க  முத்திக்  காரையைக்  காட்டி   ஆட்கொண்டு  அருளினை  (நின் அருட்பெருமை யென்னே)  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்னும் சொற் பற்றி  24 ஆம்  திருப்பாட்டில் விளக்கக்குறிப்புக்  கூறப்பட்டுள்ளது. கடலில் வீழ்வான் ஒருவனுக்கு அப்பொழுது உதவி புரியத் தக்கார்  யாரேனும் அருகில் இருப்பாராயின் , எவ்வழியானும் முயன்று  கரையேற்றவும் கூடும்.  வினைக்கீடாகப்  பிறவிக் கடலில்  வீழும் தமக்குத் துணைபுரிவார் ஒருவரும் இலர் என்னும் கருத்தால், “தனியனேன்” என்றார்.  தனிமை – உதவியற்ற நிலை . உயிர்க்கு உயிராக விளங்கும் இறைவன் துணையுளதே  எனின் , வினைக்கீடாக  மாயையினின்றும்   உடல் முதலியவற்றைக் கொடுத்துப் பிறப்பிற் செலுத்துவது,சிவசத்தியாதலின் , அது  கருதத்தக்கதன்று . ஈண்டுக்  குறித்தது பிறிதொரு துணையை என்க. உயிர்களைப் பிறவியிற் செலுத்தல் இறைவன் கருணைக்கு இழுக்கு ஆகாதோ எனின்,  பாச  நீக்கஞ் செய்து  வீட்டின்பப் பேற்றிற்கு  உரிமையாக்க வேண்டுமென்பதே இறைவன் திருவுள்ளமாதலின் இழுக்காகாது என்க .”பிறவிப்  பெளவம் “என்னாது , “பிறவிப் பெரும் பெளவம்” என்றது . பெளதிகமாகிய கடலினின்றும் பிறவிக் கடலுக்குள்ள  சிறப்பு நோக்கியென்க . என்னை சிறப்பு எனின் , “பிறவிப்பெருங்கடல் “ என்புழி, “காரண காரியத் தொடச்சியாகக் கரையின்றி வருதலிற் பிறவிப் பெருங் கடல் என்றார்” என்று பரிமேலழகர்  கூறியதே  சிறப்பென்க . காரண காரியத் தொடர்ச்சி பிறவிக்கு உண்டு . முன்னைப்  பிறப்புப்   பின்னைப் பிறப்பிற்குக்  காரணமாதலும் , இங்ஙனமே தொடர்ந்து வருதலுங் காண்க . கரையின்மை – வரம்பு இல்லாமை . உயிர்  வீட்டு  நிலை எய்துங்காறும்  பிறப்பு உண்மையின் அளவிலதாதல்  வருதல் – மேன் மேலும்  வந்து கொண்டிருத்தல் , இம் மூன்றும் பெளதிகக் கடலுக்கு  இல்லை; காரண  காரியத் தொடர்ச்சி இன்மையும் , கரை உண்மையும் , ஒரே  நிலையில் நிற்றலும்  , அதன்கட்  காணப்படுதலின். இதனாலே  பிறவிப் பெருங்கடல்  என்னப்பட்டதென்பது  கருத்து . வீழ்ந்தார் உய்தி  பெற்றுக் கரையேறுதல்  அருமை  கருதிப் பிறப்புக்  கடலாகக்  கூறப்பட்டது .

               தடந் திரையால்  எற்றுண்ணப்  படுதல் , வீழ்ந்தபின்  நிகழ்வதாகலின், “வீழ்ந்து”  என்பது  வருவித்துரைக்கப்பட்டது . கடலிற்  காணப்படும்  அலைகள் பெரியனவும் சிறியனவுமாகப் பல உள்ளன . அவற்றுட்  பேரலைகள் துன்ப மயமாகவே  உள்ளன என்பார், “எவ்வத் தடத்திரை “ என்றார் . வினைக்கு  ஈடாகவுள்ள பிறப்பில்  தீவினைப்பயன் துன்பமே , நல்வினைப்பயன்  இன்பமாயினும் , சிற்றளவினதாக  நின்று , மீண்டும்  பிறத்தற்கு ஏதுவாகிப்  பேரின்பத் திற்குத்  தடையாய்  முடிதலின் , அதுவும்  துன்பமாகவே கருதப்படும். ஆகவே  பேரலைகளைப் போன்ற துன்பங்களும் , இடையிடைய  சிற்றலைகளைப் போன்ற  அழியும் இயல்பினவாகிய  இன்பங்களும்  உளவாகிப் பிறவியுட்பட்ட  உயிர்களை  அலைக்குமென்பது கருத்து . இங்ஙனம் தாக்கப்படுதலையே , “திரையால்  எற்றுண்டு”  என்றார் .கடலுள்  வீழ்ந்தானொருவன்  அலைகளால் அங்கும் இங்கும்  அலைக்கப்படுங்கால் , பற்றுக்கோடு  ஒன்று  கிடைப்பினும்  ஒரு கால் உய்தி பெறலாகும் . அதுவும் இன்று  என்பார், “பற்றொன்றின்றி “ என்றார்.  நீர்  எப்பொழுதும் சலிக்கும்  இயல்பினது . கடல் அலைக்கோ அசைவு  மிக வுண்டென்பது சொல்ல வேண்டியதின்று .  அம் மிகுதியான  அசைவுக் காற்றும் உதவி  புரியுமானால்  அலைகளின்  கடுமை  மிகப் பெரிதாகும். அப்பொழுது வீழ்ந்தவன்  படும்பாடு  பெரிதாகுமன்றோ ? அந் நிலையே  தமக்கும் ஆயிற்றென்பார், “காலாற்  கலக்குண்டு “ என்றார்.  கால் – காற்று,  மகளிர்  காற்றாக  உருவகிக்கப்பட்டனர் ; பிறப் பிற்பட்டுப்  பழவினைப் பயன் நுகர்ச்சியில் தலைப்படுங்கால் ,வந்தேறும் புதிய கன்மங்களுட் பெரும்பாலான  மகளிரைப் பற்றியே உள்ளன வாதலின் . “கனியை நேர் துவர்  வாயார்” என்றது கலக்கம் எய்துதற்கு ஏதுக்காட்டிய படியாம் . கனி, இயைபு நோக்கி ஈண்டுக்  கொவ்வைப் பழமாகக்  கொள்ளப்பட்டது.  ஆடவர்  மயங்குதற் குரிய இனிய  சொற்கள் தோன்றுதற்கும்  வாய்  இடனாதல்  பற்றி, “கனி” ஒப்புக்கூறப்பட்டதெனினும் ஆம் . ஞானேந்திரிய  கன்மேந்திரியங்கள்  இரண்டிற்கும் உரிய இடம் வாயாதலால் , அவ்விருவகைக் கருவிகளாலும்  கலக்கம்  உறுத்தலைப்  புலப்படுக்கக்  “கனியை நேர்  துவர்  வாயர் “ என்னப்பட்டனர் .

            மகளிர் காட்சியாற்  கலக்கம் எய்தினார் , காமத்தில்  சிக்கி  உழல்வரா தலின் , “காமவான் சுறவின் வாய்ப்பட்டு “ என்றார்.  வான் சுறவு  –  பெரிய சுறாமீன் . தன்வாய்ப்பட்டார்  ஊனுடலை உண்டு உயிரைப் பற்றாது விடும் கடற் சுறவு போலாது , காமச் சுறவு , தங்கட் பட்டார் உடலோடு உயிரையும் உண்ணும் என்பது தோன்ற , “வான் சுறவு “  என்னப்பட்டது . “உயிர் உருக்கிக் குடிக்குங்  கூளி………..கடிய காமம்” என்றார் பிறரும் . தீவினையாக  நின்று  , பிற்பிறப்புக்களிலும்  உயிரைத் துன்புறுத்தும் என்பது கருத்து . பழ வினைக்கு  ஈடாகப்  பிறந்தார்க்கு , நுகரப்படுவதும் , ஈட்டப்படுவதும் , சேர்க்கப்படுவது  மாகிய  முத்திற  வினைகளும் உளவென்பதை முறையே , “எவ்வத்தடந் திரையால்  எற்றுண்டு , “வாயார் என்னும் காலாற் கலக்குண்டு” , “காமவான்  சுறாவின் வாய்ப்பட்டு” என்பன குறிப்பிற் புலப்படுத்து  நிற்றல் அறிக . எவ்வம் வினைப்பயனாதலின் , பிராரத்தமாகிய  நுகரப்படுவதாதலும் , மகளிர் என்னும் காற்றால் கலக்கம்  எய்துதல் , ஆகாமியமாகிய  ஈட்டப்படுவது ஆதலும் , காமச்சுறவு வாய்ப்படுதல் ,சஞ்சிதமாகிய  சேர்க்கப்படுவதாலும்  புலனாதல்  அறிக . காமச் சுறவு வாய்ப்பட்டு என்றது , சஞ்சித கன்மம் பக்குவம்  ஆகுங்காறும்  நுண்ணியதாய்  மாயையில் அடங்கியிருக்கும்  உண்மையைக் குறிப்பிற் புலப்படுக்கும் . காமம் பொதுவாக எல்லாப் பொருள்களினும்  செல்லும்  அவாவாயினும் , சிறப்பாக மகளிரைப் பற்றி  நிகழ்வதைக் குறிப்பதாகும் . மண் , பெண் , பொன் என்னும் மூவகைப்  பொருள்கலினும் செல்லும் ஆசைகளுட் பெண்ணாசை வலியுடைத்து என்ப. “மண்ணாசை தன்னிற்  பொருளாசையின் மாய வாழ்க்கைப் பெண்ணாசை  நீங்கலொளிதோ பெரியோர் தமக்கும்”  என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார் . “நடுவணதெய்த  இருதலையும் எய்தும்” என்பது  ஈண்டு கருதத்தக்கது. என்னை ? பெண் விருப்பம்  காரணமாக மண் விருப்பமும்  பொன் விருப்பமும் உளவாதல் காணப்படுதலின் .

            அலையால்  மோதப்பட்டுக் காற்றால் கலக்குண்டு , சுறாவின் வாய்ப்பட்டதும் , வேறு நெறி  அறியப்படாமையின் , எவ்வாறு உய்தல் கூடுமெனப்பாம்பின் வாய்த் தேரைப்போலப் பற்பல விதமாக எண்ணலானேன் என்பார் , “இனி உய்யுமாறு என் என்று எண்ணி” என்றார். காமச்சுறா  சிறிது விழுங்கியும்  முழுதும் விழுங்காமலும் இருக்கும் நிலையில் , ஒரு தெப்பம் அடிகளுக்கு நல்லூழ் வயத்தால் அணிமையிற்  பிடிக்கக் கிடைத்ததாம் . அது திருவைந்தெழுத்தாகிய  தெப்பமாகும் . அத் தெப்பத்தைத் தொட்டதும் , காமச்சுறாவின்  ஆற்றல் குன்றிவிட்டதென்பதும் அதனால் முற்றும் விழுங்கப்படாமையும் குறிப்பிற் புலப்படும் . காம  முதலிய தீங்குகள் எல்லாம்  திருவைந்தெழுத்தால் நீங்கும் என்பதை,

விண்ணுற  அடுக்கிய  விறகின் வெவ்வழல்

உண்ணிய  புகில்  அவை  யொன்றும் இல்லையாம்

பண்ணிய  உலகினிற் பயின்ற  பாவத்தை

நண்ணிநின்  றறுப்பது  நமச்சி  வாயவே

என்னும்  தமிழ் மறையானும் அறியலாம். பிறவிக்கடலினின்றும்  கரையேறுதற்குத்  திருவைந்தெழுத்தே  சிறந்த தெப்பமாயிற்றாம் . ஆளுடைய அரசு , கல்லோடு  பிணித்துக்  கடலில்  வீழ்த்தப்பட்டஞான்று , அவரை  அஞ்செழுத்து  அருமறை  கரையேற்றிய  செய்தியைக்  கூறுங்கால்,

இருவினைப் பாசமும்  மலக்கல் ஆர்த்தலின்

வருபவக்  கடலில்வீழ்  மாக்கள்  ஏறிட

அருளுமெய்  யஞ்செழுத் தரசை  யிக்கடல்

ஒருகல்மேல்  ஏற்றிடல்  உரைக்க வேண்டுமோ

என்று  அருண்மொழித் தேவர்  பாராட்டியதும்  ஈண்டு  கருதத் தக்கது . காமச் சுறாவின் வாய்ப்பட்டதும், இறைவன் திருவருள்கூட்டுவிக்க,அஞ்செழுத்     தாகிய  தெப்பத்தைப் பற்றினேனாக , அந் நிலையில்  சுறவு வலியிழந்து ஒழிய , அப் புணையையே  துணையாகக் கொண்டு கிடக்கின்றேன் என்பார் , “புணைபிடித்துக் கிடக்கின்றேனை” என்றார் . தெப்பத்தைப்  பிடித்தும் அதனைச் செலுத்திக்  கரை சேரலாமே , ஏன் அங்ஙனம் முயலவில்லை என்பதற்கு விடையாக ,  “மூர்க்கனேற்கு”  என்றார்.  திருவருள் துணையால் பிடித்ததே  அன்றிக், கரை சேர்தற்குரிய  அறிவாற்றல் தமக்கு  இன்று  என்பது புலப்படுக்க , அடிகள் தம்மை மூர்க்கன்  என்று  குறிப்பிட்டுள்ளார் . உலகியல்  நோக்கி  இவ்வாறு தம்மைக்  கூறிக்கொண்டனர்  போலும் .  

              அடிகள் அஞ்செழுத்தை  நெஞ்சழுத்தியதும் , மூவகைக்  கன்மங்களும் அழிந்து ஒழிந்தன வென்பதும் , வீட்டு நிலைக்குத்  தகுதியாயினாரென்பதும்  குறிப்பிற்  புலப்படுக்கப்பட்டபடியாம் . அஞ்செழுத்தின்  என்புழி இன்னும் கிடக்கின்றேனை  என்புழி ஐயும் சாரியைகளாம் . புணை பிடித்தல் தம் கடனாகவும்  , கரை சேர்தல்  இறைவன் கடனாகவும்  குறிக்கொண்டு  , “கரை  காட்டி” என்றார். அக்கரை சேர்த்தல் இறைவன் கடனாகவும் குறிக்கொண்டு , “கரை காட்டி “ என்றார். அக் கரையாவது , தோற்றக் கேடுகள் இல்லாத மிக்க வளம் பொருந்திய வீட்டின்பம் என்பது தோன்ற , “முதலந்தமில்லா மல்லற் கரை” என்றார் . மல்லல் – வளன் . வீட்டுநிலை , அழிவில் இன்பம்  ஆதலின் , “முதலந்தமில்லா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . மல்லல்  ஆகு பெயராக நின்று  , வீட்டு இன்பத்தை உணர்த்துவதாகும் .  கடலில் அலைப்புண்டு  தத்தளித்துக்  கிடப்பவனுக்கு வளம் பொருந்திய கரை இதோ உள்ளது என்று  காட்டுதல் முதலில் ஆறுதல் அளிப்பதாகும் . ஆதலால் , அங்ஙனம் காட்டிப்பின் ஆட்கொண்டு  கரை சேர்த்தனன்  என்பது தோன்ற , “மல்லற் கரை காட்டி  ஆட்கொண்டாய்” என்று  கூறி அருளினர் .

           இதன்கண், “முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி”  என்றதனால் , வீட்டு நிலை அவன் அருளே கண்ணாகக் கொண்டு  காணத்தக்கது  அன்றிச் சுட்டறிவினால் அறியத் தக்கது அன்று  என்பது  தெளியப்படுதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,எவ்வத் தடந்திரையும் , துவர்  வாயார் என்னும்  காற்றும் , காமவான் சுறாவும்  வெறுக்கத்தக்கனவாகக்  கூறப்பட்டிருத்தலின் , வைராக்கிய விசித்திரம்  என்னும்  சதம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                      **************************************************

பாடல் :28 .

கேட்டாரும்  அறியாதான்  கேடொன்  றில்லான்

கிளையிலான்  கேளாதே  யெல்லாங் கேட்டான்

நாட்டார்கள்  விழித்திருப்ப   ஞாலத்துள்ளே

நாயினுக்குத்  தவிசிட்டு   நாயி னேற்கே

காட்டா  தனவெல்லாங்  காட்டிப்  பின்னுங்

கேளா தனவெல்லாங்  கேட்பித் தென்னை

மீட்டேயும்  பிறவாமற்  காத்தாட் கொண்டான்

எம்பெருமான்  செய்திட்ட விச்சை தானே.

கருத்துரை :-  வீட்டு நிலைக்குச்  சாதனமாகிய திருவைந்தெழுத்தைத் தாம் கடைப்பிடித்தமையைப்  பற்றி முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அத் திருவைந்தெழுத்து ஓதுதலால்  தாம் பெற்ற பேற்றின் வகைகளையும் , அவற்றை இறைவன் தமக்கு அருளிச்செய்த முறையினையும்  இத் திருப்பாட்டில் விளக்கிக்  கூறுகின்றார்.

பதவுரை:-  கேட்டு  ஆரும்  அறியாதான்  =  கேள்வியளவில் யாரானும்  அறியப்படாதவனும் ,

கேடு ஒன்று இல்லான்  = கேடு சிறிதும் இல்லாதவனும் ,

கிளை இலான்  =  சுற்றத் தொடர்பு இல்லாதவனும் ,

கேளாதே  எல்லாம் கேட்டான்  =  பொறி வாயிலாகக்  கேளாமலே எல்லாவற்றையும் கேட்டவனும்  ஆகிய இறைவன் ,

நாட்டார்கள் விழித்திருப்ப  =   நாட்டில் உள்ளாரனைவரும்   சோர்தலின்றி  விழிப்புடையராக  இருப்பவும் ,

ஞாலத்து உள்ளே  =  இந் நிலவுலகத்தே ,

நாயினுக்குத் தவிசு  இட்டு  =  ஒரு நாய்க்குத் தவிசு  இட்டது   போல்,

நாயினேற்கு  =  நாய்த்தன்மையுடைய  எளியேனுக்கு ,

காட்டாதன  எல்லாம் காட்டி  =  காட்டக் கூடாதனவாகிய  எல்லாவற்றையும் காட்டியும் ,

கேளாதன  எல்லாம் கேட்பித்து  =  கேட்கப்படாதன  எல்லாவற்றையும்  கேட்க்கச் செய்தும் ,

என்னை  =  தகுதியில்லேனாகிய சிறியேனை ,

மீட்டேயும்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டான்  =  மீண்டும்  பிறவியிற்   புகாமல்  காப்பாற்றி  ஆட்கொண்டு  அருளினான் ,

எம்பெருமான் செய்திட்ட   விச்சைதானே  =  இஃது எங்கள் தலைவன் செய்த  மாயவித்தையே  யாகும்  என்பது .

விளக்கவுரை :-  கேடொன்றும் விழித்திருப்பவும் , காட்டியும்,கேட்பித்தும்  என்புழி  உள்ள  உம்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கன. தவிசிட்டு  என்புழி , உவம உருபை விரித்து , இட்டாங்கு எனக்கொள்க.  மீட்டேயும்  என்புழி   ஏ, தான் , ஏ  என்பனவும் அசைகளாகும் . கேட்டல் , ஈண்டு உரை யளவைக் குறிக்கும் .உரையளவையால் இறைவன் இயல்பை ஒருவாறு அறியலாமே யன்றி  முற்றும் உணர்தல் இயலாது .  “ கேட்பான் புகில்  அளவில்லை “என்பது தமிழ் மறை . மெய்யுணர்வில்  தலைப்படாதார் , நூற்கேள்வி அளவில் எத்துணை அறிவு படைத்தவராயினும் , இறைவனது உண்மை இயல்பை அறிதற்குரிய தகுதி இலராவர்  என்பது  தோன்ற , “கேட்டு ஆரும் அறியாதான்” என்றார் . உரையளவையால் முற்றும் அறியப்படுவன அழியும் இயல்பினவாகிய  மாயா  காரியப் பொருள்களேயாகும் . இவ்வுண்மை குறித்தே , இறைவன் கேள்வியளவில் அறியப்படான்  என்பதற்கு ஏது புலப்படுக்கும் முகமாக , “ கேடொன்றும்  இல்லன்” என்றார். ஒன்றும்  என்பது சிறிது என்னும் பொருட்டு . சைவசித்தாந்தம்  கூறும்  இறை , உயிர் , கட்டு  என்னும் முப்பொருள்களும் அழி வில் பொருள்கள் ஆயினும், அவற்றுள் உயிர்க்கு ஆணவ இயைபால்  அறிவு விளக்கத்திற்கு அழிவும் , வினைக்கு  ஈடாக  மாயையிலிருந்து கிடைக்கும் உடல் முதலியவற்றின் அழிவும்  காணப்படுதலானும் , கட்டின்  வகைகளாகிய ஆணவம் ,கன்மம் ,மாயை என்னும் இவற்றிற்கு , முறையே  ஆற்றல் , விளைவு  , காரியம்  என்னும்  இவற்றின் அழிவும் காணப்படுதலானும் , இறைவன் இயைபுகளுள்  எதற்கும்  அழிவு  கேட்கப்படாமையானும் , “கேடு  சிறிது  மில்லான்” என்று  கூறப்பட்டது.

       கிளை  –  தாய் , தந்தை , முதலிய  சுற்றம் . இறைவன் பிற உயிர்களுக்குச் சுற்றமாவானே  யன்றித் தனக்குச்  சுற்றமாக யாரையும் இல்லாதவன் என்பது தோன்ற , “கிளையிலான்” என்றார் . “எந்தையாய் எம்பிரான் மற்றியாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்” என்னும் அடிகள் திருவாக்கும் நோக்குக . “தனக்கு அஃதிலான் “ என்பது தனக்கு அச் சுற்றத் தொடர்பு  இல்லாதவன்  என்னும் பொருட்டு .

         “கேளாதே  யெல்லாங்  கேட்டான் “ என்பது , செவிப்பொறி வாயிலாக  அன்றித் தன் நிறைவியலால் எல்லாவற்றையும்  ஒரே காலத்தில் ஒருங்கு அறிபவன்  என்னும்  பொருளது . உபலக்கணத்தால்  காணாதே  கண்டான் என்பது முதலியவற்றையும் கொள்ளல் வேண்டும்  “பொறிவாயில் ஐந்தவித்தான் “ என்பது, பொறிவழியாக இல்லாத  ஐம்புலன்களையும்  அவித்தவன் என்னும் பொருள்படுதலால் ,இறைவன் அறிவு பொறிகளை வாயிலாக இல்லாதது என்பது போதரும் . இறைவனது இயல்பை விளக்கப் போந்த மறை முடிவில் ,”எல்லாவற்றையும் எப்பொழுதும் தானே  காட்சி யளவையில்  ஒருங்கு அறிகின்றான் “ என்று கூறப்பட்டுள்ளது . இதனால் உயிர்த் தொகுதிகளின் குற்ற நற்றங்களை உள்ளவாறு அறிந்தே அருள் செய்பவன்  என்பது விளக்கமாம் .

           நாடு  ஞாலத்தின் ஒரு பகுதியாகும் . அப் பகுதியில் உள்ள அன்பர்கள் பலரும் இப் பேறு நமக்கு எப்பொழுது கிடைக்குங்கொலோ என்று சோர்வின்றி விழிப்புடையராக இருப்பவும் ,அவரை விட்டு , அந் நாட்டுள் பிறந்த இழிபிறப்புடைய ஒரு நாய்க்கு அந் நாட்டில் உள்ளார் காணும் அளவில் அன்றி , அத்தகைய  நாடுகள் பலவற்றையும் தன்னுட்கொண்ட உலத்துள்ளார் யாவரும் காணும்படி தவிசிட்டுப் பொருட்படுத்தியது போல் என்பார், “நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசிட்டு” என்றார். நாய்க்குத் தவிசிடல் என்பதற்கு , நாயிருத்தற்குச் சிறந்த இருக்கையமைத்தல் என்றும் , யானையின்  மேலிடும் அழகிய  தவிசை நாயின் மேல் அமைத்தல்  என்றும் பொருள் கொள்ளலாம் . “நாய்மேல் தவிசிட்டு  நன்றாய்ப் பொருட்படுத்த , மேனியான்” என்பது அடிகள் மணி மொழி . “அடுகளிற் றொருத்தினிட்ட , வண்ணப்பூந்தவிசு தன்னை  ஞமலிமேலிட்ட  தொக்கும்” என்பர் சிந்தாமணி நூலாசிரியர் . இனி, நாட்டம் என்பது ஈறு தொக்கதாகக்  கொண்டு , வீட்டின்பத்திலே நாட்டமுடையார் பலரும் விழிப்புடையராக இருப்பவும் , அந் நாட்டம் சிறிதுமில்லாத  ஏழையேனை உலகம் அறியப் பொருட்படுத்து ஆண்டாய் என்று கூறினார் எனினும் பொருந்தும் . “நான்றனக்கு  அன்பின்மை நானுந் தானும் அறிவோம். தானென்னை ஆட்கொண்டது எல்லாருந்தாம் அறிவார்” என்னும் மணி மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது . நாயினேற்கே என்புழி ,ஏகாரம்  தேற்ற  பொருட்டு.

            உயிர்த் தொகுதிகளின் இயல்பும் , அவற்றை உடைமையாக  உடைய ஆண்டவன் இயல்பும் , கட்டறுத்து அப்பெருமான் திருவடிகளை அடையும் நெறியும் ஆகிய  இன்னோரன்னவைகளே காணாதனவும் கேளாதனவுமாம். கேட்டல் – அறிவியல் நூல்களின் வாயிலாகவும் , ஞானாசிரியன் உபதேசங்களானும்  ஆம். காண்டல் , அங்ஙனம் கேட்ட வழி அநுபவித்து உணர்தலாகும் . இவ்விரண்டனுள்ளும் , கேட்டற்குரிய தகுதியினும் காண்டற்குரிய தகுதி சிறந்த தென்பது எளிதில் அறியத்தக்கது. “ “இவ்வுண்மை குறித்தே , அடிகள் கேளாதன எனக் கேட்டற்கு வினை முதலாகத் தம்மையும் ,காட்டாதன எனக் காட்டற்கு வினை முதலாக இறைவனையும்  குறிப்பிட்டுள்ளார் .  கேளாதன கேட்பித்தலாவது , இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து , சிவ ஞான போத ஞான நூற்பொருளை  உணர்த்தித் திருவைந்தெழுத்தை  உபதேசித்ததாகும் .காட்டதன காட்டுதல் என்பது , அவ்வுணர்வு  உபதேசங்களின்படி அநுபவத்தல் ஆகும். “காட்டாதெனவெல்லாங் காட்டிச் சிவங் காட்டி “ என்னும்  மணி மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது. “ தம்மையுணர்ந்து  தமையுடைய தன்னுணர்வார்” என்புழித் தம்மை உணர வைத்தல்  காட்டாதன காட்டுதலும் , தம்மையுடைய தன்னை உணரவைத்தல்  சிவங்காட்டுதலும் ஆம் என்பது தெளிவாம் . கேளாதன கேட்பித்த பின்னரன்றே  காட்டாதன  காட்டுதல் முறையாகும். அங்ஙன மின்றிக் காட்டுதலை முன்னும் கேட்பித்தலை பின்னும் கூறியதன் கருத்து என்னை யெனிற் கூறுவேம். ஆண்டவன் அடிகளுக்கு முதலில் ஞான நூற் பொருளையும் , திருவைந்தெழுத்தையும் உபதேசித்து , பின்னர் அந் நெறியே ஒழுகுமாறு அநுபவ நிலையையுங் காட்டினானாக ,அவன் காட்டிய  வழியே அநுபவத்தில் தலைப்படுங்கால் , மேன்மேலும் தெளிவுறுத்தற் பொருட்டுப் பின்னும் உண்ணின்று உபதேசித்து உணர்த்தினான் என்பது  கருத்தாகலின் அவ்வாறு கூறப்பட்டதென்க . இவ்வுண்மை புலப்படுக்கவே , “ பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித்து” என்றார் . பின்னும் என்ற எச்சவும்மையால்  கேட்பித்தல் முன்னும் நிகழ்ந்த தென்பது தெளிவாம் .

         இங்ஙனம்  கேட்பித்தும்  காட்டியும்  செய்த உதவிகள் எல்லாம் யான்  மீண்டும் பிறவாமைப் பொருட்டாம் என்பது தோன்ற ,”மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் “ என்றார் .இறைவன் காப்பு , பிறப்பித்துக் காத்தலும், பிறவியிற் புகாதபடி காத்தலும் என இருதிறப்படும். பிறப்பித்துக் காத்தல்  கட்டறுத்தற் பொருட்டாம் . பிறவியிற் புகாதபடி காத்தல் , அழிவில் இன்ப நுகர்ச்சிப் பொருட்டாம். இவ்விரண்டனுள்ளும் சிறந்த காப்பைத் தகுதி யில்லாத  தமக்குச் செய்தான் என இறைவன் அருட் சிறப்பை அடிகள் வியத்த வாறிது . காத்தாட்கொண்டான் என்பதை , ஆட்கொண்டு காத்தான் என முன்னர்  உரைத்தாங்கு  உரைத்துக்கொள்க . காட்டாதன காட்டுதலும்,  கேளாதன கேட்பித்தலும் , உலகத்தில் மாயவித்தையால் நிகழும் செயல்களாதலின் , “எம் பெருமான் செய்திட்ட விச்சைதானே” என்றார். விச்சை என்பது உலகியல் முறையில் மாய வித்தையைக்  குறிக்கு மாயினும்,உண்மையாக நோக்குங்கால் , ஞானம் என்னும் பொருளுடைய தாகும் . எம் பெருமான் தன்னை அறிந்து அநுபவத்தற்கு  எனக்கு அருளிய ஞானசத்தியே இத்துணைப் பேறுகள் எல்லாவற்றிற்கும் காரணமாம் என்பது  முடிந்த பொருளாகும் .

            இதன்கண், “கேட்டாரும் அறியாதான்” என்பது முதலிய இறை யிலக்கணங்களும் , காட்டாதன முதலிய அனுபவ இலக்கணங்களும்  சுட்டி உணரப்படுவனவாக இல்லாமல், மெய்யுணர்வினால்  தெளியத்தக்கன  ஆதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .

                             ****************************************************

பாடல் :29 .

விச்சைதான்  இதுவொப்ப  துண்டோ  கேட்கின்

மிகுகாதல் அடியார்தம்  அடியன்  ஆக்கி

அச்சந்தீர்த்  தாட்கொண்டான்  அமுதம் ஊறி

அகநெகவே  புகுந்தாண்டான்  அன்புகூர

அச்சன் ஆண்  பெண்அலியா  காசம்  ஆகி

ஆரழலாய்  அந்தமாய்  அப்பால் நின்ற

செச்சைமா  மலர்புரையு  மேனி  யெங்கள்

சிவபெருமான்  எம்பெருமான்  தேவர் கோவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன் தமக்கு அருளிய பேற்றின் வகைகளையும்  முறையினையும்  கூறிய அடிகள் , அங்ஙனம்  தாம் பெற்ற பேற்றின் வகைகளுள்ஆண்டவன் தமக்குப் புறக்காப்பும்  அகக் காப்புஞ் செய்து ஆட்கொண்டு அருளியதையும் , அக் காப்புக்களால் தமக்கு விளைந்த பயன்களையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  அச்சன் ஆகி  =  எனக்குத்  தந்தையாய் ,

ஆண் பெண் அலியாகி  = அவன்  அவள்  அது  வெனும் உலகத் தொகுதியாய் ,

ஆகாசம்  ஆகி  = ஞானப் பரவெளியாய் ,

ஆர் அழலாய்  =  அரிய ஒளி வடிவாய் ,

அந்தமாய்  =  முடிவு  இடனாய் ,

அப்பால் நின்ற  =  அதற்கும் அப்பாலாக  நிலையுதல்  பெற்ற ,

செச்சை  மாமலர்  புரையும்  மேனி  =  வெட்சியின் அழகிய  மலரையொத்த  செம்மேனியை யுடைய ,

எங்கள் சிவபெருமானும் , எம் பெருமான்  =  எங்கள் தலைவனும் ,

தேவர் கோ  =  தேவர்களுக்குத்  தலைவனும்  ஆகிய  ஆண்டவன் ,

மிகு காதல் அடியார்  தம்  அடியன்  ஆக்கி  = மிக்க  மெய்யன்பினையுடைய  தன் அடியவர்களுக்கு  என்னை அடியனாகச் செய்து 

அச்சம்  தீர்த்து  ஆட்கொண்டான் =  பண்டை வாதனை இன்னும்  தாக்குங்கொலோ  என்னும்  அச்சத்தை  யொழித்து ஆளாகக் கொண்டான் ,

அமுதம்  ஊறி அகம் நெக  =  அமிழ்தம்  ஊற்றெடுத்து  நெஞ்சம் உருகவும்,

அன்புகூர  =  மெய்யன்பு  மிகவும் ,

புகுந்து  ஆண்டான்  =  என் உட்புகுந்து  ஆட்கொண்டருளினான் ,

கேட்பின்  =  இங்ஙனமாய  அப் பெருமான் செயலைக்  கேட்கப் புகின்,

இது ஒப்பது விச்சைதான் உண்டோ  =  இதனை ஒத்தாகிய  வித்தை  வேறுண்டோ (இல்லை) யென்றபடி  என்பது .

விளக்கவுரை :-   தான்  ,  அசை .  ஆகி  என்பது  முன்  ஈரிடத்துங்  கூட்டப்பட்டது.  அச்சன்  – அத்தன் ; தந்தை .  தந்தையை  அச்சன்  என்பது  குடநாட்டு  வழக்கு  . பின்னர்  ஆண் , பெண் , அலி  என்றதனால்  பெறப்படும்  உலகத்திற்கும்  தமக்கும்  தந்தை என்பது தோன்ற  , “அச்சன்”  என்றார் . ஆண்  பெண்  எனச்  சுட்டி  உணரப்படும்  உலகத்தொகுதியுட்பட்ட  தந்தையாவான் , தனக்குரிய  தந்தையைக்  குறிக்குங்கால்  மகனுமாவான் . இங்ஙனம்  தந்தையாம்  தன்மையும்  மகன்மையும்  மாறிமாறி   நிகழும்  முறைபற்றிய  தந்தை  போலாது  , எல்லாஉலகங்கட்கும்  தந்தையாவான்  என்பது  , பின்  உலக  உருவினன்  என்னும்  குறிப்பால்  உணரத்தக்கது . ஆண் , பெண் , அலி யாகி என்புழி ஆண் பெண் என்பன அவன் அவள் என்னும்  பொருளினவாகிய  உயர்திணையையும்  , அலி  என்பது  , அது  என்னும்  பொருட்டாகிய   அஃறிணையையும்   உணர்த்தும் .  ஆகவே , உயதிணையும்  அஃறிணையும்  கலந்து , அவன் , அவள் , அது  வெனச்  சுட்டியறியப்படும்  உலகத் தொகுதியுமாவான் என்பது போதரும்.  மாயா  காரியமாகிய  உலகின்  இயக்கம்  , இறைவனை  இன்றியமையாமையின் , அப் பெருமானை   உலகெலாமாயினான்  என்று  கூறுவர்.  “எல்லா உலகமும்  ஆனாய் நீயே” என்பது  தமிழ் மறை . இங்ஙனம் உலக உருவமாக இறைவனைக்  கூறியது  , உலகநிகழ்ச்சி  அவனையின்றி  நடைபெறாது என்னும்  கருத்தால் எனின், அப் பெருமான் உண்மை இயல்புதான்  எவ்வாறு  அறியத்தக்கது  என்பார்க்கு  விடையாக  ,”ஆகாசமாகி”  என்பது  முதலியவாகக்  கூறினர் . ஆகாசம்  என்பது  ஈண்டுத்  தகராகாசம்  எனப்படும்  நுண்ணிய  ஞானப்  பரவெளியாகும் . பூதாகாசம்  எனின்  “ ஆண் , பெண் , அலி “ என்னும் உலகத்  தொகுதியுள்  அடங்கும்  ஆதலின் , அஃது அன்றென்பது .  “ஆரழல்  “ என்பதற்கும்    ஈதொக்கும் . நெஞ்சத் தாமரை மலரை அலர்வித்து, அதன் நடுவண்  உள்ள  தகராகாசமாகிய  நுண்ணிய  ஞானப்  பரவெளியில் ஒளிவடிவமக  இறைவனைத்  தியானித்தல்  வேண்டும்  என்பது  மறை முடிவிற்  கண்டது . இதனைத் தகரவித்தை  என்ப . இவ்வுண்மையைப்  புலப்படுக்கவே , “ ஆகாசமாகி  ஆரழலாய்” என்றார்.  ஆர்  அழல்  – சிவ யோகிகளால் அன்றிக் காண்டற்கரிய ஒளியாகும்  . அழல்  ஆகு  பெயர் .  “ஒளியே  யுன்னையல்லால்”  எனவும் ,” பொங்கிய வொளியினீழற்   பொருவிலன் புருவமானார்” எனவும்  பெரியோர்  ஒளிவடிவாகக்  கூறிய உண்மையும் அறிக. நுண்ணிய ஞானப்  பரவெளி இறைவனுக்கு  இடனாயினும் , அதற்கும் , அதனுள் ஒளி  உருவமாக  விளங்கும்  இறைவனுக்கும்  வேற்றுமை  யின்மைபற்றி “ஆகாசமாகி ஆரழலாய்”  என்றார்.

             உலக வடிவமான  பருப்பொருளாகவும்  , நுண்ணிய  பரவெளியில்  ஒளி  உருவமாக  விளங்கும்  நுண்பொருளாகவும்  உள்ள அவ் இறைவனே  பேரூழியின்  இறுதியில்  எல்லாம்  ஒடுங்குதற்குரிய  முடிவிடனாகவும்  உள்ளான்  என்பது  தோன்ற  ,”அந்தமாய்”  என்றார் . அயன்  மால்  உருத்திரன்  என்னும்  அதிகார  தேவர்  மூவருள் ஒருவனாகிய  குணிருத்திரனும் , பிரகிருதி  புவனாந்தம்  ஒடுங்குதற்கு  முடிவிடனாகவுள்ளான்  ஆதலின் , அவனின்  நீக்குதற்கு   “ அப்பால்” என்றார். பரமசிவன்  அம்  மூவருள் ஒருவன்  அல்லன் என்றும் , மூவர்  கோனாகச்  சுத்த  மாயா  புவனாந்தம் ஒடுங்குதற்கு  இடனாக  நிற்பவன் என்றும்  மறையாகமங்கள்  கூறுவன .  இந் நிலையே  எல்லாவற்றிற்கும்  இறுதியான  இடம் .  எல்லாம் ஒடுங்கிப்  பரமசாந்தமான  நிலையில்   சிவபெருமான்  ஒருவனே தனியாக  நிலையுதலுடையனாய்  நிற்பன்  என்பது  தோன்ற  , “அப்பால்  நின்ற “ என்றார்.  இவ்வுண்மையை , “ஓதத்தொலி  மடங்கி  யூருண்டேறி   யொத்துலகமெல்லாம்   ஒடுங்கியபின் , வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  திருநாவுக்கரசர்  தேவாரத்தானும்   உணர்க .

            இத்துணை அரிய  பொருளாகவுள்ள  இறைவன்  மெய்யன்பர்க்கு  ஞானாசிரியனாக  உருவத் திருமேனி  கொண்டு  எழுந்தருளி  வந்து , எளியனாய்க்  காட்சி  நல்கும்  இயல்பைப்  புலப்படுத்துவார், “செச்சை மாமலர்  புரையும்  மேனி  எங்கள்  சிவபெருமான் “என்றார்.  வெட்சிமலர்  செவ்வண்ணமுடையது . மெய்யன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து  , “எங்கள்”  என்றார்.  சிவபெருமான்  என்றது  இன்பவடிவினன்  என்னும்  பொருட்டு.  இதனால் மெய்யன்பர்க்கு  அழி வில் இன்பம்  பயப்போன்  என்பது  புலப்படுத்தவாறாம் .  அன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து , எங்கள் என்று  பொதுப்படக்  கூறினாராயினும்  , தம்  சிறப்புரிமையையும்  புலப்படுத்த  ,எம்பெருமான்  என்றார் . மிகச்  சிறியேனாகிய  எனக்குத்  தலைவனாதல்   அவன்  பெருமைக்கு  இழுக்கன்றோ  எனின்  அவ்வாறு  எண்ணற்க; எல்லாத்தேவர்களுக்கும்  தலைவன்  அவனே  யாவான்  என்பார், “தேவர்  கோவே “  என்றார் .

              இனி,  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும்  நின்று  ஆட்கொண்டருளியதையும்  ,  அவ்வாட்சிகளால்  விளைந்த  பயன்களையும்  அடிகள் அருளிச்  செய்கின்றார்.  புறத்தே   நின்று  ஆட்கொண்டது  மெய்யன்பர்  கூட்டத்தில்  தம்மை இயைத்துப்  பணி  செய்வித்ததாகும் .  அத்தகைய   அன்பர்  பெருமையைப்  புலப்படுத்துவார்  , “மிகு  காதலடியார்”  என்றார் . மிகு  காதல்  வினைத் தொகையாதலின்  , ஒவ்வொறு  கணத்தும்  மேன்மேலும்  மிகுகின்ற  மெய்யன்பென்பது  .  அவ்வடியார்க்கு  அடியனாகச்  செய்தமையால்  விளைந்த  பயன் , பண்டைக்  கன்ம வாதனை  இன்னும்  தாக்குங்கொலோ  எனவும்  , அதனாற்  காம  வெகுளி  மயக்கங்களும்  அவற்றின்  பயனாக  மீண்டும்  பிறப்பிறப்புக்களும்  நேருங்கொலோ எனவும்  உண்டாகும்  அச்சத்தின்  ஒழிவாகும் .  மெய்யன்பராகிய  அடியார்  சூழலில்   இருப்போர்க்கு  இத்தகைய  அச்சம்  சிறிதும்  உண்டாகாதென்பது   தெளிவு. “பாசமானவை  பற்றறுத்  துயர்ந்த  தன்  பரம்பெருங்  கருணையால்  , ஆசை  தீர்ந்து  அடியரடிக்  கூட்டிய  அற்புதம்  அறியேனே”  என்னும்  மணி மொழியும்  கண்டு  நினைக்கத்  தக்கது .  இறைவனுடைய  திருக்கைகளுள்  ஒன்று  அபயக்குறிப்பும்,  மற்றொன்று  வரதக்  குறிப்பும்   உடையனவாகக்  காணப்படும்  உண்மையும்  நோக்குக .  நோயுடையயொருவற்கு  , முதலில்  அந்நோய்  தீர்க்கும்  மருந்தும்  ,  அதன்பின்  உடல்நலத்திற்கு   நல்லுணவும்  கொடுக்கப்படல்  வேண்டும் . அங்ஙனமே  பாசப்பிணிப்பிற்கு  அஞ்சி  வந்தவனுக்கு  முதலில்  அச்சத்  தீர்வும்  ,  பின்னர்  இன்ப  அன்பும்  அருளிக்  காப்பதே  முறையாகும் . உளம்  புகுந்து   செய்யும்  அக  ஆட்சியைத் தானும்,  புற  ஆட்சியைத்  தன்  அடியாரைக் கொண்டு  இறைவன்  செய்தது  உலகியற்கும்  ஒத்தது  ஆதல்  அறிக . இறைவனுக்கும்  அவன்  அடியார்க்கும்  வேற்றுமை   கருதலாகாதென்னும் உண்மையும்  இதனாற்  புலனாம் .  

                  இனி, அகத்தே  புகுந்து  ஆண்டதன்  பயனைப்  புலப்படுத்துவார், “அமுதம் ஊறி  அகம்  நெக  அன்புகூர” என்றார். திட்பமானதொரு  பொருள்  உருகினால்,  அப்பொருள்   இயல்பினின்றும்  வேறுபடாத  திரவப் பொருளாகவே   காணப்படும்  அன்றி  வேறாகாது . இங்கே  அடிகள்  உள்ளம்  குழைந்து  உருகுங்கால்   எங்ஙனம்  ஆயிற்று எனின் , அமுதம்  ஊற்றெடுப்ப  உருகிற்றாம் .  அடிகள்  தம்  உள்ளத்தை  , “இருப்பு  நெஞ்சம்  “  , “கன்நெஞ்சம்”  “நெஞ்சங்கல்லாம்”  என்று  பலவிடத்தும்  கூறியுள்ளார்  ஆதலின், அஃது  உருகுங்கால்  ,  இருப்பு  நீராகவும்    கல்நீராகவும்   காணப்பட  வேண்டும் .  அங்ஙனமின்றி ,  ஆண்டவன்  உட்புகுந்து  ஆண்டமையால்  , இருப்புத் தன்மையும் , கற்றன்மையும்  மாறி  அமிர்தமயமாக  ஆற்றெடுத்து   உருகிற்று   என்பார் , “அமுதம்  ஊறி  அகநெக  “  என்றார் .  உட்புகுந்தாண்டதன்  இயல்பு  முன்னர்  கூறப்பட்டது  காண்க .  உள்ளம்  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  மிக்கது  மெய்யன்பு  என்பார் .  “அன்பு  கூர” என்றர்  .  “பெறவே  வேண்டு மெய்யன்பு”  என்பது  அடிகள்  மணி மொழி.  “அன்பே  சிவமாவது  “  என்று  திருமந்திரம்  கூறியபடி  , சிவவடிவமாக  உள்ள  மெய்யன்பு  அகங்குழைந்து  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  வேரூன்றி  வளர்ந்ததென்பது  அடிகள்  அநுபவம் . “உரமென்னும்  பொருளானை  உருகிலுள்ளுரைவானை “  என்பது  தமிழ்  மறை  .  இங்ஙனம்  அமுதம்  ஊறி   அகம்  நெகவும் , அன்பு  கூரவும்  புகுந்து  ஆண்டான்  என,  அகவாட்சியும்  அதன்  பயன்களும்  தெளிவிக்கப்பட்டன  . இறைவனுடைய  இத்தகைய  செயலின்  அருமைப் பாட்டைக்   கேட்கப் புகின் , இதனை  ஒப்பதாகிய  வித்தைதான்  பிறிதொன்று  உண்டோ?  என  அடிகள்  பெருவியப்பு  அடைகின்றார்  .  வித்தை  அற்புத  உலகியற்  செயலாகிய  மாய  வித்தை  எனவும்  , சிவஞானம்  எனவும்  முன்னர்க் கூறப்பட்டது .  ஒன்றை உருக்கிப்  பிறிதொன்றாக்குதல்   முதலிய  அற்புதச்  செயல்களே  ஈண்டு  மாயவித்தைக்கு  எடுத்துக்காட்டாகும்  .  இனி,  ஞானமே  இறைவன்  சத்தியாதலின்  இறைவனது  பேர் ஆற்றலே  இந்  நிகழ்ச்சிகளுக்கு   எல்லாம்  கரணம்  என்பது  போதரும் . 

           இதன்கண், புறத்தே  செச்சை  மலர்  புரையும்  திருமேனியுடைய  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ஆட்கொண்டமையால் , இறைவன்  சுட்டுப்பொருளாகக்   காணப்படினும்  ,  அகத்தே  புகுந்தாண்டதும்   ஆகாசமாகி  ஆரழலாய்  அந்த  மாய  உண்மைத்  தன்மையும்  காணப்படுதலான், சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                                **************************************

பாடல் :30 .

தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்

செழும்பொழில்கள்  பயந்துகாத்  தழிக்கு  மற்றை

மூவர்கோ  னாய்நின்ற  முதல்வன்  மூர்த்தி

மூதாதை  மாதாளும்  பாகத்  தெந்தை

யாவர்கோன்  என்னையும்  வந் தாண்டு  கொண்டான்

யாமார்க்கும்  குடியல்லோம்  யாதும்  அஞ்சோம்

மேவினோம்  அவனடியார்  அடியா  ரோடும்

மேல்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே

கருத்துரை :-  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும் ஆட்கொண்டருளி யமையால்  விளைந்த  அச்சத்தீர்வும்  அன்பு  மிகுதலுமாகிய பயன்களை  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அப் பயன்களைத்  தாம் அநுபவித்த முறையையும்  , அங்ஙனம்  அனுபவித்தற்கு  ஏதுவாகவுள்ள இறைவனது  அளவிறந்த பெருமைகளும் இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்  =  விண்ணவர்க்கு  அரசனாகிய இந்திரனாலும்  அறியப்படாத  மகாதேவனும்  ,

செழும்  பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  =  வளம்  பொருந்திய உலகங்கள் அனைத்தையும்  படைத்துக்காத்து  அழித்தலைச் செய்யும் ,

மற்றை மூவர் கோனாய் நின்ற  முதல்வன்  =  அவனின் வேறாகிய  அயன்  திருமால்  உருத்திரன்  என்னும்  மூவர்க்கும்  தலைவனாக  நிலையுதல்  பெற்ற  முதற் பொருளும்,

மூர்த்தி  =  அவ் அயன் முதலியோர்  வடிவம்  எல்லாம்  தன்  வடிவாக  உள்ளவனும் ,

மூதாதை  =  பாட்டனும் ,

மாது  ஆளும் பாகத்து  எந்தை  =  உமையம்மையார்  ஆட்சிக்குரிய  ஒரு  கூற்றினையுடைய  என்  தந்தையும் ,

யாவர்  கோன்  =  எல்லோர்க்கும்  தலைவனும்  ஆகிய  சிவபெருமான்  ,

வந்து  என்னையும்  ஆண்டுகொண்டான்  =  வலிய  வந்து  மிகச்  சிறியேனாகிய  என்னையும்  ஆளாகக்கொண்டருளினான் ,

ஆதலால்  யாம்  ஆர்க்கும்  குடியல்லோம்  =  நாம்  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம் ,

யாதும்  அஞ்சோம்  =  எதற்கும்  சிறிதும்  அஞ்சுவேம்  அல்லேம் ,

அவன்  அடியார்  அடியாரோடு  மேவினோம்  =  அப் பெருமானுடைய  அடியார்க்கு  அடியாரோடு  பொருந்தினோம் ,

மேல் மேலும்  குடைந்து  ஆடி  ஆடுவோம்  =  மேலும்  மேலும்  இன்பவெள்ளத்தில்   மூழ்கித்திளைத்து  ஆடிக்  கூத்தாடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-   நல்வினைப்  பயனையே  நுகரும்  தேவர்கள் , அது  காரணமாக  இறைவன்  நம்மால்  எளிதில்  அறியத்தக்கவன்  என்று  எண்ணினாராக  , அவராலும், அவர்க்கு  அரசனாக  இருத்தலால்  மிகவும்  எளிமையில்  அறியலாம்  என்று  இறுமாந்த  இந்திரனாலும்  அறியப் படாதவன்  என்பது  தோன்ற , இந்திரன்  முதலிய  தனிப் பெயர்களாற்  சுட்டாமல்  , “தேவர்க்கோ  அறியாத”  என்றார். போக  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , யானே  எல்லோர்க்குந்  தலைவன்  என்று  செருக்குற்றிருந்த  இந்திரன்  அறியாமை  , கோனோபநிடதத்தில்  ஒரு  வரலாற்றில்  வைத்துப்  புலப்படுக்கப்பட்டுள்ளது . அவ் உபநிடத்தில்  பரமசிவன்  , இயக்க  உருவம்  தாங்கி  வந்து  , ஒரு சிறு  துரும்பை  நட்டு  , அதனை  அசைத்தவர்  முதற் பொருளாவார்  என்று  கூறியதாகவும்  , இந்திரன்  முதலிய  தேவர்  எல்லோரும்  மிக  முயன்றும்  , அங்ஙனம்  செய்ய  இயலாமலும்  , அவ்  இயக்கனை  இன்னான்  என்று  அறியாமலும்  மயங்கி  நிற்குங்கால் , அப் பெருமான்  மறைந்து  விட்டதாகவும் , மயங்கி  நின்ற  இந்திரனை  நோக்கி, அப்  பெருமானுடைய  சத்தியும்  இமவான்  புதல்வியும்  ஆகிய  உமையம்மையார்  , விண்ணில்  வெளிப்பட்டு  , “இவ்வியக்கன்  பிரமம்” என்று  கூறிச்  சிவபிரானது  பரம்பொருள்  தன்மையை  வெளிப்படுத்தியதாகவும்  கூறப்பட்டுள்ளன . தேவருள்  வீரிய  பலத்திற்  சிறந்தவன்  இந்திரன்  ஆதலால், அவன்  முகமாகக்  கோனோபநிடதத்தில்  இவ்வுண்மை  தெளிவிக்கப் பட்டுள்ளது . ஆதலின், ஈண்டும்  அடிகள்  ,”தேவர்கோ  அறியாத  தேவதேவன்” என்று  அருளிச் செய்தனர் .

       மக்களை  நோக்க  இந்திரனும்  அவனுக்கு  உட்பட்டாரும்  தேவராதல்  போல , அத் தேவரை  நோக்கச்  சிவபெருமான்  தேவதேவன்  ஆவான்  என்பதாம்  ; இது  பற்றியே  மகாதேவன்  என்றும்  கூறப்படுவன் . இனி, அத் தேவ தேவர் என்னும்  வரிசையில்  வைத்து, அயன்  மால்  உருத்திரன்  என்னும்  இவரும்  எண்ணப்படுதலால் , அவருள் ஓருவனாகிய  உருத்திரனைப்  பரமசிவன்  என்று  அறியாமல்  எண்ணுவார்க்கு , பரமசிவன்  அவ்  உருத்திரன்  அல்லன்; அம் மூவர்க்குந்  தலைவனாவான்  என்பது  தோன்ற  , “செழும் பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  மற்றை , மூவக்கோனாய்  நின்ற  முதல்வன்” என்றார் . பொழில்  என்பது  உலகம்  என்னும்  பொருட்டு  .  பல வாகலின்  ,”பொழில்கள்” எனவும்  மக்கள் தேவர்  முனிவர்  என்னும்  அறிவுடையாரையும்  தம்  அகத்துடைமையால் , “செழும்  பொழில்கள்”எனவும் கூறப்பட்டன. உலகம்  என்பது  இடத்தையும் ,அதன்கண்  வாழ்வாரையும்  உணர்த்தும் . அறிவுடைப்பொருள்  உண்மையைத்  தெளிவுறப்  புலப்படுத்தற்குச்  “ செழுமை” என்னும்  அடைபுணர்க்கப்பட்டது  என்க .  பயந்து  காத்து  அழிக்கும்  மூவர்  முறையே  அயன்  திருமால்  உருத்திரன்  என்பார்  ஆவர். மற்றை  என்பது  இந்திரன்  அல்லாத  என்னும்  பொருட்டு  , ஈண்டுக்  கூறிய  உருத்திரன்  , பிரகிருதி  புவனாந்தம்  சங்கரிக்கும்  குணிருத்திரன்  ஆவன்.  சுத்த மாயாபுவனாந்தம்  சங்கரிக்கும்  மகா  ருத்திரனே  பரமசிவனாவன் . இவ்வுண்மையை  , “நம்மவரவரே , மூவரென்றே  யெம்பிரானொடு மெண்ணி  விண்ணாண்டு  மண்மேல் , தேவரென்றே  இறுமாந்து  என்னபாவம்  திரிதவரே” என்று  அடிகளும் , “தேவரில்  ஒருவெனென்பர்  திருவுருச்  சிவனைத்  தேவர் , மூவராய் நின்ற தோரார் “ என்று  சிவஞானசித்தியும்  கூறியவற்றானும்  அறிக . சிவஞான போதம்   முதற் சூத்திரப்  பேருரைத்  தொடக்கத்தில் , மாதவச்  சிவஞான முனிவரர் இதனைத்  தடை விடைகளில்  வைத்து  விளக்கியிருத்தல் ஆண்டு  அறியத்தக்கது . அயன்  முதலிய  மூவரும்  அவ்வத் தொழில் நிலை பற்றித்  தலைவராக  எண்ணப்படினும்  , அவர்  எல்லோர்க்கும்  அத் தகுதிகளை  அளித்துத் தொழில்  புரிவிக்கும்  பெருந்தலைவன்  சிவபிரான்  ஆதலின், “மூவர்கோன்”  என்றார் . “மூவண்ணல்தன்  சந்நிதி  முத்தொழில்  செய்ய  வாளா ,  மேவண்ணல்”  என்பர்  பெளராணிகர்  . படைத்தற்றொழில்  முதலியவற்றைச்  செய்யும்  தேவரனைவரும்  பேரூழிக்  காலத்தில்  இறைவன் பால்  ஒடுங்க , அவ்விரைவன்  ஒருவனே  நிலையுடைப்  பொருளாக இருத்தலின்  , மூவர் கோன் என்ற  அளவில்  அமையாது , “நின்ற  முதல்வன் “  என்றும்  கூறினர் .  நிற்றல்  –  அழிவின்றி ஏகனாக நிலையுதல் . மூர்த்தி  –  வடிவம் . மூவர்கோன் என்றதனால் , அயன்  முதலியோர்   இறைவனின்  வேறாவர்  என்பது பெறப்படுமாயினும்  , அவரெல்லாம் மூர்த்தியாகத்  தான்  மூர்த்திமானாக, அவர் உண்ணின்று  படைத்தல்  முதலியவற்றிற்கு  ஆற்றல்  அளிப்பவன்  என்பது  தோன்ற ,”படைத்தளித்த ழிப்ப   மும்மூர்த்திகளாயினை “ என்பது  ஆளுடைய  பிள்ளையார் அருளுரை.

                இனி,  பிரமன் முதலிய  அதிகார  தேவர்  அனைவரும்  பேரூழிக்  காலத்துத்  தம்மின்  மேற்பட்ட  தத்துவங்களின்  முறையே  ஒடுங்க , இறுதியில்  அவ்வெல்லாவற்றையும் ஒடுக்கி  நின்ற  இறைவன், ஒடுக்கியவாறே  மீளத் தோற்றுவித்தல் பற்றி, அத் தேவார்க்கு  “மூதாதை” ஆயினான்  என்பது. அங்ஙனம்  தோற்றுவிக்குங்கால் , சத்தியும் சிவமும் ஆக  நின்று  தோற்றுவிப்பவன்  என்பது  தோன்ற , “ மாதாளும்  பாகத்து  எந்தை” என்றார் . இறைவன்  சத்தியும்  சிவமுமான தன்மையின் உண்மை யிதுவே . “மாதாளும்  பாகத்து எந்தை” என்றதில் மற்றொரு  குறிப்பும்  உண்டு . அஃது  ஒரு  குழந்தை முதலில் தாயை  அறிந்து , பின்  அவளாற்  காட்டப்பட்டுத்  தந்தையைக்  காண்டல்  போல , முதலில் உமையம்மையை  உபாசித்து , அவள்  அருளால்  இறைவனைக்  காண்டல்  முறையாதலின் , அம் முறைப்படி  அடிகளுக்கு  உதவிய  தாயுடன்  கூடிய  தந்தை  ஆயினான்  என்பது . “இறைவன்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  ஒரு  சிறிதும்  இல்லாத  என்னையும்  வலிய  வந்து  ஆட்கொண்டு  அருளினான்”  என்று  அடிகள் கூறத் தொடங்குங்கால் , தம்  சிறுமையையும்  அப் பெருமானது  அளவிடற்கரிய  பெருமையையும்  நினைந்தனராக , அந் நிலையிற்  பெரிதும்  வியப்புற்று , மீண்டும் , “யாவர்கோன்”  என்றார் , யாவர்கோனென்புழி, உருபும்  உம்மையும்  தொக்கு  நின்றன . என்னையும்  என்பது  மிசச்  சிறியேனாகிய  என்னையும்  எனவும் , “வந்து” என்பது  வலியவந்து  எனவும்  பொருள்பயந்து நிற்பன . “அடித்தடித்து  அக்கார  முன் தீற்றிய அற்புதம்” என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இறைவன் தம்மை  வலிய  வந்து  ஆட்கொண்டருளி யதைக்  குறிக்குங்கால் , என்னையும்  என ஒருமையிற் கூறிய  அடிகள் , அவ்வாட்சியின்  பயன்  நுகர்ச்சியைக்  கூறப்புகுந்து , தமக்கு  உண்டாகிய  இன்ப மிகுதியானும் , மெய்யடியார் குழுவில்  கலந்ததனால்  அவ்வடியாரை  உளப்படுத்தும் , “யாமார்க்குங்  குடியல்லோம் “ எனப்  பன்மையிற்  கூறத்  தொடங்குகின்றார். “மேவினோம் அவனடியார்  அடியாரோடும்  “ என்பது  சிங்க  நோக்காக  முன்னதற்கும்  பின்னதற்கும் ஏதுவாக  நிற்றல்  அறிக .

           முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  மிகு காதல்    அடியார்  தம்  அடியனாக்கினான்  என்றார் . அதற்கேற்ப , ஆண்டவன்  அருள்  வழி  நின்று, அப் பயனை  அநுபவிப்பவராய்  , இத்  திருப்பாட்டில்  ,”அவனடியார்  அடியாரோடும்  மேவினோம் “  என்றார் . அடியார்க்கு  அடியனாகச்  செய்ததன்  பயனாக  முன்னர்க்  கூறப்பட்ட  அச்சத்தீர்வைக்  குறித்து, “யாமார்க்கும்  குடியல்லோம்  யாதுமஞ்சோம் “ என்று  அடிகள் தாம்  அநுபவித்த  முறையைப்  புலப்படுத்தியருளினார்  .” நாமார்க்குங்  குடியல்லோம்  நமனையஞ்சோம்” என்பர் திருநாவுக்கரசர் . ஈண்டுக்  குடி என்றது  அடிமை  என்னும்  பொருட்டு . இறைவனும்  அவன்  அடியாரும்  அல்லாத  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம்  என்பார் , “யாமார்க்கும்  குடியல்லோம்”  என்றார் .  தமக்கு  நேர்ந்த  சார்பு  வலி  நோக்கி  , இனி  எதற்கும்  சிறிதும்  அஞ்சோம் என்பது  தோன்ற  “யாதும் அஞ்சோம்” என்றார் . இஃது அச்சத்தீர்வின்  அநுபவம் ஆகும் . அவன்  அடியார்  அடியாரோடும்  மேவியது  இதற்கும்  ஏதுவாதல்  உணரத்தக்கது.

                 முன்னைத்  திருப்பாட்டில்  அகநெகவும்  அன்புகூரவும்  புகுந்தாண்டான்  பயனை  அடிகள் அநுபவித்த முறை , “ மேன்மேலுங்  குடைந்தாடி  ஆடுவோம் “ என்பதனாற்  புலப்படுக்கப்பட்டுள்ளது . உள்ளம்  அமுதம்  ஊறி  உருகிய  நிலையில்  மெய்யன்பு  பெருகியதாக  ,அதனால்  விளைந்த  பேரின்ப  வெள்ளத்துள்  முழுகித்  திளைத்தெழுந்து , இன்பக் கூத்து ஆடுவோம்  என்பது  அவ்  அநுபவ  விளக்கமாகும் , இன்பக்களிப்பினால்  ஆராமை  தோன்ற , “மேன்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே”  என்றார். இங்ஙனம் அடிகள் தம்மை  ஆண்டவன் புறத்தும்  அகத்தும்  ஆட்கொண்டதன்  பயன்களாக  முன்னைத் திருப்பாட்டில்  கூறப்பட்டவற்றின்  அனுபவ நிலை  இத்  திருப்பாட்டில்  குறிப்பாக  புலப்படுக்கப்பட்டது  உணர்ந்து  இன்புறத்தக்கது  .

                   இதன்கண், தேவ தேவன், மூவர்கோன் , முதல்வன் , மாதாளும் பாகத்தெந்தை   என்பன  முதலியவாகக்  கூறப்பட்ட  இறைவனுடைய  உண்மை  இயல்புகள் , மெய்யுணர்விற்கு  அன்றிச்  சுட்டறிவிற்குப்  புலப்படாதன  ஆதலின், சுட்டறுத்தல்  என்னும்  பதிக  நுதலிய  பொருளும் , மேன்மேலுங் குடைந்தாடி  யாடுவோம்”  எனவும்  ,” யாமார்க்கும்  குடியல்லோம்”  எனவும்  கூறியவற்றால்   பத்தி   வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .

                                    ****************************************

                    *******************************************************************

4 .  ஆத்தும  சுத்தி

ஆத்தும  சுத்தி  என்பதற்கு  உயிரினது  தூய்மை  என்பது பொருள் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  சுட்டறிவிற்கு  இறைவன்  உண்மைநிலை  புலப்படாதென்பதும் , மெய்யுணர்விற்கே  புலப்படும்  இயல்பினது  என்பதும், அதனால்  இறைவனைச்  சுட்டுப்பொருள்களுள்  ஒன்றாக  வைத்து  எண்ணலாகாது  என்பதும்  தெளிவிக்கப்பட்டன . அங்ஙனம்  சுட்டறுத்து  , இறை  நிலை  உணர்தற்குச்  சிறந்த  கருவியாகிய  மெய்யுணர்வு  விளக்கம்  பெறுதற்கு  ,உயிர்க்கு , தூய்மை  நிலை  இன்றியமையாதது  ஒன்று . அத்  தூய்மை  தானும்  யான்  எனது  என்னும்  அகப்புறப்  பற்றுக்களுக்கு  ஏதுவாகிய  வினைமாசு  நீங்கிய  நிலையில்  ஏற்படுவதாகும் . வினைமாசின்  நீக்கம்  இடையறாத  இறை பணியினால்  பெறத்தக்கது. இறை  பணிக்கு  மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களும்  ஈடுபடல்  வேண்டும்  . ஆதலின்  , அம் மூன்றுனுள்ளுஞ்   சிறந்ததாகிய  மனத்தை  முன்னிலைப் படுத்து , ஏனைய  கரணங்களின்  செயல்களும்  நிகழாமைக்கு   அதனையே  காரணமாகக்  கொண்டு , ஒறுத்துரைக்கு  முகமாக , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பணிகளை  இப்  பதிகத்து  முதல் ஐந்து   திருப்பாட்டுக்களாலும், அப் பணிகளின்  பயனாகக்  கிடைத்த  இறைவனது  அணுக்கம்  பண்டைப்  பாசத் தொடர்பினால்  ஒரே வழி  நெகிழ்ந்த நிலையில்  , அதுபற்றித்  தமக்கு  உண்டாகிய  ஆற்றாமையைப்  பின்  ஐந்து  திருப்பாட்டுக்களானும்  அடிகள்  அருளிச்செய்கின்றார் . தச  காரியத்துள்  ஒன்றாகிய  ஆன்ம  சுத்தி   இதுவெனக்  கூறுவாரும்  உளர் . அங்ஙனம்  கூறுதற்கு  ஈண்டு  இயைபின்மை  அறிக.  தச காரிய வுண்மை  இத்  திருச்சதகத்தில்  அமைந்திருத்தலைத்  தனியே  ஆராய்ந்து  , “திருவாசகத்தேன்” என்னும்  நூலில்  விளக்கிக்  கூறுவாம் .

அறுசீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் : 31 .

ஆடு  கின்றிலை  கூத்துடை

யான்கழற்  கன்பிலை  யென்புருகிப்

பாடு  கின்றிலை  பதைப்பதுஞ்

செய்கிலை  பணிகிலை  பாதமலர்

சூடு  கின்றிலை  சூட்டுகின்

றதுமிலை  துணையிலி  பிணநெஞ்சே

தேடு கின்றிலை   தெருவுதோ

றலறிலை   செய்வதொன்  றறியேனே .

கருத்துரை :-  இதன்  முன்னைப் பதிகத்து  இறுதித்திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  ஆட்கொண்டருளியமையால் விளைந்த பயன்கள்  இன்னவெனக்  கூறப்பட்டன.  அவற்றுட்  சிறந்த  அன்பினது  மேலீட்டால்  தம்  ஆன்ம சுத்திக்கு   இன்றியமையாத  இறை  பணியாகிய  கரணங்களின் செயல்கள்  போதிய  அளவு  நிகழாமை  குறித்து ,  நெஞ்சை  முன்னிலைப்படுத்து  ஒறுத்துக்  கூறுமுகமாக  அப்  பணிச்  செயல்களைப்  புலப்படுத்து  இத் திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-   பிண நெஞ்சே  =  பிணத்தைப்போல்  செயலற்றுக்கிடக்கும்  நெஞ்சமே  ,

கூத்து  உடையான்  கழற்கு  அன்பு  இல்லை   =  இன்பத்  திருக்கூத்துடைய  சிவபெருமான்  திருவடிக்கண்  அன்பு  செய்கின்றிலை ,

ஆடுகின்றிலை  =  அன்பு  மிகுதியால்  ஆடுகின்றாயும்  இல்லை  ,

என்பு  உருகிப்  பாடுகின்றிலை  =  எலும்பு  உருகப்  பாடு கின்றாயும்  இல்லை  ,

பதைப்பதும்  செய்கிலை  =  துடித்தலையும்  மேற்கொள்ளுகின்றாய்  இல்லை ,

பணிகிலை  =  வணங்குகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூடுகின்றிலை  =  அப் பெருமான்  திருவடி மலரை  நின் தலை மேல்  சூடுகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூட்டுகின்றதும்  இல்லை  =  அப் பெருமான்  திருவடிக்கண்  மலரைப்  பெய்து  புனைவதுஞ்  செய்கின்றிலை ,

தேடுகின்றிலை  =  அப் பெருமான்  யாண்டு  உள்ளான்  என்று  தேடுகின்றாயும்  இல்லை ,

தெருவுதோறு  அலறிலை  =  ஒவ்வொரு தெருவிலும்  சென்று  அலறுகின்றாயும்  இல்லை ,

துணையிலி  =  அதனால்  துணையில்லாயுமாயினாய்,

செய்வது  ஒன்று  அறியேனே  =  இந் நிலையில்  யான்  செய்யத்தக்கது   இன்னதென்று  ஒன்றையும்  அறியேனாயினேன்  என்பது .

விளக்கவுரை :-  ஆடல்  பாடல்  முதலிய  புறச்செயல்களும் , என்பு  உருகுதல் ,  அன்பு செய்தல் முதலிய  அகச் செயல்களும்  அற்று  உயிர்  நீங்கிய  உடல் போற்  லிடத்தலின்  , “பிண  நெஞ்சே”  என  விளித்தார் . ஆண்டவன்  இன்பத்  திருக்கூத்து  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும்  தலைமைப்  புலப்படுப்பதாகலின்  , அச் சிறப்பு  நோக்கி  ,” கூத்துடையான் “ என்றார் . அத்  திருக்கூத்தையும்  , அது  நிகழும்  அரங்கத்தையும்  .  “அண்ணலார்  தமக்களித்த  மெய்ஞ்ஞானமேயான அம்பலமுந்  தம்  உண்ணிறைந்த ஞானத்தெழும்  ஆனந்த  ஒருபெருந் தனிக்கூத்தும்  “ என்று  சேக்கிழார்  பாராட்டியிருத்தல்  ஈண்டு  அறியத்தக்கது . அரங்கத்தை மெய்யுணர்வாகவும் திருக்கூத்தை  அம்மெய்யுணர்வில்  தோன்றும்  பேரின்பமாகவும்  புனைந்துரைத்த  இயைபு  இன்புறத்தக்கது . ஆண்டவன்  திருக்கூத்து  , ஆக்கல்  முதலிய  ஐந்தொழிற்  குறிப்பைப் புலப்படுப்பதாலும்  , அத் தொழிற்  பாட்டிற்குரியது  உலகம்  ஆதலாலும்  , அவ் வுலகம்  உடைமையாக ,இறைவன்  உடையவனாவான் ஆதலின்  ,” கூத்துடையான்” என்றார். ஆடல்  பாடல்  முதலிய  செயல்கள் எல்லாவற்றிற்கும்  மூலம்  திருவடிக்கட்  செய்யும்  மெய்யன்பாதலின் , “கழற்கு  அன்பிலை” என்றார் . அகத்தேயுள்ள அன்பின்  மிகுதியால்  நிகழும்  புறச்  செயல்களுல் முதலில்  ஆடலைக்  கூறியது, இறைவன்  கூத்துடையானாதலான் , அதனையே  அன்பரும்  மேற்கோடல்  அவன் உவப்பிற்கும்  பொருத்தமாம்  சிறப்பு  நோக்கி  என்க . இறைவனைப் பாடுங்கால் , அப் பாடற்  பயனை  அழுந்தி  அறிந்து  உள்ளம்  நெகிழப்  பாடுதலே மெய்யன்பின் விளைவாகும் ஆதலின், என்புருகிப் பாடுகின்றிலை”  என்றார் . உருகி  என்னும்  செய்தென்  எச்சத்தை, செயவென் எச்சமாகக் கொள்ளல் வேண்டும் . ஆடலும்  பாடலும்  ,மெய் மொழிகளின்  செயல்கள் ஆயினும்  , அவ்வெல்லாவற்றிற்கும்   காரணம்  நெஞ்சமாதலின்  , அதன்  செயல்களாக  உபசரித்துக் கூறப்பட்டன. பின்  வருவனவற்றிற்கும்  இஃதொக்கும். பதைத்தல்  துடித்தலாகும்  .  உள்ளம்  உருகிப்  பாடுங்கால், விரைவு  தோன்றாத அமைதியே  உள்ளத்தில்  நிலைபெறுவதாகும் . அவ்  அமைதி  இறைவன் திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆயினும்  , பாடற் பொருளில்  நெஞ்சம்  திளைக்குங்கால் , இறைவன் திருவடிக் காட்சி  எப்பொழுது  பெறக்கூடும்  என்னும்  விரைவு  தோன்றுமாதலின்  , அவ் விரைவு  பற்றி  நிகழும்  உள்ளப்  பதைப்பு  வேண்டற் பாலதென்னும்  குறிப்புத் தோன்ற ,”பதைப்பதும்  செய்கில்லை” என்றார்.  ஆடல் , பாடல் , பதைத்தல்  என்னும் இம்மூன்று  செயல்களும்  மெய்யன்பினால்  முறையே   மெய் ,மொழி ,மனம் என்னும்  முக்கரணங்களாலும்  நிகழ்வனவாம் .  இந் நிகழ்ச்சி  குறித்து  , ஆண்டவன்  அருள்  கூர்ந்து  தன்  திருவடியை  அகக்  காட்சிக்கு  நல்கினானாக ,  அந் நிலையிலும்  நெஞ்சம்  வணங்காமை  குறித்து  இரங்குவார் , “பணிகிலை” எனவும் , அப் பணிவின்  பயனாக அப் பெருமான் திருவடி  மலரைத்  தலையிற் சூடுதலாகிய பேறு கிடத்திருப்பவும் , செய்கிலை  என்பார் , “பாத மலர் சூடுகின்றிலை”  எனவும்  கூறினர் .  பாதமலர்  இடை நிலைவிளக்காக  நின்று ,பின்வரும் ,”சூட்டுகின்றதுமில்லை” என்பதனோடும்  இயையும்  .  சூடுகின்றதும்  இலை என்புழித்  திருவடியாகிய  மலரை எனப்  பண்புருவும்  , இரண்டாம்  வேற்றுமை  உருபும்  விரித்துக் கொள்ளல்  வேண்டும் .  

           திருவடி  மலரைச்  சூடுகின்றிலை  என்பதனால்  தலைவணக்கமாகிய பணிவு  கூறப்பட்டது . இறைவன்  திருவடியைக்  கண்ட  அளவில் “காண்டலும்  தொழுது  வீழ்ந்தவுடன்  எழுந்து “ என்றபடி  தொழுது  வணங்குதலும்  , அதன் பின் மலர் கொண்டு வழிபடுதலும் முறையாதலின்  பின்னர், “ பாத மலர்  சூட்டுகின்றதும் இலை “ என்றார். ஈண்டுத்  திருவடிக்கண் மலரை  என , ஏழாம் உருபும்  இரண்டாம்  உருபும்  விரித்துக் கொள்க .  சூட்டுதல்  –  மலர் பெய்து அலங்கரித்தல் .  தேடுதல்  – உள்ளத்தே துருவி  ஆராய்தல்.  அருட்  கடலாகிய  இறைவன் திருவடிக் காட்சி அகத்தே  திகழப்பெற்ற அடிகள் , பண்டைப் பாசத் தொடர்பால்  ஓரோவமயங்களில்  அது  புலப்படாமை   நோக்கி  இரங்குதலைப்  பலவிடத்துங்  காணலாம் . அந் நிலையில் உள்ளத்தே  புக்கவன் யாண்டு  ஒளிந்தனன் என்று முயன்று தேடுதல் அடிகள் அநுபவமாகும் .  “உள்ளுருகித்  தேடுவேன்”  என்பது  அடிகள் திருவாக்கு . அங்ஙனம்  தேடுதலால்  உண்டாம்  பயனைப்  பிறிதோரிடத்து  , “பண்டே  பயில்தொறும் இன்றே  பயில்தொறும்  ,ஒளிக்குஞ்சோரனைக் கண்டனம்”  என்று  அடிகளும்  , “தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்”  என்று  அப்பரும்  கூறியிருத்தல்  அறிக .  மீண்டும்  காட்சிப்படுதலாகிய  பயனை  நோக்கி  ,அகத்தே  தேடி உணர  முயலுதல்  இன்றியமையாதது  என்பது  கருதி , “தேடுகின்றிலை”  எனவும்  , தேடியும்  பயன்  பெறாத  நிலையில்  தன் வயம்  இழந்து  நாடவர்  பழித்துரை  பூணதுவாகக் கொண்டு  , தெருக்கள்  தோறும்  சென்று  , இறைவன்  திருப்பெயர்களைக்  கூவிக்  கதறுதலை  மேற் கொள்ளின்  , அந் நிலை  குறித்தாயினும்  இறைவன்  வெளிப்படுதல்  கூடுமே ; அதுவும்  செய்திலை  என்பார், “ தெருவு தோறலறிலை” எனவும்  கூறினர் . மேற் குறித்த  ஆடல்  பாடல்  முதலிய  அன்பின்  விளைவாகிய  செயல்களை  மேற்கொள்ளாமையால் , அழி வில்  இன்பப் பேற்றிற்குத்  துணை  செய்ய  வேண்டிய மனம் தமக்குத்  துணையாக இல்லை  என்பது  கருதி,”துணையிலி”  என்றார்.  இனி,  துணையிலி  என்னும்  சொற்கு  , நீ  துணை இழந்திருக் கின்றாய்  என நெஞ்சை  நோக்கிக்  கூறியதாகவும்  கொள்ளலாம் . நெஞ்சம்  திருவருட்  பேறு  எய்துதற்கு  இத் திருப்பாட்டில்  குறித்த  செயல்கள்  எல்லாம்  துணைக்கருவிகளாகவும்  , அத்துணையை இழந்திருக்கின்றாய் எனக்  கொள்ளுதலும்   பொருத்தமே . தம்  முயற்சிக்குப்  பெரிதும்  துணை  நிற்க வேண்டிய நெஞ்சம்  , அங்ஙனம்  நில்லாமையால்  , மேற்செய்யக்கடவது   இன்னதென்றும்   அறியேன்  என்பார் , “செய்வதொன்றறியேன்” என்றார் ,  செய்யத்தக்கது  சிறிது  அறியினும் , அந் நெறியைக் கடைப்பிடிக்கலாம் ; அத்துணை தானும் இன்று  என்பது , “ஒன்றும்” என்னும்  சொல்லாற் பெறப்படும்  . உம்மை  தொக்கு  நின்றது .

            இதன்கண்,  ஆடல்  பாடல்  முதலிய  அன்புச்செயல்களின்   இன்றியமையாமை   கூறப்பட்டிருத்தலின், பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  , அச்செயல்கள் ஆன்மாவின்  தூய்மைக்கு  வேண்டற்பாலன  என்பதனால் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  விளக்கமாதல்  அறிக.

                                        ****************************************

பாடல் : 32 .

அறிவி லாத  எனைப்புகுந்

தாண்டுகொண்  டறிவதை  யருளிமேல்

நெறியெ  லாம்புலம்  ஆக்கிய

எந்தையைப்  பந்தனை   யறுப்பானைப்

பிறிவி  லாத இன்  அருள்கள் பெற்

றிருந்துமா  றாடுதி  பிணநெஞ்சே

கிறியெ  லாமிகக் கீழ்ப்படுத்

தாய்கெடுத்  தாயென்னைக்  கெடுமாறே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பினால்  நிகழும்  ஆடல்  பாடல்  முதலிய  செயல்களை  மேற்கொண்டு  , தமக்குத்  துணை செய்யாமை  பற்றி  நெஞ்சத்தை  வெறுத்துக்  கூறிய  அடிகள், அந்  நிலையிலும்  இறைவன்  தன்  அருட்கு  இடனாக்கிய  பேருதவியைப்  பெற்றிருந்தும்  , அங்ஙனம்  துணை  செய்யாமையோடு  அமையாது. மாறாகவும்  நின்று  தமக்குக்  கேடு  விளைத்தலைக்  குறித்து , அந் நெஞ்சை நோக்கி  இத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- பிண நெஞ்சே  =  பிண  நெஞ்சே ,

அறிவு  இலாத  எனை  =  மெய்யறிவு  இல்லாத  அடியேனை ,

புகுந்து ஆண்டுகொண்டு   =  வலிய  வந்து  ஆளாகக்  கொண்டு  ,

அறிவதை  அருளி  =  தன்னை அறிதற்குக்  கருவியாகிய  ஞானத்தை  நல்கி ,

மேல்  நெறியெலாம்புலம்  ஆக்கி  எந்தையை  =  மேலாகிய  வீட்டிற்கு  உரிய  வழிகள்  எல்லாவற்றையும்  விளங்கச் செய்த  என்  தந்தையும் ,

பந்தனை அறுப்பானை   =  பாசப்பிணிப்பை  ஒழிப்பவனும்  ஆகிய  சிவபெருமானை ,

பிறிவு  இலாத  இன்  அருள்கள் பெற்றிருந்தும்  =  எஞ்ஞான்றும்  நீங்குதல்  இல்லாமைக்கு  ஏதுவாகிய  இனிய  அருள்  உதவிகளை  எளிதில்  பெற்றுக்கொண்டும் ,

மாறாடுதி  =  மாறுபட  நிற்கின்றாய் ,

கிறி  எலாம்  மிக  =  பொய்மை எல்லாம்  மேலோங்கி  நிற்க ,

என்னைக்  கீழ்ப்படுத்தாய்  கெடுமாறு  கெடுத்தாய்  =  என்னைக்  கீழ்ப்படத்  தாழ்த்துக்  கெட்டு  ஒழியுமாறு  கெடுத்தாய்  என்பது .

விளக்கவுரை :-  “பிண  நெஞ்சே” என்பதை  இருமுறை  ஓதி  , முறையே  விளியாகவும்  ஏகாரத்தை  வினாப்பொருளில்  வந்த எதிர்மறையாகக் கொண்டு  பிண நெஞ்சல்லை  எனவும்  பொருள் கொள்ளல்  வேண்டும். இங்ஙனம்  மூல பாடத்தை  இருமுறை  ஓதிப் பொருள்  வேறு  கோடலைத்  தொல்காப்பியச்  சொல்லதிகாரம்  – 77 ஆம்  சூத்திரத்திற்குச்  சேனாவரையர்  கூறிய  உரையினும்  அறிக . ஆடல்  பாடல்  முதலிய  புறச்  செயல்களும்  அன்பினால்  உருகுதல்  முதலிய  அக  உணர்ச்சியும்  அற்றுத்  துணை செய்யாமற்   பிணம்  போற் கிடந்தமை நோக்கி  , முன்னைத்  திருப்பாட்டில்  ,”பிணநெஞ்சே” என்ற  அடிகள்  ,இத்  திருப்பாட்டில்  “மாறுபட்டுக்  கேடு  செய்கின்றாய் ஆதலின் , பிணம் போற்  செயலற்ற  நெஞ்சாகவும்  இல்லையே “ என  வியந்து  இரங்குவாராய் , “பிண நெஞ்சே?” என்றார்  என்பது  .  பிணம்  நற்செயலின்றி  கிடத்தல்  போலயே  தீச் செயலும்  செய்யாமற் கிடக்கும். ஈண்டு  மாறுபட்டுக்  கேடு  விளைத்தலாகிய  தீச் செயலைச்  செய்கின்ற மையின் , பிண  நெஞ்சாகவும்  இல்லையே  என்பது  உட்கோள் .

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் , அவ்வன்பர்  உயிராகிய  தம்  இயல்பையும்  , தம்மை  உடைமையாக வுள்ள உடையனாகிய  இறைவன்  இயல்பையும்  அறியும்  அறிவுடையராக  இருத்தல்  வேண்டும் . இதுவே  ஆட்கொள்ளுதற்குரிய  தகுதியாகும் . இங்ஙனமாகவும்  , அத் தகுதியில்லாத  நிலையில் இறைவன்  வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டருளிய  அருட்டிறத்தைப்  பாராட்டுவாராய்  ,” அறிவில்லாத  வெனைப்  புகுந்தாண்டு  கொண்டு “ என்றார். “அறிவிலாமையன்றே  கண்ட தாண்ட நாள்” என்று  பிறிதோரிடத்தும்  அடிகள்  அருளிச்  செய்தமை  அறிக . ஆட்கொண்ட  பின்னரே, தம்மை  உணர்ந்து  தமையுடைய  தன்னுணரும்  ஞானத்தை  இறைவன்  தமக்கு  அருளினன்  என்பார், “ அறிவதையருளி”  என்றார். ஓர்  அரசன்  அமைச்சியல்  தகுதி பெறாதான் ஒருவனை  அன்புரிமை  பற்றி  அப்  பதவியில் இருத்திப்  பின்  அவனைப்  பெருமைப் படுத்தற்கும்  தகுதி யில்லாதானைத்  தெரிந்தெடுத்த  குற்றம்  தன்னச்  சாராமைப்  பொருட்டும் , அவற்கு  அத் தகுதியையும் உதவுதல்  போல , ஆட்கொள்ளுதற்குரிய    அறிவிலாத  தம்மை  , அருட் பெருக்கால்  ஆட்கொண்டு  , பின்னர்  அதற்குத்  தகுதியாகிய  ஞானத்தையும்  இறைவன்  அருளினான்  என்பது   அடிகள்  கருத்து. மெய்யுணர்வை  அருளிய  அளவில்  அமையாது , அதனால் அடையத்தக்க  வீட்டிற்குரிய  நெறிகள் பலவற்றையும்  புலப்பட  வைத்தான் என்பார், “மேல் நெறியெலாம்  அடைதற்புலமாக்கிய  “  என்றார். இந்திரன்  முதலியோர்  பதவிகளை  அடைதற்குரிய   சிறு  நெறிகளைப் போலாது  ,அழி வில்  இன்பப்  பேற்றிற்குரிய  நெறிகள்  என்பது  புலப்பட  ,”மேல்  நெறியெலாம்  “ என்று  கூறப்பட்டது . எல்லாம்  என்பது , வீட்டு  நிலை அடைதற்குரிய  அன்புநெறி  ஞானநெறி  முதலிய உயர்நெறி  பலவற்றையும்  குறிக்கும் . அவ் எல்லா  நெறிகளும்  முடிவில்  இறைவனையடைதற்குரியவாயினும் , அவற்றுள்ளும்  இடர்ப்பாடின்றி  எளிதில்  அடைதற்குரிய  நன்நெறி  ஒன்றே  வேண்டத்தக்கதாவும்  அவெல்லா  நெறிகளையும்  புலப்பட  வைத்து  , அவறின்  அருமை  எளிமைகளை  உணர்ந்து மேற்கொள்ளுதற்கேயாம் . செவ்விய  நன் நெறி யாகிய   சிவ நெறி  ஒன்றையே  புலப்படுத்து  , அந்நெறியே  ஒழுக  உபகரித்தல்  போதியதாகவும் , பன்நெறிகளையும்  புலம்  ஆக்குதல்  எற்றுக்கெனின் , ஒழுகும்  நெறி ஒன்றே; அது  சிவநெறியாகும்  . பலநெறிகளையும்  அறிய  வைத்து  , அவ்வெல்லா நெறிகளினும்   சிவநெறியின்  சிறப்புத்  தெளிதற்கென்க . இது  கருதியே , நெறியெல்லாம் புகுவித்த  என்னாது , “நெறியெலாம்  புலமாக்கிய”  என்றார் . இத்தகைய  உண்மை  நெறிவிளக்கம்  , ஞானத்தந்தை  தன் அருமைப்  புதல்வனுக்குச்  செய்யத்தக்கதாகலின்   “எந்தையே” என்றார். ஆண்டவன்  தமக்குப்  பல நெறிகளும் புலனாதற்கு   ஏதுவாகிய  அறிவொளியை உதவிய  தந்தையாதலோடு , அந்நெறிகளுட்  சிறந்ததாகிய  சிவநெறிக்கண் சேறற்குத்   தடையாகவுள்ள  பாசப்பிணிப்பை  அகற்றும்  ஞானாசிரியனும்  ஆயினான்  என்பது தோன்ற , “பந்தனை  யறுப்பானை “ என்றார் . இத்தகைய பேருதவியாளனாகிய இறைவன் , ஞான முதலிய  சாதனங்களை உதவிய அளவில் அமையாது , இடையறாது  சாத்தியமாகிய  தன்னை  அநுபவித்தற்கும்  நெஞ்சிற்கு  இன்னருள் புரிந்தானாக , அவ்வுதவியை அடைந்திருந்தும்  என்பார், “ பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்  “ என்றார்.  பிறிவில்லாமை – ஒரு கணப்பொழுதும்  நெஞ்சில்  நின்றும்  நீங்காமை . “இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறிய  மணி மொழியும் ஈண்டு  நினைக்கத் தக்கது . இறைவன்  அன்பர்க்கு  நன்நெறி காட்டி  உபகரித்தலோடு  , அந் நெறியே   போந்து இன்பம்  நுகர்தற்குத்  தன்னையும்  வழங்கும்  பெரு வண்மையாளன்  என்பதை  , “தன்னைத்  தந்த  என்  ஆரமுதை”  என்னும்  அடிகள் மணி மொழியாலும்  ,”தன்னையே  தந்தான் என்றுந்தீபற “ என்னும்  சைவ  நூற் குறிப்பானும்  உணரலாம் . பிறிவில்லாத  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு .

           இறைவனது  கருணை  , அறக்கருணை எனவும், மறக்கருணை  எனவும்  இருதிறப்படும்  . அவற்றுள்  தன்நெஞ்சில் நின்று  நீங்காமைக்கு  ஏதுவாகச்  செய்த  கருணை என்பார் , “இன்னருள்கள்” என்றார். அருள்ஒன்றாயினும்  , அதனைப் பெற்ற  நெறி  பலவாதலின்  ,அருள்கள்  எனப்  பன்மை  கூறப்பட்டது. திருவருட் பேறு  கிடையாத பொழுது , அது குறித்து வேண்டிஇரங்குவதல்லது  மாறுபட்டு  இகழுதல் , இறைவன்  திறந்து மேற்கொள்ளத் தகாததொன்றாம் . அங்ஙனம்  ஆகவும்  , அவ்வருளோ கிடைக்கப்பெற்றுள்ளது ; ஒருவாறு அது மறக்கருணையாக  இருப்பின், அறியாமையால்  மாறுபடுதலும்  பொருந்தும் . அக் கருணையோ இன்னருள்  ஆயிற்று , அதனை  முற்றும்  அடைந்திருந்தும் , நன்றி  மறந்து மாறாகவும்  நடத்தல் என்ன  அறியாமை என்பார், “ மாறாடுதி” என்றார்.  அதனால் , கீழ்ப்பட்டுத் தேய்ந்து ஒழிய வேண்டிய  எல்லாம்  மேற்பட்டு  உயரவும்  , உயர்ச்சி  பெற்றுச்  சிறப்படைய  வேண்டிய யான் கீழ்ப்பட்டுக்  கேடு  எய்தவும் நேர்ந்தன என்பார் , “கிறியெலாம் மிகக்  கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் எனை “ என்றார். நெஞ்சம்  நன்னிலைப்பட்டுத்  தூய்மை யுடையதாக  இருக்குமாயின் , வஞ்சகம் , பொய்  முதலிய  இழி குணங்கள் எல்லாம் கீழ்ப்பட்டுத்  தேய்ந்து ஒழியும்  என்பதும் , அவ்வொழிவினால்  உயிர்  நன்னிலை  எய்தி ,இறையருட் பேற்றினால்  உயர்ச்சி பெறும்  என்பதும்  ஞானநூல்  துணிபாகும் . அம் முறைக்கு  மாறாக ஆயிற்று  என்று இரங்குவார்  “ கிறியெலாம் மிக”  எனவும் , “கீழ்ப்படுத்தாய்  கெடுத்தாய் எனை “ எனவும் கூறியருளினர் . வஞ்சகம்  பொய்  முதலிய  இழி  குணங்களை  மிகுதிப்படுத்து முகமாக  , தம்மைக்  கீழ்ப்படுத்து , நெஞ்சம்  கேடு  செய்தது என்பது  கருத்து . கெடுமாறு  கெடுத்தாய்  என  முடித்தல்  வேண்டும் .  கெடும் ஆறு  –  யான்  கெடுதற்குரிய  உபாயம் . ஆறு , உபாய மென்னும்  பொருளாதலை  “ஆற்றின்  வருந்தா  வருத்தம்”  என்னும்  குறட்பகுதிக்குப்  பரிமேலழகர்  கூறிய  உரையானும்  அறிக.  இனி, “என்னை” என்பதை  இடைநிலை  விளக்காகக்  கொண்டு  , என்னைக்  கெடுத்தாய்  என  இரண்டாம்  உருபு  பெற்று  வந்த  தன்மை  ஒருமைப்பெயராகவும் ,இனிக்  கெடுமாறு  என்னை யென  வினாக்குறிப் பாகவும் கொள்ளுதல் பொருந்தும் . இப் பொருட்குக்  ககர  ஒற்று  மிகாமைப்  பாடங்  கொள்ளல்  வேண்டும் .

                    இதன்கண்,  இறைவனது  சிறந்த  பேருதவியை  நினைவு  கூறாமல்  மாறுபடும்  நெஞ்சத்தை  வெறுத்துரைக்கும்  முகமாக  , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பிரிவில்லாத   இனி  திருவருட் பேற்றின்  பெருமை  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “கிறியெலாமிகக்  கீழ்ப்படுத்தாய் “ என்பதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                           ***********************************

பாடல் :33 .

மாறி  நின்றெனைக்  கெடக்கிடந்

தனையையெம்  மதியிலி  மடநெஞ்சே

தேறு  கின்றிலம்  இனியுனைச்

சிக்கெனச்  சிவனவன்  திரள்தோள்மேல்

நீறு  நின்றது  கண்டனை

யாயினும்  நெக்கிலை  இக்காயம்

கீறு கின்றிலை  கெடுவதுன்

பரிசிது  கேட்கவுங்  கில்லேனே .

கருத்துரை :-  தம்  நெஞ்சம்  தமக்கு  மாறக  நின்று  கேடு  விளைத்தலைக்  குறித்து  முன்னைத்  திருப்பாட்டில்  இரங்கிக்கூறிய  அடிகள் , அங்ஙனம்  மாறுபடுதற்குக்  காரணம் , அறிவுரையைக்  கேளாத  மடமை  எனக் கண்டு , அந் நிலையில்  அது  நம்புதற் குரியது  ஆகாது  என்பதையும் , அதனால்  அங்ஙனம்  மாறுபட்ட  நெஞ்சின்  வழி  நிற்றல்  இயலாததென் பதையும்  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  எம் மதியிலி  மட  நெஞ்சே  =  யாம்  கூறும்  அறிவுரையை  ஏற்றுக்கொள்ளாத  அறியாமையை  உடைய  நெஞ்சமே ,

எனை மாறி நின்று  =  என்னை  மாறுபட்டு   நின்று  ,

கெடக்  கிடந்தனையை  உன்னை  =  யான்  கெடுமாறு  என்பொற் கிடந்த  நின்னை  ,

இனிச் சிக்கெனத்  தேறுகின்றிலம்  =  இனி மேல்  உறுதியாகத்  தெளியமாட்டோம் ,

சிவன்  அவன்  திறள் தோள் மேல்   =  சிவபெருமானாகிய  அவ்  இறைவனுடைய  திரண்ட  தோள்களிடத்து  ,

நீறு  நின்றது  கண்டனை   ஆயினும்  =  திருநீறு   நிலை பெற்று   விளங்குதலைக்  கண்டாய்  ஆயினும் ,

நெக்கிலை  =  உருகுகின்றாய்  இல்லை,

இக் காயம்  கீறுகின்றிலை   =  இவ் வுடலைப்  பிளவுபடச்  செய்கின்றாய்இல்லை ,

உன்  பரிசு கெடுவது  =  உன்  தன்மை  கேடு  விளைப்பதாகும்  ,

இது  கேட்கவும்  கில்லேன்   =  இதனைக்  கேட்கவும்  ஆற்றேன்  என்பது.

விளக்கவுரை :-  இத்  திருப்பாட்டில்  , “எனை”  எனவும் , “கில்லேன்” எனவும்  தம்மை  ஒருமையில்  வைத்துக்  கூறிய  அடிகள்  , “எம்மதியிலி”  எனப்  பன்மை  கூறியது , தம்  நெஞ்சு  , தாம்  கூறும்  அறிவுரையைக்  கேளாமையோடு  , மற்றை  அன்பர்  அறிவுரைகளையும்  ஏற்று  நடக்கவில்லை  என்பது  குறித்தாம் . ஒரு  குழந்தைக்குத்  தந்தை  கூறும்  அறிவுரை  விழுமிதாயினும்  , அதனை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் , அது குறித்துத்  தந்தை வெறான்  என்னும்  துணிவு  பற்றி  , அக் குழந்தை  அதனைப்  பொருட்படுத்தா மலிருத்தலும்  ஆசிரியர்  முதலிய  மற்றையோர்  கூறும்  அறிவுரையை  வெறுப்பிற்கு  அஞ்சியாவது  ஏற்றுக் கேட்டலும்  உலகியலிற்  கண்டவை .  அம்முறையில்  அடிகள்  தம்  நெஞ்சு  தாம்  கூறும் அறிவுரையை ஏற்றுக்  கொள்ளவில்லை  யானாலும்  ,மற்றை மெய்யன்பர்  கூறும்  அறிவுரைகளையாவது  ஏற்றுக்கொண்டிருக்கலாம் ; அப்படியும் இல்லையே  என வருந்துவார் ,அவ்வன்பரையும்  உளப்படுத்து  “எம்மதி” எனப் பன்மையாகக்  கூறினர். மடம் – அறியாமை. இயல்பாகவே  அறியாமையுடைய  நெஞ்சத்தைத்  தாமும்  பிற அன்பர்களும்  இடித்து ரைத்து  அறிவுறுத்தும்  திருந்தவில்லை  என்பது  தோன்ற  ,”மட  நெஞ்சே”  என்றார்.  “ஏவவுஞ் செய்கலான் தான்  தேறான்  அவ்வுயிர்  , போம்  அளவும்  ஓர் நோய்”  என்னும்  பொருளுரைப்படி  , நெஞ்சே , என்ற  அளவில்  அமையாது  , யெம் மதியிலி மட நெஞ்சம் தானாகவும் அறிந்திலது ; பெரியோர்  அறிவுரைகளையும்  கேட்டிலது  என்பது  கருத்து . நெஞ்சிற்கு  அறிவின்மை  கூறியது  .  உணர்ந்தபடி  ஒழுகுதற்கு  இடந்தராமை  குறித்து , “கை கவியாச் சென்று  கண் புதையாக்  குறுகி – தொடிக்கை  தைவரத்  தோய்ந்தன்று  கொல்லோ, குறுமகள்,  மென்றோள் பெறநசை  இச் சென்ற  என் நெஞ்சே “ என்று  அகப்பாட்டில்  நெஞ்சிற்குக்  கை  முதலிய  உறுப்புக் கூறியது  போலக்  கவிமரபும்  ஆம் , “வாழ்த்த  வாயிம்  நினைக்க  மடநெஞ்சும் , தாழ்த்தச் சென்னியும்  தந்த  தலைவன்” என்று தமிழ் மறை கூறியபடி ,இறைவனை  நினைந்து உய்தி பெறுதற்குக்  கருவியாகத்  தமக்குக்  கிடைத்த  நெஞ்சம்  , அங்ஙனம்  துணை நின்று  உபகரியாமையோடு  , பகைமையையும் மேற்கொண்டு  நின்றது  என இரங்குவார், “ எனை  மாறி  நின்று “ என்றார் . “எனை” என்புழி  ஐகாரம்  “செறலின்  உவத்தலின் “ என்பனவற்றுள்  செறுதற்  பொருள் பற்றி  வந்தது. “செறல் – வெகுளியது  காரியம்”  என்பர்  சேனாவரையர் .

                   வெளிப்பட  நிற்றலால் , அறிந்து  விலக்குதற்குரிய  புறப்பகையினும்  , மறைந்து  நின்று  கெடுக்கும்  அகப்பகை  கொடிது  என்பது  தோன்ற  , யான் “கெடக்கிடந்தனை” என்றார் . யான் கெடுமாறு  என்பாற்  கிடந்தனை என்றது , என்னைப் பற்றுக்கோடாகப்  பற்றி  நின்றே எனக்குக்  கேடு  விளைத்தலால்  , உய்தியில்லாத  நன்றி  மறத்தல் என்னும்  குற்றத்திற்கு  ஆளாயினை  என்று  அடிகள் நெஞ்சை  வெறுத்தவாறு இது.  கிடந்தனையை  என்பது  முன்னிலை வினையால ணையும்  பெயராய் , இரண்டன் உருபு  ஏற்று  நின்றதெனக்  கொள்ளலாம்  .  கிடந்தனையாகிய  உன்னைத்  தேறுகின்றிலம்   என முடிக்க  . ஐகாரம்  சாரியை  எனக் கோடலும்  உண்டு . உட்பகையாக  நின்று  கேடு  விளைக்கும்  உன்னை  நம்புவேம் அல்லேம்  என்பார் . “இனி  உனைத்  தேறுகின்றிலம்”  என்றார் .”உட்பகை அஞ்சித்  தற் காக்க உலைவிடத்து   மட் பகையின்  மாணத்  தெறும்” என்பது பொய்யில்  புலவர்  பொருளுரையாதலின், தற்காப்பின்  நிமித்தம்  தெளிகிலேன்  என்பார்  இங்ஙனம்  கூறினர் . மேலே  நெஞ்சிற்கு  அறிவுறுக்கும்  முகமாக, மற்றை மெய்யன்பரையும்  உளப்படுத்துக்  கூறியதற்கு  ஏற்ப , தெளியாமைக்கும்   அம் மெய்யன்பரை உளப்படுத்து ”தேறுகின்றிலம் “ என  ஈண்டும்  பன்மை  கூறினர் . யான்  நம்பாமை உனக்குப்  பொருள்  இல்லை  ஆயினும்  , மெய்யன்பரும்  நம்பமாட்டார் என்று  நெஞ்சை  இடித்துக் கூறியவாறு  இது .  வஞ்சத்தால் ஓரோவமயம் நல்லது  போல்  நடித்துத்  தேறற்கு  இடனாகலாம்  என்று  ஒரு சிறிதும்  கருதற்கும்  என்பது  தோன்ற  , “சிக்கெனத்  தேறுகின்றிலம்”என்றார். சிக்கென  என்பது  உறுதியாக  என்னும்  பொருட்டு .

       மறை  யாகமங்களால்  துணியப்பட்ட இன்ப  வடிவினனாகிய  அவ்  இறைவன்  என்பார், “சிவனவன்” என்றார். அவன்  என்னும் சுட்டுப்பெயர்  பண்டே  பரம்பொருள் என  அறியப்பட்டவன்  என்பதை  உணர்த்தி  நிற்பதாகும் , “திரள்  தோள்” என்றது, மனித வடிவில்  உருமேனி தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சி  நல்கிய பொழுது  காணப்பட்ட  திருமேனியின்  உத்தம   இலக்கணத்தைக்  குறிப்பதாகும் . திரண்டதோள்  அளவில்  காணப்பட்டதாயின்  , சிறந்த   ஆடவருள் ஒருவனைப்  புலப்படுத்தும் அவ்வளவிலாம் .  ஈண்டு  உறுப்பு  நலங்களில்  ஏதும்  குறையில்லாத  ஞானாசிரியன்  என்பதை  , “திரள் தோள் மேல்  நீறு  நின்றது “ என்னும்  தொடர்  விளக்க முறுத்துவதாகும்  . நீறு  உபலக்கணத்தால்  உருத்திராக்க மணியையும்  உணர்த்தும் . “உருவுடலிற் கண்டிகை  நீறு”  என்பது  சைவாகமம் . இறைவன்  திருமுக மண்டலத்து இயற்கை ஒளியோடு இயைந்து ,திருநுதல் வெண்ணீற் றொளி விஞ்சி நிற்றலையும், அப் பேரொளியைத்  தம்  கண்ணொளியின் வரம்பிற்கு  அடக்கி  அறியத்  தம் நெஞ்சிற்கு  ஆற்றல்  இல்லாமையையும்  உணர்ந்து , “திரு நுதல் மேல் நீறு நின்றது  கண்டனை “  என்னாது,  “திரள் தோண்மேல்  நீறு  நின்றது  கண்டனை” என்றார். உலகத்த்ப்  பொருள்கள் எல்லாம்  முடிவில்  நீறாகும் ; நீறு  பிறிதொன்றாகாது . ஆதலின்  , அஃது  இறைவன் திருமேனியில்  நிலை பெற்று  நின்றதென்னும்  குறிப்பு  , உலகம்  முற்றும் தன்பால்  ஒடுங்க, இறைவன் ஒருவனே  தனி முதலாகத் திகழ்வன்  என்பதைப்  புலப்படுப்பதாகும் . “ அந்த மதாவது  நீறு” என்று தமிழ்  மறை இயம்புதலும்  தெளிக. “திரள்  தோள் மேல் நீறு  நின்றது கண்டனை” என  இறந்த காலத்திற்  கூறியதனால் , இப்பொழுது காண் கின்றாயில்லை  என்பது  போதரும் . இறைவன்  உருமேனி  தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக எழுந்தருளி  வந்து , அடிகட்கு உபதேசித்து , இன்னுஞ்  சின்னாள் இருத்தி என்று  சொல்லி  உருக்கரந்த நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திக்  கூறிய  குறிப்புக்கள் இப் பதிகத்தின்  பல  பகுதிகளிலும்  காணப்படுகின்றன . அக் குறிப்பே இத்  திருப்பாட்டிலும்  புலப்பட  வைத்தார் எனக்  கூறலாம் . அப் பெருமான் ஞானாசிரியன்  நிலையில்  வெளிப்பட்ட வமயம்  கண்டது  திரள் தோள் மேல்  நீறு  நின்றது . உருக்கரந்த  இந்நிலையில்  அக் காட்சியை நினைத்தாயினும் உருகுகின்றாயில்லை  என்பார், “ஆயினும்  நெக்கிலை “  என்றார் .

             தமக்குக்  குருவடிவில்  வந்து , அபரஞானமாகிய  சிவஞானபோத  நூல் அறிவையும் , அவ்வழி  ஒழுகுதலாகிய  பரஞானம் என்னும்  அநுபவ வுணர்வையும்  அருளிக்காத்த  இறைவனது  திருவுருவம்  , தம்கட் புலனுக்குத் தோன்றாத  நிலையில் , “தலைவனை  நனிகாணேன்  தீயில்  வீழ்கிலேன்” என்று  துடித்து வருந்திய  உண்மையைப்  பிவரும்  திருப்  பாட்டுக்களில்  பரக்கக்  காணலாம் . அம்முறையே  பரமபதியின் பிரிவை  ஆற்றாது  , “நெக்கிலை” என  உள் நிகழ்ச்சியையும்  , “இக் காயம் கீறு கின்றிலை” எனப்  புற  நிகழ்ச்சியையும்  மேற்கொண்டிலை என நெஞ்சை  முன்னிலைப்படுத்துக்  கூறுவாராயினர் . இக் காயம்  என்னும் சுட்டு , கிடைத்தற்கரிய   பேற்றை  இழந்து வெறுவிதாயிருக்கும்  நிலையைப்  புலப்படுத்துவதாகும் . இந் நிலையில் இவ்வுடல் எதற்கு  வேண்டும்? பயனற்ற  இவ்வுடலைச்  சிதைத்து விடுதலே  நலமாகவும், அங்ஙனம்  செய்தற்கு  ஒருப்பட்டிலை என்பார், “இக் காயம்  கீறு கின்றிலை “ என்றார். இங்ஙனம்  பிரிவு  பற்றி  , அகத்தும்  புறத்தும் இரக்கக்  குறிப்பு  மேற்கொள்ளாதிருக்கும்  நின் இயல்பு உனக்கும்  எனக்கும்  கேடு  செய்வதாகும்  என்பார், “கெடுவது  உன்  பரிசு” என்றார் கெடுவது தொழிற் பெயர் அளவாய்  நின்றது . “இது” என்றது உள் உருகுதல்  இல்லாமையும்,உடலைச்  சிதைத்தற்கு ஒருப்படாமையுமாகிய நெஞ்சத்தின்  கெட்ட  இயல்பைக்  குறிக்கும்  . செவி  வாயிலாகக்  கேட்டற்கும்   இயலாததொரு  கொடிய  தன்மையைக் கண்ணினால்  எங்ஙனம்  கண்டு  ஆற்றுவேன்  என்பார், “கேட்கவும் கில்லேனே “  என்றார்.

            இதன்கண் , ஆன்மாவின்  தூய தன்மைக்குக்  கேடு  விளைக்கும்  மாறுபட்ட  நெஞ்சத்தைக் குறித்து , “எம் மதியிலிமட நெஞ்சே”  என விளித்தும், அதன்  கொடிய  செயலைக்  கருதி , “இனி, உனைத் தேறு கின்றிலம் ; கெடுவதுன்  பரிசு ; இது கேட்கவுங்கில்லேன் “ என வெறுத்துரைத்தும்  அடிகள் இரங்குகின்றமையால் , இங்ஙனம்  கொடிய  நெறியிற்  செல்லும்  நெஞ்சத்தைச்  செந்நெறிப்  படுத்துத்  தூய்மை  பெற வேண்டும்  என்பது  பெறப்படுதலின் , ஆத்தும  சுத்தி என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறு அறிக.  

                                          **************************************

பாடல் :34 .

கிற்ற  வாமன  மேகெடு  வாயுடை

யானடி  நாயேனை

விற்றெ லாமிக  ஆள்வதற்  குரியவன்

விரைமலர்த்  திருப்பாத

முற்றி  லாஇளந்  தளிர்பிரிந்  திருதுநீ

உண்டன  எல்லாமுன்

அற்ற வாறுநின்  பெருமையும்

அளவறுக்  கில்லேனே .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்   காட்சியளித்து  உருக்கரந்த  இறைவன்  பிரிவில்  உள்ளுடைந்து  வருந்தாத  நெஞ்சின்வழி   நிற்றல்  இயலாதென்ற  அடிகள் , இத் திருப்பாட்டில்  இறைவன்  பிரிவில்  நீ பெற்ற  பேறுதான்  என்னையென ,  அந் நெஞ்சை  நோக்கி  இழித்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  மனமே, உடையான்  =  உலகத்துப்  பொருள்கள் எல்லாவற்றையும்  உடைமையாகவும்  அடிமையாகவும் உடையானும்  ,

அடி நாயேனை  விற்று  எல்லாம் மிக  ஆழ்வதற்கு  உரியவன்  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை  விற்று  எனக்கு  எல்லா  நலங்களும் மிகுமாறு  ஆண்டு  கோடற்கு  உரியவனும்  ஆகிய  சிவபெருமானுடைய  ,

விரை  மலர்த்திருப்பாதம்  முற்று இலா  இளம்  தளிர் பிரிந்திருந்து = 

மணம்  பொருந்திய தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  முற்றுதல் இல்லாத இளம்  தளிரில்  நின்றும்  பிரிந்திருந்து,

முன் நீ  உண்டன  எல்லாம்  அற்றவாறும்   =  முன்னர்  நீ  நுகர்ந்தன  எல்லாம்  அற்றபடியையும் ,

நின் அறிவும்  நின்  பெருமையும்  =  அதனை  அறியும்  நின் அறிவையும்  அதனாலாகிய  நின்பெருமையையும்  ,

அளவு  அறுக்கில்லேன்  =  அளவிட்டு  வரையறுக்கும்  ஆற்றலுடையேன்  அல்லன்  ஆதலால் ,

கிற்றவா  =  நீ  செய்தவாறு   என்னே ,

கெடுவாய்  =  கெடுவாயாக  என்பது.

விளக்கவுரை :-    உலகத்து  ஒழுக்கம்  தவறி  நடப்பான்  ஒருவனை  உரிமை  பற்றி   அறிவுடையார்  இடித்துரைக்கப்  புகுங்கால் , முதலில்  அத்  தவறுகளை இன்னவென்று  கூறாமல் , தம்  உள்ளத்தே  கொண்டு , சுருங்கிய  வாய்ப்பாட்டில்  குறிப்பாகக்  கழறிக்  கூறல்  இயல்பாதலின்  , அம்முறையில்  நெஞ்சத்தின்  தவற்றை அடிகள் தம்  அறிவகத்தே கொண்டு  செய்தவாறு  என்னே என்று  குறிப்பாகப்  பொருள்  தோன்ற , “கிற்றவா  மனமே” என்றார். “மனமே”  என  முதலில்  விளித்துச்  செய்தவாறு  என்னே  என்று  கூறாமல்  மாற்றிக்  கூறியது , விளியளவில்  இழிதக்க  நெஞ்சம்  தன்  பெருமையை  நினைந்து  இறுமாந்து  விடாமைப்  பொருட்டாம் . குறிப்பாக  , “கிற்றவா” என்ற  அளவிலும்  நின்றுவிடுதல்  ,அதன்  இயல்பிற்குத்  தக்கதன்று  எனக்கருதி ,இந் நிலை கேடு விளைப்பதாகும்  என்னும்  பொருள்  தோன்ற , “மனமே  கெடுவாய்” என்று  கழறிக்  கூறுவாராயினர் .

         உலகத்துள்ள  அறிவில்  பொருள்கள்  எல்லாம்  உடைமையாக  , இறைவன்  உடையான்  எனவும், அறிவுடைப் பொருள்கள் எல்லாம் அடிமையாக , ஆண்டவன்  எனவும்  கூறப்படுவன் . இவ் இரு நிலைகளும் முறையே , “ஊடையான்”  என்பதனாலும் , “ஆள்வதற்குரியவன் “ என்பதனாலும் பெறப்பட  வைத்தார் . ஒப்புடையன்  அல்லனும் , ஓர் உவமன் இல்லியுமாகிய  இறைவன் பெருமையை நோக்க , தன் சிறுமையே  முன்னிற்பது  கருதி , அடிமையாகிய  இழிவுடையேன்  என்பது  தோன்ற  , “அடி  நாயேனை “ என்றார் . ஒரு பொருளை விலை கொடுத்துக்கொண்டு  ஆளுதல்   உலகத்தில்  கண்டது . விற்று  ஆளுதல்  நிகழாத  தொன்று  . ஈண்டு  இறைவன் ஆன்மாவை  வினைக்கு  ஈடாகப்  பிறப்பித்தலே  விற்றலாகும் . அங்ஙனம் பிறப்பித்தற்கு  ஏது , உயிர் வினைய்யொழிவு  பெற்றுத் தன்  திருவடி நிழல் அடைய வேண்டும் என்னும்  அருட்பெருக்கே யாதலின் , அதுவும்  ஆட்கொண்டபடியாம் என்பது  தோன்ற , “விற்று  ஆள்வதற்குரியவன் “ என்றார்.  உண்மையாக  ஆட்கொள்ளுதல்  கட்டறுத்தபின்னர் , “தந்ததுன்றன்னைக்  கொண்ட தென்றன்னை  “ என்றபடி  இறைவன்  தன்னைத்  தந்து    உயிரைக்  கொள்ளுதலாகும். இந் நிலையில்  ஆளான  உயிர்  எய்தும்  பேறு  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும்  .  இது, கொண்டு  ஆட்கொள்ளுதல் . விற்று  ஆட்கொள்ளுதலால் விளையும்  பயன்  கட்டறுத்தலாகும்  . இது  கருதியே , விற்று  ஆண்டனன்  என்னாது, “ ஆள்வதற்கு  உரியவன்  “ என்றார் . “எல்லாம்  மிக” என்றது , விற்று  ஆட்கொள்ளும்  நிலையிலும், அன்பு  தவம்  முதலிய  உயரிய  நலங்கள்  எல்லாம்  அடிமையாகிய  உயிர்க்கு  மிகும்படி  என்னும்  பொருட்டு  கொண்டு  ஆட்கொள்ளுதலின்  விளையும்  பயன்  முற் கூறியபடி  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும் . ஆனால், விற்று  ஆட்படுத்தும்  நிலையிலும்  உயிர்க்கு  ஊதியம்  உண்டோவெனின் , அதற்கு விடையாக  “எல்லாம்  மிக”  என்றார்.  விற்று  ஆட்கொள்ளுதலால் உயிர்க்குச்  சாதனப்பேறும்  , கொண்டு  அட்கொள் ளுதலால்   சாத்தியப்பேறும்  உண்டாம்  என்பது  தெளிவாம் . ஆண்டான்  அடிமைத்  திறத்தில் , உலகத்தொண்டு  , கடவுள் தொண்டு  என  இரண்டு வகை  நினைக்கத்தக்கன . உலகத்  தொண்டால் விளையும்  பயன்  ஆண்டானுக்கே  சிறந்தது.; கடவுள்  தொண்டினால்  விளையும்  பயன்  அடிமைக்கே  சிறந்ததாகும் .  இது  குறித்தே அடிகள் பிறிதோரிடத்து,  ”அந்தமொன்றில்லா  ஆனந்தம்  பெற்றேன்  யாது  நீ  பெற்றதொன் றென்பால் “ என்று  அருளிச்செய்தனர்.

          இனி,  ஒரு  சில பரம்பரையினர் , தம்  நிலம்  முதலிய  பொருள்களின்  வருவாயை அநுபவிகலாமே  யொழிய , அம்மூலப் பொருளை  விற்றற்கு  உரிமையிலராதலை  உலகியலிற்  காண்கிறோம். அங்ஙனமே , உயிராகிய  உடைமையை இறைவன்  ஆட்சிபுரியலாமே யன்றி  , விற்றற்கு  உரிமையிலன் ஆவனோ என்பார்க்கு  விடையாக , விற்றல்  அநுபவித்தல்  முதலிய  எல்லாவற்றிற்கும்  இறைவன் உரிமை யுடையான்  என்பது  தோன்ற   “விற்றெலாமிக  ஆள்வதற்குரியவன் “ என்றார்  என்று  கேட்டலும்  ஒன்று .  “இருந்தென்னை  ஆண்டுகொள், விற்றுக்கொள்  ஒன்றிவை  என்னின்  அல்லால்” என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறியதும்   இக் கருத்துப்  பற்றியே . இஃது உலகிய லோடு  பொருந்தக்  கண்டது.

           அடிகள்  தமக்குச்  சிறந்த பற்றுக்கோடாகவுள்ள  இறைவன்  திரு வடிகளில்  ஈடுபட்டுப்  பாராட்டுவார் , “விரை மலர்த்  திருப்பாதமுற்றிலா  இளந்தளிர் “ என்றார்.  ஈண்டு, மலர்ப்பாதம்  என்றதில்  ,உவமை  அணியும் , பாத  இளந்தளிர்  என்றதில்  உருவக  அணியும்  அமைந்திருத் தலான் , “விரை மலர்த்  திருப்பாத  முற்றில்லா  இளந்தளிர் “ என்று  கூறியது , உவம  உருவக  அணியாகும் .  இறைவன்  திருவடிக் காட்சி   தம்  உண்முகமாகவுள்ள  ஐம்புல நுகர்ச்சிக்கும்  இனிதாதலை  விளக்குவார்  இங்ஙனம்  கூறினர் . மலரிலுள்ள  தேன்  சுவைக்கும் , மலரும்  தளிரும்  ஒளி , ஊறு என்னும்  இவற்றிற்கும்  , தேன் நுகரும்  வண்டொலி ஓசைக்கும்  , விரை  நாற்றத்திற்கும்  உரியவாதல்  அறிக. தளிர்  என்னும் , அளவிலே  முற்றுதல் இன்மை  பெறப்படும் . ஆயினும் , மரம் , செடி , கொடிகளில் உள்ள  தளிர்கள் , நாள்  செல்லச்  செல்ல  முற்றி  இலையாகவும்  சருகாகவும்  கழிதல்  கூடும் . இறைவன்  திருவடியாகிய  தளிர்கள் என்றும்  இளமையும்  அழகும்  உடையனவாய்  நிலைபெற்றிருத்தலின், “ திருப்பாத  முற்றிலா  இளந்தளிர்  “ என்றார் . பிரிந்திருத்தல்  – இறைவன்  திருவடிச் சார்பை  விட்டு  உலகியற் பொருள் களைப்பற்றி  நிற்றல் . அங்ஙனம்  நிற்பதால் விளையும்  பயன்  சிறியதும்  அழிதன் மாலையதும்  ஆம்  என்பதைப்  பின்வரும்  தொடர்  மொழிகளால் விளக்குகின்றார் .  திருவடிச்  சார்பை  விட்டு  நெஞ்சம் முன்  அநுபவித்தவை  , புறப்பொருள்களைப்  பற்றிப்  பொறி வாயிலாக  நுகரப்படும்  ஐம்புல இன்பங்களேயாம் . அவ்வின்பங்கள் எல்லாம்  துன்பத்தோடு  கலந்து  அநுபவப்படுதலையும் , மறுகணத்தில்  நிலை யுதலின்றி   அழிவு  எய்துதலையும்  இயல்பாக உடையன . இவ்வுண்மை  குறித்தே  , நெஞ்சை  நோக்கி , “ முன்  நீ  உண்டனவெல்லாம் அற்றவாறும்  “  என்றார்.  அறுதல்  –  செரித்தல் ; இல்லாமற்  போதல் . திருவடிச்  சார்பு  ஒழிந்த ஞான்று , நெஞ்சம்  நுகர்ந்தன  எல்லாம் பொய்யாய்க்  கழிந்த  முறைமையும்  ,அந் நுகர்ச்சிகளையே பொருளெனக்  கண்ட சிற்றறிவும், அச் சிற்றின்பத்தையும்  சிற்றறிவையும் உடைமையால்  நெஞ்சம்  எய்திய  பெருமையும்  , தம்மால்  அளவிட்டுரைக்க   இயலாதன  எனப்  புகழ்பவர்போற்   பழித்துரைப்பர் , “அற்றவாறும்  நின்  அறிவும்  நின்  பெருமையும்  அளவறுக்கில்லேனே “ என்றார்.  “நீ உண்டன” , “நின் அறிவு” , “நின் பெருமை “ என அடுத்தடுத்து  மூன்றிடங்களிலும்   முன்னிலைப்  பெயரைக்  கூறியது , நெஞ்சத்தின்  சிறுமை கருதிக்  குறிப்பாக  இழித்தற்பொருள்  தோன்றற்கு  என்க . அறிவு , பெருமை , ஆண்மை , என்னும்  இம் மூன்று  குணங்களும்  சிறந்த  அரசற்கு உரியன . உலகத்து  மற்றோர்  அரசனுக்கும்  கீழ்ப்படாமல்  தானே  தலைவனாக  நின்று  ஆட்சிபுரியும்  தனியரசு  போல  நெஞ்சம்  தன்னைக்  கருதிக் கொண்டு  , ஆண்டவன்  திருவடிமலர்க்கும்  கீழ்ப்படாமல் ஆட்சிபுரியத் தொடங்கியது  கண்டு  இவ்வாறு  கூறினர் . இம் மூன்று  குணங்கள்  உள்ளும் , அறிவும் பெருமையும்  வெளிப்படக்  கூறப்பட்டன .  ஆண்மை  அநுபவத்திற்குரியதாகலின்  , “ஊண்டனவெல்லாம் “  என்பதனால்  அதுபெறப்படும்  நெஞ்சம்  இம் மூன்று  குணங்களையும்  போலியாகக்  கொண்டு  , போலியாட்சியில்  ,தலைப்பட்டது  கண்டு , தாமும்போலியாகப்  புகழ்வாராய்  , “அளவறுக் கில்லேனே” என்று  இழிவு  தோன்றக்  கூறினர். அறுக்ககில்லேன்  என்றது  அறுக்கில்லேன்  என்றாயிற்று . இங்ஙனமாய  விபரீதச் செயல்களை  உட்கொண்டே தொடக்கத்திலே   நீ  செய்தவாறு  என்னே  என்று  இரங்குவாராயினர் . கிற்றவாறு  என்பதில்  ஈற்றுகரம்  தொக்கு  நின்றது .  “நுகருமா  நுகரே” என்புழிப்போல . கிற்றல்  – செய்தல் . என்னே என்பது சொல் யெச்சம்,  மாறுபட்ட  இந் நெறியில்  ஒழுகத்  தலைப்படுதல் கேட்டிற்குக்  காரணம்  என்பார், “மனமே  கெடுவாய்”  என்றார்.

         இதன்கண்,  மெய்யன்புடையாரை  ஆட்கொள்ளும்  இறைவன் , அவர்  தம் உடல் , பொருள் , ஆவி  எல்லாவற்றையும்  ஏற்றுக்கொண்டு  , தன் திருவடி  மலரை  ஒருகணப் பொழுதேனும்  பிரியாதிருக்கச் செய்தலே  அவர்க்கு  உறுதி  பயப்பதாகும்  என்று  கூறுமுகமாக  , ஆன்மாவின்  தூய்மைக்குரிய  சாதனம்  கூறப்பட்டமையால்  , “ஆத்தும சுத்தி “ என்னும்  பதிகம் நுதலிய பொருள் புலப்பட  வைத்தது அறிக .

                                              ****************************

பாடல்  : 35.

அளவ  றுப்பதற்  கரியவன்

இமையவர்க்  கடியவர்க்  கெளியான்நம்

களவ றுத்துநின்  றாண்டமை

கருதினுட்  கசிந்துணர்ந்  திருந்தேயும்

உளக   றுத்துனை  நினைந்துளம்

பெருங்களன்  செய்ததும்  இலைநெஞ்சே

பளக  றுத்துடை  யான்   கழல்

பணிந்திலை  பரகதி  புகுவானே .

கருத்துரை :-   இறைவன் திருவடிச் சார்பை   விட்டுப்  போலியாட்சியில்  தலைப்படும்  நெஞ்சை  நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில்  இழித்துக் கூறிய  அடிகள் , அவ் இழிவையும் பொருட்படுத்தாத நிலையில்  , அந்தோ உண்மையாக  ஆட்கொண்ட  இறைவன்  இயல்பை  உணர்ந்தும்  , அவ்  இறை  பணியில்  தலைப்பட்டு  நலம்  பெற  முயலாமை  என்னே! என  மீண்டும்  இரங்கிக்  கூறுகின்றார்.

பதவுரை :-  நெஞ்சே  =  நெஞ்சே ,

அளவறுப்பதற்கு   இமையவர்க்கு  அரியவன்  =  தன்  இயல்பை  வரையறுத்து    உணர்தற்கு  அமரர்க்கு  அரியவனும் ,

அடியவர்க்கு  எளியான்  =  மெய்யன்பர்க்கு  எளியவனும்  ஆகிய  இறைவன் ,

நம்  களவு  அறுத்து ஆண்டு  நின்றமை  = நம்  வஞ்சத்தை  யொழித்து ஆட்கொண்டு  நிலை  பெற்ற  தன்மையை ,

கருத்தின்  உள் உணர்ந்து  கசிந்து இருந்தேயும்  =   உள்ளத்தில்  கொண்டு  உணர்ந்து  ஈடுபட்டு  உருகியிருந்தும் ,

பரகதி புகுவான்  =  வீட்டு  நிலையை  அடைதற் பொருட்டு  ,

உளகறுத்து  உனை  நினைந்து  =  பொறி  நுகர்ச்சிகளாக  உள்ளனவற்றை  வெறுத்து  நின்  இயல்பை  நினைந்து ,

உளம்  பெருங்களன்  செய்ததும்  இலை  =  உள்ளத்தை  இறைவன்  தங்குதற்குரிய  பெரிய  இடமாகச்   செய்ததும்  இல்லை ,

பளகு  அறுத்து  உடையான்  கழல்  பணிந்திலை  =  தடையாகிய  குற்றத்தை  ஒழித்து  ஆண்டவன்  திருவடியை  வணங்கினாயும்  இல்லை; நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது .

விளக்கவுரை  :-  அளவு  –  தன்மை . அறுத்தல்  –  வரையறுத்து  உணர்தல்  . அளவறுப்பதற்கு   என்பதை  ஈரிடத்துங்  கூட்டி , இமையவர்க்கு  அளவறுப்பதற்கு  அரியவன்  எனவும்  , அடியார்க்கு  அளவறுப்பதற்கு  எளியவன்  எனவும்   இயைத்துப்  பொருள்  கொள்ளல்  வேண்டும் . இறைவன்  இயல்பைத்  தேவர்  அறியாமைக்குக்  காரணம்  , புண்ணியப்  பயனாகிய  இன்பம்  ஒன்றிலே  ஈடுபட்டு  , அவ் விறைவனைத்  தம்மவருள்  ஒரு  தலைவன் என்ற  அளவில்  நினைந்து  இறுமாந்திருந்தலாகும்.  மெய்யன்பர்  தம்  எளிமையை நினைந்து , இறை பணியில்  ஈடுபட்டு  , அவ் இறைவன்  திருவருளையே பற்றுக்கோடாகக்  கொண்டு  ஒழுகுதலின்  அவர்க்கு  இறைவன்  தன்மை அறிதற்கு  எளிதாயிற்று  என்பது . “தன்மை பிறரா  லறியாத தலைவா” என்ற  இடத்தும்  , பிறர் என்றது  மெய்யன்பர்  அல்லாதார்  என்னும்  பொறுட்டு  . “வானோர்க்கரிய  மருந்தே “ எனவும், “ஏனோர்க்கெளிய   இறைவா”  எனவும்  போந்த  திருவாக்குக்களையும்  நோக்குக .  இனி , “அளவு அறுப்பதற்கு  அரியவன்” என்பதற்கு  , அளவைகளால்  வரையறுத்து  உணர்தற்கு  அரியவன்  என்றும்  , அதனால் , மெய்யுணர்விற்கு  எளியவன்  என்றும்  கொண்டு , மெய்யுணர்வில்  தலைப்படாதார்  தேவராயினும், அவர்க்கு  அரியனாவான்  எனவும் , மெய்யன்புள்ள  அடியாராயின்,  அளவை களில்  தலைப்பட்டிலர்  எனினும்  எளியவனாவான்  எனக்  கோடலும்  ஒன்று.  அளவு  –  காட்சி  முதலிய  அளவைகளை  விளக்கும்  நூல் காட்சி  , கருதல் , உரையெனவும்  வேறு  சில  வகைகளாகவும்  ஆராயப்படுவது  , அவ் வளவைகளைக் கொண்டு  இறைவன்  இயல்பை  ஒருவாறு  துணியலாமே யன்றி , முற்றும்  உணர்தல்  அரிது. மெய்யுணர்வாகிய  அநுபவ  ஞானமே   இறைவனை  உணர்தற்கு  உரிய  நன்நெறியாகும்  . “ஏதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  வைத்துச், சோதிக்க வேண்டா  சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி”  என்பது பெரியார்  திருவாக்கு  . இப்  பாசுரப் பகுதியில், ஏதுக்கள்  என்பது  அனுமான  அளவையையும் , எடுத்த  மொழி  என்பது  உரை அளவையையும்  உணர்த்துவன. இவற்றால்  ஏனைய  அளவைகளையும்  கூறிய படியாம் . இவ்வளவைகளில்  வைத்து  ஆராய்வது  பயனில்  செயல்  என்பதை  , “சோதிக்க  வேண்டா”  என்பதனாலும்  , மெய்யுணர்விற்குக்   காட்சிப்படுவன்  என்பதை , “சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி “ என்பதனாலும்  தெளியலாம் .

                 நல்வினைப் பயனையே  மிகுதியாக  அனுபவிக்கும்  தேவராயினும், அநுபவ  உணர்வில்  தலைபட்டிலரேல், அவர்  காட்சிக்கு  அரிய பொருளாக வுள்ள  இறைவன் , இருவினைப் பயனையும்  கலந்து   அநுபவிக்கும்  மக்கட்  பிறப்பினராயினும்  ,மெய்யன்பராயின்  , அவர் அநுபவத்திற்கு  எளியனவான் என்பது  தோன்ற  , “அடியவர்க் கெளியான் “  என்றார். தேவர்  அறிதற்கே அரியனாகிய  இறைவன் , அன்பர் அநுபவத்திற்கு  எளியனாவான்  என்று  குறிப்பாற்  புலப்படக்  கூறியது  இன்புறத்தக்கது .

            இங்ஙனம் அருமைக்கும்  எளிமைக்கும்  இறைவன்  இடனாதலை  உணர்ந்தே  , “அருமையில் எளிய  அழகே  போற்றி” என்று  அடிகள்  பிறிதோரிடத்தும்   அருளிச்  செய்வாராயினர் . களவு – வஞ்சம் முதலிய கரவொழுக்கம் ; வேட நெறி நில்லார்  வேடம்  பூணுதலும்  அது . “தவமறைந்தொழுகும்  தன்மையிலாளர் “ என்பர்  சிலப்பதிகார ஆசிரியர் . தவ வேடத்தைக்  கண்டு , அறியாத  உலகம்  மயங்கும் . அவ் வேட நெறிக்குப் பொருந்தாத   தீயொழுக்கத்தை  , உயிர்க்குயிராகிய  இறைவன்  அறிவன்  ஆதலின், அவ் வஞ்ச  ஒழுக்கத்தைக்  கொண்டு  இறைவனை  ஏமாற்ற  இயலாது .  அங்ஙனமாகவும் , நம்  வஞ்ச  ஒழுக்கத்தை  அறிந்தும்  நம்மை  ஆட்கொண்டது  , அப் பெருமான்  நம்பால்  கொண்டுள்ள  அருட் பெருக்கமாகும் ; வேறு  காரணம்  இன்று  என்று  நெஞ்சிற்கு  உணர்த்துவார், “நம் களவறுத்து நின்று  ஆண்டமை “ என்றார் . ஆட்கொண்டு  கருதிய பயன்  நிறைவேறியதும்  கைவிடும்  உலத்துத்  தலைவர்  போலாது , என்றும்  நீங்காது நம் உள்ளே உறுதுணையாக  நிலை பெற்று  நின்றான்  என்பது  தோன்ற  , “நின்று  ஆண்டமை “ என்று அருளிச் செய்தனர் .

              இறைவன்  நம்பால்  கொண்டுள்ள  அருட்பெருக்கால்  கட்டறுத்து , நம்மை  ஆட்கொண்டு  நின்றமையை நாம் உணராதிருந்தேம்  அல்லேம் . நன்றாக  உள்ளத்தால் உணர்ந்திருந்தும்  , அவ்வுணர்ச்சி  வாயிலாக  ஈடுபட்டிருந்தும்  என்பார், “ கருத்தினுட்  கசிந்துணர்ந்திருந்தேயும்  “ என்றார். இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து  தமக்கு  மறை மொழி  கூறித்  தம்மை  ஆட்கொண்டதை  உலகம்  நன்கு  அறியும் . அங்ஙனம்  புறக் காட்சியால் உலகம்  அறிந்த  அளவில்  போதியதென  அமைதி அடையாமல்  , தம் அகக் காட்சியாலும்  அறிந்து  அநுபவித்த  உண்மையை  அடிகள் இங்ஙனம்  புலப்படுத்து  அருளினார் . முன்னிலைப்  படுத்த  நெஞ்சை  உளப்படுத்து .  “நம்  கருத்தினுள் “ என்று  நெஞ்சிற்கும்  நெஞ்சு  உளதாகக்  கூறினர். இங்ஙனம்  கூறுதல்  செய்யுள் மரபு . இதனை , “உறுப்புடையது போல், உணர்வுடையது போல்  நெஞ்சொடு  புணர்த்தும் “ என்னும்  விதியாலும்  , “வருந்தினை  வாழிய  நெஞ்சே ……. ஒழியச்  சூழ்ந்தனையாயின்  தவிராது , செல் இனிச்  சிறக்க நின் உள்ளம்”  என்னும்  அகப்பாட்டானும்  அறிக.  இவ்வாறு  பின்வரும்  இடங்களுக்கெல்லாம்  இலக்கணம்  எடுத்துக் காட்டுகளை  இங்ஙனமே கொள்க. உலத்தில்  ஒருவன்  செய்த நன்றியை  அறியாமலிருத்தலே  நன்று  அன்றாம் . “நன்றி  மறப்பது  நன்றன்று “ என்பது பொருளுரை .அறியாமல்  இருத்தலே  நன்றன்றாயின்  , அறிந்தும்  ஈடுபட்டும்  அந்  நன்றியைப்  பொருட்படுத்தாமல்  இருத்தல்  எத்துணைக்  குற்றமாம்  என்பது நினைக்கத்தக்கது . அம்முறையில்  அடிகள் ஆண்டவன்  அருட்  செயலைத்  தம்  நெஞ்சம்  உணர்ந்தும்  , ஈடுபட்டிருந்தும்  , அது  குறித்து  மேற்கொள்ளவேண்டியவைகளைச்  செய்யாமல்  இருத்தல் குறித்து இரங்கிச்  செய்ய  வேண்டிய  கடமைகள் இன்னவென   விளக்கிக்  கூறமுற்படு வாரா யினர் . கடமைகளைக்   கூறுதற்குப்  பயன்  இன்றியமையாததாதலின், “பரகதி புகுவான்” என்றார்.

            “ உள” என்பது உண்மையடியாகப்  பிறந்த  பன்மைப்பெயர் , அது பொறிவாயிலாக  நுகரப்படும்  சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்னும்  புலன்களை  உணர்த்தும் . கட்டு , வீடு  என்னும்  இரண்டற்கும் மனமே காரணம்  என்பர் . இறைவன்  உட்கோள் , “வாழ்த்த  வாயும்  நினைக்க  மட நெஞ்சும்  “ என்றபடி  , தன்னை  நினைந்து  , கட்டறுத்து , நலம்  பெறுதற்கே  நெஞ்சம்  வேண்டும்  என்பது. ஆகவே, இறைவன்  திருவுள்ளப்பாங்கின்படி  , பொறிவாயிலாக  நுகரப்படும்  பொருள்களை  வேண்டாமல்  என்பார் , “ உள  கறுத்து” என்றார்.  கறுத்தல்  –  வெறுத்தல்  . உனை  நினைந்து  என்பது.  நெஞ்சை  நோக்கி  , இறைவனை  நினைந்து  பணி  செய்தலாகிய   உன்  இயல்பைக்  கருதி   என்றபடியாம் . நின் இயல்பை  நினைந்த  அளவில் , நின் உள்ளத்தை  இறைவன்  எழுந்தருளுதற்கு  உரிய  பெரிய  இடமாக  அமைத்தலே  செய்யத்தக்கதென்பது  துணிவாகும்  என்றும் , நெஞ்சிற்கு   அறிவுறுத்துவாராய்  , “ உளம்  பெருங்களன்   செய்ததும்  இலை  நெஞ்சே “ என்றார். ஆண்டவன்  தங்குதற்கு  அன்பர்  நெஞ்சம்  இடனாதலை  , “நெஞ்சம்  உமக்கே  இடனாக  வைத்தேன் “ என்னும்  தமிழ்  மறையானும்  உணர்க.  “உனை  நினைந்துளம்  பெருங்களன்  செய்ததுமிலை “ என்பதற்கு  இவ்வாறு  பொருள்  கொள்ளாது , “உனை  நினைந்துளம்  “ என்பதை  முற்றாகக்  கொண்டும் , “பெருங்களன்” என்பதற்குப்  பெரிய  வஞ்சம்  என்றும்   பெரிய  நட்பு  என்றும்  பலவாறு  கூறுவாருமுளர். அவ்வுரையெல்லாம்   பொருட்  பொருத்தம்  இன்மையால்  பொருந்தாமை  உணர்க . பளகு  – குற்றம்  ; ஆண்டவன்  திருவடியை  அடைதற்குத்  தடை  , அத்  தடையைச்  சிவபாவனையால்  ஒழித்து, அப் பெருமான்  திருவடியை வணங்கினாயும்   இல்லை   என்பார் , “ பளகறுத்  துடையான்  கழல்  பணிந்திலை” என்றார் . உடையான்  என்றது , நெஞ்சத்தை உடைமையாக  உடையான் என்னும்  பொருளதாம் . “உளம் பெருங்களன்  செய்ததுமிலை” என்றதனால் , அகவழிபாடு  இன்மையும்  , “உடையான்  கழல்  பணிந்திலை “ என்றதனால்  புறவழிபாடு  இன்மையும்  கூறியபடியாம் . இறுதியில்  நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது  குறிப்பெச்சம் .  

            இதன்கண் , பொறிவாயிலாக  நுகரப்படும்  பலன்களை  ஒழித்து , நெஞ்சத்தைத்  தூய்மைப்படுத்து  , இறைவன்  தங்குதற்குரிய  நல் இடனாக  அமைத்தல்  வேண்டும்  என்னும்  அகவழிபாடும்  , கழல்  பணிதல்  ஆகிய  புறவழிபாடும்  , உயிர்  தூய  நிலையடைதற்கு  இன்றியமையாதன  வென்று  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                **********************************************

பாடல் :36 .

புகுவ  தாவதும்  போதர

வில்லதும் பொன்னகர்  புகப்போதற்

குகுவ  தாவதும்  எந்தையெம்

பிரானென்னை  யாண்டவன்  கழற்கன்பு

நெகு வதாவது  நித்தலும்

அமுதொடு  தேனொடு  பால்கட்டி

மிகுவ  தாவதும்  இன்றெனின்

மற்றிதற்  கென்செய்கேன் வினையேனே.

கருத்துரை :-   இதுகாறும்  தம் நெஞ்சின்  மாறுபட்ட  நிலையை நோக்கி  இரங்கிக்  கூறிய  அடிகள் , இனி, வீட்டு  நிலையை அடைதற்குத்   தடையாக  வுள்ள  கட்டு  அறுதி பெறுமாறும்  , அன்பு  நெறிச் சென்று  பேரின்ப  நிலையில்   ஈடுபட்டு  அவ் இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படுமாறும்  கிடைக்கப் பெறாமை குறித்து , அதற்குத்  தம்  பழவினை ஏதுவாதலை  அறிந்து இத் திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார்  

பதவுரை :-   புகுவது ஆவதும்  =  அடைதற்கு  உரியதும்  ,

போதரவு இல்லதும்  =  அடைந்தால்  மீண்டு  வருதற்குரிய நெறியில்லாததும்  ஆகிய ,

பொன்னகர்  புகப் போதற்கு   =  சிவ நகருள் புகுதற்பொருட்டுச் செல்லுதற்கு  ,

உகுவது  ஆவதும்  =  தடையாக வுள்ள  அகப்புறப்பற்றுக்கள் நீங்கி ஒழி வெய்துதலும் ,

எந்தைஎம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும் =

என்  தந்தையும்  எங்கள் தலைவனும்  என்னை  ஆட்கொண்டருளிய  பெருமானும்  ஆகிய  இறைவனுடைய  திருவடிகளுக்கு  அன்பு  செய்து  உருகுதலும் ,

நித்தலும் அமுதொடு தேனொடு  பால்கட்டி மிகுவது  ஆவதும்  =

இடையறாது அமிழ்தத்தோடும் தேணொடும் கலந்து பாலும்  கருப்புக்கட்டியும் ஆகிய  இவற்றின் சுவையினும் மிக்கதாகிய  இனிய சுவை உண்டாதலும் ,

இன்று  எனின்  =  இல்லையாயின் ,

இதற்கு  வினையேன் என் செய்வேன்  =  இந் நிலைக்குத்  தீவினையுடையேன்  யாது  செய்ய  வல்லேன்  என்பது.

விளக்கவுரை :-   ஒரு  வீட்டின்  உட்புகுதற்கு அமைந்த வாயில் வழியே, திரும்பி  வெளிப்படுதற்கும்  வாயிலாக அமைந்திருத்தலைக் கண்கூடாகக்  காண்கின்றோம் . அல்லது உட்புகுதற்கு ஒருவாயிலும்  ,வெளிப்படுதற்கு ஒரு  வாயிலும்  ஆக  அமைத்தலும்  உண்டு . இஃது  இல்லங்களுக்கேயன்றி  நகரங்களுக்கும்  பொருந்துவதாகும் , முத்தி  நிலையை  வீடாகவும் , நகரமாகவும்  , உலகமாகவும்  கூறுதல் உண்டு. எல்லாப் பற்றுக்களையும்  விட்ட  நிலையே வீடாகும் .  நகரமாகவும் , உலகமாகவும்  கூறுதல்  உபசார  வழக்கு . “சிவ நகர் புகப்  போகன்”, “சிவமாநகர்  குறுகப்  போனார்  “ ,   “வாராஉலகருள  வல்லான் “ என்று அடிகளும்  மற்றைப்  பெரியோரும்  கூறியிருத்தல்  அறிக . அம் முறையில் ஈண்டு  வீட்டு  நிலையைப் பொன்னகர்  என்றனர் . பொன்னகர்  என்பது பொன் போலப் போற்றத்தக்க  முத்தி நகரம் என்று  பொருள்படும் . உலகத்தில் பொன்னில்  பற்றுடையார் , அப் பற்று அற்ற  நிலையில்  அதனைப் போல்  விரும்பத்தக்கது வீட்டு  நிலை  ஆதலின் , பொன்னகர் என்றார் . உலகத்துள்ள  அழகிய நகரங்களில்  நின்றும்  வீட்டு நிலையாகிய பொன்னகரின்  இலக்கணம்  வேறுபட்டது என்பதைப்  புலப்படுத்தற்கே . “புகுவதாவதும்  போதரவில்லதும்” என்றார். உட்புகுதற்கு வழி  அமைந்தது  போலத் திரும்பி  வருதற்கு வழியில்லாதது என்பது பொருள். “மீண்டு வாரா வழியருள்  புரிபவன்”  என்பது அடிகள் திருவாக்கு .  போதரவு  –  திரும்புதல் ; ஆகு  பெயரால் வழியை  உணர்த்தும் .

         புகப்போதல்  –  உட்புகச் செல்லல் . வீட்டு  நிலையை அடைதற்குத் தடையாக  உள்ள  யான்  எனது  என்னும்  அகப் புறப்பற்றுக்கள்  ஒழிய வேண்டும்  என்பார்,  “உகுவதாவதும்” என்றார். உகுதல் – தேய்ந்து ஒழிதல் , சிறந்த  ஓரிடத்தை அடைதற்குச் செந் நெறி  காண்டலும் ,அச்செந்நெறிச்  சேறற்குத்  தடையாகவுள்ள பொருள்களைக்  களைந்து ஒழித்தலும்  வேண்டும் . ஈண்டு , வீட்டு நிலையை அடைதற்கு உரிய செந்நெறியாக அடிகள் கண்டது அன்பு நெறியே   ஆகும் . அந் நெறிச் சேறற்குத்  தடையாக  உள்ள அகப்புறப் பற்றுக்களைத்  திருவைந்தெழுத்து  ஓதுதல்  முதலிய   சாதனங்களால் ஒழித்தல் வேண்டும் . அத் தடை ஒழிந்த பின்னர்ச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியைக்  காண்டல்  வேண்டும் . அவ்  அன்பு  , உலகத்து மனை மக்கள் முதலிய  பற்று விளைக்கும்  பொருள்களை முன்னிட்டு  உண்டானதாக  இருப்பின், அஃது அச் செலவிற்குத் தடையாகு மாதலின், அவ்வாறு  இல்லாமல்  ஆண்டவன்  திருவடியை முன்னிட்டுத்  தோன்றியதாக  இருத்தல் வேண்டும்   என்பார்,  “எந்தை எம்பிரான் என்னை  ஆண்டவன் கழற்கு அன்பு” எண்றார் . எந்தை  முதலிய  சொற்கலின்  பொருள்  நலங்கள் முன்னைத் திருப்பாட்டுக்களில்  ஆராயப்பட்டன .

                     நெகுதல்  –  உருகுதல் . இறைவன் திருவடிக்கு  அன்பு  செய்து நெஞ்சம்  உருகுதலே அன்பு நெறியாகும் . அந் நெறிச் சென்று  எய்தும்  சிறந்த பேறு எத்தன்மையத்து என்று  அறியலுறுவார்க்கு, “நித்தலும் அமுதொடு”  என்பவை  முதலிய  சொற்களால்  விளக்கமுறுத்துவாராயினர் . இறைவன்  திருவடியில் இயைந்து நுகரும்  பேரின்பம்  அமிழ்தம்  முதலியவற்றின் நுகர்ச்சியால் உண்டாம்  இன்பம்  போல  உலப்புடையது  ஆகாது என்பார் , “நித்தலும்” என்றார்.  நித்தலும்  என்பது  எந்நாளும்  என்னும்  பொருட்டு  .   அமுதம் – தேவர்  உணவு.  தேன்,  பால், கட்டி  இம்மூன்றும்  மக்கள்  உணவு . “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய் “ என்பது அடிகள் திரு வாக்கு  . இப் பாடற் பகுதியில் அமுதம்  என்றது  பாலை  உணர்த்தும் .  தேவர்  உணவு , மக்கள்  உணவு  என்னும்  வேறுபாட்டைப் புலப்படுத்தற்கே  ஒடு  உருபு  ஈரிடத்தும் போந்தது . அமரர்  உணவாகிய  அமுதத்தோடு  மக்கள்  உணவாகிய   பால், தேன், கருப்புக்கட்டி என்னும்  இவற்றையும் கலந்து  உண்டால் எத்துணை  இனிமைச்சுவை தோன்றுமோ , அத்துணைச்  சுவையினும் இறைவன்  திருவடி  இன்பம்  மேம்பட்டது  என்பார், “அமுதொடு , தேனொடு , பால்  கட்டி  மிகுவது” என்றார் . ஒப்பதும்  மிக்கதும்  இல்லாததா கிய  இறைவன்  திருவடி இன்பத்திற்கு  வேறு  எடுத்துக்  காட்டு  இல்லாமையால் , கேட்கப்பட்ட  தேவர்  உணவிலும்  , நுகரப்பட்ட  மக்கள் உணவிலும் இனிமை  மிக்கச்  சில  பொருள்களை எடுத்துக்காட்டினர் . இங்ஙனம்  கூறுதல் ஆன்றோர் கொள்கை . இறைவன்  கருணைக்குப்  பால்  நினைந்தூட்டும்  தாயின்  அன்பை  எடுத்துக் காட்டியதும்  இதனை  வலியுறுத்தும் . அமுதம் முதலிய  சுவைப்  பொருள்களை எடுத்துக் காட்டி , அவற்றினும்  மிகுவது  எனவும் , எஞ்ஞான்றும் நிலையுதல்  உடையது எனவும்  வீட்டின்பம்  குறிக்கப்பட்டது  அறிக .

          மிகுவது – மிக்கதாகிய  சுவை .  ஆவது – ஆதல் . இன்று  என்பது ,உகுவது, நெகுவது , மிகுவது  என்னும் இவற்றோடு தனித்தனி இயையும் . “கடு மொழியும்  கையிகந்த  தண்டமும்  வேந்தன் ,அடுமுதரண் தேய்க்கும்  அரம் “ என்பது தனித்தனி  இயைதல் அறிக. இவ்வாறு  முடிப்பதனை  , “பிரத்யேக பந்த அன்வயம் “ என்பர்  வடநூலார் . மற்று; அசை . , இத் திருப்பாட்டில் வீட்டு  நிலையின்  இயல்பை  விளக்கி  , அதனைச்  சார்தற்கு உரிய  செந்நெறிச் செலவும் , அதற்குத்  தடையாகவுள்ள  அகப்புறப் பற்றுக்களின் ஒழிவும் , அவற்றின் ஒழிவில் அச்செந்நெறியாகிய  அன்பு  நெறிப்   படர்தலும் , அந் நெறிச்  சென்று  எய்தும் பேரின்பப் பேறும் ஆகிய  இவற்றை முறையே  கூறி ,இவற்றுள்  ஒன்றேனும்  அடையப்  பெற்றிலேன் எனின் , இது  குறித்து யான்  செய்யத்தக்கது என்று  இரங்குவார், “ இதற்கு  என் செய்வேன்” எனவும்  , இங்ஙனம்  அடையப் பெறாமைக்கு  ஏது , என்  தீவினையே என்பார் . உடம்பொடு  புணர்ந்து , “வினையேனே” எனவும்  கூறினர் .

                  இதன்கண், பொன்னகர்  புகப் போதற்குத்  தடையாகவுள்ளன  உகுதலும் , ஆண்டவன்  கழற்கு  அன்பு  நெகுதலும்   அமுதொடு  தேனொடு  பால்கட்டி  மிகுதலும்  ஆகிய  இவை உயிரின்  தூய்மைக்கு  இன்றியமை யாதனவென்று  கூறப்பட்டிருத்தலின் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  விளக்கமாதல்  அறிக .

                                       *****************************************

பாடல்: 37.

வினையென்  போல் உடை  யார்பிறர்

ஆர் உடை  யான் அடி  நாயேனைத்

தினையின்  பாகமும்  பிரிவது

திருக்குறிப்  பன் றுமற்  றதனாலே

முனைவன்  பாதநன்  மலர்பிரிந்

திருந்துநான்  முட்டிலேன்  தலைகீறேன்

இனையன்  பாவனை  யிரும்புகல்

மனஞ்செவி  யின்னதென்  றறியேனே.

கருத்துரை :-   கட்டறுதி பொறாமை முதலியவற்றிற்கு ஏதுவாகவுள்ள தம்  பழ  வினையை நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில் வருந்திக் கூறிய  அடிகள், அவ்  வினை தம்  அளவில்  மிக்க  வலி  படைத்திருத்தலை அநுபவத்திற் கண்டு  , அதனால் நேர்ந்த  இறைவன் திருவடிப் பிரிவிற்கு வருந்தித் தம் வலிய இயல்பை  இத்  திருப்பாட்டில்  வெளிப்படுத்துக்  கூறி  மேலும்  இரங்குகின்றார் .

பதவுரை :-  என்போல்  வினை  உடையார்  பிறர்  ஆர்  =   என்னைப்போலத்  தீவினையுடையார்  பிறர்  யாவர் (ஓருவரும்  இல்லை என்றபடி) ,

அடி  நாயேனை  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை ,

தினையின்  பாகமும்  பிரிவது  –  தினையளவு  போதும்  பிரிந்திருத்தல்  ,

உடையான் திருக்குறிப்பு  அன்று  =  இறைவனுக்குத்  திருவுள்ளக்கருத்து  அன்று ,

அதனாலே – முனைவன் பாதம் நல் மலர் பிரிந்திருந்தும்  =  ஆண்டவனுடைய  திருவடிகளாகிய நல்ல  மலர்களைச்  சாராது  பிரிவுற்றிறுந்தும் ,

நான்  முட்டிலேன்  தலைகீறேன்  =  யான்  தலையை  வலிய  பொருளோடு  மோதுதல்  செய்கிலேன் , பிளத்தலும்  செய்கிலேன் ,

இனையன்  பாவனை  இரும்பு  =  இத்தகைய  எனது  நினைவு  இரும்பாகும் ,

மனம்  கல்  =  நெஞ்சம்  கல்லாகும் ,

செவி இன்னது  என்று  அறியேன்  =  செவியை  இன்ன  பொருள்  என்று  சொல்ல  அறிந்திலேன்  என்பது.

விளக்கவுரை :-  வினை  ஈண்டு  தீவினையை  உணர்த்தும் . ஆண்டவன் திருவுள்ளம் தினைத்துணைப்  போதும் தம்மை  விட்டுப்  பிரியாதிருப்ப தாகவும் , தாமே  பிரிந்து தனிப்பட்டு வருந்துதற்கு ஏதுவாகிய தீவினைப்பயன் நுகர்ச்சியில் தம்மைப் போல்  பிறர்  யாரும் உலகில்  இருக்க மாட்டார் என்னும்  கருத்தால் , “வினையென் போலுடையார் பிறரார்” என்றார். இத்தகைய  வலிய  வினைக்கு  ஆளாயினர் என்னைப்  போல் பிறர்  இருக்கமாட்டார்  என்பதை  யான்  அறிவேன் ; என்  சிற்றறிவுக்கு  அறியப் படாமல்  வேறு  யாரும்  இருப்பாராயின்  , அவ் வுண்மை உணர்ந்தாயினும் ஓராற்றான் ஆறுதல் அடையலாமே என்னும்  கருத்தால் , அடிகள் ,”பிறர்  ஆர்” என்ற  வினா வாய்ப்பாட்டால்  கூறுவாராயினர் . உடையான்  என்பது வலிய தீவினையுடைய என்னையும்  அடிமையாக  உடையான் என்னும்  பொருட்டு  , மிகவும் இழிந்தவன் என்று  என்னை  அறிந்திருந்தும்  என்னைப் பிரியாதிருக் கும்  திருவுள்ளம்   உடையான்  என்பார் , “ஆடி நாயேனை”  என்றார் .  

            தினையின்  பாகம் –  தினையளவு  கூறு. இக்கூறு  , கால அளவின்  மிக்க  சிறுமையை  உணர்த்தும் ,” இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்னும்  அடிகள்  மணிமொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . இனி, என் அறிவில்  முழுதும்  கலந்துள்ளானே யன்றித்  தினையளவு  ஒரு  சிறு  கூறும்  விலகியிருக்கும்  குறிபுடையான் அல்லன்  என்றார் எனினுமாம் . ஆகவே, தினையின்  பாகமென்பது  ,காலத்திற்கும்  இடத்திற்கும்  பொருந்துமாறறிக  .  குறிப்பு  இறைவனாதலின் , திருக்குறிப்பு  என்னப்பட்டது .  மற்று , அசை.  அதனாலே  என்னும்  ஏது , முனைவன் பாத  நன்மலர்  பிரியாதிருத்தலே கடமையென்றற்கு ஆம் . அடியேனைத் தினையின்  பாகமும்  பிரிவது  உடையானுக்குத்  திருக்குறிப்பு  அன்று . ஆயின்  அக் குறிப்பு  உணர்ந்து ,அப் பெருமான்  திருவடி  மலர்களைப்  பிரியாது  இறுகப் பற்றிக் கோடல்  என்  கடமையாகவும்  , வலிய  தீவினையின் தடையால் பிரிந்திருக்க  நேர்ந்தது  என்று  இரங்குவார், “ முனைவன்  பாதநன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றார் . இங்ஙனம்  இறைவன்  திருவடிக்  காட்சியின்  பிரிவு  அடிகளுக்கு  நேர்ந்ததற்குக்  காரணம்  , இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து உபதேசித்துச் சைவச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியை இனிய  பாடல்களின்  மூலமாக  உலகத்தவருக்கு  விளக்கி  உபகரித்தற் பொருட்டு , “இன்னும்  சின்னாள் இருத்தி” என  இட்ட  கட்டளையே  யாகும் . இறைவன்  கட்டளை  அதுவாயினும் , அளப்பரிய  இன்பத்திற்கு  ஏதுவாக  இருந்த  திருவடிக் காட்சி  , விரைவில்  கரந்தது பொறாமல்  துடித்து  வருந்தும் நிலையினர்  ஆயினர்  என்பது  ஞானாசிரியனாக  எழுந்தருளிய  இறைவன்  திருவுருக்கரந்த  நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திப்  பாடிய  பின்வரும்  பாடற் பகுதிகட்கெல்லாம் இங்ஙனமே கருத்துக்  கொள்க.  “முட்டிலேன்” , “தலை  கீறேன் “ என்புழி, தலையை ஈரிடத்துங்கொண்டு  , தலையைக் கல்  முதலிய  வலிய  பொருளோடும்   மோதுகின்றிலேன் , பிளக்கின்றிலேன்  என்று  கொள்ளல்  வேண்டும் . ஏனைய  உறுப்புக்களை  விட்டுத்  தலையை  மாத்திரம்  இங்ஙனம்  கூறியது , காட்சியில்  திளைத்தற்குரிய  கண்  முதலிய  பொறிகள் எல்லாவற்றையும்  உடைமையானும்  , இறைவன்  திருவடி மலரைச்  சூடுதற்கு  உரிமை  இருந்தும்  , அங்ஙனம்  சூடிக்கொள்ளா மையானும்  ஆம்  என்பது  சிறிதும்  தம்மைப்  பிரியாதிருத்தலே  இறைவன்  திருவுள்ளமாகவும், அதற்கு  மாறாகப்  பிரிந்திருக்க  நேர்ந்தது பற்றி  உண்டாகிய  துன்பத்தால் , “ முட்டிலேன்  தலை கீறேன் “ என்று  தம்  உடலையே மாய்த்துக் கொள்ளாத  தம் வன்கண்மையை   இவ்வாறு  புலப்படுத்தருளினர் . இனையன்  என்பது  , இத்தகைய  வன்கண்மை  உடையேன்  என்னும்  பொருட்டு .   

            இறைவன் திருவுருவைப்  பாவித்தற்கு நெஞ்சத்தின்  குழைவு  வேண்டும்  . குழைவு  இன்றேல், உள்ளம்  கடவுள்  வடிவில்   ஈடுபட்டுப்  பாவித்தற்கு  இயலாது  என்பது பெரியார்  அநுபவம் , “நெக்கு நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே, புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்  புண்ணியன்” என்பது  தமிழ் மறை  .ஈண்டு  அடிகள் இறைவன்  திருவுருவைப்  பாவித்தற்கு    உள்ளக் குழைவு  இன்மையால் ,”இனையன்  பாவனை  இரும்பு “ எனவும்  , பாவித்தற்கு  உரிய  குழைவு  இல்லாத  மனம்  கல்லைப்  போன்றிருத்தலின் , “கல் மனம் “ எனவும் கூறினர். இரும்பு , நெருப்பு முதலிய  சாதனங்களால் உருகும்  இயல்பினது .  அது  போலத்  தவ  ஆற்றலால் பாவனைக்குறிய  குழைவைப்  பெறக்  கூடுமாயினும் , அதற்கு  மூலமாகவுள்ள  மனம்  எதற்கும்  உருகாத  கல்லாயிற்று  என்பது  கருத்து.  மனம்  கல்லாகிய  நிலையில்  , அக முகமாக இறைவனைப்  பாவித்தல் இல்லாமையோடு  , பொறிகளின்  வழி யே சென்று , புலநுகர்விலும்  இறைவனை  அனுபவித்தற்கு  இயலாததாகும் என்னும்  குறிப்பை  , “பாவனை  இரும்பு  கல்மனம் “ எனவும் ,செவி  இன்ன தென்றறியேன்  எனவும்  கூறியவாற்றான் அறிக. பொறிகளுக்கு உபலக்கண மாக  ஈண்டு  செவி  கூறப்பட்டது . காட்சி ஒழிவில்  கேள்வி  அளவிலாவது  இறைவன்  திருப்புகழ்  அமிர்தத்தைப் பருகற்கும்  இயலவில்லையே  என்பது  குறிப்பு .  

          இதன்கண், “தினையின்  பாகமும்  பிறிவது திருக்குறிப்பு  அன்று “” என்றதனாலும் , “முனைவன் பாத  நன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றதனாலும்  , இடையறாது இறைவன் திருவடிக் காட்சியில்  ஈடிபட்டிருத்தல் உயிரின்  தூய  நிலைக்கு  ஏதுவாம்  என்பது போதரலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனால்  அறிக .

                                                  *****************************************

பாடல் : 38 .

ஏனை  யாவரும்  எய்திட

லுற்றுமற்  றின்னதென்  றறியாத

தேனை  ஆனெயைக்  கரும்பினின்

தேறலைச் சிவனையென்  சிவலோகக்

கோனை  மானன நோக்கிதன்

கூறனைக்  குறுகிலேன்  நெடுங்காலம்

ஊனை   யானிருந்  தோம்புகின்

றேன்கெடு   வேனுயிர்  ஓயாதே.

கருத்துரை :-  ஆண்டவன்  திருவடிப்  பிரிவிற்கு வருந்தித் தம்  அகப்புறக்  காரணங்களின்  வலிய  இயல்பைக்  குறித்து  முன்னைத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறிய  அடிகள், மீண்டும் இறைவனை அணுகப் பெறாத நிலையில்  உடலோம்புதலின் மிகையையும்  உயிர்  ஒழிவு  பெறாமையையும் நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :-   ஏனை யாவரும்  எய்திடல்  உற்றும்  =  மெய்யன்பர்  அல்லாத  மற்றைத்  தேவர்   மக்கள் முதலிய  எல்லோரும்  அடைதற்கு  முயன்றும் ,

இன்னது என்று  அறியாத  =  இத்தமை  உடையது என்று  அறியப்படாத ,

என் தேனை  ஆன்  நெய்யை  கரும்பின் இன் தேறலை =  எனக்குத் தேனும்   பசுவின்  நெய்யும்  கரும்பினது  இனிய  சாற்றின்  தெளிவும்  ஆயவனை ,

சிவனை சிவலோகக்  கோனை  மான்  அன்ன  நோக்கி தன்  கூறனை  = 

இன்பவடிவினனும்  சிவலோகனாதனும்  மான்  விழி போன்ற  கண்களையுடைய  அம்மையைத்  தன்  ஒரு  கூற்றில்  உடையவனும்  ஆகிய  இறைவனை  ,

நெடுங்காலம்  குறுகிலேன்   =   நீண்ட  காலமாக  அணுகப்பெற்றிலேன் ,

கெடுவேன்  யான்  இருந்து  ஊனை  நெடுங்காலம்  ஓம்புகின்றேன்  = 

இந் நிலையில் கேடு  அடையத்தக்க  யான்  இவ்வுலகில்  வாழ்ந்திருந்து உடலை  நீண்ட காலமாகப்  பாதுகாக்கின்றேன்,

உயிர்  ஓயாதே  =  என் உயிர் கெட்டு  ஒழியாதா?  என்பது .

விளக்கவுரை :-   ஏனை  யாவரும்  என்றதனால் , மக்கள்  தேவர்  முதலிய குழுவினருள் ஒரு சிலர் அல்லாத  மற்றைய  எல்லோரையும் கொள்ளல் வேண்டும் . அச் சிலர்தாம் யாவர்  எனின் , வினை  மாசு  நீங்கிய மெய்யன்பராவர்  என்பது . மற்று ; அசை . இறைவனை அடைதற்கு உரிய செந் நெறியாகிய அன்பு  நெறியான் அன்றி , வேற்று நெறிச் செல்வார் , எத்துணை ஆற்றலும் முயற்சியும்  உடையராயினும் , இறைவன் இயல்பை இத் தன்மைத்து என்று  அறியும்  வலியிலராவர்  என்பது தோன்ற, “ இன்னதென்று  அறியாத “ என்றார்.  அறியாத  என்னும்  பெயெரெச்சம்  ,தேன்  முதலிய  சொற்களாற்  குறிக்கப்படும்  “இறைவன்” என்னும்  பெயரைக் கொண்டு முடியும் .

               “என்” என்னும்  சொல்லைத்  தேன்  முதலிய ஆறு  இடங்களிலும் கூட்டி , எனக்குத்  தேன்  முதலியனவாக  உள்ளானை  எனக்  கொள்ளல் வேண்டும் .ஏனையோரால் இன்ன  தன்மையன்  என்று  அறியப்படாத இறைவனைத் தேன்  முதலியனவாக  அடிகள் தாம் அறிந்து கூறுதல் எங்ஙனம்  பொருந்தும்  எனின் ,  “அடித்தடித்து  அக்கார முன் தீற்றிய அற்புதம்” என்றபடி , ஆண்டவன்  வலிய  வந்து , தன் இயல்பை  அறிவித்து , அருளமுதத்தை  ஊட்டி  ஆட்கொண்டதை அடிகள் பலவிடத்தும்  குறிப்பிடுகின்றார்  ஆதலின், அம் முறையிற் பொருந்தும் என்க. அடிகள் தம்முடைய  முதிர்ந்த அன்பினால் ,”அன்பினில்  விளைந்த ஆரமுதே” என்றபடி , ஆண்டவனை  மிக இனிய பொருளாகக் கொண்டு  அனுபவித்தவர் என்பதை அறிகின்றோம் . அங்ஙனமாகவும் , அடிகள் தம் அடிமை இயல்பையும் , ஆண்டவன் அருட்  பெருக்கத்தையும்  வெளிப் படுத்தும் கருத்தினராய்த் தம்மை இழித்தும் , திருவருளை  உயர்த்துங்  கூறுதலைப்  பலவிடத்தும் காணலாம் .தேன்  பால்  கன்னல்  இம்  மூன்றனையும்  இனிமையிற் சிறந்த பொருள்களாகக் கொண்டு  , இறைவனுக்கு  ஒப்பிட்டுப் பெரும்பாலும்  இம்  முறையிற் கூறுதலைப்  பலவிடங்களிலும்  காணலாம் .  “தேனையும்  பாலையும்  கன்னலையும் ஒத்தினிய கோன்”என்பது முதலிய இடங்களிற் காண்க . இறைவன்,” அருமையில் எளிய அழகே” என்று  கூறியபடி  , தேவர்  முனிவர்  முதலியோரும் அரிய தவம் செய்தும்  காணுதற்கரிய  பொருளாகவும் , தூய  அன்பு  நெறியில்  ஒழுகும் அடியவர்க்கு  எளி பொருளாகவும் உள்ளான் என அறிகின்றோம் . அடியவர் , “பெறவே வேண்டும்  மெய்யன்பு  “  என்றபடி ,ஆண்டவனிடத்து அன்பைப்  பெருக்கிக்  கொள் வராயின் , இறைவன் அன்புவலையில்  தானே  வந்து படுவன்  ஆவன் . அங்ஙனம்  வலிய  வந்து முதலில்  எளியனாய்த்  தன் கருணைத் தேன்  காட்டி, அவ்  அடியவரைத்  தன் வயப்படுத்துத்   தன் அரிய  தன்மையைப்  படிப்படியாக உயர்த்துக்  காட்டி  தன் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்வன் என்பது பெரியார் கண்ட உண்மை அனுபவம் .ஒரு குழந் தைக்கு இனிமைமிக்க  எளிய பொருளை முதலில்  காட்டி நுகர்வித்து , அதன்மேல் சிறிது சிறிதாக உயர்ந்த பொருள்களை உண்பித்து உடலுக்கு  நலம்  செய்வார் போல , மெய்யன்பர்க்கு  , ஆண்டவன் முதலில்  எளியனாய்க்  காட்சி யளித்துப்  படிப்படியாகத்  தன் அரிய நிலையையும் உணர வைத்து , முடிவில் இன்பத்துள் திளைப்பித்து ,அவர் தம் உயிர்க்கு  நலம்  செய்பவன்  ஆவான் என்க. இம்முறையில்  அடிகளுக்கு  ஆண்டவன்  தன்   இயல்பை  முதலில்  எளிமையில்  காட்டி  ,ஈர்த்துப் படிப்படியாக  அருமை  நிலையை உணர்த்தி ஆட்கொண்டதைப்  புலப்படுத்துவாராய் , “தேனை ஆனெயை” எனத் தொடங்கி , முறையே  கூறுவாராயினர் தேனைப்  பெற்றவுடன் , அடுதன் முதலிய செயற்படுத்தாமல்  இனிமை தோன்ற எளிதில் உண்ணலாம் . “ஆனெயை”என்றமையால் பசுவினிடத்தினின்றும்  நெய்  பெறவேண்டுமானால்  பாலை  அடுதற் செயற்படுத்துத்  தயிராக்கிப் பெறல் வேண்டும் . கரும்பின் இன் தேறல்  என்புழி , தேறல் ஆகுபெயராய்க் கட்டியை உணர்த்தும் . கரும்பின் தேறல்  பெற வேண்டுமானால் , கரும்பை  ஆலையில்  இட்டுத்  தெளிந்த  சாறு  எடுத்து ,அடுதற் செயலாற்  கட்டியாக்கிப்  பெறவேண்டும் . ஈண்டுக்  கூறிய  தேன்  நெய்  கருப்புக்கட்டி இம் மூன்றும்  இனிமைச்  சுவையில்  ஒன்றுபட்டிருந்தாலும் , முன்னதை நோக்கப் பின்னது அரிதிற் பெறத்தக் கதாக  இருத்தல்  அறியத்தக்கது . தேனை  என  அடைமொழி  இன்றியும் , ஆனையை , கரும்பின் இந்தேறலை  என  மற்றைய இரண்டிற்கும் அடைமொழி  புணர்த்தும்  கூறியது  தேனை ஆக்குஞ் செயல்  ஈக்களுக்கே அன்றி மக்களுக்கு  இன்றென்பதும் ,நெய்யும்  கருப்புக் கட்டியும்  ஆக்குஞ் செயல் மக்களுக்குரியன  என்பதும் புலப்படுத்தற் கென்க . தேன்  முதலிய  மூன்றையும்  ஆண்டவன்  இயல்பிற்கு ஒப்புமை பற்றிக்  கூறிப்  பின்னர்ப் பொருள் இயல்பு  பற்றிச் சிவன்  முதலிய  சொற்களால்  விளக்கத்  தொடங்குகின்றார்.

        சிவன்  என்பது  இன்பவடிவினன் என்னும்  பொருட்டு  , தேன் முதலியன புலன் உணவிற்கு இன்பம் செய்தல் போலப் புலன்களுக்கு  எட்டாத மெய்யுணற்விற்கு இன்பம் செய்பவன்  இறைவன்  என்பது  தெளிவித்தற்கே முதலில்  “சிவனை” என்றார். சிவபெருமான் இன்ப வடிவினன் ஆதலோடு  , அவன்  ஆட்சிக்கு  உட்பட்ட  உலகமும் இன்ப மயமான தென்பதும் , அவ் உலகத்தில் இன்பத்  தனியரசாக  விளங்கு பவன் என்பதும் புலப்படுத்தற்கு ,” சிவலோகக் கோனை” என்றார். போகியாய்  இருந்து உயிர்க்குப் போகத்தை புரிதற்கும் ,உயிர்த் தொகுதிகள் அருள் உருவினளாகிய  அன்னையை  வழிபட்டு ,அவள்  காட்டக் கண்டு  அப்பனை அடைதல் முறையாதலின் , அம் முறயில் அவ் உயிர்களுக்கு  அருளுதற் பொருட்டும் , இறைவன் உமையொரு கூறனாய் விளங்குகின்றான் என்னும்  உண்மையைப்  புலப்படுத்தற்கு , “மானன  நோக்கி தன் கூறனை” என்றார். அம்மைக்கு  நோக்கச் சிறப்புக்  கூறியது, தன் மக்களாகிய  உயிர்த் தொகுதிகளின்பால் வைத்த அருட்குணம்  அதன்முகமாக வெளிப்படுதல் பற்றி என்க.  சிவன், சிவலோகக் கோன், உமையொரு கூறன் என்னும்  இம் மூன்று  பெயர்களும் ,பொருளியல்பின் ஒன்றாயினும் , அடையும்  முறயில் , முன்னதை நோக்கப் பின்னது அருமை உடையதாதலை உய்த்துணரல் வேண்டும் . ஆண்டவன் , மெய்யன்பர்க்கு  , முதலில் தன்னை இன்பவடிவினனாகவும் , பின்னர் இன்ப உலகத் தனியரசாகவும் ,அதன்பின் உமையொரு கூறனாகவும்  காட்சியளித்து இன்புறுத்தும் உண்மை புல்னாதலறிக . அருமையில் எளிய அழகு இருந்தவாறு இது . “நெடுங்காலம்”என்பதை  இடைநிலை யாகக் கொண்டு , “குறுகிலேன்” என்பதனோடும்  கூட்டுக. குறுகுதல் – அணுகுதல்.நெடுங்காலம் குறுகிலேன் என்றது பண்டைப் பிறப்புக்களிற் சென்ற காலத்தைக் குறித்து என்க. இப்பிறப்பைக் குறித்து கூறியதாகக்  கொள்ளின் , ஆண்டவனை  அணுகாத காலம் சிறிதாயினும் , பிரிவு நிலையில் பெரிதாகத் தோன்றும் ஆதலின், அது பற்றி  நெடுங்காலம்  என்று  கூறினர் எனக் கொள்ளல் வேண்டும் .கெடுவேன்  யான்  என்பது , இந் நிலையில் கேடு அடையத்தக்க  யான் என்னும் பொருட்டு . “யான் இருந்து ஊனை ஓம்புகின்றேன்” என்றது , இப்பிறப்பில் ஆண்டவனை அணுகாத  நிலையில் உடலை மாய்த்துக் கொள்ளாமல் உயிருடன்  கூடி  வாழ்ந்து , இவ்வுடலை நீண்ட  காலமாகப்  பாதுகாக்கின்றேன் ; இஃது என்ன  அறியாமை என்பது குறித்து என்க. என் அறியாமையால் பொய்யுடலை மெய்யெனக் கொண்டு யான் ஓம்புகின்றேன் ஆயினும், ஆண்டவன் அணுக்கம் பெறாத நிலையில் , உயிராவது தானே உடலை விட்டுக் கழியலாமே ; அதுவும்  இல்லையே  என்பார், “உயிர்  ஓயாதே”  என்றார்.  ஓயாதே என்புழி , ஏகாரம் எதிர்மறைப் பொருளது. “தானேயும் கழியா  தாவி” என்னும் பெளராணிகர் உரையும் இக் குறிப்புப் பற்றிய தென்க.

       இதன்கண், ஊன் ஓம்புதலைப் பொருட்படுத்தாமல் ,இனிய பொருளாகிய  ஆண்டவனை விரைந்து அணுகுதல் உயிரின்  தூய நிலைக்கு இன்றியமையாதது என்னும் பொருள் புலப்பட்டு  நிற்றலின், ஆத்தும சுத்தி என்னும்  பதிகம் நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                          ************************************

பாடல் : 39.

ஓய்வி  லாதன  வுவமனில்

இறந்தன  ஒண்மலர்த்  தாள்தந்து

நாயில்  ஆகிய  குலத்தினுங்

கடைப்படும்  என்னை நன்  னெறிகாட்டித்

தாயில்  ஆகிய இன்னருள்

புரிந்த  என்  தலைவனை  நனி காணேன்

தீயில்  வீழ்கிலேன்  திண்வரை

யுருள்கிலேன் செழுங்கடல்  புகுவேனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் பக்கல் அணுகப்பெறாத நிலையில் உடல் ஓம்புதலின் மிகையை நினைந்து இரங்கிக் கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் தமக்கு நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த ஆண்டவனைக்  காணாமல் காலம்  மிகக் கழிதலைப்  பொறாராய்த்  தீ  முதலியவற்றால் தாம்  அழியாமல்  இருப்பது  குறித்து வருந்துகின்றார் .

பதவுரை :- ஒய்வு இலாதன  =  அழிந்தொழிதல் இல்லாதனவும் ,

உவமனில்  இறந்தன  =  உவமங்களைக்  கடந்தனவும் ஆகிய ,

ஒண்மலர் தாள்  தந்து  =  ஞான ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை  அளித்து ,

நாயில்  ஆகிய  குலத்தினுங்  கடைப்படும்  என்னை  =  இழிந்த  நாய்ப்பிறப்பினும்  கடைப்பட்ட  எனக்கு,

நல்நெறி  காட்டி   =  வீடு  அடைதற்குரிய  சிறந்த  வழியாகிய  அன்பு நெறியை அறிவுறுத்தருளி ,

தாயில்  ஆகிய  இன்னருள்  புரிந்த   =  தாயிடத்து உண்டாகிய  இனிய  அருளினும்  சிறந்த  அருளைச்  செய்த ,

என் தலைவனை நனி காணேன்  =  என் ஆண்டவனை  மிகவும்  கண்டிலேன் , (இந் நிலையில்)

தீயில்  வீழ்கிலேன்  =  நெருப்பில்  வீழ்ந்து  இறந்திலேன் ,

திண் வரை  உருள்கிலேன்  =  திண்ணிய  மலைமேலிருந்து  உருண்டிலேன் ,

செழும்  கடல்  புகுவேனே  =  நீர்ப்  பெருக்கினையுடைய  கடலினும்  சென்று  வீழ்வேனா?  ( அதுவும்  செய்யேன்  என்றபடி)   என்பது .

விளக்கவுரை :-  இறைவன் உயிர்களுக்கு  அருளும்  மெய்ஞ்ஞானத்தை இறைவன் திருவடி எனக்  கூறுதல் மரபு . அழிந்து ஒழியாதன என்னும்  பொருள் தோன்ற ,”ஓய்விலாதன”என அத் திருவடிகளின் இயல்பு கூறப்பட்டது . இங்ஙனம் கூறியது அனுமான அளவை பற்றி என்க . அனுமான அளவையின் உறுப்புக்கள் ஐந்தனுள் ,மேற்கோள் , ஏது, எடுத்துக்காட்டு  என்னும்  மூன்றும் சிறந்தனவாம் . இண்டு  மேற்கோள்  இறைவன் திருவடிகள் அழிந்தொழியாத  இயல்புடையன என்பது. அதற்கு ஏது , அத் திருவடிக்கு உரிய  முதல்வன் என்றும்  அழிவில்லாத வனாக   இருத்தலின் என்பது . இதற்கு  எடுத்துக்காட்டு  வேண்டும் . அழிவின்மையும்  எங்கும்  நிறைந்திருத்தலும்  ஆகிய  குணங்களை யுடைய  கடவுளைப்பற்றி செய்திக்கு  , அப் பொருளின் நிறைவுக்கு  உட்படாத பொருல் பிறிதொன்று  இன்மையால் , எடுத்துக்காட்டுக்  காண்டல்  அரிது. எடுத்துக்காட்டு  இல்லாமல் இருப்பின்  ,அளவை இலக்கணம்   பிழைபடும் . இத்தகைய  இடங்களில் உடன்பாட்டு  முகமாக  எடுத்துக்காட்ட  இயலாமையின் , எதிர்மறைமுகமாக   எடுத்துக்காட்டு தலை  மேற்கொள்வர்  அளவை  நூலார் . இவற்றை  முறையே அந்வய திருட்டாந்தம் , வெதிரேக திருட்டாந்தம்  என்பர்  வடநூலார் . இங்கே  ஆண்டவனுடைய  திருவடி ஞானத்திற்கு  உடன்பாட்டு  முகமாக  எடுத்துக் காட்டுதற்குப் பொருல் இல்லாமையால் ,எதிர்மறை முகமாகக் கொண்டு,  “உவமனில்  இறந்தன” என்றார்.

                ஒண்மை – ஞானம் ; இறைவன்  திருவடியைச்  சிவஞான வடிவமாகச்  சைவ  நூல்  கூறும்  . அத்தகைய  உயர்ந்த  திருவடிஞானப் பேற்றிற்கு உரிய  தகுதி ஒரு சிறிதும் இல்லாத  கடையேன்  என்பார், “நாயில்  ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை” என்றார். நாய்ப் பிறப்பினும்  இழிந்த பிறப்புடையேன்  என்று  அடிக்கடி  அடிகள் தம்மைக்  கூறிக்கொள்ளுதலின்  கருத்து  இன்னது  என்பது முன்னைத் திருப்பாட்டு களில்  விளக்கப்பட்டது . நன்மை  எல்லாவற்றினும்  சிறந்தது  வீடு  ஆதலின்  , அதற்குரிய  நெறியை  நன்நெறி  என்றார். அஃது அன்பு  நெறியாகும் . அறிவு நெறி  முதலிய  வேறு  பல நெறிகளும்  உளவேனும்  , அடிகள் சிறப்பாகக்  கண்டது , பத்தி நெறியாகிய  அன்பு நெறியேயாம் . அந்நெறியைக் காட்டுதலாவது ,அக முகமாக நின்று உணர்த்தி அவ்வழிப்  படுத்தலாம் .ஆண்டவன் அன்பர்பால் வைக்கும் அருளுக்கு, “உயர்ந்ததன்  மேற்றே  உள்ளுங்காலை “  என்னும் விதிப்படி உவமை கூறுதல் இயலாத தொன்று ஆதலின்  , அதற்கு  உலக நிகழ்ச்சியுள்  சிறந்தது ஒன்றை எடுத்துக் காட்டுதல்  பெரியோர்  கொள்கை. அவ் எடுத்துக்காட்டாவது  , அறியாப் பருவத்து  மழவிளங்குழவிபால்  தாய்  வைத்துள்ள  அருட் குணமே  யாம் . அங்ஙனம்  எடுத்துக் காட்டுங்கால் , உறழ் பொருவும் , உவமப் பொருவும்  என்னும் இருவகையுள் , உறழ் பொருவு  பற்றியே  கூறத்தக்கதாகும் . காக்கையிற்  கரிது  களம்பழம்  என்புழிக்  காக்கை யினும்  கரிது என்பது உறழ்பொருவுக்கும் , காக்கைபோலக்  கரிது என்பது உவமப் பொருவுக்கும்  உதாரணங்களாம் . ஈண்டுத்  தாய்  அருள்  போன்ற  அருள்  என்பதை  உறழ்பொருவாகக்  கொண்டு, தாய்  அருளினும்  சிறந்த  அருள் எனக்  கொள்ளுதலே  பொருத்தம்  உடைத்தாம்.  

      அறக்கருணை , மறக்கருணை  என்னும் இருவகையுள் , இறைவன்  தமக்குச் செய்தது  அறக் கருணை யென்பார்,  “இன்னருள்  “ என்றார் . ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து திருவடிக் காட்சி  அளித்துத்  தமக்கு  நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த  பெருமான்  உருக்கரந்த  நிலையில்  , அப் பிரிவு  சிறு பொழுதாயினும் , அதனைப் பொறாத அடிகள் , அச் சிறு  பொழுதைப்  பெரும்  பொழுதாக நினைந்து, இத் துணைநெடுங்காலம்  கடந்தும்  காணப் பெற்றிலேனே  என்று  இரங்குவார்., “ஏன் தலைவனை நனி காணேன் “ என்றார். நனி என்னும்  உரிச்சொல் காணாமைக்கு ஏதுவாகிய  காலமிகுதியைக்  குறிக்கும் . அருமருந்தன்ன ஆண்டவன் திருவடிக் காட்சி  மறைந்த நிலையில் உயிர்  வாழ்தல் தகாது எனக் கண்ட அடிகள், தம் உடம்பை மாய்த்துக் கொள்ளாமல் இருத்தல்  பற்றிப் பெரிதும்  கவல்கின்றார். துன்பம்  பொறாத  நிலையில்  சாதற்குத்  துணிவார் , தீப் பாய்தல் ,வரையின்  நின்றும்  உருளல் , நீரில்  வீழ்தல்  முதலிய  உடற்கு  அழிவுச்  செயல்களை  மேற்கொள்ளுதல் உண்டு . இங்கே கூறப்பட்ட  மூன்றனுள் , நீரில்  வீழ்தற் குரிய  மனவலியினும் , வரையினின்றும் உருளுதற்குரிய  மன வலி சற்று மிகுதியாகவும்  , தீப் பாய்தற்குரிய  மன வலி  அதனினும் சற்று  மிகுதி யாகவும்  வேண்டும் என்பது ஊன்றி  உணர்வார்க்குப்  புலனாம் . அம் முறயில்  தலைவன்  பிறிவாற்றாமை  பற்றித்  தீப்  பாய்ந்து இறத்தலே தக்கதாகவும்  , அச் செயலின்  கடுமை நினைந்து அவ்வாறு செய்திலேன் ஆயினும் , மலையினின்றும் உருண்டு  வீழ்த்து இறத்தல் வேண்டும் ; அதற்கும்  துணிவு  தோன்ற  வில்லை  யாயினும் , கடலில் ஆயினும் முழுகி இறத்தல்  வேண்டும் ; அதுவும் செய்திலேன் என்பார் , “தீயில்  வீழ்கிலேன்  திண்வரை  உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே” என்றார். புகுவேனே  என்புழி  , ஏகாரம்  எதிர்மறைப்பொருட்டு  , நீரில்  மூழ்குதற்கு   நீர்ப் பெருக்கினையுடைய  கடலைக்  கூறினார் ; மூழ்கினார் உய்தி பெறாமைப்  பொருட்டு  , செழுங்கடல் என்புழிச்  செழுமை  , நீர்ப்பெருக்கு.

                   37 ஆம்  திருப்பாட்டில் , “பாத  நன்மலர் பிரிந்திருந்தும் “ என்றார்,  பிரிந்த அணிமை  தோன்ற  38 ஆம்  திருப்பாட்டில்  பிரிந்த பின்னர் அணுகுதல் கூடுமே ; நெடுங்காலமாகியும்  அணுகப்பெற்றி லேனே என்னும்  கருத்தால் , “குறுகிலேன்  நெடுங்காலம்  “ எனவும் , இத் திருப்பாட்டில் காலம்  மிக  நெடிதாகியும்   காணப்பெற்றிலேனே என்று இரங்குவார் ., “தலைவனை நனி காணேன் “ எனவும்  கூறினர் .  இம் முறை நினைந்து  இன்புறத்தக்கது .

                  இதன்கண், அடிகள்  தமக்கு  நன்நெறி  காட்டி  இன்னருள்  புரிந்த தலைவனது  காட்சி  இடையறாது  நிகழ வேண்டும்  என்று  கருதுகின்றார்  என்பது விளக்கமாதலின் , அங்ஙனம்  இடையறாத  திருவடிக் காட்சியே உயிரின்  தூய்மைக்கு  இன்றியமையாதது  எனப்  பதிக  நுதலிய  ஆத்தும சுத்தி என்னும்  பொருளும் , தீப் பாய்தல் , முதலியன  கூறியிருத்தலின்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக .  

                                    *****************************************

பாடல் :40 .

வேனில் வேள்கணை  கிழித்திட

மதிசுடும்  அதுதனை  நினையாதே

மானி  லாவிய  நோக்கியர்

படிறிடை  மத்திடு  தயிராகித்

தேனி  லாவிய   திருவருள்

புரிந்த என்  சிவனகர்  புகப்போகேன்

ஊனில்  ஆவியை ஓம்புதற்

பொருட்டினும்  உண்டுடுத்  திருந்தேனே.

கருத்துரை :-   ஆண்டவன்  பிரிவில்  தாம் அழியாமல்  உயிர்  வாழ்தல்  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் காமம்  முதலிய  பகை வருக்கங்களால்  இடுக்கட்பட்டு  உழலும்  ஊனுடலைப்  பேணுதற் பொருட்டுச்   சிவனகர்  புகுதற்கு  உரிய செந் நெறிச்  செலவைக்  கைவிட்டிருக்கின்றேனே  என்று மீண்டும்  வருந்துகின்றார் .

பதவுரை :-  தேன் நிலாவிய  திருவருள்  புரிந்த என் சிவன்  = 

தேன் போன்ற இனிய சுவையினையுடைய  திருவருளை  உதவியருளிய   என்  ஆண்டவனாகிய  சிவபெருமானது ,

நகர்  புகப்போகேன்  =  பொன்னகருட்  புகுதற்குச்  செல்லேனாய்  ,

வேனில்  வேள்  கணை கிழித்திட  மதி சுடும்  அதனை  நினையாது  = 

இளவேனிற்  கிழவனாகிய  காமனுடைய  மலரம்பு   என் நெஞ்சைப்  பிளந்திட   அப் புண்ணில்  திங்கட் செல்வன்சுடுகின்ற  மாறுபட்ட  அத் துன்ப  நிலையையும் கருதாமல் ,

மான்  நிலாவிய  நோக்கியர்  படிறு  இடை  =  மான் விழிபோன்ற  விழிகளையுடைய  மகளிரின் வஞ்சகச்  செயலின்  கண்ணே ,

மத்து இடு தயிர்  ஆகி  =  மத்திட்டுக்  கடையப்படும்  தயிரைப்போற்  கலக்குண்டு,

ஊனில்  ஆவியை  இன்னும்  ஓம்புதற்பொருட்டு   =  ஊனுடலின் கண்ணே  உயிரை  நிறுத்தி இன்னமும்  பாதுகாத்தற் பொருட்டு ,

உண்டு உடுத்து இருந்தேன்  =  நல்ல  உணவுகளை  உண்டும் , நல்ல  ஆடைகளை  உடுத்தும் ,இதுகாறும்  வாழ்ந்திருந்தேன் (என்  அறியாமை  இருந்தவாறு  என்னே) என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட் பேறு , தகுதியுடையார்க்கு  அன்றி , அடைதற்கும் அனுபவித்தற்கும் அரியது . அங்ஙனம் அரிய  அருளமுதை  எளிமையும்  இனிமையும்  உடையதாக்கி , வலிய  வந்து இறைவன்  தம்மை  ஊட்டினான்  என்பதே அடிகள் அநுபவத்திற் கண்டது . எளிமையில்  இனிமைச் சுவை மிகப் பெற்றது குறித்தே ,”தேனிலாவிய  திருவருள்” என்றார். தேனின் எளிமை, ஆன் நெய் ,கருப்புக்கட்டி  என்பவற்றோடு எண்னப்பட்டுக்  கிடந்த  முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளது  காண்க . புரிந்த  என்னும் சொல் , விரும்பிச் செய்த என்னும் பொருட்டு , தம்மை  அடிமையாகக் கொள்ளுதற்கு வலிய  வந்து திருவருள்  பாலித்த  உரிமை தோன்ற , “என் சிவன்” என்றார். விரும்பி அளித்த திருவருள் தேனைப்போல் இனிமை சுரந்து  இன்பது பயந்து நிற்றலின் , அதற்கேற்ப  , முதல்வனை இன்பம்  செய்பவன் என்னும் பொருள் உடையதாகிய  சிவன் என்னும் பெயரால் குறிப்பிட்டனர் .சிவன் நகர்  என்பது அழி வில்  இன்பம் துய்த்தற்கு  உரிய  வீட்டு நிலையைக் குறிக்கும் . புகப்போதல்  –  உட்புகுதற்கு உரிய செந்நெறிச் செலவை மேற்கோடல் . போகேன் என்பது  முற்றெச்சம் ; செல்லாமல்  என்னும் பொருட்டு , அஃது  ஈற்றடியில்  உள்ள இருந்தேன்  என்னும் வினையைக் கொண்டு முடியும் , பொன்னகர் புகப் போகாமல்  இருந்தேன் என்புழி , இருத்தற்கு  இடம் இம் மண்ணுலகம் என்பது போதரும் .

          இனி, இம் மண்ணுலக வாழ்க்கையின்  பயனைப் புலப்படுத்தத் தொடங்குகின்றார் . வேள்  இருவராதலின் , செவ்வேளாகிய  முருகனின் வேறுபட்டவன்  என்பது தோன்றக் காமனை “வேனில் வேள் “ என்றார்.  – காமன்  கணையோ  மெல்லிய  மலர்களாகும் . அம் மலர் அம்பினால் நெஞ்சம்  பிளவு படும் என்றது, இவ்வுலக  இன்பநுகர்ச்சிக்கு  உரிய  கருவிகளின்  வலியின்மையைப் புலப்படுத்தற்கு என்க. மலர் அம்பு கிழித்த புண்ணில் ஆம்  பெரும் புழைக்கட்  கனல் நுழைந்தாற் போல் “ ஆயிற்று  என்றபடி , மலரம்பு நெஞ்சத்தைப் பிளத்தலும் , திங்கட் கதிர்  சுடுதலும் இயற்கைக்கு  மாறுபட்ட செய்திகளாம் . உலக  வாழ்க்கையின் நொய்ம்மை  இத் தன்மைத்து என இந் நிகழ்ச்சிகளில் வைத்து நினைக்க வேண்டியது  கடமையாகவும் , அதனை  நினையாமல்  இருந்தேன் என்பார் , “ அது தனை நினையாது “ என்றார் . மலர் அம்பினால் ஊறுண்டு , திங்கட் கதிரினால்  சூடுண்டு , ஆற்றாமை  மிக்கு மகளிரைத் தஞ்சம் அடைந்தேனாக , அந் நிலையில் அவர்தம் வஞ்சகச் செயலில்  ஈடுபட்டு , மத்தினால் கடையப்பட்ட  தயிர் போலக் கலக்குண்டேன் என்பார், “மானிலாவிய  நோக்கியர்  படிறிடை  மத்திடுதயிராகி” என்றார் . மான் நிலவிய  நோக்கியர் என்றது , ஆடவர்  நெஞ்சத்தையும்  நிறையையும் கவரும் கருவியாகிய  நோக்குடையார் என்னும் பொருட்டு . “நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி” என்னும் சிந்தாமணி நூலுடையார் கருத்தும் ஈண்டு  நினைக்கத் தக்கது . ஊறுபாடும்  சூடும் பொறாது புகலடைந்த நிலையில் மதி மயங்கி  மகளிர் இட்டதே சட்டமாக அவர் தம் மாயச் செயலிற் சிக்கி, உய்தி பெற முடியாத  நிலையில்  கலக்குண்ட செய்தியை , “மத்திடு தயிராகி “ என்பதனாற்  புலப்படுத்தார் .  

     இத்துணைத்  துன்ப நிலையிலும் இன்பம் உண்டெனக் கருதி , அழியும்  இயல்பினதாகிய  ஊனுடம்பின் கண்ணே , அழிவு  இலதாகிய  உயிரை வைத்துப் பாதுகாக்கக் கருதினேனே என்பார்., “ஊனிலாவியை ஓம்புதற் பொருட்டு “ என்றார் . அறிவு வடிவம் ஆகிய உயிரை ஓம்பல்  வேண்டுமாயின், முற்றறிவினனாகிய  இறைவன் திருவடி நீழலில் இயைதற்கு முயலல் வேண்டும் . உயிர்க்கு உண்மைப் பாதுகாப்பு அதுவே யாகும் . அதனை விட்டு, ஊனில் ஆவியை வைத்து ஓம்ப  நினைப்பது , பசு மட்குடத்தைப் பற்றி , நீர் கடக்க  முயல்வது போலாம் என்பது , ஆண்டவன் திருவருட் பதிவு  ஒரு சிறிதும் இல்லாத நிலையில் , ஊனில் ஆவியை ஓம்புதல் ஓராற்றாற்  பொருந்துவதாகும் . தேனிலாவிய திருவருள் புரிந்த பின்னரும் அங்ஙனம் ஓம்ப நினைக்கின்றேனே  என்பார் , “இன்னும்  ஓம்புதற் பொருட்டு “ என்றார் .உண்ணலும் உடுதலுமே இவ்வுலக வாழ்க்கையிற் கண்டனவெனக் கொண்டு, “உண்டுடுத்திருந்தேனே”என்று கழித்தற்கு இரங்கினார்:இனியாவது சிவனகர் புகப்போதற்கு உரிய தவச் செயலில் தலைப்படுதற்கு உரிய நல்லூழ் வாய்க்க மாட்டாதா என்னும்  குறிப்புத் தோன்ற , சிவன்  நகர் புகப் போகாமல் , அதுதனை நினையாமல் , மத்திடு  தயிராகி  இன்னும்  ஓம்புதற் பொருட்டு  உண்டுடுத்திருந்தேனே  என முடிக்க .

              இதன்கண், சிவன் நகர் புகப்போதற்கு உரிய  தவத்தை  விடுதலும் , ஊனுடல் ஓம்புதல் பொருட்டு  உயிர் வாழ்ந்திருத்தலும்  தகாத செயல்களாம் என்று கூறியிருத்தலால் , சிவநகர் புகுதற்கு உரிய தவச் செயலை உயிரின்  தூய்மைக்கு வேண்டற்பாலது என்பதும் ,மத்திடு  தயிர் போலக் கலக்குண்டு  ஊனில் ஆவியை ஓம்புதல் வெறுக்கத்தக்கது என்பதும் பெறப்படுதலின் , முறையே  ஆத்தும  சுத்தி  என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதக  நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                   ******************************

                                   *******************************************************  

5 .  கைம்மாறு  கொடுத்தல்

     கைம்மாறு   கொடுத்தல்  என்பது  ஓர்  உதவி  செய்தார்க்குப்  பிரதியாக உதவுதல்  என்னும்  பொருளதாம் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  தூய்மைக்கு வேண்டுவன  கூறப்பட்டன . மன மொழி மெய்களாகிய முக்  கரணங்களும்  இறைபணியில்  ஈடுபடவேண்டும் என்பதும் , அவற்றுள்ளும் உள்ளப்பணி மிக இன்றியமையாதது என்பதும் கூறப்பட்டன .அங்ஙனம்  இறை  பணியினால் வினை  மாசு  நீங்கித்  தூய்மை  எய்திய  தமக்கு  , ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுத்தருளி , வெளிப்பட்டு  , ஞானத்தை உணர்த்தி , இன்பமயமாகிய  தன்  அருளமுதத்தைத் துய்ப்பித்தனனாக ,  அப் பெருமான்  திருவடிக் காட்சியில்  ஈடுபட்டு மாறிலா  மகிழ்ச்சியின் மலர்ந்திருந்த  நிலையில் , பண்டை வினைத் தொடர்பால் ஓரோவமயம்  அவ் இன்பக் காட்சி மறைந்தும் , வெளிப்பட்டும் நிகழாநிற்ப, மறைந்த  நிலையில், அப் பிரிவாற்றாது , தம் உடலையே வெறுத்து வருந்திக் கூறிய செய்தியும் , முன்னைப் பதிகத்திற் கண்டாம் . பின்னர் , வரம்  பிகந்த இனிய  அருள்  அமுதையூட்டிய  வள்ளற் பெருமானுக்குத்  தாம்  செய்யும்  கைம்மாறு  யாதென ஆராய்ந்து கொடுக்கக்  கருதினாராக , பேரின்ப  வள்ளலாகிய இறைவன்,அவ் வின்பமயமாகிய தன்னையே அடிகளுக்கு வழங்கினனானால்  அதற்குக்  கைம்மாறாக  அடிகளால் வழங்கத்தக்கது யாதுள்ளது.? அடிகளுடைய  உடல் , பொருள் , ஆவி , மூன்றும்  ஆண்டவன்  உடைமைகளே , கைம்மாறு  கொடுத்தல் என்றால் , கொடுக்கப்படுவது  கொடுப்பவனுடைய  உடைமையாகவன்றோ  இருத்தல் வேண்டும் ? கொடுப்பவராகிய  அடிகளுக்கு  என ஏதும் இல்லாத நிலையில், கைம்மாறு  கொடுக்க வேண்டும்  என்று  அடிகள் கருதுதற்குக்  காரணம் என்னையெனின் , திருவடிக் காட்சி யினின்றும் பிரிவு  நேர்ந்த பொழுது , அப் பெருமான் உதவிக்கு  ஈடாக ஏதும் செய்யாமல்  இருக்கலாமா?  செய்யவேண்டியது  கடமையென , அன்பு மேலீட்டால்  சிறிது உயிர் முனைப்புப்  பற்றி  எழுந்த எண்ணமேயாம்  என்க. பின்னர் , மீண்டும்  காட்சியில்  ஈடுபட்டு , அம்முனைப்பும்  ஒடுங்கிய   நிலையில் , தம்  உடல் , பொருள் , ஆவியெல்லாம்  அவனுடைமை என்னும்  உண்மையை உணர்ந்து , “தந்ததுன்றன்னைக்  கொண்ட  தென்றன்னைச்  சங்கரா யார்  கொலோ சதுரர் “  என்று  அருளியபடி  , கைம்மாறாக  ஏதும் கொடுக்க  இயலாதென்னும்  உண்மை அநுபவம் கைவரப் பெறுவர் . இவ் உண்மை அநுபவ நிலையிலே ,தாயுமான அடிகளும் , “சிந்தை மயக்கமறச்  சின்மயமாய் நின்றவுன்னைத்  , தந்தவுனக் கென்னயு நான் தந்தேன் பராபரமே “ என்று  அருளிச்செய்வாராயினர்  இவ்வுண்மை அநுபவத்திற்குச்  சிறிது  முற்பட்ட  நிலையே  கைம்மாறு  கொடுத்தற்கு  உரியதாகும் . இறைவனது இன்ப  அருள் அமுதை  ஓரோவழி  யுண்டு  , பிரிவு  நேர்ந்த  பொழுது  இங்ஙனம்  கருதுதல்  அன்பு  மேலீட்டால்  ஆவதாகும் . பிரிவு  நேர்தற்கு அடிகளுடைய  பண்டை வினைத்  தொடர்பு  ஓரளவு காரணமாயினும் , இறைவன் தன் அருளமுதின் நுகர்ச்சியில் அடிகளுக்கு  மேன்மேலும்  ஆர்வம்  விளைவிக்க  வேண்டு மென்னும் திருவுள்ளக் குறிப்பே  சிறந்த  காரணம்  ஆகும்  என்பது .

பாடல்: 41 .

இருகை  யானையை  யொத்திருந்  தென்னுளக்

கருவை  யான் கண்டி  லேன்கண்ட  தெய்வமே

வருக  என்று  பணித்தனை  வானுளோர்க்

கொருவ  னேகிற்றி  லேங்கிற்பன்  உண்ணவே .

கருத்துரை :- இதன் முன்னைப் பதிகத்து  இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன் பிரிவில் ஊனுடலைப்  பேணுதலையும்  , செந் நெறிச்  செலவைக்  கைவிட்டி ருக்கின்றமையையும்   கருதி வருந்திய  அடிகள் , அந் நிலையில் முன்னர்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ,  உண்மைப்  பொருளை  உபதேசித்துத் திருவடிக் காட்சி  யளித்து  இன்புறுத்திய  இறைவனது பெறற்கரிய  பேருதவியை  நினைந்தும் , அதற்குக்  கைம்மாறாக  எதனைக் கொடுக்கலாம்  என்று  ஆராய்ந்தும் , அப் பேருதவிக்குத் தகுதியான  கைம்மாறு  கொடுத்தற் குரிய  ஆற்றல் தமக்கு இல்லாமையை எண்ணியும், உண்முகமாக  முன்னிலைப் படுத்து  இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்   கண்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை :-  வான்  உள்ளோர்க்கு  ஒருவனே  =  வானுலகத்துள்ள  அமரர்க்கு  ஒப்பற்ற  முழு முதலே ,

யான் இருகை யானையை  ஒத்து இருந்து  =  நான் இரண்டு  கைகளையுடைய  யானையை  ஒத்து உயிர்  வாழ்ந்திருந்து ,

என் உள்ளக்  கருவைக் கண்டிலேன்  =  என் உள்ளத்தின்  உள்ளே  விளங்கும்  மூலப் பொருளாகிய  நின்னை நோக்கி உணர்ந்திலேன் ,

கண்டது எவ்வமே  =  யான்  கண்டது  துன்பத்தையே  ,

வருக  என்று  பணித்தனை  =  அங்ஙனமாகவும்  திருவடிக்காட்சி  நல்கி  வருக என்று  கட்டளை  இட்டனை ,

கிற்றிலேன்   =  அக் கட்டளைப் படி வருதற்கும்  அது குறித்துக்  கைம்மாறு  கொடுத்தற்கும்  ஆற்றல்  இல்லாதவனாயினேன்  ,

உண்ணக்கிற்பன்  =  மீண்டும்  பொறிவழி ப் புலனுகர்ச்சியின் தலைப்படுதற்கு   ஆற்றல்  உடையவனாகின்றேன்  என்பது .

விளக்கவுரை :-   இறைவன் , விண்  மண்  பாதாலம் என்னும்  மூன்றிடத்துள்ளார்க்கும் ஒத்த தலைவனே  யாயினும் , அம் மூவிடத்தும் உள்ளார்  முறையே  புண்ணியப்பயனையும்  , புண்ணிய  பாவப்  பயனையும், பாவப் பயனையும் நுகரும் இயல்பினராதலின் ,அன்னார் தகுதிக்கேற்பத் தன் இயல்பைப்  புலப்படுத்து விளங்குவன்  என்பது பெரியார் அநுபவத்திற்  கண்டது . இவ் வுண்மையை , “விண்ணோர் முழுமுதல் , பாதாளத்தார்  வித்து , மண்ணோர் மருந்து “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  அறிக.  அமரர்  தொகுதியுள் தன்னையும்  ஒரு  தலைவனாகக்  காட்டி , அன்னார்  புண்ணியப்  பயனுக்குக்  காட்சி  யளித்து விளங்குதல் பற்றி , “வானுளோர்க்கு  ஒருவனே  “ என்றார்., “ விண்ணோர்  முழுமுதல் “ என்றதும்  இக் கருத்துப்  பற்றியே , புண்ணியப் பயனுக்கு  அணுக்கங்காட்டிய அருட் குறிப்பை  உணராத நிலையில் , அவ்வமரர்க்கும்  அறியப்படாதவன்  ஆவான் என்பதை , “தேவர் கோவறியாத  தேவதேவன்  “  என்னும்  பாடற்  பகுதியால்  விளக்கியிருத்தலும்  அறிக .

          இருகை யானை  –  இல்  பொருளுவமை  . ஒரு  கையினால்  மிகுதியான  உணவை  வாரி  வாரி  விழுங்கி ,உலகத்தில்  உள்ள  எல்லாப் பிராணிகளிலும் மிகுதியாக  பருத்திருப்பது யானை , ஒருகையிடைய  அவ் யானையினும் சிறக்க , உடற்கு  வேண்டிய  உணவுப் பொருள்களை ஈட்டி  , உண்டு , செருக்குற்று  இருக்கின்றமையால் , யான் இரண்டு  கைகளையுடைய  யானையை ஒப்பாவேன் என்பது தோன்ற  ,”இருகை  யானையை  ஒத்திருந்து”ஏன்றார். அத்துணை உடற் பருமைக்கு  வேண்டும் உணவு  முதலியவற்றை நல்கித் தன்னைப் பாதுகாக்கும்  பாகனது நன்றியை ஒரு சிறிதும் நினையாமல் ,யானை  அப்பாகனுக்கே கேடு  விளைக்கும்  இயல்பினதாகும் . “ யானை யனையவர்  நட்பொரீஇ  நாயனையார். கேண்மை  கெழீஇக் கொளல்  வேண்டும்  – யானை, அறிந்திருந்தும்  பாகனையே  கொல்லும் “ என்பது நீதி நூல் . ஆண்டவன்  , தன்னை வழிபடுதற்கு உதவிய  உடலை  , அந் நெறியிற்  பயன்படுத்தாமலும்  , அப் பெருமானது நன்றியை  மறந்தும் ,ஆக்கைக்கே  இரை தேடி  அலமந்திருத் தலின்  , இருகை யானைக்குத்  தம்மை  ஒப்பிட்டுக்  கூறியருளினர் . இனி, யானையை  ஒத்திருந்து கண்டிலேன்  எனக்  கூட்டி  , யானை  தன்  உடலை  அறியாததுபோல் ,யான்  உள்ளக் கருவைக்  கண்டிலேன்  என்பது  கருத்து  எனக்  கூறுவாரும்  உளர் . வாழ்க்கையின்  சிறந்த  குறிக்கோளாகிய  கடவுட்  காட்சியைப் பெறாது , வறிதே  உடலோம்பி யிருக்கின்றேன்  என்பார். “இருந்து” என்றார். “ உள்ளக் கரு  “ என்றது , உயிர்க்கு  உயிராக  விளங்கும்  முதல்வனைக் குறிக்கும் . கரு – காரணம் .  உலகிற்கு இறைவன் நிமித்த  காரணன் ஆதலின் , “கரு” என்னும்  சொல்லால்  குறிக்கப்பட்டான் . நிமித்த காரணனாய் , உயிர்க்கு  உயிராக  நின்று  பாசகக்  கட்டை  ஒழித்துப்  பேரின்பம்  நுகர்விக்கும்  முதல்வனது  பேருதுவியை நினைந்து வழிபடுதலே  உயிராற்  செய்யத் தக்கது , அங்ஙனம்  செய்யாது , ,புலன்களின்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , உடல்  ஓம்புதலையே   குறிக்கோளாகக்  கொண்டேன் என்பார் , “ என்னுள்ளக்  கருவை  யான் கண்டிலேன்  கண்டது எவ்வமே “ என்றார். “கண்டிலேன்  என்றது ,உதவியை  நினைவு  கூர்ந்திலேன் என்னும்  பொருட்டு . “எவ்வம்” என்றது , இன்பம் போற் காட்டித்  துன்பமாக  முடியும் புலன் நுகர்ச்சிகளை , அவ் எவ்வத்தைக் காண்பதாவது , அந் நுகர்ச்சிக ளையே   பொருளென மதித்து  மேற்கொள்ளுதல் . யானை தன்னை நன்நெறிப்  படுத்தும்  பாகன்  உதவியை  நினைவு  கூறாது  , அவனைத் துன்புறுத்தி மதச் செருக்கால் புலன் நுகர்ச்சிகளில்  தலைப்படுதல்  போல, தனக்கு  மூல  காரணனாக நின்று  பேருதவி  புரியும்  இறைவன்  அருள் திறத்தை நினைவு கூறாது , அவனுக்கு  இடனாக உள்ளத்தைப்  பொறிவழிப்  போக்கி , இன்பமெனக்  காட்டித்  துன்பமாக  முடியும்  புலன்களில்  தலைப் படலானேன் என்பது இவ்விரண்டு அடிகளானும் பெறப்படும் கருத்தாம் என்க.  தம்  உள்ளத்தைப்  பற்றி நிற்கும்  இறையருளை  நினையாமல்  , அவ்வுள்ளத்தைத்  தீய  வழிகளில்  செலுத்தும் கொடியவன் என்று  தம் இயல்பை அறிந்தும் , வேறாது ,இன்பமயமாகவுள்ள  தன் பக்கலை அணுகுமாறு ஞானாசிரியன்  வடிவமாக எழுந்தருளிக்  கட்டலையிட்ட  பெருமையைப்  புலப்படுப்பார் , “வருக என்று பணித்தனை “ என்றார் . “வன்ணப் பணித்தென்னை  வா வென்ற  வான் கருணை “ என்று  பிறிதோரி டத்து   அடிகள் அருளிச் செய்ததும் அறிக .  பணித்தல் – கட்டளையிடுதல் . “வருக” என்னும் வியங்கோட்  சிறப்பால் , இறைவன்  மெய்யன்பர்  மாட்டு   வைத்திருக்கும் பெருங் கருணைத்திறம்  புலனாம் .

            “கிற்றிலேன்”  என்னும்  சொல் , ஆற்றலை உணர்த்தும்  கில்  என்னும்  இடைச்  சொல் அடியாகப் பிறந்த எதிர்மறை வினை முற்று ,”கிற்பன்”  அங்ஙனமாய உடன்பாட்டு  எதிர் கால  வினை முற்று .ஒருவன் தனக்கு  நலம்  செய்வான்  ஒருவனை  வெறுத்துத்  தீங்கு செய்பவனை அறியாமையாற்  பின் பற்றி  , அலைந்து திரிந்து பயன் ஒன்றும்  காணாமல்  துன்புற்று  , மீண்டும்  அந் நலம் புரிவோனை அணுகுதற்கு  நாணி ஒதுங்கிச்  சேறல்  உலகியலிற்  கண்டது . அங்ஙனம் ஒதுங்கிச் செல்வோனை , அந்நல்லோன் கண்டுழித்  தன் கருணையால் தான் அவனுக்குச்  செய்யத்தக்க  உதவியைக்  குறிக்கொண்டு, “வருக” என்று  அழைத்தல் போல , தன்னை  நினையாதிருந்த  என்னை  நலஞ் செய்வான் திருவுளங்  கொண்டு இறைவன் அழைத்தனன் என்பது . “வருக” என்னும்  சொல்லால் பெறப்படுவதாகும் . அங்ஙனம் பேரானந்தப் பெருஞ்  செல்வத்தை அருளுதற் பொருட்டு வலிந்து ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்   கைம்மாறு  யாது  செய்ய  வல்லேன்; ஏதும் செய்தற்கு ஆற்றல் இல்லாதவனாக  உள்ளேன் என்பார் , “ கிற்றிலேன்” என்றார். இனி, அங்ஙனம்  வலிந்து அழைத்தும் , அப் பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அடைதற்கு  அணுக ஒருப்பட்டிலேன்  என்பார் , “கிற்றிலேன்” என்றார். எனினுமாம் , கிற்றிலேன்  என்பது, ஆற்றல்  இல்லேன்  என்னும் பொருள் பயக்குமாயினும், ஈண்டு  இலக்கணச் சொல்லாக நின்று  , வருதற்கு  உடன்  பட்டிலேன்  என்னும்  பொருள் பயந்து நிற்பதாகும் .  இறைவன்  திருவருள் அமுதத்தை உண்ணுதற்கு ஒருப்படாமல் , உடலோம்பி , இழிந்த பொறி இன்பங்களை  நுகர்தற்கு  ஆற்றல்  உடையேனாக  இருக்கின்றேன்  என்பார், “உண்ணவே கிற்பன் “என்றார். ஏகாரம்  தேற்றப் பொருட்டு . ஈண்டு  உண்டல்  , இழிந்த  போகங்களை நுகர்தல் . உள்ளக்கருவைக் கண்டு ,அக் கருவின் வழி நின்று , அழி வில்  இன்பம்  நுகராமல் துன்பம்  நுகரும் பொருள்களில் தலப்பட்டு , அழியும் இயல்பினவாகிய  இன்பங்களை நுகரத் தலைப்படுகின்றேன் ; என் அறியாமை இருந்தவாறு என்னே !  என்பது  கருத்து .

           இதன்கண், “என்னுளக்  கருவையான்  கண்டிலேன் “ என  இறைவனைத்  தாம் நினையாதிருந்த  நிலையிலும்  ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்  கைம்மாறு  செய்யும்  கடப்பாடு  உடையனாக  இருந்தும் , அதற்கு  ஆற்றல்  இல்லாதவன்  ஆயினேன்   என்பதனால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  , “என்னுளக்  கருவை” ,  “ வானுளோர்க்கு  ஒருவனே  என்பவற்றால்  பத்தி விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக . 

                                            **************************************

பாடல் : 42 .

உண்டோர்  ஒண்பொருள்  என்றுணர்   வார்க்கெலாம்

பெண்டிற்  ஆண்  அலி  என்றறி   யொண்கிலை

தொண்ட னேற்குள்ள  வாவந்து   தோன்றினாய்

கண்டுங்  கண்டிலேன்  என்னகண்  மாயமே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை நினையாதிருந்தும் , வருக என்று  பணித்த அருள்திறத்தைப்  பாராட்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அவ் இறைவன்  தன்  கட்டளைப்படி  வாராதிருந்த  என்பால்  தானே  வந்து , பிறர்க்கெல்லாம்  இப்படியன்  என்று  உணர  வொண்ணாத  தன் உண்மைத்தன்மை இயல்பு காட்டிக்  காட்சியளித்த  பேருதவியைப் பாராட்டுகின்றார். முன்னைத்  திருப்பாட்டில்  , “வருக என்று பணித்தனை” என்பதும் , அக் கட்டளைப்படி  வாராமையால்  , இத் திருப்பாட்டில்  தானே வந்து தோன்றினான்  என்பதும் ஆகிய  இயைபு  கருதத்தக்கது.  

பதவுரை :-  ஓர்  ஒண்பொருள் உண்டு  என்று  உணர்வார்க்கு  எல்லாம்  = 

ஒரு சிறந்த  முதற்பொருள்  அழிவிலதாக  உள்ளது  என்று  பொது வகையில்  உணரும் அன்பர்களுக்கெல்லாம் ,

பெண்டிற் ஆண் அலி என்று அறிய ஒண்கிலை  =  அப் பொருள் பெண்ணென்றாதல்  ஆணென்றாதல்  அலியென்றாதல்  இன்னது  எனத்  துணிந்து  அறியமுடியாத  நிலையில்  உள்ளாய் ,

தொண்டனேற்கு   =  அடிமையாகிய  எனக்கு  ,

உள்ளவா  வந்து  தோன்றினாய்  =  உண்மைத் தன்மை இருந்தபடி எழுந்தருளி  வந்து காட்சிதந்து  அருளினாய் ,

கண்டும்  கண்டிலேன்  =  அங்ஙனம்  அருளிய  உண்மை இயல்பைக்  கண்டு வைத்தும்  காணாதவன்   ஆயினேன்  ,

என்ன கண் மாயம்  =  இதென்ன  கண் மயக்கமோ?  என்பது .

விளக்கவுரை :- “ஓர் ஒண் பொருள்”  என்புழி, ஓர் குறுகி  நின்றது .  தனக்கு  ஒப்பதும் , மிக்கதும் , பிறிதொன்று  இல்லாத  பரம் பொருள் என்பது தோன்ற , “ஓர் ஒண்பொருள்” என்றார். ஒருமை  தனிச்சிறப்பையும்  ,ஒண்மை இயற்கை உணர்வினன்  ஆதல்  முதலிய   எண் குணங்களையும்  குறிப்பனவாம் . இவ்விரண்டு  அடை மொழிகளும்  முதற்பொருளின்  சிறப்பியல்புகளை  நன்கு  புலப்படுத்து நிற்றல் அறிக . ஓர் உயிர் இழிந்த பல பிறவிகளினின்றும்  நல்வினைப் பயன் காரணமாக , மேன்மேற்  சென்று  அரிதின் அடைந்த  மக்கட்  பிறப்பில்  , “தெய்வம்” என்பதோர்  சித்தம்  உண்டாகப் பெறுதல் அரிது  . இது குறித்தே, “தெய்வம் தெளிமின்” என்பது சிலப்பதிகார  முடிவுரை. மக்கள் முதலிய  உயிர்த் தொகுதிகளின்  ஆற்றளினும்  எத்துணையோ சிறந்த ஆற்றலின்  விளைவைக்  காணுங்கால் , இது  கடவுள் தன்மை என்னும்  முடிவுக்கு  வருகின்றோம் . அந் நிலையில் அக் கடவுள் இயல்பை  நூல்  வாயிலாக  அறிந்து , அநுபவ வாயிலாக  உணரத் தலைப்படுவார்க்கு , அக் கடவுட் பொருள் ஒன்றாகவும் , இயற்கை உணர்வு முதலிய அருட்குணங்களு டையதாகவும்  தெளியப்படும் . தெளிந்த பின்னர் ,அப் பரம்பொருளின் உண்மைத் தன்மை , அகக்  காட்சிக்கும் , புறக்காட்சிக்கும்  ஒத்த  நிலையில்  எங்ஙனம் அறியப்படும்  எனின் , அது மாற்ற  மனங்கழிய நின்ற  நிலையாதலின்  , மெய்யுணர்விற்கு  நேர்படுவதல்லது வேறு வகையான் உணர்தற்பால தன்று .

            பின்னர் ,”பெண்டிர்   ஆண்   அலி “  என்று  அறியமுடியாதது என்றதற்கு  ஏற்ப ,”பொருள்” என்னப்பட்டது . இங்ஙனம்  முதற்பொருள் ஒன்று உண்டு என்று தெளிந்தார் சிலராக , அன்னாரும்  அத்தகைய  காட்சிப்படும்  நிலையில் பெண்ணென்றாதல் , ஆணென்றாதல் அலியென்று ஆதல் அறிய வொண்ணாத  தன்மை உடையையாய்  உள்ளாய்  என்பார், “ பெண்டிற் ஆணலி  யென்றறி யொண்கிலை “என்றார் . இறையருள் பெற  முயல்வார்க் கெல்லாம் , அருள் வடிவினளாகிய  அம்மையை முதலில்  வழிபட்டு , அவள் காட்ட, அப்பனைக் காண்டல்  முறையாகும்  . கோநோபநிடதத்தில் , இயக்க உருவம் தாங்கி  வந்த இறைவனை அக்கினி முதலாக இந்திரன் இறுதியாக வுள்ளார்  அறியாமல்  மயங்கி நிற்புழி , உமையம்மையார் தோன்றி , அது பரம்பொருள் என்று தெளிவுறுத்திய செய்தியும் இதனை வலியுறுத்துவதாகும் “அவனருளாலே  யவன் தாள் வணங்கி “ என்பதும்  அது. இங்ஙனம் , இன்ன  தன்மையன் என்று அறிய முயல்வார்க்கு , முதற் குறிப்பு அம்மையைப்  பற்றி  நிகழும்  ஆதலின் முதலிற் “பெண்டிர்”  எனவும், அடுத்து , “ஆண்”  எனவும் , கூறப்பட்டன. உலகம் , அவன் , அவள் , அது  எனும் முக்கூற்ற தென்ப. உயர்திணை  ஆணும்  பெண்ணும் அல்லாத  அஃறிணைப் பொருளை ,”அது” என்பது புலப்படுக்கும் . அவ்வுலகெலாம் ஆகி நிற்கும் இறைவன் , அம் முக்கூற்றுள் யாதன்பாற் படுவன்  என்று ஆராய்வார்க்கு  , அவற்றுள் ஒன்றன் பாற் படுபவன் அல்லன் ; அவ்வெள்ளமாய்  , அல்லதுமாய்  விளங்குபவன்  என்னும்  உண்மை  பெறப்படும் . அம் முக்கூற்றுள்  அஃறிணைக்குத்  தனியே  ஒன்றை எடுத்துக்காட்டாமல் , அலியைக்  கூறியது ஒரு  நயம்  கருதி என்க. அலி , ஆண் தன்மையும்  பெண் தன்மையும் திரிந்த உருவமாகும் .இதனைத் தன்மை திரிபொருள்   எனக் கொண்டு  , பொருள் வகையான் உயர்திணைக் கண்ணும் , சொன்முடிவால்  அஃறிணையுள்ளும்  அடக்கிக்  கூறுவர் . “தொல்காப்பியனார் , இதனால் அலி உயர்திணையாகவும்  அஃதல்லாத தாகவும் நிற்கும்  என்பது பெறப்படும் . இங்ஙனமே எல்லாமாய்   அல்லதுமாய் நிற்கும் இறை இயல்புமாம் என்பது  புலப்படும்  என்க.  இது கருதியே, ”பெண்ணாகி ஆணாய் அலியாய் “ எனப்  பலவிடத்தும்  அலியை  இயைத்தே  அடிகள் கூறியருளினர்  என்க.  இம்முறை  பிறழ்ந்தும்  ஓரோவழிக்  கூறுவர் ; கருத்து வேறுபாடு  கண்டு .

            ஓர் ஒண் பொருள்  உண்டு என்று  அறியும் அறிவு கைவரப் பெறுதலே அரிது . அங்ஙனம் பெற்றார்க்கும் நின் உண்மைத் தன்மை இன்னது என வரையறுத்துத்  தெளிதற்கு உரிய நிலையில்  காட்சிப்படுவாய்  அல்லை என்பார் , “என்று அறியொண்கிலை “ என்றார். அறிய  என்னும்  செயவென்  வாய்ப்பாட்டு  வினையெச்சத்து ஈறு தொக்கு, “ஆறியொண்கிலை” என்றாயிற்று . இங்ஙனம்  முற்றறிவு  முதலிய  குணங்களும் , தனிமைச் சிறப்பும்  உடைய கடவுட் பொருள் ஒன்று  உண்டு  என்று அறியும்  தத்துவ   ஞானிகளுக்கும் , பெண்  ஆண் அலி யென்னும்  இக் கூறுகளில் வைத்து இன்னதென்று  அறியவொண்ணாத நீ, சிற்றறிவுடைய தொண்டனாகிய எனக்கு நின் உண்மைத் தன்மை  இன்னதென உள்ளவாறு  காட்டி  வெளிப்பட்டு அருளினை என்பார், “தொண்டனேற் குள்ளவா வந்து தோன்றினாய்” என்றார்.

           முன்னைத் திருப்பாட்டில் குறிப்பிட்டபடி ,” வருக” என்று  அருளா  நிற்கவும் , அக் கட்டளைப்படி செல்லாதிருந்த அக் குற்றத்தையும் பொறுத்து, ஆண்டவன் தானே தமக்கு வலிய வந்து காட்சியளித்தனன் என்பார் , “ வந்து தோன்றினை “ என்றார். இஃது அருமையில்  எளிய  அழகுகளில் ஒன்றாகும் என்பது கருத்து. அடிகள்  தம்மைக் குறிப்பிடுங்கால்  , “ஆடியேன் “ , “தொண்டன்”  என்று  கூறிக்கொள்வதிலே பெரிதும்  விருப்பம் உடையவர் என்பது வெளிப்படும் . ஆண்டவன்  கட்டளைவழி நிற்பதல்லது , அடிமைக்கு என  யாதும்  இன்மையாலும், “ நன்றே செய்வாய்  பிழை செய்வாய்  நானோ  இதற்கு பொறுப்புக்களையும்  வீட்டுச்  சுவை நீங்கி , இறையருள் வழி நின்று  அமைதி பெறுதற்கு அவ்வடிமையே சிறந்ததொன்று ஆகலானும், திருத் தொண்டில்  உறைந்து நிற்பாராயினர் , “மறைத்திற  நோக்கி  வருந்தினர்க் கொளித்தும் ,இத் தந்திரத்திற் காணடுமென்றிருந்தோர்க்கு , அத் தந்திரத்தின் அவ்வயின்  ஒளித்தும்” என்றபடி , மறை ஆகமங்கொண்டு  காணமுயல் வார்க்கு , இறைவன் தன் இயல்பைப் புலப்படுத்தாமல் இருக்கலாம் . அன்னார் நூலறிவிற் செருக்குற்று இருக்கின்றமையின் ,மெய்த் தொண் டர்க்கு உண்மைத் தன்மை மறைக்கப்படுமாயின்  அந் நிலையிற்  காட்சிப் படுவதையே  ஆராயாமற் கடைப்பிடிப்பர்  ஆதலானும் , அஃது இறையருள் இயல்பிற்குக்  குறையாகும்  ஆதலானும், உள்ளபடி காட்சிப்படுதலே அருள் உருவினர்க்கு  முறையாகும் ஆதலானும் , அவ்வாறு  தமக்குக்  காட்சிதந்து  வெளிப்பட்ட  பேருதவியை  நினைந்து ,”தொண்டனேற்கு  உள்ளவா  வந்து  தோன்றினாய் “ என்றார். உள்ளவாறு  தோன்றுதல் – எல்லாமாய்  அல்லதுமாய் யிருக்கும் தன் உண்மைத் தன்மை புலப்பட ஞானாசிரியனாக  வெளிப்பட்டு  அருளுதல் . அங்ஙனம் காட்சி அளித்து ஞானோபதேசம் செய்த பரமபதி , ஆண்டே மறைந்து நிற்ப  , அது கண்டு வருந்திய அடிகள் , “கண்டுங் கண்டிலேன் “ என்றார். கண்ணிழந்தவன் முன்னைத் தவத்தால் தனைப் பெற்று  மீண்டும் இழத்தது  போல ,பண்டை நல்வினைப் பயனாக ஞானாசிரி யனாக  இறைவன் வெளிப்பட்டு அருளப்பெற்ற  அடிகள் , அக்காட்சி  கரந்த பொழுது துடிதுடித்துக் கதறியழுதார்  என்பது , “என் தலைவனை நனி காணேன் ,தீயில்  வீழ்கிலேன்  திண்வரையுருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே” என்பது  முதலிய  பாடற் பகுதிகளால் அறியலாம் . அரிய பொருளைப் பெறாத நிலையில் ஏற்படும் வருத்தத்தைவிடப்  பெற்று  இழந்த நிலையில் ஏற்படும் துன்பம் பெரிதாகுமாதலின் , “கண்டுங் கண்டிலேன் “ என்று   தம் துன்ப மிகுதியைப் புலப்படுத்தார் என்க .

       இறைவன்  காட்சியில்  ஈடுபட்டுத் திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  அது கரந்ததாகலின் , “என்ன கண்மாயமே” என்றார். கண் மாயம் – கண் கட்டு வித்தை . இல்லாத ஒரு பொருளை இருப்பதாகக்  காட்டியும் , கண்ட பொருளைக் காணாவாறு செய்வதும்  கண் கட்டு வித்தை என்பர் . அங்ஙனமே , காண்டற்கு அரிய பொருள் காட்சிப்படக்கிடைத்தும் , கிடைத்தது உடனே மறைந்தும் ஆகிய அந் நிகழ்ச்சியைக்  குறித்து ,  “என்ன கண்மாயமே” என்றது பொருத்தமே . அன்றிக் கண்மாயம்  என்பதற்குக் கண் மயக்கம் எனக் கொண்டு என் கண் மயக்கம் இருந்தவாறு என்னே  யென்றலுமாம் . ஈண்டு , இறைவன் அழிவில்லாத  பொருளாதலால் , அவன்  காட்சி  மறைத்தற்குத்  தம் அகப் புறக்  கண்களின் குற்றமே காரணமாகலாம்  என்பது கருத்து.

          இதன்கண், “தொண்டனேற்கு  உள்ளவா  வந்து தோன்றினாய்”  என்றதனால்  இப் பேருதவிக்கு யான்  செய்யுங் கைம்மாறு  காணேன் என்பது பெறப்படுதலின் , கைம்மாறு  கொடுத்தல் என்னும்  பதிக நுதலிய பொருள்  புலனாதல்  அறிக.

                                              *************************************

பாடல் : 43 .

மேலை  வானவ  ரும் அறி  யாததோர்

கோல  மேயெனை  யாட்கொண்ட  கூத்தனே

ஞால  மேவிசும்  பேயிவை  வந்து  போங்

கால  மேயுனை  யென்றுகொல்  காண்பதே .

கருத்துரை :-   இப் பதிகத்தின்  முதல்  திருப்பாட்டில்  இறைவன்  “வருக” என்று  பணித்தனனாக , அக் கட்டளையின்  அருமைப்பாட்டை பொருட் படுத்தா திருந்தேற்குத் தன் உண்மைத் தன்மை இயல்பு காட்டித் தானே வந்து எளிமையில் வெளிப்பட்டருளினன் எனக்  கூறிய  அடிகள் , அவ்வளவின்  அமையாது , பாசப்பிணிப்பையும் அறுத்து , அறிவு தந்து ஆட்கொண்ட  அப்பெருமான் அருள்திறத்தில்  ஈடுபட்டுத்  தேடுகின்றார்.

பதவுரை :- மேலை வானரும்  =  மிக உயர்ந்த பதங்களில்  உள்ள  தேவர்களும் ,

அறியாத  ஓர்  கோலமே  =  அறியப்படாதது  ஆகிய  ஒப்பற்ற  திருவுருவமே ,

என்னை  ஆட்கொண்ட  கூத்தனே  =  எளியேன்  ஆகிய  என்னையும்  அடிமை கொண்ட  கூத்தப்பெருமானே ,

ஞாலமே  விசும்பே  இவை  வந்து போம் காலமே  =  மண்ணும்  விண்ணும்  தோன்றி  ஒடுங்குதற்குக்  காரணமான  காலவடிவமான  பெருமானே ,

உனைக்  காண்பது என்று =  அரிய  பொருளாகிய  நின்னைக்  காண்டல்  எப்பொழுதோ?  என்பது .

விளக்கவுரை :-  வானவர்  என்ற  அளவிலே , தேவர்  என்பது  பெறப்படுவதாக, ஈண்டு மேலை வானவரென்றது , இந்திர  பதத்திற்கு  மேற்பட்ட  பிரமபத முதலியவற்றில்  உள்ள  தேவர்களைக் குறிக்கும் . அன்னார்  இறைவனுடைய   அதிகாரநிலையங்களில்  தலைவராக  இருக்கின்றமையின் , அவ் வணுக்கம்  பற்றி  அவர்களுக்கு  அறிதற்கு எளியனோ என்று  கருதுவார்க்கு , அவர்க்கும்  தன்  உண்மைத் தன்மை இயல்பு அறிய வொண்ணாத  நிலையில் உள்ளான் என்பதைப்  புலப்பட வைத்தற்கு , “மேலை வானவரும் அறியாதது” என்றார். “வானோர்க்கரிய  மருந்தே” என்பது அடிகள் திருவாக்கு . வானவரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருளில்  வந்தது, பிரம பத முதலிய அதிகார  நிலையத் தலைவர்களாலும் , இறைவன்  இயல்பு அறிய வொண்ணாதது என்பதை “பங்கயத் தயனுமால் அறியா நீதியே “ என்பது முதலிய புராண கதையை யுட்கொண்டு  கூறிய  அடிகள்  திருப்பாடற் பகுதிகளாலும்  அறிக.  தகுதி வாய்ந்த பெரிய  அமரர் தலைவராலும்  காண்டற்கரியது என்றதனால் , இஃது இன்மைப் பொருளைப் பற்றிய  செய்தியாகுங்கொலோவென்று  ஐயுறல் ஆகாது  என்பார்,“ஓர் கோலமே” என்றார். அக் கோலம்  யாண்டுங் கண்டறியப் படாதது  ஆகிய  ஞானாசிரிய வடிவமாகும் . “கோலம்”  அழகு  என்னும் பொருள் தரும் . ஆதலின், அருமையில் எளிய அழகுக்கு எல்லையாக  விளங்கிய  அவ்வுருவத்தில்  தாம்  ஈடுபட்டதை  அடிகள் மனம் உருகிப்  பாராட்டியுள்ளார் . “கோலங்காட்டி யாண்டானை” என்பர்  பின்னும் , பேரழகு  வாய்ந்த  இறைவனது ஞானாசிரியத் திருக் கோலத்தில்  ஈடுபட்டு அணுகி யதும் , இறைவன் ஞானோபதேசம்  செய்து ஆட்கொண்டான் என்பது தோன்ற “என்னை  ஆட்கொண்ட  கூத்தனே “ என்றார். உயர்ந்த  தேவராலும்  அறியப்படாத திருக்கோலமுடைய  பரமசிவன் , அத் தேவர்  முதலிய  யாவரும்  யாவும்  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்து , அவ் எல்லோரையும்  எல்லாவற்றையும்  ஒடுக்கிக்கொண்டு  , தான் ஒருவனே  அழிவிலாப்  பொருளாக  நின்று  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும் தானே தலைவன்  என்பது புலப்பட  , அருட் கூத்து இயற்றும்  பெற்றியன்  என்பது தோன்ற  , “ஆட்கொண்ட  கூத்தனே” என்றார்.  ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும் ஆண்டவன் திருவுருவைக் காண்டலினும், ஞானாசிரியனாக  எழுந்தருளிக் காட்சி தரும் நிலை காண்டற்கு  அரியது என்பது தோன்ற  , ஆட்கொண்ட  கூத்தனே எனக்  குணிப் பொருளாகவும்  “அறியாததோர்  கோலமே “ என  குணப்பொருளாகவும்  கூறியருளினர் . கூத்தன்  என்பதிற்  கூத்து , ஆடலாகிய  வினையை உணர்த்தும் . ஆதலின் , கூத்தன்  என்பது அவ்வினைப்பண்பை உடையான் என்று  குணிப்பொருளாகவும்  , “ கோலம்” என்பது அழகு . உருவம் என உடைமை அளவில் நிற்பதால் , குணப்பொருளாகவும் அறிதல் வேண்டும்   அறிதற்கு அருமை , கோலத்திற்குக் கூறப்பட்டமையால் , கூத்தனாம் நிலை அதனிற்  சற்று எளிமை உடைத்து  என்பது பொதரும் .  படைப்பு  முதலிய எல்லாவற்றையும் குறிக்கும் கூத்தாடல் , யாவரும் காண, “ஐயர் தாம் வெளியே  ஆடுகின்றாரை” என்றபடி , பொது வெளியில் நிகழ்வதாகும் . ஞானாசிரியனாக எழுந்தருளிப் பக்குவம் உடையார்க்கு உபதேசித்தல்  தனிமையில் நிகழ்வதாகும் . இவ் வுண்மையும்  மேற் காட்டியதற்குச் சான்று  ஆதல் அறிக.  

          “ஞாலம் விசும்பே” என்புழி, ஏகாரம்  எண்ணுப்பொருளில் வந்தன. இவற்றை இறைவனைக் குறிக்கும் விளியாகக் கொண்டு பொருள் கூறுவர் சிலர் . பின், இவை என்னும் அஃறிணைப் பன்மைச்  சுட்டு  உண்மையால், மண்ணும் விண்ணும் ஆகிய  பூதங்களை உணர்த்துவனவாகக் கோடலே பொருந்தும் என்க .பூதங்களுள்  முதலும் இறுதியும் கூறியது கொண்டு , நடுவண் உள்ள நீர்  தீக்  காற்று என்னும் இவற்றையும் கொள்ளல் வேண்டும். ஐம்பெரும் பூதங்களும் உபலக்கணமாக  நின்று , ஆன்ம  தத்துவங்கள் எல்லா வற்றையும் புலப்படுக்கும் . எல்லாத் தத்துவங்களும்  காரியப்பட்டுத் தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும் காரணமாக உள்ளது  கால தத்துவம் என்ப. வந்து போதல் – தோன்றி ஒடுங்குதல் . கால தத்துவம் , ஆன்மாக்களுக்குத் தொழில் , அறிவு , இச்சைகளை முறையே விளக்கி உபகரிக்கும்  கலை , வித்தை ,அராகம் என்னும் வித்தியா தத்துவங்களையும் தன்னுள் அடக்கி  மேல்நிற்பதாகலானும் , பேரூழிக் காலத்து எல்லாம் ஒடுங்கிய ஞான்று , இறைவன் ஒருவனே அக்காலத்தின் இறுதியில் விளங்குபவன் ஆதலானும், அக் காலத்தோடு ஒற்றுமைப்படுத்து , “காலமே” என்று  விளிக்கப்பட்டுள்ளான்  உண்மையில் , காலத்தையும் கடந்த தனிப்பொருளாக நிற்றலின் ,இறைவன் கால காலன் ஆவான் . ஆன்மதத்துவங்களுக்குக் காலம் இறுதியாக உள்ளது ஆகலின் , அத் தத்துவங்களானாய  உடம்போடு கூடிய உயிர்களின் இயல்பு நோக்கி , இறைவனைக் “காலமே”  என்றார் . மேல், “கழிதரு  காலமுமாய்  அவை  காத்தெம்மைக் காப்பவனே” என்று கூறியதன்கண்ணும்  இவ் வுண்மை காண்க.  இனி, அசுத்தமாயா தத்துவம் ஆகிய காலம் காரணம் ஆகலானும் , அது சிவதத்துவங்களின் அணிமையில் உண்மையானும் , அது பற்றிக்  “காலமே” என்றார் எனினும் ஆம் .

          “என்றுகொல் காண்பதே “ என்புழி , என்று என்பது காலத்தைப் பற்றிய வினாவாகும் , கால தத்துவத்தின் எல்லையே  பெரிதாக ,அதனையும் கடந்து  கால காலனாக நிற்கும் நின்னை, இவ் வுடம்பு முகந்து நின்ற மிகச் சிறுகால எல்லையுள் வைத்து எங்ஙனம் காண்பேன் என்பார், “என்றுகொல் காண்பதே” என்றார்.  காண்பது , தொழில் அளவில் நின்றது  . கொல்  – அசை .

           இதன்கண், மேலை  வானவரும்  அறியாதோர் அரிய திருக்கோலத்தைக் காட்டி ஞானோபதேசம் பண்ணி ஆட்கொண்டு அருளியக்  கூத்தப்பெரு மானே  என்றதனால் , அப் பெருமானது பேருதவிக்குக் கைம்மாறு  கொடுத்தல்  ஆற்றேன்  என்பது. பெறப்படுதலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய பொருளும் , “ஊனையென்று கொல் காண்பதே “ என்றதனால் , சதகம் நுதலிய பத்தி விசித்திரப் பொருளும் புலனாதல்  அறிக .

                                                  ************************************

பாடல் : 44 .

காண  லாம்பர  மேகட்  கிறந்ததோர்

வாணி  லாப்பொரு  ளேயிங்கொர்  பார்ப்பெனப்

பாண  னேன்படிற்  றாக்கையை  விட்டுனைப்

பூணு  மாற்றி  யேன்புலன்  போற்றியே.

கருத்துரை :-  மேலை வானவரும் அறியாத ஓர் கோலம் என்றும் , அதனை என்றுகொல்  காண்பது என்றும்  முன்னைத் திருப்பாட்டில்  கூறிய அடிகள் , அக்கோலம்  காண்டற்கு உரியதோ  காணொணாததோ  என்று நினைவார்க்கு  விடையையும் அடைதற்கு அதனைத் தாம் விரைதலையும்  இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  காணல்  ஆம்  பரமே  =  சிவ ஞானத்தாற்  காண்டற்கு உரியதாகிய  பரம்பொருளே ,

கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே  =  கட்புலனாற்  பற்றப்படாவாறு கடந்து நிற்பதாகிய  ஒப்பற்ற ஒளிப்பழம்பாக வுள்ள பொருளே ,

இங்கு  ஓர்   பார்ப்பு  என  = இவ்விடத்து ஒரு பறவைக் குஞ்சு  (கூடு  அல்லது முட்டை தனித்து வறிதே கிடப்ப  அதனின்றும் பறந்து சேறல் ) போல,

பாணனேன்  =  வீனன்  ஆகிய யான் ,

புலன் போற்றி  =  சுவை  ஒளி ஊறு  ஓசை நாற்றம் ஆகிய  ஐம்புல இன்பங்களையும் பரிகரித்து ,

படிறு  ஆக்கையை  விட்டு  உன்னைப் பூணுமாறு  அறியேன் = பொய்யாகிய இவ்வுடலை விட்டு வெளிப்பட்டு  மெய்யாகிய நின்னைப் பொருந்தும் நெறியை அறியாதவன் ஆகின்றேன் என்பது.  

விளக்கவுரை :-  இறைவனது பரம் பொருள் தன்மை , மன  மொழிகளைக் கடந்த தொன்று  ஆகலின் , கட்புலனாற் காணத்தக்கது அன்றாம் . அப் பெருமானது ஒளிமிக்க உருவம் ஒருவாற்றால் கட்புலனாற் காணத்தக்கது ஆகும் . அங்ஙனமாகவும் , பரம் பொருள் தன்மை காணத்தக்கது எனவும் , ஒளிஉருவம்  கட்புலனாற் காணத்தக்கது எனவும் கூறியதன் கருத்து ஆராயத்தக்கது . இறைவன் , பசு ஞானங்களால் காணப்படாதவன் எனவும் , பதி ஞானம்  ஆகிய சிவஞானம் ஒன்றாலே  காணத்தக்கவன்  எனவும் சைவ  நூல்கள் கூறும்  , “ஊனக்கண் பாசமுணராப் பதியை , ஞானக் கண்ணினிற் சிந்தை  நாடி”  என்னும்  சிவஞானபோத  சூத்திரத்தாலும் , அதன் விளக்கம்  ஆகிய  “பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய  பரம்பரனைப் பதி ஞானத்தாலே,நேசமொடும் உள்ளத்தே  நாடி” என்னும் சிவஞான சித்தியானும்  அறியலாம் . நூல்கள் முகமாக நிகழ்வது பாச ஞானம் எனவும் , நான் பிரமம் என்று  மதிக்க வருவது  பசுஞானம் எனவும்  கூறுவர். இவ்வுண்மையை ,” வேதசாத்திர மிருதி புராண கலைஞானம் ….. நாத முடிவான வெலாம்  பாசஞானம் “ எனவும் , “காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம்  கருது பசு ஞானம் “ எனவும் கூறிப்போந்த  பிரமாணங்களால் அறிக. அவன் அருளே கண்ணாகக்  காண்டல்  பதிஞானம் ஆகும் . இம் முத்திற ஞானங்களுள் , இறைவனது பரம் பொருள் தன்மை அறிதற்கு உரியது மெய்ஞ்ஞானம்  ஆகிய  பதிஞானம் ஆகும். அப்பதி ஞானத்தால் உணரத்தக்கவன்  என்பது  போதர ,  “காணலாம் பரமே”  எனவும் , பாசஞான , பசு ஞானங்களால்  அப் பெருமானது ஒளி உருவமே  முற்றும் காண்டற்கு  இயலாததொன்று என்பார் , “ கட்கிறந்த தோர் வாணிலாப்  பொருளே “ எனவும் கூறினர்.  இறைவனுடைய  அருவம்  அருவுருவம்   உருவம்  என்னும்  மூவகை நிலையுள் ,முன்னைய  இரண்டும்  மெய்யுணர்வாகிய சிவஞானத்தானும் , பின்னையது அப் பெருமான் அருணோக்கால்  ஆன்மைத்  தூய்மை பெற்ற  நிலையிலும் அறியத்தக்கன .  சிவலிங்காதி உருவங்கள் எல்லோரானும் அறியத்தக்க நிலையில்  உள்ளனவே எனின், ஈண்டுக் கூறியது அவற்றுள் ஒன்றை அன்று .; ஒளி மிக்க  ஞானாசிரிய  வடிவமே ஆகும் . அவ் வடிவத்தை  அப்பெருமான்  அருள்நோக்கால்  அறிந்தனர் ஆயினும் , அக்காட்சி நெடிது நில்லாமையானும் நின்ற  அளவிலும்  தம் கட் புலனால்  அளவிட்டு  உணரும் அளவில் இல்லாத  பேரொளிப்பிழம்பாக  உள்ளமையானும்  ,”கட்கு  இறந்ததோர்  வாணிலாப் பொருளே” என்றார். பரம்பொருள் ஆம் நிலையில் காண  இயலாது  என்பாரை நோக்கிச்  சிவஞானத்தால்  காணத்தக்கவன் என்பது  போதர , “காணலாம்  பரமே” எனவும் ,உருமேனிகள் எல்லாம் கண்ணால்  பார்க்கத்தக்கன  என்பாரை  நோக்கி ,ஞானாசிரிய வடிவ முதலியவற்றில் உள்ள ஒளி மிகுதி கட்புலனால்  முற்றும்  காண்டற்கு  இயலாதது  என்பது  போதர  , “கட்கு இறந்ததோர்  வாணிலாப் பொருளே  “ எனவும் கூறினார் என்க.

           இங்கு  –  இவ்வுலக வாழ்க்கையில்  ஒரு பறவைக் குஞ்சு உவமையை ,” குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே , யுடம்போடுயிரிடை  நட்பு “ என்னும்  திருக்குறளில் உள்ளபடி ஈண்டும்  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . அடிகள் தம் உயிர்க்குப் பற்றுக்கோடாக  உள்ள  ஊனார்  உடலை ஒழித்து , இறைவன் திருவடி நிழலை அடைவதில் விரைவும் விருப்பமும்  உடையார்  என்பதைத்  திருவாசகத்தில் பல இடங்களிலும் காணலாம் . வினைவயத்தால்  கிடைத்த உடலை விரைவில் விட்டுப்பின் அதனைப்பற்றிய நினைவின்றிச் சேறற்குப் பறவைக் குஞ்சு உவமை  கூறப்பட்டது . இக் கருத்திற்குப்  பரிமேலழகர் கண்டபடி , குடம்பையை முட்டை என்று பொருள் கோடல் சிறந்ததாகும் . “பார்ப்பென “ என்புழி ,உபமேயமாகிய  உயிரின் தொழிலாகிய  விட்டுச் சேறல்  என்னும் வினை , அவ் உவமைக்கண்ணும்  இயைத்துக்  கொள்ளப்பட்டது . கூடு  அல்லது  முட்டையினின்றும்  பறவைக் குஞ்சு  பருவம்  வந்ததும் பறந்து  வெளிப்படல் போல , வினைக்கு  ஈடாக  எடுத்த உடம்பினின்றும்  வினை ஒழிவு பெற்று , விரைவில் அதனைவிட்டு  நின்னைக் கூடவேண்டியவனாகவும் , அங்ஙனம்  கூடுமாறு  அறிந்திலேன் என்பார், “படிற்றாக்கையை  விட்டு உன்னைக்  கூடுமாறறிந்திலேன் “ என்றார். பார்ப்பென விட்டு  என  இயையும் . இனி, பார்ப்பு  என்பதற்குப்  பறந்து செல்லும் ஆற்றல்  படைத்த இளங்குஞ்சு  எனக் கொண்டு  , பார்ப்பென  அறியேன் என இயைத்துப் பொருள் கோடலுமாம் . பார்ப்பைப் போலப்  படிற்றாக்கையை விட்டுச்  செல்ல  அறியாதவன்  ஆயினேன்  என்பது இதற்குக்  கருத்தாகக்  கொள்க.

           அங்ஙனம் அறியாமைக்குக்  காரணமாகத்  தமக்கு  ஒரு பெயரை இட்டுக் கொண்டார் . . “பாணன் “ என்று.  பாழ் நன் –பாணன்  என்றாயிற்று ; பயன் இன்மையை உடையேன் ;  சிறந்த உறுதிப் பயனைப் பெற முயலாது  வறிதே இருக்கின்றவன் என்பது கருத்து.  ஆக்கையை , “வஞ்சினைக் கொள்கலம் “ என்பர் . அதனாலும் , மெய் எனப் பெயர் பெற்றுப் பொய்யாகக் கழிதலானும் , “படிற்றாக்கையை” என்றார் . படிறு – வஞ்சம் , பொய் . ஆக்கை என்றதனால்  வினைக்கு ஈடாக , என்பு , நரம்பு ,  முதலியவற்றால்  ஆக்கிக் காட்டப்பட்டது  என்பது பொதரும் .

            பூணுதல் – திருவடியைத் தலைமேல்  கோடல் ; தள்ளவேண்டியதும்  கொள்ள வேண்டியது,ம் கூறியபடியாம் . தள்ள வேண்டியது என்பினை  நரம்பிற் பின்னி இயைந்தது ஆகிய ஆக்கையை ; கொள்ளவேண்டியது அழி வில் இன்ப வடிவினன் ஆகிய ஆண்டவன்  திருவடியை .  உன்னைப் பூணுமாறு  என்பதற்கு , நின்னைப் பொருந்துமாறு  என்பது பொருள் . பொருந்துதல்  – திருவடியைத் தம் தலைக்கண் இயைத்தல் . அன்றி , உன்னை என்பதற்கே உன் திருவடியை என்று பொருள் கோடலும் பொருந்தும் .  ஈண்டு அவயவ  அவயவைகளின்  வேற்றுமை இன்மை கருதத் தக்கது . அறியேன் என்பதனை  படிற்றாக்கையை விடுதற்கும் . உன்னைப் பூணுதற்கும்  எனக் கொள்ளல் வேண்டும் .  

        புலன் போற்றி என்புழி, போற்றுதல் , பரிகரித்தல்  என்னும் பொருட்டு , “புறஞ் சொற் போற்றுமின் “ என்னும் இடத்து , இப் பொருளில்  வந்தது காண்க. ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதில்  உள்ள வேட்கை நீங்கவில்லையானால் , ஆக்கையை விடுமாறும்  திருவடியை அடையுமாறும் கூடா.  ஆதலால் , ஆக்கையை விடுதற்கும் ,திருவடியைக்  கூடுதற்கும்  புலனுகர்ச்சியின்  ஒழிவே காரணம் ஆம்  என்பது விளங்கும் புலன்களைப்  பரிகரித்துப்  பூணுமாறு  என இயையும் . இனிப் புலன் போற்றி என்பதற்கு, ஐம்புல  இன்பங்களைப் பேணி எனப் பொருள் கொண்டு  , அறியேன்  என  இயைத்துப் பேணுதல் ஆகிய  காரணத்தால்  அறியாதவன்  ஆயினேன் எனக் கோடலும் ஒன்று.  ஈண்டுப் பேணி என்னும் எச்சம் காரணப் பொருள் உடையதாகும் .

          இதன்கண், “புலன்போற்றிப்  படிற்றாக்கையைக் கைவிட்டுப் பூணுமாறறியேன் “ என்றதனால் , அத்தகைய இழிந்த நிலையில்  உள்ள என்னையும் ஆட்கொண்டருளிய பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்ய வல்லேன் என்பது குறிப்பெச்சமாகக் கொள்ளக் கிடத்தலால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,”பாணனேன்  படிற்றாக்கை யை விட்டு”  என்றதனால் , உடற்சுமையில்  வெறுப்புற்றது  தோன்றுதலின் , வைராக்கிய  விசித்திரம் என்னும் சதக நுதலிய  பொருளும் புலனாதல் அறிக.

                                         ****************************************

பாடல் :45 .

போற்றி  யென்றும்  புரண்டும்  புகழ்ந்து நின்

றாற்றல்   மிக்க அன்  பால்அழைக்  கின்றிலேன்

ஏற்று  வந்தெதிர்  தாமரைத்   தாளுறுங்

கூற்றம்  அன்னதோர்  கொள்கையென்  கொள்கையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  சிவஞானத்தால் அறியத் தக்க இறைவன் இயல்பை உணர்ந்து , புலனுகர்ச்சியில் பற்றற்று , ஆக்கையை  விட்டு,  அப்பெருமானை  அடையும்  நெறியைச்  சார்தற்கு  விரைதலை  மேற்கொண்ட அடிகள் , அதற்கு  ஏதுவாக  இத் திருப்பாட்டில் முதலில்  மன மொழி மெய்கள் இறை பணியினால் தூயனவாகப் பெற்று ,ஆற்றல்  மிக்க  அன்பு  நெறியில் தலைப்பட  வேண்டியதிருக்க  , அதற்கு  மாறாகச் செல்லும் கொள்கை உடையேன் ஆயினேன் ; ஆயினும் அந் நிலையிலும் என்னை ஏற்று அருளல் வேண்டும்  என்று  வேண்டுகின்றார் .

பதவுரை :- போற்றி  யென்று   =   நெஞ்சத்தாற் காத்தருள்க  என்று  நினைந்து ,

புரண்டும்  =  உடலால்  புரண்டு  வலம்  வந்தும் ,

புகழ்ந்தும்  =  நாவினால் புகழ்ந்து பாராட்டியும் ,

நின்று  =  அன்பு நெறியில்  நிலையுதல் பெற்று ,

ஆற்றல்  மிக்க  அன்பால்  அழைக்கின்றிலேன்  =  உறுதியான  மெய்யன்பினால்  கூவி  அழைக்காமல் இருக்கின்றேன் ,

என்  கொள்கை  =  இத்தகைய என் கொள்கை ,

எதிர் ஏற்று  வந்து  =  எதிராகப் பொர வந்து ,

தாமரைத் தாள்  உறும்  =  நின் தாமரை மலர் போன்ற திருவடியில்  பொருந்தப் பெற்ற  ,

கூற்றம் அன்னது ஓர் கொள்கை  =  கூற்றுவனது  கொள்கையை  ஒரு வகைக்  கொள்கையேயாம்  என்பது .

விளக்கவுரை :-  சிறந்த  அன்பின்  விளைவிற்கு  மன மொழி மெய்கள் தூயன  ஆதல் வேண்டும் . இம் மூன்று  காரணங்களாலும் முறையே  இறைவனை  நினைதலும் , புகழ்ந்து பாராட்டுதலும் , பணி செய்தலும்  ஆகிய  செயல்கள்  நிகழற்பாலன.  இந் நிகழ்ச்சிகளாலே  அவை  தூய்மை உடையன ஆம் .  நினைதல்  –  இறைவன்  பெருமையை நினைதலும் , தமக்கு  வேண்டியவற்றை  அவன்பால்  வேண்டிக்கொள்ளு முகமாக  நினைதலும்  என்று  இருவகைப்படும் . அவற்றுள் , இறைவன் பெருமையை  இடையறாது நினைதல் அன்றி , வேறு ஒன்றையும் நினையாமல்  , “நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்   நானோ  இதற்கு  நாயகமே “  என்று  இருக்கும்  அடிகள் , இடையிடையே  தம்மை  உலக வாழ்க்கையினின்றும்  விடுவித்துத்  திருவடி இன்பம் நல்கிக்  காத்து  அருளல்  வேண்டும்  என்று வேண்டிக் கொள்ளுதல்  உண்டு . அம் முறையில்  ஈண்டுக்  காத்து  அருள்க  என்று  வேண்டுவார் , “போற்றி  யென்றும்” என்றார். பின்னர்ப்  “புகழ்ந்தும் “ என்று  வந்தமையால்  ,இஃது  எண்ணத்தின்பாற்படும் . நெஞ்சம்  இல்  வழி  நிகழும்  செயல்கள்  சிறந்தன  ஆகா  ஆதலின் , முதலில்  நினைவு  கூறப்பட்டது  . அந் நினைவுக்கு  ஏற்ப  , மெய்யின்  செயலும்   நாவின்  செயலும்  பின்னர்  நிகழ்ந்தன . உடல்  உறுப்புக்கள்  அனைத்தும் இறை பணியில்   ஈடுபடுதலைப்  புலப்படுக்கவே, தொழுதல் , வணங்குதல் என்னும்  செயல்களைக்  குறிப்பிடாமல்  , “புரண்டும்” என்றார்.  புரளுங்கால் , உடல் உறுப்புக்கள்  அனைத்தும்  நிலத்திற்  படியும் உண்மை அறிக. மன  மொழி  மெய்கள் ஓரோவமயம்  இங்ஙனம்  இறை பணியில்  தலைப்படுதலும் , மற்றைக்  காலங்களில்  புலனுகர்ச்சிகளில்  ஈடு படுதலும்  உண்டு . அடிகள் அங்ஙனம் ஆதலை  விரும்பாராய் , என்றும்  ஒரே படித்தாக  முக்கரணங்களும்  இறைபணியில்  நிலைப்படுதலை விரும்பும்  இயல்பினர்  ஆதலின்  , “நின்று “ என்றார்.  

             ஒரு பொருளைப் பற்றிப் பற்பல  பிறவிகளிலும்  பிறழ்ச்சி  இன்றித்  தொடர்ந்து வேர்   ஊன்றிய  அன்பே  ஆற்றல்  மிக்க  அன்பாகும் . முறிந்த  நிலையில்  இது மெய்யன்பு  ஆகும்  . இதனையே  அடிகள் “பெறவே  வேண்டும்  மெய்யன்பு  “ஏன்பார் . இத்தகைய  சிறந்த  அன்பு  விளைதற்கு  மன  மொழி  மெய்கள்  தூயன  ஆதல் வேண்டும் ஆதலின் ,  அத் தூய்மையே  முதல் அடியிற்  பெறப்பட்டது  என்க.  கரணங்கள்  தூய னவாகப்  பெற்று , முறுகிய  தலையன்பினால்   இறைவனைக்  கூவி அழைத்தல்  இன்றியமையாததாகவும் , அவ்வாறு  செய்திலேன்  என்பார், “ ஆற்றல்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் “ என்றார்.  அன்பினால்  அழைத்து  அடையும் பேறு  எனக்கு  இல்லை  ஆயினும்  அன்பினால்  கூற்றுவன் எதிர்பட்டுத்  திருவடிப் பேறு  கிடைக்கப் பெற்றது  போன்ற  ஒரு  கொள்கையிலாவது  தலைப்படமாட்டேனா  என்பது., பின் இரண்டு அடிகளின்  கருத்தாகும் . “அஞ்சியாயினும்  அன்பு பட்டாயினும் , நெஞ்சம்  வாழி  நினை நின்றியூரனை “ என்னும் தமிழ் மறையில் , அன்பு  காரணமாக  இறைவனை நினைதற்கு  இயலாதார் , அச்சம்  காரணமாக  நினைய  நேர்ந்தாலும் , அந் நினைவும் ஓரளவு நலம் பயக்கும்  என்று  கூறியபடி  , ஆற்றல்  மிக்க  அன்பினால்  அழைக்க இயலாவிட்டாலும்  மாறுபட்ட  கொள்கையை மேற்கொண்டாவது  இறைவன் சினத்திற்கு இடனாகி , அவன்பொன்னடிகளைக் காணும் பேறுபெறலாமே  என்று  கருதுகின்றார் அடிகள் .  இக்குறிப்பை , “உடையாய்  கூவிப் பணிகொள் ளாது ஒறுத்தல் ஒன்றும் போதுமே “  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியது கொண்டு  தெளியலாம் . அரசன் அவைக்களத்தில்  சென்று  , அவனால் மதிக்கப்பெற்று , அவன் திருவோலக்கத்தைக்  காண்டற்கு இயலாத ஓர் எளியவன் , அரசனுக்கு  மாறுபட்ட  செயலில்  தலைப்பட்டுக்  குற்றவாளியாகி , அரசவைக்கு  கொண்டுவரப்பட்ட நிலையில் , அவனைக்  காண்டலை ஒரு பேறாகக் கருதுதல் போல் அடிகள் கருதுகின் றார் என்பது , “ஒறுத்தல் ஒன்றும் போதுமே “ என்றதனாற் புலப்படும் . கூற்றுவன் ,மார்க்கண்டேயர்  பொருட்டு   இறைவன் திருவுள்ளக் குறிப் போடு  முரண்பட்டு  எதிர்த்துச் சென்றான்  ஆயினும் , அப்பெருமான் திருவடிப் பரிசப்பேறு  எய்தினான்  என்பதைப் பின்வரும் அப்பர் அருள் மொழியாலும் அறிக .  

மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடத்து

மாலும்  அறிந்திலன் மாலுற்ற  தேவழி  பாடு செய்யும்

பாலன் மிசைச்சென்று  பாசம்  விசிறி  மறிந்த  சிந்தைக்

காலன்  அறிந்தான்  அறிதற் கரியான் கழலடியே “

என்பது .

                “ஏற்று வந்தெதிர் “ என்பதை , எதிர் ஏற்று  வந்து  என மாற்றி உரைத்துக் கொள்க ; நேராக எதிர்த்துவந்து என்பது பொருள் , ஒருவன், தன்னினும் வலிமிகப் படைத்தவனோடு  போர் செய்ய நேர்ந்த பொழுது , மறைத்து நின்று அம்பு எய்தலைக் கேட்டிருக்கின்றோம் . கூற்றுவன் இறைவனது பேர் ஆற்றலை  அறிந்திருந்தும் , மறைந்து ஒழுக நினைந்தான் அல்லன் என்பது தோன்ற , “ஏதிரேற்று “ என்றார். ஒருவன் தன்னின்  மெலியவனோடு  போர் செய்ய   நேர்ந்துழிச்  சந்திவிக்கிரக முதலிய  அறு வகைக் குணங்களுள்  ஒன்றாகிய போர் குறித்து மேற்சேறலை  மேற் கொண்டு , அம்மெலிய பகைவன்  இருந்த இடம் நோக்கிச்  சேறல் இயல்பு . அதற்கு  மாறாகத்  தன்னின் எத்துணையோ  மிக்க  வலிபடைத்த இறைவனை  நோக்கிக்  கூற்றுவன் மேற் சென்றான்  என்பது தோன்ற  , “எதிரேற்று வந்து” என்றார்.  இங்ஙனம்  அஞ்சாமல் கூற்றுவன்  எதிர்த்து வந்ததற்குக்  காரணம் , இறைவன் அவனுக்கு இட்ட பொதுவான  கட்டளையை நிறைவேற்றுவதில்  உள்ள கடமையும் ,அதன் நிமித்தம் பிரமாதி  தேவராலும் காண்டதற்கு  அரிய  இறைவன் திருவடியைக் கண்டு  இன்புறலாம்  என்னும் ஆர்வ உட்கோளும் ஆகலாம் என்பது குறிப்பின்  அறியத்தக்கது . அக் குறிப்பின்  பயனாக , இறைவனது  தாமரை மலர் போன்ற திருவடிப் பரிசப் பேறு கிடக்கப்பெற்றான் என்பது தோன்ற , “தாமரைத்  தாளுறும் “ என்றார். உறுதல்  –  பொருந்தப் பெறுதல் . திருவடிக் காட்சியே  அருமை. பரிசிக்கப் பெறுதல்  அதனினும்  அரிது.  திருவடி அழுந்தப் பெறுதல்  கிடைத்தற்கு  அரிய பேறு  அன்றோ?  இப் பேறு ,  வன்பு நிலையில்  நிகழாது  அன்பு நிலையில்  நிகழும்   ஆயின் , அந் நிலையே  வீட்டு  இன்பமாகும் .

            “ கூற்றம் அன்னது ‘ “என்பதற்குக் கூற்றுவன் கொள்கை போன்றது என்பது பொருள் , கொள்கை போன்றதாகிய  ஒரு கொள்கை என் கொள்கை யாகும் .என முடிக்க . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்க இயலாத நிலையில்  அமைதி அடைவேனோ  எனின் , அங்ஙனம் இரேன் , இறைவன் திருவுள்ளக்குறிப்பிற்கு வெறுப்பு விளைக்கத்தக்க நிலையில் மாறுபட்டாவது  அப் பெருமான் திருவடிப்பேற்றிற்கு  ஆளாவேன் என்பது அடிகளின் பத்தி விசித்திரமாகும் .  

               இதன்கண், மன மொழி மெய்களின் தூய்மையால் உண்டாம் மெய்யன்பினால்  நின்னை  அடைய இயலாத நிலையிலும் , நின் திருவடிப் பேற்றிற்கு என்னை  ஆளாக்கப் பிறிதொரு கொள்கையை நினைவுறுத்திய  பேருதவிக்குக்  கைம்மாறு  கண்டிலேன்  என்பது போதரலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , நேறிய அன்பு நெறியில் வழிபடும் ஆற்றல் இல்லேன்  ஆயினும் , மாறுபட்ட வன்பு நெறியிலாவது நின் திருவடியைப் பெறாமல் ஒழியேன் என்று கூறுதலின் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் தோன்றுதல் காண்க. 

                                          **************************************

பாடல் : 46 .

கொள்ளுங்  கில்லெனை  யன்பரிற்  கூய்ப்பணி

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்

நள்ளுங்  கீழுளும்  மேலுளும்  யாவுளும்

எள்ளும்  எண்ணையும்  போல்நின்ற  எந்தையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் முக்கரணங்களும் தூயனவாகப் பெற்று முறுகிய பேரன்பினால்  ஆண்டவனைக் கூவி அழைக்கப் பெறாமை பற்றி இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் யான் அழையாத நிலையிலும் இறைவன்  தானே  என்னைக் கூவி அழைத்துப் பணிசெய் வித்துக்  கொள்ளுவானோ  என்று எண்ணி  வருந்துகின்றார் .

பதவுரை :- யாவுளும்  நள்ளும்  கீழ் உளும் மேல் உளும்  =  எல்லாப்பொருள்களிடத்தும்  நடுவணும்  கீழும்  மேலும்  ஆகிய  எவ்விடத்தும் ,

எள்ளும்  எண்ணெயும் போல் நின்ற  எந்தை  =  எள்ளும்  அதன்கண்   யாண்டும்  நிறைந்திருக்கும் எண்ணெயும் போல் நிறைந்து நிலைபெற்று  இருக்கும் என் தந்தையாகிய ,

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்  =  தேனும்  அதனை நுகரும்  வண்டும்  நீங்காத  கொன்றைமலர் மாலையை உடைய ஆண்டவன் ,

கில்லேனை  =  பேரன்பினால்  அழைக்கும் ஆற்றல்  இல்லாத  என்னை  ,

அன்பரிற் கூய்ப்பணி கொள்ளும் =   மெய்யன்பரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்து  அடிமை கொள்ளுவானோ?  என்பது.

விளக்கவுரை :- இறைவன்  என்னும்  சொல் பரமசிவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப்  பண்டைப் பனுவல்களில்   பரக்கக்  கானலாம் . அச் சொல்லின்பொருள்  எங்கும் நிறைந்தவன் என்பது. இறுத்தல் – தங்குதல் ; யாண்டும் தங்குதல் . இவ்வியாபகம் , கண்டப் பொருள்களில்  தனித்தனியேயும் ,அகண்டப்பொருளில்  முழுதும் உள்ளதாகும் . எடுத்துக்காட்டாக  எள்ளில் எண்ணெயைக் காணலாம் . அது  கண்டப் பொருள் வியாபகம்  ஆகும் . கருப்பங்கழியில்  சாறும் அன்னதே .அகண்டப் பொருளின்  வியாபகம் அங்ஙனம் அன்று .  இயங்குதிணை , நிலைத்திணை  ஆகிய  எல்லாப்  பொருள்களிடத்தும்  ஏகமாக  நிறைந் திருத்தலாகும் . இந் நிலையை அடிகள் இத் திருப்பாட்டின்  பின் இரண்டு  அடிகளிலும் தெளிவாக விளக்கியுள்ளார் .

        ஒரு பொருளைப் பகுத்து வரையறை செய்யுங்கால் , முதல் இறுதி  நடு என முக்கூறுபடுத்து வழங்குவர் . அம் முக் கூறுகளில் ஒரு பகுதி அளவில் இறைவன் வியாபகம்  உள்ளதோ  என்பாரை  நோக்கி , அங்ஙனம் அன்று ; யாண்டும் உளது என்பார் , “நள்ளும் கீழுளும்  மேலுளும் “ என்றார். கீழ் மேல்  என்பவற்றில்  உள் என்பன இடப்பொரு ளிலும் ,உம்மைகள் எண்ணுப்பொருளிலும் வந்தன.  கீழும்  மேலும்  முடிந்த இடங்களாக , நடுப் பகுதி முடிவு காணப்படுவது  அன்று  ஆகலின் இறைவனது  நிறைவு எல்லை  காணப்படாதது ஒன்று  என்பதைப் புலப்படுத்த , முதலில் நள்ளும் என்றார். பின்னர் , ஆதார  ஆதேய  முறை பற்றிக் கீழும் மேலும் கூறப்பட்டன.  ஆதாரம்  தாங்குவது . ஆதேயம்  தாங்கப்படுவது . ஒரு பொருளின் அடிப்பாகம் தாங்குவதும் , நுனிப் பாகம்   தாங்கப்படுவதும் ஆதல் அறிக. நடு  கீழ் மேல்  என்னும் மூவிடத்தும் என்று கூறிய அளவில் , வியாபகம்  யாண்டும் என்பது பெறப்படுவதாகப் பின் , “யாவுளும்” என்று  கூறியது எற்றிற்கு  எனின் ,  நடு  கீழ்  மேல்  என்னும் இடங்கள் கண்டப் பொருள்களில் காணப்படுவன  ஆதலின் , இறைவன்  வியாபகம்  உலத்துள்ள  கண்டப்பொருள்களின்  அளவிற்றானோ என மயங்குவார்க்கு ,அம் மயக்கநீக்கம்  கருதி “யாவுளும் “ என்று  கூறப்பட்டது என்க.  “யாவுளும் “ என்பதற்கு எல்லாப்  பொருள்களிடத்தும் என்பது பொருள் . இயங்குதிணை , நிலத்திணை  ஆகிய  எல்லாப் பொருள்களிடத்தும் , முதல் , இறுதி , நடு  என்னும்  யாண்டும்  இறைவனது நிறைவுளது  என முழு வியாபகம் கூறியபடியாம்

       இங்ஙனம்  அகண்டமான  வியாபக  நிலையைச்  சிற்றறிவுடைய மக்கள் மனத்தால்  வரையறைப்படுத்துத் தெளிதல் அரிதாகலின் , தெளிவுறுத்தற்  பொருட்டுக்  கண்டப் பொருளில்  விளங்கத்தக்கது  ஒன்றை எடுத்துக்காட்டுவாராய் , “எள்ளும் எண்ணெயும் போல்” என்றார். கண்டப் பொருள்களுள்  ஒன்றில் ஒன்று நிறைந்து இருத்தற்கு ,எள்ளும் அதன் கண் உள்ள எண்ணெயும்போலப்  பிறிதொன்றைக் காண்டல் அரிது.  ஆமணக்கு முதலிய  வித்துக்களிலும் நெய்ப்பகுதி உள்ளதே எனின் , அப் பகுதி தோயாத  கொட்டைத் தோடு வலிதாக  உள்ளது என்பது அறியத்தக்கது . மெல்லிய தோல் உள்ள கனியையும் சாற்றையும் கூறல்  ஆகாதோ எனின் , அக்கனியில் அத் தோலோடு வித்துக்களும் இடையறவாக  உளவாகலின்  ஆகாது என்க. எள்ளில்  தோல் இருப்பினும்  மிக மெல்லியதாகும் . மேலும் , அதனைவிட  மெல்லிதாகிய  தோல்  பிறிதொன்றில்  காண்டல்  அரிது . ஆதலின், இறைவனது அகண்ட வியா பகத்திற்குக்   கண்டப்  பொருள்களுள்  எடுத்துக் காட்டத்தக்கது அதுவே  ஆதலின், “எள்ளும்  எண்ணெயும்போல் “ என்று  எடுத்துக் காட்டுவார் ஆயினர்.” திலேஷூ தைலம் “ என்று மறை முடிவு கூறுதலும்  ஈண்டு  அறியத்தக்கது .இவ்வுமையில் காணப்படும் குற்றம்  ஒன்றைப் பரிகரித்தற் பொருட்டு , “நின்ற” என்றார். நிற்றல் , காலத்தாலும்  இடத்தாலும் பிறிதொரு பொருளாலும் கேடு இன்றியும்  பிரிக்க முடியாதபடியும் நிலைத்திருத்தல் . எள்ளில் உள்ள எண்ணெய் , காலம் இடங்களால் கேடு அடைதலும் , செக்கு முதலிய  கருவிகளால்  வேறுபடுத்தப் படுதலும் காண்கின்றோம் . இறைவன் நிறைவு அன்னது அன்று என்பது புலப்படுக்க  “ எள்ளும் எண்ணெயும் போன்ற” என்னாது, “போல் நின்ற “ என்றார். “போல்” என்ற அளவில் ஒப்புப்  பெறப்பட்டது ; “நின்ற “ என்பது நிறைவு யாண்டும் ஒரே படித்தாக நிலைத்து இருத்தல்  என்னும் பொருட்டு.  

     “ எந்தையாகிய  கொன்றையான்”  என இயைக்க , கொன்றை மாலை பரமசிவனுக்குப் பலவகையானும்  சிறந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டது . அம் மலர் , தெய்வத்தைச் சார்ந்தது ஆகலின் என்றும் வாடாமல் புதிய செழுமை உடையது என்பது போதர , “கள்ளும் , வண்டும்  அறாமலர்க் கொன்றை “எனப்பட்டது . வண்டு விரும்பாத நிலையில்  கள் நிறைந்த மலரும் உளது ஆதலின் , அதனை நீக்குதற்கு “கள்ளும் வண்டும்  அறாமலர் “ எனப்பட்டது. இவ் அடை மொழிகள்  இறைவனிடத்து உலப்பு  இலா இனிமை மிக்க அருள்  அமுதம் உளது என்பதையும் , அதனைப் பக்குவமுதிர்ந்த  ஆன்மாக்கள்  பருகி இன்புறற் பொருட்டு  என்றும் நீங்காது செறிந்து  இருப்பன என்பதையும்  குறிப்பில் புலப்படுத்து நிற்றல் அறிக .  

         “கில்லேனை” என்பது “கில்லெனை” எனக் குறுகி நின்றது.; ஆற்றல்  இல்லாத என்னை என்னும் பொருட்டு . இதன் முன்னைத் திருப்பாட்டில் , “ஆற்றன்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்று  கூறியதை வழி மொழிந்து , அத்தகைய அன்பு ஆற்றல்  இல்லாத என்னை என்பது பொருள் . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கும் பேறு இல்லாத என்னையும் இறைவன் சிறந்த மெய்யன்பரை வலிய அழைத்துப்  பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்துப் பணி கொள்ளுவானோ  என்பது கருத்து . “பணி கொள்ளும்” என்பதில் கொள்ளும் என்பது காகு என்னும் ஓசை வேறுபாட்டால் , எங்ஙனம் கொள்ளுவான் என்று ஐயுறுதல் புலனாகநின்றது .காகு என்பது ஒருசொல்லில் பிறிதொறு பொருள் தோன்றுதற்கு  உரிய ஓசை வேறுபாடு என்பர் வடநூலார் . இதற்கு இவ்வாறு  பொருள்  கூறாது , கொள்ளுங்கில்  எனக்கொண்டு , கொள்ளும் ஆற்றல் உடையான் எனப் பொருள் கூறுவாரும் உளர் . சொல் அமைப்பு அங்ஙனம் பொருள் கோடற்கு இடம் தராது என்பது உய்த்து உணர்வார்க்குப்  புலனாம் . எங்கும் நிறைந்த இறைவன் , அன்பர்க்கு இன்பமயமான அருள் அமுதை ஊட்டும் குறிப்புத் தோன்றுமாறு அடையாள மாலைஅணிந்து இருத்தலின்  , யான் ஆற்றன்மிக்க அன்பால் அழையாத நிலையிலும் , மெய்யன்பு உடையாரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல் போல , என்னையும் பணி கொள்ளுவானோ என்பது இத் திருப்பாட்டின் திரண்ட கருத்து  என்க .

          இதன்கண், ஆண்டவன் மெய்யன்பரை அழைத்துப் பணி கொள்ளுமாறு போல , ஆற்றல் மிக்க அன்பு இல்லாத என்னையும் பணி கொள்ளுவானோ  என்று அடிகள் ஐயுறுதல்  கூறப்பட்டு  இருத்தலானும் , அவ் ஐயத்தின் துணிவாக , “இரும்புதரு மனத் தேனை ஈர்த்து  ஈர்த்து “ என்றபடி , வலிந்து ஆட் கொள்ளவும்  கூடும் என்பது பின்னர்ப்  பெறப்படுதலானும் , ஆங்ஙனம் ஆட்கொண்டால் அதற்குக் கைம்மாறு  யாது செய்வது  என்று கருதுமுகமாகக்  கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக, பதிகப் பொருளைப் பாட்டின் குறிப்புப் பொருளில் தோன்ற வைத்தல்  உயர்ந்த கவிமரபு என்பதும் தெளிக .

                                    ******************************************** 

பாடல் :47 .

எந்தை  யாயெம் பிரான்மற்றும்  யாவர்க்குந்

தந்தை  தாய்தம்  பிரான்தனக்  கஃதிலான்

முந்தி  யென்னுள்  புகுந்தனன்  யாவருஞ்

சிந்தை  யாலும்  அறிவருஞ்  செல்வனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் மெய்யன்பரைக் கூவி யழைத்துப் பணி செய்வித்துக் கொள்ளுதல் போலத் தம்மையும்  பணி கொள்ளுவானோ என்று  ஐயுற்று  வருந்திய  அடிகள் ,இத் திருப்பாட்டில்   தாம் அடிமையாதற்கு  முன்னரே ,தம்முட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கிய பேருதவியை நினைந்து ஆறுதல் அடைகின்றார் .

பதவுரை :-  எந்தை ஆய் எம்பிரான்   =   எனக்குத் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆயவன் , 

மற்றும்  யாவர்க்கும்  தந்தை  தாய்  தம்பிரான்  =  மற்றைத் தேவர் மக்கள் முதலிய எல்லோர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆவான் ,

தனக்கு  அஃதில்லான்  =  தனக்குத்  தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆகிய  அம் முறை உரிமை  இல்லாதவன் ,

யாவரும்  சிந்தையாலும் அறிவு அறும் செல்வன்  =  அமரர்  முதலிய  எல்லோரும்  மொழிகளால் அன்றி  மனத்தாலும் அறிதற்கு  அரிய  ஞான  ஐசுவரியம்  உடைய  பெருமான் ,

முந்தி யென்னுட்  புகுந்தனன்  =  யான்  அடிமை யாதற்கு  முன்னரே  என்னுட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கினன்  என்பது.

விளக்கவுரை :-  மக்களுக்கு இம்மை வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு உடையார் ,  தந்தையும்  தாயும்  தலைவனும் ஆவர். தந்தை வித்தும் , தாய்  நிலமுமாகத் தோன்றி   கான்முளை  ஆதலின் ,ஒரு மகனுக்கு  அவ் இருவரும்  இன்றியமையாத  தொடர்புடையர்  ஆவர் . பின்னர்த் தலைவன் தொடர்பு  வேண்டற்பாலது . ஒருவர்க்குத் தலைவன் , குடித்தலைவன் , கல்வித் தலைவன் தொழில்  தலைவன் ,தேயத் தலைவன் ,ஞானோபதேசத் தலைவன்  எனப்  பலவகைப்படுவன்  .  அத் தலைமைகளுட்  சிலவும் பலவும் தந்தையால் அமைதலும் உண்டு. வளர்த்தற்குத்  தாயும் , அறிவு  கொடுத்தற்குத்  தந்தையும் , நன்நெறி  நிறுத்தற்குத் தலைவனும்  ஒரு மகனுக்கு  இன்றியமை யாதவர் ஆவர். உடலைப் பற்றிய  இம் முத்திறத் தொடர்பு  உடையாரும் பிறவிதோறும்  வேறு வேறு ஆவர். உயிரைப்பற்றிய  தொடர்பை  நினையுங் கால் , அங்ஙனம்  வேறுபடாமல் , என்றும்  ஒரே நிலையில் உள்ள உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  சிவபெருமான்  ஒருவனே  ஆவன். அடிகள் “புல்லாகிப்  பூடாய்ப் புழுவாய் மரமாகி “ என்றபடி , தம் உயிர்க்குக் கீழ்ப்பிற விகளில் நின்றும்  இத்துணை  உயர்ந்த மக்கட்  பிறவியை  அளித்து , அறிவு நல்கி , நன்நெறிப்படுத்திய  பேருதவியை நினைந்து , உடல் உரிமையை விட்டு, உயிர் உரிமை கருதித் தமக்கு  உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்னும்  தெளிவு  கைவரப்பெற்றவராய் , “எந்தையாய் எம்பிரான் “ என்றார் . தம் அளவில்  சிறப்புரிமையில் முதலில் கண்டார் . பின்னர்  , மற்றையோர்க்கும்  தந்தை முதலியோராக இருத்தலை ஆராய்ந்து , அன்னார்க்கும் உயிர்த் தொடர்பை  நோக்க , உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும் அப் பரமபதியே என்பதைத் தெளிந்து , “யாவர்க்கும்  தந்த  தாய்  தம்பிரான்” என்றார்.  ஆர்வ மிகுதியால்  முதலில் தம் அளவிற்  கண்டார் . பின்னர் , எண்ணி எண்ணி முடிவாகக்  கண்டது . மற்றும் யாவர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்பது .

             ஒருவன், மகனை நோக்கத் தான்  அவன் தந்தை ஆதல் போல , அத் தந்தையை  மகனாகக்  கருதுங்கால் , அவற்கு உரிய தந்தையும்  தாயும்  தலைவனும்  இன்னாரென்பது  வெளியாகும் அன்றோ?  அந் நிலையில் ,தமக்கும் மற்ற எல்லோர்க்கும்  தந்தை  தாய்  தலைவனாக  உள்ள அப் பெருமானுக்கும் ,தந்தை முதலியோர் யாராக இருக்கலாம்  என்று நினைந்து கூறுகின்றார் , “தனக்கு  அஃதிலான்” என்று . “அஃது”  அஃறிணை  ஒருமைச் சுட்டு , அச்சுட்டு , தந்தை முதலிய முறை உரிமையின் மேல் நின்றது . இறைவன் தனக்கு ஒரு தந்தை  தாய்  தலைவனை  ஏன் பெறாமல் இருக்கின் றான்  எனின் , அமரர் , முனிவரர்  எல்லோர்க்கும்  பிறப்பு  இறப்புக்கள்  கேட் கப்பட்டன . பரமசிவன் ஓரிடத்துப் பிறந்தான்  இறந்தான்  என்பது கேட்கப் படாதது  ஒன்றாதலால் , பிறப்பு இல்லாதவனுக்குத் தந்தை  தாய்  என்னும் முறை உரிமை இல்லை என்பது  வெளிப்படை  அன்றோ ? தலைமை இலக்கணம்  முற்றும் அமைந்தவன்  சிவபெருமானே என்பது திருவாசகத் திருப்பாடல்கள் பலவற்றால்  அறியப்படுவதொன்று . அதனால் தனக்குத்   தலைவன் ஆம்  முறை உரிமையும் இல்லாதவன் என்பது தெளிவு ஆம் .  தந்தை  தாய்  தம்பிரான்  என்னும்  மூவரும் உயர் திணைப் பொருள் ஆகலான் , அதற்கேற்ப , “அவர் இலான் “ என்று  கூறியிருக்கலாம் . அங்ஙனம்  கூறாது  பெற்றோரே அன்றி , வளர்ப்பு  முதலியவற்றால் தந்தை முதலிய  முறை உரிமைக்கும் சிறிதும் இடம் இன்று  என்பது போதர , முறை உரிமையின்பால்  வைத்து ,அஃறிணையாக , “அஃதிலான்” என்றார் என்பது . “யாவரும் “ என்றது பிரமபதம்  அதிகார  நிலையங்களில்  அணுக்கராக  இருக்கும்  அமரர்  முதலியோரையும் , புற்றுமாய்  , மரமாய்ப்  புனல் காலே  உண்டியாக  உடைய முனிவரர்  முதலியோரையும் குறிக்கும் , அன்னார்  எல்லோரும்  கண்களால்  காண்டற்கும் , ஏதுக்களாலும்  எடுத்த  மொழிகளா லும் அளந்து அறிதற்கும் அரியன்  ஆதலே  அன்றி , மனத்தால் நினைந்து அறிதற்கும் அரியன் ஆயினான்  என்பது தோன்ற  ,”சிந்தையாலும் அறிவருஞ் செல்வன் “ என்றார். “சிந்தையாலும்” என்புழி, உம்மை  இறந்தது  தழீ இய  எச்சவும்மை . காண்டல்  அளவைக்கும் , உரை அளவைக்கும் எட்டாத  பொருளைக்  கருதல்  அளவையால் துணியலாம்  ஆயினும் , இறைவன் அங்ஙனமும் துணிதற்கு உரியவன் அல்லன் என்பது குறிப்பு . மனத்தாலும்  சிந்திக்கமுடியாத  ஒரு பொருள் , யாண்டும் இல்லாத இன்மைப் பொருளாக   அன்றோ முடியும்?  என்பார்க்கு , அங்ஙனம் அன்று ;  அறி வில் பொருள்களை  அறியும் கருவிகளைக் கொண்டு , அறிவுடைப் பொருளை அறியத் துணிதல்  இயலாத தொன்று என்பதே  ஈண்டுக் கருத்தாகும். அன்றி , மெய்யுணர்வி னால்  அறியத்தக்க இறைவன் , என்றும் உள் பொருளாக  மாத்திரம் இருத்தலே  அன்றித் தன்னை  அடைந்தார்க்கு  வழங்குதற் பொருட்டு  ஞான ஐசுவரியப் பேரானந்தப்  பெரும் செல்வமும்  உடையன் என்பது தோன்ற , “செல்வன்” என்றார்.

   இறைவன் தம் உள்ளத்தே  புகுந்து ஆட்கொண்டது , அப் பெருமான்  தங்குதற்கு உரிய தம் உள்ளத்தில் ஞானவிளக்கம் இல்லாத பொழுது என்பார், “முந்தியென்னுள் புகுந்தனன் “என்றார், “அறிவிலாமை யன்றே கண்டதாண்ட நாள் “ என்பது அடிகள் திருவாக்கு . இனி, மேற்பதங்களில்  உள்ள  பிரமன்  முதலிய அமரர்களும் , தவச் செல்வர்களாகிய முனிவரரும்  இறைவனை அறிந்து  கொள்ளுதற் பொருட்டுத் தம் சிந்தைகளை  அவன்பால் ஏவினாராக , அவற்றிற்கு எட்டாத அப்பெருமான் , அன்னார் சிந்தனைகள்  சென்று அணுகுதற்கு இல்லாத  ஓர்  ஒதுக்கிடத்தில் ஒளித்தல் கருதியே  , தம் சிந்தையுட்  புகுந்தனன் என்பார் , “முந்தியென்னுட்  புகுந்தனன் “ என்றார் என்பதுமாம்.  ஈண்டு , “முந்தி” என்பது , அமரர் முனிவரர்  சிந்தனைகள்  இறைவனைத் தொடர்ந்து பற்றுதற்கு  முன்னரே என்னும் பொருள் உடையதாகும் . உயர்  பதங்களில்  உள்ள அமரர் , முனிவரர் முதலியோர்  இறைவனை  ஆராயப் புகுங்கால்  மறைத்திறங்களை   நோக்கியும்  , தம்மின் மேலான  பதங்களில் உள்ளவர்களின்  சார்பு  பற்றியும்  முற்படுவாரே அன்றி ,  தம்மில்  கீழ்  நிலையில் உள்ளார்க்கு   இறைவன் காட்சி நேராது என்னும்  துணிபு உடையராய் , அன்னாரைக் கருதுவது இல்லை . உலகத்தில்  மிகுவிலை யுள்ள   மணியொன்றைப்  பெற விரும்புவோன் , பொருள் மிகுப்படைத்த  வாணிகர்  இடத்து அன்றிச்  சுருங்கிய  பொருளினை உடைய எளியவரைப்  பொருட்படுத்தி அடையான் என்பது அனுபவத்தில் கண்டது . அமரர், முனிவரர் சிந்தனைகள்  எல்லாம்  இறைவனை  அறிதற்குத் தொடர்ந்து செல்ல , அவர் சிந்தனை செல்லப்பெறாத இடம் என்று தம் சிந்தனையைக்  கண்டு  அவர் காணாவாறு விரைந்து மறைந்தனன்  என்னும்  குறிப்புத் தோன்ற  , “முந்தி” எனவும்  “புகுந்தனன் “ எனவும்  அருளிச் செய்தனர் . “முந்தி” என்பது ஈண்டு  விரைந்து என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . தம் நெஞ்சு  இறைவன் புகுதற்கு ஊன் ஆர்  உடற் கண்ணதாயினும் , மற்றையோர் சிந்தனைக்கு  எட்டாமல்  ஒளிந்து கொள்ளும்  குறிக்கோள்  ஒன்றே   பற்றித் தமக்கு அகப்பட்டனன்  என்று  அடிகள்  கருதினார்  என்பது , “புகுந்தனன்” என்னும்  சொல் ஆற்றலால்  பெறப்படுவதாகும் .  

              இதன்கண், யாவரும்  சிந்தையாலும்  அறிவரும்  செல்வன் , முத்தி யென்னுட் புகுந்தனன் என்று கூறியதனால், அங்ஙனம்  வலிந்து புகுந்து  ஆட்கொண்ட  பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது தோன்றி நிற்றலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் , “எந்தையா யெம்பிரான் “ என்றதனால் , பத்தி விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும் புலனாதல் அறிக .

                                         ********************************************

பாடல் :48 .

செல்வம்  நல்குர  வின்றிவிண்  ணோர்புழுப்

புல்வரம்  பின்றி  யார்க்கும்   அரும்பொருள்

எல்லை  யில்கழல்  கண்டும்  பிரிந்தனன்

கல்வ   கை மனத்  தேன்பட்ட  கட்டமே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் தாம் ஆண்டவனை அறிந்து அடிமைப்பணி செய்தற்கு முன்னரே தம் முட் புகுந்து அருளிய அருமைப்பாட்டை  வியந்து கூறிய  அடிகள் , அங்ஙனம்  வலிய  வந்து  புகுந்த  அப் பெருமானுடைய  திருவடிக் காட்சி கரந்த நிலையில் தாம் எய்திய  துன்பம் பெரிது என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார் .   

பதவுரை :-  செல்வம்  நல்குரவு இன்றி  =  நல்வினைப்பயனாகிய  செல்வம்  உடையார் , தீவினைப்  பயனாகிய  வறுமை உடையார்  என்னும் ஏற்றத்  தாழ்வு இன்றியும் ,

விண்ணோர்  புழுப்  புல்  வரம்புஇன்றி  =  நல்வினைப்பயனே  நுகரும்  தேவர்    தீவினைப்பயனே  நுகரும்  புழுப் புல் என்னும்  வரையறை  இன்றியும் ,

யார்க்கும்  அரும்பொருள்  =  இயங்குதிணை  நிலைத்திணைகளாகிய எவர்க்கும் எவைக்கும் அடைதற்கு அரிய  பரம்பொருளினுடைய  ,

எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்  =  அளவுட் படாத திருவடிகளைத் தரிசிக்கும்  பேறு பெற்றும் நீங்கினேன் (இப்பிரிவு) ,

கல்வகை மனத்தேன் பட்ட  கட்டமே  =   கல்லின்  வகைகளுள் ஒன்று எனக்  கருதப்படும் வலிய நெஞ்சத்தை உடையேன்  எய்திய  துன்பம் ஆகும் என்பது .

விளக்கவுரை :-   யார்க்கும் அரும்பொருள் என்பது, உபலக்கணத்தால்  எவைக்கும்  அரும்பொருள் என்பதையும்  புலப்படுத்தும் . யாரும்  எவையும் என்பன , முறையே  உயர்திணைப் பொருள்களையும் ,அஃறினைப் பொருள்க ளையும்   உணர்த்தி  நிற்றலால் . இயங்குதிணை ,  நிலைத்திணையாகிய உலகம்  எல்லாவற்றையும் குறிக்கும் . நல்வினைப்பயனே  நுகர்வனவும் ,  தீவினைப்பயனே  நுகர்வனவும் , இரண்டனையும் கலந்து நுகர்வனவும்  என  உயிர்கள் முத்திறப்படும்  . அவற்றுள்  நல்வினை , தீவினை  இரண்டையும்  கலந்து நுகரும்  மக்கள் உயிர்களைக் கருதி , “செல்வம்  நல்குரவு “ என்றனர் .  புண்ணியம்  விஞ்சப் பெற்றார்  செல்வரும் , பாவம்  விஞ்சப்  பெற்றார் வறியரும்  என மக்கட் பிறப்பினர் இருதிறப்படுவர் . ஆகவே, “செல்வம்  நல்குரவு”  என்பன  ஆகு பெயராக  நின்று  , அவற்றை உடையாரை  உணர்த்தி  நின்றன.  

            இதன் முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் , “அறிவருஞ் செல்வன் “ என்று  கூறப்பட்டான் . உலகத்தில் ஒரு செல்வனைக்  காண்டல் மற்றொரு  செல்வர்க்கு  எளிது அன்றோ ? ஆதலின் , இறைவனாகிய  செல்வனை , நல்வினைப் பயன் காரணமாக உள்ள செல்வன் காண்டல்  எளிதாமே  எனின்  இறைவன்  அருட் செல்வன் ; மக்கள் பொருட் செல்வர் ; ஆதலிற் காண்டல்  எளிது அன்று என்பதைப் புலப்படுத்தவே  , இப் பாட்டில் செல்வம் என்று தொடங்கப்பட்டது . இறைவனைக் காண்டற்குப் புண்ணியப் பயனாகிய  செல்வமும் ,பாவப் பயனாகிய நல்குரவும்  காரணம் ஆகா;  மெய்யுணர்விற்கு  உரிய தவமே காரணம்  ஆகும் . ஆதலின்  , அத் தவம் இலராகிய  செல்வராற் காண்டற்கு  எளிமையும் ஏற்படலாம்  என்பது போதர , “செல்வம் நல்குரவின்றி “  என்றனர் .

                இனிப்  புண்ணியப் பயனே  நுகரும் உயிரைக் குறிக்க  , “விண்ணோர் “ எனவும் , பாவப்பயனை  நுகரும்  உயிர்களைக் குறிக்க “புழு” எனவும் கூறி அருளினர்  விலங்கின் பிறப்பை  நரக கதியாகக் கூறும் மரபு உண்மையின் , புழு என்பது நரகரைக் குறிக்கும் . இத்துணையும்  முத்திற உயிர்களுள்  இயங்கு திணைப்பாற்  பட்டவை  கூறப்பட்டன. “நிலைத் திணைக்குப்  “  “புல்”  என்றனர் . அஃது உபலக்கணத்தால் , மரம் செடி முதலிய ஏனைய பொருள்களையும் உணர்த்தும் , தேவர்கள் நல்வினை மிக்கார் ஆயினும் , இன்பமே நுகர்தலில் செருக்குற்றுநிற்றலின்  அவர்க்கும் , ஓர் அறிவு உயிர்களாகிய புழுப் புல் முதலியன மிகவும் கீழ்ப்பிறவிகள் ஆதலின் ,அவை  அபுத்தி பூர்வமாகச்  செய்யும் நல்வினை காரணமாக  , மேன்மேல் சென்று  நற் பிறப்பு  எய்தவேண்டும்  ஆதலின் ,அவற்றிற்கும் இறைவன் அடைதற்கு அரிய பொருள் ஆவான் என்பது தெளிக . நல் வினைப்பயனால்  நலம் பெற்று வாழும்விண்ணோர்க்கு இறைவன் காட்சி எளிது எனவும் ,தீவினைப்பயனால்  துன்புறும் புழு முதலியவற்றிற்கு அக் காட்சி அரிது எனவும் கொள்ளல் ஆகாது இறை அருட்பார்வைக்கு இலக்கு ஆகும் தூய்மை பெற்ற உயிர் யாது ஆயினும்  அதற்கு எளிது ஆகலாம்  என்பது புலப்படுக்க , “விண்ணோர் புழுப் புல் வரம்பின்றி” என்றார் .ஆகவே இத் திருப்பாட்டின் முதலடியில் புண்ணிய பாவப்  பயன்களைக் கலந்து நுகரும் மக்களைக் குறித்தற்கு , “செல்வம் நல்குரவு” எனவும் , புண்ணியப்பயனே நுகரும் தேவர்களைக் குறித்தற்கு  “விண்ணோர் “ எனவும் பாவப்பயனே நுகரும்  உயிர்களைக் குறித்தற்கு , “புழு” எனவும்  இம்முத்திறமும் திணைகளாக ,  நிலைத்திணையைக்  குறித்தற்கு , “புல்” எனவும் , இவ்வரையறை  தோன்றக் கூறப்பட்டன எனக் கொள்க.

              “பாதாளம் ஏழினுங் கீழ்ச் சொற்கழிவு பாதமலர் “ என்றது பற்றி , இறைவன் திருவடி , “எல்லையில் கழல்” என்று  கூறப்பட்டது . வரம்புட் பட்ட  பொருளைக் காணும் தம் கண்களுக்கு , வரம்புட் படாத இறைவன் திருவடிக் காட்சி எளிது அன்று ஆகவும் , அப் பெருமான் அருட்பார்வைக்கு இலக்காண பேறு காரணமாக  எளிதாகக் காணப்ப்பெற்றேன் என்பார், “எல்லை இல் கழல் கண்டும்” என்றார் . இனி, திருவடியை மெய்ஞ்ஞானம் எனவும் , இறைவனது அருட்சத்தி எனவும்  சிவாகமங்கள் கூறும் . ஆதலின் ”எல்லையில்  கழல்” என்பதற்கு , மாசற்ற மனங்கழிய  நின்ற  இறைவனது  திருவருள் எனக் கோடலும் ஒன்று. கண்டும் என்புழி, உம்மை , காண்டலின் அருமையைப்  புலப்படுத்து நின்றது .  பெறல் அரும் பொருளைத் தேடி  அலைவான் ஒருவன் , அப் பொருள் காணப்படாத இடங்களைக் கண்டு கண்டு நீங்கிச் சேறலும் , தன்  கருதிய பொருளை அரிதிற்  காணபெற்றான் ஆயின் , அதனைவிட்டு நீங்காமல் இருத்தலும் உலகியலில் கண்டன. ஈண்டு ,அடிகள் அரிய தவம் கிடந்தும் ,காண்டற்கு அரிய இறைவனுடைய எல்லை யில் கழல்களை  எளிதிற்  காணப்பெற்றும் பிரிய நேர்ந்ததே  என்று  அடங்காத  வருத்த மேற்கொண்டு , “கண்டும் பிரிந்தனன்” என்றார். கண்ணிலான் பெற்று இழந்த  கதை ஆயிற்று என்பது குறிப்பு .

           அரியதொரு  பொருளைப் பெறாத நிலையில் உண்டாம்  துன்பத்தினும், பெற்று இழந்த காலை உண்டாம் துன்பம் பெரிது அன்றோ? இங்ஙனம் எல்லை யில்  கழல் கண்டும் , பிரிந்த இந் நிலையே  தமக்குப் பெரும் துன்பமாக முடிந்தது என்பார் , “பட்ட கட்டம் “ என்றார். . இன்ன துன்ப நிலை ஆற்றொணாதது  என்பதை “என் தலைவனை நனி காணேன் , தீயில்  வீழ்கிலேன்  திண்வரை உருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே “ என்று அடிகள் பிறிதோரிடத்து  அவலித்துக் கூறிய  செய்தியானும் அறிக.  மனம் சடப்பொருள் ஆயினும் , உருவம் உடையது அன்று .; உருவம் இல்லாது இருந்தும் , குழைவு சிறிதும் இன்மையால் , உருவம் உடையதாய்  உலகிற்  காணப்படும்  கல் வகைகளுள் ஒன்று ஆயிற்று என்பார் , “கல்வகை மனத்தேன்”  என்றார் . “கல்லை மென்கனியாக்கும்  விச்சை கொண்டு  என்னை  நின் கழற்கு அன்பன்  ஆக்கினாய் “ அன்பது அடிகள் திருவாக்கு  “கல் வகை மனத்தேன் பட்ட கட்டம் “  என்பதில் , இரங்கிக் குழையும் இயல்பு சிறிதும்  இல்லாத வன்நெஞ்சம்  உடைய தமக்கு  இத் துன்பம் நேர்தல் பொருத்தமே என்று அவலத்தில் ஆறுதல் தோன்றி  நின்ற குறிப்புண்மையும்  அறிக .  கட்டம் என்னும் பெயர்ப் பயனிலைக்கு  எழுவாய் , பிரிந்தனன் என்னும் வினை முற்றில்  தோன்றிய அப் பிரிவு என்பது ஆகும் . அப் பிரிவு எனக்குப் பெரும் துன்பம் ஆயிற்று என்பது கருத்து .  

               இதன்கண், யார்க்கும் அரும் பொருளின் எல்லையில் கழல் கண்டு  பிரிந்தனன்  என்புழி ,  அக் காட்சி அரியதாகவும் , எளி வந்த  கருணைக்கு ஈடுபட்டு வேறு கைம்மாறு செய்திலேன் ஆயினும் , அதனினின்றும்  பிரியா மையே   என்னால் ஆகிய கைம்மாறாகவும் ,  அது தானும் செய்ய இயலாத வன் ஆயினேன் என்னும் அடிகள் இரக்கக் குறிப்புத் தோன்றி நிற்றலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு அறிக .

                                                ***********************************

பாடல் :49.

கட்ட  றுத்தெனை  யாண்டுகண்  ணாரநீ

றிட்ட  அன்பரொ  டியாவருங்  காணவே

பட்டி  மண்டபம் ஏற்றினை  ஏற்றினை

எட்டி  நோடிரண்  டும்அறி   யேனையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெற்றும்  பிரிய  நேர்ந்த துன்பத்திற்கு வருந்திய அடிகள் ,இத் திருப்பாட்டில்  உண்மை அடியார்கள் கண் கூடாகக்  காணும்படி  தம்மை வித்தியா மண்டபத்தில் ஏற்றி , அறிஞரோடு  இருந்து , சமய உண்மைகளை  ஆராய்ச்சி செய்ய  உதவிப்  பெருமைப்படுத்திய நிகழ்ச்சியை நினைந்து , திருவருளைப்  பாராட்டி ஆறுதல்  அடைகின்றார்.  

பதவுரை :-  ஏற்றினை   =   ஊர்தியாகப் பெற்ற  எருதினையுடையாய் ,

எட்டினோடு  இரண்டும்  அறியேனை ,என்னை  =  எட்டும் அதனோடு   இரண்டும் சேர்த்து எண்ண அறியாத சிறியேனாகிய என்னை ,

கட்டு  அறுத்து  ஆண்டு  =  பாசப்பிணிப்பை அகற்றி  அடிமை கொண்டு  ,

நீறு  இட்ட  அன்பரொடு   யாவருங்  கண்ணாரக் காண  =   திருநீறு  அணிந்த  மெய்யடியாரொடு  மற்றை அன்பர்களும் கண் கூடாகக்  காணும்படி ,

பட்டி மண்டபம்  ஏற்றினை  =   சமய  வாதம்  புரிதற்குரிய  வித்தியா மண்டபத்தில்  ஏறி வீற்றிருக்கச் செய்தனை,

இதற்கு யான் செய்யத்தக்க  கைம்மாறு  யாது உளது?  என்பது .

விளக்கவுரை :- ஏற்றினை என்பது முன்னிலைப் பெயர் . இடப ஏறு அறத்தின் வடிவம் என்றும் , அதனை நடாத்துபவன் இறைவன் என்றும் சிவாகமங்கள் கூறும் .மேலும் , ஆதார ஆதேயப்  பாதுகாப்பிற்கு அடையாளமாக  உணரப்பட்டதும் , எடுக்கப்பட்டதும்  அவ் ஏறே  என்பார், “ஊர்திவால் வெள்ளேறே  சிறந்த , சீர் கெழு  கொடியும் அவ் ஏறு என்ப” என்பது காண்க. 

             உலகியலில் அறிவு இல்லாதவன் ஒருவனைக் குறித்து ,”எட்டும் இரண்டும் எவ்வளவு ? என்று கேட்டால் , சொல்ல அறியாதவன் என்று  இழித்து உரைத்தலைக் கேட்கின்றோம் . அதனையே அடிகள் தம்பால் ஏறிட்டு , “ எட்டினோடிரண்டும்  அறியேனை “என்று கூறினர். இனி, எட்டினோடு என்பதற்கு , அகரத்தோடு  எனவும் , இரண்டும் என்பதற்கு உகர மகரங்கள் எனவும் பொருள் கொண்டு , அகர உகர மகரங்களின் இயைபு  ஆகிய பிரணவ மந்திரம் எனக் கோடலும் ஒன்று .  தமிழில் உள்ள எண்ணைக் குறிக்கும் வடிவங்களில் , எட்டு அகர வடிவமாகவும் ,இரண்டு உகர வடிவமா கவும் , “இரண்டும்” என்புழி , இறுதி மகரவொற்றாகவும்  இருத்தல் அறிக . ஏனைய தேவர்களைக் குறிக்கும் மந்திரங்கள் பிரணவத்தோடு  எண்ணப் பட்டே , எட்டு எழுத்து முதலிய பெயர்பெறும் . சிவமந்திரமாகிய திரு ஐந்தெழுத்துப் பிரணவத்தின் விரிவே ஆதலின் , பிரணவம் இன்றியும் ஐந்தெழுத்தாக நிலைபெறுவதாகும் . ஆதலின் , பிரணவத்தின் இயல்பு அறியாதவன் என்பதற்குச் சிவமந்திரமாகிய திருவைந்தெழுத்தின்  இயல்பு  அறியாதவன் என்பது பொருள் ஆகும் என்க . இவ் வுண்மையை ,”எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் , எட்டும் இரண்டும்  அறியாத ஏழையர் , எட்டும் இரண்டும்  இரு மூன்று நான்கு  எனப்பட்டது  சித்தாந்த சன்மார்க்க பாதமே “ என்று, விளக்கிக் கூறுவர் திருமூலர் .  ஈண்டு , எட்டும் இரண்டும் பிரணவம் என்று அறியாத ஏழையர்  இரு மூன்று நான்கு என்பர் என இழித்துக் கூறியதும் அறிக .

            பட்டி மண்டபம்  –  சமய உண்மைகளைத் தடை விடைகளின் வைத்து  ஆராய்தற்கு உரிய வித்தியா மண்டபம் ஆகும் . “பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் “  என்று  சிலப்பதிகாரமும் ,”ஓட்டிய சமயத் துறு பொருள் வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு  அறிந்து ஏறுமின் “ என்று  மணிமேகலை யும்  கூறுமாறு  அறிக . இதற்கு இவ்வாறு பொருள் கூறாது , பட்டி – நாய் ; நாயை மண்டபத்து ஏற்றியது போல  என்று  வேறுபடக் கூறுவாரும் உளர் . அக் கருத்துப் பொருந்தாது என்க. . “ எட்டினோடு   இரண்டும் அறியாத சிறியேனைச் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிதற்கு உரிய சமயவா திகள்  கூடும் பட்டி மண்டபத்தில்  வீற்றிருக்கச் செய்தனை “ என்று இறைவன் அருட் பெருக்கை  வியப்பாராய் , “பட்டி மண்டபம்  ஏற்றினை “ என்றார்.  அம் மண்டபத்தில் வீற்றிருக்கும் தகுதிப் பேறு குறித்து , “கட்டறுத்தெனை யாண்டு”   என்றார்.  அறியாமைக்கு ஏதுவாகவுள்ள பாசப்பிணிப்பை ஒழித்து , ஆளாகக் கொண்டு  என்பது அத் தொடரின் பொருள். அறியாமைக்கு ஏதுவாக வுள்ள  பாச நீக்கத்தால் , சமய நூல் அறிவு முதலிய ஞான விளக்கமும் , ஆட்கொண்டமையால் அநுபவ உணர்வும்  உண்டாதல் தெளிக . எல்லாவகை யாலும்  மேம்பாடு எய்தி விளங்கும் பெரியவன் ஒருவன் , மிகவும் சிறியவன் ஒருவனைத் தனிமையில் பலபடப் பாராட்டிப் பேசி , பலர் கூடிய அவைக் களத்தில்  புறக்கணிப்பது  மிகவும் கொடிய செயல்  என்பர் . “எனைத்  துங்குறுதல் ஓம்பன் மனைக் கெழீஇ  , மன்றிற் பழிப்பார் தொடர்பு”  என்று  நீதி நூல் அத்தகைய கொடியவர்களின் தொடர்பு வெறுக்கத்தக்கது  என்று கூறுதலும்  அறிக. அங்ஙனம் அன்றிக் குற்றம் உளதேல் , தனிமையில் வைத்து  ஒறுத்துரைத்தும் , மன்றில் குணம் பாராட்டியும் பெருமைப்படுத்தலே உண்மைப் பெரியார் இயல்பு ஆகும் .  அம் முறையில் பலரும் அறியத் தம்மைப் பட்டி மண்டபம் ஏற்றியது  பெருமைப்படுத்தியது  என்பார் , ““யாவருங்காண” என்றார் . காண்பார் பலராயினும் , தகுதியுடையார் அல்லர் ஆயின் , அன்னார் காண்டலால் வரும் சிறப்பு யாதும் இன்றாம் .காண்பவர் பெருமைப் படுத்தப்படுவாரின் உள்ளம் மகிழத்தக்க தகுதி உடைய ராய் இருத்தல் வேண்டும் . உள்ளம் ஒத்தவர் மதிப்பையே தூய சிந்தை உடையார் விரும்புவர் என்பதற்குத் தம்பிரான் தோழர் காட்சியில்  ஈடுபட்ட பரவையார் இயல்பே சான்று ஆகும் .  சுந்தர மூர்த்திகளைத்  திருக்கோயிலிற்  கண்டு , காதல் அரும்பப் பெற்ற பரவையார் , தம் இல்லத்திலிருந்து  விரக தாபத்தால் வாடி , அருகு இருந்த தோழியை நோக்கி , “திருக்கோயிலிற்  காணப்பட்டவர்  யார்?  என்று கேட்டலும் , அத் தோழி , “சைவ முதற் றிருத்தொண்டர்  தம்பிரான் தோழனார் நம்பி” என்றாளாம் .இவ்வுரை கேட்ட அளவில்  பரவையார்க்கு  வன்றொண்டர்பால்  வைத்த மனக் காதல்  அளவின்றி  வளர்ந்து பொங்கிற்றாம் . இந் நிகழ்ச்சியில் ஓர் உண்மை காணப்படும் . ஒரு மணப்பெண்ணுக்குக் கனவன் இயல்பைக் கூறுவோர் , கட்டழகும்  இளமையும்  செல்வமும் உடையன் என்பராயின் , அப் பெண்ணிற்கு உளம் பூரித்துக் காதல் வரும் .அங்ஙனம் அன்றி , மணமகன் சிவபத்தன் ; திருநீறு  கண்மணி புனைவோன்  என்று கூறக்கேட்பின் ,காதல் வளர்ச்சிக்கு இடன் உண்டாமா?  இஃது உலகியற் செய்தியாகும் . இங்கே பரவையார் உள்ளமும் சுந்தரமூர்த்திகள் உள்ளமும் உலகியலைக் கடந்து, சிவபெருமானிடத்து அன்பு பூண்டு தூய்மை அடைந்தன ஆதலின் , ஒத்த இயல்பின ஆகும் .  அதனாலே , சிவனடியார் என்றலும்  காதல் வளர்ந்து பொங்கிற்று என்றார். வேறு எவ்வகையாகச்  சுந்தரர் வருணிக்கப்படினும் , அம்மையார்க்குக்  காதல் ஊன்றாது. என்க . அங்ஙனமே , ஈண்டு அடிகளின் உள்ளம் மகிழத் தக்கவர்  நல் அன்பர்  ஆதலின் , “அன்பரொடு  யாவருங்  காண” என்றார் . “ஓடு” உருபு உயர்ந்த பொருளைச் சார்ந்து  வரும்  என்ற  விதிப்படி ,”யாவரும்”  என்னும் சொல்லாற் குறிக்கப் பட்டாரினும் , அன்பர்  சிறந்தவர்  என்பது ஈண்டுக் கருதத்தக்கது .

         இனி, அன்பர் என்பது , உலகியலில் தாய் தந்தை மனைவி மக்கள்  நண்பர்  முதலியோரிடத்து அன்பு உடையாரையும் குறிக்கும் .  ஆதலின் அத்தகைய அன்பர்  காண ,அடிகள் பெருமைப்படுத்தப்பட்டார்  என்பதனால், அடிகளுக்கு வரும்  உவகை  யாதும் இன்றாம் . அடிகள் சிவனடியவரைச் சிவன் என மதிக்கும் பெற்றி வாய்ந்த பெரியார் ஆதலின் , சிவன் இடத்து அன்பு உடையாரையே பெரியார் என அவர் உள்ளம் விழையும் என்பது தெளிவு ஆம் .  அம்  முறையில்  , “நீறிட்ட அன்பர்கள்” என்று அருளிச் செய்யப் பட்டது  என்க. “ நீறிட்ட  அன்பர்கள்” என்புழி நீறிட்டமையால்  புறம் தூய்மை யும் , அன்புடைமையால்  அகம் தூய்மையும் பெற்றாம் . ஆகவே , புறமும்  அகமும்  தூய்மையுடைய  சிவனடியாரையே  ஈண்டுக் குறிப்பது  என்க . அத்தகைய சிவனடியார் , தம்மை இறைவன் பட்டி மண்டபம்  ஏற்றுங்கால்  எங்ஙனம் கண்டனர் எனின் , அவர்தம்  கண்குளிர  நேரிற்  கண்டனர் என்பார், “ கண்ணார” என்றார் . ஆகவே, தனி நிலையில் தம்மை ஒறுத்து , நன்நெறிப்படுத்து , வெளிப்புடையில்  உண்மைச் சிவனடியார்  பலருடன் மற்றையோரும்  கண்ணாரக் காணும்படி வித்தியா மண்டபத்தில்  வீற்றிருக் கச் செய்த  பேருதவிக்கு யான் செய்யக் கடவ கைம்மாறு  யாது உளது என்பது அடிகள் கருத்து என்க .

                  இதன்கண் , “எட்டினோடு இரண்டும் அறியேனைப் பட்டி மண்டபம்  ஏற்றினை “  என்று  கூறப்பட்டதால் , அப் பேருதவிக்கு  யான்  யாது கைம்மாறு  செய்ய வல்லேன்  என்பது போதரலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் வெளிபட்டு நிற்றல்  அறிக .

                                          *************************************************

பாடல் : 50 .

அறிவ   னேயமு  தேஅடி நாயினேன்

அறிவ னாகக்கொண்  டோஎனை  ஆண்டது

அறிவி  லாமையன்  றேகண்ட  தாண்டநாள்

அறிவ  னோவல்ல  னோஅரு  ளீசனே..

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  , “கட்டறுத்தெனையண்டு”  என்றார். அங்ஙனம் ஆட்கொள்ளுங்கால் , ஞானவடிவினன் ஆகிய இறைவன் , ஐம்புல வேடரின் அயர்ந்து கிடந்த  ஆன்மாவை , “நீ வேடர் மகன் அல்லை; என் மகன் ஆவாய்”   என அறிவுறுத்து  அவ் அறிவுநிலை  எய்தப்பெற்ற பின்னரே  ஆட் கோடல் மரபு. ஈண்டு  , என்பால் உள்ள பேர் அருள் காரணமாக , அம் மரபிற் பிறழ  என் அறிவிலாப் பருவத்தே  புகுந்து என்னை ஆண்டனையோ  என்று அடிகள்  இறைவன்  திருவருள்  திறத்தைப் பாராட்டி  இன்புறுகின்றார்.

பதவுரை :-அறிவனே  =  ஞான வடிவு உடையவனே ,

அமுதே  =  இனிய அமிழ்த மயம் ஆனவனே ,

அடி நாயினேன்  எனை  =  அடிமையாகிய  நாயின் தன்மை உடைய என்னை ,

அறிவன் ஆகக் கொண்டோ ஆண்டது  =   அறிவுடையவனாகத்  திருவுளம்  கொண்டோ  ஆட்கொண்டது ,

ஆண்டநாள் கண்டது  அறிவிலாமையன்றோ ? =   அடியேனை ஆட்கொண்டகாலத்தில் என்பாற் கண்டது  அறிவிலாமை அன்றோ? ,

அறிவனோ  அல்லனோ  ஈசனே  அருள்  =  யான் இந் நிலையில்  அறுவுடையவனோ  அறிவி இல்லாதவனோ  எம் பெருமானே இதனைத் தெளிவித்து அருள் புரிவாயாக  என்பது .

விளக்கவுரை :-முற்றும் உணர்தல் , இயற்கை உணர்வினன் ஆதல் முதலிய அருட் குணங்கள் உடைமைபற்றி , இறைவனை , “அறிவனே” என்றார். இறைவனை ஞான வடிவினன் என்று முது நூல் கூறும் . வரம்பின் இன்பம்  உடைமை பற்றி , “அமுதே” என்றார் . “அறிவனே” என்றதனால் ஆண்டவனது அளத்தற்கு அரிய பெருமையும் , “அமுதே” என்றதனால் , அவன் தன் அன்பர்க்கு இனியனாதலும் புலப்படுக்கப் பட்டபடியாம் . ஆண்டவன்  யாராலும் அணுகுதற்கு அரிய ஞான வடிவினன் என்றதனால் , அவன் அருமையும் , அமுதம் போல அடைந்தார்க்கு இனியன்   ஆவன் என்றதனால்  அவன் எளிமையும் கூறிய படியும் ஆம் .  அறிவன் ஆதலின் ஆண்டவன் ஆகவும்  , அமுதமயமாக  உள்ளபடியால்  அடியவரை  அடிமை கொள்பவனா கவும்  உள்ளான் என்பதும் குறிப்பிற் போதரும் .  

              “அடி நாயினேன் எனை” என இயைக்க . நாயின் தன்மை போன்ற இயல்பு உடையன் ஆயினும் , நின் அடியைப் பற்றுக்கோடாக உடையேன்  ஆதலின் , விலக்கத்தக்கவன் அல்லன் என்னும் குறிப்புத் தோன்ற , “அடிநாயினேன்”  என்றார். “என்னை” என்றது , நினக்கு ஆளாதற்குச் சிறிதும் தகுதி இல்லாத என்னை என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . சிறந்த தலைவன்  , மற்றொருவனைப் பணி கொள்ளுங்கால் , தன் தகுதிக்கு ஏற்றவாறு குறிப்பு அறிந்து ஒழுகும் அறிவு உடையானை  அன்றோ ஏற்றுக் கொள்ளுவான்? உலகியலிற் காணப்படுவதே இங்ஙனம் ஆயின் , ஆண்டவன் தொண்டிற்கு  உரியார் எத்துணைத் தகுதி உடையராய் இருத்தல் வேண்டும்  என்பது கூறவேண்டா. ஆட்கொண்ட பின்னும் தம்மை அறிவிலன் என்று அடிகள் கூற அஞ்சுகின்றார். ; “ அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் , குன்றே  யானையாய் என்னை ஆட்கொண்ட போதே  கொண்டி லையோ “  என்றபடி ஆட்கொண்ட காலத்தே உடல் பொருள் ஆவி எல்லாம் இறைவன் உடைமை  ஆயினபடியாலும் , அவ் இறைவன் உடைமைக்குக் குறை  கூறியதாக முடியும் ஆதலானும் என்க. இது பற்றியே “ஆண்டவன்” என்னாது ,உடனிகழ்ச்சியாக , “ ஆண்ட நாள் “ என்றார்.  ஆட்கொண்ட  நாளில் என்பாற்  கண்டது , அறிவு இலாமை அன்றோ என்ற இடத்துக் காண்டற்கு  வினைமுதல்  இன்னார் எனத் தெளிதல் வேண்டும் .  கண்டது இறைவன் எனின் இறைவன் காட்சிக்கு அஞ்ஞானம்  எப்படிப் புலன் ஆகும்?  ஞானாசிரியன் பக்குவம் உள்ள மாணவனுக்கு ஞானோபதேசம்  செய்தபின் , அவனை நோக்கி , ஆணவ மலத்தின் இயல்பை அறிவுறுத்த நிலையில் , அம் மாணவன் ,”சுடரால் இருள் தேடச்செல்லார்கள்  எந்தாய் , சுடரால் இருள் தேடச் சொன்னாய் “ என்றானாம் . விளக்கைக் கொண்டு இருளைத் தேடச்  சொல்லியபடி  என்பது கருத்து .  விளக்கின் முன் இருள்நில்லாமை போல மெய்யுணர்வின்முன் அஞ்ஞானம்  நிலைபெறாமையாற்  புலப்படாது என்பது ஞான நிலை எய்திய மாணவனுக்கே  இவ் அநுபவம் ஆயின் , மெய்ஞ்ஞான வடிவமாக வுள்ள இறைவன் காட்சிக்கு உயிரின் அறியாமை  எப்படிப் புலன்  ஆகும்  என்பது  . ஈண்டு , ஆண்டவனே  , நீஎன்னை  ஆட்கொண்ட நாளில் யான் கண்டது என்பால் அறிவு இலாமை   அன்றோ?  என்பது அடிகள் கருத்து எனக் கொள்ளல் வேண்டும் . “ஆண்ட நாள்” என்றதனால் , ஆட்கொள்ளத் தொடங்கிய   காலம்  என்பது போதரும் . அதன் பின்னர் , நினக்கு  ஆட்பட்ட மையால்  யான் அறிவுடையனாக  இருக்கலாம் . ஆனால் , ஆட்பட்டும்  பிரிய நேர்ந்த நிகழ்ச்சியை நினையுங்கால் , அறிவுடையன்  அல்லனாகவும் இருக்க லாம்  என்று அடிகள் ஐயுற்று , அவ் ஐயுறவு  தோன்ற ,”அறிவனோ அல்லனோ” என்றார். அடிகள் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளுங்கால் , “நான்தனக்  “ கன்பின்மை நானும்  தானுமறிவோம் “ என்றபடி , அடிமைப் பணிவு தோன்றக்  குறைத்துக் கூறுதலிலே  கருத்து உடையார் என்பது  காணப்படும் . ஆதலானும் , அம் முறையே  தம்மை ஈண்டும்  அறிவிலான்  என்று கூறின்  , ஆண்டவன் பெருமைக்கு இழுக்குச் செய்த குற்றம் உளதாம் என்னும் அச்சத்தானும்  ஐயுறவு  தோன்றக்  கூறினார் என்க. இத்தகைய ஐயுறவிற்குத் தெளிவு வேண்டுமாயின் , அதனைச் செய்தற்கு  ஞான ஐசுவரியச் செல்வனா கிய   இறைவனே   தலைவன்  ஆதல்  வேண்டும்  என்பார் . ஈண்டு, “ஈசனே” என்று விளித்துக் கொண்டார் என்க . விளித்து , இந் நிலையில் யான் அறிவனோ  அல்லனோ என்பதைத் தெளிவித்து  அருள்க என்பார் , “அருள்” என்றார் என்க .என்னை  ஆட்கொண்ட நாளில்  என்பால் யான் கண்டது அறிவு இலாமை  ஆகவும் , அந் நிலையில்  அறிவனாகத்  திருவுளங்கொண்டோ என்னை  ஆட் கொண்டது ?  நின் காட்சி கரந்ததாதலின் ,,இற்றை ஞான்று  யான் அறிவனோ அல்லனோ ? இதனைத் தெளிவித்து அருளல் வேண்டும் என்பதே இத் திருப்பாட்டில் அடிகள் கருதிக் கூறியது  என்க.

         இதன்கண், அடிகள் தம்மை அறிவிலாத நிலையில்  ஆட்கொண்டதாகக்  கூறி  இருத்தலின் , இதற்கு யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது பெறப்படுதலால் , கைம்மாறு கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “அறிவனே  யமுதே “ என்றதனாலும் , “அறிவிலாமையன்றே கண்டது “ என்றதனாலும்  பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய பொருளும்  தோன்றுதல் அறிக . “அறிவனே அமுதே”  என்றதற்குப் பத்தியும் ,  “அறிவிலாமை யன்றே கண்டது”  என்றதற்கு வைராக்கியமும் ஏதுவாதல் அறிக .

                                          *****************************************

 

திருச்சதகம் பகுதி_2

சிவமயம்

திருவாசகம்   ——     திருச்சதகம்

திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத்  திருமறைக்கண்  உள்ள  திருச்சதகத்திற்குப்  பாண்டிவள  நாட்டில்  பூங்குன்ற  நாட்டுத்  தலைநகராகிய  மகிபாலன்பட்டி,  மகாமகோபாத்தியாய  முதுபெரும்  புலவர்  சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  மு.  கதிரேசனார்  இயற்றிய  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரையில்  முதல் ஐந்து  பாடல்களும் அதற்கான உரையும்  ஜூலை 13, 2014 ஆம்  ஆண்டு  பதிவேற்றம் செய்திருந்தோம்,  அதன்  தொடர்ச்சியாக  ஏனைய  பாடல்களையும் அதற்கான  உரையையும்  கீழே  காணலாம்.

பாடல்  6

பரந்துபல்  லாய்மலர்  இட்டுமுட்

டாதடி  யேயிறைஞ்சி

இரத்தவெல்  லாமெமக்  கேபெற

லாம்  என்னும்  அன்பருள்ளம்

கரந்துநில்  லாக்கள்வ  னேநின்றன்

வார்கழற்  கன்  பெனக்கு

நிரந்தர  மாவரு  ளாய்நின்னை

யேத்த  முழுவதுமே.

கருத்துரை :-  தவஞ்  செய்தற்குரிய  பிறப்பு  வேண்டும்  என்று  முன்னைத்  திருப்பாட்டில் கூறிய  அடிகள்,  அப்பிறப்புக்  கிடைப்பினும்,  இறைவனிடத்து இடயறாத  மெய்யன்பு  சிறப்பாக  வேண்டும்  என்பதை  இத்திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை :-  பரந்து  =  சிவ  தலங்கள்  தோறும்  திரிந்து,

ஆய்  பல்  மலர்  முட்டாது  இட்டு  = 

ஆராய்ந்தெடுக்கப்பட்ட  பலவாகிய  மலர்களைக்  குறைவுபடாது  பெய்து,

அடியிறைஞ்சி  =  திருவடியை  வணங்கி,

இரத்த  எல்லாம்  எமக்குப்  பெறலாம்  என்னும்  = 

வேண்டி  எல்லாம்  எமக்குப்  பெறுதல்  கூடும்  என்று  கருதுகின்ற,

அன்பர்  உள்ளம்  கரந்து  நில்லாக்  கள்வனே =

மெய்யன்பர்களுடைய  உள்ளத்தில்  மறைந்து  நில்லாத  கள்வனே,

நின்  வார்கழற்கு  அன்பு  = 

நின்னுடைய  நெடிய  கழலணிந்த  திருவடிக்கண்  உண்டாம்  மெய்யன்பை,

முழுவதும்  நின்னை  ஏத்த  = 

முற்றும்  நின்னையே  வாழ்த்தும்  வண்ணம்,

நிரந்தரமா =     இடையறாது  நிகழுமாறு,

எனக்கு  அருள்வாய்  =  எனக்கு  அருள்  புரிவாயாக  என்பது

விளக்கவுரை :-.   ஆராய்ந்தெடுத்தல்  –   விலக்கியன  ஒழித்து  விதித்தன  தெரிந்தெடுத்தல்.  அடியிறைஞ்சுதற்கு  ஏனைய  உபகரணங்களினும்  மலர்  சிறந்ததாகளின்  அது  கூறப்பட்டது.  உபலக்கணத்தாற்  பிறவுங்  கொள்க.  கருவியும்  பயனும்  அடங்க,  “எல்லாம்”  என்றார். கருவியாவது,  ஆண்டவன்  திருவடி  அடைதற்குரிய  ஞானம்,  பத்தி  முதலிய  சாதனங்கள்.  பயன்,  திருவடி  நீழலில்  இயைந்து  நுகரும்  பேரின்பம்.  ஆண்டவன்  திருவடியை  மெய்யன்போடு  வணங்கினால்,  யாம்  இரப்பன  வெல்லாம்  பெறலாம்  என்று  கருதும்  அன்பர்  என்றமையால்,  இறைவன்  வழிபாட்டில்  நம்பிக்கையும்  கடைப்பிடியும்  இன்றியமையாதன  என்பது  புலனாகும்.  உயிர்  அறிவில்  ஒன்றித்து  நின்றும்,  அவ்வறிவால்  அறிதற்கு  அரிய  நிலையில்  மறைந்திருத்தலின்,  இறைவனைக் கள்வன்  என்றார் . “என்  உள்ளங்கவர்  கள்வன்,” “உள்ளத்தெ  நிற்றியேனும் உயிர்ப்புளே  வருதியேனும்,  கள்ளத்தே  நிற்றியம்மா  எங்ஙனம்  காணுமாறே”  என்னும்  தமிழ்  மறைகளும், 

அருந்தவர்  காட்சியுள்  திருந்த  வொளித்தும்

ஒன்றுண் டில்லை  யென்றறி  வொளித்தும்

பண்டே  பயில்தொறும்  இன்றே  பயில்தொறும்

ஒளிக்கும்  சோரன்.”  

என்று  அடிகள்  பிறாண்டுக்  கூருதலும்  ஈண்டு  நினைக்கத்தக்கன.  அடியிறைஞ்சி  இரத்தவெல்லாம்  பெறல்  கூடும்  என்னும்  மெய்யன்பர்  உள்ளத்திற்  கரந்து  நில்லாமல்  வெளிப்பட்டு  நிற்பவன்  என்றமையால்,  அடியிறைஞ்சாமல்  எல்லாவற்றையும்  பெறலாம்  என்று  துணியும்  பொய்யன்பர்  உள்ளத்தில்  வெளிப்படாமல்  கரந்து  நிற்பவன்  என்பது  போதரும்.  கீழ்  மக்கள்  உள்ளம்,   அறம்  பாவம்  என்னும்  மூலப்  பொருள்களிலும்,  அவற்றின்  பயனாகிய  இன்ப  துன்பங்களினும்  செல்லுங்கால்,  அறம்  ஆகிய  மூலத்தைவிட்டு  அதன்  பயனையும்,  துன்பம்  ஆகிய  பயனை  விட்டு  அதன்  மூலத்தையும்  விரும்புதல்  இயல்பு.  ஆதலின்  அம்முறையில்  அடி  இறைஞ்சுதலாகிய  மூலத்தை விட்டு,  எல்லாம்  பெறுதலாகிய  பயன்  எய்துதல்  அரிதெனக்  கருதி,  மேற்கூறிய  பயன்  இரண்டனுள்  சாத்தியமாகிய  பேரின்பத்தைவிட்டுச்  சாதனங்களாகிய  பலவற்றுள்  மெய்யன்பு  ஒன்றையேனும்  தரல்  வேண்டும்  என்பார்,  “நின்கழற்கு……அன்பு  எனக்கு  அருளாய்”  எனவும்,  அவ்  அன்புதானும்  ஒருகால்  தோன்றி  ஒருகால்  மறையும்  இயல்பினதாக இன்றி,  இடையறாது  நிகழ்வதாக  இருக்க  வேண்டும்  என்பார், “நிரந்தரமா”  எனவும்,  அவ்  அன்பின்  ஒருகூறு  உலகப்  பொருள்களிடத்தும்,  மற்றொரு  கூறு  கடவுளிடத்தும்  நிகழாமல்,  முழுவதும்  கடவுளை  ஏத்துதற்கே  பயன்பட  வேண்டும்  என்பார்,  “நின்னை யேத்த முழுவதுமே”  எனவும்  அருளிச்  செய்வராயினர்  “கழற்கு” என  ஏழாம்  வேற்றுமையுருபில்  நான்காவது  மயங்கிற்று. 

         அடிகள்  இறைவன்  அடியிறைஞ்சுதலாகிய  பேறு  தமக்கு  இன்றென்பதை,  “தவமே  புரிந்திலன்  தண்மலரிட்டு  முட்டாதிறைஞ்சேன்”  என்றதனால்  புலப்படுத்தமை  யறிக.  அகத்தும்  புறத்தும்  வழிபாட்டையன்றி  வேறொன்றையும்  அறியாத  அடிகள்  இங்ஙனம்  கூறியது,  உலகியலைத்  தம்  மேலாக்கிய  பணிவு  புலப்படுத்தற்கென்க.  இங்ஙனம்  கூறப்பட்ட  பிற  இடங்களிலும்  இதுவே  கருத்தாகக்  கொள்க.

          இதன்கண், “அன்பர் உள்ளம்  கரந்து  நில்லாக்  கள்வன் “  என  இறைநிலை  இத்தகைய தென்பதும்,  அப்  பெருமான்  அருளைப்  பெறுதற்கு  உரிய  சிறந்த  சாதனம்  இடையறாத  மெய்யன்பு  என்பதும்  பெறப்படுதலின், “மெய்யுணர்தல்”  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றுதல்  அறிக.

                       ******************************

பாடல்  7.

முழுதும்  கண்டவ  னைப்படைத்

தான் முடி சாய்த்து முன்னாள்

செழுமலர் கொண்டெங்குந் தேடஅப்

பாலன் இப் பால் எம்பிரான்

கழுதொடு காட்டிடை நாடகம்

ஆடிக் கதியிலியாய்

உழுவையின் தோலுடுத் துன்மத்த

மேல்கொண் டுழிதருமே.

 கருத்துரை :-   இறைவனிடத்து  மெய்யன்பு  சிறப்பாக வேண்டும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அம் மெய்யன்பினால் அன்றி ஆற்றல் முதலிய பிற சாதனங்களால் தேவராயினும்  இறைவனை அணுக இயலாது என்பதை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார். 

பதவுரை :-  முன் நாள்  =  முன் ஒரு காலத்தில்,

முழுதுங் கண்டவனைப் படைத்தான்  =

உலகமுழுதும் படைத்த பிரமனைத் தன் உந்தித் தாமரையினின்றும் தோற்றுவித்த திருமால்,

செழுமலர் கொண்டு  =  அலர்ந்த தாமரை மலரை யொத்த திருவடிகளைக் காணவேண்டும் என்னும் உறுதியை உள்ளத்தே கொண்டு,

முடிசாய்ந்து எங்குந் தேட  = 

தலையைச்  சாய்த்து  யாண்டுந்தேட,

அப் பாலன் எம்பிரான்  = 

காணப்பட்டவாறு அப்பாற்பட்டவனாகிய எங்கள் சிவபெருமான்,

இப்பால்  =    இவ்விடத்தில்,

தழுதொடு காட்டிடை நாடகம் ஆடி =

பேய்க்கணங்களோடு கூடிச் சுடுகாட்டிற் கூத்தாடி,

கதியிலியாய்  =  புகலிடம் இல்லாதவனாய்,

உழுவையின் தோலுடுத்து  =  புலித்தோலை ஆடையாக வுடுத்து,

உன்மத்தம் மேல் கொண்டு உழிதரும்  =

மிக்க களிப்பை மேற்கொண்டு அலைந்து திரிவன் . [இஃதென்ன வியப்பு} என்பது.

விளக்கவுரை :-   முழுவதுங் கண்டவன் எனப் பிரமன் பெருமை கூறியது. அவன்  –  தந்தையாகிய திருமால் பெருமை தோன்றற்கு காண்டல் , இலக்கணைச் சொல்லாய் நின்று ஆக்குதலை உணர்த்தும். முற்றும் ஆக்கினான்  என்பதற்கேற்ப  உலக முழுவதும் எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. செழுமலர், ஆகு பெயராய் நின்று சிவபெருமான் திருவடியை உணர்த்தும், தேடப்பட்டது அதுவாகலின்,  “சொற்கழிவு பாதமலர்” என்பர். பின்னும்  கொண்டு  –  குறிக்கொண்டு, திருமால் பன்றியுருக் கொண்டு நிலங்கிளைத்துச் சிவபிரான் திருவடியைத்  தேடிய வரலாறு இங்கே புலனாதலறிக. “எங்குந்தேடி” என்றது , இறைவன் திருவடி மலரைக் காண்டற்க நிலத்தை அகழ்ந்து அரிதின் முயன்றதைப் புலப்படுக்கும்.  “பிரமனைப் படைத்தவன்” எனத் திருமாலுக்குக் கூறிய அடையால். பிரமன் தேடியதும் பெறப்படும். பன்றி உருக்கொண்டு மருப்பினால் நிலங்கிளைத்தமை தோன்ற, “முடிசாய்த்து” என்றார். திருமால் தலை சாய்த்து அடியைத் தேடினான் என்வே, பிரமன் அன்னப் பறவையாகப் பறந்து, தலை நிமிர்ந்து சென்று இறைவன் முடியைத் தேடினான் என்பதும் பெறப்படும். பிரமன் தேடியதற்கேற்ப, “செழுமலர்” என்பதை ஆகுபெயராகக் கொண்டு, கொன்றை மாலை யணிந்த இறைவன் திருமுடி எனக் கொள்க; “போதார் புனைமுடி” என்பர். பின்னும் அடிமுடி தேடிய வரலாற்றில் செய்தியை வெளிப்படையாகக்  கூறவே, “முடிதேடிய பிரமன் அடி தேடிய திருமால்” செய்தியும் குறிப்பாகப் புலப்படுத்த படியாம். தந்தையின் இயலாமையைக் கூறியதனாலே, மைந்தன் இயலாமை எளிதில் அறியத்தக்கதென்பது கருத்து. மேலும், தேடியவன் தேவரில் வலியனாகிய திருமால், அவனால் தேடப்பட்டது  அன்பர்க்கு எளிய திருவடியாகும். அடி தேடல் முறைமையும் ஆகும். அங்ஙனம் தலைசாய்த்துத் தேடியும், அத் திருவடி காண்டற்கரிதாயிற்றெனின், அத் திருமாலினும் வலியில் தாழ்ந்த பிரமன்  முறையின்றி, எவர்க்கும் அரிய முடியைத் தலைநிமிர்ந்து தேடியறிந்திலன் என்பது வெளிப்படக் கூறவேண்டாமையும் உணர்க. தேடிய இருவர் செயலையும் கடந்து நின்றது தோன்ற, “அப் பாலன்”” என்றார்.  “பாதாளம் ஏழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண்முடிவே” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. ஈண்டு, “சொற்கழிவு, பொருள் முடிவு” என முறையே அடி முடிகளின் எல்லை கூறியது கொண்டு, சொற்கடந்து நின்ற நிலையை திருமாலால் அறிய முடியவில்லையெனின் , பொருண் முடிவாகிய நிலையை அவன் புதல்வனாகிய பிரமன் எங்ஙனம் அறியக்கூடும் என்பது எளிதில் உணரத்தக்க தொன்றாகலின், குறிப்பிற் புலப்படுத்தமை ஈண்டும் வலியுறுதல் காண்க. திருமால்  முதலிய வானோர்க்கரிய மருந்தாக வுள்ளான், அன்பர் ஆகிய ஏனோர்க்கு எளிய இறைவன் ஆதலைப் புலப்படுத்த,  “எம்பிரான்”  என்றார்.

       திருமால், பிரமன் முதலிய தேவர்க்கும் அறிவரிய பெருமான், கண்டார் நகையாடுதற்குரிய நிலையில் இவ்விடத்தில்  எளியனாய்த்திரிதல் வியப்பளிப்பதாகும் எனப் பின்னிரண்டடிகளினும்  மருட்கைச்சுவை தோன்றக் கூறுகின்றார் . அங்ஙனம் கூறிய சொற்களில், பழித்தல் போலப் புகழ்தற் பொருள் புலனாதல் அறிக. கழுது இழிந்த பிறப்பாகிற பேயை உணர்த்துமாயினும், ஈண்டு இறைவன் கூடியாடுதற்கேற்ப, மாயா காரியமாகிய உடல் ஒழிந்து, ஞான வடிவமாக விளங்கும் சிவகணங்களை உணர்த்துவதாகும். காரைக்காலம்மையார் இவ்வுலக வாழ்க்கையிற் பற்றொழிந்து  இறைவனை வேண்டிப் பெற்றது இப் பேய் வடிவேயாம் . “ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியேனுக்குப், பாங்குற வேண்டும் என்றார்” என்னும் இதனால், இறைவன் பக்கலில் நின்று இடையறாது பாராட்டி வணங்கும் பேறு சிவகணங்களாகிய பேய்களுக்கு உண்டென்பதும் புலப்படும். இத்தனையை பேய்வடிவத்தின் பெருமையைச் சேக்கிழார், “வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய்வடிவம்” என்பார். அம்மையார் தம் திருவாக்கால், “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன்  பேயாய- — நற்கணத்தில் ஒன்றாய நாம்” எனவும்,”காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ்” “காரைக்கால் பேய் தன் பாடல்” எனவும் தம்மைப் பேய் என்று கூறிக்கொள்வதில் பெருமை வுண்டெனக் கருதியும் ஈண்டு நினைக்கத்தக்கது. எல்லாப் பற்றுக்களையும் ஒழித்து, இறைவன் ஒருவனையே குறிக்கொண்டு, இடையறாது பணி செய்தொழுகும் பேய்களின் ஆடல் இறைவன் அருட்கூத்திற்கு இயைந்ததாகலின், “கழுதொடு ……நாடகமாடி” என்றார். “பேயோடாடி” என்னும் பெயரும் இது பற்றியதே.    காடு — மகா சங்கார காலத்தில் உலகம் முதலிய எல்லாம் ஒடுங்கிய இடமாகும்.  எல்லாம் அழிந்தொடுங்கிய இடமாதல் பற்றி இதனைச் சுடலை என்று கூறுவர்.  இவ்வுண்மையை,

கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் அழிக்குங் காலை

உடல் உயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய இடம் தன்றோ

சுடலைய தாகும்  அந்தச் சுடலைகாண் அனைய சோதி

நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் தஃதே

எனவும் ,

அங்கது மன்றி எந்தை அகிலமும் முடித்த ஞான்றின்

எங்கும் வெள் ளிடையதாகி ஈமமாம்

எனவும், இப் பெருஞ்சுடலையின் உண்மை நிலையைக் குறித்து, அஃதறியாத மாக்கட்கு மெய்யுணர்வுடைய  ததீசி முனிவர் கூறிய விடையாலும் தெளியலாம். “நாடகம்” என்பது ஈண்டு எல்லாம் ஒடுங்கிய பேரூழிக் காலத்தில் இளைப்பாறிக் கிடக்கும் உயிர்களை மீண்டும் வினைக்கு ஒத்தவாறு படைப்பு முதலிய தொழிற்படுத்தற்குச் செய்யும்  அருள் இயக்கமாகும் . இதனைச் சூக்கும ஐந்தொழில் எனவுங் கூறுப.  “சூக்குமமாகிய  ஐந்தொழிலாவன, சங்கரித்த பின்னர், மேற் செய்யக் கடவனவாகிய தூல ஐந்தொழிற்கு யோக்கியமாம்படி கேவலத்தின் கண் நிகழ்த்துவனவாம்

தோற்றந் துடியதனில் தோயும் திதியமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்ஊற்றமா

ஊற்று மலர்ப்பதத்தில்  உற்றதிரோ தம்முத்தி

நான்ற மலர்ப்பதத்தே  நாடு

என்பது இவ்வுண்மையைப் புலப்படுத்துவதாகும். இனி உயிர்த்தொகுதிகளை  மும்மலக் கட்டொழித்துத் தம் திருவருளில் இயைத்துப் பேரின்பத்துள் தலைப்படுத்தும் உண்மையையும்,  இவ்வருள் நடம் புலப்படுத்தும் என்ப.  இதனை,

மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம்

சாய அமுக்கியருள் தனெடுத்துநேயத்தால்

ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்

தான் எந்தை யார்பரதந் தான்

என்னும் இதனாலறிக. “கதியிலி” என்பது, பிறப்பில்லாதவன்  என்னும் பொருளது. “பிறவா யாக்கைப் பெரியோன்” என்றார் பிறரும். புலித்தோலுடுத்தல், தமக்கு ஊறு விளைக்கக் கருதித் தாருக வனத்து முனிவரால் உய்க்கப்பட்ட புலியைக் கொன்று, அதன் தோலையுடுத்தார் என்னும் புராண கதையை உட்கொண்டு கூறியது. தம்பால் அன்பில்லாதாரை  மறக்கருணையால் ஒறுத்தல் இதனாற் புலனாம்.  உன்மத்தம் – அளவில் மிக்க களிப்பு. இஃது இறைவன் இன்பவடிவினன் என்பதைக் குறிக்கும். உழிதரல் – யாண்டும் உளனாதல். இஃது இறைவன் வியாபக உண்மையைப் புலப்படுக்கும்.

            இத் திருப்பாட்டின் இரண்டடிகளாலும், எல்லாம் ஒடுங்கிய பின் எஞ்சிநின்று, உயிர்களை மீண்டும் படைப்பு முதலிய தொழில்களுட்படுத்தல், தான் பிறவா நிலையுடையனாதல், தன்னை அடையார்க்கும் அடைந்தார்க்கும் முறையே தெறலும் அளியும் புரிதல் முதலிய அருட்செயல்களின் உண்மையியல்பு புலனாதல் அறிக.

             இதன்கண், மெய்யன்பு இன்றிப் பிற ஆற்றல்களால் இறைவனைக் காண்டல் இயலாதென்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றல் அறிக.

                          ************************

பாடல் 8.

உழிதரு காலும் கனலும்

புனலொடு மண்ணும் விண்ணும்

இழிதரு காலம்எக் காலம்

வருவது வந்ததற்பின்

உழிதரு காலத்த உன்னடி

யேன்செய்த வல்வினையைக்

கழிதரு காலமு மாயவை

காத்தெம்மைக் காப்பவனே.

கருத்துரை :-  மெய்யன்பினால் அன்றி, ஆற்றல் முதலியவற்றால் இறைவனை எய்துதல் இயலாது என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், மெய்யன்பு வாயிலாக எய்தும் இன்பநிலை தானும் வினையொழிவில் எய்தத் தக்கதாகலின், என் வல்வினை யொழிவு எக்காலம் நேருமோ என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் =

உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும்,

இழிதரு காலம் வந்ததற் பின்னும் =

ஒன்றனுள் ஒன்றாக முறையே ஒடுங்குகின்ற காலம் வந்த பின்னரும்,

உழிதருகால் அத்த = அருட்கூத்து இயற்றுந் திருவடிகளையுடைய தந்தையே

உன் அடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமும் ஆய்  =

நின் அடிமையாகிய யான் செய்த வலிய வினைகளைக் கழிக்கின்ற கால தத்துவமும் ஆகி,

அவை காத்து =  அவ் வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்து,

எம்மைக் காப்பவனே = என்னையும் என்னைப்போன்ற ஏழை அடியாரையும் காப்பாற்றுகின்ற பெருமானே,

உழி தரு காலும்……….இழிதரு காலம் = உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும் ஒடுங்குகின்ற காலம்,

வருவது எக்காலம்  =  வருதல் எப்பொழுது?  என்பது.

விளக்கவுரை :-  காற்றுக்கு உழிதரல் கூறியதனால், தீ முதலியவற்றிற்கும் சுடுதல் முதலிய குணங்கள் கூறப்பட்ட படியாம் . பிரமனது முதற் படைப்பு நீர் என மறை கூறுதலின் , புனலொடு என ஈண்டு ஒடு உருபு உயர்வு குறித்து நின்றது. “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது விதி. மக்களுக்குச் சிறந்த உணவாகவும் , ஏனைய உணவுப் பொருள்களை உண்டாக்குவதாகவும் உள்ளது நீராதலின் , ஏனைய பூதங்களினும்  நீர் முதற்படையாகக் கூறப்பட்ட தென்பது விளங்கும்.  இவ்வுண்மை கருதியே திருக்குறட் பாயிரத்திலும் கடவுள் வாழ்த்தை யடுத்து வான் சிறப்புக் கூறப்பட்டது . விண், செய்யுள் நோக்கி இறுதியிற் கூறப்பட்டதாயினும் , தோற்ற முறை பற்றி முதலிற் கொள்ள வேண்டும். “பரம் பொருளினின்றும் ஆகாயந் தோன்றி, அதனினின்றும் நிலந் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது “ என்பர் பரிமேலழகர்.  இங்கே வேதம் என்றது தைத்தரீய உபநிடதத்தைக் குறிக்கும் . {தைத்தரீயம் 2: க} அம்முறை முடிவிற்றோற்ற முறை பற்றிக் கூறப்பட்ட செய்தியே, தமிழ் மறையாகிய தேவாரத்தில் ,

இருநிலனது புனலிடை மடிதர வெரியுக வெரியதுமிகு,

பெருவெளியினி லவிதர வளிகெட வியனிடை முழுவது கெட,

இருவர்களுடல் பொறையொடு திரியெழி லுருவுடை யவனின மலர்,

மருவிய அறுபதமிசை முரல் மறைவன மமர்தரு பரமனே

{திருமறைக் காடு – 7 } என்று திருஞான சம்பந்த சுவாமிகளால் ஒடுக்கமுறை பற்றிக் கூறப்பட்டதாகும்.. தத்தம் தன் மாத்திரைகளினின்று பூதங்கள் தோன்றுமென்று சிவாகமங் கூறும். இவற்றுள் முன்னது பழந்தமிழ் நூற்கொள்கை யாகும் . இவ்விரு கொள்கைகளையும் முரண்படாமல் ஒற்றுமைப்படுத்தச் சிவஞான முனிவர் முயன்று ஆராய்ந்து எழுதிய சில குறிப்புக்கள் சிவஞானபாடியம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில் உள்ளன. முனிவர் வேதக்கருத்தை இணக்கிச் சிவாகமக் கொள்கையையே உறுதிப்படுத்துள்ளார் . யாம் வடமொழி வேதம் தமிழ்மறைகளிற் கூறப்பட்ட முறைப்படி ஈண்டு கொள்ளலானோம்.

     ஐந்து குணங்களையும் உடைய நிலம் மிகவும் பருப்பொருளாய் நம்மனோர்க்கு ஆதாரமாக இருத்தலின் அதனையும் , அதனோடு தோற்ற முதலாதல் பற்றி விண்ணையும் இயைத்து , “மண்ணும் விண்ணும் “ என்றார்.  “மண்டிணிந்த நிலனும் , நிலனேந்திய விசும்பும் , விசும்பு தைவரு வளியும் , வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கு,  ஐம்பெரும் பூதத்தியற்கை” என்னும் புரநானூற்றுச் செய்யுளில் , நிலனேந்திய விசும்பென்று கூறியதும் இக்கருத்துப்பற்றி, இனி, ஒடுக்க முறையும் புலப்பட, விண்ணை இறுதியிற் கூறினர் எனினும் ஆம்.  இழிதரல் – இறங்குதல் ;  ஒடுங்குதற் பொருட்டு . இழிதரு காலம் – எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலம்.  அக்காலத்தின் பின்னும் இறைவனுடைய ஐந்தொழில் திருக்கூத்து,  சூக்கும நிலையில் நடைபெறும் என்பது புலப்பட , “உழிதருகால் அத்த” என்றார் .

        அடிகள் தம் பிறப்பிற்கு ஏதுவாகத் தம்பால் அமைந்து கிடக்கும் வினை எளிதில் கழிக்கத் தக்கதன்றெனவும் , தாம் முயலும்  தவத்தின் ஆற்றலையும்  கடந்து நிற்கும் வலியுடையதெனவும் கண்டு, அதனை, “வல்வினை” என்றார் .  அங்ஙனமாயினும் , அவ்வல்வினைக்கு முதலாகிய யான் நின் அடிமை என்பதைத் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்பார் , “உன் அடியேன் செய்த வல்வினை” என்றார் . கடத்தற்கரிய வல்வினை களாதலின், அவற்றை ஒழிப்பது என்னளவில் அமையாது; யான் செய்யும் தவ முயற்சி முதலிய சாதனங்கள்  எல்லாம் அவ்வினையொழிவு பெறுதற்கு ஏதுவாகிய நின் அருளைப் பெறச் செய்தற்குரிய ஆற்றலுடையனவும் அல்ல; ஆதலின், எல்லாம் ஒடுங்குதற்குரிய மகாசங்கார காலமாகிய பேரூழியில் உயிர்கள் இளைப்பாறுதற் பொருட்டு நின் அருளால் காரணமாயையில் ஒடுங்கியவழி , அவ்வுயிர்த்தொகுதிகளின் எஞ்சிய வினைகளும் சூக்குமமாய்க் காரணமாயையின் ஒடுங்கக்கூடும். ஆதலின் , அந்நிலையில் என் வல்வினையும் என்னை விட்டுக் கழிய வேண்டுமெனவும், அங்ஙனம் கழிதற்கு நீயே பேரூழிக்கால தத்துவமாகவும் நின்று உதவி புரிய வேண்டுமெனவும் வேண்டுவார், “வல்வினையைக் கழிதரு காலமுமாய் “ என்றார் . ஆன்ம தத்துவம் வித்யா தத்துவம் அனைத்தையும் தன்னுள் அடக்கி நிற்பது பேரூழியாகிய கால தத்துவம் ஆதலின் , அம்முறையில் இறைவனை , “காலமுமாய்” எனக் குறிப்பிட்டார்  “ஞாலமே விசும்பே யிவை வந்துபோம் காலமே”என அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. பேரூழிக்காலத்து, உயிர்களின் எஞ்சிய வினைப்பகுதிகள் காரணமாயையின்  ஒடுங்கிக்கிடப்பினும் , மீண்டும் படைப்புத் தொடங்குங்கால், அவ்வினைகளே அவ்வுயிர்களுக்குத் தநு கரண புவன போகங்களின் ஏதுவாக முளைக்கும் ஆதலின் , அம்முறையில் என் வல்வினைகளும் மீண்டும் என்னைப்பற்றிப் பிறப்பிற் செலுத்தக்கூடும் ; அக் காலத்திலாவது நின்னடிமை என்பதைத் திருவுளங் கொண்டு, அவ்வினைகள் என்னைப் பற்றாவண்ணம் அவற்றைத் தடுத்து என்னைக் காக்கும் பேரருள் உடையவன் நீயே என்பார் , “அவை காத்தெம்மைக் காப்பவனே” என்றார். ஈண்டுக் காத்து என்பது வராமல் தடுத்து என்னும் பொருட்டு ; “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் “ என்புழிப்போல. மல வெப்பத்தால் தாம் படுந் துயரம் பெரிதெனக் கண்டு, அது மற்றை அன்பரையும் பற்றாதிருக்க வேண்டும் என்னும் கருணையால் அடிகள் என்னைக் காப்பவனே என்னாது,”எம்மைக் காப்பவனே” என்று உளப்படுத்துக் கூறினார்.  இத்துணையும் கூறியவை விளிகலாம்.

இனி, “உழிதருகாலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்” என்னும் தொடரை இரட்டித்து உரைத்துக் கொண்டு, அக்காலம் வருவது ப்பொழுது? என முடிக்கவேண்டும். ஐம்பெரும் பூதங்களும் ஒடுங்கிய பின்னும் அருட் கூத்தியற்றும் எந்தையே எனவும், நின்னடியேன் செய்த வல்வினையைக் கழிக்கின்ற கால தத்துவமாய் நின்று , அவ்வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்துக் காப்பவனே எனவும், இறைவனை விளித்த அடிகள், தம் வல்வினை ஒழிவிற்குரிய காலம் மகா சங்கார காலம் ஆகுமாயின், அஃது அணிமையில் நேராதே; அது வருங்காறும்  வல்வினை வயப்பட்டுப் பிறந்திறந்து உழல் நேருமே என்று அஞ்சியிரங்குவாராய், அப் பேரூழிக்காலம் வருவது என்று கொலோ என்பார், “இழி தருகாலம்  எக்காலம் வருவது” என்றார் . வந்ததற்  பின்னும் என்புழி, எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. காலதத்துவம் பிரகிருதி மாயா காரியங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய வித்தியா தத்துவங்களுள் வியாபித்து நிற்பதொன்றாகலானும், மகா பிரளய நிலையில் எல்லாப்பொருளும் , தேவர் முதலிய எல்லோரும் ஒடுங்க, எஞ்சி நிற்கும் பரமபதியாகிய சிவபிரான் அருள் நடத்திற்கு இடனாக நிற்றலானும், அக் கால தத்துவம், தம் வல்வினை ஒழிவிற்கு ஏதுவாம் என்னும் உறுதியுடைய அடிகள், வினைக் கட்டறுத்தற்குரிய முதன்மை இறைவன் பாலதாகவும், அக் காலமும் அதற்குத் துணையாதல் பற்றித் தம் வல்வினைய்க் கழித்தற்கு இறைவன் கருத்தனாதலேயன்றித் துணையாகவுள்ள காலமுமாவன் என்னுங் கருத்தால், “கழிதரு காலமுமாய்”  என்றார்.  ஈண்டுள்ள உடம்பையும் எச்சப் பொருளதாம் .

     இதன்கண் , மாபெரும் பூதங்கள் எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலத்தும், அழிவில் பொருளாக நின்று அருட் கூத்தியற்றுவோன் இறைவன் ஒருவனே யென்பதும் , உயிர்களின் வினை யொழிவிற்கு அப் பெருமானைக், கால தத்துவமாகக்  கொண்டு வழிபடல் வேண்டுமென்பதும் கூறப்பட்டிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .

                     ********************************************

பாடல் 9.

பவன்எம்  பிரான்பனி  மாமதிக்

கண்ணிவிண்  ணோர்பெருமான்

சிவன்எம்  பிரான்என்னை  ஆண்டுகொண்

டான்  என  சிறுமைகண்டும்

அவன்எம்  பிரான் என்ன  நானடி

யேன்  என்ன  இப்பரிசே

புவன்எம்  பிராந்தெரி  யும்பரி

சாவ  தியம்புகவே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  தம் வல்வினையொழிவு  எக்காலம்  நேருங்கொலோவென  இரங்கிய  அடிகள், அதற்குப்  பரிகாரமாகத்  தம் சிறுமை  கண்டும்,  இறைவன்  ஆட்கொண்ட  பெருமை  பாராட்டத்  தக்கதென,  இத் திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-   

பவன் எம்பிரான்  =  உலகத் தோற்றத்திற்குக் காரணனும் எம்பெருமானும் ,

பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான் = 

குளிர்ச்சியும் பெருமையும் வாய்ந்த பிறைத் திங்களை முடிமாலையாகவுடைய தேவர் முதல்வனும் ,

சிவன் எம்பிரான் =  இன்பவடிவினனும்  ஆகிய எங்கள் தலைவன்,

என் சிறுமை கண்டும்  =  எனது சிறியதன்மையை அறிந்து வைத்தும் ,

என்னை ஆண்டுகொண்டான் = என்னை  அடிமையாக ஏற்றுக்கொண்டான்

அவன் எம்பிரான் என்ன  = அத்தகைய பெரியோன் ஆண்டான் ஆகவும்,

நான் அடியேன் என்ன =சிறியேனாகிய யான் அடியேன் ஆகவும் உள்ள

இப்பரிசே  =   இவ்வாண்டான் அடிமைத் தொடர்பின் இயல்பே,

எம்பிரான்  = அவ்வெம்பெருமான் பெருமையை,

தெரியும் பரிசாவது புவனம் இயம்புக  =  அறிந்து கொள்ளும் விதமாதலை இவ்வுலகம் பாராட்டிக் கூறக்கடவது  என்பத.

விளக்கவுரை :-

பவன் என்பதற்கு, உலகத் தோற்றத்திற்கு நிலைக்களனாகவுள்ள காரணமானவன் என்பது பொருள்; அழிவில்லாதவன் என்பதுமாம் .உலக காரணனாதல் பரம் பொருட்குச் சிறந்த இலக்கணமாகு மென்றும், அது சிவபிரானுக்கே உள்ளதென்றும் , மறை யாகமங்கள் கூறும். யாவர்க்கு மேலாம் அளவிளாச் சீருடைய அத்தகைய பெருமான் , யாவர்க்குங் கீழாம் அடியேங்கட்கும் தலைவனாயினன் என்பது போதர, “பவன் எம்பிரான்” என்றார். சிறியேமாகிய எங்களுக்குத் தலைவனானது அவன் பெருமைக்குத் தக்கதன்றெனின் , அதற்கு மாற்றமாக மக்களுட் சிறியேமாகிய எமக்கு மாத்திரம் அன்று: தேவர் எல்லோர்க்கும்  தலைவனாவன் என்பதையும் புலப்படுக்க , “விண்ணோர் பெருமான்”என்றார். இங்ஙனம் பிரித்துரைக்க வேண்டிய தென்னை? மக்கள் தேவர் அனைவருக்கும் பெருமான் என்று கூறுதலே யமையும் எனின், அரியபொருளைப் பெற்றான் ஒருவன் அஃது உண்மையிற் பொதுவாயினும் , தன் அவாமிகுதியால் தனக்குச் சிறந்ததாகும்   என்று கோடல் இயல்பாதலின் , அம்முறயில் , “எம்பிரான்” என முன்னர்க் கூறிப் பின்னர் அக்கூற்றால் அப்பெருமான் பெருமைக்கு இழுக்கு நேராவண்ணம் தேவர் தலைவன் என்றுங் கூறினர்.

         விண்ணோர் பெருமான் ஆதலை விளக்குதற்கு , “மதிக்கண்ணி” என்னும் அடை புணர்க்கப்பட்டது. மதிக்கு நேர்ந்த இடுக்கணை விலக்க , அதனைச் சடையில் அணிந்து காத்தருளினான் என்பது புராணக்கதை. அம்மதி , இறைவன் சடையை அடைந்தமையால் தன் இயற்கைத் தன்மையாகிய குளிர்ச்சிக் குணமும் பெருமையும் உடையதாயிற்று என்பது புலனாக , “பனி மாமதி” எனயும் , அடைக்கலமாக அடைந்தாரை ஏற்றுக் காக்கும் அருளாளன் இறைவன் என்பதை எல்லோரும் விளக்கமாக உணர்ந்து கோடற்பொருட்டு, அப்பிறைமதி அவர்க்குச் சடையில் அணிந்து கொள்ளும் மாலையாயிற்று என்பார் “மதிக் கண்ணி”எனவும்  கூறினர்.

           இனி, உலக காரணனாதல் ஒன்றானே யாவர்க்கும் தலைவனாகலாம் ; அத் தலைவனை அடைந்தால்  எய்தும் பயன் யாதாம் என்பார்க்கு, அவன் மங்கலகரமான பேரின்பத்தை, அடைந்தார்க்கு அளிக்கும் இன்பவடிவினன் என்பது புலனாக, “சிவன் எம்பிரான்” என்றார்  ஈண்டு எம்பிரான் என்றது , சிறுமை கண்டும் விலக்காமல் ஆண்டு கொண்ட பேரருள் உடைமை குறித்தாம். உலகியல் தலைவர், அடிமையின் சிறுமையை உள்ளவாறு அறிந்து கொள்ளும் ஆற்றலுடையராதல் அரிது . அறிந்துகொண்டால் , உடனே அவ்வடி மையை விலக்கவுஞ் செய்வர்.  கடவுட்டலைவனாகிய இப்பெருமான் , அதற்கு மாறாக , உயிர்க்குயிராக நின்று, எல்லாம் அறியும் ஆற்றல் உடையவன் ஆதலின் , அடிமையின் சிறுமையை எளிதில் அறிந்து கொள்ளும் இயல்பினன் என்பதும், அறிந்த பின்னும் விலக்காமல் ஆட்கொள்ளும் அருளுடையவன் என்பதும் புலனாக, “என் சிறுமை கண்டும் ஆண்டு கொணடான்” என்று கூறினர். “அவன்” என்பது பண்டறி சுட்டாகப் பெருமை குறித்து நின்றது. ஈண்டுப் பிரான் என்றது, ஆண்டான் என்னும் பொருட்டு. “நான்” என்றது ஈண்டு அப் பெரியோன் தகுதிக்கேற்ற அடிமையாளன் அல்லன் என்பதைக் குறிப்பிற் புலப்படுத்து நின்றது. “இப் பரிசு”  என்பதிலுள்ள சுட்டு , எத்துணையும் பெரியோனாகிய அவன் , எத்துணையும் சிறியோனாகிய என்னை ஆட்கொண்ட இத் தன்மை என ஏற்றத் தாழ்வின் இயல்பைச் சுட்டி நின்றது.

           “புவன் எம்பிரான்” என்புழிப் புவனம் என்பது அம்முக்கெட்டு, உலகம் என்னும் பொருளதாய், இயம்புதற்கு வினை முதலாகிய மக்களை உணர்த்தி நின்றது . அம்முக் கெடுதல், “ஞானால் மருவிடுங்கிரியை யெல்லாம்,” “பெற்றொன்றுயர்த்த பெருமான்” என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. அவ் வெம்பெருமான் பெருங்கருணையாளன் ஆதலை உலகம் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும் என்பார்க்கு “இப் பரிசே எம்பிரான் தெரியும் பரிசாவது”என்றார். எம்பிரான் என்றதில் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. அடிகள் தம் சிறுமை கண்டும் , பெருமான் தம்மை ஆண்டு கொண்ட வியத்தகும் இத் தன்மையே அப் பெருமான் பெருமையை உலகம் அறிந்துகொள்ளும் விதமாம் என்று கருதினர் என்பது கருத்து. இந் நிகழ்ச்சி இங்ஙனம் அறிந்துகொண்ட அளவின் அமையாது, மக்களால் நெஞ்சார வாயாரப் பாராட்டிக் கூறும் இயல்பினது என்பார், “உலகம் இயம்புக” என்றார்.  இனி, “புவனெம்பிரான்” என்புழி, “புவன்”என்பது வேள்வித் தீயை உணர்த்தும் என்று எசுர் வேதம் கூறும் . ஆதலின் அங்கி வடிவாக நின்று, வேள்வியுணவை யேற்று அருள் புரிபவன் எனவும் , ஒளி வடிவினன் எனவும் பொருள் கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால் , “இயம்புக” என்பதற்கேற்ப, உலகம் என்னும் எழுவாயை வருவித் துரைத்த்ல் வேண்டும் சைவ சித்தாந்தத்தில் , ஆண்டான் அடிமைத் திறம் சிறந்து விளங்குதலும், அடிகள் அம்முறையைத் தம் திருவாக்கால் அடிக்கடி பாராட்டிக் கூறுதலும் ஈண்டு நினைக்கத்தக்கன. தம் நல்லதெனக் கண்டு கடைப்பிடித்தொழுகும் இவ் ஆண்டான் அடிமைத் திறத்தை, உலகமும் தம்மைச் சான்றாகக் கண்டு பாராட்டி, அம்முறையில் ஒழுகி நலம் பெற வேண்டும் என்பது அடிகளின் உட்கோளாகும்.

           இதன்கண், எல்லாம் வல்ல இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறைமையும், அத்தகைய ஆண்டான் அடிமைத் திறமே சிவநெறியில் சிறந்து விளங்கும் என்னும் உண்மையும் பெறப்படுதலின் , மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடல் 10.

புகவே தகேன்உனக் கன்பருள்

யானென்பொல் லாமணியே

தகவே யெனையுனக் காட்கொண்ட

தன்மையெப் புன்மையரை

மிகவே உயர்த்திவிண் ணோரைப்

பணித்தி அண்ணா அமுதே

நகவே தகும்எம் பிரான்என்னை

நீசெய்த நாடகமே.

கருத்துரை :- 

தம்மை ஆட்கொண்ட இறைவனது பெருமை பாராட்டத்தக்கது  என முன்னைத் திருப்பாட்டில் வியந்து கூறிய அடிகள், அப் பெருமான் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டது குறித்து, மீண்டும் இத் திருப்பாட்டில் வியந்து இன்புறுகின்றார்.

பதவுரை:-   

என் பொல்லா மணியே  = 

துளையிடப்படாத என் அரிய இரத்தினமே,

யான் உனக்கு அன்பருள் புகவே தகேன் =

யான் நின் அன்பர் கூட்டத்தில்  புகுதற்கே தகுதியில் லாதவன், 

என்னை ஆட்கொண்ட தன்மை உனக்குத் தகவே =

அங்ஙனம் இருந்தும் சிறியேனாகிய என்னை ஆளாகக் கொண்டது நின் பெருமைக்கு தகுதியாகுமா?

எப் புன்மையரை மிக உயர்த்தி  =

எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச் செய்கின்றாய்,

விண்ணோரைப் பணித்தி =

உயர்ந்தவர்களாகிய தேவர்களைத் தாழச் செகின்றாய்,

அண்ணா அமுதே எப்பிரான் =

தந்தையே , அமிழ்தம் போன்றவனே, எங்கள் தலைவனே,

நீ செய்த நாடகம்  என்னை =   நீ இங்ஙனம் இயல்பிற்கு மாறாகச்  செய்த திருக்கூத்து  இருந்தவாறு என்னை?

நகவே தகும்  = இது நகையாடுதற்கே தக்கதாகும் என்பது.

விளக்கவுரை :- 

பொள்ளல்  –  துளையிடல் ;  பொள்ளாமணி  பொல்லாமணி என மரீஇயிற்று .  துளையிடப் படல், ஏனைய மணிகளிலும் கோத்தணிதற்குரிய முத்துப் பவழங்களுக்கே சிறந்ததாகும் . ஆயினும் , இனம் பற்றி மாணிக்க முதலிய மணிகளையும் கொள்ளலாம் . அங்ஙனங் கொள்ளுங்கால், ஈண்டுப் பொள்ளல் என்பது உபலக்கணத்தால்  சாணை தீர்தல், கோணங் கூரிதாக்கல் முதலிய செயல்களையும் உணர்த்தும் . உலகிற் சிறந்த மணி கருவிகளால் மாசு நீங்கி, ஒளி கால்வதாகும் . பரமபதியாகிய இறைவன் அங்ஙனமின்றி பாசங்களினீங்கிப் பேரொளிப் பிழம்பாக விளங்குவோன் என்பது புலப்பட, “பொல்லா மணியே” என்றார் . இத்துணை அரிய இரத்தினம் தமக்கு எளிதிற் கிடைத்ததே என்று ஆராயாமல் , “என் பொல்லா மணியே” என்றார் உனக்கன்பர் என்புழி, நாங்கனுருபு ஏழாவதன் பொருட்டு , உனக்கு இனிய அன்பர் எனினுமாம். மெய்யன்பர் குழாத்துள் எல்லாவற்றானும் புகுதற்கு உரிய தகுதி என்பால் இன்றென்பார், “புகவே தகேன் “ என்றார் . ஏகாரம் தேற்றப் பொருட்டு. அன்பர் கூட்டத்துள்  அணுகவும் தகுதியில்லாத சிறியேனை அன்பருள் ஒருவனாக ஏற்று ஆட்கொண்டது  நின் பெருமைக்கும் பொருத்தமாகுமா என்பார்,  “தகவே எனை உனக்கு  ஆட்கொண்ட தன்மை” என்றார்.” தகவே” என்புழி ஏகாரம் வினாப்பொருளில் வந்து, தகவன்று என்னும் எதிர்மறைப் பொருளை உணர்த்திற்று.

             எப்புன்மையரையும் என்புழி, இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.  “பூமேலயனொடு மாலும்புகலரி தென்று , ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க “ என்று அடிகள் பிறிதோரித்துக் கூறியபடி, சிறிதும் தகுதியில்லாத தம்மை இறைவன் ஆட்கொண்டதனையும், உயர்ந்த தேவர் முதலியோர்க்கு அறிவரிய நிலையிலுள்ளதையும் நினைந்து. எப்புன்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி “ என்றார் . இழிந்தாரை உயர்த்தலும் , உயர்ந்தாரைத் தாழ்த்தலும் முறைமாறிய செயல் ஆதலின், இது நகையாடற்கு உரியதென்பார், “நகவே தகும்” என்றார் . “விண்ணோரை” என்பதற்கு ஏற்றப் புன்மயரை என்னாது , “எப்புன்மையரையும்” என்றது , இழிந்தார் எத்துணைக் கீழ்நிலையுடையர் ஆயினும் , அன்னாரை உயர்த்துதலே ஆண்டவன் திருவுள்ளமாம் என்பதைப் புலப்படுத்தும் . “பணித்தி” என்பதற்கேற்ப “உயர்த்தி” என்று கூறுதலே அமையும். அங்ஙனம் கூறாமல், “”மிகவே உயர்த்தி” என்றார். உயர்ந்தோரைத் தாழ்த்தும் அளவினும் இழிந்தோரை உயர்த்தும் அளவு மிகுதி என்பது கருதி.

              இனி, உட்கோள் வருமாறு :- சிறியோரை உயர்த்தல் என்பது, சிவபோதமாகிய முனைப்பு ஒரு சிறிதுமின்றி, எல்லாம் ஆண்டவன் அருட்செயலெனக் கண்டு, அடங்கி ஒழுகும் அன்பர்க்கு, அருள்சுரந்து தன் திருவடி நீழல் இன்பத்தை நல்கிப் பெருமைப்படுத்தல் ஆகும்.  “புன்மையர்” என்பது இறைவனது அளத்தற்கரிய பெருமையை நோக்கி, அடியவர் தம் சிறுமை கருதிக் கூறியது. “விண்ணோரைப் பணித்தல் என்பது, தேவரிற் பதவி உயர்ந்தார் சிலர் தமக்குள்ள ஓரளவு அதிகாரைத்தைக் கருதாமல் தாமே எல்லாம் வல்ல தலைவராவோம் எனக் கருதிச் செருக்குற்ற நிலையில் அச் செருக்கொழிய அவரை அடக்கியாளுதலைப் புலப்படுத்தும், புன்மையர் என்றது இழிந்தோரையாதலின், அதற்கேற்ப உயர்ந்தோரென்னாது  “விண்ணோர்” என்றதனால் , தாமே பரம்பொருளென்று செருக்குற்றவர் தேவரில் ஒரு சாரார் என்பது புலனாம் . இவ்வுட்கோளுக்கேற்ப, நகவே தகும் என்பதற்கு, இறைவனது இவ்வருட் செயல் நினைந்து மகிழத்தக்கது எனப் பொருள் கொள்ளல் வேண்டும். நகுதல்  –  மகிழ்தல்,  “மெய்வேல் பறியா நகும்” என்புழி இப்பொருட்டாதல் அறிக. “அண்ணா அமுதே” என்பன நிரனிறையாக நின்று, சிறியோரை உயர்த்துங்கால் இறைவன் அவர்க்குத் தந்தை நிலையினின்று தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காப்பவன் என்பதையும், விண்ணோரைத் தாழ்த்துங்கால் அவரை அமிழ்தம் உண்பித்துத் தான் நஞ்சுண்டு செருக்கடக்கினன்  என்பதையும் குறிப்பிற் புலப்படுப்பன. இனி, “அண்ணா அமுதே” என்பதற்குப் பெறுதற்கரிய அமிழ்தம் போன்றவனே எனலுமாம். அண்ணுதல், ஈண்டு அணுகுதற் பொருட்டு. மண்ணில் வாழும் மக்களை விண்ணிற் காட்டுதலும், விண்ணில் வாழுந் தேவரை மண்ணிற் காட்டுதலும் நாடகத்தில் நிகழ்வன, ஆதலின், “நீ செய்த நாடகம் என்னை?” என்றார். “என்னை நீ செய்த நாடகமே” என்பதற்கு, என் பொருட்டு நீசெய்த கூத்து எனலுமாம்.

            இதன்கண்,  “என் பொல்லா மணியே” என்றதனால் பத்தியும், “புகவே தகேனக் கன்பருள் யான்” என்றதனால், புகுதற்குரிய தகுதி பொறாமைக்கு ஏதுவாக உள்ளது பொய்யுலக வாழ்க்கைப்பற்று என்பது பெறப்படுதலின், வைராக்கியமும் குறிக்கப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், இழிந்தார் உயர்தற்கும், உயர்ந்தார் இழிதற்கும் முறையே இறையருளின் உண்மை இன்மைகள் ஏதுவாம் என்னும் மெய்மை பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாயவாறு அறிக.

                      **********************************************

திருச்சதகம்  —-  2.   அறிவுறுத்தல்

      உடல் முதலிய மாயா காரியப் பொருள்களின் நிலையாமை உணர்ந்து, அவற்றினின்றும் நீங்கி, என்றும் நிலையுதலுடைய மெய்ப் பொருள் உணர்ச்சியில் தலைப்பட்ட அடிகள், அவ் வுணர்ச்சி வாயிலாக ஆண்டவன் திருவருளை வேண்டி, அதற்குரிய சாதனங்களை மேற்கோடற்குத் துணைபுரிய வேண்டிய மனம், அச் சாதனங்களை விட்டு, அவற்றிற்கு எதிர்மறையான உலகியற் செயல்களிற் சேரலைக் கண்டு, அந் நெஞ்சிற்கு அறிவுறுத்துவான் தொடங்குகின்றார். ஓர் இல்லறத்தான் தான் மேற்கொண்ட அறத்திற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தன் மனைவி, உரிய உதவியைச் செய்யாமையோடு மாறாகவும் நடப்பாளாயின், அவளைக் குறிப்பால் அறிவுறுத்துமுகமாகத் தக்கார் ஒருவரை முன்னிலைப் படுத்துத் தான் பெறவேண்டிய பேறுகளை இழந்திருப்பதற்கு இரங்கிக் கூறுதலும் , அவ்விரக்கக் குறிப்புணர்ந்தும், அவள் நன்னிலைப்பட்டிலள் ஆயின் , அவளை முன்னிலைப்படுத்து இடித்துக் கூறுதலும் உலகியலிற் கண்டனவாதலின் , அம்முறையில் அடிகள் திருவருட் பேற்றிற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தம் மனம், அவ் உதவியைச் செய்யாமையோடு தடையாகவும் சேரலைக் குறித்து வருந்தி , அம் மனம் உணருமாறு ஆண்டவனை முன்னிலைப்படுத்து , அப் பேற்றின் இன்றியமை யாமையாமையையும், அது பெறுதற்குரிய சாதனங்களைப் பெறாமை பற்றியும் இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டுக்களில் இரங்கிக்கூறி , அக் குறிப்புணர்ந்தும் நன்னிலைப்படாத அம் மனத்தை , பின்னர் முன்னிலைப் , படுத்து ஒன்பது பத்தாம் திருப்பாட்டுக்களில் இடித்துரைத்துள்ளார் , இச் சொற்களால் குறிப்பிற் புலப்படக் கூறுதலை விரித்தும் . கடுஞ் சொற்களால் வெளிப்படக் கூறுதலைச் சுருக்கியும் கூறுதல் பெரியோர் இயல்பு ஆதலின், அம் முறையில் அவற்றை முறையே எட்டுத் திருப்பாட்டுக்களாலும் , இரண்டு திருப்பாட்டுக்களாலும் வெளிப்படுத்துள்ளார் .

பாடல் 11.

நாடகத்தால் உன்னடியார்

போல்நடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே

இடயறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத்

தந்தருள்எம் உடையானே.

கருத்துரை :-  இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் ஆண்டவன் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டமை குறித்து வியந்து கூரிய அடிகள், யான் மெய்யன்பின்றி அன்புடையவனைப் போல நடித்து, உண்மையான வீட்டின்பத்தை அடைய முந்துகின்றேன் ;  அதற்குக் காரணம் என்பால் தகுதியின்மை கண்டும் என்னை ஆட்கொண்டமையே, ஆதலின் போலி அன்பை மெய்யன்பாக்கித் தந்தருளல் வேண்டுமென்று இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .

பதவுரை :-   ஆடகச்சீர் மணிக்குன்றே  = பொன்நிலத்தில் சிறந்து திகழும் மாணிக்க மலையே,

எம் உடையானே  =  எம்மை அடிமையாகவுடைய பெருமானே,

நாடகத்தால் உன் அடியார் போல் நான் நடித்து  =

கூத்தில் நின் அடியவர் உருக்கொண்டு நடிப்பவரைப் போல யான் இவ்வுலகத்தில் நடித்து,

நடுவே வீடு அகத்துப் புகுந்திடுவான்  =  இடையே வீட்டுநிலையிற் புகுதற்கு

மிகப் பெரிதும் விரைகின்றேன்  = அளவின் மிக்க விரைவுடன் முந்துகின்றேன் ,

உனக்கு இடையறா அன்பு  = நின்னிடத்தில் இடையறவில்லாமல் நிகழும் மெய்யன்பு ,

என் அகத்து ஊடு நின்று உருக  =   என் உள்ளத்தின் நடுவே நிலைபெற்று அவ்வுள்ளம் உருகும்படி ,

தந்தருள்  = அடியேனுக்கு உதவியருள்வாயாக  என்பதாம்

விளக்கவுரை :-   ஆடகச்சீர் மணிக்குன்று. இல்பொருள் உவமை. இறைவன் ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையழிந்து சலிக்கும் பேரூழிக்காலத்தும் , அதனால் சலிப்பறியாத்  தன்மையன் ஆதலான், அப் பெருமானை மலைபோல் வான் எனக் கூறுதன் மரபு. அத் தன்மையோடு செம்மை சான்ற பேரொளிப் பிழம்பாகவும் உள்ளான் என்பது தோன்ற , “மணிக்குன்றே” என்றார்.  “மாசற்ற மணிகுன்றே” என்பர்  பின்னும் , மணி  –  மாணிக்கம் . “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமாகடலை , மற்றவர் அறியா மாணிக்க மலையை” என்பர் திருவிசைப்பா ஆசிரியர் . கற்றவர் விழுங்குதற்குரிய சிற்றுருவமுள்ள, கற்பகப் பொற்கனியாக விளங்கும் பெருமான் கருணைக்கடலாதலின், கல்லாதவர் மாட்டுப் பேரருளுடையனாய்  மாணிக்க மலையாகவும் உள்ளானென்றும் , அந்நிலையிலும் அவர் அறிந்திலரென்று கூறிய நயம் ஈண்டு நினைக்கத்தக்கது . பொன்னிலம் ஆதாரமாக இருத்தல் , மணிக்குன்றின் ஒளி சிறந்து விளங்குதற்கு ஏதுவாகலான் , “ஆடகச்  சீர்  மணிக்குன்றே”  என்றார் மெய்யுணர்வுடையார் உள்ளக்கமலம் பொன்னிறமாகவும் , அதன்கட் பேரொளிப் பிழம்பாக விளங்கும் இறைவன் நிலை மாணிக்க மலையாகவும்  கருதியது  உட்கோளென்க . தூய வுணர்வுடையார்  உள்ளத்து விளங்கும் அளக்கலாகா அளவும் பெருமையும் உடைய  அப் பெருமான் கருணையால் என்னை போன்ற சிறியோரையும் ஆட்கொள்ளும் இயல்பினன் என்பது தோன்ற , “எம் உடையானே” என்று அருளினார்

         சிவனடியார் வேடம் பூண்டு , கூத்தில் அபிநயிக்கின்றவனைப்

போல்  உண்மையன்பின்றி , வேடமாத்திரம் உடையேன் என்பார்,  “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து” என்றார் . “நாடகத்தின்கண்” என ஏழாவதில் மூன்றாவது மயங்கிற்று . “நான் தனக்கன்பின்மை நானுந் தானுமறிவோம்” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. அன்புருவமாகிய அடிகள் இங்ஙனம் கூறியது, உலகியலைத் தம்மாட்டு ஏறிட்டெனக் கொள்க. பல இடங்களிலும் இங்ஙனம் கூறுதற்கும் இதுவே கருத்தென்க. நாடகத்தில் இந்திரனாக நடிக்கும் ஒருவன், நடிக்கின்ற தன் திறமைக்குரிய பயனை விரும்புவானேயன்றி , இந்திரனுக்குரிய போகங்களை விரும்புதலில்லை ; விரும்பினாலும் அப்பயனை எய்தான் .இஃது உல்கியலிற் கண்டது.  ஈண்டு அடிகள் இவ்வுலகியலை உட்கொண்டு ,ஆண்டவனே , யான் மெய்யன்புடைய சிவனடியார் உருக்கொண்டு உலகை வஞ்சிக்க நடிக்கின்றேன் ; அந் நடிப்புத்திறமைக்கு மக்களிடத்தினின்றும் பெறத்தக்க பயனை விரும்பாமல் , மெய்யன்பர் பெறத்தக்க வீட்டின்பத்தில் தலைப்பட முற்படுகின்றேன் என்பார், “வீடகத்தே புகுந்திடுவான் ……. விரைகின்றேன்” என்றார். வேடம் பூண்டு நடிப்பவனும் , நடித்தல் தொழில் முற்றுப் பெற்றபின், பயனைப்பெற விரும்புதல் முறை  . அங்ஙனமின்றி , யான் மேற்கொண்ட நடிப்பும் முற்றுப்பெறாமல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடையிலே, அதனாற் பெற இயலாத வீட்டு நிலையைப் பெற விழைகின்றேன் என்பார் , “நடுவே” என்றார். இனி, “வீடகத்து நடு” எனக்கொண்டு ஒரு வீட்டினுள்  ஒதுக்கிடமும் பெறுதற்கு உரிமையில்லாத ஒருவன் அதன் நடு இடத்தில் இருக்க விழைதல் போல, உரிமை படைத்த எல்லா வுயிர்களும் வேற்றுமை இன்றிக் கலந்து இன்புருதற்குரிய முத்திநிலையிலும், சிறிதும் தகுதியில்லாத நான் அறியாமையாற் சிறப்பிடம் பெற விரும்புகின்றேன் எனக் கோடலுமாம் .

     சாதனங்களை  முறையே மேற்கொண்டாற்கு, இறை யருளால் வீட்டுநிலை தானே எய்தும் இயல்பினதாகவும், யான் பொய்மையாக நடித்து, அதனை வலிந்து பெற முயல்கின்றேன் என்பார், “புகுந்திடுவான்” எனவும் , சிறந்ததொரு பயனைப் பெறுதற்குத் தகுதியில்லாததோடு, எதிர்மறையாகவுமுள்ள நடிப்பை மேற்கொண்டமையால், காலந்தாழ்ப்பின், அந்நடிப்பின் பொய்மை வெளிப்பட்டு விடும் என்னும் கருத்தால், “விரைகின்றேன்” எனவும், அவ்விரைவும் அளவிகந்த நிலையில் உளதென்பது தோன்ற,  “மிகப் பெரிதும்” எனவும் கூறினார்.

       அடிகள் கடைப்பிடித்தொழுகிய நெறி, அன்பு நெறியாதலின் , அழிவில் இன்பப் பேற்றிற்கு வாயிலாகவுள்ள அம்மெய்யன்பையே யாண்டும் இறைவன்பால் வேண்டுவார் , உரிய சாதனத்தை மேற்கோடலே நம் கடமை; அதற்குப் பயன் செய்தல் ஆண்டவன் திருவுள்ளத்தைப் பொறுத்தது என்னும் உண்மையைக் கடைப்பிடித்து , ஈண்டும் அம்மெய்யன்பையே வேண்டினர். அதுவும் இடையறவு படாமலும், எக்காரணத்தாலும் பிறிதொன்றைப் பற்றாமல் நின்னையே குறிக்கொண்டும், சலிப்பின்றி நிலை பெற்று நிகழ வேண்டும்  என்பார், “இடையறா அன்புனக் கென்னூடகத்தே நின்று” என்றார். உன்கண் என ஏழாவதில் உனக்கு என நான்காவது மயங்கிற்று. அவ்வன்பினால் பெறத்தக்க முடிந்த பயன் வீட்டின்பம் ஆயினும் , அடிகள், “கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறல்” உடையராதலின், அவ்வின்பத்தை வேண்டாது, கல்லினும் வலிய நெஞ்சம் உருகுதற்கு வேண்டுமென்பார், “நின்றுருகத் தந்தருள்” என்றார் . ஒரு சாதனத்தால் பிறிதொரு சாதனத்தையே பெறவிளைதல் அடிமைத்திறத்தின் இயல்பாகும், ஆதலின் உள்ளம் உருகுதலையே அன்பின் பயனாகப் புலப்படுத்தார். “அன்பு நின்றுருக” என்புழி, உருகுதல் நெஞ்சத்தின் செயலாயினும் , உள்ளமும் அன்பும், முறையே இடமும் இடத்து நிகழ்பொருளுமாகிய ஒற்றுமை உடைமையால் அன்பின் செயலாகக் கூறப்பட்டது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்பதற்குச் சேனாவரையர் கொள்கைப்படி, செய்தென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் வினை முதல் வினைகொள்ளாது,, பிறிதின் வினை கொண்டதெனினுமாம். அன்றி, நிற்ப என்பது நின்றெனத் திரிந்து நின்ற தெனினும் அமையும்.

      இனிப் பொய் வேடத்தால் நடிப்போரை மெய்யன்பர் உணர்ந்து, இறையருளை வேண்டிப் பொய்மை மெய்மையாக வேண்டுமென நினைவாராயின், அன்னார் நினைவாற்றல் அங்ஙனமே செய்விக்கும் என்பது முன்னை வரலாறுகளிற் காணப்படுவதொன்று. மாசு நீங்கிய தூய உள்ளமுடைய பெரியார் பாவனை, போலியை மெய்மையாக்கும் என்னும் உண்மை, அறிவியல் நூல்களிலும் தெளிவுறுத்தப் படுவதாகும். பிரமோத்தர காண்டத்தில், சீமந்தனி என்னும் சைவ செல்வியார் பாவனையால், மணமக்களாகப் போலி வேடம் பூண்டு சென்ற உடன் பிறந்த ஆண்மக்கள் இருவரும் உண்மையான மணமக்களானதும், வீர சைவ அடியார் குழுவில் சேர்ந்துண்ணும் நிமித்தம், கள்ள வேடம் புனைந்து சென்ற கள்வரெல்லாம் வசவண்ணர் நினைவு வலிமையால் களங்கமறும் உள்ளமோடு மெய்யடியாராகியதும் இதற்குச் சான்றாவனவாம். இம் முறையில் அடிகள், நாடகத்தால் சிவனடியார் போல நடித்தமையை மெய்யன்பர் கண்டு, அவர் நினைவாற்றலால் அந் நடிப்பை மெய்மையாக்கவும் கூடுமே; அங்ஙனம் மெய்மையாக்குதற்குரிய மெய்யன்பர் நினைவாற்றல் தம் மாட்டுப் பதிந்து பயன் விளைக்கும் அளவும் பெறாது, இடைக்காலத்தே வீட்டு  நிலைபெறுதற்கு விளைகின்றேன்  என்பார் , “நான்  நடுவே  வீடகத்தே புகுந்திடுவான்  விரைகின்றேன் “ என்றார் எனினுமாம் . ஈண்டு  “நடு” என்பது  காலத்தையும்  முற்கூறிய கருத்திற்கு , “நடு”என்பது இடத்தையும் குறிக்கும். 

       “ஆடகச்சீர் மணிக்குன்றே”  என்பதற்குப் பொன்னோடியைந்த அழகிய  மாணிக்க  மலையே என்று  கோடலுமாம் . இனி, மணியை நீலமணி எனக் கொண்டு, நீலமணியை ஒரு  பாலுடைய  ஆடகக்  குன்று  போல்வாய்  என  விரித்து, உமையொரு கூறனே என்று கோடலுமாம் . ஈண்டு  இறைவனை  அம்மையப்பனாக விளித்தது  மெய்யன்பு அருளுதற்குரிய  கருணையாளன்  என்பதைப்  புலப்படுத்தற்கு  என்க.

        இதன்கண், மெய்யன்புப்  பேற்றிற்கு  உறுதுணையாக  நிற்க வேண்டிய  மனம், அங்ஙனம் நில்லாமையோடு, பொய்மையாக நடிப்பதற்கும்  தூண்டுதல்  குறித்து  வருந்து முகமாக இறைவனை  முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக்  குறிப்பால் அறிவுறுத்தமை  புலனாதலின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய பொருளும் ,”இடையறா  அன்புனக்கென்  னூடகத்தே  நின்ருகத்  தந்தருள்” என்னும் தொடரால்  பத்தி  பெறப்படுதலின்  ,பத்தி , விசித்திரம் என்னும் சதகம்  நுதலிய  பொருளும் தோன்றியவாறறிக .

                             **********************************

திருவாசகம்  — நீத்தல் விண்ணப்பம்

கணபதி துணை

திருச்சிற்றம்பலம்

மாணிக்க  வாசக  சுவாமிகள்

அருளிச்  செய்த

திருவாசகம்  —  நீத்தல்  விண்ணப்பம்

மகிபாலன்பட்டி

மகாமகோபாத்தியாய , முதுபெரும்  புலவர்

பண்டிதமணி

மு கதிரேசச்  செட்டியார்

இயற்றிய

கதிர் மணி  விளக்கம்

என்னும் பேருரை

கணபதி துணை

பதிப்புரை

 அன்பு  நெறிச்சென்  றருளில்  திளைத்தரிய

                 இன்பமய  மாய்த்திகழும்  எம்மிறைவன் –  என்புருகீ

ஞானப்  பொருளா நவின்றமணி  வாசகமே

ஈனமிலா  வாழ்வுதரும்  ஈங்கு.

         மிழ்  மொழியும்  சைவ சமயமும்  தழைத்தினிதோங்கத்  தமிழகத்தில்  தோன்றியருளிய  சமயகுரவர் நால்வருள்  ஒருவரும் , எல்லாம்வல்ல  ஆண்டவ னை அன்பு நெறி  நின்று வழிப்பட்டுச்  சிவானந்தமாகிய  இன்பக்கடலில்  திளைத்துத் தம் அரிய சிவாநுபவ உண்மைகளையெல்லாம்  இனிய  ஞானப் பனுவல்களால் மக்கள்  உய்தற்பொருட்டு  வெளியிட்டருளியவர்களும்  ஆகிய திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகம் என்னும் தெய்வத் தமிழ்  மறயின்  பெருமை  இவ்வுலகம்   அறிந்ததொன்று .  சொல்லினிமை  பொருளினிமைகளிற்   சிறந்து இனிய இசை நலத்திற்கு இயைந்து விளங்குவ தும் , “நவில் தொறும் நூல் நயம்  போலும் “ என்ற பொருளுரைக்கு ஏற்பக்  கற்பவர்  ஊற்றி உணர உணரப் புதிய புதிய நுண்பொருள்களைப்  புலப்ப டுப்பதும்  ஆகிய   திருவாசகத் திருப்பாடல்களுக்கு உரைகண்டார்  பலராவர் . அவ்வுரைகளைக்கொண்டு  நூலின் உண்மைப்பொருளைப்பெரும்பாலும் உள்ளவாறு அறிதற்கியலாமையால் , “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் “ என்று அடிகள் ஆணையிட்டருளியபடி ,அவனருளே  கண்ணா கக் கொண்டும் ,அடிகள் திருவுருவத்தை இடையறாது நினைவு  கூர்ந்தும் கூடியவரை பொருள் கான முயன்றேன் . அம் முயற்சி திருவருளால் ஓரளவிற் பயனுடையதாயிற்று .

            இதற்குமுன்  திருச்சதகத்திற்கு ஒரு பேருரை எழுதி வெளியிட்டேன் . அவ்வுரையை ஊன்றிப் படித்துணார்ந்த அன்பர்கள் பலர் மதிப்புரை உதவி என்னை மேன்மேலும் தொடர்ந்து உரை யெழுதி வரும்படி  வற்புறுத்தினர் . சிவநேச செல்வர்களாகிய அன்பர்கள் தம் ஆணை கடத்தற்கரியதாகலின் , அன்னார் பணித்த படி, அடுத்த  நீத்தல் விண்ணப்பத்திற்கு  முன்னர்  மேற்கொண்ட முறைப்படியே  கதிர்மணி விளக்கம்  என்னும் பேருரை யெழுதி முடித்தேன் .

             உரை யெழுதிவருவதை அறிந்த அன்பருள்  தேவகோட்டை  சிவநேசச் செல்வர் , திருவாளர் பிச . அரு . அரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டித் திருவாசக வுரை வெளியீட்டிற்கு வேண்டிய உதவியைத் தாமும் செய்து வருவதாக ஆதரவு மொழி கூறி  அப்பொழுது உடனிருந்து எழுதுவார்க்கு வேண்டும் பொருளுதவியும் ஓரளவு செய்தார்கள் . திரு . அருணாசலம் செட்டியாரவர்கள் தேவகோட்டையில் தனவணிக மரபில்  செல்வப் பெருங்குடியில்  தோன்றியவர்கள் ; இளம் பருவத்திலேயே தமிழ் நூல் சைவ நூல்களிற் பயிற்சியுடையவர்கள் ; சிவவழிபாட்டில் பேரார்வமும் அடக்கமும் யாவர் மாட்டும் அன்பும்  நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள் ; காய்தல் உவத்தல் அகற்றி ஒன்றை நடு நின்று  ஆராய்தலும் , அங்ஙனம் ஆராய்ந்து கண்ட முடிபை எத்துணை இடையூறு  நேரினும் அஞ்சாது முடிக்கும் திண்மையும் உடையவர்கள் ; கற்றவரிடத்து மதிப்பும்  சிவதருமத்திற் பற்றும் உடையவர்கள் ; நாற்பது ஆண்டுகளாக அவர்கள் தம் அரிய நட்பு எனக்குண்டு . அந் நட்புத் தொடங்கிய காலந்தொட்டு நாணாலும் வளர்ந்து வருகின்றதேயன்றி  எக்காரணத்தாலும் சிறிதும் இடையறவு பட்டதில்லை .

           இத்துணை நற்குண நற்செயல்கள்  இவர்கள்பால்  அமைந்திருப்பதற்கு  முக்கியமான  ஒரு காரணமும் உண்டு . அது கோவிலூர் துறவு சுவாமிகள் என்னும் அருணாசல ஞானதேசிக சுவாமிகளது வழித் தோன்றலாக அமைந்த தேயாகும் . துறவு சுவாமிகள்  இவர்கள் தந்தையாரின்  பிதாமகராவர் . கோவிலூர் வேதாந்த மடத்தில் இரண்டாந் தலைவராக எழுந்தருளி வேதாந்த ஞானம் கைவரப்  பெற்றவர்கள் ; மகா வித்துவான்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள்  கோவிலூர்ப் புராணத்தில் துதியாகப்பாடிய  செய்யுளால்  இப் பெரியவர் பெருமை  புலனாகும் . இத்தகைய சிறந்த குடிப்பிறந்த என் நண்பர் திரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் நீத்த்ல் விண்ணப்பவுரை வெளிவருதற்கு வேண்டிய  பொருளுதவி செய்து ஆதரித்தார்கள் . இவ்வு தவியை  என்றும்  நினைவு கூர்தலோடு , அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து சிவதருமங்களைச் செய்யவும் , புகழொளி  மேன்மேலும் ஓங்கவும் , வாழையடி வாழையெனக் குலம் விளங்கவும் இறையருளை வேண்டுகின் றேன் .

                இதற்கு உரைச்சிறப்புப் பாயிரம்  அன்புடன் உதவிய  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துச் சொற்பொழிவாளர்  வித்துவான் ,திரு மு அருணாசலப் பிள்ளையவர்கட்கும் , முகவுரை வரைந்தனுப்பிய  கோயம்புத்தூர்  தமிழ்ப் புரவலர்  Dr . Sir . r.k. சண்முகஞ்  செட்டியாரவர்களும்  அணிந்துரை  எழுதி உதவிய  திருவாளர்  தெ பொ மீனாட்சி சுந்தரனார் , M A ., BL ., M.OL .  அவர்களுக்கும் என் உளமார்ந்த  நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

                இவ்வுரை யெழுதிவருங்கால்  என்னுடனிருந்து திருத்தமாகப்  படி யெழுதி  அன்புடன் உதவி செய்தவர்  மகிபாலன்பட்டி  மங்கள விநாயகர்  வித்தியாசாலைத் தலைமை யாசிரியர் , திரு. S . சீனிவாச ஐயங்காரவர்க ளாவர் . அச்சுப்பிழை நேராமல் அவ்வப்போது  திருத்தி உதவியவர்  காரைக்குடி   அழகப்பா கல்லூரித் தமிழ்த் தலைமைச் சொற்பொழிவாளர் , திரு. வ. சுப. மாணிக்கம்  M O L  ஆவர் . இவர்களுக்கும் என் நன்றியறிவைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன் .

                  இந் நீத்தல் விண்ணப்ப உரையைத் திருத்தமாக  அச்சிட்டு உதவிய காரைக்குடி செளத் இந்தியா அச்சகத் தலைவர் , திரு. சு வீர வீரப்ப செட்டியா ரவர்கள்  நன்றி  பாராட்டத்தக்கது.

                   சிற்றறிவுடையேனாகிய   என்னைச் சிறந்த இப் பணியில் ஈடுபடச் செய்து நிறைவேற்றியருளிய  திருவருளையும் , திருப்பாட்டுக்களின்  சொற்பொருளுணர்ச்சியில்  முட்டுப்பாடு நேர்ந்துழி  எல்லாம் சிறியேன் நினைவில் புலப்படுத்து அருளிய  சிவாநுபூதிச் செல்வராகிய  மாணிக்க வாசக  அடிகளின் அருட்பெருக்கையும் நினைந்து நினைந்து இன்புறுகின்றேன் .                                       

மகிபாலன்பட்டி                                                                   மு .  கதிரேசன்

1  –  7  –  1950                                                                                   

முகவுரை

கோயம்புத்தூர் , Dr . Sir . R  K  சண்முகம் செட்டியார்

எழுதியது

நூலாசிரியர்  மாணிக்கவாசக  சுவாமிகள் ; உரையாசிரியர்  பண்டிதமணி  கதிரேசன் செட்டியார் ; இப் பெருமை வாய்ந்த ஒரு பதிப்பிற்கு முகவுரை யெழுதுவது பொறுப்பும் பெருமையும் கொண்ட கடமையாகும் . இக்கடமையை  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் .

             திருவாசகத்தின் ஒரு பிரிவான திருச்சதகத்திற்கு , பண்டிதமணி  1947 ஆம்  ஆண்டில் ஒரு அருமையான உரையைத் தமிழகத்திற்குத் தந்தார் . இப்போது திருச்சதகத்திற்கு அடுத்த பிரிவான  நீத்தல் விண்ணப்பத்திற்கு  உரை தந்திருக்கிறார் .  

               திருச்சதகமும் , நீத்தல் விண்ணப்பமும்  மணிவாசகத்தில்  தனிப் பெருமை வாய்ந்த  இரண்டு மணிகள். ஒன்று ,இறைவன் தன்னை ஆட் கொண்டபின் மாணிக்கவாசக சுவாமிகள்  ஆனந்தக் களிப்புடன்  பாடிய  பாட்டுக்களையுடையது . மற்றொன்று இறைவன் கட்டளைப்படி  மண்ணுலக வாழ்க்கையின்  பாசத்தால் இன்னும் சில நாள்  கட்டுப்பட்டிருக்க வேண்டுமே  என்று  சுவாமிகள் முறையிடும் பாட்டுக்களையுடையது .

               மாணிக்கவாசகர்  தமிழ் நாட்டில் சைவத்தையும் , தமிழையும்  வளரச் செய்யும் சிறந்த தொண்டராய்  விளங்க வேண்டுமென்பது இறைவன் அருளால் பிறந்த ஆணை . இந்த ஆணை  நிறைவேறுவதற்குப் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராயிருந்த  மாணிக்கவாசகர்  உபதேசம் பெறவேண்டுமல்லவா?  

              சிவபெருமானே  ஞானகுருவாய் , 999 மாணவர்களுடன் திருப்பெருந்துரையில் ஒரு சோலையில் வந்து தங்கினார் . குதிரைகள் வாங்கும் பொருட்டு அவ்வூருக்கு வந்த மாணிக்கவாசகர் , குருந்த மரத்தின் நிழலில் வீற்றிருந்த  ஞானகுருவைக் கண்டார் . குருவுக்கு அடிமையானார் , ஞானோபதேசம் பெற்றார் . குதிரைகள்  வாங்க வந்த வேலையை மாணிக்கவாசகர் மறந்ததும் ,குதிரைகள் நரிகளாய் மாறியதும் , சிவபெருமான்  கூலிக்கு மண் சுமந்ததும் , பாண்டிய மன்னன் தன் அமைச்ச ருடைய  தெய்வத் தன்மையை  அறிந்ததும்  , இறுதியாக மாணிக்கவாசகர்  உலக வாழ்க்கையை விட்டுப் பெருந்துறைக்குத் திரும்பியதும்  ஆகிய  இச்செய்திகளை யெல்லாம்  வாதவூரார் புராணத்தில் காணலாம் .

              சில நட்கள் கழிந்த பின்னர் ஞானாசிரியரான சிவபெருமான்  பெருந்துறையிலிருந்து  தன்னிருப்பிடமான  கைலாசத்திற்குத் திரும்பினர். திரும்புமுன்  999 மாணவர்களும்  இன்னும் சில நாட்களுக்கு  மானிக்கவாசகருடன்  தங்கியிருந்து , அவ்விடமிருந்த பொய்கையில் நெருப்புத் தோன்றுஞ் சமயத்தில் அவர்கள் அந் நெருப்பில் புகுந்து  மறைய  வேண்டுமென்றும்  கட்டளை யிட்டார் .  

               தன்னையும் அதே சமயத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சுவாமிகள் வேண்ட , சிவபெருமான் , “நீ இன்னும் மண்ணுலகத்தில்  சில காலம் தங்கியிருந்து  தொண்டு  செய்து  ,சைவத்தையும்  தமிழையும்  மக்களிடம்  பரப்பிய பின்னரே  என் திருவடியைச் சேர்வாய் “ என்று  ஆணை  இட்டனர் . இந்த ஆணை இறைவன் உலக மக்களுக்கெல்லாம்  இட்ட ஆணையென்று நாம் அறிய வேண்டும் . இறைவன் அருளைப்பெற்று  அற நெறியை அறிந்த ஒவ்வொருவனும் உலக மக்களுக்குத் தொண்டு செய்யக்  கடமைப்பட்டிருக்கின்றான் . தன்னுடைய ஆன்ம லாபத்தை மட்டும் கருதி , உலகத்தை வெறுத்துத் தனியே இருப்பது மேம்பட்ட வாழ்க்கை அன்று .  மக்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனை வழிபடும் சிறந்த மார்க்கம் . வள்ளுவர் அருளிய திருக்குறளின் அடிப்படையான உண்மையும் இதுதான் . “அறத்தாற்றின் இல்வாழ்க்கை  யாற்றின் புறத்தாற்றில் , போ ஓய்ப் பெறுவது எவன் “ என்பது பொய்யில் புலவவர் பொருளுரை.

               சிவபெருமானின் கட்டளைப்படி 999 மாணவர்களும் மறைந்தனர் .அச்சமயம் மாணிக்கவாசகருக்கு மனம் தளர்ந்தது . மண்ணுலகப்பற்றினால்  ஏற்படும் அபாயங்களை நினைந்து மனங்கலங்கினார் . நான்  இறைவன் அருளைப் பெற்றவனாயிருந்த போதிலும் , ஆசையின் சோதனைக்கு  ஆளாய் விடுவேன் ; அதனால் , ஆண்டவன் என்னைக் கைவிட்டு விடுவானோ?  என்று அஞ்சினர் . அந்த அச்சத்தால் சுவாமிகள் முறையிடும் பாட்டுகள் தான்  நீத்தல் விண்ணப்பம் என்னும் 50 திருப்பாட்டுகள் .

                 திருச்சதகத்தில்  பேரின்பத்தின் பெருமையைச் சொல்லி மகிழ்ந்தார்  நீத்தல் விண்ணப்பத்தில்  அப்பேரின்பத்தைப் பெறுவதற்குத் தடையாயுள்ள  உடல்  நீங்கவில்லையே  என்று நினைந்து , சிற்றின்பத்தினால் விளையும் தீங்குகளை  எடுத்துக்காட்டி , இச் சோதனைகளுக்கு இடையில் இறைவன் தன்னைக் கைவிடாமல்  ஆதரிக்க வேண்டுமென்று  புலம்புகின்றார்.

                  இந்த அருமையான நூலில் உள்ள ஆழந்த கருத்துகளைச் சாமான் யத்  தமிழன்  ஒரு துணை இல்லாமல் தெரிந்துகொள்ளுவது  கடினம் . பண்டிதமணி அவர்கள் அத்துணைவராய்த்  தோன்றி  இருக்கிறார்.  ஆயிரக்கணக்கான   தமிழ் மக்கள் திருவாசகத்தை ஓதுகின்றார்கள் . ஆனால் எத்தனை பேர் அதன் பொருளை அறிந்து அனுபவிக்கின்றார்கள் ?  பொருள் விளங்காத பாடல் இருள் மூடியேகிடக்கும் என்பது நம் முன்னோரின் கொள்கை . இந்தக் கருத்தை  அப்பர் சுவாமிகளும் ,

“சொற்பாவும் பொருள்தெரிந்து  தூய்மை நோக்கித் ,

தூங்காதார்  மனத்திருளை  வாங்காதானை “

என்று பாடி இருக்கின்றார் . இறைவன்பெருமையைப் பொருள்  தெரிந்து பாடவும் , கேட்கவும் வல்லவர்கள் தான்  பேரின்பத்தை அடைவார்கள்  என்னும் கருத்தை  வாதவூரடிகளும் , “சொல்லற்கரியானைச்  சொல்லித் திருவடிக்கீழ்ச்  சொல்லிய பாட்டின்  பொருளுணர்ந்து சொல்லுவார்  செல்வர்  சிவபுரத்தினுள்ளார்  சிவனடிக்கீழ்ப்  பல்லோரும் மேத்தப்பணிந்து “ என்பர் .  

                  நீத்தல் விண்ணப்பத்தின் பொருளை நன்றாய் அறிந்து  எல்லோரும் பேரின்பம் அடையவேண்டுமென்று , பண்டிதமணி அழகான இந்த உரையை நமக்குத் தந்துள்ளார் . உரை எளிய நடையில்  எழுதப்பட்டிருக்கின்றது. . சொல்லின் பொருளையும் , சொல் நயத்தையும்  விளக்கிக்காட்டியிருக் கின் றார் . கருத்துரை  பாட்டைத் தெளிவு படுத்துகின்றது ; பதவுரை  சொல்லின் பொருளை எடுத்துக் காட்டுகின்றது ; விளக்கவுரை  சொல்லின் நயத்தையும் , பொருளின் நுட்பத்தையும் விளக்கிக் காட்டுகின்றது . 

                   இதுதான்  உரையாசிரியர்கள் கையாள வேண்டிய சரியான முறை . இம்முறையில் தமிழ் இலக்கிய நூல்களுக்கெல்லாம் உரைகள் வெளிவந்தால்  தமிழ் மறுமலச்சியின் பயனைத் தமிழ் மக்கள் அடையலாம் . ஒரு மொழியின் பண்டைய இலக்கியங்கள் அம் மொழிக்கு உயிர் . தமிழ் இலக்கியங்களை நாம் மறந்தால் , உயிரை மறந்ததற்குச் சமானமாகும் .

                    தமிழ் இலக்கியங்களில்  தலை சிறந்த திருவாசகத்தைத் தமிழ் மக்கள்  பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம்  நமக்கு உதவிய  பண்டிதமணி  கதிரேசன் செட்டியார்  அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம் .

கோயம்புத்தூர்

15 – 06 – 1950 .

அணிந்துரை

திருவாளர்  தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் .M.A., BL ., M.OL.

அவர்கள் எழுதியது .

திருவாசகம்  ஒரு  தித்திக்கும்  தேன் விருந்து. பாட்டுலகில்  எழுந்த விந்தைகளில்  எல்லாம் சிறந்த  விந்தை  இதுவே  ஆம்  . பாட்டு என்றால் எண்ண  அனுபவத்தில்  ஆழ்ந்த  ஒருவன்  அந்த  அனுபவத்தின்  உண்மை  நிலையில்  பிறரையும்  ஆழ்த்தி  இன்புறுத்தும்  மந்திர  வித்தையே  பாட்டாம். மாம்பழ  அனுபவத்திலோ  மண்ணாங்கட்டி  அனுபவத்திலோ நம்மை அழுத்தி விடுவது   எளிதாகலாம் . அங்கும்  பாவலன்  மாம்பழத்திற்கும்  மண்ணாங் கட்டிக்கும்  உள்ளீடாகக்  குறைவிலா  நிறைவாம்  பேரின்பப்  பொது  நிலையில்  நம்மை  ஆழ்த்தி  விடுகின்றான்  என்பது  உண்மையே.  ஆனால் ,  “இருள் கடிந்து  எழுகின்ற  ஞாயிறே  போன்று  நின்ற  நின்  தன்மை  நினைப்பற  நினைந்தேன்   நீயலாற்  பிறிது  மற்றின்மை “  என்று  பொங்கி  வரும்   கடவுட்  காட்சி   அனுபவமோ  மாற்றம்  மனம்  கடந்த  அனுபவமாம் . அந்த அனுபவத்தில்  நம்மை  ஆழ்த்துவது  செயற்கரிய  செய்யும்  பெரியார்  செயலாம்.  கடவுளாம்  இன்பப்  பெரு வெள்ளம்  தமிழில்  போல்  வேறு  எம்  மொழியிலும்  பொங்கி  வழியக்  காணோம் . இத்  தமிழ்ப்  பெரு  வெள்ளத்திலும்  ஆனந்த  மலையாய்க்  காட்சி  யளிப்பது  திருவாசகமே ஆம்.  கடவுள்  நம்பிக்கை  இல்லாதவரும்  இந்த  நூலை  ஓதும்போது  தம்மை  மறந்து  ஓரிமைப் போதேனும்  சமாதிகூடும்  தனிப்பெரும்  காட்சியை  இன்றும்  காணலாம் . புன் புலால் யாக்கை  புரை  புரை  கனிய  என்பெலாம்  உருக்கும்  அனுபவமே  மணிவாசகனார்  பெற்ற  அனுபவம் .  தமிழ்  என்ற  மணமே  வீசாத  ஆங்கில  நாட்டில்  தமிழரை  அஞ்ஞானிகள்  என்று  எண்ணி  வந்த  பெரியார்  போப்பையர்   இந்த  நூலை  ஓதவந்ததும்  என்பெலாம்  உருக்கும்  அனுபவத்தினைத்  தாமும்  பெற்றது   வியப்பன்றோ?  எலும்பை யும்  கசி வித்துருக்கும்   நூல்  எனத்  திருவாசகத்தினை  அப் பெரியார்  புகழ்ந்தார்  .  உலகம்  முழுதும்  இதனை  ஓதி  உய்யவேண்டும்  என  மொழி பெயர்த் தருளினார்.   தம்மை  இது  காரணமாகத்  தமிழ்  மாணவன்  என  உலகம்  போற்ற  வேண்டும்  என  மிக  மிக  விரும்பினார் . இந்த  வரலாறு  ஒன்றே  திருவாசகத்தின்   பெருமைக்குச்  சிறந்த  சான்றாகும் .  

                    சீவன்முத்தரது   அனுபவத்தினை  மணிவாசகர்  போலப்  பாடிவைத்தவர்   மிகச்  சிலரே .  அத்தகைய  அருமை  நம்  தமிழில்  வெளிப்பட்டது , தமிழரது  பெரும்  பேறே  எனலாம் . சீவன்முத்தரது  நிலை  முதலில்  சொல்லொணாத  பெரு  விளக்கமாய்த்  தோன்றும் . பின்னர்ப்  பெருநிலையைப்  பிரிந்த  பேரிழவு  நரகினும்  கொடியதாய்ப்  பேரிருளாய்ச்  சூழ்ந்து வருத்தும்  , அடுத்துத்  தோன்றுவது  பேரின்பம் . முடிவாக  அனைத் தையும்  ஒன்றாகக்  கண்டு  பெரும்  பொருளோடு  ஒன்றுபட்டு  அமைந்து  விடுகின்ற  குறைவிலா  நிறைவனுபவம்  எழும் . இந்த நான்கு  வேறு  நிலைக ளில்  திருச்சதகமும்  நீத்தல்  விண்ணப்பமும்  இரண்டாம்  நிலையாகிய   பிரிவு  நிலைத் துன்பத்தின்  போக்குவீடாக  எழுந்தனவாம்  . துன்ப  உலகில்  வாழும்  நமக்குத்  துன்ப  இயல்  பாடலே  மிக  மிக   இனிக்கும் . பாலைத்திணைப்பாடல்கள்  அகநானூற்றில்   செம்பாதியாக  வருவது  . இதனாலே  அன்றோ? விப்பிரலம்பசிருங்காரம்  என்று  அதனைப்  போற்றுவார் .  

            திருச்சதகத்திற்குப்  பண்டிதமணியவர்கள்  உரை  எழுதியதனை  உலகம்  போற்றியுள்ளது  . தமிழ்  வளர்ச்சிக்  கழகத்தின் வழியே  துரைத்தனப்  பரிசினையும்   அவ்வுரை  பெற்றுள்ளது .  அப் பெரியாரே நீத்தல்  விண்ணப்பத்திற்கு    இது  போது  உரை  எழுதி  வெளியிடுகின்றார் . திருவாசகத்தில்  இலக்கியச்சுவை  ததும்பும்  பகுதி  ஒன்று  உண்டு  என்றால்  அது  நீத்தல்  விண்ணப்பமே  ஆம் . தமிழ்ச்  சுவையறிந்த  அறிஞர் இப்பகுதிக்கு  எழுதிய  உரை  மிக  மிக  இனிக்கவே  செய்கின்றது .

             திருவாசகத்திற்கு  உரை  எழுதலாகாது  என்ற  கொள்கை  வழங்கிய  நாள்  உண்டு .  சீவன்முத்தரது  அனுபவத்தினை  உரை கொண்டு  தெளிவு  படுத்த  முடியாது . இது  பற்றியே  அப்பழங்கொள்கை   எழுந்து  நடையா டியது  போலும்  . ஆனால்  சொற்களின்  பொருளையும்   நயத்தினையும்  எடுத்துரைப்பது  இயலாத  தொன்று  அன்று.   தவறும்  அன்று .  சொல்  நயம்  அறியாதாருக்கு  ஒரு  சிறந்த  வழிகாட்டியாம் .   நாலாயிரப் பிரபந்தத்திற்கு  இவ்வாறு  பெரியோர்  உரை  எழுதவில்லையா ? ஒவ்வொரு  சொல்லாகச்  சுவைத்து   அதில்  ஆழ்ந்து  பாட்டின்  அனுபவத்தில்  குதிதுத்  திளைக்க  வழி  காட்டிய  ஈட்டின்  ஆசிரியரைத்  தமிழுலகம்  மறக்கப்போமோ?  அத்தகைய  முறையில்  நம்  பண்டிதமணியவர்களும்   இன்று  திருவாசகத்திற்குக் கதிருரை  ஒன்று  எழுதி  வருவது   தமிழின் நல்லகாலமே  ஆம் .  திருவாசகத்தி னைப் பற்றி  அவர்  செய்த  சொற்பொழிவுகளையும்  “ இருதலைக்  கொள்ளி யினுள்  ளெறும்பொத்து”  என்பது  முதலிய  பகுதிகளுக்கு  அவர்  கூறிய  நயங்களையும்  கேட்டவர்கள்   “இவர்  உரை  ஒன்று  எழுதி  வெளியிட்டாரா  “  என்று  விரும்பிய  விருப்பம்  எல்லாம்  இன்று  நிறைவேறி  வருகிறது . இது  கண்டு  எந்தத்தமிழன்  மனந்தான்  மகிழாது?   

                  சீவன்முத்தரது  அனுபவம்  மாற்ற  மனங்கடந்தது  எனக்   கண்டோம் பண்டிதமணியவர்கள்   மணிவாசகர்   அனுபவம்  சைவசித்தாந்த  அனுபவம்   என விளக்குகின்றார். பிறர் பிறவகையாக விளக்குதல்  கூடும்;  விளக்குதலும்     வேண்டும்  . அதுவன்றோ   அதன்  பெருமை . அண்டப்பகுதியை  எல்லாம்  ஆண்டவனோடு  விழுங்கித்  தேக்  கெறிந்து  பாடும்  பாடல்  உலகக் கொள்கைகளை  எல்லாம்  விழுங்கிநிற்கும்  பாடல்  அன்றோ !  ஆதலின்  , அக் கொள்கைகள்  எல்லாம்  அங்குத்  தோன்றுவது  இயல்பே. 

                  சொற்களின்  நயங்களைப்   பண்டிதமணியவர்கள்  இன்பஞ்சுரக்க  எடுத்துக்காட்டும்   பகுதிகள்  நினைக்க  நினைக்க  இன்பப்  பெரு விருந்தாக  நம்மை  மகிழ்விக்கின்றன .  புராணக்  கதைகளைப்   புறக்கணிக்கும்  காலம்  இது .  ஆனால்  மணிவாசகர்  புராணக்கதகளையும்  திருவாசகத்தில்  ஓர்  இன்சுவைப்  பகுதியாக  வளாவியுள்ளார். இங்கும்  நயம் பல  காட்டுகின்றார்  நம்  உரையாசிரியர்  . “ தழ லரவு”  என்ற பகுதிக்கு  புராணத்தின்  வழியே  சொல் நயம்  காட்டும்  பகுதி  அவருடைய  அகன்ற  நூலறிவினைப்  புலப்படுத்தும் . இப்புராணக்  கதைகளுக்கு  உரையாசிரியர்   தத்துவார்த்தம்  கூறும்  இடங்களில்  அவருடைய  மெய்ந்நூலாராய்ச்சி   நன்கு  பலனா கின்றது . சங்கு , மந்தாரம், பிறை  என்பன  சிவஞானம்  , பராபத்தி , உயிர்  என்று  விளக்குவது  காண்க .  “வெண்டலை  முழையிற்  பதியுடைவாளரப்  பார்த்திறைபைத்துச்  சுருங்க”  “உன் கழல் கண்டும்  கலந்தருள  வெளி வந்திலேனை “  “ஆருளுடைச் சுடர் “  “பதமே”  “ அடியார்  பெயராத பெருமையனே “ முதலிய  பகுதிகட்கு  உரை  கூறுமிடங்களில்   உரையாசிரியரின்  பலவகைத்  திறமைகளைக்  காணலாம் . சச்சை  என்பது  சத்தா  என்பதே  என்றும்  , கடையவனே   என்பதற்கு  “கடைமைப்பட்டவனே”  என்றும்  பொருள்  கூறி  நிலை  நாட்டும்  முயற்சியினை   ஒப்புக்கொள்ளாத வர்களும்  ஆசிரியரின்  சொல்லாராய்ச்சித் தறனை  வியவாது  இரார்.  உலகினைச் சுவைத்த பண்டிதமணி  தம் அனுபவத்தின் வழியே  திருவாசகத்தின் இன்பத்தினை  விளக்கும்  பகுதிகளில்  “ஐம்புல இன்பமும்  தருவது மலர்”  என்பது போன்றவை  இன்புறத்தக்கனவாம் .

            இவற்றை  எல்லாம் ஓதும்போது   பிறபகுதிகளுக்கும்  உரை  விரைவில் வெளிவாராதோ  என்று  ஒரு  பெருங்குறை யில்  தோன்றும்  வருத்தமே  பொங்குகிறது .  கதிருரை முற்றுப்பெறும்  வண்ணம்  கதிரேசனார்  நீடூழி வாழ்க  என  நம்  மனம்  நம்மையும்  அறியாது  வாழ்த்தி  ஆண்டவனை வணங்குகிறது .

                                              ***********************************

அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்  தமிழ் விரிவுரையாளர்,

வித்துவான்  மு . அருணாசலம்  பிள்ளையவர்கள்   இயற்றிய

உரைச்  சிறப்புப்  பாயிரம் .

1 .     திருந்து பெருந்  துறைக்கண்வளர்  குருந்தடியில்  எழுந்தருளும்

                                           தேவ  தேவன்

        பரங்கருணைத்  தடங்கடலைப்  பருகியுளம்  நெக்குருகிப்

                                           பாரோ  ருய்யப்

         பொருந்துமணி  மொழிதொடுத்துப்  புகழ்வாத  வூரடிகள்

                                           புனைபா  மாலை

          அருந்தமிழின்  அமிழ்தெனலாம்  அதன்சுவைநற்   கதிர்மணிமா

                                           விளக்கம்  ஆமே.

2         அண்ணல்திரு  வாதவூர்  அடிகள்  தமை  ஆண்டவன்விட்

                                            டகன்ற  தற்பின்

           உண்ணெகிழ்ந்து  கண்கலங்கி  உலகுடலா  தியவெறுத்தே

                                             யுணர்ச்சி  மேலிட்

           டெண்ணரிய  இறைவ எனைக்  கைவிடலா  காதென்றென் 

                                              றரங்கி  நீத்தல்

            விண்ணப்பம்  செய்திருப்பாட்  டைம்பதும்பே  ருரைபெற்று

                                              மிளிர்வ  தாலோ

3          பூங்குன்ற  நன்னாட்டுத்  தலைநகராம்  மகிபால

                                               புரிக்கண்  வாழும்

            ஓங்குபெரும்  பேராசான்  உலகறிந்த  பண்டிதமா

                                               மணியென்  றோதும்

             பாங்குநிறை  கதிரேசத்  திருவாளன்  பகுத்துணர்ந்து

                                                பலர்பா  ராட்டத்

              தீங்கரும்புந்  தெவிட்டும்வண்ணம்  செய்த அப்பே  ருரைமாண்பு

                                                 செப்பற்  பாற்றோ

4.           எழுத்தெழுத்தா  ஆய்ந்தெழுதும்  சொற்பொருளும்  இலக்கணமும்

                                                   எடுத்துக்  காட்டும்

                முழுத்துணரும்  இறையுயிர்கட்   டெனுமூன்று  பொருளியல்பும்

                                                     முறையாக்  கற்றுப்

                பழுத்த இலக்  கியச்சுவையும்  பரந்தவுல  கியலறிவும்

                                                       பழுதொன்   றின்றி 

                அழுத்தமுடன்  கற்பவர்தம்  அகக்கண்ணிர்  கண்டுவகை

                                                        யடைவர்  நன்றே.

5 .            தகுதியறிந்  திருபொருளைப்  புணர்ந்திடுவன்  இறைவனெனச் 

                                                        சான்றோர்  சொல்வர்

                 முகமனன்றஃ  துண்மையெனல்  அறிந்தோமால்  மூதறிவாற்

                                                         சிவனே  யென்னப்

                 புகலடிகள்  அருள் நூலும்  கதிர்மணிமா  விளக்கவுரைப் 

                                                          பொலிவுஞ்  சேர்ந்த

                  தகலுலகில்  முழுமணியோ  டரும்பொன்சேர்ந்  தழகுசெய

                                                           லனைப்  தொன்றே .

                                                       &&&&&&&&&&&&&&&&

கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

நீத்தல்  விண்ணப்பம்

       நீத்தல்  விண்ணப்பம்  என்பது  , அருளாரமுதப்  பெருங் கடல்வாய்  அடியாரெல்லாம்  புக்கழுந்த  அடியேனை  மாத்திரம்  இங்ஙனம்  நீத்தல்  தகுமாவென்று  இறைவன்பால் முறையிட்டுக்  கொள்ளல்  என்னும்  பொருளுடையது  .  தம்மை நீத்தலைக்  குறித்துக்  கைவிடலாகாதென்று  அடிகள்  செய்து  கொண்ட  விண்ணப்பம்  என்பதாம். இக்குறிப்பு  ஒவ்வொரு  திருப்பாட்டிலும்  “விடுதி கண்டாய்”  என்று  கூறியிருத்தல்  கொண்டு  அறியத்தக்கது. திருவாசக  வுண்மையில் “மித்தையுல  கினையகற்றி  விடாமலெனை  யாண்டருளென், றத்தரறிந்  திட நீத்தல்  விண்ணப்ப மறைந்துவாம்” என்று  கூறியிருத்தலும்  இவ்வுண்மையை  வலியுறுத்துவதாகும்  .

            இஃது , இறைவன்  திருப்பெருந்துறையில்  ஞானாசிரியனாக  வெழுந்தருளி  உபதேசித்து  அடிகளை  இன்னுஞ்  சின்னாள்  இந்நிலவுலகத்து   இருக்கவெனக்   கட்டளையிட்டுத்  திருவுருக்கரந்தனனாக , அப்பெருமான்  திருவுள்ளக்  குறிபின்படி  திருவாதவூரடிகள்   திருப்பெருந்துறையினின்றும்   திருவுத்தரகோசமங்கைக்கு  வந்து அவ் விறைவனது  திருவுருக்  காட்சியை  மீண்டும்  பெறாமல்  வருந்தி  உள்ளமுருகிப்   பாடியருளியதாகும்  என்ப. . இதனை  “உத்தரகோசமங்கை  யூரினிற்  சென்று  புக்கார்”  எனவும்  , “சடையர்  கோயிலெய்தித் தம்மை  வந்தடிமை  கொண்ட , வடிவது  காணாராகி  மயங்கிவெய்துயிர்த்து  வீழ்ந்து  , விடுதிகொ லென்னை  யென்று  நீத்தல் விண்ணப்ப மென்னுந் , தொடை கெழு பாட  லோதக் காட்டினார்  தொல்லை  மேனி” எனவுங்  கடவுண்மாமுனிவர்  கூறுதலான்  அறியலாம் . இந் நீத்தல்   விண்ணப்பத்தின்  முதல்  இருபது   திருப்பாட்டுக்களிலும்   நாற்பத்தெட்டாம்  திருப்பாட்டிலும்  “உத்தரகோச  மங்கைக்கரசே”  யென்று  கூறியுருத்தலானும்  இஃது  உத்தர கோச மங்கையிலிருந்து அருளிச்  செய்யப் பட்டதென்பது  புலனாம். இப்பகுதி  ஐம்பது  திருப்பாட்டுக்களையுடையது . “கடையவனேனை  “  யெனத்  தொடங்கி  அந்தாதித்  தொடராக   அருளிச் செய்யப்பட்டது .

பிரபஞ்ச  வைராக்கியம்

நீத்தல் விண்ணப்பம்  என்னும்  இப்பகுதியின்  உள்ளுறை   பிரபஞ்ச  வைராக்கியம்  என்பதாம் . உலக  வாழ்க்கையில்  பற்றறுதி யென்பது   இத் தொடரின்  பொருளாகும் . திருச்சதகத்தில்  “பத்தி வைராக்கிய  விசித்திரம் “  என்று  பொது  முறையில்  புலப்படுக்கப்பட்டதே  , ஈண்டுப்  பிரபஞ்ச  வைராக்கியம்  எனச் சிறப்பு  முறையிற்  கூறப்படுகின்றது . இதனால் திருச்சதகத்திற்கும்   இதற்கும்  உள்ள  இயைபு  புலனாதல்  அறிக . மெய்யன்பு   , பற்றறுதி  யென்னும்  இவ்விரண்டனுள்ளும்  உலக   வாழ்க்கையைப்  பற்றிய  பற்றறுதியை  ஈண்டுச்  சிறப்பு  முறையிற்   புலப்படச் செய்ததற்கு   ஏது, ஆண்டவன்  தம்மை  ஆட்கொண்டருளிய  பின்னும்  இந்  நிலவுலகத்து  இருக்கவெனப்  பணித்தது  பொறாமையேயாம். மெய்யன்பு  ஆண்டவன்  திருவடி  அடைதற்கும்  , பற்றொழிவு   அம்மெய் யன்பு  வளர்ச்சிக்கும்  சாதனங்களாகும் . இவ்விரண்டனுள்ளும்   இப்பொய்யுலக  வாழ்க்கையை  ஒழித்தலிலே  அடிகளுக்கு  மிக்க  விரைவு  தோன்றிய  தென்னலாம்.

           ஆண்டவன்  ஆட்கொண்டவுடனே  தம்மை  ஊனார்  புழுக்கூட்டி னின்றும்  வாங்கித்  தன்  திருவடி  நீழலில்  இயைத்து  இன்புறுத்தும்  பேறு  கிடைக்குமென   உறுதி மேற் கொண்டிருந்த  அடிகளுக்கு  , இன்னும்  சில காலம்  இந்நிலவுலகத்  திருக்கவெனக்  கட்டளையிட்டது  , கடக்கமுடியாத தாயினும் தினையளவு  நேரமும்  இத்துயர்  ஆக்கையைப்  பொறேன்  என்று  அடிகள்  கூறியிருத்தலால்  மிக்க  வருத்தத்தையே  விளைவித்தது  என்னலாம். இறைவனது  அக்கட்டளை  அப்போது  அடிகளுக்கு  வருத்தம்  விளைத்த தா யினும் ,அது பொதுவாக இந்நிலவுலகமும்  சிறப்பாகத் தமிழுலகமும்  செய்த தவப்பயனால் நிகழ்ந்ததாகும் . ஆண்டவன்  உபதேசித்தவுடனே   அடிகள்  வீட்டின்பத்தில்  தலைப்பட்டிருப்பராயின்  , அவர்கள்  அநுபவத்த சிவாநுபவ உண்மைகளைத்  தன்னுள்  அடக்கித் திகழும்   திருவாசகத்தேனை  இவ்வு லகம்  எங்ஙனம்  பருகி  மாறிலா  மகிழ்ச்சியின்  மலரக்கூடும் ?  அன்று  தொட்டு  இன்று  காறும்  இன்னும்  எத்தனையோ  காலம்  வரையும்  அடிகள் அமுத மொழியை  ஓதியுணர்ந்து  உருகிப்பருகி  இவ்வுலகத்துள்ள  எண்ணி றந்த   அன்பர்களும்  எவ்வாறு  இன்புற்றிறுக்க முடியும்?  ஆண்டவன்  கட்டளை  அவ்வாறின்றேல்  அடிகள்  ஒருவரே  அழி வில் இன்பத்தில்  அப்பொழுது  தோய்ந்திருப்பர்  .  அவ்வின்பப் பேறு  அடிகளுக்கு  அப்பொழுது  தாழ்ப்பினும்  சின்னாளில்  எய்திற்று . ஆகவே, அடிகள் விருப்பம் ,  நிறைவேறுதற்கும்   உலத்ததுள்ள  அன்பர்  பலரும்  நலம்  அடைதற்கும்  திருவுளங்கொண்ட  இறைவன்  அவ்வாறு  பணித்தருளினான்  என்பது புலனாம் . அடிகள் ஆண்டவன்  பிரிவால்  நெஞ்சம்  உருகியுருகிப்  பாடியருளிய  அநுபவ  உண்மாய்களன்றோ  இற்றைப்பொழுது  சிறியேமாகிய  நம்மை  இன்புறுத்தி  உய்விக்கும்  தீந்தேனாயின .

                   இனி, நீத்தல் விண்ணப்பம்  என்னும்  இப்பகுதி  பிரபஞ்ச  வைராக்கியம்  என்னும்  இக்கருத்தை  , நுதலிய  பொருளாகக்  கொண்டிருத்தலின்  , ஒவ்வொரு  திருப்பாட்டின்  உரையின்  இறுதியிலும்  இக்குறிப்புப்  புலப்படுக்கப்படுவதாகும் .

                                                      &&&&&&&&&&&&&&&&&&&

கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

 பாடல் : 1 .

கடையவ  னேனைக்  கருணையி  னாற்கலந்  தாண்டுகொண்ட

விடையவ  னேவிட்  டிடுதிகண்  டாய்விறல்  வேங்கையின்றோல்

உடயவ  னேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

சடையவ  னேதளர்ந்  தேனெம்  பிரானென்னைத்  தாங்கிக்  கொள்ளே .

கருத்துரை :- இதன்  முன்னர்க்  கூறப்பெற்றுள்ள  திருச்சதகத்தின்  இறுதித் திருப்பாட்டில்  , ஊனுடலின்  ஒழிவையும், வீட்டின்பப் பேற்றையும்  வேண்டிய  அடிகள்  , இவ்வின்பப்பேற்றிற்குத்  தடையாகவுள்ள  உடற்சுமை  நீங்காமை யால்  , தமக்கு  உண்டாகிய  சோர்வைப்  புலப்படுத்தி  ஆதரவளித்தல்   வேண்டுமெனவும்  , கைவிடலாகாதெனவும்   இத் தொடக்கத் திருப்பாட்டில்   ஆண்டவனை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்துகொள்ளுகின்றார் .  

பதவுரை :-  கடையவனேனை  =  கடைப்பட்டவனாகிய என்னை ,

கருணையினால்  கலந்து   ஆண்டு  கொண்ட  =  கருணை  காரணமாக  உடன்  இயைந்து  ஆட்கொண்டருளிய  ,

விடையவனே  =  காளை  ஊர்தியை  யுடையவனே ,

விட்டிடுதி   =   அடியேனைக் கைவிடுவாயோ ?,

விறல் வேங்கையின்  தோல்  உடையவனே  =  வலி மிக்க  புலியின்  தோலை  ஆடையாக  உடையவனே ,

மன்னும்  உத்தர கோச மங்கைக்கு  அரசே   =   என்றும்  நிலையுதலை யுடைய   உத்தரகோசமங்கை  யென்னும்  தலத்தில்  எழுந்தருளி யிருக்கும்  இறைவனே ,

சடையவனே   =   சடைக்  கற்றையை  யுடையாய் ,

தளர்ந்தேன்   =  சோர்வு  எய்தினேன் ,

எம்பிரான்  என்னைத்  தாங்கிக்  கொள்  =   எம்  தலைவனே  அடியேனைத்  தாங்கிக்   காத்தருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  ஈடும்  எடுப்பும்  இல்லாத  ஆண்டவன்  பணி கொள்ளுதற்கு  உரிய  தகுதி  சிறிதும்  இல்லேன்  என்பார் , தம்மைக்  “கடையவன்” எனவும் , தலை  இடை  கடை  யாகிய  முத்திறத்துள் கடைப்பட்ட  தம்மை  அங்ஙனம்  ஆட்கொள்ளுதற்கு  ஏது , ஆண்டவன் கருணையேயன்றிப்  பிறிது  இன்று  என்பார் , “கருணையினால்”  எனவும்  கூறினார் . “ஊனா  யுயிரா  யுணர்வா  யென்னுட்  கலந்து “ என்று  அருளிச்செய்தபடி தம் உடல் உயிர் உணர்வு என்னும் இவ்வெல்லாவற்றிலும்   உடன் இயைந்து ஆட்கொண்டனன் என்பது குறித்து , “கலந்து  ஆண்டுகொண்ட  “  என்றார். உயிரிற்கலந்து ஊனை யுருக்கி   உணர்வைப் பெருக்கி  ஆட்கொண்டனன்  என்பது  கருத்து . “அற்புதமான  அமுத தாரைகள் , ஏற்புத்  துளைதொறும்  ஏற்றினன் உருகுவது , உள்ளங்கொண்டோ ருருச்செய்தாங்கெனக்கு , அள்ளூறு  ஆக்கை யமைத்தனன் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறிய  திருவாக்கால்  , அவர்தம்  ஊனையுருக்கி  அருளமுதத்தை  எலும்புத்  துளைதோறும்  புகுத்தி இன்புறுத்தினன்  என்பது  தெளியப்படும் .

              விடயை  ஊர்ந்து  பணிகொண்டது  போலத்  தம்மை   இறைவன்  வலிந்து பணிகொண்டவன் என்பது குறிப்பிற்  புலப்பட  ,”ஆண்டு கொண்ட விடையவனே”  யென்றார்.  விட்டிடுதி என்பதில்  விடு  பகுதியும் , இடு  துணை வினையும்  , இகரம்  எதிர்கால  விகுதியும்  ,தகரம்  எழுத்துப் பேறும்  ஆகும் . “அவற்றுள் , முன்னிலைக்  கிளவி ,  இ  ஐ  ஆ  யென  வருஉ மூன்றும்  , ஒப்பத்தோன்றும் ஒருவர்க்கும்  ஒன்றற்கும்  “  என்னும்  தொல்காப்பியச் சூத்திரமும்  , “ இகரம்  கடதற  ஊர்ந்து  எதிர்காலம்  பற்றி  வரும்  “ என்னும்  சேனாவரையர்  உரையும்  ஈண்டு  விதியாதலைக் காண்க . விட்டிடுதி , விடுதி,  என்னுஞ் சொற்களுக்கு   விடுவாய்  என்பது  பொருளாகும் . விடுவாய்  என்பது  ஈண்டுக்  காகு  என்னும்  ஒலி  வேற்றுமையால்  விட்டுவிடுவாயோ  என  வினாவாக  நின்று  கைவிடலாகாது  என்னும்  பொருளையுணர்த்தும் . கண்டாய்  என்பது  முன்னிலையசை . விட்டிடுதி  கண்டாய்  , விடுதி  கண்டாய்  என்று  பின் வருவனவற்றிற்கெல்லாம்  இங்ஙனமே  பொருளுரைத் துக் கொள்க .  

              தாருக  வனத்து  முனிவர்  கொடிய  வேள்வியொன்று  இயற்றி  , அதனின்றும்  தோன்றிய  புலியை  ஏவி  இறைவனை  அழிக்க  முயன்றனராக அப்புலியை   உரித்து  அதன்  தோலைத்  தன்  அரைக்கண்  உடுத்தனன் என்பது  புராண  கதை .புலித்தோலை யுடுத்து  யானைத்தோலைப்  போர்த்தனன் என்ப.  “புலித்தோலை யரைக்கசை”  என்பது தேவாரம் .  அப்புலி  முனிவர் தவ வன்மையால்  தோன்றியதாகலின்  , “விறல்  வேங்கை  “ என்னப்பட்டது .  உடை –  ஆடை  .  உத்தரகோசமங்கை  என்பது  பாண்டி நாட்டுச்  சிவதலங்களுள் ஒன்று . இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிச்  சிவாகமப்  பொருள்களைப்  பக்குவ முதிர்ந்த அன்பர்களுக்கு   உபதேசித் தற்கு  இடனாய  தலமாதலின்  ,அச்சிறப்புக்  கருதி, “மன்னும்  உத்தரகோச மங்கை “ என்னப்பட்டது .தளர்ச்சியுற்று  அடைக்கலம்  புகுத்த  திங்கட்  பிறையைத்  தாங்கிப்  பாதுகாத்தற்கு  ஆதாரமாயது   சடையாதலின்  , அங்ஙனமே  தளர்ந்து  போந்த  தம்மையும்  தாங்கிக்  காத்தருளல்  வேண்டுமென்னும்  குறிப்புத் தோன்ற  ,ஈற்றடியில்   “சடையவனே”  என்றார்.  ஈண்டு  அடிகளுக்கு  நேர்ந்த  தளர்ச்சி  , ஆண்டவன்  திருவடி  நீழல்  எய்துதற்கு  விரைந்து  முற்பட்ட  முயற்சி  தடைப்பட்டமையான்  உண்டாயது  என்பது. தளர்ந்த  நிலையிற்  பணிகோடல்   பொருந்தாதெனக்  கொண்டு  “எம் பிரான்  என்னைத்  தாங்கிக்கொள்ளே”  என்றார்.

                   இதன்கண்,  “சடையவனே  தளர்ந்தேன்” என்றதனால்   உலக  வாழ்க்கை  பற்றிய  உவர்ப்புப்   பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             **********************************

பாடல் : 2 .

கொள்ளேர்  பிளவக  லாத்தடங்  கொங்கையர்  கொவ்வைச்  செவ்வாய்

விள்ளே  னெனினும்  விடுதிகண்டாய்நின்  விழுத்தொழுப்பின் 

உள்ளேன்  புறல்லேன்  உத்தர  கோசமங்  கைக்கரசே

கள்ளே  னொழியவுங்  கண்டுகொண்  டாண்டதெக்  காரணமே .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  தமக்கு  நேர்ந்த  தளர்ச்சியைக்  குறித்தும்  , தாங்கிக் காத்தருளல்  வேண்டுமென்றும்  கூறிய  அடிகள்  இத்  திருப்பாட்டில்   அவ்விரண்டற்கும்  காரணங்கூறுகின்றார்.

பதவுரை :-  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

கொள் பிளவு  அகலா  ஏர் தடம்  கொங்கையர்   =   கொள்ளு  என்னும்  கூலத்தின்  பிளவு  அளவு  இடைவெளி  இல்லாத  அழகிய  அடி  அகன்ற  கொங்கைகளையுடைய  மகளிரின் ,

கொவ்வைச்  செவ்வாய்  விள்ளேன்  எனினும்   =  கொவ்வைப்பழம்  போன்ற  சிவந்த  வாய்  இதழினின்றும்  நீங்கேன்  ஆயினும் ,

நின் விழுத்தொழும்பின்  உள்ளேன்  =  நினது  சிறந்த  தொண்டில்  ஈடுபட்டு   அதன்  அகத்தேயுள்ளேன் ,

புறம்  அல்லேன்  =  புறம்பானவன்  அல்லேன் ,

விடுதி  =  ஆதலின்  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? (விடலாகாது),

கள்ளேன்  ஒழியவும்  =  வஞ்சகனாகிய  யான்  நின்னை  நீங்கிச் செல்லவும்,

கண்டு  கொண்டு  ஆண்டது  எக்காரணம்  =  கண்டு  பிடித்து  ஆட்கொண்டதற்குக்  காரணம்  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-  “ ஈர்க்கிடை  போகா  விளமுகை “ என்றாற்  போல  இங்கே  “”கொள்ளேர்  பிளவகலாஒ கொங்கை “ யென்றனர் . “கொவ்வைச்  செவ்வாய்” என்றது  ஐம்புலநுகர்ச்சிக்குப்  பெரும்பாலும்  அஃது  இடனாதல்  பற்றியென்க. செம்மைப் பண்பு காண்டற்கும்  ,வாயிற்சொல்  கேட்டற்கும்  ,வாய்  எயிறூறிய  நீர்  உண்டற்கும்  ,உரியவாதலும்  , ஏனை  உயிர்த்தற்கும்   உற்றறிதற்கும்  ஓரோ வழி  இடனாதலும்  காண்க.  விள்ளல்  –  நீங்குதல் . அடிகள்   மகளிர்  இன்பத்தில்  ஈடுபட்டதாக  ஈண்டும்  , இத்திருவாசகத்தில்   இன்னும்  பல  இடங்களிலும்  கூறியிருக்கின்றார்..தம் தவ ஒழுக்கம்  மிகப்  பெரிதாயினும்  அதனைப்பற்றி  ஆண்டவன்  முன்னிலையில்  சிறிதும்  கூறாமல்  , தம்  குற்றம்  சிறிதாயினும்   பெரிதாகக் கொண்டு  கூறிப்  பொறுத்தருள  வேண்டுதல்  பெரியோர்  இயல்பாதலின்  , அம்முறையில்  பண்டை  வினைத் தொடர்பு  ஓரோவழித்  தம்மைத்  தாக்க  அதன்  வயப்பட்டுத்  தம்  மனம்  சிறிதளவு  நெறி  பிறழ்ந்ததாகக்  கண்டு ,அச் சிறு  பிழையைப்  பெரிதாக  ஆண்டவன்  முன்னிலையில்  விண்ணப்பஞ்  செய்து பொறுத்தருள  வேண்டுவாராய்  இங்ஙனம்  கூறியிருக்கலாம் .  அன்றி  வினைக்கு  ஈடாகப்  பிறந்து  இறந்து  உழலும்  மக்கட்  பொதுவியல்பு  நோக்கி  உயிர்  போகும்  பொதுநெறி   பொறாமல்  அங்ஙனம்  சேறல்  தீதென்பதை  உலகிற்கு  அறிவுறுத்தக்  கருதித்  தம் மேல்  ஏறிட்டுக்  கூறினாரெனக்  கொள்ளளுமாம் . இக்கருத்து  வெளிப்படும்  இடங்களுக்கெல்லாம்   இவ்வாறே  அமைத்துக்கொள்ளல்  வேண்டும் .

                தலைவர்க்குப்  பயன்  விளைக்கும்  உலகத் தொண்டு  போலாது  அடிமைக்குப்  பயன்விளைப்பது  சிவத் தொண்டு  என்பது  தோன்ற  ,”நின் விழுத்தொழும்பு”  என்றார். “உள்ளேன்  புறம்  அல்லேன்”  என்றது  , திருத் தொண்டில்  ஈடுபட்டு  அவ்வெல்லை  கடவாத  நிலையில்  உள்ளேன்  அன்றிப்  புறம்பானவன்  அல்லேன் என்னும்  பொருட்டு .  ஆண்டவனே !  உலகப் பற்றினின்றும்   நீங்கலேனாயினும்  , நின்  திருத் தொண்டினின்றும்  புறம்பானவன்  அல்லேன் ஆதலின் , என்னக்  கைவிட்டு  விடலாகாது  என்று  அடிகள்  விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .

                நெஞ்சம்  பொய்யுலக  வாழ்க்கையைப்பற்றி  நிற்ப , புறக்கரணங்கள்  திருத்தொண்டி லீடுபட்டிருக்குமாயின்  , அது வஞ்சகச்  செயலன்றே; அஃதறிந்தும்  எங்ஙனம்  கைவிடாமலிருக்க  இயலும்  என்பது  ஆண்டவன்  திருவுள்ளம்  ஆகலாம்  எனக்கொண்டு   அது  குறித்துக் “கள்ளேன் ஒழியவுங்கண்டு  கொண்டாண்ட  தெக்காரணமே”  என்று  அருளிச்செய்தனர்  . ஆட்கொள்ளுதற்கு  முன்  நின்னைச்  சிறிதும்  நினையாமல்  விலகியிருந்த  என்னை  வலிய  வந்து கண்டு  பிடித்து  ஆட்கொண்டதற்கு  ஏது  வென்னை  யென்பது   பொருள் .  இங்ஙனம்  வினவுமுகமாகக்  கிடைத்த  பொருள்  ,ஆண்டவனது  அளப்பரிய  அருட்  குணமே  காரணம்  என்பது  போதரும் . அவ் வருட்  குணமே  அடியேனைக்  கைவிடாமல்  காத்தருளுதற்கும்  காரணம்  ஆகலாம் என்பது  குறிப்பிற்  பெறப்படுவதாகும்  .  

                   இதன்கண் , மகளிர்  இன்பத்தைப்  பற்றி  நிற்கும்  தம்மை  அதுகுறித்துக்  கைவிடாமல்  காத்தருளல்  வேண்டுமென்று  அடிகள்  விண்ணப்பஞ்  செய்து  கொண்டது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்   தோன்றியவாறு  அறிக . 

                                              **********************************

பாடல் :3 .

காருறு  கண்ணியர்  ஐம்புல  னாற்றங் கரைமரமாய்

வேருறு  வேனை  விடுதிகண்  டாய்விளங்  குந்திருவா

ரூருறை  வாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

வாருறு  பூண்முலை  யாள்பங்க  வென்னை  வளர்ப்பவனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  அடிகள்  தமக்கு  நேர்ந்த  தளர்ச்சியை  நீக்கித்  தாங்கிக்  காத்தற்குக்  கூறிய  காரணத்தையே  பிறிதொரு  வகையில்  இத்திருப்பாட்டில் மீண்டும்  கூறுகின்றார் .

பதவுரை :-   விளங்கும்  திருவாரூர் உறைவாய்  =   மிக்க  புகழால்  விளங்கும்  திருவாரூர்  என்னும்  திருத்தலத்து  எழுந்தருளியிருப்போய்,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

வார்  உறு  பூண்  முலையாள்  பங்க  =  கச்சுப்பொருந்திய  அணிகலன்  விளங்கும்  நகிலினையுடைய  அம்மையை  ஒரு  கூற்றிலுடையாய் ,

என்னை  வளர்ப்பவனே  =  அடியேனைப்  பாதுகாப்பவனே  ,

கார்  உறு  கண்ணியர்  ஐம்புலன்  ஆற்றங்கரை  மரமாய்  =   கருமை  நிறம்  பொருந்திய  கண்களையுடைய  மகளிரைப்  பற்றிய  ஐம்புலன்களாகிய  ஆற்றங்கரைக்கண்  மரம்  போல  ,

வேர் உறுவேனை  =  வேர்  ஊன்றி  இருப்பேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ?  (கைவிடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  அயிராவணம்  ஏறாது  ஆனேறேறி  யமரர்  நாடாளாதே  ஆரூர்  ஆண்டமையால் ,”திக்கெலா நிறைந்த  புகழ்த்  திருவாரூர்  “  என்று  அப் பதி  பாராட்டப்பட்டுள்ளது . மேலும்  புகழ்  விளக்கம்  கொடைச்  சிறப்பால்  உண்டாவதாகலானும் ,  அதற்குரிய   தியாகராசப் பெருமான்  எழுந்தருளியிருத்தலானும்  அத்தலம்  “விளங்கும்  திருவாரூர்” என்று  கூறப்பட்டது எனலுமாம் . அம்மையை  ஒரு  கூற்றில்  உடையவனே என்றது , குழந்தையாகிய  தம்மை  வளர்த்துக்  காத்தற்  பொருட்டு  அன்னையும்  அத்தனுமாக  எழுத்தருளிய  நிலையைக்  குறிப்பதாகும் . அடிகள்  விரும்பியது  உள்ளொளியாகிய  உணர்வு  வளர்ச்சியே  யன்றி  ஊனுடலின்  வளர்ச்சி  யன்று. “ஊனினையுருக்கி  உள்ளொளி பெருக்கி  “ என்பது  அடிகள் திருவாக்கு . உலகத்தவர்  உண்டி  முதலியவற்றால்  எதனைப்  பெருக்க  விரும்புகின்றார்களோ அவ்வுடல்  உருகிச்சுருங்க  வேண்டும்  என்பதும்  உள்ளுணர்வு  அருளமுத நுகர்ச்சியால்  பெருக வேண்டும் என்பதுமே  அடிகள் விருப்பமாகும் . ஆதலின் , “என்னை  வளர்ப்பவனே  “  என்பதற்கு  என்  உணர்வை  வளர்ப்பவனே  என்பது  பொருளாகும்  .  இங்ஙனம்  இறைவன்  அருள்  காரணமாக அம்மையப்பனாக  எழுந்தருளி   வந்து   என்னை  வளர்க்க  முற்பட்டு  நிற்கவும் ,யான்  பொய்யுலக  வாழ்க்கையிற்  பொருந்தி  நிற்கலானேனே என்று  இரங்குவார் , “காருறு………வேருறு  வேனை “  என்றார்  . மகளிர்  கண்களுக்கு  வெண்மை  செம்மைகளினும்  கருமை  நிறமே  ஆடவரை   வயப்படுத்தற்குச்  சிறந்ததென்ப .

               மகளிரைப்  பற்றிய   சுவை  ஒளி  ஊறு   ஓசை   நாற்றம்   என்னும்  ஐப்புல  இன்பவடிவமாகிய  காமம்  ஆறாக  உருவகஞ்  செய்யப்பட்டது . அக்காமத்திற்  கன்றிநின்றாரைப்  பிறிதோராற்றான்  உய்தி  பெறாவாறு  அஃது  ஈர்த்துச்சேறலான்  .  மிக்க  விரைவில்  அவ்வெள்ளத்தால்  வேர்  பறிக்கப்பட்டு  வீழ்ந்தொழியும்  நிலையில்  உள்ளேன்  என்பார் , அக்காமவெள்ளத்தின்  கரைக்கண்  வேர்  ஊன்றி  நிற்கும்  மரமாயினேன் என்றார் . இங்ஙனம்  மெய்மை  போலக்  காட்டி  வஞ்சித்துக் கெடுக்க  நெருங்கியிருக்கும்  இப்  பொய்யுலக  வாழ்க்கையைப்  பற்றி  அழிந் தொழியும்  நிலையில்  உள்ள  சிறியேனைப்  பாதுகாக்கும்   கடப்பாடுடைய  நீ  இந் நிலையில்  கைவிடலாகாது  என்பார் , “ வேருறுவேனை  விடுதி  கண்டாய்”  என்றார்.

                  இதன்கண்,” ஐம்புலனாற்றங்கரை  மரமாய்  வேருறுவேனை” இந் நிலையிற்  கையிடாமற்   காத்தருள  வேண்டுமென்று   விண்ணப்பம்  செய்தமை  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                                **********************************

பாடல் : 4 .

வளர்கின்ற  நின்கரு    ணைக்கையில்  வாங்கவு  நீங்கியிருப்பால்

மிளிர்கின்ற  வென்னை  விடுதிகண்  டாய்வெண்   மதிக்கொழுந்தொன்

றொளிர்கின்ற  நீண்முடி  யுத்தர  கோசமங் கைக்கரசே

தெளிகின்ற  பொன்னுமின்  னும்அன்ன  தோற்றச்  செழுஞ்சுடரே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன்  தம்மைக்  காத்தருளுதற்கு   அப்பெருமான்  அருட்பெருக்கே   காரணமெனக்  கூறிய  அடிகள்  , அவ்வருட் கரத்தால்  ஈர்த்துக்  கொள்ளவும்,  அகப்படாமல்  விலகும்  தம்  இயல்பு  இருந்த  படியே  இத் திருப்பாட்டில்  விண்ணப்பித்து  இரங்குகின்றார் .  

பதவுரை :-  வெள்  மதிக்கொழுந்து  ஒன்று  =  வெள்ளிய  திங்கள் இளம்பிறை  ஒன்று , 

ஒளிர்கின்ற  நீள் முடி  =  திகழுகின்ற  நீண்ட  சடை  முடியினையுடைய ,

உத்தர கோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே,

தெளிகின்ற  பொன்னும்  மின்னும்  அன்ன  தோற்றம்  செழுஞ்சுடரே = 

உருக்கி  ஓட வைத்துத் தெளிந்த   பொன்னையும்  மின்னலையும்  ஒத்த  காட்சியினையுடைய  பேரொளிப் பிழம்பே ,

வளர்கின்ற  நின் கருணைக்  கையில்  வாங்கவும்   =  மேன்மேலும்  மிகுகின்ற  நின்  அருட்கரத்தால் வளைத்து  ஈர்க்கவும்  ,

நீங்கி  =  அதற்கு  அகப்படாமல்  விலகி,

இப்பால்  மிளிர்கின்ற  என்னை   =  இப் பொய்யுலக  வாழ்க்கையில்  இறுமாந்து  களிக்கின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ?(கைவிடாமற்  காத்தருளல்  வேண்டும்)  என்பது .  

விளக்கவுரை :-  மதிக்கொழுந்து   –  பிறை  .  “மதிக்கொழுந்து  ஒன்று  ஒளிர்கின்ற  நீண் முடி” என்றது  அடைக்கலம்  புகுந்தாரைத்  தலையால்  தாங்கிக்  காக்கும்   அருட்குணம்  உடைமையைப்  புலப்படுத்துவதாகும் .  தெளிகின்ற  பொன் – வேற்று  உலோகக்  கலப்பாலாகிய   மாசு  நீங்கிய  மாற்றுயர்ந்த  பொன் . “தெளிகின்ற” என்னும்  அடையை  ‘மின்’ என்பதனோடும்  இயைத்து , முகிற்  படல  முதலியவற்றால்  மறைவு  படாத  மின்னற் கொடியெனவுங் கொள்ளல்  வேண்டும் .  தோற்றம்  –  கட்  பொறியால்  வரம்பிட்டுப்  பற்ற  இயலாத  காட்சி, அத்தகைய  இறைவனது  பேரொளிப்  பிழம்பிற்கு  “உயர்ந்ததன்   மேற்றேயுள்ளுங்காலை” என்னும்  விதிப்படி  உவமங்  கூறுதல்  இயலாத  தொன்றாதலின்  , காணப்பட்ட  பொருள்களிற்  சிறந்த  பொன்னையும்   மின்னையும் கூறுவாறாயினர்  . நிறத்திற்குப்  பொன்னும்   ஒளிக்கு  மின்னுங்  கூறப்பட்டன .

                    அன்பர்க்கு  வழங்க  வழங்கக்  குறையாமல்  மேன்மேலும்  நிறைந்திருத்தல்  பற்றி  “வளர்கின்ற  கருணை  “  என்றார் . “தன்   கருணை அள்ளக்  குறையா  அரன்”  என்பதுங்காண்க.  “குறைவிலா  நிறைவே”  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியதற்கும்  இதுவே  கருத்தாதல்  அறிக.  வாங்குதல்  –  வளைத்துப்பிடித்தல்  . உலகத்தில்  ஒருவனை  வளைத்துப் பிடித்தல்  துன்புறுத்தற்  பொருட்டுமாம் . ஈண்டு  அஃது  இறைவன்  திருவுள்ளம்  அன்றென்பதைப்  புலப்படுத்தற்கு  “ கருணைக்  கையில்  வாங்கவும் “ என்றார்  . உம்மை  சிறப்புப்  பொருட்டு . ஆண்டவன்  அருணோக்கால்   தாம்  ஈர்க்கப்பட்டமையின்  கருணையைக்  கையாக  உருவகஞ் செய்யலாயினர் .  இறைவன்  அருட்கு  இடனாதற்குத்  தவங்கிடப் பார்   பலராக  என்னை  இன்புறுத்தற்பொருட்டுக்  கருணை காரணமாக  வலிந்து  பற்றவும்  ,என் அறியாமையால்  அகப்படாமல்  நீங்கலானேன்  என்று  இரங்குவார், “வாங்கவும்  நீங்கி”  என்றார் . இப்பால்  –  இவ்விடம்  .  மெய்யின்ப வாழ்வில்  தலைப்படற்கு  ஒருப்படாமல்  –  நீங்கி  இப் பொய்யுலக  வாழ்வில்இறுமாந்து  இருக்கலானேனே என்பார் . “இப்பால்  மிளிர்கின்ற  என்னை “என்றார். பேரின்புறுத்தற்கு  ஆண்டவன்  வலிந்து பற்றவும்  அகப்படாமல்  நீங்கியதே  பெரும்  பிழையாகும்  .அப் பிழைக்கு  இரங்காமை யோடு   இப் பொய்யுலக  வாழ்க்கையிற்  களித்திருத்தல்  அதனினும்  பெருங்குற்றமாகும்  . இத் தீர்வில்  பிழையைத்  திருவுளங்கொண்டு  சிறியேனைக்  கைவிட்டு  விடுவாயோ?  விடலாகாது  என்பது  கருத்து .

              இதன்கண்,  “நின் கருணைக்கையில்  என்னை  வளைந்து  பற்றவும்  நீங்கி,  இப்பொய்யுலக  வாழ்க்கையிற்  களிக்கும்   சிறியேனைக்  கைவிடலாகா  “    தென்று   விண்ணப்பஞ்  செய்துகொண்டமையால்   பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாத லறிக.   

                                                    *************************************

பாடல் :5 .

செழிகின்ற  தீப்புகு  விட்டிலிற்  சின்மொழி  யாரிற்பன்னாள் 

விழுகின்ற  வென்னை  விடுதிகண்  டாய்வெறி  வாயறுகால்

உழுகின்ற  பூமுடி  யுத்தர  கோசமங்  கைக்கரசே 

வழிநின்று  நின்னரு  ளாரமு  தூட்ட  மறுத்தனனே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  தன்  கருணைக்  கையில்  வாங்கவும்  அகப்படாமல்  நீங்கிய  இயல்பு  குறித்து  இரங்கிய  அடிகள்  , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  அகப்படாமல்  நீங்கு  நிலையில்  வழி மறித்து  அருளமுதூட்டவும்  மறுத்து  விடலானேனே யென்று  இரங்குகின்றார்.  

பதவுரை :-  வெறிவாய்  அறுகால்  உழுகின்ற  பூமுடி  =  தேன்  தோய்ந்த  வாயினவாகிய  வண்டுகள்  கிண்டுகின்ற  கொன்றைமலர்  மாலைய னிந்த  முடியினையுடைய  ,

உத்தர கோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே ,

வழி நின்று  =  வழியில்  மறித்துநின்று ,

நின் அருள்  ஆர்  அமுது  ஊட்ட   =  நின்  கருணையாகிய   அரிய  அமிழ்தத்தை  வலிந்து  ஊட்டவும்  ,

மறுத்தனன்  =  ஏற்றுக்கொள்ளாமல்  மறுத்தனனாய் ,

செழிகின்ற  தீப்புகு  விட்டிலின்  =  மிகுகின்ற  தீயின்கண்   வீழும்  விட்டிற் பூச்சியைப்   போல  ,

சில்  மொழியாரின்   =  சிலவாகிய  சொற்களை  யுடைய  மகளிரிடத்து  ,

பன்னாள்  விழுகின்ற  என்னை  =  பல காலம்  விரும்பிக் கிடக்கின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது.

விளக்கவுரை :– வெறி  –  தேன் .  அறுகால்  –  அன்மொழித்தொகையாக  நின்று  ஆறு  கால்களையுடைய  வண்டையுணர்த்தும் . உழுதல்  –  தேன்  மிகுதி  பற்றி  இதழ்களைக்  கிளறுதல் . வழி  –  முன்னைத் திருப்பாட்டிற்  கூறப்பட்டபடி  இவ்வுலக  வாழ்க்கையை  நோக்கியடையும்  நெறி  .  அந் நெறியிற்  செல்ல  விடலாகாதென்று  கருணை  காரணமாக  ஆண்டவன்  தம்மை  மறித்து  நின்றமை  தோன்ற  “நின்று” என்றார் . ஒருவனை  வழி  மறித்தல்   அவனைத்  துன்புறுத்திக்  கைப்பொருளைக்  கவர்தற்கன்றே  நிகழ்வது ? இவ்வுலக  நிகழ்ச்சிக்கு  மாறாக  இங்கே  ஆண்டவன்  என்னை  வழி மறித்துத்  தடுத்தது , பெறுதற்கு  அரிய தன்  அருளமுதத்தை  எனக்கு  ஊட்டுதற் பொருட்டு  என்பார் , “  நின் அருளார்  அமுதூட்ட  “  என்றார். .ஈதல்  தருதல்  முதலிய  சொற்களின்றி  ஊட்ட  என்றது, அருளமுதத்தைக்  கையிற்  கொடுத்தல்  அதன்  அருமை  அறியாமல்  உண்ணாது  உகுத்து  விடவுங்கூடு மென்று  திருவுளங்  கொண்டமையான்  என்க.  மறுத்தனன்  என்பது  முற்றெச்சம்.  அழியும்  இயல்பினதாகிய  இவ்வுலக  வாழ்க்கையை  நச்சிச் செல்லும்  என்னை  வழிமறித்துத்  தன்  அருளமுதூட்டவும்  மறுத்துவிட்டுக்  கேடு பயக்கும்  இழிந்த  காமத்தை  விரும்பலானேன்  என்பார் , “ விழுகின்ற  என்னை  “ என்றார் . மகளிருடைய  சிலவாகிய  மொழிகளே  என்னைப்  பலகாலம்  வீழச்  செய்கின்றன  வென்பார்  , “சின்மொழியாரிற்  பன்னாள்” என்றார் .  

                  காம  வீழ்ச்சி  கடிதில்  கெடுக்கும்  இயல்பின  தென்பதற்குத்  தீப்புகும்  விட்டில்  உவமம்  ஆயிற்று  . விட்டிற்  பூச்சி  நெருப்பில்  சிறிது  வீழ்ந்து  சூடு  தாங்கித்  திருப்பினும்  , பின்னரும்  அத் தீயில்  வீழ்ந்தே  இறப்பதாகும் . அங்ஙனமே  காமத்  தோய்வு  துன்புறுத்தினும்  மறித்தும்  அதன்கட்  சென்று  கெடுதல்  மக்கள்  இயல்பென்பது  குறிப்பு . வீழ்தற்குரிய  அக்காமமும்  சிறிதன்று ., பெரிதென்பது , “செழிகின்ற  தீ”  என்னும்  உவம  அடையால்  அறியத்தக்கது . சின்மொழி  பன்னாள்  என்பது  முரண்  அணி  . விட்டிற் பூச்சி  விளக்குத்  தீயில்  சாங்காறும்  பலமுறை  வீழ்ந்து  ஒழிதல்  போல , யானும்  கெடுங்காறும்  பலநாள்  வீழ்கின்றேன்  என்பார் , “பன்னாள்  விழுகின்ற  என்னை  “  என்றார் . இப்பெரும்  பிழையைத்  திருவுளங் கொண்டு  கைவிடலாகாதென்பது   வேண்டுகோளாகும்  .

                 இதன்கண்  ,  “தீப்புகு  விட்டிலிற்  சின்மொழியாரிற்  பன்னாள்  விழுகின்ற  என்னை  “ அது  பற்றிக்  கைவிடாமற்  காத்தருள  வேண்டுமென்று  கூறப்பட்டிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவா றறிக .

                                       *********************************************

பாடல்: 6 .

மறுத்தனன்  யானுன்  அருளறி  யாமையில்   என்மணியே

வெறுத்தெனை  நீவிட்  டிடுதிகண்  டாய்வினை  யின்றொகுதி

ஒறுத்தெனை  யாண்டுகொள்  உத்தர  கோசமங்  கக்கரசே

பொறுப்பரன்  றேபெரி  யோர்சிறு  நாய்கள்தம்  பொய்யினையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  கருணை  காரணமாக  வழி  மறித்து  அருளமுதூட்டவும்  மறுத்துவிடலானேன்  என்று  இரங்கிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  மறுத்ததற்குக்  காரணங் கூறி அப்பிழையைப்  பொருத்தருள  வேண்டுமென்று  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-   என்  மணியே  =  என்  மாணிக்கமணியே  ,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே,

யான்  அறியாமையில்  உன்  அருள்  மறுத்தனன்  =  யான்  அறிவின்மையால்  நீ  ஊட்டிய  அருளமுதத்தைஉண்ண  மறுத்துவிட்டேன்,

என்னை  நீ  வெறுத்து  விட்டுடுதி  =  அது  குறித்து  அடியேனை  நீ  வெறுத்துக்  கைவிட்டு  விடுவாயோ?(விடலாகாது) ,

வினையின்  தொகுதி  ஒறுத்து  என்னை  ஆண்டுகொள்   =   கன்மக்குழுவைக்  கடிந்து அடியேனை  ஆட்கொண்டு  அருள்வாயாக ,

 பெரியார்  சிறு  நாய்கள்  தம்  பொய்யினைப்  பொறுப்பர்  அன்றே  =  பெரியராயினார்  இழிந்த  நாய்களைப்  போன்ற  சிறியவர்  பொய்மையைப்  பொறுத்தருளுவாரன்றோ ?  என்பது .

விளக்கவுரை :-  இம்மை  வாழ்க்கைக்குரிய  மணி , பொன் , நெல் , முதலிய  பலவகைப்  பொருள்களுள்ளும்    மணி  சிறந்ததாகலின்  , அந் நிலையில்  வைத்து  இறைவனை  விளித்தது, அருளாரமுதத்தை   மறுத்துச் சேறலாற்  பெறத்தக்க  இவ்வுலகப்  பொருளும்   ஆக  அப்பெருமான்  விளங்குபவன்  என்னுங்  குறிப்புத்  தோன்றற்கென்க  . உலகத்தில்  அரிதிற்  பெறத்தக்க  ஒரு  சிறந்த  பொருள்  எளிதிற்  கிடைக்கும்  இயல்பினதாக  , அதனை  ஒருவன்  வெறுத்து விடுதற்குக்  காரணம்  , அப்பொருட்கண்  இன்று ; பெறுவோனிடத்து  அப் பொருளின்  அருமை   அறிதற்குரிய  நல்லறிவு  இன்மையே  யாகும் .  இவ்வுண்மை  தோன்றவே  “ மறுத்தனன்  யான்  உன்  அருளறியாமையால் “  என்றார்.  யான்  மறுத்தற்குக்  காரணம்  என்  அறியாமையாயின், அவ்வறியா மையை  வெறுத்தொழிக்க  வேண்டும்  அன்றி   அது  பற்றி  என்னை  வெறுத்துக்  கைவிடலாமா?  என்பார், “வெறுத்தென்னை  நீ  விட்டிடுதி”  என்றார் .  

                அரியாமையை  விளைவிப்பது  ஆணவ  மலம்  ஆதலானும்  , அவ்வாணவ  உறைப்புப்  பண்டை  தீவினையால்  வலியுற்றிருத்தலானும்  , அத்  தீவனை  பல்வேறு  வகையாகச்  செய்யப்பட்டுத்  தொகுதியாக  அமைந்திருத்தலானும்  அவ்வினைக்குழுவை  ஒறுத்து  அழித்து என்னை  ஆட்கொண்டருளின், நின்  அருளமுத நுகர்ச்சியில்  தலைப்பட்டு உய்வேன் என்பார் ,”வினையின்  தொகுதி  ஒறுத்தெனை  யாண்டுகொள்” என்றார். இனி,  “ஆண்டுகொள்  உத்தரகோசமங்கைக்கு  அரசே “  என்பதற்கு  “ஆண்டுகொண்ட  “  என  விரித்துப்  பொருள்  கோடலுமாம் . அங்ஙனம்  கொள்ளுங்கால்  , என் அறியாமையை  ஒழிக்க வேண்டியது   ஆட்கொண்ட  நினக்கு  இன்றியமையாததாகவும்  , என்னை  வெறுத்து  ஒழிக்கலாமா  வென்று  பொருள்  இயைபு  கொள்ளள்  வேண்டும்  .ஈற்றடியில்  முன்னர்க் கூறிய சிறப்புப்  பொருளை  உறுதிப்படுத்துப்  ‘பொறுப்பரன்றே  பெரியோர்  சிறு நாய்கள்  தம்  பொய்யினை யே  “ என உலகறிந்த தன்மையை யேற்றி முடித்தார்   . இது வேற்றுப்பொருள் வைப்பணியாகும் . பெரியோர்  இயல்பு  செயற்கரிய  செய்தல் என்பர் . அவ் வருஞ் செயல்களில் ஒன்று  சிறியோர்  செய்த பிழைகளைப்  பொறுத்தலாகும் . சிறுமையின்  இழிவு  தோன்றச்  “சிறு  நாய்கள்” என்றார்.  பொய் –  மனத்தால்  வஞ்சித்து  மொழியாற்  பிழைக்கூறிச்  செயலால்  மாறுபட  ஒழுகும்  தீயொழுக்கம் .

     இதன்கண், உன்  அருளமுதத்தை என்  அறியாமையால்  மறுத்தேன்  எனவும் , அதற்கு  மூல  காரணம்  என்  வினைக்குழு  எனவும்  , அவ்வினைக் குழுவை  ஒறுத்து ஆட்கொள்ளல் வேண்டுமெனவும் , அது பற்றி  என்னை வெறுத்துக்  கைவிடலாகாதெனவும் கூறப்பட்டிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                          **************************************

பாடல் :7 .

பொய்யவ  னேனைப்  பொருளென  வாண்டொன்று  பொத்திக்கொண்ட

மெய்யவ  னேவிட்  டிடுதிகண்  டாய்விட  முண்மிடற்று

மையவ  னேமன்னு  முத்தர  கோசமங்  கைக்கரசே

செய்யவ  னேசிவ  னேசிறி  யேன்பவந்  தீர்ப்பவனே .

கருத்துரை :- முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  அருளமுதை மறுத்தமைக்குக்  காரணம்  கூறிப்  பிழை  பொறுக்க  வேண்டிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அப்பிழையுடைமை  அறிந்தும் நின் அருட்பெருக்கால் அதனை மறைத்துக்  கொண்டனையாதலின்  , அது குறித்துக்  கைவிடல்  தகுமாவென  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார் .  

 பதவுரை :-  விடம்  உண் மிடற்று  மையவனே  =   நஞ்சத்தை  உண்ட  கண்டத்தின்கண்  கரிய  நிறத்தையுடையவனே  ,

மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு அரசே ,

செய்யவனே   =   சிவந்த  மேனியை யுடையவனே ,

சிவனே  =  இன்பவடிவினனே ,

சிறியேன்  பவம்  தீர்ப்பவனே  =  சிறியவனாகிய  என்  பிறப்பை ஒழிப்பவனே ,

பொய்யவனேனைப்  பொருள்  என  ஆண்டு  =  பொய்யொழுக்கம்  உடையவனாகிய  என்னை  ஒரு  பொருளாக  மதித்து  ஆண்டருளி,

ஒன்று  பொத்திக்கொண்ட  மெய்யவனே  =  ஒப்பற்றதாகிய  நின் அருட்பெருக்கால்  (என் பொய்மையை)   மறைத்து  என்னை  ஏற்றுக் கொண்ட  மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ?(விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  தேவர்  முதலிய யாவரும்  அஞ்சும்படி  யெழுத்த தீங்கு  பயக்கும்  கொடிய  நஞ்சைத் தான் உண்டு   நன்மை பயக்கும்  அமிழ்தத்தை   அவர்க்கு  அருளிக் காத்த  பெரும்  வண்மை  இறைவன்  பால்  உள்ளதென்பது  புராண கதை .”வார்ந்த  நஞ்சயின்று  வானோர்க்கமுதமீ வள்ளல்” என  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியருளியதுங் காண்க. இப்  பேரருட்டிறத்தை  உலகம்  அறிந்து  உய்தற்பொருட்டு  உண்ட  நஞ்சை  மிடற்றில்  அடக்கி  அடையாளமாக  அம் மிடறு  கரிய நிறமாகவுள்ளான்  என்பார் , “விடமுண்மிடற்று  மையவனே” என்றார். மை  –  கருமை . உயிர்த்தொகுதி களுக்கு  அச்சம்  நேர்ந்துழி , அவ்வச்சத்தைப்  போக்கி  அருள்  புரிதற்கு  அடையாளமாகக்  கண்டம்  கரியராயினரேயன்றி   அக்கரு  நிறம்   இயற்கையன் றென்பதும் , “தீவண்ணன்”, “செம்மேனியெம்மான்”  என்று  தமிழ் மறை  கூறியபடி  அப் பெருமான்  திருமேனி  செந்நிறமாகுமென்பதும்   தோன்றச்  “செய்யவனே” என்றார் .

           நோயுடை  யொருவற்கு  நோய்  நீக்கத்திற்கு  மருந்தும்  , அதன் பின் உடல்  நலத்திற்கு நல்ல  உணவும்  தரப்படுதல்  போல , நஞ்சு  முதலிய  வற்றால்  நேரும்  துன்பத்தை  யொழித்துத்  தன்  அருளமுதத்தால்  இன்புறுத்துபவன்  என்பது  புலனாக  “சிவனே” என்றார். சிவன்  –  இன்பஞ் செய்பவன்  .  அமுதம்  உண்ணும்  வேட்கை  மிக்க  தேவர்க்கு  இடையூறாகத்  தோன்றியது  நஞ்சமாதலின்  ,அதனையொழித்து  அவர்  வேண்டியதை அருளியது  போல  , நிந்திருவடி  இன்பம்  பெறும் அவா  மிக்க  எனக்குத்  தடையாகவுள்ளது  பிறவிப்பிணியாதலின்  , அதனை  யொழித்தருளும்  கடமையும்  , நின் பாலது  என்பார் , “ சிறியேன்  பவங்தீர்ப்பவனே “ என்றார் . பவம்  –  பிறப்பு  . சிறியேன் பொய்யொழுக்கம்  உடையேனாயினும்  , நீ  ஆட்கொண்டமையால்  நினக்கு  ஆளாதற்குரிய  தகுதி  படைத்துள்ளேன்  என்பார் , “ பொய்யவனேனைப்  பொருளென  ஆண்டு  “  என்றார் .                   ஒன்று  –  ஒப்பற்றதாகிய  திருவருள்  .  ஒன்றால் என்புழி  மூன்றாம்  வேற்றுமை  தொக்குநின்றது .

             பொய்யொழுக்கம்  உடைமையால்  தகுதி இல்லாத  என்னை  அஃது  உடையனவாகப்  பொருட்படுத்து  ஆட்  கொள்ளுங்கால்  ,புரையிருக்கப்  புண்  ஆற்றியது  போல  என்  பொய்மையை  அறவே  போக்காமல்   நின்  எல்லையற்ற  அருட்பெருக்கால்  அதனை  மறைத்து   ஏற்றுக் கொண்டனை  என்பார், “ஒன்று  பொத்திக்கொண்ட  “ என்றார்.  பொத்துதல்  –  மறைத்தல்  . “என்  சிறுமையை  நின்  பெருமையினாற்  பொறுப்பவனே  “  என்றாற்போ லென்க  . அங்ஙனம்  மறைக்கப்பட்ட  வினையெச்சமே  இப்பொய்யுலக  வாழ்க்கையில்  யான்  இன்னும்  இருத்தற்குக்  காரணமாயிற்று  என்பது  குறிப்பு . மறைக்கப்பட்ட  என்  பொய்மை  விளக்கின்  முன்  இருள்  போல  மெய்ப்பொருளாகிய  நின்  திருமுன்  கெட்டொழியுமாதலின்  என்னைக்  கைவிடலாகாதென்பார், “மெய்யவனே  விட்டிடுதி” என்றார் .  

              இனி,  ஒன்று  என்பதற்கு  ஒப்பற்றதாகிய  வீட்டு  நிலையெனப்  பொருள்  கொண்டு  , இரண்டாம்  உருபை  விரித்து அதனை  மறைத்துக்  கொண்ட  மெய்யவனே  என்று  கோடலுமாம் .  அங்ஙனங் கொள்ளுங்கால் , ஆட்கொண்டமையால்  ஆளாய  பயனை  அடைய  வேண்டியது  இன்றியமை யாததாகவும்  , அப்பயனாகிய  வீட்டு  நிலையை  யான்  எய்தவாறு  மறைத்த னையே  , எதனையும்  வஞ்சியாமல்  அருளும்  மெய்ப்பொருளாகிய  நினக்கு  வீட்டு  நிலையை  மறைத்தல்  தகுமா?  என்னும்  குறிப்புத் தோன்ற  , “ஒன்று  பொத்திக்கொண்ட  மெய்யவனே  “  என்றார் என்று  கருத்து  விரித்துக்  கொள்ளல்  வேண்டும்  .

                இதன்கண், “ஒன்று  பொத்திக்கொண்ட”  என்றதனால்  பிரபஞ்ச  வாதனை  தாக்குதல்  குறித்து  அடிகள்  வருந்தினா  ரென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                          ***************************************

பாடல் : 8 .

   தீர்க்கின்ற  வாறென்  பிழையைநின்  சீரரு  ளென்கொலென்று

  வேர்க்கின்ற  வென்னை  விடுதிகண்டாய்விர  வார்வெருவ

  ஆர்க்கின்ற  தார்விடை  யுத்தர  கோசமங்  கைக்கரசே     

  ஈர்க்கின்ற  வஞ்சொடச்  சம்வினை  யேனை  யிருதலையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  நின் அருட்பெருக்கால்  மறைக்கப்பட்ட  என்  பிழையைக்  கருதி  என்னைக்  கைவிடலாகாதென்று  வேண்டிய  அடிகள் ,இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  மறைப்பதற்கு  ஏதுவாக வுள்ள  கருணையினாலே  அதனை  அறவே  ஒழித்தருளல்  வேண்டுமெனவும்   அஃது  எவ்வாறு  ஆம்  என்று  அறியாமையால்  வருந்துகின்றேன்  எனவும்  விண்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-  விரவார்  வெருவ  ஆர்க்கின்ற  தார்  விடை  =  பகைவர்  அஞ்சுமாறு  ஒலிக்கின்ற  கிண்கிணி  மாலையனிந்த  காளையூர்தியை யுடைய  ,

உத்தரகோசமங்ககைக்கு   அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

வினையேனை  இருதலை  அஞ்சொடு  அச்சம்  ஈர்க்கின்ற   =   தீவினை யுடையேனாகிய  என்னை  இருபுறத்தும்  ஐம்புலன்களோடு  அச்சமும்  நின்று  இழுக்கின்றன  ஆதலின் ,

என் பிழையை  =   என் குற்றங்களை  ,

நின் சீர்  அருள்  =  நினது  சிறப்புமிக்க  அருட் குணம் ,

தீர்க்கின்றவாறு  எங்கொல் என்று  வேர்க்கின்ற  என்னை  =  ஒழிக்கின்றவிதம்  எவ்வாறு  என்று  அஞ்சுன்கிற  அடியேனை  ,

விடுதி  =  கை  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது.

விளக்கவுரை :-   விரவுதல்  –  கலத்தல் .  அதலின்  விரவார்  என்பது  உள்ளக்கலப்பு  இல்லாத பகைவரை  யுணர்த்தும்  , தீவினை  வயத்தால்  இறைவனை  எள்ளி  வெறுத்து நிற்பார் , இரைவனது  எருதூர்தியின்  கிண்கிணிமாலை  ஒலி கேட்ட  துணையானே  அஞ்சி  நடுங்குவார் என்பது  தோன்ற  “விரவார் வெருவ  ஆர்க்கின்ற  தார்விடை” என்றார் . தார்  –  கிண்கிணி மாலை .  இறைவனுக்கு  பகையென்றும்  ,நட்பென்றும்  இல்லை யாயினும்  , வினைவயத்தால்  வெறுப்புற்றுக்  கருதுவார்  நிலை  நோக்கி  , “விரவார்” எனப்பட்டனர்  . இறைவனை  வீரமிக்கவன்  எனவும்  மகாருத்திரன்  எனவும்  மறை  கூறும்  .

              ஐம்புல  அவாக்களின்  வயப்பட்டுத்  தாம்  துன்புறுதற்கு  ஏது  தம் பண்டைத்  தீவினையெனக்  கொண்டு   தம்மை  “வினையேனை” என்றார்.  இருதலை  –  இருபுறமும் .  உம்மை  தொக்கது . இருபுறமும் என்பது ஈண்டுத்  தமக்கு  முன்னிடத்தையும்  பின்னிடத்தையும்  உணர்த்தும் . ஈர்தல்  –  இழுத்தல் . இஃது  இரண்டற்கும்  ஒக்கும் . ஆதலின்  அஞ்சொடு  என்புழி, ஒடு  உடனிகழ்ச்சிப்  பொருட்டாயிற்று . அச்சத்தையும்  கடக்கும்  ஆற்றலுடையது . ஐம்புல  இன்பமாதலின்  ,”ஒரு வினையொடுச்சொல்  உயர்பின் வழித்தே” என்னும்  விதிப்படி “அஞ்சொடு” என ஒடு உருபு புணர்க்கப்பட்டதென்க.  அஞ்சு  –  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களுமாம் .

              இவை முன்னர்  ஈர்த்துச் செல்ல இவற்றால்  விளையும்  துன்பம் நோக்கிய   அச்சம்  பின்னர்  ஈர்ப்ப  இவ்விருதிறத்திற்கும்  இடைப்பட்டு  வருந்தலானேன் என்பார், “ இருதலை அஞ்சொடச்சம் ஈர்க்கின்ற” என்றார். ஈர்க்கின்றன  என்னும் முற்று  அன்சாரியை  கெட்டு  ஈர்க்கின்ற  என்றாயிற்று. இனி,  ஈர்க்கின்ற  என்பது  எதுகை  நோக்கி  ஈர்க்கின்ற  என்றாயிற்று எனக் கொண்டு  ஆர்வமும்  அச்சமும் இருபுறத்தும் நின்று  என்னை  அறுக்கின்றன என்று  பொருள்  கோடலுமாம் . ஈர்தல்  –  அறுத்தல் . எல்லையற்ற  ஆர்வத்தில்  உள்ளம் ஈடுபடுங்கால்  என்ன  துன்பம்  நேரிடுமோ  வென்னும்  அச்சம்  விளைதல்  இயல்பாதலின்  இங்ஙனம்  கூறினர் . ஆர்வமும்  அச்சமும்  என்னை  அலைப்ப அதனால்  விளையும்  குற்றங்களைக்  களைதற்கு  நிந் திருவருளையன்றி  வேறு  கருவியின்மையால்  அவ்வருள்  என்  பிழைக ளைக் களையு மாறும்  , அதற்குரிய  காலமும்  இன்னவென அறிந்து கொள்ள  இயலாமையால்  நடுங்குகின்றேன்  என்பார், “தீர்க்கின்றவாறென்  பிழையை  நின்  சீரருள்   என்கொலென்று  ,வேர்க்கின்ற  என்னை” என்றார். ஆண்டவன்  திருவருள் உயிர்களின்  குற்றங்களை ஒழிக்கவேண்டுமாயின்  , அஃது  எத்தகைய  தடையுமின்றி  ஒரு  கணப்பொழுதில்   நிகழத்தக்கதாகலின் இத்துணைத்தாழ்வைக்  கருதுங்கால்  வேறு  எவ்வாறு  தீர்க்க அவ்வருட்கு  உடன்பாடோ  என  ஐயுறுவார், “என்கொல்”  என்றார். வேர்த்தல்  –  அஞ்சுதல் . அது தெளிவுபெறாமையால்  உண்டாய  கலக்கத்தால்  நிகழ்வது .

      இதன்கண்,  “அஞ்சொடச்சம்  ஈர்க்கின்றன “  எனவும் , “என்பிழையை நின் சீரருள்  தீர்க்கின்ற  வாறு  எங்கொலோ”  எனவும்  கூறப்பட்டமையால்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                                   ***********************************

பாடல் : 9

இருதலைக்  கொள்ளியி  னுள்ளெறும்  பொத்து  நினைப்பிரிந்த

விரிதலை  யேனை  விடுதிகண்  டாய்வியன்  மூவுலகிக் 

கொருதலை  வாமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

பொருதலை  மூவிலை  வேல்வல  னேந்திப்  பொலிபவனே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  என்  பிழையைத்  திருவருள்  தீர்க்குமாறு  யாங்கனம்  என்று  அறியாமையால்  வருந்துகின்றேன் என்று  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  என்   பிழையை ஒழித்தற்குத்  திருவருள் துணைசெய்யவில்லையானால் , வேறுபோக்கிடனின்றிக்  கெட்டொழிய  நேருமே என்று  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- வியன் மூ  உலகுக்கு  ஒரு  தலைவா  =  மேல்  கீழ்  நடு  வென்னும்  பெரிய  மூன்று  உலகநளுக்கும்  ஒப்பற்ற  தலவனே ,

மன்னும்  உத்தர கோச மங்கைக்கரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே 

பொரு மூ இலை தலை வேல்  =  போர்செய்தற்குரிய  மூன்று  இலை  வடிவினவாகிய   நுனிகளையுடைய  சூலப்படையை  ,

வலன் ஏந்திப் பொலிபவனே   =   வலக்கையில்  ஏந்தித்  திகழ்கின்றவனே,

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு  ஒத்து  =  இரு புறத்தும் நெருப்பினையுடைய  ஒரு கொள்ளியின் உட்பகுதியில்  அகப்பட்ட  எறும்பைப்  போன்று  ,

நினைப்பிரிந்த விரி தலையேனை  =  நின்னை  விட்டு  அகன்ற  அலங்கோல  முடயேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- மூவுலகுக்கும்  என்புழி, முற்றும்மை  தொக்கு  நின்றது .    வியன்  –  பெருமை . உலகம்  மூன்றின் ஒரு  சிறு  கூறும்  விலக்கப்படாமல்  முழுதும்  என்றற்கு  ‘வியன்’  என்னும்  அடை  புணர்க்கப்பட்டது என்க . ஈடும்  எடுப்பும்  இல்லாத  தனித்தலைமை குறித்து “ ஒரு  தலைவா “என்றார்.  அடுத்து  “உத்தரகோசமங்கைக்கு  அரசே” என்றதனால்  மூன்று  உலகங்களுக்கும்  தனிபெரும்  தலைவனா கிய இறைவன் , உத்தரகோசமங்கை  என்னும்  திருத்தலத்தை  இராசதானித்தலைநகரமாகக்  கொண்டு  எழுந்தருளினான்  என்பது பெறப்படும் 

            பொருதல்  –  போர்செய்தல் . முத்தலை வேல்  –  சூலப்படை யாகும், இலை  வடிவினவாகிய  மூன்று   நுனிகளையுடைமையால்  ,வடமொழி  மறையில்  திருவுத்திரம்  என்னும்  பகுதியின்  தொடக்கத்தில்  இறைவனுடைய  சூலப்படைக்கு   வணக்கங்கூறப்பட்டிருத்தலால்  அதன் பெருமை அறியப்படும் . வலன் ஏந்தி –  வலக்கையில்  தாங்கி  எனவும் , வெற்றி  குறித்துத்  தாங்கி  எனவும் பொருள்படும் .  வலம்  –  வலன் ; வலப்பக்கமும்  வெற்றியுமாம் . எல்லாவுலகங்களுக்கும்   தலைவனாய்  உத்தரகோசமங்கைப் பதியில் அரசாய்  வீற்றிருக்கும்  ஆண்டவன்  சூலப்படையுடன்  விளங்கு கின்றவன்  என்றதனால் , தன்  ஆட்சியுட்பட்ட  மெய்யன்பரைக்  காமம்  முதலிய  பகைவருக்கம்   அணுகாமால் பதுகாப்பவன்  என்னுங்     கருத்துக்  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறு  அறிக .

             இருதலைக் கொள்ளி  –  இரண்டு  பக்கமும்  நெருப்புப்பற்றி யெரியும்  கொள்ளிக்கட்டை , ஒரு  கட்டையின்  இருபக்கங்களிலும்   தீப்பற்றியெரியுங்கால்  அக்கட்டையின் நடுவிடத்தில் தங்கிய  எறும்பு  இருமருங்கும்  சென்று  உய்ந்து போதற்கு  இயலாமல்  கெட்டொழிதல்  போல , இவ்வுலக  வாழ்க்கையை வெறுத்தும் நின்னை  அணுக இயலாமலும்  வருந்தி உழல்கின்றேன் என்பார், “இருதலைக்கொள்ளியினுள்ளெறும் பொத்து” என்றார். கொள்ளி நடுவண் , கொள்ளிமேல்  என்னாது  கொள்ளியுள்  என்றது  ஒரு  நயம் .

                கொள்ளி நடுவிடத்துள்ள  எறும்பு  , அங்கும்  இங்கும்  சென்று  போக்கு  வழி  பெறாமல்  உழன்று  அக்கொள்ளிக்குப்  பற்றுக்கோடாக வுள்ள  தொன்றைத்  தானும்  பற்றி ஒருவாறு  உய்யவுங்கூடும்  . அக்கொள்ளி  நிலத்திற் கிடந்தால் அவ்வெறும்பும் நிலத்தில் இறங்கலாம்  அஃது ஒன்றிற்  சார்த்தப்பட்டிருந்தால்   அச்சார்ச்சிப் பொருளைத்  தானும்  பற்றி  உய்யலாம் . அக்கொள்ளி  உட்டுளையுடைய  மூங்கிலாக  இருக்க , முன்னரே அதன்  துளையுள்  ஓர்  எறும்பு  நுழைந்திருக்குமாயின்  , இருபுறமும்  நெருப்பு  எரியுங்கால்  அதனுட்பட்ட  அவ்வெறும்புக்கு  எவ்வாற்றானும்  உய்யும்  நெறி  இன்றென்பது  கண்கூடாகக்  காணத் தக்கது . இந் நயம்  கருதியே  கொள்ளி  மேல்  நடு  என்னாது  “இருதலைக்கொள்ளியின் உள்  எறும்பொத்து .” என்றார் என்க . இதனால்  அடிகளின்  ஆராய்ச்சி  நுண்கருத்துப்  புலனாதல்  அறிந்து இன்புறத்தக் கது  . இருதலைக்கொள்ளியின்  ஒருதலை  இவ்வுலக வாழ்க்கையின்  வெறுப்பிற்கும்  ,மற்றொரு  தலை  ஆண்டவனது  பிரிவுக்கும்  உவமம்  ஆயின. ஆண்டவனது  பிரிவினால்  உண்டாய  சூடும்  ஆற்றவொண் ணா தது  என்பது  கருத்து.  விரிதலை  – துன்ப  நிகழ்ச்சியினால் உண்டாம் அலங்கோலத்தின்   அறிகுறியாகும் . இங்ஙனம்  உய்யும்  நெறி  யறியாமல்  தவிக்கின்ற  நிலையில்  என்னைக்  கைவிடலாகாதென்பது  வேண்டுகோள்  விண்ணப்பமாகும் .

             இதன்கண், “இருதலைக்கொள்ளியின்  உள்ளெறும்பு  ஒத்த விரிதலையேனை “ என்றதனால்  உலக  வாழ்க்கையில்  வெறுப்புப்  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                              ********************************

பாடல்:10 .

பொலிகின்ற  நின்றாள்  புகுதப்பெற்  றாக்கையைப்   போக்கப்பெற்று

மெலிகின்ற  வென்னை  விடுதிகண்  டாயளி  தேர்விளரி

ஒலிநின்ற பூம்பொழில்  உத்தர  கோசமங்  கைக்கரசே

வலிநின்ற  திண்சிலை  யாலெரித்  தாய்புர  மாறுபட்டே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  திருவருள் துணை செய்யவில் லையானால்  உய்யும்  நெறி  பெறாமல் கெட்டொழிய  நேருமே  என்று  இரங்கிக்கூறிய  அடிகள் ,இத்திருப்பாட்டில்    அவ்வருள்   வடிவமாகவுள்ள  திருவடிக்கட்  புகல்  அடைந்தும் ,பிறவிப்பயனை யெய்தப்பெறாமல்  வருந்தலானேன் என்று இரங்குகின்றார்.

பதவுரை :- அளி தேர் விளரி ஒலி நின்ற பூ பொழில்  =   வண்டுகள்  பயின்று  பாடும்  விளரி என்னும் இசை நிலை பெற்ற பூஞ் சோலைகளையுடைய ,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு அரசே ,

புரம்  மாறுபட்டு  =  முப்புரங்களையும்  பகைத்து ,

வலி நின்ற திண் சிலையால்  எரித்தாய் =  வன்மை மிக்க  உறுதியான  மேருவாகிய  வில்லினால்  அழித்தவனே ,

பொலிகின்ற  நின்  தாள் புகுதப்பெற்றும்   =   விளங்குகின்ற  நின் திருவடிக்கண் அடைக்கலமாக எய்தப்பெற்றும்  ,

ஆக்கையைப் போக்கப்பெற்று  =  ஊனடைந்த  உடம்பின் பிறவியை வீணாக்கி  ,

மெலிகின்ற  என்னை  =   வருந்துகின்ற  சிறியேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  விளரி  –  எழுவகை இசைகளுள்  ஒன்று .  தேர்தல்  –  நாடோறும்  பயின்று  ஒலித்தல் . மலர்களில்  தேன்  மிகுதியாக  விளைகின்றமையால்  வண்டுகள் நிரம்ப வுண்டு  களித்துப்  பாடினவென்பது . இதனால்  உத்தரகோசமங்கைப் பதியை  அணுகப்  பெற்ற  மெய்யன்பரனைவரும்  சிவானந்தத் தேனுண்டு  ஆண்டவனை  மனம்  உருகிப்  பாடி  இன்புறுவர்  என்னும்  குறிப்புப் புலனாதலறிக .      புரம்  –  திரிபுரம் . திரிபுரத்துள்ள  அசுரர்  தேவர்  முதலியோர்க்குச்  செய்த தீங்குகளைக்  கண்டு  அருள்  வள்ளலாகிய  இறைவன்  மேருமலையை  வில்லாக  வளைத்து  , அம்பெய்து அழித்தனர்  என்பது  புராணகதை . மலையை  வில்லாக  வளைத்த  செய்தி  இறைவனது பேராற்றற்கு  எடுத்துக்காட்டாகும் .  “வலி நின்ற  திண்சிலை “ என்புழி, வலியும்  திண்மையும்  மலையாகிய  வில்லைக் குறிக்கும் அடைமொழிகளாகும் .  மாறுபடுதல்  இறைவனுக்கு  இயற்கையன்று; புரம் எரித்தற்காக  அம்மாறுபாட்டை யேற்றுக்கொண்டான்  என்பது  கருத்து .  

               ஞானாசிரியனாக  எழுந்தருளிய ஞான்று  ஆண்டவனின்  திருவடிக்காட்சி  அடிகள்  உள்ளத்தைக்  கவர்ந்ததாகலின்  ,”பொலிகின்ற நின்றாள்” என்றார் . நிகழ் காலத்தாற்  கூறியது , திருவடி விளக்கம் இடையறாது  தம்  உள்ளத்தில் நிலை  பெற்றிறுத்தல் குறித்தென்பது .  புகுதப் பெறுதல்  –  அடைக்கலமாக அடையப்பெறுதல் . உம்மை  விகரத்தாற்  தொக்கது . ஆக்கை  ஆகுபெயரால்  பிறப்பை  உணர்த்தும் . ஆண்டவன் திருவடியைப்  புகலாகச்  சார்ந்தார்க்கு  ஊனடைந்த உடம்பின்  பிறவியால்  எய்தக்கடவ உறுதிப்பயன் எளிதாமென்று  கூறுவர்  பெரியார் . யான்  அங்ஙனம்  புகுதப்பெற்றும் , பிறவிப்பய னாகிய வீட்டின்பத்தை அடையாமல் வருந்தலானேன்  என்பார் , “ ஆக்கையைப்  போக்கப்பெற்று  மெலிகின்ற  என்னை “ என்றார் . இனி, “போக்கப்பெற்றும்” எனக்கொண்டு  ஆக்கை  என்பதற்கு  உடலைப்பற்றி அவா எனப்பொருள்கொண்டு  ,நின் திருவடியைப் புகலாகப் பெற்றும் உடம்பைப்பற்றிய அவாவை  யொழித்தும்  வீட்டின்பப் பேறு இல்லாமல் வருந்தலானேன்  எனக் கோடலுமாம் . இங்ஙனம் ஆதரவற்ற நிலையில் வருந்தும் என்னை  விட்டுவிடலாகாதென்பது  விண்ணப்பமென்க .

           இதன்கண்,  “பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற்று  ஆக்கையைப் போக்கப்பெற்று , மெலிகின்றேன்” என்றதனால்  உலக  வாழ்க்கையில்  பற்றறுதி பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .  

                                                ***********************************

பாடல் :11 .

மாறுபட்  டஞ்சென்னை  வஞ்சிப்ப  யான்உன்  மணிமலர்த்தாள்

வேறுபட்  டேனை  விடுதிகண்  டாய்வினை  யேன்மனத்தே 

ஊறுமட்  டேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

நீறுபட்  டேயொளி  காட்டும்பொன்  மேனி  நெடுந்தகையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிகட்  புகலடைந்தும் அழிவில்  இன்பப்பேறு எய்தப்பெறாமை  குறித்து வருந்திய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  புகலடையப்பட்ட  திருவடிக்கண்  மாறுபட்டமைக்கு   ஏதுக்கூறி காத்தருள  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .  

பதவுரை :- வினையேன்  மனத்தே  ஊறும்  மட்டே  =  தீவினையுடையேன்  ஆகிய  எனது  நெஞ்சத்தில்  ஊறும்  தேனே ,

மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

நீறு  பட்டு  ஒளிகாட்டும்   =  திருநீறு  பூசப்பட்டு  வெண்ணிற  ஒளி  விளங்கும்  ,

பொன்மேனி  நெடுந்தகையோ  =  பொன் போன்ற  திருமேனியினை யுடைய   பெரியோனே ,

அஞ்சு  மாறுபட்டு  என்னை  வஞ்சிப்ப  =  ஐம்புலன்களும்   முரண்பட்டுச்  சிறியேனை  வஞ்சித்தமையால் ,

யான்  உன் மணிமலர்த்தாள்  வேறுபட்டேனை   =   நின் அழகிய  மலர்போன்ற  திருவடித் தொண்டிற்கு  வேறுபட்டு  ஒழுகும்  சிறியேனாகிய  என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ?  (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-   மட்டு  –  தேன் ; இறைவன்  ஆகிய  தேன்  ஊற்றெடுக்கும்  இடம்  தவத்தால்  தூய்மையுடைய  மெய்யன்பரது உள்ளம்  ஆகும் . “உருகு  மனத்து அடியவர்கட்கு   ஊறுந்தேனை  “ என்பது  தமிழ் மறை .அங்ஙனம்  வினைமாசு  நீங்கிய  இடத்தில் ஊறும்  தீந்தேன் தீவினையுடைய  என்  உள்ளத்தும்  ஊறுவதாகும்  என்று  அடிகள் கூறியது , ஆண்டவனது அளப்பரிய  அருட் குணத்தைப்  புலப்படுத்துவதாகும் . ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிய பொழுது அடிகளுக்குக்  காட்சிப்பட்ட  திருமேனியின்  நிறம்  பொன்னிறமாகும் .  ஆதலின்,  “பொன்மேனி” எனவும்  , அத்திருமேனி  திருவெண்ணீற்றுப்  பூச்சினால்  வெண்ணிற  ஒளி  திகழப்  பெற்றிருந்தமை யின் , “நீறுபட்டு  ஒளிகாட்டும் “  எனவும்  கூறினார் .அடிகளுக்கு  ஆண்டவன்  சிந்தைக்கு  இனியனாய்க்  கண்ணுக்கும்  இனிய  காட்சி  தந்தமையின் , “மனத்து  ஊறும்  மட்டு “ எனவும் ,”பொன்மேனி”  எனவும்  கூறியருளினார்  . இதனால் , அகப்புறக்  கரணங்கள் ஈடுபட்டமை  குறிப்பிற்  புலனாயவாறு  அறிக .

                நெடுந்தகை –  பெரியோன்  என்னும்  பொருட்டு . சிறியவர்  செய்த  பிழைகளைப்  பொறுப்பது  பெரியோர்  கடமையாதலின்  , தம் பிழையைப்  பொறுக்கவேண்டுமென்பது  குறிப்பிற்  புலப்பட  இங்ஙனம்  அழைப்பாராயினர் .  அஞ்சு  –  ஐந்து ;  ஆகுபெயரால் ஐம்புலன்களையும்   குறிக்கும் . ஐம்புலன்களும்  சிவாகாரமாக  நிகழ்தல்  நேரிதாகும் . உலகியற் பொருள்களாக  நிகழ்தல்   அதற்கு  மாறுபாடாகும்  .  “மாறிநின்றென்னை மயக்கிடும்  வஞ்சப்புலன் ஐந்தின் வழி “  என  அடிகள் பிறிதோரிடத்து கூறியதும்  காண்க. சிறந்த  மெய்யன்பராகிய   வரகுண பாண்டியற்குச்  சுவை , ஒளி, ஊறு , ஓசை , நாற்றம்  என்னும்  ஐம்புலநுகர்ச்சியும்  சிவாகாரமாக   நிகழ்ந்த  செய்தி  பட்டினத்து  அடிகள்  கூறியவற்றான்  அறியத்தக்கதென  முன்னர்க்  கூறினாம் . அங்ஙனம்  நிகழ்தலின்றி  உலகியல்  இன்பம்  நோக்கி  மகளிரைப்  பொருளாகக் கொண்டு  , “கண்டு கேட்டு உண்டு யிர்த்து  உற்றறியும்  ஐம்புலனும்  , ஒண்டோடி கண்ணேயுள” எனக்கோடல்   நேரிது  அன்றென்பார் , “மாறுபட்டஞ்சு  “ எனவும்  , இவ் வைம்புலன்களும்  சிவாகாரமாக  நிகழ்தற்குத்  தட்டு  இன்றாகவும், வஞ்சித்துப்  பிறழ்ந்து சேறல்  பற்றி, “என்னை  வஞ்சிப்ப”  எனவும்  கூறினர் . வஞ்சிப்ப  என்னும்  செயவென்  எச்சம்  காரணப்பொருட்டு .  

          ஆண்டவனே , புலன்கள்  என்னை  வஞ்சித்து உலக  வாழ்க்கையில்  ஈடுபடச்  செய்தமையால்  ,நின் திருவடித் தொண்டிற்கு  வேறு  படலானேன்  என்பார் , “யான்  உன்  மணிமலர்த்தாள்  வேறுபட்டேனை  “எனவும்  , அது  குறித்துச்  சிறியேனைக்  கை விடலாகாது  என்பார் , “ விடுதி கண்டாய்”  எனவுங்கூறுவாராயினர். “யான்  உன்  மணிமலர்த்  தாள் வேறுபட்டேனை “  என்புழி  வேறுபட்டேனை  யென்பதிலுள்ள   இரண்டனுருபைப்  பிரித்து ,யான்  என்பதனோடு  இயைத்து  , உருபு நோக்கி யான்  என்பது என்னென்றாக  ,என்னை  யெனக்கொண்டு  வேறுபட்டவனாகிய  என்னையென   இயைத்துப்  பொருள்  கூறப்பட்டது .பின்  வருவனவற்றிற்கும்  இஃதொக்கும் .

               இதன்கண் , “ மாறுபட்டஞ்சென்னை   வஞ்சிப்ப  யானுன்  மணிமலர்த்தாள்  வேறுபட்டேன்  “  என்று  உலக  வாழ்க்கையில்  வெறுப்புத்  தோன்றக்  கூறப்பட்டமையால் , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                            *****************************************

பாடல்: 12 .

நெடுந்தகை  நீயென்னை  ஆட்கொள்ள  யான்ஐம் புலன்கள்கொண்டு

விடுந்தகை  யேனை  விடுதிகண்  டாய்விர  வார்வெருவ

அடுந்தகை  வேல்வல  உத்தர  கோசமங்   கைக்கரசே

கடுந்தகை  யேன்உண்ணும்    தெண்ணீர்  அமுதப்  பெருங்கடலே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடித் தொண்டில்  தாம்  மாறுபட்டதற்கு  ஏது, தம்  ஐம்புலங்களின்  வஞ்சகச்செயல்   ஆகுமெனக்  கூறிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அவ்வஞ்சகச்  செயலை அறிந்தும் , அப்புலன்களைப்  பற்றி   நின்று  ஆண்டவன்  திருத்தொண்டைக்  கைவிடக்   கருதுகின்றேனே   எவ்வாறு  உய்தி  பெறுவேன்  என்று  கவல்கின்றார் .

பதவுரை :-  விரவார்  வெருவ  =  பகைவர்  அஞ்ச  ,

அடும் தகை  வேல் வல  =  அவரை  அழிக்கும்  தன்மையினையுடைய  சூலப்படையில்  வல்ல ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே ,

கடும் தகையேன் உண்ணும்  =  கொடுந்தன்மையுடையேனாகிய  யான்  பருகுதற்குரிய ,

தெள்நீர்  அமுதம் பெருங்கடலே  =  தெளிந்த தன்மையினையுடைய  அமிர்தமயமான  பெரிய  கடலாகவுள்ளவனே  ,

நெடுந்தகை நீ  =  பேரருட்  குணமுடைய நீ,

என்னை  ஆட்கொள்ள  =  சிறியேனை  ஆளாகக் கொள்ளவும் ,

யான்  ஐம்புலன்கள் கொண்டு  விடுந்தகையேனை  =  ஐம்புல இன்பங்களைப்  பொருளாகக் கொண்டு  நின் சார்பைக்  கைவிடும்  இயல்பினன்  ஆகிய என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  ஐம்புலப் பகையை  வேரறக்  களையும்  ஆற்றல்  எனக்கு  இல்லையாயினும்  , என்னை  ஆட்கொண்ட  நினக்கு  எத்துணை  வலிய  பகைகளையும்  களையும்  ஆற்றல்  நிரம்ப உண்டு என்பார், “விரவர் வெருவ அடுந்தகை வேல் வல “ என்றார் .வேல்  –  முத்தலை வேல் ; சூலப்படை . இறைவன்  தனக்குப்  பகையென்றும்  நட்பென்றும்  இல்லையாயினும்  , தன் அன்பர்க்கு  வரும்  பகை  களைதற்காகவே  சூலப்படையை என்றும்  திருக் கையில்  ஏந்தி இருப்பன்  என்பது .  இதனாலே சூலபாணி  என்று  மறைகளிற்  பாராட்டப்பட்டுள்ளான்  .  இதனால் ,காம  முதலிய பகை வருக்கம் எல்லாம் , இறைவனை அடைக்கலம்  புகுந்த மெய்யன்பரை அணுகுதற்கு அஞ்சும் என்பது குறிப்பிற்  புலப்படும்   என்க .

                  கடுந்தகை  என்பது கொடுங்குணம்  என்று  பொருள்படும் . அடிகள் தம் கொடுமைக் குணம்  தணிதற்கு ஆண்டவனது அருளமுதம் இன்றியமையாத தென்பார் , “உன்ணும்  அமுதப் பெருங்கடலே “என்றார். ஆண்டவனது  அருள் அமுதம் ஒரு சிறிது நுகர  நேரினும்  , உயிரைப்பற்றி  நிற்கும்  தீய  குணம்  ஒழிவு  எய்துவதாகும் “அமுதக்கடலே” என்றது தம்பால் உள்ள  கொடுமைக் குணம்   அளவின்  மிக்கதெனவும் , அத்துணையும்  ஒழிவு அடைதற்கு  ஆண்டவனது  அருளமுதம்  அதற்குத்தகப்  பெருக்கமாக  இருக்கவேண்டுமெனவும்  அடிகள் கருதியமையான் என்பது . அருளமுதத்தில்  ஒரு சிறு துளி பெறினும் தம் தீமை ஒழிந்துபோம் என்னும் உண்மை யுணர்ந்தும் , அதனைக்  கடல் அளவாகக்  குறித்தது , ஆண்டவனுடைய  அளப்பரிய  கருணைப்பெருக்கத்தையும் ,அதனை  மிகுதியாகப் பெறுவதில் தமக்குள்ள  பேரார்வத்தையும் புலப்படுத்தற்கு  என்க .  

                    மழை சுருங்கிய  காலத்துப்  பெளதிகக் கடல் தன் வளம் குறைவு  படுவதாகும் , “நெடுங்கடலுந்தன்  நீர்மை  குன்றும்  தடிந்தெழிலி  , தான்  நல்காதாகி விடின் “ என்பது பொருளுரை . ஆண்டவனது  அருளமுதம் வருவாயை எதிர்  பாராமலும் , அன்பர்கள் எத்துணை முகந்து கொள்ளினும் குறைபடாமலும் ,எக்காலத்தும் ஒரே படித்தாக  நிரம்பி  நிற்றல்  பற்றி  அதனை  அமுதக்கடல்  என்னாது  “அமுதப் பெருங்கடல் “ என்றார். அருளமுதத்திற்குப்  பிறிதொன்றின் சார்பு  இன்றி  இயற்கையிலே  தெளிவும்  தூய்மையும் உண்மையானும் , தன்னை  உண்டாரை  ஞானத் தெளிவுறுத்தும் தன்மையானும்  “தெண்ணீர்” என்னும் அடை  புணர்க்கப்பட்டது . இனி,  ஈற்றடியில்  வெம்மை  மிகுதியால்  நீர்வேட்கையுடையேனாகிய  யான்  உண்ணுதற்குக்  கிடைத்த அமுதம் போன்ற  தெளிந்த நீர்ப்  பெருங்கடலே  என்னும்  ஒரு  தொனிப்பொருள்  தோன்றுதலும்  அறிக .  

               நெடுந்தகை  என்பது  ஆகுபெயராய்ப்  பெருமைக் குணம்   உடையானைக்  குறிக்கும் .  ஈண்டுப்  பெருமைக் குணமாவது  ,சிறியோர்  செய்த  பிழைகளைப்  பொறுத்து ஆட்கொள்ளும்  பேரருளுடைமையாகும் . என்  தகுதி இன்மை அறிந்தும்  நின் பேரருள் காரணமாகச்  சிறியேனை  ஆட்கொண்டனை என்பார்,  “நெடுந்தகை  நீ என்னை  யாட்கொள்ள  “ எனவும் அங்ஙனம்  ஆட்கொள்ளவும்  அவ்வருமை  அறியாமல்  என்னைக்  கீழ்நிலைப் படுத்தும் ஐம்புல இன்பங்களைப்  பொருளாகக்  கடைப்பிடித்து ,நன்னிலைப் படுத்தற்குரிய  நின்  சார்பை  விடலானேன்  என்பார் . “யான் ஐம்புலன்கள்  கொண்டு  விடுந்தகையேனை “  எனவும்  கூறினார் . யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை என்பதை முன்னைத்  திருப்பாட்டில் கூறியாங்குக் கூறி  முடித்துக் கொள்க . ஆட்கொள்ளவும்  என்புழி  உம்மை தொக்கது . ஐம்புலன்கள் கொண்டு என்றதனால் விடுதற்குச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது . ஒருவனை ஆள்வார்  இல்லாத  நிலையில் அவன்  வேறு போக்கின்றி  மனம்  போன  வழியிற்  சென்று  கேடு  அடைதலும்  கூடும்  . அங்ஙனம்  இன்றி  ஆண்டவன்  தன் அருட்கு  இலக்காகத்  தம்மை வலிந்து ஆட்கொண்டும், தாம்  ஐம்புல  இன்பங்களைப்பற்றி  அவ்வருட் பயனை  இழக்கும் நிலையில் இருக்க  நேர்ந்ததே என வருந்தி , அது  காரணமாக  ஆண்டவன்  கை விட்டு  விடுவானோ  என அஞ்சி  ,”விடுதி கண்டாய்” என்றார் .

             இதன்கண்,  “ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேன்” என்றதனால்  உலக  வாழ்க்கையில் உள்ள  பற்றறுதி பெறப்படுதலின்  ,பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .  

                                           ***********************************

பாடல் :13 .

கடலினுள்  நாய்நக்கி  யாங்குன்  கருணைக்  கடலின்உள்ளம்

விடலரி  யேனை  விடுதிகண்  டாய்விடல்  இல்லடியார் 

உடல் இல  மேமன்னும்  உதர  கோசமங்  கைக்கரசே

மடலின்மட்  டேமணி  யேயமு  தேயென்  மதுவெள்ளமே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  புலன்களைப்பற்றி  நின்று  ஆண்டவனுக்குப்  பணிசெய்து  ஒழுகுதலைக்  கைவிடக்கருதும் தம் இயல்பு  குறித்து வருந்திய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  கருதிய  நிலையி லும்  ஆண்டவன்  தன்  கருணைப்  பெருக்கைக்  கடல் போலப்  புலப்படுத்தி னனாக  அதனை  ஆரப்பருகாமல்  அருவருத்து  வாய்வைக்கலானேனே  என்  செய்வேன்  என  இரங்கி  விண்ணப்பஞ்  செய்கின்றார் .

பதவுரை  :- விடல் இல் அடியார்  =  விடுதலை  இன்றிப்  பற்றி   நிற்கும்  மெய்யடியாரது  ,

உடல்  இலமே  மன்னும்  =  உடலையே  திருக்கோயிலாகக்  கொண்டு   அதன்  கண்ணே  நிலைபெற்று   வீற்றிறுக்கும்  ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

மடலின்  மட்டே  =  மலர்  இதழில்  உண்டாகும்  தேனே ,

மணியே  அமுதே  =  மாணிக்கமணியே   அமிழ்தமே  ,

என் மதுவெள்ளமே  =  எனக்குக்  கிடைத்த  கட்பெருக்கே ,

கடலின்  உள்  நாய்  நக்கி  யாங்கு  =  கடலின்  கண்ணேயுள்ள  நீரை  நாய்  நக்கி  உண்பது  போல ,

உன் கருணைக் கடலின்  உள்ளம்  விடல்  அரியேனை  =   நினது  அருட் பெருங்கடலின் கண்ணே உள்ளத்தை  விரும்பிச் செல்லவிடாத  சிறியேனை ,

விடுதி =  கை விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  ஓரொருகால்  விட்டும்  தொட்டும்  பற்றிநிற்கும்  இடையாய  அன்பர்  போலாது , இடையறாத  தியான  உணர்வினால்  தம்  உள்ளத்தே  நழுவ விடாது  பற்றியொழுகும்  தலையாய  அன்பர்  என்பார், “விடலில்லடியார்  “ என்றார் . “நாயகன்  சேவடி  தைவரு  சிந்தையும்  “  என்பது திருத்தொண்டர்  மாக்கதை  . முறுகிய  அன்பினாற்   பிணிக்கப்பட்டு  மெய்யன்பர்  நெஞ்சத்  தாமரையில்  இறைவன்  எழுந்தருளி  இருத்தலின்  , அவர்  தம்  நல்லுடல்  இறைவனுக்கு  உகந்த திருக்கோயில்  ஆகும்  என்பார் ,   “உடல்  இலமே  மன்னும் “  என்றார் . “வினைபடும்  உடல்  நீ  புகுத்து  நின்றமையால்  விழுமிய விமான மாயினதே  “  என்பது திருவிசைப்பா  .  “இலமே” என்புழி  ஏகாரத்தைப்  பிரித்து உடல்  என்பதனோடு  இயைத்து  இரண்டனுருபை  விரித்துக் கொள்க .

                    ஆண்டவனைப்  பற்றிய  அன்பு  முதிரப்பெறுதல்  வினைமாசு  நீங்கிய  நிலையில் ஆதலின் , மாசு  நீங்கிய  மெய்யன்பரது நல்லுடல்  மிகவும்  தூயதாகும் என்ப . நெஞ்சத்தைத்  தூய்மைப்படுத்தும் நெறியைக் குறித்துப் பட்டணத்துப் பிள்ளையார் “ அன்புகொடு மெழுகி அருள் விளக்கேற்றித்  , துன்ப இருளைத்  துரந்து முன்புற  ,மெய்யெனும்  விதானம் விரிந்து நொய்ய  , கீழ்மையில்  தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் , பாழறை  யுனக்குப்  பள்ளியறையாக்கிச் , சிந்தைத்  தாமரைச்  செழுமலர்ப்  பூந்தவிசு  , எந்தை  நீ  இருக்க  இட்டனன்”  என்பர் . “சிந்தையே கோயில் கொண்ட வெம் பெருமான்  திருப்பெருந்துறையுறை சிவனே  , எந்தையே யீசாவுடலிடங் கொண்டாய் “ என்று  அடிகள் பிறிதோரிடத்து அருளிய திருப்பாட்டில்  , நெஞ்சத்தை த்  திருக்கோயிலாகவும் ,உடலை அக்கோயில் அமைத்தற்கு உரிய நல்லிடனாகவும் கொண்டு கூறியதும் ஈண்டு  நினைக்கத்தக்கது .

                  மடல்  –  பூ இதழ் . மட்டு –  தேன். ஈக்களின்  எச்சிலோடு  அமைக்கப்படும்  இறாலில்  தொகுக்கும்  தேன்  போலாது , மலர்  இதழில்  உண்டாம்  தேன்  தூய்மை மிக்கதென்பது அறியத்தக்கது .தன்  திருவடி நீழலில்  இயைந்து  நுகர்வார்க்குத்  தூய்மையும்  இனிமையும்  உடைய  வீட்டின்பம்  அருளுதலின்  ,” மடலின் மட்டே” எனவும்  , அவ்வின்பம்  அருளுதற்குத்  தான்  மேற்கொண்ட  திருவுருவம்  செம்மை  மிக்க  ஒளியுடைய  ஞானாசிரியத்  திருக்கோலம்  ஆதலின் , “மணியே “ எனவும்  கூறினார் . “கோகழி  யாண்ட  குருமணிதன் தாள் வாழ்க “ என்பதும் ஈண்டு  நினைக்கத்தக்கது . தன்னையடைந்தாரை  மரணம்  இலாப் பெருவாழ்வில்  இருத்தி இன்புறுத்தலின்  , “அமுதே” என்றார் .அமிர்தம்  என்பது ஈண்டு  அழி வின்மை  என்னும்  பொருட்டு . “ எனை நானென் பதறியேன் பகலிரவாவதும் அறியேன் “ என்னும்  நிலையில் இவ்வுலகை  மறந்து சிவானந்தக்  களிப்பில்  தோய்ந்திருக்கச் செய்தமையின்  , “என் மது வெள்ளமே “  என்றார் . உலகத்தில் “தேட்கடுப்பன்ன  நாட்படு  தேறல்”  சிறிது  உண்ணினும்  களிப்பு  மிக வுண்டாம் . இறைவனாகிய  மதுச் சிறிதாக இன்றி வெள்ளமாகவும் உள்ளது ; முன்னைப்  பழமைக்கும்  பழமையாயது எனின் , அதன்  விளைவாகிய  களிப்பிற்கு  எல்லையின்று  என்பது அறியத்தக்கது .

         நல்ல  நீர்  எத்துனை  மிகுதியாக  இருப்பினும்  நாய்  உண்ணுங்கால் , நக்கிச் சிறிது சிறிதாக உண்ணும் அல்லது வேண்டுமளவு விரைந்து அதனாற்  பருக இயலாது . இவ்வியல்பு  தூய  நீர்ப்  பெருக்கிலாயின்  உவர்ப்புச்  சுவையுள்ள  கடல்   நீரை வேறு  போக்கின்றி உண்ண நேரின்  , விடாய்  மிகுதியால்  நீரில்  வாய் வைத்தும் , உவர்ப்பு  மிகுதியால் அருவருத்தும்  நக்கியுண்ணும்  என்பது . இது  கருதியே  “கடலினுள்  நாய்  நக்கியாங்கு” எனத் தொழில்  உவமம்  கொள்ளப்பட்டது . ஆண்டவன்  கருணைக்கடல் அமிழ்த மயம் ஆயினும்  , தம்  வினைப்பிறழ்ச்சியால்  அது  தமக்கு  உவர்க்கடல் போல்  ஆயிற்று  என்பதும் , நாடகத்தால்  உன்னடியார் போல் நடித்து  என்றதற்கேற்ப வேறு  போக்கின்றித்  தம்  உள்ளத்தைத்  திருவருள் தோய்வில்  சிறிது செலவிடுத்தும் , வலிய  கன்மத்தடையால்  அருவருத்து  அங்ஙனஞ்  சிறிது செல்ல  முற்பட்ட  உள்ளத்தை  ஈர்த்துக்  கோடலான்  செல்லவிடாமல்  நேர்ந்தது என்பதும்  அடிகள்  கருத்து என்க. 

              இக்கருத்துப் புலப்படவே  “உன் கருணைக் கடலின்  உள்ளம் விடலரியேனை “ என்றார். கருணைக்கடல்  என்புழிக்  கடல்  ஈண்டு  மிகுதி குறித்தது . “விடலரியேன்” என்றது சிறிது மெல்ல  விடுத்தும்   விடாமையைப்  புலப்படுக்கும் . இங்ஙனம்  கிட்டுதற்கு  அரிய  கருணைக் கடலின்  அணிமை  பெற்றும்  அதன்கண்  உள்ளத்தை முற்றும்  செல்லவிடுவதற்குரிய   தவப்  பேறில்லாத  சிறியேனைக் கைவிட்டு விடுவாயோ? விடலாகாது  என்பது விண்ணப்பம்  ஆகும் . உள்ளத்தைச்  செல்லவிடாமைக்கு  ஏதுவாகிய  என்  வினையினும் , அதனை  யீர்த்துக்  கோடற்கு  ஏதுவாகிய  நின்  அருட்பெருக்கு  வலியுடையது  என்பது  குறிப்பு .

             இதன்கண்  “உன் கருணைக்கடலின் உள்ளம்  விடலரியேனை” என்றதனால்  இறைவனது அருட்பெருங்கடலில் தம் உள்ளம்  செல்லாமை  குறித்து அடிகள்  இரங்கியது பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவாறு  அறிக .  

                                                   ***************************************

பாடல் :14 .

வெள்ளத்துள்  நாவற்றி  யாங்குன்  அருள்பெற்றுத்  துன்பத்தின்றும்

விள்ளக்கி  லேனை  விடுதிகண்  டாய்விரும்   பும்அடியார்

உள்ளத்துள்  ளாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைகரசே

கள்ளத்து  ளேற்கரு  ளாய்களி  யாத  களியெனக்கே .

கருத்துரை :-  ஆண்டவன்  அருட்பெருக்கில் தலைப்படக் கிடைக்கப்பெற்றும் ஆர்ப்பருகாமல்  அருவருக்கலானேனே  யென்று  முன்னைத் திருப்பாட்டில்  இரங்கிக்கூறிய  அடிகள் ,இத் திருப்பாட்டில்  திருவருள்  வெள்ளத்தில்  மூழ்கியும்  உலக வாதனையாகிய  துன்பத்தினின்றும்  விடுதலை பெறாமல்  வருந்தலானேனே யென்று  இரங்குகின்றார் .  

பதவுரை :- விரும்பும்  அடியார்  உள்ளத்து  உள்ளாய்  =  நின்னை  விரும்பி  அன்பு  செய்யும்  மெய்யடியார்  நெஞ்சத்து வீற்றிருப்போய் ,

மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

வெள்ளத்துள் நாவற்றி  ஆங்கு =  நல்ல  நீர்ப்பெருக்கில்  மூழ்கிக்கிடந்தும்  ஒருவர்க்கு  நாவறட்சி  உண்டாயது போல ,

உன் அருள்பெற்று  இன்றும்  துன்பத்து விள்ளக்கிலேனை  =  நின் திருவருட் பேற்றிற்கு  ஆளாகியும் இன்றும்  உலக வாதனையாகிய  துன்பத்தினின்றும்  நீங்குதற்கு உரிய ஆற்றலில்லாத  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

கள்ளத்துள்ளேற்கு  எனக்கு  =  வஞ்சகச்  செயலுடை யேனாகிய   எனக்கு ,

களியாத  களி அருளாய்  =  பொறிபுலன்களின்  வாயிலாக  எய்தப்பெறாத   மாறிலா  மகிழ்ச்சியை அருள் புரிவாயாக  என்பது .

விளக்கவுரை :-  முன்னைத் திருப்பாட்டில்  “விடலில்  அடியார்  உடலிலமே மன்னும்” என்றார் . விடுதலும்  பற்றுதலும்  உள்ளத்தின் செயலானும், உடலுறுப்பாகிய  கைகளின் செயலாகக்  கொள்ளுதற்கும்  தட்டின்று . அதனால்  ஆண்டு அச்செயற்கு  எற்ப உடல் இலமே மன்னும்  என்று  கூறியது பொருத்தமாகிய  ஒரு நயம் என்க . இத் திருப்பாட்டில்  “விரும்பும் அடியார் “ என்புழி விரும்புதல் ஆகிய செயல்  உள்ளத்தைப்  பற்றியதே  ஆதலின் ,அதற்கு ஏற்ப, “உள்ளத்துள்ளாய் “என்று  கூறினர்  என்பது .”சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான்”  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

             நல்ல  தண்ணீர்   பெருக்கில்  மூழ்கிக்  கிடப்பவன்  ஒருவன்  நாவறட்சியால்  துன்புறுவானாயின்  , அதற்குக்  காரணம்  நீர்க்குறையன்று  ; அவன்  வினைக் குறையே  ஆகும்  . அது போல் யாண்டும்  இடையறாது பெருக்கெடுத்து ஒழுகும்  இறைவனது  அருளில்  தோயப்பெற்றும்  , பொறி  புலன்கள் விளையும் உலகவாதனையாகிய  துன்பத்தின்  நீங்க  இயலாமை  தம்  தவக் குறையே  யன்றி  ஆண்டவன்  குறையன்று  என்பார், “வெள்ளத்துள் நாவற்றியாங்குன்  அருள் பெற்றுத்  துன்பத்தின்றும்  விள்ளக்கிலேனை “ என்றார் .  அருள் பெற்றும்  என்புழி  உம்மையும் ,துன்பத்து என்புழி நீங்கற் பொருளில்  வந்த இன் உருவும் செய்யுள்  விகாரத்தால்  தொக்குநின்றன .

              நல்ல நீர்  வெள்ளத்துள்  தோய்ந்தாற்கு  நீர்  வேட்கை  அறவே  இன்றாதலோடு  , உடற்  சூடு  தணிந்து தட்பமும்  உண்டாம் . அது போல  ஆண்டவன்  திருவருளில்  தோயப் பெற்றார்க்குப்  பொறி புலங்களால்  ஆகிய  துன்பம்  அறவே  இன்றாதலோடு  , பரமசுகம்  ஆகிய  பேரின்பமும்  உண்டாம்  இவ்வுவமையிலும்  பொருளிலும் ஒன்றன்  நீக்கமும்  ஒன்றன்  விளைவும்  ஆகிய  இரண்டு  பயன்கள் உளவாம் என்பது பெறப்பட்டது .  இப் பயன்களுள்  தட்பமும் பேரின்பமும்  முடிவானவை . அவற்றை  நோக்க  விடாய்  தணிதலும்   துன்பம்  ஒழிதலும்  தொடக்கமானவை . தொடக்கப்பயனே  இலதாயிற்று  என்பது , “நாவற்றியாங்கு” என்னும்  உவமையாலும்  “துன்பத்து  விள்ளக்கி லேன்”  என்னும்  பொருள் இயல்பாலும்  தெளிவிக்கப்பட்டது  என்க .

             ஒளியின்  தோற்றமும்  இருளின்  ஒளியும்  ஒருகணத்து  ஒருங்கு  நிகழும்  அன்றிக் கால  இடையறவுக்கு  இடன்  இன்றாம் . அது போல  ஆண்டவனாகிய  நின்  திருவருட்  பேறும்  உலகவாதனை ஆகிய  துன்ப  நீக்கமும் ஒருங்கு  நிகழவேண்டுவனவாகவும்  , அங்ஙனம்  இன்றி  என் வல்வினையின்  ஏதுவால் நின் திருவருட் பேறு  எய்தியும் ,இன்னும்  துன்ப  நீக்கம் பெற்றிலேன்  என்பார், “இன்றும் விள்ளக்கிலேனை  “ என்றார்.  விள்ளுதல்  – நீங்குதல் . கில்லேன்  என்பது  ஆற்றல்  உடையன் அல்லேன்  என்னும் பொருட்டு . இதனால் “அவனருளாலே  அவன்றாள்  வணங்கி”  என்றபடி  திருவருட் பேறும் அவன்  அருளால்  எய்துதல்  போலத்  துன்ப நீக்கமும் அப்பெருமானது  ஆற்றலால்  ஆவதன்றித்  தம் ஆற்றலால்  இயல்வது  அன்று என்று அடிகள் கருதினார்  என்பது  போதரும் . யான்  துன்பத்தினின்றும் நீங்குதற்கு  உரிய  ஆற்றல்  நின்கண்ணதாதலின்  , அதனின்  நீங்காமை குறித்து என்னைக்  கைவிடல்  தக்கது  அன்று  என்பார் “விடுதி கண்டாய் “  என்றார்.

             இனி,  கைவிடாமல்  செய்யத்தக்கது  யாது  என்னும்  வினாவிற்கு  விடையாக  “அருளாய்  களியாத  களியெனக்கு” என்றார் . களியாத களி” என்றது பொறிவாயிலாக  நுகரப்படும் புலன்களினால்  விளையும்  அழிதன்  மாலையதாகிய  இன்பம்  அல்லாத  பேரின்பத்தை . இதுகாறும்  நுகர்ந்த  இன்பக்களிப்பு  ஐம்பொறியளவில்  நுகர்ந்த  புலன்களால்  ஆகிய  சிறிய  இன்பமாகும் . அஃது  அல்லாத  அழிவில் இன்பமே களியாத  களி  எனப்பட்டது  இது மெய்யுணர்வினால்  நுகரத்தக்கது . இதனை  “உணர்வினேர் பெறவருஞ் சிவ போகம்”  எனவும், “பூண்டவைம்  புலனிற்  புலப்படா இன்பம்  புணர்ந்து  மெய்யுணர்வினிற்  பொங்க “  எனவும் சேக்கிழார் அடிகள் கூறுவர் . இத்தகைய  சிறந்த  இன்பத்தை  “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றபடி  தவத்தில்  ஈடுபட்டுத்  தம் நெஞ்சத் தவிசில்  நின்னை  வீற்றிறுக்கச் செய்யும்  மெய்யன்பர்க்கு வலிந்து எளிதில்  அருளுவையாதலின், அதனை  வஞ்சம் உட்பொதிந்த  வல்வினையாளனாகிய   யானே  இரந்து கோடற்கு  உரியவன்  என்பார் , “ கள்ளத்துளேற்  கருளாய்” என்றார்.

              இதன்கண்,  “உன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும்  விள்ளக்கி லேனை  “ என்றதனால்  உலக வாதனையாகிய  துன்பத்திற்கு  ஆற்றாது  அடிகள் இரங்கியது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                         ********************************************

பாடல் :15 .

களிவந்த  சிந்தையொ  டுங்கழல்  கண்டுங்  கலந்தருள 

வெளிவந்தி  லேனை  விடுதிகண்  டாய்மெய்ச்  சுடருக்கெல்லாம்

ஒளிவந்த  பூங்கழல்  உத்தர  கோசமங்  கைக்கரசே

எளிவந்த  எந்தைபி  ரானென்னை  யாளுடை  யென்னப்பனே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  இறைவன்  அருட்கு  இடனாகியும்  உலகியல்  துன்பத்தினின்றும்  நீங்கப்பெறாமை குறித்து இரங்கிக்கூறிய  அடிகள் ,இத் திருப்பாட்டில்  இறைவன்  திருவடிக்காட்சி  பெற்றும் , அத்துவித  இன்பப்பேற்றின்  நிமித்தம்  உலக வாதனையினின்றும்  வெளிப்பட  இயலாமை குறித்து இரங்குகின்றார்.

பதவுரை :- மெய்ச்சுடருக்கெல்லாம்  =  மெய்மையான  ஒளி  மண்டிலங்களுக்கெல்லாம் ,

ஒளிவந்த   பூ கழல்  =  ஒளி  உண்டாதற்கு  ஏதுவாகிய  பொலிவு  மிக்க  திருவடியினையுடைய  ,

உத்தரகோச மங்கைக்கு அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

எளிவந்த  எந்தை பிரான்  =  எளிமையிற்  காட்சி  நல்கிய  எந்தந்தை  முதலியோர்க்கும்  தலைவனே ,

என்னை  ஆளுடை  என் அப்பனே  =  சிறியேனை  ஆளாகவுடைய  என்  தந்தையே ,

களி வந்த  சிந்தையொடு  =  மகிழ்ச்சி  மிக்க  உள்ளத்தோடு ,

உன் கழல் கண்டும்  =  நின்  திருவடியைத்  தரிசித்தும் ,

கலந்து அருள  வெளிவந்திலேனை  =  நீ  என்னோடு  இரண்டறக்கலந்து  அருளும்  வண்ணம்  வெளிப்பட்டு  வந்திலேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ  ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :- ஞாயிறு  திங்கள் தீ  முதலிய மண்டிலங்கள் எல்லாம் இயற்கையின்  அமைந்த  ஒளியுடையன ஆதலின் ,”மெய்ச்சுடர்” என்னப்பட்டன . அவ்வொளி மண்டிலங்களின் ஒளிக்கூறுகளே உலகத்துக்  காணப்படும் பிற வொளிகளெல்லாம்  ஆம் . ஆயினும் அம் மண்டிலங்களுக்கு  ஒளி உதவியது ஆண்டவன் திருவடி  என்பார், “ஒளி வந்த பூங்கழல் “ என்றார் . ஈண்டு  வந்த என்னும் எச்சம்  காரியப்பொருட்டு  , காரணம் திருவடியாகலின் . “ தேயமாரொளிகளெல்லாம் , சிவனுருத்தேசது  “ என்று  சித்தியாரில்  உலகத்துள்ள  ஒளிகள்  எல்லாம்  இறைவனது  திருமேனி  ஒளியே  யாகும்  எனக்  கூறியிருத்தல் அறிக . “ஓங்கொளியா   யருண்ஞான மூர்த்தியாகி  “   என்னும்  பாட்டுக்கு  மதுரைச்  சிவப்பிரகாசர்  எழுதிய  விளக்கவுரையில்  “வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச்  சுடருக்கெல்லாம்  ஒளி  வந்த பூங்கழல்  ……. என்பதுங்  கண்டு  கொள்க “ என்று  இத் திருவாசகப்  பகுதியை மேற்கோளாக  எடுத்துக் காட்டி யிருத்தலும்  அறிந்து இன்புறத்தக்கது .

                    அவயவ அவயவைகளின்  வேறுபாடு  இன்மையைப்பற்றி  உருவின்  ஒளிதிருவடிமேல்  ஏற்றிக் கூறப்பட்டது என்க . “அழலார்  ஒளியன  காண்க  ஐயாறன்  அடித்தலமே” எனவும்  , “சோதியும்  செஞ்சுடர்  ஞாயிறும்  ஒப்பன்  தூமதியோடு  , ஆதியும்  அந்தமுமான ஐயாறன்  அடித்தலமே” எனவும்  போந்த  தமிழ்  மறைகளில்  இறைவன்  திருவடியையே  ஒளி  வடிவமாகக்  கூறியிருத்தலும்  அறிக . ஒளி மண்டிலங்களுக்கெல்லாம்  தன்  திருவடியினின்றும்  ஒளி உதவும் இறைவனது  வருகை  அரியதின் அரியதாகவும்  , கருணைகாரணமாகத்  தமக்கு  எளிமையிற்  கிடைத்ததென்பார் . “எளிவந்த” எனவும், அங்ஙனம்  எளிமையாதற்கு  ஏதுவாகிய  கருணை தானும்  “என் குடி முழுதாண்டு  வாழ்வற  வாழ்வித்த  மருந்தே” என்று  அடிகள்  பிறிதோரிடத்து அருளிச்செய்தபடி  தம் வழி  முதல்வராகிய  முன்னையோரை  ஆட்கொண்டு  வழிவழித்  தலைவனாக  தொடர்புடைமை  பற்றியது என்பார் , “எந்தய் பிரான் “ எனவும்  , பாசப்பிணிப்பில்  உழலும்  யான்  இறைபணி புரிதற்குரிய  தவம் உடையேன்  அல்லேன்  எனினும்  ,வழி வழித் தொண்டு கொண்ட தொடர்புடைமையால்  , எனக்கு  உண்மைத் தந்தையாகவும் நின்று  ஆட்கொண்டனன்  என்பார், “என்னையாளுடையென்  அப்பனே” எனவும்  கூறினர் . ஒருவனை ஆட்கொள்ளுவோன்  அவனுக்குத்  தந்தையாக  இருக்கவேண்டும்  என்னும்  நியமம்  இன்மையால் ஆளுடையப்பன்  என இயைத்துக்  கூறப்பட்டது என்க.

                   ஒன்றைக்  காணுங்கால் அக்காட்சி , விருப்பொடு  காண்டல்   வெறுப்பொடு  காண்டல்  என  இருதிறப்படும்  . அவ்விருவகைக்  காட்சியாலும்  விளையும்  பயன்  , முறையே  இன்பமும்  துன்பமும்  ஆம்.  உலகியலிற்  காண்பவன்  உள்ளப்  பிறழ்ச்சியால்  இன்பம் விளைக்கும் காட்சியில்  வெறுப்பும்  , துன்பம்  விளைக்கும்  காட்சியில்  விருப்பும்  நிகழ்தலும்  உண்டு . அங்ஙனம்  இன்றி  ஈண்டு இறைவன்  திருவடிக்காட்சி  அழிவில்லாத  பேரின்பம் பயப்பதென்னும்  உண்மையுணர்ந்து , மிக்க  மகிழ்ச்சியோடு  அடிகள் அதன் கண்  தலப்பட்டமையை  “ களி  வந்த சிந்தையோடு  உன்கழல்  கண்டும்”  என்னும்  தொடரால்  புலப்படுத்தரு ளினர் .

                      பாசப்பிணிப்பின்  ஆற்றலால்  சிறிதும்  வெறாது , மகிழ்ச்சி  மிக்க  உள்ளத்தோடு  திருவடிக்காட்சியில்  தலைப்பட்டனர்  என்பது அத் தொடரின்  பொருளாகும் . இஃது இறையருளிற்  கலத்தற்கு  உரிய  முதற் சாதனம்  ஆகும். இச்சாதனத்தைத்  தம்  கடமையாகவும்  இதன்பயனாகிய  திருவருட் கலப்பை  ஆண்டவன்  கடமையாகவும்  கொண்டு  “கலந்தருள்” என்றார்.  காண்டல்  அடிகளின்  செயல் . கலந்தருளல்  ஆண்டவன்  செயல்  . வெளிவரல்  –  உலகியற்  பிணிப்பினின்றும்  வெளிப்படல்  . முன்னர்த்  தன்னின்  வேற்றுமையறக்  கண்ட  உலகத்தைத்  தன்னின்  வேறாகக்  கண்டு அக்கட்டினின்றும்  வெளிப்பட்டு  இறையருளில்  வேறறத்  தோய்தலுமாம் .

                           இனி, கலந்தருள வெளிவந்திலேன் என்பதற்குக்  கலத்தற்கு உரிய  ஞானவெளிக்கட்  போந்திலேன்  எனக்  கோடலுமாம் . சாதனம் பேதசாதனம்  அபேத சாதனம்  என இருவகைப்படும் . பேதசாதனம் இறைனனைத் தன்னுள் வேறாகக்  கண்டு  நினைதல் . அபேதசாதனம் வேறறக் கண்டு  நினைதல் . இதனையே  சிவோகம்  பாவனை என்று  சிவாகமம்  கூறும் . இவ்விரண்டனுள்  முன்னதன்  முதிர்ச்சியில் பின்னது உண்டாம் . “உன் கழல் கண்டும் “ என்பது பேதசாதனமும் வெளி வருதல்  அபேத சாதனமும் ஆம் என்க . வேறற நினைதலின்  பயனே  பாசப்பிணிப்பு  ஒழிந்து பேரின்பம் நுகர்தற்கு ஏதுவாம் என்பது. “உன் கழல்  கண்டும் “ என்புழி உம்மை முதற் சாதனம் பெற்றும்  இரண்டாம்  சாதனம்  எய்தப்பெற்றிலனே என்னும் இரக்கக்குறிப்பைப்  புலப்படுத்து நிற்றல் அறிக . இங்ஙனம்  முடிவான பயனை விளைக்கும் அபேத சாதனப் பேறு  எய்தப் பெறாத குறையைக்  காரணமாகக் கொண்டு  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? (விடலாகாது) என்பார் , “ விடுதி கண்டாய் “ என்றார் .

                    இதன்கண் , “கலந்தருள  வெளிவந்திலேனை”  என்றதனால் உலக  வாதனை குறித்து அடிகள் இரங்கியது பெறப்படுதலின் ,பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                           *************************************

பாடல் : 16 .

என்னையப்  பாவஞ்சல் என்பர்  இன்றிநின்  றெய்த்தலைந்தேன் 

மின்னையொப்  பாய்விட்  டிடுதிகண்  டாயுவ  மிக்கின்மெய்யே

உன்னையொப்  பாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

அன்னையொப்  பாயெனக்  கத்தனொப்  பாயென்  அரும்பொருளே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிக்  காட்சி  பெற்றும்  உலக  வாதனையினின்றும் வெளிபட இயலாமை  குறித்து இரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  இயலாமைக்கு ஏது  தகுதியில்லாரை  உடையராகக்  கருதி  அலைந்து இளைத்ததாகும்  என்று  கூறுமுகமாக  ஆண்டவன்  அருண்மொழியை வேண்டி  விண்ணப்பம்  செய்கின்றார் .  

பதவுரை :-  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

மின்னை ஒப்பாய்  =  காட்சிப்பட்ட அளவில்  மின்னலை  ஒப்பாய் ,

மெய்யே  உவமிக்கின்  =  மெய்மையாகவே  நினக்கு  உவமை  கூறப்புகின்  ,

உன்னை  ஒப்பாய்  =  நின்னையே  நீ ஒப்பாய்  ,

எனக்கு  அன்னை  ஒப்பாய்  அத்தன் ஒப்பாய்  =  எனக்குத்  தாயையும்  தந்தையையும்  ஒப்பாவாய் 

என் அரும்  பொருளே  =  எனக்குப்  பெறல் அரும்  பொருளாக  உள்ளவனே ,

என்னை  அப்பா  அஞ்சல்  என்பவர்  இன்றி  =  என்னை  நோக்கி  ‘அப்பா அகஞ்சாதே’ என்று  சொலுவார்  இல்லாமல் , 

நின்று  எய்த்து  அலைந்தேன்  =  வருந்தி நின்று  அலைந்து  இளைத்தேன்,

விட்டிடுதி  =  இந் நிலையில்  விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அடிகளுக்குக் காட்சி தந்த பொழுது , அப்பெருமானது  திருமேனி  மின்னலைப் போல்  ஒளிவிட்டுக்   கண்கொள்ளாக் காட்சியாக  விளங்கினமையால் , “மின்னலை ஒப்பாய் “  என்றார் . உவமேயப்பொருளினும்  உவமம்  உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும்  விதி ,கடவுளுக்கு  ஒப்புக்கூறப்புகுங்கால்  வலியிழந்து  ஒழியுமாதலின் ,அந்  நிலையில்  உலகியற் பொருள்களில் சிறந்தது ஒன்றை எடுத்துக்காட்டுதல்  கவி  மரபாகும் . அம் முறயில் மின்னல்  ஈண்டுக்  கூறப்பட்டது . இறைவன் திருமேனியின்  நிறவொளி பற்றியும் ,அடிகளுக்குக்  காட்சியளித்து உபதேசித்து விரைவில்  மறைந்தருளிய தொழில் பற்றியும் வந்தமையால் , இஃது உருவும் வினையும் பற்றிய உவமம்  ஆகும் .

                     பின்னர் , “மெய்யே உவமிக்கின்”  என்றமையால் ,இவ் உவமை உபசாரமாகக்  கூறியதாகும்  அன்றி, உண்மை ஆகாதென்பது போதரும்  .உண்மையாகவே  உவமை  கூறப்புகின்  இறைவனுக்கு  உவமம்  ஆகப்  பிறிதொரு  பொருள்  யாண்டும்  இன்றாம் .இறைவனுக்கு  ஒப்பாய பொருளும்  இன்று ; இறைவன்  ஒருபொருளுக்கு ஒப்பாதலும்  இன்று. இதனை  “ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன்  ஓர் உவமன்  இல்லி” என்னும்  தமிழ் மறையில் ஒப்புடையன்  அல்லன் எனவும் , உவமன்  இல்லி  எனவும்  கூறியிருத்தலால்  அறிக . இந் நயம் தோன்றவே  அடிகள் “மெய்யே உவமிக்கின் உன்னை யொப்பாய் ‘  என்றார் .”நின்னாவார் பிறரின்றி  நீயே யானாய்” என்பதும் அப் பொருட்டு . ஈண்டு  ஆக்கச்சொல் உவமை குறித்து .

                  இறைவ , நின்னை நோக்க  நினக்கு  ஒப்பு  நீயே  யாவாய்  அன்றிப்  பிறிதொரு  பொருள் இன்று .  சிறியேனாகிய  என்னை  நோக்கி  நினக்கு  உவமம்  கூறப்புகின் , எனக்குத்  தாயும்  தந்தையும் போல்வாய்  என்பார், “ அன்னை யொப்பாய்  எனக்கு  அத்தன் ஒப்பாய் “ என்றார். ஈண்டு  எனக்கு  என்றது எடுத்த உடலோடு  கூடிய  நிலை  பற்றியாம் . ஈன்று  வளர்த்தலில்  தாயும் , சான்றோன்  ஆக்குதலில்  தந்தையும் ஒருவர்க்கு  உலகியலில்  இன்றியமையாத  உதவியாளர்  ஆவர் . ஆதலின்  , அவ்வியல்பு  குறித்துக்  கன்மத்துக்கு ஈடாக  மாயையினின்றும்  உடலுதவியமையால்  , அன்னை யொப்பாய்  எனவும் , அறிவு  உபதேசம்  செய்து நன்னிலை  நிறுத்தலின் , “அத்தன்  ஒப்பாய்” எனவும்  கூறினர் .

                      இம்மை  மறுமை இரண்டிலும் பெறுதற்கு  உரிய பொருள்களினும்  அரிய  பொருள் என்பது  கருதி “என் அரும் பொருளே “ என்றார். இம்மைக்கு உரியது புகழும் மறுமைக்கு உரியது அறமும்  ஆகும்  இவ்விரண்டனையும்  கடந்து வீட்டிற்குரிய  மெய்ஞானத்தால் அரிதிற் பெறத்தக்க பொருளே இறைவனாதலின்  இவ்வாறு  கூறப்பட்டதென்க .

                      ஆண்டவனே , எனக்கு உண்மையான  தாயும்  தந்தையும் அரும்பொருளுமாக  உடனிருந்து ஆதரிக்கும் அரும்துணை ஒப்புயர்வற்ற   பரம்பொருளாகிய  நீயே  என்பதை உணராமல் ,நின்னையல்லாத  பிற தேவர்  மக்கள் முதலியோரை உளங்கொண்டு  ,அவருள் யாரும் எனக்கு  அபயம்  அளிப்பர் இல்லையே  என்று  என்  அறியாமையால் நினைந்து , அதனால் அலைந்து  இளைத்து வருந்தலானேன்  என்பார்,  “ என்னையப்பா அஞ்சல்  என்பவரின்றி நின்று  எய்த்தலைந்தேன் “ என்றார் .  அப்பா என்பது தந்தை மகனை நோக்கிக்கூறும் செல்ல மொழியாகும் . அஞ்சல்  –  அஞ்சவேண்டா . துன்ப நீக்கமும்   இன்பப்  பேறும்  ஒருவர்க்கு  வேண்டுவனவாயினும் , முதலில்  அச்சம்  காரணமாக உண்டாம் துன்ப  ஒழிவே இன்றியமையாத தாகும் . இது  கருதியே  “அஞ்சல்  என்பவர்” என்று கூறப்பட்டது . அடிகளுக்கு இம்மை  மறுமைப்  பேறுகளைப்  பற்றிய அச்சம்  நேர்ந்திருக்குமாயின்  , மக்கள் தேவருள் யாரும் அஞ்சல் என்று கூறி  ஆதரித்தற்கு  எளிமையிற்  கிடைப்பர் .  

                        அடிகளின்  குறிக்கோள் அங்ஙனம்  இன்றி வீட்டு  நிலை  பற்றியதாகலானும்  , அதற்குத்  தடையாகவுள்ள  பாசப்பிணிப்பின்   ஒழிவிற்கு அஞ்சல்  என்று  கூற  அன்னார்  தகுதியற்றவராதலானும்  ”என்பவரின்றி”  எனவும் , அறியாமையாற்  கழிந்த பல பிறப்புக்களிலும்   தகுதியில்லாரைக்  குறிக்கொண்டு  அலைந்து இளைத்தேன் என்பார் , “ எய்த் தலைந்தேன் “ எனவும்  கூறினர் . எய்த்தலைந்தேன்   என்பதை அலைந்து எய்த்தேன்  என  மாற்றிப்  பொருள் கொள்ளல்  வேண்டும் . அலந்து  எய்த்தல்  என்பது ஈண்டு  அஞ்சவேண்டா என்று  கூறுவாரை  நாடி  நினைந்து நினைந்து  சலித்து  இளைத்தல் . இது  மனத்தின்  செயல் . என் அறியாமை யால்  உண்மைப்பொருளாகிய  நின்னைக் குறிக்கொள்ளாமல்  பிறரைக் கருதி அலைந்த பிழை காரணமாக  என்னைக்  கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி”  என்றார் . இதனால் , “அப்பா  இனி  அஞ்சற்க “ என்று  ஆண்டவன்  திருவாயால்   தமக்கு  ஓர்  அபய  மொழி  கூறவேண்டும் என்பது அடிகள் திருவுள்ளம்  ஆதல்  குறிப்பிற்  பெறப்படுவதாம் .

                            இதன்கண் , “என்னை  யப்பா  அஞ்சல்  என்பவரின்றி  நின்றெய்த் தலைந்தேன்  “ என்றதனால் அடிகள்  உலகியற்   பொருள்களைக்  கருதி  வருந்தியமை  பெறப்படுதலின்   பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             *************************************

பாடல் :17 .

பொருளே  தமியேன்  புகலிட  மேநின்  புகழ்இகழ்வார் 

வெருளே  எனைவிட்  டிடுதிகண்  டாய்மெய்மை  யார்விழுங்கும்

அருளே  யணிபொழில்  உத்தர  கோசமங்  கைக்கரசே

இருளே  வெளியே  யிகபர  மாகி  யிருந்தவனே  .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  அபய மொழி அருளுதற்குத்  தகுதியில்லாரை  உடையராகக்  கருதி உழன்று  வருந்தியதற்கு  இரங்கிய  அடிகள்  , இத் திருப்பாட்டில்  அம் மொழி  அருளுதற்கு  உரிய  தகுதியுடைய  உண்மைப்பொருளும்  தமக்குப்  புகலிடமாகவுள்ளவனும்  இறைவனே  எனத்  தாம்  தெளிந்த உண்மையை  எடுத்துக் கூறி ஏற்று  கொள்ள விண்ணப்பம்  செய்கின்றார் .

பதவுரை  :-  நின் புகழ்  இகழ்வார்  வெருளே  =  நின் மெய்ப்புகழைப்  பழித்துரைக்கும்   பொய்மையாளர்க்கு  அஞ்சத்தக்க  பொருளே  ,

மெய்யார்  விழுங்கும்  அருளே  =  புகழ்  பாராட்டும்  மெய்யாளர்க்கு  உண்ணும்  அருளமுதமே ,

அணி பொழில்  =  அழகிய  சோலை  சூழ்ந்த  ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

இருளே  =  மாயாகாரியப்  பொருளைப்  பற்றிப்  புறப்பார்வையால்  நோக்குவார்க்கு  மறை பொருளாக  வுள்ளவனே ,

வெளியே  =  உலகியற்  பொருள்களை  மாயாகாரியமென  உணர்ந்து விலக்கி  அகப்பார்வையால்  நோக்குவார்க்கு  வெளிப்படு  பொருளாக வுள்ளவனே  ,

இகபரம்  ஆகி  இருந்தவனே  =  எனக்கு  இம்மையும்  மறுமையுமாய்  இருந்து இதுகாறும்  உதவி  புரிந்த  பெருமானே ,

பொருளே  =  மெய்ப்பொருளாகவுள்ளவனே ,

தமியேன்  புகல்  இடமே  =  வேறு  துணையிலியாகிய  எனக்குப்  புகலிட மாகவுள்ளவனே  ,

விட்டிடுதி   =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது . 

விளக்கவுரை :-  இறைவனைப்பற்றிய  புகழே  மெய்மையானதாகும் இறைமைக்  குணம் இல்லாரைப்பற்றிய  புகழ்  பொய்மையாய்ப்  புனைந்துரையாய்  முடியும் . இவ்வுண்மையை  “இருள்சேர் இருவினை யுஞ்  சேரா  இறைவன் , பொருள்சேர்  புகழ்  புரிந்தார்  மாட்டு “ என்னும்   பொருளுரையானும்  , அதற்கு  “இறைமைக் குணங்கள் இலராயினாரை   உடையரெனக்கருதி அறிவில்லார்  கூறுகின்ற  புகழ்கள் பொருள்  சேராவாகலின்  அவை  முற்றுமுடைய  இறைவன்  புகழே பொருள்சேர்  புகழ்  எனப்பட்டது  “ என்னும்  பரிமேலழகர்  உரைப்பகுதியானும்  உணரலாம் . ஒரு பொருளைப் பற்றி  விருப்பு  நிகழ்தல்  , வெறுப்பு  நிகழ்தல்  இரண்டும் இன்றாதல் என்னும்  முத்திறத்துள்  இறைவனது பொருள் சேர்  புகழில்  விருப்பம்  நிகழ்தல்  இன்றியமையாததாகவும் , அங்ஙனம்  விரும்பாமையோடு  விருப்பு  வெறுப்பு  இரண்டும்  இன்றாம் . அவ்வளவிலும்  நில்லாது ,வெறுத்தது  இகழ்தல்  கொடிது என்பார் , “நின் புகழ் இகழ்வார்”  என்றார் . வெருள்  –  அஞ்சத்தக்கது . பின் “மெய்மையார்  விழுங்கும்  அருளே  “  என்புழி  மெய்மையார்  என்றத னால்  , புகழ் இகழ்வார் பொய்மையாளர்  என்பதும் , விழுங்குதல்  வினையால்  அமுதம்  என்பதும்  பெறப்படுதலின்  , ஈண்டு  அஞ்சத்தக்க  நஞ்சமே என்பதும் பெறப்படும் . மெய்மையார்  –  மெய்யன்பர் . இறைவன்  திருப்புகழை  மெய்யன்போடு  பாராட்டுவோர்  , பொய்மை யாளர்  புகழ் இகழ்பவராதலின்  , மெய்மையார்  புகழ்  பாராட்டுபவர்  என்பது புலனாம்  என்க .

                  இறைவன்  திருவருளைக் குறித்து அருளாரமுதம்  என  அடிகள் கூறுவாராதலானும்  , விழுங்குதல் வினையாலும்  அருள் அமுதமாக  ஈண்டுக்  கொள்ளப்பட்டது  . மாயையின்  , ஆக்கப்  பாடாகிய  உலகத்தைப் பற்றிப்  புறப்பார்வையால்  நோக்கி , அதுவே  பொருள்  என  அமைவார்க்கு  இறை  விளக்கம்  புலப்படாமையின்  , “இருளே” எனவும், அவ்வுலகியற்  பொருள்களை  மாயா  காரியம்  எனக் கண்டு  “ பரமே  பார்த்திருப்பார்  பதார்த்தங்கள்  பாரார் “ என்றபடி  பரம்பொருளைப் பற்றி  அகப்பார்வையால்  நோக்கி  உணர்வார்க்கு  அப் பொருள் நன்கு புலப்படுதலின்  , “வெளியே” எனவும்  கூற்னர் .   இவ்வுண்மையை ,

     “தன்னே  ரிலாஞான  சம்பந்தன்  தாளடைந்தார்க்

                   கென்னே   யிருள்வெளியாம்  என்பரால்  –  அன்னோன்

                             அருளாத  போதுவெளி  யாயிருந்த  வெல்லாம்

                             இருளா  யிருந்த  வெனக்கு “

                   என்னும்  குமரகுருபர  அடிகள்   அனுபவமொழியும் புலப்படுத்து வதாகும் . ஞானாசிரியன்  திருவடியைச்  சார்ந்தார்க்கு  இருள்  வெளியாகு மென்பர் ; எனக்கு  அப்பெருமான்  அருள்  பெறாத  பொழுது  வெளியாகக்  காணப்பட்ட  மாயாகாரியப் பொருளெல்லாம்  , அருட்பேறு  எய்தியதும்  புலப்படாமையின்  , இருளாயின  வென்பது  இப்பாட்டிற்  புலப்படவைத்தது என்க . மாயாகாரியமாகிய  உலகப் பொருள்களைப்  புறப்பார்வையால்  நோக்குவார்க்கு  இறை விளக்கம்  புலப்படாது என்பதையும் ,அவற்றைக்  காரணங்களுள் ஒடுக்கி  அகப்பார்வையில்  இறை விளக்கமாகக்  காண்பார்க்கு  அப் பொருள்கள்  புலப்படாவென்பதையும் ,

மரத்தை  மறைத்தது  மாமத  யானை

மரத்தின்  மறைந்தது  மாமத  யானை

பரத்தை  மறைத்தது  பார்முதற்  பூதம்

   பரத்தின்  மறைந்தது  பார் முதற்  பூதம் .

என்னும்  திருமந்திரத்தானும்  உணர்க .

               அடிகள்  தமக்கு  வாய்த்த  இப்பிறப்பில்  இறைவனை  ஞானாசிரி யனாகப்  பெறும்  பேறு  பெற்றமையாலும் , இப்பெறலரும் பேற்றிற்கு  முன்னைத்தவம்  காரணம்  ஆதலானும், அத்தவச்  செயல்கள்  இதுகாறும்  கிடைத்த  இம்மை  மறுமை  இரண்டிலும்  ஈட்டப்பட்டன  வாகலானும், அங்ஙனம்  ஈட்டுதற்கும்  அப்பெருமான் திருவருளே  துணைநின்றது  என்னும்  குறிப்புத்  தோன்ற  “இகபரமாகி  யிருந்தவனே” என்றார். இப்பிறப்பின்  ஒழிவில்  மறுமையும்  அதன்  ஒழிவில்  இம்மையுமாக  மேன்மேலும்  என்னை  இன்னும்  இம்மை  மறுமைக்கு  ஆளாக்கலாகாது ; இம்மட்டில்  இகபரச் சார்பை  ஒழித்து  இனி, வீட்டு  நிலைக்கு  ஆளாக்கவேண்டுமென்னும்  தம்  உட்கோள் உண்மை  புலப்பட  , “இகபரமாகியிருப்பவனே” என்னாது , “இருந்தவனே” என  இறந்தகாலத்தாற்   கூறியருளினர். .

                 இப்பிறவி காறும்  தமக்கு  இம்மையிலும்  மறுமையிலும்  உபகரித்து  அருளிய  பெருமானே  அவ் இம்மை  மறுமை  இரண்டையும்  கடந்த  வீட்டு  நிலையாகிய  அழிவில்  இன்பத்தை  வழங்குதற்குரிய  மெய்ப்பொருளும்  ஆவான் என்பார், “பொருளே” என்றார். பொருள்  –  மெய்ப்பொருள் . “பொருளல்லவற்றைப்   பொருலென்று  உணரும்”  என்புழிப்  பொருள்  என்னும்  சொற்கு  மெய்ப்பொருள்  என்று  பரிமேலழகர்  கூறிய  உரையானும்  அறிக .  பிறிதொரு  சார்பும்  இல்லாமல் , தனிப்பட்ட  எனக்கு  எப்பொருட்கும்  சார்பாகிய  மெய்ப்பொருளாகிய  நீயே  முடிவாக அடைதற்குரிய  இடனாவாய்  என்பார் , “தமியேன்  புகலிடமே  “ எனவும் , நின்னையே   மெய்ப்பொருள் என  உணர்ந்து புகலிடமாகக்  கருதி அடைந்தேனைக்   கைவிடில் , பிறிதொரு  பற்றுக்கோடு  இல்லாத  யான்  என்  செய்வேன் ; என்னைக்  கைவிடலாகாது  என்பார் , “விட்டிடுதி  கண்டாய்”  எனவும்  கூறினர்.

              இதன்கண் , “பொருளே  தமியேன்  புகலிடமே” என  இறைவனைச்  சுட்டிக்  கூறியமையால்  , அவன்  அல்லாத  மாயாகாரியப்பொருள்கள்  எல்லாம்  நிலை இல் பொருள் என்பதும் , அப்பொருட் சார்பு   வேண்டத்தக்க தன்று  என்பதும் பெறப்படுதலின்  ,பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                            *************************************

பாடல் : 18 .

இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை                             

                                                                              யென்னினல்லால்

விருந்தின  னேனை  விடிதிகண்  டாய்மிக்க  நஞ்சமுதா 

அருந்தின  னேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

மருந்தின  னேபிற  விப்பிணிப்  பட்டு  மடங்கினர்க்கே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  , எனக்கு  இம்மை  மறுமைகளில்  துணை நின்று  உபகரித்தும் முடிவான  புகலிடமாகவும்   உள்ள  உண்மைப் பொருள் நீயேயென  இறைவனைக்  குறித்துக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் , அங்ஙனம்  புகலிடமாக  அமைந்த  நீயே  அடிமையாகிய  என்னை  ஆண்டு  கொள்ளல்  முதலியவற்றிற்கும் உரிமையுடையை  ஆதலின்  அம்முறையில்  யாது  செய்யினும்  செய்க. புதியன்  எனக்கொண்டு  கைவிடல்  மட்டும்  ஆகாதென  விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .

பதவுரை :-   மிக்க  நஞ்சு  அமுதா  அருந்தினனே  =  கடலில்   தோன்றிய பெருநஞ்சை  அமிழ்த  உணவாகக்  கொண்டு  உண்டருளினவனே ,

மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

பிறவிப் பிணிப்பட்டு  மடங்கினார்க்கு   =  பிறப்பு  ஆகிய  நோய்வாய்ப்பட்டு  முடக்கம்  உற்றார்க்கு,

மருந்தினனே   =  நோய்  தீர்க்கும்  மருந்தாக  வுள்ளவனே ,

இருந்து  =  என் உள்ளத்தே  எழுந்தருளியிருந்து ,

என்னை  ஆண்டுகொள்  விற்றுக்கொள்  ஒற்றிவை  =  அடிமையாகிய  என்னை  ஆண்டு  கொள்க  விற்றுக்கொள்க  ஒற்றிவைத்துக்கொள்க  ,

என்னின்  அல்லால்  =  என்று  கூறுதலன்றிப்  பிறிதொன்றும் செய்தற்கு  உரிமை  யில்லாத,

விருந்தினனேனை  =  புதியவனாகிய  என்னை,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  திருப்பாற்  கடல்  கடைந்த  பொழுது  கடை  கயிறாகவுள்ள   வாசுகி யென்னும்  பாம்பின்  வாயினின்று  வெளிபட்ட  ஆலாலம் என்னும்  கொடிய  நஞ்சு  என்பது  தோன்ற, “மிக்க நஞ்சு “என்றார். மிகுதி அளவானும்  கொடுங்குணத்தானும்  ஆம்  என்க .  “ஓங்கும் ஒருவிடம்  என்புழி  , உலகம் முழுதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளர நின்றதோர்  விடம் “ எனப் பேராசிரியர்  உரை  கூறியதுங் காண்க . இறைவன்  தற்பயன்  கருதாமல் உலகம்  உய்தலில்  உவகையுடன்  என்பது  புலப்பட  ,” நஞ்சு அருந்தினன் “ என்றார். அமுதம் உண்ணுங்கால்  உண்டாம் உவகை நஞ்சும்  உண்ணுங்கால் உண்டாயிற்றென்பது  கருத்து.  “ மருந்து வானவருய்ய  நஞ்சுண்டு  உகந்திருந்தவன் “  என்பர்  திருநாவுக்கரசர் , வானவர்  மருந்துண்டு  உய்யத்  தான் உகந்து நஞ்சுண்டு இருந்தவன் என இயைத்துப் பொருள் கொள்ளல் வேண்டும் . ஈண்டு  இருந்தவன்  என்றது , விரைவில் அழிதற்குரிய  பெருநஞ்சை  யுண்டும்  , அழிவின்றி  இருந்தவன்  என்னும்  பொருட்டு  . வார்ந்த நஞ்சயின்று  வானோர்க் கமுதமீந்த புராண கதையைக்  குறிப்பிட்டது, இறைவன்  பேரருள் வண்மையைப்  புலப்படுத்தற்கென்க.

                 உடலைப்பற்றி  நின்று  துன்புறுத்தும் நோய்  போல ,உயிரைப்பற்றி நின்று  துன்புறுத்தலின்  , பிறவியைப்  பிணி  என்றார் . நோய் , துன்பத்தையே  விளைவிப்பதாகும்.பிறவி  இடையிடையே இன்பத்தையும் விளைக்குமெனின், அவ்வின்பந்தானும்  துன்பம்  விரவியதாகலானும் , வீட்டின்பத்திற்குத்  தடை  யாயிருத்தலானும்  அவ்வீட்டின்பத்தை நோக்கத்  துன்பமாகவே  முடியும்  என்பது.  மடங்குதல்  –  ஆற்றல்  குன்றி  முடக்கம்  எய்துதல் . நோய்வாய்ப்  பட்டார் கை,கால்  முதலிய  உறுப்புக்கலின்  வலி  குன்றிக் கிடத்தல்  போலப்  , பிறவிப்  பிணிப்பட்டார்  வீட்டை  யடைதற்குரிய  ஆற்றல் குன்றி  யுழல்வ ரென்பது  கருத்து.  நோய்  நீக்கத்திற்கு  நன் மருந்தின் உதவி  இன்றியமையா தது. அது போலப்  பிறவி  நோய்க்கு  மருந்தாவான் இறைவன்  என்பார், “மருந்தினனே  பிறவிப்  பிணிப்பட்டு  மடங்கினர்க்கெ “  என்றார். மருத்துவனால்  தரப்படுவதன்றே  மருந்து .  இங்கே  மருத்துவனாகிய இறைவனையே  மருந்தாகக்  கூறியது எங்ஙனம் பொருந்தும் எனின் , மருந்தின் இயல்பு கூறிய வள்ளுவர் “உற்றவன்  தீர்ப்பான்  மருந்துழைச்  செல்வான்  என்று, அப்பால் நாற்கூற்றே மருந்து “ எனத் தீர்ப்பானையும்  உடன்  கூறியமையாற் பொருந்தும் என்க.

                       இருத்தல்  –  வேறறக்  கலந்திருத்தல் . உலகத்தில்  ஒருவன்  தனக்கு  உடைமையாகவுள்ள  ஒரு  பொருளை  ஆளுங்கால் , ஆளப்படும்  அப்பொருளும்  ஆள்பவனாகிய  தானும்  வேறாக இருத்தலைக் காண்கிறோம்  இறைவன்  தன் உடைமையாகிய உயிரை ஆளுங்கால் , அவ்வுலகியற்கு  மாறாக வேறறக்கலந்து நின்று  ஆள்வன்  என்பது  போதர  , “இருந்து” என்றார். ‘கடையவனேனைக்   கருணையினாற்   கலந்தாண்டு  கொண்ட “ என்பது  அடிகள் திருவாக்கு . ஒரு  நிலம்  உடையான்  , அதனை  ஆண்டனுபவித்தல்  , விற்றல் , ஒற்றிவைத்தல்  என்னும்  இம்மூன்றுஞ் செய்தற்கு  உரிமையுடைய னாதல்  உலகியலிற்  கண்டது . ஈண்டு  அவ்வுலகியலைத்  தழுவித்  தம்  உடல்  பொருள்  ஆவி  மூன்றும் இறைவன் உடைமையெனக்  கண்ட  அடிகள் இம்மூன்றனுள்  எது  வேண்டுமானாலும்  செய்துகொள்க  என்பார், இங்ஙனம்  கூறினர் .

                       இம்மூன்றனுள் விற்றல் , விலையாகப்  பிறிதொரு  பொருளைப் பெற்றுக்கொண்டு  தன் பொருளைக் கொடுத்தல் ,அஃது  ஊதியங்  கருதிய தால்  , மாற்றப்படும்  அப்பிறிது  பொருளின்  இன்றியமையாமை   கருதியதால் செய்யப்படுவதாகும் . ஒற்றிவைத்தல்   தகுதியான  பொருள்  பெற்று  நில  முதலியவற்றை  அடமானமாக  வைத்தல் . அஃது ஒருவன்  கையில்  பொருள் இல்லாத  காலத்தில் அப்பொருள்  நிமித்தம்  செய்யப்படு வதாகும் . இவ்விரண்டும்  வேண்டுதல்  வேண்டாமை  யில்லாதவனாகிய  இறைவனுக்கு  அவசியம்  இல்லாதனவாம் . ஆண்டு  கோடல்  –  ஆண்டனுப வித்தல்  . மக்கள் ஆட்சி  ஆண்டானுக்குப்  பயன்  விளைப்பது. இறைவன்  ஆட்சி  அடிமைக்குப்  பயன்  விளைப்பது ,ஆண்டவன்  அருள்  வடிவினனா தலின்  , ஆண்டு  கொள்ளுதலிலே  நோக்க  முடையவனாவனென்பது  அடிகளின்  உட்கோளாகும் .

          இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித்  தமக்கு  உபதேசித்த பொழுதே  அடிகள் தம்  உடல் , பொருள் , ஆவி  எல்லாம்  இறைவன்  உடைமையெனக்  கண்டவராதலான் , அவ்வுரிமை  கருதி ,” நின் உடைமையை  எங்ஙனம்  செய்யினும்  செய்க” என்று  கூறும் அவ்வளவன்றி  வேறு  யாதுஞ்செய்தற்கு  யான்  உரிமை உடையேனல்லேன் என்பார் , “ஆண்டுகொள்   விற்றுக்கொள்   ஒற்றிவை  யென்னினல்லால்  “  என்றார்.  “என்னினல்லால்” என்பதன்பின்  , “பிறிதொன்றும் செய்தற்கு  உரிமையில் லாத  “  என்னும்  சொற்கள்  அவாய்  நிலையான்  வந்தன” என்று  பரிமேலழகர்  விளக்கியிருத்தலும்   ஈண்டு  அறியத்தக்கது .

            அடிகள்  தம்மை  விருந்தினன் என்று  கூறியது , தம் கண் காணா  மெய்யன்பர்  பலர்  முற்பட்டு  இறையருளிற்  கலந்து  இன்புற்றனராக  , தாம்  அப்பேறு  பெறாமல்  பிற்பட்டிருத்தல்  குறித்தென்க . இக்கருத்தை  “ பன்னாளுன்னைப்  பணிந்தேத்தும்  பழைய  வடியாரொடுங்கூடா  , தென்னாயகமே  பிற்பட்டிங்கிருந்தே  னோய்க்கு  விருந்தாயே” என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலான் அறிக . இறையருளிற்  கலந்தாரெல்லா ரையும்   பழையவடியார்  என்றதனான் எஞ்சி நின்ற  தம்மை  “விருந்தினன்” என்றார்.  பழமை  புதுமை  யென்பன  முறையே  வீட்டின்பத்திற்குரிய  தவச் செயலின்  நிறைவையும்  குறைவையும்  குறிப்பனவாம் . புதியவன்  என்னும்  காரணத்தை  முன்னிட்டு  என்னை  விட்டுவிடுவாயோ?  விடலாகாது என்பார் ,  “விட்டிடுதி கண்டாய்” என்றார் .  

                    இதன்கண் ,” இருந்தென்னை  யாண்டுகொள்  விற்றுக்கொள்  ஒற்றிவை”  என்று  கூறியிருத்தலால்  , உயிர்  மாயாகாரியமாகிய  உடல்  கருவி  இடம்  நுகர்  பொருள்களாகிய  இவற்றின்  தொடர்பை  வெறுத்துத்  தான்  இறைவன்  உடைமை  என்பதை  உள்ளவாறறிதல்  வேண்டுமென்பது பெறப்படுதலான்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                       **************************************

பாடல் : 19 .

மடங்கவென்  வல்வினைக்  காட்டைநின்  மன்னருட்  டீக்கொளுவும் 

விடங்கவென்  றன்னை  விடுதிகண்  டாயென்  பிறவியைவே

ரொடுங்களைந்  தாண்டுகொ  ளுத்தர  கோசமங்  கைக்கரசே

கொடுங்கரிக்   குன்றுரித்  தஞ்சுவித்  தாய்வஞ்சிக்  கொம்பினையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  பழைய  அடியாரொடுங்  கூடாத  புதியன்  எனக் கொண்டு  என்னைக்  கைவிடலாகாதென  விண்ணப்பஞ்  செய்துகொண்ட  அடிகள், இத் திருப்பாட்டில்  யான்  புதியனாதற்கு  ஏதுவாக  நின்று  என்னைப்  பிணித்திருக்கும் வல்வினைக்காட்டை  அருட்கனலாற்  பொடியாக்கும் பேராற்ற லுடையாய்  நீயே  யாதலின்  , என் பிறவியை வேரறக்  களைந்தருளல் வேண்டுமென்று  விண்ணப்பம்  செய்து  கொள்ளுகின்றார் .  

பதவுரை :- உத்தரகோசமங்கைக் கரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே,

குன்று கொடுங்கரி உரித்து  =  மலை  போன்ற  கொடிய  யானையை  யுரித்து ,

வஞ்சிக் கொம்பினை அஞ்சுவித்தாய்  =  வஞ்சிக்கொடி  போன்ற  உமையம்மையை  அச்சமுறச்  செய்தவனே  ,

என் வல்வினைக்காட்டை  =  அடியேனது  வலிய  வினையாகிய    காட்டினை,

மடங்க  =  ஒடுங்கியழியுமாறு  ,

நின் மன் அருள் தீக்கொளுவும்  =   நின் பேரருளாகிய  நெருப்பிட்டுக் கொளுத்தும் ,

விடங்க  =  ஆண்மை மிக்கவனே ,

என் தன்னை  விடுதி  =  என்னை  விட்டுவிடுவாயோ?  (விடலாகாது) ,

என் பிறவியைவேரொடுங்க ளைந்து  ஆண்டு கொள்  =  அடியேனது பிறப்பை  மூலத்தொடுங்  களைந்தொழித்து  என்னை  ஆட்கொண்டருளுவாயாக  என்பது .

விளக்கவுரை  :-  மலை  போன்ற  கொடிய  யானை யென்றது  கயாசுரனை . உருவப் பெருமையும் கொடுங்குணமும் உடைமை  பற்றிக்  கயாசுரன்  “கொடுங்கரிக் குன்று”  என்னப்பட்டான் . நல்லோர்க்குக்  கேடு  விளைத்த கயாசுரனைக்  கொன்று  அவன்  தோலைச்  சிவபிரான்  போர்த்தனன்  என்னும்  புராண கதையை  உட்கொண்டு  இங்ஙனம்  கூறப்பட்டது . “வஞ்சிக்கொம்பு  “ என்புழிக் கொம்பு  உவமம்  ஆகுபெயராய்  இறைவியை  யுணர்த்தும் . வஞ்சிக்கொடி போன்ற  மெல்லிய  இயல்பினையுடைய  உமையம்மை  யென்பது  பொருள் . எல்லாவுலகங்களையும்  காத்தும்  படைத்தும் கரந்தும்  விளையாடும்  இறைவனது பேராற்றற்குக்  கயாசுரனைக்  கொன்றது ஒரு பொருளன்று ; அவ் வீரச்செயலைக் கண்டு  மெல்லிய  இயல்பினையுடைய  அம்மை  அஞ்சியதே  கருதத்தக்கதென்பார் , “கொடுங்கரிக் குன்று ரித்தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே” என்றார்  . அம்மையின்  அச்சத்தையும்  எண்ணாது கொடிய  அசுரனைக்  கொன்றது , தற்பயன்  கருதாமல்  நல்லோர்க்கு  நேர்ந்த  இடுக்கணைக்  களைந்து  அவர்க்கு  நலஞ் செய்யவேண்டுமென்னும் பேரருள் காரணமாக  எழுந்த குறிக்கோள் பற்றியேயாம் . இக்குறிக்கோளைத்  தம் பொருட்டும் மேற்கொள்ள வேண்டுமென்பது அடிகளின்  உட்கோட் குறிப்பாகும் . அக் குறிப்பின்  விளக்கமே  பின்வருவது .

                   வினையை  வல்வினை மெல்வினை யென இருதிறப்படுத்துக் கூறுப . வல்வினை  ஆற்றன்  மிகுதியும்  பயன்  விளைப்பதில் விரைவும்  உடையது. மெல்வினை  அத்தகையதன்று . பாண்டிய அரசன்   குற்றமிலனாகிய  கோவலனைக்  கொலை  புரிவித்த குற்றத்திற்கு  ஆளானது  வல்வினை  காரணமாக  என்பது  சிலப்பதிகார  ஆசிரியர்  கருத்து . இதனை “வல்வினை வளைத்த கோலை  மன்னவன்  , செல்லுயிர்  நிமிர்த்துச்  செங்கோலாக்கியது” என்று  அவ்வாசிரியர் நயம் பெறக்  கூறிய வற்றான் அறிக . நீதி  பிழைத்தது பொறாது அரசன் உடம்பினின்றும் வெளிப்பட்டவுயிர்  வலிய வினையால் வளைக்கப்பட்ட கோலை நிமிர்த்துச்  செங்கோலாக்கியது என்று  கூறிய  நயம்  நினைந்து  இன்புறத்தக்கது .  

                        அடிகள் தம்  வல்வினையின்  மிகுதி  புலப்பட  “ வல்வினைக்  காட்டை  “ என்றார். பயன்படாத மரஞ்  செடிகளுடைய  காட்டையழித்தற்கு  நெருப்புக் கருவியாதல் போலத் ,தம் வல்வினையை யழித்தற்கு இறைவனது பேரருள் கருவியாதல் வேண்டுமென்பார்  , வினையைக்  காடாகவும்  இறை யருளைத் தீயாகவும்  உருவகஞ் செய்து கூறினார் . வினை  வலிதாகலின்  , அதனை யழித்தற்குரிய இறையருள் மன்னருளெனப்பட்டது . இறயருட்கு  ஒறுத்தலும் அளி செய்தலும் இயல்பாதலின் , ஈண்டு ஒறுத்தல் குறித்துத்  தீயாக  உருவகஞ் செய்யப்பட்டது . வல்வினைக் காட்டை அருட்கனலால் எரித்தற்கு ஆண்மை இன்றியமையாததாகலின் ,இறைவனை  ஈண்டு “விடங்க” என்றார் .விடங்கம் –  ஆண்மை . ஆண்டவனே! நின் ஒரு  கூற்றினளாகிய அம்மையின் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மன்னுயிர்  நலங்குறித்துக்  கரிக்குன்று உரித்த இத்தெறுதற்  குணம்  என் வல்வினைக் காட்டை யழித்தற் கண்ணும் முற்படத்தக்கதாகவும் , என்னைக் கைவிடல்  தகுமா என்பார் , “என்றன்னை  விடுதிகண்டாய்” என்றார் . கைவிடாமற் செய்யத்  தக்கது  யாதென்னும் வினாவிற்கு விடையாகப்  போந்தது “என்பிறவியை வேரொடுங்களைந்தாண்டுகொள்” என்பது . கொல் என்பது வேண்டுகோட்  பொருளில்  வந்த வியங்கோள் .

             பிறவிக்கு  வேராவது அவாவாகும் . “அவாவென்ப வெல்லாவுயிர்க்கு  மெஞ்ஞான்றும் , தவா அப் பிறப்பீனும்  வித்து “ என்பது பொருளுரை . வெளிப்படும்  முளைக்கு  ஆக்கந்தருவது  வேராதலின் ,அதன்  சிறப்புத்  தோன்ற  ஒடு உருபு புணர்க்கப்பட்டது . வேரிருக்க முளை களையப்படு மாயின்  , மீண்டும்  அவ்வேரினின்றும் முளை தோன்றும் . அது போலப்  பிறவிக்கு  வேராக  வுயிரைப்பற்றி நிற்கும் மூல கன்மம்  ஒழிக்கப்படாமல் , எடுத்த அப்பிறவி மாத்திரம் நீக்கப்படுமாயின் , அம் மூல கன்மத்தினின்றும் மீண்டும் பிறவி யுண்டாம்  என்னும்  கருத்தினராய் “என் பிறவியை  வேரொ டுங்களைந்து “ என்றார் .

             கன்மம்  மூலகன்மம் எனவும் கான்மிய  கன்மம் எனவும்  இருவகைப் படுமென்ப.  “கன்மமும் மூலங்காட்டிக் கான்மியமலமாய் நிற்கும் “  என்று  சிவஞான சித்தியும் , முதற்காரணமாகிய  மூலவினை பதி முதலிய பொரு ளோடொப்ப  அநாதியாயுண்டென்பாரும்  “  என்று  சிவஞானமாபாடியமும்  கூறுமாறறிக . மூல கன்மம்  ஈண்டு  அவாவாகும் . அதன் காரியம் அறம்  பாவமாகவும்  , அவற்றின் பயன் இன்ப துன்பமாகவும் கூறப்படும் . அவா  மூல கன்மமாதலை  , “ செம்புறு  களிம்பென  அநாதிமல  மூழ்கியிருள் சேருமலர்விழி  யென்னவே , தெளிவற்ற கேவலத்  தசைவற்றிருந்துமல சேட்டை  யாற்  குழவிகுருடர் ,தம்பிணியினாலுற்ற  பால் கோலை நோக்க அவை  தமையளிப்பாரென்ன நான் , சார்கன்ம  மாயையை  விரும்ப  நீ  தந்திடச்சகலனாய் “ என்று  சிவஞான  முனிவர்  விளக்கியிருத்தலும் அறிக . வீட்டு  நிலைத்  தகுதியுள்ள  உயிரைப்பற்றி  நிற்கும்  தொடர்பை  யொழித் தலே   ஈண்டு  மூல கன்ம நாசமாகும்  ஆதலின் , அதுபற்றி  அக்கன்மத்தின் அநாதித்  தன்மைக்கு  இழுக்கின்றென்பது .

                  “என் பிறவியை  வேரொடுங்  களைத்தாண்டு  கொள்” என்றாரா யினும் , என்னை  ஆட்கொண்டு  என்  பிறவியைக் களைக  என்பதே கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் ,  ஆட்கொண்டபின் பிறப்பொழித்தல்  முறையாதலின் .

                  இனி, “ஆண்டு கொளுத்தர கோசமங்கைக்கரசே” என இயைத்துப்  பொருள்  கோடலுமாம் . அங்ஙனம் கொள்ளுங்கால்  “கொள்……….அரசே” என்பதை  வினைத்தொகையாக்குக .

                   இதன்கண் , வல்வினைக்காட்டைக்  கொளுத்திப்  பிறவியை  வேரொடுங்  களைதல்  வேண்டும்  என்பது  கூறப்பட்டிருத்தலின் ,பிரபஞ்ச  வைராக்கியம்  வெளிப்பட்டு  நிற்றல் அறிக .

                                     ******************************************

பாடல் :20 .

கொம்பரில்  லாக்கொடி  போலல  மந்தனன்  கோமளமே

வெம்புகின்  றேனை  விடுதிகண்  டாய்விண்ணர்  நண்ணுகில்லா

வும்பருள்  ளாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

யம்பர  மேநில  னேயனல்   காலொடப்  பானவனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம்  வல்வினைக் காட்டை  அருட்கனலாற்  கொளுத்தி என்னை  ஆட்கொள்ளவேண்டுமென்று  இறைவன் பால்  விண்ணப்பஞ் செய்து கொண்ட  அடிகள் ,இத் திருப்பாட்டில்  அவ்வி னைத்  தொடர் அறாமையாற்  கொழு கொம்பில்லாத  கொடிபோற்  சுழன்று  வெதும்பலானேன் ; இந் நிலையிற்  கைவிடலாகாதென  வேண்டுகின்றார் .

பதவுரை :- விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய்  =  தேவரும்  அணுகுதற்கு  இயலாத  மேலிடமாகிய  சிவலோகத்திருப்பவனே  ,

உத்தரகோசமங் கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

நிலனே  அம்பரமே  காலொடு  அனல்  அப்பு  ஆனவனே   =  மண்ணும்  விண்ணும்  காற்றும்  நெருப்பும்  நீரும்  ஆனவனே ,

கொம்பர் இல்லா  =  கொழுக்கொம்பில்லாத,

கோமளக்கொடி  போல்  அலமந்தனன்  =  இளங்கொடி  போலச்  சுழன்று  வெம்புகின்றேனை ; வாடுகின்ற  அடியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-   உம்பர் – மேலிடம் .  இஃது  இந்திரன் முதலிய  தேவர்கள் வாழும்  உலகங்களைக்  குறிக்கும்  ஆதலின்  , அவற்றை விலக்கிச்  சிவலோகத்தைப்  புலப்படுத்தற்கு , “விண்ணர்   நண்ணுகில்லா”  என்னும்  அடை புணர்க்கப்பட்டது . விண்ணுலக  வாழ்க்கைவுடைய  தேவர்க்கு   இருப்பிடனாதலை  விலக்கிய  அவ்வளவன்றி  , அன்னார்  அணுகுதற்கும் அரியதென்பதைப்  புலப்படுத்தற்கு  “நண்ணுகில்லா” என்று  கூறப்பட்டது . நண்ணுதல்  –  அணுகுதல் . சிவலோகம்  விண்ணுலக  முதலிய  எல்லா  வுலகங்களும் தன்னுள்  வியாப்பிய  மாக  அடங்கி  நிற்ப, தான்  அவற்றை  வியாபித்துக்  கடந்து  நிற்பதொன்றாகலின்  , இவ்வாறு  கூறப்பட்டது . திருக்கோவையில்   “ வான்  கழிதான்  கெழுமி” என்புழி வானையுங்  கடந்து  நிற்பது  என்னும்  பொருடோன்ற  , “வான்கழி  சிவலோக  மெனினும்  அமையும் “ என்று  பேராசிரியர்  உரை  கூறியதுங்  காண்க .

          புண்ணியப்  பயன்  துய்ப்பவராகிய  தேவரும்  அணுகுற்கு  அரிய  மேலிடத்துத்  திகழும்  இறைவன்  , மெய்யன்பர்க்கு  எளியனாய்   இந்  நிலவுலகத்துத் திருக்கோயில்  கொண்டு  எழுந்தருளிக்  காட்சியளிக்கும் இயல்பினன்  என்பது தோன்ற  , “ உத்தரகோசமங்கைக்கு  அரசே” என்றார் . இஃது அருமையில்  எளிய  அழகாகும். ஈற்றடியில்  கூறப்பட்ட  பூதங்களின்  வைப்பு  முறை  பொருளியையிற்கேற்ப  மாற்றிக் கொள்ளப் பட்டது , நிலமே  யம்பரமே “ எனவும் , “காலொடு  அனல்  அப்பானவனே”  எனவுங்கொள்க . எல்லாப்பொருளும்  தோன்றுதற்கு  இடனாக  இருத்தலின்  நிலத்தையும்  , அப்பொருள்களைத்  தன் அகப்படுத்து நிற்றலின்  ஆகாயத்தையும் ஒருங்கே  யியைத்து , “நிலனே  யம்பரமே” எனவும் ,அப்பொருள்களைச்  சலிப்பித்தல் சுடுவித்தல்  குளிர்வித்தல் என்னும் தொழில்  இயைபு  பற்றிக்  காலொடு  அனல்  அப்பு  எனவும்   கூறினர் . ஏகாரமும் ஒடுவும் எண்ணுப்பொருளன. “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ,யொன்று வழியுடைய  வெண்ணினுட் பிரிந்தே” என்னும்  விதியால் ஒடுவென்னும்  எண்ணிடைச்  சொல்லை  அனலோடு அப்பொடு  என இயைக்க . இங்ஙனம்  ஈண்டு  ஐம்பெரும் பூதங்களும் ஆனவனே  என  இறைவனை  விளித்து , ஒரு  நயம்  பற்றி  யென்க.  அந் நயம்  பின்வரும் விளக்கத்தால் அறியலாம் .

             கொம்பு  –  இளங்கொடி  படர்தற்கு ஆதரவாக  அமையும் மரக்கிளை  ,கோமளம் என்பதைக்  கொடியோடியைத்து  இளங்கொடி யெனக்  கொள்ளப்பட்டது .முதிர்ந்த கொடியாயின்  அலமருதலும்  வெம்புதலும்  எளிதிற் பற்றா . அதனால்  அதனை  விலக்குதற்கு  இளங்கொடி யென்னப்பட்டது . கோமளம்  –  இளமை ; மென்மையுமாம்  . கொழுகொம்பு  இல்லாத  இளங்கொடி  சுழன்று  வாடுதல்  போல  , இறைவனது திருவருட் சார்பு  இல்லாமையால்  தமக்கு  ஏற்பட்ட  நிலை  பேறின்மையையும்  வாட்டத்தையும் புலப்படுத்துவாராய்  , “கொம்பரில்லாக்  கொடிபோலலமந்தனன்  வெம்புகின்றேனை என்றார் . அலமருதல்  –  சுழலுதல் . அலமந்தனன்  என்னும்  தன்மை  யொருமை  வினை  முற்று  . வினை யெச்சமாய் வெம்புகின்றேன் என்னும்  வினையைக்  கொண்டு   முடிந்தது . வெம்புதலாகிய  உவமேயப்  பொருளின்  அடையை உவமைக்கும்  ஏற்றி  அதற்கு  ஏது வெயில்   வெப்பமெனவும், உவமேயப்பொருளின் வாட்டத்திற்கு  ஏது  மலவெப்பமெனவும்  கொள்ளல் வேண்டும் .

               கொழுகொம்பில்லாமற்  சுழலும்  இளங்கொடி  அளிக்கத்தக்க தென்பதை  முல்லைக்கொடிக்குத்  தேரீந்த  பாரிவள்ளலின் இரக்கச் செயலான் அறியலாம் . இளங்கொடிக்குப்  பற்றுக்கோடு  இன்மையாற்  சுழற்சியும் , வெயில்  வெப்பத்தால்  வாட்டமும்  உளவாதல்  போலத்  , தமக்குத்  திருவருட்  சார்பின்மையால்  நிலையின்மையும் மலவெப்பத் தால் வாட்டமும்  உளவாயின என்பார் , இங்ஙனம்  கூறினர். இங்ஙனம்  தமக்கேற்பட்ட  திகைப்பிற்கும்   அது  நீங்கித்  தேறுதற்கும்  இறைவனே  காரணமாவான் என்னும்  உண்மை, ஈற்றடியில்  ஐம்பெரும்  பூதங்களின்  வடிவமாக  இறைவனைக்  கூறியமையாற்  குறிப்பின்  உணரப்படும் . அக்குறிப்புப்  பொருள்  வருமாறு :-

                ஒரு கொடி தோன்றுதற்கு  ஆதாரமாகவும்  வெளிப்பட்டு  வளர் வதற்கு  இடனாகவும்  உள்ளவை  முறையே  நிலமும்  வெளியுமாகும்  . அம் முறையில்  தாம்  பிறத்தற்கும் , உடலோடு  கூடிப் போக்குவரத்துச்  செய்தற்கும்  இறைவன்  ஆதாரமாகவும்  இடனாகவும்  இருத்தலின் ,             “ நிலமே யம்பரமே “  எனவும்  அக்கொடி  பற்றுக்கோடின்றிச்  சுழலுதற் குக்  காற்றும்  , வெம்புதற்குத்  தீயும் , அவ்வெப்பம்  தணிந்து குளிர்ச்சி  பெறுதற்கு நீரும்  காரணமாதல் போல , வினையெச்சத்தால்  திருவருட் சார்பு  பெறாமல்  தாம்  சுழலுதற்கும்  , வாடுதற்கும்  , அவ்வாட்டம்  நீங்கப்பெற்றுத்  திருவடி  நீழலில்  குளிர்ந்த  இன்பம்  பெறுதற்கும்  காற்றுத்  தீ  நீர்  என்னும்  பூதங்களின்  வடிவமாக  இறைவன்  விளங்குத லின்  , “ காலொடு அனல் அப்பானவனே “ எனவும்  கூறியருளினர்  என்பது .  

                மலவெப்பத்தால்  வெம்பிக்கிடக்கும்  அடியேனைக்  குளிர்ந்த   திருவருள்  வெள்ளத்தில் மூழ்குவித்து  இன்புறுத்துவதே   நின் இயல்பா கவும் , அங்ஙனம்  செய்யாமல்  கைவிடல்  தகுமா என்பார் , “ வெம்புகின் றேனை   விடுதிகண்டாய்”  என்றார். “ கோமளமே “ என்பது  அழகே  எனப் பொருள்பட்டு  இறைவனைக் குறிக்கும் என்று  கொள்வாரும்  உளர்.  ஈண்டு  இயைபின்மையால்  அஃது  உரையன்மை  அறிக .

                 இதன்கண் , கொழு கொம்பில்லாத  கொடி  போலச்சுழன்று   பாசப்பிணிப்பால்  வாடுகின்றேன் என அடிகள் உலக  வாழ்க்கையில்  வெறுப்புத் தோன்றக்  கூறியிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவாறறிக .

                                            ************************************

பாடல் : 21 .

ஆனைவெம்  போரிற்  குறுந்தூ  றெனப்புல  னாலலைப்புண்

டெனையெந்  தாய்விட்  டிடுதிகண்  டாய்வினை  யேன்மனத்துத்

தேனையிம்  பாலையுங்  கன்ன  லையுமமு  தத்தைமொத்

தூனையு  மென்பினை  யும்முருக்  காநின்ற  வொண்மையனே  .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  வினைத்தொடர்  அறாமையால்  கொழு கொம்பில்லாத  கொடி போலத்  திருவருட்   சார்பு  பெறாமல்  சுழன்று  வாடுகின்றேன்  என்று  கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  சுழன்று  வாடுதற்கு  ஏது  ஐம்புலன்கலின் தாக்குதலேயாம்  என்று  விண்ணப்பம்  செய்து  கொள்ளுகின்றார் .  

பதவுரை :-  வினையேன்  மனத்து  =  தீவினையுடையேனது  உள்ளத்தில் புகுந்து ,

தேனையும்  பாலையும்  கன்னலையும்  அமுதத்தையும்  ஒத்து  =  தேன்  பால்  கருப்பஞ்சாறு  தேவாமுதம்  என்னும்  இவற்றை யொத்து  இனிமை  பயந்து,

ஊனையும்  என்பினையும்  =  என் உடல்  இறைச்சியையும்  எலும்புகளையும்  ,

உருக்கா  நின்ற  ஒண்மையனே  =  உருக்கிக்  கரையச்  செய்கின்ற  ஞானவடிவினனே ,

எந்தாய்  =  என்  தந்தையே  ,

ஆனை வெம் போரில்  =  யானைகளின்  கொடிய  போர்  நிகழ்ச்சியில்  அகப்பட்ட ,

குறுந்தூறு என  =  சிறிய  செடியை  யொப்ப ,

புலனால்  அலைப்புண்டேனை   =  ஐம்புலங்களாலும்  அலைக்கப்பட்ட  சிறியேனை  ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  இறையருட்  பேற்றிற்குரிய  தூய்மையில்லாத  மனம்  என்பார் , “வினையேன்  மனத்து” என்றார் . வினை  ஈண்டுத்  தீவினையை  யுணர்த்தும் , புலனால்  அலைப்புறுதலின் , வினைப்பயன்  நுகர்ச்சிக் கேற்ப  மக்கள்  மனநிலை திரியும் இயல்பினதாகலின்  , தீவினைப்பயனால்   துன்புறும்  நிலையில்  தம்  உள்ளம்  தூய்மையில்லாததாகும்  எனவும், இந் நிலையிலும்  ஆண்டவன்  இனியனாய்த்  தம் உள்ளத்தில்  புகுந்து அதனை  நெகிழ்வித்ததற்குக்  காரணம்  , அவன்  அருட்பெறுக்கே யெனவும்  கருதி  அடிகள்  இன்புறுகின்றார் .  இறையருள்  இனிமைக்குத்  தாம்  நுகர்ந்த   மக்களுணவாகிய  தேன்  பால்  கருப்பஞ்சாறு  என்னும்  இவற்றின்  சுவையை  ஒப்புக்கூறப்  புகுந்த  அடிகள்  , அப்பொருள்களால்  அறியப்படாத  சிறந்த  தெய்வ  நறுஞ் சுவையைத்  தம்  அனுபவத்தில் உணர்ந்தமையின்  , தேவருண வாகிய  அமுதத்தையும்  உடன்  புணர்த்துத்  “ தேனையும்  பாலையும்  கன்னலையும்  அமுதத்தையும்  ஒத்து “ என்றார் . மனத்து  என்பதன்  பின்  புகுந்து  என்னும்  சொல்லும்  , ஒத்து  என்பதன்  பின்  இனிமை  பயந்து  என்னும்  சொற்களும்  அவாய்  நிலையில்  வருவித்துரைக்கப்பட்டன . தேன்  பால்  முதலியன  தம்மை  உண்டாருடைய  ஊனையும்  எலும்புகளையும் பெருகச் செய்யுமல்லது  உருகச் செய்யா  , இறையருள் அங்ஙனமின்றிச்  சுவைத்தலின்  , தேன்  பால்  முதலியவற்றை யொத்து ஊனையும்  எலும்புகளையும்  உருக்கியதென்பது அடிகள்  அனுபவத்தில்  கண்டது .ஊன்  பெருகப் பெருக  உள்ளொளி  சுருங்குமென்பதும் , அன்பு நிலையில்  ஊன்  உருக உருக  உள்ளொளி  பெருகுமென்பதும் , அடிகள் அனுபவமென்பதனை, “ஊனினையுருக்கி  உள்ளொளி  பெருக்கி “ என்று  அடிகள்  பிறிதோரிடத்து  அருளிச்செய்த   பாடற்பகுதியும் தெளிவுறுத்தும்  . மெலிய  ஊன்  உருகுதல்  எளிது ; வலிய  எலும்பு  உருகுதல்  அரிது . ஆண்டவன்  அருள்நிலை  அவ்வலிய  என்பினையும்  கரையச்செய்யும்  என்ற  இதனால்  அடிகளின்  உள்ளக் குழைவும்   திருவருட்டோய்வுமாகிய  இவற்றின்  பெருமை  புலனாம் . எலும்புருக்கி  என்னும்  நோய்  வலிய  என்பை  எளிதில்  உருக்கும்  இயல்பினதேயெனின்  , அவ்வுருக்கத்தின்  பயன்  அடங்காத  துன்பமாக  முடியும் . அருட்பதிவால்  ஊறும்  என்பு  முருகுதல்  வரம்பிகந்த  இன்பம்  பயப்பதாகும் மேலும்  நோயினால்  என்பும்  ஊனும்  கரைந்த  நிலையில்  உள்ளொளி  உண்டாதற்குச்  சிறிதும்  இடனின்றென்பதும்  கருதத்தக்கது .  

            இறைவன்  தம்  உள்ளத்தில்  இனியனாய்  நின்று  ஊனையும்  என்பினையுமுருக்குதல்  தமக்கு   மெய்யுணர்வாகிய  உள்ளொளியைப்  பெருக்கி  நலஞ் செய்தற்பொருட்டென்பார் , அவ்வுதவிச்  செயற்கேற்ப  அப்பெருமானை  “ஒண்மையனே” எனவும்  ஞானச்செல்வத்தை  மகன்மை  முறையில்  வைத்துத்  தமக்கு  வழங்க  முற்பட்டவியல்பு  குறித்து, “எந்தாய்” எனவும்  விளிகொள்ளலானார் . ஒண்மை  –  ஞானம் . ஐம்புலங்களாலும்  தாம்  அலைக்கப்பட்டு  வருந்துதற்கு  உவமை  கூறப்புகுந்த  அடிகள் யானைப்  போரிடைப்பட்ட  சிறு கொடியைக்  கருதலானார் .  பிராணிகளுள்  உருவகத்தால்  மிகப்பெரிது  யானை  ; மதச்செருக்கு  மிக்கது . அவ்யானைகள்  ஒன்றனோடொன்று  தாக்குங்கால் , அவற்றின்  காலடியிற்  பட்ட  சிறுசெடி  மிதிபட்டுச்  சிதைந்தலைதல்  போலப்  , புலங்களின்  தாக்குதலால் அறிவு  கலங்கி  நிலை பேறின்றித்  தவிக்கலானேன்  என்பார் ,  “ஆனைவெம்போரிற்  குறுந்தூறெனப்  புலனாலலைப்புண்டேனை  “  என்றார். அப்போரிடைப்பட்ட   சிறு  புதர்  , வேர்பறிக்கப்படாமல்  அலைப்புற்றுச்  சிதைவடைதல்  போலப்  புலங்களின்  தாக்குதலால் தாம்  இறவாமல்  கலக்கமுற்று  வருந்துதலை  இங்ஙனம்  குறிப்பிடுவாராயினர்  . எம்பெருமா னே!  இங்ஙனம்  துன்புறும்  நிலையில் அடியேனைக்  கைவிடல்   அருட்கடலாகிய  நினக்குத்  தகுமாவென்பார் , “ விட்டிடுதி கண்டாய் “ என்றார் .

                  இதன்கண்,” ஆனைவெம்போரிற்   குறுந்தூறெனப்  புலனாலலைப் புண்டேனை  “ எனப்பொறி  புலன்களாகிய  துன்பத்தை  வெறுத்துக்  கூறியிருத்தலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                          ***************************************

பாடல் : 22 .

 ஒண்மைய  னேதிரு  நீற்றையுத்  தூளித்  தொளிமிளிரும்

வண்மைய  னேவிட்  டிடுதிகண்  டாய்மெய்  யடியவர்கட்

கண்மைய  னேயென்றுஞ்  சேயாய்  பிறர்க்கறி  தற்கரிதாம்

பெண்மைய  னேதொன்மை  யாண்மைய  னேயலிப்  பெற்றியனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஐம்புலன் களின் தாக்குதலால்  அலைப்புண்டு  வருந்துகின்றேன் என்று  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அத்  தாக்குதலில்  அகப்படாமலிருத்தற்கு  இன்றியமையாத  நின் அணுக்கத்தை யான்  மெய்யன்பர்  குழுவுட்  படாமையால்  பெறவியலாமல்  வருந்துகின்றேன் ; காத்தருள்க என்று  குறிப்பிற்  புலப்பட  அருளிச்செய் கின்றார் . “,மெய்யடியவர்கட் கண்மையனே” என்பது இக்குறிப்பிற்குச்  சான்றாம் .

பதவுரை :-  மெய்யடியவர்கட்கு  என்றும்  அண்மையனே   =  மெய்யொழுக்கமுள்ள  தொண்டர்க்கு  எஞ்ஞான்ற்ம்  அணிமையில்  உள்ளவனே  ,

பிறர்க்கு  என்றும்  சேயாய்  =  தொண்டரல்லாத  பொய்யொழுக்கமுடை

யார்க்கு   எக்காலமும்  சேய்மையில்  உள்ளவனே ,

அறிதற்கு  அரிதாம்  தொன்மை பெண்மையனே   =  காட்சி  முதலிய  அளவைகளால்  அறிதற்கு  அரிதாகிய  பழைய  பெண்டன்மையுடை யவனே ,

ஆண்மையனே  =  அத்தகைய  ஆண்டன்மையுடையவனே  ,

அலிப்பெற்றியனே  =  அலித்தன்மை யுடையவனே ,

ஒண்மையனே  =  ஒளிப்பிழம்பாகவுள்ளவனே  ,

திருநீற்றை  உத்தூளித்து  ஒளிமிளிரும்  வெண்மையனே  =  திருநீற்றை  நிறையப்பூசி   அந் நீற்றொளியால்  விளங்கும்  வெண்னிற  முடைய வனே  ,

விட்டிடுதி  =  என்னைக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-   மெய்யடியவராவர்  தவ வேடத்தில் மறைந்தொழுகு தலின்றி  அகமும் புறமும் ஒத்த  தூய்மையுடையவராய்  , இறைவனிடத்துத்  தொண்டு  பூண்டொழுகுவோர் . யாண்டும்  நீக்கமற  நிறைந்திருக்கும் இயல்புடைய  இறைவன்  , ஒரு  சாரார்க்குச்  சேயனாதலும்  , மற்றொரு  சாரர்க்கு, அணியனாதலும்  எவ்வாறு  பொருந்துமெனின் , இடையீடின்றிப்  பெய்கின்ற  மழை நீரைப்  பள்ள நிலம்  ஏற்றுக்  கொண்டிருத்தலும்  , மேட்டு  நிலம்  ஏற்றுக்கொள்ளாமல்  வழிந்து போக  விடுதலும்  கண்கூடன்றே? அவ்வாறே  இறைவனது  நிறையருளைத்  தவத்தால்  தூய்மை  எய்தினர்  உள்ளம்  பற்றிக் கோடலும்  , ஏனையோர்  உள்ளம்  பற்றாமல்  விடுதலும்  உண்மையின்  , “மெய்யடியவர்கட் , கண்மையானே  யென்றும்  சேயாய்  பிறர்க்கு  “  என்றாராதலின்  , அது பொருந்துமென்க . “என்றும்” என்னும்  சொல்  இடைநிலை  விளக்காக  நின்று  ஈரிடத்தும்  இயையும் .

                மெய்யடியவரை  முற்பட வைத்து அவர்க்கு  அண்மையனே  என்றமையால் , இறைவன்  மெய்யன்பரை  நாடித்  தானே யடைபவன் என்பதும்  , சேயாய்  என  விலக்கத்தை  முற்படக்கூறிப்  “பிறர்க்கு” என  பிற்பட  வைத்தமையால்  மெய்யன்பரல்லாதார்க்கு  இறைவனது  விலக்கம்  முற்படும்  என்பதும் குறிப்பிற்  புலனாயவாறறிக . நல்லோரைக் கூறுங்கால் அவர்  பெருமை  வெளிப்படக்கூறுதலும்  , தீயோரைக்  கூறுங்கால்  அவர்  தீமை  வெளிபடாவாறு  வேறொருபடியாகக்  கூறுதலும்  உலகத்து உயர்ந்தோர்  வழக்கு .  ஒருவருடைய  நல்லனவுந்  தீயனவுமாகிய  குணங் களைக்  கூறுங்காலும்  , “சீரெலாந்தூற்றிச் சிறுமை புறங்காத்துக் “  கூறவேண்டு மென்னும்  நீதியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . அம்முறையே  மெய்யன்பரை  மெய்யடியவரென்றும்  , மெய்யன்பில்லாதாரைப்  பிறர்  என்றும்  கூறிய  நயம்  இன்புறத்தக்கது .  

                   இறைவனைப்  பெண்  ஆண்  அலித்தன்மைகளை யுடையவனாகக்  கூறியது, வழிபாடு செய்வார்  தகுதி நோக்கியென்க . சத்தியும் சிவனுமாக  விளங்குதலால்  பெண்மையும்  ஆண்மையுமுடைமை  அறியலாம் . பிரமம்  என்னும்  சொல்லால்  குறிக்குங்கால்  அலித்தன்மை  புலப்படும் .  சத்தி  பெண்பாலும், சிவன்  ஆண்பாலும்,  பிரமம்  ஆணும்  பெண்ணும்  அல்லாத  ஒன்றன்  பாலுமாம் . பிரமம்  என்னும்  சொல்லாற்  குறிக்கும்  அந் நிலையே  ஈண்டு  அலியெனப்  படும்  . வடநூலார்  பிரமம்,  என்னுஞ்  சொல்லை  நபுஞ்சகலிங்கம்  என்ப .  வடமொழிக்  கவிஞரொருவர்  தம் நெஞ்சை  முன்னிலைப்  படுத்திப்  , பிரமப்பொருளைப் பற்றுமாறு  சாதுரிய  முறையில்  கூறிய  ஒரு  சுலோகக்  கருத்து  ஈண்டு  நினைந்து  இன்புறத்தக்கது .

                   அது  வருமாறு :-  நெஞ்சமே! நினக்கு  வேலை  யாண்டு?  சாரக்கடவ  நெறியைக் குறித்து அடிக்கடி  அலைகின்றாய் ; ஆண்  பெண்  இருபாலார்  பக்கலிலும் அணுகுதல்  தகுதியன்று ; அடிக்கடி  மக்கட் குழுவில் செல்லக் கருதுதல்  நகைப்பிற்கிடனாகும்  ; ஆதலின், அங்ஙனம்  செல்லற்க  நின்னொடு  ஒத்த இனமும் பேரின்பம்  பயப்பதுமாகிய  பிரம்மத்தைப்  பற்றிச்  சார்ந்து  நலனெய்துக “வென்பது . இதன்கண்  நெஞ்சமும்  பரமமும்  ஒத்த  இனமென்றது, இரண்டும்  நபுஞ்சகலிங்கம்  ஆதல்  பற்றி  .  மக்கட்  குழுவிற்  செல்லுதல்  நகைப்பிற்கிடனாமென்றது  , நெஞ்சம் நபுஞ்சகப்  பாலாதலின், ஆணும்  பெண்ணுமாகிய  மக்கட்குழு  ஏற்றுக் கொள்ளமாட்டா தென்பது  குறித்தாம் .  

                      உலகத்து  மக்களுடைய  ஆண்மை  பெண்மை  களும்  அலித்தன்மையும்  காட்சி  முதலிய  அளவைகளால் அளந்தறிதற்கு  எளியன வென்பதும், கன்மத்திற்  கீடாகப்  புதிது புதிதாகப்  படைக்கப்பட்டன வென்பதும் , இறைவனுடைய  அத்தன்மைகள்  அவ்வளவைகளால்  அளந்தறிதற்கு  அரியனவென்பதும்  ,வழிபடுவார் தகுதிக் கேற்பத் தானே  படைத்துக்கொள்ளப்பட்ட  பழமையுடையன  வென்பதும் புலப்பட  , “அறிதற்கரிதாம் “ எனவும், “தொன்மை” எனவும்  கூறப்பட்டன .  “அறிதற்கரிதாம் “ என்பதையும்  “தொன்மை” என்பதையும்  பெண்மை  ஆண்மை  அலிப்பொறி  என்பவற்றோடு  தனித்தனி  இயைத்துக்கொள்ளல்  வேண்டும் . பெற்றி  –  தன்மை . இறைவனுடைய  தன்மைகள்  பிறரால்  அறியப்படாதென  வென்பதை  “தன்மை  பிறரால் அறியாத  தலைவா”  எனப்  பிறிதோரிடத்து  அடிகளும் , “இன்ன  தன்மையன்  என்றறியொண்ணா  எம்மானை “  எனச்சுந்தரமூர்த்திகளும்  கூறியவற்றான்  அறியலாம் .  

                  இறைவன்  அடிகளுக்கு  உபதேசித்த  ஞான்று  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அளித்த கண் கொள்ளாக்காட்சி,  அடிகள் அகத்தே  நின்று  இன்புறுத்தலின்  , அத் திருமேனியின்  செந் நிறப்  பேரொளியில்   ஈடுபட்டு , “ஒண்மையனே” எனவும்  , அச்செம் மேனியின் மேல்  பூசப்பட்ட  திருநீற்றொ ளியால்  திகழும்  வெண்ணிறப்  பேரொளியை  நினைவு  கூர்ந்து  , “திருநீற்றை  உத்தூளித்  தொளிமிளிரும்  வெண்மை யானே”  எனவுங்கூறினர். உத்தூளித்தல்  –  நீரிற்  குழையாமல்  நிறையப் பூசுதல்  . ஆண்டவனது  ஞானாசிரியத்  திருக்கோலத்தை  ஈண்டுக்  குறிப்பிட்டமையால்  ,”யார்க்கும்  அறிவரிய  திருமேனிக்காட்சி  அடியேற்கு  எளிவர  அருளுதற்கு  ஏதுவாகிய  கருணை  உளது என்னும்  உறுதி  கடைப்பிடித்தேனை  எங்ஙனம்  கைவிடல்  கூடும் “ என்னும்  உட்கோளுடையார் அடிகள் என்பதும்  , அவ்வுட்கோட் பயனை  வெளிப்படுத்துக் கூறுவாராய்  , “விட்டிடுதி கண்டாய்” என்றார் என்பதும்  புலனாம் .  

                      இதன்கண், அடிகள் இறைவனது ஞானாசிரியத்  திருக்கோலதில்  ஈடுபட்டு  உலகியலை  வெறுத்து நின்றமை  பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம்  தோன்றுதல்  அறிக .  

                                                  **************************************

பாடல் :23 .

பெற்றது  கொண்டு  பிழையே  பெருக்கிச்  சுருக்குமன்   பின்

வெற்றடி  யேனை  விடுதிகண்  டாய்விடி  லோகெடுவேன் 

மற்றடி  யேன்றன்னைத்  தாங்குந  ரில்லையென்  வாழ்முதலே  

யுற்றடி  யேன்மிகத்  தேறிநின்  றேனெனக்   குள்ளவனே .

கருத்துரை  :- முன்னைத் திருப்பாட்டில்  மெய்யன்பர்  குழுவுட்  படாமையால் நின் அணுக்கத்தைப்  பெற  இயலாமல்  வருந்துகின்றேன்  என்று குறிப்பிற்  புலப்படக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  , அங்ஙனம்  மெய்யன்பர் சார்பு  பெறாமைக்குத் தம் மனமொழி மெய்கள் செந்நெறிப்படாமையே  ஏதுவாகு மென்பதை வெளிப்படக்கூறி  விண்ணப்பம்  செய்து  கொள்ளு கின்றார் .

பதவுரை :- என்  வாழ் முதலே  =  என் வாழ்க்கைக்கு  மூலகாரண மானவனே  ,

பெற்றது கொண்டு  =  நீ தரப் பெற்றவனாகிய  மனமொழிமெய்களைக்  கருவியாகக்  கொண்டு  ,

பிழையே  பெருக்கி  =  தீங்குகளையே  மிகைபடச் செய்து ,

சுருக்கும்  அன்பின்  வெறுமை  அடியேனை  =  அன்பினைச்  சுருங்கச்  செய்கின்ற  போலித்தொண்டனாகிய  என்னை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ?  ,

விடில்கெடுவேன்  =  அங்ஙனம்  கைவிடுவாயாயின்  கெட்டொழிவேன் ,

எனக்கு  உள்ளவன்   =  எனக்கு  உள்ளத்தில்  விளங்கும்  ஆதரவாளனாக  ,

அடியேன்  உற்று  மிகத்  தேறி   நின்றேன்  =  அடியேன்  ஆராய்ந்து  நின்னைப்  பெரிதும் தெளிந்துள்ளேன் ,

அடியேனைத்  தாங்குநர்  மற்று இல்லை  =  இந் நிலையில் அடியேனைக்  காப்பவராக  வேறு  யாருமில்லை  (நீயே  காத்தருளல் வேண்டும் ) என்பது .

விளக்கவுரை :- இறைவன்  எல்லாவுயிர்களுக்கும்  மாயையினின்று  கன்மத்திற்  கீடாக  உடல்  முதலியன  உதவும்  நிமித்த  காரணனாயுனும், ஈண்டு  அடிகள்  “என் வாழ்முதலே”  என்று  சிறப்பு  முறையில்  குறிப்பிட்டு  விளித்தது , பின்னர்க்  கூறப்படும்  விண்ணப்பங்களை  ஏற்றுத்  தம்மைப்  பாதுகாக்கும்  பொறுப்பு  அப்பெருமான்  பாலதாம்  என்பதைப்  புலப்படுத்தற்  கென்க  . முதல்  –  காரணம்.  பெற்றது  என்பது  ஈறு  தோன்றிய  சாதியோரு மையாக  நின்று  மன மொழி மெய்களையுணர்த்தும் , அம்மூன்றும்  காரணம்  என்னும்  ஓரின மாதலின் . “அஞ்சுவ தஞ்சாமை பேதமை “ என்னும்  குறட்பாப் பகுதியும் , அதற்குப்  “ பாவமும்  பழியுங் கேடும்  முதலாக அஞ்சப்படுவன பல வாயினும்   சாதி பற்றி  அஞ்சவது என்றார். என்று  பரிமேலழகர்  கூறிய  உரையும்  ஈண்டு  நினைக்கத்தக்கன .

                     “வாழ்த்த வாயும்  நினைக்க  மடநெஞ்சும் , தாழ்த்தச்சென்னியும் தந்த தலைவன்” என்று  தமிழ்  மறை  கூறியபடி  மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களும் , இறைவனை  வழிபட்டுய்தற் பொருட்டுத்  தமக்கு  அப் பெருமானால் தரப்பட்டனவாம்  என்னும்  உண்மையுணர்ந்து , அப்பேருப காரத்தைப்  புலப்படுத்துவாராய் , “பெற்றது கொண்டு”என்றார் . அக்கார ணங்களால் வழிபாடு செய்து, அன்பைப் பெருக்கி இறையருளைப்  பெற வேண்டியது கடமையாக, அக்கடமையை  மறந்தும்  ,இறைவன்  திரருவுளக்  குறிப்புக்கு  மாறாகவும்  தீங்குகளையே  மிகுதியாகச்  செய்யலானேன் என்பார் , “ பிழையை பெருக்கி”  என்றார் . உலகத்து மக்கள் செயல்கள் நல்லனவும்  தீயனவுமாகவே  பெரும்பாலும்  நிகழ்வன; என் செயலோ  நல்லது  சிறிதும்  கலவாத  தீங்காகவே  முடிந்தது  என்பார் ., “ பிழையே”  எனத்தேற்றே காரம்  இயைத்தும்  அப்பிழையும்  ஓரளவிலன்றி  மிகுதியாயிற்றென்பார் ,  “பெருக்கி”  எனவுங்  கூறினர்.

                             பிழைகளாவன  –  மன மொழி மெய்களால்  முறையே  தீயன நினைதலும்  பேசுதலும்  செய்தலுமாம் . பிழை  பெருகப்  பெருக அத்துணை  அன்பு  தேய்ந்த தென்பார் , “ சுருங்கும்  அன்பு “  என்றார் . அன்பு  அகத்ததா யினும்  , நன்மொழியும் நற்செயலும் அன்பினால்  நிகழ்வனவாதலின், அவை யும் அன்பென்ற அளவில் அடங்கும் என்பது .  சுருங்கும்  அன்பின ….அடியேன்”  என்பதனை, “சென்று  சேக்கல்லாப்புள்ள…..குளம்” என்பது  போலக் கொள்க . பிழையைச்  சுருக்கி  அன்பைப் பெருக்குதல் மெய்யடியார்  இயல்பாகும் .அவ் வியல்புக்கு  மாறாகத்  தம் செயல்  நிகழ்தலின்  , தம்மை  “வெற்றடியேன்” என்றார் . என் அடிமை  பயனற்றது  எனக்கொண்டு  என்னைக் கைவிடுவா யாயின்  , யான்  கெட்டொழிய  நேருமே  என்பார், “விடிலோகெடுவேன் “  என்றார்.  ஓகாரம்  அசை நிலை.

                             இனி, அடிகள் தம்மைக்  கைவிடலாகா  தென்பதற்குக்  காரணங்  கூற  முற்படுகின்றார் . “உள்ளவன் “  என்பது  உள்ளத்தில்  நின்று   தாங்கிக்  காப்பவன்  என்னும்  பொருட்டு.  பின்னர்த்  “தாங்குநரில்லை”  என்றதனால்  ஈண்டுத்  தாங்குபவன்  எனக்கொண்டும்  , ஆகவென்பதை  வருவித் தியைத்தும் உரைக்கப்பட்டன  . உறுதல்  –  அழுந்தி  ஆராய்தல் . தேறுதல்  –  தெளிதல்  .  அத்தெளிவு  நூலறிவானும்   அநுபவ  வுணர்வானும்  நன்கு ஆராய்ந்து மேற் கொள்ளப்பட்டது  என்பது  புலப்பட  “மிக”  எனவும்,  அது  முன்னரே  துணியப் பட்டது என்பது  தோன்ற , இறந்த  காலத்தால்  “தேறிநின்றேன்” எனவுங்  கூறினர் .  தேறுதற்குச்  செயப்படு   பொருளாக  நின்னை யென்பது  அவாய்  நிலையான்  வருவித்துரைக்கப்பட்டது .

                          ஆண்டவனே!

“என்னில்  யாரும்  எனக்கினி  யாரிலை

என்னி  லும் இனி யானொரு  வன்உளன்

என்னு  ளேயுயிர்ப்  பாய்புறம்  போந்துபுக்

கென்னு  ளேநிற்கும்  இன்னம்பர்  ஈசனே “

        என்றபடி , என் உள்ளும்  புறமும்  நின்று, என்னைப்  பாதுகாப்பவன்  நீயே  யென  ஆராய்ந்து  தெளிந்துளேனாதலின்  ,இந்நிலையில்  என்  வாழ்முதலா கவும்  , என்னால்  தெளியப்பட்ட வனாகவுமுள்ள   நின்னையன்றி  , அடியேனை  ஆதரித்துக்  காப்பாற்றுவார்  வேறு யாருமில்லை  யென்பார் ,       “ மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லை “  என்றார்.  தாங்குநர்  –  மெய்யன் பின்றிப்  பிழையைப்   பெருக்கி  அதனாற்  கீழ்வீழும்  நிலையில் வீழாவாறு  எடுத்துக் காப்போர்  .  இறுதியில்  நீயே  காத்தருள வேண்டும்  என்பது  இசையெச்சமாகும் .

                   இதன்கண் , பெற்றது  கொண்டு  பிழையே  பெருக்கிச்  சுருக்கும்  அன்புடைய  வாழ்க்கை  வெறுக்கத்தக்கது  என்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக.  

                                            ************************************

பாடல் : 24 .

உள்ளன  வேநிற்க  இல்லன  செய்யுமை  யற்றுழனி

வெள்ளன  லேனை  விடுதிகண்  டாய்வியன்  மாத்தடக்கைப் 

பொள்ளனல்  வேழத்  துரியாய்  புலனின்கட்   போதலொட்டா 

மெள்ளன  வேமொய்க்கும்  நெய்க்குடந்  தன்னை  யெறும்பெனவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் தம் மன மொழி மெய்கள்செந் நெறிப்படாமையால்  நேர்ந்த இடையூற்றை  விண்ணப்பித்துக்  கொண்ட  அடிகள் , இத்திருப்பாட்டில்  அக்கரணங்களுள்  மனம் பொறி வழிச்சென்று  கொணரும்  புலன்களால்  விளயும்   தடையை  யெடுத்துக்காட்டி இரங்குகின்றார் .  

பதவுரை :-  மா தடக்கை  பொள்ளல்  நல் வேழத்து  வியன்  உரியாய்  = 

மிகப்பெரிய  துதிக்கையில்  துளையினையுடைய  நல்ல  யானையின்  அகன்ற  தோலையுடையவனே ,

நின் கண்  போதல்  ஒட்டா  =  நெஞ்சம்  நின்பாற்  சாரவொட்டாதபடி  ,

நெய்க்குடம்  தன்னை  எறும்பு  என  =  நெய்  நிறைந்த  குடத்தை  எறும்பு  மொய்த்துத்  தடை  செய்தல்  போல ,

புலன் மெள்ளன  மொய்க்கும்  =  புலன்கள்    மெல்ல  நெருங்கிச்  சூழ்ந்து தடை செய்வன ,

உள்ளன  நிற்க  =  அதனால்  தகுதியுள்ளன  நிற்ப ,

இல்லனவே  செய்யும்  =  தகுதியில்லாதனவற்றையே  செய்யும்  ,

மையல்  துழனி  வெள்ளன்  அலேனை  =  மயக்கத்தையும்  ஆரவாரத்தையும்  உடைய  தூயோனல்லாதவனாகிய  சிறியேனை  ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :- பொள்ளல்  –  துளை .  நல் வேழம்  என்றது , எல்லாம்  வல்ல  இறைவன்  திருமேனிக்கு  அதன்  தோல்  போர்வையாகப்  பயன்படும்  பேறு  குறித்தாம் .  வியன்  என்பதை  உரியோடு  இயைத்து  அடையாக்குக. யானையை  உரித்துப்  போர்த்த  புராண  கதைக்  குறிப்பை  ஈண்டுக்  குறிப்பிட்டதில்  ஒரு பொருணயம்  புலனாம் . எறும்பு  கடை  யானை  தலையென்னும்  உலக  வழக்குப்படி  பிராணிகளுள்  மிகப்பெரிய  உருவமு டையது  யானை ; மிகச்சிறிய  உருவமுடையது  எறும்பு . அத்தகைய  யானையைக் கொன்று  அடக்கிய  ஆற்றல்  படைத்த  இறைவனுக்குப்   புலங்களாகிய எறும்புகளை யொழித்தல் அரிதன்று  என்பது  அந் நயம்  என்க.

                  “நின்கட்  போத லொட்டா”  என்புழிச்  “செல்லுமளவுஞ்செலுத்து மின் சிந்தையை” என்னும்  பெரியோர்  உபதேசப்படி  இறைவ னிடத்துச்  சேரற்குரியதும் , புலன்களால்   தடைப்படுத்தப்படுவதும்  நெஞ்சம்  ஆதலின் , போதற்கு  வினை முதலாக அது  வருவித் துரைக்கப்பட்டது . நெஞ்சம்  இறைவன்  பக்கல் அணுகவொட்டாமல்  அதனைத் தடை செய்வன உலகியற் பொருள் நுகர்ச்சியாகிய  புலன்களாம் .அங்ஙனம்  தடை  செய்தற்குப்  பொருத்தமான  ஓர் உவமையை  அடிகள் எடுத்தாளுகின்றார் .

                    மட்குடத்தில்  உள்ள  நறுமணம்  மிக்க  நெய்  , உணவிற்குப்  பயன் படாவாறு  மணமும்  சுவையும்  அறிந்து எறும்புகள் பல அக்குடத்தின்  வாயில்  வழியைத்  தடை  செய்து  மொய்த்தல் போல,  அகக்  கருவியாகிய  மனம்  இறைவழிபாட்டிற்  பயன்படாவாறு  , அம்மனத்தின் இயல்பிற்  கேற்பக் கண்டு  கேட்டு உண்டு உயிர்த்து  உற்றறியும் ஐம்புலன்களும் உணர்வு  நெறியைத்  தடை  செய்கின்றன வென்பார்,  “ புலனின்கட்   போதலொட்டா  மெள்ளனவே  மொய்க்கும்  நெய்க்குடந்தன்னை  யெறும்பெனவே” என்றார் .  நெய்யிற் றோய்ந்த  எறும்பு  விலக்கற்கரிதால்  போல , நெஞ்சத்தைப்  பற்றிய  புலன்களும்  விலக்கற்  கரிதாமென்பது .  மெள்ளன மொய்க்கும்  என்றது . சிறிது  சிறிதாகச்  சென்று  நெருங்கிச்  சூழுமென்பது குறித்தாம் .  குடத்து நெய்  உடற்கணுள்ள  நெஞ்சிற்கும்  , எறும்புகள்  புலன்களுக்கும்  உவமை  களாம் . குடத்தின் வாயில்  வழியில்  மொய்த்திருக்கும்  எறும்புகள் தடையாதல்  , நெய்  தூய  நிலையில் நல்லுணவாகாமை  பற்றியாம் .

                        அதுபோல்  உடலின் கண்  உள்ள  பொறி  வாயில்களைப்  பற்றிய  புலன்கள் தடைப்படுத்துமாயின் , மனம்  தூயநிலையில்  இறைவனைப்  பற்றாதென்பதாம் . மனம் உயர்வு  வழிச்சென்று  இறையருளைப் பற்ற  வேண்டுமன்றிப்  பொறிகளின்  வாயிலாகச்  சென்று  புலனுகர்ச்சியில்  ஈடுபடலாகாதெனவும் , அங்ஙனம்  ஈடுபட்டமையால்  செய்யத்தக்கன  இன்ன  தகாதன இன்னவெனப்  பகுத்துணர  இயலாமல்  மயங்கலானேன்  எனவும்  பிவரும்  குறிப்புக்களால் அடிகள் புலப்படுத்துகின்றார் .  

                           உள்ளன – தகுதியுள்ளன . இல்லன –  தகுதியில்லாதன .  இறை வழி  பாட்டிற்குச்  செய்யத் தக்கனவாகிய  நற்செயல்கள் பல இருக்க, அவற்றுள் ஒரு  சிறிதும் மேற்கொள்ளாமல், தகாதனவற்றையே  செய்ய லானேன் என்பார் ,  “ உள்ளனவே  நிற்க  இல்லன  செய்யும்  “ என்றார் . உள்ளனவே  என்புழி  ஏகாரத்தைப்  பிரித்து இல்லன  என்பதனோடு  இயைக்க  தக்கன  தகாதென  வென்னும்  இருதிறத்துள் , ஒரு கூறு  பிரிக்கப்பட் டமை யால் ஏகாரம்  பிரி நிலைப்  பொருளது ; தேற்றமுமாம் , சரியை  முதலிய  தவச் செயல்கள்  ஆண்டவன்  திருவருட்  பேறாகிய  நற்பயனை விளைத்தலால் அவற்றை  உள்ளன வென்றும் , அவற்றிற்கு  மறுதலையாக உடலோம்புதற்  பொருட்டுச்  செய்யப்படும்  அவச்  செயல்கள் பிறப்பிறப்புக்களிற்  புகுத்தித்  துன்பமாகிய தீய பயனை விளைத்தலால் அவற்றை இல்லன வென்றும் கூறினர் .

                உலகத்து மக்கள் செயல்கள் தக்கனவும்  தகாதனவுமாக  விரவியிருக்கும்  ; என் செயலோ , அங்ஙனமாகவும் இல்லாமல் தகுதியில்லாத னவாகவே  நிகழ்ந்தன வென்பார் ,  “ இல்லனவே செய்யும் “ என்றார் .          மையல் –  காமமுதலியன  பற்றிய  மயக்கம் . இஃது அகத்தின்கண் நிகழும்  குற்றம்  . துழனி  –  ஒலி  .; ஆரவாரம் . அகக் குற்றத்தை மறைத்தற்கு மேற்கொள்ளப்படும்  ஆடம்பரச் செயல் . இது புறக்குற்றமாகும் .  “வெள்ளன்  அலேன்” என்பது கள்ளமுடையேன்  என்னும்  பொருட்டு .  “கள்ளரோ புகுந்தீரென்னக்  கலந்து  தானோக்கி  நக்கு ,வெள்ளரோ மென்று நின்றார்  விளங்கிளம் பிறையனாரே “ என்னும்  தமிழ்  மறையில்  வெள்ளர்  கபடமற்றவர் என்னும் பொருளில்  வந்திருத்தல் அறிக . கபடமற்றவன்  அல்லேன் என்பதனால் கபடமுடையவன் என்பது  பெறப்படும் .

             இங்ஙனம்  பெறப்பட வைத்தது , புறத்தேயுள்ள  ஆரவாரச்  செயல்களால் தூய்மையுடைமை  காட்டி  அகத்தே  வஞ்ச வொழுக்கம் பொதிந்திருத்தல்  தோன்றற்கென்க  . “முகத்தினினிய  நகாஅ வகத்தினா வஞ்சர் “ என்று  பொய்யில் புலவர் கூறிய  வஞ்சகரிலக்கணம்  ஈண்டு  நினைக்கத்தக்கது . வஞ்ச வொழுக்கம்  மேற்கொண்டு  நடிக்குஞ் சிறியேனை  அக்குற்றம்  கருதிக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாயது)  என்பார் . “ “மையல்  துழனி வெள்ளனலேனை விடுதி கண்டாய் “  என்றார் .

                இனி, மையல்  துழனி  வெள் அனலேனை  எனக்கொண்டு  மயக்கமாகிய ஆரவாரித்து ஒளி செய்யும்  நெருப்பினையுடையேனாகிய  எனப்  பதப்பொருள் கூறலும்  பொருந்தும் . இவ்வுரைக்கு  விளக்கம்  வருமாறு:-   தக்கன  இன்ன  தகாதன இன்ன வென்று  பகுத்துணர்தற்குத்  தடையாயது உலகியல்  இன்பமாகிய  காமம்  முதலியனபற்றிய  மயக்கமாகு மெனவும், அம்மயக்கமும்  நெருப்பைப்   போலச்  சுட்டெரிக்கின்ற  தெனவும் , இந்  நிலையுற்  சிறியேனைக்  கைவிடல்  தகுமாவெனவும்  விண்ணப்பித்துக் கொள்வாராய்  , “மையற்றுழனி  வெள்ளனலேனை விடுதி கண்டாய் “  என்றார் . மையல்  அனலேன்  என இயைக்க  . மையல்  – காம முதலியன  பற்றிய மயக்கம் . துழானி  –  ஒலி . வெள் – ஒளி .ஒலியும் ஒளியும் நெருப்பிற்கு  இயற்கை  யடையாகும் . “தீயின்  குணங்கள் வெப்பப்பரிசமும்  , எரிதலைத்  தெரிவிப்பதாகிய தம தம ஒலியும், ஒளி நிறமாகிய  உருவ குணமும்  என மூன்றென்ப .  காமத்தைத்  தீயாக உருவகிப்பதை ,  “ உள்ளினுஞ் சுட்டிடும்  உணருங்  கேள்வியிற்  , கொள்ளினுஞ்  சுட்டிடுங்  குறுகி  மற்றதைத் , தள்ளினுஞ் சுட்டிடும்  தன்மை யீதினாற் , கள்ளினுங்  கொடியது காமத்தீயதே “ என்று  கந்தபுராண நூலாசிரியரும் , “நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற்றன் ணெனும் , தீயாண்டுப்  பெற்றாளிவள் “  எனப் பொய்யில்  புலவரும்  கூறியவற்றான்  அறியலாம் .  

                   இதன்கண் , உலகியற் பொருள் பற்றிய புலன்கள் திருவருட்  பேற்றிற்குத்  தடையாமெனவும் , அத்தடையால்  செய்யத்தகாதன   செய்யலானேன் எனவும் கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                    *********************************************

பாடல் :25 .

எறும்பிடை  நாங்கூ  ழெனப்புல  னாலரிப்  புண்டலந்த

வெறுந்தமி  யேனை  விடுதிகண்  டாய்வெய்ய   கூற்றொடுங்க

உறுங்கடிப்  போதவை  யேயுணர்  வுற்றவ  ரும்பரும்பர்

பெறும்பத  மேயடி  யார்பெய  ராத  பெருமையனே  .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால் உண்டாம்  தடையை  ஓர்  உவமை  முகத்தால்  எடுத்துக்காட்டியிரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அப்புலன்களால் உண்டாம் துன்பத்தையும்  , அத் துன்ப நீக்கத்திற்குத்  துணை புரிவாரில்லாமையால்   தமக்கேற்பட்ட  தனிமையை யும்  எடுத்துக் கூறி  இரங்குகின்றார் .  

 பதவுரை :- வெய்ய  கூற்று   ஒடுங்க  =  கொடிய  கூற்றுவன்  வலி குன்றும்படி  ,

உறும்  கடிப்போது  அவையே  உணர்வுற்றவர்   =  அவனுடலிற்  பொருந்திய  மணமிக்க  திருவடி  மலர்களாகிய  அவற்றையே  பற்றுக்கோடாக  அறிந்தவர்களாகிய  சரியையாளரும்  ,

உம்பர் உம்பர்   =  அவரின்  மேம்பட்ட  கிரியையாளரும்  அவரின்  மேம்பட்ட  யோகநிலையினரும்  ஆகிய  இவர்கள்  ,

பெறும் பதமே   =  பெறுதற்குரிய  (சாலோக முதலிய) பத முத்திகளாக  விளங்குகின்றவனே  ,

அடியார்  பெயராத  பெருமையனே   =   அம் மூவரினும்  மேம்பட்ட  மெய்யன்பராகிய  சிவஞானிகள்  மீண்டு  வாராமைக்கு  ஏதுவாகவுள்ள  (சாச்சிய  முத்தி நிலையாக  விளங்கும் ) பெருமையுடையானே ,

எறும்பு   இடை  நாங்கூழ்  என  =  பல எறும்புகளின்  இடைப்பட்ட  நாங்கூழ்ப்  புழுவைப் போல , 

புலனால்  அரிப்புண்டு  அலந்த  =  ஐம்புலன்களாலும்  தின்னப்பட்டு  வருந்திய  ,

வெறும் தமியேனை  விடுதி  =  பயனற்ற  தமியனாகிய  என்னை  விட்டு விடுவாயோ?  (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-இறைவன்  கட்டளைப்படி  தன் கடமையைப் புரியும் தருமனை  “ வெய்ய  கூற்று “ என்றது , கட்டளையிட்ட  அப்பெருமான் திருஉள்ளக் குறிப்பிற்கு மாறுபடத்  தவ முதல்வராகிய மார்கண்டேயரை உயிர்  கவர முற்பட்ட  தீச்செயல்  பற்றியென்க . கடமையை மேற்கொண்டது எங்ஙனம் தீச்செயலாகும்  எனின் “ இறைவ  நிற்கு  உவந்தது அற  மெனப்படு   மற்றேனைய மறமெனப்படுமால்  “ என்னும்  சமய  உண்மைப்படி  விதி விலக்குச்  செயல்களெல்லாம்  ஆண்டவன்  முன்னிலையில்  மாறுதல்  எய்துமாதலின் , ஆகுமென்க . கண்ணப்பர்  இட்ட  உணவு  விலக்கப்பட்ட தெனக்  கொண்டு  வெறுத்த சிவ  கோசரியார்க்கு  “அவனுகந்திட்ட  விறைச்சி  யெனக்கு  நன்மாதவர் இட்ட நெய் பாலவியே “ என்று  இறைவன் உணர்த்திய  செய்தியால் , விலக்கு  விதியாயது போலக்  , கூற்றுவன் கடமையாகிய  விதி ஈண்டு இறைவற்கு  உவந்ததாக இல்லாமையால் , விலக்காயிற்றென்பது .

                     மக்கள் தேவர் முதலிய எல்லோரையும் ஒடுக்கும் ஆற்றல்  படைத்த  கூற்றுவனது ஒடுக்கத்தைக்  குறிப்பிட்டது , சிவபெருமானது முடிவிலாற்ற லுடைமையைப்  புலப்படுத்தற் கென்க .  கடிப்போது  –  மணமிக்க  மலர் ; ஆகு பெயராய்த்  திருவடியை யுணர்த்தும் , மலர் போன்ற  இறைவனுடைய  திருவடி  மெத்தெனத்  தாக்கிய  அளவில் , மிக்க  வலிபடைத்த  கூற்றுவனது திறல்  ஒடுங்கிவிட்ட தென்பது போதா., “உறுங்கடிப்போது”  என்றார்.  “அவை” யென்பது பண்டறிசுட்டு ; தம்மை யடைந்தாரது இடையூற்றைப் போக்கி  அழிவிலின்பத்தில்  தலைப்படுத்தும் இயல்பினவாகிய அத் திருவடிகளையே என்பது கருத்து . ஏகாரம் தேற்றப்பொருட்டு . “புறச் சமயநெறி நின்று …….. சிவனடியைச்  சேர்வர்  “என்று  சைவ  நூலிற்  கூறியபடி  பல  பிறவகளினும் சோபான    முறையால்   மேற் சென்று சென்று  அரிய  சித்தாந்த சைவத்தை யடைந்தவர்கள் , சரியை  முதலிய நால் வகை  நெறிகளையும் மேற்கொண்டு  முடிவில்  இறையடி நீழலில்  இயைந்து பேரின்பெய்துவர்  என்பது உண்மை யாதலின்  , அம்முறையில்  சரியையிற்றலைப்படக்கிடைக்கப்பெற்றார் .

                       அந்நெறி நின்று  இறைவன் திருவடியையே  பற்றுக்கோடாக  உணர்ந்து வழிபாடு  செய்யும்  இயல்பினராவர்  என்பது தோன்ற  ,”அவையே  யுணர் வுற்றவர்” என்றார் . பாசப்பிணிப்பாற்  பிறப்பிறப்புக்களிற்பட்டு  நெடுங்காலம்  வருந்துவோர் அத்துன்ப  ஒழிவிற்குரிய  சாதனத்தையே  முதலில்  நாடுதல்  இயல்பாதலின் ,மிருகண்டு  புதல்வர்  பொருட்டுக்  கூற்று  உதைத்த செய்தியைக்  குறிப்பிடுவாராயினர்  . இத்துணையும்  சரியை வழியொழுகுவோர் என்பது  பெறப்பட்டமையான்  மேல்  “உம்பர் உம்பர் “ என்பன கிரியையாளரையும் , யோக நிலையினரையும் உணர்த்துவனவாம் .உம்பர்  – மேல்நிலை ; ஆகு பெயராய்  அந் நிலையில்  ஒழுகுவோரைக்  குறிக்கும்  . பின்னதற்கும்  இஃதொக்கும்.

                         சரியையாளர்க்கு  மேற்பட்ட  கிரியையாளரும் அவர்க்கு  மேற்பட்ட யோக நிலையினரும் என்றபடி  ஈண்டு எண்ணும்மைகள் செய்யுள் விகாரத்தால் தொக்கன . ஆகவே சரியை கிரியை யோகம் என்னும்  மூன்று  நெறிகளினும் ஒழுகுவோர் , முறையே சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் பதமுத்திகளைப் பெறுவறாதலின் ,அன்னார்க்கு  அப்பதங்களையருளும் இறைவனைக் குறித்து , “உணர்வுற்றவர் உம்பரும்பர் பெறும் பதமே” என்றார். இன்பத்தை வழங்கும்  இறைவனை வேற்றுமையின்மைபற்றி “இன்பமே” என்று  விளித்தமை போலப்  பதமுத்தியருளும் நிலையில் இறைவனைப் “பதமே” என்று  விளிகொள்ளலானார் .

                          அடியார்  என்றது  ஈண்டு  மெய்யன்பராகிய சிவஞானச் செல்வரை . அவர்கள் ஞான நெறியின்  ஒழுகு வேராதலின் அன்னார்  பெறும்  பேறு  முடிவாகிய சாயுச்சிய முத்தி நிலையாகும் . “முன்மார்க்க ஞானத்தா லெய்து  முத்தி வென்பர் மூன்றினுக்கு  முத்திபதம்  என்பர் “ என்பது  ஞானநூல் . சாலோக  முதலிய  பத முத்திகளைப்  பெற்றார்க்கு  அந் நிலையிற்  பெயர்ச்சியுண்டு . சாயுச்சிய  நிலையினர்க்குப்  பெயர்ச்சியில்லா மையால் , “அடியார்   பெயராத பெருமையனே  “ என்றார் . “பெயராத” என்னும்  எதிர்மறைப்  பெயரெச்சம் பெருமையன்  என்னும் காரணப்பெயர் கொண்டு  முடிந்தது. “ஏதுப்பொருள்  கருவிக்கணடங்கும்” என்பர்  சேனாவரையர் .  

                           மெய்யடியாராகிய  சிவஞானச் செல்வர்  எய்தும் சாயுச்சிய  நிலை மீண்டு  பெயராத நிலையாகும் . இதனையே  பிறிதோரிடத்து அடிகள்  “மறிவறியாச் செல்வம்” என்பர் . சாயுச்சியமாகிய  பரமுத்தி யெய்திய வுயிர், மீண்டு  பொறவாமைக்கு  ஏதுவாகவுள்ள  பெருமை  சிவபெருமான் கண்ணதாகலின்  ,”பெயராத பெருமையனே  “  என்றார் .பெருமை  –  ஞான நெறி  யொழுகித்  தன்னையடைந்த வுயிரை மீண்டு பிறவியிற்  செலுத்தாமல்  அழிவில் இன்பந் துய்க்கத்  தன்னை வழங்குதலாகிய  செயற்கருஞ் செயல் .

                            இவ்வாறு  இறைவனை விளித்துப்  புலன்களால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை ஒருவமையில்  வைத்து அடிகள் புலப்படுத்துகின்றார் . நாங்கூழ்  –  ஈரமுள்ள மண்ணில்  தோன்றும் ஒருவகைப்புழு . இதனை நாக்குப்பூச்சி  எனவும்  நாகப்பூச்சி  யெனவுங் கூறுவர் . இப்புழு  எறும்பினும் எத்தனையோ  மடங்கு  உருவத்தாற் பெரியதாகும் . இதனைப் பல  எறும்புகள் கூடிச்  சல்லடைக்கண்களாக  அரித்து ஈர்த்துச் செல்லுதலைக்  கண்கூடாகக்  காணலாம் . நாங்கூழ்  உருவத்தால் பெரிதாக  இருந்தும் , சிற்றெறும்புகளை அடக்கும்  ஆற்றலின்றி  அவற்றால்  துன்புறுதல் போல , யான் பருத்த வுருவமுடையனாக  இருந்தும் ,நுண்ணிய  நிலையில்  என்னுட்  புகுந்து  என்னையரித்து வருத்தும் புலன்களைக்  கடக்கும் ஆற்றலின்றி  வருந்து கின்றேன்  என்பார்,  “ எறும்பிடை நாங்கூழெனப்  புலனாலரிப்புப்புண்டலந்த” என்றார் . பூச்சி  தின்னுதலை அரித்தல் என்ப .  “காழ்சேர் முது சுவர்க் கணச்சிதலரித்த” என்புழிக்  காண்க. ஒரு பொருள் எவ்வாற்றானாவது பயன்படும் நிலையிலுள்ளதாயின் , அதற்குக்  கேடு  நேர்ந்துழி  அப்பயன்  கருதி  அக்கேட்டையொழிக்க ஒருவர் முற்படுதல் உலகியலிற்  காணப்படுவது .

                             நாங்கூழ்  பயன்படாமையால் எறும்பரிக்கக்  காண்பார் விளையாட்டுக்  காட்சியாகக்  காண்பதல்லது , துணை செய்ய  முற்படாமை போலப்  புலன்களால்  அரிப்புண்டு  துன்புறும்  யான் யார்க்கும்  பயன்படாமையால் , இத்துன்பத்தினின்றும்  விலக்கித் துணைபுரிவார்  யாரையும்  இலனாயினேன்  என்பார் ,”வெறுந்தமியேனை” என்றார்  . வெறுமை –  பயனின்மை . தமியேன் –  துணையில்லாது  தனிப்பட்டவன் , உலகியற்றுணை சிறிதுமின்றித்  தனிப்பட்டவனாகிய  சிறியேற்குத்  தோன்றாத்  துணையாக வுள்ளவன்  நீயே  யாதலின்  , இந் நிலையில்  என்னைக் கைவிடல்  தகுமா  என்பார் , “ விடுதி கண்டாய்”  என்றார் .

            இதன்கண், உலகியற்  பொருள்பற்றிய  புலன்களாலாம்  துன்பம்  பொறுக்கலாற்றாதது என்று  கூறப்பட்டிருத்தலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                                     **********************************

பாடல் : 26

பெருநீ  ரறச்சிறு  மீன்றுவண்  டாங்கு  நினைப்பிரிந்த

வெருநீர்மை  யேனை  விடுதிகண  டாய்வியன்  கங்கைபொங்கி

வருநீர்  மடுவுண்  மலைச்சிறு  தோணி  வடிவின்  வெள்ளைக்

குருநீர்  மதிபொதி  யுஞ்சடை  வானக்  கொழுமணியே .

கருத்துரை :-    முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால்  விளையும்  துன்பத்தையும்  தம் தனிமையையும்  எடுத்துக்கூறி  இரங்கிய  அடிகள்,  இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  துன்புறுதற்கு  ஏது உயிர்த்துணையாகிய  நின்னைப்  பிரிந்திருக்க  நேர்ந்ததாகும் என்று  கூறி  அப்பிழை  பொறுக்க  வேண்டுகின்றார் .

பதவுரை :-  வியன் கங்கை   =  பெரிய  கங்கையாறாகிய ,

பொங்கி வரும் நீர் மடுவுள்  = மிக்கு  வழியும்  நீர்ப் பெருக்கையுடைய  நீர் நிலையில் ,

மலைச் சிறு தோணி  வடிவின்  =  பொருகின்ற  சிறிய  தோணியின்  உருவத்தைப்  போன்ற  ,

வெள்ளை குரு  நீர்  மதி பொதியும்  சடை  =  வெண்ணிறமுடைய  குளிர்ந்த  பிறை  அடங்கப்பெற்ற  சடையினையுடைய  ,

வானக் கொழுமணியே  =  ஞானவெளியில்  திகழும்  செழிப்புள்ள  மாணிக்கமே ,

பெரும் நீர் அற   =  பெரிய  நீர்  நீங்க ,

சிறு மீன்  துவண்டாங்கு   =  சிறிய  மீன்  துடித்தாற் போல ,

 நினைப் பிரிந்த  =  ஆதரவாகிய  நின்னைப்  பிரிந்தமையால் ,

வெரும்  நீர்மையேனை  =  அஞ்சும்  தன்மையுடைய  சிறியேனை  ,

விடுதி  =  விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  பகீரதன்  தவத்தால் விண்ணில்  நின்றும்  தடுத்தற்கரிய  விரைவோடு வெளிப்பட்ட  தெய்வயாறு என்பார் ,  “ வியன்  கங்கை” எனவும் , அங்ஙனம் மிக்க விரைவாகப்பொங்கி வழியும்  நிலையில்  அவ் யாற்றை  மீண்டும்  பகீரதன்  வேண்டுகோட்கு இரங்கி, இறைவன்  தன் சடையின்  ஒரு  கூற்றில்  அடங்கிய  அளவில் அஃது ஒரு  சிறிய  நீர்நிலை போலக்  காண்ப்  பட்டது என்பார், “பொங்கிவரு நீர் மடு”  எனவும்  கூறினர் . பொங்கி வரு நீர்  என்றது குறைவற  நீர் நிறைந்த  மடுவின்  இயல்பைக்  குறிப்பதாகும் .  மலைத்தல்  –  அலைகளால்  அங்கும்  இங்கும்  தாக்கப்படுதல் ; அசைதல் .  இறைவன்  சடையிற்  சூடிய  பிறை  ஒரு  கலையுடைய தென்று  கந்தபுராண ஆசிரியரும் ,இரு கலையுடையது என்று  அடியார்க்கு  நல்லாரும்  கூறுவர் . இறைவன்  சடையில் கங்கையின்  அருகில் அணியப்பட்ட  பிறை , ஒரு  நீர் நிலையில்  அசைந்து விளங்கும்  வெண்ணிறமுடைய  சிறிய  தோணியைப் போற்  காணப்படுகின்றது  என்று  அடிகள் கூறிய  வருணனை  ஓர் உண்மை யைக்  குறிப்பிற் புலப்படுவதாகும் . திருவாசகத்தில்  இத்தகைய  வருண னைப்  பகுதி  மிகவும்  சுருக்கமாகவே  காணப்படும் .

                  பிறவிக்கடலுள்  மூழ்கிப்  பற்றுக்கோடு  இன்றி  வருந்தும் உயிர்களுக்கு  இக்காட்சி  ஓராற்றான்  ஆறுதலளிக்கும்  இயல்பினது . “இனியென்னே  யுய்யுமா  றென்றென்றெண்ணி  ஐந்தெழுத்தின்  புணை பிடித்துக்கிடக்கின்றேனை  “ என்று  திருச்சதகத்தில் கூறியபடி  அப்பிறவிக் கடலைக்  கடத்தற்கு  உரிய  தோணியாக  அப்பிறை அடிகளுக்குக்  காட்சியளித்த தென்பது . மேலும்  திங்களஞ் செல்வர்க்கு  நேர்ந்த சிறுமையைப்  போக்கிப்  பாதுகாத்த இறையருளை நினைவுகூர்ந்ததுமாம் .

                   வானம்  –  ஞானப் பரவெளி . கொழுமை  – செழுமை; ஒளி மிகுதியைக்  குறிக்கும் . நாண்  மீன் , கோள்   முதலியன  இல்லாத  ஞானாகாயத்தில் செந்நிற  வொளிமிக்க  மாணிக்க மணிபோலத்  திகழும்  இயல்பினது  இறைவன்  திருவுருவம்  என்பார்  “ வானக் கொழுமணியே” என்றார் . குருந்தமரத்து நீழலில்   இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  யளித்த  காட்சி  இதுவாகும் .  இதனைத்  தம் கண்குளிரக்  கண்ட  அடிகள்  தம்மை  இறைவன்  பிரிந்த நிலையில் “இன்று போய் வானுளான்  காணாய்” என்று  நெஞ்சிற்கு  அறிவித்துள்ளாராதலின் , அந்நிலயில் ஞான வெளியில் அப்பெருமான் திருவுருவத்தை வைத்து நினைவு  கூர்ந்து இவ்வாறு  கூறினர்  என்பது .

                     இனி,நேறிற் காட்சியளித்த  பெருமான்  பிரிவில்  தாம்  எய்திய  துன்பத்தை  ஒருவமையில்  வைத்துக் கூறுகின்றார். பறவைக்குக் கூடும்,  ஆடு,மாடு முதலிய  விலங்குகளுக்குக் கொட்டிலும் அவ்வப்பிராணிகளின்  உடலளவிற்குத்  தக்கவாறிருத்தல்  போதியதாகும் . சிறியவுருவமுள்ள  மீனுக்குச்  சிறிய அளவுள்ள  நீர் போதியதாகாது. மீன் வடிவாற்  சிறியதா யினும் வாழ்தற்குப்  பெரு  நீரே வேண்டியதாகும்  . இஃது உலகியலிற்  கண்டது .மகரம்  முதலிய  மீன்கள் பெரிய  வுருவ முள்ளனவே யெனின், அவற்றிற்குத் தக அவை  வாழ்தற்குக் கடல் அமைந்திருத்தல் கருதத்தக்கது . அக்கடற் பெருமையை நோக்க அம்மீன்கள் சிறியன  என்பது  கண்கூடு

ஆகவே  மீன் அளவிற்கு  அது வாழும்  நீரளவு  மிகுதியாக இருக்கவேண்டும் மென்பது  புலனாகும்.  

                    இவ்வுண்மை குறித்தே “பெரு  நீறரச்   சிறு மீன்  துவண்டாங்கு”  எனப்  பெருமை  சிறுமைகளாகிய அடைகள் முறையே புணர்க்கப்பட்டன . நீர்ப்பெருக்கில்  வாழும்  மீன்  அந் நீரற்ற  விடத்துத்  துடித்து வருந்துதல் போல,  பரங்கருணைத்  தடங்கடலாகிய  நின் அருள் நிறைவிலீடுபட்டு  இன்புற்றிருந்த  யான் , நின்  பிரிவில்  அஞ்சி  வருந்தலானேன் என்பார்,  “நின்னைப்பிரிந்த வெரு நீர்மையேனை” என்றார் . பிரிந்த என்னும் பெயரெச்சம்   உண்ட  இளைப்பு என்பது போலக் காரணப்பொருளில்  வந்தது. நீரற்ற  நிலையில்  மீனுக்கு  உணவும்  புறக்காப்பும்  இலவாதல் போல , இறைவன்  பிரிவால் அடிகளுக்கு உள்ளுணர் வின்பமும்  புறத்துணையும் இலவாயின வென்பதும்  ஈண்டு  கருதத்தக்கது .

                      எங்கும்  நிறைபொருளாகிய  இறைவன்  பிரிதல் எவ்வாறு  பொருந்தும் எனின் , ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்துப்  பின்  உருக்கரந்த நிலை பற்றிக் கூறியதகாலின்  பொருந்துமென்க .  மீன்  சிறியதா யினும் , அதன் வாழ்க்கைக்குப்  பெரு  நீரன்றிச்  சிறு  நீர்  ஆதரவாகாமை போலச் சிறியேனாகிய  எனக்கு , அருட்கடலாகிய  நின்னையல்லாத பிறர் ஆதரவாகார் என்று  அடிகள் விண்ணப்பித்துக் கொண்டபடியாம் . நின் பிரிவால் என் செய்வல்  என அச்சமுற்றிருக்கும் இந் நிலையில் , அபயமளிக் கும்  இயல்புடைய  நீ என்னைக்  கைவிடல்   தகுமாவென்பார் ,  “வெரு நீர்மை  யேனை விடுதி”  என்றார் . வெரு நீர்மையேன்  என்றது அபயம்  அளித்தற்கு இடன்  குறிப்பிட்டபடியாம் .

                      இதன்கண், இறைவனது  பிரிவில் பிரபஞ்ச வாதனையால் தாக்குண்டு அஞ்சி வருந்திய செய்தி  கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                              **********************************

பாடல் : 27 .

கொழுமணி  யேர்நகை  யார்கொங்கைக்  குன்றிடைச்  சென்று  – குன்றி

விழுமடி  யேனை  விடுதிகண்  டாய்மெய்ம்  முழுதுங்கம்பித் 

தழுமடி  யாரிடை  யார்த்துவைத்  தாட்கொண்  டருளியென்னை

கழுமணி  யேயின்னுங்  காட்டுகண்  டாய்நின்  புலன்  கழலே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால்  விளையும் துன்பத்திற்கு  ஏது  இறைவனைப்  பிரிந்திருக்க  நேர்ந்ததாகுமென்று  கூறிய  அடிகள்  , இத்திருப்பாட்டில்  அப்பிரிவு  நேராமைப்பொருட்டு  மெய்யன்ப ரோடு  தம்மை  இயைத்து வைத்து , மீண்டும்  ஞானமய மான  திருவடிக்  காட்சியளித்தல் வேண்டுமென  விண்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :- என்னைக்  கழும்  மணியே   =   அடியேனைத்  தூய்மைப்படுத்துகின்ற  மாணிக்கமணியே ,

கொழுமணி  ஏர்நகையர்   =   செழிப்புள்ள  முத்தை யொத்த  அழகிய  பற்களை  யுடைய  மகளிரின்  ,

கொங்கைக் குன்று  இடைச்சென்று  =  கொங்கைகளாகிய  மலைகளில்  ஏறிச்சென்று  ,

குன்றி விழும் அடியேனை  =  அறிவு  குறைந்து இடறி  விழுகின்ற  அடியேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

மெய்முழுதும்  கம்பித்து அழும்  அடியார் இடை  =  அன்பு  முதிர்ச்சியால்  உடல் முழுதும் நடுங்கி அழுகின்ற  மெய்யடியார்  பக்கல் ,

என்னை  ஆர்த்து வைத்து  =  அடியேனைப்  பிணித்து வைத்து ,

ஆட்கொண்டருளி  =  ஆளாக  ஏற்றுக்கொண்டு  அருள்புரிந்து ,

நின் புலன் கழல்  காட்டு  =  நின் ஞானமயமான  திருவடியைக்  காட்டியருளல்  வேண்டும்  என்பது .

விளக்கவுரை :-  கழுவுதல்  –  தூய்மை செய்தல் .  கழுவுமணி  என்பது கழுமணி யென்றாயிற்று . உலகத்து  மணிகள்   பிற  கருவிகளால்  தூய்மை செய்யப்படுவனவாம் . கடவுன்மணி  தன்னையடுத்த பொருள்களை  அழுக்கறத்  தான்  தூய்மை செய்யும் இயல்பினதாம் . இவ்வுண்மை  புலப்படவே  , “ என்னைக்  கழுமணியே  “  என்றார் . உயிரைத் தூய்மைப்படுத்தல்  பாசவழுக்கைப்  போக்கி ஞானமயமாக்குதல்  . ஆதலின், அத்தகுதி இறைவனுக் குண்மை குறித்து  இவ்வாறு  கூறப்பட்டது . கொழுமணி  –  குற்றம்  நீங்கிய  ஒளிமிக்க முத்து .  முத்து  நிரைத்தன்ன வெண்பல்லர் என்றது , இளமைச் செவ்வி புலப்பட  நின்றது . காமம்  கடியத்தக்க தென்னும்  அறிவின்றி  மகளிர்  முயக்கிடை  மயங்கி  வீழும்  இயல்பினன்  என்பார் ,”கொங்கைக்  குன்றிடைச்  சென்று  விழுமடியேனை “ சமநிலத்து நடந்து சேறலினும் , மலையேறி நடத்தலால் உடல் வலி குறைந்து  கால் இடறி வீழ்தல் கூடுமென்னும் உலகியற் செய்தியும்  ஈண்டுக்  குறிப்பிற்  புலப்பட்டவாறு  அறிக .

            வீழ்ச்சியுடையானைக் கைதூக்குதலே  அருளாளன் செய்யத்தக்கதா கலின் , “விழும்  அடியேனை விடுதி” என்றார் . வீழவிடாமற்  செய்யத்தக்கன  யாதென்னும் வினாக்களுக்கு  விடையாகப்  பின்வருவன கூறப்படுகின்றன . முறுகிய பேரன்புடைய  மெய்யடியார்க்கு  உடல்  புளகமுற்று நடுக்கம்  எய்துதலும் , நெஞ்சுருகி  அழுதலும்  நிகழ்வனவாதலின்  . “மெய்முழுதுங் கம்பித்தழுமடியார்”  என்னப்பட்டார் . ஆண்டவனைக் குறித்து   “அழுதாலுன்னைப் பெறலாமே”  என்று  அடிகளும் , அடிகளைக் குறித்து  “அழுதயடிடைந்த அன்பன்”  எனப்  பரஞ்சோதி  முனிவரும்  கூறியிருத்தல்  அறிக .  

               கம்பித்தல் – நடுங்குதல் .  நடுக்கமும் அழுகையும்  மெய்யன்பர்க்கு  அன்பு மேலீட்டால் தன்வயம்  இழந்த நிலையில் உளவாம்  என்பதை , “அழலது கண்ட மெழுகதுபோலத்,  தொழுதுளமுருகி யழுதுடல் கம்பித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலானும்  அறிக . “உருகுவது, உள்ளங் கொண்டோருருச்  செய்தாங்கெனக் , கள்ளூறாக்கையமைத்தனன் “ என்றதற் கேற்ப  , இவ் அன்பு நடுக்கம்  உடலுறுப்புக்களின்  ஓரோவிடத்தன்றி உறுப்புக்கள்  முழுவதையும் பற்றியதென்பார் ,”மெய் முழுதும்”  என்றார் .

             அடிகள் தம்மை “கொங்கைக் குன்றிடைச் சென்று குன்ற விழுமடியேன்” எனவும் , மெய்யன்பரை “மெய்ம் முழுதுங் கம்பித்தழுமடியார்” எனவுங் கூறியமையால்  தம் அடிமை நாடகத்தில் நடிப்பது போன்ற  போலி யடிமையாகுமென்பதும் , மெய்யன்பர் அடிமையே  உண்மையடிமை யென்பதும்   புலப்படவைத்தபடியாம்.  “என்னை” யென்பது இடை நிலை விளக்காக  நின்று ஈரிடத்தும்  இயையும் .நிலையின்றிக் குன்றிடை யேறியும் வீழ்ந்தும் அலந்து திரியும் என்னை  ஒரு நிலைப்படுத்தற்கு  மெய்யன்பர்   கூட்டத்தில் பிணித்து வைத்தல் வேண்டுமென்பார், “அடியாரிடை  யார்த்து வைத்து “ என்றார் .

             அறிவுரை  கூறியும்  அதற்கு அடங்காமல்  அங்கும் இங்கும் திரியும் ஒருவனை ஓரிடத்துக் கட்டிவைத்து  நல்லாற்றுப்படுத்தல்  அறிஞர்  செயலா தல்  உலகியலிற் காணப்படுவதன்றோ?  அக்குறிப்பும் ஈண்டுப் புலனாதல் அறிக . அறிவு திருத்துதற்கன்றே  ஆர்த்து வைத்தற்கு  இடன்  அடியார் பக்கலாயிற்று . மெய்யடியார்  பக்கலில் இயைத்து வைத்தல்  ஆட்கொள்ளு தற்கு  ஏதுவாம் என்பார் , “ஆர்த்துவைத்தாட்கொண்டருளி” என்றார் .  ஆர்த்து வைத்து என்னும்  எச்சம் ஏதுப்பொருட்டு .

             இறைவனுடைய திருவடியையே  ஞானமயமாகச்  சைவ  நூல் கூறும் .  ஆதலின் “புலன்  கழல் “ என்னப்பட்டது.  திருவடி ஞானத்தை முன்னர்க் குருந்த நீழலில்  ஞானாசிரியனாக  எழுந்தருளி உபதேசித்த  ஞான்று  “தாட்டாமரை  காட்டி “ என்றபடி காட்டியருளியவாறே  இன்னமும் காட்டியருளல் வேண்டும் என்பார்,  “இன்னுங்   காட்டு  கண்டாய்”  என்றார்.  கண்டாய்  முன்னிலையசை . இறைவன் திருவடி  காண்டலில்  இடையறாது நிகழும் அவா  மிகுதியால் அடிகள்  இவ்வாறு  வேண்டுவாராயினர் .

                இதன்கண், “கொழுமணியேர் நகையார் கொங்கைக்  குன்றிடைச்  சென்று குன்றி விழுமடியேனை”  என்றதனால் அந் நிலை வெறுக்கத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             ***********************************

பாடல் : 28 .

புலன்கள்  திகைப்பிக்க  யானுந்  திகைத்திங்கொர்  பொய்ந்நெறிக்கே

விலங்குகின்  றேனை  விடுதிகண்  டாய்விண்ணும்  மண்ணுமெல்லாம்

கலங்கமுந்  நீர்நஞ்  சமுதுசெய்  தாய்கரு  ணாகரனே 

துலங்குகின்  றேனடி  யேனுடை  யாயென்  தொழுகுலமே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  மெய்யன்பர்  பக்கல் தம்மை  இயைத்து வைத்து மீண்டும்  திருவடிக்காட்சியளித்தல்  வேண்டுமென  விண்ணப்பஞ் செய்துகொண்ட  அடிகள்  இத்திருப்பாட்டில்  அக்காட்சி  இல்வழியுண்டாம்  தீங்குகளைக்  கூறப்புகுந்து ,முதலில்  புலன்களால்   திகைப்புண்டு  நெறிபிழைத்துச்  சேறலைக் கூறுகின்றார் .

பதவுரை :-  விண்ணும்  மண்ணும் எல்லாம் கலங்க  =  விண்ணுலகமும்  நிலவுலகமும் ஆகிய  எல்லாம் கலக்கமுறுதலைக் கண்டு ,

முந்நீர்  நஞ்சு  அமுது  செய்தாய்  =  கடலில்  தோன்றிய  நஞ்சத்தை  உண்டு  காத்தருளியவனே  ,

கருணாகரனே  =  அருட்குணத்திற்கு  இருப்பிடமானவனே ,

துலங்குகின்றேன்  அடியேன்  உடையார்  =  நிலை கலங்குகின்ற  அடியேனை  அடிமையாக  உடையவனே  ,

என் தொழுகுலமே  =  என் குலதெய்வமே ,

புலன்கள் திகைப்பிக்க  =  ஐம்புலன்களும்  மயக்கமுற ,

யான்  திகைத்து இங்கு  ஓர்  பொய்  நெறிக்கே  விலங்குகின்றேனை  =  மயங்கி  இவ்வுலகத்து நிலையற்ற  ஒரு  தீய  நெறிக்கண்ணே  விலகிச்செல்கின்ற  சிறியேனாகிய  என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  அமுதத்தை  விரும்பிக்  கடல் கடைந்த பொழுது , அக்கடலில்  கொடிய  பெருநஞ்சு  தோன்றிற்றாக  , அது கண்டு  நமக்கு  என்ன கேடு  நேருமோ வென  முதலில்  நடுக்கம்  எய்தினர் தேவராதலானும்  ,அப்பெருநஞ் சின்  கொடிய  வேகத்தை  கண்டு பின் கலக்கமுற்றவர்   மக்களாதலானும்  அம் முறைக்  குறிப்புத்  தோன்ற  , “  விண்ணும்  மண்ணும்  “  என்றார் . விண் மண்  பாதாலமென்னும்  முத்திறவுலகங்களும்   நடுங்கினவாகச்  சிறப்புப்  பற்றி முதலிரண்டுங் கூறப்பட்டன .  “நஞ்ச மஞ்சி  ஆவ  வெந்தா யென்ற விதாவிடும் “ தேவர் நிலையைக் கண்டு இறைவன்  இரக்க முற்றனனாதலின், அதற்கேற்ப   “கலங்க” என்னும்  எச்சத்தின்  பின்  “கண்டு”  என்னும்  வினை யெச்சம்  வருவித்துரைக்கப்பட்டது .

         முந்நீர்  –  கடல் . ஆற்று  நீர்  , ஊற்று நீர் , மழை நீர்  என்னும்  மூன்றும்  உடையதெனவும்  , நிலத்தை  ஆக்கல்  , அளித்தல்,  அழித்தல்  ஆகிய  மூன்று  தன்மைகளை யுமுடைய தெனவும்  கூறுப . சில  உணவுப்பொருள்களிலும்   நஞ்சுண்டு . அஃது  உண்டவர்க்குச்  சிறிது  சிறிதாக   நாளடைவிற்  கேடு  விளப்பதாகும் . பாம்பு  முதலிய  பிராணிகளிடத்தும் நஞ்சுண்டு  . அது  தீண்டப்  பட்டவர்க்கு  மாத்திரம்  தீங்கு  விளைக்கும் . அங்ஙனமின்றி  உண்ணாத  நிலையில்  கணப்பொழுதில்  எல்லா  உலகங்களுக்கும்  கேடு  விளைக்கும்  கொடுநஞ்சென்பார் , “முந்நீர்  நஞ்சு”  என்றார் . நஞ்சின்  கொடுமையைத்  தணிக்கப்  புகுவார் , மணி மந்திர  மருந்துகளைக்  கருவியாகக்  கொள்ளுவர்  .இப் பெரு நஞ்சை யழிக்கப்  புகுந்த  இறைவன் , அதனையே  உணவாகக்  கொண்டனன்  என்பார் ,  “அமுது செய்தாய்” என்றார் .  இறைவன்  நஞ்சுண்ட  வரலாறு  அப் பெருமானது பேரருட்டிறத்  துக்கு   எடுத்துக்காட்டாகுமென்பது தோன்ற  அடுத்துக்  “கருணாகரனே” என்று  அருளிச்செய்தார் .

          பெருநஞ்சின்  எழுச்சி  கண்டு  கலங்கிய  உலகங்களையே  காப்பாற்றி யருளிய பேரருட்  குணமுடைய  நினக்குப்  , பிறப்பிறப்புத்  துன்பங்களுக்கு   அஞ்சிக்கலங்கும்   சிறியேனைக் காத்தல்  பெரிதன்று  என்பது  தோன்றத், “துலங்குகின்றேன்” எனவும்  , அங்ஙனம்  கலங்குகின்ற  யானோ  நின்  அடியேனாவனெனவும் , எனக்குத்  தலைவனும்   என் குலதெய்வமும் நீயே  எனவும்  புலப்படுப்பார் , “அடியேனுடை யாயென்  தொழுகுலமே “  என்றார் . துலங்குதல்  –  துளங்குதல் ; கலங்குதல் .  “அம்பலத்தா னருளில்லவர் போல், துலங்கலைச்  சென்றிதென்னோ  வள்ளலுள்ளந்  துயர்கின்றதே  “ என்புழித்  துலங்கும்  அப்பொருட்டாதலறிக .  அடியேனுடையாய்  என்புழி  இரண்டனு ருபு    விரித்துக்  கொள்க .

            தொழுகுலம்  என்பது  வணங்குதற்குரிய  தெய்வத்  திருக்கோயில்  என்னும்  பொருளிடையதாய்க்  குல தெய்வத்தை யுணர்த்தும் . நிலைவுத லில்லாத   மாயாகாரியப்  பொருள்களைப் பற்றி  நிகழும்  சுவையொழி  யூறோசை நாற்றமென்னும்  ஐம்புலங்களும்  , முதலில்  இன்பம்  போல்தோன்றி  முடிவில்  துன்பமாக  மாறுதலானும், அம்மாற்றத்தை  அறியாவாறு  அறிவை  மயக்குதலானும்  ,”புலன்கள்  திகைப்பிக்க”  என்றார் , “மாறிநின்றென்னை மயக்கிடும்  வஞ்சப் புலன்” என்று  அடிகள் பிறிதோரி டத்துக்  கூறியதும் அறிக .  திகைப்பித்தல்  –  மயக்க முறுத்தல் .  “திகைத்தாற்றேற்ற  வேண்டாவோ”  என்ற இடத்தும்  அப்பொருட்டாதல்  அறிக . “யானும்  திகைத்து “ என்புழி  உம்மை  அசை நிலை  “காமக்கடன் மன்னும் “  என்ற இடத்துப்போல . “யானுந்  திகைத்திங்கொர் பொய்ந் நெறிக்கே  , விலங்குகின்றேனை  “ என்பதை  முன்  உரைத்தாங்குரைத்து முடித்துக் கொள்க .

              புலன்களின்   மயக்கத்தால்  அழிவில்லாப்  பேரின்பம்  பயக்கும் சிவநெறிக்கட்  சேறல்  ஒழிந்து அழியும்  இயல்பினதாய  இவ்வுலக இன்பத்தில்  தலைப்படுத்தும்  அவநெறிக்கட்  செல்லலானேன் என்பார் ,  “இங்கோர் பொய் நெறிக்கே  விலங்குகின்றேனை “  என்றார் .”இங்கு” என்றது இவ்வுலக  இன்பம்  என்னும் பொருட்டு .   ஓர் பொய் நெறி  –  தீமை செய்வதில் ஒப்பற்ற  பிழை நெறி . செந்நெறிச்  செலவே  அறிவுடையார்க்கு  இயல்பாதலின்  , அவ்வியல்பின்   மாறிச்செல்லுதலால்  அச்செலவு  விலகிச்  சேறலாயிற்று . ஒரு நெறியினின்றும்  விலகிப்  பிறிதொரு  நெறிக்கட்  செல்ல  நேர்ந்துழி , அஃது  ஒரோவமயம்  மற்றொரு  நன்னெறியாகவும்  வாய்ப்பதுண்டு .

               அடியேற்கு  அங்ஙன  மின்றித்  தீயதாகவே  வாய்த்ததென்று  இரங்குவார் ,  “தீநெறிக்கே”  என்றார் . ஈண்டு  ஏகாரம்  தேற்றப் பொருட்டு செல்லும்  நெறி  தீயதாயின் , அதனை விட்டு விலகி நன்நெறிக்கட்  சேறல்  நன்றாம் . அங்ஙனமின்றி  நன்நெறிக்கட்  செல்லும்  நிலையில் அதனை விட்டு விலகித் தீநெறிக்கட்  சேறலானேன் என்று  அடிகள் இரங்கிக்  கூறியபடியாம் . இறைவ!  புலன்களின்  தாக்குதலால்  மயக்கமுற்றுத் , தீநெறிக்கட்  செல்லும்  சிறியேனைத்  தெளிவித்து , அருட் கிடனாக்குதலே   நின் பெருந்தன்மைக்கு  ஏற்றதாகவும் , இந்நிலையில்  கைவிடல் தகுமா  என்பார் ,  “விடுதி கண்டாய்” என்றார் .

               இதன்கட்  புலன்களால்  திகைப்புண்டு  நிலையுதலில்லாத உலக இன்பத்தை விரும்பிச்  செந்நெறிச்  செலவைக் கைவிட்டுப்  பொய் நெறிக்கட்  சேறல் , வெறுக்கத்தக்க தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                   *****************************************

பாடல் : 29 .

குலங்களைந்  தாய்களைந்  தாயென்னைக்  குற்றங்கொற்  றச்சிலையாம்

விலங்கலெந்  தாய்விட்  டிடுதிகண்  டாய்பொன்னின்  மின்னுகொன்றை 

யலங்கலந்  தாமரை  மேனியப்  பாவொப்பி  லாதவனே

மலங்களைந்  தாற்சுழல்  வன்றயி  ரிற்பொரு  மத்துறவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவன்  திருவடிக்காட்சி இல்வழி உண்டாம் தீங்குகளுள் ,புலன்களால்  மயக்கமுற்று  நெறி தவறிச்  சேறலைக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஆணவ  முதலிய  மலங்களாற் பிணிக்கப்பட்டு வருந்துதலை  ஓர்  உவமை  முகமாக  எடுத்து இயம்புகின்றார்.

பதவுரை :-  பொன்னின் மின்னுகொன்றை  அலங்கல்  =  பொன்னைப்போல ஒளி விடுகின்ற திருக்கொன்றை மலர்  மாலையையுடைய  ,

அம் தாமரை மேனி அப்பா  =  அழகிய  தாமரை மலர் போன்ற திருமேனியையுடைய என் தந்தையே ,

ஒப்பு  இல்லாதவனே  =  ஒப்பற்ற பரம்பொருளே ,

மத்து உற பொரும் தயிரின்  =  மத்தினால் வலிந்து கடையப்பட்டுச்  சுழலும் தயிரைப் போல ,

மலங்கள் ஐந்தாற் சுழல்வன்  =  ஐந்து  மலங்களாலும் தாக்கப்பட்டுச்  சுழல்கின்றேன் , இந் நிலையில் (குற்றம்) 

குலம் களைந்தாய்  =  காம  முதலிய  குற்றக்  கூட்டங்களைக்   களைந்தனையாயின் ,

என்னைக் குற்றம்  களைந்தாய்  =  அடியேனுடைய  அம்மலக் குற்றங்களையும்  களைந்தனையாவாய்  ,

விலங்கல்  ஆம்  கொற்றைச்சிலை  எந்தாய்  =  மேருமலையாகிய  வெற்றி  தரும்  வில்லையுடைய  என்  தந்தையே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  பொன் , கொன்றை மலரின்  நிறத்திற்கும்  ஒளி செய்தற்கும்  உவமையாயிற்று . மக்கட்டலைவராகிய  அரசர்க்கு  அடையாளப்பூவும்  , அழகுக்கு  அணியும்  பூவும்  , போர்ப் பூவும்  தனித்தனி வெவ்வேறாகும், இறைவர்க்கு  இம் முத்திறப்பூவும்  கொன்றாய்மலரேயாம் . இவ்வுண்மை யைக்  “ கார்விரி கொன்றைப் பொன்னேர்  புதுமலர்ந்த , தாரன்  மாலயன்  மலைந்த  கண்ணியன் “ என்பதனால் அறிக .  தார்  விசேடமாக  இடுவது;  அடையாளப் பூ .  மாலை – அழகுக்கு  இடுவது . கன்ணி  –  போர்ப் பூ . இறைவன்  நீறு அணிந்த செம்மேனியன்  ஆதலின் , நீற்று  நிறவொளிக்கு  வெண்டாமரை மலரும் , திருமேனி  நிற வொளிக்குச்  செந்தாமரை மலரும்  ஒப்பானவாம் . இவ்விரண்டு  உவமையும்  ஈண்டுப்  பெறப்படுவதற்கே  வெண்டாமரை  செந்தாமரை  யென்னாது ,அந்தாமரையென  உவமங் கூறப்பட்டது . அழகு  ஈண்டு  நிறமும் ஒளியும் செவ்வி  குலையாமை. ஞானா சிரியனாக  எழுந்தருளி  ஆட்கொண்ட  நிலையிற் கண்ட  திருவுருவக் காட்சியே  இவ்வனுபவத்திற்கு  ஏதுவாகும் .  ஞானத்தந்தையாக  எழுந்தருளி  உபதேசித் தமையால் , “அப்பா” எனவும், அப்பெருமான் தம்பொருட்டு  மக்களுருவில்  வெளிப்படினும் , எல்லா  ஆற்றலும்  படைத்தகடவுட்டலை வனாவான்  என்னும்  உண்மையுணச்சியால்  “ஒப்பில்லாதவனே  எனவும்  கூறியருளினார் .

            இனி, அடிகள் தாம்  ஆணவ  முதலிய  மலங்களால்  சுழன்று துன்புறுதற்கு  மத்திட்டுக் கடையப்படும்  தயிரை உவமையாக  எடுத்துக் காட்டுகின்றார் .  மத்திட்டு  மெத்தெனக்  கடையப்படின் , தயிரின்  சுழற்சி  மெல்ல  நிகழ்வதாகும் . அந் நிலையை  விலக்கிச்  சுழற்சி  மிகுதி தோன்ற , “மத்து உறப்பொரும்”  என்றார் .  உறப்பொருதல்  –  மிகுதியாகத்  தாக்குதல் . வலிந்து கடையுங்கால்  தயிர்  முன்னும்  பின்னுமாக  விரைந்து சுழல்வதாகும். அதுபோல  உயிர்  மலங்களால்  தாக்கப்பட்டு , கன்மத்தீற்கீடாக உடல் கரணங்களைப்  பெற்று , பற்பல புவனங்களுக்கு  மாறி மாறிச்சென்று  , பற்பல நுகர்ச்சிகளையும்  எய்திப்  பிறப்பிறப்புக்களிற் சுழலுமாதலின்  அந் நிகழ்ச்சியைத்  தம் மேலேறிட்டு  , “மலங்களைந்தாற்   சுழல்வன்  தயிரிற்பொரு மத்துறவே” என்றார் . மலங்கள்  ஐந்தாவன –  ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதாயி  என்பன .

             ஆணவம்  என்பது , உயிரறிவைச்  சிறுமைப்படுத்தும் மூலமாகும் . கன்மம் ,  நல்வினை  தீவினையாகிய  செயல்வடிவில்  நிகழ்ந்து  பக்குவ  முற்றுப்  பின்  இன்பதுன்பங்களை  விளைப்பதாகும் . மாயை  –  கன்மத்திற் கீடாக  உயிர்க்கு  உடல்,கரணம் ,இடம்  நுகர்  பொருள்களைப்  பயப்பதாகும் .  திரோதாயி –  உயிரோடு  மறைந்து நின்று  ஏனை  மலங்களத் தொழிற்படுத் துப்  பாகம்  வருவிக்கும்  மறைப்புச்  சத்தி . குற்றம்  என்னும்  சொல்லை , குற்றக்குலங்களைந்தாயெனவும், , என்னைக்  குற்றம்  களைந்தாயெனவும்  ஈரிடத்தும் இயைத்துப்பொருள்  கொள்ளல்வேண்டும் . குற்றக்குலம் –  காம வெகுளி மயக்கம் ஆகிய  குற்றக்கூட்டம். . இவற்றை அவிச்சை  ,அகங்காரம் , அவா , ஆசை , வெகுளி  என ஐந்தாகவும்  கூறுப .

              காரணமாகிய  இக்குற்றங்கள்  களையப்படுமாயின் ,  காரியமாகிய  வினைகள்  நிகழாமையின் , அவற்றால்கூட  வரக்கடவ துன்பங்களும்  இலவாம் . மெய்யுணர்வின் பயனும்  கைகூடும் . ஆகவே  இக்குற்றங்கள்  நிகழாமற்  செய்யு முகமாக  மலநாசம்  பண்ணவேண்டுமென்னும்  கருத்து டையராய் , “குலங்களைந்தாய்  களைந்தாயென்னைக்  குற்றம் “ என்றார் . முன்வரும்  களைந்தாயென்பதன் பின் , “ஆயின்”  என்னும்  சொல்லையும்  பின் வரும் “களைந்தாய்”  என்பதன்பின்  , “ஆவாய்”  என்னும்  சொல்லையும்  அவாய்  நிலையான்  வருவித்துரைத்து க் கொள்ளல்வேண்டும் . இனிக், குலங்களைந்தாய்  என்பதற்கு  , சாதி  குடிப்பிறப்பு  முதலியவற்றால்  உயர்வுடையோமென்னும்  செருக்கை யொழித்தனையாயின்  என்று  பொருள்  கோடலும் ஒன்று . “ சாதி  குல  பிறப்பென்னும்  சுழிக்கப்பட்டுத்  தடுமாறும்,  ஆதமிலி நாயேனை” என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

             என்னை  நலியும்  மலங்களும்  காம முதலிய  குற்றங்களுமாகிய   பகைகளைக்  கடிந்தொறுத்து என்னை  நன்நிலைப்படுத்தல் , மேருமலையை  வில்லாக  வளைக்கும் ஆற்றலும் , அதனால் யாண்டும்  வெற்றியே  பெறும்  இயபுமுடைய  உண்மைத்  தந்தையாகிய  நினக்குக்  கடமையாகுமென்பார், “கொற்றைச்சிலையாம்  விலங்கலெந்தாய் “  என்றார் . எந்தாய்  என்றதனால்  அடிகள்  இறைவனுடைய  புதல்வராவார்  என்பதும் ,மைந்தன் பகையைத் தன் பகையெனக்கொண்டு  களைய  வேண்டியது தந்தையின்  கடமை யென்பதும்  பெறப்படும்  .இதனையுட்கொண்டே  இந்நிலையில்  அடியேனைக்   கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி  கண்டாய்” எனக் கூறியருளினர் .

          இதன்கண்,  “மலங்க ளைந்தாற் சுழல்வன்   தயிரிற்  பொருமத்துறவே  “  என்றதனால் , உலக வாழ்க்கை  ஆணவ  முதலிய  பாசப்பிணிப்பால்   நிகழ்வதென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                                     **********************************

பாடல் : 30 .

மத்துறு  தண்டயி  ரிற்புலன்  றீக்கது  வக்கலங்கி

வித்துறு  வேனை  விடுதிகண்  டாய்வெண்  டலைமிலைச்சிக்

கொத்துறு  போது  மிலைந்து  குடர்நெடு  மாலைசுற்றித்

தத்துறு  நீறுடன்  ஆரச்செஞ்  சாந்தணி  சச்சையனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆணவ  முதலிய  மலங்களால்  தாம் எய்தும் கலக்கத்திற்கு  , மத்தினாற்  கடையப்படும்  தயிரின்  சுழற்சியை  உவமையாகக் கூறிய   அடிகள் , இத்திருப்பாட்டில்  மத்தினாற்  கடையப்  படுங்கால் , தயிர்  தன்  குளிர்ந்த இயல்புக்கு  கேடில்லாதபடி கலக்கப்படுதல்  போல  ,உயிர்க்குணமாகிய  அறிவு  நிலைக்குக்  கேடில்லாதவாறு  என் உயிர் நிலை  கலக்கப்பட்டும்   அவ்வளவின்றி , அறிவும்  வெதும்பிக் கெடுமாறு   புலன்  தீப்பற்ற  அக்கலக்கத்தில்  ஆழலானேன்  என்று  வருந்திக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வெண் (மை) தலை மிலைச்சி  =  வெண்மை  நிறமுடைய  தலையைச்  சடையிற்  சூடி ,

கொத்து உறு போது மிலைத்து  =  பூந்துணரிற்  பொருந்திய  கொன்றை மலர்  மாலையை  யணிந்து ,

குடர்நெடு  மாலை  சுற்றி =  குடராகிய  நெடிய  மாலையைக்   கழுத்திற்  சுற்றிப்புனைந்து ,

 தத்து உறு  நீறுடன்   =  பரந்துபட்ட   திருநீற்றுடன் ,

ஆரம் செஞ்சாந்து  அணி சச்சையனே  =  சந்தனத்தினது  செம்மையான  கலவையை  யணிந்து திகழும்  மெய்ப்பொருளாகவுள்ளவனே  ,

மத்து  உறு  தண்தயிரின்   =  மத்தினால்  கடையப்படும்   குளிர்ந்த தயிரைப் போல ,

புலன் தீக்  கதுவக் கலங்கி   =  புலன்களாகிய  தீ ப்பற்றி வெதுப்பக்   கலக்கமுற்று  ,

வித்து  உறுவேனை  =  அக்கலக்கத்தில்  ஆழ்ந்து  வித்தாம்  தன்மை  யெய்திய  அடியேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  தாருக  வனத்து முனிவர்கள்  வெகுளி  காரணமாக  இறைவனைக்  கொலைபுரியக்  கொடி  வேள்வியொன்றியற்றி  அதனின்றும்  தோன்றிய  வெண்டலை  யொன்றை  யேவினராக, அதனை  இறைவன்  கையினாற்  பற்றித்  தன்  சடையிற்  சூடினனென்பது புராண கதை .  மிலைத்தல்  –  சூடுதல் . வெண்டலை  மிக்க  கொடுஞ் செயலுடைய  தாகலின்   அதனால் உலகங் கேடு அடையாமைப்  பொருட்டு அதனைச்  சூடினனென்ப.  இவ்வுண்மையை  “அகிலமதிறவா வண்ணம், முக்கணனருள்  செய்தந்த  முண்ட முண்டகக்   கைபற்றிச் , செக்கரஞ் சடைமேற்  கொண்டுன்  செயலினைப்  புரிதியென்றார் “ என்பதனான்  அறிக . இதனால் எத்துணைக்  கொடிய  இடையூறும்  ஆண்டவன்  சார்பில்  அணுகாதென்னும்  உண்மை  புலப்படுக்கப்  பட்டபடியாம் .  

         கொத்து  – பூங்குலை  . குலையினின்றும்  கழன்ற பூ , புதுமைச் செவ்வி  குலைந்திருக்கு மாதலின்  , அக்குலைவின்மை  குறித்தற் பொருட்டு , “கொத்துறு போது”  என்று  கூறப்பட்டது . இனிக் குலையினின்றும்  கொய்யப் படாமல்   அக்குலையோடு  சூடப்பட்டது என்று  கோடலும்  ஒன்று . பிரமன் முதலியோர்  அழிவில்  அவர் தம் என்பு  தலை  முதலியவற்றை  மாலையாகக் கோத்தணிந்தனன் இறைவன்  என்று  கந்தபுராணம்  கூறுமாதலின் ,அவற்றின்  இனமாக  அத் தேவர்  தம்  குடர்களையும்  மாலையாக அணிந்தனன்  என்பார்  “குடர்நெடு மாலை சுற்றி” என்றார் . என்பு  மாலை முதலியவற்றை  யணிந்தத னாற்  போதரும் உண்மைப்  பொருளைக்  கந்தபுராணத்துட்  காண்க. “நூறு கோடி  பிரமர்கள்  நொந்தினார் , ஆறு  கோடி  நாராயணரங்ஙனே  , யேறு கங்கை மணலெண்ணி லிந்திரர், ஈறிலாதவன்  ஈசனொருவனே”  என்று  அப்பர்  அருளிய  தேவாரத்தானும்  இவ்வுண்மை  புலனாகும் .

          மேலும் மக்கள்  முதலியோரால்  விரும்பத்தக்கதும்  வெறுக்கத்தக்கது மாகிய   போதினையும்  குடரையும் ஒப்பப்  புனைந்தமையால், இறைவன்  ஒன்றை  விழைதலும் ஒன்றை  வெறுத்தலும் இல்லாதவன்  என்னும்  உண்மையும்  பெறப்படும் என்க . { கொடி நெடுமாலை என்று பாட வேறுபாடு இருப்பின் , தாமரை முதலிய கொடியோடு  கூடிய மாலையெனப்  பொருள்  கோடலும்  பொருந்தும் . அப்பாட வேறுபாடு  படிகளிற்  காணப்படாமையாற்  கொண்டிலம்}  தத்தல்  –  பரத்தல் . “தத்தரி நெடுங்கண்” என்புழி , அப்பொருட்டாதலறிக . இது , திருநீற்றை  நீரிற்  குழையாமல்   வரியின்றிப்  பூசுதலைக்  குறிக்கும் .  இதனை  உத்தூலனம்  என்ப . ஆரச் செஞ்சாந்து  –  செஞ்சந்தனக்  குழம்பு  .  திருநீறும்  சந்தனக் குழம்பும் முறையே  வெப்பமும்  தட்பமும்  செய்வனவாதலின்  ,ஒன்றொற்கொன்று   மாறுபட்ட  குணங்களெல் லாம்  இறைவனைச்  சார்ந்து ஒத்த  நிலை பெறும் என்னும் உண்மையை அது குறிப்பிற்  புலப்படுத்தும்  என்க .

                இனித்திருநீறும்   செஞ்சாந்தும் கூறியது , “ பால் வெள்ளை நீறும்   பசுஞ்சாந்தும் “ என்றபடி  உமை யொரு  கூறனாம்  நிலையைக்  குறிப்பிற்  புலப்படுத்து மெனக்  கோடலும் ஒன்று. இக்குறிப்புப் புலன்களால்  வெதும்பும்  தம்மைக்  கைவிடாமல்  அளிசெய்து  காத்தற்கு  அம்மையுடனாக  அப்பனை  அடிகள்  நினைவுட்  கொண்டன  ரென்பதைப்  புலப்படுத்துவதாகும் .என்றும் உள் பொருளைச்  சத்து  என்று  வட நூலார் கூறுவர் .சத்தின்  தன்மை  சத்தா வென்றாகும்  . ஆகார வீறு தமிழில் ஐகாரமாகும் . ஆதலின்  சத்தை  என்றாகி , வித்தை  விச்சை யென்றாதல்  போலச் , சத்தை சச்சை யென்றாயிற்று . ஆகவே  சச்சையன்  என்பது , சத்தாந் தன்மை யுடையவன்  என்னும்  பொருளதாம் .

                   பின் வரும் திருப்பாட்டின்  முதன் மொழிக்கும்  இதுவே  பொருளென்க . மேற்  போந்த வெண்டலை , போது , குடர்நெடுமாலை  , நீறு என்பவற்றை  அணிந்தது பற்றிய  புராண கதைகளெல்லாம் என்றும்  உள் பொருளாக வுள்ளவன்  சிவபெருமானே  யென்பதை  வலியுறுத்தற்கு  எழுந்தனவென்க.  இவ்வுண்மை குறித்தே  அவ்வரலாறுகளை   முதலில்  விளக்கி  இறுதியில்  முடி பொருளாகச்  “சச்சையனே” என அருளிச்  செவாராயினர் .  

                    இனி, இரங்கத்தக்க  தம் நிலைமையை உவமையால் விளக்கிக் கூறுகின்றார் .  மத்தினாற்  கடையப்படும்  தயிர்  போல  ஐம்புலன்களானும்  என் உயிர் கலக்கமுறுகின்றது  என முன்னைத்திருப்பாட்டில்  கூறப்பட்டத னையே   ஈண்டும்  வழிமொழிதலாகக்   கூறினரெனினும் ,ஒரு வேற்றுமை  யீண்டுண்டு  . எத்துணை  கலக்கப்படினும் தயிரின்  தட்பம்  நீங்காமை  போல   உயிர் கலக்கமுறினும்  உயிர்க்குணமாகிய   அறிவு நிலை  கலங்காதென்பது  முன்னைத் திருப்பாட்டிற்   போதரும் . அதனை விலக்கற்கே  , “தண்டயிர்” என  ஈண்டுத் தன்மை யடை  புணர்க்கப்பட்டும் , அத்தன்மை புலன்களின் வெம்மையில் ஒழிந்ததென்னும்  குறிப்புத் தோன்ற  , “புலன்  தீக்கதுவ”  என்றும்  கூறுவாராயினர் .  

                      இங்ஙனம்  கூறியதனால்  உயிர்நிலை  கலங்கியதோடு  அறிவு  கலங்க  முற்றுளதென்பது  புலனாகும் . புலன்களாகிய  தீயினால்  அறிவு நிலை  திரிந்து  வெப்பமுற்றுக்  கலங்கிய  நிலையில்  ,அக்கலக்கத்தினின்றும்   விடுதலைபெற  வியலாது , ஆழ்ந்து  பாடலானேன் என்பார் , “வித்துறுவேனை” என்றார் .வித்தாம் தன்மையடைதல்  –  வேரூன்றியழுந்துதல்  . என் உயிர் நிலையும்  அறிவு  நிலையும்  கலங்கி  வெதும்பி  ஆழ்ந்து கிடக்கும்  இத்துயர்  நிலையில் , பேரருளாளனாகிய   நீ  சிறியேனைக்  கைவிடல்  தகுமாவென் பார் ,  “விடுதி கண்டாய்”  என்றார் .  

                          இதன்கண், “புலன் தீக்கதுவக்  கலங்கி   வித்துறுவேனை “ என்றதனால்  , உலக  வாழ்க்கையில்  உயிர்  நிலையும்  அறிவு  நிலையும்  கலக்கமுறுதல்  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக 

                                               **************************************

பாடல் : 31 .

சச்சைய  னேமிக்க  தண்புனல்  விண்கால்   நிலநெருப்பாம்

விச்சைய  னேவிட்டிடுதிகண்  டாய்வெளி  யாய்கரியாய்

பச்சைய   னேசெய்ய  மேனிய  னே யொண்  படவரவக் 

கச்சைய  னேகடந்  தாய்தடந்  தாள  வடற்கரியே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் உயிர் நிலையும் அறிவும்  கலக்கமுற்று  வெதும்புமாறு புலன்களாகிய  தீயிடைப்பட்டு வருந்துகின்றேன்  எனக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அத் தீமுதலிய  ஐம்பெரும்   பூதங்களாகவும்  திகழ்கின்றவன்  நீயேயாதலின்  , வெம்மை யைத்  தணிக்கும்   தண்புனலாக  நின்று  அவ்வெப்பத்தைப்  போக்கியருள  வேண்டுமென்பதைக்  குறிப்பிற்  புலப்படுத்துகின்றார் .  

பதவுரை :-   வெளியாய்  கரியாய்  பச்சையனே  செய்யமேனியனே  = 

வெண்மை  கருமை  பசுமை  செம்மையாகிய  நிறங்களையுடைய  திருமேனியையுடையாய் ,

ஒண்பட அரவக்  கச்சையனே   =  ஒளி பொருந்திய  படத்தினையுடைய   பாம்பாகிய   அரைப்பட்டிகையை  யுடையவனே ,

தடம்தாள  அடல் கரி கடந்தாய்  =   அகன்ற  அடிகளையும்   கொல்லும்  தொழிலையுமுடைய  யானையைக்  கொன்றவனே ,

சச்சையனே  =  மெய்ப்பொருளாகவுள்ளவனே ,

மிக்க தண்புனல்  விண்  கால்  நிலம்  நெருப்பு  ஆம்  விச்சையனே  = 

மிக்கதாகிய  குளிர்ந்த  நீர்  விசும்பு  காற்று  நிலம்  தீ  ஆகிய  ஐம்பெரும்  பூதங்களாகவும்  விளங்கும்  வித்தயை யுடையவனே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- சிவபெருமானுக்கு  ஈசான  முதலிய  முகங்கள்   ஐந்துள்ளன வென்றும்  , அவை  தனித்தனி வெண்மை  முதலிய   நிறங்களுடையன வென்றும்  சிவாகமங்கள்  கூறும் . இத்திருப்பாட்டில்  கூறப்பட்ட  நான்கு நிறங்களோடு , கூறப்படாத   பிறிதொன்றையும்  இனம்  பற்றி  இயைத்து  ஐந்து  நிறங்களாகக்  கொள்ளல்  வேண்டும் .”நிறங்களோரைந்துடையாய் “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும் அறிக . இந் நிற வேற்றுமை  , நினைவு  கூறும்  அன்பர்  நலங்குறித்து  இறைவன்  மேற்கொண்டபடியாம் .  

               இனி, வெளியாய்  கரியாய்  என்பன  முறையே  பதிஞானமாகிய   ஞானநாட்டத்திற்கு  வெளிப்பட்டும்  ,பசு பாச ஞானங்களாகிய  ஊன நாட்டத்திற்கு   வெளிப்படாமலும்  இருக்கும்  இறையியல்பைக்   குறிப்பன வெனவும்  , பச்சையனே  செய்ய மேனியனே என்பன  ,அருள்வடிவினளாகிய   இறைவியோடு  இயைந்து அன்பர்க்குக்  காட்சி  நல்கி அருள்புரியும்  நிலையைக்   குறிப்பனவெனவும்  கோடலுமாம் . இவ்வுண்மைகளை   “ஊனக்  கண்  பாச முணராப்  பதியை  , ஞானக்கண்ணினிற் சிந்தைநாடி “என்னும்  சிவஞானபோத  நூற்பாவானும்  , “குறையுணர்வாகிய  பசுவறிவானும்    பாசவறிவானும்   உணரப்படாத  முதல்வனை  அவனது திருவடி  ஞானத்தாற்றன்னறிவின் கண்ணே  யாராய்ந்தறிக “  என்னும்  அதனுரை யானும்  , “கரியரேயிடந்தான்   செய்யரேயொரு  பால் “ என்னும்  திருவிசைப் பாவானும்   முறையே  அறிக .

                வெண்மை  முதலியன   இறைவற்  குண்மையாயினும்  , “செய்ய மேனியனே” என  ஈண்டுத்  திருமேனியைச்  செம்மை யோடியைத்துக்  கூறியது , ஞானாசிரியனாக  எழுந்தருளி  யளித்த காட்சியிலீடுபட்டமை  பற்றியென்க .  மற்றை  மெய்யடியார்  அநுபவத்திலும்  இறைவன்  திருமேனி  செம்மை நிறமுடையதாகக்   காட்சிப்பட்ட  தென்னும்  உண்மையும்   ஈண்டு  நினைக்கத்தக்கது . .  “தீ  வண்ணன்  “  “செம்மேனி யெம்மான் “  என்பன  காண்க.   யானைத்தோல்   அகன்றதாகலின்   அது  போர்த்தற்கும்  , புலித்தோல்  அதனிற்  சிறிதாகலின்  , அஃது உடுத்தற்கும்  இயைபுடை யன வாயினாற்போலப்  பாம்பு  அரைக்கச்சாக  அமைந்தது பொருத்தமே .

                  இறைவன்  யானையையும் புலியையும் கொன்று உரித்துப்  போர்த்து  உடுத்து போலன்றிப்  பாம்பை  உயிருடன் அரைப்பட்டிகையாகக்  கொண்டனனாதலின் “ஒண்படவரம் “ என்னப்பட்டது . ஒளியுடன்  கூடிய  படம்  உயிருள்ளதற்கே  இயல்பிற்  பொருந்துவதாகும் . பாம்பைக்  கச்சாகக்  கொண்டது குண்டலினி என்னும் சுத்தமாயையை இறைவன் தனுள்ளடக்கி யிருத்தலாகிய  உண்மைப்பொருளைக்  குறிப்பதாகும் . “தடந்தாள அடற்கரி”என்றது , கொடிய கயமுகா சுரனாகிய  யானையை  . கடத்தல்  –  அழித்தல் .  கடந்தாய்  என்பது முன்னிலை வினைப்பெயர்  விளியேற்று  நின்றது . கொடிய  அசுரனை  யழித்த மிக்க வீரச்செயலைப்புலப்படுத்தியது . புலப்பகையால்  உண்டாம்  தீக்கை யொழித்தல் எளிதென்றற்கு  .  “சச்சையனே” என்பதன்  விளக்கம்  முன்னைத் திருப்பாட்டிற்  கூறப்பட்டது .   

            “மிக்க தண்புனல்”  என்புழி  மிகுதி உருவப்  பருமையையும் , தண்மை குணத்தையும் புலப்படுக்கும் .  புனலுக்கு  இவ்வாறு  கூறவே  ஏனைய  பூதங்க ளும்  காரியப்பாட்டின்  பருமையாகிய  பொதுக் குணமும் , அவ்வப்  பூதங்க ளுக்குரிய  சிறப்புக்  குணங்களும் பெறப்படும் . சத்துப்பொருளாகவும்  பெருமை  சிறுமை  தண்மை  வெம்மை  முதலிய  குணங்களில்லாதவனாக வுமுள்ள இறைவன் “இரு நிலனாய்த் தீயாகி  நீருமாகி  , யியமானனா யெறியுங்  காற்றுமாகி , அரு நிலைய திங்களாய்  ஞாயிறாகி  யாகாச மாயட்ட   மூர்த்தியாகி “ என்றபடி .

                 அசத்துப்பொருளாகவுள்ள  ஐம்பெரும்  பூதங்களாகவும்  , குணங் களை யுடையவனாகவும்  வெளிபடாமல் , மாயவித்தை  யென்பார், “சச்சையனே  மிக்கதண்புனல்  விண்கானில நெருப்பாம் விச்சையனே” என்றார் . நிலையுடைப்  பொருளாகவுள்ளவன்  நிலையில் பொருளாகவும்  வெளிப்படுதலின்  அது வித்தையாயிற்று  என்பது .

                    இதன் முன்னைத் திருப்பாட்டில்  ஐம்புலன்களும் தீயாகக்  கூறப்பட்டமையால் , அத்தீயின்  ஆற்றலை  யொழித்தற்கு  இறைவனை  இத் திருப்பாட்டில்  ஐம்பெரும்  பூதங்களுள்  வைத்து , முதற்கட் புனலாகக்  கூறி யருளினர் . நீரும்  நெருப்பும்  இயைந்துழி  மிக்க தன் கண் ஏனையது ஒடுங்கி யொழியும் ஆதலின், நெருப்புக்கு  ஏதும் அடையின்றி  “புலன்  தீக்கதுவ” என்று முன்னைத் திருப்பாட்டிற்  கூறி, இத்திருப்பாட்டில்  “மிக்கதண்புனல்” என்றார். வெம்மையை  யொழித்தற்குத்  தண்மையும்  சுருக்கத்திற்கு மிகுதியும்  கூறிய நயம் நினைந்து  இன்புறத்தக்கது .

                       இறைவ, நிலையுடைப்  பொருளாகிய  நீ ,  நிலையில் பொருளா கிய  பூதங்களாகவும் வெளிப்பட்டருளும் வித்தை யுடையையாதலின்  , அவ் வித்தை  முகமாகவும் அடியேனைப்பற்றி நிற்கும் புலப்பகையை ஒழிக்கும் ஆற்றல் நின்பாலதாகும் . அங்ஙனமாகவும்  அப்புலன்களாகிய  தீயினால்  கலக்கமுற்றிருக்கும்  இந்நிலையில் , ஏழையேனைக்  கைவிடல்  தகுமா?  கைவிடாமற்  காத்தருள வேண்டுமென்று அடிகள் விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .  

                       இதன்கண், நிலையுடைப்பொருளாகவுள்ள   இறைவன்  , நிலையில் பொருள்களாகிய  பூதங்களாகவும்  வெளிப்படுதல் , நிலையுதலில்லா  உலக  வாழ்க்கையில்  உயிர்களுக்கு  நேரும்  புலப்பகைகளை  யொழித்தற் பொருட்டாமென்பது பெறப்படுதலின்  பிரபஞ்ச வைராக்கியம்  குறிப்பிற் புலனாதல்  அறிக .

                                           ************************************

பாடல்:32 .

அடற்கரி  போலைம்  புலன்களுக்  கஞ்சியழிந்த  வென்னை

விடற்கரி  யாய்விட்  டிடுதிகண்  டாய்விழுத்  தொண்டர்க்கல்லால்

தொடற்கரி  யாய்சுடர்  மாமணி  யேசுடு  தீச்சுழக் 

கடற்கரி  தாயெழு  நஞ்சமு  தாக்குங்  கறைக்கண்டனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஐம்பெரும் பூதங்களாக  விளங்கும்  நிலையில் , மிக்க தண்புனலாக  நின்று  புலன்களாகிய  தீயின்  வெம்மை யைக்   போக்கியருளவேண்டுமென்று இறைவனை வேண்டிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அப்புலன்களுக்கு  அஞ்சிக்  கலங்கும்  நிலையிற்  சிறியேனைக் கைவிடாமற்  காக்கும்  கடப்பாடு, என்னிற்  பிரியாதிருக்கும்   நின்பாலதேயென  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார்

பதவுரை :-  விழு தொண்டற்கு அல்லால்  தொடற்கு  அரியாய்  =  சிறந்த மெய்யடியார்க்கு  அன்றிப்பிறர்க்குத்  தீண்டுதற்கு  அருமையாகவுள்ளவனே ,

சுடர் மாமணியே  =  ஒளி விளங்கும் பெரிய  மாணிக்க மணியே  ,

சுடு தீ சுழல  =  சுடும் இயல்பினையுடைய   தீக்   கொழுந்து  சுழலும்படி ,

கடல் கரிதாயெழும்  =  திருப்பாற்கடலின் கண்ணே  கருமை  நிறத்தோடு  தோன்றிய ,

நஞ்சு அமுதாக்கும்  கறைக் கண்டனே  =  நஞ்சத்தை  உணவாகக்கொண்ட   கரிய  கழுத்தையுடையவனே ,

என்னை  விடற்கு  அரியாய்  =  அடியேனை  எக்காலத்தும் விட்டு  நீங்காதவனே ,

அடல் கரிபோல்   ஐம்புலன்களுக்கு  அஞ்சி  அழிந்த  என்னை  =  வலிமிக்க  யானையைப்போன்ற  ஐம்புலன்களுக்கும்  அஞ்சி  நிலை  கலங்கிய  சிறியேனை ,

விட்டிடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  சிறந்த  தொண்டின்  இலக்கணத்தை  “கண்ட விலையல்லேன் நானென்றகன்று  காணக்கழிபரமும் நானல்லே னெனக் கருதிக்  கசிந்த தொண்டு” என்று  சைவ நூல் கூறும் . உலகத்தொண்டு  கடவுட் டொண்டு என்னும் இரண்டனுள் , முன்னது அழியும் இயல்பினவாகிய  உலக இன்பங்களை  விரும்பி முனைத்து நின்று  செய்யப்படுவது . அவ்வின்பங்கள் தாமும்  அடிமைக்குக் குறைந்தும் , ஆண்டவனுக்கு  மிக்கும் உண்டாவனவாம்  பின்னதாகிய கடவுட்டொண்டு  , அழிவில் இன்பத்தை விரும்பி முனைப்பற  நின்று  செய்யப்படுவது ; அப்பேரின்பந்தானும்  ஆண்டவனுக்கின்றி   அடிமைக்கே  உரியதாகும் .  இவ்வுண்மை  யுணர்ந்து ,”நாமார்க்குங் குடியல்லோம் “ என்றபடி உலகத்தொண்டில்  தலப்படாமல்  கடவுட்டொண்டில்  ஈடுபட்டு  ஒழுகும் மெய்யடியாரையே  “விழுத்தொண்டர்” என்று  இங்கே  குறிப்பிடுவாராயினர் .  

                மேற்குறிப்பிட்ட சிவஞான சித்தியில் “கசிந்த தொண்டு “  என்பதற்கு “முனைத்து நின்று செய்யும் உலகத்தொண்டின்  நீக்குதற்குக்  கசிந்த தொண்டென விசேடித்தார்” என்று சிவஞான முனிவர்  கூறிய  குறிப்பும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . “விழுத்தொண்டர்க் கல்லால்” என்றதனால்  பிறர்க்கென்பது பெறப்படும் . பிறராவர்  வேடநெறி  நில்லாமல்  வேடம்  பூண்டிருப்போரும், நெறி நில்லாமையோடு  அவ்வேடத்தானும் இல்லோரும்  எனப்  பலதிறப்படுவர் .  தொடுதல்  –  தீண்டுதல் . விழுத்தொண்டரல்லாதார்  தீண்டுதற்கு  அரியனென்றதனால் ,விழுத்தொண்டர்க்கு   எளியனென்பது பெறப்படும்  .  கல்வி , செல்வ  முதலியவற்றால் பெரியராயினும் , கசிந்த தொண்டு  உடையரல்லரேல், இறைவன்  பக்கல்  சிறிதும் அணுக இயலாதென்பது  தெளிவு .

                 இறைவன்  மெய்யன்பராகிய  தொண்டர் தன்னைத்  தீண்டுதற்கு  எளியனாதலேயன்றி , அவர்தம் உள்ளத்தையே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருப்பன்  என்பதும் , மெய்யன்பரல்லாதார்  தீண்டற்கு   அரியனாதலே யன்றி அவர் தம் காட்சிக்கே அரியனாவன் என்பதும் குறிப்பிற்  புலப்படுத்த வாறாம் .  இவ்வுண்மையை “உள்ளுறும் அன்பர் மனத்தார் தாமே ……..பிறர்க் கென்றும்  காட்சியார்தாமே” என்னும் அப்பர் அருண்மொழியானும் உணர்க . “தொடற்கரியாய்”  என்றதனால்  இறைவன் தொட்டாற்  சுடும்  பரிசமுடைய   தீவடிவினனோ எனின் , பேரொளிப் பிழம்பாக வுள்ளமையால்  விழுத்தொண் டரல்லாதார்க்கு அணுகுதற்கு  அரிய  நெருப்பாகவும் ,மெய்யன்பர்க்கு அணிந்து  கோடற்குரிய  ஒளிமிக்க  மாணிக்க மணியாகவும் விளங்கும்  இயல்பினன்  என்பார் , “ தொடற்கரியாய்” என்பதனையடுத்துச்  “சுடர் மா மணியே “  என்றார் .

                  கண்ணுவர் ஆச்சிரமத்தில் கண்ட  சகுந்தலையைத்  துஷ்யந்த மன்னன்  முதலில்  அந்தணர்  குலக்கன்னி  என்று  ஐயுற்றுப்  ,பின்னர் அரசர் குலப்பாவை யென்று  தெளிந்ததும் தன் நெஞ்சத்தை நோக்கி,”நெஞ்சமே!  இப்பொழுது ஐயம் நீங்கித்  துணிவுண்டாயிற்று ;ஆதலின் விருப்பமுடையை யாகலாம் . எப்பொருளை நெருப்பென்று ஐயுற்றனையோ , அஃது அணிந்து  கோடற்குரிய  இரத்தினமாகும்  “  என்று  கூறியதாகச்  சகுந்தலா  நாடகத்தில்  காளிதாச  மகாகவி  கூறியுள்ளார் . நெருப்புத்துண்டும் மாணிக்கமணியும்   நிறத்தாலொக்குமாயினும் , முன்னது சுடும் இயல்பினது ; பின்னது அணிந்து கோடற்குரியது  என்பது உவம  விளக்கமாகும்.

                   ஈண்டு  அடிகள் இறைவனைப்பற்றிக் கூறிய  பகுதியும் , காளிதாச மகாகவி  உலகியலில் வைத்துக் கூறிய  பகுதியும்  இலக்கிய நயத்தால்  ஒற்றுமைப்பட்டு அறிஞர்க்கு  இன்பஞ் செய்வனவாகும் . அடிகள்  “அருளுடைச்  சுடரே “ என்று  பிறிதோரிடத்துக்  கூறியதன் பொருள்  நயமும்  ஈண்டு  நினைந்தின்புறத்தக்கது . ஒரு விளக்குப் பிறிதொரு  பொருளைக்  காண்டற்கு  உதவியாகுமன்றித்   தன்னைத்  தொடிற்  சுடுவதாகும் . இறைவன்  உயிர்க்குக் காட்டும் உபகாரத்தோடு  தன்னை  யனுபவிக்கவும்  தருதலால், “அருளுடைச்  சுடர்” என்னப்  பட்டானென்பது , அத்திருவாக்கின்   தெளி பொருளாகும் .  

               இனி, தன்னைப்  புகலடைந்தார்க்கு  எவராலும்  விலக்கற்கரிய  இடுக்கண்  நேரினும் , அதனை யொழித்துப் பாதுகாக்கும்  ஆற்றலும்  அருளுமுடையான்  சிவபிரான்  ஒருவனேயாவன்  என்பதற்கு ,நஞ்சுண்ட  வரலாற்றை  அடிகள்  குறிப்பிடுகின்றார் .  நஞ்செழுந்தது  திருப்பாற் கடலிலென்ப .   விண் மண் முதலிய உலகங்களையே  அழிக்கும்  கொடுமை யுடையதாக   அந்நஞ்சின்  வேகத்தில்  தீக்கொழுந்து சூழ்ந்து எழுந்ததென்பார்  “சுடுதீச் சுழல”  என்றார் .  நீர்ப்பெருக்காகிய  கடலில்  எழுந்தும் வேகந்தணி யாமை  குறித்துச்  “சுடுதீ” யென  இயற்கையடையோடு  கூறப்பட்டது . சுழலுதல் – சூழ்தல் . “சுழலுமிசை வேண்டி” என்புழி  அப்பொருட்டாதல் அறிக .  சுழலவென்னும்  செயவென்  எச்சம் எழும் என்னும்  வினைகொண்டு  முடியும்.

                   இனி,  சுடுதீயை வடவையெனக்  கொண்டு  அதுவும்  சோர்வடைய  வென்று  பொருள்  கொள்ளுவாரும்   உளர் . தீக்கொழுந்து சூழவெழுந்த  நஞ்சு   தீ  நிறமுடையதன்று ; கருநிறமுடையதே  யென்பார் , “கடற்கரிதாய்” என்றார்.  அழிக்குந்தொழில்  பற்றித்  தீக்கொழுந்து கூறப்பட்ட தன்பது . கடற்கு அரிதாய்  எனப்பலரும் பதப் பிரிவு  கொண்டனர் .  அதனால்  பொருட் சிறப்பின் றென்க . அமுதாக்கல்  –  உணவாகக்கொள்ளுதல் . அதனை அறவே யொழிக்கும் பேராற்றலிருந்தும் , உண்டு அடங்கியது எத்தகைய  கொடிய  பொருளும்  தன்னை  நலியாது என்பதை எஞ்ஞான்றும்  யாவரும்  உணர்ந்து , தன்னைச்  சார்ந்து  நலம்  எய்துதற்பொருட்டாம்  . அமுதாகக் கொண்டதற்குச்  சான்று   நீலகண்டமென்பார், “கறைக்கண்டேனே” என்றார் .  

                      “விடற்கரியாய்” என்றது , கட்டு  வீடு  என்னும்  எந்நிலையிலும்  உயிரோடு  ஒற்றித்து நிற்கும் இறையியல்பு  குறித்தாம் . இறை விளக்கம்  கட்டு  நிலையில்  அரிதாதலையும்  , சாதன நிலையில்  அதனிற்  சற்று எளிதாதலையும் , வீட்டு  நிலையில்  முற்றும்  எளிதாதலையும்  உணர்ந்து கண்ட  அப்பர் “விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல், மறைய நின்றுளன்  மாமணிச்  சோதியான்” என்று அருளியிருத்தல் இங்கே  நினைந்து இன்புறத் தக்கது . வலிமிக்க யானை  மதச் செருக்கால் பாகன்  தோட்டியை நீக்குமாறு போல , ஐம்புலங்களும்  நுகர்பொருள்களைப்பற்றிநிகழும் ஆற்றலால் ,தம் அறிவைக் கடந்து சேறலின் , “அடற்கரிபோல் ஐம்புலன்கள்”  என்றார் .

                           ஒருவன் கொடிய பொருளொன்றால்  தனக்கு  தீங்கு நேரும் என்று  அறிந்து  விலக்கமுயன்றும்  பயன்படாத நிலையிலே  அசமும் கலக்கமும் எய்துவான் ; அறியாத நிலையில் அஞ்சமாட்டான் .இஃது உலகியலிற்  கண்டது .இம் முறையில் யானையைப் போலத்  தம்மைத் தாக்க  முற்படும்  புலப்பகையைக்  கடக்கத்  தம் அறிவு  வலியால்  முயன்றும்  பயன்படாமையால் , “அடற்கரிபோல்  ஐம்புலன்களுக்கஞ்சி யழிந்த வென்னை” என்றார் .

                             அச்சத்தின் முடிவே  கலக்கமாதலின் , அஞ்சுதற்குப்பின் அழிதல்  கூறப்பட்டது . “என்னை” என்பதை “விடற்கரியாய்”  “விட்டிடுதி” என்னும்  ஈரிடத்தும்  இயைத்துக்கொள்க . புலப்பகைக்கு  அஞ்சியழிந்த யான், எக்காலத்தும்  என்னிற் பிரியாதுறையும்  நின் இயல்பையுணர்ந்து  நின்னைப்பற்றி  நிற்கின்றேனாதலின் , இந்நிலையில்  சிறியேனைக் கை விடாமல் காத்தருளும்  பொறுப்புக் கரியுரி போர்த்த கறை மிடற்ற ண்ண லாகிய  நின்பாலதே யாகுமென்பார் , “விட்டிடுதி கண்டாய் “ என்றார் .  

                             இதன்கண், “அடற்கரிபோல் ஐம்புலன்களுகஞ்சி யழிந்த வென்னை “என்றதனால் , உலக வாழ்க்கையில் புலப்பகை மிக்க வலியுடையதன்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                    *****************************************

பாடல்  : 33 .

கண்டது  செய்து  கருணைமட்  டுப்பரு  கிக்களித்து

மிண்டுகின்  றேனை  விடுதிகண்  டாய்நின்  விரைமலர்த்தாள்

பண்டுதந்  தாற்போற்  பணித்துப்  பணிசெயக்  கூவித்தென்னைக் 

கொண்டேனெந்  தாய்களை  யாய்களை  யாய  குதுகுதுப்பே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  புலன்களின்  தாக்குதற்கு  அஞ்சி வருந்தும் என்னைக்  காக்கும் பொறுப்பு , என்னிற்  பிரியாதிருக்கும் நின்பாலதாம்  என்று  இறைவனை  நோக்கிக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில்  என்னிற்  பிரியாதிருக்கும்  நிலையில் நினருட்பேற்றிற்  குரியனாக்கியும் , புலப்பகையை  வென்று  ,அப்பேற்றின் பயனை  எய்தாமல் உயிர் முனைப்பால் அதற்கு மாறாகச்  செருக்குற்று  மனஞ்சென்றவாறு  ஒழுகலானேன் ;இந் நிலையில்  மீண்டும் சிறியேனைப் பணிபுரிவித்துக் குற்றங்களைந்து  ஆட்கொண்டருளல் வேண்டுமென்று  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  என் எந்தாய்  =  எனக்குச்  சிறப்புரிமை  வாய்ந்த  என் தந்தையே ,

கருணைமட்டுப்  பருகி  =  நின்  அருளாகிய தேனை நிறையக்குடித்தும் ,

களித்து   = களிப்பு  மிகப்பெற்று ,

கண்டது  செய்து  மிண்டுகின்றேனை  –  மனத்தில்  தோன்றியபடி செய்து செருக்கிப்  பேசித்  திரிகின்ற  சிறியேனை  ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ ? (விடலாகாது) ,

நின் விரை மலர்த்தாள்  =  நின்  மணமிக்க தாமரை மலர்  போன்ற  திருவடிகளை ,

பண்டு  தந்தாற் போற்  பணித்து  =  முன்னர்த்  தந்தது போலக்   கொடுத்து ,

பணி செயக்  கூவித்து  =  தொண்டு செய்யக்  கூவியழைத்து ,

என்னைக் கொண்டு  =  அடியேனை  ஆளாகக் கொண்டு ,

களையாய  குதுகுதுப்பு களையாய்  =   இடையூறாகிய  ஆசையைக்  களைந்தருள்வாயாக  என்பது .  

விளக்கவுரை :-    அடங்காப்  பிள்ளையாயினும் , உணவூட்டிப்  பிணி களைவித்து அறிவு  கொடுத்தல்  தாய்  தந்தையர்   கடமையாதலின், அம்முறையில் அடிகள் களித்துச்  செருக்கித்  திரியும்  தமக்குக்  கருணைத் தேன் ஊட்டி , உலகப்பற்றாகிய  நோயைக்  களைவித்துத்  , திருவடிக் காட்சியாகிய  ஞானத்தை அருளிப்  பாதுகாக்கும் அம்மையப்பனைக் குறித்துச்  சிறப்புரிமை  தோன்ற  , “என் எந்தாய் “ என்றார் . மட்டு  –  தேன்.  இறையருளை  மற்றொரு பொருளாக  உருவகஞ்  செய்யாமல் தேனாகக்  கூறியது , மெய்யன்பர்க்கு எளிமையில்  அறியத்தக்க  இனிப்புச்சுவையும் குடித்தற்குரிய  நெகிழ்ச்சியும் உடைமையானென்க. “என்னிற்  கருணைவான் றேன்கலக்க”  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதுங் காண்க . இனிமை யும்  நெகிழ்ச்சியுமுடைய  உணவே  குழந்தைகள்  விரும்பி யுண்டற்குரிய தென்பதை  உலகியலிலுங்  காணலாம் . உண்டல்  தின்றல் நக்கல்  பருகல்  ஆகிய  நால்வகை  உணவுகள் ,தேன்  சுருங்கிய  அளவு  நக்குதற்கும் , மிக்க அளவு  பருகுதற்கும்  உரியதாகும் . இங்கே இறைவன்  அருளிய  அருளாகிய தேனின் மிகுதி குறித்தும் ,நீரைப் போல  அதனை  வேண்டுமளவும்  தாம்  குடித்தது  குறித்தும்  “கருணை  மட்டுப் பருகி”  என்றார் . செய்யுள்  விகாரத் தால்  தொக்க உம்மையை விரித்துப்  பருகியும் என்று கொள்ளல்  வேண்டும் .

                திருவருளாகிய  தேனை நிறையக் குடித்தும் , அவ்வருட்பயனை யடையாமல் , என் அறியாமையால் அதனைக் கள் எனக் கொண்டு களிக் கின்றேன் என்பார் , “களித்து” என்றார் . மட்டு என்னும்  சொல்  கள்ளையும்  உணர்த்தும் என்பது  ஈண்டு  நினைக்கத்தக்கது . களித்தல்  கட்குடியா லுண்டாம்  மகிழ்ச்சி . அக்களிப்பால் செய்வன இன்ன தவிர்வன இன்ன வென்றுணராமல் ,மனத்தில் தோன்றியதைச்  செய்யலானேன்  என்பார் , “கண்டது செய்து “எனவும், அந்நிலையில் “ஓருவரை மதியாதுறாமைகள் பேசி”  என்றபடி யாரையும்  மதியாமல்  செருக்கிப் பேசித் திரிகின்றேன் என்பார் , “மிண்டுகின்றேனை” எனவும்  கூறினார் .மிண்டுதல்  –  செருக்கிப் பேசுதல் . “பிண்டியர்கள் மிண்டு மொழி “ எனவும்  “வானோர்  தானவர்  துற்று மிண்டுகள் பேசி” எனவும் போந்த இடங்களில் அஃது அப்பொருட்டாதல் அறிக.  “களித்து”  என்றதனால்  உள்ளமும்  “ கண்டது செய்து “ என்றதனால் செயலும்  “மிண்டுகின்றேன்” என்றதனால் மொழியும்  ஆகிய முக்கரணங்களும்  மாறுபட்டமை  புலப்பட வைத்தாறாம் .

                   இத்துணையும்  கூறியவற்றால் , இறைவன் தமக்கருளிய  அருளாகிய தேனின் அருமை அறியாது எளிய கள்ளின் இயல்பில் வைத்துப் பயனைத்  திரியக்  கொள்ளலானேன்  என்று  அடிகள் இரங்கியபடியாம் . இங்ஙனம்  இரங்குதலை “மையிலங்கு  நற்கண்ணி பங்கனே  வந்தெனைப்  பணி கொண்ட பின் மழக், கையிலங்கு பொற்கிண்ண மென்றலாலரியை  யென்றுனைக்  கருதுகின்றிலேன்”” எனவும்,, “என்னாலறியாப் பதந் தந்தாய் யானறியாதே கெட்டேன்” எனவும்  கூறிப்போந்த  திருவாக்குக்களானும் அறிக.  இங்ஙனம்  அருட் பயனை மாறுபடக் கொண்ட பிழை கருதிச் சிறியெனைக் கைவிடலாகாதென்பார் “விடுதி கண்டாய் “ என்றார் .  கை விடாமற்  செய்யத்தக்கன என்னை  யென்னும் வினாவிற்கு  விடையாகப்  பின் வருவன  கூறப்படுகின்றன .  

                    முன்னர்  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித் தமக்கு உபதேசித்த நிலையில் , “சென்னியின் மிசை மேவிய பாதந்திருந்து கண்ணினை  சேர்த் திருக்கரத்தால் ,உன்னல் செய்திடு மிதய மேலனைவித்து வுகை கூர்ந்து மெய்யுணர்ச்சியினெழுந்தார் “என்றபடி  அப்பெருமான்  பொன்னடிகளை அடிகள் உற்றுக்கண்டு  உயிர்த்து அநுபவத்தவராதலின் , அந் நினைவு தோன்ற “நின் விரை மலர்த்தாள்” என்றார் . தாமரை மலர் மெல்லிய ஊறும் ,செந்நிறவொளியும் , நறுமணமும் உடையதாய் விளங்கி இன்பஞ் செய்தல் போலத்  திருவடிகளும்  தம் அநுபவத்திற்கு  இன்பஞ் செய்தன வென்பது  உவமைக்குறிப்பாற்  போதரும்  கருத்தாம் .

                     இறைவன்  பலகோடி ஞாயிற்று மண்டிலங்களின் ஒளியினும்  மேம்பட்ட தன் இயற்கை ஒளிப்பிழம்போடு  வெளிப்பட்டுக் காட்சியளிப்பின் , அக்காட்சி தம் கண்களாற்  காண்டற்கரியதாகும்  எனக்கொண்டு , அந் நிலை யை  வேண்டாது, முன் மக்கள் வடிவில்  ஞானாசிரியனாக எழுந்தருளித்  திருவடி  நல்கிய  நிலையையே  வேண்டுவாராய் , “பண்டு தந்தாற் போற் பணித்து” என்றார் . பணித்தல்  – கொடுத்தல் . “திருவிரல்  நெகிழ்த்து வாள் பணித்தான் “ என்புழி  அப்பொருட்டாதலறிக .

                     பாசண்டச்சாத்தன்  என்பான் மக்கள் வடிவில் வெளிப்பட்டுத்  தன் மனைவி தேவந்திகை யென்பாட்குத் தன்  இளமையுருவத்தைக் காட்டுங்கால்  அவ்வுருவின்  ஒளியை அவள் கண்கள் பொறாவென்று  கருதிப் பொறுப்பன வாக என்று  நிருமித்துக் கொண்டு காட்டினன்  என்று சிலப்பதிகாரம்  கூறும் .”தேவந்தியென்பாண் மனைவியவளுக்குப்  , பூவந்தவுண்கண்  பொறுக் கென்று மேவித்தன் , மூவாவிள நலங்காட்டி “என்பது அப்பகுதி . தெய்வக்கூறு  ஒரு சிறிது பெற்ற சாத்தன் வடிவொளியே  இங்ஙனமாயின்  , பேரொளிப் பிழம்பாகவுள்ள இறைவன் இயலொளி மக்கள் கண்களுக்கு  எங்ஙனம் அடங்கும்  என்பது .

                      கூவுவித்து என்பதிலுள்ள  பிறவனை விகுதி தொக்கு நின்றது .ஆண்டவன்  இறைமைக்கு  ஏற்பக்  கூவி யென்னாது கூவுவித்து என்றார் . கூவி  யெனப்  பிற  இடங்களில் அடிகள் அருளியிருத்தல் , இறைவன் திருவாக்காலும் தம்மை அழைத்தலில்  உள்ள அவா மிகுதியான்  அமையுமென்க.  அடிகள் தம்மை  யழைத்தற்கு ஏதுவாக வீட்டின்பத்தைக் கூறினாரல்லர் ; பணி செய்தலையே கூறினார் ,கூடுமன்பினிற்  கும்பிடலே யன்றி , வீடும்  வேண்டா  விறலின் விளங்கும்  மெய்த்தொண்டராதலின் . என்னைக் கொண்டு என்பது பணி செய்தற்குரிய ஆளாக ஏற்றுக்கொண்டு என்னும் பொருட்டு .  இறைபணி நிற்றற்கு  இடயூறாகவுள்ளது  உலக  வாழ்க் கையிலுள்ள  அவாவாகும் . ஆதலின் , அவ் ஆசையை அறவே  களைதல் வேண்டுமென்பார் ,  “களையாய் களையாய  குதுகுதுப்பே” யென்றார் . குதுகுதுப்பு  –  ஆசை .  “நாற்றங் குதுகுதுப்ப “ என்புழி அப்பொருட்டாதலறிக .  

                     “களையாய்” என வினையை முன்னர்க்  கூறியது இடையூறு களைதலில் உள்ள ஆதுராதிசயத்தானென்க . பணித்துக்  கூவுவித்துக் கொண்டு  களையாய் என்று  முடிக்கப்படுமாயினும் , என்னைப் பணியாளாக ஏற்றுக்கொண்டு , பணி செய்யக் கூவுவித்துக் ,களையாய குது குதுப்பைக் களைந்து , திருவடி  மலர்களைப்  பண்டுதந்தாற்போற் பணித்தருளல் வேண்டுமென்பதே கருத்தாகக்கொள்க .  திருவடிக்காட்சி  நல்குதற்கு உலக அவாவாகிய களையைக்  களைதல் ஏதுவாம் என்பது கருத்து . . இனிப் ‘பணிசெய” என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு பணி செயக்  கூவுவித்துப் பணிசெயத் தாள் தந்து என  ஈரிடத்தும் இயைத்துக் கோடலும் ஒன்று .

                        இதன்கண், திருவருட்பேற்றின்  அருமையறியாமல் களித்துக் கண்டது  செய்து செருக்கித் திரிதல் , வெறுக்கத்தக்கதென்பது பெறப் படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                              *************************************

பாடல் :34 .

குதுகுதுப்   பின்றி  நின்  றென்குறிப்  பேசெய்து  நின்குறிப்பில்

விதுவிதுப்  பேனை  விடுதிகண்  டாய்விரை  யார்ந்தினிய 

மதுமதுப்  போன்றென்னை  வாழைப்  பழத்தின் மனங்கனிவித்

தெதிர்வதெப்  போது  பயில்விக்  கயிலைப்  பரம்பரனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் , நின்  அருட்பேற்றின் பயனை மாறாகக்கொண்டு செருக்குற்று மனஞ்சென்றவாறு ஒழுகலானேன் என்று  இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம் ஒழுகுதற்கு ஏது நின் திருவுள்ளக் குறிப்பை யறிந்து நடக்க விரும்பாமல் , என் உள்ளக்  கருத்திற் கியைந்தபடியே  செய்தலாகும்  எனவும் , அது பற்றி அடியேனைக் கைவிடலாகாதெனவும் இறைவனை நோக்கி விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  கயிலைப்  பரம்பரனே  =  வெள்ளியங்கிரியில்  எழுந்தருளியிருக்கும்  மேலாகிய  பரம்பொருளே ,

என் குறிப்பே  செய்து நின்று  =  என் உள்ளக் கருத்துக்கு இயைந்தபடியே  ஒழுகி நின்று ,

நின் குறிப்பில்  குதுகுதுப்பின்றி  =  நின் திருவுள்ளக் கருத்திற்கு  இயைய  நடப்பதில் ஆசைப்படாமல் ,

விது விதுப்பேனை  =  (பயன் பெற) மிக  விரைகின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

வாழைப்பழத்தின் என்னை மனம் கனிவித்து  =   வாழைப்பழத்தைப்போல அடியேன்  மனத்தைக் குழையப்பண்ணி ,

விரை ஆர்த்து இனிய மது மதுப்போன்று  =  மணம்  நிறைந்து இனிமை மிக்க  பூந் துகளோடு கூடிய  தேனைப்போல ,

எதிர்வது எப்போது  =  எனக்குக்  காட்சியளித்தல்  எப்பொழுது ?

பயில்வி  =  விரைவில் அழைப்பித்துக்கொள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-    சிவபெருமான் உயிர்களுய்தற்  பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுள் , கைலை மலை மிகச் சிறந்த தென்பது , மறையாகமங்களிற் கண்ட வுண்மையாகும் “புண்ணியந்திரண்    டுள்ளது  போல்வது “ எனவும் , “நிலவு மெண்ணிறங்களும் நீடொளி , யிலகு தண்டளிராக  வெழுந்ததோர் ,உலகமென்னும் ஒளிமணிவல்லிமேல்  , மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை “ எனவும் சேக்கிழார் பாராட்டியிருத்த லறிக . ஈண்டு  உலகமாகிய மாணிக்கக் கொடியில் எண்ணிறந்த  தலங்களெல்லாம்  தளிராக , கைலை மலை  அதன் உச்சியில் மலர்ந்த வெண்மலர் போல்வதாகும் என்று  கூறிய நயம் இன்புறத்தக்கது .

             பசுவின்  உடல்  முழுதும் பரவிய பால்  அதன் முலை வழிச் சுரந்து வெளிப்பட்டுப் பயன் செய்தல் போல எங்கும் நிறைந்த இறைவன் , தூய புண்ணிய தலங்கள் எல்லாவற்றினும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அன்பர்க்கு இன்பளிப்பனாயினும் ,அடிகளுக்கு மக்களுருவில்  ஞானாசிரிய னாக  வெளிப்பட்டு  அருளுங்கால் , “சித்தி தரு தேசிக சிறந்த வடிவங் கொண்டுத் தம் நெடுங்கயிலை  யோங்கலது நீங்கித்  “திருப்பெருந்துறையில்  எழுந்தருளினன் என்று புராணங் கூறியபடி , முதலிடச் சிறப்பை நினைவு  கூர்ந்து  “ கைலைப் பரம்பரனே” என்றார்.

குறிப்பு –  உள்ளக்கருத்து .   குதுகுதுப்பு  –  ஆசைப்படுதல் பின்னர் “என் குறிப்பேசெய்து” என்றமையால் இங்கே  நின் குறிப்பில்  செய்ய  எனக் கொண்டு  , நின்குறிப்பின்  வழியொழுக எனப் பொருள்கொள்ளல்   வேண்டும் ஆண்டவனே!அடியேனை  ஆட்கொண்ட பொழுதே  என் உடல் பொருள் ஆவி யெல்லாம் நின்னுடைய வாயினவாதலின் , எனக்கென ஒன்று மின்றி, நின் திருவுள்ளத்திற்கு  இயைந்தபடியறிந்து  ஒழுகுதலே  கடமையாகவும், அதன்கண் விருப்பமும் இன்றி யிருக்கின்றேனே  யென்பார், “நின் குறிப்பில்  குதுகுதுப்பின்றி “ என்றார் . என் குறிப்பே  செய்து என்புழி ஏகாரம்  தேற்றப் பொருட்டு . செய்தல் – ஒழுகுதல் . ஆன்றோர் கூற்றும்   அறிவு நூலுரையும்  தம் கருத்தின்படி   நடத்தலாகிய செயலுக்கு இடந்தர வில்லையாயினும் , அது பற்றித்  தம் மனம் சலித்திலதென்பார், “நின்று” என்றார் . உயிர் முனைப் பின்படி செய்தலாகாதென்பதை  யறிந்தும் , என் எண்ணத்திற்  றோன்றிய  படியே  செயலின் மேற்கொண்டு  நின்று  , நின் திருவுள்ளக் குறிப்பிற்கு  இயைய  ஒழுகுதலாகிய  செயலை  அறவே  கைவிட்டதோடு  அதன்கண்  விருப்பமும் இன்றி இருக்கின்றேனே யென்று  அடிகள் இரங்கியபடியாம் .  

                  நல்லதெனக் கண்ட  தொன்றைச்  செய்தல் வேண்டும் . எவ்வாற்றானும் செய்தற்கு இயையாதவழி அச்செயலில் விருப்பமாவது இருத்தல் வேண்டுமென்பது அற நூற்கொள்கை . “அறத்தைச்செய்” என்று  கூறிய  வடமொழி மறையினும் சிறக்க “அறஞ்செய விரும்பு “ என்னும் சிறு சொற்றொடறில்  தெளிவு படுத்திய ஒளவை  முதுமொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . ஆண்டவன்  திருவுள்ளத்திற்கு இயைய ஒழுகுதலில் விருப்பந்தானுமின்றி , என் கருத்துப்படி ஒழுகலானேன் என்று அடிகள் கூறிய கருத்தும் ,”ஒருவன் அறனென்று சொல்லுவதுஞ் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்  “ என்னும் பொருள் தோன்ற ,  “அறங் கூறானல்ல செயினும்” என்று  கூறிய வள்ளுவர் பொருளுரையும் ஒப்பு நோக்கி யின்புறத்தக்கன . விதுப்பு  என்னும் சொல் விரைதற்  பொருட்டாதலின் , விது விதுப்பு என்னும்  இரட்டைக்கிளவி  விரைவின் மிகுதியைக்  குறிப்பதாகும் .  

                     இறைவ! நின் திருவுள்ளத்திற்கு  இயையஒழுகுதல் இன்றியமையா ததாகவும் , அதன்கண்   விருப்பந்தானும்  இல்லாமல், உயிர்முனைப்பால் யான்  நினைந்தபடியே நடந்து நின் குறிப்பின்படி  ஒழுகுதலின்  உண்டாம் பயனைப் பெற விரைகின்றேன் ;என் அறியாமை யிருந்தவாறு  என்னே யென்பார், “ என் குறிப்பே செய்து  விது விதுப்பேனை “ என்றார் .என் குறிப்பே  செய்து என்றமையால் , விது விதுப்பின் பின் பயனைப்பெற  என்பது அவாய்  நிலையான்  வருவித்துரைக்கப்பட்டது . உலகத்து மக்கள் இயல்பில் வைத்து ,

“அறத்தை  விரும்பா  ததன்பயனைப்  பேணல்

மறத்தை  முயன்றுசெயல்  மற்றம்  –  மறத்தின்

பயனை  வெறுத்தலிப்  பாரிலுள்ள  மக்கட்

கியல்பென்ப  வென்று  மிவை

என்று கூறிய உயிர்போகு பொது நெறியும் இங்கே கருதத்தக்கது . செயலை    உயிர் முனைப்பாற்  செய்து , அதற்குப்பொருந்தாத விழுமிய  பயனைப் பெறவிரையும்  இக்குற்றங்கருதிச் சிறியேனைக்  கைவிட்டு விடுவாயோ? விடலாகாது  என்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .

            இனி, அடிகள் தமக்கு  வேண்டிய  பேற்றையும் அதற்குரிய காலத்தை யும் பற்றி இறைவனிடத்து விண்ணப்பித்து  வினவுகின்றார் . வலிய மனம் கனிந்தாலன்றி  இறையருளைப்  பெறலரிதாதலின் , வாழைப்பழத்தை உவமையாகக்  கூறினர் .வாழை  மா  பலா  இம்மூன்றும் சிறந்த சுவையுடை மையால் , அவற்றை  ஓரினமாகக் கொண்டு  , முக்கனியென்று வழங்குவர் முன்னோர் . இக்காலத்து  இவற்றினும்  சிறந்த சுவையுடைய  பழங்களிருப் பினும் , பண்டைக்காலத்து நம்  நாட்டுக்  கனிகளுள் , இவைகளே சிறப்புடையனவாக  வழங்கின வென்பது , “முக்கனிகளுட்  சுவை  முதிர்ச்சி  பெற்றுளதெக்  கனி “ என்பது முதலிய  வழக்காற்றான் அறியலாம்

              இம்மூன்றனுள்ளும்   மாவும்  பலாவும்  அகத்தே கொட்டையுடையன வாதலின் , அவற்றை விடுத்துக் கொட்டையின்றி  முற்றுங்கனிதற்கு ஏற்ற மென்மைத்தன்மையுடைமையால் ,”வாழைப்பழத்தின் மனங்கனிவித்து “  என்றார் . அகத்தே  கொட்டையுடைய   பழங்கள் உவமை  கூறின் , கனிவித்தல் ஓரளவிலன்றி  முற்றும்  அமையாமை யறியத்தக்கது . வெள்ளரிப் பழம்  போன்ற  சுவை இல்லாப்  பழத்தைக் கூறாமல்  இனிப்புச்சுவை மிக்க  வாழைக்கனியைக் கூறியது , தம் நெஞ்சம் தமக்கு இனியதாய் இறைவன்  பக்கலில்  இயைவித்து இன்புறுதற் பொருட்டு  என்க . “கல்லை  மென்கனி யாக்கும்  விச்சை கொண்டென்னை  நின் கழற்கு அன்பனாக்கி னாய்”  என்று  பிறிதோரிடத்து அடிகள் கூறியதும் உணர்க . என்னை மனத்தைக்  கனிவித்து என்புழி .  “பசுவினைப் பாலினைக்  கறந்தான் “  என்புழிப்போலச்  செயப்படு பொருள்  ஈருருபிணைதலாய்  வந்தது .  

               இங்ஙனம்  மனம்  கனிந்த நிலையில் , அதன்கண் இறைவன்  காட்சிப்   படுதலைக்  கனிந்த வாழைப்பழத்தில் சிறந்த தேன் இயைந்தது  போல எனப்  பிறிதோருவமையால் விளக்கியுள்ளார் . வாழைப்பழத்தைத் தம் மனத்துக்கு உவமை யாக்கியதால் அடைமொழி யின்றியும் , தேனை இறைவனுக்கு உவமையாக்கியதால்  “விரையார்ந்தினிய மதுமது “ வென்று சிறந்த பல அடைமொழி புணர்த்தும் கூறினர் . விரை  – மணம்  .  மது  இரண்டனுள்  முன்னது   மகரந்தத்   துகளையுணர்த்தும் . ஆகவே, இயற்கையான  இனிமை யொடு   நறுமணமும்  மகரந்தமும் கூறியதால் , இத்தேன் ஈக்களின்  எச்சில் புழு முதலியன  கலவாத  தூய மலர்களின் தோன்றியபடியிள்ள தென்பது புலனாகும் . “மதுப்போன்று எதிர்வது “  என இயைக்க .  எதிர்வது – எதிர்தல் ; தொழிற் பெயர் ; காட்சிப்படுதல்  என்னும் பொருட்டு .  

                  வாழைப்பழத்தைக் கனிவித்து அதன்கண்   தேன்  தோய்ந்தது போல  என்னுள்ளத்தைக் குழைத்து  அதன்கண்  எழுந்தருளல் வேண்டுமென்றார் .  பசு  கரணத்தைப்  பதி  கரணமாக்கி  இறைவன் விளங்குவன்  என்னும்  சைவநூற்  தோன்ற  . “காணுங்கரணங்களெல்லாம்  பேரின்பமெனப், பேணு மடியார் “ என்னும் அநுபவ மொழியும் ஈண்டு  நினைக்கத்தக்கது . கனிந்த  வாழைப்பழத்தின்  சுவையிலும் தூய  தேனின் சுவையிலும்  முறையே குறைவு  மிகுதி  காணப்படினும்  இனிமை யொன்றாதல்  போலப் , பக்குவ முள்ள  உயிரியல்பிலும் இறையியல்பிலும் முறையே சிறுமை  பெருமை  காணப்படினும் , இரண்டும்  அறிவுடைப் பொருள்  என்னும்  சாதி யொற்று மையும் இங்கே  யுணரத்தக்கது . என் நெஞ்சத்தைப்  பக்குவப்படுத்தி  அதன் கண் எழுந்தருளிக்  காட்சியளித்தலே  என்னால்  வேண்டத்தக்கது . அதுதானும் காலத் தாழ்வின்றி நிகழ்தல்  வேண்டுமேயென்பார், “எதிர்வதெப் போது” என்றார் .

             இறைவா!  மனத்தூய்மை பெற்று  யானே  நின்னை அணுகுதற்கு  என்  முயற்சி  ஆற்றலுடையதன்று . ஆதலின், சிறியேனாகிய  என்னை  நலப்படுத் தற்கு  அருள்  கூர்ந்து நீயே  அழைப்பித்துக்கொள்ளல் வேண்டுமென்பார் , “பயில்வி” என்றார் .  பயிலுதல் – அழைத்தல் ,  “பயில்வி” யெனப்  பிறவினை விகுதியொடு புணர்த்துக்  கூறியது ஆண்டவன்  பெருமையும்  அடிமையாகிய  தம் சிறுமையும்  தோன்றற்கென்க .  

              இதன்கண் , ஆண்டவன்  திருவுள்ளக்  கருத்தின்வழி யொழுகுதலே  இன்றியமையாததாகவும் , அதன்கண்  விருப்பமின்றி உயிர்  முனைப்பாற்   கருதியபடி யொழுகுதல் நலம் பயப்பதன்று  என்பது கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                                 **********************************

பாடல் :35 .

பரம்பர  னேநின்  பழவடி  யாரொடு  மென்படி று

விரும்பர  னேவிட்  டிடுதிகண்  டாய்மென்  முயற்கறையின்

அரும்பர  நேர்வைத்  தணிந்தாய்  பிறவியை  வாயரவம்

பொரும்பெரு  மான்வினை  யேன்மன  மஞ்சிப்  பொதும்புறவே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் நின் திருக்குறிப்பிற்கு இயைந்தபடி நடக்க விரும்பாமல்  என் கருத்திற்கு  இயைந்தவாறு ஒழுகலானேன் ; இதனைப்  பொறுத்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நெறி தவறி நடத்தற்குக் காரணம் , நன்னிலைக்கட்  சார்தற்குரிய என் உள்ளம்  நடுங்கி யொடுங்குமாறு   பிறப்பாகிய  ஐந்தலை ப்பாம்பு  பொருதலாகும் . ஆதலின் , அப்பிழையைப் பொருத்தருள வேண்டுமென  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  முயற்கறையின் மெல் அரும்பு  =  திங்களின்  கூறாகிய  மெல்லிய  பிறையை ,

அர நேர் வைத்து அணிந்தாய்  =   பாம்புடன்  ஒக்க வைத்துச் சடையில்  அணிந்தவனே ,

பெருமான்  =  எம்பெருமானே ,

ஐவாய் பிறவி  யரவம்  =  ஐந்து  வாய்களையுடைய  பிறவியாகிய  பாம்பு ,

வினையேன்  மனம்  அஞ்சிப்  பொதும்பு  உறப்பொரும்    =  தீவினையுடையேன்  உள்ளம்  நடுங்கி  ஒடுக்கவிடத்தைச்  சாரும்படி  தாக்குகின்றது ,

பரம்பரனே  =  மேலாகிய  பரம்பொருளே ,

நின் பழ அடியாரொடு  என் படிறும்  விரும்பு அரனே  =  நின் பழைய மெய்யடியாருடைய  தூய ஒழுக்கத்தொடு  ஒப்பச் சிறியேனது  வஞ்சவொழுக்கத்தையும்  விரும்பி  யேற்றுக்கொண்ட  சங்காரகாரணனே ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  முயற்கறை  –  அன்மொழித்தொகையாய்  முயல் உருவம்  போன்ற  களங்கத்தையுடைய  திங்களையுணர்த்தும் . மெல்லிய அரும்பு  என்றது  அத்திங்களின்  சிறு  கூறாகிய  மெல்லிய பிறையைக்  குறிக்கும் .     அர – அரா . “குறியதனிறுதிச்  சினை கெடவுகரம் , அறியவருதல்  செய்யுளுள் உரித்தே “ என்பது விதி .  திங்களையும்  பாம்பையும்  சடையில்  அணிந்தது அழகுக்கு  அன்று ; யாண்டுச்  சேரினும்  தடைபடுத்த முடியாத பகை வலியால்  அவற்றிற்குக்  கேடு விளையாமைப்   பொருட்டென்ப .  மேலும் ஒன்றனோடு  இன்று  இகலும்  இயல்பினவாகிய திங்களும் பாம்பும் இறைவன்  பக்கலில்  பகைமைக்  குணம் நீங்கி வாழ்கின்றன  வென்னும்  உண்மை  புலப்படுத்தற்குமாம் .

            நேர் வைத்தல்  – இரண்டையும்  ஒக்க வைத்தல் . ஒன்றனை யொன்று  காணுமாறு  அணிமையில்  எதிராக வைத்தலுமாம் . இதனால்  இறைவன் ,தன்னைப்  புகலடைந்தாரை எத்துணையிடையூறும்  நலியா  வண்ணம்  காக்கும் அருட்குணமும் ,தன் அணிமையில்  பகைப் பொருள்கள் பகை நீக்கப் பெற்று  வாழும்  வண்ணம்  செய்யும் ஆற்றலும்  உடையான் என்பது புலனாம் . “கங்கையு  மதியும் பாம்பும்  கடுக்கையு  முடிமேல்  வைத்த அங்கணர்” என்று  சேக்கிழார்  கூறியதும் இங்கே  நினைக்கத்தக்கது . இவ்வாறு  அடிகள் இறைவனை  விளித்தது இங்ஙனம்  தமக்கு  நேரும்  துன்பத்தினின்றும்  விடுதலை  பெறுதற் பொருட்டாம்  . அக்குறிப்புப்   பின் வரும்   விளக்கத்தாலறிக .  

பிறப்பு  என்பது , உயிர் வினைப்பயனுகர்தற்  பொருட்டு  மாயையின்  காரியமான  உடலைக்கொண்டு  வெளிபடுதலாகும் . ஆகவே  உடற்றோற்றமே  பிறப்பு  என்பது தெளிவாம் .அவ்வுடலோடு  கூடிய  உயிர்  , வினைப்பயனை எவ்வாற்றான் நுகரும் எனின் , அவ்வுடற்கணுள்ள மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகள் வாயிலாக , முறையே  ஊறு  சுவை ஒளி நாற்றம்  ஓசை யென்னும்  புலன்  வடிவில்  நுகருமென்பது . பொறிவழி யுள்ளஞ் சென்று  புலனுகர்ச்சியிற்  றலைப்படுங்காறும்  பிறவியினால் நேரும் துன்பம்  நீங்காமையின் , அப்பிறவியைப்  “பிறவியை வாயரவம் “  என்று  உருவகஞ் செய்யலானார் .

                   இக்கருத்தையே  சீவகசிந்தாமணி யாசிரியர்  “பொறியெனும் பெயரவைவாய்ப் பொங்கழரவின் கண்ணே, வெறிபுலன்  கன்றி நின்றார்  வேதனைக்  கடலுணின்றார்  “ என்று  தெளிவுபடுத்துரைத்தார் . பிறப்பாகிய  ஐவாயரவத்தின்  தாக்குதலைக்  குறிப்பிடத் தொடங்கும்  பொழுதே  அடிகள்  நடுக்கமுற்றுப்  , புகலிடம் பெற  விரைந்து ,”பொரும்  பெருமான்” என்று  துன்பச்செயலைக் குறிப்பிட்டு இறைவனைக்  கூவியழைபாராயினர்  , ஐவாயரவத்தைக் குறித்துத் தாம்  அஞ்சுதற்குக்  காரணத்தை உடம்பொடு  புணர்த்துத்  தம்மை  “வினையேன்”  என்றார் .வினையெச்சமே பிறப்பிற்கு  ஏதுவாகலின்  அவ்வாறு  கூறினர் . “வினையேன் மனமஞ்சி” யென்பது “அம்முக்  கிளவியும் சினைவினை தோன்றின் , சினையோடு  முடியா  முதலோடு  முடியினும் , வினையோரனையை வென்மனார்  புலவர் “  என்பதனான்  அமையுமென்க . சினையாகிய  மனத்தின்  செயல்  அஞ்சுதல் .அது முதற் பொருளாகிய  வினையேன்  என்பதனோடும்  இயைதலறிக .

               பொதும்பு  –  மரப்பொந்து ; இஃது  ஈண்டுப் பொந்து போன்ற ஒடுக்க இடத்திற்காயிற்று . பொதுப்புறப் பொரும் என முடிக்க .இனி, “வினையேன் மனம் “ என்பதற்கு  வினையேனது மனம் என்றும் பொருள் கொள்ளலாம் . அங்ஙனம் கொள்ளங்கால் , பாம்பின் தாக்குதற்கு  அஞ்சி மனம் மறைத்தற் குரிய  இடமென்பது போதரும் . உடம்பிலுள்ள பொறிகளும்  காரணங்களும்  ஒடுங்குங்கால் , இன்ன இன்ன இடங்களில்  ஒடுங்கும்  என்று  கூறிய  மறை முடிவில் , மனம் சந்திரமண்டலத்தில் ஒடுங்கும் என்பது காணப்படுகின்றது .

              இதனால்  மனத்திற்குச்  சந்திர சம்பந்தம் உண்டென்பது புலனாம் . ஆகவே  மனமாகிய  சந்திரன் பிறவியாகிய பாம்பு  தாக்குதற்குரிய  பகைப்  பொருளாயிற்றென்பது  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறாம் . பாம்பும்  திங்களும்  பகைக்குணம்  ஒழியப்பெறும் இடம்  இறைவன்  பக்கலாதலின் , அவ்விறைவனே  பிறவிப்பகையை யொழித்துப்  பாதுகாக்கத்தக்கவன்  என்பதை யுட்கொண்டு  , அடிகள் , “மென் முயற்கறையின்  அரும்பர நேர்வைத்து  அணிந்தாய்”  என்று  முன்னர்  விளி கொள்ளலானார்  என்பது உய்த்துணரத்தக்கது .

                பரம்  என்னும்  வட சொல் மேலானது என்று பொருள் படுமாதலின்  , பரம்பரம் என்பது மிகமேலான  வீட்டு  நிலையை யுணர்த்துவதாகும் . அதனால் மெய்மையான  வீட்டு  நிலையை யருளும்  முழுமுதற் கடவுளாகிய  சிவபெருமான்  பரம்பரன் என்னப்பட்டான் .  ஈச்சுவரன்  பரம்பரன்  முதலிய  சொற்களெல்லாம் மற்றைத் தேவர்களை  உபசாரமாகவும்  , இறைவனை  உண்மையாகவும்  குறிக்கும்  என்பதை மறையாகம  ஆராய்ச்சி நூல்கள் தெளிவுறுத்துக்  கூறுவன .  

                  உண்மையான  வீட்டு  நிலை , நெடுங்காலம்  அருந்தவம்  இயற்றிப்  பெறத்தக்கதாகலின்  , அத் தவ முயற்சி  மேற்கொண்டொழுகும் மெய்யடியாரே  பழவடியாரவர் . “பன்னாளுன்னைப்  பணிந்தேத்தும் பழையவடியார்”  என்னும்  அடிகள்  திருவாக்கும்  இதனை  வலியுறுத்து வதாகும் . சிவபிரான்  பரம்பரனாதலும்  , அவனடியார் பழவடியாராதலும் இயல்பே . இறைமைக்குணம்  இல்லாரைக்  கடவுளர்  எனக்கொண்டு  அவரால்  மெய்மையான  வீட்டு  நிலையையடையலாம்  என்று  நம்பி  முயல் வோரெல்லாம்  சின்னாளில்  உண்மையுணர்ந்து  அம்முயற்சி யினின்றும்  மீள்வராதலின் , அவர்  பழவடியாராதல்  சாலாதென்க .

                    பின்னர்  “என்படிறு” என்று  கூறியதால் பழவடியார்  என்பது அவர் தம் மெய்யொழுக்கத்தைக்  குறிப்பதாகும் . “பழவடியாரொடும்” என்புழி  உடனிகழ்ச்சிப்  பொருளில்  வந்த ஒடுவுருபின்  பின்னுள்ள உம்மையைப்  பிரித்துப்  படிறு  என்பதனோடு இயைத்துக்  கொள்ளல் வேண்டும் . படிறும்  என்புழி  உம்மை இழிவு சிறப்புப்  பொருளது . ஆகவே , பன்னெடுங்காலம்  அரிய  தவ நிலையில்   தலைப்பட்டிருக்கும்  பழைய  மெய்யடியாரது தூய  வொழுக்கத்தோடு ஒப்பப்  , புதியனவாகவும்  தவநிலையில் தலைப்படாத வனாகவும்  உள்ள  அடியேனது பொய்யொழுக்கத்தையும்  என்மாட்டுள்ள  பேரருள் காரணமாக விரும்பியேற்று  ஆட்கொண்டனையென்பார் , “நின் பழவடியாரொடு  மென்படிறு  விரும்பரனே”  என்றார் .  

                    பழவடியா ரென்றதனால்  தாம் புதியவரென்பதும் ,தம் ஒழுக்கத் தைப் படிறு  என்றதனால்  பழவடியார் ஒழுக்கம் தூயது என்பதும் போதரும் . அடிகள் தம்மைப்  புதியெரென்றும்  தம் ஒழுக்கத்தைப்  படிறுடைத்து  என்றும்  கூறியது, ஆண்டவன்  முன்னிலையில்  அடிமையாகிய  அவர்தம் பணிவு  தோன்ற நின்றது . பெரியோர்களின் பணிமொழியீதென  அமைதலன்றி  , நாம்  அடிகளை அன்னாரெனக்  கனவிலுங் கருதலாகாது . சென்ற பல பிறப்புக்களிலெல்லாம்  இறைவனை  வழிபட்டு இப்பிறப்பில்   தவச்செல்வரா யினராதலின் , புதியரல்லர்; பழவடியாரே  யென்பதும் , இறைவன்  ஞானாசிரி யனாக எழுந்தருளி  வலிந்து  ஈர்ந்து  உபதேசிக்கப் பெற்றவராதலின்  , அடிகளின்  ஒழுக்கம் மிக்க  தூய்மையுடையதன்றிப்   படிறுடைத்தன் றென்பதும்  தெளியப்பட்ட வுண்மைகளாம் .

                   அடிகள் தம்மை  விரும்பி இறைவன் அடிமை கொண்டான்  என்பதை “வேண்டும்  வேண்டு மெய்யடியாருள்ளே  விரும்பி யெனையருளால் ஆண்டாய் “ என்பது முதலிய திருப்பாட்டுக்களில் வெளிப்படக்  கூறியிருத்தலறிக . அரன்  என்பது அழிப்பவன் என்னும்  பொருளுடையதாகும் . அதனை அடிகள் ஈண்டுக் கூறி  விளித்தது , பேரருள் காரணமாகத்  தம்மை ஆட்கொண்டமையால் , தம்மாட்டுள்ள படிற்றொழுக் கத்தைப்  போக்கியருள்வன் என்னுந்  துணிவு  தோன்ற  நின்றது . படிறுடை யேனாயினும்  நீ  அரனாதலின், அதனைப்போக்கித்  தூய்மைப்படுத்து நலம் புரிதலன்றிக் கைவிடல் தகுமாவென்பார் , “விட்டிடுதி”  என்றார் .

                   இதன்கட் பிறப்பை  ஐவாயரவமாகக்  கூறியதால் , அப்பிறப்பினால் உண்டாம்  உலக வாழ்க்கை  வெறுக்கத்  தக்க தென்பது பெறப்படுதலின்  ,     பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக . 

                                                    **********************************

பாடல் :36 .

பொதும்புறு  தீப்போற்  புகைந்தெரி  யப்புலன்  றீக்கதுவ

வெதும்புறு  வேனை  விடுதிகண்  டாய்விரை  யார்நறவந்

ததும்புமந்  தாரத்திற்  றாரம்  பயின்றுமந்  தம்முரல்வண்

டதுபுங்  கொழுந்தே  னவிர்சடை  வானத்  தடலரைசே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் என் மனம் அஞ்சி ஒடுங்குமாறு  பிறப்பாகிய  ஐந்தலைப் பாம்பு  பொருதலால் , நின் திருக்குறிப்பின்  வழியொழுக இயலாதாயிற்று  என்று  இறைவனை  நோக்கிக்  குறிப்பிட்ட  அடிகள் ,இத் திருப்பாட்டில்  அவ் வைவா யரவத்தாலாம் புலத் தீத் துன்பத்திற் குத்   தம் ஆற்றாமையை மீண்டும்  விளக்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- விரை ஆர்  நறவம்  ததும்பும் மந்தாரத்தில்  =  நறுமணம் பொருந்திய  தேன்  நிறைந்த   மந்தார   மலரில்,

தாரம்  பயின்று  மந்தம்  முரல்  வண்டு  =  எடுத்தலிசை  பாடிப்  பின்  படுத்தலிசை ஒலிக்கும் வண்டுகள் ,

அதும்பும் கொழும் தேன்  அவிர்  சடை   =  அமிழ்தற்கு  ஏதுவாகிய செழித்த  தேன்  விளங்கும்  சடையினையுடைய ,

வானத்து அடல் அரைசே  =  சிதாகாயத்தில்  வீற்றிருக்கும் வெற்றிமிக்க  வேந்தர் பெருமானே ,

பொதும்பு  உறு தீப்   போல் புகைந்து எரி  =  மரப்பொந்திற்  பொருந்திய  நெருப்பைப் போலப்  புகைந்து எரிகின்ற ,

அப்புலன்  தீக்கதுவ  வெதும்புறுவேனை  =  அப்புலன்களாகிய   நெருப்புப்  பற்ற  அதனால்  வெதும்புதலையுடைய   சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  மந்தாரம்  என்பது கற்பக முதலிய  தேவதருக்கள் ஐந்தனுள் ஒன்று ; அஃது ஆகு பெயராய்  நின்று  மலரையுணர்த்திற்று .  அம்  மலர்  இறைவன்  சடையில்  விளங்கும்  நிலையை  , அடிகள் அகக்  கண்ணாற்  கண்டு , தம் நெஞ்சக்  கிழியில் ஓவியமாகத்  தீட்டிக்கொண்டு  , பாடல் வடிவில்  நம்மனோரையும்  நினைவு  கூர  அருளிச்செய்கின்றார் .  மலர்களில்  உள்ளவை  நாற்றமும்  தோற்றமும்   நறவமும்  ஆம் . ஈண்டு  விரையார்  என்றதனால் நாற்றமும் ,  மந்தாரம்  என்றதனால் ஆகு பெயர்  கொள்ளப்பட்ட  மலரின்  தோற்றமும் , நறவந்ததும்பும்  என்றதனால்  நறவமும்  கூறியபடி யாம் . மலரின்  வண்ணமும்  வடிவும்  தோற்றத்தின்  பாற்படும்  .

                   இத்தகைய  தெய்விகப் பூவாகிய  மந்தார மலரை இறைவன் சடையில் அணிந்திருக்குங்கால் , அதன்கண் உள்ள  தேன் பெருக்கில்  இசைபாடிச் சாரும் வண்டுகளின்  அரிய செயல்களை  , அடிகள் அழகு பொருந்தப்  புனைந்து கூறுகின்றார் . ஆண்டு  வண்டு  பாடிய  இசை  மந்தோச்ச  சமம்  என்னும்  மூன்றனுள்  , உச்சமும்  மந்தமுமாம். தாரத்தை   உச்ச சுர மெனவும்   எடுத்தலிசை எனவும் , மந்தத்தைப் படுத்தலிசை எனவும் இசை நூலார் கூறுவர் . இங்கே  வண்டுகள் மந்தார மலரையடுத்தும் , புறத்தே  சூழ்ந்து எடுத்தலிசை  பாடிப்  ,பின் அகத்தே  யணு கவணுகப்  – படுத்தலிசை பாடின வென்பதும் , ஆங்குச்  செழித்துப்   பெருகிய  தேனிற்  றோய்ந்தும்  இசை பாடுதலை ஒழித்து , அத் தேனையுண்டு  களித்து மவுன  நிலையடைந் தன  வென்பதும்  புலப்பட , “மந்தாரத்திற் றாரம்  பயின்று  மந்தம் முரல் வண்டு, அதும்புங் கொழுந்தேன் “ என்றார் .  

                       ஈண்டுப்  பயிலுதல்  பழகுதல் என்னும்  பொருளுடைய  தாகலின்  , அஃது உரத்த குரலில் அடுத்தடுத்துப்  பாடுதலையும் , முரலுதல்  அதனிற்  றாழ  மெல்லிதாக  ஒலித்தலையும் குறிப்பனவாம் . அதும்புதல்  –   அமிழ்தல்  தேன் பெருக்கில் அமிழ்ந்ததும் ஒலித்தலின்றென்பது போதரும் . “அதுவும் கொழுந்தேன் “ என்புழி  அதும்பும் என்பது செய்யும் என்னும்  வாய்ப்பாட்டுப்  பெயரெச்சமாகும் ; காரியப்பொருளில்  வந்தது .இவ் வருணையில் இதனை  உவமையாகக்  கொண்டு  அறியத்தக்க  பிறிதொரு பொருளும் , குறிப்பில் வைத்து உணரத்தக்க சிறந்த சைவ சித்தாந்த நுண்பொருளும்  அமைந்திருத் தல்  அறிந்துணர்ந்து இன்புறத்தக்கன .  அவை  முறையே  வருமாறு : மலரிலுள்ள  தேனை உண்ண வந்த வண்டு , அதனை யுண்ணாமல்  புறத்தே   சுற்றுங்கால்  ஒலி  செய்தும் ,அகத்தே படிந்துண்டதும்  ஒலியடங்கப் பெற்றும் இருத்தல்  இயல்பு ; இக்குறிப்பு  கற்றறிந்த பெரியோன் ஒருவன் இறைவனை  யணுகப்பெறாத நிலையில் தருக்கவாத முதலியன செய்வன்  என்பதையும் , இறையருளில் படிந்ததும்  அவ்வாதம் ஒழிந்து மவுன நிலையடைவான் என்பதையும் புலப்படுத்தும் என்ப .   இக்கருத்தை ,

வண்டு  மலர்ப்புறத்தே  மன்மதுவுண்  ணாதொலிக்கும்

உண்டுண்  மகிழ  வொலியடங்கும்  –  அண்டான்

தருக்கவா  தம்பகர்வான்  சார்மனத்தை யீசற் 

கொருக்கமகிழ்  வான்மவுன  முற்று “

என்னும்  வெண்பாவால் அறியலாம் . இரண்டாவதாகக் கூறப்பட்ட சைவசித்தாந்த நுண்பொருள்  வருமாறு : மந்தார  மலரிலுள்ள  வண்ணம்  சத்தையும் , நறுமணம் சித்தையும் , தேன்  ஆனந்தத்தையும்  குறிப்பின் உணர்த்த , இம் மூன்றனையும் உடைய அம்மலர் சச்சிதானந்தன் என்னும் உண்மையறிவின்ப  வடிவினனாகிய  இறைவனையும் , தேணுண்ண  வந்த  வண்டு  அவ்விறைவனை  யடைதற்குறிய  பக்குவான்மாவாகிய  உயிரையும் குறிப்பனவாம் , உயிர்க்குப்  பக்குவ முதிதற்கு  முன்  பாசஞான  பசு  ஞானங்களாகிய  அபர ஞானமும் , பக்குவ முதிர்ந்த பின் பதி ஞானமாகிய அநுபவ  வுணர்வும் உண்டாம் என்ப .  

                இக் குறிப்பை  வண்டு  தாரம் பயின்று   மந்தம்  முரன்று  கொழுந் தேனில் அமிழ்தலாகிய நிகழ்ச்சிகள் புலப்படுப்பனவாம் .எடுத்தலிசை  பாச ஞானத்தையும் , படுத்தலிசை  பசு  ஞானத்தையும் ,கொழுந்தேன்  சிவானந் தத்தையும் , வண்டு அவ்விசை யொழிந்து தேன் பெருக்கில் அமிழ்தல் , பக்குவான்மா  பாச  பசு  ஞானங்களை  விட்டுச்  சிவானந்தத்தில்  தோய்ந்து  இன்புறுதலையும்  குறிப்பனவாம் . “பாச ஞானத்தாலும்  பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே  நேசமொடு  முள்ளத்தே நாடி “ என்றபடி பாச  பசு  ஞானங்களாகிய அபரஞானத்தால்  அறியப்படாத இறைவனைப்  பதிஞானமாகிய  பரஞானத்தால்  உணர்ந்து சிவானந்தத் தழுந்தியின்புறலே  வீட்டு  நிலையென்ப .

                   இரண்டற்ற  நிலையாகிய  வீட்டின்ப  நுகர்ச்சிக்குத்  தேனிற் படிந்த  வண்டினையே  சைவ  நூல் எடுத்துக் காட்டு மென்பதையும்  ஈண்டு நினைவுறல்  வேண்டும் . இத்துணையும் இறைவன்  சடையில் விளங்கும்  மந்தார  மலரைக் கொண்டு ,அடிகள் சிற்றறிவினேமாகிய  நம்மனோர் உய்தற் பொருட்டுக் குறிப்பிற்  புலப்படுத்த உண்மைகளாகும் . வானம் – ஞானப்பரவெளி .  அதன்கண் விளங்கும் இறைவனை  வெற்றிவேந்தன் என்னும்  பொருடோன்ற  , “அடலரசு” என்றார் , “வானவூர் கொள்வோநாம்  மாயப்படைவாராமே “  என்றபடி  மாயப்படைகளை  வென்று   அருளாட்சி புரிதல் பற்றியென்க .

                   இனி, மதுப்பெருக்கில்  மூழ்கியின்புறும் வண்டு போலச்  , சிவானந்தத்தில் திளைத்து   இன்புறும்  வேட்கை  மிக்க  சிறியேனை , அப்பேறெய்தாவண்ணம்  தடைப்படுத்துப்  பிறவியாகிய  ஐவாயரவம் புலன்களாகிய  நச்சுத் தீயால் வெதுப்புகின்றதேயென  அடிகள் முறயிட்டு  ஆறுதல்  வேண்டுகின்றார் .  

                    பொதும்பு – மரப்பொந்து .  இதனைக்  காட்டிலுள்ளதென்று  கொள்ளல்  வேண்டும் . ஒரு மரத்தின் பொந்திற்பட்ட தீ புகைந்து  சிறிது சிறிதாகப்  பெருகி  முடிவில்  அப்பொந்திருந்த  மரத்தையும் எரித்தல் போல , உடம்பின் பொறிவாயிலில்  பற்றிய  புலனாகிய  நெருப்புச்  சிறிது சிறிதாகப் பெருகி , உடம்பொடு வேற்றுமையற்று நிற்கும் என் உயிரையும் சுடுகின்ற தென்பார்  , “பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ , வெதும்புறுவேனை “  யென்றார் .  ஒரு  வீட்டிற்  பற்றிய  தீயினால்  அதனைய ணைக்கப்  பலர்  விரைந்து முற்படுவர் ஆதலின், அதனை விளக்கற்குக்  காட்டிலுள்ள  மரப் பொந்திற் பற்றிய  தீயை  உவமையாக்கினர் .வீட்டருகி லுள்ள மரப்பொந்து என்று கொள்ளலாகாதோ எனின், அது பொந்துபடின் , அதன்கண்  தீங்கு செய்யும் நச்சுயிர்கள் வாழும்  எனக்கருதிப் , பொந்து படுங்காறும் அதனை  வீட்டிலுள்ளார்  வைத்திருக்கமாட்டார்  ஆதலின்  ஆகாதென்க .

                  காட்டிலுள்ள  மரப்பொந்திற்  பற்றிய   தீ  மழையானன்றித்  தணியாமை   போல  ,  என்னைப்பற்றிச்  சுடும் இப்புலனாகிய தீயை யணைத்தற்கு , ஆண்டவனே , நின் அருண்மழையல்லது  வேறு கருவி  காண்டலருமையாதலின் , நீயே  முற்பட்டு  உதவி புரிதல்  வேண்டுமென்று  அடிகள் குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . “அப்புலன்” என்புழிச்  சுட்டு  . முன்னைத் திருப்பாட்டுக்களிற்  கூறப்பட்டபடி பற்பல துன்பங்களை விளைத்த தென்பதைச் சுட்டி நின்றது .இறைவ!  நின்னாலன்றித்  தணிக்க  இயலாத புலனாகிய நெருப்பினால் சுடப்பட்டு வருந்தும் இந் நிலையில் என்னைக்  கைவிடல்  தகுமா வென்பார்  ,”விடுதி கண்டாய் “ என்றார் .  

                   இதன்கண் , “பொதும்புறு  தீப்போற் புகைந்தெரியப் புலன்  தீக்கதுவ , வெதும்புறுவேனை “ என்றதனால் , உலக  வாழ்க்கை புலன்களின்  கொடுமையால்  துன்புறத்தக்க  தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                            ******************************************

பாடல் :- 37 .

அரைசே  யறியாச்  சிறியேன்  பிழைக்கஞ்ச  லென்னினல்லால்

விரைசேர்  முடியாய்  விடுதிகண்  டாய்வெண்  ணகைக்கருங்கட்

டிரைசேர்  மடந்தை  மணந்த  திருப்பொற்  பதப்புயங்கா

வரைசேர்ந்  தடர்ந்தென்ன  வல்வினை  தான்வந்  தடர்வனவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஐம்பொறிவாயிலாகப்  போதரும் கொடிய  புலனாகிய நெருப்பிற்குத்  தம்  ஆற்றாமையைக் குறிப்பிட்டு  ஆறுதல்  வேண்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில் அப்புலப்பகை   வல்வினையின் விளைவாதலின் , அவ்வினைக்குக்  காரணமாய  என்  அறியாமையால் நேர்ந்த பிழையைப்  போக்கி  எனக்கு  அபயம்  அளித்தல் வேண்டுமென்று  இறைவன்பால்  விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .

பதவுரை :-  வெள் நகை  கருங்கண்  திரைசேர் மடந்தை  =  வெள்ளிய  பற்களையும்  கரிய கண்களாகிய கடலினையும் உடைய உமையமையை,   

மணந்த புயங்க  =  ஒரு கூற்றிலுடைய இறைவனே ,

திரு பொன்பதப் புயங்கா  =  வீட்டுத் திருவினையருளும்  அழகிய  திருவடிகளுடைய  பாம்பணிந்த பெருமானே ,

வரை சேர்ந்து  அடர்ந்தென்ன  =  பல மலைகள் ஒருங்கு திரண்டு வந்து   நெருங்கினாற் போல ,

வல்வினை வந்து அடர்வன  =  வலிய  தீவினைகள்திரண்டு வந்து  நெருங்குகின்றன ,

அரைசே  =  தலைவனே ,

விரைசேர்  முடியாய்  =  நறுமணம்  பொருந்திய சடை முடியினை யுடையாய் ,

 அறியாச்சிறியேன் பிழக்கு  அஞ்சல்  என்னின் அல்லால்   = 

அறிவில்லாச் சிறியவனாகிய  எனது பிழையின் நீக்கத்திற்கு  அஞ்சற்க  என்று  கூறினல்லது வேறு  கருவியின்று ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது

விளக்கவுரை :-  அம்மையப்பனாகிய  இறைவன் திருவடிச்சார்பைத்  தன் மூலம்  அடைய  விரும்பித் தன்னை  வழிபடும் மக்களுக்கு உலகன்னையாகிய இறைவி  காட்சிதருங்கால் , புன்னகை  பூத்த முகமும்  அருளொழுகு  விழியும் உடயளாய் வெளிப்படுவள்  என்னும்  உண்மை புலப்பட , “வெண்ணைக் கருங்கட்டிரைசேர் மடந்தை “என்றார் .  “வெண்ணகைக்  கருங்கண்”  என்றது  முரணணி . தன்னையடைந்தாரை  வரவேற்று  மகிழ்வுறுத்தற்கு முறுவன் முகமும், அவர்  விரும்பியது நல்குதற்கு  அருள் விழியும்  இன்றியமையாதன வென்பது  உலகிய லிலும் காணத்தக்கது . திரை –  அலை . ஆகுபெயராய்க்  கடலை யுணர்த்தும் . அம்மையின்  கருணை அள்ள அள்ளக்  குறையாதாதலின் , அருட் பெருக்கினையுடைய  அவள்  கண்களை , நீர்ப்பெருக்கினை யுடைய கடலாக  வுருவகஞ் செய்தனர் . “மடந்தை மணந்த” என்புழி இரண்டனுருபை  விரித்துக்  கொள்க .  புயங்கன்  என்பது ஈண்டும்  இயைந்து இறைவன்  என்னும்  அளவில்  நின்று  மணந்த என்னும்  எச்சத்திற்கு  முடிபாய்  விளியேற்று நின்றது .  திரு  என்பது  வீட்டுத்  திருவினையுணர்த்தும் . வடமொழியாளர் மோஷ லஷ்மி  யென்பர் . அவ்வீட்டிபத்தைத்  தருவது மெய்ஞானமாகும் .

                இறைவன்  திருவடியை ஞானவடிவம் என்று  மறையாகமங்கள் கூறுமாதலின் , “திருப்பொற்  பதம்  “ என்னப்பட்டது . உலக  வாழ்க்கைக்குப்  பொன்  இன்றியமையாமை  போல, வீட்டுலக  வாழ்க்கைக்குச்  சிவபதம்  இன்றியமையாதது   ஆதலின்  , பொற்பதமாயிற்றென்க . ஆகவே  “ மடந்தை மணந்த புயங்கா”  “திருப்பொற்பதப்   புயங்க” என்னும்  இரண்டு தொடர்க ளும்  முறையே  இறைவன்  உயிர்களுக்குப்  போகத்தையும்  வீட்டையும்  அருள்பவன் என்னும்  உண்மையைப்  புலப்படுத்து நின்றன .  “பொன்னும் மெய்ப்பொருளுந்  தருவானைப்  போகமுந் திருவும் புணர்ப்பானை “  என்னும்  ஆரூரர்  அருண்மொழியும் ஈண்டு  நினைக்கத்தக்கது .

                இத்தேவாரப் பகுதியில் பொன்னைத் தந்து  போகத்தைப்  புணர்ப்ப வன் எனவும் , மெய்ப்பொருளைத்   தந்து  வீட்டின்பத்தை யருள்பவன்  எனவும்  நிரனிறைப்  பொருள் கோளமைந்து , இறைவன்  போகியாயிருந்துயிர்க்குப்   போகத்தைப்  புரிபவன் என்பதையும் , யோகியாய்  யோக முத்தியுதவுபவன்  என்பதையும்  புலப்படுத்து  விளங்கும்  நயம்  உணர்ச்சிக்கு  இன்ப  விருந்தாகும் .  “திரைசேர் மடந்தை “ என்பதற்கு  கங்காதேவி  யெனவும் , திருமகள் எனவும் பொருள் கூறுவாறும்  உளர் , அவ்வுரையில்  இயைபும்  நயமும்  இன்மையுணர்க .

                          அடிகள்  தம்மை நலியும் வினையை  “வல்வினை” யென்றார் . விலக்க இயலாதது  என்பது  தோன்ற, வல்வினை மெல்வினை யென வினை  இருதிறப்படு மென்ப.  வல்வினை  ஈண்டுத்  தீவினையின் மேலது . பயன்  விளைக்குங்கால்  துன்பத்தின் மிகுதி குறைவுகளால் வன்மை மென்மை யுணரப்படுவன . கணவனை யிழந்து போந்த கண்ணகி ,குறப் பெண்களுக்குத்  தன்னியல்பு  கூறுங்கால் ,”மணமதுரையோடரசு  கேடுறவல் வினை  வந்துறுத்தகாலைக்  கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன்  யான்” என்று  கூறினாள் எனச் சிலப்பதிகார  ஆசிரியர்  கூறுவர் .  

                      இங்கே  கணவனை யிழத்தற்கு  வல்வினை காரணமாயிற்றென் பது  தெளிவு . மீண்டும்  கண்ணகி  தன்னைக்  “கடுவினையேன் “ என உடம்பொடு  புணர்த்துக்  கூறியது , கணவனை  இழந்த துன்பம்  பொறாது இறத்தல் அறமாகவும் , இறவாமல் உயிர் தாங்கி வந்தது குறித்தாம் .சிலப்பதிகாரத்துப்  பிறிதோரிடத்து , “வல்வினை வளைத்த கோலை மன்னவன்  செல்லுயிர்  நிமிர்த்துச் செங்கோலாக்கியது “ என்று  கூறியிருத்தலும்  அறியத்தக்கது . வளையாத  செங்கோல்  வளைந்ததற்குக்  காரணம்  வல்வினையாயிற்றென்பது .

                         அசைக்கலாகா நிலையினையுடையது  மலை . அம்மலை  பல ஒருங்கு சேர்ந்து வந்து தாக்கினாற் போல , வலிய  வினைகள் பல ஒருங்கு  திரண்டு வந்து தாக்குகின்றன வென்பார் , “வரை சேர்ந்தடர்ந்தென்ன  வல் வினைதான் வந்தடர்வன”  என்றார் . சேர்ந்து, அடர்வன என்னும் சொற்களால் முறையே  மலையும் வினையும் பலவென்பது பெறப்படும் . சேர்ந்து  என்னும்  உவம வினையைப்  பொருளொடும் , வந்து  என்னும்  பொருள்வினையை  உவமத்தோடும்  இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும் . ஒரு மலையின்  ஒரு சிறு  கூறு  உருண்டு  வீழின்  , அதனாற்றாக்கப்பட்டார்  உய்தலரிதாம் . பல  மலைகள் திரண்டு  தாக்கின , தாக்கப்பட்டார் எங்ஙனம் உய்வர் என்பது கூறவேண்டாத  தொன்று. விலக்க  இயலாமையும்  உய்தலரு மையும்  தோன்ற  இவ்வாறு  கூறினார்  . வரை  சேர்ந்தடர்தல் இல் பொருளு வமை . இங்ஙனம் தாக்கும்  வினைபகையை  அறவே  களைதற் குரிய  ஆற்ற லுடைய  வினைக்கேடனாகிய  வேந்தர் பெருமான்  நீயே  யென்பார் .  

                 ஈண்டு  “அரைசே” எனவும் , மாயாகாரியமாகிய நிலையிலாவுலகத்தை  நிலையெனக்கொண்டு  மணி முடி பூண்டு  மருளாட்சி  புரியும் அரசர் போலாது , மாயையினீங்கி யென்றும்  நிலையு தலுடைய  இன்பமயமாக  விளங்கும்  பேராவுலகத்து ,நறுமணமிக்க  சடைமுடி  பூண்டு  அருளாட்சி   புரியும் அரசர்  பெருமான்  என்பது  புலப்பட  , “விரை சேர்முடியாய்” எனவுங்கூறி  விளித்தனர் . விரை  –  சடை முடியிற்  சூடிய  கொன்றைமலரிலுள்ள  நறு மணம்  .  மலை  திரண்டு வந்தாற் போல  வலிய  வினைகள் திரண்டு வருதற்குக்  காரணம்  சிறியேன்  குற்றமே யென்பார்.  “சிறியேன் பிழைக்கு”  எனவும்  , ஆண்டிற்  சிறியனாயினான் ஒருவன்  அறிவிற்   பெரியனாயிருந்தால் உலகத்தில் காணப்படுகின்றமை யின் , என்  சிறுமைதானும் அத்தகையதோ எனின் , அங்ஙனம்  அன்று ; அறிவிலாமையானாகிய  சிறுமையே  யென்பார் , “அறியாச் சிறியேன்” எனவுங்  கூறினர்.  

                ஈண்டுச் சிறுமை  குணஞ்  செயல்களானாய தென்பது கருத்து .  பிழைக்கு என்பதைப் பிழையின் நீக்கத்திற்கு  எனக்கொள்ளல்   வேண்டும் , “துன்பத்திற்கியாரே  துணையாவார் “  என்புழிப்போல . சிறியேனது பிழையின்  நீக்கத்திற்கு  அஞ்சற்க என்று  நீ  கூறும்  அபயமொழியல்லது வேறு  கருவியின்றென்று  அடிகள் குறிப்பிட்டபடியாம் . பிழை – மன  மொழி  மெய்களால்   நிகழும்  அனைத்துமாம் . தம் முக்கரணங்களாலும் நிகழும்  பிழயெல்லாம் இறைவன்  திருமொழி  யொன்றானே  நெருப்பிடைப்பட்ட   பஞ்சுத்துய்ப்  போல  நீங்கு  மென்று  அடிகள் துணிந்தபடியாம் . “பிழையெ லாந் தவிரப் பணிப்பானை” என்னும்  அருன்மொழியும்  இக்கருத்துப் பற்றி யெழுந்ததே . பணித்தல் –  அபயமொழியருளல் . “என்னினல்லால்” என்பதன் பின் அவாய்  நிலையான்   “வேறு  கருவியின்று “  எனபது  வருவித்துரைக்கப் பட்டது . வேறு   புகலில்லாத  சிறியேன்  , அறிவின்மையாற்  செய்த  பிழைகளைக்  களைந்து காப்பாற்றுதல்  நின் கடமையாகவும்  என்னைக்  கைவிடல் தகுமா  வென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .  

              இதன்கண், “வரை சேர்ந்தடர்ந்தென்ன  வல்வினைதான் வந்தடர்வன” என்றமையால்  உலக  வாழ்க்கை  வெறுக்கத்தக்க தென்பது  பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதலறிக .

                                                 **************************************

பாடல் :38.

அடர்புல   னால்நிற்  பிரிந்தஞ்சி  அஞ்சொல்நல்  லாரவர்தம்

விடர்விட   லேனை  விடுதிகண்  டாய்விரிந்  தேயெரியுஞ்

சுடரனை  யாய்சுடு  காட்டர  சேதொழும்  பர்க்கமுதே

தொடர்வரி  யாய்தமி  யேந்தனி  நீக்குந்  தனித்துணையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம்  வல்வினைக்குக்  காரணமாய்  அரியாமையால் நேர்ந்த பிழையைப்  போக்கி அபயமளித்தல்  வேண்டு மென்று   விண்ணப்பஞ் செய்து கொண்ட  அடிகள் , இத் திருப்பாட்டில் அவ் வல்வினையின் விளைவாகவுள்ள  எல்லாப் புலநுகர்ச்சிகளுக்கும்   நிலைக் களனாகிய  மகளிர்  சார்பினாலுண்டாம்  தீங்கு  குறித்து இரங்குகின்றார் .

பதவுரை :- விரிந்து  எரியும்  சுடர்  அனையாய்   =  எங்கும்  பரவி யொளிரும்  தீப்பிழம்பை யொத்துத்  திகழ்பவனே ,

சுடுகாட்டு  அரசே  =  எல்லாம்  ஒடுங்கும்  இடமாகிய  பெருஞ் சுடலைக்கு  அரசனே ,

தொழும்பர்க்கு  அமுதே  =  மெய்யடியார்க்கு  அமுதம் போன்றவனே ,

தொடர்வு  அரியாய்  =  யாரானுந்  தொடர்ந்து பற்றுதற்கு  அரியவனே  ,

தமியேன்  தனிநீக்கும்  தனித்  துணையே  =  புகலற்றவனாகிய  அடியேனது  தனிமையை  நீக்கியருளும் ஒப்பற்ற  துணையாக வுள்ளவனே  ,

அடர் புலனால்  அஞ்சி  நின் பிரிந்து  =  என்னைத் தாக்குகின்ற  புலன்களுக்கு அஞ்சி நின்னைப்பிரிந்து ,

அம் சொல் நல்லார்  அவர்தம்  விடர்  விடலேனை  =  அழகிய  சொற்களையுடைய   மகளிருடைய  முழை  போன்ற  இடங்களை  விடாமற்  பற்றி நிற்கின்ற   சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-   உலகெலாமாகி   வேறாயுடனுமாய்  விளங்கும்  இறைவனது திருவுருவை ஞானயோகத்தின் முதிர்ந்த பெரியார் முதலிற்  பேரொளிப்  பிழம்பாகக்  கண்டு   வழிபட்டனரென்பது மறையாகமங்களிற்  கண்ட வுண்மையாகும் . “சோதியாய்த்  தோன்று  முருவமே  “ என்பது  அடிகள் திருவாக்கு . ஐம்பெரும் பூதங்களும் , ஞாயிறு  திங்களும்   உயிருமாகிய  எட்டுப் பொருள்களும்  இறைவனுக்குத் திருமேனியென்ப . இவ்வெண் வகையுள் , ஞாயிறு  திங்கள் நெருப்பு  இம்மூன்றும் ஒளி மண்டிலங்களாகும் . இம்மூன்றும் , புறவிருளைப்போக்கி  மாயாகாரியமாகிய  உலகப்  பொருள்க ளைக்   காண்டற்குத்  துணை செய்தல் போல , ஞானமயமாக விளங்கும்  இறைவன்  எக்கருவியானும் போக்கவியலாத உயிர்களின் அறியாமையாகிய அகவிருளைப்  போக்கி , மாயையினீங்கிய  தன்னியல்பை  அவ்வுயிர்களு ணர்ந்து  இன்புறுதற்குத்  துணை செய்தலின் ,எங்கும்  நிறைந்த அவ்விறை யியல்பை ஒளி மண்டிலங்களில் வைத்து வழிபடுவாராயினர் .

                    நெருப்பு  எரியுங்கால் மேனோக்குதல் இயல்பு . பிழப்பாகிய  இறைவனியல்பு  “நள்ளுங்  கீழுளும் மேலுளும்  யாவுளும்”  நிறைந்து விளங்குதல் பற்றி ,”விரிந்தே எரியும் சுடர் அனையாய் “  என்றார் . “பார்பதமண்டமனைத்துமாய்  முளைத்துப் படர்ந்ததோர்   படொரொளிப் பரப்பே “  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்   கூறியிருத்தலும்  அறிக .  “படரொளிப் பரப்பு”  என்பது  இங்கே  நினைக்கத்தக்கது . இறவனது ஞானமயமான  திருவுருவின்  இயல்பைக்  கூறிப்பின் அப்பெருமானது தலமைத்  தன்மையைப்  புலப்படுத்துவாராய் , “சுடுகாட்டரசே”  என்றனர் .  இங்கே  சுடுகாடு  என்பது பேரூழிக்காலத்தில் மக்கள்  தேவர்  முதலிய  யாரும்  யாவும்  ஒடுங்க்கிய இடமாகும் . அக்காலத்து அவ்விடத்துத்  தலைவனாக  விளங்கும்  தகுதி , கண்ணுதற் பெருங்கடவுட்கன்றிப்  பிற ரெவர்க்கும்   இன்றென்பது  துணி பொருளாதலின் , அவ்வாறு  கூறினர் .  மாயா காரியமாகிய  உலக நிகழ்ச்சியில் , அரசராய்  விளங்கும்  மக்கள்  தேவர்  முதலியோர் , தம்மால்  ஆளப்படுவோர்  இறந்தொழிதல் போலத் தாமும்  இறந்தொழிதலின் , அன்னார்  அரசு நிலயுதலில்லா அரசென்பதும் யாரும்  யாவையும்  ஒடுங்கிய பேரூழிக் காலத்து  “ஈறிலாதவ  நீசனொரு வனே “  என்றபடி   தானொருவனே  அழிவின்றி  நின்று  மீண்டும்  படைப்பு  முதலிய  செயல்களுக்குத்   தனித்தலைமை  மேற்கோடலின்  , சுடுகாட்டரசு   நிலையுதலுடைய தென்பதும்  குறிப்பிற்   புலப்படுத்தவாறறிக .  

              இங்ஙனம்  யாண்டும்  பரவிய  ஒளிப்பிழம்பாகவும்  ,பேரூழியிறுதியில்  பேரரசாகவும்  விளங்கும்  இறைவனைச்  சார்தல்  சிறியேமாகிய  நமக்கு  எங்ஙனம் கூடும்?  இயலாத செயலிற்றலைப்படல்  பயனின்று  எனக்கருதி  மெய்த்தொண்டில்   ஈடுபடாமலிருக்கலாமே  யெனின், அங்ஙன மிருத்தலா காது ;  அப்பெருமான்  மெய்த்தொண்டி லீடுபட்டு  ஒழுகும்  மெய்யன்பர்க்கே   இனியனாய்  எளிவந்தருளும்  இயல்புடையனாவ  னென்பதைப்  புலப்படுக்க ” தொழும்பர்க்கமுதே “ எனவும், இங்ஙனம் மெய்யன்பர்க்கு  எளிவரும்  இயல்பு நோக்கி  மெய்த் தொண்டிற்றலைப்படாமல்  அவ்விறைவனை  உயிர்  முயற்சியால்  வலிந்து பற்றிக் கொள்ளலாமெனக்  கருதுவார்க்கு  அவன்  அரியன்  என்பதை  தெளிவுறுத்தத் ,  “தொடர்வரியாய்”  எனவும்  இறைவனை  விளி  கொள்ளலானார் .  

                பத்தி வலையில் எளிதிற்  படுபவனாகிய  இறைவனை  அவன் அருட்டுணையின்றி  உயிர்  முயற்சியான்  மாத்திரம்  தொடர்ந்து பற்ற இயலாதென்பதைச்  சுந்தரமூர்த்திகள்  வரலாறு  கூறுங்கால்  சேக்கிழா ரடிகள் ,

ஆவணன்   பறிக்கச்  சென்ற  அளவினி  லந்தணாளன்

காவணத்  திடையே  யோடக்  கடிதுபின்  றொடர்ந்து  நம்பி 

பூவணத்  தவரையுற்றா  ரவரலாற்  புரங்கள்   செற்ற

ஏவணச்  சிலையினாரை  யார்தொடர்ந்  தெட்டவல்லார் “

என்னுந் திருவிருத்தத்தால்  தெளிவுறுத்தருளினார் .தம்பிரான்றோழர்   திருமணத்தில் இறைவன்  ஓர்  அந்தணனாகப் போந்து , “நீ யெனடிமை , பணி செய்தல் வேண்டும் ; ஆவணமுளது “  எனக்கூறிய  அளவில் , அதனைப் பறிக்கச் சென்ற  சுந்தர மூர்த்திகள் ,விரைந்தோடிய  இறைவனைத்  தொடர்ந்து பிடித்தனர்  என்பதும் , அத்தவமுதல்வரன்றி  இறைவனைத்  தொடர்ந்து பற்ற  வல்லார்  யாருளர்  என்பதும்   இச்செய்யுளால்  அறியப்படுவன .  “தொடர்வரியாய்” ,  “தொழும்பர்க்கமுதே” யென்பன  முறையே  இறவனுடைய   அருமையையும்  எளிமையையும்  வெளிப்படுத்து  நிற்றலின் , அருமையிலெளிய  அழகுடைய னாதல்  ஈண்டும்  புலனாதலறிக .

              சுடரனையாய்  என்பது  முதலாக  இத்துணையுங்கூறிய   நான்கு  விளி களாலும் , முறையே  எங்கும்  நிறை பொருளாகிய  இறைவன்  மெய்யன்பர்க்குக்  காட்சி யளிக்குங்கால்  பேரொளிப்பிழம்பாக  விளங்குபவ னென்பதும் , அப்பெருமானே  யாரும்  யாவும்  ஒடுங்கிய  பேரூழிக் காலத்தும் அழிவின்றி நிலைத்திருக்கும் தலைமைத்   தன்மையுடையான்  என்பதும் , மெய்த்தொண்டர்குப்  பத்தி வலையிற்படும்  எளிய னென்பதும் , ,அல்லா தார்க்கு  அணுகுதற்கரிய   னென்பதும்  ஆகிய  இறையியல்பைத்  தெளிவுறுத்து, இறுதியில் தமக்குச் சிறப்பு  முறையில்  அவ்விறைவன்  செய்தற்குரிய  பேருதவியைக்  குறிப்பிட்டு அடிகள் பாராட்டி விளிப்பாரா யினர் . தமியேன்  என்பது  வேறுபுகல்  இல்லாதவன் என்னும் பொருட்டு . “தந்தையார்  தாயார்  உடன்  பிறந்தார்  தாரமார்  புத்திரரார் தாந்தாமாரே,  வந்தவாறெங்ஙனே  போமாறேதோ  மாயமாமிதற்கேது  மகிழ வேண்டா”  என்று  அப்பர்  உபதேசித்தபடி  இவ்வுல்லக வாழ்க்கையில்   ஒருவர்க்கு  இறைவன்னல்லாத  யாரும்   துணையாகாரென்னும்  உண்மை பற்றி இவ்வாறு  கூறப்பட்டது .

                      அழியும்  இயல்பினதாகிய  உலகியலைக்  கண்டு  தம் தனிமை யை யுணர்ந்த அடிகள் , அத்தனிமையை நீக்கித்  தமக்கினிய  துணையாகத்  தம்முள்ளே  விளங்கும்  தனி முதல்  சிவபெருமானே  யெனத்  தெளிந்தமை யால் , “தமியேன்  தனி நீக்குந்  தனி முதலே “ யென்றனர். உயிர்  பாசத்தாற்  பிணிப் புண்டிருக்கும் பொழுதும் ,இறவன்  அப்பிணிப்பிற் படாமல்  அவ்வுயிரிற்   கலந்திருத்தலின்  ,அவ்வுயிர்க்குத்  தனிமை யென்பது யாண்டும்  பெறப்படாதெனின்  , அங்ஙனமன்று ; உயிர்க்குத்  தன் முனைப்பு  மேலிட்டிருக்குங்கால் , இறைவனது  கலப்புண்மை  யுணரப்படாமை யால்  துணையிலதெனக்  கொண்டு  தன்னைத்  தனியனாகக்  கருதுதலும் , தன் முனைப்பு  அற்று  இறை விளக்கம்  மேலிடப்பெற்ற நிலையில் , அக்கலப்புண்மை  யுணரப்பட்டமையால் , துணையுள தெனக்  கொண்டு  தனிமை  நீக்க  முணர்தலும்  உளவாதலின்  , இம்முறையில்   தனிமையும்  அஃதின்மையும்  பெறப்படுமென்பதும் , தனி  முதலென்றது  தனக்குப்  பிரிதொரு பொருள் ஒப்பாதலும் ,பிறிதொரு பொருட்குத்  தானொப்பாதலும்  இல்லாதவன்  என்னும் பொருட்டு . இவ் வுண்மையை , “ஒப்புடையனல்ல னொருவனல்லன் ஓரூரனல்ல னோருவமனில்லி “ என்னும்  தமிழ் மறையில்  “ஒப்புடையனல்லன்  ஒருவமனில்லி “  யென்னுந்  தொடர்களில்  அப்பர்  தெளிவுறுத்தருளியிருத்தலறிக .

                         பொறிவாயிலாகப்  போதரும்  புலனுகர்ச்சியில்  உள்ளத்தைப்  போக்காமல்  தடைப்படுத்த முயன்றும்  , அப்புலன்வலி விஞ்சிப் பொருகின்ற தென்பார் ,  “அடர்புலன்” என்றார் . புலனால்  என்புழிப்  புலனுக்கு  என  மூன்றனுருபை  நான்காவதாக்குக . அப்புலப்பகையின்   தாக்குதற்கு  அஞ்சிச்  சாருமிடம்  , அது செல்லாத  நின் திருவடியாகவும்  , இறைவ ! அச்சார்பை  விட்டுக்  , கொடிய  விலங்கிற்கு  அஞ்சி  மறைய  முயல்வானொருவன் புலி கிடந்த தூற்றை யடுத்தது போல, அப்புலப்பகைக்கு ஆக்கந்தரும்  மகளிர்  சார்பைப்  பற்றலானேன்  என்பார் , “நிற்பிரிந்து அஞ்சொனல்லாரவர்  தம் விடர் விடலேனை “  என்றார் . அஞ்சொல் என்றது விரும்பிப்  பற்றுதற்குக்  கருவி  கூறியபடியாம் . நல்லாரவர் என்புழி  அவர்  என்றது , பண்டறி  சுட்டாய்ப்  புலப் பகைக்குச்  சார்பிடனாக வுள்ளவர்  என்பதைக் குறிக்கும் .  விடர் – மலைக்குகை  .“பெருமலை விடரகத்து”என்புழி அப்பொருட்டாதலறிக  அஃது  ஆகு பெயராய்க் குகை போன்ற  சிற்றிடத்தை  யுணர்த்தும் . “நிற்பிரிந்து” என்பதற்கேற்ப  விடரைப்  பற்றினேன்  என்னாது , விடலேனை யென  எதிர்மறையாற்  பெற வைத்தது . நற்சார்பை   விடுதலினும்  தீச்சார்பைப்  பற்றுதலின்   அவாமிகுதியுண்மை  புலப்படற் கென்க .

       ஆண்டவனே !  அறியாமையால்  இவ் விடர்ப்பாட்டில்   பிணிப்புண்டுழலும்   சிறியேனைப்   பேரருளாளனாகிய   நீயே  முன் வந்து  நின்  திருவடிச் சார்பை  நல்கிக்  காத்தருளல்  வேண்டுமல்லது இந்நிலையிற்  கைவிடல்  தகுமா வென்பார் . “விடுதி கண்டாய்”  என்றார் .

        இதன்கண்,  “அடர்புலனால்நிற் பிரிந்தஞ்சியஞ்  சொல்  நல்லாரவர் தம் விடர் விடலேனை “  என்றமையால்  உலக  வாழ்க்கை புலப் பகையால்  நலியப்பட்டு  வருந்தத்தக்கது  என்பது பெறப்படுதலின், பிரபஞ்ச  வைராக்கியம்   புலனாதலறிக .

                                               ************************************

பாடல் :39 .

தனித்துணை  நீநிற்க  யான்றருக்  கித்தலை  யானடந்த

வினைத்துணை  யேனை  விடுதிகண்  டாய்வினை  யேனுடைய

மனத்துணை  யேயென்றன்  வாழ்முத லேயெனக்  கெய்ப்பில்  வைப்பே

தினைத்துணை  யேனும்   பொறேன்றுய  ராக்கையின்  திண்வலையே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  எல்லாப் புலனுகர்ச்சிகளுக்கும்  இடனாகிய  மகளிர்  சார்பினாலுண்டாம்  தீங்கு  குறித்து வருந்திய  அடிகள் , இத் திருப்பாட்டில்  மெய்த்துணையாகப்  பற்றுதற்குரிய  நின்னை  விட்டு  மகளிரைப்  பற்றியதோடு  அமையாது  , அதனாற்  செருக்குற்றுத்  தலை  கீழாகவும்  நடக்கலானேன் ; என் வினை யிருந்தபடி யென்னே  என  இரங்குகின்றார் .

பதவுரை :-  வினையேன்  உடைய மனத் துணையே  =  தீவினையுடையேனது  உள்ளத்திற்குத் துணையாக  வுள்ளவனே ,

என் வாழ்முதலே  =  எனது  வாழ்க்கைக்கு  ஆதாராமாகிய முடற்பொருளே  ,

எனக்கு எய்ப்பில் வைப்பே   =  எனக்கு  இளைப்பு  நேர்ந்தவிடத்துப்  பயன்படும்  சேமப்பொருள்  போல்பவனே ,

தனித்துணை  நீ நிற்க  =  நிகரற்ற  துணையாக  நீயிருக்க  ,

யான்  தருக்கித்  தலையால்  நடந்த வினைத்துணையேனை  =  யான்  எனச் செருக்குற்று  அதனால்  தலை கீழாக  நடந்த வினையைத்  துணையாகவுடைய சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

ஆக்கை  திண்வலை  துயர்  =  உடலாகிய  திண்ணிய  வலையிற்பட்டு  எய்தும்  துன்பத்தை ,

திணைத்துணையேனும்  பொறேன்  =  தினையளவு  நேரமேனும்   பொறுக்கலாற்றேன்  என்பது .

விளக்கவுரை :-  அடிகள்  ஆண்டவன்  முன்னிலையில்  , தம்மை  அடியேன்  , சிறியேன்  ,  நாயேன்  என்னுஞ் சொற்களால்  குறிப்பிடுதலைப்  பலவிடத்துங் காணலாம் . அங்ஙனம்  குறிப்பிடல்  , யாவர்க்கு  மேலாம்  அளவிலாச்  சீருடைய  அப்பெருமான் பெருமையும்  தம் சிறுமையும் புலப்படற்கென்பது  அடிகள் கருத்தாம் . இறைவன்  ஆண்டான்  என்பது  தோன்றத்  தம்மை  யடியேன்  எனவும் ,பெரியோன்  என்பது  தோன்றச்  சிறியேன்  எனவும்  , பிறப்பிலான்  என்பது தோன்றப்  பிறப்பாலிழிந்த நாயேன்  எனவும்  கூறுவாராயினர் . அங்ஙனமே  ஈண்டு  இறைவன்  வினையினீங்கிய  தூயன்  என்பது  தோன்றத் தம்மை  “வினையேன்” என்றனர் . ஒருயிர் பிறவி தொடங்கிவிட்டு  நிலை யெய்துங்காறும்   வினையொழிவு  பெறாமையால்  அதற்கு  மற்றைக்  குறியீடுகளினும்  வினையுடைமை பற்றிய   குறியீடே  சிறப்பிற் பொருந்துவதாகும் , வினை விளைவிற்கும்  அதன் பயனுகர்ச்சிக்கும் மனமே  சிறந்த காரணமாகும் .  

                மனமில்வழி  நிகழும்  செயலை  அபுத்திபூர்வக  மெனவும்  , அஃதுள் வழி நிகழும்  செயலைப்  புத்திபூர்வகமெனவும்  , கூறபவாதாலின் , மனைவியோடு  நிகழும்  மொழியும் செயலுமே   பயன்விளைப்பனவாம் . ஆகவே  மனமொன்று  தூய்மை பெறின்  ,முக்கரணங்களும் தூய்மையுடைய னவாம்  என்பது தெளிவாம் . அத்தூய்மைதானும் , அது பொறிவழிச்  சேறலை யொழித்துத்  தன்னைப்  பற்றுமாறு  இறைவன்  அம்மனத்திற்குத்  துணைபுரி தலால் உண்டாம்  ஆதலின் , அவ்வுதவி  குறித்து , “வினையேனுடையே   மனத்  துணையே  “  என்றனர்  . இங்ஙனம்  மனத்தூய்மையை யடிப்படையாகக் கொண்டு  வாழும்  இம்மை  வாழ்க்கைக்கும் , அவ் வாழ்க்கையில்   மேற் கொள்ளப்படும்  தவம்  காரணமாக  எய்தப்பெறும்  மறுமை வாழ்க்கைக்கும் ,அத் தவத்தால்  உண்டாம்  ஞானத்தாலடையப்படும்   வீட்டின்ப  வாழ்க்கைக் கும் , ஆதாரமாகவுள்ள   முதற் பொருள்  இறைவனாதலின்  , “என் வாழ் முதலே”  என்றனர் .

                       வாழ்க்கை  இம்மை  மறுமை வீடு  மூன்றையும்  குறிக்குமா யினும் , ஈண்டு  முடிவான  வீட்டின்பம்  பற்றியதாகவே கொள்ளல்  வேண்டும் ; என்னை , “தினைத்துணையேனும்  பொறேன் றுயராக்கையின்றிண் வலையே “  என இம்மை வாழ்வு  வேண்டாமையே  இத் திருப்பாட்டிலே  கூறி யிருத்தலானும் ,”கொள்ளேன் புரந்தரன்  மாலயன்  வாழ்வு”  என்பது  முதலிய  வற்றால்  மறுமை  வாழ்வு  வேண்டாமையை  வெளிபடுத்தமையானு மென்பது .

           உலக  வாழ்க்கையில்  ஒருவற்குப்  பொருட்குறை நேர்ந்தவிடத்துப்  பயன்படுதற் பொருட்டுத்  தொகுத்து  வைக்கப்படும்  மூலப்பொருளை   வைப்புப்  பொருளென்ப . அப்பொருள் போல  வீட்டின்பம்  துய்த்தற்கு  இளைப்பு  நேர்ந்துழி  , அதனை  யொழித்து தன்னை வழங்குதலாகிய  பெரும்பயன்  விளைத்தற்கு   இறைவனுளன் என்னுந்  துணிவு  தோன்ற  அப்பெருமானை  , “எனக்கு  எய்ப்பில்  வைப்பே “  யென்றனர்  .  இம்மூன்று  விளிகளாலும்  முறையே  மனத்தூய்மையாகிய சாதனத்திற்குத்  துணையா வானும்  , அச்சாதனப்பயனாகிய  வீட்டின்ப வாழ்விற்கு   முதலாவானும்  அவ்வின்பப்  பேற்றிற்குத்  தடை  நேர்ந்துழி யுதவி புரிவானும்  சிவ பெருமானே  யென்பது புலப்படுக்கப்பட்டபடியாம் .  

         இவ்வாறு  இறைவனை  விளித்துத்  தம்  குறையை  விண்ணப்பித்துக்  கொள்ளுகின்றார் . உயிர்கட்குக்  கட்டு நிலையினும்  வீட்டு  நிலையினும்  நீங்காத  மெய்த் துணையாகவுள்ளவன்  இறைவனொருவனே , பிறவிதோறும்   அப்பிறப்புப்  பற்றியுண்டாம்  துணையெல்லாம்  அப்பிறப்பு  ஒழிவில்  தாமும்  இழிந்து போமியல்பினவாம் . அப்பிறவியினும்  இடையறாது  நிலை நின்று  பயன்  செய்வனவு மாகா; இடையிடையே  மாறி நிகழும்  இயல்புடையனவாம்  எப்பிறப்பினும்  எந்நிலையினும் விட்டு  நீங்காமல்   உடனுறைந்து  நிலை நின்று  உயிர்க்கு  உறுதுணையாகவுள்ளவன்  இறைவனாதலின், “தனித்துணை” யென்றார் .

        கட்டு  நிலையிலும்  இறைவன்  துணை  யுளதாயின்  , உயிர் இன்பத்தோடு  துன்பமும்  நுகர்தல்  எங்ஙனம்  பொருந்துமெனின் , வினைப்  பயனை  நுகர்வித்துக் கழித்து உயிர்க்கு  நலம்  புரிதலே  இறைவன்  திருவுள்ளமாதலின்  , அப்பெருமானுடைய  அறக்கருணையோடு   மறக்கருணையுங்  காரணமாக  உயிரநுபவம்  நிகழ்தலிற்  பொருந்துமென்க . உலக  நிகழ்ச்சியில்  தாய்  தந்தையர்  தம்  சொல்வழி நில்லாத  மக்களை  அடித்தொறுத்து  நல்லாற்றுப் படுத்தற்குக்  காரணம்,அம் மக்கண்மாட்டுள்ள   அன்பேயாதலை   யறிகின்றோமாதலின்  ,அம்முறையின்  எவ்வுயிர்க்கும்  தாயுந் தந்தையுமாகவுள்ள  இறைவன்  செயலுமாமென்க . இதனை ,

நிக்கிர  கங்க  டானும்  நேசத்தா  லீசன்  செய்வ

தக்கிர  மத்தாற்  குற்ற  மடித்துத்  தீர்த்  தச்சம்  பண்ணி

யிக்கிர  மத்தினாலே  யீண்டற  மியற்றி  டென்பன்

எக்கிர  மத்தினாலும்  இறைசெய  லருளே  யென்றும் “

என்னும்  சிவநெறிப்  பனுவலானும்  தெளிக .  இங்ஙனம்  தற்பயன்  கருதாமல்  உதவிபுரியும்  ஒப்பற்ற  துணையாகிய  நீ  என்னிற்  பிரியாதிருக்க  வென்பார்  “தனித்துணை நீ நிற்க “ என்றார் .  நிற்க  என்றது , உற்றுழியுதவுதலில்  விரைந்து முற்படல்  தோன்றா நின்றது .இறைவ , எனக்கு  உற்றவிடத்தும் அரிய  பெரிய  துணையாக  என்னுள்ளே  நீ முற்பட்டிருக்கவும் , நின்னை  மதியாமல்  உயிர் முனைப்பால்  யானே  தலைவன்  எனக்கருதிச்  செருக் குற்று  நெறிமுறை  பிறழ்ந்து  நடக்கலானேன் என்பார் .

                 “யான்  தருக்கித்  தலையால் நடந்த” என்றார் . “யான் தருக்கி” என்புழி இடையே  “என” வென்னும்  இடைச்சொல்லை  அவாய் நிலையாற்  கொண்டு  யான்  எனத் தருக்கி  யெனவுரைத்துக்  கொள்ளல்  வேண்டும் . யான்  என்றதனால்  , இனம்  பற்றி  எனது  என்பதையுங்  கொண்டு  , யான்  எனது  என்னும்  அகப்புறப்  பற்றுக்களால்  மயங்கி   எனக் கொள்ளுதல்  பொருந்தும் .  இனி, “யான்றருக்கித்  தலையால் நடந்த வினைத்  துணையேனை “ என்பதற்கு , தருக்கி  நடந்த  வினைத்துணை யேனாகிய  என்னை  எனப்  பொருள்  கோடலுமாம் .அங்ஙனம்  கொள்ளுங்கால் , “யான்  தருக்கித்  தலையானடந்த  வினைத் துணையேனை “ என்பதைப்  பதினோ ராந் திருப்பாட்டிற்  கூறியாங்குக்  கூறி  முடித்துக்கொள்க . இது தன்மை பற்றி  வந்தது .

                இங்ஙனமே  நாற்பத்தைந்தாம்   திருப்பாட்டில்   “நீ யொளித்தாய்க்கு” என முன்னிலைப்பற்றி   வந்த தொடர்க்கும்  கொள்க.  இவ்வாறு  வருதலை, “கருதாத வரக்கன் பெருந்தோள்கணாலைந்து மீரைந்து  முடியுமுடையானை”  என்னுஞ் சுந்தரர் தேவாரத்திலுங் காண்க . இது  படர்க்கை பற்றி  வந்தது. தருக்குதலின்  பயனாகத்  “தலையானடந்த” என்றார் . தலையானடத்தல்  என்பது நெறிமுறை தவறி யொழுகுதலைக்  குறிக்கும்  . என்றும்  அழியாத  அறிவுருவாகிய  நின்னைத்  துணையாகக்  கோடலை விட்டு , நுகர்ச்சி யாலழிவெய்துவதும்  அறிவில்லாததுமாகிய  வினையைத்  துணையாகக்  கொள்ளலானேன் ; என் அறியாமை  இருந்தவாறிது என இரங்குவார்,  “வினைத்துணையேனை  “யென்றார்  .

              முன்னர்  ஆண்டவன்  அருட்குரவனா  யெழுந்தருளித்  தமக்கு  உபதேசித்து  மறைந்தவுடன்  ,”இனவடியாருடன்  கூட்டாதே  கினாயோ  என்னையுமென்  வினையையு மிங்கிருத்தி யெந்தாய்”  என்று  அடிகள்  இரங்கிக்  கூறியதாகப்  பரஞ்சோதியார் கூறியதும்  இங்கே  நினைக்கத் தக்கது  இறைவன்  பிரிவில்  தமக்குச்  சார்பாக  நின்றது வினையென  அடிகள்  கண்டனரென்பது .  இனி, “வினைத்துணையேனை” யென்புழித்  துணையென்னுஞ் சொற்கு  இரண்டெனப்  பொருள் கொண்டு  , இருவினைக் கட்டுடையேனை   எனக் கோடலு மொன்று .  .  இறைவ! , என் அறியாமையால்  மெய்த்துணையாகிய  நின்னை  விட்டு , பொய்த்துணையாகிய  வினையைக் கொள்ளலானேன் ; இந் நிலையில் என்னைக் கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .

                இனி , அடிகள் வினைத்துணைமையால்  தமக்கேற்பட்ட  துயரத்தை  ஒரு சிறு  பொழுதேனும்  பொறேன் என்று  ஈற்றடியிற்   குறிப்பிடுவாராயினர் . “ஆக்கையின்  திண்வலை” யென்புழி  இன் அல்வழிச்சாரியையாகும்  , “தன் பூங்கழலின்  றுணர்ப்போது “ என்புழிப்போல  .  ஒரு வலையுட்பட்ட   பிராணி யின்   வன்மையால்  அவ்வலையறுதலுமுண்டு  .  யாக்கையுட்பட்ட வுயுர்   வினையொழிவு  பெற்று  வீட்டு  நிலை  யெய்துங்காறும்  யாக்கை  தொலை யாமையின்  யாக்கையைத்  “திண்வலை” யென்றார் .யாக்கையாகிய  வலிய  வலையிலகப்பட்டு   எய்தும் துயரத்தை ஒரு கணப்பொழுதேனும்  பொறேன்  என்பார் , “ தினைத்துணையேனும்   பொறேன் துயராக்கையின்றிண்வலயே”  யென்றார்.  திணை –  சிறுமையைக்  குறிக்கும்  ஓரளவு .  தினைத்துணை  நன்றி  செயினும்” என்புழியும்  அப்பொருட்டாதலறிக . ஈண்டுக் காலத்தைப் பற்றி  நின்றது .

                “எத்தனுவினின்று   மிறை  பணியர்க்கில்லை  வினை”  என்றபடி  மெய்யடியாராகிய  அடிகள் எவ்வினைகளைச்  செய்யினும் அவர்க்கு   அவை  பந்தமாகாவாயினும்  , இறை பணி நிற்கும் அன்னார்க்கும் ஒரோவழிப்  பயிற்சி  வயத்தால்  பிராரத்த வினை மெலிதாக  வந்து தாக்குதலும்  உண்டென்ப . இவ்வுண்மையை “இங்குளி வாங்கும்  கலம் போல ஞானிபால் , முன்செய் வினைமாயை  மூண்டிடினும்  “  என்னும்  திருவெண்பாவானும்  , “இறை பணி  நிற்பார்க்குப்  பிராரத்த வினை தாக்குதலுண்டென்பதற்குத்  “தினைத்துணையேனும்  பொறேன்  றுயராக்கையின்றிண் வலையே “ என்றற் றொடக்கத்தான்  அவர்  கூருந்  திருவாக்குகளே   சான்றாதலின் “ என்னும் சிவஞான முனிவர்  கூற்றானும்  உணரலாம் . இத் திருப்பாட்டின்  ஈற்றடி  சிறந்த சிவநெறியுண்மையைப்   புலப்படுத்து நிற்றல் உணர்ந்தின் புறத்தக்கது . இஃது ஆண்டவன்  தம்மைக்  கைவிடாமற்  காத்தற்கு  ஏதுக்  கூறியபடியாம் .  

                 இதன்கண்,  “தினைத்துணையேனும்  பொறேன் றுயராக்கையின்  றிண்வலையே”  என்றதனால்  உடலோடு கூடிய  உலக  வாழ்க்கை  வெறுக்கத் தக்க தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதலறிக .

                                                    ***************************************

பாடல் : 40 .

வலைத்தலை  மானன்ன  நோக்கியர்  நோக்கின்  வலையிற்பட்டு

மிலைத்லைந்  தேனை  விடுதிகண்  டாய்வெண்  மதியினொற்றைக் 

கலைத்தலை   யாய்கரு  ணாகர  னேகயி  லாய  மென்னும்

மலைத்தலை  வாமலை  யாண்மண  வாளவென்  வாழ்  முதலே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  மெய்த்துணையாகிய நின்னை விட்டு  மகளிரைப் பற்றியதோடமையாது  அதனால்  செருக்கி நெறி பிறழ்ந்தும்  நடக்கலானேன் என்று  இறைவனை  நோக்கிக்கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  நடத்தற்கு ஏதுவாகிய  மகளிர்  சார்பில்  தம்மைப்படுத்த  கருவியின்  வலிமையைக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வெள்மதியின்  ஒற்றைக்கலைத்  தலையாய்  =  வெள்ளிய  திங்களின்  ஒரு கலைப் பிறையைத்  தலைக்கணுடையவனே ,

கருணாகரனே  –  அருட்கு  இருப்பிடனாக  வுள்ளவனே ,

கயிலாயம்  என்னும்  மலைத்தலைவா  =  கயிலை என்று  சொல்லப்படும்  மலயில்  எழுந்தருளியிருக்கும்  தலைவனே ,

மலையாள்  மனவாளா  =  மலை  மடந்தையாகிய  உமா தேவியின்  கணவனே ,

என் வாழ்  முதலே  =  எனது  வாழ்க்கைக்கு  மூலகாரணமானவனே ,

வலைத்தலை மான் அன்ன நோக்கியர்  =  வலையிடைப்பட்ட  மானின்  கண்களைப்  போன்ற   கண்களையுடைய  மகளிரது ,

நோக்கு  வலையிற்பட்டு  =  பார்வையாகிய  வலையில்  அகப்பட்டு  ,

 மிலைத்து  அலைந்தேனை  =   மயங்கித் திரிந்த சிறியேனை ,

விடுதி  =  விட்டு விடுவாயோ ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- வெண்மதி என்றது  இனச்சுட்டில்லாப்  பண்பு கொள் பெயராகும் . ஆயுனும்  கந்தபுராண வரலாற்றை  நோக்குமிடத்து , ஒருண்மை  குறிக்கொள்ளத்தக்கது .  பதினாறு  கலைகளையுடைய  திங்கட் செல்வன் தக்கன்  சாபத்தால் பதினைந்து கலைகள் தேய்ந்தொழியப்   பெற்று  , ஒரு கலை  எஞ்சியிருக்குங்கால் , இறைவனைப் புகலடைந்து  குறையிரப்ப  , இறைவன்  அஞ்சற்கவெனக்  கூறித் தன் திருக்கைகளாற் பற்றித்  தலையிற்  சூடினானாக  , அச்சாபம்  ஆங்கு  அணுகாமையோடு  மேலும்  நாடோறும்  ஒவ்வொன்றாகக்  கலைகள் வளர்தலும்  பின்  தேய்தலுமாக  நிகழப்பெற் றான் என்ப . இவ்வரலாற்றிடையே , பதினைந்து கலைகளொழிய  எஞ்சிய  ஒரு கலையோடு   மதி இறைவனை யணூகிய  பொழுது ஒளியிழந்து  “மங்குலினிறங்கொடு வடிவம்  வேறதாம் , திங்கணின் றெம்பிராற் கினைய செப்புவான் “ என்றபடி  கரிய  மதியாயினனெனவும்  ,அந் நிலையில்  இறை யருட்கு   இடனாகிக்  கலைகள் வளரப்பெற்றுப் பழைய  வெண்மை நிறத்தை  யடைந்தானெனவும்  கூறுபவாகலின், அக்குறிப்புத் தோன்ற , “வெண்மதி “ என்றார்  என ஈண்டைக்கியைபுடைமை நோக்கிக்  கோடலுமாம் .

              கந்தபுராணத்துக் கூறியபடி  இறைவன்  தலையிற்  சூடிய  கலை யொன்றென ஈண்டுங் கூறப்பட்டது . சிலப்பதிகார  வுரையாசிரியராகிய  அடியார்க்கு நல்லார் இரண்டு கலையென்பார் ,”சூடினபிறை  இரண்டு  கலையாதலின் “ என்பது அவ்வுரைப்பகுதி . காண்பார்  கட்புலனுக்குஇரண்டு  கலைகளே  புலனாமென்பது  கருதி அவ்வாறு  கூறினார்  போலும் . திங்கட் கலையைப்  பாதுகாத்தற்குத்  தலையை  இடனாக்கியது , புகலடைந்தாரைப்  புரத்திலுள்ள  பேரருட்  குணத்தைப் புலப்படுத்துமென்க . இஃது  ஆதாரக்காப்பாகும் .

               இச்செயல்  நிகழ்ச்சிக்கு ஏதுக்  கூறுவாராய்  அடுத்துக் “கருணாகரனே” என்றனர் . அருட்கிடனானவனே  என்னும்  இதனால் இறைவன்  குணமும்  , ஒற்றைக் கலையைத்  தலைக்கணுடையாய்  என்றதனால் அக்குணத்தின் பயனாகிய  செயலும்   கூறப்பட்டபடியாம் . பயனாகிய  செயலை   முன்னரும்  அதற்கு  ஏதுவாகிய  குணத்தைப்  பின்னரும்  கூறியது  , செயலைக் கொண்டு குணவுண்மை தெளியச்செய்யும் இறைவனது அளப்பரும்  பெருமை   புலப்படற்கென்பது .

                கைலாயமென்பது  அம்மையப்பரின்  திருவிளையாடற்குரிய  பேரின்ப  நிலையம்  என்னும்  பொருளுடையதாகும் .அவ்வாறு  கூறுவன  மறையாகமங்களென்பதும் , பிறர் அதனை ஒரு மலையெனக்  கருதுவர்  என்பதும் , அப்பேரின்ப  நிலையமாகிய  சிவராசதானிக்குப்  பேரரசாக விளங்குவோன்  சிவபெருமானே  யென்பதும்  தோன்றக்  “கைலாயமென்னும்  மலைத்தலைவா “ என்றனர் . “என்னும்”  என்னும் சொல்லாற்றல்  ஈண்டு  கருதத்தக்கது . . “ அண்ணல் வீற்றிருக்கப்  பெற்றதாகலின்  ……..  புண்ணியந் திரண்டுள்ளது  போல்வது “  என்பர்  சேக்கிழார்  . மலயரசாகவுள்ள  இறைவன்  பிறிதொரு  மலையரசன் மகளையே  மணந்து போக மூர்த்தியாகவும்   விளங்குகின்றான் என்பது  புலப்பட , “மலையாண்  மணவாள “ என்றனர்  .பின்னர்  “என் வாழ் முதலே” என்று  அடிகள் கூறினாராயினும் , எல்லா வுயிர்த்  தொகுதிகளுக்கும்   வாழ்வின்  மூலகாரணமாக  விளங்குவோன்  இறைவனேயாவான்  என்பது தெளிவு . அது கைவரப் பெறாதார் இருக்கத்  தம் தெளிவு  ஈதெனக்  கூறியபடியாம் .

                    இங்ஙனங் கூறிய  விளிச்சொற்களாற் பெறப்படுவன ;- முறையே  அடைக்கலம்  புகுந்தாரை  யாதரித்துக்  காக்குஞ் செயலுடைமையும் , அச்செயற்கு  ஏதுவாகிய  அருட்குணமுடைமையும் , அக்குணஞ் செயல்களுக் கேற்ற   தலைமைத்தன்மையுடைமையும் , அத்தன்மைக்குரிய  சத்தியுடை மையும் , உயிர்ப்பன்மைகளின் வாழ்க்கைக்கு   மூலகாரணமாத  லுடைமை யுமாம் . அடிகள் என் வாழ் முதலே  யெனச்  சிறப்பு  முறையில்  விளித்துத்  தம் குறையை  யெடுத்துக் கூறிப்  பாதுகாப்பு  வேண்டுகின்றார் .

                      மகளிர்  கண்களுக்கு  மருட்சியுடைமை பற்றி   மான் விழிகளை  உவமை  கூறுப  . மான்  அன்ன  என்புழி  மான் ஆகுபெயராய்  விழியை  யுணர்த்தும் . அமைதியான நிலையிலே   மான் விழி  மருட்சியுடைய தாகும் .  அம்மான்  வேடரிட்ட  வலையிலகப்பட்ட  பொழுது விழி  அச்சத்தால் மிகவும்  மருண்டதாகுமாதலின்  , “வலைத்தலை  மானன்ன நோக்கியார் “ என்றார் . இவ்விழி  மருட்சி  பிறிதொரு    பொருள் கண்டு  கலங்கிய  நிலையிலும்   , பிறிதொரு  பொருளைக்  கலக்க முறுத்தும்  நிலையிலும் உண்டாவதாகும் .இங்கே  மகளிர் கண்கள் , ஆடவராகிய  பிறரைத்  தம் வயப்படுத்துக்  கலக்க முறுத்தற்கு   மேற்கொண்டனவென்க. . நோக்கு  –  பார்வை . நோக்கின் வலை யென்புழி  இன்  அல்வழிச்  சாரியை  .  மகளிர்  கண்களின்   நோக்கை  நோய்  செய்யும்  நோக்கெனவும் , அதற்கு  மருந்தாய நோக்கெனவும்   இருதிறப்படுத் துக்  கூறுப . “இருநோக்கிவளுண்க ணுள்ள   தொரு நோக்கு, நோய் நோக்கு மகளிர்  மனத்தினாய  காமக்  குறிப்பினை   வெளிப்படுப்பதாகும் . மருந்தாய  நோக்கு   அந்  நோய்  தீர்தற்கு  வாயிலாகிய  காதற்குறிப்பைப்  புலப்படுப்ப தாகும் .  

               இவ்விருதிறமும் ஆடவரை வயப்படுத்தும் இயல்பு  கருதி “நோக்குவலை” என்னப்பட்டது . அவ்வலையிற் சிக்குண்டு   கடக்க வியலாமையால்  மயங்கி அப்பிணிப்போடு  அங்கு மிங்கும்  அலையலா னேன்  என்பார் , “ மிலைத்தலைந்தேனை “ யென்றார். ஒரு தீய செயலைச்  செய்தவன் அதனை நினைந்து இரங்குதல் , பின் அச்செயலில் தலைப்படா மைக்கு  ஏதுவாகும் .  ஆதலின் , அம்முறையில்  கழிந்ததற்கு இரங்கலாக  “மிலைத்தலைந்தேன்” என இறந்த காலத்தாற்  கூறினர். அங்ஙனம் கழிந்ததற்கு  இரங்கினாராயினும் ,அத்தீவினைப்பயன்  காரணமாக  இறை யருட்கிடனாகாமல் , அப்பெருமானாற்  கைவிடப்படுவேன்  கொல் என அஞ்சி  “ விடுதி கண்டா” யென்றார் . இறைவ, சிறியேன் செய்த பிழையை யறிந்து நின்னைப்  புகலடைந்தேன் ; இந் நிலையில் நின் பேரருள் காரணமாக  என்னைக்  கைவிடாமற்  காத்தருள வேண்டுமென்று  அடிகள்விண்ணப்பித்துக் கொண்டவாறாம் .

              இதன்கண்,  “வலைத்தலை மானன்ன  நோக்கியார்  நோக்கின்  வலையிற்பட்டு  மிலைத்தலைந்தேன் “  என்றதனால்  உலக  வாழ்க்கை துன்புறுதற்கு  ஏதுவாமென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                          **************************************

பாடல்:41 .

முதலைச்செவ்  வாய்ச்சியர்  வேட்கைவெந்  நீரிற்  கடிப்பமூழ்கி

விதலைச்செவ்  வேனை  விடுதிகண்  டாய்விடக்  கூன்மிடைந்த

சிதலைச்செய்  காயம்  பொறேன்சிவ  னேமுறை யோமுறையோ 

திதலைச்செய்  பூண்  முலை  மங்கைபங்  காவென்  சிவகதியே

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் மகளிர்  சார்பில்  தம்மைப்படுத்த கருவியின் வலிமை  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  , அக்கருவியால் பற்றப்பட்டுத்  தாம் எய்திய வீழ்ச்சி  நிலையையும் , அதனால்  நோய்த் தொடர்புடைய ஊனுடலைப்  பொறாமையையும்  புலப்படுத்து இரங்குகின் றார் . 

பதவுரை :-  திதலை  செய்  பூண் முலை  மங்கை பங்கா  =   தேமல் படர்ந்த அணிகளன் விளங்கும்  நிகில்களையுடைய  உமையம்மையை  யொரு  கூற்றிலுடையவனே  ,

என் சிவகதியே  =  எனக்கு  வீடு பேறாக வுள்ளவனே

வேட்கை  வெந்நீரில்  மூழ்கி  =  காமமாகிய  வெந்நீரில்  முழுகி ,

செவ்வாய்ச்சியர்  முதலை கடிப்ப  =   சிவந்த வாயினையுடைய  மகளிராகிய  முதலை  கடிப்ப ,

விதலை  செய்வேனை  விடுதி  =  அதனால்  நடுக்கம்  எய்துகின்ற  சிறியேனைக்  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

விடக்கு  ஊன்மிடைந்த   =  புலால்  நாற்றமிக்க  இறைச்சி  செறிந்த  ,

சிதலை  செய்  காயம்  பொறேன்  =  நோய்  விளைக்கும்  உடலைத்  தாங்கலாற்றேன் ,

சிவனே  முறையோ  முறையோ  =  சிவபெருமானே  (இவ்வுடல்  வாழ்க்கையில் என்னையிருத்தல்)  முறையாகுமா?  முறையாகுமா?  என்பது . 

விளக்கவுரை :- உமையம்மையார்க்குக்  கூறிய  அடைமொழி  உலகெலா மீண்றுங்  கன்னியாயிருக்கும்  இயல்பையும்  , அணிகலன்  என்றும்  அழியாத மங்கலத் தன்மையுடைமையையும் குறிப்பனவாம் . “மங்கை பங்கா”  வென்பதனையடுத்து  “என் சிவகதியே “ என்றனர் ; போகியாயிருந்துயுர்க்குப்   போகத்தைப்  புரிந்து , யோகியாய்  யோகமூர்த்தியுதவும் இறையியல்பு, புலப்படற் கென்பது  .  மேலும் அருளுருவினளாகிய அம்மையை வழிபட்டு அவள் மூலம்  அப்பனையடைதல் வேண்டுமென்னும் உண்மையும்  பெறப்படவைத்தவாறாம் . “அவனருளாலே  யவன்றாள்  வணங்கி” என்பதும் அது .  சிவகதி  –  வீடுபேறு . இச்சொல்லை  இப்பொருளில்  பிற சமயத்தாரும்  எடுத்தாளுவர் . “சினவரன் றேவன் சிவகதி நாயகன் “  என்பது  சிலப்பதிகாரம் . இது  பொதுவாகப்  பிற சமயத்து வீட்டு  நெறியையுங்  குறிக்குமாயினும்  , சிறப்பாகச்  சிவநெறி யின்பத்தையே  புலப்படுத்து மென்பது சொல்லாற்றலாற் கண்ட  தெளிவாகும் . இவ்வுண்மை குறிக் கொண்டே  பொது நீக்கிச்  சிவபெருமானைப்  பற்றிய  அடிகள் , “என் சிவகதியே” எனத் தம் உரிமை   தோன்றக் கூறினர் .

                      வேட்கை  மகளிரைப்பற்றியதாகலின் காமத்தைக்குறிக்கும் . விரும்பிச்சார்ந்தாரை  நோய்  முதலியவற்றால்  துன்புறுத்துச் சுடுதலாற்  காமத்தை வெந்நீரென்றார் . உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற் , கொள்ளினுஞ் சுட்டிடும்  “  என்பர்  கச்சியப்ப சிவாசாரியர் . மூழ்குதல் – அமிழ்தல் .  மூழ்குதற்குப்  பெருக்கமாகிய  நீர் நிலையிலுள்ள  தண்ணீரே  ஏற்றதென்பது , உலகியலிற்  கண்டது .  அதற்கு  மாறாக  ஈண்டு  அடிகள் தாம் மூழ்குதற்குரியது  காமப் பெருக்கமாகிய  வெந்நீராயிற்றென்றார்.  மூழ்குதலால்  உண்டாம்  துன்பத்தோடு  சுடுதற்  றுன்பமுஞ் செய்தல் பற்றி . இங்ஙனம்  மூழ்குதலானும்  வெப்பத்தானும்  துன்புறும்  நிலையில் முதலையாற்  கடிக்கப்படுதலும்  நேருமாயின்  , அப்பொழுதுண்டாம்  ஏதத்திற்கு   அளவின்றென்பது கருத்து .  செவ்வாய்ச்சியர்  என்றது .  

                 இனிய  பேச்சினாலும்  சுவையினாலும்  ஆடவர்  செவிக்கும்  நாவிற்கும்  இன்பஞ் செய்து  தம்  வயப்படுத்தும் மகளிர்  கருவிச்  சிறப்புத்  தோன்றற்கு   என்க . “நெடும்  புனலுள் வெல்லு  முதலை” என்றபடி  நீர்ப் பெருக்கில்  எல்லாப்  பிராணிகளையும்  வெல்லும்  ஆற்றல்  முதலைக்கு  உளதாதல்  போலக்  காமவயப்பட்டார் யாவராயினும்  அவரைத்  துன்புறுத் தும்  இயல்பு  மகளிர்க்கு  உளதாம்  என்பது  தோன்ற  , அவர்  முதலையாக  உருவகஞ் செய்யப்பட்டனர்   மூழ்கிய  நீர்   வெந்நீராதலானும்  ,ஆங்கு   முதலையாற்  கடிக்கப்  பட்டமையானும்   நடுக்கம்  பெரிதாயிற்றென்பார் , “விதலைச் செய்வேனை”  என்றார் .  இத் திருப்பாட்டின்  முதலடிக்குச்  செங்கிடை  போன்ற  சிவந்த வாயினையுடைய  மகளிரைப்பற்றிய   காமமாகிய  விரும்பத்தக்க  நீரில்  மூழ்கி  எனப்  பதப்பொருள்  கோடலுமாம் .  இங்ஙனம்  கொள்ளுங்கால் , முதலை  யென்னும்  சொற்குச்  செந்நெட்டி யெனவும் , கடிப்ப  என்பதற்குக்   கடியென்னும்  உரிச்சொல்லடியாகப்  பிறந்த வினைச் சொல்லாகக்  கொண்டு  அச்சந் தோன்ற   எனவும்  பொருள் கொள்ளல்  வேண்டும் .

               இறைவ!  காமக்கடலுள்  மூழ்கிக்  கடுந்துயரெய்தும்  இந்நிலையிற்  சிறியேனைக்  கைவிடலாகாதென்பார் , “ “விடுதி கண்டாய்”  என்றார் . இவ்வாறு  விண்ணப்பஞ் செய்து கொண்டு தம் ஆற்றாமையை  இறைவன் பாற்  கூறி  முறையிடுதல் பின்வருவது . முடையார்  புழுக்கூடு  , ஊனார்  புழுக்கூடு   என்று  உடலை  முன்னர்க்  கூறினர் .  ஈண்டு  இவ்வுடல்  முடை நாற்றமுள்ள   இறைச்சிச்  செறிவளவில்  இருப்பின்  அருவருக்கத்தக்க  நிலையிலாவது  இருந்தொழியும் . அங்ஙனமுமின்றி  நோய்க்கு  இடனாகவும்   அமைந்திருத்தலால்  , அருவருப்போடு   துன்பமும்  விளைத்துப்  பொறுக்கலாகா  நிலையிலிருக்கின்றதே ! என் செய்வல்  என்பார் .,  “விடக்கூன்  மிடைந்த  சிதலைச்  செய்காயம்  பொறேன் “ என்றார் .  காயத்திற்குள்ள அடைமொழிகள் அதனைப்  பொறுக்க   இயலாமைக்கு  ஏதுக்களாம் . அவ்வேதுக்களுள் ஒன்றாகிய  நோய்த்தொடர்பிற்கு  , முதலடியிற்  கூறிய   காம  வீழ்ச்சி  காரணமென்பதுங் கருதத்தக்கது . நோய்க்கு  நிலைக்களனாய்  அருவருப்பு  விளைக்கும்   உடற்பொறையைத்  தாங்கலாற்றாமையான்  உண்டாய  அவலத்தான்  இறைவனைக்  கூவிய ழைத்து  முறையிடுவாராய்ச்  , “சிவனே  முறையோ  முறையோ  “ என்றனர் .

              சிவம்  என்னுஞ் சொல்  தூய  பேரின்பத்தைக்  குறிக்குமாதலின் , தமக்கு  ஏற்பட்ட துன்ப நீக்கத்தோடு இன்பப் பேறும்  வேண்டி அப்பெயரால்  கூவி   முறையிடுவாராயினர்  .  உலகியலில்  முறையீடாவது  , ஒருவன்  தனக்குப்  பகை  முதலியவற்றால்  கடக்க  முடியாத  நலிவு  நேர்ந்தவிடத்து , அரசனை யடுத்து  நீதி  வழங்க  வேண்டுதலாகும் .  அங்ஙனமே  அழியும்  இயல்பினதாகிய  உடலோடு  கூடி  வாழ்தலில்  நோய்  முதலிய  வற்றால் நேரும்  துன்பத்தை யாற்றாமல்  , அதனொழிவோடு  அழிவிலின்பப்  பேறும்   வேண்டிக்  கடவுட்  பேரரசாகிய  இறைவனிடத்து  அருணீதி குறித்துச்  செய்த  முறையீடாகுமென்பது .

          இத்திருப்பாட்டின்  முதலடியிற்  கூறியபடி  செய்த  காம  வீழ்ச்சியாகிய  தவறு  உணரப்பட்டதென்பதும் , அவ்வுணச்சியின்  பயனாக  இரண்டு  மூன்றாம்  அடிகளிற்  கூறப்பட்டபடி  காயம்  பொறாமையாகிய  முறையீடு  செய்யப்பட்ட தென்பதும்  அடிகள் கருத்தென  உய்த்துணரத்தக்கன .

         இதன்கண், “விடக்கூன்  மிடைய்ந்த  சிதலைச்  செய்  காயம்  பொறேன் “  என்றதனால் , உலக  வாழ்க்கை வெறுக்கத்தக்கதென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                              **************************************

பாடல் : 42 .

கதியடி  யேற்குன்  கழல்தந்  தருளவும்  ஊன்கழியா

விதியடி  யேனை  விடுதிகண்  டாய்வெண்  டலைமுழையிற் 

பதியுடை  வாளரப்  பார்த்திறை   பைத்துச்  சுருங்கவஞ்சி 

மதிநெடு  நீரிற்  குளித்தொளிக்  குஞ்சடை  மன்னவனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  காம  வீழ்ச்சியால்   நோய்த் தொடர்புடைய  ஊனுடல்  பொறாமையை  நினைந்து  இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  இவ்வூனுடல்  கழிதற்கு  ஏதுவாக  நின் திருவடிச்சார்பை  வழங்கியும்  , என்  வல்வினைப் பயனாகிய  ஊழ்  தடைப்படுத்து கின்றதே  யென  இரங்குகின்றார் .

பதவுரை :- வெண் தலை முழயில்  பதியுடை வாள் அர  =  வெண்மை நிறத்தாகிய   தலையின்  துளையில்  தங்குதலையுடைய  ஒளி பொருந்திய  பாம்பு ,

பார்த்து இறை பைத்து அஞ்சிச்  சுருங்க  =   அருகிலுள்ள  திங்களைப் பார்த்துச்  சிறிது படம்  விரித்துப் பின் அஞ்சிச் சுருக்கிக்கொள்ள ,

மதி பார்த்து அஞ்சி நெடுநீரில்  குளித்து  ஒளிக்கு சடை  =  அதனைத்  திங்கள் கண்டு  அஞ்சிக் கங்கை  நீரில்  முழுகி மறையும்  சடையினையுடைய  ,

மன்னவனே  =  மன்னவனே

அடியேற்கு  உன் கழல் கதி தந்தருளவும்   =    அடியேனாகிய   எனக்கு  நின் திருவடி  புகலிடம்  வழங்கியருளவும்  ,

ஊன்  கழியா =  இவ்வூனுடலைப்  போக்காமைக்கு  ஏதுவாகிய ,

விதி அடியேனை விடுதி  =  ஊழ் வலியினை  யுடைய  அடியேனை  விட்டு  விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  வெண்டலையின்   வரலாற்றை  இப்பதிகத்து  முப்பதாம்  திருப்பாட்டிற்  காண்க .  முழை  – குகை  ; வெண்டலை யிலுள்ள குகை  போன்ற  சிறிய  துளையிடத்தைக்  குறிக்கும்  . பதிதல்  –  தங்குதல் . அர – அரா; பாம்பு  .  “குறியதனிறுதிச்   சினைகெடவுகரம், அறிய  வருதல் செய்யுளுளுரித்தே  “  என்பது விதி . கலுழனுக்கு  அஞ்சித்  தன்பால்  அடைக்கலம்  புக்கதும், தாருகா வனத்து முனிவர்   வேள்வியிற்றோன்றித்  தனக்குத்  தீங்கிழைக்க  வந்ததும் என இருதிறத்துப்  பாம்புகளையும்  இறைவன்  அணிந்தனன்  என்பர் பெளராணிகர் .  தன்னையடைக்கலம்  புக்கார்  கொடுஞ்செயலுடையராயினும்  அவரையும்  , தனக்குத்  தீங்கி ழைக்க  ஏவப்பட்டு  வந்த கொடியவரையும்  பாதுகாக்கும்  அருட்குணமுடைய வன் இறைவன்  என்பதை  இந் நிகழ்ச்சி   புலப்படுத்துமென்பது .

               பாம்புக்குத்  தலை முழையும்  திங்கட்கு  நீர் நிலையும் தங்குதற்கு இடனாக்கியது , காப்பு  முறையின்  சிறப்பைக்  குறிப்பதாகும்  . தக்க  இடத்தைச்  சார்ந்து கவலையற்றிருந்ததென்பார், “வாளர”  வென்றார். ஒளியுடைமை  உடல்  நலத்தைப்  புலப்படுப்பதாகும் . திங்கட்  பிறையும்  பாம்பும்  அணிமையில்  ஒன்றற்கொன்று  எதிராக  இருக்குப்படி  வைத்து , இறைவன்  சடைக்கண்  அணிந்தனன்  என்பதை  “மென்முயற்  கறையின்,  அரும்பர நேர்வைத்  தணிந்தாய்  “  என்னுந்  திருப்பாட்டில்  அடிகள் கூறி யிருத்தலான் அறிக .  அங்ஙனம்  அணிமையிலுள்ள  நிலையில்  பாம்பு  தலை முழையினின்றும்  வெளிப்பட்டுத்  திங்களைப்பார்த்து  இயல்பாகவுள்ள  பகைக் குணத்தால் சிறிது படம்  விரித்ததென்பதும் , பின்னர்  சார்பு  நிலை  நோக்கித்  தலைவற்கு  அஞ்சிச்  சுருக்கிக்கொண்ட தென்பதும் போதர , “வெண்டலை  முழையிற்  பதியுடை  வாளரப்  பார்த்திறை  பைத்துச்  சுருங்க”  என்றார் . பார்த்தற்குச்  செயப்படுபொருளாக   மதி கொள்ளப்பட்டது .

                அரவின்  செயலாகிய  பார்த்தலை மதிக்கும்  , அஞ்சி  யென்பதைச்  சுருங்கற்கும்  ஒளித்தற்கும்  ஏதுவாக  ஈரிடத்தும்   இயைத்துக் கொள்ளல் வேண்டும்  . இங்ஙனம்  அரவு  படம்  விரித்தலைக்கண்டு  , நேரிலுள்ள மதிப்பிறை   அது தன்னை விழுங்கி விடுமோவென  அஞ்சித்  தனக்கு  ஆதரவாக  அருகிலுள்ள  கங்கைப்பெருக்கில்  முழுகி மறையும் என்பார் , “அஞ்சி மதி நெடு நீரிற்  குளித்தொளிக்கும்  “  என்றார் . மெலியவன்  தன்னின்  வலிய  பகைக்கு  அஞ்சுவன்  என்பதும்  , வலியவன்  மெலியவனை  நலிய  முற்படுங்கால்  அரசியர்க்கு  அஞ்சுவனென்பதும் உலகியலிற்  காணப்படு வன . அம்முறையில்  மதி அரவிற்கு  அஞ்சிற்றென்பதும் , அரவு  இறைவர்க்கு  அஞ்சியது என்பதும் பொருத்தமே  . அரவு  தங்குதற்குரிய  வெண்டலைக்கும்  , மதி குளித் தொளித்தற்குரிய  நெடு நீர்க்கும் சடையை  யிடனாக வுதவிப்  பகைப்பொருள்கள்  தம்மிற்  பகைமை யொழித்து வாழும்  வண்ணம்  அருளாட்சி  புரியும்  கடவுட் பேரரசாவான் இறைவனே  என்பார், “ சடை மன்னவனே” என்றார் . சடை மன்னனென்றது , முடிமன்னரின்மிக்க சிறப்புத் தோன்ற  நின்றது . சிறந்த செங்கோலாட்சியிற்  பசுவும்  புலியும்   ஒரு  துறையில்  நீருண்ணும்  என்னும்  உலகியற்  செய்தியும் ஈண்டு  நினைக்கத் தக்கது .”பாம்பு  மதியும் பகை தீர்த்துடன்  கொளீஇ, நீங்கல்  கொடானே  நெடுந்தகையானே “ என்பர்  திருமூலர் .  

             இனி,  பாம்பு  மாயையையும்  , மதி யமிர்தத்தையும் குறிக்குமென்பது நுண்பொருளாகும்  .இதனால்  இறைவன்  உயிர்களுக்கு  மாயையினின்று   உடல் கரணம்  இடம்  நுகர்வென்னும்  இவற்றைக்  கொடுத்துப்  பாச நீக்கஞ் செய்து , தூய்மைப்படுத்து முடிவில்  அமிர்தமயமான அழிவிலின்பத்தில் தலைப்படுத்துவன்  என்னும்  குறிப்புப்  புலனாமென்பது . இறைவனையும் மயங்காதோவெனின், மயங்காதென்ப . இதனை “விரவுமாயை  யெம்மிடை மை  யாற்றாயினும்  விடந்தான் , அரவை யென் செயும் – குரவமாலையாயெ மக்கது  கொடாதுகாண் மயக்கம்” என்று உமையம்மைக்கு  இறைவன்  அருளிச்செய்த ஞானோபதேசத்தானும்  அறியலாம் . கதி – புகலிடம் ; வீடு . அதனைத் தருதற்கு  வினை முதலாக  இறைவன்   திருவடி  குறிப்பிடப்பட்டது ; அது ஞானமயமாதலின் ,” ஞானத்தால் வீடென்றே  நான்  மறைகள்  புராணம்  நல்லவாகமஞ் சொல்லவல்லவாம்”   என்பது சிவஞானசித்தி .  

              இனி, தருதற்கு வினை முதலாக  இறைவனைக்  கொண்டு, கதியாக உன் கழல் தந்தருளவும் எனக் கோடலும்  ஒன்று . “ திருவடியே  செல் கதியது செப்பிற், றிருவடி யேதஞ்ச முட்டெளிவார்க்கே” என்னும்  திருமந்திரத்தில் இரண்டற்கும்  வேற்றுமை யின்மை  கூறியிருத்தலினென்பது , கதி தந்தருளிய  திருவடிக்குத்  தொண்டு பூண்டொழுகுதலின், அடியேன்  என்று  தம்மைக் கூறிக்கொண்டது  ஈண்டு  இயைபுடைத் தென்க. . கதி ஈண்டுச் சீவன்  முத்தி நிலையைக்  குறிக்குமாதலின்  , அவ்வுயரிய நிலையை  இறைவன்  திருவடி  தமக்கு  எளிதாக  அளித்திருப்பவும்  , அந் நிலையினின்றும் மறிவறியாச்  செல்வம்  பெற்று  இன்புற வேண்டியதே கடமையாக , அதனை  விட்டு  அப் பேற்றிற்குத் தடையாகவுள்ள  இவ்வூனார் புழுக்கூட்டை  விடாமல்  தாங்கி யிருக்கும்  விதியுடையனாயினேனேயென்றிரங்குவார், “கதியடியேற்குன்  கழறத்  தருளவு  மீங்கழியா  விதியடியேன்”  என்றார் .

               ஊன் கழியா  விதி   –  உடலைக்  கழியாமைக்கு  ஏதுவாகிய  வூழ் . இஃது  “இங்குளி வாங்குங் கலம் போல ஞானியன்  , முன் செய்வினை மாயை  மூண்டிடினும்  “ என்னும்  ஞானப்  பனுவலின்படி   மெலிதாக  வந்து தாக்கும்  பிராரத்த வினை வாசனையா மென்பது . ஊன்  கழியா விதியுடையேனாகிய   இந் நிலையிலும்  நின் அடியனாவேனென்பதை  மறந்திலேன்  என்பார் , விதியுடையே   னென்னாது  “விதியடியே” னென்றார் . இது   தம்மைக்  கைவிடாமற் காத்தற்குரிய  ஏது குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . விதியைக்  கடக்கும்  ஆற்றலில்லேனாகிய  யான்  ஊனுடலைக்  கைவிட்டிலேனாயினும் விதித் தொடர்பு  சிறிதுமில்லாத   பேரருளாளனாகிய  நீ யென்னைக்  கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .  

                இதன்கண், “ஊன் கழியா  விதியடியேன்”  என்றதனால்   உடலோடு  கூடிய  உலக  வாழ்க்கை  நற்கதிக்குத்  தடையாமென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                                   *****************************************

பாடல் : 43 . 

மன்னவ  னேயொன்று  மாறறி  யாச்சிறி  யேன்மகிழ்ச்சி

மின்னவ  னேவிட்  டிடுதிகண்  டாய்மிக்க  வேதமெய்ந் நூல்

சொன்னவ  னேசொற்  கழிந்தவ  னேகழி  யாத்தொழும்பர்

முன்னவ  னேபின்னு  மானவ  னேயிம்  முழுதையுமே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  இறைவ , நின் திருவடிச் சார்பு  பெற்றும்  ஊழ் வலியால்  இவ்வூனுடலைக்  கழிக்க இயலாதவனாயினேன்  என்று  இரங்கிக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  நின்னோடு  கலக்கும் நெறியறிந்தன்றோ  இவ்வுடலைக் கழித்தல் வேண்டும் . அந்நெறியையே அறியாத சிறியவனாகவுள்ளேனே ! என் செய்வல் ! என்று  வருந்துகின்றார் .

பதவுரை :-  மிக்க வேதம்  மெய்ந்நூல்  சொன்னவனே  =  சொற்பொருண்மிக்க   மறைகளையும்   மெய்மையான  சிவாகமங்களையும் சொல்லி  யருளியவனே  ,

சொல்  கழிந்தவனே  =  சொற்களுக்கு  எட்டாமல்  அப்பாற்பட்டவனே  ,

கழியாத்தொழும்பர்  முன்னவனே   =  என்றும்  நீங்காத  தொண்டினையுடைய  மெய்யன்பர்க்கு  முன்  நிற்பவனே  ,

பின்னும்  இம் முழுதும் ஆனவனே   =  அவர்க்கு  ஆதரவாகப்  பின்னிற்பவனும்  இவ்வெல்லாமும்  ஆனவனே ,

மன்னவனே  =  நிலை பேறுடையவனே  ,

ஒன்றும்  ஆறு  அறியாச் சிறியேன்  =  நின்னோடு  கலக்கும்  நெறியறியாத  சிறியவனாகிய  எனக்கு ,

மகிழ்ச்சி மின்னவனே  =  ஆனந்த விளக்கமாகத்  திகழ்பவனே  ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- சிவநெறிக்கு  மறை  பொதுநூலும் , சிவாகமம்  சிறப்பு  நூலும்  ஆகும் . “ வேதமோடாகமம்  மெய்யாம்  இறைவனூல் , ஓதும் பொதுவுஞ்  சிறப்புமென் றுன்னுக “  என்பது  திருமந்திரம்  . வேதத்துள் உபசாரமாக  இந்திரன்  முதலிய  தேவர்களுக்கும்  தலைமை  கூறப்படும்  . சிவாகமங்க ளுள்  பரமபதியாகிய  சிவபிரான்  ஒருவனுக்கே  தலைமை  கூறப்படும்  .  வேதம் பல தேவர்களையும்   தலைவரெனக்  கூறிச்  சேறலின்  , பொருட்டெளிவு  துணிவார்க்குக்  கலக்கஞ் செய்யும்  இயல்பினதாய்ச்  சொற்பொருட்  பெருக்க  முடையதாகும்  . சிவாகமம்  மெய்ப்பொருள் விளக்கித்  தெளிவிப் பதில்  சிறந்து விளங்குவதாகும் . இக்குறிப்புத்  தோன்றவே  , “மிக்க வேதம்” எனவும்  ,” மெய்ந்நூல்” எனவும்  முறையே  கூறப்பட்டன .

          சனகர்  முதலிய  முனிவர்கள்  பல  ஆண்டுகளாக  வேதத்தைப்  பயின்றும்  , மெய்யுணர்வு  கைவரப் பெறாமையால் , இறைவனை  யணுகிக்  குறையிரப்ப  , இறைவன்  சிவாகமங்களை  அவர்க்கு   உபதேசித்து மெய்ப்பொருளுண்மை  தெளிவித்தனன்  என்று  கந்தபுராணங்கூறும் . இவ்வுண்மையை “பொருட் பெருங் கடலாம்   வேதம்  புடைதொறு மலையப்ப விந்நாள் “ , எனவும்  “முந்துறை  சனகனாதி  முனிவரர் தொழுது  கேட்ப  , அந்தமி  லாகமத்தின்னரும்பத மூன்றுங்கூறப்  , புந்திய  தொடுங்கு ஞானபோதகம் “ எனவும்  போந்த செய்யுட்  பகுதிகளால்  அறிக .  இங்ஙனம் பொதுவுஞ்  சிறப்புமாகிய   மறையாகமங்களை  அருளிச்செய்தவன்  சிவபிரானே  என்பவாதலின், “மிக்க  வேத மெய்ந்நூல்  சொன்னவனே”  என்றார் .

          சொல்  என்பது நூல்  அளவையைக்  குறிக்கும்  . நூல்களின்  வாயிலாக  இறைவனியல்பை  ஓராற்றான்  அறியலாமேயன்றி  ,ஒன்றியுணர்தலாகிய  அநுபவம்  எய்தலரிதென்ப . “நூலுணர்வுணரா  நுண்ணியோன் “ என  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  அறிக . இனி , வாக்கு  மனம்  இரண்டனை யும்  முறையே  பாச ஞானம்  பசு ஞானமென்று  சிவஞான  போதங்   கூறுமாத லின் , பாச ஞான பசு ஞானங்கட்கு  எட்டாதவன்  என்பதும்  பெறப்பட்ட வா றாம் .  “ஊனக்  கண்பாசம்  உணராப்பதியே” என்னும்  சூத்திரப் பகுதியானும்   “அவன்  வாக்கு  மானதீத  கோசரமாய்  நிற்றலாம் “ என்னும்  அதன்  உரைப் பகுதியானும்  உணர்க . “ வாக்கு  நாதமுடிவான  பாசஞானமும்  , மனம் பசு ஞான முமாம் “ என்பர்  சிவஞான  முனிவர் . “மாற்ற   மனங்கழிய   நின்ற  மறையோனே”  என்னும்  அடிகள் திருவாக்கும்  இவ்வுண்மையைப் புலப்ப டுத்தும் .மறையாகமங்களை  யருளிய  இறைவன்  திறாவுள்ளம், மக்கள்  அவற்றை  யோதியுணர்ந்து அநுபவ  முறையில்  ஒழுகி  நலனடைய  வேண்டு மென்பதே  யாதலின்  , அநுபவத்தில் தலைப்படாமல்  ஓதிய  அளவில்  நின்று விடுவாராயின்  , இறையருட்கு  அணுக்கராதல்  அரிதென்பது தோன்ற  “சொன்னவனே   சொற்கழிந்தவனே” யென்றார் .  கழியாமையைத்  தொழுப்பிற்  கேற்றுக  என்றும்  இடையறாத  சிவத்தொண்டென்பது . “ஈறலாவொன்று பல, வாறே தொழும்பாகுமங்கு “  என்பதனாலும்  , “சேதனப்  பிரபஞ்சம்  வீடுபேற்றின்  கண்ணும்  பலவாற்றானும்  பரம்பொருளுக்கு   அடிமையாமென்க .”  என்னும்  அதனுரையானும்  உயிர்க்கு  கட்டு வீடு  என்னும்  எக்காலத்தும்  தொழும்பு  நீங்காமையுணர்க .  

            மெய்யன்பர்  கடமை  இறைபணி  செய்தலும்  , இறையருட்  கடமை  அவரைப்  பாதுகாத்து இன்புறுத்தலுமாமென்ப  . “என் கடன் பணி செய்து கிடப்பதே “ தன் கடன்  அடியேனையுந்  தாங்குதல் “ என்பது தமிழ் மறை  . இவ்வுண்மை  தோன்றவே  , “கழியாத் தொழும்பர் “  என  மெய்யன்பரையும்  அவரைப் பாதுகாக்கும்  அருட்கடமை  யுண்மை  குறித்து அவர்க்கு  முன்னும்  பின்னும்  ஆனவனே  யென இறைவனையும்  குறிப்பிடுவாராயினர் .  செந் நெறிச்  செலவுடைய  மெய்யன்பர்க்குச்  சரியை முதலிய  நெறிகள்  சோபான முறையாக  அமந்தன வென்று  சிவநெறிப்பனுவல்  கூறும் . சோபானம்  என்பது ஒன்றன்  மேலொன்றாக அமைக்கப்படும்   படிக்கட்டுக்களை யுணர்த்தும் .

                ஆகவே  அடுக்காகவுள்ள  படிக்கட்டிலேறி  மேனிலை  யடையச்  செல்வார்க்குக்  கவர் வழி  நேர்ந்துழிச்  , செந்நெறிகாட்டும்   வழிகாட்டியாக  முன்னரொருவரும்  , படிக்கட்டில்  கால் நழுவி  வீழாவாறு  பின்னரொருவரும்  தவறி   வீழாதபடி  பக்கங்களிற்   சிலரும்  நின்று  ஆதரவளித்தல்  போல , வீட்டு  நிலையை அடையச்  சரியை முதலிய  நெறிச்  செல்வார்க்கு  ஆதரவாக  முன்னும்  பின்னும்  பக்கங்களும்   ஆகிய  இவ்வெல்லாவிடத்தும்  நின்று  பாதுகாப்பவன்  இறைவன்  ஒருவனேயாதலின்  , “முன்னவனே  பின்னுமானவனேயிம்  முழுதையுமே  “ என்றனர் . முழுதையும்  என்புழி  ஐகாரம்  சாரியையாகும்  . இம்முலுதையும்  என்புழிச்  சுட்டு  முன் பின்  என்பவற்றோடு    பக்கங்களையும்  குறிப்பதாகும் .

                 மன்னவன்  என்பது  ஈண்டு  நிலைபேறுடையவன்  என்னும்  பொருட்டு,  மன்னுதல் – நிலைபெறுதல்  . யாண்டும்  நிறை  பொருளாக  நிலையுறுதல் பெற்று  விளங்கும்  இறை நிறைவுள் இருந்தும் , கலந்து இன்பம்  நுகர்தற்கு ரிய  நெறியறியாத சிறுமையுடையேன்   என்பார் . “மன்னவனே  யொன்று  மாறறியாச் சிறியேன் “  என்றார் .  ஒன்றுதல் – கலத்தல் . சீவன்  முத்தி நிலையுலுள்ள  அடிகள் பரமுத்தியடைய  விரைகின்றனராதலின்  , அதற்குரிய நெறியறியாமை பற்றி இரங்குவாராயினர்  .மகிழ்ச்சி  மின்னவன் என்பது  ஆனந்த விளக்கமாக வுள்ளவன்  என்னும்  பொருட்டு . சாதன முற்றுப்  பெற்றவழி ஓருயிர்க்குப்  பாச நீக்கமும்  சிவப்பேறும்  உண்டாமென்ப  . இருள் நீக்கத்தாற் கண்ணுக்குப்பொருள் விளங்க முண்டாதலும் அதன்பின் அப் பொருளை யழுந்தியறிதலும் நிகழுமாறு போலப், பாச நீக்கத்தால் அருள் விளக்கமும்  அதன்பின்  சிவப்பேறாகிய ஆனந்த விளக்கமும் உண்டாவனவாம் .  

                அருள் விளக்கத்தில்  உயிர்க்கு  அறிவு  செயல்  இரண்டுந் தொழிற் படுதலும்  , ஆனந்த விளக்கத்தில் அறிவிச்சை செயல் மூன்றுந்  தொழிற் படுதலும் வேறுபாடென்ப .  ஆனந்த விளக்கமே பேரின்ப நுகர்ச்சிக்கு உரியதாகும் . அப் பேறு இறைவனோடு  ஒன்றுபட்ட வழியுண்டாவது . ஈண்டு  அடிகள் , ஒன்று  மாறறியாச்  சிறுமையுடைய  தமக்கு  இந் நிலையிலும் பெறுதற்கரிய  ஆனந்த விளக்கமாக நின்று  இன்புறுத்தும் இறைவனது பேரருட்  குணத்திலீடுபட்டு  இவ்வாறு விளிகொள்ளலானார் என்பது .  

                இங்ஙனம்  ஒன்றுபட்டு எய்தற்குரிய ஆனந்த விளக்கம் ஒன்றுபடாத நிலையிலும்  எளிவரப்பெறும் உண்மையை ,”உணர்வினேர்  பெரவருஞ் சிவபோகத்தை யொழிவின்றி யுருவின்கண் , அணையுமைம்   பொறியளவினு  மெளிவர வருளினை யெனப் போற்றி “ என்று  திருஞான சம்பந்த மூர்த்திகள் அநுபவ  நிலையில்  வைத்துச்  சேக்கிழார்  கூறியவற்றா னும்  அறிக .ஒன்றும்  நெறியறியாத சிறியவன்  என்பதை  யுணர்ந்தும் பெறு தற்கரிய   ஆனந்த விளக்கமாகக்  காட்சி  நல்கிய இந் நிலையில்  என்னைக்  கைவிடல்  தகுமாவென்பார்  , “விட்டிடுதி கண்டாய்” என்றார் . இனி, ஒன்றும்  அறியாத எனப் பொருள் கோடலுமாம் .

            இதன்கண், ஒன்றுமாற றியாச் சிறுமைக்கு ஏது உலகப்பற்றென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                         **************************************

பாடல் : 44 .

முழுதயில்  வேற்கண்  ணியரென்னு  மூரித்  தழன்முழுகும்

விழுதனை  யேனை  விடுதிகண்  டாய்நின்  வெறிமலர்த்தாள்

தொழுதுசெல்  வானத்  தொழும்பரிற்  கூட்டிடு  சோத்தெம்பிரான் 

பழுதுசெய்  வேனை  விடேலுடை  யாயுன்னைப்  பாடுவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  சிவப்பேற்றிற் கேதுவாக  இரைவனோடு  கலத்தற்குரிய  நெறியறியாமைக்கு இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  பேரின்ப வடிவினனாகிய  இறைவனோடு  கலக்கும் நெறியறியாமையோடு  , துன்பத்தை  விளைக்கும்  காமங் காரணமாக  மகளிரோடு  கலக்கும்  சிறுமையும்  உடையனாயினேனே  யென  இரங்கி  , இந் நிலையிற்   கைவிடலாகாதென  விண்ணப்பஞ் செது கொள்ளுகின்றார் .

பதவுரை :- எம்பிரான்  =  எங்கள்  ஆண்டவனே  ,

அயில் வேல்   கண்ணியர்  என்னும்  =  கூர்மையுடைய  வேற்படை  போன்ற  கண்களையுடைய   மகளிராகிய  ,

மூரி தழல் முழுது முழுகும்  விழுது  அனையேனை  =  பெரிய  நெருப்பில்  முற்றும்  அமிழ்ந்து போம்   வெண்ணெய்   போன்ற  சிறியேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ? ,

உடையாய்  =  என்னை  உடையாய்  ,

உன்னய்ப் பாடுவனே  =  நின்னைக் குறித்துப்  பாடுவேனோ?  (அது செய்திலேன்) ,

பழுது செய்வேனை  விடேல்  =  குற்றமே  புரிகின்ற  என்னைக்  கைவிடலாகாது ,

சோத்து  =  வணக்கம் ,  

நின் வெறி மலர் தாள்   =    தேன்  நிறைந்த  தாமரை  மலர்  போன்ற   நின்திருவடிகளை  ,

தொழுது  வானம்  செல்  தொழும்பரில்  கூட்டிடு  =  வணங்கிச்  சிற்பரவெளி  நோக்கிச்  செல்லுகின்ற  தொண்டரோடு  சேர்ப்பிப்பாயாக  என்பது .

விளக்கவுரை :-  அறிவுடையுலகம்  அடிமையாக  ஆண்டானெனவும்  , அறிவுலகம்  உடைமையாக  உடையானெனவும்  இறைவன்  கூறப்படுதலில் ,  “எம்பிரான்”  , “ உடையாய் “ என விளி கொள்ளலானார்.  அயில்  –  கூர்மை . உவமமாகிய  வேற்படைக்குக்  கூர்மை  கூறியது  , கடைக்கண் ஆற்றல்  புலப்படற்காம் . மகளிர் கடைக்கண்ணால் ஆடவர்  நெஞ்சைக்  கொள்ளை  கொள்வர்  என்பது குறிப்பு . “கூர்த்த நயனக்  கொள்ளையிற்  பிழைத்தும் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறி  யிருத்தலும்  அறிக . நாற்பத்தொன் றாம்  திருப்பாட்டில்   மகளிர்  முதலையாக  உருவகஞ் செய்யப்பட்டனர் . முதலை  கிடக்கும்  நீர் நிலையில்  மூழ்கினவன்  முதலையாற்  கடிக்கப்படா மல்   ஒரோவழித்  தப்புதலுங்கூடும் .  நெருப்பில்  அமிழ்ந்த  வெண்ணெய்  எவ்வாற்றானும் உருகியழிந்தே விடும் .  

              இக்கருத்துப்  புலப்படவே ஈண்டு  மகளிர்  நெருப்பாக உருவகிக்கப் பட்டனர்  . முழுகும்  பொருள்  சிறிதாகவும்  அதற்கு இடனாய  பொருள்  பெரிதாகவும்  இருத்தல்  இயல்பாதலின்  ,”மூரித்தழல்” என்றார் .  மூரி – பெருமை  ; வலிமையுமாம், விழுது – வெண்ணெய்  . முழுது எஞ்சாமைப்  பொருட்டு .  முழுது முழுகும் என்றது , தீயின்  பெருக்கத்துள்  அடங்கிச்  சிறிதும் எஞ்சாமல் முற்றும்  அமிழ்ந்து அழியும்  என்னும்  குறிப்புத் தோன்ற  நின்றது . இங்ஙனம்  காம  முதலியவற்றால்  கரைந்தழியும்  நிலைமையில்  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ  என்பார் , “விடுதி கண்டாய் “ என்றனர் .  

                பாடுவனே  என்புழி ஏகாரம்  எதிர்மறை குறித்து  நின்ற  வினாப் பொருட்டு . மன மொழி மெய் மூன்றனுட்  சிறந்தது மனம் . அது மகளிர் பாலதாக  மொழியளவிலேனும்  நின்னைக் குறித்துப் பணி செய்திலேனே  யென்பார் .  “பாடுவனே”  எனவும்  , நினைத்தலும்  பாடுதலும் செய்யாமல்  மனத்தாலும்  மொழியாலும்  யான்  செய்வது தீமையே  யென்பார், “பழுது செய்வேனை “  யெனவும்  கூறினர் .  பழுது – குற்றம் .  இது மூரித்தழன்  முழுகு தலானும்  , இறைவனைப்  பாடுதலின்மையானும்  முறையே  மனத்தையும்  மொழியையும்  பற்றியதாகும்  . முக்கரணங்களுள்  மனமும் மொழியும்  பிழைபட்டனவாக  உடலளவில்  யான்  செய்யும்  வணக்கத்தை யேனும்  ஏற்றுச்  சிறியேனைக் கைவிடலாகாதென்பார், “விடேல் “எனவும்  , “சேர்த்து”  எனவும்  கூறினர் . சோத்து –  சோத்தம் ; இழிந்தார்  செய்யும்  வணக்கம் . இழிவு மனமொழி மெய்கள் வேறுபடப் பெற்றது . வணக்கம்  என்று  நாவளவிற்  கூறி  அது செய்யாமையை  உலகியலிலும்  காண்கின்றோம் . அக்குறிப்பும்  தோன்ற நின்றதென்க .

                 உலகியலில்  ஈடுபட்டார்க்குக்  புறத்தே  நிகழும்  ஐம்புல நுகர்ச்சிக்கு  உலகம்  பற்றுக்கோடாதல்  போல , உலகியற் பற்றோழித்த மெய்யுணர்வுடை யார்க்கு  அகத்தே   சிவாகாரமாக  நிகழும்  அநுபவத்திற்கு இறைவன்  திருவடி பற்றுக்கோடாம்  என்னும்  உண்மை  தோன்ற ,“நின்நெறிமார்த்தாள்” என இறைவன்  திருவடி  விசேடிக்கப்பட்டது . தேன்  நிறைந்த  மலர்  என்றதனால்   ஐம்புலநுகர்ச்சி  நுண்ணிதிற்  பெறப்படுவதாகும்  . தேனாற் சுவையும்  , வண்ணத்தால்  ஒளியும்  ,மென்மைத்தன்மையால்  ஊறும்  , தேனுகரும்  வண்டின்  ஒலியால்  ஓசையும்  , நறுமணத்தால்  நாற்றமும்  உடைமையால் , மலர்  ஐம்புல  நுகர்ச்சிக்கும்  நிலைக்களனாதல்  அறியத்தக்கது . ஆகவே  ஈண்டுப்  புறத்தே  நிகழும்  ஐம்புலநுகர்ச்சிக்கும்  மலர்  பற்றுக் கோடாயது  போல , இறைவனுடைய   மலர்  போன்ற  திருவடி  அகத்தே  நிகழும்  சிவாநுபவ  நுகர்ச்சிக்குப்  பற்றுக்கோடாகுமென்பது . ஐம்புல நுகர்வை  உண்முகமாக  வைத்து உணர்தல்  மெய்ஞ் ஞானிகள் இயல்பென்பதை  “அஞ்சு மடக்கில்  அசேதன மாமென்றிட்டு, அஞ்சு மடக்கா  அறிவறிந்தேனே”  என்னும்  திருமந்திரத்தானு முணரலாம் .அகத்தே  இறைவன்   திருவடியைப்  பற்றிய  இன்பநுகர்ச்சியிலீடுபட்ட   அப்பரடிகள் இவ்வுண்மைப்  புலப்பட   ,

மாசில்  வீணையு  மாலை  மதியமும்

வீசு தென்றலும்  வீங்கிள  வேனிலும் 

மூசு  வண்டறை  பொய்கையும்  போன்றதே

யீச  நெந்தை யிணையடி  நீழலே “

               

 

என்றருளிச்  செய்திருத்தலும்   இங்கே  நினைவு  கூறத்தக்கது , வீணையால்  ஓசையும் , மதியத்தால்  ஒளியும்  தென்றலால்  ஊறும்  ,இளவேனிலால்  நாற்றமும்  , பொய்கையால்  சுவையும்  பெறப்பட்டவாறறிக . வீணை  முதலிய  ஐந்தனையும்  போன்றது ஈசனெந்தை இணையடி  நீழல்  என்றது அப்பர்  அநுபவமாகும் .  

              பேரின்ப விளைவாகிய  இறைவனடியைப்  பற்றித் தொண்டு  பூண்டு  ஒழுகும்  மெய்யன்பர்   அத் தொண்டினால்  நுண்ணிய ஞானப்  பரவெளியை நோக்கிச்  செல்லும்  செந்நெறிச்  செலவுடையராவராதலின்  , தொழுது என்னும்  வினையெச்சம் காரணப் பொருட்டாகும் . இச் செந்நெறிச்  செலவு டைய  மெய்த்தொண்டரோடு  தம்மைச்  சேர்ப்பிக்க  வேண்டுமென்று  அடிகள் வேண்டியது , நெறி பிறழந்து  ஒழுகுதற்கு  இடனின்றி அச்செலவு   தம்மை  நலப்படுத்து மென்பது கருதி யென்க . மேயச் செல்லும்  நல்ல ஆனினத்தோடு   கண் கெட்ட ஒரு பசுவையும்  சேர்த்துவிட்டால்  ,அவ்வினத்தோடு  சேர்ந்து அதுவும்  புன் மேய்ந்து  நீருண்டு  நலமுடன்   திரும்புமென்பது  உலகியலிற்  கண்டது . இதனைக்  “கோவுடனே  கூடிய வோர் குருட்டாவும்  ஊர் புகுதும் “  என்பதனாலும்  அறியலாம் .

              பெரியார்  குழுவில்  கலந்த ஒருவன், அவரால்  வெறுக்கப்படுதற்   கஞ்சியாவது  நெறிபிறழத்  துணியான்  என்பது  அறிந்தது . இவ்வுண்மை குறித்தே   “தொழுது செல்வானத்  தொழும்பரிற்  கூட்டிடு “ என்றார் . “அன்பர் பணி செய்யவெனை யாளாக்கி  விட்டு விட்டால் , இன்பநிலைதானே   வந்தெய்தும்  பராபரமே “ என்னும்  தாயுமான அடிகள்  வேண்டுகோளும்  ஈண்டு நினைக்கத்தக்கது . . 

               இதன்கண், மகளிர்  இன்பத்திலீடுபடுவதால்  சிவலோக யாத்திரைக் குத்  தடையென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாத லறிக .

                                            *********************************************

பாடல் : 45 .

பாடிற்றி  லேன்பணி யேன்மணி   நீயொளித்  தாய்க்குப்பச்சூன்

வீடிற்றி  லேனை  விடுதிகண்  டாய்வியந்  தாங்கலறித் 

தேடிற்றி  லேன்சிவ  னெவ்விடத்  தானெவர்  கண்டனரென் 

றோடிற்றி  லேன்கிடந்  துள்ளுரு  கேனின்  றுழைத்தனனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  காமங்காரணமாக   மகளிர்பால்  ஈடுபட்டுருகும்  சிறுமையுடைய னாயினேனே யென இரங்கிக்கூறிய  அடிகள், இத் திருப்பாட்டில்  அச் சிறுமையின்   தடையால்  ஆண்டவனே  ! நின்னைக் குறித்து  மன மொழி மெய்களாற் செய்யவேண்டிய  அன்புப்பணிகளைச்  செய்யாமல்  வீணாக உழைக்கலானேன் ; என் செய்வல்  என இரங்குகின்றார்.

பதவுரை :-   மணி  =  மாணிக்க மணி போன்றவனே ,

பாடிற்றிலேன்  பணியேன்  =  நின்னைப்  பாடினேலல்லேன் , வணங்கினேனல்லேன் ,

நீ ஒழிந்தாய்க்கு   =  காட்சியளிது மறைந்த நின் பொருட்டு

பசுமை ஊன்  வீடிற்றிலேனை  விடுதி  =  பச்சிறைச்சிப்  பிண்டமாகிய  இவ்வுடலை  யொழித்தி லேனாகிய  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? ,

ஆங்கு  வியந்து  சிவன்  எவ்விடத்தான்  என்று  அலறித்  தேடிற்றிலேன்  = 

அப்பொழுதே  வியப்புற்றுச்  சிவபெருமான்  எவ்விடத்துள்ளான்  என்று  கதறித்  தேடினேனல்லேன் ,

எவர்  கண்டனர்  என்று  ஒடிற்றிலேன்  =  அப்பெருமானை  யாவர்  பார்த்தனர்  என்று  சொல்லிக்  கொண்டு ஓடினேன்  அல்லேன் ,

கிடந்து உள்ளுருகேன்  =  ஓய்ந்து கிடந்து உள்ளம்  உருகினேன்  அல்லேன்

நின்று  உழைத்தனனே   =   வீணாக  வுயிர்  நிலைபெற்று  உலக வாழ்க்கை குறித்து உழைக்கலானேன்  என் செய்வல் ? என்பது

 விளக்கவுரை :-  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்த பொழுது , அவனது ஒளி மயமான  திருமேனியிலீடுபட்ட  அநுபவம்  அடிகளுக்குப்  புலனாதலின்  , “மணி” யென்றார் . இனி, கண்மணியனையான்   எனக் கோடலுமாம் . “ கண்ணே கண்ணிற்  கருமணியே “ என்பது அப்பர்  அநுபவ  மொழி  . மன மொழி மெய் ஆகிய மூன்றனாலும்  இறைவனைக் குறித்து  முறையே  மெய்யன்போடு  நினைத்தாலும்  பாராட்டுதலும்  பணிதலும்  நிகழ்தற்பாலன . திருவுருக்  காட்சிப்படாத   பொழுது  இம் மூன்ற னுள்ளஞ்  சிறந்தது  நினைத்தலேயாகும்  . அங்ஙனம்  மெய்யன்போடு   நினைத்தலாகிய  உள்ளப் பணி  செய்யாத  நிலையிலும்  , அருளுருவினனா கிய  இறைவன்  ஞானாசிரியனாகத்  தமக்குக்  காட்சியளித்தனனாக , அக்காட்சியி லீடுபட்டாவது  பாடுதல்  பணிதல்  ஆகிய  மொழிப்பணி  உடற்பணிகளை  யேனுஞ் செய்திலேன்  என்பார் , “பாடிற்றிலேன் பணியேன்”  என்றார் . இஃது ஒளிமயமான  திருவுருக் காட்சி தோன்றிய  பின்னும்  மறைதற்கு  முன்னுமுள்ள  நிலை பற்றியதென்க  .

            அடிகள்  ஆண்டவன்  திருவுருவத்தைக் கண்டவுடன்  மனமுருகிப்   பாடிப் பணிந்தன  ரென்பது  வரலாற்றுண்மையாயினும் , தம் அன்பு அத்துணைச்  சிறந்ததன்றென்பது  அவர்  கருத்தாகும் . “நான் தனக்கன்  பின்மை  நானுந்தானு  மறிவொம் “  என்னும்  அடிகள்  திருவாக்கு  இதனை  வலியுறுத்துவதாகும் . இனி, கிடத்தற்கரிய   அக்காட்சி  மறைந்தவுடன்  அப் பிரிவாற்றாது  தாம்  மேற்கொள்ள வேண்டிய   செயல்களைப்பற்றிக்  கூறி  அவை  நிகழாமைக்கு  இரங்குகின்றார் .

               ஆண்டவனே  , பெறுதற்கு  அரிய  மணி போலத் தோன்றி மறைந்த நிலையில்  நின் பிரிவாற்றாது  என் ஊனுடலை  யொழித்துவிட  வேண்டியது  இன்றியமையாததாகவும்  , அது செய்திலனே யென்பார், “ மணி  நீ யொழித் தாய்க்குப்  பச்சூன்  வீடிற்றிலேனை  “ யென்றார் . “நீ யொளித்தாய்க்கு”  என்னுந் தொடர்  உருபு  பிரித்துக்  கூட்டிப்  பொருளுரைக்கப்பட்டது . இது பற்றிய  விளக்கம்   முன்னர்க் கூறினாம்  காண்க . இங்கே  ஆண்டவன்  திருமேனி  ஒளிமயமான தென்னும்  உயர்வு  தோன்ற  ,  “மணி” யெனவும்  , தம் உடம்பு  பச்சிறைச்சியாலாய தென்னும்  இழிவு தோன்ற  , “பச்சூன்” எனவும்  கூறியிருத்தல்  உணரத்தக்கது .

                 ஒளிமயமான  திருமேனியைப்  பறிகொடுத்து ஊன் மயமான  உடலைப்  பேணலானேனே  யென்பது இரக்கக்குறிப்பு .  உடலின் இழிவு   தோன்றப்  “பச்சூன்” எனப்பட்டது .  இழிவு  நரி  நாய்  கழுகுகளால்  விரும்பத் தக்க  நிலை . இதனை  “நிழலோடு  கதிக்கு   நிணம்  புரி முதுநரி, பச்சூன் கொள்ளை மாந்தி” என்பதனாலும்  அறிக . இறைவ , நின் திருவுருக்  கரந்த நிலையில்  என் பருவுடலை  யொழித்திருக்க வேண்டும் . அங்ஙனம்  செய்யாமல்  இவ்வுடற்  சுமையைத்  தாங்கியிருத்தலே  தகாத செயலாகும் இவ்வுடற் பற்றினால்  இதனை யொழிக்க  ஒருப்பட்டிலேனாயினும் , அரிய பொருளாகிய  நின் பிரிவில்  செய்யக்கடவ  செயல்களையும்  செய்திலேனே  யென்று  இரங்குகின்றார் .

                    ஆங்கு  –  காலத்தை யுணர்த்தும் ; திருவுருக்  கரந்த  அப்பொழுதே என்பது . வியப்பு  –  புதுமை பற்றியது .  என்னை  புதுமையெனின், ஓர் உரு மறைவதாயின்  , அது காண்பார்  கண் காணாவாறு   பிறிதிடஞ் சென்று   கரத்தலியல்பு .  ஈண்டு  இறையுரு  அடிகளுக்குக்   காட்சியளித்த இடத்தே அவர்  கண்  முன்  கரந்ததே  புதுமையாயிற்   றென்பது . எதிர்பாராத  நிலையில்  நின் திருவுருக்  கரந்ததாக  , அது குறித்து அப்பொழுதே  வியப்புற்றுப்  பிரிவு  பொறாது , கதறி நின்னைத்  தேடவண்டியது  கடமை யாகவும் , அது செய்திலேன்  என்பார் ,  “ வியந்தாங்  கலறித்  தேடிற்றிலேன் “  என்றார் . சிவன்  எவ்விடத்தான் “  என்பது  தேடப்படும் பொருளைப்பற்றிப்  பிறர்  அறியக் கூறியபடியாம் .

                      எங்கும்  நிறை பொருளாகிய  இறைவனுக்கு  “எவ்விடத்தான் “ என ஓரிடம்  குறித்து வினாயது , திருவுருக் கரந்த  நிலையில்   பிரிவாற்றாமை யாலுண்டாய  துன்பம்  பற்றியென்க . பின்னுள்ள என்று  என்பதை எவ்விடத்தான்  என்பதனோடும்  இயைத்துக் கொள்க . ஓர் இளமகவைப்  பிரிந்த தாய்  அம்மகவைத் தேடுங்கால்  “என் குழந்தையை  யாருங்  கண்டதுண்டா? என்று சொல்லிக்கொண்டு  , ஓரிடத்து நில்லாமலும்  மெல்ல நடவாமலும்  அங்கும்  இங்கும்  விறைந்தோடி   அலைதலை உலகியலிற்  காணலாம் . அவ்வாறே  அடிகள்  “ எம்பெருமானை  யாருங் கண்டதுண்டா?”  என்று  சொல்லிக்கொண்டே  பல இடங்களுக்கும்   விரைந்து  ஓடித்  திரிதல்  தம்  கடமையாகவும்   அதுவும்  செய்திலேன்  என்பார் , “ எவர் கண்டனரென்று   ஓடிற்றிலேன்  “ என்றார் . அன்பிற்  கருங்கலனாகிய   பொருளைப் பிரிந்தவர்   அலறித் தேடி ஓடியும்  காணாவிடத்து உடல் தளர்ந்து ஓரிடத்துக்  கிடக்க  நேரின்  , அக்கிடக்கையில்   பிரிவாற்றாமை  மிகப் பெற்று   அப்பொருளையே  நினைந்து நினைந்து  உள்ள முருகி  வருந்துதல்  இயல்பாதலின்  , இங்கே  கூறப்பட்ட  அன்புரிமைச்  செயல்களில் ஒன்றையும் மேற்கொள்ளாமல்  , உயிர் வாழ்தற் பொருட்டு  இவ்வுலக  வாழ்வை  நச்சி  உடலைத் தாங்கி  யுழைக்கலானேன்  என்பார் ,  “நின்றுழைத்தனனே” எனவுங் கூறினர் .

              நிற்றல்  –  உடலில்  உயிர்  நிலையுறப் பெறுதல் . உழைத்தல்  –  வருந்தி முயறல்  .  இவ்வருமைத் திருப்பாட்டில்   இறைவன்  திருவுருக் காட்சியளித்து  மறைந்த நிலையில்  அடிகள் மேற்கொண்ட  அளப்பரும்  அன்புரிமைச்  செயல்களே  குறிக்கப்பட்டன .  அச் செயல்கள் தம்பால்  நிகழவில்லையென   அடிகள் கூறியது , இறைவன்  தமக்குச்  செய்த பேரருட்  டிறத்திற்குத்  தம் தொண்டு   ஈடாகாதென்னும்  கருத்தாலென்க .   அன்புருவமாகிய  அடிகள் “என் அன்பும் பொய் “  என்று  ஓரிடத்துக்  கூறியிருத்தலும்   ஈண்டு  நினைக் கத்தக்கது . இத் திருப்பாட்டுக்  கன்னெஞ்சத்தையுங்  கரைக்க  வல்ல தென்பது  ஓதியுணர்வார்க்குப்  புலனாம் .  

             இதன்கண், இறைவனைப்  பற்றிய  அன்புச் செயல்களை  மேற்கொள்ளாமல்  , உலக  வாழ்க்கையிலீடுபடுதல்  வருந்தத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                              ***********************************

பாடல் : 46 .

உழைதரு  நோக்கியர்  கொங்கைப்   பலாப்பழத்  தீயினொப்பாய்

விழைதரு  வேனை விடுதிகண்  டாய்விடின்  வேலைநஞ்சுண்

மழைதரு  கண்டன்  குணமிலி  மானிடன்  தேய்மதியன்

பழைதரு  மாபரன்  என்றென்  றறைவன்  பழிப்பினையே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவனுக்குச்  செய்யவேண்டிய  அன்புப்  பணிகளைச்  செய்யாமல்  வீணாக உயிர் நிலை பெற்று உலக  வாழ்க்கைக்கு  உழைக்கலானேன் என்று  கூறி இரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அவ்வழைப்பு  இன்னதென  அதன் இழிவை யெடுத்துக் கூறி வருந்துகின்றார் .  

பதவுரை:-  உழை  தரு  நோக்கியர்  கொங்கை   =  மான் பார்வை  பொன்ற  பார்வையினராகிய   மகளிருடைய  கொங்கையை ,

பலாப்பழத்து ஈயின்  ஒப்பாய்  விழைதருவேனை  =  பலாப்பழத்தின் கண்  மொய்க்கும்  ஈயினை யொத்து  விரும்புகின்ற சிறியேனை ,

விடிதி  =  விட்டு விடுவாயோ?  

விடின்  =  கைவிடுவாயின் ,

வேலை  நஞ்சு  உண்  மழைதரு  கண்டன்  என்றும்  =  கடலிற் றோன்றிய  நஞ்சையுண்ட   நீலமேகம்  போன்ற  கழுத்தையுடையவன்  என்றும் ,

குணம்  இலியென்றும்  =  குணமில்லாதவன்  என்றும் ,

மானிடன் என்றும்  =  மக்கட்டன்மையுடையவன்  என்றும்  ,

தேய் மதியன்  என்றும்  =  குறைந்த அறிவினையுடையவன்  என்றும் ,

பழை தரு  மாபரன்  என்றும்  =  பழைய   பெரிய  பரதேசி யென்றும்  ,

என்றும்  பழிப்பினை  அறைவன்   =    எப்பொழுதும்  நின் பழியைக்  கூறுவேன்   என்பது .

விளக்கவுரை :-  உழை  –  மான் . மான்   பார்வைக்கு  ஆயிற்று .தரு  –  உவமைச் சொல் . மழைதரு என்புழியும்  ஈதொக்கும் .மான் பார்வை  இயற்கையில் மருட்சியுடையதாயினும் , ஈண்டு  உவமேயப்  பொருளாகிய  மகளிர்  கண் மருட்சி  , ஆடவரை மயக்குறுத்துங்குறிப்பின்  மேலதாகலின், செயற்கையின்பாற்  படுவதாகும் . ஆடவரைத் தம் வயப்படுத்தும் மகளிர்  உறுப்புக்களுள்  கண்ணே  சிறந்தது .  காமநோயை விளைப்பதும் அந் நோய்க்கு  மருந்தாவதும்  கண் நோக்கே   என்னும்  பொருள் தோன்ற  , “இருநோக் கிவளுண் கணுள்ள  தொரு நோக்கு , நோய்  நோக்கொன்றந் நோய் மருந்து” என்பர்  திருவள்ளுவர் .  

                 “காதன்மை கண்ணுளே  மறைத்துக்  கண்ணெனுந்  , தூதினாற்  றுணிபொருளுணர்த்தி”  யென்னும்  சிந்தாமணி ஆசிரியர்  கருத்தும்  இங்கே  நினைக்கத்தக்கது . . முதலிற்  கண்ணினால்  கவரப்பட்ட  ஆடவர்  பின்  கொங்கையிலீடு  படுவரென்னுங்  குறிப்புத்  தோன்ற  “உழைதரு நோக்கியர்  கொங்கை” யென்றனர் . கொங்கையைப் பற்றி  நிகழும் பேரவாவுடைய  தமக்குப்  பலாப்பழத்தில்  விரும்பி  மொய்க்கும்  ஈக்களை உவமையாகக்  கூறினர் . ஒப்பாய்  என்பது ஒத்து என்றபடி  . ஈயின்  என்புழி  இன், உருபு நோக்கி  வந்த சாரியை.  இரண்டனுருபு  விகாரத்தால் தொக்கது .

                      முப்பழங்களுள்  மணமிக்கது பலாப்பழம் . ஈக்கள்  மணத்தால்  கவரப்பட்டுச்  சார்ந்ததும் , பழச்சுவையிலீடுபடும்  இயல்பின .  ஓசை யொழிந்த  நான்குவகைப்   புலனுகர்ச்சியுடைய  ஈக்கள் , பலா பழத்தைச்  சார்தல் , மணமும்  சுவையுமாகிய  இரண்டு  புலன்களுக்கும்  இடனாதல்  பற்றி . அங்ஙனமே  ஆடவர்  மனம்   மகளிர்  நகிலைச்  சார்தல் , உருவமும்  ஊறுமாகிய  இரண்டு  புலன்களும் இடனாதல் பற்றி  யென்பது . முதலிற்  காட்சியால்  நகிலின்  உருவத்தைப்பற்றிப்  பின் ஊற்றின்பத்திலீடுபடுதலி யல்பு  . உவமையிலும்  பொருளிலும்  ,நுகரும்  புலன்கள்  வெவ்வேறாயினும் , சேய்மையிலும்  அணிமை  யிலும்  நிகழ்வன  ஈண்டு  என்பது ஒப்புமைபற்றிக்  கருதத்தக்கது . .உவமையாகிய  ஈக்களுக்குப்  பலாப்பழத்தின்  மணம்  சேய்மையிலும்  , சுவை  அணிமையிலும்  நுகரப்படு வனவாம் . உவமேயாகிய  ஆடவர்க்கு  மகளிரின்  கொங்கையுருவம்   சேய்மையினும்  ,ஊற்றின்பம்  அணிமையினும்  நுகரப்படுவனவா மென்பது .  புலன்களிரண்டன்  மேலும்  நிகழும்  வேட்கை ஒத்ததென்பது  காண்க .  உலக வாழ்க்கையின்  உழைப்பு  , இங்ஙனம்  அழியும் இயல்பினதாகிய  புலநுகர்ச் சியளவில்  முடிவெய்வததாகவும்  , அதனையே  விரும்பும்  சிறியேனை  அது பற்றிக் கைவிட்டு  விடுவாயோ? என்பார் , “ விழைதருவேனை விடுதி கண்டாய் “ என்றார் .

              சிறியேனது  பிழையைப்  பொறுத்து நலம்  புரிதல்  பேரருளாளனாகிய   நினக்குக் கடமையாகவும் ; அங்ஙனம்  செய்யாமல்   என்னைக்  கைவிடுவா யாயின்   , என் சிறுமைக்கு  ஏற்றபடி நின்னைப்பற்றிய   பழி மொழிகளை யெடுத்துக் கூறுவேன்  என்று  தொடங்கு வாராய், “விடின்”  என்றார் . இவ்வாறு விடுதி கண்டாய் என்பதன்  பின், “விடின்” என்று  தொடங்குதல் இப்பதிகத்துள் இருபத்துமூன்று , நாற்பத்தாறு  , நாற்பத்தெட்டு , நாற்பத் தொன்பது ஆகிய   நான்கு   திருப்பாட்டுக்களின்  மாத்திரம்  உள்ளது . இவற்றுள் இருபத்துமூன்றாம்  திருப்பாட்டில்   “விடிலோ கெடுவேன் “ என  நீ  கைவிடின் ,  அதனால்  கெட்டொழிவேன்  எனத் தமக்கு  நேரும்  கேட்டினை  எடுத்துக் கூறி  இரங்குவாராயினர்  . ஏனைய  மூன்று  திருப்பாட்டுக்களிலும்  என்னைக் கைவிடின்  என் சிறுமைக் கேற்ப  நின்னைப்  பழித்துரைப்பேன் என்று  கூறுகின்றார் .  

                 ஈண்டு  பழித்துரைத்தலாவது ,பழிப்பது போலப்  புகழ்தற் பொருடொன்றக்  கூறுதல்  ஆதாலின்  ,” அறைவன்  பழிப்பினையே  “  என்றது  சொல்லளவிலன்றி யின்று  . அடிகள் நினைவில்  ஆண்டவன்  பால்  இயல்பின் அமைந்த  பெருமையே  முன்னிற்பதாகும்  . உண்மையில்  இறைவன் பால்  பழித்தற்கு  ஏதுவாக  யாதுமின்று ; உள்ளதை மாறுபடக்  கருத்து இயல்பு அடிகளுக்கும்  இன்று . தந்தையன்பிற்குரிய  குழந்தை , தன் தகுதிக்கு  மேற்பட்ட  பொருளை  அவன்பாற்  பெற   முயலுங்கால் , தகுதி நோக்கிக் காலந்தாழ்த்த  விடத்து , அக்குழந்தை  தன் தந்தைபாற்  கண்ட  அரிய குணஞ்  செயல்களையே  பழிப்புரையாக  வழங்கி  அவனை  மகிழ்விப்பது  போல , அடிகள் ஆண்டவனைப்  பற்றித்  தம் அநுபவத்திற்  கண்ட   அரிய  குணஞ் செயல்களையே பழிப்புரை  வடிவிலெடுத்துக்  கூறி   அப்பெருமானை மகிழ் வுறுத்துவாராயினர் . இவ்வுண்மையே  பின்வரும்  நாற்பத்தெட்டு   நாற்பத் தொன்பதாம்  திருப்பாட்டுக்களுக்கும் கருத்தாகக் கொள்க .

                    இனிப்  பழிபன  போற் கூறப்பட்ட சொற்களில்  உள்ள புகழ் பொருள்  வருமாறு : –  திருப்பாற்  கடலிற்றோன்றிய  நஞ்சை யுண்ட செய்தி , சிவபெருமானுடைய பேரருளுடைமையையும் முடிவிலாற்றலுடைமையை யும்  புலப்படுப்பதாகும் . பிறிதொரு  நஞ்சாயின்  உண்பார்   ஒரோவழி யுய்தலுங்  கூடும் . தன்னை யுண்டாரைத்  தான்  உண்டேநீரும்  இயல்புடை யது   ஆலாலமென்னும்  கொடுநஞ்சு . அதனைப் பிற தேவருய்தல் குறித்து  இறைவன்  உண்டு கண்டத்தடக்கிய   அருமை தோன்ற  , “வேலை நஞ்சுண்மழை  தருகண்டன்” என்றார் . “குணமிலி” என்பது முக்குணங்களையுங் கடந்தவன்  என்னும்  பொருட்டு . சாத்துவிக முதலிய  குணங்கள்   மூன்றுங்  குணதத்துவ மென்று  கூறப்படும் .

                  குணதத்துவம்  மூலப்பகுதியின்   விருத்தியாகும்  . மூலப்பகுதியைப் பிரகிருதி மாயையென்றுங்  கூறுப .  ஆதலின்  சாத்துவிக  முதலிய  அம் மூன்றும்  உயிர்களின்  கன்மத்திற்கு  ஈடாக  உடல்  முதலியன  தருதற்கு  அமைந்த பிரகிருதி மாயையினின்றுந்   தோன்றி  , உயிர்களின்  சுக  துக்க   மோகங்கட்கு  ஏதுவாவனவாம் என்ப . இதனால் மாயாசனகமாகிய   அக்குணங்களாற்  பற்றப்படாமல்  அப்பாற்பட்டவன்  இறைவன்  என்பது  தெளிவாம் .   “ முக்குணங்களின்  மூவரைத்  தோற்றி மூவருக்கு  முத்தொழில்   வகுத்தருளி  , அக்குணங்களுக்க தீதமாய்   நிறைவாயத்து  வாக்களைக்  கடந்தவன் “  என்று  சிவஞான முனிவர்  கூறுதலும்  அறிக . “மானிடன் “  என்றது  மானை  இடக்கையில்   ஏந்தியவன்  என்னும்  பொருட்டு . தாருக  வனத்து முனிவர்  இறைவனைத்  துன்புறுத்தக்   கருதிக்  கொடிய  வேள்வியொன்று  இயற்றி  அதனினின்றுந்   தோன்றிய  ஒரு மானை  இறைவன்பாற்  போக்கினராக  ,  அதன் ஆரவாரத்தைக்  கண்ட  இறைவன்  அதனை   “வாமப் ,பொற்றடங்கையிற்   பற்றிப்  பொருக்கென வேந்தி நின்றான் “  என்று  கந்தபுராணங்  கூறுதலறிக .

                    “தேய்மதியன்”  என்றது , கலை குறைந்த சந்திரனை  முடியிற்  சூடினன்  என்னும்  பொருட்டு. தக்கன்  சாபத்தாற்  கலை குறைந்த  திங்கட் செல்வனைப்   பாதுகாத்தற்   பொருட்டுத்  தன்  சடையில்  தாங்கினனாதலின், இவ்வாறு  கூறினர் . “பழைதருமாபரன் “  என்பது  பழைய  பெரிய  பரம்  பொருள்  என்னும்  பொருட்டு . இறைவனைப்  “பழையோன்”  எனவும்  , “சொற்பதங்  கடந்த தொல்லோன் “ எனவும்,  “கருணையின்  பெருமை “  எனவும்  அடிகள்  பிற  இடங்களில்  கூறியிறுத்தல்  ஈண்டு  நினைக்கத்தக்கது . “என்று என்று “ என்னும்  இரண்டனுள்  முன்னதை  “மழைதரு கண்டன்”  என்பது  முதலியவற்றோடு  இயைத்து எண்ணும்மையை  விரித்துரைத்துக்  கொள்ளல் வேண்டும் . பின்னுள்ளதில்  முற்றும்மை  தொக்கது . “ என்றும்  அறைவேன்” என்றது என்னைக்   கைவிடினும்  யான்  இடையறாது  நின் புகழையே  கூறி  இன்புறுவேன்  என்றபடியாம் .  இஃது  உட்கோள் .  “ஈடர்களையாரேனும் , எமக்கிரங்காரேனும்  படரும்  நெறி  பணியாரேனும் …அன்பறா தென்னெஞ்சவர்க்கு  “ என்னும்  அம்மையாரருள்  மொழியும்  இங்கே  நினைவு  கூறத்தக்கது . .

                      பழைபனபோற்  கூறப்பட்ட   புகழ்மொழிகளுள்   “மழைதரு  கண்டன்”  என்பது  இறைவனுடைய  பேரருட்  பண்பையும்  ,”குணமிலி”  என்பது தத்துவாதீதத்   தன்மையையும்  , “மானிடன்”   “தேய்மதியன்” என்பன  முறையே  நிக்கிரக  அநுக்கிரகச் செயல் களையும்  , “மாபரன்”  என்பது முழுமுதற்  கடவுட் டன்மையையும்   புலப்படுத்து நீற்றல்  உய்த்துணரத் தக்கது .  

                       இதன்கண்,  “ஈயினொப்பாய்  விழைதருவேன்”  என்றதனால்  உலக  வாழ்க்கை  திருவருட்  பேற்றிற்குத்   தடையாதல்   பெறப்படுதலின் ,  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                          ***********************************************************

பாடல் :47 .

பழிப்பினின்  பாதப்  பழந்தொழும்  பெய்தி  விழப்பழித்து

விழித்திருந்  தேனை  விடுதிகண்  டாய்வெண்  மணிப்பணிலங்

கொழித்துமந்  தாரமந்  தாகினி  நுந்தும்பந்  தப்பெருமை

தழிச்சிறை  நீரிற்  பிறைக்கலஞ் சேர்தரு  தாரவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்   ஆண்டவனுக்கு  அன்புப்பணி  செய்யாமல்  வீணாக  மேற்கொண்ட  உழைப்பின்  இழிவை  யெடுத்துக்  கூறி  இரங்கிய  அடிகள்  , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  இழிந்த உழைப்பில்   தலையிடுதற்கு  ஏது ,  இறைபணியினின்றும்  வழுவியதாகு  மென்றுணர்ந்து, மீண்டும்  அப்பணியில்  தலைப்படுதற்கு   உபாயம்  அறியாமல்  திகைப்புற்றிருத்தலை  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :- வெண்மணி பணிலம் கொழித்து  =  முத்துக்களையுடைய சங்குகளைக் கொழித்து ,

பந்தப் பெருமை தழீஇ  =  சடையாகிய அணையின்  பெருமையைச்  சார்ந்து ,

மந்தாரம்  நுந்தும்  =   மந்தார மலர்களை யொதுக்குகின்ற ,

மந்தாகினி  சிறை நீரில்  =  கங்கையாகிய  வரம்புட்பட்ட  நீர் நிலையில்

பிறைக்கலம் சேர்தரு தாரவனே  =  பிறை மதியாகிய   தோணி பொருந்தப்பெற்ற  மாலையையுடையவனே ,

பழிப்பில்  நின்பாதம்  பழந்தொழும்பு  எய்தி  =  பழிக்கத்தகாத  நின் திருவடிக்கண்ணே   பழமையாகிய  தொண்டு  மேற்கொண்டு ,

விழப்பழித்து  விழித்திருந்தேனை  =  பின் அத் தொண்டு நழுவுதலால்   அத் திருவடியைப்  பழித்து  விழித்துக்கொண்டிருக்கின்ற   சிறியேனை

விடுதி  =  கைவிட்டு விடுவாயோ  ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  வெண்மணி  –  முத்து . சங்குகள் நீர் வாழும்  உயிர்ப்பகுதியைச்  சார்ந்தனவாகலின்  , அவற்றைக் கொழித்தல்  நீர்க்கு  இயற்கையெனவும் , மந்தார மலர்கள் இறைவன்  சடையிலணியப்பட்டன வாகலின்  , அவற்றை  நுந்தல்  செயற்கையெனவும் கொள்ளல்  வேண்டும்  . இறைவன்  சடக்கண்ணுள்ள  கங்கை வெள்ளம்  தூய வெண்ணற  முடையதாகலின்  , அஃது அப்பெருமானுடைய  பேரருட்  பெருக்கையும்  , அவ்வெள்ளத்தின்  அருகில்  காணப்படும்  சங்கு  இறையியல்பை யுணர்தற் குரிய   தூய  சிவஞானத்தையும்  , மந்தார  மலர்  இறைவனைச்  சார்தற்குரிய   சிறந்த  பத்தியையும்  , பிறை மதி ஞானம்  பத்தி இரண்டனையும் துணைக் கொண்டு  இறைவனது பேரருட் பெருக்கில்  தோய்ந்து  இன்புறும்  பக்குவ முள்ள  உயிரையும்  குறிப்பிற்  புலப்படுப்பனவாம் .

         முத்துக்களையுடய  சங்கு  என்றது , சிவப்பேறாகிய  பயனைத்  தன்னுட் கொண்ட  சிவஞான  மென்றற்கு . மந்தார மலர்  அன்பு வழிபாட்டிற்குச்  சாதனமாகலானும்  , இறைவன்  சடைக்கணிருந்து  கங்கையில்   தோய்ந் ததாகலானும்  பராபத்தியைப்  புலப்படுக்கு மென்பது . ஞானம்  பாச  நீக்கத்தில் தோன்றுவதாகலின்  , அதன் தோற்றத்திற்கு   இடனாயது பக்குவமுள்ள  உயிரென்பதும் ,பராபத்தி  ஆண்டவனை  முன்னிட்டு  வெளிப்படுவதாகலின்  , அதன் தோற்றத்திற்கு  இடனாயது இறையருளென் பதும்  உய்த்துணரத் தக்கன .  இவ்வுண்மை குறித்தே  பாச  நீக்கத்திற் றோன்றும்  ஞானத்தினும்  இறையருளிற்  றோன்றும்  பத்தி சிறந்ததென்ப .  ஈண்டுக் கூறிய  பத்தி கடவுட்  பேரன்பாகிய  பராபத்தியாகும் . “ஆங்கவனருளாற்  பத்தி நன் குண்டாம்  பத்தியாலவனருளுண்டாம்” என்பது  சைவ  நூலுண்மையாகும் .

               பந்தம்  –  அணை . கங்கை நீர்ப்பெருக்கு , இறைவன்  சடைக்கட் டாகிய  அணைப் பெருமையை  நோக்க  மிகச் சிறிய  நீர் நிலை போற்  காணப்பட்டெத்தென்பார் ,  “பந்தப்பெருமை தழீஇ “ எனவும்  , “சிறை நீர்” எனவும்  கூறினர் . சிறைநீர்  என்றது  சிறியநீர் நிலை என்னுங்குறிப்புத் தோன்ற  நின்றது . முதலில்  சரியை  முதலிய  தவத்தாலுண்டாம்  ஞானம்  இறைவனையுணர்தற்குக்  கருவியாம்  என்பது புலப்பட  , “வெண்மணிப் பணிலங்  கொழித்து “ எனவும்  , ஞானம்  கருவியாக  இறையியல்புணர்ந்து  பின்னர்  அவனருளில்  திளைப்பிப்பது  பராபத்தி என்பது  புலப்பட  “மந்தாரம்  நுந்தும் “ எனவும்  கூறப்பட்டன வென்க.  அணையின்  பெருமை   நீர் நிலைக்கு   எத்துணையோ  மடங்கு  மிக்கதென்பது போதர  , “பந்தப் பெருமை” யென்றார் , “தழீஇ “  யென்னும்  வினையெச்சம் பர்றி வந்த அளபெடை விகாரத்தாற்  றொக்கது . இனி  தழிச்சு  இறைநீர் எனக் கொண்டு  தழுவிய  சிறிய  நீர் நிலை யெனக்  கோடலுமாம் .தழிச்சுதல்  –  தழுவுதல்   திங்கட்பிறை  தனக்குற்ற  இடையூறொழிந்து  கலை வளரப்  பெற்றது  இறைவன்  திருவருட்டுணையாலென்பர்   பெளராணிகர் . அச் செய்தி  ஈண்டுப்   பாசப்பிணிப்பில் துன்புற்ற உயிர் , ஞானம்  பத்தியென்னும்  நெறிகளால்  திருவருட்  பேற்றிற்  குரியதாகும் என்னும்  குறிப்பைப்  புலப்படுத்து நின்றதென்க.

           பிறையின்  நடுச் சிறிது  அகன்றும்  அதனிரு கோடுகளும்  அந்நடுவினும்  சிறியனவாய்ச்  சிறிது வளைந்தும் தோணிபோற்   காணப்படுதலின்  , “பிறைக்கலம்” என்றார் . மந்தாகினிச்சிறை   நீரிற்   பிறைக்கலம்  என்றது ,அழகிய  ஓர்  உருவக அணியாகும் . இலக்கிய  நயந்  தோன்றக்  கூறிய  இவ் வருணையில்  , பாசப்பிணிப்பில்   பட்டுழலும்  ஓருயிர், ஞானத்தால் இறையியல்புணர்ந்து , அப்பிணிப்பு  ஒழிந்து  பத்தியால்  தூய்மை  பெற்றுத்  , திருவருளில்  தோய்ந்து  பேரின்பத்தில் திளைக்கும்  உண்மையை  அகக்காட்சியிலுணர்ந்த அடிகள் குறிப்பிற்  புலப்பட  வைத்தாரென்பது  உணர்ந்து  இன்புறத்தக்கது .

                  திருவாசகத்  திருப்பாட்டுக்களில்  அநுபவ  வுண்மைகளேயன்றி  வருணனை மிகக்  குறைவாகவே  காணப்படும்  . அங்ஙனம்  சுருக்கமாகக்  காணப்படும்  வருணனை  களிலும்   இன்னோரன்ன  சைவவுண்மைகள்   குறிப்பிற் புலப்பட வைத்தல்  அடிகள் அநுபவ இயல்பென்பது  உணரத்தக்கது. “தாரவன்”  என்பது  பெயரளவாய்  நின்று  “சேர்தரு” என்னும்  எச்சத்திற்கு  முடிவாகும் .  “பிறைக்கலஞ்  சேர்தரு  தாரவன்” என்பது பிறையை  முடிமாலையாயியைத்துச்   சூடினவன்  என்னும்  பொருட்டு . “மாதர்ப்பிறைக் கண்ணியானை” யென்பது தமிழ் மறை .

                   “ஓதிய  ஞானமு  ஞானப்  பொருளும்  ஒலி சிறந்த , வேதியர் வேதமும்  வேள்வியுமான “  என்று  புகழப்படுதலல்லது , சிறிதும்  பழித்தற்கு  இடனில்லாதன  இறைவன்  திருவடியென்பார் ,  “ பழிப்பினின்  பாதம்” என்றார் .  அன்புடையார்  தன்னைப்  புகழ்தலினும் தன் திருவடியைப்  புகழ்தலில்  ஆண்டவனுக்கு  உவப்புண்டு  என்பதை  “ நாயேனைத்  தன்னடிகள்  பாடுவித்த நாயகனை “ யென்று  பிறிதோரிடத்து அடிகள்  கூறி யிருத்தலானறியலாம் . அங்ஙனம்  புகழ்ந்து போற்றத்தக்க   திருவடிக் கண்ணே  மேற்கொண்ட  தொண்டு  வாழையடி  வாழையாக  வந்த தம்  மரபுக்குரிய  தென்பார் , “பழந்தொழும்பு”  எனவும் , பண்டு செய் தவத்தால்  அத் தொண்டில்  தலைப்படக் கிடைத்தும்  திருவருட்  சார்பு  இன்மையால் அது நழுவலாயிற் றென்பார் , “ விழ” எனவுங்கூறினர் .

                       வீழ்தல் –  நழுவுதல் . விழ  என்பது காரணப்பொருட்டு . திருத்தொண்டி லீடுபட்டவுள்ளம்   சோர்வுற்றமையால்  பழிக்கத்தகாத  திருவடியைப் பழிக்கலானேன்  என்பார் , “ விழப் பழித்து “ எனவும்  , பழிக்கப்பட்ட  அத்திருவடிப்  பெருமையுணர்ந்து மீண்டும்  அதன் கண்  தொண்டு   பூண்டொழுகுதற்கு  உபாயம்   அறியாமல்  மயங்கலானேன்   என்பார் , “விழித்திருந்தேனை “ யெனவுங்  கூறினர் .  வழித்திருத்தல்  இதற்கு   என் செயலாமென்று   மருண்டு  திகைப் புற்றிருத்தல் .  திருவடித் தொண்டி லுறைத்து  நிற்கும்  அடிகளுக்கு   இடையிடையே   பிரிதலுங்  கூடலுமாகிய  இன்னோரன்ன  நிகழ்ச்சிகள்  இன்பவுணர்ச்சிக்  கேதுவாக   நிகழ்தலின் , இவ்வாறு  கூறியருளினர் .

                           இவ்வநுபவத்தைக்  “காணுமதொழிந்தேன்  நின் திருப்பாதங் கண்டு   கண்  களி கூரப்  பேணுமதொழிந்தேன்  பிதற்றும்   தொழிந்தேன் …… நீயினி வரினுங்  காணவு  நாணுவனே”  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறியிருத்தலானும்  உணரலாம் .பழிக்கப்படாத  திருவடியைத்  தொண்டு  நழுவதலாற்   பழித்துப் பின்  என் செயலாமென்று   திகைப்புற்றிருக்கும்   இந் நிலையில்  எளிமைக்கு   இரங்கும்  பேரருளாளனாகிய   நீ  சிறியேனைக் கைவிடல்  தகுமா வென்பார், “ விடுதி கண்டாய்”  என்றார் .

                        இதன்கண் , “பழிப்பினின் பாதப்  பழந்தொழும் பெய்தி விழப்பழித்து  விழித்திருந்தேனை”என்றதனால்  அங்ஙனம்  இருத்தற்கு ஏது , உலகியற் பற்றென்பது  போதரலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக.

பாடல் : 48 .

தாரகை  போலுந்  தலைத்தலை  மாலைத்  தழலரப்பூண்

வீரவென்  றன்னை  விடுதிகண்  டாய்விடி  லென்னைமிக்கார்

ஆரடி  யானென்னின்  உத்தர கோசமங்  கைக்கரசின் 

சீரடி  யாரடி  யானென்று  நின்னைச்  சிரிப்பிப்பனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  நழுவி  விடப்பட்ட  இறை  பணியில்  மீண்டும்  தலைப்படுதற்கு  உபாயம்  அறியாமல்  திகைப்புற்றிருத்தலை   திகைப்புற இரங்கி  அடிகள் , இத் திருப்பாட்டில்  திகைபுற்ற நிலையில் தேற்றுதற்குத் திகைப்பறியாத்  தெய்விக வீரனாகிய  நின்னைப்பற்றி  வேறு  யாருமிலர்  ஆதலின், சிறியேனைக்  கைவிடாமற்  பாதுகாக்கும்  பொறுப்பு  நின்பாலதாகு மென்பதைக் குறிப்பிற்  புலப்படுத்து விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .  “தேறும்  வகையென் சிவலோகா திகைத்தாற் றேற்ற வேண்டாவோ”  என்னும்  அடிகள்  திருவாக்கும்  ஈண்டுக் கருதியுணரத்தக்கது.

பதவுரை :-  தலை தாரகை போலும்  தலைமாலை  =  தலைக்கண்ணே விண்மீன்கலைப்  போன்ற  தலைமாலையும் ,

தழல் அரப் பூண்  =  நகஞ்சு மிக்க  பாம்புகளாகிய  அணிகளங்களையுமுடைய  ,

வீர   =  தெய்விக வீரனே ,

என்னை விடுதி  =  சிறியேனைகைவிட்டுவிடுவாயோ? (விடலாலாது)  ,

விடில்  =  கைவிடுவாயின்  ,

மிக்கார் என்னை ஆர்  அடியான்  என்னின்  =  அறிவொழுக்கமிக்க பெரியோர்  என்னை நோக்கி  , “நீ  யாருக்கு  அடியவன் “ என்று  வினவுவாயின் ,

உத்தரகோசமங்கைக்கு  அரசின் சீர் அடியார்  என்று  =  திருவுத்தரகோசமங்கையில்  வீற்றிறுக்கும்  தெய்விக  அரசாகிய  சிவபெருமானுடைய  சிறப்புப்  பொருந்திய  அடியவர்க்கு  அடியவன்  என்று  சொல்லி ,

 நின்னைச்  சிரிப்பிப்பன்  =  நின்னைக்  குறித்துச்  சிரிக்கச் செய்வேன்  என்பது .

விளக்கவுரை :-  உலகெலாம்  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்துப்   படைப்போன்  முதலியோரும்  ஒடுங்கினராக  , அன்னார்  தலைகளை  யெல்லாம்  மாலையாகத்  தொடுத்து இறைவன்  தன்  தலைக்கண்  அணிவன்  என்று  புராணங் கூறும்  . அணிதற்குக் காரணம்  அத் தேவரெல்லோரும்   ஊழி  யிறுதியில்  தன்பால் லொடுங்கத்  தான்  ஒருவனே  யாண்டும்  ஒடுங்காத  முழுமுதற் பொருளென்பதைப், பின்னர்த் தோன்றும்  உலகம்  உணர்ந்து தன்னை யடைந்து உய்யவேண்டு மென்பதேயாம்  

                   இவ்வுண்மையை  “நூறு கோடி  பிரமர்கணொந்தினார் , ஆறு கொடி  நாரயணரங்ஙனே,  ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் , ஈறிலாதவன்  ஈசனொருவனே  “  என்னுந் தமிழ்  மறையானும்  .” அப்பெரி யோர்  , சிரமெலாந்  தொடுத் தணியலா வணிந்ததிடும் “ எனவும் ”ஆதலாற்றனை  வியப்பதற்  கன்றவையணிதல்  ,ஈதலாதொரு திறமுளதியாவரு மெவர்க்கும்  , நாதனே  யிவனென்று தன் பாங்கரே நண்ணித், தீதெலா  மொரீஇ முத்தி பெற்றுந்திடுஞ் செயலே  “எனவும்  கந்தபுராணங் கூறுமாற்றானும்  அறிக .

                    அத்தலை யோடுகள்  வெண்ணிற  வொளி யுடையனவாகக்  காணப்படுதலின் , “தாரகை போலும்  “  என்று  உவமிக்கப்பட்டவை  .இவ்வரலாற்றுக்  குறிப்புச்  சிவபெருமான்  விண்ணோர்  முழுமுதலென்பதைப் புலப் படுப்பதாம் . “தலை மாலை  தலைக்கணிந்து தலையாலே  பலிதேருத்  தலைவன் “ என்று   தமிழ் மறை கூறுதலும்  உணர்க .  தழல் – ஈண்டு நஞ்சென்னும்  பொருட்டு , தழலுமிழரவம் “ என்புழி  அப்பொருட்டாதல்  அறிக . இறைவன்  அணிகலனாக  அணிந்த  பாம்புகள் இருவகைய ; திருமாலூர்  தியாகிய  கருடனுக்கு  அஞ்சி   இறைவனைப்  புகலடைந்தன  ஒரு வகை , மற்றொரு வகை தாருக  வனத்து முனிவர்  இயற்றிய  கொடிய  வேள்வியினின்றுந்  தோன்றி  இறைவனுக்குத்  தீங்கிழைக்க   வந்தனவாம் .இவ்விருவகையும்  , ஈண்டுக்  குறிக்கப்பட்டன. வேள்வித் தீயினின்றுந் தோன்றின வென்பது ,  “தழலர ; வெனவிசேடிக்கப்  பட்டமையானாம் . கருடனுக்கு  அஞ்சிப்  புகலடைந்தவை  கொடுந்தன்மை  யொழித்து  சாந்தமெய்தின வென்பதும் , மற்றவை  “வேள்வி யெரியழற் கிடையே யெண்ணில், பாந்தளங் கெழுந்து  தீயோர்  பணியனாற்  சீற்றத்தோடும்  போந்தன “  என்றதனால்  நஞ்சைக்  கான்று  வந்தன வென்பதும் ஈண்டுக்  கருதத்தக்கன .  

                        தலையோடு  மலர் போலத்  தொடுத்தணியத்  தக்கனவாகலின்  , அவற்றை  மாலையாகவும்  , பாந்தள் முத்தார  போலப்  பூணத்தக்கன வாகலின் , அப்பாம்புகளைப்  பூணாகக்  கொண்ட  இந் நிகழ்ச்சி பகை வலியைக்  கடக்கும் இறைவனது  வீரத்தன்மையைப்  புலப்படுத்தற்கு  எடுத்துக்காட்டாகுமென்பது .

                         இங்ஙனம்  கடவுட் டலைமைத்  தன்மையும் வீரச்செயலும்  உடைமையால் , “வீர” எனவும்  , யாது செய்வல் எனத் திகைப் புற்றிருக் கும்   இந் நிலையிற்  சிறியேனைத்  தேற்றி  யேன்று  கொள்ள வேண்டியது வீரானாகிய  நினக்குக்  கடமையாகவும்  , கைவிடல்  தகுமானென்பார் , “ என்றன்னை விடுதி கண்டாய்” எனவும்  கூறினர் . யாவர்க்கு  மேலாளவிலாச்  சீருடைய  நீ , யாவர்க்குங் கீழாம்  அடியேனைக் கைவிடின் , என் எளிமையை நோக்கி  வினவுவார்க்கு  , வாழையடி  வாழையாக வந்த என் அடிமையியல் பின் உண்மையை  யான்  கூற  நேருதெனவும் , அதனால், இவ்வேழைக்கு  யாதுங்குறை நேராதெனவும், நின் அளப்பரும்  பெருமைக்கே  குறை நேருமெனவும் குறிப்பிற்  புலப்பட  நகைச்சுவை தோன்றக்  கூறுகின்றார் .

                     நின்னாற் கைவிடப்பட்ட  நிலையில் அறிவொழுக்கங்களிற்   சிறந்த பெரியார்  என் எளிமையைக்  கண்டு  “ஏன் இப்படித் துணையின் றித்  துன்புறுகின்றாய்? அடிமைத்தன்மையும்  உளதே ; நீயார்க்கு அடியவன் “   என்று  என்னை  வினவுவராயின்  என்பார் , “  என்னை  மிக்கார்  ஆரடியானென்னின் “ என்றார் . மிகுதி ஞான சீலங்களின்  மேற்று . உலகத்தில் மெலிந்து நல் கூர்ந்தானொருவனைக்  காண்பார்  வினவ  நேரின்  , நீ எக்குடும்பத்தவன்  என்று குடும்ப இயல்பு பற்றிக் கேட்பதியல்பு .

                          ஈண்டு  அடிகளுக்குத் தந்தை  தாய்  குரவனாசான்  சங்கரனிராசை பெண்டிற் , மைந்தர்  பல்லுயிருஞ்சுற்ற  மாசிலா  வீசனென்பர்  ஆதலின்,  “என்னை மிக்கார்  ஆரடியானெனின் “ என அடிமையியல்பு  பற்றி  வினவுவாரென  அடிகள்  கருதினாரென்பது . இனி, அவ்வினாவிற்கு  விடையாக  என்னாற் கூறத்தக்கது  இன்னதெனக்  குறிப்பிடுகின்றார் .  முதலில்  தம்மை அடிமைகொண்ட   பரம்பரைக்கு  இடன்  இன்னதெனவும் , அப் பரம்பரை முதல்வன்  இன்னானெனவும்  கூறுவாராய்  , “ உதர கோச மங்கைக் கரசு “ என்றார் . அரசு  என்றதனால்  உத்தரகோச மங்கை சிவராசதானி  யென்பது பெறப்படும் .

                           தெய்வ அரசுக்குரிய  திருத்த சாங்கத்தில் ஊர்  கூறுகின்றுழி  , “பத்தரெலாம்  பார்மேற் சிவபுரம் போற்  கொண்டாடும்  , உத்தரகோச மங்கையூர் “ என்று   அடிகள் பிறிதொரிடத்துக்  கூறியிருத்த லும்   ஈண்டு  நோக்கத்தக்கது .  அப்பேரூரிலுள்ள   தெய்வ அரசாக  விளங்குபவன்  சிவபெருமானெனவும்  , அப்பெருமானுக்கு   அணுக்கராய்த் தொண்டு  பூண்டு  ஒழுகும்  மெய்யன்பரே  சிறப்பு மிக்க   மெய்யடியாராவரெனவும்   மரபின்  பெருமை  புலப்படுத்து , இப்பொழுது  அம்மரபின் முதல்வனாகிய  நின்னால்  புறக்கணிக்கப்பட்டு  ஒடுங்கிக்  கிடக்கும் யான்  அவ்வுயரிய  மரபில்  வந்த அடியார்க்கு  அடியனாவேனென்று  வெளிபடக் கூறி நின்னைப்  பரிகசிக்கச்  செவேன்  என்பார் , “அரசின் சீரடியாரடியானென்று   நின்னைச்  சிரிப்பிப்பனே” யென்றார் .

                            சிரித்தல் – பரிகசித்தல் . “சகம் பேயென்று   தம்மைச்  சிரிப்ப” என்புழியுங்  அப்பொருட்டாதலறிக .  ஓர் உயர்ந்த மரபின்   முதல்வர்  சீர்மையுடையவராக  வாழ்ந்திருப்ப  , அம் மரபிற் றோன்றிய  ஒருவன்  ஆதரவற்று  எளியனாயிருப்பின் , அந் நிலையைக்  கண்டார்   அம்மரபு  முதல்வரை  யெள்ளி நகையாடல்   உலகியலிற்  காணப்படுவ தொன்றாதலின் , அம்முறை பற்றி  இவ்வாறு  கூறினர்  . இது மழவிளங் குழவி   இருமுதுகுரவரை அன்பினாற்  கூறுங் குறை போல்வதொன்று .

இதன்கண் , யான் அரசன் சீரடியாரடியனாக  இருந்தும்  புறக்கணிக்கப்படுதற்கு  ஏதுவாக உலகியற்  பற்றுடையவனாக உழல்கின்றேன்  என்று  அடிகள்  கருதினாரென்பது பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதலறிக .

                                                    ***********************************

பாடல் : 49 .

சிரிப்பிப்பன்  சீறும்  பிழைப்பைத்  தொழும்பையு  மீசற்கென்று

விரிப்பிப்பன்  என்னை  விடுதிகண்  டாய்விடின்  வெங்கரியின் 

உரிப்பிச்சன்  தோலுடைப்  பிச்சனஞ்  சூண்பிச்ச  னூர்ச்சுடுகாட்

டெரிப்பிச்சன்  என்னையும்  ஆளுடைப்  பிச்சனென்  றேசுவனே

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் சிறியேன் திகைப்புற்ற  நிலையில் தேற்றுதற்குரிய  தகுதி , முழுமுதற்றலைவனும்  தெய்வீக  வீரனுமாகிய  நின்பாலதாமென்பதைக்  குறிப்பிற் புலப்படக்கூறிய  அடிகள் , இத்திருப் பாட்டில்  அத்தகைய  நின்னாற் றேற்றப்படின்  ,என் உலக  வாழ்க்கையை  யெள்ளி வெறுத்து , நின் உடனுரை  வாழ்க்கை யாகிய  திருத்தொண்டின்  பெருமையை விரித்து விளக்கிப்பாராட்டி  மகிழ்வேன்  என்று  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :- சீறும்  பிழைப்பைச்  சிரிப்பிப்பன்  =  வெறுக்கத்தக்க   என் உலக  வாழ்க்கையை எள்ளி நகையாடச்  செய்வேன் ,

தொழும்பை ஈசற்கு  என்று  விரிப்பிப்பன்   =   தொண்டு பூண்டு  ஒழுகுதலை  இறைவனுக்கே  யென்று  யாண்டும் பரவும்படி  செய்வேன் ,

என்னை  விடுதி  =  இத்தகைய  அடியேனைக் கைவிட்டு விடுவாயோ? ,   விடின்  =   கை விடுவாயின்  ,

வெம்கரியின்   உரிப்பிச்சன்  =  கொடிய யானைத்  தோலைப்  போர்த்த பித்தன் ,

தோலுடைப் பிச்சன்  =  புலித்தோலை  யுடுத்த பித்தன் ,

நஞ்சு ஊண்  பிச்சன்  =  நஞ்சை யுணவாகக்  கொண்ட  பித்தன் ,  

ஊர்ச் சுடுகாட்டு  எரிப்பிச்சன்  =  ஊர்க்குப்  பொதுவாகிய  சுடலைத் தீயில்  ஆடும்  பித்தன் , 

என்னையும்  ஆகுடைப்பிச்சன்  =  தகுதியற்றவனாகிய  என்னையும்   ஆட்கொண்ட பித்தன் ,

என்று  ஏசுவன்  =  என்று  இவ்வாறு  கூறி  இகழ்ந்துரைபேன்  என்பது .

விளக்கவுரை  :-  நரை  திரை  மூப்புப்  பிணி  சாக்காடு  என்னும்  இவற்றிற்கு   இடனாகிய  ஊனுடம்பைப்  பெற்ற  பொழுதே  அதனைக்  கடவுட்  பணியாகிய  தவத்திற்கு  உரியதாக்கல்  வேண்டும்  .  அங்ஙனம்  செய்யாமல்  உண்டுடுத்துறங்கும்  அளவில்  அமையுமாயின்  ,அவ்வுடலோடு  கூடிய  உயிர் வாழ்க்கை  வெறுக்கத்தக்கதாக  முடியுமாதலின்  ,அதனைச்  “சீறும்  பிழைப்பு” என்றார் .  சீறுதல்  –  வெகுளல் . வெறுத்தல் . இங்ஙனம்  வெறுக்கத்தக்க  வாழ்க்கையை  விரும்பத்தக்க தெனக்   கொள்ளாமல்  யான்  எள்ளியொழிப்பதொடு   பிறரும்  இவ்வுண்மையையுணர்ந்து  எள்ளி  நகை யாடற்கு  ஏற்பச்செவேன்  என்பார் , “சிரிப்பிப்பன்” என்றார் . இனி, இவ்வுடல்  கொண்டு  மன மொழி மெய்களால்  நினைந்தும்  வாழ்த்தியும்  வணங்கியும்  செய்யப்படும்  தொண்டு  , எல்லாம்  வல்ல  இறைவனைக்  குறித்தே  செய்யத் தக்கதென எப்பொழுதும்  எவ்விடத்தும் யான் முக்கரணங்களாலும்  இயன்ற வரை  பரப்புவேனென்பார் ,  “தொழும்பை யீசற்கென்று  விரிப்பிப்பன் “ என்றார் .

               ஈசற்கே  என்புழித்  தேற்றேகாரம்   விகாரத்தாற்றோக்கது .தொழும் பையும் என்புழி  உம்மை  இசை  நிறை . ஈசன் என்னும்  சொல்  சிறப்பு  முறையில் சிவபெருமானையே  யுணர்த்துமென்பது  மறை  யாகமங்களிற்  கண்டவுண்மை. மனம் பொறி புலங்களுக்கும்  , மண் , பெண் , பொன்  முதலியவற்றிற்கும் , செல்வர்  முதலியோர்க்கும்   அடிமைபட்டு  வாழ்தல்  ஆகிய  உலகத் தொண்டு   சீறும்  பிழைப்பின்பாற்  படுமாதலின்  , அதனை  விலக்கி  ஊனடைந்த  வுடம்பின்  பிறவியே  , தானடைந்த வுறுதியைச்   சார் தற்குரிய   கடவுட்டொண்டே  சிறந்த  தாகு மென்பார் ,  “ஈசற்கே” யென  வலியுறுத்துக்  கூறினர் . நலம்  தொன்றடைதற்கு  விலக்கத்தக்கதும்  மேற் கொள்ளத்தக்கதும்  இன்னவெனவுணர்ந்து , முதலில்  விலக்கத்தக்கதை  விலக்கியபின்   கொள்ளத்தக்கதைக் கொள்ளல்  வேண்டுமாதலின் அம்முறையில்  அழிவிலின்பப்   பேற்றிற்குத்   தடையாகவுள்ள   உலகத்தொண்டை யொழித்துப் பின் அப்பேற்றிற்கு இன்றியமையாச் சாதன மாகிய  சிவத்தொண்டைக் கொள்ளல்வேண்டுமென்பது  புலப்பட  அம்முறையில்  வைத்து ஊதினாரென்க .  

                      “சீறும்  பிழைப்பைச் சிரிப்பன்” எனவும்  ,”தொழும்பை  யீசற்கென்று  விரிப்பன்  “ எனவும்  தம்மளவிற்  கூறாது , “சிரிப்பிபன் “  விரிப்பிப்பன்”  எனப் பிறரையும்  அவ்வாறு  செய்யச்  செய்வன்  என்று  கூறியது , “நான் பெற்ற  வின்பம்  பெற்க விவ்வையகம் “என்னும்  உட்கோள் பற்றியென்பது . அரிய தவத்தால்  அடையத்தக்க  வீட்டின்ப நுகர்ச்சிக்கும்  பிறரை அறைகூவியழைக்கும்  பெருமை  நம்  சைவப்பெரியார்பால்  உளதென்பதை   யாவரேயறியார்?  நாம் இனியெடுத்த தேகம்  விழுமுன்   புசிப்பதற்குச்   சேரவாருஞ்   செகத்தீரே”  என்னும்  தாயுமானவர்  உரையும் , கொள்ளை கொள்ள   வீடுதவிக்  கூற்றைப்  பிடர்பிடித்துத்  தள்ளிய   திருஞான சம்பந்தர்  செயலும்  இவ்வுண்மையை   வலியுறுத்து நிற்றலறிக .  

               இங்ஙனம்  உலக வாழ்க்கையை  யானும் வெறுப்பேன் ; பிறர்  எள்ளி நகையாடுதற்   கேற்றதையும்  செய்வேன்  எனவும்  , தொண்டு  இறைவனாகிய  நின் பொருட்டே  செய்யத்தக்க  தென்பதை  யானும்  உணர்வேன் ; பிறர்  உணரவும்  விரித்து விளக்குவேன்  எனவும்  , இந் நீத்தல்  விண்ணப்பத்தின்  இறுதிப் பகுதியில்  அடிகள்  தம் முள்ளத்திற் கண்ட   மெய்களைத்  தந்தையிடத்துக்  குழந்தை  கூறுதல்  போலக்கூறி, இந் நிலையிலுள்ள  என்னைக்  கைவிடல்   தகுமாவென்பார் ., “ என்னை விடுதி கண்டாய் “ என்றார் . 

                   இவ்வுண்மையை   விண்ணப்பஞ் செய்யக் கேட்டும்  என்னைக்  கைவிடுவாயாயின்  , என் உள்ளத்தில்  நின்னைப்பற்றியறிந்த  சில செய்திகளை  யெடுத்துக் கூறி  நின்னை  ஏசுவன்  எங்கின்றார் . இறைவனை  வாழ்த்துதற்குரிய  அருஞ் செயல்களையே  அடிகள் வைதற்குரியனவாகக்  கொண்டு  கூறின  ரென்பது பின் வருவனவற்றால்  விளங்கும் .

                     ஊண் உடை உறையுள் மூன்றையும் மாறுபடக் கோடல்   பித்தர்  செயல்களாகும்  .  யானைத்  தோலைப்   போர்வையாகவும்  ,புலித்தோலை   யுடையாகவும்  கொண்ட பித்தன்  என்றதனால்  உடையின்  மாறுபாடும்  , நஞ்சுண்ட பித்தன்  என்றதனால்  உறையுளின்  மாறுபாடும்  புலனாதல் அறிக . இம் மூன்றனாலும்   முறையே  இறைவனுடைய  முடிவிலாற்றலும்  , பேரருளுடைமையும்  முழு முதற்றன்மையும்   ஆகிய  பெருமையே  வெளிப்பட்டு  நிற்றல்  அறியத்தக்கது .  சுடுகாடு  இன்னதென்பதையும்  அதன்கண், இறைவன்  நடமாடுதலின்  உண்மையையும்   திருச்சதகம்  ஏழாம் திருப்பாட்டின்  விளக்கவுரையிற்   காண்க .  ஏசுதற்குரிய  இறை செயல்களாக  இங்கே  கூறப்பட்ட  மூன்றன்   மேலும்  சிறந்ததாக  ஒன்று  கூறுகின்றார் .   

                           அஃது ஆட்கொள்ளுதற்குரிய  தகுதி ஒரு சிறிது மில்லாத  சிறியேனையும்   ஆளாகக்கொள்ளும்  பித்தன்  என்பது . என்னையும்  என்புழி உம்மை இழிவு சிறப்புப் பொருட்டு  . அன்பரைக்  குற்றங்களைந்து  ஆட்கொள்ளுதல்   இறைவனுக்கு  இயல்பினமைந்த   பேரருளுடைமை யானாகும்  . ஆதலின்  , இதுவும்   அப்பெருமானுடைய   அளப்பரும்  பெருமையையே  புலப்படுத்து மென்பதுணர்க . இங்ஙனம்  வாழ்த்தினும்  வையினும் இறைவன்  மாண்பே  அடிகள்  நெஞ்சினும்  நாவினும்  நின்று  வெளிபடு மென்பது நினைந்து இன்புறத்தக்கது .  

                             இதன்கண், “சிரிப்பிப்பன்  சீறும்  பிழைப்பை “ யென்றதனால் , உலக  வாழ்க்கை வெறுத்து யெள்ளி நகையாடற்குரிய தென்பது பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக . 

                                             ********************************************

பாடல் : 50 .

ஏசினும்  யானுன்னை  யேத்தினும்  என்பிழைக்  கேகுழைந்து

வேசறு  வேனை  விடுதிகண்  டாய்செம்  பவளவெற்பிற் 

றேசுடை  யாயென்னை   யாளுடை  யாய்சிற்  றுயிர்க்கிரங்கிக் 

காய்சின  வாலமுண்  டாயமு  துண்ணக்  கடையவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  உலக  வாழ்க்கையை எள்ளி நின் உடனுறை வாழ்க்கையாகிய  திருத்தொண்டை  விளக்கிப்  பாராட்டி  மகிழ்வேன் என்று  கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்   அப்பாராட்டு வைதல்  வாழ்த்துதலாகிய  இருதிறத்தானும்  முறையே   குறிப்பினும்  வெளிபடை யினும்  நிகழுமாதலின்  , அவ்வீரிடத்தும்  உண்டாம் என்  குற்றத்திற்கு   வருந்துகின்றேன் ; பொறுத்தருள  வேண்டுமென்று  வின்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-  செம்பவள  வெற்பின்  தேசு  உடையாய்  =  செந்நிறமுடைய   பவள மலைபோல்  ஒளி விளங்கும்  திருமேனியை  யுடையவனே ,

என்னை  ஆளுடையாய்  =  சிறியேனை  ஆளாகக்  கொண்டவனே ,

அமுது உண்ணக்  கடையவன்  =  அமிழ்தம்  உண்ண  உரிமையுடையனாக  இருந்தும் ,

சிறுமை உயிர்க்கு  இரங்கி  =  சிறிய  உயிர்த்தொகுதிகளுக்கு    நேருந் துன்பத்திற்கு  இரக்கமுற்று ,

காய்  சினம்  ஆலம்  உண்டாய்  =  கொதித்தெழும்  கொடுமை மிக்க  ஆலாலமென்னும்   நஞ்சையுண்டருளியவனே

யான்  உன்னை  ஏசினும்  ஏத்தினும்  =  அடியேன்  ஆண்டவனாகிய   நின்னைக்  குறித்துப்  பழித்துரைப்பினும்  புகழ்ந்துரைப்பினும் உண்டாம்

என் பிழைக்கே  குழைந்து வேசறுவேனை  =  என் குற்றத்தையே  கருதி உள்ளமுருகி வருந்துவேனை , 

விடுதி  =  கைவிட்டு விடுவாயோ (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  அருளுருக்  கொள்ளுங்கால், ”நிறங்களோரைந்து டையாய்” என்றபடி அவ்வருட்டிரு மேனிக்குப் பல  நிறங்கள்  சிவாகமங்களிற்  கூறப்பட்டிருப்பினும்  , ஞானாசிரியனாக எழுந்தருளி   அன்பர்க்குக்  காட்சியளிக்குங்கால்  மேற்கொள்வது ,செந் நிற வொளி மிக்க திருமேனி யாகும் . இவ்வுண்மையைச்  “ செம்மேனி யெம்மான்”  “தழல் வண்ணன்”  “பவளமே திருவுடம்பு “  என்பன  முதலிய  ஞானப் பனுவல்களானறியலாம் .  பவள வெற்பு –  இல் பொருளுவமை . எந் நிறத்தினும்  ஒளியுடைமையே அழகு  செய்வதாகும் .  நிறம்  ஒளி என்னும்  இரண்டனியைபும்  உடலுயிர்களின்  இயைபு  போற்  கொள்ளத்தக்க தென்க .

                      அவ்விரண்டனுள்ளும்   ஒளி சிறந்த தாகலானும்,  நிறம்  செம்மை யென்னும்  உவமையடையாற்  பெறப்பட்டமையானும்  “செம்பவள வெற்பின்  நிறமுடையாய்”  என்னாது , “தேசுடையாய் “ என்றார் . தேசு – ஒளி . இங்ஙனம்  விளித்தது ஞானாசிரியத்  திருவுருவைக்   குறிக்கொண்டென்க.   அடுத்து “என்னை யாளுடையாய்  “  என்றதனாலும்  இது வலியுறுவதாகும் . “வெற்பிற் றேசுடையாய்”  என்றதனால்  இறைவனது அளப்பரும்  பெருமையும் , “என்னையாளுடையாய்” என்றதனால்  அப்பெருமானது பேரருளுடைமையும்  புலப்படுக்கப்பட்டபடியாம் .

                       இவ்வளவில்  அடிகள்  தம்  பொருட்டு  இறைவன்  செய்த  பேருத வியைப்  புலப்படுத்து,  மேல் மக்கள்  தேவர்  முதலிய  எல்லோர்க்கும்  அப்பெருமான்  செய்த பேரருட்  செயலைக்  கூறுகின்றார் ,  இவை முறையே சிறப்பும்   பொதுவுமாகும்  .  உலகியலறம்  வகுத்த  திருவள்ளுவர்  , ஒருவன் மற்றொருவனுக்கு  உற்றுழி  யுதவுதலாகிய  சிறப்பறத்தை  ஈகையெனவும்  , பலருக்கும்   பயன்பட   உதவுதலாகிய   பொதுவறத்தை ஒப்புரவு எனவும்  வகைப்படுத்துக் கூறியிருத்தலும்   ஈண்டு  நினைக்கத்தக்கது .

                           “அமுதுண்ணக் கடையவன் “  என்புழிக் கடையவன்  என்பது  கடமையுடையவன்  என்னும்  பொருட்டு  . கடமை  ஈண்டு  உரிமைப்  பொருண்மேலதாம் . கடமை என்பதில்  “மை” விகுதி கெட்டு   இடை  அகரம்   ஐகாரமாகி  விகுதியேற்றுக்  கடையன்   கடையவன்  என்றாயிற்று , பழமைப் பகுதியினின்றும்    பழையன்   பழையவன்  என்றாயது போல  வென்க .  அமுதும்  நஞ்சும்  உண்டார்க்கு  முறையே   சாவாமையை  சாதலையும்  பயக்குமென்ப .  அவற்றுள் , அமுது கடவுளர்க்குரிய  வுயர்ந்த வுணவாதலின் ,  அதனையுண்டாற்கு  உரிமை   கடவுளர்  தலைவனாகிய   நினக்கே  யுளதாகவும்  , சிறிய வுயிர்கள்  பால்  வைத்த கருணை காரணமாகச்   சாவாமையைப்  பயப்பதாகிய  அவ்வமுதவுணவை  யொழித்துச் , சாதலைப்  பயப்பதாகிய   நஞ்சையுண்டருளினாய்  என்பது  கருத்து .

                           கடையவன்  என்பதன் பின் சில சொற்கள்  அவாய்  நிலையான்   வருவித்துரைக்கப்பட்டன . இனிக் கடையவன்  என்பதற்குக்  கடைந்த அவன், திருமால்   எனப்பொருள் கொண்டு   திருமால்  அமுதுண்ண  நஞ்சமுண்டவ னே  யெனக்  கூறுவாருமுளர் .  கடைந்தவனும்  அமுதுண்டவனும்   திருமால் ஒருவன்  மாத்திரம்  அல்லன் ; தேவரெல்லோரு  மாவ ராதலானும்  , இறைவன்  நஞ்சுண்டற்கு  ஏது  “சிற்றுயிர்க் கிரங்கி” என்பதனாற்  பெறப்பட்டமையானும்   அவ்வுரை  பொருட் சிறப்புடைய தன்றென்க .

                          சிற்றுயிர்  என்றது கன்மத்திற்  கீடாகப்  பிறப்புக்களிற்  பட்டுழலும்  சிறுமையுடைய  மக்கள் தேவர்   முதலியவுயிர்த் தொகுதிகளை  அமுதமுண்டு  அமர வாழ்வு  பெற முயன்றார்க்கு  முதலிற் றோன்றியது  ஆலால மென்னுங் கொடிய  நஞ்சாக  , அது கண்டு பெரிதுங் கலக்கமுற்ற   அவ்வுயிர்த் தொகுதிகளின்  பொருட்டு மேற்கொண்ட  இரக்கங்காரணமாக  வென்பார் , “சிற்றுயுர்க்கிரங்கி “ என்றார் . இறைவன்  தன் ஆற்றலைப்  பிறர்  அறிய வைத்தற்கு   இக்கொடிய  நஞ்சை   யுண்டானல்லன் என்பது புலப்பட  “இரங்கி”யென அருட் குணத்தைக்  காரணமாகக்  குறிப்பிட்டார்  என்க .         காய் சினம்  – வினைத்தொகை  . காய்தல் –  சுடுதல் .  சினம் – வெகுளி ., கொடுமை .  

                      இறைவன்  உண்ட  நஞ்சு  வலியிழந்ததால்  மணிமந்திர   மருந்துகளால்  ஒழிக்கத்தக்கதாதல்  அன்றென்பார் , “காய்ச்சின  வாலம் “ என்றார்  . அடிகள் “என்னையாளுடையாய் “ என்றதனால்  தமக்குச் சிறப்பு  வகையிற்  செய்த பேருதவியையும்  , “சிற்றுயிர்க்கிரங்கிக்  காய்சின  வாலமுண்டாய்”  என்றதனால் பிறவுயிர்த் தொகுதிகளின்  பொருட்டுப்  பொது வகையிற்  செய்த பேருதவியையும் குறிப்பிட்டபடியாம் .

                         இனி, இறைவனைத்  தாம்  இகழ்தல்போற்  புகழ்ந்தும் , வெளிப்படையாய்ப்  புகழ்ந்தும் கூறியவற்றில்   நேரும்  பிழைகளுக்கு   வருந்திப்  பொறுத்தருள  வேண்டுகின்றார் . , ஏசுதல்  ஈண்டு  மழைதருகண் டன்  குணமிலி மானிடன்   தேய்மதியன்  நஞ்சுண்பிச்சன்  முதலாக  ஒருவாற்றாற்   சொல்லளவிற்  பழித்துரைத்தலாகும்  .  இத் தொடர் மொழி களில்  இறைவன்  பெருமையே  புலப்படுக்கப்பட்டு ப் புகழ்தலாக முடியுமாயினும் , கேட்பார்  ஓரளவு  பழித்தலாகவும்  கருதுதற்கு  இடந்தருத லின்,  அவ்வளவிற்  பிழை  செய்தாகுமென்பது .

                             ஏத்துதல் – உயர்த்துக் கூறிப்புகழ்தல் .  இறைவன்  பெருமை  மாற்ற  மனங்கழிய  நின்றதாகலின்  , “அவன்  பூங்கழல் யாம்பேசத்  திருவார்த்தையிற்  பெருநீளம்” என்றபடி  விரித்துரைக்கப் புகின் , ஓரள விலடங்காமல்   பெருகிச் செல்லுதலாலும், தொகுத்துரைக்கப்  புகின்  , முற்றுங்கூறப்பட்டதாக  முடியாமையாலும்  குறையாகவே  கூறியதாக முடிதலின், அதுவும் பிழை  செய்ததாகுமென்பது .. எங்கும்  நிறைபொருளாக  வுள்ளவனை  ஓரிடத்து  ஒரு திருக்கோயிலுள்ளான்  எனவும்  ,எச்செயலும்  , வல்லானைச்  சிற்சில  செயல்களைக்  குறிப்பிட்டு  அவற்றில்  வல்லானெ னவும்  கூறுதல் போல்வன  புகழ்தலாயினும்  , குறையாகக்  கருதுதற்கு  இடந்தருதலின்  , பிழை செய்ததாக   முடியுமென்பது கருத்து. இவ்விருதிறத் தானுமன்றிப்  பேச்சு   நிகழ்தற்கு  இடனின்று.   

                                 ஆதலின், இவ்வீரிடத்தும்  நிகழும்  பிழைகளை  நினைந்து வேறு  போக்கிடனில்லாமையால்  உள்ள முருகி  வருந்துகின்றேன்  என்பார் . “ஏசினும் யானுன்னை யேத்தினும்  என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை” என்றார் .

                                 ஆண்டவனே !  குற்ற நற்றம் இரண்டும்  மக்களியல் பாயினும்  , நின்னைக் குறித்து , யான்  பேசுவனவெல்லாம்  குற்றமாகவே  முடிதலின்  அதற்கே  வருந்தலானேன்  என்று  அடிகள் கருதினாரென்பது  பெறப்படுதலின்  , “என் பிழக்கே “ என்புழி  ஏகாரம்  பிரிதலைப்  பொருளதாகும் . வேசறுதல் – வருந்துதல் . சிற்றறிவுடைய வுயிர்கள்  பிழை செய்தல் இயல்பாயினும்  , பின் அது பிழையென  வுணர்ந்து  வருந்திப்பிழை பொறுக்க வேண்டின்  , பொறுத்துப்  பாதுகாத்தல்   பேரருளாளனாகிய   நினக்குக்  கடனாதலின் , சிறியேன் பிழை கருதிக் கைவிடாமற்  காத்தருள  வேண்டுமென்பார் , “வேசறு வேனை விடுதி கண்டாய்”  என்றார் .  

               இனி,  “ஏசினும் …………விடுதி” என்பதற்கு , யான்  உன்னை வைதாலும்  வாழ்த்தினாலும்  அவற்றைப்  பொருட்படுத்தாமல்  , என் பிழை குறித்து  வருந்து கின்றேனாதலின்  , அதுபற்றியேனும்  என்னைக்  கைவிடலாகாது  என்று  பொருள்  கூறலுமாம் . இத் திருப்பாட்டு  நீத்தல் விண்ணப்பத்தின்   இறுதியா தலின் , ஈற்றடி  யீற்றிலுள்ள  “கடையவனே” யென்பது  தொடக்கத் திருப் பாட்டின்   முதலோடியைந்து  அந்தாதித்   தொடயாயினமை  அறிக .  

                இதன்கண் ,”ஏசினும்  யானுன்னை   யேத்தினும்  என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை”  யென்றதனால் , உலக  வாழ்க்கையைப்  பற்றி நிற்பார் செயல்  எவ்வாற்றானும்  பிழைபடுமென்பதும் ,அதற்குக்  காரணமா கிய   உலக  வாழ்க்கை  வெறுக்கத்தக்கதென்பதும்  பெறப்படுதலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                   திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத் திருமறைக் கண்ணுள்ள   நீத்தல்  விண்ணப்பத்திற்குப்  பாண்டி வளநாட்டில்   பூங்குன்றநாட்டுத்  தலைநகராகிய   மகிபாலன்பட்டி  மகாமகோபாத்தியாய  முதுபெரும் புலவர் , பண்டிதமணி  மு . கதிரேசச்   செட்டியார்  இயற்றிய  கதிர்மணி விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப்பெற்றது . 

                                              திருச்சிற்றம்பலம்

                                                     முற்றும் 

                                                         *****  

 

                          

 

 

      கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

                                மாணிக்கவாசக  சுவாமிகள்

                                               அருளிச்செய்த

திருவாசகம்  –  திருவெம்பாவை

                                         கதிர்மணி  விளக்கம்

                                                                  என்னும் பேருரை

                                            மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

                                                சைவசித்தாந்த வித்தகர்  பண்டிதமணி

                                                                மு.  கதிரேசச்செட்டியார்

                                                                              இயற்றியது.

                                     பண்டிதமணியின்  வரலாறு

             பண்டிதமணி மு . கதிரேசச்செட்டியார் அவர்கள் தலைசிறந்த தமிழ் மணி. நகரத்தார் மரபில் தோன்றிய பெருமணி . புலவர்க்கெல்லாம்  புலவராய் விளங்கிய அறிவு மணி. இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியருள் ஒப்பற்ற புகழ்மணி.

           பண்டிதமணி மகிபாலன்பட்டியில்  16-10-1881 ல்  பிறந்தனர். கல்வியில் ஆராக்காதல்  கொண்டு தமது சொந்த முயற்சியால் கணக்கற்ற  நூல்களைத் தாமே கற்றனர்.  தென்மொழி, வடமொழியாகிய மொழிகளில் கற்றுத்துறை போகிய காரணத்தால்  அறிஞரின் அன்பையும் மதிப்பையும் பெற்றனர். எம் சபையினரால் பண்டிதமணி என்ற  பட்டத்தையும்,  புலவர் பெருமக்களால் முதுபெரும் புலவர்  என்ற  பட்டத்தையும்  அரசினரால்  மகாமகோபாத்தியாயர் என்ற  அரிய  பட்டத்தையும்  பெற்றனர்.

              இவர்கள்  பண்டையத்  தமிழ்ச் சங்கம்  போல  ஒரு  சங்கம்  அமைத்துத் தமிழும்,  சைவமும்,  நலனும்,  வளனும்  பெற்று  ஓங்க அவாவினர். அவ் விருப்பமே மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை   தோன்ற  வித்தாயிற்று . இன்று  இச்சபை  நாளும்  வளர்ந்து,  தனித் தமிழ்ப் புலவர்  கல்லூரியாம்  கணேசர் செந்தமிழ்க் கல்லூரி முதலாய  உறுப்புக்களோடு சிறந்து  பண்டிதமணி அவர்களின் பெரும்  நினைவுச்சின்னமாக  நிலவுகிறது .

                இச்சபையின் வாயிலாகவே, பண்டிதமணியின்  நூல்கள் முதன் முதலில்  வெளிவந்தன.  சபையின்  வளர்ச்சியிலும் ,  வாழ்விலும்  பண்டிதமணி ஊன்றிய  பற்றும்  ,  உறுதியான  அன்பும்  கொண்டு ஒல்லும் வகையெல்லாம் உதவினர். ஆதலின்  சன்மார்க்கசபையார் , தம்  அன்பையும் நன்றியையும் காட்டும்  முகத்தான் அன்னாருக்கு  மகாமகோபாத்தியாய  டாக்டர் உ. வே. சாமிநாதஐயர்  அவர்கள் தலைமையில்   பண்டிதமணி  என்ற  பட்டத்தை வழங்கினர்.  இச்சிறப்புப்பெயரே  பின்னர் கதிரேசனாரின்  இயற்பெயரினும்  மிகுதியாக  வழங்கிற்று .

                  இவர்கள் தம்  நுண்ணிய மதியால் நூல்கள் சிலவற்றிற்கு உரை  வகுத்தனர் . வடமொழியினின்றும்  சில  பெரும் நூல்களைத் தமிழாக்கம்  செய்தனர். சமயத்துறையின் தெளிந்த அறிவால் தேர்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினர் . இலக்கியங்களைச் சுவைபடவும் , நகைச்சுவை ததும்பவும் சொற்பெருக்காற்றுவதில் இவர்களுக்கு ஈடு இவர்களேயாவர்.  இவர்கள்  ஏறாத மேடையோ, தலைமை வகிக்காத மாநாடுகளோ அந்நாளில் இல்லை எனலாம் .

                   இவர்களால் , திருவாசகத்தின்  பகுதிகளாகிய  திருச்சதகம் , நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பேருரையும், , மண்ணியல் சிறு தேர் , சுக்கிர நீதி , சுலோசனை, உதயனசரிதம் , கௌடிலீயம் , மாலதீ மாதவம், பிரதாபருத்திரீயம் ஆகிய  மொழிபெயர்ப்பு நூல்களும், உரைநடைக்கோவை, சமயக்கட்டுரைகள் , நாட்டுக்கோட்டை நகரத்தாரின் சீர்திருத்தம், சுவாமிநாத  விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய பல பனுவல்களும் , தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக்  கிடைத்தன .

                      பரந்த  புகழும்  , செறிந்த  அறிவும்  கொண்டு விளங்கிய  பண்டிதமணியவர்களை , அண்ணாமலையரசர்  விரும்பி அழைத்துத் தமது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கட்டிலில் அமர்த்தி அக்கழகத்திற்குப் பெருமை  சேர்த்தனர்.

                       பண்டிதமணியவர்கள்  சங்கப் புலவர்கள் போல செம்மாப்பும் , கீர்த்தியும் , செல்வாக்கும் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்தனர் . ஏறத்தாழ ஐம்பது  ஆண்டுகள் இடையறாது தமிழ்ப்பணி புரிந்த  “கதிர்மணி” 24-10-53ல் திடீரென ஒளிக்கற்றைகளைச் சுருக்கி மறைவதாயிற்று . இறைவனை எந்நாளும் வழுத்திய  நெஞ்சும் , திருவாசக உரையை அயராது எழுதிய திருக்கைகளும் இவ்வுலகில் ஓய்வு பெற்றுச் சென்று சிவன்  திருவடிக்கீழ் உய்தி பெற்றன.

                        “ சொல்லிய  பாட்டின்  பொருளுணர்ந்து சொல்லுவார்,

                           செல்வர்  சிவபுரத்தின்  உள்ளார்  சிவனடிக்கீழ்ப்

                            பல்லாரும் ஏத்தப்  பணிந்து”

                                                       —————————–

                                                                        சிவமயம்

                                                                    திருவெம்பாவை

                                                                         நூல்முகம்

                                              தமிழ்க்கடல்  ராய.  சொக்கலிங்கம்  அவர்கள்

                                           இயக்குநர், ஆராய்ச்சித்துறை , அழகப்பா  கல்லூரி.

                 இறைவனோடு  பாடலால் நேராகப்பேசும் பேறு பெற்றவர்களுள் மணிவாசகப்பெருமானை நிகர்த்தார் எவருமிலர். தன்னை அடியார்க்குத்  தந்து  அடியாரைத்  தான்  கொண்டதில் சிவபெருமானைவிடத்  தானே சதுரப்பாடு  உடையவர் என்று மணிவாசகர் வழுத்துவது  முகமன் . மணிவாசகரை  ஆட்கொண்டு  , திருவாசகம்  என்ற  எய்ப்பில்  வைப்பைப் பெறும் பேறு  பெற்ற  சிவபெருமானே  சதுரப்பாடுடையார்  என்பது  தேற்றம் . திருவாசகத்தைப்  போன்ற  ஒரு  நுலை  யாரும்  பெற  முடியுமா ? “பாவெனப்படுவது  உன்  பாட்டு “ என்று  மணிவாசகரைப்பார்த்து  , சிவப்பிரகாசர் கூறுவது  முழு  உண்மை. திருவாசகத்தைப்  போற்றாத  புலவர்  இலர் . அதற்குள் நுழைந்தால்   அளவு  கடக்கும் .

                திருவாசகத்திற்கு  ஓர்  பேருரை  இன்றியமையாதது.  “திருவாசகத்திற்கு  உரை  காணக்கூடாது “ என்று  சிலர்  சொல்லுவர் . எனினும்  ஏறத்தாழ  எழுபது  ஆண்டுகட்கு  முன்னரேயே  திருவாசகத்திற்கு  உரை  காணப்பெற்று அச்சாகி  இருக்கின்றது . சொல்லிய பாட்டின் பொருள்  உணர்ந்து  சொல்லுதல்  வேண்டும்  என்பதே  திருவாசக  ஆசிரியர்  கருத்து . எனவே உரை காண்டல்  நூல்  ஆசிரியர்  கருத்துக்கு  மாறுபட்டதன்று .

                   திருவாசகத்திற்கு  விரிவுரை  காணும்  பணியை  முதலில்  மேற்கொண்டவர்  மறைமலை  அடிகள் . திருவாசகத்தின் முதல் நான்கு  பெரிய  பாடல்கட்கும் விரிவுரை எழுதி அடிகள் வெளியிட்டார். ஐந்தாவது  பகுதியாகிய  திருச்சதகம் நூறு  பாடல்களுக்கும் , ஆறாவது  பிரிவாகிய நீத்தல் விண்ணப்பம்  ஐம்பது பாடல்களுக்கும் ,  ஏழாவது  திருவெம்பாவை  இருபது  பாடல்கட்கும் பேருரை  செய்து  , மகாமகோபாத்தியாய-முதுபெரும்புலவர்- சைவசித்தாந்த  வித்தகர்  – பண்டிதமணி- மு. கதிரேசச் செட்டியார் வெளியிட்டார். அப்பேருரையின்  மூன்றாவது  பகுதியாகிய  திருவெம்பாவையின் பதிப்பு  இப்போது  வெளிவருகின்றது .

                      கதிரேசனாரின்  திருவாசக  உரை  விரிந்த  பேருரையாகும் . இவ்வுரைக்கு , “கதிர்மணி  விளக்கப்   பேருரை “ என்று  உரை  ஆசிரியரே  பெயர்  கொடுத்திருக்கின்றார் .  ஒளிமிக்க  திருவாசக  மணியை விளக்கிக்காட்டும்  பெரிய  உரை  என்றும்  கதிரேசனார்  விளக்கிய  பேர்  உரை  என்றும் அமையும் .

                       திருவாசகத்தின்  பகுதியாகிய  இத்  திருவெம்பாவை , நங்கைமார்  பலர்  கூறுந்துறையான்  அமைந்த  கற்பனைக்களஞ்சியம்  . திருவெம்பாவை  இருபது  பாடல்கள்  கொண்டது . இவ் விருபது  பாடல்களின்  விரிவுரையே  இந்நூல், உரை  ஆசிரியர்  தம்  நுண்ணறிவிற்கேற்ப  உரை  கண்ட திட்பத்தை  உரையினுள்  ஆங்காங்குக்  காணலாம்.  அதற்குள் நுழைந்து  மதிப்பிடப்  புகுந்தால்  நூல்முகமும்  , ஒர்  பேருரை  ஆகிவிடும்  என்று  அஞ்சி அப்பணியை  யான் மேற்கொண்டேன் அல்லேன். 

                          திருவெம்பாவை  , யாப்பு  வகையில்  பார்க்குங்கால்  வெண்தளையால்  வந்த  எட்டு  அடிக்  கொச்சக்  கலிப்பா  ஆம் . இதனைப்  பேராசிரியர்  ஒப்புக்கொண்டதாக  , திருவெம்பாவைக்குப்  பேருரை  கண்ட  பண்டிதமணியே  கூறுகின்றார் . எனினும்  எட்டடியாகப்  பதிப்பிக்காமல்  நாலடிப்பாடல்  என்று  கொள்ளுமாப்போல்  , அடிமடக்கித்  தாமும்  பதித்திருப்பது  , முன்னையோர்  முறையைப் பின்பற்றி  , என்று  அவர்  இயம்புகிறார்  இது  உரை  ஆசிரியரின்  பழமைப்பற்றைக்  காட்டுகின்றது  .

                            கதிர்மணி  விளக்கப்  பேருரை  தந்த  இருமொழிப்  புலமைக்  கதிரேசனாருக்குத்  தமிழ்நாடு  பெரிதும்  கடமைப்பட்டிருக்கிறது  . இவ்வுரையின்  சிறப்பைப்பற்றி,  மாசற்ற  உள்ளம்  படைத்த  கவிமணி  தேசிக  விநாயகனார்  பாராட்டிச்  சொல்லிய  சில  பாடல்களை  ஈண்டுக்  காண்போம் .

                     “வையகம்  போற்றுதிரு  வாசகத்தின்  உட்பொருளைக்

                      கையிற்  கனியாகக்  காட்டினனால் – செய்யதமிழ்ப்

                      பேரா  சிரியர்  பெருமான்  கதிரேசன் 

                       ஆராய்ந்து  முற்றும்  அறிந்து “

                       வாசகம்  எல்லாம்  மணிவா  சகமாமோ?

                      காசெல்லாம்  காணும்பொற்  காசாமோ? – பேசுலகில்

                      மன்னுஉரை  எல்லாம்  மகிபால  மாநகரான்

                      சொன்ன  உரைக்கு  ஈடாமோ  சொல்? “

 

                   

                 என்று  இயம்பிய     கவிமணியுடன்  சேர்ந்து  கதிர்மணி  விளக்கப்  பேருரையை  நானும்  பாராட்டுகின்றேன் .  பண்டிதமணியோடு  நேரில்  அவ்வளவு  நெருங்கிப்பழகாத    கவிமணி  , கதிர்மணி  விளக்கப்  பேருரையைப்  படித்து , பண்டிதமணிபால்  எல்லையற்ற  மதிப்பு  வைத்திருந்தார்  என்பதை  ,  பண்டிதமணி  கதிரேசனார்  இவ்வுலக  வாழ்வு  நீத்தபோது  , கவிமணி  பாடிய  பின்வரும்  ஓர்  அரிய  வெண்பா  எடுத்துக்காட்டும் .

                      “என்று  வருவான்  எமனென்று  எதிர்நோக்கி

                        நின்று  தளர்கின்றேன்  நித்தலுமே – மன்றில் 

                         நடங்கண்ட   ஈசன்  நடராசன்  பாதத்து 

                         இடங்கண்டு  வைநீ  எனக்கு .”

                     இந்த  இணையற்ற  பாட்டு  , பண்டிதமணி  இறைவன்  திருவடி நிழலை  எய்தினார்  என்ற  கவிமணியின்  நம்பிக்கையையும் , உயிருக்கும்  உடலுக்கும்  இடையில்   ஊசலாடிக் கொண்டிருக்கும்   தாங்க  முடியாத  தமது  ஆற்றாமையையும்  தெள்ளெனக்  காட்டுகின்றது .

 

                    “ கல்லைப்  பிசைந்து  கனியாக்க  வல்லான் எம்

                       தில்லைப்  பெருமான்  திருவருளால் – நல்லஒரு

                       வாடா  விளக்காக  வாழ்க  மணிவிளக்கம்

                       நீடாழி  சூழும்  நிலத்து .”

 

                   என, கவிமணியைப்  போலவே  கதிர்மணி விளக்கத்தை நானும்  வாழ்த்துகின்றேன் .

                                                                                                                         ராய. சொ.

                                                                                                                         கரைக்குடி

                                                                                                                          26-08-64

                                                  ——————————————–

கணபதி துணை

பதிப்புரை

“பாட்டுக்  குருகும்  பரமன்  திருவருளை

வேட்டுப்  புகழ்ந்துருகும்  மெய்யன்பர் – பாட்டின்

பொருளுணர்ந்து  கூறப்  புகலருமவ்  வண்ணல்

திருவடியை  நெஞ்சமே  செர்.”

தமிழ்  மொழி  மாண்பையும்  சைவ  சமய  உண்மைகளையும்  அழுந்தியுணர்ந்து  பொதுவாக  இவ்வுலகத்திற்கும்  , சிறப்பாகத்  தமிழ்  நாட்டிற்கும்  சிறந்த  பயன்  விளையும்  வண்ணம்  திருவாசகம்  அருளிச்  செய்த  அருள்  வள்ளளாகிய  மாணிக்கவாசக  சுவாமிகளின்  பெருமை  இவ்வுலகம்  அறிந்ததொன்று  . அவர்கள்  சிவானுபவத்தில்  தலைநின்று  கல்லும்  கரையும்  வண்ணம்  திருவாய்  மலர்ந்தருளிய  இனிய  திருவாசகப்  பாட்டுக்கள்  ஓதுவார், கேட்பார்  எல்லோரையும்  கரையிலா  இன்பக்  கடலுள்  திளைப்பித்து  இம்மை, மறுமை,  வீடு  ஆகிய  மும்மை  நலங்களையும்  விளைக்கும்  இயல்பின; இசை  நலத்திற்கேற்ற  இனிமை  மிக்க  சொற்றொடர்களும்  பொருணுட்பங்களும்   அமையப்பெற்றன.  நவிறோறும்  நூனயம், புதியன  புதியனவாகத்   தோற்றிப்  பரவசப்படுத்தும்  பான்மைய.  இத்தகைய  இன்பப்  பாட்டுக்களாலாகிய  திருவாசகத்தை  யான்  பண்டை  நல்வினை  வயத்தால்  பலகாலம்  ஆராய்ந்து பயின்று  வருங்கால்  அதன் கட் கண்ட  அரியவுண்மைகளை  இயன்றளவு  சொற்பொழிவு  முகமாகவும்  கட்டுரை  வடிவிலும்  வெளிப்படுத்தியதுண்டு . பின்  அன்பர்கள் குறிப்பின்  வண்ணம்  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பெயரால்  திருச்சதகம்  , நீத்தல்  விண்ணப்பம்  என்னும் பகுதிகளுக்கு  உரை  எழுதி  வெளியிட்டேன்  . மேன்மேலும்  அறிவுடையார் ஆதரவு  ஊக்கமுறுத்தி  வந்ததால் இப்பொழுது  திருவெம்பாவைக்கு  உரை  எழுதி  வெளியிடலானேன் .

இவ்வுரையை  எழுதிமுடித்து  அச்சிட  எண்ணியிருக்கும்  பொழுது  அன்பு  முறையில்  என்  உடல்  நலம்  வினாதற்கு  இங்கு  வந்த  கொத்தமங்கலம்  என்  நண்பர்  திருவாளர்  சி. ராம. மு. லெ. இலக்குமணச்  செட்டியார்  அவர்கள்  இதன்  வெளியீட்டிற்கு  வேண்டும்  பொருட்  செலவைத்  தாமே  செய்வதாகக்  கூறி  உதவினார்கள் . அவர்கள்  கல்வி  கேள்விகளில்  ஆர்வமும் , கடவுட்பத்தி  முதலிய  சைவ  ஒழுக்கமும்,  அறிவுடையோர்  குழுவில்  கூடி  மகிழும்  பெருமையும்  உடையவர்கள். எனக்கு  நெடுநாட்  பழக்கமுடைய  நண்பர் . கற்றோரை  மதித்துப்  பெருமைப்படுத்தும் குணமுடைய  அவர்கள் செய்த  இந்த நல்லுதவி  என்றும்  நினைவுகூறத்தக்கது . அவர்கள் இன்னும்  பல்லாண்டு  சிவநெறி  நின்று , அறம்பல  புரிந்து , உடல் நலமும்,  உள நலமும்  பெற்று  வாழும்  வண்ணம்  இறையருளை  வேண்டுகின்றேன் .

என்  இனிய  நண்பர்  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்துத்  தமிழாசிரியர்  வித்துவான்  திரு. க. வெள்ளைவாரணனார்  அவர்கள்  சிறந்த  முகவுரை  எழுதி  உதவினர். இவ்வுரைநூலை  அச்சிடுங்கால்  பிழை  நேராவண்ணம்  ஆராய்ந்து  திருத்தி  உதவியவர்கள்  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்துத்  தமிழாசிரியரும்  என்பால்  என்றும்  பிறழாத  மெய்யன்புடையாருமாகிய  வித்துவான்  திரு. மு . அருணாசலம்  பிள்ளையவர்கள்  ஆவர் . அன்புரிமைபற்றி  உதவிபுரிந்த  இவர்கள்  எல்லோருக்கும்  என்  நன்றியறிவைப்  புலப்படுத்திக்கொள்கிறேன் .

இவ்வரிய  பணியை  நிறைவேற்றியருளிய  ஆண்டவன்  திருவருளையும்  , சிறியேன்  நினைவிற்றோன்றி  பொருளுண்மை  தெளிவித்த  அடிகளின்  அருட்  பெருக்கையும்  நினைந்து  நினைந்து  இன்புறுகின்றேன் .

                                                                                                                         மு. கதிரேசன் 

மகிபாலன்பட்டி,

18 – 01 – 1953

குறிப்பு –  பாவைப் பாட்டும்  , அம்மானைப்  பாட்டும்  நான்கு  அடியினகந்து   பத்தடியளவும்  வரும்  கொச்சகமாகும்  என்று  பேராசிரியர் [பக்கம் -4]  கூறியபடி  இத்திருவெம்பாவைப்பாட்டு  எட்டு  அடியான்  வந்த  கொச்சகமாகும் . ஆயினும்  முன்னையோர்  பதிப்பித்த  முறையைத்  தழுவி  ஈண்டுப்  பதிப்பிக்கலாயிற்று. 

குன்றக்குடி  திருவண்ணாமலையாதீனம்

மகாசந்நிதானம்

அருட்டிரு.  தெய்வசிகாமணி  அருணாசல  தேசிக  பரமசாரிய

சுவாமிகள்  வழங்கிய

வாழ்த்துரை

                திருவாசகம்  தமிழகத்தின்  தவநூல் ;  ஞானப்  பனுவல் ; பத்திப்பெருநூல் ; தத்துவக்  கருவூலம் ; உணர்ந்த  உள்ளத்திலிருந்து  எழுந்த  உயர்ஞான  மொழிகள் ; அறிவாற்  சிவனேயாய  மணிவாசகரின்  மணிமொழிகள் ; காதலால்  கசிந்து  கண்ணீர்  மல்கிய  வாதவூரரின்  வண்மைத்  தமிழ்; ஆணவமல  வெப்பத்தைத்  தணிவிக்கும்  தண்ணருள்  நிறைந்த  திருமொழி ; பிறவிப்  பெருநோய்  தீர்க்கும்  பெருமருந்து .

                   துணையின்றி  அறியமுடியாத  பசு  அறிவாலும்  பாச  அறிவாலும்  முதல்வனை  அறிய  முடியாது .  இவ்விரு  அறிவாலும்  அறியப்படாத  முதல்வனை  அம்முதல்வனுடைய  திருவடிஞானத்தால்  உயிராகிய  தன்னறிவின்  கண்ணே  ஆராய்ந்து  அறிதல்  வேண்டும்  . அதாவது , அவன்  திருவடி  ஞானத்தால்  அவனை  அறிதல்  வேண்டும்  என்பதாகும் . இப்படி  ஆராய்ந்து  அறிந்த  ஞானச் செல்வர்  மணிவாசகர் ; சித்தம்  சிவமேயாயவர் ;   காணும்  கரணங்களெல்லாம்  சிவகரணமேயாயவர் ; எங்கும்  சிவமேயாய  காட்சியில்  திளைத்த  திருவருட் செல்வர். மணிவாசகரின் மணிமொழிகள்  ஊன்  கலந்து  உயிர்  கலந்து  உவட்டாமல்  இனிக்கும்  தகையன;  எழுமைக்கும்  இறவாத  இன்ப  உணர்ச்சியை  ஊட்டுவன.

                     திருவாசகத்துள்  திருவெம்பாவை  இன்பப்பெருக்கை  இனிதூட்டும்  பாடல்களைக்கொண்ட  பகுதி . பாச  இருள்  நீக்கி, நீங்காத  பேரருளைத்  தந்து  தலையளி  செய்யும்  சிவனது  பேரருளை  வியந்த  பகுதி.  “எங்கை  உனக்கல்லாது  எப்பணியும்  செய்யற்க”  என்ற  உறுதிமொழியைக்  கொள்க  என்று  உயிர்களுக்கு  உணர்த்தும்  திருப்பாடல்  திருவெம்பாவையிலே  அமைந்துள்ளது. அருமையில்  எளிய  அழகுடன்  பல்பொருள்  செறிவுற்றுச்  சிறந்தினிது  விளங்கும்   திருவாசகத்தைப்  பொருளுணர்ந்து  அனுபவித்தல்  பெரும்  பயன் தரும் . அத்தகு   அனுபவத்திற்கு  வழிசெய்து  கொடுக்கின்ற  சிவபுண்ணியச்  செயலை  நமது  பண்டிதமணி  சைவசித்தாந்த  வித்தகர்  அவர்கள்  செய்து  வருகின்றார்கள்.  அவர்களுடைய  நுண்மாண் நுழைபுலம்  வியந்து  பாராட்டுதற்குரியது . நுணுகிய  நிலையில் உரைகாணும்  அவர்களது  திறனை  இக்கதிர்மணி  விளக்கத்தில் பரக்கக்  காணலாம் . மெய்கண்ட  சாத்திரங்களின்   அடிப்படையிலே  நின்று  மாணிக்கவாசகரிடத்தும்  அவர்தம்  திருநூலிடத்தும்  அளவுகடந்த  பத்திநிறைந்த  உள்ளத்துடன் உரையை  எழுதி  வருகின்றார்கள். 

“ஓத வுலவா ஒரு தோழந் தொண்டருளன்” என்ற பகுதிக்குக்

கோடற்  பகுதியில்  கொண்டவுரை  கொள்ளத்தக்கது . அதாவது  ஒப்பற்ற  மிகுதியான  தொண்டரையுடையான்  எனக்கூறுவது  .  மற்றும் , 

                        “ பைங்குவளைக்   கார்  மலராற்  செங்கமலப்  பைம்போதால்

                      அங்கங்  குருகினத்தாற்  பின்னும்  அரவத்தால்

                      தங்கண்  மலங்கழுவார்  வந்து  சார்தலினால்

                            எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த”

என்ற  பகுதியின்  உரை  உணர்ந்து  இன்புறத்தக்கது . “இப்பகுதிகள்  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிப்  பக்குவமுள்ள  உயிர்களுக்குச்  செய்யும்  தீக்கை  முறைகளையும்  குறிப்பன”  என்று  கூறி  , பைங்குவளைக்கார்மலர்  நயனதீக்கையையும்  , செங்கமலப்பைம்போது  மானசிக தீக்கையையும்   அங்கங்குருகினம்  பரிசதீக்கையையும்    அரவம்   வாசிகதீக்கையையும்  குறிக்கும்  எனச்  சாத்திர  நுட்பங்களுடன்  எடுத்துக்காட்டியிருப்பது  அவர்களுடைய  சாத்திர  நூற்  பயிற்சிக்கும்  பெரும்  புலமைக்கும்  எடுத்துக்காட்டு.  “வேத  விழுப் பொருள்” “விண்ணுக்கு  ஒரு  மருந்து”  போன்ற  சில  சொற்றொடர்கள்  பண்டிதமணியவர்களின்  புலமைத்  திறத்தால்  அரும்  பெரும்  தொடர்களாகக்  காட்சியளிக்கின்றன.

                 மனங்கரைத்து  மலங்கெடுக்கும்   மணிவாசகத்திற்கு  மாண்பொருளுரை  கண்டு  வழங்கும்   பண்டிதமணியவர்களுக்குத்   தமிழகத்தின்  கைம்மாறு  யாது ? படித்துப்பயன்  பெறுவதுதான் அவர்கள்  விரும்பும்  கைம்மாறு  . தமிழகம்  தக்கவாறு  பயன்  கொண்டு  பண்டிதமணியவர்களை  வாழ்த்தும்  என்று  நம்புகின்றோம்.  கருத்தறிந்து  முடிக்கின்ற  கண்ணுதற்  பெருமானின்  திருவருள், கதிர்மணி  விளக்கப்  பேருரை  முழுவதையும்  தமிழகம்  பெறச்சுரந்து,  பண்டிதமணியவர்களைத்  தமைப்போலவே  இன்பப்பேறுகள்  பலவற்றுடன்  மண்மீது  நிலை பெறுத்துக  என்று  இறைஞ்சுகின்றோம் ; வாழ்த்தி  வணங்குகின்றோம்.

                   நமது  கதிர்மணி  விளக்கப்  பேருரையைச்  சைவத்  தமிழ்  வளர்க்கும்  தொண்டர்  குலத்தைச்  சார்ந்த  நமது  கலைத்தந்தை  திரு.  கருமுத்து . தியாகராசச்  செட்டியார்  அவர்களுக்கு  உரிமைப்படுத்தியிருப்பது  பண்டிதமணியவர்களுடைய  உளப்  பண்பிற்கு  எடுத்துக்காட்டு.

                    தமிழ்க்குடியின்  தனிப்பெருநூலும்  நமது  உயிர்  நூலுமாகிய  திருவாசகத்திற்கு  நவில்தொறும்  நன்னயம்  பயக்கும்  பேருரை  தந்துதவுகின்ற  சைவ  சித்தாந்த  வித்தகர்  அவர்களுக்கு  நமது  நெஞ்சங்  கலந்த  வாழ்த்து .

வாழ்க  மணிவாசகரின்  புகழ் ! வளர்க  நல்லறம் !

வாழ்க  பண்டிதமணி ! வளர்க  கதிர்மணி  விளக்கம் .

 

முகவுரை

திரு. க . வெள்ளைவாரணனார்

தமிழாராய்ச்சித்துறை  விரிவுரையாளர்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

இன்பம்  பெருக  எழிற்றிருவெம்  பாவைக்கு

                        நன்புலவர்  போற்றுமுரை  நன்கமைத்தான் – அன்பால்

             மதிசேரும்  பண்டிதநன்  மாமணி  யென்றேத்துங்

                               கதிரேசன்   செந்தமிழோர்  கண்

           யாவர்க்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையானாகிய  இறைவனது  திருவருள்  பெற்ற  செம்புலச்செல்வர்  திருவாதவூரடிகள்  திருவாய்  மலர்ந்தருளிய  திருவாசகம் , திருச்சிற்றம்பலக்கோவை  யென்னும்  இரண்டனுள்  கோவைத்  திருவாசகத்திற்குப்  பேராசிரியர்  திட்பம்  நுட்பஞ்செறிய  அழகியதோர்   உரை  வகுத்துள்ளார்.  அவரது  உரை  முறையைத்  தழுவி  அன்பு  நெறிக்குச்  சிறந்த  இலக்கியமாகத்    திகழும்  திருவாசகத்திற்கும்  அரியதோருரை  புலத்துறை  முற்றிய  பெரியாரொருவரால்   இயற்றப்  பெறுதல்   வேண்டுமென  நெடுங்காலமாகத்  தமிழ்  மக்கள்  விரும்பி  வந்தார்கள்.  அங்ஙனம்  இயற்றப்பெறும்  உரை  தமிழிலக்கண  இலக்கியங்களைக்  கற்றோர்க்கேயன்றி  மற்றையோர்க்கும்  பயன்படும்  வண்ணம்  எளிமையும்  இனிமையும்  உடையதாதல்  வேண்டும்  என்பது  தமிழன்பர்களது   பெருவேட்கையாக  இருந்து  வருகிறது  .

             தமிழரது  நற்றவப்  பயனாக  இப்பெருவேட்கையினை  நிறைவேற்றுதற்கு  முன்வந்த  புலமைச்  செல்வர்  நமது  பேராசிரியப்  பெருந்தகை  மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்  சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  திரு. மு. கதிரேசச்  செட்டியார்  அவர்கள்  ஆவர் .  செந்தமிழும்  ஆரியமுமாகிய  இருமொழிகளிலும்  நிரம்பிய  புலமையுடையராய்க்  காவியச்சுவை  நலங்களை  நுகர்ந்து  தாம்  இன்புற்றும்  அச்சுவை  நலங்களை  நல்லோர்  குழீஇய  பேரவைகளிலே  இனிமையும்  தெளிவும்  பொருந்த  எடுத்துரைத்துப்  பிறரை  இன்புறுத்தியும்  தமிழ்நாடெங்குஞ்  சென்று  தமிழ்  வளர்க்கும்  பேராசிரியராகிய  நம்  பண்டிதமணியவர்கள்  திருவாசகம்  என்னும்  அருளாரமுதப்  பெருங்கடலில்  திளைத்துமுழுகி  அதனகத்து  அமைந்த  அரும்  பெறல்  நன்மணிகளை  வாரி  வழங்குபவர்கள்.  சொல்லிய  பாட்டின்  பொருளுணர்ந்து அரும் பொருள்களைக்  கேட்போர்  மகிழச்  சுவைபெற  விரித்துரைக்கும்  மதிநலம்  வாய்ந்த  பண்டிதமணியவர்கள்  வாயிலாகத்  திருவாசகம்  முழுவதற்கும்  விரிவுரையொன்று  எழுதப்  பெறுதல்  வேண்டுமென்பது  தமிழ்  மக்களது  பெரு  விருப்பமாகும். இவ்விருப்பத்தை நிறைவேற்றக்  கருதிய  நம்  பண்டிதமணியவர்கள்  தமது  முதுமைத்  தளர்ச்சியை  ஒரு  சிறிதும்  பொருட்படுத்தாமல்  திருவாசகத்திற்குக்  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரையினை  யெழுதிவருகின்றமை  தமிழ்  மக்களது  நற்பேறேயாகும் . 

பண்டிதமணியவர்களால்  எழுதப்பெற்று  வெளிவந்துள்ள  திருச்சதகவுரையும்  ,  நீத்தல்  விண்ணப்பவுரையும்  புலவர்  பாராட்டும்  அருமையும்  பொது  மக்களனைவரும்  விரும்பிப்  பயிலும்  எளிமையும்  ஒருங்கமைந்து  அருமையில்  எளிய  அழகுடையனவாய்ப்  போற்றிப்  பயிலப்  பெற்றுவருதலை  யாவரும்  உணர்வர்.  இவ்வுரையினைத்  தொடர்ந்து  திருவெம்பாவைக்குரிய  விரிவுரையும்  இப்பொழுது  வெளியிடப்  பெறுகின்றது  .  திருவெம்பாவையின்   வரலாற்றையும்  தைந்நீராடல்  மார்கழி  நீராடல்  பற்றிய  செய்திகளையும்  உரைமுகத்தே  பண்டிதமணி  அவர்கள்  தெளிவாக  விளக்கியுள்ளார்கள் .

திருச்சதகத்திற்  பொதுவாகக்  கூறப்பட்ட  பத்திவைராக்கிய  விசித்திரங்களுள்  வைராக்கியத்தின்  சிறப்பியல்பினை  நீத்தல்  விண்ணப்பத்திலும் பத்தியின் விளைவிற்குத்  துணைபுரியும்   உமையம்மையின்  பேருபகாரச்செயலை  இத்திருவெம்பாவையிலும்  அடிகள்  விளக்கியருள்கின்றார்.  இவ்வியைபினைப்  புலப்படுத்தி  நம்  பண்டிதமணியவர்கள்  இத்திருவெம்பாவையுரையினைத்  தொடங்குகின்றார்கள்.  இச்சிறப்பினையுற்று  நோக்குவோர்  பரிமேலழகரது  உரைத்திறம்  இவர்கள்பால்  அமைந்திருத்தலை  நன்குணர்வர்

பண்டைக்காலத்தில்  வாழ்ந்த  சைவ  வைணவக்  கன்னிப்பெண்கள்  மழைவளங்குறித்தும்  சிறந்த  கணவரைப்  பெறுதற்  பொருட்டும்   மார்கழித்திங்கள்  வைகறையில்  நீராடிப்  பராசத்தி யாகிய    உமையம்மையாரை  வழிபட்டு  நோன்பு  மேற்கொண்டொழுகினர்  என்னும்  உண்மையை  விளக்குமுகமாக  இத்திருவெம்பாவைக்குரிய  “சத்தியை வியந்தது” என்னும்  உள்ளுரைப்  பொருளைப்  புலப்படுத்திய  சிறப்பு  நம்  பண்டிதமணியவர்களுக்கேயுரியதாகும்.  அறிவனூற்  பொருளும்  உலகநூல்  வழக்கும்  என  இருபொருளும்  அமையப்பாடிய  திருவாதவூரடிகளது  உளக்கருத்தைத்  தெளிவாக  விளக்கும்  நிலையில்  இத்திருவெம்பாவையுரை  யெழுதப்பெற்றுள்ளமை  வியந்து  போற்றத்தக்கதாகும் .

ஐந்தாண்டு  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  ஆண்டு  வகையால்  வேறுபட்ட  கன்னிமைப்  பருவத்து  மகளிர்  எண்மரும்  பாவை  நோன்பினை  மேற்கொள்ளுதற்குரியரெனவும் , பன்னீராண்டுத்  தொடக்கத்தினராய  பெண்கள்  தாமே  துயிலுணர்ந்தெழுந்து  தம்மை யொத்த  பருவத்தினளான  ஒருத்தியை  யெழுப்பினரெனவும் , இம்முறையே பதினொன்று,  பத்து , ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து  என்னும்  வயதினராகிய  மகளிர்  எழுப்பப்பட்டனரெனவும்  திருவெம்பாவையில்   ஒன்று முதல்  எட்டுவரையுள்ள  பாடல்களுக்குப்   பண்டிதமணியவர்கள்  கூறிய  விளக்கம்  வியந்து  பாராட்டத்தக்கதாகும் . இவ்வாறு  திருவெம்பாவைப்  பாடல்கள்  இருபதினையும்  வகைப்படுத்திக்கொண்டு  இவர்கள்  கூறும்  பொருளும் , அப்பாடல்கள்  ஒன்றன்பின்  ஒன்றாகப்  பாடப்பெறுதற்குரிய  இயைபினைப்  புலப்படுத்தும்  முறையும் , பாடல்தோறும்  கூறப்படும்  சொல்நயங்களும்  இலக்கியச்சுவை  நலங்கள்யுணர்வாருக்கு  இனிய  நல்விருந்தாக  அமைந்துள்ளது.

“வாட்டடங்கண்”  எனக்  கண்ணுக்கு  அடைமொழி  கூறியது , வைகறைப்பொழுதில்  ஒளியுடைமையும் அகற்சியும்  இயல்பின்  அமையுமாறு  விழிக்கத்தக்க  கண்கள் , எதிர்மறையான  இருளுடைமையும்  சுருக்கமும்  அமைய  மூடப்பட்டுக் கிடத்தல்  தக்கதன்று  என்னுங்  குறிப்புத்தோன்ற  நின்றது “ எனவும் , மாயாகாரியமாகிய  உலகமெல்லாம்  தோன்றி யொடுங்குதற்குத் தான்  நிலைக்களனாதலன்றித்  தனக்குத்  தோற்றமும்  இறுதியும் இல்லாதவன்  இறைவன்  என்பார்  “ஆதியும்  அந்தமும்  இல்லா என்றார்” எனவும் , இறைவன்  ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலிய  அண்டவெளியாகவும் உடம்பொடு  கூடிய  உயிரறிவோடு  உடனாய்ப்  பிண்டவொளியாகவும்  அங்கிங்கெனாதபடி  எங்கும்  பிரகாசமாய்  விளங்கும்  பேரொளிப்பிழம்பாகிய  அகண்ட  வொளியாகவும்  திகழவும்  மாயாகாரியமாகிய  உலகப்பார்வையுடைய  ஆன்மாக்களால்  உணர்தற்கு  அரியனாவன்  என்பது  தோன்ற   “அரும்பெருஞ்சோதி” என்றார்  எனவும்    “யாம்  என்றது , மன மொழி மெய்களுக்கு  எட்டாத  இறைவன்  திருப்புகழை  யுணர்ந்து  பாடுதற்குத்தகுதியற்ற  மானுடச்சிறுமியராகிய  யாங்கள்  என்பது  பட நின்றது”  எனவும்  முதலாந்  திருப்பாடலில்  கூறப்படும்  விளக்கம்  திருக்கோவையார்க்குப்  பேராசிரியர்  கூறும்  உரைத்திறத்தை  நினைவுபடுத்துகின்றது  . இவ்வாறே  பாடல்  தோறும்  பண்டிதமணியவர்கள்  கூறும்  விளக்கவுரைப்பகுதிகளும்  சொல் நயமும்  “சத்தியை வியந்தது” என்னும்  உள்ளுரைப்பொருளின்  தொடர்பாகக்  கூறும் மெய்ந்நூற்  கருத்துகளும்  மீண்டும் மீண்டும்  படித்து  இன்புறுதற்குரியனவாம் .

            அவ்வப்  பருவத்து  மகளிர்  உளநிலைக்கேற்ப  அவர்கள்  ஆண்டவன்பாற்  கொள்ளவேண்டிய  அன்பினைப்  புலப்படுத்தி  அவர்  தம்  உரையாடற்  பொருளை  விரித்துரைக்கும்  முறையில்  இவ்வுரை  அமைந்துள்ளது .  இவ்வுரையாசிரியர்  ஒவ்வொரு  பாடலிலும்  அதனைக்  கூறினோர்  கேட்டோர்  ஆகியவர்களின் மனநிலையினையும்  பிறசூழல்  நிலைகளையும்  பாட்டின்கண்  அமைந்த  சொற்குறிப்பின்  துணை  கொண்டு   உலகியல்  நிலைக்கேற்ப   விரித்துரைக்குந் திறம்  வியந்து  போற்றுதற்குரியது.

               இறைவன்  செய்யும்  ஐந்தொழில்களைக்  குறித்துப்  பன்னிரண்டாம்  பாடலுரையிலும்  இருபதாம்  பாடலுரையிலும்  இவ்வாசிரியர்  கூறும்  விளக்கம்  உளங்கொளத் தக்கதாகும்.  சைவ  சித்தாந்த   சமயத்தினர்  கூறும்  தீக்கை  வகைகளுள்  நயனத்தீக்கை  மானததீக்கை , பரிச தீக்கை , வாசிக தீக்கை  என்பவை  பற்றிய  குறிப்புக்கள்  “பைங்குவளைக்  கார்  மலரால்”  எனத் தொடங்கும்  பாடலில்  அமைந்துள்ளனவாக  நம்  பண்டிதமணியவர்கள்  உய்த்துணர்ந்து  விளக்கிய  நயம்  நுண்ணறிவுடையோர்  வியந்து  பாராட்டத்தக்கதொன்றாம்.  மூன்றாந்  திருப்பாடலில்  “முத்தன்ன  வெண்ணகையாய் “ எனப்  பல்லாகிய  பொருளுக்கு  அடைமொழி  புணர்த்தும் , நான்காந்  திருப்பாடலில்   “ஒண்ணித்தில  நகையாய்”  எனப்  பல்லுக்கு  உவமையாய்  வந்த  நித்திலத்திற்கு  அடைமொழி  புணர்த்தும்  கூறியதற்கு  இவர்கள்  கூறும் நயம்  பெரிதும்  சுவைபயப்பதாம். “எழுப்பியவர்  பேச்சு  எழுப்பப்பட்டவளுக்குக்  கடுமொழியாக  இருந்தமையால்  அவள்  “என் தோழிமாராகிய  நும்முள்  இனிமையாகப் பேசுவாரும்  உளரே.  அன்னார்  இக்குழுவில்  இலரோ”  என்பாள்  “வண்ணக்கிளி  மொழியார்  எல்லாரும் வந்தாரோ”  என்றாள்  என நான்காந்திருப்பாடலிற்  கூறிய  நயம் , உரையாடலில்  மகளிர்க்குரிய  கூர்த்த  நுண்மதியைப்  புலப்படுத்துகின்றது .

                    “முன்னிக் கடலை”  யெனத்  தொடங்குந்திருப்பாட்டில்  “கேவல நிலையிற்  கிடக்கும்  உயிர்த்தொகுதிகளையுடைமையாகக்  கொண்ட  நிலையில்  அன்னை, “உடையாள்” எனவும் , பின்  சகல  நிலையில்  பிறப்பில்  உழலும்  நமக்குத்  தனுகரண  முதலியவற்றைத் தந்து  சிறிது  அளவு  விளங்கச்செய்து  ஆட்கொள்ளுந்  தகுதியளித்தலின்  அந்நிலை  நோக்கி  “எம்மையாளுடையாள்” எனவும் , பின்  சுத்த  நிலையில்  பஞ்சமலங்களும்  நீங்கிச்  சிவத்தோடு  கூடி  இன்புறுதற்கு  உதவிபுரியும்  இயல்பு  நோக்கித்  தலைவியாயினாள் என்பார் “எம்பிராட்டி”  எனவும் சிவசத்தி  கூறப்பட்டாள்”  என விளக்குவர்  உரையாசிரியர் . இப்பாடலின்  உரையில்  கேவல  சகல  சுத்தம்  என்னும்  மூன்று  நிலைகளிலும்   சிவசத்தி  உயிர்களுக்குத்  துணைசெய்து  அன்னையாய்  விளங்கும்  திறத்திற்குக்   “காரிட்ட  ஆணவக்  கருவறையில்”  எனத்  தொடங்குந்  தாயுமானார்  திருப்பாடலை  மேற்கோளாக  எடுத்துக்காட்டி  விளக்கியமுறை   சைவசித்தாந்த  நுண்பொருளை  யெளிதில்  உளங்கொளச்  செய்வதாகும் .

                         நீராடப்போந்த  கன்னியருள் ஒருத்தி , உலகியலை  மறந்து  மன மொழி மெய்கள்  இறைவன்பால்  ஈடுபட்டுத்  தன்  வயமிழந்து  நிற்கும்  தலையன்பினளாகிய  மற்றொருத்தியின்  இயல்பை  ஏனைப்  பெண்கள்  உணரும்  வண்ணம்  எடுத்துரைப்பது  “ஓரொருகால்”  எனத்  தொடங்குந்  திருப்பாட்டாகும் . இதன்கண் “இவள்  இறைவன்  திருவடி  முதலியவற்றின்  உறுப்பழகை  அகக்கண்ணாற்  கண்டு  கண்ணீரில்  ஆடினாள்.  அத்தகுதி  நமக்கு  இன்றெனினும்  அவ்வுறுப்புக்களை  உவமைமுகமாகக் காட்டும்  அழகிய  தோற்றமுடைய   மலர்களைப்  புறக்கண்ணாற்  கண்டு  நாம்  தண்ணீரிலேனும்  ஆடுவோமாக  என்பாள்  “ஏருருவப்  பூம்  புனல்  பாய்ந்தாடு”  என்றாள்” என  இவ்வுரையாசிரியர்  கூறும்  விளக்கம்  படிப்போர்  உள்ளத்தையுருக்குவதாகும் .

                           இவ்வுரை  உரிய  இடங்களில்  சைவத்  திருமுறைகளையும்   சித்தாந்த  நூல்களையும்  மேற்கோளாகக்காட்டி  அவற்றின்  நுண்  பொருளையும்  வகுத்துணர்கின்றது . இஃது  அந்நூல்களைக்  கற்பதில் பேரீடுபாட்டினை  விளைப்பதாகும் . இன்றியமையாத  இடங்களிற்  பொருள்  விளக்கத்தை  யுட்கொண்டு  காட்டப்பெறும்  இலக்கணக்குறிப்புகள்  பாட்டின்  பொருளுணர்ச்சிக்குத்   துணை  செய்வனவாக  உள்ளன.  பொருட்டெளியும்  சொல்  வரையறையும்  நவில்தொறும்  சுவைமிகப்  பயக்கும்  நூல்  நயமும்  ஒருங்கமைந்த  கதிர்மணி  விளக்கமென்னும்  இப்பேருரை  சைவசித்தாந்த  நூற்பொருளை  ஒரு  நாடகக்  கதை  யுருவில்  வைத்து  விளக்கும்  இலக்கியமாக  மிளிர்கின்றது .  புலமைக்  கருவூலமாகத்  திகழும்  இப்பேருரையை  யியற்றி  யுதவிய  பண்டிதமணியவர்களிடத்து   மாணவனாகப்  பயிலும்  வாய்ப்பளித்த  திருவருளை  உளமார  இறைஞ்சிப்  போற்றுகின்றேன்.  ஊன்கலந்து   உயிர்கலந்து  உவட்டாமல்  இனிக்கும்  திருவாசகத்திற்குப்  பேருரை  காணும்  திருப்பணியில்  ஈடுபட்டுள்ள  மகாமகோபாத்தியாய  பண்டிதமணியவர்கள்  உளநலமும்  உடல் நலமும்  ஒருங்குபெற்று  இத்திருவாசகப்  பேருரையை  நிறைவு  செய்தருள்வார்களாக  எனத்  தில்லையம்பலவன்  திருவடிகளை  இறைஞ்சிப்  போற்றுகின்றேன்.

                       மண்ணுலக  மெல்லாம்  மழையாற்  குளிர்கவென

                       அண்ணா  மலையான்  அடியிறைஞ்சிப் – பெண்ணினல்லார்

                        மார்கழிநீ  ராடல்  வழுத்துதிரு  வெம்பாவைச்

                         சீருரைத்தார்  வாழ்வார்  சிறந்து.

                                                      ————————————–

கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

திருவெம்பாவை

வரலாறு

             தெய்வத்தன்மை  வாய்ந்த  “எம்பாவாய்”  என்னுந்தொடர்  மொழியை  யீற்றிலுடைமையால்  இருபது  திருப்பாட்டுகள்  அமைந்த  இப்பகுதி  திருவெம்பாவை  என்னும்  பெயருடையதாயிற்று.  திரு  வென்பது  தெய்வத்  தன்மை  யென்னும்  பொருளுடைய  மங்கல  அடைமொழியாகும் . திருவம்மானை  முதலிய  மற்றைப்  பகுதிகளுக்கும்  இஃதொக்கும்  . மாணிக்கவாசக  அடிகள், சிவபெருமான்  திருக்கோயில்   கொண்டெழுந்தருளியிருக்கும்  பல  தலங்களுக்குஞ்  சென்று  திருவண்ணாமலையையடைந்து  அங்கே  தங்கியிருக்குங்கால் , முன்பனிப்  பருவத்தொடக்கமாகிய  மார்கழித்திங்கள்  வந்தது . அப்பொழுது , மணஞ்செய்யப்படாத  பெண்கள்  பலர்  திருவாதிரைக்கு  முன்  பத்து  நாட்டொடங்கி  அதிகாலையாகிய  வைகறைப்  பொழுதில்  துயிலுணர்ந்தெழுந்து , ஒருத்தியும்  பலருமாக  இல்லங்கடோறும்  சென்று  தம்  தோழிகளையும்  துயிலுணர்த்தி  யெழுப்பியதையும் , அவ்வெல்லோரும்  ஒருங்கு   சேர்ந்து  சிவபெருமான்  திருப்புகழை  வாயாரப்பாடிக்கொண்டு   நீர்  நிலைக்குச்  சென்று  நீராடியதையும் , உலகன்னையாகிய   பார்வதி  தேவியின்  திருவுருவைத்  தூய  ஈர  நுண்மணலாற் சமைத்து  வழிபட்டுப்  பொதுவுஞ்  சிறப்புமாகிய  பயன்  வேண்டியதையும்  நேரிற்  கண்டு , அப்பெண்கள் புகன்றதாகப்  பாடியருளியது  இத்திருவெம்பாவையாகும் , இவ்வுண்மையை, 

மாதர்கொண்  மாத  ரெல்லாம்  மார்கழித்  திங்கள்  தன்னில்

ஆதிரை  முன்னீ  ரைந்தே   யாகிய  தினங்க  ளெல்லாம்

மேதகு  மனைக  டோறும்  அழைத்திருள்  விடிவ  தான

போதிவர்  தம்மிற்  கூடிப்  புனற்றடம்  ஆடல்  செய்வார்”

எனவும்,

“அன்னவ  ரியல்பு  கண்டார்  ஆங்கவர்  புகன்ற  தாக

மன்னிய  திருவெம்  பாவை  வாசகம்  பேசி”  எனவும்

                திருவாதவூரடிகள்  புராணங்  கூறுமாற்றானறிக . இங்ஙனம்   உலகியல்  நிகழ்ச்சியாகிய  மகளிர்  விளையாட்டு  முதலிய  செயல்களில்  வைத்து  அவர்தங்  கூற்றாக  அடிகள்  அருளிச்  செய்த  திருவாசகப்  பகுதிகள்  திருவம்மானை  முதலிய  பலவாகும் .

                    இத்  திருவெம்பாவை  திருப்பெருந்துறையில்  அருளிச்செய்யப்பட்டதெனத்  திருவாலவாயுடையார்   திருவிளையாடற் புராணமும்  திருவண்ணாமலையில்  அருளிச்செய்யப்பட்டதெனத்  திருவாதவூரடிகள்  புராணமும்  கூறுகின்றன.  இவ்விரண்டினுள்  பின்னதே  வலியுடைய  தென்பதற்கு   அகச்சான்றுகளுஞ்  சிலவுள.

“அண்ணா  மலையான்  அடிக்கமலஞ்  சென்றிறைஞ்சும் விண்ணோர்

மாலறியா நான்முகனுங் காணா மலையினை”

என வெளிப்படையாகவும்,

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை

பாதாள  மேழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர் 

போதார்  புனைமுடியும்   எல்லாப்  பொருள்முடிவே”

எனக்  குறிப்பாகவும்  புலப்பட  ஓதியருளிய  திருவாக்குகளே  சான்றாவனவாம் .

                       வாதவூரடிகள்  புராணத்தில்   நீராடியதுவரை  கூறப்பட்டதேயன்றிப்  பார்வதி  வழிபாடு  கூறப்பட்டிலதேயெனின் , அதற்கு  விடை  பின்வருவனவற்றால்  அறியலாம்.

                         பண்டைக்காலத்தில்  தமிழ்நாட்டில்  சைவ  வைணவக்  கன்னிப்  பெண்கள்  மழைவளங்  குறித்தும் , சிறந்த  கணவரைப்  பெறுதற்  பொருட்டும்  மார்கழித்திங்களில்  வைகறையில்  நீராடிப் , பராசத்தியாகிய  கௌரியை  வழிபட்டு  , நோன்பு  மேற்கொண்டொழுகினரென்பது . அடிகளருளிய  இத்திருவெம்பாவையாலும்  திருமால்  பத்தியிற்  சிறந்த  ஆண்டாள்  அருளிய  திருப்பாவையாலும்  அறியத்தக்கது.

                          இந்  நோன்பிற்கு  நூற்பிரமாணம்  இன்றெனவும்  ஆன்றோராசாரமே  பிரமாணமெனவுங்  கூறுப.  ஆயினும் , பாகவத  புராணத்தில்  கண்ணனை  மணவாளனாகப்  பெற  விரும்பிய  ஆயர்குலக் கன்னியர் , இந் நோன்பை  மேற்கொண்டு  மார்கழித்திங்களில்  வைகறையில்  நீராடிப்  பார்வதிதேவியை  வழிபட்டன ரென்னும்   செய்தி  கூறப்பட்டுள்ளது . இதனை,

“இன்ன  தண்பனிப்  பருவநல்  லிளநறா  வொழுகும்

கன்னி  யந்துழாய்க்  கண்ணனெங்  கணவனா  கென்ன

அன்ன  மென்னடை  யாயர்தங்  கன்னியர்  நோற்றார்

மன்னு  வெம்பனி  மால்வரைக்  கன்னியைத்  தொழுதே”

எனவும் ,

பனிநி  லாக்கதிர்  பரப்பிய  முத்தவெண்  மணலால்

பனிவ  ரைக்கொடி  திருவுருட்  பாற்பட  வகுத்துப்

பனிம  லர்த்தொடை  சூடியும்  பரவியு  நோற்றுப்

பனியி  றப்பினிற்  படர்புன  லாடுவான்  படர்ந்தார்”

எனவுங்  கூறிய  செய்யுட்களாலறிக.

                      இச்செய்யுட்களில்  “பனிமால்வரைக்  கன்னி “  யெனவும்  , “பனிவரைக்கொடி”  யெனவும்  கூறியது ,  பார்வதிதேவியை  யென்பது  வெளிப்படையாகும் . நல்ல  மணாளனை  யடைதற்குக்  கௌரி  நோன்பே  சிறந்ததெனக்  கொண்டு  வைணவப்  பெண்கள்  நோற்றனரென்றால்,  சைவப்  பெண்கள்  இந்  நோன்பை  மேற்கோடல்  மிகவும்  பொருத்தமாமென்பது  நன்கு  விளங்கும் . இங்கே  பாவையென்றது  , பார்வதி  யுருவமாக  மணலாற்  சமைத்த  தெய்வப்  படிவத்தை  யென்பது  கருதத்தக்கது. அதனாலே  இது  பாவை  நோன்பாயிற்றென்க . “சத்தியை  வியந்தது”  என  இப்பகுதிக்கு  உள்ளுரைப்பொருள்  குறித்திருத்தலும்  இதனை  வலியுறுத்துவதாகும்.  சத்தி  என்றது , இங்கே  பார்வதி  தேவியை  யெனக்  கொள்ளல்வேண்டும் .

                        இத்  திருவெம்பாவையைப்  போன்ற  பிரபந்தங்களைப்  “பாவைப்பாட்டு”  என்று  முன்னோர் வழங்கினரென்பது  “சிறுபான்மை  பாவைப்  பாட்டும்  அம்மானைப்  பாட்டும்  முதலாயின  நான்கு  அடியினிகந்து  வருவனவாயின “ எனவும்  ,  “சிற்றெல்லையாகிய  பத்தடியளவும்  பாவைப்பாடலும்  அம்மானைப்பாடலும்  போலும்  தரவுகொச்சகம் வரும் “ எனவும்  பேராசிரியர்  கூறுமாற்றானறியலாம் . யாப்பருங்கலவிருத்தி  93-ஆம் சூத்திரவுரையில்  ,

“கோழியுங்  கூவின  குக்கில்  அழைத்தன

தாழியுள்  நீலத்  தடங்கணீர்  போதுமினோ

ஆழிசூழ்  வையத்  தறிவ  னடியேத்திக்

கூழை  நனையக்  குடைந்துங்குளிர்புனல்

ஊழியுண்  மன்னுவோ  மென்றேலோ  ரெம்பாவாய்”

என்னும்  பாட்டொன்று  அவிநயனார்  காட்டிய  பாட்டென்று  எடுத்துக்காட்டப்பட்டுள்ளது .

                        பண்டைக்  காலத்துத்  தமிழ் நாட்டில்  கன்னிப்பெண்கள்  தைந்நீராடலைப்  பற்றிக்  கலித்தொகை , ஐங்குறுநூறு , நற்றிணை , பரிபாடல்  முதலிய  சங்கச்  செய்யுட்களில்  விளக்கமாகக்  காணலாம் . மார்கழித்திங்கள்  திருவாதிரையில்  தொடங்கும் நீராடல்  பூர்ணிமாந்த  முறைப்படி  தைத்  திங்களிலும்  தொடர்ந்து  நடைபெறுமாதலின் , மார்கழி  நீராடலும்  தைந்நீராடலும்  ஒன்றென்ப . ஆயினும் , திருவாதவூரடிகள்  புராணத்துக்  கூறப்பட்டபடி  மார்கழி  நீராடல்  திருவாதிரைக்குப்  பத்து  நாட்கள்  முன்  தொடங்கித்  திருவாதிரையில்  முடிவுபெறுமென்பதும் , தைந்  நீராடல்  மார்கழித்திருவாதிரையில்  தொடங்கி  நடைபெறுமென்பதும்  இங்கே  கண்ட  வேறுபாடாகும் , நூற்  பிரமாண  முள்ளனவும்  இல்லனவுமாய்  மக்கள்  வழக்க  வொழுக்கங்களிற்  காணப்படும்  இன்னோரன்ன  நிகழ்ச்சிகள், இங்ஙனம்  காலாந்தரத்திற்  சிறிது  சிறிது  வேறுபாடெய்தல்  இயல்பே . இதற்கு  மற்றொரு  சான்றும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  பிங்கலந்தையில்  ஐந்து  முதல்  ஒன்பது  ஆண்டு  வரையுள்ள  சிறு  கன்னிப்  பெண்களே  பனிநீர்  தோய்தற்கும்  பாவையாடற்கும்  உரியர்  என்று  கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்துச்  சான்றோர்  பாடல்களிலும்  இவ்விதி தழுவப்பட்டிருத்தல்   அறியலாம் . அங்ஙனமாகவும்  திருவெம்பாவையிலும் ,  திருப்பாவையிலும்  முறையே

“கொங்கைகள்  பொங்கக்  குடையும்  புனல்பொங்க”

புற்றர  வல்குற்  புனமயிலே  போதராய்”    என்பன

                          முதலிய  குறிப்புக்களுண்மையால் , ஒன்பதாண்டுக்கு  மேற்பட்ட  கன்னிப்பெண்களும்  இந் நீராடலிற்  கலந்துகொண்டனரென்பது  புலனாம் .

                           இனி, இம்மார்கழி  நீராடலால்  விரும்பப்பட்ட  பயன்  பொதுவும்  சிறப்புமாக  இருவகைப்படும்  என்பர் . பொதுப்பயன்  நாடு  செழிக்க  மழை  பெய்தல்  . இதனைப்  பதினாறாம்  திருப்பாட்டில்  பராசத்தியைப்  பாராட்டி  மழையை  முன்னிலைப்படுத்தி ,

“முன்னி  யவள்நமக்கு  முன்சுரக்கும்  இன்னருளே

யென்னப்  பொழியாய்  மழையேலோ  ரெம்பாவாய்”

என்று  கூறியிருத்தலானறியலாம்.  தைந்  நீராடல்  பற்றிக்கூறிய  பரிபாடலில்  “வெம்பாதாக  வியனில்  வரைப்பென” [ இப்  பெருநிலம்  மழையால்  வெம்மை  நீங்கப்   பெற்றுக்  குளிர்வதாக ] என்று  கூறியிறுத்தலும்  இதனை  வலியுறுத்தும்.  சிறப்புப்பயன்  கன்னியர்  சிறந்த  கணவரைப்  பெறுதல்  .  இதனை,

“உன்னடியார்  தாள்பணிவோம்  ஆங்கவர்க்கே  பாங்காவோம்

அன்னவரே  யெங்கணவ  ராவார்”  எனவும் ,

“எங்கொங்கை  நின்னன்ப  ரல்லார்தோள்  சேரற்க “ எனவுங் 

                              கூறியிருத்தலான்   அறியலாம் .  இங்ஙனம்  உலகியலில்   வைத்துச்  சைவ  சமய  வுண்மைகள்  பலவற்றையும்  புலப்படுத்து  அடிகளால்  அருளிச்  செய்யப்பட்டது  இத்  திருவெம்பாவை  யென்பது  தெளிவாம் .

சத்தியை    வியந்தது

                        திருவெம்பாவையின்    உள்ளுறைப்    பொருளாகக்  குறிக்கப்பட்டது  . சத்தியை  வியந்தது  என்பது .  சத்தி  யென்றது  பராசத்தியாகிய  உமையம்மையை  . அம்மையப்பனாகிய  இறைவனை  அடைதற்குரிய  நெறிகள்  பலவற்றுள்ளுஞ்  சிறந்தது  அன்பு  நெறி . அந்நெறியொழுகத்  தலைப்படுவாரெல்லோரும்  முதலில்  அம்மையை  வழிபட்டு  அவள்  மூலம்  அப்பனையடைதல்  வேண்டுமென்பது  பெரியோர்  கண்டவுண்மை .  கடவுட் பத்தியாகிய  பேரன்புண்டாதற்கு,  அருள்வடிவினளாகிய  இறைவியின்  வழிபாடு  முதலில்  வேண்டத்தக்கதென்ப .  “ஆங்கவனருளாற்  பத்திநன்குண்டாம்” என்பது  வாயுசங்கிதை.  ஈண்டு  அருளென்றது  சத்தியை . “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”  என்பது  சிவ  ஞான  சித்தி.  இறைவியுடனாக  இறைவனை  உள்ளத்தமைத்து  வழிபடும்  சிவாநுபவப்  பெருஞ்செல்வரே  நம்  அடிகள் . இவ்வுண்மையை ,

“உடையாள்  உன்றன்  நடுவிருக்கும்  உடையாள்  நடுவுள்  நீயிருத்தி

அடியே  னடுவுள்  இருவீரும்  இருப்ப  தானால்  அடியேனுன்

அடியார்  நடுவுள்  இருக்கும்  அருளைப்  புரியாய் “

என்று  கூறிய  அடிகள்  திருவாக்கான்  உணர்க . அருட்குணமிக்க  இறைவனைத்  தலைவனாகவும் , அன்பு  முதிர்ந்த  உயிரைத்  தலைவியாகவும்  கொண்டு , உலகியலிற்  காணப்படும்  தலைமக்களுடைய  காதல்  ஒழுக்கத்தை  யேறிட்டு  ஞானானுபவப்  பொருள்  தோன்றச்  சமயக்குரவர்  ஆழ்வார்  முதலியோர்  பாடலருளிச்  செய்திருத்தலைப்  பரக்கக் காணலாம் .  “முன்னம்  அவனுடைய  நாமங்  கேட்டாள்”  என்னுந்  தமிழ்  மறைப்  பாடலிறுதியில்  “ தலைப்பட்டாள்  நங்கை  தலைவன்  றாளே “  என்று  கூறப்பட்டுள்ளது .  இங்கே  நங்கை  என்பது  பக்குவமுள்ள  உயிரையும்  தலைவன்  என்பது  இறைவனையுங்  குறித்து  நிற்றலறிக . இம்முறையில்  அடிகள்  தம்மைத்  தலைமகளாகவும்  , இறைவனைத்  தலைமகனாகவும்  கொண்டு  திருவாசகத்தில்  பல  திருப்பாட்டுக்கள்  அருளிச்  செய்துள்ளார் .  அம்முறையின்  தொடக்கம்  இத்திருவெம்பாவையே  யாகும் . இதன்  பின்வரும்  திருவம்மானை  முதலிய  பல  பகுதிகளும்   இக் குறிப்பினவாம் . 

                 இத் திருவெம்பாவையில் , ஆன்மநாயகனாகிய    இறைவனை யடைதற்குரிய   பக்குவமுதிர்ந்த  உயிர்களையே  கன்னிப்பெண்களாகவும்  , ஆணவமலவிருளிற்  பிணிப்  புண்டிருத்தலையே  உறங்கிக் கிடத்தலாகவும் ,   மலவாற்றலொழியப்பெறும்   நிலையே  துயில்  நீத்தெழும்  நிலையாகவும்  ,  மலபரிபாகமுடையவுயிர்கள்  அஃதில்லாத வுயிர்களை யுணர்த்தி  அன்புநெறிப்படுத்து  இறையருளிற்றோய்வித்தற்கு  அழைத்தலையே  நீராட  அழைத்ததாகவும்  அமைத்துக்கொண்டு இஃது  அருளிச் செய்யப்பட்டதென்க  இந் நுண்பொருள் ,

“மலவிருளுற்  றுறங்காமல்  மன்னுபரி  பாகரருள்

செலமுழுக  வருகவெனச்  செப்பல்திரு  வெம்பாவாய்”

என்னும்  திருவாசக வுண்மையில்  தெளிவிக்கப்பட்டிருத்தல்  அறிக.  பரமான்மாவாகிய  இறைவனைத்  தலைமகனாகப்  பெற்று  மணந்து  ,  பேரின்பவாழ்க்கையிற்றலைப்படுதற்கு  விரும்பும்  கன்னிப்பெண்களுள்  தம்மையும்  ஒருத்தியாக  அடிகள்  கொண்டு  கூறியபடியாம் .

பராசத்தியாகிய  அம்மையின்  பெருமை  இத்திருவெம்பாவையில்  ,

“எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த

               பொங்குமடு”  எனவும்

“பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளைதன் 

                 பாதத்  திறம்பாடி”  எனவும் ,

முன்னி  யவள்நமக்கு  முன்சுரக்கும்  இன்னருளே

                  யென்னப்  பொழியாய்  மழை “  எனவும்   போந்த

               திருப்பாடற்  பகுதிகளில்  வெளிப்படையாகவும்  மற்றைத்  திருப்பாட்டுக்களிற்  குறிப்பாகவும்  பாராட்டப்பட்டிருத்தல்  காண்க . இவ்வுண்மை  அவ்வப்பாடல்களின்  இறுதியில்  விளக்கிக்கூறப்படும் .

                இனி , இத்திருவெம்பாவைக்குத்  தத்துவப்பொருள்  கூறும்  ஒரு  சாரார்  இத்  திருவெம்பாவையில்  முதல்  எட்டுத்  திருப்பாட்டுக்கள்வரை  ஒவ்வொரு  திருப்பாட்டிலும்  ஒவ்வொரு  பெண்ணே  யெழுப்பப்பட்டனராக,  அவ்வெண்மரோடு  முதலில்  யெழுப்பிய  ஒருத்தியையுஞ்  சேர்த்துக்கணக்கிட   ஒன்பதின்மராதலின்  அவ்வொன்பதின்மரும்  நவசத்திகளாவரெனவும்,  மனோன்மணி,  சருவபூததமணி,  பலப்பிரமதனி,  பலவிகரணி  ,  கலவிகரணி  , காளி,  இரெளத்திரி,  சேட்டை ,  வாமை  என்னும்  அவ் வொன்பது  சத்திகளும்  உலகப்  படைப்பு  நிமித்தம்  முறையே  முன்னது  பின்னதைப்  பிரேரித்  துணர்த்திய  குறிப்பே  முதல்  எட்டுத்  திருப்பாட்டுக்களில்  உள்ளதெனவும்  ,  இச்சத்திகளின்  இயக்கத்தால்  மாயை  காரியப்பட்டுப்  பிருதிவி  முடிவான  பிரபஞ்சகாரியம்  நடைபெறுதலையே  இத்  திருவெம்பாவை  குறிப்பிற்  புலப்படுத்துமெனவும் ,  இது  குறித்தே  சத்தியை  வியந்தது  என்னும்  உள்ளுரை  குறிக்கப்பட்டதெனவும்  கூறுவர்  .  பிரபஞ்ச  சிருட்டிக்குறிப்பை  இங்கே  புலப்படவைத்தற்கு  உரிய  காரணம்  இன்னதென்று  யாரும்  விளக்கினாரல்லர் .  அங்ஙனமாயின்  ஈண்டு  இயைபுடைய  வேறுகருத்து  என்னையெனிற்  கூறுதும். 

                         தமிழ் நாட்டில்  பெண்களுக்கு  ஐந்து  முதல்  ஏழாண்டு வரை  பேதைப்  பருவமென்றும் , எட்டு  முதல்  பதினோராண்டு  வரை  பொதும்பைப்  பருவமென்றும் , பன்னிரண்டாம் ஆண்டு மங்கைப்  பருவத்  தொடக்கம்  என்றும்  தமிழ்  நூலார்  கூறுவர் .  ஐந்தாண்டுக்கு  முற்பட்ட  காலம்  குழந்தைப்  பருவமாதலின்  அது  பெண்மைப்  பருவத்துள்  வைத்துக்  கணக்கிடப்படவில்லை .  ஆகவே  ஐந்து  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  கன்னிமைக்குரிய  காலமென்பது  தெளிவாம் ,  தமிழ்  அகப்பொருணூலாரும்  பதினோராண்டும்  பத்துத்  திங்களும்  கழிந்தபின்றை  மணப்பருவம்  கொண்டமை  ஈண்டுக்  கருதத்தக்கது .  ஆகவே  ஐந்து  முதல்  பன்னிரண்டுவரை  ஆண்டுகள்  எட்டாகும் .  இதனாற்  கன்னியர்  ஐந்தாண்டு  முதல்  பன்னீராண்டுத் தொடக்கம்வரை  ஆண்டு  வகையால் எண்வகைப் படுவரென்பது  விளங்கும் .  ஈண்டுப்  பாவை  நோன்பு  மேற்கொண்டவர்  இவ்வெண்வகையினரே. முதலில்  பன்னிராண்டுத்  தொடக்கமுடைய  பெரிய கன்னிப்பெண்கள்  சிலர்  தாமே  விடியுமுன்  துயில்  நீத்தெழுந்து  உடல்  தூய்மை  செய்துகொண்டு  இறைவன்  புகழைப்பாடிக்கொண்டு  தம்மோடொத்த  பருவத்தினளான  பன்னீராண்டுத்  தொடக்கப்பருவத்து  ஒரு  பெண்ணை  யெழுப்பினர்  எனவும் ,  பின்னர்  முறையே  பதினொன்று  பத்து  ஒன்பது  எட்டு  ஏழு ஆறு  ஐந்து  ஆண்டுகளான  பொதும்பைப்  பருவத்தினரையும்  பேதைப்  பருவத்தினரையும்  எழுப்பினரெனவும்  கொள்ளல் வேண்டும்  . 

                          ஆகவே  ஒன்று  முதல்  எட்டுத் திருப்பாட்டுக்களிலும்   ஒவ்வொரு  பருவத்துப்  பெண்களே எழுப்பப்பட்டனர்  எனக்கொள்ளுதல்  பொருந்தும்  . ஆண்டில்  மூத்த ,  பெரிய  பெண்கள்  விடிதற்குச்  சில  நாழிகை  முன்னரே  துயில்  நீத்தெழுந்தனரென்பதும்    ஆண்டில்  இளைய  ,  சிறு  பெண்கள்  நாழிகை  ஆக  ஆக  எழுப்பப்பட்டனரென்பதும்   பொருத்தமாகும் .  மேலும் ,  முதற்றிருப்பாட்டில்   “ஈதேயெந்  தோழி  பரிசு “  என்றமையால்  அவள் யெழுப்பியவர்  பருவத்தோடொத்த  பருவத்தினள்  ஆவாளென்பதும் ,  இரண்டு  மூன்று  நான்காம்  திருப்பாட்டுக்களில்  எழுப்பப்பட்டார் மாற்றங் கூறினர்  என்று  கூறப்பட்டிருத்தலானும்  அத் திருப்பாட்டுக்களிலும்  ஐந்தாந்  திருப்பாட்டிலும்  அன்னார்  அறிவும்  அறியாமையும்  பொருந்தியவராகப்  புலப்படுக்கப்பட்டிருத்தலானும்  அவர்  பெதும்பைப்  பருவத்தினர்  ஆவரென்பதும் , ஆறு  ஏழு  எட்டாம்  திருப்பாட்டுக்களில்  எழுப்பப்பட்டவர்   மாற்றங்கூறாமையானும் ,  எழுப்பியவர்  “மானே”  யெனவும்  “அன்னே” யெனவும்  விளித்தலானும் , ஏழாம்  திருப்பாட்டில் பருவத்தாற்  பேதையேயன்றி  இறை  புகழில்  ஈடுபடாத  “வன்னெஞ்சப்  பேதையர்போல்  வாளாகிடத்தியால்”  என்று  கூறப்பட்டிருத்தலானும்  அவர்  பேதைப்  பருவத்தினராவ  ரென்பதும்  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறறிக . மேலும்  எட்டாந்  திருப்பாட்டில்   எழுப்பப்பட்டவள்  ஐந்தாண்டுச்  சிறுமியாதலின்    அவளை  எழுப்புங்கால்  “கோழி சிலம்பச்  சிலம்புங் குருகெங்கும்”  என்று  வைகறைப்  பொழுதின்  இறுதிப்பகுதி  குறிக்கப்பட்டிருத்தலும்  கருதத்தக்கது . ஈண்டு  ஐந்து  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  எழுப்பப்பட்டவர்  ஒவ்வொருவரெனக்  கூறப்பட்டிருப்பினும்  உபலக்கணத்தாற்  பலராக்  கொள்ளல்  வேண்டும் . பின்னர்  எல்லோரும்  ஒருங்கே  கூடி  இறைவனை  முன்னிலைப்படுத்துப்  புகழ்ந்து  பாடி  நீராடினரென்பது  கூறப்பட்டுள்ளது . இடையிடையே  உமாதேவியைப்  புகழ்ந்து பாராட்டி யிருத்தல்   காணப்படுதலின்    சக்தி  வழிபாடு  செய்தமையும்   பெறப்பட்டவாறறிக .

                            ஐந்து  முதல்  பன்னிரண்டு ஆண்டுப்  பருவத்தினர்  சிறுமியராக  இருத்தலின்,   வைகறையில் அன்னார்  எழுந்து  நீர்த்துறை  சென்று  நீராடற்கு  எங்ஙனந்துணிவர்  என்று சிலர் ஐயுறக்கூடும்  . இவ்விளம்  பெண்கள்  நீராடச்செல்லுங்கால்,  தாய்மாரும்  உடன்  செல்லுவர்  எனவும், தாயருகே  நின்று  நீராடுதலின்  இஃது  அம்பாவாடலாகுமெனவும் பரிபாடல் கூறும்.  “   அம்பாவாடலின்  ஆய்தொடிக்  கன்னியர் “  என்பது  பரிபாடல்  [11—81]  ஆதலின்  இந்  நோன்பிற்குரியார்  கன்னியராயினும்  ,  அவரைப்  பாதுகாக்கும்  நிமித்தம்  அன்னார்  தாய்மாரும் உடன்  சென்று  துணைபுரிவரென்பது  வெளியாதலின்   சிறுமியர்  துணிவிற்குத்  தடையின்றென்பது  புலனாகும் . 

                               திருச்சதகத்திற்  பொதுவாகக்  கூறப்பட்ட  பத்தி  வைராக்கிய விசித்திரங்களுள், வைராக்கியத்தின்  சிறப்பியல்பு  நீத்தல்  விண்ணப்பத்தில்  தெளிவிக்கப்பட்டது.  ஏனைப் பத்தியின்  சிறப்பியல்பு   கூறத்தொடங்கி  அப்  பத்தியின்  விளைவிற்குத்  துணைபுரியும்  உமையம்மையின்  பேருபகாரச்   செயல்  இதன்கட்  பாராட்டப்படுகின்றது .  இதனால்  நீத்தல்  விண்ணப்பத்திற்கும்  இதற்கும்  உள்ள  இயைபு  புலனாதல்  அறிக.

                                                —————————————-

திருவெம்பாவை

வெண்டளையான்  வந்த  இயற்றரவிணைக்

கொச்சகக்  கலிப்பா

திருச்சிறம்பலம்

ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்பெருஞ்

            சோதியை  யாம்பாடக்  கேட்டேயும்  வாட்டடங்கண்

மாதே  வளருதியோ  வன்செவியோ  நின்செவிதான்

             மாதேவன்  வார்கழல்கள்  வாழ்த்திய  வாழ்த்தொலி  போய்

வீதிவாய்க்  கேட்டலுமே  விம்மிவிம்மி  மெய்ம்மறந்து

              போதா  ரமளியின்மேல்  நின்றும்  புரண்டிங்ஙன்

ஏதேனும்  ஆகாள்  கிடந்தாளென்   னேயென்னே

                யீதேயெந்  தோழி  பரிசேலோர்  எம்பாவாய்.

கருத்துரை;-  இதன்  முன்னர்க்  கூறப்பட்ட  நீத்தல்  விண்ணப்பத்தின்  இறுதித்திருப்பாட்டில்  வைதல்  வாழ்த்துதலாகிய  இருதிறத்தானும்  தாம்  கூறும்  பாராட்டுக்களால்  நிகழுங்  குற்றத்தைப்  பொருத்தருள  வேண்டுமென்று  ஆண்டவனை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்துகொண்ட  அடிகள்,  திருவெம்பாவையின்  தொடக்கத்  திருப்பாட்டாகிய  இதன்கண்   முதலும்  ஈறுமில்லாத  அரிய  பேரொளிப்   பிழம்பாகவுள்ள  இறைவனது  இயல்பு வரையறை  செய்து  பாராட்டுதற்கு  அரிய  தொன்றென்பதும்  ,  அதனால்   அக்குற்றம்  பொறுக்கத்தக்கதென்பதும்  , இயன்றாங்குச்  செய்யப்படும்  வாழ்த்து  ,  வாழ்த்துவோரையும்  கேட்போரையும்  இறையன்பிலீடுபடுத்தும்  இயல்பின  தென்பதும் , அதனால்  அஃது  உயிர்த்தொகுதிகளால்  மேற்கொள்ளத்தக்கதென்பதும்  ஆகிய  இவை  குறிப்பாகவும்  வெளிப்படையாகவும் புலப்பட  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-  வாள்தடம்  கண்  மாதே = ஒளி  பொருந்திய  அகன்ற  கண்களையுடைய  நங்காய்

ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்  பெரும்  சோதியை :-  தொடக்கமும்  இறுதியும்  இல்லாத  அரிய  பெரிய  ஒளிப்பிழம்பாகவுள்ள  இறைவனை 

யாம்  பாடக்கேட்டேயும்  :-  யாங்கள்  புகழ்ந்து  பாடக்கேட்டுக்கொண்டும் 

வளருதியோ :-  துயில்கின்றாயோ,

நின்செவிதான்  வன்செவியோ :-  அல்லது  நின்  செவிகள்  தாம்  செவிட்டுச்செவிகளோ

வீதிவாய் :-  தெருவில்  ,

மாதேவன்  வார்கழல்கள் வாழ்த்திய  வாழ்த்து  ஒலி  போய் :-  சிவபெருமானுடைய  நெடிய  சிலம்பணிந்த  திருவடிகளையாங்கள்  புகழ்ந்து  பாடிய  வாழ்த்துப்  பாடல்களின்  ஒலி  சென்று  ,

கேட்டலுமே :-  கேட்கப்பட்ட  அளவிலே, [ சிவபக்தி  மிக்க  இவள் ]

போது  ஆர்  அமளியின்மேல்  நின்றும்  புரண்டு :-  மலர்  நிறைந்த  படுகையிடத்து    நின்றும்  புரண்டு  எழுந்து  ,

விம்மி விம்மி மெய்மறந்து :- [ பத்தி  மிகுதியால்  ] தேம்பித்  தேம்பியழுது  பின் தன்  வயமிழந்து,

ஏதேனும்  ஆகாள்  இங்ஙன்  கிடந்தாள் :-  வேறு  எச்  செயற்கும்  ஆளாகாமல்  இவ்வாறு  கிடந்தாள். [இவள்  செயல்  அவ்வாறாக]

எந்தோழி  பரிசு ஈதே :- எங்கள்  தோழியாகிய  நின்  தன்மை  இத்தகையதாகவுள்ளது ,

என்னே என்னே :-  ஈதென்ன  வியப்பு  வியப்பு  என்பது .

விளக்கவுரை :-  பாவை  நோன்பு  மேற்கொண்ட கன்னியருள்,  வைகறையில்  தாமே  துயிலுணர்ந்தெழுந்து  உடற்றூய்மை  செய்துகொண்டு  நீராடப்  போதுவார்  சிலர் ,  அந்நோன்பு  மேற்கொண்டு  நீராடுதற்கு  உடன்  வருவதாக  முன்னே  நாளிற்கூறி  உரிய  நேரத்தில்  எழாமல்  உறங்கும்  ஒருத்தியைத்  துயிலுணர்த்துமுகமாக  அருளிச்செய்யப்பட்டது  இத் திருப்பாட்டு . “வாட்டடங்கண்”  எனக்  கண்ணுக்கு  அடைமொழி  கூறியது  , வைகறைப்  பொழுதில்  ஒளியுடைமையும்    அகற்சியும்  இயல்பின்  அமையுமாறு  விழிக்கத்தக்க  கண்கள் , எதிர்மறையான  இருளுடைமையும்  சுருக்கமும்  அமைய  மூடப்பட்டுக்கிடத்தல்  தக்கதன்று  என்னும்  குறிப்புத்தோன்ற  நின்றது  விழிப்பு  நிலையில்  ஒளியுடைமையும்   அகன்றிருத்தலும்   , துயிலும்  நிலையில்  ஒளியின்மையும்  சுருங்கியிருத்தலும்  கண்களுக்கு உளவென்பது  எளிதினறியத்தக்கது .  ஆதி  — தொடக்கம் ; ஈண்டுத்  தோற்றமென்னும்  பொருட்டு  .  மாயா  காரியமாகிய  உலகமெல்லாம்  தோன்றி   யொடுங்குதற்குத்  தான்  நிலைக்களனாதலன்றித் தனக்குத்  தோற்றமும்  இறுதியும்  இல்லாதவன் இறைவன்  என்பார் , “ஆதியும்  அந்தமும்  இல்லா “ என்றார்    திருச்சதகத்தில் ,

“ போற்றியெவ்  வுயிர்க்குந்  தோற்ற  மாகிநீ  தோற்ற  மில்லாய்

   போற்றியெல்  லாவு  யிர்க்கும்  ஈறாயீ  றின்மை யானாய் “  என்று

               அடிகள்  அருளிச் செய்திருத்தலும்  காண்க.  இங்ஙனம் ஆதியும்  அந்தமுமில்லாப்  பரம்பொருளை  மெய்யுணர்வுடையார்  பேரொளிப் பிழம்பாக  வுணர்ந்து  அநுபவித்தன  ரென்ப .  ஒளி  நிலையைத்  திருமூலர்  அண்டவொளி, பிண்டவொளி, அகண்டவொளியென  மூவகைப் படுத்துக்கூறுவர்.  அண்டவொளி   ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலியவற்றிலுள்ளது.   பிண்டவொளி  உடம்போடு  கூடிய  வுயிரறிவிலுள்ளது. அகண்டவொளி  ஞானமயமாகிய  இறைவன்பாலுள்ளது . “அங்கிங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய்  “  என்று  தாயுமானவர்  கூறியதுங்  காண்க . ஒற்றுமை  நயத்தால்  அகண்டவொளியாகவே  இறைவனைக்  குறிக்கொண்டு  பரஞ்சோதியெனவும்  பெருஞ்சோதியெனவும் , பேரொளிப்பிழம்பு  எனவும்  பெரியோர்  வழங்குவர். இங்ஙனம்  இறைவன்  பேரொளிப்பிழம்பாகத் திகழவும் ,மாயாகாரியமாகிய  உலகப்  பார்வையுடைய  ஆன்மாக்கள்  உணர்தற்கு அரியனாவன்  என்பது  தோன்ற , “அரும்பெரும்  சோதியை “என்றார் , அருமை –  பாசஞான  பசு ஞானங்களாகிய  வாக்கு  மனங்களுக்கு  எட்டாத  தன்மை ; பதிஞானமாகிய  அனுபவ  வுணர்வுக்கே  புலப்படும்  இயல்பினன்  என்பதாம் . “வாக்கு  மனாதீத  கோசரமாய்  நின்ற  அதுவே  “  என்னும்  சிவஞானபோதக்  கருத்தும்  ஈண்டு  அறியத்தக்கது .  மனவாக்கினிற்றட்டாமல்  நின்றதெது “  என்பதும்  இக்  குறிப்பினதே . அரும் பெருஞ்சோதியாக  விளங்கும்  இறையியல்பைக் குறித்துச்   சிவானந்தலகரி  யென்னும்  வடமொழி  நூலில்  சங்கராசாரிய  சுவாமிகள்  கூறிய  ஒரு சுலோகக்  கருத்து  இங்கே ஒப்பு  நோக்கி யின்புறத்தக்கது .

                  அதன்  மொழி பெயர்ப்பு  வருமாறு :-  பசுபதியாகிய  இறைவ !  தாமரை  நாயகனாகிய  ஒரு  சூரியன்  விண்  மண்  முழுதும்  நிறைந்த  பெரிய  இருட்குழுவை  யோட்டிக்  காண்பார்  கண்களுக்கும்  புலனாகின்றான் ; நீ  கோடி  சூரியவொளி   யுடையவனாக  இருந்தும் ,  கண்களுக்கும்  புலனாகாமையோடு  சிறிய  என்  அகவிருளையும்  போக்குகின்றாயல்லை . என்  அகவிருள்  நின்னால்  ஒழிக்க  இயலாத  அத்துணை வலியை  எங்ஙனம் உடையதாகும்? ஆதலின் அஞ்ஞானம்  முழுதையும்  ஒழித்துக்  காட்சி  தந்தருளுவாயாக “ என்பது

                          இனி ,  திருமாலும்  பிரமனும்  அடியும்  தேடியறிய  இயலாதபடி  பேரொளிப்பிழம்பாக  இறைவன்  நின்ற  வரலாறு  திருவண்ணாமலையில்  நிகழ்ந்ததெனப்  புராணம்  கூறுமாதலின்  , அவ்வுண்மையை  “ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்பெருஞ்சோதி  “யென்னும்   தொடர்  குறிப்பிற்  புலப்படுத்து  நிற்றலும் அறிக .  யாம்  என்றது,  மனமொழிகளுக்கு   எட்டாத  இறைவன்  திருப்புகழையுணர்ந்து  பாடுதற்குத் தகுதியற்ற  மானுடச்  சிறுமியராகிய  யாங்கள்  என்பது  படநின்றது . பாடுதற்குத் தகுதியில்லே  மாயினும்  ,  “பத்திவலையிற்  படுவோன் “என்பது  கேட்டிருக்கின்றோமாதலின்  ,அன்பினாற்  பாடலானே மென்பார் ,  “யாம்பாட” எனவும் ,  நீயும்  வைகறையில்  விழித்தெழுந்து  எங்களுடன்  கூடி  இறைவன்  திருப்புகழைப் பாடவேண்டியது   கடமையாகவும் ,  அதனைச்  செய்யாமையோடு ,  யாங்கள்  நின்  வாயிலில்  வந்து  பாடுதலைக்  கேட்டுக்கொண்டும் ,  விழித்தெழாது   பொய்யுறக்கங்  கொள்ளுகின்றனையோ என்பார் , “ கேட்டேயும்   வளருதியோ”  எனவுங்  கூறினாரென்க .  கேட்டேயும்  என்புழி  ஏகாரம்  இசை  நிறை .  கேட்டும்  என்றபடி .  வளர்தல் – கண்   வளர்தல் ; துயிலுதல்  “ ஆலிலையின்  மேலன்று  நீ  வளர்ந்தது “ என்புழி  அப்பொருட்டாதல்  அறிக .  இனி ,  “மாதே” யென  விழித்து  வாட்டடங்கண்  வளருதியோ  வெனக்  கோடலுமாம் .  வன்செவி  — தனக்குரிய  ஓசையாகிய  புலனைப்  பற்றுதற்குரிய  உணர்ச்சியற்ற  செவி . பொய்  யுறக்க  மின்றேல்  கேட்டற்குரிய  நின்  செவிகள்  தாம்  செவிடோ  வென்றாரென்பது. 

வளருதியோ , வன்செவியோ  என்னும்  ஈரிடத்தும்  ஓகாரம்  எதிர்மறை ; உறக்கமுமன்று ; செவிடுமன்று  என்பதை யுணர்த்தி நின்றது .  யாம் பாடக்கேட்டுத்  துயிலுணர்ந்தும்  , விழித்தெழாமைக்குக்  காரணம்  நீராட  வருதலில் விருப்ப  மின்மையே  யாமென்று  கருதினாரென்பது .

                         இனி , ஆண்டவனிடத்து  அப்  பெண்ணுக்குள்ள  அன்பின்  குறையை  அவள்  உணருமாறு  அவளோடொத்த  மற்றொரு  பெண்ணின்  பேரன்பை  யெடுத்துக்காட்டி  யுணர்த்துவராயினர் . அப்பேரன்பினளாகக்  கருதப்படும்  பெண்ணைக்  குறிப்பிட்டு , “இவளைத்  துயிலுணர்ந்த  முன்னர்ச்  சென்றோம் ; செல்லுங்கால்  இவள்  இல்லத்தை  யணுகுதற்கு  முன்  தெருவில்  யாம்  கூடி  அரும்  பெருஞ்  சோதியைப்  பாடத்  தொடங்குதற்குக்  காப்பாக  அப்பெருமான்  திருவடிகளை  வாழ்த்தத்  தொடங்கினோம் “ என்பார், ”மாதேவன்  வார் கழல்கள்  வாழ்த்திய  வாழ்த்தொலி”  யென்றார் என்க. மாதேவன்  என்பதும்  பேரொளிப்  பிழம்பாக வுள்ளவன்  என்னும்  பொருளுடைய  தாயினும்  , “ஆதியும்  அந்தமுமில்லா  அரும்  பெருஞ் சோதி”  என்பது  இறைவனுடைய   சொரூபலக்கணம்  எனப்படுஞ்  சிறப்பியல்பு  பற்றியும் ,  மாதேவன்  என்பது  தடத்த  லக்கணம்  எனப்படும்  பொதுவியல்பு  பற்றியும்  கூறப்பட்டன  வென்பது  கருதத்தக்கது*, அரும்பெருஞ் சோதியைப்  பாடுதற்கு  அப் பெருமான்  திருவடிகளே  காப்பாகத் தக்கனவென்பது  கருத்து  ஆன்றோர்  நூன்முகத்துக்  கூறப்படும்  கடவுள்  வாழ்த்தாகிய  மங்கல  வாழ்த்து  ,  வாழ்த்தும்  வணக்கமும்  பொருளியல்புரைத்தலும்   என  மூவகைப்படுமென்ப . 

——————————————————————————————————*பாசஞான  பசுஞானங்களால்  அறியப்படாமல்  பதி ஞானத்தால்  அறியப்படும்  சிவசத்தாதல்  இறைவனுக்குச்  சொரூபலக்கண  மெனப்படும் சிறப்பியல்பும்,  சத்தியுடன்  கூடி  உலகெலாமாகி  வேறாயுடனுமாய்  நின்று  படைப்பு முதலிய  அருட் செயல்களைப் புரியும் பதியாதல்  தடத்த  லக்கணமெனப்படும்  பொதுவியல்புமாகும்.  இவற்றை  முறையே  சிவஞானபோதம் ஆறாம்  மற்றும்  இரண்டாம்  சூத்திரத்தாலும் உணர்க.

——————————————————————————————————

அதற்கிணங்க  இப் பெண்கள்  தாம் பாடத் தொடங்குதற்குக்   காப்பாகக்  கூறியதும்  வாழ்த்தின்  பாற் படுதலறியத்தக்கது .  தெருவினின்று  யாங்கள்  மெல்ல வாழ்த்திய வாழ்த்தொலி  சென்று   கேட்கப்பட்ட  அளவில்  என்பார்  , வீதிவாய்  வாழ்த்திய  வாழ்த்தொலி   போய்க் கேட்டலும்  என்றார் .  கேட்டல்—கேட்கப்படுதல்  ,  அமளி—படுக்கை .  படுக்கை  வன்மையுடையதாக  இருப்பின் ,  அஃது   உறக்கத்திற்கு  இடையூறாக  இடையிடையே  விழிப்புண்டாதற்கு    ஏதுவாதலுங்  கூடும் .  இவள்  படுக்கை  யன்னதன்று ; மிக  மெல்லிய  பூவிதழ்களால் அமைந்த  தென்பார் ,  “போதாரமளி”  எனவும் ,  அது நன்கு  துயிலுதற்கு  ஏற்றதாக இருந்தும்  வாழ்த்தொலி கேட்டதும்  துயிலுணர்ந்தெழுந்தது  , இவள்  பத்திமையைப்  புலப்படுத்துமென்பார் , “அமளியின்மேல் நின்றும்  புரண்டு” எனவுங்கூறினர்.  புரளுதல் – விழிப்புண்டாதற்குத்  தொடங்கும்   முதற்  செயல் . அஃது  ஈண்டு  இலக்கணச் சொல்லாக நின்று  எழுதலைக்  குறிக்கும் . எழுந்து ,  “முன்னம்  அவனுடைய  நாமங்கேட்டாள்”  என்றபடி  வாழ்த்தொலியைக்  கேட்டதும்  ,  அன்பின்  மிகுதியால்  கண்ணீர்  வடியத்  தேம்பித்   தேம்பி  யழலானாள் என்பார் ,  “விம்மி  விம்மி “ யெனவும் ,  அந்நிலையின்  முதிர்ச்சியில்  தன்வய  மிழந்தனள்  என்பார் ,  “மெய்ம்மறந்து “  எனவும் ,  மெய்ம்மறந்த  நிலையில்  உலகியற்  செயல்களுள்  எதன்கண்ணும்  தலைப்படாளாய்  இறைவன்  திருவடிகளிலுறைத்துக்   கிடந்தாள்  என்பார் , “ஏதேனுமாகாள்  கிடந்தாள்”  எனவுங்கூறினர் .  ஆகாள்  என்பது  முற்றெச்சம்.  இவ்வநுபவம் , 

“முன்னம்    அவனுடைய    நாமங்    கேட்டாள்

                மூர்த்தி   யவனிருக்கும்   வண்ணங்   கேட்டாள்

பின்னை   யவனுடைய   ஆரூர்  கேட்டாள்

                  பெயர்த்தும்   அவனுக்கே   பிச்சி   யானாள்

அன்னையையும்    அத்தனையும்    அன்றே    நீத்தாள்

                    அகன்றாள்   அகலிடத்தார்   ஆசா   ரத்தைத் 

தன்னை    மறந்தாள்    தன்   நாமங்   கெட்டாள்

                      தலைப்பட்டாள்    நங்கை   தலைவன்    றாளே “

ஏன்னும்   தமிழ்மறைக்கு   இலக்காக  வுள்ளதென்பது  உணர்ந்தின் புறத்தக்கது. “ இங்ஙன்”  என்பது  இவ்வாறு  என்னும்  பொருட்டு .  இப்பெண்ணை  யெழுப்ப  இவள்  இல்லத்திற்குச்  செல்லுதற்கு  முன்னரே  தெருவில்  யாங்கூடிக்  கடவுள்   வாழ்த்தைக்  கூறினேமாக ,  அம்  மெல்லிய   வொலியை  இவள்  கேட்டதும்  துயில்நீத்தெழுந்து   பத்தியால்  உருகி  மெய்ம்மறந்து  கிடந்தாள் ;  இவள்  இயல்பு  இங்ஙனமாக ,  எம்  தோழியாகிய  நின்  தன்மை  ,  யாங்கள்  நின்  இல்லத்து  வாயிற்படியில்  வந்து  உரத்த  குரலில்  பாடியதைக்  கேட்டும்  எழாமல் ,  பொய்யுறக்கங்  கொள்ளுதலாகிய  இத்  தன்மையாகவுள்ளதே ! ஈதென்ன  பெருவியப்பு  என்பார் , “ஈதேயெந்தோழி  பரிசு  என்னே  யென்னே”  யென்றனர் .  பரிசு – தன்மை  .  இறைவன்  திருவடியை  வாழ்த்திக்கொண்டு  சென்ற  பெண்கள்  வாழ்த்தொலி  கேட்ட  அளவில் ,  பத்திவயப்பட்டு  உருகி  மெய்ம்மறந்து  கிடந்தாளை  அவள்  இல்லத்திற்கண்டு  அவளையும்  உடனழைத்துக்கொண்டு  சென்றனராதலின் ,  அவளைச்  சுட்டி  இவள்  என்னாது  “ஏதேனும்  ஆகாள்  இங்ஙன்  கிடந்தாள்” என்று  கூறி  முடித்தனர் . தம்  குழுவிற்  கூடியிருத்தலின்  ,  சுட்டுப்பெயராகிய  எழுவாயின்றிச்  சுட்டிக்  கூறிப்பயனிலையளவில்   அவள்  செயல் கூறப்பட்டதென்க .  இவள்  என்னும்  சுட்டுப்  பெயர்  ஈண்டுத் தோன்றா எழுவாயாகும் .

          திருப்பாட்டுக்களின்  ஈறுதோறும்  வரும்  “ஏலோரெம்பாவாய்”  என்னுந்  தொடற்கு  எங்கள்  பெண்ணே  யாங்  கூறுவதை  யேற்றுக்கொள் ; ஆராய்ந்துபார்  என்று  பொருள்கூறி  எழுப்பப்படுபவள்   மேலேற்றி  விளியாகவும்  ஏவலாகவும்  கூறுதல்  ஈண்டும் , இன்னுஞ்சில  திருப்பாட்டுக்களில்  கன்னி  யொருத்தியை  முன்னிலைப்படுத்திக்கூறும்  இடங்களிலும்  பொருந்தும் . ஆயினும் ,  எல்லாத்  திருப்பாட்டுக்களிலும்  பொருள்  முடிபோடு  இயைவதன்று .  கன்னிப்பெண்களைத்  தனித்தனியாகவன்றிக்  குழுவாக  முன்னிலைப்படுத்தும்  ,  இறைவனையும்  மழையையும்  முன்னிலைப்படுத்தும்  கூறப்பட்டிருத்தலின் பொருள்  முடிவும் அவற்றோடியைய  ஆங்காங்கு  வேறாகக்  கொள்ளல்  வேண்டும் .  ஆதலின் ,  இறுதிதோறுமுள்ள  “ஏலோரெம்பாவாய்”  என்புழி  ஏழும்  ஓரும்  அசையெனவும் , எம்பாவாய்  என்பது  நோன்பிற்கு  அதிட்டான  தெய்வமாகிய  பார்வதி தேவியை அடிக்கடி  நினைவு  கூர்தற்குரிய நன்மொழி  யெனவுங்  கொள்ளல்  வேண்டும்,  சிலப்பதிகாரம்  29 – வது வாழ்த்துக்காதையில்   “வீங்குநீர்  வேலி”  என்பது முதலியவற்றின்   ஈற்றில்  “பாடேலோர்  அம்மானை “  என்புழி, ” ஏலும்  ஓரும்  அசை”   என்று  அரும்பதவுரையாசிரியர்  கூறியிருத்தலும்  அறிக.  மகளிர்  மேற்கொண்ட  நோன்பு  பாவை  நோன்பு  ஆதலின்  அதற்கேற்ப  அப்பெயராலே  யொருவரை  யொருவர்  விளிகொள்ளலானாரென்பதும்  ஆம் .  பெண்கள்  விளையாட்டு  நிகழ்ச்சியில்  தம்  இயற்பெயரைவிட்டு  விளையாட்டிற்குரிய  பெயரையிட்டு வழங்குதலை  உலகியலிற்  காணலாம்.  திருவம்மானை  முதலிய  வற்றிலும்  இவ்வாறு  வழங்கப்பட்டிருத்தல்  காண்க.  ஆகவே  ஏலோரெம்பாவாயென்பது ,  இனிய  ஓசையுடையதாய்  மேற்கொண்ட  நோன்பிற்குரிய   தெய்வ  மந்திமாக  விளங்கும்  அடிநிறைவென்பது புலனாம். எல்லாத்  திருப்பாட்டுக்களுக்கும்  இஃதொக்கும் .  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்ட  முத்திறத்துக்  கன்னியருள் ,  வாழ்த்தொலி  கேட்ட  துணையானே  மெய்ம்மறந்து  கிடந்தவள்  தலையன்பினளென்பதும் ,  இறைவனைப்  பாடித்  துயிலுணர்த்த  முற்பட்டவர்  இடையன்பினரென்பதும்   துயிலுணர்த்தியும்   படுக்கையினின்று  எழாமற்  கிடந்தவள்  கடையன்பினள் என்பதும்  புலப்படலால்   தலை யிடை கடையாய  முத்திறத்துப்  பக்குவமடைய  உயிர்களின்  இயல்பு   இதனால்   தெளிவிக்கப்பட்டபடியாம் .

             இதன்கண் “ மாதேவன்  வார்கழல்கள்  வாழ்த்திய வாழ்த்து”  என்றதனால்  சத்தியை  வியந்தது  என்னும்  உள்ளுரை குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறாம் .  என்னை ?  இறவன்  திருவடி  இறையருளாகிய  சிவசத்தியைக்  குறிக்குமாதலின் ,  திருவடி  வாழ்த்துச்  சத்தியை  வாழ்த்தியதாகு  மென்பது .  சிவசத்தியாகிய  பராசத்தியை  அருளுருவினளெனச்  சைவ  நூல்  கூறும்  .  “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”  என்பது  சிவஞானசித்தி. இறைவன் திருவடியை  இறயருளாகிய  சிவசத்தியென்று  சிவஞானபோத  மாபாடியங்  கூறும் .  இதனைச்  சிவஞானபோதம் ஆறாம்  சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில்  “எண்ணிய சத்தன்றசத்தன்றாம்”  என்னும்  திருவெண்பாவின்  “அறிவறியாமெய்சிவன்  தாளாம்  “ என்னும்  ஈற்றடியானும்  , அதற்கு  “அறிவினாலறியப்படாத  மெய்ப்பொருள்……அநுபவமாத்திரையில்   கோசரிப்பதென்று  ஓதப்படும்  சிவன்தாளாம்  “  எனவும் ,  “பெயர் நிலைக்  கிளவியின்  அஅகு நவும் “ என்றது  ஒத்தாகலின் ,  சிவன்தாள்  எனச்  சிவசத்தியின்  மேல்  வைத்து  உயர்த்துக்கூறினர்.  “இறைவனார்  கமலபாதம்  என்பதும்  அது “  எனவுங்  கூறிய  மாபாடிய  வுரையானும் உணர்க .  வரும் திருப்பாட்டுக்களுள்  இறைவன் திருவடிக்  குறிப்புப்  பற்றி  உள்ளுறை  கூறப்படும் இடங்களுக்கும்  இஃது ஒக்குமென்பது .

பாடல்  2

பாசம்   பரஞ்சோதிக்   கென்பாய்   இராப்பகல்நாம்

                பேசும்போ  தெப்போதிப்  போதா   ரமளிக்கே

நேசமும்   வைத்தனையோ  நேரிழையாய்   நேரிழையீர்

                  சீசி   யிவையுஞ்   சிலவோ   விளையாடி   

யேசும்   இடமீதோ   விண்ணோர்கள்   ஏத்துதற்குக்  

                   கூசும்   மலர்ப்பாதந்   தந்தருள   வந்தருளுந் 

தேசன்   சிவலோகன்   தில்லைச்சிற்   றம்பலத்துள்

                     ஈசனார்க்   கன்பார்யாம்    ஆரேலோ    ரெம்பாவாய்

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில் ,  மற்றமனங்கழிய  நின்ற  இறைவன்  திருவடியை  வரையறைப்  படுத்துக்  கூறல்  இயலாத  தொன்றாயினும்,  இயன்றாங்கு  வாழ்த்துதல்  வாழ்த்து வோரையும்  கேட்போரையும்  இறையன்பில்   ஈடுபடுத்தும்   ஆதலின், அஃது  உயிர்களால்  மேற்கொள்ளத்தக்கது  என்பது  புலப்படக்கூறியருளிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அதற்கு  ஏதுவாக  அத்  திருவடியின்  அருமையிலெளிய  அழகை  யருளிச்  செய்கின்றார் .  “விண்ணோர்களேத்துதற்குக்  கூசுமலர்ப்பாதம் “  என்றதனால்  அருமையும்  “தந்தருள  வந்தருளும் “  என்றதனால்   எளிமையும்  புலப்பட  வைத்தவாறறிக . 

பதவுரை:-  நேர்  இழையாய்  = தகுதியான  அணிகலன்களையுடைய  பெண்ணே,

நாம்  பேசும்போது  எப்போதும்  =  நாம்  உரையாடும்  பொழுதெல்லாம்,

இரா  பகல்  பாசம்  பரஞ்சோதிக்கு  என்பாய் = இரவும்  பகலும்  என் அன்பு  மேலான  ஒளிப்பிழம்பாக  உள்ள  இறைவன்  பொருட்டே  நிகழும்  என்று  கூறுவாய்,

இப்போது  ஆர்  அமளிக்கு  நேசமும்  வைத்தனையோ ;- 

இப்பொழுது  மலர்  நிறைந்த  இப்  படுக்கையின்  பொருட்டும்  அன்பு  வைத்தனையோ (என்று  இவ்வாறு  துயிலுணர்த்த  வந்த  பெண்கள்  கூறக்கேட்ட  அப்பெண்  கூறுவாள் )

நேரிழையீர் :-  தகுதியான  அணிகலன்களையுடையாய் 

சீசி  இவையும்  சிலவோ ;-  சீச்சீ  நும்  வாக்கில்  இங்ஙனம்  எள்ளிக்  கூறுஞ்சில சொற்களும் சில வுள்ளனவோ,

 விளையாடி  ஏசும்   இடம்  ஈதோ :-  விளையாட்டு  முகமாகப்  பழித்துரைத்தற்கு  உரிய  காலமும்   இதுவா? (என்று  கூறக்கேட்ட  அம்மகளிர்  கூறுகின்றார்கள்),

விண்ணோர்கள் ஏத்துதற்குத்  தந்தருளக் கூசு மலர்ப்பாதம் :- 

தேவர்கள்  புகழ்ந்து  பாராட்டுதற்பொருட்டுத்   தருதற்கு   நாணும்  மலர்  போன்ற  திருவடிகளை

தந்தருள  வந்தருளும்  தேசன் :-  எளியேம்  பொருட்டுத்  தருதற்கு  இந்  நிலவுலகத்தில்  எழுந்தருளி  வந்த  ஞானாசிரியனும்,

சிவலோகன் :-  சிவலோக  நாயகனும்,

தில்லைச்  சிற்றம்பலத்துள்  ஈசனார்க்கு  :-  தில்லைத்தலத்தின் கண்  உள்ள  திருச்சிற்றம்பலத்தின்  கண்ணே  ஈசனும்  ஆகிய  பெருமான்  பொருட்டுச்  செய்யப்படும்  ,

அன்பு  ஆர்  யாம்  ஆர் :-  அன்பு  எத்தகையது ; யாம்  எத்தகையோம் ? என்பது .

விளக்கவுரை:-        முன்னர்த்   துயிலுணர்ந்து  வந்தவரும் , உணர்த்தப்பட்டு  எழுந்தவளும்  ஆகிய  பெண்கள்  எல்லோரும்  ஒருங்குகூடி  மற்றொரு கன்னியின்  இல்லத்தைச்  சார்ந்து  அவளியல்பு  கூறி  யெழுப்புகின்றனர் , இவ்வாறே  எட்டாந்  திருப்பாட்டு  வரை  எழுப்பப்பட்டவர்  இறுதியில்  எழுந்து  எழுப்பியவரோடு  கூடிப்  பிரிதோர்  இல்லத்தைச்  சார்ந்து  மற்றொரு  கன்னியை  எழுப்பியதாகக்  கொள்ளல்  வேண்டும்.  நேரிழை  = தகுதியான  அணிகலன்,  ஈண்டுத்  தகுதி  கன்னிமைக்குரியதாகும் . இது  நேரிழையீர்  என்பதற்கும்  ஒக்கும்.  பேசும்போது  என்பது  உரையாடும்  ஒரு  காலத்தையும்,  எப்போதும்  என்பது,  எத்தனை  முறை  யுரையாட  வாய்ப்பினும்  அப்பொழுதெல்லாம்   என  அக்காலப்  பன்மையையும் குறிப்பினவாம் . எப்போதும்  என்புழி  உம்மை  விகாரத்தாற்றொக்கது.  பாசம் =  பத்தி ,  உடலோம்  புதற்  பொருட்டு  உறங்குதற்குரிய   இரவிலும்  உண்டல்  முதலிய  செயல்களுக்குரிய  பகலிலும்  அவற்றைப்  பொருட்படுத்தாமல்  இறைவனை  நினைந்து  பத்தி  செய்தலே  கடமையாக  மேற்கொள்ளப்பட்டது   என்பது தோன்ற  நாள்  முழுது மென்னாது  இராப்பகலென்றனர்.  இராப்பகல்  என்புழி  எண்ணுமைகள்  தொக்கு  நின்றனர் . பகல்  முழுதும்  உழைத்து  இரவில்  அவ்  வுழைப்பினாலுண்டாகிய   இளைப்பை  யொழித்தற்குத்  துயிலுதல்  இயல்பாகவும்   அவ்விரவிலும்    இளைப்பாறுதலின்றி   உழைக்கலானேன்  என்னுங்  கருத்துத் தோன்ற,  இராப்பகலாக  வுழைத்தேன்  என்று  உலகியலிற்  கூறுதல்  போல.  அன்பு  வழிபாடு  செய்தற்குரிய  பகலிலன்றி  இளைப்பாறுதலுக்  குரிய  இரவிலும் பத்திமையுடையேன்  என்று  கூறுவாய்  என்பார் . பகலும்  இரவும்  என்னாது  “இராப்பக” லென  இரவை  முற்கூறினர்.  அமளிக்கே  என்புழி  ஏகாரத்தைப்பிரித்துப்  பரஞ்சோதிக்கு  என்பதனோடு  கூட்டுக ; இறைவனுக்கன்றி  வேறு  எப்பொருளிலும்  பற்றில்லையென்பது  தோன்ற  நிற்றலின்  ஈண்டு  ஏகாரம் தேற்றப்பொருட்டு  என்பாய்  – என்று  கூறுவாய்.  என்பாய்  என்பதற்கு  எலும்பாகக்  கரையுமாறு  எனப்பொருள்  கூறுவாருமுளர்.  முன்னும் பின்னும்  உள்ள  சொற்களால்  பொருட்டொடர்பு   சிறவாமையின்  அது  பொருளன்று  இப்போதரமளி  என்புழி  இகரச்சுட்டு  அணிமையையுணர்த்து  மாதலின்  துயிலெழுப்ப  வந்தவர்  எழுப்பப்படுபவளின்  அருகில்  நின்று  கூறினரென்பது  புலனாகும்.  போது – மலர் ,  போதாரமளியென்றது.  நேசம் வைத்தற்கு  ஏதுக்  கூறியபடியாம் . நேசமும்  என்புழி  உம்மையைப்  பிரித்து  அமளிக்கு  என்பதனோடு  இயைக்க. இறைவனிடத்தன்றிப்  படுக்கைக்கும்  பத்தி பூண்டனையோ  என்பது  பெறப்படுதலின்  உம்மை  ஈண்டு  எச்சப்பொருட்டாம்.

             பாசம்  பரஞ்சோதிக்கு  எனச்  சொல்லளவிற்  கூறிச்  செயலளவில்  படுக்கைக்கண்ணே  வைக்கப்பட்டது  போலும்  என்பார்  “என்பாய்”  எனவும்  “வைத்தனையோ”  எனவுங்  கூறினரென்க   இஃது  “அறங்கூறான்  அல்ல  செயினும் “  என்பது   போல  நின்றது . 

             அறமென்று  சொல்லுவதுஞ்  செய்யாது  பாவங்களைச்  செய்யுமாயினும் “ என்பது  அத்தொடரின்  பொருள் .  வைத்தனையோ  என்புழி  ஓகாரம்  வினாப்  பொருட்டு.  துயிலுணர்த்திய  காலம்  இரவின்  இறுதியும்  பகலின் தொடக்கமுமாகிய  வைகறைப் பொழுதாகலானும் அஃது இரவும் பகலுமாகிய காலக்  கூறு  இரண்டையும்  பற்றி  நிற்றலானும்,  இறைவனை  நினைந்து  பத்தி  செய்தற்குரிய  இந்நேரத்தில்  துயில்  நீத்தெழாத  நீ “இராப் பகல்  பாசம் பரஞ்சோதிக்கு “  என்று கூறியது  எத்துணை  யுண்மையாகுமென்று  கூறி  நகையாடியபடியாம்.  “வைகறைத்  துயிலெழு”  என்பதற்கு  மாறுபட  அக்காலத்து  உறங்குதல்  இரவும்  பகலும்  தூங்கியதாகுமென்பது   கருத்து .

                இவ்வாறு  எழுப்பிய பெண்கள்  கூறக்கேட்டுத்  துயிலுணர்ந்து  எழுந்தவள்  கூறுகின்றாள்.  தோழிகாள்!  நும்  செயல்  இகழத்தக்கது  என்பாள்  “சீசி”  எனவும் ,  இறைவன்  திருப்புகழைப்  பாடுதற்குரிய  தூய்மையுள்ள  நும்  வாயில்  இங்ஙனம்  எள்ளிக்  கூறுதலாகிய  இழிசொற்களும்  உள்ளனவோ வென்பாள்  “இவையுஞ்சிலவோ”  எனவும்  கூறினள் .  இவையும்  என்புழி  உம்மை  இழிவு சிறப்பு  .  “அமளிக்கு  நேசமும்  வைத்தனையோ”  என்னும்  வினாவால் வைத்திருக்கமாட்டா  யென்பது  எம்  உட்கோளாகும் .  ஆதலின்  இவ்வாறு  வினாவியது  இகழ்ந்துரைத்தலாகாது ;  விளையாட்டாகக்  கூறியதாகும்  என்றார்க்கு  விடையாக  “விளையாடியேசுமிடம்  ஈதோ” என்றாளென்க.   இடம்  ஈண்டுக்காலத்தின் மேற்று  .  ஆண்டவன்  திருப்புகழைப்பாடி  உள்ளமுருக  வேண்டிய  இவ்வமயத்தில்  ஒருவரையொருவர்  இகழ்ந்து  கூறி  விளையாடுதல்  தக்கதன்று  என்பது  கருத்து.  இனி  “நாம்  பேசும்போது  எப்போது “ என்பதற்கு  நாம்  பாராட்டிப்பேசுங்காலம்  அதற்குரிய வைகறைப்  பொழுதன்றி   வேறு  எப்பொழுதாகும்  எனக்கூறினார்  எனக்கொண்டு  அதற்கு  மாற்றமாக  நீயிர்  விளையாடி  எள்ளிக்  கூறுங்காலம் இதுதானா  என்றாளெனக்  கூறினுமாம்  . இங்ஙனம்  எழுப்பப்பட்டவள்  கூறினாளாக  , அதற்கு  மாற்றமாக  எழுப்பிய  கன்னியர்  பின்னுங்  கூறுகின்றனர் .  “விண்ணோர்கள்  ஏத்துதற்குத்  தந்தருளக் கூசுமலர்ப்பாதம் “  எனத்  தந்தருள  வென்பதையீண்டும்  இயைக்க .  கூசுதல் =  நாணுதல்  , அஃது  ஈண்டுத்  திருவுள்ளம்  உடன்  படாமையைக் குறிக்கும் .  “பொக்க  மிக்கவர்  பூவு  நீருங்கண்டு,  நக்கு  நிற்பன்  அவர்தமை  நாணியே” என்புழி  நாணுதல்  அப்  பொருட்டாதலறிக.  தேவர்கள்  புண்ணியப்  பயனுகர்வோர்  ஆயினும்  “வாழ்த்துவதும்  வானவர்கள்தாம்  வாழ்வான்” என்றபடி  அவர்  ஏத்துதல்  மேன்  மேலும்  தம்  போகநுகர்ச்சி  கருதி யென்பது   வெளிப்படுதலின்  அவர்க்குத்  தன்  திருவடியைத்  தந்தருள  இறைவனுக்குத்  திருவுள்ளமின்றென்பது  கருத்து .  நல்வினைப்  பயனால்  உயர்ந்த  தேவர்கள்  தன்  அணிமையில்  வந்து பல்கால்  வேண்டவும்  அவர்க்குத்  தந்தருள  உடன்படாத  தன்  திருவடிகளை,  நல்வினை  தீவினைப்பயன்  இரண்டனாலும்  பிணிப்புண்ட  மக்கட்  பிறப்புடைய  சிருமியராகிய  நம்  பொருட்டு  எளிமையில் தந்தருள  நாம்  இருக்கும்  இடத்தில்  வந்து  காட்சியளிக்கும்  வண்மைக் குணமிக்க  ஒளிப்பிழம்பாகவுள்ளவன்  என்பார். “விண்ணோர்க  ளேத்துதற்குக்  கூசு  மலர்ப்பாதம்  தந்தருள  வந்தருளுந்  தேசன்”  என்றார் .  தேவர்கள்  சென்று  பாராட்டியும்  பெறுதற்கரிய  தன் திருவடிகளை  மானுடப்பெண்கள்  எழுதிற்பெற  இறைவன்  வந்தருளினான்  என்னும்  சிறந்த  இக்கருத்தை  அடிப்படையாகக்  கொண்டே  இராமலிங்க  அடிகள், 

ஒருமுடி  மேற்பிறை  வைத்தோய்  அயனரி  யொண்மறைதம்

பெருமுடி  மேலுற  வேண்ட  வராதுனைப்  பித்தனென்ற

மருமுடி  யூரன்  தலமேன்  மறுப்பவும்  வந்ததவன் 

திருமுடி  மேலென்ன  ஆசைகண்  டாய்நின்  றிருவடிக்கே      

என்று  விளக்கிக்  கூறியுள்ளார் . 

                       தேசன்  என்பது  ஒளிப்பிழம்பாக  வுள்ளவன்  என்னும்  பொருளுடையதாகலின் ,  இறைவனது  சொரூப  இலக்கணம்  பற்றியும் , சிவலோகன்  என்பது  தடத்த  இலக்கணம்  பற்றியும்  கூறப்பட்டனவாம்  . ஒளிமயமான  நிலையும்  சிவலோக  நாதனாம்  நிலையும்  நாம்  சென்று  காண்டற்கு  அரியனவாமென்று  திருவுளங்  கொண்டு  இந்நிலவுலகில்  தில்லை  நகர்க்கண்  திருச்சிற்றம்பலம்  என்னுந்  திருக்கோயிலில் எழுந்தருளிக்  காட்சிதரும்   பெருமான்  என்பார்  “தேசன்  சிவலோகன்  தில்லைச் சிற்றம்பலத்து  ளீசன்“ என்றார் .  இங்ஙனம்  அருமையிலெளிய  அழகு  படைத்த சிவபெருமான்  பொருட்டு  மேற்கொள்ளத்தக்க  அன்பு  எத்துணை  யுயர்ந்தது  என்பார்  “ஈசனாற்கு  அன்பு  ஆர் “ எனவும் ,  அவ்வன்பை  மேற்கொள்ளுதற்குரிய  அடிமைகளாகிய  நாம்  எத்தகையோம்  (எள்ளி  நகையாடும்  இயல்பினம்  அல்லேம்)  என்பார்  “யாம்  ஆர்“ எனவுங்  கூறின ரென்க.  அன்பார்  என்புழி  ஆர்  அஃறிணைக்கண்  வந்தது .  திணை  வழுவமைதியாகும் .  இனி  அன்பார்  யாம்  ஆர்  என்பதற்கு  அன்பு நிறைந்த  யாம்  ஆர்  எனக்கொண்டு  பொருள்  கூறலுமாம் .  எழுப்பப்பட்ட  பெண் “சீசி  யிவையுஞ்  சிலவோ  விளையாடி  யேசுமிட  மீதோ” என்றதற்கு  விடையாக  எழுப்பிய  கன்னியர்  இவ்வாறு   கூறினர்  என்பது   வெறுக்கத்தக்க  இழிமொழிகளைக்  கூறும்  இயல்பு இறை  யன்பலீடுபட்ட  நம்மனோர்  பால்  எங்ஙனம்  உண்டாம் ?  உண்டாகாதென்பதாம் . “ஒழுக்க முடையவர்க்  கொல்லாவே  தீய,  வழுக்கியும் வாயாற்  சொலல்  “  என்னும் பொருளுரையும்  ஈண்டு நினைக்கத்தக்கது.

                     ஆண்டவனிடத்து  எனக்கு  அன்புண்டு  என்று  ஒருவன்  வாயளவிற்  கூறுதலினும்  செயலளவில்  மேற்கோடலே  சிறந்ததென்பதும் , இறை  வழிபாடு  செய்தற்குரிய காலத்தை  அது  செய்யாமல்  வேறு  நிகழ்ச்சிகளால்  கழித்தல்  கூடாதென்பதும் , தேவர்க்கும் அரிய இறைவன் அன்பிற்கு எளியனாவன் என்பதும், இறையன்பி லீடுபட்டு   ஒழுகுவோர் நிலை என்றும் இழிந்த தாகாதென்பதும்  பிறவும்  இத் திருப்பாட்டால்  புலப்படுக்கப்பட்ட படியாம் ,

                        இதன்கண்  “விண்ணோர்களேத்துதற்குக்   கூசுமலர்ப் பாதம் “ என்று  திருவடிச்  சிறப்புக்  கூறப்பட்டது, சத்தியை  வியந்ததாகும் .  இது  பற்றிய  விளக்கத்தை  முன்னைத்  திருப்பாட்டிற்  காண்க.

                                    ———————————————————-

பாடல்  3 

முத்தன்ன  வெண்ணகையாய்  முன்வந்  தெதிரெழுந்தென்

               அத்தனா   னந்தன்  அமுதனென்  றள்ளூறித்

தித்திக்கப்   பேசுவாய்   வந்துன்   கடைதிறவாய்

                 பத்துடையீர்   ஈசன்   பழவடியீர்   பாங்குடையீர்

புத்தடியோம்   புன்மைதீர்த்   தாட்கொண்டாற்   பொல்லாதோ

                 எத்தோநின்   அன்புடைமை   எல்லோம்    அறியோமோ

சித்தம்   அழகியார்   பாடாரோ   நஞ்சிவனை

                  இத்தனையும்  வேண்டும்  எமக்கேலோ    ரெம்பாவாய்

கருத்துரை:-   முன்னைத்  திருப்பாட்டில்     இறைவனது   அருமையில்   எளிய   அழகைப்  புலப்படுத்தருளிய   அடிகள்,  இத்திருப்பாட்டில்   அவ்வருமையில்  எளிமை   அன்பு    செய்வார்க்குப்பயன்  படுமுறையைப்  புலப்படுத்தத்  தொடங்கி  முதலில்  மொழியால்  பாராட்டுதற்குரிய  எளிமையை  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை:-   முத்து   அன்ன   வெள்   நகையாய் =  முத்தைப்  போன்ற  வெள்ளிய  பற்களையுடைய   பெண்ணே,

முன் :-     முன்னைக்   காலத்தில் 

முன்  எழுந்து   எதிர்   வந்து  :-  எங்களுக்கு   முன்னரே  அமளியினின்றும்  துயில்  நீத்து  எழுந்து   எம்  எதிரே   வந்து  ,

என்  அத்தன்   ஆனந்தன்    அமுதன்   என்று  :-    எனக்குத்   தந்தை ;   இன்ப   வடிவினன் ;   அழிவற்ற  கடவுள்   என்று .

அள்ளூறித்   தித்திக்கப்   பேசுவாய்  :-  வாயூறியினிக்கப்  பாராட்டியே   பேசுவாய் , 

வந்து  உன்  கடை  திறவாய் :-  இப்பொழுது  எழுந்து  வந்து  உன்   அமளியறையின்   வாயிலையாதல்   திறக்கின்றாயில்லை,  ஈதென்ன?  (என்று  இவ்வாறு  எழுப்பவந்த  பெண்கள்  கூறக்கேட்ட   அப்பெண்  எழுந்து   வந்து  கூறுவாள்)

பத்துடையீர்   ஈசன்   பழ   அடியீர்  பாங்கு  உடையீர் :-  நீவிர்  ஆண்டவனிடத்துப்  பேரன்புடையீர்  ;  இறைவனுக்குப்  பழமையான  அடிமையுடையீர்  ;  எனக்குத்  தோழமையுடையீர் ( அத்தகைய  நீவிர் )

புத்து   அடியோம்   புன்மை   தீர்த்து   ஆட்கொண்டால்    பொல்லாதோ :- 

புதிய  தொண்டுடையேம்   ஆகிய   எம்   குற்றத்தை  நீக்கி  அடிமை  கொண்டால்   அது   தீங்காகுமா? (என்று  இவ்வாறு  எழுப்பப்பட்டவள்  கூறக்கேட்ட எழுப்பிய  பெண்கள்   கூறுவார்கள்); 

நின்  அன்புடைமை   எதுஓ:-   உனது  அன்புடைமை   வேறெவ்   வகையினதோ,

எல்லோம்   அறியோமோ :-  அதனை   யாமெல்லாம்  அறிய  மாட்டேமா

நம்  சிவனை  சித்தம்  அழகியார்  பாடாரோ :-  நம்  சிவபெருமானைத்  தூய  

நன்னெஞ்சுடையார்  புகழ்ந்து  பாடாமலிருப்பாரோ,

எமக்கு  இத்தனையும்  வேண்டும்  :-   நின்னையழைக்க  வந்த   எங்களுக்கு  இவ்வளவும்  வேண்டியதே  என்பது 

விளக்கவுரை :-  எழுப்பப்படும்   பெண்   முன்னைக்  காலங்களில்  தன்னைப் பிறர்   எழுப்புதற்கு   முன்னரே   துயில்   நீத்தெழுந்து  பல்  விளக்கி உடலைத்  தூய்மை  செய்து கொண்டு   திருநீறணிந்து   வெளிப்படுவாள்   என்னுங்   குறிப்புத்   தோன்ற  “முத்தன்ன  வெண்ணகையாய்  “  என்று  விளித்தனர் .  நகை =  பல்  . உவமையாகிய  முத்துக்கு  அடையின்றிப்  பொருளாகிய   நகைக்கு   அடையாகப் பொதுத்தன்மையாகிய  வெண்மை   புணர்க்கப்பட்டது   அறிக .   பல்லின்  தூய்மை   கூறவே  உபலக்கணத்தால்  ஏனை  உடற்பகுதிகளின்   தூய்மையும்   திருநீறணிந்தமையும்   கொள்ளப்படுமென்பது .  முன்  என்பது  காலத்தைக்குறிக்கும்  .  அது   கடந்த   ஆண்டு   மார்கழித்திங்களின்  மேலது .   அதனை   மீண்டும்  ஒரு  முறையோதி  யாம்   எழுதற்கு  முன்னரே   யெனவும்   கொள்ளல்   வேண்டும் .  வந்து   எதிரெழுந்து   என்பது ,  எழுந்து   எதிர்   வந்தென  மாற்றியுரைக்கப்பட்டது   யாங்கள்  இறைவன்  புகழைப்  பாடிக்கொண்டு   நின்   இல்லத்தின்   வாயிலை   அடைதற்கு   முன்னரே  நீ  வாயிலைக்  கடந்து   திருவீதிக்கண்   வந்து  எதிர்ப்படுவை   யென்பார்  “எதிர்  வந்து “  என்றனறென்க  .  வரும்பொழுதே   இறைவன்  புகழையும்   நினக்கு     இனியனாதலையும்   உளங்கனிந்து   வாயில்  நீரூறக்   கேட்போர்   செவிக்கு   இனிமையுண்டாகப்   பாடிக்கொண்டு   வருவாய்   என்பார் .  “என்  அத்தன்  ஆனந்தன்   அமுதன்   என்றள்ளூறித்தித்திக்கப்  பேசுவாய் “   என்றனர் .  

                            எல்லா  வுயிர்களுக்கும்   தந்தையாகவுள்ள   இறைவனைக்குறித்து    அவன்   அன்பர்  பலர்  ஒருங்கு  கூடிப்  பேசுங்கால்  நம்   அத்தன்  என்று   உளப்படுத்துக்   கூறுதலே   இயைபுடையதாகும் .   இத்திருப்பாட்டில்   எழுப்பிய  பெண்கள்  “நம்  சிவனை”  என்று   பின்னர்க்   கூறுதலும்  உணர்க.  அங்ஙனமாகவும்,   என்   அத்தன் என்று  எழுப்பப்பட்டவள்  கூற்றாகக்  கொண்டு  எழுப்பியவர்   கூறியது .   தம்மினும்   சிறப்புரிமை  அவளுக்கு   உண்டென்பது   புலப்படவைத்தற்கென்க .   சார்ந்தார்க்கு   அழிவிலாப்   பேரின்பத்தை   அருளும்   இன்பவடிவின   நாதலின்  இறைவனை  “ஆனந்தன்”  என்றாளென்பது.  இறைவன் இன்பவடிவினனாக   இருந்தே   இன்பத்தை   அருள்பவன்   என்னும்   உண்மையை  “ஆனந்தத்  தேன்  சொரியுங்  குனிப்புடையான்  “   எனவும் ,  இன்பமா  கடலே”  எனவும்  எழுந்த  திருவாக்குகளான்   அறியலாம் .  தந்தையின்  செல்வம்   மக்கட்குரியதென்பது   உலகியலிற்   கண்டது.   அவ்வாறே   இறைவனது  பேரானந்தப்   பெருஞ்செல்வப்  பேற்றுக்கு  உரிமை  தனக்கு  உண்டென்பது   புலப்பட  அத்தன்  என்பதற்கு  அடுத்து “ஆனந்தன் “ என்றாளென்பது .  “அமுதன்”   என்றது  அழிவில்லாதவன்  என்னும்  பொருட்டு  ,   உலகியற்  பொருள்களால்  எய்தும்  இன்பம்  அழிவுடையதாலின்  அன்னவியல்பிற்றன்று  இவ்வின்பம் ;  என்றும்  அழியா  இயல்பிற்று  என்பது  தோன்ற  அடுத்து  “அமுதன்“ என்றாள்  என்பது .  “உவப்பிலாவானந்தமாய  தேனினைச்  சொரிந்து”  என்றதனால்  இவ்வுண்மை  புலனாயவாறறிக .

                           இங்ஙனம் “என்  அத்தன்   ஆனந்தன்   அமுதன்  “  என்று  கூறத்  தொடங்கும்  பொழுதே  அச்  சொற்களின்  இனிமையால்  வாயில்  நீரூறப்  பொருளின்  இனிமையால்  உளம்  இனிக்கப்  பாராட்டுவாய்  என்பார்  “அள்ளூறித்  தித்திக்கப்  பேசுவாய்” என்றனர் . “அள்ளூறித்தித்திக்க”  என்பதைக்  கேட்போர்  மேலும்  ஏற்றியுரைக்க. இனிய  சுவைப்  பொருளை நினைப்பினும்  காண்பினும்   கேட்பினும்  வாயில்  நீரூறி   உள்ளம்  இனிக்கும்  என்பது  உலகியலிலும்  கண்டது .   அது  பேரின்பப்  பொருளாகவுள்ள   இறையனுபவத்தில்  இன்னுஞ்  சிறப்பாகத்  தோன்றுமென்பது,

“நினைத்தொறும்  காண்டொறும்  பேசுந்தோறும்  எப்போதும் 

அனைத்தெலும்   புண்ணெக  வானந்தத்   தேன்சொரியுங்

குனிப்புடையான்  “

என்னுந்   திருவாக்கான்   உணரத்தக்கது   இங்ஙனம்   முன்னைக்  காலத்தில்   மார்கழி   நீராடுதற்கு   யாங்கள்   எழுதற்கு   முன்னரே   துயில்   நீத்தெழுந்து   உடற்றூய்மை   செய்துகொண்டு   எம்   எதிரே வெளிப்போந்து   இறைவன்   திருப்புகழை   வாயார   உளம்   இனிக்கப்   பாடிக்கொண்டுவரும்   இயல்புடைய   நீ ,  இன்று  யாம்  எழுந்து  நின்  அமளியறையின்  அணிமையில்   வந்து  எழுப்பவும்  எழாமலும்  வாயிற்கதவைத்   திறவாமலும்   இருக்கின்றாய்  ஈதென்னை ? என்பார்  “தித்திக்கப்   பேசுவாய்   வந்துன்  கடை   திறவாய்”  என்றனர் .  இவ்வாறு   தன்குறை   கூறக்கேட்ட   பெண்   எழுந்து  வந்து   வாயிலைத்   திறந்து   எழுப்பிய   பெண்களை  நோக்கிக்   கூறுகின்றாள்.  பத்துடையீர்   என்பது   முதலாகப்   பொல்லாதோ என்பது  வரை  அவள்   கூற்றாம்  என்பது .  பத்து  = பத்தி  “பத்திலனேனும்  “  என்புழி  அப்பொருட்டாதல்  காண்க .  இனித்  தொண்டர்க்குரிய  பத்துச்  செயல்களும்   உடையீர்  என்பதுமாம் .  “பத்துக்கொலாம்  அடியார்  செய்கைதானே”  என்பது  தமிழ்மறை  .  இறைவனுக்குத்  தொண்டு  பூண்டு  ஒழுகும்  பரம்பரைக்  குடியிற்  பிறந்தாரும்  ஒருபிறப்பில்  நெடுநாள்  தொண்டு  செய்வாரும்  பழைய  வடியாராவர்.  ஈசன்  என்பது  இடைநிலை  விளக்காக  நின்று  ஈரிடத்தும்  இயையும். பாங்குடையீர்  என்பது  எனக்குத்  தோழமையுடையீர்  என்பதாம் .  இம்மூன்று  விளிகளும்  பின்வரும்  வேண்டுகோட் பயனுக்கு  ஏதுவாதல்  உணர்க .  நீவிரோ  பழவடியீர்; யானோ  புத்தடியேன்.  எனக்குத்  தோழமையுடைய  யீராதலின்  என்பாலுள்ள  பத்தின்மையாகிய  குற்றத்தை  யொழித்தற்குக்  கடமையுடையீர்  என்பது  தோன்ற  “புன்மை  தீர்த்து” என்றாளென்க  “ஆழிவி  னவைனீக்கி   யாறுய்த்தல்”  என்றபடி   நட்டார்க்குற்ற  நவையொழித்தல்  கடனாமென்பது .  “பத்துடையீரீசன்  பழவடியீர்”  என்பது  ஆட்கொள்ளுதற்குரிய  தகுதியைக்  குறிக்கும்.  எனக்குத் தோழமை  யுடையீராகவும்   என்  புன்மை  தீர்த்து,  ஈசன்  பழவடியீராகவும்   பத்துடையீராகவும்  இருத்தலின்  புத்தடியேனாகிய  என்னை  ஆட்கொள்ளுதற்குரியராகவும்  ,  அது  செய்யாமை  யென்னையோ?  தகுதியைப்   பயன்படுத்தல்  தக்கதாகவும்   என்னளவில்  செய்தல்  தீங்கு  என்று ஒழிக்கப்பட்டதோ  என்பாள்  “பொல்லாதோ”  என்றாள்   என்பது  .  ஈண்டுப்  புத்தடியோம்   எனப்  பன்மை   கூறியது  ,  தன்னைப்போன்றார்   பலரையும் உளப்படுத்தற்கென்க.

                      இவ்வாறு  எழுப்பப்பட்டவள்   கூறக்கேட்ட   எழுப்பிய   பெண்கள்   கூறுவர்.   தோழி!   முன்னை  நாளில்  நின்  பத்திமை  எம்மினும்  பன்மடங்கு   முற்பட்டு  நிகழ்வதுண்டு.  இப்பொழுதோ   பிற்பட்டதாக  மேற்கொள்ளுகின்றாய் ;  ஆதலின்  நின்  அன்புடைமையின்   இயல்புதான்  யாதாங்கொல்  என்பார்  “எத்தோ நின்  அன்புடைமை”  எனவும் ,  நின்  மெய்யன்பின்   பெருமையை  யாமெல்லாம்   அறிந்துளேமென்பது   தோன்ற  “எல்லோமறியோமோ “ எனவுங்  கூறினறென்பது .  நெஞ்சிற்கு  அழகு  தூய்மை  யாதலின்  தூய  நெஞ்சுடையார் “சித்தமழகியார் “  என்னப்பட்டனர்  .  மனந் தூயராய்ப்  பத்தி நெறியிற்றலைப்பட்டார்  உரிய  காலத்தில்  இறைவன்  புகழைப்  பாடாமலிரார்.  நின் அன்புடைமையோ  சிறந்தது .  இந்நிலையில்  எம்மினு  முற்பட்டு  இறைவன் புகழ் பாடவேண்டிய  நீ அது  செய்யாமை  குறித்தும் தோழமையுரிமை  கொண்டும்  நின்னை மொழியளவில்  குறை  கூறலானேம்  என்னுங்  குறிப்புப்  புலப்பட  “சித்தமழகியார்  பாடாரோ  நஞ்சிவனை”  யென்றனரென்பது .  பத்திமையில்  எம்மினுஞ்  சிறந்த  நின்னைத்  தோழமையுரிமை  பற்றிக்கூறிய  சிறு  குறை  காரணமாக  “பத்துடையீரீசன் பழவடியீர்  பாங்குடையீர்”  முதலிய  சொற்களாற்  குறிப்பில்  பரிகசித்தனை ;  அன்பு  நெறியில்  வழுவிய  எமக்கு  இப்பரிகாசச்  சொற்கள்  எல்லாம்  பொருத்தமானவைகளே  என்பார்  “இத்தனையும்  வேண்டும்  எமக்கு” என்றாரென்பது  .

“ஒழுக்கம்  உடையவர்க்கு  ஒல்லாவே  தீய

வழுக்கியும்  வாயார்  சொலல்”  என்னும் 

     பொருளுரைப்படி  நல்லன  மொழியும்  நாநலமுடையார்  எக்காரணத்தாலும்  தீயன  மொழிதலாகதென்பது  இத் திருப்பாட்டற்  புலப்படுக்கப்பட்ட  படியாம். 

         இதன்கண்  “அத்தன்   ஆனந்தன்  “  என்புழி  அன்னையுடனாய  அத்தன்  என்பது  பெறப்படும் . “அன்னையு  மத்தனுமாவாயழல்வணா  நீயலையோ”  என்னும்  தமிழ்  மறையும்  கருதத்தக்கது .  இதனால்  சத்தியை  வியந்தது   குறிப்பிற்  பெறப்படும் .  தாயுமானவர்  என்னும்  திருப்பெயரும்   இக்  குறிப்பினதே. 

                                               ——————————————

பாடல் 4 .

ஒண்ணித்  திலநகையாய்  இன்னம்  புலர்ந்தின்றோ

                வண்ணக்  கிளிமொழியா  ரெல்லாம்  வந்தாரோ

எண்ணிக்கொ  டுள்ளவா  சொல்லுகோம்  அவ்வளவும் 

                 கண்ணைத்  துயின்றவமே  காலத்தைப்  போக்காதே

விண்ணுக்  கொருமருந்தை  வேத  விழுப்பொருளைக்

                  கண்ணுக்  கினியானைப்  பாடிக்  கசிந்துள்ளம்

உண்ணெக்கு  நின்றுருக  யாமாட்டோம்  நீயேவந்

                   தெண்ணிக்  குறையில்  துயிலேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-    முன்னைத்  திருப்பாட்டில்  இறைவனது  அருமையில்  எளிய  அழகிலே  மொழியாற்  பாராட்டுதற்குரிய   எளிமையைப்  பெண்மக்கள்  மொழி  மூலம்  புலப்பட  அருளிச்  செய்த   அடிகள்,  இத்திருப்பாட்டில்  நெஞ்சத்தால்  நினைந்து  உருகுதலாகிய  எளிமையை  அவ்வாறே  அருளிச்  செய்கின்றார். 

பதவுரை:-  

ஒள்  நித்திலம்  நகையாய் = ஒளி   பொருந்திய   முத்துப்போன்ற   பற்களையுடைய   பெண்ணே,

இன்னம்  புலர்ந்தின்றோ =  இன்னும்   விடியவில்லையா, (எழுப்பவந்த  பெண்கள்   இவ்வாறு   கூறக்கேட்டு   எழுப்பப்பட்டவள்   படுக்கையிற்   கிடந்தவாறே   மாற்றம்   உரைக்கின்றாள்)

வண்ணம்   கிளிமொழியார்  எல்லாரும்   வந்தாரோ =   அழகிய  கிளியினது   மொழி   போன்ற   மொழியினையுடைய    பெண்கள்   எல்லாரும்   இங்கு   வந்தனரா?; (என்று   இவ்வாறு   கூறக்கேட்டு   எழுப்பவந்தவர்   பின்வருமாறு   கூறுவாராயினர்)

உள்ளவா   எண்ணிக்கொடு   சொல்லுகோம் =  வந்தாரைக்   கணக்கிட்டு  உள்ளவாறு   எண்ணித்   தெரிவிப்போம் ,

அவ் அளவும்  =   கணக்கிட்டுத்   தெரிவிக்கும்   அத்துணை   நேரமளவும்  ,

கண்ணைத்  துயின்று  =  நின்கண்களைத்   துயில்  வித்து , 

காலத்தை  அவமே   போக்காது  =   இறைவன்   புகழைப் பாடுதற்குரிய   காலத்தை   வீணாகக்   கழியாமல் , 

விண்ணுக்கு   ஒரு   மருந்தை  =  தேவர்களுக்கு   ஒப்பற்ற   அமிழ்தமாக   உள்ளவனும் ,  வேத  விழுப்பொருளை   மறையாகமங்களின்  சிறந்த   பொருளாக   உள்ளவனும்   ,

கண்ணுக்கு  இனியானை  =  காண்பவர்கள்   கண்களுக்கு   இனிய   காட்சியளிப்பவனும்   ஆகிய   சிவபெருமானை,

பாடி  =  புகழ்ந்து   பாடி  ,

உள்ளம்   நின்று   உள்  நெக்கு  கசிந்து  உருக  =  நெஞ்சம்   அசைவற்று   நிற்ப  உள்ளே   நெகிழ்ந்து   கசிந்து   உருகுவாயாக (என்று   இவ்வாறு   எழுப்பிய   பெண்கள்   கூறக்கேட்டும்   எழுப்பப்பட்டவள்   படுக்கையினின்றும்  எழாமல்  துயிலும்   நிலையில்   கிடத்தலைக்   கண்டு   பின்னருங்  கூறுவர்)

யாம்  மாட்டோம்  =   வந்தாரைக்   கணக்கிட்டு   எண்ணிக்   கூறுவதற்கு   யாம்   இசையோம்  , 

நீயே  வந்து  =  நீயே  எழுந்து   வந்து  ,

எண்ணி   குறையில்  துயில்  =  கணக்கிட்டெண்ணிக்  குறைவு    காணப்படுமாயின்   மீண்டும்   துயில்வாயாக  என்பது.

விளக்கவுரை :-   மிக்க   தூக்கமுடையாளாய்த்  தன்னை    மறந்து   படுக்கையிற்   கிடக்கும்   ஒருத்தியை  ,  எழுப்ப வந்த  பெண்கள்   பார்க்குங்கால் ,  அவள்   வாயைச்  சிறிது  திறந்து   பற்கள்   வெளிப்படக்கிடந்த   நிலையைக்கண்டு   “ஒண்ணித்திலநகையாய்”   என்று   விளித்தனர்   என்க  .  இதன்  முன்னைத்  திருப்பாட்டில்    கூறப்பட்ட   பெண்ணை   விளிக்குங்கால்  ,  அவள்   பண்டை   நிகழ்ச்சியைக்   குறிக்கொண்டு ,  பல்விளக்கி    நீராடி   உடற்றூய்மையுடையளாம்   இயல்பு   குறித்து   உவமைக்கு   அடையின்றிப்  பொருளுக்கு   அடைபுணர்ந்து   “முத்தன்ன  வெண்ணகையாய்”   என்று   விளித்தனர் .  இதன்கண்   பல்லின்   இயற்கை   நிறம்   காணப்பட்டமையால்   பல்  விளக்குதல்   முதலிய   தூய்மை  யின்மை   தோன்ற   உவமைக்கு   ஒளியுடைமையாகிய   அடையைக்   கூறிப்  பொருளுக்கு   ஏதும்   அடைபுணர்க்காமற்   கூறி   விளித்தனர்   என்க. 

                           புலர்தல்  –  விடிதல் .   இன்னும்   விடியவில்லையோ  என்ற   குறிப்பு   இருணீங்கி     விடியும்   நிலையிலும்   மிக்க   உறக்கத்திற்   கிடைத்தலைப்   புலப்படுப்பதாகும் .   புலர்ந்ததின்று   என்பது   விகாரத்தால்   புலர்ந்தின்று   என்றாயிற்று. ஓகாரம் வினாப்பொருட்டு; எதிர்மறையுமாம். இவ்வாறு கூறிய   அளவில்  படுக்கையிற்   கிடந்தவள்   எழாமல்   கிடந்தவாறே   வந்தவர்களை   நோக்கி   என்னை   எழுப்ப   இத்துணைப்பேர்   வருவோமென்று   சொன்னீர்களே  அத்துணைப்  பெண்களும்   வந்துவிட்டார்களோ   என்பாள்  “எல்லாரும்  வந்தாரோ”   என்றாள்   என்க .  இவ்வினா   மீண்டும்   துயிலுதலின்   விருப்பத்தைப்   புலப்படுத்துவதாகும் . எழுப்பியவர்   பேச்சு   எழுப்பப்பட்டவளுக்குக்   கடுமொழியாக   இருந்தமையால்   அவள்  “என்   தோழிமாராகிய   நும்முள்   இனிமையாகப்   பேசுவாரு  முளரே   அன்னார்   இக்குழுவில்   இலரோ”   என்பாள்    “வண்ணக்கிளிமொழியார் “  என்றாள்   என்பது  .  வண்ணம்   மகளிர்க்கும்   பொருந்துவதாகும்  .  அழகுடையவர்   என்றது  , “இலங்கெழிலளவு   குணமெனவுரைப்பர் “  என்றபடி  நற்குணங்களையும்   புலப்படுத்துங்   குறிப்பாகும்  .  ஆகவே   நற்குணங்களும்   இனியன   மொழிதலுமுடையார்   இக்கூட்டத்திற்   கலந்திலர்   என்பது   வினாவின்  குறிப்பாகும்  .  இவ்வாறு   வினவிய   பெண்ணின்  இயல்பு   உணர்ந்து  அவளுக்குத்   தக்கவாறு   எழுப்பியவர்   விடை   கூறுவாராயினர் . யாம்  முதலில்   எண்ணிக்   கணக்கிட்டுக்  கொண்டு  பின்னர்   நினக்குத்   தெரிவிப்போம்   என்பார் “எண்ணிக்  கொடுள்ளவா  சொல்லுகோம்”  என்றனர்.  . 

                           “   கொண்டு   “  என்னும்   துணைவினை  “கொடு”   என்றாயிற்று.   வரவேண்டியவரெல்லோரும்   குறைவற வந்தனர்   ஆயினும்   வரையறுத்து  வினவும்   நினக்கு   விடையிறுக்க  எண்ணிக்கொண்டு   தெரிவிப்பதே   நலம்   என்று  அவர்   கருதினர்  என்பது   வந்தவர்   தம்மவரை   எண்ணிக்   கணக்கிட்டாலும்   சொல்லுதலில்   தவறின்றாமோ   என்னும்   ஐயந்தோன்று  மாதலின்,  அதனைப்   பரிகரிக்க   உள்ளவா  சொல்லுகோம்   என்றனர்  என்க ., “உள்ளவாறு  “   என்பது  விகாரத்தால்   உள்ளவா  என்றாயிற்று  .  எண்ணிக்கணக்கிட்டுச்  சொல்லும்   அத்துணைக்காலம்   வரையும்   நீ  பொய்யுறக்கங்கொண்டு  இறைவன்  புகழ்   பாடுதற்குரிய  இவ்  அருமைக்  காலத்தைப்  பயனின்றிக்  கழித்தல்  ஆகாதென்பார் ,  “அவ்வுளவுங்   கண்ணைத்   துயின்று   அவமே   காலத்தைப்   போக்காது   “  என்றனர்   என்பது . “கண்ணைத்துயின்று  என்புழித்துயில்வித்து   எனப்  பிறவினையாகக்கோடல் வேண்டும் . பொய்யுறக்கங்  கொண்டு  என்பது  கருத்து. 

                                   அவம்  – வீண்.  “போக்காதே”  என்புழி   ஏகாரம்   அசை  .  போக்காது  என்னும்   எச்சம்  “கசிந்துருக”  என்பதைக்கொண்டு  முடியும் .  அக்காலத்தை   வீணாக்காமல்   செய்யத்தக்கன  என்னை  யென்பதற்கு  விடையாக  இறைவனைப்   பாடியுருக   வேண்டுமென்றனர்.

                                    “ விண்”  ஆகு  பெயர்  .   பாற்கடலில்   தோன்றிய   அமுதம்   தன்னை   உண்டார்க்குச்  சிற்றின்பத்தை  விளைவிப்பதோடு  இறப்பைத்  தடை  செய்யும்  ஆற்றலின்மையும்  உடையது .  இறைவனாகிய  அமிர்தம்  பேரின்பம்  விளைத்தலோடு  மரணமிலாப்  பெருவாழ்வில்  வாழச்செய்யும்  இயல்புடையது. அதனால் “விண்ணுக்கு  ஒரு  மருந்து”  என்றார் . மேலும்  பாற்கடலில்  தோன்றிய  அமிழ்தம்  நஞ்சுடன்   தோன்றிற்றாக,  அந்நஞ்சை   அதன்   குணம்  வெளிப்படாவாறு  தன்னுளடக்கி   இன்பம்   செய்யும்   அமிழ்தமாக  இறைவன்  விளங்குதலின்  “ஒரு  மருந்து” என்றார்  எனினுமாம்.  “அடியாராம்  இமையவர்தங்   கூட்டமுய்ய  அலைகடல்வாய்  நஞ்சுண்ட  அமுதே”  என்பர்   சேக்கிழார்.  மறைகளின்   இதயத்தானத்தில்   விளங்கும்  மந்திரப்   பொருளாவான்   இறைவனே  யென்பது  புலப்பட  “வேதவிழுப்பொருளை”  யென்றார்.

“மும்மறையுள்  நடுமறையின்  முனிவிலெழு  காண்டத்தில்

செம்மைதரு   நடுக்காண்டஞ்  சேர்ந்தவெழு  சங்கிதையில் 

அம்மநடுச்   சங்கிதையின்  ஆதியீ   றொழித்துநடுப்

பொம்மலுற  அமர்மனுவின்  பொருளாவான்  எவன்மைந்த”

என்பதனாலும்   இவ்வுண்மை   தெளிக.  இச்செய்யுளில்  மனுமந்திரம் ;  சிவாயநம;  என்பது .  ஈண்டு  வேதமென்றது  சிவாகமங்களையும்  குறிக்கும்.  “யாம்  வேத  சிவாகமங்களுக்கு  வேறுபாடு  கண்டிலம் ;  வேதமே  சிவாகமம்”  என்னும் பெரியார்  உரையானுமுணர்க.  வேதங்களில்  சிறப்பிடங்களிலும்   சிவாகமங்களில்  யாண்டும்  சிவபரத்துவம்  கூறியிருத்தல்  தெளிவாம் .

              விண்ணுக்கு   ஒரு  மருந்தாகவுள்ள  இறைவன்  மண்ணுலகத்தவர்க்கு  அபர  ஞானமாகிய  நூலறிவானும்  பரஞானமாகிய  அநுபவ  அறிவானும்  உணரத்தக்கவன்   என்பது  புலப்பட  “வேத  விழுப்பொருளை”  என்பதை  அடுத்து  “கண்ணுக் கினியானை”  என்றனர்  என்க.  கண்  அகக்கண்ணும்  புறக்கண்ணுமாகும் .  இறைவன்  திருவுருவத்தைப்  புறக்கண்ணாகிய  முகக்கண்ணாற்  காண்டலினும்  அகக்கண்ணாற்  காண்டல்  சிறந்தது  என்ப.  “முகத்திற்  கண்கொண்டு  காண்கின்ற  மூடர்காள்,  அகத்திற்  கண்கொண்டு  காண்பதே யானந்தம்” என்பது  திருமந்திரம் .  அகப்புறக்  காட்சிகளுக்கு  இனியனாதல்  அன்பானினை  வாரது  உள்ளக்  கமலத்தின்  கண்  அவர் நினைந்த வடிவோடு தோன்றுதலானும் மக்களுருவில் ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்தலானுமாம் .  வேத  விழுப்பொருள்  என்பது  அபார ஞானத்தால்  உணரத்தக்கவன்  என்பதையும்  கண்ணுக்கினியான்  என்பது பரஞானத்தால்  உணரத்தக்கவன்  என்பதையும்  புலப்படுப்பனவாம் . வேத  விழுப்பொருளை  என்பதற்கேற்ப  அப்பெருமானை  என்ற  முதலிய   புகழ்ப்பாடல்களால்  பாடவேண்டுமெனவும் , கண்ணுக் கினியானை  என்றதற்கேற்ப,  கசிந்துள்ளம்  உள்நெக்கு  நின்றுருக  வேண்டுமெனவும்   கூறப்பட்டன.  உள்ளம்   நின்று  உள்நெக்கு  கசிந்து  உருகவென்று   இயைத்துப்  பொருள்  கொள்க.  உள்ளம்  அலையாமல்  நிற்ப  இறைவனை  நினைந்து  உள்ளே  நெகிழ்ந்து  கசிந்து  உருகவேண்டும்  என்பது  கருத்து .  நிற்பவென்பது  நின்று  எனத்  திரிந்து  நின்றது. 

                  முதலில்  உள்ளம்  புறச்செயல்களைப்  பற்றாமல்  அசைவற்று  நிற்றல்  வேண்டுமென்பதும்,  பின்  இறையுருவில்  ஈடுபட்டு  உட்கசிவுண்டாக  நெகிழ்ந்து  உருகவேண்டும்  என்பதும்  புலனாயவாறு  அறிக .  உருகுக  என்பது  உருக  என்றாயிற்று.  உருகு  என்னும்  பகுதியில்  வியங்கோளீறாகிய  அகரம்  தனக்குப்  பற்றுக்கோடாகிய  மொய்யைவிட்டு  இயைந்து  உருக  வென்றாயிற்றென்பது  அகரம்  வியங்கோளீறாக  வரும்  என்பதைத்  தொல்காப்பியச்  சொல்லதிகாரத்து   வினையியல்  29  -ஆம்  சூத்திர  உரையில்   “எழுத்தோத்தினுள்  ‘ ஏவல்  கண்ணிய  வியங்கோட்  கிளவியும்’  (எழு-210) (என  அகரவீற்றுள்  எடுத்தலாற்  பொருந்திய  மெய்யூர்ந்து  அகர  வீறாக  வருதலும் “  என்று  சேனாவரையர்  கூறிய  வுரையானும்  ,  தொல்காப்பியப்  பொருளதிகாரத்து,  “அவளறிவுறுத்துப்  பின்வர  வென்றலும் “ (தொல் – பொருள்  சூ.  114)  என்னும்  சூத்திரப்  பகுதியிலுள்ள  “பின்வர”  என்றதற்குப்  “பின்னர்  வருக “  என்று  நச்சினார்க்கினியர்  கூறியவுரையானும்  அறிக.

              இவ்வாறு  எழுப்பிய  பெண்கள்  கூறக்  கேட்டும்  எழுப்பப்பட்டவள்  படுக்கையினின்றும்  எழாமல்  கிடத்தலைக்  கண்டு , முன்னர்க்கூறியபடி  வந்தவர்கள்  யெண்ணிக்கணக்கிடும்  வேலையை  யாங்கள்  செய்யமாட்டோம்  என்பார்  “யாமாட்டோம்” என்றனர் .  இறைவன்  புகழ்பாடும்  இக்காலத்தில்  யாம்  கணக்கிடும்  வேலையில்  தலைப்படுங்கால்  அத்துணை  நேரமும்  வீணாகாமல்  நீ  உறக்கத்தினின்று  எழுந்து  இறைவன்  புகழைப்பாடி  உருகவேண்டும்  என்று  கூறினாராக ,  கிடந்தவள்  அவ்வாறு  செய்யாமல்  மீண்டும்  உறங்கும்  நிலையிற்  கிடத்தலை  அறிந்து  இந்நற்காலத்தை  யாமும்  வீணாக்குதல்  கூடாதென்று  கருதி  யாம்  எண்ணும்  வேலையைச்  செய்ய  மாட்டோம்  ,  நீ  இறை  புகழ்  பாடாவிட்டாலும்  எண்ணிக்  கணக்கிடும்  வேலையையாவது  செய்யவேண்டும்  என்பார்  “யாமாட்டோம்  நீயே வந்து எண்ணி”  எனவும்; எண்ணுங்கால் வரவேண்டிய  பெண்களுள்   குறைவு  நேருமாயின்    பின்  நீ விரும்பியபடியே  உறங்கலாமென்பார்  , “குறையில்  துயில்”  எனவுங்  கூறினர் .  குறை  நேர்ந்தால்  மீண்டும்  உறங்குவாயாக  வென்று  கூறிய  நயம்  உணர்ந்து  இன்புறத்தக்கது.

                 இனி,  இத்  திருப்பாட்டிற்கு  எண்ணிக்கொடுள்ளவா  சொல்லுகோம் ;  அத்துணைக்காலம்  வரை  சிவபெருமானைப் பாடி  உள்ளம்  கசிந்துருக  எமக்கு  இயலாதாகும்  .  ஆதலின்  கண்ணைத்  துயின்று  அவமே  காலத்தைப்  போக்காமல்  நீயே  எழுந்து  வந்து  எண்ணிக்  குறையில்  துயில் ,  என  இயைத்துப்  பொருள்  கோடலும்  ஒன்று .  இவ்வாறு  கொள்ளுங்கால்  உருக  என்பது  எச்சமாய்  நின்று  யாம்மாட்டோம்  என்பதைக்  கொண்டு  முடியும்  . 

                   இதன்கண்   “கண்ணுக்  கினியானை “  என்றதனால்  இறைவனுக்குத்  திருமேனி  யுண்டென்பது  புலப்படுக்கப்  படுதலின்  , அத்  திருவுருவுக்கு  இடனாகிய  சத்தியை  வியந்தது  பெறப்படும் . “ காயமோ  மாயையன்று காண்பது  சத்தி தன்னால்”  என்பது  சிவஞானசத்தி . 

பாடல் 5.

மாலறியா   நான்முகனுங்   காணா   மலையினைநாம்

             போலறிவோ   மென்றுள்ள   பொக்கங்க   ளேபேசும்

பாலூறு   தேன்வாய்ப்   படிறீ   கடைதிறவாய்

              ஞாலமே   விண்ணே   பிறவே   யறிவரியான்

கோலமும்   நம்மையாட்   கொண்டருளிக்   கோதாட்டுஞ்

                சீலமும்   பாடிச்  சிவனே   சிவனேயென்

றோல   மிடினும்   உணரா   யுணராய்காண்

                 ஏலக்   குழலி   பரிசேலோ   ரெம்பாவாய்

கருத்துரை:-   முன்னைத்   திருப்பாட்டில்   இறைவனது  அருமையில்  எளிய  அழகில்  ,  நெஞ்சத்தால்  நினைந்து  உருகுதலாகிய  எளிமையைப்   பெண்மக்கள்  வாயிலாகப்  புலப்படுத்திருளிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அப் பெருமான்  திருமேனியில்   தம்  கண்கள்  ஈடுபட்டு  இன்புறும்  எளிமையை  அவ்வாறே  அருளிச்செய்தனர்.

பதவுரை: –   மால்  அறியா  நான்முகனும்   காணா  மலையினை

திருமாலால்  அறியப்படாத  அடியினையும்  பிரமனால்  காணப்படாத  முடியினையுமுடைய  மலையுருவாய்  நின்ற  இறைவனை ,

நாம் அறிவோம்   என்று  உள்ள  பொக்கங்களே =  நாம்  உணர்வோம்  என்று  இவ்வாறு  உளவாகிய  பொய்களையே, 

ஊறு  பால்  தேன்போல்  பேசும்  வாய்  படிறீ =  சுரக்கின்ற  பாலையும்  தேனையும்  போல்  இனிமை  தோன்றப்  பேசும்  வாயினையுடைய  வஞ்சகி, 

கடை  திறவாய் =  கடைவாயிலைத்  திறப்பாயாக,

ஞாலமே  விண்ணே  பிறவே  அறிவு  அரியான் =  நிலவுலகத்துள்ளார்   வானுலகத்துள்ளார்   பிறவுலகத்துள்ளார்   ஆகிய   யாரானும்   அறிதற்கரிய   அப்பெருமானுடைய,

கோலமும் = திருவுருவத்தையும் .

நம்மை  ஆட்கொண்டருளிக்  கோதாட்டும்  சீலமும்  பாடி =   எளியேமாகிய  நம்மையும்  ஆளாகக்  கொண்டருளிச்  சீராட்டும்  அருட்  குணத்தையும்  புகழ்ந்து  பாடி.

சிவனே  சிவனே  என்று  ஓலம்  இடினும் =  சிவபெருமானே  சிவபெருமானே  யென்று  ஓலமிட்டுக்  கூவியும் ,

உணராய்  உணராய்  =  அறிந்திலை;  துயில்  நீத் தெழுந்தாயும்  இல்லை,

ஏலம்  குழலி  பரிசு =  மயிர்ச்சாந்தணிந்த  கூந்தலையுடைய  நின்  தன்மை  என்னே!  என்பது .

விளக்கவுரை :-  “பாதாள  மேழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர்

போதார்  புனைமுடியும்  எல்லாப்  பொருண்முடிவே”

என்னும்படி  ஒளிமலையாக  வெளிப்பட்ட  இறைவனுடைய  அடியையும்  முடியையும்  முறையே  திருமால்  விலங்குருக்கொண்டு  நிலம்  அகழ்ந்தும்,  நான்முகன்  பறவையுருக்கொண்டு  விண்ணிற்  பறந்து  சென்றும்  அறிய  வியலாமல்  வலியிழந்து  நின்றனரென்பது  புராணக்கதை.   இந்  நிகழ்ச்சி  திருவண்ணாமலையைப்  பற்றியதென்ப   இஃது  இறைவனது  பரம்பொருட்டன்மையைப்  புலப்படுப்பதாகும் .  இனி  மயக்கவுணர்வுடையோரால்  அறியப்படாதவன்  என்பதும் , மனத்தை  ஒருமுகப்படுத்தாமல்  பல  முகமாகச்  செலவிடுவோரால்  காணப்படாதவன்  என்பதும்  ஆகிய  குறிப்புப் பொருள்  தோன்ற .  “மாலறியா  நான்முகனுங்காணா  மலையினை”  யென்றாரெனினுமாம். .  மலையாக  வெளிப்பட்டும்  அறிந்திலர்  என்பது  ஒரு  நயம் .

              தேவருட்  சிறந்த  திருமால்  பிரமன்  இவர்களால்  அறிய  இயலாத  இறைவனை  நாம்  அறிவோமென்று  எழுப்பப்பட்டவள்  கூறியது,  விளையாட்டாகக்  கூறிய  பொய்யுரையாகும்.  இன்னோரன்ன  பொய்யுரைகளை  அவள்  பேசும்போது  சொற்கள்  இனியனவாக  இருந்தன  வென்பார்,  “பாலூரு  தேன்வாய் “  என்றனர் .  ஊறுதலைப் பாலுக்கு  ஏற்றுக .  “போலறிவோம்”  என்புழியுள்ள “போல்”  என்பதை  “பாலூறு  தேன் “  என்பதனோடு  இயைத்துத்  தேன்போல்  பேசும்  வாய்  எனக்கொண்டு  பொருள்  கொள்க ;  அன்றி  ஆண்டுப்போல்  என்பதை  அசையாக்கி,  ஈண்டுப்  போல்  என்னும்  உவமவுருவை  விரித்துக்  கோடலுமாம்.  சொல்லில்  இனிமையும்  பொருளில்  பொய்மையுந்  தோன்றக் கூறுதல்  வஞ்சகர்  இயல்பாதலின் , “படிறீ” என  விளிக்கப்பட்டாள்  என்பது . இறைவனை  நாம்  அறிவோம்  என்று  வாயளவில்  பொய்யுரை  கூறிவிட்டு  இறைவன்  புகழ்  பாடுதற்குரிய  இக்காலத்தில்  யாம்  வந்து  அழைக்கவும்  எழாமல்  துயில்கின்றனை;  இனியாவது  உன் கட்கடையைத்  திறந்து  பார்த்து  வாயிற்கடையினையாவது  திறப்பாயாக  வென்பார்  “கடைதிறவாய்”  என்றனர் . 

                     அவனருளே  கண்ணாகக்  காணினல்லால்  இந்நிலவுலகத்தவர்  ஆயினும்   விண்ணுலகத்தவராயினும்   ஏனையுலகங்களில்  உள்ளவராயினும்  யாம்  காண்போம்  என்று  தம்  வன்மையால்  முயலின்  காண்டற்கு  அரியனாவான்  என்பது  தோன்ற  “ஞாலமே  விண்ணே  பிறவே  யறிவரியான்”  என்றனர் .  ஏகாரங்கள்  எண்ணுப்பொருளன .  அப்பெருமான்  மாட்டு  அன்பு  செய்தற்கு  உரிய  சாதனம்  அவன்  திருமேனியைக்கண்டு  இன்புறுதலும்  அவன்  அளப்பரும்   அருட்குணத்தில்   ஈடுபடுதலுமாம்  என்பார், “கோலமும்  நம்மையாட்கொண்டருளிக்  கோதாட்டுஞ்சீலமும்  பாடி “ என்றார்.  இறைவனுக்குத்  திருமேனி  உருவம்  அருவம்  அருவுருவம்  என  முத்திறப்படும்  என்ப.  இதனை

உருமேனி  தரித்துக்  கொண்ட  தென்றலும்  உருவி  றந்த

அருமேனி  யதுவுங்  கண்டோம்  அருவுரு  வான  போது

திருமேனி   யுபயம்  பெற்றோஞ்  செப்பிய  மூன்று  நந்தங்

கருமேனி  கழிக்க  வந்த  கருணையின்  வடிவுதானே”

என்னும்  சிவஞானத்தித்  திருவிருத்தத்தாலும்    உணர்க.  இம்மூன்றனுள்  உருவ  வழிபாடே  நமக்கு  இயைந்த தென்பார்,  “கோலமும்”  எனவும் ,  அப் பெருமானுடைய  அளப்பரும்  அருட்குணங்களுள்  பெண்மக்களாகிய  நம்மை  அடிமைகொண்டு  நம் குற்றத்தை  யொழித்துச்  சீராட்டுங் குணமே  நம்  அநுபவத்தால்  அறியத்தக்க தென்பார்  “நம்மை  ஆட்கொண்டருளிக்  கோதாட்டுஞ் சீலமும் “  எனவுங்  கூறினர்  என்க.  முதலில்  கண்களுக்கு  இனிய  திருமேனியின்  பொலிவில்  இன்புறுதலும் ,  பின்  கரணங்களுக்கு  இனிய  அருட்  குணங்களில்  ஈடுபடுதலும்  இறைவனது  அருமையில்  எளிய  அழகின்  பயனாக  நிகழும்  என்பது  கருத்து. 

                   இவ்வாறு  அப் பெருமானுடைய  திருக்கோலத்தையும்  அருட்  செயலாகிய  சீலத்தையும்  புகழ்ந்து  பாடிச்  சிவபெருமானே  சிவபெருமானே  எம்மைக்  காத்தருள்க  என்று  அபயம்  வேண்டுங்  குறிப்பு  மொழியாற்  கூவி  யழைத்தும்  என்பார், “ சிவனே  சிவனே  யென்றோலமிடினும் “  என்றனர் .         ஓலம் = அபயம்  வேண்டிக்  கூவும்  குறிப்பு  மொழி .  யாம்  சிவபெருமானை  வேண்டி  ஓலமிட்டுக்  கூவியும்  அறிந்திலை  என்பார் “உணராய்”  எனவும் ;  இறைவன்  திருப்பெயர்ப்  பெருமையை   யுணராமையாகிய  அவ்வளவினன்றி    எங்கள்  பேரொலி  கேட்டும்  துயில்  நீத்தனையோ  வெனின்  அதுவுமின்றென்பார்  பின்னும்  “உணராய்காண்”  எனவுங்கூறினர் . 

காண் = முன்னிலையசை .  ஏலம் = மயிர்ச்சாந்து ; கூந்தற்கிடும்  வாசனைச் சாந்து .  இஃது  அவள்  தன்னை  அலங்கரித்துக் கொண்டு  கிடத்தற்கு  உபலக்கணம் .  கூந்தற்கு  மயிர்ச்சாந்து  பூசுதல்  முதலியவற்றால்  தன்னை  அலங்கரித்துக் கொண்டு  தூங்குகின்ற  நின்  தன்மை  யிருந்தவாறு  என்னேயென்பார்  “ஏலக்குழலி  பரிசு”  என்றனர் .  யாரானும்  காண்டற்கரிய  இறைவன்  நமக்கு  இரங்கி  எழுந்தருளியிருக்கும்  திருமேனியை  அலங்கரித்துக்  கண்குளிர  மனங்குளிரக்  கண்டு  இன்புறாமல்  புழுக்கூடாகிய  இவ்வுடலை  யலங்கரித்து  இன்புறும்  நின்  நிலை  இரங்கத்தக்கது  என்னுங்  கருத்தால்  “ஏலக்குழலி”  எனச்  சுட்டுவாராயினர் . 

                 இதன்கண் “ ஞாலமே  விண்ணே  பிறவே  யறிவரியான்” என்றதனால்  இறைவனது  சொரூபநிலையும்  , “கோலம்”  என்றதனால்  தடத்த  நிலையும்  பெறப்படுதலின்  ,  அக்கோலங்கோடற்கு  இடனாகிய  சத்தியை  வியந்தது  குறிப்பிற்  புலனாதல்  அறிக .  சிவன்  உருக்கோடற்குச்  சத்தி  காரணம்  யென்பதை  “காயமோ  மாயையன்று  காண்பது  சத்தி  தன்னால் “  என்னுஞ்  சிவநெறிப்  பனுவலானுந்  தெளிக. 

பாடல்  6.

மானே  நீ  நென்னலை  நாளைவந்  துங்களை

              நானே  யெழுப்புவன்  என்றலும்  நாணாமே

போன  திசைபகராய்  இன்னம்  புலர்ந்தின்றோ

               வானே  நிலனே  பிறவே  யறிவரியான்

தானேவந்  தெம்மைத்  தலையளித்தாட்  கொண்டருளும் 

                வான்வார்  கழல்பாடி  வந்தோர்க்குன்   வாய்திறவாய்

ஊனே   யுருகாய்  உனக்கே  யுறுமெமக்கும் 

                 ஏனோர்க்குந்  தலைகோனைப்  பாடேலோ  ரெம்பாவாய் .

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டுக்களில்  இறைவனது  அருமையில்  எளிய  அழகில் ,  முறையே  மொழி  மனம்  செயல்களுக்கு  எளியனாதலைப்  புலப்படுத்திருளிய  அடிகள், இத்திருப்பாட்டில்  அப்பெருமான்  முக்கரணங்களாலும்  தன்னை  எளிமையில்  வழிபாடு  செய்யும்  மெய்யன்பரை  வலிய  வந்து  அடிமை  கொண்டு  அன்னார்க்குத்தலையளி  புரிவன்  என்பதைப்  புலப்படுத்தருளுகின்றார். 

பதவுரை:-  மானே  நீ  நென்னல் =  மருண்ட  நோக்கத்தால்  மான்  போன்றவளே  நீ  நேற்று  ,

நாளை  நானே  வந்து  உங்களை  எழுப்புவன் =   நாளை  நீயிர்  எழுதற்கு  முன்னரே  யானே  எழுந்து  வந்து  உம்மை  எழுப்புவேன் , 

என்றலுமே  =   என்று  சொன்ன  அளவிலே (போய்    விட்டாய் ), 

நாணாமே  போன  திசை  பகராய் =  அவ்வாறு  நாணமின்றிப்  போன  திசையைச்  சொல்லுவாயாக, 

இன்னம்  புலர்ந்தின்றோ =  இன்னும்  இருள்  விடியலில்லையா?, 

வானே  நிலனே  பிறவே  அறிவரியான்  =   வானுலகத்தவரும்  மண்ணுலகத்தவரும்  பிறவுலகத்தினரும்  ஆகிய  எவரானும்  அறிதற்கு  அரியவனாகிய  சிவபெருமான் .

தானே  வந்து  =  தானே  வலிய  நம்பால்  வந்து ,

தலையளித்து  எம்மை  ஆட்கொண்டருளும்  =  தலையளிசெய்து  நம்மை  அடிமை  கொண்டருளுதற்குரிய, 

வான்வார்  கழல்  பாடி  வந்தோர்க்கு  =  அழகிய  நெடிய  வீரக்  கழலணிந்த  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடி  வந்தவர்களாகிய எம்பொருட்டு 

உன்  வாய்  திறவாய் =  உன்  வாயைத்  திறக்கின்றாயல்லை  ,

ஊன்  உருகாய்  =  உடல்  உருகப்  பெறுகின்றாயுமல்லை  ,

உனக்கே  உறும்  =  இந்நிலை  உனக்கே  பொருந்துவதாகும்  ,

எமக்கும்  ஏனோர்க்கும்  தம் கோனைப்பாடு  =  எங்களுக்கும்  மற்றெல்லோர்க்கும்  தலைவனாகிய  அப்பெருமானைப்  பாடுவாயாக  என்பது .   

விளக்கவுரை :-  மான்  –  உவம  ஆகு  பெயர்; பெண்ணை  யுணர்த்திற்று .  கன்னியரெல்லோரும்  முன்னை  நாளில்  ஒருங்கே    கூடிப் பாவை  நோன்பு குறித்து   விடியுமுன்  நீராடப்போதல்  பற்றிச்  சூழ்ந்த  பொழுது  இப்பொழுது  எழுப்பப்படும்  பெண்  யானே  விடியுமுன்  எழுந்து  வந்து  நும்  எல்லோரையும்  எழுப்புவேன்  என்று  சொல்லிவிட்டுப்போய்ப்  பின்  அதனை  மறந்து  மற்றெல்லோரும்  தன்  கடைவாயிலில்  வந்து  இறைவன்  புகழ்  பாடுதலைப்  படுக்கையிற்  கிடந்தவாறே  அறிந்து  நாணத்தால்  அஞ்சி  நோக்கினளாதலின், அக்குறிப்பறிந்த  மகளிர்  மருட்சி  நோக்குக்  குறித்து,  “மானே”  யென்று  அழைப்பாராயினர் .  சமணர்  வஞ்சகச்  சூழ்ச்சியால்  மனம்  வருந்தியிருந்த  மங்கையர்க்கரசியாரை  நோக்கி  அக்குறிப்பை  யுணர்ந்த  திருஞானசம்பந்தர்  “மானி  னேர்விழிமாதராய்”  என்று  அழைத்ததும்   ஈண்டுக்  கருதத்தக்கது .   நென்னல்  –  நேற்று.  அஃது ,  “என்றலுமே”  என்பதோடு  இயையும் .  ஐ  –  சாரியை.  நாளை  நானே  வந்து  எனக்கூட்டுக.  எழுப்புவன்  என்று  சொல்லிய  பின் ,  அச்சொல்லும்  நீயும்  போனதிசை  எம்மால்  அறிய  முடியவில்லை  யென்றது ,  சொன்னபின்  இந்நிகழ்ச்சியிற்  சிறிதும்  ஈடுபட்டிலை  யென்பது  பற்றி .   இறைவன்  புகழ்  பாடி  இறைவியின்  நோன்பிற்  கலந்துகொள்ள  முதலில்  வருவதாகச்  சொல்லியபடி  நடந்து  கொள்வது இன்றியமையாததாகவும்  அதனைப்  புறக்கணித்து  மறந்துவிட்டனையென்பார்  “நாணமே  போனதிசை  பகராய்” என்றனர் .        “என்றலும்  நாணமே”  என்பதும்  பாடம் . இப்பொழுது  நின்பக்கலில்  வந்து இறைவன்  புகழைப்பாடியும்  எழவில்லை .  இந் நிகழ்ச்சியில்  இத்துணைப்  புறக்கணிப்பிருப்பினும்,  இயல்பாகத்  துயில்  நீத்தெழ  வேண்டிய  காலம்  வந்தும் உணர்ந்திலை  யென்பார்  “இன்னம்  புலர்ந்தின்றோ”  என்றனர் . 

               இதன்  முன்னைத் திருப்பாட்டில்  “ஞாலமே  விண்ணே  பிறவேயறிவரியான்”  எனவும்,  இத்திருப்பாட்டில்  “வானே  நிலனே  பிறவே  யறிவரியான்”  எனவும்  கூறியவற்றின்  பொருளொன்றேயாயினும்,  அத்  திருப்பாட்டில்  இறைவன்  திருமேனி தரித்துக்கொண்டு  எழுந்தருளிக்  காட்சியளித்து  இன்புறுத்தியதற்கு  இடனாதல்  பற்றி  ஞாலத்தை  முதற்கண்ணும்,  இத்திருப்பாட்டில்  வானுலகத்திற்கும்  அப்பாலுள்ள  சிவலோகத்திலிருந்து  வானுலகத்துள்ள  தேவர்க்கும்  அரியனாய்  ஏழைகளாகிய  தம்மை  யாட்கொள்ள  வருதற்கு  வான்வழி  இடனாதல்  பற்றி  வானை  முதற்கண்ணும்  கூறினாரென்பது .  எங்கும்  நிறைபொருளாகிய  இறைவனுக்கு  ஓரிடமும்  அவ்விடம்  பெயர்ந்து  பிறிதோரிடத்தை  அடைதலுமாகிய  நிகழ்ச்சிகள்  புராண  முதலியவற்றிற்  கேட்கப்பட்டமையாலும்  ,  பத்திமை  மிகுதியாலும்  அக்கன்னியரால்  மேற்கொள்ளப்பட்டன வென்பது. 

                      அரியதவம்  புரிந்து  அறிதற்கரிய  இறைவனை  அடைதற்குரிய  தவ  வன்மை  இல்லாத  நம்மாட்டுப்  பேரருள்  காரணமாகத்  தானே    வந்ததோடு  சிறந்த  கருணைக்கு  நம்மை  இடனாக்கி  ஆளாக  ஏற்றுக்கொண்டருளினன்  என்பார், “தானே வந்தெம்மைத் தலையளித்தாட்  கொண்டருளும்  “  எனவும்,  அங்ஙனம்  நம்மை  ஆட்கொண்டருளுதற்குரிய  சிறந்த  கருவி  அப்பெருமான்  திருவடியே  யென்பார்  “ஆட்கொண்டருளும்……கழல்”  எனவுங் கூறினர்.  அவ்விறைவன்  திருவடி  தம்  நெஞ்சத்தைக்  கவர்ந்தது பற்றியும்  தமக்குக்  கேடு  வாராது  பாதுகாப்பது  பற்றியும்  முறையே  அழகும்  வீரமும்  அமைந்தன வென்பது   தோன்ற  “வான்வார்கழல்”  என்றனர் .  வான்  –  அழகு .  கழல்  – ஆகுபெயர்  உலகியற்  செய்தி  குறித்து  நின்னோடு  பேச வந்தேமாயின் , நீ  பொருட்படுத்தாமல்  ஏதும்  பேசாதிருக்கலாம்;  எல்லாம்  வல்ல  ஆண்டவன்  எளியேமாகிய     நம் பொருட்டு  இரக்கமுற்று  வலிய வந்து   ஆட்கொண்ட  திறத்தைக்  குறித்து  அப்பெருமான்  புகழை  மனங்குளிர்ந்து  பாடிவந்த  எம்மோடு  பேசுவதற்கு  வாய் திறவாமலிருத்தல்  தக்கதோ  என்பார்,  “ கழல்பாடி  வந்தோர்க்குன்  வாய்திறவாய்” என்றனர் .  திறவாய்  என்பது  திறவாமலிருக்கின்றாய்  என்னும்  பொருட்டு .  ஒருவாறு  இறைபுகழைக்கேட்டு  மெளன  நிலையில்  நினைந்து  மனம்  உருகுதலால்  பேச  நாவெழா மலிருக்கின்றனையோ  வென்றால் , “பத்தியால்  நெஞ்சுருகப்  பெற்றார்க்கு  உடலுருகிக்  கண்ணீரும் வெளிப்படுமாதலின் ,  அவ்வாறில்லாமையால்  அதுவுமில்லை  யென்பார், “ஊனேயுருகாய்”  என்றனர் .  இறைவனை  நெஞ்சம்  நினைந்துருகுங்கால்  உடலுங் குழைந்துருகுமென்பதை, “புன்புலால் யாக்கை  புரைபுரை கனியப் பொன்னெடுங்  கோயிலாப்  புகுந்தென்,  என்பெலா முருக்கி “ யென  அடிகள் பிறிதோரிடத்துத்  தம்  அநுபவநிலை  கூறியதனால்  அறிக. 

                   இவ்வாறு  நாளைவந்துங்களை  நானே  எழுப்புவன்  என்ற  சொல்லைக்  கடிதின்  மறத்தலும் ,  இறைவன்  புகழ்பாடி  வந்த  எம்மைப்  புறக்கணித்து  வாய்திறந்து  பேசாமலிருத்தலும்  , நெஞ்சம்  உருகி  உடல்  குழையாமலிருத்தலும்    ஆகிய  இந்நிலை  அன்புடையார்  பிறரிடத்துக்  காண்டற்கரியது ; நினக்கே  பொருந்துவதாகும்  என்பார், “உனக்கே  யுறும் “ என்றனர் .  ஏகாரம்  பிரிநிலை;  தேற்றமுமாம் .  இனியாவது  படுக்கையினின்றும்  எழுந்து  நமக்கும்  பிறர்க்கும்  தலைவனாகிய  இறைவனை  எம்மோடு  சேர்ந்து  பாடுவாயாக  என்பார், “எமக்கும்  ஏனோர்க்குந்  தங்கோனைப்பாடு” என்றனர் .  தங்கோன்  என்பது  தலைவன்  என்னும்  பொருட்டு  பாடுக  என்புழி  வியங்கோளீறு  தொக்கது ; பின்வருவனவற்றிற்கும்  ஒக்கும் . 

                இதன்கண்    “வான்வார்கழல்பாடி “  என்றதனால்  திருவடியாற்  குறிக்கப்படும்  சத்தியை  வியந்தது  பெறப்படும் .  “ஆதியும்  அந்தமும் “  என்னும்  திருப்பாட்டின்  இறுதியில்  இதனைப்பற்றிய  குறிப்பைக்  காண்க .

பாடல் 7.

அன்னே  இவையுஞ்  சிலவோ  பலவமரர்

             உன்னற்  கரியான்  ஒருவன்  இருஞ்சீரான்

சின்னங்கள்  கேட்பச்  சிவனென்றே  வாய்திறப்பாய்

             தென்னாவென்  னாமுன்னந்  தீசேர்  மெழுகொப்பாய்

என்னானை  யென்னரையன்  இன்னமுதென்  றெல்லோமுஞ்

              சொன்னோங்கேள்  வெவ்வேறா  யின்னந்  துயிலுதியோ

வன்னெ  ஞ்சப்  பேதையர்போல்  வாளா  கிடத்தியால்

              என்னே  துயிலின்  பரிசேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்புடையார்  செய்யும்  எளிய  வழிபாட்டிற்கிரங்கி  வலிய வந்து  தலையளிபுரியும்  இறைவன்  இயல்பைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அப்பெருமான்மாட்டுச்  செய்யப்படும்  தலையன்பின்  திறத்தை  வெளிப்படுத்து  அருளுகின்றார் . 

பதவுரை:-   அன்னே  = தாயே, 

இவையும்  சிலவோ  =  நின்  செயல்களுள்  இவைகளும்  சிலவுளவோ.

பல  அமரர்  உன்னற்கு  அரியான்  =  பல  தேவர்களாலும்  நினைத்தற்கும்  அரியவனும் , 

ஒருவன்  =  ஒப்பற்றவனும் ,

இரும்  சீரான்  =  மிக்க  பெருமையுடையவனும்  ஆகிய  இறைவனைப்  பற்றிய, 

சின்னங்கள் கேட்ப  சிவன்  என்றே  வாய்திறப்பாய் =

எக்காளம்  சங்கு  முதலியவற்றின்    ஒலிகளைக்கேட்ட  அளவில்  சிவ  சிவ  வென்றே  சொல்லி  வாயைத்திறப்பாய்  ,

தென்னா  என்னா  முன்னம்  தீ  சேர்  மெழுகு  ஒப்பாய் =

தென்னவனே  என்று  பிறர்  சொல்லும்முன்  அனலிடைப்  பட்ட  மெழுகுபோல்  உருகுவாய் ,(இப்பொழுதோ)

என்னானை  என் அரையன்  இன் அமுது  என்று  எல்லோரும்  வெவ்வேறாய்ச்  சொன்னோம்  கேள்  =

எனக்குத்  தந்தை  எனக்கு  அரசன்  இனிய  அழிழ்தம்  என்று  யாமெல்லோரும்  தனித்  தனியாகவும்  கூறினோம்   அவற்றைக்  கேட்பாய்,

இன்னம்  துயிலுதியோ =

கேட்டும்  இன்னும்  உறங்குகின்றாயோ?,

வல் நெஞ்சம்  பேதையர்போல்  வாளா  கிடத்தி   =

இறைவன்  பொருட்டுக்  குழைதலில்லாத  நெஞ்சம்  படைத்த  அறிவிலார்  போலச்  சும்மா  கிடக்கின்றாய்

துயிலின்  பரிசு  என்னே =

உறக்கத்தின்  தன்மைதான்  எத்தகையது? என்பது.

விளக்கவுரை :-  எழுப்பியவர்  ஆண்டால்  மூத்தவராகவும்  எழுப்பப்பட்டவள்  இளையவளாகவும்  குறிக்கப்படுதலின்  “அன்னே”  எனச்  செல்வ  மொழியால்  அழைப்பார்  ஆயினர் .  “இவையுஞ்  சிலவோ”  என்புழி “இவை”  யென்பது  அன்பினால்  இறைவனிடத்து  ஈடுபடுதலும்  அன்பிலள்போலக்  கிடத்தலுமாகிய  ஒன்றுக்கு  ஒன்று  முரணான  செயல்களைச்  சுட்டும் .  இப்படியும்  சில  செயல்கள்  நின்பாலுள்ளனவோ  என்பது  குறிப்பு .  “பல  அமரரும் “  என்புழி  முற்றும்மையும்  உன்னற்கும்  என்புழி  எச்சவும்மையும்  செய்யுள்  விகாரத்தாற்றொக்கன.  நினைப்பிற்கு  அரியனாங்கால்  சார்தற்கு  அரியன்  என்பது  கூறாமலே  தெளியப்படும் .  “ஓப்புடையனல்லன்  ஒருவமனில்லி”  யாதலின்  ஒருவன்  என்றார்.  நல்வினைப்  பயனே  துய்க்கும்  தேவர்  பலர்க்கும்  நினைத்தற்கு  அரியனாதலும்,  ஈடும்  எடுப்புமில்லாமையும்  பெருமைக்குரிய  குணங்களாயினும்  அத்துணைப்  பெரியோன்  நம்மைப்  போன்ற  எளியவர்க்கிரங்கி  யாட்கொள்ளும்  அருஞ்செயலுடைமையால்,  மிக்க  பெருமையுடையான்  என்பது  தோன்ற  “இருஞ்சீரான்”  என்றார் , பிறராற்  செய்தற்கரிய  செயலைச்  செய்தல்  பெருமைக்குணத்தின்  இயல்பென்பது  உணரத்தக்கது.

                    சின்னங்கள்  என்ற  பன்மையால்  இறைவன்  எழுச்சியை  நினைப்பூட்டும்  எக்காளத்தோடு  சங்கு  முதலியனவுங்  கொள்ளப்படும் .  இம் மங்கல வொலியைக்  கேட்ட  அளவில்  சிவ  சிவ  என்னும்  மகாமந்திரத்தைச்  சொல்லிக்கொண்டே  வாய்  திறக்கும்  இயல்பினை  யென்பார் , “சின்னங்கள்  கேட்பச் சிவனென்றே  வாய் திறப்பாய்” என்றனர் .  இனி  சின்னங்கள் –  அடையாளப்  பொருள்களெனவும் ,  கேட்டடல்  இலக்கணையாற்  காண்டலை  யுணர்த்து  மெனவுங்  கொண்டு  திருநீறு  கண்மணி  புனைந்த  சிவனடியாரைக் கண்ட  அளவில்  சிவனெனவே  கூறுவாயெனக்  கோடலுமாம்.

                  தென்னன்  –  பாண்டியன் .  வழுதி  மருமகனாகி  மீனநோக்கின் , மடவரலை மணந்துலக  முழுதாண்ட “  சுந்தரனாதலின்  இறைவனைத்  தென்னன்  எனப்  பலவிடத்துங்  கூறுவர் .  எந்நாட்டவர்க்கும்  இறைவனாயினும்  நேரில்  ஆட்சி  புரிந்த  சிறப்புரிமை  தோன்றத்  தென்னாடுடைய  சிவன்  எனக்கூறியதும்  ஈண்டு  உணரத்தக்கது .  இறைவன்   இறைவி   முருகன்  இம்மூவரும்  அரசு  புரிந்த  பெருமை  இப்பாண்டி  நாட்டிற்கேயுரியது என்பதை , 

“உலகம்  யாவையும்  ஈன்றவன்  உம்பரு  ளுயர்ந்த

திலக  நாயகி  பரஞ்சுடர்  சேயென  மூன்று 

தலைவ  ரான்முறை  செய்தநா  டிஃதன்றிச்  சலதி

சுலவு   பாரினுண்டாகுமோ  துறக்கத்து  மஃதே”

 என்பதனாலும்  அறிக.  எக்காரணத்தை  முன்னிட்டாவது  தென்னன்  என்று  பிறர்  கூறக்  கேட்ட  அளவில்  அச்சொல்  முடிதற்குமுன்  தீயிடைப்பட்ட  மெழுகு  போல  உருகும்  இயல்பினை  யென்பார் , ”தென்னா  வென்னாமுன்னந்  தீசேர் மெழுகொப்பாய்”  என்றனர் .  வாச்சிய  ஒலி  கேட்ட  துணையானே  சிவநாமங்  கூறுதலும்,  சிவநாமங்கேட்ட  துணையானே  நெஞ்சம்  உருகுதலும்  உடைய  நீ இப்பொழுது  யாம்  உளங்கனிந்து  அன்பு உரைகள்  பல  பகர்ந்தும்,  துயில்  நீத்தெழாமலிருப்பது  என்னையோ  என்றனரென்பது .  யாங்கள்  ஒருங்கே  சேர்ந்தும்  இறைபுகழைப்  பாடினோம் .  கூட்டொலி  நின் செவிக்குத் தெளிவாகக்  கேட்கப்படாமலிருத்தல்  கூடுமோ  என்னும்  ஐயத்தால்  பின்னர்த்  தனித்தனியாகவும்  “என்னானை  என்னரையன்  இன்னமுதென்  றெல்லோமும்”  வெவ்வேறாய்ப்  பாடலானோம்  எனவும் ,  வந்தவர்களாகிய  யாங்கள்  கூறிய  இந்நல்லுரைகளைக்  கேட்பாயாக  என்பார், “சொன்னோங் கேள் “  எனவுங்  கூறினர்  என்க.   என்னானை  –  என்  தந்தை  “என்”  என்பதன்பின்  “ஆன்”  சாரியை.  ஐ  –  தந்தை .  எனக்குச்  சிறப்புரிமைப்  பாதுகாப்பு  நோக்கத்  தந்தையாவானெனவும் .  பொதுவாட்சி  நோக்க  எனக்கு  அரசனாவானெனவும்   இன்புறுத்தலின்  அமுதாவானெனவும்  கூறினரென்பது.  தனித்தனிக்  கூற்றாதல் பற்றி  என்  தந்தை  என்  அரையன்  என  ஒருமையாகக்  கூறப்பட்டனவென்க. 

                இவ்வினிய  மொழிகளை  நின்  அருகில்  வந்து  கூறக்கேட்டும்   இன்னும்  உறங்குகின்றாயோ  என்பார் ,  “இன்னந்  துயிலுதியோ”  என்றனர்   நீ  பருவத்தாற்  பேதையேயல்லது  அறிவின்மையாற்  பேதையல்லை ; அங்ஙனமிருந்தும்  மனம்  உருகத்தக்க  இறைபுகழைப் பாடக்கேட்டும்  வலிய  நெஞ்சு  படைத்த  அறிவிலிகளைப்  போல  வாய்  பேசாமற்  கிடக்கின்றாயே   ஈதென்னையென்பார்  “வன்னெஞ்சப்  பேதையர்  போல்  வாளா  கிடத்தியால்” என்றனர் .  இறைவன்  புகழுரை  கேட்ட  அளவிலே  ஈடுபட்டுக்  குழையும்  உள்ளமுடைய  நீ  இங்ஙனம்  உருக்கம்  சிறிதுமின்றி  உறக்கத்தில்  ஆழ்ந்து  கிடத்தலை  நினையுங்கால்  உறக்கத்தின்  இயல்பு  மிகவலியது  போலும்  என்பார்  “என்னே  துயிலின்  பரிசு “  என்றனர் .  “யோசிக்கும்  வேளையிற்  பசிதீர  உண்பதும்  உறங்குவதுமாக முடியும் “  என்று  பெரியோர்  கூறியது  உலகியலில்  உயிர்  போகு   பொது  நெறி  பற்றியதாகலின் ,  நின்னைப்போன்ற   இறையன்பிலீடுபட்டாரைப்  பற்றியதன்று  என்பதாம் . 

                  இதன்கண்  “தென்னா  வென்னாமுன்னந்  தீ  சேர்  மெழுகொப்பாய் “ என்றதனால்  சிறந்த  பத்திக்கு  ஏதுவாகிய  தென்னன் என்னுஞ்  சொல்  மீன நோக்கின்  மடவரலை  மணந்து  பெற்றது  என்பது  பெறப்படுதலின்  ,  சத்தியை  வியந்தது  புலனாயவாறறிக. 

பாடல் 8.

கோழி  சிலம்பச்  சிலம்புங்  குருகெங்கும் 

            ஏழில்  இயம்ப  இயம்பும்  வெண்  சங்கெங்கும் 

கேழில்  பரஞ்சோதி   கேழில்  பரங்கருணை

            கேழில்  விழுப்பொருள்கள்  பாடினோங்  கேட்டிலையோ

வாழியீ   தென்ன   வுறக்கமோ  வாய்திறவாய்

             ஆழியான்  அன்புடைமை  யாமாறும்  இவ்வாறோ

ஊழி  முதல்வனாய்  நின்ற  வொருவனை

              யேழைபங்  காளனையே  பாடேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்பாற்  செய்யப்படும்  தலையன்பின்  திறத்தைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  தலையன்பு  செய்தற்கேற்ற   அவ்  இறைவனது  நிகரற்ற  பெருமையையும்  தலைமையையும்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை:-   கோழி  சிலம்ப  எங்கும்  குருகு  சிலம்பும்  =

கோழி  கூவ  எங்கும்  பறவைகள்  ஒலி  செய்யும் . 

ஏழில்  இயம்ப வெண்மை  சங்கு  எங்கும்  இயம்பும்  =

நாகசுரம்  வாசிக்குமாறு  வெள்ளிய  சங்கங்கள்  யாண்டும்  ஒலிக்கும் ,

கேழ்  இல்  பரம்சோதி   = 

ஒப்பற்ற  பரம்பொருளாகிய  ஒளியுருவினனுடைய  ,

கேழ்  இல்  பரம்  கருணை   =

ஒப்பற்ற  மேலான  கருணை  முதலிய ,

கேழ்  இல்  விழுப்பொருள்கள் = 

ஒப்பற்ற  சிறந்த  பொருள்கள்  அமைந்த  புகழ்ப்  பாடல்களை,

பாடினோம் , கேட்டிலையோ  = 

நீ  கேட்டாயல்லையோ,

வாழி  = 

வாழ்வாயாக,

ஈது  என்ன  உறக்கமோ = 

ஈது  எத்தகைய  தூக்கமோ

வாய்  திறவாய் =

நின்  வாயைத்  திறக்கின்றாயல்லை  ,

ஆழியான்  அன்புடைமை  ஆம்  ஆறும்  இவ்வாறோ  =

அருட்கடலாகிய  சிவபெருமான்  மாட்டு  அன்பு  செய்யும்  நெறியும்  இம்முறைதானோ, (இனியாவது)

ஊழி  முதல்வனாய்  நின்ற  ஒருவனை  = 

பேரூழியின்  இறுதியில்  தலைவனாய்த்  தான்  ஒருவனே  அழிவில்லாமல்  நின்றவனும் ,

ஏழை  பங்காளனையே =

அம்மையை  ஒரு  கூற்றிலுடையவனும்  ஆகிய  பெருமானையே  ,

பாடு  =  பாடுவாயாக  என்பது .

விளக்கவுரை :-   கோழி  –  சேவல் .  இருள்புலர்  காலத்தை  யறிவிப்பது  சேவல்  கூவுதல்.   சிலம்புதல்  –  ஒலித்தல் .  கோழி  கூவியவுடன்  காக்கை  முதலிய  பறவைகள்  விழித்தெழுந்து  ஒலிப்பனவாம் .   குருகு  –  பறவைப்பொது .           ஏழில் –  ஏழிசைகளுக்கும்  இடனாயது;  நாகசுரம்  என்னும்  துளைக்கருவி  .  திருக்கோயில்களில்  அதிகாலையில்  முதலில்  சங்கு  முழக்கஞ்  செய்யப்படும்.  அவ்வொலி  கேட்ட  துணையானே  நாகசுரம்  வாசித்தல்  முறையாதலின்  , “ஏழில்  இயம்ப  இயம்பும்  வெண்சங்கு  எங்கும்” என்றனர். “ஏழிலியம்ப”  என்புழி  இயம்ப  வென்பது  காரியப் பொருளில்  வந்த  வினையெச்சம் .  எங்கும்  என்பது  ஈரிடத்தும்  முறையே  நாளா  பக்கங்களையும்   திருக்கோயில்களையும்  உணர்த்தும் .  சிலம்புதலும்  இயம்புதலும்  விடியலைக்  குறிப்பனவாம் ,  கேழ்   –  ஒப்பு  ,  கேழில்  என்றது  ஈடும்  எடுப்பும்  இல்லாத  என்றபடி .  இது  பின்வருவனவற்றிற்கும்  ஒக்கும் .  மாயாகாரியமாகிய  ஒளியனீக்குதற்கு ,  “பரஞ்சோதி”  என்னப்பட்டது.  இறைவனை  ஒளியுருவமாகப்  பெரியோர்  கூறுதலைப்  பலவிடத்துங்  காணலாம். 

                     இறைவனது  அளப்பரும்  பேரருட்  குணத்தைக்  “கேழில்”  பரங்கருணை”  யென்றனர்    .  விழுப்பொருள்கள்  என்றது  சிறந்த  பொருளமைந்த  புகழ்ப்பாடல்களை  யுணர்த்தும் .  இறைவன்  புகழே  பொருள்சேர் புகழ்  எனப்படும் .  ஏனையோரைப்  பற்றினவெல்லாம்  அன்னவாகா  என்பது.  இதனை , “இருள்சே ரிரு  வினையுஞ்  சேரா விறைவன்,  பொருள்சேர்  புகழ்புரிந்தார்  மாட்டு “  என்புழி  “இறைமைக்  குணங்கள்  இலராயினாரை  உடையரெனக்  கருதி  அறிவிலார்  கூறுகின்ற  புகழ்கள்  பொருள்  சேராவாகலின் ,  அவை முற்றுமுடைய  இறைவன்  புகழே  பொருள்  சேர்  புகழ்  எனப்பட்டது “  என்று  பரிமேலழகர்  கூறிய  வுரையானு  முணர்க.  ஒப்பற்ற  இறைவனது  சிறந்த  கருணை  முதலிய  பொருளமைந்த  புகழ்ப்  பாடலை  யாம் பாட  நீ  கேட்டனை  யென்பார், “யாம்பாடக்  கேட்டிலையோ”  என்றனர்.  கேட்டிலையோ  என்புழி  ஓகாரம் எதிர்மறைப்  பொருட்டு .  அங்ஙனம்  கேட்டும்  வாளாவிருக்கும்  நீ  எத்தகைய  தீங்கும்  வாழக்கடவையென  வாழ்த்துவார் , “வாழி”  யென்றனர் .  இவள் பேதைப் பருவத்துச்  சிறுமியாதலின் அவள்  பாலுள்ள  அன்பினால்  ஆண்டின் முதிர்ந்த  பெண்கள் இவ்வாறு  கூறுவாராயினர்  என்பது  கருத்து .

                  யாம்பாடிய  பாடலோ  இறைவன்  பொருள்சேர்  புகழமைந்த  பாடல்;  பாடின  காலமோ  இருள்புலர்  காலை;  இடமோ  நின்பக்கல்.  அப்பாடலைக்கேட்டும்  கண்  திறந்தாயே  யன்றி  வாயைத்  திறந்து  எம்மோடு  சேர்ந்து  பாடினாயல்லை ;  இங்ஙனம்  கண்  திறந்தும்  வாய்  திறவாமலிருக்கும்   இந் நிலையும்  நின்  தூக்கத்தின்  ஒருவகை  கொலோ  என்பார். “ஈதென்ன  வுறக்கமோ  வாய் திறவாய்”  என்றனரென்பது.  வாய்திறவா  யென்றதனாலும் ,  என்ன  வுறக்கமோ  என்றதனாலும்  கண்  திறத்தல்  பெறப்பட்டது  .  மேலும் ,  அருட்பெருங்  கடலாகிய  இறைவன்பால்  நினக்குள்ள  அன்பு  நெறியும்  இங்ஙனம்  யாம்  இறை புகழ்பாடுதலாகிய  இந் நிலையிலும்   நீ  வாய் திறவாமை  விருத்தலாகிய   இம்முறைதானோ  வென்பார்,  “ஆழியானன்புடைமை   யாமாறுமிவ்வாறோ”  என்றனர் .  அடியார்  ஆண்டவனிடத்து  வைக்கும்  காதல்  அன்பும் ,  ஆண்டவன்  எல்லாவுயிர்கள்  மாட்டுஞ்  செலுத்தும்  கருணை  அருளுமாகும் .  இங்கே “ஆழியானன்புடைமை”  என்புழி  அடிமையின்  அன்பு  குறிக்கப்பட்டமையின்  அதற்கேற்ப  ஆண்டவன் திருவருளை  யியைத்து  அருளாழியெனக்  கொள்ளுதல்  பொருத்தமாகும். 

                    “பரங்கருணைத்தடங்கடலை”  என்பது  அடிகள்  திருவாக்கு . அருட்பெருங்கடலாகிய  இறைவன் பால்  வைக்கும் அன்பு தலையன்பாதல்  வேண்டுமென்பது  கருத்து .  இனி,  ஆழியான்  –  திருமாலெனக்கொண்டு  ,  திருமால்  இறைவனிடத்தே  அன்பு  செய்யும்  நெறியும்  இவ்வாறு கொல்  எனப்  பொருள்கூறி  ,  அறிதுயில்  மேற்கொண்டு  ,  நீயும்  அன்பு  செய்கின்றனை  போலும்  என்பது  கருத்தாகக்  கோடலும்  ஒன்று . மகாசங்காரகாலமாகிய  பேரூழியின்  இறுதியில்  மாயாகாரியமாகிய  எல்லாம்  அழிந்து  ஒடுங்கியபின்,  சிவபெருமான்  ஒருவனே  முதல்வனாக  அழியாப்  பொருளாக  நிலைபெற்றுப்  பின்னரும்  படைப்பாதி  தொழில்  செய்தற்கு  நாத  தத்துவத்தை  யெழுப்பி  நிற்பன்  என்னும்  உண்மை  தோன்ற , “ஊழி முதல்வனாய்  நின்ற  ஒருவனை  “ என்றார். 

“ஓதத்  தொலிமடங்கி  யூருண்டேறி 

         யொத்துலக  மெல்லாம்  ஒடுங்கியபின் 

வேதத்  தொலிகொண்டு வீணை  கேட்பார்   

           வெண்காடு  மேவிய  விகிர்த  னாரே “   என்னும் 

             தமிழ் மறையானும்  இவ்வுண்மை  தெளிக .  இத்துணை  உயரிய   பரம்பொருளாகவுள்ள  பெருமான்  ஏழையேமாகிய  நம்பொருட்டு  அம்மையொரு  கூறனாகத்  திருமேனி  கொண்டெழுந்தருளிப்  பாதுகாக்கும்  இயல்பினன்  என்னும்  பொருடோன்ற “ஏழை  பங்காளன்”  என்று  கூறினர் .      ஏழை  –  பெண் ;  உமையம்மை .  ஏகாரம்  –  பிரிநிலை .  நம்மாற்  பாடப்படுபவர்  மற்றைத்  தேவரல்லர்  என்னும்  பொருள்  தோன்ற  நிற்றலின்  தேற்றமுமாம் .

               இதன்கண்  “ஏழைபங்காளனையே  பாடு “  என்றமையால்  சத்தியை  வியந்தது  கூறப்பட்டமையறிக. 

  பாடல்  9 .

முன்னைப்  பழம்பொருட்கும்  முன்னைப்  பழம்பொருளே

                   பின்னைப்  புதுமைக்கும்  பேர்த்துமப்  பெற்றியானே

உன்னைப்  பிரானாகப்  பெற்றவுன்  சீரடியோம் 

                    உன்னடியார்  தாள்பணிவோம்  ஆங்கவர்க்கே  பாங்காவோம் 

அன்னவரே   யெங்கணவ  ராவார்   அவருகந்து 

                     சொன்ன  பரிசே   தொழும்பாய்ப்   பணிசெய்வோம்

இன்ன   வகையே   யெமக்கெங்கோன்    நல்குதியேல் 

                      என்ன   குறையும்   இலோமேலோ   ரெம்பாவாய்

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  அடியார்  தலையன்பு  செய்தற்கு  ஏற்ற  இறைவனுடைய  அளப்பரும்  பெருமையையும்  தலைமையையும்   அருளிச்  செய்த  அடிகள் ,  அவற்றுள்  எல்லாவற்றையும்  தன்னுளடக்கிநிற்கும்    காலத்தாலும்  இடத்தாலும்  அளப்பரிய  பெருமையின்  இயல்பைக்  கூறுவான்  தொடங்கி  இத்திருப்பாட்டில்   காலத்தால்  அளவிடற்கரிய  முதன்மையைப்  புலப்படுத்தருளுகின்றார் . 

பதவுரை :-  முன்னைப்  பழம்  பொருட்கும்  முன்னைப்  பழம்  பொருளே = 

முற்பட்டவனாகிய  பழைய  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்   முற்பட்ட  பழைய  பொருளாகவுள்ளவனே, 

பின்னை  புதுமைக்கும்  பேர்த்தும்  அப்பெற்றியனே =

பிற்பட்டனவாகிய  புதிய  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்  மீண்டும்  அப்புதுப்  பொருட்டன்மை  வுடையவனே,

உன்னை  பிரான்  ஆகப்  பெற்ற  உன்  சீர்  அடியோம்  =

உன்னை  ஆண்டவனாகக்  கிடைக்கப்பெற்றமையால்  உன்  சிறப்பு  மிக்க  அடிமைகளாகிய  யாங்கள்,

உன்  அடியார் தாள்  பணிவோம் =

நின்  அடியாருடைய  திருவடிகளை  வணங்குவோம் ,

ஆங்கு  அவர்க்கே  பாங்கு  ஆவோம்  =

அங்ஙனமே  நின்  அடியார்க்கே  உரிமையுடையவர்கள்  ஆவோம்  ,

அன்னவரே  எம்  கணவர் ஆவார்=

அவ்வடியார்களே  எங்களுக்குக்  கணவராவார் ,

அவர்  உகந்து  சொன்ன  பரிசே =

அவ்வடியார்  மனமுவந்து  இட்ட  கட்டளைப்  படியே  ,

தொழும்பாய்  பணி  செய்வோம்  = 

அவர்க்கு  அடிமையாய்  நின்று  ஏவல்  கேட்போம் ,

எங்கோன்  எமக்கு  இன்னவகையே  நல்குதியேல் =

எங்கள்  பிரானாகிய  நீ  எங்களுக்கு  இங்ஙனமே  அருள்புரிவையாயின்  ,

என்ன  குறையும்  இலோம்  =

எத்தகைய  குறைபாடும்  இல்லாதவராவோம் என்பது .

விளக்கவுரை :-   இதன்கண்   எழுப்பியவரும்  எழுப்பப்பட்டவரும்   ஆகிய  கன்னிப்  பெண்கள்   எல்லோரும்  ஒருங்கே  கூடி  இறைவனை  முன்னிலைப்படுத்துப்  புகழ்ந்து  பாடிப்  பயன்  வேண்டுதல்  கூறப்படுகின்றது. முன்பின்  பழமை  புதுமை  என்னும்  இவ்வழக்குகள்  காலதத்துவத்தின் பின்  தோன்றியவை .  இறைவன்  அக்காலத்தத்துவத்திற்கும்    அப்பாற்பட்ட  பொருள் .  ஆயினும் , காலதத்துவத்தின்  பிற்பட்ட  பொருள்களில்  வைத்தே  முதலில்  மக்களாராய்ச்சி  நிகழ்வது  இயல்பாதலின்  முன்னைப்  பழம்  பொருள்  என்பது  கால  தத்துவத்துளடங்கிய   முற்பட்ட  பழைய  பொருள்  களைக்  குறிக்கும் .  இதுகாறும்  வெளிப்பட்ட  மாயாகாரியமாகிய  விசித்திரப்  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்  முற்பட்ட  பழைய  பொருளாவானும்  அவ்விறைவனே :  இதுகாறும்  வெளிப்படாத  புதிய  பொருள்களெவற்றிற்கும்   புதிய  பொருளாக  ஒன்று  தோன்றுமாயின் ,  அப்பொருளில்  அமைந்துள்ள  புதுமைத்  தன்மையுடையானும்    அப்பெருமானே  யென்பார் ,

              “முன்னைப்  பழம்பொருட்கும்  முன்னைப்  பழம்பொருளே

                பின்னைப்  புதுமைக்கும்    போர்த்துமப்  பெற்றியனே”

என்றார் .    பெற்றியன்  –  புதுமைத்  தன்மையுடையவன் .    “உலகெலாமாகி  வேறாயுடனுமாய் “  நின்ற  இறையிலக்கணத்துள்  உலகெலாமாகி  நின்ற  நிலை பற்றியே  சிற்றறிவினராகிய   மக்களுக்கு  ஆராய்ச்சி  நிகழ்வது  இயல்பாதலின்  அம் முறைபற்றிக்  கூறப்பட்டது   இது  வென்க.   பழமையென  ஒன்று  துணியப்படுமாயின்  அதற்கும்  பழமையாய் ,  புதுமையென  ஒன்று  தோன்றுமாயின்    அதற்கும்  புதுமையாயுள்ள  பொருள்  இறைவனே  என்பது  கருத்து.

                    “வேதக்  காட்சிக்கும்  உபநிடத்  துச்சியில்  விரித்த

                       போதக்  காட்சிக்குங்  காணலன்  புதியரிற்  புதியன்

                        மூதக்  கார்க்குமூ  தக்கவன்  முடிவிற்கு  முடிவாய் 

                         ஆதிக்  காதியா  யுயிர்க்குயி   ராய்நின்ற  வமலன் “

என்று  கூறியதும்  இக்கருத்துப்  பற்றியே  யென்க. 

                 இனி,  இறைவன்  தனக்குப்  பின்றோன்றிய  யாக்கையுடையாரனைவரும்   மூப்பவும் , தான்  நிலைபெற்ற  இளமைத்தன்மையுடையனாயிருத்தலின்    புதுமைத்  தன்மையுடையன்  எனவும்  ,  எல்லாயாக்கைக்கு  முன்னே  தனது  இச்சையாற்  கொள்ளப்பட்ட  திருமேனியை  யுடையனாதலின்   பழம்  பொருளாதலும்  உடையான்  எனக்  கருத்துக்  கோடலும்  ஒன்று .  பழமையைப்  பெருமையென்று  கருதுவார்க்குப்  பழமையாற்  பரம்பொருளாதலும் , பழமையிற்குறை  கருதிப்  புதுமையை   விரும்புவார்க்குப்  புதுமையிற்  புதுப் பொருளாதலும்  உடைய  நின்னை  ஆண்டவனாய்ப்  பெற்றமையால்  அறிவிற்  சிறியேமாயினும்  நின்  அடிமையிற்  சிறந்தவராயினே  மென்பார் , “உன்னைப்  பிரானாகப்  பெற்றவுன்  சீரடியோம்“  என்றனர்.  “பெற்ற”  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு  .  இறைவ!  நினக்கு  அன்பு செய்து நின் அடிமைப் பேறு பெற்றதன் பயனாக நின் அடியவராகிய  மெய்யன்பர்களின்  திருவடியை  வணங்கப்பெற்றே  மென்பார் , “உன்  சீரடியோம்  உன்னடியார்  தாள்  பணிவோம் “  என்றனரென்க. .  சிறந்த  மெய்யடியாரை  வணங்கும்  பேறு, இறை வணக்கத்தின் பயனாக  நிகழக்கூடுமென்பதைத்  திருஞானசம்பந்தர்  திருக்காளத்தி  இறைவனை  வணங்கியபின்   அதன்  பயன்  கைவரப்  பெற்றது  போலக் கண்ணப்ப நாயனார்   திருவுருவைக்  கண்டு  வணங்கப்பெற்றனர்  என்பதனாலறியலாம் .   இதனை ,

                             “ வீழ்ந்தெழுவார்  கும்பிட்ட  பயன்கண்   பார்போல்

                               மெய்வேடர்  பெருமானைக்  கண்டு  வீழ்ந்தார்”

எனவும்  ,  அதற்கு  ஏதுவாக,

                                 உள்ளத்திற்  றெளிகின்ற  அன்பின் மெய்ம்மை 

                                           யுருவினையும்   அவ்வன்பி   னுள்ளே   மன்னும் 

                                  வெள்ளச்செஞ்   சடைக்கற்றை  நெற்றிச்  செங்கண்    

                                  விமலரையும்   முடன்கண்ட     விருப்பம்  “      

எனவும்  சேக்கிழார்  கூறியவற்றானுணர்க .

                         சிவனடியாரை  வணங்குதலேயன்றி  எம்  உடல்  பொருள்  ஆவி  மூன்றையும்  அவர்க்கே  யுரிமைப்படுத்தலும்  செய்வோமென்பார் , “ஆங்கவர்க்கே  பாங்காவோம் “  என்றனர்.   தாள்  பணிதல்  சாதனமும்  பாங்காதல்  சாத்தியமுமாம்  .  ஈண்டுச்  சாதனம்  வேற்றுமையிலும்  சாத்தியம்  ஒற்றுமையிலும்  வைத்து  உணரத்தக்கன.  ஞானானுபவ  நிலையில்  உடல்  பொருளாவிகளை  ஆசிரியன்  பால்  ஒப்புவித்து  ஞானானுபவ  இன்பம்  பெற  விழையும்  மாணவர்  போல ,  உலகியல்  நிலையில் தம்   உடல்  பொருளாவிகளைச்  சிவனடியார்பால்  ஒப்புவித்து  இன்பம்  பெற  விழையும்  கன்னிப்  பெண்கள்  அதற்கேதுவாக  அவ்வடியாரையே  தமக்குக்  கணவராக  வேண்டுவராய், “ அன்னவரே  யெங்கணவ  ராவார் “  என்றனர் .  தலைவர்  அடிமைக்குக்  கட்டளையிடுதல்  அதிகார  முறையிலும்  விருப்பின்றியும்  நிகழ்தல்  கூடும்; அங்ஙனம்  இல்லாமல்  உள்ள  மகிழ்ந்து  இடும்  கட்டளையாதல்  வேண்டுமென்பார் , “அவருகந்து  சொன்ன  பரிசே” எனவும் , பொருண்  முதலிய  காரணம் பற்றியும்  பணி  செய்தல்  கூடுமாதலின் ,  அதனை  விலக்குதற்குத்  “தொழும்பாய்ப்  பணி  செய்வோம் “  எனவும்  கூறினர் .  “பரிசே”  என்புழி  ஏகாரம்  தேற்றப்பொருட்டு.  தொழும்பு  என்பது  கடமையாக  மேற்கொள்ளும்  அடிமைத்தன்மை .  அங்ஙனமாயின் ,  கணவராகப்  பெற்றும்  பணிசெய்தலால்  பெறும்பயன்  இன்னதென  வேண்டப்பட்டிலதேயெனின்  , 

                          என்கடன்  பணிசெய்து  கிடப்பதே

                          தன்கடன்     அடியேனையுந்   தாங்குதல்”

என்னும்  தமிழ்மறைப்படி  அது  செய்தல்  இறைவன்  கடமையாதலின்  கூறப்பட்டிலதென்க  .  மேலும்  ,

                            “அன்பர்பணி  செய்யவென்னை  யாளாக்கி  விட்டுவிட்டால்

                              இன்பநிலை   தானேவந்   தெய்தும் “

என்று   பெரியார்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  எங்கள்  ஆண்டவனாகிய  நீ  இங்கே  யாம்  தெரிவித்துக்கொண்ட  முறைப்படி  எமக்கு  அருள்  செய்வையாயின் ,  யாங்கள்  ஏதும்  குறையிலராய்  இனிது  வாழ்வோம்  என்று  கூறினாரென்பது . 

                           இதன்கட்   கூறப்பட்டபடி   இறைவன்  முன்னைப்  பழம்  பொருட்கு   முன்னைப்பழம்  பொருளாகவும் ,  பின்னைப்  புதுமைக்கும்  பின்னைப்  புதுப்பொருளாகவும்   வெளிப்படுதல்    சத்தியோடு    கூடிய  வழியல்லது  நிகழாமையின்  சத்தியை  வியந்தது   புலப்படுக்கப்பட்டவாறறிக.

பாடல்  10.

பாதாளம்   ஏழினுங்கீழ்   சொற்கழிவு   பாதமலர் 

               போதார்   புனைமுடியும்    எல்லாப்   பொருண்முடிவே

பேதை  யொருபாற்   றிருமேனி   யொன்றல்லன் 

                வேதமுதல்   விண்ணோரும்    மண்ணுந்   துதித்தாலும் 

ஓத   வுலவா   ஒருதோழன்    தொண்டருளன் 

                கோதில்   குலத்தான்    றன்   கோயிற்   பிணாப்பிள்ளைகாள்

ஏதவனூர்   ஏதவன்பேர்    ஆருற்றார்   ஆராயலார்

                 ஏதவனைப்   பாடும்   பரிசேலோ    ரெம்பாவாய்

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  காலத்தாலும்  இடத்தாலும்   அளவிடற்கரிய    இறைவன்  பெருமையுள்  காலத்தால்  அளவிடற்கரிய  முதன்மையைப்   புலப்படுத்தருளிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில்    இடத்தால்  அளவிடற்கரிய  தலைமையை   அருளிச்செய்கின்றார் . 

பதவுரை :-    பாதமலர்  =   இறைவன்   திருவடிமலர் ,

பாதாளம்  ஏழினும் கீழ் சொல்கழிவு  =   கீழுலகம்  ஏழிற்கும்  கீழாகச்  சொல்லில்  அடங்காத  நிலையினது ,

போது  ஆர்  புனைமுடியும்  எல்லாப்  பொருள்  முடிவே =  

மலர்கள்  நிறைந்து   அணிசெய்யப்பட்ட  திருமுடியும்  எல்லாப்  பொருள்களின்  முடிவாக வுள்ளது ,

பேதை  ஒருபால்  =  பெண்  ஒரு  கூற்றிலுள்ளான் ,

திருமேனி  ஓன்று   அல்லன்  =   ஒருவகைப்பட்ட  திருமேனியை  யுடையானல்லன் ,

தொண்டர்  =  தன்  அடியார்க்கு  ,

வேதம்  முதல்  விண்ணோரும்  மண்ணும்  துதித்தாலும்  =

மறை  முதலாக  விண்ணுலகத்தினரும்  மண்ணுலகத்தினரும்  புகழ்ந்து  பாராட்டினாலும் , 

ஓத  உலவா  ஒரு  தோழன்  உளன்  = 

புகழ்ச்சி  முற்றுப்பெறாத  ஒப்பற்ற  தோழனாகவுள்ளான்  ,

அரன்  தன்கோயில்   =

அத்தகைய  சிவபெருமானுடைய  திருக்கோயிலிலுள்ள  ,

கோது  இல்  குலத்து  பிணாப்பிள்ளைகாள் =

குற்றமற்ற  நலத்தினையுடைய  பெண்  மக்களே,

அவன்  ஊர்  ஏது  அவன்   பேர்   ஏது  =

அப்பெருமானுக்கு  ஊர்  யாது ?  அவன்  பெயர்  யாது ?,

உற்றார்   ஆர்   அயலார்  ஆர் = 

அவனுக்கு  உறவினர்  ஆவார்  யாவர்  ?  அயலார்   யாவர்? 

அவனைப்  பாடும்   பரிசு   ஏது =

அவ்விறைவனைப்  புகழ்ந்து  பாடும்   தன்மை   யாது?,  என்பதாம் .

விளக்கவுரை :  –   ஒருங்கு  சேர்ந்த  கன்னிப்  பெண்களனைவரும் ,  அதிகாலையில்  சிவபெருமானுடைய   திருக்கோயிற்பணி  புரிந்து   கொண்டிருக்கும்   பெண்மக்களை  விளித்து   இறைவன்பால்   தம்மினும்   அவர்க்குள்ள  அணுக்கங்கருதிப்   பாடுதற்குரிய  சில  செய்திகளை   வினவுகின்றனர் . 

                     திருமாலும்  பிரமனும்  தனித்தனியே   யாம்  பிரமம்  என்று  செருக்குற்ற  ஞான்று  ,  மலையுருக்கொண்டு    வளர்ந்த  சிவபெருமானுடைய  அடி முடிகளைக்  காணுமாறு  பணிக்கப்  பட்டனராக;  அவ்விருவரும்  முறையே  பன்றியுருவையும்   அன்னப்பறவை  யுருவையும்  கொண்டு  அகழ்ந்தும்  பறந்தும்  அடிமுடிகளைக்   காணமுடியாமல்   செருக்கடங்கினரென்னும்    புராண   கதையையுட்  கொண்டு  கூறுகின்றார் .  இறைவன்  திருவடி மலர்  பாதாளத்தின்  கீழ்  உள்ளது  என்று  கூறுதலே  யமைவுடையதாக வும்  “ பாதாளம்  ஏழினுங்கீழ்”  என்றது  இவ்வண்டத்தின்  கீழுலகம்  ஏழென்று  கூறப்பட்டிருத்தலின் ,  அத்துணையும்  சொல்லால்  அளவிடுதற்கு  உரியதென்னும்  கருத்துப்பற்றியாம் .  கீழேழுலகங்  கட்கும்  கீழ்  என்றால்  கீழ்  யாண்டுளது  எனின்,  அந்நிலை  சொற்களால்  அளவிடுதற்கு  இயலாதென்னும்  பொருடோன்ற  “சொற்கழிவு”  என்றனர் . 

                       இறைவன்  திருமுடி  மிக  மேலோங்கிய  நிலையினதாயினும்  மெய்யன்பர்  சாத்தும்  மலர்க்கு  எளிவரும்  இயல்பிற்று  என்னும்  குறிப்புப்புலப்பட, ”போதார்  புனைமுடியும் “  என்று   கூறப்பட்டது.  அஃது  எல்லாப்  பொருள்களின் முடிவாகவுள்ளது   என்றது   சொற்களாலறிதற்குரிய  பொருள்களின்  எல்லையைக்  கடந்த  நிலையிலுள்ளது   என்பது  குறித்து .  சொல்லளவைக்  கடந்தது  திருவடியெனவும்   பொருளளவைக்  கடந்தது  திருமுடியெனவுங்   கூறியது ,  சொல்  ஆதாரமாகக்  கீழ்  நின்று  தாங்குவதும் ,  பொருள்   ஆதேயமாக  மேல்  நின்று தாங்கப்படுவதுமாகிய   இயைபு  பற்றியென்க .  திருமேனியின்  ஒரு   கூற்றில்   அம்மையுள்ளாள்  ஆதலின்  “பேதையொருபால்”  எனவும்,  அதனால்  இறைவன்  திருமேனி  ஆணுரு   அல்லது   பெண்ணுருவென்னும்  இரண்டனுள்  ஒன்றாக   அமையாமல் “திருமேனியொன்றல்லன்”  எனவும்  கூறப்பட்டன .  அம்மையையொரு  கூற்றிலுடைய  பரம்பொருளை   ஒருவனென்றாதல்  ஒருத்தியென்றாதல்   கூறுதற்கு   இயலாமையாற்  போலும்  ஒருவர்  என்னும்  சொல்  வழங்கலாயிற்றென்பர்   பெரியார் . 

                    “பாட்டான்  மறைபுகழும் “  என்றபடி  மறை , உண்மையுருவாய   இறைவன்   புகழ்மாலையாக  அமைந்தது .  அப்புகழ்  மாலையாகிய  மறைப்  பாடல்களைப்  பாடி  இன்புறுவார்  தேவரும்  மக்களுமேயாவர் . அங்ஙனம்  மறைகளும்  அவற்றை  எடுத்தியம்பிப்   பொருள்  விளக்கும்  தேவரும்  மக்களும்   எத்துணைக்காலம்  புகழினும்   அப்புகழுரைகளால்   அளவிட்டு  உரைக்க  முடியாத  பெருமை  வாய்ந்தவன்  இறைவன் .  அத்துணைப்  பெரியோன்  தன் தொண்டர்க்குச்  சிறந்த  நண்பனாவான்  என்பார் ,”ஓதவுலவா  ஒரு  தோழந்  தொண்டருளன்“  என்றார்.  “தொண்டருளன் “  என்புழி   நான்கனுருபை   விரித்து ,  தொண்டர்க்கு  எனக்கொண்டு  ஒரு  தோழன்  என்பதனை  அதனோடியைத்  துரைத்துக்கொள்க .  இனி ,  “ஒரு  தோழந்  தொண்டருளன்”   எனப்  பாடங்கொண்டு ,  ஒப்பற்ற  மிகுதியான  தொண்டரையுடையான்   எனக்  கோடலும்  ஒன்று .  தோழம்  –   பேரெண்  “ஒருதோழந்தேவர்  விண்ணிற்  பொலிய“  என்பது  தமிழ்  மறை.  சிவபெருமான்  திருக்கோயிலிற்  பணிபுரியும்  பேறு  பெற்ற  பெண்மக்களை  நோக்கி , “அரன்றன்  கோயிற்பிணாப்பிள்ளைகாள்”  என்றனர்,   பிணா  –  பெண்.  பிள்ளை, மக்கள்  என்னும்  பொருட்டு .  அப்பெண்மக்கள்  ஊனடைந்த  உடம்பின்  பிறவி  தானடைந்த  வுறுதியைத்  திருக்கோயிலிலே  தொண்டு  செய்யும்  பேற்றினால்  பெற்றமை  குறித்து  “கோதில்  குலத்து”  என்றனர் .   குலம்  –  நன்மை .

                          சிவத்  தொண்டு  ஒன்றே  குற்றமற்ற  நலம்  பயப்பது.  அந்நலத்தை  யெளிமையிற்  பெற்றிருத்தல்  குறித்து  அவ்வாறு கூறப்பட்டனர்   அப்பெண்களுக்கு   இறைவன்  பாலுள்ள  அணுக்கங்குறித்து   அவரை  வினவலாயினர் . திருக்கோயிற்  பணிபுரிவார்  ஆண்  பெண்  இருபாலாருமுளர்  அவருள்   பெண்மக்களை  விளித்து வினாவ  முற்பட்டதற்குக்  காரணம்  தம்  பெண்மைக்கு  ஒத்த  தோழமை  குறித்தென்க .  ஊர்  என்பது  பூகோளத்தில்  ஒரு  சிறு  கூற்றிலமைந்த  சிறு  கிராமமாகும் .  இறைவன்  அடியும்  முடியும்  கீழ்  மேல்   எல்லைகளைக்கடந்துள்ளன .  அத்துணைப்பெரிய  பொருளில்  அடங்கிய  ஒரு  சிறு  கூறாகிய  இடத்தில் அவன்  எவ்வாறு  அடங்குவான்  என்பார்,” ஏதவனூர்”  என்றனர் . பெயர்  திருமேனி  குறித்து   இடப்படுவது .  அவன்  திருமேனியோ  ஆணுமல்ல  பெண்ணுமல்ல  அங்ஙனமாயின்  எப்பெயரால்  குறிப்பிடலாமென்பர் “ ஏதவன்பேர் “  என்றனர் . 

                                 “ஒருநாமம்   ஓருருவம்  ஒன்றுமில்லார்க்  காயிரம்

                                    திருநாமம்  பாடிநாத்   தெள்ளேணங்   கொட்டாமோ”

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருந்தலும்  உணர்க.   உலகப்  பொருணுகர்ச்சியிலீடுபடாமல்  இறைபணி  புரிதலே  கடமையெனவுணர்ந்து  ஒழுகும்  தொண்டர்க்குச் சிறந்த  நண்பனாதலேயன்றி  வேறு  உறவு  பகை  நொதுமல்  இல்லாதவன்  என்பார் “ஆருற்றார்  ஆரயலார் “  என்றனர்  .  வேதங்களும்  விண்ணவரும்  மக்களும்  எத்துணைக்காலம்   புகழ்ந்து  பாடினாலும்  ஓதவுலவாப்  பெருமை யுடையானைப்  பெண்  மக்களாகிய  யாம்  பாடுதல்  எவ்வாறு  என்பார், “ஏதவனைப்  பாடும்  பரிசு “  என்றனர் .  இங்ஙனம்  இப்பாடலின்  மூன்றடிகளாலும்   கூறப்பட்ட  இறைவன்  பெருமைகளை  ஏதுவாக்கி  ஈற்றடிக்குப்  பொருள்  கூறுதலே  சிறப்புடைத்து  என்பது . 

                இதன்கண்  “பேதையொருபால்  திருமேனி  யொன்றல்லன்”  என்பதனால்   அம்மையின்  பெருமை  வெளிப்படுதலின்    சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறறிக . 

பாடல்  11.

                       மொய்யார்  தடம்பொய்கை  புக்கு  முகேரென்னக் 

                                        கையாற்  குடைந்து  குடைந்துன்  கழல்பாடி

                       ஐயா  வழியடியோம்   வாழ்ந்தோங்காண்   ஆரழல்போற்

                                         செய்யாவெண்   ணீறாடி  செல்வா  சிறுமருங்குன்

                        மையார்  தடங்கண்   மடந்தை   மணவாளா

                                          ஐயா  நீ  யாட்கொண்  டருளும்  விளையாட்டின் 

                          உய்வார்கள்   உய்யும்   வகையெல்லாம்  உய்ந்தொழிந்தோம்

                                           எய்யாமற்   காப்பா  யெமையேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டுக்களில்   காலத்தாலும்   இடத்தாலும்  அளவிடற்கரிய  இறைவன்  பெருமையை  அருளிச்  செய்த  அடிகள் ,  இத்திருப்பாட்டில்  அத்துணைப்பெரியோன் ,  காலம்  இடங்களினுட்பட்ட   சிறியனவாகிய  (மக்கள்)  உயிர்களையாட்கொண்டருளுதல்    கருணை  காரணமாக  உண்டாகிய  அவன்  விளையாட்டாகும்  என்பதை  அருளிச்  செய்கின்றார் . 

பதவுரை :-    ஆர்  அழல்போல்  செய்யா =    செறிந்த  தீயையொத்த  செம்மை  நிறம்  உடையவனே ,

வெண்மை  நீறாடி   =   வெள்ளிய  திருநீற்றை  நிறைய  அணிந்தவனே ,

செல்வா  =  வீட்டுத்  திருவினையுடையாய் , 

சிறு  மருங்குல்  மை  ஆர்  தடம்  கண்  மடந்தை  மணவாளா  = 

சிறிய  இடையையும்   மை  தீட்டப்  பெற்ற  அகன்ற  கண்களையும்  உடைய  உமையம்மையின்  கணவனே ,

ஐயா  =   எங்கள்  தலைவனே,

மொய்  ஆர்  தடம்  பொய்கைபுக்கு  =   வண்டுகள்  நிறைந்த  அகன்ற  திருக்குளத்தில்   புகுந்து , 

முகேர்  என்னக்  கையால்  குடைந்து  குடைந்து  உன்  கழல்பாடி  = 

முகேர்  என்று  ஒலியுண்டாகும்படி  கையினால்  இறைத்து  முழுகி  நின்  திருவடிகளைப்  புகழ்ந்து பாடி  ,

வழி  அடியோம்  வாழ்ந்தோம்  =  வழி  வழி  அடிமைகளாகிய  யாங்கள்   நல்வாழ்வு  எய்தினோம்  , 

ஐ  ஆம்  நீ  ஆட்கொண்டு  அருளும்   விளையாட்டின்   =  ஆண்டவனாகிய  நீ   உயிர்களை  அடிமைகொண்டு  காத்தருளும்  திருவிளையாட்டினால் ,

உய்வார்கள்  உய்யும்  வகையெல்லாம்  உய்த்தொழிந்தோம்  = 

உய்தி  பெறுவார்  உய்யும்  வகைகள்  எல்லாவற்றானும்  பிழைத்துவிட்டோம் ,

எய்யாமல்  எமை  காப்பாய்  =    இனி,  யாம்  இளைத்து  விடாதபடி  எம்மைக்  காத்தருள்வாயாக  என்பது.

விளக்கவுரை:-    இனி  அக்கன்னிப்பெண்களெல்லோறும்    ஒருங்கு  சேர்ந்து  நீராடத்தொடங்கி   இறைவனை  முன்னிலைப்படுத்துத்   தமக்கு  காப்பு  வேண்டுகின்றனர் . 

                    செம்மை  வெண்மையிரண்டும்  முறையே  இராசதம்  சாத்துவிகம்  என்னும்  குணங்களைக்  குறிப்பாலுணர்த்துவனவாதலின்   அக்குணங்களில்  நின்று  படைத்தல்   காத்தல்களைச்  செய்பவனும்  நீறுடைமையால்  ஒடுக்கத்திற்குரிய  தலைவனும்  சிவபெருமானே  யென்பார், ”ஆரழல்  போற்  செய்யா  வெண்ணீறாடி“  என்றனர் .  “முக்குணங்களின்  மூவரைத்  தோற்றி  மூவர்க்கு  முத்தொழில்  வகுத்தருளி ,  அக்குணங்களுக்கதீதமாய்  நிறைவாய் ……..நின்றனை”  என்று  சிவஞான  முனிவர்  கூறிய  கருத்தும்  ஈண்டு  நோக்கத்தக்கது .  செல்வம்  –  வீட்டுத்திரு;  மோஷ  ஐசுவரியம்  என்பர்  வடநூலார். 

                       இஃது  யோகியாயிருந்துயிர்க்கு   யோகத்தைப்  புரிபவன்  என்னும்  குறிப்பையும்  “மையார்  தடங்கண்  மடந்தை  மணவாளா”  என்றது  யோகியாயிருந்துயிர்க்குப்   போகத்தைப்  புரிபவன்  என்னும்  குறிப்பையும்  புலப்படுத்துநிற்பன.  இங்ஙனம் படைப்பு  முதலிய  தொழிற்றலைவனும்  போக  மோக்க  காரகனும்  ஆகிய   பெருந்தலைவனாகிய   நீயே  எளியேமாகிய  எமக்கும்  தலைவனாயினையென்னும்  உவகை  பற்றி  “ஐயா”  என்றனர் ,   மொய்  –  வண்டு .  மொய்த்தற்றொழில்  பற்றி  வண்டு  மொய்  என்னும்  பெயருடைத்  தாயிற்று .  பொய்கை  அகன்று  என்றும்   நீரறா  வளமுடமையால்   தாமரை  குவளை  முதலியன  செழித்துப்படர்ந்து  பூத்திருந்தமையின்   அம்மலர்களிலுள்ள   தேனை  நுகரும்  பொருட்டு  வண்டுகள்  நிறைந்திருத்தல்  பற்றி  “மொய்யார்  தடம்  பொய்கை “  என்றனர்.  பனிப்பருவத்  தொடக்கமாதலின்  மலர்கள்  வாட்டம்  அடைந்தில  வென்பது   கருத்து .   “முகேர் “  என்பது  கையால்  நீரைக்  குடையுங்கால்  உண்டாம்  ஒலிக்குறிப்பு. மொய்யார்  தடம்  பொய்கை  யாதலின்  மலரிதழ்  வண்டுகள்  முழுகும்  இடத்தைவிட்டு   ஒதுங்குதற்  பொருட்டும் , நீர்  விளையாட்டு  நிகழ்ச்சி  பற்றியும்  முழுகுதற்குமுன்  கையினால்  நீரைத்  தட்டி  இறைத்தல்  பற்றி “கையாற்குடைந்து”  எனவும் , பின்  முழுகி  நீராடினோம்  என்பது குறித்து  :குடைந்து”  எனவும்  கூறினர் . 

                வாழையடி  வாழையெனச் சிவத்தொண்டு   செய்து  வந்த  மரபில்  தோன்றிய  அடிமைகளாகிய  யாம்  என்பார் , “வழியடியோம்”  என்றனர் .  நீராடுங்கால்  எல்லோரும்  சேர்ந்து  இறைவன்  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடிக்கொண்டே  ஆடினரென்பது.  “வாழ்ந்தோம்”  என்றது  கருதியபடி  மார்கழி  நீராடற்கு  உரிய  நேரத்தில்  எழுந்து    வாயார  இறை  புகழ்  பாடி  நீராடக்கிடைத்த  பேறு  பற்றிய  உவகை  மொழியாகும்.  தொடங்கிய  காரியத்தின்  பயன்  பின்  விளைவாயினும்  அக்காரியம்  கைகூடுதலும்  மக்களுக்கு  மகிழ்ச்சி  விளைக்கு மென்பது  உலகியலிற்  காணப்படுவது .  காண்  –  முன்னிலையசை. 

                    பொதுவாக  மக்கள்   தேவர்  முதலிய  பல்லுயிர்களையும்   பக்குவம்  நோக்கி  அடிமை  கொண்டு  அருள்புரியும்  நின்  திருவிளையாட்டில்   என்பார், “நீ  யாட்கொண்டருளும்   விளையாட்டின்  “  என்றார் .  உயிர்களைப்  படைத்தும்  காத்தும்  ஒடுக்கியும்  மறைத்தும்  அருளுதல்  இறைவனுக்கு   ஒருவிளையாட்டுப்போலும்  எளிமையிற்  செய்யப்படுஞ்செயல்  என்பார்  “விளையாட்டின்“  என்றாரென்பது.  இக்கருத்தை   “ஒரு  சாரார் , “ ஐயா  நீ  யாட்கொண்டருளும்   விளையாட்டின்“…… என்பது  முதலிய  திருவாக்குக்கள்   பற்றி  விளையாட்டென்றது , ஐங்கலப்   பாரஞ்  சுமத்தல்  சாத்தனுக்கு  விளையாட்டென்பது போல  அத்துணை  யெளிதிற்  செய்யப்படுதலை  நோக்கியேயாகலின்  அக்கருத்தும் ,  உயிர்கட்குப்   பெத்தகாலத்துச்  சுவர்க்காதி  போகமும்  பத  முத்திகளும்   முத்தி  காலத்து  வீடுபேறும்  கொடுத்தற் பயத்ததென்பர் “ என்னும்  சிவஞான சித்தி  யுரையானும்  தெளிக. 

                      இடையறவின்றிப்   பெய்யும்  மழைநீரை   மேட்டு  நிலம்  வறிதே  கழிப்பப்  பள்ளிநிலம்  தாங்கிப்பயன்  விளைத்தல்  போல   ஆண்டவன்  திருவிளையாட்டாற்   பெய்யும்  அருளமுதத்தைத்    தூய்மை  பெறாத  உள்ளத்தினர்  விட்டொழிக்க  மெய்யன்பினால்   தூய்மை  பெற்ற  நன்னெஞ்சினோர்  பெற்றுப்  பயன்பெறுவர்  ஆதலின் ,  அம்முறையில்  இறையருளை   வேட்டு  நிற்போரே  உய்வார்களாவர் . உய்யும்  வகை   பாசப்  பிணிப்பை  யொழித்துத்  திருவருட்பேற்றைப்   பெறுதற்குரிய  சிவத்தொண்டு  முதலிய  தவநெறிகளாம் . அந்நெறிகளையே  சாதனமாக  மேற்கொண்டு  உய்திபெற்றுள்ளோம்  என்பார் “உய்யும்  வகையெல்லாம்  உய்ந்தொழிந்தோம்”  என்றனர் .  உய்ந்தொழிதல்  என்புழி  ஒழிதல்  துணைவினையாகும் ;  துணிதற் பொருட்டு . “வழியடியோம்  வாழ்ந்தோம் “  என்று முன்னர்க்  கூறியது   நீராடத்  தொடங்கியது   நிறைவேறியமையால்   உண்டாம்  உவகை  பற்றி.  உய்ந்தொழிந்தோம்  என்று  பின்னர்க்கூறியது  இறைவன்  திருவருட்பேற்றிற்கு   இலக்காயது  பற்றி. 

                  ஆண்டவனே  ! இதுகாறும்  எல்லாவகையாலும்  நின்  தொண்டில்  நழுவாமல்  ஈடுபட்டுப்  பிழைத்தோம் .  இனி  நின்  திருவருட்  பேற்றினாலாம்  பயனையெய்துதற்கு   யாம்  சலித்தொழியாமல்  கடைபோக   எம்மைக்  காத்தருள  வேண்டுமென்பார்  “எய்யாமற்  காப்பாயெமை”  என்று  கூறினரென்பதாம்  .

                    இதன்கண்  “சிறு  மருங்குன்  மையார்தடங்கண்  மடந்தை  மணவாளா”  என்றதனால்  சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறறிக.   

பாடல்  12.

                              ஆர்த்த   பிறவித்    துயர்கெடநாம்   ஆர்த்தாடுந்

                                         தீர்த்தனற்   றில்லைச்சிற்   றம்பலத்தே   தீயாடுங்

                              கூத்தனிவ்   வானுங்   குவலயமும்   எல்லோமுங்

                                         காத்தும்  படைத்துங்   கரந்தும்  விளையாடி 

                               வார்த்தையும்   பேசி   வளைசிலம்ப   வார்கலைகள்

                                       ஆர்ப்பரவஞ்   செய்ய   அணிகுழன்மேல் வண்டார்ப்பப்

                               பூத்திகழும்  பொய்கை   குடைந்துடையான்   பொற்பாதம்

                                        ஏத்தி   யிருஞ்சுனைநீர்   ஆடேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :–    முன்னைத்  திருப்பாட்டில்   மக்களை  ஆட்கொண்டருளுதல்  இறைவனுக்குத்   திருவிளையாட்டாகும்  என்பதை  அருளிச்  செய்த   அடிகள் ,  இத்  திருப்பாட்டில்  மக்களேயன்றி   விண்ணுலகம்   மண்ணுலகம்  முதலிய  எல்லாவுலகங்களையும்   படைத்தல்   முதலிய   தொழிற்படுத்தலும்   இறையருள்  விளையாட்டே  யென்பதைப்  புலப்படுத்தருளுகின்றார்.     

      பதவுரை :-    ஆர்த்த  பிறவித்  துயர்கெட  =

நம்மை  அநாதியே  கட்டிய  பிறவித்துன்பம்    ஒழியும்படி , 

நாம்  ஆர்த்து  ஆடும்  தீர்த்தன்   = நாம்  உவகையால்  ஆரவாரித்து  முழுகும்  தூய  நீரையுடையவனும்  ,

நல்  தில்லைச்  சிற்றம்பலத்தே  தீ  ஆடும்  கூத்தன்  =  நல்ல  தில்லைநகரின்கண்  உள்ள  ஞானவெளியில்   அனலையேந்தி  ஆடுகின்ற  அருட்கூத்துடையவனும்  ,

இக்குவலயமும்   வானும்  எல்லோமும்  =   இந்  நிலவுலகத்தையும்  விண்ணுலகத்தையும்   நம்  எல்லோரையும்  ,

படைத்தும்  காத்தும்  கரந்தும்  விளையாடி  =   ஆக்கியும்  அளித்தும்  ஒடுக்கியும்   விளையாடுகின்றவனும்  ஆகிய  சிவபெருமானது ,

வார்த்தையும்  பேசி  =  திருப்புகழையும்  பாடிக்கொண்டு  ,

வளை  சிலம்ப  =  கை  வளையல்  ஒலிக்கவும் ,

வார்கலைகள்  ஆர்ப்பரவம்  செய்ய  =  (இடையில்)  நீண்ட  மேகலை  முதலிய  அணிகலன்கள்  ஆரவாரித்  தொலிசெய்யவும்  ,

அணி  குழல்மேல்  வண்டு  ஆர்ப்ப  =  அழகிய  கூந்தலின்  மேல்  வண்டுகள்  எழுந்து   முழங்கவும் ,

பூ  திகழும்  பொய்கை  குடைந்து  =   மலர்கள்   விளங்குகின்ற  திருக்குளத்தில்  முழுகி ,

உடையான்  பொன்பாதம்  ஏத்தி  =   எல்லாமுடைய  இறைவனது  பொன்போன்ற   திருவடிகளைப்  புகழ்ந்து  பாராட்டி,

இரும்  சுனை  நீர்  ஆடு  =  பெரிய  சுனை  நீரிலும்  முழுகுவோமாக  என்பது .

விளக்கவுரை :-    இது,  நீராடும்  நிகழ்ச்சியில்  இறைவன்  புகழைப்  பாடி யாடுதல்   கூறுகின்றது .  உயிர்  இருவினைப்  பாசங்களாலும்   மும்மலக்  கல்லொடு   பிணிக்கப்பட்டுப்  பிறவிப்  பெருங்கடலுள்   வீழ்த்தப்படுதலின்  “ஆர்த்த  பிறவி “  எனவும் ,  பிறவி  ,  வினைப்பயனை  நுகர்ந்து கழிப்பதற்கு ஏதுவாதல் பற்றி நலம் பயப்பதாயினும் தீவினைப்பயனை நுகருங்கால்  உயிர்  துன்புறுதலின்  “பிறவித்துயர் “  எனவும் , அத்துன்பமாகிய  வெப்பம்  ஒழிய   முழுகுதற்குரிய   தூய  தண்ணிய  நீரையுடையான்  இறைவனென்பார்  “துயர்கெட  நாம்  ஆர்த்தாடுந்தீர்த்தன்  “  எனவுங்  கூறினர் .  ஆர்த்தல் ,  பிறவித்  துயரொழிவிற்குரிய   சாதனப்பேறு  குறித்து  உண்டாகிய  உவகையானாயது.

                   கடலொடு  காவிரி  கலக்குமிடத்தில்  அவ்விரு வகை  நீரிலும்  தோய்வாரைக்குறித்து .  “தீதுநீங்கக்  கடலாடியும் ,  மாசுபோகப்  புனல்படிந்தும்  என்று  கடியலூர்  உருத்திரங்கண்ணனார்   கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.   அகக்குற்றம்  நீங்கக்  கடலாடினவர்  கடலாடுதலாலுண்டாம்   புறக்குற்றமும்  நீங்கக்  காவிரிப்புனலிலும்  தோய்ந்தனரென்னும்   அது.  வினையொழியப்  பிறவிப்பெருங்கடலுள்  மூழ்கினார்  அப்பிறவித்  துயரும்  ஒழிய  நல்ல  தூயநீரிலும்  ஆடினர்  என்னும்  இக்கருத்தைக்  குறிப்பிற்  புலப்படுத்து  நிற்றலறிக.  இனி  “ஆர்த்தாடுந்  தீர்த்தன்”  என்பதற்கு    ஆரவாரித்து  இன்பக்கூத்தாடுதற்கு  ஏதுவாகிய  கடவுள்  எனப் பொருள்கோடலும்  ஆம் .  ஞானவெளியை  யுடைமையால் , “நற்றில்லை” யென்னப்பட்டது .  திருச்சிற்றம்பலம்   –  நுண்ணிய  ஞானப்பரவெளி    தூலவுடலுடைய  மக்களுக்கேற்பத்    தூலவெளியில்  இனிது  நீராடுதற்குத்  தண்ணிய  நறுநீரையுதவிய  அருளாளன் , தான்  சூக்கும  வெளியில் வெய்ய  தீயை  யேந்தி  ஆடினன் என்னும்  இதனால் ,  வார்ந்த  நஞ்சயின்று  வானோர்க்க  முதமீந்த  அப்பெருமானது  வண்மைக்குணம்  ஈண்டும்  புலனாயவாறறிக .  தீ  ஞானத்தைக்  குறிப்பது. அதனை  யேந்திக்   கூத்தாடியது    ஞானத்தால்  தன்னைக்  காண விழைவார்க்குக்  காட்சியளிப்பவன்   என்பதைக்  குறிப்பதாகும்  .  கூத்து  அருட்செயல்  ஐந்தையும்  புலப்படுத்து  நிகழ்வது . 

                       “இவ்வானும்”  என்புழிச்  சுட்டை  அணிமையிலுள்ள  குவலயத்திற் கேற்றுக ,  நுண்ணிய  ஞானப்  பரவெளியில்  நெருப்பை  யேந்திக்  கூத்தாடுதலே  யன்றி  இந்  நிலவுலகத்தினரையும்  வானுலகத்தவரையும்  நம்  எல்லோரையும்   ஆக்கியும்  அளித்தும்  மறைத்தும்   விளையாடுபவன்  என்பார்  “இவ்வானுங்  குவலயமு மெல்லோமும்    காத்தும்  படைத்துங்  கரந்தும்  விளையாடி “  என்றார்:   காணப்படாத  பொருள்களைப்  படைத்துக்காட்டலும்,  காட்டியவற்றைச்  சிலநேரம்  நிலைபெறச்  செய்தலும்,  பின்  மறையச்  செய்தலும்  இந்திரசாலவித்தை  யென்ப.  அவ்வித்தைகாட்டி  விளையாடுதல்போல ,  மருட்கேவல   நிலையிலுள்ள வுயிர்களை  உடல்  முதலியன  படைத்து  வெளிப்படச்செய்தலும்,  வினையளவு   வரையறுக்கப்பட்ட   காலம்  வரை  அவற்றை  நிலைபெறுத்தலும் ,  பின்  ஒடுக்கி  மறைத்தலும்    ஆகிய  உலக  முத்தொழிற்படுத்தல்  இறைவனுக்கு  விளையாட்டாம்  என்பது  கருத்து . 

                    படைத்தும்  காத்தும்  எனற்பாலது  செய்யுள்நோக்கி  மாறி  நின்றது.  விளையாடி  யென்பது  பெயர் ;  “மதி  மயங்கி “  என்பதுபோல.  “இவ்வானுங்  குவலயமும்  “  என்புழிக்  கூறுகின்ற  பெண்கள்  குவலயத்து  ளடங்கினராகவும்  “எல்லோமும்”  என்று  தம்மைப்  பிரித்துக்  கூறியது  தம்மாற்  சுட்டியுணரப்படும்  பிரபஞ்சத்தினின்று  தாம்  வேறல்லர்  என்பது  குறித்து.  விளையாடி  வார்த்தையும்  என்புழி  ஆறனுருபு  தொக்கது .  நீராடுதற்கு  முன்னும்  பின்னுமன்றி  நீராடுதல்  நிகழுங்காலும்  இறைபுகழ்  பாடப்பட்டதென்பார்  “வார்த்தையும்  பேசி “  என்றார் .  நீராடுங்கால்  கையால்  நீரைத்தட்டியிறைத்தலும் ,  நீர்நிலையில் அங்கும்  இங்கும்  சேறலும் , முழுகுதலும்  ஆகிய  செயல்கள்  நிகழுமாதலின்,  அம்  மூன்றும்  புலப்பட  முறையே  “வளை  சிலம்ப, வார்கலைகளார்ப்  பரவஞ்செய்ய ,  அணிகுழன்  மேல்  வண்டார்ப்ப”   என்றார் .  கலைகள்  மேகலை  முதலிய  அணிகள்.  கூந்தலின் மேலணிந்த  மலர்களிலுள்ள  தேனை  நுகரும் வண்டுகள்  தலைமுழுகுங்கால்    எழுந்து  ஆர்த்தன  வென்பது  கருத்து .  பூத்திகழும் பொய்கை  யென்றது  அம்மலர்  விளக்கத்தில்  ஈடுபட்ட  மகளிர் அப்  பொய்கையினின்றும்  பிறிதொரு  நீர்நிலைக்கு  மாறுதலின் அருமை  புலப்படுக்கப் பட்டபடியாம் .

                      பொய்கை  நீராடியதும்  அடுத்துள்ள  சுனைநீராடுதற்குத் தொடங்கும்  பெண்கள்  சுனையாடுதற்கண்  இடையூறணுகாமைப்  பொருட்டு  இறைவன்  திருவடியை  மீண்டும்  வேண்டினரென்பார்  “பொய்கை  குடைந்துடையான்  பொற்பாத  மேத்தி “ என்றனர் .  பெண்கள்  பலர்  ஆடுதற்கு  அகன்ற  சுனையே  பொருந்துமாதலின்  “இருஞ்சுனைநீர்”  என்றனர் .  “ஆடுக”  என்புழி  வியங்கோளீறு   தொக்கது .  ஆடுவோமாக  என்றவாறு .   பேசி,  சிலம்ப,  அரவஞ்செய்ய,  ஆர்ப்ப ,  குடைந்து ,  ஏத்தி,  ஆடுக  என  வினைமுடிபு  கொள்க.

                      இதன்கண்  “உடையான்  பொற்பாதம்  ஏத்தி “  யென்றதனால்   திருவடியாற்  குறிக்கப்படும்  சத்தியை  வியந்தது  புலனாயவாறறிக. 

பாடல் 13.

                    பைங்குவளைக்   கார்மலராற்   செங்கமலப்  பைம்போதால்

                               அங்கங்   குருகினத்தாற்  பின்னும்  அரவத்தால்

                    தங்கண்   மலங்கழுவு   வார்வந்து  சார்தலினால்

                               எங்கள்  பிராட்டியும்   எங்கோனும்  போன்  றிசைந்த

                   பொங்கு  மடுவிற்  புகப்பாய்ந்து    பாய்ந்துநஞ்

                               சங்கஞ்  சிலம்பச்  சிலம்பு   கலந்தார்ப்பக்

                     கொங்கைகள்  பொங்கக்  குடையும்  புனல்பொங்கப்

                               பங்கயப்  பூம்புனல்பாய்ந்   தாடேலோ  ரெம்பாவாய்

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்   எல்லாவுலகங்களையும்   முத்தொழிற்படுத்தலும்  இறையருள்  விளையாட்டேயென  அருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அப்பெருமானை  யடைதற்குத்  தூய  அன்பு  நெறியால்   தகுதி  வாய்ந்த  உயிர்கள்  தாமும்  விளையாட்டுப்  போன்ற  செயல்களால்  இறையருட்கு  இலக்காகி  இன்புறலாம்  என்னும்  உண்மையைக்  குறிப்பிற்  புலப்படுத்தருளிச்  செய்கின்றார் .  பாசப்பிணிப்பை  யொழித்தற்குரிய  நயனதீக்கை  முதலிய  சாதனங்களே  இங்கே  நுண்ணிதின்  அறியப்படும்  குறிப்புகளாம் .

பதவுரை :-     பசுமை  குவளைக்  கருமை  மலரால்  =

குளிர்ந்த  குவளைகளின்  கரிய  மலர்களையுடைமையாலும்  ,

செம்மை  கமலம்  பசுமை  போதால் =    செந்தாமரையின்  அழகிய  மலர்களையுடைமையாலும் , 

அம் கம் குருகு இனத்தால்  =  அழகிய  நீர்வாழ்  பறவைகளையுடைமையாலும்,

பின்னும்  அரவத்தால்  =  பின்னியெழும்  அலையொலிகளை  யுடைமையாலும்,

தங்கண்  மலம்  கழுவுவார்  வந்து  சார்தலினால்  = 

(மடுநீராகிய)  தம்மிடத்து  அழுக்கைக்  கழுவக்கருதுவார்   வந்தடைதலினாலும்  ,

எங்கள்  பிராட்டியும்  எம்கோனும்  போன்று  இசைந்த  பொங்கும்  மடுவில் = 

எங்கள்  இறைவியையும்  எம்  இறைவனையும்  ஒத்துப்  பொருந்திய  நீர்  நிறைந்த  பொய்கையில்  ,

பாய்ந்து  பாய்ந்து  புக =  தாவித்  தாவிப்  புகுதலால் ,

நம்  சங்கம்  சிலம்ப =  நம்  கைவளையல் ஒலிக்கவும் ,

சிலம்பு  கலந்து  ஆர்ப்ப  =  சிலம்புகள்  அவ்வொலியோடு  கலந்து  ஒலிக்கவும்,

கொங்கைகள்  பொங்க  =  நகில்கள்  குலுங்கவும்  ,

குடையும்  புனல்பொங்க  =  நீராடுதற்குரிய  நீர்  மேலெழவும்  ,

பங்கயப்  பூ  புனல்  பாய்ந்து  ஆடு  =   தாமரை  மலர்களால்  பொலிந்து  விளங்கும்  பொய்கையில்  குதித்து  நீராடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-    இதுவும்  அது . (நீராடும்  நிகழ்ச்சியில்  இறைவன்  மாண்பு  கூறியாடுதலைக்  கூறுகின்றது)  பொய்கை  இறைவியும்  இறைவனும்  இயைந்து  விளங்குதல்போல   விளங்குதற்கு  ஏது  பைங்குவளைக்  கார்  மலர்  முதலியனவாம் .  கார் மலர்   செம்போது  என்புழிக்  கருமையும்  செம்மையும்  இனம்  விளங்குதற்கு  வந்த  அடைமொழிகளாம் . அம்மையையும்  செந்தாமரை   மலர்  தீவண்ணனாகிய  அப்பனையும்  குறிப்பன .  குவளையின்  முதலுக்கும்  தாமரையின்  சினைக்கும்  பசுமையடை  புணர்த்தது, “அருளதுசத்தியாகும்  “ என்றபடி  இறைவி  அருள்வடிவினள்  என்பதையும் ,  இறைவன்  அதனையுடையவனென்பதையும்  குறிப்பிற்  புலப்படுத்தற்கென்க.

அங்கம்  –  உறுப்பு ;  கை,.  குருகு  –  வளையல்  .  அங்கம்  குருகு  இனம்  என்பது, கையில்  வளையல்  குழுவையுடைய  இறைவியையும் ,  பின்னும்  அரவம்  என்பது ,  பின்னிக்கிடக்கின்ற  பாம்பணிகளையுடைய  இறைவனையும்  குறிப்பனவாம் .  வடமொழி  மதம்  பற்றித்  தம்  என  நீர்  பன்மையாகக்  கூறப்பட்டது . ஈண்டுத்தங்கண்  அம்மையப்பராகிய   தம்மிடத்து  என்றபடி.

      இனி,  தங்கள்  மலங்கழுவுவார்  எனப்  பதப்பிரிவு  கொண்டு  தம்முடைய  அழுக்கைப்  போக்குவார்  எனப்  பொருள்  கோடலுமாம்.   மலம்  –  ஆணவ  முதலியன .  மலங்கழுவுவார்  வந்து  சார்தல்  –  பாசப்பிணிப்பைப்  போக்குவார்  வந்து  அடைதல் .  இஃது  இருவர்க்குமாம்.  இவ்வேதுக்களால்  இறைவியும்  இறைவனும்  இயைந்ததுபோற்  காணப்படும்  பொய்கை  யென்றபடி .  இனி  இவ்வேதுக்கள்  சைவசித்தாந்த  முறைப்படி   ஆணவ  முதலிய  பாசங்களை  யொழிப்பதற்கு  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிப்  பக்குவமுள்ள  உயிர்களுக்குச் செய்யும்  தீக்கைக்கிரியைகளையும்  குறிப்பனவாம் .  சிவநெறித் தீக்கைகள்  பலதிறப்படும்  .  அவற்றுள்  உபலக்கணமாகச்  சில  தீக்கைக்  குறிப்புக்கள்  ஈண்டுள்ளன.

                பைங்குவளைக்  கார்மலர்  என்பது   நயனதீக்கையைக்  குறிக்கும்.  நயனத்தீக்கையாவது  மாந்திரிகள்  பாம்பினாற்  கடிக்கப்பட்டவனைக்  கருடபாவனையாலே  பார்த்து  நஞ்சையொழித்தல் போல  ஆசிரியன்  திருநோக்கத்தால்  பாசத்தையொழித்தலாகும்.  கண்ணப்பநாயனாரை  ஆண்டவன்  ஆட்கொண்டதும்  இந்நெறியே.   இவ்வுண்மையை,  “கண்ணால்  நோக்கிக்  கண்ணப்பர்  பணியுங்கொள்  கபாலியாரே”  என்னும்  அருளுரையானும் ,  “அங்கணர்  கருணைகூர்ந்த  அருட்டிரு  நோக்கமெய்தி “ எனவும்,  “முன்பு  திருக்காளத்தி  முதல்வனார்  அருள்நோக்கின்  “  எனவும்  சேக்கிழார்  கூறுமாற்றானும்  தெளிக.  

                  செங்கமலப்  பைம்போது  என்றது,  மானசீக  தீக்கையைக்  குறிக்கும்.  மானசீக  தீக்கையாவது   பாவனையினால்  ஆசிரியன்  மாணவனது  இதயக்கமலத்தில்   புகுந்து  அவன்  அறிவை  வாங்கித்  தன்  இதயக்கமலத்தில்  கலந்ததாகக்கொண்டு   பின்  அவன்பால்  நிலைப்படுத்தலாம் .  இஃது  ஆமை  தன்  சினையை  நினைத்த அளவிற்  காப்பதுபோலப்  பாவனையினாற்  காப்பதாம்.  ஈண்டுத்  தாமரைமலர்   ஆசிரியனுடைய   இதயக்கமலத்தைக்   குறித்தல்  அறிக.

                      அங்கங்குரு கினம்  என்பது   பரிசதீக்கையைக்  குறிப்பதாகும் . பரிசதீக்கையாவது  பறவை  தனது  சினையைச்  சிறகால்  தழுவிக்காத்தல்போல   ஆசிரியன் தன்  கையினால்  மாணவனது  தலைமுதல்  எங்கும்  பரிசித்துப்  பாசத்தை  யொழித்துக் காத்தலாம் . இதனைச்  சிவஹஸ்த  மஸ்தகசையோகம்  என்ப.   குருகு  –  கோழி  முதலிய  பறவையைக்  குறிக்கும்.  அங்கம்  –  சிறகு .  இனம் –  குஞ்சு .  ஆகவே  பறவைகள்  சிறகாற்  பார்ப்பைத்  தழுவுதல்போல்வ  தென்பது  குறிப்பு . 

                        அரவம்  –  ஒலி ;  இது  வாசிகதீக்கையைக்  குறிக்கும்.  வாசிகமாவது  திருவைந்தெழுத்தை   உபதேசித்து  நலம்புரிதல் ,  இங்ஙனம்  மனம்  வாக்குக்  காயம்  கண்  முதலியவற்றாலாம்   தீக்கையால்  பாசத்தை  யொழிப்பவராகிய  பக்குவமுள்ளவுயிர்கள்   அம்மையப்பவராகிய  தம்மிடத்து  வந்து  சேர்தலினால்  என  உமையொருபாகற்குக்  கொள்ளல்  வேண்டும் .  இவ்வேதுக்களால்  எங்கள்  பெருமாட்டியாகிய  அம்மையையும்  எங்கள்  பெருமானாகிய  அப்பனையும் போல்  இயைந்த  பொய்கையென்றார் .  ஈண்டு  அம்மையை  முற்கூறியது,  மெய்யருளாம்  தாயுடன்  சென்று  தந்தையையடைய  வேண்டுமென்னும்  நுண்பொருள்  புலப்படவென்க.   பொங்குதல்  –  நீர்மிகுதல், “புகப் பாய்ந்து  பாய்ந்து”  என்பதை  பாய்ந்து  பாய்ந்து  புக  எனக்  கொள்ளல்வேண்டும் .  புக  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு ,  சங்கம்  ஆகுபெயரால்  வளையலையுணர்த்தும் . சிலம்பொலி  வளையல்களின்  ஒலியோடு  கலந்தொலிக்கவென்பது,  பொய்கைக்  கரையாகிய  நிலத்தினின்றும்   தாவிப்  புகுதலால்  கைவளையல்களோடு  காற்சிலம்புகள்  ஒலிசெய்தனவென்பது   கருத்து.   “கொங்கைகள்  பொங்க “   என்புழிப்  பொங்குதல்  இலக்கணையால்  குலுங்குதலையுணர்த்தும் .   “குடையும்  புனல்  பொங்க”  என்றதனால்  மகளிர்  நெருங்கிப்   பாய்ந்தாட  நீர்  அளவின்மிக்கு   மேலெழுந்ததென்பது   போதரும்   தாமரைமலர்களாற்  பொலிவுபெற்று  விளங்கும்  என்றது  இருள்  புலர்காலத்தைக்  குறிப்பது .  பாய்ந்து  பாய்ந்து புக  சிலம்ப   ஆர்ப்ப  பொங்க  பொங்க  பாய்ந்தாடுக   என  வினை  முடிவு  கொள்க. 

                    இதன்கண்  “எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த  பொங்குமடு “  என்றதனால்  சத்தியை  வியந்தது  புலப்படுக்கப்பட்டபடியாம் . 

பாடல்  14.

                  காதார்   குழையாடப்   பைம்பூண்   கலனாடக் 

                                கோதை   குழலாட   வண்டின்   குழாமாடச் 

                  சீதப்    புனலாடிச்   சிற்றம்   பலம்பாடி

                                 வேதப்   பொருள்பாடி   யப்பொருளா   மாபாடிச் 

                   சேரதி   திறம்பாடிச்   சூழ்கொன்றைத்   தார்பாடி 

                                  ஆதி   திறம்பாடி   யந்தமா   மாபாடிப் 

                    பேதித்து   நம்மை   வளர்த்தெடுத்த   பெய்வளை   தன்

                                  பாதத்   திறம்பாடி   யாடேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்   தூய  அன்புளதேல்  விளையாட்டுப்போன்ற  செயல்களும்  இறைவனையடைதற்கு   ஏதுவாம்  என்னும்  நுண்பொருளைக்  குறிப்பிற்  புலப்படுத்த  அடிகள்  ,  இத்திருப்பாட்டில்  அச்செயல்களும்  இறைவனுடைய  பெருமைக்  குணங்களுக்கு  மாறுபடாமலிருக்க  வேண்டும்  என்னும்  குறிக்கோளைப்  புலப்படுத்து  அருளிச்செய்கின்றார் .

பதவுரை:-   காது  ஆர்  குழை  ஆட  =  காதிலணிந்த  தோடு  அசைய ,

பூண்  பசுமை  கலன்  ஆட  = உடம்பிலணிந்த   பிற  அழகிய  அணிகலங்கள்  அசைய, 

குழல்  கோதை  ஆட   =  கூந்தலில்  அணிந்த  மாலைகள்  அசைய,

வண்டின்  குழாம்  ஆட =  வண்டுக்கூட்டம்  எழுந்து  சுழல ,

சீதம்  புனல்  ஆடி  =  குளிர்ந்த  நீரில்  முழுகி,

சிற்றம்பலம்   பாடி  =  பின்  ஞானசபையைப்  புகழ்ந்து  பாடி

வேதப்பொருள்பாடி   =  மறைப்  பொருளமைந்த  புகழ்பாடலைப்பாடி ,

அப்பொருள் ஆமா[று] பாடி  =  இறைவன்  அப்பொருளாக  விளங்குதலைப்பாடி

சோதி  திறம் பாடி  =  ஒளி வடிவாகவுள்ள  அப்பெருமான்  பெருமையைப்  பாராட்டிப்  பாடி 

சூழ்கொன்றத்தார்  பாடி  =  சுற்றியணிந்த  கொன்றைமலர்  மாலையைப்  புகழ்ந்து  பாடி 

ஆதி  திறம்  பாடி  =   அப்பெருமான்  எப்பொருட்கும்  முதலான  முறையைப்  பாடி 

அந்தம்  ஆமா[று]  பாடி  =  எவற்றிற்கும்  ஈறானதன்மையையும்  பாடி

பேதித்து  நம்மை  வளர்த்து  எடுத்த  பெய்வளைதன்  பாத்திறம்  பாடியாடு =

வேறுபடுத்து  நம்மைப்  பாதுகாத்து  ஆட்கொண்ட  வளையலை  அணிந்த  கைகளையுடைய  உமையம்மையின்  திருவடி  மாண்பைப்  பாடி  நீராடுவோமாக   என்பது . 

விளக்கவுரை :-   இதுவும்  அது .  (நீராடுங்கால்  இறைபுகழ்  பாடுதலையும்  நிகழும்  செயல்களையும்  கூறுகின்றது.)  மகளிர்  நிலத்தினின்றும்   நீர்நிலையிற்  புகுந்து  நீராடுமுறையில்  நிகழ்வனவற்றை  முறையே  குறிப்பிடுகிறார் .  முதலில்  நீராடுதற்கு   ஏற்ற  முறையில்  எழுந்து  நின்று  நீரிற்  பாயத்தொடங்கியவுடன்  காதுகளில்  அணிந்த  தோடுகள்  அசைந்தன  வென்பார்  “காதார்  குழையாட” எனவும் ,  நிலத்தினின்று  நீர்நிலைக்கு  விரைந்து  செல்லுங்கால்  உடம்பில்  அணிந்த  ஏனை  அணிகலன்கள்  ஒலித்தனவென்பார்  “பைம்பூண்கலனாட”  எனவும்  , நீருட்  புகுந்து  நீராடத் தொடங்குங்கால்  கூந்தலிலணிந்த  மலர்  மாலைகள்  அசைந்தனவென்பார்.

  “கோதை  குழலாட”  எனவும், நீருள்  முழுகத்  தொடங்குங்கால்  கூந்தலிலணிந்த  மலர்  மாலைகளில்  உள்ள  தேனை  நுகரும்  வண்டினங்கள்  எழுந்து  ஆரவாரித்தனவென்பார்  “வண்டின்குழா மாட”  எனவும்,  முறைப்படுத்துக்  கூறினர்.  இங்ஙனம்  நிகழாநிற்க ,  குளிர்ந்த  நீர்  நிலையில்  நீராடினர்  என்பார், “சீதப்புனலாடி”  என்றனர் .  பொய்கை  நீர்  இயல்பாகவே  குளிர்ந்ததாயினும்   சீதப்புனல்  என்றது ,  பனிப்பருவத்து   வைகறைப்  பொழுதில்  மிக்க  குளிர்ச்சியுடைமை  பற்றி ,  சீதப்புனலாடிப்   பாடியாடுக  என்றமையால்  நீர்  விளையாட்டு  நிகழ்ச்சியில்  இறைவனையும்  இறைவியையும்  புகழ்ந்து  பாராட்டிப்  பாடினரென்பது .   அங்ஙனம்  புகழ்ந்து  பாடத்தொடங்குங்கால்  முதலில்  “சிற்றம்பலம் பாடி”  என்றார் .  “சிற்றம்பலம்  நுண்ணிய  ஞானப்பரவெளி .  ஆவின்  உடல்முழுதும்  நிறைந்த  பால் ,  கன்றின்  பொருட்டுச் சுரந்து  வெளிப்படுதற்குச்  சுரக்கும்  உறுப்பு  இடனாயவாறு  போல,  எங்கும்  நிறைந்த  இறைவிளக்கம்  அன்பர்  பொருட்டுப் புலப்படுதற்கு   இடங்கூறியபடியாம். 

                     “வேதப்பொருள்பாடி”   என்றது  மறைப்பொருளை  இசைத்தமிழாக  இயைத்துப்பாடியமைபற்றி.  இசையின்  தோற்றத்திற்குச்  சாமவேதம்  இடனென்ப  வடமொழிவாணர்.  அப்பொருள்  ஆமா  என்புழி  ஆமாறு  என்பதன்  ஈறுதொக்கது.  சாமவேத  சம்பந்தமான  கேநோபநிடதத்தில் ,  பிரமப்பொருள்  தாம்தாம்  என்று  கருதிய  தேவர்கள்  செருக்கடங்கப்  பிரம்ம  ஓர்  இயக்கவுருக்கொண்டு  வந்ததென்றும் ,  அவ்வியக்கனால்  இடப்பட்ட  ஒரு  சிறு  துரும்பை  எரிக்கமுயன்று  அக்கினிதேவனும் ,  அசைக்க  முயன்று  வாயுதேவனும்    இயலாதொழிய,  இந்திரன்  சென்று  இவ்வியக்கன்  யாராக  இருக்கலாமென்று  திகைப்புற்றிருக்கும்  நிலையில்  இயக்கன்  மறைந்து  விட்டான்  என்றும்,  அவ்வமயம்  விண்ணில்  இமவான்  புதல்வியாகிய  உமை  தோன்றி  “இவ்வியக்கன்  பிரமம்“  என்று  தெளிவித்தாளென்றும்  கூறப்பட்டுள்ளன.  இதுபோன்ற  குறிப்புக்களே  வேதப்பொருளென்றதனாற்  பெறப்படும்  “அப்பொருள்  ஆமாறு  பாடி”  என்றது. 

                        பரமசிவன்   அப்பொருளாகியவிதத்தைப்  பாராட்டி  யென்றபடி .  கேநோபநிடதக்  குறிப்பில்  வெளிப்படையாகச்  சிவபெருமான்  பரம்பொருளாவான்   என்பது  கூறப்பட்டிலது .  இவ்வியக்கன்  பிரமம்  என்று  உணர்த்திய  சத்தி  சிவசத்தியாதலின்,  அச்  சத்திக்குரிய  சிவபெருமானே  பிரமம்  ஆவான்  என்பது  போதரும்.  இத்தெளிபொருளையே  அப்பொருளாமாறு  என்பதனாற்  புலப்பட  வைத்தாரென்பது .  இறை  விளக்கத்திற்கும்  பெருமை  புலப்படற்கும்   உரிய  இடங்களாகிய  சிற்றம்பலத்தையும்  மறைப்பொருளையும்  பாடிப்  பின்  மெய்யன்பர்  பொருட்டுத்  திருமேனிகொண்டருளும்  நிலையைப்  பாடத்தொடங்குகின்றார்.

                         இறைவன்  அன்பர்  பொருட்டுக்  கொள்ளும்  திருமேனி  முதலில்  ஒளிவடிவம்  என்பது  பெரியோர்கண்டது. “சோதியாய்த்  தோன்று  முருவமே”  என்னும்  திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .  ஒரு  கோடி  கதிரவர்  ஒருங்குதோன்றிய  தொப்பப்  பேரொளிப்பிழம்பாகத்  திகழ்பவன்  என்ப.  இவ்வுண்மை  கருதியே  “சோதிதிறம்பாடி” என்றனர் .  திறம்  –  வழிபடும்  உயிர்களின்  பக்குவத்திற்கேற்பக்  கொள்ளும்  திருமேனியின்  வகை.  தார் மாலை   கண்ணியென்னும்  வகையெல்லாம்  இறவனுக்குக்  கொன்றைமலர்  ஆதலின்  “சூழ்கொன்றைத் தார் பாடி”  என்றனர் .  மேலும் ,  புறத்தே  ஐந்து  இதழும்  நடுவண்  ஓங்காரவடிவமான  அகவிதழும்  உடைமையால்  பிரணவத்தையுட்பொதிந்த  திருவைந்தெழுத்தைப்  புலப்படுத்து  விளங்குதலின்  கொன்றைமலர்  இறைவர்க்கு  உவந்ததாயிற்றென்ப.  யாவர்க்கும்  எவைக்கும்  முதற்கடவுளாதல்  பற்றி  “ஆதி திறம் பாடி”  என்றார் . “முளைத்தானை யெல்லார்க்கும்  முன்னே”  என்பது  தமிழ்மறை.  யாவரும்  எவையும்  ஒடுங்குதற்கு  நிலைக்களனாதல்   பற்றி  “அந்தம்  ஆமாறு பாடி” என்றனர்  .  ஆகவே  எல்லாம்  தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும்  காரணனாதல்  கூறப்பட்டபடியாம் .  முதல்  ஈறு  கூறவே  இடைப்பட்ட  காத்தற்றொழிலும்  அவன்பாலதாதல்  பெறப்படுமென்பது. 

“தோற்றுவித்   தளித்துப்   பின்னுந்

         துடைத்தருள்  தொழில்கள்  மூன்றும்

போற்றவே  யுடையன்   ஈசன் “

என்னும்  சிவநெறிப்பனுவலானும்   தெளிக.

                         இறைவனுடைய  அருட்செயல்கள்  ஐந்தும்  சிவசத்தியால்  நிகழ்வன.  அவற்றுள்  மறைத்தலைச்  செய்யும்  நிலையில்  அச்சத்தியைத்  திரோதாயி  என்று  கூறுப.  அஃது  உயிர்களுக்கு  மலபரிபாகத்தை  யுண்டாக்கிப்   பாசநீக்கத்தில்   அருட்சத்தியாக  நின்று  உபகரிப்பதாகும்  ;  தாய்  தன்  மக்கள் பாற்  குற்றங்கண்டவிடத்துக்  குணங்கண்டு   அறக்கருணை காட்டி  இன்புறுத்துமாறு போல வென்பது  .  இக்கருத்தை  உட்கொண்டே  “பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளை”  என்றார்.  பேதித்தல்   கன்மநுகர்ச்சியில்  ஈடுபடுமாறு  வேறுபடுத்தல்.  இது  மறைத்தலாகும்  .  பின்  அக்  கன்மக்கழிவில்  வளர்த்தெடுத்தல்  அருளலாகும்.  இவ்வுண்மையைச் சிவப்பிரகாசம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் செய்யுட்கு மதுரைச்  சிவப்பிரகாசர்  எழுதிய  விளக்கவுரையானும்  உணர்க .  பெய்வளை  ஆகுபெயராய்  உமையம்மையையுணர்த்தும்.  பெய்வளையெனக்  கைகளைக்  குறித்தது ,  அஞ்சற்கவென  அபயமுத்திரை  காட்டி  ஆட்கொள்ளும்  இயல்பு  நோக்கி  யென்க.  ஆகவே  இறைவனுடைய  படைத்தல்   முதலிய  அருட்செயல்கள்  ஐந்தும்  புலப்படுக்கப்பட்டபடியாம்.  தாயின்  திருவடிப்புகழ்ச்சி   தந்தையின்  திருவுள்ளத்தை  உவப்பிக்கும் என்னும்  உறுதிகொண்டு  “பெய்வளைதன்  பாத்திறம் பாடி”  என்றனர்  என்பது. 

                           இதன்கண்  “பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளைதன்  பாத்திறம்பாடி “  என்றதனால்  சத்தியை  வியந்தது  வெளிப்பட்டு  இன்புறுத்தல்  அறிக.

                                         ……………………………………………………………..

பாடல்  15. 

            ஓரொருகால்  எம்பெருமான்  என்றென்றே  நம்பெருமான்

                      சீரொருகால்  வாயோவாள்  சித்தங்  களிகூர

           நீரொருகால்  ஓவா  நெடுந்தாரை  கண்பனிப்பப்

                   பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்  தான்பணியாள்

           பேரரையற்  கிங்ஙனே  பித்தொருவ  ராமாறும் 

                    ஆரொருவ  ரிவ்வண்ணம்  ஆட்கொள்ளும்  வித்தகர்தாள்

           வாருருவப்  பூண்முலையீர்  வாயார  நாம்பாடி

                     யேருருவப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்புடையார்  விளையாட்டுப்போன்ற  செயல்களும்  இறைவன்  பெருமைக்  குணங்களுக்கு    மாறுபட  நிகழ்தலாகாவென்னுங்  குறிக்கோளைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்விறையருட்குணங்களில்  ஈடுபட்டு  அனுபவிக்குங்கால்   நிகழும்  மெய்ப்பாடுகளைப் புலப்படுத்தருளுகின்றார் .

பதவுரை :-  வார்  உருவம்  பூண்முலையீர்  =  கச்சணிந்த  அழகிய  அணிகலன்புனைந்த  நகில்களையுடையீர் ,  (சிவாநுபவ  நிலையினளாகிய  இப்பெண்)

ஓர்  ஒருகால்  எம்பெருமான்  என்றென்றே  நம்பெருமான்  சீர்   ஒருகால்  வாய்  ஓவாள்  =

ஒவ்வோரமயத்தில்  எம்பெருமானே  யென்று  பலமுறை  கூறி  நம்  தலைவனாகிய  சிவபெருமானுடைய  புகழ்மொழிகளை  ஒரு  பொழுதும்  வாய்  ஓயாமல்  பேசுவாள், 

சித்தம்  களிகூர =  உள்ளம்  களிப்பு மிக  ,

கண்நீர்  ஒருகால்  ஓவா  நெடும்தாரை பனிப்ப  =   கண்களில்  நீர்  ஒருகாலும்  வற்றாத  நெடிய  தாரையாகப்  பொழிய  ,

பார்  ஒருகால்  வந்தனையாள்  =  நிலத்தில்  ஒரே  முறையான  வணக்கத்தை  மேற்கொள்ளுவாள்,

விண்ணோரைத் தான்  பணியாள்  =  மற்றைத்  தேவரைக்குறித்து  வணங்கமாட்டாள்,

பேர்  அரையற்கு  ஒருவர்  பித்து  ஆமாறும்  இங்ஙனே  =  கடவுட்பேரரசனாகிய  சிவபெருமான் பொருட்டு  ஒருவர்  மாலுடையராதலும்  இவ்வாறுகொல்,

இவ்வண்ணம்  ஆட்கொள்ளும்  வித்தகர்  ஒருவர்  ஆர் =   இம்முறையில்  இவளை  ஆட்கொள்ளவல்ல   திறமையுடையவர்  ஒருவர்  யாரோ  அவருடைய, 

தாள்  வாயார  நாம்  பாடி  =  திருவடிகளை  வாய்நிறைய  நாம்  பாடிக்கொண்டு ,

ஏர்  உருவம்  பூம்புனல்  பாய்ந்து  ஆடு  =  அழகிய  தோற்றமுடைய  மலர்கள்  நிறைந்த  நீரில்  வீழ்ந்து  ஆடுவோமாக  என்பது.

விளக்கவுரை :-    இதுவும்  அது .  நீராடப் போந்த  கன்னியருள்  ஒருத்தி ,  உலகியலை  மறந்து  மனமொழிமெய்கள்  இறைவன்பால்  ஈடுபட்டுத்  தன் வயமிழந்துநிற்கும்   தலையன்பினளாகிய  மற்றொருத்தியின்  இயல்பை  ஏனைப்  பெண்கள்  உணரும்  வண்ணம்  காட்டுமுகமாகக்  கூறியது.  வாருருவப்  பூண்முலையீர்  என்று  கன்னியருள்  ஆண்டிற்  பெரிய  பெண்களை  விளித்தது ,  அப்பருவத்தில்  உலகியலின்பநுகர்ச்சியினும்  இறையன்பில்  ஈடுபடுதல்  சிறந்தது என்னும்  உட்கோளை  யுணர்த்துற்கென்க.  சிவாநுபவ நிலையில்  ஈடுபட்ட  இப்பெண்  ஒவ்வோரமயத்தில்  இறைவன்  திருநாமத்தைக்  கூறத்தொடங்கினால்  எம்  இறைவன்  எம்  இறைவன்  என்று  பலமுறை  வாய்  ஓயாமல்  பேசுவாள்  எனவும் ,  ஒழிவில்லாத  அப்பேச்சில்  இறைவனைப்  பற்றிய  புகழ்மொழிகள்  பல  அடுக்கடுக்காக வெளிப்படும்  எனவும்  கூறுகின்றவள் ,  இறைவனைச்  சுட்டுங்கால்  தன் கூற்றாக  நம் பெருமான் எனவும் ,  அவள்  கூற்றாக  அநுவதிக்குங்கால்    எம்பெருமான்  எனவும்  முறையே  பொதுவும்  சிறப்புமாகக்  கூறியது,  தம்மினும்  அவள் பத்திமை  மிகச்  சிறந்ததென்பதைப்  புலப்படுத்தற்கென்க . 

                       சீரொருகால்  என்புழி  ஒருகாலென்பது  காலத்தின்  மேற்று;  உம்மையை  விரித்துரைக்க .  பின்  நீரொருகால்  என்புழியும்  ஈதொக்கும் .  இறைவன்,  சித்தத்துள்  தித்திக்கும்  தேனாதலின்  சிவானந்தமாகிய  அத்  தேனுகர்ச்சியிலீடுபட்டு  இன்புறுதலின்,  “சித்தங்களிகூர” என்றார் .  கூர்தல்  –  மிகுதல்   கூர  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு.  களிகூர்தலின்  காரியமாகக்  கண்கள்  இடையறாது  நீர்பொழிந்தன வென்பார், “நீர்  ஒருகாலோவா  நெடுந்தாரை  கண்பனிப்ப”  என்றார் .  ஓவாமையும்  நெடுமையும்  முறையே  இடையீடின்மையையும்   மிகுதியையும்  உணர்த்தி நின்றன.

                         கண்களினின்று  நீர்  தாரையாக  ஒழுகப்பெற்ற  நிலையில்  எழுந்து ,  சிவபெருமானே  நம்  பரமபதி யென்னும்   ஒரேமுறையை  மேற்கொண்டு   நிலத்தில்  வீழ்ந்து  வணங்குவாள்  என்பார்  “பாரொருகால்   வந்தனையாள்”  என்றார் .  வந்தனை  –  வணக்கம் ,  ஒருகால்  –  ஒரே முறை ;  ஒரே நியமம்.  இதனால்  சிவபெருமானையன்றி  வேறு தேவரைக்குறித்து   வணங்கமாட்டாள்  என்பது  பெறப்படினும்  மேலும்  அவள்  உறுதியான  நிலையை  வற்புறுத்துதற்கு   “விண்ணோரைத்  தான்  பணியாள் “ என  எதிர்  மறை  முகத்தானுங்கூறப்பட்டது  .  மற்றைத்தேவரை  விண்ணோர்  என்றது ,  இந்திரன்  முதலிய  தேவர்கள்  நல்வினைப்பயனாக  விண்ணுலக  வாழ்க்கை பெற்றவரேயன்றி  வினையினீங்கி  விளங்கிய  அறிவின்  முனைவனாகக்  கருதத்தக்கவரல்லரென்பது  குறித்து .

                       ஈண்டு  வாயோவாள்  என்றதனால்  மொழியும்  சித்தங் களிகூர  என்றதனால் மனமும்,  வந்தனையாள்  என்றதனால்  மெய்யும்  ஆகிய  முக்கரணங்களும்  இறைவன்பால்  ஈடுபட்டமை  புலப்படுக்கப்பட்டபடியாம்  . மனம்  ஈடுபடுதல்  இல்வழி  நிகழும்  சொற்களும் செயல்களும்  பயனிலவாய்  முடியுமாதலின் ,  “சித்தங்களிகூர”  என்பது  முன்னும்  பின்னும்  ஏதுவாக  இயையுமாறு  இடைக்கட் கூறப்பட்டதென்க.  வாயோவாள்,  களிகூர, வந்தனையாள்  என்னும்  மூன்றுமே  முறையே  வாக்கு  மன மெய்களைக்  குறிப்பனவாக, இடைப்பட்ட  சித்தங்களிகூர  என்பதனையடுத்துக்  கண்பனிப்ப  என்று  கூறியது,  உள்ளக்குழைவு  புலனாயவாறு  உணர்த்தற்கென்க.

“நாயகன்  சேவடி  தைவரு  சிந்தையும்  நைந்துருகிப்

பாய்வது  போலன்பு  நீர்பொழி  கண்ணும்”

என்று  சேக்கிழார்    கூறியதும்  இங்கே  நினைக்கத்தக்கது . 

                  பேரரையன்  என்றது  படைப்போன்    முதலிய  தலைவர்க்கெல்லாம்  தலைவனாக விளங்கும்   கடவுட்பேரரசனாகிய  சிவபெருமானை.  பித்து,  அஃதுடையார்  மேனின்றது .  மிகப்பெரிய  கடவுட்பேரரசன்  மாட்டு  ஒரு  சிறுமி  மால்கோடல்  பெரிதும்  வியக்கத்தக்கதென்பார்  “பேரரையற்  கிங்ஙனே  பித்தொரு  வராமாறும்”  என்றனர் . ஒருவர்  பித்து  ஆமாறும்  இங்ஙனே  என  இயைக்க.  இங்ஙனேயென்பது  இத்தன்மைகொல்  என  வியப்புக்  குறிப்புணர நின்றது.  உயிர்  எத்துணைத்  தகுதியுடையதாயினும் ,  இறைவன்  அருளில்  வழித்  தலையன்பில்   தலைப்படல்  கூடாதாகலின்,  இங்ஙனம்  முதிர்ந்த  பத்திமையுடையளாம்  வண்ணம்  இவளை  ஆட்கொள்ளவல்ல  சிறந்த  சதுரப்பாடுடையன்  சிவபெருமான்  ஒருவனேயாதல் வேண்டுமென்பார் . .”ஆரொருவரிவ்வண்ணம்   ஆட்கொள்ளும்  வித்தகர்  “  என்றார் .  இங்ஙனம்  தலையன்பினராம்  வண்ணம்  நம்மையும்  ஆட்கொண்டருளுமாறு  அப்பெருமான்  திருவடிகளை  வாயாரப்பாடி  நீராடுவோமாக  வென்பாள்  “தாள் வாயார  நாம்பாடி ………புனல்  பாய்ந்தாடு” என்று  கூறினாளென்பது .  பத்திமையிற்  சிறந்த  இந்நங்கை  வாக்கு  மனம்  மெய்  மூன்றானும்  ஈடுபட்டாள்;  இங்ஙனம்  ஒருங்கு  நிகழ்தல்  நமக்கு  அரிதாயினும்  மொழிப்பணியையேனும்   முந்துறச்  செய்வோமாக  என்பது  கருத்து .  இவள்  இறைவன்  திருவடி  முதலியவற்றின்  உறுப்பழகை  அகக்கண்ணாற்கண்டு  கண்ணீரிலாடினாள் .  அத்தகுதி நமக்கு  இன்றெனினும்  அவ்வுறுப்புக்களை   உவமைமுகமாகக்  காட்டும்  அழகிய  தோற்றமுடைய  மலர்களைப்  புறக்கண்ணாற்கண்டு   நாம்  தண்ணீரிலேனும்  ஆடுவோமாக  வென்பார்  “ஏருருவப்  பூம்  புனல்  பாய்ந்தாடு “ என்றாள்  என்பது . 

                          இதன்கண்   “ஆரொருவரிவ்வண்ணம்  ஆட்கொள்ளும் வித்தகர் தாள்”  என  இறைவன்  திருவடிப்பெருமை  கூறப்படுதலின்  சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறு  அறிக.

பாடல்  16. 

முன்னிக்கடலைச்   சுருக்கி   யெழுந்துடையாள்

             என்னத்   திகழ்ந்தெம்மை   யாளுடையா   ளிட்டிடையின்

மின்னிப்   பொலிந்தெம்   பிராட்டி   திருவடிமேற்

              பொன்னஞ்   சிலம்பிற்   சிலம்பித்   திருப்புருவம் 

என்னச்   சிலைகுலவி    நந்தம்மை   யாளுடையாள்

               தன்னிற்   பிரிவிலா   வெங்கோமான்   அன்பர்க்கு 

முன்னி   யவணமக்கு   முன்சுரக்கும்    இன்னருளே

               யென்னப்   பொழியாய்   மழையேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இறையருளில்   ஈடுபட்டு  அநுபவிக்குங்கால்   நிகழும்  மெய்ப்பாடுகளைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வநுபவப்பயனாக  இறைவன்   சத்திமூலமாக  மெய்யன்பர்க்குச்  சுரக்கும்   அருட்பெருக்கை  வருணித்து   அருளிச் செய்கின்றார். 

பதவுரை :–    மழை  =  முகிலே , 

கடலை  முன்னிச்  சுருக்கி  எழுந்து  உடையாள்  என்னத்  திகழ்ந்து  = 

நீ  கடலைச்  சார்ந்து  அது  குறைய  நீரை  முகந்து  விண்ணில்  எழுந்து  எம்மையுடையவளாகிய  உமையம்மையைப்  போல  நீலநிறம்  பெற்று  விளங்கி,

எம்மை  ஆளுடையாள்  இட்டு  இடையின்  மின்னிப்  பொழிந்து  =    

எங்களை  ஆட்கொண்டருளிய  அவ்வம்மையின்  சிறிய  இடையைப்  போல  மின்னுதலைச்  செய்து  விளக்கமுற்று  ,

எம்  பிராட்டி   திருவடிமேல்  பொன்  அம்  சிலம்பின்  சிலம்பி  = 

எங்கள்  தலைவியின்  திருவடிமேல்  அணிந்த  பொன்னாலாகிய  அழகிய  சிலம்பைப்  போல  ஒலித்து ,

திரு  புருவம்  என்னச்  சிலை  குலவி   =

அவ்வம்மையின்  அழகிய  புருவம்  போல  (வான)வில்  விளங்கச் செய்து,

நம்  தம்மை  ஆளுடையாள்  தன்னில்  பிரிவு  இல்லா  எம்  கோமான்  அன்பர்க்கும்  = 

நம்மை  அடிமையாக  வுடையவளாகிய  பெருமாட்டியினின்றும்   பிரிதலில்லாத   எம்பெருமானுடைய  அன்பர்க்கும்  ,

நமக்கும்  =  சிறியேமாகிய  நமக்கும்  ,

அவள்  முன்  முன்னி  சுரக்கும்  இன்னருளே  என்னப்  பொழியாய்  = 

அவ்வம்மை  முற்படத்  திருவுளங்கொண்டு  சுரந்தருளும்  இனிமைமிக்க  அருட்  பெருக்கைப்போலப்  பொழிவாயாக  என்பது. 

விளக்கவுரை :-   இஃது  இப்பாவை  நோன்பினால்  விரும்பப்படும்   பொதுவும்  சிறப்புமாகிய   பயன்களுள்,  நாடு  செழிக்க   மழை  பெய்தலாகிய  பொதுப்பயனைவேண்டிக்  கன்னிப்பெண்கள்  கூறியதாக  அருளிச்  செய்யப்பட்டது , “வெம்பாதாக  வியினிலவரைப்  பென”  (இப்பெருநிலம்  மழையால்  வெம்மை  நீங்கப்  பெற்றுக்  குளிர்வதாக)  என்று  11 ஆம்  பரிபாடலிற்  கூறியதும்  இவ்வுண்மையைக்குறிக்கும் .  முன்னுதல்  –  அடைதல்   சுருக்குதல்  –  நீரை  முகந்து  கடலைக்  குறைத்தல். 

“ நெடுங்கடலுந்   தன்னீர்மை   குன்றும்  தடிந்தெழிலி

தானல்கா   தாகி   விடின்”

என்புழி ,  தடிந்து  என்பதற்குக்  குறைந்து  எனப்  பொருள்  கொண்டு  “ஈண்டுக்  குறைத்தலென்றது  முகத்தலை ;  அது  “கடல்  குறை  படுத்தநீர்  கல்குறைபட வெறித்து”  என்பதனானும்  அறிக” என்று  பரிமேலழகர்  எழுதியவுரையும்    ஈண்டுக்  கருதற்பாலது .  நீருண்டமேகம்  நீலநிறம்  பெற்றுத்  தோன்றுமாதலின்  அஃது   அம்மையின்  திருவுருவம்போல  விளங்கியதென்பார்  “உடையாளென்னத்திகழ்ந்து“  என்றார்.  “நாமும்  அரனுடைமை”  என்றபடி  எல்லாப்  பொருள்களையும்  உடைமையாகக் கொண்டு  உடையானாக  விளங்கும்  இறைவனின்  வேறுபாடின்மைபற்றி  இறைவி  உடையாள்  என்னப்பட்டாள் .  அடைமொழியின்றி  வரும்  உடையான் ,  உடயாள்  என்னுஞ்  சொற்கள்  முறையே  இறைவனையும்  சத்தியையும்   குறிப்பனவாம் . 

“உடையா  ளுன்றன்  நடுவிருக்கும்

உடையாள்  நடுவுள்  நீயிருத்தி”

என்று  பிறிதோறிடத்து  அடிகள்  கூறியிருத்தலும்  உணர்க.  முகில்  நீருண்டு  விளங்குநிலைக்குச்  சத்தியின்  அருள்சூற்  கொண்டநிலை  உவமையாயிற்று. கருக்கொண்டமுகில்  மின்னலிட்டு  ஒலித்தல்  இயல்பு .  அவற்றிற்கு  முறையே அம்மையின்  சிறிய  இடையையும்   அவள்  திருவடிச்சிலம்பையும்   உவமையாக்கி  “எம்மை  ஆளுடையாள்  இட்டிடையின் மின்னி”  எனவும் ”எம்பிராட்டி   திருவடிமேற்  பொன்னஞ்சிலம்பிற்  சிலம்பி “  எனவும்  கூறுவராயினர். 

                 ஈண்டு  உவமமாகக்  கொள்ளப்பட்ட  உலகன்னையைச்  சுட்டுங்கால்  “உடையாள்”  எனவும்  “எம்மையாளுடையாள்”  எனவும் , “எம்பிராட்டி” எனவும்  முறையின்  கூறிய  உட்கோள்  என்னையெனின்,  கூறுதும்.  உயிர்த்தொகுதிகளின்  நிலைகளைப்  பற்றிச்  சிவநெறிப்பனுவல்  கூறுங்கால்  அவைகள்  காரணாவத்தை  காரியாவத்தை யெனப்  பகுத்து  விரித்து  விளக்கப்பட்டன.  அவற்றுள்  காரணாவத்தை  கேவலம்  சகலம்   சுத்தம்  என  மூவகைப்படும் .  அநாதிநித்தியமான  உயிர்  எல்லாம்  ஒடுங்குங்காலத்து  மாயாகாரணத்திலே  யொடுங்கி,  படைப்புக்காலமளவும்  ஆணவமலத்தாலே  மறைப்புண்டு ,  ஒன்றும்  அறியாமற்கிடக்கும்  நிலை  கேவலமாகும் .  படைப்புத்தொடங்கி  எல்லாம்  ஒடுங்குங்காலம்    வரை  உடல்  கரணம்  இடம்  நுகர்வுகளைப்பெற்றுப்  பிறந்திறந்துழலும்   நிலை  சகலமாகும் .  இங்ஙனம்  கேவல  சகலப்பட்டுப்  பிறந்திறந்து   திரியும்  நிலையில்  திருவருளாலே  ஆணவமலபாகம்  வர,  இருவினையொப்பும். சத்திநிபாதமும் ,  குருவருளும்,  ஞானசாதனமும்,  மும்மலநீக்கமும்,  சிற்றறிவொழிவும்  பெற்று  ஞானப்பெருக்கத்தால்  இறைவன்  திருவருளைக்கூடிப் பேரின்புறும்நிலை  சுத்தமாகும் . இவ்வுண்மையை ,                    

கேவலஞ்  சகலஞ்  சுத்த  மென்றுமூன்  றவத்தை  யான்மா

மேவுவன்  கேவ  லந்தன்  னுண்மைமெய்  பொறிக  ளெல்லாம்

காவலன்  கொடுத்த  போது  சகலனாம்  மலங்க  ளெல்லாம்

ஓவின  போது  சுத்த  முடையனுற்  பவந்து  டைத்தே”

என்னும்  சிவஞானசித்தித்  திருவிருத்தத்தால்  உணரலாம் .  இந்நிலைகளெல்லாம்  உயிர்நலங்கருதிய  இறை யருட்சத்தியால்  நிகழ்வனவாம்.  இவ்வுண்மையை  அநுபவமுடைய  ஞானதேசிகராகிய  தாயுமான  அடிகள்  கூறிய  பின்வரும்  செய்யுளாலும்  உணர்க.

காரிட்ட  ஆணவக்  கருவறையி  லறிவற்ற

             கண்ணிலாக்  குழவி  யைப்போற்

கட்டுண்  டிருந்தவெமை  வெளியில்விட்  டல்லலாங்

              காப்பிட்  டதற்கி    சைந்த

பேரிட்டு  மெய்யெனப்  பேசுபாழ்ம்  பொய்யுடல்

             பெலக்கவினை  யமுத   மூட்டிப்

பெரியபுவ  னத்தினிடை  போக்குவர  வுறுகின்ற

              பெரியவிளை  யாட்ட  மைத்திட்

டேரிட்ட  தன்சுருதி  மொழிதப்பில்  நமனைவிட்

               டிடருற  வுறுக்கி  யிடர்தீர்த்

திரவுபக  லில்லாத  பேரின்ப  வீட்டினில்

               இசைந்துதுயில்  கொண்மி  னென்று

சீரிட்ட  வுலகன்னை  வடிவான  வெந்தையே

                சித்தாந்த  முத்தி  முதலே

சிரகிரி  விளங்கவரு  தக்ஷிணா  மூர்த்தியே 

                சின்மயா   னந்த      குருவே”

      இதன்கண்  , “காரிட்ட”  என்பது  முதல்   “கட்டுண்டிருந்தவெமை”  என்பது  வரை  கேவலநிலையாகவும்  “வெனியில்  விட்டு”  என்பது  முதல்  “நமனைவிட்டு  இடருற  வுறுக்கி “ என்பதுவரை  சகலநிலையாகவும்  “இடர்  தீர்த்து “  என்பது  முதல்  “சீரிட்ட”  என்பது  வரை  சுத்தநிலையாகவும்   உய்த்து உணர்ந்து  கொள்ளத்தக்கன.  “உலகன்னை  வடிவான  எந்தை”  என்பது  இவ்வெல்லாம்  சிவசத்தியால்  நிகழ்வன வென்பதைக்  குறிப்பிற்  புலப்படுப்பதாம்.  

                 இம்முறையிற்  கேவலநிலையிற்  கிடக்கும்  உயிர்த்தொகுதிகளை   யுடைமையாகக்  கொண்ட  நிலையில்  அன்னை,  “உடையாள்”  எனவும் ,  பின்  சகலநிலையில்  பிறப்பில்  உழலும்  நமக்குத்  தனுகரண  முதலியவற்றைத்  தந்து  சிறிது  அறிவு  விளங்கச்    செய்து  ஆட்கொள்ளுதற்குத்  தகுதியளித்தலின்  அந்நிலை நோக்கி  “எம்மையாளுடையாள்”  எனவும் ,  பின்  சுத்தநிலையில்  பஞ்சமலங்களும்  நீங்கிச்  சிவத்தோடு  கூடி  இன்புறுதற்கு  உதவி  புரியும்  இயல்பு  நோக்கித்  தலைவியாயினாள்  என்பார்  “எம்பிராட்டி”  எனவும்  கூறப்பட்டாள்  என்க.   சகலநிலை  கருதி  “எம்மையாளுடையாள்  இட்டிடையின்  மின்னிப்  பொலிந்து “  என்றதும்,  சுத்தநிலை  கருதி  “எம்பிராட்டிதிருவடி” என்றதும்  குறிக்கொளத்தக்கன.

                     கருக்கொண்ட  மேகம்  மேலெழுந்து  மின்னிக்  குமுறி  வில்லிடல்  இயல்பாதலின்  “திருப்புருவம்  என்னச்  சிலைகுலவி”  என்றார் . திருவென்னும்  அடையால்  புருவம்  பிரட்டியினுடையது  என்று  கொள்ளல் வேண்டும் .  இது  முத்திநிலையிற்  சேர்க்கும்  நயன தீக்கையைக்  குறிப்பதாகும் .  அதன்மேல்  மழை  பொழிதற்கு  அம்மையின்  அருட்பொழிவை  உவமம்  ஆக்கிக்  கூறினர், “நம்தம்மை  யாளுடையாள்  தன்னிற்  பிரிவில்லா  எங்கோமான்”  என்றது  இறைசெயலெல்லாம்  சத்தியையின்றி  யமையாமை  குறிப்பிடற்கு என்க.  “சத்தியுஞ்  சிவமுமாய  தன்மை “  என்னும்  சிவஞான  சித்திச்செய்யுளில்   “அவளால்  வந்த  ஆக்கம்  இவ் வாழ்க்கை யெல்லாம் “  என்று  கூறியதும்  ஈண்டு  கருத த்தக்கது.  “எங்கோமான்  அன்பர்”  என்றது,  இறையருட்கு  ஆளாகி  மலபரிபாகம்  இருவினையொப்பு  முதலியன  பெற்றுச்  சீவன்முத்தராய்த்  திகழும்  பேரன்பரை.  “நமக்கும்” என்றது  அத்துணையன்பில்லாத  எளியேமாகிய  நம்மனோர்க்கும்  என்றபடி.  அன்பர்க்கும்  நமக்கும்  என்புழி  உம்மைகள்  எண்ணுப்  பொருளன.  “சிறைவான்  புனற்றில்லைச்  சிற்றம்பலத்துமென்  சிந்தையுள்ளும், உறைவான்”  என்புழிப்போல  முறையே  உயர்வு சிறப்பு  இழிவுசிறப்பு  உம்மைகளாகவும்  கொள்ளலாம் .  முன்  முன்னி  என  இயையும்.  இருதிறத்தார்க்கும்  முற்படத் திருவுளங்கொண்டு  என்பது பொருள் .  மெய்யன்பராகிய  அடியாரோடு  அத்துணை  அன்பில்லாத  நம்மையும் ஒப்பக்கருதி  யென்றபடி .  சுரத்தல்  மேன்மேலும்  பெருகுதல் ;  தன்  கருணை  அள்ளக்குறையாமை.  அம்மையின்  அருட்பெருக்குப்  பாசவெப்பத்தை  யொழித்துத்  தண்ணென்று  இனிமைபயந்து  நிற்றலின்  “இன்னருள்”  என்னப்பட்டது. “இன்னருளே  என்னப்  பொழியாய் “  என்புழி  ஏகாரம்  தேற்றப்பொருட்டு;  பயன்விளைதல்  நோக்கிப்  பொழிய  வேண்டுமென்பது.  “உயர்ந்ததன்மேற்றே  யுள்ளுங்காலை”  என்றபடி,  உலக நலங்குறித்துப்  பொழியும்  மழைக்கு  உயிர்  நலங்குறித்துச் சுரக்கும்  அம்மையின்  திருவருள்  ஒப்பாயிற்றென்பது.  பாவை நோன்பில்  பொதுவும்  சிறப்புமாகவுள்ள   பயனிரண்டனுள்  பொதுப்பயனாக  மழை  வளத்தை  வேண்டியது  மிகவுஞ்  சிறந்தது. “நீரின்றமையாதுலகு” “மழையின்றி   மாநிலத்தார்க்கில்லை”  என்பன  பொருளுரை .

                      இதன்கண்   உலகத்திற்கு  இன்றியமையாது  வேண்டப்படும்  மழைக்கு  உவமையாகச்  சிவசத்தியின்  அருட்பெருக்கைக்  கூறியிருத்தலின்  “சத்தியை  வியந்தது”  வெளிப்படையிற்  புலனாயவாறறிக.

                                                      ****************************

பாடல் 17.

செங்க  ணவன்பாற்  றிசைமுகன்பாற்  றேவர்கள்பால்

             எங்கு  மிலாததோ ரின்பம்நம் பாலதாக்

கொங்குண்  கருங்குழலி  நந்தம்மைக்  கோதாட்டி

            இங்குநம்  மில்லங்க  டோறும்  எழுந்தருளிச்

செங்கமலப்  பொற்பாதந்  தந்தருளுஞ்  சேவகனை

            அங்க  ணரசை  யடியோங்கட்  காரமுதை

நங்கள்  பெருமானைப்  பாடி  நலந்திகழப்

              பங்கயப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  சத்தி  மூலமாக  மெய்யன்பர்க்குச்  சுரக்கும்  அருட்பெருக்கைப்  புலப் படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வருளமுதத்தால்   விளையும்  இன்பத்தின்  அருமையைப்  பாராட்டி  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  கொங்கு  உண் கருமை குழலி  =  மணம்  தங்கிய  கரிய  கூந்தலையுடைய  பெண்ணே,

செங்கணவன் பால்  திசைமுகன்பால்  தேவர்கள்பால்= 

திருமாலிடத்தும் ,  பிரமனிடத்தும்,  இந்திரன்  முதலிய  தேவர்களிடத்தும் ,

எங்கும்  இல்லாதது  ஓர்  இன்பம்  நம்பாலதாக =  மற்றெவ்விடத்து   உள்ளார்பாலும்   இல்லாத தாகிய  ஒப்பற்ற  பேரின்பம்  எளியேமாகிய  நம்மிடத்ததாக  , 

நம்தம்மைக்  கோதாட்டி  =  நம்மை  வினை மாசு களைந்து,

இங்கு  நம்  இல்லங்கள்  தோறும்  எழுந்தருளி = 

இந்  நிலவுலகத்தில்  நம்  வீடுகள்தோறும்  எழுந்தருளி  வந்து ,

செங்கமலம்  பொன்பாதம்  தந்தருளும்  சேவகனை  =

செந்தாமரை  மலர் போன்ற  அழகிய  திருவடிகளை  எளிமையில்  தந்தருளும்  வீரனை , 

அம்  கண்  அரசை  =  அழகிய  அருணோக்கமுடைய  இறைவனை ,

அடியோங்கட்கு  அருமை  அமுதை = 

அடிமைகளாகிய  நமக்குக்  கிடைத்தற்கரிய  அமுதமாக  உள்ளவனை,

நங்கள்  பெருமானைப் பாடி  =

நம்முடைய  தலைவனைப்  புகழ்ந்து  பாடி ,

நலம்  திகழ  =  நம்மனோர்க்கும்  நன்மை  சிறக்க,

பங்கயப்  பூம்  புனல்  பாய்ந்துஆடு  = 

தாமரைமலர்  முதலியவற்றால்  பொலிந்து  விளங்கும்  நீரிற்குதித்து  ஆடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-  இது  நீராடுங்கால்  ஒருத்தியை  நோக்கிக்  கன்னியர்  பலருங்கூறியதாக  அருளிச்செய்யப்பட்டது,  இப்பகுதியில்  மகளிரை  முன்னிலைப்படுத்திய  பிற  இடங்களிலெல்லாம் “வாட்டடங்  கண்மாதே” (1) “நேரிழையாய் “  (2)  “முத்தன்ன  வெண்ணகையாய்”  (3)  “ஒண்ணித்திலநகையாய்”  (4)  “தேன்வாய்ப்படிறீ”  (5)  “வாருருவப்பூண்முலையீர் “ (6) என்று  அவர்  தம்  முன்னழகு  சுட்டப்பட்டன .  அவ்வாறாகவும்  ஈண்டு  “கொங்குண்  கருங்குழலி”  எனப்  பின்னழகைச்  சுட்டிக் கூறியது,  விளிக்கப்பட்டவள்  இறைவனுடைய  அருட்பெருக்கையும்   பேருபகாரத்தையும்  விளையாட்டுநிலையில்  புறக்கணிப்பது  போல்  திரும்பி  நின்றாளாக ,  அந்நிலையில்  அவள்  கூந்தலழகைப்  புகழ்வது  போலச்  சுட்டிக்கூறி  வற்புறுத்தியபடியாம் .

              திருமால் , நான்முகன் , இந்திரன்  முதலிய  தேவர்கள் பாலும்  மற்றெவ்விடத்துள்ளார்  பாலும்  அமையாத  ஒப்பற்ற  சிவானந்த மென்பார்      “செங்கணவன்   பால்  திசைமுகன் பால் ,  தேவர்கள் பால்   எங்குமிலாதது  ஓர்  இன்பம்  “  என்றார் .  திருமால்  முதலிய  தேவர்கள்  சிவபுண்ணியமிகுதியால்   அதிகாரநிலையங்களைப்  பெற்று  அம்முறையில்  ஒரோவமயம்  சிவபெருமான் பக்கல்  அணுகும்  பேறு  பெற்றவராயினும் ,  அதிகாரச்  செருக்கால்  உயிர்முனைப்புடன்  தத்தம்  செயல்களில்   தலைப்படும்  இயல்புடையராதலின்  இறைவனது  பேரானந்தப்  பெருஞ்செல்வத்தை  அநுபவிக்கும்  பெறலரும்பேறு பெற்றிலரென்ப .  இவ்வுண்மையை ,

“இந்திரனு  மாலயனும்  ஏனோரும்  வானோரும்  

அந்தரமே  நிற்கச்   சிவனவனி  வந்தருளி”     

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலானும்  அறிக.  இங்ஙனம்  இறைவன்  தன்  அணிமையில் இருக்கும்  திருமால்  முதலியோரைக்  கடந்து  மெய்யன்பரை  ஆட்கொள்ளும்  நிமித்தம் நிலவுலகத்துக்கு  எழுந்தருளி வருதலால்  திருமாலும்  நான்முகனும்  விண்ணுலகைவிட்டு  நிலவுலகிற்  பிறக்கும்  பேறு  பெற்றிலமே  யென்று  ஏக்கமுற்று  இவ்வுலகிற் பிறக்கப்  பெரிதும்  விருப்புற்றனர்  என்று  அடிகள்  அருளியிருத்தலும்  ஈண்டுக்  கருதத்தக்கது. 

                    திருமால்  ஓரமயம்  தன்  கண்ணிடந்து   அருச்சித்தும்  அதன்  பயனாக  இறைவன்பாற்பெற்றது  சக்கரப்படையேயன்றிச்  சிவானந்தப்பேறன்று  என்பது  குறித்து  ஈண்டுச்  “செங்கணவன்”  என்றும் ,  பிரமன்    நான்குமுகங்களாலும்  மறைபாடி  வழுத்தியும்  பெற்றது  முப்புரம்  அழிப்புழி  இறையவர்க்குச்  சாரதியாம்  அத்துணையேயன்றி  வேறு  இன்றென்பது  தோன்றத்  “திசைமுகன் “  என்றும்,  இந்திரன்  முதலியோர்  ஒளியுருவம்  பெற்றும்  பேரொளிப்பிழம்பாகிய   இறைவனை  வேண்டிப்பெற்றது  நரை  திரை  போக்கவல்ல  அமுதவுண்டியானாய  சிற்றின்பமேயன்றிப்  பிறிதின்றென்பது  புலப்படத்   “தேவர்கள்  என்றும்  சுட்டப்பட்டனரென்க .  “எங்கும்”  என்றது  ஆகுபெயர்; விண்ணுலகத்தன்றிப்  பிறவிடங்களிலுள்ள  முனிவர்  முதலியோரிடத்தும்  என்றபடி.  “ஓர்  இன்பம்”  என்றது  ஈடும்  எடுப்புமில்லாத  நித்திய  இன்பத்தை.  சிறந்த  தவமுதலியன  செய்து  தகுதிவாய்ந்தவராலும்  பெறுதற்கரிய  இன்பம்.  அத்துணைத்தகுதி  ஒருசிறிதுமில்லாத  ஏழைப்பெண்மக்களாகிய  நம்மிடத்து  நிலவென்பார் “நம்பாலதாக“  என்றனரென்க.  கோதாட்டுதல்  –   குற்றங்களைதல்.  இறைவனது  பேரானந்தம்  நம்பால்  தங்குதற்குத்   தடையாகவுள்ள  வினைமாசு  போக்கியென்பது  கருத்து .  நல்லின்பமாகிய  அமுது  பெய்து  வைத்தற்குக்  கொள்கலம்  தூய்மைசெய்தபடியாம்.  இங்கு  –  இந்நிலவுலகத்தில்.  “நாம்  இல்லங்கள்தோறும்  எழுந்தருளி”  என்றதனால்  திருமால்  முதலிய  தேவர்களெல்லாம்  இறைவன்  எழுந்தருளியிருக்கும்  சிவலோகத்தே  சென்று  அவன்  திருக்கோயிற்கண்ணே  வழிபட  முயன்று  செவ்விபார்த்திருப்ப,  இறைவன்  அன்னார்காட்சிக்கு  அரியனாய்  இந்நிலவுலகத்தே  போந்து  மெய்யன்பர்  உறையும்  சிறிய  குடில்கள்  தோறும்  வலிய  எழுந்தருளி  அவர்க்கு  எளிமையிற்  காட்சியளிக்கும்  இயல்பினன்  என்னும் உண்மை  புலனாயவாறு  அறிக .

“முந்திய  முதனடு  விறுதியு  மானாய்

           மூவரு  மறிகில  ரியாவர்மற்  றறிவார் 

பந்தணை  விரலியும்  நீயும்நின்  னடியார்

             பழங்குடில்  தொறுமெழுந்  தருளிய  பரனே”      

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  ஈண்டு  நோக்கத்தக்கது.

              ஒரு  பேரரசன்  தன்  தலைநகரைவிட்டுப்  பிறிதோரிடத்துக்கு  வரனேர்ந்தால்  வந்து  தங்கும் நேரம்  மிகச்சிறிதாயினும்   அவ்விடத்தில்  அலங்காரமாளிகையமைத்தல்  உலகயில்பு .  மேலும்  அவ்வரசன்  தன்  மனைவியோடு  வந்து  தங்குவதனால்  இன்னும்  சிறப்பாக  இடம்  அமைக்கவேண்டுமென்பது  கூறவேண்டா.  அங்ஙனமாகவும்  இங்கே  இறைவன்  எழுந்தருளிய     இடம்  குடில்  எனவும் ,  அதுவும்  பழமையானதெனவும்,  ஆண்டு  எழுந்தருளுங்கால்  உலகன்னையாகிய  தேவியாரொடு  எழுந்தருளினான்  எனவும்,  கூறிய  அருமை  நினைந்து  இன்புறத்தக்கது .  நம்  இல்லங்களுக்கு  எழுந்தருளிய  அளவிலன்றி  அப்பெருமான்  தன்பொன்  போன்ற  திருவடிகளையும்  தந்தருளினான்  என்று  கருணைமிகுதியைப்  பாராட்டினரென்பது.  கோதாட்டித்  திருவடியளித்தல் ,  வினைமாசொழித்துச்  சிவஞானம்  அருளிய  குறிப்பைப்  புலப்படுக்கும்  .  சேவகன்  –  வீரன்  ;  ஈண்டுக்  கொடைவென்றியான்  மேம்பட்டவன்  என்பது .  திருமால்  முதலியோர்க்கும்  கிடைக்காத  இன்பம்  ஏழைகளாகிய  மக்களிடமாக  அவர்தம்  இல்லங்களுக்கு  வலிய  வந்து  சிவஞானம்  வழங்கிய  பெருங்கொடையாளன்  என்பது  கருத்து.  நம்பாலதாகக்   கோதாட்டி  எழுந்தருளித்  தந்தருளும்  சேவகன்  என  முடிக்க.  இதனால்  பேரின்ப  விளைவிற்குக்  காரணமாகச்  சிவஞானம்  அருளினன்  என்பது  புலனாம் , கண்ணுக்கு  அழகு  கண்ணோட்டமாதலின்   அம்கண்  –  அருணோக்கம்  என்று  கூறப்பட்டது .  கொடைவீரனாகிய  அரசனாதலின்  அவன்பால்  அருட்குணம்  உண்டாயிற்றென்பதும்,  அக்குணம்  உண்மையானே  அரிய  அமுதமாகநின்று  பயன்விளைத்தனன்  என்பதும் ,  அப்பயனை  நமக்குச்  சிறப்பு  முறையில்  வழங்கியமையால்  நம்  உண்மைத்தலைவனாயினன்  என்பதும்  உணர்ந்து   ”அங்க  ணரசை  அடியோங்கட்  காரமுதை  நங்கள்  பெருமானை”  என்றனரென்க. அத்தகைய  பெருமானைப்  புகழ்ந்து  பாடுதலானே  நம்மனோர்க்கு  எல்லாநலங்களும்   வெளிப்படையில்  உண்டாம்  என்பார், “பாடி  நலந்திகழ” என்றார் .  நலம்  விளங்கும்  வண்ணம்  தாமரை  மலர்களாற்  பொலிவு  பெற்ற  நீர்  நிலையில்  மகிழ்ச்சி  மீக்கூர்ந்து  குதித்து நீராடுவோமாக  என்றனர்  என்பது.

                இதன்கண்  “ செங்கமலப்  பொற்பாதந்  தந்தருளுஞ்  சேவகன்” என்றதனால்  திருவடியாற்  பெறப்படும்  சத்தியை  வியந்தது   புலனாயவாறறிக . 

     முதல்  திருப்பாட்டின் இறுதியில்  விளக்கம்  காண்க .

                                             *********************************

பாடல்  18.

அண்ணா  மலையா  னடிக்கமலஞ்  சென்றிறைஞ்சும்

         விண்ணோர்  முடியின்  மணித்தொகைவீ  றற்றாற்போற் 

கண்ணா  ரிரவி  கதிர்வந்து  கார்கரப்பத் 

          தண்ணார்  ஒளிமழுங்கித்  தாரகைகள்  தாமகலப் 

பெண்ணாகி  யாணா  யலியாய்ப்  பிறங்கொளிசேர்

           விண்ணாகி  மண்ணாகி  யித்தனையும்  வேறாகிக் 

கண்ணா  ரமுதமுமாய்  நின்றான்  கழல்பாடிப் 

            பெண்ணேயிப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ ரெம்பாவாய்.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  திருவருளால்  விளையும்  இன்பத்தின்  அருமையைப்  பாராட்டியருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அவ்வின்பப்  பேற்றிற்குரிய  உயிரின்  பக்குவநிலைக்கு  ஏற்றவாறு வெளிப்பட்டு  நின்று   இறைவன்  அருளும்  முறையைப்  புலப்படுத்தருளுகின்றார்.

பதவுரை :-  அண்ணாமலையான்  அடிக்கமலம்  சென்று  இறைஞ்சும்  = 

திருவண்ணாமலையில்  எழுந்தருளி யிருக்கும்   இறைவனுடைய  திருவடித் தாமரை  மலர்களைச்  சார்ந்து  வணங்கும் ,

விண்ணோர்  முடியின்  மணித்தொகை  வீறு  அற்றாற்போல் = 

தேவர்கள்  முடியணிக்கண்  உள்ள  பலவகை  மணித்தொகைகளும்  பொலிவிழந்து  ஒளிமழுங்கியொழிந்தமை  போல, 

கார்  கரப்ப கண்  ஆர்  இரவி கதிர் வந்து =

இருள்  நீங்க  எங்கணும்  பரவிய  கதிரவன்  ஒளி  வெளிப்பட்டமையால், 

தாரகைகள்  தண் ஆர் ஒளி மழுங்கி  அகல  =

விண்மீன்கள்  தம்  மெல்லிய  ஒளி  பொலிவிழந்து  மழுங்கி  மறைய, (இந்நிலையில்)

பெண் ஆகி  ஆண் ஆய்  அலி  ஆய் பிறங்கு  ஒளிசேர்  விண்  ஆகி  மண்  ஆகி  =

பெண்ணாகியும்  ஆணாகியும்  அலியாகியும்  ஒளிவிளங்கும்  ஆகாயமாகியும்   நிலமாகியும்,

இத்தனையும்  வேறு  ஆகி  = 

இத்துணைப்  பொருள்களினின்றும்  வேறுபொருளாகியும்  ,

கண் ஆர் அமுதமும்  ஆய்  = 

ஞானானுபவத்திற்கு  அமுதமயமாகியும்  ,

நின்றான்  கழல்பாடி  = 

நிலைபெற்று  நிற்கும்  சிவபெருமானுடைய  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடி ,

பெண்ணே =  பெண்ணே

இப்பூம்புனல்  பாய்ந்து  ஆடு  = 

பொலிவு  பெற்ற  இந்நீர்நிலையிற்  குதித்து  ஆடுவோமாக  என்பது .

 விளக்கவுரை :-  இது  நீராடுங்கால்  ஒருத்தியை நோக்கிக்  கூறுமுகமாகக்  கதிரவன்  தோன்றிய  குறிப்பைப்  புலப்படுத்துக்  கூறுகின்றது.  திருவண்ணாமலை  ஒருகாலத்து  ஒளிவடிவினதாக  ஓங்கி  நின்றதென்ப  இதனை, 

“கடல் வண்ணனும்  வேதக்,

கிளர்தாமரை  மலர்மேலுறை  கேடில்புக  ழோனும்

அளவா  வணம்  அழலாகிய  அண்ணாமலை”

என்பர்  திருஞானசம்பந்தர்.  இங்ஙனம்  பேரொளிப்பிழம்பாகவுள்ள  மலை யுருவில்  விளங்கிய  இறைவனுடைய  திருவடிகளைச்  சார்ந்து வணங்கும்  தேவர்களின்  தலையிலணிந்த  முடிகளில்  பாதிக்கப்பட்டுள்ள  பலவகை  இரத்தினங்களெல்லாம்   அத்திருவடிப்  பேரொளிமுன்,  தமக்குப்  பொலிவுதரும்  சிற்றொளிகளை  யிழந்தொழிந்தது  போலவென்பது  உவமை.  அழலுருவாய  அண்ணலின்  திருவடிகளை  “சோதியுஞ்  செஞ்சுடர்  ஞாயிறு  மொப்பன”  என்று  கூறும்  தமிழ்மறை .  அணுகிவணங்குதல் முடிமணிகளின்  ஒளி  அறவே  மழுங்கியொழிதற்கு  ஏதுவாம்  என்பார்,  “சென்றிறைஞ்சும்”  என்றார் .  வீறு  –  பொலிவு .  “சாறயர் களத்து  வீறுபெறத்  தோன்றி”  என்புழி  அப்பொருட்டாதல்  அறிக.  கன்னியர்  நீராடுங்காலம்  இருள்புலர்  காலையாதலின்,  “கார்கரப்ப” என்றார்.  கார்  ஆகுபெயர் .  கரப்ப  என்னும்  எச்சம்  காரியப்பொருட்டு.  விண்  மண்  முதலிய  எங்கனும்  பரவிய  கதிரவன்  ஒளியென்பார்.  “கண்ணார்  இரவிகதிர்”  என்றார் .  இரவிகதிர்  என்றது  குழவிகை  என்பது  போல  மிகாதாயிற்று .  வந்து  என்னும்  எச்சம் காரணப்  பொருள்  குறித்து  நின்றது .  கதிரவன்  ஒளி  சிறிது  வெளிப்பட்ட  துணையானே  விண்மீன்கள்   ஒளிமழுங்கி  யொழிதல்  கண்கூடு  தண்மை  ஈண்டு  மென்மைப்  பொருட்டு.  “முயக்கிடைத்  தண்வளி போழ”  என்புழித்  “தண்மை  ஈண்டு  மென்மை  மேனின்றது “என்பர்  பரிமேலழகர்.  தாம்  –  அசை ,  வல்லொளியாகிய  கதிரொளிமுன்  மெல்லொளியாகிய  விண்மீன்  ஒளிமழுங்குதல்  இயல்பே.  வீற்றுதலாகிய  உவமவினையைப்  பொருளினும் , மழுங்கி,  அகல  என்னும்  பொருள்  வினைகளை  உவமையினும்  இயைத்துக்கொள்க . 

                இந்நிகழ்ச்சி  கன்னியர்  நீராடத்தொடங்கி  நெடுநேரமாயிற் றென்பதையும் , ஞாயிறு  கதிர்பரப்பியெழும்  இருள்புலர்காலம்  தொடங்கிற்று  என்பதையும் ,  விரைவில்  நீராடுதலை  முடித்துக்கொள்ள வேண்டு மென்பதையும் ,  குறிப்பிற்  புலப்படுத்தவாறறிக.  ஈண்டுக்  கன்னிப்பெண்கள்,  நெடுநேரம்  இறைவன்  திருப்புகழைப்  பாடி  நீராடினராக,  அந்நிலையில்  கதிரவன்  ஒளி  தோன்றியதும் ,  இருள்  நீங்கப்பெற்று ,  விண்மீன்கள்  ஒளிமழுங்கி  அக்கதிரொளியில்  இயைந்து  மறைந்தன வென்னும்  இவ்வருணனையால் ,  இறையருட்  பேற்றிற்குரிய  கடவுட்பத்தியைப்   பலகாலம்  மேற்கொண்ட  உயிர்களுக்குச்  சிவஞானம்  தோன்றியதும் ,  அவ்வுயிர்கள்  பாசம்  நீங்கப்பெற்று,  உயிரறிவு  மடங்கி  இறையருள்  நிறைவில்  இரண்டறக் கலந்து  இன்புறுவனவாம்  என்னும்  சைவசித்தாந்த  உண்மை  குறிப்பிற்  புலனாதலும்  உணர்க. 

                  இனி  இறைவன் உலகெலாமாகி  வேறாயுடனுமாய்  நின்று  உயிர்களுக்கு  அருளுமுறையைப்  புலப்படுத்துகின்றார்.  உலகம்  இயங்கியற்  பொருட்பகுதி,  நிலையியற்  பொருட்பகுதியென்னும்  இருதிறத்ததாம்.  இங்குப்  “பெண்ணாகி யாணாயலியாய்” என்பது  இயங்கியற்  பொருட்கூற்றுக்கும், “விண்ணாகி மண்ணாகி” என்பது நிலையியற் பொருட்கூற்றுக்கும்  எடுத்துக்காட்டாகும்.  ஏனையவற்றை  உபலக்கணத்தாற்  கொண்டு  இவ்விருதிறத்துள்  அடக்கிக்  கொள்ளல்  வேண்டும்.  இயங்கியற்பொருள்  ஆண்  பெண்  அலி  என்னும்  முக்கூற்றுள் அடங்கும்.  உயர்திணை  அஃறிணை  இரண்டற்கும்  ஈதொக்கும்.  ஆண்  பெண்  என்பதே  முறையாயினும்  ஈண்டுப்  புகழ்ந்து  பாடுவார்  கன்னியராதலின்,  அவர்  நிலைக்குத்  தாய்மையன்பே  முற்படுமென்பது  குறித்து , “பெண்ணாகியாணாய்” என்று  கூறப்பட்டது .  “அன்னையும்  அத்தனு மாவாய் “  என்பது  தமிழ்மறை .  இறைவன்  சத்தியாய்ச்  சிவமாய்  வெளிப்பட்டருளியது  பற்றிப்  “பெண்ணாகியாணாய்”  எனவும்,  பிரமப்பொருளாகப்  பாவிக்கப்படுதலின்  “அலியாய்“  எனவும்,  கூறுவராயினர். அலி,  ஆணாகவும்  பெண்ணாகவும்  இல்லாமல்  ஆண்மையும்  பெண்மையும்  திரிந்தவுருவாகும்.  அது  பொருள்வகையால்  உயர்திணையாயினும்  சொல்வகையால்   அஃறிணைப்பாற்படும் .  வடமொழியில்  பிரமம்    என்னும் சொல்லும்  அவ்வாறே  நபுஞ்சகலிங்கமாதல்   ஈண்டுக் கருதத்தக்கது .

              இனி  நிலையியற்  பொருளுக்கு  எடுத்துக்காட்டாக  “விண்ணாகி  மண்ணாகி”  என்றார் .  பூதங்களுள்  ஒருகுணமுடைய  விண்ணையும்  ஐந்து  குணங்களுடைய  மண்ணையும்  கூறவே , இடைப்பட்ட  ஏனைய  பூதங்களும்    அவற்றின்  கலவையாகிய  மரஞ்செடி  முதலியனவும் கொள்ளப்படும்.  ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலிய  ஒளிமண்டிலங்களுக்கெல்லாம்  இடனாதல்  பற்றி,   “பிறங்கொளிசேர்விண்”  என்னப்பட்டது  மணி  பொன்  கல் மண்  மர  முதலிய  பொருள்களைக்கொண்டு  இறைவன்  திருவுருவமைத்து  வழிபடுவார்க்கு ,  அத்திருவுருவங்களின்   முகமாகவும்  இறைவன்  வெளிப்பட்டு    அருளுதலின்,  அவற்றிற்கு  மூலமாகிய  பூதங்களாகவும்  கூறினார்.

                 இங்ஙனங்  கூறியது  உடலின்  உயிர்போலக்  கலப்பினால்  உலகெலாமாகியென்பது  புலனாதற்கு  எனவும்,  இத்தனையும்  வேறாகி  என்றது,  கண்ணின்  அருக்கன்  போலப்  பொருட்டன்மையால்  வேறாதல்  புலப்படுதற்கு  எனவும்,  கண்ணாரமுதமுமாய்  என்றது  உயிற்கு  உயிராதற்றன்மையால்,  கண்ணொளியின்  ஆன்மபோதம்  போல  உடனாதல்  புலப்படுதற்கெனவும்  கொள்ளல்  வேண்டும்.  இஃது  இறைவனுக்குத்  தடத்தலக்கணமெனப்படும்  பொதுவியல்பாகும் .  கண்  –  அறிவு .  ஆர்தல்  –  அநுபவித்தல்,  அமுதம்  –  நுகர்பொருள்.  உயிர்கள்  வினைப்பயன்களை  அநுபவிக்குங்கால்  அவற்றிற்கு  முன்னிலையாகிய  நுகர்பொருள்களில்  அவ்வுயிர்களோடு இறைவன்  பிரிப்பின்றிச்  சேறலே   உடனாதலாகும்.    இப்பொருளைக் குறிப்பிற்  புலப்படுத்தற்கே  “கண்ணாரமுதமுமாய்  நின்றான்”  என்றார் .  இங்ஙனம்  உலகெலாமாகி  வேறா யுடனுமாய்  நின்று  உயிர்களுக்கு  உபகரித்து  வரும்  சிவபெருமான் திருவடிகளைப்  புகழ்ந்துபாடி  யென்பார் , “நின்றான் கழல்பாடி” யென்றார்.  இஃது  ஒருத்தியை  விளித்துக்  கூறப்பட்டதாயினும்  கதிரவன்  தோன்றுதற்கு  முன்  நீராடுதலை  முடித்துக்கொள்ளவேண்டிய  நாம்  கதிரொளி  வெளிப்படத்  தொடங்கி விட்டபடியால்   இனிக்  காலந்தாழ்த்தல்  ஆகாது : விரைந்து  நீராடுதலைச்  செய்து  கொள்வோமாக  என்று  வற்புறுத்தலின்,  எல்லோரையுஞ்  சுட்டிக்  கூறியதாகக்  கொள்ளல்  வேண்டும். 

         இதன்கண்  “நின்றான் கழல்பாடி”  என்றமையால்  “சத்தியை  வியந்தது”  புலப்படுக்கப்பட்டபடியாம்.  இறைவன்  திருவடி  சத்தியைக்  குறித்து  என்பதை  முதல்  திருப்பாட்டின்  உரையிறுதியிற்  காண்க . 

                                              *****************************************

பாடல்  19. 

உங்கையிற்  பிள்ளை  யுனக்கே  அடைக்கலமென

           றங்கப்  பழஞ்சொற்  புதுக்குமெம்  அச்சத்தால்

எங்கள்பெருமான்  உனக்கொன்  றுரைப்போங்கேள்

           எங்கொங்கை  நின்னன்ப  ரல்லார்தோள்  சேரற்க

எங்கை  யுனக்கல்லா  தெப்பணியுஞ்  செய்யற்க

            கங்குல்  பகலெங்கண்  மற்றொன்றுங்  காணற்க

இங்கிப்  பரிசே  யெமக்கெங்கோன்  நல்குதியேல் 

           எங்கெழிலென்   ஞாயி  றெமக்கேலோ  ரெம்பாவாய்

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  உயிரின்  பக்குவநிலைக்கு  ஏற்றவாறு  வெளிப்பட்டருளும்  முறையைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வாறு  வெளிப்பட்டு  இன்புறுத்தும்  இறைவனுக்கு  உயிர்கள்  தாம்  செய்யக்கடவ  அன்புப்பணிகள்  நிறைவேறுதற்பொருட்டும்  அவ்விறைவன்  துணை  இன்றியமையாதது என்பதை  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  எங்கள்  பெருமான்  =  எங்கள்பெருமானே,

உம்கையில்  பிள்ளை  உனக்கே  அடைக்கலம் என்று  =  உன்  கையிற்  சேர்ப்பிக்கப்பெறும்  இப்பெண்  உனக்கே  அடைக்கலப்பொருளாவாள்  என்று

அங்கு  அப்பழஞ்சொல்  =  திருமணக்காலத்தில்  பண்டைக்காலமுதல்   வழங்கி  வரும்  சொல்லை, 

புதுக்கும்  எம்  அச்சத்தால் =  புதுப்பிக்குமுகமாக  எழுந்த  எம்  அச்சங்காரணமாக  ;

உனக்கு  ஒன்று  உரைப்போம் கேள்  =  உனக்கு  ஒரு  விண்ணப்பம்  செய்வோம்  கேட்டருள்வாயாக,

எம்  கொங்கை  நின்  அன்பரல்லார்  தோள்  சேரற்க  = 

எங்களுடைய  கொங்கைகள்  நின்  அன்பரல்லாதார்  தோள்களைத்  தழுவாதொழிக,

எம்  கை  உனக்கல்லாது  எப்பணியும்  செய்யற்க  =  எம்  கைகள்  நினக்கன்றி  வேறு  யார்க்கும்  எத்தகைய  தொண்டும்  செய்யாதொழிக,

எம்  கண்  கங்குல் பகல்  மற்று  ஒன்றும்  காணற்க  =

எம்முடைய  கண்கள்  இரவும்  பகலும்  நின்னையன்றிப்  பிறிது  ஒரு  பொருளையும்  காணாதொழிக  ,

இங்கு  இப்பரிசே  எமக்கு  எம் கோன்  நல்குதியேல்  =  இவ்வுலகத்தில்  இவ்வாறே  எங்களுக்கு  எங்கள்  தலைவனாகிய  நீ  அருள்செய்வாயாயின்  ,

ஞாயிறு  எங்கு  எழில்  எமக்கு  என் = 

கதிரவன்  கீழ்த்திசையிலன்றி  வேறு  எத்திசையில்  தோன்றினாலும்    எமக்கு  வரக்கடவதென்னை ?.(யாதும்  இன்று) என்பது . 

விளக்கவுரை :-   உன்  கை  எதுகை  நோக்கி  உங்கை  யென்றாயிற்று .  இப்பழமொழி  திருமணக்காலத்தில்  மணமகளை   மணமகன்பால்  ஒப்பிடுதற்பொருட்டுப்    பெற்றோர்  கூறுங்கூற்றாகப்  பண்டு  வழங்கியது  என்ப. மணமகன்  கைப்பிடித்த  ஞான்றே  அவனுக்கு  அப்பெண்  உரியவளாகவும்,  அவளைப்  பெற்றோர்  தம்  ஆர்வத்தால்  சிறப்புமுறையிலும்  பாதுகாக்கும்  கடமை  நின்பாலதே என  வற்புறுத்துக்  கூறுமுகமாக  எழுந்ததாகும்  இப்பழமொழி.  என்னை  சிறப்பு  எனின் ,  ஒருவன்  தனக்கு  உரிமைப்பொருள் ,  தன்பால்  வைக்கப்பட்ட  அடைக்கலப்பொருள்  என்னும்  இரண்டனுள்,  உரிமைப்பொருளினும்  பாதுகாக்கத்தக்க  பெருமை  அடைக்கலப்பொருட்கு  உண்மையே.  இவ்வாறு  கருதுதல்  உயர்ந்தோர்  கொள்கை.  கவுந்தியென்னும்  தவச்செல்வியால்   அடைக்கலமாக  ஒப்புவிக்கப்பட்ட  கண்ணகி  யென்னுங்  கற்பரசியை  இழந்த  மாதரியென்பாள்    அது  பொறாது   தன்னுயிர்  நீத்தனள்  என்ப.  “அடைக்கலமிழந்து  உயிரிழந்த  இடைக்குலமகள்” (காதை – 29)  என்பது  சிலப்பதிகாரம்  .

                 அங்கு  என்றது  கற்பொழுக்கமாகிய  திருமண  நிகழ்ச்சியைக்  குறிக்கும் .  வதுவைச்சடங்கு  நிகழ்த்தி ,  கொள்ளுதற்குரிய  முறைமையினை யுடைய மணமகன்,  கொடுத்தற்குரிய  முறைமையினையுடைய  இருமுதுகுரவர்  முதலாயினோர்  கொடுப்ப  மணமகளை   ஏற்றுக்கொள்ளுவதே  உலகியலிற்  பண்டு  தொட்டு  வழங்கிவரும்  திருமணமாகும்.  இதனை, 

“கற்பெனப்  படுவது  கரணமொடு  புணரக்

கொளற்குரி  மரபிற்  கிழவன்  கிழத்தியைக் 

கொடைக்குரி  மரபினோர்  கொடுப்பக்கொள்  வதுவே” 

என்னும்  தொல்காப்பிய  விதியாலும்,  “இவளை   இன்னவாறு  பாதுகாப்பாயெனவும்,  இவற்கு  இன்னவாறே  நீ  குற்றேவல்  செய்தொழுகெனவும்….கற்பிக்கப்படுதலில்……கற்பென்றார்”  என  அதற்கு  நச்சினார்க்கினியர்  எழுதிய  விளக்கவுரையாலும்  உணரலாம்.  பருவமடைந்த  மகளிரை  உரியகாலத்தே  மணஞ்செய்து  கொடுத்தல்  தங்கள்  கடமையெனப்  பெற்றோர்கள்  கருதுவது  இயல்பு,  அம்முறையில்  எம்மைப்  பெற்றோரும்  எம்மை  மணஞ்செய்து  கொடுக்குங்கால்  அப்பழஞ்சொல்  அவர்களாற்  கூறப்படுமே  யென்பார், “புதுக்கும்”  எனவும்,  அந்நிலையில்  எங்களுக்குக்  கணவராக  வர  இருக்கின்றவர்கள்  குடிப்பிறப்பு  உருவம்  பருவம்  அறிவு  திரு  ஆண்மை  அன்பு  முதலியவற்றால்  ஒத்து  உலகத்தார்  மதிக்கும்  தகுதிகள்  பலவுடையராயினும்   எங்கள்  பெருமானாகிய  நினக்கு  அன்பராம்  சிறப்புடைத்  தகுதியில்லாதவராயின்  எங்கள்  வாழ்க்கை  பயனுடையதாகாதே யென்ற  அச்சமே  எங்கள்  உள்ளத்திற்  குடிகொண்டுள்ள தென்பார் “எம்  அச்சத்தால்  “  எனவும்,   இவ்வச்சங்காரணமாக  நின்திருமுன்   யாங்கள்  கூறும்  ஒருசெய்திக்குத்  திருச்செவிசாய்த்  தருளல்வேண்டுமென்பார்  “அச்சத்தால் உனக்கொன்றுரைப்  போங்  கேள்”  எனவும்  கூறினர்  என்க.

                  இவர்கள்  கூறிய  செய்திகள்  பலவாகும்.  அவ்வாறாகவும்  “ஒன்று  உரைப்போம் “  என்றது,  இறைவன்  எளிதிற்  செவியேற்றற்கென்க.  மிகவும் தகுதிவாய்ந்த பெரியோனிடத்து எளியவன் ஒருவன் தன்குறை பற்றிப் பல சொல்ல முற்படுங்கால், காலச் செலவும், தன்  அரிய  செயற்கு  இடையறவும்  கருதிப்  பல  சொற்கேட்டலில்  அப்பெரியோன்  புறக்கணிக்கக்  கூடுமென்று  அஞ்சிக்  கூறுபவன்,  “ஒரு  வார்த்தை  தெரிவித்துக்கொள்வேன்; இடந்தரல்வேண்டும்”  என்று  நயம்படவுரைத்துப்  பின்  விரைவிற்  பலவற்றையுங்  கூறுதலை  உலகியலிற்  காண்கின்றோம்.  அம்முறையே  மேற்கொண்டே  “ஒன்றுரைப்போம்”  என்றனர்  என்பது.  விண்ணப்பம்  செய்துகொள்ளுங்  கன்னியர்  பலராதலின்  “எம்கொங்கை”  என்றும்,  ஒவ்வொருத்திக்கும்  தனித்தனியே  நல்ல  கணவன்  வேண்டுதலின்  “நின்  அன்பர்”  எனவும்  பன்மையாகக்  கூறினர்  என்க.   இப்பாவை  நோன்பின்  பயனாக  விரும்பும்  கணவர்  சிவனிடத்து  அன்புடையராக  இருப்பின் ,  அவரோடுகூடி  இல்லறம்  நடாத்துங்கால்  இருதிறத்தாரும்  சிவத்தொண்டில்  ஈடுபட்டு  இன்புறலாமென்னுங்  குறிக்கோளுடையராய்   “நின்னன்பரல்லார்  தோள்  சேரற்க”  என  வேண்டுவாராயினர் .  குறிக்கோள்  அதுவென்பது  அடுத்துத்  தம்  கைகளும்  கண்களும்  செயற்பாலவற்றைக்  குறிப்பிடுமுகமாகவும்   உணரத்தக்கது.  “அவர்  தோள்  சேர்க”  எனற்பாலதனை  “அல்லார்தோள்  சேரற்க”  என  எதிர்மறைமுகத்தாற்  கூறியது  அன்பரின்  இன்றியமையாமையை  வலியுறுத்தற்கு  பின்வருவனவற்றிற்கும்  ஈதொக்கும்.  “உள்ளேன்  பிறதெய்வம்  உன்னையல்லாது”  என்று  அடிகள்   பிறிதோரிடத்துக்   கூறிய  திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

               எம் கைகள்  உனக்கல்லாமல்  வேறு  யார்க்கும்  எப்பணியும்  செய்யாதொழிக  என்பதனோடு மேல்  ஒன்பதாம்  திருப்பாட்டில்  “நின்னடியார்  சொன்ன  பரிசே  தொழுப்பாய்ப்  பணிசெய்வோம்”  என்பது  முரணாகாதோவெனின் , ஆகாது;  என்னை?  அப்பெண்கள்  சிவனடியாரைச்  சிவனெனக்  காணும்  கருத்தினராதலின் என்க . மேலும் , கற்பெனப்படுவது  சொற்றிறம் பாமையாகலானும்,  சிவனடியார்  கணவராயின்  அவர்  கட்டளையிடுவது  சிவத்தொண்டாகவே  முடியுமாகலானும்  “அவர்  சொன்ன பரிசே  தொழும்பாய்ப்  பணிசெய்வோம்”  என்று  ஆண்டுக் கூறியது  மிகப்  பொருத்தமுடையதே.    ஒன்பதாந்திருப்பாட்டிற்   கூறியதையே  ஈண்டும்  கூறியது  மிகையாகாதோ எனின்,  ஆகாது. என்னை?  அஃது  இம்மை  மறுமைகளைக் குறிக்கொண்டு  கூறியது.  இஃது  இம்மை  மறுமை  வீடு  என்னும்  மும்மைநலங்களையும்  குறிக்கொண்டு  கூறியது  ஆதலின்  என்க.   

                     இரவும்  பகலும்  நின்  திருவுருவத்தையே  எம்  கண்கள்  காண வேண்டும்  என்றதனால்  கனவிலும்  நனவிலும்  நின்  திருவுருவக்  காட்சியே  முன்னிற்க  வேண்டுமென  வேண்டினாரென்பது  இறைவன்  திருவடியைக்  கனவிற்  காண்டலும்  சிறந்த  பேறாகுமென்பதைத்  திருவாசகத்தில்  தோய்ந்தவுள்ளமுடைய  இராமலிங்க  அடிகள், 

பண்ணேறு  மொழியடியார்  பரவி  வாழ்த்தும் 

           பாதமலர்  அழகினையிப்  பாவி  பார்க்கிற்

கண்ணேறு  படுமென்றோ  கனவி  லேனுங்

            காட்டென்றாற்  காட்டுகிலாய்  கருணை  யீதோ

என்று  அது  பெறாமைமுகமாகப்  பரிந்து  கூறிய  அன்புரையால்  அறியலாம். ஈண்டுக்கண்ணைக்  குறிப்பிட்டது   ஏனைப்  பொறிநுகர்  புலன்களும்  சிவாகாரமாகவே  நிகழவேண்டுமென்பது  குறித்து  “ஐந்து  பேரறிவுங்  கண்களே  கொள்ள”  என்னும்  அருண்மொழித்தேவர்  அருளிய  கருத்து  இங்கே  நினைக்கத்தக்கது .  “எம் கொங்கை  நின்னன்பரல்லார்  தோள்  சேரற்க”  என்றதனால்  இம்மைப் பயனும் ,  “எம் கை  உனக்கல்லாதெப்பணியும்    செய்யற்க”  என்றதனால்  மறுமைப்பயனும் ,  “கங்குல் பகல்  எம்கண்  மற்றொன்றுங் காணற்க”  என்றதனால்  வீட்டின்பமும்  வேண்டினாரென்பது  குறிப்பிற்  புலப்படுமாறு  அறிக .

                    ஆண்டவனே!  இவ்வுலகத்தில்  இங்ஙனம்  நின்பால்  அன்புடையடியவரைக்  கணவராகப்பெற்று  இல்லறத்தியைந்து  நினக்குத்  தொண்டு  செய்து  நின்தரிசனப்  பேறெய்தி வாழும்  வண்ணம்  அருள்புரிவையாயின்  இப்பொழுது  கீழ்த்திசையில்  தோன்றிய  கதிரவன்  வேறு  எத்திசையில்  தோன்றினும்  எமக்கு  வரக்கடவ  தீங்கு  யாதுமின்று  என்பார்,  “இங்கிப்  பரிசே  யெமக்கெங்கோன்  நல்குதியேல் ,  எங்கெழிலென்  ஞாயிறு  எமக்கு “  என்றனர் .

                       “என் கடன்  பணிசெய்து  கிடப்பதே,  தன்கடன்   அடியேனையுந்தாங்குதல்”  என்றபடி  தொண்டு  செய்தல்  முதலிய  செயல்களெல்லாம்  உயிர்களின்  கடமையாகவும் பயனளித்தல்  இறவன்  கடமையாகவும்   கூறியிருப்ப ,  ஈண்டு  அச்செயல்களுக்கும்  இறைவனைத்  துணைவேண்டுதல்  பொருந்துமோவெனின்.  வினைக்கு  ஈடாகப்  பயனளிக்கும்  இறைவன்  பக்குவமுள்ள  உயிர்களுக்கு  நல்வினை  செய்யவும்   கருணை  புரிந்து  பின் பயனும்  அளிப்பன்  என்பது  சைவசித்தாந்த  உண்மையாதலின்  பொருந்துமென்க.  இவ்வுண்மையை ”ஆங்கவனருளாற்  பத்திநன் குண்டாம்  பத்தியால்  அவனருள்  உண்டாம்“  என்னும்  வாயுசங்கிதையானும் , 

“என்னை  நினைந்தடிமை  கொண்டென்  இடர்கெடுத்துத்

தன்னை  நினையத்  தருகின்றான் “

என்னும்  நம்பியாண்டார்  நம்பிகள்  திருவாக்கானும்  உணர்க; இதற்கு  முன்னுள்ள  திருப்பாட்டில்  கதிரவன்  தோன்றிவிட்டான்,  விரைவில்  நீராடுதலை  முடிக்கவேண்டுமென்னுங்  குறிப்புத்  தோன்றக்  கூறிய  பெண்கள்,  பின்னர்  இறைவன்  நமக்கு  இவ்வாறு  அருளுவானாயின்  கீழ்பால்  தோன்றிய  இக்கதிரவன்  யாண்டுத்  தோன்றினாலும்  நமக்காவதென்  என்றனர் என்பது .

           இனி  இத்திருப்பாட்டிற்போந்த  “உன்கையிற் பிள்ளை  உனக்கேயடைக்கலம்  “  என்னும்  பழமொழி  ஒருதாய்  தன்  குழந்தையைக்  கையிலேந்தியிருக்குங்கால்   பிறரொருவர்  கூற்றாக  எழுந்ததென்பாரும், பெற்றோர்  தம்  குழந்தையைப்  பாதுகாக்கும்  நிமித்தம்  மற்றோர்பால்  கையடைப்படுத்துநிலையிற்  கூறியதாக  எழுந்ததென்பாரும்    உளர் . 

              இதன்கண்,  இறையன்பில்  ஈடுபட்ட  கன்னியர்  தமக்குக்  கணவராந்தன்மையுடையார்    இன்ன  தகுதியினராதல்  வேண்டுமெனத்  தம்  தாயாரிடம்  முறையிட்டுக்கொள்ளுதல்  போன்று,  தாயினுமினிய  பெருமானைத்  தாய்மை  நிலையில்  வைத்து  “எம் கொங்கை  நின்னன்ப ரல்லாதார்  தோள்  சேரற்க”  என்பது  முதலாகவுள்ள  தம்  குறிக்கோளை  விண்ணப்பித்துக்  கொண்டமையின்  சத்தியை  வியந்தது  குறிப்பிற்  புலனாயவாறு  அறிக.

                                                *****************************************

பாடல் 20. 

போற்றி  யருளுகநின்  ஆதியாம்  பாதமலர்

                போற்றி  யருளுகநின்  அந்தமாஞ்  செந்தளிர்கள்

போற்றியெல்  லாவுயிர்க்கும்  தோற்றமாம்  பொற்பாதம்

                 போற்றியெல்  லாவுயிர்க்கும்   போகமாம்  பூங்கழல்கள்

போற்றியெல்  லாவுயிர்க்கும்  ஈறாம்  இணையடிகள்

                 போற்றிமால்  நான்முகனுங்  காணாத  புண்டரிகம்

போற்றியா  முய்யவாட்  கொண்டருளும்  பொன்மலர்கள்

                  போற்றியா  மார்கழிநீ  ராடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை :_-  முன்னைத்  திருப்பாட்டில்  பயன்  அளித்தற்கே  யன்றி,  அதற்கு  ஏதுவாக  உயிர்கள்  செய்யும்  அன்புப்பணிகள்  நிறைவேறுதற்கும்  இறையருள்  இன்றியமையாதது  என்னும்  உண்மையைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  உயிர்களைக்கொண்டு  தனக்குத்  தொண்டு  செய்வித்துப்  பயனளிக்குங்கடமையை  இறைவன்  மேற்கொண்டது . அவ் வுயிர்களுக்கு  உடலைப்  படைத்துக்  காத்து  அழித்து  மறைத்து  அருளும்  ஐந்தொழிற்  குறிப்பின்பாற்பட்டு  அவற்றிற்கு  இனமாமென்பதை  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  எம்கோன்  =  எங்கள்  தலைவனே,

போற்றி  ஆதியாம்  நின்  பாதமலர்  அருளுக  =  எம்மைப்  பாதுகாத்து  எப்பொருட்கும்  முதலாகிய  நின்  திருவடிமலர்களை  அருள்வாயாக,

போற்றி  அந்தம்  ஆம்  நின்  செம்மை  தளிர்கள்  அருளுக = 

எம்மைப்  பாதுகாத்து  எப்பொருட்கும்  முடிவாகிய  நின்  செவ்விய  திருவடிகளை  அருள்வாயாக ,

எல்லா  உயிர்க்கும்  தோற்றம்  ஆம்  பொன்பாதம்  போற்றி  =

எல்லா  உயிர்களுக்கும்  தோன்றுவதற்கு  ஏதுவாகிய  பொன்போன்ற  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க  ,

எல்லா  உயிர்க்கும்  போகம்  ஆம்  பூ  கழல்கள்  போற்றி  =

எல்லா  உயிர்களுக்கும்  நுகர்தற்குரிய  காப்பாகும்  அழகிய  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க

எல்லா  உயிர்க்கும்  ஈறு  ஆம்  இணையடிகள்  போற்றி  =

எல்லாவுயிர்களுக்கும்  ஒடுக்கத்திற்கு  ஏதுவாகிய  இரண்டு  திருவடிகளும்  எம்மைக்  காத்தருள்க  ,

மால்  நான்முகனும்  காணாத  புண்டரிகம்  போற்றி  =  திருமாலும்  நான்முகனும்  காண  இயலாத  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க. 

யாம்  உய்ய  ஆட்கொண்டருளும்  பொன்மலர்கள்  போற்றி  =  நாம்  எல்லாம்  உய்யும்  வண்ணம்  அடிமை  கொண்டு  இன்பம்  அருளும்  பொன்  போன்ற  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க,

யாம்  ஆடும்  மார்கழி  நீர்  போற்றி  =  நாம்  ஆடுகின்ற  இம்மார்கழி  நீர்  எம்மைக்  காத்தருள்க  என்பது .

விளக்கவுரை :-    இத்  திருப்பாட்டு  நீராடல்   நிறைவேறியதும்  அதன் பயனாகப்  பெண்களெல்லோரும்  ஒருங்கே  சேர்ந்து  தம்மைப்  பாதுகாக்கும்படி  ஐந்தொழிற்கும்  தலைவனாகிய  சிவபெருமானையும்,  அவனைப்  புகழ்ந்து  பாடியாடுதற்கு  வாயிலாகிய  மார்கழிநீரையும்  வேண்டிக்கோடலாக  அருளிச்செய்யப்பட்டதாகும்.  இத்திருப்பாட்டில்  சிவபெருமானுக்கே  உரிய  அருட்செயல்கள்  ஐந்தும்  கூறிப்  புகழப்பட்டிருத்தலின்   அதற்கேற்ப  இதற்கு  முன்னுள்ள  திருப்பாட்டில்  உள்ள  “எங்கோன்”  என்பதையே  ஈண்டும்  விளியாகக்  கொள்ளலாயிற்று.  இதன்கண் “போற்றி”  என்னும்  சொற்கள்  எட்டு  வந்துள்ளன .  அவற்றுள்  முதலிரண்டும்  எச்சங்களாகவும்,  ஏனைய  ஆறும்  இகரவீற்று  வியங்கோளாகவும்  கொண்டு  பொருள்  கூறப்பட்டன.  எச்சங்களுக்கு   அருளுக  என்பன  முடிவாகும்.  எப்பொருட்கும்  இறைவனுடைய  திருவடியே  முதலும்  ஈறுமாகுமென்ப. “ஆதியும் அந்தமுமான  ஐயாறன்  அடித்தலமே”  என்பது  தமிழ்மறை.  திருவடிக்கு  முதன்மை கூறுங்கால்   மலரெனவும்,  ஈறு   கூறுங்கால்  செந்தளிர்கள் எனவும்  கூறியது, “ஒடுங்கியுளதாம்”  என்னும்  சைவவுண்மை  புலப்படற்கென்க  தளிரினின்றே  மலர்  தோன்றும்  உண்மை  கருதத் தக்கது.  இறைவன்  திருவடிகள்  “சிந்திப்பவர்க்குச்   சிறந்து  செந்தேன் ,  முந்திப்  பொழிவன  முத்திகொடுப்பன”  என்றபடி  உயிர்களுக்குப்  போகம்  வீடுகளை  யருளும்  இயல்பினவென்பது.  ஈண்டுச்  செந்தேன்  என்றது  போகத்தைக்  குறிக்கும்.  முந்திப்  பொழிவன  என்றதனால்  முத்தியளித்தல்  முடிவில்  என்பது  பெறப்படும்.  பாதுகாத்தல்  முறையே  இம்மை மறுமைகளில்  போக  நுகர்ச்சிக்கும்,  பின்  வீட்டின்பத்திற்கும்  ஏதுவாகிய  பொருள்,  அறம், ஞான ங்களுக்குத்  தடைகள்  நேராமைப்  பொருட்டாம் .  ஆதியாம்  நிலையிற்  போகமும்,  அந்தமாம் நிலையில்  வீடும்  வேண்டப்பட்டனவாம் .

                  முதலிற்  கூறிய  ஆதியந்தம்  நான்முகன்  முதலிய  தேவர்களைப்  படைத்துக்  காத்து  அழித்தலையும்,  பின்வரும்  அடிகளிற்  குறிப்பிடும்  முத்தொழில்கள்  அத்தேவரை  அதிட்டித்து  நின்று  மற்றை  உலகுயிர்களைப்  பற்றிச்  செய்தலையும்  புலப்படுப்பன .  இவ்வுண்மையை  “முந்திய  முதல்  நடுவிறுதியுமானாய்” என்று அடிகள்  பிறிதோறிடத்துக்  கூறியமையானும்  உணர்க .  இங்கே  “முந்திய”  என்னும்  அடையால் அம்  முதல்  நடு  இறுதி  பெரும்  படைப்பு  முதலியவற்றைக்  குறிக்குமென்பதும் ,  பிந்திய  படைப்பு  முதலியனவும்   உள்ளனவென்பதும்   பெறப்படுமாறறிக.  பிந்திய  படைப்பு  முதலியவற்றை   இடைப்பட்ட  முத்தொழில்கள்  என்ப .  அவற்றை  அயன்  முதலியோர்  இறைவன்  ஆணை  பெற்று  அவன்  முன்னிலையிற்  செய்வர்  என்பது.  இதனை  “மூவண்ணல்   தன் சந்நிதி  முத்தொழில்  செய்ய  வாளா,  மேவண்ணல்”  என்பதனாலும்  அறிக. 

                         இறைவன்  திருவடி  சத்தியைக்  குறிக்கும்  என்பது  முதல்  திருப்பாட்டு  உரையிறுதியில்  விளக்கப்பட்டுள்ளது.  தீயின்  சத்தியொன்றே  சுடுதல்  அடுதல்  முதலிய  தொழில்  வேறுபட்டால்  சுடுஞ்சத்தி  அடுஞ்சத்தியெனப்  பல  திறப்படுமாறு  போல,  சிவசத்தியொன்றே  காரிய  வேறுபாட்டால்  பரை  முதலியவாய்ப்  பல்வேறு   வகைப்படுமென்ப.  அவற்றுள்,  படைப்பு  முதலிய  தொழில்களைச்  செய்வன  செனனி  முதலிய  சத்திகளெனச்  சிவாகமங்கள்  கூறும்.  அவ்வுண்மை  குறித்தே  படைப்பு  முதலிய  அருட்செயல்கள்  ஐந்திற்கும்  வினை முதல்  தன்மை  இறைவன்  திருவடி  மேல்  ஏற்றி  ஈண்டுக்  கூறப்பட்டது.  எல்லாவுயிர்களும்  தோன்றுதற்கு   ஏதுவாகிய  திருவடிகள்  என்றது,  படைப்புத்  தொழிற்கு  வினை  முதலாதலைக்  குறிக்கும்.  போகம்  –  வினைப்பயன்களை  நுகர்தல் .  அஃது  ஈண்டுக்  காத்தற்றொழிலைக்  குறிக்கும்.  ஆதலின்  போகம்  ஆம்  என்றது,  காத்தற்கு  வினை  முதலாகிய  என்றபடி.   ஈறு  –  அழித்தல் ;  ஒடுக்கம்  ஆம்  என்பதற்கு  முன்னுரைத்தாங்கு    உரைக்க.  இத்துணையும்  ஆக்கல்  அளித்தல்  அழித்தலாகிய  முத்தொழில்களும்  கூறப்பட்டன.

                              இனி  மறைத்தல்  அருளல்  கூறப்படும்.  அவ்விரண்டனுள்,  மறைத்தலாவது   உயிர்கள்  தம்  வினை முடியும்  வரை  உண்மையை யறியாமல்  பயனுகர்ச்சியில்  ஈடுபட்டு  மயங்கச்  செய்தலாதலின் ,  அம்மயக்கம்  திருமால்  பிரமன்  முதலியோர்க்கும்  உண்டு  என்பதைப் புலப்படுத்தற்கே  அவர்பாலேற்றி  “போற்றிமால்  நான்முகனுங்  காணாத  புண்டரிகம் “ என்றார்.  அருளல்  –  கட்டொழித்து  வீடுபெறச்  செய்தல்.  அப்பேற்றுக்குத்  தம்மை  ஆட்கொண்ட  கருணையே  காரணமாகக்  குறிப்பிட்டுப்  “போற்றி  யாமுய்ய  ஆட்கொண்டருளும்  பொன்மலர்கள்”  என்றனர்.  இவ்வருட்செயல்கள்  ஐந்தும்  இறைவன் உயிரின்கண்  மேல்  வைத்த  கருணையால்  நிகழ்வனவாம்.

                    இவற்றுள்,  அருளல்  ஒழித்து  ஒழிந்த செயல்களெல்லாம்  பிறப்பிறப்புக்களிற்   படுத்துத்  துயருறுத்துவனவாகலின்,  அவற்றைச்  செய்வது   அருளாமாறு   யாங்ஙனம்  எனின் ,  அதற்கு  விடையாகச்  சிவஞான  சித்தியார்  என்னும்  நூலில் ,  ஒடுக்கமாவது  பிறப்பிறப்புக்களிற்  சுழன்று  வருந்தும்  உயிர்களுக்கு  இளைப்பாற்றலும், தோற்றமாவது   உயிர்களின்  கன்மங்கழியு  முகத்தால்  மலபரிபாகம்  வரச்செய்தலும்  ,  காப்பாவது  கன்மங்  கழியும்படி  நுகர்வித்தலும்,  மறைப்பாவது  இருவினையொப்பு  வருவித்து   மலங்களை  முதிர்வித்தலும்,  அருளாவது  சுட்டொழித்து  இன்புறுத்தலும்  ஆதலின்,  ஆராயுங்கால் இவ்வைந்து  தொழிலும்  அருட்செயலை   என்னும்  பொருள்  தோன்ற,

“அழிப்பிளைப்  பாற்ற  லாக்கம்  அவ்வவர்  கன்மமெல்லாம்

               கழித்திடல்  நுகரச்  செய்தல்  காப்பது  கன்மவொப்பில்

தெழித்திடல்  மலங்க  ளெல்லா  மறைப்பருள்  செய்திதானும் 

                 பழிப்பொழி  பந்தம்வீடு  பார்த்திடி  னருளே  யெல்லாம்”

என்று  கூறப்பட்டிருத்தல்  அறிக. 

“எக்கிர  மத்தி  னாலும்  இறைசெய  லருளே  யென்றும்”  என்பதும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  சிவப்பிரகாசம்  என்னும்  நூலில்  “ஏற்றவிவை  யரனருளின்” என்னும்  பதினெட்டாஞ்  செய்யுள்  உரையில்  ,  சிவபெருமானே  பஞ்சகிருத்தியஞ்  செய்பவன்  என்பதற்குப்  பிரமாணமாக  மதுரைச்  சிவப்பிரகாசர்  இத்திருப்பாட்டை  யெடுத்துக்காட்டியிருத்தலும்  ஈண்டு  நினைவுகூறத்தக்கது. 

              இவ்வளவில்  பெண்கள்  எல்லோரும்  பாவை  நோன்பு  குறித்து  நீராடியதன்  பயனாகத்  தம்மைக்  காத்தருளும்  வண்ணம்  இறைவனை  வேண்டி,  முடிவில்  இறைவன்  திருவருட் பேற்றுக்குச்  சாதனமாக  மேற்கொண்ட  அம் மார்கழி  நீராடலைக்  குறித்தும்  காப்பு  வேண்டுவாராய்  “போற்றியாம்  மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”  என்று  முடித்தனரென்பது .

                இதன்கண்  இறைவன்  திருவடியைப்  பலமுறை  புகழ்ந்து  காப்பு   வேண்டியிருத்தலின்  சத்தியை  வியந்தது   பெறப்பட்டவாறறிக . 

                  திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத்  திருமறைக்கண் உள்ள  திருவெம்பாவைக்குப்  பாண்டிவள  நாட்டில்  பூங்குன்ற  நாட்டுத்  தலைநகராகிய   மகிபாலன்பட்டி ,  மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்   சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  மு .  கதிரேசச் செட்டியார்  இயற்றிய    கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப்பெற்றது.